Venmurasu VIII

08-காண்டீபம்

ஜெயமோகன்



Kaandepam is the story of Arjuna's travels during his exile from Indraprastha and his marriages. It is also the story of his inner travels as he stumbles through and understands his relationship to his queens and his bow. Kaandeepam weaves in the story of Arishtanemi (based on Jain Tirthankaras) and juxtaposes it against Arjuna's story. Arjuna discovers the courage of Non-violence and his own path as a Karma Yogi.!

பகுதி ஒன்று : கனவுத்திரை – 1

அஸ்தினபுரியின் குருகுலத்து சுபாகுவின் மகன் சுஜயன் தனது யவன வெண்புரவியை கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி உடைவாளை உருவி வலக்கையில் ஏந்தியபடி தலை நிமிர்ந்து அதுவரை தன்னை தொடர்ந்து வந்த ஏழு பெருங்கழுகுகளை ஏறிட்டான். அவற்றில் நான்கின் கால்களில் பேருடல் கொண்ட காட்டு யானைகள் உகிர்களால் கவ்வப்பட்டிருந்தன. துதிக்கைகளைச் சுழற்றியும் கால்களை காற்றில் தூக்கி வைத்து நடக்க முயன்றபடியும் பிளிறி குறிய வால் சுழற்றி அவை விண்ணில் தவித்தன.

மரக்கலங்களின் பெரும் பாய்களைப் போல கரிய சிறகுகளை விரித்து மயிரற்ற நீண்ட கழுத்தை சற்று தாழ்த்தி வளைந்த அலகுகளை நீட்டி நெருப்புக் குழிகளென எரிந்த கண்களால் உறுத்து நோக்கியபடி அவை அணுகி வந்தன. அவற்றின் நிழல்கள் முகில்களைப்போல தரையில் இழுபட்டு அணுகின. அடிமரம் முறிந்து விழும் ஒலியில் கூவியபடி அவை அவனை சூழ்ந்துகொண்டன. வாளை சுழற்றியபடி, “குருகுலத்தோன் ஒரு போதும் தோற்பதில்லை பறவைகளே” என்று கூவியபடி சுஜயன் குதிரையை குளம்பு வைத்து சுழலச்செய்தான்.

அவன் இடையில் அணிந்திருந்த பட்டு ஆடை நெகிழ்ந்து நழுவி இறங்கியது. களமிறங்கும்போது இடைக்கச்சையை சரியாகக் கட்டவில்லை என்று எண்ணி ஒரு கையால் அவிழும் ஆடையை வயிற்றுடன் சேர்த்து பற்றிக்கொண்டான். தொடைகளில் சூடாக குருதி வழிவதை உணர்ந்த போதுதான் தன் நெஞ்சில் ஒரு வாள் புதைந்திருப்பதை உணர்ந்தான். சற்று முன் அவனிடம் போர்புரிந்த ஏழு ஒற்றைக்கண் அரக்கர்களில் ஒருவன் வீசிய வாள் அது. அதன் கூர்நுனி உடைந்து தசைக்குள் ஆழ இறங்கியிருந்தது. குமிழியிட்டு எழுந்த கொழுங்குருதி வெம்மையாக தொடைகளை நனைத்து வழிந்து கால் விரல்களிலிருந்து சொட்டியது.

மூச்சிரைத்தபடி சலிக்காமல் அவன் வாளைச் சுழற்றி அக்கழுகுகளின் இறகுகளை வெட்டினான். சருகுகள் போல அவை அவனைச்சுற்றி பறந்து காற்றில் மிதந்து இறங்கின. குருதி பட்ட ஆடை உடலுடன் ஒட்டிக்கொண்டு சற்று குளிரத் தொடங்கியது. வாள் என வளைந்த ஒளிமிக்க உகிர்களை விரித்தபடி அவனை அணுகிய முதற்கழுகின் காலை ஓங்கி வெட்டி துணித்தான். வெட்டுண்ட கால்கள் தரையில் விழ உகிர்கள் விரிந்து அதிர்ந்து சுருங்கின. கால்களை இழந்த கழுகு அலறியபடி சிறகை விம் விம் என்ற உறுமலோசையுடன் வீசி சுழன்று மேலெழ அந்தக் காற்றில் அவனுடைய நீண்ட குழல் எழுந்து பறந்தது. தோளிலிட்ட பட்டு மேலாடை உடன் எழுந்து அலைவுற்றது.

அவன் தன் முன் இரு உகிர் எழுந்த கால்களின் நிழலைக் கண்டு போர்க்குரலுடன் திரும்புவதற்குள் அக்கழுகு அவன் இடை பற்றி தூக்கிக்கொண்டது. வாளைச் சுழற்றியபடி சுஜயன் “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவினான். புரவியிலிருந்து அவனை அள்ளித் தூக்கிய கழுகு காற்றில் அவன் கால்கள் துழாவித் தவிக்க, நனைந்த குருதிப் பட்டாடை இழுபட்டு கீழிறங்கி மண்ணில் உதிர்ந்து குவிய, முகில்களுக்கு மேலே கொண்டு சென்றது. அருகே சுழன்ற பிறிதொரு கழுகு ஏதோ சொல்ல அப்பால் பிறிதொரு கழுகு சிரித்தது.

பெண்குரல் சிரிப்பு! கழுகுகளில் பெண்கள் உண்டா? பெண் குரலில் சிரிக்குமென்றால் அவை கூவும்போது மட்டும் ஏன் ஒரே போன்று, கொம்புகள் பிளிறுவது போல குரலெழுப்புகின்றன? சுஜயன் கையிலிருந்து வாள் நழுவியது. “என் வாள்! எனது வாள்! அதோ” என்று அவன் கூவினான். இடையை நெளித்து கால்களை உதைத்து எம்பி நழுவி கீழே விழுந்த தன் வாளை பற்ற முயன்றான். அவன் விரல் தொட்ட எல்லைக்கு அப்பால் மின்னி மெல்ல புரண்டபடி வாள் கீழே மண்ணை நோக்கி சென்றது. “வாள் செல்கிறது… வாள்” என்று அவன் மீண்டும் கூவினான்.

வானம் மண்ணை ஓங்கி வெட்டியது போல அந்த வாள் சென்று கீழே மணலை அடைந்து புதைந்தது. அந்த வெட்டின் வலியை கூச்சமாக தன் உடலில் உணர்ந்தபடி “குருதி! குருதி!” என்றான். “என்ன சொல்கிறீர்கள் இளவரசே?” என்று கேட்டபடி செவிலியன்னை அவனை உலுக்கினாள். கண்களைத் திறந்து கீழே தெரிந்த செவிலி சுஜாதையின் முகத்தை நோக்கி யாரிவள் என வியந்தான். வாயிலிருந்து ஒழுகிய நீர் அவன் மார்பைத் தொட்டது. சுஜாதை “விழித்தெழுங்கள்... பொழுதாகிவிட்டது” என்றாள்.

மல்லாந்து மண்ணை நோக்கி விழுந்து கொண்டிருந்தான். வானிலிருந்து குனிந்து அவனை நோக்கியது செவிலியின் முகம். கேலிப் புன்னகை ஒளிரும் கண்கள். கழுகு எப்போது தன்னை விட்டது? கீழே விழுந்து மணலில் உடல் அறைபட்டு சிதறப் போகிறான். ஆனால் கைகளால் மெல்ல தாங்கிக்கொண்டு செல்லப்படுவது போல விரைவின்றி காற்றில் அமிழ்ந்து கொண்டிருந்தான். “ஏதோ கனவு” என்றபடி செவிலி முகத்தருகே சேடி முஷ்ணையின் முகம் தெரிந்தது. “விழித்தெழுங்கள் இளவரசே... பகல் ஆகிவிட்டது.”

“இவன் கண்களில் எப்போதுமே கனவுதான்” என்றாள் சுஜாதை. “கருவறை விட்டு வெளியே வரும்போது குழவியர் கண்களில் பாலாடை போல் கனவு படிந்திருக்கும். காலுதைத்து கையசைத்து அவை அள்ளி அள்ளி விலக்குவது அவர்கள் மேல் சுருண்டு சுழன்று படிந்து கொண்டிருக்கும் அக்கனவின் திரைச்சீலையைத்தான். பிறகெப்போதோ அக்கனவு அவர்களை வந்து தொட்டுச் செல்கிறது. மூன்று வயதாகியும் இவன் அத்திரையை முற்றிலும் விலக்கவில்லை.” முஷ்ணை “இவர் கனவை அள்ளி அள்ளி அணைத்துக்கொள்கிறார்” என்றாள்.

சுஜயன் கண்களை விழித்து இருவரையும் மாறிமாறி பார்த்தபடி உதட்டைக் குவித்தான். பின்பு புருவம் தூக்கி விழிகளை விரித்து உதடுகளைக் குவித்து கைகளைத் தூக்கி ஆட்டி “பெரிய கழுகுகள்! ஏழு கழுகுகள்” என்றான். முஷ்ணை சிரித்தபடி “எங்கே?” என்றாள். அவன் விழி சாய்த்து நினைவு கூர்ந்து “அங்கே” என்றான். “வான்?” என்று முஷ்ணை வாய் பொத்தி நகைத்தாள். “சும்மா இரடி... என்ன சிரிப்பு? குழந்தை கனவு கண்டிருக்கிறது” என்றாள் சுஜாதை.

“ஆனாலும் யானைகளை தூக்கிக்கொண்டு போகும் கழுகுகள் சற்று பெரிய கனவுதான்” என்றாள் முஷ்ணை. சுஜாதை அப்போதுதான் கீழே மஞ்சத்தில் கிடந்த அவன் ஆடையை பார்த்தாள். “மறுபடியுமா?” சலிப்புடன் சொல்லி அவனை முஷ்ணையிடம் கொடுத்துவிட்டு பாலாடைபோல சுருங்கி ஒட்டிக்கிடந்த பட்டாடையை எடுத்தாள். முஷ்ணை “நனைந்திருக்கிறதா?” என்றாள். சுஜாதை “ஊறியிருக்கிறது” என்றாள். முஷ்ணை உரக்க நகைத்தபடி “எந்தக் காலையிலாவது இளவரசர் உலர்ந்து கண் விழித்திருக்கிறாரா செவிலியே?” என்றாள்.

சுஜாதை சுஜயனை திரும்பிப் பார்த்து “சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் என்னை கூப்பிடுங்கள் என்று சொன்னேனல்லவா?” என்றாள். சுஜயன் உதடுகளை சற்று வளைத்து மெல்லிய திக்கலுடன் “குருதி!” என்றான். “நிறைய குருதி… ஒற்றைக்கண் அரக்கன்... அவன் பெயர்... அவன் பெயர்... அதாவது அவனுக்கு பெயரே இல்லை தெரியுமா?” என்றபின் கைகளை அசைத்து “நான் அவன் கழுத்தை வெட்டினேன். இன்னொருவன் பின்னாலிருந்து வந்து மிக நீளமான வாளால் என் நெஞ்சை வெட்டினான். குருதி பெருகி...” என்றபின் சிந்தனை செய்து தன் ஆடையைப் பார்த்து “அந்த குருதிக்கு நிறமே இல்லை. நிறமே இல்லாத குருதி… தண்ணீர் போல” என்றான்.

சுஜாதை முஷ்ணையை நோக்கி கண்ணசைத்து “பார், எப்படி விளக்கமளிக்கிறார். அது சிறுநீரல்ல… நிறமற்ற குருதி, தெரிந்துகொள்” என்றாள். “யானைகள் என்னை துரத்தின” என்றான் சுஜயன். “மூன்று யானைகள்! இல்லை, ஏழு யானைகள். அவற்றின் மீது கந்தர்வர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்கள் கையில் மிகப்பெரிய வாள் வைத்திருந்தார்கள்…” அவன் கைநீட்டுவதற்காக சற்று எம்பிக்குதித்தான். “அவ்வளவு பெரிய வாள்!” முஷ்ணையின் இடையில் காலை உதைத்து திரும்பி அருகே நின்ற மரத்தூணை சுட்டிக்காட்டி “இவ்வளவு பெரிய வாள்!” என்றான்.

“இதென்ன இரவெல்லாம் போர்க்கனவுகளாக இருக்கின்றன இளவரசருக்கு?” என்றாள் முஷ்ணை. “சரியான கோழை, அதனால்தான். வேறென்ன? இவரோடொத்த இளையோரெல்லாம் இதற்குள்ளாகவே குறுவாள் ஏந்தி களம் புகத்தொடங்கிவிட்டார்கள். இவரோ இரவெல்லாம் கதை கேட்டு பின்னிரவில் தூங்கி விடியலில் சிறுநீர் கழித்து கண்விழிக்கிறார். முன்பகல் முழுக்க காய்ச்சல் அடித்த கண்களுடன் உடல்குன்றி உலகை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். தோளை பார்த்தாயா? இதை பெருந்தோள் கொண்ட குருகுலத்து இளவரசனின் தோள்கள் என்று எவரேனும் சொல்வார்களா? வெண்பல்லிக் குஞ்சு போலிருக்கிறார்” என்றாள் சுஜாதை.

பிறிதெவரையோ சொல்லக் கேட்பது போல சுஜயன் சுஜாதையை உற்று நோக்கி அச்சொற்களை கேட்டான். ஆம் என்பது போல தலையசைத்தபிறகு எம்பி கைநீட்டி சுஜாதையின் தோள்களைத் தொட்டு “சுஜாதை, அந்த யானைகளை கழுகுகள் என்ன செய்யும்?” என்று கேட்டான். “கொண்டு சென்று கூண்டிலடைத்து வளர்க்கும். போதுமா? எனக்கு வேலை இருக்கிறது” என்று சுஜாதை அவன் மஞ்சத்தில் விரிக்கப்பட்டிருந்த பட்டை இழுத்து தரையிலிட்டாள். “இறகுச் சேக்கையிலே இனி இவரை படுக்கவைக்கக் கூடாது. எத்தனை முறைதான் வெயிலில் இட்டு காய வைப்பது? வெறுமனே மரக்கட்டிலில் படுக்க வைக்க வேண்டும்” என்றாள்.

சுஜயன் திரும்பி முஷ்ணையின் கன்னத்தை தன் இரு கைகளாலும் பற்றித் திருப்பி “எனக்குத் தெரியும். அந்த யானைகளை அவை இமயமலை உச்சியில் கொண்டு வைத்து கொத்திக் கொத்தி கிழித்து சாப்பிடும்” என்றான். பிறகு சில கணங்கள் சிந்தனையில் ஆழ்ந்து விழிகளை மேலே செருகி உறைந்தான். அவன் தோள்கள் தொய்ந்து கைகள் விழுந்தன. வாயிலிருந்து எச்சில் குழாய் போல வழிந்தது. பின்பு அதிர்ந்து எழுந்து கால்களை உதைத்து எம்பி அவள் காதைப்பற்றி “ஆனால் அவற்றின் தந்தங்கள் அந்தக் கழுகுகளின் தொண்டையிலே சிக்கிக் கொள்ளும். தந்தங்கள் சிக்கிக் கொள்ளும்போது அவற்றால் சத்தம் போட முடியாது. ஆகவே அவை மலை உச்சியில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும்” என்றான்.

“ஆம், பாவம்” என்றாள் முஷ்ணை. சுஜயன் “ஏழு கழுகுகள் மலை உச்சியில் செத்துவிட்டன என்று கந்தர்வர்கள் வந்து சொல்வார்கள்... நாளைக்கு சொல்வார்கள்” என்றான். சுஜாதை “இந்தக் கதைகளை கேட்டுக் கேட்டு எனக்கே இதே போன்ற கனவுகள் வரத் தொடங்கிவிட்டன” என்றாள். “நானே நேற்று ஒரு கனவு கண்டேன். ஒரு சிம்மத்தின் மேல் அமர்ந்து செல்லும் கரிய பெருங்குரங்கு ஒன்றை... காலையில் எழுந்தபோது என்ன கனவு இது என்றெண்ணி எனக்கே சிரிப்பாக இருந்தது.” “குரங்கு என்ன செய்துகொண்டிருந்தது?” என்றாள் முஷ்ணை. சுஜாதை மறுமொழி சொல்லாமல் நகைத்தாள்.

சுஜயனைத் தூக்கியபடி இருவரும் மஞ்சத்தறையைவிட்டு வெளியே சென்றனர். சுஜயன் சேடியின் இடையிலிருந்து சறுக்கி கீழே இறங்கி “நான் வரமாட்டேன். எனக்கு இடை ஆடை கொடு” என்றான். “ஏன்?” என்றாள் முஷ்ணை. “அங்கே பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப்பார்த்து சிரிப்பார்கள்.” சுஜாதை “ஆமாம், இதற்கு மட்டும் நாணம் கொள்ளுங்கள். இத்தனை வயதாகியும் மஞ்சத்தில் சிறுநீர் கழிக்கிறீர்கள். அதற்கு நாணமில்லை” என்றாள். “அது குருதி தெரியுமா? என் நெஞ்சில் வாள் வாள் வாள்... அவ்வளவு பெரிய வாள் அப்படியே பாய்ந்து...” என்று கையை அசைத்தபடி சுஜயன் சொல்லத்தொடங்க “மறுபடியும் அதை சொல்லிக் கொண்டிராதீர்கள்...” என்றாள் சுஜாதை.

சுஜயன் பகைமையுடன் அவளைப் பார்த்து சேடியை அணுகி அவள் முந்தானையைப் பற்றி சுழற்றிப் பிடித்தபடி “அது குருதி... அவ்வளவு பெரிய வாளால் என்னை வெட்டினான்... அப்போது...” என்றான். “சரி, குருதியேதான். பிறகென்ன?” என்றபடி சுஜாதை வெளியே சென்றாள். முஷ்ணை அங்கிருந்த சிறு பீடத்திலிருந்து செம்பட்டு ஆடையொன்றை எடுத்து அவன் இடையில் சுற்றிக் கட்டி கால்களிடையே கொண்டு சென்று வரிந்தாள். அவள் கைகள் தன் கால் நடுவே பட்டபோது சுஜயன் கூசி சுருங்கி வளைந்து சிரித்தான். சேடி அவனை தன் முலைகளோடு அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு “படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்கள் பின்னாளில் மிகச்சிறந்த காதலர்களாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள், தெரியுமா இளவரசே?” என்றாள்.

“காதலர்கள் என்றால்?” என்றான் சுஜயன். “ஏராளமான இளவரசிகளை திருமணம் செய்து கொள்வீர்கள். அதன் பின் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உங்களுக்கு பிறக்கும்” என்றாள். “நூறு குழந்தைகளா?” என்று சுஜயன் விழிகளை விரித்து கேட்டான். “ஆமாம். ஏன் நூறு போதாதா?” என்றாள் சேடி. “ஒன்று குறைகிறதா?” சுஜயன் “நான் இளவரசிகளை தேரில் இழுத்து ஏற்றி விரைவாக இப்படியே குதிரைகளை அறைந்து...” என்று சொன்னபடி திரும்பி கைகளை அசைத்து அவன் முன் விரைந்து கொண்டிருந்த புரவிகளை சவுக்கால் வீசினான். அவற்றின் குளம்படி ஓசை அறையை நிறைத்தது. “ஏழு இளவரசிகள்!” என்றான். மூன்று விரல்களை தூக்கி ஆட்டி “ஏழு இளவரசிகள்!” என்றபின் திரும்பி சேடியின் முலையைத் தொட்டு “இதைவிட பெரிய முலைகள் உள்ளவர்கள்” என்றான்.

அவள் கூசிச் சிரித்தபடி அவனை அணைத்துக் கொண்டாள். தாழ்ந்த குரலில் அவன் காதில் “இதைவிடப்பெரிது வேண்டுமா?” என்றாள். “அவ்வளவு பெரியது!” என்று அவன் இரு கைகளையும் காட்டினான். “அவ்வளவு பெரிதாக இருக்கும். நிறைய பால்” என்றான். “பாலை எங்கே பார்த்தீர்கள்?” என்றாள் முஷ்ணை. “நான் மகளிரறைக்கு செல்லும்போது உதயனுக்கு செவிலி பால் கொடுப்பதை பார்த்தேன். பால் வேண்டுமென்று கேட்டபோது அந்தச் செவிலி என்னை கை நீட்டி அடித்தாள்” என்றான். “இதோ இங்கே அடித்தாள். அவள் அரக்கி. அவளை நான் கொன்று...”

“இன்னும் கொஞ்சம் பெரிதாகும்போது பாலருந்துவீர்கள். இப்போது நீராடுங்கள்” என்று முஷ்ணை அவன் கையைப்பற்றி அழைத்துச் சென்றாள். சுஜயன் சற்று தளர்வாகக் கட்டப்பட்ட பட்டாடையை ஒரு கையால் பற்றியபடி அவளுடன் நடந்தான். “ஏழு பருந்துகள். அவை ஏழு குதிரைகளை...” என்று சொல்லிக் கொண்டு நடந்தான். முஷ்ணை “ஏழு குதிரைகளா? ஏழு யானைகள் என்றீர்கள்?” என்றாள். அவன் நின்று “இவை வேறு கழுகுகள்... இவை வடக்கிலிருந்து வந்தவை அல்ல. இவை தெற்கிலிருந்து வந்தவை. அவற்றில் ஒன்று தன் காதில் ஒரு பெரிய தூணை வைத்திருந்தது” என்றான். “தூணா?” என்றாள் முஷ்ணை. “இதோ இந்தத் தூணளவுக்கு பெரியது. நான் அந்தத் தூணைப் பிடுங்கி...” என்று சொல்லிக் கொண்டே அவன் சென்றான்.

குளியலறைக்குச் செல்லும் வழியெல்லாம் சுஜயன் கைகளை ஆட்டி கால்களைத் தூக்கி சிறிய தாவல்களாக நடந்தபடி சற்றே திக்கும் சொற்களுடன் பேசிக் கொண்டே வந்தான். “கழுகுகளை அவற்றின் நிழலிலேயே நான் பார்த்துவிடுவேன். பெரிய கழுகு மலையைத் தாண்டி சிறகடித்து வரும்போது பெரிய பாறை உருண்டு வருவது போலிருக்கும். தண்ணீரில் அதன் நீர்ப்பாவையை நான் பார்த்தேன். தண்ணீரில் பார்த்தால் அதன் கண்கள் தெரியும். சிவப்புக் கண்கள்… தீ போன்று எரியும் கண்கள் தெரியுமா? தீயில்லை தீயில்லை… செவிலி அன்னையின் குங்குமச் சிமிழைத் திறந்தது போலிருக்கும். அதில் குருதி...” என்றபின் நின்று திகைத்து “என்னுடைய ஆடையில் சிவந்த குருதி வழிந்தது” என்றான்.

முஷ்ணை அவனை கைபிடித்து சற்றே இழுத்து “விரைவாக வாருங்கள் இளவரசே” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இப்பொழுது பொழுது என்ன என்று எண்ணுகிறீர்கள்? பார்த்தீர்களா, உள்அங்கணத்தில் வெயில் பொழிந்து கொண்டிருக்கிறது” என்றாள் முஷ்ணை. “நான் காலையிலேயே எழுந்துவிட்டேன்” என்றான் சுஜயன். “காலையில் எழுந்து இங்கே வந்தபோது இங்கே வானத்தில் நிலவு இருந்தது. அதன் பின் நான் இந்த வாயிலைக் கடந்து வெளியே போய் முற்றத்தில் நின்று..." கையை விரித்து "அவ்வளவு பெரிய நிலவை பார்த்தேன். வட்டமான நிலவு” என்றபின் சற்றே சிந்தித்து “சிவப்பான நிலவு” என்றான்.

முன்னால் சென்ற சுஜாதை நின்று “நானும் பார்த்திருக்கிறேன்… முழுப் பொய்யை இந்த அளவுக்கு நம்பி சொல்லும் இன்னொரு குழந்தையை இந்த அஸ்தினபுரியில் எங்குமே பார்க்கமுடியாதடி” என்றாள். “நான் பார்த்தேன், நான் பார்த்தேன்” என்றபடி சுஜயன் ஓடிச் சென்று இருகைகளாலும் அவள் இடையை முட்டினான். “போ, நீ பொய் சொல்கிறாய். நான் உண்மையிலேயே அவ்வளவு பெரிய நிலவை பார்த்தேன்” என்றான். “அந்த நிலவு உங்களைப் பார்த்ததா இளவரசே?” என்றாள் முஷ்ணை.

சுஜயன் நின்று அவளை ஏறிட்டு நோக்கி சில கணங்கள் சிந்தித்தான். அவனுடைய சிறிய இதழ்கள் சற்றே பிரிந்து இரண்டு வெண் முன்பற்களைக் காட்டியபடி உறைந்திருந்தன. கண்கள் வெண்படலத்தில் உருண்டன. பின்பு பெருமூச்சுவிட்டு கைகளை விரித்து “இல்லை” என்றான். நெடுநேரம் அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் தோள்கள் குறுகி கண்கள் எதையும் நோக்காமலாயின. சிலகணங்களில் அவன் அங்கில்லை என்று ஆனான்.

படிகளில் இறங்கி இடைநாழிக்குச் சென்று அதன் எல்லையை அடைந்து வளைந்து உள்ளே தைலமணம் ஏறிய நீராவி எழுந்து கொண்டிருந்த குளியலறைக்கு சென்றபோது அவன் முற்றிலும் மறைந்துவிட்டவன் போலிருந்தான். “என்ன குரல் அடங்கிவிட்டது?” என்றாள் முஷ்ணை. “அவ்வளவுதான். பேச்சு பேச்சென்று பேசுவது, பின்பு அப்படியே அடங்கி நாள் முழுக்க அமர்ந்திருப்பது... இதுதான் வழக்கம். இப்போது அவர் இருப்பது இவ்வுலகிலா இதைச் சூழ்ந்த வேறு உலகங்களிலா என்பது எவருக்குத்தெரியும்?” என்றாள் சுஜாதை. “இளவரசே, தாங்கள் நீராடி வரவேண்டிய நேரம் இது” என்றாள்.

நீராட்டறையிலிருந்து பருத்த பெரிய முலைகளும் நீர்நிறைந்த தோற்பைகள் போல ததும்பும் புயங்களும் கொண்ட நீராட்டறைச் செவிலி தான் அமர்ந்திருந்த பீடத்தில் கையை ஊன்றி எழுந்து சிரித்தபடி அவனை நோக்கி வந்தாள். அவன் அவளை ஒரு பெரிய வெண்ணிற யானையாக பார்த்தான். யானையின் உள்ளங்கால்கள் அத்தனை சிறியதாக இருப்பது அவனை வியப்புறச் செய்தது. அவள் கைகளும் மிகச் சிறியவை. அவன் தலைக்கு மேலிருந்த அவள் வயிற்றில் தொப்புள் சுழி சேற்றில் எழுந்த ஆழமான ஊற்றுக் குழி போல சுருங்கி உள்ளிழுக்கப்பட்டிருந்தது. அதற்கு கீழே மணல் வரிகள் போல தசைக்கோடுகள்.

அவள் குனிந்து சிரித்தபடி “இன்றென்ன கனவு? சிம்மங்களா?” என்றாள். அவன் மயக்கம் நிறைந்த விழிகளால் அவளை நோக்கிக் கொண்டிருந்தான். அவள் பெரிய வட்ட முகத்தில் மிகச்சிறிய மூக்கும் மிக மெல்லிய உதடுகளும் அதற்குள் சிறிய உப்புப் பரல்கள் என ஒளிவிடும் பற்களும் கொண்டிருந்தாள். குனிந்து அவன் தோள்களை அவள் பற்றியபோது இரு முலைகளும் வெண்ணிற அலைகளாகப் பொங்கி அவன் முன் வந்தன. அவன் திரும்பி சுஜாதையைப்பார்த்து ஏதோ சொல்ல எண்ணினான். அச்சொற்கள் அவன் நாவில் வருவதற்குள்ளே உலர்ந்து மறைந்தன.

சுபகையின் கைகள் மிக மென்மையானவை. அவள் விரல்கள் வாழைப்பூ அல்லிகள் போல. அவள் அவன் கைகளைப்பற்றி “இன்னும் தூக்கம் விழிக்கவில்லை போல” என்றாள். சுஜாதை அவன் சிறுநீர் கழித்த ஆடைகளை தூக்கிக் காட்டி “சிம்மமோ யானையோ கழுகோ ஏதோ ஒன்று. ஆனால் காலையில் ஆடை நனைவது மட்டும் தவறுவதே இல்லை” என்றாள். சுபகை அவன் இடைபற்றி சுற்றி தூக்கி தன் முலைகள் மேல் அழுத்திக் கொண்டாள். அவன் அவள் கழுத்தை சுற்றி வளைத்து தோள்களில் முகம் புதைத்தான். “அச்சமுள்ள குழந்தைகள் படுக்கையை நனைக்கும் என்பார்கள். பொதுவாக பெண் குழந்தைகள்தான் இத்தனை வயதுக்குப் பிறகும் இப்பழக்கம் கொண்டிருக்கும். குருகுலத்து இளவரசர் இதைச் செய்கிறாரென்று சூதன் ஒருவனுக்குத் தெரிந்தால் போதும். பாரத வர்ஷத்திற்கு அழியா புராணமொன்று கிடைத்துவிடும்” என்றாள் சுபகை.

முஷ்ணை “இரவெல்லாம் கதை சொல்லு என்று மாறி மாறி ஒவ்வொரு சேடியாக அழைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை கதை சொன்னாலும் துயில்வதில்லை. கதை கேட்கக் கேட்க கண்கள் விரிந்துகொண்டேதான் போகும். சொல்லாமலிருந்தால் அக்கணமே ஆடை அனைத்தையும் அவிழ்த்து வீசிவிட்டு தரையில் புரண்டு அழத்தொடங்குவார். அத்தனை கதையும் கனவாக உள்ளே போய் இதோ இப்படி சிறுநீராக வெளியே வருகிறது” என்றாள். சிரித்தபடி சுபகை அவனை தோளுடன் இறுக அணைத்து அவன் முகத்தைத் திருப்பி கன்னத்தில் முத்தமிட்டு “இளையோர் நாமறியா உலகங்களுக்குச் செல்லும் ஆற்றல் கொண்டவர்கள் முஷ்ணை. அவர் எங்கு சென்றார் என்று நாம் என்ன அறிவோம்? நாம் பார்க்கும் இவ்வுலகில் சிம்மங்களும் கழுகுகளும் பறக்கும் யானைகளும் இல்லை. நாம் காணாததனால் அது இல்லையென்று ஆகிவிடுமா என்ன?” என்றாள்.

“சரிதான். இவருக்கு சரியான இணை நீதான். அவர் விண்ணுலகின் கதைகளை சொல்லட்டும். நீ கேட்டுக்கொண்டே நீராட்டு” என்றாள் சுஜாதை. “எனக்கு இன்று முழுக்க வேலையிருக்கிறது. இவரிடம் உரையாடிக் கொண்டிருக்க நேரமில்லை. காலையில் எழுத்தரையர் வந்து அமர்ந்து பிற இளவரசர்களுக்கு ஏடு தொட்டளித்துவிட்டார். இவரைவிட ஒரு வயது இளையவர் ஹரிதர். எறும்புகள் அணி வகுத்து செல்வது போல் ஏடெழுதுகிறார். எழுதிய ஒவ்வொன்றையும் விரல் தொட்டு வாசிக்கிறார். நூறு பாடல்களை நினைவு கூர்ந்து சொல்கிறார். இவரோ இன்னமும் அகரத்தையே எழுதத் தொடங்கவில்லை. அகரமுதல்வியின் புகழ் மாலையை ஐந்து வரிகளுக்கு மேல் சொல்லவும் தெரியவில்லை. சொல்வது எதுவும் செவி நுழைவதில்லை என்கிறார் எழுத்தரையர்.”

“அதெப்படி நுழையும்? சொல்லத் தொடங்கும்போதே விழி திறந்துவிடுகிறதே” என்றாள் முஷ்ணை. “இதற்கெல்லாம் நான் பொறுப்பேற்க வேண்டுமென்கிறார்கள். ஊன்துளியாக என் கைக்கு வந்தபோதே இப்படித்தான் இருந்தார் என்று நான் சொன்னால் எவராவது நம்புவார்களா? அதெப்படி குருகுலத்து வீரர்பெருங்குடியில் நாவும் கையும் தேறாத ஒரு மைந்தர் பிறக்க முடியும் என்று என்னை கேட்பார்கள். பிறந்திருக்கிறதே இதோ. விழித்திருக்கும் பொழுதில் மூன்று நாழிகைகூட இப்புவியில் இல்லாத ஒரு குழந்தை. இதன் பழி முழுக்க என்மேல்...” என்றாள் சுஜாதை. “பழியை பகிர்ந்து கொள்வோம் செவிலியே. பிறகென்ன?” என்றபடி நீராட்டறைச் செவிலி அவனைத் தூக்கி உள்ளே கொண்டு சென்றாள்.

சுஜாதை பின்னால் வந்து “நீராட்டி ஆடை மாற்றி எழுத்தறைக்கு கொண்டு செல்லவேண்டும். அரைநாழிகையில் அனைத்தும் முடியட்டும். இல்லையேல் இவர் செல்லும்போது அங்கு எழுத்தவை முடிந்திருக்கும்” என்றாள். “இதோ...” என்றாள் சுபகை. “இதோ, என் செல்லத்தை நீராட்டி துடைத்து ஒளி பெறச்செய்து வெண்முத்தென ஆக்கி உன் கையில் தருகிறேன். போதுமா?” என்றாள். “அவரை கதை சொல்ல மட்டும் விடாதே. வாயில் ஒரு துணியை எடுத்து செருகிவிடு. வாயை திறக்கவிட்டால் நீ நீராட்டி முடிக்க உச்சிவேளை ஆகிவிடும்” என்றாள் சுஜாதை. சுபகை சிரித்தபடி அவனுடன் உள்ளே சென்றாள்.

பகுதி ஒன்று : கனவுத்திரை - 2

குளியலறைச்செவிலி சுபகை அவனை உள்ளறைக்கு கொண்டு சென்று சிறு பீடத்தின்மேல் நிறுத்தினாள். கனவு படிந்த விழிகளுடன் சுஜயன் தோள்கள் தொய்ய உடல் குழைந்து நின்றான். அவள் பிடியை விட்டபோது கால் தளர்ந்து விழப்பார்த்தான். “நின்றுகொள்ளுங்கள் இளவரசே" என்று அவனை ஒரு கையால் பற்றியபடி அவன் இடையாடையை அவிழ்த்தாள். கூச்சத்துடன் கால்களை உதைத்தபடி அவன் பாய்ந்து அவளை அணைத்துக் கொண்டான். அவன் ஆடையை கழற்றி வெற்றுடலுடன் தூக்கிச் சென்றாள். அவள் மார்பின் மேல் தன்னுடலை மறைத்து “ஆடை ஆடை” என்றான் சுஜயன்.

“எதற்கு ஆடை? நீராடத்தானே போகிறீர்கள்?” என்றாள் சுபகை. “நான் ஆடையுடன் நீராடுவேன்” என்றான் சுஜயன். “ஏன்?” என்றாள். “நீராடிக் கொண்டிருக்கும்போது இதோ இந்த வாயிலைத்திறந்து பெரிய யானை ஒன்று உள்ளே வந்தால் நான் அதை பெரிய கதாயுதத்தால் அடிப்பேன். அது பிளிறி அப்படியே சரிந்து விழுந்துவிடும். அதன் மேல் இருக்கும் கந்தர்வன் மிகப்பெரிய கதாயுதம் வைத்திருப்பான். இரும்பு கதாயுதம். அவனை அம்பு தொடுத்து வீழ்த்திவிட்டு அந்த கதாயுதத்தை எடுத்து நான் அவனை அறைவேன். மூன்று யானைகள்!” என்றபின் சுஜயன் தலையசைத்து “ஏழு யானைகள்” என்றான்.

“அம்மாடி, ஏழு யானைகள் இந்த நீராட்டறைக்குள் வருமா?” என்றாள் சுபகை. “ஆமாம், நீராட்டறைக்குள்…” என்று சொல்லி அந்த சிறு வாயிலை நோக்கியபின் கையைத்தூக்கி “இந்தக் கூரையை உடைத்துக்கொண்டு அவை உள்ளே இறங்கிவிடும்... ஏனென்றால் அவை சிறகுகள் உள்ள யானைகள்” என்றான். “யானைக்கு சிறகுகள் உண்டு என்று யார் சொன்னது?” என்றாள் சுபகை. “எனக்குத்தெரியும். நான் பார்த்திருக்கிறேன்” என்றான் சுஜயன். கைகளை விரித்து ஆட்டி “யானைகளுக்கு மூன்று சிறகுகள்...” என்றான்.

சுபகை சிரித்துவிட்டாள். அவனைத் தூக்கி சற்றே விலக்கி “மூன்று சிறகுகளா?” என்றாள். சுஜயன் “ஆம்” என்றான். “மூன்று சிறகுகள் உள்ள யானையா?” என்றாள். “ஆமாம். பறவைகளுக்கு மூன்று சிறகுகள் இருக்கின்றனவே?” என்றான். “பறவைகளுக்கு மூன்று சிறகுகளா, எங்கே பார்த்தீர்கள்?” என்றாள் சுபகை. “நான் பார்த்தேன்.” இரு கைகளையும் விரித்து ஆட்டி “இரு சிறகுகள் இப்படி இருக்கும். கை போல” என்ற சுஜயன் திரும்பி தன் பின்பக்கம் கையை வைத்து “இவ்வளவு பெரிய சிறகு பின்னால் இருக்கும்” என்றான்.

“அது சிறகல்ல இளவரசே, பறவையின் வால் அது” என்றாள் சுபகை. “வாலா?” என்றான் சுஜயன் தலையை அசைத்து. “வால் அல்ல. வாலென்றால் நீளமாக இருக்கும். குரங்குக்கு வால் உண்டு” என்றபின் உரக்க “குதிரைக்கு வால்...” என்றபின் சிந்தனை வயப்பட்டு “குதிரைக்கு சிறகு” என்றான். “குதிரைக்கு சிறகிருக்கிறதா?” என்று சுபகை கேட்டாள். “ஆமாம்” என்றபின் அவன் மீண்டும் கண்களை சரித்து “இங்கே நீர் நிறைந்திருக்கிறது. இதில் இதில் இதில் நான் நீராடும்போது தண்ணீருக்குள் பெரிய முதலைகள் இருக்கும்” என்றான்.

சுபகை “முதலைகளா? நீங்கள் எங்கு முதலைகளை பார்த்தீர்கள்?” என்றாள். “ஆம், நான் கங்கையில் படகில் போகும்போது பார்த்தேன். நூறு முதலைக் குட்டிகளை எடுத்து வந்து ஒரு சின்ன பேழைக்குள் போட்டு அங்கே வைத்திருக்கிறேன். அந்த முதலைக் குட்டிகள் இதோ இந்த குளத்தில் உள்ள நீருக்குள் நீந்திக் கொண்டிருக்கின்றன. அவை என்னை ஒன்றுமே செய்யா. ஏனென்றால் நான் அவற்றுக்கு தோழன். முதலையரக்கர்கள் அவர்கள். ஆகவே அரசகுமாரர்களை ஒன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் கரிய அரக்கர்கள் இந்த அரண்மனைக்குள் வந்தால் பாய்ந்து கடித்து...” என்றபின் பற்களை நரநரவென்று கடிப்பது போல காட்டி “அப்படியே ஊனை கவ்வி குருதியை உறிஞ்சி...” என்றான்.

அவன் உடலில் பூசுவதற்கான நறுமணத்தைலத்துடன் வந்த முதியசேடி சபரி “பார்ப்பதற்குத்தான் இப்படி எலிக்குஞ்சு போலிருக்கிறார். எந்நேரமும் வாள் உதிரம் ஊன் இதுதான் நினைப்பு” என்றாள். “சிறு துளியாக இருந்தாலும் உலகையே உண்டுவிடவேண்டுமென்றுதான் நெருப்பு துடிக்கிறது என்பார்கள்” என்றாள் சுபகை. சுஜயன் அவளையே பார்த்து “இதோ இவள் அரக்கி! வடக்கே இமயமலையில் உள்ள அரக்கமலை என்ற மலையிலிருந்து வருபவள். குழந்தைகளை கொண்டு சென்று கொன்று குருதி குடிப்பாள். ஊனை தின்பாள். கடித்துக்கடித்து...” என்றபின் கையை தூக்கி “நான் வாளை உருவி இவள் தலையை வெட்டி...” என்றான்.

“வியப்பாக இருக்கிறதடி. இப்பருவத்தில் அன்பையோ அழகையோ உளம் கொண்ட ஒரு மைந்தரைக்கூட நான் பார்த்ததில்லை. அத்தனை பேர் மனத்திலும் வாள் மட்டுமே உள்ளது” என்றாள் முதியவள். “இந்த சிற்றுடலுக்குள் இருந்து உடல்அளிக்கும் எல்லைகளைக் கடந்து செல்ல துடிக்கிறது தொல் புகழ் கொண்ட குருகுலத்தின் குருதி” என்றபடி சுபகை நறு நெய்யை விரல்களால் குழைத்து சுஜயனின் தோள்களில் பூசினாள். “மெல்லிய தோள்கள். நேற்றுதான் என் கைகளில் பிறந்து வந்தார். அப்போதிருந்தபடியே இருப்பது போல் தோன்றுகிறது. புயங்களோ விரல்களோ எதுவுமே வளரவில்லை” என்றாள் சேடி. “நானும் அந்த மாயத்தைதான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் சுபகை. “முதற்பார்வையில் அய்யோ எவ்வளவு வளர்ந்துவிட்டார் என்றும், கையோடு எடுத்து அணைத்து கொண்டுவரும்போது வளரவேயில்லை அவ்வண்ணமே இருக்கிறாரே என்றும் மாறி மாறி தோன்றுவதுதான் என்ன!” என்றாள்.

சுஜயன் கைநீட்டி காட்டி “நான் வளர்ந்துவிட்டேன்” என்றான். “என்னால் புரவியில் ஏறமுடியும்... பெரிய வெண்புரவியில்...” சுபகை சிரித்து “ஆமாம். இப்போது போனால் ஏழு இளவரசிகளை கொய்து புரவியிலேற்றி கொண்டுவந்துவிடுவீர்கள்” என்றாள். “ஏழு இளவரசிகள்!” என்றபடி சுஜயன் பாய்ந்து சுபகையின் தோள்களை பிடித்தான். “ஏழு இளவரசிகள்! ஏழு ஏழு!” என்று திக்கினான். முதியவள் வெந்நீரில் கையை விட்டு பதம் பார்த்தபடி “இவர்களுக்கெல்லாம் புரவியும் பெண்களும் பிறப்பிலேயே உடன் அளிக்கப்பட்டுவிடுகின்றன” என்றாள். உதட்டில் கைவைத்து “பேசாதே” என்று சொல்லி திரும்பி அவள் தலையை கையால் அடித்துவிட்டு சுஜயன் சுபகையின் மேலாடையை பற்றி இழுத்தான். அது சரிய அவளுடைய பெரிய முலைகள் வெளித்தெரிந்தன. அவன் திகைத்து அதைப்பார்த்தபடி பின்னால் சென்றான். “அஞ்சிவிட்டார்” என்று கிழவி சிரித்தாள்.

சுபகை மேலாடையை எடுத்து நன்றாக சுற்றிக்கொண்டு சிரித்தபடி “அஞ்சிவிட்டீர்களா இளவரசே?” என்றாள். “அவ்வளவு பெரியது” என்றான் சுஜயன். பிறகு கைசுட்டி “அது குழந்தையா?” என்றான். “எது?” என்றாள் சுபகை. அவள் முலையை தன் கையால் தொட்டு “இது சின்னக்குழந்தையா?” என்றான். “அரிய கற்பனை” என்று சொல்லி கிழவி நகைத்தாள். சுபகை அவனை அள்ளி வெந்நீருக்குள் ஆழ்த்தி வைத்தபடி “காலை தோறும் படுக்கையை நனைக்கிறாரென்று இப்போதுதான் செவிலி புலம்பிவிட்டு சென்றாள்” என்றாள். “படுக்கையை நனைக்க நீங்கள் என்ன சிறுமியா?” என்றாள் முதியவள். “என் நெஞ்சில் அவ்வளவு பெரிய வாளை செருகி... நிறைய குருதி. சூடான குருதி. இதோ இந்தத் தண்ணீர் போல சூடான குருதி” என்றான் சுஜயன்.

“குருதியா?” என்று புருவம் சுளித்தாள் கிழவி. சுபகை “எத்தனை கதைகளை மாற்றி சொன்னாலும் இது போன்று ஒரு விளக்கத்தை சொல்லிவிட்டாரென்றால் அதிலிருந்து விலகுவதே இல்லை. எந்தத் துயிலில் எழுப்பிக் கேட்டாலும் அது குருதிதான், சிறுநீரில்லை என்று சொல்வார்” என்று சிரித்தாள். “அது அவர் சொல்வதல்லடி, அப்படியே உண்மையென்று நம்பிவிடுவது. அதன்பின் அவரே நினைத்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியாது” என்றாள் கிழவி. “இச்சிறுநீர் பழக்கம் குருகுலத்து இளைஞர்கள் வேறெவருக்காவது இருந்திருக்கிறதா?” என்றாள் சுபகை.

“குருகுலத்திலா? இருந்திருக்கும். யாரறிவார்? செவிலியர் சொல்லும் கதைகளை சூதர்கள் எழுதுகிறார்களா என்ன? இவர்கள் மகளிரறைவிட்டு வாளேந்தி போர்க்களம் கண்டபிறகுதான் சூதர்களின் கதைகளே தொடங்குகின்றன. அக்கதைகளும் ஒன்றுடனொன்று மாறுபடுவதில்லை. மண் வெல்லுதல் பெண் கொள்ளுதல் களம் நின்று போரிடுதல் குருதியாடி வெல்லுதல்... அவ்வளவுதான். ஷத்ரியர்கள் தங்களுக்கென வாழ்க்கையற்றவர்கள். அவர்களின் வாழ்க்கையை முன்னரே சூதர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அதை உரிய முறையில் நடித்துக் கொடுத்துவிட்டு விண்மீளும் பொறுப்பு மட்டுமே அவர்களுக்குள்ளது” என்றாள் கிழவி.

இளவெந்நீர்த் தொட்டியிலிருந்து சுஜயனைத் தூக்கி பீடத்தில் நிறுத்தினாள் சுபகை. அவன் உடலிலிருந்து வாழைத்தண்டில் மழைபோல் நீர் வழிந்தது. அவனது மெலிந்த இரு கைகளையும் சேர்த்து பற்றி சிறு பண்டியோடு சேர்த்து அழுத்தியபடி “துடைத்து நறுஞ்சுண்ணமிட்டு முடிப்பதுவரை வாய் அசையாமல் இருக்கவேண்டும். தெரிகிறதா?” என்றாள். “வாய் அசையாமல் எப்படி பேச முடியும்?” என்றான் சுஜயன். “பேசாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்” என்றாள். “பேசாமல் இருந்தால் இந்தப் பகுதியில் வரும் கழுகுகள் நான் இருப்பது தெரியாமல் கடந்து போய்விடும் அல்லவா?” என்றான் சுஜயன். “ஆரம்பித்துவிட்டார். இனி அவ்வளவுதான்” என்றாள் முதியவள்.

“கழுகுகளுக்கு நான் இருப்பது தெரிந்தால்தான் நாங்கள் போர் புரியமுடியும். நானும் கழுகுகளும் போர் புரியாவிட்டால் கழுகுகள் நேராகச் சென்று அரண்மனை மேல் இறங்கி அங்கிருக்கக்கூடிய வீரர்களை வாழைப்பழத்தை தின்பது போல் தின்றுவிடும்...” என்றான் சுஜயன். “இவரை பேசவைப்பதற்கு சிறந்தவழி பேசக்கூடாது என்று சொல்வதுதான்” என்று சிரித்தாள் முதியவள். “இளவரசே, நறுஞ்சுண்ணம் வாய்க்குள் போய்விடும்... வாயை மூடுங்கள்” என்றாள் சுபகை. “வாய்க்குள்… வாய்க்குள்... வாய்க்குள்...” என்று மூன்று முறை சொல்லி கையைத்தூக்கி வாயை சற்று நேரம் திறந்து வைத்துவிட்டபின் துப்பியபடி “வாய்க்குள் நறுஞ்சுண்ணம் போனால் என்ன?” என்றான் சுஜயன். “ஒன்றுமில்லை, வெண்ணைதின்ற கண்ணன் போலிருப்பீர்கள்.” “கண்ணன் ஏன் வெண்ணை தின்றான்?” “சுண்ணம் என்று நினைத்து தின்றிருப்பான்...” அவன் சித்தம் அச்சொற்களில் திகைத்து நின்றுவிட்டது. விழிகள் மட்டும் உருண்டன.

அவன் உடலை மெல்லிய பட்டுத்துணியால் துடைத்து ஈரம் போகச் செய்தபின் பொற்கிண்ணத்திலிருந்த சந்தனப் பொடி கலந்த நறுஞ்சுண்ணத்தை மென்பஞ்சால் தொட்டு அவன் அக்குள்களிலும் கால் இடுக்குகளிலும் ஒற்றினாள். அவன் கூச்சத்தில் சிரித்தபடி துள்ளி விலக அவள் அவனைப் பிடித்து இழுத்தாள். அவன் பாய்ந்து அவள் மேல் ஏறி கழுத்தை கைகளால் சுற்றிக்கொண்டு அவள் முலைகளை கால்களால் சுற்றிக் கொண்டான். "சுண்ணமிட்டுக்கொண்டது நீயா அவரா என்று கேட்கப்போகிறார்கள்” என்றாள் முதியவள். "கன்றுக்குட்டிக்கு மூக்குக் கயிறிடுவது போன்றது இவரை சுண்ணமிட்டு சீர் செய்வது...” என்றாள் சுபகை. சுஜயன் பிடியை மேலும் இறுக்கியபடி "இப்படித்தான் நான் மத யானையை அடக்குவேன்” என்றான். "அய்யோடி... விழுந்துவிடுவேன்...” என்றாள் சுபகை.

முதியவள் வந்து அவனை இடை பற்றி இழுத்தாள். அவன் இறுகப்பற்றியபடி "மதயானை! அது துதிக்கையைத் தூக்கி பிளிறும்... அதன் கொம்புகளை இப்படியே பிடித்து...” என்று திரும்பி கைகளை விரித்ததும் அவள் அவனை இழுத்து பிரித்து மீண்டும் பீடத்தில் நிறுத்தினாள். "மதயானையை அடக்குங்கள். ஆனால் விடியற்காலையில் ஏன் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறீர்கள்?” என்றாள் கிழவி. "நான்... குருதி... என்னுடைய நெஞ்சிலிருந்து நிறைய குருதி...” என்று அவன் மறுபடியும் ஆரம்பித்தான். "எப்படி தூக்கிப் போட்டாலும் பூனை சரியாக நான்கு கால்களில்தான் விழும்” என்றாள் முதியவள் சிரித்தபடி.

"இவர் இப்படி படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்கு என்னதான் வழி?” என்று சுண்ணமிட்டபடியே சுபகை கேட்டாள். "வளர்வது ஒன்றுதான் வழி” என்றாள் கிழவி. "அதுதான் வளரமாட்டேன் என்கிறாரே. என் கையளவு கூட இல்லை” என்றாள் சுபகை. "உன் கையளவு ஆகும்போது இவர் நேராக வாளேந்தி களத்திற்கே சென்று விடலாம்” என்றாள் கிழவி. சுபகை வெடித்துச் சிரித்தபடி "உனக்கென்ன, என்னவேண்டுமென்றாலும் சொல்வாய். நான் இளவயதில் எப்படி இருந்தேன் தெரியுமா?” என்றாள். "எப்படி இருந்தாய்? நான்குமுலை வைத்திருந்தாயா?” என்றாள் கிழவி. "இருந்ததே போதும்... அதற்கே ஆண்கள் சுற்றிவந்தார்கள்.” "எத்தனை ஆண்கள்?” என்றாள் முதியவள். "எண்ணிக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவர் வந்தார். அவர் வந்தால் பாரதவர்ஷத்தின் ஆண்மகன்கள் அனைவரும் வந்ததுபோல.”

"அப்படியாடி?” என்று கிழவி எழுந்து அருகே வந்தாள். "உண்மையா சொல்கிறாய்?” சுபகை "ஏன் பொய் சொல்லவேண்டும்? எவரிடம் வேண்டுமென்றாலும் கேட்டுப்பார்” என்றாள். "எப்போது?” என்றாள் கிழவி. "ஒரே ஒருமுறை...” கிழவி “உண்மையை சொல்” என்றாள். "உண்மைதான்... ஒரே ஒருமுறை...” என்றாள் சுபகை. "அன்று நான் அரண்மனை இடைநாழியில் நடந்து சென்றேன். என்னெதிரே இளைய பாண்டவர் வந்தார்” என்றாள். கிழவி சிரித்தபடி "இளைய பாண்டவரா? அவ்வளவுதான்! பிறகு?” என்றாள். "நீ சொன்னதுதான், அவ்வளவுதான்” என்று சுபகை சிரித்தாள். "உன்னை இடை வளைத்து தூக்கி புரவியில் ஏற்றிக் கொண்டாரா?” என்றாள் கிழவி.

"இல்லை. என் அருகே வந்து கண்களை நோக்கி என் பெயரென்ன என்று கேட்டார்” என்று சிறிய பற்களைக்காட்டிச் சிரித்தபடி சுபகை சொன்னாள். “எவ்வளவு ஆழமான வினா! நீ நாணம் கொண்டு சொல்மறந்திருப்பாயே” என்றாள் கிழவி. "உண்மையிலேயே எனக்கு என் பெயரே நினைவுக்கு வரவில்லை. குடீரை என்று என் குலப்பெயரை சொன்னேன். உடனே பதறி நாக்கை கடித்துக்கொண்டு அய்யய்யோ என்றேன். எனக்கு மட்டுமேயானதுபோன்ற புன்னகையுடன் என்னருகே குனிந்து என்ன என்றார். நான் தலைகுனிந்து நின்றேன். சொல் என்றார். என் பெயரை சொன்னேன். அதற்குள் எனக்கு முகம் சிவந்து உடல் வியர்த்துவிட்டது. அவரது பார்வை என் முகத்திலும் மார்புகளிலுமாக இருந்ததை கண்டேன்.”

“இப்போதும் பாதி ஆண்களின் பார்வை உன்மார்பில்தான் இருக்கிறது” என்றாள் முதியவள். “அன்றைக்கு நான் சிற்பம் போலிருப்பேன்” என்றாள் சுபகை. “பேரை சொல்லிவிட்டு அங்கேயே நின்றேன். அவர் கடந்து சென்றுவிட்டார். எனக்கு கண்ணீர் வருமளவுக்கு ஏமாற்றம் வந்தது. என்னிடம் அவர் இனியன எவற்றையோ சொல்வாரென்று எண்ணியிருந்தேன். உண்மையில் அங்கே அவர் விழிமுன் நிற்பதற்காக பல்லாயிரம் முறை திட்டமிட்டிருந்தேன். அத்திட்டங்களை பல்லாயிரம் முறை நடித்திருந்தேன். ஒவ்வொரு நுணுக்கமாக எண்ணி எண்ணி கோத்து அதை அமைத்து அச்சத்தால் தவிர்த்துக் கொண்டிருந்தேன். அன்று ஏதோ ஒரு துணிவில் எதிரே சென்றுவிட்டேன்... அவர் எதிரே வருவதை அந்த இடைநாழியே அறிந்திருந்தது. யாழ்தந்திகள் போல தூண்கள் அதிர்ந்தன. முரசுத்தோல் போல தரை அதிர்ந்தது...”

“இங்குள்ள அத்தனை இளம்பெண்களையும் போல உடல் பூத்து முலை எழுந்த நாள் முதலே நானும் அவரைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். அவர் விழிகளுக்கு உகந்தவளாவேனா என்று என்னையே மதிப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் யாதவ அரசியை பார்த்துவிட்டு அவர் முதல்மாளிகை முற்றத்துக்குச் செல்லும்போது மான்கண் சாளரம் வழியாக நான் பார்ப்பேன். இந்த மகளிர்மாளிகையே பலநூறு விழிகளாக மாறி அவரை பார்த்துக்கொண்டிருப்பதை நான் அறிவேன். பலநூறு நெஞ்சங்கள் ஏங்கி நீள்மூச்சிடும். பலநூறு முலைகள் விம்மும். ஆயினும் என் விழியும் என் மூச்சும் வேறுபட்டவை என்றே நான் எண்ணினேன். என்னை நேரில் அவர் காண்பாரென்றால் அக்கணமே அடையாளம் கண்டுகொள்வார். மூலிகை தேடி காடு புகுந்த மருத்துவன் போல கண்டடைதலின் உவகையுடன் என்னை எடுத்துக் கொள்வார். அருமலர் கொய்த ஆயன் போல தன் குழல் கற்றையில் என்னை சூடிக்கொள்வார் என்று கற்பனை செய்தேன்.”

“ஒன்றும் நிகழவில்லை. அவர் கடந்து செல்வதை நோக்கிக் கொண்டிருந்தேன். நாண் பூட்டப்பட்ட வில் போன்ற உடல். நீண்ட கருங்குழல் தோள்களில் அலையடித்தது. எத்தனை சிறிய இடை என்று நான் எண்ணினேன். எத்தனை மெல்லிய கைகள். இறுகிய சிறிய தோள்கள். அவர் உடலில் ஒரு தசைகூட மிகையாக இருக்காது என்று தோன்றியது. காற்றில் கை விரித்து பறவை போல் சென்றுவிடக்கூடும் அவர். முதியவளே, நீ பார்த்திருக்கிறாயா? விலங்குகளில் கொழுத்தவை உண்டு. வான்பறவைகள் எப்போதுமே சீருடல் கொண்டவை.”

“பிறகென்ன ஆயிற்று?” என்றாள் முதியவள். “அவர் சென்றதும் விழி நனைந்து ஏங்கி என் வாழ்க்கை அங்கே முடிந்துவிட்டது என்று நினைத்தேன். எண்ணி எண்ணி நான் வணங்கிய தெய்வம் என்னை ஏற்கவில்லை. எனக்கென நான் எண்ணியிருந்த தனித்தன்மைகள் எதுவும் அவர் விழிகளுக்கு தோன்றவில்லை. அவர் விழி வழியாகவே நான் என்னை சமைத்திருந்தேன் என்பதனால் நான் ஏந்தியிருந்தவை எல்லாம் வெறும் கனவே என்று தோன்றியது. முதியவளே, அத்தூணிலிருந்து இடைநாழியைக் கடந்து படிகளில் ஏறி என் அறைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் நான் பயணம் செய்தேன். என் ஒவ்வொரு காலடியும் ஒரு பெரும்சுமையென அழுத்தியது.”

“அறைக்குள் வந்தபோது அந்த மாளிகையையே சுமந்து கொண்டிருப்பதாக எண்ணினேன். படுக்கையில் விழுந்து சேக்கையில் முகம் புதைத்து கண்ணீர் விட்டு அழுதேன். எவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத அழுகை ஒன்றுள்ளதல்லவா? காதல் ஏற்கப்படாத பெண்ணின் கண்ணீர் அது. ஆண்களுக்கு ஆயிரம் உலகங்கள். பெண்களுக்கு காதல்கொண்ட ஆணன்றி வேறுலகம் ஏது? அவர் ஏற்கவில்லை என்றால் பிறிதென ஒன்றுமில்லை” சுபகை சொன்னாள். “அன்றிரவெல்லாம் இல்லாமல் ஆவதைப் பற்றி எண்ணிக்கொண்டே என் அறையில் இருந்தேன். எழுந்து ஓடி அவ்விருளில் கலந்து மறைந்துவிட விரும்பினேன். கங்கையில் குதித்து ஒழுகி கடலை அடைந்துவிடவேண்டுமென்று எண்ணினேன். ஒருவர் நினைவிலும் எஞ்சாமல் முற்றிலும் மறைந்துவிடவேண்டுமென்று ஏங்கினேன்.”

“எத்தனை எண்ணங்கள்! ஓரிரவு துயில்நீப்பதென்றால் ஒரு முழுவாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து முடிப்பதென்றல்லவா பொருள்? ஒவ்வொரு கணமாக காலத்தை அறிந்தேன். அப்போது மலைகளை எண்ணி இரக்கம் கொண்டேன். அவை அறியும் காலத்தின் பெருஞ்சுமையை மானுடர் அறிவதில்லை. எவ்வண்ணமேனும் சில ஆண்டுகளை உந்தி உருட்டினால் இறந்து மண்ணில் மறைந்துவிட முடியும். மலைகள் காதல் கொண்டு புறக்கணிக்கப்படுமென்றால் அவை என்ன செய்யும்?” முதியவள் சிரித்து “இது உண்மையான காதல்தான், ஐயமே இல்லை” என்றாள். "உண்மையான காதல் மட்டுமே இத்தனை அரிய உளறல்களை நிகழ்த்தமுடியும்.”

“போ… நான் உன்னிடம் ஒன்றும் சொல்லப்போவதில்லை” என்றாள் சுபகை. “சொல்லடி, என் செல்லமல்லவா?” என்றாள் கிழவி. சுபகை சுஜயன் உடலில் சுண்ணமிட்டு முடித்தபின் வெண்பட்டால் மெல்ல ஒற்றி மிகைச்சுண்ணத்தை நீக்கினாள். அவன் கைகளைத் தூக்கி உடலை காட்டினான். சுபகை அவனை சிறிய பீடத்தில் கொண்டு சென்று அமர்த்தி அவன் குழலை நீட்டி குங்கிலியப்புகையை காட்டத்தொடங்கினாள். “சொல்! என்ன செய்தாய்?” என்றாள் கிழவி. அதை கேட்காமல் சுபகை தன்னுள் ஆழ்ந்திருந்தாள். அவள் முகத்தை ஏறிட்டு நோக்கி சுஜயன் நின்றான். “சொல்லடி” என்று அவள் தோளை உலுக்கினாள் முதியவள். சுபகை திகைத்து விழிதிருப்பி புன்னகைசெய்தாள்.

“மறுநாள் புலர்ந்தபோது மூடி வைத்த பால் தயிராகி பொங்கியிருப்பது போல அந்தக் காலையை உணர்ந்தேன். எனக்கு சுற்றும் பொழிந்து கொண்டிருந்த ஒளியைப்பார்த்து கண்கள் கூசின. என் முகம் வீங்கி இதழ்கள் தடித்திருந்தன. சுவையேதுமின்றி இருந்தது வாய்நீர். காய்ச்சல் கொண்டவள் போல் உடலெங்கும் களைப்பை உணர்ந்தபடி மெல்ல நடந்து முற்றத்திற்கு வந்தேன். இரவு முழுக்க அங்கெல்லாம் இருள் நிறைந்திருந்தது என்பதையே என்னால் எண்ணமுடியவில்லை. அவ்விருளெல்லாம் எப்படி வழிந்தோடி இத்தனை ஒளியாயிற்று என்று என் உள்ளம் வியந்தது. சூழ்ந்த பறவைகளின் ஒலிகளெல்லாம் நீருக்குள் கேட்பவை போல் அழுந்தி ஒலித்தன. என்னென்று தெரியாத எடைமிக்க எண்ணங்களால் ஆன நெஞ்சம். ஏனென்று அறியாமல் கண்கள் கசிய இளவிம்மலென அழுகை வந்து தொண்டையை முட்டிக் கொண்டிருந்தது. எங்கு செல்வேனென்று அறியாமல் முற்றத்தின் அருகே இடைநாழியில் நிரைவகுத்த பெருந்தூண்களின் அடியில் மறைந்தவளாக நெடுநேரம் அமர்ந்திருந்தேன்.”

“என்னைக் கடந்து சென்ற இளம்சேடி ஒருத்தி இயல்பாக என்னை நோக்கி சிரித்து என்னடி இளையவருக்காக காத்திருக்கிறாயா என்றாள். நெஞ்சில் ஓர் இரும்புக் குண்டு வந்து விழுந்தது போல் உணர்ந்தேன். என்னடி சொல்கிறாய் என்றேன். என்னிடம் ஒளிக்காதே, நேற்று இளையவர் உன்னிடம் பேசியதை இந்த அரண்மனையே அறியும் என்றாள். நெஞ்சு முரசறையும் ஒலியை அன்றி பிறிதெதையும் கேட்காமல் அவளை நோக்கி நின்றேன். இங்கே அத்தனை பேரும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இளையவர் உன்னை தேர்வு செய்துவிட்டாராமே என்றாள். இல்லையே என்றேன். என்னிடம் ஒளிக்காதே இங்கு அவர் அமரச்சொன்னாரா என்றாள். இல்லையடி நான் ஒளிந்து அமர்ந்திருக்கிறேன் என்றேன்.”

“எனக்குத்தெரியும். வாய் ஓயாமல் அவரைப்பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள் பெண்கள். அவரது விழிபட்டுவிட்டால் அனைத்தையும் உள்ளிழுத்து தங்களை ஒளித்துக் கொள்வார்கள். ஒரு போதும் பிறகு அவரைப்பற்றி பேச மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு அவள் திரும்பிச்சென்றாள். அவள் செல்வதை நோக்கி இருகைகளாலும் நெஞ்சை அழுத்தியபடி அங்கு நின்று ஏங்கி அழுதேன். எங்கும் கால் நிலைக்கவில்லை. எப்பொருளிலும் விழி பொருந்தவில்லை. படிகளில் ஏறினேன். எதற்கென்று வியந்து உடனே திரும்பி வந்தேன். இடைநாழிகள் தோறும் தூண்களைத் தொட்டபடி ஓடினேன். என்னை எங்காவது ஒளித்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றியது. மூலைகளில் சென்று பதுங்கியதுமே ஏன் இங்கு ஒளிந்திருக்கிறேன், அத்தனை பேரும் என்னை பார்க்க வேண்டுமென்று தோன்றியது. ஒவ்வொரு விழியாக நோக்கி அறிவீரா அறிவீரா என்று கேட்க வேண்டுமென்று எண்ணினேன்.”

“ஓடும்போதே நான் துள்ளுவதை அறிந்தேன். மகளிர் மாளிகைக்குள் சென்று சேடியர் பணியாற்றும் இடங்களுக்கெல்லாம் அலைந்தேன். என்னைப் பார்த்த ஒவ்வொருவரும் அதையே சொன்னார்கள். என்ன அம்புக்கு குறி வைத்துவிட்டாயா என்றார்கள். கோழிக்குஞ்சை பருந்து பார்த்துவிட்டதா என்றார்கள். கால்களற்ற நாகம் தேடிவந்துவிட்டதல்லவா என்றார்கள். எத்தனை சொற்களில் ஒரே வினா! அத்தனை கண்களிலும் இருந்தது பொறாமை என்றுணர்ந்தபோது ஒவ்வொரு கணமும் நான் மலர்ந்து கொண்டிருந்தேன். வெறும் சிரிப்பையே விடையென அளித்தேன். ஒவ்வொரு முறையும் அச்சிரிப்பு மாறுபட்டுக் கொண்டிருந்தது. பின்னர் தடையற்ற வெறும் உவகை மட்டுமென அது மாறியது.”

“அன்று இரவு நான் துயிலவில்லை. குளிர்ந்த கரிய மை போல என்னை சூழ்ந்திருந்தது இரவு. அரக்கில் சிக்கிய மின்மினிகள் போல விண்மீன்கள் அதில் ஒட்டியிருந்து துடித்தன. அறுபடாத ஒரு குழலோசை போல. உள்ளத்தை ஒற்றைச் சொல்லென ஓரிரவு முழுக்க உணர்வது பிறகெந்நாளும் எனக்கு வாய்த்ததில்லை. அது எனக்கு வீண் கற்பனை என்றிருக்கலாம், ஒரு போதும் நான் அவர் விழிகளால் மீண்டும் தொடப்படாது போகலாம், அதனாலென்ன? இவ்விரவினில் இங்கிருப்பவள் அவரது காதலி அல்லவா என்று எண்ணிக் கொண்டேன். அவ்வெண்ணத்தின் எழுச்சி தாளாது நெஞ்சைப் பற்றிக் கொண்டு இருளில் அழுதேன். முதியவளே, இருளுக்குள் எவருமே பார்க்கப்படாது விரியும் புன்னகைக்கும் உதிரும் கண்ணீருக்குமுள்ள பொருள் வேறெந்த மானுட உணர்வுகளுக்கும் உண்டா என்ன?”

“ஒரு கணமென கடந்து சென்றது அந்த இரவு. ஆம், இன்று நினைக்கும்போது ஒரு இமைப்புதான் அது என்று எண்ணுகிறேன். இமைப்பென்று சொல்வதே அதை உணரும் தருணத்துக்காகத்தான். உண்மையில் அதில் காலமே இல்லை. புலர்ந்தெழுந்தபோது தோலுரிக்கப்பட்ட கன்று போல குருதி வழிந்து வெளுத்துக் கிடந்தது காலை. அதைப்பார்க்க கண்கூசி திரும்ப என் அறைக்குள் புகுந்து கதவுகளை தாழிட்டுக் கொண்டேன். சாளரத் துளைகள் வழியாக வந்த ஒளி பகலை அறிவுறுத்தியது. கைக்கு சிக்கிய ஒவ்வொரு துணியையும் எடுத்து சாளரத்துளைகளை மூடிக் கொண்டேன். விரிசல்களை அடைத்தேன். முற்றிருளுக்குள் கண்களை மூடி அவ்விரவை திரும்ப நிகழ்த்த முயன்றேன். ஆனால் அது அவ்விரவாக இல்லை. அதற்கான பெருவிழைவொன்றே எஞ்சியது. அருகே வா என்று கை நீட்டி அழைக்கையில் அடம் பிடித்து விலகி நிற்கும் குழந்தை போன்று இருந்தது.”

“அப்போது என் கதவு தட்டப்பட்டது. கடும் சினத்துடன் என்னை அட்டை போல சுருட்டிக் கொண்டேன். என் ஆழத்திற்குள் நுழைய முயலும் அது யார்? அக்கணம் கதவைத் திறந்து ஒரு வாளை எடுத்து அவள் நெஞ்சில் பாய்ச்ச விழைந்தேன். பற்களை இறுகக் கடித்து கைகளை இறுக்கி என்னை அடக்கிக் கொண்டேன். சுபகை சுபகை என்று தோழி கதவை தட்டிக் கொண்டிருந்தாள். என் கழுத்தும் தோள்களும் அச்சம் கொண்டவைபோல புல்லரித்தன. இன்னும் சற்று நேரம், இன்னும் சற்று நேரம், இவள் கிளம்பி விடுவாளென்று எண்ணினேன். சுபகை உனக்கு இளைய பாண்டவரின் செய்தி வந்துள்ளதடி என்றாள் அவள்.”

“அச்சொல்லை நான் கேட்டேனா எண்ணிக் கொண்டேனா என்று அறியேன். மறுகணம் என் உடல் நடுங்கத்தொடங்கியது. முழங்காலில் முகம் புதைத்து விசும்பி அழத்தொடங்கினேன். அவ்வொலியை வெளியே நின்று கேட்ட தோழி கதவைத்திறடி உன்னை வசந்த மாளிகைக்கு அவர் அழைத்திருக்கிறார் என்றாள். அப்போதும் என்னால் எழ முடியவில்லை. என்னுள்ளிருந்து எழுந்து கதவைத் திறந்து காற்றென விரைந்து வசந்த மாளிகையை அடைந்த ஒருத்தியை அசைவற்ற உடலுடன் இங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சுபகை, நீ இன்றுமாலை அவரது வசந்தமாளிகைக்கு செல்லப்போகிறாய். மகளிர் மாளிகையே உன்னைப்பற்றி நகையாடிக் கொண்டிருக்கிறது. சேடியர் தலைவி உன்னை அழைத்து வரும்படி ஆணையிட்டாள். கிளம்பு என்றாள் தோழி.”

“என்னுடலை முழுச்சித்தத்தின் ஆற்றலாலும் உந்தி அசைத்து எழுந்து கைகளை சுவரில் ஊன்றி மெல்ல நடந்து சென்று தாழை விலக்கினேன். ஒளி என் முகத்தில் விழ கண்களை மூடிக்கொண்டு தலை குனிந்து தள்ளாடினேன். தோழி என் கைகளை பற்றிக்கொண்டு நீ வாழ்த்தப்பட்டவளானாய் என்றாள். நான் விழப்போனேன். இடைவளைத்து தன் தோளில் சேர்த்துக்கொண்டு இன்றிரவு உன்னை அவர் என்ன சொல்லி அழைத்தார் என்று மட்டும் என்னிடம் சொல் என்றாள். நான் தலையசைத்தேன். சேடியர்மாளிகையில் அத்தனை பெண்களும் அதையே கேட்டனர். தலைமைச்சேடி ஆணையிட்டே சொன்னாள். நான் நாணத்தால் கவிழ்ந்த தலையை தூக்கவேயில்லை.”

முதியவள் “சொல்! என்ன சொல்லி அழைத்தார்?” என்றாள். சுபகை சிரித்து “திரும்பி வந்ததும் அரண்மனையின் அத்தனை பெண்களும் என்னைச்சூழ்ந்து அதைத்தான் கேட்டார்கள். வசந்த மாளிகையில் இளையவர் இருந்தார். என் இடைவளைத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு வலக்கையால் கூந்தலைப்பற்றி இழுத்து முகத்தை மேலே தூக்கி விழிகளைப் பார்த்தபடி அப்பெயர் சொல்லி அழைத்தார். அதன் பின் என் இதழ்களில் முத்தமிட்டார்...” என்றாள். சிரித்தபடி அருகே வந்து “சொல்லடி, இனி என்ன? என்ன பெயர் அது?” என்றாள் முதியவள். “நான் எவரிடமும் சொல்லவேயில்லை. இம்மகளிர் மாளிகையின் ஒவ்வொரு பெண்ணும் அதை தனியாக என்னிடம் வந்து கேட்டாள். கெஞ்சியவர்கள் உண்டு. இன்றுவரை இன்னொருத்திக்கு நான் அதை உரைத்ததில்லை” என்றாள் சுபகை.

கிழவி சிரித்து “சிப்பிக்குள் முத்து” என்றாள். “ஆம். அதன் பிறகு பிறிதொரு ஆடவர் என்னை தொடக்கூடாது என்று எண்ணினேன். அந்த முத்தைச் சுற்றி வெறும் சிப்பியாக என்ன ஆக்கிக் கொண்டேன். ஓர் இரவுதான். அதன் பின் அவர் என்னை அழைக்கவில்லை, நான் செல்லவும் இல்லை” என்றாள் சுபகை. “வாழ்வெனப்படுவது வருடங்களா என்ன? ஓரிரவு என்று சொல்வதே மிகைதான். அப்பெயர் எழுந்து அவர் இதழில் திகழ்ந்த அந்த ஒரு கணம்தான் அது.” கிழவியின் கண்களில் இருந்த புன்னகை மறைந்தது. “ஆம்” என்றாள். “ஆண்களின் காமம் சென்று கொண்டே இருக்கிறதடி. பெண் எங்கோ ஓரிடத்தில் நிலைத்துவிடுகிறாள். அந்தக் கணத்திற்கு முன்னும் பின்னும் அவளுக்கு இல்லை” என்றாள்.

சுபகை பெருமூச்சுவிட்டாள். சுஜயன் “என்ன பெயர்?” என்றான். “அய்யோடி, இவர் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்றாள் கிழவி. “இது சிறு மகவு. இதற்கென்ன புரியப்போகிறது?” என்றாள் சுபகை. “புரியாதா என்ன? நீ அருகணையும்போதே உன் முலைகளை மட்டும்தான் அவர் பார்க்கிறார்” என்றாள் கிழவி. சுபகை “அது குழந்தையல்லவா?” என்றாள். “குழந்தையாயினும் ஆண்மகன் ஆண்மகன்தான். நீ சொல்வது அவருக்குப் புரிந்திராது. ஆனால் ஒவ்வொரு உணர்வும் உள்ளே சென்று பதிந்திருக்கும்” என்றாள் கிழவி. “அப்படியா? பதிந்ததா?” என்று சுஜயனின் விழிகளை நோக்கி சுபகை கேட்டாள். “என்ன பதிந்தது?” என்றாள். அவன் “நீ இளைய பாண்டவரை மணந்தாய்” என்றான். “அய்யோ! எவ்வளவு சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்!” என்று நெஞ்சில் கைவைத்தாள் சுபகை. முதியவள் “நான் சொன்னேனல்லவா?” என்றாள்.

சுஜயன் “நான் பெரிய வில் வைத்திருப்பேன். போர்க்களத்தில் அர்ஜுனரை தோற்கடிப்பேன்...” என்றான். சுபகை “ஆம். நீங்கள் தோற்கடிப்பீர்கள். ஆனால் அதற்கு நீங்கள் முதலில் வளரவேண்டும்” என்றாள். “வளரவேண்டுமென்றால் இப்போது நீங்கள் சென்று நல்ல ஆடைகளை அணிய வேண்டும். அடம் பிடிக்காமல் சேடியர் தரும் அத்தனை பாலுணவையும் சற்றும் மிச்சம் வைக்காமல் அருந்த வேண்டும்.” சுஜயன் “நான் வாளால்… வாளால் அவரை வெட்டி... குருதி...” என்று கையை நீட்டினான். அவன் கைகள் இழுத்துக்கொள்வதை அவள் பார்த்தாள். வாய் ஒருபக்கமாக கோணலாகி நுரை எழுந்தது. “இளவரசே” என கூவியபடி அவள் அவனை பற்றுவதற்குள் அவன் விழிகள் மேலே செருக மல்லாந்து விழுந்தான். வலக்கையும் காலும் இழுபட்டு அதிர உடல் வலிப்புகொண்டது.

பகுதி ஒன்று : கனவுத்திரை - 3

அஸ்தினபுரியில் இருந்து நாற்பது காதம் தொலைவில் கங்கைக் கரையின் குறுங்காட்டுக்குள் அமைந்திருந்தது மாலினியின் தவக்குடில். பெருநகரிலிருந்து கிளம்பி கங்கை படித்துறைக்கு வந்து, அங்கிருந்து கரையோரமாகவே செல்லும் சிறிய படகில் நீரொழுக்கிலேயே சென்று, கங்கைக்குள் நீட்டி நின்றிருந்த பாறை ஒன்றின்மேல் அமைக்கப்பட்டிருந்த சிறிய படகு மேடையை அடைந்து, கரையேறி அங்கிருந்து காலடிப் பாதை வழியாக சென்று அக்குடிலை அடையவேண்டும்.

சுபகையும் முஷ்ணையும் சுஜயனுடன் கருக்கிருட்டிலேயே கிளம்பிவிட்டனர். அவன் முந்தைய நாள் அந்தி முதலே பயணத்திற்கான உளநிலையில் இருந்தான். கையில் ஒரு சிறிய துணிப்பையுடன் வந்து “இருட்டிவிட்டது நாம் எப்போது கிளம்புகிறோம்? என் உடைவாள் எங்கே?” என்று கேட்டான். “படுத்து துயிலுங்கள் இளவரசே. நாம் காலையில்தான் கிளம்புகிறோம்” என்றாள் சுபகை. “காலையில் நாம் கிளம்பும்போது அரக்கர்கள் எதிரே வந்தால் என்ன செய்வது?” என்றான் சுஜயன். “அரக்கர்கள் ஒவ்வொருவரையாக கொன்று கொண்டே போவோம்” என்றாள் சுபகை.

முஷ்ணை பின்னால் தோல் பைகளில் ஆடைகளை எடுத்து அழுத்திக் கொண்டிருந்தாள். அவள் திரும்பிச் சிரித்து “பேன் கொல்வதைப் பற்றி சொல்கிறீர்களா?” என்றாள். “போடி, என் வீரத்திருமகன் எவ்வளவு களங்களை காணப்போகிறாரென்று நீ என்ன கண்டாய்” என்றாள் சுபகை. “நான் அத்தனை பேரையும் கொல்வேன். ஆயிரம் அரக்கர்களை கொல்வேன்.” அவன் தன் இரு கைகளையும் விரித்து “நான் ஏழு அரக்கர்களை கொல்வேன்” என்றான். “ஆயிரத்தைவிட ஏழு பெரிய எண்ணென்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்” என்றாள் முஷ்ணை. “உனக்கு எப்போதும் என் இளவரசரைப் பார்த்தால் கேலிதான். அவரை என்னவென்று நினைத்தாய்? ஆலமரம் கூடத்தான் விதையில் சிறிதாக இருக்கிறது…” என்றபின் அவனிடம் குனிந்து “இல்லையா இளவரசே?” என்றாள்.

“நான் ஆலமரத்தை… ஆலமரத்தை ஒவ்வொரு கிளையாக வெட்டுவேன்” என்றான் சுஜயன். “ஒவ்வொரு கிளையாக வெட்டியபடியே படுத்துத் தூங்குங்கள். காலையில் உங்களை கூட்டிச் செல்கிறேன்” என்றாள் சுபகை. “நான் இப்போதே கிளம்புவேன். எனது தேர்கள் எங்கே?” என்று சொன்னபின் சுஜயன் ஓடிச்சென்று மஞ்சத்தில் கிடந்த தனது மேலாடையை எடுத்துக் கொண்டான். “மேலாடை எதற்கு?” என்றாள் முஷ்ணை. “இதை வைத்து நான் அரக்கர்களின் கண்களை கட்டுவேன்” என்றான் சுஜயன். சுபகை அவனை தூக்கிச் சென்று படுக்கையில் படுக்கவைத்து முதுகைத் தட்டியபடி “கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு அரக்கனாக எண்ணிக் கொண்டே இருப்பீர்களாம். ஆயிரம் அரக்கர்களை எண்ணி அதன் பிறகு ஏழு அரக்கர்களை எண்ணும்போது தூங்கிவிடுவீர்கள்” என்றாள்.

“நான் தூங்கும்போது கழுகுகள் வந்தால் என்ன செய்வது?” என்றான் சுஜயன். “ஒவ்வொரு கழுகாக நான் பிடித்து கயிற்றால் பிணைத்து இந்தச்சாளரத்தில் கட்டிப்போடுகிறேன். காலையில் நாம் அவற்றை வைத்து விளையாடலாம்” என்றாள் சுபகை. சுஜாதை அறைக்குள் வந்து “என்னடி சொல்கிறார்? இப்போது என்ன சிம்மங்களா? அரக்கர்களா? பாதாளநாகங்களா?” என்றாள். “எதையுமே அவரிடம் சொல்லவேண்டியதில்லை. அவரே நமக்கு சொல்கிறார்” என்றாள் சுபகை. சுஜயன் கைகளை ஊன்றி தலையைத் தூக்கி “ஏழு பாதாள நாகங்கள்! ஒவ்வொன்றும் அவ்வளவு நீளமானவை. அவற்றின் வால்…” என்றபின் வாலை விவரிப்பதற்கான உவமை கிடைக்காமல் “மிக நீளமான வால்” என்று சொன்னபடி தலையணையில் தலையை வைத்தான்.

அவன் குழலை நீவியபடி சுபகை “இத்தனை சிறிய உடம்பிற்குள் இருந்து படுத்தி வைப்பது எது?” என்றாள். “வேறென்ன? பல்லாயிரம் களம் கண்ட குருகுலத்து குருதி. அது இன்னொரு களத்தில் குருதி சிந்தினால் மட்டுமே அடங்கும்” என்றபின் தான் கொண்டு வந்திருந்த ஆடைப் பெட்டியை கீழே வைத்துவிட்டு சுஜாதை திரும்பினாள். “இதற்குள் இளவரசருக்கான ஆடைகள் இருக்கின்றன. காட்டுக்குள் அவர் எளிய தோலாடை மட்டும் அணிந்தால் போதும். அரச குலத்து ஆடையுடன் எங்கும் விளையாட விடக்கூடாது. அவருக்கு இன்னும் நீச்சல் தெரியாது. ஆகவே மலைச்சுனைகளைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்” என்றாள்.

“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் சுபகை. “நீ பார்த்துக் கொள்வாய். ஆனால் இந்த உடலை வைத்துக் கொண்டு இவருக்குப்பின்னால் ஓட உன்னால் முடியுமா?” என்றாள் சுஜாதை. “இவர் செல்லும் இடத்துக்கெல்லாம் முன்னரே என் உள்ளம் சென்று நின்றிருக்கும்” என்றாள் சுபகை. “பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது. கொண்டு சென்று பார். முயல்குட்டியை மேய விடுவதற்கு நிகரானது இவரை கொண்டு செல்வது. அது என்ன செய்யப்போகிறதென்று அதற்கே தெரியாது” என்றபின் சுஜாதை நீள்மூச்சுடன் அவனை பார்த்தாள்.

“இதுவரை வலிப்பு ஏதும் வந்ததில்லை…. இச்செய்தி வெளியே தெரிந்தால் அதன்பின் இவரை தூக்கி சூதர்களுடன் பின்கொட்டிலில் சேர்த்துவிடுவார்கள். ஷத்ரிய வாழ்க்கைக்கும் இளவரசநிலைக்கும் மீளவே முடியாது” என்றாள். “எங்கே வெளித்தெரியப்போகிறது?” என்றாள் சுபகை. சுஜாதை “நமக்கு நலம்சொன்ன நிமித்திகர்தான் யாதவ அரசிக்கும் அவைநிமித்திகர்…” என்றாள். “அவர் காலைப்பிடிக்காத குறையாக கெஞ்சியிருக்கிறேன். பார்ப்போம்.” சுபகை “அவர் சொல்லமாட்டார்” என்றாள். சுஜாதை மீண்டும் நீள்மூச்செறிந்தாள்.

சுஜயனுக்கு வலிப்பு வந்ததைக் கண்டு கால்தளர்ந்து அருகிலேயே சுபகையும் விழுந்துவிட்டாள். முதியவள் வெளியே ஓடிவந்து சேடிகளை அழைக்க அனைவரும் அவனை சூழ்ந்துகொண்டனர். ஒருத்தி சுஜயனை தூக்கப்போக “தொடாதீர்கள். உடல்தசைகளும் நரம்புகளும் முறுகியிருக்கும். இறுகப்பற்றினால் முறியக்கூடும்” என்றாள் மருத்துவமறிந்த சேடி ஒருத்தி. அவள் சுஜயனைத் தூக்கி அவன் மூக்குக்குள் நீர் செல்லாமல் பார்த்து கொண்டாள். அவன் கைகால்கள் மெல்ல அவிழ்ந்து தளர்ந்தன. விரல்கள் ஒவ்வொன்றாக விடுபட்டன. வாய் திறந்து நுரையுடன் மூச்சு சீரடைந்தது.

“எளிய வலிப்புதான்…” என்றாள் மருத்துவச்சேடி. “வலிப்புக்கு உண்மையில் மருந்து என ஏதுமில்லை. தலைக்குள் குடியேறிய தெய்வங்களின் ஆடல் அது.” கண்விழித்தபோது சுபகை “எங்கே? இளவரசர் எங்கே?” என்றுதான் கூவினாள். “அவர் நலமாக இருக்கிறார். துயின்றுகொண்டிருக்கிறார்” என்றாள் முதியவள். சுபகை கையூன்றி எழுந்து தூணைப்பற்றி நின்று அவிழ்ந்த தன் ஆடைகளை சீரமைத்துக்கொண்டு விரைந்து சுஜயனின் அறைக்குள் சென்றாள். அங்கே சிறுகட்டிலில் மரவுரியை தன்னுடன் அணைத்துக்கொண்டு துயின்ற அவனருகே குனிந்து நோக்கினாள். அவன் முகத்தில் எச்சிலின் உப்புவீச்சம் இருந்தது. அவள் குனிந்து அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். அவை பிசுக்குடன் ஒட்டின.

மாலையிலேயே மருத்துவர் சரபர் வந்தார். சுஜயனை அருகே அமரச்செய்து அவன் நாடியைப் பற்றி கண்மூடி ஊழ்கத்திலமர்ந்தார். அஞ்சியபடி வரமறுத்த சுஜயனை சுபகைதான் கெஞ்சி மன்றாடி கொண்டுவந்து அமரச்செய்திருந்தாள். “இது பூதம். குழந்தைகளை தின்பது” என்றான் சுஜயன் அவரைச் சுட்டிக்காட்டி. அவர் புன்னகை செய்ய “சிரிக்கிறது” என்றான். அவர் அவனை நோக்கி “நீங்கள் மாவீரர் சுஜயர்தானே?” என்றார். “ஆம், எப்படித்தெரியும்?” என்றான் சுஜயன். “சூதர்கள் பாடினார்கள். இப்படி அமர்க… தங்கள் நாடியை நான் பார்க்கவேண்டும். நான் வீரர்களுக்கான மருத்துவன்” என்றார். சுஜயன் அவர் அருகே அமர்ந்துகொண்டு கையை நீட்டி “நான் குருதிசிந்தி போரிடும்போது என் நாடி துடிக்கிறது” என்றான்.

ஊழ்கத்தில் அமர்ந்த அவரது விழிகளை அவன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். பிறகு “துயில்கிறாரா?” என்று சுபகையிடம் கேட்டான். அவள் “உஸ்” என்றாள். “துயில்கிறாரா?” என மெல்லிய குரலில் மீண்டும் கேட்டான். அவள் ஒன்றும் சொல்லாமை கண்டு “துயில் இல்லை. அவர் நினைக்கிறார்” என்றான். அவர் விழிகளைத் திறந்து “நரம்புகளில் புரவிக்கூட்டம் போல குளம்படிகள். உள்ளே உயிர் அருவி விழும் மரக்கிளை என பதறிக்கொண்டிருக்கிறது” என்றார். சுஜாதை “என்ன செய்கிறது?” என்றாள். “ஆனால் வாத பித்த கபங்கள் முற்றிலும் நிகர்நிலையில் உள்ளன. உடலில் எந்த நோயும் இல்லை.” என்றார் சரபர். “உள்ளம் கொள்ளாத எண்ணங்கள். காதல்கொண்ட பெண் இப்படி இருப்பாள் என்பார்கள். இவர் உடல் மிக நொய்மையானது. அவ்விசையை அது தாங்கவில்லை.”

“என்ன செய்வது மருத்துவரே?” என்றாள் சுஜாதை. “நிமித்திகர் ஒருவரை அழைத்து நாளும்கோளும் கணிக்கலாம். அவர் சொல்லக்கூடும் என்ன செய்யலாமென்று” என்றார். சுஜாதை நீள்மூச்சு விட்டாள். “நீங்களே நிமித்திகரையும் சொல்லிவிடுங்கள் மருத்துவரே” என்றாள் சுபகை. “அஸ்வகர் திறனுடையவர்” என்றார் மருத்துவர். அன்றே அஸ்வகர் வந்தார். முதிர்ந்து பழுத்த கூனுடலுடன் வந்த அவரை நோக்கி “கன்று வடிவ அரக்கன்” என்றான் சுஜயன். “அப்படி சொல்லக்கூடாது” என்றாள் சுபகை. “ஏன்?” என்று அவன் அவள் காதுக்குள் கேட்டான். “அவர் உங்களை தீச்சொல் இடுவார்.” அவன் “அவர் முனிவரா?” என்றான். “ஆம்” என்றாள் சுபகை. “முனிவர்களை வீரர்கள் வணங்கவேண்டும் அல்லவா?” என்றான் சுஜயன். “ஆம்” என்றாள் அவள்.

சுஜயன் அவனே சென்று அஸ்வகரை தாள்பணிந்தான். “அஸ்வக முனிவரை குருகுலத்து சுஜயன் வணங்குகிறேன்” என்று வீரர்களுக்குரிய முறையில் சொன்னான். அவர் அவனை தன் வெண்பூ விழுந்த கண்களால் நோக்கியபின் ஆடும்தலையுடன் “அமர்வதற்கு மஞ்சம் சித்தமாக உள்ளதா?” என்றார். “ஆம்” என்றாள் முஷ்ணை. அவர் புலித்தோல் மஞ்சத்தில் அமர்ந்தபின் தன் மாணவனை நோக்க அவன் தரையில் சுண்ணக்கட்டியால் கோடிழுத்து பன்னிருகட்ட வினாக்களத்தை வரைந்து அவற்றில் சோழிகளை பரப்பினான். அவர் சோழிகளை தன் விரல்வளைந்த கைகளால் அளைந்தும் குவித்தும் பிரித்தும் கணக்கிட்ட பின் “ஏதுமில்லை. பன்னிரு களங்களிலும் உகந்த கோள்களே உள்ளன” என்றார்.

“இந்த வலிப்பு…” என சுபகை சொல்லவர “இது அவர் உள்ளத்திற்கிணையாக உடல் வல்லமை கொள்ளாததனால் வருவது. நல்லுணவும் நற்சூழலும் தேவை. அதற்கு இந்தச் சிறிய அரண்மனைபோல தடை ஏதுமில்லை. அவர் காட்டுக்குச்சென்று தவக்குடில்களில் ஒன்றில் வாழட்டும். காட்டுயிர்களை அன்றாடம் காணட்டும். வெயிலும் காற்றும் ஏற்கட்டும். உடல் உறுதிகொள்ளும்” என்றார். “கூடவே மாவீரர்களின் கதைகளையும் அவர் கேட்கவேண்டும். அவர்களின் வெற்றியை மட்டுமல்ல தோல்வியையும் இடர்களையும் கூட. அச்சொற்கள் அவர் உள்ளத்தை உரமாக்கும்.”

சுபகை அவர் என்ன சொல்லப்போகிறார் என்று கண்கள் விரித்து நோக்கினாள். “அஸ்தினபுரியின் இளையோரெல்லாம் கார்த்தவீரியர் கதைகளையும் ரகுகுலராமன் கதைகளையும் கேட்டுத்தான் வளர்ந்தனர். இன்று அவர்களுக்கு இளையபாண்டவரின் கதைகளன்றி பிற எவையும் உவப்பதில்லை. இவரும் அர்ஜுனர் கதைகேட்டு அகம் மலரட்டும்” என்றார் அஸ்வகர். “இங்கேயே சூதர்களை வரச்சொல்லி…” என சுபகை தொடங்கவும் அவளை மறித்த சுஜாதை “இளையபாண்டவரை தூக்கி வளர்த்த செவிலி மாலினிதேவியின் தவக்குடில் கங்கைக்கரையோரமாக உள்ளது. அங்கே இவரை அனுப்பி மூன்றுமாதம் தங்கச்செய்கிறேன். அவரிடமே இளையபாண்டவரின் கதைகளைக் கேட்கட்டும். அச்சூழலும் நன்று. காடுகளுக்குரிய அனைத்தும் அங்குண்டு, அணுகுவதற்கும் அண்மை” என்றாள்.

“ஆம், அது நன்று” என்றார் அஸ்வகர். “சூதர் சொல்வதைவிட அன்னை சொல்வழியாக இவர் அக்கதைகளைக் கேட்பதே உகந்தது” என்றபின் புன்னகைத்து சுஜயனை நோக்கி “சரபர் இவரது நாடியைத் தொட்டபோது பெருங்காமம் கொண்டவரின் நாடியைப்போல் உணர்ந்ததாக என்னிடம் சொன்னார். இத்தனை சிறிய உடலை நான் எண்ணியிருக்கவே இல்லை” என்றார். சுபகை சிரித்தபடி “பெருங்காமமா?” என்றாள். “நாடி பொய்சொல்வதில்லை என்கிறார்” என்றார் அஸ்வகர். சுஜாதை “அது இவருடைய குருதியிலேயே இருக்கலாம். நாமென்ன கண்டோம்! நுரையடங்கி குருதி அமைதியானால் போதும்” என்றாள்.

“காலையில் கருக்கிருட்டுக்குள் கிளம்பியாகவேண்டும் என்பது ஸ்தானிகரின் ஆணை” என்றபடி சுஜாதை வெளியே சென்றாள். அரைத் துயிலில் விழிகள் சரிந்து கொண்டிருந்த சுஜயன் “முயலரக்கன்” என்று சொன்னான். “அவனை என் உடை வாளால்…” என்று சொன்னபின் சப்புக்கொட்டினான். சுபகை குனிந்து சற்றே வளைந்து மேலெழுந்த அவனது சிவந்த உதடுகளையும் உள்ளே தெரிந்த இரு வெண்பால்பற்களையும் பார்த்தாள். உதடுகளின் ஓரத்தில் தேனடையிலிருந்து தேன் என எச்சில் வழிந்தது. சுட்டு விரலால் அதை மெல்ல வழித்து தன் வாயில் வைத்து சப்பினாள். முஷ்ணை “என்ன செய்கிறாய்?” என்றாள். “தேன்” என்றாள் சுபகை.

முஷ்ணை “எனக்கு அச்சமாகத்தான் இருக்கிறது. இவரை எப்படி கொண்டுசென்று எப்படி திரும்ப கொண்டுவரப்போகிறோம் என்று” என்றாள். “இதெல்லாம் ஒரு நடிப்புதான் முஷ்ணை. இவர் ஒன்றுமறியாத குழந்தையுமில்லை. இவரைக் கட்டிக் காக்கும் பூதங்களுமில்லை நாம். என்ன செய்யவேண்டும் இவருக்குள் உறையும் தெய்வங்கள் அறியும். அவை இவரைச் சூழ்ந்து காக்கும். நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றாள் சுபகை. “அந்த நம்பிக்கைதான் என்னை ஆறுதல் படுத்த வேண்டும்” என்று சொன்ன முஷ்ணை தோல் பையை இறுக முடிந்து குறுபீடத்தில் வைத்துவிட்டு “நான் சென்று சற்று ஓய்வெடுக்கிறேன் காலையில் எழவேண்டுமே” என்றாள்.

“ஆமாம். நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன். இவர் எப்போது எழுவாரென்று தெரியவில்லை. எப்போதுமே நாணிழுத்து அம்பு பூட்டப்பட்ட வில் போலிருக்கிறார். சற்று தொட்டால் கூட வில் பறந்து எழுந்துவிடுகிறது” என்றாள். சுஜயன் ஆழ்ந்த தூக்கத்தில் “என் அம்புகள் எங்கே?” என்றான். சிரித்தபடி முஷ்ணை வெளியே சென்றாள். சுபகை மெல்ல இறங்கி சுஜயனின் மஞ்சத்திற்குக் கீழே வெறும் தரையில் தன் பருத்த உடலை அமைத்து கைகளை ஊன்றி மெல்ல படுத்துக் கொண்டாள். ஒரு கையால் சுஜயனின் கால்களை வருடிக் கொண்டே தன் எண்ணங்களை தொட்டுத்தொட்டுச் சென்று துயின்றுவிட்டாள்.

காலையில் சுஜாதை வந்து அவளை தட்டி எழுப்பிய போதுதான் விழித்தாள். அப்போது வெண்புரவி ஒன்றில் மலையடுக்குகள் வழியாக சென்று கொண்டிருந்தாள். அவளை தன் மடியில் வைத்து இடை வளைத்து இறுக அணைத்திருந்த அந்தக் கைகளை அவள் நன்கு அறிவாள். தசைகள் இறுகிய மெல்லிய கரங்கள். அம்புடன் அவை வில் விளையாடும்போது விழிகளால் தொட்டறிய முடியாத விரைவு கொண்டவை. கையூன்றி எழுந்தமர்ந்தபோது அவள் அக்கனவை உணர்ந்து ஒரு கணம் ஏங்கினாள். பின்பு அக்கனவின் தெளிவை எண்ணி தன்னுள் வியந்தாள். அதை வெறும் அகம் நிகழ்த்திக் கொண்டது என்று எண்ணுவதன் மடமை அவளை திகைக்கச்செய்தது.. அதிலிருந்த ஒவ்வொரு பருப்பொருளும் ஐம்புலன்களின் அறிதலாக இருந்தது. குளிர் காற்று, குளம்படியோசை, இளவெயில் தழைகளை வாட்டும் நறுமணம், அவன் கைகளில் வெம்மையும் உயிர்த் துடிப்பும் கொண்ட அணைப்பு.

எத்தனை காலமாயிருக்கும்! காலம் செல்லச் செல்ல அந்த ஒரு நாள் அவளுக்குள் முழு வாழ்க்கையாக விரிந்து அகன்று பரவியிருக்கிறது. பல்லாயிரம் அனுபவங்கள். அச்சங்களும் ஐயங்களும் உவகைகளும் உளஎழுச்சிகளுமாக அவனுடன் அவள் வாழ்ந்த முடிவற்ற தருணங்கள். நீள்மூச்சுடன் எழுந்து தன் குழலை சுழற்றி முடிந்து கொண்டாள். சுஜாதை உள்ளே வந்து “கிளம்பவில்லையா? நீராடி வந்தால் நேரம் சரியாக இருக்கும்” என்றாள். “ஆம்” என்றாள் சுபகை. “உன் நீள்மூச்சைக்கண்டால் கனவில் இளைய பாண்டவருடன் காதலாடியிருந்தாய் என்று தோன்றுகிறதே” என்றாள் சுஜாதை. “ஆம். அதற்கென்ன? ஒவ்வொரு நாளும் அவருடன்தான்” என்றாள் சுபகை. “உனக்குப் பித்து” என்றபின் சுஜாதை திரும்பி “முஷ்ணை எங்கே? அவளையும் நான்தான் போய் எழுப்ப வேண்டுமா?” என்றாள். “சேடியர் அறைக்குச் சென்று துயின்றிருப்பாள். அங்கு அவளுக்குத் தோழிகள் இருக்கிறார்கள்” என்றாள் சுபகை.

“நீங்கள் நீராடி வருவதற்குள் நான் இளவரசரை நீராட்டி ஆடை அணிவித்து வைக்கிறேன்” என்றாள். “நீராட்டவேண்டுமா?” என்று குனிந்து சுஜயனை நோக்கி சுபகை கேட்டாள். “இப்போது எழுப்பினால் துயில் கலைந்த எரிச்சலுடன் இருப்பார். எப்படியும் காட்டுக்குத்தானே செல்கிறோம். அங்கே நானே நீராட்டிக் கொள்கிறேனே.” சுஜாதை “முறைமை ஒன்றுள்ளது. நீராடாது அரண்மனை நீங்க இளவரசர்களுக்கு ஆணையில்லை” என்றாள். “எத்தனை சிறிய உடலாக இருந்தாலும் இது குருகுலத்துக் குருதி. அரசகுடியின் முறைமைகள் அனைத்தையும் கடைப்பிடித்தாகவேண்டும். கிளம்புகையில் கொம்பும் முரசும் ஒலித்தாக வேண்டும். நிமித்திகன் இளவரசர் அரண்மனை நீங்குவதை அறிவிக்க தேர்ப்பாகன் தலைவணங்கி வாழ்த்துக் கூறி வரவேற்க வேண்டும். கிளம்புகையில் வாழ்த்தொலிகளும் எழுந்து விடை கொடுக்க வேண்டும்” என்றாள் சுஜாதை.

சுபகை “இவர் ஒரு குழந்தை. அவ்வளவுதான். என் கைக்கும் உள்ளத்திற்கும் சிக்குவது அது மட்டுமே” என்றாள். “அனைத்துமே குழந்தைகள்தான். இத்தனை சடங்குகள் வழியாக இத்தனை சொற்கள் வழியாக ஓதி ஓதி அவற்றை அரசர்களாக்குகிறோம் கல்லை தெய்வமாக்குதல் போல” என்றபடி வெளியே சென்றாள் சுஜாதை. சுபகை மீண்டும் சுஜயனை நோக்கினாள். அவன் சுட்டுவிரலை கொக்கிபோல வைத்திருந்தான். உள்ளங்கால்கள் வெளிநோக்கி விரிந்து வளைந்திருந்தன.

சுபகை நீராடி ஆடை அணிந்து வருகையில் முஷ்ணை சுஜயனின் தலையில் மலர்மாலையை சுற்றிக் கொண்டிருந்தாள். நீராடி நறுஞ்சுண்ணமிட்ட உடலுடன் அவன் குறுபீடத்தில் உடல் ஒடுங்கி துயின்று கொண்டிருந்தான். சிறிய உதடுகளிலிருந்து எச்சில் வழிந்து அகல் விளக்கொளியில் மின்னியது. வெண்பட்டாடை இடையில் பாளைக் குருத்தின் படபடப்புடன் சுற்றப்பட்டிருந்தது. சுஜாதை உள்ளே வந்து “இப்போதுதான் நீராடி வந்தாயா? தேர்கள் சித்தமாகிவிட்டன. கிளம்பு” என்றாள். “இளவரசர் மறுபடியும் தூங்கி விட்டார்” என்றாள் முஷ்ணை. “அவரென்ன நீராடும்போதே தொட்டிக்குள் தூங்கிவிட்டார்” என்று சொன்ன சுஜாதை, அருகே வந்து குனிந்து அவன் முகத்தை பார்த்தாள். “சில சமயம் கவிழ்ந்து படுக்கத்தெரியாத கைக்குழந்தை என்று உளமயக்கு அளிக்கிறார்” என்றபின் அவனுடைய சிறிய கால்களை கையால் பற்றி தன் நெற்றியில் வைத்துக் கொண்டாள். பின்பு இரு உள்ளங்கால்களிலும் முத்தமிட்டு “சென்று வாருங்கள் இளவரசே! வாளேந்தும் வீரனாக திரும்புங்கள்” என்றாள்.

முஷ்ணை சுஜயனை மெல்ல தூக்கி தன் தோளில் சாய்த்துக் கொண்டாள். அவனுடைய கை சரிந்து தொங்கி ஆடியது. கன்னம் அழுந்த முகத்தை அவள் தோள் வளைவில் வைத்தபடி அவன் “வாள்?” என்றான். அவன் எச்சில் அவள் தோளில் வழிந்தது. அவள் சிரித்தபடி “உள்ளிருந்து திரவங்கள் வழிந்து கொண்டே இருக்கின்றன” என்றாள். சுஜாதை “பேச்சு போதும். இன்னும் பிந்தினால் ஸ்தானிகர் என்னைத்தான் சொல்வார்” என்றபின் வெளியே சென்றாள். சுபகை அறைக்குள் எட்டிப்பார்த்த இளம் சேடியிடம் “பொதிகள் அனைத்தும் தேரில் ஏறிவிட்டனவா?” என்றாள். ”ஆம் செவிலியன்னையே” என்றாள் சேடி. “செல்வோம்” என்றபின் சுபகை தன் சிறிய கால்களை எடுத்துவைத்து கைகளை ஆட்டி மெல்ல நடந்து சென்றாள்.

இடைநாழியின் எல்லையை அடைந்தபோதே மூச்சிரைக்கத் தொடங்கிவிட்டிருந்தாள். பின்னால் வந்த முஷ்ணை “இப்போதே மூச்சிரைக்கிறது. காட்டில் என்ன செய்யப்போகிறாய்?” என்றாள். “காடு வேறு இடம். அங்கு என் எடையில் பாதியை காற்று எடுத்துக் கொள்ளும்” என்றபடி கைப்பிடியைப் பற்றி சற்றே பக்கவாட்டில் சாய்ந்து ஒவ்வொரு படியாக காலெடுத்து வைத்து சுபகை கீழிறங்கினாள். சுஜயனை தோளிலிட்டு மெல்லத்தட்டியபடி முஷ்ணை தொடர்ந்து இறங்கி வந்தாள். அவர்களைப் பார்த்ததும் இடைநாழியில் நின்றிருந்த காவல் வீர்ர்கள் “குருகுலத்தோன்றல் வாழ்க! சுபாகுவின் மைந்தர் வாழ்க! நலம் சூழ்க!” என்று வாழ்த்தினர். அவ்வொலி கேட்டு தேரின் பாகன் திரும்பி நோக்க அவன் கையசைவில் கடிவாளம் இழுபட்டதனால் புரவிகள் குளம்புகளை தூக்கிவைத்து மணி குலுங்க தலையசைத்தன.

அரச முறைமைகளுடன் தேரிலேறிக் கொண்டதும் முஷ்ணை, ”அந்த தோலாடையை விரியுங்கள் இளவரசரை படுக்க வைத்து விடுவோம்” என்றாள். சுபகை விரித்த தோல் மேல் சுஜயனை படுக்க வைத்தாள் அவன் இரு கைகளையும் அறியேனென்ற முத்திரையுடன் விரித்தபடி வாய்திறந்து மல்லாந்து படுத்து துயின்றான் தேர் கிளம்பும் ஒலி எழுந்த போது முனகியபடி பாய்ந்து புரணடு அருகே இருந்த முஷ்ணையின் கால்களை பற்றிக் கொண்டான். சுபகை குனிந்து ”உள்ளே எத்தனை புரவிகள் போரிடுகின்றனவோ? யாரறிவார்கள்?”. சுஜயன் அவள் தொடையை இறுகப்பற்றியபடி பொருள் விளங்காது எதோ முனகினான். பின்பு “அம்மா” என்றான். சுபகை “அனைத்தையும் அடையும் இளவரசர்கள் இழப்பது” என்றாள்

முரசொலிகள் ஓய்ந்தன. புரவிகள் கல் சாலையில் குளம்புகளை ஓசையெழ வைத்து விரைவுகொள்ள சகடங்கள் அதிரும் ஒலியுடன் தேர் ஓடியது. சுஜயன் “யானைகள்” என்றான். “யானைகள்… நீரில்... படகில்..” என்று ஏதோ சொன்னான். அவன் உடலில் சிறு விதிர்ப்பு ஓடியது. தேரின் தோல் விரித்த பீடத்தின் மேல் வெம்மையான சிறுநீர் ஊறி வழியத்தொடங்கியது. சுபகை திரும்பி நோக்கி “கசிந்து விட்டார்” என்றாள்.

“இரண்டு வேளை” என்றாள் முஷ்ணை. “நள்ளிரவில் ஒரு முறை, விடியலில் ஒரு முறை.” தேருக்குள் வீசிய காற்றில் சிறுநீரின் மணம் சுழன்று கடந்து சென்றது. “நீ சற்று தூக்கு அவரை” என்றாள் சுபகை. முஷ்ணை அவனை மெல்ல தூக்க அவள் அவன் அணிந்திருந்த ஆடையை சுழற்றியெடுத்து கீழே வைத்துவிட்டு மரவுரியால சிறுநீரில் நனைந்திருந்த அவனுடைய மெலிந்த வெளிறிய கால்களை துடைத்தாள். சுஜயன் “குருதி” என்றான். “துயிலிலும் இதை மட்டும் மாற்றி சொல்லப்போவதில்லை. என்ன ஓர் உறுதி” என்றபடி சுபகை அவனுக்கு வெண்ணிற ஆடையை அணிவித்தாள். சிறுநீர் நனைந்த தோலாடையை எடுத்து அதற்குள் சிறுநீரில் ஊறிய பட்டாடையை வைத்து சுற்றிக்கட்டி ஒரு சிறு பைக்குள் வைத்துக் கொண்டாள். இன்னொரு தோலாடையை எடுத்து விரித்து அதில் சுஜயனை படுக்க வைத்தாள்.

சுஜயன் ஒருக்களித்து கட்டை விரலை வாய்க்குள் போட்டுக் கொண்டான். முஷ்ணை பெருமூச்சுடன் “ஒரு குழந்தை எத்தனை தனித்தது!” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றாள் சுபகை. “பெரியவர்கள் அனைவரும் ஒரே உலகில் வாழ்பவர்கள். சொற்களாலும் உணர்வுகளாலும் ஒன்றுடனொன்று பின்னப்பட்டு ஒற்றை கட்டுமானமாக ஆகிவிட்ட உலகு. குழந்தைகள் ஒவ்வொன்றும் தனி உலகில் வாழ்கின்றன. அங்கு அவர்களுக்குத் துணை என எவருமில்லை” என்றாள் முஷ்ணை. “ஆம். ஆனால் இவ்வுலகிலிருந்து அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்தும் அங்குள்ளன” என்றபின் குனிந்து சுஜயனை நோக்கி “வியப்புதான்! இத்தனை சிறிய உடலுக்குள் எவ்வளவு பெரிய உலகம்!” என்றாள்.

பகுதி ஒன்று : கனவுத்திரை - 4

மண் சாலையின் பள்ளங்களிலும் உருளைக் கற்களிலும் சகடங்கள் ஏறி இறங்க அதிர்ந்து சென்ற தேரில் சுஜயன் துயில் விழிக்காமலேயே சென்றான். ஒவ்வொரு அசைவுக்கும் அவனுள் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. “பறவைகள்” என்றான். அவனுள் சூழ்ந்து பறக்கும் பெருங்கழுகுகளை சுபகை கற்பனையில் விரிப்பதற்குள்ளேயே “மலையில் யானைகள்” என்றான். அச்சொற்கள் அவளை எண்ணமாக வந்தடைவதற்குள்ளேயே “அருவி” என்றான்.

சுபகை முஷ்ணையை நோக்கி “உள்ளே பல இளவரசர்களாக பிரிந்து பல உலகங்களை சமைத்துக்கொள்கிறார் என்று எண்ணுகிறேன்” என்றாள். முஷ்ணை அதற்குள் தூங்கி வழியத்தொடங்கிவிட்டிருந்தாள். தேரின் குடத்தின் மீது அச்சு உரசும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. சுபகை குனிந்து மலர் சூடிய சுஜயனின் குழலை தன் கையால் வருடிக் கொண்டு பாதையோரத்து பந்தத்தூண்களின் ஒளி அவன் முகத்தை கடந்து செல்வதை நோக்கிக் கொண்டிருந்தாள்.

படித்துறையை அடைந்த போதும் அவன் விழித்துக் கொள்ளவில்லை. துறைமுற்றத்தில் தேர் திரும்பி நின்றபோது துறைக்காவலர் வந்து வணங்கினர். சுபகை முஷ்ணையின் தொடையைத் தட்டி “விழித்துக்கொள்ளடி, துறைமேடை” என்றாள். முஷ்ணை எழுந்து கைகளால் வாயைத்துடைத்தபடி “எங்கே?” என்றாள். “வந்துவிட்டோம். குழந்தையை எடுத்துக் கொள்” என்றாள் சுபகை. அவள் சோம்பல் முறித்தபடி “இவ்வளவு தொலைவா?” என்றபின் "இன்னும் விடியவில்லையா?” என்றாள். “ஆம். ஆனால் விடிவெள்ளி முளைத்துவிட்டது” என்றாள் சுபகை. “நாம் சென்று சேரும்போது இளவெயிலாகிவிட்டிருக்கும்.” முஷ்ணை தன் ஆடையை இடையில் நன்றாகச்செருகி இரு கைகளாலும் குழலை நீவி பின்னால் கொண்டு சென்று கொண்டைக்குள் செருகினாள். அவள் வளையல்கள் ஒலித்தன. இளவரசனை இடை சுற்றித்தூக்கி தன் தோளில் பொருத்திக் கொண்டு ஒரு கையால் தேரின் தூணைப்பற்றி எழுந்தாள்.

சுஜயனின் ஆடை சரிந்து கீழே தொங்க சுபகை அதை எடுத்து முஷ்ணையின் இடையில் செருகினாள். படிகளில் கால் வைத்து முஷ்ணை இறங்கி நின்றாள். காவலர் தலைவன் தலைவணங்கி “குருகுலத்தோன்றல் வாழ்க! சுபாகுவின் மைந்தர் வாழ்க!” என வாழ்த்தி “படகுகள் சித்தமாகியுள்ளன” என்றான். இரு கைகளாலும் தூண்களைப்பற்றி எடை மிக்க உடலை உந்தி சுபகை எழுந்தபோது தேர் அசைந்தது. அவள் காலெடுத்து வைத்தபோது வலப்பக்க சகடம் ஓசையுடன் அழுந்தியது. படிகளில் மெல்ல கால் வைத்து இறங்கி கீழே நின்று தேரைப்பற்றியபடி தன் உடலை நிலைப்படுத்திக் கொண்டாள். “சற்று ஓய்வெடுத்துவிட்டு கிளம்பலாமா?” என்றாள் சுபகை. காவலன் “படகிலேயே ஓய்வெடுக்க முடியும் செவிலியே. படுக்கை அமைந்த படகுதான் அது. நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்றாள் சுபகை.

அஸ்தினபுரியின் படகுத்துறையில் பொதிப்படகுகள் நிரைவகுத்து பந்த ஒளியில் ஆடிக் கொண்டிருந்தன. துலாக்கள் அவற்றிலிருந்து பொதிகளை எடுத்து வானில் சுழற்றி கரைக்கு கொண்டுவந்தன. துலாசுழற்றும் வினைவலரின் கூவல்கள் கங்கைக்காற்றில் அலையலையாக கேட்டன. மையப் படகுத்துறையிலிருந்து வலப்பக்கமாக சரிந்துசென்ற சிறு பாதையின் எல்லையிலிருந்தது பயணப்படகுகளின் சிறுதுறை. மறுபக்கம் அம்பாதேவியின் ஆலயத்தில் அகல் விளக்கு சிறு முத்தென ஒளிவிட்டது. அதன் செவ்வொளியில் அம்பையின் வெள்ளி விழி பதிக்கப்பட்ட கரிய முகம் தெரிந்தது.

துயிலற்றவள் என்று சுபகை எண்ணிக் கொண்டாள். அதையே அக்கணம் எண்ணிக் கொண்டவள் போல முஷ்ணையும் “பெருஞ்சினத்துடன் இப்படித்துறையை பார்த்து அமர்ந்திருக்கிறாள் அன்னை என்று தோன்றுகிறது இல்லையா?” என்றாள். சுபகை ஒன்றும் சொல்லவில்லை. அம்பாதேவியின் ஆலயத்தருகே நிருதனின் சிற்றாலயத்தில் அவன் குலத்தவர் வைத்த மூன்று கல் அகல்கள் சிறு சுடருடன் மின்னிக் கொண்டிருந்தன. உள்ளே கை கூப்பிய நிலையில் கரிய சிலை தெரிந்தது. துறைக்காவலன் வந்து “செல்வோம்” என்றான். வண்டிகளிலிருந்து அவர்களுடைய பொதிகள் படகில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

காவலர்கள் ஐவர் படகில் ஏறி விற்களுடன் நிலை கொண்டனர். படகிலிருந்து கரைக்கு நீண்ட நடைபாலம் வழியாக முஷ்ணை சுஜயனுடன் உள்ளே சென்றாள். பாலத்தருகே வந்து சுபகை சற்று கால் அஞ்சி நின்றாள். படகிலிருந்து குகன் ஒருவன் ஒரு கழியை கரைக்கு நீட்ட கரையில் நின்ற வீரன் அதை பற்றிக்கொண்டான். அதை வலக்கையால் பற்றிக் கொண்டு மெல்ல காலெடுத்து வைத்து படகுக்குள் சென்றாள் சுபகை. ஆடும் படகுப் பரப்பை அவள் அடைந்தபோது உடல் சற்று நிலையழிய பதறி படகின் தூணை பற்றிக்கொண்டாள். “அமர்ந்து கொள்ளுங்கள் செவிலியே” என்றான் காவலன். அவள் கைகளால் இறுகப்பற்றியபடி மெல்ல காலெடுத்துச் சென்று படகில் போடப்படிருந்த மூங்கில் பீடத்தில் அமர்ந்து கொண்டாள். “இளவரசரை உள்ளே படுக்க வை” என்றாள்.

சுஜயன் முனகியபடி கால்களை நெளித்தான். கைகளைத்தூக்கி ஒன்று என்று சுட்டும்படி விரலை வைத்துக் கொண்டு வாயை சப்புக் கொட்டினான். அவன் ஏதோ சொல்லப்போகிறான் என்று தோன்றியது. ஆனால் சுட்டிய விரல் மெல்ல தழைய மீண்டும் துயிலில் ஆழ்ந்தான். முஷ்ணை உள்ளே சென்று படகின் அறையில் குறுமஞ்சத்தில் விரிக்கப்பட்டிருந்த தோல் பரப்பில் அவனை படுக்க வைத்தாள். நீர்ப்பரப்பிலிருந்து குளிர்காற்று அடித்துக் கொண்டிருந்தது. தோலாடையை எடுத்து அவன் உடலை போர்த்தினாள். அவன் உடலை சுருட்டியபடி முனகி மீண்டும் கால்களை அசைத்தான். “செல்வோம்” என்று துறைக்காவலன் சொல்ல அமரத்தில் அமர்ந்திருந்த குகன் கையசைத்தான்.

கயிறுகள் இழுபட்டு சுருண்டு கீழே விழுந்தன. பாய் மெல்ல சுருளவிழ்ந்து புடைத்து மேலெழுந்து படகு ஏதோ நினைவுக்கு வந்தது போல் அசைந்தது. கரையில் தரையில் சுற்றப்பட்டிருந்த வடங்களை எடுத்து சுழற்றி படகை நோக்கி வீசினான் துறை குகன். அவை பாம்புகள் சுருள்கொத்துகளாக வந்து விழுவது போல படகின் பரப்பில் வந்து விழுந்தன. கட்டவிழ்ந்ததும் நீரின் ஒழுக்கில் அசைந்து மிதந்த படகு பாயின் விசையை வாங்கி மெல்ல விரைவு கொண்டது. சிம்மம் நீரருந்தும் ஒலியுடன் அலைகள் படகின் விளிம்பை அறைந்தன. அலைகளில் ஏறி இறங்கி ஒழுக்கில் சென்று முழு விரைவைப் பெற்று முன் சென்றது படகு.

மாலினியின் குடில் அமைந்த காட்டில் படகுத் துறையாக அமைந்த பாறையில் கால் வைத்து ஏறுவதற்கான வெட்டுப் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் தாவி ஏறிய குகன் மேலே நின்று கை நீட்டி முஷ்ணையை மேலேற்றிக் கொண்டான். தோளில் சுஜயனுடன் அவள் கூர்நோக்கி காலெடுத்து வைத்து மேலே சென்றாள். படிகளின் அருகே வந்த சுபகை மேலே நோக்கி புன்னகைத்தாள். அங்கு நின்றிருந்த இரு குகர்களும் சிரித்துவிட்டனர். இருவர் அவள் இரு கைகளையும் பற்ற இன்னொரு குகன் அவள் பின்பக்கத்தை உந்தி மேலே தூக்க ஒவ்வொரு படியிலும் நின்று நின்று அவள் பாறைகளில் ஏறினாள். முஷ்ணையின் தோளில் விழித்தெழுந்து திரும்பிய சுஜயன் “யானை” என்று அவளை நோக்கி கை சுட்டி சொன்னான். குகர்களும் முஷ்ணையும் உரக்கச் சிரிக்க முகம் சிவந்த சுபகை “யானை அல்ல இளவரசே, ஐராவதம்” என்றாள். காவலர்கள் மீண்டும் சிரித்தனர்.

பாறை மேல் ஏறியதும் மூச்சிரைக்க இரு கைகளையும் இடையில் வைத்து நின்று சுபகை திரும்பி கீழே கங்கையில் ஆடிய படகை நோக்கினாள். “இன்னும் எவ்வளவு தொலைவு?” என்றாள். “அரை நாழிகை நடக்க வேண்டும்” என்றான் காவலன். “படகு திரும்பிப் போகிறதா?” என்றாள். “இல்லை செவிலியன்னையே. படகு எப்போதும் இங்கே இருக்க வேண்டுமென்பது ஆணை. நாங்கள் ஒரு சிறு குடில் கட்டி படகுடன் இங்கிருப்போம். தேவையெனும்போது ஒரு சொல் அனுப்பினால் படகு சித்தமாக இருக்கும்” என்றான் குகன். “படகுகளில் முதலைகள் ஏறினால் என்ன செய்வீர்கள்?” என்றான் சுஜயன். “சமைத்து சாப்பிடுவார்கள்” என்றாள் சுபகை. “முதலைகளையா?” என்றான் சுஜயன். “செல்வோம்” என்று ஆணையிட்ட சுபகை வியர்வைத் துளிகள் பனித்த வெண்ணிற உடலை மெல்ல அசைத்து நடந்தாள்.

முழங்கால் அளவு உயரமுள்ள பூச்செடிகள் மண்டிய அரைச் சதுப்பு நிலத்தில் நடந்து செல்வதற்காக தடிகளை அடுக்கி பாதை போட்டிருந்தார்கள். சில இடங்களில் தடிகள் சேற்றில் அழுந்தி முதலைகள் சப்புக் கொட்டும் ஒலியை எழுப்பின. தவளைகள் எழுந்து துள்ளி இலைகளில் அமர்ந்து ஊசலாடின. சுஜயன் “நான் பெரிய முதலையை அப்படியே தின்பேன்” என்றான். பாதை நோக்கி நடந்ததால் எவரும் அவனுக்கு விடையளிக்கவில்லை. அவன் திரும்பி அருகே நின்ற மரத்தின் இலையில் அமர்ந்திருந்த மிகச்சிறிய தவளை ஒன்றைக் காட்டி “அரக்கன்” என்றான். “எங்கே?” என்றாள் முஷ்ணை சற்று அஞ்சி. அவன் விரல்சுட்டிய இடத்தில். தவளையைப்பார்த்ததும் அடக்க மாட்டாமல் சிரித்துவிட்டாள். “அது பெரிய கண் உள்ள அரக்கன். அப்படியே தாவி…” என்று சுஜயன் தாவப்போக அவள் சற்று நிலை குலைந்தாள். காவலன் அவள் தோளை பற்றிக் கொண்டான்.

“அடியெண்ணி செல்ல வேண்டும் செவிலியே. இங்கு பாதை நிகர் நிலையற்றது” என்றான் காவலன். சுஜயன் “ஏன்?” என்றான். காவலன் ஒன்றும் சொல்லவில்லை. சுஜயன் “இங்கே அரக்கர்கள் வந்து பாதையை உடைக்கிறார்கள்” என்றான். “ஆரம்பித்துவிட்டார். இனி பகல் முழுக்க இதுதான்” என்றாள் முஷ்ணை. சுபகை “எல்லாவற்றுக்கும் அவரிடம் விளக்கம் உள்ளது” என்றாள். “எப்படித்தான் கண் விழித்த முதல் கணத்திலேயே அரக்கர்களும் தேவர்களும் கிளம்பி வருகிறார்களோ தெரியவில்லை” என்றாள் முஷ்ணை. “தேவர்கள் அரக்கர்களை வெட்டிக் கொல்வார்கள். குருதி...” என்று சொன்ன சுஜயன், தன் ஆடையை தொட்டுப்பார்த்து “குருதி இல்லை, புண் ஆறிவிட்டது” என்றான். பின்னால் ஒரு காவலனின் கை பற்றி மூச்சிரைக்க நடந்து வந்த சுபகை தன் ஆடையை முழங்கால் வரை தூக்கி மூச்சிரைக்க நின்று “குருதி நிறைந்த ஒரு தோலாடையையும் பட்டாடையையும் பைக்குள் வைத்திருக்கிறேன். காட்டுகிறேன்” என்றாள். “அது அரக்கனின் குருதி” என்று அவன் புருவத்தை தூக்கியபடி சொன்னான். சுட்டு விரலைக்காட்டி “ஏழு அரக்கர்கள்” என்றான்.

சற்று அடர்ந்த காட்டுக்குள் பாதை நுழைந்தது. இரு பக்க மரங்களும் மேலெழுந்து கிளை கோத்துக் கொண்டதால் தழையாலான குகை என அது தெரிந்தது. சுஜயனின் விழிகள் மாறுபட்டன. இரு கைகளாலும் அவன் முஷ்ணையின் ஆடையை அள்ளிப்பற்றிக் கொண்டான். “அது குகை” என்றான். “ஆம்” என்றாள் அவள். “அதற்குள் யானை உண்டா?” என்றான். “இல்லை” என்றாள் அவள். “யானை உண்டு” என்று அவன் சொன்னான். "பறக்கும் யானை! அவன் பெயர் கஜமுக அரக்கன். அவன் அவ்வளவு பெரிய கதாயுதத்தைக் கொண்டு வந்து மண்டையில்…” என்று மேலும் சொல்லி அவளை கால்களாலும் கைகளாலும் இறுகப்பற்றிக் கொண்டு “நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்றான். “ஏன்?” என்றாள் முஷ்ணை. “நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்று அவன் தழைந்த குரலில் சொன்னான். “இளவரசே, காவலர்கள் இருக்கிறார்களல்லவா. அஞ்சாது வாருங்கள்” என்றாள் முஷ்ணை.

“இல்லை” என்றான் சுஜயன். “தாங்கள் வீரராயிற்றே, அஞ்சலாமா?” என்றாள் முஷ்ணை. “அரண்மனைக்கு…” என்று சொல்லி சுஜயன் அழத்தொடங்கினான். பின்னால் வந்த சுபகை “அவ்வளவுதான். வீரமெல்லாம் வடிந்துவிட்டது” என்றாள். சுஜயன் உடல் நடுங்கத்தொடங்கிவிட்டது. அவன் முஷ்ணையை இறுகப்பற்றிக் கொண்டு “வேண்டாம். நான் வரமாட்டேன். என்னை அரண்மனைக்கு கொண்டு செல்லுங்கள்” என்றான். “ஏன்?” என்றாள் முஷ்ணை. “இங்கே அரக்கர்கள் இருக்கிறார்கள். நான் அரண்மனைக்கு செல்கிறேன்” என்றான். பிறகு கால்களை உதைத்தபடி உடல் வளைத்து திமிறி “அரண்மனைக்கு அரண்மனைக்கு” என்று கூவி அழத்தொடங்கினான்.

சுபகை பின்னால் வந்து “பேசாமல் வாருங்கள். ஓசையிட்டீர்களென்றால் இறக்கி விட்டு விடுவோம்” என்றாள். அவன் திகைத்து வாய் திறந்து சில கணங்கள் அமைந்துவிட்டு முகத்தை முஷ்ணையின் தோளில் புதைத்துக் கொண்டான். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை முஷ்ணை உணர்ந்தாள். மெல்ல விசும்பி அழுதபடி அவன் கண்களை மூடிக் கொண்டான். கண்ணீர் அவள் தோளில் வழிந்தது. “அழுகிறார்” என்றாள் முஷ்ணை. “அங்கு சென்றதும் சரியாகிவிடுவார்” என்றாள் சுபகை.

காட்டின் உள்ளே சென்றதும் முதலில் கண்கள் இருண்டன. அதுவரை இருந்த ஓசை மாறுபட்டது. கிளைகள் உரசிக்கொள்ளும் முனகலும் காற்றின் பெருக்கோசையும் மிகத்தொலைவில் எங்கோ காட்டுக்குரங்குகள் எழுப்பிய முழவோசையும் கலந்து எழுந்தன. காட்டுக்குள் மரத்தடிகள் போடப்பட்ட பாதை மீது முந்தைய நாள் மழையில் வழிந்து வந்த சேறு படிந்திருந்தமையால் நன்கு வழுக்கியது. “கைகளை பற்றிக் கொள்ளுங்கள் செவிலி அன்னையே” என்றான் காவலன். சுஜயன் தன் உடலை முற்றிலும் ஒடுக்கி முஷ்ணையின் உடலின் ஒரு பகுதியாக மாறியவன் போலிருந்தான். உதடுகளை அவள் தோளில் அழுத்தியிருந்ததனால் அவன் மூச்சு சூடாக அவள் தோளில் பட்டது.

மிக அருகே புதருக்குள் இருந்த மான் ஒன்று அவர்களை நோக்கி விழி உறைந்து செவி முன்கோட்டி அசையாது நின்றது. அவர்களின் காலடிகள் அதன் உடலில் அதிர்வுகளாக வெளிப்பட்டன. பின்பு அது காற்றில் எழுந்து தாவி புதர்களைக் கடந்து ஓட அதைச் சுற்றிலும் இருந்த புதர்களிலிருந்து மேலும் மான்கள் காற்றில் தாவி எழுந்து விழுந்து துள்ளி எழுந்து மறைந்தன. சுஜயன் அலறியபடி இரு கைகளால் அவள் கழுத்தை இறுகப்பற்றிக் கொண்டு துடித்தான். அந்த விசையில் அவள் விழப்போக காவலன் பற்றிக் கொண்டான். “செல்வோம்” என்றாள் சுபகை. முஷ்ணை சற்று காலெடுத்து வைத்ததும் எதிர்பாராதபடி சுஜயன் அவளை விட்டுவிட்டு உதறி கீழே இறங்கி திரும்பி ஓடத்தொடங்கினான். “பிடியுங்கள்” என்று சுபகை கூவத்தொடங்குவதற்குள் அவன் சேற்றில் வழுக்கி விழுந்தான். எழுவதற்குள் மீண்டும் வழுக்கினான்.

காவலன் பாய்ந்துசென்று அவன் கையைப்பற்றித் தூக்க “மெதுவாக… அவர் கைகள் மிக மெல்லியவை. உடைந்துவிடும்” என்றாள் சுபகை. காவலன் பட்டுமேலாடையை என அவனை சுழற்றித் தூக்கினான். ஆடையிலும் உடல் முழுக்கவும் சேறு படிந்திருக்க கைகால்கள் நீல நரம்பு புடைத்து விரைப்பு கொள்ள சுஜயன் காவலன் கையிலிருந்து கதறி அழுதான். “நீங்களே கொண்டு வாருங்கள். என்னால் அவரை சுமக்க முடியாது” என்றாள் முஷ்ணை. “இளவரசை சுமப்பது என் நல்லூழ் அல்லவா?” என்றான் காவலன்.

காவலனின் கரிய பெரிய கைகளில் கரிய பாறை இடுக்கில் முளைத்த சிறிய வெண்ணிற வேர் போலிருந்தான் சுஜயன். உடல் வளைத்து நெளித்து கால்களை உதைத்து அலறியபின் அந்தப் பிடியிலிருந்து சற்றும் நெகிழ முடியாது என்று உணர்ந்து தோள்களை வளைத்துக் கொண்டான். சற்று நேரத்தில் அவன் உடல் எளிதாகியது. தன் மெல்லிய கைகளால் காவலனின் கரிய பெரிய தோள்களை தொட்டான். “நீ அரக்கனா?” என்றான். “இல்லை இளவரசே, நான் பூதம்” என்றான் அவன். “பூதமா?” என்றான். “ஆம், தங்களுக்கு காவலாக வந்த பூதம்” என்றான் காவலன். “அரக்கர்கள் வந்தால் நீ என்ன செய்வாய்?” என்றான் சுஜயன். “அரக்கர்களை காலைப்பிடித்து சுழற்றி தரையில் ஓங்கி அறைந்து கொல்வேன்” என்றான் காவலன்.

சுஜயன் காவலனின் மிகப்பெரிய மீசையை தன் கையால் தொட்டான். “இது முடியா?” என்றான். “மீசை” என்றான் காவலன். சுஜயன் இரண்டு கைகளாலும் மீசையைப்பற்றி அசைத்து “வலிக்கிறதா?” என்றான். “இல்லை” என்றான் காவலன். அவனுடைய பெரிய வெண்பற்களை கையால் தொட்டு “நீ ஊன் தின்பாயா?” என்றான். “ஆம். எலும்புகளைக்கூட கடித்து தின்பேன்” என்றான் காவலன். “நான் சொல்லும் அரக்கரை கொன்று தின்பாயா?” என்றான் சுஜயன். “ஆம்” என்று சொன்னான் காவலன். “நீங்கள் சுட்டிக் காட்டுங்கள் இளவரசே, நான் உடனே கொன்று தின்றுவிடுகிறேன்” என்றான். சுஜயன் புன்னகைத்து நாணத்துடன் “நாளைக்கு சொல்கிறேன்” என்றான். பின்னர் “என்னை விடு. என் கால்கள் இறுகி இருக்கின்றன” என்றான். காவலன் அவனை எளிதாக தூக்கிக் கொண்டான். சுஜயன் பெருமூச்சு விட்டு “நானே யானைகளை கொல்வேன்” என்றான்.

சுஜயன் அவன் தோள்களைத் தொட்டு “யானை மத்தகம் போலிருக்கிறது” என்றான். “நீங்கள் யானை மத்தகத்தை பார்த்திருக்கிறீர்களா?” என்றான் காவலன். “நூறு முறை பார்த்திருக்கிறேன்” என்று சுஜயன் மூன்று விரல்களை காட்டினான். பிறகு “என்னை உன் தோளிலே நிற்கவை” என்று சொன்னான். “நிற்க வைக்க முடியாது இளவரசே. உட்கார வைத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி இடை வளைத்து தூக்கி இரு கால்களையும் மார்பில் போட்டுக் கொண்டு தலைக்குப்பின்னால் சுஜயனை அமரவைத்தான். சுஜயன் அவன் தலைப்பாகையை பிடித்துக் கொண்டு “யானை… யானை மேல் செல்கிறேன்” என்று கூவினான். அவனைச் சூழ்ந்து வந்தவர்களெல்லாம் தலைகளாக தெரிந்தனர்.

“முன்னால் போ பூதமே! பறந்து போ… பறந்து” என்று கூவினான் சுஜயன். “இப்போது பறக்க முடியாது” என்றான் காவலன். “ஏன்?” என்றான் சுஜயன். “பகலில் எந்தப் பூதமாவது பறக்குமா?” என்றான் காவலன். “ஆமாம். பறக்காது. பகலில் பறந்தால்…” என்று சொல்லி சுட்டு விரலைக்காட்டிய சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “நிழல் வருமில்லையா? நிழலும் இன்னொரு பூதமாக ஆகிவிடும். ஆகவே பகலில் பறக்கக் கூடாது” என்று சொன்னான். “சரியாக சொன்னீர்கள்” என்றான் காவலன். “இரவில் நான் அழைப்பேன். நீ வந்து என்னை தூக்கிக் கொண்டு பறந்து செல்” என்றான் சுஜயன். காவலன் “ஆணை” என்றான். சுஜயன் தன்னுடைய காலால் காவலனின் விரிந்த பெரிய மார்பை மிதித்தான். “உள்ளே எலும்பு இருக்கிறதா?” என்றான். “என்னுடைய எலும்புகள் இரும்பாலானவை இளவரசே” என்றான் காவலன். “இரும்பா?” என்றான் சுஜயன். “ஆமாம்” என்றான் காவலன். சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “எப்படி இரும்பாலாயிற்று?” என்றான். “நான் எதற்குமே அஞ்சமாட்டேன். நிறைய ஊன் உணவு உண்பேன். ஆகவே எனக்கு இரும்பாலான எலும்புகள் வந்தன.” சுஜயன் சற்று நேரம் காட்டை நோக்கினான். பிறகு “நான் ஊன் உண்பேன். முதலைகள்… ஏழு முதலைகளை உண்பேன்” என்றான்.

காட்டுக்கு அப்பால் ஒளி தெரிந்தது. “அங்கே ஆறு ஓடுகிறது” என்றான் சுஜயன். “ஆறு அல்ல, சமவெளி” என்றான் காவலன். “சமவெளி என்றால்…?” என்றான் சுஜயன். “அங்கே மரங்கள் இல்லை. உயரமில்லாத புதர்கள்தான். அதன் நடுவேதான் குடில் இருக்கிறது.” “யாருடைய குடில்?” “மாலினிதேவியின் குடில்” என்றான் காவலன். “மாலினி யார்?” என்றான் சுஜயன் திரும்பி. “மாலினிதேவி என்னைப்போன்ற செவிலி. இளைய பாண்டவராகிய அர்ஜுனர் தங்களைப் போல் சிறிய குழந்தையாக இருக்கும்போது மாலினிதான் அந்தக் குழந்தையை தன் மார்பிலே போட்டு உணவு ஊட்டி கதையெல்லாம் சொல்லி வளர்த்திருக்கிறார்” என்றாள் சுபகை. “என்ன கதை?” என்று அவன் கேட்டான். “கார்த்தவீரியார்ஜுனன் கதை, பிறகு ராகவ ராமனின் கதை.”

தனக்குள் மெல்ல “ராகவ ராமன்…” என்று சொன்ன சுஜயன் “ராகவ ராமன் நல்லவனா?” என்று கேட்டான். “ஆம். நல்லவர். அவர்தான் பத்து தலை அரக்கனாகிய ராவணனை கொன்றவர்.” “ராவணன் கெட்டவன்” என்றான் சுஜயன். “ஆம்” என்றாள் சுபகை. “ராவணனை நான் கொல்வேன்” என்றான் சுஜயன். “அவரைத்தான் ஏற்கனவே ராகவ ராமன் கொன்றுவிட்டாரே” என்று முஷ்ணை சொன்னாள். முஷ்ணையை பொருள் விளங்காமல் நோக்கியபின் “பத்து தலை” என்றான் சுஜயன். “மாலினி தங்களுக்கு இளைய பாண்டவர் பார்த்தரின் கதைகளை சொல்வார். அந்தக் கதைகளை எல்லாம் கேட்டு தாங்கள் பெரிய வீரனாக ஆகிவிடுவீர்கள். மதயானையை மத்தகத்தைப் பிடித்து நிறுத்தி அதன்மேல் ஏறிவிடுவீர்கள்.” “நான் மத யானையை கொல்வேன்” என்றான் சுஜயன். “கொல்லவேண்டாம். அதன் மேல் அமர்ந்து கதாயுதத்துடன் போருக்கு செல்லுங்கள்.”

சுஜயன் ஆர்வத்துடன் “போருக்குச் சென்று நான் பத்து தலை… பத்து தலை ராவணனை…” என்றபின் “நூறு தலை ராவணனை நான் கொல்வேன்” என்றான். “ஆமாம். நூறு தலை ராவணனை நீங்கள் கொல்வீர்கள். அவனுக்கு இப்போதுதான் தலைகள் ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் அர்ஜுனரின் கதைகளைக் கேட்டு பெரிய வீரராக வளரும்போது நூறு தலை முளைத்து அரக்கன் சித்தமாக இருப்பான்” என்று சுபகை சொன்னாள். “எங்கே?” என்று சற்று உடலை ஒடுக்கியபடி சுஜயன் கேட்டான். “அஞ்சிவிட்டார்” என்றாள் முஷ்ணை. “சும்மா இரடி, அதெல்லாம் அஞ்ச மாட்டார். அவர் குருகுலத்து பெருவீரன்” என்றாள். சுஜயன் “எங்கே?” என்று மறுபடியும் கேட்டான். “நெடுந்தொலைவில் வானத்திற்கு அப்பால்” என்றாள் சுபகை. சுஜயன் சற்று எளிதாகி “நான் பறந்து போய் அவனை கொல்வேன்” என்றான்.

பகுதி ஒன்று : கனவுத்திரை - 5

முன்னால் சென்ற வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான். காட்டுக்கு அப்பால் இருந்து அதற்கு மாற்றொலி எழுந்தது. பசுந்தழைப்பைக் கடந்து வந்ததும் வானிலிருந்து பொழிந்த ஒளியால் விழிகள் குருடாயின. கண்ணீரை ஆடையால் துடைத்தபடி “பார்த்து கால் வையுங்கள். மரக்குற்றிகள் உள்ளன” என்றாள் சுபகை. “இப்பாதை எனக்கு நன்கு தெரிந்ததுதான் செவிலி அன்னையே” என்றான் காவலன். “யானை! விரைந்தோடு யானை!” என்றான் சுஜயன்.

கண் தெளிந்ததும் அவர்கள் கண்ட பசும்புல்வெளி அலைச் சரிவென இறங்கிச் சென்று வளைந்தெழுந்து உருவான பசுந்தரை மேட்டில் மூங்கிலாலும் ஈச்ச ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகிய தவக்குடில் மெல்லிய வானொளியில் பொன்னிறமாகத் தெரிந்தது. “அதற்கப்பால் தெள்நீர் ஓடும் சுனை ஒன்று உள்ளது. இப்பகுதியில் மிகச்சுவையான நீர் அதுவே. நாங்கள் மூங்கில் குவளைகளில் நிறைத்துக் கொண்டு செல்வோம்” என்றான் காவலன்.

“மாலினிதேவி இங்கு வந்து எவ்வளவு காலமாகிறது?” என்றாள் சுபகை. “இளைய பாண்டவர் துரோணரின் குருகுலத்திற்குச் சென்ற மறுநாள் அவர் இங்கு வந்ததாக சொல்கிறார்கள். அவர்களுக்கு மணம் முடித்து வைப்பதற்கு யாதவஅரசி ஆணையிட்டதாகவும் அப்போது அவர் சென்று அரசியை வணங்கி பிறிதொரு ஆண்மகன் தன் உடல் தொட ஒப்பமாட்டேன் என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள். அவர் கோரியதற்கேற்ப யாதவஅரசி உருவாக்கிய தவக்குடில் இது. அன்றுமுதல் அவர் இங்குதான் இருக்கிறார். திரும்ப அஸ்தினபுரிக்கு சென்றதேயில்லை.”

“இளையபாண்டவர் இங்கு வருவதுண்டா?” என்றாள் சுபகை. “அஸ்தினபுரியில் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையேனும் இங்கு வருவார். அவர் வரும்போது மட்டும் மூடிய கதவைத் திறந்து வெளியே வருவதுபோல மாலினி தேவியின் உள்ளிருந்து பழைய மாலினிதேவி வெளிவருவார் என்கிறார்கள். இருவரும் இப்புல்வெளியில் விளையாடுவார்கள். மாலினிதேவியை அழைத்துக் கொண்டு காடுகளுக்குள் இளையபாண்டவர் வேட்டைக்குச் செல்வதுண்டு. அவர் சென்றபிறகு மீண்டும் தன் வாயில்களை மூடிக் கொண்டு ஒரு சொல்கூட எழாது முற்றிலும் அடங்கி விடுவார்.”

“நதியை ஊற்றுமுகத்தில் பார்ப்பவர்கள் தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவர்கள் என்கிறார்கள்” என்றாள் சுபகை. “நாம் ஒரு நதியை ஊற்றாக சுமந்து செல்கிறோமா?” என்று முஷ்ணை தலை தூக்கி சுஜயனை நோக்கி கேட்டாள். அவர்கள் பேசுவதை மேலிருந்து கூர்ந்து நோக்கிய சுஜயன் “இளையபாண்டவர் என்றால் சிறிய தந்தை அல்லவா?” என்றான். “ஆம்” என்றாள் சுபகை. “அர்ஜுனர்” என்றான் சுஜயன். “நான் அவருடன் வில் போர் செய்வேன்.” கையை ஆட்டி விழிகளை விரித்து “இங்கு அவர் வரும்போது நான் பெரிய வில்லை… அவ்வளவு பெரிய வில்லை வளைத்து அவருடன் போர் செய்வேன்” என்றான்.

“நீங்கள் போர் செய்யாத எவரேனும் இப்புவியில் உள்ளனரா இளவரசே?” என்றாள் சுபகை. “நான் பரசுராமருடன் போர் செய்வேன். அதன் பிறகு… அதன்பிறகு…” என்று எண்ணி சுட்டு விரலைத்தூக்கி ஆட்டி “நான் பீஷ்மருடன் போர் செய்வேன்” என்றான். “நீங்கள் இவ்வுலகிடமே போர் செய்யலாம். ஆனால் அதற்கு முன் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தவேண்டும்” என்றாள் முஷ்ணை. காவலன் உரக்க நகைத்தான். சுஜயன் “என் நெஞ்சில் வாள் படும்போது குருதி கால் வழியாக செல்கிறது” என்றான். “விடவே மாட்டார். எத்தனை முறை திருப்பிப் போட்டு கேட்டாலும் அதை குருதி என்றே சொல்லி நிறுவிவிடுவார். காலப்போக்கில் இதுவே ஒரு புராணமாக ஆகிவிடும். குருகுலத்து சுபாகுவின் மைந்தர் காலையில் குருதி வழிய கண்விழிக்கிறார்” என்றாள் சுபகை.

குடில் முற்றத்திற்கு வந்து நின்ற சேடியொருத்தி அவர்களை நோக்கினாள். “அவள் பெயர் சரபை” என்றான் காவலன். “மாலினிதேவிக்கு அணுக்கத்தோழி. இங்கு அவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். இளவரசர் வருவதனால் இரு காவலர்களை அமர்த்தியுள்ளோம். அவர்கள் இக்காட்டில் காவல் புரிவார்கள்.” “மற்றபடி அவர்கள் இருவரும் தனித்தா இருக்கிறார்கள்?” என்றாள் சுபகை. “ஆம், செவிலியே. இங்கு அவர்களுக்கு அச்சமென ஏதுமில்லை.” “இங்கு யானைகள் உண்டல்லவா?” “உண்டு. ஆனால் அவை இங்கே அணுகுவதில்லை. அவைகளை அகற்றும் மந்திரம் தெரிந்தவர் மாலினிதேவி.”

கொம்பூதிய காவலன் அவர்களை அணுகி தலைவணங்கி “குருகுலத்து இளவரசரை வரவேற்கிறேன் தங்களுக்காக மாலினிதேவி சித்தமாக இருக்கிறார்” என்றான். சுஜயன் “எனக்கு பசிக்கிறது” என்றான். “உணவருந்திவிட்டு மாலினிதேவியை சந்திக்கலாம்” என்றாள் சுபகை. “எனக்கு உண்பதற்கு முதலைகள் வேண்டும்” என்று சுஜயன் சொன்னான். “ஏழு முதலைகள். நான் ஒன்றன்பின் ஒன்றாக அவற்றை தின்பேன்.” “இன்னும் கொஞ்ச நாளைக்கு முதலை உணவுதான்” என்று சுபகை சிரித்தாள்.

அவர்கள் மேடேறினார்கள். “புல் சற்று வழுக்கும் செவிலியன்னையே. பற்றிக் கொள்ளுங்கள்” என்று காவலன் கை நீட்டினான். அவனது வலுவான கைகளைப் பற்றியபடி கால்களை வைத்து மூச்சிரைக்க மேலேறினாள் சுபகை. “இங்கு வாழ்ந்தால் இவரது அச்சம் குறைகிறதோ இல்லையோ என் எடை குறைந்துவிடும் என்று நினைக்கிறேன்” என்றாள். “அரண்மனையின் நெய்ச்சோறு இங்கு கிடைப்பதில்லை” என்றாள் முஷ்ணை. “ஆமாம் நெய்ச்சோறுதான் உண்கிறோம். நான் எதையுமே உண்பதில்லையடி. என் உள்ளம் நிறைந்திருக்கிறது. ஆகவே உடல் பெருத்தபடியே செல்கிறது” என்றாள் சுபகை.

மேலிருந்த சரபை அருகே வந்து தலைவணங்கி “வருக! தங்களது தங்குமிடமும் உணவும் சித்தமாக உள்ளன” என்றாள். “இளவரசருக்கு மட்டும் சற்று பால் கஞ்சி அளியுங்கள்” என்றாள் சுபகை. “நாங்கள் இப்போதே மாலினிதேவியை சந்தித்து வணங்கிவிடுகிறோம்.” சரபை தலை வணங்கி “அவ்வாறே” என்றாள். சுபகை இடையைப்பிடித்து உடலை நெளித்து “தேவியரே, என்ன ஒரு நடை…” என்றாள். முஷ்ணை “இனி இங்கே அன்றாடம் நடைதான்” என்றாள். சரபை “செல்வோம்” என்றாள்.

ஏழு தனிக்குடில்களின் தொகையாக இருந்தது அந்த குருகுலம். புதிதாக கட்டப்பட்ட குடிலுக்குள் அவர்களை சரபை அழைத்துச் சென்றாள். காவலன் தலை வணங்கி “நாங்கள் விடை கொள்கிறோம் செவிலி அன்னையே” என்றான். “நன்று சூழ்க!” என்றாள் சுபகை. சிறிய குடிலாக இருந்தாலும் அதன் உட்பகுதியின் இடம் முழுக்க சரியாக பகுக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்தும்படி இருந்தது. மூங்கில்கள் நாட்டப்பட்டு அமைக்கப்பட்ட இரு மஞ்சங்களும் நடுவே கன்றுத் தோல் கட்டி இழுத்து நிறுத்தப்பட்ட தூளிக்கட்டிலும் இருந்தன. அவற்றில் மான்தோல் விரிப்புகளும் மரவுரிப் போர்வைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவர்களின் மூட்டைகளை வைப்பதற்காக மூங்கிலால் கட்டப்பட்ட பரண்கள் சுவர்களின் மேல் பொருத்தப்பட்டிருந்தன. ஆடை மாற்றுவதற்காக குடிலின் சிறிய மூலை மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தது.

மண்ணில் இருந்து மூங்கிலில் எழுப்பப்பட்டு அதன்மேல் மரப்பலகைகள் அடுக்கப்பட்டு தளமிடப்பட்டிருந்தது. சுபகை நடந்த போது பலகைகள் மெல்ல அழுந்தி கிரீச்சிட்டன. “உடைந்துவிடாதல்லவா?” என்றாள் சுபகை. சரபை புன்னகைத்து “இன்னும் கூட எடை தாங்கும் அவை” என்றாள். அவர்கள் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டதும் சரபை சுஜயனை நோக்கி “இவருக்காகவா இத்தனை தொலைவு?” என்றாள். “ஆம். இவரது உள்ளத்திலிருக்கும் வீரத்தை உடலுக்குக் கொண்டுவரவேண்டும். அதற்கு இளைய பாண்டவரின் கதைகள் உதவும் என்றார்கள்.”

சரபை சிரித்து “உண்மை, அஸ்தினபுரி முழுக்க அவரது கதைகளைக் கேட்டுதான் குழந்தைகள் வளர்கின்றன. பிஞ்சு உடல்களில் உறையும் தெய்வம் விரும்பும் மந்திரம் அது என்கிறார்கள் சூதர்கள்” என்றாள். சுஜயன் அவளை நோக்கி “உன்னால் பறக்க முடியுமா?” என்றான். “முடியும். நிறைய பறந்திருக்கிறேன். இப்போது சற்று வயதாகிவிட்டது” என்று சரபை சிரித்தாள். “எப்படி பறப்பாய்?” என்றான் சுஜயன். சரபை சிரித்தபடி “இளையபாண்டவர் கைகளை பற்றிக் கொண்டால் அப்படியே பறக்க ஆரம்பித்துவிடுவேன்” என்றாள்.

சுபகை அவள் தோளில் ஓங்கி அடித்து “விளையாடாதே. நீ நினைப்பதை விடவும் இவருக்கு புரியும்” என்றாள். சரபை “இங்குதானே இருக்கப்போகிறார். அனைத்தையுமே சொல்லி புரிய வைத்துவிடுவோம்” என்றாள். “இதோ பார், வீரத்தை ஊட்டத்தான் இங்கு கூட்டி வந்தேன். நீ சொல்லும் வீண் கதைகளை ஊட்டுவதற்காக அல்ல” என்றாள் சுபகை. “வீரமும் காமமும் பிரிக்க முடியாதவை செவிலி அன்னையே. இரண்டையும் கலந்து ஊட்டுவோம்” என்றபடி சரபை வெளியே சென்றாள். அவள் தன் இடையை வேண்டுமென்றே ஆட்டியபடி நடப்பதை சுபகை கவனித்தாள்.

முஷ்ணை தன் உடையை அவிழ்த்து கைகளால் நீவி சீரமைத்தபடி “இங்கு எத்தனை நாள் இருக்கப்போகிறோம்?” என்றாள். சுபகை “இந்தச் சிற்றுடலில் இருந்து விஸ்வரூபன் எழுவது வரை” என்றாள். அவர்கள் உடைகளை சீரமைத்துக்கொண்டிருந்தபோது சரபை மூங்கில் குவளையை இலையால் மூடி கொண்டு வந்தாள். “தினையரிசிக் கஞ்சி. பாலில் வேக வைத்தது. அருந்துவாரல்லவா?” என்றாள். “எனக்கு முதலை உணவுதான் வேண்டும்” என்றான் சுஜயன்.

“இளவரசே, நாம் இங்கு எதற்காக வந்திருக்கிறோம் தெரியுமா?” என்றாள் சுபகை. “எதற்கு?” என்றான் சுஜயன். “இந்தக் காட்டிற்குள் ஏழு அரக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களை யாராலும் வெல்ல முடியவில்லை. அவர்களை வெல்லக்கூடிய ஒரு மாவீரன் இங்கு வரவேண்டுமென்று இங்கிருக்கும் மாலினிதேவியென்னும் மூத்தவர் செய்தி அனுப்பியிருந்தார். ஆகவேதான் தாங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.” “நானா?” என்ற சுஜயன் பாய்ந்து ஓடி முஷ்ணையின் மடியில் ஏறி அமர்ந்து அவள் இரு கைகளையும் பிடித்து தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டு “நான் நாளைக்கு குதிரையில் செல்வேன்” என்றான்.

சிரிப்பை அடக்கியபடி சுபகை “ஆம். குதிரையில் சென்று நீங்கள் அந்த அரக்கர்களை வெல்லப்போகிறீர்கள். அந்த அரக்கர்களை வெல்வதற்கு தேவையான ஆற்றலை உங்களுக்கு அளிக்கக்கூடிய உணவு இது” என்றாள். “இதுவா?” என்றான் சுஜயன். “ஆம். இது பொற்கிண்ணத்தில் உங்களுக்கு அளிக்கக்கூடிய வழக்கமான உணவு அல்ல. பார்த்தீர்களா? மூங்கில் குவளையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதை அப்படியே நீங்கள் அருந்தும்போது உங்கள் உடல் ஆற்றல் பெருகும். அதன் பிறகுதான் நீங்கள் உடைவாளை உருவி குதிரையில் சென்று போரிடமுடியும்.”

“நாளைக்கு நான் குடிப்பேன். அப்போது என் உடம்பு பெரிதாகும். பெரிதான பிறகு நாளைக்கு…” என்றபின் கைகளைத்தூக்கி அசையாமல் சில கணங்கள் வைத்துவிட்டு “நிறைய நாளைக்குப் பிறகு நான் சென்று அரக்கர்களை வெல்வேன்” என்றான். “ஆமாம், நீங்கள் வளர்வதற்கு நிறைய நாளாகும். அதுவரைக்கும் இந்த அமுதை குடியுங்கள்” என்றாள். அவன் அதை வாங்கி இலையை அகற்றி உள்ளே பார்த்து “கஞ்சி” என்றான். “அமுதுக் கஞ்சி” என்றாள் சுபகை. சுஜயன் அதை வாங்கிக் குடித்துவிட்டு நாவால் முன்வாயை நக்கி “இனிப்பாக இருக்கிறது” என்றான்.

“ஆம். இனிமையாகத்தான் இருக்கும். விரைந்து குடியுங்கள். வாயை எடுத்தால் இது அமுதம் அல்லாமல் ஆகிவிடும்” என்றாள். “எனக்கு மூச்சு திணறுமே” என்றான் சுஜயன். “வேகமாக விரைந்து குடியுங்கள்” என்றாள் சுபகை. சுஜயன் ஒரே மூச்சில் அதை குடித்து முடித்து திரும்பி முஷ்ணையின் மேலாடையை எடுத்து தனது வாயை துடைத்துக் கொண்டான். “இப்போது புரிகிறது இவருடைய இடர் என்ன என்று. இவர் இங்கே வாழவில்லை” என்றாள் சரபை. “ஆமாம். அத்துடன் அவர் எங்கு வாழ்கிறாரென்று யாருக்குமே தெரியவில்லை” என்றாள் சுபகை. சரபை சிரித்தபடி வெளியே சென்றாள்.

“அவரது வாயைத்துடைத்து தலையை சற்று சீவி ஒதுக்கு. மாலினிதேவியை சந்திக்கச் செல்லும்போது அவர் இளவரசராக இருக்க வேண்டுமல்லவா?” என்றாள் சுபகை. முஷ்ணை சுஜயனை தூக்கி நிறுத்தி அவன் இடையில் இருந்து ஆடையை அவிழ்த்து உதறி நன்றாக மடிப்புகள் அமைத்து சுற்றிக் கட்டினாள். தன் சிறு பையிலிருந்து தந்தச்சீப்பை எடுத்து அவன் குழலை சீவி கொண்டையாக முடிந்தாள். தலையில் சூடிய மலர்மாலையிலிருந்து இதழ்கள் உதிர்ந்திருந்தன. அவற்றை திரும்பக் கட்டி சேர்த்துவைத்தாள். சுஜயன் “நான் வெளியே போய் புல்வெளியில் புரவிகளுக்கு பயிற்சி அளிப்பேன்” என்றான்.

“நாம் முதலில் மாலினிதேவியை சென்று பார்த்து வணங்குவோம்” என்றாள். “மாலினிதேவி யார்?” “இப்போதுதான் சொன்னேனே. இளைய பாண்டவர் அர்ஜுனரின் செவிலியன்னை.” “இளைய பாண்டவருக்கு அவள்தான் அமுதை கொடுத்தாளா?” என்றான். “ஆம். அதைக் குடித்துதான் அவர் மாவீரர் ஆனார்.” சுஜயன் “நான் இளைய பாண்டவருடன் போர் புரிவேன்” என்றான். “ஆம். நிறைய அமுதை அருந்தி பெரியவனாகும்போது போர் புரியலாம்” என்றாள்.

சரபை மீண்டும் வந்து வணங்கி “செல்வோம். மாலினி அன்னை சித்தமாக இருக்கிறார்” என்றாள். சுஜயனை முஷ்ணை கையில் எடுத்துக் கொண்டாள். அவன் “நான் நாளைக்குத்தான் வருவேன். என் கையில் வாள்பட்டு… வாள்பட்டு குருதி…” என்றான். முஷ்ணை சுஜயனின் தலையை தன் அருகே இழுத்து காதுக்குள் “மாலினிதேவியைப் பார்த்ததும் சென்று அவர்களின் கால்களைத் தொட்டு கண்களில் வைத்து அன்னையே என்னை வாழ்த்துங்கள், நான் பெருவீரனாக வேண்டும் என்று சொல்ல வேண்டும். புரிகிறதா?” என்று கேட்டாள். “ஏன்?” என்றான். “அவர்கள்தான் இளைய பாண்டவருக்கு அமுதை அளித்தார்கள் என்று இப்போது சொன்னேனல்லவா? அவர்கள் அமுது அளித்தால்தானே தாங்களும் பெரியவராக முடியும்?” சுஜயன் கண்கள் தாழ்ந்தன. அவன் எண்ணத்தில் ஆழ்ந்து எடையற்றவன் போலானான்.

மாலினிதேவியின் குடில் அந்த வளாகத்திற்கு நடுவே கூம்பு வடிவக் கூரையுடனும் வட்டமான மூங்கில்சுவர்களுடனும் இருந்தது. அதன் வட்டவடிவ திண்ணை செம்மண் மெழுகப்பட்டு வெண் சுண்ணத்தால் கொடிக்கோலம் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது. புலரியில் அங்கு நிகழ்ந்த பூசனைக்காக போடப்பட்ட குங்கிலியப்புகையின் மணம் ஈச்ச ஓலைகளுக்குள் எஞ்சியிருந்தது. முஷ்ணை சுஜயனை கீழே இறக்க அவன் அவள் முந்தானையைப் பிடித்து கையில் சுருட்டி வாயில் வைத்து கடித்தபடி கால்தடுமாறி நடந்தான்.

குடில் வாயிலில் நின்ற சிறிய கன்றுக்குட்டி காதுகளை முன்கோட்டி ஈரமூக்கை சற்றே தூக்கி அவர்களை ஆர்வத்துடன் நோக்கியது. அதன் மாந்தளிர் உடலில் அன்னை நக்கிய தடங்கள் மெல்லிய மயிர்க் கோலங்களாக தெரிந்தன. சிறிய புள்ளிருக்கையை சிலிர்த்தபடி வாலைச் சுழற்றியபடி அது தலையை அசைத்தது. வாயிலிருந்து இளஞ்சிவப்பான நாக்கு வந்து மூக்கைத் துழாவி உள்ளே சென்றது. “அது ஏன் அங்கே நிற்கிறது?” என்றான் சுஜயன். “அது கன்றுக் குட்டி. அதன் அன்னையைத்தேடி இங்கு வந்து நிற்கிறது.”

சுஜயன் முஷ்ணையை அணைத்து அவள் ஆடையைப் பற்றி தன் உடலில் சுற்றிக் கொண்டபடி “அது என்னை முட்டும்” என்றான். “கன்றுக்குட்டி எங்காவது முட்டுமா? அது உங்களைவிட சின்னக்குழந்தை. அது உங்களுடன் விளையாட விரும்புகிறது.” “இது… இது… கன்றுஅரக்கன்!” என்ற சுஜயன் திரும்பி கையைத்தூக்கி காலை உதைத்து “என்னைத்தூக்கு” என்றான். “தூக்கக் கூடாது. தாங்கள் நடந்துதான் இதற்குள் செல்லவேண்டும்” என்றாள் சுபகை. கையை நீட்டி “அது என்னை தின்றுவிடும்” என்றான் சுஜயன். உரத்தகுரலில் “இளவரசே, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். நடந்து செல்லுங்கள்” என்றாள் சுபகை.

முஷ்ணையின் கால்கள் நடுவே புகுந்து அவளை தடுமாறச்செய்தபடி “இந்தக் கன்று அரக்கனை நான் பெரியவனாகும்போது கொல்வேன்” என்றான் சுஜயன். “நடந்து செல்லுங்கள் இளவரசே” என்று முஷ்ணை அவன் கைகளைப்பற்றி இழுத்துச் சென்றாள். கன்றருகே சென்றதும் அவன் பிடியை உதறிவிட்டு பின்னால் ஓடிவந்து சுபகையை கட்டிப்பிடித்தான். “இந்தக் கோழையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கன்றுக் குட்டியை பார்த்தெல்லாம் குழந்தைகள் அஞ்சுவதை இப்போதுதான் பார்க்கிறேன்.”

கன்று சுஜயனை ஆர்வத்துடன் நோக்கியபடி தலையை அசைத்து அவனை நோக்கி வந்தது. “அது என்னை கொல்ல வருகிறது! கொல்ல வருகிறது!” என்று கூவியபடி அவன் சுபகையை முட்டினான். சுபகை தள்ளாடி விழப்போன பிறகு அவனை பற்றித் தூக்கி மேலெடுத்துக் கொண்டாள். அவன் கால்களாலும் கைகளாலும் பிடித்துக் கொண்டு “கன்று அரக்கன்! அவன் கண்களில் தீ!” என்றான். கன்று அண்ணாந்து சுஜயனை நோக்கி மெல்ல ஒலி எழுப்பியது. சுஜயன் “நான் அரண்மனைக்குச் செல்கிறேன். இங்கெல்லாம் ஏராளமான அரக்கர்கள் இருக்கிறார்கள். அரண்மனையில் என்னுடைய உடைவாள் இருக்கிறது. நான் உடைவாளை வைத்து அங்குள்ள அரக்கர்களிடம் போரிடுவேன்” என்றான். “பேசாமல் வாருங்கள்” என்று சொல்லி தலை குனிந்து சுபகை உள்ளே சென்றாள். முஷ்ணை கைகூப்பியபடி பின்னால் வந்தாள்.

குடிலின் தென்மேற்கு மூலையில் போடப்பட்டிருந்த மூங்கிலினாலான பீடத்தில் மாலினி அமர்ந்திருந்தாள். நீண்ட குழலை சிறியபுரிகளாகச்சுற்றி கூம்புக் கொண்டையாக சற்று சரிவாக தலையில் சூடியிருந்தாள். மாந்தளிர் நிற மரவுரி ஆடை இடை வளைத்து தோளைச் சுற்றி சென்றிருந்தது. வலது வெண் தோள் திறந்திருக்க அதில் அவள் அணிந்திருந்த உருத்திரவிழி மாலை தெரிந்தது. நீண்ட யானைத்தந்தக் கைகள் வந்திணைந்த மெல்லிய மணிக்கட்டுகளிலும் சிறிய உருத்திரவிழியொன்று கோர்க்கப்பட்ட பட்டுநூலை கட்டியிருந்தாள்.

காலை அனல் வளர்த்து ஆகுதியிட்டு பூசையை முடித்து வந்திருந்தமையால் வேள்விக் குளத்தின் கரியைத் தொட்டு நெற்றியிலிட்ட குறி அவளுடைய நீள்வட்ட முகத்தின் சிறிய நெற்றியின் நடுவே அழகிய தீற்றலாகத் தெரிந்தது. வெண் பளிங்கு முற்றத்தில் விழுந்து கிடக்கும் கருங்குருவி இறகு போல என்று சுபகை நினைத்தாள். அழகி என்று அவள் உள்ளம் சொன்னது. அழியா அழகு என்று அச்சொல் வளர்ந்தது. எப்படி ஒருத்தி தன் அழகின் உச்சத்தில் அப்படியே காலத்தில் உறைந்து நின்றுவிட முடியும்?

ஏனென்றால் அவள் அரண்மனையில் இருக்கவில்லை. அங்கு தன் அலுவல் முடிந்ததும் ஒரு கணம் கூட பிந்தாமல் தன்னை விடுவித்துக் கொண்டு இத்தவக்குடிலுக்கு மீண்டிருக்கிறாள். எது அவளை அழகென நிலை நிறுத்தியதோ அதை மட்டுமே தன்னுள் கொண்டு எஞ்சியதை எல்லாம் உதிர்த்து இங்கு வாழ்ந்திருக்கிறாள். அவளை உருக்கியழிக்கும் காலத்தை நகரிலேயே விட்டு விட்டாள். ஆம், அதுதான் உண்மை. இங்கு ஒவ்வொரு மரமும் இலையும் தளிரும் புல் நுனியும் அழகுடன் உள்ளன. இங்கு இருப்பவள் அழகுடனேயே இருக்க முடியும்.

ஏன் இளைய பாண்டவர் மீள மீள இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் தேடும் அழியா அழகு குடி கொள்வது இங்கு இவளில் மட்டும்தான். தான் தொட்ட ஒவ்வொன்றும் நீர்த்துளியென உதிர்ந்து காலத்தில் மறைவதை அவர் கண்டு கொண்டிருக்கிறார். சுடர்களை அணைத்தபடியே செல்லும் காற்றுபோல எதிர்கொள்ள நேர்ந்த அழகுகள் அனைத்தையும் அழித்தபடி சென்று கொண்டிருக்கிறார். அவர் உவந்த பெண்கள் முதுமை அடைந்துவிட்டனர். அவர் முத்தமிட்ட இதழ்கள், அவர் புன்னகையை எதிரொலித்த விழிகள், அவர் இதயத்தில் தேன் நிறைத்த குரல்கள் ஒவ்வொன்றும் அடித்தட்டிற்கு சென்று படிந்துவிட்டன. தான் மட்டும் இளமையுடன் எஞ்சுவதற்காக புதிய கிண்ணங்களிலிருந்து அமுதை பருகிக் கொண்டிருக்கிறார். இங்கோ வைரத்தில் செதுக்கப்பட்ட மலர் போல் இவள் அமர்ந்திருக்கிறாள். உதிராத மலர், வாடாத மலர்.

ஒரு கணத்திற்குள் அத்தனை எண்ணியிருக்கிறோமென உணர்ந்தாள். திகைத்து விழிநோக்க மாலினி புன்னகைத்து “வருக சுபகை! உன்னை சிறுமியென பார்த்திருக்கிறேன்” என்று சொன்னபோது மலர்ந்தாள். சுஜயனை கீழிறக்கிவிட்டு “மூதன்னை கால் தொட்டு வணங்குங்கள் இளவரசே” என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அண்ணாந்து அவளை நோக்கி “யாரை?” என்றான். “அதோ அமர்ந்திருக்கிறாரே அவர்தான் உங்கள் மூதன்னை, மாலினி தேவி. சென்று அவர்கள் கால்களைத்தொட்டு வணங்குங்கள்” என்றாள்.

சுஜயன் வாய்க்குள் கையை வைத்து இடையை வளைத்து ஐயத்துடன் நோக்கியபடி நின்றான். முஷ்ணை அவன் தோளைத்தொட்டு “செல்லுங்கள். வணங்குங்கள்” என்றாள். அவன் தலையசைத்தான். “செல்லுங்கள் இளவரசே” என்றாள் சுபகை. “அவர்கள் உடைக்குள் குறுவாள் இருக்கிறதா?” என்று அவன் மெல்லிய குரலில் கேட்டான். “பார்த்தருக்கு அளித்த அமுதை தங்களுக்கும் அளிப்பார்கள். செல்லுங்கள். சென்று வணங்குங்கள்” என்றாள் சுபகை. மாலினி அவனை நோக்கி புன்னகைத்து கை நீட்டி “வருக இளவரசே” என்றாள். அவன் இரண்டு அடிகளை எடுத்து வைத்து மறுபடியும் நின்றான். “செல்லுங்கள்” என்று முஷ்ணை அவன் தோளை உந்தினாள்.

அவன் சென்று மாலினியை அணுகி முழந்தாளிட்டு அமர்ந்து அவள் காலைத்தொட்டு தன் சென்னியில் வைத்து “வணங்குகிறேன் அன்னையே” என்றான். “வீரமும் வெற்றியும் நற்புகழும் கூடுக!” என்று சொல்லி அவன் தலை மேல் கைவைத்து மாலினி வாழ்த்தினாள். பின்பு அவன் இருகைகளையும் பற்றித்தூக்கி தன் தொடை மேல் அமர்த்திக் கொண்டாள். அவன் அத்தொடுகையாலே அவளை அன்னையென உணர்ந்து அவள் முலைமேல் தலை சாய்த்து அமர்ந்து “நான் யானை மேல் வந்தேன்” என்றான். “பெரிய யானை! கரிய யானை!” என்றான். மாலினி திரும்பி “யானை மேலா?” என்று சுபகையிடம் கேட்டாள். சுபகை சிரிக்கும் கண்களுடன் “யானை போன்ற வீரனின் தோளில் வந்தார்” என்றாள்.

மாலினிதேவி சிரித்து “ஆக அதுதான் இவரது நோயா?” என்றாள். “ஆம் அன்னையே. இவர் இங்கு வாழவில்லை” என்றாள் முஷ்ணை. சுபகை மாலினியை அணுகி மெல்ல உடல் சரித்து தரையில் அமர்ந்து முழந்தாளிட்டாள். கைகளை நீட்டி மாலினியின் காலைத்தொட்டு தன் சென்னியில் சூடி வணங்கினாள். “ஏன் இப்படி பருத்துப் போயிருக்கிறாய்? இளவயதில் அழகிய வட்ட முகமும் துடிக்கும் கண்களும் கொண்ட இனிய பெண்ணாக இருந்தாயே?” என்றாள் மாலினி. “அவர் உள்ளம் நிறைந்துவிட்டது, ஆகவே உடல் நிறைகிறது என்கிறார்கள்” என்றாள் முஷ்ணை. மாலினி நகைத்து “உள்ளம் நிறைந்துவிட்டதா? எத்தனை மைந்தர் உனக்கு?” என்றாள்.

“நான் மணம் கொள்ளவில்லை” என்றாள் சுபகை. “ஏன்?” என்றாள் மாலினி. “ஒரு நாள் தன் உளம் நிறைந்த ஒருவருடன் வாழ்ந்துவிட்டார்களாம். அந்த விதையை காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்” என்றாள் முஷ்ணை. மாலினி புரிந்து கொண்டு சிரித்து “இளைய பாண்டவனை அறிவாயா?” என்றாள். சுபகை விழிகளைத் தாழ்த்தி புன்னகைத்து தலையசைத்தாள். “நீ உள்ளே வந்து புன்னகைத்தபோதே சிறிய உதடுகள், சிறியபற்கள் என்று எண்ணினேன். இத்தனை அழகிய புன்னகையை அவன் தவற விட்டிருக்க மாட்டான் என உய்த்துக்கொண்டேன்” என்றாள் மாலினி.

“தவறவேயில்லை” என்றாள் முஷ்ணை. “அவர்களை இளைய பாண்டவர் ஏதோ மந்தணப் பெயர் சொல்லி அழைப்பாராம். அந்தப் பெயரையே தானென எண்ணுகிறார்.” மாலினி விழிதூக்கி “என்ன பெயரிட்டிருப்பான் உனக்கு? வேறென்ன, எயினி என்றிருப்பான்” என்றாள். சுபகை திடுக்கிட்டு விழிதூக்கி இதழ்கள் சற்றே விரிந்திருக்க உறைந்தாள். முஷ்ணை குனிந்து “எயினியா? அந்தப்பெயரா?” என்றாள். நீர்ப்பாவை தொடுவதில் கலைவது போல கலைந்து “ஆம். என் பற்கள்தான் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன” என்றாள் சுபகை.

“அரண்மனையில் அத்தனை பேருக்கும் உங்கள் பற்கள்தான் பிடித்திருந்தன. ஆனால் எயினி என பெரிய பல்லுள்ளவர்களைத்தானே அழைப்பார்கள்…? அடடா, எயினி என்ற பெயர் எவர் நாவிலும் எழவில்லையே. எத்தனை வருடம் இதைப் பற்றி எண்ணியிருக்கிறோம்” என்றாள் முஷ்ணை. பின்பு மாலினியை தான் வணங்காததை உணர்ந்து குனிந்து மாலினியின் கால்களைத்தொட்டு சென்னியில் சூடினாள். “உன் பெயரென்ன?” என்றாள் மாலினி. “என் பெயர் முஷ்ணை. கிருத குலத்தவள். சூதப்பெண்” என்றாள் முஷ்ணை.

“எயினி என்றால் என்ன பொருள்?” என்றான் சுஜயன். மாலினி சிரித்து “இவன் இங்கு நடப்பது அனைத்தையும் நோக்கிக் கொண்டுதான் இருக்கிறான்” என்றாள். “எங்கோ உலவிக் கொண்டிருக்கையில் சுற்றிலும் பேசுவது அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிறார்” என்றாள் முஷ்ணை. “சுற்றிலும் நிகழ்வது அனைத்தையும் அல்ல. சுற்றிலும் இருக்கும் பெண்களின் பேச்சுகளை மட்டும்” என்றாள் சுபகை. மாலினி நகைத்து “வீரம் வலக்கை என்றால் காமம் இடக்கை என்பார்கள்” என்றாள்.

சுபகை சிரித்தாள். அவள் சிரிப்பதை சுஜயன் நோக்கிக்கொண்டிருந்தான். கைசுட்டி “நீ கெட்டவள்” என்றான். சுபகை கன்னங்களில் குழி விழச் சிரித்து “ஏன்?” என்றாள். சுஜயன் “நீ கெட்டவள்” என்று கூவியபடி அவளருகே ஓடிவந்து அவளை அடித்து “செத்துப்போ… செத்துப்போ” என்று கூவினான். காலால் அவளை உதைத்து “நீ அரக்கி… நான் உன்னை வாளால்… வாளால்… வெட்டி வெட்டி” என்று மூச்சிரைத்தான். “என்ன ஆயிற்று?” என்று முஷ்ணை அவனை பிடித்தாள். அவளை உதறியபடி திமிறிய சுஜயன் “இவள் அரக்கி, கெட்ட அரக்கி” என்றான்.

“அவனை வெளியே கொண்டுசெல்” என்றாள் மாலினி. “என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை அன்னையே” என்றாள் முஷ்ணை. “எனக்குத்தெரிகிறது. வெளியே கொண்டுசென்று எதையாவது காட்டு…” என்றாள் மாலினி. “இல்லையேல் வலிப்பு வந்துவிடும்.” முஷ்ணை கைகால்கள் இறுகி இழுத்துக்கொண்டிருந்த சுஜயனைத் தூக்கி வெளியே கொண்டுசென்றாள். அவன் “ம்ம் ம்ம்” என்று முனகினான். பற்களால் இதழ்களை இறுகக் கடித்திருந்தான். அவன் வெண்ணிறக் கைகளில் நீல நரம்புகள் புடைத்திருந்தன. நாணிழுக்கப்பட்ட வில்லை கொண்டுசெல்வதுபோல உணர்ந்தாள் முஷ்ணை.

பகுதி ஒன்று : கனவுத்திரை - 6

மாலினி சுபகையை நோக்கி புன்னகைத்து கைநீட்டி “அருகே வாடி” என்றாள். சுபகை கைகளை ஊன்றி உடலை அசைத்து சென்று அவளருகே அமர்ந்தாள். சுபகையின் தலையைத் தொட்டு வருடி "உன் உள்ளம் புரிகிறது.  நீ அதன்பிறகு இளைய பாண்டவனை பார்த்தாயா?” என்றாள். அவள் “இல்லை. அவர் என்னை அழைக்கவில்லை. சாளரங்களினூடாக நான் அவரை பார்ப்பதுடன் அமைகிறேன்” என்றாள்.

மாலினி “அவன் சென்று கொண்டிருக்கிறான். பாதைகள் பின்னிட்டபடியே உள்ளன. அவனிடம் ஒரு முறை சொன்னேன் நெடுந்தொலைவு செல்கிறாய் மகனே, ஒன்று நினைவுறுக! சென்ற பாதை அனைத்தையும் திரும்பிக் கடக்காமல் எவரும் விண்ணகம் செல்வதில்லை. எனவே நெடுந்தூரம் செல்வது நல்லதல்ல என்று. நான் செல்லவில்லை அன்னையே, துரத்தப்படுகிறேன் என்றான். எதனால் என்று நான் கேட்டேன். நூறு அர்ஜுனர்களால் வில்லும் கதாயுதமும் வாளும் வேலும் ஏந்தி துரத்தப்படுகிறேன். ஒரு கணம் கூட நிற்க எனக்கு நேரமில்லை என்றான்" என்றாள்.

மாலினி சொன்னாள் "நீ செல்லும் விரைவில் எவற்றையெல்லாம் உதிர்த்துவிட்டு செல்கிறாய் என்று அறிவாயா என்றேன். ஆம் அன்னையே, இவ்விரைவினால் என் கையில் எதுவும் ஒரு கணத்திற்கு மேல் நிற்பதில்லை. நறுமணம் வீசும் அரிய மலர்கள், ஒளிர் மணிகள், இன்சுவைப் பொருட்கள் ஒவ்வொன்றும் வந்து தொட்டு எழுந்து பறந்து செல்கின்றன. நான் முன்விரைகிறேனா அடியற்ற பாதாளம் நோக்கி குப்புற விழுகிறேனா என்றே ஐயம் கொண்டிருக்கிறேன் என்றான். அதற்கு மேல் ஒன்றும் சொல்ல எனக்கும் கூடவில்லை.”

சுபகை பெருமூச்சுவிட்டாள். மாலினி “அவன் இங்கு வருவதே களியாடுவதற்காகத்தான். எனவே அரசியலோ உறவுச் சிடுக்குகளோ எதுவும் எங்கள் பேசு பொருளாக அமைவதில்லை” என்றாள். சுபகை “அந்த விரைவே அவரை மாவீரராக்குகிறது” என்றாள். "இதை நான் பல முறை எண்ணியிருக்கிறேன்” என்றாள் மாலினி. "வரலாற்றை ஆக்கும் மாமனிதர்களின் இயக்கநெறி ஒன்றே. அவர்கள் தங்களை ஆடிப்பாவைகள் போல ஒன்றிலிருந்து பல்லாயிரமாக பெருக்கிக் கொள்ளவேண்டும். ஒரே தருணத்தில் பல்லாயிரம் இடங்களில், பல்லாயிரம் வாழ்வுகளை வாழ்ந்தாகவேண்டும் அவர்கள். ஒற்றைமனிதர் ஒரு படையாக சமூகமாக நாடாக ஆவது அவ்வாறுதான்.”

“ஆனால் அவ்வாறு சிதறிப்பரந்து நிறைந்தபின் ஒரு புள்ளியில் மீண்டும் தங்களை தொகுக்க முடியாமல் ஆகிறார்கள்” என்றாள் மாலினி. “அவர்கள் சென்று சேரும் இருள் அதுதான். அவ்விருளில் நின்று ஏங்குகிறார்கள். ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணி இது அல்ல இது அல்ல என்று தவிர்த்து நான் யார் என்று வினவி விடையற்று துயருற்று மறைகிறார்கள். அவர்களை மண்ணில் இருந்து அள்ளி எடுத்து வரலாற்றின் கோபுர உச்சியில் பொற்கலங்களின் மேல் நிறுத்தும் தெய்வங்கள் ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைத்துக் கொள்கின்றன.”

அவள் என்ன சொல்கிறாள் என்பது சுபகைக்கு புரியவில்லை. “நீ இங்கிரு. அவன் மீண்டும் வருவான்’’ என்றாள் மாலினி. "இல்லை அன்னையே, இனி ஒரு போதும் அவர் முன் நான் சென்று நிற்க மாட்டேன்” என்று சுபகை சொன்னாள். “ஏன்?” என்றாள் மாலினி. “இவ்வுடலல்ல நான். அன்று அவருக்கு நான் அளித்த உடலும் அல்ல இது. இதை நோக்கி என்னை அறியாது அவர் உதறிச் சென்றால் பின்பு நான் வாழ்வதில் பொருளில்லை. அவர் இங்கு வந்தால் அவரை அஞ்சி இக்குடில்களில் எங்கோ ஒன்றில் ஒளிந்து கொள்வேன். அல்லது காட்டுக்குள் சென்றுவிடுவேன்.”

மாலினி நகைத்து "ஆனால் நான் அவன் உன்னை இவ்வுடலில் பார்க்கவேண்டுமென்று விழைகிறேன். அன்று அவன் கண்ட அந்த எயினியை இவ்வுடலில் மீண்டும் அவனால் காண முடிந்தால் மட்டுமே அன்று அவன் எதையாவது பெற்றிருக்கிறானென்று பொருள்” என்றாள். சுபகை “இல்லை. ஆண்கள் பெண்களின் ஆன்மாவைக்கூட உடல் வழியாகத்தான் அறிகிறார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்” என்றாள். மாலினி “அது சூதர்களின் பொய். விராடபுராணம் உடல் அவர்கள் உள்ளே வருவதற்கான பாலம் என்கிறது. உடல் வழியாக வந்து உடலுக்கு அப்பாலுள்ளதை அறிபவனே உண்மையில் அறிபவன்” என்றாள்.

"இல்லை அன்னையே, ஆண்கள் எதையும் அறிய முடியாது” என்றாள் சுபகை. மாலினி “உன் கண்களில் வைரமுனை போல ஒளிவிடும் அச்சிரிப்பை நிகழ்த்தும் ஒன்று உன் ஆழத்தில் உள்ளது. அதை அவன் அறிகிறானா என்று பார்க்க விழைகிறேன்” என்றாள். சுபகை “என்னை வற்புறுத்தாதீர்கள் அன்னையே” என்று சொல்லி கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டாள். “இதோபார்…” என மாலினி ஏதோ சொல்லவர “வேண்டாம்” என சுபகை தன்னை குறுக்கிக்கொண்டாள்.

முஷ்ணை சுஜயனுடன் உள்ளே வந்தாள். அவன் கையில் ஒரு நீண்ட ஈச்ச ஓலையை வாள் போல ஏந்தியிருந்தான். மார்பில் எச்சில் வழிந்திருந்தது. “அன்னையே, இங்கு இளைய பாண்டவர் எப்போது வருவார்?” என்றான். அவன் கேட்டதை மாலினி செவி கொள்ளவில்லை என்று அறிந்து இடையில் இருந்து இழிந்து ஓடிவந்து அவள் மடியில் ஏறி நின்று அவளை கன்னத்தைப் பிடித்து திருப்பி "அர்ஜுனர் எப்போது வருவார்? நான் அவரிடம் விற்போரிடுவேன்” என்றான்.

“போரிடலாம். இப்புவியில் இன்று வாழும் வில்லவர் அனைவரும் கொண்டிருக்கும் விழைவு அவனுடன் போரிடுவதுதான்” என்றாள் மாலினி. “அவனை வெல்வதை கனவு கண்டுதான் பெண்களும் இங்கு வாழ்கிறார்கள். உண்மையில் அவ்விழைவுகள் வழியாகவே வெற்றி கொள்ளமுடியாத ஆற்றல் கொண்டவனாக அவன் ஆகிறான்” என்றாள் மாலினி. முஷ்ணை "இங்கு தங்களுடன் தங்கி அவர் கதைகளை இவர் கேட்டு வளர்வாரென்றால் அச்சம் நீங்கி அவரைப்போல ஆண்மகனாவார் என்று நிமித்திகர்கள் சொன்னார்கள்” என்றாள். மாலினி நகைத்து "ஆம், பார்ப்போம்” என்றாள்.

சுபகை எழுந்து சுஜயனை வா என்று கை நீட்டினாள். "மாட்டேன்” என்று அவன் மாலினியின் தோள்களைப்பற்றிக் கொண்டான். "எனக்கு கதை சொல்லுங்கள். ஏழு குதிரைகளின் கதை” என்றான். "அது என்ன ஏழு குதிரைகள்?” என்றாள் மாலினி. சுஜயன் "ஏழு குதிரைகளின் மேல் கந்தர்வர்கள் போய் பாம்புகளைத் துரத்தி…” என்று சொன்னபிறகு என்ன சொல்ல வந்தோம் என்பது தனக்கே தெரியாமலிருப்பதை உணர்ந்து மாலினியை பார்த்து "நீங்கள் சொல்லுங்கள்” என்றான்.

"எந்த உலகில் வாழ்கிறாரென்பதே தெரியாமலிருக்கிறார். சொல்லோடு சொல் தொடுவதில்லை. நாம் சொல்லும் எதுவும் இவருக்குள் சென்று சேர்வதில்லை. எதைப்பார்க்கிறார் எங்கிருந்து காட்சிகளைப் பெறுகிறார் என்று எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். சில சமயம் உண்மையிலேயே நாம் அறியாத தெய்வங்களும் தேவர்களும் இவரிடம் வந்து விளையாடுகின்றனவா என்று எண்ணி இருக்கிறேன். வைரவிழிகள் கொண்ட பாதாள நாகங்களையும் தேனீச்சிறகுகள் கொண்ட கந்தர்வர்களையும் இவர் விவரிக்கும்போது ஓர் எளிய குழந்தையின் உள்ளத்தில் தோன்றுபவை அல்ல இவை என்றே படுகிறது” என்றாள் சுபகை. “சில சமயம் நான் துயிலும்போது என் கனவுகளிலும் அவ்வுருவங்கள் எழுகின்றன. விண்ணிலும் மண்ணுக்கு அடியிலும் நம்மைச் சூழ்ந்துள்ள ஒளி இருள் உலகங்களில் இருந்து அவை எழுந்து வருவன என்று தோன்றுகிறது.”

மாலினி "இளவயதில் அவனும் அப்படித்தான் இருந்தான். உருவிய வாளுடன் பதினான்கு உலகங்களிலும் அலைந்து கொண்டிருந்தான்” என்றாள். "அவரது வீரகதைகளில் அவர் வென்ற மானுடரைவிட கந்தர்வர்களும் தேவர்களும்தான் மிகுதி” என்றாள் மரக்கோப்பையுடன் உள்ளே வந்த சரபை. முஷ்ணை "ஆம். பார்த்தர் இன்னும் மானுடர்களை அதிகம் களத்தில் சந்திக்கவில்லை. வெற்றிக்கதைகள் அனைத்திலுமே எதிரி விண்ணில் உலவுபவராகவே உள்ளார்” என்றாள். சரபை “சூதர்களுக்கென்ன? எதையும் சொல்லலாம்” என்றாள்.

மாலினி “சில வருடங்களுக்கு முன் இங்கு வந்த சூதர் ஒரு கதை சொன்னார்” என்றாள். "இளைய பாண்டவர் தன் ஊனுடல் விழிகளாலேயே ஏழு விண்ணுலகங்களையும் ஏழு அடியுலகங்களையும் பார்க்க முடியும். அங்கிருந்து எழுந்து இம்மண்ணில் உலவும் ஒவ்வொன்றையும் விழி தொட்டு உரையாடமுடியும். அதற்கு சாக்ஷுஷி மந்திரம் என்று பெயர். அதை காசியப பிரஜாபதி முனி என்ற மனைவியில் பெற்றெடுத்த சித்ரரதன் அவருக்கு அளித்தான்” என்றாள். சுஜயன் அவள் கன்னத்தைப் பிடித்து திருப்பி "என்ன மந்திரம்?” என்றான். "சாக்ஷுஷி மந்திரம். அதை அடைந்தால் உன் கண்களுக்கு தேவர்களும் கந்தர்வர்களும் தெரிவார்கள். தெய்வங்களும் தெரிவார்கள்.” "அந்த மந்திரம் எங்கே கிடைக்கும்?” என்றான் சுஜயன். “சொல்கிறேன்” என்றாள் மாலினி.

விண்வெளியில் முடிவிலாத் தொலைவுக்கு ஒளிநீர்த் தீற்றலென விரிந்துகிடந்த மரீசி பிரம்மனின் கனிவு உருக்கொண்ட மைந்தன். அக்கனிவிலூறிய ஞானம் சொட்டிய தவமைந்தன் காசியப பிரஜாபதி. அவர் அரிஷ்டை என்னும் துணைவியை மணந்து பெற்ற மைந்தர்கள் கந்தர்வர்கள் எனப்படுகிறார்கள். ஏழு வகை விண்வாழ் தேவர்களில் கந்தர்வர்கள் அழகுருவானவர்கள். மலர்களில் புலரியின் நாள்கதிர் தொட்டு எழுவதற்கு முன்பே எழும் வண்ண ஒளி அவர்களுடையது. நீரில் இரவிலும் எஞ்சும் பளபளப்பு அவர்களுடையது.

விண்ணில் முகில்களுக்கு அப்பால் உள்ளது அவர்களின் பெரு நகரம். அங்கிருந்து சிலந்திப்பட்டு நூல்களால் ஆன படிகளில் இறங்கி மண்ணுக்கு வருகிறார்கள் அவர்கள். கண்ணில் படும் முதல் பறவையின் சிறகுகளை தாங்கள் பெற்றுக் கொள்கிறார்கள். கிளிகளாக, சிட்டுகளாக, தட்டாரப்பூச்சிகளாக, வண்ணத்துப்பூச்சிகளாக மண்ணில் பரவி பரந்தலைகிறார்கள். நீர்ப்பரப்பின் மேல் தன்னுருவை தொட்டுத் தொட்டு விளையாடும் வண்ணத்துப்பூச்சிகளை பார்த்ததுண்டா? அவை கந்தர்வர்கள். இலை நுனிகளில் அமர்ந்து ஊசலாடி மகிழும் தட்டாரப்பூச்சிகளை கந்தர்வர்கள் என்றறிக. இரை தேடாது விண்ணின் ஒளி வெள்ளத்தில் விழுந்தெழுந்து குமிழியிட்டு மகிழும் சிட்டுகள் கரவுருக்கொண்ட கந்தர்வர்கள்தான்.

விண்ணிலும் மண்ணிலும் மகிழ்வை அன்றி பிறிது எதையும் அறியாது வாழும் இறைச்சொல் அளிக்கப்பட்டவர்கள் அவர்கள். பேருருக் கொண்டு போர் புரியும் மகிமையும் நுண்ணுருக்கொண்டு மலர்ப்பொடிகளுடன் கலந்து காற்றில் பறக்கும் அணிமையும் அவர்களின் கலைகள். முகில்பீலியின் எடையின்மை கொள்ளும் இலகிமையும் வாயுதேவனும் சலிக்கும் பேரெடை கொள்ளும் கரிமையும் அவர்களின் திறன்களே. விழைவதை அடையும் பிராப்தியும் உடல் கடந்து குடிகொள்ளும் பிரகாமியமும் அவர்கள் அறிவர். அனைத்தையும் வயப்படுத்தும் வசித்துவம் கொண்டவர்கள். தெய்வங்களை விழிகொண்டு நோக்கும் ஈசத்துவம் கையகப்பட்டவர்கள். குழந்தை, எண்சித்திகளும் கந்தர்வகலைகளே என்கின்றன நூல்கள்.

விண்ணின் முகில்கள் ஏழு. இரும்பாலான கருமுகில்களின் முதல்வட்டம் கனிகம். செம்பாலான செம்முகில்களின் உள்வட்டம் தாம்ரகம். பச்சைநிறமான மூன்றாம் வட்டம் ஹரிதகம். இளநீலநிறமான நான்காம் வட்டத்தை நீலகம் என்கின்றனர். ஐந்தாவது வட்டம் வெண்மை. அது ஷீரவலயம். ஆறாவது பளிங்குவண்ணம். அது மணிபுஷ்பம் எனப்படுகிறது. ஏழாவது வட்டம் பொன்னிறமான ஹிரண்யகம். அதன் மேல் அமைந்துள்ளது அவர்களின் நகரமான கந்தர்வபுரி. பொன்னால் ஆன பன்னிரண்டு கோட்டைகளால் சூழப்பட்டது. அதன் நடுவே ஒளிவிடும் வைரங்கள் பதிக்கப்பட்ட குவைமுகடுகள் கொண்ட பன்னிரண்டாயிரம் மாளிகைகள் நிரை வகுத்த தெருக்கள் பெருஞ்சுழியென வளைந்து சென்று மையத்தில் அமைந்த நீலச்சுனை ஒன்றை அடைகின்றன.

அச்சுனை ஓர் அழகிய ஆடி. அதில் தலைகீழாகத் தெரிவது அடுத்த வானில் அமைந்த பிறிதொரு கந்தர்வ நகரத்தில் அமைந்திருக்கும் இன்னொரு சுனை. இரு சுனைகளுக்கும் நடுவே விழியறியமுடியாத வெட்ட வெளி உள்ளது. அச்சுனை அருகே கந்தர்வர்கள் செல்வதில்லை. சுழற்பாதை நூற்றி எட்டு வளைவுகள் கொண்டது. அந்நூற்றெட்டு வளைவுகளையும் கடந்து அச்சுனை அருகே சென்று தன் முகம் பார்க்கும் கந்தர்வன், முடிவிலிப் பெரு வெளியாக தன்னை அறிவான். அச்சுனையின் ஆழம் அவனை உறிஞ்சி எடுத்து அணுத்துகளென ஆக்கி தன்னுள் அடக்கிக் கொள்ளும்.

ஆனால் எத்தனை தவிர்த்தாலும் கந்தர்வர்கள் அச்சுனையை அடைந்தே ஆகவேண்டும். ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுக்கும் ஓர் அணுவிடைத் தொலைவுக்கு அவர்கள் அதை நோக்கி செல்கிறார்கள். இறுதியில் சுடரில் விட்டில் என அதில் சென்று அமைகிறார்கள். அதன் நீரின் ஒவ்வொரு அணுவும் அவ்வாறு சென்று நோக்கிய பல்லாயிரம்கோடி கந்தர்வர்களால் ஆனது. அவர்கள் பிறகெப்போதோ ஒரு முறை அத்தடாகத்திலிருந்து நீராவியென எழுந்து வானில் அலைந்து துளித்துச் சொட்டி மீண்டும் அந்நகரத் தெருக்களிலேயே விழுந்து உருக்கொண்டு எழ முடியும். இந்த முடிவிலா சுழற்சியில் காலத்தை உணர்கிறார்கள் அவர்கள்.

மண்ணிலிருந்து கந்தர்வபுரியை எவரும் காண முடியாது. ஆனால் மழை வெளுத்து வெயில் எழுவதற்கு முன்பு அரைக்கணம் விழிமயக்கென முகில்களின் மேல் அறியாப் பேருருவனின் மணி முடி போல தோன்றி மறையும் அந்நகரை காண முடியும். நூல் கனிந்த சூதரும் ஞானம் முழுத்த முனிவரும் சொல் முளைக்காத சிறாரும் அதைக் காண முடியும் என்பார்கள். கந்தர்வபுரி பொன்னொளி கொண்டது. எனவே பொன்னன்றி அங்கேதுமில்லை. பஞ்சுத் துகள்கள் இளங்காற்றிலென அங்கு ஒழுகி அலையும். கந்தர்வர்கள் ஒளியுடல்கொண்டவர்கள். எனவே ஒருவரை ஒருவர் ஆடிகளென எதிரொளித்துக் கொள்வார்கள். காதல் கொள்கையில் உடல்தழுவி முற்றிலும் ஒருவரை ஒருவர் எதிரொளித்து முடிவின்மையாவார்கள். நீர்த்துளிகள் இணைந்து பெரிய நீர்த்துளியாவது போல ஓருடலாகி அவ்வெடையால் சரிந்து விழுந்து நீரென ஒளியென பரவுவார்கள்.

கந்தர்வபுரியில் அவர்களால் தங்கள் விரல்களை ஒன்றுடனொன்று தொட்டு பேரியாழின் இசையை எழுப்பமுடியும். உள்ளங்கைகளில் விரல்களால் அறைந்து முழவின் தாளத்தை எழுப்ப முடியும். அவர்களின் மூச்சுக் காற்றே குழலிசை. அங்கு அவர்கள் பேசும் மொழியென இருப்பது இசையே. ஒவ்வொரு கந்தர்வரும் பிறிதொருவரிடம் தன் உள்ளம் பகிர்கையில் அத்தனை இசைகளும் இணைந்து ஒற்றைப் பேரிசையாகி முடிவிலாது அங்கு முழங்கிக் கொண்டிருக்கும். கந்தர்வர்கள் அந்த இசையிலிருந்து தங்களை பிரித்துக் கொள்வது சொல்லின்மைக்குச் சென்று அணையும்போது மட்டுமே. அங்கே மோனமும் அமைதியும் விரிந்திருக்கும். அதில் தங்களை பொருத்திக் கொள்ளும்போது வெயிலில் ஆவியாகி மறையும் நீர்த்துளியென ஆவர். இறுதிக்கணத்தில் திரும்பி அந்நகரை ஆளும் அப்பேரிசையென்பது ஒரு சிறு நரம்பை விண் விரலொன்று தொட்டுச் செல்லும் இசைத்துளி மட்டுமே என்றுணர்ந்து திகைப்பர்.

கந்தர்வ நகரத்தில் காற்றில்லை. அவர்களுக்கு மூச்சும் இல்லை. அங்கு திரைச்சீலைகளையும் மலர்களையும் முகில்களையும் அவர்களின் எண்ணங்களே அசைக்கின்றன. உவகை கொண்டவனருகே மலர்க்குவைகள் நடனமிடுகின்றன. காதல் கொண்ட கந்தர்வப் பெண்ணின் அருகே திரைச்சீலைகள் நாணி நெளிகின்றன. சினம் கொண்டவனைச் சுற்றி இலைகள் கொந்தளிக்கின்றன. கந்தர்வர்கள் உணவுண்பதில்லை. கந்தர்வபுரியில் மலரும் மலர்களின் தேனை மட்டுமே அருந்துகிறார்கள். அங்குள்ள பெரும் மலர்ச்சோலைகளில் பல்லாயிரம் இதழ் கொண்ட தாமரைகள் மலர்ந்து இதழ் ஒளி கொண்டு குளிர்ந்திருக்கின்றன. பசி கொண்ட கந்தர்வன் தனக்குரிய மலரைத் தேடிச்சென்று அதைச் சுற்றி பறந்து தன் உள்ளத்தின் இனிய நுண்மைகளை ஒவ்வொன்றாக எடுத்து இசையாக்கி அதைச் சூழவேண்டும். அவ்விசை கேட்டு கனிந்து அமுதூற்று என ஆகி அம்மலர் சொட்டத் தொடங்குகையில் இரு கைகளாலும் குவித்து அத்தேனை அவன் அருந்தவேண்டும்.

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவ்வமுதை அருந்தாத கந்தர்வன் தன் உடல் எடை கொண்டபடியே இருப்பதை உணர்வான். அவன் ஆடி எதிரொளிக்கும் ஒளியென பறந்தலைய முடியாமலாவான். ஈரம் கொண்ட பஞ்சுத்துகளென கந்தர்வபுரியின் தரை நோக்கி அழுந்துவான். கை நீட்டி அவன் பற்றிக் கொள்ளத்துடிக்கும் ஒவ்வொன்றும் பொருளல்ல, வெறும் ஒளித்தோற்றமே என அறிவான். மாளிகை விளிம்புகள் தூண்கள் மரங்கள் அனைத்தும் அவனை கைவிடும். அவன் விரும்பிய தோழனும் தோழியரும் அவனை அள்ளிப்பற்ற முயல்கையில் தாங்கள் புகை வடிவானவர்கள் என்று உணர்வார்கள். தரையில் கூழாங்கல்லென விழுந்து மென் புழுதியில் தடம் பதித்து அங்கே கிடப்பான்.

ஒவ்வொரு கணமும் என அவன் எடை கூடிக் கூடி வரும். கந்தர்வபுரியின் மண் பொற்துகள் பொடியாலானது. அதில் புதைந்து அழுந்தி ஓர் ஆழ்துளையென ஆகி அப்பரப்பை பொத்துக் கொண்டு மறுபக்கம் வந்து மண்ணுக்கு இறங்குவான். இரவில் எரி விண்மீனென ஒளி நீண்டு தரைக்கு வருபவர்கள் உதிரும் கந்தர்வர்களே. இங்கு விழிவிரிந்த குளிர்நீர்ச்சுனைகளில், இலை நீட்டி ஊழ்கத்தில் அமர்ந்த மரங்களில், குளிர்ந்து இருட்குவையென இறுகிய பாறைகளில் அவர்கள் வந்து விழுவார்கள். நீரில் அவர்கள் விழுகையில் அலையெழுவதில்லை. மரங்களை அவர்கள் தழுவிக்கொள்கையில் கிளை அசைவதில்லை. பாறைகளில் துளிசிதறுவதில்லை.

அக்கணம் முழுத்து மறுகணம் எழுந்ததும் தான் என உணர்கிறான் மண்ணுக்கு வந்த கந்தர்வன். தன் கந்தர்வ நகரில் தான் நுகர்ந்த இன்பங்களை இங்கு நாடுகிறான். அவன் விரல்களும் உடலும் மூச்சும் இசை எழுப்பாமலாகின்றன. எனவே மானுட நகரங்களுக்குள் புகுந்து இங்குள்ள சூதர்கள் வைத்திருக்கும் யாழ்களையும் முழவுகளையும் குழல்களையும் கண்டு இங்குள்ள இசையை கற்கிறான். அல்லிவட்டங்களில் யாழை மீட்டுகிறான். மூங்கில்களில் குழலூதுகிறான். நெற்றுகளில் பறைமீட்டுகிறான். மலர்ப்பொடிகளையும் இன் நறவையும் வண்ணத்துப் பூச்சிகளுடன் சேர்ந்து பறந்து மாந்துகிறான். அலைநீர் பரப்பில் தன் முகத்தை மீள மீள நோக்கி மகிழ்கிறான்.

ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகள் இங்கு அவன் செய்யும் தவமென்பது இழந்தவற்றை மீட்க முயல்வதே. கதிரெழும் முதற்பொன்னொளியில் முகில்களில் எழும் கந்தர்வநகரியை நோக்கி இலை நுனிகளில் ஒளி விழிகளைப் பதித்து படபடத்து ஏங்குகிறான். அந்தி இருண்டு அடங்குகையில் செங்கனல் குவையென தோன்றி மறையும் தன்நகர் கண்டு தனிப்பறவையின் குரலில் விம்மி அழுது அமைகிறான். நிலவெழுகையில் காட்டை தன் மேல் எதிரொளிக்கும் ஆடிப்பரப்பென உடல் கொண்டு எழுகிறான். குளிர் என ஆகி இலைப்பரப்புகளை நனைக்கிறான். நிலவு நீராடும் சுனைகளில் தானும் இறங்கித்திளைக்கிறான்.

இளையோனே, மண்ணிலுள்ள தூயவை அனைத்தையும் அவன் அறிந்து நிறைகையில் அவன் உடல் எடையற்றதாகிறது. இனிய மலர்த்தேனால், புலரியந்தியின் பொன்வண்ணங்களால், அகம் நிறைக்கும் இசையால், கனிந்த காதலால், காதல் முழுத்த காமக் களியாட்டத்தால் தன்னுள் இனிமை நிறைத்து தன் எடையை இழக்கிறான்.

பட்டுச் சரடால் கால் கட்டப்பட்ட பறவை போல் இங்கு இறகு படபடத்துக் கொண்டிருக்கும் கந்தர்வனை அறுத்து விடுதலை செய்வது ஒன்றே. அவன் அறிந்த இனிமைகள் அனைத்தையும் ஒன்றெனத்திரட்டி முழுமைப்படுத்தும் ஒரு மெய்ஞானம். அதை அறிந்த கணமே முற்றிலும் எடை இழந்து அவன் வானேறத்தொடங்குகிறான். ஏழு முகில் அடுக்குகளைக் கடந்து ஹிரண்யவதி என்னும் தன் கந்தர்வ நகரத்தில் அடிமணலில் சென்று ஒட்டுகிறான். விதை என அங்கு உறங்கி முளையென விழிப்பு கொண்டு தளிரென அந்நகரத்தெரு ஒன்றில் முளைத்தெழுகிறான். அங்கு தான் மறந்து வந்த அனைத்தையும் மீண்டும் கண்டடைகிறான்.

பகுதி ஒன்று : கனவுத்திரை - 7

காசியப பிரஜாபதிக்கு முனி என்னும் துணைவியில் பிறந்தான் சித்ரரதன். அன்னை அவனை ஈன்று தன்னருகே முகில் படுக்கையில் படுக்கவைத்து இனிய கனவில் துயின்றபோது விண் நிறைத்த பெருமுகில் குவையென குழல் அலைய இருவிண்மீன்களென விழிகள் கனிய குனிந்து மைந்தனை நோக்கினார் காசியபர். அவன் ஒளி ஊடுருவும் உடல் கொண்டிருந்தான். நீர்த்துளியென ததும்பிக் கொண்டிருந்த அவனை தன் சுட்டுவிரல் நீட்டி ஒற்றி எடுத்து தன் முகத்தருகே கொண்டு வந்து நோக்கி புன்னகைத்தார். அவர் புன்னகையின் ஒளியை எதிரொளித்து அவன் அசைந்தான். 'வாழ்த்தப்படுவாய்’ என்று நற்சொல் உரைத்து அவனை அன்னையருகே விட்டார்.

சித்ரரதன் கந்தர்வபுரியின் பொற்புழுதியில் ஆடி வளர்ந்தான். குப்புறக்கவிழ்ந்து சிறுகைகளை அடித்து முழங்கால் ஊன்றி அவன் தவழத்தொடங்கியபோது தந்தை விண்ணகத்தின் இரு மரமல்லி மலர்களைக் கொய்து அவற்றின் செங்காம்புகளை ஒன்றுடனொன்று இணைத்து இரு சக்கரங்களாக்கி மலர்த்தேர் ஒன்றை செய்தார். அதை அவனுக்களித்து சிரித்தார். அத்தேரை தன் கைகளால் மெல்ல தொட்ட சித்ரரதன் அண்ணாந்து இதழ்நீர் வழியும் சிவந்த வாய் திறந்து மின்னும் கண்களுடன் தந்தையை நோக்கி சிரித்தான். அவர் அவனை “சித்ரரதா, என் மகனே” என்று அழைத்தார்.

அம்மலர்த்தேர் வாடாமல் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவன் உருட்டி விளையாட அவனுடன் அது வளர்ந்தது. அதை நடைவண்டியாக ஆக்கி அவன் கால் பயின்றான். களிவண்டியாக ஆக்கி அதிலேறி தன் மாளிகை இடைநாழிகளில் சுற்றிவந்தான். சிறுபுரவியைக் கட்டி கந்தர்வ நகரியின் புழுதித்தெருக்களில் விரைந்தான். தோள் முதிர்ந்து இளைஞனானபோது கந்தர்வநகரியின் நிகரற்ற மலர்த்தேரென அது ஆயிற்று. வெண்பளிங்கில் செதுக்கப்பட்டதென ஒளிவிட்ட மலர்ச்சக்கரங்களும் இளம்செந்நிற தூண்களும் கொண்ட அந்தத் தேரை வெண்முகில் வடிவான ஏழு புரவிகள் இழுத்தன. கந்தர்வப் பெண்கள் ஒவ்வொருவரும் அதில் ஒரு முறையேனும் ஏறி விண்ணைச்சுற்றிவர விழைந்தனர்.

வெண்பனி போல் ஒளி ஊடுருவும் உடல் கொண்டிருந்த சித்ரரதன் புலரியின் செம்மையில் பொன்னென ஆனான். அந்தியில் அனலென பொலிந்து அணைந்தான். இருளில் விண்மீன்களின் ஒளியை வாங்கி உருக்கொண்டான். கந்தர்வபுரியின் பேரழகன் அவனே என்றனர் முனிவர். அவன் முகத்தைக் கனவுகண்டு கன்னியர் புன்னகை புரிந்தனர். நிகரற்ற காசியபரின் மைந்தனென்றும் பேராற்றல் கொண்ட முனியின் புதல்வனென்றும் முன்பிலாத பேரெழில் கொண்டவனென்றும் தடையற்ற தேருக்கு தலைவனென்றும் ஆன சித்ரரதன் இளமையிலேயே தருக்கு நிறைந்திருந்தான்.

ஒரு நாள் விண்ணின் ஏழு கந்தர்வக் கன்னியரை துணை சேர்த்து தேரில் முகில் நெடும்பாதையில் விரைந்து கொண்டிருக்கும்போது அவன் முன் ஒரு வாடிய மலர் பாதையில் கிடப்பதைக் கண்டான். அவனுடன் இருந்த கன்னியரில் ஒருத்தி “அதோ ஓர் அழகிய மலர். தேரை ஒதுக்கு” என்று கூவினாள். “வாடிய மலருக்காக என் தேர் வழிமாறாது” என்றான் சித்ரரதன். அவன் தேர் அம்மலர் மேல் ஏறி உருண்டு மறுபுறம் சென்றது. அதுவோ அன்று காலை மலர்ந்து மாலையில் கூம்ப வேண்டிய கள்மலர். ஆனால் அதனுள் பீதாம்பரன் என்னும் தேவன் தன் தேவியுடன் வண்டு உருவில் நுழைந்து இதழ்களை இழுத்து மூடிக்கொண்டு இன்கலவியில் ஆழ்ந்திருந்தான். அவர்களின் எடை தாளாமல் காம்பு உடைந்து உதிர்ந்து பாதையில் கிடந்தது அம்மலர்.

கலவி முழுமைக்கு முன்னே தன் மேல் ஏறிச்சென்ற சகடங்களை உணர்ந்த பீதாம்பரன் சினத்துடன் எழுந்து பேருருவம் கொண்டு சித்ரரதனை வழி மறித்தான். “உனது தேர் என் இன்ப நுகர்வை அழித்தது. தேவருக்காயினும் மானுடருக்காயினும் தெய்வங்கள் அளித்த இன்பங்கள் மூன்று. உண்ணுதல், புணர்தல், ஊழ்கத்தில் அமர்தல். மூன்றையும் சிதைக்கும் உரிமை விண்ணவருக்கோ மண்ணவருக்கோ அளிக்கப்படவில்லை. இங்கு நீ செய்த பிழைக்கு என்ன சொல்லப்போகிறாய்?” என்றான்.

“விண்ணிலும் மண்ணிலும் பாதைகள் தேர்களுக்கானவை. எளிய சிற்றுயிர்கள் பல்லாயிரம் அப்பாதைகளில் இருக்கலாம். அவற்றை நோக்குபவன் தேரோட்ட இயலாது. இன்று வரை இலக்கடைந்த அத்தனை தேர்களும் அவ்வழியில் உள்ள பிற எவற்றையும் நோக்காதவையே. நான் தேர்வலன். இலக்கு நோக்கும் வீரன். இச்சிற்றுயிர்களை அழிப்பது எனக்கு பிழையல்ல, அறமே” என்றான் சித்ரரதன்.

பீதாம்பரன் சினந்து “என்ன சொன்னாய்? மூடா, இக்கந்தர்வபுரியை அள்ளி ஒரு கணையாழியாக என் கையில் மாட்டும் அளவு பெரியவன் நான். ஏழு விண்ணுலகங்களில் ஒவ்வொரு உலகும் அதற்கு முந்தைய உலகத்தின் ஒரு சிறு துளியே என்றுணர்க! முதல் உலகில் வாழ்பவன் நீ. ஏழாவது உலகின் அமராவதியை ஆளும் இந்திரனின் அவையிலிருக்கும் தேவன் நான். உன் பாதையில் உள்ளவை சிற்றுயிர்கள் என்று நினைக்கும் உரிமையை உனக்கு அளித்த நூல் எது? அச்சொல் அளித்த மூடன் எவன்?” என்றான்.

சித்ரரதன் “தேவனே, விண்ணவருக்கானாலும் மண்ணில் வாழும் மானுடர்க்கானாலும் சிற்றுயிர்க்கானாலும் ஆன்மா ஒன்றே. ஊழ்நெறியும் ஒன்றே. வாழ்வின் இன்பங்களும் துன்பங்களும் நிகரானவையே. ஆயினும் யானைகள் செல்லும்போது எறும்புக்கூட்டங்கள் அழிகின்றன. பெருமீன் வாய்திறந்து ஒரு இமைப்புக்கு ஆயிரம் சிறு மீன்களை உண்கிறது. வேட்டையாடி விலங்கைக் கொன்று உண்பவன் அதன் உடலில் உள்ள பல்லாயிரம் சிற்றுயிர்களையும் எண்ணாமல் கொல்கிறான். ஆன்மா அமைந்திருக்கும் உடலே இப்புடவி நாடகத்தில் அதன் இடத்தை முடிவெடுக்கிறது. சிற்றுயிரென்பது உடலால் சிற்றுயிரே. இன்று என் முன் பேருருவம் கொண்டு எழுந்து நிற்கும் நீ அம்மலருக்குள் வண்டென அமர்ந்திருக்கும்போது சிற்றுயிராக இருந்தாய். என் செயலை அவ்வடிவில் இருந்தபடியே நீ மதிப்பிடவேண்டும்” என்றான்.

பீதாம்பரன் நகைத்து “கந்தர்வனே! ஐம்புலன்களும் தொட்டறியும் பருவுலகத்தை மட்டுமே அறிபவனுக்கு பெயர் உலகியலான். அதனுள் உறையும் ஆற்றலை அறிபவன் யோகி. அறிந்த அனைத்தையும் ஒன்றென காண்பவன் ஞானி. கந்தர்வன் எனப் பிறந்தவன் நீ. இவ்வுடல் மட்டும் காணும் கண் கொண்டிருந்தாய் என்றால் இங்கு நீ வாழ்வதற்கான தகுதி என்ன?” என்றான்.

“இச்சொல்லாடல் எங்கும் முடிவுறாது. பாதையின் ஒவ்வொரு சிற்றுயிரையும் உளம் கொண்டேனென்றால் இத்தேரில் முகப்பில் அமர்ந்து நான் கடிவாளம் பற்ற முடியாது. இத்தேரை எனக்களித்த எந்தை இட்ட ஆணை பிழையில்லை என்றால் இதில் எனக்கு ஐயமில்லை. பிழையென ஒரு கணமும் உணராத ஒருவனை தண்டிக்கும் ஆற்றலுள்ள தெய்வம் ஒன்றில்லை” என்றான் சித்ரரதன். “ஆம், நாம் சொல்தொடுத்து முடிவறிய இயலாது. வருக, இந்நகர் நடுவே உள்ள அந்த நீலச்சுனை அருகே செல்வோம். உன் முகத்தையும் என் முகத்தையும் அதில் காட்டுவோம். பிழையும் நிறையும் பேருருக்கொண்டு பல்கிப் பெருகி முடிவிலி என அங்கு ஆகும். அப்போது ஐயமிருக்காது” என்றான் பீதாம்பரன்.

“ஆம், அதை நோக்குவோம்” என்று தன் தேரைத் திருப்பி நகரில் பெருஞ்சுழல் பாதையில் விரைந்தான். அவன் அருகே தன் நுண்ணுடலுடன் பீதாம்பரன் வந்தான். அலையற்றுக் கிடந்த ஆடி வட்டம் போன்ற சுனையை அடைந்த சித்ரரதன் “இன்மையின் சுழியே! இங்கு என் சொல் பிழை என்றால் காட்டுக!” என்றான். பீதாம்பரன் “எங்கள் பூசலின் இறுதி முடிவை இங்கு காட்டுக!” என்றான். இருவரும் குனிந்து நீல ஆடிவெளியை நோக்கினர். அச்சுனைக்குள் தன் முகங்கள் ஒன்றிலிருந்து ஒன்றென பற்றிக் கொண்டு முடிவிலா நீள்சரடாக எழுவதை சித்ரரதன் கண்டான். அச்சரடின் மறுநுனி அலைந்தது. யானையின் துதிக்கையென அதன் அண்மைநுனி வந்து அவனை பற்றிக்கொண்டது. மறுசொல் உரைப்பதற்குள் அவனையும் அவனுடனிருந்த ஏழு கந்தர்வக் கன்னியரையும் வளைத்து நீருக்குள் கொண்டு சென்றது.

நீல வெறுமைக்குள் கணம் கோடி காதமென சென்று கொண்டிருந்த அவன் விழித்தெழுந்தபோது கங்கைக் கரையின் மலர்ச்சோலை ஒன்றில் பூத்த மந்தார மலர்களின் இதழின்மேல் சிறு பொன்வண்டாக அமர்ந்து சிறகு துடித்துக் கொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து ஏழு சிறு பூச்சிகளாக அக்கந்தர்வக் கன்னியர்கள் அதிர்ந்து கொண்டிருந்தனர்.

சித்ரரதன் தலை தூக்கி ஒளிமயமாகக் கிடந்த வானை பார்த்தான். அங்கே முகில்களுக்கு மேல் பொன்முடிகள் எழுந்த நகரி தெரிந்தது. “எந்தையரே, நான் மீள்வதெப்போது?” என்று அவன் கேட்டான். “இளையோனே, நீ எதிர்கொண்ட வினவுக்கு விடையொன்று கிடைக்கும்போது” என்றது காசியபரின் குரல். சித்ரரதன் “எவர் சொல்லில் அதைப்பெறுவேன்?” என்றான். “ஒரு கையில் சுடரும் மறு கையில் குருதியுமென வரும் ஒருவனை நீ காண்பாய்” என்று சொல்லி அடங்கியது விண்பெருங்குரல்.

கங்கைக் கரையில் சைத்ரிகம் என்னும் அடர் சோலையில் தன் துணைவி கும்பிநசியுடன் சித்ரரதன் அழகிய பொன்வண்டு வடிவில் வாழ்ந்தான். மலர்ப்பொடி ஆடியும் இன்மது அருந்தியும் அலைகளில் நீராடியும் வண்டுகளுடன் இசையாடியும் அங்கிருந்தான். ஆயிரம் ஆண்டுகளில் தான் வளர்ந்த நகரை அவன் மறந்தான். மீண்டும் ஆயிரம் ஆண்டுகளில் தன்னை கந்தர்வன் என்றே உணராமல் ஆனான். ஒவ்வொரு நாளும் பல கோடி மலர்கள் தேனுடன் மலர்ந்த அச்சோலையில் பிறிதொன்றை எண்ணவே அவனுக்கு நேரமிருக்கவில்லை. காதல் மனைவியுடன் இசையும் மதுவுமாகக் களித்து மலரிதழ்களின் ஆழத்தில் துயின்று புலரியில் விழித்தெழுந்தான்.

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் சித்திரை மாத முழுநிலவு கந்தர்வர்களுக்கு உரியது. அன்று நிலவு கிழக்கே நாற்பத்தைந்து பாகைக்குமேல் எழுந்து அணைவதற்கு நாற்பத்தைந்து பாகை வரை உண்டான காலம் கந்தர்வ காலம் என்று நிமித்திகர்களால் வகுக்கப்பட்டுள்ளது. அன்று இல்லங்களிலோ தெய்வங்கள் பதிட்டை செய்யப்பட்ட காடுகளிலோ அன்றி வேறெங்கும் மானுடர் நடமாடலாகாது என்று மூதாதையர் அறிவுறுத்தியுள்ளனர். அன்று பிறநிலங்கள் அனைத்தும் கந்தர்வர்களின் களியாட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவர்களை மானுடர் தங்கள் ஊன்விழிகளால் அன்று காணமுடியும்.

அணுவடிவென இப்புவியில் வீழ்ந்த கந்தர்வர்கள் பேருருவம் கொண்டு எழுந்து நிலமும் நீரும் ஆடிக் களிக்கும் காலம் அது. துடிக்கும் இலைநாவுகளில் அவர்களின் இசை எழுந்து மானுடச்செவிகளை அடையும். அன்று மானுடர் எவரும் எல்லை மீறுவதில்லை. ஆனால் பாண்டவர்கள் ஐவரும் தங்கள் அன்னையுடன் அப்போது கங்கைக் கரையோரமாக நடந்து கொண்டிருந்தனர். வாரணாவதத்து எரிமாளிகை நீங்கி இடும்ப வனம் ஏகி இடும்பனைக் கொன்று இடும்பியை மணந்து மீண்டு ஏகசக்ரபுரி சென்று பகனையும் கொன்றபின் அறியாப் புதுநிலம் நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

அன்னையைத் தோளிலேற்றி பேருடல் கொண்ட பீமன் நடந்தான். அவனுக்குப் பின்னால் அம்பு தொடுக்கப்பட்ட வில்லுடன் நகுலனும் சகதேவனும் சென்றனர். அவருக்கு முன்னால் வாளுடன் தர்மன் நடந்தான். அந்த ஐவருக்கும் முன்னால் ஒரு கையில் எரிசுள்ளியும் மறுகையில் வில்லும் தோளில் அம்பறாத்தூணியுமாக அர்ஜுனன் நடந்தான். எரிசுள்ளியின் செவ்வொளி பட்டு இருளுக்குள் துயின்றிருந்த மரங்கள் இலைகள் பளபளக்க விழித்துக் கொண்டன. பறவைகள் விடியலென மயங்கி கலைந்து சிறகடித்து எழுந்தன. இலைகளின்மேல் சிறகுகள் உரச வௌவால்கள் அவர்களைச் சூழ்ந்து பறந்தன. ஐவரும் நடந்த காலடி ஓசை எழுந்து ஆயிரம் எதிரொலிகளாக பெருகி அவர்களைச் சூழ்ந்தது.

மறுநாள் புலர்வதற்குள் அருகிருந்த ஆயர்குடியொன்றை அடைந்துவிட வேண்டுமென்று தருமன் திட்டமிட்டிருந்தான். பகலில் பெருநகரச்சாலை வழியாக செல்வதை அவர்கள் தவிர்த்தனர். கங்கைக் கரையோரத்து நாணல்புதர்களில் பகலெல்லாம் படுத்துத் துயின்றனர். அந்தி சாய்ந்து இருள் கனத்தபின் கிளம்பி காட்டை கடக்க முற்பட்டனர். ஆனால் அன்றிரவு அம்முடிவு சரிதானா என்று தருமன் அஞ்சத் தொடங்கினான். அரக்கென இறுகிய இருளுக்குள் மரங்களும் பாறைகளுமாக அழுந்திப் பதிந்து அசைவற்றிருந்தது காடு. ஒவ்வொரு கணமும் ஒரு கரிய திரையைக் கிழித்துச் செல்வது போல இருளை ஊடுருவ வேண்டியிருந்தது. நெடுந்தூரம் வந்தபின்னும் கிளம்பிய இடத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பது போல் உளமயக்கு ஏற்பட்டது.

“இளையோனே, இது கந்தர்வ இரவு. இக்காட்டிற்குள் இப்படியே செல்வது உகந்ததா என்று என் உள்ளம் ஐயம் கொள்கிறது. நான் எண்ணியதைவிட இது அடர்வு கொண்டு இருக்கிறது. இங்கெங்காவது இரவு தங்கிவிட்டு செல்வதல்லவா சிறப்பு?” என்றான் தருமன். “மீண்டும் காலையில் நாம் நகர் மாந்தர் கண்களில் பட வேண்டியிருக்கும் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “இக்காட்டைக் கடந்து மறுபக்கம் சென்றால் எவர் ஆட்சியிலும் இல்லாத ஆயர் குடிகள் உள்ளன. அவர்களிடம் நாம் போய் சேர்வோம். அன்னை வழியில் நாம் யாதவர் என்பதால் நம்மை ஏற்காதிருக்க மாட்டார்கள். அங்கு சில காலம் தங்கியபின் ஆவதென்ன என்று சிந்திப்போம்.”

தருமன் “என் உள்ளுணர்வு அஞ்சுகிறது. நாம் மானுடருக்குரிய எல்லைகளை மீறுகிறோம்” என்றான். பீமன் “மூத்தவரே, நாம் மானுடரல்லாமலாகி நெடுநாட்களாகின்றன. நாம் வாரணவதத்தின் சிறையில் எரிந்துவிட்டோம். இப்போது பேய்களென உலவுகிறோம்” என்றான். குந்தி “ஆம் மைந்தா, நாம் காட்டைக் கடந்துவிடுவதே நல்லது” என்றாள். “தங்கள் ஆணை அன்னையே” என்றான் தருமன்.

இருளுக்குள் நிழலெனச் சென்ற அவர்களைச் சூழ்ந்து உடலிலிகளான பாதாள நாகங்களும் குருதிப் பேய்களும் விழி ஒளிர்ந்த இயக்கிகளும் நடந்தனர். அவர்களின் ஓசையையோ மணத்தையோ அவர்கள் அறியவில்லை. ஆனால் ஐம்புலன்களுக்கும் அப்பால் ஒன்று விழிப்புகொண்டு அவர்களுடன் வருபவர்களை சொல்லிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கணமும் தன் உடல் மெய்ப்பு கொண்டிருப்பதை தருமன் உணர்ந்தான். “நம்மை பல நூறு விழிகள் சூழ்ந்து உடன் வருகின்றன என்று உணர்கிறேன் இளையோனே” என்றான் தருமன். “காடு விழிகளால் ஆனது” என்றான் அர்ஜுனன்.

“இல்லை, இவை விலங்குகளின் விழிகள் அல்ல. பறவைகளின் விழிகளும் அல்ல. உடலற்ற நோக்குகள். மிக அண்மையில் அவர்கள் நம்மை சூழ்ந்துள்ளனர்.” அச்சொற்களைக் கேட்டு கரிய நிழலென இருளுக்குள் சென்று கொண்டிருந்த இயக்கன் ஒருவன் தன் தோழனை விழிநோக்கி புன்னகைத்தான். மலைக்கொடியென மரத்தில் சுற்றியிருந்த பாதாள நாகம் ஒன்று சற்று வெருண்டு உடல் வளைத்து பின்னகர்ந்தது. அர்ஜுனன் “எவராக இருப்பினும் இங்கு என் முன் உடல் கொண்டு வந்து என் வில்லுக்கு நிகர் நின்றாக வேண்டும் மூத்தவரே. விண்ணிலும் மண்ணிலும் எவரையும் இவ்வில் கொண்டு எதிர் கொள்ள முடியும் என்று நானறிவேன். அஞ்சுவதற்கேதுமில்லை” என்றான்.

அர்ஜுனனின் முன்னால் வந்து அவன் கண்களை கூர்ந்து நோக்கி அவன் முன்னால் எட்டு வைக்க பின்சரிந்து அவன் கால்பட்ட மண்ணாக தன்னை விரித்து அவன் கடந்து சென்றபிறகு நிழலாக எழுந்து சுருண்டு அவனைச் சூழ்ந்த இலைகளின்மேல் கைவிரித்து ஆடி நின்றிருந்த சாயை என்னும் இயக்கி தன் துணைவனாகிய சாருதனை நோக்கி “ஒரு கணமேனும் அஞ்சாதவனை எதிர்கொள்ளும் ஆற்றல் நம் போல் தேவர்களுக்கும் இல்லை. இவனை வெல்லாது இவ்வைவரையும் நாம் கொல்வதும் அரிது” என்றாள்.

காலன் என்னும் நாகம் நீர்நெளிவு போல அவர்களை கடந்துசென்று எழுந்தது. “இந்நுண்ணுருவில் இவனை நான் தீண்ட முடியாது. உடல் கொண்ட பாம்பென வந்தால் விழிதொடுமுன்னே வந்து தைக்கும் அவன் அம்புக்கு ஈடு நிற்க என் உடலால் இயலாது” என்றது. “நம்மில் எவர் இவனை வெல்லக்கூடும்?” என்றாள் சாயை. இலைநுனிப் பனித்துளிகளென தன் விழிகளை வைத்துப் பரவியிருந்த அரக்கி சொன்னாள் “உண்மையை சொல்கிறேன், இங்கு இவனை வெல்ல நம்மில் எவராலும் முடியாது.”

இளங்காற்றென பறந்து அவன் தலையை சுற்றிய பாகையின் குச்சத்தை அசைத்து கடந்து சென்ற சூஷ்மன் என்னும் கந்தர்வன் சொன்னான் “இவனை வெல்லக்கூடுபவன் ஒருவனே. அப்பால் உள்ளது சைத்ரிகம் என்னும் காடு. இவனை வழிதிருப்பி அங்கு கொண்டு செல்வோம். தன் எல்லைக்குள் புகுந்தவனை சித்ரரதன் கொல்லாமல் விடப்போவதில்லை.” “ஆம் ஆம்” என எழுந்தன பேய்கள். காற்றின் நகைப்பொலியாக அவர்களின் மகிழ்வை அர்ஜுனன் கேட்டான்.

“காற்றின்றியே கிளைகள் சிலிர்க்கும் விந்தைதான் என்ன இளையோனே? என் அச்சம் மிகுகிறது. நாம் திரும்பிவிடுவோம்” என்றான் தருமன். “காட்டுக்குள் சிறு காற்றிடப்பெயரல்கள் உண்டு மூத்தவரே. அல்லது அவை சிறு விலங்குகளாகக்கூட இருக்கலாம்” என்றான் அர்ஜுனன். “என் அச்சம் என்னை நடக்க விடவில்லை” என்றான் தருமன். “மூத்தவரே, நாம் இப்பேய்களைவிட கொடியவர்களை கண்டுள்ளோம். வஞ்சனையை எதிர்கொண்டவன் பின் இவ்வுலகில் அஞ்சுவதற்கேதுமில்லை” என்றான் பீமன். தருமன் புடைத்த வேரில் அமர்ந்து “என் உடலைவிட உள்ளம் எடைகொண்டிருக்கிறது” என்றான். அவ்வேரின் நிழலெனக் கிடந்த பாதாளநாகமாகிய கிருதன் மெல்ல நெளிந்தான்.

“ஒரு கணம் அஞ்சினான் என்றால் போதும், அவன் உடலில் இருந்தே என் படைக்கலன்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்வேன்” என்றான் காலகன் என்னும் பிரம்ம அரக்கன். “இன்னும் சற்று தொலைவுதான் மூத்தவரே, விரைந்து செல்வோம்” என்று அர்ஜுனன் சொன்னான். “நிலவு மேலெழுந்துவிட்டது. அது கீழ்சரிவை அடையும்போது நாம் புல்வெளியை அடைந்திருக்கவேண்டும்.” தருமன் எழுந்து பெருமூச்சுவிட்டு “இப்படி காட்டுமிராண்டிகளைப்போல செல்பவர்கள் அஸ்தினபுரியின் இளவரசர்கள் என்பதை தெய்வங்கள் அறிந்திருக்குமா?” என்றான். பீமன் “தெய்வங்களுக்கு கொடைகளைத் தவிர வேறென்ன வேண்டும்?” என்றான்.

“இவர்கள் ஆயர்பாடியை நோக்கி செல்கிறார்கள். இவர்கள் உள்ளத்தில் இருப்பது கன்றுகள் சென்று உருவான தடம்” என்றான் காலகன். “பிறிதொரு வழி சமைப்போம். அங்கு இவன் கால்கள் தவறச்செய்வோம்” என்றாள் மாயை என்னும் இயக்கி. அவர்கள் காற்றாக மாறி காடுகளை வகுந்தொதுக்கி ஒரு மாற்றுப்பாதை அமைத்தனர். அதன் எல்லையில் ஓர் இல்லத்து சிறுவிளக்கென தன்னைக் காட்டினாள் ஜ்வாலாபிந்து என்னும் கந்தர்வப் பெண். “அங்கொரு அகல் விளக்கு தெரிகிறது. ஒரு முனிவரின் தவச்சாலை அங்கிருக்கக் கூடும்” என்றான் தருமன்.

பீமன் “இக்காட்டுக்குள் தவச்சாலை அமைவதற்கு வாய்ப்பேயில்லை மூத்தவரே. அது விளக்கல்ல, ஏதோ விலங்கின் விழிகள் காட்டும் மாயம்” என்றான். தருமன் “இங்கு முனிவர்கள் உண்டென்று நானறிவேன். அது அகல் சுடரென்று அறிய என் விழிகளே எனக்குப் போதும்” என்றான். “மூத்தவர் சொல்வது சரிதான் அரசே. இங்கொரு முனிவர் இல்லம் இருக்க வழியில்லை” என்றான் அர்ஜுனன். “அவ்விளக்கொளி நோக்கி செல். இது என் ஆணை” என்றான் தருமன்.

“அரசே…” என்று அர்ஜுனன் சொல்லத்தொடங்க “என் ஆணைக்கு மேல் ஒரு சொல்லை நான் விழைய மாட்டேன்” என்று சொன்னான் தருமன். “தங்கள் ஆணை” என்று தலைவணங்கி காட்டுக்குள் எழுந்த அந்தச் சிறிய ஒளியை நோக்கி சென்றான் அர்ஜுனன். “தவக்குடில் ஒன்றில் சிறிது இன்னீர் அருந்தி துயில்கொண்டு மீளாமல் என்னால் இனிமேல் நடக்கமுடியாது” என்றபடி தருமன் அர்ஜுனனை தொடர்ந்தான்.

அவர்கள் செல்லச்செல்ல ஜ்வாலாபிந்து அகன்றுசென்றபடியே இருந்தாள். பீமன் “நாம் செல்லும்தோறும் அவ்வொளி வளரவில்லை, அவ்வண்ணமே அகன்றுசெல்கிறது. இளையோனே, இதில் ஏதோ சூதுள்ளது” என்றான். “இல்லை, நான் அறிகிறேன். அது ஒரு தவக்குடிலின் அகல்சுடரேதான்…” என்றான் தருமன். அர்ஜுனன் எச்சரிக்கையுடன் மெல்ல நடந்தான்.

சைத்ரிகத்தின் எல்லை என அமைந்த முள்நிறைந்த குறுங்காட்டை அவர்கள் அடைந்தபோது பீமன் “இளையோனே, நாம் கந்தர்வர்களின் எல்லையை அடைந்து விட்டோமென நினைக்கிறேன். மரநிழல்களும் மரக்கிளைகளைப் போலவே பருப்பொருளாகி நம் மேல் முட்டுகின்றன” என்றான். அர்ஜுனன் “ஆம்” என்றான். “இதெல்லாம் நீங்கள் உங்கள் அச்சத்தால் சொல்வது… நான் ஓய்வெடுக்க விழையும்போது உங்கள் பேச்சை மாற்றத் தொடங்குகிறீர்கள். நான் இன்று அந்தத் தவச்சாலையில் ஓய்வெடுத்தாகவேண்டும். இது என் ஆணை” என்றான் தருமன். “அன்னை என்ன சொல்கிறார்கள்?” என்று நகுலன் கேட்டான். “துயின்றுவிட்டார்கள்” என்றான் பீமன். “என் ஆணை இது” என்றான் தருமன். “ஆம் மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

சைத்ரிகத்தின் எல்லையில் சித்ரரதன் தன் இரு இமைகளையும் சிறகுகளாக்கி ஓர் ஆந்தையென்று உருவெடுத்து மரக்கிளையில் அமர்த்தியிருந்தான். கந்தர்வநிலவில் அவன் உடலே விழிகளென்றாக ஏழு துணைவியருடன் காமநீராடிக்கொண்டிருந்தான். குறுமுழவின் ஒலியில் குமுறியபடி அது அவர்களைச் சுற்றிச் சிறகடித்தது. “மிகப்பெரிய ஆந்தை… அது ஆந்தையல்ல” என்றான் பீமன். “ஆம்” என்றான் அர்ஜுனன். ஆந்தை அர்ஜுனனை சிறகால் முகத்தில் தாக்கியது. அவன் விழிக்கணத்தில் விலகி அதே விரைவில் எரிசுள்ளியால் அதை அடித்தான். வாளை உருவும் ஒலி எழுப்பியபடி அது சிறகு உலைந்து சரிந்து பறந்து சுழன்று வந்தது. “நீ யார்?” என்றான் அர்ஜுனன் உரக்க.

ஆந்தை எழுந்து அவனருகே ஒரு மரச்சில்லையில் வந்தமர்ந்து ஆடியது. மின்னிய விழிகளுடன் “விலகிச்செல் மானுடா. இது சித்ரரதன் என்னும் கந்தர்வனின் காடு. இதன் எல்லையை இன்றிரவு எவரும் மீறலாகாது. மீறத்துணிபவன் வாளோ குருதியோ இன்றி நூறு துண்டுகளாக வெட்டப்படுவான்” என்று கூவியது. அர்ஜுனன் “எவர் எல்லையையும் மீற நான் விழையவில்லை. நாங்கள் இவ்வழிச்செல்லவே எண்ணினோம்” என்றான். “இது எங்கும் செல்வதற்கான இடமல்ல. நீங்கள் வழிதவறியிருக்கிறீர்கள்…” என்றது ஆந்தை. “திரும்பிச்செல்லுங்கள்.”

“திரும்பிவிடுவோம்” என்று தருமன் அர்ஜுனன் தோள்களைப் பற்றினான். “சித்ரரதனிடம் நாங்கள் அறியாது எல்லை கடந்ததை அறிவித்துவிடுக! எங்களுடன் முதிய அன்னை இருக்கிறாள். எந்தத் தீங்கும் விளையலாகாது.” பீமன் “ஆம், விலகிச்செல்கிறோம். கந்தர்வர் மகிழ்ந்திருக்கட்டும்” என்றான். ஆந்தை சிறகடிப்போசையுடன் இருளில் எழுந்து “உங்கள் பணிவு உங்களைக் காத்தது. மானுடரே, தலைதாழ்த்தி இந்த மண்தொட்டு வணங்கி எல்லை கடந்தமைக்கு பொறுத்தருளக் கோரி பின்முகம் காட்டாது விலகுங்கள்” என்றது.

தருமன் அதை நோக்கி சற்றே தூக்கிய கைகளுடன் நின்றான். பின்பு “நாங்கள் திரும்புகிறோம் ஆந்தையே. ஆனால் என் இளையவன் எங்கும் தலைவணங்கமாட்டான். அவன் பாரதவர்ஷம் கண்ட நிகரற்ற வீரன்” என்றான். ஆந்தை சினந்து காற்றில் சிறகுகள் சீற சுழன்றது. “ஆனால் இவ்வெல்லை கடந்த எவரும் என் தலைவனை வணங்காது திரும்பியதில்லை. எளிய மானுடப்பதர்கள் நீங்கள். எப்படி திரும்பிச்செல்ல ஒப்ப முடியும்?” என்று சினத்துடன் கூச்சலிட்டது.

தருமன் “வையத்தில் மானுடருக்களிக்கப்பட்ட அறிதல்களனைத்தும் தெய்வங்களுக்குரியவையே. அவற்றில் ஏதாவது ஒன்றில் முழுமை கண்டவன் விண்ணவனே. என் தம்பி உன் கந்தர்வனுக்கு நிகரானவன். தெய்வங்களால் விரும்பப்படுபவன். பரம்பொருளுக்கு அன்றி எவருக்கும் தலைவணங்க மாட்டான். அவன் குலமூத்தாரின் துளி என்பதனால் எனக்கு மட்டுமே பணிவான்” என்றான். “முடியாது. இங்கு தலைவணங்காது திரும்ப மானுடர் எவரையும் நான் விடமாட்டேன். மீறத்துணிபவர்களை இக்கணமே கொன்றுவீழ்த்துவேன்” என்றது ஆந்தை.

அர்ஜுனன் “என் தமையனின் சொல்லுக்கு மறுசொல் உரைப்பவர் என் எதிரிகள். உயிர் காத்துக்கொள், விலகு” என்றான். சினத்துடன் படைக்கொம்பு என கேவல் ஒலி எழுப்பியபடி சிறகுகளை மேலும் பலமடங்கு விரித்து கூருகிர்களை நீட்டி அவன் மேல் பாய்ந்தது ஆந்தை. இருளில் அதன் கரிய உடல் முற்றிலும் மறைய இரு செம்புள்ளிகளாக விழிகள் மட்டுமே தெரிந்தன. கணம் நிகழ்ந்து மறைவதற்குள் ஒற்றைக்கையால் எடுத்த அம்பை அதன் இரு விழிகளுக்கு நடுவே வீசி அதன் நெற்றியைப்பிளந்தான். கிளைமுறியும் ஒலியுடன் அவன்மேலேயே அது விழுந்தது.

சூடான குருதி அவன் தோளில் விழுந்து கை நோக்கி வழிந்தது. வலக்கையை உதறி அதை சிதறடித்துவிட்டு திரும்பி “இங்கு நின்றிருங்கள் மூத்தவரே. நான் வெற்றியுடன் மீள்கிறேன்” என்று சொல்லி அவன் வலக்காலை எடுத்து வைத்து சைத்ரிகத்தின் எல்லைக்குள் சென்றான்.

பகுதி ஒன்று - கனவுத்திரை - 8

ஒரு கையில் குருதியும் மறு கையில் தழலுமென தன் எல்லை கடந்து வந்த இளைய வீரனை சித்ரரதன் தன் உடல்விழியால் அக்கணமே கண்டான். விழிமணி போல் இருளுக்குள் ஒளிவிட்ட அவன் உடல் அதிர்ந்தது. அவனுடன் பொன்னுடல் பொலிய காமக் களியாட்டிலிருந்த துணைவி கும்பீநசியும் கந்தர்வ கன்னியரும் அக்கணமே வண்ணச் சிறகுள்ள மீன்களாக மாறி நீருக்குள் மூழ்கி மறைந்தனர். அவர்களின் அச்சமும் நாணமும் நிறைந்த பதறும் சொற்கள் அவனைச் சுற்றி குமிழிகளென எழுந்து வெடித்தன.

சினம் நெய்யில் எரியென பற்றிக்கொள்ள தன் உடல் பெருக்கி நீருக்கு மேலெழுந்தான் சித்ரரதன். அவன் இரு தோள்களிலிருந்து நூறு கைகள் முளைத்தெழுந்து விரிந்தன. அவற்றில் மண்ணில் உள்ள படைக்கலங்கள் அனைத்தும் தழல்கள் ஒன்றில் பிறிதென பற்றிக்கொண்டு எழுவதுபோல தோன்றின. ஆயிரம் சிம்மங்களின் அறைதல் என ஒலியெழுப்பி நீர் மேல் நடந்து கரைக்கு வந்தான்.

"நில். நில். மானுடா! யார் நீ?” என்று கூவியபடி அவன் வந்தபோது மலை உருண்டு வரும் எடையதிர்வில் மரங்கள் நடுங்கின. அவற்றின் கூடுகளில் கண் துயின்ற குஞ்சுப் பறவைகள் எழுந்து கூவிய அன்னையின் தூவி வெம்மைக்குள் புகுந்து கொண்டன. காட்டுக்குள் மடம்புகளிலும் குகைகளிலும் புதர்களிலும் பதுங்கி விழிமூடித் துயின்றிருந்த விலங்குகள் அனைத்தும் தங்கள் கனவுகளுக்குள் அத்தருணத்தை கண்டன. பேருருக் கொண்டு அர்ஜுனன் முன்பு வந்து நின்ற சித்ரரதன் “ஏன் இங்கு வந்தாய்? அறியா மானுடனா நீ? கந்தர்வ வேளையில் இவ்வெல்லை கடக்கக் கூடாதென்றறியாத மானுடன் ஒருவனும் இருக்க முடியுமா?” என்றான்.

அர்ஜுனன் அஞ்சாத விழிகளுடன் நிமிர்ந்து நோக்கி, "அறிந்தே வந்தேன்” என்றான். மண்ணுக்கு வந்த பல நூறு யுகங்களில் முதன் முறையாக முற்றிலும் அச்சமற்ற விழியொன்றைக் கண்ட கந்தர்வன் திகைத்து "என்னை யாரென்று அறிவாயா?” என்றான். “நீர் கந்தர்வன், சித்ரரதன் என்று உமக்குப்பெயர்” என்றான் அர்ஜுனன்.

நூறு கைகளையும் நிலத்தில் ஓங்கியறைந்து ஊன்றி குனிந்து கன்னங்கரிய உடல் கொண்டு விந்தையான பெரிய பூச்சியைப் போல் சித்ரரதன் ஆனான். அவன் இடையிலிருந்து வௌவால்களைப்போல் இருபெரும் தோல் சிறகுகள் விரிந்தன. கடற்கலத்தின் பாய் காற்றில் படபடப்பது போல அவற்றை அடித்து பாறை உருளும் ஒலியில் “நான் மானுடரை விரும்புவதில்லை. என்னை விழிதொட்டு நோக்கிய மானுடர் எவரையும் கொல்லாது விட்டதும் இல்லை” என்றான்.

அர்ஜுனன் புன்னகையுடன் “ஆம். கந்தர்வர்களின் முறை அது. அவர்களுக்கு மானுடர் ஒரு பொருட்டல்ல” என்றான். “மூடா, என் எல்லைக்குள் வந்த நீ இப்போதே இறந்தவனுக்கு நிகரே” என்றான் கந்தர்வன். அர்ஜுனன் "இங்கு நான் வந்தது உம்மை அறைகூவ மட்டுமே” என்றான். தன் முதல் வலக்கையால் நிலத்தை ஓங்கி அறைந்து வெடித்து நகைத்து "என்னையா? போருக்கா?” என்றான் சித்ரரதன்.

கருவறைச் சுடர்விளக்கின் அசைவின்மை தெரிய “ஆம்” என்றான் அர்ஜுனன். “நான் எளிய மானுடன். அதை அறிவேன். ஆனால் முழுக்குருதியையும் உண்டபின் படையல் விலங்கை தானென்றே உணர்கிறது தெய்வம். என் கையில் அமர்ந்த வில்லின் தெய்வம் விண்ணளந்தவன் எடுத்த காலுக்கு நிகரானது. அது ஏறி வரும் ஊர்தி மட்டுமே நான். இதை எதிர்கொள்ள மும்மூர்த்தியரும் திசைவெளியை வில்லென வளைத்து எழுந்து வந்தால் மட்டுமே முடியும்.”

நூறு நூறு யுகங்களின் களிம்பு படிந்த உள்ளத்திற்கு அப்பால் சென்று சித்ரரதனின் விண்ணகர் வாழ்வின் நினைவை அர்ஜுனனின் சொல்லோ தோற்றமோ தொடவில்லை. அந்த அச்சமின்மை மட்டுமே சினம் கொள்ளச் செய்தது. நூறு கைகளையும் அசைத்து படைக்கலங்களைச் சுழற்றி சிறகுகளை அடித்து காற்றில் எழுந்து அவனை சூழ்ந்து பறந்தான். “மூடா, எடு உன் படைக்கலத்தை. இக்கணமே பார்ப்போம், வெல்வது எவரென்று” என்றான்.

அர்ஜுனன் “அறைக்கூவியவன் நான். எனவே படைக்கலன் தேர்வது உன் உரிமை” என்றான். சித்ரரதன் சினமும் ஏளனமும் கலக்க நகைத்து “எனக்கு போரறம் கற்பிக்க வந்துளாயா? உன் படைக்கலத்தை நீயே எடு. அறைகூவல் விடுத்தவன் நான். என் விழி என நான் அமைத்த எல்லைக் காவல் ஆந்தை என் அறைகூவலாக அங்கே அமர்ந்திருந்தது” என்றான். “ஆம். அவ்வண்ணமெனில் அதுவே”” என்றான் அர்ஜுனன். தன் எரிசுள்ளியை வீசி அங்கிருந்த எண்ணெய் முட்புதர் ஒன்றை பற்றி எரிய வைத்தான். வெடித்து தழல் தெறித்து எழுந்து நிழல்களுடன் ஆடிய சுடரின் ஒளியில் தன் வில்லை எடுத்து நாணேற்றி கால் பரப்பி சமபாத நிலையில் நின்றான்.

“வில் எனில் வில்” என்று உரைத்த சித்ரரதன் ஒளிரும் உடல்கொண்ட மானுடனானான். படநாகம் போல் வளைந்தெழுந்த பெருவில்லொன்றை இடக்கையில் ஏந்தி மான்விழிபோல் ஒளிர்ந்த முனை கொண்ட அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணியை தோளிலேந்தி நின்றான். இருவரும் ஒருவரை ஒருவர் விழிதொடுத்தபடி பக்கச்சுவடு வைத்து மெல்ல சுற்றி வந்தனர். அர்ஜுனனின் கைகள் அவன் ஆவநாழியை தொடவில்லை. வில்லின் நாண் மட்டும் முட்டி முட்டி துளை தேடும் வண்டு போல் இமிழ்ந்து கொண்டிருந்தது.

கந்தர்வனின் பத்து விரல் நகங்களிலும் கருவிழிகள் எழுவதை அர்ஜுனன் கண்டான். பத்து கால்நகங்களும் நோக்கு கொண்டன. அம்பெனப்படுவது பருவுருக்கொண்டு காற்றிலெழும் விழியே என துரோணர் சொன்ன சொற்களை நினைவு கூர்ந்தான். சுற்றிவரும் கந்தர்வனின் உடலசைவை விழி சலிக்காது நோக்கியபடி தான் சுற்றி வந்தான். விழி கோத்து மெல்ல சுழலும் அம்முடிவற்ற கணத்தில் அவன் அதைக்கடக்கும் வழியை கண்டான். புதர்களில் பூத்து நீட்டி நின்ற மலர்கள் தொடும்போது மட்டும் சித்ரரதன் உடல் உதிர்வறிந்த சுனைநீர்ப் பரப்பென மெல்ல அதிர்ந்தது. கணத்தின் ஒரு துளிநேரம் அசைவிழந்து உறைந்து மீண்டது.

அர்ஜுனன் புன்னகைத்தான். கால் பின்னெடுத்து வைத்து அங்கே இலையின்றி கிளை செறிந்து பூத்து நின்ற கொன்றை ஒன்றை அடைந்தான். அவன் இயற்றப் போவதென்ன என்று சித்ரரதன் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே பார்த்தனின் வலக்கை நீண்டு மலரொன்றைக் கொய்து நாணிலேற்றி அம்பெனத் தொடுத்து சித்ரரதன் உடலை அடித்தது. மலர்பட்டு செயலிழந்து விழுந்த அவன் உடல் மீள்வதற்குள் அடுத்த மலர் வந்து விழுந்தது. மலர் மேல் மலர் வந்து விழ முடிவற்ற நீளம் கொண்ட மலர்ச்சரடென ஆயிற்று அந்த ஆவத்தொடர்.

எழுந்த பெருங்கையில் வில்லும் மறுகையில் அம்புமாக பனிச்சிலையென நின்றான் சித்ரரதன். அம்புகளை என மலர்களை தொடுத்தபடி அவனைச் சுற்றி வந்த அர்ஜுனன் புரிவட்டப்பாதையில் மெல்ல அணுகி அவன் கையிலிருந்த வில்லை தன் காலால் உதைத்து வீசினான். மறுகையில் இருந்த அம்பைத் தட்டி நிலத்தில் இட்டான். இமையசைவும் இன்றி நின்றிருந்த சித்ரரதனின் மேல் பாய்ந்து அவன் குளிர்ந்த கைகளைப் பற்றி முறுக்கி பின்னால் பதித்தான். கால்களுக்கு நடுவே கால் செலுத்தி நிலையழியச்செய்து மண்ணில் வீழ்த்தி தன் உடலால் இறுகப் பற்றிக் கொண்டான். “வென்றேன் கந்தர்வரே” என்றான்.

முதல் மலரிலிருந்து இறுதி மலர் வரைக்குமான அம்புப் பெருக்கை ஒரு கணமென உணர்ந்து சிந்தை அழிந்திருந்த சித்ரரதன் விழித்து உடல் புதைத்து தலை திருப்பி “என்ன நிகழ்ந்தது?” என்றான். “உங்களை வென்றுளேன் கந்தர்வரே” என்றான். “எங்ஙனம் இது நிகழ்ந்தது? எங்ஙனம்?” என்று குரல் இறுகித் தெறிக்க கந்தர்வன் கேட்டான். “மானுடன் கந்தர்வரை வென்றது இதுவரை நிகழ்ந்ததில்லை. நீ திருமால் உருவமா? முக்கண்ணன் படையினனா?”

“கந்தர்வரே, எண்வகை நுண்திறன் பெற்றவர் நீங்கள். அங்கே உங்கள் கந்தர்வ கன்னியருடன் நீராடுகையில் உருவழிந்து இலகிமை கொண்டு காற்றென ஆகியிருந்தீர். காதல் கொண்டு கனிந்திருந்த அகமோ நுண்ணிய அணிமையில் இருந்தது. காமம் கலைந்து எழுந்து சினம் பெருகி என்னுடன் போர்புரிய வருகையில் மலையென வளர்ந்து மகிமைக்கு மாறியது உங்கள் உடல். அப்போதும் காதலின் நினைவில் அணிமையில் நீடித்திருந்தது உள்ளம். உங்கள் மகிமையுடன் போரிடலாகாது என்றுணர்ந்தேன். இம்மென்மலர்களால் உங்கள் அணிமையைத் தாக்கி வென்றேன்” என்றான் அர்ஜுனன்.

தசைகள் தளர உடல் தொய்ந்து மண்ணில் அமிழ்ந்து சித்ரரதன் கண்ணீர் விட்டான். “ஆம், என்னுள் இரண்டெனப் பிளந்து வலுவிழந்தேன். எனவே நீ என்னை வென்றாய்.” அர்ஜுனன் “கந்தர்வரே, வெல்லப்படுபவர் அனைவரும் பிளவுண்டவர்களே. ஒன்றென நின்றவன் தோற்றதில்லை” என்றான்.

“என் கந்தர்வத்தன்மையே என் படைக்கலங்களை பொருளற்றதாக்கியது…” என்று சொல்லி நிலத்தில் முகம் புதைத்தான் சித்ரரதன். “தனிவல்லமையை அளிப்பது எதுவோ அதுவே வீழ்த்தும் பொறியும் ஆகும் என்பது போர்நூல் கூற்று” என்றான் அர்ஜுனன். “இனி நான் எப்படி விண்ணேகலாகும்? மானுடரிடம் தோற்ற கந்தர்வன் அங்கே இழிமகன் எனப்படுவான். யுகயுகங்களாக இக்காட்டில் இன்பங்கள் அனைத்தையும் அடைந்து திளைத்தேன். என்னுள் எங்கோ இவையனைத்தும் கந்தர்வபுரியின் இன்பங்களின் ஆடிநிழல்கள் மட்டுமே என்று அகக்குரல் சொல்லிக் கொண்டிருந்தது. என்றோ ஒரு நாள் இப்பொய்வெளியிலிருந்து எழுந்து மெய் நிலையை அடைவேன் என்று எண்ணியிருந்தேன். இனி அது நடவாது. ஊழி முடிவு வரை இந்த மாயக்கனவின் பொய் இன்பங்களில் ஆடி இங்கு உறைவதே என் ஊழ் போலும்” என்றான்.

அர்ஜுனன் தன் ஆடையை சீர்படுத்தி வில்லை தோளில் அமைத்தான். “என் பிழையன்று இது கந்தர்வரே” என்றான். “அறைகூவல்களை ஏற்பதும் களம் நின்று வெல்வதும் இயலாதபோது அங்கே மாய்வதும் வீரனுக்குரிய நெறிகள். வணங்குமிடத்தில் வணங்கவும் பிற இடங்களில் நிமிரவும் அவன் கடமைப்பட்டிருக்கிறான். என் தமையனின் ஆணை ஏற்று இங்கு வந்தேன். உம்மை வென்று மீள்வதன்றி வேறு வழியில்லை எனக்கு. உமக்கு இழைத்த பிழைக்காக என்னை பொறுத்தருள்க!”

எரிந்து அகன்று சென்றிருந்த புதர்த் தீயை அணுகி அங்கு உள்ளெண்ணெய் பற்றிக் கொள்ள நீலச்சுடர் எழுந்து சீறிக்கொண்டிருந்த எரிசுள்ளி ஒன்றை எடுத்தான். அதைச் சுழற்றியபடி “விடையருள்க!” என்று சொல்லி தலைவணங்கி திரும்பினான். திடுக்கிட்டு கையூன்றி எழுந்தமர்ந்து “நில்” என்றான் சித்ரரதன். “இவ்வண்ணம்தான் நீ இவ்வனத்திற்குள் புகுந்தாயா?” “ஆம்” என்றான் அர்ஜுனன். "எதற்கு அதை வினவுகிறீர்?”

சித்ரரதன் எழுந்து கைநீட்டி “உனது வலக்கையில் குருதி…” என்றான். “நான் கொன்ற அவ்வாந்தையின் குருதி அது” என்றான் அர்ஜுனன். சித்ரரதன் இருகைகளும் தளர தலை குனிந்து “எப்படி மறந்தேன்? அச்சொற்களை எப்படி மறந்தேன்?” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். “யுகங்கள் சருகென விழுந்து என் அனலை அணைத்துவிட்டன. எப்படி இதை மறந்தேன்?” நிமிர்ந்து அர்ஜுனனை நோக்கி “இளையோனே, இங்கு நான் இத்தனை யுகங்கள் காத்திருந்ததே ஒருகையில் தழலும் மறுகையில் குருதியும் என இங்கு நுழையும் ஒருவனுக்காகவே” என்றான்.

அர்ஜுனன் “இது வெறும் தற்செயல்” என்றான். “மானுடனே, புடவிப் பெருநிகழ்வில் தற்செயல்கள் இல்லை. ஒவ்வொரு கணமும் பெரும்படிவன் சொல்லெண்ணி யாத்த கவிதை போல் அமைப்பும் இலக்கும் இலக்கணமும் உள்ளதென்றுணர்க!” என்றான் சித்ரரதன். “நான் காத்திருந்த மானுடன் நீயே.” அர்ஜுனன் வியந்து நின்றான்.

சித்ரரதன் கைநீட்டி “இளையவரே, தாங்கள் எவரென்று நான் அறியலாமா? எளிய மலைவேடரல்ல என்று தோற்றத்தால் அறிவேன். அரசகுடிப் பிறந்து முதன்மையான கல்வியைப் பெற்றவரென்று இங்கு கைத்திறனால் காட்டினீர். மணிக்குண்டலங்களும் பொற்கச்சையும் ஏவலும் அகம்படியும் கொம்பும் குழலும் இன்றி வந்திருப்பதனால் எவரென்று அறியக்கூடவில்லை” என்றான். அர்ஜுனன் “கந்தர்வரே, என் பெயர் பார்த்தன். அஸ்தினபுரியின் அரசர் பாண்டுவின் இளைய மைந்தன். இளவரசர் தருமரின் அடிபணியும் இளையோன்” என்றான்.

சித்ரரதன் வியந்து “ஆம். இதை எப்படி தவற விட்டேன்? தாங்கள் இளைய பாண்டவராக மட்டுமே இருக்க முடியும். அன்றேல் துவாரகை ஆளும் இளைய யாதவன். ஆனால் அவன் முகில்நீல நிறத்தவன். அல்லது வில்திறன் மிக்க கர்ணன், அவனோ இன்னும் உயரமானவன். பிறிதெவரும் தாங்கள் இங்கு காட்டிய இவ்வில்திறனை எய்தவில்லை” என்றான். “ஆனால் கள்வரைப்போல் இவ்விரவில் இவ்வண்ணம் காடு புகுவது ஏன்? என்னைப் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எவரென அடையாளம் காணக்கூடவில்லை”.

அர்ஜுனன் புன்னகைத்து “அது நன்று. இன்னும் சில காலம் நாங்கள் எவரென்றறியாமல் வாழ விழைகிறோம்” என்றான். நீரிலிருந்து மீன்வடிவில் எம்பி சேற்றில் விழுந்து மும்முறை துள்ளி மானுடப்பெண் வடிவில் எழுந்த சித்ரரதனின் துணைவி கும்பீநசி நீர் வழியும் உடலுடன் புதர்களை விலக்கி அவன் அருகே வந்து நின்றாள். அவளைத்தொடர்ந்த கந்தர்வப்பெண்கள் புதர்களுக்குள் நின்றனர். சித்ரரதன் “இங்கு தங்களால் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். எனவே என் பெண்டிருடன் தங்களுக்கு தொழும்பர் பணி எடுக்க கடமைப் பட்டுள்ளேன். நாங்கள் உங்களை உடன் தொடர ஒப்புங்கள்” என்றான்.

அர்ஜுனன் திரும்பி கும்பீநசியின் விழிகளை நோக்கி புன்னகைத்தான். “கந்தர்வரே, போர்முறைப்படி நீர் என் தொழும்பரே. ஆனால் மண்ணில் மானுடருக்குள்ள மணவினையோ மங்கலத்தாலியோ கந்தர்வருக்கில்லை. எனவே இவள் என் தொழும்பியல்ல. இக்காட்டில் எனக்கென தங்கை ஒருத்தியை பெற்றேன். அவளுக்கு என் மூத்தோன் பரிசென உம்மை அளிக்கிறேன்” என்றான். விழிகளில் நீர் நிறைய இதழ்கள் புன்னகைக்க கும்பீநசி கைகூப்பினாள்.

கந்தர்வன் “பாண்டவரே, எய்துமிடத்தை நிறைக்கும் நீரென ஒவ்வொரு வாழ்க்கைத் தருணத்திலும் இடைவெளியின்றி நிறைபவனே வாழ்க்கையைக் கடந்து மெய்மையை அறிய முடிபவன். அத்தகைய ஒருவனை இங்கு கண்டேன். என் தலை தாழ்வதாக!” என்று வணங்கினான். மீளத் தலைவணங்கி “என் மூத்தவரும் அன்னையும் காத்திருக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன்.

“பாண்டவரே, இங்கு நான் செய்த நெடுந்தவம் தங்களால் முடியும் என்ற சொல்லிருக்கிறது. விண்ணில் யுக யுகங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு புதிரை இங்குரைக்கிறேன். அதற்கான விடையை தாங்கள் அளித்தால் மெய்யறிந்து இப்பொய்யுலகை விடுத்து விண்ணேகுவேன்” என்றான் சித்ரரதன். "சொல்க!” என்றான் அர்ஜுனன்.

தான் மண்ணில் இழிந்த கதையை சித்ரரதன் விரித்துரைத்தான். "சொல்லுங்கள் இளைய பாண்டவரே, நான் பிழை செய்தவனா? நான் உரைத்தவற்றில் அறவிலகல் ஏதுள்ளது? இலக்கு நோக்கும் வீரன் பாதையின் சிற்றுயிர்களை கருத்தில் கொள்ளலாகுமா?” என்றான்.

அர்ஜுனன் எண்ணம் முழுத்த முகத்துடன் மெல்ல நடந்து கங்கையை அணுகி அதன் நீர்ப்பரப்பில் தன் வில்லை வைத்தான். கங்கை கொதிநீரென இளகி அலைவு கொண்டது. ஒவ்வொரு அலை வளைவும் சென்று கரையை நாவால் தொட்டு சுருண்டு மீண்டது. இறுதி அலையும் ஓய்ந்து நீர்ப்பரப்பு பளிங்குத் தகடென ஆனபோது விழிமூடி தன்னுள் ஆழ்ந்து சென்று சொல்லெடுத்து திரும்பினான். கூரிய சிறு முகத்தில் படர்ந்த மெல்லிய தாடியை கையால் நீவியபடி “கந்தர்வரே, நீர் செய்தது பிழை” என்றான்.

சித்ரரதன் “ஏன்?” என்றான். “இலக்கை நோக்கிச் செல்லும்போது எவ்வண்ணம் பாதையை நோக்க முடியும்? இப்பாதையில் செல்லும் சகடங்கள் எவையும் சிற்றுயிர்களை கொல்வதில்லையா? சொல்லுங்கள் இளைய பாண்டவரே, உங்கள் அம்புகளால் எளியவர் கொல்லப்பட்டதே இல்லையா? சிற்றுயிர்கள் அழிந்ததில்லையா?”

அர்ஜுனன் “ஆம், சிற்றுயிர்களை சகடங்கள் தவிர்க்க முடியாது. ஆனால் அந்த இலக்கு அச்சிற்றுயிர்களின் நலனுக்காக அமைந்திருக்கவேண்டும். அனைத்துயிரும் மண்ணில் காலூன்றி அறத்தில் உயிரூன்றி இங்கு வாழ்கின்றன. அவ்வறத்தை இலக்காக்கியவன் செல்லும் பயணம் தெய்வங்கள் நிகழ்த்துவது. அவன் அதன் கருவி மட்டுமே” என்றான்.

“ஆம், எளியோர் கொல்லப்படாது போர் நிகழமுடியாது. ஆனால் அப்போர் அன்னோரன்ன எளியோர் அச்சமின்றி சிறந்து வாழ்வதற்காக அமைந்திருக்க வேண்டும் கந்தர்வரே. அறத்தின் பொருட்டு வில்லேந்துபவனுக்கு மட்டுமே கொல்லும் உரிமையுள்ளது. அறத்தின் பொருட்டன்றி சிந்தப்படும் ஒவ்வொரு துளிக் குருதியும் பழி சூழ்ந்ததே. அன்று நீர் சென்று கொண்டிருந்தது உமது உவகைக்காக மட்டுமே. ஆணவத்திற்காகவும் அகமகிழ்வுக்காகவும் இலக்குகொள்பவன் பழி சுமந்தாக வேண்டும்.”

அவன் வில் தொட்டிருந்த கங்கை பளிங்கு வெளிக்குள் சுடர் ஏற்றப்பட்டதைப்போல ஒளி கொள்வதை சித்ரரதன் நோக்கினான். அவ்வொளியில் சைத்ரிகம் என்னும் அக்காடே மின்னத்தொடங்கியது. இலைகள் பளபளத்தன. மலர்கள் வண்ணம் கொண்டன. மென்தூவிகள் ஒளி துழாவ பறவைகள் எழுந்து காற்றில் மிதந்தன.

ஒளி பெருகி கண் நிறைத்தபோது கை கூப்பி சித்ரரதன் சொன்னான் “தீட்டப்படும் எதைவிடவும் அறம் கூரியது என்றுணர்ந்தேன். ஏனெனில் ஒவ்வொரு கணமும் குருதியால் கூர்மையாக்கப்படுவது அது.” முழந்தாளிட்டு அர்ஜுனனை வணங்கினான்.

தானும் கைகூப்பி “குருவருள் கிடைக்கட்டும்! மெய்மை துணை நிற்கட்டும்!” என்று அர்ஜுனன் அவனை வாழ்த்தினான். “தங்களுக்கு குருகாணிக்கை என நான் எதை அளிக்கலாகும்?” என்றான் சித்ரரதன். "இந்த அறிவு என்னில் விளையவேண்டுமென்றால் நான் காணிக்கை அளித்தாகவேண்டும். ஏற்றருள்க!”

அர்ஜுனன் புன்னகைத்து “தங்களிடம் உள்ளவை என்னென்ன?” என்றான். சித்ரரதன் “ஒருபோதும் களைப்புறாத வெண்புரவிகள், எந்நிலையிலும் அச்சிறாத தேர்கள், மலைமுட்டினாலும் உடையாத கதாயுதங்கள், அம்பு ஒழியா ஆவநாழிகள், அறாநாண் கொண்ட விற்கள், திசை வளைக்கும் பாசக்கயிறுகள், வான் கொளுத்தி இழுக்கும் அங்குசங்கள்… படைக்கலன்களில் வல்லமைகொண்டவை அனைத்தும் என்னிடமுள்ளன. கொள்க!” என்றான்.

அர்ஜுனன் “இப்படைக்கலன்களைவிட வலிமையானது எது?” என்றான். கந்தர்வன் “படைக்கலன்களில் முதன்மையானது விழியே. படைக்கலன்கள் அனைத்தும் நெருப்பு போன்றவை. காற்றென வந்து அவற்றை உயிர்கொள்ளச்செய்வது விழிநோக்கே. படைக்கலம் பரு. விழி அதில் சிவம்” என்றான்.

“அப்படைக்கலங்களை ஆளும் கந்தர்வ விழிகளை எனக்கு அளியுங்கள்” என்றான் அர்ஜுனன். “இளையவனே, விண்ணுக்கு மேலுள்ளவர்களால் மட்டுமே ஆளத்தக்கது இந்த விழி. ஆம், மண்ணில் அது பெரும்சுமை என்றேயாகும்” என்றான். “அதையன்றி பிறிதை வேண்டேன்” என்று சொல்லி அர்ஜுனன் திரும்பிக்கொண்டான். “நில்லுங்கள்! கந்தர்வவிழிகளை அடையும் மந்தணச்சொல் ஒன்றை உங்களுக்கு அளிப்பேன். அதற்கு சாக்ஷுஷி என்று பெயர். அதை மும்முறை சொல்லும்போது மட்டும் அவ்விழிகளை அடைவீர்” என்றான் சித்ரரதன்.

“உங்கள் விழிகளை மூன்று வண்ணங்களில் ஒளிவிடச்செய்யும் அது. ஹிரண்யாக்ஷம் என்னும் முதல் நிலையில் நீங்கள் தெய்வங்களையும், தேவர்களையும், மூதாதையரையும் ஊன்விழிகளால் பார்க்கமுடியும்” என்றான் சித்ரரதன். “நீலாக்ஷம் என்னும் விழியால் இப்புவியில் உள்ள அனைத்தையும் பார்ப்பீர்கள். புழுவின் விழிகொண்டு அசைவுகளையும் ஈயின் விழிகொண்டு அசைவின்மைகளையும் கழுகின் விழிகொண்டு மண்ணையும் தவளைவிழிகொண்டு வானையும் பார்க்க முடியும். இப்புவியில் மானுட விழிக்கு எட்டாதவையே பெரும்பகுதி என்றறிக! நீலாக்ஷத்தால் நீங்கள் பார்க்க முடியாத எதுவும் இப்புவியில் எஞ்சாது.”

“சாரதாக்ஷம் என்னும் இருள்மணி விழியால் ஒளியென எதுவும் எட்டியிராத ஏழு ஆழுலகங்களையும் உங்களால் பார்க்க முடியும். பாதாள நாகங்களை, இருள் வடிவ தெய்வங்களை, பழி கொண்ட ஆன்மாக்களை” என்றான். “பாண்டவரே, விழிகளால் ஆக்கப்பட்டது உலகம். மண்ணில் ஒளியறியாதவற்றை நோக்கும் திறன் வௌவால்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மொழியறியாதவற்றை நோக்க நாய்கள் அருளப்பட்டுள்ளன. எண்ணம் அறியாதவற்றையும் நோக்கும் திறனை இச்சொல் அளிக்கும் உங்களுக்கு. இவ்விழி காட்டில் கொளுத்தப்பட்ட எரி என உங்கள் உடலில் இருக்கும். விழைவுகளின் காற்று அதைத் தொடாமலிருக்கட்டும். உங்கள் அறிவின் குளிரோடைகளால் அது கட்டுப்படுத்தப்படட்டும்.”

“அம்மந்தணச் சொல்லை அறிய விரும்புகிறேன்” என்றான் அர்ஜுனன். “அறம் உணர்ந்து அதில் அமைந்த உள்ளம் கொண்ட உங்களுக்கு அறிவிழி என்றும் அணிநகையே” என்றான் சித்ரரதன். அர்ஜுனன் அவன் முன் முழங்காலிட அவன் செவியை தன் வாயருகே கொணர்ந்து தன் மேலாடையால் இரு தலைகளையும் மூடி மும்முறை சாக்ஷுஷி மந்திரத்தை சித்ரரதன் உரைத்தான்.

மும்முறை அதை தனக்குள் ஓதி எழுந்த அர்ஜுனன் தலை வணங்கி “இம்மந்திரத்தை அளித்து நீங்கள் எனக்கு ஆசிரியரானீர். குரு காணிக்கை என நான் அளிப்பது எதை?” என்றான். சித்ரரதன் “நான் மண்ணில் வந்து விழுந்தபோது எந்தை காசியபர் எனக்கு அளித்த அழகிய தேர் விண்ணில் சிதைந்துவிட்டது. அதை மீட்டு அளியுங்கள்” என்றான்.

அர்ஜுனன் தன் வில்குலைத்து அம்புகளைத் தொடுத்து காட்டில் மலர்ந்திருந்த பவளமல்லிமலர்களை கொய்தான். அம்புகளாலேயே அவற்றை ஓரிடத்தில் குவித்து விஸ்வகர்ம மந்திரத்தை சொன்னான். நூற்றெட்டு முறை உரைக்கப்பட்ட அம்மந்திரம் நிறைவுற்றபோது சித்ரரதனின் மலர்த்தேர் மீண்டும் ஒருங்கி நின்றது. “தங்கள் துணைவியுடன் விண்ணேகுக கந்தர்வரே!” என்றான் அர்ஜுனன்.

சித்ரரதன் கை நீட்டி அர்ஜுனனை ஆரத்தழுவிக் கொண்டான். “நாம் மீண்டும் சந்திக்கும் களங்கள் அமையும். அவைகள் நிகழும்” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்றான் அர்ஜுனன். “வாழ்த்துங்கள் மூத்தவரே” என்று கும்பீநசி தலைவணங்கினாள். “என் தங்கையின் கைகள் உங்கள் கைகளில் இனிதமரட்டும்” என்றான் அர்ஜுனன். கும்பீநசியின் கைபற்றி மலர்த்தேரில் ஏறிக் கொண்டான் சித்ரரதன். மணியொலி எழ சிரித்தபடி கந்தர்வ கன்னியர் எழுந்து வந்து தேரிலேறிக் கொண்டனர்.

“நலம்திகழ்க!” என்றான் அர்ஜுனன். “அவ்வண்ணமே” என்றான் சித்ரரதன். தேர்ச்சக்கரங்கள் சுழன்று ஒளிவட்டங்களாயின. விரைவு மிக அவை விழிவிட்டு மறைந்தன. கண்ணுக்குத் தெரியாத சரடொன்றால் விண்ணுக்கு சுண்டி இழுக்கப்பட்டது போல தேர் எழுந்து முகில்களில் மறைந்தது. அர்ஜுனன் நிமிர்ந்து நோக்கியபோது விண்பரப்பு பல்லாயிரம் கந்தர்வர்களின் புன்னகை முகங்களால் நிறைந்திருப்பதை கண்டான். மெல்ல கரைந்து ஒற்றைப்படலமாகி அவர்கள் மறைந்தனர். அலையடிக்காத ஒற்றைச்சரடென நீளும் கந்தர்வப் பேரிசையாக வானம் மேலும் சற்று நீடித்தது.

பகுதி இரண்டு : அலையுலகு - 1

கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான் பார்த்தன் அறிவிழி கொண்டவனானான். மானுடவிழிகள் புற ஒளியால் மட்டுமே பார்ப்பவை. அவன் விழிகள் அகஒளியாலும் பார்க்கும் வல்லமை கொண்டவை.”

சுஜயன் தலையை தூக்கி அவள் கன்னங்களை தன் கையால்பற்றி திருப்பி “நான்... நான்... எனக்கு?” என்றான். “உனக்கு என்னடா செல்லம்?” என்றாள் மாலினி. “எனக்கு கண்?” என்றான் சுஜயன். “உனக்கும் அறிவிழி கிடைக்கும். நீ பெரியவனாகி போரில் வென்று தேவர்களிடமிருந்து அதை பெறுவாய்.” சுஜயன் “பெரிய கண்!” என்றான். கைகளை விரித்து “ஏழு கண்!” என்று சொன்னபின் “நான் ஏழுகண்களை வைத்து.... ஏழு அரக்கர்களை கொல்வேன்” என்று சொல்லி கைகளை தன் தொடைகள் நடுவே செருகி உடலைக்குறுக்கி தோள்களை ஒடுக்கிக்கொண்டான்.

மாலினிக்குப் பின்னால் அமர்ந்திருந்த சுபகை “இந்தக்கதையையே பலவாறாக சொல்கிறார்கள். சித்ரரதனை இளவரசர் தூக்கிக்கொண்டுவந்து தருமரின் காலடியில் போட்டதாகவும் கும்பீநசி வந்து தருமரின் கால்களில் விழுந்து அழுததனால் அவர் கந்தர்வனை கொல்லாமல் விட்டதாகவும் கேட்டிருக்கிறேன்” என்றாள். “தருமருக்கும் சூதர்கள் இருப்பார்களல்லவா? என்ன இருந்தாலும் அவர் இந்திரப்பிரஸ்தத்தை ஆளப்போகும் இளவரசர்” என்று மாலினி சிரித்தாள்.

சுபகை தனக்குத்தானே ஏதோ எண்ணிக்கொண்டு சிரித்தாள். “என்னடி சிரிப்பு?” என்றாள் மாலினி. “இல்லை” என அவள் தலையசைத்தாள். “சொல்லடி... ஏன் சிரித்தாய்?” என்றாள். “இல்லை, மூவுலகையும் பார்ப்பதற்குரிய விழிகொண்டவர் காணும் கனவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்?” என்றாள் மாலினி. “ஆம், நாம் காணும் இருளுலகங்களையும் நிழலுலகங்களையும் அவன் காண்பானா? அவனிடமே கேட்டிருக்கிறேன். இதெல்லாம் வெறும் சூதர்கதை அன்னையே. நான் அஸ்தினபுரியில் இல்லாத காலங்களில் என் நினைவை நிலைநிறுத்த சூதர்கள் கதைகளை புனைந்துகொண்டே இருக்கிறார்கள். நான் திரும்பி வந்தபின்னர்தான் அவற்றை அறிகிறேன். பலகதைகளைக்கேட்டு எனக்கே மயிர்கூச்சம் ஏற்படுகிறது என்றான்.”

சுபகை “உண்மை. இக்கதைகள் எல்லாமே இவரைப்போல படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவர்களுக்காக சொல்லப்பட்டவை போலிருக்கின்றன” என்றாள். சுஜயன் “நான் வாளால் வெட்டியபோது என் மேல் வாள் பட்டு குருதி... ஏழு குருதி என் கால் வழியாக...” என்று சொல்லி தன் காலைத்தூக்கி காட்டினான். சுபகை மீண்டும் தனக்குள் சிரித்தாள். “சொல்லடி... நீ ஏன் சிரித்தாய்? நீ நினைத்தது இப்போது சொன்னதை அல்ல” என்றாள் மாலினி.

சுபகை “அய்யோ இல்லை, நான்...” என்றாள் சுபகை. “நீ இளையபாண்டவனைப்பற்றி நினைத்தாய். அவனுடைய பெண்களைப்பற்றி...” என்றாள் மாலினி. “ஆம்” என்று சுபகை தலைகுனிந்தாள். “சொல்! என்ன நினைத்தாய்?” சுபகை அகலேற்றி வைக்கப்பட்ட பொற்தாலம் போல முகம் ஒளிகொள்ள “இல்லை... அந்த சாக்ஷுஷி மந்திரத்தை இளையவர் பெண்களிடம் போட்டுப்பார்ப்பதில்லை போலிருக்கிறது என நினைத்தேன்” என்றாள். மாலினி சிரித்துவிட்டாள். “ஏன்?” என்றாள். “அகவிழியால் பெண்களை நோக்கினால் அவர்கள் எப்படி தெரிவார்கள்?” உரக்கச்சிரித்தபடி “அகவிழியில் தெரியும் பெண்ணை ஆணால் கூட முடியுமா?” என்றாள்.

மாலினியும் சிரித்துக்கொண்டு “உனக்கு குறும்பு சற்று மிகுதி” என்றாள். “அதெல்லாம் எதிரிகளிடம் அவன் கையாளும் மந்திரம். பெண்களைப்பொறுத்தவரை அவர்களை தன்னிடமிருந்து மறைக்கும் மந்திரம் எதையாவது வைத்திருப்பான். கேட்டுப்பார்க்கவேண்டும்” என்றாள். “பெண்களை மூடிவைப்பதற்குரியவை சொற்களே. கவிஞர்களை கூப்பிட்டு கேட்டால் அழகிய சொற்களை ஆயிரக்கணக்கில் சொல்வார்கள். சிவக்குறிக்கு மலர்மூடல் வழிபாடு செய்வதுபோல அள்ளி அள்ளிக்கொட்டி மூடிவிடலாம். இறுதிவரை அவளைப்பார்க்காமலேயே ஆண்டு அறிந்து கடந்துசென்றுவிடலாம்.”

அவள் மடியிலிருந்த சுஜயன் கால்களை உதைத்து “கதைசொல்லு” என்றான். “இரு” என்றாள் மாலினி. “கதை சொல்லு... அர்ஜுனன் கதை” என்று சுஜயன் குரலெழுப்பினான். “சொல்கிறேன்...” என்றாள் மாலினி. “சாக்ஷுஷி மந்திரத்தை கந்தர்வன் அர்ஜுனனுக்கு சொன்னான் அல்லவா? கந்தர்வன் வானிலேறியபின்னர் அர்ஜுனன் அந்த மந்திரத்தை ஆய்வுசெய்து நோக்க விழைந்தான். கண்மூடி அதை மும்முறை சொன்னான். விழிதிறந்தபோது அவன் அக்காடு முழுக்க பல்லாயிரம் மேலுலகத்தவரும் கீழுலகத்தவரும் செறிந்திருப்பதைக் கண்டு திகைத்தான்.”

“அவன் காலடியில் அதுவரை நெளிந்துகொண்டிருந்த நிழல்களெல்லாம் விழிமின்னும் கரிய பாதாள நாகங்கள். இலைநிழல்களென படபடத்தவை மென்சிறகுகள் கொண்ட தேவர்கள். சிறிய பூச்சிகளாக சிறகு மின்ன சுற்றிவந்தவர்கள் கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் என கண்டான். நூறு கைகளை விரித்து வானளாவ எழுந்து நின்றிருந்த பாதாளமூர்த்தியாகிய பகநீலை என்னும் தெய்வத்தின் சிறகுகளைத்தான் சற்று முன்புவரை இரு முகில்கீற்றுகளென கண்டிருந்தோம் என அவன் அறிந்தான். ஆயிரம் கால்களை விரித்து மண்ணில் ஊன்றி ஆயிரம் கைகளை விரித்து நின்ற சகஸ்ரபாகு என்னும் சுதலத்தின் தெய்வமே அங்கே நின்றிருந்த ஆலமரம்.”

மாலினி சொன்னாள் “மண்ணில் ஒளிவிட்ட ஒவ்வொரு கூழாங்கல்லும் ஒரு ஆழுலகத்து விழி. படபடத்த ஒவ்வொரு தளிரும் ஒரு தேவனின் இமை. இவ்வுலகென்பது மேலுலகங்களும் கீழுலகங்களும் ஒன்றுடன் ஒன்று வெட்டிக்கொள்ளும் ஒரு வெளி. இங்கே இடைவெளியே இல்லாமல் அந்த மாற்றிருப்புகள் அடர்ந்து அலையடிக்கின்றன.” சுஜயன் “அவர்கள் ஒருவரோடொருவர் போரிடுவார்களா?” என்றான். “மாட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் தேவையின்றி பார்க்கவே முடியாது. ஓர் உலகத்தவரை இன்னொரு உலகத்தவர் அறியமாட்டார்கள்.”

“எப்படி?” என்று சுஜயன் தலைசரித்து கேட்டான். “இதோ காற்று அடிக்கிறது. அதன்மேல் ஒளிபடுகிறதா என்ன? அவையிரண்டும் ஒரே இடத்தில்தானே உள்ளன?” என்று மாலினி சொன்னாள். சுஜயன் ஒருகணம் திகைத்து தன்முன் தெரிந்த காட்சியை நோக்கினான். அது அவனுக்குப் புரிந்ததும் எழுச்சி தாளாமல் எழுந்து விட்டான். “ஒளி... ஒளி ... ஒளி” என்று கைதூக்கினான். அவன் வாய் வலிப்புவந்ததுபோல கோணலாகியது. “ஒளி” என்று சொல்லி கையை தூக்கியபின் அஞ்சுபவனைப்போல வந்து அவள்மேல் ஒண்டிக்கொண்டான். அவன் உடல் அதிர்ந்துகொண்டே இருப்பதை மாலினி அறிந்தாள்.

“ஒரு புது உலகை கண்டுவிட்டார்” என்று குனிந்து நோக்கி சிரித்தபடி சுபகை சொன்னாள். “அவர் இதுவரை அறிந்த அனைத்துமே மாறிவிட்டன” என்றாள் மாலினி. சுஜயன் மெல்ல உடல் தளரத்தொடங்கினான். அவன் கை மலர்ந்து விரல்கள் விரிந்தன. உதடுகள் வளைந்து மூச்சு சிறிய வாய்நீர் குமிழியுடன் எழுந்து வெடித்தது. அவன் சப்புகொட்டிக்கொண்டு புரண்டுபடுத்து மாலினியின் ஆடையைப்பற்றி வாயில் வைத்து சப்பிக்கொண்டான்.

சுபகை “கதை கதை என்று கேட்டு படுத்துகிறான். என்னதான் சொல்வது? எங்கிருந்து தொடங்குவது?” என்றாள். மாலினி “அர்ஜுனனின் வீரப்பயணங்களைப்பற்றிய விஜயப்பிரதாபம் என்னும் காவியம்தான் கதைக்களஞ்சியம். சூதர்பாடல்களிலிருந்து சதபதர் என்னும் கவிஞர் இயற்றியது. நீ வாசித்ததில்லையா?” என்றாள். “நான் அரண்மனையில் காவியம் வாசிக்குமிடத்தில் இருக்கவில்லை” என்றாள் சுபகை.

“நல்ல காவியம். சிறுவர்களுக்கும் கதைகளாக சொல்லலாம். சிருங்காரப்பகுதிகளை மட்டும் தவிர்த்துவிடவேண்டும். சொல்லப்போனால் அவற்றை எழுபது எண்பது வயதான கிழவர்களும் முனிவர்களும் மட்டும் வாசிப்பது நல்லது. அர்ஜுனனே அதையெல்லாம் வாசித்தால் கெட்டுப்போய்விடுவான்” என்றாள் மாலினி. சுபகை சிரித்துவிட்டாள். “பத்து சர்க்கங்கள் கொண்டது. ஒவ்வொன்றிலும் ஓர் உலகம், ஒரு நாயகி. வெவ்வேறு கதைகளைக் கலந்து எழுதியிருக்கிறார்கள்.” சுபகை “அர்ஜுனர் வாரணவதத்தில் இருந்து சென்றபோது நிகழ்ந்தவையா?” என்றாள். “இல்லை, இவை அவன் திரௌபதியை மணந்தபின் நிகழ்பவை என எழுதப்பட்டிருக்கின்றன” என்றாள் மாலினி.

சுபகை தலையசைத்தாள். அவள் முகத்தில் கதைகேட்பதற்கான விழைவைக் கண்ட மாலினி “காவியத்தின் தொடக்கம் இளையவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு கதையாக உள்ளது” என்றாள். “மணத்தன்னேற்பில் வில்லை வளைத்து திரௌபதியை மணந்தபின் பாண்டவர் ஐவரும் அஸ்தினபுரிக்கு அருகில் மயனால் கட்டப்பட்ட இந்திரப்பிரஸ்தம் என்னும் பெருநகரியில் குடிபுகுந்தபின்னர்தான் காவியம் தொடங்குகிறது...” சுபகை “அந்நகரம் இன்னும் கட்டப்படவே இல்லையே” என்றாள்.

“சொல்லிலும் கனவிலும் அது எழுந்து நெடுநாட்களாகின்றன” என்றாள் மாலினி. “காவியத்தில் அந்நகரத்தின் மிகப்பெரிய வர்ணனையை அளிக்கிறார் சதபதர். அது ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்ட பெருநகர். நடுவே தருமரின் மாளிகையை மையமாகக் கொண்ட யமபுரி. வலப்பக்கம் பீமனுக்குரிய வாயுபுரி. இடப்பக்கம் அர்ஜுனனின் இந்திரபுரி. பின்பக்கம் நகுலசகதேவர்களின் அஸ்வபுரியும் சக்ரவாளபுரியும். தருமனின் மாளிகை நீல நிறம். பீமனின் மாளிகை மஞ்சள். அர்ஜுனனுக்கு இளஞ்சிவப்பு. நகுலனுக்கு பச்சை. சகதேவனுக்கு வெண்மை.”

“ஐந்து உள்நகரங்களின் தெருக்களின் அமைப்பு, கட்டிடங்களின் தோற்றம் எல்லாமே விவரிக்கப்பட்டிருக்கின்றன. மைய மாளிகையைச்சுற்றி பெரிய கோட்டை. அதற்குள் அரசியர்மாளிகைகள்...” சுபகை “பாவம் பாஞ்சால அரசி. கவிஞரின் சொல்லுக்கிணையாக நகரை அமைப்பதற்காகவே அவள் அல்லும்பகலும் உழைக்கிறாள். அதை எட்டவே முடியவில்லை” என்றாள். மாலினி “ஆமாம், அதை கட்டி முடிக்கவே முடியாது என்று இப்போதே சூதர்கள் கதைகளை கட்டிவிட்டார்கள். ஊழிக்காலம் முடிவதுவரை அங்கே ஏதோ ஒரு மூலையில் சிற்பிகளின் உளிகள் ஒலித்துக்கொண்டேதான் இருக்குமாம்” என்றாள்.

“இந்திரப்பிரஸ்த நகரியில் கதை தொடங்குகிறது” என்றாள் மாலினி. “ஐவரும் தங்கள் துணைவியுடன் இந்திரபுரியில் குடியேறி இல்லம்புகுதலுக்கான பூதவேள்விகளை இயற்றியபோது அதில் பங்கு கொள்வதற்காக விண்முனிவராகிய நாரதர் வந்தார். ஐவருக்கும் துணைவியாக ஒரு பெண் இருப்பது தெய்வங்களுக்கு உகந்தது அல்ல என்றார்.” சுபகை “எவருடைய தெய்வங்களுக்கு?” என்றாள். “ஷத்ரிய ஆண்களின் தெய்வங்களுக்கு... வேறு எவருக்கு?” என்றாள் மாலினி. ”அவர்களுக்கு பெண்கள் கருப்பைகள் மட்டுமே. எவருடைய மைந்தன் என்பதே அவர்களை முழுமுற்றாக வகுக்கிறது. அதில் மயக்கம் வருவதை அவர்களால் ஏற்கமுடியாது.”

“எப்படியோ மணவினை நிகழ்ந்துவிட்டது. ஆகவே அதை மாற்றமுடியாது. ஒருபெண் இருவருடன் இருந்தால் அவளை விபசாரி என்றே நெறிநூல்கள் சொல்லும் என்றார் நாரதர். அர்ஜுனன் அவரை வணங்கி அதற்கு நெறிநூல்களுக்கிணங்க நாங்கள் செய்யவேண்டியதென்ன முனிவரே என்றான். நாரதர் சிந்தனைசெய்துவிட்டு ஆண்டுக்கொரு முறை தன் பிறந்தநாளில் ஒவ்வொருவரும் மறுபிறப்பு கொள்வதாக நெறிநூல்கள் சொல்கின்றன என்றார். அதன் அடிப்படையில் அவர் ஒரு முறைமையை வகுத்தளித்தார்” என்றாள் மாலினி.

மாலினி தொடர்ந்தாள் “திரௌபதியின் பிறந்தநாளில் அவள் அன்று புதியதாகப்பிறந்ததாகக் கருதி முறைப்படி இனிப்பளித்தல், பெயரிடுதல் முதலிய ஜாதகர்மங்களை செய்தபின் அவளை இளவரசர்களில் ஒருவர் மங்கலநாண் அணிவித்து மலர்கொடுத்து மணம்புரியவேண்டும். அவருடன் தனிமாளிகையில் இளவரசி மணவாழ்வில் ஈடுபடலாம். அப்போது பிறநால்வரும் அவளை பார்க்கவோ பேசவோ கூடாது. தங்கள் மனைவியென எண்ணவும் கூடாது.”

“அவ்வுறவு ஓராண்டு நீடிக்கும். அவ்வாண்டு இறுதியில் அடுத்த பிறந்தநாளுக்கு முந்தையநாள் அவள் இறந்துவிட்டாளென்று கருதி இறுதிச்சடங்குகள் செய்து கங்கைநீராடி எழுந்தால் அவ்வுறவு முடிவடையும். மறுநாள் மீண்டும் பிறந்து அடுத்த இளவரசனை மணந்து அவனுடன் வாழலாம் என்றார்.” சுபகை இதழ்கள் கோண “நல்ல திட்டம்... சமையல்பாத்திரங்களைப்போல உடலைக் கழுவலாம் என்கிறார்கள். உள்ளத்தை எப்படி கழுவுவது?” என்றாள். “உள்ளத்தை எண்ணத்தால் கழுவலாமடி. பிறப்பும் இறப்பும் உறவும் எல்லாம் மானுடனின் வெறும் பாவனைகள் மட்டுமே” என்றாள் மாலினி. சுபகை பெருமூச்சுவிட்டாள்.

“அதை தருமன் ஏற்றுக்கொண்டான். முதல்பிறப்பில் அவளுக்கு பாஞ்சாலி என்று பெயரிட்டனர். திரௌபதி, கிருஷ்ணை, யக்ஞசைனி, பார்ஷதி என பிற நான்கு பெயர்களும் அடுத்தடுத்த பிறப்புகளுக்கு. பாஞ்சாலி தருமனின் மனைவியாக யமபுரியில் அமைந்த அவனுடைய நீலநிறமான அரண்மனைக்கு சென்றாள். அங்கே பிறநால்வரையும் அறியாத பத்தினியாக அவனுடன் வாழ்ந்தாள்” என்றாள் மாலினி.

அக்காலகட்டத்தில் ஒருநாள் கடம்பபதத்தைச் சேர்ந்த அந்தணர்கள் குழு ஒன்று அரசரைப் பார்ப்பதற்காக இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தது. பதறியழுதபடி வந்த அவர்கள் அரண்மனைப்பெருமுற்றத்தில் நின்று கூச்சலிட்டனர். ஆராய்ச்சி மணியை அவர்களில் ஒருவன் வெறியுடன் அடித்தான். இந்திரப்பிரஸ்தம் அமைந்த நாள்முதல் ஒருமுறையேனும் ஒலித்திராத மணி அது. ஆகவே அதன் ஓசைகேட்டு அரண்மனை அதிர்ந்தது. அமைச்சுநிலைகளிலிருந்தும் காவல் மாளிகைகளிலிருந்தும் அமைச்சரும் படைத்தலைவர்களும் வந்து அந்தணர்களை சூழ்ந்துகொண்டனர்.

அதற்குள் அங்கே இளையபாண்டவரே வந்தார். “என்ன நிகழ்ந்தது?” என்றார். “அரசரை அழையுங்கள்... நாங்கள் அவரிடம்தான் பேசவேண்டும். இது அந்தணர் வாழ்வதற்குரிய நாடா என இன்றே அறிந்துகொள்ளவேண்டும்” என்று முதிய அந்தணர் கூச்சலிட்டார். “நான் இளையவன். இவ்வரசை காப்பவன். என்ன என்று சொல்லுங்கள், இக்கணமே ஆவன செய்கிறேன்” என்றான் அர்ஜுனன். “நாங்கள் உம்மிடம் பேசவரவில்லை. வீரர்களை அனுப்பி தீர்வுகாண்பதென்றால் எங்கள் ஊரிலேயே பெருவீரர் பலர் உண்டு. அரசரே வந்து வில்லேந்தி எங்களுக்கு நீதியளித்தாகவேண்டும். அதுவே எங்கள் குலத்துக்கு உகந்த முறை... அழையுங்கள் அரசை” என்றனர் அந்தணர்.

அர்ஜுனன் ஏவலனிடம் யமபுரிக்குச் சென்று தருமனிடம் செய்தியைச்சொல்லி அவைகூட ஆணையிடும்படி கோருவதாக சொல்லி அனுப்பினான். ஏவலன் திரும்பிவந்து “அரசர் அரசியுடன் அமர்ந்து நூலாய்ந்து கொண்டிருக்கிறார். இத்தனை சிறிய செய்திகளுக்கெல்லாம் அவரை அழைக்கலாகாது என்று சினம் கொண்டார். தாங்களே இதை நிகழ்த்தும்படி ஆணையிட்டார்” என்றான். முதிய அந்தணர் “அரசர் வரவில்லை என்றால் விடுங்கள். வில்லுடன் எழுந்து வந்து எங்களைக் காக்கும் அரசர் எங்குள்ளாரோ அங்கு செல்கிறோம். குருகுலத்து அரசர் துரியோதனர் அவையில் பிராமணர்கள் தேவர்களுக்கு நிகராக வாழ்கிறார்கள் என்கிறார்கள்” என்றார்.

“அந்தணர்களே, சினம்வேண்டியதில்லை. புதியநகரின் நெறிகளை வகுக்கும்பணியில் இருக்கிறார் அரசர். அவருக்கு மேலும் விளக்கமாக செய்தியை அனுப்புகிறேன்... பொறுங்கள்” என்றான் அர்ஜுனன். “இளையவரே, அவரைப்பற்றி நகரில் நுழைந்ததுமே அறிந்தோம். அந்திமலருக்குள் சிக்கிக்கொண்ட தேன்வண்டு என அவர் பாஞ்சால அரசியில் இருக்கிறார் என்கிறார்கள் சூதர்கள். அங்கே அவர் ஆராய்வது நெறியை அல்ல, காமத்தை. நெறியாய்ந்தவர் என்றால் அந்தணரைக் காக்க வில்லுடன் இதற்குள் எழுந்து வந்திருப்பார்” என்றார் அந்தணர்தலைவர்.

“பொறுங்கள் அந்தணர்களே, பொறுங்கள்...” என்றான் அர்ஜுனன் “நான் ஆவனசெய்கிறேன். தங்கள் உறுதியை சற்றே தளர்த்திக்கொள்ளுங்கள். பரதகுலத்தில் நானே நிகரற்ற வீரன் என்கிறார்கள். நான் வந்து உங்கள் குறைகளை தீர்க்கிறேன். என்னிடம் உரையுங்கள்.” அந்தணர்தலைவர் “இளையவரே, எவன் ஒருவன் தனக்கென எந்தப்படைக்கலமும் இல்லாமலிருக்கிறானோ அவனே அந்தணன் என வகுக்கின்றன நெறிநூல்கள். ஷத்ரியனுக்கு வாளும் வைசியனுக்கு செல்வமும் சூத்திரனுக்கு உழைப்புக்கருவிகளும் படைக்கலங்கள். சொல் அன்றி பிறிதேதும் அற்றவனே அந்தணன். அச்சொல் அரசால் நேரடியாக காக்கப்படவேண்டும். இல்லையேல் இறுகமூடப்பட்ட கலத்தில் அகல்சுடர் அணைவதுபோல அந்தணர் அழிந்துவிடுவார்கள்.”

“சூத்திரனின் செல்வம் ஒவ்வொரு பருவத்துடன் பிணைந்தது. வைசியனின் செல்வம் பாதைகளுடன் பிணைந்தது. ஷத்ரியனின் செல்வமோ நாடுகளுடன் பிணைந்தது. மண்ணில் எதனுடனும் பிணையாதது பிராமணனின் செல்வம். மண்ணில் அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன. மாறாததென நின்றிருக்கும் சொற்களை நம்பியே இங்கு மானுடர் வாழ்கிறார்கள். அச்சொற்களை நிலைநாட்டும் பொறுப்புள்ளவன் மன்னன். ஆகவே அந்தணரைக் காக்க அவனே எழுந்தாகவேண்டும்” முதிய அந்தணர் சொன்னார்.

“கேளுங்கள் இளையவரே, அரண்மனையின் முத்திரை இருப்பதனால்தான் செம்புத்துண்டு நாணயமாக ஆகிறது. எங்கள் சொற்களில் எல்லாம் அரசனின் முத்திரை இருந்தாகவேண்டும். அவற்றை எவர் மீறினாலும் அரசனின் வாள் எழும் என்பது கண்கூடாக நிறுவப்பட்டாகவேண்டும். ஆகவேதான் அரசனே வரவேண்டும் என்கிறோம்” என்றார் முதியவர். அர்ஜுனன் சினத்துடன் படைத்தலைவர் சிம்ஹபாகுவை நோக்கி “உடனே சென்று அரசரை ஒப்பக்கூடிவாருங்கள். நான் சொன்னதாக சொல்லுங்கள்” என்றான். சிம்ஹபாகு குறடுகள் ஒலிக்க ஓடினார்

சற்றுநேரத்தில் அவர் சோர்ந்து திரும்பி வந்து “அரசர் படுக்கையறைக்கு சென்றுவிட்டார். அரசியும் உடனிருக்கிறார். இப்போது அவர்களை அழைக்கமுடியாதென்றாள் சேடி” என்றார். அர்ஜுனன் அக்கணத்தில் அனைத்தையும் மறந்தான். “இதோ வருகிறேன் அந்தணர்களே” என்று சொல்லி திரும்பி இடைநாழியில் விரைந்து ஓடி முற்றங்களில் இறங்கி யமபுரியின் குறுமதில்சூழ்கையை கடந்து நீலமாளிகைக்குள் சென்றான். எதிரே வந்த சேடியிடம் ”விலகு” என்று உறுமினான். மஞ்சத்தறையின் பித்தளைப்பூணிட்ட தாழை விசையுடன் இழுத்து ஓசை எழுப்பினான்.

கதவைத் திறந்தவள் பாஞ்சாலி. அவள் மேலாடை நழுவியிருந்தது. கன்னமும் கழுத்தும் தோள்களும் காமத்தின் குளிர்வியர்வையால் பனித்திருக்க மூச்சில் முலைகள் எழுந்து அமைந்தன. ஆழ்ந்த குரலில் “என்ன?” என்று கேட்டாள். “இல்லை” என்று சொல்லிஅர்ஜுனன் திரும்ப போனான். “ஏன் அழைத்தீர்கள்?” என்றாள் திரௌபதி. “அலுவல்....” என்று சொல்லி அவன் விழிகளை திருப்பிக்கொண்டான். விரைவாக அள்ளிப்போட்ட அவள் ஆடை தோளில் சரிந்தது. அதை வலக்கை இயல்பாகச் சென்று அள்ளிச்சேர்க்க அவ்வசைவை அவன் விழிகள் உடனே அறிந்தன. கால்களை சற்றே விலக்கி இடையை ஒசிய வைத்து அவள் நிற்பது ஏன் என அவன் அறிந்தான்.

அவளிடமிருந்த மணத்தை சித்தத்திலிருந்து விலக்கும்பொருட்டு அவன் சொல்லெடுத்தான். “நான் சென்று... பிறகு வருகிறேன்” என்றான். மஞ்சத்தில் எழுந்து அமரும் உடல் அப்போதும் தருமனுக்கு அமையவில்லை. ஆடையை அள்ளி தன்மேல் குவித்தபடி அமர்ந்து ”பார்த்தா, என்ன செய்கிறாய் என உணர்ந்திருக்கிறாயா?” என்றான். “பொறுத்தருள வேண்டும்... அந்தணர்கள் வந்தமையால்...” என்றான் அர்ஜுனன். “எவர் வந்தாலென்ன? எப்படி நீ என் அரண்மனைக்குள் நெறிமீறி நுழையலாகும்?” என்றான் தருமன்.

“பொறுத்தருள்க மூத்தவரே. தாங்களே நேரில் சென்று தீர்க்கவேண்டிய இடர் ஒன்று வந்துள்ளது. அந்தணர்களின் தீச்சொல் எழுந்துவிடலாகாது என்பதற்காகவே வந்தேன்” என்றான் அர்ஜுனன். “அந்தணர் தீச்சொல் பின்னால் வரும். அதற்கு முன் மூதாதையர் தீச்சொல் சூழ்ந்துவிட்டிருக்கிறது மூடா. இதோ இவள் மறுபிறப்பெடுத்த என் மணமகள். இவளை நீ எப்படி உன் விழிகளால் நோக்கினாய்? இவளை நீ இப்போது இழிமகளாக ஆக்கினாய்....” அர்ஜுனன் மறுமொழி சொல்லாமல் தலைகுனிந்தான்.

தருமன் அச்சினத்தாலேயே உடல் மீண்டான். எழுந்து தன் சால்வையை போட்டபடி நடந்தான். “இதை நான் இப்போதே முடிக்கிறேன். ஆனால் நீ செய்த பிழைக்கு என்ன மாற்று என நிமித்திகர் சொல்லட்டும்” என்றபடி சென்றான். அர்ஜுனன் அவன் பின்னால் செல்ல காலெடுத்தபோது மிகமெல்லிய உடைநலுங்கும் ஓசை அவனை அழைத்தது. திரும்பி அவள் விழிகளை நோக்கியபின் பதறி மூத்தவன் பின்னால் ஓடினான்.

அவைக்களம் வந்த தருமன் “அந்தணரே, என்ன ஆயிற்று என்று சொல்லுங்கள்” என்றான். “மலைவேடர் சிலர் எங்கள் பசுக்களை கவர்ந்து சென்றுவிட்டனர். அவற்றை மீட்டளிக்கவேண்டும்” என்றார் முதியபிராமணர். “நிகரான பசுக்களை இப்போதே அளிக்கிறேன். பசுக்களைக் கவர்ந்தவர்களை எங்கள் படைவீரர்கள் கொன்று அப்பசுக்களை மீட்டு அளிப்பார்கள்” என்று தருமன் ஆணையிட்டான். “அவ்வண்ணமே ஆகுக! மூதாதையர் அருளும் மூத்தார் அருளும் உங்களிடம் தங்குக!” என்றார் முதிய அந்தணர்.

அன்று மாலையே அவையில் பன்னிரு நிமித்திகர்கள் கூடினர். அர்ஜுனன் தன் செய்கை பிழை என தலைகுனிந்து ஏற்றுக்கொண்டான். முதுநிமித்திகர் பார்வதர் “அரசே, காமம், உணவு, ஊழ்கம் மூன்றும் ஒன்றே என்கின்றன நூல்கள். ஆகவே ஊழ்கத்தைக் கலைப்பதற்கு என்ன தண்டனையோ அதையே இதற்கும் அளிக்கலாமென எண்ணுகிறோம். இளையவர் இன்றே வெறும் கையுடன் தவக்கோலம் பூண்டு காடேகவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் எல்லைக்குள் அவர் இருக்கலாகாது. அவருடன் இருக்கவேண்டிய ஓராண்டையும் அரசி தங்களுடன் கழிக்கவேண்டும்” என்றார்.

முகம் மலர்ந்த தருமன் “தங்கள் நூலறிவு அவ்வண்ணம் கூறுமென்றால் அதுவே ஆகட்டும்” என்றான். அர்ஜுனன் தலைவணங்கி “ஆணையை ஏற்கிறேன்” என்றான். தலைதிருப்பி அப்படியே சென்றுவிடவேண்டுமென்றே விழைந்தான். ஆனால் தூணிலிருந்த வெண்கலக் கவசத்தின் ஒளியில் திரௌபதியின் முகத்தில் கூர்கொண்டு நின்ற விழிகளை கண்டான். நெஞ்சு அதிர தன்னை விலக்கிக்கொண்டு “நான் இன்றே கிளம்புகிறேன் மூத்தவரே” என்றான்.

”அன்றே இளையபாண்டவன் கிளம்பி காடேகியதாக சதபதரின் நூல் சொல்கிறது” என்றாள் மாலினி. “அதன்பின் பதினான்கு ஆண்டுகாலம் அவன் இந்திரபுரிக்கு திரும்பவில்லை. அவன் அந்தப்பயணத்தில் சென்ற ஊர்களையும் வென்ற வீரர்களையும் அடைந்த கன்னியரையும்தான் காவியம் விவரிக்கிறது.” சுபகை “ஆண்டுகள் என்றாலே பதினான்குதான் இவர்களுக்கு” என்றாள். “ரகுகுல ராமனும் பதினான்கு ஆண்டுகாலம் அல்லவா காடேகினான்?”

“அவன் தன் தேவியை தேடிச்சென்றான். இவன் தேவியரை அணுகும்பொருட்டு சென்றான்” என்றாள் மாலினி. “இந்தக்காவியத்தை ஒருநாள் இளையவனை அருகே அமரச்செய்து வாசிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.” சுபகை சிரித்து “அய்யோ, நாணம்கொண்டு விடுவார்” என்றாள். மாலினியும் சிரித்தாள். சுஜயனை மெல்லத்தூக்கி “செல்வோம். வெயில் ஏறிவருகிறது” என்றாள். “முதலில் எங்குசென்றார்?” என்றாள் சுபகை. ”முதல் பயணம் நாகருலகுக்கு. அங்கே உலூபியை மணந்தான்.”

சுபகை சுஜயனை வாங்கி தன் தோளில் பதமாக போட்டுக்கொண்டாள். அவள் தோள்வளைவில் வாயைச் சேர்த்து வெம்மையுடன் மூச்சுவிட்டு அவன் துயின்றான். வாய்நீர் வழிந்து முதுகில் ஓடியது. “நாகர்கள் மலைமக்கள் அல்லவா?” என்றாள் சுபகை. “ஆம், அவர்களைப்பற்றி நாமறிந்தவை சிலவே. நமக்குக் கிடைப்பவை எல்லாம் வெறும் சூதர்கதைகள்.” அவர்கள் சிறிய பாதையில் நாணல்களின் நடுவே நடந்தனர். அப்பால் குன்றின்மேல் அவர்களின் தவக்குடில் வெயிலில் ஒளிவிட்டுத்தெரிந்தது.

முகில்கள் எரிந்துகொண்டிருந்த வானத்தை நோக்கியபடி சுபகை சொன்னாள் “நான் எண்ணிக்கொண்டிருப்பதெல்லாம் ஒன்றே.” மாலினி “என்ன?” என்றாள். “இடைநாழிவரை சினத்துடன்தான் இளையபாண்டவர் சென்றிருப்பார். ஆனால் நீலமாளிகைக்குள் செல்லும்போது அவர் நெஞ்சில் பாஞ்சாலியை சந்திக்கும் விழைவு இல்லாமலா இருந்திருக்கும்?” மாலினி “இதையெல்லாம் எப்படி எண்ணித்தீர்க்கமுடியும்?” என்றாள். தயக்கத்துடன் “இல்லை...” என்றாள் சுபகை.

“அடி, கதவு தட்டப்பட்டபோது அவள் ஏன் எழுந்து வந்து திறந்தாள்?” என்றாள். “அவர் காலடியோசை அவளுக்குத் தெரிந்திருக்குமோ?” என்றாள் சுபகை. “தாழோசையே அவளுக்கு சொல்லியிருக்கும்” என்றாள் மாலினி. சற்றுநேரம் கழித்து சுபகை “ஆம்” என்றாள்.

பகுதி இரண்டு : அலையுலகு - 2

தன் ஒரு முகத்தை இன்னொரு முகத்தால் பார்க்கத் தெரிந்தவனை தெய்வங்கள் பார்க்கின்றன. மூன்று முகமுள்ள பேருருவனின் கதை இது. பிரம்மனின் உளம்கனிந்த மைந்தர்களில் முதல்வர் மரீசி. அவர் விண்பெருக்கில் ஒரு நீர்த்தீற்றலெனத் திகழ்ந்தார். அவர் பெற்ற மைந்தரான காசியபர் பெருநாகமான தட்சனின் மகள் அதிதியை மணந்து பெற்ற மைந்தர்களை ஆதித்யர்கள் என்றனர். ஆதித்யர்களில் முதலோன் இந்திரன். தாதா, ஆரியமா, மித்ரன், ருத்ரன், வருணன், சூரியன், பகன், விவஸ்வான், பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு என்னும் பன்னிரு ஆதித்யர்களும் அவனுக்கு இளையோர்.

தம்பியரின்மேல் பேரன்பு கொண்டிருந்த இந்திரன் அவர்களில் மிக இளையவர்கள் என த்வஷ்டாவையும் விஷ்ணுவையும் எண்ணி அன்னையென உளம் கனிந்திருந்தான். இருபெருந்தோள்களில் சிறுவர் இருவரையும் எந்நேரமும் ஏற்றிக்கொண்டு விண்முகில் வெளியில் களித்தான். அவர்கள் உளம்கொண்டது சொல்கொள்வதற்கு முன்னரே அறிந்தான். அச்சொல் வெளிவரும் முன்னரே அதை அளித்தான். அவர்களின் விழிநீர்த்துளி எழுந்தால் ஈரேழு உலகையும் அழிக்க சித்தமாக இருந்தான்.

விஷ்ணுவுக்கு இசை தெய்வங்களால் அளிக்கப்பட்டது. த்வஷ்டா சிற்பியானான். எண்ணுவதை இயற்றும் விரல் கொண்டிருந்தான். அவனைச்சூழ்ந்து அவன் படைத்தவை நிறைந்தபோது அவற்றுக்கு அப்பாலிருந்த பேருலகங்களை அவன் மறந்தான். அங்கு அவ்வாறிருப்பதே உலகென்று எண்ணியபோது உலகியற்றிய இறைவனென தன்னை உணர்ந்தான். ஆம் ஆம் என்றன அவனைச் சூழ்ந்திருந்த அவன் படைத்த முகங்கள். அவன் கலைத்திறன் கண்டு உளம்விம்மிய இந்திரன் அவனை சிற்பியரில் முதல்வன் என கொண்டாடினான்.

தடையற்ற பேரன்பு பொழியப்படும் விசையில் நிறையும் கலமும் கவிழும் கலமும் தெய்வங்களின் ஆடலுக்கு களம் அமைக்கின்றன. விஷ்ணு தமையனின் உடலில் ஒரு சிற்றுறுப்பென தன்னை உணர்ந்தான். தனக்கென எண்ணமோ விழைவோ இன்றி கடலில் மீன் என அவனில் திளைத்து வாழ்ந்தான். த்வஷ்டாவோ தன் தமையனே தான் என ஒவ்வொரு கணமும் உணரலானான். எண்ணுவதெல்லாம் விலகுதலே என்றானான். விலகும்தோறும் தமையனின் வெல்லற்கரிய வல்லமையை அறிந்தான். தோற்கும்தோறும் கசப்பு கொண்டான். வெறுப்பு என்பது முடிவற்ற வல்லமையை அளிக்கும் ஊற்று என்று அறிந்தான்.

விஷ்ணு வெண்ணிற ஒளிகொண்டு கீழ்த்திசையில் மின்னி நின்றான். இங்கு காதலில் கனிந்தவர்கள், பேரன்பில் விரிந்தவர்கள் அவனை ஏறிட்டு நோக்கினர். அவனுடைய ஒளிவடிவம் அருமணியென மின்னி விழுந்து கிடந்த சுனைநீரை அள்ளி அருந்தி அகம் நிறைந்தனர். அவர்களின் குருதியின் பாதைகளில் மின்மினி போல அவன் ஒழுகிச்சென்றான். த்வஷ்டா செந்துளி என மேற்கே நின்றெரிந்தான். மண்ணில் வஞ்சமும் சினமும் ஆறாப்பெருந்துயரும் கொண்டவர்கள் அவனை நோக்கி நின்றனர். அவனைத் தவிர்த்து விழிதிருப்பிக்கொண்டு விலக முயன்றனர். அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் நீர்நிலைகளில் ஈரத்தரையில் இல்லத்து ஆடிகளில் அவன் தோன்றி உறுத்து விழித்தான். கனவுகளில் பட்டுக்குவியலில் விழுந்த கனல்பொட்டு போல எரிந்து இறங்கிச்சென்றான்.

வெறுப்பவனைப்போல அறிபவன் எவனுமில்லை. ஏழு ஊழிக்காலம் இந்திரனை அணுகியறிந்தபின் த்வஷ்டா இடதுகாலின் கட்டைவிரலை ஊன்றி மேற்குமூலையில் தவமிருந்தான். முதல் ஏழு ஊழிக்காலம் அவன் தமையன் மீதுகொண்ட கடும் கசப்பில் இருண்டிருந்தான். அடுத்த ஏழு ஊழிக்காலம் அவன் அக்கசப்பை தானே நோக்கி அறிந்துகொண்டிருந்தான். தன்னுடையது வெல்லவேண்டும் என்னும் விழைவே என உணர்ந்தான். மூன்றாவது ஏழு ஊழிக்காலத்தின் தொடக்கத்தில் அவன் அறிந்தான் தன்னுடையது தன்மேல்கொண்ட பேரன்பு என. அவ்வூழி நிறைந்தபோது அவன் தெளிந்தான், அவ்வன்பு என்பது அனைத்துமாகி நின்ற அதன்மேல் கொண்ட அன்பின் ஒரு முகமே என.

முகில் மழையென ஆகும் கணம் அமைந்தபோது விண்வடிவானது மேற்கில் ஒரு பேருருவக் கதிரவனாக எழுந்தது. அதன் ஒளிபட்டு அவன் உடல் பொன்னொளி கொண்டது. விழிகள் மணிச்சுடர் விட்டன. 'கேள் மைந்தா, நீ வேண்டுவதென்ன?’ என்றது அது. ‘பகை முடித்தல்’ என்றான். அது நீலப்பேரொளி கொண்டது. ‘என் பெயர் என்றும் நிற்றல்’ என்று அவன் மேலும் சொன்னான். அது செந்நிறமாகியது. புன்னகைத்து இறுதியாக ‘நீயென நானும் ஆதல்’ என்றான். அது வெண்ணிறமாகச் சுடர்ந்தது. ‘முத்தொழில் ஆற்றும் பேருருவன் ஒருவன் எனக்கு மகனாக வேண்டும்' என்றான் த்வஷ்டா. 'அவ்வாறே ஆகுக' என்று அருளியது ஒளியோசை.

வெண்மையும் செம்மையும் நீலமும் என நிறம் கொண்டு சுடர்ந்தணைந்த அதன் ஒளியில் த்வஷ்டாவின் பெருநிழல் கிழக்கே நீண்டு எழுந்து மும்முடிகள் எழுந்த மலையென ஆகியது. அம்மைந்தன் விஸ்வரூபன் எனப்பட்டான். அவனை திரிசிரஸ் என அழைத்தனர் வேதமுனிவர். ஒன்றுடன் ஒன்று இணைந்த மூன்று முகங்களால் நான்குதிசைகளையும் நோக்கினான். அவன் நீலமுகம் கள்ளில் பித்துகொண்டிருந்தது. ஊன்சுவைத்து மகிழ்ந்தது. இரண்டாவது முகம் சூழுலகை நோக்கி விழைவுகளை அறிந்தது. மூன்றாவது முகம் வேதமெய்ப்பொருளை உணர்ந்தோதிக்கொண்டிருந்தது.

கள்ளால் வேதத்தை அறிந்தவன் வேதத்தால் கள்ளையும் அறிந்தான். வேதமும் கள்ளும் துணைவர இங்கென இவையென திகழ்வன அனைத்தையும் அறிந்தான். வேதம் அவன் உண்ட கள்ளை சோமம் என ஆக்கியது. ஊனை அவியாக்கியது. கள் அவன் ஓதிய வேதத்தை இசையென மாற்றியது. அவன் விழிதொட்ட ஒவ்வொன்றும் பொருள் துலங்கின. அறிவென ஆகிய விழைவால் தொடப்பட்ட ஒவ்வொன்றும் அவனுடையதாயிற்று.

இங்குள்ள ஒவ்வொன்றும் தங்கள் உண்மையின்மேல் பொருண்மையை ஏற்றிவைத்து மூடிக்கொண்டிருக்கின்றன. பொருண்மையை விலக்கினால் இன்மையையே அறியமுடியும். பொருண்மையை அறிந்தால் உண்மை மறைந்துவிடும். சலிக்காத பெரும்பகடையாட்டத்தில் புன்னகைத்து அமர்ந்திருக்கிறது பிரம்மம். அவனோ பகடையின் மூன்று களமுகங்களிலும் தானே அமர்ந்தான். நான்காவதாக பிரம்மத்தை அமரச்செய்தான். பொருண்மையை அறிந்தது கள். பொருளை அறிந்தது வேதம். அறிந்ததை ஆண்டது விழைவு.

அவன் விழிதொட்டபோது கதிரவனும் நிலவும் விண்மீன்களும் அவனுக்கு விளக்குகளாயின. திசையானைகள் ஊர்திகளாயின. பாதாளநாகங்கள் பணியாட்களாயின. எட்டுதிசைத் தேவர்கள் வாயிற்காவலர்களாக வந்து நின்றனர். விண்முதல்வனின் ஐராவதம் அவனை எண்ணி மத்தகம் தாழ்த்தியது. உச்சைசிரவஸ் முன்னங்கால்தூக்கி பிடரி சிலிர்த்தது. மாதலி முகபீடத்தில் ஏறி அமர்ந்து வியோமயானத்தை கிளப்பியபோது அவனை எண்ணி நீள்மூச்செறிந்தான். அவனுக்காக அரிசந்தனமும் பாரிஜாதமும் மந்தாரமும் மணமெழுப்பி மலர்ந்த நந்தனத்தில் கற்பக மரம் அவனுக்காகக் கனிந்தது. காமதேனு அவனுக்காக சுரந்தது.

அஸ்வினிதேவர்கள் அவனுக்காக ஏடுகளுடன் எழுந்தனர். ரம்பையும் மேனகையும் திலோத்தமையும் கலைத்தோழியருடன் அவன் அண்மையை நாடினர். இனி அவனிருக்கும் இடமே சுதமை போலும் என தேவர் மயங்கினர். அமராவதியில் விழவுகள் ஓய்ந்து புள் அகன்ற காடு என அமைதி நிறைந்தது. தன் வைஜயந்த முகப்பில் அமர்ந்து நோக்கிய இந்திரன் தன் துணைவியும் மைந்தனும்கூட அவன் அமைந்த திசைநோக்கி விழிதிருப்பியிருப்பதை கண்டான். அவன் முகம் சுளிப்பதைக் கண்டு அருகிருந்த நாரதர் “ஆம் அரசே, இனி அமுதென்பது அங்குள்ள நீரே. கிழக்கென்பது அவன் திசையே” என்றார்.

சினந்தெழுந்த இந்திரன் “ஆயிரம் அஸ்மேதமும் நூறு ராஜசூயமும் செய்து நான் அடைந்த அரியணை இது. அரசனுக்குரிய அறங்களில் முதன்மையானது அரியணையை காத்துக்கொள்ளலே. அவனை அழித்து இதைக் காப்பேன். அருள்க என் தெய்வங்கள்!” என வஞ்சினம் உரைத்தான். “விண்ணவனே, விழைவுகொண்டவனுக்கு பிற எதிரிகள் தேவையில்லை. அவன் விழியால் தொட்டவை அவனை நாடுகின்றன. அவற்றையே அனுப்பி அவன் தவத்தை கலைக்கலாம். ஒருமுறை ஒருசொல்லில் அவன் வேதம்பிழைத்தான் என்றால் தன் அனைத்து வல்லமைகளையும் அவன் இழந்தவனாவான்” என்றார் நாரதர்.

“அது எவ்வண்ணம்?” என்று வியந்தான் இந்திரன். “மூன்று முகங்களால் தன்னை முற்றிலும் நிகர்நிலையில் வைத்து முள்முனையில் நெல்லிக்கனி என அமர்ந்திருக்கிறான் அவன். மூன்றும் ஒன்றையொன்று நிகர் செய்கையிலேயே அவன் வெல்லமுடியாதவனாகிறான். அம்மூன்றில் ஒன்று பிழை ஆனால் பிறஇரண்டும் அப்பிழையை எதிரொளிக்கும். ஆடிகள் முன் விளக்கென அப்பிழை முடிவிலாது பெருகும். அதை வெல்ல அவனால் முடியாது” என்றார் நாரதர்.

“அவன் மதுவுண்கிறான். உலகை எண்ணி ஊழ்விழைகிறான். அங்கு நாம் அவனை அணுகினாலென்ன?” என்றான் இந்திரன். நாரதர் நகைத்து “விண்ணவனே, உண்பவனும் விழைபவனும் தன்னை தோற்கடிக்க தானே முனைபவர்கள். எழுந்தபின் வேட்கை எரியென ஆகும். முழுதுண்டு அமையும் வரை நிற்காத தடையின்மையே அதன் இயல்பு. மாறாக மெய்நாடும் உள்ளமோ இறுதிச்சொல் வரை ஐயம் கொண்டது. மெய்மையென்பது சவரக்கத்திநுனிப்பாதை. பிடியானை அடிபிழைக்கும் சரிவு. அது. வரையாடு நிலைதவறும் ஏற்றம். அதில் ஒரு சொல் பிழைப்பது மிகமிக எளிதென்றறிக!” என்றார். இந்திரன் “ஆம், அதையே செய்கிறேன். என் அவைமங்கலங்கள் எழுக! அவன் முன் சூழ்ந்து அவனைக் கவர்ந்து வெல்க!” என ஆணையிட்டான்.

நந்தனத்தின் அரிசந்தனமும் பாரிஜாதமும் மந்தாரமும் கொண்டு தேவர் மும்முகனின் அருகணைந்து வணங்கி “இறைவ, இவை இனி உனக்கே” என்றனர். கற்பகமரத்தின் கனிகளையும் காமதேனுவின் இன்னமுதையும் கொண்டுவந்து படைத்து “உண்க தேவர்களுக்கரசே!” என்றனர். அவன் கள்முகம் வெறிகொண்டெழுந்து அவற்றைச் சூழ்ந்தது. தடையற்ற அதன் பசியை வேதமுகம் தடுக்கவில்லை. தன்னை பிறிதொன்றென ஆக்கி அது ஊழ்கத்திலிருந்தது.

இந்திரனின் அவைக்கன்னியரான ரம்பையும் ஊர்வசியும் மேனகையும் பொற்பட்டு ஆடைகளும் அருமணி அணிகளும் மின்ன அவன் முன் வந்தனர். “தீராத காமமே தேவர்கொள்ளும் களியாட்டம். கொள்க தேவர்க்கரசே!” என்றனர். மாயப்பூங்காக்களை அமைத்து அவற்றில் நடமிட்டனர். நீலநீர்ச்சுனைகளை சமைத்து அவற்றில் பொன்னுடல் பொலிய நீராடினர். அவன் பெருவிழைவுமுகம் எழுந்து தன்னை ஒன்றுநூறெனப் பெருக்கி அவர்களுடன் உறவாடியது. தன் மத்தத்தில் மூழ்கிய சுவைமுகம் அதை அறியவில்லை. வேதமெய் நாடிய முகமோ மறு எல்லையென எங்கோ இருந்தது.

“கள்ளில் ஆடுகையிலும் காமம் நாடுகையிலும் உள்ளுறைந்த அறம் வந்து வழிமறிக்காத உள்ளம் இல்லை தேவர்க்கரசே” என்றார் நாரதர். “ஆகவேதான் எங்கும் எவரும் அதில் முழுதும் திளைக்கக் கூடுவதில்லை. அச்சமும் ஐயமும் உட்கரந்துதான் அவர்கள் நுகர்கிறார்கள். கோட்டையின் பின்பக்கம் திறந்திருக்கும் அந்த வாயிலே அவர்களை வெல்லும் வழி. இவனோ முற்றிலும் தடையற்று புயலெனப்பெருகி சுவைமேல் படர்கிறான். காமத்தைச் சூழ்கிறான். இவ்வழியே இவனை வெல்லல் அரிது.”

“நானறிவேன் இவனை வெல்லும் வழி” என்று எழுந்தான் இந்திரன். இடியோசையை முரசொலியாக்கி தேவர்படை திரட்டிக்கொண்டான். மின்னல்களை வாள்களென ஏந்தி முகில்குவைகளை மதகளிறுகளென ஆக்கி திரண்டு கிளம்பினான். கிழக்கு எல்லையில் விண்நிறைத்து நின்றிருந்த மும்முகனைச் சூழ்ந்தான். சுவையில் திளைத்திருந்த முகம் ஒரு பெரும்பன்றியாகியது. விழைவில் சிவந்த முகம் சிம்மமென உறுமியது. வேதம் பெருகிய முகம் ஒரு வெண்பசுவென விழிதிறந்தது. பன்றியைக் கொல்லலாம். சிம்மத்தை வெல்லலாம். பசுவை வெல்லமுடியாதென்று அறிந்து இந்திரன் திகைத்தான்.

தன் பாடிவீட்டுக்கு மீண்டு துயருற்றுத் தனித்திருந்த இந்திரனை அணுகிய நாரதர் சொன்னார். “மின்னலுக்கரசே, சோர்வுறுதல் ஏன்? நீர் இந்திரன் என இவ்வரியணையில் அமர்ந்திருப்பதும் வழுவுதலும் விண்சமைத்த வெறுமையின் விழைவு என்றால் அதுவே நிகழும். உம் பணி போரிடுவதொன்றே. அதை இயற்றுக!” அவரை நோக்கி கைகூப்பிப் பணிந்து இந்திரன் கேட்டான் “தாங்கள் சொல்லுங்கள், மும்முகனை வெல்ல வழியென்ன? ஒருமுகத்தை பிறமுகம் காக்கும் இவன் வெல்லற்குரியவனா என்ன?”

“மெய்மைதேர் தவத்தை கலைக்கும் கரவு ஒன்றே. மெய்மையை முழுதறியவேண்டுமென்னும் விழைவு.” இந்திரன் “அவ்விழைவு இன்றி அதை எவர் இயற்றக்கூடும்?” என்றான். “மெய்மையைத் தேடும் விழைவையும் அதன்பாதையில் உதிர்த்து வழிதல் நீரின் இயல்பென்பதுபோல செல்பவன் மட்டிலுமே அதை அடைகிறான். விழைகிறேன் என்பது இருக்கிறேன் என்னும் சொல்லின் நிகரொலி மட்டுமே. இருக்கிறேன் என்பதோ நான் எனச்சுருங்கும். நான் என்பதோ நீ என உணரும். நீ என உணரப்படுவது அக்கணமே தன்னை உணர்பவனிலிருந்து விலக்கிக் கொள்கிறது. பின்பு துலாக்கோல்கள் நடுவே நின்றாடும் முள்ளென ஆகிறது அறிவு.”

தன் படைகளனைத்தையும் விட்டுவிட்டு தனித்து மும்முகப் பேருருவனுடன் போருக்கு வந்தான் இந்திரன். வேதமுரைத்த முகத்தின் முன் நின்று தானும் வேதம் ஓதலானான். அவன் சொற்களை இடியோசையென முகில்நிரைகள் எதிரொலித்தன. வேதச்சொல் கேட்டு மும்முகன் செவியளித்தான். அப்போது இந்திரனின் வெண்களிறு பிளிறியது. வேதத்தில் தானறியாத வரியா அது என திகைத்த மும்முகன் ஒருகணம் ஓதுவதையும் ஊழ்கத்தையும் நிறுத்தி உளம்கூர்த்தான். அக்கணத்தில் அவன் பசுமுகம் மறைந்து அரக்கப் பேருருவம் தோன்றியது. அதை எண்ணிய பன்றிமுகமும் சிம்மமுகமும் இருண்ட பெருமுகங்களாயின. இந்திரன் தன் வாளை எடுத்து அவன் நெஞ்சில் ஆழப்பாய்ச்சினான்.

விண்தொலைவுகளில் தனித்தலைந்த கோள்களில் மோதி எதிரொலிக்கும்வண்ணம் அலறியபடி மும்முகன் மாண்டான். அவன் குருதி எழுந்து வானில் பரவியபோது உச்சிவேளையில் அந்தியெழுந்த விந்தையென்ன எனத் திகைத்தனர் பொழுதிணைவு தொழும் முனிவர். இடியோசை முடிவிலாது நீளக்கேட்டு நாகங்கள் மண்ணாழத்தில் புதைந்து சுருண்டு இறுகி அதிர்ந்தன. அவன் சரிந்தபோது எழுந்த ஊழிக்காற்றில் மரங்கள் சருகுகள்போல் எழுந்து பறந்து சுழன்று சென்று மலைகளை அறைந்து விழுந்தன. மலையுச்சிகளில் காலத்தவம் செய்திருந்த பெரும்பாறைகள் உருண்டன. விண்ணில் மின்னல்கள் எழுந்தெழுந்து அணைந்தன. வானம் முகில்புதர்களில் ஒளிந்த நரிக்கூட்டமென ஊளையிட்டது.

மும்முகன் உயிர்துடித்துக்கொண்டிருந்ததைக் கண்டு இந்திரன் தன் சங்கை எடுத்து வெற்றிப்பேரொலி முழக்கியபடி திரும்பினான். அவனருகே வந்த நாரதர் “தேவர்க்கரசே, அவன் இறக்கமாட்டான். அவன் தலைகளில் ஒன்றை பிறிதொன்று வாழச்செய்யும். மது வேதத்தையும் வேதம் உலகத்தையும் உலகம் மதுவையும் ஓம்பும் என்பதை உணர்க! முற்றிலும் கொல்லாமல் இங்கிருந்து விலகினீர் என்றால் மேலும் பெரிய எதிரியை அடைந்தவராவீர்” என்றார்.

இந்திரன் திரும்பி தன்னருகே நின்ற காம்யகனை நோக்கினான். பெருஞ்சிற்பியாகிய த்வஷ்டாவின் முதல்மாணவன் அவன். “உன் ஆசிரியரால் உருவாக்கப்பட்டவன் இந்த மூன்றுமுகப் பேருருவன். இவனை வெல்லும் கலை உனக்குத் தெரியுமா?” என்றான். “ஆம் அறிவேன்” என்றான் காம்யகன். “அவ்வண்ணமெனில் இவனை கொல். நீ விழைவதை அளிப்பேன்” என்றான் இந்திரன். காம்யகன் தன் மழுவை எடுத்து முன்னால் சென்று மூன்றே வெட்டில் துடித்துக்கொண்டிருந்த மூன்று தலைகளையும் வெட்டி துண்டாக்கினான்.

மும்முகனின் குருதி சீறி தன் உடலில் வழிய காம்யகன் வேதம் நாடிய முதல்தலையை விண்ணுலகம் நோக்கி வீசினான். மது விரும்பிய இரண்டாவது தலையை பாதாளம் நோக்கி வீசினான். விழிவிரிந்த மூன்றாவது தலையை மண்ணுலகம் எறிந்தான். அவை பேரொலியுடன் சென்று விழும் ஓசையை இந்திரன் கேட்டான். அவ்வதிர்வில் முகில்கள் வெடித்துப்பிரிந்தன. மண்ணுலகில் அந்தத் தலை சென்று விழுந்தபோது மலைகளின் மீது அமர்ந்திருந்த உச்சிப்பாறைகள் உருண்டு சரிவிறங்கின. பூமியைச் சுமந்திருந்த திசையானைகள் ஒருகணம் உடல்சிலிர்த்தன. பாதாள நாகங்கள் சுருண்டு இறுகிக்கொண்டு சீறின.

“எவ்வண்ணம் இவனை வென்றாய்?” என்றான் இந்திரன். “அறியேன். எல்லா மலைகளையும் உடைப்பதுபோல இவனையும் அரிந்தேன்” என்றான் காம்யகன். நாரதர் “மூன்றெனப் பிரிந்து தன்னைப்பெருக்கிய இவனை வெல்லும் வழி ஒன்றென நின்றிருப்பதே. அரசே, இவன் முன் வருபவர்கள் எவரும் ஒரேசமயம் இம்முகங்களை நோக்கும்பொருட்டு தங்களையும் மூன்றென வகுத்துக்கொள்கின்றனர். ஆகவே அறிவும் உணர்வும் கொண்டவர்களால் வெல்லப்படமுடியாதவனாக இருந்தான். இந்த மூடன் தன் அறியாமையினாலேயே வெல்லமுடியாத ஒருமையை கொண்டிருந்தான்” என்றார்.

இந்திரன் மகிழ்ந்து காம்யகனை ஆரத்தழுவிக்கொண்டான். “தச்சனே, நீ விழைவதென்ன?” என்றான். “மிகப்பெரியது... எவரும் விழையாதது” என்றான் தச்சன். இந்திரன் “அதர்வ வேள்விகளில் பலியென அளிக்கப்படும் பசுவின் தலையை எவரும் விழைவதில்லை. அதைவிடப்பெரியது அவியாவதும் இல்லை. இனி அது உனக்கென்றே ஆகுக” என்று சொல்லளித்தான். காம்யகன் பற்களைக் காட்டி வணங்கி “அவை எனக்கு இனியவை அரசே” என்றான்.

மும்முகப்பேருருவனின் தலை வந்து விழுந்த இடம் கங்கைக்கரையில் நீலப்பசுமை இடைவெளியின்றி நிரம்பிய ஐராவதீகம் என்னும் பெருங்காடு. அங்கே அந்தப் பெருந்தலை தீர்க்கசிரஸ் என்னும் பெயரில் மலையென உயர்ந்து நின்றது. அதன் கிழக்குமுகப்பில் இரு குகைகள் விழிகளெனத் திறந்து உலகை நோக்கின. அந்தத்தலை அங்கு விழுந்த பலநூறு யுகங்களுக்குப்பின்பு அங்கே அர்ஜுனன் வந்து சேர்ந்தான்.

இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து முறைப்படி காடேகிய அர்ஜுனனுடன் பன்னிரு வேதியரும் உடன் வந்தனர். அவர்களுடன் காசிக்குச் சென்று மணிகர்ணிகா கட்டில் நீராடி பழிநீக்கினான். பின்னர் அங்கே சந்தித்த முனிவர்களுடன் கங்காத்வாரம் சென்று அங்கு நன்னீராடி அகத்தூய்மை கொண்டான். அங்கிருந்து தனியாக இமயமலை நோக்கி அவன் கிளம்பியபோது “இளவரசே, ஒருவருடம் நீங்கள் காட்டிலுறையவேண்டும் என்பதே ஆணை. இந்தக்காட்டில் எங்களுடன் இருந்தருளலாமே” என்றார் உடன்வந்த சபர முனிவர்.

“என் சொல் எல்லைமீறல் என்றால் பொறுத்தருள்க முனிவரே! உங்கள் உள்ளம் பெருவெளியின் எல்லையின்மையை ஒவ்வொரு கணமும் நாடுகிறது. அவ்வூழ்கம் தெய்வங்களுக்கு உகந்தது. நானோ என் அகவெளியின் எல்லைக்கு அப்பால் என்ன என்று ஒவ்வொரு கணமும் தேடிக்கொண்டிருப்பவன். இப்புவியில் நான் செல்லும் பயணங்களெல்லாம் என்னுள் நுழைந்து செல்பவை என்றே உணர்கிறேன். நான் காணும் ஒவ்வொரு எல்லையிலும் பாம்பு தன் உறையை என என்னை கழற்றிவிட்டு கடந்துசெல்கிறேன். செல்லச்செல்லப் பெருகும் என்னுள் பெருகாதிருப்பது ஒரு வினா மட்டுமே. என்னை முற்றிலும் கழற்றிவிட்டு அவ்வினா மட்டுமாக நான் எஞ்சும் ஒரு தருணம் வரும். அதுவரை எங்கும் அமர்ந்திருக்க என்னால் இயலாது.”

“அவ்வாறே ஆகுக!” என்று சபர முனிவர் வாழ்த்தினார். கங்கையின் தோழிகளால் புரக்கப்பட்ட பெருங்காட்டினூடாக யானைமந்தைகள் சென்று உருவான வழியில் அர்ஜுனன் நடந்தான். கங்கையின் பேரோசையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தான். அது அவன் அகப்பேரோசையென்றாயிற்று. சொற்கள் மறைந்து ஒற்றை மீட்டலென அவனுள் ஒலித்தது. கோடானுகோடி இலைகள் அவ்வொலியை ரீங்கரித்தன. இருண்டமலைப்பாறைகள் அவ்வொலியாக அமர்ந்திருந்தன. முகில்நுரைத்த வானம் அவ்வொலியென கவிந்திருந்தது.

ஐராவதீகத்தின் எல்லையில் ஓங்கி நின்றிருந்த பெரும்பாறை ஒன்றைக் கண்டு அர்ஜுனன் வியந்தான். மூன்று கரும்பாறைகளுக்குமேல் நூறுயானை அளவுள்ள பெரும்பாறை ஒன்று தூக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை அணுகி சுற்றிவந்தான். இயற்கையாக அந்தப்பாறை மேலேறமுடியாதென்று உணர்ந்தான். மூன்று பாறைகளும் முற்றிலும் நிகராக எடைவாங்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. மேலே அமர்ந்திருந்த பெரும்பாறையின் குவியம் அம்மூன்றுபாறைகள் நடுவே கூர்ந்திருந்தது.

மும்முறை சுற்றிவந்த அவன் அப்பாறை விலாவில் குடைவுச்சிற்பமென வரையப்பட்டிருந்த ஐந்துதலை நாகத்தைக் கண்டான். அதை நன்கு நோக்கும்பொருட்டு விலகிச்சென்று பிறிதொரு பாறைமேல் ஏறிக்கொண்டான். ஐந்துதலைநாகம் தழல்நா பறக்க விழிகூர்ந்தது. நோக்க நோக்க அதன் கல்விழிகளில் நச்சு எழக்கண்டான். உடல்நெளித்து வளைந்திறங்கி பாறையிலிருந்து இழிந்து அருகணையும் என்பதுபோல உளமயக்கு எழுந்தது.

நாகத்தின் வால் ஏழுமுறை பின்னி உருவாக்கிய மந்தணச் சொல் என்ன என்று அவன் அறிந்தான். ஐராவதீகம் உருவான பின்பு அதன் எல்லை கடந்து உள்ளே நுழைந்த முதல் மானுடன் அவன். எல்லைகளை மீறிச்செல்லும் எவரும் முன்பிருந்ததுபோல் மீள்வது இயலாது. எல்லைகள் அனைத்துமே எச்சரிக்கைகள். எச்சரிக்கைகள் அனைத்துமே அறைகூவல்கள்.

விழிகளை மூடி சித்ரரதன் அளித்த சாக்ஷுஷி மந்திரத்தை மும்முறை உரைத்து ஓங்காரத்தில் நிறுத்தியபின் அவன் விழிதிறந்தான். எதிரே ஓங்கி நின்றிருந்த தீர்க்கசிரஸை நோக்கினான். அதன் விழிகள் ஒளிகொண்டு அவனை நோக்கின. அதன் இருபக்கமும் பிறதலைகளும் தோன்றின. மும்முகப்பேருருவன் அவனை நோக்கி புன்னகைத்தான். அர்ஜுனன் இரு கைகளையும் மார்பின்மேல் கட்டியபடி அதை நோக்கி நின்றான். பின்னர் பெருமூச்சுடன் ஐராவதீகத்தின் எல்லையைக் கடந்து உள்ளே சென்றான்.

பகுதி இரண்டு : அலையுலகு - 3

ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை. எனவே கால் வழி என ஏதுமின்றி ஐந்து திசைகளையும் நிறைத்த பசுமை பெருகி விரிந்த வெளியென கிடந்தது அது. தழைந்த பெருங்கிளைகளில் ஒன்றில் இருந்து பிறிதுக்கு கால் வைத்து அர்ஜுனன் அக்காட்டுக்குள் சென்றான்.

காமம் கொண்டு கண்ணயர்ந்த பெண்ணின் தோளிலிழியும் பட்டு மேலாடை என மரங்களில் வழிந்தன மலைப்பாம்புகள். கீழே அவன் அசைவைக் கேட்டு செவி கோட்டி விழி ஒளிர உடல் சிலிர்த்தன மான்கள். உச்சி மரக்கிளையில் அமர்ந்த கருமந்தி ஒன்று அவன் வருகையை நாணொலி என கூவி அறிவித்தது. குறுங்காற்று கடந்து செல்வது போல் மந்திக்கூட்டம் கிளை வழியாக அகன்று சென்றது.

தொலைவில் எங்கோ பாறைகள் மேல் அறைந்து சிதறி அருவி ஒன்று விழும் ஓசை எழுந்தது. மேலும் மேலும் இருண்ட காடு பசுமை நீலமாகி நீலம் கருமையாகி தன்னை செறிவாக்கிக் கொண்டது. இலைநுனி மிளிர்வும் மான்கண் ஒளிர்வும் ஒன்றெனக் கலந்த இருளுக்குள் தன் உடல் எழுப்பும் ஒலியே சூழ்ந்து தொடர அர்ஜுனன் சென்றான். அவனை பறவையென எண்ணிய சிறுபுட்கள் உடன்பறந்து உவகைக்குரலெழுப்பி சிறகடித்தன.

திசைகள் மயங்கி அப்பால் விலகிச் சென்றன. வானும் மண்ணும் இல்லாமலாயின. அந்தர வெளியில் கருமுகில் குவையென அக்காடு நின்றிருப்பதாக தோன்றியது. ஆலவிழுதுகளில் பற்றி ஆடிப் பறந்து குறுமரக்கிளைகளில் அமர்ந்து வில்லென வளைந்து அம்பென்றாகி தாவி அவன் சென்றான். மறுபக்கமென ஒன்றிலாத ஆழ் உலகங்களில் ஒன்று அக்காடு என கற்பனை மயங்கியது. மரக்கிளை ஒன்றில் அமர்ந்து கனிந்த அத்திகளையும் இன்சாறு தேங்கிய மாங்கனிகளையும் பறித்து உண்டான்.

நீர் அருந்தும் எண்ணம் எழுந்தபோது அதுவரை தன்னுடன் மெல்லிய தவிப்பென உடன் வந்தது விடாயே என்றறிந்தான். கனன்ற விடாயே நீரிருக்கும் திசையை உணர்த்தியது. இருளுக்கு பழகிய விழிகள் வலப்பக்கம் காடு நீர் தேங்கிய இலை கொண்ட செடிகள் செறிந்து சற்று கீழிறங்கி செல்வதை உணர்ந்தன. கிளைவிட்டு கிளைதாவிச் சென்று சரிந்திறங்கிய நாணல் விளிம்பை அடைந்தான்.

இலைச்செறிவின் சிறுதுளைகள் வழியாக வந்த வெயில் ஆயிரம் பட்டுக்கதிர்களென மண்ணில் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. விரலோட்டி பேரியாழ் நரம்புகளென அவற்றை மீட்ட முடியுமென்று தோன்றியது. விண்ணென வளைந்த குடம் அவ்விசையை முழங்கும். மண்ணில் பசுமையென விரிந்த ஒவ்வொரு உயிர்த்துளியும் அவ்விசையை முன்னரே அறிந்திருக்கும். விண்ணவர் அறிந்த பண். உயிர்க்குலங்களை உண்ணும் உயிர்கள் மட்டும் அதை கேட்கமுடியாது.

ஒளிக்கதிர்களுக்குள் நுழைந்தான். ஒளித்தூண்களால் எழுப்பப்பட்ட மண்டபம். நூறு ஒளிவாட்கள் சுழலும் படைக்கருவி. நூறுநூறு துண்டுகளாக தன் உடல் சிதறுண்டதை கண்டான். நான்கு துண்டுகளாக கைகளை தூக்கி நோக்கினான். அவன் உடலின் நிழல்நிரைகள் எழுந்து இலைத்தழைப்புப் பசுந்திரையில் சுழன்றுவந்தன. எரிந்தும் அணைந்தும் சுடர்ந்தும் இருண்டும் கடந்து சென்றான். வெயில்வெளிக்குள் சென்றதும் எரிந்து தழலாகியது அவன் உடல். வெண்தழல்வெளியில் கரைந்தது.

பாறைகளில் அலைந்து நுரையுமிழும் அலைகளென வெண்பூக்குலைகள் சூடி காற்றில் கொந்தளித்தது நாணல்விரிவு. அதனூடே எழுந்து தெரிந்த கரும்பாறைகளில் ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்குத் தாவி கீழிறங்கிச் சென்றான். காலடிகள் கற்சிற்பத் தடங்களென பதிந்த உலர்சேற்றுப் பரப்புக்கு அப்பால் கங்கையின் நீர்ப்பெருக்கு அசைவற்றதென முதற்கணம் விழிமயக்காக தெரிந்தது. நீரலை நாவுகள் வெல்லக் கதுப்பென கிடந்த சேற்றுச் சரிவை நக்கி சுருண்டு மீண்டும் மீண்டும் நக்கி சுவையொலி எழுப்பிக் கொண்டிருந்தன.

காட்டில் கையால் எழுதப்பட்டவை என பல்லாயிரம் குளம்புச்சுவடு எழுத்துக்கள் பதிந்த சேற்று வெளி தொன்மையான கன்றுத்தோல் ஏடு போலிருந்தது. பொருக்கு வெடித்து முதலைத் தோல் பரப்பெனக் கிடந்த சேற்றை நொறுக்கும் காலடிகளுடன் கடந்தான். களிச்சேற்றுப் பரப்பு மேல் தன் வில்லை ஊன்றி வழுக்காது குனிந்து நோக்கி நடந்தான். மட்கியமரங்களுடன் கலந்து சேற்றில் கிடந்த முதலைகளில் ஒன்றின் வால் மெல்ல வளைந்தது. இரண்டு முறை காலெடுத்துவைத்துவிட்டு அது மீண்டும் காலத்தைக் கடந்து சிலையென்றாகியது.

மென்சந்தனக் குழம்பென விரல்களை அளையவைத்த நொதிப்பில் கால்களை நீட்டி நீட்டி வைத்து இறங்கினான். நீரில் இறங்கி முழங்கால் வரை நடந்தபோது அடிமணலை விரல்கள் உணர்ந்தன. அவன் காலடிமணலை மெல்ல கரைத்துச்சென்றது நீர். நின்ற இடம் குழிந்து மெல்ல இறங்கிக்கொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து வளைந்த நீர்ப்பளிங்கு மேல் அலையெழுந்து வந்த சருகு ஒன்று நாணித் தயங்கி அருகணைந்து மெல்ல தீண்டிச்சென்றது. பின்னர் சிறியமீன்கள் நகைப்பெட்டிக்குள் இருந்து இழுத்து எடுக்கப்படும் சரப்பொளி மாலை என நிரைவளைந்து வந்து அவனைச்சூழ்ந்தன. அணுகி முத்தமிட்டு முத்தமிட்டு சிமிட்டும் விழிகளென சொடுக்கி மறைந்தன.

ஒளியே புனலாயிற்றென அடிதெரியத் தெளிந்து மறுகரை கரந்து சென்றது கங்கை. விழிகூர்ந்து நோக்கியபோது பல்லாயிரம் மீன் விழிகள் அவனைச்சூழ்ந்து வியந்து நிற்பதைக் கண்டான். வில்லை தோளில் குறுக்காக மாட்டி அம்பறாத்தூணியை சரியாமல் பொருத்திவிட்டு குனிந்து இருகைகளாலும் நீரள்ளி முகம் கழுவினான். அடர்ந்த தாடியில் நீர்மணிகள் உருண்டன. கைக்குவளை நீரை மும்முறை அள்ளி குடித்துவிட்டு வாரி முதுகிலும் தோள்களிலும் தெளித்துக் கொண்டான். வெம்மை குளிர மென் சிலிர்ப்பை தன் உடலெங்கும் உணர்ந்தான். காதுகளில் அலைநெளிவு மேலிருந்து வந்த காற்று குளிரென முட்டியது.

மீன்களின் மிரண்ட விழிகளை அர்ஜுனன் சற்று கழித்துதான் அறிந்தான். இமையா விழிகளில் அசையாது துளிர்த்திருந்தது அச்சம். ஊன்றிய காலை மணலிலிருந்து விடுவித்து மெல்ல பின்னகர்ந்து அலைவளைவுக்கு அடியில் சிறகுகள் உலைய வால் விசிற நின்ற மாந்தளிர்நிற மீனை நோக்கி “என்ன?” என்றான். அவன் உள்ளத்துச் சொல்லை உணர்ந்து வாய் திறந்து முத்துக் குமிழிகள் என எழுந்த சொற்களால் “பிறிதொருவர்” என்றது. புரியாமல் மேலும் குனிந்து “என்ன?” என்று கேட்டபடி நோக்கிய அர்ஜுனன் நீல நீர்க்கீற்று ஒன்று முகில்வானில் புகை என நீருக்குள் வளைந்து தன்னை நோக்கி வருவதை கண்டான். திரும்பி அப்பகுதியில் சிற்றோடை ஏதேனும் கங்கையில் கலக்கிறதா என்று நோக்கினான். இல்லை எனக்கண்டு மீண்டும் அந்த நீர்விழுதை விழிகூர்ந்தான்.

நிறமற்ற வேர்ப்பின்னலென அது சிறு கிளைகளாகப் பிரிந்தது. பளிங்கில் விரிசலென ஒளிர்ந்தபடி அலைநெளிவில் தான் நெளிந்து அணுகி வந்தது. கனவுகண்டு கை நீட்டும் குழந்தையென அவன் காலை நோக்கி நீண்டது. அஞ்சி பின்னகரும் உயிரின் இயல்பான அசைவின்மேல் சித்தத்தை நாட்டி வைத்திருந்தமையால்தான் அவனை குடாகேசன் என்றனர். குளிர்ந்த தொடுகையென அவன் காலை தொட்டது அந்த நீர்வளையம். சுழித்துச் சுழன்றேறி அவன் முழங்கால்களை மேலும் சுற்றியது. இமையும் அசைக்காமல் இருகைகளையும் இடையில் வைத்து அதை குனிந்து நோக்கி நின்றான்.

மீன்களாக ஒவ்வொன்றாக ஓசையின்றி பின்னகர்ந்து நீரிருளுக்குள் அமிழ்ந்து மறைந்தன. நீர்ச்சுழல் பிடியானையின் துதிக்கை என அவனை அள்ளிக் கொண்டது. கால் தென்னி நிலையழிந்து அவன் நீரில் விழுந்தான். அவ்விசை அள்ளி இழுத்து நீருக்குள் கொண்டு சென்றபோது விழிகளை மூடி சாக்ஷுஷி மந்திரத்தை சொன்னான். அதன் மீட்டலுடன் விழி திறந்தபோது தன்னை உடல் சுற்றி இழுத்து உள்ளே கொண்டு செல்லும் நீர்நாகம் ஒன்றை கண்டான். அதை தன் கைகளால் இறுகப்பற்றி எதிர்விசை அளித்தபோதுதான் அதன் ஆற்றலை உணர்ந்தான்.

“யார் நீ?” என்று அவன் கேட்டான். “நான் எவரென்று அறிவாயா? உயிரை இழக்காதே!” தொலைவில் நீருக்குள் நெளிந்து சென்ற தலையை வளைத்து அவனை நோக்கி திரும்பி அணுகி வைரம் ஒளிரும் விழிகளுடன் நச்சுநீலம் பூசப்பட்ட குறுவாட்கள் என வளைந்த இரு கோரைப்பற்களைக் காட்டி வாய்திறந்து “என் பெயர் உலூபி” என்றது. “உங்களை சிறைகொண்டிருக்கிறேன் இளைய பாண்டவரே!” “எங்கு கொண்டு செல்கிறாய் என்னை?” என்றான் அர்ஜுனன். “இங்கே நீருக்கடியில் எங்கள் உலகுக்குச்செல்லும் மந்தணப் பாதை ஒன்று உள்ளது இளவரசே. சின்னாள் எங்கள் விருந்தினராகுக!” அர்ஜுனன் “இக்கணம் உன்னைக் கொன்று இப்பிடியிலிருந்து தப்ப இயலாதென்று எண்ணுகிறாயா?” என்றான். “ஆம் இயலாது” என்றாள் உலூபி. “எங்கள் நஞ்சு உங்களை மீள விடாது.” அர்ஜுனன் “அதை பார்ப்போம்” என்று சொல்லி தன் வில்லை தோளிலிருந்து எடுத்தான். அக்கணமே நாகத்தின் வால் பின்னாலிருந்து சுருண்டு எழுந்து அவன் கைகளைச்சுற்றி இறுக்கிக் கொண்டது. மறுகை அம்பை நோக்கி சென்றபோது வாலின் நுனி மேலும் நீண்டு வந்து அக்கையையும் சுற்றிக் கொண்டது.

அவன் கால்களையும் கைகளையும் இடையையும் முற்றிலுமாக சுற்றி இறுக்கி அசைவிழக்கச் செய்தது நாகம். அவன் முகத்தருகே வந்து அவன் விழிகளை இமையாது நோக்கி “அசைய வேண்டாம் இளவரசே. தங்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை” என்றாள். அர்ஜுனன் “எது வரினும் அஞ்சுவதில்லை என்ற ஆணையை என் ஆன்மாவுக்கு இளமையிலேயே அளித்துள்ளேன்” என்றான். “அஞ்சுவது உடல். அது ஆன்மாவுக்கு கட்டுப்பட்டதல்ல” என்று உலூபி நகைத்தாள்.

“நான் கடக்க விரைவது இவ்வுடலென என் கல்வியென அகத்துறையும் எண்ணங்களென எனக்கு வகுக்கப்பட்டுள்ள எல்லைகளையே” என்றான். “இப்போது மண்ணோ விண்ணோ ஆழுலகோ அல்லாத உலகொன்றை கடந்து வருக!” என்று அவள் சொன்னாள். அமிழும்தோறும் எடைமிகுந்து நீரின் அலைமடிப்புகளைக் கிழித்து சென்று கொண்டிருந்தனர். பெரும் குமிழிகளாக அவர்களின் அசைவு உருமாறி ஒளி மின்னி மேலெழுந்து சென்று கொண்டிருந்தது. தலைக்கு மேல் நீர்ப்பரப்பு பட்டுவிதானமாக மாறியது. சூரியனை மூடிய கருமுகில்பரவிய வானம். அங்கிருந்து ஊறி வந்த ஒளி நீரலைகள் மேல் பரவி நெளிநெளிந்து அவனை சூழ்ந்திருந்தது.

மூழ்கி ஒழுகிய காட்டுக்காய்கள் பொன்னுருளைகளாக சுழன்று சென்றன. சருகுகள் பொற்தகடுகளாக திரும்பி பளபளத்து மறைந்தன. பல்லாயிரம் சிறு மின்னல்களாக நெளியும் பொன்னூல்கள் அலைகளில் ஆடின. காலுக்குக் கீழே ஈயக்குழம்பென எடைகொண்டு குளிர்ந்திருந்த நீர் விசையுடன் அவர்களை இழுத்தது. நெஞ்சுக்குள் எஞ்சிய மூச்சு ஒரு நுரைக் குவையாக அதிர்ந்தது. பின்னர் அழுந்தி நீர்க்குடமாக மாறி நலுங்கியது. இறுகி இரும்புக் கோளாக மாறியது. வயிற்றை எக்கி அதை மேலெழுப்பினான். நெஞ்சை அடைத்து தசைகளை சிதைத்தபடி உருண்டு எழுந்தது. வாயை உப்பி அந்த இரும்புருளையை வெளியே உமிழ்ந்தான். வெடித்து மேலே சென்று சுழன்று பறந்து வான் நோக்கி எழுந்தது.

இறுதி மூச்சும் அகன்றபோது அதுவரை தவித்துக் கொண்டிருந்த உடல் துவண்டு முறுக்குகளை புரியவிழ்த்துக்கொண்டு எளிதாகியது. கைகால்களில் தெறித்த நரம்புகள் கட்டு தளர்ந்தன. உடையுமெனப் புடைத்த தொண்டக்குழி அமைந்தது. விழிகள் தெளிந்து சுற்றும் நிகழ்வனவற்றை நன்கு காண முடிந்தது. பல்லாயிரம் மீன் விழிகளால் சூழப்பட்டவனாக அவன் சென்று கொண்டிருந்தான். நீர்நாகத்தின் தலை முன்னால் நீந்தும் கையின் விரல்களென துழாவி அவனை இழுத்துச் செல்ல அவன் காலுக்கு அப்பால் அதன் வால்நுனி நெளிந்தது.

விரைவு கூடிவந்தபோது தலைமுடி மேலெழுந்து அலையடிக்க ஆடை அவிழ்ந்து சுருண்டு மேலே செல்ல வெற்றுடலுடன் விழத்தொடங்கினான். விழுதலின் விசையில் தலைகீழாக ஆனான். காதுகளை வருடியபடி நீர் மேலே செல்வதை உணர்ந்தான். சில கணங்களுக்குள் அலை அலையென படிந்த மென் சேற்றுப்படலத்தால் ஆன வானமொன்றை தலைக்குமேல் கண்டான். அதைநோக்கி எடை இழந்து எழுந்து கொண்டிருந்தான். அணுகுந்தோறும் நீர் தன் பளிங்குத்திரைகளை அகற்றி அவனை அள்ளி உள்ளிழுத்து மூடிக்கொண்டிருந்தது. செந்நிறவானம். அதிரும் முரசுத்தோல்.

சிறிய பூச்சிகளால் வரையப்பட்ட கோலங்கள் பரவி இருந்தது அடிச்சேற்று பரப்பு. தொய்யில் எழுதிய சந்தனமார்பு. பேற்றுவரிகள் பரவிய அடிவயிறு. உள்ளங்கை கோடுகளென மீன்கள் வரைந்திட்ட கோடுகள் தெரிந்தன. சேற்றுப்பரப்பை நீர் நாகத்தின் தலை தொட்டதும் அதிலொரு கோடு விரிசலாக மாறியது. வாயிலென மெல்லத்திறந்து அப்பால் எழுந்த பொன்னொளியை காட்டியது. நீர்நாகம் அவனை இழுத்து அவ்வாயிலுக்குள் நுழைந்தது. அவனுக்குப்பின்னால் சேற்றால் ஆன கதவு மூடிக் கொண்டது.

புன்னகை மறையும் இதழ்களென தனக்குப்பின்னால் சேற்றுப்பரப்பு மூடிக்கொண்டதை அர்ஜுனன் கண்டான். அங்கே நீர்மையென்றேயான அடர் இருள் நிறைந்திருந்தது. மேல் கீழற்ற கரியவெளியில் விழாது எழாது நின்றுகொண்டிருந்தான். “இது எங்கள் உலகம் இளைய பாண்டவரே. அதல, விதல, சுதல, ரசாதல, மகாதல, தராதல, பாதாளமென்னும் ஏழு ஆழுலகங்களுக்கும் மேலாக மண்ணுலகுக்கு அடியில் அமைந்துள்ளது இது. எங்கள் உலகுக்கு வரும் முதல் மானுடன் நீர்…” என்றாள் உலூபி.

நீர்நாகம் பட்டுச் சால்வை காற்றில் நழுவுவது போல அவன் உடலை விட்டு நீங்கியது. பாய்ந்து அதை அவன் அணைத்துப் பற்றிக் கொள்ள வாழைத்தண்டு என அவன் கைகளில் சிக்கி வழுக்கி விலகிச்சென்றது. சரிந்து கீழே விழுந்து இருளை அறைந்து மூழ்கி சென்று கொண்டிருந்தபோது தன் இடைக்குக் கீழே கால்கள் நீண்டு நீண்டு ஒரு பெருநாக வடிவத்தில் இருப்பதை அர்ஜுனன் கண்டான். சவுக்கென வாலை சொடுக்கி நீட்டி அருகே தொங்கிய பிறிதொரு நாகம் ஒன்றின் உடலைப் பற்றிச்சுருண்டு இறுக்கியபின் கைவீசி ஊசலாடி தலை வளைத்து எழுந்தான். அவன் கைகளில் எஞ்சியிருந்த ஒரே அணிகலனாகிய பாண்டவர்குலத்து முத்திரை பொறிக்கப்பட்ட கணையாழி கழன்று முடிவிலியாழத்தில் விழுந்து மறைந்தது.

சாக்ஷுஷி மந்திரத்தால் உள்ளொளி கொண்ட அவன் விழிகளில் தொலைதூரம் வரை விரிந்தது அவ்வுலகு. இருள்வானில் விண்மீன் கூட்டங்களென முன்பு தெரிந்தவை பல்லாயிரம் நாகங்களின் கண்மணிகள் என்று கண்டான். வானென விரிந்த பெரும் வலைப்பரப்பு ஒன்றில் உடல்கோத்து நெளிந்து கொண்டிருந்தன அவை. நீர்த்தாரைகளென, இருட்தழல்களென, தரைதேடும் விழுதுகளென அவை கண் தொடும் தொலைவுவரை ஆடின. அவற்றின் சீறலே அங்கே சூறாவளியென ஒலித்துக்கொண்டிருந்தது.

அவன் முன் நெளிந்து எழுந்து வந்த உலூபி “நாகருலகைக் காணும் விழிகொண்டிருக்கிறீர் இளவரசே” என்றாள். “எங்குளது இவ்விடம்? அதோ மேலே தெரியும் அந்த வான் எது?” என்று அர்ஜுனன் கேட்டான். “மேலே ஐராவதீகம் என பெயர் கொண்டு எழுந்து நின்றிருக்கும் பெருங்காட்டின் வேரடர்வுகளால் ஆனது எங்கள் நிலம். அதில் பின்னித் தொங்கிக்கொண்டிருப்பவர்கள் நாகங்கள். கால்களால் நீங்கள் மண்ணில் பற்றிக்கொண்டிருப்பதுபோல. அதோ தலைக்குக்கீழே விரிந்துள்ளது எங்கள் வானம். இங்கு இறப்பவர்கள் அங்கு விழுந்து மறைகிறார்கள். அவர்கள் சென்று மீளாத அவ்விருளுக்கு அப்பால் உள்ளன எங்கள் மூதாதையர் உலகங்கள். அங்கு வாழ்கின்றனர் எங்கள் தெய்வங்கள்.”

“இங்கு எனை ஏன் கொணர்ந்தாய்?” என்று கேட்டான் அர்ஜுனன். “ஐராவாதீகம் என்னும் இந்நாகர் உலகின் அரசர் ஐராவதி குலத்துதித்த எந்தை கௌரவ்யர். அவரது ஒரே மகள் உலூபி நான். ஒளிநீரில் நீந்தி விளையாட ஒவ்வொரு நாளும் உச்சிப்பொழுதில் கங்கையின் அடித்தட்டுக்கு செல்வது என் வழக்கம். இன்று நீராழத்தில் தொலைவில் ஐந்து மின்னும் விழிகள் கொண்ட இரு நாகங்கள் சேற்றிலாடி வருவதைக் கண்டேன். அணுகிய பின்புதான் அவை உங்கள் கால்கள் என அறிந்தேன். அவ்வழகை என்னுடையவை எனக்கொள்ள விழைந்தேன். என்னுடன் தாங்கள் இருக்க வேண்டுமென்று இங்கு கொணர்ந்தேன்.”

“நாகமங்கையே, இது மானுடர் வாழும் உலகல்ல. இங்கு நாகம் என வாழ்வது எனக்கும் ஒவ்வாததே, உணர்க!” என்றான் அர்ஜுனன். உலூபி நகைத்து “ஆம். அதை நானும் அறிவேன். அங்கு மானுடர் வாழும் உலகில் கால்களுடன் வாழ்வது எனக்கும் அரிதே. ஆனால் தனக்குரிய ஆண்மகனை தேடி அடைவது எப்பெண்ணும் விழைவதல்லவா? இன்று உங்கள் கால்களைக் கண்டதுமே அறிந்தேன், அவை என்னை ஆள்பவை” என்றாள். “நான் அஸ்தினபுரியின் இளவரசன். இந்திரப்பிரஸ்தத்தின் சக்ரவர்த்தினியின் இளைய துணைவன்” என்றான் அர்ஜுனன். “அதை அறிவேன். என் அறிவிழியால் தங்களைத் தொட்டதுமே யார் என்று உணர்ந்து கொண்டேன்” என்றாள் உலூபி.

“நான் இங்கிருக்க விழையவில்லை. மீளும் எண்ணம் கொண்ட எனக்கு நீ விரும்பத்தக்கவளும் அல்ல” என்றான் அர்ஜுனன். “இங்கு நீங்கள் விழைபவை என்ன என்று எண்ணுங்கள். அவை தேடி வரும். மண்ணுலகின் எளிய வாழ்க்கையை ஏன் நாட வேண்டும்?” என்றாள். “விழைவுகளால் இயக்கப்படும் ஆண்கள் இழிமகன்கள். கடமைகளால் ஆனவர்களையே தெய்வங்கள் விரும்புகின்றன” என்றான் அர்ஜுனன். “உங்கள் கால்களை என் விழிகள் தொட்டகணமே அறிந்தேன், நான் உங்கள் துணைவியன்றி பிறிதெவரும் அல்ல என்று. என் சொல்பெற்று நீங்கள் இங்கிருந்து திரும்பப்போவதில்லை” என்றாள் உலூபி.

“இங்குள நாகங்கள் எய்தாத எந்நிலையை என்னில் கண்டாய்? உன் மேல் காதல்கொண்டவர் இங்கே பல்லாயிரம்பேர் இருப்பார்கள். அவர்கள் என் மேல் சினம் கொள்ளலாகும்” என்றான் அர்ஜுனன். “இளைய பாண்டவரே, தவழும் நாளில் எந்தை எனக்குரைத்த கங்கையின் அவ்விளிம்பே நாகமென என் எல்லை. அதை உணர்ந்தபின் ஒவ்வொரு நாளும் அவ்வெல்லையையே சென்றடைகிறேன். அதை மீறும் கனவொன்றே என் நெஞ்சை இனிதாக்குகிறது. என்னை வெல்பவன் அவ்வெல்லைக்கு அப்பால் எழுபவன் என்றே எண்ணியிருந்தேன். அது நீங்களே” என்றாள் உலூபி. “இவ்வுலகின் சமர்களிலாடி வென்று என்னை அணைக!”

அவள் மேலேறிச்சென்ற பின்னர்தான் அர்ஜுனன் மேலே விரிந்த பரப்பை முழுதும் நோக்கினான். ஊடும்பாவுமென நாகநெளிவுகளால் ஆன கரியபெரும்பரப்பாக அது தெரிந்தது. உடல் வளைத்து மேலே நோக்கி வியந்தபோது தன் மூச்சும் நாகமென்றே ஒலிப்பதை கேட்டான். அவனருகே நான்குபக்கமிருந்தும் நாகமுகங்கள் நீண்டு வந்து சூழ்ந்துகொண்டன. “மானுடன்!” என்று ஒரு நாகம் சொன்னது. “ஏன் விழிகளை சிமிட்டிக்கொண்டிருக்கிறான்?” என்றது இளம்நாகம் ஒன்று. “அது மானுடரின் இயல்பு. அவர்கள் புடவியை முழுதும் காணும் ஆற்றலற்றவர்கள்” என்றது முதிய நாகம்.

“ஏன்?” என்று இன்னொரு இளம்நாகம் கேட்டபடி நெரித்து முன்னால் வந்தது. “இவர்கள் வாழும் மண்ணுலகம் மேலும் கீழுமுள்ள உலகங்கள் சந்தித்துக்கொள்ளும் பொதுவெளி. அங்கே விண்ணுளோரும் மண்ணகத்துளோரும் வந்து உலவுகின்றனர். இவர்கள் இமைமூடித்திறக்கும் காலத்திலேயே அவர்கள் வாழ்கிறார்கள்.” இளையநாகம் அருகே வந்து அவன் கண்களை நோக்கியது. “இவன் உடலில் இருந்து இரு நாகங்கள் எழுந்துள்ளன” என்றது. “ஆற்றல்மிக்க ஐந்து தலைகள் கொண்டவை. தலைநுனியில் கூர்விழிகள் எழுந்தவை.”

“அவை அவன் கைகள்” என்றது ஒரு முதுநாகம். “இவன் மூதாதையர் மண்ணில் மானுடரென உருவெடுப்பதற்கு முன் உளைசேற்றில் புழுக்களென நெளிந்தனர். அவர்களில் பூஜாதன் என்பவன் தன் தவத்தால் பிரஜாபதி என்றானான். மண்ணுக்கு அடியில் வாழும் மாநாகங்களை எண்ணி அவன் தவமிருந்தான். அழியாப் பெருநாகமான ஐராவதம் அவன் முன் எழுந்து எளியோனே நீ விழைவதென்ன என்று கேட்டது. இம்மண்ணில் எனக்குரிய உணவை உண்டுபண்ணும் ஆற்றலை அருள்க என்றான் பூஜாதன். அவ்வாறே ஆகுக என்றது ஐராவதம்.”

“ஐராவதத்தின் ஆணைப்படி வாமன் தட்சிணன் என்னும் இரு நாகங்கள் அவன் இருபக்கமும் தங்களை பொருத்திக்கொண்டன. அவையே கைகள் என்றாயின” என்றது முதியநாகம். “அருகே நின்றிருந்த குரங்கு எனக்கும் அருள்க பெருநாகமே என்றது. நான் கிளைவிட்டு கிளைதாவுகையில் கீழே விழாதிருக்கவேண்டும் என்று கோரியது. அவ்வாறே ஆகுக என்று அருளியது ஐராவதம். புச்சன் எனும் நாகம் அதன் நீண்ட வாலென்று ஆயிற்று. பெருமரங்களை முறித்து உன்னும் ஆற்றலை எனக்கருள்க என்றது அங்கு நின்றிருந்த யானை. நாசிகன் என்னும் பெருநாகம் அதன் துதிக்கை ஆனது. என்னைக் கடிக்கும் ஈக்களை ஓட்டவேண்டும் என்று கோரியது பசு. லூமன் என்னும் நாகம் அதன் வாலென்று ஆயிற்று.”

இளையநாகம் வந்து அர்ஜுனனின் கைகளைப் பற்றி சுற்றிக்கொண்டு மேலேறியது. “இவன் தோள்கள் நம்மைப்போலவே இறுகியிருக்கின்றன.” அவன் முகத்தருகே வந்து, “மூத்தவரே, இவன் விழிகள் ஒளிகொண்டவை” என்றது. மேலே இடியென பேரோசை எழுந்தது. பெரும்பாறை ஒன்று உருண்டு வருவதுபோல கரியநாகமொன்று சுருளவிழ்ந்து அணுகியது. பல்லாயிரம் யானைகள் சேர்ந்து பிளிறும் குரலில் “விலகுங்கள்... இவன் மானுடன். இங்கு இவன் வாழலாகாது” என்றது. “எல்லை கடந்து எங்ஙனம் இங்கு வந்தாய்?”

“நான் கொண்டுவரப்பட்டேன், உங்கள் இளவரசியால்” என்றான் அர்ஜுனன். “நீ அஞ்சியிருக்கவேண்டும். ஒருகணம் உன்னில் அச்சம் நிகழ்ந்திருந்தால் மானுட எல்லையை கடந்திருக்கமாட்டாய்” என்றது கரியபெருநாகம். “நான் அச்சத்தை உதறிவிட்டவன்” என்றான் அர்ஜுனன். “மூடா, அச்சமும் வலியுமே மானுடனுக்கு மாபெரும் காப்பென்பதை அறியாதவனா நீ?” என்று சீறியபடி பிறிதொரு பெருநாகம் அவனை அணுகியது. “வலியறியா உடல் பருப்பொருட்களில் முட்டிச்சிதையும். அச்சமறியா மானுடனை மேலுலகும் கீழுலகும் தாக்குகின்றன. ஏனென்றால் அச்சமற்றவன் தெய்வங்களுக்கு முன் ஓர் அறைகூவல்.”

அர்ஜுனன் “ஆம், நான் அறைகூவலே” என்றான். “ஆனால் நான் ஆணவத்தால் இவ்வச்சமின்மையை கொள்ளவில்லை. அறிய வேண்டுமென்னும் வேட்கையால் இதை சூடியிருக்கிறேன். மானுடம் இங்கு நிகழ்ந்தகாலம் முதல் இன்றுவரை அச்சத்தால் மூடிவைக்கப்பட்ட அனைத்து வாயில்களையும் திறந்து நோக்க விரும்புகிறேன்.” முதிய நாகம் அவனருகே வந்து கண்ணொடு கண் நட்டு “வேண்டாம்... அது மானுடருக்குரியதல்ல” என்றது. “தன் எல்லையை மீறிய விலங்கே மானுடன் என்றானது” என்றான் அர்ஜுனன்.

“நீ அறியவிழைவது எதை?” என்றது முதியநாகம். “எதை அறியாததனால் நான் மானுடன் என்று என்னை உணர்கிறேன்? நான் என்றும் எனதென்றும் வகுத்துக்கொள்கிறேன்?” என்று அர்ஜுனன் சொன்னான். “எந்நிலையில் என்னை கடந்துசெல்வேன்? ஒவ்வொன்றாய் கடந்து கடந்து நான் தேடுவது அதையே.” முதியநாகம் பெருமூச்சுடன் “அவ்வாயிலைக் கடந்தவர் மீண்டதில்லை” என்றது. “நான் மீளும் எண்ணத்துடன் எங்கும் நுழைவதில்லை” என்றான் அர்ஜுனன். “எதையும் மிச்சம் வைத்துவிட்டுச் செல்வதுமில்லை. இன்று என்னை செல்பவன் என்றே அடையாளப்படுத்துவேன். என்றோ ஒருநாள் நின்றவன் என்றாவேன்.” முதியநாகம் “ஆம், அது நிகழ்க!” என வாழ்த்தி பின்னகர்ந்தது.

பகுதி இரண்டு : அலையுலகு - 4

அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது. அங்கே மறுவிசும்பெனப் பரவிய வேறு படுகையில் உடல் சுற்றி தொங்கி நெளிந்தாடின முதல் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் பற்றி நெளிந்தன இரண்டாம் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் கவ்விச் சுற்றி மூன்றாம் உலகு நெளிந்தது. ஒன்றிலிருந்து ஒன்றென தொங்கிச்சென்ற அடுக்கில் ஏழாம் உலகத்து நாகங்கள் தொற்றியும் பற்றியும் நழுவியும் வளைந்து கவ்வியும் அடிநுனியென தவித்துக் கொண்டிருந்தன.

மேலே அமைந்த ஆறு உலகங்களின் கருணையால் அமைந்திருந்தது ஏழாம் உலகு. அங்கு அவ்வப்போது இறுதிப் பற்றும் விடுபட்டு உருகும் அரக்கின் துளியென இழுபட்டு நீண்டு பின் அறுந்து இருளாழம் நோக்கி விழுந்து மறைந்தன நாகங்கள். அவற்றின் இறுதிச்சீறல்களாலான அப்பேரிருளை நாகங்கள் அனைத்துமே அஞ்சின. தலைகீழ் கருந்தழல் விரிவென ஏழு நாக அடுக்குகளான பரப்பு நெளிந்தாடிக் கொண்டிருந்தது.

முதல் உலகிலிருந்து நழுவி அள்ளிப் பற்றி உதறப்பட்டு மீண்டும் நழுவி, மீண்டும் பற்றி ஏழாமுலகத்து எல்லைக்கு வந்த அர்ஜுனன் தன் நீண்ட அரவுடலால் மேலே தொங்கிய அரவொன்றின் இடையை வளைத்து இறுகப்பற்றிக்கொண்டு தலைகீழாக ஆடியபடி விழுந்து ஆழத்தின் தொலைவில் மறைந்த பிறிதொரு நாகத்தின் இறுதிக் கண சுருங்கலை நோக்கினான். அவன் பற்றியிருந்த நாகம் தன்னுடலை நெளித்து உருவிக் கொண்டு அவனை வீழ்த்த முயன்றது. கைகளை வீசி வளைந்தாடி எழுந்து பிறிதொரு நாகத்தையும் பற்றிக் கொண்டான். இரண்டு அரவுடல்களும் அலையிளகித் திமிறி அவனை உதற முயன்றன.

அவனருகே உடல் வளைத்து வந்த நாகம் அவன் விழிகளை நோக்கி “இங்கு நீ வாழ இயலாது மானுடனே. இங்கு உன்னை வாழவிடவும் மாட்டோம். உனக்குரியது அதலத்தின் பேரிருளே” என்றது. அர்ஜுனன் சிரித்து “கரியவனே, அங்கு மானுட உலகத்திலும் என்னிடம் இதையே சொன்னார்கள். நினைவறிந்த நாள் முதல் எனக்குரியதல்ல என்று உணரும் உலகிலேயே நான் வாழ்ந்துள்ளேன். இங்கு இருக்கும் பொருட்டல்ல, வெல்லும் பொருட்டும் கடந்து செல்லும் பொருட்டுமே ஒவ்வொரு கணமும் போர் புரிகிறேன்” என்றபடி தன் வாலை வளைத்து அவனை அறைந்தான்.

அலறியபடி தன் சுருள் பிடியிலிருந்து விலகி கீழே விழப்போன அந்நாகம் வால் சொடுக்கித் தாவி பிறிதொரு நாகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது. இரு நாகங்களும் நெளிந்து ஆடி விலகிச்சென்றன. “என் பெயர் காலகன்” என்றது துணைக்கு வந்த நாகம். “என் இளமை முதலே நான் விரும்பி வந்தவள் உலூபி. இன்று எங்கள் எல்லைக்கு அப்பால் சென்று மானுடன் ஒருவனை தன்னவன் என்று கொணர்ந்திருக்கிறாள்.” வஞ்சம் ஒளிவிட்ட அவன் கண்களை நோக்கி “அது என் பிழையல்ல” என்றான் அர்ஜுனன்.

“நோக்கு, இங்கு நெளியும் பல்லாயிரம் நாகங்களில் இளையோர் அனைவராலும் விரும்பப்படுபவள் அவள். அவளை நீ கொண்டுசெல்ல இங்கு எவரும் விழையார். உன் பாதைக்கு குறுக்காக பல்லாயிரம் நச்சுப்பற்கள் எழும் என்பதை உணர்க!” அர்ஜுனன் “காலகரே, இங்கு வருகையில் உங்கள் இளவரசியைக் கொள்ளும் எண்ணம் எனக்கிருக்கவில்லை. ஆனால் இவ்வறைகூவலுக்குப்பின் அவளை மணம் கொளாது இங்கிருந்து மீள என்னால் முடியாது” என்றான்.

சினந்து வாய் திறந்து நச்சுப்பற்களைக் காட்டி சீறிய காலகன் உடல் வளைத்து தன்னை ஓர் அம்பென ஏவி அர்ஜுனன் மேல் பாய்ந்தான். தசை மோதும் பேரோசையுடன் இரு உடல்களும் முட்டிக்கொண்டன. காலகனின் கரிய உடல் தன் உடலுடன் ஆயிரம் புரிகளாக இறுக முறுக்கிக் கொண்டதை அர்ஜுனன் உணர்ந்தான். விழித்த இமையா விழிகளுடன் சீறும் நச்சு வாயுடன் அவனைக் கவ்வ வந்தான் காலகன். இருகைகளாலும் அவன் தலையைப் பற்றி விலக்கியபடி அக்கணத்தின் முடிவின்மையின் விளிம்பில் நின்று அதிர்ந்தான்.

உடல் இறுகி ஒன்றை ஒன்று முறுக்கி அசைவின்மையின் இறுதிப்புள்ளியை அடைந்தபோது அவ்விழிகளைக் கூர்ந்து நோக்கி அங்கிருந்த விழைவைக் கண்டு அர்ஜுனன் சொன்னான். “நாமிருவரும் இணைந்து அவ்விருளை சென்றடைவோம் காலகரே, மீளமுடியாமையின் பெருவெளி. அது ஒரு பெண்ணுக்காகவா?”

அச்சொல்லில் அரைக்கணம் காலகனின் பிடி நெகிழ்ந்ததும் தன்னை உருவி மீட்டுக்கொண்டு அர்ஜுனன் அவனை அள்ளி தூக்கி வீசினான். சீறியபடி இருள் நோக்கி விழுந்த காலகனை அவனது தோழன் வீசப்பட்ட பாசச்சரடென நீண்டு சென்று சுழன்று பற்றிக் கொண்டான். தோழனின் உடலில் சுற்றிக் கொண்டு சுழன்று மேலேறி வந்த காலகன் “ஒரு கணம்” என்றான். “ஆம், ஒருகணம்! அந்த ஒரு கணத்தை தன்னுள்ளில் கொண்டவன் வெல்வதே இல்லை” என்று சொல்லி அர்ஜுனன் தனக்கு மேலிருந்த நாகத்தை நோக்கி சுழன்றேறினான்.

நீரலைகள் என கருநாக உடல்கள் அங்கே நெளிந்தன. ஒன்றுடன் ஒன்று பின்னி ஒரு பெருங்கருஞ்சுழியென அவன் தலைக்கு மேல் அவை குவிந்தன. அவற்றின் வால் நுனிகள் அவனை அறைந்து கீழே தள்ள முயன்றன. அச்சுழியின் மையத்தில் தன் தலையால் ஓங்கி முட்டினான். அத்துளைக்குள் தன்னை செலுத்திக் கொண்டபோது அது அவனை அள்ளிச் சுழற்றி மேலே உறிஞ்சிக்கொண்டது. பெருஞ்சுழலென சுற்றிக் கொண்டிருந்த நாகப்பேருடல்களுடன் முற்றிலும் தன்னை பிணைத்துக் கொண்டான்.

அவனருகே இருந்த நாகம் “என் பெயர் சந்திரகன். இத்தனை எளிதாக ஏழாம் உலகிலிருந்து ஒருவர் எங்கள் உலகுக்கு வந்ததில்லை” என்றான். அவன் உடலுடன் தன்னை பிணைத்துக் கொண்டு “நான் எப்போதும் முதல்வன்” என்றான் அர்ஜுனன். “முதல் உலகிலிருந்து உதிர்பவர்களால் ஆனது இரண்டாம் உலகு. அனைத்துலகிலிருந்தும் உதிர்ந்தவர்கள் ஏழாம் உலகை சமைக்கிறார்கள். அந்தகாரம் என்னும் அந்த உலகம் உக்ரமாலின்யம் என்றும் அழைக்கப்படுகிறது.”

“கீழிறங்குவது எளிது, மிக எளிது. மேல் வருவதற்கு பெரும் தவம் தேவை. ஏனெனில் இங்கு ஒவ்வொரு நாகமும் பிறிதொன்றை கீழே வீழ்த்தும் பொருட்டே நெளிந்து கொண்டிருக்கிறது. மேலேறி வரும் தனிநாகத்தை முந்தைய உலகின் நாகங்கள் அனைத்தும் கோட்டைச் சுவரென, ஆற்றல் மிக்க சுழியென மாறி தடுப்பது வழக்கம். இளையோனே, இங்கு ஒவ்வொரு நாகத்திற்கும் பிற அனைத்து நாகங்களும் எதிரியென ஆகும் அமைப்பே உள்ளது” என்றது பிறிதொரு நாகம். “என் பெயர் ஃபும்சலன். இங்கு நீ காணும் முடிவிலா நெளிதல்கள் அனைத்தும் இங்கிருக்கவும் மேலெழவும் பிறனை வீழ்த்தவும் உன்னும் அலைகளே.”

அவனருகே வந்த பிறிதொரு நாகம் “என் பெயர் சதயன். நீ ஆற்றல் மிக்கவன் என்றறிந்தேன். கீழே காலகனை நீ தூக்கி வீசியதை கண்டோம். ஆகவேதான் இவ்வல்லமை மிக்க பெருஞ்சுழியால் உன்னை தடுத்தோம். இதன் விளிம்பை நீ தொட்டிருந்தால் அக்கணமே தூக்கி பல்லாயிரம் யோசனை தூரத்திற்கு வீசப்பட்டிருப்பாய். ஆனால் அதன் மையப்புள்ளியை தொட்டாய். அது உன்னை உள்ளுக்கு இழுத்தது. எச்சரிக்கைகொண்டு அப்புள்ளியில் உன் வால்நுனியை வைத்து ஆழத்தை நோக்கியிருந்தால் அவ்விழு விசையில் அரைக்கப்பட்டு அணுவென்றாகி இருப்பாய். துணிந்து உன் தலையை இதனுள் நுழைத்ததனால் இவ்வுலகுக்குள் வந்து எங்களுடன் சுழல்கிறாய்” என்றது.

“என் வழி அது. எப்போதும் மையங்களையே நாடுகிறேன்” என்றான் அர்ஜுனன். அவனைச் சூழந்து பறந்து கொண்டிருந்த நாகங்களின் உடல்களின் அலை நெளிவுகள் வழியாக தன்னுடலை ஒழுகச்செய்து எழுந்து மேலே சென்றான். “இவ்வுலகம் தரளம் என அழைக்கப்படுகிறது. இங்கு நீ எதை அறிந்தாய்?” என்றது அவனைத் தொடர்ந்த நாகம். “எவ்வண்ணம் எங்களால் கடக்கமுடியாத இப்புரிப்பாதையை கடக்கிறாய்?” அர்ஜுனன் திரும்பி நோக்காமல் “பிறன் என ஏதுமற்றவனே பயணியாக முடியும்” என்றான்.

ஐந்தாம் உலகமான காளகம் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒரு மரவுரிப் பரப்பென மாறிய கருநாகங்களின் உடலால் ஆனதாக இருந்தது. அதன் இடுக்கு ஒன்றில் தன் வாலை நுழைத்து பற்றிக் கொண்டான். ஆடி வளைந்து சென்று அதை பிடிக்க முயன்றபோது அங்கிருந்த நாகங்கள் வால்சுழற்றி அவனை அறைந்து தெறிக்கச்செய்தன. பிடிவிட்டு அவன் ஆடியபோது ஏளன நகைப்புகள் மேலே ஒலித்தன.

அர்ஜுனன் ஏழுமுறை உடலை வீசி இருளில் நெளிந்தாடி வந்தான். ஒரு போதும் அவர்களை பற்ற முடியாதென்ற எண்ணம் எழுந்தபோது அவர்கள் விழிகளை ஒவ்வொன்றாக நோக்கினான். ஒரு விழியில் அவனுக்கான தனிநோக்கு ஒன்று இருந்தது. அவ்விழியை தன் விழிகளால் கூர்ந்தபடி மீண்டும் அதை நோக்கித்தாவினான். எழுந்து விசையென தன்னை ஆக்கி தாவி அதை பற்ற முயன்றான். பன்னிரண்டாவது முறை அந்த நாகம் அவனை பற்றிக் கொண்டது. அக்கணமே அதன் உடலுடன் தன் உடலைச்சுற்றி பற்றி இறுக்கிக் கொண்டான்.

அது நெளிந்து மேலேறுவதற்குள் முந்திச்சென்று இறுகிக் கொண்டான். அவனருகே பத்தி எழுந்து வந்த அந்த நாகம் “என் பெயர் ஜலஜன். இத்தனை ஆயிரம் நாகங்கள் பின்னிப் பரப்பென மாறி உன்னைத் தடுத்தபோது பற்றுவதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய், ஏன்?” என்றது. “உன் விழிகளை நோக்கினேன். என்னை அகலாது நோக்கி நிலைத்திருந்தன அவை. என்னை எதிரியென எண்ணுகிறாய். நம்மை ஒரு கணமும் மறக்காதவனே நம் எதிரி. முற்றெதிரி ஒரு போதும் நம்மை கைவிடுவதில்லை” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் அவன் தன்னை வகுத்தமைக்கவும் பொருள்கொள்ளவும் நாமின்றி இயலாது.”

தழுவுதலுக்கென்று சமைக்கப்பட்டவை அரவுடல்கள். இரண்டின்மை உடலென உணரப்படுவதை அங்குதான் அர்ஜுனன் அறிந்தான். முட்டித் தழுவி இறுக்கி மேலும் இறுக்கி மேலும் இறுக்குவதற்காக மெல்ல நெகிழ்ந்து மீண்டும் இறுகி நடந்த அப்போரின் முடிவில் தன் வால் நுனியால் ஜலஜனின் வால் நுனியை ஊசி முனையை ஊசி முனையென குத்தி நின்று அசைவிழந்தான். முற்றிலும் நிகர் நிலை கொண்டபின் இரு உள்ளங்களும் ஒன்றாயின. எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்தன. நதியொடு நதியென பொருந்தி முடிவிலா காலத்தில் அங்கிருந்தன.

இருள் வானில் பறந்து செல்லும் வௌவாலின் ஓசையென ஓர் எண்ணம் அவனுள்ளில் எழுந்து அடங்கியது. இவன் எனக்கு நிகரானவன், ஆயினும் அவள் என்னையே தேர்வு செய்தாள். அவ்வெண்ணம் அளித்த சோர்வில் ஜலஜனின் உள்ளம் அலை சுருண்டு ஒரு கணம் பின்னடைந்தது. அக்கணத்தில் ஊன்றிய வால் நுனி நழுவ உடல் வலு தளர அவன் தொய்ந்தான். மற்போரில் ஒரு கணம் என்பது ஒரு பிறப்பு, ஒரு முழு வாழ்வு. அதில் ஆயிரம் திட்டங்களுடன் விரிந்து பல்லாயிரம் கரங்களுடன் எழுந்த அர்ஜுனன் அவனை உடலால் சுழற்றி தூக்கி வீசினான். நீரில் பாறை விழும் ஓசையுடன் விழுந்த ஜலஜன் மரப்பட்டை பிளக்கும் ஒலியுடன் உரசி கீழே சரிய அவன் இரு தோழர்கள் நீண்டுசென்று பற்றிக் கொண்டனர்.

“வென்றேன்” என அர்ஜுனன் எண்ணியதை அங்கிருந்த அத்தனை நாகங்களும் கேட்டன. ஒவ்வொரு விழியாக நோக்கி “வென்றேன்! வென்றேன்! வென்றேன்!” என உரைத்தபடி விண்ணிலிருந்து இறங்கிய கரும்பனைக்கூட்டங்கள் போல் நின்ற நாகங்கள் உடலில் தொற்றி சுழன்று மேலேறினான்.

நான்காம் உலகமான தாம்ரம் குளிர்ந்திருந்தது. உடலை விரைக்கவைக்கும் அமைதி அங்கே நிலவியது. அசையா வளைவுகளென கிடந்த அரவுடல்களின்மேல் தவழ்ந்து அவன் அங்கே நுழைந்தபோது இழுபட்டு அதிர்ந்து உடற்தசைகளை அசைவிழக்கச்செய்யும் கடுங்குளிரை உணர்ந்தான். ஒவ்வொரு தசையாக எண்ணத்தால் தொட்டுத் தொட்டு உந்தி முன் செல்ல வேண்டியிருந்தது.

“இது உரகங்களின் உலகம்” என்றது அங்கே உறைந்ததெனக் கிடந்த பாம்பு. “நாங்கள் படம் எடுப்பதில்லை, நெளிவதுமில்லை. எங்களுக்குள் ஆலகாலத்தின் துளி ஒன்று உறைகிறது. அதன் தண்மையால் விரைத்து உடல் இறுகச்சுருட்டி எங்கள் உடல்களால் ஆன புதர்களுக்குள் நாங்களே ஒண்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு காலமில்லை. ஊழிகள் கணங்களென சொட்டி செல்கின்றன. இங்கு வந்தடைந்த நீ உன் மாற்றுலகங்களில் யுகயுகங்களை இழந்து கொண்டிருக்கிறாய். அங்கு நகரங்கள் நீர்க்குமிழிகள் போல் வெடித்து மறைகின்றன. பெருங்கடல்கள் நீர்ப்படலங்கள் போல் உலர்ந்து மறைகின்றன. கரைந்து மறைந்து வான்பனித்து துளித்து மீண்டும் பெருகிக் கொண்டிருக்கின்றன மாமலைகள். இங்கிருந்து நீ தப்ப முடியாது.”

ஒவ்வொரு தசையாக அசைத்து தன் உடலை நகர்த்தி உரகங்களின் உடல் சுற்றி மெல்ல வழிந்து மேலேறினான் அர்ஜுனன். “உன் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? உன் உடல் இயங்கும் வெம்மையை எங்கிருந்து பெறுகிறாய்?” என்றது அவன் மேலெழுந்த குகன் என்னும் நாகம். “உடல் குளிர்ந்து அசைவின்மைக்குச் சென்றவையென்றாலும் அனல் கொண்டவை உங்கள் கண்கள். அவற்றை அன்றி பிறிதெதையும் பார்க்காமலானேன். அக்கனலை தொட்டுத் தொட்டு என் வெம்மையை எடுத்துக் கொண்டேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “எச்சொல்லால் எங்களை கடந்துசெல்கிறாய்?” என்றான் குகன். “அசைவின்மையில் பெருகுகின்றது அகம்” என்றான் அர்ஜுனன்.

பனியலைகளின் மீதேறி மூன்றாவது அரவுலகத்தை அடைந்தான். பொன்னிற நாகங்களின் பரப்பாக இருந்தது சுவர்ணம். செம்மண் நீர்வழிந்தோடும் மழைக்காலச் சிற்றோடைகள் போல அங்கு அசைந்தன நாகங்கள். “இங்கு பொன்னுடல் கொண்டவர்களுக்கு மட்டுமே நுழைவு ஒப்புதல் உண்டு” என்று அவன் பற்றி ஏறிய பொன்னாகம் சொன்னது. “இழிவுடல் கொண்டு இங்கு வாழ்பவன் ஒளியணைந்து அழிவான்.” அந்நாக உடலைப் பற்றி உறுதியுடன் மேலேறியபடி அர்ஜுனன் சொன்னான் “நான் சென்றடையும் உலகம் இது அல்ல. நான் காண்பவை அனைத்தும் என் வழியம்பலங்கள் மட்டுமே. ஏழு விண்ணகங்களே ஆனாலும் அவை இறுதியாக நான் தங்குமிடங்களல்ல.”

புன்னகைத்து ரிஷபன் என்னும் அப்பெருநாகம் தன் உடல் வளைத்து அவனை மேலேற்றிக் கொண்டது. “நன்று சொன்னாய். இவ்வரவுவெளியை கடந்து செல். அதற்கு உன் உடலை பொன்மயமாக்கிக் கொள்.” அர்ஜுனன் “ஆம்” என்றான். “இளையோனே, உன்னை பொன்னாக்குவது எது? அதை எண்ணமென்றாக்கி உன்னில் நிறை.” .அவனருகே புன்னகையுடன் வளைந்து வந்த சுரபி என்னும் நாகம் சிரித்தபடி கேட்டது “உன் அருங்காதல்களா இளவரசே?”

அர்ஜுனன் “ஆம், அவை என்னை பொன்னாக்குகின்றன. அந்திச் செம்மையில் ஒளி கொள்ளும் மாடங்கள் போல்” என்றான். கிருதை என்னும் பிறிதொரு நாகம் அவனருகே நெளிந்து வந்து “உன் உள் கரந்த அன்னை என்னும் விழைவா?” என்றது. அர்ஜுனன் “ஆம். புலரி என என்னை பொன்னாக்குகிறது அது” என்றான். பொன் வெளிச்சம் கொண்டு அவன் துலங்கத் தொடங்கினான். அவனருகில் சூழ்ந்திருந்த நாகங்கள் அனைத்தும் ஒளி கொண்டன. “சொல், உன்னை பொன் ஆக்குவது எது? விழைந்ததெல்லாம் பெறும் உன் வெற்றியா? அவ்வெற்றியினால் உன்னுள் நிறைந்த ஆணவமா?” என்றது ஜாதன் என்னும் பொன்னிறப் பெருநாகம்.

அள்ளி அதன் கழுத்தைச் சுற்றி அதன் உடலின் ஊடாக சுழன்றேறி மேலே சென்ற அர்ஜுனன் திரும்பி “உச்சி வானில் நின்றெரியும் கதிரென என்னை பொன்னாக்குவது அதுவே” என்றான். அவனுடலைப் பற்றி சுற்றி மேலேறி அவனருகே வந்து இளைய பொன்னாகம் ஒன்று கேட்டது “பாண்டவரே சொல்லுங்கள், உங்களை அழியா பொன்னொளி கொள்ளச்செய்யும் அவ்வெண்ணம் எது?”

இரண்டாம் உலகின் எல்லையென மேலே வந்த வெண்ணிறமான அரவுடல்களின் பின்னல் நோக்கிச் சென்று அதன் உடல் வளையமொன்றில் தன் உடலை நுழைத்து சுற்றிக் கொண்டு தன்னை மேலிழுத்த அர்ஜுனன் இளையவன் கண்களை நோக்கி சொன்னான் “எனது விழைவு. அறிதல் அறிதல் என்று ஒவ்வொரு கணமும் என்னுள் இருக்கும் விடாய். இளையோனே, எங்கும் நில்லாதவன் என்பதால் ஒருபோதும் அழியா ஒளி கொண்டேன்.” பின்பு தன்னை வளைத்து மேலே சென்றான்.

சுஃப்ரம் என்றழைக்கப்பட்ட இரண்டாவது அரவுலகு வெண்முகில் வெளியென பரவிக்கிடந்தது. அங்கே பாற்கடல் அலையென நெளிந்து கொண்டிருந்தன வெண்ணிறப் பெருநாகங்கள். பொன்னுடல் கொண்டு எழுந்த அர்ஜுனன் கொண்ட ஒளி சென்ற பகுதியை சிவக்க வைக்க சினந்தவை போல நாகங்கள் அவனை நோக்கின. சீறி அருகே வந்த பெரு நாகம் ஒன்று “யார் நீ? இங்கு எவ்வண்ணம் வந்தாய்?” என்றது. “ஏழாவது அரவுலகில் இருந்து எழுந்து வந்திருக்கிறேன். என் பெயர் இளைய பாண்டவன்” என்றான் அர்ஜுனன்.

“என்னை மால்யவான் என்று அழைக்கிறார்கள்” என்றது அப்பெரு நாகம். பளிங்கு நிலப்பரப்பில் விழுந்த கொன்றைமலர்மொட்டு என தன்னை அர்ஜுனன் உணர்ந்தான். அவனைச்சுற்றி வெண்ணிய மலைமுடிகள் போல எழுந்தமைந்தன நாகங்களின் படங்கள். அலைகள் மேல் துரும்பென எழுந்து விழுந்து சென்ற அர்ஜுனன் பெருநாகத்தின் விழியருகே எழுந்து “இங்கு அனைவரும் இப்பேருடல் கொண்டிருக்கிறீர்களே, எங்ஙனம்?”என்றான்.

மால்யவான் “இளையோனே, ஏழாவது அரவுலகில் உள்ள ஒவ்வொன்றும் ஆறாவது உலகின் ஆயிரத்தில் ஒரு பங்குள்ளதே. ஆறாவது உலகில் ஐந்தாவது உலகின் ஆயிரத்தில் ஒன்று. ஏழாம் உலகிலிருந்து முந்தைய உலகங்களுக்கு இதுவரை எவரும் வந்ததில்லை. வந்தவர் உடல் சிறுத்து அணுவென ஆகி மறைவதே வழக்கம். முதல் முறையாக நீ இங்கு வந்திருக்கிறாய். இதை ஊழ் காட்டும் மாயம் என்றே கொள்கிறேன். இங்கு இச்சிறு உடலுடன் நீ வாழமுடியாது. உன் முந்தைய உலகிற்கே திரும்பு” என்றான்.

அர்ஜுனன் “இங்கு தங்க நான் விழையவில்லை. இவ்வுலகைக் கடந்து மறுபக்கம் செல்லவிருக்கிறேன்” என்றான். “உன்னைவிட பலலட்சம் மடங்கு பெரிய உடல்கள் நிறைந்த இங்கு நீ அசைவதும் உறைவதும் பறப்பதும் நிகரே. இப்பெருந்தொலைவு உன் சிற்றுடலுக்கெட்டாது” என்றது மால்யவான். “என் பெயர் பிரபாதரன்” என்று இடி முழங்க ஒலித்தபடி அவன் தலைக்கு மேல் எழுந்தது வெண்பெருநாகம் ஒன்று. அதன் சொற்களின் அதிர்வில் பறந்து சென்று மால்யவானின் வெண்பரப்பில் ஒட்டிக் கொண்டான் அர்ஜுனன். “உன் சிற்றுடல் நெளித்து எத்தனை தொலைவுதான் செல்வாய்? மூடா, விலகு” என்றான்.

“இப்பேருலகில் உங்கள் உடல் பேருருவம் கொள்வது எதனால்?” என்று அர்ஜுனன் கேட்டான். “எண்ணங்களால்” என்றான் மால்யவான். “இவ்வேழு உலகங்களும் எண்ணங்களால் ஆனவை என்றுணர்க! ஏழாம் உலகம் குரோதத்தால் ஆனது. காமத்தாலானது ஆறாம் உலகம். பேராசையால் ஆனது ஐந்தாம் உலகம். நான்காவது உலகம் தமோகுணத்தால் ஆனது. அன்பெனும் பொன்னொளி கொண்டது மூன்றாம் உலகம். ஞானம் கனிந்த எண்ணங்களால் ஆனது இவ்வுலகம்.”

“இங்கு உன்னில் மெய்யறிதல் ஒன்று எழுமென்றால் நீயும் வெண்ணிறப் பேருடல் பெறுவாய்” என்றது பிரபாதரன். “நானறிந்த மெய்மை ஒன்றை சூடுக என்னுடல். பல்லாயிரம் குறி பிழைக்காத அம்புகளால் நானறிந்த ஒன்று” என்று அர்ஜுனன் சொன்னான். தன் நெஞ்சில் கை வைத்து விழி மூடி “வெற்றி என ஒன்றில்லை எங்கும்” என்றான். விழி திறந்தபோது மால்யவான் அவனுக்கு நிகரான உடல் கொண்டு எதிரே நின்றான்.

“நீ சொன்ன சொற்களை நான் உணரவில்லை” என்றான் மால்யவான். “ஆனால் அதை உண்மை என எதிரொலிக்கின்றன இங்கு சூழ்ந்துள்ள வெண்முகில்வடிவ நாகப்பேருடல்கள். நீ அறிந்தது உனக்குத்துணையாகுக!” அவனைச்சூழ்ந்து “ஆம் அவ்வாறே ஆகுக!” என்று இடியோசை என எழுந்தது சுற்றத்தின் வாழ்த்து. திசை தொட்டு மறுதிசைவரை வளர்ந்த தன்பேருடலை அலைஅலையென நெளித்து எழுந்து அதற்கு மேலிருந்த ஒளியுலகின் முதல் நாகத்தின் வால் நுனியைப் பற்றி சுருண்டு மேலேறினான் அர்ஜுனன்.

சுதார்யம் என்றழைக்கப்பட்ட முதல் அரவுலகின் உள்ளே தான் பற்றிக் கவ்விய புருஷன் என்னும் பெருநாகத்தின் உடலில் சுற்றி மேலேறிச்சென்றான் அர்ஜுனன். ஒளிபட்ட நீரால் ஆனதென தோன்றியது அங்கிருந்த அரவுலகம். ஆடிப்பாவைகளென ஒன்றையொன்று எதிரொளித்துப் பெருகி நெளிந்து கொண்டிருந்தன அரவங்கள். ஏழுவண்ண ஒளிக்கீற்றுகளாக சிறகுகளை கொண்டிருந்த நாகங்கள் மைநாகம் மின்னும் படங்களை விரித்து அவனை திரும்பி நோக்கின. ஒளி பறக்கும் நாவுகளுடன் கூரிய பற்களைக் காட்டி அணுகின.

சிறகோசையுடன் அவனருகே வந்து நெளிந்தமைந்த ஹ்ருஸ்வன் என்னும் நாகம் “இங்கு ஒளியுடல் கொள்ளாத எவரும் அமைய முடியாது. மானுடனே திரும்பிச் செல்க! இல்லையேல் இவ்வுலகின் ஒளியால் உன் உடல் கரைந்தழியும்” என்றது. “சொல்லுங்கள் அரவங்களே, உங்களை ஒளியுடல் கொள்ளச்செய்வது எது?” என்றான் அர்ஜுனன். “ஊழ்கம்” என்றது தாம்ரை என்னும் பெரு நாகம். ஒலிவடிவெனச்சுருண்டு அவனருகே வந்தெழுந்து விழி நோக்கி புன்னகைத்து “அறிதல் கடந்த முதல் மெய்மையால் தீண்டப்பட்டவர்கள் மட்டுமே இங்குளோம். உன் மெய்மை ஒன்றால் உன்னை நிறைக்க முடிந்தால் இங்கிருப்பாய்.”

அர்ஜுனன் குனிந்து தன் காலடிக்குக் கீழே இருள்வானம் வரை நிறைந்த ஆறுலகங்களை நோக்கினான். மெய்மை ஞானம் என்றும் ஞானம் உணர்வு என்றும் உணர்வு விழைவு என்றும் விழைவு செயல் என்றும் செயல் ஆணவம் என்றும் ஆகி உதிர்ந்து கொண்டிருப்பதை கண்டான். “சொல், நீ அறிந்த மெய்மை எது?” என்றான் ஜ்வாலன் என்னும் பெருநாகம். நெஞ்சில் கை வைத்து விழி மூடி அர்ஜுனன் சொன்னான் “ஆவது என்றொன்றில்லை.”

விழிதிறந்தபோது தன் உடல் ஒளி வடிவாகி அங்கிருந்த பிற உடல்களின் ஒளி எதிரொளித்துக் கொண்டிருப்பதை கண்டான். “அரவு ஏகும் முழுமை இது மானுடனே. எய்தற்கரிய உச்சமொன்றை அடைந்தாய், இங்கிருப்பாய்” என்றது ஒளிப்பெரு நாகமான ஸ்ருதன். “கடந்து செல்வதற்கே இங்கு வந்தேன்” என்றான் அர்ஜுனன். “எங்கும் அமர்வதற்கு எனக்கு ஊழ் அமையவில்லை.”

“இங்கிருந்து செல்வதற்கு பிறிதொரு உலகம் இல்லை” என்றான் ஜாதன் என்னும் ஒளிநாகம். “இருக்கிறேன் என்னும் உணர்விருக்கும் எங்கும் இல்லையென்றாவதற்கு வாயிலிருக்கும்” என்றான் அர்ஜுனன். நெளிந்து அருகே வந்த பகன் என்னும் நாகம் “அதோ, எங்கள் ஒளியுலகின் நடுவே கரிய புள்ளி ஒன்றுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக அதை சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். ஒருவரும் அதை தொட்டதில்லை” என்றது.

“ஏன்?” என்றான் அர்ஜுனன். “அது கருமை கொண்டிருக்கிறது. முதல் உலகில் எஞ்சும் ஏழாம் உலகின் ஒரு துளி என்று அதை சொல்கின்றனர். இவ்வேழுலகங்களையும் முடிவிலா சுழலாக ஆக்குவது தலையை வந்து தொடும் நாகத்தின் வாலென இங்கிருக்கும் அதுதான்” என்றது பகன். “அதை அஞ்சியே அணுகாது சுற்றி வருகிறோம். இவ்வொளியுலகுநடுவே பிறிதொன்றிலாது நிற்கும் அதுவே வெளியேறுவதற்கான வழியாகும்.”

அர்ஜுனன் “ஆம்” என்றான். அரவுடல்களைத் தழுவி நெளிந்து அதை நோக்கி சென்றான். செல்லும் தோறும் விரிந்து பன்னிரு பேரிதழ் கொண்டு அலர்ந்து நூறிதழ் ஆயிரம் இதழ் கருந்தாமரை என விரிந்து வாயைத் திறந்து இருள் காட்டியது அச்சுருள். அதை அணுகி “இங்குளேன்” என்றான் அர்ஜுனன். உள்ளிருந்து மெல்லிய சிரிப்பொலி ஒன்று கேட்டது. காமத்தில் வென்று அல்லது கழுத்தறுத்துக் குருதியுண்டு வென்று சிரிக்கும் பெண்குரல் நகைப்பு. தன் உடலை ஒரு சிறு அம்பென ஆக்கி அவ்விருள் மையம் நோக்கி பாய்ந்தான்.

பகுதி இரண்டு : அலையுலகு - 5

அணுகும்தோறும் விரிந்து வட்டச்சுழல் பாதையில் பெருவிசையுடன் சுழற்றி தன்னை உள்ளிழுத்த அக்கரிய பெருந்துளை ஒரு வாய் என அர்ஜுனன் எண்ணினான். அங்கு சென்றவை அனைத்தும் முடிவற்ற நீள் கோடென இழுபட்டன. அதன் நடுவே இறுகிச் செறிந்து ஒளியென்றே ஆன இருட்டு முனை கொண்டிருந்தது. மாமலைகளை அணுவென ஆக்கி தன்னுள் ஆழ்த்திக் கொண்டிருந்தது. ஒரு கணமோ நூறு கோடி யுகங்களோ என மயங்கும் காலம் அங்கே புல் நுனிப் பனித்துளி போல் சொட்டி நின்றிருந்தது.

அப்பால் மீண்டும் அப்பால் என அதை நோக்கி அணுகலோ விலகலோ இன்றி நின்றிருந்த இறுதிக் கணத்தை உணர்ந்தபின் அவன் விழித்துக் கொண்டபோது ஒரு காட்டின் சேற்று மண்ணில் மல்லாந்து படுத்திருந்தான். தலைக்கு மேல் மரக்கிளைகளின் இலையடர்வினூடாக வந்த ஒளி வெள்ளிச் சரடுகளென நீண்டு இளம்பச்சை வட்டங்களென புல்லிலும் இலையிலும் விழுந்து ஊன்றி நின்றிருந்தது. ஒளிக்கு கூசிய கண்கள் நீர்வழிய, எங்கிருக்கிறோம் என தேடித் தவிக்கும் மேல் மனம் ஒன்றன் மேல் ஒன்றென அலையடித்த ஆழ்மனத்து கனவுகளின் மீது தத்தளித்து தத்தளித்து பிடியொன்றை அடைந்து இங்கே இக்கணம் என்று தன்னை உணர்ந்தது.

அருகே ஓர் இருப்பை தன் உடலால் உணர்ந்தவனாக கை நீட்டி தன் வில்லுக்காகத் துழாவி அது இல்லையென்று அறிந்த கணமே நிகழ்ந்ததனைத்தையும் உணர்ந்து புரண்டெழுந்து கால் மடித்து அமர்ந்து எதிரே முழந்தாளிட்டு அமர்ந்திருந்த பெண்ணை நோக்கினான். மான்தோல் ஆடையை உடல் சுற்றி, கழுத்தில் கல்மணி மாலையும் காதுகளில் நாகபடத் தோடும் அணிந்து சிறிய கூரிய விழிகளால் அவனை நோக்கிக் கொண்டிருந்த அவள் அவ்வசைவில் சற்றும் திடுக்கிடவில்லை. பழுத்த மாவிலையின் பொன்னிறம் கொண்ட அவள் தோள்களில் நாக படங்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. நாகச்சுருள்கள் புயங்களில் வளைந்து முழங்கையில் வால்நெளித்தன. நெற்றியில் நீள்பொட்டு என நாநீட்டி படம் விரித்த சிறு நாகம்.

“அஞ்சவேண்டியதில்லை இளவரசே” என்றாள் அவள். “யார் நீ?” என கேட்டபடி கை நீட்டி தரையில் கிடந்த சப்பையான கல்லொன்றை தொட்டான். “படைக்கலங்கள் தேவையில்லை. நான் உங்கள் எதிரி அல்ல” என்று அவள் சொன்னாள். “இக்காட்டை ஆளும் நாகர் குலத்தலைவன் கௌரவ்யரின் மகள் உலூபி நான்.” அர்ஜுனன் “நீருக்குள் வந்து என் கால் பற்றியவள் நீயா?” என்றான். “ஆம், தங்களை இங்கு கொண்டுவந்தேன்” என்றாள். அவள் விழிகளை நோக்கி “ஏன்?” என்றான். “நான் விழையும் ஆண்மகன் என உங்களை உணர்ந்தேன்” என்றாள் உலூபி.

“பெண்களால் சிறைபிடிக்கப்படுவதை நான் விரும்புவதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். அவள் புன்னகைக்க சற்றே சினம்கொண்டு “நான் யார் என்று அறிவாயா?” என்றான். அவள் “நீங்கள் இக்காட்டிற்குள் நுழையும்போதே நான் பார்த்துவிட்டேன். இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவர். எங்கள் குலப்பாடகரும் உங்கள் புகழை பாடுவதுண்டு. என் நெடுந்தவம் கனிந்தே இக்காட்டிற்குள் நீங்கள் கால் வைத்தீர்கள் என்றுணர்கிறேன்” என்றாள். அர்ஜுனன் திரும்பி அடர்காட்டை நோக்கினான். “இக்காட்டிற்குள் மானுடர் எவரும் இல்லை என்றல்லவா சொன்னார்கள்?”

அவள் “நாங்கள் மானுடரல்ல. பாரத வர்ஷம் என்று நீங்கள் சொல்லும் நிலத்தை நிறைத்துள்ள மானுடர் எவருடனும் நாங்கள் இல்லை” என்றாள். “இளையவளே, உன் விழைவை போற்றுகிறேன். ஆனால் இங்கு மணம் கொள்வதற்காக நான் வரவில்லை. என் உள்ளம் நிறைந்த பிறிதொருத்தி இருக்கிறாள்” என்றான். உலூபியின் கண்கள் சற்று மாறுபட்டன. “ஆம், அதையும் அறிவேன். ஐந்தில் ஒரு பங்கு” என்றாள். அர்ஜுனன் அக்கணம் தன்னுள் எழுந்த எரிசினம் எதற்காக என்று தானே வியந்தான். “நன்று! அரசியல் அறிந்துள்ளாய். என்றேனும் ஒரு நாள் இக்காட்டிற்குள் நாகர்கள் அரசமைப்பார்கள் என்றால் முடி சூடி அமரும் தகுதி கொண்டுள்ளாய். வாழ்க!” என்றபின் திரும்பி நடந்தான்.

அவள் அவன் பின்னால் வந்தாள். “நில்லுங்கள்! இக்காட்டிலிருந்து எனது துணையின்றி நீங்கள் மீள முடியாது. நீங்கள் வழியறியாதிருக்கவேண்டும் என்றே நீருள் வந்து கால் பற்றி இழுத்துக் கொண்டு வந்தேன்” என்றாள். அர்ஜுனன் புன்னகைத்து “எவ்விடத்திலேனும் சென்றடைய எண்ணுபவனே வழி பற்றி துயர் கொள்வான். சென்று கொண்டே இருப்பதை மட்டும் இலக்காகக் கொண்டவன் நான். என் கால்கள் செல்லுமிடமே என் வழி” என்றான். அவளை நோக்கி தலையசைத்தபின் இலைசெறிந்த கிளைகளை மெல்ல விலக்கி நடந்தான். அவனுக்குப் பின்னால் மீண்டும் வந்து இணைந்துகொண்டன அவை. அவன் காலடியோசை காட்டில் நாடித்துடிப்பு போல ஒலித்தது.

“இளைய பாண்டவரே, காதல் என்ற ஒன்றை இவ்வாழ்வில் நீங்கள் அறியவே போவதில்லையா என்ன?” என்று உலூபி கேட்டாள். எளிய காட்டுமகளின் கேள்வி அது என்று சித்தம் உணர்ந்த அக்கணமே தன் ஆழம் கோல் கொண்ட பெருமுரசென அதிர்வதை அர்ஜுனன் உணர்ந்தான். திரும்பி “என்ன சொன்னாய்?” என்றான். “இப்புவியில் அல்லது அவ்விண்ணில் பிறிதெவரையும் உங்களுக்கு நான் நிகர் வைக்கவில்லை. உடல் கொண்டு இங்கு வாழும்கணம் வரை நீரன்றி பிறிதெதுவும் என் உடல் நோக்கப்போவதில்லை. உயிர் நீத்தபின் நெருப்பு மட்டுமே அதை அறியும். உங்களுக்கு மட்டுமே என பூத்த ஓர் உள்ளத்தின் காதலை இதுவரை நீங்கள் அறிந்ததில்லை. இன்று உங்கள் முன் அது நின்றிருக்கையில் உதறி மேற்செல்ல முடியுமென்றால் அவ்வண்ணமே ஆகுக!”

கனிவும் உறுதியும் ஒருங்கே தெரிந்த அவ்விழிகளை நோக்கி சில கணங்கள் நின்றபின் ஏதோ சொல்ல வந்து அச்சொல் தன்னுள் அப்போதும் திரளாமையை உணர்ந்து தலையை அசைத்து அர்ஜுனன் திரும்பி நடந்தான். செறிந்த புதர்களை கைகளால் விலக்கி தலை தொட்ட விழுதுகளைப்பற்றி ஊசலாடி கிளைகளில் கால்களால் தொற்றி மறுபக்கம் தாவி சென்றான். பறவைகளின் ஓசையிலிருந்து பொழுதறிந்தான். ஒளி சாய்ந்த கோணத்தில் திசை தேர்ந்தான். கங்கை மேற்கே இருக்கும் என்று நிலம் சரியும் விதம் நோக்கி உய்த்தான். பொழுது இருளும்போது கங்கையின் கரைச்சதுப்பை அடைந்திருந்தான்.

கங்கை நோக்கி சென்றுகொண்டிருந்த சிற்றோடைகளின் நீர் இருண்டிருந்தது. பல்லாயிரம் தவளைக் குரல்களாக அந்தி எழுந்து வந்து சூழ்ந்தது. அவன் உடல் வெக்கை கொண்டு எரிந்தது. கழுத்திலும் விலாவிலும் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி சேற்று விளிம்பில் வந்து நின்றான். தெப்பமொன்றைக் கட்டி கங்கையில் இறங்கி கிளம்பிச் செல்வதென்று முடிவெடுத்தான். மரக்கிளைகளை வெட்டுதற்கோ கொடிகளை அறுத்து வடமாக்குவதற்கோ அவனிடம் உலோகம் ஏதும் இருக்கவில்லை என்றறிந்து நீர்க்கரையில் செயலற்று நின்றான்.

விடிந்தபின்பன்றி அங்கிருந்து செல்லமுடியாது என்று எண்ணியதுமே துரோணரின் குரல் நினைவிலெழுந்தது. ஒவ்வொருநாளும் விடியும் முதற்கணத்தில் அருகே வரும் தினி என்னும் தெய்வம் முடிவெடுக்கிறது ஒருவன் எங்கு மாலையில் உறங்கவேண்டும் என்று. நிசி என்னும் தெய்வத்திடம் அவனை கையளித்துவிட்டு மறைகிறது. தினி அறிவின் தெய்வம். நிசி உணர்வுகளுக்குரியவள். தினி வெண்மயில்மேல் ஏறியவள். நிசி கருநிறப் பருந்தில் அமர்ந்தவள். தினி மண்ணில் நடப்பவள். நிசி இருண்ட முகில்களின் மேல் ஏறி வான் முடிவின்மையை அளப்பவள்.

நீர் இருண்டபடியே வந்தது. காடு விழியில் இருந்து மறைந்து பல்லாயிரம் ஓசைகளின் பெருக்கென அவனை சூழ்ந்தது. கரையோரத்து ஆலமரமொன்றின் விழுதில் தொற்றி ஏறி கவண்கிளையொன்றில் கால் நீட்டி அமர்ந்தான். அவ்வழி நீள எதையும் உண்டிருக்கவில்லை என்று பசித்தபோதே உணர்ந்தான். கங்கையில் இறங்கி விடாய் தீர்க்கவும் மறந்திருந்தான். அருகிலேயே பலாப்பழம் பழுத்திருப்பதை நறுமணம் சொல்லியது. இறங்கிச்சென்று பசியாறவும், விடாய் தீர்க்கவும் உடல் விழைந்ததென்றாலும் உள்ளம் சலித்து விலகி நின்றது. தன் விடாயை பசியை பிறிதெவருடையதோ என நோக்கியபடி உடலருகே நின்றிருந்தான்.

எண்ணங்கள் பிசிறுகளென சுழன்று அமைந்து ஏதோ காற்றில் திகைத்து எழுந்து ஆறுதல் கொண்டு மீண்டும் அமைந்து எழுந்தன. நெடுந்தூரம் வந்துவிட்டதை உடற்களைப்பு காட்டியது. ஆனால் வந்த வழி ஒரு காட்சியெனக்கூட நினைவில் எஞ்சவில்லை என்றுணர்ந்தான். ஒரு கணத்திற்கு அப்பால் இருந்தது அவன் தொடங்கிய இடம். அங்கே அவள் நின்றிருந்தாள். ஒரு கணம். அங்கிருந்து இங்கு வரை அவனைக் கொண்டு வந்தது ஓர் எண்ணம் மட்டுமே. ஓர் எண்ணம் என்பது ஒரு கணம். என்ன எண்ணம்? விலகு விலகு என்னும் ஒற்றைச் சொல்லால் அன்றி அவ்வெண்ணத்தை மீட்க முடியவில்லை. நூறு நூறாயிரம் சொற்களில் இடைவிடாது பகலெங்கும் அலையடித்தது அவ்வொற்றைச் சொல் மட்டுமே.

உடல் சலித்து புரண்டு அமர்ந்தான். கண்களை மூடி தன் உள்ளத்தின் ஒவ்வொரு மூடிய கதவாக திறந்து நோக்கினான். எதை அஞ்சி ஓடி வந்தேன்? அஞ்சவில்லை. இங்கெனக்கு ஏதுமில்லை என்றுணர்ந்து திரும்பினேன். இல்லை, அஞ்சி ஓடினேன். புண்பட்ட விலங்கின் விரைவு கொண்டிருந்தேன். எதை அஞ்சினேன்? அஞ்சுவது நானா? அச்சமின்மை என்பதே முதல் மறை எனக்கொண்ட அஸ்தினபுரத்து பார்த்தன் நான். அஞ்சினேன் அஞ்சினேன் என்று அவனுள் பிறிதொருவன் சொல்லிக் கொண்டிருந்தான். சினந்து திரும்பி அவன் தோள்பற்றி “சொல்! எதை அஞ்சினாய்” என்றான் பிறிதொருவன். “நீ நன்கறிந்த ஒன்றையன்றி பிறிது எதை அஞ்ச முடியும்?” என்றான் பிறிதொருவன். நன்கறிந்த ஒன்றை, சொற்களில் நீ புதைத்து விட்ட ஒன்றை…

அவன் எழுந்து ஆலமரக்கிளையில் நின்றான். திமிறும் எண்ணங்களுடன் அமர்ந்திருக்கலாகாது. இக்கணம் தேவை ஒரு புரவி. மரக்கிளைகள் அறைந்து விலக, கூழாங்கற்கள் தெறித்து பின்னால் பாய, காற்று கிழிபட்டு இருபக்கமும் விலக, திசையற்ற வெளி ஒன்றை நோக்கி விரையவேண்டும். அல்லது ஒழியாத அம்பறாத்தூணியொன்று, நாணொலிக்கும் வில்லொன்று, விழிமுதல் கால்பெருவிரல் வரை உடல்விசை அனைத்தையும் ஒருங்கு குவிக்கும் இயலாஇலக்கு ஒன்று வேண்டும். எத்தனை ஆயிரம் இலக்குகளின் ஊடாக என்னை தொகுத்துக் கொண்டிருக்கிறேன்! சிதறிப்பரவும் சித்தம். வெண்பளிங்கில் விழுந்த நீர்த்துளி. குவித்து ஒன்றாக்கி மீண்டும் குவித்து துளியாக்கி அதை நோக்கி நின்றிருக்கிறேன்.

விண்மீன்களை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. கண் மூடி அமர்ந்தபோது இடைவெளியின்றி விண்மீன் செறிந்த வான் நினைவில் எழுந்தது. சில கணங்களுக்குள்ளேயே விண்மீனைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று தோன்றியது. விழுதுகளை பற்றிக்கொண்டு மரத்தின்மேல் ஏறினான். கிளைகளில் கூடணைந்த பறவைகள் கலைந்து எழுந்து இலைகளினூடாக சிறகுரச பறந்து குரலெழுப்பின. உச்சி மரக்கிளை ஒன்றை அடைந்து வானை ஏறிட்டு நோக்கினான். முற்றிலும் இருண்டிருந்தது. விழிகளை சுழற்றி இருளின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்கும் விழியோட்டினான். வெறும் இருள்.

அது வானல்ல என்று தோன்றியது. பல்லாயிரம் நாகங்கள் தலைகீழாக தொங்கும் ஒரு பெருவெளிநெளிவு இக்காடு. அவை உதிர்ந்து சென்றடையும் அடியிலா இருள் அவ்வானம். அவ்வெண்ணமே அவனை மூச்சுத்திணற வைத்தது. பிடி நழுவி கிளைகளிலிருந்து கீழே விழுந்துவிடுவோம் என்று எண்ணினான். விழுதொன்றை எடுத்து தன் உடலுடன் சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும். தொலைவில் என எழுந்து கொண்டிருந்த தவளையின் இரைச்சலை நினைவு கூர்ந்தான். வானம் முகில்மூடி இருக்கும். தவளைக் குரலை வைத்துப்பார்த்தால் பெருமழை பொழியப்போகிறது. பெருங்கடல்கள் எழுந்து வானமாகி அலையின்மையாகி அசைவின்மையாகி நின்றிருக்கின்றன.

அங்கு அமர்ந்தபடி கைகளை கட்டிக் கொண்டு மேலே நோக்கிக் கொண்டிருந்தான். எந்தையே, அங்கிருக்கிறீர்களா? நினைவறிந்த நாள் முதல் உங்களை என் தந்தை என்று எண்ணியிருக்கிறேன். உங்கள் கைவிரல் தொட்டு கண்மலர்ந்திருக்கிறேன். வெண்முகில்களிறு மேல் மின்னல் படைக்கலம் ஏந்தி செஞ்சுடர் மணிமுடி சூடி எழுகிறீர்களா? உங்கள் பெருமுரச முழக்கத்தை கேட்க விழைகிறேன். வான் கிழித்தொரு கணம் உங்கள் ஒளிர்படைக்கலம் எழக்காண வேண்டும் நான். எந்தையே எங்குளீர்?

இந்தத் தனிமையில் நான் எதை எண்ணி இங்கு காத்திருக்கிறேன்? எண்ணங்கள் ஊறி நிறைந்து உடல் எடை கொண்டது. அவ்வெடை தாளாது அமர்ந்திருந்த கிளை கூட தழைவதாக உளமயக்கெழுந்தது. நீர்வீங்கி உடையும் அணைக்கட்டை இரு கைகளாலும் உந்திப்பற்றி உடல் நெருக்கி நின்றிருக்கிறேன். ஒவ்வொரு கல்லாக பிளவுண்டு நெறிந்து இளகும் ஒலியை கேட்கிறேன். கணம் கணம் என அத்தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இப்போது நான் செய்யக்கூடுவதொன்றே. என் கையை விலக்குவது. நிகழ்க என்றொரு ஒற்றைச்சொல்லுடன் நின்றிருப்பது. என் ஆணவம் என்னை தடுக்கிறது. அல்லது அச்சமா? இரண்டுமில்லை. உருவழிந்து இல்லாமல் ஆவதை எண்ணி அடையும் பதற்றம் அது.

இப்புவியில் உள்ளவை அனைத்தும் வானை அஞ்சுகின்றன. இவ்வனைத்தையும் அள்ளிப்பற்றி விளிம்புகளை கரைத்தழித்து தன்னுள் கரந்துகொள்ள விழையும் பேராற்றலுடன் கவிந்திருக்கிறது வானம். நான் நான் நான் என்று இங்குள்ள ஒவ்வொன்றும் ஓலமிடுகின்றன, அவ்வொற்றைச் சொல்லில் அனைத்தையும் அள்ளி இழுத்துக் குவித்து தானென்றாக்கி நின்றிருக்கின்றன. அச்சொல் பல்லாயிரம் சரடுகளின் ஒரு முடிச்சு. அது அவிழும் கணம் உருவழிகிறது. வான் விளிம்பென எழுந்த மெல்லிய கோடு கலைகிறது. குடவானம் மடவானம் என்றாகிறது.

இரு கைகளாலும் கண்களை அழுத்தி குனிந்து அமர்ந்திருந்தான். சில கணங்கள் மை நிற இருளை கைகளால் அள்ளி வழித்து விலக்கியபடி எங்கோ செல்வது போல் இருந்தது. எவரோ ஒருவர் தோள்தொட்டு அழைப்பது போல. பல்லாயிரம் கைகள் அவனை அள்ளித்தூக்கிக் காற்றில் வீசிப்பிடித்தன. மானுடக் குரல்களின் பேரோசை. அலையடிக்கும் கைகளின் காடு. எழுந்தமைந்து அதன்மேல் அலைக்கழிந்தான். விழித்தபோது கீழே காட்டுக்குள் கிளைகளை உலைத்து இலையோசை எழுப்பியபடி காற்று சுழன்றடிப்பதை உணர்ந்தான்.

மீண்டும் அக்கனவை நனவில் கண்டான். மதலையென சிறுகையில் வில்லெடுத்து அடைந்த முதல் இலக்கு. புகழ் என்னும் வெண்களிறு மீது ஏறி அமர்ந்த நாள். பின்பு ஒரு போதும் அவன் இறங்கியதில்லை. அன்று அரண்மனைக்கு மீளும்போது தேரில் தனித்து அமர்ந்து தலை குனிந்து எதையோ எண்ணிக் கொண்டிருந்தான். அருகே மாலினி அமர்ந்திருந்தாள். “வென்றீர் இளவரசே! இந்நகரை. இப்பாரதப் பெருநிலத்தை” என்றாள். “இந்திரனின் மைந்தர் நீங்கள். இப்புவியில் இன்று வில்லெடுத்து உங்கள் நிகர் நிற்க எவருமில்லை.”

அவன் தலைநிமிரவில்லை. குனிந்து அவனை நோக்கி “ஏன் துயருற்றிருக்கிறீர்கள்?” என்றாள். “விலகு” என்று சொல்லி அவள் கையை எடுத்து வீசினான். “ஏன் இளவரசே?” என்றாள். “என்னைத் தொடாதே” என்றான். “ஏன்?” என்றாள். “தொடாதே” என்று கூவியபடி எழுந்தான். “சரி, தொடவில்லை” என்று சொல்லி அவள் கையை விலக்கி தேரின் மறு எல்லைக்கு நகர்ந்தாள். சினத்துடன் அவளை நோக்கியபடி தேர்த்தூணைப்பற்றியபடி நின்றான். சகடங்களின் நகர்வில் அவன் உடல் அசைந்தது. கல்லொன்றில் ஆழி ஏறி ததும்ப சற்று நிலைதடுமாறினான். “அமருங்கள் இளவரசே” என்றாள். அவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

“அமருங்கள் என் அரசே” என்றாள். மெல்ல அமர்ந்து கொண்டு தலை குனிந்தான். அவளுடைய நோக்கை தன்னுடலில் உணர்ந்தான். பின்பு “நீ வேறு எவரையாவது பெரிதென நினைப்பாயா?” என்றான். “என்ன கேட்கிறீர்கள்?” என்றாள் மாலினி. “எனக்கு நிகரென பிறிதெவரும் உண்டா உனக்கு?” என்றான். “இளவரசே, நான் உங்கள் செவிலி. உங்களை அன்றி பிறிதெவரையும் எண்ணாதிருக்க கடமைப்பட்டவள்.” அவன் தலைதூக்கி “நான் வளர்ந்தால்?” என்றான். அவ்வினாவை அவள் அதுவரை எதிர்கொண்டதில்லை. “சொல்! நான் வளர்ந்தால் நீ என்ன செய்வாய்? வேறொரு குழந்தையை வளர்ப்பாயா?”

மாலினியின் முகம் மாறியது. “இல்லை வளர்க்கமாட்டேன்” என்றாள். “வேறு எவரையாவது…” என்று சொன்னபின் அவன் சொல் சிக்கிக் கொண்டு நிறுத்தினான். “இல்லை இளவரசே” என்று சொன்னாள். இருவிழிகளும் தொட்டுக் கொண்டபோது அவன் எண்ணிய அனைத்தையும் அவள் பெற்றுக் கொண்டாள். “இளவரசே, இப்புவியில் நான் வாழும் காலம்வரை எவ்வடிவிலும் பிறிதொரு ஆண்மகன் எனக்கில்லை” என்றாள். அச்சொற்கள் மேலும் சினத்தை அவனுக்கு ஊட்டின. தலை திருப்பி பந்தங்கள் எரிந்த அஸ்தினபுரித் தெருக்களை நோக்கினான். அவள் கை நீண்டு வந்து அவன் தோளைத் தொட்டது. அப்போது அதை எதிர்க்கத் தோன்றவில்லை. மெல்ல அவனை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

நீள்தொலைவில் மெல்லிய செருமலோசை போல் இடி முழங்கியது. முகில் சரிவுகளில் உருண்டுருண்டு மேலும் நெடுந்தொலைவில் எங்கோ விழுந்து மறைந்தது. தன்னருகே இலைப்பரப்புகள் மெல்லிய ஒளி கொண்டு மறைந்ததை அர்ஜுனன் கண்டான். மான்விழிகள். மதலைஇதழ்கள். மீன்கள். குறுவாட்கள். அரவுச்சுருள்கள். மீண்டும் ஒருமுறை அவை மின்னி அணைந்தன. கன்றின் நாக்குகள். கனல்பட்ட வேல்முனைகள். திரும்பி கீழ்த்திசையை நோக்கினான். இருள்வெளி அசைவின்றி காத்திருந்தது. கணங்கள் ஒவ்வொன்றாக கடந்துசெல்ல ஒரு முகில்குவை ஒளிர சுடர் ஒன்றை எவரோ சுழற்றி அணைத்தனர். அப்பால் இடியோசை ஒன்று பிறிதொன்று என தொட்டு திசைச்சரிவில் இறங்கிச்செனறது.

‘பிறிதொன்றிலாத’ என்ற சொல்லை அவன் அடைந்தான். யார் சொன்னது? மிக அண்மையில் எவரோ அவனிடம் சொன்னார்கள். பிறிதொன்றிலாத, பிறிதொன்றிலாமை, பிறிதொன்று, பிறிது… பிறன் என்பதைப்போல் நச்சு நிறைந்த கோப்பை உண்டா என்ன? பிறிது என்னும் சொல்லைப்போல் இரக்கமற்றது எது? பிறிதொன்றிலாமை, பிறிதொன்றிலாமை. அவன் உடல் நடுங்கத்தொடங்கியது. கண்களை மூடிக் கொண்டான். இமைக்குள் செங்குருதி அனலென பற்றி ஒளிவிட்டு அணைந்தது. குருதி ஒளிரும் குளம் ஒன்றில் முழுகி எழுந்தது போல் இமைக்குள் ஒளிக் கொப்பளங்கள் மின்னிச் சுழன்று பறந்தன.

மறுகணம் அவன் தலைக்கு மேல் பேரொலியுடன் வானம் வெடித்துக் கொண்டது. ஒலியில் மரங்கள் அதிர முடியுமென்று அன்றறிந்தான். சிலிர்த்து அதிர்ந்த அவன் உடல் அடங்குவதற்குள் மொத்தக் காடும் ஒருகணம் ஓசையின்றி அவன்முன் தெரிந்தது. பின் முகிற்குவைகளனைத்தும் பெரும்பாறைகளென மாறி மண்ணுக்கு வந்து மண்ணை அறைந்து உருண்டு செல்வதைப் போல் இடியோசைகளால் அவன் சூழப்பட்டான். தன்னுணர்வு மீண்டபோது நெஞ்சில் கைவைத்து “எந்தையே!” என்று அவன் கூவினான். “எந்தையே! எந்தையே!” என்று அரற்றிக் கொண்டிருந்தான்.

அப்பால் இருளுக்குள் இலைகளின் மீது மழைத்துளிகள் அறையும் ஓசை கேட்டது. பறவைகள் உடல் இறுக்கி குஞ்சுகளை அணைத்துக் கொள்ளும் குறுகல்கள். மழை கொண்ட காடு ஓலமிட்டது. சூடுஏறும் அடுப்புக்கலத்து நீர் போல. பின்பு அம்புகளென அவனைச் சூழ்ந்து இலைகளனைத்தையும் தைத்து அதிரவைத்தபடி மழை கடந்து சென்றது. ஒரு கணத்தில் முற்றிலும் குளிர்ந்துவிட்டான். தாடியிலும் தலை முடியிலும் வழிந்த நீர் சொட்டுகளாகி பின்பு முறியாச் சரடுகளாகியது. வானம் கரிய பசுவென்று உருக்கொண்டு குனிந்து தன் கருணை நிறைந்த நாவால் நக்குவதுபோல் மழை காட்டை நீவியது. பின்பு அக்காட்டின் மேல் பற்றி ஏறி தண்தழல் விட்டு நின்றாடியது.

நீர் வடங்களாக உடலை வளைத்து ஒழுகி ஒழுகி கரைக்க முயன்றது. எண்ணங்களையும் நீர் கரைக்குமென்று அறிந்தான். இறுகிக் கொதித்துச் சிதைந்து கொப்பளித்து நின்ற அனைத்தும் அடங்கி மறைந்தன. உடல் நடுங்கத்தொடங்கியபோது அகம் விழித்துக் கிடந்தது. ஒரு சொல் மிச்சமில்லை. இப்புவியிலுள்ள அனைத்தையும் சொற்களென மாற்றி அள்ளி அங்கே நிறைக்கலாம். ஏதோ எண்ணம் எழுந்து அவன் கிளையில் எழுந்து நின்றான். பின்பு விழுதைத் தொற்றி கீழிறங்கினான். தரைக்கு வந்து இடையில் கைவைத்து நின்றான். கண்மூடி ஒரு கணம் தான் வந்த வழியை நினைவிலிருந்து மீட்க முயன்றான். ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு வேர்ப்பின்னலும் உள்ளே பதிந்திருப்பதை உணர்ந்தான்.

எங்கு செல்கிறோம்? அவள் அவனை கொண்டுசென்ற அத்திசையில் எங்கோதான் நாகர்களின் சிற்றூர் இருக்க வேண்டும். அங்கு செல்வது எளிது. அவ்விடத்தை முதலில் சென்றடைய வேண்டும். அங்கு நின்றிருக்கவேண்டும். அவளைத்தேடிச் செல்லலாகாது. அங்கு பாதையிருக்கும், அதை தொடரலாகாது. அவள் வருவதற்கான பாதை அது. இன்றிரவு தன் சிறு குடிலில் அவளும் ஒரு கணமும் துயின்றிருக்கப்போவதில்லை. அவன் விட்டுச் சென்று விடுவான் என்று அவள் எண்ணியிருக்கலாகாது. ஆம், விலகி விட்டான் என்று அவள் ஒரு கணமேனும் நம்பினாள் என்றால் அவள் அவனுக்குரியவள் அல்ல. பிறிதொன்றிலாமை என்னும் முள்முனையில் நின்றவளல்ல.

அவனை அறிந்திருந்தால் இரவு துயின்றிருக்கமாட்டாள். முதற்காலையில் மயங்கும் விழிகளும் நடுங்கும் உடலுமாக கால்பதற ஓடி அங்கு வருவாள். கண்ணீருடன் நெஞ்சில் கை சேர்த்து விம்மும் உதடுகளுடன் அவள் அங்கு வரும்போது விடியா இரவென்றே ஆகி நின்றிருக்கும் மழையில் சொட்டிச் சொட்டிக் கரைந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் மரங்களின் நடுவே அவனும் நின்றிருக்கக் காண்பாள். ஒரு சொல் தேவையிருக்காது ஓடி வந்து அவனை அள்ளி அணைத்து இறுக்கிக் கொள்ளுகையில அவளை அவன் அறிவான். பிறிதொன்றிலாமை என்ற சொல்லை இதழ்களில் வைத்த தேவியை.

மழை பிறிதொரு காடு போல் காட்டினூடாக படர்ந்து நின்றிருந்தது. தழைசெறிந்து, கிளைவிரித்து, தடிநிறுத்தி, அடிபெருத்து, வேர்பரப்பி. நூறு நூறாயிரம் முறை சென்ற வழியென அவன் கால்கள் திசை அறிந்திருந்தன. தழைக்கூரைக்கு மேல் மின்னல்கள் அதிர்ந்தபோது மழைச்சரடுகள் வழியாக அவ்வொளி இறங்கி வந்து அதிர்ந்தது. இலைப்பரப்புகளின்மேல் வழிந்த நீர் பளபளத்தது. துளிகள் மணிகளாகி மறைந்தன. இடியோசை மேல் பல்லாயிரம் பட்டுக்குவைகளை அள்ளிக்குவித்தது மழை.

அவன் மீண்டும் அவ்விடத்தை அடைந்தான். அதற்கு முன்னரே அறிந்திருந்தான் என்பதனால் மழையின் இளநீலத் திரைக்கு அப்பால் கரையும் மைத்தீற்றலென அவள் உருவம் அங்கு நின்றிருப்பதைக் கண்டபோது நெஞ்சு அதிரவில்லை. அவளல்ல அவளல்ல என்று சொல்லி அக்கணத்தின் பேருவகையை மேலும் சற்று ஒத்திப்போடவே அவன் உள்ளம் எழுந்தது. ஆனால் தொட்டுத் தொட்டு அறிமுகமான அனைத்தையும் கொண்டு அம்மைத்தீற்றலை அவளென வரைந்தெடுத்தது விழிகளில் உறைந்த சித்தம்.

நெஞ்சில் கை கோத்து நின்ற அவளுடைய தோள்களின் குறுகலை, புயங்களின் மேல் கோடுகளென பரவி இருந்த கூந்தலை, சற்றே குனிந்து நின்ற முகத்தில் இமை தழைந்திருந்த விழிகளை, ஒன்றோடொன்று ஒட்டிக் குவிந்திருந்த சிற்றுதடுகளை, கன்னப் பூமயிர்ப் பரவலை மணல்வரிகளென்றாக்கி வழிந்த நீரை, வாழைவளைவுகளிலென நீர்த்தாரைகள் வழுக்கி இறங்கிய மார்புக்குழியை அருகில் நின்றவன் போல் கண்டான்.

மிக அருகே அவன் அணைவது வரை அவள் அவனை அறியவில்லை. அவன் நின்றபிறகே உடலால் உணர்ந்து விழிதூக்கினாள். மார்பில் குவிந்த கைகள் உயிரற்றவை என இருபக்கமும் இழிந்தன. முலைகள் எழுந்தமைந்தன. உதடுகள் மெல்ல பிரிந்தன, மீண்டும் ஒட்டிக் கொண்டன. அதுவரை தனித்து பிரிந்து பறந்து தொடர்ந்து வந்தது போல் உடனிருந்த அச்சொல் சென்று கிளையமர்ந்து சிறகு கூப்பியது. பிறிதொன்றிலாமை.

பகுதி இரண்டு : அலையுலகு - 6

இளவெயில் பூத்து இலைகளிலிருந்து சொட்டத் தொடங்கிய காலை. நாணம் கொண்டதென பசுமையில் மறைந்து எழுந்து உடல் வளைத்து சென்ற சிறு காலடிப்பாதையில் இருவரும் நடந்தனர். உலூபி அவன் வலக்கையை தன் இடக்கையால் வளைத்துப் பற்றி, விரல்களைக் கோத்து தன் முலை நடுவே வைத்து அழுத்தி கூந்தல் அவன் தோள்களில் சரிய தலைசாய்த்து உடன் நடந்துவந்தாள். அவர்களின் காலடியோசையை ஒலித்தது காடு. அவர்களைக் கண்டு எழுந்த பறவைகளின் ஒலியால் உவகை காட்டியது.

அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ எந்தப் பெண்ணும் அப்படி ஆண்மகனோடு நிகரனெ நடப்பதில்லை. நாண் இல்லாது காதலை வெளிப்படுத்துவதும் இல்லை. அவளது வேட்கை அவனை நாணச்செய்தது. இருமுறை கையை விடுவித்துக் கொள்ளவும், சற்றே விலகி நடக்கவும் அவன் முயன்றான். அவ்வெண்ணம் எழுந்ததுமே அறிந்தவள் போல் அல்லது உளமறியாது உடல் மட்டுமே அறிந்தது போல அவள் மேலும் இறுக்கிக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அவன் தோள்களிலும் புயங்களிலும் தன் உருகும் உதடுகளால் முத்தமிட்டாள். மூக்கையும் வாயையும் ஆவல்கொண்ட நாய்க்குட்டியைப்போல அவன் மேல் வைத்து உரசினாள். அப்போது கொஞ்சும் பூனைபோல் மெல்ல ஒலியெழுப்பினாள்.

அவன் “இங்கு எவரேனும் பார்க்கக்கூடும்” என்றான். வியந்து புருவம் சுளித்து “பார்த்தால் என்ன?” என்றாள். “நாம் இன்னும் மணம் கொள்ளவில்லை” என்றான். உலூபி “நாகர்குல மணம் என்பது மணமக்களே முடிவெடுப்பது. அக்குலம் அதை ஏற்கிறதா இல்லையா என்பதே பின்னர் முடிவு செய்யப்படுகிறது” என்றாள். “என்வரையில் கங்கையின் அடியில் நீந்தி வந்து உங்கள் கால்களைப் பார்த்த கணம் என் மணம் முடிந்துவிட்டது. நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டபோது அது முழுமை அடைந்தது. என் தந்தை ஏற்றுக்கொள்ளும்போது நாளை பிறக்கும் என் மைந்தர்கள் அடையாளம் கொள்வார்கள், அவ்வளவே” என்றாள்.

அர்ஜுனன் திரும்பி அவளை பார்த்தான். காதல் கொண்ட முகம். இரு விளக்குகள் ஏற்றப்பட்ட பொற்தாலம். உருகி விடுகிறாற்போல் இருந்தன விழிகள். அக்கணம் ஏதோ இன்கனவு கண்டு எழுந்ததுபோல தெரிந்தாள். “என்ன?” என்று அவள் கேட்டாள். “பெண்களை கண்டிருக்கிறேன். இத்தகைய பெருங்காதல் எழுந்த முகம் இதுவரை கண்டதில்லை” என்றான். நாணிச்சிரித்து அவன் தோள்களில் முகம் அழுத்தினாள். கழுத்துகளும் நாணிச்சிவக்குமோ? தோள்கள் புன்னகைக்குமோ? அவளுடைய பறந்தலைந்த குழலை கையால் நீவி, மயிர்ப் பிசிறுகளை பின்னலில் சேர்த்தான். பின்பு அப்பின்னலை ஒரு கையால்பற்றி இழுத்து அவள் முகத்தைத் தூக்கி “உன் கண்களைப் பார்க்கப் பார்க்க தீரவில்லை” என்றான்.

“என்ன?” என்று அவள் தாழ்ந்த குரலில் கேட்டாள். “தெரியவில்லை. கள்ளையும் வேள்வியமுதான சோமத்தையும் வெறும் நீர் என மாற்றும் களிமயக்கு கொண்டவை இக்கண்கள். இதை அடைந்தபின் இவ்வுலகில் இனி அடைவதற்கேதுமில்லை.” அவள் “ம்?” என்றாள். அவன் சொற்கள் அவளுக்குப்புரியவில்லை என்று தோன்றியது. அவளை நெருங்கி “இத்தகைய பெரும் காதலை எழுப்பும் எது என்னிடம் உள்ளது என்று வியக்கிறேன்” என்றான். “நான் என்றும் இதே காதலுடன்தான் இருக்கிறேன். காதலுக்குரியவனை அறியாதிருந்தேன். மண்ணில் அவன் பெயர் என்ன, தோற்றமென்ன என்பது மட்டுமே எஞ்சியிருந்தது” என்றாள். “ஆம். இது உன்னுடனேயே பிறந்த காதலாகவே இருக்கவேண்டும். விதையில் உறைகின்றன மலரும் கனியும் என்று ஒரு சூதர் வாக்கு உண்டு” என்றான் அர்ஜுனன்.

அவள் விழிகள் சுருங்க தலைசரித்து “என் மேல் காதல் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அர்ஜுனன் அந்த நேரடி வினாவுக்குமுன் சொல்லிழந்தான். மூடிய அறைக்குள் சிட்டுக்குருவி போல அவன் சித்தம் பதறி சுற்றி வந்தது. பின்பு தடுத்த சுவர்ப்பரப்பு ஒளித்திரையென மாற பீறிட்டு வானிலெழுந்தது புள். அக எழுச்சியுடன் அவள் இடையை வளைத்து அணைத்து “நேற்றிரவு இறந்து மீண்டும் பிறப்பதுபோல் ஒன்றை உணர்ந்தேன்” என்றான். “என்ன?” என்று அவள் மேலும் கேட்டாள்.

பிறிதெவர் குரலோ என தானே செவிகொண்டபடி “உன்னைக் கடந்து நான் செல்லமுடியாது. இன்று வரை பகிரப்படாத எதையும் நான் பெற்றதில்லை. ஐவரில் ஒருவன் என் அன்னைக்கு. அவ்வண்ணமே என் துணைவிக்கும். பிறிதொன்றில்லாத முழுமை ஒன்றுக்காக என் அகம் தேடிக்கொண்டிருந்தது. நிகர்வைக்கப்படாத ஓரிடம். நான் மட்டுமே அமரும் ஒரு பீடம்” என்றான் அர்ஜுனன்.

என்ன சொல்கிறோம் என்று சொன்னபின்னரே தெளிவடைந்தான். அவள் விழிகளை நோக்கி “ஆண்மகன் குடியின் செல்வத்தின் முடியின் புகழின் ஆணவத்திலிருந்து விடுபடமுடியும். மெய்ஞானத்தின் ஆணவமேகூட அவனை விட்டு நீங்கமுடியும். ஒரு பெண் நெஞ்சில் பிறிதொன்றில்லாது அமரவேண்டும் என்ற விழைவை, அதை எய்தியதன் ஆணவத்தை அவனால் துறக்க இயலாது” என்றான்.

அவன் சொற்களை புரிந்துகொள்ளாததுபோல் அவள் ஏறிட்டு நோக்கினாள். “திரௌபதியிடம் நான் இருக்கையில் அவளை அடைந்த பிற நால்வரையன்றி எதையும் என் நெஞ்சு எண்ணுவதில்லை. அவ்வெண்ணங்களை அள்ளி தவிர்க்கும் முயற்சியில் என்னுள்ளம் அலைபோல் கொந்தளித்துக்கொண்டிருக்கும். அவளுடன் கொள்ளும் காமம்கூட அக்கொந்தளிப்பின் சுவைதான்” என்றான். வியத்தகுமுறையில் அவள் அதைப்புரிந்துகொண்டு விழிமாற்றம் கொண்டாள்.

“இன்று உணர்கிறேன், துன்பத்தை இன்பமெனக்கொள்ளும் கணங்கள் அவை. தன்குருதி நாவில் அளிக்கும் சுவையை அறிந்தவன் அதிலிருந்து மீள்வதில்லை” என்றான் அர்ஜுனன். “என் உள்ளம் அறிந்து விதுரர் என்னிடம் சொன்னார், படித்துறைகள் தோறும் தழுவி வரும் கங்கை ஒவ்வொரு படித்துறைக்கும் புதியதே என்று. அச்சொற்களின் பொருள் முழுமையை என் சித்தம் உணர்ந்தது. சித்தத்தில் பற்றி எரியும் ஆணவம் அதை ஏற்க மறுத்தது.”

“அவள் உடலை பிறர் தொட்டதனாலா?” என்றாள். அவள் கண்களில் வந்துசென்ற மெல்லிய ஒளி மாறுபாட்டைக் கண்டு எத்தனை கூர்மையாக தன்னை பின் தொடருகிறாள் என்று எண்ணி வியந்தான். “இல்லை, உடலல்ல” என்று தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். “பின்பு?” என்றாள். அப்போது அவள் காட்டுமகளாக தெரியவில்லை.

“அவள் உள்ளத்தில்” என்று சொன்னபின் “அங்கு ஐவருக்கும் இடமுள்ளது” என்றான். நோக்கு விலக்கி “அதிலென்ன, தாங்கள் அறிந்தேதானே?” என்று அவள் கூறினாள். “ஆம், அறிந்ததுதான்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆயினும் நான் ஐந்தில் ஒன்று என்ற எண்ணத்தில் இருந்து என்னால் ஒரு கணமும் மீள முடிந்ததில்லை.”

திரும்பி அவள் விழிகளை நோக்கி “அதை நீ அறிவாய். உன் காதலை என்னிடம் சொன்னபோது நேராக அந்த நுண்ணிய நரம்பு முடிச்சில்தான் உன் விரலை வைத்தாய்” என்றான். “இல்லை” என்றாள் அவள். “பெண்களின் உள்ளத்தை நான் சற்று அறிவேன். இதுநாள்வரை அவர்களை வேட்கைகொண்ட நிழலாக தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். சொல், நீ அறியாததா?” என்று அர்ஜுனன் கேட்டான். அவள் தலை குனிந்தாள். “என்னிடம் சொல். நீ அறிந்தே உரைத்ததுதானே. பிறிதொன்றில்லாமை எனும் சொல்? அது சினம்கொண்ட குளவி என என்னைத் தொடரும் என்று நீ அறிந்திருந்தாய்” என்றான்.

அவள் கழுத்தில் ஒரு நரம்பு அசைந்தது. நாவு நீண்டு வந்து கீழுதட்டை நீவி மறைந்தது. வாய்நீர் இறங்குவதை தொண்டை அசைவு காட்டியது. குனிந்து மேலும் ஆழ்ந்த குரலில் “அறிந்துதானே சொன்னாய்” என்றான். “ஆம்” என்று அவள் மூச்சின் ஒலியில் சொன்னாள். “ஆனால் அத்திட்டம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. ஏழுலுகங்களுக்கும் செல்லும் திறன் படைத்திருப்பவர் நீங்கள். பாரதவர்ஷத்தின் மாவீரர். உங்களுக்கு இச்சிறிய நாகர்குலத்தில் பிறந்த நான் அளிக்கக்கூடிய அரும்பொருள் எதுவுமில்லை.”

அவள் இளமுலைகள் எழுந்தமைந்தன. “இப்பிறவியில் உள்ளும் புறமும் பிறிதொன்றிலாத காதல். அதுவே என் படையல்.” அர்ஜுனன் மேல்மூச்செறிந்தான். “ஆம்” என்றபின் மேலும் ஏதோ சொல்ல வந்து அச்சொற்களை தானே உணர்ந்து கைவிட்டான். அக்கணம் அங்கிருந்து விலகியோட ஏன் தோன்றுகிறது என்று வியந்தான்.

குறைநீர் கலம் என உள்ளம் அலைந்து நடையை உலைத்தது. “உன் இல்லம் இன்னும் எத்தனை தொலைவில் உள்ளது” என்றான். “ஐந்நூறு இல்லங்களாலானது எங்கள் ஊர். அதன் பெயர்தான் ஐராவதீகம்” என்று என்று உலூபி சொன்னாள். அத்தருணத்தின் முள்காட்டிலிருந்து உடல் விலக்கி அவளும் விலகுவது போல் தோன்றியது. “உன் குலத்தில் பெண் கொள்வதற்கு முறைமைகள் ஏதும் உள்ளதா?” என்றான் அர்ஜுனன் “முன்பு எவரும் பெண் கொண்டதில்லை. எனவே முறைமை என ஏதும் உருவாகவுமில்லை. என்ன நிகழும் என்று என்னால் உய்த்தறியக் கூடவில்லை. ஆனால் இறுதியில் நீங்கள் வென்றெழுவீர்கள் என்று நன்கறிகிறேன்” என்று உலூபி சொன்னாள்.

பின்பு நெடுநேரம் இருவரும் உரையாடவேயில்லை. உலூபி தனக்குள் மெல்ல பேசியபடியும் முனகலாக பாடியபடியும் நடந்துவந்தாள். அவன் உடலுடன் ஒட்டிக்கொள்ள விழைபவள் போல சாய்ந்தும், கை தழுவியும் நடந்தாள். காற்றில் எழுந்த அவள் குழல் அவன் தோளை வருடி பறந்தது.

இலைத் தழைப்பின் இடைவெளி வழியாக வானம் தெரிந்தபோது அவன் நின்று அண்ணாந்து நோக்கினான். முந்தைய இரவின் அடரிருளை, அதைக்கிழித்தெழுந்த ஒளிப்பெருக்கை, முகில் அதிர்ந்த பேரோசையை நினைவு கூர்ந்தான். அவை அங்கு நிகழ்ந்தனவா என்றே ஐயம் எழுந்தது. பிறிதொரு வானில் அது நிகழ்ந்ததுபோல.

தலைகுனிந்து பாதையை நோக்கினான். அவன் நின்றதைக் கண்டு அவள் “என்ன?” என்றாள். “இப்பாதையில் கன்றுகள் ஏதும் நடப்பதில்லையா?” என்று கேட்டான். எண்ணியது பிறிதொன்று என்று அவ்வினாவிலேயே உணர்ந்துகொண்டு, “இல்லை. நாங்கள் விலங்குகள் எவற்றையும் வளர்ப்பதில்லை” என்றாள். “நீங்கள் பால் அருந்துவதில்லையா” என்றாள். “இல்லை, நாங்கள் வேளாண்மை செய்வதும் இல்லை. இக்காடு எங்களுக்கான உணவால் நிறைந்துள்ளது.” “எப்படி என் மொழி அறிந்தாய்? பாரதவர்ஷத்தின் அரசியலைக்கூட அறிந்திருக்கிறாய்” என்றான்.

“எங்கள் பாடகர்கள் பாம்பாட்டிகளாக நகர்களுக்குச் செல்வதுண்டு. மழைக்காலம் தொடங்குகையில் அவர்கள் திரும்பி வரும்போது கதைகளால் நிறைந்திருப்பார்கள். இங்கு மழை நின்று பெய்யும். மழைக்காலம் முழுவதும் எங்கள் இல்லங்களுக்குள் அமர்ந்து நெருப்பிட்டு குளிர்காய்ந்தபடியே கதைகளை சொல்லிக்கொண்டிருப்போம். அஸ்தினபுரி, இந்திரப்பிரஸ்தம், ராஜகிரகம், தாம்ரலிப்தி, விஜயபுரி, காஞ்சி, மதுரை என்று நாங்கள் அறியாத ஊர்களே இல்லை.” அர்ஜுனன் “கதைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது பாரத வர்ஷம்” என்றான்.

அவ்வெளிய உரையாடல் அதுவரை பேசிய எடையேறிய சொற்களை பின்னுக்குத்தள்ளியது. விழிகளை இயல்பாக்கி சூழ்ந்திருந்த காட்சிகளை துலக்கியது. அவன் திரும்பி அவள் முகத்தை நோக்கினான். பக்கவாட்டுப்பார்வையில் அவள் கன்னங்களின் வளைவில் விழுந்த ஒளி மென்மயிர்களை பொன்னாக்கியிருக்கக் கண்டான். கழுத்துக்கோடுகளில் வியர்வை பட்டுநூலென தெரிந்தது. எதையோ தன்னுள் பாடிக்கொள்பவள் போல அவள் விழிகளும் இதழ்களும் அசைந்தன.

பாதை வளைந்தபோது தொலைவில் மலைச்சிகரம் எழுந்து தெரிந்தது. அதன் மறுபக்கத்தைப் பார்த்த நினைவை அர்ஜுனன் அடைந்தான். “உங்கள் மொழியில் இதன் பெயர் என்ன?” என்று கேட்டான். “மூன்று தலையுள்ள பேருருவன்” என்று உலூபி சொன்னாள். அர்ஜுனன் வியப்புடன் “மூன்று தலையா?” என்றான். “ஆம், ஊழ்கத்தில் அமர்ந்து எங்கள் மூதாதையில் ஒருவர் இம்மலைக்கு அருகில் கண்ணுக்குத் தெரியாத இன்னும் இரு மலைகள் இருப்பதைக் கண்டார். அதனால் இதற்கு திரிசிரஸ் என்று பெயரிட்டார். பிற இரு தலைகளும் விண்ணுலகங்களில் எங்கோ விழுந்துள்ளன என்பது எங்கள் கதை” என்றாள்.

அர்ஜுனன் “இக்காட்டின் எல்லையில் நுழையும்போதே அதை நான் கண்டேன். அங்கிருந்து நோக்குகையில் இரு குகைகள் விழிகளாக மாறி என்னை நோக்கின” என்றான். “ஆம், அந்நோக்கு எங்கள் எல்லையைக் கடக்கலாகாது என்ற எச்சரிக்கை” என்றாள் உலூபி. “கடந்தவர்கள் திரும்பமுடியாதென்பது எவரும் அறிந்ததே. திரிசிரஸை வெல்ல மானுடரின் தெய்வங்களால் இயலாது.” நகைத்து “அதை அறைகூவல் என நான் எடுத்துக்கொள்வேன்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அறைகூவலை நீங்கள் அங்கே எங்களூரில் சந்திப்பீர்கள்” என்றாள் உலூபி. “எங்கள் கதைகளில் திரிசிரஸ் என்னும் பேருருவனைப் பற்றிய சித்திரம் ஒன்று உள்ளது. ஒரு முகத்தால் கள்ளுண்டு களித்திருப்பான். பிறிதொரு முகத்தால் உலகறிந்து இயற்றுவான். மூன்றாம் முகத்தால் தன்னுள் மூழ்கி வேதம் அறிவான். ஒன்றையொன்று நோக்கும் திறன் கொண்ட மூவரில் எவரையும் தெய்வங்களும் வெல்ல முடியாது என்கின்றது தச பிராமணம் என்னும் தொன்மையான நூல்.”

“அதே கதை இங்குள்ளது” என்று உலூபி வியப்புடன் சொல்லி அவன் கையை அள்ளிச் சேர்த்தாள். “நேற்று உங்களைப் பார்த்ததுமே நான் எண்ணியதும் அதைத்தான். மூன்று முகம் கொண்டவர் நீங்கள். கள்ளுண்டு வில்லாண்டு மெய்தேர்ந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள்.”

அர்ஜுனன் அவளை நோக்கி புன்னகைத்து, “ஆம், அன்று அப்பெருமுகத்தை நோக்கியபோது என்னிடம் அது ‘நான் நீ’ என்று சொல்வதுபோல் உணர்ந்தேன்” என்றான். உலூபி “அதிலென்ன ஐயம்? நான் இதோ நான் சொல்கிறேன். அவர் நீங்களே” என்றாள். அர்ஜுனன் “மூன்று முகம்... நன்றாகத்தான் உள்ளது” என்றபின் “என் தோழன் ஒருவன் உள்ளான். யாதவன்” என்றான். “ஆம், அறிவேன்” என்றாள் உலூபி. “அவனுக்கு மூவாயிரம் முகம் என்று சொல்வேன்” என்றான் அர்ஜுனன்.

தொலைவிலேயே மானுடக் குரல்களை அர்ஜுனன் கேட்கத் தொடங்கினான். முதலில் கேட்டவை கைக்குழந்தைகளின் கூரிய அழுகுரல். பின்பு சிறுவர்கள் கூவி ஆர்த்து விளையாடும் ஓசை. உடன்கலந்த பெண்களின் ஓசை. படைக்கலன்கள் இல்லாமல் செல்கிறோம் என்ற எண்ணம் அவனில் எழுந்ததுமே உலூபி “படைக்கலன்கள் இல்லாமல் எங்கள் நகர் நுழைவதே உகந்தது. இதை அறியாது எல்லை கடந்து உயிர் துறந்தோர் பலர்” என்றாள். “அறியாத இடத்திற்கு படைக்கலன்களுடன் நுழைவது அல்லவா நல்லது?” என்று அவன் கேட்டான்.

“நாங்கள் கொண்டிருக்கும் படைக்கலன்கள் என்ன என்று அறியாதபோது உங்களிடம் இருக்கும் படைக்கலன்களால் என்ன பயன்?” என்று அவள் கேட்டாள். அர்ஜுனன் திரும்பி அவளை நோக்கி “உங்கள் படைக்கலன்கள் என்ன?” என்றான். “நஞ்சு” என்று அவள் சொன்னாள். “இப்பகுதிக் காடுகள் பாம்புகளால் நிறைந்தவை. நாக நஞ்செடுப்போம். அதை பிசினாக ஆக்கி பாதுகாக்கும் கலையை பல தலைமுறைகளாகவே நாங்கள் கற்றிருக்கிறோம்.”

“அம்புகளில் தீற்றிக் கொள்வீர்களா?” என்றான். “இல்லை. அம்புக்கலை எங்களிடம் இல்லை” என்றாள். “சிறிய முட்களை நாக நஞ்சில் ஊறவைத்து சேர்த்து வைத்திருப்போம். சிறிய மூங்கில் குழாய்க்குள் அவற்றை இட்டு வாயால் ஊதி பறக்கடிப்போம். கொசு ஒன்றின் கடி அளவுக்கே அந்த முட்கள் தீண்டும். ஒரு யானையை சரிக்கும் ஆற்றல் கொண்ட முட்களும் உண்டு. விழிகளால் அவை வருவதை பார்க்க முடியாது. அம்புகளால் தடுக்கவும் இயலாது” என்றாள் உலூபி.

அவர்கள் அணுகுவதை உயர்ந்த மரத்தின் மேலிருந்து நோக்கிய காவலன் ஒருவன் எழுப்பிய குறுமுழவோசையில் நாகர் குடி அமைதியாகி சிறுத்தை என பின்வாங்கி புதர்களுக்குள் முற்றிலும் பதுங்கிக்கொண்டது. எல்லையைக் கடந்து உலூபி தன் வாயில் கைவைத்து பறவை ஒலி ஒன்றை எழுப்பினாள். மரத்தின் மீதிருந்த கூகை குழறும் ஒலியில் அதற்கு மறுமொழி எழுந்தது. அவள் திரும்பி அர்ஜுனனை நோக்கி “நீங்கள் அஞ்ச மாட்டீர்கள் என்று அறிவேன். ஆனால் உடலிலும் விழியிலும் அனிச்சையாகக்கூட அச்சம் தெரியாது என்பதை இப்போதே காண்கிறேன்” என்றாள். “இதுவரையிலான வாழ்நாளில் கடந்தது அச்சத்தை மட்டுமே” என்றான் அர்ஜுனன்.

மூன்று நாகர்கள் அவர்களை நோக்கி எதிரே வந்தனர். புலித்தோல் ஆடை அணிந்து, உடலெங்கும் சாம்பல் பூசி, கழுத்தில் கமுகுப்பாளையாலான நாகபட ஆரம் அணிந்து, நெற்றியில் இறங்கிய நாகபடம் பொறித்த கொந்தை சூடியிருந்தனர். முதலில் வந்த முதியவரை நோக்கிய உலூபி நாகமொழியில் பேசினாள். குரலதிர்வுகளுக்கு மாறாக மூச்சுச் சீறல்களாலான மொழி அது என்று கண்டான். பாம்புகள் பேசுமென்றால் அது அம்மொழியாகவே இருக்கும். அவர்கள் நாகங்களுடன் உரையாடுவார்கள் போலும்.

மூவரும் அவனை நோக்கி தலை தாழ்த்தினர். முதியவர் சற்றுக் குழறலான மொழியில் “ஐராவதீத்திற்கு நல்வரவு இளைய பாண்டவரே” என்றார். அர்ஜுனன் “நானும் என் மூதாதையரும் வாழ்த்தப்பட்டோம். இந்திரப்பிரஸ்தம் ஆளும் மன்னர் யுதிஷ்டிரரின் தூதனாக உங்கள் ஊருக்குள் நுழைகிறேன். உங்கள் ஊர் நெறிகளுக்கும் குலமுறைகளுக்கும் முற்றிலும் கட்டுப்படுகிறேன். உங்கள் நகரில் இருக்கும்வரை நாகர் குலத்து அரசனின் ஆணைகள் என்னை கட்டுப்படுத்தும்” என்றான்.

“ஆம், அதுவே முறை” என்று சொன்னார் முதியவர். “என் பெயர் கர்க்கன். உங்களை ஐராவதீகத்திற்குள் இட்டுச்செல்ல இளவரசியால் ஆணையிடப்பட்டுள்ளேன்” என்றார். அர்ஜுனன் அவருக்கு தலைவணங்கினான். “எங்கள் அரசர் குடிமூத்தவர் மட்டுமே. அன்னையர் அவையே இறுதிமுடிவெடுக்கிறது” என்றார் கர்க்கர். “வருக!” அவரது முகத்தில் அவன் அறியாத ஒன்றிருந்தது. அவரை அது மானுடரல்ல என்று காட்டியது.

புதர் வகுந்து வளைந்து சென்ற பாதை வேர்ப்பின்னல்களுக்குள் நுழைந்தது. உருளைப் பாறைகளை கவ்விப் பிடித்திருந்த வேர்களின் ஊடாக நோக்கி விழிகூர்ந்து காலெடுத்து வைத்து இறங்கிச் சென்றனர். மரங்கள் செறிந்து மேலும் மேலும் அவ்வழி இருட்டி வந்தது. இருள் அடர்ந்தபோது விழி மேலும் கூர்மைகொள்ள அவ்வேர்களுக்குள் உயிருள்ள வேர்கள் என பல்லாயிரம் பாம்புகளை அர்ஜுனன் கண்டான். துயிலில் என அவை ஒன்றுடன் ஒன்று பின்னி வழுக்கி உருவி தலைதூக்கி வால் நெளித்து அசைந்துகொண்டிருந்தன. பல்லாயிரம் கரிய சிற்றோடைகளென பாறைகளை வளைத்து சரிவிறங்கின.

பாறையொன்றின் மேல் நுனிக்கால் ஊன்றி நின்று அவன் சுற்றிலும் பார்த்தான். “உரகங்கள்” என்றார் கர்க்கர். “ஆனால் அவை எங்களை தீண்டுவதில்லை. எங்களுடன் வந்திருப்பதனால் தாங்களும் பாதுகாக்கப்பட்டவரே.” பாறையில் இருந்து பிறிதொரு பாறைக்குத் தாவி சமன்பெற்றுநின்ற அர்ஜுனன் “இவை உண்ணுவது எதை?” என்றான்.

“இந்தச் சிற்றாறு மீன்களாலும், தவளைகளாலும் நிறைந்தது. உணவு உண்பதற்காக காடுகளில் இருந்து இவை வந்தபடியே உள்ளன” என்றார் கர்க்கர். பாறைகளை அலைத்து நுரையோசையுடன் கடந்துசென்ற ஆற்றின் ஒலியில் இலைகளுக்கு அப்பால் அர்ஜுனன் பார்த்தான். நீர் விளிம்புகள் முழுக்க பாம்புகள் நெளிந்து இரை தேடின. நீரில் இறங்கி அலைகளுடன் வளைந்து நீந்திச் சென்றன. இருண்ட நீர்ப்பரப்பெங்கும் கருவூலத்தின் வெள்ளி நாணயப் பெட்டியைத் திறந்ததுபோல் மீன்கள் நீந்தின.

பாறைகளை இணைத்து போடப்பட்டிருந்த பெரிய தடிப்பாலம் வழியாக உலூபி முதலில் நடக்க அர்ஜுனன் தொடர்ந்தான். அவனுக்குப் பின்னால் கர்க்கர் வந்தார். மறுகரையின் சரிவுப் பாறைகளிலும் வேர்களுடன் கலந்து நெளிந்த பாம்புப்பரப்பே கண்ணுக்குப்பட்டது. அவை கொண்ட ஓசையின்மையே அவற்றை உயிர்களல்ல என்றாக்கியது. ஓசையே உலகம். ஓசையின்மையின் ஆழத்திலிருந்து ஊறிவந்தவை அவை. விண்ணின் இயல்பு ஓசை என்கின்றன நூல்கள். ஆகவேதான் இவை விண்ணொலியை அஞ்சுகின்றன போலும்.

சற்று ஏறிச்சென்ற பாதையின் முடிவில் கூடிநின்ற நாகர்குலச் சிறுவர்களை அர்ஜுனன் கண்டான். தோலாடை அணிந்து நாகபட ஆரம் கழுத்திலிட்டு கைகளில் மரப்பாவைகளை ஏந்தி விழிவிரித்து அவனை நோக்கி நின்றனர். “அவர்கள் மானுடரைக் கண்டதில்லை” என்றார் கர்க்கர். “மானுடர்களும் நாகர்களைப்போல் கை கால்களைக் கொண்டவர்களே என்று இப்போது அறிந்திருப்பார்கள்” என்றான் இன்னொருவன்.

அர்ஜுனன் உள்ளே நுழைந்தபோது விரல் தொட்ட சுனையின் மீன்கள்போல் குழந்தைகள் விலகி ஓடி புதர்களுக்குள் மறைந்தனர். அங்கு நின்று நோக்கியபோது ஐராவதீகத்தின் இல்லங்களை ஒற்றைநோக்கில் அவன் கண்டான். “இவையா இல்லங்கள்?” என்று திரும்பி கேட்டான். “இவை உங்களால் கட்டப்பட்டவையா?” மூன்றுஆள் உயரக் கரையான் புற்றுகள் போல எழுந்து நின்றன அவ்வில்லங்கள். கவர் விரித்துப் பரவிய உருளைக்கூம்புகள். மழை ஒழுகிய தடம் கொண்டவை. இறுகிய தொன்மையான மண் அவற்றை அடிமரமென்று மயங்கச்செய்தது.

“இல்லை, இவை உண்மையான சிதல் புற்றுகள். மானுடன் இத்தனை உறுதியுடனும் அழகுடனும் இவற்றை அமைக்க முடியாது என்றார்” கர்க்கர். “தலைமுறைகளுக்கு முன் எங்கள் மூதாதையர் இங்கு குடியேறியபோது இவற்றைக் கைக்கொண்டு இல்லங்களாக ஆக்கிக்கொண்டனர்.” அவற்றினுள்ளே எப்படி நுழைவது என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். “நாகர்கள் அவற்றுக்குள் நுழைந்து உள்ளறைகளுக்குள் வாழும் கலையை இளமையிலேயே அறிந்திருக்கிறோம். மானுடர் உள்ளே செல்லமுடியாது” என்று கர்க்கர் சொன்னார்.

“நடுவே உயர்ந்து நின்ற பெரிய புற்று பத்து ஆள் உயரமிருந்தது. “நூற்றெட்டு கரவுப்பாதைகளும் எண்பத்தேழு உள்ளறைகளும் கொண்டது அது. முன்பு இந்த ஒரு புற்றே இருந்தது. இன்று அது எங்கள் அரண்மனை” என்றார் கர்க்கர். புதர்களிலிருந்து குழந்தைகள் எழுந்து அர்ஜுனனை நோக்கின. அச்சம் தெளிந்த சில குழந்தைகள் மேலும் அணுகின. அக்கையரின் இடையிலிருந்து சில குழவியர் அவனை நோக்கி கைசுட்டி இனிய ஒலியெழுப்பின.

அர்ஜுனன் திரும்பி ஒரு குழந்தையை நோக்க அது நாணம்கொண்டு தனது அக்கையின் தோள்மேல் முகம் புதைத்தது. தோல் ஆடையால் முலைமறைத்த நாகர் குலப் பெண்கள் மரங்களிலிருந்தும் புற்றில்லங்களின் மறைவுகளிலிருந்தும் அவனைச் சூழ்ந்தனர். உலூபி “அரசரை சந்தித்து முறை செய்க!” என்றாள். அர்ஜுனன் “அவ்வண்ணமே” என்றான்.

நாகர்களில் ஒருவன் தன் இடையில் இருந்த மூங்கில் குழாய் ஒன்றை வாயில் வைத்து பேரொலி ஒன்றை மூம்முறை ஒலித்தான். அனைவரும் அந்த மையப்பெரும்புற்றை நோக்க, அதன் சிறிய வாய் வழியாக உடல் நெளித்து பசுவின் வாயிலிருந்து நாக்கு வெளிவருவதுபோல் முதியவர் வெளிவந்தார். அவர் அணிந்திருந்த பொன்னாலான நாகபட மணிமுடியைக் கண்டு அவரே நாகர்களின் அரசர் கௌரவ்யர் என்பதை அர்ஜுனன் உணர்ந்தான்.

“ஐராவதீகத்தின் தலைவரை இந்திரப்பிரஸ்தம் ஆளும் மாமன்னர் யுதிஷ்டிரரின் தம்பியும் அரச தூதனுமாகிய பார்த்தன் வணங்குகிறேன். தங்கள் நிலத்தில் தங்கள் ஆணைக்குப் பணிகிறேன்” என்றான். அவரது உடல் முதுமையில் சுருங்கியிருந்தது. பாம்புத்தோல் என செதில்கள் மின்னின. பழுத்த விழிகள் இமைப்பு ஒழிந்திருந்தன. அப்போதுதான் கர்க்கர் முதலிய நாகர் அனைவரிலும் இருந்த மானுடம்கடந்த தன்மை என்ன என்று அவன் அறிந்தான். அவர்கள் எவரும் இமைக்கவில்லை.

வெளிவந்த முதியவர் அவனை கைதூக்கி வாழ்த்தியபடி வந்து அங்கு போடப்பட்டிருந்த கற்பீடங்கள் ஒன்றில் அமர்ந்தார். அவரது குலத்தவரில் ஆண்கள் மட்டுமே அவருக்கு தலைவணங்கினர். குழந்தைகள் அவரை அணுகி இயல்பாக அவரது மடியில் ஏறியமர்ந்துகொண்டனர். பெண்கள் அவருக்குப்பின்னால் திரண்டு கூர்ந்த விழிகளுடன் அவனை நோக்கினர்.

“எங்கள் எல்லைக்குள் மானுடர் இதுவரை வந்ததில்லை” என்றார் கௌரவ்யர். “உன்னை என் மகள் கொண்டுவந்தாள் என்று அறிந்தேன். என்குடியில் மானுடர் மகற்கொடை கொள்ள மூதாதையர் ஒப்புதல் இல்லை” என்றார். அவருக்குப்பின்னால் நின்ற பெண்கள் ஆம் என முனகினர். “நீ அவளை கண்டிருப்பாய். மானுடராகிய உங்களைப்போல் அவள் இமைப்பதில்லை.”

அர்ஜுனன் திரும்பி நோக்க அவள் விழிகள் இமைப்பின்றி இருப்பதைக் கண்டான். ஆனால் அவள் விழிகள் முன்பு மானுடவிழிகளாகவே இருந்தன என நினைவுகூர்ந்தான். “அவள் எடுத்த முடிவு அது” என்றான். “மானுடனே, எங்கள் உடலின் குருதி நஞ்சாலானது. எங்கள் கைநகம் கீறினால் நீ நஞ்சுண்டு இறப்பாய்...” என்றார் கௌரவ்யர்.

“அதையும் அவளே முடிவெடுத்தாள். நான் அவள்பொருட்டு இறக்கவும் சித்தமாகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “மூடா, நீ அவளை கொள்வதென்பது அவள் முடிவல்ல. இக்குலம் காக்கும் மூதன்னையரின் முடிவு” என்று கௌரவ்யர் சினத்தால் நடுங்கும் தலையுடன் கைநீட்டி சொன்னார். சூழநின்றவர்களில் பாம்புகளின் அசைவென ஓரு நெளிவு ஓடுவதை அவன் கண்டான்.

அர்ஜுனன் “மூதன்னையர் ஒப்புதல்கொள்ள நான் இயற்ற வேண்டியது என்ன?” என்றான். “முன்பொருமுறையும் இவ்வண்ணம் நிகழ்ந்ததில்லை. எனவே எங்கள் மூதன்னையரை இங்கு வரவழைப்போம். அவர்களிடம் கேட்போம்” என்றார். “நான் அவர்களை சந்தித்து அடிபணிகிறேன்” என்றான் அர்ஜுனன். “அவர்கள் இங்கில்லை. இந்த மண்ணுக்கு அடியில் காட்டின் வேர்ப்பரப்புகளில் உடல் பின்னி தங்கள் உலகில் வாழ்கிறார்கள்” என்றார் கௌரவ்யர்.

“இன்று உணவுண்டு எங்களுடன் உறைக! இரவு இங்கே நாங்கள் நிகழ்த்தும் பெருங்கொடைக் களியாட்டில் எங்கள் மூதாதையர் எழுவார்கள். அவர்கள் ஆணையிடட்டும், உனக்குரியது எங்கள் நஞ்சா குலமகளா என்று.” அர்ஜுனன் “ஆணைக்குப் பணிகிறேன்” என்றான்.

பகுதி இரண்டு : அலையுலகு – 7

நாகர் குலத்து முதுமகள்கள் இருவர் கொண்டு வந்து வாழை இலைவிரித்து பரிமாறிய ஏழுவகை கிழங்குகளையும் முயல் ஊனையும் மூன்று வகைக் கனிகளையும் தேன் கலந்த நன்னீரையும் அருந்தி அர்ஜுனன் எழுந்தான். நிழல் மரங்களின் நடுவே இழுத்துக் கட்டப்பட்ட காட்டெருதுத்தோல் தூளியில் அவனுக்கு படுக்கை ஒருக்கப்பட்டிருந்தது. அருகே புல் கனலும் புகை எழுந்து பூச்சிகளை அகற்றியது. அவன் படுத்துக் கொண்டபோது நாகர் குலக்குழந்தைகள் அவனைச்சூழ்ந்து நின்று விழி விரித்து நோக்கின.

ஒரு சிறு மகவை நோக்கி அவன் புன்னகை புரிந்தான். அது கை நீட்டி சிவந்த வாயில் நீர்வழிய தொடைகளை ஆட்டியபடி அக்கையின் இடையிலிருந்து எம்பியது. ‘அருகே வா’ என்றான் அர்ஜுனன். அவள் அக்குழந்தையை அருகே கொண்டு வர அப்பால் இரண்டு முதியவர்களில் ஒருவர் ’இளவரசே குழந்தைகளை தொட வேண்டியதில்லை’ என்றார். அர்ஜுனன் அவரை திரும்பி நோக்கினான். ’அவர்களின் வாய்நீரும் நகங்களும் உங்களுக்கு நஞ்சு’ என்றார். அர்ஜுனன் திரும்பி அக்குழந்தைகளின் விழிகளை நோக்கினான். அழகிய வெண்ணிறக்கற்கள் போல அவை தெரிந்தன. நடுவே நீல மையவிழிகள் அசைவின்றி நின்றன. இமையா விழிகள் உயிரற்ற பொருளென மாறிவிட்டிருந்தன.

ஒவ்வொரு விழியாக நோக்குகையில் அவை கொள்ளும் கூர்மை அவனை அச்சுறச்செய்தது. நீள்மூச்சுடன் விழிகளை மூடிக் கொண்டான். கால்களை நீட்டியபடி நெடுந்தொலைவு வந்துவிட்டேன் என்று எண்ணினான். அவ்வெண்ணம் அளித்த ஆறுதலை அவனே வியந்து சற்று புரண்டு படுத்தான். அந்த மரங்களின் வேர்கள் இறங்கிப்போய் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பெரும் படலமாக ஆன ஆழத்தை நினைத்தான். அவன் விழிகளுக்குள் வேர்களும் பாம்புகளும் என பெரும் நெளிவு வெளி ஒன்று எழுந்தது. ஒவ்வொரு நெளிவையாக தொட்டுச் சென்று எப்போதோ துயிலில் ஆழ்ந்தான்.

முழவொலி கொட்ட விழித்துக் கொண்டபோது எங்கிருக்கிறோம் என்ற உணர்வு சில கணங்களுக்குப் பின்புதான் அவன் மேல் ஏறிக் கொண்டது. எழுந்து நின்று இடைக்கச்சையை சீர் செய்து சுற்றும் நோக்கினான். அவிழ்ந்த தோல்நாடாவை எடுத்து கூந்தலை பின்னுக்குத்தள்ளி முடிந்து கொண்டான். காடு நன்கு இருட்டிவிட்டிருந்தது. நாகர்களின் புற்றில்லங்களுக்குள் இருந்து மென்மையான பொன்னிற ஒளி அவற்றின் சிறுவட்ட வாயில் வழியாக தெரிந்தது. இருளில் அது பூம்பொடித் தீற்றல்கள் போல் எழுந்திருந்தது. அங்கு பெண்டிரும் குழந்தைகளும் முதியவர்களும் விரைவு கொண்ட உடல்களுடன் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கர்க்கர் அவன் அருகே வந்து ”இளவரசே தாங்கள் சித்தமாகலாம்” என்றார். அர்ஜுனன் அங்கு நிகழ்ந்தவற்றை விழிகளால் நோக்கி ”அனைவரும் எங்கு செல்கிறார்கள்?” என்றான். ”மூதன்னையரின் ஆலயத்திற்கு. இன்று அங்கு சொல்லீடு கேட்கும் பூசனை நிகழ்கிறது அல்லவா?”என்றார் கர்க்கர். ”எங்குளது அவ்வாலயம்?” என்றான் அர்ஜுனன். ”மும்முக மலையின் அடியில். அங்குதான் எங்கள் மூதன்னையர் வாழும் ஆழுலகுக்கு செல்லும் ஏழு குகை வாயில்கள் உள்ளன” என்றார் கர்க்கர்.

வானம் இரும்புப் பீப்பாயை அசைத்து வைத்தது போல் ஆழ்ந்த உறுமலை எழுப்பியது.சூழ்ந்திருந்த இலைத்தகடுகள் மிளிர்ந்து அணைந்தன. ”இன்றும் மழை வரும் போலும்” என்றான். “இங்கு அனைத்து இரவுகளிலும் மழை உண்டு” என்று கர்க்கர் சொன்னார். குழந்தைகளை இடையில் தூக்கியபடி பெண்கள் காட்டுக்குள் சென்ற பாதையில் நடந்தனர். மெல்லிய மூச்சுசீறும் குரலில் உரையாடிக் கொண்டனர். கைகளில் சிறிய மூட்டைகளுடன் முதியவர்களும் அவர்களுடன் தொடர்ந்து செல்ல அந்த நிரை நிழலுருவாக காடெனும் நிழல்குவைக்குள் மறைந்தது.

”நான் நீராட விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். ”இங்குள்ள ஓடையில் இரவில் எவரும் நீராடுவதில்லை ”என்று கர்க்கர் சொன்னார். ”நீர் மிகவும் குளிர்ந்திருக்கும். தாங்கள் காலையில் நீராடி இருப்பீர்களல்லவா?” அர்ஜுனன் “மூதன்னையரை நீராடாது சென்று காண்பது என் குடி நெறிகளுக்கு உகந்ததல்ல” என்றான். ”அவ்வண்ணமே ”என்று தலைவணங்கினார் கர்க்கர். புற்றுகளுக்குள் இருந்து எழுந்த பொன்னொளி அன்றி அப்பகுதியில் விளக்கென ஏதும் இருக்கவில்லை. விலகிச் செல்லும் தோறும் புற்றுகள் பொன்விழிகளைத் திறந்தது போல அத்துளைகள் தெரிந்தன. அவற்றிலிருந்து கண் விலக்கி காட்டை நோக்கியபோது பரு என ஏதுமெஞ்சாத மைக்குழம்பென இருள் தெரிந்தது.

பாதையை கூர்ந்து நடந்தான். ”இங்கு பாம்புகள் கடிப்பதில்லை. ஆனால் நீங்கள் மிதிப்பது அவற்றின் பத்தியை என்றால் தீண்டாமல் விலகிச்செல்ல அவற்றுக்கு நெறியில்லை” என்றார் கர்க்கர். அர்ஜுனன் தன் இரு கால்களிலுமே கண்களை ஊன்றி அடி மேல் அடி என நடந்தான். மரங்கள் சூழ்ந்த இருளுக்குள் பாறைகள் மேல் அலைசரியும் ஒலியுடன் சிற்றாறு சென்று கொண்டிருந்தது. அதன் நுரைத்தீற்றல்களை இருளுக்குள் தனிச்சிரிப்புகள் என காண முடிந்தது.” இங்கு நீங்கள் நீராடலாம்” என்றார் கர்க்கர்.

அர்ஜுனன் தன் தோலாடைகளை கழற்றி வெற்றுடலுடன் நடந்து நீர் விளிம்பை அடைந்தான். நூற்றுக் கணக்கான பாம்புகள் ஒன்றுடன் ஒன்று உடல் பின்னி செறிந்து நதியின் அலை விளிம்புக்கு கரை அமைத்திருந்ததை கண்டான். காற்றிலாடும் திரைச் சீலையின் கீழ்நுனித் தொங்கல்கள் என நெளிந்து கொண்டிருந்தன அவை. ஒரு கணம் தயங்கியபின் தாவி நீருக்குள் நின்ற பாறை ஒன்றின் மேல் ஏறிக் கொண்டான். பின்பு கால்களை நீட்டி நீரைத்தொட்டான். பனி உருகியதென உடலை நடுங்க வைத்தது நீர். ஒரு கணத் தயக்கத்திற்குப் பின் அதில் கை நீட்டி தாவி மூழ்கினான். ஒரு முறை மூழ்கி எழுந்து தலை மயிரைச் சிலுப்பி முடிந்து மீண்டும் மூழ்கியபோதுதான் நீருக்குள் மீன்களுக்கு நிகராக பாம்புடல்களும் நெளிவதைக் கண்டான். அவன் உடல் மேல் வழுக்கிச் சென்றன நெளிவுகள்.

எழுந்து பாறையில் தொற்றி ஏறி கையில் அள்ளி வந்த மணலால் உடலைத் தேய்த்து மீண்டும் நீரில் இறங்கி துழாவி ஆடினான். பாறையிலிருந்து கரை நோக்கி தாவி வந்து தனது ஆடைகளை ஈர உடல் மேல் அணிந்து கொண்டிருந்தபோது கர்க்கர் புன்னகைத்து ”தாங்கள் அரண்மனையில் வாழ்ந்தவரென்று தோன்றவில்லை இளவரசே” என்றார். ”அரண்மனையிலும் வாழ்ந்திருக்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். கர்க்கர் ”நான் காம்பில்யத்தின் அரண்மனையை கண்டிருக்கிறேன். அதற்குள் எப்படி மானுடர் வாழ முடியும் என்று எனக்கு புரிந்ததேயில்லை” என்றார். அர்ஜுனன் புன்னகைத்து ”ஆம், அங்கு மானுடர் வாழ்வதில்லைதான்” என்றான். “தாங்கள் உணவருந்தலாகாது. அங்கே மூதன்னையரின் பூசனை முடிந்து கிடைக்கும் பலியுணவை மட்டுமே உண்ண வேண்டும் என்று முறைமை” என்றார் கர்க்கர். ”ஆம் அவ்வாறே” என்றான் .

அர்ஜுனன் கர்க்கருடன் இருண்ட காட்டுக்குள் சென்ற சிறு பாதையில் நடந்தான். சற்று நேரத்திலேயே புதர்களால் ஆன குகை ஒன்றுக்குள் செல்வது போல் உணர்ந்தான். வானம் அதிர்ந்து ஒளி உள்ளே சிதறியபோதுதான் தன்னைச் சூழ்ந்திருந்த இலைத்தழைப்பின் வடிவை காண முடிந்தது. சுழன்று இறங்கி பின்பு மேலேறி மீண்டும் வளைந்து சென்ற அப்பாதையில் முடிவே இன்றி சென்று கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டான். பல்லாயிரம் முறை அப்பாதைகளில் சென்றிருந்ததாகத் தோன்றியது. எங்கு என வினவிக்கொண்டான். அறியா இளமையிலேயே இத்தகைய பாதையொன்றில் தனித்து உளம் பதைத்து ஓடி இருக்கிறான். அது கனவில். ஆனால் நினைவில் என்று பார்க்கையில் கனவுக்கும் நனவுக்கும் வேறுபாடென்ன?

எங்கிருக்கிறோம் என்று ஒவ்வொரு கணமும் வகுத்துக்கொள்ளத் துடிக்கும் உள்ளத்தின் தேவையென்ன? எங்கு சென்றாலும் மீளும் வழியொன்றை தனக்குள் குறித்திட அதுவிரும்புகிறது. எங்கிருந்தாலும் அங்கிருந்து கடந்து செல்ல விழைகிறது. அறியா இடம் ஒன்றில் அது கொள்ளும் பதற்றம் அங்கு அது உணரும் இருப்பின்மையாலா? இடமறியாத தன்மை இருப்பை அழிக்கிறதா? என்னென்ன எண்ணங்கள்! இவ்வெண்ணங்களை கோத்துச் சரடாக்கி அதைப் பற்றியபடி இந்நீண்ட இருள் பாதையை கடந்து செல்லவேண்டும். இதன் மறு எல்லையில் உள்ளது இங்கு முடிவாகும் என் ஊழின் ஒரு கணம். குலமகளா? நஞ்சா?அர்ஜுனன் புன்னகைத்தான். இவர்களின் குலமகள் நஞ்சு நிறைந்த ஒரு கோப்பை என்கிறார்கள். வென்றால் இன்றிரவு காதல் கொண்ட பொற்கோப்பையில் நஞ்சருந்துவேன். தோற்றால் நஞ்சுண்டு அழிவேன்.

தொலைவில் முழவுகளின் ஓசையை கேட்கத் தொடங்கினான். மறுகணமே அவனுக்குப் பின்னால் இருந்து அந்த ஒலி வந்தது. மரங்கள் அவ்வொலியை அவனை சூழப் பரப்பின. வானிலிருந்து இலைகளின் வழியாக ஒலி வழிந்தது. மீள மீள ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தது அது. முழவொலிகளை கேட்டுக்கொண்டு சென்றபோது வானில் எழுந்த இடிமுழக்கம் அவ்வொலியுடன் இயல்பாக ஒன்று கலந்ததை உணர்ந்தான். மின்னல் எழாது இடி ஓசை மட்டும் எழுந்தது. வியந்தபோது சூழ்ந்திருந்த மொத்தக் காடும் ஒரே கணமென தன்னைக் காட்டி இரு முறை அதிர்ந்து இருளாகியது. கண்களுக்குள் வெடித்த ஒளி நீலமாகி செம்மையாகி பொன்னிறமாகி சிறு குமிழ்களாக சிதறி சுருண்டு பரந்து அமைந்தது.

இலைத் தழைப்புகளுக்கு அப்பால் பந்தங்களின் ஒளியை காணத் தொடங்கினான். குருதி தீட்டிய வேல்நுனிகள் போல் இலைகளை கண்டான். நிழல்கள் எழுந்து இருளாகி நின்ற மரங்களின் மேல் அசைந்தன. அணுக அணுக இலைப்பரப்புகளின் பளபளப்பை, பாதியுடல் ஒளி கொண்டு நின்ற அடிமரங்களை, ஒளி வழிந்த பாறை வளைவுகளை கண்டான். பின்பு காடு பின்னகர்ந்து நாணல் வெளியொன்று அவர்களுக்குமுன் விரிந்தது. வானம் மின்னலொன்றால் கிழிபட்ட ஒளியில் அப்புல்வெளிக்கு அப்பால் மும்முகப்பெருமலை எழுந்து தெரிவதை அவன் கண்டான்.

கர்க்கர் "இப்புல்வெளி பாம்புகளின் ஈற்றறை எனப்படுகிறது. பகலில் பல்லாயிரம் பாம்புகள் இங்கு நெளிவதை காண முடியும். ஒவ்வொரு புல் நுனிக்கும் ஐந்து வீதம் இங்கு பாம்புக் குட்டிகள் விரிகின்றன என்பார்கள்” என்றார். பாம்பு என்னும் சொல்லை செவிக்கு முன்னரே கால்கள் அறியும் விந்தையை எண்ணி அர்ஜுனன் புன்னகைத்தான். கர்க்கர் ”இதை நான் கடந்து செல்கிறேன். என் கால்கள் படும் மண்ணில் மட்டும் தங்கள் கால்கள் பட வேண்டும். விழிகூர்ந்து வருக” என்றபடி தன் கைக்கோலுடன் முன்னால் நடந்தார். அவர் காலடி எழுந்ததுமே அங்கே தன் காலை வைத்து அர்ஜுனன் தொடர்ந்து சென்றான்.

மின்னல் ஒளியில் சுற்றிலும் அலையடித்த நாணல் பூக்களை கண்டான். அவற்றின் அடியில் பாம்பு முட்டைகள் விரிந்து கொண்டிருந்தன. கற்றாழைச் சோறு மணம், தேமல் விழுந்த உடல் வியர்க்கும் வாடை, பூசணம் பிடித்த அப்பங்களின் நாற்றம், உளுந்து வறுக்கும் மணம்… எண்ண எண்ண சித்தம் சேர்த்து வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் மணங்களாக எழுந்தன. ஊறி மட்கிய மரவுரி, பிறந்த குழந்தையின் கருநீர், குட்டிகளுக்கு பாலூட்டிக் கிடக்கும் அன்னை நாயின் சிறுநீர், தழைமட்கிய இளஞ்சேறு, புளித்த கோதுமை மாவு…. பிறிதொரு மின்னலில் மும்முகப்பெருமலை மிக அண்மையில் வந்து நின்று அதிர்ந்தது.

நாணல் வெளிக்கு அப்பால் பந்தங்கள் காட்டுத்தீ போல் எரிவதைக் கண்டான். அவ்வொளியை சூழ்ந்து நின்ற மனித உடல்களின் நிழல் உருவங்கள் எழுந்து மரக்கிளைகள் செறிந்த இலைத்திரைகள் மேல் ஆடின. அவர்களின் மூதாதையர் சூழ்ந்து பேருருவம் கொண்டு நடமிடுவது போல. அணுக அணுக மூச்சொலி என எழுந்த அவர்களின் கூர்குரல்கள் முட்புதர்களை கடந்து செல்லும் காற்று போல பல்லாயிரம் கிழிதல்களாக ஒலித்ததை கேட்டான். அவன் வருவதை அங்கு எவரோ அறிவித்தனர். பெருமுழவம் ஒன்று பிடியானை என ஒலி எழுப்பத் தொடங்கியது. சேர்ந்து நடமிடுவது போல் குறுமுழவுகள் வந்து இணைந்து கொண்டன. அவ்வோசைக்கு இயைய அங்கிருந்தவர்களின் உடல்கள் இணைந்து அலையாகி அசைந்தன.

அவன் அணுகியபோது ஒற்றைப்பெருங்குரலில் அவனை வரவேற்று கூச்சல் எழுப்பினர். அர்ஜுனனை நோக்கி வந்த நான்கு முதுமகள்கள் கைகளில் அனல் சட்டிகளை வைத்திருந்தனர். அதிலிருந்த புகையை அவனை சுற்றிப் பரப்பினர். அதில் சிவமூலிகை போடப்பட்டிருக்குமோ என அவன் ஐயுற்றான். ஆனால் அதற்குரிய மணம் ஏதும் தென்படவில்லை. அனல் சட்டிகளை ஏழுமுறை அவனைச் சுற்றி உழிந்தபின் முதுமகள் ”வருக” என்றாள். நடந்து அக்கூட்டத்தை அணுகி உடல்களால் ஆன வேலி மெல்ல விலகி விட்ட வழியினூடாக உள்ளே சென்றபோது தன் உடலெங்கும் மெல்லிய மிதப்பு ஒன்று ஏற்படுவதை அர்ஜுனன் உணர்ந்தான். ஒழுகிச்செல்லும் ஆற்றில் மணல் பறிந்து விலகும் கால்களுடன் நிற்பது போல் இருந்தது. விழாமல் இருக்க உடலை சற்று முன்னால் வளைத்து கைகளை விரித்துக் கொண்டான்.

மனித உடல்களால் ஆன அந்த வளையத்திற்கு நடுவே கற்களை அடுக்கி உருவாக்கிய வட்ட வடிவமான நெருப்புக்குழி இருந்தது. அதில் அரக்கும் விலங்குக் கொழுப்பும் விறகுகளுடன் போடப்பட்டு ஆளுயரத்திற்கு நெருப்பு எழுந்து கொழுந்து விட்டு ஆடியது. நெருப்புக் குழியிலிருந்து நிரையாக நூறு பந்தங்கள் மூங்கில் கழிகளில் நாட்டப்பட்டு ஊன்கொழுப்பு உருகி எரிய, ஊடே நீலச்சுடர் வெடிக்க தழலாடிக் கொண்டிருந்தன. அப்பந்தங்களுக்கு இருபக்கமும் விரிக்கப்பட்ட இலைகளில் ஊனும் கிழங்குகளும் கனிகளும் பரப்பப்பட்டிருந்தன.

பந்தநிரை சென்றுசேர்ந்த மறுமுனையில் மேலிருந்து வளைந்திறங்கி வந்த பாறைப்பரப்பில் மூன்று கரிய குகைகள் திறந்திருந்தன. ஒரு மனிதர் தவழ்ந்து உள்ளே செல்லுமளவுக்கே பெரியவை. அவன் புருவங்களைத் தூக்கி மேலும் கூர்ந்தபோது அப்பாறைகளுக்கு மேல் முதல் மடம்பில் மேலும் இரு குகைகளை பார்த்தான். அடுத்த மடம்பில் மேலும் இரு குகைகள் தெரிந்தன. முதுமகள்களில் ஒருத்தி “வருக இளவரசே” என்று அழைத்துச் சென்று அந்த எரிகுளம் அருகே நிறுத்தினாள். அங்கிருந்த பிறிதொரு முதுமகள் எரி குளத்திலிருந்து கொழுந்து எரியும் விறகுக் கொள்ளி ஒன்றை எடுத்து அவனை மும்முறை உழிந்து அதைச்சுற்றி வரும்படி கைகாட்டினாள்.

கூப்பிய கைகளுடன் அர்ஜுனன் அவ்வெரிகுளத்தை மும்முறை சுற்றி வந்தான். அவன் இடையிலிருந்த தோலாடையை முதுமகள் கழற்றி எரிகுளத்து நெருப்புத் தழலில் எரிந்தாள். ஒருத்தி அவன் தலையில் கட்டியிருந்த தோல் நாடாவை அவிழ்த்து தீயிலிட்டாள். அவன் உடலில் இருந்த அனைத்து அணிகலன்களையும் அறுத்து நெருப்பிலிட்டனர். கையிலிருந்த கணையாழியை ஒருத்தி கழற்றியபோது அறியாது ஒருகணம் அர்ஜுனன் கையை பின்னிழுத்தான். அவள் விழி தூக்கி “உம்’ என்று ஒலி எழுப்பினாள். கணையாழி எளிதில் கழன்று வரவில்லை. அவள் தன் இடையிலிருந்த குறுவாளொன்றை எடுத்து அதை வெட்டி விலக்கி நெருப்பிலிட்டாள்.

வெற்றுடலுடன் பந்தங்கள் வழியாக நடந்து அர்ஜுனன் அந்த குகைகளுக்கு அருகே சென்றான். அங்கே தரையில் போடப்பட்ட மணைப்பலகைகளின் மேல் ஏழு முதுமகள்கள அமர்ந்திருந்தனர். அவர்களை நாகர்களின் குடியில் முன்பு பார்த்ததில்லை என்று அர்ஜுனன் உணர்ந்தான். விழுதுகளென தரை தொட்ட பெரிய சடைத்திரிகள். உலர்ந்து பாம்புச்செதில் கொண்டிருந்த மெல்லிய உடல்கள். இமையா பழுத்த விழிகள். கால்களை மடித்து முழங்கால் மடிப்பின் மேல் கைகளை வைத்து யோக அமர்வில் எழுவரும் அசையாதிருந்தனர்.

அவர்களுக்கு முன் போடப்பட்டிருந்த மரப்பீடத்தில் கௌரவ்யர் அமர்ந்திருந்தார். பொன்னாலான நாகபட முடி மேல் பந்தங்களின் ஒளி செம்புள்ளிகளாக அசைந்தது. அவருக்குப்பின்னால் அக்குடியின் பெண்கள் நின்றனர். மறுபக்கம் குடிமூத்தோர் கைக்கோல்களுடன் நின்றிருந்தனர். அவர்களுக்கு நடுவே ஏழன்னையருக்கு நேர்முன்பாக போடப்பட்டிருந்த பெரிய மரப்பீடத்தில் அர்ஜுனனை முதுமகள் அமரச்செய்தாள். அவன் கையை மடிமீது விரிக்க வைத்து அதில் ஓர் இலையை வைத்தாள் பிறிதொரு முதுமகள் சிறிய கொப்பரைப் பேழை ஒன்றை கொண்டு வந்தாள். அதைத் திறந்து அதிலிருந்து மூன்று சிறிய வெண்ணிற உருளைகளை எடுத்து அதன் மேல் வைத்தனர்.

அர்ஜுனன் சில கணங்களுக்குப்பிறகே அவை பாம்பு முட்டைகள் என்று அறிந்தான். வழக்கமான முட்டைகளைவிட அவை பெரிதாக இருந்தன. அவற்றில் ஒன்று உள்ளிருந்து அழுத்தப்பட்டு சற்று புடைத்து அசைந்தது. புகை மூடிய அவன் சித்தத்தில் அதற்குப் பின்னரே அவை அரசப்பெரு நாகத்தின் முட்டைகள் என்பது உறைத்தது. ஓடுவிலக்கி எக்கணமும் வெளிவரும் நிலையில் இருந்தன அவை. கர்க்கர் ஏழன்னையரை நோக்கி தலைவணங்கி ”அன்னையர் அருளவேண்டும்” என்றார். சற்று அப்பால் பாறை ஒன்றுக்கு மேல் கட்டப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்து தன் முன் பக்கவாட்டில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பெரு முரசை ஒருவன் அறைந்து கொண்டிருந்தான். அவ்வொலியில் மலைப்பாறைகள் தோல்பரப்புகளென அதிர்ந்தன. குறு முழவுகளுடன் நாகர்கள் வந்து அன்னையரை சூழ்ந்து கொண்டனர்.

பெருமுரசத்தின் சீரான இழைதாளத்தை குறுமுழவுகளின் துடிதாளங்கள் ஊடறுத்தன. ஒரு சொல் பல நூறு துண்டுகளாக்கப்பட்டது. ஒவ்வொரு துண்டும் துடிதுடித்தது. உடல்துண்டுகள் அதிர்ந்து எம்பிக் குதித்தன. குமிழிகளென வெடித்து எழுந்தன. தாளத்தை விழிகளால் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்ஜுனன் உணர்ந்தான். அவ்வுணர்வை அறிந்த ஒருவன் அப்பால் நின்று நோக்க தாளம் குருதிக் கொப்புளங்களாக வெடித்துச் சிதறி விழுந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தாளத்துடிப்பையும் கை நீட்டி தொட்டுவிடலாம் போலிருந்தது. வெட்டுண்ட சதை விதிர்ப்புகள். அனலில் விழுந்த புழுவின் உடற் சொடுக்குகள். உருகி விழுந்த அரக்கின் உறைவுகள். தாளம் அவன் உடலில் பல இடங்களில் தொட்டுச் சென்றது. முதுகில் குளிர்ந்த கற்களென. கன்னங்களில் கூரிய அனல் துளிகளென. உள்ளங்கால்களில் பிரம்பு வீச்சுகளென.

அர்ஜுனன் தன் முன் எழுந்த அரவு விழிகளை நோக்கிக் கொண்டிருந்தான். ஏழு கல்முகங்கள். அவற்றில் ஏழு வெண்கல் விழிகள். பாம்பின் விழிகளைப் போல பொருளின்மையால் ஆன நோக்கு கொண்ட ஏதுமில்லை. சுட்டுவிரல் தொட்டெடுக்கும் சிறு புழுவின் விழிகளில்கூட இருத்தலின் பெரும் பதைப்பு உள்ளது. யானையின் கண்களில் விலகு என்னும் ஆணை. விண்ணளந்து பறக்கும் கழுகின் கண்களில் மண்ணெனும் விழைவு. முற்றிலும் பொருளின்மை கொண்டவை பாம்பின் விழிகள். இங்கிருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து நோக்குபவை. அவை விழிகளே அல்ல, வெண் கூழாங்கற்கள்.

பாம்பு விழிகளால் நோக்குவதில்லை. நோக்குவதற்கு பிறிதொரு புலனை அது கொண்டுள்ளது. ஒவ்வொரு அசைவையும் தன்னுடலால் அது எதிர்கொள்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் உடலால் எதிர்வினையாற்றுகிறது. அந்த நீள் உடல்தான் அதன் விழியா? அவ்வெண்ணங்களே ஓங்கி வெட்டி அறுத்து இரு துண்டாக்கிச் செல்வது போல் வீரிடல் எழுந்தது. ஏழன்னையரில் இறுதியில் இருந்தவள் எழுந்து இருகைகளையும் விரித்து உடல் துடித்து நின்றாள். அவ்வசைவு தொட்டு எழுந்தது போல அடுத்தவள் எழுந்தாள். எழுவரும் நிரையென எழுந்து கைகளை நீட்டி உடல் விதிர்க்கச்செய்யும் கூரொலியுடன் அலறியபடி உடல் அதிர்ந்து துடிதுடித்தனர். முதுமையில் தளர்ந்த அனைத்து தசைகளும் இழுபட்டு தெறித்து நின்றன. கழுத்துச் சரடுகள், புயத்தசைகள், இடைநரம்புகள் உச்ச விசையில் எக்கணமும் அறுந்து துடித்துவிடும்போல் தெரிந்தன.

அர்ஜுனன் அறியாது தன் கையை பின்னிழுக்க இலையிலிருந்த பாம்பு முட்டைகளில் ஒன்று உருண்டது. கர்க்கர் கை நீட்டி “அசையாதே” என்று ஆணையிட்டார். அலறிய முதுமகள்களில் ஒருத்தி கண்ணுக்குத்தெரியாத கையொன்றால் தூக்கி வீசப்பட்டவள் போல் மண்ணில் விழுந்தாள். அவள் உடல் பாம்பு போல் நெளியத்தொடங்கியது. மானுட உடலில் அத்தகைய முழுநெளிவுகள் கூடுமென்று எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. இரு கைகளையும் அரவுப்படம்போல் நீட்டி தரையில் இருந்து எழுந்து சொடுக்கி திரும்பி அதிர்ந்து பின் வளைந்து சினந்து சீறி முன் நீண்டு புரண்டெழுந்து நெளிந்து சுழன்றாள். ஏழன்னையரும் நிலத்தில் விழுந்து பாம்புகளாகி ஒருவரோடொருவர் பின்னி புரண்டனர். சீறி முத்தமிட்டு வளைந்து விலகினர். முழவோசை கேட்டு திரும்பி வாய் திறந்து சீறினர்.

சற்று நேரத்தில் விழியறிந்த அவர்களின் மானுட உடல்கள் மறைந்து அரவு நெளிவுகள் அன்றி பிறிதெதையும் காண முடியாமல் ஆயிற்று. பீடத்தில் அமர்ந்திருந்த கௌரவ்யர் எழுந்து இருகைகளையும் கூப்பி “மூதன்னையரே அருள்க! ஆணை இடுக!” என்றார். அச்சொற்கள் அவர்களை சென்றடைந்ததாக தெரியவில்லை. நெளியும் அரவுகளில் ஒன்று பிறிதொன்றின்மேல் எழுந்து பத்தி விரித்து திரும்பி அவர்களை நோக்கியது. ஓங்கி தரையை மும்முறை கொத்தி அது வாழ்த்தியபோது கூடி நின்ற நாகர் குடியினர் கைகூப்பி இணைந்த குரலெழுப்பி நாகங்களை வாழ்த்தினர். திறந்த இருட் குகைகளுக்குள் அக்குரல்கள் புகுந்து சென்று எங்கோ முழங்குவது போல் அர்ஜுனன் உணர்ந்தான்.

அரவுடல்களில் ஒன்று நெளிந்து அவனருகே வந்தது. அர்ஜுனன் அவ்விழிகளை நோக்க அவற்றின் மையத்தில் இருந்த ஊசி முனை ஒளி விரிந்து ஒரு வாயிலாவது போல் இருண்மை கொண்டது. அது சந்திரகர் என்று அர்ஜுனன் அறிந்தான். திகைத்து அவன் இன்னொரு நாகத்தை நோக்கினான். அறிந்த விழிகள். சதயன், ஜலஜன், ஊஷரன், குகன், ரிஷபன், மால்யவான். அவனை நோக்கி விழித்த இமையாமைகளில் புன்னகை தெரிந்து மறைந்ததென எண்ணினான்.

நாகங்கள் காற்றிலாடும் நாணல் நுனிகள் போல் மெல்ல அவனைச்சூழ்ந்து நடனமிட்டன. அவன் தன் உள்ளங்கையின் அசைவை உணர்ந்து திரும்பி நோக்கினான். முட்டைகளில் ஒன்றில் சிறிய விரிசல் விழுந்தது. உள்ளிருந்து அதைக் கொத்தி உடைத்து மலர் அல்லி போல் செந்நிற பாம்புக் குஞ்சு ஒன்று வெளிவந்தது. நெளிந்து உடல் இறுக்கி அசைந்து உள்திரவத்திலிருந்து வழுக்கி அவ்விழுதை வாலால் இழுத்தபடி வெளியே வழிந்தது. பின்பு தன் வாலை முற்றிலும் உருவிக் கொண்டது.

அவன் அசையாமல் நோக்கிக்கொண்டிருந்தான். அது அவன் கையிலிருந்த இலை மேல் விழுந்து சற்று புரண்டு தலை தூக்கி பத்தியை விரித்தது. எண்ணெய் வழிவது போல் வழிந்து அவன் முழங்கையை அடைந்தது. அதன் உடலில் இருந்த கொழும் திரவத்தால் வழுக்கி அவன் தொடையில் விழுந்தது. தொடை மடிப்புக்குள் முகம் புதைத்து உள்ளே சென்று வால் நெளிய உன்னி மறைந்தது. இரண்டாவது முட்டை உருள்வதை அர்ஜுனன் கண்டான். அதன் ஓட்டுப்பரப்பின் ஒரு துண்டு உடைந்து மேலெழ உள்ளிருந்து விதை முளைத்து தளிரெழுவது போல் வெளிவந்ததது அரசநாகக் குஞ்சு. வெளியே விழுந்த அதிர்வில் வால் நெளிய உடல் சுருட்டி சீறி பத்திவிரித்தது. அதன் சிறு செந்நா பறந்தது.

அதை நோக்கி இருக்கையிலே மூன்றாவது முட்டைக்குள்ளிருந்து ஓசையின்றி வழிந்து வெளிவந்து மெல்ல எழுந்து தலை தூக்கி அவனை நோக்கியது சிறு நாகம். இரண்டாவது நாகம் அவன் கட்டை விரலைச்சுற்றி மேலேறியது மூன்றாவது நாகம் அவன் உள்ளங்கையை அடைந்து மடிந்து மறுபக்கம் விழுந்து கால்களின் இடுக்குக்குள் புகுந்தது.

சுழன்றாடி இருந்த ஏழன்னையரில் ஒருத்தி அவன் முன் வந்து மும்முறை வளைந்து கைக்குவை நுனியால் நிலத்தை கொத்தியபின் பின்னால் தூக்கி வீசப்பட்டாள். அவள் உடலை தழுவியவர்கள் போல வந்து ஒவ்வொருவராக மண்ணைக் கொத்தியபின் மல்லாந்து விழுந்தனர். அவர்களின் கால்கள் விரைத்து மண்ணை உதைத்து கைகள் விரல் சொடுக்கி அதிர்ந்து பின்பு மெல்ல தளர்ந்தன. சூழ்ந்திருந்த முழவோசைகள் ஓய்ந்தன. பெருமுழவின் விம்மல் மட்டும் காற்றில் அஞ்சி கரைந்து அமைதியாகியது. கர்க்கர் அருகே வந்து தன் சுட்டுவிரலால் அந்த சிறு நாகக் குஞ்சுகளை எடுத்து சிறிய மரக்கொப்பரைக்குள் போட்டார். கௌரவ்யர் எழுந்து ”மூதன்னையர் அருள் உரைத்துவிட்டனர். பாண்டவரே, இனி தாங்கள் எங்கள் குலம்” என்றார்.

பகுதி இரண்டு : அலையுலகு – 8

மூன்று நாகர் குல முதியவர்கள் நாகபட முனை கொண்ட நீண்ட குலக்கோல்களுடன் முன்னால் வந்து அர்ஜுனனை கைபற்றி எழுப்பினர். ஒருவர் திரும்பி இரு கைகளையும் விரித்து கூட்டத்தை நோக்க நாகர்களின் சீறல் மொழியில் வாழ்த்தொலிகள் எழுந்தன. பெருமுரசம் மலை பேசத்தொடங்கியது போல முழங்கியது. குறுமுழவுகள் துடித்து பொங்கி யானைக்கு சுற்றும் துள்ளும் மான்கள் என அதனுடன் இணைந்து கொண்டன.

அர்ஜுனனை கைபற்றி அழைத்துச் சென்று கௌரவ்யரின் முன்னால் நிறுத்தினர். கர்க்கர் “மண்டியிடுங்கள் இளவரசே!” என்றார். அர்ஜுனன் இருகால்களையும் மடித்து மண்ணில் அமர்ந்து தலையை கௌரவ்யரின் கால்களில் வைத்து வணங்கினான். அவர் அவன் முடியைத் தொட்டு தன் நெற்றியில் மும்முறை வைத்து வாழ்த்தினார். எழுந்தபோது அவர் முகத்தில் புன்னகை இல்லை என்பதை அர்ஜுனன் கண்டான்.

அர்ஜுனன் திரும்பி அங்கு கூடியிருந்த நாகர்குலத்து மூதன்னையரின் பெண்கள் பிறரை வணங்கி நின்றான். தரையில் விழுந்த ஏழு அன்னையரையும் நாகர்குலப் பெண்கள் கைகளைப் பற்றித் தூக்கி அமரச் செய்தனர். அவர்களின் நீண்ட சடைக்கற்றைகளை தொகுத்துக் கட்டி தோலாடைகளை அணிவித்தனர். மூங்கில் குவளைகளில் கொண்டுவரப்பட்ட சூடான நீருணவை அளித்தனர். அவர்களில் சிலர் முற்றிலும் களைத்து தங்களை எழுப்பியவர்களின் தோளிலேயே முகம் புதைத்து, சடைத்திரிகள் சரிய, கை தொங்க துயிலத் தொடங்கினர். கால்கள் மண்ணில் தொட்டு இழுபட அவர்களை தூக்கிச் சென்று அப்பால் படுக்க வைத்தனர்.

கைமுழவை ஒலித்தபடி நாகர்குலப்பாணன் ஒருவன் நடமிட்டு முன்னால் வந்தான். தொடர்ந்து ஏழு நாகரிளம்பெண்கள் உலூபியை நடுவே நடக்கவிட்டு இருபக்கமும் தாங்கள் தொடர்ந்து வந்தனர். தலையில் இளம்பாளையாலான நாகபட முடியும், கழுத்தில் நாகாபரணமும் அணிந்த உலூபி தலைகுனிந்து நடந்து வந்தாள். அவளை வாழ்த்தி அவர்கள் குரலெழுப்புவதை அர்ஜுனன் நோக்கினான். அனைத்து முகங்களிலும் உவகையே நிறைந்திருந்தது.

உலூபி இடையில் ஆடையில் எதுவும் அணிந்திருக்கவில்லை. ஆடகப்பசும்பொன் நிறம் கொண்ட வெற்றுடலில் மெல்லிய தசையசைவுகளுடன் வந்து அவனருகே நின்றாள். அவளுடைய இளமுலைகள் நடையில் ததும்புவதை நோக்கிவிட்டு அவன் விழிதிருப்பிக்கொண்டான். குட்டி குதிரையின் இறுகிய தொடைகள் போன்ற இடை அசைவில் மேலும் இறுக்கம் காட்டியது. அவளருகே வந்து நின்றபோது தன் வாழ்வின் முதல் பெண் என உள்ளம் கிளர்ச்சி கொள்வதை உணர்ந்தான்.

குறுமுழவுகளின் துடிப்புகளுக்கு மேலாக தன் நெஞ்சில் ஒலியை கேட்டான். நின்ற இடத்தில் கால் பதியாது விழப்போவது போல் தோன்றியது. நானா என்று அவனே புன்னகைத்துக்கொண்டான். சிறுவனாக ஆகிக்கொண்டிருக்கிறேனா? பெரிய மரத்தாலத்தில் புதிய தோலாடைகளுடன் மூன்று நாக கன்னியர் வந்தனர். முதுமகள் சொல்காட்ட உலூபி அதிலிருந்த புலித்தோலாடையை எடுத்து அவனுக்கு அளித்தாள். அவன் அதை அணிந்துகொள்ள நாகர் இளைஞர் உதவினர். அவன் அதிலிருந்த மான் தோலாடையை எடுத்து அவளுக்கு அளித்தான்.

பிறிதொரு தாலத்தில் கோதையும் தாருமாகத் தொடுத்த மலர்கள் வந்தன. உலூபி தாரை எடுத்து அவனுக்கு அணிவிக்க அவன் கோதையை அவளுக்கு அணிவித்தான். குலமுதியவர் மூவர் சொல்காட்ட கௌரவ்யர் அவள் கையைப் பற்றி அவன் கையில் அளித்தார். அவன் கைபற்றிக் கொண்டதும் சீறல் ஒலியில் எழுந்த நாகர் வாழ்த்துகளால் அப்பகுதி நிறைந்தது. இருவரும் பணிந்து கௌரவ்யரின் வாழ்த்துகளை பெற்றனர். அவர் எழுந்து தன்னருகிருந்த நாகப்பெண்ணின் தாலத்திலிருந்து மலர்களை எடுத்து இருவர் தலையிலும் இட்டு வாழ்த்தினார்.

மூங்கில் குவளை ஒன்றில் குடிப்பதற்காக இளவெந்நீர் வந்தது. முதுமகள் உலூபியிடம் அதை நீட்டினாள். அவள் அதை வாங்கி மூன்று மிடறுகள் அருந்தியபின் அர்ஜுனனிடம் அளித்தாள். அதன் மணம் குடிப்பதற்குரியதென காட்டவில்லை. அர்ஜுனன் தயங்க கர்க்கர் “அருந்துங்கள் இளவரசே” என்றார். அவன் மீண்டும் முகர்ந்துவிட்டு ஒரே மூச்சில் அதை குடித்து முடித்தான். வாயிலிருந்து எழுந்த வெந்நீராவியில் குருதிமணம் இருந்தது. நாள்பட்டு சீழான குருதி.

கர்க்கர் “பதப்படுத்தப்பட்ட நாக நஞ்சு அது” என்றார். பின்பு புன்னகையுடன் “நஞ்சென உங்கள் குடல் அறிந்தது. ஆயினும் ஒரு கணமேனும் அச்சம் கொள்ளாமலிருந்தீர்” என்றார். அர்ஜுனன் மீசையை நீவியபடி “அச்சம் எதற்கு? நான் களத்தில் பலநூறு பேரை இதற்குள் கொன்றிருப்பேன். எனவே எக்கணமும் கொல்லப்படுவதற்கு சித்தமாக இருக்கவேண்டும் என்பதே முறை” என்றான். “என்னைக் கொல்லும் வாளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என் கொலைகளை அது நிகர்செய்கிறது”

நாகர் குலத்தின் முதியவர்களும் பெண்களும் அவர்களை சூழ்ந்துகொண்டனர். “தாங்கள் விழைந்தால் எங்களுடன் இங்கு வாழலாம்” என்றார் கர்க்கர். “நான் எங்கும் நிலைத்து வாழ விழையவில்லை” என்றான் அர்ஜுனன். “தங்கள் நகருக்கு இவளை அழைத்துச் செல்ல இயலாது, இல்லையா பாண்டவரே?” என்று முதுநாகர் ஒருவர் சொன்னார். “நாங்கள் மானுடர் அல்ல. மானுட இல்லங்களிலும் தெருக்களிலும் எங்களால வாழ முடிவதில்லை. அவை நேரானவை. எங்கள் உடல்களோ நீரலைகள் போல் நெளிவுகொண்டவை.”

அர்ஜுனன் “ஆம், அதை அறிவேன்” என்றான். கௌரவ்யர் அவ்வுரையாடலை விரும்பாதவராக தனக்குப் பின்னால் நின்ற பெண்டிரை நோக்கி “மணநிகழ்வு முடிந்துள்ளது. பலிகொடை நிகழலாமே” என்றார். அவர்கள் தலைவணங்கி விலகினர். கர்க்கரிடம் “பலிகொடைகள் முடிந்தபின்னர்தான் ஊண்களி. இளையோர் எத்தனைநேரம்தான் காத்திருப்பார்கள்?” என்றபின் அர்ஜுனனை நோக்கி விழி மலராது உதடுகள் விரிய புன்னகைசெய்தார்.

ஏழு குகைவாயில்கள் எழுந்த மலைச்சரிவுக்கு முன்னால் பெரிய அரைவட்டமென நாகர்கள் இடம்விட்டு விலகி நின்றார்கள். அங்கு உயிர்ப்பலி நிகழப்போகிறது என்று அர்ஜுனன் எண்ணினான். ஆனால் பலிபீடம் எதுவும் அங்கிருக்கவில்லை. அடிமரம் தறித்த பலிபீடங்களைக் கொண்டுவந்து வைப்பார்கள் என்று எண்ணியிருக்க, இளையநாகர்கள் காட்டில் கண்ணியிட்டுப் பிடித்த ஆடுகளுடனும் மான்களுடனும் வரத்தொடங்கினர். இழுத்துவரப்பட்ட ஆடுகள் கால்களை ஊன்றி நின்று கழுத்தை பிதுங்க நீட்டி கமறலோசை இட்டன. மான்கள் விழியுருள திகைத்து நின்று கழுத்துச் சரடு இழுபடும்போது துள்ளி முன்னால் பாய்ந்து வட்டமடித்து மீண்டும் காலூன்றின. கால்களைப் பரப்பி நின்று உடல் சிலிர்த்து தும்மல் ஒலி எழுப்பின.

காதுகளைக் கோட்டி அங்கிருந்த கூட்டத்தையும் ஒலியையும் பார்த்த மானொன்று பாளை கிழிபடும் ஒலியில் கனைத்து துள்ளி தன்னைக் கட்டியிருந்த கொடிச்சரடை இழுத்தபடி காற்றில் எம்பிப் பாய்ந்து அவ்விசையில் நிலையழிந்து தலைகீழாகி உடல் அறைபட நிலத்தில் விழுந்தது. ஆடுகள் தங்கள் கழுத்துகள் சரடால் கட்டப்பட்டிருப்பதை புரிந்துகொண்டன. மான்கள் சரடு என்பதையே அறியாதவை என துள்ளிச் சுழன்றன.

அரைவட்ட வெளியில் ஏழு தறிகள் அறையப்பட்டு அவற்றில் ஆடுகள் கட்டப்பட்டன. அவை இழுத்து திரும்பி தாங்கள் வந்த வழியை நோக்கி குரலெழுப்பிக் கொண்டிருந்தன. கொண்டு சென்று கட்டப்பட்ட மான்கள் கால்பரப்பி நின்று கல்விழுந்த நீர்ப்படலம் என உடல் அதிர்ந்தன. அவற்றின் உடலில் முரசுமுழக்கத்தின் ஒவ்வொரு அதிர்வையும் காணமுடிந்தது. சட்டென்று அம்பு என மண்ணில் இருந்து தாவி எழுந்து கயிறு இழுக்க சுழன்று நிலம் அறைந்து விழுந்து குளம்புகளை உதைத்து திரும்பி எழுந்தது ஒரு மான். குறிய வாலை விடைத்தபடி சிறுநீர் கழித்தது.

அர்ஜுனன் அங்கு என்ன நிகழப் போகிறது என நோக்கிக் கொண்டிருந்தான். கூடி இருந்தவர்களின் முகங்களில் மெல்ல குடியேறிய அச்சத்தை கண்டான். கௌரவ்யர் கைகாட்ட முழவுகள் ஓய்ந்தன. பெருமுரசின் தோல் விம்மி மீட்டி மெல்ல ஒலியின்மையில் அமிழ்ந்தது. இரு வெள்ளாடுகள் குறுகிய வால்களை விரைந்து அசைத்தபடி சிறுநீர் கழித்தன. அதை நோக்கிய பிற ஆடுகளும் சிறுநீர் கழித்து புழுக்கை இட்டன. சில ஆடுகள் மூக்கை சுளித்து அந்த மணத்தை கூர்ந்தன. ஆடுகள் அச்சம் கொள்ளவில்லை, மான்கள் நுணுக்கமாக எதையோ உணர்ந்துகொண்டு கடுங்குளிரில் நிற்பவை போல சிலிர்த்து அசையாது நின்றன.

மான்களின் தலையில் இருந்த மாறுபாட்டை அப்போதுதான் அவன் நோக்கினான். அவற்றின் கொம்புகள் ஒட்ட வெட்டப்பட்டிருந்தன. ஆடுகளின் கொம்புகளும் சீவப்பட்டிருந்தன. பலிநிகழ்வு தொடங்குவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள் என்றும் தோன்றியது. பூசாரிக்காகவா, அல்லது நற்பொழுதுக்காகவா? அவன் மீண்டும் அந்த முகங்களை நோக்கினான். அவர்கள் அனைவரும் அங்கு நிகழப்போவதை அறிந்திருந்தனர்.

கைகளைக் கூப்பியபடி குகை வாயில்களை நோக்கி கௌவரவ்யர் நின்றிருந்தார். கர்க்கர் மறு எல்லையில் நின்ற எவருக்கோ கையசைத்து ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தார். கூடி நின்ற அனைவரும் எதிர்பார்ப்பின் திசையில் உடல் இறுகி காலம் செல்லச் செல்ல மெல்ல கைகள் தளர்ந்த இடைவளைத்து நின்றனர். அப்பால் நாணல் வெளியில் காற்று கடந்து செல்லும் நீரோசை கேட்டது. தொலைவில் காட்டுக்குள் கருமந்திகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன.

மெல்லிய மின்னல் துடித்தணைய அத்தனை முகங்களும் ஒளிகொண்டன. கீழ்ச்சரிவில் எரிந்தணைந்த மரங்களுக்குப் பின்னால் இடியோசை அதிர்ந்தது. யாருக்காக காத்திருக்கிறார்கள்? அந்த மலைக்குவைகளுக்குள் இருந்து எவரோ வரப்போகிறார்கள் என்று அத்தனை நோக்குகளும் காட்டின. மலைக்குகைகளில் வாழும் முனிவர்களா?

பெரும் துருத்தி ஒன்றின் ஒலிபோல சீறல் ஓசை கேட்டு ஒட்டுமொத்த அச்ச ஒலியுடன் அனைவரும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டனர். ஒற்றை உடற்சரடென ஆகி விழிகள் தெறித்துவிடுவதைப் போல குகைவாயிலை நோக்கினர். முதற்குகைக்குள் இரு மணிவிழிகளை அர்ஜுனன் கண்டான். நடுவே ஒரு முகம் உருவாகிவந்தது. வெண்பற்கள் வளைந்த வாயென ஆகியது. பழுத்த கலத்தில் நீர் சொரிந்தது போல் மூச்சொலி எழுந்தது.

அங்கு பேருருவ முதலை ஒன்று இருப்பதாக தோன்றியது. மெல்ல அம்முகம் குகையிலிருந்து நீண்டு வெளிவந்தபோது அது உடும்பு என்று தோன்றியது. அதன் நாக்கு இரட்டைச் சாட்டை என விசிறப்பட்டு காற்றில் துடிதுடித்து பின்னிழுக்கப்பட்டது. அத்தனை பெரிய உடும்பா என்று அவன் எண்ணியது முடிவடைவதற்குள்ளே அந்த முகம் கொண்டுவந்த உடல் வளைந்து தெரிந்தது. வெண்கலநாணயங்களை அடுக்கியதுபோல செதில்கள் பரவிய பாம்புடல்.

பொதியிழுபடும் ஒலியுடன் வாய் திறந்து நீரோடை என வளைந்து வந்த மாநாகம் அங்கே கட்டப்பட்டிருந்த முதல் ஆட்டை பாய்ந்து கவ்வியது. இழுத்து சரடை அறுத்து வாய்க்குள் தூக்கி இருமுறை உதறி தலைகீழாக்கி விழுங்கியது. கைக்குழந்தை போன்ற அலறல் ஒலியுடன் ஆட்டின் தலை பாம்பின் வாய்க்குள் நுழைய அதன் இரு பின்னங்கால்களும் உதைத்தபடி அதிர்ந்தன. சேற்றுக்குழியில் மூழ்கி மறைவது போல ஆடு அதன் வாய்க்குள் புகுந்தது.

வெறித்த நாகவிழிகள் அச்சுவை இன்பத்தில் மதம்கொண்டதுபோல் தோன்றின. பாம்பின் வாய்மூட நாவு வெளிவந்து அலையடித்து மீண்டது. அதன் உடல்நெளிவுக்குள் மெல்ல புடைத்து இறுகி அசைந்தபடி ஆடு உள்ளே செல்வதை காணமுடிந்தது. சினம் கொண்ட மல்லனின் புயம் என இறுகி வளைந்து அந்தப் பாம்பு திரும்புவதற்குள் இன்னொரு குகையிலிருந்து அதைவிடப் பெரிய நாகம் ஒன்று தலைநீட்டி சீறி பின்பு வளைந்தோடி வந்தது.

ஏழு குகைகளில் இருந்தும் மாநாகங்கள் எழுந்தன. மானுட உடலளவுக்கே பெரியவை. அடிமரங்களைப்போல, காளான் படர்ந்த கரும்பாறைகள் போல, பாசிவழுக்கும் அடிப்படகுகள் போல பேருடல்கள். மேலிருந்த குகைகளில் இருந்து கரிய அருவி போல வழிந்து ஓசையுடன் தரையை அறைந்து விழுந்து வாய் திறந்து வளைந்த பின்பற்களைக் காட்டி சீறியது ஒன்று. அது பாறையைக் கடக்கும் ஓடையின் சிற்றலை என எழுந்து மானை கவ்விக்கொண்டது. அதன் மேலேயே அடுத்த நாகம் வந்து விழ இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று பின்னி முறுக்கி மரத்தடிகள் உரசிக்கொள்ளும் ஒலியுடன் திளைத்தன.

நாக உடல்கள் சேற்றுச்சுழி என அசைந்தன. உருவி மேலே வந்து இன்னொரு ஆட்டை கவ்விக்கொண்டது கரிய மாநாகம். குகைக்குள்ளிருந்து மேலும் மேலும் என நாகங்கள் வந்துகொண்டிருந்தன. இருபக்கமும் நிரைவகுத்த நாகர் குலத்து இளைஞர்கள் மான்களையும் ஆடுகளையும் இழுத்துக்கொண்டு வந்தனர். அவற்றின் கால்களைப் பற்றித் தூக்கி நெளியும் நாகங்களின் உடல்களின் பரப்பை நோக்கி வீசினர். அவை நிலம் தொடுவதற்குள்ளே பொங்கிய தலைகளின் வாய்களால் கவ்வப்பட்டு மறைந்தன. கருந்தழல்களின் நெளிவை நோக்கி வீசப்படும் அவிப்பொருட்கள்.

ஏரி மதகு என திறந்த ஏழு குகைகளில் இருந்தும் மேலும் மேலும் கரிய நாகங்கள் பீரிட்டு வந்துகொண்டிருந்தன. உயிர்கொண்ட ஆலமரத்து வேர்களென, மலைவேழத்து துதிக்கைகள் என, உருகி வழியும் கரும்பாறைகளென. விழித்த நோக்கும் திறந்த செவ்வாய்களுமாக அவை இரைகளை நோக்கி வந்தன. மான்களும் ஆடுகளும் அவற்றுக்கு முன் செயலற்று அசையாது காலூன்றி நின்றன. அவற்றின் தோல் முடிப் பரப்புகள் மட்டும் விதிர்த்துக்கொண்டிருந்தன. பெரிய ஆட்டுக்கிடா ஒன்றை கவ்விய மாநாகம் ஒன்று அதைத் தூக்கி வானில் வீசி கவ்விப் பிடித்து ஒருமுறை உதறி விழுங்கியது.

நோக்கி நிற்கையில் மான்களும் ஆடுகளும் அஞ்சி வளைக்குள் ஓடி மறையும் எலிகள் போல அவ்வாய்களுக்குள் செல்வதாகத் தோன்றியது. இரு நிரைகளாக கொண்டுவரப்பட்ட ஆடுகளும் மான்களும் வரும் விரைவு குறைந்தபடி வந்தது. மறுபக்கம் குகைகளுக்குள்ளிருந்து அரவங்கள் எழுந்து வரும் விரைவு மேலும் கூடியது. ஒன்றன் மேல் ஒன்றென விழுந்து உடல்நெளித்து சீறி எழுந்து தலைதூக்கிய நாகங்கள் நூறு தலைகள் எழுந்த கால்களற்ற பாதாள விலங்கு என தோன்றின.

சினம் கொண்டு தலைசொடுக்கி நிலத்தை அறைந்து புரண்டது ஒரு நாகம். தன் மேலேறிய ஒரு நாகத்தை நோக்கி அது சீறித் திரும்பியபோது இரு நாகங்களும் ஒன்றை ஒன்று நோக்கி சீறி நாபறக்க மெல்ல அசைந்தாடின. பின்பு மத்தகம் முட்டும் களிறுகளின் சமர்முதல்கணம் போல ஓசையுடன் அவை ஒன்றை ஒன்று அறைந்து பின்னி முறுக்கி எழுந்து விழுந்தன. மேலிருந்து விழுந்த நாகங்கள் கீழே இருந்த நாகக் குவியலில் விழுந்து வளைந்து தலை தூக்கி ஆடின.

கௌரவ்யர் பதறும் கைகளுடன் “எங்கே?” என்று கேட்க, கர்க்கர் ஓடி முன்னால் சென்று எம்பிக் குதித்து கைவீசி “என்ன செய்கிறீர்கள்? கொண்டு வாருங்கள்” என்றார். மறு எல்லையில் இருந்து எவரோ “இனி இல்லை” என கூவினார்கள். கர்க்கர் “இனி கொடைவிலங்குகள் இல்லை அரசே” என்றார். கௌரவ்யர் தன் தலைமுடியை கைளால் பற்றியபடி “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “இனி விலங்குகள் இல்லை” என்றார் கர்க்கர். “எஞ்சிய அனைத்தையும் கொண்டு வாருங்கள்” என்றார் கௌரவ்யர். மூன்று ஆடுகள் மட்டும் எஞ்சியிருக்கின்றன” என்று ஒருவன் கூவினான்.

இளையோர் மூன்று சிறிய ஆடுகளை கால்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு ஓடி வந்தனர். அதற்குள் கரிய நாகம் ஒன்று அங்கே நின்றவர்களை நோக்கி தன் நீர்த்துளிக்கண்களை விழித்து நாக்குசீறி வளைந்து நீண்டு வரத்தொடங்கியது. ஆவல் கொண்ட கை என அது அணுக அலறியபடி நாகர்கள் பின்னால் ஓடினர். ஆடுகளை நாகக்குவியலை நோக்கி வீசியபோது ஒரேசமயம் பல தலைகள் எழுந்து ஒன்றுடன் ஒன்று முட்டி விழுந்தன. ஆடுகளின் தலையையும் உடலையும் வெவ்வேறு நாகங்கள் கவ்வ அவை இரண்டாகக் கிழிந்து குருதியுடன் குடல் தெறிக்க குளம்புகள் அப்போதும் துடிதுடித்துக்கொண்டிருக்க வாய்களுக்குள் மறைந்தன.

தன்மேல் குவிந்த பெருநாகங்களை விலக்கி எழுந்த மாபெரும் நாகம் ஒன்று கடலலையென பத்தி விரித்தபடி சீறி அருகணைந்தது. நாகர்குல முதியவர் தங்கள் மொழியில் உரக்கக்கூவியபடி கைகளை விரித்து மறுபக்கம் ஓடினார். கௌரவ்யர் அவர்களை நோக்கி அச்சமும் சினமும் கொண்டு ஏதோ கூவி தன் கோலை அடிப்பதற்காக ஓங்கினார். அத்தனைபேரும் அஞ்சி கூச்சலிடத் தொடங்கினர். முதியவர் ஏதோ சொல்ல பெண்கள் அலறியபடி வேண்டாம் என்று கைநீட்டி கதறினர். குழந்தைகள் அவர்களைப்பற்றியபடி கதறியழுதன.

கைகளில் சிறிய கத்திகளுடன் ஏழு இளநாகர்கள் ஓடி முன்னால் வந்தனர். முதலில் வந்தவன் அவ்விரைவிலேயே சென்று நாகங்களுக்கு முன் முழந்தாளிட்டு அமர்ந்து தன் கையில் இருந்த கத்தியால் கழுத்துக் குழாயைக் கிழித்தான். மூச்சு குருதித்துளியுடன் சீறித் தெறிக்க கைகள் விடைத்து நீண்டு அதிர குப்புற மண்ணில் விழுந்தான். அவனுக்குப் பின்னால் வந்த நாகனும் தன் கழுத்தை அறுத்து அவனருகே விழுந்தான். நிரைநிரையாக எழுவரும் தங்களை கழுத்தறுத்துக்கொண்டு நாகங்களுக்கு முன் விழுந்தனர்.

நாகங்களின் நெளிவுகள் அசைவமைந்தன. பெருநாகம் எழுந்து வந்து அவர்களில் ஒருவனை கவ்வித் தூக்கி விழுங்கியது. அப்போதும் துடித்துக்கொண்டிருந்த கால்கள் நீண்டு முழங்கால்தசை இழுபட்டு கட்டைவிரல் காற்றில் சுழித்தது. எழுவரையும் ஏழு நாகங்கள் விழுங்கின. ஒரு நாகம் முன்னால் வந்து பத்தி எழுப்பி அசையாது நின்றது. அதன் பத்தியின் வளைவில் கூழாங்கற்கள் அடுக்கப்பட்டது போலிருந்த பரப்பில் பந்தங்களின் ஒளி தெரிந்தது. குனிந்து மூன்றுமுறை தரையை முத்தமிட்ட பின் அது திரும்பி குகை நோக்கிச் சென்றது.

ஒவ்வொரு நாகமாக எழுந்து நெளிந்து குகைக்குள் மறைந்தது. குகை வாயில்கள் பிறிதொரு பெருநாகத்தின் வாயிலென தெரிந்தன. இறுதியாக தரையில் கிடந்த நாகம் தலைதூக்கி பந்த ஒளி தெரிந்த விழிகளுடன் வாய்திறந்து நாக்கை பறக்கவிட்டது. உள்ளிருந்து ஒரு சரடால் கட்டி இழுக்கப்பட்டது போல மெல்ல திரும்பிச் சென்றது. அங்கு வந்ததிலேயே பெரிய நாகம் அதுதான் என அர்ஜுனன் எண்ணினான். சீரான காலடிகளுடன் கவசங்கள் மின்ன ஒரு காலாட்படை வளைந்து திரும்பிச் செல்வதுபோல் தோன்றியது.

அது குகைக்குள் ஏறி நுழைந்து மறைந்த அக்கணமே அங்கு நிகழ்ந்தவை நம்பமுடியாத சூதர்கதையாக மாறின. விழிமயக்காக கண்களுக்குள் எஞ்சின. இல்லை என்பதைப்போல் அதன் வால்நெளிவு இறுதியாக துடிதுடித்து உள்ளே சென்றது. வாயென மாறிய குகைகளின் நாக்கு போல அது தெரிந்து நிழலோ என ஆகி இல்லை என்று மறைந்தது. குகைகள் இருண்ட சுழிகளாக மாறி அமைதிகொண்டன.

கூடிநின்ற நாகர்கள் ஒவ்வொருவராக உடல் தளர்ந்தனர். பெருமூச்சுகள் ஒலித்தன. கௌரவ்யர் சினம்கொண்டவர்போல தலையசைத்து கர்க்கரிடம் ஏதோ சொல்லிவிட்டு திரும்பிச் சென்றார். கர்க்கர் அர்ஜுனனை நோக்கி “இம்முறை நாகங்கள் பெரும் சினம் கொண்டிருந்தன இளைய பாண்டவரே” என்றார். அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “பலிபூஜைக்கு இங்கு வரும்போதெல்லாம் எம் குலத்திலிருந்து ஒரு பலி வாங்காமல் அவை திரும்பியதில்லை. ஆனால் எழுவரை பலிகொள்வது இதுவே முதல்முறை” என்றார் கர்க்கர்.

கர்க்கர் அர்ஜுனனிடம் "மணநிறைவுக்குப்பின் புலரி எழுவதுவரை உண்டாட்டு எங்கள் மரபு. உணவும் நாகமதுவும் நீட்டும் கைகள் சோர்வது வரை முடிவின்றி கிடைக்க வேண்டும் என்பது முறைமை. தங்கள் உணவு இங்கில்லை. தாங்கள் தங்கள் துணைவியுடன் மந்தணம்கொள்ளச் செல்லலாம். அங்கே அவளுடன் உணவருந்தலாம்" என்றார். அர்ஜுனன் தலையசைத்தான்.

நாகர்குலப் பெண்கள் எழுவரும் குலமூத்தவர் எழுவருமாக வந்து கௌரவ்யரை வணங்கி அழைத்துச்சென்று உண்டாட்டிற்காக முதல் உணவுக் குவை அருகே அமர்த்தினர். அதற்குப்பின் அக்குலத்து மூத்தவர்களும் அவர்களைத் தொடர்ந்து அமர்ந்தனர். முதுபெண்டிரும் பெண்களும் குழந்தைகளும் இறுதியாக இளையோரும் உணவுக்கு முன் அமர்ந்தனர். அதுவரை இருந்த அச்சநிலையில் இருந்து உணவு அவர்களை விடுவித்தது. மெல்ல பேசிக்கொள்ளத்தொடங்கி பின்னர் உவகைக்கூச்சல்கள் எழுப்பி அவ்விடத்தை நிறைத்தனர்.

மூன்று நாகினியர் அர்ஜுனனை அணுகி தலைவணங்கினர். ஒருத்தியின் கையில் மரத்தாலத்தில் ஏழு அகல்சுடர்கள் எரிந்தன. அதிலிருந்த மலர்களை எடுத்து அவன் தலை மேல் இட்டு “இன்பம் விடியும்வரை தொடர்க!” என்று வாழ்த்தினாள். இரு நாகினியர் உலூபியின் கைகளை பற்றிக்கொண்டு “செல்வோம்” என்றனர். உண்டாட்டிற்கு அமர்ந்திருந்த நாகர்குலத்தவரின் நடுவே நிரைவகுத்த பந்தங்களின் ஒளியில் அவர்கள் நடந்துசென்றனர். இருபக்கமும் உணவுக்கு முன் அமர்ந்திருந்த நாகர்கள் கை தூக்கி அவர்களை வாழ்த்தினர்.

எரிகுளத்து விளக்கை மும்முறை சுற்றி வந்து வணங்கியபின் அங்கிருந்து விலகி நாணல் பூக்கள் இருளுக்குள் நுரை என அலையடித்த புல்வெளியில் நுழைந்தனர். சுடர் ஏந்திய பெண் முன்னால் நடக்க வழியில் அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. இருளுக்குள் மரங்களில் சேக்கேறியிருந்த பறவைகள் சுடர் கண்டதும் எழுந்து ஓசையிட்டன. கருமந்திக் குலம் ஒன்று உறுமல் ஒலியுடன் துயில் கலைந்து கிளைகள் வழியாக தாவிச் சென்றது.

ஒரு பெரிய மின்னலில் அர்ஜுனன் அந்த நாணல்வெளியை நோக்கினான். அதன் இடைவெளிகளிலெல்லாம் பல்லாயிரம் நாகங்கள் நெளிவதைக் கண்ட இருண்ட விழிக்குள் இருளே நெளிவுகளென நிறைந்திருந்தது. இடியோசை நாகப்பெருக்கென நெளிந்தது. விண் என விரிந்த காலம் நெளிந்தது. அவர்கள் மேல் குளிர்க்கற்றைகள் என மழை கொட்டத்தொடங்கியது.

பகுதி இரண்டு : அலையுலகு - 9

ஐராவதீகம் இருண்டு நிழலுருவக் கூம்புப்புற்றுக்களாக தெரிந்தது. மஞ்சள்நிற ஒளி எழுந்த அவற்றின் வாய்வட்டங்கள் இருளுக்குள் மிதக்கும் பொற்தாலங்கள் போல் நின்றன. “எங்கள் மூதாதையர்கள் இங்கு வரும்போது இவ்வில்லங்களில் மாநாகங்கள் வாழ்ந்திருந்தன. மூதாதையருக்கும் அவர்களுக்குமான ஆயிரம் ஆண்டு சமரில் நாங்கள் வென்றோம். இங்கு திரும்பி வருவதில்லை என்று மண்தொட்டு மும்முறை ஆணையிட்டு காட்டைக் கடந்து மலைக்குகைகளின் ஊடாகச் சென்று உள்ளே விரிந்த ஆயிரம் கிளைகொண்ட பிலத்தில் வாழ தொடங்கினர்” என்றார் கர்க்கர்.

“இன்று பெருநாகங்களின் அரசு ஒன்று அங்கு உள்ளது. அவர்கள் வாழ்ந்த புற்றில்லங்கள் ஆயிரத்தி எட்டு. அவற்றில் நானூற்றி இருபத்தொன்று புற்றில்லங்களில் மட்டுமே நாங்கள் வாழ்கிறோம். மற்ற புற்றில்லங்கள் பல இன்னும் எவரும் குடியேறாதவை” என்றாள் முதுநாகினி. விழிகள் திறக்காது இருளில் நின்ற ஒரு புற்றில்லத்தைச் சுட்டி “புதுமணம் கொண்டு வரும் இணை இல்லம் அமைக்க புதிய புற்றில்லம் ஒன்றை அவர்களுக்கு வழங்கும் வழக்கம் உள்ளது. தங்கள் முதற்கூடலை அவர்கள் அதற்குள் நிகழ்த்திக் கொள்ள வேண்டும். உங்கள் இருவருக்கும் என அரசரால் அளிக்கப்பெற்றது இப்புற்றில்லம்” என்றாள் நாகினி.

அர்ஜுனன் உலூபியின் கைபற்றி அவளுடன் நடந்து அந்தப் புற்றில்லத்தின் வாயிலை அடைந்தான். “இதற்குள் மானுடர் நுழைய இயலாது. ஏனென்றால் மானுட இல்லங்களைப்போல் வாயிலும் அறைகளும் கொண்டவை அல்ல இவை. எங்கள் மூதன்னையர் உங்களை எங்கள் குடிப்பிறந்தவர் என்று காட்டியிருப்பதனால் உங்களுக்கு இது அளிக்கப்படுகிறது” என்றாள் நாகினி. அர்ஜுனன் தலைவணங்கினான். அகல்சுடர் ஒன்றை உலூபியிடம் அளித்து “இன்பம் விளைக!” என்று வாழ்த்தி அவள் விலகிச்சென்றாள்.

கையில் அகல்சுடரின் ஒளியுடன் நாகினியர் விலகிச் செல்வதைக் கண்ட உலூபி திரும்பி அவனை நோக்கி புன்னகைத்து “வருக!” என்றாள். அர்ஜுனன் “பாம்புடல் கொள்ளாது இவ்வில்லத்திற்குள் நுழைய முடியாது என்றே எண்ணுகிறேன்” என்றான். “ஆம்” என்று உலூபி சொன்னாள். சுடர் விரித்த செவ்வொளியில் அவள் கன்னங்களும் கழுத்தும் பொன் என சுடர்ந்தன. “ஆனால் காமம் கொண்ட அனைத்து உயிர்களுமே நாகமாக மாறுகின்றன என்று எங்கள் குலக்கதைகள் சொல்கின்றன.”

தொலைதூரத்து மின்னல் ஒன்று அவள் முகத்தை ஒளியென அதிரச்செய்தது. அர்ஜுனன். “இதை நானே எண்ணியிருக்கிறேன். காமம் கொள்கையில் மானுடக்கைகள் பாம்புகளாக மாறி தழுவிக் கொள்கின்றன. காமம் ஆடும் இருவரை தொலைவிலிருந்து நோக்கினால் அரவுகள் பின்னி நெளிவது போல் தோன்றும்” என்றான். “மானுடர் முழுமையான காமத்தை அறிவதில்லை என்று எங்கள் குலப்பாடகர் சொல்வதுண்டு. தங்கள் காம விரைவின் உச்ச கணங்களில் ஓரிரு முறை அவர்கள் நாகமென ஆகி மீள்கிறார்கள். முற்றிலும் நாகமென்றாகி காமத்தை அறிவதற்கு நாக குலத்தில் பிறந்திருக்கவேண்டும்.”

அர்ஜுனன் “அல்லது நாகர் மகளை கொண்டிருக்க வேண்டும் அல்லவா?” என்றான். சிரித்தபடி அவள் அந்தப் புற்றில்லத்தின் அருகே சென்று அதன் கூம்பு வடிவ மடம்புகளில் ஒன்றில் கால் வைத்து மேலேறினாள். பின்பு அதன் வாய்க்குள் அகல்சுடரை இறக்கிவைத்தாள்.

நீரோசையுடன் மழைப்பெருக்கு வந்து அறைந்தபின்னர்தான் அர்ஜுனன் அதை மழை என்று அறிந்தான். அதற்குள் அவன் முற்றிலும் நனைந்து தாடியும் தலைமயிரும் நீர்த்தாரைகளில் பின்னி சொட்டிக்கொண்டிருக்கக் கண்டான். அர்ஜுனன் தயக்கத்துடன் அதை தொட்டான். எளிதில் உடைந்துவிடும் என்று விழிக்குச் சொன்ன அப்புற்று சுட்ட களிமண்ணால் ஆனது போல் அத்தனை உறுதியாக இருப்பதை கண்டான். “உறுதியானவை” என்றான்.

உலூபி “இவ்வில்லங்கள் உருவாகி யுகங்கள் கடந்துள்ளன என்கிறார்கள். இப்புவியில் நாகங்கள் உருவாவதற்கு முன்னரே சிதல்களால் இவை கட்டி எழுப்பப்பட்டுள்ளன. அன்று இப்புவியை ஆண்டவை சிதல்கள். இந்த ஒவ்வொரு இல்லமும் சிதல்களின் ஒவ்வொரு நகரம். சிதல்களை வென்று பெருநாகங்கள் இவற்றில் குடியேறி வாழ்ந்தன. அந்த யுகம் முடிந்த பின்பு எங்கள் மூதாதையர் இங்கு குடியேறினர். நாகர் குலத்திலேயே பன்னிரண்டாவது குடி மரபைச் சார்ந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு முன் பதினொரு குடி முறைகள் இங்கு பெற்று பெருகி வாழ்ந்து மறைந்துள்ளன” என்றாள்.

புற்றின் மடிப்புகளில் கைவைத்து ஏறியபோது தன் உடலின் மூட்டுக்கள் அனைத்தும் பொருத்து விட்டு விலகி நெகிழ்ந்திருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். கால்கள் அச்சாணி கழன்ற தேர்ச்சகடங்கள் போல் தனியாக அசைந்தன. கைகள் சாட்டைகள் போல வளைந்தன. பிடிநழுவி விழுந்துவிடுவோம் என்று தோன்றியபோது இரு கைகளாலும் புற்றுகளின் சிறிய மடம்புகளை இறுகப்பற்றிக் கொண்டான். “அந்த நாகமது என் உடலின் ஆற்றலை அழித்துவிட்டது” என்றான். “இல்லை. உங்கள் உடலை அது நெகிழ வைத்துள்ளது” என்றாள் உலூபி. அவளுடைய நீட்டிய கையைப் பற்றி உடலை புற்றுச் சுவருடன் ஒட்டி கால்களை உதைத்து நெளிந்து மேலேறினான். குழந்தையைப்போல் அவள் அவனை தூக்கிக் கொண்டாள்.

அகல்சுடரின் செவ்வொளி தூண்போல எழுந்த வாயில் வழியாக அவள் குனிந்து உள்ளே நோக்கி “இது நம் இல்லம்” என்றாள். அர்ஜுனன் அக்குரல் உள்ளிருந்து பலவாகப்பெருகி முழக்கம் சூழ்ந்து திரும்பி வருவதை கேட்டான். குனிந்து “இதுவா?” என கேட்டான். இதுவா இதுவா இதுவா எனக்கேட்டது புற்று. “இது உருவானபின் இதற்குள் எங்கள் குலத்தவர் எவரும் இதுவரை சென்றிருக்கவில்லை. நம் இல்லத்தை நாமே கண்டடைய வேண்டும் என்று குலம் ஆணையிட்டுள்ளது. இதற்குள் நம் மைந்தர்கள் பிறக்கும் அறைகளை நாம் அமைக்க வேண்டும். மழைக்க்காலத்தில் அவர்கள் உண்பதற்கான உணவை சேர்த்து வைக்கவேண்டும்.”

அர்ஜுனன் அதை நோக்கி “இதற்குள் எப்படி இறங்குவது?” என்றான். நூலேணியும் அதற்குள் செல்ல முடியுமென்று தோன்றவில்லை. ஒரு மனிதனின் உடலளவுக்கே இருந்த அத்துளை உள்ளிறங்கியபோதே புரியென்றாகி வளைந்து இருளுக்குள் சென்றது. உலூபி அவன் உள்ளத்தை அறிந்தது போல் “சரடோ நூலேணியோ இதற்குள் செல்வதற்கு உதவாது இளவரசே. அரவென்று ஆவதொன்றே வழி” என்றாள். பின்பு தன் கைகளை நீட்டி தலைகீழாக உள்ளே வழிந்திறங்கி அகல் விளக்கை தன் வாயால் கவ்வியபடி உள்ளே சென்றாள்.

அரவென்றே அவள் மாறிய விந்தையை நோக்கி புற்றின் விளிம்பைப் பற்றியபடி அவன் நின்றான். ஒளி உள்ளே சென்றதும் அப்பாதையின் வளைவை காணமுடிந்தது. ஓர் இடத்தில் கூட உடலை நேராக வைத்திருக்க அங்கு இடமில்லை என்று தெரிந்தது. செங்குத்தாக சுழன்றிறங்கிச்சென்ற அப்பாதையில் அவள் நீரோட்டமென சென்று முற்றிலும் மறைந்தாள். அவளுடன் சென்ற ஒளி பாதையின் வட்டத்திற்கு அப்பால் இருந்து மெல்ல கசிந்து தெரிந்தது. அவள் செல்லச் செல்ல அது தேய்ந்து மறைந்தது. “உலூபி!” என்று அவன் அழைத்தான். அக்குரல் உள்ளே எங்கெங்கோ தொட்டு ஒன்று பத்து நூறென பெருகி அவனை நோக்கி வந்தது.

வட்ட ஒளி முற்றிலும் மறைந்தது. அவள் உள்ளே எங்கோ விழுந்துவிட்டாள் என அவன் எண்ணினான். “உலூபி…” என்று உரக்க அழைத்தான். அந்த அச்சத்தையும் துயரையும் பன்மடங்கு பெருக்கி உலூபி உலூபி என்று வீரிட்டது புற்றில்லம். அதன் புரிப் பாதைகள் முற்றிலும் இருண்டன. அர்ஜுனன் “உலூபி” என மீண்டும் அழைத்தான். புற்று அவனை ஏளனம் செய்வது போல் உலூபி உலூபி உலூபி என்றது. இரு கைகளையும் நீட்டியபடி தலை கீழாக அப்புற்றுப் பாதைக்குள் தலைகீழாக அவன் இறங்கினான். கால்களை நெளித்து உடல் வளைத்து அதற்குள் தவழ்ந்து சென்றான்.

தன் உடல் முற்றிலும் நெகிழ்வு கொண்டிருப்பதை அப்போது உணர்ந்தான். இடையை தோள்களை முன்பெப்போதும் அறியாத அளவுக்கு வளைத்து செல்ல முடிந்தது. அந்நெளிவையே விசையென்றாக்கி முன்னால் சென்றான். அரவென உருக்கொண்டு ஏதோ ஆழ்கனவொன்றில் ஊழிக்காலங்கள் வாழ்ந்ததென ஒரு நினைவெழுந்தது. உடலெங்கும் ஆயிரம் கால்கள் எழுந்தது போல் தோன்றியது. கால்களையும் கைகளையும் இயக்காமல் உடல் நெளிவுகளின் ஊடாகவே செல்ல முடிந்தது. புரிவட்டப்பாதை சுழன்று சுழன்று மேலும் ஆழம் நோக்கி சென்றது. அது மூன்று கவர்களாக பிரிந்து சென்ற முனையை அடைந்ததும் அவன் தயங்கினான். வலப்பக்க வளை பாதையின் மறு எல்லையில் பொன்னிற ஒளி தெரிந்தது. காலை சூரியன் போல் அழகிய பொன்வட்டமாக அது துலக்கம் கொண்டது. அங்குதான் அவள் இருக்கிறாளெனறு அவன் உணர்ந்தான். அதை நோக்கி சென்றான்.

துளைப்பாதை முழுக்க பொன்னொளி ஊறிப்பரந்தது. ஒன்றிலிருந்து ஒன்றென பிரிந்து சென்ற அத்தனை வளைவுகளும் ஒளி ததும்பின. விழிகளை கூசாத மென்மிளிர்வு. மண்ணுக்குள் நெடுந்தூரம் இறங்கிவிட்டதை உணர்ந்தான். நெருங்க நெருங்க அவ்வொளி அகலாது அணுகாது எங்குமென நிறைந்திருந்தது. ஏழு கவர்களாக பிரிந்த சுழல்பாதையின் விளிம்பின் தொடக்கத்தில் அவன் நின்றிருந்தபோது மேலிருந்து விழுது போல் தொங்கி இறங்கி கை நீட்டி வந்த உலூபியை கண்டான். அவள் விழிகள் இமைப்பின்மை கொண்டு வெறித்திருந்தன. “உலூபி” என்று அவன் அழைத்தான். அவள் கைகள் நெளிந்து வந்து அவன் கைகளை பற்றிக் கொண்டன. “வருக!” என்று சீறும் ஒலியில் அவள் அழைத்தாள்.

“இந்த ஒளி எது?” என்று அவன் கேட்டான். “பொன்னொளி” என்றாள் உலூபி. “நாமிருக்கும் இது ஆடகப் பசும்பொன்னில் எழுந்த வளை.” கைகளால் வளையின் சுவர்களை தொட்டுப்பார்த்தான். உலோகத்தின் மென்மையும் தண்மையும் கொண்டிருந்தது. கை நகத்தால் கீறி எடுக்கும் அளவுக்கு மென்மையானதாக. “பொன்னா?” என்றான். “ஆம் எங்கள் புற்றில்லங்கள் அனைத்துமே ஆழத்தில் பொற்பரப்பில் சென்று முடிகின்றன” என்றாள் உலூபி. பொற்சிரிப்புடன் “இவை பொன் என்பதும் அங்கே மானுடரின் பெருநகரங்களில் இப்பசும்பொன் தெய்வங்களுக்கு நிகர் வைக்கப்படுகிறது என்பதும் சில காலம் முன்புதான் குலப்பாடகர் வழியாக எங்களுக்கு தெரியவந்தது” என்றாள்.

“எங்கு வைத்தாய் அச்சுடரை?” என்றான். “அனைத்து துளைப்பாதைகளுக்கும் ஒளி பரவும் இடம் என ஒன்றுள்ளது, அங்கு” என்றாள் உலூபி. “வருக!” என்று அவன் கைகளைப்பற்றி அழைத்துச் சென்றாள். அவள் உடல் நூறு நெளிவுகள் கொண்ட அரவென ஆவதைக் கண்டான். என் உடல் முற்றிலும் அரவென ஆகவில்லை. இயல்பான மூச்சுடன் நீரில் மீனென அவள் செல்லும்போது களைத்தும் உயிர்த்தும் நான் இடர்கொள்கிறேன். அரவுக்கு நெளிவு என்பது நீருக்கும் நெருப்புக்கும் அலையே இருத்தலென்பது போல. “அதோ…” என்று அவள் சொன்னாள். அங்கே துளைவழிகள் சென்று இணைந்து ஓர் அரைவட்டக் கூடத்தை அடைந்தன. ஒரு பொற்கலத்தின் உட்குடைவு போலிருந்தது அது. பொற்குமிழி ஒன்றின் உள் போல. அதன் வளைவுமையத்தில் இருந்த சிறு பிறையில் அந்த அகலை அவள் வைத்திருந்தாள். குழியாடியென அவ்வொளியை எதிரொளித்து அனைத்து சுழிப்பாதைகளுக்குள்ளும் செலுத்திக் கொண்டிருந்தது அவ்வறை.

உலூபி பளிங்குவளைவில் எண்ணைத்துளியென வழிந்து அங்கே சென்று அமர்ந்து திரும்பி கை நீட்டினாள். அவன் அவளைத்தொடர்ந்து சென்று அமர்ந்தான். பொன் உருகி துளித்த சொட்டு என இன்னமும் உலோகமாகாதவளாக அவள் அங்கு இருந்தாள். அவன் அணுக இரு கைகளையும் விரித்து அரவின் விழிகளுடன் புன்னகைத்தாள். தன் விழிகளும் அரவு விழிகளாக இமைப்பழிந்திருக்க வேண்டுமென்று அவன் உணர்ந்தான். அவளை அணுகி அவள் மேல் படர்ந்தான். இருவர் உடல்களும் ஒன்றோடொன்று தழுவி ஏழு முறுக்குகளாக இறுகப்பின்னிக் கொண்டன. சீறி அவள் முகத்தருகே எழுந்தான். அவளது மூச்சுச் சீறலை தன் முகத்தில் உணர்ந்தான். வாய் திறந்து சீறி வளைந்த நச்சுப்பற்களைக் காட்டி அவனைக் கவ்வ வந்தாள். அவன் அச்சம்கொண்டு விலகுவதற்குள் அவன் இதழ்களைக் கவ்வி நச்சுப்பற்களால் அவள் அவனை தீண்டினாள்.

குருதிக்குள் இரு கொதிக்கும் அமிலத்துளிகளென அந்நஞ்சு கலப்பதை அவன் உணர்ந்தான். உடலெங்கும் ஓடிய குருதி வெம்மை கொண்டு கொப்புளங்களாயிற்று. விழிகளுக்குள் செந்நிறக் குமிழிகள் வெடித்தன. உடலெங்கும் குமிழிகள் இணைந்த நுரை பரவிச்சென்றது. அவன் காதுகளில் அவள் “நாகமாகிவிட்டீர்கள்” என்றாள். “ஆம், நான் உன் நாகன்” என்று அவன் சொன்னான். உடலெங்கும் பல்லாயிரம் விற்களை இழுத்து ஏற்றபட்டிருந்த நாண்கள் ஒவ்வொன்றும் மெல்ல தளர்வதை அர்ஜுனன் உணர்ந்தான். கைவிரல்கள் மலர்களாயின. கொடிகளாயின கைகள். காற்றில் நெளியும் நீர்த்தாரையாயிற்று உடல். அவனுடன் சேர்ந்து நெளிந்தன அவள் உடல் கொண்ட மென்மைகள்.

தன் விரிநெஞ்சின் பாறைபரப்பு களிமண்ணாகி உருகும் அரக்கென்றாகி, கதுப்பு நுரைத்து குமிழி என்றாகி, முலைகளென உன்னுவதை உணர்ந்தான். அலையும் பொன்னிற நீர்வெளியில் சிறகு விரித்து நடனமிடும் மீனென்றானான். உள்ளுணர்ந்த மென்மைகள் அனைத்தும் நாணேறின. அம்பெனத்திரண்டு கூர் கொண்டன. எங்கோ பெருமுழக்கமென மணியோசை ஒன்று ஆம் ஆம் என்று உரைத்தது. பிறிதெங்கோ ஏன் ஏன் என்று ஏங்கியது மணிச்சங்கம். அப்பால் எங்கோ இனி இனி என தவித்தது குறுமுழவொன்று. தன் உடலுக்குள் நுழைந்து நெளிந்தாடும் அலைவென அவளை உணர்ந்தான். நீரலைகளை விழுங்குவதனால்தான் மீன் உடல் நெளிகிறது போலும். இது அவள் கொண்ட நடனம்.

பொன்னொளி பரவிய துளைப்பாதைகளுக்குள் புரியெனப்பின்னிய ஒற்றையுடலுடன் சென்றுகொண்டே இருந்தனர். உடல் கரத்தல், உடல் நீளல், உடல் மறத்தல், உடல் என இருத்தல், உடல் உதறி எழுதல் என அலையலையென நிகழ்ந்து நினைவாகின நெளிகணங்கள். பெண்ணுடல் கொண்ட ஆண் காமம். கரையிலாக் காமம் என்பது பெண்ணுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. இங்கு உடல்நெகிழ்ந்து பெண்ணென்றாகி ஆணென எழுந்த காமத்தை அறிகிறேன். சூழ்ந்த ஆவுடை மேல் சிவக்குறி. ஆற்றல் சுழியில் நின்ற ஆதன். தன்னை அவள் கைகள் சூழ்ந்து இறுக்குவதை உணர்ந்தான். கொழு கொம்பு மீது பசுங்கொடி. மூழ்கிய கட்டுமரத்தின் மேல் அலைநிழல் ஒளி.

அவனைச் சூழ்ந்து தன் அலை வடிவை அவனில் பதியவைத்து உட்கரந்தாள். பின்பு அவளின்றி தான் மட்டும் வட்டச்சுழல் பாதையில் நெளிந்து உருகி ஓடிக் கொண்டிருந்தான். ஒளிரும் பொன்னிறக் குருதியென அப்பாதைகளை நிறைத்தான். பின்பு அவ்வழிதலை நோக்கியபடி அப்பால் இருந்தான். எப்போதோ அங்கிருப்பதை அறியாதவனானான். மீண்டபோது இருக்கிறேன் எனும் முதற் தன்னுணர்வாக எழுந்தான். அக்குமிழிக்கு உள்ளே புன்னகையுடன் அவள் மிதந்தாள். பொன்னிற ஒளி சூழ்ந்த புரிசுழிப்பாதையின் ஒரு வளைவில் அலைகொண்டு படியச் செய்த நுரைப் படலமென வளைந்து கிடப்பதை உணர்ந்தான்.

வெண்பளிங்கில் ஒரு மயிரிழையென அவள் அருகே வந்தாள். கையூன்றி புரண்டு அவள் அருகே சென்று குனிந்து கவிந்தான். குழல் முகம் சரிய தாழ்ந்து அவள் இதழ்களில் முத்தமிட்டான். “நான் அறிந்ததை அள்ளவும் நினைவில் தேக்கவும் என்னிடம் சொற்களில்லை” என்றான். மயக்கு நிறைந்த விழிகளை அவனை நோக்கித்திருப்பி வெண்முத்து எயிற்றுநிரை தெரிந்த புன்னகை விரிய “என்ன?” என்று கேட்டாள். “என் உடல் பெண்ணாகியது. என் காமம் மும்மடங்கு ஆணாகியது. இரு திசைகளிலும் என் திகிரி முறுகி நிலைக்க ஓர் உச்சத்தில் அசைவிழந்தேன். அங்கு காலம் என ஒன்றிலாததை உணர்ந்தேன்” என்றான். அச்சொற்களை வாங்காதவளென அவள் புன்னகைத்தாள்.

அவன் அவள்மேல் எடை கவிந்து மென்தோள் வளைவில் முகம் புதைத்து “நீரென நெருப்பென நெளியாது இவ்வுலகை எவரும் அறிய இயலாது. வளைவுகளால் வட்டங்களால் புடவி சமைத்த கலைஞனின் ஆணை. நேர் என அகமும் ஆகமும் கொண்ட எவையும் இங்குள பேரழகை தொடுவதில்லை” என்றான். “உம்” என்று அவள் சொன்னாள். அவள் கைகள் அவன் முதுகை அணைத்து வருடின. அவன் கன்னத்தில் வியர்வை நனைந்த தாடியில் தன் முகத்தைப் புதைத்து மெல்ல அசைத்தபடி “நிறைவடைந்தீர்களா?” என்றாள். “ஆம், என் உள்ளறைகள் நிறையும்போது இறுதிக் காற்றும் வெளியேறியது, பிறிதொன்றிலாமை நிகழ்ந்தது. நிறைந்தபின் நான் ஒரு கலம் மட்டும் என்றானேன்” என்றான்.

“எத்தனை நெளிவுகள்!” என்றான். தன் உடல் தசைகளனைத்தையும் முடிச்சவிழச்செய்து தசைகளென மாறி அவள் மேல் எடையானான். “சுவை உணரும் நாக்கு நெளிந்தாக வேண்டும்.” அவள் “என்ன? என்று கேட்டாள். “தெரியவில்லை. பொருளற்ற சொற்கள். ஆனால் அவை எங்கிருந்தோ என்னில் நிகழ்கின்றன” என்றான். ஆழ்ந்த அன்னைக்குரலில் “துயிலுங்கள்” என்றாள் உலூபி. அவன் முதுகை நீவியபடி “துயில்க என் இனியவனே!” என்றாள்.

சுரங்கப் பாதைகளில் நீர் நிறைவது போல் அவன் சித்தமெங்கும் துயில் வந்து பெருகிக் கொண்டிருந்தது. எஞ்சிய பகுதிகளில் ஓடி தஞ்சம் கொண்ட மொழி இறுகி குமிழிகளென வெடித்தது. “ஆணென்றும் பெண்ணென்றும் ஆகி அறிவதென்ன? மெய்யறிதல் என்பது இரண்டுமாகி நின்றறிவதே. காமமோ ஞானமோ மாதொரு பாகனாக நில்லாமல் எதையும் அறியக்கூடுவதில்லை” என்றான். அவள் கை அவன் குழலுக்குள் நுழைந்து அளைந்தது. “துயில்க என் மைந்தா!” என்றாள்.

அர்ஜுனன் துயிலில் பேசுவதுபோல குழறல்மொழி கொண்டிருந்தான். “இன்றே அறிந்தேன், பெண்ணென இருப்பதன் பெருங்களியாட்டத்தை. இனி ஆணிலி வடிவெடுக்காது என்னால் உவகையை அடைய முடியாதென்று தோன்றுகிறது” என்றான். “மொழியறிவதற்கு முன்பே என்னிடம் நான் ஆணென்று உரைத்தனர். படைக்கலமெடுத்து என் கையில் அளித்தனர். வில்லோ வாளோ கதாயுதமோ இம்மண்ணில் உள்ள படைக்கலன்கள் அனைத்தும் ஆண்மை கொண்டவை. வெறும் ஆண்குறிகள் அவை. என் தசைகளை ஒவ்வொரு நாளும் இறுகச்செய்தேன். ஒவ்வொரு கணமும் பயின்று என் உடலை இறுக்கி ஆணென்றாக்கிக் கொண்டேன். இன்று இளகி முலைக்குமிழ்களைச் சூடி நெளிந்து வழிந்தபோது அறிந்தேன் நான் இழந்துவிட்டு வந்ததென்ன என்று. ஆணென்றும் பெண்ணென்றும் ஆகி ஆடும் களியாட்டுகளை நாடுகிறது என் உள்ளம். இனி இவ்வுடல் எனக்குரியதல்ல.”

அவன் சொற்களை அவள் கேட்டதாக தெரியவில்லை. இளந்தோள்களிலும் கழுத்தின் குழிகளிலும் குளிர்வியர்வை வழிய இமைகள் சரிந்து பாதி மூடிய விழிகளுடன் உடல் தளர்ந்து கிடந்தாள். தன் எடை அவளை அழுத்துவதாக உணர்ந்து மெல்ல சரிந்தபோது “ம்ம்” என முனகியபடி அவனை அணைத்துக் கொண்டாள். “என் எடை” என்று அவன் சொன்னபோது “எனக்கு வேண்டும்” என்றாள். “ஆம்” என்றான். அவள் கனவில் என கண்மூடி புன்னகைத்தாள். “நீ ஆணென உணர்ந்தாயா?” என்றான். பெருமூச்சுடன் “ஆம்” என்றாள். “உன் உடல் இறுகியதா? தசைகள் நாணேறினவா?” என்றான். அவள் விழிகளைத்திறந்தபோது அச்சொற்களை அவள் அப்போதுதான் பொருள் கொள்கிறாள் என்று தெரிந்தது. “என்ன?” என்றாள். “நீ ஆணென உணர்ந்தாயா?” என்றான்.

“ஆம்” என்றாள். “எங்கு?” என்று அவன் கேட்டான். “நினைவறிந்த நாள் முதல் பெண்ணென்று சொல்லி வளர்க்கப்பட்டேன். பெறுபவளென்று என்னை உணர்ந்தேன். இன்று இம்முயங்கலின் அலைகளில் எங்கோ புடைத்தெழுந்து அளிப்பவள் என நின்றேன்” என்றாள். அர்ஜுனன் “நான் அதை உணர்ந்தேன், பெற்றதனால் மட்டுமே நான் முழுமைகொண்டேன்” என்றான். “அதைப்பெற்று நான் பெண்ணானேன்.” இனிய பெருமூச்சுடன் சரிந்து அவளருகே மல்லாந்து படுத்து இருகைகளையும் தலைக்குப் பின்னால் வைத்துக் கொண்டான். புரண்டு அவன் மேல் ஒரு கையையும் காலையும் வைத்து தலைசரித்தாள். அவள் குழல் அவன் முகத்திலும் கழுத்திலும் பரவியது. அவன் மார்பில் முடிகளில் தன் முகம் அமர்த்தி உதடுகளால் அம்மென்மயிர்ப் பரவலை கவ்வி இழுத்தாள்.

“ஆணென்பதும் பெண்ணென்பதும் என்ன?” என்றான். “சக்தி சிவம் இப்புடவியென ஆகும்போது இரண்டாகின்றதா? அல்லது நாம் உணரும் மாயைதானா அது?” அவள் “நாகங்கள் பிறக்கையில் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை என்பார்கள். நாகமகவு வளர்ந்து தன்னை ஆணென்றோ பெண்ணென்றோ ஆக்கிக் கொள்கின்றது. ஆண் பெண்ணாவதோ பெண் ஆணாவதோ நாகங்களில் இயல்பே.” வான்நோக்கி தொடுக்கப்பட்ட அம்புகள் போல அவன் உள்ளத்தில் எழுந்த சொற்கள் விசை தீரும்வரை பரந்து பொருளின்மையை, பொருள்கொள்ளும் முடிவின்மையை, முடிவின்மையின் முதல் எல்லையைத் தொட்டு திரும்பி வந்து அவன் மீதே விழுந்து கொண்டிருந்தன.

“இரண்டின்மை” என்று அவன் சொன்னான். “இரண்டின்மையன்றி எதுவும் அதை தொட முடியாது என்று யாதவன் என்னிடம் சொன்னான். இரண்டும் என யோகத்தில் அமர முடியுமா? இரண்டிலியாகும் வழி ஒன்றுண்டா? இரண்டென ஆகி மானுடன் கொள்ளும் மாயங்கள். இரண்டழிந்து அவன் தன்னுள் உணரும் தடையின்மைகள் தெய்வங்களுக்குரியவை போலும். இரண்டுக்கும் நடுவே அசைவற்ற துலாமுள் அது. எழும் விரல் எஞ்சாத்தொலைவில் எட்டித் தொடும் புள்ளி. முடிவிலாக்காலமென அசையும் துலா. அசைவின்மைகொள்ளும்போது அதில் இன்மையென நின்றிருக்கிறது காலம்…”

தான் முன்னரே துயின்று விட்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ஒன்றுடன் ஒன்று இணையாத தனிச் சொற்களாக இருந்தது அகம். “நாகம் இரண்டின்மை. இரண்டுமானது. அதன் வால் ஆண்மை, சிவக்கத்திறந்த வாயோ பெண்மை. தன் வாலை தான் விழுங்கி தன்னுள் முழுமை கொள்கிறது. முற்றுச் சுழல். சுழிமைய வெறுமை. உண்டு தீரா விருந்து. தன்னை உண்பதைப்போல் தீராச் சுவை என்ன? தன்னுள் தான் நுழைந்து நிறைக்கும் வெளி என்ன? தன்னுள் நிறையும் வெளியை தானன்றி எது நிறைக்க ஒண்ணும்?” துயிலில் புதைந்து புதைந்து சென்ற இறுதிக் கணத்தில் விரிந்தோடி வந்து மண்டியிட்டு சிறு கத்தியால் கழுத்தறுத்து குப்புற விழுந்த இளைஞன் ஒருவனைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தமர்ந்து உடல் நடுங்கினான்.

அவள் கைகள் விலக விழித்து “என்ன?” என்றாள். “ஓர் இளையோன். அவனை நான் மிக அருகிலென கண்டேன். தன் கழுத்தை தான் அறுத்து உடல் துடித்து விழும்போது அவன் விழிகள் என்னை நோக்கின.” உலூபி “இன்று மூதாதையர்களுக்கு பலியானவர்களை சொல்கிறீர்களா?” என்றாள். “ஆம்” என்றான். “அது இங்கு வழக்கம்தான்” என்றாள். “இல்லை அதிலொருவன் என்னை உற்று நோக்கினான். அவன் விழிகளில் ஒரு சொல் இருந்தது.”

அவள் “படுத்துக் கொள்ளுங்கள்” என்றாள். அர்ஜுனன் உடலில் எஞ்சிய மெல்லிய அதிர்வுடன் அவளருகே படுத்துக் கொண்டான். “அவன் விழிகளை மிக அருகே என இப்போது கண்டேன். அவனை நான் முன்பே அறிவேன். முன்பெங்கோ கண்டிருக்கிறேன்” என்றான். “நாகர்களை நீங்கள் எங்கு கண்டிருக்க முடியும்?” என்றாள். “இல்லை, எங்கோ கண்டிருக்கிறேன். கழுத்து அறுபடுவதற்கு முந்தைய கணம் அவன் விழிகளில் வந்தது ஓர் அழைப்பு. அல்லது ஒரு விடை.” அர்ஜுனன் அக்கணத்தை அஞ்சி மீண்டும் அஞ்சி அஞ்சி அணுகி அவ்விழிகளை மிக அருகிலென கண்டான். “அல்லது விடைபெறல்” என்றான்.

பின்பு அதற்கு முந்தைய கணத்தை அவ்விழிகளில் இருந்து மீட்டெடுத்தான். “ஆம், அதுதான்” என்று வியந்தான். “அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான்.” புருவம் சுருக்கி “யார்?” என்று உலூபி கேட்டாள். “அவ்விளையோன். முந்தையநாள் முதலே என்னை அவன் கண்டிருக்கிறான். ஆனால் அக்கணத்திற்கு முந்தைய கணத்தில் அவன் என்னை அடையாளம் கண்டான். நான் யாரென அறிந்தான்.” உலூபி “யாரென?” என்று கேட்டாள். “அவன் அறிந்ததென்ன என்று தெய்வங்களே அறியும்” என்றான் அர்ஜுனன். “ஆனால் அதில் ஐயமில்லை, அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான். நான் இன்னமும் அவனை அறியவில்லை. எங்கோ… காலமடிப்புகளில் எங்கோ, எனக்காக அவன் காத்திருக்கிறான் போலும்.”

அவள் மெல்ல மேலெழுந்து அவனருகே வந்தாள். அவன் குழலுக்குள் கை செலுத்தி நீவி பின்னால் சென்று தலையைப் பற்றி தன் முலைக்கோடுகளுக்குள் வைத்தாள். அவன் காதுகளுக்குள் “துயிலுங்கள் காலை விழித்தெழுகையில் பிறிதொருவராக இருப்பீர்கள்” என்றாள். “இந்தப் பொற்கணம்… இது மீளாது. பிறிதொரு முறை இதை நான் அறியவும் போவதில்லை” என்றான் அர்ஜுனன். அவள் அவன் காதில் “ஆம், இத்தருணம் என்னுள் மைந்தனென முளைக்கும்” என்றாள். அவன் தலை தூக்கி நோக்கி “என்ன?” என்றான்.

“என் குலத்து நிமித்திகர் முன்பே சொல்லி இருக்கின்றனர், பொற்கணத்தில் துளிர்க்கும் மைந்தன் ஒருவனுக்கு அன்னையாவேன் என. நாகமணி போல் என்னுள் அவன் உறைந்திருக்கிறான். எண்கவர் களம் அமைத்து கல்லுருட்டிக் கணித்து அவன் பெயரையும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.” மெல்லிய இதயதுடிப்புடன் அர்ஜுனன் அவள் கையை பற்றினான். முகம் தூக்கி அவள் விழிகளை நோக்கினான். அதில் அந்த இமையா நோக்கு மறைந்திருந்தது. அன்னையெனக் கனிந்த கண்கள் சிறு குருவிச்சிறகுகளென சரிந்தன. அவனருகே குனிந்து “அவன் பெயர் அரவான்” என்றாள்.

பகுதி 3 : முதல்நடம் - 1

“கதைகளின் தெய்வமாகிய புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள் என்று முதுசூதர் பிருஹத்வர் எழுதிய காவியமாகிய ப்ரஸ்ன சம்ப்ரதீகம் சொல்கிறது” என்றாள் மாலினி. “ஒலியற்றவள். கதைகளுக்கு முன்பும் பின்பும் மட்டுமே அவள் இருப்பை உணர முடியும்.” சுபகை முடிந்த கதையின் மீட்டலில் இருந்து மெல்லிய உடலசைவு வழியாக மீண்டாள்.

“முதற்சொல் எழுகையிலேயே அவள் கதைகளுக்குள் புகுந்து கொள்கிறாள். கதைகளின் ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும் ஒவ்வொரு சொல்லுக்கு இடையிலும் அவள் இருக்கிறாள். நீள்மூச்சுகளாக விழிநீர்த் துளிகளாக பிறர் அறியா உவகைகளாக பொருள் கொள்ளா சொற்களாக எவரும் அறியா விழைவுகளாக. கதை முடிந்ததும் தன் ஆயிரம் கைகளை விரித்து பேருருவம் கொண்டு அவள் எழுகிறாள்” என்றாள் மாலினி. “எனவே ஒருபோதும் கதைகள் முடிந்ததும் விழி தூக்கி அவளை நோக்கலாகாது.”

“ஆம்” என்றாள் சுபகை. “கேளடி, அனைத்து கதைகளும் அவளை தவிர்ப்பதற்கான முயற்சிகளே. கங்கையைக் கடக்கும் ஒற்றைத் தோணிக்காரன் ஊன்துண்டுகளை எறிந்து பின்தொடரும் பசிகொண்ட முதலைகளை விலக்கிச் செல்வது போல சொற்களால் அவளை ஏமாற்றுகிறோம். மறுகரை அணைந்ததும் பாய்ந்தோடி விலகாதவர் தொடர்ந்து வரும் அவள் பசிக்கு இரையாக வேண்டியதுதான்.”

“இவ்வுலகில் சிம்மங்களால் உண்ணப்பட்டவர்களைவிட, நோயால் உண்ணப்பட்டவர்களைவிட, போர்களால் உண்ணப்பட்டவர்களை விட, ஊழால் உண்ணப்பட்டவர்களை விட கதைகளால் உண்ணப்பட்டவர்களே மிகுதி” என்று மாலினி தொடர்ந்தாள். “புராணிகை தன் முடிவிலா நீளம் கொண்ட மேலாடையால் இப்புவியை ஏழுமுறை சுற்றி வைத்திருக்கிறாள். பொருள் கைவிடா முதியவள் தன் முந்தானை முடிச்சில் இட்டு வைத்துள்ள சிறு பொன் நாணயமே இப்புவி என்கின்றனர் சூதர்.”

“அவள் என்றோ எதையோ தான் மறந்துவிடாமலிருக்க அம்முடிச்சை போட்டாள். பின்பு ஒவ்வொரு முறையும் அதை அவிழ்த்து எதன் பொருட்டு அது போடப்பட்டது என்று எண்ணி வியந்து திரும்ப முடிந்து கொள்கிறாள். மிக முதியவள். வெண்பட்டாடை அணிந்தவள். பழுத்து கனிந்த விழிகளும் பால் நுரையென அலையடிக்கும் கூந்தலும் மெலிந்து கூன் விழுந்த உடலும் நடுங்கும் கை விரல்களும் இறுக மூடிய உதடுகளும் கொண்டவள். இவ்வுலகில் அவளறியாதவை எதுவுமில்லை. எனவே இவ்வுலகில் உள்ள எவையும் அவளுக்கு ஒரு பொருட்டும் அல்ல.”

“தன் நீண்ட முதிய கைகளால் அவள் தொடும் கூழாங்கற்கள் விதை என வெடித்து முளையெழுந்து விழுதுகள் பரப்பி வான் நோக்கி பல்லாயிரம் நாவுகளை விரித்து படபடக்கின்றன. இம்மலைகளை அவள் தொட்டால் பாம்பு முட்டைகளென இவை உடைந்து பேருருவ நாகங்கள் விண்மீன்கள் என விழி சுடர, மழை முகில் என கரிய படம் விரிய எழும். வானளாவிய இப்புவியில் தன் நடுங்கும் கைகளால் ஒவ்வொரு கணமும் அவள் வருடிக் கொண்டிருக்கிறாள், தூங்கும் குழவியை தனித்த அன்னை என.”

“புராணிகையை மும்மூர்த்திகளும் அன்னையென எண்ணுகிறார்கள். அவள் அளிக்கும் இன்முலைப்பாலின்றி அவர்கள் ஆற்றல்கொண்டு ஆக்கி அளித்து அழிக்க முடியாது. அவள் கால்களைப் பணிந்து தேவர்கள் வழிபடுகிறார்கள். அவர்களின் பெருநிரை அவள் கொண்ட ஒற்றைச் சொல் முளைத்த காடே. அவள் வயிற்றில் பிறந்தவன் பிரம்மன். அவள் கருணை கொண்ட முலைகளில் எழுந்தவன் விஷ்ணு. சினம் கொண்டு சிவந்த அவள் விழிகளில் இருந்து வந்தவன் கனல்வண்ணன்.”

“புராணிகை நிகரற்ற பெருங்கருணை கொண்டவள். குனிந்து விழிநீர் சொட்டி இப்புவியில் தனித்து நெளியும் சிறு புழுவையும் தொட்டறிவாள். விண்ணுலாவும் கோள்களை களிப்பாவைகளென நோக்கி புன்னகைப்பாள். இங்குள ஒவ்வொன்றையும் குளிர்நீரெனத் தொட்டு ஏழுமுறை பெருக்குபவள் அவள். பொங்கும் பேரருவி என தான் தொட்ட அனைத்தையும் நுரை பெருகி எழுந்து நிறையச்செய்பவள். தளிரொடு மலர் கருக்கி பெருகிச்சூழும் காட்டுத்தீ போன்று பெருஞ்சினம் கொண்டவள். குளிர்ந்து பொழிந்து மூடும் பெருமழை அவள்.”

“புராணிகை ஒரு கையில் ஒரு போதும் வாடா தண்மலர் கொண்டவள். மறுகையில் விண்கொடி ஒளிவாள் ஏந்தி மலைகளை அரிந்து செல்பவள். புராணிகையை வணங்குபவனுக்கு துயரில்லை. சுவடிக் கட்டெடுத்து விரலோட்டி புரட்டுவதுபோல அவன் அறிந்து கடந்து செல்ல முடிவிலா உலகங்கள் உள்ளன. கடலடித் தளம் போல அவன் திறந்து நோக்குவதற்கு எண்ணிலடங்காத பொற்பேழைகள் காத்திருக்கின்றன. தன்னந்தனிமையில் நெஞ்சு தொட்டு விழி மயங்கி உவகை கொள்ள முதிரா இளங்கன்னிக்கு தீராபெருங்காதலன் நினைவு என இனியவை கோடி எழுகின்றன.”

“புராணிகையை அறிந்தவர்கள் இலையன்றி மலர் கொண்ட மரம் போன்றவர்கள். அவளைத் தொட்டவர்கள் புலரி படிந்த பனிமலைகள் போல் பொன்னாகிறார்கள். புராணிகையின் மைந்தர்களுக்கு மும்மூர்த்திகள் மூன்று இனிய சொற்களே. முப்பத்து மூன்று கோடி தேவர்கள் வெறும் எழுத்துகளே. மூவாயிரத்து.முப்பத்து மூன்று கோடி பாதாள தெய்வங்கள் அவ்வெழுத்துகளின் நிழல் வடிவங்களே. புராணிகை தனித்தவள். அவளைச் சூழ்ந்து பணிந்திருக்கிறது இப்புவி. படைத்த தெய்வங்களின் பெருவிழி அவள்.”

மாலினி சொல்லி நிறுத்தியதும் எங்கிருந்தோ என சுபகை விழித்து நீள் மூச்செறிந்தாள். இருவரும் அங்கிலாதவர்கள் போல் நெடு நேரம் அமர்ந்திருந்தனர். காட்டின் ஒலிகள் எழுந்து சூழ்ந்த கரிய வானில் விண்மீன்கள் அதிர்ந்து கொண்டிருந்தன. நிலவு தொலைவில் எங்கோ முகில் குவையொன்றுக்குள் ஒளிக்கசிவென தெரிந்தது. பிடியானை ஒன்று தன் மைந்தனுக்கு இட்ட ஆணையை சுபகை கேட்டாள். மைந்தன் ஆம் என்று உரைத்தபடி அன்னையை நோக்கி ஓடுவது தெரிந்தது.

இளங்காற்று கடந்து வந்து அவள் குழலை அள்ளி முதுகில் தெளித்த பின்பு சுழன்று சென்றது. அவர்கள் இருந்த மூங்கில் குடில் காற்றில் மெல்ல அசைந்தது. இரவெனும் ஒழுக்கில் அப்பாறை ஒரு படகென மிதந்து செல்வது போல. இரவெனும் கரிய பெருஞ்சுழி அப்பாறையை மையமாக்கி மெல்லச்சுழல்வது போல. மீண்டும் சிந்தனை. மீண்டும் பொருள் மயங்கி ஒலியாகி அவிதல். மீண்டும் என்னென்ன எண்ணங்கள் என வியத்தல். மீண்டும் ஒரு சொல்லில் எழுதல்…

துயின்றோமா என்று சுபகை வியந்தாள். துயிலிலெழும் இச்சித்திரங்கள் எங்குள்ளன? துயிலில் என்னைச்சூழ இருக்குமா அவ்வுலகு? இங்குள்ள அனைத்தையும் துயிலென வருடிச் செல்லும் மாயப்பட்டு துகில்பீலி. ஒவ்வொரு முறையும் அது அவளை பிறிதொன்றென காட்டுகிறது. துகில் விலகியதுமே ஒவ்வொன்றும் உருமாறி வருகிறது.

சுஜயனின் அலறல் கேட்டு இருவரும் ஒரே கணத்தில் விழித்தெழுந்தனர். “ஆ! நாகம்! நாகம்!” என்றபடி அவன் எழுந்து உடல் விதிர்க்க தன் சிறு மஞ்சத்தில் அமர்ந்து கூவினான். வாய் ஒருபக்கமாக கோணி ஒரு கை துடித்தது. “இளவரசே” என்றபடி மாலினி அவன் இடுப்பைச் சுற்றி தூக்கினாள். “ஆயிரம் பாம்புகள்! ஏழு பாம்புகள்!” என்று அவன் கூவினான். அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து  “பாம்புகள்! பாம்புகள்! நாகங்கள்! நாகங்கள்!” என்று அலறி அவளை பற்றிக்கொண்டான்.

“இளவரசே… இதோபாருங்கள் இளவரசே” என்று அழைத்து அவன் இரு கன்னங்களையும் மாறி மாறி தட்டினாள் சுபகை. பெருகி வழிந்த எச்சில் ஆடையிலும் மார்பிலும் பளபளக்க அவன் விழப்போவது போல் உடல் தளர்ந்தான். உடனே விழித்துக் கொண்டு பாய்ந்து சுபகையை கைகளாலும் கால்களாலும் இறுக்கிக் கொண்டு “பாம்புகள்!” என்றான். “எங்கே?” என்றாள் சுபகை. “ஏழு பாம்புகள்!” என்றான் சுஜயன். “தென்னை மரம் அளவுக்கு பெரியவை. அவை நெளிகின்றன.”

“இளவரசே, அவை கதைகளில் உள்ள பாம்புகள். இங்கு நாங்கள் மட்டும்தான் இருக்கிறோம்” என்றாள் சுபகை. “நீ இங்கிருந்தாயா?” என்றான் அவன். “ஆம்” என்றாள் சுபகை. “அங்கே பாம்புகளுக்குள் உன்னைப் பார்த்தேன்” என்றான் சுஜயன்.  ”எங்கு?” என்றாள் சுபகை. “அங்கே நீ…” என்றபின் அவளை விட்டுவிட்டு தலையை விலக்கி அவள் முகத்தை பார்த்தான். “விடு, என்னை விடு… விடு என்னை” என்றான். “இளவரசே” என அவள் கைநீட்ட “விடுடீ என்னை” என்று அவன் கால்களை உதறி அவள் தோள்களில் மாறி மாறி அடித்தான்.

அவள் இறக்கிவிட தரையில் நழுவி ஓடி மாலினிக்கு அருகே சென்று அவள் மடியில் அமர்ந்துகொண்டு தன் கையை வாயில் வைத்து ஏறிட்டு நோக்கினான். அவனது சிறு விழிகள் உருண்டு கொண்டிருப்பதை அவள் கண்டாள். குனிந்து “இளவரசே” என்றாள். “போ, என்னை தொடாதே” என்றான் அவன். “ஏன் இளவரசே? அஞ்சிவிட்டீர்களா?” என்றாள். “அருகில் வராதே” என்றான் சுஜயன். “ஏன்?” என்றாள். “நீ கெட்டவள்” என்றான்.

சுபகை கையை ஊன்றி மெல்ல அமர்ந்தபின் சிரிப்புடன் “இப்போதுதான் என்னை கண்டு கொண்டீர்களா?” என்றாள். சுஜயன் “நான் உன்னை அங்கே பார்த்தேன்” என்றான். “எங்கே?” என்றாள் அவள். “காட்டில்… உன்னைச்சுற்றி நிறைய பாம்புகள் இருந்தன.” மாலினியின் விழிகளை சுபகை சந்தித்து மீண்டாள். “அந்தக்காட்டில் உன்னுடன் அர்ஜுனர் இருந்தார்” என்றான்.

சுபகை திகைத்து மாலினியை நோக்கினாள். சுஜயன் கைநீட்டி “நீ ஏன் ஆடை அணியவில்லை அப்போது?” என்றான். மாலினி வாய்பொத்தி சிரித்தாள். சுபகை நெஞ்சு படபடத்து “என்ன கண்டீர்கள்?” என்றாள். “நீ ஆடை அணியவில்லை” என்றபின் சுஜயன் கை சுட்டி “உன்னுடைய மார்பில் இரண்டு சின்னக் குழந்தைகள்… மிகவும் சிறிய குழந்தைகள்…” என்றான். சற்றுத்திணறியபின் “பெரிய செம்புக்குடங்கள் போல” என்றான்.

“பார்த்திருக்கிறார்” என்றாள் மாலினி. சுஜயன் சுபகையிடம் “நீ கெட்டவள்” என்றான். மாலினி அவனைத் தூக்கி தன் மடியில் நீள படுக்க வைத்துக் கொண்டாள். அவன் தலை மயிரை மெல்ல நீவியபடி “நாம் அவளுடன் பேச வேண்டியதில்லை இளவரசே. நீ என்னிடம் எல்லாவற்றையும் சொல்லு” என்றாள். அவன் “ஏழு பாம்புகள்” என்றான். ”அவை ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு நெளிந்தன. அதன்பிறகு நான் அவற்றை வாளால் வாளால்...” என்று சொல்லி கையூன்றி எழுந்து “வாளால் அர்ஜுனரை ஒரே வெட்டு… நான்கு துண்டுகள்… அவை துடிதுடித்து…” என்றபின் திகைத்து திரும்பிப் படுத்து கால்களை முறுக்கிக் கொண்டு “நிறைய பாம்புகள். மால்யவான்! அந்தப்பாம்பை நான் பார்த்தேன். யானைப் பாம்பு” என்றான்.

அவன் தலையை வருடிக் கொண்டே மாலினி “ஏழாம் உலகிலிருந்து இன்னும் மீள்வதற்கு இயலவில்லை” என்றாள். உரக்க “உலூபி!” என்று சொன்ன சுஜயன் இரு முறை சப்புக் கொட்டி “பாம்புகள் வந்தன. நான் அவ்ற்றின் முன்னால்… நான் என் கழுத்தை அறுத்துக் கொண்டேன். அவை என்னை விழுங்கின. உள்ளே இருட்டாக இருந்தது. இருட்டுக்குள் நான் ஏழு மனிதர்களை பார்த்தேன். அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்” என்றான். “ஏன்?” என்றாள் மாலினி. “அவர்களைத்தான் பாம்பு விழுங்கி விட்டதே, அதனால்தான்” என்றான் சுஜயன்.

மெல்ல அவன் உடல்தசைகள் தளர்ந்தன. கைகள் பக்கவாட்டில் விழ தொண்டையொலியுடன் மூச்சு சீராக ஒலிக்கத்தொடங்கியது. புரியாத குழறலாக அவன் ஓரிரு சொற்களை சொன்னான். பின்பு கைகளை வாய்க்குள் செலுத்தி சப்பிக் கொண்டான். அவனை நோக்கியபின் “உடலை ஒடுக்கி புரளும் குழந்தை கருவறைக்குள் திரும்ப விழைகிறது. இப்புவியில் தன் இடத்தை அது கண்டடையவில்லை” என்றாள் மாலினி. ”உடல் நிமிர்த்தி கைநீட்டி துயிலும் குழந்தை தன் இடத்தை அடையாளம் கண்டுவிட்டது. அது முளைத்து விட்ட விதை போல. மேலும் மேலும் என விரிந்து வளர்ந்து இப்புவியை நிறைத்து விட விழைகிறது.”

மாலினி குனிந்து அவன் தலையை மெல்ல எடுத்து தரையில் தன்னருகே வைத்தாள். “இங்கேயே துயிலட்டும். மஞ்சத்தில் துயில்வது மட்டும் இளவரசர்களுக்குத் தெரிந்திருந்தால் போதாது. மண் தரையில் துயில்வதற்கும் தெரிந்தவனே அரசாள முடியும்” என்றாள். சுபகை “இளைய பாண்டவர் மஞ்சத்தில் துயின்றதைவிட மண்ணில் துயின்ற நாட்களே மிகுதி என்பார்கள் சூதர்” என்றாள். “ஆம் அவன் தீராப்பயணி. பயணிக்கு படுக்கை அமையாது என்பது முதுசொல்” என்றாள் மாலினி.

“நாகர் உலகிலிருந்து அவர் மணிபூரக உலகிற்குச் சென்றதாக கதை கூறுகிறது” என சுபகை சொன்னாள். “ஆம், தசபதரின் காவியத்தின் அடுத்த பகுதி அவரது மணிபூரக பயணத்தைப் பற்றித்தான்” என்றாள் மாலினி. “அரவான் பிறக்கும் காலம் வரை அவன் நாகர் உலகில் இருந்ததாக சொல்கிறார்கள். அரவான் பிறக்கும்போது ஆணென்றும் பெண்ணென்றும் ஆன உடல் கொண்டிருந்தான். அவனுக்கு அரவான் என்றும் அரவினி என்றும் இரு பெயர்களை அர்ஜுனன் சூட்டினான்.”

“மைந்தன் பிறந்து இருபத்தெட்டாவது நாளில் முதல் நாகவிஷத்துளி அவன் நாவில் வைக்கப்பட்டது. அன்று தன்துணைவியிடம் விடைபெற்று அக்காட்டிலிருந்து கிளம்பினான். கங்கைக் கரையோரமாக எழுந்து சென்ற பாதையில் நடந்து இமயப்பனிமலை நோக்கி சென்றான். அப்பயணத்தில் தன்னை ஒரு பெண்ணென அவன் ஆக்கிக் கொண்டான். மலைப்பெண்களின் ஆடையணிந்து நீள்கூந்தல் கொண்டையிட்டு மலர் சூடி பெண்ணென்று சில நாட்கள் சென்றான். பின்பு தோலாடை அணிந்து வில்லேந்தி ஆணென்று சில காலம்.”

“இமயமலை அடுக்குகளினூடாக அங்கு சந்தித்த மலைப்பயணிகளுடன் அவன் சென்றதாக சொல்லப்படுகிறது. இமய உச்சியில் வாழும் கின்னரருடனும் கிம்புருடருடனும் அவன் வாழ்ந்தான். விழியறியாமல் மறையும் கலையை கின்னரரிடம் கற்றான். சிறகிலாது பறக்கும் கலையை கிம்புருடரிடம் கற்றான். ஆனால் தனிமையில் பிறரை எண்ணி ஏங்காதிருக்கவும் பிறருடன் இருக்கையில் உள்ளத்தில் தனிமை கொள்ளாதிருக்கவும் பயின்றதே அவன் கற்ற கலைகளின் உச்சம் எனப்படுகிறது.”

“பாரத வர்ஷத்தின் வடக்கே இமயத்தை படிகளென ஆக்கி ஏறிச்சென்றால் முகில்களுக்குள் அமைந்த நாடுகள் உள்ளன. அங்கு பொன்னிற உடல் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். இறப்பற்றவர்கள். காலம் அவர்களை குறுகவே வைக்கிறது. வற்றி உலர்ந்து பருந்துபோலாகி பின் சிட்டுக்குருவியென்றாகி பின்னர் சிறகுள்ள பூச்சிகளாகி அங்கேயே அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மலைசரிவுகளில் நிழல் இழுபட பறந்திறங்கிச் செல்லும் கீழ்த்திசை நாடுகள் பல உள்ளன. அவை புராணங்களும் அறியாதநிலங்கள்.”

“கிழக்கத்திய மலை நாடுகளில் காமரூபத்துடன் பாரதவர்ஷம் முடிவடைகிறது என்பது சூதர் கணக்கு. காமரூபத்துக்கு மறுபக்கம் நீரும் நெருப்பும் ஒன்றேயான கீழைப்பெருங்காடுகள் உள்ளன. கால்களால் அணுகப்பட முடியாதவை அவை என்கின்றனர் சூதர். பறந்து செல்லும் கின்னரரும் கிம்புருடரும் மண்ணுக்குள் செல்லும் பெருநாகங்களும் மட்டுமே அணுகக் கூடியவை அந்நாடுகள் என சூதர்நூல்கள் பாடுகின்றன. ஆனால் வணிகர்கள் காமரூபத்துக்கு அப்பால் உள்ள நாடுகளுடன் இமயமலைமுடிகளின் பொன்னிற மக்கள் வணிகம் செய்வதாக சொல்கிறார்கள்.”

“அவர்களுடன் இணைந்து மலைச்சரிவுகளில் தோற்கூடாரங்களில் தங்கி நாட்கள் மாதங்களாக உருண்டு மறைய நாள்தோறும் நடந்து அர்ஜுனன் காமரூபத்தை அடைந்தான். காமரூபத்திற்கு அப்பால் இருபத்துநான்கு கீழ்நாகர் உலகங்கள். மணிபூரகம் நாகருலகிற்கு அப்பால் அமைந்திருந்தது” என்று மாலினி சொன்னாள். “இளையபாண்டவன் அங்கே சென்றுவந்தபின் இன்று அது அஸ்தினபுரியுடன் அணுக்கமான நாடாக உள்ளது. அங்கு அஸ்தினபுரியின் வணிகத்தூதர்களும் சொற்தூதர்களும் சென்று மீள்கிறார்கள்.”

“காமரூபத்துக்கு கிழக்கே எழுந்து செல்லும் பெருநிலத்தை சப்த சக்ர மகாதலம் என்று தாந்த்ரீக நூல்கள் வகுக்கின்றன. கரிய காட்டுமனிதர்கள் வாழும் நிலம் ஸ்ரீமூலம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கப்பால் பொன்னிற முகமும் பாம்பு விழிகளும் கொண்ட இருபத்துநான்கு குலத்து நாகர் வாழும் நாடு சுவாதிஷ்டானம். அதற்கப்பால் உள்ளது மணிபூரகம். அதற்கப்பால் அனாகதமும் விசுத்தியும் ஆக்ஞையும் உள்ளன.”

“அணுக முடியாத மலை உச்சியான ஸ்ரீசகஸ்ரம் தேவர்கள் மட்டுமே செல்லமுடிவது. பாரதவர்ஷத்தின்மீது எழும் சூரியன் முதலில் காலடி வைக்கும் இடம் அது என்கின்றன புராணங்கள். அதை கிழக்கு மேரு என்று நூல்கள் அழைக்கின்றன். சூரியனின் தோழரான அருணர் தன் பொன்னொளிர் பார்வையால் முதலில் தொட்டு பொற்குவையாக ஆக்கும் மலை அது. முன்பு ஸ்ரீசகஸ்ரத்தில் சூரியன் எழுவதைக் காண தேவர்கள் இருபுறமும் ஒவ்வொரு நாளும் கூடி அமர்வதுண்டு.”

“மணிபூரகம் அன்னை துர்க்கையின் நிலம். முன்பொரு நாள் கைலாயத்தில் தன் இல்லம் விட்டு எழுந்து கதவைத்திறந்த அன்னை காலையின் முதற்கதிர் பட்டு மரகதமணி என ஒளிர்ந்த பச்சைப் பெரும் பரப்பை கண்டாள். நந்தியிடம் “எவ்விடம் இது?” என்றாள். அது காலையொளி படும் பாரதவர்ஷத்தின் முடிமுனை என்று அறிந்தாள். மணிப்பச்சை செறிந்த் அதற்கு மணிபூரகம் என்று பெயரிட்டிருந்தார்கள் முனிவர். மணிபத்மையாகிய அன்னை அங்கே எழ விழைவுகொண்டாள்.”

“இல்லாள் என்றும் அன்னை என்றும் ஆன எந்தப் பெண்ணும் இளமைக்கு மீளும் நுண்கனவொன்றை உள்ளத்தில் மீட்டியிருப்பாள். அன்று காலை அந்த மண்ணில் ஒரு சிறு மகவென எழுந்து வாழ்ந்து மீள வேண்டுமென்று விழைவை அடைந்தாள் அம்பிகை. அவ்வண்ணமே முகில்களில் இறங்கி அம்மண்ணை அடைந்து அங்கு சிறு குழந்தையென கிடந்து அழுதாள்.”

“அப்பால் தன் வேட்டைத்துணைவருடன் யானை மீதேறி கானாடலுக்கு வந்த அரசன் சித்ரகர்ணன் அவ்வழுகையைகேட்டான். ஒளி முத்து போல் இலைக் குவை ஒன்றில் கிடந்து அழுத மகளை பாய்ந்து வந்து எடுத்து நெஞ்சோடணைத்துக் கொண்டான். தொப்புள் கொடியற்ற அக்குழவி தெய்வம் மானுட உருக்கொண்டதே என்றார் அமைச்சர். நம் இல்லத்தில் இவள் வளரட்டும், இவள் பேரருளால் இந்த மண் ஒளி கொள்ளட்டும் என்றான் அரசன்.

சித்ரகர்ணன் அரண்மனையில் தந்தையின் கைகளிலிருந்து ஒரு கணமும் இறங்காதவளாக துர்க்கை வளர்ந்தாள். வேதியரென வந்த நாரதர் அவளுக்கு ஜாதகர்மங்கள் செய்து மணிபத்மை என்று பெயரிட்டார். அவள் காணும் கண்களிலெல்லாம் கனவை நிறைத்தாள். பேரழகன்றி பிறிதொன்றிலாது வளர்ந்தாள். பொன்பூத்து கன்னியென்றானாள். அவளுக்கு மணவினை முதிர்ந்தபோது வெள்விடை ஒன்றின் மேலேறி, புலித்தோல் ஆடை அணிந்து வந்த வடபுலத்து மலைமகன் ஒருவன் அவளை மணம் கொண்டு சென்றான்.”

“தெய்வநிகர் உருக்கொண்டு தன் இல்லத்தில் எழுந்த மகளை மானுடர் எவரும் மணக்கலாகாது என்பதற்காக பன்னிரு பயிற்சிகளை அளித்திருந்தான் சித்ரகர்ணன். நீர்த்துளி மண்ணை தொடுமுன் ஒற்றை அம்பால் அதை ஏழு துளிகளாக்குதல். நீரிலாடும் அல்லி மலரிதழை நெடுக்காக வாளால் பிரித்தல். நிலவொளியை கதாயுதத்தால் சிதறடித்தல் என அவன் வகுத்த அத்தனை படைத்தொழில்களையும் வென்று குலமக்கள் அனைவரும் கூடி நின்று வாழ்த்த அவளை இடை வளைத்து தூக்கி தன் விடை மேல் ஏற்றி மலை மேல் எழுந்து மறைந்தான் மலைமகன்.”

“அந்திச்செம்மை மேல் ஏறி சூரியன் அணைந்ததுபோல் அவள் சென்றாள். அவள் இருந்த இடமெங்கும் பின்னர் பொன் பூத்தது. அவள் தொட்ட செடிகளெல்லாம் மலர் நிறைந்தன. அவளை நோக்கியவர் அனைவரும் தீராமங்கலம் கொண்டனர். அவள் வாழ்ந்த மண் பின்னர் செல்வம் ஒழியா கருவூலமாகியது. சித்ரகர்ணன் அவள் உருவை பொற்சிற்பமொன்றில் அமைத்து தன் அரண்மனை முகப்பில் ஆலயமொன்றை எழுப்பினான். அவளே அரசகுடியின் குலதெய்வமானாள். அன்றுமுதல் மணிபூரகம் அன்னை மணிபத்மையின் நிலமென்றே அறியப்படலாயிற்று.

பகுதி மூன்று : முதல்நடம் - 2

மணிபுரத்தின் எல்லைக்குள் நுழையும்போது அர்ஜுனன் ஃபால்குனை என்னும் பெண்ணாக இருந்தான். மலைகளினூடாக செய்யும் பயணத்தில் ஆண் என்றும் பெண் என்றும் உருவெடுக்கும் கலையை கற்று மிகத் தேர்ந்திருந்தான். உருமாறும் கலை என்பது வண்ணங்களோ வடிவங்களோ மாறுவதல்ல, அசைவுகள் மாறுவதே என அறிந்திருந்தான். விழிதொடும் முதல்அசைவு ஆண் என்றோ பெண் என்றோ நல்லவர் என்றோ தீயவர் என்றோ தம்மவர் என்றோ அயலவர் என்றோ சித்தத்திற்கு காட்டவேண்டும். அவ்வெண்ணத்தையே பார்ப்பவரின் சித்தம், பாக்கப்படுபவரின்மேல் ஏற்றிக் கொள்கிறது.

பெண்ணென்று ஆன உள்ளத்தை சூடிய அர்ஜுனன் ஆண் உடை அணிந்திருந்தாலும் ஆண் உருக்கொண்ட பெண் என்றே பார்ப்பவர்கள் எண்ணுவார்கள். வண்ணமும் வடிவமும் கொள்ளும்போது அவனை ஆணென எண்ணும் விழிகளே எதிர்வரவில்லை. பெண்ணுரு கொண்டிருக்கையில் பெண் என கனிந்திருந்தது அவன் உள்ளம். மகவொன்றை எடுத்து மார்போடு சேர்த்தால் முலை சுரந்து ஊட்டமுடிந்தவனானான். மலர்களையும், இன்னிசையையும் நாடினான். ஆண்களைக் கண்டு செல்ல நாணினான். அவைகளில் தயங்கினான். ஆனால் நாடிவரும் விழித் தொடுகைகளை விழைந்தான். காற்று தொடும் சுடர் என ஆண்களின் பார்வை அவன் உடலை நெளிய வைத்தது.

நேர்விழியால் ஒன்றையும், ஓர விழியால் பிறிதொன்றையும் காணக்கற்றான். ஓர விழி காண்பதே உண்மை என்று நம்பும் உளம் கொண்டான். தன் கைகளென்றே தன்னை உணர்ந்திருந்த ஆண்மகன் தன் உடலை எண்ணி எப்போதும் தவித்து நெளியும் கைகள் கொண்டவனான். ஆடை சீர்செய்தான். கூந்தல் இழை ஒதுக்கினான். கன்னத்தையும் கழுத்தையும் தொட்டு வருடி தன்னை அறிந்தான். விரல்களை ஒன்றுடன் ஒன்று பின்னி நாணினான். கையால் வாய்பொத்தி நகைத்தான். உளம் சென்று தொட்ட அனைத்தையும் விரல் நுனியால் மெல்லத் தொட்டு அறிய விழைந்தான்.

ஆண் என்று அவன் கண்ட உலகம் படைக்கலன் ஏந்தி அவனை அறைகூவல் விட்டு நின்ற ஒன்று. கிளைகளும் இலைகளும் மட்டுமன்றி தளிர்களும் மலர்களும்கூட கூர்கொண்டு எழுந்த வெளி அது. கொம்புகளும் பற்களும் குளம்புகளும் மட்டுமன்றி கனிந்த கரிய மூக்கும், கரு விழிகளும் நாக்கும்கூட எதிர்த்து நின்ற களம். பெண் என்று அவன் கண்ட உலகில் மெல்ல கை தொட்டபோது கரும்பாறை களிம்பாகியது. அடிமரம் அன்னையின் இடை என ஆயிற்று. கொம்பு குலுக்கி வரும் மதயானை கைநீட்டி வரும் குழந்தை என்று தோன்றியது.

இருவேறு உலகங்களை அறிந்தான். ஒன்று பிறிதொன்றின் மேல் முற்றிலும் கவிழ்ந்து கடந்து சென்றது. நீர் வலையை என ஒன்று பிறிதை அறியவில்லை. நீரில் ஒளி என ஒன்று பிறிதால் ஆனதாக இருந்தது. எதிரெதிர் ஆடிகளைப்போல் ஒன்று பிறிதை நோக்கி தன்னை பெருக்கிக்கொண்டது. காற்று முகில்களை அறிதலைப்போல் ஆண் பெண்ணை அறிந்தான். மழையை மண் என பெண் ஆணை அறிந்தாள்.

கீழ்நாகர்களின் குடிகளுக்கு இமயமலையின் பனிச்சரிவுகளிலிருந்து ஆயிரம் கழுதைகளில் பொதியேற்றி வந்திறங்கிய மலைவணிகர்களுடன் அவனும் இணைந்து கொண்டான். மலைச்சரிவு ஒன்றில் அமர்ந்து தங்கள் பொதிவிலங்குகளை அவிழ்த்துக் கட்டி, புற்சருகுகளை பிரித்துப்போட்டு, நீர் காட்டிவிட்டு மலைச்சரிவில் தோல் கூடாரங்களை கட்டினர் வணிகர். சிறுகொக்கித்தறிகளில் கட்டப்பட்ட கழுதைத் தோல்பைகளிலிருந்து உள் நாக்குக்குள் விடப்பட்ட நீரை உறிஞ்சிக்குடித்தன. கூடாரங்களுக்கு சுற்றும் இரவுக்காவலர் படைக்கருவிகளுடன் நின்றனர்.

கூடாரமுற்றத்தில் சிறு வட்டங்களாக அமர்ந்து நடுவே நெருப்பிட்டு, தழலில் காட்டி உருக்கிய ஊன்கொழுப்பை மரக்கட்டைகளென உலர்ந்திருந்த உலர்அப்பங்களின் மேல் பூசி பசியின் விருப்புடன் உண்டனர். பெரிய சுரைக்காய் குடுவைகளில் நிறைக்கப்பட்ட புளித்த மதுவை அனலிலிருந்து சற்று அப்பால் வைத்தனர். வெம்மை பட்டபோது இனிய நினைவுகள் எழுந்து உவகை கொண்டதுபோல் மது நுரைத்து குமிழி விட்டு வழிந்தது. அதன் மூடியின் விளிம்புகள் மீறி அடக்கப்பட்ட சிரிப்பு போல மதுவின் ஆவி வெடித்தெழுந்தது. அந்த மணம் அவர்கள் அனைவருக்கும் நாவூறச்செய்தது.

அப்போது ஒருவன் மலைப்பாதையில் நிழலசைவென ஓருருவை கண்டான். அது பெண்ணென்று அக்கணமே உணர்ந்தான். “ஒரு பெண்” என்று ஒருவன் சுட்டிக்காட்ட, “பெண்ணா? இப்பாழ்வெளியிலா? உன் விழிகள் உருவெளித் தோற்றம் காட்டுன்றன” என்றான் ஒருவன். “இல்லை, பெண்ணே” என்றான் இன்னொருவன். “அழகி” என்று இன்னொருவன் சொன்னான். அவர்கள் விழிவிரித்து நோக்கியிருக்க அழகிய உடல் நெளிய நாகமென ஃபால்குனை அணுகி வந்தாள்.

அவள் கால்களில் கட்டி இருந்த சலங்கை ஒலி முதலில் அவர்களை அடைந்தது. ஒவ்வொருவரும் தங்கள் விரல் நுனியால் அதை தொட்டுவிட முயல்பவர்கள் போல் முன்னெழுந்தனர். “தித்திக்கும் ஒலி” என்று அவர்களில் பாடக்கற்றிருந்த ஒருவன் சொன்னான். விழிமயங்க “பொருள் கனிந்த ஒலியே சொற்கள். பொருள்மிகுந்து மீறிய ஒலியே இசை. இது நல்லிசை” என்றான்.

அணுகி வந்த ஃபால்குனை தலைவணங்கி “என் பெயர் ஃபால்குனை. ஊர்மன்றுகளில் நடனமிட்டு அலையும் தாசி. நெடுந்தூரம் தனித்துவந்தேன். நீங்கள் வைத்துள்ள கள்மணம் அறிந்து உங்களை நோக்கி வந்தேன்” என்றாள். “அமர்க அமர்க” என்று பல குரல்கள் எழுந்தன. “இப்பாழ்வெளியில் பெண் ஒருத்தி தனித்து வருவதை நம்ப முடியவில்லை” என்றார் முதியவர். “நான் இப்பனிவெளியில் பல்லாண்டுகள் அலைந்து திரிந்தவள். வில்தொழில் அறிந்தவள். மண்ணில் எவ்விலங்கும் எனக்கு தீங்கு இழைக்க இயலாது. சொல்தொழிலும் அறிந்தவள் என்பதால் தேவர்களும் என்னை அணுகார்” என்றாள்.

தோலாடை ஒன்றை மணையில் விரித்து இளையோர்களில் ஒருவன் “அமர்க அழகி” என்றான். மலைப்பாம்பு உடல் வளைப்பது போல் கால்களை மடித்து, இடை ஒசிந்து, ஒரு கை ஊன்றி அவள் அமர்ந்தாள். இன்னொருவன் மூங்கில் குழாயைமீறி நுரைத்து மெல்லிய ஆவி எழுந்த மதுவை ஊற்றி அவளுக்கு அளித்தான். அதை வாங்கி அதன் புளிப்பு மணத்தை மும்முறை நுகர்ந்து ஃபால்குனை ஒரே மூச்சில் அருந்தினாள். அவளது செவவிதழ்களில் பளபளத்த மதுவின் ஈரத்தை அன்றி பிறிதெதையும் பார்க்கவில்லை இளையோர்கள்.

“எங்கு செல்கிறாய்?” என்றார் முதியவர். “தங்களுடன் வருகிறேன். எங்கு செல்வது என்ற இலக்கேதும் எனக்கில்லை. செல்லுமிடமெல்லாம் எனக்கு உகந்த ஊரே. பார்க்கும் மானுடரெல்லாம் எனக்கு கேளிர்” என்றாள். பாடகன் கை ஊன்றி எழுந்து “நீ நடனமாடுவாயா?” என்றான். “ஆம். அதுதான் என் தொழில்” என்றாள். “களைத்திருக்கிறாய். இன்று துயில்க! நாளை நீ ஆடுவதை நாங்கள் பார்க்கலாம் அல்லவா?” என்றார் இன்னொரு முதியவர். “நெடுந்தொலைவு நடந்துள்ளேன். ஆயினும் சற்று ஓய்வெடுத்தபின் என்னால் ஆட முடியும். இத்தனை விழிகளைக் கண்டபின் பெண் என உணரும் இனிமையை அறிகிறேன். ஆடாது இவ்விரவைக் கடக்க என்னால் முடியாது” என்றாள் ஃபால்குனை.

உரக்க ஒலி எழுப்பி அனைவரும் நகைத்தனர். உருகும் கொழுப்பு தடவிய உலர் அப்பங்களை ஒருவன் கொண்டுவந்தான். கொதிக்கும் நீரிலிட்டு வேகவைக்கப்பட்ட உலர்ந்த காய்கறிகளை பிறிதொருவன் கொண்டுவந்தான். உணவருந்தி, சற்றே கால்நீட்டி ஓய்வெடுத்தபின் எழுந்து மேலாடையை எடுத்து இடையில் சுற்றி, கை வளையல்கள் ஒலிக்க, வளையல்கள் நகைக்க கைகளைத் தட்டிக்கொண்டு “ஆடுகிறேன்” என்றாள் ஃபால்குனை. கையில் தப்புத் தாளத்துடன் எழுந்து வந்த பாடகன் “இத்தனை பேரழகி ஒருத்தி என் பாடலுக்கு இதற்குமுன் ஆடியதில்லை” என்றான்.

பால்குனை சிரித்து “இத்தனை விடாய் கொண்ட விழிகளுக்கு முன் நானும் ஆடியதில்லை” என்றாள். அவர்கள் கைகளில் மதுக்கோப்பையுடன் அவளைச் சூழ்ந்தனர். நான்கு பக்கமும் எரிந்த செஞ்சுடர் ஒளி மின்னும் ஆடைகளுடனும் கல்அணிகளுடனும் அவள் பாயச் சித்தமாகி நிற்கும் இளமான் என மன்றுநடுவே நின்றாள். ஒருவன் “மோகினி! மோகினியைப் பாடு!” என்றான்.

பாடகன் தப்புக்கிணை மீட்டி “அமுதென எழுக! பாற்கடல் அமுதென எழுக! நெஞ்சம் பாற்கடல் அமுதென விழைந்து எழுக! இங்கெழுக! எழுக இங்கு என்னெஞ்சம்!” என்று பாடத் தொடங்கினான். பால்குனை அதை தன் விழிகளால் கூர்ந்து நோக்கி அசையாது நின்றாள். அச்சொற்களின் அதிர்வுகள் அவள் விழிக்கூர்மையில் மட்டுமே தெரிந்தன, வேல்நுனியில் சுடரசைவுபோல.

”அலையெழும் பொன்னொளியே!வெண்பனியில் அலையென எழும் பொன்னொளியே” என்று பாடகன் தாளம் ஈட்டி பாடத்தொடங்கியபோது அவள் கால்கட்டை விரலிலிருந்து மெல்லிய நடுக்கம் ஒன்று கிளம்பி உடலெங்கும் பரவியது. அவ்வலையை தொடைகள், இடை, முலைகள், தோள்கள், கால்கள், கைகள், இதழ்கள் என காண முடிந்தது. விழிதொட்டறியும் தாளம். கைகள் அலை வடிவாக மெல்ல தழல் ஆடுவதுபோல் அவள் நடமிடத்தொடங்கினாள். உள்ளத்திலிருந்து ஆட்டம் உடலுக்கு எழுகையில் தாளத்தின் கணக்குகளாக மாறியே வந்தடைகிறது. உடலுக்கும் உள்ளம் எழுந்த நடனத்துக்கும் நடுவே அந்த தாளக்கணக்கின் ஒருநொடி எப்போதும் எஞ்சியுள்ளதென்பதை பாடகன் அறிவான். உடல் அக்கணக்கை மறந்து உள்ளமே நேராக நடனமென்றாக உடல் அதன் விழிவடிவமென்றாகும்போதே நடனம் தெய்வங்களுக்குரியதாகிறது.

தெய்வமெழுந்த நடனம். அவர்கள் முன் நின்றது பெண்ணுடல் அல்ல. பாற்கடல் அலையின் தாளம் கனிந்து எழுந்த மோகினி. தோளில் அமுத கலமேந்தி நடந்து வந்தவள் அவள். அன்னை அன்னை என தவித்த குழந்தைகளை நோக்கி புன்னகைத்தாள். வானம் வானம் என உன்னிய தேவர்களின் சிறகுகளை காற்றென வந்து தொட்டாள். ஆழம் ஆழம் என எடைகொண்ட தலைகளை நீரென வருடிச்சென்றாள். பின்பு நடனம் ஓய ஒவ்வொருவரும் காற்றில் பறந்து பனியீரத்தில் எடை கொண்டு ஆங்காங்கே வந்தமைந்த பஞ்சுப் பிசுறுகள் என மண் தொட்டனர். எங்கிருக்கிறோம், ஏதென்றிருக்கிறோம் என்றறியாத தன்னிலையில் எழுந்து நோக்கியபோது முடியாத இசை ஒன்று சுழித்துச் சென்றுகொண்டிருந்தது.

விழித்துக்கொண்ட ஒரு வணிகன் சிவந்திருந்த கனலருகே கனல் எழும் கண்களுடன் சிலையென அமர்ந்திருந்த ஃபால்குனையிடம் “நீ எப்போது விழித்தாய் அழகி?” என்று கேட்டான். “நான் துயில்வதே இல்லை இளைஞனே” என்றாள் ஃபால்குனை. “ஏன்?” என்றான். “துயிலின்போது இழக்கும் உலகை நான் விடுவதில்லை. இப்புவியில் எனக்களிக்கப்பட்ட அனைத்தையும் முழுதாக அடைய விழைபவள் நான்.” அவள் என்ன சொல்கிறாள் என்பது தெரியாமல் அவன் திகைத்து பின்பு “முற்றிலும் துயிலாமல் எப்படி வாழ முடியும்?” என்றான். ஃபால்குனை “விழித்திருக்கையிலும் நாம் துயின்றுகொண்டுதான் இருக்கிறோம். விழி மூடி திறக்கும் ஒரு கணம் என்பது ஒரு சிறு துயிலே. பல்லாயிரம் துயில்களின் ஊடாக என் பகல் சென்று இரவாகிறது” என்றாள்.

அவன் அவளை எண்ணி ஆழ்ந்த அச்சம் ஒன்றை அடைந்தான். மேற்கொண்டு சொல்லின்றி அவள் கனல் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தான். பின்பு கனவுள் புகுந்து அங்கே நாணொலி எழுப்பி அம்புமிழும் கொலைவில் ஏந்தி காகபட்சக் குழல் பறக்க தாடி எழுந்து சிம்மப் பிடரிபோல் அலைய பாய்ந்து வரும் மாவீரன் ஒருவனைக் கண்டான். அவன் விழிகளுக்கு குருதிகொள் அம்பின் கூர்மை இருந்தது. “அடிபணிகிறேன் இளவரசே” என்றான். குழல்தொட்டுச் செல்லும் காற்றுபோல கை ஒன்று அவன் நெற்றியில் தொட்டு விலகிச் சென்றது. வில்லின் நாணோசை கேட்டு தன்னைச் சூழ்ந்திருந்த பெருமரங்கள் யாழ் தந்திகள் போல விம்முவதை கேட்டான். கைகூப்பி அவ்வீரன் செல்லும் திசையை நோக்கி நின்றான்.

பின்பு விழித்துக்கொண்டபோது புலரியின் மென்வெளிச்சம் அங்கெல்லாம் சூழ்ந்திருந்ததை அறிந்தான். கங்கு வெண் சாம்பல் பூத்திருந்தது. ஃபால்குனை அங்கிருந்ததை, அவள் இருந்த இடத்தின் வெறுமை மூலம் அறிந்து அவன் எழுந்து அமர்ந்தான். சுற்றி நோக்கியபோது அப்பால் ஆழத்தில் ஒளிக்குழைவெனச் சென்ற சிறு சுனையிலிருந்து மரக்குடைவுக் குடத்தில் நீர் அள்ளி இடையில் வைத்து, ஓசையின்றி உலையும் அழகுடலுடன் அவள் மேலே ஏறிவருவதைக் கண்டான்.

வணிகர் குழுவுடன் பால்குனை கீழ்நாகர் நாட்டுக்குச் சென்றாள். அங்கு சந்தைகள் தோறும் அவர்கள் தாழ்வரை விளைபொருட்களை வாங்கி தாங்கள் கொண்டுவந்த மலைப்பொருட்களை அளித்தனர். மலையிலிருந்து அவர்கள் கொண்டுவந்த கம்பளங்கள், கம்பளி ஆடைகள், தோல் பொருட்கள், தெய்வம் குடியேறிய சாளக்கிராமங்கள், ஒளிவிடும் பலவண்ண அருங்கற்கள், முட்டை விரிந்து வெளிவந்த செங்கழுகுக் குஞ்சுகள் சந்தைகளில் பேரார்வத்தை எழுப்பின. நிகராக உப்புக்கற்களும், உலர் ஊனும், மீன்உலர் சுருள்களும், ஏழு வகை கூலமணிகளும் கொண்டனர். பொதி நிறைத்து மலை வணிகர் ஒவ்வொரு சந்தையிலிருந்தும் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மலை இறங்குகையில் சிறிய போர்ப்படை என தோன்றிய அக்குழு பாலையில் வற்றும் நதிப்பெருக்கென சிறுத்து மறையத்தொடங்கியது.

கீழ்நாகர்களின் இறுதிச் சந்தையாகிய ஷிப்ரதலம் என்னும் ஊரில் இறுதி வணிகர் குழுவும் மலை திரும்பியது. ஃபால்குனையிடம் சொல்பழுத்த முதுவணிகர் “அழகியே, எங்களுடன மலைக்கு வருகிறாயா? தலைமுறைகள் என மலை இறங்கி இம்மண்ணில் பரவி பொருள்கொண்டு மீள்பவர்கள் நாங்கள். பனி பொழிந்து உருகி மறைவதுபோன்றது எங்கள் வருகை என்று இவ்வூரில் சொல்கிறார்கள். வலசைப் பறவைகள் என மூதாதையரின் நினைவுகளின் ஊடாக இவ்வழிகளை அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை வருகையிலும் ஊர் மீள்வோமா என்ற அச்சம் கொள்வோம். ஒவ்வொரு முறையும் இங்கு திரும்புகையில் மறுமுறை இங்கு வருவோமா என்று உள்ளம் ஏங்கும். ஒருமுறைகூட இப்பயணம் போல உவகையும் களியாட்டமுமென எங்கள் பொழுது கழிந்ததே இல்லை” என்றார்.

“நூறு மேனி விளையும் சொல்வயல் உன்னிடம் உள்ளது. காட்டை எரித்தழிக்கும் தழல் போன்றது உன் உடல். நீ மானுடப்பெண் அல்ல. மண்ணில் எழுந்த ஏதோ தெய்வம் என்று நான் அறிவேன். எங்களை இத்தனை நாள் உடனிருந்து வாழ்த்தினாய். எங்கள் இல்லங்களில் நிறைக்கும் ஒளியென உடன் வந்தால் பேறு பெற்றவர்கள் ஆவோம். இனி மலைமேல் பனி இறங்கும் காலம். எங்கள் இல்லங்கள் மீது பளிங்குப்பனி சரியும். மைந்தரை உடலோடு அணைத்து சிறு வெம்மையும் சிந்தாமல் ஏற்று அமர்ந்திருக்கும் ஆறு மாத காலம். சொல்லிச் சொல்லி காலத்தை உருக்கி நீட்டிச் சுருட்டி வைத்திருப்போம். அங்கு எங்களுடன் நீ இருப்பாய் என்றால் காலத்தின் ஒவ்வொரு மணியும் ஒளிகொண்டதாக ஆகும்” என்று சொல்லி கைகூப்பினார்.

ஃபால்குனை “பணிகிறேன் முதுவணிகரே. கடந்து வந்த பாதையில் திரும்புவதில்லை என்ற நெறி கொண்டவள் நான். இங்கிருந்து மீண்டும் முன்செல்லவே விழைகிறேன்” என்றாள். முதுவணிகர் “இதற்கு அப்பால் உள்ளது மணிபூர நாடு. துர்க்கை அன்னையின் மண் அது என்கிறார்கள். அங்கு மலைவணிகர் செல்வதில்லை. மணிபுரத்தவர் மேலும் கிழக்கே அருங்காட்டிற்கு அப்பால் இருந்து வரும் தீரர்களிடம் இருந்து பொருள் கொள்பவர்கள். பதினெட்டு கீழ்நாகர்களின் நாடுகளால் சூழப்பட்டு இருப்பவர்கள். ஓநாய்கள் சுற்றி வளைத்த பிடியானைபோல் அஞ்சி உடல் சிலிர்த்து நின்றிருக்கும் நாடு அது என சூதர்கள் பாடுகின்றனர். தங்கள் எல்லைகளைக் கடந்து அயலவர் வருவதை அவர்கள் விழைவதில்லை. கடந்து சென்ற அயலவர் அனைவரையும் வினாவேதும் இன்றி கொன்று வீசுவதையே தங்கள் நெறி என்று கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

“நான் இதுவரை சென்ற இடங்கள் அனைத்துமே நுழைவுக்கு ஒப்புதல் இல்லாதவையே” என்றாள் ஃபால்குனை. “மூடப்பட்ட வாயில்களின் வழியாகச் செல்லும் காற்று என்றே என்னை அறிகிறேன்.” வணிகர் “ஆம், நீ செல்லக்கூடாத இடமென ஏதுமில்லை” என்றார். பால்குனை தலைவணங்கி “என்னை வாழ்த்துங்கள்” என்றாள். வணிகர் “நீ தெய்வம் என்ற எண்ணம் மேலும் வலுப்பெறுகிறது. தெய்வங்கள் மானுடருடன் கருணையுடன் இருக்கவேண்டும். மானுடர்களை முடிவின்றி பொறுத்தருளவேண்டும். அவ்வாறே ஆகுக!” என்றார்.

பன்னிரண்டு நாட்கள் தன்னந்தனியாக மலைச்சரிவுகளில் பயணம் செய்து ஃபால்குனை மணிபூரக நாட்டை அடைந்தாள். மலைச்சரிவு தாழ்வரையைத் தொட்ட இடத்தில் பாறைகளை அலைத்துப் பெருகி புகை எழுப்பிக்கொட்டிக்கொண்டிருந்த வெண்ணிற அருவி ஒன்றின் அருகே விழுதுகளைத் தொற்றி இறங்கி குழல்களில் படிந்த நீர்ப்பிசிறுகளுடன் நின்றாள். ஆறுகளே வழிகளென அவள் அறிந்திருந்தாள். அவற்றின் கரைகளில் ஊர்கள் முளைத்தெழுந்திருக்கும். சிதறல்கள் இணைந்து ஒற்றைச் சிற்றாறு என்றாகி வளைந்தும் ஒசிந்தும் சென்ற ஆற்றின் ஓரத்தில் நடந்தாள்.

முதல் மானுடக்குரல் அவள் செவிகளில் விழுந்தபோது அதிலிருந்த அச்சத்தைக் கண்டு மரம் ஒன்றுக்குப் பின் தன்னை மறைத்துக்கொண்டாள். அஞ்சிய வேளாண்குடி மகன் ஒருவன் ஆற்றோரத்து வழியினூடாக ஓடி வந்து அப்பால் அடுமனைப் புகை எழுந்த சிறுகுடில்கள் செறிந்த சிற்றூருக்குள் நுழைந்தான். அவன் வந்த திசையிலேயே குளம்படிப் பெருக்கு எழுந்து அருகணைந்தது. குதிரைகளில் அமர்ந்து வந்த படை வீரர்கள் உரக்க ஒலியெழுப்பி அவற்றைத் தூண்டினர். அவர்களுக்கு முன்னால் குரைத்தபடி நாய்கள் ஓடிவந்தன.

வேளாண்குடிமகன் உள்ளே சென்றதுமே அச்சிற்றூரின் அனைத்து வாயில்களும் மூடும் ஒலி கேட்டது. உள்ளிருந்து அவர்களின் காவல்வீரர்கள் படைக்கலன்களுடன் ஊர் முகப்பிற்கு ஓடி வந்தனர். ஊரைச் சுற்றி வளைத்துச் சென்ற கோட்டை முள்மூங்கில்களை செறிவாக நட்டு அப்பத்தைகளை ஒன்றுடன் ஒன்று பின்னியிணைத்து கட்டப்பட்டது. அதன் நுழைவாயிலில் படைக்கலன்களுடன் அவர்கள் நிரைகொண்டனர். உயர்ந்த மரத்தின் மேல் நின்று ஃபால்குனை அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பால் உள்ள இல்லங்கள் அனைத்தும் இரண்டெனப் பிளந்து கவிழ்த்தும் விரித்தும் வைத்து அடுக்கிச் சரித்த மூங்கில்களால் ஆன கூரைகளை கொண்டிருந்தன.

கோட்டை முகப்பு வாயில் முள் புதர்களைக் கட்டி உருவாக்கப்பட்டது. அதை போர் வீரர்கள் வடத்தால் இழுத்துத் தள்ளிக்கொண்டு வந்து வாயிலை மூடினர். கூழாங்கற்கள் தெறிக்க அணுகிய ஐம்பது பேர் கொண்ட குதிரைப்படை அதை அடைந்து நின்றதும் அதன் தலைவன் தன் புரவியிலிருந்து பாய்ந்து இறங்கி இரும்புக் குறடிட்ட கால்களை தரையில் ஓசையெழ உதைத்து, கைகளை விரித்து உடல் களைப்பை தீர்த்தான். நிமிர்ந்த தலையுடன் அணுகி வாயிலில் நின்ற முதியவரிடம் தன் அடையாளத்தைக் காட்டினான். அவர் அச்சம் கொண்டு தலைவணங்கி பின்னால் திரும்பி ஆணையிட முட்புதர்க் கதவை மூடியவர்கள் உள்ளிருந்து இழுத்து அதை திறந்தனர்.

புரவிப்படை உள்ளே சென்றது. ஐந்து புரவிவீரர்கள் மட்டும் வாயிலில் புரவிகளை அவிழ்த்துவிட்டு காவலுக்கு நின்றுகொண்டனர். ஃபால்குனை அங்கே அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தாள். உள்ளே படைவீரர்கள் சென்றதும் ஊர்மக்கள் வாழ்த்து எழுப்பவில்லை என்று கண்டாள். அங்கு உவகையோ, வரவேற்போ தென்படவில்லை. சில கணங்கள் நோக்கியபடி இருந்துவிட்டு உயர்ந்த மரத்திலிருந்து விழுதுகளைப் பற்றி கீழிறங்கினாள். பின்பு பாறைகளினூடாக ஒலித்துச் சென்றுகொண்டிருந்த நதியின் கரையில் காட்டுக்குள் மேயப்போகும் கன்றுகள் உருவாக்கிய ஒற்றையடித் தடம் வழியாக நடந்தாள்.

பசுஞ்சாணி மண்ணுடன் குழைந்து கிடந்த அந்தப் பாதை தொழுவம் என மணம் நிறைந்திருந்தது. சாணிகளை உருட்டிக்கொண்டு சென்ற வண்டுகள் அவள் காலடி ஓசை கேட்டு எழுந்து யாழ் மீட்டிப் பறந்தன. ஆற்றுக்குள் வேர்களை இறக்கி நீர் அருந்தியபடி கிளை தழைத்து நின்றன வேங்கை மரங்கள். அவற்றின் மலர்கள் காற்றில் உலைந்து நீரில் விழுந்து வண்ணப்பட்டாடைபோல் இழுபட்டு சுழித்துச் சென்றன. தலைக்குமேல் புரவியொலிகேட்டு எழுந்த பறவைகளின் பெருங்குரல் கேட்டுக்கொண்டிருந்தது. காட்டுக்குள் இருந்த பறவைகளுக்கு மாற்றாக ஊரை அண்டி வாழும் மைனாக்களும், காக்கைகளும் அங்கு நிறைந்திருப்பதை அவள் உணர்ந்தாள்.

கோட்டைமுகப்பின் அரைவட்ட முற்றத்தில் அவள் நுழைந்ததும் காவல் நின்ற ஐந்து படை வீரர்களும் தங்களது விற்களை எடுத்த கணத்தில் நாணேற்றினர். அம்புமுனைகள் அவளை குறிநோக்கின. இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி மெல்ல நடமிட்டபடி அவள் அருகில் சென்றாள். அம்புகளின் ஒளிவிழிகளின் நோக்குக்கு முன் சென்று நின்றாள். ஒருவன் “யார் நீ?” என்றான். “மலைப்பாடகி. நடனமங்கை. மலை இறங்கி வருகையில் வழி தவறினேன். பின் இவ்வாற்றுத் தடம் பற்றி இவ்வூரை வந்தடைந்தேன்” என்றாள். “இங்கு எவரும் வருவதில்லை. கண்ணுக்குப் படும் அயலவரை அக்கணமே கொல்லும்படியான அரசாணை உள்ளது” என்றான். “பெண்களையுமா?” என்று கேட்டு அவள் புன்னகையிட்டாள்.

அவன் புன்னகைத்து “உயிர்களை” என்றான். பிறிதொருவன் “இங்கு எவருக்கும் நுழைவு இல்லை” என்றான். “மலை மேல் பசித்து இறப்பதைவிட இங்கு இவ்விலங்குகளுக்கு இரையாகி இறப்பது மேலல்லவா?” என்றபடி அவள் அணுகிச் சென்றாள். “அணுகாதே. அங்கேயே நில்!” என்றான் காவலன். “அணுகாவிடினும் கொல்லத்தானே போகிறீர்கள். அணுகும்போதே இறப்பதிலும் ஒரு மேன்மை உண்டல்லவா?” என்று சிரித்தபடி ஒசியும் இடையும் நெளியும் கைகளுமாக ஃபால்குனை அருகே சென்றாள்.

அவள் அழகு அவர்களை தணியச்செய்தது. ஒருவன் “உன் பெயர் என்ன?” என்றான். “ஃபால்குனை” என்றாள். “இங்கு எங்கள் இளவரசர் வந்துள்ளார். அதை அறிந்து உளவுநோக்க வந்தவள் என்றே உன்னை எண்ணுகிறேன். எங்கள் படைக்கலன்களுக்கு முன்பு பணிக! எங்கள் தலைவர் உன்னை உசாவி உண்மையை அறிவார்” என்றான். “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றாள் ஃபால்குனை.

ஐந்து அம்புகளுக்கு முன் அவள் சென்று நின்றபோதே, ஐவர்விழிகளும் அவளை அடி முதல் முடி வரை தொட்டு உழிந்தன. “நீ பேரழகி. மலைமக்கள் இவ்வித அழகுடன் இருப்பதில்லை” என்றான் காவலன். புன்னகைத்து “இத்தனை இளவிழிகள் நோக்குகையில் நான் எப்படி அழகின்றி இருக்க முடியும்?” என்றாள் ஃபால்குனை. “அவளிடம் சொல்லெடுக்கவேண்டாம். மயக்குகலை பயின்றவள் என தெரிகிறாள்” என்றான் முதியகாவலன். அவளை அவர்கள் ஊருக்குள் இட்டுச் சென்றனர்.

கூப்பிய கை போல் செங்குத்தாக எழுந்த கூம்புக்கூரையுடன் மாளிகை ஒன்று ஊரின் நடுவே எழுந்து நின்றது. ஊர்த்தலைவரின் இல்லம் அது என்று தெரிந்தது. அதைச் சூழ்ந்து நின்றன பிற இல்லங்கள். மூங்கில் கால்களின் மேல் ஆளுயரத்துக்குத் தளமிட்டு அதன் மேல் எழுப்பப்பட்டவை. அவ்வில்லத்தை கைகூப்பித் தொழுது சூழ்ந்திருந்தன. இல்லங்களின் முகப்புகளில் அவர்கள் கொன்ற எதிரிகளின் மண்டை ஓடுகள் சரடுகோத்து மாட்டப்பட்டிருந்தன. சிரிப்புகளின் மாலை. இருள்சூழ்ந்த விழிகளின் நிரை.

இல்லங்கள் அனைத்தும் உள்ளிருந்து மூடப்பட்டிருப்பதை ஃபால்குனை கண்டாள். அடியில் மூங்கில் கால்களில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் அவர்களை நோக்கித் திரும்பி குரல் எழுப்பின. இடையில் கம்பி கட்டப்பட்டிருந்த சில குரங்குகள் மூங்கில்கள்மேல் தொற்றி ஏறி விழி சிமிட்டி வால் நெளித்து அவர்களை நோக்கின. படைப்புரவிகள் ஊர்த் தலைவரின் மாளிகை முற்றத்தில் அவிழ்த்துக் கட்டப்பட்டிருந்தன. அவற்றிற்கு வீரர்கள் புல்சுருள்களை அவிழ்த்து அள்ளிக்கொண்டுவந்து போட்டனர். கையில் புல்லுடன் அவளை ஏறிட்டு நோக்கினர்.

மரத்தொட்டிகளில் நீர் கொண்டுவந்து வைத்து கைவிட்டு கலக்க, மூச்சு சீறியபடி புரவிகள் மூழ்கி இழுத்து நீர் அருந்தின. தாடை மயிர்களில் துளிகள் சொட்ட தலைதூக்கி சிறிய காதுகளை முன்னால் குவித்து அவர்களை நோக்கின. ஒரு புரவி ஃபால்குனையை நோக்கி மெல்ல கனைக்க, தோள் சிலிர்த்தபடி பிற புரவிகள் திரும்பி நோக்கி பெருமுச்சுவிட்டன. புரவிவீரர்கள் ஆங்காங்கே வெறும் தரையிலேயே மல்லாந்து படுத்துவிட்டிருந்தனர். தலைவர் இல்லத்திற்குப் பின்னால் தனியாகக் கட்டப்பட்டிருந்த அடுமனைகளிலிருந்து அவர்களுக்கென ஊன் உணவும் அப்பங்களும் அரிசி மதுவும் மூங்கில் கூடைகளில் கொண்டுவரப்பட்டன.

ஊர்த்தலைவர் இல்லத்தின் வலப்பக்கம் இருந்த துணை இல்லம் ஒன்றின் முன்னால் நின்றிருந்த படைத்தலைவரை நோக்கி ஃபால்குனையை கொண்டுசென்றனர். ஒரு வீரன் அருகே சென்று வணங்கி அவரிடம் அவளை சுட்டிக்காட்டி அவர்களது மொழியில் ஏதோ சொன்னான். அவர் படியிறங்கி அருகே வந்தார். இடையில் கைவைத்து நின்று அவளை நோக்கினார். “யார் நீ?” என்றார். “என் பெயர் ஃபால்குனை” என்றாள். “இங்கு உணவும் ஓய்வும் தேடி வந்தவள். மலையில் வசித்தவள். பாடகி.” “உன் கண்களில் அச்சமின்மை தெரிகிறது. பெரும் போர்களைக் கண்ட வீரர் விழிகளில்கூட இல்லாத அச்சமின்மை. நீ பெண்ணல்ல. ஆனால்...” என்றார் படைத்தலைவர்.

“படைத்தலைவரே வெறுமை குடிகொண்ட மலைகளில் வாழ்ந்தவள் நான். காற்று சவுக்குகளைப்போல் சுழன்று வீசும் இடம் அது. எங்கள் அச்சமும் அதில் பறந்து விட்டிருக்கிறது” என்றாள். “இங்கு ஏன் வந்தாய்? உண்மையை சொல்!” என்றார். “நான் சொல்லிவிட்டேன். நம்பவில்லை என்றால் என்னைக் கொல்ல நீங்கள் ஆணையிடலாம்” என்றாள் ஃபால்குனை. ஐயத்துடன அவளை மேலும் கீழும் நோக்கி தன் மீசையை ஒரு கையால் நன்கு முறுக்கிக்கொண்டிருந்தார் படைத்தலைவர். பின்பு “பெண் என்பதால் நாங்கள் கொலை புரிவதில்லை என்ற எண்ணம் வேண்டியதில்லை” என்றார்.

ஃபால்குனை புன்னகைத்தாள். “இது போர் நிலம். எங்கள் எல்லைகள் முழுக்க ஒவ்வொரு நாளும் போர் நடந்துகொண்டிருக்கிறது. இப்பகுதியை கீழ்நாகர்கள் இன்று தாக்கக்கூடும் என்று செய்தியறிந்து, இளவரசர் படையுடன் வந்திருக்கிறார். நீ அவர்களின் உளவாளி என்றால் மண்ணில் மானுடர் அறிந்ததிலே பெரிய வதைகளை அடைவாய்” என்றார். “என்ன செய்வீர்கள்?” என்றாள் ஃபால்குனை. “உயிருடன் தோலை உரிப்போம். ஒன்பது உடல்திறப்பு வழியாகவும் எரியமிலத்தை உள்ளே செலுத்துவோம். கால் கட்டைவிரலைக் கட்டி தலைகீழாக தொங்கவிடுவோம். எங்கள் வதைமுறைகள் பதினேழு” என்றார்.

ஃபால்குனை புன்னகைத்து “எவ்வண்ணம் அழித்தாலும் உடல்வதை என்பது ஒன்றே” என்றாள். “பார், ஒருகணம்கூட சொற்கள் உன்னை அச்சுறுத்தவில்லை. நீ பெண்ணல்ல. அணங்கு” என்றார். “என் கால்கள் மண் தொடுவதைப் பாருங்கள்” என்று தன் பாவாடையை சற்றே தூக்கிக்காட்டினாள். “நிலம் தொடவைக்கும் வித்தை மட்டும் அணங்குக்கு கடினமானதா என்ன?” என்றார். “நீ அணங்கா இல்லையா என்பதை அறிய ஒரு வழியே உள்ளது. உன்னைக் கொல்லும்படி ஆணையிடுகிறேன். அணங்கென்றால் உன்னைக் கொல்லமுடியாது.” அவள் புன்னகைத்தாள். “நீங்கள் செய்துபார்க்கலாம். ஆனால் நான் மானுடப் பெண் என்று அறிந்தால் அப்பிழையை உங்களால் திருத்த முடியாதல்லவா?” என்றாள்.

அச்சொற்களில் அவர் சற்று சிக்கிக்கொள்ள விழிகள் சுருங்கின. அடுத்த சொல்லெடுக்க அவர் வாயெடுத்தபோது பின்பக்கம் ஊர்த்தலைவர் மாளிகையின் முகப்பிலிருந்து “யார் அது, ஊர்ணரே?” என்று குரல் எழுந்தது. படைத்தலைவர் திடுக்கிட்டுத் திரும்பி தலைவணங்கி “இளவரசே, இவள் இங்கு அடைக்கலம் கோரி வந்த மலைப்பாடகி என்கிறாள்” என்றார். ஃபால்குனை திரும்பி உயரத்தில் மூங்கில்தரைத்தளத்தில் கவச உடை அணிந்து நின்றிருந்த இளவரசனை பார்த்தாள். “இளவரசர் சித்திராங்கதர். மணிபுரத்தை ஆளும் மாமன்னர் சித்ரபாலரின் ஒரே மைந்தன்” என்றார் ஊர்ணர்.

நாணப்புன்னகையோடு “அழகன்” என்றாள் ஃபால்குனை. திரும்பி தன் உடலை ஒசித்து நின்றாள். சித்ராங்கதனின் விழிகள் அவளைத் தொட்டுச் செல்ல, அவன் விழைவு தொட்ட இடமெல்லாம் இனிய நெளிவு ஒன்று குடியேற, வளையோசையுடன் ஆடை திருத்திய கைகளை ஒன்றுசேர்த்து விழிதாழ்த்தி இனிய மணிக்குரலில் “வணங்குகிறேன் இளவரசே” என்றாள் ஃபால்குனை.

பகுதி மூன்று : முதல்நடம் - 3

ஃபால்குனையின் இரு கைகளையும் பற்றி இழுத்துச் சென்று சித்ராங்கதனின் முன் நிறுத்தினர் வீரர். தலைமுதல் கால்விரல்வரை அவளை கூர்ந்து நோக்கியபடி சித்ராங்கதன் மாளிகையின் முகப்பில் இருந்து இரும்புக்குறடு மரப்படிகளில் ஒலிக்க மெதுவாக இறங்கி வந்து இடைவாள் பிடிக்குமிழில் கையை வைத்தபடி அவள் அருகே நின்றான். அப்பார்வையை உணர்ந்து தலைகுனிந்து, விழிசரித்து, இடை நெளிய கால்கட்டை விரலால் மண்ணை நெருடினாள் ஃபால்குனை.

மெல்லிய குரலில் “இவள் எங்கிருந்து வந்தாள்?” என்றான் சித்ராங்கதன். “மலையிலிருந்து” என்கிறாள்” என்றார் படைத்தலைவர். “அத்தனை தொலைவுக்கு தனியாக எவரும் வரமுடியாது. ஒரு புரவிகூட இல்லாமல் இந்த மலையை ஏறி இறங்குவது மானுடரால் ஒண்ணாதது” என்றான் சித்ராங்கதன். ஃபால்குனை “நான் மலைமகள் இளவரசே. மலைகள் நிலங்களைவிட எனக்குப் பழகியவை. வடக்கே எழுந்திருக்கும் பனிமலை முகடுகளுக்கு அப்பால் சென்று மீண்டவள் நான்.”

அவளை சில கணங்கள் கூர்ந்து நோக்கிய பின் “அத்தனை தொலைவிறங்கி இந்நாட்டிற்கு ஏன் வந்தாய்?” என்றான். “நானறியேன். என்னுள் இருந்து என்னை விலக்கி எம்மண்ணிலும் நில்லாது அலையச் செய்யும் ஒன்று உள்ளது. அதை ஆராய்தலே என் உள்ளச் செயலென இதுகாறும் உள்ளது. நாகர்களின் உலகில் இருந்தேன். அங்கிருந்து எவரோ மணிபூரகம் என்று சொல்லக்கேட்டேன். அச்சொல்லில் ஈர்ப்புகொண்டு இங்கு வந்தேன். ஏனென்றால் நான் அன்னை மணிபத்மையை வணங்குபவள். மணிபத்மை ஆலயத்தின்முன் என்னுள் எழும் இந்தத் தவிப்பின் பொருள் என்ன என்று வினவலாம் என்று எண்ணினேன்.”

சித்ராங்கதன் அவளை நோக்கி மெல்ல புன்னகைத்து “அத்தவிப்பின் பொருள் என்ன என்று தெரிகிறது” என்றபடி அவளை அணுகிநோக்கி “ ஏனென்றால் நீ முற்றிலும் பெண்ணுமல்ல” என்றான். ஃபால்குனை விழிதூக்கி அவனை நோக்கினாள். “உன் உடல் அசைவுகளில் மொழியில் விழியில் பெண்மை நிறைந்துள்ளது. ஆனால் நீ பெண் மட்டுமல்ல. அதை நான் அறிவேன்” என்றான்.

ஃபால்குனை “என்னைப் பார்த்த அனைவரும் அதை சொல்லியிருக்கின்றார்கள்” என்றாள். “பொருள் விளங்காத சொல் என என் உடலை நான் உணர்வதும் அதனாலேயே.” சித்ராங்கதன் திரும்பி தன் காவலரை பார்த்து “இவளுக்கு உணவும் ஓய்விடமும் அளியுங்கள். ஆனால் இவள் யாரென முற்றிலும் தெரியும்வரை சிறையில் இருக்கட்டும். நான்கு வீரர்கள் இவளுக்கு எப்போதும் காவல் இருக்கவேண்டும்” என்றான். வீரன் தலைவணங்கி “ஆணை” என்றான்.

சித்ராங்கதன் ஃபால்குனையிடம் “ஓய்வெடு. இன்று இங்கு ஒரு போரை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றான். “தாங்கள் போருக்கென வந்திருப்பதை புரவிகளைப் பார்க்கும்போதே உணர்ந்தேன். கொலைக்களத்திற்கு செல்லும் படைவாள்போல் புரவியின் மேல் அமர்ந்திருந்தீர்கள்” என்றாள் ஃபால்குனை. சித்ராங்கதன் புன்னகையுடன் திரும்பி நடந்தான். அவன் மெல்லிய உடலும், பொன் மஞ்சள் நிறமும் நீண்ட கண்களும் சிறிய செவ்வுதடுகளும் மீசை அரும்பாத இளைய மேல்உதடும் கொண்டிருந்தான். இரு கன்னங்கள் மேலும் மாதுளை முத்துக்கள்போல் பருக்கள் எழுந்திருந்தன.

”நமது படைவீரர்கள் ஓய்வெடுத்துவிட்டார்கள் என்றால் தங்கள் புரவியின் அருகிலேயே நின்றிருக்கட்டும்” என்றான் சித்ராங்கதன். படைத்தலைவர் “ஆணை” என்றார். “மடிப்புக்கத்தி விரியும் நேரத்தில் அவர்கள் படையென ஆகவேண்டும்” என்றபின் அவன் குலத்தலைவர் மாளிகைக்குள் நுழைந்தான். ஃபால்குனை அவ்வில்லத்தின் வாயில்களில் நீள்நிரையாகத் தொடுக்கப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்த மண்டையோட்டு மாலையைப் பார்த்து புன்னகைசெய்தாள்.

“என்ன?” என்றான் வீரன். “புன்னகைக்கும் மாலை. இதற்கு முன் முல்லை மலர் மாலைகளை மட்டுமே புன்னகை என்று உணர்ந்திருந்தேன்” என்று ஃபால்குனை சொன்னாள். முகம் மலர்ந்து “நீ பாடுவதுண்டா?” என்றான் வீரன். “அது என் தொழில்” என்றாள் ஃபால்குனை. “ஆடுவதும் உண்டு.” “இன்று வெற்றிக்குப்பின் உண்டாட்டு உண்டு. நீஅதில் பாடி ஆடலாம்” என்றான் வீரன். “ஏனென்றால் நீ கவிதையுடன் இருக்கிறாய்.” அவள் தலைவணங்கி “நற்சொற்களுக்கு நன்றி” என்றாள். “நான் கவிதையறிந்தவன். என் பெயர் கலிகன்” என்றான்.

அவளை அழைத்துச்சென்று குலத்தலைவன் இல்லத்துக்குப் பின்னால் மூங்கில் கூரையிட்டு கொட்டகையாக அமைக்கப்பட்டிருந்த அடுமனைக்குள் நுழைந்தான். அங்கே மூங்கில் தூணின் அடியில் அவளை அமரச் செய்தான். காட்டுக்காய் கொப்பரையில் கொதிக்கும் அரிசிக்கஞ்சியையும் தீயில் வாட்டிய மானிறைச்சியையும் கொண்டுவந்து வைத்தான். கஞ்சியில் மஞ்சள்நிறமான பன்றிக்கொழுப்புக் கட்டிகளை போட்டான். வெம்மையில் அவை அதில் உருகி எண்ணெய்ப் படலம் என பரவின. மூங்கிலாலான கரண்டியை வைத்து “இங்குள்ள உணவு இது” என்றான். அடுமனைக்காரன் தேங்காய்த் துண்டுகளும், ஆட்டு இறைச்சித் துண்டுகளும் இடப்பட்ட கீரைக்கறியை கொண்டுவந்து வைத்தான். “இவை அரசர்களுக்கு மட்டும் இன்று அளிக்கப்பட்டவை. நீ பாடகி என்றாய். உனக்காக” என்றான்.

நன்றியுடன் தலைவணங்கி மெல்லிய நாணத்துடன் புன்னகைத்தாள் ஃபால்குனை. அவள் உணவருந்துவதை வீரர்கள் சூழ்ந்து நின்று நோக்கினர். “நீ நடனமணி என இவ்வசைவே சொல்கிறது” என்றான் ஒருவன். “ஆம். இசைக்கருவி என்பது காணக்கூடிய இசை” என்றான் ஒருவன். “அழகி, அழகொன்றையே அசைவெனக் கொண்டவள்” என்றான் சற்று அப்பால் அமர்ந்திருந்த முதியவன். அவள் உணவு உண்டதும் கொப்பரையை எடுத்துச் சென்று அருகே ஓடிய சிற்றோடையில் கழுவி எடுத்து வைத்தாள். தன் கைகளையும் வாயையும் கழுவி மேலாடையால் துடைத்துக்கொண்டாள். சிறிய மூங்கில் படிகளில் ஏறி அடுமனைக்கு அவள் வந்தபோது தொலைவில் நாய் குரைப்பதை கேட்டாள்.

அவள் விழிகளை அறிந்த வீரர்கள் “அவர்கள்தான். கீழ்நாகர்கள். இன்று அவர்கள் தாக்குவார்கள் என்று செய்தி வந்தது” என்றபடி தங்கள் படைக்கலன்களை நோக்கி ஓடினர். கலிகன் “ஃபால்குனை, இந்த மூங்கில்தூணின் அருகிலிருந்து விலகினால் அக்கணமே உன்னைக் கொல்லும் பொறுப்பு எனக்கு வந்துவிடுகிறது” என்றான். “விலகுவதில்லை” என்றாள் ஃபால்குனை. அதன் அருகிலேயே ஒற்றைக்கால் மடித்து சற்றே சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.

நாய்க் குரைப்புகள் அலைகள் போல ஒன்றைவிட இன்னொன்று பெரிதாகி எழுந்து வந்தன. மூன்று திசைகளிலிருந்து அவ்வொலிகள் நெருங்கி வருவதை உணரமுடிந்தது. குலத்தலைவர் இல்லத்தின் உள்ளிருந்து இரும்புக் குறடுகளின் எடையொலியுடன் வெளியே வந்த சித்ராங்கதன் உரத்த குரலில் “படைகள் கிளம்பட்டும். இருபது கணங்களுக்குள் அத்தனை பேரும் புரவிகளில் ஏறியிருக்க வேண்டும். இது ஆணை!” என்று கூறியபடி தன் உடைவாளை உருவி தலைமேல் ஆட்டி “இன்று அவர்கள் தலைகொண்டு மீள்வோம்” என்றான்.

முற்றத்தில் கூடியிருந்த வீரர்கள் அனைவரும் தங்கள் உடைவாள்களை உலோகக் கிரீச்சிடல்களுடன் உருவி ”வெற்றிவேல் வீரவேல்” என குரல் எழுப்பினர். ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவர்களின் விற்கலையும் அம்பறாத்தூணிகளையும் மூன்று வீரர்கள் ஓடிச்சென்று எடுத்து வீரர்களிடம் கொடுத்தனர். தோல்நாடாக்களை குறுக்கே மாட்டி அம்பறாத்தூணிகளை தோளில் அமைத்து இடக்கையில் வில்லும் வலக்கையில் எடுத்த அம்புமாக வீரர்கள் புரவியின் மேல் ஏறிக்கொண்டனர். அவர்களின் உடல் அசைவுகளிலிருந்தே போர் அழைப்பு என்று உணர்ந்த புரவிகள் கிளர்ச்சிகொண்டு உருளைக் கற்கள் போன்ற குளம்புகளை மண்ணில் தூக்கி வைத்து, வால் சுழற்றி, தலை அசைத்து, பிடரி சிலிர்த்து பாயத் தவிப்பதுபோல நிலையழிந்தன.

ஒரு புரவி திரும்பி அருகே சென்ற சித்ராங்கதனை நோக்கி மெல்ல கனைத்தது. மற்ற புரவிகளும் அவனை நோக்கின. அவனே ஆணை இடுபவன் என அவை அனைத்தும் அறிந்திருந்தன. சித்ராங்கதன் தன் வெண் புரவி மேல் ஒரே கால்சுழற்றலில் பாய்ந்து ஏறி கை நீட்ட முதியவீரன் அவன் கைகளில் வில்லையும், அம்பறாத்தூணியையும் இட்டான். அவற்றை அணிந்துகொண்டபின் அவன் தலைகுனிந்து கண்கள்மூடி ஒரு கணம் தன்னை குவித்துக்கொண்டான். பின்பு குதிமுள்ளால் குதிரையை மெல்லத் தட்ட அது பெருமூச்சுவிட்டபடி சீரான தாளத்துடன் சென்று போர்முகப்பில் நின்றது. அவனுக்குப் பின்னால் வேல்முனை வடிவில் புரவிகள் அணிவகுத்தன.

அப்பால் எழுந்த நாய்க்குரைப்புகளுக்குப் பின்னால் புரவிகளின் குளம்படி ஓசைகள் ஒலிக்கத் தொடங்கின. காடுகளிலிருந்து எழுந்து பறந்த பறவைகளின் ஒலிகள் வானில் குழம்பின. “அன்னை மணிபத்மையே, உடனிருப்பாயாக” என்று கூவியபின் கையாலேயே கிளம்ப ஆணையிட்ட சித்ராங்கதன் தன் புரவியில் பாய்ந்து மூங்கில் கோட்டையின் வாயில் வழியாக மறுபக்கம் சென்றான். பின்னால் அவனது படை அவனைத் தொடர்ந்து சென்று மறைந்தது. குளம்போசைகள் அகல்வதுவரை அப்படைகள் சென்று முடியவில்லை என்று தோன்றியது. இறுதிக் குளம்படி ஓசையும் தேய்ந்து மறைந்த பிற்பாடு அவர்கள் அங்கிருந்த விழிச்சித்திரம் எஞ்சியது.

ஃபால்குனை பெருமூச்சுடன் கால்மாற்றி அமர்ந்தாள். கலிகன் “மூங்கில் பூக்கும் காலத்து எலிகள் பெற்று பெருகுவது போல அவர்கள் வளர்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பல நூறுபேர் படையென எழுந்து வருகிறார்கள். இங்கு எங்கள் நாட்டிலோ நாற்புறமும் ஒவ்வொரு நாளும் இளையோர் இறந்துகொண்டேயிருக்கிறார்கள். எங்கள் பெண்கள் எத்தனை கருவறை திறந்தாலும் எங்கள் படைகளை பெருக்க முடியவில்லை” என்றான். “நெடுங்காலத்துப் பகைமையோ?” என்றாள் ஃபால்குனை. “வெள்ளாட்டுக்கு ஓநாய்களுடன் உள்ள பகைமை அளவிற்கே பழையது” என்று கலிகன் புன்னகைத்தான்.

கசப்பு நகைப்பான கண்சுருங்கலுடன் “நாங்கள் இங்கு மண்ணைக் கிண்டி உயிர் விளைவிக்கிறோம். அவர்களோ ஒரு செடி நட்டு காய் நோக்கும் கலை அறியாதவர்கள். வேட்டை ஒன்றே அவர்கள் அறிந்தது. நாங்கள் அவர்களுக்கு அஞ்சி வளைக்குள் திரண்டுள்ள வேட்டை விலங்குகள் மட்டுமே. உழைத்து உண்டு கொடுத்து ஊன் வளர்த்து இங்கிருப்பவர்கள். எங்கள் மூதாதையர்கள் அறிந்த காலம் முதலே நான்குபுறம் இருந்தும் எங்களை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் இளவரசர் பிறப்புக்குப்பின் இப்போதுதான் நாங்கள் திருப்பிப் போரிடுகிறோம்” என்றான்.

“முன்பு போரிட மாட்டீர்களா?” என்றாள் ஃபால்குனை. “போரிட்டிருக்கிறோம். ஆனால் அதனால் பயன் ஒன்றும் இல்லை என்று முன்பே அறிந்திருந்தோம். நாங்கள் மேழிக்குப்பழகியவர்கள். அவர்களோ கொலைப்படைக்கருவிகளை மட்டுமே அறிந்த கைகள் கொண்டவர்கள். அவர்கள் வருவது எங்கள் பொருட்களுக்காகவும், கால்நடைகளுக்காகவும்தான். ஆகவே அவர்கள் கொள்ளையிட்டுச் செல்ல போதுமான அளவுக்கு பொருளையும் கால்நடைகளையும் விட்டுவிட்டு விலகி ஓடி மறைந்துகொள்வோம்” என்றான் கலிகன். “அந்தக்கலையை நாங்கள் முயல்களிடருந்து கற்றுக்கொண்டோம். நாகர்கள் எங்களை குழிமுயல்கள் என்றே அழைக்கிறார்கள்.”

“நெடுங்காலமாகவே எங்கள் ஊரில் நாங்கள் மறைந்துகொள்ளும் அமைப்புகள் உருவாகி வந்துள்ளன. இந்த ஊரின் அனைத்து இல்லங்களுக்கு அடியிலும் மண்ணுக்குள் பல சுருள்களாக இறங்கிச் செல்லும் வளைபாதைகள் இருக்கின்றன. அவற்றின் மேல் பெரிய கருங்கல்லை இழுத்து மூடிவிட்டு உள்ளே சென்றார்கள் என்றால், அங்கு ஐந்துநாட்கள் ஒளிந்துகொள்ளும் அளவுக்கு உணவும் நீரும் வைத்திருப்பார்கள். இவ்வூரைச் சூறையாடி நெருப்பிட்டு சாம்பலாக்கியபின் அவர்கள் கிளம்பிச் செல்வார்கள். இறுதி நாகனும் சென்றபின் சாம்பல் குவியல்களுக்குள் இருந்து கருங்கல் மூடியை தூக்கி எழுந்து வருவார்கள். காட்டுத் தீ எரிந்த புல்வெளியில் வேரிலிருந்து புல் மீண்டும் முளைப்பதுபோல மீண்டும் இவ்வூர் எழும்.”

கலிகன் புன்னகைத்து ”ஒவ்வொருநாளும் கன்றுகளும் குதிரைகளும் மான்களும் காட்டெருமைகளும் மேயந்தபின்னும் காட்டில் புல் அழிவதே இல்லை. எங்கள் மக்களை திருணமூலர்கள் என்று அழைக்கிறார்கள். புல்வேரின் அழிவின்மை கொண்டவர்கள் நாங்கள்” என்றான். ஃபால்குனை “ஆம், பொறுத்திருப்பதும் காத்திருப்பதும்கூட ஒருவகையில் போர்தான்” என்றாள். “இவர்களின் கொள்ளைக்கும் சேர்த்தே விதைத்துக்கொய்யப் பழகிக்கொண்டோம். இவர்கள் கொண்டுசெல்வதற்கும் சேர்த்தே கன்றுவளர்க்க கற்றோம்” என்றான் கலிகன். “ஆனால் சென்ற சில ஆண்டுகளாக எங்கள் பெண்களையும் இவர்கள் கவர்ந்துகொண்டு செல்லத் தொடங்கியுள்ளனர்.”

“பிறகுலத்துப் பெண்களை நாகர்கள் ஏற்கலாகாது என்ற குலநெறி இருந்தது. விழிதொட்ட அனைவரையும் கொன்று மீள்வதே அவர்களின் வழக்கம். அங்கு நாகர்குலங்களில் எழுந்த ஒரு நோயால் கன்னியர் இறந்து கருவுறுதல் குறைந்தபோது, அவர்களிடம் பெண்கள் இல்லாமலானார்கள். முது பூசகர்களில் எழுந்த பாதாள நாகங்கள் இங்குவந்து பெண்கொண்டு சென்று நாகதெய்வங்களுக்குப் படைத்து ஏழுவகை தூய்மைச் சடங்குகளைச் செய்து அவர்களை நாகப்பெண்களாக்கி மணந்து கொள்ளலாம் என்று ஆணையிட்டார்கள். எனவே இப்போது அவர்கள் வருவது பெண்களுக்காகத்தான்.”

கலிகன் தொடர்ந்தான் “பெண்கள் கிடைக்கவில்லை என்றால் கடுஞ்சினம் கொண்டு மேலும் மேலும் என போர்களுக்கு வருகின்றனர். எனவே ஊர்களைக் கைவிட்டு மண் ஆழத்திற்குச் சென்று பதுங்குகையில் படைகொண்டு வரும் நாகர்கள் கைப்பற்றிச் செல்லவதெற்கென்றே செல்வங்களையும் கன்றுகளையும் கூடவே இளம்பெண்களையும் விட்டுச் செல்லும் வழக்கம் எங்களுக்குள் உருவாயிற்று.” ஃபால்குனை “அதை பல குடியினர் செய்வதை அறிந்துள்ளேன்” என்றாள்.

“கண்ணீருடன் உடல் குறுக்கி அமர்ந்து காத்திருக்கும் எங்கள் இளமகளிரின் விழிகளைப் பார்த்தபடியே வளைகளுக்குள் பதுங்குவதென்பது இறப்பைவிட நூறு மடங்கு கொடியது. மண்ணுக்குள் எத்தனை ஆழத்தில் அமர்ந்திருந்தாலும் அவர்களின் அழுகை ஓசையை கேட்கமுடியும். பிறகொருபோதும் பெற்றோரின் செவிகளில் இருந்து அவ்வொலி நீங்குவதில்லை” என்றான் கலிகன். “அதன் பின்னரே நாங்கள் எதிர்க்கவேண்டுமென எண்ணினோம். அன்னை மணிபத்மையை வணங்கினோம். எங்களுக்கு அன்னை அளித்த அருளென இளவரசர் வந்தார்.”

ஃபால்குனை “பெண் கவர்தல் என்பது பாரதவர்ஷம் முழுவதும் உள்ள நடைமுறை அல்லவா?” என்றாள். “ஆம். இங்கிருந்து செல்லும் பெண்களின் மைந்தர்களே மீண்டும் வில் கொண்டு புரவிகளுடன் எங்கள்மேல் படையெடுத்து வருகிறார்கள். இங்கிருந்து சென்ற சில நாளிலேயே அப்பெண்கள் அனைவரும் நாகினியர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கு முந்தைய உறவோ நிலமோ குலமோ நினைவில் நிற்பதில்லை. நாக நஞ்சொன்றை அவர்களுக்குள் செலுத்தி அவர்களின் விழிகளை இமையாமல் நோக்கச்செய்கிறார்கள். பின்னர் அவர்களின் குருதிகளில் நச்சுநீலம் வழிந்தோடுகிறது” என்றான் கலிகன். ஃபால்குனை “பெண் கொண்டு செல்லும் அத்தனை குலத்திலும் அந்த நஞ்சு உள்ளது” என்று கூறி சிரித்தாள்.

மிகத்தொலைவில் பறவைகளின் ஒலி வானில் மேலும் மேலும் குழம்பி கலந்து ஒலித்தது. நாய்க் குரைப்புகளின் ஊடாக மனித அலறல்கள் எழுந்தன. குதிரைகள் கனைக்கும் ஒலிகள் பிறிதொரு இடத்திலிருந்து என கேட்டன. கலிகன் “இங்கிருந்து கேட்கையில் ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு இடத்தில் என தெரிகின்றன. போரில் மகிழ்ந்து சூழ்ந்துகொள்ளும் தெய்வங்கள் அவ்வொலிகளை அள்ளி விளையாடுகின்றன என்பார்கள். மானுடர் போரிடுவதே அத்தெய்வங்கள் களியாடுவதற்காகத்தான். சித்தத்தில் குருதியில் படைக்கலக் கூர்மையில் அவை குடிகொண்டு போர் போர் என அறைகூவிக்கொண்டிருக்கின்றன.”

“ஆம், நான் போர்களை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு உயிரும் தனக்கான போரில் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றும். புரவிகள் செய்யும் போர் மானுடர்களின் போர்தானா என்று ஐயம் எழும். யானைகளோ நாய்களோ தங்களுக்குரிய போரில்தான் ஈடுபட்டிருக்கின்றன என்று காணலாம். தொலைவில் இருந்து நோக்கினால் மானுடப்போருக்கு தொடர்பே அற்று, மேலும் வெறிகொண்டு படைக்கலன்கள் தங்கள் சமரை ஆற்றிக்கொண்டிருப்பதை காணலாம்” என்றாள் ஃஃபால்குனை. கலிகன் “குதிரைக்கும் யானைக்கும் நாய்களுக்கும் மனிதருக்கும் படைக்கலன்களுக்கும் வெவ்வேறு தெய்வங்கள்” என்றதும் ஃபால்குனை சிரித்து “குருதி ஒன்றே” என்றாள்.

கலிகன் “ஆம் எவ்வளவு குருதி! இந்த மணிபூரக மண்ணில் மனிதக் குருதி சிந்தாது ஒரு வாரம்கூட கடந்து சென்றதில்லை. இப்படி இத்தனை தலைமுறைகளாக இங்கே பொழிந்த குருதியை தேக்கினால் மணிபூர நகர் நடுவே ஒளிவிடும் மணிபத்மம் என்ற எங்கள் ஏரியைவிடப் பெரிதாக இருக்கும்” என்றான். “அவ்வண்ணமே மானுடம் இதுவரை பெருக்கிய குருதியைத் தேக்கினால் என்ன ஆகும்? செந்நிறம் கொண்ட பெரிதொரு கடலாகும்” என்றாள் ஃபால்குனை. “அதன்மேல் மும்முறை வளைந்த பெரிய அரவொன்றில் கால்நீட்டிப் படுத்திருப்பான் உலகளந்தவன். அவன் இதழில் பாற்கடலில் அவன் பள்ளிகொண்டிருக்கையில் நிறைந்து நின்ற அதே புன்னகையே தெரியும் என்று தோன்றுகிறது.”

மேலும் மேலும் போர் ஒசைகள் வலுத்தன. “அவர்கள் எண்ணிக்கையில் பலமடங்கு” என்றான் கலிகன். “ஓசைகள் அதையே காட்டுகின்றன. மேலோங்கிய பெருங்குரல்கள் நாகர்களின் போரொலிகளாகவே இருக்கின்றன. ஆனால் எங்கள் இளவரசர் இதுவரை எப்போரிலும் தோற்றதில்லை. விற்தொழிலில் அவருக்கு நிகர் இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவர் மட்டுமே என்கிறார்கள். அவர் இருக்கும்வரை மணிபூரகம் பணியாது” என்றான் கலிகன். “மணிபூரகம் என்னும் நாகத்தின் நச்சுப் பல் என்று எங்கள் இளவரசரை நாகர்கள் சொல்கிறார்கள். எங்கள் கொடிமரத்தில் ஏறிய அனல்கொடி அவர்."

“இப்போது அவருக்கு பதினெட்டு வயதே ஆகிறது" என்றான் கலிகன். "இன்னும் மீசை முளைக்கவில்லை. குரலில் ஆண்மை கூடவில்லை. விழிகளும் கன்னியருக்குரியவைபோல் கனவு நிறைந்துள்ளன” என்றாள் ஃபால்குனை. “ஆம்” என்றான் கலிகன். “ஆனால் தீராப்பெருஞ்சினம் கொண்டவர். உறையுருவப்பட்ட கொலைவாள் போன்றவர். அவர்மேல் இங்கு அனைவருக்கும் அன்பைவிட அச்சமே உள்ளது. வெறுப்பும் பலரிடமுண்டு. ஏனென்றால் இரக்கம் என்பதே அவர் அறியாதது. அயலாரைக் கண்டதுமே தலையை வெட்டுவது அவரது வழக்கம். இன்று உன் உயிர் எஞ்சியது ஏன் என்று எனக்கே புரியவில்லை.”

”அவர் ஒருவர்தான் இளவரசரா?” என்று ஃபால்குனை கேட்டாள். கலிகன் “நெடுங்காலம் எங்கள் அரசருக்கு மைந்தர் இல்லை. ஏழு துணைவியரை அவர் மணந்தார். எழுவரும் இளவரசிகளை பெற்றனர். மணிபூரகத்து அரசருக்கு மரபு உரிமை உள்ள மைந்தர் இல்லை என்ற செய்தி பரவியபோது, நாற்புறமும் நாகர் நாடுகளிலிருந்து இளிவரல் எழுந்தது” என்றான் கலிகன். “அன்னை மணிபத்மையின் ஆலயத்தின்முன் நாற்பத்தொரு நாட்கள் ஒருவேளை உணவுண்டு மன்னர் தவம் இருந்தார். நாடாள்வதற்கு ஒரு மைந்தனைத் தர வேண்டும் என்று கோரி கண்ணீர் உகுத்தார். வில்திறன் கொண்ட அவன் படைமுன் நின்று பகை வெல்லவும் மூதாதையர் நெறிகற்று முடிசூடி மணிபூரகத்தை காக்கவும் வேண்டுமென மன்றாடினார்.”

“நாற்பத்தொன்றாம் நாள் அவர் கனவில் சிற்றாடை கட்டி சிறுமியென வந்த அன்னை மணிபத்மை அவருக்கு ஒரு சிறு மலரை அளித்தாள். அது நற்குறி என நிமித்திகர் உரைத்தனர். முதிய பட்டத்தரசி கருவுற்று எங்கள் இளவரசரைப் பெற்றார். முதலில் இங்கு ஒரு சிறிய வதந்தி இருந்தது. இம்முறை அரசி பெற்றதும் பெண்ணே என்று. ஆனால் அது நாகர்கள் பரப்பிய வீண்செய்தியே என்று தெளிவாயிற்று. சில ஆண்டுகளிலேயே கையில் நாண் முழங்கும் வில்லும் ஒளிரும் வாளும் ஏந்தி இளவரசர் பொதுமேடையில் எழுந்தார். செண்டுவெளிப் பயிற்சியில் அவரது விற்தொழில் கண்டு மணிபூரகத்து மக்கள் விழிவிரித்தனர். தங்கள் குலதெய்வங்களை நோக்கி கைகூப்பி எங்கள் குடி காத்தீர்கள் தெய்வங்களே. இனி மணிபூரகம் வாழும் என்று கூவினர்.”

“சொற்களெல்லாம் ஆணை என்று ஒலிக்க இன்று எங்கள் இளவரசரே நாட்டை ஆளுகிறார். படைகொண்டு அவர் எழுகிறார் என்றாலே நாகர்கள் அஞ்சுகின்றனர். முன்புபோல் எங்கள் மைய நகரத்தை நோக்கி அவர்கள் படைகள் தொடுப்பதில்லை. இதுபோல ஒதுங்கிய எல்லைப்புற சிற்றூர்களையே தாக்குகின்றனர். அவர்கள் தாக்கும் செய்தியை முன்னரே அறிந்து படையுடன் வருகிறார் எங்கள் இளவரசர்” என்று கலிகன் சொன்னான். “அவர் வருவதற்குள் கொள்ளைப்பொருள்கொண்டு சென்றால் மட்டுமே அவர்களுக்கு தலைகள் எஞ்சுகின்றன.”

ஃபால்குனை “ஆகவேதான் இம்முறை அவர்கள் பெரும்படையுடன் வந்திருக்கிறார்கள்” என்றாள். ”உங்கள் இளவரசர். அவர் கண்டதிலேயே கடும் சமர் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறார். அவர் வெல்வது எளிதல்ல” என்றாள். சினத்துடன் கலிகன் “எப்படி தெரியும்?” என்று கேட்டான். “புரவிகளின் ஒலி” என்றாள் ஃபால்குனை. “குளம்புகளின் ஒலியிலிருந்தே புரவிகளை கணக்கிட முடியும். ஒற்றைப்பெரும் ஒலியாக அவை ஆலங்கட்டி மழைபோல் ஒலிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு குளம்பொலி ஓசையையும் தனித்தனியே கேட்டு எண்ணித் தொகுத்து அவற்றின் எண்ணிக்கையை அறிய முடியும். அங்கே ஐந்நூறு புரவிகள் உள்ளன. இங்கிருந்து சென்றவை எழுபத்தைந்து மட்டுமே” என்று ஃபால்குனை சொன்னாள்.

கலிகன் அச்சத்துடன் தூண் பற்றி எழுந்து நின்று தொலைவை நோக்கி செவிகூர்ந்தான். பதைப்புடன் திரும்பி “என்னாகும் இப்போரில்?” என்றான். “விற்தொழில் தெய்வங்களின் அருள். எப்போரும் தெய்வங்களின் பகடையாடலே. ஆயினும் போரில் முதன்மையான ஆற்றல் என்பது எண்ணிக்கைதான்” என்று ஃபால்குனை சொன்னாள். “இளவரசர் வீழ்ந்துவிடுவாரா?” என்றான் கலிகன். “அது தேவர்களின் விழைவு. இத்தருணத்தில் அவர் வீண்ஆணவத்தால் அவர்களை எதிர்கொண்டு போரிடாமல் இக்கோட்டைக்குள் தன்னைக் காத்துக்கொள்வதே உகந்ததாகும்.”

“இக்கோட்டை வலுவானது. புரவிகளால் இதைக் கடக்கமுடியாது இல்லையா?” என்றான் கலிகன். “தைலப்புல் கொண்டுவந்து இதை நெருப்பிட்டுவிட முடியும். மூங்கில் பற்றிக்கொண்டால் எளிதில் அணையாது” என்றாள் ஃபால்குனை. கலிகன் சோர்ந்து சற்றே வாய்திறந்து அவளை நோக்கினான். “ஆனால் இக்கோட்டைக்குள் இருப்பதில் நன்மை ஒன்றுள்ளது. அங்கே அவர்களால் சூழப்பட்டிருப்பவர் எத்தனைபேர் என்று அவர்களால் நன்கு கணிக்க முடியும். ஆனால் இக்கோட்டைக்குள் இருப்பவர்கள் எத்தனைபேர், படைக்கலன்கள் எவ்வளவு என்று அவர்களால் அறிய முடியாது. அந்த அச்சம் ஒரு துணைப்படை போல. நம்மைத் தொடர்ந்து வர நமக்கு உதவும்” என்றாள்.

கலிகன் “ஆனால் எங்கள் இளவரசர் தோற்கக்கூடாது. ஏனெனில் ஒருமுறை தோற்றுவிட்டால், அவர் தோற்கக்கூடும் என்று அவர்கள் உணர்வார்கள். அதன்பின் இன்றிருக்கும் அச்சத்தை இழந்தவர்களாவர். இன்று தயங்கி கை நீட்டித் தொட்டெடுக்க முயலும் குரங்குபோல் இருக்கிறார்கள். எங்கோ ஒரு முனையிலே ஒரு சில சமயம் எப்போதோ தாக்குகிறார்கள். அச்சம் விலகி அத்தனை முனையிலும் ஒரு சமயம் தாக்குவார்கள் என்றால், மணிபூரகம் அதனை எதிர்த்து நிற்க முடியாது. மீண்டும் சாம்பல் குவியலாக அது மாறும்” என்றான்.

“இக்கோட்டைக்குள் பின்வாங்கினால், அவர்கள் விட்டுச் செல்ல மாட்டார்கள். அதைத் தோல்வி என்றே எடுத்துக்கொள்வார்கள். பின்தொடர்ந்து வருபவர்களை முற்றிலும் அழித்துக் குருதியாடினால் மட்டுமே அதை இறுதி வெற்றி என்று கொள்வார்கள்” என்றான் கலிகன். “இறுதி வெற்றி நம்முடையது என்றால் அது பின்வாங்கல் அல்ல பதுங்கல் என்றே பொருள்படும்” என்றாள் ஃபால்குனை. “ஆம். ஆனால் இத்தருணத்தில் எங்கள் இளவரசருக்கு அது தோன்றாதென்றே நினைக்கிறேன். அவர் வைரம்போல கடினமானவர். குருதியாடுகையில் கொற்றவை என்றே தோற்றமளிப்பார்.”

மேலும் மேலும் ஓசைகள் வலுத்துச் சென்றன. ”இத்தனை தொலைவில் இருந்து கேட்கையில் இறக்கும் வீரர்களின் ஓலம் வெறும் அழுகை என்றே ஒலிக்கிறது. அத்தனை உயிர்களும் இறப்பின் கணத்தில் கொள்ளும் வலியின் ஓசை ஒன்றே. அதில் வீரம் இல்லை. நாடோ, குலமோ, கொள்கையோ இல்லை” என்றான் கலிகன். “உம்மை எதற்கு இங்கு விட்டுச்சென்று இருக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறது. இத்தனை சொற்களுடன் உம்மால் களம் காணமுடியாது” என்றாள் ஃபால்குனை. புரவிகளின் ஓசை மலையிறங்கியிருவதைக் கேட்டு, “வருகிறார்கள்” என்று சொல்லி ஃபால்குனை எழுந்தாள். “யார்?” என்றான் கலிகன்.

ஃபால்குனை “இளவரசரும் அவரது படைகளும். இங்கிருந்து சென்ற அதே புரவிகளின் குளம்போசை” என்றாள். “குளம்புகள் ஓசையை ஒரு மொழியென அறிய முடியும் என்று நான் எண்ணியதே இல்லை” என்றான் கலிகன். “ஒவ்வொரு ஓசையையும் தனித்தனியாகக் கேட்பது போர்த்தொழிலின் கலை. என்னால் ஒவ்வொரு நாணோசையையும் கேட்க முடியும்” என்றாள் ஃபால்குனை. “என்னருகே பறந்து செல்லும் ஒவ்வொரு அம்பையும் வெவ்வேறெனக் கேட்க முடியும்.”

“நீ விற்தொழில் கற்றவளா?” என்றான் கலிகன். “ஆம். இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவரே என் ஆசிரியர். அவருக்கு இணையாக களம் நிற்கும் திறன் கொண்டவள் நான் என்றே சொல்லியிருக்கிறார்” என்றாள் ஃபால்குனை. தன்னருகே பறந்த ஈ ஒன்றை அக்கணமே கையில் எடுத்த சிறுதுரும்பால் குத்தி தூக்கிக்காட்டினாள். “என் விழிளும் கைகளும் முற்றிலும் ஒன்றென ஆனவை.” கலிகன் திகைப்புடன் “ஆம்” என்றான். ஃபால்குனை எழுந்து, “வீரரே இப்போது ஓர் உறுதிச்சொல் அளிக்கிறேன். என் குலத்தெய்வங்களின் மேல் ஆணை. இங்கிருந்து நான் விலகுவதை ஒப்புக்கொள்ளுங்கள். என் வில்நாண் மணிபூரக நாட்டிற்கென்றே எழும்” என்றாள். “உன்னை என் தெய்வங்கள் இங்கே அனுப்பியதாகவே உணர்கிறேன்” என்றான் கலிகன்.

பகுதி மூன்று : முதல்நடம் – 4

மூள்மூங்கில் படல்கதவை நான்கு வீரர்கள் வடங்களைப் பற்றி இழுத்து தள்ளித் திறந்தனர். கோட்டை முகப்பில் கட்டப்பட்டிருந்த ஆழ்ந்த குழிக்கு மேல் மூங்கில் பாலத்தை இறக்கி வைத்தனர். முகப்பில் நின்ற மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த காவல் பரணில் இருந்த இரு வீரர்களும் தங்கள் குறுமுழவுகளை விரைந்த தாளத்தில் ஒலிக்கத் தொடங்கினர். அந்த ஒலியில் ஊரின் அனைத்துக் குடில்களும் அதிர்ந்ததுபோல தோன்றியது. எக்குடியிலும் மானுடர் இருப்பதற்கான சான்றுகளே இல்லை என்பதுபோல அசைவின்மை இருந்தது.

ஃபால்குனை எழுந்து தன் அரையாடையை இறுகக் கட்டிக்கொண்டாள். அதன்மேல் தோற்கச்சையையும் இறுக்கி முடிந்தாள். “வில் ஒன்று எனக்கு அளியுங்கள்” என்றாள். வீரன் ஓடிச்சென்று வில்லையும் அம்பறாத்தூணியையும் எடுத்து வந்தான். “மூன்று அம்பறாத்தூணிகள் தேவை எனக்கு” என்றாள் ஃபால்குனை. மூன்று தூணிகளையும் இணைத்து தன் தோளில் போட்டபடி சிறுத்தை என காலெடுத்து வைத்து அவள் வெளியே சென்றாள்.

கலிகன் பின்னால் வந்தபடி “பெண்ணே, நான் சொன்னால் வாயிற்காவலர் கேட்கமாட்டார்கள். இங்குள்ள ஊர்க்காவலர்களும் என்னை ஒரு பொருட்டென எண்ணமாட்டார்கள். கட்டற்றுப் பேசுபவன் என்பதால் என்னை அவர்கள் அறிவிலி என்றே எண்ணுகிறார்கள். அவர்கள் உன்னை வெளியே விடப்போவதில்லை” என்றான். திரும்பாமல் “மீறும் வழி எனக்குத் தெரியும்” என்றாள் ஃபால்குனை.

முதல் புரவித்தொகை குளம்புகளின் பெருந்தாளத்துடன் ஆற்றங்கரையில் தோன்றியது. மரக்கிளைகளை அறைந்து வளைத்தபடி, கூழாங்கற்கள் உருண்டு தெறிக்க, கனைத்தபடி பாய்ந்துவந்த முதல் புரவி மூங்கில் பாலம் அதிர உள்ளே நுழைந்தது. அதைத் தொடர்ந்து வந்த புரவியில் சித்ராங்கதன் கால்களாலும் கைகளாலும் சேணத்தைப் பற்றியபடி குப்புறப் படுத்திருந்தான். அவன் உடலை புரவியுடன் சேர்த்து தோல்நாடாவால் கட்டியிருந்தனர். அதைத்தொடர்ந்து வந்த புரவிகளில் வீரர்கள் திரும்பி நோக்கி “விரைவு விரைவு” என்று கூவியபடி வந்தனர்.

படைத்தலைவன் “இறுதிப் புரவி நுழைந்ததும் கோட்டை வாயிலை மூடுங்கள். பாலத்தை எடுத்துவிடுங்கள். காவல் மேடைகளில் வீரர்களும் நிலைகொள்ளட்டும். அவர்கள் ஆயிரம்பேருக்குமேல் உள்ளனர். அணுக்கமாக நம்மைத் துரத்தி வருகிறார்கள்” என்று கூவியபடியே உள்ளே வந்து பாய்ந்திறங்கி “அத்தனை படைக்கலன்களும் எழட்டும்… ஆண்கள் அனைவரும் களம் காணட்டும்” என்று ஆணையொலித்தான். நாற்புறமும் வீரர்கள் அவ்வாணைகளை மறுபடியும் ஒலித்தபடி விரிந்தனர்.

“இளவரசர் காயம்பட்டிருக்கிறார்” என்று கூறியபடி அவன் குலத்தலைவர் மாளிகையின் முகப்பை நோக்கி ஓடி படிகளில் ஏறி உள்ளே நுழைந்தான். சித்ராங்கதன் படுத்திருந்த புரவியின் விலா வளைவில் குருதி கரிய சாட்டை நாக்குகளாக உறைந்திருந்தது. புதுக்குருதி செவ்வண்டுகள் போல முடிப்பரப்பில் உருண்டு சொட்டியது. குருதியீரத்தை உடல்சிலிர்த்துக் காட்டியது குதிரை. உள்ளிருந்து நான்கு முதிய வீரர்கள் வெளியே ஓடி வந்தனர். ஒரு வீரன் புரவியின் கடிவாளத்தை பற்றிக்கொண்டான். இன்னொருவன் குனிந்து இறுக்கமாக கட்டப்பட்டிருந்த தோல்நாடாவை அவிழ்த்தான்.

சித்ராங்கதனை அவர்கள் மெல்லப் பற்றி இறக்கினார்கள். அவன் கைகள் இருபுறமும் தழைந்து விழுந்தன. உடலில் மெல்லிய நெளிவு இருந்தது. அவன் இறக்கப்பட்டதும் அப்புரவி எடை எழுந்த கிளை என வளைந்த முதுகைத் தூக்கி புட்டம் சிலிர்த்தது. அவர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றதும் அது நிலைகொள்ளாது கால்களைத் தூக்கியபடி அவனைத் தொடர்ந்து செல்ல முயன்று படிகளின் அருகே சென்று தலைநீட்டியது. அவனை “மெல்ல… பார்த்து…” என்று ஆணையிட்டபடி உள்ளே கொண்டுசென்றனர். புரவி எட்டிப் பார்த்து காதுகளை முன்கோட்டி மூக்கைச்சுருக்கி மெல்ல கனைத்தது.

இறுதிப் புரவி கோட்டைக்குள் நுழைந்ததும் வீரர்கள் கூச்சலிட்டபடி ஓடிச்சென்று பாலத்தை உள்ளே இழுத்தனர். வடங்களைப் பற்றி அந்தரத்தில் தொங்கி கால்களை ஊசலாட்டியபடி தாழ்த்தி இழுத்து படல்கதவை மூடினர். கோட்டைக்குள் இருந்த உயர்ந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த பரண்கள் நோக்கி விற்களுடன் வீரர்கள் நூல்ஏணியில் தொற்றி மேலேறினர். இலைத்தழைப்புக்குள் பறவைகள் போல மறைந்துகொண்டு தொலைவுசெல்லும் பெருவிற்களை நாணேற்றிக்கொண்டனர். ஆணைகளுடன் துணைப்படைத்தலைவர்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடினர்.

“அவர்களிடம் நெடுந்தொலைவு செல்லும் அம்புகள் உள்ளன. நச்சு அம்புகள் அவை. எனவே மறைவின்றி எவரும் நிற்கவேண்டியதில்லை. எரியம்புகள் எழக்கூடும். எரியும் இல்லங்களுக்குள் செல்லாதீர்கள். இல்லங்களை மறைவென எண்ணாதீர். பச்சைமரங்களே சிறந்த மறைவு” என்று படைத்தலைவன் கூவினான். அப்பகுதி படைநிலமாக உருமாறிக்கொண்டிருந்தது. மெல்ல ஓசையடங்கி பாயக்காத்திருக்கும் சிறுத்தை என ஆகியது. அத்தனை தசைகளும் இறுகி அசைவிழந்தன.

ஃபால்குனை சீராடிகளுடன் வெளியே வந்தாள். கொட்டகையைத் தாங்கிநின்ற மூங்கில் தூணைப்பற்றி அணில் போல எளிதாக மேலேறி கூரை விளிம்பை எட்டி மேலே மறைந்தாள். கலிகன் ஓடிச்சென்று நோக்கியபோது அவள் நாணல்மேல் அணில் போல மரக்கிளைகளில் தொற்றி வளைந்து நின்ற மூங்கில் ஒன்றைப் பற்றி அதை அசைத்து வில் அம்பை என தன்னை ஏவச்செய்து தெறித்து பிறிதொரு மூங்கில் கழையைப் பற்றி ஆடி இலைத்தழைப்புகளுக்குள் முற்றிலும் மறைவதைக் கண்டான்.

அவள் பெண்ணல்ல அணங்கு என அவன் கொண்டிருந்த ஐயம் உறுதியானது. “அணங்கு அணங்கு” என்று கூவியபடி முற்றத்தை நோக்கி ஓடினான். பதறி “என்ன?” என்று கேட்டான் படைத்தலைவன். "அணங்கு…” என்றான் கலிகன். திகைத்து “யார்?” என்று கேட்டான் படைத்தலைவன். “ஃபால்குனை. அந்த நடனப்பெண். இங்கிருந்து வெறும் காற்றில் சிறகின்றி பறந்து எழுந்து மேலே செல்வதை என் விழிகளால் கண்டேன்.” படைத்தலைவன் மேலும் கேட்க வாயெடுத்து அக்கணம் எழுந்த ஓசையால் திரும்பிக்கொண்டான்.

கோட்டைக்கு அப்பால் புரவிப்படை குளம்போசைப்பெருக்காக அணுகுவது தெரிந்தது. ஒவ்வொரு குளம்படியும் தன் தலைமேல் விழும் கற்கள் போலத் தெரிய படைத்தலைவன் “எனக்கு எதையும் நோக்க நேரமில்லை. இன்னும் சற்று நேரத்தில் முற்றிலும் அழியப் போகிறோம்” என்றான். “தாக்குங்கள்!” என்று கூறியபடி இரு கைகளையும் விரித்துக்கொண்டு ஓடி விழுதுகள் தழுவி ஓங்கி நின்ற ஆலமரத்திற்குப் பின் மறைந்துகொண்டான். “தாக்குங்கள்… ஓர் அம்புகூட வீணாகலாகாது” என்று வீரிட்டான்.

வெளியே இருந்து காற்றில் எழுந்த நாணற்கூட்டம்போல் வந்த அம்புகள் வளைந்து இறங்கியபோது மழைக்கற்றையாயின. மரப்பரப்பில், மண்தரையில், தூண்களில் பாய்ந்து துளைத்து நின்று இறகுவால் நடுங்க அதிர்ந்தன. அசைவுகள் நிற்பதற்குள் அடுத்த அம்புத்தொகைகள் வந்து இறங்கின. சற்றும் இடைவெளி விடாது அப்பகுதி முழுக்க அம்புகள் நிறைந்தன.

அவை மெல்லிய சிறிய அம்புகள். நாகங்களின் தீண்டல் என அவற்றின் கூர்முனை தொட்டவீரர்கள் அலறியபடி விழுந்தனர். திகைத்து எழுந்து உடலை இழுத்து மறைவிடம் நோக்கிச் செல்லும்போதே உடல்தசைகள் இழுபட்டு வலிப்பு எழுந்து தளர்ந்து மண்ணில் கால்கள் இழுபட்டு அதிர வாய் கோணலாகி நுரைகசிய துடித்தனர். சிலகணங்களிலேயே அவர்களின் இமைகள் அசைவிழக்க விழிவெண்மைகள் வெள்ளாரங்கற்களென நிலைத்தன.

மூன்று  கழைகளால் சுண்டிச் சுண்டி ஏவப்பட்டு வானில் தெறித்துச் சென்றாள் ஃபால்குனை. கால்களால் இரு மூங்கில்களை எட்டிப் பற்றியபடி அலைகளிலென நின்று நாண் பூட்டி அம்பெடுத்தாள். அப்பால் நாகர்களின் புரவிகள் ஒவ்வொன்றாக ஆற்றங்கரை மேட்டில் எழத்தொடங்கின. முதலில் வந்த நாகன் ஒரு கையில் நீள ஈட்டியை ஓங்கியபடி, வெறியுடன் இழுபட்ட திறந்த வாயுடன், சுருங்கிய கண்களுடன் காற்றில் மிதந்து நீர் நிழலென நெளிந்து அணுகினான். ஃபால்குனையின் அம்புபட்டு அவன் தெறித்து விழ அவன் புரவி அதே விரைவில் வந்து கோட்டை முகப்பை அடைந்து அஞ்சி வளைந்தது.

விழுந்தவன் மேல் மிதித்து வந்த அடுத்த புரவியின் வீரனும் தெறித்தான். அவன் புரவி முதல் புரவியை விசையுடன் முட்டி துள்ளிக்கனைத்து சரிந்து விலாவறைய விழுந்தது. அதற்கடுத்த புரவி அதில் கால்கள் சிக்கி வளைய அதன் மேலிருந்தவன் குப்புற விழுந்து கழுத்து உடைந்து துடித்தான். அம்புபட்டு விழுந்த நான்காவது வீரனின் புரவி முன்னால் விழுந்த இரு புரவிகளின் மேல் பாய்ந்து கடந்து மறுபக்கம் சென்று கால் அறைந்து விழுந்து புரண்டு நான்கு குளம்புகளும் காற்றில் அலைபாய துடித்து சுருண்டெழுந்தது.

அடுத்த வீரனும் தெறித்து விழ அவன் புரவியும் வந்து உருண்டு சென்றபோதுதான் நாகர்தலைவன் அம்புகள் தொலை தூரத்தில் இருந்து வருவதை அறிந்து கைகளைக் காட்டி தங்கள் வீரர்களை தடுத்தான். அதற்குள் அவனைச் சூழ்ந்து நின்ற ஒவ்வொருவராக புரவியில் இருந்து அலறி விழத் தொடங்கினர். அம்புகள் வரும் திசையை உய்த்து மூவர் வில்லெடுத்து தொடுத்த அம்புகள் மூங்கில்குவை அருகில் பறந்து வந்து வானிலேயே வளைந்து நிலம் நோக்கிச் சரிந்தன. அம்புகள் சென்றடையாததை கண்ட தலைவன் ஒருகணம் விழிகூர்ந்தபின் “பின்வாங்குக… அங்கே அவர்கள் நெடுந்தொலைவு விற்களுடன் இருக்கிறார்கள்” என்றான்.

அதற்குள் கைகளில் விற்களுடன் புரவிகளில் தோன்றி முன்னால் ஓடி வந்த மூன்று வீரர்களும் ஒரே கணத்தில் வந்த அம்புகளால் வீழ்த்தப்பட்டனர். என்ன நிகழ்கிறதென்று தலைவனாலும் உய்த்துணரக் கூடவில்லை. இத்தனை தொலைவில் இருந்து வந்து ஒருமுறைகூட குறி தவறாது தன் வீரர்களின் நெஞ்சில் கவசத்துக்கும் தலைக்கும் இடையேயான வெளியில் துளைத்துச் சென்ற அம்புகளை நம்பமுடியாதவன் போல் அவன் மாறிமாறி நோக்கினான். அவன் கண்ணில் பாய்ந்து தலைக்குள் சென்றது ஒரு அம்பு. ஒருக்களித்து நிலத்தில் விழுந்து ஒரே ஒரு முறை காலை உதைத்துக் கொண்டு அவன் இறந்தான்.

நாகர்படைகள் அஞ்சிக் குழம்பி கலைந்த தேனீக்கள் போல அக்குறுங்காட்டுக்குள் சுற்றி வந்தனர். கோட்டையை அவர்கள் அணுகாததனால் கோட்டைக்கு மேல் எழுந்த காவல்மாடங்களில் நின்ற வீரர்களும் அம்பு தொடுக்காது திகைத்து நோக்கி நின்றிருந்தனர். அவர்களுக்கும் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை. அங்கு இருந்த படைத்தலைவர்களில் ஒருவன் “என்ன நிகழ்கிறது? ஏன் தயங்குகிறார்கள்?” என்று கேட்பது ஃபால்குனைக்குத் தெரிந்தது. “அவர்கள் அங்கே அலறுவதைக் கேட்டேன்” என எவனோ மறுமொழி சொன்னான்.

துணைப் படைத்தலைவன் பொறுப்பேற்று முன்னால் வந்து தன் நாகர்களை உரக்க ஆணையிட்டு பின்னால் கொண்டு சென்றான். அவர்கள் மரங்களுக்குள் முழுக்க மறைந்து கொண்டனர். கோட்டைக்கும் மரக்கூட்டங்களுக்கும் நடுவே இருந்த திறந்த வெளியில் தனித்த குதிரைகள் மட்டும் திகைத்தபடி நின்று குரல் எழுப்பின. கால் ஒடிந்த குதிரைகளும் கழுத்து ஒடிந்த குதிரைகளும் மண்ணில் குளம்புகளை வீசி துடித்துக் கொண்டிருந்தன. அவற்றின் கனைப்பொலிகளை காவல் மாடங்களுக்குமேல் ஏறி நோக்கினர் மணிபுரியின் படையினர்.

ஃபால்குனை மூங்கில் கழைகளைப் பற்றி ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு என தாவி முற்றிலும் தன்னை மறைத்துக் கொண்டாள். புதர்களுக்குள் விழி கூர்ந்து தொலைவில் ஆடையின் அசைவை உணர்ந்து காதளவு நாணிழுத்து அம்பு தொடுத்தாள். பாம்பு போல இலைகளுக்கு மேல் இருந்து சீறி வந்த அம்பால் கொல்லப்பட்ட வீரனை நோக்கி கூச்சலிட்டனர் நாகர்கள். எவ்விடம் இருந்து வந்தது அம்பு என்று நோக்க புரவியின் கடிவாளத்தை இழுத்துத் திருப்பிய நாகன் நெஞ்சில் அம்புடன் அதன் மேலேயே விழுந்தான்.

“மேலும் பின்னால்… மேலும்” என்று கூவியபடி நாகர்கள் புதர்களுக்குள் ஆழ்ந்து சென்றனர். பிறிதொரு அம்பு மேலிருந்து செங்குத்தாக இறங்கிவந்து ஒருவனின் முதுகைத் தைத்து அவனை வீழ்த்தியது. மேலும் பின்னால் என்று படைத்தலைவன் கூச்சலிட நாகர்கள் ஆற்றங்கரையின் உருளைக்கல் சரிவு வரை பின்வாங்கிச் சென்றனர். அவர்களின் புரவிகளில் ஒன்று கால்தடுமாறிச் சரிய அதன் வீரன் அதை இழுத்து சீர்ப்படுத்தி சரிவில் நின்றான். “ஆற்றில் இறங்கவேண்டாம்… அது திறந்தவெளி” என்றான் தலைவன்.

ஒருவன் “அவர்கள் ஏதோ பூதத்தை ஏவி இருக்கிறார்கள்” என்றான். “அவை அம்புகளல்ல, பேய்கள். இத்தனை தொலைவுக்கு ஓர் அம்பு கூட குறி பிழைக்கவில்லை என்றால் அது மானுடர் தொடுப்பதே அல்ல” என்றான். “கூச்சலிடாதே” என்றான் தலைவன். “உயிர்குடிப்பதற்கென்றே வருகின்றன அவை” என்றான் இன்னொருவன். “அவற்றை தொடுக்கும் வில்லே விழிகளுக்குத்தெரியவில்லை.” தலைவன் “மேலும் கூச்சலிடுபவர்களின் தலை உடனே வெட்டப்படும்… ஆணை” என்றான்.

ஃபால்குனை மூங்கில் கோட்டையின் செங்குத்தான கழைகளின் வழியாக தழுவியபடி கீழிறங்கி தரையடைந்து செறிந்த முள்மூங்கிலுக்குள் நின்றாள். மெல்லிய சீழ்க்கை ஒலியால் அங்கிருந்த புரவி ஒன்றை அழைத்தாள். அது திடுக்கிட்டுத் திரும்பி செண்பக இலைபோன்ற சிறு செவிகளை முன்குவித்து நோக்கியது. மூக்கைச் சுளித்து பர்ர் என்று ஓசையிட்டது. மீண்டும் அழைப்பைக் கேட்டு விழிகளை உருட்டி மெல்ல கனைத்தது. இன்னொரு புரவி அதற்கு மறுமொழி சொன்னது. இருமுறை காலால் மண்ணை உதைத்தபின் நுண்சரடால் இழுக்கப்பட்டது போல் தலையை அசைத்தபடி அவளை நோக்கி வந்தது. அதன் மேல் சேணம் உறுதியாக இருக்க கடிவாளம் தரையில் இழுபட்டது.

அவள் அருகே வந்து நின்று தலையைக் குனிந்து பிடரியை அசைத்தது புரவி. ஃபால்குனை மெல்லிய சீழ்க்கை ஒலியில் ஆணையிட அது பிடரி சிலிர்க்க தலையாட்டியது. ஃபால்குனை மூங்கிலில் இருந்து மெல்ல வெளியில் வந்தாள். தரையில் இருந்து கடிவாளத்தை குனிந்து கையில் எடுத்துக் கொண்டு முழங்காலைத் தூக்கி அதன் விலாவில் குத்தினாள். ஆத்மாவில் படிந்த ஆணையால் தூண்டப்பட்டு கனைத்தபடி குளம்புகளைத் தூக்கி எழுந்து பாய்ந்த புரவியின் மேல் அவ்விரைவுடன் இணைந்தே எழுந்து ஓடி கால் சுழற்றி ஏறிக் கொண்டாள்.

சிட்டு போல குறுங்காட்டை நோக்கிப் பாய்ந்தது புரவி. செல்லும்போதே உதடுகளைக் குவித்து ஃபால்குனை ஆணையிட்டாள். அவ்வொலியைக் கேட்ட இரு புரவிகள் செவிதூக்கி நோக்கியபின் கனைத்தபடி பாய்ந்து அவளது புரவிக்கு முன்னால் ஒடின. அவற்றைத் தொடர்ந்து அங்கு நின்ற பிற புரவிகளும் கனைத்தபடி ஓடத் தொடங்கின. அவ்வொலியைக்கேட்டு காடுகளுக்குள் நின்ற நாகர்கள் கூச்சலிட்டனர்.   “புரவிகள்! புரவிகள் வருகின்றன” என்ற கூச்சலுடன் கை நீட்டிய வீரன் நெஞ்சில் தைத்த அம்புடன் திகைத்து குப்புற விழுந்தான்.

தலைவன் “கோட்டைக் கதவை திறந்து விட்டார்களா?” என்றான். “இல்லை நமது புரவிகள் நம்மை நோக்கி வருகின்றன” என்றான் வீரன். “நமது புரவிகளா?” என்று அவன் திகைப்புடன் திரும்பினான். “ஆம், அவற்றின் மேல் படைகள் இருப்பது போல் தோன்றுகிறது” என்றான் ஒருவன். “இல்லை, ஒழிந்த புரவிகள் அவை” என்றான் இன்னொருவன். “ஒரு புரவியில் ஒருவன் அமர்ந்திருக்கிறான்” என்று ஒருவன் கூவினான். “அது ஆணல்ல, பெண்” என்றான் இன்னொருவன். “பெண்ணா?” என்றபடி தலைவன் மரமொன்றில் ஏறி நெற்றிமேல் கை வைத்து நோக்கினான். “ஆம், மூங்கில்களுக்குமேல் ஒரு வண்ணமின்னல் போல் நான் ஒரு பெண்ணைக் கண்டேன். சிறகுகளின்றி பறந்தாள்.”

காற்றில் வந்த புரவிக்குமேல் வண்ண ஆடையுடன் பெண் ஒருத்தி முகம் அமைத்து படிந்திருப்பதை தலைவன் கண்டான். அச்சத்துடன் “அணங்கு!” என்றான் இன்னொரு வீரன். “கொல்லுங்கள்!” என்று தலைவன் கையை அசைத்துக் கூவினான். அம்புகள் சீறி எழுந்து காற்றைக் கிழித்து வந்தன. அம்பு பட்ட முதல் புரவி தரையை அறைந்து விழுந்து இழுபட்டுச் சென்று துடித்து எழுந்தது. தாவிவந்த அடுத்த புரவி அதில் கால் சிக்கி விழுந்தது. அதில் கால்பட்டு துடித்துச் சுழன்று விழுந்த மூன்றாவது புரவியைக் கடந்து வந்த புரவியில் இருந்து அறைந்த கிளையொன்றை பற்றித் தாவி ஃபால்குனை மேலே சென்றுவிட்டாள்.

அம்புபட்டு அவள் வந்த புரவி நிலம் அறைந்து விழுந்து மரம் ஒன்றில் மோதி மல்லாந்து கால் உதைத்து துடித்தது. தலைவன் அதைநோக்கி “வெறும் புரவிகள்! எதிலும் எவரும் இல்லை” என்றான். அதற்குள் அவன் நெஞ்சில் பாய்ந்த அம்பு அவனை புரவியில் இருந்து தூக்கி வீசியது. அவனை நோக்கி ஓடிவந்த வீரர்கள் ஒவ்வொருவராக புரவியில் இருந்து கீழே விழுந்தனர். கூச்சலிட்டபடி மேலும் பின்னால் சென்ற நாகர்கள் மேலே பார்க்க மரக்கிளையில் இருந்து பிறிதொரு மரக்கிளைக்கு காற்றில் பறந்துசென்ற பெண் உருவத்தைக் கண்டனர். மூன்றாம்நிலைத் தலைவன் “அணங்கு!” என்று கூவியபடி திரும்பி விரைந்து ஓட நாகர் படைகள் அவனை அனிச்சையாக தொடர்ந்தன.

இறுதியாகத் திரும்பி நின்ற நாகன் கழுத்தில் அம்பு தைத்து கீழே விழ “திரும்புங்கள்! திரும்புங்கள்” என்று மேலும் குரல் எழுந்தது. திரும்பியவர்களில் இறுதிநிரையினர் ஒவ்வொருவராக புரவியில் இருந்து தெறித்து மரங்களில் மோதி கீழே விழுந்தனர். அவர்களின் உடல்கள் பச்சைப்புதர்களை அலைவுறச்செய்தன. தலைக்குமேல் பறவைகள் எழுந்து பறந்து குழம்பி கூச்சலிட்டன.

இறுதியாக திரும்பியவன் மரக் கிளைகளின் நடுவே காற்றில் ஒரு கணம் தெரிந்து மறைந்த பெண் வடிவைக் கண்டு “கொலையணங்கு!” என்று கூவி நெஞ்சில் பட்ட அம்புடன் அவ்வெண்ணம் இறுதியாகத் தெரிந்த முகத்துடன் மல்லாந்து மண்ணில் அறைந்து விழுந்தான். குறுங்காடுகளுக்குள் குதிரைகள் துடித்துக் கொண்டிருந்தன. வீரர்களை இழந்த குதிரைகள் திகைத்து கடிவாளம் இழுபட சுற்றி வந்தன. நிலத்தில் நெளிந்த கைகள் புதர்களுக்குள் இலைகள் அசைய பாம்புகள் கடந்து செல்வதுபோல காட்டின. இலைகளில் விழுந்த குருதி நுனியில் திரண்டு தயங்கிச் சொட்டியது.

நாகர்கள் ஆற்றங்கரையை அடைந்து தாங்கள் வந்த பாதையிலேயே திரும்பி விரைந்தனர். குளம்படி பட்ட உருளைக்கற்கள் உருண்டு ஆற்றங்கரைச் சரிவில் இறங்கி பிற உருளைக் கற்களில் முட்டி நீர்ப்பரப்புக்குள் பொழிந்தன. ஒருபக்கம் சேறுபடிந்த சரிவில் தயங்கி நின்றன. பாறைகளில் முட்டி நுரை எழுப்பிச் சென்ற அருவியின் ஓசையின் மேல் புரவிக் குளம்புகள் ஒலித்து ஒவ்வொன்றாக தேய்ந்தன. குறுங்காடு முழுக்க வலிமுனகல்களும் தனித்த புரவிகளின் கனைப்புகளும் மட்டும் எஞ்சின.

மரக்கிளையின் மறைவில் நின்றபடி ஃபால்குனை அசையாது நோக்கிக் கொண்டிருந்தாள். ஓசைகள் அடங்கியபோது அஞ்சி மேல் எழுந்த பறவைகளில் ஒன்று மெல்ல சிறகொடுக்கி கிளையில் வந்தமர்ந்தது. பறவைக் குரல்கள் அவியத்தொடங்கின. ஒவ்வொரு பறவையாக சிறகமைத்து கீழே வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டது. வில்தாழ்த்தி ஃபால்குனை திரும்பி நடந்தாள்.

காட்டின் விளிம்புக்கு வந்து கோட்டைமுகப்பின் ஒளிபரவிய வெளியில் ஒரு கையில் வில்லும் ஒரு கையில் அம்புமாக நிமிர்ந்து நடந்தாள். கோட்டைக்குள் காவல் மாடங்களில் இருந்த வீரர்கள் திகைத்து குரல் எழுப்பினர். “இன்று காலை வந்தவள்” என்று ஒருவன் கூவினான். “ஃபால்குனை அவள் பெயர்” என்றான் இன்னொருவன். “அவள் எதிரியா?” என்றான் வேறொருவன். “எதிரியா? அவள் அம்புக்கு முன் நிற்கமுடியாது நாகர்கள் ஓடிவிட்டார்கள்” என்று பிறிதொருவன் கூறினான்.

கலிகன் ஓடிச்சென்று மண்ணில் விழுந்து கைகளை நெஞ்சில் வைத்து “வீரர்களே, அவள் அணங்கு. நம்மைக் காக்க வந்த மலைத்தெய்வம். நாகர்களைத் துரத்தி நம் கொடைகொள்ள மீள்கிறாள்” என்றான். “அவள் வெறும் காற்றில் சிறகின்றிப் பறந்தெழுவதை என் விழிகளால் கண்டேன்” என்று ஒருவன் கூறினான். அவர்கள் அவளை நோக்கி சொல்லவிந்தனர். மேலும் மேலும் வீரர்கள் மூங்கில்மேல் ஏறி அவள் அணுகுவதை நோக்கினர்.

திகைத்து நோக்கிநின்ற விழிகள் முன் சீரான காலடிகளுடன் ஃபால்குனை நடந்து வந்தாள். கோட்டை மூங்கில் முகப்பை அடைந்ததும் வளைந்து நின்ற கழை ஒன்றைப் பற்றி வளைத்து ஒரு முறை எம்பி காற்றில் பறந்து பிறிதொன்றைப் பற்றி வளைந்து மீண்டும் பறந்து காவல் மாடத்துக்கு மேல் வந்தாள். அங்கு நின்ற வீரர்கள் அஞ்சி பின்னகர்ந்தனர். ஒருவன் படிகளில் விரைந்து இறங்கி “வந்துவிட்டாள்! மேலே வந்துவிட்டாள்” என்றான். முற்றத்தில் நின்றவர்கள் அஞ்சி இல்லங்களை நோக்கி ஓடத்தலைப்பட்டனர்.

ஃபால்குனை “நான் அணங்கு அல்ல. போர்த்தொழில் கற்றவள். கழிகளில் தாவும் கலை தெரிந்தவள். நாகர்களை துரத்தி விட்டேன்” என்றாள். முதியவீரன் ஒருவன்  “தனந்தனியாக நாகர்களைத் துரத்தும் ஒருவரை இப்போதுதான் காண்கிறேன்” என்றான். “இப்புவியின் நிகரற்ற வீரர் என்று எங்கள் இளவரசரை எண்ணியிருந்தோம்” என்றான் பிறிதொருவன். “அவர் நிகரற்றவரே. நான் மேலும் பல களம் கண்டவள். அவ்வளவுதான்” என்றாள் ஃபால்குனை. “நீ அஸ்தினபுரியின் இளைய பாண்டவருக்கு இணையானவள்” என்றான் முதியவீரன். “நீ இளவரசி… பாடகியல்ல. ஐயமே இல்லை.”

ஃபால்குனை புன்னகைத்தாள். “என்னை அஞ்சவேண்டாம். அஞ்சும் விழிகளை அஞ்சியே நான் பெண்ணானேன்” என்றாள். அவர்கள் சிரித்தனர். “வாருங்கள்! இளவரசரிடம் அழைத்துச் செல்கிறேன்” என்றான் ஒருவன். “உங்கள் இளவரசருக்கு புண்பட்டிருக்கிறது அல்லவா?” என்றாள் ஃபால்குனை. “ஆம். இங்கு குலமருத்துவர் எவரும் இல்லை. இவர்களுக்கு எளிய புண்களை நோக்கவே மருத்துவம் தெரிந்துள்ளது” என்றான் முதியவன். “நான் பார்க்கிறேன்” என்றபடி ஃபால்குனை முடிச்சுகள் போடப்பட்ட நூலேணியில் நீர்த்துளி வழிவதைப் போல் இறங்கி கீழே சென்றாள்.

பகுதி மூன்று : முதல்நடம் - 5

ஊர்த்தலைவர் மாளிகையின் முகப்பில் நின்ற காவலர்கள் ஃபால்குனையைப் பார்த்ததும் அஞ்சி தலை வணங்கி வழி விட்டனர். அவர்கள் அனைவரின் விழிகளும் மாறிவிட்டிருந்தன. தன் தோளிலிருந்து வில்லையும் அம்பறாத்தூணியையும் கழற்றி அவர்கள் முன் வைத்துவிட்டு அவள் படியேறி மேலே சென்றாள். படைத்தலைவர் வணங்கி “இவர் ஊர்த்தலைவர் சத்ரர்” என்றார். தலையில் அணிந்த பெரிய அணிச்சுருளில் செங்கழுகு இறகு சூடிய ஊர்த்தலைவர் வணங்கி “குருதிப்பெருக்கு இன்னமும் நிற்கவில்லை. பெரும் காயம்” என்றார். “எண்ணையுடன் கலந்த பச்சிலைப்பற்று வைத்தோம். கரைந்து வழிகிறது.”

ஃபால்குனை “பார்க்கிறேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள். மையமாக ஒற்றைப்பேரறை கொண்ட மாளிகை அது. அந்தப் பேரறையிலிருந்து இருபக்கமும் திறந்த வாயில்கள் இணைப்புக்குடில்களுக்குச் சென்றன. கூரை செங்குத்தான கூம்பாக தலைக்கு மேல் எழுந்திருந்தது. அங்கிருந்து பலவகையான உணவுப்பொருட்கள் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்தன. எலிகளிடமிருந்து தப்புவதற்காக அவ்வாறு மலைமக்கள் செய்வதுண்டு என்று ஃபால்குனை அறிந்திருந்தாள். தலைக்குமேல் தொங்கிய உணவுமூட்டைகளும் காய்ந்த காய்களும் உலர்ந்த ஊன்தடிகளும் மெல்லிய எச்சரிக்கையை உச்சித்தலைக்கு அளித்தன.

அறைக்குள் அரையிருள் நிறைந்திருந்தது. தரையில் போடப்பட்ட முழங்கால் உயர மூங்கில் மஞ்சத்தில் விரிக்கப்பட்ட காட்டெருமைத்தோல் படுக்கையில் சித்ராங்கதன் படுத்திருப்பதை ஃபால்குனை கண்டாள். “ஒளி” என்றாள். இரு வீரர்கள் சாளரங்களை மறைத்துக் கட்டப்பட்டிருந்த மூங்கில்தட்டித் திரைகளைத் தூக்கி உள்ளே மாலையின் சாய்வெயில் வரச் செய்தனர். செவ்வொளியில் குருதி நனைந்த விலாக்கட்டுடன் கிடந்த சித்ராங்கதனைக் கண்டு அருகே அணைந்து முழந்தாளிட்டு அமர்ந்து அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.

சித்ராங்கதன் மெல்லிய முனகல் குரலில் “படைத்தலைவரும் ஊர்த்தலைவரும் செய்தி சொன்னார்கள். தனியொருத்தியாக நாகர்களை வென்ற உன்னிடமிருந்து அப்போர்க்கலையை பயில விரும்புகிறேன்” என்றான். “அதற்கு முன் நீங்கள் நலம் பெற வேண்டும்” என்றாள் ஃபால்குனை. "குருதி மெல்ல கொப்பளிப்பதைக் கண்டால் ஆழ்ந்த புண் என்று நினைக்கிறேன்.” சித்ராங்கதன் வலியில் பல்லைக் கடித்தபடி மெல்லப் புரண்டு தன் புண்ணைக் காட்டியபடி “ஆறிவிடும்” என்றான். “ஏனென்றால் நான் ஆற்றுவதற்கான பணிகள் நிறைய உள்ளன.”

காவலர்களை நோக்கி “அனைவரும் விலகுங்கள்” என்றாள் ஃபால்குனை. அவர்கள் தலைவணங்கி வெளியே செல்ல எஞ்சிய படைத்தலைவரை நோக்கி “தாங்களும்தான்” என்றாள். “ஆம்” என்றபடி அவரும் விலகினார். ஃபால்குனை ஆடையுடன் சேர்ந்து குருதிப்பசையால் ஒட்டி இறுகியிருந்த கடலாமையோட்டுக் கவசத்தை கொக்கி விலக்கி உரித்துக் கழற்றி அப்பால் வைத்தாள். அவனுடைய ஆடைகளின் முடிச்சுகள் குருதியுடன் இறுகியிருந்தன. அவற்றை தன் குறுவாளால் வெட்டி அறுத்து சுழற்றி உரித்து களைந்தாள்.

குருதி சொட்டிய மேலாடை புண்ணுடன் நனைந்து ஒட்டி தோலென்றே தெரிந்தது. அதை இழுத்து விலக்கிய போது சித்ராங்கதன் வலியுடன் முனகினான். தலைதூக்கி பிளந்து தசைநெகிழ குருதி கொப்பளித்துக் கொண்டிருந்த புண்ணை நோக்கிய சித்ராங்கதன் “சுனை போல் இருக்கிறது” என்றான். “ஆம்” என்ற பின்பு ஃபால்குனை எழுந்து அருகே நின்றிருந்த ஊர்த்தலைவரிடம் “இளவரசருக்கு அருந்த என்ன கொடுத்தீர்கள்?” என்றாள். “புண்பட்டவர்களுக்கெல்லாம் நாங்கள் மகாருத்ரப்புகை கொடுப்பதுண்டு” என்றார் அவர். அவள் திரும்பி உள்ளே நோக்கியபின் “நன்று” என்றாள்.

வெளியே சென்று அங்கு காத்து நின்ற வீரர்களிடம் சுருக்கமாக “தேன்மெழுகு ஓர் உருளை, நன்கு கொதிக்க வைத்து சற்றே ஆறிய நீர், புதிய மரவுரித்துணி நான்கு சுருள்கள், அரைத்தமஞ்சள், நறுஞ்சுண்ணம் மற்றும் வேம்பின் எண்ணை” என்று ஆணையிட்டாள். பின்பு படிகளில் இறங்கி வெளியே சென்று கோட்டைவேலியை அணுகி அங்கு செறிந்து நின்றிருந்த மூங்கில் கவடின் அடியில் படர்ந்து கிடந்த முட்புதர்களில் தேடி கூரிய காரை முட்களை ஒடித்து கைகளில் சேர்த்துக் கொண்டாள். திரும்பி வரும் வழியில் அருகே நின்ற குதிரையின் வாலில் இருந்து சில முடிகளை பிடுங்கி கையில் எடுத்துக் கொண்டாள்.

உள்ளே வந்து வெண்ணிறத் துணி விரிக்கப்பட்ட பீடத்தில் அவற்றை பரப்பி வைத்தாள். சித்ராங்கதன் “உங்கள் கொள்கைப்படி என் உயிர் பிரிய வாய்ப்புள்ளதா?” என்றான். “குருதி நின்றாக வேண்டும். புண்பட்டபின்பு இத்தனை நேரம் ஆகியும் குருதி நிற்கவில்லை என்பது உகந்ததல்ல” என்றாள் ஃபால்குனை. “உங்களை புரவியில் வைத்து கொண்டு வந்திருக்கிறார்கள். அவ்வசைவில் புண் விரிந்துவிட்டது என்று எண்ணுகிறேன்.”

“நீ மருத்துவத்தை எங்கு கற்றாய்?” என்றான் சித்ராங்கதன். “போர்க்கலையில் ஒரு பகுதி மருத்துவம்” என்றாள் ஃபால்குனை. புண்ணை அவள் தன் விரல்களால் தொட்டு ஆராய்ந்தாள். அதன் இரு விளிம்பிலும் நின்ற கிழிந்த தோலை தன் குறுவாளால் வெட்டி காயத்தை தூய்மைப்படுத்தினாள். கொதித்து ஆற்றிய நீருடன் இரு வீரர்கள் வந்தனர். மஞ்சளும் வேம்பெண்ணையும் சுண்ணமும் கொண்டுவரப்பட்டன. அந்தக் குடுவையின் நீரில் மஞ்சள்தூளையும் வேம்பெண்ணையையும் சற்று சுண்ணத்தையும் இட்டு சிறிய மூங்கில் குவளையால் அள்ளி புண்ணை நன்கு கழுவினாள்.

வலியுடன் சித்ராங்கதன் முனகினான். பற்களைக் கடித்து கண்மூடியிருந்த அவனிடம் “இளவரசே, இதில் தங்களின் புதிய சிறுநீர் தேவை” என்றாள். அவன் திகைப்புடன் “எதற்கு?” என்றான். அவன் விழிகள் சுருங்கி இமைகள் குளவியிறகுகள் போல அதிர்ந்தன. “தங்கள் சிறுநீர் தங்கள் காயத்துக்கு மருந்து. மலைகள் முழுக்க முதல் உடன்மருந்தாக அதுவே உள்ளது” என்றாள் ஃபால்குனை. அவன் அவளையே நோக்கிக்கொண்டு அசையாமலிருந்தான். “இளவரசே, இந்த மருந்தைவிட உகந்தது இன்று இங்கே கிடைப்பதில்லை” என்றாள் ஃபால்குனை.

“சிறுநீரா?” என்று மீண்டும் சித்ராங்கதன் கேட்டான். “ஆம்” என்றாள் ஃபால்குனை. “இங்கா?” என்றான். “இங்கு எவரும் இல்லை. வெளியேயிருந்து மருத்துவர் எவரையும் அழைக்க நேரமில்லை” என்றாள். அவன் விழிகளைத் தாழ்த்தியபோது மென்மையான வெண்கழுத்தில் நீலநரம்பு ஒன்று எழுந்தது. வெண்பளிங்கு சாளக்கிராமத்தில் விழுந்த நீரோட்டம் போல. உதடுகளைக் கடித்துக்கொண்டு சிவந்த விழிகளுடன் அவளை நோக்கி “நீ விலகி சுவர் நோக்கி நில். அந்தக் கொப்பரையை என்னிடம் கொடு” என்றான்.

அவள் அளித்த சிறுகொப்பரையை கை நீட்டி வாங்கியபடி எழுந்த சித்ராங்கதன் அடிவயிற்றை இழுத்துச் சொடுக்கிய வலியுடன் “அம்மா!” என்று அலறியபடி மல்லாந்து விழுந்தான். ஃபால்குனை திரும்பி “என்ன?” என்றாள். அவன் சிறுநீர் தானாக வெளியேறத்தொடங்கியதை நெடியால் உணர்ந்ததும் கொப்பரையைப் பிடுங்கி அவன் கீழ் ஆடையை மேலே தூக்கி கால்களைப் பரப்பி அதன் அடியில் வைத்தாள். “ஒன்றுமில்லை இளவரசே, நான் மருத்துவர் என எண்ணுங்கள்” என்றாள் ஃபால்குனை.

“ம்” என அவன் முனகினான். குளிர்ந்த ஈரக்கம்பளிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அவர்கள் மேல் போடுவதுபோல அமைதி எழுந்து மூடியது. ஒவ்வொரு நரம்பும் எடைதாளாமல் முறுக்கி அதிர்ந்து இற்றுவிடுமென அதிரும் பேரமைதி. சிறுநீர் கழித்து முடித்தபின் சித்ராங்கதன் பெருமூச்சுவிட்டான். ஃபால்குனை அசையாமல் நின்றாள். அவன் அந்த அமைதியை கலைப்பதற்காக தொண்டையை கனைத்தான். அவ்வொலியில் அவள் அசைந்தாள். அவன் மேலும் குரல் தீட்டிக்கொண்டபின் “சிறுநீர் எப்படி மருந்தாகும்?” என்றான்.

ஃபால்குனை “ஆம்” என்றாள். என்ன சொல்கிறோம் என உணர்ந்தவள் போல “விலங்குகளுக்கு அவற்றின் தெய்வங்கள் அளித்த கொடை அது இளவரசே” என்ற பின் பார்வையைத் திருப்பி தன் கைகளை நீர்விட்டு மும்முறை கழுவிக் கொண்டாள். பின்பு சித்ராங்கதனை அணுகி அவனைத் தொட்டாள். அவன் பார்வையை மறுபக்கம் திருப்பி “வலிக்குமா?” என்றான். அவள் “சற்று...” என்றபின் அவனை மெல்லச் சரித்து சிறுநீரை அக்காயத்தில் விட்டு கழுவினாள். மென்மையான தசைப்பிளவில் அவள் விரல்கள் உரசியபோது அவன் அவள் தோள்களை இறுகப்பற்றிக் கொண்டு பற்களை கிட்டித்துக் கொண்டான்.

அவள் கழுவக் கழுவ வலி தாளமுடியாமல் முனகிக் கொண்டே இருந்த சித்ராங்கதன் ஒரு கணத்தில் கிரீச்சிட்டு அலறியபடி எழுந்து அவள் தோள்களை இறுகப்பற்றி அழுத்தினான். “போதும்... போதும்” என்றான். “வலி தாள வேண்டியதுதான் இளவரசே” என்றாள் ஃபால்குனை. “வலி இன்றி இதைச் செய்தால் பிழை நேர்கையில் அதை நாமறிய முடியாமலாகும்.” சித்ராங்கதன் பிடியை விட்டு உடலை விலக்கி படுத்துக்கொண்டு “ம்” என்றான்.

கொதித்த நீரில் குதிரைவால் முடியையும் காரைமுட்களையும் போட்டு கழுவினாள். முள்ளை சிறுநீரில் கழுவி உதறிவிட்டு வெட்டுவாயின் ஒருமுனையில் அழுத்தி குத்தி இறக்கினாள். சித்ராங்கதன் அவள் தோள்களை இறுகப்பற்றி தசையை பற்களால் கவ்வினான். வெட்டுவாயின் மறு முனையையும் அதே முள்ளால் குத்தி மறுபக்கம் உருவி எடுத்தபின் முள்ளின் கீழ் நுனியில் குதிரை வால் மயிரை செலுத்தி இழுத்து எடுத்து இறுக்கி முதல் முடிச்சை போட்டாள். சித்ராங்கதனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் கால்கள் படுக்கைத்தோலை கசக்கியபடி துடித்து அடங்கின.

ஏழு முடிச்சுகள் போட்டபின் ஃபால்குனை நோக்கி “குருதி சற்று அடங்குகிறது” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். வியர்வையில் முகமும் கழுத்தும் நனைந்து அவற்றில் குழல்பீலிகள் ஒட்டியிருந்தன. ஃபால்குனை திரும்பி அப்பால் மண்கலத்தில் உருகும் தேன் மெழுகும் மரவுரியுமாக நின்ற குடித்தலைவரிடம் “உள்ளே வருக” என்றாள். அவர் வந்ததும் சிறுநீரில் அந்த மரவுரியை நனைத்தாள். உருகும் மெழுகுவிழுதை அதிலிட்டு தோய்த்தாள். மஞ்சளும் வேம்பெண்ணையும் சுண்ணமும் கலந்த லேபனத்தை புண்மேல் வைத்து அதன் மேல் அந்த மரவுரிச்சுருளை சுற்றி கட்டத் தொடங்கினாள்.

“வலிக்கு இந்த வெப்பம் இதமாக இருக்கிறது” என்றான் சித்ராங்கதன். “ஆம்” என அவள் புன்னகை செய்தாள். “உன் தோள்களை கடித்துவிட்டேன்” என்றான் சித்ராங்கதன். ஃபால்குனை “அது நோயாளிகள் செய்வதுதான்” என்றாள். “உன் தோள்கள் இறுகியிருக்கின்றன.” ஃபால்குனை புன்னகையுடன் விழிகளை விலக்கி “நான் படைக்கலப்பயிற்சி பெற்றவள்” என்றாள். மீண்டும் அவள் விழிதிருப்பியபோதும் அவன் நோக்கிக்கொண்டிருந்தான். இருவிழிகளும் உலோக ஒலியெழுப்பி அம்பு முனைகள் தொடுவதுபோல சந்தித்து விலகின. இரு மணிகள் நீரலைகளில் அணுகவா விலகவா என அலைக்கழிந்தன.

ஃபால்குனை நன்கு சுற்றிக்கட்டியபின் தோளைப்பற்றி மெல்ல படுக்க வைத்து அவன் ஆடைகளை சீர்படுத்தினாள். தன் குருதிக் கைகளை வெந்நீரில் கழுவியபடி “சில நாட்களில் சீர்படுவீர்கள்” என்றாள். “ஆம், இப்போதே அதை உணர்கிறேன். இதுவரை எங்கோ விழுந்து நழுவிச் சென்று கொண்டிருப்பதாக தோன்றியது. இப்போது பற்றுக் கோல் ஒன்றை அடைந்துள்ளேன்” என்றான் சித்ராங்கதன். அவள் திரும்பி நோக்கியபின் விழிகளை விலக்கிக்கொண்டு மேலும் கைகழுவினாள். அத்தனைநேரம் கழுவுவதை உணர்ந்து கைகளை வெளியே எடுத்து மரவுரியால் துடைத்துக்கொண்டாள்.

சித்ராங்கதனின் குருதியால் வெந்நீர்க் கலத்தில் செந்நீர் நிறைந்தது. புன்னகையுடன் உதடுகளை வளைத்து “உங்கள் குருதி” என்றாள் ஃபால்குனை. அவன் எட்டிப்பார்த்து “ஆம்” என்றான். “இளமைமுதலே குருதியை கண்டுவருகிறேன். என்னை கிளர்ச்சியடையச் செய்யும் வண்ணம் அது” என்றபின் “ஆனால் இது என் குருதி” என்றான். “ஆம், இது நமக்கு அரியதே” என்றாள் ஃபால்குனை. “நான் பலரை சித்திரவதை செய்ய ஆணையிட்டிருக்கிறேன். பலநூறு தலைகளை வெட்டி எறிந்திருக்கிறேன்” என்றான் சித்ராங்கதன். “நீங்கள் குரூரமானவர் என்றார்கள்.” சித்ராங்கதன் புன்னகைத்து “ஆம்” என்றான்.

மீண்டும் ஒரு குளிரமைதி அவர்களை சூழ்ந்தது. ஃபால்குனை எழுந்து விலக எண்ணும் கணத்தில் “நீ யார்?” என்றான். “ஃபால்குனை” என்றாள். “இல்லை, நீ அறிந்திராது ஏதும் இப்புவியில் இல்லை என உணர்கிறேன்” என்றான் சித்ராங்கதன். “ஒருவேளை உன் முன் களம் நிற்க இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவரால் மட்டுமே முடியும். தனியொருத்தியாக நாகர்களை வென்ற நீ விழைந்தால் பாரதவர்ஷத்தையே ஆள முடியும். காட்டில் தனியாக அலைந்து திரிவதன் நோக்கம் என்ன?” என்றான்.

“இப்போது அதை சொல்லலாகாது. பிறிதொரு தருணம் வரட்டும்” என்றாள் ஃபால்குனை. அவன் மேலும் பேசுவதற்குள் எழுந்து திரும்பி ஊர்த்தலைவரிடம் “உங்கள் ருத்ரதூமத்தை கொண்டு வருக!” என்றாள். “நல்ல உயர்தர மதுவும் தேவை.” ஊர்த்தலைவர் “தூமமே மயக்களிக்கும்” என்றார். “ஆம், ஆனால் குருதி சற்று சூடாகவேண்டியிருக்கிறது” என்றாள் ஃபால்குனை. “இங்கு நாங்கள் அரிசி மது அருந்துகிறோம். அது கடுமையானது” என்றார் அவர். “அரிசி மது உகந்தது. இரு குவளை கொடுங்கள்.”

ஊர்த்தலைவர் “இருகுவளையா? அது மிகை” என்றார். “வேண்டும்” என்ற ஃபால்குனை “ஏழு முறை சிவ மூலி இழுக்கட்டும். இன்று இரவு நன்கு துயிலல் வேண்டும். துயிலுக்குள்ளும் வலி எழும்” என்று சொன்னபின் திரும்பி சித்ராங்கதனை நோக்கி “ஆனால் தூமம் அதைச் சூழ்ந்து அழுத்தி மூடிக் கொள்ளும். வலியை வெல்லும்பொருட்டு உள்ளம் அழகிய கனவுகளை உருவாக்கிக்கொள்ளும். அக்கனவுகளை தூமம் வளர்க்கும். வலிக்கனவுகளிலேயே வாழும் பொருள் தெளியும் தருணங்கள் உள்ளன என்பது மருத்துவர் கூற்று” என்றாள்.

“ஆகவே வலி இனியது, அல்லவா?” என்றான் சித்ராங்கதன். ஃபால்குனை புன்னகைத்து “அவ்வாறே” என்றாள். அவர்கள் விழிகள் சந்தித்தன. ஒன்றையொன்று தொட்டு நிலைத்து காலம் மறந்து பின்பு திகைத்து மீண்டன.

ஊர்த்தலைவர் ஆணையிட நெருப்பில் காட்டி சற்றே ஆவி எழச்செய்யப்பட்ட அரிசி மதுவை ஒரு வீரன் கொண்டு வந்தான். மூங்கில் குவளையில் அளிக்கப்பட்டபோது சித்ராங்கதன் அதை வாங்கி முகர்ந்தான். “அனல் என எரிகிறது” என்று முகம் சுளித்தான். “அருந்துங்கள் அரசே. தங்கள் குருதியின் கொப்பளிப்பை இது அடங்கச் செய்யும்” என்றாள் ஃபால்குனை. ஒரே மிடறில் அதை அருந்தி உடல் உலுக்கி முகம் சுளித்து திருப்பிக் கொடுத்தபின் பற்களைக் கிட்டித்தபடி மெல்ல மல்லாந்து சித்ராங்கதன் “மெல்லும்தோறும் இனிக்கும் அரிசிக்குள் இத்தனை கசப்பு ஒளிந்திருப்பது வியப்பு அளிக்கிறது” என்றான்.

ஃபால்குனை “இப்புவியில் உள்ள அனைத்து உணவுக்குள்ளும் அறுசுவைகளும் உறைந்துள்ளன. நாம் விரும்புவதையே நாதொட்டு மேலே எடுக்கிறோம்” என்றாள். “இத்தனை கசக்கும் பொருள் எப்படி இனிதாகிறது?” என்றான். “பசியால்” என்ற ஃபால்குனை விழிகாட்ட சிறிய மண் சிலும்பியில் அனலுடன் வந்த வீரர்கள் அதில் பொடித்த சிவமூலியின் இலைத் திவல்களைப் போட்டு விசிறி புகை எழுப்பி சித்ராங்கதன் அருகே வைத்தார்கள். “மூச்சை இழுங்கள் இளவரசே” என்றாள் ஃபால்குனை. “இந்த மதுவே போதாதா?” என்றான் சித்ராங்கதன். “அது உடலுக்கு, இது உள்ளத்துக்கு” என்றாள் ஃபால்குனை.

சிரித்தபடி அவன் ஒரு மூக்கை கையால் பொத்தி மூச்சை ஆழ இழுத்து புகையை நெஞ்சு நிரப்பி வெளியில் விட்டான். இடையில் கை வைத்து அவன் மூச்சு இழுப்பதை அவள் நோக்கி நின்றாள். “போதும்” என்று கையசைத்து அவன் கண்களை மூடிக் கொண்டான். “நன்கு துயிலுங்கள் இளவரசே” என்றாள் ஃபால்குனை. அவன் விழிகளைத் திறந்த போது வெண்பரப்பில் குருதி வேர்கள் படர்ந்து எழுந்தன. “நான் அங்கே வெளியேதான் இருப்பேன். என் குரலை நீங்கள் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்.” மெல்லிய முனகலுடன் அவன் தன் கைகால்களை எளிதாக்கிக் கொண்டான்.

அவள் ஆடைதிருத்தி வெளியே சென்றாள். தொடர்ந்து வந்த குடித்தலைவர் “இளவரசர் மீண்டு விடுவாரா?” என்றார். “இன்னும் பன்னிரு நாட்கள் கடந்தால் வில்லேந்தி புரவி ஏறி போரிட முடியும்” என்று ஃபால்குனை புன்னகைத்தாள். “நாடே அவரைத்தான் நம்பி உள்ளது. எங்களூரில் அவரது கொடுஞ்செயல்களால் அவரை அஞ்சி வெறுத்தவர்கள் பலர். அவர் புண்பட்டுள்ளார் என்றறிந்ததுமே அஞ்சி கதறி அழத்தொடங்கியிருக்கின்றனர். அனைத்து தெய்வங்களிடமும் அவர் உயிருக்காக இறைஞ்சுகிறார்கள். எங்கள் குடிகாத்தாய் பெண்ணே. இதன் பொருட்டு எங்கள் மூதாதையரும் குலமும் உன் தாள் பணிய கடமைப்பட்டுள்ளது” என்றார் குடித்தலைவர்.

ஃபால்குனை மீண்டும் வெளியே வந்தபோது மணிபூரகத்தின் வீரர்கள் அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர். “இந்த விழிகள் தங்களைப் போல் நிகரற்ற வீராங்கனை ஒருத்தியை வணங்கும் பேறு பெற்றன" என்றான் முதிய வீரன் ஒருவன். “எங்கள் குலங்களில் தங்களுக்கு நிகரான வீரர்கள் பிறக்க வேண்டும். எங்கும் தலை தாழ்த்தாமல் எங்கள் குலம் வாழ வேண்டும்" என்று ஒருவன் குரல் கம்ம கூவினான்.

ஃபால்குனை புன்னகையுடன் அவனை வாழ்த்தினாள். "உங்கள் பாடலை இன்று கேட்போம் என்று எண்ணி மகிழ்ந்திருந்தோம்” என்றான் இளையவீரன். முதிய வீரன் “உளறுகிறாயா? உன்னைப் போல் ஆயிரம்பேர் கொண்ட படைக்கு நிகரானவள் அவள். உனக்காக பாடுவதற்கா இங்கு வந்திருக்கிறாள்? மூடா” என்றான். "பாடுகிறேன்” என்றாள் ஃபால்குனை. “என் முதற்தொழில் அதுவே.”

“வேண்டாம். தாங்கள் புவியாளும் சக்ரவர்த்தினிக்கு நிகரானவர். தாங்கள் போர் புரிவதை இக்கோட்டை மேல் நின்று நான் கண்டேன். துர்க்கை மண்ணுக்கு வந்து விட்டாள் என்று என் உடல் மெய்ப்பு கொண்டது. கண்ணீர்வார கைகூப்பி நோக்கி நின்றேன். தங்கள் கால்பட்ட மண்ணைத் தொட்டு தலையில் அணிய வேண்டும் என்று விழைந்தேன். எங்களுக்காக நீங்கள் பாடுவது பெரும்பிழை” என்றான் முதியவீரன்.

“பாடுவதும் ஆடுவதும் போரிடுவதும் என் கலைகள். எதையும் ஒன்றைவிட குறைவென்று நான் எண்ணவில்லை” என்றாள் ஃபால்குனை. திரும்பி இளையோரிடம் “வருக! இன்றிரவு நாம் இசையுடன் உண்போம்” என்றாள். பின்வரிசையில் நின்ற இளம் வீரர்கள் கைகளைத் தூக்கி உவகைக் குரல் எழுப்பினர். “இசை! இசை! இன்று இரவெல்லாம் இசை. நெருப்பு! நெருப்பிடுக!” என்று ஒருவன் கூவினான்.

அவர்கள் ஓடிச் சென்று பின்பக்கம் விறகுப்புரையிலிருந்து பெரிய கட்டைகளை இழுத்து வந்தனர். குடித்தலைவர் மாளிகை முற்றத்தில் கணப்பு இடப்பட்டது. இல்லங்கள் அனைத்தும் விழிச்சாளரங்களையும் வாடிவாசல்களையும் திறந்து கூச்சலிட்டன. ஆர்ப்பரித்தபடி பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் ஓடி வந்தனர். முதியவர்கள் கலங்களில் உணவையும் மதுவையும் கொண்டு வந்தனர். கணப்பைச்சுற்றி அமர்ந்துகொண்டனர். கூச்சலிட்டு ஓடிய குழந்தைகளை அதட்டலிட்டு அமரச்செய்தனர் அன்னையர்.

நெருப்பு மெல்ல நாகமென சீறி உடல் சுற்றி சிறு விறகுகளை பற்றிக் கொண்டது. சிவந்து எழுந்து பெரும் தடிகளை வளைத்தது. அவை செம்மைகொண்டு கனன்று வெடித்து நீலப்புகை எழுப்பியபோது தழல்கொடிகள் மேலே எழுந்தன. “இசை, இன்றிரவு முழுக்க!” என்று ஒருவன் கூறினான். “நெருப்பு அணையும் வரை” என்று இன்னொருவன் சொன்னான். “இந்த நெருப்பு இனி அணையவே அணையாது” என்றான் ஒருவன். பெண்கள் சிரித்தனர்.

நெருப்பைச் சூழ்ந்து உடல்நெருக்கி அவர்கள் அமர்ந்து கொண்டனர். அன்னையர் மடியில் அமர்ந்த குழந்தைகள் கைகளை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டன. “பாடுங்கள்” என்றார் முதியவர். ஃபால்குனை சிறிய தப்புமுழவை கையில் வாங்கிக் கொண்டாள். விரலால் அதை மீட்டி தாளத்தை ஓடவிட்டபடி “எதைப் பாடுவது?” என்றாள். இளைஞன் ஒருவன் “அழியாக் காதல் கதை ஒன்றை” என்றான். பிற இளைஞர்கள் “ஆம் ஆம்” என கூவினர். புன்னகைத்தனர்.

ஒரு சிறுவன் “இளைய பாண்டவரின் கதையை” என்றான். “ஆம், இளைய பாண்டவர்! பார்த்தர்” என்றபடி குழந்தைகள் எழுந்து கூச்சலிட்டன. ஃபால்குனை சிரித்து “என்னிடம் பிறிதொரு கதையையும் எவருமே கேட்பதில்லை என்று அறிவேன்” என்றாள். “ஆம் ஆம். இளைய பாண்டவரின் கதை” என்றது பெண்களின் கூட்டம். “சரி, அப்படியென்றால் இளைய பாண்டவரின் காதல் கதை” என்றான் இளைஞன். “இளைய பாண்டவரின் கதைகள் எல்லாமே காதல் கதைகள் அல்லவா?” என்றாள் பெண்ணொருத்தி. அத்தனை இளம் பெண்களும் உரக்க நகைத்தார்கள்.

“இளைய பாண்டவர் நாகருலகுக்குச் சென்று உலூபியை மணந்த கதையைப் பாடுகிறேன்” என்றாள் ஃபால்குனை. “ஆம். அதைப் பாடுங்கள்… பாடுங்கள்” என்று கூட்டம் கொந்தளித்தது. “பாடகியே, அந்தக்கதையை கேட்டிருக்கிறேன். ஆனால் எவரும் இன்றுவரை முழுமையாகப்பாடியதில்லை அதை” என்றாள் முதியவள். “நான் அதை நன்கறிவேன்” என்றாள் ஃபால்குனை.

ஓர் இளைஞன் “அவர்கள் இங்குள்ள கீழ்நாகரல்ல அல்லவா? மண்ணுக்குள் நெளியும் பாம்புகள் என்று கேட்டிருக்கிறேன்” என்றான். பிறிதொருவன் “அவர்கள் பறக்கும் நாகர்கள்” என்றான். ஃபால்குனை முழவின் வார்களை இழுத்து ஆணியைத் திருகி இறுக்கியபின் விரல்களால் அதை மீட்டினாள். தாளம் விரைவுகொள்ள ஒப்பக் குரலெடுத்து பாடத் தொடங்கினாள்.

“கங்கைக் கரையில் நீராட இறங்கிய இளைய பாண்டவரை காலில் சுற்றிப் பற்றிக்கொண்டது ஒரு பெருநாகம். அதற்கு முந்தைய கணம் அது உலூபன் எனும் ஆணாக இருந்தது. அவர் கால்களின் நகங்களைக் கண்டதுமே உலூபி என்று தன்னை பெண்ணாக்கிக் கொண்டது. நாடுவிட்டு காடு வந்த இளைய பாண்டவரோ நீரில் இறங்கி குனிந்து தன் முகம் பார்த்த அக்கணத்தில் தன்னைப் பெண்ணென உணர்ந்துகொண்டிருந்தார். கால்சுற்றிக் கவ்விய நாகம் நீருள் அழைத்துச்சென்றபோது அத்தழுவலில் அவர் ஆண்மகன் என்றானார்.”

பகுதி மூன்று : முதல்நடம் – 6

இரண்டுநாட்கள் முற்றிலும் ஆழ்துயிலிலேயே இருந்த சித்ராங்கதன் மூன்றாம் நாள் மணிபுரநகரிக்கு திரும்பிச்சென்றான். கீழ்நாகர்கள் மீண்டும் படைகொண்டு வரக்கூடும் என்ற ஐயம் இருந்ததால் சித்ராங்கதனுடன் வந்த புரவிப்படை அவ்வூரிலேயே மேலும் பதினைந்துநாள் தங்கியது. அவர்களுடன் ஃபால்குனையும் இருக்கவேண்டும் என்று சித்ராங்கதன் ஆணையிட்டான். அதை தலைவணங்கி அவள் ஏற்றுக்கொண்டாள்.

அரிசிமது சித்ராங்கதன் மூச்சை சீர்படுத்தியிருந்தது. சிவமூலி அவனை அவனறியாத இடங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்று மீட்டுக்கொண்டு வந்திருந்தது. மயக்கில் இருந்து விழித்த சித்ராங்கதன் கையூன்றி எழ முயன்று தன் இடையில் இருந்த காயத்தை உணர்ந்து களைப்புடன் படுத்துக்கொண்டு கண்மூடினான். ஒவ்வொன்றையும் நினைவிலிருந்து மீட்டெடுத்தபின் அருகில் இருந்த படைத்தலைவரிடம் “மீண்டும் அவர்கள் வந்தார்களா?” என்றான். “இல்லை” என்று படைத்தலைவன் கூறினான். “வரக்கூடும். வெறும் அச்சத்தால் திரும்பிச் சென்றதை எண்ணி அவர்கள் நாணுவார்கள். அல்லது நாம் ஏவிய அணங்கு அவர்களை வென்றது என்று புரிந்துகொள்வார்கள். தங்கள் குலத்து தெய்வங்களை பூசனை செய்தபின் அவ்வச்சத்தை வென்று தங்கள் பேய்களுடன் மீண்டு வருவார்கள்” என்றான்.

பின்பு விழி திறந்து “அவள் எங்கே?” என்றான். ஃபால்குனை கை வளையல்கள் ஒலிக்க அருகே வந்து நின்றாள். அவளை சிவந்த விழிகளால் நோக்கியபோது அவன் உடல் அதிர்ந்து வாய்திறந்து இருகைகளையும் ஊன்றி எழுந்து அமர்ந்துவிட்டான். “இளவரசே” என்று முதியகாவலன் அவனைப் பற்றினான். “இல்லை” என்று காவலனைத் தடுத்து “நீ...” என்றான். ஃபால்குனை “நான் இங்கு இருக்கிறேன்” என்றாள். பெருமூச்சுடன் “ஆம், இங்கே இரு. மீண்டும் ஒருமுறை அவர்களை தோற்கடித்தால் இத்திசை நோக்கி அவர்கள் வருவது அரிதாகும்” என்றான்.

முனகலாக ஏதோ சொன்னபடி கண்களை மூடிக்கொண்டான். குருதி வடிந்து வெளுத்த முகம் துயிலில் சற்றே வீங்கியிருந்தது. வலியுடன் முனகியபடி கைகால்களை தளரவிட்டு மல்லாந்து படுத்தான். “இளவரசரை மீண்டும் அரண்மனைக்குக் கொண்டுசெல்ல இயலுமா?” என்றான் முதிய காவலன். “செல்லும் வழி சீரான தேர்ச்சாலைகளாக இருந்தால் வண்டியில் படுக்கவைத்து கொண்டு செல்லலாம்” என்றாள் ஃபால்குனை. “இந்த நதிக்கரையைத் தாண்டினால் தேர்ச்சாலைதான்” என்று முதுகாவலன் சொன்னான். “அப்பால் ஸ்வேதை ஆறு ஓடுகிறது. ஆனால் அதன் வழியாக செல்ல முடியாது. அதன் பெருக்கு சுழற்சியைக் கொண்டு செல்வது.”

“தேர்ச்சாலையில் செல்லலாம். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று நாழிகைக்கு மேல் செல்லலாகாது. மணிபுரிக்கே கொண்டு செல்வது நன்று. நல்ல மருத்துவர்கள் தொடர்ந்து நோக்கிக்கொண்டிருக்கவேண்டும்” என்றாள் ஃபால்குனை. முதுகாவலன் “அவ்வண்ணமே” என்றான். சித்ராங்கதன் ஏதோ சொன்னான். “என்ன சொல்கிறீர்கள் இளவரசே?” என்றான் முதுகாவலன். சித்ராங்கதன் “பெண்” என்றான். பின்னர் பெருமூச்சுடன் “நீண்ட புரிப்பாதையின் வாயில்” என்றான்.

குனிந்து நோக்கிய முதுகாவலன் “எதையோ சொல்கிறார். ஒற்றைச் சொல்தான். ஆனால் அது என்னென்று அறியக் கூடவில்லை. நாள்தோறும் அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்றான். இன்னொரு காவலன் குனிந்து கூர்ந்து நோக்கியபடி திரும்பி ஃபால்குனையிடம் “உன் பெயரை” என்றான். முதுகாவலன் “நானும் அவ்வண்ணமே எண்ணினேன். நெடுநேரம் கூர்ந்து நோக்கியபோது இல்லை என்று தெரிந்தது. ஃபால்குனை என்ற பெயரின் இறுதிசொல்லில் நா வளையும். அது நிகழவில்லை” என்றான். “இதழசைவைக் கொண்டு அச்சொல்லை அறிய முடியுமா என்ன? வீண் முயற்சி அது” என்று ஃபால்குனை சொன்னாள். “விழித்தால் அவரே சொல்வார். அதுவரை காத்திருப்போம். இளவரசருக்கு மீளமுடியாத புண் எதுவும் இல்லை” என்று படைத்தலைவன் சொன்னான்.

மூன்றாம் நாள் நான்கு வீரர்கள் மூங்கில் கட்டிலில் சித்ராங்கதனை படுக்கவைத்து சுமந்தபடி ஆற்றின் கரையின் ஓரமாக இறங்கிச்சென்ற மண்பாதையில் வளைந்து வளைந்து சென்று மறைந்தனர். முன்னும் பின்னும் காவல்வீரர்கள் படைக்கலன்களுடன் அகம்படியாக சென்றனர். பயண அலுப்பு தெரியாமல் இருக்க சித்ராங்கதனுக்கு மேலும் அரிசிமதுவும் ருத்ரதூமமும் அளிக்கப்பட்டது. இருகைகளையும் இறுகச் சுருட்டி ஒருக்களித்துப் படுத்து விழிமூடி இருந்த அவன் இதழ்கள் அப்போதும் எதையோ சொல்லிக்கொண்டிருந்தன.

கோட்டைவாயிலில் அமைந்த காவல்பீடத்தில் ஏறி சித்ராங்கதன் ஆற்றங்கரைப் பாதையில் சென்று வளைந்து மரக்கூட்டங்களுக்கு அப்பால் மறைவது வரை ஃபால்குனை நோக்கினாள். பின்பு பெருமூச்சுவிட்டு தலைகுனிந்து விழி சரித்து காற்றில் பறக்கும் பனிப்புகைத் தீற்றல் என நடந்து தன் குடிலுக்கு வந்தாள். அவளுக்கு ஏவல் பணி செய்ய வந்திருந்த வீரன் “இளவரசரின் பிரிவு தங்களை வருத்துகிறது” என்றான். ஃபால்குனை உணர்ந்து நோக்கி புன்னகை செய்தாள். “ஆம். அங்ஙனம் நான் வருந்துவேன் என இப்பிரிவு நிகழும் கணம் வரை நான் அறியவில்லை” என்றாள். காவலன் “பிரிவே உறவைக் காட்டும் ஆடி என்பர்” என்றான். ஃபால்குனை துயரம் கொண்ட புன்னகையைக் காட்டி மெல்லிய மூச்சுடன் விழி விலக்கிக்கொண்டாள்.

அந்தி இறங்கிக்கொண்டிருந்தது. இருள் செறியும்வரை அவள் அங்கேயே வானை தொட்டுத் துழாவி அசைந்துகொண்டிருந்த மரங்களின் உச்சிகளை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அந்திப் பறவைகள் எழுந்து சிவந்த வானைத் துழாவி ஒவ்வொன்றாக அமைவதுவரை அவள் உடலில் அசைவு கூடவில்லை. இருளானதும் புரவி வீரர்கள் களமுற்றத்தில் நெருப்பிட்டு செவ்வொளி எழுப்பினர். இளம்சிறார் சிரித்தபடி அவளைச் சூழ்ந்து “பாடல்! இன்றும் பாடல்!” என்று கூவினர். ஒரு குழந்தை “இன்று வாரணவதம்” என்றது. ஒரு வீரன் “ஆம், இன்று வாரணவதம் பாடுவதாய் சொன்னாய்” என்றான். ”வாரணவதம்! வாரணவதம்!” என்று கூவியபடி குழந்தைகள் துள்ளிக்குதித்தன “ஆம்” என்று புன்னகைத்தபடி ஃபால்குனை எழுந்துவிட்டாள்.

“வாரணவதம் பாண்டவர்களின் மறுபிறப்பு என்கிறார்கள். அக்குகைப் பாதையில் அவர்களை ஃபூதமஸ் என்னும் பெருநாகம் விழுங்கியதாகவும் பின்பு அவர்கள் அதன் வயிற்றைக் கிழித்து வெளிவந்ததாகவும் அந்நாகம் அவர்களை வாழ்த்தி முத்தமிட்டு அனுப்பியதாகவும் கதைகேட்டிருக்கிறோம். அந்நிகழ்வு இறந்து மீண்டும் பிறப்பதற்கு நிகராக அவர்களை மாற்றியது என்று சொல்கிறார்கள்” என்றார் ஒரு முதியவர். “ஒவ்வொரு பயணமும் மறுபிறப்பே” என்றாள் ஃபால்குனை.

"பாட்டு பாட்டு” என்று இரு குழந்தைகள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டன. மூங்கில் இல்லங்களிலிருந்து உணவுக் கலங்களும் மதுக்குடங்களுமாக வந்து நின்ற பெண்கள் குழந்தைகளை அதட்டி அமரச்செய்தார்கள். முகபடாம் விலக்கிய ஒருத்தி புன்னகைத்து “பாடுவாள், அதற்குத்தானே வந்திருக்கிறாள். நீங்கள் கூச்சலிடாமல் சென்று அமர்ந்துகொள்ளுங்கள்” என்றபின் ஃபால்குனையிடம் “நீ பாடாமல் ஒருநாள் முழுமையடைவதில்லை ஃபால்குனை” என்றாள்.

இரு குழந்தைகள் ஃபால்குனையின் கைகளைப் பற்றி இழுத்தன. “பாட்டு! பாட்டு!” என்று மெலிந்த சிறுவன் ஒருவன் தன்னை அறியாது குதித்துக்கொண்டிருந்தான். ஃபால்குனை அவனைத் தூக்கி தன் இடையில் வைத்துக்கொண்டாள். அவன் அவள் கன்னத்தைத் தட்டி அழைத்து திருப்பி “நீ அணங்கா?” என்றான். “இல்லை. யார் சொன்னது?” என்றாள் ஃபால்குனை. "என் அன்னை. அவர்கள் கிணற்றடியில் கூடி பேசிக்கொண்டிருக்கும்போது நீ பெண்ணே அல்ல, அணங்கு என்றாள். இரவில் நாங்கள் அனைவரும் தூங்கிய பின்பு நீ ஆணாக மாறி இருளை மிதித்து ஏறி வானுக்குள் மறைந்துவிடுகிறாய் என்றாள்.” ஃபால்குனை சிரித்து “அப்படியா?” என்று அவன் அன்னையைப் பார்க்க அவள் முகபடாமால் வாய் மறைத்துச் சிரித்து நாணினாள்.

“அங்கே முகில்களின் வழியாக வந்து சேரும் கின்னரர்களுடனும் கிம்புருடர்களுடனும் விளையாடுகிறாய். அழகிய கந்தர்வப் பெண்கள் உன்னைச் சுற்றி கைகோத்து ஆடுகிறார்கள். நீங்கள் அங்கே களியாடுகிறீர்கள்… உலகில் முதல் வெளிச்சம் வருவதற்குள் மீண்டும் இருள்படிகளுக்குள் இறங்கி வந்து பெண்ணாக மாறி இருக்கிறாய்” என்றான் இன்னொரு வளர்ந்த சிறுவன். ஃபால்குனை புன்னகைத்து “அழகிய கதை. உண்மையில் அவ்வண்ணம் நிகழ வேண்டும் என்று விழைகிறேன்” என்றாள்.

“என் அக்கா சொன்னாள், ஒருநாள் நீ கந்தர்வ கன்னிகையுடன் விளையாடுகையில் தன்னை மறந்துவிடுவாய் என்று. அப்போது இருள் மென்மையாக ஆகும். உன்னால் அதை மிதித்து கீழிறங்க முடியாது. நீ வானிலேயே தங்கநேரும். அங்கே நீ ஆண் வடிவம் கொண்டு நின்று தவிப்பதை விடிகாலையில் நம் முற்றத்தில் நின்று நோக்கினால் பார்க்க முடியும்” என்றாள் ஒரு பெண்குழந்தை. ஃபால்குனை புன்னகைத்து “அப்படி நிகழ்ந்தால் இந்த ஊருக்கு மேலே முகில்களில் அமர்ந்து காத்திருப்பேன். மழைவரவேண்டும் என வேண்டிக்கொள்வேன். என் பாட்டைக்கேட்டு இந்திரன் மழையை அனுப்புவான். மழை வரும்போது அதன் நூல் தாரைகளைப் பற்றியபடி கீழிறங்கி வருவேன்” என்றாள்.

"என்ன பேச்சு அங்கே? பாடு” என்றார் முதியவர். ஃபால்குனை எழுந்து கைகளைத் தூக்கி இயல்பாக சோம்பல் முறித்தபடி நெருப்பு அலையடித்த செவ்வொளிமுற்றம் நடுவே சென்றாள். “இதுவே நடனம் போல் இருக்கிறது” என்றார் அங்கிருந்த ஒருவர். பிறர் நகைத்தனர். “சற்று மது அருந்துகிறாயா?” என்றார் ஒருவர். “மதுவின்றி நடனமா? அவள் அருந்தும் மதுவை நீங்கள் அருந்தினால் உயிரே ஆவியாக எழுந்து வானுக்குச்சென்றுவிடும்” என்றாள் முதியவள் ஒருத்தி. மூங்கில் குழாயில் சற்றே ஆவி பறக்கும் அரிசி மதுவை அவள் கொண்டுவந்தாள். அதை வாங்கி ஒரே மிடறில் குடித்ததும், இதழ்களைத் துடைத்து ஃபால்குனை பாடத்தொடங்கினாள்.

“எரிநிழல் ஆகுக.

நிழல் எரி என்று ஆகுக.

எரிதழலின் நிழலே

நிழலில் உறையும் தழலே

எழுந்து நின்றாடுக!

ஆடுவதெல்லாம் எரியே

நெளிந்தாடுவதெல்லாம் எரியே!"

அவளுடன் கிணைமீட்டி இணைந்த குலப்பாடகன் தொடர்ந்து பாடினான்.

"எரிதழலின் நிழலை

நிழலெரியின் தழலை

தழல்கொண்ட நிழலை

அறிக அறிக நெஞ்சே!"

ஃபால்குனை கைகளைத்தட்டி சிரித்தபடி மேலும் பாட்டெடுத்தாள்.

“நிழலெரி தொட்டு எரிந்தவருண்டோ

சொல்லுங்கள் சுற்றமே

எரிக்காத தழல் என்று ஒன்றுண்டோ?"

குலப்பாடகன் தன் தப்புக்கிணையை மீட்டி அவளுக்கு எதிர்ச்சொல் தொடுத்தான்.

“எரிதொடாத உடலுண்டு அறிக

கன்னியே, வெம்மை கொண்டு எரிபவளே

எரிதொடா உடல் உன் நிழல் அல்லவா?

நிழலுடல் எரிய நிழலெரி எழுக

நிழலெரியும் தருணம் இங்கமைக!"

அப்பாடலினூடாக அவள் உள்ளத்தை குலப்பாடகன் அறிந்தான். இரு பறவைகள் வானில் ஒன்றை ஒன்று சுற்றி சொல்லின் சுரிவளைவுப் பாதையில் ஏறிச்சென்று ஒன்றை ஒன்று விழிநோக்கின. பின்பு மெல்ல உதிர்ந்து மண் வந்தமைந்தன.

ஏழாவது நாள் அவர்கள் எண்ணியிருந்தது போலவே கீழ்நாகர்கள் மீண்டும் படைகொண்டு வந்தனர். அவர்களது படை காட்டின் மறு எல்லையைக் கடக்கும்போதே ஃபால்குனை பறவைகளின் ஒலியைக்கொண்டு அதை அறிந்துவிட்டிருந்தாள். கோட்டைக்கு அருகே நின்ற உயர்ந்த மூன்று மரங்களை உச்சியில் வடங்களால் இணைத்து கட்டப்பட்ட பரணில் நான்கு காவல் வீரர்களுடன் அவள் அப்போது இருந்தாள். “வருகிறார்கள்” என்றாள். “முன்னரே அறியப்பட்ட போர் வெல்லப்பட்டுவிட்ட ஒன்று என்பது நூலெழுசொல்.”

ஒற்றை மரத்தில் காவல்பரண் கட்டுவதையே முன்னர் அறிந்திருந்தனர். ஒன்றுக்கு மேற்பட்ட மரங்களில் கட்டினால் காற்றில் அடிமரங்கள் அசைய பரண் இழுபட்டு உடையும் என எண்ணியிருந்தனர். ஒன்றுக்குமேற்பட்ட மரங்களை இணைத்து வடங்களால் பரண் கட்டமுடியும் என்று அவள் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. “கிளையற்ற மரங்களே செங்குத்தாக எழுந்து உயரமாக நின்றிருக்கும். காட்டின்மேலே எழுந்த பரண்களை அங்கே மட்டும்தான் கட்டமுடியும்” என்று அவள் சொன்னாள். அவளே வடங்களைக்கொண்டு நான்கு தேவதாருக்களை நோக்கி இணைத்துக் கட்டிய பரணில் நூலேணி பற்றி ஏறிச் சென்று அமர்ந்தபோது காவலன் ஒருவன் “முகிலேறிய கந்தர்வன் போல் உணர்கிறேன்” என்றான்.

"விண்நோக்கில் முழுக்காட்டையே பார்க்கிறேன். இத்தனை சிறியதா எனது ஊர்? இதற்குள்ளா இத்தனை காலம் வாழ்ந்தேன்?” என்றான் இன்னொருவன். ஃபால்குனை நிமிர்ந்து “நம் எல்லைகளை ஒரே நோக்கில் காணும்போதே நாம் உண்மையில் நம்மை அறிகிறோம்” என்றாள். “ஆம். விழிதொடும் தொலைவில் பச்சைக்காடுகளும், காடுபோர்த்தி எழுந்த மலைகளும் மட்டுமே தெரிகின்றன. அவற்றை ஒளிகொண்ட முகில்படலம் மூடியிருக்கிறது” என்றான். “இங்கு அமர்ந்து இருப்பதால் என்ன பயன்?” என்றான் முதுகாவலன்.

"தொலைதூரத்துப் பறவைகளை பார்க்கமுடியும்” என்றாள் ஃபால்குனை. “நீரில் மீன்களைப் பார்ப்பதைப்போல வானில் பறவைகளைப் பார்க்கலாம்” என்றாள். “மண்ணில் நிகழும் அனைத்தையும் பறவைகளைக் கொண்டு அறியமுடியும்” என்றபின் கை சுட்டி "அதோ, அங்கு ஒரு யானைக்கூட்டம் இருக்கிறது. புதிய யானைசாணிக்கென சிறிய மைனாக்களும் சிட்டுகளும் எழுந்து பறந்தமைகின்றன. சிறிய பறவைகளை உண்ணும் வல்லூறு மேலே வட்டமிடுகிறது” என்றாள்.

பிறிதொரு இடத்தைச் சுட்டி “அங்கு புலி ஒன்று பதுங்கிச் செல்கிறது. விலங்குகளை எச்சரிக்கும் ஆள்காட்டிப்பறவைகள் செங்குத்தாக அம்புகள் போல மேலே எழுந்து வளைந்து கீழிறங்கி கூவுகின்றன. அதற்கு அப்பால் அதோ, அவ்வளைவில் மான்கூட்டம் ஒன்று நின்றுள்ளது. மான்களை பின்தொடர்ந்து உண்ணிகளைப் பொறுக்கும் அடைக்கலங்குருவிகள் அங்குள்ளன” என்றாள்.

ஒரு நாழிகைக்குள் புதிய விழி ஒன்று திறந்ததுபோல் அவர்கள் காட்டை பார்க்கத் தொடங்கினார்கள். நோக்க நோக்க விரிந்து விரிந்து தன் மந்தணங்கள் அனைத்தையும் சொல்லத் தொடங்கியது காடு. “இங்கு அமர்ந்து இக்காட்டையே ஆள முடியும் போலிருக்கிறது” என்றார் முதியவர். “அறிய முடியும்” என்றாள் ஃபால்குனை. அதன்பின் அவர்கள் எந்நேரமும் அங்கிருந்து காட்டை பார்த்துக்கொண்டிருந்தனர்.

“மறைந்த மூதாதையர் நம்முடன் உரையாடத்தொடங்கிவிட்டதுபோல” என்றான் ஒருவன். “அந்த மலைப்பாறையை நம்முடன் உரையாடச்செய்யமுடியுமா?” என்று ஒருவன் கேட்டான். “முடியும்” என்றாள் ஃபால்குனை.

முகில்களை சிறகால் வளைத்தபடி வானில் பெருவட்டம் அடித்த செம்பருந்து ஆழ்ந்து இறங்கி அவ்வளைவின் விசையாலேயே தூக்கப்பட்டது போல் மறுபக்கம் எழுந்து மூன்று புரி வளைவுகளாக வானிலேறி சிறகடித்து அசைவின்றி நின்றது. வெண்பட்டுவானில் ஓர் அரக்குக்கறைத்துளி போல் அது தெரிந்தது. ஃபால்குனை “அங்கு மானுடர் வருகிறார்கள்” என்றாள். “மானுடர் என்றால்?” என்றபடி நோக்கிய அனைவரும் மறுகணமே அகம்சொடுக்க பாய்ந்து எழுந்து விட்டனர். “கீழ்நாகர்கள்!”

“ஆம், அவர்கள்தான்” என்றாள் ஃபால்குனை. “அப்பறவைக்கு நேர் கீழே அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். இங்கு அவர்கள் வந்து சேர இன்று மாலை ஆகும்." “இங்குதான் அவர்கள் வருகிறார்கள் என்பதை எப்படி உணர முடியும்?” என்றான் ஒருவன். "நோக்குக!” என்றாள் ஃபால்குனை. “செம்பருந்து பெரிய சூழ்வட்டங்களால் வானைத் துழாவி மேலேறி ஒரு புள்ளியில் அசைவற்று நின்று மீள்கிறது. அப்புள்ளிகளை இணைத்து எழும் கோடு அவர்கள் வரும் பாதை.”

ஃபால்குனை அந்த மரங்களுக்கு மேல் சிறிய செம்பட்டு துவாலையை வீசி வீசி இழுத்ததுபோல எழுந்து மறைந்த பறவைக்கூட்டங்களை சுட்டிக்காட்டினாள். “அவை புரவிகளை தொடரும் பறவைகள்.” “ஆம், அவர்கள் புரவிகளில் வருகிறார்கள்” என்றான் ஒருவன். “அவர்கள் ஆற்றை கடக்கவேண்டும். இரு செங்குத்தான பாறைகளில் தொங்கி இறங்கி வரவேண்டும். இங்கு வந்து சேர நாளை புலரி ஆகிவிடும்” என்றார் முதியவர். “ஆம். இன்றிரவே நாம் சித்தமாக இருப்போம்” என்றாள் ஃபால்குனை. “இரவிலா?” “ஆம், நாம் இப்போரை தொடங்குகிறோம்.”

அவர்கள் படைக்கு சித்தமானார்கள். “மணிபூரகத்தின் புரவிவீரர்கள் இப்போரில் கலந்துகொள்ள வேண்டியதில்லை. அவர்கள் கோட்டைக்குள் காத்திருக்கட்டும். இப்போரில் இச்சிற்றூரின் மைந்தர் மட்டுமே பங்குகொள்ளட்டும்” என்றாள் ஃபால்குனை. “அரசுப் படைகளால் காக்கப்படும் ஊர் கால் வளர்ந்த பின்னும் முலைப்பால் குடிக்கும் மைந்தர்களைப் போன்றது.” தயக்கத்துடன் “நாங்கள் இதுவரை போரிட்டதில்லை” என்று குலத்தலைவர் சொன்னார். “இன்று போரிடுங்கள்” என்றாள் ஃபால்குனை.

“போரை நாங்கள் வெறுக்கிறோம். கீழ்நாகர்களை மட்டுமின்றி மணிபூரகத்தின் அரசரையும் இளவரசரையும்கூட நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் மைந்தர்கள் போரில் இறக்க நாங்கள் விரும்பவில்லை. இரு யானைகள் போரிடுகையில் பெருங்கால்களால் மிதிபட்டு அழியும் சிற்றுயிர்களாகவே நாங்கள் இருக்கிறோம். எங்களைத் தேடி மணிபூரகத்தின் படை வருகிறதென்றால் இந்நிலத்தில் போர் நிகழும் என்றே பொருள். எவர் வென்று மீண்டாலும் எங்கள் ஊர் சாம்பல் குவியலாகவே எஞ்சும். கலைக்க கலைக்க புற்றை கட்டி எழுப்பும் சிதல்போல் நாங்கள் தலைமுறை தலைமுறையாக இவ்வூரை அமைத்து வருகிறோம்” என்றாள் ஓர் மூதன்னை.

புன்னகையுடன் “இனி குளவிகள்போல கூடுகட்டலாம். எளிதில் எவரும் கைவைக்க மாட்டார்கள்” என்றாள் ஃபால்குனை. “குளவிகளிலிருந்து ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள். குளவிகள் எதிரிகளை அவர்கள் அணுகும் முன்னரே தேடிச்சென்று தாக்கத்தொடங்கிவிடும். இந்த ஊர்வரைக்கும் ஒருபோதும் எதிரி வரலாகாது. எதிரிகளுக்கு அஞ்சி இக்கோட்டைக்குள் புகுந்து கொள்வது உங்களை அஞ்சுபவர்கள் என்று வெளிக்காட்டுகிறது. இக்கோட்டைக்குள் நீங்கள் இருக்கையில் உங்கள் ஊரே போர்க்களமாகிறது. அது அழியாமலிருக்காது.”

“ஊரிலிருந்து போரிடுகையில் போருக்காக ஒரு சிறு நிலப்பகுதியை வகுத்து அவர்களுக்கு அளிக்கிறீர்கள். இந்தக் காடு தலைமுறைகளாக நீங்கள் அறிந்த ஒன்று. போர் அங்கு நிகழும் என்றால் விரிந்து கிடக்கும் அப்பச்சைத் தழைவெளி முழுவதும் போர் நிகழும் களமாக மாறிவிடும். பெரும்படைகொண்டு வந்தால்கூட சிதறி சிறு குழுக்களாகவே அவர்கள் அங்கு இருக்கமுடியும். ஒவ்வொரு சிறு குழுவையும் சூழ்ந்து நீங்கள் எளிதில் அவர்களை கொல்லமுடியும். கோட்டைக்குள் அவர்கள் சூழும்போது இதற்குள் நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று அவர்களால் ஓரளவு மதிப்பிட முடியும். காட்டுக்குள் மறைந்து இருக்கையில் காடளவே விரிகிறீர்கள். காடளவே மந்தணம் கொள்கிறீர்கள். மந்தணமின்றி போர் இல்லை. ஏனென்றால் அச்சத்தை மந்தணமே உருவாக்குகிறது.”

ஊரின் இளையோர் பன்னிரண்டு பிரிவினராக ஃபால்குனையைத் தொடர்ந்து காட்டுக்குள் புகுந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து வீரர்கள் இருந்தனர். ஒருவரையொருவர் கருங்குருவிச் சீழ்க்கையாக ஒலியெழுப்பி தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு ஒரு வேட்டைக் குழூஉக்குறிமுறை முன்பே இருந்தது. மரக்கிளைகளின் மேல் தாவிச் செல்லும் பயிற்சியும் அவர்களிடம் இருந்தது. இருண்ட காட்டுக்குள் காற்று கடந்து செல்வதுபோல் அவர்கள் போருக்குச் சென்றனர். மீன்வலை என ஓசையின்றி விரிந்தனர்.

ஃபால்குனை “அவர்கள் மலைப்பாதையில் விழுதுகள் வழியாக தொற்றி இறங்கும் கணம் மிக வாய்ப்பானது. அப்போது இருகைகளும் விழுதுகளை பற்ற வேண்டியிருக்கும்” என்றாள். காட்டின் இருளுக்குள் விழி பழக காடு ஒவ்வொன்றாக தெளிந்து நிழல்வெளியென தன்னை காட்டியது. ஆறு அருவியெனப் பொழியும் மலைவிளிம்பின்மீது எழுந்த மரங்களின் வேர்களும் சரிந்து தழைந்த ஆலமரங்களின் விழுதுகளும் பாறைகளைக் கவ்வியும் வளைவுகளில் தவழ்ந்தும் இணையாகத் தொங்கி ஆடியும் கீழிறங்கின. அங்கே சூழ்ந்த மரங்களில் இலைத்தழைப்புக்குள் அவர்கள் நாண் ஏற்றி அம்பு தொடுத்து அமர்ந்தனர். ஒவ்வொரு உடலும் நாண் ஏற்றப்பட்டிருந்தது.

மேலிருந்து கீழ்நாகர்கள் ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினர். பாம்புபோல சீறல் ஒலி எழுப்பி அவர்களுக்குள் உரையாடினர். அவர்களைப் பார்த்தவுடன் முதுவீரர் அம்பை எடுத்தார். ஃபால்குனை “வேண்டாம்” என்றாள். “மேலே அவர்களுடைய இறுதிப் படையினரும் வேர்தொற்றி இறங்கத்தொடங்கிய பின்பே நாம் தாக்கவேண்டும்” என்றாள். “மேலிருந்து நம்மை அம்புகொண்டு தாக்குவது எளிது. நம் அம்புகள் அங்கு சென்று எட்டாது. நாம் அவர்களின் விழிமுன் ஒளியவும் முடியாது.”

முதல் வரிசை கீழ்நாகர்கள் கீழே இறங்கி கைகாட்ட, இரண்டாவது வரிசை இறங்கத் தொடங்கியது. மூன்றாவது வரிசை விழுதுகளைப் பற்றி இறங்க இறுதியாக நோக்கி நின்ற கீழ்நாகர்களின் படை விற்களை தோளில் மாட்டி விழுதுகளைப் பற்றியபடி இறங்கியது. கீழிறங்கியவர்கள் தங்கள் விற்களை நாணேற்றி சுற்றிலும் நோக்கினர். ஃபால்குனை கருங்குருவிக் குரல் எழுப்ப ஒரே கணத்தில் முப்பது நாண்கள் விம்மி வெடித்தன. அம்பு பட்டு விழுதுகளில் தொங்கிய கீழ்நாகர்கள் அலறியபடி கீழே விழுந்தனர்.

ஃபால்குனையின் அம்புகள் இருளில் வண்டொலி எழுப்பிச் சென்று முனைக்கு ஒன்றென அவர்களை கொன்று வீழ்த்தின. கீழ்நாகர் விற்களுடன் அலறி ஓடி வேர்ச்செறிவிலும் அடிமரங்களுக்குப் பின்னாலும் ஒளிய மரங்களில் பாய்ந்து சென்று அவர்களை தேடித்தேடி கொன்றனர். “முடிநிறைந்த கன்றின் உடலில் உண்ணிகளை தேடிக்கொல்வதுபோல” என்றார் முதியவர். அவர்களில் ஒருவன் அலறி கீழே விழுந்தபோது மேலும் வெறிகொண்டு “விடவேண்டாம்... ஒருவனைக்கூட விடவேண்டாம்” என்று கூவினார்.

முற்றிலும் ஒலி அடங்கியபோது முதியவர் கிளைதொற்றிக் கீழிறங்க கால் எடுத்தார். “இல்லை, காலையொளி வருவது வரை காத்திருப்போம். அவர்கள் எத்தனை பேர் எஞ்சியிருக்கிறார்கள் என்று அறியமுடியும்” என்றாள். கூர்ந்து துடித்த அம்புகளுடன் அவர்கள் மரங்களின் மேல் காத்திருந்தனர். கிளைசெறிந்த இலைக்கூரை வழியாக ஒளிச்சட்டங்கள் மங்கலாக நீண்டு வந்து இலைகளின் மேல் நிலா வட்டங்கள் போல் விழத்தொடங்கின. பாறைகளின் கரிய வளைவுமேல் நீரென ஒளி விழுந்து வழிந்தது.

ஒளிக்குழல்கள் மேலும் தெளிவடைந்தன. அவற்றினுள் தூசுப்பரல்கள் பொற்துருவல்களாக சுழன்றன. ஃபால்குனை மரக்கிளையை பற்றியபடி பாம்புபோல் ஊர்ந்து சென்றாள். பாறைகளுக்குப் பின்னால் புழுக்களைப் போல ஒட்டி கையில் சிறிய நச்சு அம்புகளுடன் காத்திருந்த ஏழு கீழ்நாகர்களை கண்டாள். அவள் அம்புகள் அவர்களைக் கொன்று வீழ்த்தின. இருவர் வீழ்ந்ததுமே பிறர் விலகி பின்வாங்கி ஓடினர். அவர்களை தேடிச் சென்று கொன்றார் முதியவர். “களைகள்... ஓநாய்கள்” என்றார். அவர் விழிகளில் தெரிந்த வஞ்சத்தைக் கண்ட ஃபால்குனை “இனி உங்களிடமிருந்து அவர்களை காக்கவேண்டியிருக்கும்போல” என்றாள். அவர் “ம்ம்” என்று உறுமினார்.

நாகர் இருவர் ஓடி சிறிய குழி ஒன்றுக்குள் இறங்க பாம்புபோல் வானில் வந்து வளைந்து இறங்கி அவர்களின் உயிர் குடித்தன ஃபால்குனையின் அம்புகள். மேலும் சற்று நேரம் விழி பொறுத்து “ஒருவரும் மிஞ்சவில்லை” என்ற ஃபால்குனை கை தூக்கினாள். வெற்றிக் குரலுடன் வீரர்கள் மரக்கிளைகளை விட்டு கீழே குதித்தனர். தரையெங்கும் பரவிக் கிடந்த கீழ்நாகர்களின் உடல்களைக் கண்டு வெறியுடன் கைகளைத் தட்டி நடமிட்டனர். “களைகளை நீக்கு. பயிர் உன்னை வாழ்த்தும். களைகளை நீக்கு. கதிர் உன்னை வாழ்த்தும். களைகளை நீக்கு. நிலம் உன்னை வாழ்த்தும்.”

“நிலத்துக்கு களையும் செடிதான் வீரரே” என்று தன் வில்லைத் தாழ்த்தியபடி ஃபால்குனை சொன்னாள். அவள் குரலில் இருந்த கசப்பை அவர்கள் உணரவில்லை. முதுகாவலர் “ஆம்! நாங்கள் இதை செய்திருக்கிறோம். கீழ்நாகர்களை நாங்கள் போரில் வென்றிருக்கிறோம். தெய்வங்களே, நாங்களே வென்றிருக்கிறோம்” என்று கூவினார். “எத்தனை கால கனவு இது!” கைகளை விரித்து “மூதாதையர்களே தெய்வங்களே அறிக! இதோ நாங்கள் கீழ்நாகர்களை வென்றிருக்கிறோம். நாங்களே வென்றிருக்கிறோம்” என்றார்.

அங்கு இருந்த வீரர்கள் அனைவரும் களிவெறியில் நிலையழிந்து கைகளை விரித்து ஆட்டி, பாறைகளில் எம்பிக் குதித்து, தொண்டை நரம்புகள் புடைக்க உரக்க ஒலி எழுப்பி கூச்சலிட்டனர். “வெற்றி! நாகர்களை வென்றிருக்கிறோம்! வெற்றி! இதோ, கீழ்நாகர்களை நாங்கள் வெற்றிகொண்டிருக்கிறோம்!” என்றனர். முதியவர் ஃபால்குனையின் கைகளைப் பற்றி “இனி கீழ்நாகர்கள் குலம் மொத்தமும் திரண்டு வந்து எங்கள் ஊரையே அழித்தாலும் சரி, மூதாதையர்கள் சொல்லைச் சொல்ல இந்த ஒரு வெற்றி போதும். இனி நாங்கள் எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை” என்றார்.

“இனி என்ன? கீழ்நாகர்களுக்கு அளித்த செல்வத்தை இனி மணிபுரி கொண்டு செல்லும்” என்றான் ஒருவன். “இனி எவருக்கும் அடிமை இல்லை. எவரும் நம்மிடம் கொள்ளையடிக்கப்போவதில்லை” என்றார் முதியவர். “நாம் படைகொண்டுசெல்வோம். கீழ்நாகர் குடிகளை சூறையாடுவோம். அங்குள்ள நம்குடிப்பெண்களிடம் சொல்வோம், நாங்களும் ஆண்களே என்று” என்றான் ஒருவன். “ஆம், அவர்கள் இதுநாள் வரை கொள்ளையடித்துச் சென்றவற்றை மீட்போம்” என்றான் இன்னொருவன். ஒருவன் கீழே கிடந்த நாகனின் தலையை ஓங்கி மிதித்து “இழிமக்கள். இவர்களை இன்னும் நூறுதலைமுறைக்காலம் நாம் கொன்றாலும் நம் முன்னோர் அடங்கப்போவதில்லை” என்றான்.

“கன்னியே, இது உன் வெற்றி. எங்கள் அனைவரையும் ஆண்கள் என ஆக்கினாய்” என்றார் முதியவர். “எங்கள் குலத்திற்கே ஆண்மையை மீட்டளித்தாய்” என்று பிறிதொருவன் பின்னால் நின்று சொன்னான். ஃபால்குனை புன்னகைத்து “ஆண்மையை பெண்மையால் நிகர் செய்தேன். அஃதே இக்காடு அளிக்கும் கொடை” என்றாள்.

பகுதி மூன்று : முதல்நடம் – 7

நாகர்கள்மேல் கொண்ட வெற்றிக்காக மூன்று நாட்கள் நீடித்த உண்டாட்டு நிகழ்ந்தது. ஃபால்குனை அவ்வூருடன் சேர்ந்து களியாடி வில்திறன் விஜயனின் கதைகளை, கொல்படை பீமனின் வெற்றிகளை பாடி ஆடினாள். “எங்களுக்குள்ளும் எழுவான் பார்த்தன். கதைகொண்ட பீமன்” என்று முதியவர் ஒருவர் கூவினார். “மண்ணில் இதுவரை ஒளிந்துகிடந்த குலம் நாங்கள். இதோ உறைகீறி முளைத்தெழுந்துள்ளோம்.”

ஓர் இளைஞன் எழுந்து ஃபால்குனை அருகே வந்து “இன்றுவரை எங்களுக்கென பெயரில்லை. எல்லையூர் என்றே அழைத்தோம். இனி எங்களுக்கு பெயர் வேண்டும். கொடியும் அடையாளமும் வேண்டும். நீங்களே ஒரு பெயரைச் சொல்லுங்கள்” என்றான். “இந்த ஆற்றால் உருவான ஊர் இது. அதுவே பெயராக இருக்கட்டும்...” என்றாள் ஃபால்குனை. “இது சிவதாவின் கொடை. உங்களை சிவதர்கள் என்று சொல்லிக்கொள்ளுங்கள். சிவதம் என இவ்வூர் அழைக்கப்படட்டும்.”

“சிவதையின் மைந்தர் நாம்! ஆம்!” என்று ஊர்த்தலைவர் கூவினார். “சிவதர்களே!” என்று கைவிரித்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் அதை ஏற்று கூச்சலிட்டனர். “சிவதர்கள் எவருக்கும் அடிமைகளில்லை. சிவதர்கள் எவருக்கும் பணிவதில்லை” என்று ஒருவன் கைநீட்டி அறைகூவினான். “எங்களுக்குள்ளும் எழுக இளைய பாண்டவர்கள். எங்கள் குடிப்பெயரையும் பாடட்டும் அமரகவிஞனான மகாவியாசன்.” “ஆம் ஆம் ஆம்” என்று கூட்டம் ஆராவாரமிட்டது.

மணிபுரியின் வீரர்கள் அந்த எழுச்சியைக் கண்டு ஒதுங்கி அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களிடம் மதுக்குவளைகளை நீட்டிய ஊர்த்தலைவர் “இனிமேல் நீங்கள் இங்கு வரவேண்டியதில்லை வீரர்களே. உங்கள் அரசரிடம் சொல்லுங்கள்” என்றார். ஒரு பெண் “எங்கள் விழவுகளுக்கு வாருங்கள். கள்ளுண்டு களிநடமிட்டு மீளுங்கள். உங்களுக்கு வாளும் தோளும் தேவையென்றால் சொல்லுங்கள். எங்கள் மைந்தர் எழுந்து வருவார்கள்” என்றாள். அவளைச் சூழ்ந்திருந்த பெண்கள் கூவிச்சிரித்தனர்.

மறுநாள் மணிபுரியின் புரவிப்படை கிளம்பியபோது ஃபால்குனையும் உடன் செல்லப்போகிறாள் என்ற எண்ணமே அவர்களுக்கு எழவில்லை. அவள் என்றும் அங்கிருந்தாள் என்றும் எப்போதும் இருப்பாள் என்றும் எண்ணியிருந்தனர் போல் தோன்றியது. “சிவதர்களின் குலதெய்வம் அணங்குவடிவம் கொண்டு வந்த கொற்றவை. இங்கு எங்கள் மன்றில் அவள் என்றுமிருந்து பலிகொண்டு அருள்புரிவாள்” என்றான் குலப்பாடகன். “அவளுக்குரியது எரியின் நிழல். அவள் முற்றத்தில் தீமூட்டுவோம். அதன் எரிநிழல் அவள் மேல் விழச்செய்து வணங்குவோம்.”

ஃபால்குனை காலையில் தன் ஆடைகளை தோல் மூட்டையில் கட்டிக்கொண்டிருக்கும்போது அவள் குடிலுக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் “எங்கு செல்கிறாய் ஃபால்குனை?” என்றான். "மணிபுரிக்கு” என்றாள். “நானும் உடன் செல்லும்படி இளவரசரின் ஆணை இருந்ததல்லவா?” அவன் திகைத்து நின்று பெரிய விழிகளை உருட்டி சற்றே தலைசரித்து “நீயா? நீ ஏன் செல்ல வேண்டும்?” என்றான். அவன் தலை உடலுக்குப் பெரிதாக இருந்தமையால் எப்போதும் தலை சரிந்தே இருக்கும். ஃபால்குனை “இளவரசரின் ஆணை” என்றாள்.

அவன் ஓடிவந்து அவள் ஆடையைப் பற்றி “செல்ல வேண்டாம்” என்றான். “இல்லை மைந்தா, நான் சென்றாக வேண்டும்” என்றாள். “இல்லை, செல்ல வேண்டாம். செல்ல வேண்டாம்” என்று அவன் அவள் ஆடையைப் பற்றி இழுத்து நாவுடைந்து அழுதான். அவள் அவன் பெரிய தலையை மெல்ல வருடி “ஆணாகிலும் பெண்ணாகிலும் அவர்களுக்கு ஆணையிடும் சொல் என ஒன்று எப்போதும் உள்ளது மைந்தா. நான் சென்றாகவேண்டும்” என்றாள்.

அவன் அழுதபடியே வெளியே ஓடி “ஃபால்குனை இன்று செல்கிறாள். புரவி வீரர்களுடன் அவளும் மணிபுரிக்குச் செல்கிறாள்” என்றான். கூவியபடி அவன் ஓடி அணுக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் அதிர்ந்து அசையாமல் நின்றனர். ஒருவன் “ஃபால்குனையா? ஏன்?” என்றான். “அரசாணை என்கிறாள்.” அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிய பின்னர் ஓடி ஃபால்குனையின் அறைக்கு வெளியே கூடி திகைப்புடன் நோக்கி நின்றனர். ஒரு சிறுவன் உள்ளே சென்று “விடமாட்டோம்... நீ போக நாங்கள் விடமாட்டோம்” என்று கூவினான்.

அவள் இறங்கி வெளியே வந்ததும் அவ்வூரின் ஆண்களும் பெண்களும் முதியவரும் அனைவரும் கூடிநிற்கக் கண்டாள். ஒவ்வொருவரின் விழிகளிலும் அவளுக்கான மன்றாட்டு இருந்தது. பெண்களில் சிலர் கண்ணீர் வழிய உதடுகள் அதிர அழுதுகொண்டிருந்தனர். அவள் ஆடையைப் பற்றிய சிறுவர்கள் அழுதபடி “வேண்டாம். போகாதே” என்றனர். இரு சிறுவர்களை அள்ளி தன் இடையில் இரு பக்கமும் வைத்தபடி அவர்கள் நடுவே வந்து அவள் புன்னகை புரிந்தாள்.

கலிகன் சினத்துடன் "இத்தனைபேரும் விழிநீர் சிந்துகிறார்கள். நீ ஒரு கணமும் உளம் கலங்கவில்லை. உன் கண்களில் துயரமே இல்லை” என்றான். அவள் “இல்லை. நான் பிரிவில் கலங்குவதில்லை” என்றாள். “ஏனெனில் நான் சென்ற அனைத்து திசைகளையும் பிரிந்தே வந்திருக்கிறேன்.” முதியவன் சினத்துடன் “ஏனென்றால் நீ பெண்ணல்ல. அணங்கு. மானுட உணர்வுகளற்ற அணங்கு” என்றான். ஃபால்குனை “நான் எளியவள் முதியவரே” என்றாள். “ஆகவேதான் உறவுகளெனும் கட்டிலாப் பெருக்கை உணர்ந்திருக்கிறேன்.”

முதியவர் “பிரிவில் துயருறவில்லை என்றால் நீ அன்பை அறிந்தவளே அல்ல” என்றார். “இதுவரை இங்கே எங்களுடன் விளையாடினாய். எங்களை உன் களத்தின் காய்களென மட்டுமே கண்டாய். ஆடிமுடிந்ததும் களம் கலைத்து கிளம்புகிறாய்.” ஃபால்குனை “ஆம், ஒருவகையில் அது உண்மை” என்றாள். “இதோ, இந்த ஆற்றுவழி கடந்து நீ சென்றதும் எங்களை மறந்துவிடுவாய்” என்றார். “ஆம், பெரும்பாலும் அவ்வாறே. இங்கிருக்கையில் நான் நேற்றிருந்த ஊர்களை எண்ணவில்லை அல்லவா?” என்றாள். “அப்படியென்றால் நாங்கள் உன் மேல் கொண்ட அன்பிற்கு பொருள்தான் என்ன?” என்றான்.

ஃபால்குனையின் விழிகள் மாறின. “அன்பெனப் படுவதை குறித்து எந்நேரமும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். இன்றுவரை அது என்ன என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இக்குழந்தைகளைக் காண்கையில் என் உள்ளம் நெகிழ்கிறது. இப்பெண்குழந்தைகள் கவர்ந்துசெல்லப்படுவதைப் பற்றி சொன்னீர்கள். நான் வில் பூண்டதும் உயிர்கொண்டதும் இவர்களுக்காக மட்டுமே” என்றாள். பின்பு பெருமூச்சுடன் “இவர்களுக்காக உயிர் துறக்கவும் என்னால் சித்தமாக முடிகிறது. ஆனால் இங்கு கட்டுண்டு இருக்க இயலவில்லை” என்றாள்.

“அன்பென்பது அதுதான்” என்றான் கலிகன். “என்றுமென என்னைப் பிணைக்காத அன்பென்று ஒன்று உண்டா என்று வினவி அலைகிறேன். எங்கோ அது இருக்கலாம். அதுவரையிலும் தேடிச் செல்வதே என் பயணமாக இருக்கலாம். அங்கு செல்லும் பொருட்டு எங்கும் தடைகளை கடந்து செல்லவே நான் விழைகிறேன்” என்றாள். “அப்படியொரு அன்பு இல்லை. அன்பென்பதே பிணைப்புதான்” என்றான் கலிகன். “அளிப்பதும் பெறுவதுமான முடிவிலா விளையாட்டு அது.” ஃபால்குனை "நான் பெறும் அன்பு எங்காவது கணக்கு வைக்கப்படும் என்றால் அது எனக்குத் தளையே. நான் கட்டுண்டிருக்க விரும்பவில்லை” என்றாள்.

ஒரு முதியவள் தளர்ந்தாடிய குரலில் “அன்பின் பொருட்டு தளைகளை போட்டுக்கொள்வதன்றி மானுட வாழ்க்கைக்கு பொருள் ஏது? இளையவளே, நீ பிழையான வழியில் செல்கிறாய்” என்றாள். “கேள், இப்புவியில் அனைத்து மரங்களும் வேர்களால் மண்ணைப் பற்றிக்கொண்டுதான் நின்றிருக்கின்றன. அவ்வேர்கள் தங்களை மண்ணில் தளையிட்டிருக்கின்றன என்று மரங்கள் எண்ணினால் என்ன ஆகும்? அவை நீர்ப்பாசியைப் போன்று அலையடித்து திசையின்றி ஒழுகிச்செல்லும். ஒருநாளும் நிலைகொள்ளாத அவை விண்ணையும் மண்ணையும் அறிவதில்லை.”

"நீர்ப்பாசிகளின் வேர்களை நீரில் மூழ்கிச்சென்று பார்த்திருக்கிறாயா? பற்று தேடித் தவிக்கும் ஒருகோடி கண்ணிகள் மட்டும்தான் அவை” என்று சொன்னபடி முதியவள் அருகே வந்தாள். “அன்பு எனும் தளைபூட்டி இம்மண்ணில் நிலைகொள்ளவே மானுடன் பிறக்கிறான். நீ அறிந்திருக்கமாட்டாய். இதோ என் மைந்தன். இவன் என் கருவறைவிட்டு வெளியே வந்தபோது அவனையும் என்னையும் இணைக்கும் அழியாத் தளையை என் ஊன்விழிகளால் கண்டேன். அதை வெட்டி அவனை விடுவித்தபோது அப்புண்ணின் எச்சம் இங்கே என் வயிற்றில் அலையலையெனப் பதிந்தது. அதோ அவன் வயிற்றில் அது தெய்வங்கள் அளித்த அடையாளமாக நின்றுள்ளது…”

அவள் கைகளை விரித்தாள். “உன் உடலில் தொப்புள் இருக்கும் வரை நீ தளையற்றவள் ஆவதில்லை.” ஃபால்குனை “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால்...” என்றாள். முதியவள் “அதோ நம் தலைமீது வானத்தின் முடிவிலி இருப்பதை காண்கிறாயா? வானம் என்றால் என்னவென்று அறிவாயா? அது நம் மீது நிறைந்திருக்கும் பொருளின்மையின் பெருவெளி. பேராற்றல் மிக்க விசையுடன் இங்குள்ள ஒவ்வொன்றையும் உறிஞ்சி தன்னுள் இழுத்துக்கொண்டிருக்கிறது. இங்குள்ள ஒவ்வொன்றும் அப்பெருவெளியை அஞ்சி உருவாக்கப்பட்டவையே. வேர்களால், உறவுகளால், விழைவுகளால், கடமைகளால், இங்கு தன்னைப் பிணைத்துக்கொள்ளாத அனைத்தும் அதை நோக்கி வீசப்படுகின்றன” என்றாள். “தெய்வங்களும் அவியால் மண்ணுடன் பிணைக்கப்பட்டுள்ளன என்று அறிக!”

முதியவளின் முகத்தை நோக்கி ஃபால்குனை உடல் சற்றே அதிர்ந்து “உண்மை அன்னையே, முற்றிலும் உண்மை” என்றாள். “ஆனால் என்னை பொறுத்தருள்க! அறிந்துகொள்வதினால் எவரும் அதை கடைப்பிடிப்பதில்லை. எது அவர்களுக்கு இயல்பானதோ அதையே ஆற்றுகிறார்கள். நானறிவேன், மானுடனுக்கு கட்டிலா விடுதலை என்று ஒன்றில்லை என. ஆனால் கட்டின்றி பறந்தலைவதும் எங்கும் நிலைகொள்ளாமல் இருப்பதுமே என் இயல்பு. இப்பயணம் என்னை எங்கு கொண்டு செல்கிறது என்பதை என்னுள் உறையும் தெய்வங்களே அறியும். அவை என்னை வழிநடத்தட்டும்."

“இங்கு நீ நிறைந்திரு இனியவளே” என்று முதியவர் தழுதழுத்த குரலில் சொன்னார். “உனக்காக நாங்கள் வாழ்கிறோம். இச்சிற்றூர் உன் கால்பட்டு ஒரு பெருநகராகட்டும். முடியும் கோலும் கொண்ட நாடென்று எழட்டும்...” ஃபால்குனை “எப்பொருளும் தன் எடையைவிட மிகுதியான அழுத்தத்தை மண்மேல் அளிக்க முடியாது என்பார்கள். நான் எண்ணமெனும் வெண்பஞ்சு சூடிய விதை. என்னை காற்று அள்ளிக்கொண்டு செல்கிறது” என்றாள். அவர் கால்களைத் தொட்டு தன் தலைமேல் சூடியபின் திரும்பி புரவியை நோக்கி சென்றாள். அவளுக்குப்பின்னால் விம்மல்கள் ஒலித்தன. சிறுமைந்தர் கதறி அழுதபடி அன்னையரின் ஆடைகளில் முகம் மறைத்துக்கொண்டனர்.

புரவிகளின்மேல் வீரர்கள் ஏறிக்கொண்டனர். ஃபால்குனை இறுதியாக அவ்வூரை நோக்கியபின் தன்புரவி மீது ஏறிக்கொண்டு பெருமூச்சுவிட்டாள். அவர்கள் கண்ணீருடன் நோக்கியபடி தோள்கள் முட்டித்ததும்ப தங்கள் ஊர் வாயிலில் குழுமினர். குழந்தைகள் வீறிட்டு அழுதபடியே கைநீட்டி கூவியபடி புரவிகளுக்குப் பின்னால் சற்று தூரம் ஓடின. புரவிகள் ஊர்ச்சாலையைக் கடந்து ஆற்றங்கரையின் பாதையை அடைந்தன. அவற்றின் குளம்படியோசை தேய்வது வரை அவர்கள் அங்கேயே விழிகளென நின்றனர். ஃபால்குனை ஒருகணமும் திரும்பிப் பார்க்கவில்லை.

சிவதா பாறைகளில் சரிந்து நுரைபொங்கி சிதறி மீண்டும் இணைந்து மலைச்சரிவிறங்கி தாழ்வரையை அடைந்து அங்கே அசைவற்றதென கிடந்த வராகநதியை அடைந்தது. ஆற்றங்கரைச் சாலையில் நின்று நோக்கியபோது வராகநதியின் மீது தக்கைமரத்தாலான தோணிகள் ஒற்றைப்பாய் விரித்து முதலைகள்மேல் அமர்ந்த நாரைகள் போல சென்றுகொண்டிருந்தன. தோணிக்காரர்களின் பாடல்கள் தொலைவிலிருந்து வண்டு முரள்வதுபோல கேட்டன. நீரொளி கண்களை நிறைத்தது.

நதிக்கரையை அடைந்தபோது அங்கே கரையில் நின்றிருந்த படகுகளின் அடியில் மூங்கிலால் பின்னப்பட்ட பெரிய தெப்பங்கள் இணைக்கப்பட்டிருப்பதை ஃபால்குனை கண்டாள். “இப்பெரிய ஆறு சீரான ஒழுக்குள்ளது அல்ல. சரிந்திறங்கும் மலைப்பாறைப்பரப்புகள் அவ்வப்போது வரும். படகுகளின் அடிப்பகுதி பாறைகளில் முட்டி உடைந்துவிடக்கூடும் என்பதனால் இவ்வமைப்பு” என்றான் அவளுடன் வந்த வீரன். ஒளிவிட்ட நதி மூன்று இழைகளாக பிரிய அவற்றில் படகுகள் விரிந்தன. நதியொழுக்குகள் சிலந்திவலைச்சரடுகள் என்றும் அவை சிறிய சிலந்திகள் என்றும் ஃபால்குனை எண்ணினாள்.

வராகநதியின் ஓரமாகவே ஆறுநாட்கள் அவர்கள் சென்றனர். செம்மண்நொதிப்பின் மேல் பெரிய மரங்களைப் போட்டு அவற்றின்மேல் மரப்பலகைகளை அடுக்கி உருவாக்கப்பட்டிருந்த சாலை புரவிக்குளம்புகளால் அதிர்ந்து ஓசையிட்டு மரக்கூட்டங்களில் இருந்த பறவைகளை கலைந்தெழச் செய்தது. பொதிசுமந்த கழுதைகளும் அத்திரிகளும் எருமைகள் இழுத்த வண்டிகளுமாக மலைவணிகர் சென்றுகொண்டிருந்தனர். அவ்வண்டிகளின் சகடங்கள் சிறியனவாகவும் ஒருமுழத்துக்குமேல் அகலம் கொண்டவையாகவும் இருந்தன. வணிகர்கள் அவர்களை வாழ்த்த மறுமொழி உரைத்து கடந்துசென்றனர்.

மிக அரிதாகவே ஊர்கள் இருந்தன. மையச்சாலையிலிருந்து ஊர்களுக்குப்பிரியும் வண்டிப்பாதைகளில் வணிகர்களுக்காக நாட்டப்பட்ட கொடிகள் பறந்தன. அவ்வூர்களில் விற்கப்படும் பொருட்களைச் சுட்டும் சிவந்த கொடிகளில் பன்றி, மாடு வடிவங்களும் நெற்கதிரும் வரையப்பட்டிருந்தன. வாங்க விழையும் பொருட்களைச் சுட்டும் மஞ்சள்நிறக் கொடிகளில் கத்திகள், கலங்கள் போன்றவை பொறிக்கப்பட்டிருந்தன. வைரம்போல ஒரு வடிவைக் கண்டு ஃபால்குனை அது என்ன என்றாள். “உப்பு” என்றான் ஒருவீரன். “மலையூர்களில் அவர்கள் உப்புக்காக எதையும் அளிப்பார்கள்.”

தொலைவில் தென்பட்ட ஊர்கள் அனைத்தும் ஒன்றுபோலவே இருந்தன. மூங்கில்செறிவால் கோட்டையாக சூழப்பட்டவை. மூங்கில் கால்களில் செங்குத்தான கூம்புகளாக எழுந்து மூங்கிலாலும் மரப்பட்டைகளாலும் கூரையிடப்பட்டவை. அங்கே எழுந்த அடுமனைப்புகையின் இன்மணம் வீரர்களை மயக்கியது. “அடுமனை போல் இனியவை ஏதுமில்லை இவ்வுலகில். அடுமனையில் ஊண்புகை சூழ நின்றிருக்கும் பெண்ணே அழகி” என்றான் ஒருவன். “அடுமனைகள் அல்ல அவை, வேள்விக்களங்கள். விண்ணாளும் தெய்வங்களின் தோழி நம் வயிற்றில் எழும் பசி” என்றான் கூடவே வந்த பாணன்.

ஏழாவதுநாள் அவர்கள் மணிபுரத்தை சென்றடைந்தனர். சாலைகளில் வணிகர்களின் குழுக்கள் கூடியபடியே சென்றன. தொலைவில் பறவைகளின் ஒலி உரக்கக் கேட்பதை அறிந்த ஃபால்குனை “மணிபுரம் சதுப்பில் அமைந்துள்ளதா?” என்றாள். அவள் கேட்டதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. “மிகப்பெரியது” என்று ஒருவன் சொன்னான். சதுப்பு என்றால் அதைச்சூழ்ந்து மூங்கில்காடே கோட்டையென ஆகியிருக்கும் என அவன் எண்ணிக்கொண்டான். எரியம்புகளை தடுக்கமுடியும் என்றால் அது வலுவான அரண்தான் என்று தோன்றியது.

ஆனால் புரவிகள் அணுகியபோது அது ஒரு பெரிய ஏரியின் கரை என்று அறிந்தாள். "லோகதடாகம் என்று இதற்குப் பெயர். எங்கள் மொழியில் ஆறுகளின் தொகை என்று பொருள்” என்றான் உடன்வந்த முதியவீரன். அந்த ஏரி விழிதொடும் தொலைவுவரை ஒளிகொண்ட நீர்ப்பரப்பாக தெரிந்தது. அதனுள் நூற்றுக்கணக்கான சிறிய பசுந்தீவுகள் இருந்தன. அவற்றிலெல்லாம் வெண்நாரைகளும் கொக்குகளும் கூழைக்கடாக்களும் செறிந்திருந்தன. முகிலென கூட்டமாக வானில் எழுந்து தங்கள் நீர்நிழல்களுடன் இணைந்து சுழன்று மீண்டும் அமைந்தன. அவற்றின் ஒலி அங்கே நிறைந்திருந்தது.

கரையோரத்து மண்குன்று ஒன்றின்மேல் மூங்கில்கால்களில் எழுந்த காவல்மாடம் நின்றது. அதிலிருந்த வீரர்களின் வேல்முனைகளின் ஒளிமின்னல்கள் கண்ணில்பட்டன. ஏரிக்கரை கரியவண்டல்படிவாக இறங்கிச்சென்று அலைவளைவுகளாக தளும்பிய நீர்விளிம்பை சென்றடைந்தது. மெல்லிய உலர்களியில் பறவைக்கால்தடங்களின் நுண்ணிய எழுத்துக்கள் செறிந்து பரவியிருந்தன. நூற்றுக்கணக்கான மென்மரக்குடைவுப் படகுகள் முதலைக்கூட்டங்கள் போல கரைகளில் கிடந்தன.

ஏரிக்கரையோரமாகவே பெரிய பொதிமுற்றமும் அங்காடியும் அமைந்திருந்தது. அத்திரிகளிலும் கழுதைகளிலும் வண்டிகளிலும் வந்த பொதிகளை சுமைதூக்கிகள் இறக்கி அங்கே மூங்கில்கால்களில் எழுந்த பொதிமாடங்களில் அடுக்கினர். பூத்தகாடு போல கொடிகள் பறந்த அங்காடிவெளி இரைச்சலிட்டுக்கொண்டிருந்தது. அங்காடிக்கூரைகளின் மீது பெரிய வெண்நாரைகள் கழுத்து வளைத்து அலகுகளை மார்பின்மேல் புதைத்து அமர்ந்திருந்தன. பெருஞ்சிறை முறங்களை விரித்து காற்றோசையுடன் வானில் எழுந்து நிழல் தொடர சுற்றிவந்தன. நாணோசை போல கூவி பறந்து ஏரியை நோக்கி சென்றன.

பொதிகளை ஏற்றிக்கொண்ட படகுகளை பெரிய கழிகளால் உந்தி ஏரிக்குள் கொண்டுசென்றனர். சிறியபச்சைத்தீவுகளில் மூங்கிலால் ஆன மாடங்கள் அமைந்திருந்தன. சில சிறுதீவுகளில் ஒரே ஒரு குடிலுக்கே இடமிருந்தது. ஃபால்குனை “மணிபுரி எங்குள்ளது?” என்றாள். கூடவந்த வீரன் “இதுதான் மணிபுரி” என்றான். “எது?” என்றாள் ஃபால்குனை. “இந்த ஏரிதான் நகரம். அதோ அங்குள்ளது அரண்மனை” என்று சுட்டிக்காட்டினான் ஒருவன்.

ஏரிக்கு நடுவே எழுந்த குன்றின்மேல் முடிசூடியதுபோல பொன்மூங்கில்களால் கட்டப்பட்ட பெரிய மாளிகை தெரிந்தது. ஏழு கூம்புக்கோபுரங்கள் கொண்டிருந்தது அது. குன்றின் சரிவில் சிறிய கூம்புவடிவக் கூரைகொண்ட மூங்கில்வீடுகள் இருந்தன. மணிபுரியின் சிம்மக்குருளைச் சின்னம் பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறக் கொடிகள் காற்றில் பறந்தன. குன்றின் முகப்பில் காவல்மாடத்திலிருந்த பெருமுரசின் தோல்வட்டப்பரப்பு வெயிலில் மின்னியது.

“கோட்டை என ஏதும் இல்லையா?” என்று கேட்டதுமே தன் வினாவின் பொருளின்மையை ஃபால்குனை உணர்ந்தாள். “இந்த ஏரியே பெரும் கோட்டை” என்றான் வீரன். “அயலவர் இதை கடக்க முடியாது” என்றான் வீரன். ஃபால்குனை அந்த ஏரியின் சிறுதீவுகளை நோக்கினாள். பெரிய தீவு ஒன்றில் ஐம்பது இல்லங்கள் கொண்ட தெருவே இருந்தது. எதிலும் மரங்கள் இல்லை. இடையளவு உயரமான நாணல்கள் அன்றி எந்த செடியும் தென்படவில்லை.

“இந்த ஏரிமுழுக்க நகரம்தான்” என்றான் வீரன். படகுகள் அணுகியதும் புரவிகள் கால்களை உதறியபடி அணுகி குனிந்து முகர்ந்து மூச்சுசீற மெல்ல காலெடுத்துவைத்து ஏறி சமன்கொண்டு நின்றன. ஃபால்குனை ஒரு படகில் ஏறியதும் படகுகள் நீரில் சென்றன. அருகே இருந்த சிறுதீவு அந்தப்படகளவுக்கே இருந்தது. அதில் கூடுகட்டியிருந்த நாரை ஒன்று சிறகடித்து மேலெழுந்தது. அக்கணம் ஃபால்குனை அறிந்தாள், அது தீவல்ல, மிதக்கும் நீர்நாணல்கள் பின்னி உருவான மிதவை என்று. வியப்புடன் அவள் எழுந்துவிட்டாள். “இவை மிதந்தலைகின்றன” என்றாள்.

“ஆம், இங்குள்ள எல்லா தீவுகளும் மிதந்தலைபவைதான்” என்று வீரன் சொன்னான். “இங்கு வரும் வணிகர்கள் இதைப்போல எங்குமே இல்லை என்கிறார்கள்.” ஃபால்குனை மெல்ல அமர்ந்தாள். விழிகளை விலக்கவே முடியவில்லை. சற்று அப்பால் இருபது மாளிகைகள் எழுந்த தீவை நோக்கினாள். “அதுவும் மிதந்து நிற்பதே. இந்த ஏரியின் நீர் ஒவ்வொருநாளும் ஏறியிறங்குகிறது. நீரோட்டம் இரவுக்கு ஒருமுறை திசைமாறுகிறது. ஆகவே மாளிகைகள் இடம்பெயர்ந்தபடியே இருக்கின்றன. அந்தப் பெரிய மாளிகை படைத்தலைவர் சத்ரபானுவுடையது. அவரது தீவை அரசரின் குன்றுடன் பெரிய வடத்தால் இழுத்துக் கட்டியிருக்கிறார்கள்.”

ஒரு சிறிய தீவை அணுகியதும் ஃபால்குனை பாய்ந்து அதன் மேல் ஏறிக்கொண்டாள். அவள் கால்கீழே அது மெத்தைபோல அழுந்தியது. நீரில் மிதக்கும் குழல்கள் போன்ற தண்டுகொண்ட பச்சைநீர்நாணல்களும் ஆம்பல்தண்டுபோன்ற நீர்ப்பாசிகளும் இணைந்து உடல்பின்னி செறிந்த அடித்தளம். அவள் எம்பி எம்பி அசைந்தபோது மெல்ல விரிசலிட்டு நீர் ஊறியது. புல்போல முளைவிட்டு எழுந்து நின்ற நாணல்முனைகளுக்கு நடுவே உலர்புல்லைச் சுருட்டிவைத்து வெண்முட்டையிட்டிருந்தன நாரைகள். அவள் தலைக்குமேல் நாரையிணை ஒன்று தவிப்புடன் சுற்றிவந்தது.

அவள் படகுக்குள் திரும்பியதும் நாரைகள் சிறகுமடித்து வந்தமர்ந்தன. ஒன்று கழுத்தை நீட்டி கேவல் ஒலி எழுப்பியது. திரும்பித்திரும்பி அந்தத் தீவுகளையே நோக்கினாள். விழிகள் ஏமாற்றுகின்றனவா? “தீவுகளை கரையணையச்செய்து பொதிகளை ஏற்றிக்கொண்டபின் நீருக்குள் செல்வார்கள்” என்றான் வீரன். மிதக்கும் நாணல்தீவின் விளிம்பில் தேட்டையின் கால்களென வெளிறிய செந்நிறநிரையாகத் தெரிந்தன.

ஃபால்குனை உடைகளை சுற்றிக்கொண்டு நீரில் பாய்ந்தாள். “என்ன செய்கிறாய்?” என்றான் வீரன். “இவற்றின் வேர்களைப் பார்க்கிறேன்” என்றாள். மூழ்கி நீந்திச்சென்றாள். அந்தச் சிறு தீவின் வேர்கள் பல்லாயிரம் மெல்விரல் நுனிகளாக நீரை பிசைந்துகொண்டிருப்பதைக் கண்டாள். உந்தி நீந்தி தீவுகளின் அடியினூடாகச் சென்று காலை உதைத்து மல்லாந்தபோது மேலே இருந்து நீர்ப்படலம் வழியாகக் கசிந்த ஒளியில் வேர்வெளியின் பெருந்தவிப்பைக் கண்டாள்.

பகுதி மூன்று : முதல்நடம் - 8

மணிபுரத்தின் அரசர் சித்ரபாலரின் அரண்மனைக்குச் செல்வதற்கான அழைப்பு முந்தைய நாள் மாலைதான் ஃபால்குனையிடம் அளிக்கப்பட்டது. குறும்படகில் விருந்தினருக்கான மூங்கில்மாளிகையை அடைந்து மென்சுருள் கொடிகளில் மிதித்து ஏறி உள்ளே சென்றாள். அத்தீவு காற்றில் மெல்ல கிழக்கு நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர்ந்து அவ்விந்தையை எண்ணி புன்னகைத்தாள். அங்கிருந்த ஏவலர் தலைவன் தலைவணங்கி “தாங்கள் இன்று இரவு இங்கு தங்கி இளைப்பாறவேண்டும் என்றும், நாளை காலை கதிர் எழுந்து, மந்தண மன்று முடிந்த பிறகு அரசவையில் தங்களை சந்திப்பதாகவும் அரசாணை" என்றான்.

ஃபால்குனை தலையசைத்து “நன்று” என்றாள். ஏழு அகன்ற அறைகளுடன் இருந்தது விருந்தினர் மாளிகை. தரையும் சுவரும் கூரையும் பொருட்களை வைக்கும் பரண்களும் மஞ்சங்களும் பீடங்களும் அனைத்துமே மூங்கிலால் ஆனவை. அவற்றின் கட்டுகள் அசைவில் மெல்ல இறுகி நெகிழ்ந்து முனகின. அவை உரையாடுவதுபோல தோன்றியது. நீராடி உணவு உண்ட பின் மரவுரி விரிக்கப்பட்ட மஞ்சத்தில் படுத்துக்கொண்டதும் எப்போதுமென எழும் ‘எங்கிருக்கிறோம்’ என்னும் வியப்பு எழுந்தது. தொலைவில் எங்கோ இருந்தன அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும். ‘இங்கிருக்கிறேன்’ என்றது அடுத்த நினைவு. அது மீளமீள சொற்களாகச் சுழன்று மங்கலாகி மீட்டி மறைய அவள் துயின்றுவிட்டாள்.

துயிலில் விழிக்குள் அனைத்தும் ஒளிகொண்டிருப்பதை உணர்ந்தாள். அம்மாளிகை ஒழுகிச்செல்வதை தன்னுணர்வாகவே அறிந்தாள். அவ்விரைவு கூடிக்கொண்டே வந்தது. எரியும் விண்மீன்போல சுடர்ந்தபடி வானில் முழக்கோல்களும் கரடியும் வெள்ளியும் வியாழனும் துருவனும் அவளை கடந்து சென்றன. லோகதடாகம் பெரியதோர் அருவியென அடியற்ற பாதாளத்தில் கொட்ட, அதில் அத்தீவுகள் அனைத்தும் சரிந்து வளைந்திறங்கின. அதிலொன்றில் ஒட்டிக்கொண்டிருந்த அவள் அப்பால் வானம் மேலும் பெரிய அருவியெனப் பொழிவதை கண்டாள்.

திகைத்து விழித்துக் கொண்டபோது தன்னைச் சூழ்ந்திருந்த இருளுக்குள் பல்லாயிரம் பறவைகளின் ஒலியை கேட்டாள். சில கணங்களுக்குப் பிறகே எங்கிருக்கிறோம் என்று உணர்ந்தாள். மிதக்கும் செடிகளின் மேல் இருக்கும் மாளிகையின் மேல் இருப்பதை உணர்ந்ததுமே அது மெல்ல நீரில் அமிழ்ந்து கொண்டிருப்பதாக ஓர் உணர்வு ஏற்பட்டது. அவ்வுணர்வு கணம் தோறும் பெருக எழுந்து மூங்கில்தரையில் காலூன்றி நின்றாள். கால்களின் அடியில் நீரலைவை உணரமுடிந்தது.

மாளிகைக்கு வெளியே வந்து செடிப்பின்னல்களாலான தரையில் இறங்கி நின்றாள். அவள் கால்களை அழுந்தி ஏற்றுக்கொண்ட உயிர்த்தரை மெல்ல வீங்கி அவளை மேலே தூக்கியது. இருளுக்குள் நீர் கண்காணா விரல்களால் அளையப்படுவதுபோல் ஓசையிட்டது. அவளைச் சூழ்ந்திருந்த உயிர்த்தீவுகளின் மாளிகை உப்பரிகைகளிலும் உள்ளறைகளிலும் நெய்ச் சுடர்கள் எரிந்தன. அவற்றின் செந்நிறத் தலைகீழ்ச் சுடர்கள் நீருக்குள் பரவி நெளிந்தன. தொலைவில் அரசமாளிகையின் விளக்குகள் அதிர்வதை காணமுடிந்தது. வானில் மிதந்து ஒழுகும் ஒரு நகரமென மணிபுரம் தோன்றியது.

கிழக்கு நோக்கி வீசிய காற்றில் அனைத்து சுடர்களும் தழைந்து பின் எழுந்து மெல்லக் குழைந்து ஆட, நகரம் மேற்கு நோக்கி பரந்துகொண்டிருப்பதாக விழி மயக்கு எழுந்தது. சுடர்களிலிருந்து விழி விலக்கி இருண்ட நீரை சற்று நேரம் நோக்கியபோது பார்வை தெளிந்து நீர்வெளி எங்கும் மீன் கூட்டங்களை பார்க்க முடிந்தது. பெரிய மீன்கள் குத்துவாள்களென நீரைக் கிழித்து மேலே எழுந்து அவ்விசையில் சற்றே புரண்டு மீண்டும் நீர்தெறிக்க விழுந்து மூழ்கிச் சென்றன. அவற்றின் இரட்டைவால்கள் நீரை அரிந்து வீசியபடி மூழ்கி மறைந்தன. அடர்ந்த நீருக்குள் இருளை துழாவிக்கொண்டிருக்கும் பல கோடி வேல் நுனிகளை அவள் அக விழியால் கண்டாள்.

ஓயாத பெருந்தவிப்புகளின் மேல் அமைந்த நகரம். அத்தவிப்புகள் சிறகுத் துழாவல்களாக மாறி தலைகீழ் வானில் அதை சுமந்து செல்கின்றன. அங்குள்ள ஒவ்வொரு காலுக்கு அடியிலும் வேர்களின் பதைப்பதைப்பு. ஒவ்வொரு மாளிகைக்கு அடியிலும் வேர்களின் அலை. அவள் அவ்வெண்ணங்களின் சீரின்மையை உணர்ந்து பெருமூச்சுடன் விழித்துக்கொண்டு தன் அலைந்த குழலை அள்ளி முடிந்துகொண்டாள். ஆழ்ந்துணரும் எண்ணங்களெல்லாமே ஒழுங்கற்றவையாக உள்ளன. ஒழுங்குள்ளவை முன்னரே அறிந்த எண்ணங்கள்.

வானம் முகில் படர்ந்திருந்தமையால் விண்மீன்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. முகில் குவை ஒன்றுக்குள் கரி படிந்த சிற்றகல்போல நிலவு இருப்பது தெரிந்தது. நெடுநேரம் கிழக்குக் காற்றில் தன் குழல் எழுந்து பறந்தலைய ஆடை படபடக்க ஃபால்குனை அங்கே நின்றிருந்தாள். எப்போது திரும்பிச் சென்று மஞ்சத்தில் படுத்தோம் என காலையில் விழித்தபோது அவள் அறிந்திருக்கவில்லை.

சேடி நறுமண வெந்நீர் கொண்ட மரக்கொப்பரையுடன் அவளருகே நின்று "தெய்வங்களுக்குரிய இனிய காலை" என்று மும்முறை சொன்னபோது விழித்துக்கொண்டாள். எழுந்து அமர்ந்து அவ்வெந்நீரில் முகத்தைக் கழுவி அவள் கொடுத்த மரவுரியால் துடைத்தபடி "புலரி எழுந்துவிட்டதா?" என்றாள். "இல்லை. கீழ்வெள்ளி எழும் தருணம்" என்றாள் சேடி. “இங்கு பிரம்மதருணத்திலேயே முதற்சங்கு ஒலிக்கும். அரண்மனைமுற்றத்தின் அன்னை மணிபத்மைக்கு பூசனை நிகழும். அன்னையைத் தொழுது நாள் தொடங்க அரசரும் அரசியும் இளவரசரும் எழுந்தருள்வார்கள்.”

ஃபால்குனை வெளியே சென்று குளிர் மெல்லிய ஆவி என குழைந்து எழுந்து கொண்டிருந்த லோகதடாகத்தில் பரவிய சிற்றலைகளை நோக்கி சிலகணங்கள் நின்றாள். பின்பு ஆடையுடனேயே துள்ளி அதில் பாய்ந்தாள். கரையில் நின்ற காவலன் “இந்த ஏரியில் எவரும் நீராடுவதில்லை இளவரசி. இங்குள்ள கொடிகள் கால்களை சுற்றிக்கொள்பவை” என்று கூவினான். “ஆம் அறிவேன், எந்தக்கொடியும் என்னை முற்றிலும் பிணைப்பதில்லை” என்று சொல்லி நீரள்ளி நீட்டி உமிழ்ந்தபின் புன்னகையுடன் மூழ்கி நீந்தி மிதக்கும் நீர்ச்செடிகளின் துகள்களை நோக்கியபடி சென்றாள். மேலே அவன் ஏதோ சொல்லும் ஒலி அலைகளில் கலைந்து கேட்டது.

நீர்பிளந்து எழுந்து தலைதூக்கி கூந்தலை உதறி சுழற்றி பின்பு கட்டிக்கொண்டாள். “இளவரசி, இதன் அடியில் ஏழு மூழ்கிய நகரங்கள் உள்ளன. முற்றிலும் நீர்க்கொடிகளால் பின்னப்பட்டவை. பாதாள நாகங்கள் அங்கு வசிக்கின்றன. மூழ்கிய மானுடர்களை அவை இழுத்துச் சென்று அங்கு வைத்துக்கொள்கின்றன” என்று காவலன் சொன்னான். “இந்நீரில் மூழ்கி இறந்தவர் உடல்கள் எதுவும் மீண்டதில்லை.” சிரித்தபடி “மீளா உலகங்களை தேடுபவள் நான்" என்றபின் ஃபால்குனை மீண்டும் மூழ்கிச் சென்றாள். மிதக்கும் வேர்களின் அடியில் மல்லாந்து நீந்தினாள். காற்றில் பறக்கும் புரவியின் பிடரி மயிர் போல் அலைந்தன மெல்லிய வேர்கள்.

அனைத்து வேர்களையும் மிகச்சீராக அடியில் நறுக்கிவிட்ட கை எது என எண்ணிக்கொண்டாள். அவ்வெல்லையை அவற்றுக்கு எவர் வகுத்தளித்தனர்? இவ்வேர்கள் அனைத்தும் இணைந்து ஒற்றை விழுதென ஆகி இறங்கிச் சென்றால் தடாகத்தின் அடிமண்ணை பற்றிவிடலாம். மண்ணை உறிஞ்சி மேலெழுந்து காடென்று விரிந்திருக்கலாம் என எண்ணிக்கொண்டாள். நீருக்குள் புன்னகைத்தபோது அதை ஏற்று சுற்றும் அலைகள் ஒளிகொண்டன. காலுந்தி கையால் நீரைப்பற்றி எம்பி மேலே வந்து நீரை கொப்பளித்து துப்பி தலையைச் சுழற்றி கூந்தலை பின்னுக்குத் தள்ளி கட்டியபின் தன்னைச் சுற்றி மெல்ல உயிர்கொண்டு எழத் தொடங்கிய மணிபுரி நகரை நோக்கினாள்.

கரையிலிருந்து படகுகள் எழுந்து ஒற்றைப்பாய் விரித்து கொடிவலைத் தீவுகளை நோக்கி செல்லத் தொடங்கியிருந்தன. அவற்றில் எரிந்த நெய் அகல்களைச் சுற்றி பீதர்நாட்டு வெண்பட்டால் ஆன காற்றுத்தடைக்குமிழி அமைத்திருந்தார்கள். கனிந்த சிவந்த கனிகளைப் போல அவை மிதந்தலைந்தன. நீருக்குள் ததும்பிய அலைகளில் அக்கனிகள் சிதைந்து இழுபட்டு மீண்டும் இணைந்து மீண்டும் உருகி வழிந்து குவிந்து ஒழுகிச்சென்றன.

சித்ரபாலரின் மாளிகையின் கூம்புமுகடு காலையொளி பட்டு தன் உருவை வானிலிருந்து வெட்டித் திரட்டி எடுக்கத் தொடங்கியிருந்தது. முகில்கள் புடைப்பு கொண்டன. அரச மாளிகையின் நீள்கூம்புவடிவக் கூரையின் இருமுனைகளிலும் பொறிக்கப்பட்ட வெண்கலக் கழுகுகளின் சிறகுகளின் விளிம்புகளை பார்க்க முடிந்தது. அங்குள்ள ஆலயங்களின் முற்றங்களில் சுடர்கள் ஒவ்வொன்றாக பூத்து எழுந்தன. கைவிளக்குகளுடன் நடமாடுபவர்களின் நிழலுருவங்கள் சுவர்களில் எழுந்து நடந்து வானிலெழுந்து மறைந்தன.

அரச மாளிகையின் முகப்பில் இருந்த காவல் மாடத்தின் புலரிக்கான அறிவிப்பு ஓசை எழுவது வரை அவள் நீரில் நீந்திக்கொண்டிருந்தாள். பின்பு கரை அடைந்து குளிரில் ஒடுங்கிய தோளுடன் ஆடையை தொடையுடன் சேர்த்து பற்றியபடி சிற்றடி எடுத்துவைத்து நடந்து அறைக்குள் சென்று மூங்கில்படலை மூடியபின் ஆடை மாற்றிக்கொண்டாள். அகிற்புகையிட்டு குழலை ஆற்றி முப்பிரிகளென எடுத்து பின்னி வலஞ்சுருட்டி நாகச்சுருள் கொண்டையாக்கினாள். தன் அணிப்பேழையைத் திறந்து அதிலிருந்து கருஞ்சிமிழை எடுத்து சுட்டுவிரலால் தொட்ட மையை விழிக்கரைகளில் தீட்டினாள். கால்வெண்மைக்கும் கைப்பரப்புக்கும் செம்பஞ்சுக் குழம்பு பூசினாள். செஞ்சாந்து பட்டு காந்தள்மொக்குகளாயின விரல்கள். இதழ்களுக்கு செங்கனிச்சாறும், கன்னங்களுக்கு பொன்பொடிச்சுண்ணமும் பூசினாள்.

காதுகளில் செங்கனல் குழைகளும், கழுத்தில் செம்மணி ஆரமும் அணிந்தாள். கைகளுக்கு கல்பதித்த வளையல்கள். விரல் சுற்றிய நாகபடக் கணையாழிகள். இடையில் பொற்சுட்டி மையம் கொண்ட மேகலை. தோள்வளைகள். முலைமேட்டில் ஒசிந்தசைந்த சரப்பொளி. அணிபூண்டு அவள் எழுந்தபோது சேடி சொல்மறந்து அவளை நோக்கி நின்றாள். அவளை நோக்கி திரும்பி புன்னகைத்து "பொழுதாகி விட்டதா?" என்றாள். திகைத்து நிலையுணர்ந்து விழித்து "ஆம். ஆனால்… இல்லை… நான் பார்க்கிறேன்" என்று சொல்லி அவள் வெளியே ஓடினாள். அவளது விழிகளை எண்ணி அவள் புன்னகைத்துக் கொண்டாள்.

வெளியே மூங்கில் படித்துறையை தொட்டுத்தொட்டு அசைந்தபடி அவளுக்கான படகு செம்பட்டுப் பாய் படபடக்க காத்திருந்தது. படகுக்காரனிடம் பேசிய பின் காவலன் ஓடி வந்து தலைவணங்கி "அரண்மனைக்குச் செல்ல தங்களுக்கு படகு வந்துள்ளது" என்றான். "நன்று" என்றபடி ஆடைகள் நலுங்கும் ஒலியும், அணிகள் குலுங்கும் ஒலியும் இணைந்து பிறிதொரு மொழி பேச அவள் நடந்தாள். வேறெங்கோ விழியோட்டி அமர்ந்திருந்த படகுக்காரன் ஒலிகேட்டு இயல்பாகத் திரும்பி அவளைக் கண்டதும் திகைத்து எழுந்து வாய்திறந்தான். அஞ்சுபவன் போல துயருறுபவன் போல பதைத்தபடி சேடியை நோக்கினான்.

சேடி அவளுக்குப் பின்னால் வந்து “அரசரும் அரசியும் இளவரசரும் பிரம்மதருணத்தில் எழுந்து ஏழு மூதாதையர் ஆலயங்களிலும் மணிபத்மையன்னையின் பேராலயத்திலும் புலரிப்பூசனைகளும் சடங்குகளும் முடிந்து வந்து மன்றமர்ந்து அமைச்சர்களை சந்தித்தபின்னரே பொதுமன்று கூடும். அரசமுறை தூதர்களும், வணிக தூதர்களும் வந்து நின்று அவரைக் காணும் தருணம் அது. உங்களுக்கும் அப்போதே நேரம் அளிக்கப்பட்டுள்ளது” என்றாள். "நன்று" என்றபின் ஃபால்குனை படகில் ஏறி ஆடைகளை கைகளால் பற்றிக் குவித்து தொடை நடுவே அமைத்துக்கொண்டு இடை ஒசிந்து கையை நீட்டி அமர்ந்துகொண்டாள்.

வானில் ஊறி பரவத் தொடங்கியிருந்த மெல்லிய ஒளி அவள் முகத்தின் ஒவ்வொரு மென்மயிரையும் பொன்னென காட்டியது. அவள் முகத்தை அன்றி பிறிதெதையும் படகோட்டி பார்க்கவில்லை. அங்கு துயின்று எங்கோ விழித்து இமையாமல் அவளை நோக்கிக்கொண்டிருக்க அவன் கைகள் துழாவி படகை முன்செலுத்தின. தன்னுள் அமைந்து மெல்ல சரிந்த அவள் விழிகள் ஒருமுறை மேலேழுந்து பார்வை அவனைத் தொட்டபோது அவன் குளிர்நீர் வீசப்பட்ட கன்றுபோல் உடல் சிலிர்த்தான். மெல்லிய புன்னகை ஒன்றை அவனுக்கு அளித்துவிட்டு அவள் திரும்பிக்கொண்டாள்.

குருதி படிந்த வேல் முனைபோல் சிவந்திருந்தன அவள் விழிகள். படகு அரசப் படித்துறையை அடைந்தபோது துடுப்புகளின் ஓசையை உணர்ந்து விழித்து அவற்றை எடுத்து மடிமேல் வைத்துக்கொண்டு கைகளால் துழாவி படகை துறையணையச் செய்த படகோட்டி நெஞ்சை நிறைத்து உடலை இரும்புப் பதுமையென எடைகொள்ள வைத்த ஏக்கம் ஒன்றை அடைந்தான். அவள் படகில் எழுந்து ஆடும்பந்தத்தின் தழலென உலைந்து நிலைகொண்டு படித்துறையின் மூங்கில் நீட்சியை நோக்கி கால் எடுத்து வைத்து ஏறி திரும்பியபோது தலைவணங்கி விடை கொடுக்கவும் மறந்தான்.

படகுத்துறையில் இருந்த காவலர் அவளை நோக்கி வியந்து பின்பு செயல்குழம்பி ஒருவரை ஒருவர் பார்த்தனர். வளையல்கள் குலுங்க நெற்றியருகே பறந்த குழலை நடனமென எழுந்த கையசைவால் கோதி பின்னேற்றி கொண்டையில் செருகிய பின் மெல்லிய புன்னகையுடன் “மேலே செல்லும் வழி ஏது?” என்று கேட்டபோது காவலர் தலைவன் விழித்துக்கொண்டு “வணங்குகிறேன் இளவரசி” என்றான். கன்றுக் கழுத்துக்களின் மணி என அணிகலன்கள் குலுங்க சிரித்துக்கொண்டு “நான் இளவரசி அல்ல" என்றாள் ஃபால்குனை. “ஆம். ஆனால்…” என்று சொல்லி காவலர் தலைவன் பிறரை நோக்கியபின் “தங்கள் வரவால் இம்மாளிகை முகப்புகள் எழில்கொண்டன" என்றான்.

“நடந்தேதான் செல்ல வேண்டுமா?" என்றாள் ஃபால்குனை. “ஆம். ஆனால்... அதோ...” என்று அவன் தடுமாறினான். “நடந்தேதான் செல்ல வேண்டும். அரசரும் நடப்பதுதான் வழக்கம்” என்றான் காவலர் தலைவன். “தாழ்வில்லை, அதிக தொலைவு இல்லையல்லவா?” என்று விழிசுடர புன்னகைத்துவிட்டு அவள் மெல்ல நகர்ந்தாள். அவளுடைய ஒவ்வொரு காலடியையும் நெஞ்சக் கதுப்பில் வாங்கிக்கொண்டனர் வீரர்கள். ஒவ்வொரு அணி ஒலியும், ஆடை ஒலியும் அவர்களின் அகச்செவிகளில் கேட்டன. அவள் கடந்து சென்றபோது கனவிலிருந்து விழித்து அவர்கள் அத்தனைபேரும் ஒருசேர மீண்டனர். அவள் தனித்துச் செல்வதை அதன் பின்னரே காவலர்தலைவர் கை காட்டி ஆணையிட இருவீரர் வேல்களுடன் அவளுக்குப் பின்னால் ஓடி இருபுறமும் வந்தனர்.

வளைந்து மேலே ஏறும்போது ஃபால்குனை பாதையின் இருபுறமும் காவலர்கள் தங்குவதற்கான மூங்கில் மாடங்கள் அமைந்திருப்பதை கண்டாள். மரத்தடிகளைப் போட்டு அமைக்கப்பட்டிருந்த படிகளில் ஏறி அமைச்சரும் படைத்தலைவரும் அமரும் அலுவல் மாளிகைகளைக் கடந்து, பெருங்குடி மன்று கூடுவதற்கான அகன்ற மூங்கில் கொட்டகையைத் தாண்டி அரண்மனை முற்றத்திற்கு வந்து அங்கு பொழிந்து கிடந்த இளவெயிலில் நின்றாள்.

அரண்மனை முகப்பில் ஐம்பது தேர்கள் நிற்கும் அளவிற்கு இடமிருந்தது. அதன் இடப்பக்கம் பொன்மூங்கில்தூண்களின் மேல் மூங்கில் கூரையுடன் மணிபத்மையின் ஆலயம் நின்றிருந்தது. மூங்கில் கொடிமரத்தில் அன்னையின் செம்பட்டுக்கொடி படபடத்தது. ஃபால்குனை பறந்த ஆடையை சேர்த்தமைத்து நின்று சுற்றிலும் தெரிந்த மணிபுரி நகரத்தை விழிநிறைய பார்த்தாள். பார்வை தொடும் எல்லை வரை நான்கு திசையிலும் நீர் வெளியே தெரிந்தது. மூங்கில் மாளிகைகளைச் சுமந்த மிதக்கும் தீவுகள் நீர்ப்பரப்பில் மெல்ல அசைந்து சென்று கொண்டிருந்தன. அவை அசையக்கூடியவை என்று அறிந்த பின்னரே அசைவு விழிகளுக்குத் தென்படுகிறது என்பதை எண்ணி வியந்தாள்.

தொலைதூரத்து கொடிப்புதர்த் தீவுகளில் வெண் பறவைகள் மீன்பிடிவலைகள் வீசப்படுவதுபோல எழுந்து பறந்து நீரில் பரவி ஆம்பல்களாக மாறி அலைகளில் எழுந்தமைந்து ஒழுகின. வானில் சூரியன் தென்படவில்லை. முகில் படலங்கள் மறைத்த கீழ்வானில் எங்கோ ஒளியின் ஊற்று மட்டும் இருந்தது. கரையிலிருந்து நீரில் மிதக்கும் தங்கள் இல்லங்களை நோக்கிச் சென்ற பறவைக்கூட்டங்களால் வானம் அசைவு நிறைந்திருந்தது. குனிந்து தரையை நோக்கியபோது ஒளிகொண்ட செம்மண் தரைமீது பறவைகளின் நிழல்கள் கடந்து செல்வதை காண முடிந்தது.

சித்ரபாலரின் அரண்மனை வெண்கலக் குழாய்களைப் போன்று முற்றிப் பழுத்த பெரும் மூங்கில்களை மண்ணில் ஆழ நட்டு எழுப்பி மேலே ஒருங்கிணைத்து கூம்புக்கோபுரம் என அமைத்து கட்டப்பட்டிருந்தது. இருபுறமும் நீண்டெழுந்து நின்ற உப்பரிகைகளில் மூங்கில் வெட்டி அமைத்த தொட்டிகளில் சிறுபூக்கள் மலர்ந்த செடிகள் எழுந்திருந்தன. மூங்கில்கள் மல்லாந்து ஏந்தியும் கவிழ்ந்துஇணைத்தும் அமைத்த சரிவுக் கூரையின் இரு உச்சியின் நுனிகளிலும் இருந்த வெண்கல கழுகுச் சிலைகள் வெயிலில் ஒளிவிட்டன.

அரண்மனை முகப்பில் நின்றிருந்த துணை அமைச்சரும் காவலர் தலைவரும் படி இறங்கி வந்து ஃபால்குனையை வரவேற்றனர். “தங்களை மணிபூரகத்தின் அரசவை வரவேற்கிறது” என்றார் அமைச்சர். தன் விழிகளை உணர்வற்றதாக வைத்துக்கொள்வதில் அவர் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் அந்த முயற்சி அவர் உடல் முழுவதும் இறுக்கத்தை உருவாக்கியிருந்தது. அவள் விழிகளை முற்றிலும் தவிர்த்த காவலர் தலைவன் “சற்று காத்திருங்கள். மன்று கூடியதும் மணி ஓசை எழுகையில் அவை நுழையலாம்” என்றான்.

அமைச்சரை நோக்கி புன்னகை செய்தபின் ஃபால்குனை காவலர் தலைவனின் முகத்தையே ஓரக்கண்ணால் நோக்கியபடி “ஆம். காத்திருக்கிறேன். அதற்கென்ன!" என்றாள். இரு கைகளை அவள் தொங்கவிட்டபோது வளையல் ஓசை எழ காவலர் தலைவனின் தோளிலும் கழுத்திலும் மெல்லிய மெய்ப்பு உருவானது. அவள் பார்வையை திருப்பிக்கொண்டாள். அவனுடைய மெல்லிய உயிர்ப்பை நுண்செவிகளால் கேட்டாள். இருவர் உடலில் இருந்தும் இளவியர்வை குளிர்வதன் மணம் எழுந்தது.

பட்டாடைகளும், பெரிய தலைப்பாகைகளும் அணிந்த மூன்று பெருவணிகர்கள், தங்களுக்குள் மெல்லிய குரலில் உரையாடியபடி வந்து, முற்றத்தை அடைந்ததும் நிமிர்ந்து மாளிகையை நோக்கினர். பின்னால் நின்றவர் முன்னால் நின்ற முதிய வணிகரிடம் ஏதோ மெல்லிய குரலில் சொல்ல அவர் மாளிகையை நோக்கி தலை அசைத்தார். அதை மதிப்பிடுகிறார் என்று எண்ணி ஃபால்குனை புன்னகை செய்தாள். பேசியபடி இயல்பாகத் திரும்பிய அவரது விழிகள் ஃபால்குனையைக் கண்டதும் திகைத்தன. பின்பு அவள் அருகே நின்ற அமைச்சரையும் படைத்தலைவரையும் பார்த்து தாவிச்சென்று மீண்டன.

அவர் இதழ் அசையாது ஏதோ சொன்னார். அருகே நின்ற வணிகர் அதன் பின்னரே அவளைப் பார்த்தார். மூன்றாவது வணிகன் அப்போதும் அவளைப் பார்க்கவில்லை. அவள் முதல் பெருவணிகரை நோக்கி புன்னகைக்க, திடுக்கிட்டவர்போல் அவர் விழி விலக்கிக் கொண்டு உடனே தலை வணங்கினார். வணிகர்களை நோக்கிய பார்வையை உடனே திருப்பி காவலர் தலைவனை நோக்கிய ஃபால்குனை அவளில் பதிந்திருந்த அவன் விழிகளை சந்தித்து புன்னகை செய்தாள். அவன் மெலிதாக உடல் பதறி அமைச்சருக்குப் பின்னால் மறைந்தான்.

காவலர் தலைவனை நோக்கி அமைச்சர் “பெருவணிகர்களை அழைத்து வருக!” என்று மெல்லிய குரலில் ஆணையிட்டார். விடுதலை பெற்றவன்போல அவன் விரைந்து மரப்படிகளில் இறங்கி பெருவணிகர்களை அணுகி தலைவணங்கி முகமன் உரைத்து வரவேற்று மேலே அழைத்து வந்தான். மூன்று வணிகர்களும் ஃபால்குனையின் அருகே வந்து இன்னொரு தூணருகே கூடி நின்றுகொண்டனர்.

முயல்கள் ஒன்றுடன் ஒன்று உடல் நெருக்குவதுபோல அவர்களின் தோள்கள் உருமிக்கொண்டன. ஃபால்குனை பெருவணிகரின் விழிகளை நோக்கியபடி கைகளால் தன் ஆடை திருத்தி வளையொலி எழுப்ப, அவர் திகைத்து விழி தூக்கி அவளைப் பார்த்து அவள் புன்னகையைக் கண்டதும் பதைப்புடன் மெல்ல உடல் திருப்பிக்கொண்டார்.

உள்ளிருந்து வந்த காவலன் அமைச்சரை நோக்கி வணங்கி மெல்லிய குரலில் மணிபுரி மொழியில் ஏதோ சொன்னான். அமைச்சர் “உள்ளே செல்லலாம். மன்று கூடிவிட்டது” என்றார். “இல்லை, அவர்கள் செல்லட்டும்" என்று இனிய மென்குரலில் சொன்னாள் ஃபால்குனை. “இல்லை இல்லை, தாங்கள்தான் அரசமுறை விருந்தினர். தாங்கள் முதலில் செல்ல வேண்டும் என்பது மரபு” என்றார் அமைச்சர். “அவ்வண்ணமே” என்று தலைவணங்கி ஃபால்குனை நழுவிய ஆடையைப் பற்றி மேலேற்றி முலைகள்மேல் சீர்செய்தபடி அவைக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்ததை அவையிலெழுந்த மூச்சொலிகளாலேயே அவள் அறிந்தாள். கன்னத்தில் செறிந்த குழல்கற்றையை அள்ளி ஒதுக்கியபடி நீள் விழிகளைச் சுழற்றி மன்றை நோக்கினாள். நீள் வட்ட வடிவிலான கூடத்தின் ஓரங்களில் பொன்னிறம் பழுத்த பெருமூங்கில்கள் நெருக்கமான தூண்நிரையாக நாட்டப்பட்டிருந்தன. இளமையிலேயே வளைத்து வளர்க்கப்பட்ட அவை மேலே குவைமாடமென சென்று ஒன்றிணைந்தன. அங்கே மூங்கிலுரித்த வடங்களால் அவை சேர்த்து கட்டப்பட்டிருந்த கோட்டிலிருந்து சரவிளக்குகள் தொங்கின.

மூங்கில் பின்னி அமைக்கப்பட்ட பீடங்களில் அமைச்சரும் படைத்தலைவரும் குடித்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். சுவரோரமாக அடைப்பக்காரர்கள் தாலங்களுடனும் அடுமடையர்கள் இன்னீர் குடுவைகளுடனும் நின்றனர். சித்ரபாலர் அமர்ந்திருந்த அரியணை மரத்தால் ஆனது. அதன் இரு கைப்பிடிகளிலும் வாய் திறந்திருந்த சிம்மங்கள் செந்நிறம் பூசப்பட்டு, ஒளிவிடும் வைரங்கள் பதிக்கப்பட்ட விழிகளுடன் ஒருகால் முன்னால் வைத்து நின்றன.

ஃபால்குனை அவை நடுவே சென்று தன் உடல் அணிந்த அணிகலன்கள் மந்தணச்சிரிப்பென ஒலிக்க நடன அசைவுடன் கைகுவித்து தலைவணங்கி இனிய குரலில் “பாரதவர்ஷத்தின் பொன்புலரி எழும் மண் மணிபுரி. அதை வைரம் சுடரும் கோல் கொண்டு ஆளும் மன்னர் சித்ரபாலர். அறம் தழைத்து நிற்கும் வயல் இந்த அவை. இங்கு வந்து நின்று வணங்கும் பேறு பெற்றேன். என் மூதாதையர்கள் குலமும் புகழ் பெற்றது” என்றாள்.

சித்ரபாலர் அவள் குழலையும் முகத்தையும் தோள்களையும் இடையையும் கால்களையும் நோக்கி சற்றே விழி சுருங்கியபின் திரும்பி தன் மகனை பார்த்தார். அரியணைக்கு வலப்பக்கம் மூங்கிலாலான பெரிய பீடத்தில் சித்ராங்கதன் அமர்ந்திருந்தான். முழுதும் உடல் மறைக்கும் பட்டாடை அணிந்திருந்ததனால் அவன் இடையில் புண் மீது கட்டிய கட்டு தெரியவில்லை. பட்டுத்தலைப்பாகை மேல் மணிபுரியின் சிம்ம இலச்சினை அணிந்திருந்தான். கழுத்தில் செவ்வைர மாலையையும், காதுகளில் மணிக்குண்டலமும் ஒளிவிட்டன. கால் மேல் கால் போட்டு சற்றே உடல் வளைத்து கையூன்றி அமர்ந்திருந்தான்.

ஃபால்குனை அவன் விழிகளை சந்தித்து புன்னகைக்க, அவன் இதழ்களும் புன்னகையென மெல்ல இழுபட்டு மீண்டன. சித்ரபாலர் “கீழ்நாகர்களை தனி ஒருத்தியாக வேல் வில் கொண்டு சென்று வென்றாய் என்று அறிந்தேன். அஸ்தினபுரியின் இளைய பாண்டவருக்கு இணையான வில்லாளி நீ என்றனர் என் வீரர்கள். உன்னை நேரில் காணவேண்டும் என்று விழைந்தேன். இந்த அவை நீ மணிபுரிக்கு இழைத்த பணிக்காக உனக்கு நன்றி கொண்டுள்ளது" என்றார். “இந்த மண்ணின் உணவை உண்டதற்காக அது என் கடமை” என்றாள் ஃபால்குனை.

பேரமைச்சர் ஹிரண்யதூமர் எழுந்து “அழகிய இளம் மூங்கில் போன்ற இக்கரங்களும் கைகளும் வில்லேந்தி போரிட்டன என்று எண்ணவே கடினமாக உள்ளது. மேற்கே விரிந்துள்ள பாரதவர்ஷத்தில் நாங்கள் புராணங்களிலும் கனவுகளிலும்கூட காண முடியாத விந்தைகள் நிறைந்துள்ளன என்கிறார்கள். அங்கிருந்து வரும் ஒவ்வொருவரும் ஒரு வகை விந்தையுடன்தான் இம்மண்ணில் கால் வைக்கிறார்கள். ஆகவே இதையும் நம்புவோம். இம்மண்ணுக்கு உன் வருகை நலம் பயக்கட்டும்” என்றார். அவை “ஆம் ஆம் ஆம்” என்றது. ஃபால்குனை அவையை நோக்கி மும்முறை தலை தாழ்த்தினாள். “அமர்க!” என்றார் சித்ரபாலர்.

பகுதி மூன்று : முதல்நடம் - 9

துணை அமைச்சர் அவள் அமரவேண்டிய மூங்கில் இருக்கையை காட்ட ஃபால்குனை அதில் ஆடை சீரமைத்து அமர்ந்தாள். மேலாடையை கையால் சுழற்றிப் பற்றி மடிமீது அமைத்துக்கொண்டு, தன் குழலை சற்றே தலை சரித்து முன்னால் கொண்டு வந்து தோளில் போட்டுக்கொண்டு, கால்களை ஒடுக்கி உடல் ஒசித்து அமர்ந்து அவையை நோக்கி புன்னகைத்தாள். அந்த அவையில் அவள் மட்டுமே இருப்பதுபோல் விழிகள் அனைத்தும் அவளை நோக்கி நிலைத்திருந்தன.

சித்ராங்கதன் மட்டும் அவளை நோக்காதவன்போல, அவை நோக்கி விழி திருப்பி இருந்தான். ஃபால்குனை அந்த அவைக்கூடத்தை கூர்ந்து நோக்கினாள். மூங்கில் தூண்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்து உருவாக்கிய சுவர் மூங்கில் பிளந்து பின்னியமைத்த தட்டியால் இணைக்கப்பட்டிருந்தது. வெளியே சுண்ணம் கலந்த களிமண்ணும் உள்ளே தேன் மெழுகும் பூசப்பட்டு மெருகேறியிருந்தது. வட்டச்சுவரில் இருபத்துநான்கு சிறு சாளரங்கள் இருந்தன. அவற்றினூடாக உள்ளே வந்த நீர்த்தழை மணம் கொண்ட ஏரிக்காற்று, சுழன்று மேலெழுந்து மூங்கில் குவைமுகட்டில் ஒலிகளைக் குவித்து ரீங்காரமாக்கி வழிந்து கடந்து சென்றது. சாளரங்கள் அனைத்திலும் சுருட்டி மேலே எழுப்பப்படத்தக்க வண்ண மூங்கில் தட்டிகளே திரைகளாக இருந்தன.

சித்ரபாணன் ஃபால்குனையை நோக்கி “இளையோளே, உன் குடி என்ன என்று அறிய விழைகிறேன்” என்றார். ஃபால்குனை தலைவணங்கி “நான் மலைமகள். காட்டில் கண்டெடுத்த என்னை சூதர்கள் வளர்த்தனர். பாட்டும் நடனமும் பயின்றவள் என்பதால் மலை வணிகர் குழு ஒன்று என்னை வாங்கியது. அவர்களிடமிருந்து என் விடுதலையை ஈட்டியது என் கலை. மலைகள் தோறும் அலைந்தேன். பனிமலைகளை கண்டேன். மலைப்பீதருடன் வாழ்ந்தேன். அவர்களுடன் நாக நாட்டிற்கும் அங்கிருந்து இம் மணிபூரகத்திற்கும் வந்தேன். மலைக்காற்றுக்கு வானமே வீடு என்பார்கள். வானாளும் காசியப பிரஜாபதியே அதன் குலத்தந்தை. எனவே நானும் காசியப குலத்தவள்" என்றாள்.

சித்ரபாணன் புன்னகையுடன் “நன்று பெண்ணே, நயம்பட உரைக்கக் கற்றிருக்கிறாய். உன்னை இங்கு வரவழைத்தது எங்கள் பட்டத்து இளவரசரின் விழைவுப்படி என்று அறிக! எங்கள் அரசையும் இந்நாட்டையும் பற்றி நீ என்ன அறிந்திருக்கிறாய் என்று அறிய விழைகிறேன். ஏனென்றால் எங்கள் எல்லைக்கு அப்பால் செல்லும் சூதர்கள் எவரும் இங்கு இல்லை. வெளியே இருந்து எவரையும் நாங்கள் உள்ளே விடுவதுமில்லை” என்றார். “ஆம். இறுகமூடப்பட்ட மாய மணிச்செப்பு இந்நாடு என்று அறிந்துள்ளேன்” என்றாள் ஃபால்குனை.

“நூற்றெட்டு தலைமுறைகளாக நாங்கள் காத்து வரும் இந்த எல்லை பேணலே எங்களை இன்னும் அழியாது இங்கு வாழவைப்பது. அத்துடன் இம்மாபெரும் நீர்அரணும் எல்லையென்றாகிக் காக்கும் அடர்காடும் என எங்கள் நெஞ்சிலும் கனவிலும் வாழும் மூதாதையர்கள் அருள்புரிந்துள்ளனர்” என்றார் சித்ரபாணன். “ஆம், அறிவேன்" என்றாள் ஃபால்குனை. “மலைநாடுகளிலும் பின்பு காமரூபத்திலும் இப்பால் நாகர்நாடுகளிலும் மணிபூரகத்தைப் பற்றி நிலவும் அச்சம் ஒன்றையே நான் அறிந்துள்ளேன். அணுகும் முன் எவரையும் கொல்லும் நிகரற்ற வஞ்சம் கொண்ட மக்கள் அன்றி பிற சொல் எதுவும் என் காதில் விழவில்லை" என்றாள்.

“அவ்வச்சமே எங்கள் படைக்கலன்” என்றார் சித்ரபாணன். “பாரதவர்ஷத்தின் நீள் அலைக் கூந்தல் என்று காமரூபத்திற்குக் கிழக்கே விரிந்து கிடக்கும் இப்பெரும் காட்டுவெளியை சொல்கின்றனர். இங்கு மானுடர் வாழும் செய்தியையே பாரதவர்ஷத்தின் தொல் முனிவர்கூட அறிந்திருக்கவில்லை. கின்னரரும் கிம்புருடரும் உலவும் காடு இது என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு பறக்கும் குதிரைகளும் அனலுமிழும் நாகங்களும் தழல்பிடரி கொண்ட சிம்மங்களும் வாழ்கின்றன என்றும் பாரதவர்ஷத்தின் நிலப்பகுதியை விவரிக்கும் தொன்மையான நூலாகிய ஜம்புத்வீப மாகாத்மியம் சொல்கிறது.”

“இளையோளே, உண்மையில் விலங்குகள் தோன்றிய காலம் முதலே இங்கு மானுடர் வாழ்கிறார்கள். அவர்கள் ஆயிரத்தெட்டு பழங்குடிகள் என்பது எங்கள் கணக்கு. அவர்களை ஏழு பெருங்குலங்களாக பிரிப்பதுண்டு. மலைக்குகைகளில் வாழ்பவர்கள், மரங்களுக்குமேல் வாழ்பவர்கள், மிதக்கும் தீவுகளில் வாழ்பவர்கள், மண்ணில் குழிதோண்டி உள்ளே வாழ்பவர்கள், படகுகளிலேயே வாழ்பவர்கள், உச்சிமலைகளில் மட்டும் இருப்பவர்கள், சேற்றுவெளிமீது மூங்கில்கால்கள் நாட்டி இல்லமெழுப்பி வாழ்பவர்கள். அவர்கள் இன்றும்கூட அவ்வாழ்க்கையிலேயே நீடிக்கின்றனர்.”

“அன்று அவர்கள் ஒருவரை ஒருவர் அறியாது மட்கிய மரத்தின் பட்டைக்கு உள்ளேயே தங்கள் நகரங்களை அமைத்துக் கொள்ளும் சிதல்கள் போல வாழ்ந்தனர். பின்னர் பெற்று பெருகி நிலம் நிறைத்து எல்லைகளை எட்டியபோது ஒருவரையொருவர் எதிரிகள் என்று கண்டனர். ஒருவரை ஒருவர் தேடித்தேடி வேட்டையாடுவதே பன்நெடுங்காலமாக இங்கு மரபாக இருந்து வந்தது. ஒவ்வொரு குடிக்கும் பிற குடிகளனைவரும் அயலவரே. அயலவரோ விழி தொட்ட அக்கணமே கொன்று கடக்க வேண்டியவர்கள்.”

“குடிச்சமர் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்த இப்பெருங்காட்டில் செடிகள் எங்கள் குருதியைக் கொண்டே செழித்தன என்பர். பிற குடியினரின் தலை கொய்தலே விளையாட்டானது. அவர்களின் குடிகளை எரித்து, ஊர்களை அழிப்பதே களியாட்டானது. கொன்றவர்களின் மண்டையோடுகளை சேர்த்து வைப்பதே குடில்மங்கலம். அவர்களின் எலும்புகளும் பற்களுமே எங்கள் குடிப்பெண்களின் அணிகலன்கள். கொன்ற அயலவர்களின் எண்ணிக்கையை குலப்பெருமையெனக் கொள்ளும் மக்கள் நாங்கள்” என்றார் சித்ரபாணன்.

“ஆயிரத்தெட்டு தொல்குடியும் தங்களுக்கென்று தனி மொழி கொண்டிருந்தனர். இரவுலாவிகளான மலைமக்கள் கோட்டான்களிடமிருந்தும் கூகைகளிடமிருந்தும் தங்கள் மொழியை பெற்றனர். மலையுச்சி மாந்தர் வரையாடுகளின் சொற்களை கற்று மொழியாக்கினர். சேற்றுமாந்தரோ தவளைகள்போல் பேசினர். நீர்மக்களின் மொழி காற்றில் அலையடிப்பது. குழிமக்களின் மொழி மந்தணம் மட்டுமே கொண்டது. மரங்களின் மேல் வாழ்ந்தவர்கள் குரங்குகளுடன் உரையாடுபவர்கள்.”

“ஆனால் பல்லாயிரம் ஆண்டுகாலம் நாங்கள் ஒருவரோடொருவர் உரையாடியதே இல்லை. ஒவ்வொரு குலமும் பிறிதை மொழியற்றது என்றே எண்ணியது. இன்றும் அயலவர் என்பதற்கு எங்களிடமுள்ள சொல் அபாஷா என்பதே” என்றார் சித்ரபாணன். “நூற்றி எட்டு தலைமுறைக்கு முன் எனது முதுமூதாதை சித்ரகேசர் மூன்றுவயது சிறுவனாக இருந்தபோது காடுகளிலிருந்து எரிதழல்கள் போல எழுந்துவந்த சிவந்த நிறம் கொண்ட மொழியற்றவர்கள் கூக்குரலிட்டபடி வந்து அவர்களின் சிற்றூரை சூழ்ந்துகொண்டனர். சதுப்பு நிலத்தில் மூங்கில்கால்நட்டு கட்டப்பட்ட அவர்களின் குடில்களின் மீது எரியம்புகள் வந்து விழுந்தன. தீமழை போல அவை இறங்குவதை சித்ரகேசர் தன் குடில்முற்றத்தில் நின்று கண்டார்.

ஊர் எரியால் சூழப்பட்டது. கைகளில் நீளமான மூங்கில்களுடன் வந்த மொழியற்றவர்கள் அவற்றை ஊன்றி காற்றில் எழுந்து பறந்து அரணாக அமைந்திருந்த உளைச்சதுப்பு வெளியை கடந்து வந்திறங்கினர். அவ்விரைவிலேயே எதிர்ப்பட்டவர்கள் அனைவரையும் ஆண் பெண் முதியோர் குழவியர் என வேறுபாடில்லாமல் வெட்டிக்குவித்தனர். எங்கள் குலம் கன்று பேணி வளர்க்கவும் விதைநட்டு கதிர்கொள்ளவும் கற்றிருந்தது. இளையவளே, எதையேனும் ஆக்கத்தெரிந்தவர்களின் உள்ளம் அழிக்கும் கலையை வெறுக்கத் தொடங்குகிறது. எங்களுக்குள் மிகச்சிலரே போர்வீரர்கள். அவர்களைவிட பத்துமடங்கு எண்ணிக்கை கொண்டிருந்தனர் மொழியற்றவர்கள்.

“மரங்களின்மேல் வாழ்ந்த அந்த மொழியற்றவர்களை நாங்கள் பச்சோந்திகள் என்று அழைத்தோம். அவர்கள் தங்கள் உடலெங்கும் பச்சையும் மஞ்சள்வரிகளுமாக வண்ணம்பூசியிருப்பார்கள். முகங்களில் செந்நிறம். இலைகளுக்குள் அவர்கள் இருந்தால் தொட்டுவிடும் தொலைவை அடைந்தாலும் அவர்கள் நம் விழிகளுக்குப் படுவதில்லை. கிளைவிட்டு கிளைக்கு கால்களையும் கைகளையும் விரித்து அவர்கள் தாவும்போது வாலற்ற பச்சோந்திகளென்றே தெரிவர்” சித்ரபாணன் சொன்னார். “பச்சோந்திக்குலத்தால் எங்கள் குலம் முழுமையாக அழிக்கப்பட்டது. ஐந்து சிறுமியரும் எங்கள் மூதாதை சித்ரகேசரும் மட்டுமே உயிருடன் எஞ்சினர். சதுப்பில் பாய்ந்து மூழ்கி அங்கே நின்றிருந்த துளைநாணல்களை வாய்க்குள் வைத்து மூச்சுவிட்டபடி நாள் முழுக்க உள்ளே இருந்து அவர்கள் உயிர்தப்பினர்.”

எழுந்து நோக்கியபோது அவர்களின் ஊர் சாம்பல்குவையாக இருந்தது. குருதி உறைந்த சடலங்கள் கைவிரித்து மல்லாந்தும் மண்ணை அணைத்துக் கவிழ்ந்தும் கிடந்தன. அனைத்து ஆண்களின் தலைகளையும் வெட்டிக்கொண்டு சென்றிருந்தனர். குருதி விழுந்த மண் கருமைகொண்டிருந்தது. அந்தி எழுந்த வேளையில் அவ்வூரை இறுதியாக நோக்கியபின் அச்சிறுமியரில் மூத்தவளான சபரி சித்ரகேசரையும் பிறரையும் அழைத்துக்கொண்டு உள்காட்டுக்குள் விலகிச்சென்றாள். அங்கே நாணல்கள் மூடிய சதுப்புக்குள் தாழ்வான குடில் ஒன்றை அமைத்துக்கொண்டு அவர்கள் தங்கினார்கள். அந்த ஐந்து அன்னையரிலிருந்து எங்கள் குடி மீண்டும் முளைத்தெழுந்தது.

இளைஞராக ஆனபோது சித்ரகேசர் நிகரற்ற உடல்திறன் கொண்டவராக இருந்தார். தவளைகளிடமிருந்து தாவும் கலையை கற்றார். மீன்களைப் பிடித்துத் தின்று நாட்கணக்கில் நீருக்குள்ளும் சேற்றுக்குள்ளும் இருக்கும் கலையை அவர்கள் கற்றுத்தேர்ந்தபின் பிறர் விழிகளுக்கு முற்றிலும் தெரியாமலானார்கள். அவர்களின் குலம் பெருகியது. இரண்டு மோட்டெருமைகளை கைகளுக்கொன்றாக பற்றி அசையாது நிறுத்தும் தோள்வல்லமை கொண்டிருந்தார் சித்ரகேசர்.

சேற்றுக்கரைகளில் தவளை பிடிக்கவரும் நாகங்களை நாணல்களால் பொறிவைத்துப்பிடித்து அவற்றின் நச்சைப் பிழிந்தெடுத்து பதப்படுத்தும் கலையை அவரே உருவாக்கினார். நாணல்முனைகளில் அந்நச்சைத் தோய்த்து அவர் செலுத்திய அம்புகள் தொட்டகணமே மான்களை கொன்று சரித்தன. ஒலி கேட்ட இலக்கை நோக்கி ஒலி எழுந்த மறுகணமே இருகைகளாலும் கூர்நாணல்களை ஏவும் திறன் கொண்டிருந்த அவரை மண்ணில் எழுந்த தெய்வமென்றே அவரது குடி எண்ணியது.

அவர் அகவிழியில் எரிந்த தன் சிற்றூரும் அங்கே குருதியில் உறைந்துகிடந்த உடல்களும் எப்போதுமிருந்தன. தன் இருபத்தெட்டாவது வயதில் முதன்முறையாக சேற்றுநிலத்தில் எல்லையைக் கடந்து அப்பால் அடர்காட்டுக்குள் இருந்த பச்சோந்திகளின் சிற்றூருக்குள் நுழைந்தார். அவரை எதிர்த்து வந்த ஏழு வீரர்களை அவர் அறைந்தே கொன்றிருக்கலாம். ஆனால் அவர்கள் கைகளை முறுக்கி செயலிழக்கச்செய்து தூக்கிச்சரித்துவிட்டு அவர்களின் ஊர்மன்று நடுவே சென்று நின்றார்.

“அவர்களில் ஒருவனை முன்னரே குறிவைத்து சிறை பிடித்து தன் குடிலுக்குள் கட்டிப்போட்டு பச்சோந்தி மொழியை கற்றிருந்தார். தானும் அவர்களைப் போன்றவனே என்றார். அவர்களை கொல்ல விழையவில்லை என்றும் இணையவே விரும்புகிறேன் என்றும் சொன்னார்.” சித்ரபாணன் சொன்னார் “இளையவளே, பல்லாயிரம் ஆண்டு மலைவரலாற்றில் என் மூதாதை நாவில் அச்சொல் எழுந்தது ஒரு தெய்வ கணம். புரியாத ஒன்று விண்ணில் இருந்து வந்து நின்றதுபோல் அவர்கள் திகைத்தனர். அஞ்சி கூக்குரல் இட்டு ஓடி ஒளிந்துகொண்டனர்.”

தன் கையில் வில்லுடனும் தோளில் நாணலம்புகளுடனும் சீராக அடிவைத்து நடந்து சென்று அவர்கள் வழிபட்ட பன்னிரு அன்னையரின் மரச்சிலைகளுக்கு முன்னால் நின்றார். அத்தெய்வங்கள் ஒவ்வொன்றிற்கும் தலைவணங்கி, சொற்கடன் செலுத்தினார். இல்லங்களிலிருந்தும் புதர்களிலிருந்தும் மெல்ல தலை நீட்டி அவர் செய்வதென்ன என்று பச்சோந்தியினர் நோக்கினர். படைகொண்டு சென்று பிறிதொரு ஊருக்குள் நுழைகையில் அங்குள்ள தெய்வங்கள் அனைத்தையும் உடைத்து வீசுவதையே பழங்குடிகள் செய்வது வழக்கம். தங்கள் தெய்வத்தை வணங்கும் ஒரு அயலவனைக் கண்டு அவர்கள் ஒருவர் தோளை ஒருவர் பற்றிக்கொண்டனர்.

அங்கே மூத்தவர் ஒருவர் விட்டுச்சென்ற குலச்சின்னம் பொறித்த கைக்கோலைத் தூக்கி  “நான் உங்களவன். நாம் ஒன்றாவோம்” என்றார் சித்ரகேசர். மும்முறை அச்சொற்களை சொல்லிவிட்டு திரும்புகையில் “உங்கள் தெய்வங்களிடம் கேளுங்கள். அவை ஆணையிடட்டும்”என்றார். “உங்கள் தூதர் எங்கள் குடிக்கு வருக! அங்கு நாங்கள் உங்களை விரித்த கரத்துடன் வரவேற்போம். நாம் ஒன்றாவோம்” என்றபின் திரும்பி நடந்தார். அயலவன் ஒருவன் நம்பிக்கையுடன் தங்களுக்கு புறம் காட்டுவதை அவர்கள் நோக்கி நின்றார்கள்.

நடந்து காட்டுக்குள் நுழைந்து அவர் மறையும் வரை அக்குடியில் ஒருவரும் வெளிவரவில்லை. அவர் மறைந்தபின் அவருக்குப் பின்னால் பெருங்குரலில் அவர்கள் ஒரே சமயம் பேசத் தொடங்குவதை கேட்டார். அன்று முழுக்க தன் குடிலில் கண் துஞ்சாது அவர் காத்திருந்தார். இரவு சென்று மறைந்தது. மறுநாள் காலை ஒளி எழுந்தது. அவரைச் சூழ்ந்து நின்ற பெண்கள் “மூத்தவரே, நீங்கள் விழைவது ஒருபோதும் நிகழாது. நாம் தனித்தனியாக வாழ வேண்டும் என்பதே தெய்வங்களின் முடிவு. ஓர் உயிர் பிறிதொரு உயிரை அறியும். ஆனால் ஒரு உயிர்க்குலம் பிறிதொன்றுடன் இணையாது” என்றார்கள்.

“புழுக்கள் இணைவதில்லை இளையவளே. ஆனால் விண் வாழும் பறவைகளோ குலங்கள் கலந்து இணைந்தே வாழ்கின்றன" என்றார் எந்தை. அவர்கள் பெருமூச்சுவிட்டனர். “தெய்வங்களே, நாங்கள் வாழவேண்டுமா என முடிவெடுங்கள்” என்றாள் குலமூத்தவளாகிய கார்க்கி. “எங்கள் மைந்தர் இங்கு குருதிசிந்தாமல் வாழவேண்டும் அன்னையரே” என்றாள் மகவை மார்பில் அணைத்த ஓர் அன்னை.

காட்டில் ஒலிக்குழல்கள் சுடர் கொண்டபோது இலைகளை விலக்கி மூவர் வருவதை அவர்கள் கண்டனர். அச்சக்குரல் எழுப்பி அனைவரும் எழுந்து ஊர் மன்றில் கூடி நின்றனர். அஞ்சி உடல் விதிர்க்க ஒவ்வொரு ஓசைக்கும் பின்னால் பதுங்கி, பின்பு துணிந்து முன்னால் கால் எடுத்து வைத்து வந்த அம்மூவரும் மன்று முகப்பில் நின்று தங்கள் கைக்கோலைத் தூக்கி தங்கள் மொழியில் “நாங்கள் வந்துள்ளோம்” என்றனர். அச்சொற்களை எந்தை எங்கள் மொழியில் சொன்னதும் அவர்கள் உவகைக்கூச்சல் எழுப்பினர்.

எந்தை முன்னால் சென்று அம்மூவரில் முதியவனை தலை வணங்கி அவர்கள் மொழியில் வரவேற்று அழைத்து வந்து குடில்முகப்பில் போடப்பட்ட மரப்பீடத்தில் அமர்த்தி “இன்று இணைந்தோம். இனி ஒன்றாவதே நமது வழி” என்றார். அவர்கள் கொண்டுவந்திருந்த மலையுப்புத் துண்டு ஒன்றை அவருக்கு அளித்தனர். அவர் தன் இல்லத்தில் எரிந்துகொண்டிருந்த நெருப்பை கொண்டுவந்து அவர்களுக்கு அளித்தார். பச்சோந்தியினர் தங்கள் கைகளை கற்கத்தியால் குருதியெழக் கிழித்து அக்குருதியை சித்ரகேசர் கைமேல் சொட்டினர். தன் கையைக் கிழித்த புண்ணில் அக்குருதியை கலக்கச்செய்தார்.

“அன்று தொடங்கியது மணிபுரியின் வரலாறு. பச்சோந்திகுலமும் நாங்களும் மண உறவு கொண்டோம். இருகுலங்களும் இணைந்ததும் வெல்லமுடியாதவை ஆயின. வென்றும் அளித்தும் ஒன்பது வருடங்களில் இங்கு வாழ்ந்த ஏழு குடிகளை எந்தை ஒருங்கிணைத்தார். ஏழு குடிகளுக்கும் பொதுவாக மைத்ரி என்னும் பெயரை சூட்டிக்கொண்டார்கள். இன்று எங்கள் குடி மைத்தி என்றும், நாங்கள் மைத்தியர் என்றும் அழைக்கப்படுகிறோம்” என்றார் சித்ரபாணன்.

“எங்கள் குடிகள் இணைந்து இவ்வரசை அமைத்தன. காடு திருத்தி கழனி சமைத்து அமுது விளைவிக்கத் தொடங்கினர். எங்கள் குடித்தெய்வங்களாக ஐந்து அன்னையரும் ஒற்றை மூதாதையும் அமைந்தனர். அத்தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைத்தனர். எங்கள் மண்ணில் கயிலை மலையாளும் அன்னை துர்க்கை மகளாகப் பிறந்தாள். எங்கள் அரண்மனை முகப்பில் அவள் கோயில் கொண்டாள்.”

“இளையோளே, அன்னை மணிபத்மையின் மண் இது. எனவே புராணங்கள் இதை மணிபுரி என்று அழைத்தன. பாரதவர்ஷத்தின நீள் குழலில் சூடிய அருமணி என்றனர் கவிஞர்கள். இத்திசையில் மணிபுரிக்கு நிகரான செல்வமும், பெருமையும் கொண்ட பிறிதொரு நாடு இல்லை. இது குன்றாப் பெருங்களஞ்சியம் என்று சூழ்ந்துள்ள மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். எனவே ஒவ்வொரு நாளும் எங்கள் மேல் அவர்கள் படைகொண்டு இறங்குகிறார்கள். ஒரு கையில் வாள் இன்றி மறுகையில் செல்வம் நிலைக்காது. இரு கைகளிலும் செல்வமும் வாளும் இன்றேல் நெஞ்சில் அறம் நிறைப்பது அரிது என்று அறிந்தோம்.”

“ஆகவே இங்குள்ள ஒவ்வொருவரும் போர்க்கலை வல்லவர்களானோம். நூற்றெட்டு தலைமுறைகளாக கோல் கொண்டு இந்நகராண்ட மரபில் வந்தவர்கள் அங்கமர்களாகிய நாங்கள். என் பன்னிரு மனைவியரில் மைந்தர் என ஒருவரும் பிறக்கவில்லை. எனக்குப் பின் இந்த மண் முடியின்றி அழியும் என்ற ஐயம் எழுந்தபோது, அன்னை மணிபத்மையின் ஆலயத்தில் அருந்தவம் இயற்றி என் மைந்தனைப் பெற்றேன். நிகரற்ற வில் திறன் கொண்ட அவனால் மணிபுரி வெல்வதற்கரியதாயிற்று” என்றார் சித்ரபாணன்.

அரியணையிலிருந்து எழுந்து கைகூப்பி “இளையோளே, போரில் அவன் உயிர் உன்னால் காப்பாற்றப்பட்டது. நீ கற்ற வில்தொழில் அஸ்தினபுரியில் துரோணரால் மட்டுமே கற்பிக்கற்பாலது என என் மைந்தன் சொன்னான். உன் முன் இதோ மணிபுரி பணிந்து நிற்கிறது. இங்கு அமைந்து சில காலம் என் மைந்தனுக்கு ஆசிரியனாகி வில்தொழில் பயிற்றுவித்து வாழ்த்தி நீ விலக வேண்டும் என்று வேண்டுகிறேன்" என்றார் சித்ரபாணன்.

ஃபால்குனை “அரசாணையை வணங்குகிறேன். நான் அரசவைகள் எதிலும் அமைவதில்லை என நெறிகொண்டவள். ஆனால் இம்மண்ணில் அறம் திகழும் பொருட்டு தங்கள் ஆணையை ஏற்க சித்தமாக இருக்கிறேன்" என்றாள். சித்ராங்கதனை நோக்கி திரும்பிய சித்ரபாணன் “மைந்தா, உனது விழைவுப்படியே இதோ ஆசிரியை” என்றார்.

சித்ராங்கதன் எழுந்து தலைவணங்கினான். ஆனால் அவன் முகத்தில் உவகை இருக்கவில்லை. இறுகிய தாடையுடன் விழிகளை மறுபக்கம் திருப்பிக்கொண்டு “உங்கள் மாணவனாக அமைய நற்றவம் செய்துள்ளேன். என் கல்வி நிறைவுற வாழ்த்துக!” என்றான். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றாள் ஃபால்குனை.

சித்ரபாணன் கைகாட்ட அவரது பேரமைச்சர் ஓடிச்சென்று ஏவலரை கைகாட்டி அழைத்தார். பெரிய தாலத்தில் செம்பட்டில் வைக்கப்பட்ட உடைவாளும் கங்கணமும் வந்தன. அவற்றை எடுத்து ஃபால்குனையிடம் அளித்தார். அவள் அதை தலைவணங்கி பெற்றுக்கொண்டாள். அவை எழுந்து வாழ்த்தொலி பெருக்கியது. மங்கலமுழவுகளும் கொம்புகளும் சங்கும் மணியும் இசைத்து அமைந்தன.

அவை நிறைவுற்றபோது ஃபால்குனை புன்னகையுடன் எழுந்து தன் ஆடைகளை சீரமைத்துக்கொண்டு இடைநாழி நோக்கி நடந்தாள். மறுபக்கம் அரசர்களுக்குரிய வாயிலினூடாக சித்ராங்கதன் செல்வதைக் கண்டு அவள் புன்னகை மேலும் விரிந்தது. கைநீட்டி அவனை அவள் அருகழைத்தாள். அவன் சற்று திகைத்தபின் அருகே வந்தான்.

ஃபால்குனை “புண் எந்நிலையிலுள்ளது?” என்றாள். “நலம்கொண்டு வருகிறது” என்றான் சித்ராங்கதன். அவள் அவன் இடையில் கைவைத்து சுற்றியிருந்த மெய்ப்பையை விலக்கி அந்தக்கட்டை நோக்கினாள். அவன் உதடுகளை இறுக்கியபடி மறுபக்கம் நோக்கினான். “புண் குருதியுமிழ்வது முற்றாக நின்றிருக்கிறது” என்றாள். “ஆனால் ஆழமான புண். இதன் வடு என்றும் உடலில் இருக்கும்.”

“ஆம்” என்று சித்ராங்கதன் சொன்னான். பெருமூச்சுடன் “நான் தந்தையிடம் சற்று உரையாடவேண்டும்” என்றான். “நாளை படைக்கலச்சாலையில் பார்ப்போம்” என்றாள் ஃபால்குனை. அவன் “ஆணை” என்று தலைவணங்கியபின் திரும்பிச்சென்றான். அவன் கால்கள் தளர்வதும் வாயிலைக்கடக்கையில் நிலையை கையால் பற்றிக்கொண்டு காலெடுத்து வைப்பதும் தெரிந்தது.

ஃபால்குனை புன்னகையுடன் காவலர் தலைவனை நோக்கி “செல்வோம்” என்றாள். அவன் விழிபதறி விலகி “ஆம், ஆணை” என்றான். “என் படைக்கலப் பயிற்சியால் இளவரசர் முழு ஆண்மகனாவார் என்று எண்ணுகிறேன்” என்றாள் ஃபால்குனை. அமைச்சர் பதறும் குரலில் “ஆம், உண்மை” என்றார்.

பகுதி மூன்று : முதல்நடம் - 10

மணிபுரி நகரில் மிதக்கும் தீவுகளில் ஒன்றில் அமைந்த படைச்சாலையின் வாயிலில் ஃபால்குனை காத்திருந்தாள். அவளைச்சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் கீழைக்காற்றில் நெளிந்த நீரின் பளிங்குக் கம்பளத்தின் பின்னல் அணிமலர்களென அசைந்து அமைந்து எழுந்தன. அவற்றுக்கு மேல் நிழல்பரப்பி பெரும் சிறகுகளை விரித்து இறங்கிய வெண் நாரைகள் வேர்கள் போன்ற சிவந்த நீண்ட கால்களை நீட்டியபடி அமிழ்ந்திறங்கி சங்கெனக் கூம்பி அமர்ந்து காற்றுக்கு சிறகு குலைத்து சமனழிந்து கழுத்தை வளைத்து முன்சரிந்து வால் விரித்து பின் எழுந்து நிலையமைந்தன. நீண்ட அலகை நீட்டி தங்கள் வெண் முட்டைகளை உருட்டி நோக்கின. கழுத்தை சுருள்நீட்டி வளைத்து அலகை வான் நோக்கி திருப்பி கிளிஞ்சலை ஊதியது போன்ற ஒலியெழுப்பின. வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த அவற்றின் தோழர்கள் சரிந்து சுழன்றிறங்கி உகிர்கொண்ட செங்கால்களை முன்னால் நீட்டியபடி வந்து சிறகை பின்மலர்த்தி அமர்ந்து “ஆம்” என்றன.

அவள் அப்பறவைகளை சற்று நேரம் நோக்கிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு பறவையென நோக்கி ஒவ்வொரு இறகென நோக்கி பின்பு அப்பறவைகளில் ஒன்றென தான் பறந்துகொண்டிருந்தாள். அவள் அங்கில்லையென்று தோன்றியது. பறப்பதன் இயல்புத்தன்மை அவள் உடலில் கூடியிருந்தது. படைக்கலச் சாலையின் காவலன் வாயிலில் கைகட்டி நின்று ஏரியின் காற்றில் இளகும் அவள் குழலையும் ஆடையையும் ஒளிரும் நீர் பகைப்புலமாக அமைய தேர்ந்த ஓவியனின் வீச்சுக்கோடென எழுந்த அவளுடைய கூரிய முகத்தையும் விழிவிலக்காது நோக்கிக் கொண்டிருந்தான். ஒரு கணத்தில் அவள் பறந்து கொண்டிருப்பதை அவனும் உணர்ந்தான். அவளுடன் அந்தத் தீவும் விண்ணிலென எழுந்தது போலிருந்தது, ஒளி கொண்ட மேகம் ஒன்று அத்தீவுக்கு அடியில் கடந்து சென்றது.

தன்னுணர்வால் தொட்டு எழுப்பப்பட்ட அவன் பெருமூச்சுடன் கலைந்து தொலைவில் தனி சிறுபடகில் கைகட்டி நின்றபடி வந்து கொண்டிருந்த சித்ராங்கதனை பார்த்தான். ஓரவிழி பார்த்தபின்னரே தன் கனவு கலைந்திருக்கிறது என்று உணர்ந்தான் . நீள்கழையால் படகை உந்திய காவலன் சித்ராங்கதனின் கால்களில் மீளமீளக் குனிந்து பணிந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. பலிகோரும் குருதிவிடாய் கொண்ட போர்த்தெய்வம் என காலடியில் முகில்கள் அசைந்தோட தலைக்குபின்னால் வானம் ஒளிவிட்டு நிற்க அணுகிவந்த சித்ராங்கதன் ஃபால்குனையை நோக்கவில்லை என்பதை காவலன் கண்டான். அவன் விழிகள் மறு எல்லையில் கீழ்வானின் ஒளியை சுடர்விட்டுக் கொண்டிருந்த அமைச்சு மாளிகையை நோக்கிக் கொண்டிருந்தன.

ஆனால் படகு அணுகும்தோறும் சித்ராங்கதன் உடலில் வந்த இறுக்கம் விழிகள் தவிர்த்த மற்ற அனைத்து தன்னுணர்வாலும் அவன் ஃபால்குனையை நோக்கிக் கொண்டிருப்பதை காட்டியது. படகு கரையணைந்ததும் படைக்கலச் சாலைக் காவலன் சென்று சித்ராங்கதன் முன் நின்று அவனை வணங்கினான். இரும்புக் குறடிட்ட கால்களைத் தூக்கி கொடிச்சுருள் தீவின் நீரூறிய பரப்பில் வைத்து ஏறி மேலே வந்தான். அவன் இரும்புக்குறடிட்டு வந்ததை அப்போதுதான் கண்ட காவலன் ஏதோ சொல் எழ உதடுகளைப்பிரித்தபின் அதைக் கடந்தான். குறடுகள் இடாமல் சித்ராங்கதன் எங்கும் செல்வதில்லை என நினைவுகூர்ந்தான். அரண்மனைக்குள்கூட இரும்புக்குறடுகள் அவன் கால்களிலிருக்கும். அதன் சீரான தாளமும் எடையுமே அவன் நடையை ஆக்கின. அவனை எப்போதும் படைக்கலம் ஏந்தியவன் என காட்டின.

சித்ராங்கதன் கைகளை இடையில் வைத்து நின்று நீர்விளிம்பிலே அமர்ந்து நாரைகளை நோக்கிக் கொண்டிருந்த ஃபால்குனையை நோக்கினான். ஏதோ சொல்ல வாயெடுத்த காவலனை கை காட்டி அடக்கினான். ஃபால்குனை சித்ராங்கதனை பார்க்கவில்லை என்பதை சிறிது நேரம் கழித்தே காவலன் உணர்ந்தான். அவள் முற்றிலும் அங்கில்லை என காட்டியது உடல். விரித்த பெருஞ்சிறகுகளுடன் எழுந்த நாரை ஒன்று நீட்டிய காலின் நண்டுக்கொடுக்குபோன்ற விரல்களால் நீர்ப்பரப்பைத் தொட்டு மெல்ல கிழித்துச் சென்றபோது அக்கீறலை தன் உடலில் உணர்ந்தவள் போல ஃபால்குனையின் கழுத்துப் பூமயிர் சிலிர்ப்பதை கண்டான்.

ஃபால்குனை இமைகள் சுருங்கி விதிர்ப்புற எழுந்தாள். சிறு முலைகள் எழுந்தமர மூச்சு விட்டபின் ஆடை திருத்தி தன்னுணர்வு கொண்டாள். கலைந்த குழலை அள்ளிச் செருகி சரித்து தலை திருப்புகையில் சித்ராங்கதனைக் கண்டு மெல்ல நாணி புன்னகைத்தாள். சித்ராங்கதன் கைகள் இடையிலிருந்து சரிந்து விழுந்து கங்கணம் இடைச்சல்லடத்தை உரசி ஒலித்தது. ஒருகையால் ஆடை மடிப்புகளை ஒதுக்கி நொறிகளை நீவி கால் நடுவே வைத்து அழுத்திப்பற்றியபடி எழுந்த ஃபால்குனை “தாங்கள் வருவதை நான் பார்க்கவில்லை இளவரசே” என்றாள். சித்ராங்கதன் “ஆம், நானும் கண்டேன், கனவிலிருந்தாய்” என்றான். “நான் பறவைகளைப் பார்ப்பதை தவிர்ப்பதே இல்லை. பறவைகளிலிருந்து மானுடன் கற்றுக் கொள்பவைக்கு முடிவில்லை” என்றாள்.

சித்ராங்கதன் அச்சொற்கள் வெறும் முறைமைக் கூற்றென இருப்பதை உணர்ந்து தலை அசைத்தான். “இன்று நமது பாடம் தொடங்குகிறது. நீங்கள் இங்கு விற்தொழில் கற்றிருக்கிறீர்கள் என்று அறிந்தேன். இது மூங்கில்களின் நாடு. இங்குள அனைவருமே விற்தொழில் அறிந்துளீர். நான் கற்றுத் தர விழைவது வில்லை அல்ல, போரை” என்றாள். சித்ராங்கதன் “போரை அதிலீடுபடுதன் வழியாக மட்டுமே கற்க முடியும் என எண்ணுகிறேன்.” என்றான் “நான் எட்டு வயதில் என் முதற்போரை சந்தித்தேன். பன்னிரு முறை புண்பட்டிருக்கிறேன்” என்றான். பெருமூச்சுடன் விழிதிருப்பி நீரொளி தெரிந்த முகத்துடன் “பல நூறு போர்கள். இறப்புமுனைகள். இன்று அவற்றைக் கணக்கிடுவது கூட இயலாது என்று படுகிறது.”

ஃபால்குனை புன்னகைத்து “ஆயிரம் களம் கண்டாலும் அடுத்த களம் முற்றிலும் புதியதென்றுணர்ந்தவனே வீரன்” என்றாள். “ஆம்” என்று சித்ராங்கதன் பெருமூச்சு விட்டான். “ஒவ்வொரு களமும் வேறுவேறு. ஒவ்வொரு களத்திற்கும் செல்லும் நம் உள்ளமும் உடலும் வெவ்வேறு. ஆனால் களம்தோறும் மாறாதிருக்கும் சில உண்டு நம்மில். நான் கற்பிக்க விழைவது அதையே” என்று ஃபால்குனை சொன்னாள். “இங்கு நாம் படைக்கலங்களை தொட வேண்டியதில்லை. படைக்கலங்களை நம் கைகள் ஏந்தியிருக்கலாம். உள்ளமே அவற்றை ஆள்கிறது”.

“இளவரசே, தெய்வங்கள் கைகள் பெருகி படைக்கலங்களைப் பூண்டிருக்கும் சிலைகளை கண்டிருப்பீர்கள். கைகள் பெருகுவதே போர்க்கலை என்று அறிக! இரு கைகள் கொண்டவர் என்பதனால் பார்த்தர் சவ்யசாசி எனப்படுகிறார். தன்னை இரண்டாகப்பகுத்துக்கொள்ளும் திறன்கொண்டவர் அவர். நான்காக எட்டாக பதினாறாக விரியும் திசைகளென கைகளைக் கொண்டவை தெய்வங்கள். பிரம்மம் என்பது கைகளற்றது, படைக்கலங்கள் மட்டுமே கொண்டது” ஃபால்குனை சொன்னாள். “பயின்று அடையப்படுவது அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஊழ்கத்தில் அமைந்து கற்பவை மட்டுமே இனி எஞ்சியுள்ளன.”

“அவற்றை கற்கவிழைகிறேன்” என்றான் சித்ராங்கதன். ஃபால்குனை திரும்பி அப்பால் வானிலிருந்து மெல்ல வந்து ஒற்றைப்புல்நுனியில் சமன் கொண்டு அமர்ந்த நாரையைச் சுட்டி சொன்னாள் “இப்பறவை இதில் அமர்வதற்கு முன்னர் இச்சிறு நாணலின் எடை தாங்கும் திறனை அறிந்துள்ளது .இங்கு வீசும் காற்றையும் இச்சிறு கொடிச்சுருள்தீவு நகர்ந்து செல்லும் திசையையும் அறிந்துள்ளது. நோக்குக...” அடுத்த பறவை நாணல் மேல் அமர்வதற்கு முன்னரே தன் சிறகுகளைக் குலைத்து பிரித்து கால்களை நீட்டிக்கொண்டுவிட்டதை சித்ராங்கதன் கண்டான். “ஆம்” என்றான் வியப்புடன். “தான் அறிந்த புல்நுனியிலேயே அது அமர்கிறது.” அப்பறவை அமர்ந்த கணமே விழிசுழற்றி நீர்வெளியைத்தான் துழாவியது.

“இளவரசே, நாணல் நுனியில் இப்பறவை அமர்வதற்கு முன்னரே அதனுள் வாழ்ந்த நுண்பறவை ஒன்று அங்கே அமர்ந்துவிட்டது. அந்த நுண்பறவை அமர்ந்த முறையில் இருந்து கற்றுக் கொண்டவையே அப்பறவை அமர்கையில் அதற்கு உதவுகின்றன. அந்த அறிதல் அதன் சித்தமறிந்து சிறகறிந்து உகிர்களறிந்து அது அமர ஒரு கணம் போதுமானது.” சித்ராங்கதன் அவனை அறியாது முன் நகர்ந்து நாணல் மேல் வந்தமர்ந்த மூன்றாவது நாரையை நோக்கினான். அது பல்லாயிரம் முறை பயின்று தேர்ந்த அசைவுகளுடன் வந்தமர்ந்தது. “ஒருமுறை அல்ல, ஓராயிரம் முறை அது அமர்ந்து பழகியிருக்கிறது, அந்த ஒரு கணத்தில்” என அவன் எண்ணத்தை அறிந்தவளாக ஃபால்குனை சொன்னாள்.

“ஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது. அதன் முன் எழும் ஒளியின் உருவாக்கம் அது. இளவரசே, ஒவ்வொரு மானுடனுக்குப்பின்னாலும் தொடர்கிறது வரலாறு எனும் நிழல். குலவரலாறு, குடிவரலாறு, முந்தையறிவின் வரலாறு. அதையே சுருதி என்கின்றனர். அவனுக்குப் பின்னால் ஒளிரவேண்டியது அவனுடைய ஒளியுடல். அது உருவாக்கும் நீள்நிழல் அவனுக்கு முன்னால் விழ வேண்டும். அவன் செய்வதற்கு ஒருகணம் முன்னரே அது அனைத்தையும் செய்திருக்கவேண்டும். அது அமர்ந்தெழுந்த பீடங்களிலேயே அவன் அமரவேண்டும். அது கடந்து சென்ற வெளியிலேயே அவன் காலெடுத்துவைக்கவேண்டும்” என்றாள் ஃபால்குனை.

“அவன் முன் உள்ள பிரத்யக்ஷத்தை அனுமானங்களாக மாற்றுவது அதுதான். எவனொருவன் தன்னை உண்மையுருவென்றும் கனவுருவென்றும் இரண்டாக பகுத்துக் கொள்கிறானோ அவனே திறன்கொண்டு களம்காண்பவன். உங்களை விட நூறு மடங்கு பெரிய அகஉருவன் ஒருவன் தன் உள்ளங்கையில் உங்களை ஏந்தி கொண்டு சென்றால் மட்டுமே உங்கள் இலக்குகளை அடையமுடியும். இங்கு நீங்கள் அறியும் ஒவ்வொன்றையும் தொட்டெடுத்து தனக்கு உணவாக்கி அவன் உடல் பெருத்து எழவேண்டும். ஞானம் கிளை தாளாது பழுத்த கனி போல் அவனில் செறிந்திருக்க வேண்டும். அதில் ஒரு கனியை சற்றே கொத்தி உண்பதே உங்கள் புறஇருப்பென்று உணருங்கள்.”

“ஒரு வெற்றியை அடைந்தவர்கள் ஓராயிரம் முறை வெற்றியை நடித்து அறிந்தவர்கள். ஓர் இன்பத்தை சுவைப்பவர்கள் ஓராயிரம் முறை அவ்வின்பத்தில் திளைத்தவர்கள். சென்று தைக்கும் அம்புக்கு ஒரு கணம் முந்தி இலக்கடையும் அம்பொன்று உண்டென்று அறிந்தால் வில்லேந்தும் தகுதி பெறுகிறீர்கள்” என்றாள் ஃபால்குனை. சித்ராங்கதன் தன் முன் வந்து நாணிலில் அமர்ந்த நாரை ஒன்றை கூர்நோக்கி அச்சொற்களில் மூழ்கி நின்றான். “உங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இங்குள்ள உடல் ஒரு விதை, அதில் முளைத்த ஒரு பெருமரம் கிளை விரித்து வானை அள்ளட்டும்” என்றாள் ஃபால்குனை.

சித்ராங்கதன் தன் முழு சித்தத்தாலும் ஒவ்வொன்றாக வந்தமரும் நாரைகளையே நோக்கிக் கொண்டிருந்தான். நாரை அங்கிருந்தது, நோக்குகிறேன் என்னும் உணர்வு இங்கிருந்தது. இரண்டுக்கும் நடுவே கண்காணா நுண் கோடென நோக்கு என ஒன்று ஊசலாடியது. கொண்டது, கொடுத்தது, ஆக்கி அழித்து ஆக்கி விளையாடியது. நோக்கும் நோக்கியும் நோக்கமும் நோக்குதலும் ஆன அறிதல் ஒன்று வேறெங்கோ இருந்தது. அவ்விருப்பை எட்டித்தொட முடியாதபடி எப்போதும் அகலும் அண்மையிலும் தொலைவிலும் என அவன் உணர்ந்தான்.

அக்கணத்தில் ஒரு நாரையின் விழி அவனை நோக்கி திரும்பியது. முழு நோக்குவட்டத்திலும் அந்த விழி மட்டுமே எஞ்சியது. அவன் அஞ்சி விழித்துக்கொண்டு தலையை அசைத்தான். “என்ன?” என்றாள் ஃபால்குனை. அவன் இல்லை என தலையை அசைத்தான். “சொல்லுங்கள்” என்றாள் ஃபால்குனை. “கலையும் ஓவியங்கள்” என்றான். “அருகே மிதக்கும் தக்கை போல் அதை நோக்கி நகர்கையில் அலை கொண்டு விலகிசென்றது.” அச்சொற்கள் வழியாக அத்தருணத்தை கடந்தான்.

“சலிப்புற வேண்டியதில்லை இளவரசே. ஊழ்கமென்பது எளிதல்ல. அது முதலில் தன் எல்லைகளையே காண்கிறது. வழிகளை அதற்குப் பின்னரே அறிய முடியும்” என்றாள் ஃபால்குனை. சித்ராங்கதன் “என் உள்ளம் நிலை கொள்ளாமலுள்ளது” என்றான். “ஏன்? என்று ஃபால்குனை கேட்டாள். அவன் விழிதிருப்பி “இப்போதென பிறிதெப்போதும் என் உள்ளத்தை நான் அறிந்ததில்லை” என்றான். “பட்டில் பொதிந்து வைக்கப்பட்ட கருங்கல் என இவ்வுடலுக்குள் உடலை உள்ளத்தை உணர்கிறேன்.”

ஃபால்குனை புன்னகைத்து “நல்ல உவமை” என்றாள். சித்ராங்கதன் கலைந்து நகைத்து “முன்பொரு பாடகன் பாடியது. இத்தருணத்தில் அவ்வுவமையே பொருத்தமாகத்தோன்றியது” என்றான். “இன்று இப்பொழுதில் பறவையை நோக்கும் ஊழகத்தின் முதல் பயிற்சியை நாம் தொடர்வோம். இங்கு அமர்க!” என்று ஃபால்குனை தன்னருகே சுட்டிக்காட்டினாள். தன் குறடுகளுடன் அவன் முன்னகர “அதை கழற்றுக1” என்றாள். அவன் கால்தூக்கி குறடுகளை உருவினான். காவலன் அவன் கால்களை முதல்முறையாக பார்த்தான். அகழ்ந்தெடுத்து நன்கு கழுவிய இன்கிழங்குபோலிருந்தன. கொடிப்படர்வுத்தரையில் கால்களை ஊன்றியபோது கூசி நின்றான் சித்ராங்கதன். பின்பும் மெல்ல தூக்கிவைத்தான். அவன் உடல் விதிர்த்து கண்கள் கசிந்தன.

“கவசத்தையும் தோள்வளைகளையும் கங்கணங்களையும் கழற்றுங்கள். இந்த இன்குளிர்காற்று உங்கள் மேல் படட்டும்” என்றாள் ஃபால்குனை. “ஊழ்கத்திற்கு அணிகள் எதிரானவை. அவை நம் உடலசைவில் ஒலிக்கின்றன.” பெருமூச்சுடன் தலையசைத்தபடி தன் அணிகளை முழுக்கக் கழற்றிவிட்டு சித்ராங்கதன் அவளருகே அமர்ந்தான். அவளுடைய நோக்கைக் கண்டு கைகளில் அமைந்த மணிக் காப்புகளையும் கழற்றி அருகே வைத்தான். காவலன் அவற்றை எடுத்து உள்ளே கொண்டு சென்றான். அணிகள் இன்றி தன் உடல் எடையற்றிருப்பதை முதற்கணம் உணர்ந்தான். மறுகணமே அங்குள்ள அனைத்தின் நோக்குகளும் அவன் உடல்மேல் பதிந்து எடைகொண்டன.

அலைவுற்றுக்கொண்டிருந்தது ஏரி. அவன் அதை அப்போதுதான் முதலில் பார்ப்பதுபோல் உணர்ந்தான். நீரின் நிறமின்மையின் ஒளி. நிறமின்மை கொண்ட நிறமென நீலம். அறியா இளமை ஒன்றில் அவன் தந்தையின் மடியிலமர்ந்து அதன்மேல் களிப்படகில் சென்றுகொண்டிருந்தான். அருகே அன்னை இருந்தாள். சுற்றிலும் நாரைகள் இதழ் மலர்ந்திருந்த நீலப்பரப்பு நெளிந்தது. அவன் அதை நோக்கி கைநீட்டி வா வா என விரலசைத்தான். பின்பு திரும்பி “தந்தையே, இவ்வண்ணம் நீலத்தில் வெண்பூ விரிந்த ஆடை ஒன்று எனக்கு வேண்டும்” என்றான்.

ஒருகணம் பொருளின்றி அவனை நோக்கிய தந்தை “மூடா” என்று கூவியபடி அவனைத் தூக்கி நீரில் வீசினார். அன்னை அலறியபடி எழுந்துவிட்டாள். “செலுத்து படகை. அவன் ஆணென்றால் திரும்பி நீந்தி வரட்டும்” என்றார் தந்தை. “அவனுக்கு நீச்சல் தெரியாது... அவன் சிறுகுழந்தை” என்று அன்னை அலறினாள். அவன் பற்றிக்கொண்டு மிதந்த கொடிச்சுருள் நெக்குவிட்டு பிரிய நீரில் மூழ்கத்தொடங்கினான். ‘அன்னையே அன்னையே’ என்று அவன் அழைத்தபோது குரலெழவில்லை. நீர் வாய்க்குள் புகுந்தது. குரல் ஒரு கொப்புளமாக வெடித்தெழக் கண்டபடி அவன் நீருள் இறங்கினான்.

அவனுக்குமேல் குமிழிகள் வெடிக்கும் ஒலியுடன் நீர்ப்பலகைகள் மூடிக்கொண்டன. ஓசைகள் மழுங்கி மழுங்கி அவ்வொளி போலவே குழைந்தாடின. அலறலோசை ஆடிப்பரப்பில் கைவழுக்கும் கீச்சொலி என எங்கோ கேட்டது. தலைக்குமேல் ஒரு துடுப்பு நீரை கொப்புளங்களாக கீறியபடி அப்பால் சென்றது. ஆழத்திலிருந்து நீல இருள் எழுந்து அணுகி வந்தது. அப்போது அவன் எண்ணியது எதை? மூச்சிறுதியென, துளியுதிரும் கணமென அவனில் நின்றது ஒரு விழைவு. அது என்ன?

எண்ணங்கள் உதிர்ந்தழிய உயிர் கைகால்களை தான் எடுத்துக்கொண்டது. உதைக்க உதைக்க இலைகளைப்போல நழுவவிட்டன நீர்ப்பாளங்கள் என்றாலும் அவனால் மேலே எழ முடிந்தது. கைகள் துழாவித்துழாவி நீரின் எதிர்விசை அமையும் கோணத்தை கற்றுக்கொண்டன. இறுதி உந்தலில் எழுந்து நீரைப்பிளந்து ஆவேசத்துடன் மூச்சை விட்டான். மீண்டும் மூழ்கி எழுந்தபோது எளிதாக இருந்தது. மீண்டும் மூழ்கி எழுந்தபோது நீரைத் துழாவக் கற்றிருந்தன கைகால்கள். கைகளை தூக்கி வைத்து கால்களைப் பரப்பி உதைத்து முன்னால் சென்றான்.

அப்பால் சென்ற படகிலிருந்த அவன் தந்தை எழுந்து இடையில் கைவைத்து அசையாமல் நின்றார். அவன் நீந்தி அருகே சென்றதும் துடுப்பை நீட்டும்படி ஆணைட்டார். நீட்டப்பட்ட துடுப்பைப் பற்றி அவன் மேலேறி கவிழ்ந்து படகில் விழுந்ததும் அன்னை குனிந்து அவனை எடுத்துக்கொண்டாள். நெஞ்சோடணைத்து “என் மைந்தன்! ஆண்மகன்! என் மைந்தன் ஆண்மகன்!” என்றாள். தந்தை புன்னகையுடன் அமர்ந்தபடி “அதில் அவன் இனி உறுதியாக இருக்கட்டும்” என்றார்.

அன்றுமாலை அரண்மனையின் படைக்கலப்பயிற்சியிடத்தில் அவனை வரச்சொல்லியிருந்தார். அங்கே சென்றபோது கால்கள் கட்டப்பட்ட நாரைகள் சிறகடித்து எழமுயன்று ஒருக்களித்து விழுந்து தரையில் தவழ்ந்து எழுந்து மீண்டும் சிறகடிப்பதை கண்டான். “வருக” என்ற சித்ரபாணன் தன் உடைவாளால் ஒரு நாரையின் கழுத்தைச் சீவி எறிந்தார். திகைத்த நாரை குருதி கொப்பளிக்கும் நீண்ட கழுத்து நெளிய நின்று பின்னர் ஓடி கீழே விழுந்து கால்களை உதைத்து விரல்களை விரித்து சுருக்கி வலிப்பு கொண்டது.

“உம்” என அவர் ஆணையிட்டார். படைத்தலைவர் “இந்த நாரைகள் அனைத்தையும் கொல்லுங்கள் இளவரசே” என்றார். அவன் தந்தையை நோக்கியபின் வாளை வாங்கிக்கொண்டான். அதை ஒருமுறை காற்றில் சுழற்றியபின் சீரான நடையுடன் சென்று ஒவ்வொரு பறவையாக வெட்டித்தள்ளினான். வாள்சுழலலில் தெறித்த குருதித்துளிகள் அவனைச்சூழ்ந்து பறந்து உடல்மேல் பெய்து வழிந்தன. உடை நனைந்து ஒட்டிக்கொண்டது. கால்களைத் தூக்கி வைத்தபோது செந்நீர்த் தடம் பதிந்தது. கால்விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டின.

தன்னைச்சூழ்ந்து குருதி சிதற சிறகடித்துக்கிடந்த நாரைகளின் உடல்களை நோக்கியபடி அவன் வாள் தாழ்த்தி நின்றான். “அந்த வாளை உன் கழுத்தின் பெருநரம்பின் மேல் வைத்துக்கொண்டு நில்” என்றார் சித்ரபாணன். அவன் வாளை வைத்தபோது கைகள் நடுங்கவில்லை. அவனுடைய தெளிந்த விழிகளை நோக்கி சிலகணங்கள் நின்றபின் சித்ரபாணன் புன்னகைசெய்தார்.

“இப்பறவையை பார்க்கையில் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது?” என்றாள் ஃபால்குனை. விழித்தெழுந்த சித்ராங்கதன் “தனிமை” என்றான். “முற்றிலும் தனித்திருக்கிறேன்.” ஃபால்குனை “பறவையை பார்க்கையில் பறவையுடன் என்னுள் எழும் பறவையெனும் எண்ணம் அறியாச்சரடொன்றால் இணைக்கப்படுகிறது. அக்கணமே அந்நிகழ்வைப் பார்க்கும் பிறிதொன்று என்னிலிருந்து விலகிச் செல்கிறது. அப்பிறிதொன்றைப் பார்க்கும் பிறிதொன்று அதன் பின் எழுகிறது. ஒன்று நூறென பெருகி இவ்வெளியெங்கும் நானே சூழ்ந்திருக்கிறேன். விரிசலிட்ட பளிங்கில் என பல நூறு முகங்கள்” என்றாள்

“அவ்வறிதல் ஒரு தழலாட்டம். தழல் எரிந்து தன்னைத்தானே அணைத்துக்கொள்வது” என்று ஃபால்குனை தொடர்ந்தாள். “அகம் மெல்ல அணைந்தபின் நான் இந்நாரையை பார்க்கையில் இங்குளேன் என்றும், அங்குளது என்றும், அறிகிறேன் என்றும், அறிவென்றும் நான்கு முனைகள் எழுகின்றன. ஒவ்வொன்றும் மழுங்கி ஒன்றாகி பின் அணைகின்றன. அறிவு எனும் ஒன்று மட்டுமே எஞ்சுகிறது.”

“ஆம், முழுமை கொண்ட ஒன்று மிக அருகே உள்ளது. தற்செயலென தன்னைக் காட்டி நோக்கு பட்டதும் மறைகிறது” என்றான் சித்ராங்கதன். “ஆனால் பறவையின் விழிகளை சந்திக்க அஞ்சுகிறேன்.” “ஏன்?” என்றாள். அவன் பெருமூச்சு விட்டான். அவனை சற்றுநேரம் நோக்கியபின் “இங்கமர்ந்து என் விழிக்கோணத்தில் அப்பறவையை பாருங்கள். உங்கள் உடல் இங்கே உதிரட்டும். விழி தன் ஊன் வடிவை உதறி ஒளி மட்டுமென ஆகட்டும். ஒளி சென்று அப்பறவையை தொடட்டும்” என்றாள் ஃபால்குனை.

அவன் செவியறியாது நெஞ்சு நுழையும் குரலென அது ஒலித்தது. “அப்பறவை என்றான அவ்வறிதல் அதிலிருந்து பிரிந்து எழட்டும். அது மீண்டு வந்து சேர ஓரிடமின்றி வெளியில் எஞ்சட்டும்.” அவள் குரல் ஆணென்றும் பெண்ணென்றுமில்லாத எண்ணமென்றே இருந்தது. “ஆனால் இவை அனைத்தும் வெறும் சொற்கள். இச்சொற்கள் அந்நிலை நோக்கி இழுக்க வல்லமை கொண்டவை என்பதனால் மட்டுமே சொல்லப்படுகின்றன. அந்நிலை அடைந்ததுமே இவை பொருளற்று எங்கோ உதிர்ந்து மறைந்து அழிந்துவிட வேண்டும்.”

சித்ராங்கதன் அவள் விழிகள் சுடர்வதை நோக்கினான். எதிரே இருந்த நாரையை நோக்கி தன் முழுத்தன்னுணர்வையும் விழியில் நாட்டினான். அதை நோக்கிய நோக்குகள் ஒன்று மேல் ஒன்றென அடுக்கப்பட்டன. நோக்குகளின் மாலை. மாலையிணைந்த மலர். மலர்குவிந்த மொக்கு. மொக்குள் கரந்த மணம். கொதிக்கும் புதுக்குருதி மணம் அது. அவன் உடல் தளர்ந்தது. அவன் இருந்த அந்த கொடித்தீவு ஃபால்குனையை அவனிடமிருந்து பிரித்தபடி இரண்டாக கிழிபட்டது. ஒவ்வொரு கொடி இணைப்பாக நரம்புகள் என அறுபட்டு ஓசையின்றி பிரிந்து விலகத் தொடங்கின.

பதைப்புடன் அவன் கைநீட்ட முயன்றபோது உடல் செயலிழந்திருந்தது. சொல்லெடுத்து அவளை அழைக்க விழைந்தான். அத்தனை சொற்களும் முன்னரே உதிர்ந்துவிட்டிருந்தன. பிளந்த இடைவெளியில் அடியிலி கருமையென எழுந்தது. தவித்து தவித்து முள்முனையில் நின்று தத்தளித்துவிட்டு கை நீட்டி எம்பித்தாவினான். மலைச்சரிவின் செங்குத்தான ஆழத்தில் விழப்போகும் போது கைநீட்டி விளிம்பின் வேரைப்பற்றிக் கொள்ளும் துடிப்புடன் அவள் கைகளை பற்றிக் கொண்டான். மூச்சு சீற உடல்வியர்த்து நடுங்க முனகினான்.

ஃபால்குனையின் கைகள் நீண்டு அவன் தோளை வளைத்தன. தன் உடலை வளைத்து அவள் தோளில் முகம் அமைத்து உடல் சேர்த்துக் கொண்டான். அவன் உடல் காற்றின் விரைவில் அதிரும் இலை போல நடுங்கிக் கொண்டிருந்தது. மேலும் மேலும் அவன் ஃபால்குனையின் உடலில் தன்னை ஒட்டிக் கொண்டான். புயல் காற்றில் பாறை மேல் படியும் மென் பட்டு போல. மண்ணில் ஊன்றி தன்னை செலுத்திக்கொள்ளும் மண்புழு போல.

பிறிதின்றி படிந்ததும் அவன் உடலின் அதிர்வு இல்லாமலாயிற்று. அந்தக் கணம் வரை தத்தளித்த நோக்கு கூராகியது. அவன் அந்த நாரையை நோக்கியபோது நாரை மட்டுமே எஞ்சியது. பின்பு நாரையும் மறைந்தது. நாரையென தன்னைக் காட்டிய அறிதல் மட்டுமே அங்கே இருந்தது. அவ்வறிதலின் உள் சென்று சேரும் பெருங்கடலின் விரிவை கண்டான். அது நான் என்றுணர்ந்தான். அங்கிருந்தான். “ம்?” என்றாள் ஃபால்குனை. “நாரை... இனியது, மெல்லியது” என அவன் சொன்னான். ஈரக்களிமண் என சொல்குழைந்திருந்தது. “ம்?” என்றாள் ஃபால்குனை. அவன் கண்களில் நீர் சுரக்க “தன் கூட்டில் அமர்ந்த அன்னைநாரையின் விழிகள்” என்றான்.

பகுதி மூன்று : முதல்நடம் - 11

மீண்டும் தன்னை உணர்ந்த சித்ராங்கதன் திகைத்து எழுந்த விசையில் நீர்ப்புதர்த்தீவு சற்று அசைந்து நகர்ந்தது. ஃபால்குனை விழிதூக்கி அவனை நோக்கி “என்ன?” என்றாள். அவன் தொலைவில் ஒளி அலையடித்த ஏரிப்பரப்பை நோக்கியபடி இறுகி நின்றான். “சொல்லுங்கள்” என்றாள் ஃபால்குனை. “இல்லை” என்றபின் அவன் பெருமூச்சுவிட்டு “நான் மீள்கிறேன்” என்றான். “எங்கு?" என்றாள் ஃபால்குனை. “அரண்மனைக்கு” என்று அவன் அவளை நோக்காமலேயே சொன்னான்.

“என்ன?” அவள் மீண்டும் கேட்டாள். “நான் இப்பொழுது அறிந்தது...” என்றபின் “நான் மீள்கிறேன்” என்றான். சுட்டுவிரல் நகத்தைக் கடித்து விழிதாழ்த்தி “நான் இனி வரப்போவதில்லை” என்றான். “என்ன அறிந்தீர்கள் இளவரசே?” என்றாள் ஃபால்குனை. “நான்...” என்றபின் சித்ராங்கதன் அந்த சொல் பொருத்தமற்றிருக்கிறது என உணர்ந்து “பிறிதொன்று...” எனத்தொடங்கி “இல்லை, நான் போகிறேன்...” என்றபடி குடிலை நோக்கி சென்றான்.

ஃபால்குனை கையூன்றி எழுந்து பறந்த தன் ஆடையை இழுத்து செருகியபடி “இங்கு காற்று சற்று விரைந்து வீசுகிறது” என்றாள். இயல்பாக வந்த அந்த சொற்றொடரால் உளவிசை சற்றே தழைந்த சித்ராங்கதன் சிறு நீள்மூச்சுடன் “ஆம்” என்றான். “மொத்த நகரையே கிழக்கு நோக்கி தள்ளிக் கொண்டு செல்கிறது. விந்தைதான்... “ என்றாள் ஃபால்குனை. “இடம்மாறுநகர் என்று பிறிதொன்று பாரதவர்ஷத்தில் இல்லை.” காவலன் “உருமாறவும் செய்கிறது... வளர்பிறை காலத்தில் இது பெண். தேய்பிறையில் ஆண்” என்றான். ஃபால்குனை திரும்பி நோக்க “பெண்ணாக இருக்கையில் இது கிழக்கே குவிந்திருக்கும். ஆணாக இருக்கையில் நீர்வெளியெங்கும் பரவியிருக்கும்” என்றான்.

“கிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி காற்று வீசத்தொடங்கும்போது இத்தீவுகள் அனைத்தும் திரும்பி செல்லத்தொடங்கும்” என்றான் சித்ராங்கதன். “ஒவ்வொரு ஐந்து நாளுக்கும் ஒரு முறை இந்நகரின் அமைப்பு முற்றிலும் மாறிவிடுகிறது. நடுவே அரசரின் அரண்மனை மட்டுமே நிலைத்திருக்கிறது. ஆகவே இந்நகரை பெரும் சக்கரம் என்பவர்கள் உண்டு. அரசர் அதன் அச்சு” என்றான். அவன் குரல் தழுதழுத்திருந்தது. அழுதுமுடிந்து பேசுபவன் போல. மூச்சை இழுத்து தன் உடலை நேராக நிறுத்திக்கொண்டான். தோளில் எடை ஏற்றிக்கொண்டவன் போல அவன் இடை வளைந்தது.

ஃபால்குனை நடுவே செம்மண் குன்றுமேல் தெரிந்த அரசமாளிகையை நோக்கி “ஆம், உண்மை” என்றாள். அவள் நோக்கு தன்னை தொட்டதும் சித்ராங்கதன் மீண்டும் விதிர்த்தான். திரும்பி காவலனை நோக்கி மென்மையான குரலில் “என் குறடுகள்” என்றான். தன் கால்கள் நிலையற்ற கொடிப்பரப்பில் ஊன்றியிருப்பதனால்தான் உடல் சமன்குலைகிறது என்று நினைத்துக்கொண்டான். காவலன் அளித்த குறடுகளுக்குள் கால்களைச் செலுத்தி நிமிர்ந்து நின்றபோது அவன் விழிகள் மாறின. காவலனிடம் “நான் கிளம்புகிறேன், படகை எடுக்கும்படி அவனிடம் சொல்” என்றான்.

“இளவரசே, நீங்கள் அறிந்த நிலை வேதநிறைவுக் கொள்கையால் பல முறை விளக்கப்பட்டுள்ளது. இரண்டின்மை என்று அதை சொல்கிறார்கள். ஞேயியும் ஞாதாவும் ஒன்றாகி ஞானம் மட்டும் எஞ்சும் நிலை. அந்த ஞானமும் முதல் முடிவிலா ஞானவெளியாகிய ஒன்றின் சிறுதுளியே. நீராவியும் குளிர்காற்றும் இணைந்து நீர்த்துளியாகி அந்நீர்த்துளி கடலில் சென்றடைவது போல் என்று அதை விளக்குகிறார்கள்” என்றாள் ஃபால்குனை. தன் கைகளில் தோள்வளைகளையும் கங்கணங்களையும் அணிந்தபடி “வெறும் சொற்கள்” என்றான் சித்ராங்கதன். “இத்தனை சொற்களைக்கொண்டு அதை விளக்கி என்ன பயன்?”

“சொற்கள் அதன் மீதான ஐயங்களையே களைகின்றன. அறிதல் அங்கு அக்கணத்தில் நிகழ்கிறது” என்றாள் ஃபால்குனை. “நான் இன்று எதையும் அறியவில்லை” என்றபின் “அகம் நிலைகுலைந்துள்ளது. அவைக்கூடத்தில் நாளை சந்திப்போம்” என்றபடி படகை நோக்கி நடந்தான். ஃபால்குனை “எனில் அவ்வண்ணமே ஆகுக” என்றபின் “நான் இவ்வேரியில் சற்று நீந்தி வரலாமென்று எண்ணுகிறேன்” என்றாள். “இங்கா?” என்றான் சித்ராங்கதன். “ஆம், ஆழத்தில்” என்றாள் ஃபால்குனை. “ஆழத்தில் நாம் அறியாதவை முடிவிலாதுள்ளன.”

அவள் தன் மேலாடையைச் சுற்றி இடையில் செருகிய பின் துள்ளி நீரில் அம்பென குதித்து மூழ்கி மறைந்தாள். அவள் சென்ற சுழியின் அலை வட்டங்களை நோக்கி சில கணங்கள் நின்றபின் அவன் திரும்பி படகை நோக்கி மீண்டும் ஓர் அடியெடுத்து வைத்தான். அவள் சென்றபாதை குமிழிகளாகத் தெரிந்தது. நிறமின்மையை வடிவமாகக் கொண்ட மீன்கூட்டங்கள் அங்கே மொய்த்துச் சுழன்றன. நீர் இந்திரனைப்போல் உடலெங்கும் விழிகள் கொண்டது. அவன் படகில் ஏறிக்கொண்டான்.

நீருக்குமேல் எழுந்த ஃபால்குனை அவனை நோக்கி “வா” என்றாள். அவன் திகைத்து காவலனை நோக்க “வா” என்றாள் மீண்டும். அவள் மூழ்கிய இடத்தில் கூந்தல் அலையாகி சுழன்று மறைந்தது. சித்ராங்கதன் எழுந்து தன் குறடுகளை விரைந்து கழற்றி வீசிவிட்டு நீரில் பாய்ந்தான். அவன் உடலணிந்த கவசமும் தோள்வளைகளும் அவனை இறுகிய இரும்புப்பாவை என செங்குத்தாக மூழ்கச்செய்தன.

நீருக்குள் மூழ்கி தன் அருகே வந்த சித்ராங்கதனை ஏறிட்டு நோக்கி ஃபால்குனை சிரித்தாள். பற்கள் மின்னிய வாயிலிருந்து அவள் மூச்சு பொற்குமிழ்களாக மாறி வீங்கி பருத்து மேலே சென்று மறைந்தது. அவள் கை நீண்டு வந்து அவன் கைகளை பற்றிக் கொண்டதும் அவன் மூழ்கிய விரைவு குறைந்தது. அவன் கவசத்தை அவள் கழற்றினாள். அது திரும்பித் திரும்பி மூழ்கி நீரின் இருளுக்குள் சென்றது. இருவரும் நீர்க்கொடிகள் நெளிந்த ஆழத்தில் உடலால் துழாவிச் சென்றனர். இருவர் உடல்களும் ஒன்றையொன்று மெல்ல தொட்டு வழுக்கி விலகின. மெல்ல தொடுகையிலேயே தோல் நுண்ணிதின் அறிகிறது.

நீர்ப்பரப்பைப் பிளந்து மேலே வந்து மூச்சிழுத்து சிரித்த ஃபால்குனை “ஆழம் பிறிதோர் உலகம்” என்றாள். “ஆம்” என்றான் சித்ராங்கதன். “அங்கு மேலிருந்து மூழ்கியவை அனைத்தும் சென்று நிறைந்துள்ளன.” அவள் அவன் விழிகளை நோக்கியபின் “அங்கு செல்வோம்” என்றாள். “அங்கு சென்றவர்கள் மீள்வதில்லை என்கிறார்கள்” என்றான் சித்ராங்கதன். “மீளாவிட்டால் என்ன?” என்றபின் ஃபால்குனை மீண்டும் மூழ்கினாள். அவள் நெளியும் கால்களுக்கு அருகே சித்ராங்கதன் மூழ்கி வந்தான். கால்களை இழுத்து வளைந்து அவன் முகத்தை நோக்கி நீர்க்குமிழிகளென சிரித்தபடி அவள் இறங்கிச் சென்றாள்.

காலால் நீரை உந்தி கை நீட்டி அவளை அவன் தொடர்ந்தான். அந்த ஏரியில் அவன் விழுந்து நீந்தக்கற்றபின் இறங்கியதேயில்லை. ஆனால் அந்த முதல் மூழ்கலை ஒவ்வொரு நீர்க்குமிழியையும் அலைநெளிவையும் என நினைவிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. ஒவ்வொரு எண்ணமென மீண்டும் அடையமுடிந்தது. அன்று ஆழம் அவனை அச்சுறுத்தியது. ஆழம் அப்பால் என இருக்கவில்லை. அவனைச் சூழ்ந்து கைகளையும் கால்களையும் பற்றியிருந்தது. கீழே மேலும் மேலும் செறிந்து சென்றது. நீர் என்பதே ஆழம் மட்டும்தான்.

அப்போது ஆழம் ஈர்ப்பு கொண்டிருப்பதை உணர்ந்தான். பாதிமூடிய கருவூலப்பெட்டி. அவன் தலைக்குமேல் ஃபால்குனை சிரித்தபடி கருங்குழல் சுருள்கள் அலையில் நெளிய அவனை நோக்கினாள். அவன் எம்பி ஆடையை பற்ற வந்தான். அவள் அக்கைகளை தன் கால்களால் உதைத்து விலகிச் சென்றாள். அவன் தோள்வளைகளும் கங்கணங்களும் எடைமிகத் தொடங்கின. அவன் உடல் மேலும் மேலும் என ஆழத்தை நாடி சென்றது. அவனுக்குமேல் சுருண்டும் குவிந்தும் சுழன்றும் அவள் கடந்து செல்வதை சித்ராங்கதன் கண்டான். இரு கைகளால் நீரை உந்தி கால்களால் மிதித்து மேலிருந்த அனைத்தையும் பின் தள்ளி அவளை தொடர்ந்தான்.

அவள் உடலிலிருந்து எழுந்த மேலாடை நீண்டு அலையடித்தது. அதை பற்றி அவன் இழுக்கையில் சிரித்தபடி சுழன்று அதை கைவிட்டு வளைந்து இருண்ட ஆழத்திற்கு ஒளிரும் உள்ளங்கால்களுடன் அவள் இறங்கி மறைந்தாள். அவ்வாடையை தன்னைச் சுற்றி நெளிந்த ஒளியென கண்டான். முகத்தில் அதன் மென்பரப்பு உரசிச்சென்றது. நீர்ப் பலகைகளை கைகளால் பற்றி திறந்து நீர்த்தூண்களை உதைத்து நீர்த் திரைகளை கிழித்து சித்ராங்கதன் ஆழத்தை நோக்கி சென்றான். தன்னைச் சூழ்ந்து இருந்த நீரொளி மங்கி இருண்டு விட்டதை கண்டான். அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. தொலைவில் வண்ணம் ஒன்று கரைந்து வழிந்திருப்பது தெரிந்தது. அது நீண்டு குவிந்து நீள்கையில் அவளாகி மாறி மறைந்தது.

அவனை ஆயிரம் நுண்கைகளால் அள்ளிச்சுழற்றி இழுத்துக் கொண்டிருந்த ஆழம் மெல்ல அவ்விசையை இழந்து நெளியும் சுவர்ப்பரப்பென ஆயிற்று. அதில் இறங்க மூச்சால் இறுக்கி உடலை மேலும் உந்த வேண்டியிருந்தது. தசையில் முள் என தன்னை தைத்து அதனுள் சென்றான். சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த ஃபால்குனையின் கை வெள்ளைகளும் கால் வெள்ளைகளும் மட்டும் அல்லி நிறத்தில் தெரிந்தன. அவள் வளைந்து திரும்பியபோது கன்னங்களும் கழுத்தும் மின்னி மறைந்தன. அவன் முழு மூச்சையும் அசைவென்றாக்கி உந்திச்சென்று நெளிந்த அவள் இடைக்கச்சை நுனியைப்பற்றினான். அதைக் கழற்றி உதறியபடி அவள் சுழன்று மேலும் ஆழத்திற்கு சென்றாள்.

தன் உடலின் ஆடைகளாலேயே நீந்துவதும் அமிழ்வதும் அத்தனை கடினமாக இருக்கிறது என்று அவன் உணர்ந்தான். நெஞ்சுக்கு முன்னிருந்த மூன்று சரடுகளின் முடிச்சுகளை இழுத்து அவிழ்த்து தன் மெய்ப்பையை கழற்றி மேலெழுந்து பறந்தகல விட்டான். பின்பு உள்ளே அணிந்திருந்த பட்டாலான மெய்யாடையை கழற்றி பறந்தெழ விட்டான். அவனது சுரிகுழல் நீரலைகளில் அலைபாய்ந்தது. சுழன்று திரும்பியபோது தனக்கு முன் நீந்திச்செல்லும் பிறிதொருத்தியைக் கண்டு திகைத்தான். அவள் கைநீட்டி ஃபால்குனையை அடைந்து தோள்சுற்றி கைசுழற்றி இறுக்கி அணைத்து அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்விக்கொண்டபோது உடல்சிலிர்த்தான்.

அவர்களின் ஆடலை மூச்சு தளர அவன் நோக்கி நின்றான். அப்போது நீர்வாயில் திறந்து தன்னை நோக்கி வரும் ஒருவனை கண்டான். திரண்ட தோள்களும் நீண்ட மெலிந்த கைகளும் கூரிய நகைப்பெழுந்த விழிகளும் கொண்டவன். நாண் இழுத்து உச்ச விசையில் அம்பு நிறுத்தப்பட்ட மூங்கில் வில் போன்றவன். அவன் அஞ்சி பின்னால் நகரமுயன்றபோது நீர் அழுத்தி முன்னால் தள்ளியது. துளைக்கும் காமம் நிறைந்த விழிகள். அவள் நன்கறிந்த சொல் ஒன்று கரந்த இதழ்கள். அவன் தன் உடலை கைகளால் சுற்றி இடைவளைத்து தன் இடையுடன் இறுக்கி குனிந்து தன் இதழ்களை கவ்விக்கொண்டபோது அவன் தன்னுடலை உணர்ந்தான்.

முத்தத்தை உதறி முகம் திருப்பி அவன் நெஞ்சில் கைவைத்து உந்தி விலகி மேலேறினாள். கைகளால் தன் தோளை தொட்டாள். அவை நூறாண்டுகள் உரசி இழைத்த சந்தனத்தடியென மென்மையுடன் குழைந்திருந்தன. கைகள் அல்லித் தண்டுகளென நெளிந்தன. இரு நீர்க்குமிழிகளென வளைவின் ஒளியுடன் முலைகள் எழுந்திருந்தன. குமிழிமுனை நீர்த்துளியென காம்புகள் சிலிர்த்திருந்தன. குழைந்து சரிந்த அடிவயிறை தழுவிச் சென்றது நீரலை ஒன்று.

அவன் சிரித்தபடி அருகே வந்து அவள் ஆடையைப் பற்றி விலக்கி வெற்றுடலாக்கி தன் கைகளில் எடுத்துக்கொண்டான். அவள் உடல் எழுந்து விரிந்து அவன் உடலை சூழ்ந்தது. அவனை தன் கைகளாலும் கால்களாலும் பற்றிக்கொண்டு அவன் தோளில் முகம் புதைத்தாள். ஒன்றை ஒன்று நிரப்பும் பொருட்டே உருவான இரண்டு உடல்களென தங்களை உணர்ந்தன அவை. குளிர்ந்த ஆழத்தில் குருதி வெம்மையால் சிவந்து கனன்றது அவள் உடல். இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று கண்டு நகைத்துக்கொண்டன.

நீரிலிருந்து மேலெழுந்து இருவரும் அவர்களின் உடலளவே விட்டமிருந்த மெல்லிய கொடித்தீவின்மேல் ஏறிக்கொண்டனர். முதலில் தொற்றி ஏறிய அவன் மல்லாந்து படுத்துக்கொள்ள அது அவன் கால்பக்கமாக சரிந்தது. அவள் சுற்றிவந்து எதிர்த்திசையில் ஏறி குப்புறப்படுத்தாள். அவன் மெல்லதிரும்பி அவள் தோளை தொட்டான். அவள் தலையை மட்டும் திருப்பினாள். “ஒரு கணத்தில் உன்விழிகள் பெண்மைகொண்டுவிட்டன” என்றான். அவள் “உங்கள் விழிகள் ஆண்மை கொண்டதுபோல” என்றாள். “ஒருகணம்...” என்றான். “ஒருகணமா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அங்கே ஆழத்தில் காலமும் செறிந்து விடுகிறது.” அவள் புன்னகையுடன் கண்களை மூடினாள்.

அவன் அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டுசென்றான். “ம்?” என்றான். “என்ன?” என்றாள். “என்ன எண்ணுகிறாய்?” என்றான். “எண்ணமென ஏதுமில்லை. கள்மயக்கு போல் ஒன்று...” அவன் புன்னகையுடன் “என்ன மயக்கம்?” என்றான். “தெரியவில்லை. இதுவரை இதைப்போல் ஒன்றை உணர்ந்ததில்லை” என்றபின் சற்றே ஒருக்களித்து “என் கால்விரல் நுனிகள் தித்திக்கின்றன” என்றாள். “கால்விரல்களா?” என்றான். “எப்படி?” என்று அவள் மூக்கோடு தன் மூக்கை வைத்தான். “இனிய உணவை அறிகையில் நா தித்திக்குமே அதைப்போல.” அவள் கண்களை மூடி “அந்தத் தித்திப்பு அங்கிருந்து தொடைகளுக்கும் இடைக்கும் வயிற்றுக்குமென ஏறிவந்து உடலை மூடுகிறது” என்றாள்.

“ம்” என அவன் சொன்னது அவள் காதுகளை காற்றென தொட்டது. “என் உடல் ஒரு நாவென இனிமையில் திளைக்கிறது. காதுமடல்கள் இனிமையில் கூசுகின்றன” என்றாள். “என்னால் அதை உணரவே முடியவில்லை” என்றான் அவன். “அதையுணர பெண்ணாகவேண்டும் போல.” அவள் புன்னகை செய்தபோது கன்னங்களில் குழி விழுந்தது. “இந்தக்கன்னக்குழி முன்னர் இருந்ததில்லை” என்றான். “அப்போது நான் பெண்ணாக இல்லை” என்றாள் கண்களை மூடியபடி. “எப்போது பெண்ணானாய்?” என்றான். “தெரியவில்லை. நான் அறியத்தொடங்குவதற்கு முன்னரே என் ஆழம் மாறத்தொடங்கிவிட்டிருந்தது என்று எண்ணுகிறேன்.”

அவன் தோள்மேல் தன் கையை வைத்து “அதையே நானும் கேட்கிறேன். நான் பெண் என எப்போது அறிந்தீர்கள்?” என்றாள். “நான் பெண்ணென்றே இருந்தேன். எனவே என் உள்ளம் அதை அறியவில்லை” என்றான். “என் உடல் எப்போதோ அதை அறிந்திருக்கவேண்டும்.” அவள் சிரித்து “நான் சொல்லவா?” என்று அவன் காதில் கேட்டாள். “ம்” என்றான். “என்னை முதலில் தொட்டபோதே” என்றாள். அவள் சிரிப்பு அவன் செவிதொடாது உள்ளே சென்று ஒலித்தது.

”என்ன ஆடல் இது?” என்றபடி அவள் மல்லாந்தாள் . உடனே தன் உடலை உணர்ந்து கவிழ்ந்து கொண்டாள். அவன் சிரித்தபடி அவள் உடலை அணைத்து “எவரிடம் மறைக்கிறாய்?” என்றான். “தெய்வங்களிடம்” என்று அவள் சிரித்தாள். “விண்ணகம் முழுக்க நின்றிருக்கின்றன பெண்ணை நோக்கும் தெய்வங்கள்.” அவன் நனைந்து ஒட்டிய அவள் குழல்கற்றைகளை நகத்தால் கோதி எடுத்து ஒளியுடன் சிவந்திருந்த செவிக்குப்பின்னால் செருகினான். “விழிகள் முன் திகழ்கையிலேயே பெண் உடல் திரள்கிறது. விழிகள் உன்னை அறியாததனால் நீ முளைத்தெழாமலிருந்தாய்” என்றான். “தெரியவில்லை...” என்றாள். "ஒரு விழிக்காக இப்போது உருக்கொண்டுள்ளாய்” என்றான்.

பெருமூச்சுடன் “முன்பு ஒருமுறை இந்த ஏரியில் மூழ்கிச்சென்றேன்” என்றாள். “அன்று ஆழம் அச்சுறுத்தியது. இன்று அது இனிமை தேங்கி இறுகிய பரப்பாக உள்ளது. அவ்வப்போது இறங்கிச்சென்று ஒரு மிடறு அள்ளி மீளவேண்டிய தேன்.” அவன் “அதற்கும் அப்பால் கடும் கசப்பின் ஆழங்கள் இருக்கக்கூடும். எதுவும் ஒற்றையடுக்கு கொண்டதல்ல” என்றான். அவள் “அன்று நான் எதையோ எண்ணினேன்” என்றாள். “எப்போது?” என்றான். “அன்று மூழ்கிச்செல்லும்போது... ஆனால் அதை மறந்துவிட்டேன் தெரியுமா? இத்தனைநாளில் எவ்வளவோ முறை இருளில் படுத்து நான் எண்ணியதுண்டு அதை. என் நினைவு அங்கே செல்வதற்கு முன்னரே நின்றுவிடும்.”

அதையெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் உடனே எழுந்தது. ஆனால் அவனுடன் இருக்கையில் மிக எளியவற்றையே உரையாடவேண்டுமென அவள் அகம் விழைந்தது. அச்சிறியசெய்திகள் அவளை சிறுமியென்றாக்கின. அவனருகே தண்டோ கிளையோ எழாது என்றும் தளிரென்றே இருக்கவேண்டும் என்று தோன்றியது. “என்ன நினைத்தாய்?” என்றான் அவன். “மறுபிறப்பையா?” அவள் “இல்லை” என்றாள். “தெய்வங்களையா?” என்றான். “இல்லை, அதையெல்லாம் இல்லை.” அவன் "பின்னர் எதை?” என்றான். “தெரியவில்லை” என்றாள். “எனக்கு ஒன்றுமே தெளிவாக இல்லை.”

பின்பு சிரித்து “நான் ஏன் இத்தனை மழலை பேசுகிறேன்?” என்றாள். அவன் அவள் காதில் “இன்னும் குழவிபோல பேசுவாய்” என்றான். முகம் சிவந்து விழி திருப்பி “நான் எப்போதும் எவரிடமும் மழலை பேசியதில்லை. என் தந்தை அதற்கு ஒப்பியதில்லை. ஆண் மகனென்றே என்னை அனைவரும் நடத்தினர்” என்றாள். “பெரும்பாலான பெண்கள் முதல்மழலை பேசுவது காதலர்களிடம்தான்” என்றான். அவள் சிரித்து “ஏன்?” என்றாள். “தெரியவில்லை. அவர்கள் பேசத்தொடங்கும்போதே அன்னையராக எண்ணிக்கொள்கிறார்கள்...” என்றான். “நான் முதியவளான பின்னரும் மழலை பேசுவேனோ?” என்றாள். “பேசுவாய், உன் மைந்தனிடம்” என்றான்.

அவள் மூச்சு திணற “என் மைந்தனிடமா?” என்றாள். “ஆம், ஏன்?” அவள் சற்றுநேரம் அசைவிழந்திருந்தாள். கைதொட சுருங்கி மறுதொடுகைக்காக காத்திருக்கும் அட்டை போல. பின்பு பாய்ந்தெழுந்து நீரில் குதித்து நீந்திச் சென்றாள். அவளுக்குப் பின்னால் குதித்து அவன் அவளை துரத்திச்சென்றான். நெடுந்தொலைவில் அவள் தலை எழுந்து கூந்தல் உதறி நகைக்க அவன் நீரை விலக்கி எட்டிப்பார்த்து கைவீசி நீந்தினான். கைகளை உள்ளே செலுத்தி மீன் போல அவள் நீந்தினாள். இருவரும் சென்று ஒரு தீவின் இலைத்தழைப்பை பற்றிக்கொண்டனர்.

“பெண்ணாகிக் கொண்டிருக்கிறது இது” என்றான். அவள் சிரித்துக்கொண்டு அதில் கையூன்றி எழுந்து அமர்ந்தாள். அது நீருக்குள் அமிழ்ந்து ஒரு பை என அவளை சுமந்தது. "ஏன் சிரிப்பு?” என்றான் அணுகியபடி. அவள் கால்களை ஆட்டியபடி “என்னால் ஏன் கைவீசி நீந்தமுடியவில்லை என எண்ணிக்கொண்டேன்.” அவன் அருகணைந்து அவள் கால்களைப்பற்றி “ஏன்?” என்றான். அவள் வெண்பற்கள் காட்டி சிரித்தபடி புரண்டு படுத்து முழங்காலை ஊன்றி மேலேறினாள். “அய்யோ” என்றாள். “என்ன?” என்றான். “இங்கே ஒரு கூடு... நாரையின் கூடு.” அவன் “கலைக்காதே” என்றான்.

அவள் குனிந்து அக்கூட்டிலிருந்த சிறிய குஞ்சுகளை நோக்கினாள். “பூக்கள்... பூக்களேதான்” என்றாள். வெண்ணிறபூஞ்சிறகுகளும் சிறுமணி மூக்குகளுமாக அவை அவளை அன்னை என எண்ணி சிவந்த வாய் திறந்து எம்பி எம்பி குதித்தன. வெண்கலக்குச்சிகள் உரசிக்கொள்ளும் ஒலியில் கூவின. “உன்னை அன்னை என எண்ணுகின்றன” என்றான். “என்னையா?” என்றாள். “ஆம், இங்கே பிற உயிர்களே வருவதில்லை அல்லவா?” அவள் அவற்றின் அலகு நுனியில் சுட்டு விரலால் தொட அத்தனை குஞ்சுகளும் அவள் விரலை முத்தமிட்டு விரியாத சிறகை அடித்துத் தாவின.

“அய்யோ” என அவள் கைவிரலை எடுத்துக்கொண்டாள். “கூசுகிறது” என்றாள். “அது விரல் அல்ல, உன் முலைக்காம்பு” என்றான். அவள் “சீ” என்று முகம் சிவந்தாள். “பசிக்கின்றதா இவற்றுக்கு?” என்று அவனை நோக்காமல் கேட்டாள். “ஆம், அவை எப்போதும் பசியுடன் இருப்பவை.” அவன் மூழ்கி விலகி கைவீசி ஒரு மீனை பிடித்தான். அதை நசுக்கி உடைத்து தசையைப் பிய்த்து அவள் விரல்நுனியில் வைத்து “ஊட்டு” என்றான். “அதற்கு ஏன் அந்த மீனை கொல்லவேண்டும்? இரக்கமே இல்லை” என்றாள். “கொடு” என்றான். அவள் சுட்டுவிரலில் அந்த ஊன் துளிகளைத் தொட்டு அவற்றின் அலகுக்குள் வைத்தாள். அவை எம்பி ஒன்றன் மேல் ஒன்று விழுந்து சிறுகால்களால் மிதித்து துவைத்து ஏறி உண்டன.

கீழே கிடந்த ஒன்றை அவள் தூக்கி அதன் வாய்க்குள் உணவை வைத்தாள். எம்பி குதித்த ஒன்றை நோக்கி “நீ துடுக்குக்காரன். இவன்தான் எளியவன். இவனுக்குத்தான் முதலில்” என்றாள். அது அவளை நோக்கி சீற்றத்துடன் கூவியபடி கொத்துவதற்காக எம்பியது. “சீறுகிறது” என்றாள். “அவன் பறவைகளில் பார்த்தன்” என்றான். “ஆகவே அவனுக்கு அன்னையின் கனிவே கிடைப்பதில்லை.” அவள் திரும்பி அவன் தலையைத் தொட்டு மெல்ல வருடி “அப்படியா?” என்றாள். அவன் “ஆம்” என்றான். “கனிவு அன்னையிடம் மட்டும்தானா?” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கினான்.

பின்னர் நினைத்திருக்காத கணம் அவளை அள்ளி நீருள் போட்டான். அவள் மூழ்கி விலக சிரித்தபடி பாய்ந்து பிடித்தான். அவள் நீருள் இருந்து எழுந்து முகம் துடைத்து “இப்போது நீரில் விழுந்த கணம் உணர்ந்தேன், நான் அன்று எண்ணிய இறுதி விழைவு என்ன என்று” என்றாள். “என்ன?” என்றான். "சற்றுமுன் செய்தது. ஒரு நாரைக்குஞ்சை தொட்டுப்பார்க்கவேண்டும். அதன் சிறிய அலகுக்குள் உணவூட்டவேண்டும்” என்றாள் சித்ராங்கதை. “ஊட்டு” என்றான் ஃபால்குனன்.

பகுதி மூன்று : முதல்நடம் - 12

கதிரவனின் முதற்புரவியின் முதற்குளம்பு படும் கீழைமேரு மலையின் உச்சியின் நிழல் சரியும் மேற்குச்சரிவிலிருந்தது காமிதம் என்னும் பசும்நீலப் பெரும்காடு. ஒன்றுக்குள் ஒன்றென ஏழு நதிகளின் விரைவுகளால் வளைக்கப்பட்ட அந்நிலத்தில் மண்தோன்றிய காலம் முதலாக மானுடர் காலடி பட்டதில்லை. எனவே விண்வாழும் தேவர்களும் இருள் வாழும் பெருநாகங்களும் வந்து விளையாடி மீளும் களியாட்டுச் சோலை என அது திகழ்ந்தது.

பளிங்கு ஊசிகள் போல் இறங்கி மண் தொட்டு நின்று அதிரும் பல்லாயிரம் கால்களுடன் சூரியன் அக்காட்டை கடந்து செல்லும்போது ஒவ்வொரு சாய்வுக்கும் ஒரு நற்தருணமென வகுத்து விண்ணவரும் பிறரும் அங்கிறங்கி களித்து மீண்டனர். அங்கு கனிகள் அனைத்தும் மதநீரின் இனிய நறுமணம் கொண்டிருந்தன. வெயில் பட்ட இலைப்பரப்புகள் வேட்கையில் சிவந்த பெண் உடலென மிளிர்ந்தன. அவர்களின் வெம்மை மிக்க மூச்சென காற்று அங்கு உலாவியது. ஈரமண்ணில் பட்ட கதிரவனின் ஒளி விந்துவின் நறுமணமென ஆவியெழச் செய்தது. தேவர்களின் விந்துத் துளிகள் விழுந்து முளைத்தெழுந்த வெண்காளான்களால் நிறைந்திருந்தது அக்காடு.

மகரராசியில் கதிரவன் புகும் முதற்தருணத்தை காண விழைந்த அம்மையுடன் கயிலை நின்றாடும் ஐயன் கீழ்த்திசை காண வந்தான். மேருவுக்கு மேல் செவ்வொளியும் நீலப்பேரொளியுமென எழுந்து இருவரும் மணிநீலவட்டம் சுடர்ந்தெரிய செம்மை சூழ்ந்து திளைத்தாட ஏழுவண்ண புரவிகள் இழுத்த ஒளித்தேரிலேறிச் சென்ற வெய்யோனை கண்டனர். “நலம் வாழ்க!” என்று வாழ்த்தி மீளும்போது அம்மை தன் ஓர விழியால் காமிதத்தை கண்டாள். அங்கிருந்து எழுந்த காமத்தின் நறுமணத்தால் ஏதென்றறியாது நாணி முகம் சிவந்தாள்.

அவளில் எழுந்த நறுமணத்தை அறிந்து விழி திருப்பி புன்னகைத்த சிவன் “அதன் பெயர் காமிதம். அங்கு தேவரும் தெய்வங்களும் நாகங்களும் வந்து காமம் கொண்டாடி மகிழ்கின்றனர்” என்றார். சினந்து விழி தூக்கி “நான் ஒன்றும் அதை குறித்து எண்ணவில்லை” என்றாள் அவள். நகைத்து “ஆம், நீ எண்ணவில்லை என்று நானும் அறிவேன். எண்ணியது நான்” என்றபடி சிவன் அவள் இடையை வளைத்து தன்னோடு அணைத்து “ஆகவே நாம் மண்ணிறங்கி அங்கு சென்று ஆடி மீள்வோம்” என்றார். அவர் கையைப்பிடித்து உதறி சினந்து “நான் சொல்வதென்ன? நீங்கள் புரிந்து கொண்டதென்ன? மைந்தரைப்பெற்று இவ்வுலகாக்கி விழிமூடாமல் இதை ஆளும் எனக்கு காமம் கொண்டாடுவதற்கு நேரமும் இல்லை. மனமும் இல்லை. நான் இங்குள அனைத்திற்கும் அன்னை” என்றாள்.

“நல்ல காமத்தை அறிந்தவரே நல்ல அன்னையராகிறார்கள். எனவே நல்ல அன்னையர் நல்ல காமத்திற்குரியவர்” என்றார் சிவன். “என்னை சினம் கொள்ளச் செய்வதற்கென்றே வீண்பேச்சு பேசுகிறீர்கள். இனி ஒரு கணம் இங்கிருந்தால் நான் நாணற்றவள் என்றே பொருள்” என்று சீறி அவர் நெஞ்சில் கை வைத்து உந்தித் தள்ளி அவ்விரைவில் குழல் பறந்து முதுகில் சரிய நூபுரங்கள் ஒலிக்க மணிமேகலைகள் குலுங்க அன்னை நடந்து சென்றாள். பின்னால் சென்று நழுவிய அவள் மேலாடையின் நுனியைப்பற்றி கையில் சுழற்றி தன் உதடுகளில் ஒற்றி “என்ன சினம் இது? ஈரேழு உலகங்களை ஈன்றாலும் என் கண்ணுக்கு நீ கன்னியல்லவா? உன்னிடம் காமம் கொள்ளாது இருப்பதெங்ஙனம்?” என்றார்.

சிவந்த முகத்தை குனித்து இதழ் கடித்து நகையடக்கி “போதும் வீண்பேச்சு. இன்னும் இளையோன் என நினைப்பு. ஈன்ற மைந்தர் தோளுக்குமேல் எழுந்துவிட்டனர்” என்றாள் சக்தி. சிவன் “இக்காமிதக் காட்டை கடந்து என்னால் வரமுடியவில்லை. இவையனைத்தும் பிறப்பதற்குமுன் இளம் கன்னியென நீ இருந்த நாட்கள் ஒவ்வொன்றும் என் நெஞ்சில் மீள்கின்றன. பிறிதொருமுறை உன்னை அப்படி பார்க்க மாட்டேனா என்று அகம் ஏங்குகிறது” என்றார். கனிவு எழுந்த விழிகளால் அவரை நோக்கி “அவ்விழைவு தங்களுக்கு உண்டென்றால் அதை தீர்க்கும் பொறுப்புள்ளவள் அல்லவா நான்?” என்றாள் சக்தி.

“அதைத்தான் உன் இடை வளைத்து கேட்டேன்” என்றார் சிவன். “இல்லை, அதை கேட்கவில்லை. நீங்கள் பேசியதே வேறு” என்றாள் அன்னை. “எடுப்பது தங்கள் உரிமை. கொடுப்பது என் கடமை. அதை மட்டும் சொல்லியிருந்தால் போதுமே” என்றாள். “இப்போது சொல்கின்றேன், போதுமா?” என்று சிவன் அவள் கைகளை பற்றினார். காமம் நிறைந்த அவர் விழிகளை நோக்கி “நெடுங்காலம் நுரைத்த காமம் போலும்... தொல்மது என மயக்கு அளிக்கிறது” என்றாள் அன்னை. அவள் குறும்புச் சிரிப்பை நோக்கி “ஆயிரம் யுகங்கள்” என்று சிவன் சொன்னார். “வா, நமக்காக காத்திருக்கிறது காமிதம்.”

முகிலலைகளை படிகளாக்கி இருவரும் இறங்கி காமிதத்திற்கு வந்தனர். இரு சிறு வெண்புழுக்களாக மாறி புரியென ஒருவரையொருவர் தழுவி சுருண்டதிர்ந்து சித்தமற்ற பெருங்காமத்தை நுகர்ந்தனர். சிறு வண்டுருவாக மண் துளைத்துச் சென்று ஒருவரை ஒருவர் துரத்தி பற்றி ஆறு கால்களால் பின்னி ஒருவரை ஒருவர் கடித்து இறுக்கி ஓருடலாகி ரீங்கரித்து பறந்தெழுந்தனர். நா பறக்க சீறி பல்லாயிரம் முறை முத்தமிட்டு உடல் பிணைத்து நாகங்களாயினர். மான்கள் என துள்ளி குறுங்காடுகளை புதர்களைக் கடந்து பாய்ந்து மகிழ்ந்தனர்.

விழி மருண்டு நின்ற மடமான் இணை அருகணையும் வரை காத்து பின் தாவி கடந்து சென்றது. பெண்மையின் மென்மையே அவளுக்கு துள்ளலின் ஆற்றலாகியது. ஆண்மையின் தவிப்போ உடல் எடை மிகச்செய்து மூச்சிரைக்க வைத்தது. காடெங்கும் துரத்தி பற்றி தழுவிக் கொண்ட அக்கணமே அவரை உதைத்துத் தள்ளி நகைத்து மீண்டும் பாய்ந்தாள். நடை தளர்ந்து நுரை வாயில் ததும்ப விடாது தொடர்ந்தது மான்களிறு. தெளிந்த காட்டுச் சுனையருகே சென்றதும் அதில் எழுந்த நீர்ப் பாவையைக் கண்டு மயங்கி அருகே சென்று மூச்சு எழுப்பிய சிற்றலைகளில் நெளிந்த தன் முகம் கண்டு உடல் விதிர்த்து அசையாது நின்ற பிடியை புன்னகையுடன் மெல்ல பின்னால் அணைந்து தழுவி ஒன்றானது ஏறு.

தோகை மயிலென ஆகி மரக்கிளையிலிருந்து இறங்கி பீலி விரித்து ஓராயிரம் விழிகளைத் திறந்து அவளை நோக்கி அதிர்ந்தார். ஒரு நோக்கில் நாணுபவள் போல ஒசிந்தாள். மறு நோக்கில் ஊதப்பட்ட செங்கனல் போல் சிவந்து சீறினாள். பிறிதொரு நோக்கில் சரடு இழுத்த பாவையென அருகணைந்து அவரை தழுவிக் கொண்டாள்.

மத்தகம் குலுக்கி வெண்தந்தம் தூக்கி வந்த பெருங்களிறாக வந்தார். கருமுகிலென இடியொலி எழுப்பி அருகணைந்து அவருடன் மத்தகம் முட்டி அதிர்ந்து அசைவிழந்து நின்றாள். துதிக்கை பிணைத்து சுற்றி வந்தனர். பெருமரங்கள் குடை சரிய பாறைகள் உருண்டு சரிந்தோட காட்டை கலக்கி நிகர்வலு கொண்டு அசைவிழந்து ஒருவரை ஒருவர் அறிந்தனர்.

சிறகடித்து மரக்கிளையிலிருந்து எழுந்து இணைச்சிறகு விரித்து ஒளி நிறைந்த காட்டை சுற்றி வந்தனர். காற்றிலாடும் சிறுசில்லையில் அமர்ந்து ஐயன் வசந்தத்தின் காதல் பாடலை மீட்ட புள்ளிச்சிறகு குவித்து குமிண் சிரிப்புடன் இலைத்தழைப்புக்குள் அமர்ந்து அன்னை கேட்டிருந்தாள்.

செம்பருந்தென எழுந்து சூரியனை எதிர்கொண்டு பொன்னாகி அவன் சுற்றி வர மண்ணிலிருந்து எழுந்து அவன் அருகே சென்று அந்நிழலை தன் முதுகில் வாங்கி கீழே சுற்றி வந்தாள் அன்னை. மேலிலாத கீழிலாத வெளியில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தனர். நான்கு சிறகுகளால் காற்றைத் துழாவி பறந்து அமைந்தது புதிய பறவை.

நூறு உடல் கொண்டு முயங்கி விலகி நிறைவின்மையை உணர்ந்து மீண்டும் பொங்கி மீண்டும் முயங்கி உச்சம் கண்டு அவ்வுச்சத்தில் கால் வைத்தேறி மறு உச்சம் அடைந்து இன்னும் இன்னுமெனத் தவிக்கும் அகத்தை உணர்ந்து இதுவோ இதுவோ என்று வியந்தனர்.

பருகும் தோறும் விடாய்மிகும் நீர். எரிந்தெழுந்தாலும் கருகி அணைக்காத அனல். உண்டு தீராத தேன். முடிவற்ற பேரிசை. ஆயிரம் காலங்கள் கடந்திருந்தன. அவர்கள் காமம் கொண்டாடிய காடு பல்லாயிரம்முறை பூத்து தழைத்து செறிந்து பொலிந்தது. அவர்கள் காமம் காண்பதற்கென்று விண்ணிலும் மண்ணிலும் வியனுருக்கள் விழி என்றாகி வந்து நிறைந்தன.

இரு நுண்ணணுக்களாக மாறி நீரில் நொடித்து காமம் களித்தனர். பெரும் பசி கொண்டு ஒன்றை ஒன்று விழுங்கின கையற்ற காலற்ற விழியற்ற செவியற்ற வாயும் வயிறும் பசியும் மட்டுமேயான வெற்றுடல்கள். ஒன்றை ஒன்று உண்டு பசி தீர்த்தன. முற்றிலும் நிகர் நிலையில் காலம் மறைந்து சமைந்தன. விலகி விடிந்த வெறும்வெளி காலப்பொழுதில் தன்னை உணர்ந்த அன்னை நீள் மூச்சுடன் “ஆம், இது காம முழுமை” என்றாள். நகைத்தபடி அவளருகே எழுந்த சிவன் “ஆம், இனி ஒன்றில்லை” என்றார்.

“பிரம்மனை அழைத்து இக்கணமே அவனெண்ணிய முழுமையா என்று கேட்போம்” என்றார். கயிலைக்கு வந்து வணங்கி நின்ற பிரம்மன் “தங்கள் ஐயத்தை அறிந்தேன். இறைவா, தாங்கள் இருவரும் அறிந்தது மாமலையின் ஒரு பக்கத்தை மட்டுமே” என்றார். “மண்ணிலுள்ள அத்தனை உயிர்களாகவும் காமம் களியாடி மீண்டிருக்கிறோம். இனி பிறிதெது?” என்று சினந்தார் சிவன். “அத்தனை உயிர்களிலும் ஆணில் நின்றாடியிருக்கிறீர்கள் ஐயனே. ஆணறியும் காமமன்றி பிறிதெதை அறிந்தீர்கள்?” என்றார் பிரம்மன்.

தேவியை நோக்கி “பெண் அறியும் காமத்தை மட்டுமே தாங்களும் அறிந்துள்ளீர்கள் தேவி” என்றார். சிவன் சினந்து “அவ்வண்ணமெனில் அதுவே அறிதலின் எல்லை என்று கொள்க! செல்” என்றார். தலை வணங்கி பிரம்மன் சென்றதும் தேவி தலைகுனிந்து அசைவற்று நிற்கக் கண்ட சிவன் “சினந்தாயா? மூவரில் சிறியோன் அவன். அவன் சொல்லை பொருட்டாக எண்ணாதே. விடு” என்றார். “இல்லை, அவர் சொன்னது சரியென்று உணர்கிறேன்” என்றாள் அன்னை.

“என்ன சொல்கிறாய்? சக்தியென்றும் சிவமென்றும் நீயும் நானும் கொள்ளும் இருமையால் ஆக்கப்பட்டுள்ளது புடவி எனும் பெரும் படைப்பு. ஊடு பாவு அவிழ்வதென்றால் இந்நெசவு அழிவதென்றே பொருள்.” சினத்துடன் விழி தூக்கிய அன்னை “எச்சொற்களையும் நான் வேண்டேன். நான் விழைவது முழுக்காமம்” என்றாள். “எழுந்தபின் கனியாது அணைவதல்ல பெண்ணின் காமம் என்று அறியாதவரா நீங்கள்?”

“தேவி” என்று சொல்லெடுத்த இறைவனை நோக்கி கை நீட்டி “பேச வேண்டாம். என் விழைவு அது மட்டுமே” என்றாள். அழகிய வனமுலைகள் எழுந்தமைந்தன. குளிர் வியர்வை கொண்டது கழுத்து. மூச்சில் முகம் ஊதப்படும் பொன்னுருக்கு உலையென சுடர்ந்தணைந்தது. “உலகு புரக்கும் அன்னை நீ. அதை மறவாதே. ஆணென்றாகி நீ அக்கருணையை அழித்தால் என்னாகும் இப்புடவிப்பெருவெளி?” என்றார் சிவன். “அன்னையென்றானதால்தான் இப்பெரும் காமம் கொள்கிறேன். இனி இது கடக்காது ஒரு கணமும் இல்லை” என்றாள். அவள் தோளைத்தொட வந்த சிவனின் கையை தட்டி மாற்றி “இக்கணமே” என்றாள். பெரு மூச்சுடன் “எனில் அவ்வாறே ஆகுக!” என்றார் சிவன்.

காமிதவனத்தில் சிவன் நுதல்விழியும் செஞ்சடையும் குழல் கற்றைகளும் மகர நெடுங்குழை ஆடும் செவிகளும் மானும் மழுவும் சூலமும் துடியும் எனக்கொண்டு வந்து நின்றார். அவர் காலின் கட்டைவிரல் நெளிந்து தரையில் சுழன்றது. கணுக்கால்கள் குழைந்து மென்மை கொண்டன. தொடை பெருத்து, இடை சிறுத்து, பின்னழகு விரிந்து, முலைகள் எழுந்து குவிந்து, தோள்கள் அகன்று வில்லென வளைந்து, மென்புயங்கள் தழைந்து, தளிர் விரல்கள் மலர்மொக்குகளென நெளிந்து, கழுத்தின் நஞ்சுண்ட நீலக்கறை மணியொளி கொண்டு கன்னங்கள் நாணச்செம்மை பூண்டு, குறுநகை எழுந்த இதழ்கள் குவிந்து, நாணம் கொண்ட கண்களின் இமைசரிந்து சிவை எனும் பெண்ணாகி நின்றார்.

அருகே நீலஒளி கொண்ட உடலும் இமையா நீள்விழிகளும் பாசமும் அங்குசமும் சூலமும் விழிமணி மாலையும் கொண்டு நின்ற மலைமகள் விழிகளில் நாணம் மறைந்து மிடுக்கு கொண்டாள். கூர் மூக்கு நீள அதற்கு அடியில் கரிய குறுவாளென மீசை எழுந்தது. குறும்பு நகைப்பெழுந்த இதழ்கள். கல்லென இறுகி விம்மி புடைத்தெழுந்தன தோள்கள். முலை மறைந்து மென்மயிர் பரவல் கொண்டு புல்முளைத்த மலைப்பாறை என்றாயிற்று மார்பு. அடிமரங்களென நிலத்தில் ஊன்றின கால்கள். சக்தன் என்று அவன் தன்னை உணர்ந்தான்.

சிவையை நோக்கி சக்தன் கை நீட்ட நாணி அக்கையை தட்டிவிட்டு விழி விலக்கி துள்ளி பாய்ந்தோடினாள் சிவை. இரும்புச் சங்கிலிகள் குலுங்கும் ஒலியில் நகைத்தபடி அவளைத் தொடர்ந்து ஓடினான் சக்தன். பாய்ந்து நீரில் இறங்கி மூழ்கி விலாங்குமீனாக மாறி நெளிந்து அவள் மறைய தொடர்ந்து வந்து குதித்து பிறிதொரு மீனாக மாறி அவளை தொடர்ந்தான். நீர் நெளிந்து அவர்களை சூழ்ந்தது. கவ்வித்தழுவி புல்கி ஒருவர் பிறரை உணர்ந்தனர். புல்லாக, புழுவாக, வண்டாக, பாம்பாக, மானாக, மயிலாக, களிறாக, சிம்புள்ளாக, செங்கழுகாக காமம் ஆடினர்.

பின்பு இளஞ்சேறு படிந்த சுனைக்கரையில் காமத்தில் கனிந்த சிவையின் உடலை விழைவு நிமிர்த்த தன்னுடலால் அறிந்து இறுகி புதைந்து கரைந்து மறைந்தான் சக்தன். ஒன்றை ஒன்று விழுங்கி உச்ச கணத்தில் அசைவிழந்தன இரு அணுக்கள். ஒன்றான அவ்வணுவை தன் சுட்டு விரலால் தொட்டெடுத்து கண் முன் நோக்கி பிரம்மன் சொன்னான் “இது முழுமை.”

சக்தனும் சிவையும் இணைந்து அடைந்த காமத்தில் பிறந்தவள் காணபத்யை என்னும் பெண் தெய்வம். செவிகள் விரிந்த யானைமுகமும் பண்டி பெருத்த குற்றுடலும் கொண்டவள். மழுவும் பாசமும் ஏந்தி அவள் காமிதத்தின் நடுவே மலை ஒன்றில் கோவில் கொண்டாள். அவளுக்கு இளையவள் கௌமாரி. நீள்விழியும் மென்னகையும் பொன்னொளிர் திருமுகமும் கொண்ட சிறுமி. வேலேந்தி மயிலமர்ந்து தன் தமக்கை அருகே அவள் கோயில் கொண்டாள். காணபத்யையும் கௌமாரியும் காமிதத்தின் தனித்தெய்வங்களென்று அங்கிருந்த உயிர்கள் வழிபட்டன.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின் நதி கடந்து அக்காட்டில் கால் வைத்த முதல் முனிவர் அத்தெய்வங்களை கண்டுகொண்டார். அவர்களை கொண்டுவந்து மணிபுரி நாட்டின் வடகிழக்கு எல்லையில் இருந்த கௌமாரவனத்திலும் காணபத்யவனத்திலும் பதிட்டை செய்தார். மணிபுரத்தின் வசந்தமெழும் வனங்களில் எல்லாம் அவ்விரு பெண்தெய்வங்களும் கோவில் கொண்டிருந்தன.

பெருமழை காடு மூடி பெய்யும் காலத்திலும், பனி இறங்கி காடு திரையிடப்பட்டிருக்கும் போதும் அத்தெய்வங்களை எவரும் எண்ணுவதில்லை. இளவேனில் எழுந்து இலையுதிர்த்த மரங்கள் தளிர்கொள்ளும்போது சிறு துடி எடுக்கும் பாணனின் முதற் சொல்லில் இருந்து முளைவிட்டெழுந்து வருவார்கள் அவர்கள். களிமண்ணிலும் மென் மரத்திலும் அவர்கள் உருவங்களை அமைத்து ஏழு வண்ணங்களில் அணிசெய்து களித்தேரில் அமர்த்தி தெருக்களில் இழுத்து வந்து கொண்டாடுவார்கள். இளையோரும் மகளிரும் அதை சுற்றி கோலாடியும் வண்ணத் துணி வீசி நடனமாடியும் மகிழ்வார்கள்.

பாணர் சொல்லில் காமநோயுற்றெழும் காலம். வயல்களில் உறைந்த விதைகள் உயிர் கொண்டு உறைபிளந்து புன்னகைக்கும் காலம். வசந்தம் மணிபூரக நாடெங்கும் காமனும் தேவியும் இறங்கி களி கொண்டாடும் பருவம். அன்று ஒவ்வொரு உயிரும் சிவையும் சக்தனுமென ஆகும். காதலின் உச்சத்தில் சிவசக்தியென உருமாறும்.

லோகதடாகத்தின் வடக்கு எல்லையில், கரைச்சதுப்பு ஏறிச்சென்று இணைந்த நாணல் சரிவுக்கு அப்பால், குறுங்காடு எழுந்து பரவி வளைந்து முகில்சூடி நின்ற மலைகளின் அடிவாரத்தை அணுகியது. நீலப்பச்சை இலைத்தழைப்பு கொண்ட தேவதாரு செறிவாக மாறியது. குறுங்காட்டின் நடுவே நிரைவகுத்து நின்ற ஏழு தொன்மையான தேவதாருக்களின் கீழே காணபத்யையும் கௌமாரியும் இருபக்கமும் நின்றிருக்க நடுவே சக்தனும் சிவையும் அமர்ந்து அருள் செய்த சிற்றாலயம் இருந்தது.

மலைக்கற்களை அடுக்கிக் கட்டி மேலே மூங்கில் கூரையிட்ட ஆலயத்தின் உள்ளே கருங்கல் பீடத்தின்மேல் அமர்ந்திருந்த சிலைகள் முன்பு எப்போதோ சுண்ணமென்கல்லில் செதுக்கப்பட்டவை. காற்றும் நீரும் வழிந்தோடி உருவம் கரைந்திருந்தாலும் அவற்றின் விழிகளில் உயிர் இருந்தது. சருகை மிதித்து எவரோ வரும் ஒலியை கேட்ட சக்தன் சிவையிடம் புன்னகைத்து “அவர்கள்தாம்” என்றார். “முழுமை” என்று அவள் சொல்லி நாணினாள்.

ஆடையற்ற உடலுடன் அர்ஜுனன் சித்ராங்கதையை இடைசுற்றி அணைத்துக் கொண்டு அங்கே வந்தான். காய் பெருத்த கொடி என அவன் தோளில் குழல் சரித்து தலைசாய்த்து உடன் நடந்து வந்தாள் அவள். குறுங்காட்டின் சருகு மெத்தையில் அர்ஜுனனில் இருந்த ஃபால்குனையை அவள் அறிந்தாள். சித்ராங்கதையை அவன் அணைந்தான். பொழுது நிறைந்த மணல் கடிகை தன்னை தலைகீழாக்கிக்கொள்வது போல காமநிறைவின் கணத்தில் மீண்டும் அவர்கள் உருமாறினர். சித்ராங்கதையுடன் இருந்த அர்ஜுனன் ஃபால்குனையை அவளில் உணர்ந்தான். அவனில் எழுந்த சித்ராங்கதனில் திளைத்தாள் அவள்.

பெண்ணென திகழ்ந்தும் ஆணென எழுந்தும் உருமாறினர். தன் வாலை தானுண்டது நாகத்தின் செவ்வாய். ஒன்று மென்மை ஒன்று கடினம். ஒன்று நீர் ஒன்று தழல். ஒன்று வான் ஒன்று மண். ஒன்று கொடை ஒன்று நிறைவு. ஒன்று பெரிது. இரண்டும் என்றான ஒன்று. இரண்டென எழுந்து இங்கு நடிப்பது. இரண்டுக்கும் அப்பால் நின்று துடிப்பது. ஒன்றுளது. இரண்டுளது. ஒன்றில் எழுந்த இரண்டு. இரண்டறியும் ஒன்று. அதை சிவசக்தி என்றனர். சக்தசிவை என்றனர். ஆம் என்றனர். அதுவே என்றனர்.

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 1

மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று... நிறைய நாகர்களை கொன்று…” என்று சொன்னபடி கையிலிருந்த சிறிய மூங்கில் வில்லை எடுத்துக்கொண்டு குறுங்காட்டை நோக்கி ஓடினான். மரநிழல் ஒன்று அவனுக்குக் குறுக்கே விழுந்து நெளிய திகைத்து நின்று உடல் நடுங்கியபின் பறவை ஒலி போல் அலறி வில்லை கீழே போட்டுவிட்டு திரும்பி ஓடி வந்து மாலினியின் மடியிலேறி அமர்ந்து கொண்டான்.

வீரர் என்ன சென்ற விரைவிலேயே திரும்பிவிட்டார்?” என்றாள் சுபகை. “போ, நீ கெட்டவள்” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவன் மாலினியின் மார்பில் முகம் புதைத்தான். “என்ன சொல்கிறீர்கள் இளவரசே?” என்று அவள் அவன் கன்னத்தை பற்றினாள். “என் மாவீரனல்லவா? அரசனுக்கு அரசனல்லவா? சொல்லுங்கள்!” அவன் கண்களை விழித்து “அங்கே அவ்வளவு பெரிய நாகம்! பாதாளத்திலிருந்து அது வந்து படுத்திருக்கிறது” என்றான். “யானை நாகம் அது.”

மாலினி அவன் தலையை தடவியபடி “நாம் சொல்வனவற்றில் அவன் எதை கேட்கிறான், அவை எங்கு சென்று எப்படி உருமாறுகின்றன என்று யார் அறிவார்!” என்றாள். சுபகை  “பாதியைத்தானே கேட்கிறார்? எஞ்சிய நேரம் துயில்” என்றாள். “அறிதுயில்“ என்றாள் மாலினி. “நாம் சொல்லாத கதைகள் அவன் துயிலுக்குள் வளர்கின்றன.” சுபகை “ஆம்... இவரைப் பார்க்கையில் ஒரு சிறிய விதை என்றே தோன்றுகிறது” என்றாள். “அல்லது ஒரு துளி நெருப்பு” என்று மாலினி சொன்னாள். “அவனுக்குள் இருக்கும் ஆத்மன் துயிலில் எழுந்து அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றுமடி.”

சுஜயனை வருடி “ஆத்மனுக்கு அனைத்தும் தெரியும் என்பார்கள். இங்கு அது அடைவதெல்லாம் நினைவூட்டல் மட்டுமே” என்றாள் மாலினி. சுபகை குனிந்து சுஜயனின் கண்களைப் பார்த்து “இக்கண்களுக்கு எல்லாமே தெரியும் என்றே தோன்றுகிறது” என்றாள். சுஜயன் “எனக்கு எல்லாமே தெரியும்” என்றான். “என்ன தெரியும்?” என்றாள் சுபகை. “அர்ஜுனரும் சித்ராங்கதையும் விளையாடினார்கள்” என்றான். அவள் “என்ன விளையாட்டு?” என்று சிரித்தபடி கேட்டாள். “பாம்பு விளையாட்டு” என்று அவன் சொன்னான்.

மாலினியின் கண்களைப் பார்த்தபின் “என்ன பாம்பு விளையாட்டு?” என்றாள். “இருவரும் பாம்பாக மாறினார்கள்” என்றபின் அவன் மூக்குக்குள் கையை விட்டு துழாவியபடி கண்களை உருட்டி தலையை அசைத்தான். சொற்களுக்காக அவன் முட்டித் ததும்பி பின்பு எழுந்து நின்று கைகளை விரித்து “அர்ஜுனர்! அவர் பெண்பாம்பு. சித்ராங்கதை ஆண்பாம்பு” என்றபின் கைகளைப் பிணைத்து “அப்படி விளையாடினார்கள்” என்றான். “அதன் பிறகு... அதன்பிறகு...” என்றபின் “அதன்பிறகு சித்ராங்கதை பெண்பாம்பு, அர்ஜுனர் ஆண்பாம்பு” என்றான்.

சுபகை வியந்து வாயில் கை வைத்து “அய்யோ!” என்றாள். “நாம் இவர் துயிலும்போது பேசுகிறோம். எங்கோ ஒரு செவி நம் குரலுக்காக வைத்திருக்கிறார்” என்றாள். “இல்லையடி, நாம் சொன்னவற்றிலிருந்து அவனது ஆத்மா நீட்டித்து கொள்கிறது. ஜாக்ரத் புறவுலகு என்றால் அதை அறியும் ஸ்வப்னம் ஆத்மாவின் உலகம். சுஷுப்தி ஆன்மாவை ஆளும் தெய்வங்களின் உலகம். துரியம் பிரம்மத்தின் உலகத்தை சார்ந்தது” என்றாள் மாலினி.

அவள் கன்னத்தை பற்றித் திருப்பி “நான் பார்த்தேன்” என்றான் சுஜயன். “என்ன பார்த்தீர்கள்?” என்று சுபகை கேட்டாள். “அர்ஜுனர் அவ்வளவு பெரிய வாள்... இல்லை… மூன்று வாளால் சித்ராங்கதையை வெட்டினார்” என்றான். திகைப்புடன் “ஏன்?” என்றாள் சுபகை. “ஏனென்றால் அவள் பெரிய வாளால் அர்ஜுனரை வெட்டினாள். இருவரும்… ஒரே குருதி. அவ்வளவு குருதி... சிவப்பாக... ஏழு குருதி” என்றான். “சரி” என்றபோது சுபகையின் விழிகள் மாறியிருந்தன. “அந்தக்குருதியில் அவர்கள் பாம்பாகி...” என்றபின் அவன் வாயில் கட்டை விரலை விட்டு சுபகையை நோக்கி பேசாமலிருந்தான்.

“சொல்க இளவரசே” என்றாள் மாலினி. சுபகையை சுட்டிக்காட்டி “இவளை பார்க்க எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான் சுஜயன். “ஏன்?” என்று மாலினி கேட்டாள். “இவள் கண்கள் பாம்புக் கண்கள் போல் உள்ளன” என்றான். “என் கண்களா?” என்று சுபகை அருகே வந்தாள். “அருகே வராதே. நீயும் பாம்பாகிவிட்டாய்” என்றான் சுஜயன். “வேறு யார் பாம்பாக இருந்தார்கள்?” என்று மாலினி கேட்டாள். “அவர்கள் இருவரும் பாம்பாக இருந்தார்கள். இருவர் விழிகளும் பாம்பு போல் இமைக்காதிருந்தன. இதோ உன் விழிகளும் அப்படித்தான் உள்ளன.”

“நீ அவளிடம் பேசவேண்டாம் என்னிடம் பேசு” என்று சொல்லி மாலினி சுஜயனை தூக்கி மடியில் வைத்து மார்புடன் அணைத்துக் கொண்டாள். “எனக்கு அவளை பிடிக்கவில்லை” என்றான் சுஜயன். “நீ அவளிடம் பேசவேண்டாம்” என்று மாலினி அவன் கன்னங்களை முத்தமிட்டாள். பின்பு “எதற்காக அவர்கள் வெட்டிக் கொண்டார்கள் இளவரசே?” என்றாள்.

“அவர்கள் பாம்பாக இருந்து தண்ணீரில் நீந்தி கரையேறியபோது மனிதர்களாகி விட்டார்கள். அப்போது இரண்டு தேவர்கள் வந்து அவர்களிடம்...” என்றபின் அவன் சிந்தனை செய்து தலையை சரித்து “தேவர்களில்லை… பேய்கள்” என்றான். “பேய்களா?” என்றாள் சுபகை. “நீ என்னிடம் பேசாதே. நீ பாம்புக் கண்களுடன் இருக்கிறாய்” என்றான். “சரி அவள் பேசவில்லை. நான் கேட்கிறேன், தேவர்களா பேய்களா?” என்றாள் மாலினி.

அவன் இரண்டு விரல்களை காட்டி “ஒரு பேய் ஒரு தேவர்” என்றான் சிரித்தபடி. “சரியாக சொல்கிறார்” என்றாள் சுபகை. “பேசாமல் இரடி” என்று அவளை கடிந்தபடி மாலினி அவன் தலையை தடவி “சொல்க இளவரசே” என்றாள். “பேய்… பிறகு ஒரு தேவன்... இருவரும் வந்தனர். பேய் பெண்ணாக இருந்தது. தேவன் ஆண். இருவரும் கையில் வாள் வைத்திருந்தார்கள். அந்த வாளை அவர்கள் அர்ஜுனருக்கும் சித்ராங்கதைக்கும் கொடுத்தார்கள். அதை வைத்துக் கொண்டு அவர்கள் போர் புரிந்து ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டார்கள். இருவர் உடலிலும் குருதி வழிந்தது. பிறகு...”

அவன் நாணம் கொண்டு இரு கால்களையும் குறுக்கி கைகளை நடுவே வைத்துக் கொண்டு உடலை இறுக்கினான். “என்ன?” என்றாள் மாலினி. “சொல்லமாட்டேன்” என்று அவன் தலை அசைத்தான். “சொல், என் கண்ணல்லவா?” என்றாள் மாலினி. “ம்... சொல்லமாட்டேன்” என்று சொல்லி முகத்தை அவள் மார்பில் புதைத்துக் கொண்டான். ஆவல் தாளாமல் அருகே வந்த சுபகை “சொல்லுங்கள் இளவரசே’’ என்றாள். “நீ என் அருகே வராதே. நீ கெட்டவள்’’ என்றான் சுஜயன். “சொல்லுங்கள் இளவரசே, நான் உங்களுக்கு கார்த்தவீரியன் கதை சொல்கிறேன். என்ன பார்த்தீர்கள்?” என்று அவள் கேட்டாள்.

சுஜயன் எழுந்து அவள் கழுத்தை தன் கைகளால் வளைத்து காதுக்குள் “அவர்கள் நக்கிக் கொண்டார்கள்” என்றான். அவள் “ஏன்?” என்றாள். “அவள் உடலில் இருந்த குருதியை அர்ஜுனர் நக்கினார். அர்ஜுனர் உடலில் இருந்த குருதியை அவள் நக்கினாள். சிவந்த பெரிய நாக்கு… நாய் போல… இல்லை புலி போல.” சுபகை “எவ்வளவு நேரம் நக்கினார்கள்?” என்றாள். “நிறைய நேரம். ஏழு நேரம்” என்று அவன் சொன்னான். பின்பு ”நக்க நக்க குருதி வந்து கொண்டே இருந்தது” என்றான்.

“பிறகு?” என்றாள் சுபகை. அவன் அவளைப் பார்த்தபின் “இவள் அரக்கி. சிறிய குழந்தைகளை தின்பாள்” என்றான். “அவளை நுண் சொல் ஏவி கட்டிவிடலாம். நான் உன்னுடன் இருக்கிறேன் இளவரசே” என்று மாலினி சொன்னாள். சுஜயன் “நீ நல்லவள்” என்று அவள் கையைப்பற்றி தன் வயிற்றில் வைத்து அழுத்திக் கொண்டான். “அதன் பின் என்ன பார்த்தீர்கள்?” என்றாள் சுபகை. “அதன்பின்... அதன் பின்னும் அதே போல ஒரு பேய். இன்னொரு தெய்வம். அந்தப்பேய் ஆண். அதன் தலையில் மணிமுடி இருந்தது. அந்த தேவதை நீண்ட ஆடை அணிந்திருந்தாள். காற்றில் அந்த ஆடை நெடுந்தூரம் பறந்தது, முகில் போல. அவர்கள் கையிலிருந்த வாளை மீண்டும் கொடுத்தார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரும் வாட்போர் புரிந்தனர்.”

”அதன்பிறகு குருதியை நக்கிக் கொண்டனர் அல்லவா?” என்றாள் மாலினி. “எந்த தெய்வம் உருவாக்குகிறது இக்கனவுகளை?” சற்றே பதறியவள் போல் மாலினியிடம் கேட்டாள் சுபகை. மாலினி “கனவுகளை கட்டுப்படுத்தும் சொற்கரைகள் அவனிடம் இல்லை” என்றாள். சுஜயன் “அதன் பிறகு அவர்கள் இருவரும் காட்டுக்குள் ஓடி ஒரு சுனையில் இறங்கினர். அதில் மீன்களைப்போல விளையாடினார்கள். பிறகு அவர்கள் காட்டுக்குள் சேற்றில் படுத்திருந்தார்கள்” என்றபின் கிளுகிளுத்து சிரித்து எழுந்து வந்து “அவள் இவ்வளவு சிறிய குழந்தை” என்றான். “யார்?” என்றாள் சுபகை. “அவள்தான் சித்ராங்கதை... இளவரசி” என்றான். “அர்ஜுனர் இவ்வளவு சிறிய குழந்தை” என்று கையால் மேலும் சிறிய அளவை காட்டினான்.

“இவ்வளவு சிறிய குழந்தைகளா? புழுக்கள் போல் இருப்பார்களே” என்றாள் மாலினி. “புழுக்களைப்போல” என்று சொன்னபின் அவன் விரலை நெளித்து “புழுக்களைப் போன்ற குழந்தைகள். அவர்கள் அருகருகே ஒட்டிக்கொண்டு படுத்து அழுதார்கள்” என்றான். “அழுதார்களா?” என்றாள் மாலினி. ”அழவில்லை” என்று அவன் தலை அசைத்தான். “அசையாமல் அப்படியே படுத்திருந்தார்கள்” என்றான்.

“அதன் பிறகு?” என்று சுபகை கேட்டாள். “அதன் பிறகு நான் அந்தக் காட்டை விட்டு வந்தேன். வானத்தில் மூன்று கழுகுகள்” என்றபின் அவன் அதை அழிப்பது போல சைகை காட்டி “ஏழு கழுகுகள்… யானைகளை தூக்கி வந்தன” என்றான். “அவ்வளவுதான். தெய்வம் மலைக்கு திரும்பிவிட்டது” என்றாள் சுபகை. “கழுகுகளை நான் துரத்திக் கொல்லும்போது அவை பாறைகளை தூக்கி வீசுகின்றன. அதோ அந்த மலை மேல் இருக்கும் பாறைகள் அளவுக்கு பெரிய பாறைகள்” என்றான் சுஜயன்.

சற்றே துள்ளி கைவிரித்து “அவற்றை நான் என்னுடைய வாளால் உடைத்தேன். இல்லை என்னுடைய கதாயுதத்தால் ஓங்கி அடித்தேன். ஆனால்...” என்று திக்கலும் விரைவுமாக சுஜயன் சொன்னான். “என்னுடைய கதாயுதம் மிகவும் பெரியது. கரிய இரும்பு அது. அதை வைத்து ஒரே அடியில் இந்தப்பாறைகளை உடைக்கமுடியும்.” ஓடிச்சென்று இருகைகளை விரித்து அங்கிருந்த மரத்தை காட்டி “அந்த மரத்தை நான் ஒரே அடியில் உடைப்பேன்” என்றான்.

மாலினி சுபகையிடம் “மிகச் சரியாகவே சென்றடைந்திருக்கிறான்” என்றாள். “எனக்கு புரியவில்லை” என்றாள் சுபகை. “ஏனெனில், நீ காதலையும் காமத்தையும் அறிந்திருக்கிறாய். நான் இளைய பாண்டவனை அன்றி பிறிதொரு ஆண்மகனை தொட்டதில்லை” என்றாள் மாலினி. சுபகை சிரித்து “நானும்தான்” என்றாள். “சீ போடி” என்று அவள் தொடையில் அடித்தாள் மாலினி.

“அப்படியென்றால் எப்படி அறிந்தீர்கள்?” என்று சுபகை கேட்டாள். “நதியில் இறங்குபவர்கள் அதை அறிவதில்லை. உயிர் காக்க மூச்சு குவித்து நீச்சலிடுவதை மட்டுமே செய்கிறார்கள். நான் நெடுங்காலமாக இதன் கரையில் இப்பாறைமேல் விழிகூர்த்து அமர்ந்திருக்கிறேன்” என்று மாலினி சொன்னாள்.

“இளைய பாண்டவன் இரண்டு வருடங்கள் அங்கிருந்ததாக காவியம் சொல்கிறது” என்றாள் மாலினி. சுபகை நகைத்து “இக்காவியங்களில் ஒவ்வொரு ஊரிலும் அவர் இருந்த வருடங்களை கூட்டி நோக்கினால் இதற்குள்ளாகவே அவருக்கு நூறு வயது கடந்திருக்கும்” என்றாள். மாலினி “காவிய நாயகர்கள் ஒருவரல்ல. ஓருடலில் திகழும் மானுடத்திரள். அவர்களை விராடர்கள் என்பது வழக்கம்” என்றாள். “காட்டிலிருந்து ஆணும் பெண்ணுமாக உருமாற்றம் அடைந்து அவர்கள் இருவரும் அரண்மனைக்கு வந்தபோது மணிபுரி நகரமே திகைத்தது. அவர்களுக்குப்பின்னால் நகரமக்கள் சொல்விக்கியவர்களாக ஆயிரம் படகுகளில் தொடர்ந்து சென்றனர்.’’

“அமைச்சரும் அரசியரும் அரசரும் உண்மை என்னவென்று அறிந்திருந்தனர். பிறருக்கு அது எண்ணிப் பார்க்க அகம் பதைக்கும் கனவு போல் இருந்தது. கொலை வாளும் கொடும் சினமும் கொண்ட இளவரசர் விழிகனிந்து உடல் குழைந்து இளவரசியென வந்தாள். சுடரென ஒளிகொண்டு உடல்நெளிந்த நடனப்பெண் இளங்களிறு போன்ற ஆண்மகனாகி உடன் வந்தான்” என்றாள் மாலினி. “அதற்கிணையான ஒன்று கதைகளிலேயே நிகழமுடியுமென்பதனால் ஒவ்வொருவரும் கதைகளுக்குள் புகுந்துகொண்ட உணர்வை அடைந்தனர்.”

சித்ரபாணனின் அவையில் இருவரும் சென்று நின்றபோது ஒற்றை மூச்சொலியாக முகங்கள் செறிந்த அவை ஒலித்தது. அங்கிருந்த குடிமூத்தார் சிலர் அதை நோக்கமுடியாதவர்களாக விழிகளை விலக்கிக்கொண்டனர். சித்ரபாணன் அவையினரை வணங்கி “மூத்தகுடியினர் என் பிழை பொறுக்கவேண்டும். என் அரசி பெற்றது ஒரு மகளையே. மீண்டும் பெண் என்று அறிந்ததும் உளம் சோர்ந்து சென்று அன்னை மணிபத்மையின் ஆலயத்து படியில் அமர்ந்து விட்டேன். என் கண்ணீர் துளிகள் அங்கே விழுந்தன.”

“என் சிறு நாட்டை சூழ்ந்திருந்த எதிரிகள் செய்தியறிந்து சிரித்து கொப்பளிப்பதை கண்டேன். உனக்கென எழுந்த இச்சிறு நாடு அழிவதே உன் சித்தமா என்று அன்னையிடம் கேட்டேன். என்றோ அழியுமென்றால் அது இன்றே அழிக! இப்படிகளிலிருந்து எழுந்து செல்லமாட்டேன். இனி உணவும் நீரும் அறிந்துவதில்லை என்று வஞ்சினம் உரைத்து அங்கு அமர்ந்தேன். உடல் சோர்ந்து அங்கேயே துயின்றபோது என் கனவில் அன்னை எழுந்தாள். எட்டு தடக்கைகளில் படைக்கலன்களும் செம்மணிவிழிகளும் தழற்சடைப் பெருக்கும் கொண்டு நின்றாள். திகைத்து விழித்துக் கொண்டபோது புரியாத வானொளி ஒன்றால் என் அரண்மனையும் ஆலயமுற்றமும் கருவறை சிலையும் ஒளி பெற்றிருப்பதை கண்டேன்.”

“அனைத்தும் மறைந்தபின்னரே அன்னை என்னிடம் சொன்னதை என் சொல்மனம் புரிந்து கொண்டது. திரும்பி வந்து என் பட்டத்தரசியை அழைத்து நமக்குப் பிறந்துள்ளது பெண்ணல்ல, ஆண் என்றேன். என்ன சொல்கிறீர்கள் என்று அவள் திகைத்தாள். இவள் பெயர் சித்ராங்கதன். இனி இவள் ஆண். அன்னை முடிவெடுக்கும் வரை இவள் நாம் விழையும் தோற்றத்தில் இருக்கட்டும். நாமன்றி பிறர் இவள் பெண்ணென்று அறிய வேண்டியதில்லை. அது எப்படி இயலும் என்று அவள் சொன்னாள். இது என் ஆணை. இனி இக்குழவியை கைதொட்டும் விழிதொட்டும் சொல்தொட்டும் அணுகும் எவரும் இவள் பெண்ணென உணர்த்தலாகாது என்றேன்."

“ஆணென்றே எண்ணவும் ஆணென்றே பழகவும் பயின்றால் இவள் ஆணென்றே ஆவாள் என்று நான் வகுத்தேன். தானொரு பெண் என்று ஒரு போதும் இவள் அறியலாகாது என்றேன். சின்னாட்களிலேயே பெண்ணென இவள் பிறந்த செய்தி அரண்மனையின் ஒருசில உள்ளங்களுக்குள் ஆழ புதைந்து மறைந்தது. இவளில் எழுந்த பெண்மையை அழித்தேன். படைக்கலப்பயிற்சி அளித்தேன். நெறி நூல் கற்பித்தேன். இளவரசனென்றே வளர்ந்தெழச் செய்தேன். இவள் சென்ற களங்கள் எங்கும் ஆண்மையே வெளிப்பட்டது. இங்குள எவரும் இவளை பெண்ணென எண்ணியதில்லை” என்றார் சித்ரபாணன்.

குடி மூத்தார் ஒருவர் எழுந்து “பொறுத்தருள்க அரசே! எங்கள் அனைவரின் கனவிலும் எப்போதும் இளவரசர் பெண்ணென்றே தோன்றினார். எங்கள் குலதெய்வங்கள் சன்னதமெழுகையில் இளவரசரை பெண்ணென்றே குறிப்பிட்டன. உண்மையில் இங்குள்ள குடிகள் அனைத்தும் அறிந்திருந்தோம், அவர் பெண்ணென்று. அதை எங்கள் உள்ளத்தின் முற்றம் வரை கொண்டு வர நாங்கள் துணியவில்லை. பல்லாயிரம் சொற்களால் புனைந்து அவரை ஆணென உளம் கொண்டோம்” என்றார். புன்னகையுடன் “ஆம்” என்றார் அமைச்சர்.

திகைத்து தன் தேவியை நோக்கியபின் சித்ரபாணன் “நானும் என் கனவில் அவளை பெண் என்றே உணர்ந்தேன்” என்றார். சித்ராங்கதை இதழ்களில் நாணப்புன்னகை தவழ விழி சரித்து “என் கனவுகளிலும் எப்போதும் நான் பெண்ணாகவே இருந்தேன் தந்தையே” என்று இனிய மென் குரலில் சொன்னாள். பட்டத்தரசி நகைத்தாள்.

“பெண்ணென தன்னை உணராத இவள் உடல் பெண்ணுருக்கொண்டு வந்த இளைய பாண்டவரை அறிந்த விந்தையை தெய்வங்களே அறியும்” என்றார் சித்ரபாணன். “அன்று சிவதையின் கரையிலிருந்த எல்லைப்புற ஊரிலிருந்து திரும்பியபோது இளவரசியின் உடல் பெண்ணென தன்னை அறிவித்தது. அதை சேடியர் என்னிடம் சொன்னபோது சினத்துடன் அரண்மனை மருத்துவரை அறிந்து உசாவினேன். அவர்கள் பிழை புரிந்தனர் என்றால் அக்கணமே கழுவேற்றவும் சித்தமாக இருந்தேன்.”

“ஏனென்றால் இளவரசி பிறந்த நாள் முதல் ஒவ்வொரு வாரமும் மருத்துவர்கள் அவளுக்கு பெண்மையை தவிர்த்து ஆண்மையை ஊட்டும் மருந்துகளை அளித்து வந்தனர். ஆண் குதிரையின் வெண்துளியை உயிருள்ள சிப்பியின் உடலில் வைத்து வளர்த்தெடுக்கும் மருந்து அது. பதினெட்டு வயது வரை அவளை உடலெங்கும் பெண்ணெனும் பாவனையே இல்லாமலே நிறுத்தியது அம்மருந்துகளின் வல்லமைதான். உடல் அறியாததை அவள் உள்ளமும் அறியவில்லை. ஒவ்வொரு நாளும் புறச்சூழல் அவளை ஆணென்றே நடத்தியதால் ஆணென்றே இருந்தாள். இன்றென்ன நடந்தது என கூவினேன்.”

“மருந்துகளும் மந்தணச் சொற்களும் உடலையும் உள்ளத்தையுமே ஆள்கின்றன. ஆன்மாவை ஆளும் தெய்வங்களுக்கான தருணம் ஒன்று வந்திருக்கலாம் அரசே” என்றார் முதுமருத்துவர். ஒற்றர்களை அனுப்பி அங்கு என்ன நடந்தது என்று கேட்டு வரச் சொன்னேன். ஃபால்குனை என்னும் பேரழகி அங்கு வந்ததைப்பற்றி மட்டும் அறிந்தேன். அவள் உள்ளத்தின் மந்தணச் சுனையைத் தொட்டு ஊற்றெடுக்க வைக்கும் ஒரு ஆணழகன் அங்கு வந்திருக்கலாம் என்பதே என் எண்ணமாக இருந்தது. அவ்வாறல்ல என்று உணர்ந்தபோது என்ன சொல்வதென்று தெரியவில்லை. கந்தர்வர்களோ தேவர்களோ காட்டில் இறங்கி வந்திருக்கலாம் என்றனர் நிமித்திகர்."

"என் பட்டத்தரசியிடம் சொல்லி தன் மகளிடம் உரையாடச் சொன்னேன். சேடியரையும் செவிலியரையும் அனுப்பி அவள் உள்ளத்தை அறிந்துவர ஆணையிட்டேன். அவளுக்கே என்ன நிகழ்கிறது என்று தெரியவில்லை என்றும், ஐயமும் அதிர்ச்சியும் கொண்டிருக்கிறாளென்றும் சொன்னார்கள். இருண்ட தனிமையில் சோர்ந்து அமர்ந்திருக்கையில் அவள் இமை கசிந்து விழிநீர் வடிவதைக் கண்டு என்னிடம் சொன்ன செவிலி 'அரசே, என் ஐம்பதாண்டு வாழ்க்கையில் நூறு முறை நான் கண்டது இது. காதல் கொண்ட இளம் கன்னியின் கண்ணீரேதான், பிறிதொன்றுமில்லை' என்றாள்."

“அக்காதலன் யார் என்று அறிந்துவா என்றேன். கன்னியே அறியாத காதலர்கள் அவளுக்கு இருக்கக் கூடும். அவள் சித்தமும் புத்தியும் அறியாமல் ஆன்மாவுடன் விளையாடிச் செல்லும் கந்தர்வர்கள் உண்டு என்றாள் அவள். மீண்டும் ஒற்றர்களை அனுப்பி உசாவியபோது ஃபால்குனை என்னும் அப்பெண் சிவதையின் கரையிலிருந்த எல்லைச் சிற்றூரின் குடியினர் அத்தனை பேரையும் ஆண்மை கொள்ளச் செய்திருப்பதை அறிந்தேன். அவர்கள் தாங்களே படைக்கலம் ஏந்திச் சென்று கீழ்நாகர்களை வென்றார்கள். அவள்தான் என்றது என் உள்ளம். என் அரசுக்குள் நேற்றுவரை இன்றி இன்று வந்தவள் அவளே.”

“அவளை நேரில் காண வேண்டுமென்று இங்கு வரச்சொன்னேன். பெண்ணெழில் கொண்டு இங்கு வந்து நின்ற அவளைக் கண்டபோது அவள்தான் என்று உறுதியாக அறிந்தேன். என் மகளை பெண்ணாக்கியது இப்பெண்ணழகை தானும் அடையவேண்டுமென்ற பெண்ணுடல் விருப்பா என்று குழம்பினேன். நாள் முழுக்க அவை அமர்ந்து நிமித்திகருடனும் அமைச்சருடனும் மருத்துவருடனும் உரையாடினேன். அவர்கள் இணையட்டும். இங்கு எது நிகழ வேண்டுமோ அதை தெய்வங்கள் நிகழ்த்தட்டும் என்றாள் அரசி. அவ்வண்ணமே ஃபால்குனையை இளவரசியின் வில்தொழில் ஆசிரியையாக அமர்த்தினேன்.”

அமைச்சர் நகைத்து “இளவரசியின் பெண்மையை அவர் எழுப்பினார். அவரில் ஆண்மையை இளவரசி எழுப்பினாள். சிவனும் சக்தியும் ஒருவரை ஒருவர் நிகழத்திக் கொள்கிறார்கள் என்கின்றன நூல்கள்” என்றார். அர்ஜுனன் அவையை வணங்கி “பிறிதொரு கோலம் கொண்டு இந்த அவை புகுந்தமைக்கு பொறுத்தருள வேண்டுகிறேன். ஆனால் பெண்ணுருக்கொண்டு இங்கு வந்தமையாலேயே அன்னை மணிபத்மையின் மண்ணை முழுதறியும் தகைமை கொண்டேன். பெண்ணென்று ஆகாதவன் புவியை அறிவதில்லை. முலை கொள்ளாதவன் படைப்பை உணர்வதில்லை. அம்முழுமை இங்கெனக்கு நிகழ்ந்தது” என்றான்.

“இளைய பாண்டவரே, உங்கள் கதைகளைக் கேட்டு எங்கள் மைந்தர் வளர்கிறார்கள். நீங்களே இங்கெழுந்தருளியது அன்னை மணிபத்மையின் அருள். ஓர் ஊரை வெற்றிகொள்ளும் வீரர்களென ஆக்கியபோதே உங்களை நான் உய்த்தறிந்திருக்கவேண்டும்” என்றார் சித்ரபாணன். “உங்கள் குருதியில் எங்கள் குலம் காக்கும் மாவீரன் எழட்டும். அவன் பெயரால் மணிபுரி என்றும் நூலோர் சொல்லிலும் சூதர் இசையிலும் வாழ்வதாக!” அர்ஜுனன் தலைவணங்கி “தெய்வங்கள் அருள்க!” என்றான்.

வந்தவன் இளைய பாண்டவன் என்னும் செய்தி பரவியபோது வெளியே படகுகளிலும் புதர்த்தீவுகளிலும் நின்றிருந்த மணிபுரியின் மாந்தர் துள்ளிக்குதித்து கூச்சலிட்டனர். ஏரிநீரின் மீது பிறிதொரு அலையென உவகை கடந்துசென்றது. "இளைய பாண்டவர் அவர். இந்திரப்பிரஸ்தத்தின் தலைவர்” என்றான் ஒருவன். “பெண்ணென்றாகி நம் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.”

குலப்பாடகன் ஒருவன் கைகளைத் தூக்கி “அங்கு நிகழ்ந்தது என்ன என்று நானறிவேன். கொலைவில்லும் கண்களில் கூர்மையுமாக இளைய பாண்டவர் நம் எல்லைக்குள் நுழைந்தபோது யானைகளை குண்டலமாகவும் கழுத்துமாலையின் மணிகளாகவும் கொண்டு அன்னை மணிபத்மை அவர் முன் பேருருக்கொண்டு எழுந்தாள். என் மைந்தரின் மண் இது. உள்ளே அயலவனாகிய உனக்கு இடமில்லை என்றாள்” என்றான்.

எல்லோரும் அவனைச் சூழ்ந்தனர். “படைக்கலமேந்திய போர்வீரர் எவர் இவ்வெல்லை கடந்தாலும் அழிப்பதென்று எண்ணம் கொண்டுள்ளேன் என்று அன்னை மணிபத்மை அவரிடம் சொன்னாள். குட்டிகளுக்கு அருகே கண் துஞ்சாது கிடக்கும் அன்னைப்பெரும்பன்றி நான். கண்கனிந்து அவர்களை நக்கிக்கொண்டே இருப்பவள். ஆனால் அயலவன் காலடியோசை கேட்டால் முள்விரித்து விழி எரிய சினந்து எழுவேன். குடல் இழுத்து நீட்டுவேன். அகல்க! என்றாள்.”

“அன்னையை நோக்கி புன்னககைத்து தானறிந்த புருஷ மந்திரத்தால் தன்னை பெண்ணென்று ஆக்கிக்கொண்டார் விஜயன். தன்னுருவை அன்னை மணிபத்மையின் உருவமென்றே பூண்டார். இனி எனக்கு தடைகளில்லையே அன்னையே என்றபடி எல்லைகடந்து உள்ளே வந்தாள். அவள் எழில்கண்டு அன்னை புன்னகைத்து நீயே நான், இனி உன் குருதி இம்மண்ணில் விளையும் என்று மொழியளித்தாள்” என்றான் பாணன். “அன்னை மணிபத்மையே ஃபால்குனை என்னும் பேரழகுத்தோற்றம் கொண்டு இம்மண்ணுக்கு வந்தாள்.”

“அன்னை வாழ்க! அவள் கால்பட்ட இம்மண் வாழ்க! அவள் விழிதொட்ட எங்கள் குடிவாழ்க!” என்று கூவினர் மணிபுரியின் மக்கள். “அன்னை எழுந்தாள். அவள் அன்னை வடிவம்” என்று ஒருவருக்கொருவர் கூவிக்கொண்டனர். அன்னை மணிபத்மையின் ஆலயங்கள் அனைத்திலும் அன்று சிறப்பு பூசெய்கையும் பலிக்கொடையும் நிகழ்ந்தன. அன்னையின் காலடியில் வலப்பக்கம் அவளுடைய மானுடவடிவான ஃபால்குனைக்கும் மரத்தாலும் களிமண்ணாலும் சுண்ணக்கல்லாலும் ஆன அழகிய சிறிய சிலைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கும் பூவும் மலரும் அளிக்கப்பட்டன.

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 2

அர்ஜுனனும் சித்ராங்கதையும் கொண்ட மணநிகழ்வை ஒட்டி மணிபுரியில் பதினெட்டுநாள் விழவு கொண்டாடப்பட்டது. குலமூத்தாரும் குடிகளும் கூடிய பேரவையில் அனல் சான்றாக்கி அவள் கைபற்றி ஏழு அடிவைத்து எழுவிண்மீன் நோக்கி குடிமுறைப்படி அவளுக்கு கணவனானான். மூதன்னையர் நூற்றெண்மர் நிரைவகுத்து வந்து சித்ராங்கதையை மஞ்சளரிசியும் மலரும் நீரும் சொரிந்து வாழ்த்தி “மாமங்கலையாகுக!” என்று அருளினர். காட்டில் வளைத்து வளர்க்கப்பட்ட பொன்மூங்கில்களை வெட்டிவந்து புதியதோர் கொடித்தீவில் அவர்களுக்கு மாளிகை அமைத்தனர்.

அங்கே அவர்கள் வாழும் காதல்வாழ்க்கையைப்பற்றி மணிபுரியின் பாணர் பல பாடல்களை பாடினர். நள்ளிரவில் அர்ஜுனன் பெண்ணாவான் என்றும் அவள் ஆணாகி அவனை அணைத்துக்கொள்வாள் என்றும் கதைகள் சொல்லின. ஆணும் பெண்ணும் காதலில் ஆடைமாற்றிக்கொண்டு மகிழ்வது அதன்பின்னரே மணிபுரியில் பரவலாயிற்று. அன்னை மணிபத்மையின் திருவிழாவில் ஆண்கள் பெண்களைப்போல முகத்தில் செஞ்சாயம் பூசி பட்டாடை அணிந்து அணியும் மலரும் சூடி ஆடிச்செல்லுதல் சடங்கென ஆயிற்று. பெண்ணுருவில் அழகியென தோன்றுபவனே தகுதியான இளைஞன் என பெண்கள் எண்ணத்தலைப்பட்டனர். வில்லில் நாண் நிலைக்க பெண்ணென ஆகி மீள்க என்று பாணன் பாடிய வரி பழமொழியென்றே ஆகியது.

கார்காலம் வந்தபோது சித்ராங்கதை கருவுற்றாள். மைந்தன் பிறப்பான் என்று நிமித்திகர் வகுத்துரைத்தனர். தந்தைக்கு நிகரான வில்லவன், பாரதவர்ஷம் உள்ளளவும் வரலாறு சொல்லும் மாவீரன் என்று அவனை பாணர் பாடத்தொடங்கினர். மைந்தன் பிறக்க மணிபத்மையின் ஆலயத்தில் நாள்பூசைகளும் பலிக்கொடைகளும் நிகழ்த்தப்பட்டன. இளவரசி வலப்பக்கம் கை ஊன்றி ஒசிகிறாள் என்றாள் ஒரு செவிலி. அவள் தொப்புள் விரிந்து வலப்பக்கமாக இழுபட்டுள்ளது என்றாள் மருத்துவச்சி. கண்களுக்குக் கீழே கருமை படர்ந்துள்ளது. கனவுகளில் சிம்மங்களைக் காண்கிறாள். மைந்தனே வரப்போகிறான் என்றனர் நிமித்திகர்.

மணிபுரியே நோக்கியிருந்த மைந்தன் முதுகோடைகாலத்தில் பிறந்தான். சைத்ரமாதம் ஏழாம் நிலவுநாளில் பிறந்த அவன் அறத்தின் தேவனாகிய தருமனுக்கு பிரபாதை என்னும் மனைவியில் பிறந்த மைந்தனும் எட்டு வசுக்களில் ஒருவனுமாகிய பிரபாசனின் மண் நிகழ்வு என்றனர் நிமித்திகர். தன் தமையனின் தோற்றம் அவன் என்று அர்ஜுனன் மகிழ்ந்தான். இருபத்தெட்டாம் நாள் அவனுக்கு இடைநூல் அணிவிழா அன்று எட்டுமங்கலங்கள் நிரைத்து ஏழுதிரி விளக்கின் முன்வைத்து பப்ருவாகனன் என்று பெயரிட்டனர்.

மைந்தனின் பிறப்பு ஒருமாதகாலம் மணிபுரியின் விழவாக இருந்தது. ஒவ்வொருநாளும் இல்லங்களில் அணிமங்கலங்கள் பொலியவேண்டும் என்றும் அடுமனைகளில் இன்னுணவு சமைக்கப்படவேண்டும் என்றும் அரசாணை இருந்தது. அனைத்து தண்டனைகளும் தவிர்க்கப்பட்டன. அந்நாட்களில் பிறந்த அனைத்து மைந்தர்களுக்கும் அரசரின் அணியும் பட்டும் அளிக்கப்பட்டது. எல்லைப்புற ஊர்களிலிருந்தெல்லாம் ஒவ்வொருநாளும் மைந்தனைக் காண மணிபுரிக்குடியினர் வந்துகொண்டிருந்தனர். காலையிளவெயில் எழுகையில் அரண்மனையில் உப்பரிகை முகப்பில் மைந்தனுடன் செவிலி வந்து அமர்ந்து மும்முறை அவனைத்தூக்கி அவர்களுக்கு காட்டினாள். அவர்கள் ஒற்றைப்பெருங்குரலாக வாழ்த்தொலி எழுப்பினர்.

மைந்தனுக்கு பெயர் அமைவதுவரை அர்ஜுனன் அங்கே இயல்பாக இருந்தான். பெயரற்ற சிற்றுடல் அவன் உடலின் ஓர் உறுப்பென எப்போதும் இருந்தது. மைந்தன் தந்தையை உடலால் அறிந்தான். துயிலில்கூட அவன் தொடுகை நீங்குகையில் சினந்து முகம் சுளித்து அழுதான். பெயரிடப்பட்ட அன்று காலை மங்கலப்பொருட்கள் பரப்பிய மணித்தாலத்தில் படுக்க வைக்கப்பட்ட மைந்தனை சித்ரபாணனும் அவர் அரசியும் கைகளில் ஏந்தி அன்னை மணிபத்மையின் ஆலயத்தை மும்முறை சுற்றிவந்து அதன் படிகளில் வைத்து வணங்கி எடுத்துக்கொண்டனர். தாலத்தை கொண்டுவந்து அர்ஜுனனிடம் நீட்ட அவன் மைந்தனை கையில் எடுத்தான். முத்தமிட்டுவிட்டு சித்ராங்கதையிடம் அளித்தான்.

அன்றுமாலை வழக்கம் போல் மைந்தனை தன் தோளிலேற்றி சிறுதோணியேறிச்செல்லும்போது அர்ஜுனன் ஒரு வேறுபாட்டை உணர்ந்தான். அன்று காலையிலேயே அதை உணர்ந்திருப்பதை அப்போது தெளிவுற அறிந்தான். அது என்ன என்று சொற்களால் நெஞ்சைத் துழாவி பின்பு கண்டடைந்தான். அம்மகவு பிறிதொன்றாக இருந்தது. அவன் மைந்தனாக, அன்புக்குரியவனாக, ஆனால் பிறிதொரு ஆண்மகனாக. அதை திரும்பி வந்து சித்ராங்கதையிடம் சொன்னான். அவள் விழிகளில் இன்னதென்றறியாத சிறிய ஒளியுடன் அவனை நோக்கிவிட்டு “இங்கே கொடுங்கள்” என்று மைந்தனை வாங்கிக்கொண்டாள்.

அதன்பின் அவள் மைந்தனை அர்ஜுனன் முன்னால் கொஞ்சவோ முலையூட்டவோ செய்யவில்லை. எப்போதும் செவிலியே அவனை தந்தைக்குமுன் கொண்டுவந்தாள். மைந்தனை வாங்கி மடியிலிருத்தி விளையாடி நகையாடி முத்தாடி மகிழ்ந்தபின் திருப்பியளித்துவிட்டு அவன் தனியனாகும்போதே அவள் அவன் முன் வந்தாள். மைந்தனைப்பற்றி அவனிடம் பேசும்போது ஒருபோதும் அவள் குரலில் நெகிழ்ச்சி இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவள் ’நம் மைந்தன்’ என்ற சொல்லில் அவனை குறிப்பிட்டாள். அவனோ மேலும் மேலும் கனிவும் நெகிழ்வும் கொண்டே மைந்தனைப்பற்றி பேசினான்.

ஆனால் அவன் அங்கிருந்து கிளம்பவிருக்கிறான் என அவள் அறிந்திருந்தாள். அவனே அதை சொல்லும்நாளுக்காக காத்திருந்தாள். சித்ரபாணனின் அமைச்சர்கள் அவரிடம் தன் பெயரனை அவர் மைந்தனென்றும் ஏற்புகொள்ளவேண்டும் என்றனர். அதற்கு ஒரு முறைச்சடங்கை செய்யவேண்டும். அன்றே பப்ருவாகனன் மணிபுரிக்கு பட்டத்து இளவரசன் ஆகிவிடுவான். அவனே தன் தாதனுக்கு நீத்தார்கொடையையும் செய்ய உரிமைகொண்டவனாவான். “தொல்புகழ் மணிபுரியின் கோலுக்கு காவல் அவனே என்றாகும். இனி ஒரு தலைமுறைக்காலம் இங்கு ஒளிரும் வாள் ஒன்று நின்றிருக்கும் என உலகறியும்” என்றனர் அமைச்சர்.

மைந்து ஏற்புச் சடங்குக்கு நாள் பார்க்க முதுவைதிகர் ஒருவரை தேடிவரச்சொல்லி தூதர்களை அனுப்பினார் சித்ரபாணன். காமரூபத்திலிருந்து சாக்தவைதிகரான மணிகர்ணரை கண்டடைந்து ஐந்து மங்கலங்களுடன் பட்டும் பொன்னும் மணியும் வைத்து அழைத்தனர். முதல்மழை விழத்தொடங்கிய பருவத்தில் முதிர்ந்து தசைகனிந்து தொங்கிய உடலும் பழுத்த விழிகளும் கொண்ட மணிகர்ணர் பட்டுமஞ்சலில் மணிபுரிக்கு வந்தார். படகிலேறி அரண்மனைக்கு வந்த அவரை சித்ரபாணரும் அமைச்சர்களும் அரண்மனை முகப்புக்கு வந்து வரவேற்றனர். அவையமர்த்தி முறைமைசெய்தனர்.

மைந்தனுடன் சித்ராங்கதையும் உடன் அர்ஜுனனும் வந்து அவரை பணிந்தனர். நடுங்கும் கைகளால் குழந்தையைத் தொட்டு “புகழ் பெறுக!” என்று வாழ்த்திய மணிகர்ணர் அருகே பட்டுப்பாய் விரித்து மைந்தனை கிடத்தும்படி சொன்னார். பாயில் கிடத்தப்பட்டதும் இடக்காலைத் தூக்கிவைத்து கவிழ்ந்து கைகளால் தரையை அறைந்து செவ்விதழ்களிலிருந்து வாய்நீர் குழாய் இழிய மேல்வாயின் சிறுவெண்பல் காட்டிச் சிரித்த சித்ரபாணன் தன்னைச்சூழ்ந்திருந்தவர்களை ஒளிமிக்க விழிகளால் மாறி மாறி நோக்கினான். பின்னர் வலக்கையை தரையில் மீண்டும் அறைந்து “ஆ” என்று கூவினான்.

சித்ரபாணன் அசைய விழியால் வேண்டாம் என்றார் மணிகர்ணர். மைந்தன் மும்முறை தரையை அறைந்த பின் கூர்ந்து பட்டுப்பாயை நோக்கினான். அதில் ஊர்ந்த ஓர் எறும்பைக் கண்டு கையை அறைந்து அதைப்பிடிக்க இருமுறை எம்பி மீண்டும் நினைவு கூர்ந்து தன்னைச் சூழ்ந்திருந்தவர்களை நோக்கி “ஆ?” என்றான். அக்கணம் அவன் அர்ஜுனனை கண்டுகொண்டான். இருகைகளாலும் நிலத்தை அறைந்து முழங்காலை ஊன்றி உந்தி தந்தையை நோக்கிச் சென்று கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்து சிரித்தபடி “ஆ” என்றான். அவன் வாய்நீர் நெஞ்சில் சொட்டியது.

மணிகர்ணர் கைகாட்ட அர்ஜுனன் குழந்தையை தூக்கிக்கொண்டான். அவர் களைத்துச்சரிந்த வலதுகண்ணின் இமை மெல்ல அதிர பெருமூச்சுடன் “சரி” என்றார். “இவனை என் மைந்தனாகவும் மகவேற்பு செய்யவிழைகிறேன் வைதிகரே. நன்னாளும் நலம்தரும் கோளும் உய்த்து சொல்லவேண்டும்” என்றார் சித்ரபாணன். மணிகர்ணர் தலையசைத்துவிட்டு “செய்யலாம்” என்றார். “இவனது பிறவிநூலை எங்கள் நிமித்திகர் கணித்துள்ளார்கள். நற்குறிகள் அனைத்தும் உள்ளன என்கிறார்கள். உடல்குறி கணித்துச் சொல்லும் நிமித்திகர்களும் சிறந்ததையே சொன்னார்கள்” என்றார் சித்ரபாணன்

“சிறந்தவற்றை மட்டுமே நானும் காண்கிறேன்” என்றார் மணிகர்ணர். “இவர் மணிபுரியின் அரசர்நிரையின் முதல்வர். காமரூபமும் கிழக்குநாடுகள் அனைத்தும் ஒருநாள் இவர் குடைக்கீழ் அமையும். பாரதவர்ஷத்தின் நிகரற்ற வில்வீரர் என்று இவர் புகழ்பெறுவார். தன் தந்தையும் வில்லுக்கு இறைவனுமாகிய இளையபாண்டவரை ஒருபோரில் வென்று புகழ்பெறுவார்.” அச்சொல் கேட்டதும் அவையினர் ஒருசேர குரலெழுப்பினர். மலர்ந்த முகத்துடன் அர்ஜுனனை நோக்கியபின் “தம்மின் தம் புதல்வர் மேன்மையுறக்காணும் நல்லூழ் இளையபாண்டவருக்கு அமையட்டும்” என்றார்.

“தன் தந்தையின் தீப்பழி ஒன்றை போக்கவும் மண்ணிலிருந்து அவர் எளிதாக விண்ணேக வழிகோலவும் நல்லூழ்கொண்ட மைந்தன் இவர். இவரை ஈன்றதனால் மட்டுமே இவரது தந்தை பிறவாழிச்சுழல் நீந்தி கரைகாண்பார்” என்றார் மணிகர்ணர். அர்ஜுனன் கைகூப்பினான். சித்ராங்கதை ஓரவிழியால் அர்ஜுனனையே நோக்கி நின்றிருந்தாள். அவள் ஏன் அவ்வாறு தன் கணவனை நோக்குகிறாள் என்று வியந்த சித்ரபாணன் ஓரவிழியால் தன் மனைவியை நோக்கினார். அவள் மகளை நோக்கியபின் அவரை நோக்கி விழிகளை மெல்ல அசைத்தாள். ஒன்றுமில்லை என்பதுபோல. பின்னர் சொல்கிறேன் என அவள் கூறுவதை அடுத்த கணம் அவர் புரிந்துகொண்டார்.

“வரும் முழுநிலவுநாளில் காலை பிரம்மதருணத்தில் மகவேற்பு நிகழலாம். நல்ல நேரம்” என்றார் மணிகர்ணர். “தந்தைக்கும் மைந்தனுக்கும் மட்டுமல்லாது இந்நாட்டுக்கும் குலத்திற்கும் அழியாப்புகழ் சூழும்.” சித்ரபாணன் கைகூப்பி “என் நல்லூழ்” என்றார். ஏவலன் தாலத்தில் கொண்டு வந்து அளித்த மரப்பட்டை ஏட்டில் மை தொட்டு நாளையும் கோளையும் குறித்தார் மணிகர்ணர். அவரது தூரிகையின் அசைவை கேட்டபடி அனைவரும் விழி விரித்து நின்றனர். மணிகர்ணர் எழுந்து ஓலையை நீட்டியதும் சித்ரபாணன் இரு கைகளையும் நீட்டி அதை பெற்றுக்கொண்டார். சேடியர் குரவையிட்டனர். மங்கலப்பேரிசை எழுந்தது. அவ்வொலி கேட்டு நகரெங்கும் செவிகூந்ந்து நின்றிருந்த மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.

முதுவைதிகர் மணிகர்ணருக்கு எண்மங்கலம் வைத்த பொற்தாலத்தில் ஏழு அருமணிகளும் நூற்றெட்டு பொன்நாணயங்களும் பன்னிரு பட்டாடையும் வைத்து பரிசில் அளித்தார் சித்ரபாணன். அவர் நீரும் மலருமிட்டு அரசனையும் அரசியையும் மைந்தனையும் அவன் பெற்றோரையும் வாழ்த்தினார். திரும்பி அவையை வாழ்த்தி கைகூப்பினார். அவை எழுந்து முதுவைதிகரை வாழ்த்தி வணங்கி நின்றது. “இக்குடி நலம்பெறுக! இந்நிலம் செழிக்கட்டும். இங்கு அறம் வாழட்டும். தெய்வங்கள் மண்ணிறங்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார் மணிகர்ணர்.

ஏவலர் கைபற்றி எழுந்து கூனிய உடலை மெல்ல அசைத்து நடந்த மணிகர்ணர் எண்ணிக்கொண்டு நின்று அர்ஜுனனை நோக்கி “என்னுடன் வருக!” என்றார். “அவ்வாறே” என்று அவன் அவரை தொடர்ந்தான். அரண்மனைக்கூடத்தின் நீண்ட இடைநாழிக்கு வந்த மணிகர்ணர் நின்று திரும்பி நோக்க ஏவலர்கள் அவரை விட்டுவிட்டு விலகினர். அவர் அங்கே நின்ற பெரிய மூங்கில்தூணை பற்றிக்கொண்டு தன் கூன்முதுகை நிமிர்த்தினார். “உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும் இளவரசே” என்றார். “காத்திருக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

“உன் மைந்தனே இப்புவி அறியும் மாவீரன், நீயல்ல. உன்னை வென்றவன் என்றே அவன் இங்கு எக்காலமும் அறியப்படுவான்” என்றார் மணிகர்ணர். “அதை நீ மாற்ற முடியாது. ஏனென்றால் அது நல்லூழ். ஆனால் தீயூழ் ஒன்றும் உள்ளது.” அர்ஜுனன் “தங்கள் சொற்களுக்காக காத்திருக்கிறேன்” என்றான். “இம்மைந்தன் உன்னை களத்தில் கொல்வான்” என்றார் மணிகர்ணர். “அதை நான் அருகே என காண்கிறேன். இன்று இடக்கையை மண்ணில் அறைந்து அவன் உன்னை அறைகூவினான்.” அர்ஜுனன் “அது ஊழெனில் அவ்வாறே ஆகுக!” என்றான்.

”ஊழெனினும் வெல்ல வழியுள்ளது” என்றார் மணிகர்ணர். “விற்கலையை அவன் உன்னிடமிருந்தே கற்றாகவேண்டும்.அவனுக்கு நீ அனைத்து அம்புகளையும் அளிக்காமலிருக்கலாம். இறுதிவெற்றிக்காக ஒற்றை அம்பை உன்னிடம் தக்கவைத்துக்கொள்ளலாம்.” அர்ஜுனன் வாயெடுப்பதற்குள் “அது போருக்கு உகந்த அறம் என்றே நூல்கள் சொல்கின்றன. வீரன் தான் உயிர்வாழ்தலையே அறங்களில் முதலாவதாக கொள்ளவேண்டும். ஏனென்றால் பிற அறங்களை இயற்றுவதற்கான வாய்ப்பை அவனுக்களிப்பது அதுவே.”

“உத்தமரே, அவ்வண்ணம் ஓர் அம்பை நான் எனக்கென வைத்துக்கொண்டேன் என்றால் அவ்விறுதிக் களத்தில் என்ன நிகழும்?” என்று அர்ஜுனன் கேட்டான். அவர் “அப்படி கேட்கப்போனால்...” என்றார். “நான் அவனை வெல்வேன், அவன் உயிர்கொள்வேன், அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம், அது நிகழலாம்” என்றார் மணிகர்ணர். “அவன் குருதிபடிந்த கைகளுடன் விண்ணுக்குச்சென்றால் நான் என் மூதாதையருக்கு என்ன மறுமொழி சொல்வேன்?” என்றான் அர்ஜுனன். மணிகர்ணர் “ஆம், ஆனால் தந்தையைக் கொன்றபழியை அவன் சுமப்பதும் உகந்தது அல்ல” என்றார்.

“நான் விண்ணிலிருந்து அவன் பழியை பொறுப்பேன். அவனை என் நுண்கரங்களால் அள்ளி எடுத்து நெஞ்சோடு சேர்த்து நன்றுசெய்தாய் மைந்தா என்பேன். மண்ணில் அவன் பழிகொள்ள நேரலாம். விண்ணில் என்னருகே எனக்கு இனியவனாக வந்தமர்வான்” என்றான் அர்ஜுனன். “ஆகவே, அவன் என்னைக் கொல்வான் என்றால் அதை நான் ஏற்பதே சிறந்ததாகும்.” மணிகர்ணர் “என் எண்ணத்தை சொன்னேன். இந்திரப்பிரஸ்தத்தின் அச்சு நீங்கள். அறம் திகழ உங்கள் அம்புகள் தேவை” என்றார். அர்ஜுனன் “அறம் என்பது தன்னிலிருந்து தொடங்குவதல்லவா?” என்றான்.

“நன்று. நலம் திகழ்க!” என்றார் மணிகர்ணர். “நீங்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நான் முன்னரே அறிந்திருந்தேன், இளையவரே. பிறிதொரு சொல்லை நீங்கள் என்றல்ல எளிய தந்தைகூட சொல்லிவிடமுடியாது. இவ்வண்ணம் கண்காணா வலையால் மானுடரை இணைத்து ஆடச்செய்தபடி நடுவே அமர்ந்திருக்கிறது அந்தப் பெருஞ்சிலந்தி” என்றபின் அவன் தலைமேல் கைவைத்து “அறம் துணைக்கட்டும். புகழ் தொடரட்டும்” என்று வாழ்த்திவிட்டு திரும்பி அப்பால் நின்ற ஏவலரை அருகணையச்சொல்லி கைகாட்டினார்.

மகவேற்பு நிகழ்வு முடிந்து ஒருமாதம் கடந்துதான் தான் விடை பெறவிருப்பதை அர்ஜுனன் சித்ராங்கதையிடம் சொன்னான். அவளுடன் கொடித்தீவில் அமர்ந்திருந்தான். அவன் மடியில் மைந்தன் துயின்றுகொண்டிருந்தான். அவள் அதை எதிர்பார்த்திருந்தாள். அத்தடாகத்தைப் போன்றது அவன் உள்ளம் என்று அறிந்திருந்தாள். அதில் பெருநதிகள் இணைகின்றன. அதேயளவு நீர் பெருகி வெளியே வழிந்தோடுகிறது. தடாகமோ என்றும் மாறாமல் அவ்வண்ணமே வானை நோக்கி ஊழ்கத்தில் இருக்கிறது.

மைந்தனின் மென்கால்களை தன் சென்னியில் சூடி முத்தமிட்டு “இந்த ஒரு மாதத்தில் மூன்றுநாட்களுக்கு ஒருமுறை என நானறிந்த அனைத்து அம்புகளையும் நுண்சொல்வடிவில் உனக்களிப்பேன். என் மைந்தனின் கைகள் எழுந்ததும் அவற்றை அவனுக்கு நீயே கற்பித்தளிக்கவேண்டும்” என்றான். அவள் தலையசைத்தாள். “என் பெயர் அவனுடனிருக்கட்டும்” என்றபின் எழுந்து அவள் கன்னங்களை வருடி குழல் கோதி நீவி கூந்தல்கட்டில் ஒதுக்கிவைத்தான். அவள் கண்களை நோக்கி புன்னகைத்து “பிரிவை நீ அரசியென எதிர்கொள்வாய் என எண்ணுகிறேன்” என்றான்.

“ஆம்” என்றாள். “பிரிந்தபின் நீ மீண்டும் சித்ராங்கதனாக ஆகவேண்டும். என் மைந்தனுக்கு நல்லாசிரியனாக நீயே அமர்க!” என்றான். “ஆம்” என்று சொல்லி அவள் நோக்கை விலக்கிக் கொண்டாள். ஏரிப்பரப்பிலிருந்து நாரைகள் எழுந்து காற்றிலேறிக்கொண்டன. அவள் கழுத்தின் மெல்லிய நீல நரம்பை அவன் நோக்கிக்கொண்டிருந்தாள். “என்ன?” என்றான். “பாரதவர்ஷம் பெரியது” என்று அவள் சொன்னாள். “அல்ல, மிகச்சிறியது. பெரியது நம் ஊழ். நான் எங்கிருப்பேன் என அறியேன். ஆனால் எங்கிருந்தாலும் இங்கிருந்த நான் என்னுள் இருப்பேன்” என்றான். அவள் புன்னகை செய்தாள்.

அர்ஜுனன் விடை பெற்றபோது மழைக்காலம் தொடங்கிவிட்டிருந்தது. வானம் கருமைகொண்டு மூடியிருக்க இளஞ்சாரல் காற்றை எடைகொள்ளச்செய்திருந்தது. கூரைவிளிம்புகள் சொட்டிக்கொண்டிருதன. ஏரிப்பரப்பு சாரல் மழை பட்டு சிலிர்த்து பரந்திருந்தது. அவன் சிறுபடகில் தன் தோல்மூட்டையுடனும் மூங்கில் வில்லுடனும் ஏறிக்கொண்டான். கழை எழுந்து தாழ்ந்து படகை உந்த நீர்த்தடமிட்டபடி அது சென்றது. காலத்தை விரித்து அம்பொன்றை அணுக்கமாக நோக்குவது போல தோன்றியது. அலைகளென மாறிய படகுத்தடம் தீவுகளை உலையச் செய்து கரையை வருடியது.

மணிபுரியின் மாந்தர் அனைவரும் தங்கள் இல்லங்களின் முற்றங்களில் வந்துநின்று அவன் செல்வதை நோக்கினர். சிறுவர் கண்ணீர் வழிய அன்னை உடைகளில் முகம் மறைத்தனர். பெண்கள் முகம் மறைத்து விம்மினர். அவன் ஒருமுறைகூட திரும்பிப்பார்க்கவில்லை. கரை அணைந்து அங்கு காத்து நின்ற குதிரையில் ஏறி சேற்றுப்பரப்பை மிதித்துச்சென்று நீர் சொட்டிய மரக்கிளைகளுக்கு அப்பால் மறைந்தான்.

சுஜயன் ”போய்விட்டாரா?” என்றான். “ஆம்” என்றாள் மாலினி. “எங்கு?’ என்றான். “அடுத்த ஊருக்கு.. .அங்கிருந்து இன்னொரு ஊருக்கு. அர்ஜுனன் இதோ மேலே செல்லும் பறவைகளைப்போல. அவை பறந்துகொண்டேதானே இருக்கின்றன?” சுஜயன் “ஏன்?” என்றான். “ஏனென்றால் அவை சிறகுள்ளவை” என்றாள் மாலினி. அந்த மறுமொழியில் சுஜயன் முழுநிறைவை அடைந்து “ஆம், சிறகிருந்தால் பறந்து போகலாம்” என்றான்.

வானத்தில் பறந்த இரு பறவைகளைப் பார்த்து “அர்ஜுனர், சித்ராங்கதை!” என்றான். சுபகை புன்னகைத்து ”அதற்குப் பின்னால் பாருங்கள் இளவரசே, ஆயிரம் அர்ஜுனர்களும் சித்ராங்கதைகளும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றாள். சுஜயன் திரும்பிப் பார்த்து விழி விரித்து வியப்பில் சிறு செவ்வுதடுகள் சற்றே பிரிய அசைவிழந்து நின்றான். அவன் உடல் அதிர்ந்தது. கண்களை மூடித்திறந்து கூடு கட்டிய சிறு மார்பு எழுந்தமைய நீள்மூச்சு விட்டு ”ஆயிரம் அர்ஜுனர்! ஆயிரம் சித்ராங்கதை” என்றான்.

“அல்லது ஆயிரம் சித்ராங்கதைகள் ஒரு அர்ஜுனர்” என்றான் சுபகை சிரித்து. மாலினி “போதுமடி, ஏற்கெனவே நன்கு குழம்பியிருக்கிறார் இளவரசர்” என்றாள். “சிற்றுடல் எனினும் உள்ளே இருப்பது இவ்வுலகை காமத்தால் வெல்ல எழும் ஆண்மகன் அல்லவா? அவன் அறிவான் அனைத்தையும்” என்றாள் சுபகை. “இப்போது நாம் சொற்களென உள்ளே விதைப்போம். மழை விழுகையில் அவை முளைக்கட்டும்.”

“எப்போது மழை வரும் ?” என்றான் சுஜயன். “வானம் கறுக்கும்போது” என்றாள் மாலினி. ”எப்போது வானம் கறுக்கும்?” என்று சுஜயன் மீண்டும் கேட்டான். “கடல் நினைக்கும் போது” என்றாள் மாலினி. சுபகை “:எந்த அளவுக்கு விஞ்சிய கற்பனையாக உள்ளதோ அந்த அளவுக்கு அவர் அதை புரிந்துகொள்கிறார்” என்றாள். ”கடலா?” என்றான் சுஜயன. “இளவரசே, மழை என்பது கடல் தன் கை நீட்டி அதன் குழந்தையாகிய மண்ணை வருடுவதல்லவா?” என்று மாலினி சொன்னாள்.

அவள் வியப்புறும்படி அதை அவன் சரியாக புரிந்து கொண்டான். அருகே வந்து “பசு நக்குவது போல” என்று நாவால் நக்கிக் காட்டினான் ”இப்படி கன்றை பசு நக்குவது போல மழை நக்குகிறது” என்றான். ”அய்யோ, இது என்ன? இத்தனை அழகாக சொல்கிறாரே!” என்று சுபகை வியந்தாள். மாலினி ”குழந்தைகள் பிறிதொரு பாதையில் நமக்கு முன்னே வந்து கொண்டிருக்கின்றன. சில சமயங்களில் நமக்கு வெகு தொலைவில் முன்னால் அவர்களை பார்க்கிறோம்” என்றாள்.

சுஜயன் திரும்பி கையை நீட்டி ”அங்கே முதலை” என்றான். மாலினி ”ஆம் முதலை... இங்கே வந்துவிடு’’ என்று திரும்பிபார்க்காமலே சொன்னாள். ”அந்த முதலையை நான் சாப்பிடமாட்டேன். அது பெரிய பற்களுடன் இருக்கிறது” என்றான் அவன். ”ஆமாம் வேறு முதலையை நான் சமைத்து அளிக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “அது கெட்ட முதலை” என்று அவன் மேலும் முன்னகர்ந்து சொன்னான். ”கிளம்புவோம். இன்று மாலையில் மழை வரும் போலிருக்கிறது” என்றாள் மாலினி.

சுஜயனை பிடிக்கச் சென்ற சுபகை ”ஆ! உண்மையிலேயே முதலை!” என்றாள். “முதலையா? இங்கா?” என்றபடி மாலினி எழுந்து வந்தாள். கங்கையை நோக்கி இறங்கிய நாணல் சரிவில் அத்தனை நேரம் அவர்கள் விழுந்து கிடந்த பட்ட மரமென்று நினைத்தது இரண்டாள் நீளமுள்ள பெருமுதலை என்று அறிந்தனர். சுஜயனை அள்ளி தோளில் தூக்கிக் கொண்ட சுபகை ”அம்மாடி! எத்தனை அருகே சென்றுவிட்டார்! நல்லூழ்தான்” என்றாள். ”இங்கு முதலைகள் இல்லையென்று நினைத்தேன்” என்றாள். “கங்கையில் எவ்விடத்திலும் முதலைகள் உண்டு. மானுடர் நடமாடும் இடங்களில் அவை பொதுவாக வருவதில்ல்லை” என்றாள் மாலினி.

மாலினி அதை நோக்கி “பெரிய முதலை” என்றபின் ”பெண்முதலை” என்றாள். “எப்படி தெரியும்?” என்று மாலினியை நோக்கி சுபகை கேட்டான். ”அது அங்கே முட்டை போட்டிருக்கிறது” என்று சொன்ன மாலினி மணல்குழிகளில் சுட்டிக் காட்டி அந்த சிறு பள்ளங்களில் கொப்புளங்கள் எழுந்திருக்கின்றன. அச்சிறு குழிகள் தெரிகின்றன. முட்டையிட்டு மணலில் புதைத்து வைத்து அருகே காவலுக்கு படுத்திருக்கிறது. முட்டையிடும் பொருட்டே நீரிலிருந்து இத்தனை தூரம் கடந்து வந்துள்ளது”

சுபகை சில கணங்கள் திகைத்து திரும்பி புன்னகைத்து ”அது அன்னை என்று அறிந்தவுடனே அதன் மேல் இருக்கும் அச்சம் விலகி அணுக்கம் தோன்றுவதையே எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றாள். மாலினி “விளையாடாதே. முட்டையிட்ட முதலை பெரும் சினம் கொண்டது. இவ்வுலகின் மேல் தீரா ஐயம் நிறைந்தது. மும்மடங்கு உண்ணும் பெரும் பசியும் உண்டு” என்றாள். “ஆம் அவை அனைத்துமே பெருங்கருணையின் வடிவங்களல்லவா?” என்றாள் சுபகை.

”அது ஏன் அழுகிறது?” என்றான் சுஜயன். ”முதலைக் கண்ணீர்” என்றாள் சுபகை. “முதலைகள் அப்படித்தான் அழுது கொண்டிருக்கும்.” சுஜயன் அவள் தாடையைப்பற்றி “ஏன்?’ என்று கேட்டான். “தெய்வங்கள் அவற்றுக்கு அவ்வாறு ஆணையிட்டுள்ளன. கரையில் பல்லியும் நீரில் மீனும் என அவை வாழும் இரட்டைவாழ்க்கையை எண்ணி கண்ணீர் வடிக்கின்றன.” சுஜயன் “ஏன்?” என்று கேட்ட பின்பு “அந்த முதலை நல்லது. அதை நான் வளர்ப்பேன்” என்றான். சுபகை “என் செல்லமே, துணிவு வந்துவிட்டதே” என்று அவனை முத்தமிட்டாள்.

மாலினி ”செல்வோம்” என்று சொல்லி கிளம்ப சுபகை சுஜயனைத் தூக்கிச் சுழற்றி தன் தோளில் வைத்துக் கொண்டாள். அவன் அங்கிருந்து முதலையைப் பார்த்து கை சுட்டி ”பெரிய முதலை. ஆனால் மிக நல்லது” என்றான். “இளவரசே, அர்ஜுனன் சந்தித்த ஐந்து முதலைகளைப் பற்றி தெரியுமா?” என்றாள் மாலினி. “முதலையா? ஐந்து முதலையா?” என்றான். “ஆம், ஐந்து முதலைகள்” என்றாள் மாலினி. கால்களை உதைத்து ”என்னைத் தூக்கு... என்னைத் தூக்கு” என்று மாலினியிடம் சொன்னான் சுஜயன். “முதலையின் கதை சொல்! முதலையின் கதை” என்றான். “குடிலுக்குச் செல்வோம். நீ அமைதியாக பாலமுதை உண்டால் இக்கதையை சொல்வேன்” என்றாள் மாலினி.

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 3

வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது. அங்குள்ள புழுதியும் பொன்னே. அங்கு தன் அரசி சித்ரரேகையுடனும் மைந்தன் நளகூபரனுடனும் இனிதிருந்து ஆண்டான் குபேரன்.

ஒழியாத கருவூலம் கொண்டவன். எண்ணிமுடியாத செல்வங்களின் மேல் அமர்ந்திருப்பவன். ஆடகப் பசும்பொன்னில் முற்றிய கதிர்மணியில் பழுத்த இலைகளில் அடிமரத்தின் வைரத்தில் அடிவானத்து ஒளியில் கைம்மகவின் கால்களில் இளங்கன்னியர் தோள்களில் எழுபவன். அவன் துணைவியோ உருகிவார்த்த பசும்பொன்னில் எழும் வரியின் வடிவாக தோன்றுபவள். அன்னையர் அடிவயிற்றில், வசந்தகால ஆற்றுமணலில், தேக்குமரப்பரப்பில் பரவியிருப்பவள். அவர்களின் நகரில் அழகென்பதே செல்வமென்று இருந்தது. அடைவதென்பது இல்லாமலாகி அனைத்தும் அறிதலென்று மட்டுமே இருந்தன. கொள்வதோ கொடுப்பதோ இன்றி செல்வம் மங்கலம் என்றே பொருள்பட்டது.

இந்திரன் ஆளும் தேவர்கள் உலகத்தில் ஐந்து தேவகன்னியர் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர். வர்கை. சௌரஃபேயி, சமீசி, ஃபுல்புதை, லதை என்னும் ஐவரும் தேவருண்ணும் அமுதத்தால், கற்பகக் கனிகளால், காமதேனுவின் கருணையால் வாழ்த்தப்பட்டிருந்தனர். கண்நிறைக்கும் பெருஞ்செல்வம் தங்களை சூழ்ந்திருக்கும் பேறு கொண்டவர்களாயிருந்தனர். ஆயினும் பெண்ணெனும் அழகிய பேதைமையால் அவர்களின் உள்ளம் திரிபுகொள்ளும் நாள் ஒன்று வந்தது.

வெண்முகில் வடிவம் கொண்ட ஐராவதத்தின் மேல் அமர்ந்து தேவர்க்கரசன் நகருலா செல்லும்போது அவனைத் தொடர்ந்து சென்ற அணியூர்வலத்தில் ஐவரும் முழுதணிக்கோலம் கொண்டு மங்கலம் ஏந்தி சென்றுகொண்டிருந்தனர். இந்திரன் காலில் அணிந்திருந்த பொற்கழலில் இருந்து ஒரு மணி உதிர்ந்து மண்ணில் விழுந்தது. அதை அறியாது தேவருலகின் எழிலில் அவன் ஈடுபட்டிருந்தான்.

அவ்வணியூர்வலத்தில் அவனுக்குப் பின் வந்த வர்கை தன் காலடியில் மின்னிக் கிடந்த பொன்மணியை கண்டாள். நடக்கும்போதே இருவிரலால் அதைக் கவ்வி தோழியின் தோள்பற்றி கால் தூக்கி கையில் எடுத்தாள். “கொடுடீ” என்று அதை வாங்கிப் பார்த்த தோழி “அழகியது. இதை அரசரிடம் திருப்பி அளிப்போம்” என்றாள். “எண்ணி முடியா பெரும் பொருள் கொண்ட இந்திரனுக்கு எதற்கு இது மேலும்? இதை நாமே வைத்துக்கொள்வோம்” என்றாள் வர்கை. அவள் அருகே நின்ற சமீசி “ஐயோடி, இது பிழையல்லவா? பெரும் செல்வத்தின் மேல் வாழும் நாம் நமக்கென்று ஒரு துளி செல்வமும் கொண்டிருக்க ஆணை இல்லை. பொன் விழைவு தேவர்க்கு பாவம் என்றே சொல்லப்பட்டுள்ளது. அருந்தவத்தோர் வேள்வி மேடையில் அளிக்கும் அவி ஒன்றே நாம் விரும்பத்தக்கது” என்றாள்.

“போடீ, இதை நான் விடப்போவதில்லை” என்றாள் வர்கை. “வீண் பழி சேரும்” என்றாள் ஃபுல்புதை. அணியூர்வலத்தில் அவர்களைச் சூழ்ந்து ஒலித்த கொம்புகளும் முழவுகளும் சல்லரிகளும் பெருஞ்சங்குகளும் மணிகளும் அவர்களின் பேச்சொலியை மறைத்தன. சூழ்ந்து அசைந்த வண்ணங்களும் அசைவுகளும் அவர்களின் முகங்களை ஒளித்தன. மறைவே அவர்களுக்கு உள்ளக்கரவை அளித்தது. வர்கை சொன்னாள் “ஊழின் விளையாட்டென்றே இருக்கலாம். என் கைக்கு வந்துள்ளது இவ்வணிகலன். தேடிவரும் திருவை எப்படி துறப்பேன்? என் உள்ளத்தை உசாவினேன். இல்லை, இதை ஒருபோதும் வீச என்னால் இயலாது. எனக்குரியது என இவ்வொரு துளி மணி என்னுடன் இருக்கட்டும்.”

“வேண்டாமடி. இது பழிசேர்க்கும் நமக்கு” என்றாள் லதை. “அவ்வண்ணமெனில் இதோ இதை உன்னிடம் அளிக்கிறேன். எடுத்த இடத்திலேயே இதை வீசு” என்றாள் வர்கை. “சரி கொடு” என கையில் அதை வாங்கிய லதை சற்று தெளிந்து “இல்லை, நானும் இதை எனக்கென கொள்ளவே விரும்புகிறேன்” என்றாள்.

“சரி இவளிடம் கொடு, துணிவிருந்தால் அதை இவள் துறக்கட்டும்” என்றாள் வர்கை. சமீசி அதை வாங்கி கை ஓங்கி பின் தோள் தழைத்து “இல்லையடி, என்னால் ஆகவில்லை” என்றாள். “உம், கொடு நான் வீசுகிறேன்” என்றாள் ஃபுல்புதை. ஆனால் கையில் வாங்கியதுமே “ஒரு கணம் துணிந்து இதை வீசிவிடலாம். பின்பு பல்லாயிரம் யுகம் தவம் இருந்தாலும் இது மீளக்கிடைக்காது போகலாம் அல்லவா? என்னால் முடியவில்லை” என்றாள்.

சௌரஃபேயி “என்னால் முடியுமா இல்லையா என்றே அறிகிலேன். அவ்வெல்லையை தொட்டுப் பார்க்க அஞ்சுகிறேன். வேண்டாம்” என்றாள். “இங்கு கொடுடீ அதை” என வர்க்கையே அதை வாங்கி உள்ளங்கையில் வைத்து “பொன்னைப்போல் பெண்ணுடலுடன் பொருந்தும் பிறிதொரு பொருள் எங்கும் உண்டோடி?” என்றாள். தன் நெஞ்சுக் குவையில் அதை வைத்து “பொன் பட்ட உடனே பெண்ணுடல் கொள்ளும் அழகு... இது தெய்வங்களின் ஆணை அல்லவா?” என்றாள்.

“கொடுடி, ஒரு முறை நானும் வைத்துப் பார்க்கிறேன் என்ற சமீசி அதை தன் மூக்கில் வைத்து “எவ்வண்ணம் உள்ளது?” என்றாள். “செந்தாமரை மேல் ஒரு பொன்வண்டு அமர்ந்ததுபோல்” என்றாள் சௌரஃபேயி. “எனக்குக் கொடுடி... ஒரு கணம்... ஒரே கணம்” என்று வாங்கி அதை தன் காதுகளில் வைத்தாள் லதை. “தளிரிதழில் நீர்மணி நின்றதுபோல்” என்றாள் வர்கை. ஃபுல்புதை அதை வாங்கி தன் நெற்றிப்பொட்டில் சூடினாள். செவ்வானில் எழுந்தது இளங்கதிர். சௌரஃபேயி அதை மென்வயிற்றில் வைத்தாள். “இளஞ்சேற்றில் எழும் முதல் தளிர்” என்றாள் வர்கை.

“எங்கும் இது பொருள் கொள்கிறது. ஆலயத்தில் தெய்வம் அமர்வதுபோல் பெண்ணுடலில் பொன் அமைகிறது” என்றாள் வர்கை. தன் நெஞ்சக்குவையில் வைத்து “தீரா பெருங்காமம் கொண்ட இதழ் ஒன்றின் முத்தம்போல் சிலிர்க்க வைக்கிறதடி இது” என்றாள். “பெண்ணுடன் முற்றிலும் ஒன்றாகி ஒளிவிட பொன்னால் மட்டுமே முடியும்” என்றாள் சமீசி. “பொன் என்பது ஒருபோதும் வாடாத வண்ண மலரல்லவா?” என்றாள் லதை.

“பொன் என பிறக்க வேண்டும் ஒரு பிறவி” என்றாள் ஃபுல்புதை. “என்றும் புதிதாக என்பதனாலேயே இது தெய்வங்களாலும் விரும்பப்படுகிறது” என்றாள் சௌரஃபேயி. “அழியா மங்கலங்கள் அழியலாகும். எங்கும் எந்நிலையிலும் மங்கலம் கொள்வதே பொன்” என்றாள் வர்கை.

அணி ஊர்வலம் முடிந்து தங்கள் மாளிகைகளுக்கு சென்றபின் பிற தேவகன்னிகளின் விழி தவிர்த்து தங்கள் அறைக்குள் புகுந்து அமர்ந்துகொண்டு அந்தப் பொன் மணியை மாறிமாறி கைகளில் வைத்து நோக்கி உடல் பொருத்தி உணர்ந்து, ஒளித்துவைத்து எண்ணி உளம் மகிழ்ந்தனர். பின்பு தங்கள் ஆடைப்பட்டில் சுற்றி உடல் மடிப்புகளுக்குள் ஒளித்துக்கொண்டு ஒடுங்கி படுத்துத் துயின்றனர்.

அத்துயிலில் தொலைவில் ஒரு பொற்த்துளி கிடப்பதை வர்கை கண்டாள். ஆவலுடன் சென்று குனிந்து அதை தொட்டாள். மெல்ல அசைந்து அது ரீங்கரித்தபோது அது ஒரு பொன்வண்டு என்று உணர்ந்தாள். விழிகள் மயங்கி மயங்கி மறைய குனிந்து நோக்கியபோது அது பொன்னிறத்து முட்டை என்று தெளிந்தாள். முட்டை ஓட்டை கையால் அழுத்தி விரிசலிடச்செய்து மெல்ல உடைத்துத் திறக்க உள்ளிருந்து பொற்கம்பி சுருளவிழ்வது போல மெல்ல நெளிந்தபடி நாகக்குழவி வெளிவந்தது.

சிறுவால் விடைத்து மெல்ல அசைய தலைதூக்கி பத்தி விரித்து ஆள்நோக்கி நா நீட்டி சீறி அவளை நோக்கி வந்தது. அவள் அஞ்சியபடி கைநீட்டி அதை தொட்டாள். சுட்டு விரலில் பற்றி சுற்றி ஏறி மோதிர விரலில் வளைந்து ஓர் கணையாழி ஆயிற்று. “பாரடி இதை” என்று சொல்லி திரும்புகையில் மெல்ல வளைந்து மணிக்கட்டை அடைந்து கங்கணமாயிற்று. “வளர்கிறது” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலே தோள்வளை வடிவு கொண்டு மேலேழுந்தது. அவள் இடை வளைத்து சல்லடம் ஆயிற்று. எழுந்து முலை இணைகளின் நடுவே சென்று தோளை அடைந்து சுற்றி தோளாரம் ஆயிற்று. முதுகின் பின் எழுந்து அவள் நெற்றி வழியாக வந்து நாகபட மணி முடியாயிற்று.

“பொன்! ஆடகப் பசும்பொன்!” என்று அவள் அடைத்த குரலில் எவரிடமோ சொன்னாள். அவள் தலைக்கு மேல் எழுந்து மரம்போல் வளர்ந்து வான் நோக்கி படம் விரித்தது நாகம். அதன் வால் முனையில் அவள் சுற்றப்பட்டிருந்தாள். எத்தனை விரைவில் அது வீங்கி பேருரு கொள்கிறது என்று அவள் வியந்தபோது, அந்த வியப்பையே பொருளற்றதாக்கும் வண்ணம் அடிமரம்போல் மண்டபத்தூண் போல் கோபுரம் போல் உடல் பெருத்து வளர்ந்தது. காலை இளவெயிலில் அதன் பொற்செதில்கள் ஒளிவிட்டன.

ஈரம் என குளிர்ந்திருந்தது அதன் பொன்னுடல். இடி ஓசையை கேட்டாள். மின்னலென அதிர்ந்து அடங்கியது அதன் நா பறத்தலே என்று கண்டாள். தன்னை கால் முதல் தலைவரை சுற்றி இறுக்கி இருக்கிற அதன் வாலை விலக்க முயலும்போது அது மேலும் இறுகுவதையும் அறிந்தாள். ஆலமரத்தின் வேரால் சுற்றப்பட்ட பாறை என நெரிந்தாள்.

பொருளிலாச் சொல் ஒன்றைக் கூவியபடி எழுந்து அமர்ந்து நெஞ்சை அழுத்தினாள்.   “என்னடி? கனவா?” என்றபடி தோழிகள் சூழ்ந்தனர். “ஆம், கனவுதான்.” அவள் கண்டவற்றை தொகுத்துக் கொள்ள முயன்றாள். ஒரு சொல்லும் எழாமல் தலையை அசைத்ததும் “கொடுங்கனவு” என்றாள். “என்ன கண்டாய்?” என்றாள் லதை. “நாகம்… பொன்னுடல் கொண்ட நாகம்” என்றாள். ஃபுல்புதை அவள் தொடையை அழுத்தி, “நாகத்தை கனவு கண்டால் இனிய கூடல் ஒன்று நிகழ இருக்கிறது” என்றாள். “போடீ” என்று அவளை தள்ளினாள்.

“பொன்னிற நாகத்தை கனவு காண்பவள் பெருந்தோள் கொண்ட வீரனால் அணைக்கப்படுவாள்” என்றாள் சமீசி. “பேசாதே” என்று சொல்லி முழங்கால் மடிப்பில் முகம் சேர்த்து, உடல் ஒடுக்கி அமர்ந்தாள். “என்னடி அக்கனவு?” என்றாள் சௌரஃபேயி. “நான் அஞ்சுகிறேன். இந்தப் பொற்துளியை பெருங்காட்டை தன்னுள் அடக்கிய விதை என்று நான் உணர்கிறேன். என் உடல் சதுப்பென இதை வாங்கிக் கொண்டுள்ளது. இது முளைத்து எழுந்து விரியும்” என்றாள் வர்கை. “அவ்வண்ணமே ஆகட்டும். மட்கி இதற்கு உரமாகுவோம்” என்றாள் லதை.

சமீசி சினந்து “என்னடி வெறுஞ்சொல் சொல்கிறாய்?” என்றாள். “நான் இதை அஞ்சுகிறேன்” என்றாள் வர்கை. “அப்படியென்றால் என்னிடம் கொடுத்துவிடு” என்றாள் லதை. “போடீ” என்று சொல்லி தலையை திருப்பிக் கொண்டாள். சற்று நேரம் கழித்து பெருமூச்சுடன் “என்னை எது கொண்டு அழித்தாலும் சரி, இதன் உறவிலாது இனி வாழ்க்கையில்லை எனக்கு. ஒன்று பிறிதொன்று என நீளும் முடிவற்ற காலம் கொண்ட நம்மால் இத்தகைய நிகழ்வுகளினூடாகவே அலையென ஒன்றை அறியமுடிகிறது” என்றாள்.

“விளைவுகள் எவ்வகையிலும் ஆகுக! நிகழ்வுகள் எவையாயினும் அவை அறிதலை உள்ளடக்கியவையே. நன்றெனினும் தீதெனினும் அந்நிகழ்வு அளிக்கும் அறிதல் தூயதே. சந்தனத்திலும் மலத்திலும் எரியும் தழல் என்பது அவிகொள்ளும் தேவனே அல்லவா?” என்றாள். “ஞானியைப்போல் பேசுகிறாய்” என்றாள் ஒருத்தி. “அவ்வண்ணம் பெருஞ்சொல் எடுப்பவள் தாளா காமம் கொண்டுவிட்டாள் என்றே பொருள்” என்றாள் ஃபுல்புதை.

அவள் அதை தன்னுடலில் ஒளித்துக்கொண்டாள். விதையிலை நடுவே முளைக் கருத்துளிப்போல் அப்பொன்மணி அவள் உடலில் இணைந்து உயிர்த்தசையென ஆகியது. அதன் பின் அவள் எழுந்து வெளிவந்து நோக்கியபோது தேவர் குலம் முற்றிலும் பிறிதென தெரிந்தது. பொன்னிலும் பளிங்கிலும் செம்மணியிலும் புனையப்பட்ட அப்பெரும் நகரம் துடிக்கும் தசையினால் ஆனது என மயக்கு காட்டியது. சுவர்களைத் தொட்டு தோல் மென்மையை உணர முடிந்தது. தூண்களைத் தழுவி உள்ளே குருதி ஓடும் வெம்மையை உணர முடிந்தது. கட்டடங்களின் மூச்சோட்டத்தை இருண்ட அறைகளில் நிறைந்திருந்த இதயத் துடிப்பை அவள் அறிந்தாள்.

அமராவதியின் அழியா வசந்தத்தை தேன்நிறை மலர்களை தொட்டுத் தொட்டு விலக்கி ரீங்கரித்து தவித்து அலையும் விழிஎழுந்த பட்டாம்பூச்சி போல அவள் சுற்றிவந்தாள். அவள் தோழிகள் உடனிருந்தனர். அவர்கள் அன்றுவரை கண்டதை தங்களிலிருந்து பிறிதென அறியும் அகப்பிரிவு கொண்டிருக்கவில்லை. அவ்விரண்டின்மை அழிய அவர்கள் காண்பவை அனைத்தும் புறம் என்றாயின. அள்ளி அள்ளி நிறைத்துக்கொண்ட அகம் எப்போதும் குறைகொண்டு தவித்தது.

தன் வைஜயந்தம் என்னும் உப்பரிகையில் அமர்ந்து இந்திராணியுடன் நாற்களச் சூது ஆடிக்கொண்டிருந்தான் இந்திரன். எட்டுத் திசைத் தெய்வங்களையும் எட்டு வசுக்களையும் புவி தாங்கும் நாகங்களையும் ஏழு முனிவர்களையும் காய்களென அக்களத்தில் வைத்து அவர்கள் ஆடினர். வெற்றியும் தோல்வியும் இன்றி இந்திரனும் அரசியும் ஆடி முடித்தாக வேண்டும் என்பதே அமராவதியின் நெறி. இருவரில் ஒருவர் வென்றாலும் இந்திரபுரியின் முறையமைவு பிழைவுறும் என்பது தெய்வங்களின் ஆணை. அதை சீரமைத்த பின்னரே நகர் தன் இயல்புக்கு வரலாகும்.

அம்முறை அதில் இறுதிக் காய் ஒன்றை நகர்த்தி இந்திராணி வென்றாள். சினந்து களம் மீது இரு கைநீட்டி “என்ன ஆயிற்று?” என்றான் இந்திரன். “எனது இந்தக் காய் ஏழு காய்களை வெட்டி இங்கு வந்தது” என்றாள் இந்திராணி. குனிந்து இறுதியில் வென்று நின்ற காமனை நோக்கினான் இந்திரன். “நாகங்களையும் திசைத்தேவர்களையும் எப்படி கடந்தது? ஏழு முனிவரையும், எட்டு வசுக்களையும் எப்படி வென்றது காமம்?” என்றான். காமனுக்கு தடை வைக்க ரதியையும் அவன் நகர்த்தியிருந்தான். ஊசி அசையா துலாக்கோலென ஒருவரையொருவர் தடுக்கும் இரு முனைகள் அவை. அன்றோ ரதியை தன்னுடன் தூக்கி மும்முடங்கு விசைகொண்டு முன்நகர்ந்திருந்தான் மலரம்பன்.

களம் நோக்கி சற்று அமைந்திருந்த பின் எழுந்து வெம்மூச்சு விட்டு “என்ன நிகழ்ந்துள்ளது என்று பார்க்கிறேன்” என்றான் இந்திரன். எடை மிக்க கால்களுடனே நடந்து சுதர்மை என்னும் தன் அவைக்கு வந்தான். கால மடிப்புகளின் கதைமுறைகள் அறிந்த நாரதரை அழைத்து வரச்சொன்னான். அவை வந்த இசைமுனிவரிடம் “காலமும் விழியும் கொள்ளும் கணக்குகள் அனைத்தும் நிகர்நிலை கொண்டுள்ள இந்நகரில் எங்கனம் காமம் வென்றது?” என்று அவன் கேட்டான்.

முறுவலுடன் “தேவர்க்கு அரசே, இப்பெரும் நகரிலுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களுள் ஒருத்தி காமம் கொண்டிருக்கிறாள். அவளிடமிருந்து அவள் தோழியர் நால்வருக்கும் அக்கனல் பற்றிக்கொண்டுள்ளது” என்றார். “எவர் அவர்கள் என்று அறிந்துகொள்ள வேண்டும் இக்கணமே” என அவன் எழுந்தான். “எவர் என்று எளிதில் காண முடியாது அரசே. ஐம்புலனும் முற்றிலும் நிகரமைந்தமையால் இமையாவிழி அமைந்தவர்கள் தேவர்கள். இமைப்பு என்பது ஐம்புலன்களும் ஐந்து தட்டுகளாக ஆடும் துலாவின் நடுவில் நின்றாடும் முள்ளின் தவிப்பே ஆகும். அது மானுடர்க்குரியது. இமைப்பை வென்றவர் முனிவர். கடந்தவர்கள் தேவர்” என்றார் நாரதர்.

“எழுக என் தேர்” என்றான் இந்திரன். வியோமயானம் என்னும் தன் ஒளித்தேரில் ஏறி அமராவதியின் அகன்ற தெருக்களில் ஊர்ந்தான். பொன்னொளிர் நாடெங்கும் பரந்தும் புணர்ந்தும் இசைத்தும் இனித்தும் இயைந்தும் குறையா பேரின்பத்தில் திளைத்திருந்த தேவர்களிள் முகங்களை நோக்கியபடி கடந்து சென்றான். விழைவின் துயரின் இன்பத்தின் அளவு வேறுபாடுகளாலேயே முகங்கள் ஒன்று பிறிதென ஆகின்றன. காற்றின் குளிரின் அளவின் ஆடலால் மழைத்துளிகள் ஒன்று பிறிதொன்றிலாது ஆவதுபோல. தேவர் உலகில் ஒவ்வொன்றும் முற்றிலும் நிகர் என்பதால் முகங்கள் அனைத்தும் ஒன்றே. ஒரு முகம் தன்னை ஆடிப் பரப்புகளில் பெருக்கிக்கொண்டதைப் போல. முடிவிலாது ஒரு முகமே வந்து விழிகாட்டி திரும்புவதுபோல.

பிறகு இந்திரன் கண்டான், இமைக்கும் ஐவர் விழிகளை. பற்றி எரிந்த சினத்துடன் சென்று அவர்கள் முன் நின்றான். அமராவதியின் பூந்தோட்டத்தில் சகஸ்ரம் என்னும் அழகிய நீலக் குளத்தின் கரையில் பூத்தெழுந்த சௌவர்ணம் என்னும் கொன்றை மரத்தின் அடியில் அவர்கள் இன்மொழி பேசி கனவினிலாடி அமர்ந்திருந்தனர். பொன் மலர்கள் உதிர்ந்த பெருங்கம்பளம் அவர்களைச் சுற்றி விரிந்திருக்க நடுவே அனல் வைத்து மூடிய பளிங்குபோல் ஒளிவிட்டுக்கொண்டிருந்தாள் வர்கை. இந்திரனைக் கண்டதும் தன் நெஞ்சில் அழுந்திய கைகளுடன் எழுந்து நின்றாள். கரவுள்ளம் கொண்ட பெண்ணின் உடல்மொழி அது என இந்திரன் அறிந்திருந்தான்.

“உன் விழிகள் இமைக்கின்றன. நீ உடல்கரந்தது எதுவென அறிவேன். விழைவின் துளிக்கனல் அது. எனவே இங்கு தேவர் என இருந்து வாழும் தகுதியை இழந்துவிட்டாய். இது நிகர் நிலையில் நின்றிருக்கும் நகரம். முள்முனை பனித்துளி என்று இதனை சொல்கின்றனர் முனிவர். உன்னால் இது சரிவுற்றது” என்றான். “வேந்தே, விழைவுகளுக்கு எவரும் பொறுப்பல்ல” என்றாள் வர்கை. “ஆம். பொருள் ஒவ்வொன்றிலும் அனல் உறைகிறது. ஆனால் ஒவ்வொன்றும் தன் அமைப்பால் மட்டுமே இருப்பு கொள்கின்றது. உள்ளிருக்கும் அனல் எழுந்தால் அவ்வமைப்பையே அது உண்டு சாம்பலாக்கும்.”

“தன்னுள் இருக்கும் நெருப்பை சூடும் தகுதி பசுமரத்திற்கில்லை” என்றான் இந்திரன். “இக்கணமே இங்கிருந்து நீ உதிர்க! உன் விழைவு எங்கு உன்னை இட்டுச்செல்கிறதோ அங்கு சென்று விழுக!” என்றான். கைகூப்பி “தேவர்க்கரசே, இத்தீச்சொல்லை தங்கள் ஆணை என்றே கொள்கிறேன். எங்கணம் இங்கு மீள்வோம் அதை மட்டும் கூறி அருள்க!” என்றாள் வர்கை. “ஆம், அருள்க!” என்றனர் தோழியர்.

“கன்னியரே, விழைவு என்பது இன்னும் இன்னும் என்று மீறும் எழுச்சியையும் போதும் போதும் என்று தள்ளும் தவிப்பையும் தன் இரு முனைகளாக கொண்டுள்ளது. அத்தவிப்பு மறைந்த மறுகணமே நீ எங்கிருந்தாலும் அங்கிருந்து எழுந்து மீண்டும் இங்கு வருவாய். இங்கிருந்து சென்றபோது இருந்த கணத்தின் மறுகணத்தை அடைவாய். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி இந்திரன் மறைந்தான்.

அந்தியில் வாடி உதிர்ந்து புலரியில் முளைத்தெழும் மலர்கள் போல் அவர்கள் குபேரனின் அளகாபுரியில் எழுந்தனர். தன் காலில் இடறி கையில் வந்து உடலில் கரந்த அச்சிறு பொன்மணி பல்லாயிரம் இதழ் விரித்து மலர்ந்து ஒரு நகரமென ஆனதுபோல் அளகாபுரியின் விரிவை வர்கை உணர்ந்தாள். பொன்னன்றி ஏதும் விழி படவில்லை. காற்றும் பொன்னலைகளாக இருந்தது. முகில்கள் பொற்புகைபோல் மிளிர்ந்தன. அங்கு வாழ்ந்த தேவர்களும் பொன்னுடல் கொண்டு இருந்தனர். அவர்களது விழிகள் பொற்சுடர் விட்டன. அவர்களின் இசை கலந்த மொழிகளும் பொன்னென அலையிளகின.

“பொன்னன்றி பிறிதிலா பேருலகு” என்றாள் வர்கை. “அள்ளி அள்ளிக் குவித்தாலும் முடிவிலியே மிஞ்சும் பொன்” என்று நெஞ்சம் அழுத்தி விம்மினாள் லதை. “கடலென கொண்டு கரந்தாலும் ஒரு துளியும் இடைவெளி விழா பெருக்கு இது” என்றாள் சமீசி. களித்தனர். முழுதுடலாலும் அங்கே திளைத்தனர். குபேரனின் அவைக்குச் சென்று அரசி சித்ரரேகையுடனும் மைந்தன் நளகூபரனுடனும் அமர்ந்திருந்த அவனை வணங்கினர். “துளி விழைந்தீர். பெருங்கடல் பெற்றீர். மகிழ்ந்திருப்பீர்” என்று குபேரன் அவர்களை வாழ்த்தினான்.

வந்தமைந்த முதல் நாளே களிவெறி கொண்டவர்களாக அப்பொன்வெளியில் அவர்கள் மிதந்தலைந்தனர். சிரித்தும் அழுதும் பொன்னில் விழித்து எழுந்தனர். பொன்நிற அமுதை உண்டனர். பொன்நிற அலைகளில் நீராடினர். பொற்பட்டாடை அணிந்தனர். பொன் மலர் சூடினர். பொன்னில் அளைந்து விளையாடி பொற்சேக்கையில் படுத்து பொற்கனவுகளில் எழுந்தனர். பொற்சரடென சுற்றிக் கட்டி இழுத்துச் சென்ற கனவுகளில் ஆழ்ந்தனர்.

பொற் தூண்களென அடிமரங்கள் சரிந்த பொற்தகடுகளென மின்னும் சருகுகளில் விழுந்து ஒளிர்ந்த கதிர்குழல்கள் வருடிச்சென்ற பொற்காடு ஒன்றுக்குள் வர்கை சென்று கொண்டிருந்தாள். அங்கு விரியத் திறந்து அவளை வரவேற்ற சிறு குடில் ஒன்றுக்குள் நுழைந்தாள். அவளைச் சூழ்ந்து அமைதி கொண்டு உருகி இணைந்து மூடிக்கொண்டன அவ்வில்லத்தின் சுவர்கள். திகைத்து திரும்பும் வழி நோக்க நாற்திசையும் ஒன்றுபோல் வளைந்திருப்பதை கண்டாள். பொன்முட்டை ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டிருப்பதை அறிந்து அஞ்சி பதறி அதன் சுவர்களை அறைய உலோகத்தின் உறுதியை, தண்மையை, அசைவின்மையை, அமைதியை அறிந்தாள். அவள் தவிப்பை இழுத்தும் நீட்டியும் சுருட்டியும் காட்டி களியாடியது அது.

அலறி விழித்து அது கனவல்ல என்று உணர்ந்து மீண்டும் அறைந்து கூவி தளர்ந்து முடிவிலா காலம் அங்கு இருப்பதன் பேரச்சத்தால் உடல் விதிர்த்து பின் தளர்ந்தாள். கூவி ஒலி எழுப்பும்போது அங்கு ஒலி என எதுவும் எழாது என அறிந்தாள். குரல் மறைந்துவிட்டதை உணர்ந்ததும் நெஞ்சு மும்மடங்கு கொப்பளித்து எழுந்து ஓலமிட்டது. உடல் திறந்து எழுந்த ஓசை வெறும் ஒரு பொற்கொப்புளம் என விரிந்து சூழ அக்கொப்புளத்தின் முட்டைக்குள் தான் இருப்பதை கண்டாள்.

இரு கைகளாலும் மஞ்சத்தை ஓங்கி அறைந்து கொண்டிருப்பதை உணர்ந்து, விழித்து எழுந்து நெஞ்சு பற்றி அமர்ந்து அவள் நடுங்கியபோது தோழியர் அவள் கைகளை பற்றிக்கொண்டனர். “என்ன ஆயிற்று? என்ன கண்டாய்?” என்றனர். “ஒரு கனவு” என்றாள் அவள். “என்ன கனவு?” என்றாள் அஞ்சிய லதை. “உலோகம்!” என்றாள் அவள்.

பின்பு தோழியரின் கை பற்றி “பொன் என்பது ஓர் வெறும் உலோகம். அதை எப்படி மறந்தோம்?” என்றாள். “உலோகம் தன்னுள் தானே அமைதி கொண்டது. பிறிதனைத்தையும் தன் பரப்பில் எதிரொளித்து மறுதலித்து உள்ளே தனித்து குளிர்ந்திருப்பது. எத்தனை ஓசையற்றவை இவ்வுலோகங்கள்!” லதை “ஆயினும் பொன் உலோகங்களில் பேரழகு கொண்டதல்லவா?” என்றாள். “இரக்கமின்மை முழுமை அடையும்போது அது பேரழகு கொண்டதாக ஆகிறது” என்றாள் வர்கை.

கண்ணீருடன் தலையசைத்து “இல்லையடி, இங்கு இல்லை நமது இடம்” என்றாள். “என்னடி சொல்கிறாய்?” என்று தோழியர் கேட்டனர். “நாம் அடைந்தது நமக்குரிய வாழ்வு அல்ல. இதை நாம் விழையவில்லை. நம்மில் விழைவெழுப்பியது இச்சிறு பொன்துளி. இது தூண்டிலின் முள்” என்றாள் வர்கை. “அப்பொற்குவைக்குள் என்னை உணர்ந்தபோது நான் விழைந்தது ஒரு சொல். என்னை அறிந்து அழைக்கும் ஒலி. அது மட்டுமே” என்றாள். எழுந்து முழங்கால்மேல் முலை வைத்து குறுகி அமர்ந்து உடல் சிறுத்தாள்.

“இப்பொன்வெளியில் சிறையிடப்பட்டிருக்கிறோமடி” என்றாள். அவள் சொன்னதை பிறர் நால்வரும் உணர்ந்துகொண்டனர். நீள்மூச்சுடன் அவள் அருகே அமர்ந்து “ஆம், அதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உணரத் தொடங்கியிருக்கிறோம்” என்றனர்.

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 4

தன் மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து சித்ரரேகையுடன் பகடையாடி மகிழ்வது குபேரனின் கேளிக்கை. அரவும் ஏணியும் அமைந்த களத்தில் மானுடம், தாவரம், மலைகள் என்பனவற்றின் சடலங்களை கருக்களாக்கிப் பரப்பி காம குரோத மோகம் என்னும் மூன்று பகடைக் காய்களை ஆடும் அந்த ஆட்டம் முற்றிலும் நிகர் நிலையில் முடியவேண்டும் என்பது அளகாபுரியின் தெய்வ ஆணை. அது குலையுமென்றால் நிகர்நிலையழியும் .

செந்நிறமும் கருநிறமும் பொன்நிறமும் கொண்ட காய்களை மாறி மாறி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கையில் சித்ரரேகை இறுதியாக உருட்டிய பகடையின் எண் மேலெழுந்து குபேரனை வென்றது. புன்னகையுடன் “அரசே வென்றேன்” என்றபோது திகைத்து எழுந்து குனிந்து காய்களை பார்த்தான். “எங்கு நம் பிழைத்தது கணிப்பு?” என்று அறியாது திகைத்தான். “நானறியேன். என் வழக்கப்படி ஆடினேன்” என்றாள் அரசி

காலமும் காலம் கடந்ததும் ஆகி எங்கும் நிற்கும் அனைத்துமான ஒன்றை அறிந்த நாரத முனிவரை அழைத்து வர ஆணையிட்டான் செல்வத்துக்கிறைவன். முனிவர் வந்து வணங்கி, “அப்பகடைக் களத்தை காட்டுக!” என்றார். கூர்ந்து நோக்கி “அரசே, உங்கள் விழி தொடாத பிறிதொரு காய் ஒன்று இங்கு உருண்டுள்ளது” என்றார். “இது செல்வத்தின் களம். காம குரோத மோகம் என்னும் மூன்று காய்கள் மட்டுமே இங்கு உருள்பவை” என்றான் குபேரன்.

கையால் தொட்டு எடுத்துக்காட்டி “வண்ணமோ வடிவமோ அற்ற இந்தக் காய் உருண்டுள்ளது. இதன் எண்களும் கலந்து இதன் ஆட்டம் நிகழ்ந்துள்ளது” என்றார் நாரதர். ஒளியை வெட்டி செய்ததுபோலிருந்த அப்பளிங்குக் காயை நோக்கி “இது எதனால் ஆனது?” என்றான் குபேரன். “காமமும் குரோதமும் மோகமும் நிறைக்க ஒண்ணாத விடாய் ஒன்றால் ஆனது. அருந்தவ முனிவர் அடைந்து அருந்தும் அமுதம் மட்டுமே அணைக்கும் தழல் அது” என்றார். “இக்களத்தில் எங்ஙனம் வந்தது?” என்றார். அரசி திகைத்து “நான் ஒன்றும் அறியேன்” என்றாள்.

“முனிவரே, இது பொருள் விழைவுகளின் பெருவெளி மட்டுமே. பொருளெல்லாம் பொன்னால் அளவிடப்படுவதென்பதனால் பொன்னால் நிறைக்கப்படாத விழைவுகள் என இங்கு இருக்க முடியாது.” “பொன் தொடா விழைவென்பது மெய்மைக்கும் முழுமைக்குமானது அரசே” என்றார் நாரதர். “எவர் கொண்டுள்ளார் இங்கு அவ்விழைவை?” என்றான் குபேரன்.

நாரதர் “சூரியன் இல்லா உலகு இது. தன்னொளி கொண்டதுபோல் இங்குள்ள ஒவ்வொன்றும் சுடர் விடுபவை. எனவே நிழலற்றது அளகாபுரி என்று நீ அறிவாய். பொன்னொளி சென்று மறையும் ஆழமொன்றை தன்னுள்ளே கொண்டவர்கள் நிழல் சூடி இருப்பார்கள். அவர்களை தேடிக் கண்டடைய வேண்டும்” என்றார்.

தன் புஷ்பக விமானத்தில் ஏறி குபேரன் அளகாபுரியின் தெருக்கள்தோறும் ஊர்ந்தான். அங்கே பொற்தூண்கள் சூழ்ந்த பேரிசை மண்டபத்தில் பொன் முரசுகள் ஒலிக்க பொற்பட்டாடை அணிந்து நடனமிட்டுக் கொண்டிருந்தனர் கலைஞர்கள். சூழ்ந்து அமர்ந்து அதை நோக்கி மகிழ்ந்திருந்த தேவர்களின் நடுவே அவர்கள் அறியாது நுண் வடிவை நோக்கியபடி அவன் சுற்றிவந்தான். அங்கு தரையில் கரிய ஐந்து வடிவங்கள் கிடப்பதை கண்டான். அந்நிழல் வடிவங்கள் மேல் பொன்வடிவென அமர்ந்த ஐவரை அணுகி அவர்கள் முன் சினம் கொண்டு எரிந்த விழிகளுடன் தோன்றினான்.

“எங்கு வாழ்கிறீர்களோ அங்குள்ளவற்றால் நிறைவுறும் விழைவுகளே உண்மையானவை. இங்கு நீங்கள் கொண்டுள்ள விழைவு பொன்னால் நிரப்பப்படாதது என்பதனால் பொருந்தா இருப்பு கொண்டீர்...” என்றான். “இப்போதே என்னுலகிலிருந்து விலகுங்கள்!” அஞ்சி எழுந்து கைகூப்பி “இவ்விழைவு எங்களுள் ஊறுவது எங்கள் பிழையால் அல்ல. இவ்வண்ணம் இதை அமைத்த தெய்வங்களின் பிழை” என்றாள் வர்கை.

“ஆம்” என்று பெருமூச்செறிந்து குபேரன் சொன்னான் “பொருள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு துளி நீர் இருப்பதுபோல. பொருட்கள் தம் வடிவம் இழந்து நீர்மை கொள்ள விழைவது அதனால்தான். காலவெளியில் முடிவின்றி இருக்கவிடாமல் பொருள்களை அலைவுறச் செய்யும் அகம் அதுவே. அத்துளி எழுந்தபின் இங்கு நீங்கள் இருக்க இயலாது. உங்கள் உளம் விரும்புவது பிறிதொன்று. இவ்விழைவுடன் நீங்கள் எங்கு எழ வேண்டுமோ அங்கு செல்க!” என்றான்.

பொன்னின் தலைவனின் சொற்களைக் கேட்டு மறுமொழி உரைப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து ஐந்து எரியும் மீன்கள் என விழுந்து பாரத வர்ஷத்தின் தெற்கே மகாநதிக் கரையில் இருந்த தேவாரண்யம் என்னும் பசும் பெருங்காட்டில் இருந்த ஐந்து சுனைகளில் அலையெழுப்பி மூழ்கினர். குளிர்ந்து தேவகன்னியராக எழுந்தனர்.

ஐந்து தேவகன்னிகள் குளிர்ச்சுனைகளில் இருந்து எழுந்ததைக் கண்டு, அங்கு உலாவிய மான்கள் விழிசுடர்ந்தன. யானைகள் துதிக்கை நீட்டி நீள்மூச்செறிந்தன. பறவைகள் கலைந்து எழுந்து வாழ்த்தொலி கூவின. வான் நோக்கும் ஆடிகள் போன்ற அகஸ்தியம், சௌஃபத்திரம், பௌலோமம், காரண்டமம், சுப்ரசன்னம் என்னும் ஐந்து சுனைகள் ஆடி தன் பாவையை உமிழ்வது போல தம் பரப்பிலிருந்து அவர்களை ஈன்றன.

இலை செறிந்த மரக்கிளைகளால் முற்றிலும் வான் மறைக்கப்பட்ட தேவாரண்யம் பகலிலும் இருண்டு குளிர்ந்து தன்னுள் தான் மறைந்து கிடந்தது. அங்கு வாழ்ந்த விலங்குகள் தங்கள் விழியொளியாலேயே நோக்கின. தடாகங்கள் தங்கள் ஆழங்களிலிருந்தே ஒளியை கொண்டிருந்தன. உச்சிப்பொழுதில் அத்தடாகத்தின் உள்ளிருந்து எழுந்த தேவகன்னிகள் அது இரவென்றே எண்ணினர்.

தங்கள் விழியொளியால் அக்காட்டை நோக்கியபடி அதில் ஒழுகி அலைந்தனர். இலை நுனிகளைத் தொட்டு அசையவைத்தனர். விம்மி காற்றில் நின்ற மலர்களைத் தொட்டு மலர வைத்தனர். உள்ளிருந்து அதிர்ந்த முட்டைகளைத் தட்டி விரிசல் விட வைத்தனர். ஈரச்சிறகுகளுடன் கோதுமை அலகுடன் வெளிவந்து மலர்க்காம்புக் கால்களை எடுத்து வைத்து தள்ளாடி உடல் சிலிர்த்த குஞ்சுகளின் மென்தூவிகளை விரல்களால் நீவி காயவைத்தனர். கிளைகளை உலுக்கி காற்றில் விளையாடினர். உதிரும் மலர்களை அள்ளி வழிந்த நீரோடைகளில் இட்டு நூலில்லா மாலையாக்கி மகிழ்ந்தனர்.

பின்பு பூத்த சரக்கொன்றை ஒன்றின் கீழ் பொன்மலர் பாயில் படுத்து இளைப்பாறினர். துயிலில் அவர்கள் அமராவதியின் ஒளி மிகுந்த தெருக்களை கண்டனர். அங்கு அவர்கள் கண்ட அத்தனை தேவர் விழிகளும் இமைத்துக் கொண்டிருந்தன. அவர்களின் இதழ்கள் அனைத்திலும் விழைவு ஒரு சொல்லென ஓடிக் கொண்டிருந்தது. ஒருவரை ஒருவர் பார்க்காத கணத்தில் அவர்களின் கால்கள் மண்ணை தொட்டன.

நடுவே உயர்ந்த மாளிகை உப்பரிகையில் அமர்ந்து தன் துணைவியுடன் நாற்களமாடிய இந்திரனின் அருகே இருபுறமும் இரு தெய்வங்கள் நின்றிருந்தன. சங்கும் சக்கரமும் ஏந்திய தெய்வம் வெண்ணிற ஒளி கொண்டிருந்தது. மான் மழுவேந்தி மறுபக்கம் நின்றிருந்தவனோ இருண்டிருந்தான்.

தேவியின் இருபுறமும் கரிய ஆடையுடுத்து விழிமணிமாலையும் தாமரையுமென ஒருத்தி நின்றாள். வெண்கலை உடுத்தி பொற்றாமரைகள் ஏந்தி நின்றிருந்தாள் ஒருத்தி. அவர்களின் களத்தில் பாம்புகளும் பறவைகளும் கருக்களாக அமைந்திருந்தன. அவற்றினூடாக சிற்றுருவம் கொண்டு தேவர்களும் மானுடரும் ஊர்ந்து கொண்டிருந்தனர்.

இனிய இசையொன்று கேட்டு அவர்கள் எழுந்தபோது காடு நிலவொளியில் ஊறி பளபளத்துக் கொண்டிருப்பதை வர்கை கண்டாள். “எடீ, எழுந்திருங்களடி!” என்று தன் தோழியரை தட்டி எழுப்பினாள். ஒவ்வொருவரும் எழுந்து “அமராவதிக்கு மீண்டுவிட்டோமா?” என்றார்கள். “ஆம், இது அமராவதியே” என்றாள் சமீசி.

“இல்லையடி, நிலவெழுந்துள்ளது” என்றாள் லதை. “ஒரு நிலவு இத்தனை ஒளியை உருவாக்குமா என்ன?” என்றாள் சௌரஃபேயி. “நிலவொளியென்றால் நிழல் விழவேண்டுமே! இங்கு ஒவ்வொன்றும் பளிங்கென மாறியுள்ளது. ஊன்விழி காணும் ஒளியல்ல இது” என்றாள் ஃபுல்புதை.

வர்கை “இங்குள ஒவ்வொன்றும் தன்னுளிருந்தே அவ்வொளியை கொண்டுள்ளது. தன்னொளி கொண்டவை மட்டுமே நிழலின்றி நிற்கமுடியும். எழுக! அது என்னவென்று பார்ப்போம்” என்றாள். அக்காட்டினூடாக விழி துழாவி அவர்கள் நடந்தனர். ஒளி கொண்டிருந்தன மரக்கிளைகள். பளபளத்தன இலைகள். சுடர்ந்தன மான் விழிகள். வெண் நெருப்பென அலைந்தன புரவிகளின் பிடரி மயிர்கள்.

தன்னருகே அதிர்ந்த இலையொன்றை சுட்டி “இவ்விலை ஒரு நாவென மாறி எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறது” என்றாள் லதை. வர்கை அவ்விலையை நோக்கி தன் விழியை காதாக்கினாள். “அது காயத்ரி மந்திரத்தை சொல்லிக் கொண்டுள்ளது” என்றாள். அக்கணமே அவர்கள் அனைவரும் அங்குள்ள அனைத்தும் அம்மந்திரத்தை சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டனர்.

“காட்டின் கோடி நாக்குகளுக்கும் காயத்ரியை கற்றுத்தந்த முனிவர் எவர்?” என்றாள் வர்கை. “அங்கு எங்கோ அவர் எழுந்தருளியுள்ளார்” என்றாள் ஒருத்தி. மான் விழியொன்றை நோக்கி “இவை ஒரு திசை நோக்கி நிலைத்துள்ளன” என்றாள் வர்கை. “இங்குள விழிகள் அனைத்தும் அத்திசையை நோக்குகின்றன. ஆதலினால் அங்குளார் அம்முனிவர்.” அவ்விழிகள் சுட்டிய திசை நோக்கி தென்றல் சுமந்த புகைச்சுருள்களென அவர்கள் சென்றனர்.

அங்கே ஆலமரத்தின் அடியில் இலைச்சருகுகளால் கட்டபட்ட சிறு தவக்குடில் ஒன்றை கண்டனர். தொலைவிலிருந்து அதை நோக்கி கணித்தனர். தன் விழி மூடி அறிந்து மீண்ட வர்கை “அவர் பெயர் பூர்ணர். காசியப குலத்துதித்த அருந்தவ முனிவர். நூறாண்டு காலம் இங்கு தவம் செய்து தன் அரவுப்புற்றில் இருந்து நாகமணியை நெற்றிப்பொட்டிற்கு எடுத்து ஆயிரம் இதழ் அலரச்செய்தவர். இங்குள தண்ணொளி அவரது சகஸ்ரத்தில் எழுந்த பெருநிலவின் ஒளியே” என்றாள். “நான் அச்சம் கொள்கிறேனடி. சென்றுவிடுவோம்” என்றாள் லதை.

“இல்லையடி. நாம் தீரா விடாய் ஒன்றினால் இங்கு வந்துளோம். அதைத் தீர்க்கும் சொல் இவரிடமே உள்ளது போலும். இல்லையேல் நாம் இங்கு எழ வாய்ப்பில்லை” என்றாள் வர்கை. “வருக! அதை அவரிடமே கேட்போம்” என்று நால்வரும் எழ கை நீட்டி அவர்களை தடுத்தாள் வர்கை. “விழைவற்று எஞ்சாது முழுமைகொண்ட உள்ளத்தால் இவ்வொளியை அடைந்துள்ளார் இம்முனிவர். இவரை வென்று அச்சொல்லை அடைவது எளிதல்ல” என்றாள்.

“என்னடி செய்வது?” என்றாள் லதை. “நிகர் உலகொன்றை படைத்து திரிசங்குவை அங்கு அமர்த்தும் தவவலிமை கொண்டிருந்த விஸ்வாமித்திரரே நம்மவள் ஒருத்தி முன் காமம் கொண்டு அடிபணிந்த கதைகளை நாமறிவோம். மெய்த்தேடிகளென இவரை வெல்ல நெடுநாளாகும். காமினிகளென இவரை வளைக்க ஒரு நொடியே போதும்” என்றாள் வர்கை. “அத்தனை கதைகளிலும் அரும்படிவர் தவம் கலைந்தது நிகழ்ந்துள்ளது. ஆனால் தவம் கலைத்தவள் எதையும் பெற்றதில்லை” என்றாள் சௌரஃபேயி. “ஆம். இவர் தவம் கலைத்து நாம் அடைவதொன்றில்லை” என்றாள் சமீசி.

“இல்லையடி, முற்றிலும் சொல்லின்மை கொண்ட ஒருவர் அடையும் முழுமை இவர் கொண்டுள்ளது. இவர் வாய்திறந்து நமக்கு அருளவேண்டுமென்றால் இந்த இறைநிலை கலைந்தே ஆகவேண்டும். நமக்கு வேறு வழியில்லை” என்றாள் வர்கை. எண்ணி குழம்பியபின் வர்கையின் சொல்லை அவர்கள் ஐவரும் நோக்கினர். வர்கை “என்ன செய்வதென்று அறியேன். கடலென தவப்பேராற்றல் கொண்ட இவரை எங்ஙனம் வெல்வேன்?” என்று ஏங்கினாள். கண்மூடி நெஞ்சில் கைவைத்து “விண் உலாவியாகிய நாரதரே, உங்கள் அடிபணிந்து இதை கோருகிறேன். அருள்க!” என்றாள்.

இசை முழங்க அங்கு ஒரு மலர்மேல் தோன்றிய நாரதர் “சொல்க கன்னியே!” என்றார். “இவ்வருந்தவத்தோனை எப்படி வெல்வேன்?” என்றாள் வர்கை. “தவம் முதிரும்தோறும் முனிவரை வெல்வது எளிதென்று உணர்க! பேராவல் கொண்டு தவம் நாடி வரும் இளைஞன் ஒருவனை வெல்ல உன்னால் இயலாது. அவன் விழைவதனைத்தும் காலத்துக்கு முன்னாலெங்கோ உள்ளன என்பதால் ஒரு கணமும் பின்னால் திரும்பிப் பார்க்க மாட்டான்” நாரதர் சொன்னார்

“ஆனால் இங்கு அமர்ந்து விழைவுகளை ஒவ்வொன்றாக உதிர்த்து தவத்தின் முடியேறி அமர்ந்திருக்கையில் இவர் இழந்ததே மிகுதி. எனவே ஒராயிரம் அழைப்புகளாக அவரது கடந்த காலம் பின்னால் விரிந்துள்ளது. கன்னியே முள்முனையில் நெல்லிக்கனி என்று முழுமை கொண்ட தவத்தை சொல்கிறார்கள். அதைத் தொட்டு உருட்டுவது மிக எளிது. நீ சென்று அழைத்தால் திரும்பாமலிருக்க அவரால் இயலாது” என்றார் நாரதர்.

“அது முறையோ?” என்றாள் வர்கை. “இப்புவியில் தன் இயல்பான விழைவொன்றை தொடர்ந்து வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இங்குள்ள அனைத்தும் நுகர்கனிகளும் விளையாட்டுப் பொருட்களும்தான். பாதையில் துணைவரும் தோழமைகள் அவை. ஆனால் தன்னை ஒறுத்து தவநிலை கொண்டு இறையளித்த எல்லையைக் கடக்க உன்னும் ஒருவர் தெய்வங்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். அவருக்கு இங்குள்ள அனைத்தும் எதிரிகள் என்றே ஆகும். விண்ணும் மண்ணும் அளிக்கும் அமுதங்கள் அனைத்தும் நஞ்சாகும்” என்றார் நாரதர்.

“அறிக! முழுமைதேடும் தவ முனிவர்கள் முன் நஞ்சு கொண்டெழ நாகங்களுக்கு ஒப்புதல் உள்ளது. விழைவை ஏந்திவந்து சூழ தேவர்களுக்கு ஆணை உள்ளது. காமம் சுமந்து முன் சென்று நிற்க தேவகன்னியர் கடமை கொண்டுள்ளார்கள். தெய்வங்களுக்கு உகந்ததையே நீ செய்கிறாய். செல்க!” என்றார். தலைவணங்கி “அவ்வண்ணமே” என்று சொல்லி அவள் ஒசிந்து நடந்து தன் நான்கு தோழியருடன் முனிவர் வாழ்ந்த தவக்குடிலுக்குள் நுழைந்தாள்.

அப்போது பூர்ணர் தன் உள்ளே எழுந்த ஒளிப்பெருவிழியின் நடுவே ஊசி முனையால் தொட்டு எடுக்கும் அளவுக்கு சின்னஞ்சிறிய கரும்புள்ளி ஒன்றைக் கண்டு அதை நெருங்கிக் கொண்டிருந்தார். அணுகும்தோறும் அது ஒரு பெரும் சுழியின் மையம் என்பதை உணர்ந்தார். சுழிமையத்தை நேர்கோட்டில் அணுக முடியாது. பல்லாயிரம் கோடி காதங்கள் அதற்கு சுற்றும் வளைந்து சென்றன. அகலத்தில் தொலைவும் அணுக்கத்தில் விரைவும் என்றான புரிசுழல் பாதையில் தானெனக் கொண்ட அனைத்தும் தெறித்து விலகி பின்னெங்கோ சென்று மறைய தனித்து பின் தனித்து பின் தனித்து தனித்திருப்பதென்பதும் பறக்க அவர் சென்று கொண்டிருந்தபோது மிகத்தொலைவில் எங்கோ ஐந்து விண்மீன்களை கண்டார்.

அவை மேலும் மேலும் என ஒளி கொண்டு அணுகி வந்தன. தன் போதத்தின் துளி ஒன்றைத் தெறித்து புரிசுழல்பாதையில் பின்னுக்கு அனுப்பி விழிகள் என்றாக்கி அவ்வெரிவிண்மீன்களை நோக்கவிட்டு முன்சுழல் பாதையில் தொடர்ந்தார். விழி திறந்த பூர்ணரைக்கண்டு வணங்கி நின்ற வர்கை “அருந்தவ முனிவரின் அடிகளை வணங்கினேன். இக்காட்டில் எழுந்த ஐந்து அரம்பையர்கள் நாங்கள்” என்றாள். “இத்தவக்குடிலில் உங்களுக்கென்ன வேலை? வெளியேறுங்கள்!” என்றார் பூர்ணர். “ஆலமர்ந்துள்ளதால் தங்களை ஆசிரியரெனக் கொண்டோம். தங்கள் அடி பணிந்து எங்கள் ஐயம் ஒன்றை தீர்க்கும் பொருட்டு வந்தோம்” என்றாள்.

“விலகுங்கள்! நான் புலன்ஒறுத்து அகம் அவித்து முதல்முழுமை நோக்கி சென்று கொண்டிருப்பவன்” என்றார் பூர்ணர். “அருளறிவு தேடி வரும் மாணாக்கர்களை விலக்குவது ஆசிரியருக்கு அழகல்ல. எங்கள் வினாக்களை எதிர் கொள்ளுங்கள்” என்றாள். “அதற்குரிய நேரம் இதல்ல. இது என் முழுமையின் தருணம்” என்றார் பூர்ணர். “தங்கள் முழுமை எங்கள் சொல்லால் கலையுமென்றால் அது அத்தனை நொய்மையானதா?” என்றாள் லதை.

“சொல்லெடுக்காதீர்கள். விலகுங்கள்…” என்று சினந்தார் பூர்ணர். “அவ்வண்ணமே விலகுகிறோம். ஆனால் எங்கள் ஐயங்களை இங்கு விட்டுச் செல்கிறோம். இங்கு அவை விளையாடட்டும்” என்று சொல்லி தன் குழல்சூடிய வெண்முல்லை மலர்களை அள்ளி தரையிலிட்டுவிட்டு திரும்பி தன் தோழியரை நோக்கி “வாங்களடி” என்றபடி தவக்குடிலை விட்டு வெளியே சென்றாள் வர்கை. பிறரும் தாங்கள் சூடிய மலர்களை உதிர்த்துவிட்டுச்சென்றனர்.

அம்மலர்களிலிருந்து அவர்கள் முளைத்தெழுந்தனர். ஐவரும் ஐநூற்றுவர் ஆயினர். காமம் கனன்ற விழிகள் விரிந்து அவரை நோக்கின. செவ்விதழ்கள் களியாடின. மென்முலைகள் எழுந்தமைந்து மூச்செறிந்தன. திகைத்த பூர்ணர் “உள்ளே வருக!” என்று அவளை அழைத்தார். அவள் சிரித்தபடி வந்து நின்றாள். “உங்கள் வினாக்களை கேளுங்கள்” என்றார் பூர்ணர்.

வர்கை தலைவணங்கி “தங்கள் அருள் கொள்ளும் நல்லூழ் கொண்டவளானேன். இது முதல் வினா” என்றாள். அவர் தலையசைக்க “முதல்நிறைவின்மை என்பது ஏது? எனென்றால் அதுவே வாழ்வைச் செலுத்தும் முதல் வினா” என்றாள். பூர்ணர் சினம் மின்னிய விழிகளுடன் திரும்பி அருகே நின்ற சௌரஃபேயியை நோக்க அவள் புன்னகையுடன் வணங்கி “எவ்வினாவின் முன் ஒருவன் தன் இறுதியை காண்கிறான்?” என்றாள்.

பூர்ணரின் நிலையழிவைக் கண்டு புன்னகைத்த சமீசி “எவ்விடையில் அவன் முதல்நிறைவை காண்கிறான்?” என்றாள். ஃபுல்புதை “எவ்விடையில் ஒருவன் வினாவென்பது பொய் என உணர்கிறான்?” என்றாள். லதை “எவ்வினாவுக்கு தன்னையே விடையென்று நிகர்வைக்கிறான்?” என்றாள்.

சினந்தெழுந்து “வெளியேறுங்கள்! இதை வினவவா இங்கு வந்தீர்கள்?” என்று பூர்ணர் கூவினார். இடை ஒசிந்து பற்களில் இளநகை கூட்டி நாவால் இதழ் நீவி வர்கை சொன்னாள் “எங்களை இங்கு கொண்டு வந்தமை வினாக்களே. இவ்வினாக்களை நிறைக்காமல் எங்கும் செல்லவியலாது நீங்கள்.”

கோடி யோஜனை தொலைவிலிருந்து எரிந்து வந்து விழுந்து அதிர்ந்து விழித்து உடல் விதிர்த்து அங்கு நின்றார் பூர்ணர். கடந்து வந்த வழி தோறும் மீண்டும் நடந்து சென்றாலொழிய அவ்வினாக்களுக்கு விடை அளிக்க முடியாதென்று உணர்ந்தார். கால் தளர்ந்து மீண்டும் ஆலமரத்து வேர்க்குவையில் அமர்ந்தார். வேர் பின்னி நிறைந்தது போல் வழிந்த சடை முடிக்கற்றையை அள்ளி தன் வெற்றுடலை மறைத்து கால் மடித்து அமர்ந்தார். பெருமூச்சுடன் கண்களை மூடி ஏங்கினார்.

பின்பு சீற்றம் கொண்டு பாதாள நாகமென அனல்சீறி விழி கனன்று “நீங்கள் அறிந்து இதை நிகழ்த்தவில்லை. என் முழுமைக்கு முன் வந்த தடைக்கற்கள் நீங்கள். ஆயினும் நீங்கள் இழைத்த பிழைக்கு ஈடு செய்தே ஆகவேண்டும். அகல்க! ஐவரும் ஐந்து முதலைகளென மாறி இங்குள ஐந்து தடாகங்களில் வாழுங்கள். காலம் உங்களை காற்று பாறையை என கடந்து செல்லட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

திகைத்த வர்கை “முனிவரே, உங்கள் தவம் கலைத்து எங்களுடன் களியாட்டுக்கு அழைக்கவே விழைந்தோம். களியாட்டன்றி பிறிதொன்றும் அறியாத தேவகன்னிகைகள் நாங்கள். பெரும்பிழை செய்துவிட்டோம்” என்றாள். “அகல்க! நீங்கள் விழைந்த வினாவிற்கு விடையுடன் எவன் வருகிறானோ அவனிடமிருந்து பெற்று மீள்க!” என்றார் பூர்ணர். “தேவ…” என்று லதை கை கூப்ப “இனி ஒரு சொல் தேவையில்லை” என்றார் பூர்ணர்.

ஐவரும் அழுத விழிகளுடன் தளர்ந்த காலடிகளுடன் திரும்பினர். “நீரிலும் இன்றி நிலத்திலும் இன்றி இனி எத்தனை யுகங்களடி!” என்றாள் சௌரஃபேயி. “எண்ணி எண்ணி விழிநீர் வழிய காத்திருப்பொன்றே வாழ்தல் என எஞ்சும் போலும்” என்றாள் சமீசி. நடந்து செல்கையிலேயே ஐவரும் முழந்தாளிட்டு மண்ணில் அமர்ந்து கை பரப்பி கால் பரப்பி முதலைகள் என ஆனார்கள். சிப்பியடுக்கியதுபோல் செதில் எழுந்து காரைப்பழம்போல் விழி உறுத்து வெண்பற்கள் எழுந்த விரிவாய் திறந்து தவழ்ந்து வால் திளைக்க சென்று அத்தடாகங்களில் இறங்கினர்.

அகத்தியத்தில் வர்கை இறங்கினாள் சௌஃபத்ரத்தில் சௌரஃபேயியியும் பௌலோமத்தில் சமீசியும் காரண்டமத்தில் ஃபுல்புதையும் சுப்ரசன்னத்தில் லதையும் முதலைகள் ஆனார்கள். தவம் கலைந்த பூர்ணர் தன் தவக்குடில் விட்டிறங்கி தன் கைகளாலேயே சடை முடிகற்றைகளை பறித்து வீசி அருகில் இருந்த சுனையில் நீராடி எழுந்து தேவாரண்யத்தை விட்டு விலகிச் சென்றார். வடமலைக்கு சரிவில் ஏறி பனிமுடிகளை அடைந்து அங்கு தன் உடல் நீத்து பிறிதொரு பிறப்பெடுத்து அவர் தவம் தொடர்ந்தார்.

தேவாரண்யத்தின் இருண்ட காட்டில் வேட்டைக்கு வந்த வேடர்களையும் கானாட வந்த இளவரசர்களையும் தவம் கொள்ள வந்த முனிவரையும் அங்கு ஐந்து சுனைகளில் வாழும் பெரு முதலைகள் கவ்வி இழுத்து நீராழத்திற்கு கொண்டு சென்று உண்டன. கண்ணுக்குத் தெரிந்தும் காட்சியிலிருந்து மறைந்தும் விளையாடி உயிர் கொள்ளும் அந்த முதலைகளின் கதைகள் பரவியபோது தேவாரண்யத்தின் திசைக்கே எவரும் செல்லாமலாயினர். நூற்றாண்டுகளில் முட்புதர்களும் தழையும் வளர்ந்து தேவாரண்யம் ஒற்றைப் பெரும் பரப்பாக மாறி மூடியது.

பின்பு அக்கதைகளும் மறைந்தன. கதைகளால் மட்டுமே நினைவில் நிறுத்தப்படுபவை நிலங்கள் என்பதால் அந்நிலத்தையும் எவரும் அறியாதாயினர். அறியா நிலங்களைத் தேடி எவரும் வருவதில்லை என்பதனால் அந்நிலம் இல்லாமலாயிற்று. எங்கோ எவரோ தன் ஆழ் கனவில் மட்டும் கண்டு அஞ்சுவதாக மாறியது. ஐந்து விழிகளென குளிர்ச்சுனைகள். அந்நீர்பரப்பில் வால் அளைந்து கரை எழுந்து வாய் திறந்து நிற்கும் பெரு முதலைகள். ஒவ்வொரு கணமும் எண்ணி எண்ணி அவை விழி நீர் உகுத்துக் கொண்டிருந்தன.

மணிபூரக நாட்டிலிருந்து மலை வணிகர் குழாமுடன் இறங்கி பிரம்மபுத்ரையின் பெரும்பெருக்குக்கு வந்து படகிலேறி வங்க நாட்டை அடைந்து கலிங்கம் புகுந்து மகாநதியில் ஒழுகிய அம்பிகளில் ஏறி தண்டகாரண்யத்தைக் கடந்து பதினெட்டு ஆயர் சிற்றூர்களில் வாழ்ந்து வேசரநாடு செல்லும் பொருட்டு அவ்வழி வந்தான் இளைய பாண்டவன். நெஞ்சில் விழுந்த நீள்தாடியும், புறா அலகு போல் எழுந்த நகங்களும், தோளில் புரண்ட சுரிகுழல் கற்றைகளும் நூறுமுறை தீட்டிய அம்பு நுனி போன்ற விழிகளுமாக வேங்கை என நடந்து அவன் வந்தான்.

வேசர நாட்டுக்குச் செல்லும் பாதை எது என்று வணிகரிடம் வினவினான். அவர்கள் சுட்டிய வழியில் சற்று நடந்தபோது தன் தலைக்கு மேல் வட திசையிலிருந்து தென் திசைக்கு வலசை போகும் பறவைகள் செல்லும் நேர் வழி ஒன்றைக் கண்டான். “அவ்வழியே நாம் ஏன் செல்லக்கூடாது?” என்று வணிகரிடம் கேட்டான். “அதை யாமறியோம். இதுவே வழி என்று எம் முன்னோர் சொல்லிலும் நினைவிலும் நாட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்” என்றனர் வணிகர். “அது வணிகரின் வழி. வீரரின் வழி என்றும் புதியது” என்றான் அர்ஜுனன். “இந்தப் பாதை எதையோ கரந்து செல்கிறது. பிறர் அறியாத ஒன்றை. ஒரு வேளை அதை அறிவதற்கென்றே எனது இப்பயணம் அமைந்திருக்கலாம்.”

“வீரரே… வானாளும் புள்ளின் வழியல்ல மண் தொட்டு நடக்கும் மானுடரின் வழி. இது யானை செல்லும் பாதை. இதுவே உறுதியானது” என்றார் வணிகர். “எனது வழி காற்றில் மிதக்கும் அம்புகளுக்குரியது. அம்புகளும் பறவைகளே” என்று புன்னகைத்து வலசைப் பறவைகளின் நிழல் தொட்டுச் சென்ற பாதையில் அர்ஜுனன் நடந்தான். பன்னிரு நாட்கள் புதர்களை ஊடுருவிக் கடந்தான். புதர்களில் தாவி மறிந்து அவன் தேவாரண்யத்தின் கரையை அடைந்தான். அங்கு அவனுக்கென காத்திருந்தன ஐந்து சுனை முதலைகள்.

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 5

அர்ஜுனன் தேவாரண்யத்தின் எல்லை என அமைந்த பிரதிவாகினி என்னும் பெயருள்ள காட்டாற்றின் கரையை அடைந்து, வழுக்கும் பாறைகளில் மெல்ல காலடி எடுத்து வைத்து அவற்றின் கரிய வளைவுகளின் ஊடாக வெண்ணுரை எழ சிரித்துக் கொண்டிருந்த ஆற்றுக்குள் இறங்கி முழங்காலளவு நீரில் நின்றான். நீரை அள்ளிக் குடித்து முகம் கழுவி தோளிலும் முதுகிலும் விட்டுக் கொண்டான். நீண்ட வழிநடை வெம்மையை இழந்து அவன் உடல் சிலிர்ப்பு கொண்டது.

மறுபக்கக் காட்டில் இருந்து பறந்து அவனருகே வந்த சிறிய மண்நிறக் குருவி ஒன்று அவனைச் சூழ்ந்து அம்பு தீட்டும் ஒலியுடன் பேசியபடி சிறகடித்துப் பறந்தது. அவன் முன் இருந்த பாறைவளைவில் அமர்ந்து சிறகை பிரித்து அடுக்கி தலை அதிர ஒலியெழுப்பியது. விருட்டென்று எழுந்து காற்றின் அலைகளில் ஏறி இறங்கி மீண்டும் சுற்றி வந்தது. மேலாடையால் முகம் துடைத்து கை தாழ்த்தும் போது அவன் அப்பறவையின் சொற்களை புரிந்து கொண்டான். “வேண்டாம், திரும்பிவிடு” என்றது அப்பறவை.

“யார் நீ?” என்று அர்ஜுனன் கேட்டான். “என் பெயர் வர்ணபக்ஷன். இங்குள காட்டில் என் குலம் வசிக்கிறது. நீ அங்கு தொலைவில் வருகையிலேயே பார்த்துவிட்டேன். இளையோனே, அழகும் நல்லுணர்வும் கொண்டிருக்கிறாய். உனக்கென்றிலாது செயலாற்றுகிறாய். அறம் உனக்கு துணை செய்கிறது. இக்காடு உனக்குரியதல்ல. விலகி செல்!” என்றது. அர்ஜுனன் புன்னகைத்து “பிற மானுடர் அனைவரும் அஞ்சி விலகிச் செல்லும் எங்கோ ஒரு வாயிலுக்கு அப்பால் எனக்குள்ள அமுதம் உள்ளது என்று எண்ணுகிறேன். பாரதவர்ஷத்தின் மலைச்சரிவுகளிலும் காடுகளிலும் நான் அலைந்து திரிவது அதற்காகவே. நீ சொல்லும் இவ்விலக்குச் சொற்களே நான் உள்ளே நுழைய போதுமானவை” என்றபின் பாய்ந்து இன்னொரு பாறையில் கால் வைத்து உடல் நிகர்நிலை கொண்டு நின்றான்.

“இது பொருளிலாச் சொல்” என்றது பறவை. “உன்னுள் வாழும் ஆன்மாவும் அது கொண்டுள்ள அழியாத்தேடலும் இங்கு ஒரு பொருட்டே அல்ல. உன் உடலின் ஊன் மட்டுமே இங்கு பொருள்பெறும். இங்கு இறப்பு உனக்கு நிகழுமென்றால் உன் உடல் வெறும் உணவு என்றே ஆகி மறையும். அதை தன் ஊர்தியெனக் கொண்டு தெய்வங்கள் வெறும் வெளியில் பதைபதைத்து அலையும்” என்றது வர்ணபக்ஷன். “நான் அஞ்சுவேன் என்று எண்ணுகிறாயா?” என்றபடி இன்னொரு பாறை மேல் கால் வைத்தான் அர்ஜுனன்.

“அஞ்சமாட்டாய் என்றறிவேன். தொலைவிலிருந்து உன்னைக் கண்டபோது எது என்னைக் கவர்ந்ததென்று இச்சொற்களை நான் சொல்லும்போது உன் விழிகளைக் கண்டு அறிந்தேன். உனது நிகரற்ற அச்சமின்மை. ஆனால் அச்சமின்மை அறியாமை என்று ஆகிவிடக்கூடாது. பிரித்தறியும் நுண்மை உன்னில் செயல்பட வேண்டும்.” பிறிதொரு பாறை மேல் தாவியபடி அர்ஜுனன் “அழகிய சிறகுள்ளவனே, எண்ணும் பொறுப்பு வில்லுக்கு. எய்யப்பட்ட அம்புக்கு செல்லும் பணி மட்டுமே” என்றான்.

அவன் தாவிச்சென்று நின்ற பாறைமுன் சுற்றி வந்து சிறகடித்து அவன் முன் பிறிதொரு பாறையில் அமர்ந்தபடி “வீண்சொற்கள்… அணிகள் போல உண்மையை மறைக்கும் திறன் கொண்டவை பிறிதில்லை. இக்காட்டிலும் நீ காவியத்தலைவனாக இருந்தாக வேண்டுமா என்ன?” என்றது வர்ணபக்ஷன். பிறிதொரு பாறைமேல் தாவி “இங்கு வருவதற்கு முன்னரே எனக்கான கதை வடிவம் எழுதப்பட்டுவிட்டது. அதை நான் நடிக்கிறேன்” என்றபின் மேலும் தாவி மறு கரையை ஒட்டிய பாறைமேல் நின்று அப்பால் நோக்கினான் அர்ஜுனன்.

.

“நூற்றாண்டுகளாக மானுடக் காலடி படாத காடு இது. நச்சுக்கோப்பை போல் வஞ்சம் கரந்துள்ளது” என்றது வர்ணபக்ஷன். “ஆம், அழகியது. ஆழ்ந்து உள்ளே ஈர்ப்பது. பொருள் உள்ள அனைத்தும் கொள்ளும் பேரமைதி நிறைந்தது” என்றான் அர்ஜுனன். “இனி உன்னை விலக்க முடியுமென்று நான் எண்ணவில்லை” என்று அவனுக்கு மேல் சிறகடித்தது வர்ணபக்ஷன். மறுபக்கத்து மணல் விளிம்பை அடைந்து கால் நனைத்து மிதித்து மேலேறிய அர்ஜுனனுக்கு மேல் பறந்து முன்னால் உள்ள சிறு சல்லிக்கிளையில் அமர்ந்து மேலும் கீழும் ஆடியபடி “ஏன் இதைச் சொல்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை. நீ வெல்லவேண்டுமென்று என் உள்ளம் விழைகிறது. ஏனென்றால் நீ வீரன்” என்றது.

“அதற்கான வழிகளைச் சொல்” என்றான் அர்ஜுனன். “இக்காட்டில் ஐந்து சுனைகள் உள்ளன. ஐந்து ஆடிகள், ஐந்து விழிகள். இக்காட்டின் ஐந்து உள்ளங்கள். அவற்றை ஒவ்வொன்றாக நீ கடந்து செல்வாய்” என்றது. தன் வில்லை எடுத்து அதன் நாணை இழுத்து கொக்கியில் மாட்டி செவியளவு இழுத்துவிட்டு நாணொலி எழுப்பினான் அர்ஜுனன். “வில்லுக்கு இங்கு வேலை இல்லை. ஏனெனில் கொடிகளும் செடிகளும் பற்றிச்செறிந்த இப்பெருங்காடு தொலைவென்பதே அற்றது. உன் கை தொடும் அண்மையில் ஒவ்வொன்றும் உள்ளன. உன்னை கொல்ல வரும் யானையை அதன் துதிக்கை உன்மேல் பட்ட பிறகுதான் உன்னால் பார்க்கமுடியும். இங்கு ஒருவர் தன் உடலெனக் கொண்ட தோள்வல்லமை அன்றி பிற படைக்கலன்கள் எதுவும் பயன் தருவதில்லை.”

அர்ஜுனன் புன்னகைத்தபின் ஒருஅம்பை மட்டும் கையில் எடுத்துக் கொண்டான். வர்ணபக்ஷன் “அது நன்று. ஆனால் பாதாள நாகங்களின் நஞ்சை அந்நுனியில் நீ கொண்டிராவிட்டால் அதில் என்ன பயன்? எழுந்து மத்தகம் காட்டும் மதகளிற்றை அது வெல்லுமா?” என்றது. “ஒவ்வொரு உயிரும் தன் உடலில் நூற்றிஎட்டு நரம்பு முடிச்சுகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு முடிச்சிலும் ஒரு துளி நஞ்சு உறைந்துள்ளது. அம்பு நுனியென்ன, இக்கைவிரல்நுனியால் அவற்றில் ஒரு துளியைத் தொட்டு எழுப்பிவிட்டாலே உயிர்களை கொல்ல முடியும். நம்புக, இச்சுட்டுவிரல் ஒன்றே எனக்குப் போதும்” என்றான்.

துடித்து மேலெழுந்து சற்றே சரிந்து வளைந்து ஒரு இலையில் அமர்ந்து எழுந்தாடி “அப்படியென்றால் எதற்கு அம்பு?” என்றது வர்ணபக்ஷன். “இளமையிலிருந்தே அம்பு நுனியை நோக்கி என் உள்ளம் குவிக்க கற்றுள்ளேன். போர் முனையில் என் சித்தம் அமர்ந்திருப்பது இந்நுனியிலேயே” என்ற அர்ஜுனன் “வருக! நீ சொன்ன அவ்வைந்து சுனைகளையும் எனக்கு காட்டுக!” என்றான்.

“இக்காடு உனை நோக்கி சொன்ன ஒரு சொல் மட்டும்தானா நான் என்று ஐயுறுகிறேன். அறியாது தெறித்து வெளிவந்து உன்னை சூழ்ந்துளேன்” என்றது வர்ணபக்ஷன். இடம் மாறி அமர்ந்து திரும்பி “காட்டின் ஒளிபுகா ஆழத்தை நோக்கி உன்னை விலக்க நான் வந்தேனா, அல்லது என்னை மீறிய விசைகளால் உன்னை ஈர்த்து உள்ளே கொண்டு வரும் சொற்களை சொன்னேனா என்று குழம்புகிறேன்” என்றது.

அர்ஜுனன் “இவ்வினாக்களுக்கு பொருளே இல்லை. பல்லாயிரம் கோடி முடிச்சுகளால் ஆனது இவ்வலை. அதில் என் உடல் தொடும் முடிச்சைப் பற்றி மட்டுமே நான் உளம் கூர்கிறேன். என் விழி தொடும் எல்லைக்குள் வருபவை, என் அம்பு சென்று தொடும் எல்லைக்குள் வருபவை மட்டுமே நான் அறியற்பாலவை. இவ்வெல்லையை அமைத்துக் கொண்டதனால் எனது தத்துவங்கள் கூரியவை, எளியவை” என்றான்.

வர்ணபக்ஷன் எழுந்து சிறகுகளை காற்றில் படபடக்கும் தளிரிலைகள் போல் அடித்தபடி முன்னால் சென்று “என்னைத் தொடர்ந்து வருக! அச்சுனைகளை உனக்குக் காட்டுகிறேன்” என்றது. அர்ஜுனன் அதை தொடர்ந்தான். வர்ணபக்ஷன் தன் சிறகுகளால் இலைகளை விலக்கி மலர்ப்பொடிகளை உதிரவைத்தும் கனிந்த பழங்களை சிதைய வைத்தும் கிளைகளை விலக்கி காட்டைக் கடந்து சென்றது. “இச்சதுப்பு மண்ணுக்கு அப்பால் சூழ்ந்த புதர் இலைகளை தன் உள்ளொளியால் ஒளிரவைக்கும் முதல் தடாகம் உள்ளது. அதற்கு அகஸ்தியம் என்று பெயர். அச்சுனையில் வாழ்கிறாள் வர்கை. விண்ணின் இந்திரனின் அவையில் வாழ்ந்த அரம்பை அவள். இங்கு தன் கீழியல்பால் விழுந்து ஒரு முதலை வடிவம் கொண்டு வாழ்கிறாள். இக்காட்டுக்குள் நுழைபவர் எவராயினும் முதலில் அவளுக்கு உணவாவது வழக்கம்” என்றது.

“சொல், அச்சுனையின் இயல்பென்ன?” என்றான் அர்ஜுனன். “நன்று. அவள் இயல்பென்ன என்று நீ கேட்கவில்லை” என்றது வர்ணபக்ஷன். “வீரனே! பிராணம் என்று இச்சுனை அழைக்கப்படுகிறது. இக்காட்டில் உள்ள அத்தனை நீரோடைகளும் வழிந்தோடி இங்கு வந்து சேர்கின்றன. இச்சுனை நிறைந்து பல்லாறுகளாக பெருகிப் பிரிந்து பாறைகளில் அலைத்தும் சரிவுகளில் சுழன்றிறங்கியும் ஓடி காட்டாறென மாறி காட்டை கடந்து செல்கிறது. சற்று முன் நீ இறங்கிய ஆறு அதுவே. இக்காட்டில் உள்ள எந்தச் சிற்றோடையை தொடுபவனும் இச்சுனையை தொட்டவனாகிறான். இந்தப் பெருங்காட்டின் உயிர்ப்பு இதுதான்.”

புதர்களினூடாக அர்ஜுனன் எச்சரிக்கையுடன் காலெடுத்து வைத்து முன்னால் சென்றான். “நோக்கு, ஈடிணையற்ற வல்லமை கொண்டது அந்த முதலை. தான் விரும்பும் உருவம் எடுக்கும் ஆற்றல் கொண்டது மட்டுமல்ல, நீ விரும்பும் உருவெடுக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. அது எவர் விருப்பென்று தெளியாத மயங்கலில் உன் உயிர் உண்டு தன் இருளுக்கு மீளும். எண்ணித் துணிக!” அர்ஜுனன் “சொற்களுக்கு நன்றி. இனி இச்சுனைக்கரையிலிருந்து விடை அறியாது என்னால் மீள முடியுமா?” என்றான். தன் வில்லை மரக்கிளையில் மாட்டிவிட்டு வலக்கையில் ஏந்திய சிற்றம்புடன் வழுக்கும் சேற்றில் நடந்து அச்சுனையை அடைந்தான்.

இருளை எதிரொளிக்கும் மந்தண ஆடி போல் சீரான வட்ட வடிவில் அமைந்திருந்தது அப்பெருஞ்சுனை. அதன் அலைகளே ஒளி அதிலிருப்பதை காட்டின. அணுகும்தோறும் அதன் குளிரெழுந்து அவன் காதுகளை தொட்டது. பின்பு மூக்கு நுனி உறைந்தது. உதடுகள் இறுகின. கால்கள் நடுங்கத்தொடங்கின. “கடுங்குளிர் கொண்டது அது. ஏனெனில் அடியிலா அதலம் வரை அதன் ஆழம் இருப்பதாக சொல்கிறார்கள். ஊறித்தேங்கிய முதற்கணம் முதல் இன்றுவரை இதில் கதிரொளி பட்டதில்லை. அதில் ஒரு துளி எடுத்து உன் மேல் வீசினால் துளைத்து தசைக்குள் புகும் என்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் குளிர்ந்து தன்னுள் தானென இறுகி பாதரசம் என்று ஆகிவிட்டிருக்கிறது அது” என்றது வர்ணபக்ஷன்.

பற்கள் கிட்டித்து கழுத்துத் தசைகள் நாணென பூட்டிக்கொள்ள வயிறை இறுக்கி ஒவ்வொரு காலடியையும் வைத்துப் பறித்து எடுத்து ஊன்றி முன் சென்று அச்சுனைக்கரையை அடைந்தான் அர்ஜுனன். விழிமயக்கா உளமயக்கா என்றறியாது அச்சுனை தன்னை நோக்கி அறிந்து கொண்டது என்ற ஓர் உணர்வை அடைந்தான். அசைவற்ற முதலையின் விழியசைவு அதை ஓர் உயிரெனக்காட்டுவதுபோல. அசையாது நின்று அச்சுனையை கூர்ந்து நோக்கினான். அச்சுனை தன்னை விழிகளில் குவித்து அவனை நோக்கிக் கொண்டிருந்தது. உடலெங்கும் அதன் நோக்கை உணர்ந்து அவ்வெடையை அனைத்து எண்ணங்களாலும் தாங்கியபடி மேலும் காலெடுத்து முன்னால் சென்றான்.

அதன் கரையிலெங்கும் அந்த முதலை தென்படவில்லை. பிறிதொரு உயிரும் அந்நீர்ப்பரப்பில் இல்லை என்று தெரிந்தது. அசைவின்மை இருளெனத்தேங்கிய ஆழத்தை நோக்கி மேலும் அணுகிச் சென்றான். இழைத்த மரப்பலகைப் பரப்பென தெரிந்த சேற்று வளைவில் எங்கும் ஒரு காலடித்தடம்கூட இருக்கவில்லை. வர்ணபக்ஷன் அப்பால் தேங்கி நின்றுவிட்டது. பறவைகள் கூடவா இச்சுனையை அணுகுவதில்லை என்று அர்ஜுனன் வியந்தான்.

நீர்ப்பரப்பை அணுகி குனிந்து இரு கைகளாலும் நீரை அள்ளினான். ஒரு கையில் அள்ளிய அந்நீரை அவனால் மேலே தூக்கமுடியவில்லை. இரும்பு உருளை என எடை கொண்டிருந்தது அவ்விசையில் அவன் புயங்களின் தசைகளும் தோள்களும் இழுபட்டு அதிர்ந்தன. முதுகெலும்பின் கொக்கிகள் உரசி பொறி கொண்டன. அள்ளிய நீரை விடுவதில்லை என்று தன் முழு ஆற்றலாலும் அவன் அதை மேலே தூக்குகையில் அவனுக்குப் பின்னால் இனிய குரலில் “அதை விட்டுவிடு மைந்தா” என்று குந்தி சொன்னதை கேட்டான்.

திடுக்கிட்டுத் திரும்பி தன் அருகே நின்ற அன்னையை நோக்கி “நீங்களா?” என்றான். “நானென்றே கொள். இது கொலை முதலை வாழும் சுனை. இங்கு உயிர் துறந்த பல்லாயிரம் பேரை நான் அறிவேன். இதன் ஆழத்தில் அவர்களின் நுண்வடிவுகள் சிறையுண்டுள்ளன. எக்காலத்துக்குமான இருளில் அவை பதைபதைத்துக் கூவுவதை கேட்கிறேன். அவற்றில் ஒன்றாக என் மைந்தன் ஆவதை நான் விரும்பவில்லை. விலகு” என்றாள். “நான் என்ன செய்வது?” என்றான் அர்ஜுனன். “விட்டேன் என்று அந்நீரை மீண்டும் அதிலேயே விட்டு திரும்பி விடு” என்றாள் குந்தி.

“நான் இச்சுனையில் இறந்தால்தான் என்ன? தங்களுக்கு நான்கு மைந்தர்கள் எஞ்சுகிறார்கள் அல்லவா?” என்றான் அர்ஜுனன். “நீ இறந்தால் பின் இப்புவியில் எனக்கு ஆண்களே இல்லை” என்றாள் குந்தி. திகைத்து “அன்னையே” என்றான் அர்ஜுனன். “அகலாது அணுகாது நான் காயும் அனல் நீ. உன் நெஞ்சறிந்த முதல் பெண் நான்” என்றாள் குந்தி. “ஆம். நீ இன்றி எங்ஙனம் நானில்லையோ அங்ஙனம் நான் இன்றி நீயில்லை. என் சொற்களை கேள். அந்நீரை விட்டு பின்னால் விலகு” என்றாள்.

ஒரு கணத்தின் ஆயிரத்தில் ஒரு பகுதியில் அர்ஜுனன் அந்த கை நீரை சற்றே தாழ்த்தினான். அது ஓர் எண்ணமென அறிந்த மறுகணம் அதை மேலே தூக்கி தன் தலை மேல் விட்டுக் கொண்டான். இருகைகளிலும் கூர் உகிர்கள் எழ முகம் நீண்டு வாய் பிளந்து வெண்பற்கள் தெரிய முதலை உருக்கொண்டு அவன் மேல் பாய்ந்து தள்ளி கீழே வீழ்த்தினாள் குந்தி. தன்னைவிட மும்மடங்கு பெரிய அம்முதலையின் இரு கைகளையும் இறுகப்பற்றி புரண்டு அதன் மேல் தன் முழு உடலையும் அமைத்து மண்ணோடு இறுக்கிக் கொண்டான் அர்ஜுனன்.

முதலை துள்ளி விழுந்தது. புரண்டு திமிறியது. அதன் பிளந்து திரும்பிய வாய்க்கும் சுழன்று சுழன்று அறைந்த வாலுக்கும் நடுவே நான்கு கால்களுக்கு இடையில் தன் முழு உடலையும் வைத்துக் கொண்டான். முதலை அவனை திருப்பி தான் மேலேறி அடிப்படுத்த முயன்றது. அதை அசைத்து மேலேற்றினான். பின்பு தன் ஒரு காலை ஊன்றி ஒரு கணத்தில் அதை இரு கைகளாலும் பற்றித் தூக்கிச் சுழற்றி சேற்றுக் கரைகளுக்கு அப்பால் புதர்களுக்குள் வீசினான். மரத்தடி விழும் ஓசையுடன் மண்ணை அறைந்து விழுந்த முதலை புதர்களுக்கு உள்ளே துடித்து புரண்டு மறைந்தது.

புதர்களின் இலைத் தழைப்பினுள் அதன் செதில்வால் நெளிந்து அமைவதை அர்ஜுனன் கண்டான். சேற்றில் வழுக்கும் கால்களுடன் சற்றே குனிந்து மேலேறி அவன் நோக்கும்போது அப்புதர்களுக்கு அப்பால் புரண்டு எழுந்து கால் மடித்து கையூன்றி குழல் சரிந்து தரையில் விழ கலைந்த இலைகள் கன்னத்திலும் தோள்களிலும் ஒட்டியிருக்க நீண்ட கரிய விழிகளால் அவனை நோக்கிக் கொண்டிருந்த வர்கையைக் கண்டு “உன் பெயர் வர்கை என எண்ணுகிறேன்” என்றான்.

மூச்சிரைக்க உதடுகளை நாவால் ஈரம் செய்தபடி அவள் ஆமென தலையசைத்தாள். “இங்கிருந்து விலகி மேலெழ உனக்கு வேளை வந்துள்ளது” என்றான் அர்ஜுனன். “எதன் பொருட்டு இங்கு காத்திருந்தாயோ அது நிறைவேறிவிட்டது.” அவள் நீள்மூச்செறிந்து கால் மடித்து எழுந்து உலைந்த தன் ஆடைகளைத் திருத்தி குழலை அள்ளி தலைக்கு மேலிட்டு “ஆம்” என்றாள். “உன் விடையை அறிந்துவிட்டாயா?” என்றான் அர்ஜுனன். “இல்லை. என் வினா மறைந்துவிட்டது” என்றாள் அவள். “அவ்வண்ணமே ஆகுக!” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அச்சமற்றவன் ஒருவனால் நான் என் நீர்த்தளையிலிருந்து விடுபடுவேன் என்று எனக்கு சொல்லப்பட்டது. படைக்கலன்கள் முன், நோயின் முன், அவமதிப்பின் முன் அச்சமற்றிருப்பவன் வீரன். உண்மையின் முன் முற்றிலும் அச்சமற்றிருப்பவனே மாவீரன். நீ அத்தகையவன். இப்புவி உள்ள அளவும் உன் பெயர் நிலைக்கும். வீரமென்னும் சொல்லுக்கு நிகரென அது நூலோர் நெஞ்சில் வாழும்” என்றபின் இலைகளில் விழுந்த ஒளிக்கதிரென பரவி மெல்ல அலையடித்து மறைந்தாள் வர்கை.

புதர்களைக் கடந்து சென்ற அர்ஜுனனின் தோளில் வந்தமர்ந்து சிறகடித்து எம்பிப்பறந்து மீண்டும் வந்தமர்ந்த வர்ணபக்ஷன் சிறு செவ்வலகை விரித்து கைக்குழந்தையின் சிரிப்பென ஒலியெழுப்பியது. “நன்று நன்று. இவ்வெற்றி நிகழ்ந்ததும் அறிந்தேன், இதையே நான் எதிர்நோக்கினேன் என. இது நிகழ்ந்தாக வேண்டும். இல்லையேல் இக்கதைக்கு இனியதோர் முடிவு இல்லை.”

அர்ஜுனன் “நீ என்ன கண்டாய்?” என்றான். “நீர்பிளந்து எழுந்து உன்னைக் கவ்வ வந்த பெருமுதலையை முதலில் நீ காணவில்லை. அந்த ஒரு கணத்தில் நீ உடல் கிழிபட்டு குருதி வழிய அதற்கு உணவாவதை நான் கண்டுவிட்டேன். நல்லவேளை மறுகணம் நீ திரும்பி அதன் இரு கைகளையும் பற்றிக் கொண்டாய். சித்தத்திற்கு அப்பால் உன் தசைகளில் உள்ளது போர்ப்பயிற்சி. அஞ்சி அதன் நீண்ட வாயை நீ பற்றியிருந்தால் கைகளால் உன்னை கிழித்து எறிந்திருக்கும்” என்றது வர்ணபக்ஷன்.

“இப்போது வென்றது நானல்ல. எனக்கு போர்க்கலை பயிற்றுவித்த ஆசிரியர். அவர் பெயர் துரோணர். கற்று மறக்காத கலை வெறும் ஆணவம் மட்டுமே, முற்றிலும் பயனற்றது என்று அவர் சொல்வதுண்டு” என்றான் அர்ஜுனன். “வருக! இரண்டாவது சுனை இங்கு அருகில்தான். அதற்கு சௌஃபத்ரம் என்று பெயர். அங்கு வாழ்பவள் சௌரஃபேயி என்னும் தேவர் குலத்துப்பெண். பெருமுதலை என விழிநீர் உகுத்து காத்திருக்கிறாள்” என்றது வர்ணபக்ஷன். “அச்சுனையின் இயல்பென்ன?” என்று அர்ஜுனன் கேட்டான்.

“அதை அபானம் என்கிறார்கள்” என்றது வர்ணபக்ஷன். “அச்சுனையில் ஒரு துளி நீர் கூட வெளியிலிருந்து உள்ளே வருவதில்லை. ஒரு துளி நீர் கூட வெளியே வழிவதும் இல்லை. ஆனால் கரை விளிம்புகளை முற்றிலும் நிறைத்து எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கிறது அது. இக்காட்டிலுள்ள அத்தனை ஆறுகளின் அடியிலும் மண்ணுக்குள் கண்காணா ஆறுகள் ஓடுகின்றன என்கின்றனர் என் முன்னோர். அவ்வாறுகள் அனைத்தும் சென்று சேரும் மந்தண மையமே அச்சுனை. அங்கிருந்து மீண்டும் மண்ணுக்குள்ளேயே ஊறி அவை விலகிச் செல்கின்றன. முதற்சுனையின் மறு எல்லை அது.”

அர்ஜுனன் “ஆம், அதை நான் உய்த்துணர்ந்தேன்” என்றான். புதர்களைக் கடந்து செல்லும் தோறும் தன் இமைகளிலும் கன்னங்களிலும் வெம்மை வந்து படுவதை உணர்ந்தான். “அதை நான் அணுக முடியாது” என்றது வர்ணபக்ஷன். “உள்ளிருந்து கொப்பளித்தெழும் அனலால் நீரே தழலாகி அலையடித்துக்கொண்டிருக்கும் வேள்விக்குளம் அது. இன்னும் சற்று நேரத்தில் என் மென்தூவிகள் பொசுங்கத்தொடங்கிவிடும். நீயே முன் செல்க! இப்பெருமரத்தின் உச்சியில் இருந்து உன்னை நான் காண்கிறேன்” என்றது. “அவ்வண்ணமே ஆகுக!” என்றபின் அர்ஜுனன் தன் அம்பை முன்னால் நீட்டியபடி மெல்ல காலடி எடுத்து வைத்து சென்றான்.

அவனைச் சூழ்ந்திருந்த மரங்கள் இலை அனைத்தும் பொசுங்கிச் சுருண்டு இருப்பதை கண்டான். பாறைகள் அடுப்பிலேற்றப்பட்ட கருங்கலங்கள் போல் வெம்மை கொண்டிருந்தமையால் இலைகளிலிருந்து சொட்டிய நீர்த்துளிகள் பாம்பு சீறும் ஒலி எழுப்பி ஆவியாயின. அவற்றுக்கிடையே இருந்த சேற்றுப்பரப்பில் கால் வைத்து அவன் நடந்து சென்றான். பின்னர் உருளியில் காய்ச்சி கொட்டப்பட்ட கூழ் போல சேறு கொதித்து குமிழி எழத்தொடங்கியது. சுற்றிலும் நோக்கியபின் ஒரு பட்ட மரத்தின் கிளைகளை ஒடித்து அவற்றின் கணுக்களில் தன் இரு கால்களையும் வைத்து மேல் நுனியை கையால் பற்றியபடி அச்சேற்றில் ஊன்றி அர்ஜுனன் நடந்து சென்றான்.

நூறு பெருநாகங்கள் உள்ளே உடல் வளைத்து போரிடுவது போல கொப்பளித்துக் கொண்டிருந்த அப்பெருஞ்சுனையின் நீர்ப்பரப்பை அணுகினான். ஒவ்வொரு கணமும் அது விழிமுன் பெருகி வருவதை கண்டான். வானிலிருந்து கண்காணா பெரும் பாறைகள் அதில் விழுவதைப்போல, உள்ளே இருந்து பெருவெடிப்புகள் நிகழ்ந்து நீர் சீறி எழுவதுபோல அது கொந்தளித்தது. சேற்று விளிம்பை அடைந்து அந்நீர் நோக்கி குனிந்தான். தன் விரலால் அதை தொட்டான். அமிலமென அவன் விரலை பொசுக்கியது.

பற்களை கிட்டித்து அவ்வலி உடல் முழுக்க பரவியபின் அதைக் கடந்து இரு கைகளையும் குவித்து அதை அள்ளினான். “மைந்தா” என்று குந்தியின் ஒலியை கேட்டான். “உன்னை பொசுக்கிவிடும் அவ்வெரிநீர். அதை விட்டு விடு” என்றாள் அவள். அவன் தலை திருப்பாது “தோற்பதற்கென நான் இங்கு வரவில்லை” என்றான். “நீ அதை தொட்டாய். அறிவாய் அது இப்புவியை எரித்து அழிக்கும் பேரனல்” என்றாள் குந்தி. “சின்னஞ்சிறு மகளாக அவ்வனலை நானும் கொண்டிருந்தேன், அன்னையாகி அதைக் கடந்து அணைந்தேன். இது அணையா அனல். வேண்டாம், விலகு” என்று அவள் சொன்னாள்.

“விலகு, விலகிச்செல்” என்றான் அர்ஜுனன். “உன்னை நான் அறிவேன், விலகு.” அவள் “ஆம், நீ அறிவாய் என் குளிர்ந்த ஆழத்தில் வந்திறங்கி என்னை அனல் வடிவாக்கிய கதிரவனை. இன்றும் என் ஆழத்தில் அவனையே நான் சூடியுள்ளேன். அவனன்றி பிறிதொருவன் என் ஆழத்தை அடைந்ததில்லை. இந்தச்சுனை ஏன் கொதிக்கிறது? இதனுள்ளும் கதிரவனே குடிகொள்கிறான்.” அர்ஜுனன் “சீ! விலகு” என்று சீறியபடி திரும்பினான்.

“நான் யாரென்று அறியமாட்டாயா?” என்றாள் குந்தி. “நான் உன்னை அறிவேன். விலகு!” என்று தன் முழங்கையால் அவள் கையை தட்டி அந்நீரை தன் தலை மேலும் தோள் மேலும் விட்டுக் கொண்டான். அக்கணமே முதலை என உருமாறி அவன் மேல் அவள் பாய்ந்தாள். ஒரு கையில் பற்றியிருந்த அவள் கையை வளைத்து முதலையின் பிளந்த வாய்க்குள் செலுத்தி முழு உடலால் உந்தி அவளைச்சரித்து அவள் மேல் விழுந்தான். தன் கையை தானே கவ்விய முதலை வால் துடிதுடிக்க மறு கையால் அவனை அடிக்க முயன்றது. அக்கையை பிறிதொரு கையால் பிடித்து முதலையின் கீழ்த்தாடை மேல் தன் இடுப்பை அமைத்து முழு எடையாலும் அதை அழுத்திக் கொண்டான்.

தன் கை கடிபடும் வலியில் வாலை சேற்றில் அடித்து துடித்தது முதலை. அதன் முழு ஆற்றலையும் தன் தசைகளாலும் ஈடு செய்தான். ஒவ்வொரு கணமென முதலை வலுக்குறைய இருவரும் நிகரென்றாயினர். பிறிதொரு கணம் பிறிதொரு கணம் என முதலை அடங்க அவன் மேலோங்கிய முதல் தருணத்தில் அதை சேற்றில் சுழற்றி இழுத்து மேலே இருந்த புல்வெளி நோக்கி வீசினான். அங்கு விழுந்து புரண்டு வாலை நிலத்தில் ஓங்கி அறைந்து இருகால்களில் எழுந்த முதலை சௌரஃபேயி ஆயிற்று. "என்னை வென்றீர் இளைய பாண்டவரே” என்றாள். “என் வினா உதிர்ந்து மறைந்தது. நிறைவுற்றேன்.” இலைகளில் விழுந்த அடிமரங்களின் நிழல் போல அலையடித்து வானிலேறி மறைந்தாள் சௌரஃபேயி.

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 6

தேவாரண்யம் சொற்கள் செறிந்து உருவான இருளால் ஆனதே என்று அர்ஜுனன் அறிந்தான். மண்ணில் பல்லாயிரம் நுண்ணுயிர்கள் எழுப்பிய ரீங்காரம். கிளைகளிலும் இலைகளிலும் செறிந்த பறவைகளின் ஓசையும், புதர்களை ஊடுருவி ஓடிய சிறு விலங்குகளின் சலசலப்பும், கிளை ஒடித்து மரம் விலக்கி செல்லும் களிறுகளின் காலடிகளும், புதர்களை துள்ளிக் கடக்கும் மான்களின் அமறலும், கொம்புகள் முட்டிக் கொள்ளும் காட்டெருமைகளின் முக்காரமும், முழவொலி எழுப்பும் கரடிகளும், குகைக்குள் உறுமிய புலிகளும் கிளைகளை உலைத்து பாய்ந்தமைந்து குமுறிய மந்திகளும் இலைகளுக்கு மேல் எழுந்து வானில் சிறகடித்துக் கூவி அமைந்த புட்களும் இலைசொட்டி ஒலை மேல் விழும் தாளமும் கொண்டு ஒரே சமயம் ஓராயிரம் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது அது. சொல் பெருகி சொல்லின்மையாகி செறிந்து நின்றது.

இரு கைகளையும் நீட்டி சொற்களை விலக்கி சொற்களில் முட்டிக் கொண்டும் சொற்களால் வருடப்பட்டும் சொற்களால் கீறப்பட்டும் சொற்களில் தடுக்கி சொற்களில் கால் வைத்தும் அவன் நடந்து கொண்டிருந்தான். இருள் காலத்தையும் இடத்தையும் மறைத்துவிடுவதை அறிந்தான். அவன் கால் நின்ற வெளிக்கு அப்பால் அவன் காலை ஏற்கும் வெளி அக்கால் சென்று பதியும் கணத்திலேயே நின்ற இடம் மடிந்து எழுந்து வந்தது. அவன் சென்றபின் நின்றவிடம் இல்லாமலாயிற்று. சென்று கொண்டே நின்ற இடத்தில் தொங்கிக் கிடப்பதென தோன்றியது. சூழ்ந்தொலித்த பல்லாயிரம் சொற்கள் திரண்டு ஒற்றை சொல்லாயின. பொருளின்மை கூர்ந்த அவ்வொற்றைச் சொல் பிளந்து பிளந்து பொருள் பெருகிய பலகோடி சொற்களாகிறது என்பதை உணர்ந்தான். ஒவ்வொரு சொற்பொருளிலும் இலைக் காம்பின் நுனியில் அது பிரிந்து உதிர்ந்ததன் வடு எஞ்சுவது போல் பொருளின்மை மிஞ்சியிருந்தது.

இருளுக்குள் மெல்லிய சிறகோசை மட்டுமென அவனைத் தொடர்ந்து சித்திரமென வந்த வர்ணபக்ஷன் “என்னைத் தொடர்க!” என்றது. “நானும் ஒரு சொல்லே.” அவ்வொற்றைச் சொல்லைத் தொட்டு பற்றியபடி அவன் இருளுக்குள் நடந்தான். முடிவிலி வரை நீட்டிக் கட்டிய வலையின் ஒற்றைச்சரடு வழி செல்லும் சிறு சிலந்தியென. “அச்சம் கொள்கிறாயா?" என்றது வர்ணபக்ஷன். “இல்லை” என்றான். “சிறு அச்சம் நன்று. இல்லையேல் உன் உடல் கொண்ட வடிவ எல்லைகள் கரைந்து இவ்விருளில் பரவி மறைந்து இருளாவாய்” என்றது வர்ணபக்ஷன். “நான் ஐயம் கொண்டிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

சிறகடித்துச் சுழன்று வந்து “அதுவும் நன்றே” என்ற வர்ணபக்ஷன் “வருக! இது மூன்றாவது சுனை. இதை பௌலோமம் என்கிறார்கள். இங்கு சமீசி என்னும் தேவதை முதலை வடிவு கொண்டு வாழ்கிறாள். முதலிரு சுனைகளிலும் தப்பி இங்கு எஞ்சும் உயிர்களை அவள் உண்கிறாள். கால் கொண்டவை முதற் சுனையில் மறைகின்றன. தாவி வருபவை இரண்டாம் சுனையில் உயிர் துறக்கின்றன. இது பறந்தலைபவர்களுக்கான சுனை” என்றது. அந்த இருளில் விழி புதைய “இதன் இயல்பென்ன?" என்றான் அர்ஜுனன்.

“இதை வியானம் என்கிறார்கள். இச்சுனையில் நிறைந்திருக்கும் நீர் எடையற்றது. ஆவி வடிவானது. இக்காடெங்கிலும் ஒவ்வொரு இலையிலும் பரவி குளிர்ந்து சொட்டி வெம்மையால் மீண்டும் ஆவியாகும் நீர் இங்கு வந்து சேர்கிறது. இங்கிருந்தபடியே இக்காடெங்கிலும் நிறைந்துள்ளது இது. ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு தளிரையும் இச்சுனை அறியும்” என்றது வர்ணபக்ஷன். அர்ஜுனன் வியானத்தின் கரையை அடைந்ததை தன்மேல் வந்து பட்ட நீராவியிலிருந்து அறிந்தான். முதல் மழைக்குமுன் அறைகளுக்குள் வரும் வெம்மை கொண்ட காற்றென தோன்றியது. அவன் உடல் வியர்த்து ஆடை நனைய முதுகோடை வழியே வழிந்தது.

உடல் குளிர்ந்து நடுங்கத்தொடங்கியபோது அந்த ஆவியும் மேலும் குளிர்ந்தது. பின்பு செவிமடல்களிலும் புருவங்களிலும் மூக்கு நுனியிலும் வியர்வை சொட்ட அருவியின் நீர்ப் புழுதிப் பரப்பை கடந்துசெல்வது போல அவன் அச்சுனையை அணுகினான். காற்றே நீரென்றாகியிருந்த போதிலும் தொண்டை விடாய் கொண்டு பரிதவித்தது. “இனி நான் வருவதற்கில்லை. சிறகுகள் நனைந்து என்னை மண்ணில் வீழ்த்திவிடும்” என்றது வர்ணபக்ஷன். “ஆம், நீ இங்கிரு” என்றபடி அர்ஜுனன் முன்னால் நடந்தான். நீராவி செறிந்து முகில் என்றாயிற்று. இரு கைகளாலும் அதைக் கலைத்து முன் செல்ல பட்டுத்திரை என்றாயிற்று. கையை வீசி அம்பால் அதைக்கிழித்து முன் சென்றான். குளிர்ந்த பிசினென ஆயிற்று. அதில் புதைந்திறங்கி வியானத்தின் சேற்றுப் பரப்பை அடைந்தான்.

விழிகூர்ந்து அந்த ஏரியின் நீர்விளிம்பை நோக்க முடிந்தது. மலைக்குவைக்குள் விழுந்து கிடக்கும் முகில்பிசிறு போல் தெரிந்தது. கால் எடுத்து வைத்து அதை அணுகி இரு கைகளாலும் அச்சுனை மேல் படர்ந்திருந்த ஆவிப்புகைப்படலத்தை விசிறி நகர்த்தினான். கருமைக்குள் இளங்கருமை வெண்மையென விழிமாயம் காட்டியதை வியந்தபடி குனிந்து நீர்ப்பரப்பை பார்த்தான். அள்ளி இரு கைகளிலும் கோரியபோது நீரின் தொடுகை உளதா இலதா என்று உளம் ஐயம் கொண்டது. “மைந்தா, அதை விலக்கு” என்று குந்தியின் குரலை அவன் கேட்டான். உடலின் தோல் செவிப்பறையென மாற பிடரி மெல்ல சிலிர்க்க அசையாது நின்றான்.

“நீ கொண்ட விழைவு முதிர்ந்து நான் எழுந்தேன். பெருவிழைவுடன் உன் கால் சுற்றிய நாகம் நான்” என்றாள் குந்தி. “இளையவனே, என் மேல் நான் கொண்ட ஐயமே உன்னை மூன்றாமவன் என விலக்கி நிறுத்தியது. ஆனால் ஒரு கணமும் உன் வில்லை நான் மறந்ததில்லை.” பெருமூச்சுடன் “ஆம், நான் அதை அறிவேன். என் வாழ்நாளெல்லாம் காடுகளில் அலைவதே ஊழ் என்று உணர்கிறேன்” என்றான். "அரண்மனையில் நீ இருக்கையில் உன்னை காடு நோக்கி விலக்குகிறேன். அரண்மனையில் என்னை விட்டு உன்னுடன் காடுகளில் நானும் அலைகிறேன்” என்றாள் குந்தி. “அறிவேன்” என்றான் அர்ஜுனன்.

“மைந்தா, நீ உரு நான் நிழல். உன் கால் தொட்டுச் சென்ற மண் அனைத்திலும் உடல் தொட்டுச் சென்றவள். சாயும் பொழுதுகளில் பேருருக்கொண்டு உச்சிப் பொழுதில் உன் காலடியில் மறைந்து என்றும் உன்னுடன் இருப்பவள். இதை விலக்கு. உன்னை உள்ளிழுத்து இங்கொரு நிழலென ஆக்கிவிடும் இச்சுனை” என்றாள். அவன் கண்மூடி தன்னை தொகுத்தான். தன் உடலை வாளென்றாக்கி பல்லாயிரம் வலைப்பின்னல்களை வெட்டிச்சென்றான். புன்னகைத்து “விலகிச் செல்! இன்னும் நூறாயிரம் அறைகளைத் திறந்து அங்கே இன்மையென உன்னை உணர்வதே என் ஊழ்” என்றபடி அந்நீரை தலையில் விட்டான். அக்கணமே முதலையெனப் பாய்ந்து அவனை பற்றிக் கொண்டாள் சமீசி.

முதலையின் வால் சுழன்று அவனை அறையவந்த கணத்தில் அதன் நுனியை தன் காலால் மிதித்து சேற்றுடன் இறுக்கி இரு முன்னங்கால்களையும் பற்றி உடலைச் சரித்து தலையால் அதன் நெஞ்சில் ஓங்கி முட்டி அதை அடிவயிறுகாட்டி விழச்செய்து அக்கணமே புரண்டு அதைத் தூக்கி புல்வெளி நோக்கி வீசினான். அங்கு நின்றிருந்த மரத்தில் மோதி பட்டையில் உரசும் ஒலியுடன் சரிந்து விழுந்து சில கணங்கள் நெளிந்து துடித்தபின் முன்காலை ஊன்றி பெண்ணென எழுந்தது. சமீசி “இக்கணம் என் தவம் நிறைவுற்றது. இவ்வாழம் வரை மானுடர் எவரும் வந்ததில்லை. இதை வெறும் அலையென மாற்றும் பேராழம் ஒன்று உனக்கு வாயில் திறப்பதாக!” என்று வாழ்த்தி முகில் பிசிறுகளாக காற்றில் படர்ந்து மறைந்தாள்.

எழுந்து சரிவில் ஏறி மேலே சென்றான். நீள்மூச்சுடன் காட்டுக்குள் நடந்தான். அவன் கால்கள் உடலை சுமக்கமுடியாமல் தள்ளாடின. சிறகடித்து அவன் தலைக்குமேல் பறந்து சுழன்று வந்து கிளைநுனியில் அமர்ந்து “பஞ்சதீர்த்தத்தின் நான்காவது சுனை இனிமேல்” என்றது வர்ணபக்ஷன். “நோக்கு!” அர்ஜுனனின் தலைமேல் வந்து சிறகடித்து கூவி அழைத்தது. “இதற்கு காரண்டமம் என்று பெயர். இதில் வாழ்கிறாள் பெருவல்லமை கொண்ட முதலையாகிய ஃபுல்புதை. முன்பு இங்கு முனிவரின் தீச்சொல்லால் வந்திறங்கிய ஐந்து தேவதைகளில் ஒருத்தி.” அர்ஜுனன் “அவள் எத்தகையவள்?” என்றான்.

“இளைய பாண்டவனே, இனியவையும் சிறந்தவையும் மட்டும் செறிந்து உருவானவர்கள் தேவர்கள். ஆனால் தீச்சொல்லால் தலைகீழாக திருப்பப்பட்டு இவ்வண்ணம் உருக்கொள்கையில் அவ்வினிமையும் நன்மையும் அதே அளவு பேருருக்கொண்ட தீமையாக மாறுகின்றன. ஒவ்வொன்றுக்கும் அடியில் அதன் இருண்ட புறமொன்று உள்ளது என்பர் என் குலத்துப் பாடகர். இங்கு நிலத்திழைந்து வரும் உயிர்களை உண்ணும் ஆறாப்பெரும் பசி கொண்டு ஃபுல்புதை வாழ்கிறாள். அவளை வெல்கையிலேயே முனிவர் சென்று நின்று திகைக்கும் கரிய பெரிய நதியின் கரையை அடைந்து பாய்ந்து நீந்தி நீ மறுகரை செல்கிறாய். அவ்வண்ணம் ஆகுக!”

அர்ஜுனன் “பெருந்தவத்தின் தருணத்தில் மாமுனிவர் காணும் அவ்விருள்கணத்தை நாணிழுத்து அம்பு பூட்டி குறி நோக்கி நின்று ஏவுவிரலை அசைப்பதற்கு முந்தைய கணம் வில்லாளியும் உணர்வதுண்டு” என்றான். “ஆம், அது ஒரு கணநேரத்தவமே” என்றது வர்ணபக்ஷன். “சிறகுளது என்றுணர்ந்து அன்னை அமைத்த கூட்டிற்கு வெளியே வந்து நின்று, விரிந்த வானை நோக்கி கழுத்து தூக்கி, அலகு திறந்து கூவி, பாய்ந்தெழுந்து காற்றில் மிதப்பதற்கு முந்தைய கணம் ஒவ்வொரு பறவையும் அதை உணர்ந்திருக்கும்.”

“இதன் பெயரென்ன?” என்றான் அர்ஜுனன். “இதை சமானம் என்கிறார்கள். இதுவரை நீ நோக்கிய மூன்று சுனைகளின் நீர் அளவுகள் இச்சுனையால் நிகர் செய்யப்படுகின்றன. அம்மூன்றுக்கும் நடுவில் அமைந்துள்ள இச்சுனை தன் பல்லாயிரம் நுண்ணிய துளை வழிகளால் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துள்ளது. இச்சுனை இருக்கும்வரை பிற மூன்றும் நீர் ஒழிந்து வெறுமை கொள்வதில்லை” என்றது வர்ணபக்ஷன். அர்ஜுனன் பறவையின் வழிகாட்டலில் நோக்கி கால்வைத்து மெல்ல நடந்தான். “இது ஒரு மாயவெளி என்கிறார்கள். இதன் எல்லையைக் கடக்கும் ஒவ்வொருவரும் பால் திரிந்து உருமாறுகிறார்கள். இன்னும் சில கணங்களில் நீ அதை உணர்வாய்.”

அர்ஜுனன் “அது எனக்கு புதிதல்ல, மேலும் அதையே எதிர்பார்த்தேன்” என்றான். புதர்களை வகுந்து செல்லச் செல்ல இலைகளின் அடியில் வெண்ணிற ஒளி ததும்புவதை கண்டான். மரங்களின் மறுபாதிகளில் பால்வழிவது போல் ஒளிவழிந்தது. உருளைக்கற்கள் உடைந்த முட்டையின் பாதி ஓடு போல் தெரிந்தன. வழிந்தோடிய சிற்றோடைகள் வெண்பட்டு நாடா என நெளிந்தன. “வெண்பளிங்கு போன்றது இந்தச் சுனை” என்றது வர்ணபக்ஷன். “இவ்வெல்லையை நான் கடக்க விழையவில்லை. பெண்ணாக உணர்ந்தபின்பு என்னை நான் மீட்டுக் கொள்வேனா என்று எனக்கு ஐயம்.”

அர்ஜுனன் தன் கண்முன் மெல்லிய வெண்ணிற எல்லைக்கோடு போல் தெரிந்த ஒளிவட்டத்தைக் கடந்து அப்பால் சென்றான். அவ்வொளி பட்டு தன்னுடல் சற்றே குழைந்து நெளிந்தாடியதை அறிந்து மேலும் ஒரு அடிவைத்தபோது தன் இடைகுழைவதை தோள் நெகிழ்ந்துள்ளதை கைகள் நெளிவதை அறிந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் மாறிக் கொண்டிருந்தது. தோள்மறைய நீள்குழல் எழுந்தது. குமிழ் முலைகள் வளர்ந்தன. அணிகள் செறிந்த கைகள். நூபுரம் ஒலித்த கால்கள்.

இடை ஒசிய நடந்து சுனைச் சரிவில் இறங்கி சேற்றுப் பரப்பை அடைந்தான். பாற்கலம் என தெரிந்தது அப்பெருஞ்சுனை. அதை அணுகி குனிந்து அந்நீர்ப்பரப்பை நோக்கினான். அதில் தெரிந்த முகம் எங்கோ அவன் கண்டதாக இருந்தது. முழங்காலில் கையூன்றி மேலும் குனிந்து நோக்குகையில் சிறு வியப்பொலியுடன் அம்முகத்தை அடையாளம் கண்டான். அது இளம் குந்தியின் முகம். அவ்விழிகளை நோக்கி நின்றபோது அந்நீர்ப்பாவை பேசுவது போல் “திரும்பிச்செல் மைந்தா! இவ்வாழம் வரை நீ வந்ததே வெற்றிதான். பின்னால் ஏதுமில்லாத யோகியரின் பயணமிது. இல்வாழும் மானுடர்க்குரியதல்ல. அடைந்தடைந்து சென்று நிறைவுறுவது வாழ்க்கை. திறந்து திறந்து சென்று ஒடுங்குவது ஞானத்தின் பாதை” என்றது குரல்.

“என் மைந்தனல்லவா? என் மடியிலிட்டு நான் முலையூட்டிய செல்வனல்லவா? எவ்வன்னை தான் தன் மகன் துறந்து செல்வதை விழையமுடியும்? அவ்வண்ணம் அவன் துறப்பது முதலில் அவன் அன்னையை அல்லவா? என்னை விலக்கும் விழியொன்று உன்னில் அமைந்தால் அக்கணம் நான் இறந்தேன் என்றல்லவா பொருள்? இதோ இங்கு நிறைந்திருப்பது என் முலை நிறைந்த பாலென்று கொள்க. உனக்கு நான் ஊட்டியது சிறிதே. உனக்கென ஊறி நிறைந்தது இப்பெரும் வெள்ளம்.”

அர்ஜுனன் தன் அருகே அவள் அணுகுவதை உணர்ந்து “விலகு!” என்றான். “என் கண்ணீரைக் கடந்து வந்தாய். இம்முலைப்பாலை கடப்பாயா?” என்றாள் குந்தி. “விலகு!” என்றவன் திரும்ப அங்கு மணிமுடியும் பொற்கவசமும் மஞ்சள் பட்டாடையும் அணிந்து நின்ற பாண்டுவை கண்டான். “எந்தையே, நீங்களா?” என்றான். “இல்லை, நான் உன் அன்னை” என்றான் பாண்டு. “உன்னை ஆணென வந்து போர்முனையில் சந்திக்க விழைந்தவள். உன்னைக்கொல்லும் மைந்தனைக் கருவுற விழைந்தவள். உன்னுடன் நீந்திய ஆழத்தில் உன் விழிநோக்கி விண்ணின் சொல்லை கற்றவள்.”

“அன்னையே” என அவன் சொல்ல அச்சொல்லைமீறி நெஞ்சு முன்னால் பாய்ந்தது. அந்நீரை அள்ளி தலையில் விட்டான். அக்கையசைவு முடிவதற்குள் தன் மேல் பாய்ந்த முதலையை குனிந்து தலையால் முட்டி மறுபக்கம் சரித்து குனிந்து அதன் வாலைப்பற்றி மும்முறை சுழற்றி அப்பால் காட்டில் வீசினான். தொலைவில் ஒரு பாறை இடுக்கில் விழுந்து துடித்து புரண்டெழுந்து நின்றாள் ஃபுல்புதை.

“இளையோனே, இங்கு உயிர்கள் கருணையால் தளையிடப்பட்டுள்ளன. அதையும் வென்று செல்பவனே முமுமையை அடையும் தகுதி கொண்டவனாகிறான். உன் விழைவின், தேடலின் இரக்கமற்ற வாளால் இக்கருணையை வெட்டிச் சென்றாய். நான்காவது சிறையை உடைத்திருக்கிறாய். விண்ணிறைந்துள்ள அமுதத்தில் ஒரு கோப்பை என்றோ உனக்கும் அளிக்கப்படும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றுரைத்து வெண்புகைப்படலமென அலைவுற்று மறைந்தாள்.

காட்டில் அர்ஜுனன் நடக்கையில் மிகவும் களைத்திருந்தான். “ஐந்தாவது சுனையை நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம்” என்றது வர்ணபக்ஷன். “இங்கொரு மண்குன்று மேல் அமைந்துள்ளது இச்சுனை. ஐந்தில் மிகச்சிறிய சுனை இதுவே. விண்ணிலிருந்து பெய்யும் நீர் மட்டுமே உள்ளே செல்லக்கூடியது. ஐந்தில் விண்கதிர் ஒளிபடும் ஒரே சுனையும் இதுதான். விண்மீன்களை சூடிப் பரந்திருக்கும் இவ்வாழத்தில் வாழ்கிறாள் லதை எனும் தேவதை. ஐவரில் நிகரற்ற அழகி அவளே என்கின்றன எங்கள் பாடல்கள். அவள் வாழும் இச்சுனையை ஒளியெழில் கண்டு மகிழ்ந்து சுப்ரசன்னம் என்றழைக்கின்றனர். ஒளியே நீரென அங்கு தேங்கியுள்ளது என்கிறார்கள்.”

“அங்கு செல்லும் வழியில் உன் விழிகள் விண்மீன்களென பூப்பதை உணர்வாய். அங்குள ஒவ்வொரு மரமும் மலரென மாறியிருக்கும். கற்பாறைகள் கனிகள் போல் தெரியும். காமம் கொண்ட பெண்ணுடலின் கதுப்புத் தசை போல் தரை துடிக்கும். நறுமணமும் இன்னிசையும் நிறைந்த காற்று வீசும். அச்சுனை மேல் நிலவு விழுகையில் மட்டுமே தேவாரண்யம் எனும் இக்காடு முற்றிலும் அமைதி பெறும்” என்றது வர்ணபக்ஷன். “செல்க! வென்று மீள்க!”

நீர்த்துளிகள் உதிரும் ஒலிகளும் மெல்ல தேய்ந்தமிழ இன்மையென்றே ஆகி பின் இருப்புணர்ந்து மீளும் முடிவிலி என நிறைந்த பேரமைதி. “அகல்வெளியில் காடும் இணைந்து மறையும் தருணம் இது. இது இங்கிருப்பதை அப்போது மட்டுமே விண்ணகம் அறியும்” என்றது வர்ணபக்ஷன். “இதன் இயல்பு யாது?” என்றான் அர்ஜுனன்.

“உத்தானம் என்று இதை சொல்கிறார்கள். மண்ணில் உள்ள நீரை விண் உறிஞ்சி உண்கிறது என்று அறிந்திருப்பாய். இக்காட்டில் ஊற்றென்றும் ஓடையென்றும் ஆவியென்றும் நீர்த்துளியென்றும் இளமழையென்றும் நிறைந்திருக்கும் நீரை வானம் அள்ளி எடுத்துக்கொள்வது இச்சுனையிலிருந்தே. புலரியில் கதிரவனின் முதல்கதிர் பட்டு ஒளி கொள்கிறது. பின்னர் உச்சியில் வெம்மை கொண்டு ஆவியாகிறது. அந்தி சரிந்தபின் விண்ணில் விண்மீன்கள் தெளியும்போது ஓசையின்றி நீர் மேலெழுந்து செல்வதை உணரமுடியும். தேவாரண்யத்தின் நெற்றிப்பொட்டில் அமைந்துள்ளது இச்சுனை.”

அர்ஜுனன் புதர்களை விலக்கி தன் முன் எழுந்த அச்சிறு குன்றை நோக்கி நின்றான். அதன் உச்சியில் ஓர் சுனை உண்டு என அங்கிருந்து எண்ணவும் முடியவில்லை. “அங்கு செல்வது உகந்ததல்ல இளைய பாண்டவனே. அது ஒருவழிப்பாதை. இவ்வெல்லை கடந்து அங்கு சென்றவை அனைத்தும் அங்கிருந்து விண்ணால் உறிஞ்சப்பட்டு மேலெழுந்து மறையும். முடிவிலியை அறிந்தவை அனைத்தும் முடிவிலி என்றாகும் என்றறிந்திருப்பாய். முடிவெனப்படுவதே உருவென்றாகிறது. உருக்களால் நிறைந்தது இப்புவி” என்றது வர்ணபக்ஷன்.

“இவ்வெல்லை வரை வந்ததே உன்னை இப்புவி கண்ட பெரும் யோகிகளில் ஒருவனாக்குகிறது. இதைக் கடந்து அப்பால் நீ செல்லவேண்டுமென்பதில்லை” என்றது வர்ணபக்ஷன். “நானறியேன், ஒருக்கால் இதுவே நான் தேடி வந்ததாக இருக்கலாம். நான் தேடுவது இங்கே மறைந்து அழிவதே என்றுகூட இருக்கலாம்” என்ற அர்ஜுனன் அவ்வெல்லையைக் கடந்து சிறு குன்றின் மேலேறினான். வியத்தகு காட்சி ஒன்றை பின்னரே அவன் கண்டான். அக்கூம்பு வடிவக்குன்றின் நான்கு திசைகளிலிருந்தும் காற்று மேல் நோக்கி எழுந்து கொண்டிருந்தது. மணலும் புழுதியும் மெல்ல மேல் நோக்கி ஒழுகி எழுந்தன. சற்று நடக்கையில் எழுவதா விழுவதா நிகழ்கிறது என்று அவன் விழிமயங்கியது.

அவனருகே வந்த வர்ணபக்ஷன் “இவ்வெல்லைக்கப்பால் கடக்க எனக்கு ஒப்புதல் இல்லை. வாழ்க!” என்று சொல்லி திரும்பி மறைந்தது. மேலே செல்லச் செல்ல கால்தசையின் விசையின்றியே அவனுடல் மேலே சென்று கொண்டிருந்தது. கண்காணா சரடொன்றால் கட்டி தூக்கப்படுவது போல் அவன் சென்று நின்ற முகடுக்கு நடுவே முழுவட்ட வடிவ சுனை ஒன்றிருந்தது. அதற்குள் ஒளி மட்டுமே நிறைந்திருந்தது. பின்னர்தான் அதை நீரென்று உணர்ந்தான். நீரென்று விழி நோக்குவது நீர்ப்பாவைகளின் பரப்பையே என்று கற்றிருந்தான். எதையும் எதிரொளிக்காத நீர் இன்மையென்றே இருந்தது.

சுனை விளிம்பில் மெல்ல நடந்திறங்கி மெல்ல நீர்விரிவை அடைந்தான். குனிந்து அதில் ஒரு கையை அள்ளினான். ஒளியை கையால் அள்ள முடியுமென்று கண்டு குழந்தைக்குரிய களியில் பொங்கியது அவன் உள்ளம். அருகே அவன் உள்ளத்தால் எதிர்நோக்கிய குந்தியின் உருவம் எழுந்தது. “மைந்தா, வேண்டாம். இதைத் தொட்டபின் அங்கு யாதொன்றும் எப்பொருளும் கொள்வதில்லை. பொருளனைத்தையும் ஊடுருவிச்செல்லும் நோக்கு ஒருவனுக்கு இருக்குமென்றால் பொருளென புவியில் எவை எஞ்சும்? பொருளென்பவை விழிக்கு அவை அளிக்கும் தடையால் ஆனவை அல்லவா? விலகு!” என்று அவள் ஒலியின்றி சொன்னாள்.

“உன் விழைவுக்கு நிகர்விழைவு கொண்டு எதிரே நிற்கும் ஆடிப்பாவையென என்னை நீ இதுவரை கண்டதில்லை” என்றாள் குந்தி. அர்ஜுனனின் தோள்களும் கைகளும் நடுங்கின. “சொல்லுக்குச் சொல் தோளுக்குத் தோள். வில்லுக்கு என் வில்லும் நிகர் நிற்கும். உன் அம்பின் கூர்முனையை என் அம்புமுனை சந்திக்கும்.” அவன் மெல்லிய குரலில் “விலகு!” என்றான். மீண்டும் தன் உள்ளத்தின் அடியாழத்தில் எங்கோ சொன்னான். விலகு விலகு விலகு என்று அவன் ஆழத்தின் ஆயிரம் குகைகள் அச்சொல்லை எதிரொலித்தன.

“ஒரு கணத்தின் பல்லாயிரம் கோடியில் ஒன்றென ஆகிய தேவகணத்தால் மட்டுமே நீ என்னை வெல்ல முடியும். உன் அம்பு நுனியின் புள்ளியில் அமைந்த மாநகரத்தின் நடுவே அமைந்த மாளிகையின் குவைமுகடின் உச்சிக் கொடிமர நுனியில் பறக்கும் ஒரு கொடி. அதுவே உன் அறிதல் என இருக்கக்கூடும். இங்கு அதைத் தொட்டபின் அதை அறிய நீ மீள்வதில்லை” என்றாள் குந்தி. “விலகு!” என்றான் அர்ஜுனன். அவன் மேல் கவிந்திருந்த வானம் பல்லாயிரம் இடி முழக்கங்களை எதிரொலித்தது.

“மூடா, ஒன்றை விட்டு விட்டு இங்கு வந்துளாய். திரும்பு! அதை அடைந்து மீள்!” என்றாள் குந்தி. அர்ஜுனன் “எதை?” என்று எண்ணிய கணமே அறியாது அவன் விழி திரும்பி அந்நீர்வெளியை நோக்கியது. அதிலொரு பெண் முகம் எழுந்து புன்னகைக்கக் கண்டான். அவன் கையிலிருந்த நீர் மீண்டும் அச்சுனையில் விழுந்ததுமே முதலையென்று உருமாறி லதை அவன் மேல் பாய்ந்தாள். பயின்று தேர்ந்த உடலால் அவளை விலக்கி அவளை நிலையழிந்து மறுபக்கம் சென்று விழச்செய்தான். பாய்ந்து அவள் மேல் விழுந்து இரு கால்களாலும் கைகளாலும் அவளை பற்றிக்கொண்டான்.

அவள் வால் அலைந்து துடிக்க எம்பி விழுந்து துள்ள தன் புயவல்லமையால் அவளைப் பற்றி பன்னிருமுறை புரண்டு சுனை எல்லைக்கு வெளியே வந்து மறுபக்கச் சரிவில் உருட்டி வீசினான். புழுதியில் விழுந்து உருண்டுருண்டு சென்று நிலையழிந்து மூழ்கி நின்று மேலெழுந்து வந்த புழுதியால் உடல் மூடப்பட்டு கிடந்த லதை தன்னுரு மீண்டு அப்புழுதிக்குள் மண்சிலை என பெண் உடல் அமைந்து அவனை நோக்கினாள். “மீள்க! நீ வென்று வர இன்னும் ஒரு களம் உள்ளது. இச்சுனை உனக்கென காத்திருக்கும்” என்றாள். அர்ஜுனன் “அவள் யார்?” என்றான். “அவள் பெயர் சுபத்திரை” என்றாள் லதை. அர்ஜுனன் நீள் மூச்சுடன் “ஆகுக!” என்றான். புழுதி என கலைந்து பரவி லதை விண் மீண்டாள். அர்ஜுனன் தோளில் சிறகடித்து வந்தமர்ந்து “மீள்க!” என்றது வர்ணபக்ஷன்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்க்கூடல் கட்டுரைகள்

பகுதி ஐந்து : தேரோட்டி - 1

மாலினி தன் படுக்கை அறையில் மான்தோல் மஞ்சத்தில் அமர்ந்திருக்க அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்த சுஜயன் எழுந்து அமர்ந்து “அதன் பின் அந்த ஐந்து தேவதைகளும் எங்கு போனார்கள்?” என்றான். “அவர்களுக்கு இங்கிருந்து விடுதலை கிடைத்தது. விண்ணில் ஏறி தேவர் உலகான அமராவதிக்குச் சென்றார்கள்” என்றாள் மாலினி.

“அமராவதியிலிருந்து?” என்று சுஜயன் கேட்டான். “அமராவதிதானே அவர்கள் இடம்?” என்றாள் மாலினி. “அவர்கள் அமராவதியிலிருந்து எங்கு செல்வார்கள்?” என்று சுஜயன் மீண்டும் அவளை உலுக்கி கேட்டான். “அமராவதியில்தானே அவர்கள் இருந்தாக வேண்டும்? அங்கேதான் அவர்களுக்கு இடமிருக்கிறது” என்றாள் மாலினி. “எவ்வளவு நாள்?” என்று சுஜயன் தலை சரித்து கேட்டான். “எவ்வளவு நாள் என்றால்?” என்றாள் மாலினி. “இறந்துபோவது வரையா?” என்று அவன் கேட்டான்.

“அவர்கள் தேவதைகள். அவர்களுக்கு இறப்பே இல்லை.” அவன் திகைப்புடன் “இறப்பே இல்லையா?” என்றான். “ஆம். இறப்பே இல்லை.” அவன் “ஆனால்… ஆனால்…” என்று திக்கி “அப்படியென்றால் அவர்கள் அங்கே எத்தனை நாள் இருப்பார்கள்?” என்றான். “இருந்துகொண்டே இருப்பார்கள்” என்றாள் மாலினி. அவன் உள்ளம் சென்று தொட்டு திகைக்கும் இடம் என்ன என்று அவளுக்கு மெல்ல புரியத்தொடங்கியது.

“அவர்கள் எப்போதும் மாறாமல் அங்கே இருந்துகொண்டே இருப்பார்கள்” என்றாள். “எங்குமே செல்ல மாட்டார்கள் அல்லவா?” என்று சொன்னபடி அவன் மீண்டும் படுத்துக்கொண்டான். அவன் தலையை வருடிக்கொண்டிருக்கும்போது முதுகெலும்பில் ஒரு குளிர் தொடுகையை போல அவளுக்கு அவ்வெண்ணம் உறைத்தது. “ஆம்” என்றாள். பின் அவன் இடையை வளைத்து தன்னருகே இழுத்துக்கொண்டு “ஆனால் அவர்களுடைய உள்ளம் அங்கிருந்து ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு முறை வெளியே கிளம்பும். பாதாள உலகங்களிலும் விண்ணுலகங்களிலும் உலாவும். புதிய மனிதர்களையும் தேவர்களையும் நாகங்களையும் பேய்களையும் பார்க்கும்” என்றாள்.

அவன் விழிகள் உருளத் தொடங்கின. “எவரும் அதை கட்டுப்படுத்த முடியாது” என்றாள் மாலினி. “ஏன் அவர்கள் அப்படி ஒளிந்து செல்கிறார்கள்?” என்றான் சுஜயன். “ஏனென்றால், அப்படி செல்லாவிட்டால் ஒரே இடத்தில் வாழ வேண்டும் அல்லவா? ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்படி செய்தால் எல்லா நாளும் ஒன்றே ஆகிவிடும். எவராவது ஒருநாள் மட்டும் வாழ விரும்புவார்களா?” என்று மாலினி கேட்டாள். “ஆம்” என்றபடி அவன் கண்களை மூடி ஒருக்களித்து இருகைகளையும் தொடையின் நடுவே வைத்து உடலை குறுக்கிக்கொண்டான்.

“தூங்கு என் அரசே” என்று சொல்லி அவள் அவன் தலையை தன் விரலால் மெல்ல வருடிக்கொண்டிருந்தாள். அவன் மூச்சு சீராக ஒலிக்கத் தொடங்கியதும் மெல்ல அவனை தூக்கிக் கொண்டுசென்று அருகிருந்த மூங்கில் மஞ்சத்தின் மேல் விரிக்கப்பட்ட புலித்தோல் விரிப்பில் மெல்ல படுக்க வைத்தாள். ஆடை திருத்தி திரும்பிச்செல்ல முனையும்போது அவன் வாயைத் திறந்து காற்றில் தேடி சப்புவதுபோல் ஓசைக்கேட்டாள்.

அவள் மெல்ல திரும்பி வாயிலை பார்த்தபின்பு ஓசையின்றி நடந்துசென்று மூங்கில் படலை மூடிவிட்டு வந்து அவனருகே மண்டியிட்டாள். தன் மேல்கச்சையை நெகிழ்த்தி கனிந்த காம்பை அவன் வாயருகே வைத்தாள். ஆனால் வாய்க்குள் அதை செலுத்த அவளால் முடியவில்லை. குளிர் வியர்வை கொண்டு அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அந்த அறை முழுக்க அவள் நெஞ்சின் ஓசையே ஒலித்தது. பல்லாயிரம் காலம் விரைந்து ஓடுவதுபோல மூச்சிரைக்க அவன் வாய்க்கும் முலைக்காம்புக்குமான மிகச்சிறிய தொலைவை அவள் கடந்தாள். அவள் உடல் அவள் மனத்தை கனவுக்குள் அறைந்தது. மேலும் அருகே சென்றாள்.

அவன் மூச்சு முலைமுகப்பில் தொட்டுச் செல்லும்போது அவள் பற்களை இறுக கடித்துக்கொண்டாள். அதற்குமேல் அவளால் முன்னகர முடியவில்லை. அவன் அவள் வாசனையை முகர்ந்ததுபோல மூக்கை சுளித்தான். மாயச்சரடு ஒன்றால் இழுக்கப்பட்டவன்போல தன் செவ்விதழ்களை குவித்து நீட்டி அவள் காம்புகளை வாயால் கவ்விக்கொண்டான். தன் கைகளால் அவன் தலையை தோளில் பற்றி சற்றே ஏந்தி தன் முலைகளை அவனுக்களித்தாள். வியர்த்த உடலை இறுக்கி சற்றே குனிந்து அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். மேலும் சற்று நேரம் கழித்து தன் பற்கள் கிட்டித்து கைகள் சுருண்டு இறுகியிருப்பதை உணர்ந்தாள். மூச்சை இழுத்து விட்டு உடலை மெல்ல தளர்த்தினாள்.

அவள் உடலிலிருந்து இளம் சூடாக குருதி ஓடை ஒன்று ஒழுகி வெளியேறுவதுபோல் தோன்றியது. இனிய களைப்பால் கைகளும் கால்களும் தசைக்கட்டுகளை அவிழ்த்து தோய்ந்தன. இமைகள் சரிந்து மூடிக்கொண்டன. வியர்வை கழுத்திலும் தோள்களிலும் குளிரத் தொடங்கியது. சுஜயனின் வாயை அகற்றி இன்னொரு முலைக்காம்பை அவன் இதழ்களுக்குள் வைத்தாள். அவன் தலையை தடவிக்கொண்டிருந்த கைகளில் நடுக்கம் அகன்று சீரான தாளம் கூடியது.

அவன் விழிகள் சிறு சிறு இமைகள் அழகான இரு அரை வட்டங்களாக படிந்திருக்க, இமைக்குள் கருவிழி ஓடும் அசைவு தெரிந்தது.

கண்ணுறங்குக கண்ணே, என் அரசே,

இப்புவியாள வந்த தேவன் அல்லவா?

இன்று என்னை ஆள வந்த தலைவன் அல்லவா?

உயிருண்ண வந்த மைந்தன் அல்லவா?

என் இமைகள் உனக்கு சாமரங்கள்

இறைவா என் கைகள் உன் கழுத்து மாலை

என் மூச்சு உனக்கு தூபம்

இறைவா என் விழிகள் உன் ஆலயத்துச் சுடர்கள்

என் நெஞ்சே பறை, என் கண்ணீர் உனக்கு நீராட்டு

எழுந்தருள்க விண்ணளந்தோனே

நீயளக்கும் நிலம் நான்

தான் பாடிக்கொண்டிருக்கும் வரிகளை உணர்ந்தபோது நின்றுவிட்டாள். அவ்வரிகளை எங்கு படித்தோம் என்று நெஞ்சுக்குள் துழாவினாள். மதங்கர் எழுதிய எட்டு காண்டங்கள் கொண்ட சுப்ரதீபம் என்னும் காவியத்தில் வரும் தாலாட்டு இது என்று உணர்ந்தாள். அதை முதிரா இளமையில் அவள் கற்று அகச்சொல் ஆக்கியிருந்தாள். அன்று துள்ளி அலையும் சிறு பெண். காமமோ, இல்லறமோ கனவென்றுகூட நெஞ்சில் இருந்ததில்லை. ஆயினும் குழந்தைகளை பெரிதும் விரும்பியிருந்தாள். கொஞ்சாது முத்தமிடாது ஒரு மழலையைக் கூட கடந்து செல்ல அவளால் முடிந்ததில்லை. அப்பாடலை எத்தனையோ முறை ஏதேதோ குழந்தைகளிடம் பாடியிருப்பதை நினைவுகூர்ந்து புன்னகை செய்தாள்.

ஆனால் அர்ஜுனனுக்கு அதை பாடியதில்லை. அவனுக்கான பாடல்களை அரண்மனைக்கவிஞர் எழுதிக்கொண்டுவந்து அவளுக்களிப்பார்கள். விறலியர் இசையமைத்து பாடிப்பயிற்றுவிப்பார்கள். அவற்றையே பாடவேண்டுமென குந்தியின் ஆணை இருந்தது. அவள் ஒருநாளும் அவள் நெஞ்சிலெழுந்த வரிகளை பாடியதில்லை. அவன் இளவரசனாகவே பிறந்தான், அவ்வண்ணமே வளர்ந்தான். குழவியோ மைந்தனா சிறுவனோ ஆக இருக்கவேயில்லை.

பெருமூச்சுடன் சுஜயனிடமிருந்து தன்னை விலக்கி அவனின் ஈரம் படிந்த தன் முலைக்காம்புகளை பார்த்தாள். அவை சுட்டுவிரல்கள் போல கருமைகொண்டு திரண்டு நின்றன. ஆடை சீரமைத்து எழுந்து கூந்தலை கோதிக்கொண்டு மெதுவாக கால் எடுத்து வைத்து வெளியே சென்று கதவுப்படலை மூடிக்கொண்டு வெளியே இறங்கி சிறு திண்ணையில் அமர்ந்தாள். தலையை இரு கைகளிலும் தாங்கி விண்மீன்கள் செறிந்த வானை நோக்கிக்கொண்டு அசையாது இருந்தாள். புலருவதுவரை அங்கு இருக்க வேண்டும் என்று தோன்றியது.

விண்மீன்கள் அவளை நோக்கியபடி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தன. கங்கையிலிருந்து வந்த காற்றின் நீராவியை கன்னங்களிலும் காதுமடல்களிலும் உணரமுடிந்தது. காடு எழுப்பிய ஒலிகள் இணைந்து ஒற்றைப் பெரும் ரீங்காரமாகி காற்றில் பரந்து சுழன்றுகொண்டிருந்தன. ஒன்றின் மீது ஒன்றென வந்த பெருமூச்சுகளை வெளியேற்றியபடி நெஞ்சின் எடை முற்றிலும் இல்லாமல் ஆகியது. காய்ச்சல் வந்து மீண்டது போல் உடலெங்கும் வந்த குடைச்சலை கைகளையும் கால்களையும் நீட்டி இனிதென அறிந்தாள். கண்கள் அனல்காற்றுபட்டு எரிபவைபோல தோன்றின. உதடுகள் உலர்ந்து தோலெனத் தெரிந்தன. எழுந்து சென்று நீர் அருந்த வேண்டும் என்று விழைந்தாள். ஆனால் எண்ணத்தாலோ உயிராலோ உடலை சற்றும் அசைத்து எழ முடியாது என்று தோன்றியது.

அஸ்தினபுரியில் அவள் இருந்த நாட்களில் அப்படி ஒருபோதும் இரவெல்லாம் அமர முடிந்ததில்லை. நினைவு அறிந்த நாள் முதல் விழித்திருக்கும் கணம் முழுக்க வேலை இருந்து கொண்டிருந்தது. அங்கு ஒவ்வொருவரும் பிறரை வேலை செய்ய வைத்தனர். “இங்கு மட்டும்தானடி அன்பும் ஒரு வேலை” என்று அவள் தோழி சிம்ஹிகை சொல்வதுண்டு. ஆனால் வேலை செய்து பழகியமையால் வெறும் கணங்களை இனிதென காணும் ஆற்றலையே அனைவரும் இழந்திருந்தனர். அரை நாழிகை வெறுமனே இருக்கும் வாய்ப்பு ஏதேனும் நன்னாட்களில் அமையும் என்றால்கூட அப்போது வேலை ஒன்றை நோக்கி செல்லவே அவர்கள் கைகளும் கால்களும் பரபரத்தன.

ஒருநாள் நள்ளிரவில் இனி எதையும் செய்ய முடியாது என்று அவள் உணர்ந்தாள். அன்று காலை அர்ஜுனன் தன் உடன்பிறந்தாரோடும் அன்னையோடும் வாராணவதத்திற்கு கிளம்பிச் சென்றிருந்தான். அன்று காலை செவிலியர் மாளிகையில் அவளை அவன் காண வந்தபோது நீராடிய ஈரம் குழலிலிருந்து தோளில் விழுந்து சொட்டிக் கொண்டிருந்தது. நெற்றியில் இட்ட மஞ்சள் குறி காய்ந்துகொண்டிருந்தது. எப்போதுமென அவள் இரு விழிகள் அவன் இரு தோள்களையும் தொட்டுத் தழுவி மீண்டன. “இன்று நாங்கள் கிளம்புகிறோம் அன்னையே” என்றான். “நன்று நிகழ்க!” என்று அவள் அவன் விழிகளை நோக்கி புன்னகையுடன் சொன்னாள்.

கை நீட்டி அவன் தோள்களை தொட விழைந்தாள். அது முறையா என்று அறியாததால் தன்னை நிறுத்திக்கொண்டாள். அதை உணர்ந்தவன் போல அவள் அருகே வந்து அவள் வலக்கையைப் பற்றி தன் இரு கைகளுக்குள் வைத்தபடி “இந்நகரை சற்று பிரிந்திருப்பது எவ்வகையிலும் எங்களுக்கு உதவுவதே என்று மூத்தவர் எண்ணுகிறார்” என்றான். “ஆம், நானும் அவ்வாறே எண்ணுகிறேன். அண்மை பகைமையை உணர்கிறது. சேய்மை உள்ளங்களை அணுகச் செய்கிறது என்பது மூதாதையர் சொல்” என்றாள்.

“ஆம் அன்னையே, உண்மை” என அவன் இயல்பாக அவள் கைகளை தோள்களில் வைத்தான். “எங்கிருந்தாலும் உன் இக்கைகளை எண்ணிக்கொண்டிருப்பேன்” என்றாள். அவள் கைகள் அவன் தோளைத் தொட்டதும் உடல் மெல்ல நெகிழ்ந்தது. தோளிலிருந்து பெரு நரம்பு புடைத்து இழிந்த இறுகிய புயங்களை வருடி வந்தது அவள் வலக்கை. இன்னொரு கையால் அவன் விரிதோளை தொட்டு வருடியபடி “சில தருணங்களில் உன்னை இளமகவென்று எண்ணுவேன். சில தருணங்களில் உன்னை என் கை தொட அஞ்சும் காளை என்றும் உணர்கிறேன்” என்றாள்.

அர்ஜுனன் “இங்கு வரும்போது நான் இளைஞன். மீள்கையில் மைந்தன்” என்றான். அவன் முகத்தில் எழுந்த புன்னகையைக் கண்டு அவள் உள்ளத்தில் ஒரு குளிர் பரவியது. “என்ன எண்ணுகிறீர்கள்?” என்றான். “உன் புன்னகை! இப்புவியில் இதற்கு இணையான அழகிய புன்னகை கொண்ட பிறிதொரு ஆண்மகன் இருப்பான் என எண்ணவில்லை. இன்றல்ல, இப்பாரதவர்ஷம் உள்ளளவும் உன்னை எண்ணி இங்கு பெண்கள் கனவு காணப் போகிறார்கள்” என்றாள். சிறுவனைப்போல சற்றே தலைசரித்து அவன் நகைத்தான்.

“உன் வாய்க்குள் சிறு பற்கள் எழுந்த நாட்களை நினைவு கூர்ந்தேன். இங்குள்ள அத்தனை சேடியரும் உன்னிடம் கடிபட்டவர்கள். பல் முளைத்த குழந்தைகள் விரல் பற்றி கடிக்கும். நீ முலைகளைத்தேடி கடிப்பாய். இங்குள்ள அனைத்து முலைக்கண்களும் உன்னால் புண்பட்டு இருக்கின்றன” என்றாள் மாலினி. அர்ஜுனன் நகைத்து “பெரும் தேடலில் இருந்திருக்கிறேன்” என்றான்.

அவள் “சென்றுவா மைந்தா. உளம் மறையத் துயிலாமல் இருப்பது உன் இயல்பு என்று அறிவேன். ஆனால் என் மைந்தன் அனைத்தையும் மறந்து துயிலக் காண்பதே எனக்கு பிடித்தமானது. எங்கிருந்தாலும் அங்கு துயில்கொள்” என்றாள். “அன்னையே, இப்பிறவியில் எனக்கு துயில் அளிக்கப்படவில்லை. வில்லேந்தி ரகுகுல ராமனைத் தொடர்ந்த இளையவனைப் போன்றவன் நான்” என்றபின் குனிந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கி “தங்கள் நற்சொல் என் உடன் வரட்டும்” என்றான். அவள் “தெய்வங்கள் துணை வரட்டும்” என்றாள்.

நெஞ்சைப் பற்றி அவன் செல்வதை நோக்கி நின்றாள். இடைநாழி கடந்து அவன் படி இறங்கும் ஓசையைக் கேட்டதும், ஓடிவந்து கைபிடிக்குமிழ்களை பற்றியபடி நின்று நோக்கினாள். முகப்புக் கூடத்திற்குள் அவன் மறைந்ததும் ஓடி சாளரக் கதவைத் திறந்து முற்றத்தில் எட்டி அவனை பார்த்தாள். அங்கு நின்ற புரவியில் ஏறி காவல் மாடத்தைக் கடந்து அவன் சென்றபோது விழி எட்டி நுனிக்காலில் நின்று அவனை நோக்கினாள். பின்பு திரும்பி தன் மஞ்சத்தில் அமர்ந்தாள். கண்கள் மூடி நீள்மூச்சு விட்டு ஏங்கினாள்.

அரண்மனை முகப்பில் இருந்து பாண்டவர்கள் கிளம்பிச் சென்றனர். அவள் அங்கு செல்லவில்லை. அஸ்தினபுரியின் நீண்ட தெருக்களினூடாக அவர்கள் செல்வதை, மக்களின் ஓலங்கள் சூழ கோட்டை முகப்பை கடப்பதை, கங்கை நோக்கி செல்லும் பாதையில் அவர்களது தேர்ச்சகடங்கள் உருள்வதை ஒவ்வொரு கணமும் நோக்கிக்கொண்டிருந்தாள். அன்று முழுக்க அவள் எழவில்லை. தன் சிற்றறையின் மஞ்சத்தில் குளிர் கண்டவள் போல போர்வையை எடுத்து தலைக்குமேல் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள்.

இளஞ்செவிலி ஒருத்தி அவள் போர்வையை விலக்கி காலைத் தொட்டு “அன்னையே, சற்று இன்கூழ் அருந்துங்கள்” என்றபோது உள்ளிருந்தே “வாய் கசக்கிறதடி, வேண்டாம்” என்றாள். பிறிதொரு முறை அவள் கேட்டபோது “வேண்டியதில்லை மகளே. செல்” என்று உறுதிபட சொன்னாள். மேலும் மேலும் போர்த்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. வெளியே ஓசையுடன் காற்று சுழன்றது. ஒவ்வொன்றிலிருந்தும் தன்னை அறுத்துவிட வேண்டும் என்பதுபோல உடலை நன்கு இறுக்கி போர்வையைச் சுற்றி செருகிக்கொண்டாள்.

உள்ளிருந்த இருள் அவள் வியர்வையும் வெப்பமும் கொண்டு மென்சதைக் கதுப்புபோல ஆகி அவளை பொதிந்தது. ஒரு கருவறை. ஒரு முத்துச்சிப்பி. போர்வை குருதிமணம் கொண்டிருந்தது. உயிர்த் துடிப்பு நிறைந்திருந்தது. அதனுள் மயங்கி துயின்று எங்கோ எழுந்தாள். அங்கு இளையோனாகிய அர்ஜுனனுடன் தென்திசை காடுகள் எங்கும் நடந்துகொண்டிருந்தாள். “உங்களுக்காக என் குருதியை, அரசை, மண்ணை உதறி வந்திருக்கிறேன் அன்னையே” என்றான். “நீ வென்றெடுப்பதற்கு மண் இங்குள்ளது” என்றாள். அவன் கைபற்றி “வா, தென் திசையில் அதை காட்டுகிறேன்” என்றாள்.

விழித்துக்கொண்டு தன் உடல் வியர்த்து வெம்மை கொண்டிருப்பதை உணர்ந்து உடலை நீட்டி போர்வை ஓரத்தை விலக்கி சற்றே காற்றை உள்ளிட்டாள். அவ்வண்ணமே துயில்கொண்டு மறுபடியும் கனவில் ஆழ்ந்தாள். அலைகடல் எழுந்த பரப்பில் ஒரு தனித்தீவில் அவள் மட்டும் அமர்ந்திருந்தாள். நீரில் அவன் கைகள் மாறி மாறி விழுந்து துழாவுவதை கண்டாள். அலைகளில் எழுந்து எழுந்து அவன் அணுகிக்கொண்டிருந்தான். கனவோட்டமா சொல்லோட்டமா என்று மயங்கிய துயில்விழிப்பில் அன்று பகல் முழுக்க அங்கே கிடந்தாள்.

அந்தியின் ஒலி கேட்டபோது ஒருநாள் கடந்துவிட்டதை உணர்ந்தாள். அன்று முழுக்க ஒன்றும் செய்யவில்லை என்ற உணர்வெழ போர்வையை விலக்கி எழுந்தாள். கால்கள் தளர்ந்து அவள் சிற்றறை நீரில் மிதக்கும் கொப்பரை என ஆகியது. மஞ்சத்தின் விளிம்பைப் பற்றியபடி மீண்டும் அமர்ந்தாள். கண்களை மூடி உள்ளே சுழித்த குருதிச் செவ்வலைகளை நோக்கி இருந்தாள். பின்பு மீண்டும் படுத்து போர்வையை தலைக்கு மேலே இழுத்து சுருண்டுகொண்டாள்.

அவள் தன்னை உணர்ந்தபோது அரண்மனையும் செவிலியர் மாளிகையும் துயின்று கொண்டிருந்தன. காவலரின் குறடுகளின் ஒலிகளும், படைக்கலங்கள் முட்டிக்கொள்ளும் குலுங்கல் ஓசையும், காற்று சாளரங்களை அசைத்து கடந்து செல்லும் கிரீச்சிடல்களும், பலகைகளின் முட்டல்களும் மட்டும் கேட்டன. அவள் அறையைச் சூழ்ந்திருந்த சிற்றறைகளிலும் கூடத்திலும் துயின்ற சேடியரும் செவிலியரும் விட்ட சீர்மூச்சுகள் பல நூறு நாகங்கள் எழுந்து இருளில் நெளிவதைப்போல் தெரிந்தன.

ஓசையின்றி எழுந்து மெல்ல நடந்து வெளிவந்தாள். படி இறங்கி கூடத்தைக் கடந்து பின்பக்கத் திண்ணையை அடைந்தாள். அங்கு தெற்கிலிருந்து வந்த காற்று இசைத்துக்கொண்டிருந்தது. தெற்கில் வரும் காற்றில் சற்று கூர்ந்தால் எப்போதுமே சிதைப் புகை மணத்தை அறிய முடியும். ஆகவே அவள் அங்கு அமர்வதேயில்லை. அவள் விழையும் காற்று மேற்குத் திண்ணையிலே இருந்தது. அதில் எப்போதும் ஏரிநீர்வெக்கை இருக்கும். பாசிமணம் கலந்திருக்கும். அலைகளின் ஓசையைக்கூட கேட்கமுடியும். ஆனால் அன்று அங்கு இருக்க விரும்பினாள்.

கால் நீட்டி அமர்ந்துகொண்டு, விண்மீன்கள் செறிந்த வானை நோக்கிக்கொண்டிருந்தாள். ஒன்றும் செய்யாமல் இருக்கிறோம் என்ற உணர்வு கொண்டாள். ஒருபோதும் அப்படி அமர்ந்ததில்லை. வாள் என ஓர் எண்ணம் வந்து தன்னினைவுப்பெருக்கின் சரடை துண்டித்தது. முனைகள் நெளிந்து தவித்து துடித்தன. ஏன் கூடாது என்றாள். இனி செயலென எதற்கு? இனி ஆற்றுவதற்கு ஒன்றுமில்லை. அறிவதற்கும் ஒன்றுமில்லை. இனி வெறுமனே இருக்க வேண்டும். எஞ்சிய நாள் முழுக்க ஏதும் ஆற்றாமல் இவ்வண்ணமே விரிந்த விண்மீன் வெளியை நோக்கி உடல் ஓய்ந்து அமரவேண்டும். கைகளும் கால்களும் மண்ணில் கிடக்கவேண்டும். எதையும் கண்டடையாமல், எதையும் கடந்து செல்லாமல், எதையும் இழக்காமல் நெஞ்சு காலத்தில் படிந்திருக்கவேண்டும்.

விடிந்தபோது அவள் எழுந்து முகம் கழுவி பொட்டும் பூவும் அணிந்து வெண்ணிற ஆடை சுற்றி பேரரசி காந்தாரியின் அவைக்குச் சென்றாள். புஷ்பகோஷ்டத்தில் காந்தார அரசியரின் மாளிகையில் எப்போதும் சேடியரும் செவிலியரும் ஏவலரும் காவலரும் செறிந்து ஓசை நிறைந்து இருக்கும். பத்து அரசியர்கள் பலநூறு பணியாட்களை வைத்திருந்தனர். கலைந்து இடந்தேரும் பறவைகளைப்போல அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி கூவிக்கொண்டிருப்பார்கள். அங்கு எப்போதும் ஏதோ நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆனால் எதுவும் எண்ணியபடி நிகழாது.

அறைகளை ஒவ்வொன்றாகக் கடந்து பேரரசியின் சிறு மஞ்சத்தறையை அடையும்போது அத்தனை ஓசைகளும் பின்னகர்ந்து மையமென குவிந்திருக்கும் அமைதியை உணர முடியும். தன் மஞ்சத்தில் காந்தாரி கண்களை மூடிக் கட்டிய நீலப்பட்டுத் துணியுடன் அசைவற்றவள் என அமர்ந்திருப்பாள். அவள் அருகே அமர்ந்து சேடிகளும் தூதர்களும் மெல்லிய குரலில் பேசுவார்கள். அல்லது விறலியும் பெண்பாற்புலவரும் அவளுக்கு மட்டும் கேட்பதுபோல் கதைசொல்வார்கள். காந்தாரியின் குருதிச்சிவப்புகொண்ட சிறு உதடுகள் அசைவதும் நாவு இதழ்களை தீண்டிச் செல்வதும் ஓசையென கேட்கும் அமைதி அங்கு இருக்கும்.

வாயிலுக்கு அவள் வருவதற்கு முன்னரே அவள் காலடியை காந்தாரி அறிந்திருந்தாள். அவளுக்காக நூல் மிடற்றிக்கொண்டிருந்த பெண்பாற்புலவரை நோக்கி கையசைத்து “வெளியே மாலினி நின்றிருக்கிறாள் வரச்சொல்” என்றாள். சுவர் ஓரமாக நின்றிருந்த சேடி “ஆணை” என்று சொல்லி வெளியே வந்து மாலினியிடம் “உள்ளே வருக!” என்றாள். காவல்பெண்டு கதவைத் திறந்து தர மாலினி உள்ளே சென்று தலைவணங்கி முகமன் உரைத்தபின் அரசியருகே தரையில் அமர்ந்தாள்.

காந்தாரி ஒன்றும் சொல்லாது தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். வெண்பளிங்குப் பேருடல், உருண்ட துதிக்கை புயங்கள், சின்னஞ்சிறு மணிக்கட்டு அமைந்த, மிகச்சிறிய விரல்கள் கொண்ட அவள் கைககள் சிவந்த தாமரை மொட்டுக்களென குவிந்திருந்தன. சிவந்த சிறிய கால்கள். உள்ளங்கால்கள் இத்தனை சிவந்து மென்மையாக இருக்கலாகும் என்று அவள் அறிந்ததில்லை. நடை பழகா கைக்குழந்தையின் கால்கள் எனத் தோன்றின.

காந்தாரி ஒரு சொல்லும் எடுக்கவில்லை என்பதை உணர்ந்ததும், மாலினி மெல்ல கை நீட்டி அவள் கால்களைத் தொட்டு தன் தலைமேல் சூடி “பேரரசி என் உள்ளத்தை உணரவேண்டும். இனி ஏதும் எஞ்சவில்லை என உணர்கிறேன். எனக்கு விடைகொடுங்கள்” என்றாள். “ஏன்?" என்றாள் காந்தாரி. “இங்கு இருக்க விழையவில்லை. காடு செல்ல வேண்டுகிறேன்” என்றாள் மாலினி. “காட்டில் என்ன செய்யப் போகிறாய்?" என்றாள். அதுவரை அதை சொல்லாக வடித்திராத மாலினி சிலகணங்கள் தவித்து “விண்மீன்களை எண்ணுவேன்” என்றாள்.

காந்தாரியின் இதழ்கள் புன்னகை கொண்டன. “பகலில்?” என்றாள். “அவ்வீண்மீன்களை நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றாள். “நன்று” என்றாள் காந்தாரி. “இனிதாக உதிர்வதற்கு நிகர் என ஏதுமில்லை. அவ்வண்ணமே ஆகுக! இப்போதே உனக்கு அது நிகழ்ந்தமை கண்டு நான் பொறாமை கொள்கிறேன்.” மாலினி “தங்கள் நல்வாழ்த்து துணை இருக்கட்டும் அன்னையே” என்று சொல்லி மீண்டும் அவள் காலைத் தொட்டு தன் தலையில் சூடினாள்.

“நீ வாழ்வதற்குரிய அனைத்தையும் கொடுக்க நான் ஆணையிடுகிறேன்” என்றாள் பேரரசி. மாலினி “தங்கள் கருணை தெய்வங்களின் சொற்களுக்கு நிகர்” என்றதும் பேரரசி சிறிய உள்ளங்கையை ஊன்றி தடித்த புயங்கள் அசைய எழுந்து நின்றாள். “உன் இளையோன் இன்று உன்னிடம் விடைபெற்றுச்சென்றான் அல்லவா?” அவள் ஒன்றும் சொல்லவில்லை. “இங்கு வந்து என்னிடமும் விடைபெற்றுச் சென்றனர். ஐவரும் வந்து இச்சிற்றறையை நிரப்பி நின்றபோது அவர்கள் என் மடியில் அமர்ந்து என் முலையுண்ட நாட்களைத்தான் எண்ணிக்கொண்டேன்” என்றாள் காந்தாரி.

“ஆம் அன்னையே, இங்குள்ள அனைவரும் தங்களுக்கு மைந்தர்களே” என்றாள் மாலினி. “மூத்தவனிடம் மட்டுமே நான் பேசினேன். அவனை தோள் வளைத்து பழுதற்ற பேரறம் கொண்டவன் நீ. என்றும் அதுவே உன்னுடன் இருக்கும் என்றேன். பெண் என்றும் அன்னை என்றும் என் பேதை மனம் எதையோ விழையலாம். மைந்தா, தொல்குடி காந்தாரத்து அரசி என நான் விழைவது ஒன்றே. அறம் வெல்ல வேண்டும் என்றேன். ஆம் அது வெல்லும் என்றான். அச்சொற்களையே வாழ்த்து எனச் சொல்லி அனுப்பினேன், அறம் உங்களுக்கு துணை நிற்கும் என்று” என்றாள்.

மாலினி மீண்டும் ஒருமுறை தலை வணங்கி ஓசையின்றி கதவைத் திறந்து வெளியேறினாள். அன்று மாலை அவளுக்கென காடு ஒருங்கிவிட்டது என்று விதுரர் அனுப்பிய செய்தியை அமைச்சர் கனகர் வந்து சொன்னார். அவளுக்கான ஊர்தி காத்திருந்தது. எவரிடமும் விடை சொல்லாமல் தனக்கென எதையும் எடுத்துக்கொள்ளாது மரவுரிச் சுருள் ஒன்றைச் சுருட்டி கைகளில் எடுத்துக்கொண்டு அவ்வூர்தியில் அவள் ஏறி அமர்ந்தாள். அவள் ஒன்றும் சொல்லாமல் இருப்பதைக் கண்டு “செல்வோமா செவிலியே?” என்றான் தேர்ப்பாகன். “ஆம்” என்றாள் அவள்.

தேர் உருண்டு கிளம்பிய பிறகு ஒரு கணம் திரும்பி தன் மாளிகையை நோக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு எழுந்தது. பல நூறு சேடியரும் செவிலியரும் அங்கு விழிகளாகி நிற்பதை அவள் அறிந்தாள். ஆயிரம் விழிகள் கொண்ட மாளிகையை தன் முதுகில் உணர்ந்தபடி ஒருமுறையும் திரும்பி நோக்காமல் அம்முற்றத்தை கடந்தாள். விழி தூக்கி அஸ்தினபுரியின் மாளிகையையோ தெருவையோ கோட்டையையோ மானுட முகங்களையோ விளக்குகளையோ அவள் நோக்கவில்லை. பெருங்கோட்டை வாயில் அவளை விட்டு பின்னால் உதிர்ந்தபோதும் திரும்பவில்லை.

பகுதி ஐந்து : தேரோட்டி - 2

மெல்லிய காலடி ஓசையை மாலினி கேட்டாள். மிகத் தொலைவில் என கேட்ட மறுகணமே அண்மையில் என ஆயிற்று அது. அது சுபகை என உடனே தெளிந்தாள். இருளுக்குள் மிதப்பவள்போல் வந்து சுபகை அவளை நோக்கி ஒரு கணம் நின்று பின்பு மெல்ல முழங்கால் மடக்கி அவள் அருகே அமர்ந்தாள். தடித்த உடல் கொண்டிருந்தபோதும் மெல்லிய ஓசையுடன் அவள் நடப்பதை மாலினி விந்தையுடன் எண்ணிக்கொண்டாள்.

சுபகையின் கையில் மூங்கில் குவளையில் சூடு தெரியும் இன்நீர் இருந்தது. “அருந்துங்கள்” என்று அதை நீட்டினாள். அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு அதன் நறுமணத்தை உணர்ந்தபோதுதான் நெடுநேரமாக அதற்காகவே தன்னுள் நா தவித்துக்கொண்டிருப்பதை மாலினி உணர்ந்தாள். புன்னகையுடன் “துயிலவில்லையா?” என்றாள். “இல்லை.” “ஏன்?” என்றாள் மாலினி. “என்ன விந்தையான கதை அது!” என்றாள் சுபகை.

அவள் சொல்வதை புரிந்துகொண்டு மாலினி இருளுக்குள் தலை அசைத்தாள். “ஐந்து முகங்கள்” என்றாள் சுபகை. “ஒவ்வொன்றையும் திருப்பிப் திருப்பிப் போட்டு உளம்மீட்டிக்கொண்டிருக்கையில் ஐந்து பெண்ணுருவங்களும் ஐந்து முகங்களை அணிந்த ஒரு முகம் என்றும் ஐந்துபெண்களின் ஒரே முகம் என்றும் தோன்றியது.” மாலினி “செல்லுமிடமெல்லாம் முகம் தேடி அலைபவன் என்கிறாயா?” என்றாள்.

சுபகை “நான் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த ஓர் இரவில் என்னில் அவர் எதையோ தேடுகிறார் என்று நான் எண்ணியது பிழை. அன்றிரவு அவர் என்வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை. அன்று உடல் உள்ளம் ஆன்மா மூன்றையும் எனக்களித்திருந்தார். முற்றிலும் என்னுடனேயே இருந்தார். ஐயமேயிலை, அன்றொருநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை நிறைவுறச் செய்து, இன்றென இருக்கவைத்தது அந்நிறைவே.”

“நீரென ஒளியென எங்கும் சூழலுக்கேற்ப முற்றிலும் உருமாறிக் கொள்ள அவனால் முடியும். எதுவும் எஞ்சாது விட்டுச் செல்லவும் முடியும்” என்றாள் மாலினி. “ஆம்” என்றாள் சுபகை. “இந்த நூல்கள் அனைத்தும் அவரை புனைந்து காட்டுகின்றன. இப்புனைவுகளில் எவை விடப்பட்டிருக்கிறதோ அவற்றைக் கொண்டு நாம் புனைவதே அவருக்கு இன்னும் அணுக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.” மாலினி “அவ்வண்ணம் ஆயிரம்பேர் இயற்றும் ஆயிரம் புனைவுகளுக்கு அப்பாலும் ஒன்று மிஞ்சியிருக்கும்” என்றாள். “அதை அறிந்தவள் தான் மட்டுமே என நம்பும் ஆயிரம் பெண்கள் இருப்பார்கள்.”

“இப்புடவி சமைத்த பிரம்மன் தன் துணைவியை நோக்கி புன்னகைத்து இதைவிட பெரிதொன்றை உன்னால் ஆக்கமுடியுமா என்றார். முடியும் என்று அவள் தன் கையிலிருந்த விழிமணிமாலையின் ஒரு மணியை எடுத்து புனைவெனும் ஒளியாடையை உருவாக்கி புடவியை அதில் ஏழுமுறை சுற்றி அவன் முன் வைத்தாள் என்று கதைகள் சொல்கின்றன. அதன் பின் தன் படைப்பை தான் அறிவதற்கு பிரம்மன் வெண்கலைச் செல்வியின் ஏடுகளை நாடுகிறான் என்கிறார்கள்” என்றாள் மாலினி. “சூதர்களின் தன்முனைப்புக்கு அளவேயில்லை” என்று சொல்லி சுபகை சிரித்தாள்.

உள்ளே சுஜயன் “குதிரை” என்றான். “இளவரசர் போரில் இருக்கிறார்” என்றாள் சுபகை. “போர்நிறுத்தத்தில்தான் அவன் புரவிகளை எண்ணுகிறான்” என்றாள் மாலினி. “நேற்று முழுக்க கேட்டுக்கொண்டிருந்தார்” என்றாள் சுபகை. “சித்ராங்கதையும் அர்ஜுனரும் ஏன் வாள் போர் புரியவில்லை என்று. நான் அவர்கள் மணம் கொண்டதும் போர் தொடங்கிவிட்டிருக்கும் என்றேன்” என்றாள். “ஏனடி இளவரசரிடம் இதையெல்லாம் சொல்கிறாய்?” என்றாள் மாலினி. “அவர் வாயை மூட வேறு வழி இல்லை. சிறுசித்தம் சென்று சிக்கும் ஒன்றை சொல்லிவிட்டால் விழிகள் பொருளற்றதாகி தலை சரியும். பின் நெடுநேரம் வினா எதும் எழாது.”

“இன்று என்னிடம் கேட்டான், விண் மீண்ட ஐந்து தேவதைகளும் அங்கிருந்து எங்கு செல்வார்கள் என்று. ஒரே வினாவில் என் உள்ளத்தை கலங்கச் செய்துவிட்டான்” என்றாள் மாலினி. சுபகை சற்று நேரம் கழித்து “ஆம், அது முதன்மையான வினா. காத்திருப்பதற்கு ஏதும் இன்றி பெண்ணால் வாழ முடியுமா என்ன?” என்றாள். “விண்கன்னியர் என்ன செய்வார்கள் என்று அறியமுடியவில்லை. மீண்டும் ஒரு தீச்சொல் பெற்று எழுவாள். மீண்டும் ஒரு புவியில் சென்று பிறப்பாள். கடலை அடைந்த நீர் அங்கிருப்பதில்லை. ஆவியாகி முகிலாகி மழையாகி நதியென ஓடி சலித்தால் மட்டுமே அதற்கு நிறைவு” என்று மாலினி சொன்னாள்.

மாலினி கை நீட்டி சுபகையின் கைகளை பற்றிக்கொண்டு “மீண்டும் இளைய பாண்டவனை அடைவதை நீ கனவு காண்கிறாயா?” என்று கேட்டாள். “நான் அங்கு விட்டுவந்த இளைய பாண்டவர் சென்ற காலத்தில் எங்கோ இருக்கிறார். அங்கு மீண்டு அவரை அடைவது இயல்வதல்ல. எதிர்காலத்திற்குச் சென்று அவரை அடையும்போது நான் உருமாறியிருப்பேன்” என்றாள் சுபகை. “இளைய பாண்டவரை நான் அறிவேன். அவர் மீண்டும் புதியவளாக என்னை அடையக்கூடும். என்னிடம் மீண்டுவர அவரால் இயலாது.”

மாலினி அவள் கையை பற்றி “எண்ணி இருக்கவும் காத்திருக்கவும் ஓர் உருவகம். அதற்கப்பால் என்ன?” என்றாள். “அவ்வண்ணமே இருக்கட்டுமே. இவ்வாழ்க்கையை அப்படி ஓட்டிச்சென்று அந்தியணைவதன்றி வேறென்ன செய்வதற்குள்ளது?” என்றாள் சுபகை. “அவன் மீளமீளச் சென்றடைந்தபடியே இருப்பவள் ஒருத்திதான்” என்று மாலினி சொன்னாள். “இளைய யாதவ அரசி, சுபத்திரை. அலை கரையை தழுவுவதுபோல அவள் மேல் அவன் அணைந்தபடி இருக்கிறான் என்கின்றனர் சூதர்.” சுபகை “ஏன்?” என்றாள். “ஏனென்றால் அவள் அவனுக்காக ஒரு கணமும் காத்திருப்பதில்லை. அவள் நெஞ்சின் ஆண்மகன் அவன் அல்ல.”

சுபகை “அவள் இளைய யாதவரின் தங்கை” என்றாள். “நிகரற்ற தமையனைக் கொண்டவள், நினைவறிந்த நாள் முதல் அவன் தங்கை என்றே தன்னை உணர்ந்தவள். இப்புவியில் பிற ஆண்கள் அவளுக்கொரு பொருட்டே அல்ல” என்று சொன்ன மாலினி “ஊழ் சமைக்கும் தெய்வங்கள் எண்ணி எண்ணி நகைக்கும் ஒரு இடம் இது” என்று சிரித்தாள். “கிள்ளி எடுப்பதற்கிருந்தால் அதை மலையென மாற்றி நிறுத்திவிடுவார்கள் சூதர்கள்” என்றாள் சுபகை. “ஆணும் பெண்ணும் கொள்ளும் ஆடலை பிறர் அறிய முடியாது என்பார்கள். ஆனால் அதை இம்மண்ணிலுள்ள அத்தனை ஆண்களும் பெண்களும் அறியமுடியும்” என்று மாலினி சொன்னாள். “இளைய யாதவ அரசி என்று அவளை முதலில் சொன்னவர் எவராயினும் அத்தெய்வங்கள் அவர் நாவில் அத்தருணம் அமர்ந்திருந்தன.”

“யாதவகுலத்திலிருந்து அஸ்தினபுரியின் அரசகுடிக்கு வந்த இரண்டாவது யாதவ இளவரசி சுபத்திரை. இளவயது குந்திதேவியைப்போலவே வில்சூடி போரிடவும் வாள்ஏந்தி எதிர்நிற்கவும் கற்றவள். கதாயுதம் கொண்டு போரிடும் பெண்கள் அரசகுலத்தில் அவர்கள் இருவரும் மட்டுமே என்கிறார்கள் சூதர்கள்” என்றாள் மாலினி. “ஆம், நானும் அறிவேன்” என்றாள் சுபகை. மாலினி “கால்களை பின் எட்டு எடுத்து வைத்து முற்பிறவிகளில் விட்டுச் சென்றவற்றை தொட்டு எடுக்க இளைய பாண்டவருக்கு நல்லூழ் அமைந்துள்ளது.”

“சதபதத்தின் ஐந்தாவது காண்டம் சுபத்ரா அபஹரணம்” என்று சுபகை சொன்னாள். “காண்டங்களில் அதுவே பெரியது. ஏழாயிரம் செய்யுட்கள். ஏழு சர்க்கங்கள்” என்றாள் மாலினி. “அதில் யாதவர்களின் குலவரிசையும் உறவுமுறைமைகளும்தான் முதல் மூன்று சர்க்கங்கள். பழைய யாதவபுராணங்களில் இருந்து எடுத்துத் தொகுத்திருக்கிறார் புலவர். ஆனால் மொத்த வரலாறும் முழுமையாக திருப்பி எழுதப்பட்டுள்ளது. இது விருஷ்ணிகுலத்தை யாதவர் எனும் பேராலமரத்தின் அடிமரமும் வேருமாக காட்டுகிறது. கார்த்தவீரியரின் கதையிலிருந்து நேராக சூரசேனருக்கு வந்துவிடுகிறது, கம்சர் மறைந்துவிட்டார்.”

“வென்றவர்களுடையதே வரலாறு” என்றாள் சுபகை. “என் கண்ணெதிரிலேயே அஸ்தினபுரியின் வரலாற்றிலிருந்து சித்ராங்கதர் உதிர்ந்து மறைவதை கண்டேன்” என்றாள் மாலினி. “அதற்கு முன்னர் தேவாபியும் பால்ஹிகரும் மறைவதை கண்டிருக்கிறேன். அவ்வண்ணம் மறைந்தவர்கள் சென்றுசேரும் ஓர் இருண்ட வெளி உள்ளது” என்றபின் சிரித்து “எனக்கு காவியம் கற்றுத்தந்த மூதன்னை பிருஹதை சொல்வதுண்டு, காவியங்கள் எழுதப்பட்ட ஏட்டை வெளிச்சத்தில் சரித்துப்பிடித்து இருண்ட மூலைகளில் ஒளி செலுத்திப்பார்த்தால் அங்கே மறைந்த காவியங்களின் தலைவர்கள் கண்ணீருடன் நின்றிருப்பதை காணமுடியும் என்று.”

“மறைந்த காவியங்கள் உதிரும் இலைகள். அவை மட்கி சூதர்களின் வேருக்கு உரமாகின்றன. புதிய தளிர்கள் எழுகின்றன” என்று சுபகை சொன்னாள். மாலினி “இனி பாரதவர்ஷத்தின் வரலாறே யாதவர்களால்தான் எழுதப்படும். வரலாறு ஒரு எளிய பசு. அதை ஓட்டிச்செல்லும் கலையறிந்த ஆயன் இளைய யாதவன்.” சுபகை “சுபத்திரை கவர்தலை மீண்டும் வாசிக்க விழைகிறேன்” என்றாள். “எடுத்து வா” என்றாள் மாலினி.

ஏட்டுச்சுவடியையும் நெய்ச்சுடர் எரிந்த அகல்விளக்கையும் கொண்டு சுபகை அருகே வந்து அமர்ந்தாள். “இளைய பாண்டவன் பிரபாச தீர்த்தம் நோக்கிச் செல்லும் விவரணையிலிருந்து தொடங்கு” என்றாள் மாலினி. “பிரபாச தீர்த்தத்திற்கு அவர் ஏன் சென்றார்?” என்றாள் சுபகை ஏட்டை புரட்டிக்கொண்டே. “சித்ராங்கதையின் மைந்தன் பப்ருவாகனன் எட்டுவசுக்களில் ஒருவனாகிய பிரபாசனின் மானுடவடிவம் என்று நிமித்திகர் கூறினர்.. தருமதேவனுக்கும் பாதாளதேவதையாகிய பிரபாதைக்கும் பிறந்த மைந்தனாகிய பிரபாசன் இளமையில் பாதாளத்தின் இருளை உடலில் கொண்டிருந்தான். அவன் கொண்ட மறுவை அகற்ற மண்ணில் ஒளியே நீரெனத் தேங்கிய சுனை ஒன்றை தருமதேவன் கண்டுகொண்டான். அது பிரபாச தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது” என்றாள் மாலினி.

“ஏழு தண்டகாரண்யத்திற்கும் சூரியநிலத்திற்கும் நடுவே இருக்கும் பிரபாச தீர்த்தத்திற்குச் சென்று தன் மைந்தனுக்காக வேண்டுதல் செய்ய அர்ஜுனன் விழைந்தான்” என்று சுபகை வாசித்தாள். “தேவாரண்யத்தில் இருந்து கிளம்பி தண்டகாரண்யத்திற்குள் சென்று அங்கே முனிவர்களையும் சூதர்களையும் சந்தித்தான். பிரபாச தீர்த்தம் பற்றி அவர்களிடமிருந்து கேட்டறிந்துகொண்டு அத்திசை நோக்கி சென்றான்.”

பிரபாச தீர்த்தம் அஷ்டசிரஸ் என்னும் மலையின் உச்சியில் நூற்றெட்டு மலைவளைவுப் பாதைகள் சென்றடையும் இறுதியில் இருந்தது. வசந்தகாலத்தில் மட்டுமே அங்கு பயணிகள் செல்வது வழக்கம். நாற்பத்தியோரு நாட்கள் நோன்பு எடுத்து உடல் வருத்தி கால்பயின்று அம்மலை வளைவுகளில் ஏறி அங்கு சென்று தூநீர் ஆடி மீள்வது வேசரத்தில் புகழ்பெற்ற வழக்கம். முன்பு ஷத்ரியர்களைக் கொன்ற பழி தீர்ப்பதற்காக அனல் குலத்து அந்தணனாகிய பரசுராமன் வந்து நீராடிச் சென்ற நூற்றெட்டு நறுஞ்சுனைகளில் ஒன்று அது என்று புராணங்கள் கூறின. கொலைப்பழி வஞ்சப்பழி பெண்பழி பிள்ளைப்பழி தீர அங்கு சென்று நீராடுவது உகந்தது என்றன மூதாதையர் சொற்கள்.

இளவேனில் தொடக்கத்தில் சிறுசிறு குழுக்களாக வழியில் உண்ணவேண்டிய உணவு ஒரு முடியும் அங்கே சுனைக்கரையில் அமர்ந்த பிரபாசனுக்கு அளிக்கவேண்டிய பூசனைப்பொருட்கள் மறுமுடியும் என இருமுடிகட்டி தலையில் ஏற்றி நடந்து சென்றார்கள் நீராடுநர். அவர்கள் தங்குவதற்காக ஏழு வளைவுகளுக்கு ஒருமுறை கல்மண்டபங்களை கட்டியிருந்தனர் அருகநெறியினராகிய வணிகர். விழாக்காலம் ஆகையால் அவற்றைச் சுற்றி மூங்கில்தூண்களின் மேல் ஈச்சமர ஓலைகளை வேய்ந்து கொட்டகைகள் போட்டிருந்தனர். அங்கே பயணிகளுக்கு உணவும் இந்நீரும் அளிக்க முறை செய்திருந்தனர்.

பிரபாச தீர்த்தத்திற்கான வழியில் வசந்தகாலத்திலும் பின்மாலைதோறும் மூடுபனி இறங்கி காடு முற்றிலும் மூடி குளிர் எழுந்து தோல் நடுங்கும். முதல் கதிர் மண்ணில் பட்டதுமே கிளம்பி கதிர் மறையும் நேரம்வரை நடந்தபின்பு அருகே இருக்கும் சத்திரத்தை அடைந்து அங்கு ஓய்வெடுத்து மீண்டும் பயணம் தொடருவதே நீராடுநரின் வழக்கம். இரவில் மலையிறங்கி வரும் கொலைவிலங்குகளாலும் கந்தர்வர்களாலும் பாதாளதெய்வங்களாலும் மானுடருக்கு அரியதென ஆகும் அக்காடு.

நீண்ட தாடியும், தோளில் புரண்ட குழலுமாக வேடர்களுக்குரிய மூங்கில் வில்லும், நாணல் அம்புகளும் ஏந்தி இடையே புலித்தோல் ஆடை சுற்றி முதல் விடுதியாகிய ஸ்ரீதுர்க்கத்திற்கு அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது மூடுபனி நன்கு சரிந்துவிட்டிருந்தது. தொலைவில் விடுதியின் பந்த ஒளி எழுந்து பனித்திரைக்கு அப்பால் செந்நிற மை ஊறி நீரில் கலங்கியது போல் தெரிந்தது. பல நூறு துணிகளால் மூடப்பட்டு ஒலிப்பதுபோல் பேச்சுக்குரல்கள் கேட்டன. விழியும் செவியும் கூர்ந்து பாம்புகளுக்கு எச்சரிக்கையாக நீள் கால் எடுத்து வைத்து நடந்து அவ்விடுதியை அடைந்தபோது பனி பட்டு அவன் உடல் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது.

குளிரில் துடித்த தோள்தசைகளுடன் கிட்டித்த பற்களுடன் “ஐயன்மீர், வடதிசையில் இருந்து வரும் ஷத்ரியன் நான். பிரபாச தீர்த்தம் செல்லும் பயணி. இங்கு நான் தங்க இடம் உண்டா?” என்று மூடுபனி திரை நோக்கி வினவினான். அப்பால் கலைந்து ஒலித்துக் கொண்டிருந்த பேச்சுக்குரல்கள் அமைந்தன. ஒரு குரல் “யாரோ கூவுகிறார்கள்” என்றது. “இந்நேரத்திலா? அவன் மானுடன் அல்ல, கந்தர்வனின் சூழ்ச்சி அது” என்றது பிறிதொரு குரல். “யார் அது?” என்ற குரல் அணுகி வந்தது. “நான் வடதிசை ஷத்ரியன். பிரபாச தீர்த்தப் பயணி. இங்கு தங்க விரும்புகிறேன்” என மீண்டும் சொன்னான் அர்ஜுனன்.

ஒர் அகல் விளக்குச் சுடர் ஒளிகொண்ட முகில் ஒன்றை தன்னைச் சுற்றி சூடியபடி எழுந்து மூடுபனியில் அசைந்து நாற்புறமும் விரிந்தபடி அவனை நோக்கி வந்தது. அதற்கு அப்பால் எழுந்த முதிய முகத்தில் கீழிருந்து ஒளி விழுந்தமையால் கண்கள் நிழல்கொண்டிருந்தன. “உங்கள் பெயர் என்ன வீரரே?” என்று அவர் கேட்டார். “பாரதன் என்று என்னை அழைக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “தனியாக எவரும் பிரபாச தீர்த்தம் வரை செல்வதில்லை” என்றார் முதியவர். “எவ்வழியிலும் தனியே செல்வதே என் வழக்கம்” என்று அர்ஜுனன் சொன்னான். புன்னகைத்து “தலைமை ஏற்பவரே தனியாக செல்கிறார்கள். நீர் வீரர் அல்ல, அரசர் என்று உணர்கிறேன். எவரென்று நான் வினவப்போவதில்லை, வருக!” என்றார் முதியவர்.

நடந்தபடி “என் பெயர் ஸ்ரீமுதன். பெரு வணிகர் சந்திரப்பிரபரின் செல்வம் பெற்று இங்கு இந்த விடுதியை நடத்துகிறேன். இப்போது பிரபாச தீர்த்தம் நோக்கி செல்லும் பயணம் தொடங்கி இருப்பதால் பன்னிரு ஏவலர்களுடன் இங்கிருக்கிறேன்” என்றார். “பிறநாட்களில் நானும் என் மனைவியும் மட்டிலுமே இருப்போம். வாரத்திற்கு ஒருநாள்கூட பயணி என எவரும் வருவதில்லை.” அர்ஜுனன் “நான் உணவுண்டு ஒரு நாள் ஆகிறது” என்றான். “நல்லுணவு இங்கு உண்டு. ஆனால் ஷத்ரியருக்குள்ள ஊனுணவு அளிக்கும் முறை இல்லை. இங்கு உணவளிப்பவர்கள் அருக நெறி நிற்கும் வணிகர்கள். இங்குள்ளது அவர்களின் உணவே” என்றார்.

“ஆம். அதை முன்னரே கேட்டிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். கிழவரைத் தொடர்ந்து கல்மண்டபத்துக் கூடத்திற்குள் நுழைந்த அர்ஜுனனை நோக்கி அங்கிருந்தோர் விழிகள் திரும்பின. கரிய கம்பளிகளைப் போர்த்தி மரவுரி விரிப்பு விரித்து அதன் மேல் உடல் குவித்து அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். “இவர் இங்கு தங்க வந்த ஷத்ரியர்” என்றார் ஸ்ரீமுதர். “பிரபாச நோன்பு நோற்காமல் மேலே செல்வது வழக்கமில்லை” என்று ஒருவர் சொன்னார். “நானும் அந்நோன்பிலே இருப்பவன்தான்” என்று சொன்னான் அர்ஜுனன்.

“ஒருவேளை உணவு. அணிகலன் அணியலாகாது, வண்ண ஆடைகள் துறத்தல் வேண்டும். நாற்பத்தொரு நாள் மகளிருடன் கூடுவதும் மறுக்கப்பட்டுள்ளது” என்றார் இன்னொருவர். புன்னகைத்து “ஆறு மாதங்களாக அந்நோன்பிலே இருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “பிரபாச தீர்த்தத்தை எங்ஙனம் அறிந்தீர்?” என்றான் ஒருவன். “இங்கு கீழே உள்ள சகரபதம் என்னும் ஆயர் சிற்றூரை அடைந்தேன். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தேன். அவ்வழியாக செல்லும் பயணிகளின் பாடலைக் கேட்டேன். பிரபாச தீர்த்தத்திற்கு செல்கிறோம் என்றார்கள். நானும் அங்கு செல்லலாம் என்று எண்ணினேன்.”

“அது பழி தீர்க்கும் சுனை என்று அறிவீரா?” என்றான் ஒருவன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். “பெரும்பழி செய்தவரோ?” என்றான் அவன். அவன் விழிகளை நேர் நோக்கி “இல்லை பிழையென எதையும் ஆற்றவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் இனி பிழையாற்றக்கூடும் அல்லவா?” ஸ்ரீமுதர் “ஆம், செய்த பிழை மட்டுமல்ல, செய்யா பிழையும் பழிகொள்வதே” என்றார். “அவை எண்ணப்பிழை எனப்படுகின்றன. ஆயிரம் பிழைகளின் தலைவாயிலில் நின்று ஏங்கி தயங்கி மீள்வதே மானுட இயல்பு. அப்பழிகளும் அவனைச் சூழ்ந்து உயிர் இருக்கும் கணம் வரை வருகின்றன.”

“இச்சுனை அனைத்தையும் களைந்து கருவறை விட்டு எழும் புதுமகவுபோல் நீராடுபவரை மாற்றுகிறது” என்றார் ஒரு கிழவர். அர்ஜுனன் புன்னகைத்து “இங்கிருந்து தவழ்ந்து திரும்பிச் செல்ல விழைகிறேன்” என்றான். அங்கிருந்த பலர் நகைத்தனர். முதியவர்கள் அவர்களை திரும்பி நோக்கி விழிகளால் அதட்டி அமையச்செய்தார்கள்.

“வீரரே, வந்து உணவு உண்ணுங்கள்” என்றார் ஸ்ரீமுதர். அவர் கையின் அகல் ஒளியைத் தொடர்ந்து பின்கட்டுக்குச் சென்று அங்கு விரிக்கப்பட்டிருந்த நாணல் பாயில் அர்ஜுனன் அமர்ந்துகொண்டான். “நீராடிய பின்னரே மலை ஏறத் தொடங்கியிருப்பீர். குளிரில் பிறிதொரு நீராட்டு தேவையில்லை” என்றார். பெரிய கொப்பரையில் இளவெந்நீர் கொண்டு வந்து வைத்தார். அவரது ஏவலன் ஒருவன் “அப்பங்கள் கொண்டுவரலாமா?” என்றான். ஸ்ரீமுதர் “கீரை அப்பங்கள். அருகரின் உணவென்பதில் நறுமணப்பொருட்களும், மண்ணுக்கு அடியில் விளையும் பொருட்களும், விலங்கோ நுண்ணுயிரோ பேணும் பொருட்களும் இருப்பதில்லை” என்றார்.

கீரைகளை வஜ்ரதானியத்துடன் அரைத்து வாழைப்பழம் கலந்து வாழை இலையில் பொதிந்து ஆவியில் வேகவைத்த அப்பங்கள் இனிதாகவே இருந்தன. அர்ஜுனன் உண்ணுவதை நோக்கி முகம் மலர்ந்த ஸ்ரீமுதர் “இங்கு வரும் அனைவருமே பெரும் பசியுடன்தான் அணுகுகின்றனர். ஆனால் இப்படி உண்ணும் எவரையும் கண்டதில்லை” என்றார்.

அர்ஜுனன் விழி தூக்கி “என்ன?” என்றான். “உண்ணுகையில் தங்கள் சித்தம் முற்றிலும் அதில் உள்ளது” என்றார் ஸ்ரீமுதர். “ஐம்பதாண்டுகளாக உணவு உண்பவர்களை நோக்கி வருகிறேன். உண்ணும்போது மட்டுமே மானுடன் பலவாக பிரிகிறான். எண்ணங்கள் சிதறி அலைய கையால் அள்ளி வாயால் உண்டு நாவால் அறிகிறான். நெஞ்சம் நினைவுகளுடன் சேர்த்து சுவைக்கிறது. உளங்குவிந்து உண்ணும் கலை சிறு மைந்தருக்கே வாய்க்கிறது.”

அர்ஜுனன் கைகளை கழுவியபடி “எச்செயலிலும் அத்தருணத்தில் முழுமையுடன் இருப்பதென்று நான் வெறிகொண்டுள்ளேன்” என்றான். “நன்று, அதுவே யோகம் என்பது” என்றார் ஸ்ரீமுதர். “தாங்கள் எளிய வீரர் அல்ல என்று உங்கள் நோக்கிலேயே அறிந்தேன். இங்கு வரும் மானுடரை அறிந்தே இப்புடவியை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.”

“நான் சற்று ஓய்வெடுக்க விரும்புகிறேன்” என்றான் அர்ஜுனன். “ஆம். தற்போது துயிலுங்கள். முதல் பறவை குரல் எழுப்புகையில் எழுந்து நீராட வேண்டும். முதற்கதிர் எழுகையில் மலையேறத் தொடங்குங்கள். மிகவும் செங்குத்தான மலை. கொடிகளைப் பற்றி பாறைகளில் குதித்து மலை ஏற வேண்டும். மரங்களில் கட்டப்பட்ட வடங்களைப் பற்றி ஏற வேண்டிய இடங்களும் பல உள்ளன. வெயிலின் ஒளி மறைவதற்குள் இந்நாளில் நீங்கள் செல்லவேண்டிய தொலைவில் முக்கால் பங்கை கடந்துவிட்டீர்கள் என்றால்தான் கணக்கு சரியாக வரும். வெயில் எழுந்த பின் குறைவாகவே முன் செல்ல முடியும். வெயில் அணையும்போது உடல் களைத்துவிடும்.”

“அவ்வாறே” என்றான் அர்ஜுனன். கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி “இங்கு படுக்க இடம் உள்ளதல்லவா?" என்றான். “மரவுரிச் சுருள்கள் போதிய அளவில் உள்ளன. இங்கு முன்னிரவிலேயே குளிர் மிகுதியாக இருக்கும். பின்னிரவில் மரங்களின் நீராவி எழுந்து இளவெம்மை கூடும். வருக!” என்று அழைத்துச் சென்றார் ஸ்ரீமுதர்.

கல்மண்டபத்தின் உள் அறைகள் நிறைந்து விட்டிருந்தன. வெளியே போடப்பட்ட கொட்டகைக்குள் இருளுக்குள் பயணிகள் துயின்று கொண்டிருந்தனர். “அதோ, அவ்வெல்லையில் தாங்கள் மரவுரியை விரிக்க இடம் உள்ளது” என்றார் ஸ்ரீமுதர். அவரைத் தொடர்ந்து வந்த ஏவலர் அளித்த எடைமிக்க மரவுரியை கையில் வாங்கிக்கொண்ட அர்ஜுனனிடம் “தங்களிடம் பொதி என ஏதும் இல்லையோ?” என்றார் ஸ்ரீமுதர். “இல்லை” என்றான் அர்ஜுனன். புன்னகைத்து “அதுவும் நன்றே” என்றபின் தலைவணங்கி அவர் விடைபெற்றார்.

கொட்டகையின் எல்லையில் எஞ்சியிருந்த இடத்தில் தன் மரவுரியை விரித்து, தலையணையாக அளிக்கப்பட்ட மென்மரக்கட்டையை வைத்து உடல் விரித்து மல்லாந்து படுத்துக்கொண்டான் அர்ஜுனன். மூடுபனி குளிர்ந்து கூரைகளில் ஊறி விளிம்பிலிருந்து மழைபோல சொட்டிக்கொண்டிருந்தது. அலை அலையாக உள்ளே வந்த காற்று வாடிய தழைமணமும், காட்டெருமைச் சாணியின் மணமும் கொண்டிருந்தது. நீர்த்தாளம் சித்தத்தை ஒழுங்கமைத்தது.

துயில் அவன் கால்கள் மேல் பரவுவதை உணர முடிந்தது. உடலின் ஒவ்வொரு தசையையும் அது அவிழ்த்து விட்டது. புல்வெளிக்குள் நுழைந்த மந்தை மெல்ல கன்றுகளாக கலைவதுபோல அவன் விரிந்து கொண்டிருந்தான். எவரோ எங்கோ “நல்ல தருணம் இது” என்றார்கள். “நீர் பெருகிச் செல்கிறது” என்றார் இன்னொருவர். துயிலணையும்போது வரும் இக்குரல்கள் எங்குள்ளன? “பட்டத்துயானை” என்றது யாரோ உரைத்த ஒலி. “சூரியனின் மைந்தன்… அவன் விற்கள் கதிர்களே” என்றது மிக ஆழத்தில் ஒரு குரல் இறுதியாக. பெண்குரல், மிக அணுக்கமாக அறிந்த குரல். இருமுகங்கள் பேசும் ஒரு குரல்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

பகுதி ஐந்து : தேரோட்டி - 3

பின்னிரவில் இருளுக்குள் விழித்துக்கொண்டபோதுதான் துயின்றிருப்பதையே அர்ஜுனன் அறிந்தான். அவனை எழுப்பியது மிக அருகே கேட்ட யானையின் பிளிறல். கை நீட்டி தன் வில்லைத் தொட்டதுமே எழுந்து கொட்டகையின் சிறு சாளரம் வழியாகவே வெளியே நோக்கினான். யானை மிக அருகில் இருப்பதை மூக்கால் அறிந்தான். மட்கிய தழையை கொதிக்கச்செய்வதுபோன்ற மணம். உடன் கலந்த உப்புச்சிறுநீர் மணம்.

ஆனால் இருளில் அதன் உரு தெரியவில்லை. கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும்போது யானை மிக அருகே மீண்டும் பிளிறியதை கேட்டான். அவன் நோக்குவதை அது அறிந்துவிட்டது என்பதை உணர்ந்தான். அதன் காலடியோசை கேட்கவில்லை. இருளுக்குள் முகில்குவை போல அது மிதந்து அலைகிறது போலும்.

அதன் கரிய நிழல் உருவம் இருளுக்குள் இருளென சென்றபோதுதான் அது அத்தனை அருகில் இல்லை என அறிந்தான். பெரிய பிடியானை. அதற்குப் பின்னால் அதன் பின்னங்காலை தன் சிறிய துதிக்கையால் தொட்டு விளையாடிச் செல்லும் யானைக் குழவியைக் கண்டான். குழவி இருக்கிறதென்றால் அது சற்று பெரிய மந்தைதான். அப்பால் இருந்து இரு பெரும் தந்தங்கள் மட்டும் இருள் கிழித்து வந்தன. களிறு இருக்கிறது, அப்படியென்றால் கருக்கொண்ட யானைகளும் உள்ளன.

அவன் விழிகள் மென்மையான தூரிகை புழுதிப்படலத்தை விலக்குவதுபோல இருளை நீவி நீவி அகற்றின. இருளின் மைப்படலத்திற்குள் துழாவிச்சென்று களிறின் வான்விளிம்புக்கோட்டை தொட்டு வரைந்தெடுத்தன. துதிக்கை நீட்டி வந்த களிறு குட்டியின் முதுகைத் தொட்டு சற்று முன்னால் தள்ளியது. மூச்சு சீறிய துதிக்கையை அவனை நோக்கி வளைத்து அவன் அங்கே நின்றிருப்பதன் மணத்தை அறிந்து வயிற்றுக்குள் மெல்ல உறுமியது.

விழிகள் மேலும் மேலும் தெளிய யானைக்கூட்டத்தை நன்கு கண்டான். பன்னிரெண்டு யானைகள் இருந்தன. எட்டு பிடியானைகள். ஒரு களிறு. எஞ்சியவை கன்றுகள். அப்பகுதி எங்கும் செறிந்து கிடந்த உயரமான தாளிப்புற்களை துதிக்கை சுழற்றி பிடுங்கி கால்தூக்கி அடித்து வேர்மண்களைந்து வாயில் செருகி தொங்குதாடை ஊறிவழிய செவிப்பள்ளம் அசைய மென்றன. சருகு அரைபடுவதுபோல அந்த ஒலியை கேட்கமுடிந்தது. மண்பற்று நின்ற வேர்ப்பகுதியை வாய்நுனியாலேயே நறுக்கி கீழே உதிர்த்தன.

இரண்டு யானைகள் கொட்டகையின் பின்புறம் அடுமனைச் சாம்பல் குவிந்திருப்பதை அறிந்து துதிக்கையால் அவற்றை அளைந்து அள்ளி தங்கள் மேல் போட்டுக்கொண்டன. கொட்டப்பட்ட எஞ்சிய உணவிலிருந்த குப்பையை துதிக்கையால் கிளறி அதிலிருந்த உப்பை மண்ணுடன் அள்ளி வாய்க்குள் வைத்தன இரு யானைகள். குட்டிகள் முண்டியடித்து அந்தச் சாம்பலை அன்னையரின் துதிக்கையிலிருந்தே வாங்க முயன்றன.

அவன் யானைகளை நோக்கி நின்றிருந்தான். அவை தன்னுள் நிறைந்திருந்த இருளுக்குள் எங்கோ இருந்து எழுந்து வந்தவை போல, இருளுருவாக உள்ளே உறைவனவற்றின் பருவடிவம் போல. ஆனால் அப்படி நோக்கி நின்றுகொண்டிருந்தபோது வெகு நாட்களுக்குப் பின் தன் இருப்பு தித்தித்திருப்பதை உணர்ந்தான். அக்காட்சி எதனுடனும் தொடர்புகொள்ளவில்லை. எனவே எப்பொருளும் கொள்ளவில்லை. முழு மகிழ்ச்சி என்பது உடனே எழும் நினைவுகளுடன் இணையாத அழகிய காட்சியால் ஆனதுதானா?

ஆம். இருத்தல் என்பதன் தூய இன்பத்தை அது காட்டுகிறது. இன்பங்களில் தலையாயது உள்ளேன் என்று உணர்வதே. உயிரின் முதல் பேறு. காற்றில் எழுந்து களியாடும் சிறு புட்கள், கிளைகள்தோறும் தாவும் குரங்குகள், சிறகு ஒளிர சுடரும் ஈக்கள், நெளிந்து துவளும் புழுக்கள் என ஒவ்வொன்றும் அதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை அவை இவ்வெண்ணங்களை அடையாமல் இருக்கலாம். அல்லது அவை அடையவில்லை என்று எவர் கண்டார்?

இருக்கிறேன் என்ற உணர்வை தித்திப்பு என்று அவன் தன் வலது தோளில், பின்பு நெற்றியில், பின்பு புறங்கழுத்தில் உணர்ந்தான். அதை நோக்கி சித்தம்குவிக்க உடல் ஒரு நாவென மாறி அந்த இன்சுவையை உணர்வதுபோல் இருந்தது. உடல் அதில் நெளிந்து துழாவியது. தித்திப்பு. அச்சொல்லுடன் அவன் சித்ராங்கதையை நினைவுகூர்ந்தான். நுரையடங்குவதுபோல் உவகை அணைந்து நெஞ்சு இனிய ஏக்கம் ஒன்றால் நிறைந்தது.

ஏன் என்று எண்ணினான். வேட்கையா? இழப்புணர்வா? இக்கணமே எழுந்து கிளம்பி அங்கு திரும்பிச் சென்றால் என்ன? இல்லை... நான் பார்த்தன். மிச்சமின்றி விட்டுச் செல்வதால் மட்டுமே புதியவற்றை அடைய முடியும் என்று அறிந்தவன். எக்கணமும் என் முன் பேருருக் கொண்டு எழப்போகும் முழுதறிவை பெறுவதற்காக என் கலங்களை ஒவ்வொரு கணமும் கழுவி தூய்மைப்படுத்தி வைப்பவன்.

பெருமூச்சுடன் அவன் மீண்டும் வந்து தன் மரவுரி இருக்கைமேல் அமர்ந்துகொண்டான். கம்பளியை போர்த்தி கண் மூடி சூழக் கேட்கும் மூச்சொலிகளில் சித்தம் நிலைக்க விட்டான். அருகே இருந்த மரவுரிப் படுக்கையில் மெல்லிய அசைவொன்று கேட்டது. ஓர் ஒலி குரல் போலவே பொருள்கொண்டதாக ஆவதன் விந்தையை அர்ஜுனன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். மீண்டும் மஞ்சம் தெளிவான ஒரு சொல்லை பேசியது. அர்ஜுனன் திரும்பவில்லை.

எழுந்து அமர்ந்த அப்பயணி "யானைகளா?” என்றான். "ஆம்” என்றான் அர்ஜுனன். "இம்மலை முழுக்க யானைகள்தான். இங்கு குன்றாது மழைபெய்வதனால் அவற்றுக்கு உணவுக்கு குறைவில்லை.” ஓர் உரையாடலை தொடங்குவதற்கான வெற்றுப்பேச்சு அது என்று உணர்ந்து, கண்களை மூடி விழிகளை திருப்பிக்கொண்டான் அர்ஜுனன். "இம்மலை பற்றி என்னிடம் சொன்னவர்கள் யானையைத்தான் திரும்பத் திரும்ப குறிப்பிட்டார்கள். அங்கே எங்களூரில் யானைகள் படைகளில்தான் இருக்கின்றன. இப்படி மந்தைகள்போல் சுற்றித் திரிவதில்லை.”

அதற்கும் அர்ஜுனன் மறுமொழி சொல்லவில்லை. "இங்கே காட்டு மாடுகள் போல் யானைகள் சுற்றித் திரிகின்றன. இம்மலையில் கன்று வளர்ப்பது எளிதல்ல. அதனால்தான் இம்மலையில் யாதவர்கள் இல்லைபோலும்” என்றபின் அவன் மஞ்சம் ஓசையிட எழுந்து சாளரம் வழியாக வெளியே பார்த்தான். "பெரிய யானைகள். கங்கைக் கரைக் காடுகளிலும், யமுனைக்கரைக் காடுகளிலும் சில உள்பகுதிகளில் யானைகள் உள்ளன. ஆனால் அவை இவ்வளவு பெரியவை அல்ல. அவற்றின் முகத்தில் இத்தனை செம்புள்ளிகளும் இருப்பதில்லை.”

தன்னை அறியாது எழுந்த ஆர்வத்துடன் "உங்கள் ஊர் எது?” என்று வினவினான் அர்ஜுனன். அவன் தன்னை உரையாடலுக்குள் இழுத்துவிட்டதை உணர்ந்ததும் அவன் கூர்மதியாளன் என எண்ணிக்கொண்டான். "நான் மதுவனத்தை சேர்ந்தவன். துவாரகையின் இளைய யாதவருக்கு உறவினன்” என்றான். “நீர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, என் பெயர் கதன்.” அர்ஜுனன் வியப்புடன் இருளுக்குள் அவனை நோக்கி விழியசையாமல் சிலகணங்கள் இருந்தபின் இயல்பாக “அப்படியா?” என்றான்.

"மதுவனத்தை இப்போது இளைய யாதவரின் தந்தைவழிப் பாட்டனார் சூரசேனர்தான் பிதாமகராக அமர்ந்து ஆண்டு வருகிறார் என்று அறிந்திருப்பீர்கள். அவருக்கு வயது முதிர்ந்துவிட்டது. காதுகளும் நன்றாக கேட்பதில்லை. அவரது மைந்தர் வசுதேவர்தான் யாதவர்களின் தொல்நகரகான மதுராவை ஆள்கிறார். அறிந்திருப்பீர்” என்றான் கதன். ”ஆம்” என்றான் அர்ஜுனன். கதனின் கண்களை சந்திக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக்கொண்டான்.

"உண்மையில் வசுதேவரின் உடன்பிறந்தவர்களால் ஆளப்படுகிறது மதுவனம்” என்றான் கதன். அவனே மெல்ல சிரித்து "ஆள்வதற்கு அங்கு என்ன நாடா இருக்கிறது? வெறும் காடு. அதில் கன்று மேய்க்கும் ஆயர்குழுக்கள்” என்றான். அர்ஜுனன் “நான் பார்த்ததில்லை” என்றான். “அவர்கள் அறிந்ததெல்லாம் புணர்வதும் பூசலிடுவதும்தான். ஒன்றாகவே மேயும் கன்றுகளை கண்டு கண்டு யாதவர்கள் பிளவுறக் கற்றிருக்கிறார்கள்.” “ஏன்?" என்றான் அர்ஜுனன்.

“அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதேயில்லை. கன்றின் கால்களில் இருக்கிறது அவர்களது பாதை. மழைக்காலத்தில் மட்டும் ஓரிடத்தில் கூடுவது அவர்களின் வழக்கம். மழைமாதங்கள் நான்கும் முடிவதுவரை கொட்டகைகளில் கூடி அமர்ந்து வம்பு பேசிக்கொண்டிருப்பார்கள். முதல் மாதம் முழுக்க ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, வசைபாடி, பூசலிடுவார்கள். இரண்டாம் மாதத்தில் கதைகள் சொல்லிக்கொள்வார்கள். மூன்றாம் மாதத்தில் உறவுகள் அமையும். நான்காம் மாதம் முழுக்க மதுமயக்கு மட்டுமே. எங்கிருக்கிறோம் என்றே அறியாதிருப்பர். மழைவிட்டு வசந்தம் வந்திருப்பதே மாடுகளை விட்டு முட்டி அவர்களை எழுப்பினால்தான் தெரியும்.”

அர்ஜுனன் புன்னகைத்தான். கதன் “நான் நினைவறிந்த நாள் முதல் மதுவனத்திற்கு வெளியே சென்றதில்லை. சென்ற மாதம் மூத்த இளவரசர் வசு என்னை அழைத்தார். எங்கள் மூதரசர் சூரசேனருக்கு லவண குலத்து இளவரசி மரீஷைக்கு பிறந்த மைந்தர்கள் பதின்மர் என்று அறிந்திருக்கமாட்டீர்கள். வசு, தேவபாகர், தேவசிரவஸ், ஆனகர், சிருஞ்சயர், காகனீகர், சியாமகர், வத்ஸகர், காவுகர், வசுதேவர். இளவரசி பிருதை மார்த்திகாவதியின் குந்திபோஜருக்கு மகளாகிச் சென்று குந்திதேவியாக அஸ்தினபுரியை ஆள்கிறார்.”

“சூரசேனம் மைந்தரால் பொலிவு கொண்டது. அனைவருமே கன்றுபெருக்கிய பெருங்குடி யாதவரே. அவர்களுள் கன்று மேய்க்க மறுத்து கல்வி கற்கச் சென்றவர் வசுதேவர். அவர் மதுராவை ஆண்ட உக்ரசேனரின் அமைச்சரானார். மதுராவின் இளவரசர் கம்சரின் தோழரானார். கம்சரின் தங்கை தேவகியை மணந்து இளைய யாதவரை பெற்றார்” என்றான் கதன். “அவரது முதல் மனைவி ரோகிணியின் மைந்தர் பலராமர் இன்று யாதவர்களின் தலைவர். சூரசேனரின் முதல் மைந்தர் வசுவே தந்தைக்கு நிகரென அமர்ந்து இன்று மதுவனத்தை ஆள்கிறார்.”

“வசுவை அறிந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், காடு விட்டு ஊருக்குள் வருவதை வெறுக்கக்கூடியவர் அவர். அரசமுறைகளோ செம்மொழியோ அவருக்குத் தெரியாது. அவரது துணைவியரான கிருபையும் சுபையும் சத்ரையும் கணவதியும் காட்டில் கன்றோட்டும் எளிய யாதவப்பெண்கள். ஆகவே இளைய யாதவர்தான் மதுவனத்தை தன் சொல்லை அனுப்பி ஆள்கிறார். அவரது ஆணைகளைப் பெற்று இளையோர் சியாமகரும் வத்ஸகரும் காவுகரும் மதுவனத்தை நடத்துகிறார்கள்” என்றான் கதன்.

“நீங்கள் எண்ணுவது சரிதான். இளையோராகிய வத்ஸகரும் காவுகரும் இளைய யாதவருக்கே அணுக்கமானவர்கள்” என்று கதன் தொடர்ந்தான். “ஆனால் மூத்தவர்களின் நோக்கில் இளைய யாதவர் யாதவகுலத்தை போருக்கும் பூசல்களுக்கும் இட்டுச்சென்று அழிவை அழைப்பவர். கார்த்தவீரியருக்கு நிகழ்ந்ததே இளைய யாதவருக்கும் நிகழப்போகிறது, பிறிதொரு முற்றழிவை மதுராவும் யாதவரும் சந்திக்கவிருக்கிறார்கள் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே மூத்தவர்களுக்கும் இளையவர்களுக்கும் நடுவே நீருக்குள் சுழலோட்டம் போல தெரிந்தும் தெரியாமலும் ஏதோ ஒன்று எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும்.”

“எனவே மூதரசர் சூரசேனரை சந்திக்கும்படி எனக்கு இளவரசர் வசுவின் ஆணை வந்தபோது அதை இளைய யாதவரின் ஆணையா மூத்தவர்களின் ஆணையா என்றறியாமல் குழம்பினேன். உத்தரவனத்தில் என் குடும்பத்துடனும் மந்தையுடனும் தங்கியிருந்த நான் அங்கிருந்து கிளம்பி காட்டில் மூன்று நாள் பயணம் செய்து மதுவனத்திற்கு வந்தேன்” என்றான் கதன். "மதுவனத்தின் இளவரசர்கள் அனைவருமே அப்போது அங்கே வந்திருந்தனர். அவர்களின் குடும்பங்களும் அங்கிருந்தன.”

என் அன்னையின் குடிலுக்குச் சென்று நீராடி உடை மாற்றி மையமாளிகைக்குச் சென்றபோது வாயிலிலே ஆனகர் என்னை அணுகி மெல்லிய குரலில் “மதுராவிலிருந்து பலராமர் வந்துள்ளார், அவரே உம்மை சந்திக்க அழைத்தவர்” என்றார். "பலராமரா? ஏன்?” என்றேன். "அதை நான் அறியேன்” என்றார். தயக்கத்துடன் “இச்சந்திப்பு இளைய யாதவரின் ஆணைப்படியா?” என்றேன். "அதையும் நான் சொல்லலாகாது” என்றார். நான் "எவ்வண்ணம் எனினும் என் குடித்தலைவர் சூரசேனரே. அவரது சொல்லுக்கு நான் கட்டுப்பட்டவன்” என்றேன். ஆனகர் "இளைய யாதவரும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டவரே” என்றார்.

நான் உள்ளே சென்று அங்கே அங்கணத்தில் போடப்பட்ட மரப்பீடங்களில் அமர்ந்திருந்த பலராமரையும் சூரசேனரையும் வணங்கி நின்றேன். வசுவும், தேவபாகரும், தேவசிரவஸும் தந்தைக்குப் பின் போடப்பட்டிருந்த பீடங்களில் அமர்ந்திருந்தனர். பலராமர் என்னிடம் “இவனா? இவனைப் பார்த்தால் அறிவுள்ளவன்போல் தோன்றவில்லையே!” என்றார். எனக்கு சினம் எழுந்தது என்றாலும் அடக்கிக்கொண்டு சூரசேனரை நோக்கினேன். சூரசேனர் "நம்மில் செம்மொழி நன்கு பேசக்கூடியவன் இவன் ஒருவனே” என்றார்.

பின்பு என்னை நோக்கி “இளையோனே, இவன் ஒரு மங்கலச் செய்தியுடன் வந்துள்ளான்” என்றார். நான் "நன்மங்கலம் என்றும் உள்ளதல்லவா?” என்றேன். “தேவகியின் மகள் சுபத்திரைக்கு மணம் நிகழ்த்த குடிகூடி முடிவு எடுத்துள்ளனர். நாள் முடிவுசெய்ததும் நீ சென்று அச்செய்தியை அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்துக்கும் முறைப்படி அறிவிக்க வேண்டும்” என்றார். நான் தலைவணங்கி "ஆணை” என்றேன். ஆனால் என் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அவர்களே அந்த மணவினைச் செய்தியின் விரிவை சொல்லக்கூடும் என்று நான் எண்ணினேன்.

“ஷத்ரிய அரசமுறைப்படி மணத்தன்னேற்பை நிகழ்த்த வேண்டும் என பலராமன் எண்ணுகிறான். ஆனால் அதில் அஸ்தினபுரியின் அரசனும், இவனது முதல் மாணவனுமாகிய துரியோதனன் வெல்ல வேண்டும் என்றும் விழைகிறான். எனவே கதைப் போரையே தேர்வு முறை செய்யலாம் என்று கருதுகிறான்” என்றார் சூரசேனர். நான் திகைத்துப்போனேன்.

“ஏன்?” என்றான் அர்ஜுனன். “கதைகளை கேட்டிருந்தால் நீர் அறிந்திருப்பீர். மழைக்கால அருகம்புல் என பெருகிக் கொண்டிருக்கிறது யாதவர் குலம். செல்வமும் புகழும் வெற்றிகளும் சேர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இன்று எங்கள் குலத்தின் மையங்களென சூரசேனரும் வசுதேவரும் ஆகியுள்ளனர். சூரசேனரின் பத்து மைந்தர்களில் மூத்த ஒன்பதுபேரும் யாதவக்குடிகளிலேயே மணம் புரிந்து எண்பத்தேழு இளவரசர்களை பெற்றுள்ளனர். அவர்களெல்லாம் இன்று தோள் பெருத்த இளையோராகியிருக்கிறார்கள்” என்று கதன் சொன்னான்.

வசுதேவர் எங்கள் குலத்தில் உதித்த பெரும்சான்றோர்களில் ஒருவர். குலப்பாடகர்கள் அவரை முதற் பிரஜாபதியாகிய கசியபரின் மானுட வடிவம் என்கிறார்கள். கசியபரின் துணைவியாகிய அதிதியும் சுரசையும்தான் இப்புவியில் ரோகிணியும் தேவகியுமாக பிறந்து அவருக்கு துணைவியரானார்கள் என்பது எங்கள் குலப்பாடகர்களின் சொல். வசுதேவரின் முதல் துணைவியாகிய ரோகிணி எங்கள் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர். பௌரவ குடியில் பிறந்தவர்.

பௌரவியாகிய அவருக்கு சாரணர், துர்த்தனர், தர்மர், பிண்டாரகர், மஹாஹனு என்னும் மைந்தர்கள் பிறந்தனர். அவர்களுக்குப் பின் பிறந்தவர் பெரும் தோள் கொண்டவரான பலராமர். முதல் அறுவரும் பௌரவ குடிக்கு உரியவர்கள் என்பதால் அவர்கள் ரோகிணியின் தந்தை உத்தவரின் பொறுப்பில் வளர்க்கப்பட்டார்கள். ஒவ்வொருவரும் ஆயிரம் பசுக்களுக்கு உரிமையானவர்களாக காடுகளில் நிறைவுற்றிருக்கிறார்கள்.

ஏழாவது மைந்தர் பலராமர் இளைய யாதவரின் தோழராகவும் காவலராகவும் கோகுலத்தில் வளரவேண்டும் என்பது கம்சரின் சிறையில் இருந்த வசுதேவரின் ஆணை. அவ்வண்ணமே ரோகிணி மதுவனத்தில் இருந்து கிளம்பி கோகுலத்திற்குச் சென்று வாழ்ந்தார். இளையோர் இருவரும் சென்று கம்சரைக் கொன்று மதுராவை வென்றபோதுதான் அவர் தன் துணைவருடன் மீண்டும் இணைந்தார்.

வசுதேவர் உக்ரசேனரின் இளையவர் தேவகரின் மகளும் கம்சரின் தங்கையுமான தேவகியை மணந்ததை அறிந்திருப்பீர். அவரது வயிற்றில் பிறந்த எட்டு குழந்தைகளில் இறுதியானவர் இளைய யாதவர். மதுராவை மீட்டு வசுதேவர் அரசராக ஆனபோது பட்டத்தரசியாக ரோகிணியும் இளைய அரசியாக தேவகியும் அமர்ந்தனர். அதன் பின்பு தேவகிக்கு பிறந்தவர் சுபத்திரை. பின்னர் அவர்களுக்கு விஜயர், ரோஜமானர், வர்த்தமானர், தேவலர் என்னும் மைந்தர்கள் பிறந்தனர்.

வசுதேவர் அதன் பிறகு மேலையாதவ குடியான ஸீதர்களின் இளவரசி விருகாதேவியை மணந்து அகாவாதர், மந்தகர் என்னும் இரு மைந்தரை பெற்றார். கீழ்யாதவ குடியான சப்தமர்களை வென்றபோது அவர்களின் இளவரசியாகிய சப்தமி தேவியை வசுதேவர் மணந்தார். அவளுக்குப் பிறந்தவர் ரேவதர். பின்னர் வனவணிகர் குலத்து உதித்த செராத்தாதேவி என்னும் பெண்ணை மணந்து கௌசிகன் என்னும் இளவரசனை பெற்றார்.

“இறுதியாக அங்க நாட்டு இளவரசி சுதந்தரையை மணந்து கபிலரையும் வேசர நாட்டு இளவரசி ஜனாவை மணந்து சௌபத்ரர், அபவர் என்னும் இரு மைந்தரையும் வசுதேவர் பெற்றார். வீரரே, இன்று நிகரற்ற வீரர்களால் நிறைந்துள்ளது மதுராபுரி” என்றான் கதன். “இத்தனை மைந்தர் யாதவர்களில் இதுவரை பெருகியதில்லை. இவர்கள் அனைவருமே போர்க்கலை பயின்றவர்கள். நாடாளும் விருப்புள்ளவர்கள்.”

“இளவரசர் பெருகுவது காட்டில் புலிபெருகுவதுபோல” என்று கதன் தொடர்ந்தான். “அவை ஒன்றை ஒன்று எதிரி என கொள்ளும். மதுராவிலும் மதுவனத்திலும் வலுவான உளப்பூசல் என்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. வசுதேவரின் மைந்தர்கள் இளைய யாதவரை தங்கள் உடன்பிறந்தோர் என்று மட்டும் எண்ணவில்லை, தங்களுக்குரிய புகழையும் தான் சூடிக்கொள்பவர் என்றும் எண்ணுகின்றனர். மதுவனத்தின் இளவரசர்களும் மைந்தர்களும் இளைய யாதவருடன் உளப்பிரிவு கொண்டிருக்கிறார்கள். எங்கும் இது வெளித்தெரிவதில்லை. யாதவராகிய நாங்கள் அறிவோம்” என்றான் கதன்.

பிறருக்கு பூசல் ஏதும் தெரியாது. ஒரு குடியவையில் மிகச்சிறிய செவிச்செய்தியாக அது வெளிப்படும். அது மிகச் சிறிய செய்தி என்பதாலேயே அனைவராலும் கூர்ந்து நோக்கப்படும். கூர்ந்து நோக்கப்படும் என்பதாலேயே உள்ளங்களில் பெருகி என்றும் நினைவில் வாழும். ஒன்று பிறிதொன்றை வளர்க்கும். பகைமைக்கு மட்டும் ஒரு பண்புள்ளது. அது தனக்குத்துணையாக பிறிதொன்றை கண்டுகொள்ளும். தன்னைத்தானே மாலையென தொகுத்து இறுகி கோட்டையென வளர்ந்து சூழும்.

சென்ற முறை யமுனை நதிக்கரையின் பெருவிருந்தின்போது சூரசேனர் மந்தர மலைக்கு படைத்த பலியுணவை தன் மைந்தர்களுக்கு பகிர்ந்தளித்தபோது ஏழில் ஒரு பங்கை வசுதேவர் பெற்றார். அதில் பதினெட்டில் ஒன்றை ஒவ்வொரு இளவரசரும் பெற்றனர். இளைய யாதவருக்கு பதினாறாவதாக அது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அனைவரும் அவ்வுணவைப் பெற்ற பின்னர்தான் இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டது.

புன்னகையுடன் அதை வாங்கி மும்முறை சென்னி சூடியபின் அவர் உண்டார். அங்கே சூழ்ந்த அமைதியில் அவர் உண்ணும் ஒலியை கேட்டபடி யாதவர்கள் அனைவரும் வேறெங்கோ விழி திருப்பி அமர்ந்திருந்தனர். இளவரசர் சிலர் ஒருவரை ஒருவர் விழிநோக்கி புன்னகைத்தனர். அதைக்கண்டு என் நெஞ்சு நடுங்கியது. "என்ன நிகழ்கிறது இங்கு?” என்று அருகே நின்ற ஆனகரிடம் கேட்டேன். "யாதவர்களை பிறர் வெல்ல முடியாது. அவர்களே தங்களை தோற்கடித்துக் கொள்வார்கள்” என்றார். “ஒவ்வொருவரும் இன்று இளையவருடன் உள்ளூர போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”

“ஏன்? இங்குள்ள ஒவ்வொருவரும் அறிவோம், நம் குலத்து உதித்த நிகரற்ற மாவீரர்களில் ஒருவர் இளைய யாதவர் என்று” என்றேன். “ஆம். அவரை ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறோம். அதுவே இவ்வுணர்வுகளை எழுப்புகிறது” என்றார். “எனக்கு விளங்கவில்லை இளவரசே” என்றேன். "என் இனிய கதா, அன்புக்கும் சினத்துக்கும் இணையாக மானுடனை என்றும் ஆட்டிவைப்பது பொறாமை” என்றபின் ஆனகர் அகன்றார்.

“அன்றே என் உள்ளம் பதைத்துக்கொண்டிருந்தது, ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்று. சுபத்திரையை அஸ்தினபுரி அரசருக்கு கொடுக்கப் போவது என்பது யாதவ குடிகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிறுமையின் வஞ்சத்தின் அறிகுறியே என்று உணர்ந்தேன்” என்றான் கதன்.

அர்ஜுனன் “அதை ஏன் பலராமர் செய்கிறார்?” என்றான். “வீரரே, அவர் உடலைப்போல் உள்ளமும் வெண்மையானது. அவருக்கு துரியோதனன் மேல் பற்று மிகுதி. அப்பெரும்பற்றால் அவர் துரியோதனனின் நற்பண்புகளை மட்டுமே அறிந்திருக்கிறார். துரியோதனன் என்றும் பாண்டவருக்கு பகைவர் என்பதை, அப்பகை தெய்வங்களின் ஆடல் என்பதை அனைவரும் அறிவர். தெரிந்தேதான் சூரசேனரும் இளவரசர்களும் வசுதேவரின் மைந்தர்களும் கூடி பலராமரை அத்திசை நோக்கி கொண்டு செல்கிறார்கள்” என்றான் கதன்.

"இளைய யாதவரின் விருப்பத்திற்குரிய இளையவளை துரியோதனர் மணப்பதென்பது அவருக்கு பெரும் தோல்வி என்பதை அவர்கள் அறிவார்கள். தன் உயிர்த் தோழர் அர்ஜுனனை முழுமையாக ஆதரிக்க முடியாத இக்கட்டில் அவர் சிக்கிக்கொள்வார் என திட்டமிடுகிறார்கள்” கதன் சொன்னான். "இச்சிறிய வெற்றி அவர்களுக்கு எளிய ஆணவநிறைவை மட்டுமே அளிக்கப்போகிறது. ஆனாலும் அவர்கள் அதில் மகிழ்ந்து திளைக்கிறார்கள்.”

“வீரரே, என்றேனும் கௌரவர்களும் பாண்டவர்களும் போர்முனையில் எதிரெதிர் நிற்பது உறுதி. பாரதவர்ஷமெங்கும் நிமித்திகரும் பூசகர்களில் எழும் தெய்வங்களும் அதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அப்போரில் பாண்டவர்களுக்கு எதிராக இளைய யாதவர் நிற்கவேண்டியிருக்கும். தன் அன்புக்குரிய பார்த்தனையே அவர் களத்தில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அவர்களின் திட்டம் அதற்காகவே” என்று கதன் சொன்னான்.

அர்ஜுனன் நீண்டநேரம் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தான். ஓர் எண்ணம் அவனில் எழுந்தபோது உடல் அறியாமல் அசைந்து அவன் அமர்ந்திருந்த மஞ்சம் அதை சொல்லென ஒலித்தது. “எப்போது மணநாள்?” என்றான். "வரும் நிறைநிலவு நாள்” என்றான் கதன். அர்ஜுனன் "நெடுநாட்களில்லை” என்றான். "ஆம், இன்னும் இருபதுநாட்கள்” என்றான் கதன். அர்ஜுனன் "கதரே, நான் யார் என்று அறிவீரா?" என்றான். “உங்கள் குரல் கேட்டபோதே அறிந்தேன்” என்றான் கதன்.

வெளியே பெருங்களிறு ஆழ்ந்த குரலில் பிளிறியது. அதன் மந்தை தொடர்ந்து சென்று மறையும் ஒலிகள் கேட்டன. காட்டுமரக்கிளைகள் மெல்ல ஒடியும் ஒலி. பறவைகள் எழுந்து கலைந்து கூவியமரும் ஒலி. பின் காடு அமைதியடைந்தது. மீன்கள் ஆழ்ந்திறங்கி மறைந்த சுனை என. ஆழத்தில் மீன்கள் நீராக மாறிவிடுகின்றன என்று இளவயதில் கதைகளில் அவன் கேட்டிருந்தான். ஆழம் அலைவடிவுகொண்டு விழிபூண்டு எழுந்து மீனாகி வந்து வானையும் உலகையும் நோக்கி மீள்கிறது.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

பகுதி ஐந்து : தேரோட்டி - 4

முதற்கதிர் மூடுபனித்திரையை ஒளிரச்செய்த காலையில் கதனும் அர்ஜுனனும் விடுதியிலிருந்து கிளம்பி வளைந்துசென்ற மலைப்பாதையில் நடந்தனர். முன்னரே கிளம்பிச் சென்ற பயணிகளின் குரல்கள் பனித்திரைக்கு அப்பால் நீருக்குள் என ஒலித்தன. அவர்களில் எவரோ குறுமுழவொன்றை மீட்டி பாடிக்கொண்டிருந்தனர். மீள மீள வரும் ஒரே தாளத்தில் அக்குரல் ஒன்றையே பாடிக்கொண்டிருந்தது, மன்றாட்டு போல, உறுதி ஏற்பு போல.

அனைத்துப் பாடல்களும் இன்னிசை கொள்கையில் தன்னந்தனிக் குரல் போல் ஒலிப்பதன் விந்தையை அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அப்போது அருகே பிற மானுடர் எவரும் இல்லையென்று அவை உணர்கின்றன. இனிய இசைப்பாடல்கள் ஒருபோதும் உரையாடல்கள் ஆக முடியாது. கூற்றுகளும் ஆக முடியாது. அவை வெறும் வெளிப்பாடுகளே. இங்குளேன் என்றும் அங்குளாயா என்றும் துடிக்கும் இரு முனைகள். அல்லது பக்திப்பாடல்கள் மட்டும்தான் அப்படி உள்ளனவா? இப்பாடலின்றி இவர்களால் மலையேற முடியாதா?

கதன் சொன்னான் “இளைய பாண்டவரே, என்னை பலராமர் தேர்வு செய்தது அவர்கள் தரப்பில் ஆற்றப்பட்ட பெரும்பிழை. நான் இளைய யாதவரிடம் இணையற்ற அர்ப்பணிப்பு கொண்டவன். அதை அறிந்தவர்களல்ல வசுவும் தம்பியரும். பலராமர் அதையெல்லாம் உன்னும் நுட்பம் கொண்டவருமல்ல. உகந்த ஒருவரை அனுப்ப வேண்டுமென்று அவர் கோரியதும் என்னை அனுப்பலாமென்று அவருக்கு சொன்னவர் ஆனகர். அவர் என்னை அறிவார்.”

அர்ஜுனன் “அப்படியென்றால் இது அவரது திட்டம்” என்றான். “ஆம். பலராமர் என்னிடம் சொன்னார், முடிவெடுக்க வேண்டியவர் எந்தை. அதனால்தான் அவரைத் தேடி வந்தேன். அவரது சொல் பெற்றுவிட்டேன். இனி ஏதும் நோக்க வேண்டியதில்லை. அஸ்தினபுரிக்கு செல்க! துரியோதனனை முகம் கண்டு இவ்வண்ணம் ஒரு முடிவு யாதவப் பெருங்குலத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்க! கதாயுதத்துடன் வந்து என் இளையவளை கைக்கொண்டு செல்லுதல் அவன் கடமை என்று உரைத்து மீள்க என்றார். நான் தலைவணங்கி ஆணை என்றேன்.” அர்ஜுனன் தலையசைத்தான். கதன் தொடர்ந்தான்.

பலராமர் என்னிடம் இந்திரப்பிரஸ்தம் சென்று அங்கு யுதிஷ்டிரரையும் பிற நால்வரையும் கண்டு இம்முடிவைக் கூறுக என்றதும் பின்னால் நின்ற வசு சற்றே அசைந்து “மைந்தா, இளைய பாண்டவர் அங்கில்லை. பிற நால்வரும் அவரிலாது முடிவெடுக்கத் தயங்குவர்” என்றார். “இல்லை, நான் இம்முடிவை எடுத்ததை அவர்கள் அறியவேண்டும். ஒளித்து எதையும் செய்ய நான் விரும்பவில்லை. கதாயுதப்போரில் பீமன் வந்துவிடலாகாது” என்றார் பலராமர்.

“அவ்வண்ணமெனில் அவர்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பதே நல்லது” என்றார் வசு. “அவர்கள் துரியோதனன் சுபத்திரையை மணப்பதை விரும்பமாட்டார்கள். இன்று இரு தரப்பும் போர்முகம் கொண்டு நிற்கின்றன. இருசாராரும் தங்கள் ஆற்றலை துளித் துளியென சேர்த்து பெருக்கிக்கொள்ளும் தருணம். துலாத்தட்டுகளில் வேறுபாடாக இருக்கப்போவது யாதவர்களின் ஆதரவே.” சூரசேனரும் “ஆம், நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். பாஞ்சாலத்து அரசி எண்ணி எண்ணி படையும் கலமும் சேர்த்துக்கொண்டிருக்கிறாள் என்கின்றனர் ஒற்றர்” என்றார்.

பலராமர் “இல்லை, எவ்வண்ணமென்றாலும் எவரையும் ஏமாற்றி அச்செயலை ஆற்ற நான் ஒப்பமாட்டேன்” என்றபின் என்னிடம் “பீமனிடம் நான் சொன்னதாக சொல்க. இந்த மணநிகழ்வில் அவன் பங்கு கொள்ளலாகாது. இது என் தங்கையை அஸ்தினபுரியின் அரசனுக்கு அளிப்பதற்கு விழைந்து நான் நிகழ்த்தும் மணவிழா” என்றார். வசு குரல் தழைத்து “அப்படி ஓர் ஆணையை நாம் எப்படி பீமனுக்கு அளிக்கமுடியும்? மேலும் மணநிகழ்வுக்கு எவரையும் வரலாகாது என ஆணையிடும் முறைமையும் இங்கில்லை” என்றார்.

“இப்போது அம்முறை உருவாகட்டும், வேறென்ன? மறைத்தும் ஒளித்தும் நிகழ்த்துவது அரசமுறை என்றால் அதைவிட மேலான அரசமுறை இதுவே. பீமனிடம் என் விழைவை மட்டும் சொல்லுங்கள். அதன் பிறகு அவன் வரமாட்டான், நான் அவனை அறிவேன்” என்றார் பலராமர். ஆனகர் ஏதோ சொல்ல முயல “தந்தையே, நீங்களெல்லாம் படைக்கலம் கொண்டு பொருதுபவர்கள். உங்கள் சொற்களும் படைக்கலம் ஏந்தியவை. நானும் அவனும் வெறுந்தோள் கொண்டு மல்லிடுபவர்கள். எங்களுக்கு எல்லாமே தசையுடன் தசை உள்ளத்துடன் உள்ளம்தான்” என்றார் பலராமர்.

நான் தலைவணங்கி “ஆணையை சென்னிசூடுகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் அஸ்தினபுரிக்குச் செல்லாமல் இந்திரப்பிரஸ்தத்துக்கே முதலில் சென்றேன். கட்டி முடிக்கப்படாத அப்பெருநகரில் அப்போதும் கற்பணி நடந்து கொண்டிருந்த மாபெரும் முகப்பு கோபுரத்தின் முற்றத்தில் யுதிஷ்டிரர் யவனச் சிற்பிகளுக்கு ஆணையிட்டு கொண்டிருந்தார். என்னை அங்குதான் அழைத்துச்சென்றனர் ஏவலர். தோளிலிருந்து காற்றில் நழுவிச் சரிந்த கலிங்கப்பட்டுச் சால்வையை எடுத்து மீண்டும் போர்த்தியபடி புருவங்கள் சுருங்க “என்ன?” என்றார்.

தவறாக எண்ணவேண்டாம், அங்கே நான் கண்டது பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியை அல்ல. எளிய குடும்பத்தலைவர் ஒருவரைத்தான். என் உள்ளத்தை கரந்து “இந்திரப்பிரஸ்தமாளும் பாண்டவர்களுக்கு மதுவனத்து அரசர் சூரசேனரின் செய்தியுடன் வந்துள்ளேன். என் பெயர் கதன். விருஷ்ணிகுலத்தான். கிரௌஞ்ச குலத்துக் கரவீரரின் மைந்தன்” என்றேன். “சூரசேனரின் செய்தியா?” என்று கேட்டபின் “அச்செய்தி எனக்கு மட்டும் உரியதா? எங்கள் ஐவருக்குமா?” என்றார். “ஐவருக்கும்” என்றேன். “இளையவன் இங்கில்லை பிற மூவரையும் வரச்சொல்கிறேன். சிற்றவை கூடத்திற்கு வருக!” என்றார்.

தலைவணங்கி “அவ்வண்ணமே” என்று நான் திரும்பியதும் “என்ன செய்தி?” என்று என்னை கேட்டார். அவர் பெரும் சூழ்மதியாளர் என அப்போது உணர்ந்தேன். செய்தியை நான் அரசமுறையில் அவையில் சொல்லவேண்டும். தனிப்பட்ட முறையில் அங்கே அளிக்கவேண்டும். “அரசே, யாதவகுலத்தலைவரும் மதுராபுரியின் அரசருமான வசுதேவர் தன் பட்டத்தரசி ரோகிணியில் பெற்றெடுத்த இளவரசி சுபத்திரையை மணத்தன்னேற்பு அவை முன் நிறுத்த அவருடைய பிதாமகர் சூரசேனர் முடிவெடுத்துள்ளார். அதற்கு முறைப்படி தங்களுக்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன்” என்றேன்.

ஒரு கணத்தில் அவர் கண்களில் ஒரு அசைவு வந்து போவதை கண்டேன். “என்ன படைக்கலம் கொண்டு?” என்றார். அனைத்தையும் அவர் புரிந்துகொண்டதை உணர்ந்தேன். தாழ்ந்த குரலில் “கதாயுதம் கொண்டு” என்றேன். அவர் முகத்தில் ஏதும் தெரியவில்லை. முனகலாக “கதாயுதமா?” என்றார். “பீமனிடம் ஏதேனும் செய்தி சொல்லும்படி பணிக்கப்பட்டீரா?” நான் “ஆம்” என்றேன். “எவர் செய்தி? பலராமரா?” நான் “ஆம்” என்றதும் “அவைக்கூடத்துக்கு வருக!” என்று திரும்பிக் கொண்டார்.

சிற்றவைக்கூடத்திற்கு வெளியே நான் காத்து நின்றபோது உள்ளே பேரமைச்சர் சௌனகரும் துணையமைச்சர்களும் பேசும் ஒலிகளை கேட்டேன். சற்றுநேரம் கழித்து சௌனகர் கதவைத்திறந்து முகமன் சொல்லி வணங்கி என்னிடம் உள்ளே வரும்படி சொன்னார். உள்ளே சிற்றமைச்சர்கள் நின்றிருக்க பீடங்களில் நகுலனும் சகதேவனும் மட்டும் அமர்ந்திருந்தார்கள். நான் தலைவணங்கி வாழ்த்தும் முகமனும் உரைத்தேன். என்னை அமரும்படி ஆணையிட்டனர். தலைவணங்கி அமர்ந்து கொண்டேன். ஆனால் சொல்லெடுக்கவில்லை.

சற்று நேரத்தில் மேலாடை மாற்றி அரசாடை அணிந்து குழல்திருத்தி யுதிஷ்டிரர் வந்தார். அவை எழுந்து அவருக்கு வாழ்த்துரைத்தது. அவரது அசைவுகள் இயல்பிலேயே ஒருவித தளர்வுடன் இருந்தன. தோள்கள் தொய்ந்திருப்பதனாலாக இருக்கலாம். கால்களை நீட்டி நீட்டி வைத்து கைகளை குறைவாக வீசி நடந்தார். அவர் தன் அரியணையில் அமர்ந்ததும்கூட தளர்வுகொண்டவர்களுக்குரிய எடை தாழ்த்தி இளைப்பாறும் பாவனைகள் கொண்டதாக இருந்தது. அவரது உடலின் தளர்வல்ல அது, உள்ளத்தின் தளர்வும் அல்ல. எண்ணங்களின் எடை அது என உணர்ந்தேன்.

அணிகளும் ஆடைகளும் காற்றில் ஒலிக்க மூச்சொலிகளும் இருமல்களும் எழுந்தமைய அவை காத்திருந்தது. அவர் பெருமூச்சுவிட்டு சற்றுநேரம் அமைதியாக இருந்தார். முகவாயை கைகளால் நீவிக்கொண்டு தன்னிலை மீண்டு “எங்கே மந்தன்?” என்றார். சௌனகர் “வந்துகொண்டிருக்கிறார்” என்றபின் துணையமைச்சர் ஒருவரை நோக்க அவர் தலைவணங்கி வெளியே சென்றார். சௌனகர் என்னை முறைப்படி அறிமுகம் செய்துவிட்டு என்னை நோக்கி செய்தியை சொல்லும்படி ஆணையிட்டார். நான் முகமன், வாழ்த்து, அரச குலமுறை ஏத்தல், என் குடிநிரை விளம்புதல் என மரபுப்படி விரித்துரைத்து செய்தியைச் சொல்லி தலைவணங்கினேன்.

அப்போதுதான் பீமன் உள்ளே வந்தார். அவரது பெருந்தோள்களின் அளவு இடுப்புக்குக் கீழே உடலை மிகச்சிறியதாக ஆக்கியிருந்தது. அத்தனை எடைகொண்ட ஒருவரின் வயிறு எட்டு பலகைகளாக இறுகியிருப்பதை நோக்கி வியந்தேன். அது சிற்பங்களில் மட்டுமே இயல்வது என்று தோன்றியது. மஞ்சள்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம். மிகச்சிறிய கண்கள் அவர் உற்றுநோக்கும்போது இரு நீர்த்துளிகளாக மாறி சுருங்கி உள்ளே ஒடுங்கின. கைகளைக் கட்டியபடி சுவரோரமாக நின்றார்.

என் செய்தியை மீண்டும் சொல்லும்படி தருமர் சொல்ல நான் பீமனுக்கு அதை சுருக்கி மீண்டும் சொன்னேன். அதுவே ஓர் உத்தி. ஒருசெய்தியைச் சொல்லும் தூதன் முதலில் விரிவான சொல்லாடலை அமைப்பான். உடனே மீண்டும் சொல்லச்சொன்னால் அவன் சலிப்புற்று அதன் சாரத்தை மட்டும் சொல்லிவிடுவான். அவன் அதைப்பற்றி பலமுறை எண்ணியிருப்பவன் என்பதனால் சரியான சொற்களில் சுருக்கமாகச் சொல்ல அவனால் முடியும். நான் சொல்லிமுடித்ததும் எல்லாம் அப்பட்டமாக திறந்து அவை முன் விரிந்து கிடந்தன.

பீமனின் விழிகளில் எந்த உணர்வுமாற்றத்தையும் நான் காணவில்லை. யுதிஷ்டிரர் என்னை நோக்கி “முறைமைசார் அழைப்புக்கு அப்பால் வேறு செய்தி எதையும் பலராமர் சொன்னாரா?” என்றார். ஆணையை புரிந்துகொண்டு நான் “ஆம்” என்றேன். “இப்போட்டியில் இரண்டாவது பாண்டவர் கலந்து கொள்ளலாகாது என்றார்” என்றேன். பீமன் கண்கள் மேலும் சுருங்க “ஏன்?” என்றார். “அவர் சுபத்திரையை அஸ்தினபுரியின் அரசர் மணக்கவேண்டுமென விழைகிறார்” என்றேன்.

அதை அப்படி மீண்டும் சொன்னதும் அவையில் ஓர் உடலசைவு ஏற்பட்டது. “அது அவரது விழைவாக இருக்கலாம்” என யுதிஷ்டிரர் தொடங்கியதுமே பீமன் கைகட்டி “இல்லை மூத்தவரே, அது அவரது ஆணை என்றே கொள்கிறேன்” என்றபின் என்னை நோக்கி “அவரது ஆணை என்றே அதை கொள்வதாக நான் சொன்னேன் என்று தெரிவியுங்கள்” என்று சொல்லி தலைவணங்கினார். அதைக்கேட்டு நகுலனும் சகதேவனும் முகம் மலர்வதை கண்டேன். யுதிஷ்டிரர் சரி போகட்டும் என்பதைப்போல கைகளை வீசியபின் ஏவலனிடம் ஏதோ கேட்க அவன் ஒரு துண்டு சுக்கை அவருக்கு எடுத்து அளித்தான். அதை வாயிலிட்டபின் கைகளை உரசிக்கொண்டார்.

நான் நால்வர் முகங்களையும் மாறி மாறி பார்த்தபின் சௌனகரை பார்த்தேன். சௌனகர் என்னிடம் “இச்செய்தியை எவரிடம் முதலில் சொல்லச் சொன்னார் பலராமர்?” என்றார். “அஸ்தினபுரிக்குச் சென்று துரியோதனரிடம் சொல்லச் சொன்னார். அங்கிருந்து இங்கு வரும்படி எனக்கு ஆணை” என்றேன். “நீர் வரிசை மாறிவிட்டீர் அல்லவா?” என்றார். “ஆம்” என்றேன். “ஏன்?” என்றார். நான் அவர் கண்களை நேராக நோக்கி “ஏனெனில் நான் இளைய யாதவரின் அடிமை” என்றேன். “முதலில் இங்கு வரவேண்டுமென்பது ஆனகரின் ஆணை. இளைய யாதவரின் ஆணை பெறுபவர் அவர்.”

என்னை சற்று கூர்ந்து நோக்கியபின் “இப்போரில் மந்தன் வந்தால் வெல்ல முடியும் என்று எண்ணுகிறீரா?” என்றார் யுதிஷ்டிரர். “வெல்ல முடியாது” என்றேன். “ஏனென்றால் கதைப்போரை அமைப்பவர் பலராமர். ஆனால் ஏதேனும் வழி இருக்கும். அதை இளைய பாண்டவர் கண்டறிய முடியும்.” யுதிஷ்டிரர் சிலகணங்களுக்குப்பின் “அர்ஜுனன் வந்தால்?” என்றார். நான் அவர் விழிகளை நோக்கி “அது வேறு கதை” என்றேன். “அப்படியென்றால் அதை நீர் இளைய பாண்டவரிடம்தான் சொல்ல வேண்டும்” என்றார் சௌனகர். “அவர் எங்கிருக்கிறார்?” என்று நான் கேட்டேன்.

“ஒற்றுச் செய்திகளின்படி இறுதியாக மணிபுரி நாட்டில் இருந்தார். அங்கு பப்ருவாகனன் என்னும் மைந்தனுக்கு தந்தையானார்” என்றார் சௌனகர். “அவன் எங்கிருக்கிறான் என்று அறிவது எளிதல்ல. அவனை மறைக்க முடியாதென்பதனால்.அவன் சென்ற தடத்தை தொடர முடியும். ஆனால் ஆற்றல் மிக்க சிறகு கொண்ட பறவை. எத்தனை தொலைவு சென்றிருக்கிறதென்று. உய்த்துணர்வது எளிதல்ல” என்றார் யுதிஷ்டிரர். “நான் என்ன செய்வது அரசே?” என்று கேட்டேன்.

“யாதவரே, இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை. இது பலராமரின் ஆணை என்றால் அது என்னையும் கட்டுப்படுத்துவதே” என்றார் யுதிஷ்டிரர். சௌனகர் “ஆனால் பலராமர் இளைய யாதவரின் தந்தையராலும் உடன்பிறந்தாராலும் திசை திருப்பப்பட்டிருக்கிறார். இதில் உள்ளது அவர்களின் வஞ்சம் மட்டுமே. இதன் இறுதி விளைவென்ன என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. யாதவ குலத்தின் வெற்றியும் பெருமையும் இந்திரப்பிரஸ்தத்துடன் இணை நிற்கையிலேயே உருவாகின்றன. இளைய பாண்டவரின் துணையின்றி இளைய யாதவர் வெற்றி கொள்வதும் எளிதல்ல. ஆகவே இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஒருபோதும் முறியத்தக்கதல்ல” என்றார்.

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஊழ்வினை இங்ஙனம் உறுகிறது என்றால் அவ்வண்ணமே ஆகுக” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “சுபத்திரை என் இளையவனால் மணக்கப்படுவாளானால் அது நன்று. ஆனால் எந்த மணஉறவும் முற்றிலும் அரசியல் அல்ல. அதை தெய்வங்கள் ஆடுகின்றன. ஆகவே மணவுறவுகள் எவையும் இன்றியமையாதவையும் அல்ல. நமது வெற்றியும் சிறப்பும் நம் அறத்திலேயே அமைந்துள்ளது. மேலும் நாம் படை திரட்டவில்லை. எந்நாடு மீதும் தண்டு கொண்டு செல்லப்போவதும் இல்லை.”

நான் பீமனை நோக்கினேன். “இதிலுள்ள அரசு சூழ்தல் எதையும் நான் எண்ணவிழையவில்லை. கதரே, பலராமரின் ஆணை அது. என் தந்தையின், ஆசிரியரின் ஆணைக்கு நிகர்” என்றபின் பீமன் தலை வணங்க யுதிஷ்டிரர் அவை நிறைவுக்காக எழுந்தார். வாழ்த்தொலிகள் எழ மெல்ல நடந்து நீங்கினார். பீமன் தன் கைகளை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு சகதேவனிடம் ஏதோ மெல்லிய குரலில் சொல்லிவிட்டுச் சென்றார். சௌனகர் “அவை நிறைவுற்றது கதரே. நீங்கள் தங்குவதற்கான அனைத்தையும் செய்கிறேன்” என்றார். “நான் அஸ்தினபுரிக்குச் செல்லவேண்டும்” என்றேன்.

நான் வெளியே வந்தபோது என்னுடன் சௌனகரும் வந்தார். நான் மெல்லிய குரலில் “நான் இனி என்ன செய்வது அமைச்சரே?” என்று அவரிடம் கேட்டேன். “அஸ்தினபுரிக்கே செல்லுங்கள். அங்கு துரியோதனரிடம் நீர் வந்த செய்தியை சொல்லுங்கள். உமது தூது முடியட்டும்” என்றார். நான் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ளாமல் வெறுமனே நோக்கினேன். “காலில் சரடுகட்டப்பட்டு பறக்கவிடப்பட்ட புறாக்கள் நாம்” என்றார் சௌனகர். “அதற்குள் நீர் என்ன செய்ய வேண்டுமென்பது தெரியவரும்.” “யாரிடமிருந்து?” என்றேன். “ஊழிடமிருந்து” என்று சொல்லி சிரித்தபின் என் தோளை மெல்ல தட்டியபடி அவர் திரும்பிச் சென்றார்.

மறுநாளே அங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரிக்கு சென்றேன். என்னை அங்கு எதிர்பார்த்திருந்தார்கள் என்று அறிந்தேன். கோட்டைக் காவல் மாடத்திலேயே என்னைக் காத்து படைத்தலைவர் வஜ்ரதந்தர் நின்றிருந்தார். தேரில் என்னை அழைத்து நேராக கொண்டு சென்று விதுரர் முன் நிறுத்தினார். நான் நீராடவோ முறைமையுடை அணியவோ இல்லை. பீடத்திலிருந்து எழுந்து என்னை வரவேற்ற விதுரர் நான் முறைமைச்சொல் சொல்வதற்குள்ளாகவே “சூரசேனத்திலிருந்து நீர் கிளம்பி சில நாட்களாகின்றன” என்று என்னை கூர்ந்து நோக்கி சொன்னார்.

அவரது அமைச்சு மாளிகையில் மூன்று துணைஅமைச்சர்கள் என்னை கூர்ந்து நோக்கி நின்றனர். அவருக்குப் பின்னால் நின்ற அமைச்சர் கனகர் என் விழிகளை நோக்கிக் கொண்டிருந்தார். “ஆம்” என்றேன். அந்த அறை சுவடிகளாலும் எழுத்துப்பட்டுச் சுருள்களாலும் நிறைந்திருந்தது. சற்றும் மந்தணமின்றி அத்தனை பேர் முன்னிலையில் அவர் உரையாடியது வியப்பூட்டியது. “இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றீரோ?” என்றதுமே நான் உணர்ந்து கொண்டேன், அத்தனை விழிகள் என் மேல் நாட்டப்பட்டிருப்பது எதற்காக என்று. அவை என்னை சித்தம் குவிக்க முடியாது செய்தன. ஒன்றும் சொல்வதற்கின்றி நான் “ஆம், அமைச்சரே” என்றேன்.

“உம்மிடம் இட்ட ஆணையை அவ்வண்ணமே நிறைவேற்றிவிட்டீரா?” என்றார். நான் “இல்லை. இங்கு வந்து அங்கு செல்ல வேண்டுமென்பது ஆணை” என்றேன். அடுத்த வினாவைக் கேட்காது அவர் கடந்து சென்றார். “நீர் அஸ்தினபுரியின் அரசரை இன்று சந்திக்கலாம், அவையமர்வதற்கான ஒப்புதல் ஓலையை உம்மிடம் துணையமைச்சர் சமீகர் வழங்குவார்” என்றார். நான் தலைவணங்கி “ஆணை” என்றேன். “உமக்குரிய மாளிகையும் நீராட்டறையும் சித்தமாக உள்ளன.”

மாலையில்தான் நான் அரசப்பேரவையில் துரியோதனரை சந்திக்கச் செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குமுன்னரே துரியோதனரின் ஆணை வந்தது, அவரை நான் மந்தண அறையில் சந்திக்கலாம் என்று. அந்த உள்ளவைக்கு விதுரர் வரவில்லை. கனகரே என்னை அழைத்துச் சென்றார். அவர் என்னிடம் ஒன்றும் சொல்லாமல் எண்ணம் சுமந்தவர் போல வந்தார். அவரிடம் ஏதேனும் பேசலாமென எண்ணினேன். அஸ்தினபுரிக்கு யாதவரின் எண்ணங்கள் எந்த அளவுவரை தெரியும் என அறிய விழைந்தேன். விதுரருக்கு நான் எண்ணியதைவிட கூடுதலாகவே தெரியும் என அவரது சொற்கள் காட்டின. துரியோதனர் அறிந்திருப்பாரா? ஆனால் கனகர் சொல்லெடுக்கலாகாது என்னும் ஆணை பெற்றவர் போலிருந்தார்.

அஸ்தினபுரியின் மைய அரண்மனை அத்தனை பழமையானது என்பதை நான் எண்ணியிருக்கவில்லை. கதைகளில் அம்மாளிகையைப் பற்றி இளமை முதலே கேட்டிருந்தேன். என் கற்பனையில் வான் என உயர்ந்த கூரையும் அடிமரமென தூண்களும் வெண்பளிங்குத்தரையும் அனலெனப்பறக்கும் திரைச்சீலைகளும் கொண்டதாக இருந்தது அது. நேர்க்காட்சிக்கு எடைமிக்க தடிகளை அடுக்கிக் கட்டப்பட்ட உயரமற்ற கூரைகொண்ட பழமையான கட்டடம் கருமைகொண்டிருந்தது. அதன் பூண்களும் பட்டைகளுமெல்லாம் வெண்கலத்தால் ஆனவை. படிகளில் தோல்கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. வயதாகி முதிர்ந்த பேரரசரைப் போல தோன்றியது அது.

இடைநாழி வழியாக அழைத்துச்செல்லப்பட்டு எந்த முறைமைகளும் இல்லாமல் அறைக்கதவைக் கடந்து தம்பியருடன் தன் மந்தண அறையில் உரையாடிக் கொண்டிருந்த துரியோதனர் முன்பு நிறுத்தப்பட்டேன். அறைக்கு வெளியிலேயே அவர்களின் சிரிப்பொலியை கேட்டேன். அவர்கள் நூறு பேர் என்று அறிந்திருந்தேன். ஆயினும் உள்ளே பேரவைதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என எண்ணினேன். உள்ளே நுழைந்து தலைவணங்கியதும் ஒரே விழியில் அவர்களைப் பார்க்கையில் ஆடிப்பாவை முடிவின்றி பெருகியது போல் ஒரு விழிமயக்கெழுந்து திகைத்தேன்.

துரியோதனர் வெண்பட்டுக் கீழாடையும் செம்பட்டு மேலாடையும் அணிந்து எளிய பீடத்தில் தன் பெருந்தோள்களைச் சாய்த்து அமர்ந்திருந்தார். தலைப்பாகையோ மணிமுடியோ இல்லாமல் நீள் குழல் சரிந்து தோள்களில் கிடந்தது. அவரைப்பார்த்த அக்கணமே நினைவு பீமனை சென்று தொட்டது. அவர்கள் இருவரையும் சேர்த்தே எண்ணிக்கொள்ளமுடிகிறது, இக்கணம் வரை. உண்மையில் அவர்களுக்குள் பொதுவாக ஏதுமில்லை. நிறம் தோற்றம் எதுவும். ஆனால் இருவரும் ஆடிப்பாவைகள் போலிருந்தனர். எப்படி என்று எண்ணி என்ணி என் சித்தம் சலிக்கிறது. அப்படியென்றால் அங்கிருந்த நூற்றுவரில் ஒருவர்தான் பீமன். அவர் பாண்டவராகப் பிறந்த கௌரவர்.

தமையன் அருகே இருந்த துச்சாதனன் என்னிடம் “உமது செய்தியை கனகர் சொன்னார். மீண்டும் அச்செய்தியை சொல்மாறாது உரைக்கலாம்” என்றார். நான் சூரசேனரின் சொற்களையும் பலராமரின் சொற்களையும் அவ்வண்ணமே மீண்டும் சொன்னேன். துரியோதனர் தலையசைத்து "நன்று” என்றார். பின்னர் கனகரிடம் “பலராமரின் ஆணை. அது என்னையும் இந்நாட்டின் ஒவ்வொரு குடியையும் கட்டுப்படுத்துவது” என்றார். துச்சாதனர் “நீர் அஸ்தினபுரிக்கு வருவதற்கு முன் இந்திரப்பிரஸ்தத்துக்கு சென்றீர் என்றார் கனகர்” என்றார். "ஆம்” என்றேன். "ஏன்?" என்று அவர் கேட்டார்.

“நான் மதுவனத்தை விட்டு வெளியே வந்து பழக்கமற்றவன். இந்திரப்பிரஸ்தம் நான் வரும் வழியிலேயே இருந்தது. அங்கு சென்றுவிட்டு இங்கு வருவதே எளிய வழி என்று தோன்றியது” என்றேன். துச்சாதனர் என் விழிகளையே கூர்ந்து நோக்கினார். நான் அவர் விழிகளில் இருந்து நோக்கை விலக்கவில்லை. “பீமனிடம் என்ன சொன்னீர்?” என்றார் துச்சாதனர். “இம்மணத்தன்னேற்பில் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்று பலராமரின் ஆணை என்றேன்” என்றேன். துச்சாதனர் “மூத்தவர் அதற்கு என்ன சொன்னார்?” என்றார். “பலராமர் ஆணை அவரையும் கட்டுப்படுத்தும் என்றார். இளைய பாண்டவர் அங்கு இல்லை என்பதால் அவர் எண்ணத்தை அறியக்கூடவில்லை. பிற நால்வரும் பலராமர் ஆணைக்கு கட்டுப்படுவதாக சொன்னார்கள்” என்றேன்.

துச்சாதனன் “நீர் பாஞ்சால அரசியை சந்திக்கவில்லையா?” என்றார். அப்போதுதான் அதை முழுதுணர்ந்து “இல்லை”  என்றேன். துரியோதனர் “இளையோனே, மணத்தன்னேற்புச் செய்தியை பெண்களிடம் சொல்லும் வழக்கமில்லை” என்றார். “அறிவேன் மூத்தவரே. ஆனால் இந்திரப்பிரஸ்தத்தை ஆள்வது பாஞ்சால அரசி. எச்சொல்லும் இறுதியில் அவளாலேயே முடிவெடுக்கப்படுகிறது” என்றார் துச்சாதனர். துரியோதனர் “அதை அவர்கள் சொல்லிக் கொள்ளட்டும்” என்றார். “ஒரு போதும் துவாரகை தன்னிடமிருந்து விலகிச்செல்வதை அவள் ஒப்பப்போவதில்லை. அவள் என்ன எண்ணுகிறாள் என்பதே முதன்மையனாது” என்றார் துச்சாதனர்.

“துவாரகை எங்கே விலகிச் செல்கிறது? மதுராவுடனான நம் உறவு துவாரகையை கட்டுப்படுத்தவேண்டுமென்பதில்லையே” என்றார் துரியோதனர். "அது அரசு சூழ்தலின் நோக்கு மூத்தவரே. ஆனால் இளைய யாதவர் தன் தங்கையை ஒரு தருணத்திலும் தன்னிலிருந்து விலக்கி நோக்க மாட்டார். தாங்கள் சுபத்திரையை மணந்தீரென்றால் இப்பிறவி முழுக்க உங்களிடமிருந்து ஒரு தருணத்திலும் துவாரகையின் தலைவர் அகலப்போவதில்லை” என்றார் துச்சாதனர்.

அவரை நோக்கி சில கணங்கள் மீசையை நீவியபடி அமர்ந்திருந்துவிட்டு என்னை நோக்கியபின் மீண்டும் அவரை நோக்கி “என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை” என்றார் துரியோதனர். “இவ்வளவுதான் சுருக்கம். எந்நிலையிலும் தன் தங்கையையோ இளைய பாண்டவரையோ இளைய யாதவர் விட்டுக் கொடுக்க மாட்டார். எனவே அவர்கள் மாற்றுத் தரப்பில் இருப்பதை விரும்பவும் மாட்டார். அவர்கள் இருவரும் மணம் புரிய வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருக்கும். அவ்வெண்ணத்தை உய்த்தறிந்துதான் அவர்மேல் அழுக்காறு கொண்ட அவரது குடிப்பிறந்தார் இம்மணத்தன்னேற்பை ஒருங்கு செய்திருக்கிறார்கள். அவர்கள் கையின் கருவி என்றே பலராமரை சொல்வேன்.”

“இம்மணத்தன்னேற்பு அவர்கள் எண்ணுவது போல அத்தனை எளிதில் நிகழாது. ஏனெனில் மறுதரப்பில் இருப்பது இளைய யாதவரின் விழைவு” என்றார் துச்சாதனர். துரியோதனர் “ஆனால் அவரும் தன் தமையனை மீற முடியாது” என்றார். கனகர் “அவ்வண்ணமே விதுரரும் எண்ணுகிறார்” என்றபின் என்னை நோக்கி “நீர் செல்லலாம்” என்றார். நான் தலைவணங்கி வெளியே சென்றேன்.

நான் அங்கே நின்றிருக்கையிலேயே அவ்வுரையாடலை அவர்கள் ஏன் நிகழ்த்தினார்களென்று வியந்தேன். அவைக்கூடத்திற்கு வெளியே கனகர் வெளிவருவதற்காக காத்து நின்றேன். அரைநாழிகைக்குப் பின் வெளியே வந்த கனகர் என்னிடம் “நீர் எங்கு திரும்பிச் செல்கிறீர்?” என்றார். “மதுவனத்திற்குத்தான். என் கடமை முடிந்தது” என்றேன். “அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர் கதாயுதம் கொண்டு மதுராவுக்கு வந்து சுபத்திரையை வெல்வார் என்று பலராமரிடம் சொல்லுங்கள்” என்றார். நான் தலைவணங்கினேன்.

அப்போது தெரிந்தது அங்கு நிகழ்ந்த உரையாடல் அனைத்தும் நான் சென்று பலராமரிடம் சொல்வதற்காகவே என. இளைய யாதவர் அம்மணத்தன்னேற்புக்கு எதிராக இருப்பார் என்பதை அங்கு பேசிக்கொண்டார்கள் என்பதை அவ்வண்ணம் பலராமர் அறிய நேருமென்று துச்சாதனர் எண்ணுகிறார். ஒரு கணம் நான் அஞ்சிவிட்டேன். இத்தனை கூரிய மதி விளையாடலில் எளிய யாதவனாகிய நான் என்ன செய்ய முடியும்? மீண்டும் என் கன்றுகளுடன் சென்று காடுகளுக்குள் புதைந்துவிட எண்ணினேன்.

“இளையபாண்டவரே, அப்போது நான் உணர்ந்த தனிமையை பிறகெப்போதும் உணர்ந்ததில்லை. நான் எளியவன், எளியவர்கள் வரலாற்றுப்பெருக்கில் அடித்துச்செல்லப்படவும் அதன் கொந்தளிப்பில் அலைக்கழியவும் விழைகிறார்கள். ஆனால் வரலாற்றில் கால் நிலைக்காத ஆழத்திற்குச் சென்றதுமே அங்கு வந்து சூழும் தன்னந்தனிமையில் பரிதவிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். தெய்வங்களின் உலகில் சென்றுவிட்ட எளிய உயிரின் தனிமை அது” என்றான் கதன்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 5

கதன் சொன்னான் “அன்று பகல் முழுக்க என் மாளிகையின் உப்பரிகையில் நின்று அஸ்தினபுரியின் தொன்மையான தெருக்களையும் கருமை படிந்த கோட்டையையும் காவல் மாடங்களையும் பெருமுரசங்களையும் நோக்கிக் கொண்டிருந்தேன். பொழுதுமாறும் முரசொலியே என்னை பகலென உணரச்செய்தது. அன்றிரவு அங்கே துயின்றேன். நான் ஏன் வந்தேன், என்ன செய்யவிருக்கிறேன் என்று என் உள்ளம் பதைத்துக்கொண்டே இருந்தது. ஒன்றுக்கும் பொருளில்லை என்பது மூக்கில் முட்டும் சுவர் போல தெரியும் சில தருணங்கள் வாழ்வில் உண்டல்லவா?”

புலரியில் கனகர் வந்து எனக்கு விடைகொடுத்தார். நான் கிளம்பும்போது அவர் முகத்தில் ஏதோ இருந்தது. தேரில் ஏறிக்கொண்டதும் என்னிடம் “அமைச்சர் விதுரர் ஒரு சொற்றொடரை சொல்லச்சொன்னார்” என்றார். என் உள்ளம் படபடத்தது. “ஆணைகளை ஏற்பவர்கள் காத்திருக்கவேண்டும். அவர்களின் செவிகள் திறந்திருக்கட்டும் என்றார்” என்றார் கனகர். நான் அச்சொற்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால் என் உள்ளம் அமைதிகொண்டது.

கங்கைக்கரைப் படகுத்துறையை அடைந்து அங்கிருந்து யமுனை வழியாக நான் மதுவனத்தை அடைவதாக இருந்தது. எனக்கான ஐந்துபாய்ப் படகு காத்திருந்தது. அதில் ஏறி கங்கையில் பாய் விரித்தபோது அதுவரைக்கும் என்னிடமிருந்த பரபரப்பு அகன்று நீரோட்டத்தின் மென்மையான ஒழுக்கு என்னுள்ளும் நிறைந்தது. என் பரபரப்பை எண்ணி நானே புன்னகைத்துக் கொண்டேன். மரத்தில் அடிவிழுகையில் தூசித்துளிகள் எம்பிக்குதிப்பதுபோன்றதே அது. நானல்ல, நான் அமர்ந்திருக்கும் நிலம் கொள்ளும் அதிர்வுதான் அது.

இவை அனைத்தும் என்னைச் சூழ்ந்து செல்லும் இப்பெருவெள்ளம் போன்றவை என எண்ணினேன். இதன் திசைச்செலவுக்கு அப்பால் எதையும் ஆற்ற ஒண்ணாதவன் நான். இதிலொரு துளி. இதிலொரு அலை. ஆயினும் நான் என்று எண்ணவேண்டியிருந்தது. ஆகவே எதையோ ஆற்றவேண்டியிருந்தது. ஆற்றியதனாலேயே விளைவை விழையவேண்டியிருந்தது. விழைவு வெளியுலகின் இரும்புத்தன்மையை சந்திப்பதனால் பகற்கனவுகளை நெய்யவேண்டியிருந்தது. ஒவ்வொரு கணமும் கற்பனையில் என்னை மீட்டு மீட்டு மையத்தில் வைத்துக்கொள்கிறேன். ஆனால் அதன் வீண் உழைப்பை என் அகம் அறியும். ஆகவே இறுதியில் அது சோர்வையே அளிக்கிறது. வெற்றிகள் தற்காலிகமானவை . அச்சோர்வுதான் இறுதியானது.

படகுப்பயணம் உள்ளத்தை எளிதாக்குவது. இவ்வண்ணம் இங்கு எளிதாக ஒழுகிச்செல்வது போல் உகந்த ஏதுமில்லை என எண்ணிக்கொண்டேன். விரிந்துகொண்டிருப்பது ஒரு மாபெரும் வலை. அதில் நானும் ஒரு கண்ணி என எனக்கு மட்டுமே தெரியும். இருந்துகொண்டிருப்பதொன்றே நான் ஆற்றக்கூடியது. யானையின் உடலில் தொங்கும் உண்ணியும் யானையே. இப்படலத்தில் கொக்கிபோல பற்றிக்கொண்டு தொங்குவது மட்டுமே நான் செய்யவேண்டியது. ஒழுகு. ஒழுகிச்செல். ஒழுகிக்கொண்டே இரு.

அச்சொற்கள் என்னை ஆறுதல் படுத்தின. எவர் எவரை மணந்துகொண்டால் எனக்கு ஆவதென்ன? அஸ்தினபுரியின் வெற்றியோ இந்திரப்பிரஸ்தத்தின் புகழோ எனக்கு என்ன அளிக்கப்போகிறது? உண்மையில் அவ்வெண்ணம் கூட ஒரு உள நாடகமாக இருக்கலாம். நான் விழைவது நிகழும் வரை என்னை ஆறுதல் செய்து கொள்ள நான் அடைந்ததாக இருக்கலாம். ஆனால் அவ்வெண்ணம் என்னை துயில வைத்தது .படகின் அகல்வெளி முற்றத்தில் தூளிப்படுக்கையில் படுத்து நன்கு துயின்று விட்டேன்.

குகன் வந்து என்னை எழுப்பியபோது விழித்தேன். என்னை நோக்கி ஒரு சிறு படகு வருவதையும் அதில் இருந்த குகன் அணுகுவதற்கு ஒப்புதல் கோருவதையும் அவன் சொன்னான். "அணுகட்டும்” என்றேன். அப்போதே தெரிந்துவிட்டது. விதுரர் சொன்னது அதுவே. படகில் இருந்து இறங்கி வடத்தில் தொற்றி மேலே வந்தவர் துவாரகையிலிருந்து வந்த தூதுடன் இருந்தார். மதுராவில் அவரை நான் கண்டிருக்கிறேன். விருச்சிகர் என்று அவர் பெயர். அங்குள்ள துணை அமைச்சர்களில் ஒருவர். அவரை அரசர் வசுதேவருக்கு நெருக்கமானவர் என்றுதான் அதுவரை அறிந்திருந்தேன். இளைய யாதவருக்கு நெருக்கமானவர்கள் பாலில் நெய் என பாரதவர்ஷம் முழுக்க கலந்துளார்கள் என்று அப்போது எண்ணிக்கொண்டேன்.

”அவரை எதிர்கொண்டு அழைத்தேன். முகமனுக்குப்பின் அவர் என்னிடம் துவாரகையின் சங்கு சக்கர கருட முத்திரை பதித்த தோற்சுருளை அளித்தார். அதில் இளைய யாதவரின் ஆணை தெளிவாக இருந்தது. மந்தணச்சொற்களில் என்னை இங்குள்ள இந்த மலைச்சுனை நோக்கி வரும்படி கூறியிருந்தார். இங்கு வருதற்கான வழியையும் நாளையும் கணித்திருந்தார். அக்கணிப்பின்படி நான் நேற்றுமுன்னாள் இங்கு வந்து காத்திருந்தேன்” என்றான் கதன்.

அர்ஜுனன் அவனுடைய சொற்பெருக்கை கேட்டுக்கொண்டு விரியத்தொடங்கிய காலைவெயிலில் கண் ஓட்டியபடி நடந்தான்.  "தங்களை சந்தித்துவிட்டேன். எண்ணி சொல்லெடுத்துப்பேசவேண்டும் என தூதுமுறை சொல்லும். ஆனால் நீங்கள் என் நெஞ்சை ஆளும் இளைய யாதவரின் நேர்வடிவமென்றே தோன்றியது. நான் சொன்னவை அவரது செவிகளுக்காக" என்றான். “இங்கு என்னை சந்திக்க நேருமென்று சொல்லப்பட்டதா? ”என்றான் அர்ஜுனன். "ஆம், இங்கு நீங்கள் இருப்பீர்கள். உங்களிடம் இச்செய்திகளை விரித்துரைக்கும்படி எனக்கு ஆணை” என்றான் கதன்.

அர்ஜுனன் "நீங்கள் மதுராவிலிருந்து கிளம்பி எவ்வளவு நாட்களாகின்றன?" என்று கேட்டான். "பன்னிருநாட்கள்” என்றான் கதன். அர்ஜுனன் ”இத்திசை நோக்கி நான் திரும்ப முடிவெடுத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இங்கு நான் வருவேனென்று எப்படி கணக்கிட முடிந்தது?' என்றான். கதன் நகைத்து ”பாரத வர்ஷத்தையே ஒரு பெரும் சூதுக் களமென கண்டு விளையாடுபவர் அவர் என்கிறார்கள். தன் உளம் நிறைந்த ஒருவரின் தடத்தை அறிவதா அவருக்கு கடினம்?” என்றான். அர்ஜுனன் சட்டென்று நகைத்து "ஆம்" என்றான்.

பிரபாசதீர்த்தத்தின் இறுதிப்பாதைவளைவில் இருந்தது சுகீர்த்தி என்னும் விடுதி. கற்தூண்களால் ஆன மண்டபத்தைச் சுற்றி நோன்புக்காலத்திற்காக போடப்பட்டிருந்த ஓலைக்கொட்டகைகளில் பயணிகள் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். உச்சிவெயிலில் உடல் வியர்த்து வழிய கதன் “உணவு அருந்தி இளைப்பாறாமல் மேலும் செல்லமுடியாது” என்றான். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “இனிமேல் தீர்த்தமுகம் அருகேதான் என நினைக்கிறேன்.”

அருகே சென்ற வணிகன் நின்று “வீரரே, நீர் ஓடும்புரவியில் ஏறும் பயிற்சி கொண்டவராகக்கூட இருக்கலாம். இனிமேல் இப்பாதையில் ஏறுவதற்கு ஒருவேளை அப்பயிற்சிகளும் போதாமலாகும்” என்றான். கதன் கவலையுடன் “செங்குத்தான பாதையோ?” என்றான். “பாதையே இல்லை. பன்னிரு இடங்களில் தொங்கவிடப்பட்ட கயிறுகள் வழியாக ஏறிச்செல்லவேண்டும். நான்கு பெரும்பாறைவெடிப்புகள் நடுவே கட்டப்பட்ட வடமே பாலமாக உள்ளன. அவற்றில் நடந்துசெல்லவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பலநூறுபேர் அங்கு விழுந்து மறைகிறார்கள்.”

கதன் அச்சத்துடன் “நான் படைப்பயிற்சி பெற்றவன் அல்ல” என்றான். “அஞ்சவேண்டாம், உம்மை அங்கு கொண்டுசென்று சேர்ப்பது என் பணி” என்றான் அர்ஜுனன். “உடல் வலிக்குமோ?” என்றான் கதன். “வலிக்காமல் செல்ல நான் ஆவனசெய்கிறேன். கவலைவிடுக!” என்று அர்ஜுனன் சொன்னான். கதன் அச்சத்துடன் மேலேறிச்சென்ற மலையடுக்குகளை நோக்கினான். மழையில் கருமைகொண்ட பெரிய உருளைப்பாறைகள் ஒன்றன் மேல் ஒன்றென ஏறி அமர்ந்து மாளா அமைதியில் மூழ்கியிருந்தன.

அவர்கள் விடுதியை அடைந்தனர். அங்கே பெரிய படகு ஒன்று வைக்கப்பட்டு அதில் குளிர்ந்த மோர் கலக்கி வைக்கப்பட்டிருந்தது. ஓலைத்தொன்னைகளிலும் கொப்பரைகளிலும் அதை அள்ளி அருந்திக்கொண்டிருந்தனர் பயணிகள். கரியதாடிகளில் வெண்ணிறமான நீர்மணிகள் உருண்டு வழிந்தன. “பெருங்கூட்டம் இருக்கும் போலிருக்கிறதே” என்றான் அர்ஜுனன். “வீரரே, சௌராஷ்டிர மண்ணை ஒரு செந்நிறக்கொடி என்கிறார்கள். அதில் பொறிக்கப்பட்ட முத்திரை இந்தப் பிரபாசம். இங்கு ஒருமுறை வந்துசென்றவனே அங்கு வீரன் என கருதப்படுகிறான்” என்றான் வணிகன்.

“அஷ்டசிரஸ் சௌராஷ்டிரத்தின் மணிமுடியின் உச்சி. அங்கு குடிகொள்கிறான் அறத்தேவனாகிய பிரபாசன். தர்மதேவனுக்கு பிரபாதை என்னும் மனைவியில் பிறந்தவன். பிறந்ததுமே தன் தந்தையிடம் அவன் கேட்டான், அவரது பணி என்ன என்று. இறப்பு என்று அவர் சொன்னார். ஏனென்றால் அழிவும் இறப்புமே அறத்தை நிலைநாட்டும் வழிகள். எந்தையே அழிவின்மையை அடையும் வழி என்ன என்று மைந்தன் கேட்டான். அழிவின்மை தேவர்களுக்குமட்டும் உரியது என்றார் தந்தை. உபதேவர்கள் கூட யுகமுடிவில் அழிபவர்களே என்றார். அதை நான் அடைவேன் என்றான் பிரபாசன்.”

ஆயிரம் ஆண்டுகாலம் பிரபாசன் தவம்செய்தான். அவன் முன் தோன்றிய சிவனிடம் அழிவின்மை என்னும் வரம் கேட்டான். நீ அறத்தின் தேவன். ஐந்துகோடி வழக்குகளை உனக்கு அளிக்கிறேன். அனைத்திலும் அறம் பிழைக்காது தீர்ப்புரைத்தாயென்றால் நீ தேவன் எனப்படுவாய் என்றார் சிவன். நூறு யுகங்கள் அத்தனை வழக்குகளுக்கும் நல்ல தீர்ப்பை உரைத்தான். ஒருமுறைகூட துலாமுள் அசையவில்லை. அவனைப் பாராட்டிய சிவன் நீ எட்டு வசுக்களில் ஒருவனாக அழிவின்மை கொள்க என்றார். பிரஹஸ்பதியின் தங்கையாகிய வரையை மணந்து எட்டு வசுக்களில் ஒருவராக அமர்ந்தார் பிரபாசன். மண்ணிலும் விண்ணிலும் நீதிக்கு அவரே நிலையான சான்று.”

“இங்கே எட்டுகுன்றுச்சிகள் உள்ளன. எட்டாவது உச்சி இது. முதல் முடியில் தரன், இரண்டாவதில் துருவன். பின்னர் சோமன் கோயில்கொண்டிருக்கிறார்கள். அகஸ், அனிலன், அனஹன், பிரத்யூஷன் ஆகியோர் தொடர்ந்த மலைமுடிகளில் இருக்கிறார்கள். இறுதியான உயர்முடியில் பிரபாசனின் ஆலயம் உள்ளது. அங்குதான் அக்னிசரம் என்னும் அருவி மலையிடுக்குகளில் இருந்து கொட்டுகிறது. அது அனலுருவான புனல்” என்றான் வணிகன். ”ஆகவே இங்கே நீராடுவது அக்னிஷ்டோம வேள்விசெய்த பயனை அளிக்கும்”

“அந்த அருவியின் நீரை அருந்தினால் கள்மயக்கு ஏற்படும். ஏனென்றால் மலையுச்சியில் தேவர்களின் சோமம் ஊறும் சுனையில் எழுவது அது. ஆகவே அதற்கு சோமதீர்த்தம் என்றும் பெயர்உண்டு” என்றான் இன்னொருவன். “ஆகவே இந்திரனுக்கு மிக விருப்பமான நீர் இது என்கிறார்கள். இந்திரன் இம்மலைமுடிமேல் வந்திறங்கும்போது அவனுடைய அழகிய ஏழுவண்ண வில் இதன் மேல் எழுந்திருப்பதை காணலாம். இந்த நீரை அருந்தி நிலையழிந்து அதன் கரையிலேயே விழுந்து பலநாட்கள் துயின்றவர்கள் உண்டு. மிகையாக அருந்தினால் உயிருண்ணும் நஞ்சு அது.”

அனலில் சுட்ட அப்பங்களும் வஜ்ரதானியத்தையும் வெல்லத்தையும் போட்டு சமைத்த இன்கஞ்சியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. தொன்னைகளில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய ஏவலர் “பார்த்து… கொதிக்கிறது” என்றனர். “நாங்கள் அங்கே அனலில் நீராடவிருக்கிறோம்… இது என்ன?” என்றார் ஒருவர். “சொல்லாதீர் கர்க்கரே, என் உடல் கூசுகிறது” என்றார் அவர் அருகே இருந்த ஒருவர். “அனல் என்றால் அனலேதானா?’ என்றார் ஒருவர். “பின்னர் என்ன நினைத்தீர்? புராணத்திலுள்ள அனல் உடலைச் சுடாது என்று நம்பிவிட்டீரோ?” என்றார் ஒருவர். சிலர் சிரித்தனர்.

சூடான கஞ்சியை உடல் வியர்த்துவழிய குடித்தபின் கதனும் அர்ஜுனனும் வந்து வெளியே விரிக்கப்பட்டிருந்த சருகுமெத்தைமேல் படுத்துக்கொண்டனர். மேலே விரிந்திருந்த தழைப்பரப்பு வழியாக ஊசிகளாக சூரியஒளி வந்து கண்மேல் விழுந்தது. அர்ஜுனன் கண்மயங்கினான். நீண்ட புரவிப்பாதையில் அவன் சென்றுகொண்டிருந்தான். அவனுக்காக புரவியோட்டிக் கொண்டிருந்தவன் இளைய யாதவன் என்று கண்டான். விரைவு விரைவு என அவன் கூவ தேரோட்டி திரும்பிப் பார்த்தபோதுதான் அது ஒரு பெண் எனத்தெரிந்தது. சுபத்திரை. "நீ ஏன் மயிற்பீலி சூடியிருக்கிறாய்?” என்று அவன் கேட்டான். “நான் அவர்தான் “ என்று அவள் சொன்னாள்.

அவர்களை விடுதிக்காரர்களே கூவி எழுப்பினர். “கிளம்புங்கள். வெயில் சாய்ந்துவிட்டால் பின்னர் மலையேற முடியாது.” அர்ஜுனன் எழுந்து முகம் கழுவிக்கொண்டு கிளம்பினான். கதன் “நான் ஏன் பிரபாசதீர்த்தம் வரவேண்டும்? அங்கே நான் செய்யவேண்டிய பிழைபோக்குச் சடங்கு என ஏதுமில்லை” என்றான். அர்ஜுனன் “எனக்கு உள்ளது” என்றான். “ஏன்?” என்றான் கதன். “அதைச்செய்தபின்னரே நான் என் மூத்தவர் முகத்தை ஏறிட்டு நோக்கமுடியும்.”

கதன் விழிகள் மாறின. “குருதிப்பிழை, வஞ்சப்பிழை, களவுப்பிழை, பெற்றோர்பிழை, ஆசிரியர்பிழை, பெண்பிழை, பிள்ளைப்பிழை என பிழைகள் ஏழு” என்றான். “நீர் எப்பிழை செய்தீர் என நான் கேட்கலாமா?” அர்ஜுனன் விழிகளை திருப்பி “பெண்பிழை” என்றான். கதன் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. நீண்டநேரம் கடந்த பின்னர் “நானும் நீராடியாகவேண்டும்” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாதது கண்டு ”இது தந்தைப்பிழை “ என்றான். அர்ஜுனன் “அதில்லாத மானுடர் எவர்?” என்றான்.

மலைச்சரிவு செங்குத்தாக மேலேறிச்செல்லத் தொடங்கியது. நடப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலின் மொத்த எடையையும் முழங்கால் தசையில் முதலில் உணர்ந்தனர். பின்னர் நுரையீரலில் அவ்வெடை தெரிந்தது. பின்னர் அத்தனை எண்ணங்களிலும் அந்த எடை ஏறி அமர்ந்தது. தலைக்குள் குருதி வெம்மையாக கொப்பளிப்பதை உணர்ந்தனர். காதுமடல்கள் அனலாக எரிந்தன.

யானைவிலா போலத்தெரிந்த மலைப்பாறைமேல் ஒரு இரும்புச்சங்கிலியை சரிவாகப்போட்டதுபோல படிநிரை தெரிந்தது. படிகள் அல்ல, நான்கு விரற்கடை ஆழத்துக்கு பாறையில் குழிசெதுக்கப்பட்டிருந்தது. கைகளை ஊன்றி நடுங்கும்கால்களை தூக்கிவைத்து மேலே சென்றனர். பேச்சொலிகள் நின்று விட்டன. அஞ்சி திரும்பிவிட எண்ணியவர்கள் பின்னால் வருபவர்களின் நிரையைக் கண்டு திரும்பமுடியாதென்று உணர்ந்து மேலும் அஞ்சினர். "செல்க!” என பின்னால் வந்தவர்கள் அவர்களை ஊக்கினர்.

ஒருவன் நிலையழிந்து அலறியபடி சரிவில் உருண்டு கீழே செல்ல அவனைப்பிடிக்க அறியாமல் கைநீட்டிய பிறிதொருவனும் நிலையழிந்து அவனைத் தொடர்ந்தான். அவர்களின் அலறல்களில் அத்தனைபேரின் கால்களும் நடுங்கத்தொடங்கின. கதன் நிலையழிய அர்ஜுனன் அவன் தோளை மெல்லத்தொட்டான். அவன் நிலைகொண்டு நீள்மூச்சுவிட்டான்.

பாறைச்சரிவில் பிடிக்க ஏதுமிருக்கவில்லை. உருண்டு சென்று கீழே பிறிதொரு பாறைமேல் விழுந்து உடல்கள் உடைந்து துடித்து அமைந்தார்கள். முதல் வீழ்ச்சியை கண்ணால் பார்த்தபின் அத்தனைகால்களும் நடுங்கத்தொடங்கின. ”பார்த்து பார்த்து” என்று கூவினர். “எங்கே பார்ப்பது?” என்று எவரோ சொல்ல எவரோ சிரித்தனர். இன்னொருவன் கால்தவறி விழ அவனைப் பிடிக்க இயல்பாக கைநீட்டிய இன்னொருவனும் தொடர்ந்தான். “இங்கே துணைவர்கள் இல்லாமல் நாம் செல்வதில்லை என்னும் ஆறுதல் எழுகிறது” என்றான் முதலில் வேடிக்கையாகப் பேசியவன். சிலர் சிரித்தனர். “சங்கரே, வாயைமூடும்” என்றான் ஒரு முதியவன்.

அடிக்கொரு முறை ஒவ்வொருவராக கால்தவறி அலறியபடி உதிர்ந்து விழத்தொடங்கினர். கதன் “என்னால் முடியாது இளையபாண்டவரே” என்றான். “இங்கு பிறர் எவருமில்லை என்று எண்ணுங்கள்“ என்றான் அர்ஜுனன். ”மலையை பார்க்காதீர். எதிரே உள்ள ஒரே ஒரு படியை மட்டுமே பாருங்கள். அதைமட்டுமே எண்ணுங்கள்.”

“என்னால் முடியவில்லை” என்றான் கதன். “இங்குள்ள படிகள் உங்கள் அகநுண்சொல்நிரை. ஒவ்வொரு படியும் அதன் ஓர் ஒலிப்பு. அதை மட்டும் நெஞ்சுகுவித்து அறியுங்கள். காலம் விலகட்டும். திசைகள் அழியட்டும்” என்றான் அர்ஜுனன். கதன் “ஆம். வேறுவழியில்லை” என்றான். சற்றுதொலைவு சென்றதும் அர்ஜுனன் “இளைய யாதவரை பார்த்தீரா?” என்றான்.

“இங்கு எப்படி பேசுவது?” என்றான் கதன். “இங்கு வருவது வரை பேசிக்கொண்டிருந்தோமே. அப்போது கால்களை நெஞ்சுணர்ந்து வைத்தீரா என்ன? கால்கள் அறியும் நடையை நெஞ்சு அறியாது” என்றான். “போர்க்களத்தில் அம்பையும் வில்லையும் அறியவேண்டியவை கைகள்தான்.” கதன் “அங்கே நீர் வேறெதையாவது நினைப்பீரோ?” என்றான். “இல்லை, ஒன்றை மட்டும்தான்” என்றான் அர்ஜுனன் சிரித்தப.டி “அதைச்செய்யும்போது களத்தையும் எண்ணிக்கொள்வதுண்டு.”

கதன் சிரித்தான். “சொல்லும்” என்றான் அர்ஜுனன். “அவரை சந்திக்கும்படி இளைய யாதவர் தங்களுக்கு ஆணையிட்டுள்ளார்” என்றான் கதன். “எங்கு?” என்றான் அர்ஜுனன். "ஆணையில் அது இல்லை. ஆகவே அது துவாரகையாக இருக்கலாம்” என்றான் கதன். ”அல்ல, துவாரகையல்ல” என்றான் அர்ஜுனன். ”துவாரகை என்றால் அதை சொல்லியிருப்பார்.” கதன் “ஏன்?” என்றான். “அவர் துவாரகையிலிருந்து இவ்வோலை அனுப்பப்பட்ட அன்றே கிளம்பியிருப்பார். மதுராவுக்கோ மதுவனத்துக்கோ. மிக அருகே எங்கோதான் இருப்பார்” என்று அர்ஜுனன் சொன்னான்.

கதன் புன்னகைத்து ”அவ்வண்ணமெனில் அவர் உள்ளத்தடத்தை தாங்கள் உய்த்துணர வேண்டுமென எண்ணுகிறார்” என்றான். “எங்கு நிகழ்கிறது இந்த மணத்தன்னேற்பு?” என்றான் அர்ஜுனன  "முறைமைப்படி அது மதுவனத்தில் சூரசேனரின் அவைக்களத்தில்தானே நிகழும்?” என்றான் கதன். அர்ஜுனன் “ஆம்” என்றபின் ஒன்றும் சொல்லாமல் நடந்தான்.

அத்தனைபேரும் கால்பழகிவிட்டமையால் இயல்பாக ஆகிவிட்டிருந்தனர். ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொள்ளத் தொடங்கினர். “சென்றவர்கள் ஆவியாக எழுந்து இந்நேரம் பிரபாசதீர்த்தத்தில் நீராடத் தொடங்கிவிட்டிருப்பார்கள். அவர்கள் சென்றதுதான் குறுக்குவழி” என்றான் சங்கன். “நீரும் அவ்வழியே செல்லவேண்டியதுதானே?” என்றான் ஒருவன். “செல்ல எண்ணினேன், ஆனால் ஆவியை நீர் நனைக்குமா என்ற ஐயம் வந்தது” என்றான் சங்கன். பலர் சிரித்தனர்.

“ஏன் சிரிக்கிறார்கள்?” என்றான் கதன். “அச்சத்தை வெல்ல முதலில் நகைத்தனர். இப்போது உண்மையான உவகையுடன் சிரிக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “மாண்டவர்கள் தோற்றார்கள். நான் வென்று இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன், இதுவே இங்குள்ள ஒவ்வொருவரின் உள்ளமும் கொள்ளும் எண்ணம். போர்க்களத்திலிருந்து மீளும் வீரர்கள் இறந்தவர்களை எண்ணி உவகை கொள்வதை கண்டிருக்கிறேன்.” கதன் “நான் அவ்வண்ணம் எண்ணவில்லை” என்றான். “முதியவர்களையும் நோயுற்றவர்களையும் நோக்குங்கள். பிறர் இறக்கும் செய்திகள் அவர்களுக்கு ஆறுதலையும் அகத்துள் உவகையையும்தான் அளிக்கின்றன.”

மலைமேல் மூக்கு என நீண்டிருந்த பாறைகளில் இருந்து முடிச்சுகள் போடப்பட்ட வடங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றைத் தொற்றி மேலே சென்றார்கள். மலைமுடிகளை இணைத்துக்கட்டப்பட்டிருந்த கயிற்றுப்பாலத்தை நீர்த்துளி கொடிச்சரடில் செல்வதுபோல கடந்தனர். ”மெல்லமெல்ல கால்கள் பழகிவிட்டன போலும்” என்றான் கதன். “இல்லை, கால்களுக்கு நெஞ்சம் விடுதலைகொடுத்துவிட்டது” என்றான் அர்ஜுனன். “பயிற்சி என்பது உறுப்புகளிலிருந்து உள்ளத்தை விலக்கும் கலைமட்டுமே.”

பிரபாசதீர்த்தத்தை தொலைவிலேயே உணர முடிந்தது. அடுமனையிலிருந்து எழுவதுபோல கண்ணுக்குத்தெரியாத நீராவி வந்து முகத்தில் பரவியது. வெண்முகில்போல எழுந்து கிளைவிரித்து குடைசூடி வான்சரிவில் நின்றது. பாறைவளைவுகளில் வியர்த்து ஊறி நீர் வழிந்தது. இரு கரியபாறைகளின் இடுக்கு வழியாக உள்ளே நுழைந்தபோது பாறைகள் சூழ்ந்த வட்டத்தின் நடுவே ஆழமற்ற சுனை தெரிந்தது. அதிலிருந்து வெண்ணிற ஆவி எழுந்து வளைந்தாடியது. அதனூடாக மறுபக்கம் தெரிந்த கரியபாறை அலையடித்தது.

மலை மேலிருந்து மெல்லிய வெண்ணிறப் பட்டுத்துணிபோல சிறிய அருவி ஒன்று சுனைநீர் மேல் விழுந்துகொண்டிருந்தது. மிகுந்த உயரத்திலிருந்து விழுந்தமையால் காற்றில் அருவியின் கீழ்நுனி அலையடித்து சிதறிப்பறந்தது. நீர்விழுந்த இடத்தைச்சுற்றியிருந்த பாறைகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டின. சுனை ஆழமற்றது எனத்தெரிந்தது. அடித்தளத்தின் கூழாங்கற்பரப்பு மிகமேலே எழுந்து தெரிந்தது. அங்கிருந்த வேறுபாட்டை அதன்பின்னர்தான் அர்ஜுனன் அறிந்தான். அப்பாறைகளில் எந்த வகையான செடிகளும், பாசிகளும் வளர்ந்திருக்கவில்லை. நீருக்குள் மீன்களோ தவளைகளோ நீர்ப்பூச்சிகளோ இல்லை.

“கனவில் விழும் அருவிபோலிருக்கிறது” என்றான் கதன். ”ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “தெரியவில்லை. இது உயிரற்றது என்று தோன்றுகிறது. இருக்கமுடியாதது...” என்றான். “ஏனென்றால் இங்கே செடிகளோ உயிர்களோ இல்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், உண்மை” என்றான் கதன். “இதற்குள் நெருப்பு வாழ்கிறது என்கிறார்கள்...” அர்ஜுனன் “ஆம், கந்தகத்தின் நெடி அடிக்கிறது. மேலே எரிமலைவாய் இருக்கக்கூடும். அதிலிருந்து வரும் நீர் இது.”

“கொதிக்கும் என நினைக்கிறேன்” என்றபடி குனிந்து சுனையைத்தொட்ட கதன் “குளிர்ந்திருக்கிறது” என்றான். அர்ஜுனனும் வியப்புடன் குனிந்து நீரைத்தொட்டான். சூழ்ந்து வந்தவர்கள் கைகளைக்கூப்பியபடி கண்ணீருடன் சுனைநீரில் இறங்கினர். "ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை பிழைகள் செய்தவர்கள்...” என்றான் கதன். “வியப்பாக உள்ளது, இத்தனை கடுந்தொலைவு ஏறிவரும்படி பெரிய பிழைகளா அவை?”

அர்ஜுனன் “பிழைகள் பெரியவை அல்ல. இத்தனை தொலைவுக்குச் சென்று அவர்கள் அதை செய்திருக்கிறார்கள். அந்தத்தொலைவை அவர்கள் திரும்பக்கடந்தாகவேண்டும் அல்லவா?” என்றான். விம்மி அழுதபடியும் உடல்நடுங்கியபடியும் நீரிலிறங்கி அருவியை நோக்கி சென்றனர். அதன் கீழே நின்று நனைந்தபின் விலகினர். ஒருவன் “ஆ” என்று அலறியபடி விழுந்தான். நீர் புகைந்து மேலெழுந்தது. “ஏன் ஏன்?” என்றான் கதன்.

“பிழைசெய்தவர்கள் சிலரை இந்த அருவி தண்டிக்கும் வீரரே” என்றான் வணிகன். “எப்போது இதில் கொதிநீர் வருமென எவராலும் சொல்லமுடியாது. பிரபாசன் முடிவெடுப்பான் அதை.” அர்ஜுனன் புன்னகைத்து “இங்கு இத்தனை தொலைவுக்கு ஏன் வருகிறார்கள் என்று புரிகிறதல்லவா? தெய்வமே வந்து தண்டித்தாலொழிய இவர்களுக்கு நெஞ்சு ஆறாது” என்றான். கொதிநீர் விழுந்து சுட்டவனை இருவர் அள்ளி குளிர்நீரிலிட்டு ஆறச்செய்தனர். அவன் பற்களைக் கடித்து அலறலை தன்னுள் அடக்கிக்கொண்டான்.

கைகள் கூப்பியபடி அர்ஜுனன் சென்று அருவிக்குக் கீழே நின்றான். அவன்மேல் குளிர்நீர் கொட்டியது. அவன் பெருமூச்சுடன் திரும்பும் கணத்தில் கொதிநீரின் ஓர் அலை அவன் தோளை அறைந்தது. அவன் அருகே நின்றவன் அலறிவிழுந்தான். அவன் அசையாமல் நின்றபின் மெல்ல இறங்கி குளிர்நீருக்குள் மூழ்கினான். கதன் அருவியில் நீராடிவிட்டு சுனையில் பாய்ந்து அணுகி "அஞ்சிவிட்டேன்... உங்கள்மேல் கொதிநீர் விழுந்தது அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “எரிகிறதா?” என்றான் கதன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“நீர்விழுந்த கணத்தில் உணர்ந்தேன். துவாரகை அருகே உள்ள ரைவத மலையில்தான் இளைய யாதவர் இருக்கிறார். நான் அங்கு செல்ல வேண்டும்” என்றான் அர்ஜுனன். “எங்ஙனம் அறிந்தீர்?” என்றார் கதன். “அறிந்தேன். பின்னர் அதற்கான சொல்லூழ்கையை கண்டடைந்தேன். அவர் தனித்து வந்திருப்பார். அவரை அறியாத மாந்தர் உள்ள இடத்திலேயே தங்கியிருப்பார். ரைவத மலையின் தொல் குடிகளான சிசிரர் இளைய யாதவர் எவரென அறியாதவர். வெறும் ஒரு மலை வணிகராக முன்னர் அங்கு சென்று சிந்நாள் தங்கிய வரலாறும் அவருக்குண்டு.”

கதன் “ஆம், சரியாகத்தான் தெரிகிறது” என்றான். “ரைவத மலையில் மக்கள் அவரை தங்களவர் என்று என்றும் வரவேற்பார்கள் .மணத்தன்னேற்பு நிகழும் வரை அங்குதான் இருப்பார்” என்று அர்ஜுனன் சொன்னான். கதன் ”நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் இருவரும் ஒற்றைப்பறவையின் இரு சிறகுகள் என்று சூதன் ஒரு முறை பாடினான். ஒரு சிறகசைவது பிறிதொரு சிறகுக்கு எப்படி தெரிகிறது என்று பறவையே அறியாது என்பார்கள்.”

அர்ஜுனன் புன்னகைத்தான். சுனையிலிருந்து கைகூப்பியபடி ஏறி நீர் சொட்டும் உடையுடன் சென்று அங்கிருந்த பிரபாசனின் சிறிய ஆலயத்தை அணுகினர். கல்லால் ஆன பீடத்தின்மேல் வலக்கையில் துலாக்கோலுடன் இடக்கையில் அறிவுறுத்தும் சுட்டுவிரலுடன் அமர்ந்திருந்தான் பிரபாசன். இடது மேல்கையில் வஜ்ராயுதமும் வலதுமேல்கையில் தாமரையும் இருந்தன. அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டான். ஒரு கணம் எவரோ பிடரியை தொட்டதுபோலிருந்தது.

திடுக்கிட்டு விழித்து “ஆ” என்றான். “என்ன?” என்றான் கதன். “இந்த இடம்தான்” என்றான். “ஏன்?” என்றான் கதன். “இளைய யாதவரையும் மூத்த யாதவரையும் இங்கே கண்டேன்.” கதன் விளங்காமல் “இங்கா?” என்றான். “ஆம், இங்குதான். ஓர் உருவெளிக்காட்சி. அவர்கள் இருவரும் ஆடையில்லாமல் இங்கே நீராடுகிறார்கள். மலரூர்தி ஒன்று மேலிருந்து இறகுதிர்வதுபோல அவர்களை நோக்கி இறங்குகிறது. அதில் அவர்கள் இருவரும் ஏறிக்கொள்கிறார்கள்.”

கதன் திகைத்து சொல்லிழந்து வாய்திறந்து நின்றபின் “அப்படியென்றால்?” என்றான். “இங்குதான்” என்றான் அர்ஜுனன்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 6

துவாரகையில் இருந்து பன்னிரெண்டு நாள் நடை செல்லும் தொலைவில் இருந்தது தொன்மையான ஜனபதமாகிய கஜ்ஜயந்தம். நூற்றியெட்டு மலைக் குடிகள் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ஊர்களின் பெருந்தொகை அது. அதன் நடுவே அமைந்த மலை ஒன்றன் மேல் ஒன்றென மூன்று பெருங்குன்றுகளும் இரு இணைப்புக்குன்றுகளும் கொண்டது. கேஜ்ரி மரங்கள் மட்டுமே நின்றமையால் அது கஜ்ஜயந்தம் என்று பெயர் கொண்டிருந்தது. அம்மக்கள் கஜ்ஜர்கள் எனப்பட்டனர். அக்குன்றுகளை ஒன்றிணைத்து வேதங்களின் சௌனகபாடங்கள் உருவான காலகட்டத்தில் ஒரு தொல்நகரம் எழுந்தது. அதை கஜ்ஜயந்தபுரி என்றனர்.

விண்ணில் எழுந்து தங்கள் மண்ணை ஆளும் சூரியனே கஜ்ஜர்களின் தெய்வம். ஒவ்வொரு நாளும் முதற்கதிரை நோக்கி கைகூப்பி நின்று வழிபடுவது அவர்களின் குலவழக்கம். அவர்களின் பட்டிகளில் மூங்கில்மேல் எழுந்து காற்றில் துடிக்கும் வெண்கொடியில் சூரியனே பொறிக்கப்பட்டிருந்தான். அன்று அப்பகுதி வருடத்தில் ஏழுமழை மட்டுமே பெறும் நிலம் என்னும் பொருளில் சப்தவர்ஷம் என்று பெயர் பெற்றிருந்தது. மாடுகளை மேய்க்குமளவுக்கு அங்கே புல் செழிப்பதில்லை. ஆகவே ஆடுகளை மேய்க்கும் உபயாதவர்கள் அங்கே குடிகளை அமைத்து ஊர்களாக பெருகினர்.

ஆனால் அவர்களின் ஊர்கள் என்பவை நிலையானவை அல்ல. ஒவ்வொரு குடிக்கும் ஊர் என்று ஒன்றிருக்கும். அது அவர்களின் குடித்தெய்வங்களும் மூதாதையரும் கோயில்கொண்ட மரத்தடிகளும் பாறையடிகளும்தான். ஆண்டில் ஒன்பது மாதகாலம் அங்கே மானுடர்கள் இருப்பதில்லை. ஆட்டுப்பட்டிகளை அமைத்தபடி விரிந்த வெற்றுநிலத்தில் ஆயர்கள் ஆண்டுமுழுக்க அலைந்துகொண்டிருப்பார்கள். மழைபெய்ததும் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிவந்து ஒன்றிணைந்து குடில்கட்டி குடிகொள்வார்கள். தெய்வங்களுக்கும் மூதாதையருக்கும் ஆண்டுதிறை கொடுப்பார்கள். மூதாதையர் காலடியில் புதைத்திட்டுச்சென்ற மதுவை அகழ்ந்தெடுத்து மூத்த கருங்கிடாவை வெட்டி உடன் படைத்து வணங்குவார்கள்.

மழைக்காலத்தில் ஏழு உண்டாட்டுகள் நிகழும். ஆடலும் பாடலும் ஏறுதழுவுதலும் சிலம்பாட்டமும் மூதாதைசொல்கூர்தலுமாக அவர்கள் மகிழ்வார்கள். அஜபாலவிருத்தம் என்று சொல்லப்பட்ட ஆயர்குடிகளின் பேரவை அப்போதுதான் கூடும். நூற்றெட்டு குடிகளின் சொல்கொண்டார்களும் சப்தவர்ஷத்தின் அச்சு என ஓங்கி நின்றிருந்த கஜ்ஜயந்த மலையின் மீது கூடுவர். குடிவழக்குகள் பேசித்தீர்க்கப்படும். மேய்ச்சல் நிலங்கள் பங்கிடப்படும். பெண்கொண்டு பெண்கொடுப்பார்கள். அரிதாக மைந்தர்கொடையும் நிகழும். நோயுற்றோ பிறிதாலோ ஆடுகள் குறைந்த குடிகளுக்கு மிகை ஆடுகள் கொண்ட குடிகள் ஆட்டுக்குட்டிகளை அளிப்பார்கள். பத்துக்கு இரண்டு பெருக்கம் என்பது அதற்கான தொல்கணக்கு.

நூற்றெட்டு குடிகளும் பெருகப்பெருக அங்கே ஆண்டில் இருமுறையும் பின்னர் மும்முறையும் குடியவை கூடவேண்டியிருந்தது. நூற்றெட்டு குடிகளுக்கும் பொதுவாக குடித்தலைவர் ஒருவரை தேர்வுசெய்தனர். முதலில் சுழற்சிமுறையில் தலைமை தேர்வுசெய்யப்பட்டது. நூற்றெட்டு குடிகளுக்கும் அதில் நிறைவு எழாமையால் நூற்றெட்டு குடிகளுக்கும் பொதுவாக எக்குடியையும் சேராத தலைமைக்குடி ஒன்று உருவாக்கப்பட்டது. கஜ்ஜயந்தர்கள் என அக்குடிமரபு அழைக்கப்பட்டது.

நாளடைவில் கஜ்ஜர்கள் நிலைத்த ஊர்கள் கொண்டவராயினர். ஊர்களை இணைக்கும் பாதைகள் உருவாயின. அப்பாதைகளின் பொதுமுடிச்சில் இயல்பாக சிறிய சந்தைகள் தோன்றின. அச்சந்தைகளுக்கு புறநிலத்து வணிகர்கள் வந்து ஆட்டுத்தோலும் உலர்ந்த இறைச்சியும் கொண்டு செம்பு, வெண்கலப் பொருட்களையும் இரும்புப் படைக்கலங்களையும் உப்பையும் மரவுரியாடைகளையும் கொடுத்து மீண்டனர்.

சந்தைகள் விரிந்தபோது ஊர்களும் பெருகிப்பரந்தன. அவர்களிடம் வரிகொண்ட கஜ்ஜயந்தபுரி நகரமென்றாயிற்று. அங்கே வெண்கல் சுவர்கள் மேல் சுண்ணம் பூசிய வெண்குவடுகள் கொண்ட மாளிகைகள் எழுந்தன. கீழே நின்று நோக்குபவர்களுக்கு அது நூற்றுக்கணக்கான காளான்கள் முளைத்த மலைச்சரிவு என தோன்றியது. சத்ரகபுரி என அதை சற்று கேலியுடன் சொன்னார்கள் அயல்வணிகர். கஜ்ஜர்கள் அவர்களின் மொழியில் குஜ்ஜர்கள் என ஆனார்கள்.

அரைப்பாலை நிலத்தில் ஆடு மாடு மேய்த்து வாழ்ந்த மக்களிடம் அம்மழைக் காலத்தை கடப்பதற்கான உணவுக்கு அப்பால் எப்போதும் செல்வம் சேர்ந்ததில்லை. எனவே அங்கு அயலார் படைகொண்டு வருவதோ, கொள்ளை தேடி மலைவேடர் புகுதலோ நிகழ்ந்ததில்லை. மாதவிடாய் குருதி அன்றி பிறிதை அறியாதவர் என்று அப்பால் வெண்பாலையில் வாழும் மக்கள் அவர்களை இகழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். தொன்று நிகழ்ந்து நூலென மறைந்த அறியா நெறிகளைக்கூட ரைவதகத்தில் சென்று காணலாம் என்று பயணிகள் சொன்னார்கள். பிரம்மனிடம் இருந்து துயின்று எழா நல்ஊழ் பெற்று வந்த நாடு என்று சொன்னர்கள் சூதர்கள். எனவே பகையறியாது கோல்நாட்டி குடியாண்டனர் கஜ்ஜயந்தபுரியின் தலைவர்கள்.

கஜ்ஜயந்த குடியில் நூல்பயின்ற முதல் அரசர் ரைவதகர். நூல்கள் அறிந்த முதல் அரசரும் அவரே. அவரது புகழைப் பாடும் தொன்மையான நூல் ரைவதக வைபவம். தொன்மையான நூலாகிய ரைவதக வைபவத்தின் கூற்றுப்படி ரைவதகர் மகாளய அமாவசை அன்று நள்ளிரவு முகில் விலகி ஒரே ஒரு தனி விண்மீன் மட்டும் விண்ணில் எழுந்த நேரத்தில் பிறந்தவர். கஜ்ஜயந்தபுரியின் அறுபத்தெட்டாவது குடித்தலைவரான சுதமருக்கு மைந்தனாகப் பிறந்த அவர் முதல் மூன்று வாரங்கள் ஓசை எழுப்பவோ, உடலை அசைக்கவோ செய்யவில்லை. அன்னையிடம் முலை அருந்துவதையும், கழிப்பதையும் தவிர்த்தால் அச்சிறு உடலில் உயிர் இருப்பதற்கான சான்றுகளே தென்படவில்லை. மருத்துவர் வந்து நோக்கி “அம்மைந்தன் உயிர் பிழைக்க மாட்டான்” என்றார். பன்னிரெண்டு ஆண்டுகள் மைந்தனுக்காகக் காத்திருந்து தவம் இயற்றி அவனை ஈன்று எடுத்த அன்னையும் தந்தையும் இருபுறமும் அமர்ந்து விழிநீர் சிந்தினர்.

அந்நிலையில் அவ்வழி வந்த அருகநெறித் துறவி ஒருவர் மைந்தனை பார்க்கவேண்டும் என்று விழைந்தார். கஜ்ஜயந்தமலைக்கு அப்பால் பாலிதான மலையில் அமர்ந்த ரிஷபரின் வழிவந்த அவர்கள் விண்ணாடை அணிந்து மண்மேல் என்றிலாமல் உலவும் நெறியினர். கொல்லா நோன்பும் உவகை கொள்ளா உறுதியும் கொண்டவர்கள். மைந்தரையோ, பெண்களையோ விழிதூக்கி நோக்கும் வழக்கமில்லை என்பதால் அரசரும் அரசியும் வியந்தனர். அவரை அடிபணிந்து ஏத்தி அரண்மனைக்கு கொண்டுசென்று மைந்தனை அவர் கால்களில் வைத்தனர்.

குனிந்து அம்மைந்தனின் நெற்றிபொட்டை தன் விரல்களால் தொட்ட அருகர் “எட்டுவகை அசைவின்மைகளால் கட்டப்பட்டுள்ளது இச்சிறுவுடல். எட்டு முற்பிறவித் தளைகள் அவை. அவ்வெட்டையும் இன்று களைந்து எழுக!” என்றார். அக்கணமே குழந்தை கை கால்களை உதைத்துக் கொண்டு வாய் கோணலாகி வீறிட்டு அழத் தொடங்கியது. மெல்ல அதன் தலைதொட்டு வாழ்த்தி பின் ஒரு சொல்லும் சொல்லாமல் அருகர் திரும்பிச்சென்றார். நகைப்பும் அழுகையுமாக பாய்ந்து குழவியை எடுத்து தன் முலைகளோடு அழுத்திக்கொண்டாள் அரசி. அரசியின் கழுத்தில்கிடந்த பதக்கமாலையை தன் சிறுகைகளால் அது பற்றிக்கொண்டது.

மைந்தன் பிறந்த இருபத்தெட்டாவது நாள் இடையணி பூட்டி பெயரணிவிக்கும் நன்னாளில் வடக்கே சௌனகவனத்தில் இருந்து வந்த மகாவைதிகரான கிருபர் என்பவர் பிறந்திருப்பது ரைவத மனுவின் மானுட வடிவம் என்று தன் நுதல்விழியால் நோக்கி சொன்னார். முதன்மை மனுவாகிய சுயம்புமனு பெற்ற மைந்தர் இருவர் பெருவைதிகர்களான உத்தானபாதரும் பிரியவிரதரும். பிரியவிரதர் நான்குவேதங்களிலும் சொல்லெண்ணி கல்விகொண்டவர். பொருளுணர்ந்து இறுதிகண்டவர். அவர் ஸ்வரூபை, பர்கிஷ்மதி என்னும் இரு மனைவியரை கொண்டார். ஸ்வரூபை அக்னீத்ரன் முதலிய பத்து மைந்தர்களை பெற்றாள். பர்கிஷ்மதிக்கு உத்தரன், தாமசன், ரைவதன் என்னும் மூன்று மைந்தர் பிறந்தனர். காளிந்தி நதிக்கரையில் காமபீஜமந்திரம் கொண்டு தேவியை வழிபட்டு தன்னை அமரனாக்கிய ரைவதர் அறம் பிழைக்காது நாடாண்டார். ஆகவே அவர் மனு என்னும் தகுதி பெற்றார்.

மலைமேல் கேஜ்ரி மரத்தடியில் ரைவதரின் ஆலயம் ஒன்றை அமைத்து அங்கே மைந்தனை மலர்த்தாலத்தில் படுக்கவைத்து அவனுக்கு ரைவதகன் என்று பெயரிட்டார். அறச்செல்வனாகிய மனுவைப் பெற்ற சுதமரை மண்ணாளும் தகுதி பெற்ற அரசர் என்று அறிவித்து அரியணை அமர்த்தி மஞ்சளரிசியும் மலரும் பொன்னும் இட்டு மங்கலநீரூற்றி செங்கோல் கொடுத்து வெண்குடைசூடச்செய்தார். கஜ்ஜயந்த அரசகுலம் அவ்வாறு உருவானது. அவர்கள் கேஜ்ரி மரக்கிளையாலான செங்கோலும் அம்மலர்களைப்போன்று அணிகொண்ட மணிமுடியும் கொண்டனர்.

ஐந்து வயதில் வானில் சுழலும் புள்ளை கீழே அதன் நிழல் நோக்கி வீழ்த்தும் வில்திறன் கொண்டவரானார் ரைவதகர். பன்னிரு வயதில் புரவியில் நின்றபடி குன்றிறங்கிப் பாயும் திறன் கொண்டவரானார். கஜ்ஜயந்த குலத்தின் மாவீரன் என அவரை வாழ்த்தினர் குடிமூத்தார். அவர் பதினெட்டு வயதில் கஜ்ஜயந்தபுரியை விட்டு அயல்வணிகர் குழு ஒன்றுடன் கிளம்பிச் சென்று இரண்டாண்டுகள் கடந்து திரும்பி வந்தார். அப்போது செம்மொழியை நன்கு பேசவும் எழுதவும் கற்றிருந்தார். குஜ்ஜர்களின் தனிமொழியாகிய குர்ஜரியை செம்மொழி எழுத்துக்களில் எழுதவும் வாசிக்கவும் தன் மக்களுக்கு கற்பித்தார்.

ரைவதகரின் இருபத்திரண்டாவது வயதில் தந்தை உயிர் நீக்க கஜ்ஜயந்தபுரியின் செங்கோலை தான் ஏற்றுக்கொண்டார். கஜ்ஜயந்த குலத்து மன்னர்களில் மிக இளம் வயதில் அரியணை அமர்ந்தவர் இவரே என்றனர் குலப்பாடகர்கள். வாலுக குடியின் கூர்மரின் மகளாகிய சைந்தவியையும் அவளுடைய இரு தங்கையரையும் மணந்துகொண்டார். அம்மூவரிலாக எட்டு குழந்தைகளுக்கு தந்தையானார். அவர்களில் மூத்தவராகிய பத்ரபானுவை தனக்குப் பின் முடிசூட்ட வேண்டிய பட்டத்து இளவரசனாக அறிவித்தார்.

ஒன்று போல் பிறிதொரு நாளென்று என்றும் நிகழ்வதே நிகழ்ந்து காலம் கடந்தபோது நூல் ஆய்ந்து, கானாடி, மைந்தர் கொண்டாடி மகிழ்ந்திருந்த ரைவதகரின் வாழ்வில் ஒரு அருநிகழ்வு நிலையழிவு கொணர்ந்தது. குஜ்ஜர குடிகள் வாழ்ந்த விரிநிலத்திற்குத் தெற்கே மாளவத்தின் எல்லையில் இருந்த முட்புதர்க் காடுகளிலிருந்து கிளம்பி வந்த கண்டர்கள் என்னும் மலைவேடர்கள் அவர்களின் ஊர்களுக்குள் புகுந்து ஆடுகளையும், கூலக்குவைகளையும், உலோகப்பொருட்களையும் கவர்ந்து செல்லத் தொடங்கினர். அவர்கள் புகுந்த சிற்றூர்களில் இருந்த ஆண்களை வெட்டி வீழ்த்தி, பெண்களை சிறைகொண்டனர். இல்லங்களுக்குள் செல்வங்களை குவித்திருக்கின்றனர் என்று ஐயமுற்று அடித்தளம் வரை தோண்டி அனைத்தையும் புரட்டிப்போட்டு எரித்து சாம்பல்மேடாக ஊர்களை விட்டுச்சென்றனர்.

ஆடுகளை இழந்து, குடி அழிந்து, கன்னியரை அளித்து மாளாக் கண்ணீருடன் குஜ்ஜர குல மக்கள் குன்றுநகர் நோக்கி வந்தனர். ஒவ்வொரு நாளும் தன் அரண்மனை வாயிலில் வந்து நின்று நெஞ்சறைந்து கதறிய மக்களை நோக்கி ரைவதகர் சினந்தார், கண்ணீர்விட்டார், செய்வதறியாது பதைத்தார். விரிந்த சப்தவர்ஷநிலத்தை முழுமையாக எல்லை வளைத்துக் காக்கும் படைவல்லமை அவருக்கிருக்கவில்லை. அப்படி ஓர் அறைகூவல் அதற்கு முன்பு வந்ததே இல்லை.

அம்மலைக் குடிகளை ஒடுக்காமல் விடுவது அரசமுறை அல்ல என்று துணிந்தார். ஆனால் அவர் நாட்டில் போரும் படைக்கலமும் பயின்ற சிலரே இருந்தனர். தன் மெய்க்காவலர்களையும், அரண்மனைக் காவலர்களையும் திரட்டி சிறுபடை ஒன்றை அமைத்துக் கொண்டு எல்லைப்புறச் சிற்றூர் ஒன்றில் குடிகளென மாறுவேடமிட்டு தங்கியிருந்தார் ரைவதகர். பன்னிரெண்டு நாட்கள் அங்கே அவர்கள் இருந்தனர். மலைக்குடிகளை கவரும்பொருட்டு கொழுத்த கன்றுகளை எல்லைப்புறத்தே மேயவிட்டனர். வரப்போகும் எதிரிக்காக ஒவ்வொரு கணமும் நூறு சூழ்கைகளை உள்ளத்தில் சமைத்து அழித்தபடி காத்திருந்தனர்.

எண்ணியதுபோலவே ஒருநாள் தொலைவில் புழுதி முகில் எழுந்து நிற்கக் கண்டான் பாறைமேலிருந்த கண்நோக்குக் காவலன். குறுமுழவை அவன் மீட்ட ரைவதகர் “கிளம்புக!” என்று ஆணையிட்டார். “இது நம் முதல் வெற்றி. நம் மண்ணையும் மைந்தரையும் காப்போம். எழுக!” அவர்கள் தங்கள் விற்கலன்களையும் வாள்களையும் எடுத்துக்கொண்டு போர்க்குரல் எழுப்பி எழுந்தனர். தொலைவில் அடிவானைத் தாங்கி நிற்பதுபோல் தெரிந்த செம்மண் குன்றுகளின் மேல் உருண்டு நின்ற பெரிய கரும்பாறைகளில் குதிரைகளின் குளம்பொலிகள் எதிரொலிக்கத் தொடங்கின. பின்னர் தென்கிழக்கே தொலைவில் சுழிக்காற்று அணுகுவதைப்போல மலைவேடரின் குளம்படிகள் கிளப்பிய புழுதி எழுவதை ரைவதகர் கண்டார்.

தென்கிழக்குத் திசையில் இருந்து செம்பட்டுக்குள் இருந்து பாசிமணி மாலையை உருவி நீட்டியதுபோல ஒன்றன் பின் ஒன்றென வந்தகொண்டிருந்த கண்டர்களின் புரவிப் படையை மலைப் பாறையின் உச்சியில் இருந்து நோக்கி ரைவதகர் திகைத்தார். “இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலா வருகிறார்கள்?” என்று அருகில் இருந்த குடித்தலைவரிடம் கேட்டார். “ஆம், அரசே. அவர்கள் அங்கு முள்நிறைந்த மலைக்காடுகளுக்குள் உண்ணிகள் போல பெருகி வாழ்கிறார்கள். சிறகு கொண்டு அவை காற்றிலேறி சூழ்வதுபோல முடிவிலாது வந்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார் அவர்.

“வெறும் கன்றுகளை கொண்டு செல்லவா வருகிறார்கள்?” என்றார் ரைவதகர். “கன்றுகளுக்காக அல்ல, பெண்களுக்காக” என்றார் இன்னொருவர். “அவர்கள் குடியில் பெண்கள் அரிது. அவர்கள் கரியதோற்றமும் பேருருவும் கொண்டவர்கள். இனிய மண் நிறமும் சிற்றுருவும் கொண்ட எங்கள் பெண்கள்மேல் பெரும் காமம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கவர்ந்து செல்லும் நமது பெண்கள் அவர்களுக்கு அஞ்சி உடல் நலிந்து செல்லும் வழியிலேயே உயிர் துறக்கிறார்கள். இறந்தவர்களை செல்லும் வழியோரம் பாறைகளிலேயே வீசிவிட்டுச் செல்கிறார்கள். இங்கிருந்து அவர்களின் முட்காடுகளின் பாதைகளின் இருபுறமும் வெள்ளெலும்புகள் என நமது பெண்கள் கிடப்பதை காணலாம்” என்றார் குடித்தலைவர்.

இளையோன் ஒருவன் “அஞ்சி உயிர் துறந்த பெண்களை அப்போதும் விடாமல் சடலங்களுடன் உறவு கொள்கின்றனர் என்கிறார்கள் சிலர்” என்றான். “ஆனால் அங்குசென்று வாழும் நம்குடிப்பெண்களுக்குப் பிறக்கும் செந்நிறக்குழவிகளை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். அக்குழவிகளை தங்கள் தெய்வங்களுக்கு உகந்தவை என எண்ணி மலர்சூட்டி விழவு கொள்கிறார்கள்” என்றான் இன்னொருவன். “செந்நிறமே தெய்வங்களுக்குரியது என்று அவர்களின் குடித்தெய்வம் பூசகரின் உடலில் எழுந்து சொன்னதாம். செந்நிறக்குழந்தைகளை தெய்வங்களின் மலர்கள் என்கிறார்கள்.”

ரைவதகர் எழுந்து “நாம் அவர்களை எதிர்கொள்வோம்” என்றார். வில்லெடுத்து வளைத்து அம்பு தொடுத்து காத்துநின்றார். புரவிக் குளம்பொலிகள் அவர்களைச் சூழ்ந்திருந்த மலைகளுக்குமேல் உருண்டு அசைவற்று நின்ற பாறைகளில் முட்டிப் பெருகி திசைகளென மாறி சூழ்ந்துகொண்டன. “ஒலிகளை கேட்காதீர்கள். முற்றிலும் செவிகளை மூடிக்கொள்ளுங்கள். அவை சித்தத்தை மயக்குகின்றன. அக்குதிரைகளை மட்டுமே பாருங்கள். ஆணைகளுக்கு என் கைகளை நோக்குங்கள்” என்று ரைவதகர் ஆணையிட்டார். தன் கையில் செவ்வண்ணக்கொடி ஒன்றை சுற்றிக்கட்டிக்கொண்டார்.

“நமது அம்புகள் குறுகிய தொலைவு மட்டுமே செல்லக்கூடியவை. நாம் சிறு பறவைகளை மட்டுமே வேட்டையாடி வாழும் இளம்பாலை நிலத்து மக்கள். இங்கிருந்து அவர்களை வீழ்த்த முடியாது. நம் எல்லைக்குள் அவர்கள் நுழைவதுவரை காத்திருப்போம். அதோ இரு விரல்களென விரிந்துள்ள அப்பாறைகளுக்கிடையே இருக்கும் இடுக்கு வழியே நமது ஊருக்குள் நுழைவதற்கான சிறிய வாயில். அவர்கள் எத்தனைபேரானாலும் ஒவ்வொருவராக சற்று தயங்கியே உள் நுழைய முடியும். அதுவே நமது இலக்கு என்று இருக்கட்டும்” என்றார் ரைவதகர்.

அவரது ஆணைப்படி குஜ்ஜர்களும் காவலர்களும் தங்கள் விற்களை நாணேற்றி அவ்வூரைச் சூழந்து நின்ற சிறு குன்றுகளின் உருளைப்பாறைகளுக்கு பின்னால் பதுங்கிக்கொண்டனர். அனைவரும் விழிகளிலிருந்து மறைய அந்தப் பாறைகள் கோல்படக் காத்திருக்கும் பெருமுரசுகளின் தோல்பரப்புகள் என விம்மி நின்றன. ரைவதகரின் ஆணைப்படி அவ்வூரின் அனைத்துப் பெண்களும், குழந்தைகளும் ஊரிலிருந்து பின்வாங்கி அப்பால் விரிந்து கிடந்த முட்புதர் வெளியின் ஊடாகச்சென்ற பாதையில் சென்று தொலைவில் ஏழு மாபெரும் உருளைப் பாறைகள் அமர்ந்த மொட்டைக்குன்றை அடைந்து அங்குள்ள மடம்புகளிலும், குழிகளிலும் பதுங்கிக்கொண்டனர்.

அத்தனை மலைப்பாறைகளும் முரசுகள் என ஒலி எழுப்பத் தொடங்கியபோது கண்டர்களில் முதல்வீரன் பிளவுபட்ட பாறையின் இடைவெளி வழியாக எல்லைக்குள் நுழைந்தான். அக்கணமே நெஞ்சில் தைத்த அம்புடன் புரவியிலிருந்து வீழ்ந்தான். அவன் அலறல் ஒலி கேட்டதுமே அவனைத் தொடர்ந்து வந்த வீரன் கடிவாளத்தை இழுப்பதற்குள் அவனும் வீழ்ந்தான். “பின்னால் செல்லுங்கள்! பின்னால் செல்லுங்கள்!” என்று அங்கு எவரோ கூவுவது கேட்டது. ஆனால் இறுதியில் வந்துகொண்டிருந்த வீரன் வரை அவ்வாணை சென்றடையாததால் அணை கட்டி தேக்கப்பட்ட ஓடை போல புரவிநிரை தேங்கி ஒன்றுடன் ஒன்று முட்டி சுழலத் தொடங்கியது. அவர்களில் தலைவனை அடையாளம் கண்டு அவனை அம்பால் வீழ்த்தினார் ரைவதகர். அவன் விழுந்ததும் சூழ நின்றவர்கள் கல்பட்ட நீர் அலைவளையங்களாகி விரிவதுபோல விலகினர்.

“அணுகுங்கள்… விடாது அம்புசெலுத்துங்கள்” என்று கையசைத்துக்கொண்டே பாறை மறைவிலிருந்து பாறை மறைவிற்கு ஓடி அவர்கள் மேல் அம்பு செலுத்தினார் ரைவதகர். ஒவ்வொருவரும் கைகாட்டி பிறருக்கு ஆணையை அறிவித்தபடி பாறையிலிருந்து பாறைக்குச் சென்று அணுகி ஒளிந்தபடி அம்பு எழுப்பினர். ரைவதகரின் அம்புகள் மட்டுமே அத்தனை தொலைவு செல்லக்கூடியவையாக இருந்தன. குஜ்ஜர்களின் பிற அம்புகள் கண்டர்களை சென்றடையவில்லை. ஆனால் மறைவிடத்திலிருந்து வந்த தாக்குதலை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்பாறைவழி அத்தனை சிறியதென்பதையும் கணித்திருக்கவில்லை. அஞ்சியும் குழம்பியும் கூச்சலிட்டனர். அம்பு பட்டு விழுந்துகொண்டே இருந்த கண்டர்களைக் கண்டு அஞ்சி பின்னால் சென்றனர்.

அதற்குள் அவர்களுக்குரிய அடுத்த தலைவன் உருவாகியிருந்தான். அப்படையை வழிநடத்தி வந்த முதியவனின் இடத்தை தன் ஆணைத்திறனாலேயே எடுத்துக்கொண்ட இளையவன், மேலும் பல மடங்கு திறன் கொண்டவனாக இருந்தான். புரவிகளை பின்னால் நகரச் செய்ய முடியாது என்பதை அறிந்திருந்தான். கணங்களுக்குள் முடிவெடுத்து ஒற்றைச்சரடென வந்த புரவிப்படையின் முன்னால் வந்த புரவிகளை இரு நிரைகளாக மாற்றி பிளந்து இருபக்கமும் சுழன்று திரும்பி பின்னால் வரச்செய்தான். அவர்கள் பின்னால் சென்று தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஒவ்வொரு புரவிவீரனிடமும் நிற்கும்படி ஆணைகூவ அதற்குப் பின்னால் வந்த புரவி வீரனிடம் அவன் ஆணைகூவ ஆணை பாம்பின் உடலுக்குள் இரை நகர்வதுபோல செல்வதை கண்கூடாகக் காணமுடிந்தது. புரவிகள் மண்ணில் குளம்பூன்றி நின்றன. பாம்பு அசைவிழந்தபின் பின்பக்கமாக வளைந்து செல்லத்தொடங்கியது.

உளைசேற்றிலிருந்து பின்கால் எடுத்து வைத்து மெல்ல கரையேறும் விலங்குபோல தன் புரவிப் படையை அச்சிறு இடுக்கிலிருந்து மீட்டெடுத்தான். அவனுடன் வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு அம்புபட்டு வீழ்ந்து கிடந்தனர். அவர்கள் கிடந்த வகையிலிருந்து அம்புகள் படாத எல்லை ஒன்று உண்டு என்பதை அவன் உணர்ந்துகொண்டான். அவ்வெல்லைக்கு அப்பால் தன் படையை முழுமையாக விலக்கிக்கொண்டு அந்நிலப்பகுதியை ஆராய்ந்தான். உயரமற்ற குன்றுகளால் சூழப்பட்ட அந்தச்சிற்றூரின் காவல் என்பது மலைப்பாறைகளே என அறிந்தான். அவற்றுக்குப்பின்னால்தான் வில்லவர் ஒளிந்திருக்கிறார்கள் என்று கணித்தான். எதிரிகள் தாங்கள் ஒளிந்திருந்த மலைச்சரிவுகளிலிருந்து வெட்டவெளிக்கு வரமாட்டார்கள் என்பதை தெளிந்தான்.

மேலும் மேலும் பின்னகர்ந்து தனது புரவிப் படையை மூன்றாக பிரித்தான் கண்டர்களின் இளந்தலைவன். இரு பக்கங்களிலும் இரு பிரிவுகளை கைகளாக நீளசெய்தான். அவை வலையென விரிந்து அவ்வூரையும் சூழ்ந்த குன்றுகளையும் ஒட்டுமொத்தமாக வளைக்கத் தொடங்கின. நடுவே இருந்த சிறு வளைவில் மலைச்சரிவுகளில் உருண்டு வந்து நின்றிருந்த பெரும்பாறைக்குப்பின்னால் தன் சிறுபடையை அணிவகுத்து நிற்கச் சொல்லி அசைவின்றி காத்திருந்தான்.

ரைவதகர் கண்டர்களின் படை பின்வாங்குவதைக் கண்டார். அச்செயலில் இருந்த முழுமையான ஒழுங்கு அங்கு ஒரு சிறந்த தலைவன் உருவாகியிருப்பதை அவருக்குக் காட்டியது. கிண்ணத்தில் ஊற்றப்படும் நீர்த்தாரையென அந்தப்பாறையில் முட்டி இரண்டாகப் பிரிந்து வளைந்து பின் நகர்ந்து சென்ற புரவிப்படையை கண்டபோது அதற்கிணையான சூழ்கை ஒன்றை தன்னாலும் வகுக்கமுடியாதென்று எண்ணினார். குதிரைகள் பின்வாங்கிச் சென்றபின் செம்புழுதியில் அவர்கள் முற்றிலும் மறைந்தனர். அவ்வப்போது வால்களின் அசைவுகளும் படைக்கலங்களின் மின்னல்களும் மழுங்கிய குரல்களும் கேட்டுக்கொண்டிருந்தன.

“பின்வாங்குகிறார்கள்” என்று ஒருவன் கூவினான். இல்லை என்று ரைவதகர் தலை அசைத்தார். பின்பு செவிமேல் கைவைத்து கண்மூடி புரவிகளின் குளம்பொலி ஒசைகளில் வந்த மாறுதலை அறிந்தார். “அவர்கள் நம் ஊரை சூழ்ந்துகொள்கிறார்கள்” என்றார். “எப்படி?” என்றார் அருகே நின்ற குலத்தலைவர். “இம்மலைகளுடன் சேர்த்து நம்மை சூழ்ந்துகொள்கிறார்கள்” என்றார். “அது எப்படி? அவ்வளவு...” என்று அவர் சொல்வதற்குள் ஒருவன் புரிந்துகொண்டு “ஆம், அதுவே அவர்கள் செய்யக்கூடுவது. இன்னும் சில கணங்களில் நமக்கு பின்னால் வந்துவிடுவார்கள்” என்றான்.

ரைவதகர் “இப்பாறை மறைவுகளில் இருந்தால் நாம் வீழ்ந்தோம்” என்றார். “நாம் போரிடுவோம்... நம்மால் போரிடமுடியுமென காட்டியிருக்கிறோம். இப்போது பின்வாங்கினால் பின்பு நாம் எழுவதே அரிது” என்றார் மூத்தகுடித்தலைவர். “அவர்களை எதிர்கொள்ள நம்மால் முடியாது. நாம் மிகச்சிலரே. நாம் பின்வாங்கிச் செல்வோம். உகந்த இடமும் சூழலுமின்றி போரிடுதல் தற்கொலையாகும். நம் இளையோரை நாம் காக்கவேண்டும்” என்றார் ரைவதகர். அவரது ஆணைப்படி பாறை மறைவை விட்டு ஒவ்வொருவராக பின்னால் சென்றனர்.

“பின்னால் செல்லும்போதும் ஒரு பாறை மறைவிலிருந்து இன்னொரு பாறை மறைவிற்குச் செல்லுங்கள். ஒருபோதும் வெட்டவெளிக்குச் செல்லாதீர்கள்” என்று ரைவதகர் ஆணையிட்டார். அவர்கள் ஒளிந்து ஒளிந்து பின்வாங்கிச் செல்லும்போது எதிர்கொண்ட சிறுபாறை ஒன்றின் மேல் ஏறி ஒருவன் மறுபக்கம் குதித்தான். வானிலேயே நெஞ்சில் பாய்ந்த அம்புடன் அலறி கைகால் உதறி பாறையிடுக்குக்குள் விழுந்தான். போர்க்கலை பயிலாத குஜ்ஜர்கள் இருவர் அறியாது கூச்சலிட்டபடி அவனை நோக்கி எழுந்ததுமே அம்பு பட்டு வீழ்ந்தனர். பிறிதொருவன் பாறை மேல் ஏறி “நம்மைச் சூழ்ந்துள்ளார்கள்” என்று கூவினான். அவன் கழுத்தை தைத்த அம்பு அவன் குரலை துண்டாக்கியது.

குஜ்ஜர்கள் அதன் பின் எங்கு இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்று உணரவில்லை. கூச்சலிட்டு அலறியபடி ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய இடங்களை நோக்கி ஓடத்தொடங்கினர். வெட்ட வெளிக்கு வந்த அனைவரும் அக்கணமே கொல்லப்பட்டனர். “ஒளிந்து கொள்ளுங்கள். வெளியே வராதீர்கள்” என்று ரைவதகர் கூவிக்கொண்டு இருந்தார். ஆனால் வேட்டையோ, போரோ தெரியாத அம்மக்களால் ஒளிந்திருக்கும் அளவுக்கு பொறுமையை அமைக்க முடியவில்லை. “மூடர்களே, அமர்ந்திருங்கள். பொறுமை” என்று கூவியபடி அவர் எழுந்து கைவீசியதும் அவரது தோளைத் தாக்கிய பெரிய அம்பு ஒன்று அவரை அள்ளி பாறைவெடிப்பு ஒன்றுக்குள் வீசியது.

முதலைவாய் என திறந்திருந்த ஆழ்ந்த வெடிப்புக்குள் அவர் சறுக்கி உள்ளே சென்றார். அதன் இறுகிய கூர்முனையில் அவரது உடல் சிக்கிக்கொண்டது. கைகளால் உந்தி எழமுயல குருதியிலேயே வழுக்கி வழுக்கி உள்ளே சென்று மேலும் இறுகிக்கொண்டார். அவரது குருதி அவர்மேலேயே வழிந்தது. இடக்கையும் இடக்காலும் இரும்பால் ஆனவை போல எடை கொண்டிருந்தன. கழுத்துத் தசையும் வலக்கால் தொடைத் தசையும் வெட்டுண்டு விழுந்த விலங்கின் தசைபோல் துடித்துக்கொண்டிருந்தன.

“என்குடியே, என் மூதாதையரே, நான் என்ன செய்வேன்?” என்று ரைவதகர் நெஞ்சுக்குள் ஓலமிட்டார். “என் பெண்கள். என் மைந்தர். என் மூத்தோர்” என்று அவரது அகக்குகைகள் எதிரொலித்தன. “நீ ரைவதகன்” என ஒரு குரல் எங்கோ இருளில் முணுமுணுப்பதை இறுதியாக கேட்டார்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 7

எப்போதுமே தாக்குதலில் வெறிகொள்ளும் கண்டர்கள் அன்று தங்கள் தரப்பின் இறப்புகளால் பித்துநிலையில் இருந்தனர். எல்லைமீறிய எதுவும் களியாட்டமாகவே வெளிப்படுகிறது. உரக்க நகைத்தும் படைக்கலங்களைத் தூக்கியபடி நடனமிட்டும் அவர்கள் அவ்வூர் முழுக்க சுற்றிவந்தனர். இல்லங்களின் அடித்தளங்களை உடைத்து, அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தவற்றை சூறையாடினர்.

திண்ணைகளில் கைவிடப்பட்டிருந்த நடக்கமுடியாத முதியவர்களின் தலைகளை துண்டித்து தூக்கிவீசி கால்களால் பந்தாடி கூச்சலிட்டனர்.. வெட்டுக்கழுத்துகளைத் தூக்கி செந்நீரை பிறர் மேல் பீய்ச்சியடித்து சிரித்தாடினர். வயிற்றைக் கிழித்து குடல்களை இழுத்து குதிரைக்கால்களில் சிக்கவைத்து தெருநீள இழுத்துச்சென்றனர். பின்னர் இல்லங்களை தீவைத்துக்கொளுத்தி புகைக்குள் துள்ளிக்குதித்து வெறியாட்டமாடினர்.

ரைவதகர் எண்ணியதுபோல அன்று பாலைக்காற்று வீசவில்லை. எனவே கண்டர்களில் ஒருவன் முட்புதர்மண்டிய பாலை மென்மணலில் குளம்புகளும் காலடிகளும் பதிந்துசென்ற திசையை கண்டடைந்தான். வாள்சுட்டி “இவ்வழியே சென்றுள்ளார்கள்” என்று அவன் கூற, வெறிக்குரல்களுடன் கண்டர்கள் அச்சுவடுப்பாதையை தொடர்ந்தனர். சற்று கடந்ததும் குளம்புகளும் காலடிகளும் தனித்தனியாக பிரிநது போவதை கண்டனர். புரவிகளை நிறுத்திவிட்டு கைகளில் விற்களும் வாள்களுமாக அக்காலடிகளை தொடர்ந்து சென்றனர்.

“ஆடுகளை பிறகு கொள்வோம். பெண்களையும் பின்னர் கொள்வோம். இப்போது தேவை வெங்குருதி” என்றான் தலைவன். “ஆம்! ஆம்!” என்று அவர்கள் கூச்சலிட்டனர். மலையடுக்குகளுக்கு அப்பால் ஒரு பெரிய பள்ளத்தில் ஆடுகள் பட்டியடித்து கட்டப்பட்டிருந்தன. அவை ஓசையிடாமலிருக்க அவற்றின் மேல் ஈரப்புழுதி பரப்பப்பட்டிருந்தது. அவர்கள் பாறைகள் செறிந்த குன்றின்மேல் ஏறிச்சென்றனர். மடம்புகளில் குழவியரை முலைமேல் அணைத்தபடி ஒண்டியிருந்த கஜ்ஜர்கள் காலடியோசைகளை கேட்டு நடுநடுங்கினர். குழந்தைகளை மார்போடு அணைத்து அமர்ந்திருந்த அன்னையர் அஞ்சி மூச்சு விடும் ஒலியே புற்றுக்குள் இருக்கும் அரவ ஒலியென கேட்டன. தேனடைகளை தேடிக் கண்டடையும் வேடர்கள்போல பாறைகளில் தாவித் தாவி அவர்களை கண்டடைந்தனர்.

சிறு பள்ளங்களில் ஒளிந்திருந்த அவர்களை கிழங்கு பிடுங்குவதுபோல் கொத்துக்களாக அள்ளி தூக்கி எடுத்தனர் கண்டர்கள். அன்னையர் இடையில் இருந்த குழந்தைகளை தலைமயிரைப் பற்றி இழுத்து வெளியே எடுத்தனர். கருவறைக்குள் இருந்து வருவதுபோல அழுதபடி வந்த குழந்தைகளைத் தூக்கி குறிகளை நோக்கினர். ஆண் குழந்தைகளைத் தூக்கி மேலே வீசி வாள்முனையில் விழச்செய்தனர். கால்சுழற்றி பாறைகளில் அறைந்து சிதறடித்தனர். தூக்கி உச்சிப்பாறைகளிலிருந்து கீழே இருந்த பாறைகள்மேல் வீசினர். பேறுக்கு வழியற்ற முதுபெண்டிரை கூந்தல் பற்றி இழுத்து தலைவெட்டி நின்றாடிய உடலை உதைத்துச் சரித்தனர். கூந்தலைப்பற்றி தலையைச் சுழற்றி தொலைவுக்கு விட்டெறிந்தனர்.

பெண் குழந்தைகளின் கைகளை பின்னால் சேர்த்து தோல்நாடாக்களால் கட்டி புரவிகளுக்கு இருபுறமும் தொங்கவிட்டனர். பெண்களை கூந்தல் பற்றி இழுத்துச் சென்று ஆடைகளைந்து வெட்டவெளியில் அங்கேயே உடல்நுகர்ந்தனர். தெய்வங்களை அழைத்து அவர்கள் அலறிய குரல் விண்ணில் பட்டு கசங்கியது. பாலைக்காற்று சிதறி மறைந்தது. அதன்பின்னர் ஆடுகளை அவிழ்த்து ஒன்றோடொன்று சேர்த்துக்கட்டி இழுத்தபடி புழுதித்தடம் நீள பாலையில் சென்று மறைந்தனர்.

மூன்றாவது நாள் விடியற்காலையில் காலைப்பனி பாறையில் பட்டு குளிர்ந்து துளித்து உதிர்ந்த நீர்த் துளிகள் முகத்தில் விழ ரைவதகர் தன்னுணர்வு பெற்றார். எங்கிருக்கிறோம் என்று உணர்ந்தபின்பு அனல் சுட்டதுபோல் எழுந்து உடல் புரட்டி மேலெழ முயன்றார். தன் உடல் குருதிப்பசை ஒட்டி உலர்ந்த ஆடைகளுடன் இறுகியிருப்பதை அறிந்தார். உடலெங்கும் விடாய் எரிந்தது. முகத்தில் விழுந்த நீர்த்துளிக்கு வாய் காட்டி நீட்டிய நாவில் விழச்செய்து நக்கி நக்கி தொண்டையின் வறட்சியை போக்கினார். எளிய நீர்த்துளி கருந்திரிக்கு நெய் என உடலினுள் ஒடுங்கிய உயிரை தளிர்க்கச் செய்ததை உணர்ந்தார். குருதி உலர்ந்து பொருக்காய் இருந்த உடலில் சிற்றெறும்புகளும் வண்டுகளும் மொய்த்து அவர் அசைவில் எழுந்து பறந்து சுழன்றன.

அவர் விழுந்து கிடந்த பாறைப்பிளவின் மேல் விளிம்பில் இரு ஓநாய்கள் நின்று அவரைநோக்கி முனகி காலால் பாறையை பிராண்டியும் மெல்ல குரைத்தும் மூக்கு தாழ்த்தி நாநீட்டி வாய்விளிம்பை நக்கியும் தவித்தன. அவரது ஒரு கையும் காலும் செயலற்று இருந்தன. இன்னொரு கையை பாறை விளிம்பில் ஊன்றி மறுபாறையில் தோளை அழுத்தி கணுக்கணுக்வாக மேலே எழுந்து வந்தார். அவர் அசைவை அறிந்து அவரை நோக்கி உறுமி தலை தாழ்த்தி வால் நீட்டி பின்னடைந்தபின் பழுத்த விழிகளால் கூர்ந்து நோக்கி துணிவுகொண்டு மெல்ல மூக்கால் அணுகிய ஓநாயை பாராததுபோல் மேலே எழுந்தார்.

ஒரு ஓநாய் மேலும் துணிவுகொண்டு அவரை அணுகியது. மேலும் மேலும் அதை அணுக விட்டார். கையருகே திறந்த வாய்க்குள் வெண்பற்கள் வளைந்து தெரிந்தன. கடைவாயில் அரக்கு உருகியதுபோல உதடுகளின் பிசிறுகள் எச்சில் ஊறி சொட்டி வெளியே மலர்ந்திருந்தன. அதன் வாய் கையருகே வருவது வரை காத்திருந்துவிட்டு ஒரே கணத்தில் அம்பால் அதன் கண்ணை குத்தினார். கண்ணில் இறங்கிய அம்புடன் சில்லென்ற ஒலி எழுப்பி அலறி மறுபக்கம் பாய்ந்து பாறைச் சரிவுகளில் விழுந்து எழுந்து மீண்டும் அலறி ஓடியது ஓநாய். அதன் தோழியும் பின்னால் பாய்ந்து தொடர்ந்தது.

இரு ஓநாய்களும் வால் சுழற்றி ஊளையிட்டபடி ஓடுவதை கேட்டார். தலைசுழன்று கீழே விழுந்துகொண்டே இருப்பதுபோல உளமயக்கு ஏற்பட்டது. பற்களைக் கடித்து சற்று நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் தோளையும் கையையும் உந்தி மேலே வந்து புரண்டு படுத்து உருண்டு பெரிய பாறையின் மேல் ஏறி கையூன்றி எழுந்து கால்கள் தள்ளாட நின்றார். பின்னர் கண்களைத் திறந்து வானைநோக்கினார். முகிலற்ற நீலவானின் அமைதி அவரது உள்ளத்தை படியச்செய்தது. ஏனென்றிலாத மெல்லிய உவகையை உணர்ந்தார். அது உயிருடனிருப்பதன் இன்பம் என்று அறிந்தார்.

பாறைச் சரிவுகளில் சறுக்கி, கீழிறங்கி, செம்புழுதியில் கால்வைத்தார். தரைத்தளத்திற்கு வந்ததும் உடலின் எடை சற்று குறைந்ததுபோல் இருந்தது. புழுதியில் உடைந்து கிடந்த வில் ஒன்றைக் கண்டு அதை எடுத்து ஊன்றுகோலாக்கி, காலை இழுத்து புழுதியில் கோடு நீட்டியபடி நடந்து அவ்வூரை அடைந்தார். அங்கு ஓநாய்கள் கிழித்துக் குதறிய மனித உடல்கள் கிடந்தன. புழுதியில் இழுபட்டு துணிச்சுருள்கள் போல சிறுபூச்சிகள் ரீங்கரிக்க கிடந்த குடல்கள் காலில் சிக்கின. உருண்டு கிடந்த தலைகளில் விழிகள் வியந்தும் துயர்கொண்டும் அஞ்சியும் விழித்திருக்க தேய்ந்த கூழாங்கல்நிறப் பற்கள் சிரித்தன.

சாம்பல்குவைகளாக மாறியிருந்த இல்லங்கள் கொண்ட ஊரை கடந்துசென்ற பாதையில் குதிரைக் குளம்புகள் குதறிப் போட்டிருந்த பாலை மணலில் உலர்ந்த குருதித்துளிகள் கரிய பொருக்குகளென கிடந்தன. அங்கே கண்டர்கள் கொன்று வீசியிருந்த இளமைந்தர்கள் ஓநாயால் பாதி உண்ணப்பட்டு வானிலிருந்து விழுந்தவர்கள் போல புழுதி மண்ணில் சற்றே புதைந்து சிதறிக் கிடந்தனர். சிறு கால்களையும், தளிர்க்கைகளையும் மட்டும் பார்த்தபோது மென்மரவுரிச்சேக்கையில் அன்னை தாலாட்டுகேட்டு அவர்கள் துயில்வதுபோல தெரிந்தது. சிறிய ஈக்கள் பறந்து சுழன்று ரீங்கரித்து மொய்த்த விழிகள் உறைந்த தேன்துளிகள் போல் இருந்தன.

காற்று ஓசையுடன் வந்து எழுந்து ஊரைச்சூழ்ந்த பாறைகளால் சீவப்பட்டு கீற்றுகளாகக் கிழிபட்டு வெவ்வேறு திசைகளில் சுழன்று மாறி மாறி வீசியது. அவரது ஆடை முன்னும் பின்னுமாக எழுந்து பறந்தது. அங்கு நிகழ்ந்தவற்றை அவரது உள்ளம் முன்னரே உய்த்துக்கொண்டிருந்தமையால் அதிர்ச்சி ஏற்படவில்லை. சித்தம் கற்பாறையாலானது போலிருந்தது. ஆனால் தனியாகக்கிடந்த ஒரு சிறு கையில் வளையல்களைக் கண்டதும் அவருள் ஓர் உடைவு நிகழ்ந்தது. “தெய்வங்களே” என்று அங்கு அமர்ந்து ஓலமிட்டார்.

நெஞ்சில் அறைந்தபடி விலங்குபோல கூவினார். என்னசெய்கிறோம் என்றறியாமல் மண்ணை அள்ளி அள்ளி தன் தலைமேல் போட்டுக்கொண்டார். “தெய்வங்களே, இங்கு என் குடிகளின் நடுவே சிறுமை கொண்டு நிற்கின்றேன். விண்ணில் இருந்து நோக்கும் என்மூதாதையர் விழிகளுக்கு முன் கீழ்மைகொண்டு நிற்கின்றேன். இனி உயிர் வாழேன்” என்றார். வாளைத் தூக்கி தன் கழுத்தில் வைத்தவர் “இல்லை, மூத்தாரே உங்கள் உலகுக்கு வந்துசேர்கிறேன். உங்கள் காலடியில் விழுந்து பிழைபொறுக்க இரக்கிறேன்” என்றார்.

அங்கேயே கால்மடித்து ஊழ்க முறையில் அமர்ந்து, கைகளை மடியில் வைத்து கண்மூடி “கொள்க! இவ்வுயிர் கொள்க!” என்று சொல்லி தன் உளம் அடைத்து அமர்ந்தார். பாறைகளால் சிதறடிக்கப்பட்ட நூறு காற்றுகள் அவரைச் சூழ்ந்து அலையடித்தன. அக்காற்றுகள் அள்ளிப்பறக்கவிட்ட மென்மணல் அலையலையாக அவர் மேல் பொழிந்து தலையிலும் தோளிலும் வழிந்து மடியில் கொட்டிக்கொண்டிருந்தது.

மேற்குத் திசையை ஆளும் வாயுதேவனின் மைந்தர்களாகிய பதினெட்டு மருத்துக்கள் அக்காற்றுகள் வழியாக களியாடினர். ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளி, குழல் பற்றி இழுத்துத் தழுவி மண்ணில் புரண்டனர். விண்ணில் தாவி ஏறிச் சுழன்று அமைந்தனர். அவர்கள் கூவிக் களித்த ஓசை முட்கிளைகளில் பாம்புச்சீறலாகவும் பாறைப்பிளவுகளில் யானையின் உறுமலாகவும் இலைக்கற்றைகளில் சிறகடிப்புகள் போலவும் ஒலித்தது. செம்புழுதி மண்ணில் கிடந்த சடலங்கள் மேல் பொழிந்து ஆடையாக்கி புதுவடிவங்கள் சமைத்தது.

அவர்களில் இளம் குழவியாகிய மந்தன் என்னும் மருத்தன் தன் சிறு கால்களை வைத்து தவழ்ந்து ஓடி தமையன்களை பற்ற முனைந்தான். அவர்களின் கால்களின் நடுவே ஓடி அவற்றால் தட்டி வீழ்த்தப்பட்டு புரண்டு எழுந்து “நானும்! நானும்!” என்று கைநீட்டி கூவினான். மூத்தவர் ஆடலில் அவனுக்கு இடமே இருக்கவில்லை. “நான் விளையாடுவேன்! நான் விளையாடுவேன்” என்று அவன் கூவிக்கொணடு இருந்தான். “விலகு” என்று அவனை தள்ளிவிட்டு மீண்டும் ஓடினான் மூத்தவனாகிய பீஷ்மகன்.

மந்தன் பீஷ்மகனின் நீண்ட ஆடையை அள்ளி பற்றிக்கொண்டான். அவன் கையைப் பற்றி விலக்கி “போடா” என்று தள்ளிவிட்டு தமையன் ஓட புழுதியில் விழுந்து கையூன்றி எழுந்து “நான் புயலாக வந்து உன்னை கொல்வேன்!” என்றபடி அமர்ந்தான். “நாளைக்கு நான் வளர்ந்து பெரிய புயலாக ஆவேன்.” அவன் சினம் கொண்டு மண்ணை அள்ளி நான்குபக்கமும் தூற்றினான். அது அலையலையாக விழுவதைக் கண்டு நின்று நோக்கி மகிழ்ந்து “ஆடை” என்றபின் மீண்டும் அள்ளி வீசத்தொடங்கினான்.

மந்தன் தன்னருகே உருவான அழகிய செம்பட்டாடைகளின் மடிப்புகள் மேல் சுட்டு விரல் ஓட்டினான். அந்த மென்மையான ஏட்டுப்பரப்பில் தன் பெயரை எழுதி வைக்க முயன்றான். அப்போது அதன் உள்ளே அமைந்த புழுதி மெல்ல பறந்து அங்கு ஒரு சிறு குழி உருவாவதை கண்டான். ஆவலுற்று அக்குழியில் கைவைத்தபோது அக்குழியிலிருந்து மெல்லிய நீராவி காற்று ஒன்று எழுந்தது. வியந்து முகம் அணைத்து உதடுகுவித்து மெல்ல ஊதி அக்குழி மணணை விலக்க உள்ளே ஒரு முகம் எழுந்தது.

ஊழ்கத்தில் இருந்த ஒருவரின் மூச்சுக்காற்று என்று உணர்ந்தபோது மந்தன் வியந்து தன் சிறகுகளால் வீசி அப்புழுதி மூடலை விலக்கினான். உள்ளே அமர்ந்திருந்த அரசனை அறிந்து அவன் நெற்றிப்பொட்டில் கைவைத்து “விழித்தெழுக!” என்றான். விழிமலர்ந்த அவரிடம் “என் பெயர் மந்தன். நான் மாருதியின் மைந்தன். என்னால் பார்க்கப்படும் பேறு பெற்ற நீ யார்?” என்றான். “என் குடிகளைக் காக்க முடியாமலானபோது வடமிருந்து உயிர் துறக்கும் நோன்பு கொண்டுள்ளேன். நான் கஜ்ஜயந்தபுரியை ஆளும் அரசன் ரைவதகன்” என்றார் ரைவதகர்.

“உன் நகரோ, உன் குலமோ, உன் குடியோ அழிந்துபட்டதா?” என்றான் மந்தன். ரைவதகர் “என் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் என் குலமே, என் குடியே” என்றார். “அவர்களை காக்கும்பொருட்டு மணிமுடி சூழ்ந்து வாள் ஏந்தியவன் நான்.” கண்கலுழ்ந்து நெஞ்சு விம்மி “அதில் நான் தோற்றபின் உயிர் துறப்பதே முறை” என்றார்.  மந்தன் என்ன நிகழ்ந்தது என சுற்றிப் பார்த்தான். அப்பால் காவலருடைய சிறு வாள் ஒன்று விழுந்து கிடந்தது. அதைச்சுட்டிக்காட்டி “என் உடைவாள் அது. அது உன்னிடம் இருக்கட்டும். நீ விழைகையில் அதை மும்முறை வீசு. அது எழுப்பும் சீறல் ஒலி கேட்டால் அங்கு நான் எழுவேன். இனி இம்மண்ணில் உன் முன் எவரும் படைக்கலன் ஏந்தி நிற்கப்போவதில்லை” என்றான்.

ரைவதகர் தலைவணங்கி “நல்வாழ்த்து பெற்றேன். என் குடிசிறக்க உங்கள் அருள் என்றென்றும் இருக்கட்டும்” என்றார். விழி திறந்தபோது தனக்கு முன்னால் பெரியதொரு வாள் போல் விழுந்துகிடந்த காற்றின் அலைவடிவத்தை கண்டார். எழுந்து அது எவ்வண்ணம் உருவாகியது என்று சுற்றி நோக்கினார். கனவென்றோ, தொல்நினைவென்றோ நிகழ்ந்தவை நெஞ்சில் நின்றன. பெருமூச்சுடன் காலை இழுத்து நடந்து வேறொரு மலைக்கு வந்தார். அங்கிருந்து நோக்கியதும்தான் அது மாபெரும் வாள் வடிவம் என அறிந்தார். தன் கையிலிருந்த வாளை மெல்ல வீசியபோது அந்த மாபெரும் மணல்வாள் எழுந்து சுழல்வதைக் கண்டு விம்மியபடி நிலத்தில் அமர்ந்தார்.

அருகிலிருந்த கமனபதம் என்னும் ஆயர்குடியை அவர் அடைந்தார். அங்கிருந்து கஜ்ஜயந்தபுரிக்கு அவரை கொண்டுசென்றனர். உடல்நலம் கொண்டதும் அவர் பிறிதொருவர் என தோன்றினார். அவர் காற்றுவெளியுடன் பேசத்தொடங்கியதை குஜ்ஜர்கள் உணர்ந்தனர். அவருக்கு தேவர்கள் காட்சிகொடுப்பதாக எண்ணத்தலைப்பட்டனர். அவர் பேராற்றல் மிக்கவரென தோன்றினார். குன்றுகள் போல் பேருடல் கொண்டு மானுடரை குனிந்து நோக்கும் பார்வை விழிகளில் எழுந்திருந்தது,

எல்லையில் அமைந்த தவணம் என்னும் சிற்றூரில் மீண்டும் கண்டர்களின் தாக்குதல் நிகழக்கூடும் என்று ஒற்றர் செய்தி வந்தது. தனது சிறு படையுடன் அங்கு சென்று காத்திருந்தார் ரைவதகர். கண்டர்களை கவரும்பொருட்டு எல்லையில் கொழுத்த கன்றுகளை உலாவவிட்டனர். எட்டு நாள் கழித்து குன்றில் மேல் அமர்ந்து காத்திருந்த அவரது ஒற்றனின் கண்ணில் தொலைவில் செம்புழுதி பறக்கும் தாழ்வரையில் குதிரைப் படை ஒன்று நதிநீரோட்டமென வருவது தெரிந்தது. அவன் குறுமுழவை ஒலிக்க கஜ்ஜர்கள் விற்களுடன் எழுந்தனர். ஆனால் எவரிடமும் துணிவிருக்கவில்லை. மகளிர் கதறி அழுதபடி மைந்தரை அணைத்துக்கொண்டனர். அனைத்து விழிகளும் ரைவதகரை நோக்கின. அவரோ அங்கில்லாதவர் போலிருந்தார்.

தொலைவில் வந்து கொண்டிருந்த புரவிநிரை சொடுக்கப்பட்ட சாட்டை ஒன்றின் நெளிவைப்போல் தெரிந்தது. சாட்டையின் கைப்பிடியென வந்துகொண்டிருந்தது தலைவனின் கொடியேந்திய முதற்புரவி. முந்தைய தாக்குதலுக்குப் பிறகு மேலும் இருமடங்கு வீரர்களுடன் தாக்கும் வழக்கத்தை கண்டர்கள் கொண்டிருந்தனர். அத்துடன் படைமுகப்பில் இருபக்கமும் பக்கவாட்டிலும் பின்நோக்கியும் புரவியில் அமர்ந்து சூழலை உற்றுநோக்கும் கண்காணிப்பாளர்களையும் அமர்த்தியிருந்தனர். அவர்களின் படை பறவைகளைப்போல ஆறுதிசைகளிலும் நோக்கு கொண்டிருந்தது.

அப்படையின் எண்ணிக்கையைப் பார்த்ததும் கஜ்ஜர்கள் அஞ்சி உடல் குறுக்கினர். அத்தனை விழிகளும் ரைவதகரையே நோக்கின. கண்மூடி நெற்றிப்பொட்டில் சித்தம் குவித்து நின்று “மந்தனே இங்கு எழுந்தருள்க!” என்றார். இடையிலிருந்து அவன் அளித்த வாளை உருவி நீட்டினார். எதிரே இருந்த பாறையிலிருந்து புழுதியும் சருகும் எழுந்து அவர் மேல் பொழிந்தன. குழந்தைச் சிரிப்பொலியுடன் அவரைச் சூழ்ந்த மந்தன் “வந்துவிட்டேன்” என்றான். “என் குலத்தை காத்தருள்க!” என்றார். “உன் வாளில் நான் எழுகிறேன்” என்றான் மந்தன்.

“ஆம், ஆணை” என்றார் ரைவதகர். விழி திறந்தபோது செம்மண் குன்று ஒன்றின் மேலிருந்து அலையாக புழுதிக்காற்று இறங்கி வந்து படிவதை கண்டார். நெடுந்தூரம் வாளென வளைந்து கிடந்தது அது. தன் கையிலிருந்த குறுவாளை அவர் அசைத்தபோது அதுவும் அசைந்தது. தன் படைகளை நோக்கி. “அங்கு செல்வோம்” என்றார். “நாம் தப்பி ஓடுகிறோமா அரசே” என்றார் படைத்தலைவர். “ஒரு முறை ஓடினால் பின் எங்கும் நிற்க இயலாது. இவர்கள் கஜ்ஜயந்தகக் குன்று வரை வந்துவிடுவார்கள்.”

ரைவதகர் “இல்லை, இன்று நான் இளமருத்தனின் வாளால் போரிடப்போகிறேன்” என்றார். வியந்து நின்ற படைகளிடம் தன்னை பின்தொடரும்படி கை வீசிவிட்டு, ரைவதகர் தன் புரவியில் ஏறி அந்தச் செம்புழுதி வாளின் விளிம்பு வழியாக புரவியில் விரைந்து சென்றார். மண்ணில் ஒரு மலர்மலைபோல் விழுந்த அவரது புரவிச்சுவடை நோக்கி தயங்கிவிட்டு, பின் அங்கிருந்து அவரைத் தொடர்ந்தார்கள். அவர்கள் அம் மண்மேட்டைக் கடந்து மறுபக்கம் சென்று, அங்கிருந்த உதிரிப் பாறைகளுக்கு அப்பால் மறைந்தனர்.

அவர்கள் இருந்த இடத்திற்கு மேல் பாறைகள் செறிந்த சரிவில் எழுந்த கண்டர்கள் அப்பாதச் சுவடுகளைக் கண்டு, உரக்க நகைத்தபடி நின்றனர். அவர்களின் தலைவன் கை சுட்டி “அவர்களின் புரவிகளை உயிருடன் பிடியுங்கள். ஒரு தலைகூட கழுத்தில் நிற்கலாகாது” என்றபடி தன் புரவியைத் தட்டி தங்கள் குலக்கொடி பறக்க குன்றின் மணல்சரிவில் இறங்கி அச்சுவடுகளை தொடர்ந்தான். அவன் படையினர் அவனை தொடர்ந்தனர். இடியை எதிரொலிக்கும் முகில்குவைகளாயின மலைப்பாறைகள். அவர்களைச் சூழ்ந்திருந்த பாறைகளின் உச்சியில் இருந்து புழுதிகளும் சருகுகளும் பறந்து அவர்கள் மேல் விழுந்தன. அந்த செம்மண் வளைவை அவர்கள் கடப்பதற்குள் கடலில் எழுந்த பேரலைபோல் மணல்வரி வளைந்து எழுந்தது. அவர்கள் திரும்பி நோக்குவதற்குள் செம்முகில்போல் அவர்களை முற்றிலும் மூடி சூழ்ந்துகொண்டது. விழி இழந்து கடிவாளத்தை இழுத்து ஒருவரோடு ஒருவர் முட்டி கூச்சலிட்டபடி அவர்கள் சுழன்றனர்.

பெரும் சுழிபோல் அவர்களை சுற்றிச் சூழ்ந்து அலைக்கழித்தது புழுதிப் புயல். மூச்சடைத்து குதிரைகளின் கழுத்தில் முகம் புதைத்து அமர்ந்திருந்தனர். மேலும் மேலும் என புழுதி எழுந்துகொண்டே இருந்தது. அவர்கள் ஒருவரோடொருவர் முட்டி நிலையழிந்து மண்ணில் விழ புரவிகள் கனைத்தபடி அவர்களை மிதித்துத் துவைத்தன. தொலைவில் இருந்து ரைவதகர் தன் குறுவாளை சுழற்றிக்கொண்டிருந்தார். செம்புழுதிச் சுழலுக்குள் மின்னிய வாள் மின்னல்களையும், புரவி வால்களின் நெளிவையும் கண்டார். ஒன்றுடன் ஓன்று கலந்து ஒலித்த அலறல்களையும் உலோகமுட்டல்களையும் கேட்டார்.

“கொல்லுங்கள்” என்றபடி பாறையில் வில்லுடன் எழுந்து அப்புழுதிப் படலத்தை நோக்கி அம்புகளை எய்தார். இலக்கின்றி அவர்கள் விட்ட அம்புகள் அனைத்தும் பார்வையின்றி தவித்த கண்டர்களை தாக்கின. ஆரவாரங்கள் அனைத்தும் ஒழியும்வரை அவர்கள் அம்பெய்து கொண்டே இருந்தனர். பின்னர் செம்புழுதிச் சுழி உச்சி குவிந்து கூர்மைகொண்டது. குடுமிபோல் ஆகி வானில் எழுந்து அலைக்கழிந்து வடமேற்கு நோக்கி சரிந்து, இழுபட்டு மறைந்தது. அதன் அகன்ற கீழ்வட்டம் மண்ணிலிருந்து எழுந்து வலைபோல வானில் தெரிந்து மெல்ல மறைந்தது.

செந்நிற இறகுகள் கொண்ட மாபெரும் கழுகுபோல் அப்புழுதிக் கூம்பு வானில் எழுந்து செம்மணல் பரப்பில் முகில்நிழல் போல் கறைபடியச் செய்தபடி சென்று மறைந்தது. நெடுந்தொலைவில் வளைந்து கீழ் இறங்கி அங்கு இருந்த முட்புதர் காட்டில் புழுதி மழையென பொழிந்து பரவி இலைகளை செம்மண் சில்லுகளென மாற்றியது. பாறைகளை செம்மண் திரையால் மூடியது. புதர்களை மூடிய செந்திரைக்குள் இருந்து கூர்முட்கள் வெளிவந்து சிலிர்த்தன. செம்புழுதி படிந்த சிறகுகளை உலைத்து எழுந்த பறவைகள் விடிகாலை என எண்ணி காற்றில் சுழன்று கூச்சலிட்டன.

அவர்கள் எச்சரிக்கையுடன் வில்லேந்தியபடி சென்று நோக்கினர். முற்றிலும் செம்புழுதித் திரையால் மூடப்பட்டிருந்த தரையில் ஒருவர்கூட எஞ்சாமல் அத்தனை கண்டர்களும் அம்பு பட்டு விழுந்துகிடந்தனர். புழுதிப் போர்வையை இழுத்துத் தள்ளி கால்களை உதைத்து துடித்தன புரவிகள். எச்சரிக்கையுடன் கைகளில் அம்புகளும் வாள்களும் ஏந்தி மெல்ல அணி சூழ்ந்தனர் குஜ்ஜர்கள். “ஒருவர்கூட எஞ்சவில்லை” என்றார் படைத்தலைவர். “ஒற்றைக்கையால் பாலைநிலம் அவர்களை நசுக்கி அழித்துவிட்டது.” ஒரு முதியவீரன் நடுங்கும் குரலில் “நம் அன்னை இந்நிலம். இக்காற்று நம் மூதாதையர்” என்றான்.

“என்ன நிகழ்ந்தது அரசே?” என்றார் குடித்தலைவர். “இப்பாலையின் தெய்வமான கைக்குழந்தை ஒன்றால் விளையாட்டுப் பாவையென ஆடப்பட்டு அழிந்தனர் இவர்கள்” என்றார் ரைவதகர். படைத்தலைவர் விழுந்துகிடந்த கண்டன் ஒருவனின் தலையை ஓங்கி உதைத்தார். “வேண்டாம். இவர்கள் எளிய மானுடர்கள். பசித்து வரும் ஓநாய்களும் உயிர் கொடுக்கும் ஆடும் இப்பெருங்களத்தில் இரு காய்கள் மட்டுமே” என்றார் ரைவதகர். செம்புழுதியில் குருதி ஊறிப்பரவி நனைந்த தடங்கள் தெரியத் தொடங்கின. முனகலுடன் துடித்துக் கொண்டிருந்த கண்டர்கள் ஒவ்வொருவராக மூச்செறிந்து உயிர் துறந்து சிலைத்தனர்.

“தாங்கள் அடைந்தது என்ன?” என்றார் படைத்தலைவர். “இப்பெரும் பாலையை ஆளும் மருத்தன் எனக்களித்த வாள் இது” என்றார் ரைவதகர். தன் வாளைத்தூக்கி “இனி எம்மை வெல்ல எவருமில்லை இப்புவியில்” என்றார். திகைத்து நோக்கி நின்ற படைவீரர் ஒரே தருணத்தில் குரலெழுப்பி “குஜ்ஜர்குலம் வாழ்க! கஜ்ஜயந்தகம் வாழ்க!” என கூச்சலிட்டனர்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 8

எல்லைப்புற ஊரில் நிகழ்ந்த அப்பெரும்போர் கஜ்ஜயந்தத்தில் குலப்பாடகர்களால் ரைவதகவிஜயம் என்ற பெயரால் குறுங்காவியமாக பாடப்பட்டது. இளையோர் மொழியறியும் நாளிலே அதை கற்றனர். வருடம்தோறும் அவ்வெற்றியின் நாள் மூதாதையருக்கு திறைகொடுத்து சொல்பணியும் விழாவாக எடுக்கப்பட்டது. பாலைப் பெருங்காற்றின் வாளை கையில் ஏந்தியவர் என்று ரைவதகர் புகழ் பெற்றார். கஜ்ஜயந்த குடிகளின் அச்சம் ஒழிந்தது. மேலும் மூன்று களங்களில் அவர்கள் படைகொண்டுவந்த கண்டர்களை முழுமையாக வென்றனர்.

புறச்சூதர்கள் வழியாக அச்செய்தி புறநாடுகளுக்கும் பரவியபோது கஜ்ஜயந்தத்தின் மீது எவரும் படைகொண்டுவரத் துணியவில்லை. விண்தொடும் பெருவாளை கையிலேந்தி முகில்களைச் சூடி நிற்கும் ரைவதகரின் ஓவியங்கள் இல்லச் சுவர்களில் வரையப்பட்டன. அவருக்கு ஏழு சிறகுகள் கொண்ட மருத்தனாகிய மந்தன் உடைவாளை அளிக்கும் காட்சி நாடகமாக நடிக்கப்பட்டது. காற்றின் உடைவாளைச் சூடி களம் சென்று வெல்வதை அக்குலத்து இளையோர் கனவு கண்டனர். கன்னியர் அவர்களை எண்ணி உவகை கொண்டனர்.

இருபத்தியெட்டு ஆண்டுகாலம் எதிர்ப்பவர் எவருமின்றி கஜ்ஜயந்தபுரியை ஆண்டார் ரைவதகர். அவர் சொன்ன சொல் ஒவ்வொன்றும் சட்டமென கொள்ளப்பட்டது. அவர் செய்கைகள் அக்கணமே புராணங்களாயின. மண்ணில் இருக்கையிலேயே விண்வாழும் முதியவர்களில் ஒருவராக அவர் போற்றப்பட்டார். அவரது மைந்தர்களான சஜ்ஜனரும் பிரபரும் குமாரரும் சுஜரரும் சுந்தரரும் நூலும் வேலும் பயின்று தோள் திரண்டனர். அவர்களுக்கு குஜ்ஜர் குலத்துப் பெண்களை மணம்செய்து வைத்தார். எல்லைப்பகுதிகளை அவர்கள் காத்தனர்.

கஜ்ஜயந்தபுரி அமைதியும் செல்வமும் கொண்டது. அங்கு கலைகளும் கல்வியும் செழித்தன. அயல்நாட்டு வணிகரும் சூதரும் அதை அறிந்து அங்கு வந்தனர். எல்லைகளிலெல்லாம் அங்காடிகள் எழுந்தன. கஜ்ஜயந்தகிரியின் அடிவாரத்தில் பேரங்காடி ஒன்று உருவானது. அங்கு பாலைவணிகர் வந்து தங்கி விற்று கொண்டு மீண்டனர். ரைவதகர் அவர்களில் நூலறிந்த அனைவரையும் தன்னிடம் வரச்சொல்லி புதியன கூறக்கேட்டு கற்றறிந்தார்.

அவர்கள் அயோத்தியில் மண்நிகழ்ந்து கயிலையில் விண்திகழ்ந்த ரிஷபரின் அணையாச்சுடரை அவருக்கு சொன்னார்கள். கொல்லாமை என்னும் பெரும்படைக்கலத்தை ஏந்திய அம்மாவீரரின் செய்தி அவரை அகம் திகைக்கச் செய்தது. ஒவ்வொரு நாளும் கீழ்த்திசையில் கதிர் எழும்போது அவர் தன் உள்ளம் தனித்துவிடப்பட்டிருப்பதை உணர்ந்தார். அந்தியில் அத்தனிமை ஆழ்ந்த துயரமாக கனிந்திருந்தது. அவர் சொல்லவிந்து செயல் நிறைந்து ஒரு பெருஞ்சிலை என ஆவதை அவரது குடியும் குலமும் கண்டது. "கனி முழுத்துவிட்டது. உள்ளே இனிமை ஊறிச் சிவக்கிறது” என்றார் முதுநிமித்திகராகிய ரூபிணர்.

ஒருநாள் அவர் கீழ்வான் நோக்கி நின்றிருக்கையில் அவர் அருகே வந்து பணிந்த அமைச்சர் அயல்நாட்டுச் சூதர் இசையவைக்கு வந்திருப்பதை சொன்னார். எண்ணங்கள் அப்போதும் செம்பொன்கோபுரத்திலேயே படிந்திருக்க சொல்லில்லாமல் ரைவதகர் இசையவைக்குச் சென்று வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் ஏற்று அரியணை அமர்ந்தார். அயல்சூதர் முதியவர். தன் நந்துனியை மீட்டி அவர் மந்தர மலையைப் பற்றி பாடத்தொடங்கினார். தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்து அமுது எடுத்த மத்து. தேவர்களுக்கு அமுது அளிக்கப்பட்டதும் மானுடருக்கு அந்த மலையை அளிக்க உளம்கொண்டார் ஈசன். மண்ணில் வந்து விழுந்தது மந்தரமலை.

அமுதம் படிந்தமையால் அம்மலையின் ஒவ்வொரு உயிரும் இறப்பின்மையை அடைந்தது. அம்மலைமேல் முளைக்கும் செடிகளில் இலைகள் உதிர்வதில்லை. மலர்கள் வாடுவதில்லை. அங்கு வாழும் பூச்சிகளும் இறப்பதில்லை. அமுதிலாடி நிற்கும் அவ்வுயிர்களுக்கு அந்தமென இங்கு ஏதுமில்லை. அச்செடிகளை வருடி வரும் காற்றும் அமுதமே. தீராநோயாளிகள் அக்காற்று பெற்று உயிர் ஊறப்பெற்றனர். அதற்காக உற்றாரையும் ஊரையும் விடுத்து வழிதேர்ந்து நடந்து அதன் சாரலை அடைந்தனர். மந்தரமலையில் முளைக்கும் செடிகளனைத்தும் மூலிகைகளே. அவற்றை மருத்துவர் தேடிச்சேர்த்து அருமருந்துகள் கூட்டினர்.

தொல்கதைகளில் கேட்டிருந்த அம்மலையை பார்க்க வேண்டுமென்பது ரைவதகர் சிறுவனாக இருந்தபோது கொண்ட கனவு. அந்நாளில் அவர் அவைக்கு வந்த வடபுலத்துப் பாணன் ஒருவன் குறுயாழை மீட்டி மந்தரமலையின் உச்சியில் பொன்னொளிர் முகில் வந்து அமரும் அழகை பாடினான். முகில் கீற்றுகளில் தேவதைகள் தோன்றி அம்மலை மேல் இறங்குவதை தேன்தட்டில் தேன் துளிப்பதுபோல என்று அவன் சொன்ன வரியை அவர் ஒருபோதும் மறக்கவில்லை. பின்னர் வணிகருடன் வெளியேறி இரண்டாண்டு காலம் அலைந்தபோது மந்தரமலைக்கு ஒருமுறை செல்வதென்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. வழி தேர்ந்து மந்தரமலைக்கு கிளம்புகையில்தான் தந்தை உடல்நலமின்றி இருக்கும் செய்தி வந்தது. அக்கணமே திரும்பி வர முடிவெடுத்தார். பின்பு குடிகாக்கும் பொறுப்பும் அரச கடமைகளும் அவரை அவ்வூரிலேயே சிறை வைத்தன.

காலத்தில் அவ்வெண்ணம் கரைந்து அழிந்து ஆழத்தில் மறைந்தது. மந்தரமலை என்னும் சொல்லை முதுசூதர் பாடியதுமே கோல்பட்ட முரசின் தூசுத்துளிகள் நடனமிடுவது போல அவருள்ளத்தில் சொற்கள் கொந்தளித்தன. பின்பு அச்சொல் மட்டும் எஞ்சியது. கஜ்ஜயந்தகுடியினர் எல்லை தாண்டி போகும் வழக்கமில்லை என்பதால் பயணத்துக்குரிய முறைமைகள் ஏதும் அந்நாட்டில் இருக்கவில்லை. எனவே வெறும் விழைவென்றே அது அவருள் எஞ்சியது. ஆனால் எவ்வண்ணமோ நாளில் ஒருமுறையேனும் மந்தரமலையென்னும் எண்ணம் நெஞ்சில் எழத் தொடங்கியது. எச்சொல்லிலிருந்தும் அதற்கு சென்று சேரும் ஆழ் உள்ளத்து வழி ஒன்று அவருக்கு இருந்தது.

அரசவையில் மந்தணம் சூழ்ந்து கொண்டிருக்கும்போதே அகத்தில் அவ்வழி திறந்து அவர் அங்கு செல்லத்தொடங்குவார். அவரது விழிகள் அணைவதை உடல் அங்கிருக்க உள்ளம் மறைவதை அறியும் அவையினர் அவர் செவிகளை ஈர்ப்பதற்கென உரக்க பேசுவர். அப்போதும் அவர் விழிதிரும்பவில்லையென்றால் எளிய வீண்பேச்சுகளுக்கு செல்வார்கள். எண்ணி இருந்த நாட்களில் ஒரு முறை உப்பரிகையின் தனிமையில் இருளுக்குள் நிலவை நோக்கி இருந்தபோது எங்கோ எவரோ சொல்லி நினைவில் எழுந்ததுபோல ஒரு சொல் அவர் உள்ளத்தில் எழுந்தது. 'இனியில்லை’.

திடுக்கிட்டு யார் அதை சொன்னது என்று நோக்கினார். எவ்வண்ணம் அச்சொல் தன் உள்ளத்தில் எழுந்தது என்று வியந்தார். எவரோ தலைக்குப் பின்னால் நின்று காதுகளுக்கு மட்டும் கேட்பதுபோல அச்சொல்லை சொல்லி சென்றார்கள். இனியில்லை இனியில்லை இனியில்லை என்று பல்லாயிரம் முறை அச்சொற்களை சொல்லி நிலைகொள்ளாமல் அம்மாளிகையில் அலைந்தார். காவலனும் துயின்று காற்றும் அடங்கிவிட்ட மாளிகையில் பாதகுறடுகள் ஒலிக்க தலை குனிந்து நடந்தார். நீள்மூச்சுடன் எங்குளோம் என உணர்ந்தபோது உள்ளம் சென்ற நெடுந்தொலைவு காலுக்கு சில அடிகளே என அறிந்து தலையசைத்துக்கொண்டார்.

விடியலில் துயில் மறந்து சோர்ந்த விழிகளுடன் வந்து அவை அமர்ந்தார். தன் மைந்தர்களை வரச்சொன்னார். அமைச்சரும் குடித்தலைவர்களும் படைத்தலைவர்களும் சூழ்ந்த அவையில் தன் மணிமுடியை இளவரசர் சஜ்ஜனரிடம் அளித்து அரசு துறந்து வெளியேறவிருப்பதை அறிவித்தார். எவ்வண்ணமோ அப்படி ஒன்று நிகழும் என்பதை அவை முன்னரே அறிந்திருந்தது. அவரது முகக்குறிகள் அங்கு காட்டுவது என்ன என்பதை நிமித்திகர் உய்த்து அமைச்சருக்கு உணர்த்தியிருந்தனர். ஆயினும் அச்சொற்கள் அவர் வாயிலிருந்து நேரடியாக எழக்கேட்டபோது ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தலைமை அமைச்சர் “அரசே, தாங்களின்றி…” என்று சொல்லத் தொடங்கியதும் கையமர்த்தி “தங்கள் உணர்ச்சிகளை அறிவேன். இவ்வவை சொல்லப்போகும் அத்தனை சொற்களையும் ஓராயிரம் முறை முன்னரே என் உள்ளத்தால் கேட்டுவிட்டேன். என் இறுதிச் சொற்கள் இவை. இன்றேனும் இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் இனியில்லை என்றே என் உள்ளம் உணர்கிறது என் மைந்தன் தோள் பெருத்து விழிகூர்ந்து அரசனுக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்றுவிட்டான். அவனுக்குத் தகுதியான இளையோர் அவன் தோள்வரை எழுந்துவிட்டனர். அவனுக்குரியது இம்மணிமுடி” என்றார்.

“குடியீரே, இனி இவன் கோல் கீழ் இந்நாடு பொலிவுறட்டும். என் மக்கள் இவனை என் மூதாதையர் வடிவென கொள்ளட்டும். என் மனைவியருக்கு இவன் காவலனாகட்டும். தெய்வங்கள் இனி எனக்கான பலிக் கொடைகளை இவன் கைகளில் இருந்து பெறட்டும். அவ்வாறே ஆகுக!” என்றபின் எழுந்து தன் மணிமுடியை இருகைகளாலும் கழற்றி அருகிலிருந்த பீடத்தில் வைத்தார். செங்கோலையும் கங்கணத்தையும் அதன் அருகே வைத்தபின் "என் மூதாதையர் மேல் கவிந்து என் குடியை குளிர்நிழலில் நிறுத்திய இவ்வெண்குடை இதன் மேல் கவியட்டும்” என்று ஆணையிட்டார். குடைக்காவலன் வெண்குடையை மணிமுடி மேல் குவிக்க அரியணையிலிருந்து படியிறங்கிவந்து அவை நடுவே நின்று அனைவரையும் தலைமேல் கைகுவித்து மும்முறை வணங்கி விலகி வெளியே சென்றார்.

அவர் செல்வதை நோக்கிநின்ற அவையினர் ஏங்கி கண்ணீர் உகுத்தனர். அவர் மைந்தர்கள் விழிநிறைய சொல்மறந்து நின்றனர். மகளிரறைக்குச் சென்று தன் துணைவியர் ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொல்லில் விடைபெற்றார். அவரது பட்டத்தரசி சுஜயை "இறுதி வரை உடனிருப்பேன் என்று சொல்லி என் கைபற்றினீர்கள் அரசே” என்றாள். "இவ்வுலகில் நான் கொண்டவை அனைத்துக்கும் இறுதி வரை நீ உடனிருந்தாய். ஆனால் காடு உனக்கானதல்ல. மைந்தருடன் கூடி மகிழ்ந்திருந்தால் மட்டுமே உன் உள்ளம் விண்ணேகும். இங்கிரு. நான் சென்றுவிட்ட செய்தி கிடைக்கும்போது என் மங்கலங்களைத் துறந்து எனக்காக நோற்றிரு. அங்கு உனக்காக நான் காத்திருப்பேன். அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.

அன்று பின்மாலை கஜ்ஜயந்தபுரியின் மலைப்பாதை சரிந்திறங்கிய குன்றில் இறங்கி விரிநிலம் வந்தார். குன்று முழுக்க பரவியிருந்த அந்நகரின் மாந்தர் அனைவரும் வந்து மலைப்பாதையின் இருமருங்கிலும் கூடி அவரை வாழ்த்தி குரலெழுப்பி விடை கொடுத்தனர். பெண்கள் விம்மி அழுதனர். அவருக்காக அரசமணித்தேர் காத்திருந்தது. அதில் அவர் ஏறிக்கொண்டதும் பாகன் அவர் சொல்லுக்காக காத்திருந்தான். அவர் அங்கில்லையென்றிருந்தார். அவனே குதிரையை சொடுக்கி அதை விரையச்செய்தான். சிறுவர்கள் அவர் சென்ற தேருக்குப் பின்னால் அழுதபடி கை நீட்டி ஓடினர். ஒருவரையும் திரும்பி நோக்காமல் எல்லை கடந்து விரிநிலத்தில் வளைந்து சென்ற செம்புழுதி எழும் சாலையில் மறைந்தார்.

கஜ்ஜயந்தநாட்டு எல்லையை அடைந்ததும் ரைவதகர் மெல்லிய உறுமலால் தேரை நிறுத்திவிட்டு இறங்கி தன் அரச ஆடைகளைக் களைந்து அதுவரை தன்னுடன் வந்த அணுக்கச் சேவகனிடம் அளித்தார். அமைச்சர் தேரில் வைத்திருந்த மரவுரியும் மரக்குறடும் அணிந்து கையில் கோலும் துணிமூட்டையில் மாற்றுடையும் கொண்டு பாலையில் நடக்கத் தொடங்கினார். அவர் சென்று மறைவதுவரை அவன் அங்கே நோக்கி நின்றான். பெருமூச்சுடன் திரும்பி தேரின் பின்நீட்சியில் ஏறிக்கொண்டான். தேர் திரும்பும்போது பீடத்தில் இன்மையென அவர் இருப்பதாக அவன் எண்ணினான்.

நாடுநீங்கிய முதல்நாள் நாடுநீங்கிய மன்னராக இருந்தார் ரைவதகர். இரண்டாம் நாள் விடுதலை அடைந்த குடிமகனாக ஆனார். மூன்றாம் நாள் வழிதேறும் பயணியாக இருந்தார். நான்காம் நாள் எண்ணங்களை துழாவிச்செல்லும் தனியனாக இருந்தார். ஐந்தாம் நாள் எங்கும் செல்லாது தன்னுள் உழலும் அயலவன் என தோன்றினார். ஆறாம் நாள் அவரது விழி பதைக்கும் பித்தனென்று மாறினார். வெறுமனே சென்றுகொண்டிருந்தார். பதினெட்டாவது நாள் வழிகள் பொருட்டற்ற துறவியாக மாறியிருந்தார். நூற்றியெட்டு நாட்களுக்குப் பிறகு நீண்ட தாடியும் சடைத்திரிகள் தொங்கும் முதுகும் ஒளிரும் வெண்பளிங்கு விழிகளுமாக மந்தரமலை நோக்கிச் செல்லும் பாதையை அடைந்தார்.

மந்தரமலை வரைக்கும் பாடும் மந்தார வழிநடைப்பாடல் நூலில் எழுதப்படாமல் அத்தனை யாதவ குடிகளிடமும் புழங்கியது. ஆண்டில் ஒருமுறை சித்திரை முழுநிலவு நாளில் யாதவர்கள் சிலர் நோன்பு கொண்டு இருமுடி கட்டி செல்வதுண்டு. ஆவளம் பெருக பால் நிறைய தெய்வங்களை வேண்டி அக்காட்டின் முதல்விளிம்பில் எருமையேறிய அறச்செல்வராகிய வசுதேவர் என்னும் தெய்வம் நின்றிருந்த ஆலயத்தில் அமுதும் மலரும் நீரும் படைத்து வணங்கி மீள்வார்கள். அப்பாலிருந்த காட்டுக்குள் சித்தம் தெளிந்த யோகியரே செல்லமுடியும் என்று சொல்லப்பட்டது.

அருகநெறியினருக்கு அவ்வாலயம் அவர்களின் பனிரெண்டாவது தீர்த்தங்கரரான வசுபூஜ்யரின் பதிட்டை. ஆஷாட மாத முழுநிலவு நாளில் அருக நெறி நிற்கும் வணிகர்கள் தங்கள் குடிச் செலவுகளை நிறைவு செய்தபின் அங்கு வந்து அரிசி விரித்து அழியாசுழற்சியை விரல் தொட்டு வரைந்து அருக நாமத்தை பாடி வழிபட்டு மீண்டனர்.

இக்ஷ்வாகு வம்சத்தில் அங்க நாட்டுத் தலைநகர் சம்பாபுரியில் வாசுதேவருக்கும் ஜெயதேவிக்கும் மைந்தனாகப் பிறந்து இளமையிலேயே ஐம்புலனறுத்து அறிபுலன் பெருக்கி அலைந்தார். சித்தக்கடல் கடைந்து அமுதெடுத்தார். அதை நிரப்பி தானென எஞ்ச உரிய இடம் தேடி அலைந்தார். காட்டில் கண்ட காட்டெருமை ஒன்று அவரை அறிந்து கரிய பேருடல் ஒடுக்கி தலை வணங்கி தாள் பணிந்தது. அதன் மேல் ஏறி பன்னிரு நாட்கள் பயணம் செய்து மந்தரமலையை வந்தடைந்தார் ஆஷாட மாதத்தின் பதினான்காவது முழுநிலவு நாளில் தன்னந்தனியாக மந்தர மலை சரிவில் ஏறி சென்று உருளைப் பாறையின் அடிவாரத்தை அடைந்தார்.

முகில்கள் விலகி முழுநிலவு மந்தரமலைக்கு மேல் நின்றபோது உருவான நிலவொளிப்பாதை வழியாக நூற்றெட்டு தேவர்கள் இறங்கி மந்தரமலை சிகரத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் எழுப்பிய அமரப்பேரிசையை கேட்டார். தன் ஊனுடலை அங்கொழித்து இசைகலந்து மேலேறி அவர்களை சென்றடைந்தார். அவ்விசையின் வழியாக தேவர்கள் வாழும் விண்ணுலகை அடைந்தார். அங்கு அழியா புகழுடன் நிலை கொண்டார். அம்மலைவிளிம்பில் கற்சிலையமைத்து வழிபட்டனர். அவர் காலடியில் கொம்பு சரித்து நின்றது மோட்டெருமை.

அப்பால் எழுந்த பசுங்காடு பச்சைப்பிசின் என செறிந்து வழியின்மையாகியது. அதன் நடுவே கரிய தனிமையின் வடிவென எழுந்து விண்தொடும் விரல் என நின்றிருக்கும் மந்தரமலை. காட்டின் விளிம்பில் நின்று நோக்கியதன்றி எவரும் அறிந்ததில்லை. அங்கு செல்ல காலடிப்பாதைகள் இல்லை. அங்கு செல்பவர்கள் தங்களுக்கான பாதையை தாங்களே கண்டடைந்தனர். சென்றவர்கள் எவரும் மீண்டதில்லை என்பதனால் சொல்லில் வழி இருக்கவில்லை.

வசுபூஜ்யரின் கோயில் கடந்து காட்டில் நுழைந்த ரைவதகர் அங்கே ஒவ்வொரு இலையும் பொய்யுரைத்து வழிதிருப்புவதை உணர்ந்தார். ஒவ்வொரு முள்ளும் படைக்கலமாகி எதிர்கொண்டது. ஒவ்வொரு வேரும் கால்பின்னி தடுத்தது. நூறுநாட்கள் அக்காட்டில் தவித்தலைந்து தளர்ந்து விழுந்தார். பசி எரிந்து பின் அணைந்த உடலில் உயிர் இறுதிச்சரடில் நின்று தவித்தது. சிதையென ஆன தசைகளில் விடாய் நின்று தழலாடியது.

கைகளை ஊன்றி கால்களை மடித்து எழுந்தார். ஒவ்வொரு தசையாக இயக்கி உடலை நகர்த்தி சுற்றிலும் நோக்கினார். உலர்ந்த நாக்கு வந்து இதழ்களை நக்கி நக்கி மீண்டது. ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு குழியும் நீரில்லை என்னும் பொருள் மட்டுமே கொண்டிருந்தது. அவர் உடல் நீர்விழைவு என்பதாக இருந்தது. விடாய் என இம்முனையும் இல்லை என மறுமுனையும் இணைவிசைகளுடன் முட்டிக்கொண்டு அசைவிழந்து காலம் மறந்தன. கண்களில் காடு நீர்ப்பாவையென அலையடித்தது. காதுகளில் ஓசைகள் தொலைவிலெங்கோ என ஒலித்தன. மூழ்கிக் கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்திருந்த காற்று நீரென்றாகி அவரை மூழ்கடித்து தன் ஆழத்துக்கு கொண்டுசென்றது.

பற்றுதேடித் தவித்த சித்தத்தின் பல்லாயிரம் கைகள் சொற்களை அள்ளி அள்ளி பற்றிக்கொண்டன. அன்னை, தந்தை, குடி, குலம், நகர், பொருள், இன்பம், வெற்றி, புகழ், அறிவு, மீட்பு, முழுமை என ஒவ்வொரு கொடியும் அவர் எடைதாளாது அறுபட்டது. அறுந்து துடிக்கும் கொடிகளில் ஒன்றென மந்தரமலை இருப்பதைக் கண்டதும் உடல் ஒருமுறை சொடுக்கிக்கொண்டது. கைநீட்டிப் பற்றிய கொடி ஒன்று அவரை தாங்கியது. அது ஒரு செவிவடிவில் இருந்தது. அச்செவியில் நீராவி பட்டு பனித்திருந்தது. இடக்காது. அவர் இடப்பக்கம் நகர்ந்தார். எஞ்சியிருந்த ஒற்றைக்கை ஒரு நாகமென மாறி நெளிந்து மண்ணை உந்தி அவரை தூக்கிச்சென்றது.

தொலைவிலேயே நீரை அறிந்துவிட்டார். அசைவற்ற எருமைவிழி என அது அங்கே கிடந்தது. அதை அணுகி படுத்தபடியே நீரை அள்ளி அள்ளி விழுங்கியபோது உடல் அறிந்தது அது அமுதம் என. கண்மூடி அங்கே கிடந்தார். மெல்லிய முக்காரம் கேட்டு கண்விழித்தபோது மிக அருகே நின்ற கரிய எருமையின் கண்களை கண்டார். அவர் கைநீட்டியபோது அந்தக் காட்டெருமை கரிய பேருடல் ஒடுக்கி தலை வணங்கியது. அதன் மேல் ஏறி பன்னிரு நாட்கள் பயணம் செய்து மந்தர மலையை வந்தடைந்தார். அவர் செல்லும் வழியெல்லாம் முட்கள் சுட்டுவிரல்களாகி வழிகாட்டின. இலைகள் வாழ்த்துகூவின.

அது ஆஷாட மாதத்தின் பதினான்காவது முழுநிலவு நாள். விண்ணில் பொற்பெருங்கலமென எழுந்து நின்றது குளிர்நிலவு. காடு குளிர்ந்து ஒளிசொட்டும் இலைநுனிகளுடன் அசைவிழந்து மோனத்திலாழ்ந்திருந்தது. குவிந்த செம்மண்பீடத்தின் மேல் ஊழ்கத்திலமர்ந்த கரிய ஒற்றைப்பெரும்பாறையே மந்தரமலை. ரைவதகர் அங்கு வந்தபோது அங்கே உயிரசைவே இருக்கவில்லை. நிலவொளியே பருவெளியென்றானது போல் தெரிந்த மலைச்சரிவில் தனித்து ஏறிச் சென்று உருளைப் பாறையின் அடிவாரத்தை அடைந்தார். விண்ணில் தொங்குவது போல நின்றது அது. அங்கிருந்து எவரோ மண்ணை கடைவதுபோல.

ரைவதகர் நிலவொளி தழுவி பளபளத்து எழுந்து நின்ற மந்தரமலையின் கரிய பேருடலை பார்த்தார். கிளம்பிய நாள் முதல் அவர் சித்தத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த பாற்கடலை கலக்கியது எதுவென்றறிந்தார். கன்னங்கரியது. அமுதை உடல் பூசி அழியாமை கொண்டு என்றும் நின்றிருப்பது. விண்ணைத்தொடுவது. மண்ணில் வேரூன்றி இருப்பது. மாநாகங்களும் வானவரும் தங்களதென்று உணர்வது. இதுவே இதுவே இதுவே என்று நெஞ்சு உரைக்க சிறிய பாறை ஒன்றின் மேலமர்ந்து அதை நோக்கிக் கொண்டிருந்தார். அதன் மேலிருந்த முகில்கள் ஒளிகொள்வதை கண்டார். வெளிகடைந்த மத்து. அழியாத்தவம் கொண்டு யுகங்கள் தோறும் விண்ணில் பறந்தலைந்த பயணம் மண்ணில் இங்கு நிலை கொள்வதற்காகதானா?

கண்களை மூடி ஊழ்கத்தில் அமர்ந்தார். அவர் நெற்றிப்பொட்டில் எழுந்து சித்தத்தில் சுழன்று கொண்டிருந்தது மந்தரமலை. இறுகி நஞ்சு துப்பியது பாதாள நாகம். பற்றி எரிந்தன புரங்கள். அனல் என உணர்ந்த தருணம். அமுது என உணர்ந்த ஓசை. அமுது என்று நுரைத்த உள்ளம். அமுது என எஞ்சிய சித்தம். அமுது என்று திரண்ட பித்தம். பின் அமுதென்று அங்கிருந்தார். விழிதிறந்தபோது முழு நிலவு மந்தரமலைக்கு நேர் உச்சியில் நின்றிருந்தது. விண்ணையும் மண்ணையும் முழுக்காட்டும் பேரிசையொன்று சூழ்ந்திருந்தது.

செவிகள் தொட முடியாத இசை. ஒவ்வொரு மயிர்க்காலும் அறிந்து தித்திப்பில் விரைத்து நிற்கும் இன்னிசை. கரைகளின் வெண்ணுரை எழுப்பி அலை அலையெனக் கிளர்ந்து அவரை அள்ளி எற்றி எற்றி எற்றிச் சென்றது அவ்விசை. இசையினூடாக நடக்க முடியும் என்று கண்டார். இசையை அள்ளி பற்ற முடியும். இசையில் கால் துழாவி கைவீசி நீந்தி திளைக்க முடியும். இசை அவரை மந்தரமலையின் உச்சிக்கு கொண்டுசென்றது. தன்னருகே மலைப்பாறையின் பளபளக்கும் கருமை எருமைத்தோல் என உயிர்கொண்டு அசைந்ததை அவர் கண்டார். அதன் மடம்புகளிலும் மடிப்புகளிலும் முளைத்த சிறுமுட்செடிகள் முடிகளென சிலிர்த்திருந்தன.

மலையுச்சியில் கால்தொடாது சென்று நின்றார். அது ஒரு முழுவட்டச் சதுக்கமென தெரிந்தது. அதன் மையத்து விளக்கென பொன்னிலவு. அந்நிலவை நோக்கி நின்றிருக்கையில் அதை தன் மேல் சூடிய மாபெரும் நிலவு ஒன்று விண்ணிலெழக்கண்டார். குளிர்நீல நிலவு. அப்பெருநிலவு மழலையை மடியில் வைத்த அன்னையென நிறைந்திருந்தது. அதிலிருந்து வழிந்தோடி இறங்கிய நீலப்பளிங்குப்பாதை வழியாக ஒளிச்சிறகுகளுடன் கந்தர்வர்கள் இறங்கி வந்தனர். நிலவொளியில் சுழன்று நடனமிட்டுக் களித்தபடி வந்து அங்கே நிலவொளித்துளிகளென கிடந்த பாறைகளில் அமர்ந்தனர்.

நூற்றெட்டு கந்தர்வர்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் அமர்ந்து இசைமீட்டினர். அவர்கள் தொட்டு மீட்டிய இசைக்கருவிகள் நிலவொளியால் ஆனவையாக இருந்தன. இசையும் ஒளியென்றே அலையடித்தது. அதில் அவர் உடல் உருகி பரந்து திளைத்து மெல்லிய அலைவாக இருந்தது. அவர்கள் அவரை அறியவில்லை. அவர் அணுகிச் சென்றபோதும் அணுகாமல் அவர்கள் அங்கே இருந்தனர். அவர்களில் ஒருவன் விழிதிருப்பியபோது ஒரு கணம் அவன் நோக்கு அவரை அறிந்தது. அக்கணமே விழித்துக்கொண்டார்.

அப்போது அவரது தலைக்கு மேல் இளஞ்சூரியன் எழுந்திருந்தது. பொன்னொளிர் வெயில்பட்டு மந்தரமலை விண்மகள் அணிந்த தாலியின் குண்டு போல சுடர்விட்டது. விழிநீர் வார்ந்து செவிகள் நிறைய அங்கு பார்த்தபடி கிடந்தார். நேற்றிரவு கேட்ட இசை வெறும் உளமயக்கா என்று தோன்றியது. எழுந்து அமர்ந்தபோது தன் இடையில் ஆடை இல்லையென்பதை கண்டார். இசை ஏறிச்சென்று மந்தரமலை உச்சியில் கரைந்து நடமிட்டபொழுது தன் ஆடை கழன்று காற்றில் பறந்து மறைவதை கண்டிருந்தார். எழுந்து அங்கெங்கேனும் தன் ஆடை கிடக்கிறதா என்று பார்த்தார். இல்லையென்று அறிந்ததும் “ஆம், நான் கேட்டேன்! நான் இருந்தேன்! நான் அடைந்தேன்! நான் எஞ்சுகிறேன்!” என்று சொல்லிக் கொண்டார்.

கஜ்ஜயந்தபுரியின் எல்லைக்குள் மீண்டும் ரைவதகர் நுழைந்தபோது அவர் புழுதிபடிந்த வெற்றுடல் கொண்டவராக இருந்தார். குழல் வளர்ந்து தோளில் தொங்கியது. சடை கட்டிய தாடி மார்பில் விழுந்திருந்தது. புழுதி படிந்த மேனி தொன்மையான மரம் ஒன்றின் வேர் போன்றிருந்தது. சொல்லற்று புன்னகை ஒன்றே மொழி என கொண்டிருந்தார். உற்றவர் எவரையும் அவர் தனித்தறியவில்லை. மானுடரையும் விலங்குகளையும் பறவைகளையும் வேறுபடுத்தி நோக்கவில்லை. விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் மூதாதையரின் விழிகள் அவை என்றனர் குலப்பாடகர்.

எல்லையிலிருந்து பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்து ஊருக்குள் கொண்டுவந்தது. அவருக்குப் பின்னால் குலப்பாடகர் இசைமீட்டி வந்தனர். “அருகர் தாள் வாழ்க!” என்று கூவிய குடிமூத்தார் உடன் வந்தனர். தன் அரண்மனை மாளிகை முகப்பில் வந்து நின்று அவர் கைகளை நீட்டினார். செய்தியறிந்து ஓடிவந்த அவரது துணைவி சுஜயை அவரைக் கண்டு நெஞ்சை அழுத்தி நிலைபற்றி நின்று கண்ணீர் விட்டாள். “அன்னையே, இரவலருக்கு உணவளியுங்கள்” என்றாள் முதியசேடி. விம்மும் இதழ்களை இறுக்கியபடி அவள் அவரது நீட்டிய வெறும் கையில் அன்னமிட்டாள். மும்முறை அதை உண்டபின் அவர் திரும்பிச்சென்றார்.

பன்னிரெண்டு ஆண்டுகாலம் ரைவதகர் கஜ்ஜயந்தநாட்டின் ஊர்களில் அலைந்தார். எங்கும் எவரிடமும் எச்சொல்லும் சொல்லவில்லை. அவர் சென்றவிடத்தில் எல்லாம் அவர் சித்தமுணர்ந்ததை மக்கள் அறிந்தனர். சித்திரை வளர்நிலவு இரண்டாம் நாளில் ரைவதக மலைமேல் ஏறிச்சென்ற அவர் அங்குள்ள மலைப்பாறை ஒன்றில் வடக்கு நோக்கி அமர்ந்து பன்னிரண்டுநாட்கள் உண்ணாநோன்பிருந்தார். அரண்மனையில் தன் மஞ்சத்தில் அவர் துணைவி சுஜயையும் உண்ணாநோன்பிருந்தாள். அவள் முழுநிலவுக்கு முந்தையநாள் உடல்துறந்தாள். முழுநிலவு எழுந்த நாளில் அவர் முழுமைகொண்டார்.

ரைவதகரின் காலடி அங்குள்ள சேற்றுப்பரப்பில் படிந்திருந்தது. அவரது மைந்தர் சஜ்ஜனர் சிற்பிகளைக்கொண்டு அளவிட்டு அவர் அமர்ந்திருந்த பாறையில் செதுக்கிவைத்தார். அங்கு குஜ்ஜர்கள் நாள்தோறும் சென்று அரிசிப்பரப்பில் அருகமந்திரத்தை எழுதி மலரிட்டு வணங்கலாயினர். கஜ்ஜயந்த மலை ரைவத மலை என பெயர் கொண்டது. அவர் குலம் ரைவதகம் என அழைக்கப்படலாயிற்று. கஜ்ஜயந்தம் என்னும் பெயரே நினைவில் மறைந்து நூல்களில் எஞ்சியது.

பகுதி ஐந்து : தேரோட்டி - 9

சௌராஷ்டிர அரைப்பாலை நிலத்திற்கு வணிகக்குழுக்கள் அரிதாகவே சென்றன. ”அவர்கள் உடுப்பதற்கு மட்டுமே விழைகிறார்கள். உண்பதற்கு மட்டுமே விளைய வைக்கிறார்கள். பூண்வதற்கு விழைவதில்லை” என்றார் பாலைவணிகராகிய சப்தமர். அவரது பன்னிரண்டு பொதி வண்டிகளுடன் வழிக்காவலன் என அர்ஜுனனும் சென்றான். நீண்ட குழலை காட்டுக்கொடியால் கட்டி தோளில் புரளவிட்டு நுனி முடிச்சிட்ட தாடியை நீவியபடி அவர் பேசுவதைக்கேட்டு நடந்தான். அவன் தோளில் மூங்கில் வில்லும் நாணல் அம்புகள் குவிந்த அம்பறாத்தூணியும் இருந்தன.

”அங்கு அவர்கள் விரும்பும் பொருளென்ன?” என்றான் அர்ஜுனன். ”வீரரே, எங்கும் மக்கள் விரும்புவது பட்டும் படைக்கலங்களும் பொன்னும் மணியுமே. சில ஊர்களில் மரவுரி, சில ஊர்களில் மெழுகு, சில ஊர்களில் அரக்கு, சில ஊர்களில் வண்ணங்கள், சில ஊர்களில் மரப்பொருட்கள் என தேவைகளும் விழைவுகளும் வெவ்வேறு. இவை எதுவும் இங்குள்ள மக்களால் விரும்பப்படுவதில்லை. இவர்கள் நறுமணப்பொருட்களையே விழைகிறார்கள். கோரோசனை, கஸ்தூரி, புனுகு, ஜவ்வாது, குங்கிலியம், சந்தனம் என நறுமணங்கள் அனைத்தும் இங்கு ஆண்டிற்கு மூன்று முறை கொண்டுவரப்படுகின்றன” என்றார் சப்தமர்.

அர்ஜுனன் வியந்து ”பெரு நகரங்களுக்கு மட்டுமே நறுமணப்பொருட்கள் வணிகர்களால் கொண்டு செல்லப்படும் என்று கேட்டிருக்கிறேன்” என்றான். “ஆம். உண்டு நிறைந்து உவகை அமைந்தபின் அழகை விழையும் செல்வர்களுக்கும் அரசர்களுக்கும் உரியவை நறுமணப்பொருட்கள். மணிமகுடமென மாளிகைகளை சூடிய நகரங்களுக்கு அன்றி அவை தேவைப்படாது என்பார்கள். சௌராஷ்டிரம் அதற்கு விலக்கு. இங்கு வானுயர்ந்த மாளிகைகள் இல்லை. செல்வக்குவை கரந்த கோட்டைகள் ஏதுமில்லை. எளிய மக்கள்” என்றார் சப்தமர்.

அர்ஜுனன் சில கணங்கள் எண்ணிவிட்டு ”இங்கு இவர்களின் வாழ்க்கைக்கு இது தேவையாகிறதா?” என்றான். ”ஆம், இங்குள்ளவர் அனைவரும் அருகநெறிகொண்டவர்கள். பல்லாயிரம் வழிபாட்டிடங்கள் இங்குள்ளன. அவற்றிலெல்லாம் இரவும் பகலுமென நறுமணம் புகைக்கப்படுகிறது, தெளிக்கப்படுகிறது” என்று சப்தமர் சொன்னார். “பருப்பொருட்களில் நுண்வடிவாக நறுமணம் உறைவதுபோல இப்புடவியில் அருகர்களின் பெருங்கருணை நிறைந்துள்ளது என்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு நறுமணம் என்பது இறையாற்றலின் உடல் அறியும் ஒரே வெளிப்பாடாகும்.” “பிற எவையும் இவர்களுக்கு தேவையில்லையா என்ன?” என்றான் அர்ஜுனன்.

சப்தமர் சொன்னார் “வீரரே, இப்பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு பகுதியும் தனித்து வான் சூழ்ந்து கிடக்கிறது. வணிகப்பாதையின் தொப்புள் கொடியால் அவை பாரத வர்ஷத்துடன் இணைக்கப்படுகின்றன. அதனூடாக வரும் பொருட்களைக் கொண்டு கனவுகளை நெய்து பாரதவர்ஷத்தை அறிகின்றன குமுகங்கள். கலிங்கம் பட்டாகவும், தமிழ் நிலம் முத்தாகவும், திருவிடம் மணியாகவும், வேசரம் சந்தனமாகவும், மாளவம் செம்பாகவும், வங்கம் மீனாகவும்,.கூர்ஜரம் உப்பாகவும் ஒவ்வொரு ஊருக்குள்ளும் நுழைகின்றன. உண்டும் உடுத்தும் சூடியும் நோக்கியும் அதை மானுடர் அறிகிறார்கள். சௌராஷ்டிரர்கள் பாரதவர்ஷத்தை மூக்கு அறியும் பெருவெளியென அடைகிறார்கள்.”

அர்ஜுனன் புன்னகைத்து ”விந்தை” என்றான். ”இவர்கள் உண்பதற்கும் வேட்டைக்கும் விழைவதில்லையா?சுவைமாறுபாடுகள் இவர்களுக்கில்லையா? களம் பல இவர்கள்முன் விரிவதில்லையா?” என்றான். “ஆம், நீங்கள் கூறுவது உண்மை. எங்கும் வணிகர்கள் பொன்கொள்வது மாறுபட்ட நாச்சுவையை விற்றே. நெஞ்சம் கொள்ளும் அச்சத்தை தூண்டியே அதைவிட பெரும் பொருள் கொள்கிறார்கள். அறியாதவற்றின் மேல் உள்ளம் கொள்ளும் ஆர்வத்தை வளர்த்து மேலும் பொருள் செய்கிறார்கள். சௌராஷ்டிரத்தின் மக்கள் இம்மூன்றையும் வென்றவர்கள்” என்றார் சப்தமர். அர்ஜுனன் ”பெரு விந்தை” என்றான்.

“ஏனென்றால் இங்கு தொல்நெறியாகிய அருகம் வேரூன்றி உள்ளது. அந்நெறி பயிற்றுவித்த ஐம்புலன் அடக்கமும் அச்சத்தை கடத்தலும் அறிவில் அமைதலும் இம்மக்கள் அனைவரிலும் நிலை கொண்டுள்ளன” என்றார் சப்தமர். “அருக நெறி பற்றி வணிகர் வழியாக அறிந்துளேன்” என்றான் அர்ஜுனன். ”அறியாத தொல்காலத்தில் ரிஷபர் என்னும் முதற்றாதையால் அமைக்கப்பட்ட நெறி அது. அனல் பட்டு அனல் எழுவதுபோல அவர்கள் அழியா தொடர்ச்சியாக உள்ளனர். ரிஷபர், அஜிதர், சம்பவர், அபிநந்தனர். சுமதிநாதர் என்னும் ஐவரையும் இன்று ஆலயங்களில் அமைத்து வழிபடுகிறார்கள். பத்மபிரபர், சுபார்ஸ்வர், சந்திரபிரபர், புஷ்பதந்தர், சீதாலர், சிரயோனஸர், வசுபூஜ்யர், விமலர், அனந்தர், தர்மர், சாந்திநாதர், குந்துநாதர், அரநாதர், மல்லிநாதர், முனிஸுவிரதர், நமிநாதர் என அவர்களின் நிரை ஒன்று உருவாகியுள்ளது. அறியாத நிலங்களில் எல்லாம் அருகர்கள் எழுந்துகொண்டிருக்கிறார்கள்.”

சாலையோரத்தில் அருகநெறியினர் அமைத்திருந்த விடுதி ஒன்றில் அவர்கள் பொதியவிழ்த்திட்டு தங்கினர். உணவும் நீரும் அங்கு விலையில்லாமல் அளிக்கப்பட்டன. விலங்குகள் கால்மடித்து படுத்து அரைவிழி மூடி அசைபோட்டு இளைப்பாறின. நடைநலிந்த வணிகர் திறந்த மென்மணல் வெளியில் மெல்லிய ஆடையை முகம் மீது மூடியபடி படுத்து துயிலத் தொடங்கினர். அந்த மெல்லாடைமேல் பாலைநிலக்காற்று மணலை அள்ளி தூவிக்கொண்டிருந்தது. மூச்சில் இழுபட்டு குழிந்து எழுந்துகொண்டிருந்தன துணிகள். அர்ஜுனன் துயிலமையாமல் அமர்ந்து வானை நோக்கிக்கொண்டிருந்தான்.

பாலைவனத்து மக்கள் விழிகள் என்று பொருள் வரும் சொல்லால் வானத்தை குறிப்பிடுவார்கள் என்று அவன் கேட்டிருந்தான். மேற்கே அந்திச் செம்மை இருண்டு முகிற்குவைகள் எடைகொண்டு இருள, பல்லாயிரம் சிற்றலைகள் என படிந்த செம்மணல்வெளி உயிர்கொண்டு அசையும் மென் தசைப்பரப்பாக மாறி பின் விழிகளில் மட்டுமே அலைகளை எஞ்சவிட்டு மறைய, இரவு சூழ்ந்து கொண்டபோது வானில் ஒவ்வொன்றாக எழுந்து வந்த விழிப்பெருக்கை அவன் கண்டான். சில கணங்களில் ஒளிரும் வைரங்களை பரப்பிய மணல் வெளியென மாறியது வானம்.

அத்தனை அருகில் விண்மீன்கள் இறங்கிவருமென அவன் எண்ணவில்லை. அப்பால் தெரிந்த சிறு குன்றின்மேல் ஏறி நின்றால் அவற்றை கைவீசி அள்ளி மடிச்சீலைக்குள் கட்டிக்கொள்ளலாம் என்று தோன்றியது. கரும்பட்டுப் பரப்பிலிருந்து எக்கணமும் உதிர்ந்து விழுபவை போல அவை நின்று நின்று அதிர்ந்தன. முழங்காலைக் கட்டியபடி அமர்ந்து அவன் நோக்கிக்கொண்டிருந்தான். வேறெங்கும் அத்தனை பெரிய விண்மீன்களை அத்தனை அண்மையில் காணநேர்ந்ததில்லை என்று நினைத்தான். விண்மீன்களுக்கு மிக அருகே வாழ்பவர்கள் என எண்ணியதும் அவ்வெண்ணத்தை உணர்ந்து மெல்ல அசைந்து அமர்ந்தான்.

அவன் அசைவால் அவ்வெண்ணத்தை அறிந்ததுபோல சப்தமர் மெல்ல புரண்டு படுத்து மேலே நோக்கி “விழிகள்!” என்றார். ”இங்குள்ள தொல்குடிகள் அவை மூதாதையர் நோக்குகளென எண்ணுகின்றனர். உறங்கும்போது உளம் கனிந்த அன்னையரும் தந்தையரும் விண்ணிலிருந்து தங்களை நோக்கி காவலிருப்பதாக நம்புகின்றனர். இங்கு வாழும் குடிகள் படைக்கலம் எடுப்பதில்லை. எனவே நிசஸ்திர மண்டலம் என்று இது அழைக்கப்படுகிறது. செந்நிற அலைமண் விரிந்த இந்நிலத்தின் எட்டு மலைகளால் சூழப்பட்ட எல்லைக்குள் எதன் பொருட்டேனும் படைக்கலம் தொட்டு எழுபவன் இக்குடிகளால் முற்றிலும் விலக்கப்படுவான். அவனை அழைத்துச் சென்று இங்குள்ள பவநாசினி என்னும் ஐந்து சுனைகளில் நீராடச்செய்து தலையை மொட்டையாக்கி புறந்தள்ளப்பட்டவனின் அடையாளமாகிய எதிர்த் திசை சுவஸ்திகத்தை அவன் நெற்றியில் பச்சை குத்தி எல்லை கடத்தி விட்டுவிடுவார்கள். பிறகு ஒருபோதும் அவன் இந்நிலத்திற்குள் நுழைய முடியாது” சப்தமர் தொடர்ந்தார்.

எனவே சொல்புழங்கும் காலம் முதல் இங்கு எவரும் படைக்கலம் ஏந்தியதில்லை. இவர்களின் முதுமூதாதை ரைவதகர் விண்நிறைந்த சித்திரை முழுநிலவு நாளில் அவர் காலடி பொறிக்கப்பட்ட கரும்பாறை அருகே நின்று இனிமேல் இந்நிலத்தில் படைக்கலங்கள் திகழத்தேவையில்லை என முடிவெடுத்தனராம்” என்றார் சப்தமர். “படைக்கலம் ஏந்தாதவர்கள் என்று இவர்கள் புகழ்பெறும் தோறும் இவர்கள் மேல் படைகொண்டு வருபவர்களும் இல்லாமலாயினர். ஏனென்றால் படைகொண்டு வந்து இவர்களை வென்று மீள்வதில் எப்பெருமையும் இல்லை. அத்துடன் இப்பெரும்பாலையை ஆளும் மணல் காற்றுகளின் மேல் இவர்களுக்கு ஆணை உள்ளது என்றொரு தொல்நம்பிக்கை உள்ளது. எனவே தலைமுறைகளென இவர்கள் போர்க்குருதி ஒரு துளியையேனும் கண்டதில்லை.

படைகொண்டுவருபவர் முன்னே வெறும்தலையுடன் சென்று நின்று குருதிகொடுத்து மடிவது இவர்களின் வழக்கம். அது படைகொண்டுவரும் மன்னனுக்கு தீரா பெரும்பழியையே கொண்டுவரும். மாளவத்தின் தொல்லரசன் பிரபாவர்த்தனன் இந்நிலத்தின்மேல் படைகொண்டு வந்தபோது அருகநெறிநிற்கும் படிவர் நூற்றெட்டுபேர் கூப்பிய கைகளுடன் அருகமந்திரங்களை உச்சரித்தபடி நிரையாக சென்று அவர்களை எதிர்கொண்டனர். அவர்களை விலகிச்செல்லும்படி அரசன் எச்சரித்தான். அவர்கள் அம்மொழியை கேட்டதாக தெரியவில்லை. சினந்த மன்னன் அவர்களின் தலைகளைக் கொய்து வீசிவிட்டு முன்செல்லும்படி ஆணையிட்டான்.

போர்க்கூச்சலுடன் முன்னால் பாய்ந்த படைமுதல்வர் முதலில் வந்த பன்னிரு அருகப்படிவரை வெட்டிவீழ்த்தினர். கைகூப்பியபடி ஓசையின்றி அவர்கள் இறந்து விழுந்தனர். முண்டனம் செய்த தலைகள் தேங்காய்கள் போல ஓசையிட்டு தரையில் விழுந்ததைக் கண்டு படைவீரர் நின்றுவிட்டனர். வெட்டுபட்ட தலையில் உதடுகள் மந்திரங்களை உச்சரித்தன. விழிகள் கனிவுடன் மலர்ந்திருந்தன. கைகள் கூப்பியபடி உடல்கள் மண்ணில் விழுந்து துடித்தன. முன்னால்சென்ற வீரன் திரும்பி “படைக்கலம் எடுக்காத படிவரை கொன்றபின் நான் மூதாதையர் உலகில் சென்று சொல்லும் விடை என்ன?” என்று கூவினான். ”ஆம் ஆம்” என்றபடி படையினர் நின்றனர். ”வெட்டி வீழ்த்துங்கள்... முன்னேறுங்கள்” என்று அரசன் கூவ ”அரசே, அறமில செய்து எங்கள் குலமழிக்க மாட்டோம். திரும்புவோம்” என்றான் படைத்தலைவன். “கொல்லுங்கள். இல்லையேல் உங்களை கழுவேற்றுவேன்” என்றான் அரசன். “இதோ நானே அவர்களை வெட்டிக்குவிப்பேன்… “

”அதைவிட உங்களை வெட்டுவது எங்களுக்கு நெறியாகும். நீங்கள் படைக்கலம் ஏந்தியிருக்கின்றீர்கள்” என்று அரசனின் மெய்க்காவலன் சொன்னான். பிரபாவர்த்தனன் நிலையழிந்து அவனை வெட்டப்போக அக்கணமே அரசனின் தலையை வெட்டினான் பின்னால்நின்ற தளபதி. திகைப்புடன் அரசன் சரிந்து புரவியிலிருந்து கீழே விழுந்தான். அரசனின் உடலுடன் மாளவத்தினர் திரும்பிச்சென்றனர். அவனுக்கு வீரக்கல் நாட்டி குருதிக்கொடை அளித்து நிறைவளித்தனர். அப்போது குலப்பாடகரில் எழுந்த மூதாதையர் “செல்லுமிடம் தெரியாத கால்கள் கொண்டவன் குலம் அழிக்கும் நச்சுவிதை. அவனை கொன்றது நாங்களே. அவ்வாளில் அன்று நாங்கள் எழுந்தருளியிருந்தோம்” என்றனர்.

ஆனால் அருகநெறியினரை கொன்றமையால் பன்னிரு ஆண்டுகாலம் மாளவத்தில் மழைபெய்யாது என்றனர் நிமித்திகர். அதற்கேற்ப ஈராண்டு மழை பொய்த்தது. ஊர்களிலிருந்து வேளாண் மக்கள் கிளம்பிச்செல்லத் தொடங்கினர். வணிகர் வராதாயினர். பிரபாவர்த்தனனின் மைந்தர் அஸ்வபாதர் அருகநெறியினர் ஆயிரத்தவரை தன் நாட்டுக்கு அழைத்துவந்து பாதபூசனை செய்து பழிதீர்த்தார். அவர்களின் ஆணைக்கிணங்க ஆயிரத்தெட்டு அன்னசாலைகளும் ஆயிரத்தெட்டு ஆதுரசாலைகளும் ஆயிரத்தெட்டு கல்விச்சாலைகளும் அமைத்தார். அதன்பின்னரே கருமுகில் மாளவத்திற்குள் நுழைந்தது. முதல்மழை பெய்து காய்ந்த நிலம் பெருமூச்சுவிட்டது. பசும்புல் முளை தூக்கியது. புள்ளொலி வானில் எழுந்தது.

”இங்கு அருகநெறியை நிறுவிய ரைவதகர் அரண்மனை முகப்பில் நின்றிருந்த தொன்மையான கூர்ஜ மரத்தின் அடியில் தன் கைகளால் மென்மரத்தில் செதுக்கப்பட்ட முதற்றாதை ரிஷபரின் வடிவை நிறுவினார். இன்று அது ஓர் ஆலயமாக எழுந்துள்ளது. அதைச் சுற்றி பிற நான்கு அருகத்தாதைகளும் அமைந்துள்ளனர்” என்றார் சப்தமர். “ரைவதகரும் இன்று அருகரென வழிபடப்படுகிறார். காலையிலும் மாலையிலும் சொல் எண்ணி தொழவேண்டிய மூதாதையரில் ஒருவர் என்று வைதிகரின் நூல்களிலும் அவர் வாழ்த்தப்படுகிறார்.”

“இங்குமட்டும் ஏன் அருகநெறி தழைத்துள்ளது?” என்று அர்ஜுனன் கேட்டான். “இங்குள்ள பாலிதான மகாமேரு என்னும் குன்றின் உச்சியில்தான் அருகர்களின் முதல்தாதை ரிஷபர் மெய்மையை அறிந்தார்” என்று சப்தமர் சொன்னார். “அன்றே இங்கு அருகமெய்மை விதைக்கப்பட்டுள்ளது. அருகநெறியை பாலைநிலத்தோர் புரிந்துகொள்வதுபோல பிறர் அறிவதில்லை. இங்கு எவரும் பிறர் கருணை இன்றி வாழமுடியாது. ஒவ்வொருவரும் பிறருக்கு முலையூட்டும் அன்னையும் பிறர் முலைகுடிக்கும் சேயுமென்றே இம்மண்ணில் வாழமுடியும் என்று தொல்பாடல் சொல்கிறது. அருகநெறியின் அடிப்படைச் சொல் என்பது கருணையே” சப்தமர் தொடர்ந்தார்.

அயோத்தியை ஆண்ட இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த நாபி என்ற அரசருக்கும் அவரது பட்டத்தரசியாகிய மரூதேவிக்கும் மைந்தராகப் பிறந்தவர் அருகர்களின் முதல்வராகிய ரிஷபர். ஆடிமாதம் அமாவாசை நாள் முதல் மரூதேவி பதினாறு மங்கலக் கனவுகளைக் கண்டதாக அருகநெறிநூல்கள் கதைகள் சொல்கின்றன. அக்கனவுகளை அவள் தன் கணவரிடம் சொல்ல நூற்றிஎட்டு நிமித்திகர்கள் அவை கூடி அமைந்து நூலாய்ந்து குறிதேர்ந்து அவை விண்ணாளும் பெரு நெறி மண்ணுரைக்க வரும் முதல் ஞானி ஒருவரின் பிறப்பு நிகழவிருப்பதைக் குறிப்பன என்பதை முன்னுரைத்தனர்.

அயோத்தி நகரம் முழுதும் மைந்தனின் வருகைக்காக அணிக்கோலம் கொண்டது. விண்ணில் சென்ற தேவர்களும் கந்தர்வர்களும் வானிலிருந்து உதிர்ந்து கிடக்கும் பொன்னணி என்று அயோத்தி நகரத்தை எண்ணினர். அங்கிருந்து எழுந்த மங்கல இசையையும் நறுமணத்தையும் அறிந்து மகிழ்ந்து முகில்விட்டு இறங்கி வந்து மைந்தருடன் சேர்ந்து விளையாடினர். அரம்பையர் மகளிருடன் சேர்ந்து களியாடினர். கந்தர்வர்கள் தும்பிகளாக மலர்தேடி பறந்தலைந்தனர். தேவர்களின் குளிர்மழைக்குடையொன்று எந்நேரமும் அயோத்தியில் நின்றது. அதன்மேல் இந்திரனின் மணிவில் ஒன்று அழியாது அமர்ந்திருந்தது. இரவில் விண்ணிலிருந்து இறங்கி வந்த விண்மீன்கள் அயோத்தியின் தெருக்களெங்கும் கிடந்து அதிர்ந்தன.

அப்போது இரவெல்லாம் குயில்கள் பாடின என்கிறார்கள். குளிர்மழைக்கொண்டலைக் கண்டு பகலெல்லாம் மயில்கள் தோகை விரித்து நின்றன. அயோத்தியில் அன்று மக்கள் உண்ட அத்தனை உணவுகளும் தித்தித்தன. காற்று தொட்ட அனைத்து பொருட்களும் இசையெழுப்பின. அடுமனை புகைகூட குங்கிலியமென மணத்தது. பகலெங்கும் சிரித்து களித்தலைந்த மக்கள் இரவில் துயில்கையில் மேலும் உவகை கொண்டு முகம் மலர்ந்து கிடந்தனர்.

சித்திரை ஒன்பதாவது வளர்பிறையில் மரூதேவியின் மணிவயிறு திறந்து பிறந்தார் ரிஷ்பர். மூன்றுமுழம் நீளமிருந்த பெரிய குழந்தையைக் கண்டு வயற்றாட்டிகள் கைகூப்பி வாழ்த்தினர். வெண்காளை ஒன்று அன்று காலை அரண்மனை முகப்பில் வந்து நின்றதாக மூதன்னையர் உரைத்தனர். ஆகவே அவருக்கு ரிஷபதேவர் என்று பெயரிட்டனர். நிகரற்ற தோள்வலிமையும் மறுசொல்லற்ற அறிவும் சொல் கடந்து செல்லும் சித்தமும் கொண்டிருந்தார் காளையர். ஏழுவயதில் அந்நகரின் மாந்தர் அனைவரும் அண்ணாந்து நோக்கி பேசும் உயரம் கொண்டிருந்தார். துதிக்கைபோன்ற பெருங்கைகள் முழந்தாள் தோய விரிநெஞ்சும் சிறுவயிறும் உருண்ட தொடைகளும் என அவர் நின்றிருந்தபோது மானுட உடல் கொள்ளும் முழுமை அது என்று கண்டனர் நிமித்திகர்.

இளமை அமைந்ததும் சுனந்தை, சுமங்கலை என்னும் இரு இளவரசிகளை மணந்தார். சுமங்கலை பரதன் என்னும் மைந்தனையும் பிராமி என்னும் மகளையும் ஈன்றாள். சுனந்தை பாகுபலி என்னும் மைந்தனை பெற்றாள். இனிய இல்லறத்தால் நூறு மைந்தரை பெற்றார். செல்வமும் புகழும் வெற்றியும் அடைந்து நிகரிலா வெண்குடை ஒளியுடன் அயோத்தி நகரை ஆண்டார். பாரதவர்ஷத்தில் அத்தனை நாடுகளும் அயோத்திக்கு கடலுக்கு மலைகள் நதிகளை அளிப்பதுபோல் கனிந்து கப்பம் கொடுத்தன. அந்நகரின் கருவூலங்கள் குறைவறியாதவை என்பதனால் அவற்றை ஒருபோதும் காவலிட்டு பூட்டிவைக்கவில்லை என்கின்றன பாடல்கள்.

விண்முகில்களை கை சுட்டி அழைத்து நிறுத்தி மழைபெய்யவைக்கும் தவத்திறன் கொண்டிருந்தார் ரிஷபர். கிழக்கெழுந்து மேற்கில் அமையும் சூரியனின் கதிர்களை அவர் தன் சொல்லால் நிறுத்த முடிந்தது. துயரென்று ஒன்று அவர் அறிந்திருக்கவில்லை. தந்தையின் கைபற்றிச் செல்லும் மைந்தரின் களியாட்டு ஒவ்வொரு குடிமக்களிலும் நிகழ்ந்தது. அயோத்தி நகரில் முதற்புலரியில் கூவி எழும் கரிச்சான் அவர் பெயரை பாடியது. அந்தியில் செங்கதிர் மேற்கு வானில் மறையும்போது எழுந்து சிறகடிக்கும் வால்குருவி அவர் பெயரை வாழ்த்தியது.

மானுட துயரங்கள் ஏழு. இறப்பு, நோய், தனிமை, பிரிவு, வறுமை, அறியாமை, நிறைவின்மை. இவ்வேழும் ஏழு இருட்குகைகள். இப்புவியையும் அவ்விண்ணையுமே அள்ளித்திணித்தாலும் நிறையாத ஆழம் கொண்டவை. ஆனால் பேரறம் அவ்வேழு அடியிலா பெருந்துளைகளையும் நிறைக்குமென்பதை அயோத்தியில் ரிஷபதேவரின் ஆட்சியில் மக்கள் கண்டனர். அறத்திலமைந்த வெண்குடை நாளும் ஒளிகொள்ளுமென்பது தேவர்நெறி. ரிஷபரின் வெண்குடை இரவில் மண்ணில் ஒரு நிலவென தெளிந்திருந்தது.

விண்ணாளும் இந்திரன் அவைக்கு வந்த நாரதர் சொன்னார் “அதோ மண்ணில் பேரறம் திகழ்கிறது. ஆகவே இன்று முழுமை என்பது இங்கு அமராவதியில் இல்லை. தேவர்க்கரசே. உன் கடன் தன் மானுடவாழ்வின் எல்லையை அவ்வரசருக்கு அறிவிப்பது. அவர் மண் நிகழ்ந்தது இன்று நின்று ஒளிரும் எளிய அறம் ஒன்றைக்காட்டி விண்மீள்வதற்காக அல்ல. என்றும் நின்று ஒளிரும் அழியா அறம் ஒன்றை அங்கு நாட்டி சொல்லில் நிலை கொள்வதற்காக. அதனை அவருக்கு உணர்த்துக!”

இந்திரன் எழுந்து ”நான் செய்ய வேண்டியதென்ன நாரதரே?” என்றான். ”அவர் ஆற்றும் அறம் என்பது அன்றன்று மலரும் அழகின் மலர் என உணர்த்துக! மலராது வாடாது என்றுமுள்ள மலர் ஒன்றின் நறுமணத்தை அவர் தேடிக்கண்டடையட்டும்” என்றார் நாரதர்.

இந்திரன் தன் அவையில் இருந்த நடன அரம்பையான நீலாஞ்சனை என்னும் பேரழகியை பன்னிரு கந்தர்வர்களுடன் மண்ணுக்கு அனுப்பினான். சூதர்களாகவும் ஆட்டர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும் புலவர்களாகவும் மாற்றுருக் கொண்டு அவர்கள் அயோத்தி நகர் அடைந்தனர். அங்குள்ள இசைச்சாவடியில் தங்கள் கலை நிகழ்வை அரங்கேற்றினர். மண்ணில் எவரும் நிகழ்த்தமுடியாத அவ்வருநிகழ்வைக் கண்டு அங்கு கூடிய நகரத்தினர் நெஞ்செழுந்தனர். இது அரசரின் அவையிலேயே நிகழ்த்தப்படவேண்டுமென்று எண்ணினர்.

தன் அரண்மனை வாயிலில் வந்து கூடிய மக்கள் மலர்ந்த முகத்துடன் குரலெழுப்பி கூவி ஆர்த்து அழைப்பதைக்கண்டு வெளியே வந்த ரிஷபர் அவர்கள் நடுவே வந்த கலைஞர்களை கண்டார். கருநிற உடல் கொண்டவளாகிய நீலாஞ்சனை பொன்னிறமான கந்தர்வர்களின் நடுவே பொற்தாலத்தில் நீலமணி போல் ஒளிவிட்டாள். அவளை தன் அவைக்கு வரச்சொன்னார் ரிஷபர். அங்கு குடிகளும் அரண்மனைப் பெண்டிரும் குடித்தலைவர்களும் அமைச்சர்களும் சூழ இசை அவை கூட்டினார்.

அவைநடுவே ஆட்டர் சூழ செந்தாமரை நடுவே நீலம் மலர்ந்ததுபோல நீலாஞ்சனை வந்து நின்றாள். அவளைக்கண்டதுமே அவர் அவள் அழகால் அள்ளி எடுத்து குழலில் சூடப்பட்டார். இசைச்சூதர் பாட அவள் நடனமிட்டாள். தாளத்தில் இசை அமைந்து, இசையில் பாடல் அமைந்து, பாடலில் நாட்டியம் அமைந்து, நாட்டியத்தில் உணர்வுகள் எழுந்து, உணர்வென்றே எஞ்சும் பெருநிலை அங்கு நிகழ்ந்தது. கை சுழன்ற வழிக்கு கண், கண் சென்ற வழிக்கு கற்பனை, கால் சென்ற வழிக்கு தாளம், தாளம் சென்ற வழிக்கு அவையினர் நெஞ்சம் என்று நிகழ்ந்த ஆடலில் தன் உடல் விட்டு உள்ளம் எழுந்து நின்றாடுவதை அவர் உணர்ந்தார்.

இப்புவியில் தெய்வம் என்று ஒன்றிருந்தால் அது அழகே என்று அறிந்தார். ஓர் அழகு புவியில் உள்ள அனைத்து அழகுகளையும் துலக்கும் பேரழகு என ஆகும் மாயத்தை கண்டார். விழி தொட்ட அனைத்தும் எழில் கொண்டன. சித்திரத்தூண்கள், வளைந்த உத்தரங்கள், அவற்றின் மேலெழுந்த கூரையின் குவை முகடு, சாளரங்கள், திரைச்சீலைகள், சுடுகளிமண் பலகைகள் பாவிய செந்நிறத்தரை அனைத்தும் தங்கள் முழுமையெழிலில் மிளிர்ந்தன. சூழ்ந்திருந்த அவையினர், அங்கு மலர்ந்த விழிகள் எங்கும் அழகென்பதே ஒளிகொண்டிருந்தது. அழகென்பது விழியறியும் தெய்வம். பொருள் மேல் தன்னை தெய்வம் நிகழ்த்திக் கொள்ளுதல். உருவம் கொள்ள தெய்வத்திற்கு பிறிதொரு வழியில்லை. உருவெடுத்த மானுடனுக்கு அறியவரும் தெய்வமும் பிறிதில்லை.

காலம் அழகை முடிவிலிக்கு நீட்டுகிறது. வெளி அதை தன் தாலத்தில் ஏந்தியிருக்கிறது. ஒளி அதை துலக்குகிறது. இருள் அதை காக்கிறது. இருப்பு அழகின் வெளிப்பாடு. இன்மை என்பது அழகின் நுண்வடிவம். அழகிலாதது என்று ஏது இங்கு? பேரழகு ஒன்று எங்கோ பெருகியுள்ளது. அதிலிருந்து ததும்பி கனிந்தூறி முழுத்துச் சொட்டி பரவுகின்றன பேரழகுத் துளிகள். புடவி எனும் அழகுக் கோலம் எந்த முற்றத்தில் வரையப்பட்டுள்ளது?

எண்ணங்கள் ஒன்றன்மேல் ஒன்றென விழுந்து அழுத்தி ஒவ்வொன்றையும் அசைவறச்செய்து அழகு என்னும் ஒற்றைச் சொல்லாய் எஞ்சின. பின் அழகை கை விரல்நுனிகள் அறிந்தன. காது மடல் நுனிகள் அறிந்தன. மூக்கு முனை அறிந்தது. நாநுனி தித்தித்தது. மயிர்க்கால்கள் தேனில் ஊறி நின்றன. உள்ளம் தேன் விழுதென ஒழுகியது. அச்சொல் மறைந்து அதுவென அங்கிருந்தார்.

அக்கணத்தில் இந்திரன் வானின் விழி திருப்பி அருகே நின்ற நாரதரை நோக்கினான். பின்பு புன்னகைத்து தலை அசைத்தான். சுழன்று நடனமேறி காற்றில் எழுந்த நீலாஞ்சனை உதிரும் மலர் போல் மண்ணில் விழுந்தாள். விண்ணில் பறந்தகன்ற நீலப்பறவையொன்றின் இறகு போல் தரையில் கிடக்கும் அவளை நோக்கி எங்கிருந்தோ அறுபட்டு அங்கு வந்து விழுந்து திகைத்து எழுந்தார் ரிஷபர்.

அவையினர் அதுவும் நடனமோ என்று மயங்கி அமர்ந்திருந்தனர். ஆழ்ந்த அமைதியில் சாளரத் திரைச்சீலைகள் துடித்தன. எவரோ ”மூச்சின் அசைவில்லையே” என்ற மென்குரல் பேச்சை எழுப்ப அக்கணமே ஓசைகளாக பற்றிக்கொண்டது அவை. ”ஆம் ஆம்” என்றனர். இருவர் ஓடிச் சென்று நீலாஞ்சனையின் தலை பற்றி மெல்ல தூக்கினர். அவள் முகம் உயிரசைவை இழந்திருந்தது. இரு மயில்பீலி விளிம்புகள் போல் இமைகள் மூடியிருந்தன. சேடி அவள் கன்னத்தை தட்டி ”நீலாஞ்சனை! நீலாஞ்சனை” என்று அழைத்தாள். இன்னொருத்தி அவள் கையைப்பற்றி நான்கு விரல் அழுத்தி நாடி நோக்கினாள். பிறிதொருத்தி தன் ஆடை நுனியை எடுத்து அவள் மூக்கின் அருகே வைத்து மூச்சு கூர்ந்தாள்.

மூவரும் திகைக்க முதியவள் ஒருத்தி ”ஆம், இறந்துவிட்டாள்” என்றாள். நான்கு புறமிருந்தும் அவையினர் ஈக்கள் போல கலைந்து ரீங்கரித்து வந்து மொய்த்தனர்.. ”இறந்துவிட்டாள்! இறந்துவிட்டாள்!” என்று பொருளில்லாது கூவினர். “அது எப்படி?” என்று கூவினார் ரிஷபர். அச்சொல்லின் பொருளின்மையை தானே உணர்ந்து “ஏன்?” என்றார். அதன் பெரும்பொருளின்மையை மேலும் உணர்ந்து ”என்ன நிகழ்கிறது இங்கு?” என்றார். அதன் முடிவிலா பொருளின்மையை உணர்ந்து ”என்ன சொல்வேன்!” என்றார்.

“விலகுங்கள்” என்று மருத்துவர் கூறினார். கூட்டத்தை விலக்கி அருகே சென்றார். அவள் நெற்றியில் கை வைத்து “ஆம், இறந்துவிட்டாள்” என்று அறிவித்தார். அமைச்சர் ”என்ன ஆயிற்று மருத்துவரே?” என்றார். “பிராணன் ஆட்டத்தில் முழுமை கொண்டு கூர்ந்த விழிகளினூடாக வெளியே சென்றுவிட்டது” என்றார் மருத்துவர். ”ஆட்டப்பாவையை உச்சியில் கட்டிய சரடு என்று ஊர்த்துவனை சொல்வார்கள். அது அறுந்துள்ளது. ஆகவேதான் அவள் அக்கணமே விழுந்தாள். அவள் இங்கில்லை.”

இரு கைகளையும் தொங்கவிட்டு தன் குடியினர் நடுவே நெடுமரமென எழுந்து அசைவற்று நின்றார் ரிஷபதேவர். ”இங்கில்லை! இங்கில்லை! இங்கில்லை!” என்று ஓலமிட்டது உள்ளம். அவ்வண்ணமெனில் இங்குளதென்ன? அதுவரை கண்டிருந்த நீல மென்மலர், நீள் விழிகள், நெடுங்கூந்தல், துவளும் இடை, நெளியும் கைகள், செங்கனி உதடுகள், இளமுலைக்குவைகள். இவைதான் இக்கணம் வரை இங்கு அழகு அழகு அழகென்று எழுந்து நின்றன. இப்போது இங்கிலாதது எது?

அவளை அள்ளி அவை விட்டு வெளியே கொண்டு சென்றனர். எவரிடமும் சொல்லெடுக்காமல் திரும்பி தன் மஞ்சத்தறை சென்று கைகளில் தலை தாங்கி அமர்ந்தார். அன்றிரவு முழுக்க ஒற்றைச் சொல் மேல் அமர்ந்திருந்தார். முட்டை என கூழாங்கல் மேல் சிறகை விரித்து அமர்ந்து அடைகாக்கும் அன்னைப்பறவை என.

பகுதி ஐந்து : தேரோட்டி – 10

நீலாஞ்சனையின் இறப்பு அரண்மனையை ஆழ்ந்த அமைதியில் ஆழ்த்தியது. அவைநடுவே தன் கலையின் உச்சகணத்தில் அவள் மறைந்தது நல்லூழ் என ஒருசாராரும் அவைநடுவே ஓர் இறப்பு நிகழ்ந்தது தீயதேதோ தொடர்வதற்கான அறிவிப்பு என இன்னொரு சாராரும் பேசிக்கொண்டனர். ஏதோ நிகழவிருக்கிறது என அனைவரும் அறிந்திருந்தனர். தன் மஞ்சத்தறையில் நாட்டிய சிலை என அரசர் அமர்ந்திருப்பதை நகரமே அறியலாயிற்று. அவரை அணுக அஞ்சி அரசியும் இளையோரும் அவரது அணுக்கச்சேவகனும் அறைவாயிலிலேயே காத்திருந்தனர்.

மறுநாள் துவாதசி. அன்று கன்னியை சிதையேற்றுவது முறையல்ல என்றனர் நிமித்திகர். அதற்கு மறுநாள் தெற்குக்காட்டில் அவளுக்கு சிதை ஒருக்கப்பட்ட செய்தியை வந்து அவரிடம் சொன்னார்கள். மஞ்சத்தில் அமர்ந்த நிலையிலேயே கை மேல் தலை வைத்து கண்கள் குத்தி நிற்க அசையாதிருந்த ரிஷபர் எழுந்து “எரியீடு எப்போது?” என்றார். “உச்சிக்கு ஒரு பொழுது முன்பு” என்றார் அமைச்சர். மீண்டும் “எரியீடு எப்போது?” என்றார். அமைச்சர் விழிமாறாமல் அதை சொன்னார். “இப்போது நேரமென்ன?” என்றார். “நெருங்குகிறது” என்றார் அமைச்சர்.

நீள் மூச்சுடன் “நன்று” என தன் சால்வைக்கென கைநீட்டினார். “தாங்கள் செல்லவேண்டுமென்பதில்லை அரசே” என்று தன்னைத் தொடர்ந்து வந்த அமைச்சரின் சொற்களைக் கேளாமல் படியிறங்கி அரண்மனை முற்றத்திற்கு வந்து ஒற்றைக் குதிரை தேரிலேறி “செல்க!” என்றார். அவன் அறிந்திருந்தான் அவர் செல்லுமிடம் ஏதென்று. புரவிகள் நெஞ்சின் தாளமென குளம்பு பதிய சாலையில் ஓடின.

தெற்குக்காட்டில் சிதை ஒருக்கப்பட்டிருந்தது. அங்கு நீலாஞ்சனையுடன் வந்த பன்னிருவரும் துயர் தாங்கி நின்றிருந்தனர். கூடி இருந்த நகர்மக்களோ இருநாள் துயிலழிந்த முகங்கள் வீங்கி விழிகள் நனைந்து ஊறியிருக்க, கைபிணைத்து தலை குனிந்து நின்றனர். அவர் வந்ததும் மெல்லிய குரலில் வாழ்த்தொலிகள் எழுந்தன. தேர் விட்டிறங்கி சிதை அருகே மலர் வணக்கத்திற்கென வைக்கப்பட்டிருந்த நீலாஞ்சனையின் உடல் நோக்கி சென்றார். மலர்மணமும் பல்வகை பொருள்மணமும் கலந்து எழுந்த அவள் உடலில் இருந்து அனைத்து மணங்களின் அடுக்குகளையும் கலைத்து வெளிவந்தது சதை அழுகும் நாற்றம்.

வெண்மலர்களும் செம்மலர்களும் கொண்டு மூடப்பட்டிருந்த அவள் உடலருகே நெருங்கும் தோறும் அஞ்சும் விலங்கென அவர் உள்ளம் திமிறி இழுத்துக்கொண்டு பின்னால் சென்றது. இதுவல்ல இதுவல்ல என்று தவித்தது. அருகே சென்று நின்று அம்முகத்தை நோக்கியதும் திடுக்கிட்டு “ஆ!” என்று மெல்லொலி எழுப்பினார். அங்கு கிடந்தது பிறிதொரு சதையும் உடலும். மெழுகென உயிர் அழிந்த தோல். வீங்கிய இமைகள். நீலமோடிய இதழ்கள். உப்பி சற்றே வளைந்து உறைந்திருந்த கன்னங்கள். “யாரிது?” என்று அறியாது அமைச்சரிடம் வினவி உடனே விழிதிருப்பிக் கொண்டார். அமைச்சர் மறுமொழி உரைக்கவில்லை. பின்னால் நின்ற தலைமை ஏவலர் “மலரீடு செய்யுங்கள் அரசே” என்றார். “ஆம்” என்றபின் மும்முறை மலரள்ளி அவள் மேல் இட்டபின் தலை குனிந்து விலகினார். அவள் விரிந்த இதழ்களின் மேல் தேனீக்கள் அமர்ந்திருந்தன.

அவள் உடலை சிதைக் காவலர் தூக்கி சந்தன விறகடுக்கின் மேல் வைப்பதை கண்டார். மென்விறகிட்டு உடல் மூடப்பட்டது. அவள் துணைவனாக வந்த கந்தர்வன் நெஞ்சில் நெருப்பிட்டான். சருகில் பற்றி சற்றே தயங்கி சிறு சுள்ளியை வெடிக்கச் செய்து சிவந்தெழுந்து இதழ் இதழாக மலர்ந்து விரிந்து தடிகளை வளைத்துச் சுழன்று மேலெழுந்தது செந்நெருப்பு. உள்ளே அவள் உடல் வெந்து உருகி வழிவதை அவரால் விழியின்றி நோக்க முடிந்தது. தோல் இழுபட்டு கருகி வழிந்து விலகி உள்ளிருந்த நிணம் உருகிச் சொட்ட ஊன்நெய் ஊறிக் கொதித்தபடி வழிந்து விறகில் விழுந்து நீலமாகி எரிந்தது. அங்கு எழுந்த நெருப்பின் நாக்கு அதை ஆவல்கொண்டு உண்டது.

எரியாத முகம் உருகி வழிந்து பற்களுடன் மூக்கின் வெள்ளெலும்பு மூடிய துணிப்பரப்பில் புடைத்து எழும் மரப்பாவை போல் தெரிய, மென் முலைகள் அழன்று வழிந்தபின் வெள்ளெலும்பு நிரை எழுந்து வர, உள்அமைந்த நுரையீரல் சலம் சிதற மெல்ல வெடித்தது. சிதைக் காவலன் நீண்ட கவைக்கழியால் அந்நெஞ்சை அறைந்து உடைத்து உள்ளே சிறைப்பட்ட காற்றை வெளியேறச் செய்தான். இடையெழுந்த தசை உருகி பற்றிக்கொள்ள மேலும் காலமெடுத்தது. நீள் கழியால் அதை அறைந்து உடலை மெல்ல உள்மடித்து மேலும் விறகை எடுத்து வைத்தான். உடல் நீரை அனல் உண்டதும் ஊன் கொழுப்பு தானே நெருப்பாயிற்று.

விழியசைக்காது ஏன் இதை நோக்கி நிற்கிறோம் என்று வியந்தார். நோக்குவது உள்ளமல்ல உடலே என்று உணர்ந்தார். திரும்புக திரும்புக என்று அதற்கு ஆணையிட்டார். விரைக என கடிவாளத்தை பிடித்திழுக்க இழுக்க அது கற்குதிரை என்று உணரும் கனவு போலிருந்தது அக்கணம். “செல்வோம் அரசே” என்றார் அமைச்சர். “ஆம்” என்று உரைத்து திரும்பி நடந்தார். தேரில் கால் வைக்கும்போது தலை சுழன்றது. வாயில் நிறைந்திருந்த உமிழ் நீரை துப்பியபின் ஏறுவதற்காக உன்னும் கணத்தில் இரும்பு கதாயுதத்தால் பிடரியில் அறையுண்டது போல் உள்ளம் திறந்தது. அவரது நா அறிந்தது ஊன் சுவை!

அடுமனையில் உணவாகும் ஊன்மணம் அது. ஊன். ஊனை அறியும் கணம். அவரது உடல் குத்துண்ட குதிரை என விதிர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது. “அரசே” என்று அமைச்சர் அழைத்தது கேட்கவில்லை. பின்னால் நின்ற முதியஏவலர் “செல்வோம் அரசே” என்று அவர் தோளைத் தொட்டபோது உடல் நிலைஅழிய கால் தளர்ந்து விழப்போனார். அவர் தோளை பற்றிக்கொண்டார் ஏவலர். மானுடர் எவருக்கும் இல்லாத நிகரற்ற எடை கொண்ட உடல் என்பதால் அவனால் அவரை நிறுத்த முடியவில்லை. சரிந்து கற்சிலையென மண்ணை அறைந்து விழுந்து அவ்வண்ணமே கிடந்தார்.

பாதி புதைந்ததுபோல் மண்ணுடன் மண்ணென கிடக்கும் தொல்காலத்துச் சிற்பம் போல் அசைவிழந்திருந்தார். அதுவரை அவர் முகத்தில் இல்லாத நெடுநரம்பொன்று மூக்கு நோக்கி இறங்கி கிளைபுடைத்து நீலமாகி நின்று துடிப்பதை ஏவலர் கண்டார். குனிந்து அவர் கைகளை பற்றியபோது அவர் உடலின் அனைத்துத் தசைகளும் கோல்கொண்ட முரசுத் தோலென அதிர்ந்து கொண்டிருப்பதை அறிந்தார். “அரசே அரசே” என்று அழைத்தார். அமைச்சர் கைவீசி பிற ஏவலரை அழைத்து அவரைத் தூக்க ஆணையிட்டார்.

அவர்கள் அருகே வந்தபோது தலைமை ஏவலர் கைகாட்டி நிறுத்தி விலகும்படி சொன்னார். சில கணங்களுக்குப் பின் மெல்லிய விசும்பல் ஒலி ரிஷபரிடமிருந்து எழுந்தது. சிறுகுழந்தை போல் உடல் குறுக்கி தோள் ஒடுக்கி மண்ணில் கிடந்தார். கண்ணில் இருந்து வழிந்த நீர் காது நுனியில் சொட்டி விழுந்தது. உதடுகள் அதிர கேவல்கள் வெடித்தன. அழும்தோறும் அழுகை எழுந்தெழுந்து வலுத்தது. பின்னர் இரு கைகளையும் ஊன்றி எழுந்து அமர்ந்தார். மூன்று நீள்மூச்சுகளுக்குப் பின் கண்களைத் துடைத்து எவர் இவர் என தன்னைச் சூழ்ந்திருந்தவர்களை நோக்கினார்.

முற்றிலும் அறியாதவரென அவரது விழிகள் மாறியிருந்ததை அணுக்கனாகிய முதியஏவலர் கண்டார். “அரசே” என விளித்து ஏதோ சொல்ல வந்த அமைச்சரை அவர் கை நீட்டி தடுத்தார். எழுந்து விண் சூடிய தலையுடன் நின்ற ரிஷபர் தன் வலக்கையால் நெற்றியில் சரிந்த குழல் கற்றையை பற்றிச் சுருட்டி இழுத்து பிடுங்கினார்.

இருகைகளாலும் தன் தலை மயிர் அனைத்தையும் பிழுது அவர் வீசுவதை உடல் விதிர்க்க கெட்டித்த பற்களுடன் சுற்றம் நோக்கி நின்றது. குருதி வழிய முண்டனமாகியது தலை. மீசையையும் தாடியையும் அவ்வண்ணமே பிடுங்கி வீசினார். இடை சுற்றிய பட்டாடையை, மணிக்கச்சையை, கழுத்தணி ஆரத்தை, கங்கணங்களை, தோள்வளைகளை, கழலை களைந்தார். அக்கணம் கருவறைக்குள் இருந்து வெளிவந்தது போல் குருதி வழிந்த தலையுடன் முழுதுடலுடன் தெற்கு நோக்கி நடந்தார்.

அவரைத் தொடர்ந்து கண்ணீருடன் சென்றனர் அயோத்தி மக்கள். செய்தி அறிந்து அவரது இரு மைந்தரும் தொடர்ந்து ஓடி வந்தனர். அவரை பின் நின்று அழைக்க அல்லது முன் சென்று தடுக்க அவர்களுக்கு துணிவு கைகூடவில்லை. அயோத்தியின் எல்லை வரை குடிகளும் படைகளும் மைந்தரும் அவரை தொடர்ந்தனர். ஒருகணமும் திரும்பாமல் உடல் களைந்து விண்ணேகும் உயிர் என நடந்து காட்டின் விளிம்பை அடைந்தார். எவனோ ஒரு சூதன் தன்னை மறந்து “முகில் ஏறி மறையும் தேவன்” என்றான். அச்சொல் கேட்டு நீர் விழுந்த குளம்போல் அலையெழுந்து அடங்கியது கூட்டம். புதர்களுக்குள் ரிஷபர் மறைந்தார்.

இருபத்தியெட்டு ஆண்டுகாலம் ரிஷபர் அருந்தவம் இயற்றினார் என்கின்றன நூல்கள். வெண்பனி அனலென உடலை எரிக்கும் இமயமலை உச்சியில், நதிகளுக்கு பித்துபிடித்த தாழ்வரைகளில் சூரியனின் அடுமனை என கொதிக்கும் பெரும் பாலைகளில். ஆறு ஞானமரபுகளை அவர் கடந்தார். ஏழுவகை ஊழ்க முறைகளை பயின்றார். இறுதியில் நீர்விடாய் கொண்ட யானை துதிக்கை நீட்டி ஊற்று தேடி செல்வது போல் கீழ்த்திசை வந்தார். சௌராஷ்டிர மண்ணில் அமைந்த பாலிதானம் என்னும் இப்பெருங்குன்றின் மேலேறினார்.

அன்று மானுடர் எவரும் செல்லாத பெருமலை அடுக்கமாக அமைந்திருந்தது அது. அங்குள்ள இன்நீர்ச் சுனை ஒன்றில் புலியும் இளமான் குட்டியும் இணைந்து நீரருந்துவதை கண்டார். இவ்விடமே என்று கண்டு அங்குள்ள பேரால மரத்தடியில் அமர்ந்தார். எண்வகை இருத்தல்களை உதறினார். ஐவகை நிலைகளை அடைந்தார். சித்திரை முழுநிலவு நாளில் அவர் சித்தத்தில் முழுமை நிறைந்தது.

கருணை என்னும் சொல்லுடன் காலமில்லா பெருவெளி கடந்து வந்து கண்விழித்தார். முழுநிலவு அப்போதும் புவியை தழுவி இருந்தது. பெருங்கருணை கரும்பாறைகளில் வழிந்தது, இலைகளில் ஒளிர்ந்து சொட்டியது. கருணையில் நெளிந்தன புழுக்கள். கருணை ஒளியை சிறகெனச் சூடி பறந்தன பூச்சிகள். கருணையில் விழி கனிந்து நின்றன மான்கள். கருணையில் சிறகு துழாவி திளைத்தன பறவைகள். கருணையை கவ்வியபடி சுழன்றது வானத்தில் வெண் பருந்து. கருணையுடன் புழுவை கொத்தி உண்டது புறா. கருணையுடன் தவளையை விழுங்கியது பாம்பு. கருணையுடன் கிழித்த மானின் ஈரலை சுவைத்தது புலி. கருணையுடன் மாமலைகளை நெரித்துக் கொண்டிருந்தது காலம்.

“இரு கைகளையும் விரித்து வான் நோக்கி நின்றபின் ரிஷபர் மலை இறங்கினார். இப்புவிக்கு அவர் ஒன்றும் சொல்ல தேவை இருக்கவில்லை. பொருள் மயக்கமின்றி உரைக்கப்பட்ட ஒற்றை மந்திரச்சொல் என இருந்தது அவர் தோற்றம். சென்ற இடத்திலெங்கும் கருணை என நின்றது அவரது நெறி. இளையவரே, இம்மண்ணை அணைத்து கொல்லாமை என்னும் நெறியை நாட்டியது அவர் கொண்ட அப்பெருஞ்சொல். அதில் எழுந்த அருகர்களை இங்கு நாங்கள் வழிபடுகிறோம்” என்றார் சப்தமர்.

“ரிஷபர் பால்குன மாதம் வளர்பிறை பதினொன்றாம்நாள் நிறைவடைந்தார். வடதிசைக்கேகி அஷ்டபதம் என்னும் எட்டு குன்றுகளைக் கடந்து கயிலை மலைமுடியை அடைந்தார். அங்கு திகழ்ந்த பேரொளியில் கலந்து விண்உருக்கொண்டார். இன்று பாரதவர்ஷமெங்கும் நரம்புவலைப் பின்னலென விரிந்துள வணிகப்பாதை வழியாக ஊறிப்பரவிக் கொண்டிருக்கிறது அருகநெறி. அதன் ஒரு துளியையேனும் அறியாத மானுடர் எவரும் இன்று இங்கில்லை. சௌராஷ்டிரமென்னும் மலைச்சுனையில் இருந்தே அது ஊறித் ததும்பி பெருகுகிறது. இப்பெருநிலத்திற்கு கோட்டை என்றும் காவலென்றும் இருப்பது அருகநெறியே” என்றார் சப்தமர்.

வெள்ளிமுளைத்ததும் அவர்கள் கிளம்பினர். துயிலெழுந்த விலங்குகள் புத்துணர்வுடன் நடப்பது இருளுக்குள் அவற்றின் காலடியோசையிலேயே தெரிந்தது. தொலைவில் இருளுக்குள் நின்ற மலைப்பாறைகளில் அவற்றின் காலடியோசை எதிரொலித்தது. “இவர்களின் ஊர்கள் வெயில் வந்தபின்னரே விழித்தெழுகின்றன. இருள் வந்தவுடன் அடங்கிவிடுகின்றன. இருளில் விழித்திருக்கலாகாது என்னும் கொள்கை கொண்டவர்கள்” என்று சப்தமர் சொன்னார்.

முதல்கதிர் எழுந்தபோது அவர்கள் சௌராஷ்டிரத்தின் சிற்றூர்களை கடந்துசென்றனர். ஊருக்குள் பிரிந்துசெல்லும் அனைத்து சாலைமுகப்புகளிலும் சிறிய அருகர் ஆலயங்கள் இருந்தன. ஒவ்வொரு அருகர் ஆலயத்தின் அருகிலும் காரையிலை சேர்த்து அவித்த அப்பங்களும் குடிநீருமாக சிறியதோர் அன்னசாலையும் இருந்தது. விலங்குகள் அருந்த மரம் குடைந்த படகுகளில் நீர் நிறைத்துவைக்கப்பட்டிருந்தது.

அர்ஜுனன் "இங்கு கொள்ளையர் அணுகவில்லை என்றால் அது ஒரு விந்தையே” என்றான். “தங்களுக்குத் தேவையானவற்றுக்கு மேல் சேர்த்து வைப்பவர்களை கொள்ளையர்கள் அணுகுகின்றனர். எறும்புப் புற்றுக்கும் தேன் கூடுக்கும் தேடி வரும் கைகள் உண்டு. பறவைக் கூடுகளை எவரும் தொடுவதில்லை” என்றார் சப்தமர். “விண்ணில் பறக்கும் பறவைகள் அறிந்துள்ளன இம்மண்ணை. ஆகவேதான் அடுத்த வேளை உணவை அவை சேர்த்து வைப்பதில்லை. மண்ணில் துளையிட்டு உழலும் எலிகள் விண்ணை அறிந்ததில்லை. ஆகவேதான் உண்ணும் மணிக்கு நிகரான நெல்மணிகளை அவை சேர்த்து வைக்கின்றன.”

கஜ்ஜயந்தபுரியில் வணிகம் பெரிதும் ஈச்சமரத்தில் இறக்கி காய்ச்சி எடுத்த வெல்லமாக இருப்பதை சாலையோரமாக குவித்து வணிகத்திற்கு வைக்கப்பட்டிருந்த வெல்லக் குவைகளிலிருந்து அவன் அறிந்துகொண்டான். ஆடுமேய்க்கும் சிற்றாயர்குலம் படிப்படியாக அத்தொழிலை விட்டு இனிப்பு சமைப்பவர்களாக மாறியிருந்தனர். “ஆடுகளை கொல்லாமல் வளர்க்க இயலாது என்று அறிந்ததும் நடந்த மாற்றம் இது. ஊனோ தோலோ வணிகம் செய்ய இயலாதபோது பாலை நிலத்தில் ஈச்சை மரங்களை பயிரிடலாமென்று ரைவதகுலத்து மன்னர் வஜ்ரசேனர் கண்டடைந்தார். அவர் காலத்தில்தான் இங்கு இத்தொழில் தொடங்கி வளர்ந்தது.”

தொலைமேற்கின் பெரும்பாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட குட்டை ஓலைகளும் முள்சூழ்ந்த கரிய உடலும் கொண்ட ஈச்சை மரங்கள் அரைப்பாலை நிலங்களில் நீள்வரிசையாக நடப்பட்டிருந்தன. ஒன்றுடன் ஒன்று இணைத்து மூங்கில்களை கட்டி ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு நடந்து சென்றே பாளைகளை சீவும்படி அமைக்கப்பட்டிருந்தது. ஈச்சமரப்பாளைகளின் முலைநுனிகளை மெல்லச்சீவி கலங்களுக்குள் விட்டு ஊறிச் சொட்டி நிறையவைக்கப்பட்டிருந்த இன்நீரை மரமேறிகள் மரக்குடுவைகளில் சேர்த்து சகடைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளில் கட்டி இறக்கினர்.

இன்நீர் இறக்கியவர்கள் தங்களுக்குள் மயிலகவல் போல ஒலியெழுப்பி பேசிக்கொண்டது வானிலிருந்து வழியும் குரல்களென கேட்டுக்கொண்டிருந்தது. ததும்பும் குடங்களை தோளிலேற்றியபடி வியர்த்த உடல்களில் தசைகள் இறுகி அதிர மரமேறிகள் ஓட்டமும் நடையுமாக வந்தனர். மூச்சும் பேச்சுமென “உம் உம் “ என அவர்கள் வழிகோரி எழுப்பிய ஓசைகள் சாலைதோறும் ஒலித்தன. “காஜுர் மரங்கள் பிற ஊர்களிலெல்லாம் கள்ளுக்கென்றே வளர்க்கப்படுகின்றன. இங்கு கள் உண்பது கொலைக்கு நிகரான குற்றம்” என்றார் சப்தமர். “இங்குள்ள பெருந்தண்டனை என்பது ஊர்நீக்கம். இங்கு திறந்த நிலத்தில் வாழ்ந்தவர்கள் பிற ஊர்களில் வாழ முடியாது. எனவே அது இறப்புக்கு நிகர்தான்.”

பாலைகளில் செறிந்திருந்த சிறிய முள் மரங்களை வெட்டி விறகாக்கி சுமந்துகொண்டு வந்தனர் சிறுவர். அவற்றை எரித்து வாயகன்ற கலங்களில் இன்நீரைக் காய்ச்சி பதநீராக்கிக் கொண்டிருந்தனர் பெண்கள். ஒரு சிற்றூரில் அர்ஜுனன் சென்று அருகமர்ந்து அவர்கள் அதை காய்ச்சுவதை நோக்கினான். அங்கிருந்த மூதாட்டி முன்னெழுந்து பிரிந்து நின்ற பற்களைக் காட்டி நகைத்தபடி “இப்போதுதான் பார்க்கிறீர்கள் போலும், இன்நீர் இப்படித்தான் வெல்லமாகிறது” என்றாள். “இப்புவியை ககன வெளியிலிருந்து இப்படித்தான் தெய்வங்கள் காய்ச்சி உருட்டி எடுத்தன என்று என் மூதன்னை ஒரு முறை சொன்னாள்.”

அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “இது மெய்ஞானம் திரளும் முறை என நான் எண்ணினேன்” என்றான். அவள் சிரித்தபடி “நாங்கள் எதையும் அறியோம். நினைவறிந்த நாள்முதல் இன்நீரில் இனிப்பு திரட்டுவதை மட்டுமே செய்துவருகிறோம்.” அர்ஜுனன் “இதன் வழியை அறிந்தால் அருவம் உருவமாவதை அறியமுடியும் அல்லவா?” என்றான்.

அவள் “இதில் எட்டு பதங்கள் உள்ளன வீரரே. வெண்பால் என நுரைகொண்டு நிற்கும் இன்நீரை நுரைப்பதம் என்கிறார்கள். கலத்திற்கு அடியில் அனல் பட்டு அசைவு கொண்டதுமே நிறம் மாறி தேன்பதமாகிறது. பின்பு குமிழிகள் எழுந்து மீன்கண்பதம் ஆகிறது. குமிழிகள் நீராவியுடன் உடைந்து தெறிப்பதை பாகுபதம் என்கிறோம். குமிழித் துளைகள் விழுவது சேற்று பதம். துடுப்பு சிக்கிக் கொள்ளும்போது அதை அரக்கு பதம் என்போம்.”

“அரக்கு பதம் அமைந்ததும் துடுப்பால் இடைவிடாது இதை கிளறவேண்டும். இல்லையேல் பாகு இறுதி வரை பசை என்றே இருக்கும். பாகு அறுத்தல் என்று இதை சொல்கிறோம். துடுப்பில் அள்ளி உதிர்க்கப்படும் பாகு கம்பி என நீளாமல் பிரிந்து அறுந்து விழவேண்டும். அதை தேனடை பதமென்கிறோம். அனலை நிறுத்தி பாகை ஆற விடும்போது மேலே மெல்லிய பொருக்குப் படலம் எழவேண்டும். அது தோல் பதம்” என்றாள் முதியவள். “தோல் பதம் அமைந்தால் வெல்லம் அமைந்ததென்றே பொருள். உறைந்தபின் அள்ளி இக்குழிகளில் விட்டு அரை உருளைகளாக்கி எடுப்போம்.”

முதியவள் அங்கே குவிந்துகிடந்த வெல்லக்குவைகளை சுட்டி “எங்கள் வெல்லம் பாரத வர்ஷத்தின் பதினேழு நாடுகளுக்கு செல்கிறது. சுவை அறிந்த அடுமனையாளர்கள் சௌராஷ்டிர வெல்லம் வேண்டுமென்று கோரிப் பெறுகிறார்கள்” என்றாள். “இங்குள மண்ணின் சுவையா அது?” என்றான் அர்ஜுனன். “அல்ல. இங்குள்ள வெயிலின் சுவை” என்றாள் மூதாட்டி. “இன்நீர் வேரில் ஊறி தடியில் எழுந்து பாளையில் சொட்டி பானையில் திரளவேண்டும். மழையோ பனியோ அதில் ஊறலாகாது. இங்கு மழையில்லை என்பதனால் இந்நீர் நறுஞ்சுவை உடையதாகிறது.”

“இங்கும் கூட நீரற்ற மேட்டுநிலத்து மரங்களின் இனிமை ஊற்றருகே நிற்கும் மரங்களுக்கு வருவதில்லை” என்றார் சப்தமர். “மேட்டுநிலத்தில் நிற்கும் மரம் எப்போதும் தனித்தது. ஆழ வேர் செல்வது. காற்றை தனித்து எதிர்கொள்வதனால் நெடிதோங்கி நிற்பது. அதை நோன்பு கொண்டு நிற்கும் மரம் என்பார்கள். அதன் நீரை காய்ச்சி எடுக்கப்படும் வெல்லம் அருகர்களுக்கு உகந்தது என இவர்கள் எண்ணுகிறார்கள்.”

முதியவள் அளித்த வெல்லத்தை அர்ஜுனன் கைகளில் வைத்து உடைத்து வாயிலிட்டான். “சௌராஷ்டிரத்தின் இனிமை” என்றான். சப்தமர் “ஆறு சுவைகளும் மண்ணுக்குரியவை. மண்ணிலிருந்து இவ்வினிமையை மட்டும் வேர்களால் அள்ளித் திரட்டி நமக்களிக்கும் காஜுர் மரங்கள் அன்னையருக்கு நிகரானவை என்கிறார்கள் இவர்கள். நமக்கென முலை கனிபவை. கரிய உடலுடன் குறுகிய இலைகளுடன் காற்றென்றும் மழையென்றும் வெயிலென்றும் பாராது கருணை சுரந்து இங்கு நின்றிருக்கின்றன.”

கஜ்ஜயந்தபுரிக்கு செல்லும் பாதையெங்கும் ஈச்ச மரங்கள் நிறைந்திருந்தன. இல்லங்களின் கூரைகள் ஈச்ச ஓலைகள் முடைந்து செய்யப்பட்ட தட்டிகளால் ஆகியிருந்தன. ஈச்சமரத்தின் நார்களை பின்னி செய்யப்பட்ட கூடைகள். ஈச்சமட்டைகளால் ஆன பீடங்கள். இளையோர் அணிந்திருந்த ஆடைகள்கூட ஈச்சையோலைகளை நுணுக்கமாகக் கீறி பின்னப்பட்டிருந்தன. “ஊர்களின் பெயர்கள்கூட ஈச்சைமரங்களை ஒட்டித்தான்” என்றார் சப்தமர்.

வெயில் வெம்மை கொண்டபோது ஈச்சைச்சிறகு என்னும் ஊரின் முகப்பிலிருந்த பெரிய ஈச்சைக்காட்டின் நடுவே இருந்த அடுத்த விடுதியில் தங்கினர். அங்கிருந்த சிறிய சுனை மலைக்கற்களால் விளிம்பு கட்டப்பட்டு குளிர்ந்த கரிய நீர் நிறைந்து ஈச்சஓலைகளின் நிழலசைவுடன் கிடந்தது. பொதிவிலங்குகளை அவிழ்த்து ஆங்காங்கே கட்டியபின் கொட்டகைகளில் இளைப்பாறினர். சப்தமர் “வெயில் தாழ்ந்தபின் கிளம்பினால் முன்னிரவாகும்போது ரைவதமலையை சென்றடையமுடியும்” என்றார்.

சாவடிக்கு அப்பால் ஊருக்குள் செல்ல திரும்பும் பாதையின் தொடக்கத்தில் இருந்த செம்மண் மேட்டின்மீது இரு கரிய பாறைகளின் நடுவே மிகப்பெரிய ஈச்சை மரம் ஒன்று சிறகுகள் விரித்து எழுந்து நின்றது. அதன் அருகே மரத்தில் செதுக்கப்பட்ட ரிஷபரின் சிலை நின்றிருந்தது. நான்கு ஆள் உயரம். அதன் தலைக்குமேல் முகிலற்ற நீலவானம் வெளித்திருந்தது.

அர்ஜுனன் அருகே சென்று அதை நோக்கி நின்றான். ஆடையற்ற பேருடல். மானுட உடல் அடையும் தசைவடிவத்தின் உச்சம். பெருந்தோள்கள். தாளில் படிந்த கைகள். ஒட்டிய வயிறு. விரிந்த மார்பு. சுருள்நுரையென படிந்த குழல். மண்ணில் எதையும் நோக்காத பார்வை. தன்னுள் ஊறிய மகிழ்வு துளித்து நின்றிருக்கும் இதழ்கள்.

அவன் நெடுநேரம் அதன் முன் நின்றிருந்தான். பின்பு கைகூப்பி அச்சிலையின் அடிகளை தொட்டு சென்னிசூடியபின் திரும்பினான். வெயில் விரிந்த நிலம் போல நான்குதிசைகளும் திறந்து அமைதியே அதுவென இருந்தது உள்ளம். சப்தமர் “ஓய்வெடுங்கள் வீரரே” என்றார். “ஆம்” என்றபடி சென்று தனக்காக இளவணிகன் ஒருவன் விரித்துவைத்திருந்த சருகுப்படுக்கையில் படுத்தான். தலைக்குமேல் கைகளைக் கோத்து கண்களை மூடிக்கொண்டான். காலைமுதல் கேட்ட சொற்களும் குழம்பிக்கொண்டிருந்தன. கொதித்து குமிழியிட்டு கடைந்து திரட்டி...

எவரோ அருகே இருந்து மெல்ல சொன்ன சொற்றொடர் போல ஓர் எண்ணம் அவனுள் எழுந்தது. அந்த முகத்தை அவன் நன்கறிந்திருந்தான். அந்த விழிகளுடனும் இதழ்களுடனும் உரையாடியிருந்தான். “ஆம்” என்று சொல்லிக்கொண்டான். ஆனால் எங்கே? அவன் சித்தம் துழாவிக்கொண்டே இருந்தது. கண்டடையாமலேயே துயிலில் ஆழ்ந்தது.

பகுதி ஐந்து : தேரோட்டி - 11

கஜ்ஜயந்தபுரியின் நடுவே அமைந்த ரைவத மலையின் அடிவாரத்தில் அமைந்த அங்காடிக்கு சப்தமரின் வணிகக்குழுவுடன் அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. தெற்கிலிருந்து வந்த குளிர்காற்று புழுதியை அள்ளி அங்கிருந்த நூற்றுக்கணக்கான தோற்கூடாரங்களின் மீது பொழிந்தது. அதற்குள் மரவுரி போர்த்தி உடல் ஒடுக்கி படுத்திருந்தவர்கள் அவ்வொலியைக் கேட்டு துயிலுக்குள் குளிர்மழையில் நனைந்தனர்.

பொதிவண்டிகளை அவிழ்த்து அத்திரிகளையும் காளைகளையும் அங்கு அறையப்பட்டிருந்த தறிகளில் கட்டிக் கொண்டிருந்த வணிகர்கள் எழுப்பும் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. பொதிகளை விடிந்தபிறகே எண்ணி இறக்குவது அங்குள்ள வழக்கமென்பதால் ஓரிரு காவலர்களை அங்கு நிறுத்திவிட்டு வணிகர்கள் கூடாரங்களுக்குள் எங்கேனும் படுத்துக்கொள்ள இடமிருக்குமா என்று தேடிச் சென்றனர். சிலர் அணைந்துவிட்டிருந்த கணப்பை ஊதி விறகு இட்டு அனலெழுப்பினர்.

சப்தமர் “சற்று நேரம் துயிலுங்கள் வில்லவரே. விடிந்தபின் இங்கு துயில முடியாது. கஜ்ஜயந்தபுரியின் முகப்பு இந்த அங்காடி. பகல் முழுக்க இங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும். கோடை காலமாதலால் வெளிச்சமும் புழுதியும் நிறைந்திருக்கும். பகலில் துயில்வது இங்கு அரிது” என்றார். அர்ஜுனன் “துயில் வரும்போது படுத்துக் கொள்கிறேன்” என்றபின் நடந்து சென்று கஜ்ஜயந்தபுரியின் நெடுங்குன்றை நோக்கி நின்றான். தொலைதூரத்தில் எல்லா குன்றுகளும் வான் திரையில் எழுதப்பட்டவை போல செங்குத்தாக நிற்பதாக தோன்றும். அணுகும்போதுதான் அவற்றின் சரிவு தெரியும். ரைவதமலை அணுகியபின்னரும் அவ்வண்ணமே வானில் எழுந்து நின்றது.

மலைப்பாறைகளினூடாக வளைந்து சென்ற பாதையில் கற்தூண்கள் நிறைந்த எண்ணெய் விளக்குகளின் சுடர்கள் விண்ணிலிருந்து விண்மீன் சரமொன்று சரிந்தது போல் தெரிந்தன. மேலே மாடங்களில் எரிந்த விளக்குகள் விண்மீன்களுடன் கலந்துவிட்டிருந்தன. முற்றான அமைதி அங்கே நிலவியது. முரசுகள் கொம்புகள் விலங்குகளின் ஓசைகள் எவையும் எழவில்லை. அங்கு மானுடர் வாழ்வது போலவே தோன்றவில்லை.

அவனருகே வந்து நின்ற சப்தமர் “ஏழு முறை இங்கு வந்துள்ளேன் வில்லவரே. ஒவ்வொரு முறையும் இதை முதலில் பார்க்கையில் விந்தையால் சொல்லிழந்துவிடுகிறேன்” என்றார். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “இப்பெரு நகரம் முற்றிலும் காவலற்றது” என்றார் சப்தமர். அர்ஜுனன் திகைப்புடன் “முற்றிலுமா?” என்றான். “ஆம், ரைவத குலத்தின் எழுபத்தியெட்டாவது அரசர் பிங்கலர் இங்கு ஆள்கிறார். அவருக்கு மெய்க்காவலர்கள் இல்லை. அணுக்கர்களாக நூற்றியெட்டு சேவகர்கள் உள்ளனர். எவரிடமும் படைக்கலங்கள் இருப்பதில்லை. அரசர் தன் வாழ்நாளில் எப்போதும் படைக்கலங்களை தொட்டதில்லை.”

அர்ஜுனன் “நான் கேட்டதேயில்லை” என்றான். “நீங்களே நோக்கமுடியும். இந்நகரைச் சுற்றி கோட்டைகள் இல்லை. காவல்மாடங்களோ கண்காணிப்பு அமைப்புகளோ ஏதுமில்லை. மேலே அரண்மனைகளின் வாயில்கள் அனைத்தும் மரவுரித் திரைச்சீலைகளால் ஆனவை. கருவூலம் அற்ற மாநகர் இது என்று சூதர்கள் பாடுகிறார்கள். ஏழு நாட்களுக்குத் தேவையான உணவும் நீரும் மட்டுமே இப்பெருநகரில் சேர்த்து வைக்கப்படும்.” அர்ஜுனன் “மழைபொய்த்தால்?” என்றான். “மானுடர் வாழவேண்டும் என மழை விரும்பவில்லை என்று பொருள். மழையுடன் போரிடலாகாது என்பதே இவர்களின் கொள்கை.”

அர்ஜுனன் முற்றிலும் நம்பமுடியாத புராணநூல் ஒன்றை படிக்கக் கேட்பது போல உணர்ந்தான். “பாரதவர்ஷம் எங்கும் குருதி விழுந்து கொண்டிருக்கிறது. எரிபரந்தெடுத்தலின் புகை எழாது ஒரு தலைமுறையை எந்நகரமும் கடப்பதில்லை என்கிறார்கள். இங்கு இவ்வண்ணம் ஒரு நகரம் எழுந்தது பெருவிந்தை!” என்றான். “அது ஒருபக்க உண்மையே” என்றார் சப்தமர். “மறுபுறம் ஒன்றுண்டு. என் முதுமூதாதையர் காலத்தில் பாரதவர்ஷத்தின் பெருநிலமெங்கும் பல்லாயிரம் பழங்குடியினர் ஒவ்வொரு கணமும் பிற குடியினரை கொன்றபடி இருந்தனர். அணுக முடியாத மலை மடிப்புகளும் தொலைதூரத் தாழ்வரைகளும் அயலவர் குழுமிய கடற்கரையுமாக சிதறிக்கிடந்தது ஜம்புத்வீபம். இன்று வணிகர் செல்லாத ஊர்கள் மிகச்சிலவே.”

“எவ்வணிகரும் பெரும் காவல் படைகளை கொண்டு செல்வதில்லை. படைக்கலமேந்தி எம்மக்களையும் அணுகுவதுமில்லை. மிகச்சில ஊர்களைத் தவிர்த்தால் கொள்ளையர் தொல்லை மிக அரிது. கொல்லாமை எனும் எண்ணம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய வேர்ப்பரவலாக இப்பெரு நிலமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. அதன் விதை ஊன்றப்பட்டது இங்குதான்” என்றார் சப்தமர். “அருகர்களின் சொல் பேராலமரமாக தலைக்கு மேல் எழுந்து கிளை விரித்து நிழல்பரப்புகிறது இளையவரே. இப்பெரு நிலத்தில் குடிப்போரால் குலங்கள் அமைக்கப்பட்டன. பெரும்போர்களால் நாடுகள் அமைக்கப்பட்டன. இன்று போரின்மையால் இந்த விரிநிலம் ஒன்றாக்கப்படுகின்றது.”

“உடைவாளும் மணிமுடியும் உடலெங்கும் போர்க்கவசமும் அணிந்த மன்னர் ஒருபக்கம். புழுதி ஒன்றையே ஆடையாக அணிந்த எங்கள் அருகர்கள் இன்னொரு பக்கம். துலாவில் எங்கள் தட்டு எடை கொண்டுள்ளது. அது வெல்வதை ஒவ்வொரு ஊரிலும் பார்க்கிறேன். நூறாயிரம் மொழிகளால் பிரிக்கப்பட்டுள்ளன இக்குலங்கள். அனைவருக்கும் விளங்கும் ஒரு மொழி உள்ளது. கருணை எனும் மொழி. பசித்தவனுக்கு உணவாக, பிணியாளனுக்கு மருந்தாக, அஞ்சுபவனுக்கு அடைக்கலமாக, தனித்தவனுக்கு துணையாக, அறியாதவனுக்கு கல்வியாக அது அவனை சென்றணைகிறது. அந்த மொழி புரியாத மானுடர் எவருமில்லை.”

“மத்தகம் தாழ்த்தும் மதகரிகள் வணங்கும் மொழி அது. அம்மொழியால் ஒவ்வொரு கணமும் முடிச்சிடப்பட்டு கட்டி எழுப்பப்படுகிறது பாரதவர்ஷம் எனும் இப்பெருங்கம்பளம்” என்றார் சப்தமர். “வாள்கள் பொருளிழந்து போகும் ஒரு காலம் வரும். குருதி என்பது வியர்வையென்றும் கருணையின் விழிநீர் என்றும் மட்டுமே வெளிப்படும் ஒரு காலம். அருகரின் சொற்கள் நூறுமேனி விளையும் விதைகள். அவை சென்று தொட்ட மண்ணில் எல்லாம் அருகர்களும் படிவர்களும் முளைத்தெழுந்து கொண்டிருக்கிறார்கள்.”

அர்ஜுனன் “நன்று நிகழ்க!” என்றான். “துயில்கொள்ளவில்லையா?” என்றார் சப்தமர். “என் விழிகள் தாழ்கின்றன.” அர்ஜுனன் “நான் நாளில் இருநாழிகைநேரம் மட்டுமே துயில்வது வழக்கம்” என்றான். சப்தமர் கூடாரம் ஒன்றுக்குள் சென்று மறைந்தார். அவரது குறடுகள் மணலில் பதியும் ஒலி கேட்டது. கூடாரத்திற்குள் அவர் படுத்துக்கொள்ளும் முனகல். அருகநாமத்தைச் சொன்னபடி அவர் உடல் நீட்டிக்கொள்ளும் ஒலி.

பாலையிலிருந்து வந்த காற்றை உடலால் அறிந்தபடி அர்ஜுனன் அசையாமல் நின்றிருந்தான். பாலைக்காற்றிலிருந்த மணமாறுபாடுகளை மெல்ல உணரத்தொடங்கினான். தென்மேற்குக்காற்றில் மெல்லிய நீராவியும் நீர்மணமும் கலந்திருந்தது. வடகிழக்குக் காற்றில் இளங்குளிரும் தழைமணமும். தெற்குக்காற்று எடைமிக்கதாக இருந்தது. வடக்கிலிருந்து காற்று வரவில்லை. காற்றலைகள் நின்றபோது அந்த இடைவெளியில் குளிரின் அழுத்தமான அமைதியாக வடக்கை உணரமுடிந்தது.

விழியில்லாதபோது ஓசைகளாக உலகு தன்னை விரித்துக்காட்டுகிறது. ஓசைகளுமில்லாதபோது மணங்கள். எவற்றிலிருந்தும் எழும் புவி ஒன்றே. மானுட உள்ளம் மண்ணை எப்போதும் அறிந்தபடியேதான் இருக்கிறது. மண்ணே காற்றும் நீரும் கனலும் வானுமாக உள்ளது. அல்லது அவை அனைத்தும் ஒன்றே. காற்றிலேறி அலைகிறது மண். என்னைச்சூழ்ந்து எழும் காற்றின் பாடல். தனிமையில் மட்டுமே பொருள்கொண்டதாக ஆகிறது அது. தனியர்களை மட்டும் தொட்டுத்தழுவும் காற்றுகள் இவ்வெளியில் உறைந்துள்ளன.

தனிமை. தனிமை தாளாமல் இங்கு வந்தேன். இங்கு நான் அவனை தோள்தழுவிக்கொள்ளமுடியும். என் தனிமையை கலைப்பவன் அவன் ஒருவனே. ஆனால் இன்று இங்கே நின்றிருக்கையில் என் தனிமையின் தேன்துளியை தக்கவைக்கவே என் அகம் விழைகிறது. அவனை நான் ஏன் அத்தனை நாடுகிறேன்? பசித்தவன் அன்னையை என, நோயுற்றவன் மருத்துவனை என, அஞ்சுபவன் காவலனை என, இருளில் அலைபவன் சுடரை என. ஆனால் என் ஆணவம் அவனைவிட்டு விலகியோடச் சொல்கிறது. ஓடி ஓடி அவனிடம் மீள்கிறேன்.

பூனை எலியை கால் உடைத்து தன் முன் போட்டுக்கொண்டு நகைக்கும் விழிகளுடன் அமர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறது. ஓடு என்கிறது. இழுத்து இழுத்து எல்லைகடக்கையில் மெல்லத் தட்டி உள்ளே வீழ்த்துகிறது. அதன் நாக்கில் சுவைநீர் ஊறுகிறது. உண்பதற்கு முந்தைய ஆடலில் அது அச்சுவையை கொண்டாடுகிறது. மூச்சு சீற நாபறக்க இரையை தழுவி அணைக்கிறது மலைப்பாம்பு. அதற்கிணையான பெருங்காதல் பிறிதில்லை.

வானம் செம்மைகொள்ளத் தொடங்கியது. பறவையொலிகள் எழுந்து வானை நிறைத்தன. ஆனால் முதற்கதிர் ரைவத மலையின் மறுபக்கம் எழுவதுவரை நகரம் உறங்கியே கிடந்தது. ஒளி விரிந்ததும் கஜ்ஜயந்தபுரியின் தாழ்வான கூம்பு முகடுகள் தெளிந்து எழுந்தன. கூர்தீட்டிய் ஆவநாழிக்குள் இருக்கும் அம்பு முனைகள் என்று அர்ஜுனன் எண்ணினான். மறுகணமே அவ்வெண்ணத்தின் பொருத்தமின்மையை உணர்ந்து புன்னகைத்தான். ஒளி எழுந்தோறும் குன்று தெளிவடைந்தபடியே வந்தது. உருண்டு நின்ற பெரும்பாறைகளை ஒட்டி மலைக் கற்களை அடுக்கி மூங்கில் படல்களாலும் ஈச்சை ஓலைகளாலும் கட்டப்பட்ட சிறிய வீடுகளால் ஆனதாக இருந்தது அந்நகர். காவல் மாடங்களோ முரசு மேடைகளோ தென்படவில்லை. நகரைச்சுற்றி எளிய முள்வேலி கூட இருக்கவில்லை.

புலரி எழுவதற்கு முன்னரே அங்காடியின் கூடாரங்களிலிருந்து எழுந்து அருகே இருந்த சுனைக்கு காலைக்கடன் கழிக்கச் சென்ற மக்கள் பேசியபடி வந்து குழுமும் ஒலி அவனை வந்து சூழ்ந்து நிறைத்தது. அத்திரிகளும் காளைகளும் துயில் கலைந்து கழுத்துகளை திருப்பி கயிறை இழுத்து குரல் கொடுத்தன. புதுச்சாணி மணம் அவற்றின் சிறுநீர் வாடையுடன் கலந்து எழுந்தது. தொலைவில் இருந்த குறும்புதர்க்காட்டுக்குள் இருந்து எழுந்த சிறு பறவைகள் வானில் வட்டமடித்து சரிந்திறங்கி மணலில் பதிந்து சிற்றடி எடுத்து வைத்து கூர் அலகுகளால் மண்ணைக் கொத்தி காலடி ஓசைக்கு எழுந்து சிறகடித்து அப்பால் எழுந்தமர்ந்தன. மென் புழுதி படிந்த தரையில் நூற்றுக்கணக்கான சிறு குழிகள் விழுந்து கண்காணா காற்றில் மெல்ல சுழன்று கொண்டிருந்தன. அவற்றுக்குள் வாழும் சிற்றுயிர்களை அப்பறவைகள் கொத்தி உண்டு கூவிப்பேசியபடி எழுந்தன.

அங்காடிகளில் இருந்து பாற்குடங்களும் நெய்க்குடங்களும் காய்கறிகளும் கனிகளும் கிழங்குகளும் சுமந்த சிறுவணிகர்கள் கஜ்ஜயந்தபுரியின் கற்படிகளில் ஏறிச்சென்றனர். உடல் அலுப்பை வெல்லும்பொருட்டு அவர்கள் பாடிச்சென்ற குஜ்ஜர்மொழிப் பாடல்களின் சொற்கள் முயங்கி வெறும் ரீங்காரமென ஆகி பாறைகளில் முட்டி பெருகி வந்து கொண்டிருந்தன. இளம் வணிகனாகிய சபரன் அவனிடம் வந்து “தாங்கள் உடல் தூய்மை செய்து சித்தமாகவில்லையா வில்லவரே?” என்றான்.

“ஆம்” என்றான் அர்ஜுனன். “சப்தமர் எங்கே?”  “அவர் காலையிலேயே சித்தமாகி கடைக்குச் சென்றுவிட்டார்” என்றான் அவன். அர்ஜுனன் புன்னகை செய்தான் “உங்கள் புன்னகை புரிகிறது வில்லவரே. அவர் முதலும் முடிவுமாக வணிகர். அருகநெறியை கற்றறிந்திருக்கிறார். செல்லுமிடமெங்கும் அதைப்பரப்ப முயல்கிறார். நெறிகளில் வணிகர்களுக்கு பொருள்செய்ய உதவுவது அருகமே என அவர் அறிந்திருக்கிறார்.”

அர்ஜுனன் சிரித்து “ஆம், வணிகர்கள் என்றும் போருக்கு எதிரானவர்களே” என்றான். “இந்நகரைப்பற்றி பாரதவர்ஷம் முழுக்க வணிகர்கள் உருவாக்கியிருக்கும் கதைகளை இவர்கள் அறிந்தால் திகைத்துப்போவார்கள். அதன்பின் இம்மண்ணில் கால்வைக்கக் கூசி திசையாடையர்களைப்போல உறிகட்டி அமரத்தொடங்கிவிடுவார்கள்” என்றான் சபரன். “நீரும் வணிகர் அல்லவா?” என்றான் அர்ஜுனன்.

“ஆம், ஆனால் என் கையில் பொருள் இல்லை. ஆகவே கொடைசெய்வதில்லை. ஆகையால் கொடையளிக்கும் ஆணவத்தை பெருங்கருணை என விளக்கும் தத்துவங்கள் எனக்குத் தேவையாகவில்லை” என்றபின் திரும்பி செல்லப்போன சபரன் நின்று புன்னகையுடன் “இன்னும் சற்றுநாளில் என் மடிச்சீலையும் நிறைந்து குலுங்கும். அப்போது நானும் ஐந்தவித்து எட்டைத் துறந்து முழுவெறுமையில் நிற்பதன் மாண்பு குறித்து சொல்விளக்கிப் பேசுவேன்” என்றான்.

“இன்று நான் இக்குன்றின் மேல் சென்று இந்நகரை காண விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். இளைஞன் “இந்நகரில் ஐந்து அருகர்களின் ஆலயம் உள்ளது. அரண்மனை முகப்பில் ரைவதரின் கல் ஆலயமும் உள்ளது. நகருக்கு நீரளிக்கும் பன்னிரு ஊற்றுகள் அங்குள்ள மூன்று சுனைகளில் தேக்கப்படுகின்றன. நகர் நடுவே உள்ள அரசரின் அரண்மனை தொன்மையானது. பிறிதெதுவும் இங்கு நோக்குவதற்கில்லை” என்றான்.

அவனுடன் சென்று நீராடி குப்பைமேனிக் கீரைசேர்த்து சமைத்த வஜ்ரதானிய கஞ்சியை காலையுணவாக அருந்தி தன் படைக்கலங்களை அங்கிருந்த முள் மரமொன்றில் மாட்டியபின் அர்ஜுனன் ரைவத மலைமேல் ஏறி சென்றான். உருளைக்கற்களை ஒழுங்கின்றி அடுக்கிக் கட்டப்பட்ட தொன்மையான படிக்கட்டுகள் அவை. பெரிய பாறைகளின் இடைவெளிகள் வழியாக வளைந்து மேலே சென்றன. சற்று நேரம் நடந்த பின்னர்தான் அவை மேலிருந்து நெடுங்காலமாக வழிந்த இயற்கையான மழைநீர் ஓடையால் உருவாக்கப்பட்ட உருளைப்பாறைகளின் தடம் என அவன் அறிந்தான்.

மழை உருட்டிக்கொண்டு வந்து அடுக்கிய உருளைப் பாறைகளை நன்கு இறுக்கி அமைத்து படிக்கட்டுகள் போல் ஆக்கியிருந்தார்கள். மேலும் அவ்வழியாக நீர்வராமல் பிறிதொரு வழியை அமைத்து ஓடையாக்கியிருந்தனர். நீர் அமைத்த படிக்கட்டென்பதால் மானுட உழைப்பு தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனால் பாறைகள் நன்கு தேய்ந்து வழுக்கும்படியாக இருந்தன. பன்றிமுதுகுகள் என ஆமையோடுகள் என சுரைக்காய்குடுக்கைகள் என தெரிந்த பாறைகள் மேல் தாவி அவன் மேலே சென்றான். அங்கு ஏறிச்சென்ற சிறு வணிகரும் சிற்றாயர் குடியினரும் அவ்வழி கால்களுக்கு நன்கு பழகியவர்களாக இருந்தனர். எனவே அவர்கள் குனிந்து நோக்கவே இல்லை. மூச்சிரைப்புடன் சேர்ந்து ஒலித்த குரலில் நிலைக்காது பேசியபடி மேலே சென்றனர்.

பெரிதும் சிறிதுமென உருளைப்பாறைகளை சிட்டுக்குருவிபோல தாவிக் கடந்து செல்லும்போது அர்ஜுனன் செம்மொழியும் தொல்மொழியும் கலந்த சொற்கள் சேர்த்து அமைக்கப்பட்ட சொற்றொடர்களால் ஆன நூலொன்றில் விழியோட்டிச் செல்வது போல் உணர்ந்தான். மணிமிடைபவள மொழியை வாசிக்கையில் புதிய சொற்றொடர் பழைய சொற்றொடரை முற்றிலும் மறக்கச்செய்துவிடும். அத்தனை சொற்றொடர்களையும் கடந்துவந்துவிட்டோம் என்னும் தன்மகிழ்வு மட்டிலுமே எஞ்சியிருக்கும்.

பஞ்சுத்துகள் பறந்துசெல்வதுபோல் பாறைகள் மேல் கால்கள் பதிகின்றனவா என்னும்படி சென்றுகொண்டிருந்த வெண்ணிற ஆடையணிந்த அருகநெறிப் படிவர் ஒருவரைக் கடந்து செல்லும்போது “அடிபணிகிறேன் உத்தமரே” என்றான் அர்ஜுனன். “தாங்கள் செல்லும் விரைவு பொருளற்றது வீரரே. நெடுநேரம் அப்படி தாவிச்செல்ல முடியாது. பாதையை கால்களுக்கு விட்டுக்கொடுங்கள். செல்வதறியாது செல்லும் பாதையே பொருளுடையது” என்றார்.

“நான் இதேபோன்று இன்னும் மூன்றுமலைகளை தாவிக்கடப்பேன் உத்தமரே” என்றான் அர்ஜுனன். “முப்பது மலைகள் என்றால்?” என்றார் அவர். அர்ஜுனன் நின்றுவிட்டான். “நான் முப்பதுமலைகளிலும் இதே விரைவில் ஏறிச்சென்றுவிடமுடியும் அல்லவா?” என்று அவர் புன்னகைசெய்தார். அர்ஜுனன் சிலகணங்களுக்குப்பின் “ஆம்” என்றான். “நான் எப்படி நடக்கவேண்டுமென நீங்கள் சொல்லுங்கள்.” “அடிகள் சீராக இருக்கட்டும். கால்களே அனைத்தையும் புரிந்துகொண்டு முடிவெடுக்கட்டும். மெதுவாகச்செல்லும் பாதைகளே இறுதியை சென்றடைகின்றன.”

அவருடன் அர்ஜுனன் நடந்தான். ஒவ்வொரு பாறையிலும் அவர் மெல்ல கால் எடுத்துவைத்து சீராக ஏறிச்சென்றார். “தாங்கள் சென்றது குட்டிக்குதிரையின் பாதை. நான் செல்வது காளையின் பாதை. காளை களைப்படைவதில்லை” என்றார் படிவர். “ரிஷப பதம் என்று எங்கள் நெறியில் இதை சொல்கிறார்கள். நடக்கும்போதும் விழிமூடி அசைபோட்டுக்கொண்டு செல்லும் எருதுபோல எங்கும் எப்போதும் அசைபோட அருகநாமம் உள்ளே இருக்கவேண்டும் என்பது என் ஆசிரியர்களின் வழிகாட்டல்.”

“மேலே செல்ல குதிரைப் பாதை ஏதுமில்லையா?” என்றான் அர்ஜுனன். “இல்லை. ரைவதமலை மேல் விலங்குகளின் மீது பொதியேற்றிச் செல்ல தடை உள்ளது. ஊனுணவும் உயிர்களை வதைப்பதும் இங்கு பாவமென கொள்ளப்படுகிறது.” அர்ஜுனன் புன்னகைத்து “இம்மானுடர் பொதி சுமந்து ஏகலாமோ?” என்றான். “ஆம், ஏனெனில் பொதி சுமக்க முடியாது என்னும் முடிவெடுக்கும் அறிவும் உரிமையும் அம்மானுடருக்கு உள்ளதல்லவா?” என்றார் அவர்.

அர்ஜுனன் சிரிக்க “அருகநெறியின் ஐந்து கொள்கைகள் இங்குள அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது. கொல்லாமை, பொய்யாமை, களவாமை, புலனடக்கம், உடைமைகொள்ளாமை என்னும் நெறிகள் அவர்களை சீரான பாதையில் நிறுத்துகின்றன. இருளில் அறியாது சிற்றுயிர்களை மிதித்து கொல்லலாகாது என்பதனால் இங்கு எவரும் கதிர் அணைந்தபின் உணவோ நீரோ உண்பதில்லை. ஒளி எழுந்த பின்னரே விழித்தெழுவர். சொல்லாலோ செயலாலோ எண்ணத்தாலோ எவருக்கும் வன்முறை இழைப்பதில்லை. வெண்காளை வேந்தரின் சொல் விளங்கும் மண் இது.”

“இங்குள்ள விலங்குகள் ஊன் உண்பதில்லையா?” என்றான் அர்ஜுனன். அவன் முகத்தில் இளநகையைக் கண்டும் படிவர் விழிகள் மாறுதல் கொள்ளவில்லை. “ஆம். அவை ஊன் உண்கின்றன. ஏனெனில் ஊன் உண்ணவேண்டியதில்லை என்று முடிவெடுக்கும் அறிவு அவற்றுக்கில்லை. முடிவெடுத்தபின் வாழும் முறைமையும் அவற்றுக்கில்லை” என்றார். “அகிம்சை என்பது உடலைப் பழக்குவதல்ல, உள்ளத்தை அமைப்பதுதான்.”

அர்ஜுனன் சற்று வியப்புடன் அவர் விழிகளை நோக்கி பின் விலக்கிக்கொண்டான். படிவர் “எங்கள் நெறி முன்வைக்கும் பவசக்கரம் என்னும் கருத்தை அறிந்திருந்தால் இவ்வினாவை எழுப்பியிருக்க மாட்டீர். இப்புவி ஒரு மாபெரும் ஆழி. இது அமைந்திருக்கும் புடவி பிறிதொரு பேராழி. அது அமைந்திருக்கும் காலமும் ஆழியே. இவை ஒன்று பிறிதை என முற்றிலும் வகுத்துள்ளன. அந்நெறிகளே இங்கு உறவென முறையென வழியென வாழ்வென விளங்குகின்றன. எறும்பும் யானையும் அப்பேராழியின் சுழலில் ஒன்றோடொன்று முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ளன” என்றார்.

“ஒரு தனி எறும்பின் வாழ்வு இப்புவியில் உள்ள பிற அனைத்து உயிர்களாலும் முடிவு செய்யப்படுவதைத்தான் நாங்கள் ஊழ் என்கிறோம். ஊழின் வழி அல்லது ஒழுக உயிர்கள் எவற்றுக்கும் ஆணையில்லை என்றறிக! கொல்வதும் கொல்லப்படுவதும் ஊழெனும் பேராழி ஒன்றை ஒன்று நிரப்பும் இரு நிகழ்வுகள் மட்டிலுமே. வீரரே, இங்குள்ள உயிர்க்குலங்களில் அவ்வூழைக் காணும் விழி கொண்ட உயிர் மானுடன். ஆகவே அவ்வூழில் நன்று தேறவும் தீது விலக்கவும் கடமைப்பட்டவன். அதை நாங்கள் சீலம் என்கிறோம். ஐந்து நல்வழிகளை சென்னி சூடி இங்கு முழு வாழ்க்கை வாழ்ந்து முடிப்பவன் இப்பேராழியின் முடிவிலா பெருஞ்சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதையே நாங்கள் முக்தி என்கிறோம்.”

“இச்சுழற்சிக்கு அப்பால் மாறாது என்றுமிருக்கும் ஒன்று என ஆவதே விடுதலை. இதிலிருந்து விடுபடுவதே வீடுபேறு. இங்குள ஒவ்வொரு உயிருக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளது அது. ஓருயிர் கொண்ட எறும்பும் தன் பவசக்கரத்தின் விளிம்பில் இருந்து எழுந்து ஈருயிர் கொண்ட நெளியும் உயிராகிறது. மூன்றுயிரும் நான்குயிரும் கொள்கிறது. ஏழுயிர் கொண்ட மனிதனாகையில் முழுதறிவை அடையும் வாயில் அதற்கு திறக்கிறது. பிறந்திறந்து முன் நகரும் இச்சரடின் எல்லை அவ்வழியில் முடிகிறது. அதை திறப்பதும் திரும்பி மீண்டும் முதல்முனை சென்று ஓரறிவுள்ள உயிரென ஆவதைத் தேர்வதும் மானுடரின் தேர்வு மட்டுமே.”

“இங்குள அறிவர் ஒவ்வொருவரும் தங்கள் பிறவிச்சரடு முடித்து ஊழ்ச்சுழல் விட்டு உதிர்ந்து மெய்முழுமை கண்டு பிறிதிலாது அமைவதை இலக்கென கொண்டு ஊழ்கம் இயற்றுகிறார்கள். இதோ இந்நகரின் பாறைப்பிளவுகளுக்குள் இன்று ஆயிரத்திற்கும் மேல் அருகப்படிவர்கள் அருந்தவம் இயற்றுகிறார்கள். நூறு தலைமுறைகளில் பல்லாயிரம் பேர் இங்கு உடல் உதிர்த்து உய்ந்திருக்கிறார்கள். அவர்களின் தூய கால்கள் இங்குள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் முன்சென்றோர் வழியை காலடிச்சுவடுகளைக்கொண்டு கணித்தே நாம் செல்லவேண்டும்.”

“அவ்வடிகளை தொட்டு சென்னி சூடி தங்களுக்கும் அப்பேறு வாய்த்திட வேண்டுமென்று வேண்டி மானுடர் ஒவ்வொரு நாளும் இப்படிகளினூடாக ஏறி மேலே செல்கிறார்கள். தாங்களும் செல்லலாம். அதற்கு முன் தாங்கள் தங்கள் தோளே என்றாகியுள்ள அவ்வில்லையும் அம்பறாத்தூணியையும் துறக்க வேண்டும்.” அர்ஜுனன் “நான் துறந்துவிட்டே மலையேறினேன்” என்றான். “உடல் துறந்தால் ஆயிற்றா? நினைவு துறக்கவேண்டும். அத்தோள்களின் தசைகள் மறக்கவேண்டும்” என்றார் படிவர். “ஒவ்வொன்றையும் அக்கணமே துறந்துசெல்கிறீர்கள் என எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். துறந்தீர், ஆனால் ஒவ்வொன்றாலும் நீர் உருமாறிவிடுகிறீர். அவ்வுருமாற்றத்தையும் துறந்தால் அல்லவா கடந்துசெல்வதாக பொருள்?”

அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “ஆணென்றும் பெண்ணென்றும் ஆனீர். அனைத்து அறிதல்களையும் தொட்டு எடுத்து சூடிக்கொண்டீர். இளைய வீரரே, உம்முள் நிறைந்துள்ள அச்சத்தை அறுக்காமல் நீர் அடையப்போவது ஏதுமில்லை.” அர்ஜுனன் மூண்டெழுந்த சினத்துடன் “அச்சமா?” என்றான். “என்ன சொல்கிறீர்?” என்று சொன்னபோது அவனுக்கு மூச்சிளைத்தது. “ஆம், அச்சமே. படைக்கலமேந்திய எவரும் அச்சம் கொண்டவரே. எப்படைக்கலம் ஆயினும் சரி. உலோகப் படைக்கலம். கைகள் கொள்ளும் பயிற்சி என்னும் படைக்கலம். தேர்ந்த சொல் எனும் படைக்கலம். கூர்மதி என்னும் படைக்கலம். நானென எண்ணும் நிலை என்னும் படைக்கலம்.”

“நான் அஞ்சுவது எதை?” என்றான் அர்ஜுனன். “பிறப்பித்த ஒன்றை. உடன்பிறந்த ஒன்றை. உடன் தொடரும் ஒன்றை. அதைத் தொடரும் பிறிதொன்றை” என்றார் அருகர். அர்ஜுனன் உடல் தளர்ந்தது. “என்ன சொல்கிறீர்கள் உத்தமரே?” என்றான். “எளிய மொழியில் எழுதப்பட்ட நூல் நீர். அதை வாசிக்கிறேன்” என்றார் படிவர். “அச்சத்தை நான் எப்படி கடந்து செல்வேன்?” என்று அர்ஜுனன் கேட்டான்.

“அச்சங்கள் எவையாயினும் கண்ணொடு கண் நோக்காது வெல்வது அரிது” என்றார் படிவர். “ஒரு களம் வரும். உமது அச்சங்கள் பேருருக்கொண்டு பெரும்படையென முன்னால் திரண்டு நிற்கும். அவற்றை நீர் கண்நோக்கி நின்று பொருதி வெல்வீர். அக்களத்தைக் கடந்தபின்னரே உமக்கு மெய்மை ஓதப்படும். வீரரே, மெய்மையை அஞ்சாது எதிர்கொள்பவனே வீரன். நீர் அதுவாக ஆவீர். அதற்கென இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீர்.” அர்ஜுனனின் பிடரி குளிர்நீர் விழுந்ததுபோல சிலிர்த்தது. “அழியாப்பாடல் ஒன்றை கேட்கும் பேறு பெற்றவர் ரைவதர். நீரும் அக்கீதையை கேட்பீர்.”

“தங்கள் சொல் விளங்கட்டும் படிவரே” என அர்ஜுனன் வணங்கினான். “இன்று தொட்டு ஏழாம் நாள் இங்கு ரைவதர் மந்தரமலையில் அழியாப் பேரிசையைக் கேட்ட நாள். விழவென கொண்டாடப்படுகிறது. இங்கு இருங்கள். ரைவதர் கேட்ட இசையின் ஓர் அதிர்வை அன்று நீங்கள் கேட்கமுடியும். பாலாழியின் ஒரு துளி” என்று படிவர் சொன்னார். “நான் எவரென்று அறிவீரா?” என்று அர்ஜுனன் கேட்டான். “எவராயின் என்ன? துயர்கொண்டவர், தனித்தவர், தேடி அலைபவர்” என்றார் படிவர்.

பகுதி ஐந்து : தேரோட்டி – 12

ரைவதமலை உச்சியில் அமைந்த அரண்மனைக்குச் செல்லும் உருளைப்பாறைப் படிக்கட்டால் ஆன பாதையின் இரு புறங்களிலும் பிரிந்து சென்று நூற்றுக்கணக்கான கொடிவழிப் பாதைகள் ஒவ்வொன்றும் ஓர் அருகர் ஆலயத்தையோ அடிகள் பொறிக்கப்பட்ட ஊழ்கப்பாறையையோ சென்றடைந்தன. அருகர் ஆலயங்கள் கற்பாறைகளை அடுக்கி மேலே மரப்பட்டைக்கூரையுடன் அமைக்கப்பட்டிருந்தன. கூம்புவடிவக்கூரையின் முகப்பில் அந்த அருகருக்குரிய அடையாளம் பொறிக்கப்பட்ட வெண்கொடி பறந்தது. அருகர்அடிகள் அமைந்த பாறைகளின் அருகே சுவஸ்திகம் பொறிக்கப்பட்ட கொடிகள் பறந்தன. அருகே அப்பாறையிலேயே செதுக்கப்பட்ட சிற்றகல்களில் நெய்யிட்டு சிறுதிரியில் சுடரேற்றி இருந்தனர். எங்கும் மண் கலங்களில் குங்கிலியமும் அகிலும் புகைந்தது.

அந்த மெல்லொளி எழுந்த காலையில் வெண்புகை முகில்படலமென குன்றை சூழ்ந்திருந்தது. அக்குன்றே ஒரு புகையும் குங்கிலியக் கட்டி என தோன்றியது. ஆலயங்களுக்குள் இருந்து ஆழ்ந்த இன்குரலில் அருக மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர். வெண்ணிற ஆடை அணிந்து வாய்களில் துணித்திரை கட்டிய அருகநெறியினர் கைகளில் மலர்க்குடலைகளும் நறுமணப்பொருட்களுமாக சென்றுகொண்டிருந்தனர். மலையெங்கும் பலவகையான நறுமணப் பொருட்கள் மணத்தன. எதிர்வரும் ஒவ்வொருவர் உடலிலும் மணமிருந்தது. பாதையோரம் நின்றிருந்த பசுக்களின் உடம்பிலிருந்தும் நறுமணப்பொருட்கள் கமழ்ந்தன. பல்வேறு வகையான மணங்களை படிக்கட்டுகளாக மிதித்து மேலேறிச் செல்வதாக அர்ஜுனன் உணர்ந்தான்.

பிற நகரங்கள் அனைத்திலும் இருந்த படிநிலை ஆட்சிமுறை அங்கில்லையென்று தோன்றியது. ஈச்ச ஓலை வேயப்பட்ட சிற்றில்லங்களும் மரப்பட்டை கூரையிட்ட சிறு மாளிகைகளும் தங்கள் போக்கில் முளைத்தெழுந்தவை போல கலந்து மலைச்சரிவை நிறைத்திருந்தன. எதிர்ப்படும் முகங்கள் ஒவ்வொன்றையும் நோக்கியபடி அவன் நடந்தான். அவன் மகிழ்வுநிறைந்த நகரங்கள் பலவற்றை கண்டிருந்தான். விழவு எழுந்த நகரங்களில் கட்டற்று பெருகும் களிவெறியையும். அங்காடிகளில் பொருள் நுகர்வுக்கென எழும் உவகைத்திளைப்பையும் போர்வெற்றிச் செய்தி வருகையில் வரும் கொண்டாட்டத்தையும் கண்டிருக்கிறான். போருக்கென எழுகையில் பற்றிக்கொள்ளும் கொலையெழுச்சியும் கடும்சினமும் கொண்டாட்டங்களே. போரில் கொடி வீழும்போது பெருகும் துயரும் அழுகையும் கூட ஒருவகை களியாட்டமாக ஆகக்கூடும். ஆனால் ஒரு துளி குறையாது ஒரு துளி ததும்பாது நிறைந்த பாற்குடங்கள் போன்ற முகங்களை அங்கு மட்டுமே கண்டான்.

எதிரே வந்த ஒருவனிடம் “அரண்மனையில் அரசர் முகம் காட்டும் நேரம் எது?” என்று கேட்டான். அவன் இனிய புன்னகையுடன் “நீங்கள் அயலவர் என்று எண்ணுகிறேன் இங்கு அவ்வண்ணம் அரசர் உப்பரிகையில் எழுந்து முகம் காட்டும் தருணம் என்று எதுவுமில்லை. இங்குள்ள மாளிகைகள் எதற்கும் கதவுகள் இல்லை என்பதை கண்டிருப்பீர். அரண்மனைக்கும் அவ்வாறே. எப்போது நீர் விழைந்தாலும் அரண்மனைக்குள் நுழைந்து அரசரைப் பார்த்து வணங்கி, சொல்லாட முடியும். இந்நகரில் காவலும் தடையும் கண்காணிப்பும் ஏதுமில்லை” என்றான். அர்ஜுனன் தலைவணங்கி “நன்று” என்ற பின் அவ்வெண்ணத்தை வியப்புடன் தன்னுள் மீட்டியபடி சென்றான்.

இலைநுனியில் ததும்பிச் சொட்ட காத்திருக்கும் துளி என அந்நகர் தோன்றியது. நீலவான் எதிரொளிக்கும் ஒளி அழியா முத்து என அதை காட்டுகிறது. அதன் ஒவ்வொரு கண நடுக்கலும் ஒரு யுகமே. அல்லது இதுவேதான் அழிவின்மையா? அறம் கொண்டும், மறம்கொண்டும், சொல் கொண்டும், படை கொண்டும் அரசியல் சூழ்ச்சி கொண்டும், நூல்நெறி கொண்டும் காக்கப்பட்ட பெருநகர்கள் என்னாயின? இக்ஷுவாகு குலத்து ராமன் ஆண்ட அயோத்தி எங்கே? தொல்புகழ் மாகிஷ்மதி எங்கே? அரக்கர்கோன் ஆண்ட தென்னிலங்கை எங்கே? எந்நகர்தான் இலைநுனி நீர்த்துளி என நிலையற்றதாக இல்லாமல் இருக்கிறது? விண்ணில் எழுந்த விண்மீன் போல் என்றுமுளதென தோன்றுகிறது? இங்கு சூழ்ந்திருக்கும் உவகை மானுடர் விழையும் பெருநிலை என்றால், இதுவே இவர்களுக்கு காவலென ஆகவேண்டும் அல்லவா?

அரண்மனை முகப்பில் இருந்த ஐந்து அருகர்களின் ஆலயத்தின் முன் சென்று நின்றான். நீண்ட கற்பீடத்தில் நடுவே பெருந்தோள்களுடன் வெற்றுடலுடன் நின்றார் ரிஷபர். கைகள் இரண்டும் கால்முட்டின் மேல் படிந்திருந்தன. விழிகள் முடிவிலியை நோக்கி மலர்ந்திருந்தன. காலடியில் திமில் எழுந்த மாக்காளையின் சிறிய உருவம் இருந்தது. வலப்பக்கம் அடியில் யானைச்சிலை அமைந்த அஜிதரின் சிலை நின்றது. அப்பால் குதிரை பொறிக்கப்பட்ட சம்பவநாதரின் சிலை. இடப்பக்கம் குரங்கு பொறிக்கப்பட்ட அபிநந்தனரின் சிலையும் காட்டுவாத்து பொறிக்கப்பட்ட சுமதிநாதரின் சிலையும் இருந்தன. நன்கு தீட்டப்பட்ட கரிய கல்மேனிகள்மீது ஆலயவாயிலுக்கு அப்பால் தெரிந்த ஒளியசைவுகள் நீர்த்துளியில் என எதிரொளித்துக் கொண்டிருந்தன. அவை சிலைகள் என்று தோன்றவில்லை. இப்புடவிச் சித்திரம் வரையப்பட்ட பெருந்திரையொன்றில் அவ்வடிவங்கள் வெட்டப்பட்டு துளை என தெரிவதாக விழி மயக்கெழுந்தது. அப்பால் ஓர் ஒளியுலகம் அசைந்து கொண்டிருந்தது.

சிறுவர்க்குரிய கற்பனை என்று எண்ணியபடி அவனே புன்னகைத்தபடி அர்ஜுனன் ஆலயத்துக்குள் சென்றான். மஞ்சளரிசியில் முடிவிலிச் சக்கரம் வரைந்து வழிபட்டுக் கொண்டிருந்த வெண்ணிற ஆடையணிந்த அருகநெறியினரின் அருகே சென்று அமர்ந்தான். உள்ளே ரிஷபரின் காலடியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை மலர்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் அளித்தார் பூசகர். கண் மூடி கை கூப்பிய பின்னர் அதை தன் குழலில் சூடினான். இரு கைகளையும் மடியில் வைத்து விழிகளை ரிஷபரின் நின்ற சிலைக்கு கீழிருந்த பீடத்தில் பொறிக்கப்பட்டிருந்த பெருங்காளையின் கண்களை நோக்கி குவித்தான்.

அவ்வாலயத்தின் சுவரிலிருந்த கற்கள் அக்கணம் நீரூற்றில் இருந்து எடுக்கப்பட்டவை போல் குளிர்ந்திருந்தன. அங்கிருந்த அமைதியில் அக்குளுமை பரவி அதை எடை மிக்கதாக்கியது. உள்ளத்தில் எழுந்த அத்தனை சொற்களும் குளிர்ந்த ஈரம் கொண்டு மெல்ல சித்தத்தின் மேல் படிந்து அசைவிழந்தன. வெண்கல மணி அடித்த ஒலி கேட்டு அவன் விழித்துக் கொண்டான். எழுந்து நீள்மூச்சுடன் அவ்வாலயச் சூழலை நோக்கியபின் பிறிதொருமுறை தலைவணங்கி வெளிவந்தான். கண்ணில் எஞ்சிய ஐந்து சிலைகளும் ஐந்து கருவிழி மணிகளென தோன்றின. அவற்றில் ஆடும் காட்சித் துளிகள். சாலையை அடைந்தபின் திரும்பி அச்சிலைகளை நோக்கியபோது அவை ஐந்து கரியவிதைகளென தோன்றின.

அரண்மனை முற்றம் வரை அவன் விழிகளுக்குள் அச்சிலைகள் இருந்துகொண்டிருந்தன. அரண்மனை முற்றத்தை அடைந்து அங்கு நின்ற ஏவலனை நோக்கி தலைவணங்கி “நான் ரைவத குலத்து அரசரை காண விழைகிறேன். அயல் வணிகருக்கு காவலனாக வந்தவன்” என்றான். “என் பெயர் ஃபால்குனன். வடக்கே அஸ்தினபுரி என் ஊர். க்ஷதிரிய குலத்தவன்.” “தங்கள் நெறி என்ன?” என்றான் காவலன். “இங்கு ஊனுணவு உண்பவர்களுக்கு மட்டும் சில இடங்களில் விலக்குள்ளது.” அர்ஜுனன் “நான் வைதிகநெறியினன்” என்றான். காவலன் “அந்த பெரிய வளைவுவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அரசவைக்கூடம் உள்ளது. அங்கு இப்போது அரசமன்று கூடியுள்ளது” என்றான். அர்ஜுனன் “அங்கு….” என்று தயங்க “தாங்கள் தங்களை அறிவித்துக்கொண்டு உள்ளே செல்லலாம். இங்கே எந்த விலக்குகளும் எவருக்குமில்லை” என்றான் காவலன்.

மென்புழுதியும் கூழாங்கற்களும் பரவிய விரிந்த முற்றத்தில் மரக்குறடு ஒலி எழுப்ப நடந்தான். காட்டு மரங்களை கற்பாறைகள் மீது நாட்டி அதன் மீது மரப்பலகை தளம் அமைத்து எழுப்பப்பட்டது அம்மாளிகை. அதன் நீள்சதுர முகப்பிற்கு அப்பால் மூன்று வாயில்கள் திறந்திருந்தன. முகப்பு வாயிலில் ரைவத குலத்தின் புதிய அடையாளமான அன்னப்பறவை பொறிக்கப்பட்ட செந்நிறத்திரை தொங்கி காற்றில் நெளிந்து கொண்டிருந்தது. மாளிகையின் கூம்பு வடிவக்கூரையின் உச்சியில் ஊழ்கத்தில் அமர்ந்த அருகரின் மரச்சிலை பொன் வண்ணம் பூசப்பட்டு காலைவெயிலில் மின்னியபடி மணிமுடி என அமர்ந்திருந்தது.

படிகளில் ஏறி மாளிகை முகப்பை அடைந்து ஒருகணம் தயங்கி நின்றான். உள்ளிருந்து வந்த ஏவலன் அவனைக்கண்டு தலைவணங்கி முகமன் கூறி அகன்றான். திரையை மெல்ல விலக்கி உள்ளே சென்று இடைநாழியை அடைந்தான். கையில் இன்நீருடன் அவனைக்கடந்து சென்ற நான்கு ஏவலர் முகமன் கூறி வாழ்த்தி புன்னகைத்துச் சென்றனர். எவரென எவ்விழியும் வினவவில்லை. விலக்கும் முகம் எதுவும் எதிர்வரவில்லை. அங்கு அயலவர் இயல்பாக வருவார்கள் போலும். அப்பால் எங்கோ யாழிசை கேட்டுக்கொண்டிருந்தது. அவன் அதை இலக்காக்கி நடந்தான். அரண்மனைக்கூடங்கள் அமைதியில் ஆழ்ந்து கிடந்தன. அரக்கு பூசப்பட்ட தூண்களில் அவன் பாவை வளைந்தும் நெகிழ்ந்தும் உடன் வந்தது.

உள்கூடத்தை அடைந்து அதற்கு அப்பால் சிறுவாயிலில் தொங்கிய வண்ணத் திரைச்சீலையைத் தொட்டு ஒரு கணம் தயங்கி “வணங்குகிறேன்” என்று கூறியபடி விலக்கி உள்ளே சென்றான். அங்கு தரையில் விரிக்கப்பட்டிருந்த மரவுரி மீது கால் மடித்து அமர்ந்திருந்தார் ரைவத குலத்து அரசரான சுதேவர். தலையில் அணிந்திருந்த கொடித்தளிர் வடிவமான மெல்லிய பொன்முடிதான் அவரை அரசரென காட்டியது. அவருக்கு முன்னால் நான்கு அயல்நாட்டுச் சூதர்கள் அமர்ந்து மகரயாழை குறுமுழவுடன் இணைத்து இசைத்தனர். சூழ்ந்திருந்த அவையில் குடித்தலைவர்களும் அயல்வணிகர்களும் எளிய குடிகளும் கலந்திருந்தனர்.

காலடியோசை கேட்டு திரும்பிய சுதேவர் புன்னகையுடன் அர்ஜுனனை நோக்கி தலைவணங்கி அமரும்படி கைகாட்டினார். முகமன் சொல்லி வாழ்த்த நாவெடுத்த அர்ஜுனன் அங்கிருந்த இசையமைதியை கலைக்க வேண்டியதில்லை என எண்ணி அவையின் ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டான். இன்நீர் கொண்டு வந்த ஏவலன் அங்கிருந்த அவையின் ஓரத்திலிருந்து தொடங்கி மண்குவளைகளில் அதை அளித்தான். முதலில் அரசருக்கு அளிக்கும் முறைமையை அங்கு காணமுடியவில்லை. பிறருக்கு அளித்த இன்நீர்க் குவளைகளில் ஒன்றையே அரசருக்கும் கொடுத்தான். அவர் இசையில் ஆழ்ந்தபடி அதை அருந்தினார்.

தன் கையில் வந்த குவளையிலிந்த இன்நீரை அருந்தியபடி அர்ஜுனன் அரசரை நோக்கினான். எளிய பருத்தி ஆடையை அணிந்து பிறிதொரு பருத்தி ஆடையை உடலுக்கு குறுக்காக சுற்றியிருந்தார். அரசணி என்பது காதில் அணிந்திருந்த மணிக்குண்டலங்கள் மட்டுமே. அங்கிருந்த எவரும் அரசருக்கு முன் தலை வணங்கி நிற்கவில்லை. அவர்கள் அமர்ந்திருந்த முறைமையிலேயே விடுதலை தெரிந்தது. ஒருவரை நோக்கி சுதேவர் புன்னகைக்க அவர் கையை இயல்பாக அசைத்து அந்த இசைத்தாவலை தானும் விரும்பியதை அறிவித்தார்.

இசை முடிந்து யாழ் விம்மி அமைந்தது. இசைச்சூதர் வணங்கியதும் சுதேவர் அவர்களை திரும்ப வணங்கினார். அருகே வந்த தாலமேந்திய ஏவலனிடமிருந்து சிறு பட்டுக்கிழியொன்றை எடுத்து பரிசிலாக சூதருக்கு வழங்கினார். அவர்கள் வந்து அரசரை வணங்கி அதைப்பெற்று தலைவணங்கினார். சுதேவர் திரும்பி அர்ஜுனனை நோக்கி, “தாங்கள் இளைய பாண்டவரென்று எண்ணுகிறேன்” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “இளைய யாதவர் தாங்கள் இங்கு வருவீர்கள் என்று செய்தி அறிவித்தார். தங்களுக்காக இந்நகர் காத்திருக்கிறது. இன்றிரவு இளையவர் இங்கு வரக்கூடுமென்று தெரிகிறது” என்றார்.

அர்ஜுனன் வியப்புடன் “தன்னை எவரென்று அறியாத மக்களுடன் தான் இங்கு தங்குவதாகவே என்னிடம் இளைய யாதவர் சொல்லியிருந்தார்” என்றான். “எவரென அறியத்தலைப்படாத மக்கள் என்று சொல்லவேண்டும்” என்றார் சுதேவர். அவை புன்னகைசெய்தது. “தாங்கள் இன்று இங்கு எங்கள் விருந்தினர் இல்லத்தில் தங்கி இளைப்பாறலாம். மாலையில் அவைக்கு வாருங்கள்” என்றார் சுதேவர். “ஆவனசெய்யும்படி ஏவலருக்கு ஆணையிட்டிருக்கிறேன்.” அர்ஜுனன் “அவ்வண்ணமே” என்றான்.

இளைய யாதவரைப்பற்றிய உரையாடல் எழும் என அர்ஜுனன் எண்ணினான். ஆனால் அவர்கள் இசைபற்றி பேசத்தொடங்கினர். சுதேவர் திரும்பி அர்ஜுனனிடம் “நாளை மறுநாள் இங்கு எங்கள் குலமூதாதை ரைவதகர் விண்ணேறிய நன்னாள். ரைவதமலை கொண்டாடும் ஏழு விழவுகளில் ஒன்று அது. அவ்விழவுக்கு யாதவகுடியினர் துவாரகையிலிருந்து திரண்டுவரும் வழக்கம் உண்டு. இளைய பாண்டவர் வருவதும் அதற்காகவே. தாங்களும் அவ்விழவில் பங்கெடுக்கவேண்டும்” என்றார். அர்ஜுனன் “ஆம், அது என் நல்லூழ்” என்றான்.

ஏவலன் அவனை விருந்தினர் இல்லம் நோக்கி கொண்டுசென்றான். அரண்மனையை ஒட்டியிருந்த அந்த மாளிகை மூங்கில்களாலும் ஈச்சமரத்தின் ஓலை முடைந்தமைத்த தட்டிகளாலும் கட்டப்பட்டிருந்தது. தேன்மெழுகு பூசப்பட்ட உட்சுவர்கள் கரிய வண்டின் உடல் போல் ஒளி கொண்டிருந்தன. இழுத்துக் கட்டப்பட்ட கொடிகளால் ஆன மஞ்சத்தில் மரவுரிப் படுக்கையில் படுத்து அர்ஜுனன் துயின்றான். புழுதிக் காற்று கூரையின் மேல் மழையென கொட்டிக் கொண்டிருந்தது. குளிர் மழை அவனை நனைக்க தொலைதூரத்துக் காடு ஒன்றுக்குள் சென்றுகொண்டிருந்தான். தன் மேல் விழுந்த மழைத்துளிகள் வெம்மையாக இருக்கக் கண்டு நிமிர்ந்து நோக்கினான். இலைகளென அவன் தலைக்கு மேல் நிறைந்து நின்றவை பசி கொண்ட ஓநாய்களின் சிவந்த நாக்குகள் என்று கண்டான். அவை சொட்டிய உமிழ் நீர் அவன் உடலை நனைத்து தரையில் வழிந்து கால்களை வழுக்கச்செய்தது.

மூன்றாம் முறை வழுக்கியபோது அவன் விழித்துக் கொண்டான். அறைக்கு வெளியே அவன் விழிப்பதைக்காத்து நின்ற ஏவலன் “தங்களை அவைக்கு அழைத்து வரும்படி அரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றான். “விருந்தினர் வந்துவிட்டார்களா?” என்று கேட்டான் அர்ஜுனன். “ஆம்” என்றான் ஏவலன். அர்ஜுனன் எழுந்து தன் ஆடையை சுற்றிக் கொண்டான். “அவர் இளைய யாதவரா?” என்றான். ஏவலன் “யாதவர் எனத்தெரிகிறது” என்றான். அதற்கு மேல் அவனிடம் கேட்டறிய ஏதுமில்லை என்பதால் அர்ஜுனன் அவன் செல்லலாம் என தலையசைத்தான். “நீராட நன்னீரும் புத்தாடையும் சித்தமாக உள்ளன” என்றான் அவன். “நன்று” என்றான் அர்ஜுனன்.

நீராடி அங்கு அளிக்கப்பட்ட எளிய மரவுரி ஆடை அணிந்து நீர் சொட்டும் நீள் குழலை தோளில் விரித்திட்டு அர்ஜுனன் அவை நோக்கி சென்றான். முகமன் சொல்லி வரவேற்கவும் வருகை அறிவித்து அவை புகுத்தவும் எவரும் இல்லாததனால் அவன் உடல் தத்தளித்தபடியே இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கணம் தயங்கி பின் நினைவுகூர்ந்து முன் நடந்தான். எதிரே வந்த ஏவலனிடம் “அரசர் எங்குள்ளார்?” என்றான். “உள்ளே தன் தனியறையில் இரு யாதவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்” என்றான் ஏவலன்.

அர்ஜுனின் உள்ளத்தில் எழுந்த வியப்பு விழிகளில் வெளிப்படவில்லை. “இரு யாதவர்களா? எவர் அவர்?” என்றான். “இங்கு வருபவர்கள்தான். அவர்களில் ஒருவன் நன்கு குழலிசைப்பான்” என்றான். “ஆம்” என்றுரைத்து அர்ஜுனன் படிகளில் ஏறி மாடியின் சிறிய இடைநாழி வழியாக நடந்து அரசரின் தனியறைக்கு சென்றான். அங்கும் கதவுகள் இல்லை என்பது அத்தனை பார்த்தபின்னரும் அவனை வியப்பிலாழ்த்தியது. வெளியே நின்று தன் பாதக்குறடுகளை அசைத்து ஒலிஎழுப்பினான். “வருக” என்றார் அரசர்.

உள்ளே நுழைந்து அரசருக்கு தலைவணங்கியபின் அவர் எதிரே பீடங்களில் அமர்ந்திருந்த இளைய யாதவரையும் அருகே அமர்ந்திருந்த சாத்யகியையும் நோக்கி புன்னகையுடன் தலை வணங்கினான். இளைய யாதவர் எப்போதும்போல ஒரு பெரும் நகையாட்டு சற்றுமுன் முடிந்ததுபோல புன்னகை விழிகளில் எஞ்சியிருக்க “நீண்ட தாடி உங்களை துறவி என காட்டுகிறது பார்த்தரே” என்றார். “பெண்கள் விரும்பும் தாடி இது.”

அர்ஜுனன் புன்னகைத்தான். இளைய யாதவர் கண்களில் சிரிப்புடன் “ஒவ்வொரு ஊரையும் உறவையும் துறந்து முன் செல்வதால் இது பொருத்தமுடையதுதான்” என்றார். “இன்னும் சில நாளைக்கு இத்தோற்றம் இருக்கட்டும்.” அர்ஜுனன் அருகே அமர்ந்துகொண்டான். “நான் இங்கு முன்னரே வந்தது என் உடன்பிறந்தவராகிய அரிஷ்டநேமி அவர்களை பார்ப்பதற்காக” என்றார் இளைய யாதவர். “இங்குதான் அருகர்களுடன் குகை ஒன்றில் நோன்பாளராக அவர் தங்கியிருக்கிறார். அவரை என்னுடன் அழைத்துச்செல்லவே வந்தேன்.”

அர்ஜுனன் வியப்புடன் நோக்க “அறியப்படாத ஓர் உறவு அது. தென்மதுராபுரி என அழைக்கப்பட்ட யாதவப்பெருநகரை ஆண்ட சத்வத குலத்து கிரிராஜரின் எட்டாவது மைந்தர் வீரசேனரில் இருந்து அந்தக குலம் உருவானதை அறிந்திருப்பீர். என் தந்தைவழி முப்பாட்டனார் விருஷ்ணியின் உடன்பிறந்தவராகிய சக்ரசேனர் அந்தகக்குடியில் மணமுடித்து அந்தகவிருஷ்ணிகுலம் என்னும் குலத்தை அமைத்தார். அவரது கொடிவழியில் பிறந்தவர் அஸ்வசேனர். அவரது மைந்தர் சமுத்ரவிஜயர் சௌரிபுரம் என அழைக்கப்பட்ட தட்சிணமதுராபுரியை ஆண்டார். அவருக்கும் யாதவ அரசியான சிவைதேவிக்கும் பிறந்த இறுதி மைந்தர்தான் அரிஷ்டநேமி. கொடிவழியில் சமுத்ரவிஜயர் என் சிறிய தந்தை. இவர் எனக்கும் என் தமையன் பலராமருக்கும் மூத்தவர்.”

“நான் என் தமையனை சந்தித்து ஓராண்டு ஆகிறது. சென்றமுறை ரைவதகரின் விண்ணேற்ற விழவு நிகழ்ந்தபோது அவரும் நானும் இங்கு வந்தோம். நான் துவாரகைக்கு திரும்பியபோது அவர் வரமறுத்து இங்கேயே தங்கிவிட்டார். ஓரிரு மாதங்களில் திரும்பி வருவார் என நான் எண்ணினேன். வராததனால் என் தந்தையும் தமையனும் கவலைகொண்டிருக்கிறார்கள். அவரை எவ்வண்ணமேனும் அழைத்துவரவேண்டும் என்பது என் தந்தையின் ஆணை” என்றார் இளைய யாதவர். “மறைந்த உக்ரசேனரின் ஏழாவது அரசியின் மகளான ராஜமதியை இவருக்கு மணம்செய்விக்கவேண்டுமென அரசர் எண்ணுகிறார். கம்சரின் கொலையால் உளப்பிரிவுகொண்டுள்ள உக்ரசேனரின் உறவினரை யாதவகுடிகளில் இணைத்துக்கொள்ள இம்மணம் இன்றியமையாதது என நானும் எண்ணுகிறேன்.”

அர்ஜுனன் அரசரை நோக்கியபின் “நோன்பு கொள்பவரை மீட்பது முறையல்ல என்பார்கள்” என்றான். “ஆம், ஆனால் தந்தையின் ஆணை இது. அவரது உடன்பிறந்தவரான சமுத்ரவிஜயர் நேரில் மதுராவுக்கு வந்து கண்ணீருடன் மன்றாடியிருக்கிறார். இவருக்காக குடிகளும் உற்றாரும் தந்தையும் தாயும் அங்கே காத்திருக்கின்றனர். மூதாதையருக்கான நீர்க்கடன்களை கழிக்கும் பொறுப்புள்ளவன் துறவுபூணக்கூடாது என நெறிநூல்கள் சொல்கின்றன. ஆகவே அவரை மீட்டுக்கொண்டுசெல்வதில் பிழையில்லை” என்றார் இளைய யாதவர். “நமக்கு வேறுவழியில்லை. நான் தந்தைக்கு வாக்களித்தபின்னரே துவாரகையிலிருந்து வந்திருக்கிறேன்.”

அர்ஜுனன் திரும்பி சுதேவரை நோக்கினான். “அதைச் செய்வதில் பிழையில்லை. அவரது துறவு உண்மையானதா என தெய்வங்கள் பரிசீலித்தறிவதற்கான நிகழ்வாகவும் இது அமையலாமே” என்று அவர் சொன்னார். அர்ஜுனன் “ஆம், அவ்வண்ணமும் கொள்ளலாம்” என்றான். “முறைமைச்சொல் சொல்லமுடியாத இடங்களில் அரசகுடியினர் தடுமாறத்தொடங்கிவிடுகின்றனர்” என்று இளைய யாதவர் சிரித்தார். அர்ஜுனன் புன்னகைத்தான். “குலமுறைப்படி அரிஷ்டநேமி எனக்கு தமையனின் இடம் உள்ளவர். துவாரகையிலும் மதுராவிலும் மதுவனத்திலும் அவரை தந்தையென்றே நான் நடத்துவது வழக்கம். சௌராஷ்டிரத்தின் எல்லையைக் கடந்ததும் தோள்தழுவும் தோழர்களாகிவிடுவோம்” என்றார் இளைய யாதவர். “நான் துவாரகையில் அவரைப்பற்றிய செய்திகளை கேள்விப்பட்டதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அனைத்து வகையிலும் அவர் யாதவர்களிடமிருந்து வேறுபட்டவர். யாதவர்கள் எவருக்கும் இல்லாத உயரமான உடல் கொண்டவர். என் தமையன் பலராமரே அவரை தலைதூக்கி நோக்கித்தான் பேசவேண்டும். அவரை ஒரே கையால் தூக்கி தோளில் ஏற்றிக்கொள்ளும் அளவுக்கு புயவல்லமை கொண்டவர். வெறும் கைகளால் பலகைகளை அறைந்து உடைப்பார். தலையால் முட்டி பாறைகளை பிளப்பார். களிற்றை கொம்புகளைப்பற்றி அசையாமல் நிறுத்த அவரால் முடியும். இளமையில் அவரை மண்ணுக்கு வந்த அரக்கன் என்றே அவர் குடியினர் எண்ணினர். ஆனால் நிமித்திகர் அவர் பிறந்தநாள் பெருமையுடையது என்றனர். சிரவணமாதம் சுக்லபஞ்சமி. அவர் யாதவர்குலம் ஒளிகொள்ளப்பிறந்த முழுநிலவு என்று கவிஞர் பாடினர்.”

“இளமையில் அவரை படைக்கலப்பயிற்சிக்கு அனுப்பினார்கள். முதல்நாள் ஆசிரியரை வணங்கி மலர்கொண்டு பிற மாணவர்களுடன் நிரையாகச் சென்று படைக்கலமேடை முன் நின்றார். அங்கு வில்லும் வேலும் வாளும் கதையும் வைக்கப்பட்டிருந்தன. இளையோர் அறியாது எடுக்கும் படைக்கலம் எது என்று பார்க்கும் சடங்கு அது. அவர் கதாயுதத்தை எடுப்பார்கள் என அனைவரும் எண்ணினர். அவர் அங்கிருந்த வெண்மலர் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டார். திகைத்த ஆசிரியர் பலவகையிலும் அவரிடம் படைக்கலம் ஒன்றை எடுக்கும்படி சொன்னார். உறுதியாக அவர் மறுத்துவிட்டார். எப்போதும் எந்தப்படைக்கலத்தையும் அவர் தொட்டதில்லை” இளைய யாதவர் சொன்னார்.

“சொல்முளைத்ததுமே தமையனார் யாதவபுரியிலிருந்து நீங்கிவிட்டார். அவரை அறநூல்களே கவர்ந்தன. தட்சிணமதுராவிலும் பின்பு மதுராவிலும் குருகுலங்களில் பயின்றபின் மேலும் கல்வி கற்கும்பொருட்டு வடதிசைக்கு சென்றார். அங்கு சௌனக குருமரபில் இணைந்து வேதங்களை கற்றார். சாந்தோக்ய குருமரபைச் சேர்ந்த கோர அங்கிரசரிடம் வேதமுடிவையும் கற்றறிந்தார். ரிஷிகேசத்தில் அமைந்த வசிஷ்ட குருகுலத்தில் நீதிநூல்களையும் யோகநூல்களையும் கற்றார். யாதவகுடியில் அவரே அனைத்தும் கற்ற அறிஞர் என்கிறார்கள்.”

அர்ஜுனன் இனிய மெல்லிய புன்னகையுடன் “கற்று நிறைந்து திரும்பிய எவரையும் நான் இதுவரை கண்டதில்லை” என்றான். “ஆம், கற்று எவரும் நிறைவதில்லை. எதுவரை கற்பது இயல்வது என்று அறிந்து மீள்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். “கற்றதன் பயன் அவ்வண்ணம் வாழ்வது. எங்கோ ஓரிடத்தில் கல்வியை நிறுத்திவிடாவிட்டால் வாழ்வதற்கு காலம் இருக்காது அல்லவா?’ என்றான் அர்ஜுனன். “வாழும்போதே கற்பவற்றை என்ன செய்வது?” என்றார் சுதேவர். இளைய யாதவர் “கற்றவற்றின்படி நிற்கும் மாணவர் எவரும் இதுவரை மண்ணில் பிறக்கவில்லை. கற்பது அறிவு. வாழ்வது திருஷ்ணை” என்றார்.

“ஒருவர் கூடவா?” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றார் இளைய யாதவர். “அயோத்தியை ஆண்ட ரகுகுலத்து ராமன் கூடவா?” என்றான் அர்ஜுனன். “அவனை நான் அறிவேன். நானன்றி அவனை முழுதுணர்ந்தவர்கள் இல்லை” என்றார் இளைய யாதவர். அச்சொற்களின் துணையென அவன் கண்களில் எழுந்த ஒளியைக் கண்டு குழம்பிவிட்டு சுதேவரை நோக்கிவிட்டு அர்ஜுனன் ஏதோ சொல்ல வாயெடுத்து சொல் உருவாகாமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டான்.

பின்பு அந்த உளநிலையை மாற்ற விழைந்து “இங்கு தாங்கள் அடிக்கடி தங்குவது உண்டென்று அறிந்திருக்கிறேன். இது மலைக்குடிகள் வாழும் மண் என்று சொன்னீர்கள். இங்கு எவருக்கும் உங்களை தெரியாது என்றீர்கள். ரிஷபரின் சொல் நின்று வாழும் நிலம் என்று நான் அறிந்திருக்கவில்லை” என்றான். “நான் பிறிதென்ன சொன்னேன்? இங்கு மலைக்குடிகள் வாழ்கிறார்கள், அவர்கள் நான் யாரென்று அறியாதவர்கள். இவ்வரண்மனையிலும் சிலரே என் குலத்தையேனும் அறிந்தவர்கள்” என்றார் இளைய யாதவர். “முடிவற்ற பெருங்காவியம் ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறேன். அதன் ஒரு ஏட்டிலிருந்து பிறிதொன்றுக்கு தப்புவதே அங்கு எனக்கு இயல்வது. இங்கு வருகையில் காவியத்தின் எல்லைகளைக் கடந்து எளிய மானுடனாகிறேன். பார்த்தரே, மேலும் கீழும் எவரும் இன்றி இருக்கையிலேயே தான் யாரென மானுடன் அறிகிறான். இப்புவியில் அதற்கான இடங்கள் மிக அரியவை.”

“தாங்கள் இங்கிருப்பீர்கள் என்று எப்படி உணர்ந்தேன் என்றே தெரியவில்லை. ஆனால் தெளிவாக அதை கண்டேன்” என்றான் அர்ஜுனன். “உண்மையில் இங்கு வரும் திட்டம் ஏதும் இருக்கவில்லை” என்றார் இளைய யாதவர். “மதுவனத்தில் தங்கையின் மணத்தன்னேற்புக்கான ஒருக்கங்கள் நிகழ்கின்றன. அங்கு நானிருந்தாக வேண்டும். ஆனால் தந்தையின் ஆணை நேற்று முந்நாள்தான் எனக்கு வந்தது. ஆனால் கிளம்பும்போதே நீர் இங்கு வருவதை என் சித்தம் அறிந்தது” என்றார். சுதேவர் உரக்க நகைத்து “நீங்கள் இருவரும் பாம்பின் வாலும் தலையும் போல என்று யாதவர் சொல்கிறார்கள். தலை எண்ணுவது வாலில் அசைவாக வெளிப்படுகிறது” என்றார். அவர் அருகே இருந்த அமைச்சர் “ஆம், ஆனால் வாலும் தலையும் பிரித்தறியமுடியாத விரியன் பாம்பு” என்றார்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 13

இளைய யாதவருடன் அரண்மனையிலிருந்து பிரிந்துசென்ற இடைநாழியில் நடக்கையில் அர்ஜுனன் அவர் சுபத்ரையைப்பற்றி பேசுவார் என எதிர்பார்த்தான். ஆனால் அவர் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டதாக தோன்றியது. அத்தருணத்தில் அது மிகச்சிறிய, பொருளற்ற செயலென தோன்றியது. உடனே ஓர் எண்ணம் வந்தது. அரசியலுக்காகத்தான் அந்த மணம் என்றால் ஏன் நகுலனோ சகதேவனோ சுபத்ரையை கைகொள்ளக் கூடாது? அவளுடைய வயதும் அவர்களுக்குத்தான் பொருத்தமானது. அதையே சொல்லலாம் என அவன் எண்ணியபோது இளைய யாதவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குவதுபோல் பேசினார்.

“இளமையில் நானும் தமையனார் அரிஷ்டநேமியும் சேர்ந்துதான் வடபுலத்து குருகுலங்களுக்கு கல்வி பயிலச்சென்றோம். முரண்படுவனவற்றை மட்டுமே காணும் விழிகள் எனக்கு. இயைபனவற்றை மட்டுமே காணும் விழிகள் அவருக்கு. அத்தனை குருகுலங்களிலும் ஆசிரியருக்கு அணுக்கமானவராக அவர் இருந்தார். ஆசிரியரால் முதலில் புறந்தள்ளப்படுபவனாக நான் இருந்தேன். கற்பனவற்றை கடந்து சென்று அவர் அடுத்த குருவை கண்டடைந்தார். நானோ கற்பனவற்றை தவிர்த்து பிறிதொன்றை கண்டடைந்தேன். நூற்றியெட்டு குருநாதர்களால் வாழ்த்தப்பட்டவராக அவர் இருந்தார். மானுடர் எவரையும் ஆசிரியராக ஏற்காதவனாக இருந்தேன் நான். எட்டு கைகளாலும் திசைகளை அள்ளி தன்னுள் நிறைத்துக் கொண்டார் அவர். என்னுள் எஞ்சியனவற்றை அள்ளி வெளியே இட்டேன் நான். ஆற்றுவனவற்றுக்கு முடிவிலாதிருந்தன எனக்கு. அவரோ செயலின்மையை ஊழ்கமென கொண்டிருந்தார்.”

“நான் அவரை விட்டு விலகினேன். நெடுநாட்களுக்குப் பின்பு துவாரகை எழுந்து கொண்டிருந்தபோது ஒருநாள் நான் அறிந்தேன் என் நகர் வாயிலில் வெள்ளுடை அணிந்த இளைஞரொருவர் வந்து நிற்கிறார் என. என்னை கண்ணன் என்று பெயர் சொல்லி அவர் அழைத்தது வாயிற்காவலர்களை வியப்புறச்செய்தது. எந்நகரத்தவர் என்று கேட்டமைக்கு நவதுவாரகை என்று அவர் மறுமொழி சொன்னார். அச்செய்தி கேட்டதுமே உள்ளுணர்வால் நான் அறிந்தேன், அவர் யாரென்று. படிகளில் இறங்கி முற்றத்திற்கு ஓடி “என் புரவியை வரச்சொல்லுங்கள்” என்று கூவினேன். ஓடிச்சென்று புரவியில் ஏறி “அரச வெண்புரவி என் பின்னால் வரட்டும்” என்று ஆணையிட்டபடி விரைந்து சென்றேன். அரண்மனை வாயிலில் முழுதணிக்கோலத்தில் எப்போதும் சித்தமாக இருக்கும் அரச வெண்புரவி கடிவாளங்களை முதுகில் சுமந்தபடி வெற்றுச்சேணத்துடன் என்னைத் தொடர்ந்து ஓடி வந்தது.

நகரின் சுழல்பாதைகளில் விரைந்திறங்கி அரசநெடும்பாதையில் புழுதி தெறிக்க ஓடி நகர் வாயிலை அடைந்தேன். என் புரவியை கண்டு நகர் மாந்தர் திகைப்பதை ஓரவிழிகளால் கண்டேன். காலை ஒளி ஊறிநின்ற புழுதித்திரைக்கு அப்பால் தொலைவிலேயே கண்டுகொண்டேன், என் ஆடிப்பாவை என அவர் அங்கே நின்றார். பார்த்தா, அவருக்கும் எனக்கும் தோற்றத்தில் எந்தப் பொதுமையும் இல்லை. என்னை விட இருமடங்கு பெரிய உடல் கொண்டவர். இளமையிலேயே அவரை அண்ணாந்து பார்த்து விண்சூழ்ந்த முகத்தைக் கண்டு உரையாடுவதே என் வழக்கமாக இருந்தது. இரு கைகளையும் விரித்து அவர் தோள்களை நான் தழுவிக்கொள்வதுண்டு. விளையாட்டுப் போர்களில் என்னை ஒற்றைக்கையால் தூக்கிச் சுழற்றி தன் தோளில் வைத்து எம்பிக்குதித்து மண்ணில் இறங்குவார்.

படைக்கலம் பயிலாவிட்டாலும் ஆற்றல்மிக்க ஆடல்களில் எப்போதுமிருந்தார். கரைபுரளும் யமுனையில் ஒரு கரையில் இறங்கி மறுகரை நோக்கி நீந்தி கரையேறாமல் திரும்பி வருவார். நாளில் நூற்றெட்டு முறை யமுனையைக் கடந்து நீந்துவதுண்டு. பன்னிரு மல்லர் உண்ணும் உணவை தனி ஒருவராக உண்டு கையூன்றாமல் எழுவார். தோள் வல்லமையில் முதற்தாதையாகிய அருகரின் மைந்தர் பாகுபலிக்கு நிகரானவர் இவர் என்று யாதவகுடிகளில் புகழ் பெற்றிருந்தார். செந்தாமரை வண்ணம் கொண்டவர். என்னுள் எழுந்த எதையும் தானறியாதவர். ஆயினும் என் முதிரா இளமையில் முதன் முதல் இவரைக் கண்டபோதே நான் இவரே என்று உணர்ந்தேன்.

மாமனை வென்று மதுராவை கொண்டபின் தமையனுடனும் தந்தையுடனும் சௌரபுரம் சென்றிருந்தபோது முதன்முதலாக இவரைக் கண்டதை நினைவுறுகிறேன். தேர் சௌரபுரத்தின் கோட்டை முகப்பை அணுகியபோது அங்கு கொடிகளும் பாவட்டாக்களும் மலர்த்தோரணங்களும் சூழ மங்கலங்கள் ஏந்திய சேடியர் முன்னிற்க இன்னிசைக் குழுவும் வாழ்த்துரைக்கும் மூத்தோரும் இருபக்கம் நின்றிருக்க சௌரபுரியின் அரசர் சமுத்ரவிஜயர் எங்களைக்காத்து நின்றிருந்தார். தேர் இறங்கியதும் வைதிகர் கங்கை நீர் தெளித்து வேதச்சொல் உரைத்து எங்களை வரவேற்றனர்.

சூதர் இசையும் வாழ்த்தொலிகளும் சூழ சென்று எந்தை அரசரின் கைகளைப்பற்றிக் கொண்டு முகமன் உரைத்தார். இருவரும் தோள் தழுவிக் கொண்டனர். தந்தைக்குப் பின்னால் தலைதூக்கி நின்றிருந்த இவரைக் கண்டு மலைத்த என் தமையன் என் கைகளைப்பற்றி “மானுடத்தில் இப்படி ஒரு பேருடல் உண்டென்று எவர் எண்ண முடியும்? பிதாமகர் பீஷ்மரும் பால்ஹிகரும் கூட இவரை விட சிறியவர்களே” என்றார். “யாரிவர்?” என்றேன். “சௌரபுரத்து அரசர் சமுத்ரவிஜயரின் எட்டாவது மைந்தர் இவர். அரிஷ்டநேமி என்று இவரை அழைக்கின்றனர்” என்றார்.

நான் இவரது இறுகிய இடையையும் இரு கிளை விரிந்த ஆலமரத்தடி என தெரிந்த தோள்களையும் நோக்கினேன். தலை தூக்கி மேலே வானில் நின்று புன்னகைக்கும் நீண்ட விழிகளைக் கண்டு புன்னகைத்தேன். தமையனிடம் “மூத்தவரே, இவர் என்னைப் போன்றே உள்ளார்” என்றேன். “மூடா உளராதே” என்று சொல்லி என் தலையை தட்டினார். “இல்லை, நான் இவரென இருக்கிறேன்” என்றேன். “கனவில் இருந்திருப்பாய். யாதவகுடியின் தோள் சூம்பிய குழந்தைகள் அனைத்துமே இவரைத்தான் கனவுகாண்கின்றன என்கிறார்கள்” என்றார் தமையன். “இவர் கதைபயின்றால் பின்னர் பாரதவர்ஷத்தில் எவரும் கதை ஏந்தவேண்டியதில்லை. வாலுடன் அஞ்சனைமைந்தர் எழுந்து வரவேண்டியதுதான்.”

அரசர் திரும்பி எங்களை நோக்கி “கம்சர் என் தோழர். அவரை வென்று மதுராவை மீட்ட யாதவஇளவரசர்கள் எனும்போது பேருருக்கொண்ட இளைஞர்களை எண்ணியிருந்தேன். விளையாட்டு மாறாத சிறுவர்களாக இருக்கிறீர்கள்” என்றபடி கைநீட்டினார். இருவரும் சென்று அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினோம். இருகைகளாலும் எங்கள் தோள்களை அணைத்து உடலோடு சேர்த்து திரும்பி தன் மைந்தரிடம் “உனது இளையோர் இவர். என்றும் உன் அருளுக்குரியவர்” என்றார். மூத்தவர் அவரை நோக்கி “கதாயுதம் பயில்கிறீரா மூத்தவரே?” என்றார். அரசர் சலிப்புடன் “இவன் எப்படைக்கலத்தையும் தொடுவதில்லை. உண்பதும் யமுனையில் நீந்துவதும் அன்றி வேறெதையும் செய்வதும் இல்லை” என்றார்.

அக்கணத்தை கடப்பதற்காக என் தந்தை “நெறி நூல்களில் வல்லவர் என்றனர் அமைச்சர்” என்றார். அரசர் “ஆம், ஏழு மொழிகளில் நூல் பயின்றான். நாடாளவிருக்கும் இந்நாட்டு அரசனுக்கு வாளெடுத்து துணைநிற்கவேண்டியவன் இவன். வீரனுக்கு நூல்கள் எதற்கு? அமைச்சுப் பணியாற்றும் அந்தணர்க்குரியவற்றை எல்லாம் கற்று இவன் அடையப்போவதுதான் என்ன?” என்றார். பெருமூச்சுடன் “ஒன்றும் சொல்வதற்கில்லை. சொல் கேட்கா தொலைவில் இவன் தலை எழுந்துவிட்டது” என்றபின் என்னை நோக்கி புன்னகைத்து “வருக!” என்று தோள்தொட்டு அழைத்துச் சென்றார்,

இரு அரசர்களும் முன்னால் சென்றபின் அரிஷ்டநேமி என் கைகளை பற்றிக்கொண்டு “இளையவனே, தொலைவிலேயே உன்னைக்கண்டேன். உன் புகழ் என்னை சூதர்சொல்லென குலப்பாடகர் இசையென வந்தடையத் தொடங்கி பல்லாண்டுகளாகின்றன. என் நெஞ்சிலிருந்த நீ பேருருவம் கொண்டவன். கரிய சிற்றுடலாக உன்னைக் கண்டபோது நான் ஏமாற்றம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் விந்தையான ஓர் உணர்வு எனக்கேற்பட்டது. நான் நீயே என எண்ணிக்கொண்டேன்” என்றார். அவரது இருகைகளையும் பற்றிக்கொண்டு “நானும் அவ்வண்ணமே எண்ணினேன் மூத்தவரே” என்றேன். சிரித்தபடி இருகைகளாலும் என் புயங்களைப்பற்றி பட்டுச்சால்வையென தூக்கிச் சுழற்றி தன் தோளில் ஏற்றிக் கொண்டார். வெண்யானை மேல் ஏறிச் செல்லும் இந்திரன்போல் அவர் தோள்களில் அமர்ந்து அந்நகரின் தெருக்களில் சென்றேன். எங்கள் உறவு அன்று தொடங்கியது.

அன்று துவாரகையில் என் வாயிலில் வந்து இவர் நின்றபோது கடுந்தவமியற்றி கற்ற கல்வியால் உடல் மெலிந்து தோள் சிறுத்திருந்தார். ஆயினும் வெண்கல்லில் கலிங்கச் சிற்பி செதுக்கி எடுத்த சிற்பம் போல் தோன்றினார். அருகே சென்று தாள்பணிந்து “என் நகருக்கு வருக மூத்தவரே! இது உங்கள் நிலம். உங்கள் சொல் இங்கு திகழ்வதாக!” என்றேன். என் தோள்களை அள்ளி தன் பெரிய நெஞ்சோடு அணைத்து “உன் நகர் குறித்த செய்திகளை சில ஆண்டுகளாக கேட்டேன் இளையவனே. ஆனால் மண்ணில் இப்படி ஒரு விந்தையை நீ நிகழ்த்தி இருப்பாய் என்று எண்ணவில்லை. ஆனால் நீ நிகழ்த்தி இருப்பதைக்கண்டு எவ்வகையிலும் நான் வியக்கவும் இல்லை” என்றார். “ஏனெனில் என் கனவுகளில் இந்நகரை நானே அமைத்திருந்தேன். இதோ இப்பெருந்தோரணவாயில், நீண்டு செல்லும் இச்செம்மண் பாதை, இருபக்கத்திலும் கீழே கதிர் பட்டு மின்னும் மாளிகை முகடுகள். ஒவ்வொன்றும் நான் முன்பு கண்டது போல் இருக்கின்றன. இவற்றை நானே சமைத்தேன் என்று சித்தம் மயங்குகிறது” என்றார்.

“அவ்வண்ணமே ஆகுக மூத்தவரே. தாங்கள் இதை அமைத்தவரென்றே இருக்கட்டும்” என்றேன். அவரை அணிப்புரவியில் ஏறச்செய்து என் அவைக்கு கொண்டு சென்றேன். என் அரசுச்சுற்றமும் படைத்தலைமையும் அவரை அடிபணிந்து வரவேற்றனர். அவை எழுந்து அவருக்கு முறைமை செய்தது. என் மாளிகை நிறைந்திருந்தார். பார்த்தா எப்போதும் இவரை நிகரற்ற வல்லமை கொண்ட வெண்காளை என்றே எண்ணுவதுண்டு. சிம்மமல்ல, வேங்கை அல்ல, மதவேழமும் அல்ல. தடைகள் எதையும் கடந்து செல்லும் பெருவல்லமை உடலில் உறைகையில் ஒவ்வொரு அசைவிலும் அமைதி நிறைந்த ஏறு. வாணாளில் ஒருமுறையேனும் சிற்றுயிரையேனும் அது கொல்லாது. அதன் ஆற்றலென்பது மாபெரும் கண்டாமணிக்குள் உறையும் இசை போன்றது.

சின்னாட்களிலேயே துவாரகைக்கு அரசரென இவர் ஆவதைக் கண்டேன். செல்லும் இடமெல்லாம் பிறிதொன்றிலாத பணிவையே அவர் பெற்றார். அவரை மண் நிகழ்ந்த விண்ணவன் என்றே மக்கள் எண்ணினர். அவர் சொல்லெல்லாம் ஆணை என்றாயிற்று. அயல் வணிகர் வந்து என் அவை பணிந்த பின்னர் ஒரு முறை அவர் முகமும் பார்த்துச் செல்ல வேண்டும் என்று விழைந்தனர். அந்தகவிருஷ்ணிகள் அவரையே தங்கள் அரசர் என்று எண்ணத்தலைப்பட்டனர். பின்னர் அந்தகர்களுக்கும் அவரே தலைவரென்றானார்.

அவரைப்பற்றி ஒவ்வொருநாளும் ஒரு புகழ்ச்செய்தி வந்து அரண்மனையில் ஒலிக்க மெல்ல சத்யபாமா அவர்மேல் காழ்ப்பு கொண்டாள். “அந்தகர்களுக்கும் அவருக்கும் என்ன உறவு? அந்தகர்களுக்கு தனிக்குலவரிசையும் பெருமுறைமைகளும் உள்ளன” என்றாள். “மக்கள் கண்ணெதிரே காண விழைகிறார்கள்” என்றேன். “அப்படி எதை காண்கிறார்கள் மக்கள்? இரண்டடி உயரம் மிகுதி. அதை ஒரு மாண்பென்று கொள்கிறார்களா?” என்றாள். “அவரது மென்மையும் அமைதியும் அவர்களுக்குத் தெரிகின்றன” என்றேன். “மிகையான உயரம் கொண்டவர்கள் அனைவருமே மந்தமானவர்கள்…. இதை எங்கும் காணலாம்” என்றாள். “நீ அவரை உனக்குப் போட்டியென எண்ணுகிறாயா?” என்றேன். “அவரா எனக்குப்போட்டி? அந்தககுலத்திற்கு நான் அரசி. அதை இக்கணம் வரை எவரும் எதுவும் மாற்றவில்லை” என்று சீறினாள். அவளுடைய சிவந்த முகம் மூச்சிரைப்பதை வியர்ப்பு கொள்வதை நோக்கி புன்னகைசெய்தேன்.

அரக்கன் என்றுதான் சத்யபாமா அவரை சொல்வாள். அவர் வேண்டுமென்றே தன் புகழை உருவாக்குகிறார் என்றாள். “அவருக்கு தெளிவான நோக்கங்கள் உள்ளன. துவாரகையை தான் அடையவேண்டுமென எண்ணுகிறார். ஐயமே இல்லை” என்றாள். “உலகை முழுக்க நோக்கும் கண்கள் கொண்டிருக்கிறீர்கள். நின்றிருக்கும் காலடிகள் தெரியாத அளவுக்கு உங்கள் தலை மேலே சென்றுவிட்டது.” நான் அவளிடம் விவாதிக்கவில்லை. அனைத்தையும் விரும்பிய வண்ணம் காட்டும் மாயக்கண்ணாடியை நாம் மனம் என்கிறோம். “அவரது திட்டங்களை நான் ஒப்பப்போவதில்லை. வெறுமனே தசைகளைக் காட்டி எவரும் இப்பெருநகரை வெல்ல எண்ணவேண்டியதில்லை. இது அந்தககுலத்தின் அரசியான என் கனவு கல்லில் எழுந்த நகரம்” என்றாள்.

துவாரகையின் அரசவைக்கு மூத்தவர் அரிஷ்டநேமி வருவதில்லை. அவருக்கு அரச அவைகள் உகக்கவில்லை. அரச முறைமைகளும் முகமன் சொற்களும் சொல்சூழ்தலும் செய்திநுணுக்கங்களும் சலிப்பூட்டின. “ஐந்து சொற்களில் சொல்லப்படவேண்டியவற்றை ஐந்தாயிரம் சொற்களில் மடித்து மடித்து உரைத்தல்தான் அரசு சூழ்தல்” என்று ஒரு முறை என்னிடம் சொன்னார். “அவ்வைந்து சொற்களின் அனைத்து விளைவுகளையும் கருத்தில் கொண்டு உரைப்பதுதான் அது” என்று நான் மறுமொழி சொன்னேன். “ஐந்துகோடிச் சொற்களை எடுத்தாலும் ஒரு சொல்லின் பின் விளைவை சொல்லிவிட முடியுமா இளையோனே?” என்றார். புன்னகைத்தேன்.

“அவைக்கு வருக மூத்தவரே!” என்று ஒவ்வொரு முறையும் அழைக்கும்போதும் “இந்த அவை எனக்குரியதல்ல இளையோனே” என்று சொல்லி விலகிச் சென்றுவிடுவார். துவாரகையின் கடற்கரையோரமாக அமைந்த கல் மண்டபங்கள் ஏதேனும் ஒன்றில் கால் மடித்து கைமலர்த்தி ஊழ்கத்தில் அமர்ந்து அலைகளை நோக்கி இருப்பதையே அவர் விழைந்தார். அன்று அவரை அவைக்கு நான் அழைத்து வரச்சொன்னபோது வந்தே ஆகவேண்டும் என்று நான் உரைப்பதாக மேலும் ஒரு சொல்லை சேர்த்து அனுப்பினேன். அச்சொல்லின் அழுத்தத்தை உணர்ந்து அவைக்கு வந்தார்.

அவை நிகழும் நேரத்தை மறந்திருப்பார் என்றும் இறுதிக்கணத்தில் எப்போதோ நினைவு கூர்ந்து கிளம்பி வந்தார் என்றும் தோன்றியது. எளிய அரையாடையுடன் தோளில் நழுவிய வெண்ணிற மேலாடை அணிந்து விரைந்த காலடிகளுடன் அவைக்குள் நுழைந்தார். பேருடல் கொண்டவராதலால் இடைநாழியில் அவருடைய காலடி ஓசைகளைக் கேட்டே அது அவர்தான் என உணர்ந்தேன். அவைக்கு அவர் வருவதை எவரும் முன்னரே எண்ணியிருக்கவில்லை. எனவே காவலன் உள்ளே வந்து அவரது அவை நுழைவை அறிவித்தபோது அனைவரும் வியப்புடன் வாயிலை நோக்கினர்.

திறந்த வாயிலினூடாக பெரிய வெண்தோள்களும் தாள் தோயும் நீண்ட கைகளுமாக உள்ளே வந்தார். கூடியிருந்த ஐங்குலங்களையும் எட்டு பேரவைகளையும் சார்ந்தவர்களைப் பார்த்து திகைத்து திரும்பி விடுபவர் போல ஓர் உடலசைவைக்காட்டி ததும்பியபடி அங்கு நின்றார், நான் எழுந்து “வருக மூத்தவரே! இந்த அவை தங்களுக்காக காத்துள்ளது” என்றேன். “ஆம்” என்று அவர் சொன்னார், முகமனை திருப்பி உரைக்கவில்லை. காவலன் அவரது குடிமுறைமையை அறிவித்து பீடம் கொள்ளும்படி கோரினான். அவை அவருக்கு தலை வணங்கியது. அவர் வந்து என் முன்னால் ஓசையெழ பீடத்தில் அமர்ந்தார். பெரிய கைகளை மடித்து மடிமேல் வைத்துக்கொண்டார். முதியவேழத்தின் மிகப்பெரிய தந்தங்கள் போன்றவை அவரது கைகள் என எண்ணிக்கொண்டேன். அவை ஆண்மையும் அழகும் கொண்டவை. ஆனால் அத்தனை பெரும்படைக்கலத்தால் ஆற்றவேண்டிய பணிகளென ஏதுமில்லை. ஆகவே எப்போதும் அவை செய்வதறியாமல் ததும்பிக்கொண்டிருக்கின்றன.

என் அரியணைக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்த சத்யபாமையின் உடலில் எழுந்த மெல்லிய அணிகளின் ஓசையை நான் கேட்டேன். அது ஒரு சொல் என நான் அறிந்தேன். அவள் ஒரு கணமும் விழிதூக்கி அவரை நோக்கவில்லை. அவள் உடலின் அணிகலன்கள் அனைத்தும் விழிகளாக மாறி அவரை நோக்கிக் கொண்டிருந்தன. அன்றைய அரச முடிவுகளை ஆராயும் ஆணையை அமைச்சருக்கு விடுத்தேன். அக்ரூரர் என்னை நோக்கியபின் குழப்பத்துடன் மூத்தவரையும் நோக்கி பின்பு முடிவு செய்து இயல்பாக உடலைத் தளர்த்தி தன் இருக்கையில் அமர்ந்தார். அமைச்சர் அரச முறைமைப்படி ஒவ்வொரு செய்தியாக சொல்லி அவற்றின் வருகைகளையும் செல்கைகளையும் விளக்கினார். குடியவையில் சிலர் ஐயங்கள் கேட்டனர். சிலர் திருத்தங்கள் கூறினர். அதன்பின் அனைவரும் கைகளைத்தூக்கி அம்முடிவுகளை ஒப்பினர். முழு ஒப்புதல் பெறப்பட்ட முடிவுகளை ஓலை நாயகங்கள் எழுதிக்கொண்டனர்.

ஒவ்வொரு முடிவாக அவை கடந்து செல்லச் செல்ல அவையிலிருந்தவர்களே மூத்தவர் அங்கு வந்திருப்பதை மறக்கத்தொடங்கினர். அம்முடிவுகளையும் விளைவுகளையும் எல்லைகளையும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தலைப்பட்டனர். அக்ரூரரும் சத்யபாமையும் மட்டுமே சற்று நிலையழிந்த உள்ளத்துடன், அந்நிலையழிவு கையசைவிலும் கால்விரல் சுழற்றலிலும் தெரியும்படியாக அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரைத் தவிர பிறரை என் விழிகளால் நோக்கினேன். அவர்கள் இருவரையும் உள்ளத்தால் உற்று நோக்கிக்கொண்டும் இருந்தேன்.

முடிவுகள் அனைத்தும் அமைந்ததும் அமைச்சர் என்னை நோக்கி “இவற்றை அரசாணைகளாக பிறப்பிக்க தங்கள் கைச்சாத்து கோருகிறேன்” என்றார். நான் எழுந்து முறைமைப்படி என் முத்திரை மோதிரத்தை அவரிடம் கொடுத்து “இப்பதினெட்டு ஆணைகளுக்கும் இதனால் நான் கைச்சாத்திடுகிறேன்” என்றேன். அவை “ஆம் அவ்வாறே ஆகுக!” என்றது. அங்கு நிகழ்வது எதையும் உணராதவர் போல கைகளை மடிமேல் வைத்து நெடிது ஓங்கிய உடலை நிமிர அமர்த்தி அரைவிழி மூடி அமர்ந்திருந்தார் மூத்தவர். ஓங்கிய உடல் அவரை அயலவனாக்கியது அவரை பிறர் வியக்கவும் மதிக்கவும் செய்தது. அதுவே அவரை விலக்கியும் வைத்தது. அவர் அங்கு ஒரு தூண் என மாற அவருக்குக்கீழே அனைத்தும் தங்கள் இயல்பில் நடந்துகொண்டிருந்தன.

அவை முடிந்ததும் நான் அவரிடம் “மூத்தவரே, உங்களைப்பற்றி ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்த அவையில் அதைப்பற்றி விசாரிக்க வேண்டுமென்று என்னிடம் கோரப்பட்டது. ஆகவேதான் இந்த அவைக்கு தாங்கள் அழைக்கப்பட்டீர்” என்றேன். அவரது விழிகளில் ஒரு கணம் வந்து சென்ற வினாவை கண்டேன். பதற்றமோ ஐயமோ இல்லை, எளியதொரு வினா மட்டுமே. என் சொற்கள் அவையை உறைய வைத்தன. குலமூத்தார் ஒருவர் ஏதோ சொல்வதற்கு என கைதூக்கி எழுந்தபின் தன்னை கட்டுப்படுத்தி அமர்ந்துகொண்டார்.

அக்ரூரர் எழுந்து கைகூப்பி “நம் குலத்தின் கொடி அடையாளம் என்று சொல்லப்படுபவர் தங்கள் மூத்தவராகிய அரிஷ்டநேமி. அவர்மீது தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன என்பதை அறிய இவ்வவை காத்துள்ளது” என்றார். நான் “என் குற்றச்சாட்டு அல்ல. அத்தகைய எச்சொற்களையும் என் உள்ளம் ஒரு போதும் எண்ணாது. துவாரகையின் மக்களில் ஒரு சாரார் இதை சொல்கிறார்கள். அந்திக்கு சேக்கேறும் பறவைகளில் சில பறவைகள் இறுதிக்கணம் வரை கிளைகளில் அமைவதில்லை. அத்தகைய இறுதிப் பறவைகளின் குரல் இது என்று கொள்க!“ என்றேன். “ஆனால் அரசன் என அனைத்துக்குரல்களையும் நான் கேட்டு உசாவியாகவேண்டும்.”

“அவையோரே, துவாரகை அந்தககுலத்தாராலும் விருஷ்ணி குலத்தவராலும் கட்டப்பட்டது என்று அறிவீர். இருகுலத்து மூத்தவரோ அல்லது அவர்களில் வல்லவரோ இந்நகருக்கு அரசனாக முறையுடையவர். இன்று அந்தககுலத்திற்கும் விருஷ்ணி குலத்திற்கும் ஆற்றல்மிக்கத் தோன்றலாக இருப்பவர் சௌரபுரத்து இளவரசர் அரிஷ்டநேமி அவர்களே. தோள் வல்லமைக்கு நிகராக தவ வல்லமையிலும் முதிர்ந்தவர். ஆகவே அவரே இவ்வரியணை அமர தகுதி வாய்ந்தவர். முறைமை மீறி இங்கு நான் அமர்ந்திருப்பதனால் வானம் பொய்க்கவும் காற்று சினக்கவும் கடல் எல்லை மீறவும் வாய்ப்புள்ளது என்கின்றனர்” என்றேன்.

“இப்படி ஒரு சொல்லை இதுவரை கேட்டதில்லை” என்றார் அக்ரூரர். “நான் கேட்டேன்” என்றேன். “அவ்வாறு சில வீணர் அலர் உரைத்தால் அதில் இவரது பிழை என்ன?” என்றார் குலமூத்தார். “ஆம், அறிவீனர்களின் சொற்களுக்கு எவ்வகையில் நம் மூத்த இளவரசர் பொறுப்பாவார்?” என்றார் அக்ரூரர். நான் புன்னகைத்து “அறிவின்மையாயினும் அது விதையின்றி முளைப்பதில்லை அல்லவா? அந்த விதை எதுவென்பதை இந்த அவை முடிவெடுக்க வேண்டியுள்ளது” என்றேன். “என்ன சொல்கிறீர்கள் அரசே? அவ்வெண்ணத்தை மக்களிடம் நம் மூத்த இளவரசர் உருவாக்குகிறார் என்கிறீர்களா?” என்றார் அக்ரூரர் பதற்றத்துடன்.

“இல்லை, அவர் எண்ணி அதை உருவாக்கவில்லை. எண்ணாது அவ்விழைவை அவர் தன் சொற்களாலோ செயல்களாலோ வெளிப்படுத்தவும் இல்லை. அதை நான் அறிவேன். ஆனால் அவ்வெண்ணத்தை அவரது உடல் உருவாக்குகிறது. அவையோரே, உள்ளம் தன் ஆழத்தில் ஒளியுடனும் உடல் இருளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இப்புவியில் அனைத்து விழைவுகளும் உடலால் மட்டுமே உணரப்படுகின்றன, வெளிப்படுத்தப்படுகின்றன. அதை மறைப்பதற்கும் திசை மாற்றுவதற்குமே சொற்கள் துணை சேர்க்கின்றன” என்றேன்.

என் குற்றச்சாட்டு தெளிவடைந்ததும் சொல்லடங்கி அவையினர் அமர்ந்திருந்தனர். நான் சொன்ன எச்சொல்லையும் கேட்காதவர் போல் ஒளிரும் புன்னகையும் ஊழ்கநிழல் படிந்த விழிகளுமாக அரிஷ்டநேமி அமர்ந்திருந்தார். “தங்கள் பேருடல், திரண்ட தோள்கள் அவைதாம் இச்செய்தியை மக்களுக்கு அறிவிக்கின்றன மூத்தவரே. இந்நகரம் தங்களுக்குள்ளது என்று எளியோர் நம்புதல் அதனால்தான்” என்றேன். “நான் என்ன செய்யவேண்டும்?” என்று அவர் மென்மையான குரலில் கேட்டார். “நெறிகளில் முதன்மையானது காட்டுநெறியே என்கின்றன தொன்மையான ஸ்மிருதிகள். எது யானைகளுக்கும் சிம்மங்களுக்கும் உரியதோ அதுவே இங்கு திகழ்க! நான் தங்களை மற்போருக்கு அழைக்கிறேன். இம்மக்கள் நடுவே நாம் தோள்பொருதுவோம். வென்றீர்களென்றால் இந்நகரை நீங்கள் கொள்ளுங்கள்” என்றேன்.

“நான் போர்புரிவதேயில்லை இளையோனே. போர்க்கலை என எதையும் கற்றதுமில்லை” என்றார் அரிஷ்டநேமி. “அப்படியென்றால் அதை இந்நகர் அறியட்டும். இங்கு எம் குலத்தோர் மத்தியில் உங்களை நான் வென்றேன் என்றால் இவ்வரியணைக்குரியவன என்பதை ஐயம்திரிபற நிறுவியவனாவேன். பிறிதொரு சொல் எழாது இத்தொடக்கத்திலேயே அனைத்தையும் முடித்துவைக்க முடியும்” என்றேன். “போரிடுதல் என் உள்ளம் கொண்ட உண்மைக்கு ஒவ்வாதது இளையோனே” என்றார் அரிஷ்டநேமி. “தாங்கள் போரிட்டே ஆகவேண்டும். ஏனெனில் தங்கள் உடல் அவ்வறைகூவலை விடுத்துவிட்டது. அதை நான் ஏற்றுக்கொண்டு விட்டேன்” என்றேன்.

அக்ரூரர் “ஆம், அப்படி ஒரு சொல் எழுந்தபிறகு அதை நிலை நாட்டுவதே அரசுக்கு நல்லது” என்றபின் திரும்பி கை தொழுது “மூத்த இளவரசே, துவாரகையில் ஐயச்சொல் எழாது முழுமை நிகழ்வதற்காக தாங்கள் இவ்வறைகூவலை ஏற்றாக வேண்டும்” என்றார். சிலகணங்கள் எண்ணியபின் “எனக்கு அதில் எவ்வேறுபாடும் இல்லை. அவ்வண்ணமே ஆகுக!” என்றார் அரிஷ்டநேமி. அவையில் ஒரு கலைந்த அமைதியின்மை பரவுவதை உணர்ந்தேன். நான் வெல்வது அரிது என்னும் எண்ணம் ஒருபுறம். ஆனால் மூத்தவர் போர்க்கலை அறியாதவர் அல்லவா என்னும் ஆறுதல் மறுபுறம். சத்யபாமையின் விழிகள் எப்படி அலைபாய்ந்துகொண்டிருக்கும் என எண்ணி புன்னகைத்தபடி அவற்றை நோக்காமல் அவை கலையும்படி கையசைத்து ஆணையிட்டேன்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 14

விருந்தினர் இல்லமாக இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டிருந்தது ரைவதமலையில் இருந்தவற்றிலேயே பெரிய இல்லம். ஆனால் துவாரகையின் மாளிகையுடன் ஒப்பிடுகையில் அதை சிறிய குடில் என்றே சொல்லவேண்டும் என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அதன் வாயிலில் நின்ற ஏவலன் தலைவணங்கினான். இளைய யாதவர் இயல்பாக “உள்ளே வருக” என்றபின் நுழைந்து குறடுகளை காலாலேயே உதறிவிட்டு துள்ளி மஞ்சத்தில் விழுந்து மல்லாந்து படுத்து ஒரு தலையணையை எடுத்து மார்பின்மேல் வைத்துக்கொண்டார். அவரிடம் எப்போதுமிருக்கும் அந்தச் சிறுவனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் புன்னகை செய்தான்.

“பிரபாசதீர்த்தத்திற்கு வந்தவர் என் அணுக்கரான கதர். ஆனால் அவரை நான் ஒரே ஒருமுறைதான் சந்தித்திருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “வரலாற்றின் முன் திகைத்து நிற்கும் ஓர் எளியவர் என தன்னை உணர்வதாக சொன்னார்” என்றான் அர்ஜுனன். “வரலாற்றை அறிந்தவர்கள் அதன் முன் திகைத்து நிற்பதில்லை. அதன் பொருளின்மையைக் கண்டு அயர்ச்சிதான் கொள்கிறார்கள். பின்னர் சிறுநகைப்பாக அதை முதிரச்செய்து அதிலிருந்து தப்புகிறார்கள்” என்றார் இளைய யாதவர். “வரலாறு என்று ஒன்று உண்டா என்ன? இருப்பது நினைவு மட்டுமே. அடிக்கடி தீப்பிடிக்கும் காடுகளில் தீப்பிடிக்காத நீரிலைக் கற்றாழைகள் வளர்ந்து காட்டுக்கு அரணிட்டிருப்பதை கண்டிருக்கிறேன். மரங்களுக்கும் வரலாற்று நினைவு உள்ளது.”

“சொல்லில் அமைந்த வரலாற்றையே நாம் அறிகிறோம். அது மிக மிக மேலோட்டமானது. கனவுகளிலும் சுஷுப்தியிலும் படிந்துள்ள வரலாற்றின் மேல் ஜாக்ரத்தில் மானுடன் செதுக்கி வைக்கும் வரலாறு அது. பலசமயம் ஆழத்து வரலாற்றை அஞ்சியோ கூசியோ அதை மறைப்பதற்காக இதை எழுதுகிறான். இது பொய் என அவன் அறிந்தமையாலேயே இதை நிலைநாட்ட சொல்லடுக்குகளை குவிக்கிறான். சொல்லுக்கு அருகே வாளையும் காவல் வைக்கிறான்” என்று இளைய யாதவர் சொன்னார். “அத்தனை வரலாறுகளும் குன்றுமேலிருந்து நோக்கும்போது மானுடரின் மாளிகைகள் எளிய சிதல்புற்றுகளாகத் தெரிவதுபோல பொருளிழந்து தெரிகின்றன.”

அர்ஜுனன் “அன்று என்ன நிகழ்ந்தது?” என்றான். “தாங்கள் அரிஷ்டநேமியுடன் போரிட்டீர்களா?” இளைய யாதவர் “ஆம்” என்றார். “ஆனால் துவாரகையின் வரலாறுகளில் அப்போர் இல்லை. வேறேதோ வரலாற்றில் அது இருந்துகொண்டும் இருக்கும். அக்ரூரர் அவ்வரலாற்றை அழிக்க முயல்கிறார். அதை முற்றாக அழிக்க வேண்டுமென்றால் கம்சரைப் போல கருக்குழந்தைகளை தேடித்தேடி கொல்லவேண்டும். அதைவிட அதுவும் என் புகழென நீடிக்கட்டும் என விட்டுவிட்டேன்.”

இளைய யாதவர் கைகளை நீட்டி உடலை நெளித்து “நீண்டபயணம்... இங்கு வருவது எளிதல்ல. புரவிப்பாதை மட்டுமே சீராக உள்ளது” என்றார். பின்பு “நானும் அவரும் போரிட்டோம். துவாரகையின் செண்டுவெளியின் நடுவே எங்கள் இருவரின் மற்போருக்கென களம் அமைக்கப்பட்டிருந்தது” என்று சொன்னார். “நாங்கள் தோள்பொருதும் செய்தி முதலில் துவாரகையெங்கும் பரவியபோது எழுந்த உணர்வுகளை ஒற்றர்கள் எனக்கு தெரிவித்தனர். எளிய மக்கள் பதற்றமும் தீவிரமும் அடைந்து பாம்பு நுழைந்த மரத்தின் பறவைகள் போல ஓசையிட்டு பேசிக்கொண்டிருந்தனர். முதியவர்கள் கைகூப்பி தெய்வங்களுடனும் மூதாதையர்களுடனும் வேண்டிக்கொண்டிருந்தனர். பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர். காலை முதலே நகரம் வேண்டியவர்களின் இறப்புக்கு துயர் கொள்வதுபோல் அமைந்திருந்தது. என் உப்பரிகை முகப்பிலிருந்து நகரை நோக்குகையில் நனைந்த மரவுரி ஒன்றால் துவாரகையை மூடி வைத்திருப்பது போல் ஒலிகள் அடங்கி ஒலிப்பதை கேட்டேன்.”

போருக்கு ஃபால்குன மாதம் கருநிலவுநாளின் பிற்பகலை குறித்திருந்தனர். ஏழுநாட்கள் அதற்காக காத்திருந்தேன். முதல் நாள் இருந்த உணர்வெழுச்சிகள் மெல்லமெல்ல மாறுவதை கண்டேன். நான் தோற்றுவிடுவேனோ என்னும் ஐயமும் அச்சமும் துவாரகையினருக்கு இருந்தது. அவர்கள் தங்களுக்குள் பிரிந்து பேசப்பேச அவை அகன்றன. மூத்தவர் வெல்லக்கூடுமோ என்னும் ஐயத்தில் அப்போரை தங்கள் உள்ளங்களில் மீளமீள நிகழ்த்திக்கொண்டனர். அப்போரில் அவர் தன் தூய தசைவல்லமையால் வெல்வதை கற்பனையில் கண்டனர். அதை வியந்து பின்னர் அதை விரும்பத்தொடங்கினர். அவர் வெல்லவேண்டுமென்ற விழைவாக அது மாறியது. பின்னர் நான் தோற்கவேண்டுமென்னும் விழைவென அது உருக்கொண்டது.

பார்த்தா, எளிய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அம்மாற்றத்தால் தங்கள் வாழ்வு தலைகீழாகுமென்றாலும் சரி. முந்தைய கணம் வரை சார்ந்திருந்த ஒன்று சரிவதைக்கூட அதன் பொருட்டு விழைவார்கள். ஏதேனும் ஒன்று நிகழ்ந்து தாங்கள் கொண்டாடிய ஒன்று வீழ்ச்சியடையுமென்றால் அதில் அவர்களின் அகம் களிக்கும். எழுந்தவை அனைத்தையும் நிலம் இழுப்பதுபோல எளியோர் வென்றவரையும் நின்றவரையும் பற்றிச்சரிக்க ஒவ்வொரு கணமும் தவிக்கிறார்கள். இப்புவியை ஆளும் வல்லமைகளில் ஒன்று எளியோரின் வஞ்சம். அதை நன்கறிந்திருந்தபோதும்கூட அன்று நான் என் நகர்மக்களின் விழிகளைக் கண்டு அஞ்சினேன். ஒவ்வொருவரும் என் விழிகளைத் தவிர்த்து மிகையாக வணங்கி கடந்துசென்றனர். என் முதுகில் நோக்கு நட்டு தங்கள் உள்ளவிழைவை உணர்ந்து பின் பிறர் விழிகளை நோக்கி அவ்விழைவை அவர்கள் அறிகிறார்களா என்று கூர்ந்தனர். அங்கும் அதையே காணும்போது தங்கள் பேருருவை தாங்களே கண்டு திடுக்கிட்டனர்.

ஆனால் நாள் நெருங்க நெருங்க அவர்களின் தன்னடக்கமும் கரவும் மறைந்தன. தாங்களனைவரிலும் நுரைப்பது ஒரே விழைவு என அவர்கள் உணர்ந்தபோது ஒற்றைப் பெரும்பரப்பென ஆயினர். அந்த விராடவடிவம் மானுடர் எவருக்கும் அஞ்சாதது. கரப்பதற்கோ நாணுதற்கோ ஏதுமில்லாதது. பேருருக்கொண்ட அம்முகத்திலிருந்த கசப்பும் இளிப்பும் என்னை பதறச்செய்தன. சத்யபாமையை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தேன். முதலில் அவள் நானே வெல்வேன் என எண்ணியிருந்தாள். பின் நகர்மக்களிடமிருந்து நான் வெல்லமுடியாதென்னும் உணர்வை அவள் அடைந்தாள். அவள் அடைந்த அனைத்தையும் இழக்கப்போகிறாள் என்னும் எண்ணம் அவளை துவளச்செய்ததை கண்டேன். அவ்வெண்ணம் வலுப்பெறுந்தோறும் என் மீதான கசப்பாக மாறியது. கசப்பு மூப்படைகையில் ஏளனமாகிறது. ஏளனம் பழுத்து புறக்கணிப்பாகிறது. என்னை அவள் விழிகள் நோக்குவதேயில்லை என்னும் நிலை வந்தது.

குறித்த நாளில் மற்போருக்குரிய தோலாடையை அணிந்து அணிகளைந்து அரங்குக்கு சென்றேன். அங்கு விழிகளால் ஆன வேலி போல மக்கள் சூழ்ந்திருந்தனர். செண்டுவெளியின் செம்மண் முற்றத்தில் மண்ணை கிளைத்து கூழாங்கல் அகற்றி பொடிப்புழுதி சமைத்து வைத்திருந்தனர். அக்ரூரரே போர் நடுவராக இருக்க ஆணையிட்டிருந்தேன். வெண்கச்சையும் வெண்தலைப்பாகையும் அணிந்து அவர் அங்கு நின்று ஏவலருக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தார். நான் மேடைக்குச் சென்றதும் வாழ்த்தொலிகள் எழுந்தன. ஆனால் அவையும் மிகத்தயங்கி ஆங்காங்கே தனிக்குரல்களாகவே ஒலித்தன. என்னைக் கண்டு நிலவெழுகையில் கடலலைகள் போல் ஒலிக்கும் துவாரகையின் உவகைக்குரல் எழவில்லை.

அதைக்கண்டு என் வீரர் கைகளை வீசி வாழ்த்தொலி எழுப்பும்படி மக்களை ஊக்கினர். உடனே வாழ்த்தொலி மும்மடங்கு பெருகி எழுந்தது. இயல்பாக எழும் வாழ்த்தொலி பல்லாயிரம் குரல்கள் கூடிய வெற்று முழக்கமாக இருக்கும். ஆணைக்கேற்ப எழுந்த வாழ்த்தொலி சீரான அலைகளாக இருந்தது. பெருங்கூட்டத்திற்கும் ராணுவத்திற்கும் இடையேயான வேறுபாடு போல தோன்றியது. நான் என் மக்களின் முகங்களை ஒவ்வொருவராக அணுகி நோக்க விரும்பினேன். ஒவ்வொருவருடனும் எனக்குள்ள உறவு ஒவ்வொரு வகையானது. பிறிதொன்றிலாதது. ஆயிரம் உளநாடகங்களால் அமைக்கப்பட்டது. அணுக்கமும் விலக்கமுமாக அலைபாய்வது.

மல்லர்களுக்குரிய தாழ்வான பீடத்தில் அமர்ந்தேன். இரு ஏவலர்கள் என் தசைகளை நீவி விரல்களை சொடுக்கெடுத்து உடலை போருக்கு சித்தமாக்கினர். என் விழிகளை சந்தித்த அக்ரூரர் தலையசைத்து திரும்பி ஏவலரிடம் ஆணையிட்டுக் கொண்டு விலகிச்சென்றார். சத்யபாமா வருவதற்கான மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் கேட்டன. ஆள்கூட்டம் அவளுக்கு வழக்கமான வாழ்த்தோசையை எழுப்புவதை கண்டேன். அரசி முகம்காட்டும் நாள் அல்ல அது என்பதனால் பட்டுத்திரைச்சீலையை மூங்கில்சட்டங்களில் பற்றிய சேடியர் அவளை மறைத்து சூழ்ந்து வந்தனர். அரசியருக்குரிய மேடையும் வெண்பட்டால் மறைக்கப்பட்டிருந்தது. அவள் உள்ளே அமர்ந்ததும் திரைமறைவுக்கு மேல் வெண்சாமரம் எழுந்து அடங்கியது. அது வரை வாழ்த்தொலிகள் எழுந்தன. அந்த வெண்பட்டுத்திரைச்சீலை அவளாக மாறி அரங்கை நோக்கத் தொடங்கியது.

மறுபக்கமிருந்து அரிஷ்டநேமி நடந்து வந்தார். அவர் அவை நுழைந்ததும் துவாரகையின் குடிகள் அனைவரும் பெருங்குரலெடுத்து அவரை வாழ்த்தினர். அவ்வொலி சூழ்ந்திருந்த மாளிகை முகடுகள் அனைத்திலிருந்தும் திரும்பி வந்தது. நகரின் பருப்பொருட்கள் அனைத்தும் குரல் கொண்டவை போல் தோன்றின. ஆனால் அவ்வோசை எதையும் கேளாதவர் போல முற்றிலும் வேறெங்கோ இருப்பவர் போல நடந்து வந்து எனக்கெதிரே கற்பீடத்தில் அமர்ந்தார். அவர் அணிந்திருந்த பழைய மரவுரியாடையை ஏவலர் கழற்றினர். களைவதற்கு அவர் அணியேதும் அணிந்திருக்கவில்லை. அவரது பெருந்தோள்களில் இறுகிய தசைகளை வீரர்கள் நீவி சீரமைத்தனர். உள்ளங்கால் முதல் முடி வரை அவரது உடலை ஒவ்வொரு தசையாக நோக்கினேன்.

பார்த்தரே, ஆயிரம் தலைமுறைகளுக்கு ஒரு முறையே பழுதில்லாத பேருடலை தெய்வங்கள் சமைக்கின்றன என்பார்கள். தலை முறைகளுக்கு ஒரு தசையை முழுமை பெறச்செய்கின்றன தெய்வங்கள். பின் அத்தனை திசைகளையும் கூட்டி ஒரு மனிதனை படைக்கின்றன. அவன் தெய்வங்களுக்குரிய சிறந்த படையல். அவன் அழகு மானுடர் துய்ப்பதற்குரியதல்ல. அதை அவனும் அறிந்திருப்பான். ஆகவே அவன் உள்ளம் மண்ணில் எங்கும் தோய்வதில்லை. அவன் மண்ணில் மலர்ந்து விண் நோக்கி உதிரும் மலர் என்கின்றன நூல்கள். முரசு முழங்கி என் உடல் அதிர்ந்து விழிப்பதுவரை அவரையே நோக்கிக்கொண்டிருந்தேன்.

அக்ரூரர் குறுமேடையில் ஏறி நின்று கைகாட்ட ஓசைகள் அடங்கின. போர் முரசு முத்தாய்ப்பாக மும்முறை விம்மி அமைய கொம்புகள் பிளிறி ஓய்ந்தன. அக்ரூரர் உரத்த குரலில் அங்கு நிகழும் மற்போரின் முறையை அறிவித்தார். அது வெறும் உடல்வல்லமையால் மட்டுமே வெற்றிதோல்விகள் முடிவாகும் வன்யம் என்னும் போர்முறை. ஐந்து தடைகள் மட்டுமே அதன் எல்லைகள். இடைக்கு கீழ் தாக்கலாகாது. தலைக்கு மேல் கை தூக்கலாகாது. தசைகள் அன்றி பிற படைக்கலங்கள் பயன்படுத்தலாகாது. அவமதிக்கும் சொற்கள் எழலாகாது. விழிகளை நோக்கலாகாது.

அக்ரூரர் எங்களிடம் “வீரர்களே, போர்முறைகள் இப்புவியில் பல்லாயிரம். போர்களுக்கெல்லாம் அன்னை என்று மற்போரை சொல்கிறார்கள், ஏனெனில் கைகளற்ற புழுக்களும் செய்யும் போர் அது. தெய்வங்களுக்கு மிக உகந்தது. மானுடர் கண்டறிந்த எப்படைக்கருவியும் அதில் இல்லை. தெய்வங்கள் சமைத்த படைக்கருவிகளான கைகள் மட்டுமே உள்ளன. இரு மானுடர்களின் ஆற்றலை எடை போடுவதற்கு மற்போருக்கு நிகரான பிறிதொரு வழிமுறை இல்லை. இங்கு நிகழ்வது போரல்ல வழிபாடென்றே ஆகட்டும். நமது மூதாதையரும் குடித்தெய்வங்களும் இங்கெழுந்து இப்படையலை ஏற்றுக்கொள்ளட்டும். வெற்றி தோல்வி எவையாயினும் அவை நம் குடிசிறக்கவே பயன்படட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

நான் தலைவணங்கி எழுந்து அரங்கின் நடுவே சென்று நின்றேன். எனக்கென ஓரிரு குரல்களே அங்கு ஒலிக்கக் கேட்டேன். நான் செல்வதை பொருளிலாது நோக்கி அமர்ந்திருந்த அரிஷ்டநேமியை வீரர் ஊக்க ஆம் என தலையசைத்து எழுந்து அரங்கை நோக்கி தலைவணங்கி பெருங்கால்களை எடுத்துவைத்து வந்தார். என் முன்னால் அவர் வந்து நின்றபோது புயல்பட்ட புதர்க்கூட்டம் போல துவாரகையின் மக்கள் கொந்தளித்து கைவீசி கூச்சலிட்டனர். நாங்களிருவரும் பொடிகிளைத்துக் கிடந்த மல்லரங்கில் எதிரெதிர் நின்றோம். அக்ரூரர் கைகாட்ட முரசு இமிழ்ந்து அடங்கியது. போர் தொடங்குவதற்கான கொம்புக்குரல் எழுந்தது.

இருகைகளையும் விரித்து கால் பரப்பி என் முன்னால் அவர் நின்றார் . நண்டுக்கொடுக்கு போல கைகள் விரிந்திருக்கும் அந்நிலைக்கு கடகஸ்தானம் என்று பெயர். போர்க்கலை பயிலாதவர் என்றாலும் அவர் இயல்பாகவே அந்நிலையை கொண்டிருந்தார். ஏனென்றால் அது கையுள்ள விலங்குகளுக்கு இயல்பானது. தாக்குதலை எதிர்கொள்கையில் கரடியும் குரங்கும்கூட அந்நிலையில் நிற்பதை கண்டிருக்கிறேன். அதற்கு நிகரென இருகைகளையும் நீட்டி விருச்சிக ஸ்தானத்தில் நான் நின்றேன். என் ஒருகால் தேளின்கொடுக்கென பின்னால் நீண்டிருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் நோக்காது உடலால் நோக்கியபடி இணையடி எடுத்து வைத்து சுற்றி வந்தோம். சூழ்ந்திருந்த ஓசைகள் அடங்கி மூச்சொலிகளும் ஆடைகளில் காற்றோடும் ஒலிகளும் கேட்கும் அளவு அமைதி நிரம்பியது. ஒவ்வொரு தசையும் எதிர்உடலில் அதற்கிணையான பிறிதொரு தசை இருப்பதை உணரும் கணம். ஒவ்வொரு கையசைவும் எதிர்கையசைவை உருவாக்கும் தருணம். உடல் உடலை முழுதறியும் தருணம் மற்போரில் அன்றி வேறெங்கும் நிகழ்வதில்லை.

நுண் உடலை நுண்உடல் அறிந்தபின்னரே பருவுடலை பருவுடல் சந்திக்கிறது. அப்போது எழும் முதல் திடுக்கிடல்தான் மற்போரின் உச்சம். தெய்வங்கள் வகுத்த கணத்தில் இடியோசை போல் இருவருக்குள்ளும் எழுந்த தசைமோதும் ஒலியை கேட்டோம். புழுதி எழுந்து எங்களை மூடிக்கொண்டது. எங்கள் கைகள் பிணைந்திருந்தன. கால்கள் மண்ணை உதைத்து விசை கொண்டன. இரு நாகங்கள் தழுவி இறுக்கி ஒன்றையொன்று நிகர் செய்து அசைவிழந்தன. இரு புழுக்கள் ஒன்றை ஒன்று உண்ணமுயன்றன.

அவரது கால்கள் என் கால்களுக்கு அருகே வந்தன. விருச்சிகமுறைப்படி என் கைகளால் அவர் கைகளைப்பற்றி நிறுத்தியபின் வலக்காலை நீட்டி அவரது இடக்காலை மண்ணிலிருந்து விலக்க முயன்றேன். அவை நெகிழ்ந்தால் அக்கணமே அவரைப்புரட்டி நான் மேலேறிக்கொள்ள முடியும். ஆனால் ஆயிரம் ஆண்டுகால அடிமரம் போல அவை மண்ணில் வேரோட்டி இறுகியிருந்தன. ஒரு கணமேனும் என்னால் அவற்றை அசைக்க முடியவில்லை. அவரது விலா எலும்புகளுக்குக் கீழ் மடிந்திருந்த குருத்தெலும்பில் என் தலையை வளைத்து ஓங்கி முட்டினேன். பாறை மேல் தலை முட்டி எலும்பு அறைபடும் வலியை மட்டுமே உணர்ந்தேன்.

மற்போரின் போர்சூழ்ச்சிகள் எதையும் அவர் செய்யவில்லை. வெறும் தசைக்குவியலாகவே என்னை எதிர்கொண்டார். நான் கற்ற முறைமைகள் அனைத்தும் முற்றிலும் பயனற்றுப் போயின. என் கைகளும் கால்களும் ஆலமரத்து வேர்களால் கவ்வப்பட்ட கல்மண்டபம்போல் அசைவிழந்தன. நிமிர்ந்து அவர் முகத்தை நோக்கியபோது என் அகம் அதிர்ந்தது. அவர் என்னை கனிந்து நோக்கிக்கொண்டிருந்தார். முலைகனிந்த அன்னை மார்போடு அணைப்பதுபோல் என்னை இறுக்கியிருந்தார். என் உள்ளம் தவிக்கத்தவிக்க உடல் நெகிழ்ந்துகொண்டே சென்றது. அவரது அணைப்பில் நான் குழந்தையாக ஆனேன்.

என் இருகைகளையும் பற்றிச் சுழற்றி தலைக்கு மேல் தூக்கி மண்ணில் ஓங்கி அறைந்தார். பேருடலுடன் என் மேல் சரிந்து முழங்கால்களால் என் கால்களை மண்ணுடன் அழுத்தி இடக்கையால் என் வலத்தோளை பற்றிக் கொண்டார். என் வலக்கால் மேல் அமர்ந்து இடக்கையை பற்றி முகத்தை பார்த்தார். இனி அவர் செய்வதற்கொன்றே எஞ்சியிருந்தது. யானை மத்தகத்திற்கு நிகரான பெருந்தலையால் ஓங்கி என் நெஞ்சில் முட்டுவது. என் இதயம் உடைந்து குருதியும் சலமுமென வாயில் மூச்சுடன் கலந்து சிதறும். தேர்ச்சகடத்தில் சிக்கிய எலி என நான் சிதைந்து உயிர்துறப்பேன்.

சில கணங்கள் அங்கே அசைவற்றிருந்தபின் என்னை விட்டு அவர் எழுந்தார். இருகைகளாலும் தன் உடலில் படிந்த புழுதியைத் துடைத்தபின் திரும்பி அவை நோக்கி கை கூப்பினார். நான் எழுந்து கை கூப்பியபடி அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என்னை யாரிவன் என்பது போன்ற பார்வையுடன் சிலகணங்கள் விழிகூர்ந்தபின் குனிந்து துவாரகையின் ஒரு பிடி மண்ணை அள்ளி எனக்கு நீட்டினார். இருகைகளையும் நீட்டி அதை நான் பெற்றுக்கொண்டேன். என் தலைமேல் தன் வலக்கையை வைத்து வாழ்த்தியபின் ஒரு சொல் சொல்லாமல் திரும்பி நடந்து மேடையேறி மறுபக்கம் சென்று மறைந்தார்.

அதுவரை ஓசையற்றிருந்த துவாரகையின் மக்கள் பெருங்குரலில் வெடித்தெழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். யாருக்கான வாழ்த்து அது என என்னால் கணிக்கமுடியவில்லை. ஆனால் அது அவர்கள் விழைந்த முடிவு. அவர்கள் எதையும் இழக்காமல் விரும்பியதை அடைந்ததன் மகிழ்வா அது? இல்லை, அவர்களின் சிறுமைகளை கோடைகாலத்துமுதல்மழை புழுதியை அடித்துக்கொண்டு செல்வதுபோல அவரது பெருமை கழுவியகற்றியதன் நிறைவா? பட்டுத்திரையை நோக்கினேன். அது அசைவற்றிருந்தது.

“அந்தப் பிடி மண்ணை என் தலையிலும் நெஞ்சிலும் வைத்து வணங்கியபின் அவையை சூழநோக்கி தலை வணங்கி நான் அரங்கு விட்டகன்றேன்” என்றார் இளைய யாதவர். “மூத்தவர் துவாரகையிலிருந்து வெளியேறி பாலையின் விளிம்பிலிருந்த சுஸ்ருதம் என்னும் சோலையிலிருந்த சிறிய குடிலில் குடியேறினார். அங்கு மக்கள் அவரைத் தேடிச்சென்று அடிபணியத்தொடங்கினர். அங்கிருந்து மீண்டும் விலகி சுபார்ஸ்வம் என்னும் தொலைதூர முட்காட்டில் குடியேறினார். அங்கும் மக்கள் செல்லத்தொடங்கவே மீண்டும் விலகி பாலையில் இருந்த அறியாத பாறைவெடிப்பு ஒன்றுக்குள் தங்கினார். துவாரகையிலிருந்து அவருக்கு உணவு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தேன்” இளைய யாதவர் சொன்னார்.

மீண்டும் அவரைச்சென்று பார்த்தபோது அவர் மிகவும் அமைதியிழந்திருப்பதை கண்டேன். அவரது விரல்கள் அசைந்துகொண்டே இருந்தன. உதடுகளில் ஏதோ சொல் கசங்கிக்கொண்டிருந்தது. எதையும் நிலைத்து நோக்காமலிருந்தன விழிகள். “மூத்தவரே, தாங்கள் நிலையழிந்திருக்கிறீர்கள்” என்றேன். “ஆம், எங்கும் என்னால் அமரமுடியவில்லை. என் உள்ளத்தில் ஊழ்கம் நிலைக்கவில்லை” என்றார். “ஏன்?” என்றேன். “அறியேன்” என்று சொல்லி எழுந்துகொண்டு “நீ விலகிச்செல். நான் மானுடர் எவரையும் நோக்க விழையவில்லை” என்றார்.

“நான் தங்களை சந்திப்பதை விலக்காதீர் மூத்தவரே. தங்கள் அண்மையில் நான் அறிவதை வேறெங்கும் அடையவில்லை” என்றேன். “அந்த மற்போர் நான் அமைந்த ஊழ்கங்களில் தலையாயது. தங்கள் கையில் அமைந்த அக்கணங்களில் நான் அனைத்திலிருந்தும் விடுபட்டு எழுந்தேன்.” அவர் அப்பால் நோக்கியபடி நின்று “ஆனால் உன்னை தூக்கி அறைந்த அக்கணம் நான் அனைத்திலும் ஒருகணம் சிக்கிக்கொண்டேன்” என்றார். “அப்போது நான் துவாரகையை வென்றேன். சத்யபாமையை மணந்து சக்ரவர்த்தியாக பாரதவர்ஷத்தை ஆண்டேன்.”

நான் சொல்லின்றி அவரை நோக்கிக்கொண்டிருந்தேன். “நான் முழுமையாக தோற்றுவிட்டேன் இளையோனே. நான் அடைந்த அத்தனை கல்வியையும் ஊழ்கவல்லமையையும் இழந்து தொடங்கிய புள்ளிக்கே மீண்டு வந்துவிட்டேன்.” நான் என்ன சொல்வதென்று தெரியாமல் “ஆம், ஆனால் இது வழுக்குமரம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது...” என்றேன். “வழுக்குமரம்” என்று அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். தலையை அசைத்தபின் “இருக்கலாம். ஆனால் நான் மீண்டும் புதியதாக தொடங்கவேண்டியிருக்கிறது. முற்றிலும் புதிய ஒன்று. இவையெல்லாம் அல்ல என்று என் உள்ளம் அனைத்தையும் விலக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்கு செல்வதென்று அறியாமல் தவிக்கிறது” என்றார்.

மூன்றுமாதகாலம் அவர் அங்கே தனிமையில் இருந்தார். அப்போதுதான் இங்கே ரைவதமலையில் ரைவதகருக்கான விழவுநாள் வந்தது. யாதவர்கள் கிளம்பியபோது நான் அவரிடம் சென்று ரைவதமலைக்கு வரும்படி அழைத்தேன். பயணங்களில் ஆர்வமில்லை என மறுத்துவிட்டார். “ரைவதகரின் கதையும் தங்கள் கதைக்கு நிகரானதுதான் மூத்தவரே” என்றேன். “மண்ணில் நிகரற்ற படைக்கலம் ஒன்றை அடைந்தவர். அதைத் துறக்கும் முடிவுக்கு வந்ததை நான் ஒவ்வொருநாளும் எண்ணுவதுண்டு” என்று நான் சொன்னபோது அவர் தளர்ந்த விழிகளுடன் என்னை நோக்கினார். “வாருங்கள்” என்றேன். பெருமூச்சுடன் “சரி கிளம்புவோம்” என்றார்.

சென்றஆண்டு இதே நாளில் இங்கு நானும் அவரும் வந்தோம். முற்றிலும் தனித்தவராக ஒரு சொல்கூட பேசாது அவர் உடன் வந்தார். அஞ்சிய காளை ஒன்றை மெல்ல தேற்றி கொண்டுவருவதுபோல இருந்தது அப்பயணம். இந்த மலைக்கு வந்தபோது அவர் முற்றிலும் ஆர்வமிழந்தார். “நான் மலையேற விழையவில்லை இளையோனே. இங்கே இருந்துகொள்கிறேன்” என்றார். “இல்லை, மலைமேல் உள்ள ரைவதகரின் ஆலயம் வரை வாருங்கள்... வந்த பின்னர் அங்கு செல்லாமலிருப்பது முறையல்ல” என்று அழைத்தேன். என்னுடன் மலையேறும்போது அவர் எதையும் நோக்கவில்லை. அருகர் ஆலயங்களும் அடிகள்பாறைகளும் அவரை எவ்வகையிலும் கவரவில்லை.

ரைவதகரின் ஆலயத்தின் முகப்பில் அயலவர் போல விழித்து நோக்கிக்கொண்டு நின்றார். உடனே திரும்பிச்செல்லத்தான் அவர் விழைகிறார் என்று தோன்றியது. அரசமுறைமைகளுக்கெல்லாம் வெற்றுச்சிலைபோல நின்று எதிர்வினையாற்றினார். இரவில் என்னுடன் இதே மாளிகையில் இதே படுக்கையில் படுத்திருந்தார். பெருமூச்சுவிட்டுக்கொண்டும் புரண்டுகொண்டும் இரவை கழித்தார். “என்ன எண்ணுகிறீர்கள் மூத்தவரே?” என நான் பலமுறை கேட்டேன். இல்லை என தலையை மட்டும் அசைத்தார்.

காலையில் அவர் படுத்திருந்த மஞ்சம் ஒழிந்து கிடந்தது. அதைக் கண்டதும் என் உள்ளம் அதிர்ந்தபோதே அதை எதிர்பார்த்திருந்ததையும் உணர்ந்தேன். ஏவலர்களை அனுப்பி தேடச்சொல்லிவிட்டு நானும் மலையில் தேடத்தொடங்கினேன். அவர் துவாரகைக்கு திரும்பியிருக்கமாட்டார் என உறுதியாகவே தெரிந்தது. ரைவதகரின் ஆலயத்தின் அருகிலோ பிற அருகர் ஆலயங்களிலோ அவர் இருக்கவில்லை. உச்சிவெயில் எழத்தொடங்கிய நேரத்தில் ஓர் ஏவலன் அவரை கண்டடைந்தான். மலையின் மறுசரிவில் ஒரு பாறைக்கடியில் தனிமையில் அமர்ந்திருந்தார். நான் அருகே சென்று “மூத்தவரே” என்றேன். என்னை நோக்கி “நான் இங்கேயே இருக்கிறேன் இளையோனே. நீ திரும்பிச்செல்” என்றார்.

“அன்று சென்றபின் இன்றுதான் திரும்பி வந்திருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “அன்றிருந்தவர்தான் இன்றிருக்கிறாரா என்று தெரியவில்லை.”

பகுதி ஐந்து : தேரோட்டி - 15

ரைவத மலையின் பின்பக்கமாக சென்ற செம்மண் பாதை, சுட்டுவிரல் தொட்டு நீட்டிய செங்காவிக்கோடு போல கரும்பாறைகளைச் சுற்றியும் செம்மலைச்சரிவுகளில் இறங்கியும் வளைந்தேறியும் சென்றது. இருபக்கமும் முட்கள் செறிந்து சாம்பல் நிறம் கொண்டு நின்ற செடிகள் பகைமையுடன் சிலிர்த்திருந்தன. உச்சிப்பாறைகளின் மேல் வரையாடுகளின் நிரை ஒன்று மெல்லிய தும்மலோசை எழுப்பியபடி கடந்து சென்றது. காலையில் அவ்வழி சென்ற அருகப் படிவர்களின் காலடிகள் செம்மண் புழுதியில் படிந்து அப்போதும் அழியாமல் எஞ்சியிருந்தன.

அவற்றின் மேல் கால் வைக்காமல் நடந்த இளைய யாதவர் அர்ஜுனனிடம் “கீழ்த்திசை எங்கும் இவ்வருகப்படிவர்கள் சென்றுள்ளார்கள். தெற்கில் தண்டகாரண்யத்தை கடந்தும் சென்று விட்டிருக்கிறார்கள். இங்கு இப்பாலை மண்ணில் விழியும் உளமும் பழகியதனால் செல்லுமிடங்களிலும் முட்புதர்களும் பாறைகளும் நிறைந்த வெறும் வெளியையே இவர்கள் நாடுகிறார்கள். எங்கும் அரைப்பாலை நிலங்களிலேயே இவர்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ளன” என்றார். “வளம் என்பது இவர்களுக்கு ஒவ்வாததா?” என்றான் அர்ஜுனன். “ஆம், அங்கு வாழ்வு செழிக்கிறது. செழிப்பின் திசைக்கு எதிர்த்திசையே துறவின் திசையென்று இவர்கள் எண்ணுகிறார்கள். துறந்து துறந்து சென்று துறக்க ஒண்ணாததென எஞ்சுவதே தங்கள் இருப்பென்றும் அதை நிறைவழியச்செய்யும் முறைமையே ஊழ்கமென்றும் இவர்களின் நெறிவழி வகுத்துள்ளது” என்றார் இளைய யாதவர்.

மலைப்பாறை ஒன்றின் இடுக்கில் பெரிய அரசவெம்பாலையின் சட்டை தொங்கி பட்டுச் சால்வை போல் காற்றில் நெளிந்தது. அர்ஜுனன் அதைப் பார்த்ததும் யாதவரை நோக்கினான். “குகைகளில் இவர்கள் அரசப் பெருநாகத்துடன் தங்குகிறார்கள் என்று எளியமக்கள் நம்புகிறார்கள். ஆகவே செல்லும் இடங்களிலெல்லாம் நாகர்கள் இவர்களை எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள். தென்திசையில் அருகர் ஆலயங்களைச் சுற்றிலும் நாகர்களின் அரவாலயங்கள் அமைந்துள்ளன” என்றார். அர்ஜுனன் “தங்கள் தமையனார் முற்றிலும் அருக நெறியை சார்ந்துள்ளாரா?” என்றான். “அதை அறியேன். சென்றமுறை வந்தபின் அவரை நான் காணவுமில்லை. அவர் இங்கு அருகநெறியினருடன் இருக்கிறார் என அறிந்தேன். அவர் இருக்கும் நிலையை உணரக்கூடவில்லை” என்றார்.

சில கணங்கள் எண்ணிவிட்டு “நான் அவரிடம் விடைபெறும்போது இங்கிருங்கள் மூத்தவரே இவ்வழிச்செல்கையில் தன் முழுத்தோற்றத்தை சுருக்கி தன் கைகளுக்குள் அடங்கும் நாள் ஒன்று வரும். அப்போது விரல்களை விரித்துப் பார்த்தால் அங்கும் ஒரு வினாவை மட்டுமே காண்பீர்கள். அன்று திரும்புவதற்காக உங்களுக்கு ஒரு நகரம் உண்டென்று உணருங்கள். துவாரகை உங்களுக்குரியது. நீங்கள் விழைந்தால் என் மணிமுடி தங்கள் பாதங்களுக்கு உரியது என்றேன். புன்னகைத்து சென்று வா என்றார்” என்றார் இளைய யாதவர். “உண்மையில் அன்று இம்மலை இறங்கி செல்லும்போது ஒரு முழுநிலவு நாளுக்குள் அவர் திரும்பி வருவாரென்றே எண்ணினேன். முன்பு ராகவ ராமனுக்காக அனுமன் இலங்கையை நோக்கி கடல் தாவி சென்றது போல் நெடுந்தொலைவுகளை கணத்தில் தாவிக் கடப்பவர் அவர். இன்று ஓராண்டு நிறைகிறது. இன்னமும் இங்குதான் அவர் இருக்கிறார் என்பதே என்னை வியப்புறச் செய்கிறது” என்றார்.

தொலைவில் எருதுக்கொடி பறக்கும் மலைக்குகை முகப்பு ஒன்றிருந்தது. இரு பெரிய பாறைகளால் மறிக்கப்பட்ட குகையின்முன்னால் இருவர் கையூன்றி சரிந்து செல்வதற்கு இடமிருந்தது. அதனருகே சென்றதும் உள்ளிருந்து வந்த குகையின் குளிர்மூச்சு அர்ஜுனனின் விலாத் தசைகளை சிலிர்க்க வைத்தது. இளைய யாதவர் உள்ளே சென்று உருளைப்பாறைகளை கடந்து தாவி கீழே இறங்கி “வருக” என்றார். அர்ஜுனன் தொடர்ந்தான். “இயற்கையான குகை… உள்ளே நீரூற்று ஒன்றுள்ளது” என்று இளைய யாதவர் சொன்னபோது குரலுடன் குகைமுழக்கமும் கலந்திருந்தது.

இருண்ட குகைக்குள் தொலைவில் என தெரிந்த நெய்யகல் சுடர் வெளிச்சத்தில் இரு கைகளையும் மடியில் அமர்த்தி கால் மடித்து விழிமூடி ஊழ்கத்திலிருந்த ரிஷபரின் பெருஞ்சிலை பாறைப்புடைப்பென செதுக்கப்பட்டிருந்தது. நன்கு தீட்டபட்டு எண்ணெய் பூசப்பட்ட சிலையின் கரிய வளைவுகளில் செவ்வொளி குருதிப்பூச்சு போல மின்னிக் கொண்டிருந்தது. அங்கு எவரும் இருப்பது போல் தெரியவில்லை. அவர்களின் காலடி ஓசையை குகை எங்கெங்கோ எதிரொலித்து திருப்பி அனுப்பியது. இருளுக்கு விழி பழகியபோது அங்கு ஊழ்கத்திலிருந்த ஏழு படிவர்களை அர்ஜுனன் கண்டான். அவர்களில் ஒருவர் பிறரைவிட அரை மடங்கு பெரிய உடல் கொண்டிருந்தார். அக்கணமே அது அரிஷ்டநேமி என்று அவன் தெளிந்தான்.

சுரிகுழல் கற்றைகள் தோளில் விழுந்து கிடக்க பெரிய கூர்மூக்கின் இருபுறமும் கடற்சிப்பிகள் போல் மூடிய இமைகளுடன், மெல்லிய நகை ஒன்று சூடிய குவிந்த இதழ்களுடன், மடிமேல் மலர்ந்த கைகளும் தாமரை இதழென மடிக்கப்பட்ட கால்களுமாக நிமிர்ந்து தசைச்சிலையென அமர்ந்திருந்தார். இளைய யாதவர் ஓசையின்றி சென்று அரிஷ்டநேமியின் கால்களுக்கு அருகே அமர்ந்து அவர் பாதங்களைத் தொட்டு மும்முறை சென்னி சூடினார், சற்று விலகி அதே போல ஊழ்கத்தில் அமர்ந்தார். அர்ஜுனன் கைகளை மார்பில் கட்டியபடி இருவரையும் நோக்கி நின்றான்.

அவர்கள் வந்ததையோ இளைய யாதவர் அருகே அமர்ந்ததையோ அரிஷ்டநேமி அறிந்தது போல் தெரியவில்லை. ஆனால் அவர் இருந்த கனவுக்குள் இளைய யாதவர் நுழைந்துவிட்டார் என்பதை அர்ஜுனன் உணர்ந்தான். சில கணங்கள் கழித்து திரும்பி நோக்கியபோது அசைவற்ற சிலையாக இளைய யாதவர் மாறியிருப்பதை கண்டான். இருவரையும் மாறி மாறி நோக்கியபடி அவன் அங்கு நின்றான். மூச்சு ஓடுகிறதா என்று ஐயமெழுப்பும் அசைவின்மை. இரு ஆடிப்பாவைகள். ஒன்றை ஒன்று நோக்கும் இரண்டு முடிவின்மைகள். இரண்டு வினாக்கள். அல்லது இரண்டு விடைகள். ஒரு பொருள் கொண்ட எதிரெதிர் சொற்கள். இரண்டு முடிவிலா பெருந்தனிமைகள். பொருளின்றிப் பெருகிய சொற்கள் பதற்றம் கொண்ட வெள்ளாட்டு மந்தைகளென ஒன்றையொன்று நெரித்து முட்டிச் சுழல தன் சித்தம் பித்து கொள்வதை உணர்ந்து அர்ஜுனன் இமைகளை மூடிக்கொண்டான். இமைகளுக்குள் அவன் குருதிக் குமிழிகள் மிதந்தலைந்தன. அவன் எண்ணியது என்ன? குந்தி. பின்பு பாஞ்சாலி. உலூபி. பின்பு சித்ராங்கதை. அவர்கள் வழியாக சென்றடைந்த எண்ணம் எவ்வண்ணம் கர்ணனை சென்றடைந்தது? யாரவன் இந்நிரைக்குள் நுழைய? வில்லேந்தியவன். தெளிந்த பெரிய விழிகள் கொண்ட கருவண்ண மேனியன். யாரவன்?

விழிகளைத் திறந்து நோக்கியபோது மிக அருகிலென ரிஷபரின் கரியசிலை தெரிந்தது. சுடர் அசைவில் இதழ் நெளிய அவர் ஏதோ சொல்ல விரும்புவது போல. கைகள் கால்கள் அனைத்திலும் எழுந்த ஒளியசைவு அவர் எழுந்துவிடப் போகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. கை நீட்டி தனக்குப் பின்னாலிருந்த குகைச் சுவரை தொட்டான். நீரில் கிடக்கும் பாறை போல் அது குளிர்ந்திருந்தது. மலை உச்சியில் ஊற்றுகள் அனைத்தும் அப்பாறைகளை எங்கோ நனைத்துச் செல்கின்றன. அப்போதுதான் குகைக்குள் எங்கோ கொட்டிக் கொண்டிருந்த நீரோசையை அவன் கேட்டான். சொட்டிய நீர் வழிந்தோடும் ஓசை இருளில் சுரந்து இருளுக்குள்ளே வழிந்தோடுகிறது. ஒருபோதும் ஒளியை அறியாதது. ஆகவே இருளென்றே ஆனது. இருள் நீர் குளிர்ந்திருக்கும், தன்னந்தனிமையின் கண்ணீரென.

அரிஷ்டநேமி விழிகளை அப்போது திறந்திருக்காவிட்டால் தன் சித்தம் கீழே விழுந்த நீர்த்துளிபோல் சிதறி பரந்து மறைய, பித்தனாகி வெளியே சென்றிருப்போம் என அர்ஜுனன் உணர்ந்தான். அவர் புன்னகையுடன் எதிரே அமர்ந்திருந்த இளைய யாதவரை நோக்கி “வணங்குகிறேன் இளையோனே” என்றார். இளைய யாதவர் புன்னகைத்து “தங்களைப் பார்ப்பதற்காகவே வந்தேன் மூத்தவரே” என்றார். “ஆம், உனது வருகையை எதிர்நோக்கியிருந்தேன். ஏழு நாட்களுக்கு முன்னரே கரிக்குருவி ஒன்று அதை சொன்னது” என்றார். கால்களை நீட்டி அவர் எழுந்தபோது அவரது தலை உச்சிப் பாறை வளைவை தொட்டது. இளைய யாதவர் எழுந்து அவரருகே நின்றபோது அவரது குழல்சூடிய பீலி அரிஷ்டநேமியின் மார்பு அளவுக்கே இருந்தது.

தன் பெரிய கைகளால் இளைய யாதவரின் தோள்களைத் தொட்டு “உன் வருகை இத்தனை மகிழ்வளிக்கும் என்று நான் எண்ணவில்லை. நீ வருவாய் என்ற செய்தி வந்தபிறகு ஒவ்வொரு நாளும் காலையில் நினைவெழும்போது உன் புன்னகையே உள்ளே விரிந்தது. நீ எனக்கு எப்படி பொருள்படுகிறாய் என்று புரியவில்லை. இளையோனே, இங்கு வந்தபிறகு அங்கு கொண்டிருந்த ஒவ்வொன்றையும் உதிர்த்துவிட்டேன். நகரையும் உறவுகளையும் குலத்தையும் பெயரையும்கூட. இங்கென்னை நேமி என்றே அழைக்கின்றனர். அது என் குலச்சின்னமாயினும் அறவாழியின் பெயரென அதை மட்டும் ஏற்றுக்கொண்டேன். அதற்கப்பால் ஏதுமில்லை என்றே இருக்கிறேன். ஆயினும் நீ என்னிடம் முழுமையாக இருந்து கொண்டிருக்கிறாய் எனும் விந்தையை சில நாட்களாக திரும்பத் திரும்ப எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றார் அரிஷ்டநேமி.

இளைய யாதவர் “அது என் நல்லூழ். தங்கள் பாதங்களை வணங்கும் பேறு எனக்கு உள்ளது என்பது அதன் பொருள்” என்றார். “முகமன்கள் எதற்கு?” என்றபின் அரிஷ்டநேமி நீள் மூச்சுவிட்டார். “இந்நாட்களில் நான் எண்ணிக்கொண்டது ஒன்றே. நான் துறந்தவை அனைத்தாலும் ஆனவன் நீ. உன் வடிவில் என் வாழ்க்கையை பிறிதொருவனாக மாறி நடித்துக் கொண்டிருக்கிறேனா? கிளைகள், இலைகள், மலர்கள் அனைத்தும் வேர் மண்ணுக்குள் ஒளிந்துகொண்டு காணும் கனவுகள்தானா?” இளைய யாதவர் “அறியேன் மூத்தவரே. ஆனால் ஒன்று உரைப்பேன்… தாங்கள் என் கனவு” என்றார்.

சற்றே திகைத்தவர் போல் அரிஷ்டநேமி திரும்பி இளைய யாதவரை பார்த்தார். ஏதோ சொல்லெடுக்க விழைபவர் போல் அசைந்தார். அர்ஜுனனை திரும்பிப் பார்த்தபின் “செல்வோம்” என்றார். அவர் முன்னால் செல்ல இளைய யாதவர் பின்தொடர்ந்தார். அர்ஜுனன் அவர்கள் இருவரையும் நோக்கியபடியே தொடர்ந்து சென்றான்.

தன் பெரிய கால்களை களிறு போல் தூக்கி வைத்து அரிஷ்டநேமி முன்னால் செல்ல பாறைகளில் தாவி இளைய யாதவரும் அர்ஜுனனும் அவரை தொடர்ந்தனர். முட்கள் செறிந்த பாதையை அவர் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. அர்ஜுனனின் கால்கள் முழுக்க முட்கள் கீறி குருதிக்கோடுகள் எழுந்து ஊறி வழிந்தன. திரும்பி தன் குருதி சூடி நின்ற அம்முள்முனைகளை நோக்கியபின் அவன் அவர்களை தொடர்ந்தான். மலைச்சரிவில் சிறிய பாறை இடுக்கு ஒன்றை நோக்கி சென்ற அரிஷ்டநேமி “இங்குதான் நான் தங்கியுள்ளேன்” என்றார். அர்ஜுனன் இளைய யாதவரை நோக்க அவர் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

மலையின் கருவறைத்திறப்பு போல தெரிந்த அவ்விடுக்குக்கு அருகே சென்று அமர்ந்து பின்பு தன் உடலை நீட்டி கால்களை உள்ளே விட்டு மெல்ல நாகம்போல உடலை உள்ளிழுத்துக்கொண்டார். குனிந்து நோக்கியபோது அங்கிருந்த இருண்ட சிற்றறை ஒன்றுக்குள் கால் மடித்து அமர்ந்திருப்பதை காணமுடிந்தது. இளைய யாதவர் அதேபோல உள்ளே சென்று அமர அர்ஜுனன் சற்று தயங்கியபின் தன்னையும் உள்ளே நுழைத்து மூலையில் உடல் ஒடுக்கி அமர்ந்தான். சில கணங்களுக்குப் பின் விழிபழக வெளியே இருந்து வந்த ஒளியின் கசிவில் அந்தப் பாறைக் குடைவு தெளிவடைந்தது.

“இங்கு வஜ்ரநந்தி அடிகள் என்னும் படிவர் பதினெட்டு ஆண்டுகாலம் வாழ்ந்தார். அவர் விண்ணேகியபின் எட்டு மாத காலம் இது ஒழிந்து கிடந்தது. அப்போதுதான் நான் வந்தேன். இவ்வறையை எனக்குரியதாக்கிக் கொண்டேன்” என்றார் அரிஷ்டநேமி. “இளையோனே, நீ என்னை தேடி வந்தது ஏன் என்று அறிய விழைகிறேன்” என்றார்.

“எவ்வண்ணம் ஆயினும் நான் வரவேண்டும் மூத்தவரே. இன்னும் நான்கு நாட்களில் இங்கு ரைவதகரின் விண்ணேற்று நாள் வரப்போகிறது. விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் விரும்பிக் கொண்டாடும் நாள் அது. அதற்கு முன் நான் வந்தது தங்களிடம் என் சார்பிலும் தங்கள் தந்தை சார்பிலும் ஒரு மன்றாட்டை முன் வைக்கவே. தாங்கள் நகர்புக வேண்டும். மதுராவின் அரசர் உக்ரசேனரின் மகள் தங்கள் மணமகளாக அங்கு சித்தமாக இருக்கிறார்.”

அவர் விழிகளில் எந்த மாற்றமும் தெரியவில்லை. “இங்கு நான் வாழும் வாழ்வை பார்த்தபின்னும் இதை சொல்வதற்கான உறுதிப்பாடு உன்னிடம் உள்ளதா இளையோனே?” என்றார். இளைய யாதவர் “தாங்கள் மூத்தவர்களுக்கு நீர்க்கடன் செலுத்தும் முறைமை உள்ளவர். தங்கள் குருதியிலிருந்து மைந்தர்கள் பிறக்கவேண்டும். அவர்கள் தந்தையையும் தந்தையை ஈன்ற முதுமூதாதையர்களையும் நீரும் உணவும் அளித்து மூச்சுலகில் நிலை நிறுத்தவேண்டும். மண்ணில் பிறந்த எவரும் முற்றிலும் தவிர்க்கமுடியாத கடனென்பது நீத்தாருக்குரியதே. அதன் பொருட்டு தாங்கள் வரவேண்டும்” என்றார்.

“அவ்வாறு நெறிநூல்கள் சொல்கின்றன என்று அறிவேன் இளையோனே. ஆனால் எனக்கு முன் ஏழு உடன்பிறந்தவர்கள் உள்ளனர். அவர்களில் மூத்தவராகிய ஸினி இன்று சௌரிபுரத்தின் பட்டத்தரசர். அவர்கள் நம் தந்தையருக்குரிய கடன்கள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பும் தகுதியும் உடையவர்கள் அல்லவா?” என்றார்.

இளைய யாதவரின் முகம் எவ்வுணர்வை காட்டுகிறது என்று அர்ஜுனன் கூர்ந்து நோக்கினான். அதில் உணர்வுகள் எதுவும் தெரியவில்லை. மிக எளிய அன்றாட விவாதமொன்று நிகழ்ந்து கொண்டிருப்பதற்கான மெய்ப்பாடுகளே தெரிந்தன. “மூத்தவரே, நான் உரைப்பது நாளையை பற்றி.” சிலகணங்களுக்குப் பிறகு அரிஷ்டநேமி “நிமித்திகர் அவ்வண்ணம் உரைத்தனரா?” என்றார். “ஆம், தங்கள் மூத்தவர்கள் அனைவரும் களம்படுவது உறுதி. அவர்களின் குருதிகளில் மைந்தர்களும் எழப்போவதில்லை. தங்கள் மூதாதையருக்கு நீர்க்கடன் செலுத்தப்படவேண்டுமென்றால் தங்கள் குருதி முளைத்தாக வேண்டும். வேறு வழியில்லை” என்றார் இளைய யாதவர்.

அரிஷ்டநேமியின் முகத்தில் எழுந்த வலியை அர்ஜுனன் கண்டான். “என் தசைகளை அறுத்துக் கொண்டுதான் நான் என்னை இங்கிருந்து விடுவிக்கவேண்டும். இளையோனே, இன்று நான் கன்றுச்செடியல்ல, வேர் விட்டு கிளை எழுந்துவிட்ட மரம்” என்றார். “தங்கள் விழைவும் தேடலும் எனக்குத் தெரிகிறது. நான் சொல்வதற்கு ஏதுமில்லை. இனி முடிவெடுக்கவேண்டியது தங்கள் உள்ளம். இங்கிருந்து கிளம்புவது தங்களுக்கு ஒரு மறுபிறப்பென்றே உணர்கிறேன். குருதி வழிய தொப்புள் சரடு அறுத்து தாங்கள் அங்கு வந்து விழவேண்டும். ஆனால் வேறு வழியில்லை மூத்தவரே. மண்ணில் உள்ள அத்தனை பேருக்கும் உள்ள கடமை தங்கள் குலக்கொடியை நிலைநிறுத்துவது. அதிலிருந்து விலகிச்செல்லும் ஒருவர் தன் மூதாதையரின் நீட்சிமுடிவிலிக்கு பெரும் பழியொன்றை செய்தவராகிறார். அவர்களின் கண்ணீர் அவரை தொடரும். அச்சுமையை ஏற்றபின் அவர் செல்லும் தொலைவென்ன?”

அரிஷ்டநேமி சொல்லுக்கென தத்தளிப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். இருகைகளாலும் தன் குழலை நீவி பின்னுக்கு சரித்தார், கண்களை மூடி சில கணங்களுக்குப் பிறகு நீள்மூச்சுடன் திறந்து “என்ன சொல்வதென்றே தெரியவில்லை இளையோனே. நான் கற்ற அனைத்து நூல்களையும் நீயும் கற்றிருக்கிறாய். நான் சென்ற தொலைவெல்லாம் சென்றவன் நீ. நீயே உரை. பிறப்பின் கணம் ஒருவனிடம் வந்து தொற்றிக்கொள்ளும் இந்த பவச்சுழல் சரடை அறுக்கவே கூடாதென்றா நீ சொல்வதற்குப் பொருள்? பிறந்ததனாலேயே வீடுபேறற்றவனாகிவிட வேண்டுமென்றா சொல்கிறாய்? ஒருவனின் ஊழ் பிறவியிலேயே முற்றிலும் வகுக்கப்படுமென்றால் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவும் உணர்வும் எதற்காக? அவ்விரண்டின் அடியில் அணையாது எரியும் மீட்புக்கான தவிப்பின் பொருளென்ன?”

இளைய யாதவர் முகத்தில் மெல்லிய துயர் ஒன்று படிந்தது. “இதற்கெல்லாம் இறுதி விடை என ஒன்றை என்னால் சொல்லிவிட முடியுமென்று நான் எண்ணவில்லை மூத்தவரே. ஒருவேளை இவற்றை இயற்றி ஆடி கலைத்து மீண்டும் இயற்றும் அப்பெரு நெறி கூட இதற்கு விடையளிக்க முடியாமல் இருக்கலாம். பிறந்திறந்து செல்லும் இச்சுருள் பாதையில் ஒரு கண்ணி அறுந்தால் நம்மால் எண்ணி முடிக்கப்படாத பல்லாயிரம் கண்ணிகள் எங்கெங்கோ அறுபட்டு துடிதுடிக்கச் செய்கிறோம். பல ஆயிரம் கோடி நுண்சமன்களால் ஆன இந்த ஆட்டத்தை எப்போதைக்குமாக குலைக்கிறோம். அதற்கான உரிமை மானுடனுக்கு இல்லை. ஆனால் அச்சமன் குலைவை நிகழ்த்தாமல் எவரும் தானிருக்கும் இடத்திலிருந்து ஒருகணமும் எழப்போவதுமில்லை.”

“இப்பெரிய வலையை சமைத்து இதை மீறும் துடிப்பை அதன் ஒவ்வொரு துளியிலும் அமைத்து இங்கு ஆடவிட்ட அது அலகிலாத விளையாட்டு கொண்டது. அது ஒன்றையே என்னால் சொல்ல முடியும். முடிவெடுக்கவேண்டியது தாங்கள்” என்றார் இளைய யாதவர். அதன் பின் இருவரும் உரையாடவில்லை.

அரிஷ்டநேமி ஒவ்வொரு சொல்லாக எடுத்து கூர்நோக்கி தன்னுள் அமைத்துக் கொள்கிறார் என்பதை அவரது முகம் காட்டியது. சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி முற்றிலும் விடுபட்ட அமைதியை இளைய யாதவர் அடைந்திருப்பதை அவர் முகம் வெளிப்படுத்தியது. அர்ஜுனன் அந்தப் பாறையிருளில் குளிர்ந்து வெளியே செல்ல விழைந்தான். ஒளிமிக்க வானம் விரிந்து கிடக்கும் மலைப்பாறை உச்சியில் ஏறி இரு கைகளையும் சிறகுகளென நீட்டி நிற்க வேண்டுமென தோன்றியது. முடிவெடுக்கும் பொறுப்பால் மானுடனை மண்ணுடன் கட்டிப்போட்டிருக்கின்றன தெய்வங்கள். எங்கு செல்வதென இல்லாமல் காற்றுக்கு சிறகை கொடுத்திருக்கும் எளிய பூச்சிகள் மட்டுமே திளைக்கின்றன.

திரும்பி அரிஷ்டநேமியை நோக்கினான். அவனுக்கு இரக்கமே சுரந்தது. என்ன முடிவை எடுக்கப்போகிறார்? எம்முடிவென்றாலும் அதன் பொறுப்பை அவர் ஏற்றாக வேண்டும். அதுவோ அவர் சற்றும் புரிந்து கொள்ளாத முடிவின்மை. இன்னதென்றே அறியாத ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ஒருவன் எங்கு நிறைவுடன் அமரமுடியும்? எதை எண்ணி தன்னை நிறுவிக்கொள்ள முடியும்? இளைய யாதவரை நோக்கினான். இத்தகைய தருணத்தில் இவர் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?

அவர் தன்னுள் அறக்கேள்வி எதையும் கேட்டுக்கொள்ள மாட்டார் என்று எண்ணினான். தன்னுள் இருந்து கொப்பளிக்கும் தொன்மையான ஊற்றொன்றின் விசையாலே இயக்கப்படும் மனிதர். இரண்டு வயதுக்குழந்தையை இயக்கும் அதே பேராற்றலே அதையும் இயக்குகிறது. உண்ண வெல்ல வளர இருக்க விழையும் ஒன்று. இம்மண்ணில் சிறகு சிறகென்று தவமிருக்கும் கூட்டுபுழுக்களும் உணவு உணவென்று தாவும் புலிக்குருளைகளும் வானம் வானம் என்று எம்பும் முளைச்செடிகளும் கொண்டுள்ள முதல் விசை அதன் ஒருதுளி. பிறிதொன்றுமல்ல.

இளைய யாதவர் எழுந்து “பார்த்தா, நாம் செல்வோம். தன் முடிவை அவர் எடுக்கட்டும்” என்று சொன்னபின்பு கைகூப்பினார். அரிஷ்டநேமி வாழ்த்துவதுபோல கைகாட்டினார். இளைய யாதவர் பாறை வெடிப்பில் கையூன்றி வெளிவந்தார். அர்ஜுனன் அவரைத் தொடர்ந்து வெளிவந்து வெளியே எழத்தொடங்கியிருந்த காலை இளவெயிலில் கண்கள் கூச கைகளால் மறைத்துக்கொண்டான். அப்பாலிருந்த இரு பாறைகளின் இடைவெளி வழியாக சரிந்து வந்த காற்று அவன் குழல்களை நீவி தோளில் பறக்கவிட்டது.

“நாம் செல்வோம்” என்றார் இளைய யாதவர். “அவர் எந்த முடிவை எடுப்பார்?” என்றான் அர்ஜுனன். “அறியக்கூடவில்லை. பார்த்தா, ஊழின் துலா நிகர் நிலையில் நின்று தயங்கும் அருங்கணங்களை வாழ்வில் அவ்வப்போது காண்கிறோம். முடிவின்மை என்பது நம் நெஞ்சை தன் மத்தகத்தால் முட்டும் தருணம் அது. யோகி இங்குள்ள ஒவ்வொரு கணத்திலும் அதை காண்பான். இதோ இந்தச் சிறு எறும்பின் மறுகணம் என்பது முடிவின்மையே” என்றார் இளைய யாதவர். அவ்வெறும்பு ஒரு சிறு இலை நுனி ஒன்றில் ஏறமுயன்றது. சுழன்று வீசிய காற்று அதை பறக்க வைத்தது. அது எங்கு சென்று விழுந்தது என்று அர்ஜுனன் நோக்கினான். காணமுடியவில்லை. “இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றை மானுடனால் விளக்க முடியாது. முற்றிலும் அறிதலால் ஆனது மானுட உள்ளம். முற்றிலும் அறிதலுக்கு அப்பால் இருப்பது அது” என்றார் இளைய யாதவர்.

இருவரும் பாறைகளில் கால்வைத்து கைகளால் கூர்முட்களை ஒதுக்கி மெல்ல நடந்தனர். எண்ணிக்கொண்டபோது எங்கோ சித்தம் பதைத்து நின்றுவிட்டது. ஒன்றுடன் ஒன்று பின்னி செல்லும் ஒரு பெரு நீட்சி. குகையிலிருந்து அவர் வெளிவரலாம். ஒரு பெண்ணுக்கு மணமகனாவதும், அவள் கருவறையில் உடல் கொண்டு உயிர் பெறாது துயின்றிருப்பது மண்நிகழ்வதும் நிகழலாம். உவகைகள் வஞ்சங்கள் துயரங்கள் வெற்றிதோல்விகள் என வாழ்வுப்பெருக்கு இங்கிருந்து எழலாம். பேரரசுகள் எழலாம். பெரும்போர்கள் நிகழலாம். குருதி வெள்ளம் பெருகலாம். நோக்கி முடிக்க முடியாத எதிர்காலம் வரை செல்லும் ஒரு குலச்சரடு இக்கணத்தில் ஒரு சொல்லில் பிறக்கலாம். அதை நிகழ்த்துவது எது?

அவன் தலைமேல் பறந்து வந்து கிளையில் அமர்ந்த காகம் முட்கிளையை ஊசலாட்டியபடி “கா” என்றது. ஏன் என்ற சொல். ஒரு பறவைக்கு அதன் மொழியாக ஒற்றைச் சொல்லை அளித்து அனுப்பியிருக்கிறது பிரம்மம். காகம் இருமுறை முட்கிளையை ஊசலாட்டியபின் எழுந்தது. மீண்டும் “கா! கா!” என்றது. மீண்டும் எழுந்து பிறிதொரு மரக்கிளைமேல் அமர்ந்து கரைந்தது. “தாங்கள் விழவு முடிந்ததும் ஊர் திரும்புகிறீர்களா?” என்று அர்ஜுனன் கேட்டான். அப்பெரும் வெறுமையை வெல்ல விழைந்தான். வெறுமையை கலைப்பதற்கென்றே ஆனவை சொற்கள். பொருளற்ற சொற்கள் மேலும் அதற்கு பொருத்தமானவை.

“ஆம், என்னுடன் நீரும் வருக!” என்றார் இளைய யாதவர். அவர் சுபத்திரையைப் பற்றி என்ன சொல்லவிருக்கிறார் என்று அர்ஜுனன் உணர்ந்து கொண்டான். அவன் எண்ணுவதை உணர்ந்தது போல் “சுபத்திரையை துரியோதனனுக்கு அளிக்க என் தமையன் எண்ணியிருக்கிறார். அவருக்கெதிராக எதுவும் செய்ய நான் எண்ணக்கூடாது” என்றார் இளைய யாதவர். அச்சொற்களை நூறு முறை திருப்பி நூற்றொன்றாவது புறத்தை நோக்கியபின் அர்ஜுனன் தலை அசைத்து “ஆம்” என்றான். அதன் பின் அவர்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.

மேலும் பாறைகளைக் கடந்து இறங்கியபோது அர்ஜுனன் இளைய யாதவர் தன்னைக் கண்டபோது சொன்ன முதல் சொற்றொடரை நினைவுகூர்ந்து திடுக்கிட்டு திரும்பி நோக்கி “துறவியாகவா?” என்றான். இளைய யாதவர் அவன் விழிகளை நோக்காமல் “ஆம். இத்தோற்றத்தில் உம்மை யாதவர்கள் அறிந்து கொள்ள முடியாது” என்றார். அர்ஜுனன் “நான் துறவிக்கோலம் பூணுவது அக்கோலத்துக்கு இழுக்கல்லவா?” என்றான். “உம்முள் ஒரு துறவி இல்லையென்றால் அது இழுக்கே. உண்டென்றால் அத்துறவியை எழுப்பி அவரை துவராடை அணியச்செய்யும்” என்றார் இளைய யாதவர். அவனை நோக்கித் திரும்பி அவர் பேசவில்லை. சுருள் குழல் படிந்த கரிய தோள்களை சில கணங்கள் உற்று நோக்கியபின் “நான் துறவிக்கோலம் கொள்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

இளைய யாதவர் கீழே தெரிந்த உருளைப்பாறையில் குதிக்க அர்ஜுனன் தொடர்ந்து குதித்தான். இரு பாறைவளைவுகளைக் கடந்து அவர்கள் மீண்டும் செம்மண் பாதைக்கு வந்தபோது மேலே கைதட்டும் ஒலி கேட்டது. இளைய யாதவர் திரும்பி நோக்கி “தமையன்” என்றார். அர்ஜுனன் திரும்பியபோது அங்கொரு மலைப்பாறை மேல் எழுந்த அரிஷ்டநேமியை கண்டான். “நான் வருகிறேன் இளையோனே, அது மூதாதையரின் ஆணை” என்றார் அரிஷ்டநேமி. இளைய யாதவர் “நன்று மூத்தவரே” என்றார். “இப்போது என் குகைக்குள் ஒரு காகம் வந்தது. அது என்னிடம் சொல்வதென்ன என்று உணர்ந்தேன்.”

இளைய யாதவர் வெறுமனே நோக்கினார். “ஊன் என்று அது கூவியது” என்றார் அரிஷ்டநேமி. “நான் எளிய மனிதன், வெறும் ஊன்தடி. ஒன்றிலிருந்து ஒன்றென தன்னை பெருக்கி இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் முடிவிலா ஊன்சரடின் ஒரு கண்ணி. பிற அனைத்தும் என் வெறும் ஆணவங்கள். அவற்றைத் துரத்தாமல் என்னை நான் உணர்வதற்கில்லை. யாதவனே, நீ கொண்டுவந்த செய்திக்கு உடன்படுகிறேன். என் மூதாதையர் எழட்டும். பிறந்து பிறப்பித்து மடிவதற்கப்பால் மானுடர்க்கு ஆவதொன்றும் இல்லையென்றால் அதுவே ஆகட்டும்” என்றார் அரிஷ்டநேமி.

பகுதி ஐந்து : தேரோட்டி – 16

ரைவதகர் விண்ணேகிய நாளை கொண்டாடுவதற்காக யாதவர்கள் கஜ்ஜயந்தபுரிக்கு முந்தையநாளே வந்து குழுமத் தொடங்கியிருந்தனர். துவாரகையை சுற்றியிருந்த பன்னிரு ஊர்களிலிருந்தும் விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் தனித்தனி வண்டி நிரைகளாக வந்தனர். தொலைதூரத்தில் மதுராவில் இருந்தும் மதுவனத்தில் இருந்தும் கோகுலத்திலிருந்தும் மார்த்திகாவதியிலிருந்தும்கூட யாதவர்கள் வந்திருந்தனர்.

வலசைப்பறவைகளின் தடம்போல கஜ்ஜயந்தபுரியில் அவர்கள் வருவதற்கும் தங்குவதற்கும் நெடுங்காலம் பழகிப்போன பாதைகள், தங்குமிடங்கள், உபசரிப்பு முறைமைகள் உருவாகியிருந்தன அவர்களுக்கென கட்டப்பட்ட ஈச்சை ஓலை வேய்ந்த கொட்டகைகளில் தனித்தனிக் குலங்களாக பயணப்பொதிகளை அவிழ்த்து தோல்விரிப்புகளை விரித்து படுத்தும் அமர்ந்தும் உண்டும் உரையாடியும் உறங்கியும் நிறைந்திருந்தனர்.

வறண்ட அரைப்பாலை நிலத்தில் உடல்குளிர நீராடுவது இயல்வதல்ல என்று யாதவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே நீராடுவதற்கென்று விடுதிகளில் அளிக்கப்பட்ட ஒற்றைச் சுரைக்குடுவை நீரை வாங்கி அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கி “இது எதற்கு?” என்றனர். “இங்கு இவ்வளவு நீரால் உடல் கழுவுவதே நீராட்டெனப்படுகிறது” என்று முதிய யாதவர் விளக்கினார். “கைகளையும் முகத்தையும் கழுவி ஈரத்துணியால் உடம்பின் பிற பகுதிகளை துடைத்துக் கொள்வதுதான் இங்கு வழக்கம்.” ஒரு இளையவன் “இந்நகருக்குள் வரும்போதே இத்தனை நறுமணப்பொருட்கள் ஏன் எரிகின்றன என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது. இப்புகை இல்லையேல் இங்கு பிணந்தின்னிக் கழுகுகள் வானிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்திறங்கி விடும்” என்றான். சூழ்ந்திருந்தோர் நகைத்தனர்.

யாதவகுடியினர் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய கொடி அடையாளத்தை தங்கள் தங்குமிடம் அருகிலேயே கழை நட்டு பறக்கவிட்டனர். ஒரு குடி அருகே அவர்களின் பங்காளிக் குடியினர் தங்குவதை தவிர்த்தனர். ஆகவே கொட்டகையில் இடம் பிடிக்க அவர்கள் மாறி மாறி கூச்சலிட்டபடி சுற்றி வந்தனர். தோல்விரிப்புகளை விரித்து பொதிகளை அவிழ்த்து உடைமைகளை எடுத்த பின்னர் அருகே பறந்த கொடி பங்காளியுடையது என்று கண்டு மீண்டும் அனைத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டு இடம் மாறினர்.

அவர்களுக்குத் தேவையானவற்றை ஒருக்கிய குஜ்ஜர்களில் ஒருவன் “இவர்கள் அத்தனை பேரும் ஒருவருக்கொருவர் பங்காளிகள். பங்காளிகளை இவர்கள் பகைவர்கள் என எண்ணுகிறார்கள். ஆகவே எங்கு சென்றாலும் பகைவர்களையும் உடனழைத்தே செல்கிறார்கள்” என்றான். அவன் தோழன் “அது நன்று. வெளியே பகைவர்களுக்காக தேடவேண்டியதில்லை. நம்முடைய பகைவர்கள் நம்மை நன்கறிந்தவர்களாகவும் நாம் நன்கறிந்தவர்களாகவும் இருப்பது எவ்வளவு வசதியானது!” என்றான். அவன் நகையாடுகிறானா என்று தெரியாமல் நோக்கியபின் அவனிலிருந்த சிறுசிரிப்பைக் கண்டு நகைத்தான் முதல் குஜ்ஜன்.

சிறிது சிறிதாக கஜ்ஜயந்தபுரியின் ஊர்கள் அனைத்திலும் யாதவர்கள் பெருகி நிறைந்தனர். அவர்கள் தங்களுடன் கொண்டுவந்த உலர்ந்த அப்பங்களை உடைத்து கொதிக்கும் நீரில் இட்டு மென்மையாக்கி வெண்ணெய் தடவி உண்டனர். அந்த உலர்ந்த அப்பங்களை கஜ்ஜயந்தபுரியின் மக்கள் தொலைவிலிருந்து நோக்கி வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “மரக்கட்டைகள் போலிருக்கின்றன” என்றான் ஒருவன். “ஆம். நான் ஒருவரிடம் ஒரு துண்டை வாங்கி மென்று பார்த்தேன். மென் மரக்கட்டை போலவே தோன்றியது. என்னால் விழுங்கவே முடியவில்லை” என்றான் இன்னொருவன்.

“இவர்கள் நாட்கணக்கில் கன்று மேய்க்க காடு செல்லக்கூடியவர்கள். உலர் உணவு உண்டு பழகிப்போனவர்கள்” என்றான் முதிய குஜ்ஜன். “கெட்டுப்போன உணவையே சுவையானதென எண்ணுகிறார்கள். கெடவைத்து உண்ணுகிறார்கள்.” குஜ்ஜர்கள் அவர்களை அரைக்கண்ணால் நோக்கி புன்னகை செய்தனர். “இந்த குஜ்ஜர்கள் நம்மைப் பார்க்கும் வகை சீரல்ல. இவர்கள் ஊனுண்ணிகள் அல்ல என்பதே ஆறுதல் அளிக்கிறது” என்று ஒரு யாதவன் சொன்னான். “பெண்வழிச்சேரல் பெரும்பாவம் இவர்களுக்கு. ஆகவே ஆண்களை நோக்குகிறார்கள்” என்றான் ஒருவன். கொட்டகையில் வெடிச்சிரிப்பு எழுந்தது.

கொட்டகைகளில் இரவு நெடுநேரம் பேச்சுகளும் பாட்டுகளும் சொல்லுரசி எழுந்த பூசல்களும் நிறைந்திருந்தன. யாதவர்களின் பேச்சுமுறையே தொலைவிலிருந்து பார்க்கையில் பூசல்தான் என்று தோன்றியது. நகையாட்டு எப்போது பகையாடலாக ஆகுமென்றும் அது எக்கணம் கைகலப்பென மாறுமென்றும் எவராலும் உய்த்துணரக்கூடவில்லை. ஆனால் கைகலப்புகள் அனைத்துமே ஓரிரு அடிகளுக்கு மேல் நீடிக்கவில்லை. அடி விழும் ஓசை கேட்டதுமே சூழ்ந்திருந்த அனைத்து யாதவர்களும் சேர்ந்து பூசலிடுபவர்களை பிரித்து விலக்கி அதை முடிவுக்கு கொண்டு வந்தனர். பூசலிடுபவர்களும் அதை விலக்கி விடுபவர்களும் சேர்ந்து மேலும் கூச்சல் எழுப்பி சொற்கள் என எவையும் பிரித்தறிய முடியாத பேரோசையை எழுப்பினர்.

அர்ஜுனன் தன் விருந்தினர் மாளிகையிலிருந்து ரைவத மலையின் படிகளில் இறங்கி அதைச் சூழ்ந்திருந்த அரைப்பாலை நிலத்தின் புதர்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கொட்டகைகளில் தங்கியிருந்த யாதவர்களை பார்த்தபடி நடந்தான். அவர்கள் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஒருவன் அவனை நோக்கி “தாங்கள் யோகியா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அரசரின் விருந்தினரா?” என்று அவன் மேலும் கேட்டான். “ஆம்” என்றான் அர்ஜுனன். "இளைய யாதவர் மேலே தங்கியிருக்கிறாரா?” என்றான். “அறியேன்” என்றான் அர்ஜுனன்.

“அரசிகள் வந்துள்ளனரா?” என்றான் இன்னொருவன். “மூடா, அரசிகள் வருவதென்றால் அதற்குரிய அணிப்படையினரும் அகம்படியினரும் அணித்தேர்களும் வரவேண்டுமல்லவா? அவர்கள் வரவில்லை. வரவில்லை அல்லவா யோகியே?” என்று அர்ஜுனனிடம் கேட்டான் இன்னொரு யாதவன். “ஆம்” என்று அவன் மறுமொழி சொன்னான். “ரைவத மலையின் விழவுக்கு அரசிகள் வரும் வழக்கமில்லை. இது துறவைக்கொண்டாடும் விழவு. இதில் பெண்களுக்கென்ன வேலை?” என்றார் ஒரு முதியயாதவர். “ஆனால் இம்முறை மதுராவிலிருந்து இளவரசி சுபத்திரை வருவதாக சொன்னார்களே?” என்று ஒருவன் சொன்னான்.

சுபத்திரை என்ற சொல் அர்ஜுனனை நிற்க வைத்தது. இன்னொருவன் “அது வெறும் செய்தி. இங்கு பெண்கள் வரும் வழக்கமில்லை” என்றான். அர்ஜுனன் முன்னால் நடந்தான். அந்த யாதவர்குழு அதையே ஒரு பூசலாக முன்னெடுத்தது. அடிவாரத்தில் அருகர் ஆலயங்களைச் சூழ்ந்து குஜ்ஜர் அமைத்திருந்த பெருமுற்றங்களில் யாதவர் தலைகளாக நிறைந்து அமைந்திருந்தனர். நறுமணப்பொருட்களை மென்று அங்கிருந்த செம்மண் புழுதியில் துப்பினர். ஒருவரை ஒருவர் எழுந்து கைநீட்டி கூச்சலிட்டு அழைத்தனர். வெடிப்புற பேசி நகைத்தனர்.

யாதவர்களிடம் எப்போதும் பணிவின்மை உண்டு என்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். ஏனெனில் அவர்களுக்கு அரசு என்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கன்றுகளுடன் தன்னந்தனியாக காடுகளில் வாழ்பவர்கள். தன் காட்டின் அப்பகுதியில் தானே அரசனென்று ஒரு யாதவன் உணர முடியும். எனவே யாதவர்கள் ஒன்று கூடுமிடத்தில் மேல்கீழ் முறைமைகள் உருவாவதில்லை. ஆகவே முகமன்கள் அவர்களிடையே வழக்கமில்லை. சொல்தடிப்பது மிக எளிது. மிகச்சில கணங்களுக்குள்ளேயே அவர்களுக்குள் பெரும் பூசல்கள் வெடித்துவிடும். யமுனைக்கரையில் அவர்களின் மாபெரும் உண்டாட்டுகள் அனைத்தும் கைகலப்பிலும் போரிலும் பூசலிலுமே முடியுமென்று அவன் கேட்டிருந்தான்.

துவாரகை உருவாகி மதுரை வலுப்பெற்று யமுனைக்கரையிலிருந்து தென்கடற்கரை வரை அவர்களின் அரசுக்கொடிகள் பறக்கத்தொடங்கியபோது யாதவர்களின் பணிவின்மையும் துடுக்கும் மேலும் கூடி வந்தன. பல இடங்களில் முனிவர்களையும் வைதிகர்களையும் அயல்வணிகர்களையும் அவர்கள் கேலி செய்வதாகவும் அவமதிப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சாலையில் அவனைக்கண்ட யாதவர்கள் பலர் இளிவரல் கலந்து “வாழ்த்துங்கள் யோகியே” என்றனர். “உத்தமரே, தாங்கள் புலனடக்கம் பயின்றவரா?” என்று ஒருவன் கேட்டான். அர்ஜுனன் கேளாதவன் போல கடந்துசெல்ல “அதற்குரிய சான்றை காட்டுவீரா?” என்றான். அவன் தோழர்கள் நகைத்தனர்.

கண் தொடும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பற்ற எண்ணமொன்றால் நிகர் வைத்த அகத்துடன் அர்ஜுனன் நடந்து கொண்டிருந்தான். அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் முதுகை வளைத்து வயிறு தொங்க புதர்களின் அருகே ஒண்டி நின்று கண்மூடி துயிலில் தலைதாழ்த்தி திகைத்து விழித்து மீண்டும் துயின்றன. குதிரைகள் மூக்கில் கட்டப்பட்ட பைகளுக்குள்ளிருந்து ஊறவைத்த கொள்ளை தின்றபடி வால்சுழற்றிக் கொண்டிருந்தன, மாட்டு வண்டிகளின் அருகே வண்டிக்காளைகள் கால்மடித்து அமர்ந்து கண்மூடி அசைபோட்டன. தோல் விரிப்புகளிலும் மரவுரிகளிலும் ஈச்சை ஓலைப் பாய்களிலும் படுத்திருந்த யாதவர்கள் பலர் பயண அலுப்பினால் வாய்திறந்து குறட்டை எழ துயின்று கொண்டிருந்தனர்.

புழுதிபடிந்த உடலுடனும் இலக்கடைந்த உள எழுச்சியுடனும் மேலும் மேலும் சாலைகளினூடாக உள்ளே வந்துகொண்டிருந்த யாதவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களை கூவி அழைத்து தங்குமிடமும் உணவும் பற்றி உசாவினர். ஒன்றிலிருந்து ஒன்று என தொட்டுச் சென்ற தன் எண்ணங்கள் சுபத்திரையை வந்தடைந்து கொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். ஆனால் மிக எளிய ஒரு தகவல் போலவே அது எண்ணத்தில் எழுந்தது. ஏதோ ஒரு வகையில் தனக்கு பெண்கள் சலித்துவிட்டனர் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. பெண்கள் அளிக்கும் மாயங்களின் எல்லைகள் தெளிவடைந்துவிட்டதைப்போல. அவர்களை வெல்வதற்கான தன் ஆணவத்தின் அறைகூவல்கள் மிக எளிதாகி விட்டதைப்போல. அல்லது பெண்களின் வழியாக அவன் கண்டடையும் தன் முகம் மீண்டும் மீண்டும் ஒன்றைப் போலவே தோன்றுவது போல.

சுபத்திரை என்னும் பெயரை முதன்முதலாக கதன் சொல்லி கேட்டபோதுகூட எந்தவிதமான உள அசைவையும் அது உருவாக்கவில்லை என எண்ணிக்கொண்டான். ஒரு பெண் பெயர் போலவே அது ஒலிக்கவும் இல்லை. ஒரு செய்தியாக ஒலித்தது. அல்லது ஒரு ஊரின் பெயர். அல்லது ஒரு பொருள். அல்லது என்றோ மறைந்த ஒரு நிகழ்வு. உயிருள்ள உணர்வுகள் உள்ள உள்நுழைந்து உறவென ஆகும் ஒரு பெண்ணின் பெயரல்ல என்பதைப்போல. கஜ்ஜயந்தபுரிக்கு வரும்போதே அதைப்பற்றி எண்ணி வியந்து கொண்டிருந்தான். முதன் முறையாக ஒரு பெண்ணின் பெயர் எவ்வகையிலும் உள்ளக்கிளர்ச்சியை அளிக்கவில்லை. எளிய பணிப்பெண்கள் பெயர்கூட விரல் நுனிகளை பதறச்செய்யுமளவுக்கு நெஞ்சில் தைத்த நாட்கள் அவனுக்கிருந்தன. ஒரு வேளை முதுமை வந்தடைந்துவிட்டதா?

ஆம், முதுமையும் கூடத்தான். அவனைவிட இருபத்தி ஐந்து வயது குறைவானவள் சுபத்திரை. அவனுடைய இளவயது உறவில் மைந்தர்கள் எங்கேனும் பிறந்திருந்தால் அவளுடைய வயது இருந்திருக்கக் கூடும். உடனே இவ்வெண்ணங்களை இப்போது எதற்காக மீட்டிக் கொண்டிருக்கிறோம் என்றும் எண்ணினான். சுபத்திரை ஒரு பொருட்டே அல்ல என்றால் ஏன் அவ்வெண்ணத்திலேயே திரும்பத் திரும்ப தன் அகப்பாதைகள் சென்று முடிகின்றன?

சற்று முன் சுபத்திரை இங்கு வந்திருப்பதாக ஒரு யாதவன் சொன்னான். இங்கு வந்திருக்கிறாளா? இங்கு வரவில்லை. வந்திருக்கக்கூடும். வந்திருக்கிறாள் என்று அவன் அறிந்ததை சொன்னான். அப்போது தோன்றியது அவள் வந்திருக்கிறாள் என்று. அதைச்சொன்ன அந்த யாதவனின் முகம் அவன் அகக்கண்ணில் எழுந்தது. அதில் எழுந்த நூற்றுக்கணக்கான விழிகளை தன் நினைவில் எழுப்பினான். அவற்றில் ஒன்றில் சுபத்திரையைப்பற்றி அவர் சொல்லும்போது எழுந்த தனி ஒளியை கண்டான். ஆம், வந்திருக்கிறாள். ஆயினும் அவன் உள்ளம் எழவில்லை. வந்திருக்கக் கூடும் என்ற உறுதியை அடைந்தபின்னும் அது ஓய்ந்தே கிடந்தது.

கஜ்ஜயந்தபுரியின் எல்லை வரை நடந்து வந்திருப்பதை உணர்ந்தான். முழங்கால்வரை செம்மண் புழுதி ஏறியிருந்தது. நாளெல்லாம் கதிரவன் நின்று காய்ந்த மண்ணிலிருந்து எழுந்த வெம்மையால் உடல் வியர்த்து வழிந்திருந்தது. பாலைவனத்தின் விளிம்பில் நெடுந்தொலைவில் செங்குழம்பென உருவழிந்த சூரியன் அணைந்து கொண்டிருந்தான். நான்கு திசைகளிலிருந்தும் வந்து சூழ்ந்துகொண்டிருந்த யாதவர்களின் புழுதியால் கஜ்ஜயந்தபுரி மெல்லிய பட்டுத்திரை என போர்த்தப்பட்டிருந்தது.

சூரியன் நீரில் விழுந்த குருதித்துளியென மேலும் மேலும் பிரிந்து கரைந்து பிரிந்து மறைவது வரை அவன் பாலை விளிம்பிலேயே நின்றிருந்தான். ஒருபோதும் இப்படி விழைவறுந்து தன் உள்ளம் மண்ணில் கிடந்ததில்லையே என்று எண்ணிக் கொண்டான். பெருவிழைவுடன் அணைத்த பெண்டிர்களுக்குபின் சற்றும் விருப்பின்றி ஒரு பெண்ணை மணக்கப் போகிறோமோ? அதுதான் இப்பயணத்தின் இயல்பான முடிவோ?

பின்பு நீள் மூச்சுடன் எழுந்தான். ஆம், அரசர்கள் நடத்தும் மணங்களில் பெரும்பாலானவை வெறும் அரசியல் மதிசூழ்கைகளின் விளைவுதான். பெண்களை விரும்புவதோ உள்ளத்தில் ஏற்றுவதோ ஷத்ரியனுக்குரிய பண்புகள் அல்ல. அவர்கள் அவன் ஆடிக்கொண்டிருக்கும் பெருங்களத்தின் கருப்பாவைகள் மட்டுமே. திரும்புகையில் ஒரு விந்தையை அவன் அறிந்தான். அவ்வெல்லை வரை வந்துகொண்டிருக்கும்போது எழுந்த அனைத்து எண்ணங்களும் நேர் எதிர்த்திசையில் திரும்பி ஓடத்தொடங்கின. திரும்புகிறோம் என்ற உணர்வாலா, அல்லது உடல் உண்மையிலேயே எதிர்த் திசை நோக்கி திரும்பி இருப்பதாலா அதை நிகழ்த்துகிறது அகம்?

இதுவரை அவன் எப்பெண்ணையும் உள்ளத்தில் ஏற்றிக் கொள்ளவில்லை. ஆகவே தான் குளித்து ஆடை மாற்றுவது போல பெண்களை மறந்து புதிய நிலம் நோக்கி செல்ல முடிந்தது. இப்போதுதான் ஒரு கணத்திலும் அவன் துறக்கமுடியாத ஒருத்தியை பார்க்கவிருக்கிறான். அவனுள் இருக்கும் அறியாத துலா ஒன்று நிலை குலைந்துள்ளது. அவனை அவள் வீழ்த்தத் தொடங்கிவிட்டாள். அதை அவனுக்கே மறைத்துக் கொள்ளும் பொருட்டுதான் அந்தப் பொருட்டின்மையை நடித்துக் கொள்கிறான். இரு கைகளாலும் அவள் பெயரை தள்ளித் தள்ளி விலக்கியபடி முன் செல்கையில் ஓரக்கண்ணால் அது தன்னை பின் தொடர்கிறதா என்று உறுதி செய்து கொள்கிறான்.

ரைவத மலையின் உச்சியிலிருந்த இந்திரபீடம் என்னும் கரிய பெரும்பாறையின் மீது விளக்கேற்றுவதற்கான பணிகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை தொலைவிலேயே பார்க்க முடிந்தது. நூலேணி ஒன்றைக்கட்டி அதன் வழியாக சிறிய வண்ண எறும்புகள் போல வீரர்கள் ஊர்ந்து மேலே சென்றனர். அங்கு சிறிய குளம் போன்று வெட்டப்பட்ட கல் அகல் ஒன்று உண்டு என்று அவன் அறிந்திருந்தான். அதில் நெய்யும் அரக்கும் கலந்து சுற்றப்பட்ட பெரிய துணித் திரியை சுருட்டி குன்றென வைத்து தீயிடுவார்கள். கதிரவனுக்கு நிகராக அந்நகரில் எழுந்து அவ்விரவை பகலென ஆக்குவது அது. அப்பகலில் வெளியே வந்து தெருக்களில் நடக்கவும் உணவு உண்ணவும் அருக நெறியினருக்கு மரபு ஒப்புதல் உண்டு.

குன்றுக்கு அப்பால் கிழக்கு இருண்டு எஞ்சிய செவ்வெளிச்சமும் மெல்லிய தீற்றல்களாக மாறி மறைந்து கொண்டிருப்பதை பார்த்தபடி அவன் நடந்துகொண்டிருந்தான். மலையுச்சியில் புகை எழுந்து சிறிய வெண்தீற்றலாக வானில் நின்றது. மேலும் எழுந்து கரிய காளானாக மாறியது. அதனடியில் செந்நிறத் தழல் எழுந்தது. அவன் நோக்கிக் கொண்டிருக்கவே தழல் தன்னை பெருக்கிக் கொண்டது. ஒரு சிறிய மலரிதழை அப்பாறையின்மேல் வைத்தது போல. செஞ்சுடர் எழுந்ததனால் சூழல் இருண்டதா? குருதி தொட்டு நெற்றியில் இடப்பட்ட நீள்பொட்டு போல சுடர் எழுந்தபோது வானம் முற்றிலும் இருண்டுவிட்டிருந்தது. அச்சுடர் மட்டும் வானில் ஒரு விண்மீன் என அங்கு நின்றது.

கீழே ரைவத மலையின் மடிப்புகளில் இருந்த பல நூறு அருகர் ஆலயங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன. பல்லாயிரம் அடிகள்பாறைகளில் அகல்கள் எழுந்தன. வளைந்து அடிவாரம் நோக்கி வந்த படிக்கட்டு முழுக்க கல்விளக்குகள் கொளுத்தப்பட்டன. நகரெங்கும் இல்லங்களில் சுடர்கள் மின்னத்தொடங்கின. வானிலிருந்து ஒரு சிறு துளை வழியாக செந்நிறத்தழல் ஊறிச்சொட்டி மலையடிவாரத்தை அடைவதுபோல. அவன் மலையின் கீழிருந்த அருகர் ஆலயத்தை அடைவதற்குள் பல்லாயிரம் நெய் அகல்களால் ஆன மலர்க்காட்டுக்குள் இருப்பதை உணர்ந்தான்.

அடிவாரத்தில் இருந்த ரிஷப தேவரின் ஆலயத்தில் மணிமண்டபத்தின் மேல் கட்டப்பட்டிருந்த கண்டாமணி பன்னிருமுறை ஒலித்தது. உள்ளிருந்து அருகர் ஐவரையும் வாழ்த்தும் ஒலி எழுந்தது. வெள்ளுடை அணிந்து வாய்த்திரை போட்ட படிவர்கள் வலது கையில் மண்ணகலில் நெய்த்திரிச் சுடரும் இடது கையில் மயிற்பீலித் தோகையுமாக வெளிவந்தனர். தங்கள் இரவலர் கப்பரைகளை தோளில் மாட்டிக் கொண்டனர். மயிற்தோகையால் மண்ணை நீவியபடி அருகர் புகழை நாவில் உரைத்தபடி மெல்ல நடந்தனர். விளக்கொளித் தொகையாக அவர்கள் ரைவத மலையில் ஏறத்தொடங்க அவ்வொலி கேட்டு அருகநெறி சார்ந்த இல்லங்களிலிருந்து பெண்களும் குழந்தைகளும் கைகளில் நெய்யகல்களுடன் வெளியே வந்து நிரைவகுத்து மேலேறி செல்லத் தொடங்கினர். செந்நிற ஒளியென செதில் சுடரும் நாகம் ஒன்று மலைச்சரிவில் வளைந்து உடல் நெளித்து மேலெழுவது போல் தோன்றியது.

அந்த விளக்குகளின் அணியூர்வலம் கண்டு யாதவர்கள் எழுந்து கைகூப்பி நின்றனர். அருக நெறியினர் அனைவரும் ரைவத மலைமேல் ஏறிச் சென்றதும் கஜ்ஜயந்த புரியின் தெருக்களில் நிறைந்திருந்த யாதவர் உரத்த குரலில் ரைவதக மன்னரை வாழ்த்தி பேரொலி எழுப்பினர். மருத்தனின் வாளை ஏந்தி விண்ணை இரு துண்டென வெட்டிய ரைவதகரின் வெற்றியை புகழ்ந்து பாடியபடி மலையேறிய சூதனைத் தொடர்ந்து அர்ஜுனன் மேலேறினான். உருளைப்பாறைகளில் தன் கால்கள் நன்கு தடம் அறிந்து செல்வதை உணர்ந்தான் இருபுறமும் நின்ற மூங்கில்தூண்களில் நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அருகே நெய்க் கொப்பரையுடன் சுடர்க்காவலர் சிலை போல் நின்று கொண்டிருந்தார்கள். விண்ணிலிருந்து இறங்கி அவ்விழவுக்காக வந்த தேவர்கள் போல் அவர்கள் அசைவின்மை கொண்டிருந்தனர்.

ஆலயங்கள்தோறும் எரிந்த குங்கிலியமும் அகிலும் கொம்பரக்கும் கலந்த நறுமணப்புகை இருளுக்குள் ஊடுருவிய இன்னொரு இருளென நிறைந்திருந்தது. சுடரொளி விழுந்த இடங்களில் செந்நிறநீர் விழுந்த பட்டுத்துணி போல் அப்புகை நனைந்து வட்டங்களாக தெரிந்தது. அரண்மனை முகப்பிலிருந்த ரிஷபர் ஆலயமுகப்பின் பெருமுற்றத்தில் அருகநெறியினர் பன்னிரு சுடர் நிரைகளாக அணிவகுத்து நின்றிருந்தனர். உள்ளே ஐந்து அருகர் சிலைகள் முன்னால் பரப்பப்பட்ட ஈச்ச இலைகளில் அரிசிச்சோறும் அப்பங்களும் காய்கனிகளும் மலரும் படைக்கப்பட்டிருந்தன.

அர்ஜுனன் அருகநெறியினரின் நீண்ட நிரையின் பின்வரிசையில் நின்று உள்ளே எழுந்த தெய்ய உருவங்களை நோக்கி நின்றான். மணியோசை எழுந்த போது இருகைகளையும் தலைக்கு மேல் குவித்து அருகரை வணங்கினான். அங்கிருந்த அனைவரும் ஒருங்கிணைந்த பெருங்குரலில் அருகர்களை ஏத்தினர். உள்ளிருந்து வெண்ணிற ஆடை அணிந்த படிவர் விளக்குடன் வெளியே வந்து தம் கையிலிருந்த நீரை அங்கு கூடியிருந்தவர்கள் மேல் வீசித்தெளித்து இரு கைகளையும் தூக்கி அவர்களை வாழ்த்தினர். அவர்களிடமிருந்து நீரைப்பெற்று பிற பூசகர் அனைவர் மேலும் படும்படி நீரை தெளித்தனர்.

தன் மேல் தெளித்த நீர்த்துளி ஒன்றால் உடல் சிலிர்த்தான் அர்ஜுனன். கோடைமழையின் முதல்துளியென அது தோன்றியது. ஒரு துளி நீர் ஒருவனை முற்றாக கழுவிவிடக்கூடுமா? ஒரு துளி நீரால் கழுவப்பட முடியாதவன் பெருங்கடல்களால் தூய்மை கொண்டுவிடுவானா என்ன? அங்கு கூடி நின்ற ஒவ்வொருவர் விழிகளிலாக மாறி மாறி நோக்கிச்சென்றான். மானுட அகத்தின் வேர்ப்பற்றுகள் என்றான வன்முறையை அவர்கள் எப்படி வென்றார்கள்? சிங்கத்தில் நகங்களாக, எருதில் கொம்புகளாக, ஓநாயில் பற்களாக, முதலையில் வாலாக, ஆந்தையில் விழிகளாக, வண்டில் கொடுக்காக எழுந்த ஒன்று. புவியை ஆளும் பெருந்தெய்வமொன்றின் வெளிப்பாடு. அதை இம்மக்கள் கடந்து விட்டனரா என்ன?

மீண்டும் மீண்டும் அம்முகங்களை நோக்கினான். வெள்ளாட்டின் விழிகள். மான்குட்டியின் விழிகள். மதலைப்பால்விழிகள். கடந்து விட்டிருக்ககூடும். தனியொருவனாக கடப்பது இயல்வதல்ல. ஆனால் ஒரு பெருந்திரளென அதை கடந்துவிட முடியும். இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்திலும் இருக்கும் இனிமை ஒன்றுடனொன்று ஒட்டிக்கொண்டு துளித்துளியாக தன்னை திரட்டிக்கொண்டு பேருருவம் கொள்ள முடியுமென்றால் அத்தெய்வத்தை காலடியில் போட்டு மண்ணோடு அழுத்தி புதைத்துவிட முடியும். நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழ்ந்தாக வேண்டும். ஐந்து சுடரென எழுந்த கரிய உடல்களின் முன் நின்ற போது “அதை நிகழ்த்தியிருப்பீர் கருணையின் தெய்வங்களே. அதை நிகழ்த்துக! அதை நிகழ்த்துக! ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்று வேண்டிக் கொண்டான்.

அவன் உள்ளத்தை ஒலிப்பதுபோல் அப்பால் மணிமேடையில் கண்டாமணி மும்முறை ஒலித்தது. நீள் மூச்சுடன் அரண்மனை நோக்கி செல்லத் திரும்பியபோது கீழே பெருமுரசங்கள் ஒலிப்பதை கேட்டான். அருகராலயங்களில் பூசனைகள் முடிவுற்றதற்கான அறிவிப்பு அது. கஜ்ஜயந்தபுரி ஒற்றைப் பெருங்குரலில் “அருகர் சொல் வாழ்க!” என்று முழங்கியது. மேலிருந்து அனைத்துப் பாதைகளின் வழியாகவும் யாதவர்கள் கூட்டமாக மலைமேல் ஏறத்தொடங்கினர். ரைவதக மன்னரை வாழ்த்தி கூட்டமாக நடனமிட்டபடி பாறைகளிலிருந்து பாறைகளுக்குத் தாவி மேலே வந்தனர்.

அர்ஜுனன் அரண்மனை முற்றத்தில் இடைமேல் கைகளை வைத்தபடி நோக்கி நின்றான். இருளுக்குள் யாதவர்கள் வருவது பெரு வெள்ளம் ஒன்று பாறைகளை உருட்டிக்கொண்டு சருகுகளையும் முட்களையும் அள்ளிப் பெருக்கி எழுந்து குன்றை மூழ்கடிப்பது போல் தோன்றியது. அதுவரை அங்கிருந்த அமைதி குன்றின் மேலிருந்து தன்னை இழுத்துக்கொண்டு மேலேறி உச்சிப்பாறை மேல் நின்று ஒருமுறை நோக்கியபின் முகில்களில் பற்றி ஏறி ஒளிந்து கொண்டது.

ஒளிப்பரப்புக்குள் வந்த முதல் யாதவக்கூட்டத்தில் இருந்த களிவெறியை கண்டபோது தன் முகம் அறியாது மலர்ந்ததை எண்ணி அவனே துணுக்குற்றான். சற்று முன் ஐவர் ஆலயத்தின் முன் கைக்கூப்பி நின்ற மக்கள் எவர் முகத்திலும் இல்லாதது அக்களிவெறி. தன்னை மறந்த பேருவகை அவர்களுக்கு இயல்வதல்ல. உள்ளுறைந்த அவ்வன்முறை தெய்வத்தை ஒவ்வொரு கணமும் கடிவாளம் பற்றி தன்னுணர்வால் இழுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அதை அவர்கள் விடமுடியாது. கடும் நோன்பு என முழு வாழ்க்கையும் ஆக்கிக் கொண்டவர்கள் எவரும் இடைக்கச்சையை அவிழ்த்து தலைமேல் வீசி கூத்தாடி வரும் இந்த யாதவனின் பேருவகையை அடைய முடியாது. இக்களிவெறியின் மறுபக்கமென இருக்கிறது குருதியும் கண்ணீரும் உண்டு விடாய் தணிக்கும் அத்தெய்வம்.

பந்த ஒளிப்பெருக்கின் உள்ளே யாதவர்களின் வெறித்த கண்களும் கூச்சலில் திறந்த வாய்களும் அலையடித்த கைகளும் வந்து பெருகி எங்கும் நிறைந்தபடியே இருந்தன. கைகளை தட்டியபடியும் ஆடைகளை தலைமேல் சுழற்றி வீசி குதித்தபடியும் தொண்டைநரம்புகள் அடிமரத்து வேர்களென புடைக்க, அடிநா புற்றுக்குள் அரவென தவிக்க கூச்சலிட்டபடி அவர்கள் சென்று கொண்டிருந்தனர். தொலைதூரத்தில் “யாதவ இளவரசி வெல்க!” என்றொரு குரல் கேட்டது. அர்ஜுனன் அந்த ஒளிவட்டத்தையே நோக்கி நின்றான். “யாதவ இளவரசி வாழ்க! மதுராவை ஆளும் கோமகள் சுபத்திரை வாழ்க!” என்று மேலும் மேலும் குரல்கள் பெருகின.

அப்பால் இருந்த இருளுக்குள் இருந்து செவ்வொளிக்குள் வந்த சுபத்திரையை அர்ஜுனன் கண்டான். அவள் அணிந்திருந்த வெண்பட்டாடை நெய்ச்சுடர் ஒளியில் தழலென நெளிந்து கொண்டிருந்தது. அவள் நீண்ட குழலும் வெண்முகமும் பெருந்தோள்களும் செந்நிறத்தில் தெரிந்தன. குருதியாடி களத்தில் எழுந்த சிம்மம் மேல் நிற்கும் கொற்றவையென அவள் தோன்றினாள்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 17

ரைவத மலையின் அடிவாரத்தில் இருந்து பெருகி மேலெழுந்த யாதவர்களின் கூட்டம் பெருவெள்ளமொன்று மலையை நிரப்பி மேலெழுந்து கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது. சருகுகளும் செத்தைகளும் நுரைக்குமிழிகளும் அலைகளுமென அது பெருகி வர அதன் விளிம்புவட்டம் குறுகிக்குறுகி மலைமுடி நோக்கி சென்றது. அவர்கள் எழுப்பிய பேரோசை எதிரொலிக்க மலைப்பாறைகள் அனைத்தும் யானைகளென எருமைகளென பன்றிகளென பெருச்சாளிகளென உயிர்கொண்டு ஓசையிடத் தொடங்கின. எக்கணமும் அவை பாய்ந்து எழுந்து பூசல் கொள்ளுமென்று தோன்றியது.

அர்ஜுனன் கைகட்டி அருகர் ஆலயமுற்றத்தில் நின்றபடி அப்பெருந்திரளை நோக்கிக் கொண்டிருந்தான். திரண்டெழும் எதுவும் நீர்மைகொள்வதன் விந்தையை எண்ணிக்கொண்டான். மணலாயினும் விலங்குகளாயினும் மக்களாயினும். அவை விளிம்புகளில் விரியத்தவிக்கின்றன. அனைத்துத் திசைகளிலும் சூழ்ந்து நிறைக்கின்றன. நிரப்புகின்றன. அந்த முகங்களையே மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முகத்திலும் கணத்திலொரு துளியே கண் நிலைக்கமுடிந்தது. ஆகவே முகங்களின் உள்ளுறையும் வெளிப்பாடுமான ஒன்றையே அறியமுடிந்தது. அதுவே அத்திரளென இருந்தது. அனைத்து முகங்களும் கலந்து உருவான ஒற்றை அலைப்பரப்பு. பல்லாயிரம் கோப்பைகளில் நிறையும் ஒரு நதியின் நீர். விராடவடிவம் கொள்ளும் எதுவும் உலகமே வேண்டுமென்று வெறிகொள்கிறது. அனைத்து எல்லைகளையும் முழு ஆற்றலுடன் தாக்குகிறது.

திரளாவதற்கான அகநிலை ஒன்று யாதவர்களிடம் முன்னரே இருந்ததென்று தோன்றியது. ஒவ்வொரு தருணத்திலும் தனித்து தனித்து காட்டில் அலைந்தவர்களுக்குள் அந்தத் தனிமையை முற்றிலும் உதறி தழுவும் தோள்களுடன் தசைகள் முட்டிப் பிணைந்து தசைப்பெருக்காக மாறும் விழைவு இருந்திருக்கும். எப்போதோ பெருந்திரள் என தன்னை உணரும்போது யாதவன் திடுக்கிட்டு விழித்து அண்டையனை வெறுத்து விலகிக்கொள்வான். வேடிக்கையான எண்ணம் ஒன்று எழுந்தது. சாங்கியம் என்ன சொல்லும்? இந்த யாதவர் முக்குணமும் நிகர்நிலையில் இருக்க ஒற்றைப்பேருடலாக எங்கோ இருந்திருக்கின்றனர். நிலையழிந்த குணங்கள் ஒன்றையொன்று நிறைசெய்ய முட்டி மோதிப்பெருகி பல்லாயிரங்களென மாறிக்கொண்டிருக்கின்றன. மீண்டும் அவை நிகர்நிலையடைந்து அமைதிகொள்ளக்கூடும்.

யாதவர் அருகர் ஆலயங்களின் சுற்றுவளைப்புகளை தாவிக் கடந்து வந்தனர். அடிகள் பதிந்த பாறைகளை அவர்களின் உடல்திரள் முழுமையாக மூடி மறைத்தது. சிந்திக்கிடந்த செவ்வொளி வட்டங்களில் தெரிந்து சென்ற அவர்களின் முகங்கள் வெறிகொண்டு விழித்த தெய்வங்கள் போல் இருந்தன. அவர்கள் நடுவே புதுவெள்ளப் பெருக்கில் சுழற்றிக் கொண்டு வரப்படும் மரத்தடியைப் போல சுபத்திரையின் புரவி உலைந்தது. அதை பின்நின்று வாலை முறுக்கி ஊக்கினர் யாதவ இளைஞர். அது முன்னால் எம்பித் தாவ முயன்றபோது சிலர் கழுத்தைப் பிடித்து நிறுத்தினர். அவளை புரவியிலிருந்து பிடித்து இழுத்து கீழே தள்ள சில இளைஞர் முயன்றனர். கூவிச்சிரித்து ஆர்ப்பரித்து அவளை சூழ்ந்துகொண்டனர். சவுக்கை சுழற்றி அவர்களை மாறி மாறி அடித்து அவள் உரக்க சிரித்தாள். அவர்கள் அந்த அடியை தழுவல் போல முத்தங்கள் போல கொண்டனர்.

அக்கூட்டத்தின் களிவெறியில் அவளும் முழுமையாக தன்னை மூழ்கடித்திருப்பதை அர்ஜுனன் கண்டான். புரவியை கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்திச் சுழற்றி பின்னால் அதன் வாலைப் பற்றியவர்களை கால்தூக்கி உதைத்தாள். குதி முள்ளால் அதன் விலாவை குத்தி சுண்டி உந்த அது முன்குளம்பு தூக்கி கூட்டத்தின் நடுவே பாய்ந்து மேலும் பாய முடியாமல் தவித்து சுழன்றது. அதன் காலடியில் விழுந்த யாதவர்கள் எழுந்து அதை உதைத்தனர். அவள் அணுகி வரும்தோறும் அர்ஜுனன் அவளை மட்டுமே நோக்கலானான். அவளது கழுத்தெலும்பு எழுந்த பெருந்தோள்கள், விரிந்த நெற்றி கொண்ட பரந்த முகம், சிரிக்கும் சிறிய கண்கள். கள் மயக்கிலிருப்பது போல் சிவந்திருந்தன அவை.

அவனை அவள் அணுகியதும் சூழ்ந்திருந்தவர்களில் ஒருவன் “அதோ அவன் யோகி! சிவயோகி என்று எண்ணுகிறேன். அவனிடம் கேட்போம்” என்றான். ஒருவன் “யோகியே! நீர் சொல்லும்! யாதவ இளவரசியை மணம் கொள்ளும் தகுதி எனக்குண்டா?” என்றான். பிறிதொருவன் “ஷத்ரியர் எங்கள் இளவரசியை மணம்கொண்டு செல்கையில் இடைக்கச்சை இறுக்கி காட்டில் அலையும் இழிவு எங்களுக்கு என்றால் அதை எப்படி பொறுக்கமுடியும்?” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தபடி “முற்பிறவியில் அவள் ஒரு வண்ணத்துப்பூச்சியாகவும் நீங்கள் அவளை இழுத்துச்செல்லும் எறும்புகளாகவும் இருந்தீர்கள் யாதவர்களே” என்றான். “என்ன சொல்கிறான்?” என்று பின்னால் ஒருவன் கேட்டான். “சொல்லும்” என்றான் ஒருவன். “பாதியிலேயே யானை ஒன்று உங்களை மிதித்துக்கூழாக்கி கடந்துசென்றது. முடிவடையாத அச்செயலை இப்பிறவியில் மீண்டும் செய்கிறீர்கள்.” பின்னால் நின்றவன் “என்ன சொல்கிறீர்?” என்றான். “மணத்தன்னேற்பில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாமே?” என்றான் அர்ஜுனன்.

சுபத்திரை “ஆம். அதையே நானும் சொல்கிறேன். சைப்யரே, நீர் கதாயுதமேந்தி வந்து களத்தில் நில்லும்” என்றாள். “வருகிறேன், உனக்காக களத்தில் என் தலை உடைந்து தெறித்தால்கூட உவகையுடன் விண்ணேறுவேன். ஷத்ரியன் முன் வெறுந்தடியென நிற்பதைவிட அது மேல்” என்றான் சைப்யன். “ஆகா! அவன் ஆண்மகன்” என்று ஒரு முதியவன் கைநீட்டி சொன்னான். சுபத்திரை அர்ஜுனனை நோக்கி “உமது பெயரென்ன?” என்றாள். அர்ஜுனன் “ஃபால்குனன். சிவ யோகி” என்றான். “உம்மை எங்கோ பார்த்திருக்கிறேன்” என்றாள் அவள். “இருக்கலாம். பிறப்பால் நான் ஷத்ரியன். ஷத்ரியர்களின் முகங்கள் ஒன்று போலுள்ளன என்று சொல்வார்கள்” என்றான் அர்ஜுனன். “இல்லை, உமது விழிகளை வேறெங்கோ பார்த்திருக்கிறேன்” என்றபின் அருகே வந்தாள்.

அவள் புரவியை பற்றியபடி வந்த யாதவர்கள் அவனை நோக்கி கூச்சலிட்டனர். அவர்களை பின்னாலிருந்து நெருக்கிய கூட்டத்தால் மொத்தமாக அடித்துச்செல்லப்பட்டனர். “உம்மைப் பார்த்தால் சிவயோகி போல் தோன்றவில்லையே” என்றான் ஒருவன். “இளைஞரே, உமது தாடியை நான் பிடித்திழுத்துப் பார்க்கலாமா?” என்று ஒரு முதிய யாதவன் எட்டி அர்ஜுனன் தாடியை பிடித்துக் கொண்டான். அர்ஜுனன் அவன் கையை வளைத்து எளிதாக தூக்கி அப்பால் இட்டான். திரும்பி சுபத்திரையை நோக்கி “இவ்விழவில் யாதவப் பெண்கள் வருவதில்லை என்று அறிந்தேனே” என்றான். “ஆம். வழக்கமாக வருவதில்லை. இம்முறை நான் வந்துள்ளேன். அது என் மூத்தவரின் ஆணை” என்றாள் சுபத்திரை.

“அவளுக்கு மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது” என்று ஒரு யாதவன் கைநீட்டி கூறினான். மேலும் மேலும் பெருகி வந்து கொண்டிருந்த யாதவர்களின் திரள் அவர்களை தள்ளி முன்னால் கொண்டு சென்றது. அர்ஜுனன் ஏராளமான தோள்களால் அள்ளிக்கொண்டு செல்லப்பட்டான். கூச்சல்களிடையே அவன் குரல் கேட்கவில்லை. “அவளுக்கு மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது. அஸ்தினபுரியின் அரக்கன் வந்து அவளை கொள்ளவிருக்கிறான். மூடன்!” என்றான் ஒருவன். அர்ஜுனன் “ஊழ் அவ்விதம் இருந்தால் எவர் என்ன செய்ய முடியும்?” என்றான். சுபத்திரை “ஊழ் நடத்துபவர் என் தமையன். அவர் ஆணைப்படி நான் இங்கு வந்தேன்” என்றாள்.

“இங்கு அவளுக்கு மணமகன் கிடைக்கவிருக்கிறான் என்று நிமித்திகன் ஒருவன் சொன்னான்” என்று ஓர் இளைஞன் கூவினான். “இளைய பாண்டவனாகிய பார்த்தன் இங்கு வரப்போகிறான். அவளை சிறைபற்றிக்கொண்டு செல்லவிருக்கிறான்.” கடும் சினத்துடன் பின்னால் இருந்து ஒரு யாதவன் தலைதூக்கி “அதை சொன்னவன் யார்? இப்போதே அவன் நாவை வெட்டுகிறேன். சொன்னவன் யார்?” என்றான். “ஏன்? நான் சொன்னேன். வெட்டு பார்க்கலாம்” என்றபடி சொன்னவன் முன்னால் வந்தான். அவனை நோக்கி பாய்ந்தவனை பிறர் அள்ளிப் பற்றி விலக்கினர். “விருஷ்ணி குலத்தில் ஒரு யாதவன் இருக்கும்வரை இளைய பாண்டவன் எங்கள் இளவரசியை கொள்ள மாட்டான்” என்றான் அவன். “ஏனெனில் அஸ்தினபுரியின் அரசருக்கு அவளை கொடுக்க வேண்டும் என்பது விருஷ்ணி குலத்து பலராமரின் விருப்பம். அதை மீற இளைய யாதவருக்கும் உரிமையில்லை.”

வசைகள் வெடிக்க பூசல் ஒன்று தொடங்கவிருந்தது. “விலகுங்கள். இதை பேச இப்போது நேரமில்லை” என்று அவர்களைப் பிடித்து விலக்கினர். “விலகுங்கள் விலகுங்கள்” என்று அருகே பாறைமேல் எழுந்த குஜ்ஜர் குலத்துக் ஏவலன் ஒருவன் கூவினான். அவன் குரல் இரைச்சலில் மறையவே தன் கையில் இருந்த கொம்பை உரக்க ஒலித்து கைவீசி விலகிச் செல்ல ஆணையிட்டான். பெருகி வந்த யாதவர்கள் ஐந்து அருகர் ஆலயத்தை அடைந்தனர். முற்றத்தை நிறைத்திருந்த அருகநெறியினருக்கு சுற்றும் பெருகி அலைபாய்ந்தனர். “ஐந்து அருகர்களுக்கு வெற்றி! ஐந்தவித்தவர்களுக்கு வெற்றி! ஐந்துபருக்களை வென்றவர்களுக்கு வெற்றி” என்று அவர்கள் கூவினர். வெள்ளுடை அணிந்த ஐந்து படிவர்கள் உள்ளிருந்து வந்து நீரையும் மலர்களையும் அள்ளி யாதவர்கள் மேல் வீசி வாழ்த்தினர்.

“விலகிச் செல்லுங்கள். அப்பால் விலகிச் செல்லுங்கள்” என்று மூங்கில் மேடைகளில் ஏறி நின்று குஜ்ஜர்கள் கூவினர். “நிரை வகுத்து மலை நோக்கி செல்லுங்கள்” என்றனர். ஒருவரை ஒருவர் முட்டி கூச்சலிட்டபடியும் எம்பி குதித்து ஆர்ப்பரித்தபடியும் அரண்மனையை வளைத்து மறுபக்கம் சென்ற பாதையில் பரவி இறங்கினர் யாதவர். அங்கே சுடர்கள் ஒளிவிட்ட சிறிய விமானத்துடன் நின்றிருந்த ரைவதகரின் ஆலயத்தின் முன் கட்டப்பட்டிருந்த மணிமண்டபத்தின் முன் கண்டாமணி முழங்கத்தொடங்கியது. “நிரை வகுத்துச் செல்லுங்கள். நிரை வகுத்துச் செல்லுங்கள்” என்று ஆணை எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தபோதும் எங்கும் நிரை என ஏதுமிருக்கவில்லை. ஆனால் மண்ணின் மேடுபள்ளங்களும் அவற்றை அறிந்த கால்களின் விருப்பமும் இணைந்து அதற்கென ஓர் ஒழுங்கு அமைந்தது.

நெடுந்தொலைவில் தன்னைவிட்டு விலகிச் சென்றிருந்த சுபத்திரையை நோக்கியபடி வெள்ளத்தில் எழும் நெற்றுபோல அர்ஜுனன் சென்றான். உடலை அப்பெருக்குக்கு விட்டுக்கொடுத்தபோது விழிகளை முழுமையாக அக்காட்சிகளில் ஈடுபடுத்த முடிந்தது. பல்லாயிரம் கால்கள் கொண்ட பெரும் புரவியொன்றின்மேல் ஏறியவன் போல். கூட்டத்தை நோக்கி மலர்களையும் மஞ்சள் அரிசியையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தனர் அருகநெறிப் பூசகர். முட்டித் ததும்பி கூட்டத்தில் நின்று ஒரு கணம் ஆலயக் கருவறைக்குள் எழுந்த ரைவதகரின் சிலையை நோக்கினான் அர்ஜுனன். நெடுந்தொலைவில் என விழித்து பதிந்திருந்தன விழிகள். வலது கையில் மருத்தன் அளித்த வாளும் இடது கையில் மொக்கவிழாத சிறு தாமரையும் இருந்தன. அவரது காலடியில் கனிகளும் காய்களும் அன்னமும் அப்பமும் இன்னுணவும் எட்டு மங்கலங்களும் படைக்கப்பட்டிருந்தன. சூழ்ந்திருந்த நெய்விளக்குகளின் வெளியில் அக்காட்சி திரைச்சீலை ஓவியமென அலையடித்தது. விழிகள் ஒரு சுற்று அக்காட்சியை தொட்டு வருவதற்குள் நெடுந்தொலைவுக்குள் அவனை தூக்கிச் சென்றுவிட்டது கூட்டம்.

இந்திரபீடத்தின் அருகே கூட்டம் சென்றபோது அங்கு பாறைகளின் உச்சியில் நின்றிருந்த குஜ்ஜர்கள் கைகளில் ஏந்திய பந்தங்களை சுழற்றியும் கொம்புகளை முழக்கியும் அக்கூட்டத்தை வழிப்படுத்தியும் குன்றைச் சுற்றி அமரவைத்தனர். தொன்மையான ஆணை ஒன்று அவர்களின் அகப்புலனில் உறைவதுபோல யாதவர் மண்ணில் புதர்களுக்கும் உருளைப்பாறைகளுக்கும் ஊடாக அமர்ந்தனர். பின் நிரையில் வந்துகொண்டிருந்தவர்கள் அந்த அமைதியைக்கேட்டே அமைதிகொண்டனர். அந்தப்பெருங்கூட்டம் ஓசையின்மையின் இருளுக்குள் பெய்தொழிவது போல தோன்றியது.

கீழிருந்து வந்தவர்கள் வந்து முடிந்ததும்  மலைப்பகுதியெங்கும் யாதவர்கள் முற்றிலும் படிந்து ஓசை அழிந்தனர். இருளின் திரை மேலும் தடித்தது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த குரல்பெருக்கு ஓசையற்ற ஒன்றாக மாறி எப்போதும் செவிகளை சூழ்ந்திருப்பதுபோல அர்ஜுனன் உணர்ந்தான். கீழே அருகர் ஆலயத்திலிருந்து மணிகளின் ஓசைகள் எழுந்தன. அங்கிருந்து ஒற்றை விளக்கு ஒன்று இருளுக்குள் கண்காணா நீர்ப்பெருக்கொன்றால் கொண்டு வரப்படுவது போல மெல்ல அலை பாய்ந்தபடி வந்தது. அருகணைந்தபோதுதான் அதைத் தொடர்ந்து பெரிய அணி நிரையாக அருக நெறியினர் ஓசையின்றி நடந்து வருவதை அர்ஜுனன் கண்டான்.

கைகூப்பி நடந்துவந்த அவர்கள் யாதவர்கள் நடுவே பிளந்திருந்த பாதை வழியாகச் சென்று இந்திரபீடத்தை அணுகி அதன் அடிவாரத்தில் பெரிய வளையமாக சுற்றி அமர்ந்தனர். ஒருவரை ஒருவர் முட்டி மோதாமல் பல்லாயிரம் முறை பயிற்சி செய்யப்பட்ட ஓரு படை நகர்வு போல மிக இயல்பான ஒழுங்குடன் அவர்கள் சென்றனர். இருளுக்குள் கூட்டம் பெருகிச் சென்றுகொண்டிருந்த காலடிகளிலிருந்து அவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருப்பதை உணர முடிந்தது. பெண்களும் குழந்தைகளும் முதியவரும் அடங்கிய அப்பெருங்கூட்டம் ஓருடலும் பல்லாயிரம் கால்களும் கொண்ட அட்டை போல மாறியிருந்தது.

அவர்கள் அமர்ந்து முடிந்ததும் அங்கிருந்த பாறை ஒன்றின் மேலிருந்து ஏவலர் தலைவன் பெருங்கொம்பை முழக்கினான். அதை ஏற்று மலை முழுக்க இருந்த பல்வேறு பாறைகளில் இருந்து ஏவலர்கள் கொம்போசை எழுப்பினர். மலை முற்றிலும் அமைந்துவிட்டது என்று தோன்றியது. யாதவர் சூழ தரையில் அமர்ந்திருந்த அர்ஜுனன் தலைக்கு மேல் இருந்த இந்திரபீடத்தை நோக்கிக் கொண்டிருந்தான். இளைய யாதவரும் அரிஷ்டநேமியும் அக்கூட்டத்தில் எங்கோ இருக்கிறார்கள் என்று எண்ணினான். அவர்கள் இருவர் அகத்தையும் மிக அருகே என பார்க்க முடிந்தது.

இருவர் முகமும் ஒரே உணர்வு நிலையில் இருக்குமென்று நினைத்தான். ஒரு கோப்பையிலிருந்து அதேஅளவுள்ள இன்னொரு கோப்பைக்கென அவர்களின் உள்ளங்களை துளிததும்பாமல் குறையாமல் ஊற்றிவிட முடியும். இருமுனைகள். முற்றிலும் ஒன்றை ஒன்று அறிந்தவை. தன்னை அறிவதற்காக மறுமுனையை கூர்ந்து நோக்குபவை. முற்றிலும் ஒன்றை ஒன்று நிறைப்பவை. சாங்கியம் என்ன சொல்லும்? இரண்டும் இணைகையில் முக்குணங்களும் முழுதமைய முதல்அசைவின்மை நிகழ்கிறதா? அல்லது வைசேடிகம் என்ன சொல்லும்? இன்மையை முழுதும் நிரப்புவது இன்மைதானா? பொருண்மை எதுவும் பிறிதொன்றாக ஆக முடியாது. பொருண்மை என்பதே தனித்தன்மைதான். இன்மையின் விசேஷமென்பது இன்மையே. இன்மை என்பது எந்நிலையிலும் நிகரானது.

புன்னகையுடன் துவராடை அணிந்து தத்துவத்தில் இறங்கிவிட்டோமா என்று எண்ணிக்கொண்டான். அருகிருந்த யாதவனிடம் மெல்ல “இங்கு நிறைந்துநிற்கும் அமைதியை இப்பாறைகள் யுக யுகங்களாக பேணி வந்தன அல்லவா?” என்றான். திகைத்த நோக்குடன் அவன் “ஆம்” என்று சொல்லி விழிகளை திருப்பிக் கொண்டான். பின்பு அறியாமல் தன் உடலை சற்று அசைத்து விலகினான். அர்ஜுனன் சிரிப்பை அடக்கிக்கொண்டு மறுபக்கம் திரும்ப அவனை நோக்கிக் கொண்டிருந்த யாதவன் ஒருவன் பதறி விழி திருப்பினான். “நாம் பாறைகளைப் போல் ஆக முடியாது யாதவரே?” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம்” என்றான் அவன் நிலையழிந்த விழிகளுடன். “ஏனென்றால் பாறைகள் எண்ணங்களால் தங்கள் உடலை அசைக்கும் வலுவற்றவை.”

அவன் உடைந்த குரலில் “உண்மைதான்” என்றான். “மானுடர் தங்கள் உள்ளங்களை உருமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எனவே உருமாறிக்கொண்டே இருக்கிறார்கள். நீர்த்துளிகளைப் போல. நீர்த்துளியை அவ்வடிவில் நிறுத்துவது அதன் உள்விழைவு அல்லவா?’’ அவன் “ஆம்” என்றான். அருகே இருந்தவர்களை பதற்றமாக நோக்கினான். “முள் முனையில் நின்றிருக்கும் நீர்த்துளியே அவர்கள் உள்ளம்” என்றான். “ஆம்” என்ற பின் யாதவன் தலைகுனிந்து கண்களை மூடிக்கொண்டான். அர்ஜுனன் இருளுக்குள் சிரித்துக் கொண்டான். யாதவனின் உடல் பூனையை கட்டிப்போட்ட பை போல அசைந்துகொண்டிருந்தது.

இந்திரபீடத்தைச் சூழ்ந்து அமர்ந்திருந்த அருகநெறியினரில் எவரோ குழலிசைத்து பாடத்தொடங்கினார்கள். அவர்களின் தொன்மையான குலப்பாடல் .ஒவ்வொருவருக்கும் அந்த இசையொழுங்கும் வரிகளும் தெரிந்திருந்தன.. எனவே மிக இயல்பாக ஆணும் பெண்ணும் அதில் இணைந்து கொண்டனர். ஒற்றைக்குரலென. காட்டை நிறைக்கும் சீவிடுகளின் பாடல் போல அவ்விசை இந்திரபீடத்தை சூழ்ந்து ஒலிக்கத் தொடங்கியது. 'நாங்கள்’ என்று சொல்வது போல் இருந்தது. 'நாங்கள்! நாங்கள்!’ என்று அலையடித்தது. ‘இங்குளோம்! இங்குளோம்!’ என்று தன்னை உணர்ந்து 'இவையனைத்தும்! இவையனைத்தும்!’ என சூழலை நோக்கி பரவத்தொடங்கியது. 'எங்கு? எங்கு?’ என அதன் வினா எழுந்தது. 'எவ்வண்ணம்? எவ்வண்ணம்?’ என்று அது வியந்தது. பின்பு 'வருக! வருக!’ என்று அழைத்தது.

அவ்வழைப்பு மன்றாட்டாகியது. அம்மன்றாட்டு நீண்டு இருளென்றாகிய வானில் நெளிந்து துடித்தது. மலை விளிம்பில் பற்றிக் கொண்டிருப்பவனின் கைதுழாவல் போல. நீரில் மூழ்குபவனின் இறுதி கையசைப்பு போல. ஒரு சொல்கூட விளங்காமலே அப்பாடலை அத்தனை தெளிவாக உள்வாங்க முடிந்தது. அத்தனை பெருங்கூட்டம் ஏற்றுப்பாடுவதென்றால் பாடல் மிக எளிமையானதாக இருக்கவேண்டும். மிகக்குறைவான சொற்களே சொல்லப்பட்டிருக்க வேண்டும். தனி மனிதர்கள் கற்பவை விரிவானவை. சிக்கலானவை. புரிந்துகொள்ள கடினமானவை. பெருந்திரளான மனிதர்களை நோக்கி அறிவு விரிவடையுந்தோறும் அது எளிமையாகிறது. ஆனால் பெருவிசையும் பொருட்செறிவும் கொண்டதாக மாறுகிறது.

அர்ஜுனன் அந்த மலைஉச்சியின் பெருவிளக்கன்றி வேறெதையும் பார்க்க முடியாதிருப்பதை எண்ணிக் கொண்டான். இருளில் ஒற்றைவிளக்கு மட்டுமே தெரியும்போது விழிக்கு வேறு வழியே இல்லை. சூழ்ந்திருந்த விண்மீன்களின் நடுவே செந்நிறமான தீற்றல். மானுடர் அமைத்த விண்மீன். தூண்டிலில் சிறு புழு. விண்ணில் ஏதோ ஒன்று பசித்த வாய்திறந்து அருகணையலாம். பாடல் ஓய்ந்தது. அதன் செவிமீட்டலும் பின் நினைவுமீட்டலும் எஞ்சியிருந்தன. பின்னர் மெல்ல அவையும் அடங்கின. காலம் என்ற உணர்வு மட்டுமே ஒவ்வொருவருள்ளும் எஞ்சியிருந்தது.

இங்கிருக்கிறோம் என்ற உணர்வாக இருந்தது காலம். இன்னும் எத்தனை நேரம் என்று பதற்றமாக தன்னை உருமாற்றிக் கொண்டது. நெடுநேரம் அங்கிருக்கிறோமோ என்னும் சலிப்பாக தன்னை விரித்துக் கொண்டது. தெரிந்த ஒவ்வொன்றாக அள்ளி அப்பெரும் சலிப்பை நிரப்ப முயன்றது. அத்தனை எண்ணங்களை அள்ளிப் போட்டாலும் அப்பெரும் இன்மையின் ஒரு பகுதிகூட நிரம்பாததைக் கண்டு சலித்து மீண்டும் எழ விரும்பியது. அவ்வெண்ணங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக ஒருகணத்துளி போல மாற அத்தகைய கணங்களால் ஆன முடிவிலி ஒன்று கண்முன் இருப்பதைக் கண்டு அஞ்சி நின்றது.

காலம் சூழ்ந்திருந்த இருட்டாக விண்மீன் வெளியாக அதன் நடுவே எழுந்து நின்றிருந்த சிவந்த சுடராக இருந்தது. சென்ற நினைவுகளாக நொறுக்கி படிமத்துளிகளாகி பொருளின்றி கலந்து அருவி என அகத்துள் எங்கோ பெய்து கொண்டிருந்தது. வானில் அந்த தனிச்சுடர் மெல்ல தவித்தாடிக் கொண்டிருப்பதை அர்ஜுனன் நோக்கி அமர்ந்திருந்தான். எங்கிருந்தோ காற்று ஒன்று கடந்துசெல்ல அது சரிந்து கீழ்நோக்கி இழுபட்டு வளைந்து மேலெழுந்து துடித்தது. மீண்டும் தழைந்து கீழ் நோக்கி சுழன்று எழுந்தது. கரிய பசுவின் நாக்கு போல. பிறிதொரு காற்று அதை பிடுங்கி பறக்கவிட்டது. வானில் அலையடித்து இழுபட்டு பின்பு அறுபட்டதுபோல அணைந்தது.

சூழ்ந்திருந்த அனைவரிலுமிருந்தும் ஒற்றைக் குரலென ஓர் வியப்பொலி எழுந்தது. பெரியதோர் உறுமல் போல எழுந்து ரீங்காரமாக மாறி மறைந்தபின் மௌனமாக ஓசையின்மையாக ஆகி இருளுக்குள் எஞ்சி விம்மி அணைந்தது. முற்றிருளுக்குள் பெருந்திரளெனப் பெருகிய ஒற்றை உடலாக ஒவ்வொருவரும் மாறுவது போல் இருந்தது. தசைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முன்னும் பின்னும் என நெசவாகி ஒரு படலமாயின. சுருக்கி இறுக்கி ஒரு துளியாயிற்று அது. அங்கே இருந்தது ஒரு மானுடம்.

இந்திரபீடத்தின் மேல் செந்நிறமான விண்மீன் ஒன்று வந்து அமைவதை அர்ஜுனன் கண்டான். அது விழிமயக்கா என்று எண்ணியபோது அக்கூட்டத்திலிருந்து தான் தனித்திருப்பதை அறிந்தான். குஜ்ஜர் என யாதவர் என ஆகாத ஒருவன். எங்கோ அரிஷ்டநேமியும் இளைய யாதவரும் அவ்வண்ணம் விலகி தனித்திருக்கக்கூடும்.

இந்திரபீடத்தின் நேர் மேலாக விண்ணில் அதை கூர்ந்து நோக்குவதுபோல நின்று நடுங்கியது. இந்திரபீடத்தை ஒரு மெல்லிய சரடால் கட்டி வான் நோக்கி தூக்க முயல்வதுபோல நகர்ந்தது. அப்போது மிகத்தொலைவிலென ஓர் இசையை அவன் கேட்டான். அவன் அறிந்திராத இசைக்கருவி. அது குழலா யாழா என்று அறிய முடியாதது. ஒற்றைச் சொல். ஆணையென கொஞ்சலென அருளென அது நின்றது. தான் அதைக் கேட்டதையே அது அவிந்தபின்னர்தான் அவன் அறிந்தான். வெறும் உளமயக்கா என அகம் வியந்தது. இல்லை இல்லை என நினைவு எழுந்து கூவியது.

சில கணங்களுக்குப் பின் அங்கிருந்த அனைவரும் ஒற்றைக் குரலில் வாழ்த்தியபடி விழித்தெழுந்தனர். ரைவத மலை குரல் எடுத்துக் கூவியது. “காற்றை ஏந்தியவன் புகழ் வாழ்க! குஜ்ஜர் குலத்தலைவர் புகழ் வாழ்க! ரைவதகர் புகழ் என்றென்றும் வாழ்க!” மலையின் குரலை முதல்முறையாக கேட்கிறோமென அர்ஜுனன் எண்ணிக் கொண்டான். வான்சரிவில் முகில்களிலிருந்து நிலவு எழத்தொடங்கியது.

பகுதி ஐந்து : தேரோட்டி – 18

காலைவெயில் ஒளி கொண்டுவிட்ட போதும் வானத்தில் மங்கலாக நிலவு தெரிந்தது. அர்ஜுனன் தரை முழுக்க விண்ணிலிருந்து உதிர்ந்து பரவியது போல கிடந்த யாதவர்களை மிதிக்காது ஒவ்வொருவராக தாண்டி காலெடுத்து வைத்து நடந்தான். இரவு நெடுநேரம் களிவெறியும் கூச்சலுமாக திளைத்து உடல் சோர்ந்து படுக்கும்போது அவர்கள் அங்கு முள்ளும் கல்லும் இல்லாமல் இருப்பதை மட்டுமே பொருட்டென கொண்டிருந்தார்கள். வெயிலில் புழுதியிலும் சருகிலுமாக அவர்கள் கிடந்ததை காணும்போது போர்க்களம் ஒன்றின் அந்தி போல தோன்றியது.

எச்சில் ஒழுகிய திறந்த வாய்களில் உதடுகளை அதிரவைத்து வெளிவந்த மூச்சொலியும் அவ்வப்போது சிலர் முனகியபடி கைகளை அசைத்ததும் புரண்டு படுத்ததும்தான் உயிருள்ளவர்கள் என்று காட்டியது. அர்ஜுனன் காலால் மிதிபட்ட ஒருவன் “நூறு கன்றுகள்” என்று சொன்னபடி தன் தோளை தட்டிக் கொண்டு மேலும் சுருண்டான்.

உடல்களால் நிரம்பியிருந்தது ரைவதமலையின் மேலெழுந்து சென்ற கூழாங்கல்பரப்பு. அதன்மேல் வளைந்து சென்ற உருளைக்கல் பாதையில் எவரும் இருக்கவில்லை. வாடிய மலர்களும் மஞ்சள் அரிசியும் கனிகளும் சிதறிய படையல் உணவுகளும் மிதிபட்டு மண்ணுடன் கலந்திருந்தன. அதன் மேல் காலை எழுந்த சிறிய மைனாக்கள் அமர்ந்து இரைதேடிக் கொண்டிருந்தன. தூங்கும் மனிதர்கள் மேல் சிறகடித்துப் பறந்து அவர்கள் உடல்களின் இடையே அமர்ந்து சிறகு ஒதுக்கி சிறுகுரலில் பேசிக்கொண்டன.

முந்தையநாள் இரவு அங்கு நிகழ்ந்தவை எழுந்து மறைந்த ஒரு கனவு போல் ஆகிவிட்டிருந்தன. அங்கிருந்த அனைவரும் ஒருவரோடொருவர் உடலிணைத்து ஒற்றை ஊன்பரப்பென ஆகி ஒற்றை அகம்கொண்டு கண்ட கனவு. அவன் அந்த இசையை நினைத்துக் கொண்டான். அது முந்தைய நாளிரவு அளித்த உள எழுச்சியை அப்போது எவ்வகையிலும் அளிக்கவில்லை. அந்த இசை எப்படி எழுந்திருக்கக்கூடும் என்று உள்ளம் வினவிக்கொண்டே இருந்தது. அங்கு அதை எழுப்பும் கருவிகள் நிறுவப்பட்டிருக்கலாம். சூதர்களை வைத்து அதை எழுப்பியிருக்கலாம். ஆனால் அத்தனைபேரும் கேட்கும் இசை என்றால் அங்கு பலநூறு சூதர்கள் இருந்தாக வேண்டும். அவர்களை இந்திரபீடத்தின் மொட்டை உச்சி மேல் ஒளித்து வைப்பது இயலாது. இயற்கையாக எழுந்த இசை அது. அங்குள்ள பாறைகளால் காற்று சிதறடிக்கப்பட்டிருக்கலாம். அங்கே ஏதேனும் மலைப் பிளவுகளோ வெடிப்புகளோ இருந்து காற்றை பெருங்குழலிசையாக மாற்றியிருக்கலாம்.

துயில்நீப்பினால் அவன் உடல் களைப்படையவில்லை. ஆனால் முந்தையநாள் இரவு முழுக்க சித்தத்தில் கொப்பளித்த காட்சியலைகள் சலிப்புறச் செய்திருந்தன. எந்த எண்ணத்தையும் முன்னெடுத்துச் செல்லமுடியாத அளவுக்கு அவை எடையுடன் அழுத்தின. எங்காவது படுத்து நீள்துயிலில் அமிழ்ந்து புதியவனாக விழித்தெழுந்தால் மட்டுமே அவற்றிலிருந்து மீளமுடியும் என்று தோன்றியது. ஆனால் வேட்டை விலங்குகளுக்கு ஆழ்துயில் அளிக்கப்படவில்லை.

ரைவதமலையின் உச்சியில் இருந்த அருகர் ஆலயத்தின் முற்றம் ஒழிந்து கிடந்தது. புலரிக்கு முன்னரே அதை நன்கு கூட்டியிருந்தார்கள். மூங்கில் துடைப்பத்தின் சீரான வளைகோடுகள் அலையலையென படிந்த மணல்முற்றத்தில் அங்கு நின்ற வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பொன்னிறப் பழங்கள் புதிதென கிடந்தன. ஓரிரு பறவைக்கால்களின் தடம் தெரிந்தது. ஐவர் ஆலயத்தின் வாயில்கள் திறந்திருக்க உள்ளே மலரணியும் மங்கலஅணியும் பூச்சணியும் புகைத்திரையும் இன்றி கரிய வெற்றுடல்களுடன் ஐந்து அருகர்களின் சிலைகள் நின்றிருந்தன.

உள்ளே சென்று வழிபட வேண்டுமென்று எண்ணினான். அந்த அலைஓவியம் காற்றில் கரைவதுவரை அப்படியே இருக்கட்டுமென்று தோன்றியது. அந்தக்காலை முடிந்தவரை கலையாமலிருக்கட்டும். கைகளை மார்பில் கட்டிக்கொண்டு ரிஷபரின் ஓங்கிய பெருந்தோள்களை நோக்கிக் கொண்டு நின்றான். ஐந்து கரிய பளபளப்புகள் நேற்றிரவு இங்கு நடந்த எவற்றுடனும் தொடர்பற்றவை.

முன்பு கலிங்கத்துக் கொல்லர்கள் இரும்பையும் கரியையும் கலந்துருக்கி உருவாக்கும் ஒருவகை படைக்கலன்கள் அஸ்தினபுரியில் விற்பனைக்கு வந்திருந்ததை எண்ணிக் கொண்டான். கன்னங்கரியவை, உறுதியானவை. அவற்றின் பரப்பை கண்மூடி கைகளால் தொட்டால் பளிங்கு என்றே உளமயக்கு ஏற்படும். வேல்முனைகளாக, வாட்களாக அடிப்பதற்குரியவை என்றான் கொல்லன். அவற்றை வேட்டைக்கு கொண்டு சென்றபோதுதான் தனித்தன்மை தெரிந்தது. அவை எலும்புகளை உடைத்து ஊன்கிழித்து குருதிநீராடி மீளும்போது சற்றும் முனைமடியவில்லை. ஒரு சொட்டு செந்நீர்கூட இன்றி புத்தம் புதியவை என தோன்றின.

தன் உள்ளத்தில் எழுந்த அந்த ஒப்புமையைக் கண்டு அவன் திகைத்தான். அதை வேறெவரும் அறிந்திருப்பார்களோ என்பதுபோல் இருபுறமும் பார்த்தான். நீள்மூச்சுடன் கைகளை தலைக்குமேல் தூக்கி ஐந்து அருகர்களையும் வணங்கினான். இரண்டு படிவர்கள் பெரிய பூக்குடலைகளுடன் நடந்து வந்து ஆலயத்திற்குள் நுழைந்தனர். மூவர் சற்று அப்பால் மண் குடங்களில் நீருடன் வந்தனர். அவர்களுக்கும் நேற்றிரவு ஒரு கணக்குமிழியென வெடித்து மறைந்திருக்கும். இன்று புதியவர்களென மீண்டிருக்கிறார்கள். படிவர் ஒருவர் அவனை நோக்கி வாழ்த்துவது போல் புன்னகைத்து சற்றே தலை சாய்த்து உள்ளே சென்றார்.

அர்ஜுனன் திரும்பி அரண்மனைக்குச் செல்லும் பாதையில் நடந்தான். ரைவத குலத்து அரசர்களின் மாளிகைமுற்றத்தில் நான்கு புரவிகள் மட்டும் சேணமோ கடிவாளமோ இன்றி காலை வெயிலில் மின்னிய வெண்ணிற தோற்பரப்புடன் நின்று ஒற்றைக்கால் தூக்கி துயின்றுகொண்டிருந்தன. காவலற்ற வாயிலில் பட்டுத்திரைச்சீலை ஆடியது. அவனது காலடி ஓசையைக்கேட்டு ஒரு வெண்புரவி கண்களைத் திறந்து திரும்பி அவனை நோக்கி மூச்சுத் துளைகள் விரிய மணம் பிடித்தது. தொங்கிய தாடையை அசைத்து தடித்த நாக்கை வெளிக்கொணர்ந்து துழாவி மீண்டும் பெருமூச்சு விட்டது. அரண்மனைக்குள் ஏவலர்களின் மெல்லிய பேச்சொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.

அரண்மனைக்குள் நுழையாமல் வலதுபக்கமாக திரும்பிச்சென்ற பாதையில் நடந்து விருந்தினர் இல்லங்கள் அமைந்த இணைப்புப் பகுதி நோக்கி சென்றான். அவ்வேளையில் இளைய யாதவர் அங்கு இருப்பாரென அவன் அறிந்திருந்தான். அவரை சந்திக்கச் சென்ற ஒரு தருணத்திலும் முன்னரே அவர் அங்கு சித்தமாக இல்லாமல் இருந்ததில்லை. அதை எண்ணி ஒருமுறை வியந்திருக்கிறான். முன்னரே சொல்லாமல்கூட அவரை பார்க்க சென்றிருக்கிறான். அப்போதும் அவன் வருவதை முன்னரே அறிந்தவர்போல் காத்திருக்கும் இளைய யாதவரையே கண்டான். “நான் வருவதை அறிந்தீரா யாதவரே?” என்று ஒருமுறை கேட்டான். “இல்லை, ஆனால் எவரேனும் வருவார்கள் என்று எப்போதும் சித்தமாக இருப்பது என் இயல்பு” என்றார் அவர்.

மாளிகைப்படிகளில் ஏறி மரவுரித் திரைச்சீலை தொங்கிய வாயிலைக்கடந்து உள்ளே சென்று, கட்டுக்கயிறுகள் முறுகி ஒலிக்க மூங்கில்படிக்கட்டில் கால்வைத்து ஏறி மரப்பலகைகள் எடையில் அழுந்தி ஓசையிட்ட இடைநாழியில் நடந்துசென்று இளைய யாதவரின் அறைவாயிலை அடைந்தான். திரைச்சீலையை விலக்குவதற்கு முன் “வணங்குகிறேன் இளைய யாதவரே” என்றபடி குறடுகளை சற்று அழுந்த மிதித்து கழற்றினான். “உள்ளே வருக!” என்று இளைய யாதவர் குரல் கேட்டது. திரைச்சீலையை விலக்கி உள்ளே சென்றான். அங்கு இளைய யாதவருடன் சுபத்திரையும் இருக்கக்கண்டு ஒரு கணம் சற்று குழம்பி இளைய யாதவரின் கண்களைப் பார்த்தபின் மீண்டான்.

“இளவரசிக்கு வணக்கம்” என்றான் அர்ஜுனன். சுபத்திரை “உங்களை நான் நேற்று பார்த்தேனே” என்றாள். இளைய யாதவர் “ஆம், இவர் பெயர் ஃபால்குனர். பிறப்பால் ஷத்ரியர். ரைவதகரின் பெருமை கேட்டு விழவு கொண்டாட வந்தவர். நெறிநூலும் படைக்கலமும் கற்றவர் என்பதனால் எனக்கு நண்பரானார்” என்றார். சுபத்திரை அவன் கைகளைப் பார்த்து “வில்லவர் என்பது ஐயமற தெரிகிறது” என்றாள். "ஆம், வில்லும் தெரியும்” என்றான் அர்ஜுனன். இளைய யாதவர் அவனை அமரும்படி கைகாட்ட அருகிலிருந்த பீடத்தில் அமர்ந்து நீண்ட தாடியை நீவி விரல்களால் சுழற்றியபடி சுபத்திரையை நோக்கினான்.

அவன் கண்களை மிக இயல்பாக சந்தித்து விழிதிருப்பி இளைய யாதவரிடம் “இவரை முன்னர் எங்கோ பார்த்தது போல தோன்றுகிறது” என்றாள் சுபத்திரை. “நேற்றே அதை இவரிடம் சொன்னேன்.” இளைய யாதவர் அர்ஜுனனை நோக்கிவிட்டு சிரித்தபடி “சிவயோகிகளின் கண்கள் ஒன்றுபோல தோன்றும். ஏனெனில் அவர்கள் பயிலும் ஊழ்கநெறி அவ்வகையானது. அதற்கு மகாதூமமார்க்கம் என்று பெயர்” என்றார். “இவரை துவாரகைக்கு அழைத்திருக்கிறேன் இளையவளே.” “ஏன்?” என்றாள் சுபத்திரை. “விற்பயிற்சியிலும் புரவியாடுதலிலும் நாமறியாத பல நுண்மைகளை இவர் அறிந்துளார். அவற்றை நம்மவர் கற்கட்டுமே என்று எண்ணினேன்.”

சுபத்திரை சற்று ஏளனமாக கையை வீசி சிரித்து “இவரல்ல, கயிலையை ஆளும் முக்கண் முதல்வனின் முதற்படைத்தலைவர் வீரபத்ரனே வந்து ஆயிரம் வருடம் தங்கி போர்க்கலை கற்பித்தாலும் யாதவர் எதையும் கற்றுக் கொள்ளப்போவதில்லை மூத்தவரே. நேற்றிரவு அவர்கள் இந்நகரில் நடந்துகொண்ட முறையைக் கண்டு நான் திகைத்துவிட்டேன். ஒழுங்கென்றும் முறைமை என்றும் ஏதாவது எஞ்சினால் அதைத் தேடிக் கண்டடைந்து மீறிவிட முயல்பவர்கள் போல தோன்றினர். விலங்குகளுக்குக் கூட அவற்றின் தலைமுறைகள் வகுத்தளித்த கால்நெறியும் நிரையொழுங்கும் உண்டு. இவர்கள் வெறும் ஊன்திரள்” என்றாள்.

“நீ பேசிக்கொண்டிருப்பது துவாரகையை தலைமைகொண்டு யாதவப்பேரரசை அமைக்கவிருக்கும் மக்களைப்பற்றி” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் அவர் கண்களை நோக்கினான். அவற்றில் சிரிப்பு இருப்பதை அவன் மட்டுமே அறிந்துகொண்டான். சுபத்திரை சீற்றத்துடன் “எந்நிலையிலும் யாதவரால் ஷத்ரியப் படைகளை எதிர்கொள்ள முடியாது என நேற்று தெளிந்தேன்” என்றாள். “வெறும் திரள். இந்த மலைமக்கள் அருகநெறியைக் கற்று அடைந்துள்ள ஒழுங்கை இதனருகே கண்டபோது நாணத்தில் என் உடல் எரிந்தது.”

“ஆனால் நீங்கள் அத்திரளில் மகிழ்ந்தீர்கள்” என்றான் அர்ஜுனன். “ஆம், இளவரசியாக அது என் கடன். நான் விலகி நிற்க இயலாது” என்றாள் சுபத்திரை. இளைய யாதவர் புன்னகைத்து “அதை நீ இத்தனை பிந்தி புரிந்துகொண்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்றார். “இவர்களை வைத்துக்கொண்டு அரசை அல்ல ஒரு நல்ல மாட்டுப்பட்டியைக்கூட அமைக்க முடியாது. பூசலிடுவதற்கென்றே கிளம்பிவரும் மூடர்கள்” என்றாள் சுபத்திரை.

“இளையவளே, கன்று மேய்க்கும் தொழிலை முற்றிலுமாக கைவிடாமல் யாதவர்களால் போர்வீரர்களாக முடியாது. எதையேனும் படைப்பவர்கள் எந்நிலையிலும் போர் புரிய முடியாது.” வகுத்துரைத்த இறுதிச் சொல் போன்ற அக்கூற்றைக் கேட்டு சுபத்திரை ஒரு கணம் திகைத்தாள். திரும்பி அர்ஜுனனை நோக்கி “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றாள். “ஆம். இவர்களை பயிற்றுவிக்கமுடியாது” என்றான் அர்ஜுனன். “இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தவர்கள். எனவே ஆணைகளை ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல. இவர்களின் ஆணவம் பிறரை தலைவரென ஏற்க மறுக்கிறது. நூற்றுவர் குழுக்களாகக்கூட இவர்களை தொகுக்க முடியாது.”

சுபத்திரை கணநேரத்தில் அவளில் எழுந்த சினத்துடன் பீடத்தைவிட்டு எழுந்து “ஆனால் அவர்கள் அனைவரும் மறுக்கமுடியாத தலைவராக என் தமையனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முன்பு கார்த்தவீரியன் தலைமையில் அவர்கள் ஒருங்கிணைந்திருந்தனர் என வரலாறும் உள்ளது” என்றாள். ஆனால் அவன் சொன்னது உண்மை என்று அறிந்தமையால் எழுந்த சினம் அது என அவளுக்கு உடனே தெரிந்தது.

“ஆம், அறிவேன்” என்றான் அர்ஜுனன். "அவர்களுக்குத் தேவை தலைவனல்ல. தந்தை. தந்தையை வழிபடுவார்கள், தெய்வ நிலைக்கு கொண்டு சென்று வைப்பார்கள். அதற்குரிய அனைத்துக் கதைகளையும் சமைப்பார்கள். ஆனால் தந்தை என்று ஆன பிறகு அவரை மறுக்கத் தொடங்குவார்கள். அவரை மீறுகையில் உள்ளக்கிளர்ச்சிக்கு ஆளாவார்கள். அவர் குறைகளை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அவரை இழிவுசெய்ய வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வார்கள். இவர் அவர்களுக்கு இன்று ஒரு வாழும் மூதாதை மட்டுமே.”

சுபத்திரை அவன் விழிகளைப் பார்த்தபடி ஏதோ சொல்ல வாயசைத்தாள். பின்பு இடை இறுகி அசைய உறுதியான காலடிகளுடன் சென்று சாளரத்தருகே சாய்ந்து நின்றாள். இளைய யாதவர் “இவர் சொல்வதில் ஐயமென்ன இளையவளே? இன்று உன் திருமணத் தன்னேற்பை ஒட்டி என்ன நிகழ்கிறது? ஒரு களத்திலேனும் என்னைத் தோற்கடித்து விடுவதற்கல்லவா யாதவர் அனைவரும் முயல்கிறார்கள்?” என்றார்.

சுபத்திரை “இல்லை, அவ்வாறல்ல” என்றாள். “நான் யாதவப் பெண் என்பதனால் என்னை ஷத்ரியர் கொள்ளலாகாது என்கிறார்கள்.” மெல்ல சிரித்து “என் மேல் அகக்காதல் கொள்ளாத யாதவ இளைஞனே இல்லையென்று தோன்றுகிறது” என்றபின் அர்ஜுனனை நோக்கித் திரும்பி “நேற்று நீங்களே பார்த்தீர்கள் அல்லவா?” என்றாள். “அது உண்மையே” என்றான் அர்ஜுனன். “அவர்கள் உங்களை தங்கள் உடைமை என நினைக்கிறார்கள்.”

“வேறொன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் கண்டது அதன் வெளிப்பாடே” என்றார் இளைய யாதவர். “இவள் விருஷ்ணிகுலத்தின் இளவரசி. துவாரகையில் விருஷ்ணிகளுக்கும் அந்தகர்களுக்கும்தான் முதன்மை இடம் உள்ளது. குங்குரர்களும் போஜர்களும் தாங்கள் ஒதுக்கப்படுவதாக நினைக்கிறார்கள். பெரும்புகழ்கொண்ட ஹேகயர்கள் தங்கள் வரலாற்றை எவரும் எண்ணுவதில்லை என்னும் ஏக்கம் கொண்டிருக்கிறார்கள். இவளை மணப்பதன் வழியாக துவாரகையால் தவிர்க்க முடியாதவர்களாக ஆகிவிடலாமென்று அவர்கள் எண்ணுகிறார்கள்.”

“இயல்பான வழிதானே அது?” என்றான் அர்ஜுனன். “ஆகவே யாதவர்களுக்குள் மட்டும் நிகழும் ஏறுதழுவல்போட்டியில் இவள் மணமகனை தேர்வுசெய்யவேண்டும் என யாதவர்கள் வாதிடுகிறார்கள். அந்தக் கோரிக்கையுடன் அவர்கள் சூரசேன பிதாமகரை அணுக அவர் அவர்களை திருப்பியனுப்பிவிட்டார்” என்றார் இளைய யாதவர். “விருஷ்ணிகளிலேயே ஒரு சாரார் இவளை சேதிநாட்டு சிசுபாலன் மணக்கவேண்டும் என விழைகிறார்கள். அவன் யாதவக்குருதி கொண்டவன் என்கிறார்கள்.”

“யாதவர்களை  பார்த்துக்கொண்டு நேற்று இவ்வூரில் உலவினேன். ஒவ்வொருவரும் இந்த மணத்தன்னேற்பை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தன்னேற்பு விழாவுக்கு வந்து நின்று வென்று உங்கள் கைபற்றும் தகுதி தனக்கு இருப்பதாக எவரும் எண்ணவில்லை. ஆயினும் அந்தப் பகற்கனவில்லாத இளைஞர் எவரும் இல்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் அவர்களின் உள்ளம் செயல்படுவதன் அடிப்படை அந்த எளிய கனவுமட்டும் அல்ல.” அவள் அவன் சொல்வதைக் கேட்பதற்காக விரிந்த விழிகளுடன் அவன் முகத்தை நோக்கி நின்றாள்.

“இன்று நிகழ்ந்துள்ள இவ்விணைவு அரியது. சூரசேனரும் வசுதேவரும் பலராமரும் இயல்பாக ஒருங்கிணைந்து ஒரு தரப்பாக நிற்க மறுதரப்பாக இளைய யாதவர் நிற்கும் ஒரு சூழல் அமைந்துள்ளது. இளைய யாதவர் வெல்வது அரிது என்னும் நிலையும் உள்ளது. சூரசேனரின் தரப்பைச் சார்ந்து நின்று பேசும்போது இளைய யாதவரை எதிர்க்க முடியும். அவர் தோற்கையில் மகிழ்ந்து கூத்தாட முடியும். ஆனால் யாதவர் குடிநன்மைக்காகவும் யாதவர்களின் மூதாதை சூரசேனரின் சொல்லுக்காகவும் நிலை கொள்வதாக தங்களை விளக்கிக் கொள்ளவும் முடியும். குற்ற உணர்வின்றி ஒரு அத்துமீறல். யாதவர்கள் இன்று கொண்டாடுவது அதைத்தான்” என்றான் அர்ஜுனன்.

சுபத்திரை சில கணங்கள் கடந்தபின் நெடுநேரமாக அவனை உற்று நோக்கிவிட்டோம் என உணர்ந்து கலைந்து விழிவிலக்கினாள். தன் பீடத்தில் அமர்ந்து கைகளை முழங்கால் மேல் வைத்து விரல்களை கோத்துக்கொண்டு “இவர் யாதவர்களை நன்கு அறிந்திருக்கிறார்” என்றபின் இளைய யாதவரை நோக்கி “ஷத்ரியர்களால்தான் யாதவர்களை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது போலும்” என்றாள். ஏளனத்துடன் இதழ்கள் வளைய “அவர்கள் தங்கள் எதிரிகளை புரிந்துகொள்வதுபோல தங்களை புரிந்துகொள்வதில்லை” என்றாள்.

அர்ஜுனன் ஒருகணத்தில் சினந்து கனன்றான். அதை புன்னகையாக மாற்றிக்கொண்டாலும் கண்கள் சுடர்ந்தன. “ஷத்ரியர்கள் பிறர் மீதான வெற்றியினூடாக உருவாகிறவர்கள்” என்றான். “இவர் முற்றிலும் ஷத்ரியர் அல்ல. யாதவ குருதியும் கொண்டவர்” என்றார் இளைய யாதவர். “அப்படியா?” என்று அவள் அவனிடம் கேட்டாள். அப்போது வேடிக்கைக் கதையைக் கேட்டு விழிவிரியும் சிறுமியின் தோற்றம் கொண்டிருந்தாள். அவள் தன்னுள் நிகழ்வனவற்றை நுட்பமாக மறைத்துக்கொள்கிறாள் என்று அர்ஜுனன் எண்ணினான்.

”ஷத்ரிய குருதி என்பது கங்கை போல. அதில் பாரதவர்ஷத்தின் அத்தனை குருதிகளும் கலந்துள்ளன” என்றான். அவள் உரக்க நகைத்தாள். கழுத்து நரம்புகள் தெரிய முகவாயை மேலே தூக்கி பறவையொலி போல ஓசையிட்டு அவள் சிரிப்பதை பார்த்தபின் அவன் இளைய யாதவரை நோக்கினான். அவர் விழிகளும் நகைத்துக்கொண்டிருந்தன. அவனுக்கு மட்டுமான நகைப்பு. “கங்கையில் கங்கையே குறைவு என்பார்கள்” என்று சொன்னபடி சுபத்திரை மீண்டும் நகைத்தாள்.

அவளே சிரித்து ஓய்ந்து மேலாடையால் கண்களைத் துடைத்தபின் “பொறுத்தருள்க யோகியே. நான் தங்கள் குலத்தைப்பற்றி நகைத்துவிட்டேன்” என்றாள். “யோகி என்பவன் முதலில் துறக்கவேண்டியது குலத்தை அல்லவா?” என்றான் அர்ஜுனன். அவள் பெருமூச்சுடன் தமையனை நோக்கி “நான் இயல்பாகத்தான் சொன்னேன் மூத்தவரே” என்றாள். அர்ஜுனன் “தாங்கள் மகிழ்வதற்கு ஒரு வாய்ப்பானமைக்கு மகிழ்கிறேன் இளவரசி” என்றான்.

இளைய யாதவர் “மணத்தன்னேற்பு ஒருங்கமைந்த நாள்முதல் ஷத்ரியர்களின் எதிரி ஆகிவிட்டாள்” என்றார். "அதெல்லாமில்லை. ஷத்ரியர்கள் இல்லையேல் யாதவர்கள் அரசமைக்கமுடியாது. இன்றுகூட அஸ்தினபுரியின் படைத்துணை உள்ளது என்பதனால்தான் மதுரா தனித்து நிற்க முடிகிறது” என்றாள் சுபத்திரை. “தாங்கள் அறிவீரா யோகியே? நான் இளைய பாண்டவனின் வில்லால் காக்கப்படுபவன் என்று எண்ணும் யாதவர்களும் உள்ளனர்” என்றார் இளைய யாதவர்.

அந்தச் சொல்விளையாட்டுக்கு நடுவே கண்ணுக்குத் தெரியாமல் பகடை உருண்டுகொண்டிருந்தது. அர்ஜுனன் திடீரென்று சலிப்படைந்தான். இளைய யாதவரின் விழிகளைப் பார்த்தான். அவை அவனை அறியாதவைபோல முழுமையாக வாயில் மூடியிருந்தன. அவள் “இவர் அரசுசூழ்தலை யோகமெனப் பயில்கிறார் போலுள்ளது” என்றாள். இளைய யாதவர் “அதுவும் யோகமே. ஏனென்றால் அதில் பொய்மைக்கு நிறைய வாய்ப்புள்ளது” என்றார்.

இளைய யாதவரின் அணுக்கரும் அமைச்சருமாகிய ஸ்ரீதமர் உள்ளே வந்து தலைவணங்கினார்.  இளைய யாதவர் ஏறிட்டு நோக்க அவர் மெல்லிய குரலில் “அரசரிடமிருந்து செய்தி வந்துள்ளது. துவாரகையின் அரசராக தாங்கள் இம்முறைதான் வந்துள்ளீர்கள். ஆகவே முறைப்படி விடையளித்து வழியனுப்பும் சடங்கு ஒன்று பேரவையில் நிகழவேண்டும் என்றார்” என்றார். அர்ஜுனன் அவரது வருகையை இனிய காற்றுபோல இளைப்பாற்றுவதாக உணர்ந்தான்.

புருவம் சுருங்க “எப்போது?” என்றார் இளைய யாதவர். “ஒரு நாழிகைக்குள் சடங்கு தொடங்கினால் நன்று என்று நான் சொன்னேன். உச்சிவெயில் எழுவதற்குள் இங்கிருந்து நாம் கிளம்பியாக வேண்டும். சடங்கு ஒரு நாழிகை நேரம் நிகழக்கூடும். என்ன முறைமைகள் உள்ளன என்று தெரியவில்லை” என்றார் ஸ்ரீதமர்.

“அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார் இளைய யாதவர். “அதற்கு தாங்கள் அரசணிக்கோலம் கொள்ள வேண்டும் அரசே.  நாம் கஜ்ஜயந்தபுரியின் அரசருக்கு நம் அரசுக்கு உரிய முறையில் பரிசில்களும் அளிக்கவேண்டும்” என்றார் ஸ்ரீதமர். “அத்துடன் நாம் அவருக்கு வாக்களித்துள்ள சில உதவிகளையும் முறைப்படி அவையில் அறிவிக்கவேண்டும்.” இளைய யாதவர் எழுந்து அர்ஜுனனிடம் “சைவரே, நான் இதைப்பற்றி பேசி உரிய ஆணைகளை இட்டுவிட்டு மீள்கிறேன்” என்றபின் ஸ்ரீதமரிடம் “விடைகொள்ளும் சடங்கிற்கு இவளும் வரவேண்டியிருக்குமா?” என்றார்.

“இல்லை. இளவரசி இனிமேல் முழுதணிக்கோலம் கொண்டால் மீண்டும் பயணக்கோலம் கொள்ள நெடுநேரமாகிவிடும். நாம் உடனே கிளம்பவேண்டும். வெயில் சுடத்தொடங்குவதற்குள் நாம் முதல் சோலையை சென்றடையவேண்டும். இச்சடங்கு துவாரகையின் ஆட்சியாளருக்கு உரியது மட்டுமே” என்றார் ஸ்ரீதமர். இளைய யாதவர் “அவ்வண்ணமே ஆகுக!” என்றபின் திரும்பி “இளையவளே, நான் உடனே நீராடி அணி புனைகிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்” என்றார்.

சுபத்திரை “நானும் கிளம்புகிறேன்” என்றபடி எழுந்தாள். “இல்லை, உனக்கு நேரமிருக்கிறது” என்றபின் புன்னகைத்து “நாமறியாத போர்க்கலை ஏதேனும் இவரிடமிருந்தால் அதை கற்றுக்கொள்வோம் என்று எண்ணினேன். நாமறியாத உள ஆய்வுக்கலையும் இவரிடமுள்ளது என்று இப்போது அறிந்தேன். இவர் சொற்களினூடாகவே நம் மூதாதையரை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது” என்றார். சுபத்திரை சற்று தத்தளித்து அவனை நோக்கியபின் தமையனை நோக்கி “ஆம்” என்றாள்.

“இவர் பாரதவர்ஷத்தை நடந்தே பார்த்தவர். இவர் கண்டவற்றை கேட்கவே முழுநாளும் தேவைப்படும்” என சொன்னபின் ஸ்ரீதமரிடம் “செல்வோம்” என்றார் இளைய யாதவர். அவள் மேலும் பதைப்புடன் தலையசைத்தாள். இளைய யாதவர் அர்ஜுனனுக்குத் தலைவணங்கி வெளியே சென்றார். இருவரும் எழுந்து விடைகொடுத்தனர்.

பகுதி ஐந்து : தேரோட்டி – 19

இளைய யாதவரும் ஸ்ரீதமரும் அறைவிட்டு அகன்றபின் வாயிலை மூடி மெல்ல அசைந்த திரையை சிலகணங்கள் அர்ஜுனனும் சுபத்திரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அர்ஜுனன் திரும்பி சுபத்திரையிடம் “போர்க்கலை கற்பதில் இளவரசிக்கு ஆர்வம் உண்டா?” என்றான். எத்தனை எளிதாக முற்றிலும் பொருட்டில்லாத ஒன்றை பேசி உரையாடலை தொடங்கமுடிகிறது என வியந்தான். ஆனால் எளிய மனிதர்கள் கூட அதை அன்றாடம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“எனக்கு விற்கலையில் மட்டும் ஆர்வமில்லை” என்றாள் சுபத்திரை. “அது அனைத்தையும் வெறும் இலக்குகளாக மாற்றிவிடுகிறது.” புன்னகையுடன் “இலக்குகளாக மாறுவதில் என்ன பிழை?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஒரு மானை பன்னிரு நரம்புச்சுழிகளாக மட்டுமே அது பார்க்கிறது. மனிதன் நூற்றெட்டு வர்மமுனைகள் மட்டுமே” என்றாள் சுபத்திரை. “ஆகவே நான் விரும்புவது மற்போரைத்தான். கதைப்போர் என்பது சற்று இரும்பு கலக்கப்பட்ட மற்போர்தான்.”

“படை நடத்துவதும் வெல்வதும் உங்கள் கனவுகளில் இல்லையா?” என்றான் அர்ஜுனன். “ஆம், அதில் எனக்கு ஆர்வமுள்ளது. படைகொண்டு சென்று நாடுகளை வெல்வதற்காகவோ புரங்களை வென்று அரியணை அமர்ந்து ஆள்வதற்காகவோ அல்ல, இங்குள மக்கள்பெருக்கை எங்ஙனம் ஒரு விராட வடிவாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை அறிவதற்காக. அவர்களை வழிநடத்திச் சென்று விடுதலையின் நிறைவை அவர்களுக்கு அளிக்கமுடியும் என்பதற்காக” என்று சுபத்திரை சொன்னாள். “இளமையில் இருந்தே கதைப்போர் கலையை மூத்தவரிடமும் படைநடத்தும் கலையை இளையவரிடமும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.”

அர்ஜுனன் புன்னகைத்தபடி “போர்சூழ்கைகளை நூல்களிலிருந்து கற்றுக்கொள்வதில் மிகப்பெரிய இடர் ஒன்றுண்டு. நாம் போர்களை நம் உள்ளத்தில் இடைவிடாது நிகழ்த்தத் தொடங்கிவிடுவோம். அவை நாம் நிகழ்த்தும் போர்கள் என்பதால் நாம் வென்றாக வேண்டியது முதல்தேவையாக ஆகிவிடுகிறது. அவ்வெற்றியிலிருந்தே அனைத்து போர்சூழ்கைகளும் திட்டமிடப்படுகின்றன. உண்மையான போர்சூழ்கை என்பது தோல்வியிலிருந்து தொடங்கி திட்டமிடப்படவேண்டும். எனென்றால் தோல்வி ஊழின் முகம். அத்தனை போர்களும் ஊழுடன் நிகழ்த்தப்படும் ஆடல்களே” என்றான்.

“வெற்றியை எண்ணி எதையும் தொடங்கவேண்டும் என்பார்கள்” என்றாள் சுபத்திரை. “ஆம், அப்படி சொல்வதுண்டு. ஆனால் தோல்வியை எண்ணியே எதையும் நடைமுறை வாழ்வில் தொடங்குகிறோம். வெற்றியை மட்டும் எண்ணி நாம் தொடங்குவது பகற்கனவுகளில் மட்டுமே” என்றான் அர்ஜுனன். “மறுமுனையில் இருப்பது நாம் அறியமுடியாததும் எந்நிலையிலும் முற்றாக கடக்கமுடியாத பேருருக் கொண்டதுமான ஊழ் என்று அறிந்தவன் இத்தகைய உள ஓட்டங்களை முதிராத கன்னியரின் காமக்கனவுகள் என்றே எண்ணுவான்.”

சுபத்திரையின் முகம் சிவப்பதைக் கண்டு அர்ஜுனன் வியந்து அவளை நோக்கினான். அவள் விழிகளை விலக்கி சாளரத்திற்கு அப்பால் தெரிந்த ஒளிமிக்க முற்றத்தை நோக்கியபடி “ஆம், நானும் அவ்வண்ணம் கனவுகளை கண்டதுண்டு. ஒருமுறை வேண்டுமென்றே நான் தோற்பதுபோல் கனவு கண்டேன். அப்போதுகூட தோல்வியிலிருந்து நான் மீண்டெழுவதே அக்கனவின் தொடக்கம் என்று உணர்ந்து சலிப்புற்றேன்” என்றாள்.

ஆனால் அவள் அதை வேறெதையோ மறைக்கும்பொருட்டு சொல்கிறாள் என்று அவள் வெண்கழுத்திலிருந்து தோளுக்குப் பரவிய செம்மை அவனுக்கு சொன்னது. அறைக்குள் வந்த கணம் முதல் அவள் உடலை நோக்கலாகாது என்று அவன் தன் விழிகளுக்கு ஆணையிட்டிருந்தான். அதற்காக அவளுடைய வலது காது முனையில் தொங்கிய குழை மேல் தன் விழிகளை நட்டிருந்தான். ஆயினும் அவள் விழிகள் அவனைப் பார்க்காதபோது இயல்பாக அவன் பார்வை அவளுடைய பெரிய தோள்களையும் வெண் தந்தக் கைகளையும் அதில் ஓடிய நீலநரம்புப் பின்னல்களையும் பார்த்து மீண்டன. அவளுடைய தோள்கள் தன் விழி மூடினாலும் கண்ணுக்குள் நிற்பதை உணர்ந்தான்.

அவள் எப்போதும் அவனை நேர்விழியால்தான் நோக்கினாள். ஆனால் அதற்கு ஓர் அளவு வைத்திருந்தாள். யாதவர்களைப் பற்றி அவன் பேசியபோது அறியாமல் நெடுநேரம் அவன் முகத்தை நோக்கிவிட்டாள். அதன்பின் அவள் பாவனைகள் மாறிவிட்டிருந்தன என்பதை அவன் அப்போது புரிந்துகொண்டான். அவன் இரண்டாகப் பிரிந்திருந்தான். ஒருவன் கண்முன் திகழ்ந்த அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். இன்னொருவன் கரந்து விளையாடும் அவளை அள்ளிப்பற்ற முயன்றுகொண்டிருந்தான்.

சுபத்திரை நாவின் நுனியால் இதழ்களை மெல்ல வருடியபடி ஏதோ சொல்ல எழுவதுபோல வாயசைத்தாள். தலையில் பால்குடத்துடன் தடிப்பாலம் கடந்துசெல்லும் ஆயர்மகளின் முகம் அது என தோன்றியது. அவர்கள் இருவருக்கும் நடுவே அறியமுடியாத ஏதோ ஒன்று வந்து தேங்கியது போல. பிசின் போன்ற ஒன்று. நீரென விலக்கவோ திரையென கிழிக்கவோ முடியாதது. தொடும் கைகளில் எல்லாம் கவ்விப் பரவும் ஒன்று. எட்டு வைத்து பின்னகர்ந்து அதை விட்டு விலகிவிட முயன்றான். ஆனால் எந்தத்திசையில் நகர்ந்தாலும் அது அணுகுவதாகவே தெரிந்தது.

எத்தனை எளிதாக ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே அந்த புரிந்து கொள்ளமுடியாத ஒன்று நிகழ்ந்து விடுகிறது என்று எண்ணியபோது உள்ளம் முடிவிலி ஒன்றைக் கண்டு திகைத்தது. அவள் மெல்ல அசைந்தபோது அணிகள் எழுப்பிய ஒலி ஒரு சொல்லென அவனை தொட்டது. எண்ணங்கள் திசையழிந்து அலைந்துகொண்டிருந்தபோது சட்டென்று முதிரா பெண்ணின் கனவுகள் என்று அவன் சொன்ன சொல்தான் அவளை சிவக்க வைத்தது என்று அவன் உணர்ந்தான். அகம் படபடக்கத் தொடங்கியது. எதைச் சொல்ல எண்ணி எதை சொல்லியிருக்கிறோம் என்று வியந்தான்.

அங்கிருந்து திரும்பிச் சென்றுவிடலாம், பிறிதொரு தருணத்தில் அச்சந்திப்பை நீட்டலாம் என்று எண்ணினான். அவ்வெண்ணத்தை அவன் உடல் அறிவதற்குள்ளேயே அவள் அறிந்ததுபோல் திரும்பி “இன்னும் சில நாட்களில் என் மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது” என்றாள். தன் உடலெங்கும் குருதிக்குழாய்கள் துடிப்பதை அறிந்தபடி “ஆம், அறிவேன். இன்னும் ஒருமாதம். வைகானச பூர்ணிமை” என்றான் அர்ஜுனன். அவள் மேலும் ஏதோ சொல்ல விரும்பி அதை சொல்லாக உணராமல் தவித்ததுபோல உதடசைத்தாள்.

தாழ்ந்த குரலில் “முழுநிலவு நாளில்” என்றாள். பொருளில்லாத சொல் பொருளை அந்தத் தருணத்திலிருந்து அள்ளிக்கொண்டது. “ஆம்” என்றான் அர்ஜுனன். “மதுராவின் இளவரசி என்று என்னை சொல்கிறார்கள். எனவே எனக்கு ஷத்ரிய முறைப்படி மணத்தன்னேற்பு ஒருங்கு செய்திருக்கிறார்கள்” என்றாள் சுபத்திரை. ஆர்வமில்லாமல் எதையோ சொல்பவள் போலிருந்தது முகம். ஆனால் குரல் கம்மியிருந்தது.

“அது நன்றல்லவா? உங்களுக்கு உகந்த ஆண்மகனை நீங்கள் கொள்ள முடியுமே?” என்றான் அர்ஜுனன். சினத்துடன் அவள் திரும்பியபோது தலையில் சூடிய முத்துச்சரம் காதில் சரிந்து கன்னத்தில் முட்டி அசைந்தது. “இல்லை. ஷத்ரியப் பெண்கள் போல தளைகளில் சிக்குண்டவர்கள் வேறில்லை. இந்த மணத்தன்னேற்பில் அரசர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். அதில் எவர் வெல்ல வேண்டுமென்பதையும் மதி சூழ்கையாளர்கள் முன்னரே முடிவு செய்கிறார்கள்” என்றாள்.

அவளுடைய சீற்றம் எதன் பொருட்டென்று அவனுக்கு புரியவில்லை. ஏன் அப்போது அதைச் சொல்கிறாள் என்றும். “எனக்கென தேர்வு எதுவுமில்லை. தன் எளிய விழைவுடன் ஆண்மகனை தேடிச் செல்லும் மலைக்குறமகள் கொண்ட உரிமையின் ஒரு துளிகூட எனக்கில்லை” என்றாள் சுபத்திரை. அவள் மூச்சு எழுந்தடங்குவதை அவன் நோக்கி நின்றான். அப்போது அவன் என்ன சொல்லவேண்டுமென எதிர்பார்க்கிறாள் என எண்ணினான். ஒன்றும் தோன்றவில்லை.

அவன் உள்ளத்தில் குருதி விடாய் ஒன்று எழுந்தது. உதடுகளில் அது புன்னகையாக கசியாமல் இருக்கும் பொருட்டு தன்னை இறுக்கிக்கொண்டு விழிகளை அவள் விழிகள் மேல் நாட்டி “யாதவர் பேசுவதைக் கேட்டேன் இளவரசி. இம்மணத்தன்னேற்பு அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர் தங்களை மணக்கும் பொருட்டே என்றனர்” என்றான்.

முதுகில் சவுக்கடி விழுந்ததைப்போல அவள் முகத்தில் தோன்றி மறைந்த வலியைக் கண்டதும் அவன் உள்ளம் துள்ளியது. அதை மறைக்க பணிவு ஒன்றை முகத்தால் நடித்தான். “நான் பிழையாக ஏதும் சொல்லியிருந்தால் பொறுத்தருள்க இளவரசி” என்றான். சுபத்திரை “என் மூத்தவரின் ஆணை அது என்றால் அதுவே என் கடமை” என்றாள். முலைகளை சற்றே எழுந்தமையச் செய்த பெருமூச்சை அவளால் அடக்க முடியவில்லை.

அர்ஜுனன் மேலும் வழுக்கும் விளிம்பை நோக்கி மெல்ல எட்டுவைத்துச் சென்று “அவர் அஸ்தினபுரியின் பேரரசர். ஒரு நாள் இப்பாரதவர்ஷத்தை ஒரு குடைக்கீழ் நின்று அவர் ஆள்வார் என்று சொல்கிறார்கள்” என்றான். அவள் அருவருப்பு கொண்டதுபோல முகம் சுளித்தாள். “உங்கள் குலம் அதை விரும்பக்கூடும்” என்று அர்ஜுனன் மேலும் சொன்னான். இல்லை என தலையசைத்த  சுபத்திரை அவன் கண்களை நோக்கி “நீங்கள் யோகியாயிற்றே, உங்கள் நோக்கில் சொல்லுங்கள்! என்னை மணம் கொள்ளும் தகுதி கொண்டவரா அவர்?” என்றாள்.

அர்ஜுனன் அந்த ஒரு கணத்தை பின்வாங்காமல் எதிர்கொள்ள தன் முழுப் போர்த்திறமையும் தேவைப்படுவதை உணர்ந்தான். “இல்லை” என்றான். ஆனால் அவன் குரல் சற்றே தழுதழுத்தது. “எவ்வகையிலும் அவர் தங்களுக்குரியவரல்ல. அவர் தங்களை மணம் புரியப்போவதில்லை என்று சொல்கிறார்கள்” என்றான். அவள் முகம் அறியாது மலர்ந்ததைக் கண்டு அவனும் அறியாது புன்னகைத்தான்.

“ஆம். என் உள்ளமும் அவ்வாறே சொல்கிறது. திரும்பத் திரும்ப அதையே என் அகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. அதை என் இளைய தமையனும் அறிவார் என்று தோன்றுகிறது” என்றாள் சுபத்திரை. “எதன் பொருட்டு என்னை இங்கு ரைவத மலைக்கு அவர் வரச்சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் எவ்வகையிலோ இது என் மணத்தன்னேற்புடன் தொடர்புடையது என்று தோன்றியது.”

அர்ஜுனன் “ஆம். மணத்தன்னேற்பு குறிக்கப்பட்ட பெண்கள் அரண்மனைவிட்டு வெளியே செல்லும் வழக்கமில்லை” என்றான். “வழக்கமில்லைதான். ஆனால் இங்கு ரைவதகர் முன் நான் ஆற்ற வேண்டிய நோன்பு உள்ளது என்று இளையவர் சொன்னபோது எந்தையோ மூத்தவரோ மறுக்கவில்லை” என்றாள். அவள் உள்ளம் எடையிழந்து மீள்வதை முகம் காட்டியது.

அர்ஜுனன் “நீங்கள் எங்கு திரும்பிச் செல்கிறீர்கள் இளவரசி?” என்றான். “மதுராவுக்குத்தான். என் மணத்தன்னேற்பு நிகழ்வதற்கு இன்னும் நான்கு வாரங்களே உள்ளன. நான் அங்கிருந்தாக வேண்டும்” என்றாள் சுபத்திரை. “அங்கே ஆயிரம் சடங்குகள். குலபூசனைகள். நான் அங்கு வெறும் ஒரு பாவை.”

அப்போது அவள் விழிகளைப் பார்த்த அர்ஜுனன் அவை அச்சொற்களுக்கு தொடர்பற்ற பிறிதொன்றை சொல்வதுபோல் உணர்ந்தான். தன் உள்ளம் கொள்ளும் இந்த பதற்றங்களும் குழப்பங்களும் வெறும் விழைவின் வெவ்வேறு நடிப்புகள்தானா என்று வியந்து கொண்டான். சுபத்திரை “நான் திரும்பிச் சென்றாக வேண்டும். ஆனால் மதுராவுக்குச் செல்வதை எண்ணும்போதே என் உள்ளம் மறுக்கிறது. இங்கே இளைய தமையனுடன் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் உடனே திரும்பி வரும்படி மூத்தவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றாள்.

அதை ஏன் தன்னிடம் சொல்கிறாளென்று அர்ஜுனன் எண்ணினான். விடைபெறுவது போலவோ மீண்டு வருவேனென்று வாக்களிப்பது போலவோ அவள் அச்சொற்களை சொல்வதாகத் தெரிந்தது. அக்குரலில் இருந்த ஏக்கம் தன் உளமயக்கா என்ன? ஒரு கணம் தான் யார் என்று அவளுக்குத் தெரிந்துவிட்டதோ என்ற ஐயத்தை அவன் அடைந்தான். அவ்வெண்ணம் வந்ததுமே அவன் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் திரும்ப எடுத்து கூர்நோக்கியது அவன் உள்ளத்தின் பிறிதொரு பகுதி.

அதை அவள் எவ்வண்ணமோ உணர்ந்திருந்தாள். ஆகவே அதை பொருளில்லாச் சொற்களை அள்ளிப்போட்டு முழுமையாக மூடினாள். “இளவரசியாக இருப்பது பெரிய நடிப்பு. யாதவர்கள் இன்னும் அரசகுலமே ஆகவில்லை. அதற்குள் இத்தனை சடங்குகள், முறைமைகள், முகமன்கள். சிலநாட்களில் நான் சலிப்புற்று கிளம்பி மதுவனத்திற்கே சென்று மூத்ததந்தையரின் மைந்தர்களுடன் காட்டுக்குச் சென்று கன்றுமேய்க்கத் தொடங்கிவிடுவேன்.”

பெண்கள் சிறியவற்றை பேசிக்கொண்டிருப்பதை விரும்புபவர்கள் என அவன் அறிந்திருந்தான். ஆனால் அது அவர்கள் தங்கள் உள்ளம் பொங்கிக் கொண்டிருப்பதை மறைக்கும்பொருட்டுதான். அந்தச் சிறிய பேச்சு அவர்களை இளமையானவர்களாக, கவலையற்றவர்களாக, பொறுப்புகளும் சுமைகளுமற்றவர்களாக காட்டுகிறது. ஆனால் அணுக்கமானவர்களிடம் மட்டுமே அவற்றை பேசுகிறார்கள். அவள் தன்னை எப்படி எண்ணுகிறாள்?

அவளிடம் மேலும் நெருங்க வேண்டுமென்றும் அந்த மாறுதோற்றம் கலையாது அப்படியே விலகிவிட வேண்டுமென்றும் ஒரேசமயம் உள்ளம் எழுந்தது. அந்தத் தடுமாற்றத்தை உடல் தாளாததனால் சாளரத்தை நாடி அதன் விளிம்பில் கை வைத்து சரிந்தபடி “தங்களுக்கு உகந்த ஆண்மகன் எவரென்பதை எப்போதேனும் எண்ணியிருக்கிறீர்களா இளவரசி?” என்றான். அப்படி ஒரு நேரடிக் கேள்வியை அவளிடம் கேட்க அவன் எண்ணவில்லை. எழுந்து சென்ற அவ்வசைவால் அதுவரை உள்ளத்தில் குவித்திருந்த அனைத்தும் சிதற அது மொழியில் எழுந்துவிட்டது.

அவள் ஒரு சிறு உளமாறுதலைக்கூட காட்டாது “இல்லை” என்றாள். ஏமாற்றத்தால் அவன் உள்ளம் சுருங்கியது. தாடியை நீவியபடி “விந்தைதான்” என்றான். “ஏன்?” என்றாள். “அப்படி எண்ணாத பெண்கள் இல்லை என நான் கேட்டிருக்கிறேன்.” அவள் “நான் அவ்வண்ணம் எந்த ஆண்மகனையும் பார்க்கவில்லை” என்றாள். தொலைவில் புயல் எழும் ஓசை போல் தன்னுள் சினம் எழுவதை அக்கணம் அறிந்தான். வேண்டுமென்றே சொல்கிறாளா? “அதாவது நேரில் பார்க்கவில்லை, இல்லையா?” என்று தொலைதூரத்து வெயில் முற்றத்தை பார்த்தபடி கேட்டான்.

“ஆம். அத்தகைய தகுதி கொண்ட எவரையும் நான் கேட்டிருக்கவும் இல்லை” என்றாள். ஆம் வேண்டுமென்றேதான் சொல்கிறாள். நான் யாரென அறிந்திருக்கிறாள். “வெறும் புகழ்மொழிகளால் வீரர்களை கன்னியரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் சேடிப்பெண்கள். சூதர்களின் பாடல்களோ பொய்யில் புடமிட்டவை. அவற்றை நம்பி அந்த ஆண்மகன்மேல் காதல்கொள்வதில் ஒரு கீழ்மை உள்ளது. அவர்கள் என்னிடம் காதலை உருவாக்கமுடியும் என்றால் நான் யார்?”

இல்லை, இவள் இங்கு சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் அவள் அறிந்த அர்ஜுனனைப்பற்றி. பாரதவர்ஷத்தின் பெண்கள் அனைவரும் காதல்கொண்டிருக்கும் ஒருவன் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்கிறாள். ஆனால் அதை அவள் அவனிடம் சொல்லவில்லை, அயலானாகிய சிவயோகியிடம்தான் சொல்கிறாள். ஆனால் அயலானிடம் சொல்வதென்பதே  ஓர் இழிவுதானே?

அர்ஜுனன் தலை திருப்பி அவளை நோக்கி “மண்ணில் எவரும் தங்களுக்கு தகுதியற்றவர்கள் என்று எண்ணுகிறீர்கள் போலும்?” என்றான். அப்போது தன் முகத்தில் எழுந்த ஏளனச் சிரிப்பை தானே உணர்ந்து எத்தனை கீழ்மை தன்னுள் உறைந்துள்ளது என்று வியந்து கொண்டான். அந்தக் கீழ்மை இல்லாத ஆண்மகன் எவனுமிருக்கப்போவதில்லை.

அவள் அவன் விழிகளை நோக்கி “அப்படி நான் எண்ணவில்லை. ஏனெனில் எனக்குரிய ஆண்மகன் புகழ் பெற்ற குடியில் உதித்திருக்க வேண்டுமென்று உண்டா என்ன? யாரென்றே அறியாத அயலவனாக ஏன் இருக்கக் கூடாது?” என்றாள். அர்ஜுனன் அவள் கண்களை நோக்கினான். அவள் அவனை அறியவில்லை என உறுதிப்பட்டது.

“இவையெல்லாம் கற்பனைக்கே உகந்தவை” என்றான். “அறியாப்பெண்ணின் கனவுகள், இல்லையா?” என்றாள். அவள் அச்சொல்லால் குத்தப்பட்டிருக்கிறாள் என தான் உய்த்தறிந்தது எத்தனை உண்மை என அவன் எண்ணினான். சற்றே சீற்றத்துடன் “ஆம்” என்றான். “அறியா வயதில் பெண்கள் அவ்வாறு பலவகையாக எண்ணிக்கொள்கிறார்கள். இளைஞர்கள் வாளேந்தி புதுநிலத்தை வென்று பேரரசு ஒன்றை அமைப்பதைப்பற்றி கனவு காண்பதற்கு இதுவும் நிகர்தான்.”

“ஏன்?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “ஏன் இது உண்மையாக இருக்கமுடியாது?” அர்ஜுனன் “அறியாத மண்ணின் நாடோடியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்போகிறீர்களா? மேழி பற்றி வருபவனோ பொதி சுமந்து அலைபவனோ கன்றோட்டி காட்டில் வாழ்பவனோ கைபற்றினால் அவனுடன் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா தங்களால்?” என்றான்.

“ஆம், இயலும்” என்றாள். “இயலுமா என்றே திரும்பத் திரும்ப என்னுள் கேட்டுக் கொண்டிருந்தேன். இயலும் என்ற ஒரு சொல்லை அன்றி வேறெந்த விடையும் என் உள்ளம் சொல்லவில்லை. வேறெதையும்விட அது எனக்கு எளிது. ஏனெனில் நான் இளவரசியல்ல. எளிய பெண். பெண் மட்டுமே” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கினான். இமைகள் தாழ்ந்திருக்கையிலும் பெண்விழிகள் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகின்றன! எதையெதையோ கடந்துசென்று அவள் இளமகளாக நின்றிருந்தாள். ஆண்மகன் மிகவிரும்பும் பெண்ணின் தோற்றம். முழுமையாக தன்னை படைக்க முற்பட்டவள்.

“அவனை கண்டடைந்துவிட்டீர்களா?” என்றான். அவள் சொல்லப்போவதை எண்ணி அவன் உள்ளம் படபடத்தது. அவள் திரும்பி வாயிலை நோக்கினாள். அப்பால் காலடியோசை கேட்டது. “அதற்குள்ளாகவா சித்தமாகிவிட்டார் இளைய தமையன்?” என்றாள். “இல்லை, அது ஸ்ரீதமரின் காலடியோசை” என்றான் அர்ஜுனன். அவள் அந்த ஒலியை மிக இயல்பாக பயன்படுத்திக்கொண்டாள் என தோன்றியது. அத்தனை உணர்வுநிலையிலும் சூழலின் ஒலிகளில் முழுதும் சித்தம் பரப்பியிருக்க பெண்களால் மட்டுமே முடியும்.

ஸ்ரீதமர் உள்ளே வந்து “வணங்குகிறேன் இளவரசி. இங்கு நடக்கும் இந்த விழவில் இளைய யாதவரை முழுமையாக முறைமை செய்து அனுப்பவேண்டும் என்று ரைவதகத்தின் அரசர் விரும்புகிறார்.  பன்னிரு குடிகளும் நேற்றுதான் அவர் இளைய யாதவர் என அறிந்திருக்கின்றன. அவர்களின் குடிமுறைமைகள் செய்யப்படவேண்டும். எனவே விழவு முடிய இரவு ஆகிவிடும். தாங்கள் கிளம்பிச்செல்ல வேண்டுமென்று தங்கள் தமையனார் ஆணையிடுகிறார்” என்றார். “அவர் தன் அகம்படிகளுடன் நாளை மாலை கிளம்புவார்.”

“நான் அதையே விழைந்தேன். இங்கிருக்க என்னால் முடியவில்லை” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “உண்மை, விழவு முடிந்த களம் போன்ற வெறுமைகொண்டது வேறு ஏதுமில்லை” என்றான். அவன் வேறேதோ சொல்லவேண்டுமென அவள் விழைந்ததைப்போல இருந்தது முகம். ஆனால் அதை மறைத்தபடி  “எத்தனை விரைவில் இங்கிருந்து செல்ல முடியுமோ அத்தனை விரைவில் செல்ல விழைகிறேன் மாதுலரே”  என்றாள். ஆனால் அச்சொற்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதபடி அவள் விழிகள் அவன் முகத்தை ஓரக்கண்ணால் நோக்கிச் சென்றன. அப்பார்வையை தன் முகத்தில் உணர்ந்த அர்ஜுனன் உடல் திருப்பி ஸ்ரீதமரை பார்த்தான்.

ஸ்ரீதமர் “தங்களுக்கு பிறிதொரு பணியையும் இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார் இளவரசி” என்றார். சுபத்திரை விழிகளில் சினம் ஒளிவிட்டு அணைவதை அர்ஜுனன் கண்டான். ஆனால் அவள் “ஆணை” என தலைவணங்கினாள். “அந்தகவிருஷ்ணிகளின் இளவரசரான அரிஷ்டநேமி அருக நெறி நோற்று சென்ற ஓராண்டாக இங்கே தங்கியிருக்கிறார் என்பதை அறிந்திருப்பீர்கள் இளவரசி. அவருக்கு மறைந்த உக்ரசேனரின் மகள் ராஜமதியை  மணம் முடிக்க ஆவன செய்யுமாறு அவரது தந்தை சமுத்ரவிஜயர் கோரியிருக்கிறார். துவாரகையில் அதற்கான விழவுக்கு ஆவன செய்யும்படி இளைய யாதவர் நேற்றே செய்தி அனுப்பியிருந்தார்.”

“ஆம், என்னிடம் சொன்னார்” என்றாள் சுபத்திரை. “அரிஷ்டநேமி அவர்களை இங்கிருந்து துவாரகைக்கு அழைத்துச் செல்லும்படி தங்களுக்கு இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார் ஸ்ரீதமர். “துவாரகைக்கா?” என்று கேட்டபோதே அறியாது அவள் முகம் மலர்ந்தது. “ஆம், துவாரகைக்குத்தான். இன்னும் நான்கு நாட்களில் அங்கு அந்த மணவிழாவை நிகழ்த்தலாமென்று இளையவர் சொன்னார்.” அர்ஜுனனை நோக்கி “அரிஷ்டநேமிக்கு வழித்துணையாக தாங்களும் செல்ல வேண்டுமென்று இளையவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார்.

அர்ஜுனன் தலைவணங்கி “ஆணை” என்றான். “நான் அவரை இளைய யாதவருடன் சென்று கண்டிருக்கிறேன். ஆனால் கொல்லாமை உறுதிகொண்ட அவரால் என்னைப் போன்ற போர்பயின்ற யோகியிடம் நட்புறவு கொள்ளமுடியுமா?” என்றான். “கொல்லாமையை கைவிட்டு இல்லறத்தையும் செங்கோலையும் கைக்கொள்வதற்காகவே அவர் வருகிறார். இங்கிருந்து துவாரகைக்குச் செல்வதற்குள் அருகநெறிப் படிவரை கொல்வேல் கொற்றவராக மாற்றும் பொறுப்பு தங்களுக்கு” என்றார் ஸ்ரீதமர்.

அர்ஜுனன் புன்னகைத்தான். “தங்கள் பயணங்களுக்கான ஒருக்கங்களை செய்ய ஆணையிடுகிறேன்” என்றபின் ஸ்ரீதமர் வெளியே சென்றார். புன்னகைத்து மூடிய இதழ்களைப்போல இணைந்து அசைந்து கொண்டிருந்த திரைச்சீலையை நோக்கியபடி அர்ஜுனன் ஒருமயிர்க்கால் கூட அசையாமல் அமர்ந்திருந்தான். பின்பு அவ்வண்ணமே அத்திரைச் சீலையை நோக்கியபடி உறைந்து நின்றிருந்த சுபத்திரையை உணர்ந்தான். நெடுநேரத்திற்குப் பின் என ஓரிரு கணங்களைக் கடந்து விழிதிருப்பி அவளை பார்த்தான். அவள் விழிகள் அவனை சந்தித்து உடனே விலகிக்கொண்டன.

அர்ஜுனன் புன்னகைத்து “எஞ்சியதை வழிநீள பேச முடியும்” என்றான். அவள் புன்னகைத்து “ஆம்” என்றாள். “போர்க்கலைகளை நான் கற்பிக்கிறேன். தாங்கள் பேரரசி ஆகப்போவதனால் அவை உதவும்” என்றான். ஏன் அந்தப்புண்படுத்தும் சொற்றொடரை சொன்னோம் என உடனே உள்ளம் வியந்தது. ஏதோ சிறிய எரிச்சல் உள்ளே இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்த எரிச்சலை அவள் புரிந்துகொண்டு மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றியது. புன்னகையுடன் “ஆம், அது உதவும்” என்றாள்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 20

அரிஷ்டநேமி தங்கியிருந்த பாறைப்பிளவை நோக்கி செல்லும்போது அர்ஜுனன் தனது காலடியோசை சூழ்ந்திருந்த மலைப்பாறைகளில் பட்டு பெருகி எழுவதை அறிந்தான். பலநூறு உறுதியான காலடிகள் அக்குகைவாயில் நோக்கி சென்று கொண்டிருப்பது போல. அவ்வோசை கேட்டு முட்புதர்களிலிருந்து சிறகடித்தெழுந்த பறவைகள் வானில் சுழன்று படபடத்தன.

கீழே பரவியிருந்த கூர்முட்களில் அச்சிறகுகளின் நிழல்கள் படிந்து கிழிபட்டுச் செல்வதை கண்டான். காலையொளியில் அவற்றின் நிழல்கள் சரிந்து நீண்டிருக்க முட்கள் மேலும் கூர்நீட்சி கொண்டிருந்தன. அவனுக்கு வலப்பக்கம் எழுந்த கரிய பாறையில் முட்புதர் ஒன்றின் நிழல் கூர் உகிர்களுடன் அள்ளிப் பற்றுவதற்காக நீண்ட குருதி தெய்வத்தின் கொடுங்கை போல் நின்றிருந்தது.

காலை வெயிலின் வெக்கையில் ஒரு கணம் நின்று திரும்பி நோக்கியபோது அப்பகுதி முழுக்க நிறைந்திருந்த முட்புதர்களும் அவற்றின் நிழல்களும் இளங்காற்றில் அசைவது கனவுரு போல தோன்றியது. அவன் நிழல் இழுபட்டு நைந்து மீண்டும் உயிர்கொண்டெழுந்து சென்றது. அவன் குகைவாயிலை அடைவதற்குள்ளாகவே நிழல் அதை அடைந்து விட்டது. அதைக் கண்டு உள்ளிருந்து அரிஷ்டநேமி வெளியே வந்தார். கையில் சிறிய மரவுரி மூட்டை ஒன்று வைத்திருந்தார். அவனைக் கண்டதும் புன்னகைத்து “வருக!” என்றார்.

அர்ஜுனன் “பணிகிறேன் மூத்தவரே” என்றான். அரிஷ்டநேமி “நீங்கள் யோகி. நான் ஊழ்கம் துறந்து இல்லறம் ஏகுபவன். இனி உங்களைப் பணிய வேண்டியவன் நானே” என்றார். “ஆம், ஆனால்...” என்று அர்ஜுனன் தயக்கமாகச் சொல்ல “அதுவே முறை" என்றார் அரிஷ்டநேமி உறுதியாக. அர்ஜுனன் தலையசைத்தான். அரிஷ்டநேமி குகையை மீண்டும் ஒருமுறை நோக்கிவிட்டு “கிளம்புவோம்” என்று உரைத்தார். அர்ஜுனன் தன் உள்ளத்தில் ஓடிய எண்ணம் அவரை அடையலாகாது என்று எண்ணியபோதே அவர் அந்த மூட்டையை திருப்பி குகைக்குள் வீசிவிட்டு அவனிடம் திரும்பி புன்னகையுடன் “எத்தனை எளிய உயிர்கள் மனிதர்கள்! நான் நாடாளச் செல்கிறேன். இக்குகையிலிருந்து இந்த மரவுரியையும் திருவோட்டையும் கொப்பரையையும் கொண்டு செல்வதனால் என்ன பொருள்?” என்றார்.

அர்ஜுனன் “இந்நாட்களின் நினைவாக இவை தங்களுடன் இருக்கலாமே?” என்றான். அவர் பொறுமையின்றி கையசைத்து “இந்நாட்களின் நினைவு என்னுள் எஞ்ச வேண்டியதில்லை” என்றார். பின்பு பெருமூச்சுடன் “எஞ்சாது இருக்குமெனில் நன்று. இனி நான் இருக்குமிடத்தில் பொருந்தி அமைய முடியும்” என்றார். “செல்வோம் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றபடி அவர் இரு பாறைகளில் காலெடுத்து வைத்து கடந்து முட்புதர்கள் நடுவே இறங்கினார்.

படியாக அமைந்த பாறையில் கால்வைத்துத் திரும்பி அக்குகையை ஒரு கணம் நோக்கியபின் “இருங்கள்” என்றபடி பாறைகளில் தாவி ஏறி உடலை மண்ணோடு படியவைத்து கைகளால் உந்தி மலைப்பாம்பைப் போல் அதற்குள் நுழைந்தார். திரும்பி வருகையில் அவர் கையில் ஒரு சிறிய உருளைப்பாறை இருந்தது. “இப்பாறையை நான் என்னுடன் வைத்திருந்தேன்” என்றார். முகம் மலர்ந்திருந்தது. “இது என் உள்ளத்துணைவன். முதல் நாள் இப்பாறைக்குள் என்னை அமைத்துக் கொண்டபோது கல்லில் சிறைப்பட்ட தேரை என உணர்ந்தேன். உண்மையில் திறந்த பெரும்வெளி ஒன்பது புறமும் உடைத்து என்னை பீறிட்டுப் பரவ வைக்கிறது என்று தோன்றியபோதே இந்தச் சிறு குகையை தேர்ந்தெடுத்தேன்.”

“உள்ளம் என்பது ஒரு சிறிய கற்பூரத்துண்டு. அதை சிறு பேழைக்குள் அடக்கி வைத்தாக வேண்டுமென்று எனக்கு ஊழ்கநெறி கற்றுத்தந்த அருகப்படிவர் சொன்னார். ஆனால் அவர் எனக்கு இச்சிறிய அறையை சுட்டிக் காட்டியபோது அச்சத்தில் என் உடல் விரைத்துக் கொண்டது. இதற்குள் நுழையவே என்னால் முடியுமென்று தோன்றவில்லை. முதுகெலும்பை நிமிர்த்தி அமர்வதற்கு இதற்குள் இடமில்லை. இதுவே உன் இடம்,  உன்னை குறுக்கு. உடல் குறுகுகையில் உள்ளமும் குறுகும். உன்னிடம் எழுபவை வானில் விரியாது உன்னிடத்திலேயே திரும்பி வரும். அவை உன்னில் அமிழட்டும். அதுவே ஊழ்கத்தின் முதல் நிலை என்றார்."

“அவர் சென்றபின் நாளெல்லாம் இந்த சிறிய குகை வாயிலில் தயங்கியும் அஞ்சியும் விழைந்தும் வெறுத்தும் அமர்ந்திருந்தேன். பின்பு முழந்தாளிட்டு கால்களை நீட்டி கைகளை உந்தி இதனுள் நுழைந்தேன். கருவறை விட்டு வெளிவரும் குழந்தை அதற்குள்ளேயே திரும்பிச் செல்வது போல என்று தோன்றியது. உள்ளே குளிர்ந்து இருண்ட அமைதி செறிந்திருந்தது. சில கணங்களுக்குள் என் முதுகெலும்பு வலி கொள்ளத்தொடங்கியது. அதற்குள் நெடுநேரம் அமரமுடியவில்லை. என்னால் முடியாது என்றபின் மீண்டும் வெளிவர முயன்றேன். கைகளை ஊன்றி தவழத்தொடங்கியபோது என்னால் என்னும் சொல் எனக்கு அறைகூவலாகியது. என்னால் முடியாததா? வெளியேறினால் மீண்டும் இக்குன்றுக்கோ அருகநெறிக்கோ வரமுடியாது என்று உணர்ந்தேன். எனவே உள்ளம் திரும்பி உள்ளேயே அமைந்து கொண்டேன். அன்றிரவு முழுக்க இதனுள் எனது தனிமையை நானே உணர்ந்தபடி அமர்ந்திருந்தேன்.”

“மறுநாள் புலரியில் தவழ்ந்து வெளிவந்தபோது என் முதுகு பல துண்டுகளாக உடைந்துவிட்டது போல் வலித்தது. வெளியே விரிந்துகிடந்த ஒளிப்பெருக்கில் கண்கள் கூசின. காற்று நாற்புறமும் என்னைத் தழுவியது. பின்னர் விழிதிறந்து நோக்கியபோது காற்றில் புகை என சிதறடிக்கப்பட்டேன். கரைந்து மறைந்தேன். கைகளை விரித்தபடி இங்குள்ள ஒவ்வொரு பாறையிலிருந்தும் இன்னொரு பாறைக்கு தாவினேன். வானை நோக்கி அண்ணாந்து பெருங்குரலெடுத்து கூவினேன். நெஞ்சில் அறைந்து பொருளற்ற ஒலியை எழுப்பினேன். பின்னர் கண்ணீருடன் சோர்ந்து ஒரு பாறை மேல் அமர்ந்து விம்மினேன்.”

“தன்னுணர்வடைந்தவுடன் எழுந்து ஓடி மீண்டும் குகைக்குள் ஒண்டிக் கொண்டேன். நத்தை தன் ஓட்டுக்குள் என. நத்தையல்ல ஆமை. கைகால்களை நீட்டினால் மட்டுமே உண்ணமுடியும், செல்லமுடியும். ஆனால் எத்தனை நல்லூழ் கொண்டது? விழைந்தகணமே கருவறையிருளுக்குள் மீண்டுவிடும் வாய்ப்புள்ள உயிர்கள் பிறிதெவை? எத்தனை நாள் என் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது என்று இன்று எண்ணினால் வியப்பேற்படுகிறது. இக்குகை என் அகம். இம்மலையுச்சிப் பாறைவெளி என் புறம். இக்குகை என் ஊழ்கம். அந்த வானம் என் விழைவு. துலாக்கோலில் முடிவிலா அசைவு என்று உள்ளத்தை அருக நெறி சொல்கிறது. துலாக்கோலின் முள் புயலில் ஆடும் பாய்மரக்கலத்தின் சுக்கான் என கொடுநடனமிட்ட நாட்கள் அவை.”

“பின்புதான் இக்கூழாங்கல்லை நான் கண்டு கொண்டேன். கண்மூடி நெடுநேரம் ஊழ்கத்தில் அமர்ந்து ஒன்றுமேல் ஒன்றென விழுந்த எண்ணங்களை ஒருவாறாக சீர்ப்படுத்தி என்னை உணர்ந்து விழித்தபோது இருளுக்குள் ஓரத்தில் இதை கண்டேன். என்னை நோக்கியபடி இதுவும் ஊழ்கத்தில் ஆழ்ந்திருப்பதாக தோன்றியது. குகைக்குள் நோக்கினேன். இக்குகைக்குள் அவ்வாறு பலநூறு உருளைக்கற்கள் காலகாலமாக அழியாத்தவத்தில் அமைந்துள்ளன. அவற்றுக்கு துலாமுள்ளின் நிலைகொள்ளாமை இல்லை. தனிமை இல்லை. விழைவுகளின் இமையாவிழி இல்லை.”

“இக்கல்லை எடுத்து என் முன் ஒரு பீடத்தில் அமர்த்தினேன். நீ என் ஊழ்கத்துணைவன், உன் முழுமையும் தனிமையும் என்னுள் திகழ்வதாக என்று சொல்லி கொண்டேன். இளையோனே, வாரக்கணக்காக இதனுடன் நான் உரையாடி இருக்கிறேன். கண்ணீருடன் மன்றாடி இருக்கிறேன். பணிந்து வழுத்தி இருக்கிறேன். பின்பு எங்கள் இருவருக்கும் நடுவே இருந்த தொலைவு கரைந்தழிந்தது. முழுமையான இணைவு அவ்வப்போது வந்து போயிற்று. இக்குகை இருளுக்குள் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தோம். என் அலைக்கழிதல்களை இதுவும் இதன் அகாலத்தை நானும் அறிந்தோம்.”

அவர் கூழாங்கல்லை கையில் விரித்துக் காட்டினார். “எத்தனை அரியது! உருவமென்று ஒன்றுள்ளது, ஆனால் அவ்வுருவுக்கு முற்றிலும் பொருளில்லை. பொருளுண்டென்றால் அது பயன் சார்ந்தோ செயல் சார்ந்தோ உருவானதல்ல. காலத்தின் விருப்பு சார்ந்து காலமாகி வந்த காற்றும் மழையும் செதுக்கியெடுத்தது. உள்ளீடும் புறவடிவும் ஒன்றேயான இருப்பென்பது நல்லூழ் அன்றி வேறென்ன? உட்கரந்துறையும் ஒன்றுமில்லை. உருமாறி அடைவதற்கோ உருவழிதல் மூலம் இழப்பதற்கோ ஏதுமில்லை.”

அரிஷ்டநேமி புன்னகையுடன் “இத்தனை சொற்களால் இதனை வகுத்துரைக்க முயல்கிறேன். நேற்றுவரை இச்செயலை ஒருபோதும் செய்ததில்லை, இன்று நீங்கள் எனக்கு ஒரு முன்னிலையாகி வந்துள்ளீர்கள். சொல்லிச்சொல்லி கடக்க முயல்கிறேன். அல்லது சொல்லாக்கி சேர்த்துக்கொள்ள விழைகிறேன்” என்றபின் தன் இடையாடையின் கச்சையில் அக்கல்லை சுருட்டி உள்ளே வைத்துக் கொண்டார்.

“அது எதற்கு உங்களுடன் மூத்தவரே?” என்றான் அர்ஜுனன். “நான் இங்கிருந்த இந்நாட்களின் நினைவாக” என்றார் அரிஷ்டநேமி. “அந்நினைவு தங்களுக்கு தேவையில்லை என்றீர்கள்?” என்றான் அர்ஜுனன். “ஆம், இந்நினைவு முற்றிலும் அழிந்தால் செல்லும் இடத்தில் நான் முழுநிறைவடையக்கூடும். ஆனால் அதைச் சொன்னதுமே நான் பேரச்சம் கொண்டேன். முழுமையாக என்னை அதில் இழந்து விடக்கூடாதென்று எண்ணிக் கொண்டேன். அறியாத ஆழத்தில் இறங்குபவன் பிடித்துக் கொள்ள சரடொன்றை வைத்துக் கொள்வது போல் இதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது” என்றார்.

இருவரும் முட்களின் ஊடாக நடந்தனர். அர்ஜுனன் நீண்டு நின்ற புதர்முள் கைகளைத் தவிர்த்து பாறைகளில் தாவி ஏறி மறுபக்கம் சென்றான். அரிஷ்டநேமி அம்முட்கள் நீட்டி நின்றதை அறியவே இல்லை. அவன் தாவித் தாவி வருவதை சற்று கடந்த பின்னே அவர் நோக்கினார். “ஏன்?” என்று கேட்டார். “முட்கள்” என்றான். “ஆம்” என்றார் அவர். “மிகக்கூரியவை. மலை உச்சியில் மட்டுமே இத்தனை கூரிய முட்கள் உள்ள செடிகள் முளைக்கின்றன” என்ற அர்ஜுனன்  ஒரு செடியை சுட்டிக் காட்டி “இதோ இதற்கு இலை என்றும் மலரென்றும் ஏதுமில்லை. முட்களை மட்டுமே சூடி நிற்கிறது” என்றான்.

அரிஷ்டநேமி “இங்கு வேர்ப்பற்றுக்கு மண்ணில்லை. எனவே ஒவ்வொரு செடியும் இலையையும் மலரையும் பெருந்தவத்திற்குப் பின்னரே தன்னுள்ளிருந்து எழுப்புகிறது. ஓரிலைக்கு ஐந்து முட்களை காவலாக நிறுத்திக் கொள்கிறது” என்றார். மேலும் படியிறங்கும்போது அரிஷ்டநேமியும் பாறைகளை தாவிக் கடக்கத் தொடங்கியிருப்பதை அவன் கண்டான். அவர் புன்னகைத்து “முட்களை நானும் உணரத் தொடங்கிவிட்டேன்” என்றார்.

அரண்மனைக்கு முன்னால் இருந்த முற்றத்தில் புரவிகள் சித்தமாக நின்றன. ஸ்ரீதமர் ஏவலர்களுக்கு ஆணைகளை பிறப்பித்துக் கொண்டு நின்றிருந்தார். தொலைவில் அர்ஜுனனையும் அரிஷ்டநேமியையும் கண்டதும் அவர் திரும்பி மீண்டும் ஒரு ஆணையை பிறப்பித்துவிட்டு அருகே நெருங்கிவந்து “வருக இளவரசே. தங்களுக்கான புரவிகள் சித்தமாக உள்ளன” என்று சொன்னார். அர்ஜுனன் திரும்பி நோக்குவதைக் கண்டு “இளவரசி வந்து கொண்டிருக்கிறார் யோகியே” என்றார்.

அங்கிருந்து நோக்கியபோது மலைச்சரிவில் எங்கும் யாதவர்கள் கீழிறங்கிச் செல்வதை காணமுடிந்தது. மழைநீர் சிறு சிறு ஓடைகளாக வழிந்து பெருகிச் செல்வது போல. முந்தைய நாள் அவர்கள் பொங்கி மேலெழுந்து வந்ததை எண்ணிக் கொண்டான். “அனைவரும் நாளைக்குள் கஜ்ஜயந்தபுரியின் எல்லைக்குள்ளிருந்து சென்றுவிடுவார்கள்” என்றார் ஸ்ரீதமர். “நெடுங்காலமாக நடந்து வருகிறது இந்த விழவு. யாதவர்களின் வரலாற்றில் உண்டாட்டில்லாத ஒரே விழவு இதுவே. நூற்றெட்டுநாள் குடியும் ஊனுணவும் தவிர்த்து கொல்லாமையும் பொய்யாமையும் பூசலிடாமையும் நோற்று இருமுடிகட்டி இங்கு வருகிறார்கள். எனவே செல்லும் வழியிலேயே குடித்தும் உண்டும் கொண்டாடி நிலையழியத் தொடங்கிவிடுவார்கள்.”

அரிஷ்டநேமி அங்கு நின்ற பெரிய வெண்புரவி ஒன்றை அணுகி அதன் கழுத்தை தடவினார். ஸ்ரீதமர் “புரவியேற்றம் தங்களுக்கு மறந்திருக்காதென்று நினைக்கிறேன் இளவரசே” என்றார். “ஆம், புரவியேறி நெடுநாட்கள் ஆகின்றன” என்றார். “விலங்குகளின் மேல் ஏறுவது கருணைக்கு மாற்றானது என்ற எண்ணம் எனக்கிருந்தது” என்றபின் புன்னகைத்து “இனிமேல் ஏவலர்களின் மேல், படைவீரர்களின் மேல், குடிகளின் மேல், அயல்நாட்டவர் மேல் என வாழ்நாளெல்லாம் உயிர்களின் மேலேயே பயணம் செய்யப்போகிறேன். இது ஒரு தொடக்கமாக இருக்கும் என தோன்றுகிறது” என்றார்.

அப்புரவி திரும்பி அவரது தோளை தன் செந்நீல நாக்கால் நக்கியது. “அது தாங்கள் ஏறுவதை விரும்புகிறது” என்றார் ஸ்ரீதமர். “ஆம், அதற்கு அது பழக்கப்பட்டுள்ளது. நான் துவாரகைக்குள் நுழையும்போது அங்குள்ள குடிகளும் வீரர்களும் மகிழ்ந்து கூச்சலிட்டு என்னை வரவேற்பார்கள். வாளேந்தி அவர்களை போருக்கு அழைத்துச் சென்றால் என்னை வாழ்த்தியபடி தொடர்வார்கள். அவர்களின் குருதிமேல் நின்று நான் முடிசூடிக்கொண்டால் என்னை குலதெய்வமாக ஆக்கி கோயில் கட்டுவார்கள்.”

அர்ஜுனன் தொலைவில் சுபத்திரை வருவதை கண்டான். சேடி ஒருத்தி அவளுடைய மான்தோல் பயணமூட்டையுடன் பின்னால் வந்தாள். தோலால் ஆன இடையாடையும் உடலுக்குக் குறுக்காகச் சென்ற செவ்வண்ணம் பூசப்பட்ட காப்பிரிநாட்டு மென்தோல் மேலாடையும் அணிந்து குழலை கொண்டையாகக் கட்டி தலைக்குப் பின் சரித்து அணிகள் ஏதும் இல்லாமல் நடந்து வந்தாள். அவளுடைய இறுகிய தசைகள் அந்நடையில் குதிரைத்தொடைகள்போல் அதிர்ந்தன. அருகே வந்து அரிஷ்டநேமியை வணங்கி “நான் மதுராவின் இளவரசி சுபத்திரை. மூத்தவரை வணங்குகிறேன்” என்றாள். அரிஷ்டநேமி கைதூக்கி அவளை வாழ்த்தி “நாம் கிளம்புவோம்” என்றார்.

அர்ஜுனனை நோக்கி புன்னகைத்து “சித்தமாகிவிட்டீர்களா?” என்றாள். அர்ஜுனன் “ஆம் இளவரசி” என்றபின் புரவியில் ஏறிக்கொண்டான் அரிஷ்டநேமி எளிதாக கால்தூக்கி வைத்து தன் புரவியின் மேல் ஏறினார். சுபத்திரை தன் தோல் மூட்டையை வாங்கி அணுக்கனிடம் கொடுத்துவிட்டு தன் புரவியை நோக்கி சென்றாள். ஸ்ரீதமர் அர்ஜுனன் அருகே வந்து அவன் புரவியின் கழுத்தை நீவியபடி “ஒரு புறம் ஊழ்கப் படிவர் மறுபுறம் காதலிளம் கன்னி. சிறந்த பயணத்தை தங்களுக்கு அமைத்திருக்கிறார் இளைய யாதவர், பாண்டவரே” என்றார். அர்ஜுனன் அவர் விழிகளை நோக்கி “ஆம்” என்றான். பின்பு புன்னகைத்து “எனது துலாமுள் எத்திசைக்கு சாயும் என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை ஸ்ரீதமரே” என்றான்.

ஸ்ரீதமர் “இளைய பாண்டவர் எந்தெந்த விசைகளால் ஆக்கப்பட்டவர் என்பது எனக்கே தெரியும், யாதவருக்கு தெரியாமல் இருக்குமா?” என்றார். அர்ஜுனன் “தெரிந்திருக்கலாம், எனக்கு அவை எவையெனத் தெரியாது” என்றான். முன்னால் நின்றிருந்த காவலர்தலைவன் தன் கொம்பை எடுத்து ஊத பயணத்திற்கென்று சித்தமாக நின்ற யாதவர்கள் கைகளைத் தூக்கி “துவாரகை வாழ்க! நேமியும் சங்கும் வாழ்க! கருடக்கொடி எழுக!” என்று கூவினர். தலை வணங்கி ஸ்ரீதமரிடம் விடை பெற்று அர்ஜுனன் புரவியை காலால் செலுத்தினான்.

மூன்று புரவிகளும் இணையாக மலைச்சரிவில் இறங்கத்தொடங்கின. வளைந்த பாதையில் கூழாங்கற்களின்மேல் புரவியில் இறங்கியபோது அரிஷ்டநேமி ஊழ்கத்தில் இறங்கியவர் போல் பாதி விழி மூட கால்களன்றி உடற்தசைகள் எவற்றிலும் அசைவின்றி அமர்ந்திருந்தார். கஜ்ஜயந்தபுரியின் புழுதி படிந்த பாதையில் அவர்கள் செல்லத் தொடங்கியதும் இருபக்கமும் இருந்த இல்லங்களிலிருந்த அருக நெறியினர் மஞ்சள் அரிசியையும் மலர்களையும் அவர்கள் மேல் வீசி அருகர் பெயர் சொல்லி வாழ்த்தி விடை கொடுத்தனர். இளம்சிறுவர்கள் அவர்களை நோக்கி கூச்சலிட்டு கைகளை வீசி குதித்தனர்.

யாதவர்கள் நகருக்குள் வரும்போதிருந்த உள எழுச்சிகள் முற்றிலும் அகன்று துயிலும் துயரும் கலந்த எடை உடல் தசைகளை அழுத்த தளர்ந்த கால்களை எடுத்து வைத்து மெல்ல நடந்தனர். பொதி வண்டிகள் வலி மிகுந்தவை போல முனகியபடி சென்றன. அத்திரிகளும் கழுதைகளும் இருபுறமும் தொங்கிய எடைகளை நிகர் செய்தபடி மழை நனைந்து ஈரமான முரசுத்தோலில் கோல்குண்டுகள் விழுவது போல ஓசையிட்டு குளம்புகளை வைத்து மெல்ல சென்றன.

கஜ்ஜயந்தபுரியில் இருந்து யாதவர்கள் விலகிச்செல்வது வெயில் இழுபட்டு அந்திக்கதிரவன் அணைதல் போல் அர்ஜுனனுக்கு தோன்றியது. அவர்கள் விலகி விலகிச்செல்ல அசைவின்மையும் இருளும் கஜ்ஜயந்தபுரியின் இல்லங்கள் அனைத்திலும் படிந்து மூடின. அரைப்பாலை நிலத்தின் தொடுவானம் அவர்களை அரைவட்டமாக வளைத்திருந்தது. கூரிய படையாழி ஒன்றின் முனை போல.

அவனருகே புரவியில் வந்த சுபத்திரை தொடுவானை சுட்டிக்காட்டி “வெண்பட்டு நூலை வட்டமாக இழுத்துக் கட்டியது போல” என்றாள். அவன் திரும்பி அவளைப் பார்த்து புன்னகை செய்தான். “தொடுவான் நோக்கி புரவியில் விரையவேண்டும் என்று எப்போதும் எண்ணிக் கொள்வேன்” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “நான் அடைய விரும்புவன எல்லாமே தொடுவானுக்கு அப்பால் இருப்பது போல தோன்றும்” என்றாள் சுபத்திரை. “இளமையின் கனவு” என்று அர்ஜுனன் சொன்னான். “வாழுமிடத்துக்கு அப்பால் வெல்ல வேண்டியவை அனைத்தும் குவிந்து கிடப்பது போல் உணரும் உள நிலை. அது ஒரு முறை கிளம்பிச்சென்று நோக்கினால் தெரியும். தொடுவானம் என்பது ஒன்றில்லை. மீண்டும் மீண்டும் நிகழும் முடிவிலாத வாழ்விடங்களைத்தான் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.”

“அதை நானும் அறிந்துளேன்” என்றாள் சுபத்திரை. “ஆயினும் இக்கனவுகள் இப்படியே இருக்கட்டும் என்று எண்ண விழைகிறேன்.” முன்னால் வந்து நின்ற முதிய யாதவர் “இனிமேல் பாலைவனப்பாதை யோகியே. விரைந்து சென்று முதல் சோலையை அடைந்தாகவேண்டும்” என்றார். “செல்வோம்” என்றான். புழுதித் திரைக்கு அப்பால் சென்று கொண்டிருந்த முன்னோடிக் காவலன் தன் கொம்பை எடுத்து ஊதினான். அதுவரை ஒன்றன்பின் ஒன்றென நிரை வகுத்து வந்து கொண்டிருந்த யாதவர்களின் கூட்டம் நாரைக்கூட்டம்போல பிரிந்து பல தனிநிரைகளாக ஆகி பாலைவனத்தில் செல்லத்தொடங்கியது.

எவனோ ஒரு சூதன் குறுமுழவை மீட்டி பாடத் தொடங்கினான். காளியனை வென்று களிநடமிட்ட கரிய குழந்தையின் அழகை. அர்ஜுனனின் அருகே வந்த சுபத்திரை “இளமை முதலே இப்பாடலை கேட்டு வருகிறேன்” என்றாள். அர்ஜுனன் அவளை நோக்காமல் “யாதவப் பெண்கள் அனைவரும் பெற்றெடுக்க விழையும் குழந்தை அல்லவா அது?” என்றான். அவள் முகம் சிவப்பதை திரும்பி நோக்காமலே காணமுடிந்தது. “ஆம்” என்று அவள் சொன்னபோது அது ஒரு பெருமூச்சு போல் ஒலித்தது. “பெருந்திறன் கொண்ட வீரன் ஒருவனை பெறவிரும்பாத பெண் யாருமிருக்க முடியாது” என்று அவள் சொன்னாள்.

அர்ஜுனன் தன் புரவியின் குளம்படி ஓசையை உற்றுக் கேட்டுகொண்டு சில கணங்கள் சென்று கொண்டிருந்தான். தன் உடல் எங்கும் அந்த ஓசை ஒலிப்பதை உணர்ந்தான். பின்பு “இளைய யாதவருக்கு இணையாகவே பாரதவர்ஷமெங்கும் அர்ஜுனன் பெயரும் சொல்லப்படுகிறது” என்றான். அவள் உடல் கொள்ளும் குறுகலை தன் முதுகே எப்படி உணர்கிறது என்னும் வியப்பு அவனுக்கு ஏற்பட்டது. அவள் ஒன்றும் சொல்லவில்லை என்று கண்டு மீண்டும் “அவர்கள் இருவரையும் பேருருவம் கொண்ட ஒன்றின் இரு முகங்கள் என்று சொல்லும் வழக்கமுண்டு” என்றான்.

அதற்கும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அர்ஜுனன் சினம் கொண்டான். “அஸ்தினபுரியில் பெண்கள் இளைய யாதவனை கனவு காண்பது குறித்து சூதன் ஒருவன் பாடிய ஏளனப் பாடலை கேட்டேன். இளைய பாண்டவனுக்கு தங்கை முறையும் தமக்கை முறையும் தாய்முறையும் கொண்டவர்கள் அவனுக்கு மாற்றென இவனை விழைகிறார்கள் என்றான். அதைக்கேட்டு சூழ்ந்து நின்ற நகர்ப்பெண்கள் ஆடையால் வாய் மூடி நகைத்தனர்.” அதற்கும் சுபத்திரையிடமிருந்து மறுமொழி ஏதும் வரவில்லை .அர்ஜுனன் திரும்பி அவளை நோக்க அவள் தலை குனிந்து வேறெங்கோ எண்ணத்தை நிறுத்தி வந்து கொண்டிருந்தாள்.

அர்ஜுனன் ஒருகணம் உளம் தளர்ந்தான். பின்பு அவளை நோக்கி “தாங்கள் இளைய பாண்டவரையே மணப்பதையே தங்கள் தமையன் விரும்புகிறார் என்று நேற்று யாதவன் ஒருவன் சொன்னான்” என்றான். சுபத்திரை “ஆம்” என்றாள். அங்கேயே அச்சொல்லாடலை விலக்கிச் சென்றுவிட வேண்டும் என்று அவன் உள்ளம் விழைந்தாலும் அர்ஜுனனால் அது முடியவில்லை. “தங்கள் எண்ணம் என்ன?” என்றான். அதைக் கேட்டமைக்காக அவனே தன்னை கசந்தான். அவள் “நான் ஷத்ரியர்களை வெறுக்கிறேன்” என்றாள். அவன் அவள் கண்களை நோக்கி “ஏன்?” என்றான். “தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் ஒரு பொருட்டே அல்ல என்று தோன்றுகிறது. அவர்கள் விழைவதெல்லாம் மண் மேலும் பெண் மேலும் கொள்ளும் வெற்றியைத்தான்” என்றாள்.

அவன் மேலே சொல்லெடுக்காமல் புரவியைச் செலுத்த அவளே தொடர்ந்தாள் “இளைய பாண்டவரைப்பற்றி நான் கேட்கும் செய்திகள் அனைத்தும் ஒன்றையே காட்டுகின்றன. அவர் பெண்களை அடைகிறார், வெல்கிறார். கடந்ததுமே துறந்து செல்கிறார். அவ்வெற்றிகளில் ஒன்றாக நானும் இருப்பது இழிவென்று தோன்றுகிறது. ஒருபோதும் அவர் அடைய முடியாத மலைமுடியென, அவர் எண்ணி ஏங்கும் அரும்பொருளாக இருக்கும்போது மட்டுமே என் ஆணவம் நிறைவுறுகிறது. அவரென்றல்ல அத்தனை ஷத்ரியர்களுக்கும் அவ்வாறு மிக அப்பால் இருக்க வேண்டுமென்று விழைகிறேன்.”

அர்ஜுனன் “கதைகளினூடாக அறியவரும் ஒருவர் பிறரது விழைவுகளாலும் அச்சங்களாலும் தீட்டப்பட்டவர். அச்சித்திரம் எத்தனை பெரிதென்றாலும் தொட்டு எடுத்த வண்ணம் கொண்ட சிமிழ் மிக மிகச் சிறியதே” என்றான். “அதையும் நான் அறிவேன். ஆயினும் அவ்வண்ணம் அவருடையது. அதை என்னால் உணர முடிகிறது. அவருக்கு நானல்ல, எந்தப் பெண்ணும் ஒரு பொருட்டல்ல” என்றாள். அர்ஜுனன் “இளைய பாண்டவரை நீங்கள் எண்ணியதே இல்லையா?” என்றான். அவள் கண்களில் மெல்லிய வலி ஒன்று வந்து சென்றதைக் கண்டதும் அவன் உள்ளத்தில் இருந்த எரிச்சல் சற்றே குளிர்ந்தது.

“எண்ணியதுண்டு” என்றாள். “நான் அவரை எண்ண வேண்டுமென்று சேடியரும் என் செவிலியரும் விரும்பினார்கள். அது என் இளைய தமையனின் விழைவென்று பின்னர் அறிந்தேன். நெடுங்காலம் அவரை எண்ணியிருந்தேன். அவருக்கெனவே என் பெண்மை மலர்ந்ததென்றுகூட நம்பினேன். பிறகெப்போதோ என்னையும் ஓர் இருப்பென எண்ணியபோது இந்தக் கசப்பு எழத்தொடங்கியது” என்றாள். அர்ஜுனன் “இளைய பாண்டவர் இன்று உங்கள் முன் வந்து உங்கள் கைகளை கோரினால் என்ன செய்வீர்கள்?” என்றான். அதைக் கேட்ட கணமே அது தன் வாழ்நாளில் கீழ்மைகொண்ட தருணம் என நினைத்தான்.

அவள் அச்சொற்களை கேட்டதாகவே தோன்றவில்லை. அவன் உள்ளம் எரியத்தொடங்கியது. பிறிதொரு முறை அவ்வண்ணம் கேட்டால் வாளை உருவி தன் தலையை வெட்டிக்கொள்வோம் என எண்ணினான். உடலின் ஒவ்வொரு நரம்பும் இழுபட்டு நின்றது. பின்பு மெல்ல தளர்ந்தான். அப்பால் சென்றுகொண்டிருந்த அரிஷ்டநேமியின் அருகே சென்றுவிட எண்ணி புரவியை திருப்பினான். அப்போது அவள் மெல்ல அசைந்தாள். அந்த அசைவு புரவியிலும் தெரிந்தது. அவன் ஒருகணம் தயங்கினான். அந்தத் தயக்கம் அவன் புரவியிலும் தெரிந்தது. ஆனால் அவள் ஒன்றும் சொல்லவில்லை.

அர்ஜுனன் அரிஷ்டநேமியின் அருகே சென்று அவருடைய புரவிக்கிணையாக தன் புரவியை செலுத்தினான். அவர் கையில் எதையோ வைத்து உருட்டிக்கொண்டிருப்பதை பார்த்தான். அந்தக் கல் அது என கண்டான். அனைத்துப் பதற்றங்களும் விலக புன்னகைத்துக் கொண்டான். எடை விலகிய உடலுடன் புரவியை காலால் அணைத்து சீர்நடையில் செலுத்தினான்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 21

ரைவத மலையிலிருந்து ஒருநாள் பயணத்தொலைவில்தான் துவாரகை இருந்தது. முட்புதர்க் குவைகள் விரிந்த அரைப்பாலை நிலம் கோடையில் பகல்பயணத்திற்கு உகந்ததல்ல என்பதனால்தான் மேலும் ஓர் இரவு தேவைப்பட்டது. ரைவத மலையிலிருந்து பாலைவனத் தொடக்கத்தை அடைந்ததுமே உஜ்ஜயினி நோக்கி செல்லும் யாதவர்கள் பிறரிடம் விடைபெற்று பிரிந்தனர். துவாரகையிலிருந்து வந்தவர்களே எண்ணிக்கையில் மிகுதி என்பதனால் ஒவ்வொரு சிறுகுழு உஜ்ஜயினிக்காக வடகிழக்கு நோக்கி திரும்பும்போதும் பெருங்குரல்கள் எழுந்து நெடுந்தொலைவிற்கு வானில் பறந்து சென்றன.

உஜ்ஜயினி வரைக்குமான பாதை பலநாட்கள் அரைப்பாலைவெளியினூடாக செல்வது. காற்றாலும் கனல் கொண்ட வானாலும் அலைக்கழிக்கப்படுவது. எனினும் மதுராவுக்கும் மதுவனத்துக்கும் மார்த்திகாவதிக்கும் சென்ற யாதவர்கள் தனித்தனி குழுக்களாகவே சென்றனர். ஒவ்வொரு குழுவிலும் அவர்களின் குலத்திற்கோ குடிக்கோ உரிய அடையாளங்களுடன் இளமஞ்சள் கொடி பறந்தது. மணல் மேட்டில் நின்று தொலைவில் செல்லும் யாதவக் குழுக்களை பார்த்தபோது அக்கொடிகளின் ஒற்றைச் சிறகு அவர்களை கவ்வி தூக்கிக்கொண்டு செல்வதுபோல் தோன்றியது.

அவனருகே வந்து நின்ற துவாரகையின் முதியயாதவர் சௌபர் “இவர்கள்தான் நேற்று முன்தினம் ஒற்றை பெரும் பெருக்கென கஜ்ஜயந்தபுரியை நிறைத்திருந்தனர் என்று எவரேனும் சொன்னால் நம்பமுடியுமா என்ன?” என்றார். அதற்கு அப்பால் நின்ற முதியயாதவர் காலகர் “வானிலிருந்து மழையின் ஒவ்வொரு துளியும் தனித்தனியாகவே மண்ணிறங்குகின்றன. மண் தொட்ட பின்னர்தான் இணைந்து ஓடைகளாக ஆறுகளாக மாறி கடலடைகின்றன” என்றார். அர்ஜுனன் புன்னகையுடன் அவரை திரும்பிப்பார்த்தான். அவர் புன்னகையுடன் “இது நான் சொல்லும் வரி அல்ல. யாதவர்களின் குலப்பாடல்கள் அனைத்திலும் இந்த உவமை இருக்கிறது” என்றார்.

புரவிகளும் அத்திரிகளும் பொதிவண்டி இழுத்த மாடுகளும் மென்மணலில் புதைந்த குளம்புகளால் உந்தி மூச்சிரைக்க நடந்து கொண்டிருந்தன. சகடங்கள் மணலில் செல்லும் கரகரப்பு ஒலி முதலில் தோலை கூச வைப்பதாக தோன்றியது. ஒருநாளில் அது ஒரு மெல்லுணர்வை உருவாக்குவதாக மாறிவிட்டிருந்தது. அர்ஜுனன் வண்டிகளிலும் அத்திரிகளிலுமாக துவாரகைக்குச் செல்லும் யாதவர்களின் முதியவர் நடுவே புரவியில் சென்றான். அப்பால் இரு சேடியர் தொடர தன் புரவியில் சுபத்திரை செல்வதை ஒருமுறை நோக்கியபின் அவன் தலை திருப்பவே இல்லை. அவனுக்குப் பின்னால் புரவியில் ஊழ்கத்தில் அமர்ந்தவர்போல ஒரு சொல்லும் எழாது அரிஷ்டநேமி வந்து கொண்டிருந்தார்.

மீண்டும் சுபத்திரை அருகே செல்லவோ களிச்சொல்லெடுக்கவோ முடியுமென்று அர்ஜுனன் எண்ணவில்லை. அவளில் ஒற்றை உணர்வை அன்றி பிறிதெதையும் தான் எதிர்பார்க்கவில்லை என்று அறிந்தான். அதை அவள் சொல்லப்போவதும் இல்லை. உடல்கள் நெருக்கமாக தொட்டுச்செல்கையில் உணர்வுகள் உடல் எல்லையை கடந்துவிடுகின்றன. காலகர் அவனிடம் “இளவரசி தங்களை பலமுறை திரும்பி நோக்குவதை காண்கிறேன் யோகியே. தாங்கள் அவர்களுக்கு படைக்கலன் பயிற்ற இளைய யாதவரால் அமைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றார்கள். தங்கள் அணுக்கத்தை இளவரசி விழைவதாகவும் தோன்றுகிறது” என்றார்.

அவருக்குப் பின்னால் வந்த முதியயாதவர் கீர்மிகர் “கன்னியர் இளம் யோகியரை விரும்புகிறார்கள். அதற்கு சான்றாக நூற்றுக்கணக்கான கதைகள் உள்ளன” என்றார். அர்ஜுனன் தாடியை நீவியபடி கண்கள் சிரிக்க “ஏன்?” என்றான். “அறியேன்” என்றார். “ஆனால் கதைகளில் மீண்டும் மீண்டும் அதை காணமுடிகிறது.” காலகர் “இதிலென்ன அறியமுடியாமை உள்ளது? ஆண்கள் தங்கள் அழகின் சரடால் கட்டப்பட்ட பாவைகள் என்று கன்னியர் எண்ணுகிறார்கள். அச்சரடுக்கு தொடர்பின்றி ஒரு பாவை நின்றாடுமென்றால் அது அவர்களின் தோல்வி. அதிலிருந்து உள்ளத்தை விலக்க அவர்களால் இயலாது” என்றார்.

அவர்களுடன் வந்து இணைந்துகொண்ட இன்னொரு யாதவரான அஷ்டமர் “அது வெல்வதற்கு அரிய ஆணை வெல்வதற்காக பெண்ணின் ஆணவம் கொள்ளும் விழைவு மட்டுமே என்று நானும் எண்ணினேன்” என்றார். காலகர் “அழகும் வீரமும் கொண்ட இளைஞர் ஒருவர் யோகி என்றாவதை பெண்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பெண்ணின் அழகைவிட காதலின் உவகையைவிட மேலானதாக அவன் விழைவது எது? அப்படி எதையேனும் அவன் கண்டடைந்தானா? அப்படி ஒன்று இருக்குமென்றால் இப்புவியில் பெண்ணுக்கு என உள்ள பொருள் என்ன? அவ்வினாக்களிலிருந்து அவள் உள்ளம் விலகுவதே இல்லை.”

காலகர் ஏதோ சொல்ல வர அஷ்டமர் “விழி திருப்பவேண்டாம் இப்போது. இளவரசி இந்த சிவயோகியை அன்றி இங்குள எந்த ஆண்மகனையும் விழிகளால் பொருட்படுத்தவில்லை” என்றார். சில கணங்களுக்குப் பின் யாதவர்கள் திரும்பி நோக்கி நெய் பற்றிக்கொள்வதுபோல ஒரே சமயம் சிரித்து “ஆம், உண்மைதான்” என்றனர். “நீர் திரும்பிப் பார்க்கவில்லை சிவயோகியே!” என்றார் அஷ்டமர். அர்ஜுனன் “என் யோக உறுதியைப்பற்றி நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்” என்றான். “இல்லை. இயல்பாக திரும்பிப் பார்த்திருந்தால்தான் நீர் இளவரசியை ஒரு பொருட்டெனக் கருதவில்லை என்று பொருள். உடலை இறுக்கி கழுத்தை திருப்பாது வைத்துக்கொண்டு வருவதிலிருந்து உம் உள்ளம் முழுக்க இளவரசியையே சூழ்ந்துள்ளது என்று தெளிவாகிறது” என்றார்.

அவர்கள் சேர்ந்து நகைத்தனர். அர்ஜுனன் அவர்களின் விழிகளைத் தவிர்த்து “இளைய பாண்டவருக்காக இளைய யாதவரால் மொழியப்பட்ட பெண் இளவரசி. அவள் உள்ளம் அவரை தன் கொழுநனாக ஏற்றுக்கொண்டுள்ளது” என்றான். காலகர் “ஆம், அவ்வாறுதான் யாதவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பெண்ணின் உள்ளம் காற்றுமானியைப் போன்றது. அதன் திசை விண்வல்லமைகளால் ஒவ்வொரு கணமும் மாற்றி அமைக்கப்படுகிறது” என்றார். “அவள் உள்ளம் அர்ஜுனனிடம் இல்லை என்று எண்ணுகிறீர்களா?” என்றான் அர்ஜுனன்.

“ஆம், எங்கோ ஓரிடத்தில் அவளுக்குள்ளிருந்து இளைய பாண்டவர் உதிர்ந்து விட்டிருக்கிறார்” என்றார் காலகர். “நீர் இளவரசியை பார்க்கத் தொடங்கியதே நேற்று முன்தினம் தானே?” என்றார் அஷ்டமர். “ஆம். அணுகி புழங்கி உடனிருப்பவர்கள் பெண்களை அறிய முடியாது. ஏனெனில் அவர்களை அப்பெண்களும் அறிவார்கள். அவர்களுக்கு உகந்த முறையில் தங்களை மாற்றி நடிக்கும் கலையை கற்றிராத பெண் எவருமில்லை. இளவரசியின் அன்னையும் தந்தையும் சேடியரும் செவிலியரும் அவள் அகத்தை அறியமுடியாது. அவர்கள் தங்கள் விழைவையே இளவரசியாக கண்டிருப்பார்கள். முற்றிலும் புதியவனான என் கண்களுக்கு இளவரசி நான் விழையும் பாவை எதையும் அளிக்கவில்லை. அவள் உள்ளம் இயங்கும் வண்ணத்தை அணுகி நோக்கிக் கொண்டிருக்கிறேன் என்று அவள் அறியவில்லை என்பதனால் என் முன் எழுந்தவள் அவளேதான்.”

கனகர் என்னும் யாதவர் “சொல்லும் காலகரே, நீர் என்ன கண்டீர்?” என்றார். “இளைய பாண்டவரின் பெயர் எவ்வகையிலும் இளவரசியை தூண்டவில்லை” என்றார் காலகர். “எப்படி தெரியும்?” என்றார் அஷ்டமர். “காதல் கொண்ட பெண் தன் ஆண்மகனின் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் கண்களில் சிறுஒளியை அடைகிறாள். வெவ்வேறு வீரர்கள் இளைய பாண்டவரின் பெயரை அவளிடம் சொல்லக் கேட்டேன். அந்த ஒளியை நான் இளவரசியின் கண்களில் பார்க்கவில்லை.”

“இது எப்போது?” என்று அர்ஜுனன் கேட்டான். “கஜ்ஜயந்தபுரியில் நுழையும்போதே” என்றார். “ஏன்?” என்று அர்ஜுனன் அவர்களை நோக்காது தொலைவில் சென்றுகொண்டிருந்த யாதவர்களின் வளைவை நோக்கியபடி கேட்டான். “அதைத்தானே நேற்று முதல் நானும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் தன் உள்ளத்திலிருந்து ஏன் இளைய பாண்டவர் உதிர்ந்தார் என்பதை இளவரசி கூட இன்னும் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்றார்.

அர்ஜுனன் “இளைய பாண்டவர் பெண் பித்து கொண்டவர். முன்னரே பல பெண்களை மணந்து உடனே விலகியவர் என்பதனால்தானா?” என்றான். “அல்ல” என்றார் காலகர். “பெண்பித்தர்களை பெண்களுக்குப் பிடிக்கும். அத்தனை பெண்களையும் கவரும் எது அவனிடம் உள்ளது என்ற ஆர்வமே பெண்பித்தர்களிடம் பெண்களை கொண்டுவந்து சேர்க்கிறது. பெண்களை அணுகும்தோறும் பெண்களை அறியும் கலையை பெண்பித்தர்களும் அறிந்திருக்கிறார்கள்.” அர்ஜுனன் “அவர் எளிதில் பெண்களை உதறிச் செல்கிறார் என்பதாலா?” என்றான். “ஷத்ரியர்கள் அனைவருமே பெண்களை கடந்துதான் செல்கிறார்கள்” என்றார் காலகர்.

“பிறகென்ன? மூப்பா?” என்றான் அர்ஜுனன். காலகர் “சுபத்திரை போன்ற பெண்கள் வயது மூத்தவர்களையே விழைவார்கள். ஏனெனில் அவர்கள் உள்ளம் உடலைவிட முதிர்ந்தது. அதை ஆளும் ஆண் மூப்பு கொண்டவனாகவே இருக்க முடியும்.” சலிப்புடன் தலையைத் திருப்பி “பிறகென்ன?” என்றான் அர்ஜுனன். “அறியேன்” என்றார் காலகர். பின்னால் வந்த கீர்மிகர் “விந்தைதான். இப்புவியில் அவள் கொழுநனாகக் கொள்ளும் ஆண்மகன் ஒருவன் உண்டென்றால் அது இளைய பாண்டவரே என்று எண்ணினேன். ஏனெனில் அவள் உள்ளத்தில் முழுதும் நிறைந்திருப்பவர் தமையனாகிய இளைய யாதவர்தான். இளைய யாதவருக்கு நிகரென எப்போதும் வைக்கப்படும் அணுக்கத்தோழர் இளைய பாண்டவர். பிறிதொரு ஆண்மகனை அவள் தன் உள்ளம் கொள்வாளா என்ன?” என்றார்.

காலகர் திரும்பி நோக்கி “ஒருவேளை அதனால்தான் இளைய பாண்டவரை அவளுக்கு உகக்காமல் ஆயிற்றோ?” என்றார். அவ்வினாவால் உள்ளம் தூண்டப்பட்டவர்களாக யாதவர்கள் அறியாது சற்று காலகரை நெருங்கினர். ஒன்றுடன் ஒன்று அணுகிய அத்திரிகள் மூச்சுக்களை சீறலாக எழுப்பின. ஒரு கழுதை தும்மலோசை எழுப்பியது. காலகர் “நான் உளறுவதாக தோன்றக்கூடும். ஆனால் எனக்கு இப்படித் தோன்றுகிறது. தோழரே, அவள் உள்ளம் நிறைந்திருக்கும் மானுடன் இளைய தமையன் என்றால் பிறிதொரு ஆண்மகனை அங்கு வைக்க விழைவாளா? அந்த ஒப்புமையே அவளுக்கு உளக்கசப்பை அல்லவா அளிக்கும்?” என்றார்.

“மூடத்தனம்” என்றார் கனகர். “இல்லை” என்றார் இன்னொரு யாதவராகிய கமலர். “காலகர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. அவளிடம் பேசிய சேடியர் அனைவரும் இளைய யாதவரும் இளைய பாண்டவரும் என்று சேர்த்தே சொல்லியிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் தன் தமையனை ஒரு படி மேலே நிறுத்தும் பொருட்டு இளைய பாண்டவரை குறைத்தே பேசியிருப்பாள். அப்படி அவள் குறைத்துப் பேசிய அத்தனை சொற்களும் அவள் உள்ளத்தில் தேங்கி ஓர் எண்ணமாக மாறி இருக்கலாம்” என்றார். “ஆனால் இங்கு அவள் வரும்போது இளைய பாண்டவரை மணக்கும் மனநிலையில்தான் இருந்தாள். காதல் கொண்டவள் போல் தோன்றவில்லை. ஆனால் அதுவே நடக்கும் என்று எண்ணியவள் போல இருந்தாள். ஏனென்றால் அது இளைய யாதவரின் விழைவு என்பதை அவள் அறிந்திருந்தாள்” என்றார் முகுந்தர் என்னும் யாதவர்.

“கஜ்ஜயந்தபுரியில் அவளுடைய அணுக்கனாக இருந்தவன் எனது தோழன். அவனுக்கு உதவும் பொருட்டு உணவும் தோலாடைகளுமாக பலமுறை அரண்மனைக்கு நான் சென்றேன். என் தோழனும் அங்குள்ள சேடியர் அனைவரும் பேசியது அனைத்தும் இதையே காட்டின” என்று தொடர்ந்தார். “பிறகெப்போது அவள் உள்ளம் மாறியது?” என்றான் அர்ஜுனன். “யாரறிவார்? நேற்று தன் தமையனை அரண்மனையில் சந்தித்தபின் என்று சேடி ஒருத்தி சொன்னாள். அதன்பின் இளைய பாண்டவரின் பேரை சொல்லும் போதெல்லாம் அவள் முகம் சுளிக்கிறது. கண்களில் ஒரு துளி கசப்பு வந்து மீள்கிறது” என்றார் முகுந்தர். “அது அரிஷ்டநேமியை சந்தித்ததனால் இருக்குமோ?” என்றார் கீர்மிகர். “கொல்லாமையின் கொடுமுடி ஏறி நின்றிருக்கும் மூத்தவர் ஒருவர் அவர்களுக்கு இருக்கிறார். கொலைவில் கொண்ட ஒருவன் மீதான வெறுப்பாக அது மாறியிருக்கலாம் அல்லவா?”

“என்ன பேசுகிறீர்? அவளே பெருந்தோள் கொண்டவள். விழியிமை கூட அசைக்காமல் வீரனின் தலை வெட்டி வீழ்த்தும் உரம் கொண்டவள். அவளைப் பற்றிய கதைகளை நீர் அறிந்திருப்பீர் அல்லவா?” என்றார் காலகர். “அதனால்தான் சொல்கிறேன்” என்றார் கீர்மிகர். “வன்வழியிலிருந்து விலகியவர்கள் அனைவரும் ஒரு கணத்திலேயே அவ்வாறு மாறியிருக்கிறார்கள். நெடுங்காலமாக அவர்களுக்குள் அப்பெரும்பாறையின் அடிமண் கரையத்தொடங்கி இருக்கும். ஆனால் அது உருண்டோடத் தொடங்கும் கணம் ஒன்றே. அருகே நின்றிருந்தால் பெருமரம் இற்று முறிவதுபோன்ற அந்த ஓசையைக்கூட கேட்க முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“அவளுக்கு அருகப்படிவராகிய தன் பெருந்தமையன் முன் அப்படி ஒரு கணம் வாய்த்திருக்குமா என்ன?” என்றார் காலகர். அவர்கள் அனைவரும் அறியாது ஒரு கணம் திரும்பி தொலைவில் சென்ற சுபத்திரையை நோக்கினர். கீர்மிகர் அர்ஜுனனை நோக்கி “அவள் தங்களை நோக்குகிறாள் யோகியே” என்றார். காலகர் உரக்க நகைத்து “அவள் நோக்கை பார்த்தால் இவரைக் கண்ட பின்னர்தான் அர்ஜுனனை வெறுத்தாளோ என்று எண்ணத்தோன்றுகிறது” என்றார். “யோகினியாக எங்கள் இளவரசியை கொள்ளுங்கள். சைவ யோக முறைகளில் யோகினியருக்கு இடமுண்டல்லவா?” என்றார் முகுந்தர். அர்ஜுனன். “நான் நைஷ்டிக பிரம்மசரியம் கொண்டவன்” என்றான். “ஆகவே நன்கு கனிந்த கனி என்று பொருள். அதை பெண்கள் விரும்புவார்கள்” என்றான் ஒருவன். யாதவர்கள் உரக்க நகைத்தனர்.

“என்ன பேச்சு பேசுகிறாய்? வீண் சொற்கள் எடுப்பதற்கு ஓர் எல்லையுண்டு” என்று கீர்மீகர் சீறினார். “எது வீண் என நாம் என்ன அறிவோம் யாதவரே?” என்றார் முகுந்தர். “வீண் பேச்சு வேண்டாம்” என்றார் காலகர். “முன்னரே இங்கு உளப்பூசல்கள் சீழ் பழுத்த கட்டிகள் போல் விம்மி நின்றிருக்கின்றன. இளவரசி இவரை பார்க்கிறாள் என்று அறிந்தாலே இவர் முதுகில் வாளை செலுத்தத் தயங்காத இளையோர் பலர் இங்குள்ளனர்.” “ஆம், நானும் அதை அறிந்தேன். போஜர்களும் குங்குரர்களும் இளவரசிக்காக விழைவு கொண்டிருக்கிறார்கள் என்று” அர்ஜுனன் சொன்னான்.

காலகர் “விழைவல்ல, அது ஒரு அரசியல் திட்டம். இளவரசியை வெல்பவன் மதுராவை அடைகிறான். ஒரு வேளை அவன் மைந்தன் துவாரகையையும் அடையக்கூடும். யாதவர்களில் விருஷ்ணிகள் அடைந்த மேன்மையை இளவரசியை மணம்கொள்ளும் குடியும் பெறும் என்பதில் ஐயமில்லை” என்றார். முகுந்தர் “நேற்று முதலே தனி தனிக் குழுக்களாக கூடி பேசிக்கொண்டே இருந்தனர்” என்றார். காலகர் “என்ன பேசிக்கொள்ளப் போகிறார்கள்? யாதவர்களால் முடிந்தது கூடிப்பேசுவது மட்டும்தானே?” என்றார்.

வெயில் மேலும் வெண்ணிற அனல் கொண்டது. நிழல்கள் குறுகி அவர்களின் காலடியை நெருங்கின. அவர்களின் நிரைக்கு முன்னால் சென்ற யாதவன் குதிரை ஒன்றின் மேலேறி நின்று நீள்சுரிக் கொம்பை முழக்கினான். காலகர் “அஜதீர்த்தம் என்னும் சோலை வந்துவிட்டது” என்றார். “சூழ்ந்திருக்கும் காட்டுக்குப் பெயர் ஷிப்ரவனம். சிறிய சுனை அதன் நடுவே உள்ளது. அளவோடு உண்டால் மட்டுமே அதன் நீர் நாமனைவருக்கும் போதுமாக இருக்கும். வரும்போது முதலில் வந்தவர்கள் நீரைஅள்ளி தாங்கள் உண்டு மிச்சிலை தரையிலும் தலைமேலும் ஊற்றி வீணடித்தனர். நீர் அள்ளும் வெறியில் சுனையை சேற்றுக்குழியாக்கினர். இறுதியில் வந்தவர்கள் சேற்றுக் கலங்கலை மரவுரியில் வடிகட்டி அருந்தவேண்டியிருந்தது. அந்த நீரும் கிடைக்காமல் எழுவர் உயிரிழந்தனர்.”

“யாதவர்களின் தங்குமிடங்கள் முழுக்க நடந்தது அதுதான். அத்தனை சோலைகளிலும் முதலில் வந்தவர்கள் நீர்வெறியால் கட்டின்றி சென்று சுனையை வீணடித்தனர். இறுதியில் வந்தவர்கள் நீருக்காக ஏங்கி சினவெறி கொண்டு அவர்களுடன் பூசலிட்டனர். உஜ்ஜயினி அருகே சுபகவனத்தில் மாறி மாறி கழிகளாலும் கற்களாலும் தாக்கிக் கொண்டனர். பன்னிருவர் உயிரிழந்தனர். பலருக்கு மண்டை உடைந்து குருதி சிந்தியது” என்றார் கீர்மிகர். “யாதவர்கள் கடலையே கையருகே அடைந்தாலும் கைகலப்பின்றி அருந்த மாட்டார்கள்” என்றார் காலகர்.

“இது ஒரு விந்தைதான். ஒவ்வொரு யாதவரும் தங்கள் ஒற்றுமையின்மையையே பழிக்கிறார்கள். ஆனால் அத்தனை யாதவர்களும் ஒற்றுமை இன்றியும் இருக்கிறார்கள்” என்றார் சௌம்யர் என்னும் முதிய யாதவர். “யாதவர்களிடையே ஷத்ரியர்கள் அனுப்பிய கண்காணா தெய்வங்கள் ஊடுருவி பூசலை உருவாக்குகின்றன” என்றார் காலகர். அவர் விழிகளை நோக்கிய அனைவரும் அதிலிருந்த சிரிப்பை தெரிந்துகொண்டு தாங்களும் சிரித்தனர். “ஆம், இதை நாம் சொல்லி பரப்புவோம். ஷத்ரியர்களை மேலும் வெறுப்பதற்கு இம்மாதிரியான மேலும் சிறந்த வரிகள் நமக்குத் தேவை” என்றார் கனகர்.

தொலைவில் சோலை தெரியத் தொடங்கியது. புழுதி படிந்த மரங்கள் நின்றிருந்த சோலைக்கு மேல் அங்கு நீர் இருப்பதை அறிவிக்கும் வெண்ணிற அலைகள் வரையப்பட்ட கொடி உயர்ந்த மூங்கில் கழியொன்றில் கட்டப்பட்டு காற்றில் படபடத்தது. அதைச் சூழ்ந்து பறந்த வலசைப் பறவைகளும் அங்கு நீர் இருப்பதை தெரிவித்தன. அக்கொடியை மனிதர்கள் பார்ப்பதற்குள்ளாகவே பறவைகளை விலங்குகள் பார்த்துவிட்டிருந்தன. முதலில் சென்ற குதிரை கனைக்க அந்நிரையிலிருந்த அனைத்து குதிரைகளும் ஏற்று கனைத்தன. குதிரைகளும் அத்திரிகளும் சிலைப்பொலி எழுப்பின. ஒரு காளை தோல் பட்டையை இழுக்கும் ஒலியில் உறும பிறிதொரு காளை உலோக ஒலியில் பதிலுக்கு உறுமியது.

அவர்களின் நிரை அச்சோலையை நெருங்கியது. அங்கிருந்து எழுந்த பறவையொலிகள் காதில் விழத்தொடங்கின. சோலை தனக்குள் பேசிக்கொண்டிருப்பதுபோல. காலகர் “யோகியாரே, தாங்கள் முன்னால் சென்று அங்குள்ள தலைமைக் காவலரிடம் சொல்லுங்கள். சென்றமுறைபோல நீருக்காக பூசல் தொடங்கலாகாது. விலங்குகளுக்கு நீர் அளந்து கொடுக்கப்படவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் விடாய்க்கு மட்டுமே நீரருந்த வேண்டும். அருந்திய மிச்சத்தை நிலத்தில் ஊற்றுவதோ உடலுக்கு தெளித்துக் கொள்வதோ கூடாது. தலைவர் சொல்லைக் கேட்கும் வழக்கம் இவர்களுக்கில்லை. தாங்கள் சொன்னால் கேட்பார்களா என்று பார்ப்போம்” என்றார்.

அர்ஜுனன் “நானா?” என்றான். “நீங்கள் இளைய யாதவருக்கு அணுக்கமானவர் என இவர்கள் அறிவார்கள். சிவயோகி மட்டுமல்ல நீங்கள் பார்த்தனுக்கு நிகரான வில்லவர் என்றும் சொல்கிறார்கள்.” அர்ஜுனன் “பார்க்கிறேன்” என்றபடி முன்னால் சென்றான். யாதவர்களின் விழிகளனைத்தும் தொலைவில் தெரிந்த சோலையை மட்டுமே நோக்கின. அவன் திரும்பி சுபத்திரையை பார்த்தான். அவள் விழிகள் அவனை சந்தித்ததும் புன்னகைத்தன.

அர்ஜுனன் தன் புரவியை பெருநடையில் ஓட வைத்து யாதவர்களின் நீண்ட நிரைக்கு இணையாக விரைந்து முகப்பை அடைந்தான். அங்கு வழிகாட்டி சென்று கொண்டிருந்த யாதவர்தலைவன் அவனை நோக்கி “நில்லுங்கள்… நீருக்கென எவரும் விரைந்து செல்லக்கூடாது என ஆணை” என்றான். அர்ஜுனன் ஏதோ சொல்ல வாயெடுக்க அவன் சினத்துடன் “சிவயோகியே, எவரும் என் ஆணையை மீறலாகாது. உடனே திரும்பி தங்கள் நிரைக்கு செல்லுங்கள்” என்று கூறினான். “இல்லை. நான் நீர் அருந்த வரவில்லை. முன்னர் சென்றவர்கள் சில நெறிகளை கடைபிடிக்கிறார்களா என்று பார்த்து வரும்படி என்னிடம் முதிய யாதவர் சொன்னார்கள். அதன்பொருட்டே வந்தேன்” என்றான்.

அவன் சினம் செறிந்த முகத்துடன் “அவை எங்குமுள பாலைநெறிகளே. முன்னால் வருபவர்கள் அனைவருக்குமான நீரில் தங்களுக்கான பங்கை மட்டுமே அருந்தவேண்டும். இந்நிரையின் இறுதியில் உள்ளவனுக்கும் முதலில் நீர் நிலையை அடைபவன் அருந்தும் அதே நீர் கிடைக்கவேண்டும்” என்றான். “ஆம், அதுவே நெறி. ஆனால் சோலைக்குள் புகுந்து சுனையைப் பார்த்த பின்பும் அதுவே நெறியாக நீடிக்க வேண்டுமல்லவா?” என்றபடி அர்ஜுனன் அவனுடன் நடந்தான். “நான் அதற்கு தங்களுக்கு உதவமுடியும். என் சொற்களை அவர்கள் பொருட்டெனக் கொள்வார்கள்.”

“என் சொற்களையும் அவர்கள் பொருட்படுத்தியே ஆகவேண்டும்” என்றான் தலைவன். கண்களில் பகைமையுடன் அர்ஜுனனை நோக்கி “அதன் பொருட்டே சாட்டை ஏந்திய நாற்பது வீரர்களை முன்னணியில் கொண்டுவந்திருக்கிறேன். வாளும் வேலும் ஏந்திய இருபது வீரர்கள் முன்னிரையில் உள்ளனர். நெறிகளை அறிவிப்போம். மீறுபவர்கள் அங்கேயே தண்டிக்கப்படுவார்கள்” என்றான். “நன்று” என்றான் அர்ஜுனன். தலைவன் சிரித்தபடி “முதலில் நெறி மீறுபவன் அங்கேயே வெட்டி வீழ்த்தபடுவான். அவனது தலையை ஒரு வேலில் குத்தி ஒரு ஓரமாக நிறுத்தி வைப்போம். அதன் பிறகு எச்சரிக்கை தேவையிருக்காது” என்றான்.

அர்ஜுனன் திகைப்புடன் “விடாய் கொண்ட ஒருவனை வெட்டுவதா?" என்றான். “நிறைவுறாது செத்தான் என்றால் அவனுக்கு ஒரு குவளை நீரை படையல் வைத்தால் போதும்” என்று தலைவன் புன்னகை செய்தான். “அந்தத் தலையை வேலில் குத்தி நீர் அருகே நிலைநிறுத்துவேன். எஞ்சியவர்களுக்கு அதைவிடச் சிறந்த அறிவிப்பு தேவையில்லை.” அவனருகே நின்ற இருகாவலர்கள் புன்னகைத்தனர். அர்ஜுனன் தன் உடல் ஏன் படபடக்கிறது என்று வியந்தான். “நீங்கள் இதில் தலையிடவேண்டியதில்லை யோகியே. இது போர்க்களத்தின் வழிமுறை. யாதவர்கள் இன்னும் பெரும்போர்கள் எதையும் காணவில்லை. அவர்களுக்கு இவ்வாறுதான் இவற்றை கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.”

யாதவர்களின் நிரை சோலையின் விளிம்பை வந்தடைந்தது. அங்கே மென்மணல்பரப்பு மெல்ல சரிந்திறங்கியது. சோலை மணல்வெளியின் சுழிபோல காற்றால் அமைக்கப்பட்டிருந்த பெரிய வட்டவடிவமான பள்ளத்திற்குள் அமைந்திருந்தது. மேலிருந்து பார்க்கையில் பள்ளத்தை உயரமற்ற சிற்றிலை மரங்களின் புழுதிபடிந்த பசுமை நிரப்பி அச்சோலையே ஒரு ஏரி போல தோன்றியது. அருகே வர வர யாதவர்களின் கால்களும் விலங்குகளின் கால்களும் மண்ணில் புதைந்தன. விலங்குகள் தலையை அசைத்து நாநீட்டி குரலெழுப்பியபடி விரைவு கொண்டன. அவற்றைப் பற்றியபடி யாதவர்களும் ஓடிவந்தனர்.

அர்ஜுனன் புரவியை இழுத்து ஓரமாக நிறுத்திக்கொண்டு அந்நிரையின் ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டிருந்தான். சோலையைப் பார்த்ததும் ஒவ்வொருவரும் மாறுவதை கண்டான். அதுவரை நீரைப் பற்றிய எண்ணமே இல்லாதவர்கள் போல் இருந்தனர். நீரெனும் விழைவுக்கு மேல் எதை எதையோ சொல்லென அள்ளிப்போட்டு மூடியிருந்தனர். அவை காற்றில் புழுதியென விலகிப்பறக்க அனலை நெருங்குபவர்கள் போல அத்தனை முகங்களிலும் ஒரே எரிதல் தெரியத் தொடங்கியது.

ஒவ்வொருவரும் அப்பெருந்திரளிலிருந்து பிரிந்து தனது விடாயைப் பற்றி மட்டுமே எண்ணியவர்கள் ஆனார்கள். மழைநீர் பெருகிய ஏரியின் பரப்பு எடைகொண்டு நாற்புறமும் பெருவிசையுடன் கரையை அழுத்திக் கொண்டிருக்கையில் மறுபக்கம் நின்று நோக்குவது போல ஒரு உணர்வு அவனுக்கு எழுந்தது.

பகுதி ஐந்து : தேரோட்டி - 22

சீரான காலடிகளுடன் கலையாத ஒழுக்காக யாதவர்கள் சோலைக்குள் புகுந்து கொண்டிருந்தனர். அவர்களது காலடிகளின் ஓசை சோலையெங்கும் எதிரொலித்தது. கலைந்து எழுந்த பறவைகள் குட்டைமரங்களின் இலைப்பரப்புக்கு மேலே கலைந்து ஒலித்துக்கொண்டிருந்தன. யாதவர்கள் ஒருவர் தோளை ஒருவர் பற்றியிருந்தனர். தளர்ந்து நடந்த சிலரை இளைஞர் பிடித்துக்கொண்டனர்.

எங்கும் அந்த அணி உடைவதற்கான அசைவு தெரியவில்லை. அர்ஜுனன் நீள்மூச்சுவிட்டான். ஒன்றுமில்லை, வெறும் அச்சம் இது, அனைவரும் சீராகவே செல்கிறார்கள், அனைத்தும் முறைப்படியே உள்ளன என்று சித்தம் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அடியில் சுஷுப்தி பதைபதைத்து முகங்கள் தோறும் தாவிக்கொண்டிருந்தது. ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. உடையும் ஒன்று அதன் முந்தைய கணம் உடைவெனும் இயல்கையின் உச்சகணத்தை சுமந்து அதிர்கிறது.

எக்கணம்? யார் முதல்வன்? எப்போதும் அந்த கணத்தின் துளியென உதிர்ந்து சொட்டுபவன் ஒரு தனிமனிதன். அவனை ஊழ்விசை தேர்ந்தெடுக்கிறது. அதற்கு முந்தையகணம் வரை அவன் எளியவன். அவர்கள் ஒவ்வொருவரையும் போன்றவன். தன்னை நிகழ்த்திக்கொண்ட பின்னர்தான் அவன் வேறுபட்டவனாகிறான். இவர்களில் எவனோ ஒருவனின் தலை. உண்ணப்படாத நீருக்காக அவன் உடல் நின்று துடித்து மண்ணில் நெளியப்போகிறது. விழித்த கண்களும் திறந்த வாயுமாக அவன் தலை ஈட்டியில் அமரப்போகிறது. விடாயுடன் இறந்து தெய்வமாகப் போகிறான்.

அவன் இவன் என ஒவ்வொருவரின் தலையையும் ஈட்டியின் முனையில் அர்ஜுனன் பார்த்துவிட்டான். நூறாயிரம் தலைகள். ஆயிரம்பல்லாயிரம் பொருளற்ற விழிப்புகள். துடிக்கும் உடல்கள். கண்களை மூடி கண் இமைகளை இருவிரல்களால் அழுத்தி நீவினான். உடலெங்கும் நூற்றுக்கணக்கான மையங்களில் நரம்புகள் அதிர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். புரவியைத் திருப்பி அந்நிரையின் பின்பக்கத்திற்கு சென்றுவிடவேண்டும் என்று எண்ணினான். அங்கு சென்றால் அவனுக்கென தனிப்பொறுப்பு ஏதுமில்லை. அந்த நிரையில் அவனும் ஒருவன். முன்னிரையில் இருப்பவன் அனைத்து எடையையும் தாங்குபவன்.

கண்களை திற. இதோ இப்பெரு நிரை உடையும் கணம். ஒரு வேளை உன்னால் அதை தடுக்க முடியும். பெரும்படைகளை ஆணையிட்டு நிறுத்தும் குரல் கொண்டவன் நீ. இவர்கள் எளிய யாதவர்கள். நீ ஷத்ரியன். இவர்கள் கட்டுமீறுவது பிழையல்ல. அவர்களை கட்டுப்படுத்தாது நீ நின்றிருப்பதே பிழை. இதோ. இக்கணம்தான். இதை நீ மறக்கவே போவதில்லை. அவனால் கண்களை திறக்க முடியவில்லை. இமைகளுக்கு மேல் அவன் சித்தத்திற்கு ஆணையென ஏதுமில்லை என்று தோன்றியது. எண்ணத்தை குவித்து கண்களைத்திறக்க அவன் முயன்று கொண்டிருக்கும்போது மிக அருகே அவன் எவரையோ உணர்ந்து திகைத்து விழிதிறந்தான். எதிரே எவருமில்லை. அருகே உணர்ந்தது இளைய யாதவனை என எண்ணியபோது மெய் குளிர்கொண்டது.

அவன் அனிச்சையாக விழிதிருப்பியபோது எதிரே மிக அண்மையிலென ஒருவனின் முகத்தை கண்டான். அவன் வாய் திறப்பதை, விழிகள் சுருங்குவதை, அலறலில் தொண்டைத்தசைகள் இழுபட நரம்புகள் புடைப்பதை, கைகளும் கால்களும் உள்ளத்தின் விசையால் இழுபட்டு அதிர்வதை தனித்தனியாக சித்திரப்பாவைகள் என கண்டான். தாளமுடியாத வலியால் துடிப்பவனின் முகம். பெரும்பாறையைத் தாங்கி இற்று உடைந்து சிதறும் அணைக்கல். அந்த மனிதன் நொறுங்குவதை அவன் கண்டான். பிறிதொன்றாக ஆவதை. அக்கணத்திற்கு முன் அவனில் இல்லாத ஒன்று அவனை அள்ளிச்செல்வதை. மானுடன் ஒரு பெருவிசையின் விழியுருவென ஆவதை.

அவன் கூச்சலிட்டபடி பாய்ந்து சோலையை நோக்கி ஓட அத்தனை யாதவர்களும் அவனை நோக்கி திரும்பினர். ஒரு கணம் மொத்த நிரையே கழிபட்ட நாகமென உடல்விதிர்த்தது. பின்பு ஏரி கரையை உடைத்தது. அந்த நிரை அனைத்து பகுதிகளிலும் உடைந்து சிதறி தனித்தனி மனிதர்களாக ஆகி காற்றில் சருகுகள் பறப்பது போல கலைந்தும் சுழன்றும் சோலையின் உள்ளே புகுவதை அர்ஜுனன் கண்டான். செவியற்ற விழியற்ற ஒரு பெருக்கு. உருகி வழியும் அரக்குக்குழம்பு என அது ஒற்றையலையாக எழுந்து சென்றது.

“நிறுத்துங்கள் அவனை!” என்று தலைவன் கூவினான். முரசுகளையும் கொம்புகளையும் தொண்டைகளும் கன்னங்களும் புடைக்க உரக்க முழக்கியபடி காவலர்கள் அவர்களை அணைகட்ட முயன்றனர். “நில்லுங்கள்! ஒழுங்குமீறினால் தண்டிக்கப்படுவீர்கள்! நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று காவலர்கள் கூவினார்கள். மதம்கொண்ட யானை என கூட்டம் குரலுக்கு செவிகொடுக்கவில்லை. காவலர் தலைவன் வெண்பற்கள் தெரிய முகத்தைச் சுளித்து கூவியபடி தன் நீண்ட வாளை வீசியபடி முன்னால் பாய்ந்தான். அவன் கட்டற்ற சினம் கொண்டிருக்கிறான் என அறிந்த அவன் புரவியும் அதே சினத்தை அடைந்து பற்களைக் காட்டியபடி கால்தூக்கி வந்தது.

தன்முன் வந்த அந்த முதல் யாதவனை நீரைச் சுழற்றி வீசியதுபோல ஒளிவிட்ட வாள்வீச்சின் வளைவால் வெட்டி வீழ்த்தினான். என்ன நிகழ்கிறதென்றே அறியாமல் அவன் தலை துண்டிக்கப்பட்டு திகைத்த கைகளும் மண்ணில் ஊன்றிய கால்களுமாக நின்றான். தலை அப்பால் சென்று விழுந்தது. போரில் மானுடத் தலைகள் வெட்டுண்டு விழுவதை அர்ஜுனன் பல நூறுமுறை பார்த்திருந்தான். அவையனைத்தும் ஒரு பெருநிகழ்வின் கணத்துளிகளென கடந்துசெல்பவை. மானுடத்தலை என்பது அத்தனை எடை கொண்டது என்பதை அப்போதுதான் உணர்ந்தான். இரும்புக்கலம் போல் மண்ணில் விழுந்து குழி எழுப்பி பதிந்தது. மணலில் குருதித்துளிகள் கொழுத்துச்சிதறின. விழிகள் காற்றில் பூச்சியிறகுகள் என அதிர்ந்து பின் நிலைத்தன.

அதன்பின் நிலையழிந்து ஒருக்களித்து மண்ணில் விழுந்த யாதவனின் கால்கள் உதைத்தன. கைகள் மணலை அள்ளிப் பற்றின. தன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி உடல் நடுங்க அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவன் வெட்டுண்டதை அவனைத் தொடர்ந்து வந்த யாதவர் சிலரே கண்டனர். அவர்கள் என்ன நிகழ்ந்தது என்பதை உள்ளம் வாங்கிக்கொள்ளாமையால் இளித்தும் சுழித்தும் திகைத்தும் உறைந்த முகங்களுடன் நின்று மாறி மாறி நோக்கினர். ஒருவன் கைநீட்டி தலையை சுட்டிக்காட்ட இன்னொருவன் பாய்ந்து மேலும் முன்னேறினான். அவன் தலையையும் வீரன் வெட்டி வீழ்த்தினான். அதன்பின்னரே அடுத்துவந்தவர்கள் அதை உணர்ந்து பின்னால் நகர்ந்தனர்.

“நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று கூவியபடி யாதவக் காவலர்கள் ஒவ்வொருவரையும் சவுக்கால் அறைந்தனர். வாளின் பின்புறத்தால் தலையில் அடித்தனர். கூட்டத்தை ஊடுருவி முன்னால் சென்ற படைத்தலைவன் சுனையைச் சூழ்ந்து எழுந்திருந்த குட்டை முட்புதர்களைத் தாண்டி அதன் சேற்றுச் சரிவில் பாய்ந்து சறுக்கியும் புரண்டும் உள்ளே இறங்கி அருகே சென்று அசைவுகள் கொந்தளித்த அடிநீரை நோக்கி கை நீட்டிய யாதவர்களை பின்னால் இருந்து வாளால் வெட்டினான். இருவர் தலையற்று சேற்றில் விழுந்தனர். தலை சரிவில் உருண்டு நீரை அணுகியது. கொழுங்குருதி வழிந்து சென்று நீரில் கலந்தது.

உடல்கள் சேற்றில் சரிந்ததும் சுனையைச் சூழ்ந்திருந்த யாதவர்கள் அலறியபடி பின்னால் நகர்ந்தனர். “பின்னால் செல்லுங்கள்! சுனைக்குள் இறங்கும் எவரும் அக்கணமே கொல்லப்படுவீர்கள்” என்றான் தலைவன். யாதவர்கள் பின்காலடி எடுத்து வைத்து சென்றனர். முன்னால் நின்றவர்கள் விசையழிந்து தயங்க அவர்களை பின்னால் வந்து முட்டிய கும்பல் உந்தி முன்னால் செலுத்தியது. கூட்டத்தின் முன்விளிம்பு அலையடித்தது. பின்னால் இருந்து தள்ளப்பட்டவர்களால் கால்தடுக்கி சுனையின் சேற்றுச் சரிவில் விழுந்த ஒருவன் அலறியபடி எழுவதற்குள் காவலன் ஒருவன் தலையை வெட்டி தோளை உந்தித் தள்ளினான்.

“விலகுங்கள் விலகுங்கள்!” என்று காவலர் கூவிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் சுனையைச் சுற்றி யாதவர்கள் தோளோடு தோள் சேர்ந்து தலை செறிந்து நீள் வட்டமென அசைவிழந்தனர். “உடல்களை இழுத்து அகற்றுங்கள்” என்று தலைவன் ஆணையிட்டான். யாதவ வீரர்கள் இறங்கி ஒவ்வொரு உடலாக கால்பற்றி இழுத்து மேலே கொண்டு சென்றனர். நீண்டு சேற்றில் இழுபட்ட கைகளுடன் தலையில்லாத உடல்கள் அகன்ற தடம் மட்டும் எஞ்சியது.

“தலைகள் இங்கே காவலுக்கு நிற்கட்டும்” என்றான் தலைவன். வெட்டுண்ட தலைகளை எடுத்து வேல்முனைகளில் குத்தி மணலில் நாட்டி வைத்தனர். ஆறு தலைகள். ஒருதலை வேலில் இருந்து விழுந்து நீரை நோக்கி விடாய்கொண்ட வாயுடன் உருள அதை ஓடிச்சென்று எடுத்து மீண்டும் குத்திய வீரன் புன்னகையுடன் ஏதோ சொன்னான். இன்னொருவன் அதற்கு சிரித்தபடி மறுமொழி சொன்னான். சூழ்ந்திருந்தவர்களின் முகத்தில் அச்சமில்லை என்பதை அர்ஜுனன் கண்டான். அவர்கள் அங்கு நிகழ்வனவற்றை வேடிக்கை பார்ப்பவர்களாக மாறியிருந்தனர். ஊர் சென்றதும் அங்கு உற்றவர்களிடம் சொல்லவேண்டிய சொற்களாக அவர்கள் அதை மாற்றிக்கொண்டிருந்தனர் என்று தோன்றியது.

அர்ஜுனன் தன் புரவியை பின்னடி எடுத்து வைத்து விலகி குறும்புதர் ஒன்றிற்குள் மறைந்து நின்றான். குதிரையின் கழுத்திலேயே முகம் வைத்து உடலை பதித்து தளர்ந்தவன் போல் கிடந்தான். கூட்டத்தினர் மெல்ல கலைந்து பேசிக்கொள்வதை கேட்கமுடிந்தது. தாங்கள் இன்னும் சாகவில்லை என்பதை மகிழ்வுடன் உணர்கிறார்கள் போலும். எவரோ மெல்லிய குரலில் ஏதோ சொல்ல சிரிப்பொலிகள் கலந்து ஒலித்தன. நீரை உணர்ந்த அத்திரிகளில் ஒன்று தலையசைத்து அமறியது. இன்னொரு அத்திரி அதற்கு மறுமொழி உரைத்தது.

“ஒவ்வொருவரும் தங்கள் நீர்க்குடுவைகளை எடுத்து கொள்ளுங்கள். சீராக விலகிச் சென்று நிரைவகுத்து தரையில் அமருங்கள். பூசலிடுபவர் எவரும் அக்கணமே வெட்டப்படுவீர்கள்” என்றான் தலைவன். “எங்கள் படைவீரர் உரிய நீரை உங்களுக்கு அளிப்பார்கள். அளிக்கப்படும் நீருக்கு அப்பால் ஒரு துளி நீரும் எவருக்கும் உரிமை கொண்டதல்ல. நீரை வீணடிப்பவர்கள் இரக்கமில்லாமல் வெட்டி வீழ்த்தப்படுவார்கள்.” ஒருவன் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல யாதவர் நிரையிலிருந்து சிரிப்பொலி எழுந்தது.

யாதவர்கள் ஓசையின்றி காலெடுத்து வைத்து பின்னால் சென்றனர். மெல்லிய குரலில் “நிரை நிரை” என ஒரு முதியவர் சொல்லிக்கொண்டிருந்தார். “அமருங்கள். நிரை வகுத்து அமருங்கள். விலங்குகளை வண்டிநுகங்களிலோ புதர்களிலோ கட்டிவிடுங்கள்” என்று தலைவன் ஆணையிட்டான். படை வீரர்கள் அவ்வாணைகளை திரும்பச் சொல்ல மணலில் ஒவ்வொருவராக அமர்ந்து தங்கள் முன் சுரைக்கொப்பரைகளையும் தோல்குடுவைகளையும் மூங்கில்குவளைகளையும் எடுத்து வைத்துக் கொண்டனர்.

எவரோ “அமுதுக்காக தேவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்” என்று சொல்ல சிலர் சிரித்தனர். “அசுரர்கள். வரப்போவது ஆலகாலம்” என்று இன்னொரு குரல் எழுந்தது. “அமைதி” என வீரன் கூவினான். அந்த அச்சுறுத்தல்நிலை அவர்களை கிளர்ச்சியடையச் செய்திருந்தது. நிகழ்வுச்செறிவு கொண்ட நாடகத்தில் ஓரு தருணம். கிளர்ச்சியை உள்ளம் மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டது. உள்ளம் ததும்பியபோது எளிய சொல்லாடல்கள் வழியாக அதை மெல்ல கீழிறக்கிக் கொள்ளவேண்டியிருந்தது. வேட்டையாடுவது மட்டுமல்ல வேட்டையாடப்படுவதும் உவகையளிப்பதே.

அர்ஜுனன் அருகே வந்த சுபத்திரை “அங்கே தங்களை தேடினேன்” என்றாள். அர்ஜுனன் அவள் குரலைக்கேட்டு நிமிர்ந்து “ஆம்… நான்” என்றபோது வியர்த்தமுகத்தில் காற்று பட்டது. நடுங்கும் உதடுகளுடன் “அந்த நெரிசலை தவிர்க்க விழைந்தேன்” என்றான். “வியர்த்திருக்கிறீர்கள். முகம் வெளிறியிருக்கிறது” என்றாள். “என்னால் அங்கு நிற்க முடியவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆறு உயிர்கள்” என்றான்.

“ஆம்” என்றபின் சுபத்திரை திரும்பிப் பார்த்து “ஆறு மூடர்கள்” என்றாள். “பொருளற்ற இறப்பு” என்றான் அர்ஜுனன். “எந்த இறப்புதான் பொருளுடையது? இவர்கள் ஒரு போரில் இறந்தபின் போரில் ஈடுபட்ட இரு அரசர்களும் பேச்சமைந்து மகள்மாற்றிக்கொண்டால் அவ்விறப்பு பொருள்கொண்டதா?” என்றாள். அர்ஜுனன் அவள் பேச்சை தவிர்க்க முயன்றான். “அவை வீரஇறப்புகள் ஆகிவிடும். வீரருலகுக்கு அவர்கள் செல்வார்கள் இல்லையா?” என்றாள். “இல்லை, நான் அதைச்சொல்லவில்லை” என்றான்.

சுபத்திரை “நான் கொல்வதை கருத்தில் கொள்வதில்லை” என்றாள். அர்ஜுனன் அவளை நிமிர்ந்து நோக்கி “மூத்தவர் எங்கே?” என்றான். “இந்த நெரிசலில் அவர் ஈடுபடவேண்டாம் என எண்ணினேன். ஆகவே பின்நிரையில் இருந்து அப்பாலுள்ள பெருமரம் ஒன்றின் அடிக்கு அவரை கூட்டிச்சென்றேன். அங்கே ஊழ்கத்தில் அமர்ந்துவிட்டார். அதுவும் நன்றே என முன்னால் வந்தபோது கண்டேன். இங்கு நிகழ்ந்த உயிர்ப்பலியை அவர் காணவில்லை” என்றாள் சுபத்திரை. பெருமூச்சுடன் “ஆம். அது நன்று” என்று அர்ஜுனன் சொன்னான்.

“போர்க்கலையும் படைசூழ்கையும் கற்றவர் என்று சொன்னீர்கள். இத்தனை எளிதாக தளர்வீர்கள் என நான் எண்ணவில்லை” என்று சுபத்திரை வெண்பற்கள் மின்னும் சிரிப்புடன் சொன்னாள். அர்ஜுனன் “முன்பெப்போதும் உயிரிழப்பை நான் ஒரு பொருட்டென எண்ணியதில்லை. இப்போது அந்தத் தலைகளின் விழிகளை என்னால் பார்க்க முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை, அவ்விழிகள் என்னுடன் பேசமுற்படுபவை போல தெரிகின்றன” என்றான். “ஆம்” என்றாள் சுபத்திரை திரும்பி நோக்கியபடி. “நானும் ஒருகணம் கைகால்கள் தளர்ந்துவிட்டேன். நம்முடன் மூத்தவர் இருப்பதனால்தான் என்று தோன்றுகிறது. அவர் நம்மை நாமறியாத எதையோ நோக்கி செலுத்துகிறார்.”

அர்ஜுனன் “திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றுகிறது. என்னால் இங்கே இனிமேல் நிற்கமுடியாது” என்றான். சுபத்திரை புன்னகைத்து “உங்களை எனக்கு படைக்கலன் பயிற்றுவிக்க அனுப்பியிருக்கிறார் என் தமையன்” என்றாள். “எந்த படைக்கலத்தையும் என் கைகளால் பற்ற முடியுமென்று தோன்றவில்லை” என்றான் அர்ஜுனன். சுபத்திரை சிரித்தாள். “என்ன?” என்றான் அர்ஜுனன். “ஆண்மகனை ஆற்றல்சோர்ந்த நிலையில் பார்ப்பது பெண்களுக்கு பிடிக்கும்” என்றாள். அர்ஜுனன் அவள் சிரிப்பு ஒளிர்ந்த விழிகளை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டான்.

சுனையின் கரையில் இரு மூங்கில்கழிகளை நாட்டினர். அதில் நெம்புதுலா போல நீண்ட மூங்கில்கழியை அமைத்து அதன் முனையில் தோல்பையைக் கட்டி தாழ்த்தி சுனையிலிருந்து நீரை கலக்காமல் அள்ளி மறுமுனையை நான்கு வீரர்கள் சேர்த்து அழுத்தி தூக்கி சேற்றில் தொடாது வட்டமிட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அதை மரக்குடைவுக் கலங்களில் ஊற்றி தூக்கிக்கொண்ட யாதவர்கள் நிரையாக அமர்ந்திருந்தவர்களின் அருகே சென்றனர். பக்கத்திற்கு ஒருவராக மூங்கில் குவளையில் நீரை அள்ளி ஒவ்வொருவருக்கும் ஊற்றினர். நீரின் ஒலி முன்பு எப்போதும் கேட்டிராதபடி ஓர் உரையாடல்போல சிரிப்பு போல ஒலித்தது.

கண் முன் நீரை பார்த்தும்கூட அதை எடுத்து அருந்தாமல் யாதவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி அமர்ந்திருந்தனர். யாதவர்தலைவன் “உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நீரை பாதி அருந்துங்கள். எஞ்சியதை கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். மறுமுறை நான் சொன்ன பின்பே அருந்தவேண்டும். முழுதாக அருந்தியவர்கள் நாதளர்ந்து போவார்கள் என்று உணர்க” என்று சொன்னான். அதன் பின்னரும் அவர்கள் தயங்கியபடி அமர்ந்திருந்தனர். ஒருவன் நீரை எடுத்து உறிஞ்ச அந்த ஒலியில் பிறர் உடல் விதிர்த்தனர். அத்தனைபேரும் நீர்க்குவளைகளை எடுத்து குடித்தனர். நீர் உறிஞ்சும் ஒலிகளும் தொண்டையில் இறங்கும் ஒலிகளும் கலந்த ஓசை எழுந்தது.

அர்ஜுனன் அந்த ஒலியைக் கேட்டு உடல் கூசினான். விலகிச்சென்றுவிட எண்ணி கடிவாளத்தை அசைக்க அவன் குதிரை காலெடுத்துவைத்தது. சுபத்திரை “என்ன?” என்றாள். “மூத்தவரிடம் செல்கிறேன்” என்று அவன் திரும்பிப்பார்க்காமல் சொன்னான். “அதோ அங்கிருக்கிறார்” என்றாள் சுபத்திரை. அரிஷ்டநேமி யாதவர்களின் நிரைக்கு அப்பால் முள்நிறைந்த மரத்தின் அடியில் சருகுமெத்தைமேல் ஊழ்கத்தில் அமர்ந்த அருகர்களைப் போல கால்களை தாமரையிதழென மடித்து கைகளை அதன்மேல் விரித்து நிமிர்ந்த முதுகுடன் மூடிய விழிகளுடன் அமர்ந்திருந்தார்.

“முன்னரே கற்சிலையாக மாறிவிட்ட அருகர்” என்றாள் சுபத்திரை. “அவரை ஏன் கொண்டுசெல்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை.” அர்ஜுனன் “அவருள் ஏதோ மாறிக்கொண்டிருக்கிறது. அதை அஞ்சித்தான் ஊழ்கத்தை பற்றிக்கொள்கிறார்” என்றான். “என்ன?” என்றாள். “அவர் உள்ளம் காலத்தில் விரைந்தோடி உக்ரசேனரின் மகளை மணந்து கொண்டிருக்கலாம். இப்போது அவர் பாரதவர்ஷத்தை குடைகவித்து ஆண்டுகொண்டிருக்கலாம்” என்றான் அர்ஜுனன்.

சுபத்திரை திரும்பி நோக்கியபின் “ஆண்களுக்கு என்னதான் வேண்டும்?” என்றாள். “வெற்றி” என்றான் அர்ஜுனன். “இறுதிவெற்றி தன்மீது.” அவள் மீண்டும் நோக்கியபின் புன்னகைத்து “ஒப்புநோக்க பெண்ணின் விழைவு எளியது. அவள் ஆணை வெற்றிகொண்டால்போதும்” என்றாள். உடனே சிறுமியைப்போல சிரித்து “உலகைவெல்ல எழுந்த ஆணை வெற்றிகொள்வதென்றால் எத்தனை எளியது” என்றாள். அர்ஜுனன் அதுவரை இருந்த உளச்சுமை விலக தானும் சிரித்தான்.

யாதவவீரன் ஒருவன் அவர்களை நோக்கி இரு குவளைகளில் நீர் கொண்டுவந்தான். பணிவுடன் ஒன்றை அவனிடம் அளித்து பிறிதொன்றை சுபத்திரையிடம் அளித்தான். “அருந்துங்கள் இளவரசி” என்று தலைவணங்கி பின்னால் சென்றான். சுபத்திரை நீரை வாங்கியபின் பெண்களுக்குரிய இயல்புணர்வால் அவன் முதலில் அருந்தட்டும் என்று காத்து நின்றாள். அர்ஜுனன் குனிந்து நீரை நோக்கினான். பின்பு தலையை அசைத்தபின் யாதவனை கைசுட்டி அழைத்து குவளையை நீட்டி “வேண்டியதில்லை” என்றான். அவன் புரியாமல் “உத்தமரே” என்றான். “நான் இந்நீரை அருந்தவில்லை” என்றான்.

அவன் திகைப்புடன் “உத்தமரே” என்றான். “நீர் பிழையேதும் செய்யவில்லை. நான் இன்று நீர் அருந்துவதில்லை” என்றான் அர்ஜுனன். அவன் சுபத்திரையை நோக்கியபின் குவளையை வாங்கிக்கொண்டான். சுபத்திரை “ஏன்?” என்றாள். அவள் விழிகளை நோக்காமல் மெல்ல “குருதி விழுந்த நீர்” என்றான். அவள் “ஆம். ஆனால் அனைத்துப் போர்க்களங்களிலும் குருதி கலந்த நீரை அல்லவா அருந்த வேண்டியுள்ளது?” என்றாள். “உண்மை. நான் பல களங்களில் குருதிகலந்த நீரை அருந்தியுள்ளேன்” என்றபின் அர்ஜுனன் தலையை அசைத்து “இதை அருந்த என்னால் முடியாது” என்றான்.

சுபத்திரை யாதவவீரனை அழைத்து தன் குவளையையும் கொடுத்து “கொண்டு செல்க!” என்றாள். அவன் இருவர் விழிகளையும் நோக்கியபின் வாங்கிக்கொண்டு சென்றான். “நீங்கள் அருந்தலாமே” என்றான் அர்ஜுனன். “ஒருவர் அருந்தாதபோது நான் அருந்துவது முறையல்ல” என்றாள். அர்ஜுனன் ஏதோ சொல்ல வந்தபின் தலையை திருப்பி யாதவர்களின் கூட்டத்தை பார்த்தான். நீர் அவர்களுக்கு களியாட்டாக ஆகிவிட்டிருந்தது. அதன் அருமையே அதை இனிதாக்கியது. துளித்துளியாக அதை உண்டனர். சுபத்திரை “இனியநீர். தம்மவர் குருதி கலந்தது” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “ஆம்” என்றான்.

அரிஷ்டநேமியை நோக்கி ஒரு குவளை நீருடன் ஒருவன் சென்றான். “அவருக்கு இந்த நீரா?” என்றான் அர்ஜுனன். “குருதி உண்ணத்தானே மலையிறங்கினார்? அருந்தட்டும்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் அவள் கண்களை நோக்கி சற்று நெஞ்சு அதிர்ந்து விழிவிலக்கினான். “என்ன அச்சம்?” என்றாள். “நீ இரக்கமற்றவள்” என்றான். “எல்லா பெண்களையும்போல” என்று சேர்த்துக்கொண்டான். “நான் மண்ணில் நிற்பவள். என் வெற்றிகளும் மண்ணில்தான்” என்றாள். அர்ஜுனன் “அவர் அதை அருந்தமாட்டார். முதற்துளியிலேயே சுவையறிவார்” என்றான்.

அரிஷ்டநேமிக்கு முன் ஒரு கொப்பரைக் குவளையை யாதவ வீரர்கள் வைத்தார்கள். அதில் நீரை ஊற்றிய யாதவன் “அருந்துங்கள் மூத்தவரே” என்றான். அவர் விழிதிறந்து அவனை நோக்கியபின் நீரை எடுத்து ஒரு துளி அருந்தினார். அர்ஜுனன் விழிகளே உள்ளமென அவர் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் நீரை அருந்தும் ஒலியைக்கூட கேட்கமுடியுமென தோன்றியது. அவர் பாதிக்குவளையை அருந்திவிட்டு கீழே வைத்தபோது அவன் பெருமூச்சுவிட்டான்.

“நீங்கள் எதிர்பார்ப்பது என்ன யோகியே?” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “தெரியவில்லை” என்றான். “உலகியலை அத்தனை எளிதானதென்று மதிப்பிட்டுவிட்டீர்களா?” என்றாள். “இல்லை, அதன் வல்லமையை நான் அறிவேன்” என்றான் அர்ஜுனன். “துறவு என்பது மானுடக்கீழ்மையை கனிவுடன் நோக்கும் பெருநிலை என எண்ணியிருந்தேன்” என்றாள். “இல்லை, தன் கீழ்மையை திகைப்புடன் நோக்கும் நிலை” என்றான் அர்ஜுனன். அவள் சிரித்து “சரி, அப்படியென்றால் அந்த துயரத்துடன் நீரை அருந்துங்கள்” என்றாள்.

“நீங்கள் அருந்துங்கள் இளவரசி” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அருந்தாமல் நான் அருந்தப்போவதில்லை” என்று அவள் சொன்னாள். அவன் அவள் விழிகளை நோக்கியபின் தலைதிருப்பினான். இருவரும் ஆழ்ந்த அமைதியில் சிலகணங்கள் நின்றனர். அவன் “நீங்கள் இளைய பாண்டவரை வெறுக்கிறீர்கள் என்று முதிய யாதவர் சொன்னார்” என்றான். “ஆம், அதை நானே சொன்னேனே?” என்றாள். “ஏன் என்றும் சொன்னார்” என்றான். “ஏன்?” என்றாள்.

அவன் உள்ளத்தில் எழுந்த முதல் வினா நாவில் தவித்தது. திரும்பி அவளை நோக்கியபோது அவள் முகம் பதற்றத்தில் சிவந்திருப்பதை கண்டான். “உங்கள் தமையனுடன் அவர் இணை வைக்கப்பட்டமையால்தான் என்றார்கள்” என்றான். அவள் உள்ளம் எளிதாகி உடல்தளரச் சிரித்து “ஆம், இருக்கலாம்” என்றாள். “இல்லை என்று தோன்றுகிறது” என்றான் அர்ஜுனன் அவள் விழிகளை கூர்ந்து நோக்கி. திடுக்கிட்டு அவன் விழிகளை சந்தித்து “ஏன்?” என்றாள். “உங்கள் உள்ளத்தில் பிறிதொருவர் குடியேறியிருக்கலாம் என்றனர்” என்றான்.

அவள் உதடுகள் மெல்ல பிரிந்தன. அந்த ஓசையைக்கூட கேட்கமுடியுமென தோன்றியது. மெல்லிய சிறிய செவ்வுதடுகள். உள்ளே ஈரமான வெண்பரல் பற்கள். “யார் என்று சொல்லவில்லையா அவர்கள்?” என்றாள். அர்ஜுனன் அவள் தொண்டை ஏறியிறங்குவதை கழுத்துக்குழி அசைவதை நோக்கினான். “இல்லை” என்றான். அவள் புன்னகைத்து “அதையும் அவர்கள் சொல்லியிருக்கலாமே” என்றாள். “அவர்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான். “இதை மட்டும் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்றபின் “நான் ஒரு சிறிய புரவிப்பாய்ச்சலை விழைகிறேன்” என்றாள்.

“இந்நேரத்திலா?” என்றான். “ஆம்” என்றபின் அவள் தன் புரவியின் மேல் ஏறி அதை குதிமுள்ளால் குத்தினாள். அதை எதிர்பாராத புரவி கனைத்தபடி குளம்புகள் மணலை அள்ளி பின்னால் வீச பாய்ந்தோடியது. அர்ஜுனனின் புரவி உடன் விரைய விழைந்து கால்களால் மண்ணை அறைந்து தலைகுனிந்து பிடரிகுலைத்தது. அவன் அதன் முதுகைத்தடவியபடி அசையாமல் நின்றான். தொலைவில் புழுதிக்குவைக்கு அப்பால் அவள் மறைந்தபோது விழித்துக்கொண்டவன்போல தன் புரவிமேல் ஏறிக்கொண்டான்.

அவன் ஆணையிடாமலேயே அவன் புரவி அவள் புரவியை துரத்தத் தொடங்கியது. ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் அது மேலும் வெறிகொண்டது. புழுதிக்குவைகள் செந்நிறமான புதர்கள் போல நின்றன. அவற்றை ஊடுருவிச்சென்று அவளை கண்டான். அவன் அணுகுவதைக் கண்டதும் அவள் புரவியை மேலும் விரைவாக்கினாள். அவன் குதிமுள்ளால் தொட்டதும் அவன் புரவி கனைத்தபடி கால்தூக்கி காற்றில் எழுந்து விழுந்து எழுந்து சென்றது. வானிலேயே செல்வதுபோல அவன் தொடர்ந்தான்.

நெடுந்தொலைவில் அவள் விரைவழிவது தெரிந்தது. அவன் புரவி மேலும் விரைவுகொண்டது. அவள் சிலந்திவலைச் சரடிலாடும் சிறிய பூச்சி போல அந்தக் குளம்புத் தடத்தின் மறு எல்லையில் நின்றாடினாள். பெரியதாகியபடி அணுகி வந்தாள். அவன் புரவி அவளை நோக்கி சென்றது, முட்டி வீழ்த்திவிடுவதுபோல. அவள் தன் புரவியை கடிவாளத்தை இழுத்து நிறுத்தி அவனை அசையாமல் நோக்கி நின்றாள். அவன் அவளை நெருங்கி தன் புரவி அவள் புரவியை மோதும் கணத்தில் கடிவாளத்தைப்பற்றித் திருப்பி அவளைத் தவிர்த்துச் சென்று சுழன்று நின்றான்.

இருபுரவிகளும் கொதிக்கும் கலத்தில் நீர் விழுந்த ஒலியுடன் மூச்சுவிட்டபடி தலைதாழ்த்தி நின்றன. அவற்றின் வியர்வையின் தழைகலந்த உப்புமணம் எழுந்தது. அவள் அவனை நோக்கி சிரித்தாள். எத்தனை வலுவான ஈறுகள் என அவன் நினைத்தான். “என்ன?” என்றாள். இல்லை என தலையசைத்தான். “விடாய்” என்றாள். “ஆம்” என்றான். “திரும்பச்சென்று நீர் அருந்துவோம்” என்றாள். செல்லமாக தலைசரித்து “எனக்காக” என்றாள். அவன் “ஆம்” என்றான். அவள் கண்கள் இடுங்க சிரித்து “குருதிநீர்” என்றாள். அவன் “ஆம்” என்றான்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 23

அர்ஜுனன் துவாரகையை அடைவதற்கு முன்னரே நகரம் மணவிழவுக்கென அணிக்கோலம் கொண்டிருந்தது. அதன் மாபெரும் தோரணவாயில் பொன்மூங்கில்களில் கட்டப்பட்ட கொடிகளாலும் இருபுறமும் செறிந்த செம்பட்டு சித்திரத்தூண்களாலும் பாவட்டாக்களாலும் பரிவட்டங்களாலும் மலர்க்காடு என வண்ணம் கொண்டிருந்தது. அவர்கள் அணுகும் செய்தியை முன்னரே சென்ற புரவித் தூதன் கொடியை அசைத்து தெரிவித்ததும் தோரண வாயிலுக்கு இருமருங்குமிருந்த காவல்மாடத்துக்கு மேல் இருந்த பெருமுரசுகள் முழங்க தொடங்கின. கொம்புகள் உடன் எழுந்து பெருங்களிற்றுநிரையென பிளிறலோசை எழுப்பின.

சில கணங்களுக்குள் நகரின் நூற்றுக்கணக்கான காவல் மாடங்களில் இருந்த முரசுகள் ஒன்றிலிருந்து ஒன்றென வந்த ஒலி பற்றிக்கொண்டு முழங்கத் தொடங்க நகரமே களிகொண்ட இளங்களிறென குரல் எழுப்பியது. நீண்ட பயணத்தால் சலிப்புற்று கால் சோர்ந்திருந்த யாதவர் அவ்வோசை கேட்டு உயிர் மீண்டனர். அவ்வோசைக்கு எதிரோசை என யாதவர்நிரையும் ஒலியெழுப்பியது. அரிஷ்டநேமியையும் சுபத்திரையையும் இளைய யாதவரையும் துவாரகையையும் யாதவர் குலக்குழுக்களையும் வாழ்த்தும் கூச்சல்கள் எழுந்து அலையடித்தன.

அர்ஜுனன் திரும்பி சுபத்திரையிடம் “வாழ்த்தொலி எழுப்புகையில் மட்டுமே தங்களை குடிமக்களென உணருகின்றனர் மானுடர் என்று விதுரர் சொல்வதுண்டு” என்றான். சுபத்திரை “ஆம்” என்று சொல்லி திரும்பி யாதவர்களை நோக்கியபின் “சேர்ந்து குரல் எழுப்புகையில் அச்சொற்களை அவர்களே நம்பத்தொடங்குகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் சிரித்தபடி “ஆம், இவ்வாழ்த்து வரிகளுக்கு நடுவே அவர்கள் இக்கணம் வரை எண்ணியிராத சில பெயர்களையும் சேர்த்தால் அவர்களும் வாழ்த்துக்குரியவர்கள் ஆகிவிடுவார்கள். பின்பு இவர்களின் தோள்களிலிருந்து அவர்களை இறக்குவது கடினம்” என்றான்.

“அஸ்தினபுரியில் எத்தனை வருடம் இருந்தீர்கள்?” என்று சுபத்திரை கேட்டாள். “ஐந்து வருடம். துரோணரிடம் கல்வி கற்று முடிந்தபின் அஸ்தினபுரியின் படைக்கலப் பயிற்றுநராக பணியாற்றினேன்” என்றான். “அங்கு இளைய பாண்டவரை நீங்கள் சந்தித்ததுண்டா?” என்று சுபத்திரை கேட்டாள். “பல முறை” என்றான் அர்ஜுனன். “உங்களுக்கும் அவருக்கும் எப்போதேனும் தனிப்போர் நிகழ்ந்ததுண்டா?” என்றாள். “இல்லை” என்றான் அர்ஜுனன். “நான் அரச குடியினன் அல்லன். அரச குடியினர் அல்லாதவருடன் அவர்கள் களிப்போர் செய்வதில்லை” என்றான்.

சுபத்திரை “என்றேனும் ஒரு நாள் அவரை களத்தில் சந்தியுங்கள்” என்றாள். “அவர் நிகரற்ற வீரர். கர்ணனும் இளைய யாதவரும் மட்டுமே அவரை வெல்ல முடியும் என்கிறார்கள்” என்றான். “நீங்கள் வெல்ல முடியும்” என்று சட்டென்று தலை திருப்பி விழிகள் கூர்மையுற அவள் சொன்னாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “வெல்ல முடியும்… வெல்வீர்கள்” என்றாள் சுபத்திரை. “வென்றாக வேண்டுமா?” என்று அர்ஜுனன் கேட்டான். சற்றே வீம்புடன் தலை அசைத்து “ஆம்” என்றாள் அவள். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். அவள் விழிகளை சரித்து “எனக்காக” என்றாள். “வென்ற பின்?” என்றான் அர்ஜுனன். “அவ்வெற்றி எனக்காக என்று அவரிடம் சொல்ல வேண்டும்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் சில கணங்களுக்குப் பின்பு சிரித்து “அது நிகழட்டும்” என்றான்.

“நீங்கள் நம்பவில்லையா?” என்றாள் சுபத்திரை. “நம்புகிறேன். சிவயோகி ஒருவனால் அர்ஜுனன் தோற்கடிக்கப்படுவான் என்று நிமித்திகரின் சொல் உள்ளது” என்றான். சுபத்திரை “நான் அதற்காக எத்தனை விழைகிறேன் என்று தெரியுமா?” என்றாள். அர்ஜுனன் திரும்பி அரிஷ்டநேமியை பார்த்தான். அசைவற்று ஊழ்கத்தில் என அமர்ந்திருந்தார். “உண்மையிலேயே இந்நகரின் வாயிலுக்குள் நுழைவது இவரை நிலையழியச் செய்யவில்லையா?” என்று சுபத்திரையிடம் கேட்டான். “இல்லை என்றே எண்ணுகிறேன். உள்ளத்தை எவராலும் உடலிலிருந்து அத்தனை விலக்கி விட முடியாது."

தோரணவாயிலின் முகப்புக்கு அக்ரூரர் வந்திருந்தார். அவருடன் துவாரகையின் மூன்று படைத்தலைவர்கள் துணை வந்தனர். அரிஷ்டநேமியை அழைத்துச் செல்வதற்காக வெண்புரவிகள் ஏழு பூட்டப்பட்ட அணித்தேர் செந்நிறப் பட்டுத்திரைகள் உலைய, பொன்முகடுகள் மீது துவாரகையின் கருடக்கொடியும் சௌரபுரத்தின் நேமிக்கொடியும் படபடக்க நின்று கொண்டிருந்தது. தோரணவாயிலில் இருந்து மூன்று வெண்புரவிகள் துவாரகையின் கருடக் கொடியுடனும் சௌரபுரத்தின் கதிர்க் கொடியுடனும் மதுராவின் சங்குக் கொடியுடனும் பறந்து வருபவை போல புழுதிச் சிறகுகள் இருபுறமும் அசைய வந்தன.

முன்னால் சென்ற காவலன் வாளை உருவி தன் தலை மேல் ஆட்ட யாதவர்களின் நிரையில் ஆங்காங்கு நின்றிருந்த செய்திபகிர்பவர்கள் கொம்புகளை முழக்கி அனைவரையும் நிற்கச்செய்தனர். ஒருவரோடொருவர் முட்டிக் கொண்டு யாதவர்களின் நீண்ட நிரை அசைவழிந்தது. காவலர் தலைவன் முன்னால் சென்று அரிஷ்டநேமியிடம் “மூத்தவரே, தாங்கள் அணி முகப்புக்கு செல்லுங்கள்” என்றான். அவர் விழிகளை திறந்து அவனை நோக்கி “ஆம்” என்றார். அவரது புரவி தலையை சிலிர்த்து இரு முறை தும்மி தூசியை உந்தியபடி முன்னால் சென்றது.

கருடக்கொடியுடன் வந்தவன் முதலில் அணுகி முகப்பில் நின்ற அரிஷ்டநேமியின் முன்பு புரவியை விரைவழியச்செய்து அக்கொடியை முறைமைப்படி மும்முறை தாழ்த்தி தலைவணங்கி “சௌரபுரத்தின் இளவரசரை, விருஷ்ணி குலத்தின் மூத்தவரை, துவாரகை பணிந்து வரவேற்கிறது. நல்வரவாகுக!” என்றான். அவன் வலப்பக்கமாக விலகிச் செல்ல விருஷ்ணி குலத்தின் சங்குக் கொடியுடன் வந்த வீரன் வாழ்த்துரை அளித்தான். அதன் பின் சௌரபுரத்தின் காவலன் கதிர்க் கொடியை மும்முறை தாழ்த்தி வாழ்த்தி வணங்கினான். முறைப்படி தலை தாழ்த்தி அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட அரிஷ்டநேமி “நல்லூழ் சிறக்க!” என்றார்.

கொடிவீரர்கள் திரும்பி நிரையாக தோரணவாயிலை நோக்கி செல்ல அவர்களுக்குப் பின்னால் அரிஷ்டநேமி அருகே படைத்தலைவனும் இருபக்கமும் யாதவர்களும் சென்றனர். சுபத்திரை “செல்வோம்” என்றாள். அர்ஜுனன் “யாதவ இளவரசிக்கு முறைமை வாழ்த்து எதுவும் இல்லையா?” என்றான். அவள் “இந்நாள் அவருக்குரியது” என்றாள்.

அவர்கள் தோரணவாயிலை அணுகியதும் அங்கு நின்றிருந்த அக்ரூரர் வந்து அரிஷ்டநேமியை வாழ்த்தினார். “சௌரபுரியின் இளவரசே, துவாரகைக்கு வருக! இங்கு நல்லூழ் சிறக்க தங்கள் வரவு நிமித்தமாகுக!” என்றார். புரவியிலிருந்து இறங்கி சூழ்ந்திருந்த அனைவருக்கும் மேல் உயர்ந்த பெருந்தோளுடனும் சுருள்முடி முளைக்கத் தொடங்கியிருந்த உருண்ட தலையுடனும் நின்றிருந்த அரிஷ்டநேமி திகைத்தவர் போல, அடையாளம் அறியாதவர் போல அத்தோரண வாயிலை நிமிர்ந்து பார்த்தார். படைத்தலைவர் “தங்களுக்காக அணிரதம் வந்துள்ளது இளவரசே” என்றார். தலை அசைத்தபின் நீண்ட கால்களை எடுத்து வைத்து நடந்து தன் தேரை அணுகி அதன் பொன் முலாம் பூசப்பட்ட படிகளை நோக்கி ஒரு கணம் தயங்கி நின்றார்.

“தங்களுக்கான தேர் இளவரசே” என்றார் அக்ரூரர். அதைக்கேளாதவர் போல அவர் தயங்கி நின்றார். பின்பு காலை தூக்கி அப்பொற்பரப்பின் மேல் வைத்து தலைதாழ்த்தினார். அது கடுங்குளிருடன் இருப்பதை அவர் உணர்வது போல தோன்றியது. உடலை அசைத்து ஒரு காலை தூக்கி வைத்து தேர்த்தட்டின் மீது அமர்ந்து கொண்டார். அக்ரூரர் கைகாட்ட தேர்ப்பாகன் கடிவாளத்தொகையை மெல்ல சுண்டினான். ஏழு புரவிகளும் உடலை நெளித்து மணிகளும் சலங்கைகளும் குலுங்க தலை அசைத்து முன்னால் சென்றன. வெண்பஞ்சுத் துகள்களால் இழுத்துச் செல்லப்படும் பொன்னிற இறகு போல் இருந்தது அந்தத் தேர். அர்ஜுனன் அதன் அடியில் இருந்த பன்னிரண்டு உலோக விற்களை பார்த்தான். அவற்றின் மேல் அமைந்திருந்தமையால் அந்தத் தேர் மண்ணில் படாமல் ஒழுகிச்செல்வது போல் தோன்றியது.

தேருக்கு முன்பாக அணிவகுத்து நின்றிருந்த ஏழு திறந்த வண்டிகளில் அமர்ந்திருந்த இசைச்சூதர்கள் மங்கல நாதத்தை எழுப்பியபடி முன்னால் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து மூன்று திறந்த தேர்களில் அணிச்சேடியர் மலர்களைத் தூவி வாழ்த்துரை கூவியபடி சென்றனர். அரிஷ்டநேமியின் தேருக்குப் பின்னால் அக்ரூரரும் படைத்தலைவர்களும் தங்கள் தேர்களில் தொடர்ந்தனர். புரவிகளில் அவர்களைத் தொடர்ந்த அர்ஜுனனும் சுபத்திரையும் இருபுறமும் மாளிகை முகப்புகளில் நகர் மக்கள் செறிந்து உவகை எழுந்த முகங்களுடன் வாழ்த்துக்கூவி மலர்களையும் மஞ்சள் அரிசியையும் அள்ளி அரிஷ்டநேமியின் தேர்மேல் வீசுவதை கண்டனர்.

அர்ஜுனன் தன் புரவியை சுபத்திரைக்கு இணையாக செலுத்தி “இந்த உவகை உண்மையானது” என்றான். “ஆம், அவர்கள் அனைவருக்கும் உகந்த ஒருவர்” என்றாள். “அவர் இவர்களையும் இந்நகரையும் உதறி துறவு பூண்டது குறித்து ஏமாற்றம் இவர்களுக்கு இருந்துள்ளது. ஆகவேதான் இவ்வரவை கொண்டாடுகிறார்கள்” என்றான். “இயல்புதானே?” என்றாள் சுபத்திரை. “சமணப்படிவராகி ஆன்மா மீட்படைந்து அருகர் நிலைக்கு அவர் உயர்ந்திருந்தால் இவர்கள் அவரை துறந்திருப்பார்களா?” என்றான் அர்ஜுனன். “ஒவ்வொரு கணமும் ஒரு படிவர் மெய்மையை உணர்ந்து விண்ணேகிக் கொண்டிருக்கிறார் என்று அருக நெறியினர் சொல்வார்கள். அவர்களின் பெயர்களெல்லாம் எவர் நினைவிலும் நிற்பதில்லை. தெய்வங்கள் மட்டுமே அவர்களை அறியும்” என்றாள் சுபத்திரை.

மலர்மழையும் வாழ்த்துச்சொல் மழையும் மூடியிருந்த துவாரகையின் அரசப்பெரு வீதியில் நுழைந்து அதன் குன்றின் மேலேறிய சுழல்பாதையில் சென்று கொண்டிருந்தபோது அர்ஜுனன் தன்னருகே சுபத்திரையும் வந்து கொண்டிருப்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்து கொண்டிருந்தான். அந்த மங்கலமழையும் தானும் அவளும் மட்டுமே அங்கிருப்பது போல் உள்ளம் மயங்கியது. அவள் தன் புரவியை முடிந்தவரை அவனருகே அவனுக்கு இணையாக செலுத்தினாள். அவன் கால்கள் அவள் கால்களில் அடிக்கடி முட்டி மீண்டன.

ஒரு முறை ஊடே புகுந்த சரடொன்றில் அவள் புரவி காலெடுத்து வைத்து நிலையழிந்தபோது அவன் அவள் தோளை மெல்ல தொட்டான். அந்தத் தொடுகையின் மேல் அவள் தன் கைகளை வைத்துக்கொண்டாள். தொட்டதுமே தன்னை உணர்ந்தவன் போல கையை இழுத்து விழிகளை விலக்கிக் கொண்டான் அர்ஜுனன். ஆனால் அவள் நோக்கு தன் மேல் இருப்பதை உடலால் உணர்ந்தான். நெடுநேரம் என சில கணங்களை கடந்தபின் திரும்பி அவளை பார்த்தான். அவள் விழிகள் அவனை சந்தித்தன. குருதி படிந்த வேல் போன்ற விழிகள்.

அவன் தன் பார்வையை திருப்பி மேலேறிச்சென்ற துவாரகையின் சாலையின் இருமருங்கிலும் எழுந்த மாபெரும் விண்மாளிகைகளை பார்த்தான். ஒவ்வொரு மாளிகையும் பூத்த சரக்கொன்றை போல் பொற்தோரணம் சூடியிருந்தது. நகரம் முழுக்க நிறைந்திருந்த களிவெறியை அங்கெழுந்த ஓசையே காட்டியது. நெஞ்சு நிறைந்து விம்ம ஒவ்வொரு கணமென கடந்துபோவது கடினமாக இருந்தது. எனவே அவ்வுள எழுச்சியை முடிந்தவரை பின்னால் இழுத்து உலகியல் நோக்கில் கொண்டு வந்தான். திரும்பி அவளிடம் “மணவிழாக்கள் நகர் மக்களை களி கொள்ளச் செய்கின்றன” என்றான்.

அவள் “ஆம்” என்றாள். பிறகு அவள் “நான் இந்நகரத்தில் வரும்போதெல்லாம் ஏதேனும் ஒன்றை நிமித்தமாகக் கொண்டு இந்நகர் களிவெறி கொண்டிருப்பதையே கண்டிருக்கிறேன்” என்றாள். “ஆயினும் மங்கல விழவுகள் ஒரு படி மேலானவை” என்றான் அர்ஜுனன். “அவை ஒவ்வொருவருக்கும் இனிய நினைவுகளை எழுப்புகின்றன போலும்” என்றாள் அவள். “இந்நகரம் காமத்தின் மையம் என்கிறார்கள். இது ஒரு போதும் அனங்கனின் கொடி தாழாத கழைகளைக் கொண்டது என்று சூதர்கள் பாடி கேட்டிருக்கிறேன்” என்றாள்.

மீண்டும் நாணிழுத்த வில்லென தன் உள்ளம் இறுகுவதை உணர்ந்தபின் அர்ஜுனன் பேச்சை நிறுத்திக் கொண்டான். சுபத்திரை “இம்முறை அனங்கன் தன் வில்லால் ஊழ்கம் இயற்றிய உருத்திரனுக்கு நிகரான ஒருவரை வீழ்த்திவிட்டான். களியாட்டுக்கென்ன குறை!” என்றாள். அர்ஜுனன் “இல்லை. அவரை வீழ்த்துவது அவனுக்கு அத்தனை கடினமானதாக இல்லை” என்றான். “எண்ணினேன்” என்று சிரித்தாள். “தன்னிடம் இருக்கும் மிக மெல்லிய மலர் ஒன்றை இரு விரலால் சுண்டி ஏவி இவரை வீழ்த்திவிட்டான். அதை நான் உடனிருந்து கண்டேன்” என்றான்.

“ஏமாற்றம் கொண்டீர்களா?” என்றாள் சுபத்திரை. “இல்லை” என்றான். “ஏன்?” என்றபின் அருகே வந்து “யோகியின் தவம் கலைவது மிக எளிதென்று அறிந்திருக்கிறீர்களா?” என்றாள். அர்ஜுனன் அவளை நோக்கி “மறு எல்லைக்கு தங்களை உந்திச் சென்றவர்களே திரும்பி வருகிறார்கள். ஏனெனில் இது ஒரு சுழல்பாதை. நிகர் நிலையை பேணுபவர்கள் எளிதில் சரிவதில்லை” என்றான். அவள் சிரித்தபடி “மண ஊர்வலத்தில் ஒரு சிவயோகி செல்வதை அத்தனை பேரும் விழிகூரத்தான் செய்கிறார்கள்” என்றாள். பின்பு உரக்க நகைத்து “இங்குள்ள பெண்கள் அனைவரின் விழிகளிலும் தாங்களே இருக்கிறீர்கள் யோகியே” என்றாள்.

அர்ஜுனன் திரும்பி பெண்களின் கண்களைப் பார்த்துவிட்டு “யார் சொன்னது?” என்றான். “பெண்ணென எனக்குத் தெரியாதா?” என்றாள். “தாடி நீட்டிய எந்த ஆண்மகனையும் பெண்கள் பார்ப்பதுண்டு என்று முதியயாதவர் காலகர் சொன்னார்.” “ஆம், உண்மை அது. கரிய நீண்ட தாடி பெண்களுக்கு விருப்பமானது. அவர்களால் அதிலிருந்து விழிகளை விலக்கவே முடிவதில்லை.” அர்ஜுனன் “எல்லா பெண்களுக்குமா?” என்றான். “ஆம். எல்லா பெண்களுக்கும்தான்” என்றாள். “தங்களுக்குமா?” என்றான். அவள் நன்கு சிவந்து கதுப்பென ஆன முகத்துடன் விழிகளை மறுபக்கம் திருப்பியபடி புன்னகைத்தாள்.

அர்ஜுனன் தன் தாடியை கைகளால் சுழற்றி நீவிவிட்டபடி பெண்களை பார்த்தான். அவள் “பார்க்காதீர்கள்” என்றாள். “ஏன்?” என்றான். “தாங்கள் சிவயோகி. இப்படி பெண்களை பார்த்தால் தங்களை பொய்த்துறவி என்று அவர்கள் எண்ணக்கூடும் அல்லவா?” என்றாள். “நான் எப்போதும் பெண்களைப் பார்க்கும் துறவியாகவே இருந்துளேன்” என்றான் அர்ஜுனன். அவள் சிரித்து “அவ்வகையிலும் ஒரு துறவி உண்டா?” என்றாள். “பார்ப்பதில் என்ன?” என்றான் அர்ஜுனன். “ஒன்றுமில்லை” என்றாள். சிரித்து உதடுகளை உள் மடித்து இறுக்கி மேலும் சிரிப்பை அடக்கியபின் “எனக்கு அப்போதே ஐயமிருந்தது” என்றாள். “என்ன ஐயம்?” என்றான் அர்ஜுனன். “தங்கள் விழிகள் துறவிகளுக்குரியவை அல்ல” என்றாள்.

அர்ஜுனன் “எங்களது துறவு என்பது வேறு. நாங்கள் இடது முறைமையை சார்ந்தவர்கள். கள்ளும் களி மயக்கும் சிவ மூலிகையும் எங்களுக்கு விலக்கல்ல” என்றான். “அதையும் இப்பெண்கள் அறிவார்கள் என்று தோன்றுகிறது. ஒவ்வொருத்தியும் உங்களைப் பார்த்து இன்னொருத்தியின் செவிகளுக்குள் எதையோ சொல்கிறாள். அத்தனை பெண்கள் முகமும் காய்ச்சல் கண்டது போல் சிவந்து பழுத்துள்ளன.” அர்ஜுனன் “அவை உங்கள் விழி மயக்கு” என்றான். “ஏன் நான் அவ்வாறு விழி மயக்கு கொள்ள வேண்டும்? அவர்களிடம் எனக்கென்ன பொறாமையா?” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் ஒன்றும் பேசாமல் சென்றான்.

அவள் மேலும் அருகே வந்து “தாங்கள் கேட்டதற்கு நான் இன்னும் மறுமொழி சொல்லவில்லை” என்றாள். “எதற்கு?” என்றான் அர்ஜுனன். “சற்று முன் கேட்டதற்கு” என்றாள். “சற்றுமுன் என்ன கேட்டேன்?” என்றான். அவள் சிரிப்பை அடக்கி உதடுகளை இறுக்கியபோது கழுத்தின் தசைகள் இழுபட்டன. “என்ன கேட்டேன்?” என்றான் அர்ஜுனன். “தாடியை பெண்கள் விரும்புவார்களா என்று?” “ஆம்” என்றான். “பெண்கள் விரும்புவார்கள் என்று நான் சொன்னேன்.” “ஆம்” என்றான் அர்ஜுனன். “பெண் விரும்புவாளா என்று கேட்டீர்கள்” என்றாள். அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “விரும்புவாள்” என்ற பின் தன் புரவியை தட்டி அவள் முன்னால் சென்றாள். அதன் சாமர வால் குழைந்து குழைந்து அகன்று செல்வதை அர்ஜுனன் நோக்கி அமர்ந்திருந்தான்.

துவாரகையின் குன்றின் உச்சியில் அமைந்த பெரிய மைய மாளிகையின் அகன்ற முற்றத்தில் அரிஷ்டநேமிக்காக அவரது தந்தை சமுத்ரவிஜயரும் தாய் சிவை தேவியும் காத்து நின்றிருந்தனர். இருபுறமும் அவர் உடன் பிறந்தவர்களான சினியும், சப்தபாகுவும், சந்திரசேனரும் ரிஷபசேனரும், சூரியசேனரும், சித்ரசேனரும், மகாபாகுவும் காத்து நின்றிருந்தனர். அரண்மனைக்கோட்டையின் முகப்பில் இருந்த முரசு ஒலித்ததும் இருபுறமும் நின்றிருந்த இசைச்சூதர்கள் தங்கள் வாத்தியங்களை முழக்கினர். அணிச்சேடியர் வாழ்த்தொலியும் குரவை ஒலியும் எழுப்பினர்.

மங்கலத் தாலங்கள் ஏந்திய அணிப்பரத்தையர் ஏழு நிரைகளாக முன்னால் சென்று அரிஷ்டநேமியின் அணி ஊர்வலத்தை எதிர் கொண்டனர். அவர்களுக்குப் பின்னால் நூற்றி எட்டு வைதிகர்களும் கங்கை நீர் நிறைத்த பொற்கலங்களுடன் வேதம் ஓதி தொடர்ந்தனர். மூன்று கொடிகளுடன் வந்த வீரர்கள் இருபுறமும் விலகி வழிவிட தொடர்ந்து வந்த நிமித்திகன் தன் கொம்பை உரக்க ஊதி “சௌரபுரியின் இளவரசர் துவாரகை மீள்கிறார்” என்று அறிவித்தான். “வாழ்க! வாழ்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. மங்கலச் சேடியர் எண் மங்கலங்கள் நிறைந்த பொற்தாலங்களை அவர் முன் உழிந்து இருபுறங்களிலாக விலகிச் சென்றனர். தேர் விரைவழிந்து மெல்ல முற்றத்திற்குள் நுழைந்தது. அரிஷ்டநேமி மெல்ல படிகளில் கால் வைத்து முற்றத்துக்கு இறங்கியபோது அவரது பேருடலின் எடையால் தேர் ஒரு பக்கம் மெல்ல சரிய புரவி ஒரு பக்கம் கால் தூக்கி வைத்து முன்னும் பின்னும் ஆடியது. அதை அங்கிருந்த அத்தனை விழிகளும் கண்டு ஒன்றை ஒன்று நோக்கிக் கொண்டன.

அவர்களின் தலைக்குமேல் எழுந்த தோள்களுடன் மெல்ல நடந்து முன்னால் வந்தார். விழவின்போது மரத்தில்செய்து சுமந்துசெல்லப்படும் பேருருவத் தெய்வச்சிலை என அவர் அவர்களுக்குமேல் சென்றார். மறுகணம் எறும்புகள் இழுத்துச்செல்லும் வண்டுபோல என்ற எண்ணம் அர்ஜுனனுக்குள் எழுந்தது. வைதிகர் அவர் மேல் கங்கை நீரை தெளித்து வேதம் ஓதி வாழ்த்தினர். வேள்விக்குண்டத்தில் எடுத்த கரியைத் தொட்டு முதுவைதிகர் ஒருவர் அவருக்கு நெற்றிக் குறியிட்டார். இடை வரை குனிந்து அதை பெற்றுக் கொண்டபின் கை குவித்து வணங்கியபடி மெல்ல நடந்து தன் தந்தையை அடைந்தார்.

தொலைவிலேயே நடந்து வந்த தன் மைந்தனைக்கண்டு அறியாது இரு கைகளையும் கூப்பி மார்போடு சேர்த்து அதன் மேல் விழுந்த விழிநீர்த்துளிகளை உணர்ந்தபடி உதடுகளை இறுக்கி நின்றார் சமுத்ரவிஜயர். மைந்தன் அருகே வர வர கால் தளர்ந்தவர் போல் அசைய  முதல்மைந்தர் சினி தந்தையை பற்றிக் கொண்டார். அருகே வந்து முழந்தாளிட்டு குனிந்து தன் தந்தையின் கால்களைத்தொட்டு தன் சென்னியில் சூடினார் அரிஷ்டநேமி. குனிந்து மைந்தனின் தோள்களை தொட விழைந்தும் உடல் அசையாது அப்படியே நின்றார் சமுத்ரவிஜயர். “வாழ்த்துங்கள் தந்தையே” என்றார் மகாபாகு. “ஆம், ஆம்” என்றபடி தலையில் கை வைத்து “அழியாப் புகழ் கொண்டவனாய் இரு” என்றார் சமுத்ரவிஜயர்.

அரிஷ்டநேமி எழுந்து தந்தையை கை கூப்பி வணங்கினார். அருகே நின்றிருந்த சிவைதேவி தன் முகத்தை இரு கைகளிலும் அழுத்தி குனிந்து தோள் குலுங்க அழுது கொண்டிருந்தாள். அயலவளை பார்ப்பது போல் சில கணங்கள் அவளை பார்த்தபின் அரிஷ்டநேமி தன் பெரிய கைகளை நீட்டி அவள் தோளை தொட்டார். அறுந்து விழுந்தவள் போல் அவர் முன் சரிய அள்ளி தன் உடலுடன் சேர்த்துக் கொண்டார். அவள் தலை அவர் வயிறளவுக்கே இருந்தது. அவரது இறுகிய விலா எலும்புகளின் மேல் தன் முகத்தை இறுக அணைத்து உடல் குலுங்கி அதிர அரசி அழுதாள். அவர் தோள்களில் தலை சாய்த்து தந்தையும் அழத் தொடங்கினார்.

இருவரையும் தன் பெருங்கரங்களால் வளைத்து உடலோடு சேர்த்தபின் தலை குனிந்து நின்றார் அரிஷ்டநேமி. அவரது உதடுகள் ஒட்டியிருந்தன. கண்கள் மூடியிருக்க முகம் அங்கு இல்லாதது போல் இருந்தது. கனவு கண்டுறங்கும் குழந்தையின் மென்மை அதில் இருந்தது. சினி அவர் தோளைத்தொட்டு “இளையோனே, நாம் முன்னே செல்வோம்” என்றார். பிற தமையன்களும் அவர் கைகளை பற்றிக் கொண்டனர். மகாபாகு “இளையோனே, இந்நாளில் நான் அடையும் உவகைக்கு நிகரென ஏதுமில்லை இவ்வுலகில்” என்றார்.

உடன் பிறந்தோர் சூழ அவர் அரண்மனைக்குள் செல்வதை அர்ஜுனன் நோக்கியபடி புரவி மேல் அமர்ந்திருந்தான். அதன் பின்னரே தொடர்ந்து வந்தவர்கள் உள்ளே வருவதற்கு கொடி அசைவு காட்டப்பட்டது. அக்ரூரரும் படைத்தலைவர்களும் உள்ளே சென்றபின் அர்ஜுனனின் புரவி உள்ளே வந்தது. அக்ரூரரையும் கடந்து உள்ளே சென்ற சுபத்திரை இடப்பக்கமாக திரும்பி பெண்களுக்கான அரண்மனை நோக்கி புரவியிலேயே சென்றாள். அவள் திரும்பி நோக்குவாள் என்று அர்ஜுனன் எண்ணினான். ஒரு கணம் கூட அவள் திரும்பி நோக்கவில்லை என்பதைக் கண்டதும் புன்னகைத்தான்.

அக்ரூரர் இறங்கி அவனிடம் வந்து “வருக யோகியே. தங்களுக்கான இருப்பிடம் சித்தமாக உள்ளது. சிவயோகி என்று தங்களை தூதன் அறிவித்தான். இங்கு நகரின் தென்மேற்கு மூலையில் சிவாலயங்கள் உள்ளன. உக்ரமூர்த்தியாகவும், அகோர மூர்த்தியாகவும், சித்தமூர்த்தியாகவும், யோகமூர்த்தியாகவும், கல்யாண மூர்த்தியாகவும் கைலாயன் குடிகொள்கிறான். நாளும் பூசனைகள் நடைபெறுகின்றன. தாங்கள் அங்கு சென்று வழிபடலாம்” என்றார். “நன்று” என்றான் அர்ஜுனன். ஏவலன் ஒருவன் வந்து அவன் தோளில் போட்டிருந்த பொதியை வாங்கினான். அர்ஜுனன் மீண்டும் தலை வணங்கி அவனுடன் நடந்தான்.

நகரின் பல இடங்களில் அணி ஊர்வலம் முடிந்து அவை தொடங்கப்போகிறது என்பதை அறிவிக்கும் முரசொலிகள் முழங்கத் தொடங்கியிருந்தன. அவனை அழைத்துச் சென்ற ஏவலனிடம் “இங்கு மண விழா என்று சொன்னார்கள்” என்றான். “ஆம், சௌரபுரியின் இளவரசருக்கான மணத்தை இங்குதான் நடத்த வேண்டுமென்று அவர் தந்தை விழைந்தார். எனவே நாளை மறுநாள் அவ்விழவை ஒருக்க இளைய யாதவர் ஆணையிட்டுள்ளார்” என்றான். அர்ஜுனன் “அது நன்று. அவர் அந்தககுலத்திற்கு இளவரசர் அல்லவா?” என்றான்.

“இங்குள்ள விருஷ்ணிகளும் அந்தகர்களும் ஒன்று கூடும் விழவாகவே அது அமையும். இதற்குள்ளாகவே அவ்விழவிற்கென அனைத்தும் சித்தமாகியுள்ளன. சூழ்ந்துள்ள அத்தனை யாதவ ஊர்களிலிருந்தும் மணவிழவு கூடும் விருந்தினர் வந்துள்ளனர். இத்தனை பெரிய மாளிகைகள் இருப்பினும் போதாமல் ஐநூறு புதிய கொட்டகைகள் அவர்கள் தங்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்நகரில் மணவிழவொன்று நிகழ்ந்து நெடுநாட்களாகின்றன. எனவே சோனகர்களும் யவனர்களும் பீதர்களும் காப்பிரிகளும் கூட அவ்விழவில் பங்கெடுக்கவிருக்கிறார்கள். கடை வணிகர் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது” என்றான்.

அவன் புன்னகைத்து “இது மண விழாவல்ல. உண்மையில் பாரதவர்ஷம் காணப்போகும் மாபெரும் உண்டாட்டு விழா” என்றான். “ஊன் உணவு உண்டு போலும்” என்றான் அர்ஜுனன். “ஊனும் மதுவும் இல்லாது உண்டாட்டு ஒன்று நிகழவிருக்கும் என்பதையே அயல் வணிகர் அறிய மாட்டார்கள் யோகியே” என்றான் ஏவலன். “முன்னரே யாதவர் குலங்கள் அனைத்திற்கும் அறிவிப்பு சென்றுவிட்டது. ஊனுக்கு உடல் முதிர்ந்த அத்தனை ஆடுகளும் கடந்த நான்கு நாட்களாகவே நகருக்குள் வந்து கொண்டிருந்தன. இப்போது மக்களின் பெருங்குரல் கேட்டுக் கொண்டிருப்பதால் நீங்கள் அறிவதில்லை. இது சற்று அடங்கியபின் இரவில் கேட்டுப்பாருங்கள். நகரமே மாபெரும் ஆட்டு மந்தை போல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்” என்றான்.

அர்ஜுனன் “அடுமடையர்கள் எங்கிருந்து?” என்றான். ஏவலன் “ஏழுவகை மடைப்பணி உள்ளது. சோனகர்களும் யவனர்களும் ஊன் உணவில் காரம் இருப்பதை விரும்புவதில்லை. உப்புச்சுவையுடன் உண்பார்கள். காப்பிரிகளுக்கு அனலென எரியவேண்டும். நாமோ ஊனுணவை ஊனென்றே அறியாமல் உருமாற்றி உண்ணும் வழக்கம் உடையவர்கள். தென்புலத்தாருக்கு அதில் கருமிளகு தேவை. வடபுலத்தார் ஊன் மீது பழச்சாறு ஊற்றி அருந்துவர். அத்தனை முறையிலும் சமைப்பதற்கு மடைத்திறனாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மடைப்பள்ளிகள் வடக்குச் சரிவில் உள்ளன. எட்டு பெருமாளிகைகள் இங்கு மடைப்பள்ளிகளாக இயங்குகின்றன என்று அறிந்திருப்பீர்கள். இப்போது மேலும் ஆறு மடைப்பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன” என்றான்.

தன் அறையை அடைந்ததும் அர்ஜுனன் உள்ளே நோக்கி “சிவயோகி தங்குவதற்கு இத்தனை ஆடம்பர அறை எதற்கு?” என்றான். “இங்குள்ளவற்றில் எளிய அறை இதுவே” என்றான் ஏவலன். புன்னகைத்து அர்ஜுனன் தலை அசைத்தான். அவன் சென்றபின் மஞ்சத்தில் சென்று அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். ஒரே கணத்தில் ரைவத மலையிலிருந்து துவாரகை வரைக்குமான பயணம் அவனுள் ஓடி மறைந்தது. வாயிலில் வந்து நின்ற நீராட்டறை ஏவலன் “தங்கள் நீராட்டுக்கும் அதன் பின்புள பூசனை முறைமைகளுக்கும் ஆவன செய்யும்படி எனக்கு ஆணையிடப்பட்டுள்ளது” என்றான். அர்ஜுனன் “நான் நீராடி வருகிறேன். தென்மெற்கு எல்லையில் பைரவர் ஆலயம் அமைந்துள்ள சிவன் கோயில் ஒன்றுக்கு சென்று வணங்காது நான் உணவு உண்பதில்லை” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்றான் ஏவலன்.

நீராடி புலித்தோல் ஆடை அணிந்து நீண்ட ஈரக்குழலை தோள்களில் விரித்து நீர்த்துளிகள் உருண்டு சொட்டிய தாடியை கைகளால் அறைந்து துளி தெறிக்க வைத்தபடி அர்ஜுனன் அறைக்கு மீண்டான். ஏவலன் “சிவாலயத்திற்கு தங்களை அழைத்துப் போக வந்துள்ளேன்” என்றான். அர்ஜுனன் “ஆம், செல்வோம்” என்றான். விருந்தினர் மாளிகையிலிருந்து மறுபுறம் இறங்கி அகன்ற கற்கள் பதிக்கப்பட்ட சாலையினூடாக சென்று தென்மேற்கு திசையை தேர்ந்தான். மைய தெருக்களை நோக்கி நகர் மக்கள் அனைவரும் சென்றதனால் சிறிய பாதைகள் அனைத்தும் ஓய்ந்து கிடந்தன.

“இங்கு பைரவர் பதிட்டைக்கு ஊன் பலி உண்டா?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆம், ஒவ்வொரு கருநிலவு நாளிலும் ஊன் பலி அளிக்கப்படுகிறது” என்றான் ஏவலன். “சிவயோகியரும் சிவ பூசனை செய்பவரும் அவ்வாலயங்களை சூழ்ந்துள்ள இல்லங்களில் வாழ்கிறார்கள். இந்நகரின் பொதுப் போக்குக்கும் அதற்கும் நேரடித் தொடர்பு எதுவும் இங்கில்லை. சிவனுக்கு உரிய நாட்களில் மட்டுமே நகர் மக்கள் அங்கு வழிபடச் செல்கிறார்கள். காபாலிகர்களும் காளாமுகர்களும் போன்ற இடது வழியினர் நகருள் நுழையாமலேயே அங்கு வருவதற்கு பாதையும் உண்டு.”

அதுவரை அறியாச்செவி கேட்டுக் கொண்டிருந்த ஒலியை நெடுநேரம் அர்ஜுனன் சித்தம் பொருட்படுத்தவில்லை. பின்புதான் வியப்புடன் அதை அறிந்து நின்றான். “ஆடுகளின் ஒலி அல்லவா அது?” என்றான். “ஆம். உண்டாட்டிற்கென கொண்டுவரப்பட்டவை. இங்குதான் பட்டி அமைத்து பேணப்படுகின்றன. இது விழவு நாட்களில் இரண்டாவது செண்டு வெளியாக பயன்படும் இடம். ஆடுகளை பட்டி அமைக்க வேறு இடம் இல்லாததால் இங்கு அமைக்கலாம் என்றார் அமைச்சர்.”

ஆடுகளின் பேச்சொலிகள் இணைந்த முழக்கம் சாலை ஓரமாக அமைந்த கட்டடங்களின் இடைவழியாக கேட்டுக்கொண்டிருந்தது. அர்ஜுனன் திரும்பி அங்கே செல்லத்தொடங்க ஏவலன் “ஆலயம் இவ்வழி” என்றான். “நான் முதலில் இவற்றை பார்க்க விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். அவன் பின்னால் வந்தான். அர்ஜுனன் இரு கட்டடங்களின் இடை வழியாகச் சென்ற பாதை வழியாக நடந்து போனான். அங்கு மூங்கிலால் அமைக்கப்பட்ட பட்டிகளுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ஒன்றுடன் ஒன்று உடல் முட்டி அலை அடிக்கும் வெண்ணிறப் பரப்பென தெரிந்தன. அவற்றின் கண்கள் நீர்த்துளிகள் போல மின்னிக் கொண்டிருந்தன. தலை நீட்டி வாய்திறந்து அவை அனைத்தும் ஒற்றைச் சொல்லையே சொல்லிக் கொண்டிருந்தன.

பகுதி ஐந்து : தேரோட்டி – 24

தெற்கே சேரநாட்டிலிருந்து துவாரகைக்கு கொண்டுவரப்பட்டது சுப்ரதீபம் என்னும் வெண்களிறு. துவாரகையின் துறைமுகத்திற்கு வந்த தென்கலம் ஒன்றின் நடைபாதையின் ஊடாக தலையை ஆட்டியபடி ஆவலுடன் நடந்து வந்த குட்டியானையைப் பார்த்து அன்று துறைமுகமே உவகை எழுச்சியுடன் ஒலி எழுப்பி சூழ்ந்து கொண்டது. வெண்பளிங்கில் வெட்டி உருட்டி எடுக்கப்பட்டது போன்ற அதன் உடல் காலையொளியில் மின்னியது. மானுடத்திரளைக் கண்டு மேலும் களி கொண்டு செவ்வாழைக் குருத்து போன்ற துதிக்கையை நீட்டி வளைத்து மணங்களை பற்றியபடி மெல்ல பிளிறியது.

வெண்ணிற வெள்ளரிப்பிஞ்சு போன்று இரு சிறிய தந்தங்கள் மழுங்க சீவப்பட்டிருந்தன. மொந்தன் வாழைத்தண்டு போன்ற கால்களை முன்னும் பின்னும் எடுத்து வைத்து ஆட்டியபடி தன்னைச்சுற்றிக் கூடி நின்ற ஒவ்வொருவரையாக துதிக்கை நீட்டி தொட முயன்றது. துறைமுகத் தலைவராகிய சிவதர் ஓடி வந்து “விலகுங்கள்! விலகுங்கள்!” என்று ஆணையிட்டு அதை அணுகி முழந்தாளிட்டு “துவாரகையை வாழ்த்துங்கள் தென்னிலமுடையோரே” என்று வணங்கினார்.

அவர் தலையில் சூடி இருந்த மலரை தன் துதிக்கையில் தொட்டு எடுத்து இருமுறை சுழற்றி ஆட்டி அவர் மேலேயே போட்டபின் முன்கால் தூக்கி வைத்து ஓடி வந்து நெற்றியால் அவரை முட்டி வான்நோக்கி தள்ளியது யானைக்குழவி. அவர் கூவிச்சிரித்து உருண்டார். அவர் எழமுயல மேலும் முட்டித் தள்ளியது. அதைப் பிடிக்க வந்த இரு காவலர்களை நோக்கி சுருட்டிய வாலுடன் திரும்பி முட்டித் தள்ளியது. சிரித்தபடி காவலர் பற்ற முயல அதையே விளையாட்டாக மாற்றிக்கொண்டு முட்டித் தள்ளத் தொடங்கியது. காவலர்கள் சிரித்துக் கூச்சலிட்டனர்.

செய்தி சென்று துவாரகையிலிருந்து அக்ரூரரே இறங்கி வந்தார். நிமித்திகர்களும் களிற்றுக்குறி தேர்பவர்களும் அவருடன் வந்தனர். அப்போது துறைமேடை முழுக்க அலுவல்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு களிக்கூச்சல் எழுந்து கொண்டிருந்தது. வெண்ணிற யானைக்குட்டி துறை மேடையிலிருந்த பொதிகளை நெற்றியால் முட்டித் தள்ளியது. துதிக்கை தூக்கி ஒவ்வொருவரையாக பிடித்து இழுத்து சுழற்றி வீசியது. அதை பின்னால் இருந்து வால் பற்றி இழுத்தும் முதுகில் அறைந்தும் நெற்றியில் கை வைத்து தள்ளியும் வீரரும் வினைவலரும் ஏவலரும் விளையாடினர்.

அக்ரூரர் இறங்கி வருவதைக் கண்டதும் தலைமைக் காவலன் தன் கொம்பை எடுத்து ஊத அனைவரும் விலகி தங்கள் பணியிடங்களுக்கு ஓடினர். தனித்து விடப்பட்ட யானைக்குட்டி அருகே இருந்த தூண் ஒன்றை நெற்றியால் ஓங்கி முட்டி பிளிறலோசை எழுப்பியது. திரும்பி புரவிகளில் வந்து இறங்கிய அக்ரூரரையும் அகம்படியினரையும் கண்டு ஆர்வம் கொண்டு ஓடிச் சென்றது. அக்ரூரரின் பின்னால் நின்றிருந்த களிற்றுக்குறி தேர்பவரான கூர்மர் “அமைச்சரே இது போன்று நற்குறிகள் முற்றிலும் அமைந்த பிறிதொரு குழவிக்களிறை நான் கண்டதில்லை” என்றார். “எவ்வண்ணம் சொல்கிறீர்?” என்றார் அக்ரூரர்.

“அது வருவதை நோக்குங்கள். ஒவ்வொரு அடியும் பிறிதொரு அடியின் மேல் விழுகிறது. நூல்வடம் மேல் வரும் பொதிபோல நேர் கோட்டில் அணுகுகிறது” என்றார் கூர்மர். “உடலின் ஒவ்வொரு தசையும் பிறிதொன்றால் முற்றிலும் சமன் செய்யப்பட்டுள்ளது. இது பல்லாயிரம் கோடி களிறுகளில் ஒன்று. எதன் பொருட்டு இப்பெருநகருக்கு இது வந்துள்ளது என்று அத்தெய்வங்களே அறியும். ஒன்றுரைப்பேன். எளிய மானுடனுக்காக இது இந்நகர் புகவில்லை. மண்ணிறங்கும் தெய்வமொன்று தன் ஊர்தியை முன்னரே அனுப்பியுள்ளது.”

“என்ன சொல்கிறீர்?” என்று மெய் சிலிர்த்து அக்ரூரர் கேட்டார். “அறியேன். ஆனால் இது விண்ணகம் இறங்கி மண் தொடும் நிகழ்வுக்கு கட்டியம். அதுவன்றி பிறிதொன்றையும் சொல்ல மொழியில்லை எனக்கு” என்றார் கூர்மர். நிமித்திகராகிய கமலகர் “இங்கு வரும் வழியிலேயே நேரத்தை குறித்துக் கொண்டிருந்தேன். இதன் முன் வலதுகால் துவாரகையின் மண்ணைத் தொட்ட கணம் எதுவென நான் அறிய வேண்டும்” என்றார்.

அவர்களை அணுகிய வெண்களிறு சற்று தொலைவிலேயே நின்று ஐயத்துடன் செவிகளை முன்மடித்து தலைகுலுக்கி மூவரையும் பார்த்தபின் அக்ரூரரை நோக்கி துதிக்கையை நீட்டியது. அதன் துதிக்கையின் முனை சிவந்திருந்தது. மழலையின் வாய் போல மூக்குத்துளையின் விரல் நுனி ஆடியது. காற்றளைந்த காதுகளின் பிசிறுமுனைகளும் துதிக்கை சென்றணைந்த விரிமுகமும் செவ்வாழைத்தண்டுகள் போல் சிவப்போடியிருந்தன. உடலெங்கும் வெண்ணிற முடி புல்குருத்துகள் போல் எழுந்திருந்தது. சுழன்ற வாலில் முடியும் வெண்ணிறமாக இருந்தது. கடற்சிப்பிகள் போலிருந்தன கால் நகங்கள்.

“அதன் விழிகளும் வெண்ணிறமாக இருக்கின்றன” என்றார் அக்ரூரர். “ஆம், ஆனால் நோக்கில் குறையில்லை” என்றார் கூர்மர். கமலகர் துறைமேடைத்தலைவர் சரமரை அருகழைத்து “இது இந்நகரில் கால் வைத்த தருணம் எது?” என்றார். “நான் அதை குறிக்கவில்லையே” என்று அவர் சொல்ல அருகிலிருந்த முதிய காவலர் ஒருவர் “நான் குறித்தேன் நிமித்திகரே. காலை எட்டாம் நாழிகை பதினெட்டாவது கணம்” என்றார்.

அக்ரூரர் மண்டியிட்டு கை நீட்டி அக்களிறின் துதிக்கை முனையை தொட்டார். அது அவர் விரல்களை சுற்றிப்பிணைத்து அருகே இழுத்தது. நிலை தடுமாறி அவர் முன்னால் விழ அருகே இருந்த காவலன் “அமைச்சரே, குழந்தையாயினும் அது களிறு” என்றார். யானைக்குட்டி காலெடுத்து வைத்து தன் நெற்றியால் அவரை பின்னால் தள்ளியது. அருகே ஓடி வந்து இடையில் சுற்றியிருந்த கச்சையை பற்றி அவிழ்த்து தூக்கியது. அக்ரூரர் கையூன்றி எழுந்து அமர்ந்து “இதன் பாகன் கச்சையில் எதையோ ஒளித்து வைத்திருக்கும் பழக்கமுடையவன் போலும்” என்றார். கச்சையை உதறி நிலத்தில் இட்டு அதனுள் நன்கு தேடியபின் அக்ரூரரை நோக்கி கை நீட்டியது. அக்ரூரர் அதன் மத்தகத்தை தொடப்போனார்.

பின்னால் இருந்து அதன் தென்னகப்பாகன் ஓடி வந்து “அமைச்சரே, அதன் மத்தகத்தை தொட வேண்டியதில்லை” என்றான். “இவ்வயதில் இளங்கன்றுகள் மத்தகத்தை தொடுவதை போர் விளையாட்டுக்கான அழைப்பாக எடுத்துக் கொள்கின்றன. அதன் பின் தங்களை அது முட்டிக்கொண்டே இருக்கும். இங்குள்ள ஒவ்வொருவரையும் முட்டிவிட்டது. பலருக்கு முறிவுகள் கூட உள்ளன.” “இதன் பெயர் என்ன?” என்றார் அக்ரூரர். “வெண்ணன்” என்றான் பாகன். “தென்னாட்டு மொழியாகிய தமிழில் வெண்ணிறமானவன் என்று பொருள்.”

அக்ரூரர் அதன் காதுக்குக் கீழே இருந்த சிறு குழியை கைகளால் வருடினார். சற்று உடல் சிலிர்த்து பின்பு சிறு குழவியென ஆகி அவர் உடலுடன் தன் தலையை சேர்த்துக் கொண்டு செவிஅசையாது நின்றது. காதுகளையும் தாடையின் அடிப்பகுதியையும் அவர் வருடினார். அவரது காலை துதிக்கையால் சுற்றி வளைத்தபடி தலையை அவர் இடையுடன் சேர்த்துக் கொண்டது குழவி. நேரத்தை கணித்த நிமித்திகர் திகைப்புடன் யானையைப் பார்த்து கைகூப்பினார். “என்ன சொல்கிறீர்?” என்றார் அக்ரூரர்.

“இது…” என்றபின் “இவர்…” என்றார் நிமித்திகர் கமலகர். அக்ரூரர் அவருடைய பதற்றத்தை பார்த்தபின் “சொல்க!” என்றார். “மண் நிகழப்போகும் விண்ணவன் ஒருவனை கொண்டு செல்லும் பொருட்டு இங்கு வந்தவர், ஐயமே இல்லை” என்றார் நிமித்திகர். “இங்கு என்ன நிகழப்போகிறதென்று நான் அறியேன். ஆனால் விண்ணவருக்கு மட்டும் உரியது இவர் கால்கள் துவாரகையின் மண்ணை தொட்ட கணம்.”

அக்ரூரர் “இதை மேலே அரண்மனைக்கு கொண்டு போ! இளைய யாதவர் இப்போது ஊரில் இல்லை அவர் வந்து பார்த்து இதற்கு நல்ல பெயர் ஒன்றை சூட்டட்டும். துவாரகையின் செல்வங்களில் ஒன்று தெய்வங்களால் இந்த நன்னாளில் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார். யானை திரும்பி தான் வந்த கலத்தை நோக்கி ஓடி அங்கே நின்றிருந்த கலத்தலைவனை முட்டி நீருக்குள் தள்ளியபின் தலையை ஆட்டியபடி திரும்ப வந்தது.

நான்கு நாட்கள் கழித்து அஸ்தினபுரியிலிருந்து இளைய யாதவர் வந்தபோது துவாரகையின் அரண்மனைச் சேடியர் ஏவலர் காவலர் அமைச்சர் அனைவரும் அதனுடன் சிரித்துக்கூவி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதன் ஆடலன்றி வேறேதும் அங்கு நிகழவில்லை. அமைச்சு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏட்டுச் சுவடி அடுக்குகளை முட்டி வீழ்த்தியது. அவைக்கூடங்களுக்குள் நுழைந்து நிரை வைக்கப்பட்டிருந்த பீடங்களை மறித்துக் கலைத்தது. திண்ணைகளில் தொற்றி ஏறி அங்கிருந்த தூண்களை முட்டியது. உள்ளறைகளுக்குள் புகுந்து செம்புக்கலங்களை பேரோசையுடன் சரித்து உருட்டியது.

அடுக்கப்பட்டிருந்த எதுவும் அதை கவர்ந்தது. மூடப்பட்டிருந்த எந்தக் கதவும் அதை சீண்டியது. நின்று கொண்டிருந்த எந்த மனிதரும் அறைகூவலாக தோன்றியது. ஓடிக் கொண்டிருந்த ஒவ்வொரு சிறுவனும் தன்னை அழைப்பதாக அது எண்ணியது. ஆனால் முதியவர்களின் அருகே வருகையில் அதன் விரைவு குறைந்தது. அருகே வந்து மெல்ல துதிக்கையெடுத்து அவர்களைத் தொட்டு வெம்மையுடனும் ஈரத்துடனும் அவர்கள் மேல் மூச்சு பட உழிந்தது. கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த அன்னையர் அருகே சென்றதும் மெல்ல கை நீட்டி குழந்தைகளின் கால்களை தன் மூக்கு விரலால் தொட்டுப் பிடித்தது. அவர்களின் அருகே முன்னங்கால் நீட்டி பின்னங்கால் சரித்து மடித்து குறுவால் வளைத்து ஒதுக்கி அமர்ந்து விளையாடியது. தன் துதிக்கை உயரத்திற்கு மேலுள்ள ஒவ்வொன்றையும் பிடித்து கீழிறக்க ஒவ்வொரு கணமும் முயன்று கொண்டிருந்தது.

இரண்டாவது நாளே பொறுக்க முடியாமல ஆனது போல் “அமைச்சரே, அதை தளைத்தால் என்ன?” என்றான் காவலர் தலைவன். “இக்களிறு மானுடனால் தளைக்கபடுவதல்ல. அது முடிவெடுக்கட்டும் எங்கு எதை செய்வதென்று” என்றார் அக்ரூரர். “அப்படியானால் அதன் கழுத்தில் ஒரு மணியையாவது கட்டுவோம். அது வரும் ஒலியைக் கேட்டு ஆட்கள் சற்று எச்சரிக்கை கொள்ள முடியுமே” என்றான் காவலர் தலைவன். பொன்னன்றி வேறு எதுவும் அதன் உடலை தொடலாகாது என்று அக்ரூரர் ஆணையிட்டார். அரண்மனைக் கருவூலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய பொன்மணி ஒன்று அதன் கழுத்தில் பொன் வடம் கொண்டு கட்டப்பட்டது.

தன் கழுத்திலிருந்த மணியின் ஓசையை பெருங்குழவி விரும்பியது. எனவே எங்கிருந்தாலும் தன் உடலை அசைத்து அம்மணியோசையை எழுப்பிக் கொண்டே இருந்தது. அரண்மனையின் அனைத்து அறைகளிலும் நிறைந்த மணியோசையை கேட்டு காவலர் தலைவன் “இம்மணியோசையால் எந்தப்பயனும் இல்லை அமைச்சரே. எந்நேரமும் இது கேட்டுக் கொண்டிருக்கிறது. துயிலுகையில்கூட யானை உடல் அசைக்கும் என்பதை இப்போதுதான் அறிந்தேன்” என்றான். “இதன் கால்களுக்கு மணி கட்டுவோம்.  அவ்வோசையை வீணே எழுப்ப முடியாதல்லவா” என்றான். அதன் நான்கு கால்களுக்கும் சதங்கை மணிகள் கொண்ட பொன்னணிகள் அணிவிக்கப்பட்டன.

அரண்மனையின் இடைநாழிகள் வழியாக புகுந்து வாயில்களை முட்டித் திறந்து சேடியரின் பின்புறங்களை முட்டிச் சரித்து விளையாடிய களிற்று மகவிடம் சினங்கொண்ட மூதாட்டி ஒருத்தி “நீர் என்ன இளவரசரா? களிறுதானே? யானைக் கொட்டிலுக்கு செல்லுங்கள்” என்று சீறினாள். அவள் முகத்தை நோக்கியபடி அசைவற்று நின்றபின் திரும்பிச் சென்று அவ்வறையின் ஒரு மூலையில் முகத்தை சேர்த்து நின்று கொண்டது.

ஒளிந்து விளையாடுவது அதன் வழக்கம். திரைச்சீலைகளுக்குப் பின்னால் தூண்களின் மறைவில் அசைவற்று நின்று அவ்வழியாக வருபவரை துதிக்கை தூக்கி பிடிப்பது அதன் ஆடல். ஒளிந்து நிற்பது யானைகளுக்கு பிடித்தமானது என்று யானைக்குறியாளர் சொன்னார்கள். ஆனால் பகல் முழுக்க அவ்வண்ணமே அது முகம் திருப்பி நிற்கக் கண்டபின்புதான் அதில் ஏதோ பிழையுள்ளது என்று செவிலியர் உணர்ந்தனர். அமைச்சர்கள் வந்து அதைச் சுற்றி குழுமினர். அக்ரூரர் வந்து அதன் முதுகைத் தட்டி “தென்னரசே, என்ன இது? ஏன் இங்கு நிற்கிறீர்கள்?” என்றார். செவிலியர்தலைவி “வெல்லமும் கரும்புச் சாறும் அளித்தோம். எதையும் உண்ணவில்லை” என்றாள்.

அக்ரூரர் வந்து வெல்லக்கட்டி ஒன்றை எடுத்து அதன் துதிக்கைக்கு அளித்தார். துதிக்கை அதை பற்ற மறுத்து விட்டது. கூர்மர் வந்து அதை நோக்கினார். “இது நோயெதுவும் அல்ல. அவர் சினந்துளார். இங்கு எவர் மீதோ அவர் முனிந்துள்ளார்” என்றார். “எவர் மேல்?” என்றார் அக்ரூரர். மூதாட்டியாகிய செவிலி கை கூப்பியபடி “அறியாதுரைத்தேன் அமைச்சரே. களிற்றுக் கொட்டிலில் சென்று நிற்கவேண்டியதுதானே என்று சொன்னேன். நான் அறிந்திருக்கவில்லை இவர் சினம்கொள்வார் என. என் மைந்தனைப்போல் எண்ணினேன்” என்றாள்.

சினத்தில் சிவந்து நடுங்கிய முகத்துடன் அக்ரூரர் “வா, இங்கு வா” என்று அவளை அழைத்து முன்னால் தள்ளி “அவர் முன் சென்று நின்று உன் தலையை அவரது முன்காலடியில் வை” என்றார். ”உன்னைக் கொன்று சினம் தணிப்பது அவர் விழைவென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். “ஆம். அதற்கும் நான் சித்தமாக உள்ளேன்” என்றபடி கைகூப்பி அழுதபடி வந்து களிற்றுமகவின் முன் அமர்ந்து அதன் வலது முன்காலில் தன் தலையை வைத்தாள் செவிலி.

தன் கால்களை பின்னுக்கு இழுத்தது அது. துதிக்கையை நீட்டி அவள் மேலாடையைப் பற்றி இழுத்து இடமுலையின் கண்ணை மெல்லிய மூக்கு நுனியால் வருட காவலர் தலைவன் வெடித்துச் சிரித்தபடி புறம் காட்டினான். அக்ரூரர் சிரிப்பை அடக்கி உடல் குலுங்கினார். திரும்பி கூடிநின்ற கூட்டத்தைப் பிளந்து இடைநாழியில் ஓடியது யானைக்குட்டி. கூர்மர் “நானும் ஒரு கணம் சிந்தை மயங்கிவிட்டேன் அமைச்சரே. இது எளிய யானை அல்ல. அவ்வுருவில் இம்மண் நிகழ்ந்த பிறிதொன்று. பேரருள் ஒன்றை அன்றி பிறிதொன்றையும் இதனிடமிருந்து எவ்வுயிரும் பெறப்போவதில்லை” என்றார்.

இளைய யாதவர் தன் நிமித்திகர் அவையைக் கூட்டி அக்களிற்றுமகவுக்கு ஒரு பெயர் சூட்டும்படி ஆணையிட்டார். அது பிறந்த நேரம் சேரநாட்டின் யானைக்குறி தேர்பவர்களால் பதிவு செய்யப்பட்டு ஓலையில் பொறிக்கப்பட்டு உடன் அனுப்பப்பட்டிருந்தது. மதங்க ஜாதகம் என்னும் அவ்வோலையில் அதன் பதினெட்டு நற்குணங்கள் அங்குள்ள நிமித்திகர்களால் குறிக்கப்பட்டிருந்தன. அது நகருள் கால் வைத்த முதற்கணத்தை கணக்கிட்டு அத்தருணத்தின் கோள்அமைப்பையும் விண்மீன் உறவையும் விரித்தெடுத்தனர் நிமித்திகர். அதன் பதினெட்டு நற்சுழிகளை தொட்டெண்ணி நூல் பதித்தனர் மாதங்கர்.

வலக்கால் மடித்து அது அமரும் முறை, இடப்பக்கம் சரிந்து அது துயிலும் வகை, இடக்கால் மடித்து எழுந்து வலக்கால் முன்வைத்து அது வரும் இயல்பு, நன்கு அமைந்த நீள்அம்பு என நேர்கோட்டில் ஓடும் தகைமை என ஒவ்வொன்றையும் கணித்தனர். “அரசே, ஏரிக்கரை சேற்றில் அது செல்லும்போது நோக்குங்கள். நான்கு கால் கொண்ட விலங்கு அது. ஆனால் செல்லும் போது ஒற்றைக்கால்தடம் மட்டுமே நேர் கோடென விழுந்திருக்கும்” என்றார் கூர்மர். பதினெட்டு நாட்கள் நிமித்திகரின் நெறி சூழ்கை முடிந்தபின் தலைமை நிமித்திகர் அவையில் எழுந்து “மண்ணில் இருந்து விண்ணேகும் எவருக்கோ ஊர்தியாக ஆவதெற்கென இங்கு வந்த யானையுருக் கொண்ட இத்தேவனுக்கு விண்ணவர் முன்னரே பெயர் சூட்டியிருக்கின்றனர் என்று அறிந்தோம். சுப்ரதீபம் என்று இதை அழைக்கிறோம்” என்றார். அவை ஒரேகுரலில் “மங்கலம் நிறைக!” என வாழ்த்தியது.

“எது மலர்களில் வெண்தாமரையாகியதோ, எது பொருட்களில் வெண்பளிங்கு ஆகியதோ, எது பறவைகளில் அன்னமாகியதோ, அது விலங்குகளில் இதுவாகியுள்ளது. பழுதற்ற பெருந்தூய்மை ஒன்றின் பீடம் இது. கதிரவனை தன்மேல் அமர்த்தும் வெண்முகில். இந்நகர் இதன் ஒளியால் அழகுறுவதாக!” என்றார் இளைய யாதவர். அவை களிகொண்டு “வாழ்க! வாழ்க!” என வாழ்த்தியது.

சுப்ரதீபம் யானைகளுடன் இருந்ததில்லை. அரண்மனையின் மைந்தருடன் ஆடி அது வளர்ந்தது. ஒரு போதும் தளைக்கப்பட்டதில்லை. நூறு சிறுவருடன் கூடி முட்டி மோதி துதிக்கை சுழற்றி ஓடி விளையாடும்போதும் அன்னையர் எவரும் அதை அஞ்சியதில்லை. தவழ்ந்து செல்லும் குழந்தை அதன் கால்களுக்கு இடையில் அமர்ந்து களித்திருக்கும்போது அன்னையர் அப்பால் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தனர். களிவெறி மீதூறி மதில்களின் மேல் அது ஏறுகையிலோ சிற்றறைகளுக்குள் உடல் திணித்து சுவரை இடிக்க முற்படுகையிலோ ஒரு குடுவை குளிர்நீரை அதன் மேல் ஊற்றினால் போதும் என்று கண்டுகொண்டனர். குளிர்நீர் பட்டதும் அவ்வண்ணமே அசைவழிந்து உடல் சிலிர்த்து துதிக்கை நெளித்து நிற்கும். மெல்ல கழுத்தணியைப் பற்றி பூனைக்குட்டியை அழைத்துச் செல்வதுபோல் சென்றுவிட முடியும்.

இளைய யாதவருக்கு மிக அணுக்கமான ஒன்றாக இருந்தது சுப்ரதீபம். ஒவ்வொரு நாளும் இரவில் அதற்கென்றே அமைக்கப்பட்ட அணிக்கொட்டிலில் அது துயில்வதற்கு முன் இளைய யாதவர் சென்று மத்தகத்தையும் நீண்ட துதிக்கையையும் செவ்வெண் மலரிதழ் போன்ற செவிகளையும் வருடி தேங்காயும் பழமும் அளித்து மீள்வார். காலையில் விழித்தெழுந்ததுமே கண்களை மூடிக்கொண்டு அரண்மனையின் சுவர்களையும் தூண்களையும் தொட்டபடி நடந்து அதன் கொட்டிலுக்குள் நுழைந்து மத்தகத்தின் முன் நின்று கண் திறப்பார். அதன் வெண்ணிறப் பெருங்கையை தன் தோளில் தார் என அணிந்து வெண் தந்தங்களை அழுத்தி விளையாடுவார்.

குழவிநாட்களில் அது இரவில் கனவுகண்டு விழித்துக்கொண்டால் பிளிறியபடி எழுந்து கொட்டிலை விட்டிறங்கி கதவுகளை முட்டித்திறந்து சதங்கை ஒலிக்க ஓடி அரண்மனைக்குள் புகுந்து இடைநாழிகளில் விரைந்து மரப்படிகளில் ஏறி இளைய யாதவரின் படுக்கை அறைக்குள் நுழைந்து அவரது மஞ்சத்தருகே நின்று அவர் மேல் துதிக்கையை போட்டுக் கொள்ளும். மெல்ல புரண்டு புன்னகைத்து “கனவா? இங்கேயே துயில்க என் செல்லமே” என்பார். கால் மடித்து அவர் மஞ்சத்தருகே படுத்து அவர் மெத்தை மேல் மத்தகத்தை இறக்கி வைத்து துதிக்கை நீள்மூச்சில் குழைந்து அசைவிழக்க விழி சரிந்து துயிலத் தொடங்கும்.

காலையில் இளைய யாதவரை எழுப்ப வரும் ஏவலன் மஞ்சத்தில் துயின்று கொண்டிருக்கும் வெண்களிறைக் கண்டு வியந்து வாய் பொத்தி சிரிப்படக்குவான். ஒவ்வொரு நாளும் என அது வளர்ந்தது. அதன் தோலின் வெண்ணிற ஒளி கூடிக்கூடி வந்தது. வெண்ணைமலை என்றனர். பளிங்கு மலை என்றனர். வெண்முகிலிறங்கி வந்தது என்றனர். பீதர் நாட்டு வெண்பட்டுக்குவை என்றனர். அதன் தந்தங்கள் கட்டு மரங்கள் போல் நீண்டு வளைந்து எழுந்தன. பெருநாகம் போல் ஆயிற்று துதிக்கை. அரண்மனையின் வாயில் எதற்குள்ளும் நுழைய முடியாமல் ஆனபோது ஒவ்வொரு நாளும் வாயிலில் முன்னால் முற்றத்தில் நின்று துதிக்கை தூக்கி நெற்றி தொட்டு பிளிறலோசை எழுப்பும். உள்ளிருந்து இளைய யாதவரும் எட்டு துணைவியரும் அதை தொட்டு வணங்கி வாழ்த்து பெற்று மீள்வர்.

துவாரகையின் விருஷ்ணிகளும் அந்தகர்களும் கூடிய அவையில் அரிஷ்டநேமியின் மணமங்கலம் குறிக்கப்பட்டது. சௌரபுரத்தின் அரசர் சமுத்ரவிஜயரும் அவரது மைந்தர்களும் அவை வீற்றிருந்தனர். ரைவதத்திலிருந்து திரும்பிய இளைய யாதவர் அரியணை அமர்ந்திருந்தார். நிமித்திகரும் அமைச்சரும் பீடம் கொண்டிருந்தனர். நாளும் கோளும் நற்குறிகளும் பழுதற தேர்ந்து அறிந்ததை செய்யுளாக்கி ஏட்டில் பொறித்து அதை அவை முன் வைத்தார் முது நிமித்திகர் சுதர்ஷணர்.

அதை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அக்ரூரர் இளைய யாதவரின் கைகளுக்கு அளித்தார். இளைய யாதவர் குலமுறைப்படி அதை பெற்றுக் கொண்டு அவையறைவோனை அழைத்து அதை அவை முன் படிக்கும்படி ஆணையிட்டார். எட்டு மங்கலங்களும் நிறைந்த சித்திரை முழுநிலவு நன்னாளில் மணம் நிகழக்கடவது என்றிருந்தனர் நிமித்திகர். விண்ணவர் வானில் சூழும் பெருநாள் என அதை காட்டின குறிகள். மண்ணிலுள்ள எண்வகை உயிர்களும் மகிழ்ந்து கொண்டாடும் தருணம் அது.

“அன்று கீழ் வானில் ஒரு ஏழுவண்ண வானவில் எழும். மேற்கு வானில் இந்திரவஜ்ரம் எழுந்து ஏழுமுறை மின்னி அமையும். பதினெட்டு முறை முழங்கி இடியோசையென தெய்வங்களின் வாழ்த்தொலி எழும். பொற்துகளென இளமழை பொழிந்து மண் குளிரும். அன்று எவ்வுயிரும் பிறிதொரு உயிரை வேட்டையாடாது. அன்று காலை எம்மலரிலும் வண்டுகள் அமராது. தொடப்படாத தூய மலர்கள் அனைத்தும் விண்ணிறங்கி வரும் கந்தர்வர்களுக்காக காத்திருக்கும்.”

“இப்புவி உள்ள நாள் வரை நினைவுகூரப்படும் நன்னாள் அது. சைத்ர மாதம் முழுநிலவு. குருபூர்ணிமை. மெய்மை அறிந்தோர் சொல்லும் வார்த்தையில் கலைமகள் வந்தமரும் நன்னாள். மந்திரங்கள் உயிர் கொள்ளும் தருணம். வெண்ணிற யானை மேல் ஏறி மணங்கொள்ள எழுவார் இவ்விளையோர். அவ்வண்ணமே ஆகுக அனைத்து மங்கலங்களும்.”

அச்சொல் கேட்டதும் அவை கலைந்து எழுந்த ஓசை சொல் தொட்டு வாசித்து நின்ற அறைவோனை விழிதூக்க வைத்தது. இளைய யாதவர் புன்னகையுடன் “ஆம். அதற்கென்றே அமைந்தது போலும் சுப்ரதீபம்” என்றார். அந்தகக்குடி மூத்தார் திகைப்புடன் “அதன் மேல் இதுவரை மானுடர் ஏறியதில்லையே” என்றார். பிறிதொருவர் “மானுடர் ஏறிச் செல்வதை அது விழையுமோ என்றே ஐயமாக உள்ளது. யானைகள் இளவயதிலேயே தங்கள் மேல் மானுடரை ஏற்றி பழகியனவாக இருக்க வேண்டும் அல்லவா?” என்றார்.

அவர்கள் கூற வருவது அதுவல்ல என்பதை உணர்ந்த இளைய யாதவர் “மூத்தாரே, இந்நகருக்கு அவ்வெண்களிறு வந்தபோது அது தெய்வங்களின் ஆணை என்று நாம் அறிந்தோம். இன்று நிமித்திகர் சொல்லில் இவ்வரி எழுந்ததும் தெய்வங்களின் ஆணை என்றிருக்கட்டும். இதில் நாம் சொல்ல ஏதுள்ளது? அவரை தன் மத்தக பீடத்தில் அமர்த்த வேண்டுமா வேண்டாமா என்பதை சுப்ரதீபமே முடிவெடுக்கட்டும்” என்றார். அச்சொல்லிலும் நிறைவுறாது குடிமூத்தாரின் அவை வண்டுக்கூட்டமென கலைந்த ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.

“முழுமை அடைந்த மானுடன் ஒருவன் விண் வடிவோன் ஆகி மண் விட்டெழுவதற்காக வந்தது அவ்வெண்களிறு என்று பத்து வருடங்களாக இங்கு சூதர்கள் பாடியுள்ளனர். எத்தனை சிறப்புடையதாயினும் இது ஒரு மணவிழா அல்லவா? இளவரசர் ஒருவர் தன் அரசியை மணப்பதற்கு ஏறிச்செல்வதற்காகவா அந்த தெய்வ ஊர்தி?” என்றார் ஒரு குடி மூத்தார். “ஏன்? மண்ணில் பிறக்கவிருக்கும் விண்ணவன் ஒருவன் பிறப்பதற்காக அமைகிறது இம்மணவிழா என ஏன் சொல்லக்கூடாது? பாரதவர்ஷத்தை ஆளும் சக்ரவர்த்தி கருபீடமேறக் கண்ட வழிபோலும் இது” என்றார் ஸ்ரீதமர். “இவை அனைத்தும் சொற்கள். நாமறியும் அறியவொண்ணா ஒன்றை இவ்வண்ணம் நாம் விளக்கிக் கொண்டிருக்கிறோம். நிகழவிருப்பது எதுவோ அதை தெய்வங்கள் முடிவெடுக்கட்டும். நமக்கு ஆணையிடப்பட்டதை இயற்றுவோம்” என்றபின் அக்ரூரரிடம் திரும்பி “தங்கள் எண்ணமென்ன அக்ரூரரே?” என்றார் இளைய யாதவர்.

“ஒவ்வொன்றும் நிகழ்கையில் முற்றிலும் இயைபின்றி ஒன்றன்மேல் ஒன்றென வந்து விழுவதுபோல் தோன்றுவதே இப்புடவியின் இயல்பு. நிகழ்ந்து முடிந்த பின்னரே அவை ஒவ்வொன்றும் பிறிதொன்றுடன் பழுதற இணைந்திருப்பதை நாம் காண்கிறோம். அலகிலாத ஊழ் வலையால் சமைக்கப்பட்டது இப்புடவி என்றறிந்துளோம். அதுவே நிகழ்வதாகுக!” என்றார் அக்ரூரர். “ஆம், நானும் அவ்வண்ணமே உரைக்கிறேன். இது அரசாணை. மணநாளில் வெண்களிறு மேலேறி என் மூத்தார் மணப்பந்தலை அடையட்டும்” என்றார் இளைய யாதவர்.

அவை நிறைவுற்று கலைந்து செல்லும்போது ஒவ்வொருவரும் அகம் குலைந்து பதறும் உடல் கொண்டிருந்தனர். “என்ன நிகழவிருக்கிறது இங்கு?” என்றார் ஒருவர். “வெண்களிறு ஏறி மணப்பந்தலுக்கு வருபவரைப் பற்றி இதுவரை கேட்டதில்லை” என்றார் பிறிதொருவர். “ஒரு மணநாளுக்கென விண்ணில் இந்திர வில் எழுமென்றால், வஜ்ரம் ஒளிரும் என்றால், இடி சொல்லி பிரம்மம் வாழ்த்தும் என்றால் வெண்களிறு ஏறிவருவதற்கென்ன?” என்றார் மூன்றாமவர்.

அவர்களிடருந்து அச்சொற்கள் பரவி நகரை அடைந்தன. எங்கும் அதுவே அன்று பேச்சென்றிருந்தது. இளைய யாதவர் தன் அமைச்சர்களை அழைத்து “சுப்ரதீபம் மேல் இளவரசர் அமர்வதற்குரிய பொற்பீடம் அமைக்கப்படட்டும். பட்டத்து யானைக்குரிய அணிகலன்கள் அனைத்தும் அதற்கு ஒருங்கட்டும்” என்றார். கூர்மர் “அவ்வாறே” என்று தலைகுனிந்தார். “நீர் என்ன எண்ணுகிறீர் கூர்மரே? தன் மேல் மானுடர் அமர அது ஒப்புமா?” என்றார் இளைய யாதவர். கூர்மர் தலைவணங்கி “அறியேன். ஆனால் இம்மணநாள் அதற்கும் ஒரு நன்னாள். பதினெட்டு அகவை நிறைகையிலேயே குழவி களிறாகிறது. அரசே, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு சித்திரை முழுநிலவு நாளில்தான் அது மண் நிகழ்ந்துள்ளது” என்றார்.

யானைப்பயிற்றுநர் எவரையும் அணுக அது விட்டதில்லை. அதற்கென்று கோலேந்திய பாகர்கள் எவரும் இருக்கவும் இல்லை. அதை நீராட்டி உணவூட்டி பேணும் ஏவலர்களே இருந்தனர். ஒரு முறையேனும் கோலோ துரட்டியோ அதன் மேல் தொட்டதில்லை. மானுடர் அதற்கு கற்றுக் கொடுக்க ஏதுமில்லை என்றார் கூர்மர். அது அறியாத அவைமுறைமைகளோ, புரிந்து கொள்ளாத மானுட மெய்ப்பாடுகளோ, துவாரகையில் அதன் நினைவில் இல்லாத இடங்களோ இருக்கவில்லை.

பிறயானைகள் அனைத்தும் அதை நன்கு அறிந்திருந்தன. யானைப்பெருங்கொட்டிலில் உணவு இடுகையில் ஒருவர் உண்ணும் கவளத்தை பிறிதொருவர் நோக்கி சினம் கொண்டு மத்தகம் உலைத்து, துதிக்கை சுழற்றி, இடியோசையிடும் போர்க்களிறுகளைக் கண்டு பாகர்கள் ஓடிவந்து அதை அழைத்துச் செல்வார்கள். யானைக் கொட்டிலுக்குள் சுப்ரதீபம் காலெடுத்து நுழைந்ததுமே முரண்டு நிற்கும் களிறுகள் தலைதாழ்த்தி துதிக்கை ஒதுக்கி பின்வாங்கும். எந்த யானையையும் திரும்பி நோக்காது மெல்ல நெளியும் துதிக்கையுடன், விசிறும் வெண்சாமரச் செவிகளுடன் எண்ணி எடுத்து வைத்த பஞ்சுப்பொதி பேரடிகளுடன் கொட்டிலைக் கடந்து அது மறுபக்கம் செல்லும்போது மாற்று ஒன்று அற்ற முழு வணக்கத்துடன் மதமொழுகும் பெருங்களிறுகளும் ஈன்று பழுத்த அன்னைப் பிடிகளும் திமிரெழுந்த இளங்களிறுகளும் கட்டென்று ஏதுமறியாத குழவிகளும் அசைவற்று நிற்பதை காண முடியும்.

சுப்ரதீபத்தின் மேல் ஒருமுறைகூட மானுடரோ தெய்வங்களோ ஏறியதில்லை. அதன் மத்தகமும் முதுகும் எவ்வண்ணம் இருக்கும் என்பதை ஒவ்வொரு நாளும் ஏரியில் அதை இறக்கி நீராட்டும் அணுக்கப்பாகர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். “ஒவ்வொரு இதழென மலர்ந்தபடி இங்கு காத்திருக்கிறது ஒரு வெண்தாமரை மலர்ப் பீடம்” என்றனர் சூதர்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 25

காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் புலரியை அறிவித்ததுமே துவாரகையின் அனைத்து இல்லங்களிலிருந்தும் எழுந்த மக்களின் ஓசை அலையென பெருகி எழுந்து வந்து அரண்மனையின் தாழ்வாரங்களையும் உள்ளறைகளையும் முழங்க வைத்தது. இரவு முழுக்க துயில் மறந்து இருந்த நகரத்தில் நாணலில் தீ பற்றிக்கொண்டது போல ஆயிரக்கணக்கான சுடர்கள் கொளுத்தப்பட்டு செவ்வொளி பரந்தது. அனைத்து ஆலயங்களின் மணிகளும் சங்குகளும் முழங்கத்தொடங்கின.

நீராடி சிவக்குறி அணிந்து தன் மாளிகை விட்டிறங்கி வந்த அர்ஜுனனைக் காத்து முற்றத்தில் அவனுக்கான அணுக்கன் நின்றிருந்தான். நள்ளிரவிலேயே சென்று தென்மேற்குத்திசையில் அமைந்திருந்த ஏழு சிவாலயங்களிலும் வணங்கி மீண்டு ஈரஆடை அகற்றி புலித்தோல் அணிந்து உருத்திரவிழிமாலை நெஞ்சில் புரள வந்த அர்ஜுனனை நோக்கி அணுக்கன் “அரண்மனைக்கு அல்லவா?” என்றான். “ஆம்” என்றபடி அவனுக்காக காத்திருந்த ஒற்றைக்குதிரை தேரிலேறிக்கொண்டான்.

விருந்தினர் மாளிகையை மைய அரண்மனையுடன் இணைக்கும் கல்பாவப்பட்ட சாலையில் இருபுறமும் படபடத்துக் கொண்டிருந்த பந்தங்களின் செவ்வொளியினூடாக அர்ஜுனன் சென்றான். நகரத்தின் ஓசை கணந்தோறும் பெருகிக்கொண்டே இருப்பது போல் இருந்தது. வளைந்து மேலெழுந்து அரண்மனை நோக்கி திரும்பியபோது துறைமுகத்தின் மேடை முழுக்க பல்லாயிரம் மீனெண்ணெய் பந்தங்கள் எரிய அந்தி எழுந்தது போல் காட்சிகள் தெரிந்தன. மிதக்கும் சிறு நகரங்களென கடலில் அசைந்தாடிக்கொண்டிருந்த பீதர் கலங்களைச் சூழ்ந்து பல்லாயிரம் விழிகள் ஒளிர நின்ற கலங்களையும் விண்மீன்களுக்கு ஊடாக நின்றெரிந்தது போல் தெரிந்த அவற்றின் கொடிமர முனையின் எண்ணெய் விளக்குகளையும் நோக்கிக் கொண்டு அரண்மனை நோக்கி சென்றான்.

அணைக்கும் கைகள் போல நீண்டிருந்த இரு கிளைகளுடன் நின்ற அரண்மனைத்தொடரின் மாடங்களில் இருந்த அனைத்து சாளரங்களிலும் செவ்வொளிச் சட்டங்கள் எழுந்து வானை துழாவின. அங்கு கைகளில் ஏந்திய அகல்விளக்குச் சுடர்களுடன் ஏவலர்கள் நடமாடிக்கொண்டிருந்தது மின்மினிக் கூட்டம் காற்றில் சுழல்வது போல் தோன்றியது. செவ்வொளி ஈரம் போல் படிந்து மின்னிக் கொண்டிருந்த பெருமுற்றத்தின் தேர்கள் ஓடித்தேய்ந்த கற்தரையில் அவனது தேரின் சகடங்கள் தடதடத்து ஓடிச்சென்று நின்றன. புரவி முன்னும் பின்னும் காலெடுத்து வைத்து தலை தாழ்த்தி சீறியது.

அவன் இறங்கி முற்றத்தில் நின்றதும் அங்கு நின்றிருந்த இளைய அமைச்சர் அவனை நோக்கி வந்து தலைவணங்கி “தங்களுக்காக இளைய யாதவர் அரண்மனை உள்ளறையில் காத்திருக்கிறார்” என்றான். “எனக்காகவா?” என்றான் அர்ஜுனன். “ஆம். குடித்தலைவர்கள் உடனிருக்கிறார்கள். புலரியின் முதல்வெளிச்சத்தில் மணநிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன” என்றார் அமைச்சர். “இளைய யாதவர் துயிலவில்லையா?” என்று கேட்டபடி அர்ஜுனன் நடந்தான். “அனைத்தும் சித்தமானதும் உச்சிப்பொழுதுக்கு மஞ்சம் சென்று விழி மயங்கி சற்று முன்னர்தான் எழுந்தார்” என்றபடி அவனுடன் வந்தார்.

அரண்மனைப்படிகளில் ஏறி உருண்ட பெரும்தூண்கள் நிரை வகுத்த நீண்ட இடைநாழியில் வளைந்து நடந்து வெண்பளிங்குக் கற்களால் ஆன அகன்ற படிகட்டுகளில் ஏறி மாடியில் மரத்தாழ்வாரத்தில் நடந்து உள்ளறையை அடைந்தான். அங்கு பேச்சொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. வாயில்காவலன் தலை வணங்கி உள்ளே சென்று அவன் வரவை அறிவித்து மீண்டான். கைகளை விரித்து “அவைக்கு நல்வரவு” என்றான்.

அர்ஜுனன் உள்ளே சென்றபோது அங்கு அக்ரூரர் ஏடொன்றை உரக்க வாசித்துக் கொண்டிருக்க அந்தக, விருஷ்ணி, போஜ, குங்குர குலத்தலைவர்கள் அமர்ந்து அதை கேட்டுக் கொண்டிருந்தனர். அரியணையில் முழுதணிக் கோலத்தில் அமர்ந்திருந்த இளைய யாதவர் அவனைக் கண்டதும் திரும்பி சற்றே தலையசைத்து வரவேற்றார். அர்ஜுனன் சென்று அமைச்சர் கனகர் காட்டிய புலித்தோல் விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்தான்.

அக்ரூரர் அஸ்தினபுரியின் திருதராஷ்டிர மாமன்னரின் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். கடிமணம் கொள்ளும் சௌரபுரத்து இளவரசருக்கு வாழ்த்துக்களை மன்னர் தெரிவித்திருந்தார். ‘வேரும் காய்த்த பலா என மைந்தருடன் பெருகி விழுது பெருத்த ஆல் போல் குலம் விரிந்து வாழ்க’ என்று எழுதியிருந்தார். விதுரரின் சொற்கள் அவை என்று அர்ஜுனன் எண்ணிக் கொண்டான். திருமுகத்தை அக்ரூரர் வாசித்து முடித்ததும் குலத்தலைவர்கள் கைதூக்கி “அஸ்தினபுரியின் பேரரசர் வாழ்க!’’ என்று வாழ்த்தினர்.

அக்ரூரர் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து மூத்த பாண்டவரின் வாழ்த்து வந்துள்ளது” என்றபின் பிறிதொரு திருமுகத்தை எடுத்தார். ‘அறமெனப்படுவது பல்கிப் பெருகுவதனாலேயே நிகழ்கிறது. அறம் பெருக்க உகந்தது இல்லறம் புகுதல். அந்தகவிருஷ்ணி குலத்து இளவரசர் ஆயிரம் காடுகள் உறங்கும் விதையென நீர் தொட்டு எழுக!’ என்று தர்மர் வாழ்த்தியிருந்தார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் வாழ்க!” என்றது அவை.

அப்பால் வாழ்த்தொலிகள் எழுந்தன. மங்கலம் உரைக்கும் சேடி அவைக்கு வந்து தன் கையில் இருந்த வலம்புரிச் சங்கை ஊதி உரத்த குரலில் அரசியரும் மதுராபுரியின் இளவரசியும் அவை புகுவதை அறிவித்தாள். அவையமர்ந்திருந்த குடித்தலைவர்களும் அமைச்சர்களும் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்ப வலப்பக்கம் இருந்த வாயிலில் அசைந்த செம்பட்டுத் திரைச்சீலையை விலக்கி நிமித்திகத் தோழி முன்னால் வந்து சத்யபாமையின் வரவை அறிவித்தாள். ருக்மிணியும் நக்னஜித்தியும் மித்ரவிந்தையும் லட்சுமணையும் பத்ரையும் ஜாம்பவதியும் காளிந்தியும் வரவு அறிவிக்கப்பட்டு அவை புகுந்தனர். அர்ஜுனன் விழிகள் அத்திரைச்சீலையின் அசைவை நோக்கிக் கொண்டிருந்தன. சேடி “மதுராபுரியின் இளவரசி சுபத்திரை” என்றறிவித்ததும் பொன்னூல் பின்னலிட்ட வெண்பட்டாடையும் பொன்னிற இடைக்கச்சையும் அணிந்து நீள்குழலில் வெண்மலர்கள் சூடி திறந்த பெருந்தோள்களில் செந்நிறத் தொய்யில் எழுதி சித்திரக் கோலத்தால் உருண்ட வெண்கைகளை அழகுபடுத்தி உடலெங்கும் இளநீல வைரங்களும் தென்பாண்டி வெண்முத்துகளும் பூண்டு சுபத்திரை அவை புகுந்தாள்.

அரசியரும் இளவரசியும் தங்களுக்கு போட்ட பீடங்களில் அமர்ந்தனர். சுபத்திரையின் விழிகள் அர்ஜுனனை சந்தித்து மீண்டன. ஒரு கணத்தில் ஒருவருக்கு மட்டுமே என ஒரு புன்னகையை அளிக்க பெண்ணின் கண்களால் இயல்வது கண்டு அர்ஜுனன் வியந்து கொண்டான். அவை தன்னை நோக்குகிறது என்று அறிந்ததும் தன்னை திருப்பினான். அக்ரூரர் அரசியருக்கும் இளவரசிக்கும் தலை வணங்கியபின் பாஞ்சாலத்து அரசர் துருபதனின் வாழ்த்துரையை வாசிக்கத் தொடங்கினார். சுபத்திரை வேறுதிசை நோக்கி புன்னகைத்துக் கொண்டிருந்தாலும் அது தனக்கான விழியொளி என்பதை அவன் அறிந்தான்.

அஸ்வத்தாமனின் வாழ்த்துரையை வாசித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் முரசொலிகளும் மங்கல ஒலிகளும் எழுந்தன. சௌரபுரத்தின் கதிர்க் கொடியுடன் அவை புகுந்த அறிவிப்பாளர் தலை வணங்கி சௌரபுரத்து அரசர் சமுத்ரவிஜயர் தன் முதல்மைந்தர் ஸினியுடன் அவை புக இருப்பதை அறிவித்தார். வாழ்த்தொலிகள் நடுவே சமுத்திரவிஜயர் தன் துணைவி சிவை தேவியுடன் அவைக்குள் நுழைந்தார். தொடர்ந்து பட்டத்து இளவரசர் ஸினி தன் அரசுத்துணைவி சுமங்கலையுடனும் இளைய அரசி பிரஹதையுடனும் வந்தார். அவரது தம்பியர் சப்தபாகு தன் துணைவி பிருதையுடனும், சந்திரசேனர் தன் துணைவி அரிஷ்டையுடனும், ரிஷபசேனர் தன் துணைவி ஜ்வாலாமுகியுடனும், சூரியசேனர் தன் துணைவி சித்ரிகையுடனும், சித்ரசேனர் தன் துணைவி அகல்யையுடனும், மகாபாகு தன் துணைவி பத்ரையுடனும் அவைக்கு வந்தனர். அக்ரூரரின் அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துச் சென்று அவையில் அமரச்செய்தனர்.

வாழ்த்தொலிகள் அமைந்ததும் அக்ரூரர் மத்ர நாட்டு அரசர் சல்லியரின் வாழ்த்துரையையும் சிந்து நாட்டரசர் ஜயத்ரதரின் வாழ்த்துச் செய்தியையும் வாசித்தார். சீரான அணிச்சொற்களில் எழுதப்பட்ட வாழ்த்துச் செய்திகள். வெறும் முறைமைவெளிப்பாடுகள்தான் எனினும் அத்தருணத்தை அழகுறச்செய்தன. 'நற்சொற்கள் மலர்களை போன்றவை. அழகுக்கு அப்பால் அவற்றுக்கு பொருளென எதுவும் தேவையில்லை' என்று துரோணர் ஒரு முறை சொன்னதை எண்ணிக் கொண்டான். மகதமன்னர் ஜராசந்தரின் வாழ்த்துரையை அக்ரூரர் வாசித்தபோது மெல்லிய உரையாடல் ஒலியுடன் எப்போதும் இருந்த அவை முற்றிலும் அமைதி கொள்ள அச்சொற்கள் மேலும் உரக்க ஒலித்தன.

இளைய யாதவர் அத்திருமுகம் முடிந்ததும் தலை வணங்கி “நன்று” என்றார். அங்க மன்னன் கர்ணனின் வாழ்த்துரையை வாசித்தபோது அறியாது இளைய யாதவர் கண்கள் வந்து அர்ஜுனனின் கண்களை தொட்டு மீண்டன. அவன் தலைகுனிந்து அந்நோக்கை விலக்கினான். ஸ்ரீதமர் அவைக்குள் வந்து தலை வணங்கியபோது அக்ரூரர் சேதி அரசர் தமகோஷரின் வாழ்த்துச் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதமர் அருகே வந்து நிற்க இளைய யாதவர் திரும்பி மெல்லிய குரலில் “என்ன நிகழ்கிறது?” என்றார். “ஒருக்கங்கள் அனைத்தும் முழுமையடைந்துவிட்டன” என்றார் ஸ்ரீதமர். “மணமகனுடன் ஏழு மணத்துணைவர்கள் உள்ளனர். அவர் அணி செய்து கொண்டிருக்கிறார்.”

அர்ஜுனன் மெல்லிய குரலிலான அவ்வுரையாடல்களை உதட்டசைவின் மூலமே கேட்டான். அக்ரூரர் காந்தார அரசர் சுபலரின் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். இளைய யாதவர் “சுப்ரதீபம் சித்தமாக உள்ளதா?” என்றார். “ஆம்” என்றார் ஸ்ரீதமர். “அது தன் மேல் பொற்பீடம் அமைக்க ஒப்புக் கொண்டதா?” என்றார் இளைய யாதவர். “ஆம். ஆனால் யானைகளுக்குரிய அசைவுகள் இன்றி நான்கு கால்களையும் மண்ணில் ஊன்றி அசைவற்று நிற்கிறது” என்றார் ஸ்ரீதமர்.

அக்ரூரர் மாளவ மன்னரின் செய்தியை வாசிக்கத் தொடங்கினார். பாரத வர்ஷத்தின் ஒவ்வொரு அரசரும் செய்திவடிவில் அங்கு வந்து சென்றனர். அர்ஜுனன் தனக்குள் ஒரு மெல்லிய பதற்றம் குடியேறுவதை உணர்ந்தான். இயல்பாக விழிகளைத் திருப்பியபோது தன்மேல் பதிந்திருந்த சுபத்திரையின் நோக்கை சந்தித்து விலகிக் கொண்டான். வெளியே இருந்து அக்ரூரரின் துணையமைச்சர் சுதாமர் உள்ளே வந்து அருகே நின்று மெல்லிய குரலில் ஏதோ சொன்னார். அக்ரூரர் தலையசைத்தார்.

அக்ரூரர் திருமுகங்களைச் சுருட்டி வெண்கலப் பெட்டிக்குள் வைத்துவிட்டு அவையை நோக்கி தலைவணங்கி “காலை முதற்பொழுது தொடங்கிவிட்டது குடித்தலைவர்களே. மணமகனும் மணமகளும் அணிக்கோலம் பூண்டுவிட்டனர். முதல் ஒளி எழுகையில் மணமகன் நகர்வலம் வரத் தொடங்க வேண்டும் என்பது முறைமை. மணமகள் நம் குடியின் பன்னிரு தெய்வங்களையும் வணங்கி மணப்பந்தலுக்கு வரவேண்டும். நகர்வலம் வந்து நான்கு எல்லைகளிலும் அமைந்த தேவர்களை வணங்கி மணப்பந்தலுக்கு மணமகன் வருவார். அங்கு அவர்களுக்கு காப்பு கட்டி கடிமணம் கொள்ளும் செய்தியை தெய்வங்களுக்கு அறிவிப்பார் நமது குலப்பூசகர். இன்று பகல் முழுக்க நிகழ்ந்து முழுநிலவெழுகையில் முடிவடையும் மணநிகழ்வுக்கான தொடக்கம் அது. நன்று சூழ்க!” என்றார்.

அவையறிவிப்பாளன் குறுமேடை ஏறி நின்று தன் கோலை தூக்கி மும்முறை சுழற்றி முறைப்படி அவை கலைந்துவிட்டதை அறிவித்தான். யாதவ குலக்கொடி வழியின் பெயர்களைச் சொல்லி 'இளைய யாதவருக்கு வெற்றி திகழ்க! வளம் திகழ்க! பெரும் புகழ் என்றும் வாழ்க!’ என்று சொல்லி அவன் இறங்கியதும் அவை அமர்ந்திருந்த குடித்தலைவர்கள் எழுந்து கை தூக்கி இளைய யாதவரை வாழ்த்தியபின் ஒருவரோடொருவர் மெல்லிய குரலில் பேசியபடி அவை விட்டு வெளியே வந்தனர்.

அர்ஜுனன் எழுந்து அக்ரூரரை நெருங்கினான். “தங்கள் நெறிப்படி மணநிகழ்வுகளில் பங்கேற்பதில் பிழை ஏதுமுண்டோ?” என்றார் அக்ரூரர். “எதுவும் எங்களுக்கு விலக்கல்ல” என்றான் அர்ஜுனன். “வருக!” என்றபடி அக்ரூரர் விரைவான காலடிகளுடன் வெளிவந்து இடைநாழியில் நடந்தார். “மெல்லிய அச்சமொன்று உள்ளது யோகியே. இன்றுவரை அந்த யானை எவரையும் தன் மேல் ஏற ஒப்புக்கொண்டதில்லை. முறைமை நிகழட்டும் என்று இளைய யாதவர் சொல்வார். ஆனால் சிறியதோர் படுநிகழ்வு உருவானாலும் அது அமங்கலமென்றே கொள்ளப்படும். அதன் பின் இம்மணம் சிறக்காது.”

அர்ஜுனன் புன்னகைத்து “முற்றிலும் மங்கலத்தால் ஆனதாகவே மணம் அமைய வேண்டுமா என்ன?” என்றான். “என்ன கேட்கிறீர்கள்? மானுடர் அஞ்சும் மூன்று தருணங்கள் உள்ளன. இல்லம் அமைத்தல், போருக்குக் களம் எழுதல், மணம் நிகழ்தல். அறிய முடியாத முடிவிலி வந்து கண்முன் நிற்பதை காண்கிறார்கள். அதன்முன் தங்கள் சிறுமையை உணர்கிறார்கள். அனைத்தும் முற்றிலும் நம்பிக்கையூட்டுவதாக அப்போது அமைந்தாக வேண்டும். ஒரு சிறு பிசகென்றாலும் அச்சம் முழுமையும் அங்கு குவிந்துவிடும். அச்சமே அதை பெரிதாக்கும். அனைத்து நலன்களையும் அழிக்கும் பெரும் புண்ணென அதை மாற்றிக் கொள்ளும். மூதாதையர் மணமங்கலத்தை முழுமங்கலம் என்று வகுத்தது வீணே அல்ல” என்றார்.

“யான் ஏதறிவேன்?” என்று சிரித்தபடி அர்ஜுனன் சொன்னான். “தாங்கள் வந்து அவரிடம் சொல்தொடுக்க வேண்டும் யோகியே. இளைய அரசர் நகர் புகுந்தபின் இதுவரை ஒரு சொல்லேனும் சொல்லவில்லை. இளைய யாதவரும் தாங்களும் சென்று அவரது குகைக்குள் கண்டு உரையாடினீர்கள் என்று அறிந்தேன். இந்நகரில் அரிஷ்டநேமி தம்மவர் என்று உணரும் இருவரில் ஒருவர் நீங்கள். இளைய யாதவர் ஆற்றவேண்டிய அரச பணிகள் உள்ளன. தாங்கள் வந்து அவர் அருகே நில்லுங்கள். தனக்கு நிகரான ஒருவரென அவர் உங்களை எண்ணக்கூடும்” என்றார் அக்ரூரர்.

அர்ஜுனன் புன்னகையுடன் “தனக்கு நிகரென இப்புவியில் அனைவரையும் அவர் எண்ணுவதே அவரை தனிமைப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்” என்றான். அவன் சொன்னதை புரிந்துகொள்ளாமல் அக்ரூரர் திரும்பிப் பார்த்தார். “அவர் இருக்கும் பீடம் மாமலைகளின் முடிகள் அளவுக்கு உயரமானது அக்ரூரரே” என்றான் அர்ஜுனன்.

அரண்மனையின் பெருமுற்றம் முழுக்க நூற்றுக்கணக்கான தேர்களும் மஞ்சல்களும் பல்லக்குகளும் நிறைந்திருந்தன. மேலும் மேலும் உள்ளே வந்து கொண்டிருந்த தேர்களை நிறுத்துவதற்காக ஏவலர்கள் ஒருவரை ஒருவர் கை நீட்டி கூவி அழைத்தபடி ஓடினர். சாலைகளில் வந்து கொண்டிருந்த தேர்களும் மஞ்சல்களும் தேங்கி ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றன. தேரை இழுத்து வந்த புரவிகள் பொறுமையிழந்து கால்களால் கல்தரையை தட்டி தலை சரித்து மூச்சு சீறின. பின்னால் ஒரு புரவி உரக்க கனைத்தது.

அக்ரூரர் “இந்நகரம் இவ்விழவினை எப்படி கடந்து செல்லப் போகிறது என்று அறிந்திலேன். செய்தி அறிந்து வந்து கூடிக்கொண்டே இருக்கிறார்கள். எப்போதுமே நுரைத்து எழும் கள்குடுவை போலிருக்கும் இந்நகர். இன்று மும்மடங்கு மானுடர் உள்ளே வந்துவிட்டனர்” என்றார். முகப்புச் சாலையில் இறங்கி வளைந்து சௌர அரச குலத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மாளிகையை நோக்கி சென்றனர். உருண்டு சென்ற தேர் மக்கள் கூட்டத்தின் நடுவே சென்று மெல்ல மெல்ல விரைவழிந்து சிக்கிக் கொண்டது. இருபுறமும் செறிந்து அலையடித்த முகங்களை அர்ஜுனன் வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தான். உவகையில் தங்களை மறந்து எங்கு செல்வதென்று அறியாது ஒருவரை ஒருவர் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். பெருந்திரளென ஆகும்போது மட்டுமே கொள்ளும் மயக்கு அது. ஒவ்வொருவரும் பல்லாயிரம் கைகளுடன் விராட வடிவம் கொண்டது போல்.

மெல்ல மெல்ல நகர்ந்த தேர் மையப்பாதையிலிருந்து பிரிந்து சௌர அரண்மனை நோக்கி சென்றது. அரண்மனை முகப்பில் சௌர குடிக்குரிய சூரிய வடிவம் ஏழு புரவிகள் இழுக்கும் மணித்தேர் வடிவில் பொறிக்கப்பட்டிருந்தது. மாதலி கதிர்முடி சூடியிருந்தான். தேர்த்தட்டில் அமர்ந்த சூரியனின் உடலில் பலநூறு கைகள் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து கதிர்களாக விரிந்திருந்தன. “சௌரபுரம் முன்பு சூரியனை வழிபட்ட சௌரன் என்னும் பழங்குடியினருக்கு உரியதாக இருந்தது. அந்தகவிருஷ்ணிகளில் ஒரு பிரிவினரான விருஷ்டிபாலர்கள் அங்கு சென்று அப்பகுதிகளில் குடியேறினர். கன்று பெருக்கி குலம் செழித்தபோது படை கொண்டு சென்று சௌரபுரத்தை தாக்கி வென்றனர். சௌரபுரத்தின் அன்றைய அரசர் சூரியசேனர் கொல்லப்பட்டார். அவரது மகள் சித்ரிகையை விருஷ்டிபால குலத் தலைவர் பிரஹத்சேனர் மணந்து கொண்டார். அதிலிருந்து தோன்றிய அரசகுடி இது. சௌரபுரத்தின் குறியாகிய சூரியன் இன்றும் அவர்களின் அரண்மனை முகப்புகளிலும் நாணயங்களிலும் உள்ளது” என்றார் அக்ரூரர்.

மாளிகையின் முகப்பில் தேர்களும் மஞ்சல்களும் பல்லக்குகளும் ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்டவை போல் சரிந்திருந்தன. அங்கிருந்து கொம்பூதியபடி ஓடி வந்த அணுக்கக் காவலன் அவர்களின் புரவிகளின் கடிவாளத்தை பற்றியபடி “பின்பக்கம் மட்டுமே தேர் நிறுத்த இடம் உள்ளது அமைச்சரே” என்றான். “அங்கு நிறுத்துக!” என்றபடி அக்ரூரர் இறங்கி "வாருங்கள்” என்று அர்ஜுனனை நோக்கி சொன்னபடி அரண்மனைக்குள் சென்றார்.

அணித்தோரணங்களாலும் மலர்மாலைகளாலும் பட்டுத்திரைச் சீலைகளாலும் தரைநிரப்பிய வண்ணக்கோலங்களாலும் சுவர்களில் வரையப்பட்ட சித்திரச் செறிவாலும் வண்ணம் பொலிந்த அரண்மனையின் இடைநாழியில் ஏறி உள்ளே சென்றனர். ஓங்கிய சுதைத் தூண்கள் தாங்கி நின்ற பெருங்கூரையிலிருந்து தொங்கிய மலரணிகள் காற்றிலாடின. அவற்றில் வண்டு மொய்க்காது என்ற நிமித்திக உரையை எண்ணி மேலே நோக்கிய அர்ஜுனனை நோக்கி “உண்மையிலேயே இன்று காலை மலர்களில் வண்டுகள் அமரவில்லை யோகியே” என்றார் அக்ரூரர்.

எதிரே ஓடி வந்த சிற்றமைச்சர் சிபிரர் தலை வணங்கி “சித்தமாகிவிட்டார்” என்றார். “என்ன சொல்கிறார்?” என்றார் அக்ரூரர். “சொல்லென எதுவும் எழவில்லை. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை.” அரண்மனை முழுக்க நிறைந்திருந்த ஏவலரும் சேடியரும் தங்கள் செயற்சுழற்சியின் உச்சகட்ட விரைவில் வெறி கொண்டது போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். எறும்புகளைப்போல ஒருவரை ஒருவர் முட்டி ஓரிரு சொற்களில் உரையாடி திரும்பினர். எவரும் எவரையும் பார்க்கவில்லை. எங்கும் நிறைந்திருந்த குங்கிலியப்புகையும் அகிற்புகையும் அவ்வரண்மனை விண்முகில்களுக்குள் எங்கோ இருப்பது போல உளமயக்கை உருவாக்கியது.

யாழ்களுடனும் முழவுகளுடனும் சூதர் குழு ஒன்று படியிறங்கி முற்றத்தை நோக்கி சென்றது. மங்கலத் தாலங்களுடன் ஓர் அறையிலிருந்து பிறிதொரு அறைக்கு சென்றனர் அணிசேடியர். தரையில் பரப்பப்பட்டிருந்த எண் மங்கலங்கள் கொண்ட தாலங்களை ஒருவர் எடுத்து சேடியர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தார். உள்ளிருந்து ஓடி வந்த முதிய செயலகர் ஒருவர் “நீர்க்குடங்கள் நீர்க்குடங்கள்!” என்று அவர்களை கடந்து ஓடினார். இளைய வைதிகர் ஒருவர் மறுபக்கத்திலிருந்து வந்து “வைதிகர் அணி நிற்பதற்கு உரிய இடத்தில் இருக்கும் தேர்களை அகற்ற வேண்டும்” என்று சிபிரரிடம் சொன்னார். “இதோ நான் வருகிறேன். இதோ இதோ” என்றபடி “வாருங்கள் அமைச்சரே” என்று அழைத்துச் சென்றார் சிபிரர்.

மெல்லிய வெண்பட்டு திரை தொங்கிய அறை ஒன்றை அணுகி திரையை விலக்கி உள்ளே நோக்கி “பேரமைச்சர் அக்ரூரர்” என்று அறிவித்தார். உள்ளிருந்த அணிச்சமையர்கள் தலை வணங்கி விலகினர். அக்ரூரர் உள்ளே சென்று தலை வணங்கி “தங்களை சந்திக்க சிவயோகியார் வந்துள்ளார் இளவரசே” என்றார். சந்தன மரத்தால் ஆன பீடத்தில் கால் மடித்து அமர்ந்திருந்த அரிஷ்டநேமி தன் பெரிய கைகளை ஒன்றன் மேல் ஒன்றென வைத்து ஊழ்கத்தில் ஆழ்ந்த அருகரென அமர்ந்திருந்தார். அமர்ந்திருந்த தோற்றத்திலேயே அவர் அவர்களுக்கு நிகரான உயரம் கொண்டிருந்தார். அவரது விழிகள் திரும்பி அர்ஜுனனை நோக்கின. மெல்லிய புன்னகையுடன் தலை வணங்கி வரவேற்றார்.

“தாங்கள் வெண்மலர் மாலை சூடி வெள்ளை யானையின் மேலேறி நகர்வலம் செல்ல வேண்டுமென்பது நிமித்திகரின் ஆணை. அதை முன்னரே தங்களிடம் அறிவித்திருப்பார்கள்” என்றார் அக்ரூரர். “ஆம்” என்றார் அரிஷ்டநேமி. “தருணம் அறிவிக்கப்பட்டதும் தாங்கள் எழுந்தருள வேண்டும். சுப்ரதீபம் என்னும் வெள்ளையானை தங்களுக்கெனவே சித்தமாகி நின்றிருக்கிறது” என்றார் அக்ரூரர். அரிஷ்டநேமி மீண்டும் தலை வணங்கினார்.

“நான் உடனே திரும்பிச் செல்ல வேண்டும். இவர் தங்களுடன் இருப்பார்” என்றார் அக்ரூரர். “மணநிகழ்வுக்கென வந்துள்ள குலத்தலைவர் அனைவரையும் சீராக அமரவைக்கும் பொறுப்பு எனக்குள்ளது. ஒவ்வொன்றுக்கும் அதற்கென முன்னரே வகுக்கப்பட்ட முறைமைகளும் சடங்குகளும் ஒருமைகளும் உள்ளன. எதிலும் எப்பிழையும் நிகழாதிருக்க வேண்டும் என்பது என் கவலை” என்றபின் தலை வணங்கி அவர் வெளியே சென்றார்.

அர்ஜுனன் அரிஷ்டநேமியின் அருகே கைகளை கட்டி நின்றான். அவர் விழிகளைத் திறந்து அவனை நோக்கியபோது அவனை அறிந்தது போல் தெரியவில்லை. சில கணங்களுக்குப் பின் அவர் விழிகள் திறந்திருந்த சாளரத்தினூடாக வந்து கொண்டிருந்த பந்தங்களின் செவ்வொளி நோக்கி நிலை கொண்டன. உடலில் இருந்து அசைவுகள் நழுவிச்செல்ல மெழுகு உறைந்து கல்லாவது போல அவர் ஆவதை அவன் கண்டான். அவ்வுடல் மலைப்பாறையின் குளிர்மை கொள்வது போல. தண்மை அறையை நிறைப்பது போல. அங்கிருந்த ஒவ்வொன்றும் விரைத்து மெல்ல சிலிர்த்துக் கொள்வது போல.

குளிரில் தன் உடல் மெல்ல புல்லரிப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். நெஞ்சுக்குள் நுழைந்த காற்றை பெருமூச்சுகளாக வெளியே விட்டான். அறைக்கு வெளியே மும்முரசமும் சங்கும் ஒலித்தபோது வெளியே இருந்து உள்ளே எட்டிப்பார்த்த முதுஏவலன் தலைவணங்கி “முதற்கதிர் எழுந்துவிட்டது இளவரசே” என்றார். அர்ஜுனன் அரிஷ்டநேமியின் அருகே சென்று குனிந்து “கிளம்புவோம் மூத்தவரே” என்றான். “ஆம்” என்றபடி அவர் எழுந்து இரு கைகளையும் தொங்கவிட்டபடி நின்றார்.

ஆலயக்கருவறையில் ஓங்கி நின்றிருக்கும் ரிஷபதேவரின் சிலையென ஒரு கணம் அர்ஜுனன் எண்ணினான். அறியா வழிபாட்டாளர் அதன் உடலெங்கும் அணிசூட்டியிருந்தனர். செம்பட்டுத் தலைப்பாகை மேல் மணிச்சரம் சுற்றப்பட்டிருந்தது. இடை சுற்றிய மஞ்சள் பட்டாடை பந்தச்செவ்வொளியில் உருகிய பொன்னென ஒளிவிட்டது. கால்களில் சந்தன குறடுகள் அணிந்திருந்தார். மார்பில் செம்மணியாரமும் சரப்பொளி மாலையும் தவழ்ந்தன. இடைசுற்றிய பொன்மணிச் சல்லடமும் மணித்தொங்கல் தோள்வளையும் வைரங்கள் மின்னிய நாககங்கணமும் மலர்க்கணையாழிகளும் இமைப்புகொண்டன. அவ்வுடலுக்கு முற்றிலும் பொருந்தி அணிசெய்த அவை அவ்விழிகளுக்கு முன் பொருளற்றவை ஆயின.

அறை வாயிலின் உத்தரம் அவர் தலையை தொடுமென தோன்றியது. “செல்வோம்” என்றான் அர்ஜுனன். உள்ளே இருந்து அவர் வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த மங்கலச் சேடியரும் இசைச் சூதரும் வாழ்த்தொலியும் இன்னிசையும் எழுப்பி அவரை வரவேற்றனர். அணிச்சேடியர் முதலிலும் இசைச்சூதர் தொடர்ந்தும் செல்ல அவர் பின்தொடர்ந்தார். அவர் அருகே சற்று விலகி அர்ஜுனன் நடந்தான்.

அரண்மனை இடைநாழி ஊடாக நடந்து வெளித்திண்ணையை அடைந்து ஓங்கிய இரு தூண்களின் நடுவே நின்றார். அவரைக் கண்டதும் முற்றத்தில் நிறைந்திருந்த மக்கள் கைகளைத் தூக்கி பெருங்குரல் எடுத்து “சௌரபுரத்து இளவரசர் வெல்க! மணமங்கலம் நிறைக!” என்று வாழ்த்தினர். அமைச்சர் சிபிரர் தலைவணங்கி “தங்களை சுப்ரதீபத்தின் வெண்கொட்டிலுக்கு அழைத்துச் செல்லும்படி ஆணை” என்றார். “ஆம்” என்று சொல்லி தலை அசைத்தபடி அவர் படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தார்.

“இத்திசை இளவரசே” என்றார் அமைச்சர். அவருக்காக காத்து நின்றிருந்த செம்பட்டுத் திரைச்சீலையிட்ட பொன்வண்ணத் தேரில் ஏறி பீடத்தில் அமர்ந்தார். மூன்று புரவிகள் கட்டப்பட்ட தேர் சிறிய உலுக்கலுடன் மணியோசைகள் எழ கிளம்பி தேய்ந்த கற்தரையில் வழுக்கியது போல ஓடிச் சென்றது. அர்ஜுனன் திரும்பி அருகே நின்றிருந்த ஒரு வீரனின் புரவியைப் பெற்று அதன் மேல் ஏறி அதை தொடர்ந்து சென்றான். வாழ்த்தொலிகள் இருபக்கமும் இருந்து எழ முற்றத்தை நீங்கி வளைந்த சாலையில் இறங்கி இருபக்கமும் எழுந்த பந்தங்களின் ஒளியில் பற்றி எரிந்து தழலானபடி அவரது தேர் சென்றது.

பகுதி ஐந்து : தேரோட்டி - 26

முகில்கள் தீப்பற்றிக் கொண்டது போல் வானக் கருமைக்குள் செம்மை படர்ந்தது. கீழ்வானில் எழுந்த விடிவெள்ளி உள்ளங்கையில் எடுத்து வைக்கப்பட்ட நீர்த்துளி போல் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் உடல் நிறைத்து தலைகளென செறிந்த மக்கள் அவரை நோக்கி ”சௌரபுரத்து சுடர் வாழ்க! மணமங்கலம் கொள்ளும் மன்னவர் வாழ்க!” என்று வாழ்த்தினர். சாலையின் மறு எல்லையில் காத்து நின்றிருந்த வீரர்கள் அவரை எதிர்கொண்டழைத்தனர்.

மையஅரண்மனையின் வடக்குத் திசையில் இருந்தது சுப்ரதீபத்தின் கொட்டில். அங்கு செல்லும் வழிமுழுக்க இருபக்கமும் மலர்மாலைகளும் வண்ணக்கொடிகளும் சித்திரத் துணித்தூண்களும் பாவட்டாக்களுமாக அணிசெய்யப்பட்டிருந்தது. அரிமலர் மழையில் மலர்மேல் உருண்டு சென்றது தேர். அரிஷ்டநேமியின் அருகே புரவியில் சென்ற அர்ஜுனன் கூடி நின்றிருந்த மக்களின் உவகை நுரைத்த முகங்களை நோக்கிக்கொண்டே சென்றான். ஏதோ ஒரு கணத்தில் தன் உள்ளம் விழைவது அப்பெரும்பெருக்கில் ஒரு பிழையையா என்ற ஐயத்தை அடைந்ததும் திடுக்கிட்டு அதை விலக்கிக்கொண்டான்.

வடக்கு அரண்மனை முற்றத்திற்கு அப்பால் செவ்வண்ணம் பூசப்பட்ட பன்னிரு இரும்புத் தூண்களுக்குமேல் கரிய அரக்கும் சுண்ணமும் கலந்து பூசப்பட்ட மரத்தாலான கூரையிடப்பட்ட கொட்டகை அமைந்திருந்தது. கருங்கற்பாளங்கள் பதிக்கப்பட்ட தரையில் புதிய பொன்னிறப்புல் பரப்பப்பட்டிருந்தது. தூண்களெங்கும் வண்ணமலர்மாலைகள் சுற்றப்பட்டிருந்தன. கூரைவிளிம்பிலிருந்து தோரணங்கள் தொங்கியாடின. கொட்டிலின் முன்பு ஏழு வைதிகர் கங்கைநீருடன் நின்றிருந்தனர்.

முழுதணிக்கோலத்தில் நின்றிருந்த யானையை தொலைவிலேயே அர்ஜுனன் கண்டான். சூழ்ந்திருந்த பந்தங்களின் ஒளியில் அதன் உடல் செந்நிறத் தாமரை மொட்டு போல் தெரிந்தது. துதிக்கையை நீட்டி தரையை துழாவி எதையோ எடுப்பதும் சுழற்றி திரும்பிப் போட்டு மீண்டும் எடுப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தது. தேர்கள் வரும் ஒலியை கேட்டு அதன் செவிகள் நின்றன. துதிக்கையிலிருந்து சிறிய வெண்கலக் கிண்ணமொன்றை மெல்லிய மணியோசையுடன் நழுவவிட்டது. உருண்டு சென்ற அதை எடுக்க முன்கால் தூக்கி வைத்து சற்றே முன்னால் நகர்ந்து துதிக்கையை நீட்டியபின் தேரைப் பார்த்தபடி பின்னிழுத்துக்கொண்டது. முன்னால் தூக்கி வைக்கப்பட்டிருந்த ஒற்றைக் கால் எழுந்து பின்னால் செல்ல நான்கு கால்களையும் நிலத்தில் ஊன்றி அசையாது நின்றது.

வழிகாட்டிச் சென்ற படைத்தலைவன் தலைவணங்கி கைகளை விரித்து இறங்கும்படி செய்கையால் சொன்னதும் அரிஷ்டநேமி தன் எடைமிக்க கால்களை படிக்கட்டில் வைத்து தேர் குலுங்கி சரிய இறங்கினார். அவரது எடையை அதுவரை சற்றே இழுத்துக் கொண்டிருந்த மூன்று புரவிகளும் நிலையழிந்து சில அடிகள் முன்னால் செல்ல தேர் மணியோசையுடன் ஒருமுறை உருண்டு முன்னால் சென்றது. பாகன் கடிவாளத்தை இழுத்து ஆணையிட்டு புரவிகளை நிறுத்தினான். வேதமோதியபடி வந்த வைதிகர் கங்கை நீரை அரிஷ்டநேமியின் மீது தெளித்து வாழ்த்தினர்.

அரிஷ்டநேமி நிமிர்ந்த தலையுடன் பெருந்தோள்கள் அசையாது துலாக்கோல்கள் என நிற்க காலெடுத்து வைத்து நடந்தார். அர்ஜுனன் புரவியிலிருந்து இறங்கி அவருக்கு இணையாக நடந்தான். துவாரகையின் நான்கு சிற்றமைச்சர்களும் யானையருகே காத்து நின்றிருந்தனர். அவர்கள் முன்னால் வந்து தலை வணங்கி "இளவரசே, தங்களை துவாரகை வணங்குகிறது. நிமித்திகர் கூற்றுப்படி தாங்கள் இந்த வெண்ணிற யானைமேல் ஏறி நகர்வலம் வரவேண்டுமென்பது முறைமை” என்றார். இயல்பாக "ஆம்” என்றபடி அவர் யானையை நோக்கி சென்றார்.

அவர் வருகையை உணர்ந்த சுப்ரதீபம் துதிக்கையை நீட்டி சிவந்த துளைகள் தெரிய மூக்குவிரலை சுழித்து மணம் பிடித்தது. அதன் வயிறு ஒலியில்லாமல் அதிர்ந்தடங்கியது. சற்றும் தயங்காது சீரான அடிகளுடன் அவர் அதை அணுகி நீண்டு நின்ற துதிக்கையை தொட்டார். யானை துதிக்கையை வளைத்து அவர் கையை பற்றிக் கொண்டது. மறுகையால் அதன் வெண்தந்தங்களை வருடியபடி அவர் அதன் விழிகளை பார்த்தார். அர்ஜுனன் அங்கு நிகழவிருக்கும் ஒன்று தன் வாழ்நாளெல்லாம் விழிகளில் நிறைந்திருக்கக் கூடிய காட்சி என்றுணர்ந்து சித்தத்தை குவித்து நின்றான்.

அரிஷ்டநேமி யானையின் தொங்கிய வாழைப்பூ போன்ற வாயை பற்றி வருடி அதில் வழிந்த எச்சில்கோழையை கையில் அள்ளி அதன் துதிக்கையின் அடிப்பகுதியின் மென்தோல் தசைமேல் பூசினார். யானைகளுக்கு அந்தத் தண்மை பிடிக்கும் என்பதை அர்ஜுனன் மதங்கநூலில் கற்றிருந்தான். சுப்ரதீபம் விளையாட்டாக தலை குலுக்கும்போது அதன் கழுத்தில் அணிந்திருந்த பொன்மணி ஓசையிட்டது. கால்களை மெல்ல தூக்கி அசைத்தபோது காலில் இருந்த பொற்சலங்கைகள் ஓசையிட்டன.

பொன்னின் ஒலி பிற உலோக ஒலிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதை அப்போதுதான் அர்ஜுனன் அறிந்தான். எளிய உலோகங்களைப் போல அது தண்ணென ஒலிக்கவில்லை. ஒலி முடிந்து ரீங்கரிக்கவுமில்லை. அதன் மென்மையான ஓசை அவ்வுலோகம் ஈரமாக மெத்திட்டிருப்பதுபோல எண்ணச் செய்தது. வெண்கலத்தின் ஒலியை செவி வாங்கிக்கொள்ளும்போது பொன்னொலியை செவியறியாது உள்ளமே பெற்றுக்கொள்வதுபோல தோன்றியது.

யானை மரப்பட்டைகள் உரசும் ஒலியுடன் முன்னங்கால்களை ஒன்றுடனொன்று தேய்த்தது. அவர் அதன் காதுகளின் செம்பிசிறுகளை வருடினார். அங்கு சூழ்ந்து நின்றிருந்த எவருக்கும் அவர் அதில் ஏறிக்கொள்வதில் எந்த ஐயமும் இல்லை என்பது தெரிந்தது. அது நிகழும் கணத்தையே அவர்கள் ஒவ்வொருவரும் காத்திருந்தனர். அர்ஜுனன் திரும்பி நோக்கியபோது யானைக் கொட்டிலை சுற்றிலும் சூழ்ந்திருந்த மாளிகை முகப்புகளிலும் அனைத்துச் சாளரங்களிலும் விழிகள் செறிந்திருப்பதை கண்டான். அரிஷ்டநேமி யானையின் செந்நரம்புகள் ஓடிப்பரவிய சேம்பிலை போன்ற அதன் காதுகளை நீவியபடி அதனிடம் ஏதோ சொன்னார்.

பாரதவர்ஷத்தின் பேருருவம் கொண்ட களிறுகள் அனைத்தும் துவாரகையில் இருந்தன. அங்கிருந்த பெருங்களிறுகளை விடவும் ஒரு அடி உயரம் கொண்ட மாபெரும் களிறு சுப்ரதீபம். ஆனால் ஓங்கிய தலையுடனும் பெருந்தோள்களுடனும் அரிஷ்டநேமி அதன் அருகே நின்றபோது அதன் உயரம் சற்று குறைவானது போல் தோன்றியது. செம்புள்ளிகள் பரவிய அதன் பருத்த துதிக்கை அவர் இடையை வளைத்து நழுவி தரையை உரசி வளைந்து எழுந்து மீண்டும் தழுவிக்கொண்டது. உவகை கொண்ட காதுகள் சாமரங்கள் போல் வீசின.

நோக்கி நிற்கவே ஆண்மையின் வீறு கொண்ட பெருங்களிறு யானைக் குழவியென்றாவதை அர்ஜுனன் கண்டான். இளங்கன்று போல் தலை குலுக்கியது. விளையாட்டென கால்களைத் தூக்கி ஒன்றுடன் ஒன்று வைத்தது. உடலை நீரில் நிற்கும் பெருங்கலம் போல் ஊசலாட்டியது. துதிக்கையால் அவரை வளைத்து அவரது ஆடையை பற்றி இழுத்து விளையாடியது. அவர் அதனுடன் உடலால் ஆழ்ந்த உரையாடலுக்குள் சென்றுவிட்டது போல் தோன்றியது.

அமைச்சர் "இளவரசே” என்றபோது அரிஷ்டநேமி உளம்கலைந்து திரும்பி நோக்கி "ஆம்” என்று சொல்லி தலையசைத்தபின் அதனிடம் கைசுட்டி ஏதோ சொன்னார். யானையிடம் பேசுவதற்குரிய குறுஞ்சொற்கள் அல்ல அவை. நெடுங்காலம் அறிந்த நண்பனிடம் பேசும் இயல்புமொழி. சுப்ரதீபம் தன் வலது முன்னங்காலை மடித்து படி என்றாக்கி அவருக்குக் காட்டியது. அதை மிதித்து தொடைக்கணுவில் ஏறி கால் சுழற்றி அதன் மத்தகத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டார்.

அங்கிருந்தோர் அனைவரும் உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். அமைச்சர் மத்தகம் மீதிருந்த பொற்பீடத்தை சுட்டி அதன் மேல் அமரும்படி சொன்னார். திரும்பிப் பார்த்தபின் அதன் மேல் ஏறி கால் நீட்டி யானையின் மத்தகத்தை உள்ளங்கால்களால் பற்றிக்கொண்டு அரிஷ்டநேமி அமர்ந்தார். யானை கொம்புகளை சற்றே குலுக்கியபின் துதிக்கையை நேராக்கி மத்தகத்தை தூக்கியது. அதன் முதுகைவிட மிக உயர்ந்திருந்தது மத்தகம்.

"செல்வோம்” என்று அர்ஜுனன் கையசைத்தான். யானையின் அணுக்கப்பாகர்கள் இருவர் செம்பட்டுத் தலைப்பாகையும் பொற்கச்சையும் பொன்ஆரமும் அணிந்து சித்தமாக நின்றனர். அவர்கள் இருவரும் வந்து அதன் பெருந்தந்தங்களை பற்றிக் கொண்டனர். யானை கீழே கிடந்த அந்த வெண்கலக் கிண்ணத்தை கையில் எடுத்துக்கொண்டு காலெடுத்து வைத்து சீரான மணியோசையும் கால்சலங்கை தாளமுமாக கல்பாவிய தளத்தில் நடந்து வெளியே சென்றது.

தன்மேல் பொன் இருக்கையில் அமர்ந்த அரிஷ்டநேமியுடன் சுப்ரதீபம் வடக்கு அரண்மனையின் பெருமுற்றத்துக்கு வந்தபோது அங்கு தலை பரப்பென நிரம்பியிருந்த மக்களிடமிருந்தும் சூழ்ந்திருந்த அரண்மனையின் நூற்றுக்கணக்கான சாளரங்களில் இருந்தும் உப்பரிகைகளில் சரிந்து நின்ற முகங்களில் இருந்தும் வாழ்த்தொலிகள் எழுந்து அதை சூழ்ந்தன. சீரடி எடுத்துவைத்து அது தனக்கென அமைந்த பாதையில் நடந்தபோது மேலே அமர்ந்திருந்த முழுதணிக்கோலம் கொண்ட பேருருவன் விண்ணிறங்கிய தேவன் வெண்முகில் மேல் அமர்ந்து மிதந்து செல்வதுபோல் தோன்றினான்.

அவரது நோக்கு அங்கிருந்த எவரையும் அறியவில்லை. குளிர்ந்த காற்று எழுந்து கட்டடங்களின் இடைவெளி வழியாக பீரிட்டு காதுகளை சிலிர்க்க வைத்தது. அர்ஜுனன் வானை நோக்கினான். கிழக்கே திசைவெளிக்கு அடியில் சூரியன் எழத்தொடங்கியிருந்தமையால் முகில்கள் அனைத்தும் விளக்கை மூடிய பட்டுத்திரைச்சீலைகள் என ஒளிகொள்ளத் தொடங்கியிருந்தன. ஆனால் மேற்கே மலையடுக்குகள் போல கருமுகில்கள் ஒன்றன் மேல் ஒன்றென எழுந்தன. அவற்றின் வளைவுகளில் ஒளி பட்டு அவை பாறைத்திரள்கள் போல எடைகொண்டவை ஆயின.

சுப்ரதீபத்தின் முன்னால் இரு புரவிகளில் சென்ற காவலர்கள் "விலகுங்கள்! விலகுங்கள்!” என்று கூவி கூட்டத்தை ஒதுக்கினர். கைகளில் ஈட்டியை பற்றியபடி இருபுறமும் பன்னிரண்டு வீரர்கள் வேலி அமைத்து உந்தித் ததும்பிய திரளை தடுத்து பாதை ஒருக்கினர். தன் புரவியில் சுப்ரதீபத்தின் பின்னால் சென்ற அர்ஜுனன் பீதர்பட்டு நலுங்குவது போல் அதன் வெண்ணிற உடல் அசைவதை மிக அருகே என கண்டான். அதன் கால்கள் தூக்கி முன்னால் வைக்கப்படுகையில் தெரிந்த அடிப்பாதம் வெட்டப்பட்ட பலாமரம் போல பொன்னிறமாக தெரிந்தது. மண்ணில் அவை ஓசையின்றி பதிந்து பதிந்து முன்சென்றன.

அதனுடலில் இருந்த பொன்மணிகளின் மஞ்சள் ஒளிவளைவுகளில் சூழ்ந்திருந்த கூட்டத்தின் வண்ணங்கள் அலைபாய்ந்தன. அதன் காற்சலங்கை ஓசை மிக அருகில் எனவும் மிக அப்பால் எனவும் கேட்டுக் கொண்டிருந்தது. முற்றத்தைக் கடந்து பெருஞ்சாலையை அடைந்ததும் அங்கு முன்னரே காத்து நின்றிருந்த இசைச்சூதர்களும் மங்கலச் சேடியரும் தங்கள் தேர்களில் ஏறிக் கொண்டனர். அவை வெண்புரவிகளால் இழுக்கப்பட்டு சரிந்து சுழன்று சென்ற சாலையில் முன் நகர்ந்தன. மங்கலஇசை மக்கள் திரளின் குரலில் முற்றிலும் மறைய இசைச்சூதர்களின் புடைத்த தொண்டைகளும், திறந்த வாய்களும், எழுந்தமையும் முழவுக்கோல்களும் சுழன்று சுழன்று வந்த கொம்புகளும் வெறும் விழியோவியங்களாக எஞ்சின.

முற்றத்தைக் கடந்து வந்ததும் சுப்ரதீபத்தின் விரைவு சற்று குறைவதை அர்ஜுனன் கண்டான். அதன் பின்னந்தொடையை தொட்டபடி பின்னால் சென்ற வீரனிடம் கை நீட்டி அங்கு தடை ஏதும் உள்ளதா என்று சைகையால் கேட்டான். அவன் குழம்பி முன்னால் ஓடிச் சென்று நோக்கினான். யானை செல்வதற்காக உருவாக்கப்பட்ட நீண்ட பாதை இருபக்கமும் மக்கள் செறிந்து புல்வெளி நடுவே ஓடை போல் தெரிந்தது. இல்லை என அவன் சொன்னான். அர்ஜுனன் பாகர்களிடம் “என்ன?" என்றான். அவர்கள் அதன் காதுகளைப் பற்றி செல்லும்படி தூண்டினர்.

சாலைமுனையை அடைந்ததும் சுப்ரதீபம் அசைவற்று நின்றுவிட்டது. அதன் உடலில் நீர்ப்பரப்பின்மேல் ஆழத்துச் சுழிகளின் அசைவு தெரிவது போல் சில சிலிர்ப்புகள் நிகழ்ந்தன. முன்னும் பின்னும் என உடலை அசைத்தபடி வலது காலை தூக்கி மண்ணில் வைப்பதும் எடுப்பதுமாக ஆடியது. அர்ஜுனன் அதன் அணுக்கனை நோக்கி சினத்துடன் அதை முன் செல்ல ஊக்கும்படி கைகாட்டினான். அவன் அதன் வெண்தந்தத்தை பற்றியபடி தொங்கிய கீழ்வாயின் அடியை மெல்ல தட்டி முன்னால் செல்லும்படி சொன்னான். யானை தன் துதிக்கையை சுருட்டி தூக்கியபின் அதே விரைவில் விடைத்து விரித்து சீறிய மூச்சுடன் தரையை துழாவியது. அந்த வெண்கலக் கிண்ணத்தை தரையிலிட்டு துதிக்கையைச் சுருட்டி கொம்புகளின் மேல் வைத்துக்கொண்டது. அங்கிருந்து துதிக்கை மலைப்பாம்பு போல வழிந்து இறங்கி நீண்டது.

அது ஏன் தயங்குகிறது என்று எண்ணியபடி அர்ஜுனன் தன் புரவியைத் தட்டி முன்னால் செலுத்தி நோக்கினான். அங்கு எதுவும் தெரியவில்லை. புரவிகளால் இழுக்கப்பட்ட இசைச்சூதர்களின் வண்டிகளும் அணிச்சேடியரின் வண்டிகளும் மேலும் முன்னால் சென்றிருக்க சிறியதோர் களம் போல அந்தச் சாலை அதன் முன் கிடந்தது. தரையில் ஏதேனும் ஐயத்துக்குரியவை இருக்கிறதா என்று அர்ஜுனன் பார்த்தான். உதிர்ந்த மலர்கள் அன்றி வேறேதும் இல்லை. "என்ன?" என்று அவன் பாகனிடம் கேட்டான். "தெரியவில்லை யோகியே” என்றபடி அவன் அதன் விலாவை பலமுறை தட்டி முன்னால் செல்லும்படி கோரினான். யானை துதிக்கையை வீசியபடி ஊசலாடி நின்றது. எங்கிருந்தோ வரும் ஓசையை செவி கூர்வதென அதன் செவிகள் முன்னால் மடிந்து அசைவிழந்தன. பின்பு உயிர் கொண்டு பின்னால் வந்து விசிறிக் கொண்டன.

அர்ஜுனன் அதன் அருகே சென்று "தென்னிலத்தாரே செல்க! இது தங்கள் அணியூர்வல நன்னாள்” என்றான். யானையின் கண்கள் மூடி எழுந்தன. அதன் விழிகள் செம்பழுக்காய்போல் இருந்தன. தொங்கிய வாய்க்குள் இருந்து எச்சில் வழிந்து துதிக்கையின் அடியில் பரவியிருந்தது. அதற்கு உடல் நலமில்லையா என்று அர்ஜுனன் எண்ணினான். ஆனால் அதன் உடல் நலம் எப்போதும் குன்றியதில்லை என்று அவன் கேட்டிருந்தான். அன்று காலை வரை நன்றாகவே இருந்துள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் புரவியை திருப்பி துணைப்படைத்தலைவனை கை நீட்டி அழைத்தான். அவன் அருகே வந்ததும் "கூர்மரை வரச்சொல். விரைவில்... புரவியிலேயே ஏற்றி வா” என்று ஆணையிட்டான். தலை வணங்கி அவன் புரவியுடன் திரும்பிச் சென்றான்.

யானை அசைவற்று நின்றபோது அது சிறிய எதையோ கண்டு சற்று தயங்குகிறது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே அங்கிருந்து அது அசையப்போவதில்லை என்று தோன்றிவிட்டது. அவன் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. "மதமா?” என்று தன் வாய் மீது கை வைத்து உதடசைவு தெரியாமல் இருக்க பாகனிடம் கேட்டான். அவன் "இல்லை யோகியே. இவ்வகை வெண்ணிற யானைகள் மதம் கொள்வதே இல்லை. ஏனெனில் இவை காமம் கொள்வதும் இல்லை” என்றான். "இவை பிற யானைகளை அருகணையவே விடுவதில்லை. மதங்க நூலின்படி வெள்ளை யானைகள் தனிமையாகப் பிறந்து மைந்தரின்றி விண்ணேகுபவை.”

“இருக்கலாம். ஆயினும் நாம் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது. மதம் எழுந்துள்ளதா பார்” என்றான் அர்ஜுனன் மீண்டும். "ஆணை யோகியே” என்றபடி அவன் திரும்பினான். "மூடா, கையை வைக்காதே” என்று அர்ஜுனன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாகன் கை நீட்டி யானையின் கண்ணுக்குக் கீழே இருந்த தோல்சுருங்கிய சுழியை விரல்களால் தொட்டுப் பார்த்தான். அவன் தொடுவதை கூட்டத்தில் தள்ளி நின்ற சிலர் உடனே பார்த்துவிட்டார்கள்.

யானை நின்றுவிட்டமை முன்னரே கூட்டத்தை செயலறச்செய்திருந்தது. அத்தனை விழிகளும் யானையையும் அதைச் சூழ்ந்து நின்றிருந்த ஏவலர்களையும் பாகர்களையும்தான் நோக்கிக் கொண்டிருந்தன. மதம் வழிகிறதா என்று அவன் தொட்டுப் பார்க்கிறான் என்று உணர்ந்ததும் கூட்டத்தினர் "மதம்! மதம்!” என்று கூவினர். உலர்நாணலில் தீப்பற்றி பரவிச் செல்வது போல சில கணங்களுக்குள் அச்செய்தி கூட்டம் முழுக்க சென்றது. பல்லாயிரம் தொண்டைகள் "மதம்! வெள்ளை யானைக்கு மதம்!” என்று கூவத் தொடங்கின. சுற்றிலும் கோட்டைச்சுவர் போல செறிந்திருந்த மக்கள்திரள் இடிந்து பின்னால் சரிவதுபோல் அகன்று விலகத்தொடங்கியது. அலை அலையென ஒருவரை ஒருவர் முட்டிச் செறிந்து பின்னால் இருந்த மாளிகைச் சுவர்களை அடைந்து பரவி விலகினர்.

முதலில் அவர்கள் விலகிச்செல்வதுகூட நல்லதற்கே என்று எண்ணினான் அர்ஜுனன். அதன் பின்னரே அதிலிருந்த பிழையை உணர்ந்தான். அரண்மனைகளால் சூழப்பட்ட அப்பெருமுற்றத்தில் அவர்கள் பின்னால் செல்ல இடம் இருக்கவில்லை. பின்னால் சென்றவர்களால் அழுத்தப்பட்டு பிறிதொரு பகுதியில் மக்கள் முன்னால் வந்தனர். அவர்கள் நிலை தடுமாறியும் விழுந்தும் கூச்சலிட்டபடி எழுந்தும் முழுமையாக யானையின் முன்னால் இருந்த பாதையை நிறைத்துக் கொண்டனர். சற்று நேரத்திலேயே நீண்ட களம் போல் தெரிந்த அந்தப் பாதை முழுமையாக மறைந்தது.

அர்ஜுனன் திரும்பி "கூர்மர் எங்கே?” என்று பல்லைக் கடித்தபடி கேட்டான். வேறொருவன் “யானைக் கொட்டிலுக்கு ஆட்கள் சென்றிருக்கிறார்கள்” என்றான். "அவர் இங்கிருந்திருக்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். "காலையில் தென்னிலத்தார் மிகச்சிறப்பாகவே இருந்தார். இங்கு வந்து நோக்கியபின் களிற்றுநிரை சீர்படுத்தத்தான் அங்கு சென்றார்” என்றான் வீரன். அவர் வந்தும் ஒன்றும் செய்வதற்கில்லை என்று எண்ணினான் அர்ஜுனன்.

யானையின் விலாவை கையால் வருடி அதன் வயிற்றுக்குள் ஏதேனும் ஓசைகள் கேட்கிறதா என்று தொடுகையின் மூலமாக கூர்ந்து அறிய தலைப்பட்டான். ஆனால் எளிய ஒரு விலங்கு என அதை புரிந்துகொள்ள முயலக்கூடாது என்றும் தோன்றியது. எண்ணங்களும் உணர்வுகளும் கொண்ட யானை வடிவ தேவன் என்றே அதை அங்குளோர் உணர்ந்திருந்தனர். அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையேனும் பிறர் அதன் நோயையோ உணர்வையோ உய்த்துணரும்படி அது விட்டதில்லை.

நிமிர்ந்து மேலே அமர்ந்திருந்த அரிஷ்டநேமியை பார்த்தான். ஊழ்கத்தில் இருப்பவர் போல இருகைகளையும் மடியில் வைத்து அசையா விழிகளுடன் அவர் இருந்தார். அது மதம் கொள்ளவிருக்கிறது என்றால் அவரை இறங்கச் சொல்வதே சரியானது. மதங்கொண்ட யானை அசைவிழந்து உடல் சிலிர்த்து நிற்பதுண்டு. குளிர்ந்ததுபோல அது நின்றிருக்கும். செவிகள் அடிக்கடி நிலைக்கும். ஏதோ மணத்திற்கென துதிமூக்கு நீட்டும். வால்சுழித்து மத்தகம் தாழ்த்தி நிற்கும்.

எங்கோ ஒரு கணத்தில் அதற்குள் குடியிருக்கும் இருளுலக தேவர்கள் ஆணையிட கற்றும் பழகியும் அது அறிந்த கட்டுகள் அனைத்தும் அறுபடும். செவிகள் அலைய கொம்புகுலைத்து துதிக்கை சுழற்றி பிளிறி அது எழும். அப்போது மானுடர் குரல் அதற்கு கேட்காது. மானுடர் கற்றுவித்த அனைத்தும் அதிரும் பரப்பிலிருந்து தூசி என எழுந்தகலும். அதன் உள்ளிருளில் நெடுங்காலமாக குருதி காத்துக் கிடக்கும் இருண்ட தெய்வங்கள் வேண்டிய உயிரைக் கொண்ட பின்னே அது அடங்கும். சங்கிலிகளால் அதைத் தளைத்து அசையாமல் நிறுத்தி சிவமூலிப் புகையிட்டு மயக்கி மருந்துகள் அளிக்கவேண்டும். யானைப் பூசகர்களை அமர்த்தி ஏழுவகை சாந்தி பூசைகள் செய்து அதன் உள்ளெழுந்த தேவர்களை பீடத்தை விட்டு இறக்கவேண்டும்.

மறுபக்கம் சுற்றி வந்து அதன் செவ்விழிகளை பார்த்தான். வெண்ணிற இமைமுடிகள் மீன்முட்களைப்போல் வளைந்திருந்தன. இமைகள் மூடி திறக்க விழிகள் எதையும் பார்க்காதவை போல் இருந்தன. துதிக்கை காற்றில் எதையோ தேடித் தவிப்பது போல், முன்னால் இருந்து எதையோ பற்றி பிடுங்கி பின்னால் எடுப்பது போல் அசைந்து கொண்டிருந்தது. ஒரு கணம் அதன் பெரிய தந்தங்களைப் பார்க்க அர்ஜுனன் அஞ்சினான். அவன் பார்த்த எந்த பெருங்களிறுக்கும் அதற்கு நிகரான தந்தங்கள் இல்லை. யானைத் தந்தங்களுக்குரிய பழுப்பு நிறத்திற்கு மாறாக தூய வெண்பளிங்கு நிறம் கொண்டிருந்தன அவை.

அவ்வாறு அஞ்சியதற்கு நாணி முன்னால் சென்று அதன் தந்தங்களைப் பற்றி கையால் வருடி அதன் மழுங்கிய முனையை உள்ளங்கைக் குழியில் வைத்து அழுத்தினான். அவன் புரவி ஒருமுறை தும்மி தலைகுனிந்து பிடரி உலைத்தது. அது ஏன் அவ்வாறு செய்கிறது என்று அவன் எண்ணுவதற்குள் மேலைவானில் இடியோசை எழுந்தது. சுப்ரதீபத்தின் உடல் சிலிர்த்தது. செவிகள் அசைவிழக்க அது மத்தகத்தை மேலே தூக்கியது. மின்னல் அதிர்ந்து சூழ்ந்திருந்த சுவர்களனைத்தும் ஒளிப்பரப்பாக மாறி அணைந்ததுமே வானம் பிளப்பதுபோல பேரிடி ஒன்று எழுந்து பலநூறாக உடைந்து சரிவுகளில் உருண்டு சென்றது. அதைக் கேட்டதும் சுப்ரதீபம் வலதுமுன்காலை தூக்கி வைத்து நடக்கத்தொடங்கியது.

கூடியிருந்த பெருங்கூட்டத்தின் ஒற்றை வியப்பொலி எழுந்து வாயில்கள் வாய்திறந்து மாளிகைகள் பேசுவதுபோல ஒலித்தது. “யோகியே, விலகுங்கள்” என்று மறுபக்கம் இருந்து பாகன் சொன்னான். "அது ஓடவிருக்கிறது” என்று இன்னொருவன் சொன்னான். "சங்கிலிகள் இல்லை. தளைகள் இல்லை. அது கட்டற்றுப் போகுமென்றால் எவ்வகையிலும் தளைக்க முடியாது” என்று பிறிதொருவன் கூவினான். "மேலிருக்கும் இளவரசரை யானையின் செவி பற்றி சறுக்கி பின்னால் இறங்கி விலகச் சொல்லுங்கள்” என்று தலைமைப்பாகன் கைநீட்டி சொன்னான்.

அர்ஜுனன் அவனை கைமறித்து "அது அறியும்” என்றான். “அது யானையல்ல, மண்ணில் வந்தது எதன் பொருட்டென்று அறிந்த தேவன்.” இன்னொரு மின்னல் வெட்டி அணைய நீள்கோடுகளென விழுந்த மழைச்சரடுகளை கண்டான். சுப்ரதீபம் ஓடவில்லை. மீண்டும் அதே விரைவில் சீர்காலடிகளை எடுத்து வைத்து முன்னால் சென்றது. அது செல்லும் திசையில் மக்கள் ஊதப்படும் பொடி விலகுவது போல் சிதறி அலையென மாறி விலகினர். முன்னிருந்த வழியிலிருந்து விலகி இடப்பக்கமாக திரும்பி சிறிய பாதைக்குள் செல்லத் தொடங்கியது.

திகைப்புடன் “எங்கு செல்கிறது?” என்றான் அர்ஜுனன். "அறியேன்” என்றான் பாகன். "அது வழக்கமாக செல்லும் வழியா?” என்றான் . "இந்நகரில் அதற்கு கட்டுகளே இல்லை. பகலில் அரண்மனை வளாகத்திலிருக்கும். இரவில் விரும்பிய இடத்தில் எல்லாம் தனித்தலையும்” என்றார் தலைமைப்பாகன். "இங்கு அது அறியாத இடமேதும் இல்லை. எங்கு செல்கிறதென்று தெரிந்து உறுதிகொண்டே கால் எடுத்து வைக்கிறது.” மக்கள் திரள் வியப்புடன் பேச்சொலி முழங்கியபடி அவர்களுக்குப் பின்னால் முட்டிமோதி அலைகளாகித் தொடர்ந்து வந்தது. “அவர்களை ஒதுக்குங்கள்” என்றான் அர்ஜுனன். அவன் தலைமயிர் நுனிப்பிசிறுகளில் இருந்து நீர்மணிகள் உதிர்ந்து விழிமறைத்தன. காவலர்களின் தலைப்பாகைகளில் நீர்ப்பொடிகள் செறிந்திருந்தன. கட்டடங்களின் சுவர்களில் சாய்வாக ஈரம் நிறமாறுதலாகத் தெரிந்தது.

சுப்ரதீபத்தின் உடலில் வெண்முடிகளில் நீர்த்துளிகள் திரண்டு ஒளிகொண்டிருந்தன. அதன் காதசைவில் துளிகள் சிதறின. அதன் கால்பதிந்த மண்ணில் வட்டத்தடங்கள் விழுந்தன. "இத்திசையில் என்ன உள்ளது?” என்றான் அர்ஜுனன். “இங்கு நீர் நிலை ஏதும் உண்டா?” தலைமைப்பாகன் “இல்லை யோகியே, இது சிவாலயங்கள் இருக்கும் தென்மேற்கு” என்றான். "இங்கு யார் இருக்கிறார்கள்? இதை அறிந்த எவரேனும் உள்ளனரா?” என்றான். "அறியேன் யோகியே” என்றான் பாகன்.

"என்ன நிகழ்கிறது? எங்கு செல்கிறது?” என்று கேட்டபடி அர்ஜுனன் அதற்குப் பின்னால் சென்றான். கூட்டம் விலகி வழிவிட தென்புலத்துக்குச் செல்லும் பாதை சரிந்து வளைந்து இறங்கி சென்றது. அதன் இரு மருங்கும் இருந்த கட்டடங்களின் உப்பரிகைகளிலும் சாளரங்களிலும் இருந்த மக்கள் “மதம் கொண்டு ஓடுகிறது! வெண்களிறு மதம் கொண்டு செல்கிறது!” என்று கூவினர். யானை அணுகியதும் அஞ்சியபடி சாலை ஓரங்களில் இருந்த இல்லங்களுக்குள் நுழைந்து மறைந்தனர். அலறிய குழந்தைகளுடன் பெண்கள் வாயில்களில் நின்று அலறினர். இல்லக்கூரைகள் மேலேறி சிறுவர்கள் கூச்சலிட்டனர்.

அர்ஜுனன் மெல்ல ஆறுதல் கொண்டான். களிறு சினம் கொண்டிருக்கவில்லை. மேலும் இரண்டு எட்டு விரைவில் எடுத்து வைத்திருந்தால் தன் முன் நின்றிருந்த மக்களின் மேல் கால்களை தூக்கி வைத்து மிதித்துச் சென்றிருக்க முடியும். ஒருவரைக்கூட மிதிக்கக் கூடாதென்றே அது சீரான விரைவில் செல்வதாக தோன்றியது. நாலைந்து முறை பிதுங்கித் ததும்பி அதன் முன் வந்து விழுந்தவர்களை மெல்ல துதிக்கையால் தட்டி அகற்றியது. ஒரு முதியவரை துதிக்கையால் குடுமியைப் பற்றி சுருட்டி அப்பால் இட்டது.

அவன் எண்ணத்தை புரிந்துகொண்டதுபோல தலைமைப்பாகன் "இவ்வுலகில் எவருக்கும் அது தீங்கிழைக்காது என்ற நிமித்திகர் சொல் உள்ளது யோகியே. சுப்ரதீபத்தை நான் அறிவேன்” என்றான். "அப்படியெனில் சற்று முன் ஏன் அஞ்சினீர்?” என்றான் அர்ஜுனன். தலைமைப்பாகன் "அது யானையை நான் அறிவேன் என்பதனால்” என்றான். "சொல்கடந்த நிலையின்மை கொண்டது யானை. தெய்வங்களை புரிந்து கொள்வதும் யானையை புரிந்து கொள்வதும் ஒன்றே.” இன்னொரு பாகன் “இது தெய்வங்களின் தருணம் யோகியே” என்றான்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 27

சீரான காலடிகளுடன் தென்மேற்குத் திசை நோக்கி சுப்ரதீபம் சென்று கொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் அது வந்த வழி மக்கள்கூட்டத்தால் மூடப்பட்டது. அவர்களின் பின்னால் உள்ளக்கிளர்ச்சி கொண்ட மக்கள் ஓசையிட்டபடி தொடர்ந்து வருவதைக் கண்ட அர்ஜுனன் “எவரும் தொடரக்கூடாது. நின்ற இடத்திலேயே அனைவரும் நிற்க வேண்டும்” என்று ஆணையிட்டான். படைத்தலைவன் “ஆணை” என்றபின் தன் கைகளை அலைத்து வீசி “எவரும் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள்! ஆணை மீறி தொடர்பவர்களை வீழ்த்துங்கள்!” என்றான்.

வீரர்கள் வேல் முனைகளை ஒன்றுடன் ஒன்று பற்றி வேலி ஒன்றை அமைத்து கூட்டத்தை தொடராமல் தடுத்தனர். அது மக்களை மேலும் அகவிரைவு கொள்ளச் செய்தது. குரல்கள் மேலும் வலுத்தன. ஒவ்வொரு முகமும் உணர்ச்சிகளால் நெளிந்துகொண்டிருந்தது. “மதம்கொண்டுவிட்டது” என்றது ஒருகுரல். “அவரால் இறங்கமுடியவில்லை” என்றது பிறிதொன்று. “அவர் அதை செலுத்துகிறார்… கடற்கரைக்குச் செல்கிறார்” என்றது அப்பால் ஒன்று. “அவர் சிவாலயங்களுக்கு செல்கிறார். அவர் அருகநெறியினர் அல்ல. ரைவதமலையில் அவர் சிவயோகம் செய்தார்.”

அக்கணமே அந்த ஒற்றைக்கருத்து ஒரு பொதுக்கருத்தாக மாறியது. “அவருடன் செல்பவன் சிவயோகி.” “அவர் இடதுமரபைச் சேர்ந்தவர்.” “பிணம் மீது அமர்ந்து ஊழ்கம் செய்பவர்.” “அங்கே மானுடப்பலி கொடுக்கப்போகிறார்கள். அவர் அத்திசைக்கே யானையை செலுத்துகிறார்.” “பலியான மானுடர்களின் குருதியை அவர் தலைவழியாக ஊற்றி நீராட்டுவர்.” “அவர் மானுட ஊன் ஒரு துண்டு உண்பார். அது அவரைச் சூழ்ந்துள்ள பாதாளதெய்வங்களுக்கு உகந்தது.” “நிகரற்ற வல்லமை கொண்டபின் இளைய யாதவரைக் கொன்று துவாரகையை வெல்வார்.” “அவரை வெல்ல எவராலும் இயலாது. அவர் மண்ணிற்கு வந்த இருளரக்கர்.”

கூட்டத்தின் இடைவெளி வழியாக பிதுங்கி வந்த இரு புரவிகளில் முன்னால் வந்த புரவியில் அமர்ந்திருந்த கூர்மர் அர்ஜுனனை அணுகி “என்ன நிகழ்கிறது இங்கு?” என்றார், “அணி ஊர்வலத்திற்கான அரச வீதிக்குச் செல்லாமல் இந்த வீதியை தேர்ந்து செல்கிறது சுப்ரதீபம்” என்றான். திகைப்புடன் “இங்கு எதை நோக்கி செல்கிறது?” என்றார் கூர்மர். அர்ஜுனன் எரிச்சலுடன் “அதை உம்மிடம் கேட்கவே வரச்சொன்னேன்” என்றான். “நான் அறியேன் யோகியே. இவ்வழியில் இது வந்தது இல்லை என்றே எண்ணுகிறேன்” என்றார் கூர்மர்.

துணைப்பாகன் “சிவபூசைநாளில் வருவதுண்டு. இரவில் அது எங்கு செல்கிறது என்று எவரும் பார்ப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் அதனுடன் பாகர்கள் எவரும் இருப்பதில்லை” என்றான். “நீர்நிலைக்கு செல்கிறது” என்றார் கூர்மர். “இவ்வகையில் நீர்நிலைகளேதும் இல்லை. தென்கிழக்கு திசையில் துறைமுகம் நோக்கி இறங்கும் பாதைகள்தான் உள்ளன” என்று காவலர்தலைவன் சொன்னான். “அதை தொடர்வதன்றி வேறு வழியில்லை. எப்போதுமே அதை ஆணைகளிட்டு நடத்தியதில்லை” என்றார் கூர்மர்.

யானை சற்றே விரைவு குறைந்து எதையோ எண்ணிக்கொள்வது போல் காலெடுத்து தயங்கியது. பின்பு இடப்பக்கமாக திரும்பி அச்சாலையிலிருந்து பிரிந்து சென்ற கிளைப்பாதை ஒன்றுக்குள் நுழைந்தது. “எங்கு செல்கிறது?” என்றான் அர்ஜுனன். “அறியேன்” என்றார் கூர்மர். “நான் அனைவரிலும் திகைத்திருக்கிறேன்.” அர்ஜுனன் “இருவர் முன்னால் செல்லட்டும். அங்கு என்ன உள்ளது என்று பாருங்கள். அங்கு வாயில்கள் உள்ளது என்றால் அதை மூடி யானையை நிறுத்தமுடியுமா என்று கருதுங்கள்” என்றான். ஐந்து வீரர்கள் யானையின் முன்னால் பாய்ந்து சென்றனர்.

உள்ளே சென்று மீண்ட படைத்தலைவன் “அங்கு எவரும் இல்லை யோகியே. இது இணைச் செண்டுவெளிக்குள் செல்லும் குறும்பாதை” என்றான். அர்ஜுனன் “செண்டுவெளியா?” என்றதுமே திரும்பி “இரண்டாம் செண்டுவெளியா?” என்றான். “ஆம்” என்றான் காவலன். அர்ஜுனன் “அங்குதானே ஆட்டுப்பட்டிகள் உள்ளன?” என்றான். “ஆம் யோகியே, ஆட்டுப்பட்டிக்கு வருவதற்கான மையப்பாதை மறுபக்கம் உள்ளது. இது துணைப் பாதை. ஆடுகளை உள்ளே கொண்டு செல்வதற்கு இதையும் வெளியே கொண்டு செல்வதற்கு அதையும் பயன்படுத்துகிறோம்” என்றான் ஒரு காவலன்.

அர்ஜுனன் “அங்கு இப்போதும் ஆடுகள் உள்ளனவா?” என்றான். “ஆம். ஐந்துநாட்களாக அங்குதான் ஆடுகளை கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இன்று காலையிலேயே அடுமடை பணிகள் தொடங்கிவிட்டன” என்றான் படைத்தலைவன். சிறிய பாதைக்குள் சுப்ரதீபம் நுழைந்தபோது இருபுறமும் இடைவெளி மிகக் குறுகலாயிற்று. “எவரும் வரவேண்டியதில்லை. அனைவரையும் நிற்கச் சொல்லுங்கள்” என்றபடியே அர்ஜுனன் யானையின் விலாப்பக்கமாக புரவியை செலுத்தினான்.

யானை அப்பாதைக்குள் நுழைந்து சென்று வளைந்து இணைச் செண்டுவெளிக்குள் செல்லும் செந்நிறக் கல்லாலான அலங்கார வளைவை அடைந்தது. அர்ஜுனன் அண்ணாந்து மேலிருந்த அரிஷ்டநேமியை பார்த்தான். அவரது தலைக்கு மேல் வளைந்த அந்த அணிவளைவு ஆலயத்தில் அமர்ந்த அருகரின் மேல் அமைந்த பிரபாவலயம் போல் தெரிந்தது. செண்டுவெளிக்குள் ஆடுகளின் கலைந்த ஓசை நிறைந்திருப்பது அப்போதுதான் கேட்டது. அதுவரைக்கும் மக்களின் ஓசை காதுகளை நிறைத்திருந்ததனால் அதன் தொடர்ச்சியாகவே ஆடுகளின் ஓசையை உள்ளம் எண்ணிக் கொண்டிருந்தது. அது ஆடுகளின் ஓசை என்று அறிந்ததுமே அவ்வோசையில் இருந்த பதற்றத்தையும் அச்சத்தையும் அர்ஜுனன் அறிந்தான்.

ஆடுகள் அனைத்தும் வால்கள் விடைத்து அசைய கழுத்துகளை நீட்டி நாக்கு வெளியே தெரிய உரத்த குரலில் கூவிக்கொண்டிருந்தன. கிளர்ச்சியுண்டவை போல ஒன்றோடொன்று முட்டிச் சுழன்று விழிதொடும் தொலைவு வரை வெண்மையும் கருமையும் பழுத்திலை நிறமுமாக ததும்பிக் கொண்டிருந்தன. யானை நின்றது. அர்ஜுனன் வளைவைக் கடந்து யானைக்கு முன்னால் சென்று அங்கிருந்த ஆட்டுப்பட்டிக்கு அப்பால் இருந்தவர்களைப் பார்த்து கையசைத்தான். அவர்கள் யானை உள்ளே வந்ததைக் கண்டதும் திகைத்து எழுந்து நின்றனர். சிலர் விலகி அப்பால் ஓடி மண்டபங்களின்மேல் ஏறிக்கொண்டனர்.

யானை ஆட்டுப்பட்டியாக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் தடுப்பை வலக்காலால் உடைத்து மிதித்து உள்ளே சென்றது. யானையைக் கண்டதும் ஆடுகள் முட்டிமோதி கரைந்தபடி விலகி அதற்கு வழிவிட்டன. யானை செல்வதற்கு எத்தனை குறுகிய வழி போதும் என்பதை அர்ஜுனன் கண்டான். ஒரு புரவி செல்லும் அளவுக்கே வெளி விழுந்திருந்தது. யானைக்குப் பின்னால் அவன் சென்றபோது அவன் புரவியின் கால்களில் கிளர்ந்தெழுந்த ஆடுகள் முட்டின. ஒன்றை ஒன்று உந்தியபடி வந்து திரும்பி நின்று நீள்வட்ட கருவிழிகள் கொண்ட சிப்பிக்கண்களால் நோக்கி கூவின.

அவை எதையோ சொல்வது போலிருந்தது. மன்றாடலாக. அழுகையாக. மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லி கூவின. தங்கள் கூற்று புரிந்துகொள்ளப்படாமையைக் கண்டு மேலும் பதைத்து ஓசையிட்டன. தன் காலடியில் வந்து முட்டி கால்மடித்து விழுந்த சில ஆடுகளை துதிக்கையால் தட்டி விலக்கியபடி சுப்ரதீபம் சென்று பட்டியின் வலப்பக்க ஓரமாக நின்றது. அர்ஜுனன் “யாரங்கே? இங்கு பொறுப்பாளன் யார்?” என்றபடி புரவியிலிருந்து இறங்கி ஆடுகளை விலக்கி முன்னால் சென்றான். அவன் கால்கள் சேற்றில் புதைந்தன. குனிந்து நோக்கி திகைத்து கடிவாளத்தை பற்றிக் கொண்டான்.

அவன் காலடியில் மண் குருதி கலந்து குளம்புகளால் மிதிபட்டு சேறாக இருந்தது. நிணப்பரப்பு போல கொழுங்குருதிச்சேறு. பெரும் போர் முடிந்த களம் போல் இருந்தது செண்டுவெளி. பல்லாயிரம் ஆடுகள் அதற்கு முன்னரே கழுத்தறுத்து கொல்லப்பட்டுவிட்டிருந்தன. எதிரில் மூன்று மூங்கில்களை சேர்த்துக் கட்டி குறுக்காக மூங்கில் வைத்து அமைக்கப்பட்ட முக்காலிகள் நீண்ட நிரை போல நின்றிருக்க அவற்றில் கழுத்தறுபட்ட ஆடுகள் தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தன.

நூற்றுக்கணக்கான ஏவலர்கள் அவற்றின் வயிற்றைக் கிழித்து குடற்சுருளை வெளியே எடுத்து மண்ணில் இட்டனர். வெட்டப்பட்ட தலைகள் தேங்காய்க்குவியல்கள் போல அருகே போடப்பட்டிருந்தன. மரத்தாலான கைவண்டிகளில் செந்நிற ஊன் குவியல்களாக அடுக்கப்பட்டு வெளியே கொண்டுசெல்லப்பட்டது. அதனடியில் செங்குருதி குழாய்கள் போல ஒழுகியது. வெட்டுண்ட கழுத்துகளிலிருந்தும் தலைக்குவியல்களிலிருந்தும் ஊறிவழிந்த குருதி மண்ணில் பரவி மிதிபட்டு குழம்பியது. கழுத்துவெட்டுகளில் உறைந்து செவ்விழுதுகளாக தொங்கியது. உரித்து எடுக்கப்பட்ட தோல்கள் கொல்லப்பட்ட முயல் கூட்டங்கள் போல் ஆங்காங்கே கிடந்தன. அவற்றை ஈட்டியால் குத்தி எடுத்து வீசி ஓர் ஓரமாக குவியல்களாக குவித்துக் கொண்டிருந்தார்கள் வீரர்கள்.

மறுபக்கம் ஆடுகளை பற்றி இழுத்து கொண்டுவந்து குறுங்கொம்பைப் பிடித்து வளைத்து கழுத்தை சற்றே திருப்பி குரல்வளைக்குழாயை புடைக்கச்செய்து கூர்கத்தியால் வெட்டினர். கழுத்து பற்றப்பட்டதும் குழந்தைகள் போல அவர்களின் கால்களை உரசியபடி மெல்லிய குரலில் மன்றாடியபடி வந்த ஆடுகள் கொம்பு சுழற்றப்பட்டதும் நான்கு கால்களையும் விரித்து வால் அதிர நின்றன. கழுத்துக்குழாய் வெட்டப்பட்டதும் கைகள் தளர என்ன நிகழ்கிறதென்றறியாமல் திமிறி பின்னால் வந்தன. மூச்சும் குருதியும் உலைத்துருத்தி ஆவியென பீறிட கழுத்து ஒடிந்ததுபோல தொங்க நின்று தொடையதிர்ந்து பக்கவாட்டில் சரிந்து விழுந்தன. கால்கள் இரட்டைக் கூர்க்குளம்புகளுடன் எழுந்து காற்றில் உதைத்துக்கொண்டன.

அவற்றின் வாலையும் பின்னங்கால்களையும் பற்றித்தூக்கி இரு பின்னங்குளம்புகளில் கயிற்றை சுருக்கிட்டு மூங்கிலில் மாட்டினர். தொங்கி அதிர்ந்த உடல்களிலிருந்து மூச்சும் குருதியும் தெறித்தன. நீண்ட நாக்குடன் கழுத்தறுபட்ட தலையில் வாய் திறந்து மூடியது. தலையை வெட்டி தனியாக எடுத்து குவியலை நோக்கி வீசினர். குருதியை மிதித்துத் துவைத்தபடி அடுத்த ஆடு வந்து நின்றது. ஊன்கொலைஞர்களின் கைகளும் கால்களும் ஆடைகளும் குருதிநனைந்து செந்நிறத்தில் ஊறிச்சொட்டின. தரையில் விழுந்து குளம்புகளை உதைத்து உடல் விதிர்த்து காற்றில் நடுங்கி அணையும் சுடர் போல விரைத்து அடங்கின ஆடுகள். அடுக்கடுக்காக நூற்றுக்கணக்கான உடல்கள் அசைவழிந்துகொண்டிருந்தன.

செங்குருதியில் ஊறிய ஊன்கொலைஞர் தழல்களென இருக்க அதில் வந்து விழுந்து கருகி மறைந்தன ஆடுகள். அங்கு நிகழ்ந்த வேள்விக்கு வேதமாக பல்லாயிரம் ஆடுகளின் மன்றாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. யானையையும் வீரர்களையும் கண்டதும் கத்திகளுடன் எழுந்து திகைத்த ஊன்கொலைஞர்களால் விடப்பட்ட ஆடுகள் திகைத்து பின்னர் கால்களை உதைத்தபடி அவர்கள் உடல்மீதே மெல்ல உரசிக்கொண்டு குரலெழுப்பின. பாதி வெட்டப்பட்ட கழுத்துடன் ஓர் ஆடு திமிறி கைதப்பி துள்ளிப்பாய்ந்து தன் கூட்டத்துடன் இணைந்து உள்ளே சென்றது. அங்கே அது நின்று தள்ளாடி மடிந்துவிழுந்தது.

அர்ஜுனன் தன் இடது தொடை நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். திரும்பி பாகனிடம் “சுப்ரதீபத்தை பின்னால் கொண்டு செல்லுங்கள். இங்கு ஏன் வந்தது அது?” என்றான். கூர்மர் “நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை யோகியே. இக்கணம் வரை அது நம்மை தாக்கவில்லை… இந்த இடத்திற்குப்பின் அது அவ்வாறிருக்குமா என்றறியேன்” என்றார். அர்ஜுனன் சுப்ரதீபத்தை நோக்கினான். அதன் துதிக்கையின் அசைவு முற்றிலும் நின்றிருந்தது. செவிகள் மட்டும் சீராக அசைந்து கொண்டிருந்தன. நான்கு கால்களையும் தரையில் ஊன்றி வெண்பாறையென காலமழிந்து நின்றது.

அதன் பின்னரே அவன் அதன் மேல் அமர்ந்திருந்தவரை சிந்தை கொண்டான். அண்ணாந்து நோக்கியபோது அவருடைய கால்கள் அதிர்ந்துகொண்டிருப்பதை கண்டான். அவரை இறக்கவேண்டுமென்று நினைத்தான். ஏதாவது சொல்லவேண்டுமென்று உளம் எழுந்தான். ஆனால் வெறுமனே நோக்கி நின்றான். காலம் அங்கேயே நின்றுவிட்டது. மேற்குவானம் மெல்ல உறுமியது. சூழ்ந்திருந்த அத்தனை வெண்சுதை மாளிகைகளும் வெள்ளை யானைகளாக உறுமின. மின்னலில் வெண்பரப்புகள் பளபளத்து அணைந்தன. மீண்டுமொரு மின்னலில் நூற்றுக்கணக்கான ஆட்டுவிழிகள் உப்புப்பரல்கள் போல மின்னி மறைந்தன. பேரோசையுடன் இடி முழங்கியது. மின்னலொன்று முற்றிலும் குருடாக்கி அணைந்து வண்ணச்சுழல்களை விழிகளுக்குள் கொப்பளிக்கச் செய்தது.

விழி தெளிந்தபோது அரிஷ்டநேமி எழுந்து யானை மத்தகத்தின் மேல் நிற்பதை கண்டான். “மூத்தவரே” என்றான். அக்குரலை அவர் கேட்டது போல் தெரியவில்லை. யானையின் மத்தகத்தின் முழைகளின் மேல் வலக்காலை வைத்து பின்கழுத்து மேல் இடக்காலை வைத்து கைகளை தொங்கவிட்டபடி அம்மாபெரும் கொலைக்களத்தை நோக்கியபடி அசையாது நின்றிருந்தார். உடைந்த குரலில் “மூத்தவரே” என்று அர்ஜுனன் மீண்டும் அழைத்தான். ஆனால் அவர் அங்கில்லை என்றே அகப்புலன் சொல்லிக் கொண்டிருந்தது. அவர் உடலில் ஓர் அசைவு எழக்கண்டு அவன் உள்ளம் திடுக்கிட்டது.

அரிஷ்டநேமி வலக்கையால் தன் கழுத்தில் இருந்த மணியாரத்தைப் பற்றி அறுத்து வீசினார். அதன் மணிகள் சரடற்று உதிர்ந்து செங்குருதிப்பரப்பில் பதிந்தன. சரப்பொளியை அறுத்து கீழே போட்டார். பாம்புச்சட்டை போல அது யானை முன் வந்து விழுந்தது. தலையில் அணிந்திருந்த மணிமுடியையும் தோள்வளைகளையும் கங்கணங்களையும் கணையாழிகளையும் என அனைத்து அணிகளையும் உடலில் இருந்து அறுத்தும் உடைத்தும் எடுத்து வீசிக் கொண்டிருந்தார். கீழே ஆடுகளின் குருதியும் நிணமும் படிந்த சிவந்த சேற்றில் அவை மெல்லிய ஓசையுடன் வந்து விழுந்தன. காறித்துப்பப்பட்ட வெண்சளி போல. பறவை எச்சம் போல. அழுகியுதிரும் கனிகள் போல. பொன்னகைகள் மலம் போல விழுந்து மஞ்சள் மின்னின.

பின்பு அவருடைய இடையாடை வந்து விழுந்தது. அர்ஜுனன் நிமிர்ந்து நோக்கியபோது தன் அடியில் அணிந்திருந்த தோலாடையையும் அவர் இழுத்து கழற்றி வீசுவதை கண்டான். இடைக் கச்சையையும் சல்லடத்தையும் ஒரே விசையில் இழுத்துப் பிடுங்கி அகற்றினார். குனிந்து கால்களில் அணிந்திருந்த கழல்களை உடைத்து எறிந்தபின் நிமிர்ந்தபோது அவர் வெற்றுடல் கொண்டவராக இருந்தார். உடல் நேராக்கி இரு கைகளையும் வான் நோக்கி விரித்தார். குன்றின்மேல் எழுந்து வான்மின்னலில் பற்றி சடசடத்து பொசுங்கி தழலாகி நின்றெரியும் பச்சை மரம் போல தெரிந்தார்.

அண்ணாந்து நோக்கியபோது அவர் தலையைச்சுற்றி வானம் ஒளிகொண்டிருந்தது. கிழக்கே எழுந்த காலைச்சூரியனின் கதிர்களில் மழைமுகில்கள் பற்றிக்கொண்டன. மழைச்சரடுகள் வெள்ளிநூல்களாயின. நீர்த்துளிகளில் கரைந்து மண்ணிலிறங்கிய ஒளியில் அனைத்தும் பொன்னாயின. சுவர்கள் உருகி வழிந்தன. உலையிலுருகும் பொன்னாலான காற்று. கண்களுக்குள் பொன்னுருகி நிறைந்துவிட்டது போல. ஒளிபெருகி அவன் கண்கள் நீர் நிறைந்து வழிந்தன. இமைமயிர்களின் துளிப்பிசிர்களில் வண்ணங்கள் எழுந்தன. அவ்வண்ணங்கள் விரிந்ததுபோல மேற்கில் பெரியதோர் வானவில் எழுந்து வருவதை கண்டான்.

முன்னரும் வானவிற்களை கண்டதுண்டு. ஆனால் முற்றிலும் வண்ணங்கள் தெளிந்த சற்றும் கலையாத முழுவானவில்லை அன்றுதான் கண்டான். தலையை அசைத்தபோது அது வானை வளைத்தெழும் ஏழுவண்ன நேமி என்றாயிற்று. அப்போது அவரிலிருந்து வேல்பாய்ந்த களிற்றின் பிளிறல் போல் ஓர் ஒலியெழுவதை கேட்டான். முதுகுச்சங்கிலியை உலுக்கி சொடுக்கிடச்செய்யும் ஓசை. முகில்கள் வெண்சுடர்களென ஆன வானில் நூற்றுக்கணக்கான தெய்வங்கள் அணிவகுத்திருப்பது போலவும் அவற்றை நோக்கி அறைகூவலென, மன்றாட்டென, ஆங்கார வினாவென, தீச்சொல் என அக்குரல் எழுவதாகவும் அவனுக்கு தோன்றியது.

அரிஷ்டநேமி தன் இரு பெருங்கரங்களையும் அறைவது போல் தலை மேல் வைத்து முடிச்சுருள்களைச் சுழற்றிப் பிடித்து நாற்றுகளை பிடுங்குவதுபோல இழுத்து எடுத்து வீசினார். காக்கை இறகு போல் சுழன்று பறந்து தன் மேல் வந்து விழுந்த கரிய குழல்கற்றையை அவன் நோக்கினான். குருதியுடன் பிழுதெடுக்கப்பட்ட முடிக்கற்றைகள் மேலும் வந்து அதன் மேல் விழுந்தன. அவன் அண்ணாந்து பார்த்தபோது தன் தலை மயிரை விரல்களால் சுழற்றி அள்ளிப்பற்றி தோலுடன் குருதியுடன் பிடுங்கி வீசிக்கொண்டிருக்கும் அவரை கண்டான். இறப்பின் கணத்தில் என அவன் உடல் குளிர்ந்து விரைத்தது.

தலைமுடி அனைத்தையும் பிடுங்கியபின் இரு கைகளாலும் குருதியுடன் தன் தலையை மாறி மாறி அறைந்து கொண்டார். பின்பு தன் ஆண்குறிக்கு மேல் கையை வைத்து அங்கிருந்த முடியைப் பற்றி இழுத்து வீசினார். அக்குள் முடியையும் மார்பு முடியையும் பிடுங்கினார். ஒவ்வொரு முறையும் தன் உடலை அவர் அள்ளிப் பற்றும்போதும் சினம்கொண்ட மற்போர் வீரர்களின் அறைகள் விழும் ஒலி போல் கேட்டது. அவரது கழுத்தில் தசைநார்கள் புடைத்து அசைந்தன. தோளிலும் கைகளிலும் நரம்புகள் ஒட்டுக்கொடிகளென புடைத்திருந்தன. அவரிடமிருந்து சிறு முனகல்கூட வெளிவரவில்லை. நீள்தொலைவு வரை அந்த நிகழ்வை நோக்கி நின்றவர்கள் அறியாது கைகளை கூப்பினர். நெஞ்சோடு கைசேர்த்து உடல் விதிர்த்தனர். பற்கள் கூசி கண்ணீர் பெருக உடல்குறுக்கி குனிந்தனர்.

உடலெங்கும் குருதி வழிய அங்கு கிடந்த தோலுரிக்கப்பட்ட வெள்ளாடுகளில் ஒன்று உயிர்கொண்டு எழுவதுபோல நின்றார். அவர் தலையிலிருந்து வழிந்த குருதி சௌரகுல அரசமுறைப்படி நீட்டப்பட்ட காதுமடல்களில் துளித்து நின்றாடி தோள்களில் சொட்டி மார்பிலும் கைகளிலுமாக ஓடையாகியது. கைவிரல்களில் சேர்ந்து யானையின் விலாமேல் சொட்டியது. இடையினூடாக தொடைக்கு வந்து கால்களின் வழியாக யானைமேல் வழிந்தது. வெண்களிற்றின் மத்தகத்தின் மீது செந்நிறக் கோடாக மாறி ஓடியிறங்கியது. அதன் வெண் முடிகளில் சிறிய செம்முத்துகளாக திரண்டு நின்றது.

சுப்ரதீபம் தன் முன் வலதுகாலை எடுத்து அவருக்கு படி காட்டியது. அதை மிதித்து இறங்கி மண்ணுக்கு வந்தார். அவர் வலக்கால் தரையைத் தொட்டதும் மின்னல் எழுந்து அக்கணம் விழியிலிருந்து மறைந்தது. அவர் இருகாலூன்றி நின்ற காட்சி விழிகளில் வண்ணக்கொப்புளங்களுடன் தெளிந்ததும் அதை அதிரச்செய்தபடி இடியோசை எழுந்தது. அவர் குனிந்து தரையை தொட்டார். குருதியில் ஊறிய செஞ்சேற்று மண்ணை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து மும்முறை “ஆம்! ஆம்! ஆம்!” என்றார். அவர் அருகே ஆட்டுத்தலைக்குவியலில் அவற்றின் சிப்பிவிழிகள் அவரை நோக்கி விழித்திருந்தன.

அவர் திரும்புகையில் அந்தக் குருதிபடிந்த கொலைக்களத்தின் மறுபுறமிருந்து இளைஞன் ஒருவன் இடையில் வெண்ணிறச் சிற்றாடை மட்டும் அணிந்து இருகைகளிலும் ஒரு பெரிய வலம்புரிச் சங்கேந்தி அவரை நோக்கி வருவதை அர்ஜுனன் கண்டான். வெண்ணிறமான சங்கை முதலில் அவன் தாமரை என்றே எண்ணினான். கூட்டத்திலிருந்து அவன் கிளம்பியதை தான் பார்க்கவில்லையே என்று வியந்து மின்னல் வெட்டிய விழியிலாக்கணத்தில் அவன் இறங்கியிருக்கலாம் என வகுத்துக்கொண்டான். அவ்விளைஞன் அரிஷ்டநேமியின் அருகே வந்து அந்த வெண்சங்கை அவரிடம் நீட்டினான். அவர் திகைத்து அவனை நோக்கி உடனே அடையாளம் கண்டுகொண்டு இரு கைகளையும் நீட்டி அதை வாங்கிக் கொண்டார். அதை திருப்பி நோக்கியபின் தன் வாயில் வைத்து ஓங்காரப் பேரொலி எழுப்பினார்.

கூட்டத்திலிருந்து கலைந்த ஒலிகள் எழுந்தன. அவர் திரும்பிப் பார்த்தபோது சுப்ரதீபம் மீண்டும் தன் காலை படியென வளைத்தது. அவர் அதன் காதுமடலைப் பற்றி கால்வளைவில் மிதித்து ஏறி கால்சுழற்றி அதன் மத்தகத்தின் மேல் அமர்ந்தார். திரும்பி தன் வலக்கையால் அறைந்து அங்கிருந்த பொன்னிற பீடத்தை தட்டி கீழே உருட்டினார். குருதிக்கோடுகள் வழிந்த மத்தகத்துடன் திரும்பிய சுப்ரதீபம் அக்கொலைக்களத்தை கடந்து சென்றது. யானையைக் கண்டதும் பதறி விலகி ஓடிய ஊன்கொலைஞர் அது அவர்களை நோக்கி வருவதாக அஞ்சி கூச்சலிட்டனர். ஆனால் கொலைக்களத்தைக் கடந்து அங்கு கூடி நின்றிருந்த ஏவலர்களையும் பணியாட்களையும் விலக்கியபடி மறுபக்கத்து வாயிலை அடைந்து வெளியேறியது.

எண்ணங்கள் நிலைத்திருந்தமையால் அதை பின்தொடர ஒண்ணாது அர்ஜுனன் அசையாது நின்றான். கனவில் என உள்ளம் இதோ விழித்துக் கொள்கிறேன் இதோ விழித்துக் கொள்கிறேன் என பதைத்தபோது உடல் குளிர்ந்து அசைவற்றிருந்தது. பின்பு திகைத்தெழுந்து பாய்ந்து புரவிமேல் ஏறினான். குதி முள்ளால் அதை தூண்டியபோது புரவியும் அவ்வாறே சிலைத்திருந்ததை உணர்ந்தான். மும்முறை அதை குத்தி அதட்டியபோது விழித்தெழுந்து பிடரியின் நீர்மணிகளை சிலிர்த்து உதறியபின் மெல்ல கனைத்து முன்னால் சென்றது.

அப்போதுதான் அச்சங்கை கொண்டுவந்த இளைஞன் எங்கே என்று அர்ஜுனன் எண்ணினான். விழிகளால் அக்கூட்டத்தை துழாவியபோது ஓடி சாவடிகளின் விளிம்புகளில் ஏறி நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்த பணியாட்களில் எவரிலும் அவனைக் காணவில்லை என்று அறிந்தான். திரும்பிப்பார்த்தபோது செண்டுவெளியின் சாவடிகளுக்கு நடுவே இருந்த பாதை வழியாக குறுவால் சுழல பொதிக்கால்களின் அடிவட்டங்கள் தெரிந்து தெரிந்து மறைய மெல்லலையில் கடல் நீரில் ஊசலாடும் கலம் போல சுப்ரதீபம் வாயிலுக்கு அப்பால் சென்று மறைந்ததை கண்டான்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 28

பெருஞ்சாலையை அடைந்து இருபுறமும் கூடிநின்ற மக்களின் வாழ்த்தொலிகளும் மலர்சொரிதலும் சேர்ந்து பின்னிய வான் மூடிய பெருந்திரையை கிழித்து சுப்ரதீபம் சென்று கொண்டிருந்தது. செல்லச்செல்ல அதன் விரைவு கூடிக்கூடி வந்தது.  பெருங்காற்றிலாடும் அடிமரங்களை காண்பது போலிருந்தது அதன் கால்களின் அசைவு. துதிக்கை நிலத்தை தொட்டுத் தொட்டு பின் தள்ளுவதாக பட்டது.

எங்கோ எவரோ “விண்ணூர்ந்து ஏகும் அருகர்” என்று கூவினார். அவ்வொரு சொல் எழுவதற்கென்றே அங்கு கூடியிருந்த அனைவருடைய அகங்களும் காத்து நின்றிருந்தன என்று தோன்றியது. “விண்ணேகும் அருகர்! வெள்ளை யானை ஊர்ந்தேகும் அருகர்! வெண்முகில் ஏறிய அருகர்! அருகர் புகழ் வாழ்க! அருகர் வெல்க!” என்று அனைத்து புறங்களில் இருந்தும் வாழ்த்தொலிகள் எழுந்து சூழ்ந்தன.

யானையைச் சூழ்ந்து கொந்தளித்த மக்கள்திரள் எழுப்பிய ஒலியலைகள் நகர்மேல் புயல்படர்ந்ததைப்போல் உணரச்செய்தன. “வெள்ளையானை ஏறிய அருகர் வாழ்க! வெண்சங்குப் படிவர் வாழ்க! நேமிநாதர் வாழ்க!” என செவி கிழிக்கும் ஒலியுடன் கூவியபடி கைவீசி துள்ளிக்குதித்தனர். வாழ்த்துக்களை புதியதாக புனையும் சூதர்களை மக்கள் தலைக்குமேல் தூக்கினர். தோள்கள் மேல் அமர்ந்து எம்பி கைவீசி அவர்கள் கூவ அதைக்கேட்டு தாங்களும் முழங்கினர். நகரெங்கும் அணிசெய்யப்பட்டிருந்த மலர்மாலைகளையும் தோரணங்களையும் பிடுங்கி மலர்களாகப் பிய்த்து அள்ளி வீசினர். அந்த மலர்கள் அவர்கள் மேலேயே விழ ஒவ்வொரு தலையும் மலர்சூடியிருந்தது.

சுப்ரதீபத்தைத் தொடர்ந்து புரவியில் சென்ற அர்ஜுனன் தன்னைச்சூழ்ந்து முட்டிமோதிய மனிதர்களை விலக்கமுடியாமல் நின்றுவிட்டான். ஒவ்வொரு முகமும் களிவெறியின் உச்சத்தில் யட்சர்களின் பித்துசூடிய விழிகளுடன் வலிப்பு கொண்டிருந்தது. என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் ததும்பினர். ஒருவன் தன் நெஞ்சில் ஓங்கி ஓங்கி அறைந்தான். ஒருவன் அர்ஜுனனின் குதிரையின் புட்டத்தில் அறைய அது திகைத்து முன்னகர்ந்து இருவர் தோள்களில் முட்டிக்கொண்டு பக்கவாட்டில் திரும்பி வால்குலைத்தது.

சுப்ரதீபத்தின் விரைவு கூடிக்கூடி வந்ததை காணமுடிந்தது. யானையின் விரைவை அதன் கால்கள் உடலைத்தொடும் பொருத்தில் தசை எந்த அளவுக்கு இழுபடுகிறது என்பதைக்கொண்டே உணரமுடியும். விழிகளுக்கு அதன் ஓட்டமும் நடையாகவே தெரியும். அதன் பேருருவம் அதன் விரைவை மறைக்கும். புரவியின் முழுவிரைவில் சென்றே அதை தொடர்ந்து அணுகமுடியும் என்று தோன்றியது.

யானை விரைவு மானிடரின் விழிக்கணக்குகளைவிட பல மடங்கு கூடுதல் என்பதை பல களங்களில் அவன் கண்டிருந்தான். ஆயினும் சுப்ரதீபத்தின் விரைவு திகைப்புறச் செய்வதாக இருந்தது. அவ்விரைவை அறிந்து அது சென்ற தொலைவெங்கும் மக்கள் பெருங்கூச்சலுடன் இருபக்கமும் பிளந்து வழிவிட்டனர்.

யானை மீது வெற்றுடலுடன் கைகளை மடியில் கோத்து அமர்ந்திருந்த பேருருவரின் தோற்றம் வானத்தின் ஒளிப்பின்னணியில் நிழலுருவென தெரிந்துகொண்டிருந்தது. அவர்மேல் மென்மழை பட்டுச்சாமரத்தால் வருடிக்கொண்டிருந்தது. அண்ணாந்து நோக்கியபோது கிழக்கே சூரியன் வெண்படிகம்போல மங்கலாக ஒளிவிட இளமழை அதை சிலந்திவலை போல சூழ்ந்திருந்தது. சாலையின் இரு மருங்கும் நின்ற மரங்களின் இலைப்பரப்புகள் ஒளிகொண்டு பளபளத்து அசைந்து நுனி சொட்டின. மரத்தடிகள் பாதி நனைந்து கருமைகொண்டு குளிர்ந்து நின்றன.

சுவர்களின் சுதைப்பரப்புகள் நனைந்து அதன் மேல் ஒளி விழுந்து பட்டுச்சால்வை வளைவுகள் போல மின்னிய மாளிகைகளில் பெண்கள் இல்லங்களில் இருந்து மலர்க்குவைகளை தூக்கிக்கொண்டு வந்து அள்ளி அள்ளி வீசினர். சுப்ரதீபம் அதன் மேலமர்ந்த அரிஷ்டநேமியுடன் பொன்னிறமும் செந்நிறமும் வெண்ணிறமும் கொண்டு சுழன்று பெய்து கொண்டிருந்த மலர் மழையின் நடுவே அசைந்து சென்றது.

எதிரே துவாரகையின் பெரிய கோட்டைவாயில் கடல் எழுந்த நீர்ச்சுவர் போல தெரியத்தொடங்கியது. அதன் மேல்விளிம்பில் கலங்கள் என தெரிந்த காவலர்மாடங்களில் வீரர்கள் கிளைகளில் காய்கள் போல செறிந்து நின்றனர். கைவீசி அவர்களும் வாழ்த்து கூவினர்.

அர்ஜுனன் திரும்பி தன் அருகே வந்த படைத்தலைவரிடம் “அதைத் தொடர்ந்து செல்லுங்கள். அங்கு என்ன நிகழ்ந்தது என்று உடனடியாக என்னிடம் சொல்லுங்கள்” என்று ஆணையிட்டுவிட்டு புரவியைத் திருப்பி அரண்மனை நோக்கி சென்றான். கூர்மர் அவனை எதிர்கொள்ள “அது எங்கு செல்கிறது என்று மட்டும் நோக்குங்கள்…. நான் இளைய யாதவரிடம் இதை நேரில் சொல்லி மீள்கிறேன்” என்றான்.

கூர்மர் “யோகியே…” என்று ஏதோ சொல்லவந்தார்.  “பாலையில் அது நெடுந்தொலைவு செல்லமுடியாது. தோரண வாயில் மேல் நின்றிருந்தாலே அதை நெடுந்தொலைவு வரை பார்க்க முடியும்” என்றான். அர்ஜுனன் “இப்போது அரண்மனையில் இருப்பவர்கள் என்ன நிகழ்கிறதென்பதை அறிவதே முதன்மையானது. இனி மணவிழா நிகழாதென்பதை சொல்லியாகவேண்டும்” என்றபின் புரவியை முடுக்கினான்.

அவனுக்கு முன்னால் சென்ற புரவி வீரர்கள் கூர்வேல்களை கண்மூடித்தனமாகச் சுழற்றி “வழி விடுங்கள் வழிவிடுங்கள் வழிவிடுங்கள்” என்று கூவிக்கொண்டே சென்றார்கள். வேல்முனைகள் வளைந்து சுழன்று வெள்ளிக்கோடுகளாக மின்னின. களிவெறியில் தன்னை மறந்து ஆர்த்திருந்த கூட்டம் பிதுங்கி வழிவிட்டது. உடனே வந்து அழுந்திமூடிக்கொண்டது. சேற்றுப் பரப்பொன்றில் உடலைப் புதைத்து புதைத்து உள்ளே செல்வது போல் உணர்ந்தான். பின்னர் மேலே செல்லமுடியாது புரவி நின்றுவிட்டது. வழியொதுக்கியவர்கள் கூட்டத்தால் பிரித்து அடித்துச்செல்லபப்ட்டனர்.

“அரசாணை… வழி விடுங்கள்… வழிவிடுங்கள்” என்று அவன் கூவினான். அக்குரலை அவனாலேயே கேட்க முடியவில்லை. புயல்பரந்த முட்புதர்க்காட்டில் சிக்கிக்கொண்டது போல் உணர்ந்தான். எல்லாதிசையிலிருந்தும் முட்டித் தள்ளப்பட்டதனால் நின்ற இடத்திலேயே அசைந்துகொண்டிருந்தான். அவனைச்சுற்றி கைகள் வீசப்பட்டன. எத்தனை கைகள்! கைகள் காற்றுக்கும் வானுக்குமானவை. பறவைகளில் அவையே சிறகு. கைகள். வானில் அள்ள முயல்பவை. வெறுமை பற்றி ஏற முயல்பவை. அள்ளி வீசுபவை. பிடித்து இழுப்பவை.

கைகள் கொள்ளும் மெய்ப்பாடுகளை தனியாக நோக்க அவன் நெஞ்சு வியந்தது. முகங்களுக்கும் விழிகளுக்கும் நாவுக்கும் தொடர்பின்றி கைகள் பேசிக்கொண்டே இருக்கின்றன. உடல்வளைவை சொற்களாக்கிய நாகங்கள். கேளா ஒலியொன்றை எழுப்பும் நாக்குகள். செல்க என்கின்றன. நிற்க மன்றாடுகின்றன. வருக என்கின்றன. என்னையும் கொள்க என்கின்றன. செவியறிந்த பெருங்கூச்சலை மறந்து சித்தம் விழிதொட்ட அவ்விரைச்சலை அறிந்து செயல்மறந்தது.

“வழிவிடுங்கள் வழிவிடுங்கள்” என்று கூவிய அவன் அகம்படி வீரன் எவராலோ கால் தட்டி வீழ்த்தப்பட்டான். “வழிவிடுங்கள்! அரசப்பணிக்கு வழிவிடுங்கள்” என்று அவன் கூவ அவன் மேல் கூட்டம் மூடியது. அர்ஜுனன் புரவியில் இருந்தவாறு சுழன்று சுழன்று தவித்தான். கடிவாளத்தைப் பற்றியபடி அதன் முதுகின் மேல் எழுந்து நின்று அக்கூட்டத்தை பார்த்தான். சாலை தலைப்பாகைகளின் வண்ணங்கள் இடைவெளியின்றி பரவி புன்னைப் பூக்கள் படலமென மிதந்து செல்லும் ஓடைபோல் தெரிந்தது. தொலைவில் துவாரகையின் குன்றுச்சரிவில் பாதைகள் முழுக்க வண்ணக்கரைசலாக மக்கள் வழிந்திறங்கிக்கொண்டிருந்தனர்.

அரண்மனைக்குச் செல்வது இயல்வதல்ல என்று தோன்றியது. இளைய யாதவரிடம் எப்படி செய்தியை அறிவிப்பது என்று எண்ணினான். பின்னர் அத்தருணத்தில் இளைய யாதவரோ சமுத்ரவிஜயரோ சிவை தேவியோ அவர் மைந்தர்களோ செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது. ஆவதொன்றுதான், அக்கணத்தை விழிகளால் சித்தத்தால் சொற்களால் முற்றிலும் பதிய வைத்துக்கொள்வது. அவ்வெண்ணம் வந்ததுமே கோட்டையில் பறவைத்தூது அனுப்ப வழியிருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. எப்படி அதை மறந்தான்?

அவன் புரவியைத் திருப்பி அதன் விலாவை குதிமுள்ளால் ஓங்கி அழுத்தினான். பிளிறியபடி பாய்ந்தெழுந்து தலைகளுக்கு மேல் கால்களைத் தூக்கிக் குதித்து அது முன்னால் சென்றது. அதன் காலடியில் சிக்கியவர்கள் அலறினார்கள். கீறிவிரையும் படகுக்குப்பின்னால் எழும் நீர்முக்கோணம் போல சுப்ரதீபத்திற்குப் பின்னால் உருவான சிறிய இடைவெளியை நோக்கி அவன் புரவியில் விரைந்தான்.

சுப்ரதீபத்தை தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் பின் தங்கிவிட்டிருந்தனர். புரவியில் சென்ற தளபதிகள் மட்டும் அதைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். கூர்மரை கூட்டத்தின் நடுவே அலைக்கழிபவராகக் கண்டான். “யோகியாரே…” என அவர் கைநீட்டி கூவினார். அவன் அவரை பார்ப்பதற்குள் கூட்டத்தால் அள்ளி பின்னால் கொண்டுசெல்லப்பட்டார்.

அர்ஜுனன் சுப்ரதீபத்தின் அருகே வந்தபோது அவனது புரவி நுரை கக்கிக் கொண்டிருந்தது படைத்தலைவர் திரும்பி தொண்டைபுடைக்க கண்கள் பிதுங்க  “கோட்டைவாயிலை மூடும்படி ஆணையிட எனக்கு சொல்லுரிமையுள்ளது யோகியே” என்றார். “வேண்டாம்” என்றான் அர்ஜுனன். குரல்களை சூழ்ந்த பேரோசை ஒலியின்மையாக்கியது. “தோரண வாயிலை நோக்கி செல்கிறார்கள்” என்றார் அவர். “தோரணவாயிலைக் கடந்தால் நாம் செய்வதற்கொன்றுமில்லை. கடிமணத்தின் முறைமைகளின்படி காப்புகட்டியபின் அவர் பன்னிருநாட்கள் நகரெல்லை நீங்கலாகாது. இன்றைய மணநிகழ்வு நின்றுவிடும்.”

அர்ஜுனன் எரிச்சலுடன் “மணநிகழ்வு நடக்காது” என்றான். “அவர் இந்நகரை விட்டுச்செல்கிறார் யோகியே” என்றார் படைத்தலைவர். “ஆம். அவர் உறுதியாக இந்நகரை விட்டு வெளியேறுவார், நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றான் அர்ஜுனன். படைத்தலைவர் தவிப்புடன் “உக்ரசேனரின் குடி அங்கே அரண்மனையில் திரண்டுள்ளது. இளவரசி ராஜமதிதேவி அங்கு காத்திருக்கிறார்” என்றார்.

அர்ஜுனன் அப்போதுதான் அவளைப்பற்றி நினைத்தான்.   அவளை இருமுறை பார்த்திருக்கிறான். நெடுங்காலம் இருட்டில் இருந்த பொருட்களுக்குரிய ஓர் இயல்பு அவளிடமிருந்தது. வெண்ணிறமான உயர்ந்த உடலும் கரிய அடர்ந்த புருவங்களும் செதுக்கப்பட்டவை போன்ற மூக்கும் உதடுகளும் கொண்டவள். அழகி. ஆனால் அவள் முகத்தில் துயரமும் அதன் செதுக்கிலேயே கலந்திருந்தது. கம்சரின் வீழ்ச்சிக்குப்பின் அரண்மனையிலிருந்து அகன்று உத்தரமதுராவின் புறநகர் அரண்மனைக்குச் சென்று அங்கேயே தனிமையில் வளர்ந்தவள். அவள்  அரண்மனையைவிட்டு வெளியே வந்ததே இல்லை என்றார்கள்.

முப்பது வயதாகியும் அவளுக்கு மணம் நிகழவில்லை. ஷத்ரிய அரசகுலங்களில் இருந்து  அவளுக்கு மணக்கோரிக்கை ஏதும் எழவில்லை. யாதவர்கள் கம்சனின் குடியை வெறுத்தனர். எங்கும் ஓர் ஆழ்பேச்சு இருந்தது. கம்சன் கொன்ற குழந்தைகளின் கண்ணீர் அவர் குடியைத் தொடரும் என. “ஒருபோதும் அந்தப் பழி நீங்காது. பிழைகள் மைந்தரில் தொடர்பவை. குலக்கொடிவழியாக முடிவிலி வரை சென்று குருதிகொள்பவை. கம்சர் நல்லூழ் செய்தவர். அவர் களத்தில் இறந்தார். அவரது குடியினருக்கு இனி இவ்வுலகம் ஓர் எரிசிதை. எத்திசையும் பூட்டப்பட்ட சிறை” என்றார் முதியவர் ஒருவர்.

அவளுக்கும் அவள் உடன்பிறந்தவர்களுக்கும் வசுதேவர் மணமகன் தேடினார். அவளுக்குமுன் பிறந்த நால்வர் அருகநெறி பூண்டு  கன்னியர்மாடங்களுக்குச் சென்றனர். அவளும் அவ்வாறு செல்வதாக சொன்னாள். கம்சரின் குடியில் அத்தனைபெண்களும் அவ்வாறு சென்றால் அது பெரும்பழியென்றாகும் என்று சூரசேனர் வசுதேவரிடம் சொன்னார். அவளுக்கு ஓர் அரசகுடியில் மணமகனை தேடியே ஆகவேண்டும் என்று ஆணையிட்டார். “இனி அவளுக்கொரு மணம் நிகழ்ந்தபின்னரே நம் அரசகுடியில் மணநிகழ்வு. இது என் ஆணை” என்றார்.

சுபத்திரைக்கு மணமகன் தேடிய காலம் என்பதனால் வசுதேவர் பதற்றம் கொண்டார். பாரதவர்ஷமெங்கும் ஓலையனுப்பினார். நிறைந்த கருவூலத்தையே நிதியென அளிப்பதாகச் சொல்லியும் மறுஓலை வரவில்லை. அப்போதுதான் சௌரபுரத்தில் இருந்து சமுத்ரவிஜயர் துவாரகைக்கு வந்து தன் மைந்தனுக்காக கண்ணீருடன் வேண்டிக்கொண்டார். அவளை அரிஷ்டநேமிக்கு மணமகளாக்கலாம் என்று இளைய யாதவர் சொன்னார்.

கம்சரின் மகளை ஏற்க அரிஷ்டநேமியின் தமையன்களுக்கு தயக்கமிருந்தது. “பசுக்கொலையும் பார்ப்பனக் கொலையும் செய்து திருடிப்புதைத்துவைக்கப்பட்ட செல்வம் போன்றது கம்சனின் குடியின் தீயூழ். அதில் பங்குகொள்வதென்பது அழியாப்பழியை விரும்பி ஏற்பது” என்றார் மூத்தவர் ஸினி. “கம்சரின் கொலையாட்டை நாம் தடுக்கவில்லை என்னும் பழிக்கான கண்ணீரையே நாம் இன்னும் உதிர்த்து முடிக்கவில்லை. இனி குருதியும் சிந்தவேண்டியிருக்கும்” என்றார் சமுத்ரசேனர்.

ஆனால் சிவைதேவி “என் மைந்தன் எரிதழலால் ஆனவன். அவன் மேல் எந்த அழுக்கும் ஒட்டாது. அவளை அந்தக் குருதிப் பழியிலிருந்து மீட்பதாகவே அவன் உறவு அமையும்” என்றாள். “யாரறிவார், அவளுக்கு ஊழிட்ட ஆணையே அவனைக் கலந்து பழிநீங்குவதாக இருக்கலாம்!” நிமித்திகர் நூல்கணித்து முற்றிலும் பொருந்தும் பிறவிநூல்கள் அவை என்றனர். “தெய்வங்கள் சொல்கின்றன அவள் அவர் அருகே என்றுமிருப்பவள்.”

மணஉறுதி நிகழ்ந்து மலர் கைமாறப்பட்டபின்னரும் அவள் விழிகளில் உவகை எழவில்லை என்று சுபத்திரை சொன்னாள். “ஏன் அத்தை உங்கள் விழிகள் அழியாத்துயர்கொண்டவையாகவே உள்ளன?” என்றாள். “எந்தையால் கொல்லப்பட்ட ஏதோ குழந்தையின் விழிகளாக இருக்கலாம். அவை எனக்ப் பிறவியிலேயே வந்தவை” என்றாள் ராஜமதி. “இம்மண்ணில் இன்றுள்ள மானுடரிலேயே பேரழகரை கணவனாகக் கொள்ளவிருக்கிறீர்கள் அத்தை” என்றாள் சுபத்திரை. “பாரதவர்ஷம் விழுந்து வணங்கும் கால்கள் அவை என்கின்றனர் நிமித்திகர்.”

அவள் மெல்ல புன்னகை புரிந்தபோதும் கண்கள் துயர்கொண்டவையாகவே இருந்தன. “ஆம், அவற்றில் நானும் பணியும் நல்லூழ் கொண்டவளானேன்” என்றாள். “அவள் அஞ்சுகிறாள். ஐயம் கொண்டிருக்கிறாள். பழிகோரும் பிள்ளைத்தெய்வங்கள் அத்தனை எளிதாக தன்னைவிட்டுவிடாதென்று எண்ணுகிறாள்” என்று சுபத்திரை அவனிடம் சொன்னாள். “ஆனால் நிமித்திகர் அவள் அவரை நீங்காமலிருப்பாள் என்று உறுதிசொல்கிறார்கள். இளைய தமையன் எதையும் வீணே சொல்பவரல்ல என்று நானுமறிவேன்.”

“நானே சௌரபுரத்தவருக்கு செய்தியனுப்புகிறேன்” என்றான் அர்ஜுனன். “இங்கு நிகழ்பவை அவர்களுக்குச் சென்றிருக்கும். அவர்கள் நாடுவது உறுதிப்பாடு ஒன்றையே” என்றபடி புரவியை மேலும் செலுத்தினான். படைத்தலைவர் ”யோகியே, இனி இவர் மீண்டுவருவாரா?” என்றார். அர்ஜுனன் திரும்பிப்பார்க்கவில்லை. புரவியை அதட்டி முன்னால் உந்தினான். அப்போதுதான் தான் சொன்ன சொற்களின் பொருளின்மையை உணர்ந்த படைத்தலைவர் தலையை அசைத்தபின் புரவியைத் திருப்பி மீண்டும் சுப்ரதீபத்தை தொடர்ந்தார்.

அந்த ஒரு வீதியிலேயே நகரமக்கள் அனைவரும் கூடிவிட்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். மாளிகைகள் மக்களையே மேலே மேலே என ஏற்றிக்கட்டப்பட்டவை போலிருந்தன. மாளிகைகளின் மேல் நின்று கூவி ஆர்த்தவர்களில் இளம்பெண்கள் பலர் இருந்தனர். அவர்கள் கொண்டாடுபவர் ஒரு பெண்ணை உதறி நகர்விட்டுச்செல்பவர். அப்பெண்ணுடன் அவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளவில்லையா? அவர்களுக்கு துயரோ சினமோ இல்லையா?

அவர்கள்தான் நேற்றுவரை அந்த மணநிகழ்வை களியாட்டமாக கொண்டாடியவர்கள். அப்போது மதுராவின் இளவரசி ராஜமதியாக இருந்தார்கள். அப்போதே அதை நோக்கி பொறாமைகொண்டிருந்த பிறிதொருத்தி அவர்கள் அனைவருக்குள்ளும் இருந்தாள் போலும். இப்போது இவர்கள் மகிழ்வது ராஜமதியின் இழப்பையா? அவர்களின் ஆழம் கொண்ட வஞ்சத்தையா?

இல்லை என அர்ஜுனன் தலையசைத்தான். இவர்கள் கொண்டாடுவது அவரது முழுமையை. ஒரு பெண்ணுக்கு உரியவராகும்போது அவர் சுருங்குகிறார். மாமலை முடிகள் எவராலும்  அணுகமுடியாது முகிலாடி நின்றாகவேண்டும். ஆம் அதைத்தான். அப்படித்தான். அக்கணமே அவன் அந்தப்பெருந்திரளில்  ஒரு முதியபெண்ணின் முகத்தை கண்டான். அவள் நெஞ்சில் கை அழுத்தி விம்மியழுதுகொண்டிருந்தாள். அவள் தசைகள் எரிந்து உருகிக்கொண்டிருந்தன. அவள் அன்னையாக இருக்கவேண்டும். அவர் அப்போது அவள் மைந்தனாகிவிட்டிருக்கவேண்டும்.

கோட்டையின் காவலர்தலைவன் முரசு மேடையில் ஏறி நின்று கையசைத்தான். அர்ஜுனன் அவனைக் கண்டு விலகு விலகு என்று சைகை காட்டினான். ’கோட்டையை மூடவா?’ என்று அவன் சைகையால் கேட்க வேண்டாமென அர்ஜுனன் கைகாட்டினான். “என்ன ஆணை?” என அவன் கேட்டான். “வருகிறேன்” என்று அர்ஜுனன் கையசைத்தான்.

கோட்டை வாயிலைக் கடந்து யானை முன்னால் சென்றது. கோட்டைக்கதவு மூடப்படுமா என எண்ணியிருந்த மக்கள் கூச்சலிட்டனர். கோட்டைமேலிருந்த வீரர்கள் சிலர் தோரணங்களைப் பிய்த்து அள்ளி  யானைமேல் வீசி வாழ்த்து கூவினர். ஒருவன் ஓடிச்சென்று முரசுமேடைமேல் தொற்றி ஏறி முழைத்தடிகளை எடுத்து அறைய பெருமுரசம் முழங்கத்தொடங்கியது.

அர்ஜுனனுக்குப்பின்னால் வந்த படைத்தலைவர் “மங்கலத்தாளம். பித்துப்பிடித்துவிட்டதா இவர்களுக்கு? மணமங்கலம் நிகழவில்லையே!” என்றார். நகரின் பிற முரசுமேடைகளிலிருந்தும் மங்கலத்தாளம் ஒலிக்கத்தொடங்கியது. வீரர்கள் ஓடிச்சென்று கொம்புகளை எடுத்து கோட்டைமதில்மேல் நின்று உரக்க முழக்கினர்.

அர்ஜுனன் கோட்டைமுகப்பில் இறங்கி மேடைமேல் பாய்ந்தேறி சிறியபடிகளில் சுழன்று ஓடி மேலே சென்றான். கோட்டைக்காவலர் தலைவன் அவனுடன் வந்தான். “பறவைகள்…” என்றான் அர்ஜுனன். “மந்தணமொழியில் மட்டுமே செய்தியனுப்ப முடியும் யோகியே” என்றான் காவலர்தலைவன். “நான் அறிவேன்” என்றான் அர்ஜுனன்.

கோட்டைக்காவலர்தலைவன் கைவீசி ஆணையிட இருவர் ஒரே சமயம் இரு புறாக்களுடன் ஓடிவந்தனர். அர்ஜுனனிடம் ஒருவன் கன்றுத்தோல் சுருளையும் வண்ணப்புட்டியையும் தூரிகையையும் நீட்டினான். சுருக்கமான அடையாளக்குறிகளில் அவன் நிகழ்ந்ததை எழுதி காவலனிடம் அளித்து “அரசருக்கு. உடனே செல்லவேண்டும்” என்றான்.

காவலன் அதை இறுகச்சுருட்டி வேய்மூங்கில் குழாய்க்குள் செலுத்தி புறாவின் உடலில் மெல்லிய வெண்கலக் கம்பியால் கட்டினான். அர்ஜுனன் இன்னொரு ஓலையில் சமுத்ரவிஜயருக்கு அதே செய்தியை எழுதினான். “சௌரபுரியின் அரசருக்கு… உடனே” என்றான். அவர்கள் புறாக்களுடன் ஓட அவன் திரும்பி குறுகிய கருங்கல்படிகளில் ஏறி மேலே சென்றான்.

அந்த உயரத்தில் நின்று நோக்கியபோது மாலையிலிருந்து உதிர்ந்தோடும் வெண்முத்து போல சுப்ரதீபம் சென்றுகொண்டிருப்பதை காணமுடிந்தது. அவன் “என்ன ஆணை வந்தாலும் உடனே தோரணவாயிலுக்கு அனுப்புங்கள்” என்றான். படிகளில் இறங்கி ஓடியபடி “நான் செய்யவேண்டியவை இனி அரசரின் ஆணைப்படி” என்றான்.

அவன் கீழே புரவியை நோக்கி சென்றபோது துணைக்காவலர்தலைவன் அவனை நோக்கி ஓடிவந்து “யோகியே, உங்களுக்கு செய்தி” என்றான். “எனக்கா?” என்றான் அர்ஜுனன். “எப்போது வந்தது?” காவலர்தலைவன் “இப்போது…. சிலகணங்களுக்கு முன்” என்றான். அர்ஜுனன் அந்த மூங்கில் குழாயை வாங்கினான். அதன் முத்திரைமெழுகிலிருந்த சங்குசக்கர முத்திரையின் நடுவே பீலியடையாளம் இருந்தது. நடுங்கும் கைகளுடன் அவன் அதை உடைத்து தோல்சுருளை வெளியே எடுத்தான். உலர்ந்த அரக்குப்படலம்போலிருந்த அதை விரித்தபோது உடைந்துவிடுமென அவனுக்கு தோன்றியது.

சுருக்கமான குறிகளால் இளைய யாதவர் ஆணையிட்டிருந்தார். “பட்டுப்புழு சிறகடைந்துவிட்டது. தொடரவேண்டியதில்லை.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “என்ன ஆணை?” என்றான் காவலர்தலைவன். “தொடரவேண்டியதில்லை. செல்ல ஒப்புதல் அளிக்கும்படி சொல்கிறார்” என்றபின் அவன் புரவியில் ஏறிக்கொண்டு குதிமுள்ளால் அதை குத்தி பாய்ந்தெழச்செய்து கல்பாளங்களில் லாடங்கள் பொறிபறக்க விரைந்து ஓடச்செய்தான்.

தொலைவில் கவிழ்ந்த வில் என தோரணவாயில் தெரிந்தது. யானை அதன் நாணில் தொடுக்கப்பட்ட அம்பு என. அவன் புரவியை மேலும் மேலும் உந்தி முன்செலுத்தினான். சுப்ரதீபம் தொலைவில் நின்ற இடத்தில் அசைவதுபோல தெரிந்தது. வானில் எழுந்த வண்ணவில் கலையாது அப்படியே நின்றுகொண்டிருந்தது. எண்ணைச்சாயத்தால் வரையப்பட்டது என. பருவடிவப்பொருள் என.

மழைநின்றுவிட்டிருந்தது. முகில்கள் வடக்காக அள்ளிக்குவித்து உருட்டிச்செல்லப்பட்டன. கிழக்கே எழுந்த சூரியன் கண்கூசும்படி வானை நிறைத்தது. சாலையோர வெண்மாடங்கள் ஒவ்வொன்றும் விளக்குச்சுடர்கள் போல ஆயின.

சுப்ரதீபம் தோரணவாயிலை கடந்து செல்வதை பின்னாலிருந்து அவன் பார்த்தான். ஒரு கணம் கூட அதன் நடை தளரவில்லை. கண்ணுக்குத்தெரியாத பளிங்குவலையில் ஆடும் வெண்சிலந்தி. அது தோரணவாயிலை அடைந்தபோது அர்ஜுனன் அறியாது உடல்தளர்ந்தான். ஒவ்வொரு கணமாக அது கடந்துசெல்வதை கண்டான். அதன்மீது தோரணவாயிலின் நிழல் விழுந்து வருடியது. வெண்மை மங்கலாகி மீண்டும் ஒளிர மறைந்து புத்துடல் கொண்டு எழுந்து அப்பால் சென்றது.

புரவியை மீண்டும் தூண்டி அவன் தோரணவாயிலை நோக்கி சென்றான். சிற்பங்கள் விழித்துத் திகைத்து நின்ற முகப்பை அடைந்ததும் அர்ஜுனன் உடல் தளர்ந்து மூச்சிரைக்கத் தொடங்கினான். வாயிற்காவலன் அவனை நோக்கி ஓடிவந்து “நிறுத்தவேண்டாமென ஆணை வந்தது யோகியே” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன் களைப்புடன். காவலன் கைசுட்டி மூச்சிரைக்க “விரைந்து சென்றுகொண்டிருக்கிறார்” என்றான்.

அர்ஜுனன் மறுபக்கம் திரும்பி நோக்க தொடர்ந்து வந்த பெருங்கூட்டம் கோட்டைக்கு அப்பால் நின்றுவிட்டிருப்பதை கண்டான். அவர்களால் தொடரமுடியவில்லை. வாயில்கள் திறந்ந்தே இருந்தன. ஆனால் அது அவர்களின் எல்லை. குலத்தால், வாழ்வால், நம்பிக்கைகளால், அச்சங்களால், ஊழால்.

தோரணவாயிலுக்கு அப்பால் காலைவெயில் விழுந்து செந்நிறத்தில் எரிந்த பாலைவனப் பாதையில் சுப்ரதீபம் சென்றது. அர்ஜுனன் அதை நோக்கியபடி சற்று நேரம் அசையாது நின்றபின் இறங்கி படிகளில் மேலேறினான். அவன் பின்னால் வந்தபடி காவலன் “முதல் சாவடி முப்பது காதம் அப்பாலுள்ளது. பகலெரிந்து அணைந்தபின்னரே அங்கு செல்லமுடியும். குடிநீரின்றி அத்தனை தொலைவு செல்ல எவராலும் இயலாது. யானை பத்துகாதம்கூட செல்லமுடியாது. அவர் வழியிலேயே விழுந்துவிடுவார்” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் மேலேறினான்.

செம்மண் விரிந்த பாலைவனப் பாதையில் சுப்ரதீபம் நெடுந்தொலைவு சென்று விட்டது. அன்று பெருவிழவு நாள் என்பதால் வணிகர் அனைவரும் முன்னரே வந்து விட்டிருந்தனர். பாதையில் செல்பவர் என வருபவர் என எவரும் இருக்கவில்லை. எனவே ஒழிந்த பாதையில் அது ஒழுகிச்செல்வதுபோல தோன்றியது. ஒரு துளிப்பால். இல்லை ஒரு துளி விந்து. ஒரு விதை.

தன் காலடிகள் எழுப்பிய புழுதியின் மேல் முகிலூர்வதுபோல யானை சென்றது. சாளரங்கள் தோறும் அதை நோக்கியபடி அவன் மேலேறினான். தோரணவாயிலின் பக்கவாட்டில் ஏறிச் சென்ற படிக்கட்டு மேலும் மேலுமென குறுகியது. சிறிய கற்படிகள் ஏறி மடிந்து மடிந்து மேலே சென்றன. அந்தச் செங்குத்தான பாதையின் இருள் அவனை மூச்சுத்திணறச்செய்தது. மேலிருந்து எவரோ இறங்கி வருவதைப்போல் உணர்ந்தான். ஒருகணம் அது இளைய யாதவர் என எண்ணி அவன் நெஞ்சு திடுக்கிட்டது. அவனுடைய காலடிகளின் எதிரொலியே என பின்பு தெளிந்தான்.

ஆனால் அவன் உள்ளம் அக்கற்பனையை விரிவாக்கிக்கொண்டது. “அவர் சென்றுகொண்டிருக்கிறார் இளையயாதவரே” என்றான். “ஆம், அவர் எப்போதும் சென்றுகொண்டுதான் இருந்தார்” என்றார் இளைய யாதவர். “அறிந்தேதான் அவரை அழைத்துவந்தீர்களா?” என்றான் அர்ஜுனன். இளைய யாதவர் “எவர் அதை அறியமுடியும்? நிகழ்வனவற்றை பிரம்மமும் அறியாது. ஆனால் அவர் எவரென அறிந்திருந்தேன்” என்றார்.

“எங்கு செல்கிறார்?” என்றான் அர்ஜுனன். “ஒருதுளிக் குருதியை அவர் அருந்தியிருக்கிறார். அவருள் வாழும் வஞ்சமும் பசியும்கொண்ட தெய்வங்கள் அக்குருதிச்சுவையை அறிந்துள்ளன. அவர் அவற்றை வெல்லவேண்டும்.” அர்ஜுனன் திகைப்புடன் “அதை அருந்தாதவர் எவர்?” என்றான். “நான்” என்றார் இளைய யாதவர் “ஒருபோதும் ஒருதுளியும் அருந்தியதில்லை.” அர்ஜுனன் அவரை திகைப்புடன் நோக்கினான். “நான் விடாயின்றி பெருங்கடல்களை உண்பவன் பார்த்தா.”

அர்ஜுனன் தோரணவாயிலின் பன்னிரண்டாவது நிலையை அடைந்து அதன் திறந்த சாளரம் வழியாக வெளியே நோக்கினான். மழைத்தூறலின் நீர் ஆவியாகி அவித்த நெல்குட்டுவத்தின் மணத்துடன் காற்றாகி வந்து அவன் முகத்தை மோதியது. தொடுவானம் கண் கூசும் ஒளியுடன் வளைந்து நின்றது. அதை நோக்கி வெண்ணிற யானை சென்றுகொண்டிருந்தது. கண்கள் அதை நெடுந்தொலைவுக்கு தொடரமுடியவில்லை.

பகுதி ஐந்து : தேரோட்டி - 29

அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துவாரகையின் நால்வகை குடித்தலைவர்களும் அமைந்த சிற்றவையில் அன்றைய அலுவல்கள் முடிந்து திரண்டு வந்த ஆணைகளை அக்ரூரர் ஓலைநாயகத்திற்கு அளித்தார். அவர் அவற்றை எழுதியளித்ததும் பெற்று ஒவ்வொன்றாக உரக்க வாசித்தார். “ஆம்! ஆம்! ஆம்” என்று உரைத்து அவை அதை ஏற்றது. அரியணை அமர்ந்திருந்த இளைய யாதவரின் பொருட்டு அவரது அணுக்கன் முத்திரை மோதிரத்தால் அவ்வோலைகளில் சாத்து இட்டான். ஓலைகள் முடிந்ததும் அக்ரூரர் அவை நோக்கி தலைவணங்கி “நன்று சூழ்க!” என்றார்.

மெல்லிய உடை அசைவுகளுடன் குடித்தலைவர்கள் பின்நிரையிலிருந்து தங்கள் பொருட்களை எடுக்கத் தொடங்கியபோது அர்ஜுனன் எழுந்து கைகூப்பி “நான் இந்நகர் விட்டு செல்ல அரசரும் இந்த அவையும் ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றான். இளைய யாதவர் புருவங்கள் சற்றே சுருங்க “ஏன் இந்த உடன் முடிவு?” என்றார். அக்ரூரர் “தாங்கள் இங்கு ஒரு மாதம் இருப்பதாகத்தானே சொல்லப்பட்டது?” என்றார். “ஆம். அரசருக்கும் இளவரசிக்கும் நான் அறிந்த சில படைக்கலப் பயிற்சிகளை கற்றுக் கொடுப்பதற்காக இங்கு வந்தேன். ஆனால் இந்நகரில் தொடர்ந்து தங்குவதற்கு என் உள்ளம் ஒப்பவில்லை” என்றான்.

“எதனால் என்று இந்த அவைக்கு சொல்ல முடியுமா?” என்றார் அக்ரூரர். இளைய யாதவர் புன்னகைத்து “யோகியர் உள்ளம்… அதை நாம் மறுக்க என்ன இருக்கிறத!” என்றார். ஸ்ரீதமர் “தாங்கள் எப்போது கிளம்புவதாக எண்ணம்?” என்றார். “இன்றே, இப்போதே” என்றான் அர்ஜுனன். “எண்ணிய பின் ஒரு கணமும் பிந்த முடியாது. ஊர் ஊராகத் திரிபவர்களுக்கு கொண்டு செல்வதற்கு நினைவுகளும் சுமையே. இந்த நன்னகரில் பெருநிகழ்வொன்றுக்கு சான்றாகி நிற்கும் பேறு பெற்றேன். அதன் பொருட்டு அரசரையும் அவையையும் வணங்குகிறேன்” என்றான். அக்ரூரர் “நன்று சூழ்க!” என்றார்.

இளைய யாதவர் “சென்று வருக யோகியே! இந்நகருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு இதன் எல்லை கடந்து செல்லுங்கள். இந்நகருக்குள் வரும் எவருக்கும் வரிசை அளித்து அனுப்பும் வழக்கம் உள்ளது. சிவயோகியர் எதையும் கொள்வதில்லை என்பதனால் எங்கள் வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார். அர்ஜுனன் “அவ்வண்ணமே” என்று மீண்டுமொருமுறை தலை வணங்கினான்.

அவையறைவோன் தன் குறுபீடத்தில் எழுந்து கையிலிருந்த தண்டைச் சுழற்றி உரத்தகுரலில் அவை நிறைவுறுவதை அறிவிக்க அவையினர் சால்வைகளையும் கோல்களையும் பைகளையும் எடுத்துக்கொண்டு எழுந்தனர். அர்ஜுனன் அவை நீங்கும்போது அக்ரூரர் அரசரின் முகத்தைப் பார்ப்பதையும் அதைத் தவிர்ப்பவர் போல இளைய யாதவர் எழுந்து தன் சால்வைக்காக அணுக்கனிடம் கை நீட்டுவதையும் அவன் கண்டான். வெளி வந்து இடைநாழியில் தூண்களின் நிழல்கள் உடலை வருடி பின் செல்ல மெல்ல நடந்தபோது பின்னால் வந்த விருஷ்ணி குலத்தலைவராகிய சுதாமர் “உடனே கிளம்புவதற்கு தூண்டுதல் என்ன என்று நான் அறியலாமா?” என்றார்.

“ஏதுமில்லை. தூண்டுதலின்றியே நான் இங்கு வந்தேன். அவ்வண்ணமே கிளம்புகிறேன்” என்றான். “இல்லை. தங்கள் வரவு தெய்வங்களால் வகுக்கப்பட்டது என்று இந்நகர் மக்கள் நம்புகிறார்கள். வெள்ளையானை மீதேறி எங்கள் குடியின் இளவரசர் இந்நகர் நீங்கியதைக் கண்டது தாங்கள் மட்டுமே. உங்கள் சொற்களையே இன்று நகரெங்கும் சூதர்கள் பாடல்களாக பாடியலைகிறார்கள்” என்றார்.

அவருக்குப் பின்னால் வந்த இன்னொரு குடித்தலைவர் “பாலைவனப் பாதையில் விரிந்த சிறகுகளுடன் வந்திறங்கிய ஐந்து தேவர்கள் அவரை இருபக்கமும் நின்று காத்து அழைத்துச் சென்றதை தாங்கள் சொல்வதாக ஒரு பாடல் நேற்று எங்கள் குடி மன்றில் பாடப்பட்டது” என்றார். “கதைகள் பெருகி வளர்பவை. ஒவ்வொரு நாளும் நாம் கேட்பது ஒரு புதிய கதையை” என்றான் அர்ஜுனன். “தாங்கள் இங்கு வந்த பணி முடிந்தது என்று கிளம்புகிறீர்களா?” என்றார் சுதாமர். “அறியேன். நான் பெற வேண்டியதை பெற்றுவிட்டேன் என்பதனால் இருக்கலாம்” என்றான் அர்ஜுனன். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி தலை அசைத்தனர்.

அர்ஜுனன் முற்றத்தில் இறங்கி தன் ஒற்றைக்குதிரைத் தேரிலேறி சாலையோரத்தை நோக்கியபடி அமைதியாக அமர்ந்து பயணித்து விருந்தினர் மாளிகைக்கு வந்தான். காலையிலேயே தனது சிறிய தோல் மூட்டையை முடிந்து மஞ்சத்தில் வைத்திருந்தான். அப்போது உடனிருந்த அணுக்கனிடம் முன் மதியத்தில் அவை முடிந்தவுடன் கிளம்பி நகர்நீங்குவதை சொல்லியிருந்தான். இடைநாழியில் காத்திருந்த அவன் தலை வணங்கி “அவை முடிந்துவிட்டதா யோகியே?” என்றான். “ஆம். நான் கிளம்புகிறேன்” என்றபடி அர்ஜுனன் உள்ளே சென்று படியேறி தனது மஞ்சத்தறையை அடைந்தான்.

அவன் பின்னால் வந்த ஏவலன் “தாங்கள் ஆடை மாற்றிக் கொள்ளப் போகிறீர்களா?” என்றான். “ஆம். இந்த உயர்தர தோலாடையுடன் நான் பாலைவனத்தில் செல்ல முடியாது. என்னிடம் பொன் இருக்கும் என்று திருடர்கள் என்னை கொல்லக் கூடும். யோகியருக்கு உயர்வு மரவுரி ஆடையே” என்றான். “உணவு அருந்திவிட்டு கிளம்பலாம்” என்றான் அணுக்கன். “அருந்தும் உளநிலை எனக்கில்லை. பால் மட்டும்கொண்டு வருக!” என்று சொல்லி அவனை அனுப்பியபின் அர்ஜுனன் உடைமாற்றினான்.

மரவுரியை தோளில் முடிந்து இறுக்கிக் கொண்டிருந்தபோது வெளியே காலடி ஓசையை கேட்டான். உள்ளம் படபடக்கத் தொடங்கிய பிறகே அது சுபத்திரையின் காலடி ஓசை என்று தான் அறிந்திருப்பதை அவன் உணர்ந்தான். கதவருகே வந்து மெல்லிய குரலில் “தங்களை நான் சந்திக்க விழைகிறேன் யோகியாரே” என்றாள் சுபத்திரை. “உள்ளே வருக!” என்றான் அர்ஜுனன். அவள் உள்ளே வந்து கதவருகே கைகளை வைத்துக்கொண்டு சாய்ந்து நின்று “தங்களுக்காக இன்று காலை பயிற்சிக்களத்தில் காத்திருந்தேன்” என்றாள். “இன்று அவைக்குச் சென்றேன்” என்றான்.

“அவையில் இன்று தாங்கள் நகர்நீங்குவதாக சொன்னீர்கள் அல்லவா?” என்றாள் அவள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “ஏன்?” என்றாள் அவள். தன் நாவில் எழுந்த ஒரு சொல்லை ஓசையின்றி உருட்டி பின் விழுங்கிவிட்டு மேல் மூச்சுடன் திரும்பி “இங்கு நான் இருப்பது நல்லதல்ல என்று தோன்றியது” என்றான். சுபத்திரை “நான் இன்னும் பத்து நாட்களே இங்கு இருக்கப் போகிறேன். வரும் வைகாசி முழு நிலவு நாளில் மணத்தன்னேற்புக்காக மதுராவில் நான் இருந்தாக வேண்டும். இங்கிருந்து என்னுடன் தாங்களும் வரப்போவதாக இளைய யாதவர் சொன்னார்” என்றாள்.

“ஆம். அவ்வாறு முதலில் சொல்லியிருந்தேன். ஆனால்…” என்ற அர்ஜுனன் திரும்பி சாளரத்தை பார்த்தான். சாளரத்துக்கு அப்பால் அசைந்த மரக்கிளையின் சீர்தாளம் அவனை உளம் அமையச் செய்தது. அதை நோக்கிக் கொண்டிருக்கையில் அவனுள் எழுந்த அலைகள் முற்றிலும் அடங்கின. திரும்பி “இளவரசி, நான் தங்களுக்கு படைக்கலப் பயிற்சி அளிப்பதை தங்கள் குலங்கள் விரும்பவில்லை. இங்குள யாதவர் அனைவருமே அதைப்பற்றி அலர் பேசுகிறார்கள் என்பதை நான் அறிந்தேன். என்னை மாறு தோற்றத்தில் இங்கு வந்த பிறநாட்டு அரசர் எவரோ ஒருவருடைய ஒற்றர் என எண்ணுவாரும் உளர். தங்கள் மணத்தன்னேற்பு நிகழவிருக்கும் இந்நேரத்தில் இவ்வீண் சொற்கள் எழவேண்டியதில்லை என்று தோன்றியது” என்றான்.

அவள் மெல்ல அவன் அருகே வந்து “அலரை நீங்கள் அஞ்சமாட்டீர்கள் என்று நான் அறிவேன். ஏனெனில் நாம் இந்நகருக்கு வரும்போதே அது தொடங்கிவிட்டது” என்றாள். அர்ஜுனன் “ஆம்” என்றான். “பின் என்ன?” என்றாள். “வெள்ளையானை மீதேறி மூத்தவர் சென்ற அக்காட்சி கண்ணில் உள்ளது” என்றான் அர்ஜுனன். “எனவே…?” என்றாள் அவள். “அரியவை, அருள் நிறைந்தவை அனைத்தும் நூல்களிலேயே நிகழுமென்றும் எண்ணியிருந்தேன். என் கண் முன் அவ்வாறு ஒன்று நிகழ்ந்தபோது நான் எண்ணுபவை, இயற்றுபவை, எஞ்சுபவை அனைத்தும் எத்தனை சிறியவை என்றுணர்ந்தேன். சின்னஞ்சிறு கூழாங்கற்களை மலை என எண்ணி ஏறும் எறும்பு போல தோன்றுகிறது என எண்ணிக் கொண்டேன்.”

தலையசைத்து தனக்குள் என “மிக எளியவை மிகச் சிறியது” என்றான். “எதைச் சொல்கிறீர்கள்?” என்றாள் சுபத்திரை. “எதை சொல்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள்” என்றான். “ஆம்” என்றாள். அவள் அவன் விழிகளை நோக்கிய தன் பார்வையை தழைக்கவில்லை. “பெண் ஒரு போதும் அப்படி எண்ணப் போவதில்லை. எந்தப் பெண்ணுக்கும் இவை எவையும் எளியவையோ சிறியவையோ அல்ல” என்றாள். முகம் சிவந்து கூர்மைகொள்ள “ஆம். நானும் அறிவேன். வெண்களிறு ஏறி விண் நோக்கிச் சென்ற பேருருவனை. இன்று அவரை என்னால் முழுதறிய முடியாமல் இருக்கலாம். என்றோ ஒரு நாள் அவரை சிறு கருவென தன் வயிற்றில் அடக்கிய அன்னையென என்னை எண்ணிக் கொள்ள முடியும்” என்றாள்.

அர்ஜுனன் அவள் கண்களை நோக்கினான். “அவ்வன்னை என நின்று சொல்கிறேன். இவை எதுவும் பொருளற்றவை அல்ல. நீங்கள் கண்ட அவ்வரிய நிகழ்விற்கு எவ்வகையிலும் குறைந்தவையும் அல்ல” என்றாள் சுபத்திரை. நடுக்கம் ஓடிய மெல்லிய குரலில் அவன் “எதைச் சொல்கிறாய்?” என்றான். “நான் எதைச் சொல்கிறேன் என நீங்கள் அறிவீர்கள்” என்றாள். சில கணங்கள் அர்ஜுனனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. “நான் யார் என்று அறிவாயா?” என்றான். தன் குரல் ஏன் அப்படி குழைந்து அதிர்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. “அறிவேன்” என்றாள். அவன் விழிதூக்கி அவளை நோக்க “குலமோ நாடோ அல்ல பெண் அறிய விழைவது. பெண்ணென நான் விழைவது எதுவோ அதை உங்களில் அறிந்தேன். அது எனக்குப் போதும்” என்றாள்.

அர்ஜுனன் தோள்கள் மெல்ல தளர்ந்தன. “நான்…” என்று அவன் எதோ சொல்லத் தொடங்க, அவள் அவன் கைகளை பற்றிக் கொண்டாள். அவன் கைகளை பின்னுக்கு இழுக்க இன்னொரு கையால் அவன் இடையை வளைத்து அவன் அருகே உடலை நெருக்கி வந்து நின்று சற்றே முகத்தை தூக்கி அவன் விழிகளை நோக்கி “நான் அறிவேன்” என்றாள். அவள் வியர்வையின் வெம்மை கலந்த மணம் அவனை அடைந்தது. அவன் மூக்கருகே அவள் காதோர மென்மயிர் சுருள்கள் அசைந்தன. கழுத்தின் மெல்லிய வரிகள். விரிந்த தோளில் வெண்ணிற மென்தோலின் மலர்க்கோடுகள். “அஞ்சுகிறேன்” என்றான் அர்ஜுனன். “எதை?” என்றாள். “பிறிதெப்போதும் இதுபோல அஞ்சியதில்லை” என்றான். “அஞ்ச வேண்டியதில்லை” என்று சொல்லி அவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவள் முலைகள் அவன் மார்பில் பதிந்தன. முலைக்கண்களை உணரமுடிந்தது.

தயங்கியபடி அவன் கைகள் அவள் உடலை தொட்டன. பின்பு உளஎழுச்சி கொண்டு வலக்கையால் அவள் இடையைச் சுற்றி தன் இடையுடன் சேர்த்துக் கொண்டு குனிந்து அவள் வெண்ணிற வட்ட முகத்தை பார்த்தான். சிறிய விழிகள் கனன்றபடி இருந்தன. நுனிநா வந்து இதழ்களை தொட்டு மீண்டது. கொழுவிய வெண்கன்னங்களில் சேர்ந்த சிறிய பருக்கள் மொட்டுகள் போல் தெரிந்தன. “வேண்டாம் இளவரசி” என்றான். அவள் “நான் பிறிதொரு ஆண்மகனை எண்ணப்போவதில்லை. அதை தாங்கள் அறிவீர்கள். விழைந்தால் என்னைத் துறந்து இந்நகர் நீங்கலாம். நான் தடுக்கப்போவதில்லை. இதை சொல்லிச் செல்லவே இங்கு வந்தேன்” என்றபின் அவள் தன் கைகளை அவனிடமிருந்து எடுத்தாள்.

அறியாமல் அவனில் முன்னால் செல்லும் ஒரு மெல்லசைவு எழுந்தது. அவள் தன் இடையிலிருந்து அவன் கையை தொட்டு விலக்கிவிட்டு “விரும்பாத ஆண்மகனை விழைவைக் காட்டி உடன் நிறுத்துவது எனக்கு இழிவு” என்றாள். மந்தணக் குரலில் “நான் அஞ்சுவது என் விழைவையே என்று உனக்குத் தெரியாதா?” என்றான் அர்ஜுனன். விழிதூக்கி அவளைப் பார்த்தபோது அவள் முகம் மலர்ந்திருந்தது. கன்னங்களில் சிறிய சிவப்புத் திட்டுகள் எழுந்து மறைந்தன. “விழைவு ஆணுக்கு அழகு” என்றாள். “எதை அஞ்சுகிறீர்கள்? என் குலத்தையா? என் தேர்வுக்கு அப்பால் என் குல மூத்தார் சொல்வதற்கு ஏதுமில்லை” என்றாள்.

“இன்று உன் கை பற்றுவதற்கு யாதவ குலங்களும் ஷத்ரிய அரசுகளும் முந்தி நிற்கின்றன” என்றான். “ஆம். அதனால் நான் விழைந்த கையை பற்றுவதற்கு எனக்கு தடை ஏதுமில்லை” என்றாள். “அதன் பின் அவர்களை எதிர்கொள்ளும் பொறுப்பும் எனக்கே. தங்களுக்கில்லை.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு கால் தளர்ந்து பின்னால் நகர்ந்தான். அங்கிருந்த சிறிய பீடத்தில் அமர்ந்து கைகளை மடிமேல் வைத்துக்கொண்டான். அவள் இடையில் கைவைத்து முன்னின்று “இத்தனை அஞ்சுவதற்கு இதில் என்ன உள்ளது?” என்றாள். இல்லை என்பதுபோல தலையசைத்து “இது மேன்மையை நோக்கி இட்டுச் செல்வதில்லை” என்றான் அர்ஜுனன்.

“மெய்க்காதல் என்பது மேன்மை அல்லவா?” “ஆம்” என்றான் அவன். “ஆனால் என்னுடையது மெய்க்காதலா என்று நான் ஐயம் கொள்கிறேன்” என்றான். “ஏன்?” என்றாள் அவள். “இது மேன்மையானது என்றால் ஏன் உள்ளம் அஞ்சுகிறது? என் நினைவுகள் அனைத்திலும் இனிமை நிறையவில்லை. வெண்களிறு ஏறிச்சென்ற வேந்தனுக்கு ஏதோ பிழையை நான் ஆற்றுவது போல் என் உள்ளம் சுருங்குவது ஏன்?” என்றான். “நான் இங்காவது விழைவுகளில் நீந்தாமல் அதை ஆளமுடியாதா என்ன?”

அவள் முகத்தில் இரு புன்னகைக்குழிகள் எழுந்தன. “இங்கு நிகழ்ந்த அவ்வருஞ்செயலில் எவ்வகையிலோ உங்கள் உள்ளம் ஈடுபட்டுவிட்டது. தாங்கள் யோகியல்ல. எண்ணியும் கருதியும் எவரும் யோகியாவதில்லை. கனிந்த கனியென உதிர்ந்து செல்பவர்களே முற்றிலும் துறக்க முடிகிறது. கனி உதிர எண்ணுகையில் மரம் உதிர்க்கவும் வேண்டும். ஒரு ஊழின் கணம் அது” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “பெரும் பாறை வெடித்து பிளவுறுவது போல அக்கணத்தில் நிகழ்ந்தது. நான் அருகிருந்து கண்டேன். பல்லாயிரம் முறை எனக்குள் அதை மீட்டிக் கொண்டேன். ஒரு முழு வாழ்க்கையின் அக்கணத்தை வாழ்ந்து முடித்தேன். அவை எனக்கில்லை என்று அப்போது தெளிந்தேன்” என்றான்.

“அவ்வண்ணமெனில் இத்திசைக்கு வருவதன்றி வேறென்ன வழியுள்ளது?” என்றாள் அவள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “தாங்கள் இந்நகர் விட்டு எங்கும் செல்லப்போவதில்லை. தங்கள் முடிவை மாற்றிக் கொண்ட செய்தியை அவைக்கு நான் அறிவித்துவிட்டே வந்தேன்” என்றாள் சுபத்திரை. அவன் திகைத்து ஏதோ சொல்ல முயல அவன் கையைப்பற்றி “விற்கூடத்தில் நிறைந்த ஆவநாழியும் நாணேற்றிய விற்களும் நமக்காக காத்துள்ளன” என்றாள். சில கணங்கள் அவள் முகத்தை பார்த்தபின் புன்னகைத்து அர்ஜுனன் எழுந்தான்.

அவள் மேலாடையை சீர்செய்து குழல் ஒதுக்கி முன்னால் நடந்தபடி “தங்களை அழைத்து வருவதாக பயிற்சிக் களத்தில் சொல்லிவிட்டே வந்தேன்” என்றாள். “என்னை முற்றிலும் அறிந்திருக்கிறாய்” என்றான் அர்ஜுனன். திரும்பி “இல்லை, என்னை அறிந்திருக்கிறேன்” என்றாள். அவள் சிரிப்பைக் கண்டதும் இரண்டு அடிகள் முன்னெடுத்து வைத்து அவள் இடையை வளைத்து இழுத்து தன் உடலுடன் சேர்த்து இறுக்கி குழலுக்குள் விரல் செலுத்தி அள்ளி பற்றித் தூக்கி அவள் இதழ்களில் தன் இதழ்களை பதித்துக் கொண்டான். பின்பு அம்முத்தத்திலிருந்து மீண்டு நீள்மூச்சுவிட்டு புன்னகையுடன் அவள் விழிகளை பார்த்தான். சிவந்த முகத்தில் சிரிப்பு இரு துளிகளாக மின்னிய விழிகளுடன் “யோகியின் முத்தம்” என்று அவள் மெல்ல சொன்னாள்.

அச்சிரிப்பு அவனை கிளர்ந்தெழச் செய்து வெறி கொண்டு அவள் கன்னங்களிலும் கழுத்திலும் திரண்ட தோள்களிலும் முத்தமிடத் தொடங்கினான். நீர்த்துளிகளை உதிர்க்கும் பனிமரம் போல. வெளியே ஏவலனின் கால் ஒலி கேட்டு “ஏவலன்” என்று மெல்ல சொல்லி அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள். சற்றே விலகியபின் மீண்டும் அவள் இடைவளைத்து அருகணைத்து இதழ்களை ஆழ முத்தமிட்டான். பெருமூச்சுடன் அவள் விலகிக்கொண்டு தன் ஆடையையும் குழலையும் சரி செய்து கொண்டாள். “உள்ளே வருக!” என்று ஏவலனுக்கு ஆணையிட்டாள். பொற்கிண்ணத்தில் பாலுடன் உள்ளே வந்த ஏவலன் தலை குனிந்து நிற்க அதை வாங்கி அவனிடம் “அருந்துங்கள்” என்றாள்.

அவன் அதை வாங்கி மும்முறை அருந்திவிட்டு சிரிக்கும் கண்களுடன் அவளுக்கு நீட்டினான். “பகிரப்படுகையில் அனைத்தும் அமுதாகிறது என்றொரு சூதர் பாடல் உண்டு” என்றபடி அவள் அதை வாங்கி அருந்தினாள். இரு மிடறு அருந்திவிட்டு திருப்பிக் கொடுத்தாள். கிண்ணத்தை பீடத்தின் மேல் வைத்துவிட்டு அவன் கிளம்ப அன்னைபோல் தன் மேலாடையால் அவன் தாடியில் ஒட்டியிருந்த பால் துளியை துடைத்து “செல்வோம்” என்றாள்.

இடைநாழியில் செல்லும்போது அர்ஜுனன் “நான் அவையில் இந்நகர் நீங்குவதை அறிவித்ததை உன்னிடம் சொன்னது யார்?” என்றான். “இளைய தமையனார்தான்” என்றாள். “செய்தியை தூதனிடம் சொல்லி அறிவித்தாரா?” என்றான். “இல்லை, படைக்கலச் சாலைக்கு அவரே வந்தார். இனிமேல் பயிற்சி இல்லை. சிவயோகி கிளம்பவிருக்கிறார் என்றார்." அர்ஜுனன் அவளை கூர் நோக்கியபடி “சரியாக எச்சொற்களை சொன்னார்?” என்றான். “சிவயோகி இன்று கிளம்பக்கூடும் என்றார்.” அர்ஜுனன் புன்னகைத்து “கிளம்பப் போவதில்லை என்று அறிந்திருக்கிறார்” என்றான். சுபத்திரை உரக்க நகைத்தாள்.

படைக்கலச் சாலைக்கு செல்லும் வழியில் சுபத்திரை சிறுமியைப் போல படிகளில் துள்ளி இறங்கினாள். திரும்பி அவனை நோக்கி கை நீட்டி “வாருங்கள்” என்று சிணுங்கினாள். காதல் பெண்களை சிறுமிகளாக்கும் விந்தையை எண்ணி அர்ஜுனன் புன்னகை செய்தான். அவள் புருவம் சுருங்க “என்ன?” என்றாள். “இல்லை” என்றான். “என்னைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டு சிரிக்கிறீர்கள்” என்றாள். “உன்னை பற்றித்தான்” என்றான். “என்ன?” என்றாள் அவள். “அழகியாகிவிட்டாய்” என்றான்.

அவள் கண்கள் ஒளிர்ந்தன. தலையை மெல்ல சரித்தபோது வலக்குழை கன்னத்தில் முட்ட இடக்குழை ஆடியது. கை இயல்பாக எழுந்து கூந்தலிழையை காதோரம் ஒதுக்கியது. செல்லமாக உதடுகளைக் குவித்து “முன்னரே அழகியாக இல்லையா?” என்றாள். “முந்தைய கணத்தைவிட அழகியாகிவிட்டாய்” என்றான். “இப்போது?” என்று அவள் தன் இடுப்பில் கை வைத்து திரும்பி நின்றாள். “முந்தைய கணத்தை விட மேலும் அழகாகிவிட்டாய்” என்றான். சிரித்து “ஒவ்வொரு கணத்திலுமா?” என்றாள். “ஆம்” என்றான். “ஓரிரு நாட்களில் அழகு தாளாமல் வெடித்து விடுவேன் போலிருக்கிறதே” என்றாள். “இல்லை அழகுக்கு எல்லை என்று ஒன்றில்லை” என்றான் அர்ஜுனன். “வானம் போல. எத்தனை சென்ற பின்னும் செல்வதற்கு வானம் எஞ்சியிருக்கும்.”

அவள் வாய்விட்டுச் சிரித்து “சிவயோகி ஆவதற்கு முன்பு பல காதலிகள் இருந்தார்களோ?” என்றாள். “நிறைய” என்றான் அர்ஜுனன். “நினைத்தேன்” என்று அவள் சொன்னாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இல்லை” என்று உதடை இறுக்கியபடி அவள் தலை அசைத்து சிரித்தாள். “சொல்” என்றான். வாய்க்குள் நாவை சுழற்றியபடி “தெரியும்” என்றாள். “எப்படி?” என்றான் அர்ஜுனன். “சொல்ல மாட்டேன்” என்று அவள் முன்னால் ஓடினாள். பின்னால் சென்று அவள் மேலாடையைப் பற்றி நிறுத்தி “சொல்” என்றான். “ஐயோ! என்ன இது ஏவலர்கள் அனைவரும் பார்க்கிறார்கள்” என்றாள். “பார்க்கட்டும். எப்படி தெரியும் என்று சொல்” என்றான். “மாட்டேன்” என்றாள்.

அவன் அவளை உந்தி “சொல்” என்று சொல்லி அவள் கையைப்பற்றி சற்றே முறுக்கி தூணோடு சேர்த்து அழுத்தினான். “வலிக்கிறது. ஐயோ வலிக்கிறது” என்றாள். “வலிப்பதற்காகத்தான், சொல்” என்றான். “காவலர்கள் அனைவரும் பார்க்கிறார்கள். விடுங்கள்” என்றாள். “எப்படி தெரியும்? சொல்” என்றான். “கையை விடுங்கள் சொல்கிறேன்” என்றாள். அவன் கையை விட்டான். “சொல்” என்றான். “சற்று முன் முத்தமிட்டீர்களே” என்றாள். “ஆம்” என்றான். “நான் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி தள்ளினேன்.” “ஆமாம்” என்றான். “நீங்கள் விட்டு விலகிச் சென்றீர்கள். ஆனால் அந்த ஏவலன் அறைக்குள் வர சில கணங்கள் ஆகுமென கணித்து என்னை அணைத்து மீண்டும் ஓர் ஆழ்முத்தமிட்டீர்கள்.” “ஆமாம். அதற்கென்ன?” “அந்த கடைத்துளி முத்தம் பெண்களுக்குப் பிடிக்கும் என்று அறிந்திருக்கிறீர்கள்.”

ஒரு கணம் குழம்பியபின் அர்ஜுனன் நகைத்து “ஆம் உண்மைதான்” என்றான். “எனக்கு அது பிடித்திருந்தது. பிடிக்குமென உங்களுக்கு முன்னரே தெரியும் என்றும் பின்னர் நினைத்துக் கொண்டேன்” என்றாள் சுபத்திரை. “தெரியும்” என்று தோளில் கைவைத்து அர்ஜுனன் சொன்னான். “முழு நாடகம் முடிந்து மங்கலப் பாடல் நிறைவுற்ற பின்னர் ஒரு பாடல் இருந்தால் பெண்களுக்கு அதுவே முதன்மையானதாக இருக்கும்” என்றான். கண்கள் சுருங்க “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “இப்போது புரியாது. பிறகு விளக்குகிறேன்” என்றான்.

அவள் முகம் சிவந்து வேறு பக்கம் பார்த்தபடி “எல்லோரும் பார்க்கிறார்கள்” என்றாள். அப்போது அவள் கழுத்தில் வந்த மெல்லிய நொடிப்பை எந்த நடனமும் நிகழ்த்தமுடியாது என தோன்றியது. “எல்லோரும் பார்க்க வேண்டுமென்றுதானே” என்றான். “என்ன?” என்று அவள் கேட்டாள். “இந்தப் படிகளில் நீ துள்ளி இறங்கியதே அதற்காகத்தான். அனைவரும் அறிய வேண்டுமென்று நீ விரும்புகிறாய்” என்றான். சினப்பதுபோல விழிகள் சுருங்க “யார்? நானா?” என்றாள். “ஆம். இப்போது நீ பேசியதும் கொஞ்சியதும் உன் உடலில் கூடிய செல்லமும் அதற்காகத்தான்.”

அவள் சினம் படிந்த குரலில் “இல்லை. நான் அவ்வண்ணம் எண்ணவில்லை” என்றாள். “நீ எண்ணவில்லை. உன் அகம் எண்ணியது.” அவள் “இல்லை” என்றாள். “ஆமாம்” என்றபின் அவன் அவள் பின்புடைப்பை தட்டினான். “அய்யோ” என நான்குபக்கமும் நோக்கியபின் அவள் தலைதாழ்த்தி “உம்” என்றாள். நிமிர்ந்து விழிகளை ஓட்டி இருபக்கமும் பார்த்தபின் “தெரியவில்லை, இருக்கலாம்” என்றாள்.

அர்ஜுனன் “காதலை பிறர் அறிய வேண்டுமென்று பெண்கள் எப்போதும் விழைகிறார்கள். அதை அறிவிப்பதற்கு என்று அவர்களுக்கு சில வழிமுறைகள் உள்ளன. கொஞ்சுதல் சிவத்தல் சிரித்தல் ஒரு வழி. அக்கறையற்றது போல பிறிது எதையோ உரக்க பேசுதல் ஊடலிடுதல் பிறிதொரு வழி” என்றான்.

அவன் கைகளை பற்றி அவன் தோளுடன் தன் தோளை சேர்த்தபடி “இரண்டு வழிகள்தானா?” என்றாள் தாழ்ந்த குரலில். “மூன்றாவது வழியும் உண்டு, இப்போது நீ செய்தது.” “என்ன?” என்றாள் அவள். “தொட்டுக்கொண்டிருப்பது. சிறு குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான பாவைகளை தொட்டுக் கொண்டிருக்க விழையும். அது போல” என்றான். “ஆம். தொடாமல் அகன்றிருக்க என்னால் முடியவில்லை. எப்போதும் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டுமென்று உடல் தவிக்கிறது” என்றாள். அதுதான் “காதல்” என்றான் அவன். “அத்துடன் அது உரிமை நிலைநாட்டலும் கூட.”

அவள் “யாரிடம் நான் உரிமை நிலைநாட்ட வேண்டும்? இந்த வீரர்களிடமா?” என்றாள். “இல்லை. இங்கு விழிகளாக வந்து நிற்பவர்கள் நம்மைச் சூழ்ந்துள்ள குலங்கள். அவர்கள் முன்” என்றான். “குன்றின் மேலேறி முரசு கொட்டுவதுபோல் தன் காதலை உலகுக்கு அறிவித்து விடுகிறார்கள் பெண்கள்.” அவள் சட்டென்று சிறகடித்து நிறம் மாறி எழும் மைனா போல மலர்ந்து சிரித்து “நிறைய அறிந்திருக்கிறீர்கள் பெண்களைப்பற்றி” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அதுவே ஒரு படபடப்பை அளித்து உங்களைப் பற்றியே எண்ணச் செய்தது” என்றாள்.

அர்ஜுனன் அவள் கண்களுக்குள் நோக்கி “அதை நீயே உய்த்துணர்ந்தாயா?” என்றான். “ஆம்.” “எப்போது?” என்று அர்ஜுனன் கேட்டான். “தங்களை சந்தித்த மறுநாளே” என்றாள். “எப்படி?” என்றான். “நிறைய பெண்களை பார்த்த விழிகள் என்று தோன்றியது.” “எப்படி?” என்றான் அர்ஜுனன். “பெண்களை உணராதவன் விழிகளில் ஒரு பரபரப்பு இருக்கும். அத்தனை பெண்களுக்கும் அவன் விழி சென்று சென்று மீளும். உலோபி செல்வத்தை அளைவதுபோல உடலை மீள மீள வருடும். பெண்களைப் பார்த்தவன் விழிகளோ நிலை கொண்டிருக்கும். மெல்லிய சலிப்பும் அகலுதலும் இருக்கும்.”

அர்ஜுனன் நகைத்து “இதை யார் சொன்னது?” என்றான். “எவரும் சொன்னதில்லை. நானே அறிந்தேன்.” அவன் “நிலை கொண்ட விழிகள் கொண்ட பிறிதெவரை பார்த்தாய்?” என்றான். அவள் சிரித்து பார்வையை திருப்பி “என் இளைய தமையனை பார்த்தால் போதாதா?” என்றாள். அர்ஜுனன் உரக்க நகைத்து தொடையில் தட்டி “ஆம். போதும். அவர் ஒருவரே போதும்” என்றான். “அதை யோகியின் விழிகள் என்கிறார்கள் சிலர்” என அவள் புன்னகையை உதட்டை இறுக்கி அடக்கியபடி சொன்னாள். “யோகம்தான் அதுவும்” என்று அர்ஜுனன் வெடித்துச் சிரித்தான்.

“போதும். என்ன சிரிப்பு? இப்படியா சிரிப்பது? அறைகள் அனைத்தும் பதறுகின்றன” என்றாள் அவள் அவன் தோளை செல்லமாக அடித்தபடி. “என் சிரிப்பை விட அறைகள் அனைத்தையும் அதிகமாக அதிர வைப்பது என் கையைப்பற்றி நீ இப்படி நடந்து வருவது. என்னை அடித்து மந்தணக் குரலில் பேசுவது” என்றான் அர்ஜுனன். “அனைவரும் அறியட்டும். இதில் ஒளிக்க என்ன இருக்கிறது?” என்று அவள் சொன்னாள். “எப்படி அறிந்தாய்?” என்றான் அர்ஜுனன். “எதை?” என்றாள் அவள். “என் விழிகளை” என்றான் அவன்.

“அலையாத விழிகள் எனக்கு பிடித்திருந்தன. ஏன் பிடிக்கிறது என்று எண்ணிக்கொண்ட பின்புதான் அவை நிலைத்தவை என்பதனால் என்றறிந்தேன். நிலைத்த விழிகள் கொண்டவர் என் இளைய தமையன் என்பதை பிறகு புரிந்து கொண்டேன்” என்றபின் “மகளிர் அறைகளில் சேடியர் பேசிக்கொள்வதே ஆண்களை பற்றித்தான். அங்கு ஒரு வாரம் இருந்தாலே உலகின் அனைத்து ஆண்களையும் புரிந்து கொள்ள முடியும்” என்றாள். “ஆண்களைப் பற்றியே பேசிக்கொள்வீர்களா?” என்றான். “ஆண்கள் உலகைப்பற்றி பேசுகிறார்கள். பெண்கள் ஆண்களைப் பற்றி பேசுகிறார்கள்” என்றாள் சுபத்திரை சிரித்தபடி.

படைக்கலப் பயிற்சி சாலையின் உள்ளே அவர்கள் நுழைந்ததும் அங்கே நின்றிருந்த படை வீரர்கள் படைக்கலப் பணியாளர்கள் அனைவரின் விழிகளும் ஒருகணம் அவர்களை நோக்கி திரும்பியபின் விலகிக்கொண்டன. அவர்களின் காலடி ஓசையிலேயே இருவரும் எந்த உள நிலையில் அங்கு வருகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்ஜுனன் அறிந்தான். ஆணாயினும் பெண்ணாயினும் பிறர் கொண்ட காதலை அறிய விழையாதவர் எவருமில்லை. அறியும் நுண்ணுணர்வற்றவர்களும் எவருமில்லை. பசித்தவன் உணவுண்ணும் ஓசையை அறிவது போல என்று எண்ணிக் கொண்டான்.

சாலைத்தலைவர் அவனை அணுகி வணங்கி “விற்கள் இங்குள்ளன யோகியே” என்றார். அர்ஜுனன் கை நீட்டியதும் அங்கிருந்த பெரிய வில் ஒன்றை அவர் எடுக்கப்போனார். “அந்த மிகச் சிறிய வில் போதும்” என்றான் அர்ஜுனன். மூங்கிலால் ஆன சிறிய வில்லை அர்ஜுனன் கையில் அளித்தார். அர்ஜுனன் திரும்பி சுபத்திரையிடம் “காட்டில் கொடிய நஞ்சுள்ளவை மிகச்சிறிய பாம்புகளே. பெரியவற்றுக்கு அவற்றின் வலுவே படைக்கலமாகிறது. அம்புகளிலும் தசைகளைக் கிழிப்பவை எலும்புகளை உடைப்பவை உண்டு. பெரிய விற்கள் அவற்றுக்குரியவை. நுண்ணிய நரம்பு நிலைகளை மட்டும் தீண்டும் சிறிய அம்புகளுக்கு சிறிய விற்களே உகந்தவை” என்றான்.

சுபத்திரை “காட்டில் நஞ்சு பூசப்பட்ட அம்புகளை ஏவும் வில்லவர் உண்டென்று கேட்டிருக்கிறேன்” என்றாள். “இளைய பாண்டவர் நாகநாட்டரசி உலூபியை மணந்தபோது அவர்களிடமிருந்து நஞ்சு பூசிய அம்பை ஏவும் கலையை கற்றதாக சூதன் ஒருவன் இங்கு பாடினான்” என்றாள். “ஆம். அவற்றை நானும் பயின்றிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். வில்லை நீட்டி எதிரே இருந்த தோலால் ஆன குறிப்பாவையை பார்த்தபடி “ஆனால் உடலுக்கு புறநச்சு தேவையில்லை. அதற்குள்ளாகவே நஞ்சு நிறைந்துள்ளது” என்றான்.

“நூற்றி எட்டு நரம்புப் புள்ளிகளால் ஆனது மானுட உடல். நூற்றி எட்டு சிலந்தி வலைகள் நூற்றி எட்டு நச்சுச் சிலந்திகள். நரம்புவலை மையத்தை தாக்கும் சிறிய நாணல் ஒன்று அந்த நச்சை உடைத்து சிந்தவைக்கும். அவ்வலை நுனிகள் சென்று தொட்டிருக்கும் அனைத்துப் பகுதிகளையும் செயலிழக்க வைக்கும். இதோ இத்தோளின் பொருத்துக்குக் கீழே உள்ள புள்ளி” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று அவள் சொன்னாள். மறுகணம் அவன் அம்பு சென்று அதை தைத்து நின்றாடியது. “இவ்வம்பு தைத்தவன் இடப்பக்கம் முற்றிலுமாக செயலிழந்து களத்தில் கிடப்பான். பிறகெப்போதும் இருகால் ஊன்றி எழமுடியாது” என்றான் அர்ஜுனன்.

“பெரிய அம்புகள் களத்தில் ஓர் அச்சத்தை அளிக்கும் அல்லவா?” என்றாள் சுபத்திரை. “ஆம். அவற்றின் நாணொலியும் காற்றில் அம்புகளின் சிறகதிரும் ஒலியும் அச்சுறுத்துபவை. ஆனால் அவை என்ன செய்யும் என்று அறிந்திருப்பதனால் அவ்வச்சம் எல்லைக்குட்பட்டது. இச்சிறு நாணல்கள் எதை இயற்றப்போகின்றன என்று அறியமுடியாதவை என்பதனாலேயே இவை மேலும் அச்சமூட்டக்கூடியவை” என்றான். “உனக்கு நான் கற்பிக்கவிருப்பது இந்நரம்பு முனைகளையே. ஒரு விரலை மட்டும் செயலிழக்கச் செய்யும் அளவுக்கும் நரம்பு முனைகளை தாக்க முடியும்.”

அவள் அவன் கைகள் சுட்டிய பாவையின் கால்களை நோக்கினாள். “தொடைகள் இணையும் அப்புள்ளியில் உள்ளது காலை செயலிழக்க வைக்கும் நரம்பு முனை” என்றான். “அதை நான் அறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான் அர்ஜுனன். “பெண்களுக்கு அது தெரிந்திருக்கும்” என்றபடி அம்பை எடுத்து இழுத்து அவ்விலக்கை தாக்கினாள். அர்ஜுனன் “காதுக்குப் பின்னால் உள்ளது பிறிதொரு நரம்பு முடிச்சு” என்றான். “இந்நாணலால் அதை அடிக்க முடியாது. காது மடல் அதை தடுக்கும்” என்றாள் சுபத்திரை.

“ஆம். ஆனால் அதற்கு ஒரு அம்பு முறை உள்ளது” என்றபின் அவன் இரு அம்புகளை எடுத்தான். ஒரே தருணத்தில் அதை தொடுத்து ஏவ முதல் அம்பு அப்பாவையின் மூக்கை தைத்தது. பாவை இயல்பாக சற்றே திரும்ப காது மடலுக்கு அடியிலிருந்த குழியில் இரண்டாவது அம்பு தைத்தது. சுபத்திரை அவனை நோக்கிக் கொண்டிருந்தாள். “என்ன?” என்றான் அர்ஜுனன். அவள் தலை நடுங்கியது. மெல்லிய மூச்சுக்குரலில் “நீங்கள் யார்” என்று அவள் கேட்டாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். அவள் குரல் மேலும் தாழ்ந்தது. “நீங்கள் யார்?” என்று அவள் கேட்டாள். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். பற்களைக் கடித்து கழுத்துத்தசைகள் இழுபட “இப்போது தெரிந்தாக வேண்டும். நீங்கள் யார்?” என்றாள்.

“நான் இளைய பாண்டவன் அர்ஜுனன்” என்றான் அவன். அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. “யார்?” என்று கேட்ட குரல் மிகத் தாழ்ந்திருந்தது. “சொல்கிறேன். என்ன நடந்தது என்றால்…” என்று அவன் சொல்லி கை நீட்ட “தொடாதீர்கள்” என்று கூவியபடி அவன் கையை அவள் தட்டி விலக்கினாள். “கூவாதே. இங்கு அனைவரும் இருக்கிறார்கள்” என்றான். அவள் திரும்பி பணியாளர்களை பார்த்தபின் தன் கையில் இருந்த வில்லை தரையில் வீசினாள். அது துள்ளித்துள்ளி சரிந்தது.

அவள் செயலற்றவள் போல ஒருகணம் நின்றபின் திரும்பி படைக்கல சாலையின் கதவை நோக்கி ஓடினாள். அவளை பின்னாலிருந்து அழைக்க கைதூக்கியபின் அர்ஜுனன் தோள்தளர்ந்து வெறுமனே நின்றான். குழல் உலைய ஆடை பறக்க ஓடி அவள் வெளியே செல்வதை பார்த்தபின் இன்னொரு அம்பை எடுத்து குறி நோக்கி அப்பாவையின் நெஞ்சுக்கு மேலிருந்த பெரு நரம்பை அடித்தான்.

பகுதி ஐந்து : தேரோட்டி – 30

அர்ஜுனன் சுபத்திரையின் மஞ்சத்தறையின் வாயிலை அடையும்போது எதிரில் நிழல் ஒன்று விழுந்ததைக் கண்டு திரும்பி அங்கிருந்த தூண் ஒன்றுக்குள் தன்னை மறைத்துக் கொண்டான். தாலத்தில் பழங்களையும் பாலையும் ஏந்தி வந்த சேடி சுபத்திரையின் அறைக்கதவை மெல்ல தட்டி “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். கதவைத் திறந்த சுபத்திரை சினந்த குரலில் “எதுவும் வேண்டாம் என்று சொன்னேன்” என்றாள். சேடி “தங்களிடம் அளிக்கும்படி செவிலியன்னையின் சொல்” என்றாள். “வேண்டாம். கொண்டு செல்” என்ற சுபத்திரை கதவை மூடினாள்.

சேடி ஒரு கணம் நின்றபின் திரும்பிச் சென்றாள். அர்ஜுனன் கதவை மெல்ல தட்டினான். ஓசையுடன் கதவைத் திறந்து “உன்னிடம் நான்…" என்று சொல்ல வாயெடுத்த சுபத்திரை அவனைக் கண்டு திகைத்து “ஆ...” என்று வாய் திறந்து விரல்களால் இதழ்களை பொத்தியபடி பின்னடைந்தாள். அவளைத் தள்ளி உள்ளே சென்று கதவை தனக்குப் பின்னால் மூடி தாழிட்டபின் அர்ஜுனன் “உன்னை பார்க்கத்தான் வந்தேன். ஓசையிடாதே” என்றான். “வெளியே செல்லுங்கள்!” என்று சுபத்திரை சொன்னனாள். “வீரர்களை அழைப்பேன்.”

“அழை” என்றான் அர்ஜுனன் சென்று அவள் மஞ்சத்தில் அமர்ந்தபடி. அவள் தாழை தொட்டு மறுகையை நீட்டி “வெளியே செல்லுங்கள்” என்றாள். “திறக்காதே” என்றான் அர்ஜுனன். “உன் படுக்கையறையில் அயலவன் ஒருவன் இருப்பதை நீயே அரண்மனைக்கு சொன்னால் அதன் பிறகு உனக்கு இங்கெங்கும் மதிப்பிருக்காது.” தளர்ந்து அவள் கை விழுந்தது. “இங்கு வந்து அமர்ந்துகொள். உன்னிடம் நான் பேசவேண்டும்.”

“என்ன இது?” என்றாள். “உன்னைப் பார்க்க வேண்டுமென்றே நான் வந்தேன்” என்றான். “என்னை நீங்கள் பார்க்க வேண்டியதில்லை” என்றாள். “இது என்ன மாற்றுரு? யாரை ஏமாற்றுகிறீர்கள்?” என்றாள். “நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னை நீ சிவயோகியெனக் கொண்டாயென்றால் அது உனது பிழை” என்றான். “நான் உங்களை சிவயோகியென்று எண்ணி அர்ஜுனனைப் பற்றி பேசும்போதெல்லாம் நீங்கள் அதை ஒப்புக் கொண்டீர்கள். என்னிடம் பொய்யுரைத்தீர்கள்” என்றாள்.

“நான் பொய்யுரைக்கவில்லை. உண்மையை சொல்லவில்லை, அவ்வளவுதான். இரண்டுக்கும் வேறுபாடுள்ளது” என்றான் அர்ஜுனன். சுபத்திரை “நான் அறிவேன். பொய்யுரைத்தும் மாற்றுரு கொண்டும் பெண்களைக் கவர்ந்து வென்று செல்வது உங்கள் இயல்பு என்று. அந்தப் பட்டியலில் ஒருத்தியல்ல நான். இக்கணமே வெளியேறுங்கள்” என்றாள். “வெளியேறவில்லை என்றால்…?” என்றான் அர்ஜுனன். “ஒன்று செய்ய என்னால் முடியும்” என்றாள். “என் வாளை எடுத்து கழுத்தை வெட்டிக் கொள்வேன். குருதியுடன் இங்கு கிடப்பேன் அப்பழியை சிவயோகியான நீங்கள் சுமந்தால் போதும்” என்றாள்.

அர்ஜுனன் “அதோ உன் அருகில்தான் உன் உடைவாள் இருக்கிறது. எடுத்து வெட்டிக் கொள்” என்றான். அவள் சினத்துடன் சென்று அந்த வாளைப் பற்றி கையிலெடுத்தபின் திரும்பி அவன் கண்களைப் பார்த்து தயங்கி நின்றாள். “நீ வெட்டிக் கொள்ள மாட்டாய்” என்றான். “ஏனெனில் நீ என்னை விரும்புகிறாய். என்னை இக்கட்டுகளில் விட நீ முனையமாட்டாய்.” அவள் “பேசவேண்டாம். வெளியேறுங்கள்!” என்றாள் பற்களை இறுக்கிக் கடித்து பாம்பென சீறும் ஒலியில். “நீ என்னை விரும்பவில்லை என்றால் வெட்டிக்கொள்” என்றான் அர்ஜுனன். “உறுதியாக மறுகணம் நானும் வெட்டிக்கொள்வேன்.” அவள் தளர்ந்து வாளை தாழ்த்தினாள்.

“உன்னிடம் பேசி தெளிவுற்ற பின்னரே நான் இவ்வறைவிட்டு செல்லப் போகிறேன். நீயும் என்னிடம் பேசத்தான் போகிறாய். அதை நாம் இருவரும் அறிவோம். பின் எதற்கு இந்த உணர்ச்சி நாடகம்?” என்றான் அர்ஜுனன். “ஆம், நீ என்னை வெறுக்கிறாய். என் வரலாற்றை அருவருக்கிறாய். நான் உன்னை வென்று செல்ல நீ ஒப்புக் கொள்ளப்போவதில்லை. உன் உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திவிட்டாய். நான் புரிந்துகொண்டு விட்டேன். இனி நாம் அமர்ந்து பேசலாமல்லவா?” தான் இந்திரப்பிரஸ்தத்தின் அர்ஜுனனாக ஆகிவிட்டதை அவனே உணர்ந்தான். கன்னியர் படுக்கையறைகளில் நுழைவதற்கு உரிமையுள்ள இந்திரனின் மைந்தன்.

சுபத்திரை பல்லைக் கடித்தபடி “உங்களிடம் இருக்கும் இந்த குளிர்நிலை, வாளின் உலோகப்பரப்பு போல அதன் தண்மை, அதை நான் அருவருக்கிறேன்” என்றாள். “ஆம், அறிந்து கொண்டேன்” என்றான் அர்ஜுனன். “நான் இப்போது இந்திரன். ஆனால் நீ அந்த சிவயோகியை விரும்பினாய்.” “அது உங்கள் மாற்றுரு. உங்கள் நடிப்பு” என்றாள். “இளவரசி, தன்னுள் இல்லாத ஒன்றை எவரும் நடிக்க முடியாது. என் ஆளுமையில் ஒரு பகுதியை நீ விரும்ப முடியும் என்றுதானே அதற்குப் பொருள்? எந்த ஆணிலும் பெண் அவனுடைய ஒரு பகுதியை மட்டுமே அறிகிறாள். அதையே விரும்புகிறாள். நீ பெருங்காதல் கொள்வதற்குத் தகுதியான ஒரு முகத்தை கொண்டுள்ளேன் என்பதே என்னை மகிழ்விக்கிறது” என்றான்.

“இப்பேச்சுகள் எதையும் கேட்கும் உளநிலையில் நான் இல்லை. இன்று என்னை தனிமையில் விட்டு விட்டுச் செல்லுங்கள்” என்றாள். “உங்களுக்காக ஒரு நாள் முழுக்க காத்திருந்தேன். உங்களை சந்திக்க வேண்டுமென்று பன்னிரு முறை தூதனுப்பினேன். நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை” என்றபின் “நான் எங்கும் தணிந்து வாயில் திறக்கக் கோருவதில்லை. மூடும் கதவுகளை உடைத்துத் திறந்து உட்புகுவதே எனது வழக்கம்” என்றான். சீற்றத்துடன் “இங்கு உட்புகுந்து வரவில்லை நீங்கள். கள்வனென கரந்து வந்துள்ளீர்” என்றாள் அவள். “அதற்கும் இந்திரநூல் விடை சொல்கிறது இளவரசி. உண்மையிலேயே பெண் விரும்பவில்லை என்றால் அவள் அறைக்குள் எவரும் நுழைய முடியாது.”

அவள் கடும் சினத்துடன் “சீ” என்றாள். “காதலில் இதுவும் ஒரு வழியே. நீங்கள் விழைந்தால் சொல்லுங்கள், படை கொண்டு வந்து துவாரகையின் கோட்டையை உடைத்து அரண்மனைக் கதவுகளை சிதைத்து உங்கள் குலத்தை கொன்றுகுவித்து உள்ளே வருகிறேன்” என்றான். அவள் கைகள் வளையலோசையுடன் சரிந்தன. தோள்கள் நீள்மூச்சில் குழிந்து எழுந்தன. “உங்களுக்கென்ன வேண்டும்?” என்றாள். “தெளிவுறச் சொல்லிவிடுகிறேனே. நான் இங்கு வந்தது உங்கள் மேல் காதல் கொண்டு அல்ல. உங்களை அடைய வேண்டுமென்ற உங்கள் இளைய தமையனின் ஆணையை ஏற்று மட்டுமே. உங்களை நான் மணந்தாக வேண்டுமென்பது இந்திரப்பிரஸ்தத்துக்கும் துவாரகைக்குமான அரசியல் உறவுக்கு தேவை.”

அவள் விழிகள் மாறுபட்டன. “காதலின் விழைவு கூட அல்ல இல்லையா?” என்றாள். “ஏன் பொய்யுரைக்க வேண்டும்? உங்களைக் காணும் கணம் வரை அது அரசியல் மட்டுமே. கண்ட பின்னரும் நான் தயங்கினேன். என்னை விழைவை நோக்கிச் செலுத்தியது நீங்கள். உங்களை முத்தமிட்ட பின்னரே விரும்பத் தொடங்கினேன். ஒரு பெண்ணின் அனலெனும் விழைவை வெல்லும் ஆண்மகன்கள் சிலரே. நேமிநாதரைப்போல.” அவள் மேல்மூச்சு விட்டபோது முலைகள் எழுந்தடங்கின. என்ன சொல்வதென்றறியாதவள் போல் தன் மேலாடையை கையிலெடுத்து விரல்களைச் சுழற்றி பார்வையை சரித்தாள்.

“உங்கள் உள்ளத்தில் நான் அமர்ந்துவிட்டேன் இளவரசி” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அல்ல… சிவயோகி” என்றாள். “சரி, சிவயோகியென நான் அமர்ந்துளேன். உங்கள் கன்னிமையை அடைந்துவிட்டேன். இனி பிறிதொரு ஆண் உங்களைத் தொட உங்கள் ஆணவம் ஒப்புக் கொள்ளாது” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “பிறகென்ன? என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றான். “என்னால் முடியவில்லை. நீங்கள் அர்ஜுனன் என்று எண்ண எண்ண என் உள்ளம் கசப்படைகிறது” என்றாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “நீங்கள் குருதியாடி நிற்கும் போர்த்தெய்வம்போல. நான் போரை வெறுக்கிறேன். போரில் இறப்பவர்களைக் கண்டு கழிவிரக்கம் கொள்கிறேன்.”

அர்ஜுனன் “அதற்கு நேமிநாதர்தான் பின்புலமா?” என்றான். “இல்லை, நான் என்றும் அப்படித்தான் இருந்தேன்” என்றாள். “எண்ணி எண்ணி பார்த்தேன். எப்போது இக்கசப்பு தொடங்கியது என்று. அப்போது தெரிந்தது பல்லாண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ஒரு சூதன் சொன்ன கதையில் வில்லுடன் நீங்கள் எழுந்தீர்கள். போர்க்களத்தில் துருபதனை பற்றி இழுத்து தேர்க்காலில் கட்டி கொண்டு வந்து உங்கள் ஆசிரியரின் காலடியில் போட்டீர்கள். வீரன் செய்யும் வினை அல்ல அது.”

அர்ஜுனன் முதல்முறையாக உளம்குன்றினான். நோக்கைத் திருப்பி கைகளைக் கோத்து பற்றிக்கொண்டு “அது என் ஆசிரியருக்காக” என்றான். “அல்ல… ஆசிரியருக்காக மட்டுமல்ல” என்றாள். “ஆம், அவருக்காகத்தான்” என்றான் அர்ஜுனன். அவள் உரக்க “உங்கள் தமையனை அவ்வண்ணம் கட்டி இழுத்து வர துரோணர் ஆணையிட்டிருந்தால் செய்திருப்பீர்களா?” என்றாள். அர்ஜுனன் தடுமாறினான். இதழ்களை ஓசையின்றி அசைத்தபின் “அது…” என்றான். “நான் கேட்பது நேரடியான விடையை” என்றாள் சுபத்திரை. “இல்லை” என்றான் அர்ஜுனன். “என்ன செய்திருப்பீர்கள்?” என்றாள். “சொல்லுங்கள், அவ்வண்ணம் ஓர் ஆணையை துரோணர் இட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

அர்ஜுனன் கை தூக்கி உறுதியான குரலில் “அவ்வாணையை அவர் உதடுகள் சொல்லி முடிப்பதற்குள் என் வாளை எடுத்து என் தலையை வெட்டி வீழ்த்தி அவர் முன் இறந்துவிழுந்திருப்பேன்” என்றான். அவள் இதழ்கள் மெல்ல இகழ்ச்சியுடன் வளைந்தன. “அப்படியென்றால் துரோணர் துருபதனை கட்டி இழுத்து வர ஆணையிட்டபோது மட்டும் அறமென எதுவும் ஊடே வரவில்லையா? மழுப்ப வேண்டியதில்லை. அக்கணம் நீங்கள் அறிந்திருந்தீர்கள், பாண்டவர்களில் கௌரவர்களில் எவரும் ஆற்ற முடியாத ஒன்றை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என.” “ஆம்” என்றான் அர்ஜுனன். “அப்போது உங்கள் அகம் அந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தது. பின்னர் நீங்கள் அடைந்த கசப்பெல்லாம் அந்தக் கீழ்மையை உங்களுடையதல்ல என்றாக்கி அவர்மேல் சுமத்துவதன் பொருட்டே.”

அர்ஜுனன் தலையசைத்து “ஆம், உண்மை” என்றான். “ஒவ்வொரு முறையும் ஓர் எல்லை மிக அருகே தெரிகிறது. துணிவின் எல்லை. அறத்தயக்கத்தின் எல்லை. கீழ்மையின் எல்லை. அதைக் கடக்கையிலேயே உள்ளம் நிறைவுறுகிறது. அதுவரையிலான எல்லைகளைக் கடந்தவர்களையே வீரர் என இவ்வுலகு கொண்டாடுகிறது. அறத்தில் மட்டுமல்ல, அறமீறலிலும் எல்லைகடத்தலே வீரமெனப்படுகிறது” என்றான் அர்ஜுனன். “அந்த மீறல் வழியாகவே பெருவீரர் என்று புகழ் பெற்றீர்கள். நீங்கள் எதையும் செய்வீர்கள் என்னும் அச்சம் பாரதவர்ஷத்தில் பரவியது. நீங்கள் செல்வதற்குள்ளாகவே உங்கள் தூதர்களாக அந்த அச்சம் சென்றுவிடுகிறது. களங்களில் உங்கள் முதல் பெரும் படைக்கலம் அது. அதை அறிந்தே கையிலெடுத்தீர்கள்.”

சுபத்திரை தொடர்ந்தாள் “சூதர்கள் சொல்லில் உங்கள் வில் புகழ்பெற்ற முதற்கணம் அது இளைய பாண்டவரே! நீங்கள் அடைந்த அனைத்து வெற்றிகளும் புகழும் அந்தத் தருணத்திலிருந்தே தொடங்குகின்றன. அந்தத் தருணத்திலிருந்தே என் கசப்பும் தொடங்குகிறது.” அர்ஜுனன் “அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. வீரன் படைக்கலம் ஏந்துவது அறத்தின் பொருட்டே என நூல்கள் சொல்கின்றன. ஆனால் முற்றிலும் அறத்தில் நின்ற படைக்கலம் கொண்ட வீரன் எவனும் மண்ணில் இதுவரை நிகழ்ந்ததில்லை. பேரறத்தான் என்று நூல்கள் புகழும் ராமனும் மறைந்திருந்து வாலியை கொன்றவனே” என்றான்.

அச்சொற்களாலேயே இயல்பு நிலை மீண்டு புன்னகைத்து “ஒன்று அறிக, இயல்பிலேயே அறமும் வீரமும் ஒன்றுடன் ஒன்று முரண்படும் இரு திசைகளைக் கொண்டவை. அறம் என்றும் ஆக்கத்தை உன்னுகிறது. வீரமோ அழிவில் உவகை கொள்கிறது. முற்றிலும் பொருந்தாத ஒன்றை உயர் கனவொன்றில் பொருத்தி வைத்துள்ளனர் மூதாதையர். வில்லேந்தும் இளையவனுக்கு அக்கனவை இளமையிலேயே அளிக்கிறார்கள். படைக்கலம் என அக்கனவை ஏந்தி களம்புகும் அவன் அங்கு முதற்கணத்திலேயே அனைத்தும் அக்கனவிலிருந்து விலகி விடுவதை காண்கிறான். துரோணரின் முன் துருபதனை வீழ்த்திய கணம் நான் என் கனவிலிருந்து விழித்துக் கொண்டேன். படைக்கலங்களைப் பற்றி வீண் மயக்கங்கள் எதுவும் எனக்கில்லை. அவை அறத்தையோ தெய்வங்களையோ நிலை நாட்டுபவை அல்ல. கொல்பவை மட்டுமே” என்றான்.

“நான் நேமியின் முன் தலைவணங்கினேன். ஆனால் ஒருபோதும் சிறுமை கொள்ளவில்லை. ஏனென்றால் எனக்கு என்னைப் பற்றிய மயக்கங்கள் ஏதுமில்லை. என் படைக்கலத்தை நான் அறிந்திருக்கிறேன். அதை தூக்கி வீசிவிடமுடியுமா என்று மட்டுமே பார்த்தேன்” என்றான் அர்ஜுனன். அவள் “அதைத்தான் நான் வெறுக்கிறேன்” என்று கசப்புடன் சொன்னாள். “இன்னும் அக்கசப்பு இருந்து கொண்டிருக்கிறது. படைக்கலமேந்தி பயிலும்தோறும் என் எதிர் நின்று என்னுடன் போரிட்டது அக்கசப்பே.”

“வாளேந்தி தமையனுக்காக போர்புரியச் சென்றேன். முதல் வீரனை என் வாள் வெட்டி வீழ்த்துவதற்கு ஒரு கணம் முன்பு கூட என்னால் கொலை புரிய முடியுமென்று நான் எண்ணியதில்லை. அந்த முதல் தலை வெட்டுண்டு மண்ணில் விழக்கண்டபோது என்னைக் கட்டியிருந்த சரடொன்றை வெட்டி அறுத்து என் எல்லையை கடந்தேன். பின்பு இரக்கமற்ற வெறியுடன் என்னை நானே துண்டித்து கடந்து சென்று கொண்டிருந்தேன். குருதி வழியும் உடலுடன் களம் எழுந்து நின்றபோது உவகையில் என் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. என்னைச் சூழ்ந்து எழுந்த வாழ்த்தொலிகளை கேட்டேன். அன்று முழுக்க என் தசைகள் அனைத்தும் இறுகி அதிர்ந்து கொண்டிருந்தன. மண்ணில் நான் என்னை உணர்ந்தபின் ஒரு போதும் அதற்கிணையான பேரின்பத்தை அடைந்ததில்லை” என்று சுபத்திரை தொடர்ந்தாள்.

“கணம்தோறும் கூடிச் செல்லும் களியாட்டு அது. வாளேந்தி நகர் புகுந்து எதிர்வரும் அத்தனை தலைகளையும் கொய்து வீழ்த்த வேண்டுமென்று தோன்றியது. அவ்வுவகையை கட்டுப்படுத்தியது உடல் கொண்ட களைப்பே. அன்றிரவு துயில்வதற்காக படுக்கும்போது என் உள்ளம் சரிய மறுத்து திமிறி எழுந்து நின்று கொண்டிருந்தது. கைகளும் கால்களும் ஈரத்துணி போல படுக்கையில் ஒட்டிக்கொண்ட போதும் என்னிலிருந்து எழுந்து என் மேல் கைவிரித்து கவிழ்ந்து நோக்கி நின்றது என் துடிப்பு. அப்பொழுது அதை அஞ்சினேன். அதை என் சரடுகளால் கட்டி வைக்க முடியாதென்று தோன்றியது.”

சுபத்திரை பெருமூச்சுவிட்டாள். “ஏதோ ஒரு கணத்தில் நான் அறிந்தேன் பிறிதொருத்தி என நான் மாறிக்கொண்டிருப்பதை. அஞ்சி எழுந்தோடி என் செவிலியன்னையின் அறைக்குள் புகுந்து அவள் இரு கைகளை எடுத்து என்னை சுற்றிக்கொண்டு அவள் பொல்லா வறுமுலைக்குள் என் முகத்தை புதைத்து சிறு மகள் என என்னை உணர்ந்தபடி உடல் ஒடுக்கிக் கொண்டேன். எதைக் கடந்தேன்? அதில் எதை இழந்தேன்? என் உள்ளம் துழாவிக் கொண்டே இருந்தது. அப்போது அறிந்தேன் இவ்வுயிர்கள் அனைத்தையுமே அறிவே என உணர்ந்து வியந்த இளம் சிறுமி ஒருத்தி இருந்தாள். அந்த கணத்தில் நான் தலை வெட்டி எறிந்தது அவளைத்தான்.”

“கண்ணீர் விட்டு உடல் குலுங்கி அன்று அழுதேன். என்னென்று கேட்காமல் செவிலி என் தலையை கோதிக் கொண்டிருந்தாள். இரவெல்லாம் அழுது காலையில் ஓய்ந்தேன். எழுந்து வெளியே சென்றபோது என் அணுக்கத்தோழி எழுவகை இனிப்புகளை தாலத்தில் வைத்து எனக்கென கொண்டு வந்தாள். அன்று தத்தாத்ரேயருக்குரிய நோன்புநாள் என்றாள். குளித்து நீராடை அணிந்ததும் என் அகம்படியினருடன் தத்தாத்ரேயரின் ஆலயத்திற்கு சென்றேன். மூவேதங்களும் வால் குழைத்து பின்னால் தொடர வெற்றுடலுடன் நின்ற தத்தாத்ரேயரின் முன் கைகூப்பி நின்றபோது என் கண்கள் நீரொழுகத் தொடங்கின. கூப்பிய கைகளின் மேல் முகத்தை வைத்து விம்மியழுதேன்.”

“வெற்றுடல் கொண்டு எழுந்து நிற்கும் சிலை கொண்ட கனிந்த விழிகள் என்னை அணுகி நோக்கின. முலையூட்டும் அன்னையின் கருணை. எதன் பொருட்டேனும் அவை படைக்கலம் ஏந்த முடியாது. எவ்வுயிரையும் கொன்று அதை வெற்றி என கொள்ள முடியாது. கனிதல் என்பது மட்டுமே தன்முழுமை. முழுமையல்லாத எதுவும் வெற்றி அல்ல. என் அறைக்குத் திரும்பி மஞ்சத்தில் பித்தெழுந்தவள் போல் அமர்ந்திருந்தேன். அப்போது உறுதி கொண்டேன் என் உள்ளம் விழைவது என்ன என்று. இவ்வுலகைத் தழுவி விரியும் அக்கனிவை மட்டும்தான். படைக்கலம் ஏந்தி போர்க்களம் வென்று நான் அடைவதற்கேதுமில்லை. இனி நான் படைக்கலம் ஏந்துவதில்லை என முடிவெடுத்தேன். இளவரசே, அதன் பின் உங்களை மேலும் வெறுத்தேன்” என்றாள்.

அர்ஜுனன் “தத்தாத்ரேயரின் ஆலயமுகப்பில் சென்று நிற்கையில் நானும் என்னை வெறுப்பதுண்டு” என்றான். சுபத்திரை “பெரும் கருணை கொண்டு முற்றும் உறவைத் துறந்து நிற்கும் ஒருவன் மெய்மையை தேடவேண்டியதில்லை. வால் குழைத்து உடல் நெளித்து மெய்மைகள் அவனை தொடர்ந்து பின்னால் வரும்” என்றாள். “என் குலத்தில் அரிஷ்டநேமி போன்ற ஒருவர் எழுந்தது எனக்களித்த பெருமிதம் அதன் பொருட்டே. எதையும் அவர் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ஒரு கையில் மெய்மையுடனும் மறுகையில் முழுமையுடனும் பிரம்மம் அவரைத் தொடர்ந்து வரும். திமிறி விளையாடச் செல்லும் குழந்தையை தொடர்ந்தோடி பிடித்துத் தூக்கி மடியில் வைத்துக் கொள்ளும் அன்னை போல் தெய்வம் அவரை ஏற்றுக் கொள்ளும்.”

“ரைவத மலையில் அவரைக் கண்டபின் நான் மேலும் மேலும் விலகினேன். யோகி என வந்த உங்களிடம் நான் கண்டதேது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கண்டது போர்வீரனின் விழிகளை அல்ல” என்றாள் சுபத்திரை. “ஆம். அவை உண்மையில் போர்வீரனின் விழிகள் அல்ல” என்றான் அர்ஜுனன். “அவை ரைவதமலையின் நெற்றியில் வெற்றுடலுடன் எழுந்து நின்ற ரிஷபரின் கால்களைப் பணிந்த கண்கள். மழைக்குகைக்குள் தேரை போல் ஒட்டி அமர்ந்திருந்த அரிஷ்டநேமியின் கண்களைக் கண்ட கண்கள். அவை அர்ஜுனனின் கண்கள் அல்ல” என்றான் அர்ஜுனன்.

“ஆம்” என்றபடி அவள் முன்னால் வந்தாள். உள எழுச்சியால் கிசுகிசுப்பாக மாறிய குரலில் “குருதித் துளி விழுந்த நீரை அருந்தக் கூசி நின்றிருந்த சிவயோகியைத்தான் நான் உளமேற்றுக் கொண்டேன். இன்றும் என் உள்ளத்தில் உள்ளது அவர்தான். அஸ்தினபுரியின் இளவரசர் அல்ல, இந்திரப்பிரஸ்தத்தின் ஆட்சியாளர் அல்ல, பாரதவர்ஷத்தின் வில்லாளி அல்ல. எனக்கு அவர்கள் தேவையில்லை” என்றாள். அர்ஜுனன் எழுந்து அவளருகே வந்து “இளவரசி, உங்கள் முன் என்றும் உளங்கனிந்த சிவயோகியாக மட்டுமே இருப்பேன் என்றுரைத்தால் என்னை ஏற்கலாகுமா?” என்றான்.

இல்லை என்பது போல் அவள் தலை அசைத்தாள். அவன் அவள் தோளில் கை வைத்தான். “என்னால் உன்னை விட்டு விலக முடியாது சுபத்திரை. என் தலை கொய்து இக்கால்களில் வைக்க வேண்டுமென்று கோரினால் கணம் கூட தயங்காமல் அதை செய்வேன். எங்கும் பெண் முன்னால் நான் முழுதும் தலை பணிந்ததில்லை. இங்கு ஏதும் மிச்சமின்றி வணங்குகிறேன். எனக்கு அருள்க!” என்றான். அவள் கைகளைத் தூக்கி அவற்றில் தன் கைகளை வைத்தான்.

சொற்கள் தவித்த இதழ்களுடன் பெருமூச்சு விட்டு “உங்களை நான் எந்நிலையிலும் தவிர்க்க முடியாது என்று நான் அறிவேன்” என்றாள். “தயக்கமின்றி உன் தோள்களில் என் கையை வைக்க முடியுமா என்று பார்த்தேன். முடிகிறது. நான் உன்னவன்” என்றான் அர்ஜுனன். “என்னை ஒரு விளையாட்டுப் பாவையாக அரண்மனை விலங்காக உன் மஞ்சத்தருகே வைக்கும் எளிய கோளாம்பியாக ஏற்றுக்கொள்.” அவள் தலைகுனிந்து “இளைய பாண்டவரே, என் தமையனுக்கு முழுவதும் அளிக்கப்பட்டது என் வாழ்க்கை” என்றாள். அவன் “இளைய யாதவருக்கு படைக்கப்பட்டதே என் வாழ்க்கையும்” என்றான். “எஞ்சும் ஏதேனும் ஒன்றிருந்தால் அது முற்றிலும் உனக்காக.”

சிறிய விம்மலுடன் அவள் அவன் மார்பில் தலையை வைத்தாள். அவள் இடை சுற்றி தன் மார்புடன் இறுக அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். “எச்சொல்லும் காமத்தில் பொருள்படும். அத்தனை சொல்லும் பொருளற்றுப் போகும் தருணமும் ஒன்றுண்டு. நான் என்ன சொல்வேன் இளவரசி? என்னை சூடிக்கொள்ளுங்கள்” என்றான் அர்ஜுனன். அவள் அவனை இறுக அணைத்து முகத்தை அவன் மார்பில் வைத்து உடல் குலுங்க அழத்தொடங்கினாள்.

இருவரும் ஒருவர் உடலை ஒருவர் உணரத் தொடங்கினர். அவன் கைகளை உணர்ந்த சுபத்திரை தன் கைகளால் அவற்றை பற்றிக்கொண்டு “வேண்டாம்” என்றாள். அர்ஜுனன் புன்னகைத்து “ஏன்?” என்றான். அவள் விழிகளைத் தாழ்த்தி “இல்லை” என்றாள். “யாரை அஞ்சுகிறாய்?” என்றான். “யாரையும் இல்லை” என்று அவள் சொன்னாள். “யாதவர்களுக்கு இம்மணமுறை உகந்தது. ஷத்ரியர்களுக்கு இது விலக்கல்ல” என்றான். “ஆம். நான் எவருக்கும் விடைகூற கடமைப்பட்டவளல்ல. என்னளவில் இளைய தமையன் ஒருவருக்கே கட்டுப்பட்டவள். எனவே நான் தயங்க வேண்டியதில்லை” என்றாள்.

அவன் அவள் உடலைவிட்டு கைகளை எடுத்து விலகி “சரி” என்றான். “பிடிக்கவில்லை என்றால் தேவையில்லை.” “பிடிக்கவில்லை என்றல்ல…” என்று அவள் விழிகளைத் தூக்கி சொன்னபோது அவற்றிலிருந்த சிரிப்பை அவன் கண்டான். “அனைவரும் செய்வதை நானும் செய்வது கூச்சமளிக்கிறது” என்றாள் அவள் சிரித்தபடி. “ஆம். அதுவேதான் நானும் எண்ணினேன். ஆனால் நேர்மாறாக. இது ஒரு புழுவோ விலங்கோ பறவையோ செய்வது. நாம் மானுடர் என்றும் கற்றவர் என்றும் அரசகுடியினர் என்றும் எண்ணிக்கொள்ளும் வெறும் உடல்கள். அதன் விடுதலையை கொண்டாடுவதற்குப் பெயர்தான் காமம். காமத்தை அறிந்தபின் நீயும் இச்சொற்களை உணர்வாய்” என்றான்.

“அச்சொல் வேண்டாமே” என்று அவள் முகம் சுளித்தாள். “எச்சொல்?” என்றான். “காமம். அது கூரியதாக இல்லை. ஆடையற்றதாக உள்ளது” என்று தாழ்ந்த குரலில் சொல்லி சிரித்தாள். “உனக்கு நாணம் என்றால் அதை காதல் என்று ஆடையணிவித்து சொல்கிறேன்” என்றான். “என்ன பேச்சு இது?” என்று அவன் கையை அடித்தாள். அவன் அக்கையைப் பற்றி சற்றே வளைத்து அவளை இழுத்து தன்னுடன் சேர்த்துக் கொண்டு “இன்னும் என்ன?” என்றான். “இத்தருணத்தில் உங்கள் பிற நாயகியரைப் பற்றி எண்ணாமல் இருக்க என்னால் முடியவில்லை என்பதை வியக்கிறேன்” என்றாள். “அது இயல்புதானே?” என்றான். “பிறநாயகியரும் முந்தையவளைப் பற்றியே கேட்டனர்.”

“உலூபியை, சித்ராங்கதையை நான் ஒரு பொருட்டென எண்ணவில்லை” என்றாள். “ஆம். அதுவும் இயல்புதான்” என்றான். “அவள் எப்படிப்பட்டவள்?” என்றாள் சுபத்திரை. “நீ என்ன எண்ணுகிறாய்?” என்றான். “சக்ரவர்த்தினி என்று சொல்லி வளர்க்கப்பட்டவள். எனவே சக்ரவர்த்தினியன்றி பிறிதொரு ஆளுமையை சூடிக்கொள்ள அறியாதவள்.” அர்ஜுனன் சிரித்து “ஆம்” என்றான். “அவள் அமரும் பீடங்கள் அனைத்தும் அரியணைகளே என்று ஒரு சூதன் பாடினான். அரியணையன்றி பிற பீடங்களில் அவளால் அமரமுடியாது என்று நான் புரிந்து கொண்டேன்” என்றாள். அர்ஜுனன் “உண்மை” என்றான். பின்பு “பாரதவர்ஷத்தின் பெண்கள் அனைவருமே அவளைப் பற்றித்தான் அறிய விரும்புகிறீர்களா?” என்றான். “ஆம். அது இயல்புதானே? அத்தனை பெண்களுக்குள்ளும் ஒரு பேரரசி பகற்கனவாக வடிவம் கொண்டிருக்கிறாள். மண்ணில் திரௌபதி அவ்வடிவில் இருக்கிறாள். அவளாக மாறி நடிக்காத பெண் எவளும் இங்கு இருக்கிறாள் என்று நான் எண்ணவில்லை. வெளியே தாலமேந்திச் செல்லும் எளிய சேடி கூட உள்ளத்தின் ஆழத்தில் திரௌபதிதான்.”

அர்ஜுனன் மஞ்சத்தில் அமர்ந்து அவள் கைகளைப் பற்றி அருகிலே அமர்த்திக் கொண்டான். அவள் தன் கையை அவன் கையுடன் கோத்து தோளில் தலை சாய்த்து “தொட்டுக் கொண்டிருப்பது எத்தனை இனிதாக இருக்கிறது!” என்றாள். “யாரை தொடுகிறாய்? சிவயோகியையா அர்ஜுனனையா?” என்றான். “அந்தப்பேச்சு வேண்டாம்” என்றாள். “இப்படி எண்ணிப்பார், பொன்னாலான ஓவியச்செதுக்கு உறை. அதற்குள் வாள் இல்லை என்றால் அதை வாளுறை என்று கொள்ள முடியுமா?” என்றான். “அதைப்பற்றி பேசவேண்டாம்” என்றாள்.

“இங்கு நான் யாராக இருக்க வேண்டும்?” என்று அவன் கேட்டான். “எப்போதும் சிவயோகிதான்” என்றாள். “எப்போதுமா?” என்று அவன் கேட்டான். “ஆம். எப்போதும்தான்” என்றாள் அவள். அர்ஜுனன் “அது ஒன்றும் அரிதல்ல. சிவயோகியென்பது என் நடிப்பும் அல்ல” என்றான். பின்பு “காமத்தில் தானென இருந்து திளைப்பவர் சிலரே. மாற்றுருக்களில் ஒன்றுதான் அம்மேடையில் இனிது ஆட முடியும். ஏனென்றால் அது நகக்காயங்களும் பற்காயங்களும் படுவது. குருதி ஊற மாறிமாறி கிழிக்கப்படுவது. மாற்றுரு என்றால் புண்படுவது தானல்ல அவ்வுரு என ஆகும் அல்லவா?” என்றான்.

“என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை” என்றாள். “என்றோ ஒரு நாள் வெற்றுடலுடன் வெற்று உள்ளத்துடன் நீ என்னை காண்பாய். அப்போது அதன் மேல் நான் சூடியிருந்த பலநூறு மாற்றுருக்களை ஒவ்வொன்றாக எடுத்து நோக்கி திகைத்து நிற்பாய்” என்றான். “ஏன் மாற்றுரு சூட வேண்டும்?” என்றாள். “ஏனென்றால் நீ கொண்ட மாற்றுருக்களை அப்படித்தானே நான் எதிர் கொள்வது?” “நான் ஒன்றும் மாற்றுரு கொள்ளவில்லை” என்றாள் அவள். “இப்போது நீ இருப்பது அர்ஜுனனிடம்” என்றான். அவள் விழிகள் மாறின. “அதை எந்த அளவுக்கு உணர்கிறாயோ அந்த அளவுக்கு சிவயோகியுடன் இருப்பவளாக உன்னை கற்பித்துக் கொள்கிறாய்” என்றான்.

“எனக்கு புரியவில்லை” என்றாள். “நிழல்குத்து என்றொரு அபிசாரிக கலை உண்டு. கூரிய வாளின் நிழலால் குத்தி மானுடரைக் கொல்வது” என்றான் அர்ஜுனன். அவள் “எதை குத்துவார்கள்? நிழலையா?” என்றாள். “நிழலையும் குத்துவதுண்டு. உடல்களையும் குத்துவதுண்டு." அவள் விழிகள் மீண்டு புரியாமல் மங்கலடைந்தன. “என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை” என்றாள். “நிழலாட்டத்தை தொடங்குவோம்” என்றான் அர்ஜுனன். “அது இனியது என்று கண்டிருக்கிறேன்.”

அவன் கைகளில் உடல்குழைய அவள் தசைகளுக்குள் இறுக்கமாகப் படர்ந்திருந்த தன்னுணர்வு மறைந்தது. முலைகளென தோள்களென இதழ்களென ஆனாள். அவன் காதுக்குள் அவள் "நான் ஒன்று கேட்கவா? உங்கள் பெண்களில் முதன்மையானவள் அவளா?” என்றாள். “இவ்வினாவுக்கு நான் என்ன விடை சொன்னாலும் அதை பொய்யென்றே நீ கூறுவாய்.” “இல்லை, உண்மையை சொல்லுங்கள்.” அர்ஜுனன் “உண்மையிலேயே அவள் அல்ல.” அவள் விலகி அவனை நோக்கினாள். அவள் கண்களில் மெல்ல எச்சரிக்கை வந்து சென்றது. “உண்மையிலேயே நீதான்” என்றான்.

அவள் இல்லை என்பது போல் தலை அசைத்தாள். “நம்ப மாட்டாய் என்று சொன்னேன் அல்லவா?” அவள் அவனை தோள்களை அணைத்து முலைகள் அழுந்த முகம் தூக்கி “உண்மையாகவா?” என்றாள். “முற்றிலும் உண்மை.” அவள் அவன் விரல்களை முத்தமிட்டு பெருமூச்சு விட்டாள். “நானா?” என்றாள். “நீதான் உன் முன்தான் முதன் முறையாக நான் பணிந்தேன்” என்றான். “அவள் முன்?” என்றாள். “அவள் ஆணவத்தை புண்படுத்தி விலகிவிட்டால் அவளை வெல்வது மிக எளிது என்று கண்டு கொண்டேன். அதை செய்தேன்” என்றான்.

“எப்படி?” என்றாள். “என்னை எண்ணி அவளை ஏங்க வைத்தேன்” என்றான் அர்ஜுனன். “அதற்கு நிகராக இங்கு உன்னை எண்ணி ஏங்கலானேன்” என்றான். அவள் “ம்ம்ம்” என்று மெல்லிய குரலில் முனகியபடி அவனை மீண்டும் முத்தமிட்டு அவன் முகத்தைப் பிடித்து தன் கழுத்தில் அழுத்திக் கொண்டாள். உடலால் ஒருவருக்கொருவர் மட்டும் புரியும்படி உரையாடிக் கொண்டார்கள். ஒவ்வொரு சொல்லும் மிக மிக தொன்மையான பொருள் கொண்டது. பொருள் அடுக்குகள். ஒன்றை ஒன்று செறிவாக்கிச் செல்லும் நீள் உரையாடல்.

உடலென்பது எத்தனை பழமையானது! புவியில் என்றும் இருந்து கொண்டிருப்பது. ஊனை மாற்றி உயிரை மாற்றி தன்னை புதுப்பித்துக் கொள்ளும் உடல் கொள்ளும் உவகை போல் மண்ணில் தூயது எதுவும் இல்லை. தான் ஒன்றல்ல பல என்று அது அறிகிறது. தன்னிலிருந்து எழும் முடிவிலியை காண்கிறது. அவள் உடலைத் தழுவி படுத்திருக்கையில் மெல்ல புகைப்படலத்தில் விலகி உருவங்கள் தெளிவது போல் எண்ணங்கள் எழுந்தன. குனிந்து அவளை நோக்கினான். சிறிய விழிகளின் இமைகள் அழுந்த ஒட்டியிருந்தன. வியர்த்த கழுத்திலும் தோள்களிலும் கூந்தலிழைகள் பளிங்கில் விரிசல்கோடுகள் போல பரவியிருந்தன.

நாணத்தை முழுக்க இழந்து அவன் மார்பில் தலை வைத்து அவன் கைகளை முலையிடுக்கில் அழுத்தி அவள் துயின்று கொண்டிருந்தாள். மெல்லிய மூச்சு சிறிய மூக்கை மலர்ந்து குவிய வைத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. உதடுகள் குழந்தைகளுக்குரியவை போல சற்று உலர்ந்து ஒட்டியிருந்தன. தன் சுட்டு விரலால் அவ்விதழ்களை அவன் தொட்டான். அவள் இமைகள் அதிர்ந்தபின் விழித்து அவனை யாரென்பது போல் பார்த்து பின்பு கையூன்றி எழுந்து தன் உடல் ஆடையின்றி இருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு போர்வையை எடுத்து முலைகளை மூடி கையால் அழுத்தியபடி அப்பால் விலகினாள். எழுந்து மேலாடையை எடுத்து சுற்றிக் கொண்டாள்.

அவன் சிரித்துக்கொண்டு “அது எதற்கு?” என்றான். அவள் நாணி முகம் திருப்பி “கிளம்புங்கள். வெகு நேரமாகிவிட்டது” என்றாள். “ஆம்” என்றபடி அவளை கைநீட்டி இழுத்தான். அவள் திரும்பி விலக ஆடை கலைந்து அவள் பின்னுடல் தெரிந்தது. அவள் “என்ன இது?” என அவனை உதறி ஆடையை சீரமைத்தாள். திரும்பி அவன் உடலை பார்த்தபின் “ஐயோ” என்றாள். “என்ன?” என்றான். திரும்பாமலேயே அவன் ஆடையை எடுத்து வீசி “அணிந்து கொள்ளுங்கள்” என்றாள்.

அவன் சிரித்தபடி மேலாடையை கட்டிக் கொண்டான். “திரும்பிக் கொள்ளுங்கள்” என்றாள். “ஏன்?” என்றான் அவன். “திரும்புங்கள்” என்றாள். அவன் சுவரை நோக்கி திரும்பிக் கொண்டான். சுபத்திரை தன் ஆடையை நன்றாகச் சுற்றி அணிந்து கொண்டாள். “நான் கிளம்புகிறேன்” என்றான் அவன். “எப்படி?” என்றாள் அவள். “எவர் விழிகளுக்கும் தெரியாது வரும் கலை எனக்குத் தெரியும். செல்லும் கலை இன்னும் எளிது” என்றான். “இல்லை, இப்போது அத்தனை விழிகளும் பார்க்கவே நீங்கள் செல்லவேண்டும்” என்றாள்.

“என்ன சொல்கிறாய்?” என அவன் திகைப்புடன் கேட்டான். “கரந்து வந்தது நீங்கள். அதில் எனக்கு பொறுப்பில்லை. ஒளிந்து நீங்கள் சென்றால் அக்களவில் நானும் பொறுப்பு என்றாகும். நான் துவாரகையின் இளவரசி. ஒளித்து எதையும் செய்யவேண்டியதில்லை. அது எனக்கு பீடல்ல” என்றாள் “என்ன செய்யப்போகிறாய்?” என்றான். “கதவைத் திறந்து உங்கள் கை பற்றிக் கொண்டு படிகளில் இறங்கி கூடத்தில் நடந்து முற்றத்தை அடைந்து அரச தேரிலேற்றி அனுப்பி வைப்பேன்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் அவள் முகத்தை சிலகணங்கள் நோக்கிவிட்டு “ஆம், அதைத்தான் நீ செய்வாய்” என்றபின் “அதுதான் உனக்கும் அவளுக்குமான வேறுபாடு” என்றான். அவள் புன்னகைத்தாள்.

பகுதி ஐந்து : தேரோட்டி – 31

“நாண் இழுபடுகையில் வில்லின் இரு முனைகளையும் சீராக இழுக்குமெனில் மட்டுமே அம்பு நேராக செல்லும்” என்று அர்ஜுனன் சொன்னான். “விசை தோளிலிருந்து நாணுக்கு செல்கிறது. நாணிலிருந்து தண்டுக்கு. தண்டிலிருந்து அம்புக்கு. தண்டின் இருமுனைக்கும் விசையை பகிர்ந்தளிப்பது நாண். எனவேதான் வில்லின் நாண் ஒற்றைத் தோலில் அமைந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.”

“எருமையின் கொம்பின் அடியிலிருந்து பின்கால் குளம்பு வரைக்கும் வளைந்து செல்வதாக தோலைக்கீறி எடுத்து நாணை அமைக்கிறார்கள். நீர் அருந்துவதற்காக பின்காலை உலர்ந்த கரையில் வைத்து முன்னங்காலை நீர் விளிம்பில் வைத்து வாயை நீட்டி நீரை தொடும் ஒரு எருமை ஒவ்வொரு நாணிலும் என் விழிகளுக்கு வந்து போகும்.” வில்லை நிறுத்தி காலால் அதன் நுதிபற்றி நாணை இழுத்து விம்மலோசை எழுப்பினான்.

“நாணுக்கு உகந்தது தோலே. ஏனெனில் பிற அனைத்தை விடவும் சுருங்கி விரிவதும் வலுக்கொண்டதும் அது. மானுட உடலே தோலெனும் நாணால் இழுத்துக் கட்டப்பட்டது என்று சரபஞ்சரம் என்னும் நூல் சொல்கிறது. உடலுக்குள் நூல் ஒன்று செல்கிறது. உள்ளே பல நூறு அம்புகள் ஏவப்படுகின்றன. உள்ளேயே அவை இலக்கை கண்டுகொள்கின்றன.”

சுபத்திரை அவன் சொற்களை கேட்டுக் கொண்டு நின்றிருந்தாள். அவள் கண்களைப் பார்த்து “என்ன?” என்றான். “இல்லை” என்று அவள் தலை அசைத்து புன்னகைத்தாள். “சொல்” என்றான். “நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது விற்கலை என்றே தோன்றவில்லை” என்றாள் அவள். “எந்தக் கலையும் அதன் நடைமுறையிலிருந்தே தொடங்கும். அதன் நெறிகளை நோக்கி வளரும். அதன் தத்துவம் நோக்கி ஒடுங்கும். ஒளிகொண்டு தரிசனம் ஆகும்” என்றான் அர்ஜுனன். புன்னகைத்து “அது எளிய ஒற்றைச்செயலென சிறுக்கும் என்பது உலகியல்” என்றாள்.

“விற்கலை இலக்கின் மீதான விளைவென சிறுப்பது என ஒரு முறை நீ சொன்னாய். தேர்ந்த விற்கலை வீரனுக்கு இலக்குகள் ஒரு பொருட்டல்ல. தொடுக்கும் அனைத்து இலக்குகளையும் வென்றுவிட முடியும் என்று அவன் அறிந்தபின் அறைகூவலென இருப்பது அவனது உடலிலும் உள்ளத்திலும் உள்ள எல்லைகள்தான். விற்கலை என்பது அம்பென, வில்லென, தொடுக்கும் தோளென தன்னையே ஆக்கிக் கொள்ளல். அதன் உச்சம் வெறும் விழியென எண்ணமென முழுமை கொள்ளல்.”

அவள் புன்னகைத்து “அறியேன். ஆனால் நீங்கள் இதை சொல்லும்போது ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் முழு உயிரும் வந்து அமைவதை காண்கிறேன். உங்களுக்கு மாற்றாக இச்சொற்களை எடுத்து வைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அவற்றின் பொருள் என்னவென்றாலும் அவை என்னிடம் சொல்லப்படுகின்றன என்பதே என்னை உளம்கிளரச் செய்கிறது” என்றாள்.

அவள் தோளைத் தொட்டு புன்னகையுடன் “சரி, இந்த நாணை தொட்டு இழு” என்றான் அர்ஜுனன். அவள் அவனருகே வந்து தோள்தொட்டு நின்றாள். வில் முனையை அவள் பற்றியதும் “வில் மையத்தை விழிகளால் கணக்கிடாதே. விரல்கள் அறியட்டும்” என்றான். “நாணை அதன் இழுவிசையால் கணக்கிடுவது தொடக்கம். இழுத்து ஒரு முறை விட்டதும் ஒலியிலேயே வில்லை அறிந்து கொள்வான் வில்லவன்.”

நாணிழுத்து செவி வரை நிறுத்தி அம்பு தொடுத்ததும் அவள் விழிகள் இலக்கை கூர்ந்தன. அவள் தோள்களைத் தொட்டு மறுகையால் வில்பிடித்த அவள் கைகளை பற்றியபடி அவன் “உம்” என்றான். அவன் மூச்சு அவள் கழுத்தின் குறுமயிர்களை அசைய வைத்தது. “உம்” என்று அவன் மீண்டும் சொன்னான். அம்பு பறந்து சென்று இலக்கைத் தாக்கி நின்றாடியது.

அவள் வில்லை தாழ்த்தியபின் தலை குனிந்து கொண்டாள். அவள் தோள்களை தொட்டு “என்ன?” என்றான். “இல்லை” என்றபின் அவள் வில்லை கொண்டு சென்று பீடத்தில் வைத்தாள். “என்ன?” என்றபடி அர்ஜுனன் அவள் பின்னால் சென்றான். “சொல், என்ன?” என்றான். அவள் அவன் கண்களை நிமிர்ந்து நோக்கி நாணம் திரண்ட விழிகளுடன் “அந்த அம்பு விடும்போது…” என்றாள். “என்ன?” என்றான் அர்ஜுனன். “அந்த அம்பு விடும் போது அதுவும் ஓர் உச்சகணம் போல் இருந்தது” என்றாள்.

புரியாது திரும்பி இலக்கை நோக்கிவிட்டு அவளைப் பார்த்து “ஆம், அது ஓர் உச்சகணம்தான். இன்னும் அரிய இலக்கை எடுப்போம்” என்றான். “போதும்” என்றபடி அவள் பீடத்தில் அமர்ந்தாள். “எளிதில் சலிப்புற்று விடுகிறாய்” என்றான் அர்ஜுனன். “என்னை தீட்டித் தீட்டி கூர்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அது பொருளற்றது என்று தோன்றுகிறது. இதோ இங்குள்ள இக்கூழாங்கற்கள் அனைத்தும் வான்மழையாலும் காற்றாலும் மென்மையாக்கப்பட்டவை. அதைப்போல இருக்கவே நான் விழைகிறேன்” என்றாள்.

“ஏன்?” என்றான் அர்ஜுனன். “ஒரு செயலின் பொருட்டு கூர்மையாக்கப்பட்டவை படைக்கலங்கள். இக்கூழாங்கற்கள் அப்படி ஓர் இலக்குக்கென அமைந்தவை அல்ல.” அவற்றில் ஒன்றை தூக்கி சிறு பீடம் மீது அமர்த்தி “ஆனால் இறையென அமர்த்தப்பட்டால் பின் கல்லென எவரும் கடந்து செல்ல மாட்டார்கள்” என்றாள். அர்ஜுனன் தன் கையிலிருந்த அம்பை இலக்கு நோக்கி எறிந்துவிட்டு “பேசக் கற்றிருக்கிறாய்” என்றான். “நூற்கல்வியின் பயனே அதுதானே?” என்றாள் சுபத்திரை.

படைக்கலச் சாலைக்குள் வந்து தலைவணங்கிய ஏவலனை நோக்கி திரும்பி அர்ஜுனன் விழிகளால் என்ன என்றான். “செய்தி” என்றான் அவன். “இருவருக்குமா?” என்றான் அர்ஜுனன். அவன் “ஆம்” என்று சொல்ல சொல்லும்படி கையசைத்தான். “மூத்த யாதவரின் படைகள் துவாரகையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன” என்றான் ஏவலன். “படைகளா?” என்றான் அர்ஜுனன். “ஆம், எத்தனை நாட்களுக்கு முன் அவர் மதுராவிலிருந்து கிளம்பினாரென்று தெரியவில்லை. ஆனால் பாலையை இரண்டே நாட்களில் கடந்துவிட்டார்” என்றான்.

அர்ஜுனன் “படைகள் என்றால்?” என்றான். “மதுராவிலிருந்து அவருடன் விருஷ்ணி குலத்து வீரர்களும் அந்தக குலத்து வீரர்களும் வந்தனர். வரும் வழியிலேயே குங்குரர்களும் போஜர்களும் அவருடன் இணைந்து கொண்டிருக்கலாம். அவர்கள் முன்னரே மதுராவை நோக்கி கிளம்பி வரும் வழியில் மூத்த யாதவரை சந்தித்தனர் என்று தோன்றுகிறது.” அர்ஜுனன் தாடியை நீவியபடி சற்றே விழி சரித்து எண்ணம் கூர்ந்துவிட்டு திரும்பி “சினந்து வருகிறார்களா?” என்றான். “ஆம்” என்றான் ஏவலன். “வஞ்சினம் உரைத்து வருவதாக சொன்னார்கள்.”

“என்னிடம் செய்தி சொல்ல உம்மை அனுப்பியது யார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அக்ரூரர். அவர் சொன்ன வார்த்தைகளையே திருப்பி சொன்னேன்” என்றான் ஏவலன். அவனை செல்லும்படி கைகாட்டிவிட்டு திரும்பி சுபத்திரையை பார்த்தான். சுபத்திரை “நான் இதை எதிர்பார்த்தேன். இன்னும் பத்துநாட்கள்தான் மணத்தன்னேற்புக்கு உள்ளன. நான் இங்கிருந்து கிளம்பியாயிற்றா என்று கேட்டு எட்டு ஓலைகள் வந்தன. எவற்றுக்கும் இங்கிருந்து முறையான மறுமொழி செல்லவில்லை. இங்கு தங்களுடன் நான் படைக்கலப் பயிற்சி கொள்வது அரண்மனையில் அனைவரும் அறிந்ததே. மூத்த தமையனாருக்கும் இங்கு அரண்மனை முழுக்க அணுக்கர்கள் உண்டு” என்றாள்.

“பெரும் சினத்துடன் வருகிறார். கட்டற்று சினம் கொள்பவர் என்பது அனைவரும் அறிந்ததே” என்றான் அர்ஜுனன். “ஆம். அது இயல்பே” என்றாள். அர்ஜுனன் அவளை நோக்கி “என்ன செய்யவிருக்கிறாய்?” என்றான். “நான் ஏதும் செய்வதற்கில்லை. மறைத்து எதையும் செய்யும் வழக்கமும் எனக்கில்லை. அவர் வரட்டும். என்னை தன் அவைக்கு அழைத்து கேட்பார். என் உள்ளத்திற்கு உகந்ததை தலைநிமிர்ந்து சொல்வேன்” என்றாள். “அவர் என்னை என்ன செய்வார்?” என்றான் அர்ஜுனன். “தாங்கள் சிவயோகி அல்ல என்று இப்போதே அறிந்திருப்பார். பார்த்த மறுகணமே யாரென்று தெளிவார். போருக்கழைப்பார். அவருடன் கதைப்போரிட நீங்கள் சித்தமாக வேண்டியதுதான்.”

அர்ஜுனன் சிரித்து “எனக்கெனப் போரிட என் தமையனைத்தான் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வரவழைக்க வேண்டும்” என்றான். “விளையாடாதீர்கள். இது அதற்கான நேரமல்ல” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் மீசையையும் தாடியையும் இடக்கையால் நீவியபடி தலை தாழ்த்தி எண்ணத்திலாழ்ந்தான். “இப்போது செய்வதற்கு ஒன்றே உள்ளது. நான் தேர் கூட்டுகிறேன். என்னுடன் கிளம்பு. துவாரகையின் எல்லையை விட்டு இன்றே விலகிச் செல்வோம்.”

“அதன் பெயர் பெண்கவர்தல் அல்ல” என்று அவள் சொன்னாள். “பெண்கவர்ந்து செல்வதற்கும் நெறிகள் உள்ளன. ஆணென தோள் விரித்து எதிர்த்து நின்று அதை ஆற்றவேண்டும். கரந்து செல்ல நான் ஒன்றும் களவு செய்பவளல்ல” என்றபின் “உங்களுக்கு உகந்த முடிவை எடுங்கள். நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்றாள். அர்ஜுனன் “நானும் அதையே சொல்ல விழைகிறேன். நான் அரண்மனைக்கு திரும்புகிறேன். அவர் வரட்டும். எதிர்கொள்கிறேன்” என்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி நின்றபின் ஒரு புன்னகையில் இணைந்து கொண்டனர். “சென்று வா. இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவன் இத்தனை சிறிய களங்களில் தோற்பதற்காக வில்லெடுத்தவன் அல்ல” என்றபின் அவள் தோளைத் தொட்டு “வருகிறேன்” என்றான். அந்தத் தொடுகை அவளை மலரச் செய்தது. புன்னகையுடன் அவள் தலையசைத்தாள்.

தன் அறைக்கு வந்து நீராடி ஆடை அணிந்தபின் நூலறைக்குச் சென்று வில்நூல் ஒன்றை எடுத்து படிக்கத் தொடங்கினான். அவன் அணுக்கன் வாயிலில் வந்து நின்று நிழலாட்டம் அளித்தான். விழிதூக்கிய அர்ஜுனனிடம் “படைகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். நகரமே அச்சத்தில் இருக்கிறது” என்றான். “நகரம் எதற்கு அச்சப்பட வேண்டும்?” என்றான் அர்ஜுனன். “மூத்த யாதவர் வருவது தங்களுக்காகவே என்று அனைவரும் அறிவர்” என்றான் அணுக்கன். “ஆம்” என்றான் அர்ஜுனன். “எவ்வகையிலோ நீங்களும் இளவரசியும் கொண்ட விழைவை இந்நகர் ஒப்புக்கொண்டது. வெளிக்காட்டாமல் அதை கொண்டாடியது. எனவே அச்சம் கொள்கிறது” என்றான்.

அர்ஜுனன் “அவ்வாறு ஏற்றுகொண்டது பிழை என்றால் அதற்குரிய தண்டத்தை அது பெற்றுக் கொள்ளட்டும்” என்றான். “இல்லை… தாங்கள்…” என்று அவன் ஏதோ சொல்ல வர அர்ஜுனன் “நான் என்ன செய்யவேண்டுமென்று எண்ணுகிறீர்?” என்றான். “இப்போது மூத்த யாதவரை களம் நின்று எதிர்கொள்ள தங்களால் இயலாது. அவர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற கதைபோர் வீரர்.” அர்ஜுனன் “ஆம், அறிவேன். ஆனால் அஞ்சி ஓடும் குலமரபு கொண்டவனல்ல நான்” என்றான். “நானும் அறிவேன்” என்றான் அணுக்கன்.

அர்ஜுனன் விழிதூக்கி “நான் யார் என்று அறிவீரா?” என்றான். “ஆம், நான் மட்டும் அல்ல, இந்நகரில் அனைவரும் அறிவர்” என்றான். அர்ஜுனன் எழுந்து தன் இடையில் கைவைத்து “அக்ரூரருமா?” என்றான். “ஆம், அவருக்கும் முன்னரே தெரியும். நகரில் உள்ளோர்க்கு சற்று ஐயமிருந்தது. தாங்கள் வில் கொண்டு செல்வதைக் கண்ட சூதன் ஒருவன் உறுதிபடச் சொன்னபிறகு அவ்வையம் அகன்றது. அல்லது தாங்கள் இளைய பாண்டவராக இருக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் விழைந்ததனாலேயே எளிதில் அடையாளம் கண்டு கொண்டனர்.”

அர்ஜுனன் “யாதவ இளைஞர்கள் என் மேல் சினம் கொள்ளவில்லையா?” என்றான். “ஆம், சினம் கொண்டிருந்தார்கள். ஆனால் தனியாக நகர் புகுந்து இளவரசியின் உளம் வென்றதனால் மெல்ல அவர்கள் அடங்கினார்கள். ஏனெனில் அதிலொரு புராணக்கதையின் அழகு உள்ளது.” அர்ஜுனன் நகைத்து “அவ்வழகை பெருக்குவோம்” என்றான். அணுக்கன் கண்களில் மெல்லிய துயர் வந்தது. “போரென வந்தால்?” என்றான். “நான் இறப்பதற்கு அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் அவ்வண்ணம் நிகழுமென்றால் அது…” என்றபின் அணுக்கன் மங்கிய புன்னகை செய்து “தெய்வங்கள் பெரும் துயர்களை விரும்புகின்றன என்று சூதர்கள் சொல்வதுண்டு” என்றான்.

“மானுடன் அவ்வப்போது தெய்வங்களை சீண்டிப் பார்க்க வேண்டி உள்ளது. பார்ப்போம்” என்றான் அர்ஜுனன். நீள்மூச்சுடன் அணுக்கன் தலை வணங்கி வெளியே சென்றான். பகல் முழுக்க அர்ஜுனன் நூலறையில் இருந்தான். மாலையில் உணவுண்டபின் மீண்டும் படைக்கலச் சாலைக்கு சென்று பயிற்சி கொண்டான். இரவு திரும்பிவந்து நீராடியபின் மஞ்சத்தில் படுத்து அக்கணமே துயின்றான். காலையில் அவன் அறை வாயிலில் நின்ற அணுக்கன் “படைகள் தோரணவாயிலில் நின்றால் தெரியும் தொலைவுக்கு வந்துவிட்டன இளைய பாண்டவரே” என்றான்.

அர்ஜுனன் எழுந்து “ஆம். அவர் நகர் நுழையட்டும். நான் சிவாலயங்களில் வழக்கமான பூசனை முடித்து வரும்போது அவர்களின் நகர்நுழைவு நிகழ்வதற்கு சரியாக இருக்கும்” என்றான். “இன்று தாங்கள் செல்லத்தான் வேண்டுமா?” என்றான் அணுக்கன். “இன்றுதான் செல்ல வேண்டும்” என்று சொல்லி புன்னகைத்தான் அர்ஜுனன். நீராடி சிவக்குறி அணிந்து புலித்தோலை சுற்றிவந்தான். பூசனைப்பொருட்களுடன் அணுக்கன் தொடர ஒற்றைப் புரவித் தேரில் ஏறி தென்மேற்குத் திசை நோக்கி சென்றான்.

இணைச்செண்டுவெளிக்கு அருகே தேர் சென்றபோது நிறுத்தச் சொல்லி தேரின் தண்டில் தட்டினான். தேர் நின்றதும் இறங்கிச் சென்று செண்டுவெளியின் உள்ளே நடந்து போய் செம்மண் விரிந்து கிடந்த அந்த முற்றத்தை நோக்கி நின்றான். அன்றும் குருதி ஊறியிருப்பதாக தோன்றியது. காலையொளி வானில் முகில்களின் ஓரங்களில் மட்டும் சிவப்பாக ஊறியிருக்க அந்த மண் கடற்காற்றில் மெல்லிய புழுதியலைகளை எழுப்பியபடி இருந்தது. இருளுக்குள் ஒரு கணத்தில் பல்லாயிரம் ஆடுகள் முட்டி மோதி அலை அடித்து நின்ற காட்சி வந்து சென்றது.

திரும்பி வந்து தேரிலேறிக்கொண்டு “செல்க!” என்றான். தேர் சென்று சிவன் ஆலயத்துக்கு முன் நின்றது. இறங்கி ஆலயத்தை நோக்கி செல்கையில் உடன் வந்த அணுக்கனிடம் அரிஷ்டநேமி பற்றி ஏதோ கேட்கவேண்டுமென்று எண்ணினான். ஆனால் மறுகணமே அவ்வெண்ணம் கை நழுவி நீரில் விழுந்த எடை மிக்க பொருள் போல் நெஞ்சுக்குள் சென்றது. அரிஷ்டநேமி அந்நகர்விட்டு சென்றபின் ஓரிரு நாட்களிலேயே அந்நகரம் அவரை மறந்தது. நா தவறியும் கூட எவரும் அவர் பெயரை சொல்லாமலாயினர்.

அத்தனை முழுமையான மறதி என்பது உள்ளம் திட்டமிட்டு நிகழ்த்துவது. அது அத்தனை பேரிலும் ஒரே தருணத்தில் நிகழும்போது மட்டுமே அத்தனை பேராற்றல் கொண்டதாக ஆகிறது. அவரை திராட்சைச்சாற்றை கலத்தில் மூடி நூறாண்டு காலம் புளிப்பதற்காக மண்ணில் புதைத்து வைக்கும் தேறல்சமைப்பவர் போல அந்நகரம் தன் உள்ளாழ்த்தில் எங்கோ மறைத்து வைத்தது. அங்கு நிகழ்ந்தவற்றை சூதர்களும் மறந்தனர். ஒருநாள் நகர்சதுக்கத்தில் வந்து கை முழவை மீட்டிப் பாடிய தென்திசைச்சூதன் ஒருவன் அரிஷ்டநேமி ஏழு ஆழுலகங்களில் சென்று மானுடரின் விழைவுகளை ஆளும் தெய்வங்களை பார்த்த கதையை பாடினான்.

கடும்குளிர் பரவிய இருளால் ஆன நீர் பேரிரைச்சலுடன் ஓடும் ஆறொன்றால் சூழப்பட்ட முதல் உலகம். கசக்கும் அமிலத்தாலான இரண்டாவது உலகம். கொந்தளிக்கும் எரிகுழம்பால் சூழப்பட்ட மூன்றாவது உலகம். கண்ணொளிரும் நாகங்களால் சூழப்பட்ட நான்காவது உலகம். பறக்கும் கூருகிர் தெய்வங்களால் சூழப்பட்ட ஐந்தாவது உலகம். செவி உடையும் பேரமைதியால் வேலியிடப்பட்ட ஆறாவது உலகம். கரைத்தழிக்கும் இன்மையால் சூழப்பட்ட ஏழாவது உலகம்.

ஒருசில வரிகளுக்குள்ளேயே அவன் பாடலைக்கேட்டு ஒவ்வொருவராக விலகி செல்லத்தொடங்கினர். பாடி முடிக்கையில் சதுக்கத்தில் அவன் மட்டுமே இருந்தான். திகைப்புடன் தன்னைச் சூழ்ந்த வெறுமையை பார்த்தபின் குறு கிணை தாழ்த்தி தரை தொட்டு தலையில் வைத்து வணங்கி அவன் திரும்பி சென்றான். அதன் பின் அவரைப்பற்றி பாடும் எவரும் நகருக்குள் நுழையவில்லை.

ஏழு சிவாலயங்களில் முறையே வணங்கி நீரும் வில்வமும் செவ்வரளியும் கொண்டு நெற்றியிலும் சென்னியிலும் சூடி அர்ஜுனன் திரும்பினான். ஆலயத்தில் அவனை பார்த்த சிவநெறியினர் அனைவர் விழிகளிலும் ஒன்றே இருந்தது. திரும்பி ஒளி எழத்தொடங்கியிருந்த சாலைக்கு வந்து தேரில் ஏறிக்கொண்டபோது எதிர்வந்த அனைவர் விழிகளும் அவனைக் கண்டு திகைத்தன. இறந்தவன் உயிர் கொண்டு வருவதை பார்ப்பது போல என்று எண்ணிக் கொண்டான்.

அவனது தேர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு வருவதற்குள்ளாகவே இடுங்கிய சாலையின் இருபுறங்களிலும் புரவிகளில் வந்து சூழ்ந்துகொண்ட யாதவ வீரர்கள் அவனை மறித்தனர். வாளுடன் முதலில் வந்தவன் “நான் குங்குர குடித்தலைவன் சாம்பன். அவர் எங்களுடைய படைத்தலைவர் உதயன். இளைய பாண்டவரே, தங்களை பிடித்து வரும்படி மூத்த யாதவரின் ஆணை. மீறுவீர்கள் என்றால் எங்கள் படைகளுடன் போருக்கெழுகிறீர்கள் என்றே பொருள்” என்றான்.

“நான் அவரை சந்திக்க சித்தமாக இருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “தேரிலேயே நான் வரலாமென்றால், அவ்வண்ணம் ஆகுக. அல்லது என்னை பிடித்து இழுத்துச் செல்லவேண்டும் என்று ஆணை என்றால் அது நிகழட்டும்” என்றான். “தாங்கள் தேரிலேயே வரலாம்” என்றான் உதயன். “ஏனென்றல் இன்னும் நீங்கள் தண்டிக்கப்படவில்லை.” அவன் தேரைச் சூழ்ந்து யாதவரின் புரவிகள் நெருக்கியடித்தன. அவன் தேரை இழுத்த புரவி தும்மி தலையாட்டியபடி தன் விருப்பின்மையை தெரிவித்தது.

துவாரகையின் அரண்மனையின் பெருமுற்றத்தை அடைந்ததும் “இறங்குங்கள் இளைய பாண்டவரே” என்றான் உதயன். “எங்கிருக்கிறார் மூத்த யாதவர்?" என்றான் அர்ஜுனன். "குடிப்பேரவையில்” என்று உதயன் சொன்னான். “உங்கள் பிழையுசாவல் அங்குதான்.” பிறவீரர்கள் அவன் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் கைகள் இயல்பாக அசைந்தபோதும் திடுக்கிட்டு உடல் அதிர்ந்தனர்.

அர்ஜுனன் நிமிர்ந்த தலையுடனும் சீரான காலடிகளுடனும் அரண்மனையின் இடைநாழிகளில் நடந்தான். வேலுடனும் வாளுடனும் இரு நிரைகளில் காவல் நின்ற வீரர்கள் அவனை வியப்புடன் நோக்கினர். தலை வணங்கி வழி திறந்த ஏவலர்கள், கையசைவில் ஆணை பெற்று ஓடி செய்தி அறிவிக்கச் சென்ற வீரர்கள் அனைவர் விழிகளும் ஒரே உணர்வையே கொண்டிருந்தன. அணுகும்போதே குடிப்பேரவையின் கலைந்த பேரொலியை அர்ஜுனன் கேட்டான். உள்ளே சென்று அவன் வரவை அறிவித்த ஏவலன் தலைவணங்கி அவன் உள்ளே செல்லலாம் என்று கை காட்டினான்.

உதயன் நெருங்கி “அவைபுகுங்கள் இளைய பாண்டவரே” என்றான். அர்ஜுனன் கதவைக் கடந்து உள்ளே சென்றதும் அதுவரை ஓசையிட்டுக் கொண்டிருந்த பேரவை அமைதியடைந்தது. பின் சினம் கொண்ட யானை போல் அது நீள் மூச்சொன்றை எழுப்பியது. அர்ஜுனன் தலைவணங்கி “பேரவைக்கு என் பணிவை அறிவிக்கிறேன்” என்றபின் திரும்பி அரியணை அருகே பொற்பீடத்தில் அமர்ந்திருந்த பலராமரை பார்த்து “மூத்த யாதவரையும் அரசரையும் வணங்குகிறேன்” என்றான்.

வெயிலில் அலைந்தமையால் பழுத்து செம்புநிறம் கொண்டிருந்த பெரும் கரங்களை தன் மடியில் கோத்து வைத்து பற்களைக் கடித்தபடி பலராமர் அவனை நோக்கிக் கொண்டிருந்தார். அவனுக்கு பீடம் ஏதும் அளிக்கப்படவில்லை. எதிரிலிருந்த அக்ரூரர் “சிவயோகியே, தாங்கள் குற்றம்சாட்டப்பட்டு இந்த அவைக்கு வந்துள்ளீர். தாங்கள் இந்த அவையை ஏமாற்றி விட்டீர்கள் என்றும் இளவரசியிடம் மாற்றுருக்கொண்டு பழகினீர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர். தங்களை அதன் பொருட்டு தண்டிக்க வேண்டுமென்று யாதவர்களின் குலத்தலைவர்கள் விரும்புகிறார்கள்” என்றார்.

அர்ஜுனன் சற்றே தலை சாய்த்து வணங்கினான். குடித்தலைவர் ஒருவர் எழுந்து “தங்கள் பெயரென்ன என்று அவைக்கு சொல்லுங்கள்” என்றார். “ஃபால்குனன்” என்றான் அர்ஜுனன். “சென்ற சில ஆண்டுகளாக நான் வாமார்க்க சிவாசாரத்தில் ஒழுகி வருகிறேன்.” அவர் “குலம்?” என்றார். அவன் “நான் அஸ்தினபுரியின் அரசர் பாண்டுவின் மைந்தன். இந்திரப்பிரஸ்தம் ஆளும் யுதிஷ்டிரரின் இளையோன். என்னை அர்ஜுனன் என்றும் பார்த்தன் என்றும் அழைப்பார்கள்” என்றான். அவை முழுக்க மெல்லிய முணுமுணுப்பு கடந்து சென்றது. “இதை மறைத்து இங்கு ஏன் இத்தனை நாள் இருந்தீர்கள்?” என்றார் ஒரு குடித்தலைவர். “நான் மறைக்கவில்லை. கூறவும் இல்லை. ஏனெனில் கூறும்படி இந்த அவையோ அரசோ என்னை கோரவில்லை. நான் யார் என்பது அரசருக்குத் தெரியும். அவரே இந்நாட்டின் காவலர் என்பதனால் நான் இந்நாட்டை ஏமாற்றவில்லை” என்றான்.

அக்ரூரர் இளைய யாதவரை பார்த்து “தங்கள் சொல்லை அவை நாடுகிறது” என்றார். “ஆம், எனக்குத் தெரியும்” என்றார் இளைய யாதவர். “நான் எதையும் பேரவையிடம் ஒளிப்பதில்லை. இளைய பாண்டவர் எனது தோழர். ரைவத மலையில் இத்தோற்றத்தில் அவரைப் பார்த்தபோது பிறர் அவரை எளிதில் கண்டு கொள்ள முடியாதென்று தோன்றியது. எனவே இவ்வுருவிலேயே இங்கு வரும்படி நான் ஆணையிட்டேன்.” கைகளை பீடத்தில் அறைந்தபடி முன்னால் சாய்ந்து “எதற்கு?” என்று உரத்த பெருங்குரலில் பலராமர் கேட்டார்.

“என் தங்கையை மணம் கொண்டு செல்வதற்கு” என்றார் இளைய யாதவர். வெடிப்போசையுடன் தன் தொடையில் அறைந்தபடி எழுந்து “என் ஆணையை மீறி தங்கையை பிறனுக்கு அளிக்க துணிந்து விட்டாயா? தனி அரசொன்றுக்கு தலைவன் என்று ஆணவம் கொண்டாயா? இப்போதே உன்னை தனிப்போருக்கு அழைக்கிறேன்” என்றார். “இல்லை மூத்தவரே” என்று இளைய யாதவரும் எழுந்தார். “ஆணவமில்லை இது. என் தங்கையின் உள்ளம் எதை விரும்புகிறது என்று அறியும் விழைவு மட்டுமே. தாங்கள் அமைக்கவிருக்கும் மணத்தன்னேற்பை நான் மறுக்கவும் இல்லை. அதை குலைக்க எண்ணவும் இல்லை. மணத்தன்னேற்பை தங்கை விழைகிறாளா என்று அறிய விரும்பினேன். அவளுக்குரிய மணமகன் என்று இளைய பாண்டவரை அவள் எண்ணினால்கூட அவரிடம் மணத்தன்னேற்புக்கு வந்து போட்டியில் பங்கேற்று வென்றுசெல்லவே நான் ஆணையிடுவேன். இங்கு இவர் வந்ததும் தங்கியதும் தங்கையுடன் பழகியதும் அறப்பிழை அல்ல” என்றார். “யாதவ குலப்பெண்கள் ஆண்களுடன் பழகுவதும் தங்கள் உள்ளம் என்ன என்று அறிந்து கொள்வதும் இப்போதுமட்டும் நிகழ்வதும் அல்ல. அவர்கள் தங்கள் மூதன்னையருக்கு உகந்தவற்றையே செய்கிறார்கள். இதை மூதன்னையர் விலக்குவாரென்றால் இப்போது இங்கு எரியும் விளக்குகளில் ஒன்றாவது அணையட்டும்” என்றார். பலராமர் திரும்பி பேரவையின் கூடத்தில் எரிந்த நெய்யகல் சுடர்களை மாறி மாறி பார்த்தபின் மெல்ல தோள் தளர்ந்து மேல்மூச்சு விட்டார். அர்ஜுனன் புன்னகையை அடக்கியபடி தலை குனிந்தான். பின் நிரையில் யாரோ “மூத்தவர் இங்குள்ள சாளரங்களில் ஒன்றைத் திறந்து அதன் பின் சுடர்களில் ஒன்று அணைகிறதா என்று பார்த்திருக்க வேண்டும்” என்றார். இரு மெல்லிய சிரிப்பொலிகள் கேட்டன. அர்ஜுனன் அவனைப் பார்க்க அவன் விழிகள் சிரிப்புடன் அர்ஜுனன் விழிகளை சந்தித்தன.

பலராமர் “அவ்வண்ணமெனில் இவன் பிழையேதும் செய்யவில்லை என்கிறாயா?” என்றார். “எனது ஆணையையே நிறைவேற்றினார். பிழை செய்திருந்தாரென்றால் அது நான் செய்த பிழைதான்” என்றார் இளைய யாதவர். “இளவரசியை உள்ளம் கவர்வதற்கு நீங்கள் முயன்றீர்களா?” என்று அக்ரூரர் அர்ஜுனனிடம் கேட்டார். “இது என்ன வினா அமைச்சரே? அழகிய இளம்பெண்ணின் உள்ளம் கவர விழையாத ஆண்மகனென்று எவரேனும் இப்புவியில் உண்டா? அத்தனை முதியவனா நான்?” என்றான் அர்ஜுனன். அவையில் பலர் சிரித்து விட்டனர்.

அவனை நோக்கி திரும்பி சினத்துடன் கையசைத்த அக்ரூரர் “இது நகையாட்டல்ல” என்றார். “ஆம், உள்ளம் கவர முயன்றேன்” என்றான் அர்ஜுனன். “கவர்ந்துளேனா என்று இளவரசி சொல்வார்கள்.” அவையில் வலப்பக்க கீழ்நிரையில் இளைய யாதவரின் எட்டு அரசியரும் அமர்ந்திருந்தனர். சத்யபாமை எழுந்து “இளவரசியை அவைக்கு கொண்டுவந்து உசாவும் மரபு யாதவருக்கில்லை. பெண்ணை வினவவோ தண்டிக்கவோ யாதவகுடியில் ஆண்களுக்கு உரிமையில்லை” என்றாள். பலராமர் தத்தளிப்புடன் “ஆம், ஆனால் நான்…” என்றார். “அவளுடைய பிழையோ நிறைவழிவோ கண்டறிய வேண்டியவர் அவள் அன்னை. இங்கு அவள் அன்னையின் இடத்திலிருக்கும் நான். எங்கள் முடிவு இங்கெழுந்தருளியுள்ள மூதன்னையர் சொல்” என்றாள்.

“அவ்வண்ணமெனில் நீங்களே உசாவி உரையுங்கள்” என்றார். “நான் அவளிடம் கேட்டேன்” என்றாள் சத்யபாமை. பலராமர் தயக்கத்துடன் “என்ன சொன்னாள்?” என்றார். “இளைய பாண்டவரை அன்றி பிறிதொருவரை மணமகனாக ஏற்க முடியாது என்று சொன்னாள்.” குளிர் நீர் கொட்டப்பட்ட யானை போல் உடல் விதிர்க்க பலராமர் நின்றார். ஏதோ சொல்வதற்காக எழுந்த அவர் இரு கைகளும் தளர்ந்தவை போல் தொடையுரசி விழுந்தன. குலத்தலைவர் ஒருவர் “பிறகென்ன? யாதவ முறைப்படி திருமணமே முடிந்து விட்டது. இனி எவருக்கும் சொல்லில்லை” என்றார்.

“இல்லை, இதை நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை” என்று கை தூக்கி கூவியபடி அரங்கின் முகப்புக்கு வந்தார் பலராமர். “என் உயிர் உள்ள அளவும் இவனை அவள் கொள்ள ஒப்புக்கொள்ள மாட்டேன். அது நிகழப்போவதில்லை” என்றார். சத்யபாமா “இனி மணத்தன்னேற்பு நிகழ முடியாது. அவளது தன்னேற்பு முடிந்துவிட்டது” என்றாள். என்ன செய்வதென்றறியாது பதறும் உடலுடன் மேடையில் பலராமர் சுற்றி வந்தார். உடைந்த குரலில் “நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எவ்வகையிலும் ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்றார்.

“என்ன செய்ய எண்ணுகிறீர்கள் மூத்தவரே?” என்றாள் சத்யபாமா. “அவளை இங்கிருந்து அழைத்துச் செல்வேன். மதுராவில் என் குலத்துக்கு முன் நிறுத்துகிறேன். அங்கு முடிவெடுக்கிறேன்.” அவள் “இங்கிருந்து அவளை தாங்கள் கொண்டு செல்ல முடியாது” என்று உறுதியாகச் சொன்னாள். “இங்கிருக்கும்வரை அவளுக்கு நான் அன்னை. எந்த யாதவப் பெண்ணும் அவள் விழைவை மீறி மணம் கொள்ள மாட்டாள். ஷத்ரியப்பெண் போல் யாதவப்பெண் அடிமையோ உடைமையோ அல்ல.”

“அப்படியென்றால்…” என்றபின் நின்று சுற்றிலும் திரும்பிப் பார்த்து அருகே நின்ற சிறிய மண்டபத்தூணை ஓங்கி தன் கையால் அறைந்தார் பலராமர். அது விரிசல்விட்டு மேற்கூரை சற்று தணிய சரிந்தது. காலால் ஓங்கி உதைத்து அதை கிரீச்சிட உடைத்து கையில் ஏந்தி சுழற்றியபடி அர்ஜுனனை நோக்கி வந்தார். கைகளைக் கட்டியபடி விழிகளைக் கூட அசைக்காமல் அவன் நின்றான். அத்தூணைச் சுழற்றி அவனை அடிக்க வந்த அவர் அவ்வசைவின்மை கண்டு தயங்கினார். “தங்கள் கையால் கொல்லப்படுதல் இந்நாடகத்தின் இறுதி அங்கமென்றால் அவ்வண்ணமே ஆகட்டும் மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

ஓசையுடன் அத்தூணை தரையில் வீசியபடி “என்ன செய்யவிருக்கிறாய்?” என்றார். “இதோ இங்கிருக்கும் ஐங்குல யாதவருக்கும் அங்கு அமர்ந்திருக்கும் அரசருக்கும் அவர் அறத்துணைவியருக்கும் தங்களுக்கும் தலைவணங்கி ஒன்றை சொல்வேன். இந்த அவையிலிருந்து என் இல்லறத் துணைவியை அழைத்துக் கொண்டு நகர்நீங்கவிருக்கிறேன். எங்களை தடுக்கும் எவரும் என் வில்லுக்கு நிகர் நிற்க வேண்டும்” என்றபின் அர்ஜுனன் திரும்பி சத்யபாமையை நோக்கி “முறைப்படி தங்கள் ஒப்புதலை மட்டுமே நான் கோரவேண்டும் பேரரசியே” என்றான்.

“ஆம், என் மகளை உங்களுக்கு கையளிக்கிறேன்” என்றபின் சத்யபாமா திரும்பி தன் சேடியிடம் “இளவரசியை அவைபுகச்சொல்” என்றாள். அச்சொல்லுக்கு காத்திருந்தது போல் வாயிலுக்கு அப்பால் இருந்து இருபுறமும் சேடியரால் அழைத்து வரப்பட்ட சுபத்திரை தலைகுனிந்து கைகூப்பி மெல்ல காலடி எடுத்து வைத்து அவைக்கு வந்தாள். அவளைக் கண்டதும் அவை அறியாது வாழ்த்தொலி எழுப்பியது. மூத்த யாதவர் ஒருவர் “மணமங்கலம் பொலிக!” என்றார்.

அர்ஜுனன் அவையை குறுக்காகக் கடந்து சுபத்திரையின் அருகே சென்றான். சத்யபாமை சுபத்திரையின் வலதுகையைப் பற்றி அவனிடம் நீட்டி “கொள்க இளைய பாண்டவரே” என்றாள். அவன் வியர்த்துக் குளிர்ந்திருந்த அக்கையை பற்றிக் கொண்டான். அவையில் வாழ்த்தொலி எழுந்தது. இருவரும் சத்யபாமாவை தாள் வணங்கினர். “தங்கள் நற்சொற்கள் துணையிருக்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “வீரரைப் பெறுக! குலக்கொடி அறாது காலங்களை வெல்க!” என்று சொன்ன சத்யபாமா திரும்பி தன் அருகே நின்ற மங்கலச்சேடியின் கையிலிருந்த எண்மங்கலம் அடங்கிய தாலத்திலிருந்து மலர்களையும் அரிசியையும் எடுத்து அவர்கள் தலைமேல் இட்டு வாழ்த்தினாள்.

சுபத்திரையின் கையை பற்றியபடி அவைக்கு வந்து நின்ற அர்ஜுனன் அரியணையில் அமர்ந்திருந்த இளைய யாதவரையும் அவையில் பதட்டத்துடன் எழுந்து நின்றுவிட்டிருந்த யாதவ குலங்களையும் நோக்கி தலை வணங்கிவிட்டு வாயிலை நோக்கி நடந்தான். “பிடியுங்கள் அவனை” என்று பலராமர் கூவினார். “இதுதான் உனது முடிவென்றால் அவன் விதவையாக என் தங்கை வாழட்டும்” என்று இளைய யாதவரிடம் கூச்சலிட்டுவிட்டு “கொல்லுங்கள்… தலையை கொண்டுவந்து என் முன் இடுங்கள்” என்றார்.

வாட்களை உருவிக்கொண்டு ஓடி வந்த யாதவ குலத்து இளைஞர்களை நோக்கி அக்ரூரர் கைகளைத் தூக்கி கூவினார். “இது அரசவை. இங்கு ஒருவரோடு ஒருவர் வாள்கோக்க அனுமதி எப்போதுமில்லை. பூசல் என்றால் அது நிகழவேண்டியது அரண்மனை வளாகத்திற்கு வெளியே.” ஸ்ரீதமர் “ஆம், இவ்வரண்மனைக்குள் ஒருவருக்கொருவர் வாள் உருவும் எவரும் அக்கணமே தண்டிக்கப்படுவார்கள். அது மூத்த யாதவராயினும் நெறி ஒன்றே” என்றார்.

இளைய யாதவர் கையசைத்து “இந்நகரம் அந்தகக் குலத்து பட்டத்தரசி சத்யபாமையின் சொல்லுக்கு அடங்கியது. இந்நகரில் படைகளோ குலவீரர்களோ அவளுக்கு எதிராக எழமாட்டார்கள். எனவே முனிந்து இங்கு வந்துள்ள யாதவ குலங்கள் தங்கள் போரை நிகழ்த்தட்டும். அதில் துவாரகையினர் தலையிடவும் மாட்டார்கள்” என்றார். “ஆம், இது எங்கள் போர். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார் குங்குர குலத்தலைவர் சம்பிரதீகர். “வாளை எடுங்கள் இளையோர்களே! எத்தனை தொலைவு இவர்கள் செல்வார்கள் என்று பார்ப்போம்” என்று கூச்சலிட்டபடி வெளியே ஓடினார். அவரது வீரர்களும் போர்க்குரலுடன் தொடர்ந்தோடினர்.

அவையின் எட்டு பெருவாயில்களையும் இழுத்துத் திறந்து அதனூடாக உள்ளிருந்த யாதவ வீரர்கள் வெளியே பாய்ந்தனர். இடைநாழிகளை நிரப்பி முற்றத்தில் இறங்கினர். சுபத்திரையின் கையை பற்றிக்கொண்டு நிமிர்ந்து நடந்து வந்த அர்ஜுனன் இடைநாழியைக் கடந்து படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தான். திரும்பி அருகே நின்ற வீரன் ஒருவனின் வில்லையும் அவன் தோளில் இருந்த ஆவநாழியையும் வாங்கிக் கொண்டு தேரிலேறிக்கொண்டான். சுபத்திரை தேரில் பாகனுக்குரிய தட்டில் அமர்ந்து கடிவாளத்தை இழுத்து இடக்கையால் மெல்ல சுண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர் உயிர் கொண்டது.

குதிரைகள் தலை தூக்கி கடிவாளத்தை மெல்ல இழுத்து பிடரி சிலிர்த்தன. பிறிதொரு முறை கடிவாளத்தை சுண்டியபின் அவள் ஆணையிட இரை நோக்கிப் பாயும் சிறுத்தை என உறுமியபடி பெருமுற்றத்தின் சரிந்த கல்பாதையில் குளம்படிகள் பெருகிச்சூழ்ந்து ஒலிக்க சகடங்களைச் சுற்றிய இரும்புப் பட்டை கல்லில் பட்டு பொறிகள் சீறித் தெறிக்க பாய்ந்தோடி அரண்மனையின் உள்கோட்ட காவல் மாடம் அமைந்த வாயிலை இமைப்பொழுதில் கடந்து பெருஞ்சாலையில் இறங்கியது அவர்களின் தேர்.

பகுதி ஐந்து : தேரோட்டி - 32

சகடங்களின் ஒலி எழுந்து சாலையைச் சூழ்ந்திருந்த மாளிகைகளின் சுவர்களில் பட்டு எதிரொலித்து முழக்கமெனச் சூழ சாலைகளில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர்களையும் புரவிகளையும் பல்லக்குகளையும் விலங்குகளையும் பதறி இருமருங்கும் ஒதுங்கச் செய்தபடி பாய்ந்து முன்னால் சென்றது அர்ஜுனனும் சுபத்திரையும் சென்ற தேர். தேர்த்தட்டில் எழுந்து பின்பக்கம் நோக்கி நின்ற அர்ஜுனன் தன் வில்லை குலைத்து சற்று அப்பால் கையிலொரு பெரிய மரத்தொட்டியுடன் வந்து கொண்டிருந்த முதிய பணியானையின் காதுக்குக் கீழே அடித்தான்.

சற்றே பார்வை மங்கலான முதிய களிற்றுயானை அலறியபடி சினந்து பின்னால் திரும்பி ஓடியது. இன்னொரு அம்பால் அதன் முன்னங்காலில் வயிறு இணையுமிடத்தில் அடித்தான். காலை தூக்கி நொண்டியபடி திரும்பி அரண்மனையின் பெருவாயிலின் குறுக்காக நின்றது. அவர்களின் தேரைத் தொடர்ந்து முற்றத்திற்கு ஓடிவந்த யாதவர்கள் தங்கள் தேர்களிலும் குதிரைகளிலும் ஏறி அதட்டல் ஒலியுடன் கூவி ஒருவரை ஒருவர் ஏவியபடி குளம்புகளும் சகடங்களும் சேர்ந்து ஒலிக்க பாய்ந்து வந்தபோது வாசலை மறித்ததுபோல் குழம்பிச் சினந்த பெரிய யானை நின்று கொண்டிருந்தது.

“விலக்கு! அதை விலக்கு!” என அவர்கள் கூவினர். யானையைவிட பாகன் குழம்பிப்போயிருந்தான். அதன் கழுத்துக் கயிற்றைப் பிடித்து துரட்டியை ஆட்டி கூவியபடி “வலது பக்கம்! வலதுபக்கம்!” என்று ஆணையிட்டான். முதியயானைக்கு செவிகளும் கேளாமலாகிவிட்டிருந்தன. ஒருகாலத்தில் அணிவகுப்பின் முன்னால் நடந்ததுதான். முதுமையால் சிந்தையிலும் களிம்பு படர்ந்திருந்தது. அது நின்ற இடத்திலேயே உடலைக்குறுக்கி வாலைச்சுழித்து துதிக்கையை சுருட்டியபடி பிளிறிக்கொண்டு சுழன்றது. கால்களை தூக்கியபடி இருமுறை நொண்டி அடித்தபின் எடை தாளாது மடிந்த மறு காலை சரித்து வாயிலிலேயே படுத்துவிட்டது.

பாய்ந்துவந்த புரவிகள் தயங்கி விரைவழியமுடியாது பின்னால் திரும்பி கனைத்து வால் சுழற்றிச் சுழல தொடர்ந்து வந்த தேர்கள் நிற்க அவற்றில் முட்டி சகடக்கட்டைகள் கிரீச்சிட நின்றன. ஒரு புரவி நிலை தடுமாறி யானையின் மேல் விழுந்தது. அதிலிருந்த வீரன் தெறித்து மறுபக்கம் விழ சினந்த யானை துதிக்கையைச் சுழற்றி தரையை அடித்தபடி காலை ஊன்றி பாதி எழுந்து பெருங்குரலில் பிளிறியது. ஒன்றுடன் ஒன்று முட்டி தேர்களும் புரவிகளும் முற்றத்தில் குழம்பின. தேரிலிருந்த ஒருவன் சவுக்கை வீசியபடி “விலகு! விலகு!” என பொருளின்றி கூச்சலிட்டான்.

சுபத்திரை நகைத்தபடி “மறுபக்கச் சிறு வாயில்களின் வழியாக சற்று நேரத்தில் அவர்கள் தொடர்ந்து வந்து விடுவார்கள்” என்றாள். “எனக்குத் தேவை சில கணங்கள் இடைவெளி மட்டுமே” என்றான். “இந்நகரம் சக்கரச் சூழ்கை எனும் படையமைப்பு முறையில் அமைக்கப்பட்டுள்ளது அறிவீர்களா?” என்றாள் சுபத்திரை. “அறிவேன்… அதை எதிர்த்திசையில் சுழன்று கடக்கவிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

சுபத்திரை புரவியை சவுக்கால் தொட்டு பெருங்குரலில் விரைவுபடுத்தியபடி திரும்பி “பாலை நிலத்தில் மெல்லிய கூம்புக்குழிகளை பார்த்திருப்பீர்கள். அதனுள் பன்றி போன்ற அமைப்புள்ள சிறு வண்டு ஒன்று குடிகொள்கிறது. இங்கு அதை குழியானை என்பார்கள். அக்குழியின் விளிம்பு வட்டம் மென்மையான மணலால் ஆனது. காற்றில் அது மெல்ல சுழன்று கொண்டிருக்கும். அச்சுழற்சியில் எங்கேனும் கால் வைத்த சிற்றுயிர் பிறகு தப்ப முடியாது. சுழற்பாதையில் அது இறங்கி குழியானையின் கொடுக்குகளை நோக்கி வந்து சேரும். தப்புவதற்கும் வெளியேறுவதற்கும் அது செய்யும் அனைத்து முயற்சிகளும் மேலும் மேலும் குழி நோக்கி அதை வரச்செய்யும்” என்றாள்.

சாலையில் எதிரே வந்த இரு குதிரைவீரர்களை அர்ஜுனனின் அம்புகள் வீழ்த்தின. குதிரைகள் திரும்பி கடிவாளம் இழுபட நடந்து சென்று சாலையோரத்தில் ஒண்டி நின்று தோல் அசைத்து பிடரி சிலிர்த்து குனிந்தன. “குழியானையின் சூழ்கையை நோக்கி நெறிகற்று அமைக்கப்பட்டது இந்நகரம்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “சக்கரவியூகம் பன்னிரண்டு வகை என்று அறிவேன். அதில் இது ஊர்த்துவ சக்கரம்” என்றான். “ஆம், செங்குத்தாக மேலெழும் மேருவடிவம் இது. இதுவரை எவரையும் இது தப்பவிட்டதில்லை” என்றாள். “நன்று” என்றான். சுபத்திரை கடிவாளத்தை சுண்டினாள். காற்றில் சவுக்கை வீசி குதிரைகளுக்கு மேல் சவுக்கோசை எப்போதும் இருக்கும்படி செய்தாள்.

“நூற்றெட்டு காவல்கோபுரங்கள் அறிவிப்பு முரசுகளுடன் இந்நகரில் உள்ளன. மானுட உடலின் நூற்றெட்டு நரம்பு நிலைகளைப் பற்றி சொன்னீர்கள். அவற்றுக்கு நிகர் அவை. முரசுகளின் மூலமே இந்நகரம் அனைத்து செய்திகளையும் தன்னுள் பரிமாறிக்கொள்ள முடியும். மூன்றாவது திகிரிப் பாதையை நாம் அடைவதற்குள் இந்நகரின் அனைத்துப் படைகளும் நம்மை முற்றும் சூழ்ந்துவிடும்” என்றாள்.

“பார்ப்போம். எந்த சூழ்கையையும் உடைப்பதற்கு அதற்குரிய வழிகள் உண்டு” என்ற அர்ஜுனன் அவள் இடக்கையை அசைத்து தேரை திருப்பிய கணத்திலேயே தொடர்ச்சியாக பன்னிரண்டு அம்புகளை விட்டு இரு சிறு பாதைகளினூடாக தொடர்ந்து பாய்ந்து மையச்சாலைக்கு அவனை பின்தொடர்ந்த புரவிப்படையை அடித்து வீழ்த்தினான். நரம்பு முனைகளில் அம்புகள் பட்ட புரவிகள் கால் தடுமாறி விரைந்து வந்த விசையிலேயே தரையில் விழுந்து புரண்டு கால்கள் உதைத்து எழுந்து நிற்க முயல தொடர்ந்து வந்த புரவிகளால் முட்டி மீண்டும் தள்ளப்பட்டன. நிலை தடுமாறிய அப்புரவிகள் சரிந்து விழ அவற்றின்மேல் பின்னால் வந்த புரவிகள் முட்டிச் சரிந்தன.

கடலலைகள் ஒன்றன்மேல் ஒன்று ஏறிப் புரண்டு சரிவது போல் புரவிகள் விழுவதை அரைக்கணத்தில் ஓரவிழியால் சுபத்திரை கண்டாள். ஒரு தேர் மட்டுமே செல்வதற்கு வழியிருந்த சிறு சந்துக்குள் விரைவழியாமலேயே உள்ளே நுழைந்தாள். நகரெங்கும் காவல் முரசுகள் ஒலிக்கத் துவங்குவதை அர்ஜுனன் கேட்டான். சுபத்திரை திரும்பி “தெளிவான ஆணை” என்றாள். “நம் இருவரையும் கொன்று சடலமாகவேனும் அவை சேர்க்கும்படி மூத்தவர் கூறுகிறார்.” அர்ஜுனன் “நன்று, ஆடல் விரைவுசூழ்கிறது” என்றான்.

இருமருங்கும் மாளிகைகள் வாயில்கள் திறந்து நின்ற அச்சிறு பாதையில் நான்கு புரவி வீரர்கள் கையில் விற்களுடன் தோன்றினர். அம்புகள் சிறு பறவைகளின் சிறகோசையுடன் வந்து தேரின் தூண்களிலும் முகப்பிலும் பாய்ந்து நின்றன. கொதிக்கும் கலத்தில் எழும் நீராவி என தேர்த் தட்டில் நின்று நெளிந்த அர்ஜுனன் அவற்றை தவிர்த்தான். பாகனின் தட்டில் முன்னால் இருந்த தாமரை இதழ் மறைப்புக்குக் கீழே தலையை தாழ்த்தி உடல் ஒடுக்கி கடிவாளத்தை சுண்டி இழுத்து புரவிகளை விரைவுபடுத்தினாள் சுபத்திரை. அர்ஜுனனின் அம்புகள் பட்டு இரு புரவி வீரர்கள் தெருவில் இருந்த கற்பாதையில் உலோகக் கவசங்கள் ஓசையிட விழுந்தனர். புரவிகள் திகைத்து பின்னால் திரும்பி ஓடின.

ஒரு குதிரை அம்புபட்டு நொண்டியபடி தொடர்ந்து வந்து கொண்டிருந்த புரவிகளை நோக்கி ஓட அவற்றை ஓட்டியவர்கள் நிலைகுலைந்து கடிவாளத்தை இழுக்கும் கணத்தில் அவர்களின் கழுத்திலும் தோள்களிலும் அர்ஜுனனின் அம்புகள் பாய்ந்தன. தேர் அவர்களை முட்டி இருபக்கமும் சிதறடித்தபடி மறுபக்கமிருந்த அகன்ற சாலைக்குப் பாய்ந்து சென்று இடப்பக்கமாக திரும்பி மேலும் விரைவு கொண்டது. தேர் திரும்பும் விசையிலேயே கைகளை நீட்டி சுவரோரமாக ஒதுங்கி நிலையழிந்து நின்றிருந்த வீரனின் தோளிலிருந்து ஆவநாழியைப் பிடுங்கி சுழற்றி தன் தோளில் அணிந்து கொண்டான் அர்ஜுனன். அதிலிருந்த அம்புகளை எடுத்து தன் எதிரே வந்த யாதவ வீரர்களை நோக்கி செலுத்தினான். ஒருவன் சரிய இன்னொருவன் புரவியை பின்னுக்கிழுத்து விளக்குத்தூணுக்குப்பின் ஒதுங்கி தப்பினான்.

“துறைமுகத்தை நோக்கி…” என்றான் அர்ஜுனன். “துறைமுகத்திலிருந்து கலங்களில் நாம் தப்ப முடியாது. எந்தக் கலமும் துறை விட்டெழுவதற்கு இரண்டு நாழிகை நேரமாகும். அதற்குள் நம்மை எளிதாக சூழ்ந்து கொள்ள முடியும்” என்று சுபத்திரை கூறினாள். “துறைமுகத்துக்கு செல்லும் பாதை சரிவானது. நம் புரவிகள் உச்சகட்ட விரைவை அடைய முடியும்” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றபடி அவள் மயில் போல அகவி சவுக்கை இடக்கையால் சுழற்றி புரவிகளை அறைந்தாள். மெல்லிய தொடுகையிலேயே சிலிர்த்து சினம் கொண்டு பாயும் வெண்புரவிகள் ஓசையுடன் புட்டங்களில் விழுந்த சாட்டையடிக்கு தங்களை முற்றிலும் மறந்தன. குளம்படி ஓசை கொண்டு இருபுறமும் இருந்த சுவர்கள் அதிர்ந்தன.

கல் பரவிய தரை அதிர்ந்து உடைந்து தெறிப்பதுபோல் சகட ஒலி எழுந்தது. அர்ஜுனனின் தலை மயிர் எழுந்து பின்னால் பறந்தது. தாடி சிதறி உலைந்தது. சுபத்திரையின் மேலாடை அவள் தோளை விட்டெழுந்து முகத்தை வருடி மேலெழுந்து தேர்த்தூணில் சுற்றி காற்றால் இழுத்து பறிக்கப்பட்டு பின்னால் பறந்து கிளை மீது அமரும் மயிலென ஓர் இல்லத்தின் உப்பரிகைமேல் சென்று விழுந்தது. மேலே காவல்மாடங்களில் இருந்து அவர்களைப் பார்த்தவர்கள் முரசொலியால் அவள் செல்லும் திசையைக் காட்ட துவாரகையின் அனைத்து சாலைகளிலும் இருந்து பேரொலியுடன் புரவிகள் சரிவிறங்கத்தொடங்கின.

மூன்றாவது வளைவில் ஒற்றைப்பார்வையில் பன்னிரண்டு சாலைகளையும் பார்த்த அர்ஜுனன் மலை வெள்ளம் இறங்குவது போல் வந்த புரவி நிரைகளை கண்டான். “பத்து அம்பறாத்தூணிகள் தேவைப்படும்” என்றான். “புரவிகளை நிறுத்த இயலாது. இவ்விரைவிலேயே நீங்கள் அவற்றை கொள்ள வேண்டியதுதான்” என்றாள் அவள். விண்ணிலிருந்து மண்ணை நோக்கி எடையுடன் விழுவது போல அவர்களது தேர் சென்று கொண்டிருந்தது. துரத்தி வந்த புரவிநிரைகளில் ஒன்று பக்கவாட்டில் சென்று சிறிய பாதை ஒன்றின் திறப்பு வழியாக அவர்களுக்கு நேர்முன்னால் வந்தது. அர்ஜுனனின் அம்புகள் அவர்கள் புரவிகளில் பட்டு தெறிக்க வைத்தன.

மீண்டும் மீண்டும் புரவிநிரையில் முதலில் வரும் மூன்று புரவிகளை அவற்றின் கால்கள் விலாவைத் தொடும் இடத்தில் இருந்த நரம்பு முடிச்சை அடித்து வீழ்த்தியதே அவன் போர் முறையாக இருந்தது. உச்சகட்ட விரைவில் வந்த பிற புரவிகளால் முன்னால் சரிந்து விழுந்த அப்புரவிகளை முட்டி நிலைகுலையாமலிருக்க முடியவில்லை. ஒன்றன் மேல் ஒன்றென புரவிகள் மோதிக்கொண்டு சிதறி சரிந்து துடித்து எழுந்து மீண்டும் முட்டி விழுந்தன. அவற்றின் கனைப்போசை பிற புரவிகளை மிரளச்செய்து கட்டுக்கடங்காதவையாக ஆக்கியது. மீண்டும் மீண்டும் அதுவே நிகழ்ந்தபோதும்கூட போரின் விரைவில் தெறித்துச் செல்பவர்கள் போல் காற்றில் வந்து கொண்டிருந்த அவர்களால் அதை எண்ணி பிறிதொரு போர் சூழ்கையை வகுக்க இயலவில்லை.

சிறிய நிரைகளாக துறைமுகப் பெரும்பாதையின் இருபுறங்களிலும் திறந்த சிறிய பாதைகளில் திறப்பினூடாக மேலும் மேலும் பாய்ந்து வந்து அவனை தொடர முயன்று விழுந்துருண்ட முதற்புரவிகளில் மோதி சிதறுண்டு தெருக்களில் உருண்டு தெறித்து துடித்தனர். கீழே விழுந்தபின் அவர்கள் எழுவதற்குள் அவர்களைத் தொடர்ந்து வந்த தேர்ச் சகடங்கள் ஏறி நிலைகுலைய அவர்கள் அலறி நெளிந்தார்கள். துடித்து விழுந்து சறுக்கி குளம்புகளை உதைத்து உடல் நிமிர்த்தி பாய்ந்தெழுந்த புரவிகள் இருபுறமும் ஒதுங்கின. அவற்றின் மேல் வந்து மோதிய தேர்ச் சகடங்கள் அவற்றை உரக்க கனைக்க வைத்தன.

கனவு ஒன்று நிகழ்வது போல மீள மீள ஒன்றே நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் எண்ணியது போலவே அவள் “கனவுரு போல” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “போரில் மனம் ஆயிரமாக பிரிந்துவிடுகிறது… அந்நிலை கனவில் மட்டுமே எழுவது.” தேரின் உச்சகட்ட விரைவில் முற்றிலும் எடை இழந்தவனாக உணர்ந்தான். விரைவே அவன் உடலை நிகர் நிலை கொள்ள வைத்தது. அவன் உள்ளத்தை விழிகளிலும் கைகளிலும் கூர்கொள்ள வைத்து ஒரு அம்பு கூட வீணாகாமல் வில்லதிரச்செய்தது.

துறைமுக மேடையை நோக்கி தேர் வீசியெறியப்பட்டது போல் சென்றது. “இப்புரவிகள் இனி அதிக தொலைவு ஓடாது” என்றாள். அர்ஜுனன் “மேலும் விரைவு…” எனக்கூவி வில்லுடன் சேர்ந்து நடனமிட்டான். “அங்கு பிறிதொரு தேர் நமக்குத் தேவை” என்றாள் சுபத்திரை. “துறைமுகக்காவலனின் புரவிகள் அங்கு நிற்கும்” என்றான். “நமக்குத் தேவை தேர்” என்றாள். அர்ஜுனன் “துறைமுக முகப்பில் காவலர்தலைவனின் தேர் நிற்க வாய்ப்புள்ளது. அங்கு செல்” என்றான்.

“இங்கிருந்து களஞ்சியங்களை நோக்கி செல்லும் பெரும்பாதை உள்ளது. ஆனால் அது பொதிவண்டிகளாலும் சுமைவிலங்குகளாலும் நிறைந்திருக்கும் இந்நேரம்” என்றாள். “சுமைவிலங்குகளுக்கு மட்டுமான பாதை என்று ஒன்று உண்டா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இவ்வழி சுமை விலங்குகளுக்கானது” என்று அவள் கைச்சுட்டி சொன்னாள். “அது மண்பாதை…” அர்ஜுனன் “அதில் செல்லலாம். மானுடரைவிட விலங்குகள் எளிதில் ஒதுங்கி வழிவிடும்” என்றான்.

எதிரேயிருந்த காவல் மாடத்தின் மீதிருந்து அவன் மேல் அம்பு விட்ட இரண்டு வீரர்களை அனிச்சையாக அவன் கை அம்பு தொடுத்து வீழ்த்தியது. ஒருவன் அலறியபடி மண்ணில் விழுந்து அவர்களின் தேரின் சகடத்தால் ஏறி கடக்கப்பட்டான். அவன் எலும்புகள் நொறுங்கும் ஒலி அர்ஜுனனை அடைந்தது. “நெடுநாளாயிற்று துவாரகை ஒரு போரைக்கண்டு” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “யாதவர் போர்கண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன” என்று சிரித்தான். “அதோ!” என்று அவள் கூவினாள். “அதோ யவனர்களின் சிறுதேர்.” அங்கே யவன கலத்தலைவன் ஒருவன் ஏறியிருந்த இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட சின்னஞ்சிறிய தேர் அவர்கள் தேர் வரும் விரைவைக்கண்டு திகைத்து பக்கவாட்டில் ஒதுங்கியது.

அர்ஜுனன் “அதில் ஏறிக்கொள்” என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே சுபத்திரை ஓடும் தேரிலிருந்து பறப்பவள் போல எழுந்து அத்தேரின் முகப்புப் பீடத்திற்கு சென்றாள். அர்ஜுனன் பாய்ந்து அதன் பின்பக்கத்தை பற்றிக் கொண்டான். கையூன்றி தாவி ஏறி யவன மொழியில் ஏதோ சொன்னபடி தன் குறுவாளை உருவிய கலத்தலைவனை தூக்கி வெளியே வீசினான். சவுக்கை பிடுங்கிக்கொண்டு அந்தத் தேரோட்டியை வெளியே வீசிய சுபத்திரை ஓங்கி புரவிகளை அறைய இரு புரவிகளும் கனைத்தபடி முன்னால் ஓடின.

அவர்கள் வந்த தேர் விரைவழியாது துறைமுகப்பை நோக்கி சென்றது. “பக்கவாட்டில் திருப்பு” என்றான் அர்ஜுனன். அவள் கடிவாளத்தை பிடித்திழுக்க எதிர்பாராதபடி அவ்விரட்டை புரவிகளும் ஒன்றன் பின் ஒன்றென ஆயின. “என்ன அமைப்பு இது?” என்றாள் அவள். “யவனத்தேர்களின் முறை இது. மிக ஒடுங்கலான பாதைகளில்கூட இவற்றால் செல்லமுடியும்” என்றான் அர்ஜுனன்.

துவாரகையின் ஏழ்புரவித்தேரைவிட விரைவு கொண்டிருந்தது அது. உறுதியான மென்மரத்தால் ஆன அதன் உடலில் பெரிய சகடங்கள் மெல்லிய இரும்புக்கம்பியாலான ஆரங்கள் கொண்டிருந்தன. பித்தளைக் குடத்திற்குள் பித்தளையால் ஆன அச்சு ஓசையின்றி வழுக்கிச் சுழன்றது . “சகடங்கள் உருள்வது போல தெரியவில்லை, பளிங்கில் வழுக்கிச்செல்வது போல் தோன்றுகிறது” என்றாள் சுபத்திரை. அவர்களைத் தொடர்ந்து வந்த யாதவர்களின் தேர்கள் அவர்கள் தேர் மாறிவிட்டதை உணர்வதற்குள் விரைவழியாமலேயே நெடுந்தூரம் கடந்து சென்றன. “அங்கே! அங்கே!” என்று முன்னால் சென்ற யாதவர்கள் குரல்கள் எழ சுபத்திரை தன் தேரைத் திருப்பி சிறிய வண்டிகள் மட்டுமே செல்லும் வணிக சந்து ஒன்றுக்குள் புகுந்தாள்.

இரண்டு புரவிகள் மட்டுமே போகும் அளவுக்கு குறுகலான பாதை அது. துறைமுகத்தை ஒட்டி அமைந்திருந்த மரக்கல வினைஞர்களின் குடியிருப்பு. மரத்தாலான சிறிய அடுக்குவீடுகள் இருபுறமும் செறிந்திருந்தன. அங்கிருந்த நாட்டவரின் கொடிகள் சாளரங்களுக்கு முன்னால் எழுந்து சாலைமேல் பூத்து வண்ணங்களை காட்டின. உப்பரிகைகள் சாலையின் மேலேயே நீட்டி ஒன்றுடன் ஒன்று தோள் உருமி நிரை வகுத்திருந்தன. தேர் செல்வதற்கான பாதை அல்ல என்பதனால் அவ்வப்போது படிக்கட்டுகள் வந்தன. படிப்படிகளாக இறங்கி தொலைவில் அலையோசை என தன்னை அறிவித்த கடலை நோக்கி சென்றது அச்சாலை.

யவனத் தேரின் சகடங்கள் படிகளில் மோதி அலைகள் மேல் படகெனத் துள்ளி மேலெழுந்து நிலத்தில் அமைந்து முன் சென்றன. யவனப்புரவிகள் நீண்டகால்களைச் சுழற்றி சாட்டையில் கட்டப்பட்ட இரும்புக் குண்டுகளென குளம்புகளை கற்தரையில் அறைந்து முன் சென்றன. தேரின் இருபுறங்களிலும் மாறி மாறி இல்லங்களின் முகப்புகள் உரசிச் சென்றன. துறைமுகச்சாலையில் சென்ற யாதவர்களின் நிரை கூச்சல்களுடனும் ஆணைகளுடனும் திரும்பி அச்சிறுபாதையின் விளிம்பை அடைந்ததும் பிதுங்கி இரட்டைப் புரவிகளாக மாறி அவர்களை தொடர்ந்து வந்தது.

அர்ஜுனன் புன்னகையுடன் முன்னால் வந்த நான்கு புரவிகளை அம்பு தொடுத்து வீழ்த்தினான். தேர்கள் சென்ற விரைவும் அதிர்வும் அவை உருவாக்கிய காற்றும் சாலைவளைவுகளும் சிறுபாதை இணைவுகளும் உருவாக்கிய காற்றுமாறுபாடுகளும் பிறவீரர்களின் அம்புகளை சிதறடித்தன. நூற்றில் ஓர் அம்புகூட அர்ஜுனனை வந்தடையவில்லை. ஆனால் அவன் ஏவிய அம்புகள் தாங்களே விழைவு கொண்டவை போல காற்றிலேறி சிறகடித்து மிதந்து சென்றிறங்கின. அவர்கள் அஞ்சி ஒதுங்கியபோது முன்னரே அவ்விடத்தை உய்த்தறிந்தவை போல அவை அங்கே வந்து தைத்தன. அவன் அம்புகளுக்கு விசைக்கு நிகராக விழைவையும் அளித்து அனுப்புவதாக தோன்றியது.

“அவை நுண்சொல் அம்புகள். அவன் உதடுகளைப் பாருங்கள். பேசிக்கொண்டே இருக்கிறான். நுண்சொல்லால் அனுப்பப்பட்ட அம்புகளில் தெய்வங்கள் குடிகொள்கின்றன. அவற்றின் குருதிவிடாய் கொண்ட நாக்குகள் அம்புமுனைகள்” என்று ஒருவன் கூவினான். யாதவர்குடியின் பொது உள்ளத்தின் குரலாக அது ஒலித்தது. ஒலித்ததுமே அது பெருகி அவர்களின் வலுவான எண்ணமாக ஆகியது. யாதவர் அஞ்சத் தொடங்கியபின் விற்கள் கட்டுக்குள் நிற்காமல் துள்ளின. அம்புகள் பாதிவானிலேயே ஆர்வமிழந்தன. புரவிகள் சினம்கொண்டு பாகர்களை உதறின.

வளைந்து சென்றுகொண்டே இருந்தது சிறிய பாதை. “இது எங்கோ முட்டி நிற்கப்போகிறது” என்றாள் சுபத்திரை. “இல்லை. மறுபக்கம் கடலிருக்கையில் அப்படி நின்றிருக்க வாய்ப்பில்லை” என்றான் அர்ஜுனன். இருபுறமும் உப்பரிகைகளில் நின்ற யவனர்களும் பீதர்களும் சோனகர்களும் காப்பிரிகளும் தங்கள் மொழிகளில் அத்தேரை சுட்டிக்காட்டி கூச்சலிட்டனர். என்ன நிகழ்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அள்ளி உள்ளே இழுத்துக் கொண்டனர் அன்னையர். சாலையோரங்களில் இருந்த கலங்களையும் தொட்டிகளையும் எடுத்துக்கொண்டு உள்ளே மீண்டனர்.

சுருக்கங்கள் அடர்ந்த நீண்ட உடைகள் அணிந்து பொன்னிறச் சுருள் மயிர் கொண்ட யவனப்பெண்கள், இடுங்கிய கண்களும் பித்தளை வண்ண முகமும் கொண்ட பீதர்குலப் பெண்கள், பெரிய உதடுகளும் கம்பிச்சுருள்முடிகளும் காரிரும்பின் நிறமும் கொண்ட ஓங்கிய காப்பிரிப் பெண்கள். அவர்களின் குரல்களால் பறவைகள் கலைந்த வயலென ஒலித்தது அப்பகுதி. “இப்படி ஒரு உலகம் இங்கிருப்பதை நான் அறிந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “இத்தனை பெருங்கலங்கள் வரும் துறைமுகத்தில் இவர்கள் இருக்கத்தானே வேண்டும்?” என்றாள் சுபத்திரை.

ஆண்கள் படைக்கலங்களுடன் ஓடிவந்து நடப்பது தங்களுக்குரிய போர் அல்ல என்றறிந்து திண்ணைகளில் நின்று நோக்கினர். போர் அவர்களை ஊக்கம் கொள்ளச்செய்தது. இயல்பாகவே யவனத்தேருக்கு ஆதரவானவர்களாக அவர்கள் மாறினர். மேலிருந்து மர இருக்கைகளும் கலங்களும் வந்து கீழே சென்ற குதிரைகள் மேல் விழுந்தன. ஒரு பெரிய தூண் வந்து கீழே விழ புரவிகள் பெருவெள்ளம் பாறையைக் கடப்பதுபோல அதை தாவித்தாவிக் கடந்தன.

அர்ஜுனன் “திருப்பு! திருப்பு!” என்று கூவுவதற்குள் எதிரில் வந்த பொதி மாடு ஒன்று மிரண்டு தத்தளித்து திரும்பி ஓடியது. சுபத்திரை எழுந்து தாமரை வளைவில் வலக்காலை ஊன்றி பின்னால் முழுக்கச்சாய்ந்து பெருங்கரங்களால் கடிவாளத்தை இழுத்து புரவிகளை நிறுத்தினாள். குளம்புகள் அறையப்பட்ட லாடங்கள் தரையில் பதிந்து இழுபட்டு பொறி பறக்க நின்றன. பக்கவாட்டில் ஒரு சிறு பாதை பிரிந்து சென்றது. பொதிமாடு நின்று திரும்பி நோக்கி “அம்மா” என்றது. எங்கோ அதன் தோழன் மறுகுரல் கொடுத்தது. சுபத்திரை புரவியை திருப்பி சாட்டையை வீசினாள். புரவிகள் சிறிய பாதையில் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே நுழைய தேர் சகடங்கள் திடுக்கிட தொடர்ந்தது.

தேரின் வலதுபக்கம் அங்கிருந்த இல்லத்தின் காரைச் சுவரை இடித்துப் பெயர்த்து சுண்ணப் பிசிர்களை தெறிக்க வைத்தபடி சென்றது. “இப்பகுதியின் அமைப்பு துவாரகையில் எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது ஈரத்தில் புல்முளைப்பதுபோல தானாகவே உருவான பகுதியாகவே இருக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன். “நாம் எவ்வழியே வெளி வருவோமென்று அவர்களால் உய்த்துணர முடியாது.” சுபத்திரை “துவாரகையின் யாதவர்கள் அறிவார்கள்” என்றாள். “ஏனெனில் அவர்களின் தலைவர் தன் உள்ளங்கை கோடுகளென இந்நகரை அறிவார்.”

அர்ஜுனன் “ஆம், மதுராபுரி யாதவர்கள்தான் மதுராவையே நன்கறிந்திருக்க வாய்ப்பில்லை” என்றான். சினத்துடன் திரும்பிய சுபத்திரை “மதுராவுக்கு வாருங்கள், நான் காட்டுகிறேன். நானறியாத இடம் ஏதும் அங்கில்லை” என்றாள். அர்ஜுனன் “சரி சரி தலைவி, நாம் போரில் இருக்கிறோம். தலைக்கு அடகு சொல்லப்பட்டுள்ளது. நாம் பூசலிட நீண்ட நாட்கள் நமக்குத் தேவை. அவற்றை நாம் ஈட்டியாகவேண்டும்” என்று சிரித்தான். விரைவழியாமல் இருபக்க சுவர்களையும் மாறி மாறி முட்டி உரசி மண்ணையும் காரையையும் பெயர்த்தபடி சென்றது தேர்.

“தப்பிவிட்டோம் என நினைக்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “நம்மைத் துரத்தியவர்கள் நேராக கடல்முகம் நோக்கி செல்கிறார்கள்.” முரசுகள் முழங்குவதை அவள் கேட்டு “ஆம், படகுகள் அனைத்தையும் கலங்களால் வளைத்துக்கொள்ளும்படி அரசாணை” என்றாள். “நாம் படகுகளில் ஏறி துவாரகையின் எல்லையை கடக்க முயல்வோம் என அவர்கள் எண்ணுவதில் பொருள் உள்ளது. ஏனென்றால் அதுவே எளிய வழி. பலராமர் அதை நம்பியிருப்பார்” என்றான் அர்ஜுனன். “நான் அவர்களுடன் இல்லாதது உங்கள் நல்லூழ்” என்றாள் சுபத்திரை.

“இந்தப் பாதை மையப்பெருஞ்சாலையை அடையும். நாம் துறை வழியாக தப்புவதாக செய்தியிருப்பதனால் அங்கே காவலர் குறைவாகவே இருப்பார்கள். முழுவிரைவில் சென்றால் அரைநாழிகையில் தோரணவாயிலை கடந்துவிடலாம். அதை கடந்துவிட்டால் நம் ஆட்டம் முடிகிறது” என்றான் அர்ஜுனன். அவள் “அரைநாழிகை நேரம் மிகமிக நீண்டது” என்றாள். “காமத்துக்கு நிகர்” என்று அவன் சொல்ல “மூடுங்கள் வாயை. எங்கே எதைப் பேசவேண்டும் என்பதில்லையா?” என அவள் பொய்ச்சினம் கொண்டாள்.

பகுதி ஐந்து : தேரோட்டி – 33

தேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து சரிந்து நின்று கடிவாளத்தை முழுக்க இழுத்து பற்றிக்கொண்டாள். தலையை பின்னால் வளைத்து வாய் திறந்து கனைத்தபடியே சென்ற புரவிகள் அந்தப் படிகளில் இறங்கின. இருவரையும் தேர் தூக்கி அங்குமிங்கும் அலைத்து ஊசலாட்டியது. படிகள் நகைப்பது போல் ஒலி எழுந்தது.

கீழே சென்றதும் “யவன தேர்! இல்லையேல் இந்நேரம் அச்சிற்று சகடங்கள் விலகி ஓடி இருக்கும்” என்றாள். “ஆம், தேர் புனைவதில் அவர்களே நிகரற்றவர்கள்” என்றான் அர்ஜுனன். உலர்ந்த மீனின் வீச்சம் எழத் தொடங்கியது. “மீன்களஞ்சியங்கள் இங்குள்ளன என்று நினைக்கிறேன்” என்றாள். “நன்று” என்றான் அர்ஜுனன். “யாதவர்கள் மீன் விரும்பி உண்பவர்கள் அல்ல. உலர் மீன் அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத உணவு. எனவே இங்கு வந்திருக்கமாட்டார்கள்” என்றான்.

அப்பகுதியெங்கும் பீதர்களே நிறைந்திருந்தனர். “இவர்கள் உலர்மீனுக்கு அடிமைகள்” என்றான் அர்ஜுனன். அவள் “காலையிலேயே வாங்குகிறார்களே!” என்றாள். விரைந்து வந்த புரவியைப் பார்த்ததும் இரும்புப் படிகளில் ஏறி ஒரு பீதன் கைகளை விரித்து அவர்கள் மொழியில் கூவ சாலையில் கூடைகளுடனும் பெட்டிகளுடனும் நின்றிருந்த பீதர்கள் பாய்ந்து குறுந்திண்ணைகள் மேலும் சாளரங்கள் மேலும் தொற்றி ஏறிக்கொண்டனர். வண்ணத் தளராடைகள் கைகளை விரித்தபோது அகன்று அவர்களை பெரிய பூச்சிகள் போல காட்டின. அவர்களின் குரல்கள் மான்களின் ஓசையென கேட்டன.

தரையில் கிடந்த கூடைகளின் மேல் ஏறி மென்மரப்பெட்டிகளை நொறுக்கியபடி புரவிகள் செல்ல சகடங்கள் அவற்றின் மேல் உருண்டு சென்றன. சாலைக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தோல்திரைகளையும் துணிப்பதாகைகளையும் கிழித்து வீசியபடி சென்றது தேர். அவர்களின் மேல் பறக்கும் சிம்மப்பாம்பு பொறிக்கப்பட்ட குருதிநிறமான பதாகை வந்து படிந்து இழுபட்டு பின்னால் வளைந்து சென்றது. “இத்தனை மீன் இங்கு பிடிக்கப்படுகிறதா?” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “இதைவிட பெரிய மீன் அங்காடி ஒன்றிருக்க வேண்டும். இது இங்குள்ளவர்கள் உண்பதற்காக கொள்ளும் மீன். கலக்காரர்களே இங்கில்லை பார்” என்றான்.

சாலை ஓரங்களில் தோல்துண்டுகளை போலவும், வெள்ளித் தகடுகளை போலவும், ஆலிலைச்சருகுகள் போலவும், சிப்பிகள் போலவும், கருங்கல்சில்லுகள் போலவும் குவிக்கப்பட்டிருந்த உலர் மீன்கள் நடுவே தேர் சென்றது. அங்கு தெருநாய்கள் நிறைந்திருந்தன. தேரைக் கண்டு கூவியபடி எழுந்து பாய்ந்து சிறுசந்துகளுக்குள் புகுந்து வால் ஒடுக்கி ஊளையிட்டு தேர் கடந்து சென்றபின் பின்னால் குரைத்தபடி துரத்தி வந்தன. “இந்தச் சாலை பண்டக நிலைக்கு செல்லும் பெருஞ்சாலையை அடையும் என எண்ணுகிறேன்” என்றாள் சுபத்திரை. “ஆம், பொதி வண்டிகள் சென்ற தடம் தெரிகிறது” என்றான்.

வீட்டு வாயிலைத் திறந்து பெருஞ்சாலைக்கு இறங்கியது போல சிறிய திறப்பினுடாக அகன்ற நெடுஞ்சாலையில் அவர்கள் தேர் வந்து சேர்ந்தது. நேராக ஒளிக்குள் சென்றதுபோல கண்கள் கூசி சிலகணங்கள் ஒன்றும் தெரியவில்லை. அங்கு நின்றிருந்த சிறிய யாதவர் குழு அவர்கள் வருவதை எதிர்பார்க்கவில்லை. ஓசையிட்டு திரும்பி ஒருவன் கை வீசி கூவுவதற்குள் கழுத்தில் பட்ட அம்புடன் சரிந்து விழுந்தான். அடுத்தடுத்த அம்புகளால் எழுவர் விழ பிறர் புரவிகளை இழுத்துக் கொண்டு விலகினர்.

அவர்களைக் கடந்து மையச்சாலைக்கு சென்று முழு விரைவு கொண்டது தேர். அப்பகுதியிலிருந்த காவல்மாடத்தில் முரசு ஒலிக்கத் தொடங்கியது. “வந்துவிட்டோம்! இந்த நீண்ட சாலையைக் கடந்தால் தோரணவாயிலை அடைவோம். அதைக் கடந்து அவர்கள் வர குலநெறி இல்லை” என்றாள் சுபத்திரை. “இது பாதுகாப்பற்ற திறந்த சாலை. உன் கையில் உள்ளது நமது வெற்றி” என்றான். சிரித்தபடி “பார்ப்போம்” என்று கடிவாளத்தை எடுத்து மீண்டும் முடுக்கினாள். வெண் புரவிகளின் வாயிலிருந்து தெறித்த நுரை சிதறி காற்றில் பறந்து வந்து அர்ஜுனன் முகத்தில் தெறித்தது. “களைத்துவிட்டன” என்றான். “ஆம், தோரண வாயிலைக் கடந்ததுமே கணுக்கால் தளர்ந்து விழுந்து விடக்கூடும்” என்றாள்.

பெருஞ்சாலையின் அனைத்து திறப்புகளின் வழியாகவும் யாதவர்களின் புரவிகள் உள்ளே வந்தன. அம்புகள் எழுந்து காற்றில் வளைந்து அவர்களின் தேரின் தட்டிலும் குவைமுகட்டிலும் தூண்களிலும் தைத்து அதிர்ந்தன. அர்ஜுனன் “இனி அம்புகள் குறி தவறுவது குறையும்” என்றான். அவன் அம்பு பட்டு அலறியபடி வீரர்கள் விழுந்து கொண்டிருந்தனர். குதிரைகள் சிதறிப்பரந்து வால்சுழற்றி ஓடி வர அந்தப் பெருஞ்சாலையில் விரிவிருந்தது. “இனி எல்லாம் முற்றிலும் நல்லூழ் சார்ந்தது. ஒரு முறை சகடம் தடுக்கினால் ஒரு புரவியின் குளம்பு உடைந்தால் அதன் பின் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றாள்.

“அனைத்து போர்களும் ஊழின் விளையாடல்களே” என்றான் அர்ஜுனன். “போரின் களியாட்டே அது நேராக ஊழெனும் பிரம்மம் கண்ணெதிரே வந்து நிற்கும் காலம் என்பதனால்தான். செல்க!” என்றான் அர்ஜுனன். சுபத்திரை திரும்பி நோக்கி “மேடை ஒன்றில் நடனமிடும் போர் மங்கை போலிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் “நான் நன்கு நடனமிடுவேன், பெண்ணாகவும்” என்றான். பேசியபடியே விழிகளை ஓட்டி தன்னைச் சூழ்ந்து வந்த யாதவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அம்பும் முன்னரே வகுக்கப்பட்டது போல் சென்று மெல்ல அலகு நுனியால் முத்தமிட்டு அவர்களை வீழ்த்தியது.

“பெண்ணாகவா?” என்றாள். “பெண்ணாக ஆகாமல் பெரு வில்லாளியாக எவனும் ஆக முடியாது. வில்லென்பது வளைதலின் கலை” என்றான் அர்ஜுனன். நீண்ட சாலைக்கு அப்பால் கோட்டைப் பெருவாயில் தெரியத் தொடங்கியது. “கோட்டை வாயில்” என்றாள் சுபத்திரை. “எழுபத்தெட்டு காவலர்மாடங்கள் கொண்டது.”

அர்ஜுனன் “நன்று” என்றான். “காவல் மாடங்களிலும் கோட்டை மேல் அமைந்த காவலர் குகைகளிலும் தேர்ந்த வில்லவர்கள் இருப்பார்கள்” என்றாள். “ஆம், இறுதித் தடை இது, செல்” என்றான். “இங்குள்ள யாதவர் வில்லெடுக்க மாட்டார்கள். மதுராபுரியினருக்கு வில்லெடுத்து பறவைகளை வீழ்த்தியே பழக்கம்.” அவள் “மதுராவின் வில்லாளி ஒருத்தி அவர்களுடன் இல்லை. அதனால் இந்தப்பேச்சு” என்றாள். புரவிச் சவுக்கை மாற்றி மாற்றி வீறி விரைவின் உச்சத்தில் செலுத்தியபடி “இன்னும் இன்னும்” என கூவினாள்.

“பெரிய அம்புகளை இந்த மென்மரத்தேர் தாங்காது. இது விரைவுக்கானது. இதில் இரும்புக்கவசங்களும் இல்லை” என்றாள். “பார்ப்போம்” என்றபடி அர்ஜுனன் தன்னருகே வந்த வீரன் ஒருவனை அறைந்து வீழ்த்தினான். அவன் கழுத்திலணிந்த சரடைப் பற்றித் தூக்கி சுழற்றி எடுத்து தன் தேர்த்தட்டில் நிறுத்தி அதே விசையில் அவன் புறங்கழுத்தை அறைந்து நினைவிழக்கச்செய்து அம்புமுனையால் அவன் அணிந்த கவசங்களையும் இரும்புத் தலையணியையும் கட்டிய தோல்பட்டைகளை வெட்டிக் கழற்றி தான் அணிந்தான். அவனைத்தூக்கி பக்கவாட்டில் வீசியபடி பிறிதொருவனை பற்றினான். அவன் மார்புக்கவசத்தைக் கழற்றி சுபத்திரையின் மேல் வீசி “முதுகில் அணிந்து கொள். குனிகையில் உன் முதுகு திறந்திருக்கிறது” என்றான். அவள் அதைப்பற்றி முதுகில் அணிந்து வார்ப்பட்டையை மார்பில் கட்டிக் கொண்டாள்.

அவர்களின் தேர் அதில் தைத்த நூற்றுக்கணக்கான அம்புகளுடன் நெருஞ்சிக்குவியலிலிருந்து மீளும் வெண்ணிறப் பசு போல் இருந்தது. மேலும் மேலும் அம்புகள் வந்து தைத்தன. சகடத்தின் அதிர்வில் அம்புகள் பெயர்ந்து உதிர்ந்தன. அர்ஜுனனின் கவசத்தின் மேல் தைத்த அம்புகளை அவன் தேர்த்தட்டிலேயே உரசி உதிர்த்தான். அவள் “கோட்டை அணுகுகிறது...” என்றாள். கோட்டையின் கதவு வழியாக கூரிய கடற்காற்று நீர்க்குளிருடன் வந்து அவர்களை அறைந்தது.

துவாரகையின் முகப்புக் கோட்டை இருள் புனைந்து கட்டப்பட்டது போல அவர்களை நோக்கி வந்தது. அதன் உச்சியில் அமைந்திருந்த நூற்றுக்கணக்கான அம்பு மாடங்களில் மதுராபுரியின் யாதவ வீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் பாய்ந்து ஏறி நிறைவதை அர்ஜுனன் கண்டான். அம்புகளின் உலோகமுனைகள் பறவை அலகுகள் போல செறிந்தன. வெயிலில் மான்விழிகள் போல மின்னின. காவல் முரசங்கள் கருங்குரங்குகள் போல முழங்கிக் கொண்டிருந்தன. கொம்பு ஒன்று உரக்க ஓசையெழுப்பியது.

தொலைவிலேயே அவர்களின் தேர் வருவதைக் கண்ட வீரர்கள் கை நீட்டி பெருங்கூச்சலிட்டனர். சிலர் ஓடிச் சென்று முரசுமேடையில் ஏறி பெருமுரசை முழக்கத்தொடங்கினர். பதினெட்டு பெருமுரசங்கள் முழங்க களிற்று நிரைபோல பிளிறி நிற்பதாக தோற்றம் கொண்டது கோட்டை. “முழு விரைவிலா?” என்றாள் சுபத்திரை. “ஆம் முழுவிரைவில்” என்றான் அர்ஜுனன். பிறிதொரு வீரனிடம் இருந்து பெரிய வில் ஒன்றை பிடுங்கியிருந்தான். “தங்கள் அம்புகள் சிறிதாக உள்ளன” என்றாள் அவள். “சிறிய அம்புகள் பெரிய விற்களில் இருந்து நெடுந்தூரம் செல்ல முடியும்” என்று அதை நாணேற்றினான். கோட்டையில் இருந்து அம்புகள் வந்து அவர்கள் தேரை தொடுவதற்கு முன்னரே அதன் மேலிருந்து யாதவர்கள் அலறியபடி உதிரத் தொடங்கினர்.

“நேராக செல்” என்று அர்ஜுனன் கூவினான். “கோட்டைக் கதவுகளை அவர்கள் மூடக்கூடும்” என்றாள். “இல்லை, மூட வேண்டும் என்றால் முன்னரே மூடியிருப்பார்கள்” என்றான் அர்ஜுனன். “கோட்டையை மூட இளைய யாதவர் ஆணையிட்டால் அது துவாரகையின் போராக ஆகிவிடுகிறது.” சுபத்திரை புரவிகளை சுண்டி இழுத்து தூண்டி சவுக்கால் மாறி மாறி அறைந்தபடி “இன்னும் எத்தனை நேரம் இவை ஓடும் என்று தெரியவில்லை" என்றாள். அர்ஜுனன் “இன்னும் சற்று நேரம்… விரைவு! விரைவு!” என்றான்.

அவன் கண்கள் கோட்டை மேல் இருந்த வீரர்களை நோக்கின. அவன் கண் பட்ட வீரன் அக்கணமே அலறி விழுந்தான். கோட்டை மேலிருந்து வந்த வேல்அளவு பெரிய அம்பு அவர்களின் தேரின் தூணை முறித்து வீசியது. விறகு ஒடியும் ஒலியுடன் முறிந்த குவை முகடு சரிந்து இழுபட்டு பின்னால் சென்று விழுந்து உருண்டது. இன்னொரு பெரிய அம்பில் பிறிதொரு தூண்முறிந்து தெறித்தது. திறந்த தேர் தட்டில் கவசங்கள் அணிந்து நின்ற அர்ஜுனன் அப்பெரிய அம்புகளை எய்த இரு யாதவ வீரர்களை வீழ்த்தினான். அவனது மார்பில் அணிந்த ஆமையோட்டுக் கவசத்தில் அம்புகள் வந்து பட்டு நின்றாடின. தலையில் அணிந்த இரும்புக்கவசத்தில் மணி போல் ஓசையிட்டு அம்பு முனைகள் தாக்கிக் கொண்டிருந்தன.

சுபத்திரை உஸ் என்று ஒலி எழுப்பினாள். அரைக்கணத்தில் அவள் தோளில் பாய்ந்த அம்பை அர்ஜுனன் கண்டான். “உன்னால் ஒற்றைக் கையால் ஓட்ட முடியுமா?” என்றான். “ஆம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் அவள். தேர் அணுகும்தோறும் கோட்டை முகப்பில் இருந்த யாதவர்கள் கூச்சலிட்டபடி வந்து செறிந்து வில்குலைக்கத் தொடங்கினர். அர்ஜுனன் முழந்தாளிட்டு தேர்த்தட்டில் அமர்ந்து வில்லை பக்கவாட்டில் சரித்து வைத்துக் கொண்டான். அவன் அம்புகள் அவர்களை வீழ்த்த அவர்களது அம்புகள் அவனை கடந்து சென்று கொண்டிருந்தன. பின்பு நன்றாக கால் நீட்டி தேர்த் தட்டில் படுத்து தேர்த்தட்டில் வில்லை படுக்கவைத்து அம்புகளை எய்தபடியே அவர்களை நோக்கி சென்றான். பதினெட்டு பேர் அவன் அம்புகள் பட்டு கீழே விழுந்தனர். முழு விரைவில் சென்ற தேர் கோட்டையின் வாயிலைக் கடந்து வெளியேறியது.

“வந்து விட்டோம்” என்றாள் சுபத்திரை. தொலைவில் தோரணவாயில் தெரியத் தொடங்கியது. கோட்டைக்குள் இருந்து யாதவர் இறங்கி புரவிகளில் அவர்களை துரத்தி வந்தனர். தேர்த்தட்டில் படுத்தபடியே உடல் சுழற்றி பின்பக்கம் நோக்கி அம்புகளை எய்த அர்ஜுனன் “செல்க! செல்க!” என்றான். "புரவிகளால் முடியவில்லை. ஒரு புரவி விழப்போகிறது” என்றாள் சுபத்திரை. “நாம் இன்னும் சில கணங்களில் தோரண வாயிலை கடந்தாக வேண்டும்” என்றான் அர்ஜுனன்.

புரவிகள் விரைவழியத் தொடங்கின. சுபத்திரை இரு புரவிகளையும் மாறி மாறி சவுக்கால் அடித்தாலும் அவை மேலும் மேலும் தளர்ந்தபடியே வந்தன. தோரண வாயில் அண்மையில் தெரிந்தது. அவள் கடிவாளத்தைப் பற்றி இழுத்து புரவிகளை நிறுத்தினாள். “என்ன செய்கிறாய்?” என்று அவன் கூவினான். “அவை களைத்துவிட்டன” என்றாள். “நேரமில்லை… ஓட்டு ஓட்டு” என்றான். “இல்லை, அவை அசையமுடியாது நிற்கின்றன.” அவன் பொறுமையிழந்து “ஓட்டு ஓட்டு” என்றான். “ஒரு கணம்” என்றாள். புரவிகள் கால் ஊன்றி தலை தாழ்த்தி நின்றன. ஒரு புரவி மூச்சு விட முடியாதது போல் இருமி நுரை கக்கியது.

அர்ஜுனன் அம்புகளை செலுத்தியபடி தொடர்ந்து வந்த யாதவர்களை தடுத்தான். மிக அகன்ற சாலையாதலால் அவர்கள் பிறை வடிவமாக விரிந்து தழுவ விரிந்த கைகள் போல வந்தனர். அவன் தேரின் புரவிகள் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டுவிட்டது போல் தெரிந்தது. “நாம் நிற்பதை அறிந்து விட்டார்கள்” என்றான் அர்ஜுனன். சுபத்திரை எதிர்பாராதபடி பேரொலியில் கூவியபடி சாட்டையால் இரு புரவிகளையும் அறைந்தாள். உடல் சிலிர்த்து கனைத்தபடி அவை முழு விரைவில் விரைந்தன. அர்ஜுனன் திரும்பி அவற்றின் விரைவை பார்த்தான். அவை தாங்கள் களைத்திருப்பதை ஒரு கணம் மறந்து அனிச்சையாக விரைவு கொண்டன என்று தெரிந்தது. தோரண வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த அவற்றின் விரைவு மீண்டும் குறையத்தொடங்கியது.

மேலிருந்து சரிந்து தலை மேல் விழுவது போல் துவாரகையின் மாபெரும் தோரண வாயில் அவர்களை நோக்கி வந்தது. இன்னும் சில கணங்கள்தான். சில அடிகள்... இதோ அருகில்… என்று அவன் மனம் தாவியது. அம்பொன்று வந்து அக்கணத்தில் நிலைமறந்த அவன் விலாவில் பதிந்தது. அதை ஒடித்து பிடுங்கி வீசியபின் அதை எய்தவனை நோக்கினான். அவன் முகம் புன்னகையில் விரிந்திருந்தது. திரும்பிப் பார்த்தபோது தோரணவாயிலைக் கடந்து அவர்களின் தேர் மறுபக்கம் சென்றுவிட்டிருந்தது.

தோரண வாயிலுக்கு அப்பால் கூடி நின்றிருந்த துவாரகையின் மக்கள் உரத்த குரலில் “இளைய பாண்டவர் வாழ்க! மதுராபுரியின் அரசி சுபத்திரை வாழ்க!” என்று கூச்சலிட்டனர். தோரணவாயிலைக் கடந்தபின் அதேவிரைவில் சென்ற புரவிகளில் ஒன்று கால் மடித்து மண்ணில் விழுந்து முகத்தை தரையில் பதித்தது. பிறிதொரு புரவி மேலும் சில அடிகள் வைத்து பக்கவாட்டில் சரிந்து விழ தேர் குடை சாய்ந்தது. சுபத்திரை பாய்ந்து புரவிகளின் மேல் மிதித்து அப்பால் சென்று நிற்க அர்ஜுனன் குதித்திறங்கி அவளை தொடர்ந்தான்.

“வாழ்க! வாழ்க!” என்று துவாரகையின் மக்கள் கூவினர். ஓரமாக நின்ற வெண்புரவி ஒன்றை நோக்கி சென்ற சுபத்திரை அதன் கடிவாளத்தைப் பற்றி கால்சுழற்றி ஏறினாள். அதன் உரிமையாளனாகிய வீரன் தலை வணங்கி பின்னகர்ந்தான். இன்னொருவன் கரிய குதிரை ஒன்றை பின்னால் இருந்து பற்றி அர்ஜுனனுக்கு நீட்டினான். அர்ஜுனன் அதில் ஏறியதும் இருவரும் பாய்ந்து அக்கூட்டத்தின் நடுவே இருந்த பாலைவனப் பாதையினூடாக செம்புழுதி பறக்க புரவியில் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் வாழ்த்தொலிகளுடன் கூட்டம் ஆரவாரமிட்டது. தோரணவாயிலின் நிழலை கடந்து சென்றபோது அவன் மெல்ல தளர்ந்தான். அவளும் தளர்ந்து புரவியை இழுத்து சீராக நடக்கவிட்டாள்.

மென்புழுதியில் விழுந்த குளம்பு ஒலிகள் நீரில் அறைவது போல் ஒலித்தன. சுபத்திரை திரும்பி அர்ஜுனனை பார்த்து “இப்போது போர் புரிந்தவர் இளைய பாண்டவரல்ல. சிவயோகிதான்” என்றாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “அம்பு பட்டவர்களில் ஒருவர்கூட உயிர்துறக்கப் போவதில்லை” என்றாள். “ஆம், கொல்வது என்னால் இயலாதென்று தோன்றியது. அத்தனைபேரும் என் அன்புக்குரியவர்கள் என்றே அகம் எண்ணியது” என்றான். அவள் புன்னகைத்தாள்.

அர்ஜுனன் பெருமூச்சுடன் “வெளியேறிவிட்டோம்” என்று சொல்லி திரும்பி தோரணவாயிலை பார்த்தான். “இல்லை, பிறிதொரு வழியாக இந்நகரத்திற்குள் நுழையவிருக்கிறோம்… இன்னும் சில நாட்களில்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “ஆம், அவரிடமிருந்து எவர் தப்பமுடியும்?” என்று சிரித்தபடி சொன்னான். அவள் விழிகள் மாறுபட்டன. “இது சக்கர சூழ்கை கொண்ட நகரம். வந்தவர் எவரும் மீண்டதில்லை” என்றாள்.

அவள் உடல் ஏதோ எண்ணங்களால் உலைவது தெரிந்தது. குளம்படித்தாளம் பாலையின் நரம்போசை என ஒலித்தது. சுபத்திரை உதடுகளை இறுக்கி திரும்பி தோரணவாயிலுக்கு அப்பால் தெரிந்த துவாரகையின் இரட்டைக்குன்றுகளையும் அவற்றின்மேல் தெரிந்த மேருவடிவ நகரையும் உச்சியில் எழுந்த பெருவாயிலையும் நோக்கி கண்களை சுருக்கியபடி “இதை உடைத்து மீண்டு சென்றவர் ஒருவரே. என் தமையன் அரிஷ்டநேமி” என்றாள்.

அர்ஜுனன் “ஆம்” என்றான். பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை. அவர்களின் புரவிகள் ஒன்றின் நிழலென ஒன்றாகி குளம்படிகள் மட்டும் ஒலிக்க வாள்போழ்ந்த நீண்ட வடுவெனக்கிடந்த செம்புழுதிப்பரப்பை கடந்து சென்றன. குறும்புதர்களின் நிழல் குறுகி ஒடுங்கத் தொடங்கியது. பாலையின் செம்மை வெளிறிட்டது. வானில் தெரிந்த ஓரிரு பறவைகளும் சென்று மறைந்தன. வியர்வை வழிந்து அவர்களின் புண்களில் காய்ந்த குருதியைக் கரைத்து வழியச்செய்தது.

பாலைவனத்தின் தொடக்கத்தில் அமைந்த முதல் சாவடியை அடைந்தனர். தொலைவிலேயே சங்குசக்கரக்கொடி வானில் பறப்பது தெரிந்தது. பாலைக்காற்றில் தானே ஊளையிட்டுத் திரும்பும் நான்குமுனைக்கொம்பு ஒன்று மூங்கில் உச்சியில் கட்டப்பட்டு மேலே நின்றது. அதைக் கண்டதும் விடாய் எழுந்தது. அணுக அணுக விடாய் உச்சம் கொண்டது. சாவடியின் முற்றத்தில் போய் புரவிகளை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்றபோது கால்கள் தளர்ந்து விழுந்துவிடுவதுபோல் ஆயினர்.

சாவடிப் பணியாளர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். “நீராடுவதற்கு இளவெந்நீர். உணவு.” என்றான் அர்ஜுனன். “அதற்குமுன் இப்புண்களுக்கு மருந்து.” ஏவலன் “மருத்துவரை வரச்சொல்கிறேன்” என்றான். அங்கிருந்த மரப்பீடத்தில் அமர்ந்தபடி அர்ஜுனன் “மது” என்றான். “ஆணை” என்று தலை வணங்கி ஏவலன் விலகினான். அவன் அருகே அமர்ந்த சுபத்திரை “இப்போது வரும்போது எண்ணிக் கொண்டேன் வீரர்களால் எந்தச் சூழ்நிலையிலும் உள் நுழைய மட்டுமே முடியும் என்று. வெளியேறும் கலை அறிந்தவர்கள் யோகியர் மட்டுமே” என்றாள்.

அர்ஜுனன் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை எண்ணியபடி முகத்தை பார்த்தான். “வீரராகிய பார்த்தரை நான் வெறுத்தேன். யோகியாகிய உங்களை விழைந்தேன். என் வயிற்றுள் உறையும் விழைவு அது. நாளை இங்கு பிறப்பவன் வெளியேறவும் தெரிந்தவனாக இருக்க வேண்டும், என் தமையனைப் போல” என்றாள். அர்ஜுனன் உள்ளம் அறியாத துயரொன்றால் உருகியது. அவள் தலையைத் தொட்டு “நான் வெளியேறத் தெரியாதவன். உன்னுடன் இணைந்து நானும் அதற்காக வேண்டிக்கொள்கிறேன். கருணைகூர்க தெய்வங்கள். அருள்க மூதாதையர்” என்றான். அவன் தோள்களில் தலை சாய்த்துக்கொண்டு அவள் “தெய்வங்களே… ஊழே… கனிக!” என்றாள்.

பகுதி ஆறு : மாநகர் - 1

தொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து காற்றில் சீறிக்கொண்டிருந்தது .அதன் செவ்வொளியின் மென்மையான வெம்மையும் கல்மண்டபத்திற்குள் நிறைந்திருந்தது. வெளியே மழைச்சாரல் சரிந்து வீசி காற்றில் சுழன்று மறுபக்கமாக சென்று மீண்டும் விழுந்தது. அதன் மேல் மின்னல் அவ்வப்போது ஒளிவிட்டு அணைந்தது.

வெளியே தாழ்வான கொட்டகைகளில் வணிகர்களின் அத்திரிகள் குளிரில் பிசிறிச் சிலிர்த்த தோல்பரப்புகளை விதிர்த்தபடி கழுத்துமணிகள் குலுங்க உலர்புல்லை தின்று கொண்டிருந்தன. அங்கும் சட்டிகளில் இட்ட அனலில் தைலப்புல்போட்டு புகைப்படலத்தை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அடுமனையிலிருந்து சோளமாவு வேகும் மணத்துடன் மென்புகை நீர்த்துளிப் புதருக்குள் பரவி எழுந்துகொண்டிருந்தது.

நரைத்த தாடியும் பழந்துணித் தலைப்பாகையும் அணிந்த எளிய முதுவணிகர் தன் கையிலிருந்த பாளைப்பையை திறந்து உள்ளிருந்து பலாக்கொட்டைகளை வெளியே கொட்டி எடுத்து அனல்பரப்பிற்கு மேல் அடுக்கி வைத்தார். நீண்ட இரும்புக் கிடுக்கியால் அக்கொட்டைகளை மெல்ல சுழற்றி அனல்செம்மையில் எழுந்த பொன்னிற மென்தழலில் வெந்து கருக வைத்தார். தோல் வெடித்து மணம் எழுந்ததும் கிடுக்கியால் ஒவ்வொன்றாக எடுத்து நடுவே இருந்த மரத்தாலத்தில் போட்டார். சூழ்ந்திருந்தவர்கள் கை நீட்டி ஒவ்வொன்றாக எடுத்து தோல் களைந்து ஊதி வாயிலிட்டு மென்றனர்.

அருகே இருந்த கன்னங்கள் ஒட்டி மூக்கு வளைந்த மெலிந்த சாலைவணிகன் பலாக்கொட்டைகளை எடுத்து கற்சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜுனனிடம் கொடுத்தான். அதை வாங்கி ஒன்றை உரித்து வாயிலிட்டு மென்றபடி அவன் சுவரில் எழுந்து மடிந்திருந்த அவர்களின் பெரு நிழல்களை நோக்கிக் கொண்டிருந்தான். “இன்னும் பத்து நாட்கள்தான்... பெருமழை தொடங்கிவிடும். அதன் பின் எங்கிருக்கிறோமோ அங்கு நான்கு மாதம் ஒடுங்க வேண்டியதுதான்” என்றார் நரைத்த நீண்ட தாடிகொண்ட முதிய வணிகர். “இப்போது பருவங்கள் சீர் குலைந்துவிட்டன. வைதிகர் மூவனலுக்கு உண்மையாக இருந்த அந்த காலத்தில் எழுதி வைத்த நாளில் மழை பொழிந்தது. போதுமென்று எண்ணுவதற்குள் வெயில் எழுந்தது.”

“ஆம். இன்னும் பன்னிரண்டு நாட்கள் கழித்தே மழை வரவேண்டும். ஐங்களச்சுவடியில் கணித்து மழைக்கணியன் சொன்னது. அதை நம்பி என் மரவுரிப் பொதிகளை ஏற்றி வந்தேன். நல்லவேளையாக என் இளையவன் மெழுகுப் பாயை என்னிடம் கொடுத்து அனுப்பியிருந்தான். இல்லையேல் முதலீட்டில் பாதி இந்த மழையிலேயே ஊறி அழிந்திருக்கும்.. இதை அயோத்தி கொண்டு சென்று சேர்த்தேன் என்றால் இழப்பின்றி மீள்வேன்” என்றான். “இழப்பை பற்றி மட்டுமே வணிகர்கள் பேசுகிறார்கள். ஏனெனில் ஈட்டலைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சுவர் ஓரமாக அமர்ந்திருந்த மெலிந்து கன்னங்கள் ஒட்டிய நாடோடி சொன்னான்.

அனைவரும் அவனை நோக்கினர். கரிப்புகை போல் தாடி படர்ந்திருந்த அவன் கன்னம் நன்றாக ஒட்டி உட்புகுந்திருந்தது. மெலிந்த உடலும் கழுகுமூக்கும் பச்சைக்கண்களும் கொண்டிருந்த காந்தார வணிகன் “அனைவருக்கும் வணிகர்கள் பொருள் ஈட்டுகிறார்கள் என்று காழ்ப்பு. அப்பொருளுக்குப் பின்னால் இருக்கும் கணக்கீட்டையும் இழப்பையும் துணிவையும் எவரும் அறிவதில்லை” என்றான். முதிய வணிகர் “ஆம், என்னிடம் கேட்பவர்களிடம் அதையே நான் சொல்வேன். நீங்கள் வணிகம் செய்யவேண்டாமென்று யார் சொன்னது? துணிவில்லாமையால் எண்ணம் எழாமையால் எல்லைமீற முடியாமையால் உங்கள் சிற்றில்லங்களுக்குள் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சிறகு விரித்த பறவைக்கு கிடைக்கும் உணவு கூட்டுப் புழுவுக்கு கிடைப்பதில்லை” என்றார்.

நாடோடி “நான் அதைத்தான் சொன்னேன். வணிகர்களிடம் பேசினால் எவரும் வணிகம் செய்யத் துணிய மாட்டார்கள். உழைத்து அலைந்து இழப்புகளை மட்டுமே அவர்கள் அடைவதாக சொல்வார்கள்” என்றான். மூலையில் அமர்ந்திருந்த கொழுத்த மாளவத்து வணிகன் “இவன் வணிகத்தில் தோற்றுப்போன ஒருவன் என்று எண்ணுகிறேன்” என்றான். நாடோடி சிரித்தபடி “வணிகத்தில் தோற்கவில்லை. ஈடுபட்ட அனைத்திலும் தோற்றுவிட்டேன். தோல்வி ஒரு நல்ல பயிற்சி. வெற்றி பெற்றவர்களிடம் சொல்வதற்கு ஏராளமான சொற்களை அது அளிக்கிறது” என்றான். சிரித்தபடி முதிய வணிகர் பலாக் கொட்டைகளை எடுத்து அவன் முன்னால் இருந்த கமுகுப்பாளைத் தொன்னையில் போட்டு “உண்ணும்” என்றார்.

நாடோடி “இது உங்களுக்கு எங்கோ கொடையாகக் கிடைத்திருக்கும். அன்புடன் அள்ளிக்கொடுக்கிறீர்கள்” என்றான். முதியவணிகர் “விடுதியில் உமக்கு உணவளித்தார்களா?” என்றார். “என்னிடம் சில நாணயங்கள் இருந்தன” என்றான் நாடோடி. “என் உணவுக்குரியதை ஈட்டும் திறன் எனக்கு உள்ளது” என்றான். “கதை சொல்வீரோ?” என்றான் ஒருவன். “இல்லை, நான் என் அனுபவங்களை சொல்பவன். நாடோடியாக என் செவியில் விழுந்த செய்திகளையே விரித்துரைக்க என்னால் முடியும். அவற்றை விரும்பிக் கேட்பவர்களும் இருக்கிறார்கள்” என்றான்.

முதியவணிகர் “அப்படியானால் சொல்லும். இந்தக் கல்மண்டபம் எவரால் கட்டப்பட்டது? சிறுவனாக எந்தையுடன் இதே பாதையில் வணிகத்திற்காக வந்துளேன். அப்போதும் இதே போன்று தொன்மையாகவே இக்கல்மண்டபம் இருந்தது” என்றார். நாடோடி “இது அயோத்தியை ஆண்ட ராகவராமனால் கட்டப்பட்டது” என்றான். “அத்தனை தொன்மையானதா?” என்றான் இளவயதினனான தென்வணிகன். கரிய நிறமும் அடர்த்தியான புருவங்களும் கொண்டிருந்தான். “ஆம், கல் மண்டபங்கள் எளிதில் சரிவதில்லை. அத்துடன் இது மண்ணில் இயற்கையாக எழுந்த பாறையைக் குடைந்து கூரைப்பாறைகளை அதன்மேல் அடுக்கிக் கட்டப்பட்டது. இன்னும் சிலஆயிரம் வருடங்கள் இருக்கும்” என்றான் நாடோடி.

“ராகவராமன் அரக்கர்குலத்தரசன் ராவணனைக் கொன்ற பழிதீர கங்கை நீராட்டு முடித்து மீண்டபோது இவ்வாறு நூற்றெட்டு மண்டபங்களை கட்டினான். அதோ உங்களுக்குப் பின்னால் அந்தத் தூணில் அதற்கான தடயங்கள் உள்ளன” என்றான். வணிகர்கள் விலகி அந்தத் தூணை பார்த்தனர். அதில் புடைப்புச் சிற்பமாக ஏழு மரங்களை ஒற்றை அம்பால் முறிக்கும் ராமனின் சிலை இருந்தது. “எத்தனையோ முறை இம்மண்டபத்தில் அமர்ந்திருக்கிறோம். இதுவரை இதை பார்த்ததில்லை” என்றான் குள்ளனான வணிகன். நாடோடி “வந்து அமர்ந்ததுமே அன்றைய வணிகக் கணக்கை பேசத்தொடங்குகிறீர்கள். பிறகெப்படி பார்க்க முடியும்?” என்றான்.

“ஒற்றை அம்பில் ஏழு மரங்களை முறித்தான் வில்திறல் ராமன். நீங்கள் எல்லாம் ஒற்றைக்காசில் ஏழு உலகங்களை வாங்க முயலும் பொருள்வலர் அல்லவா?” என்றான் நாடோடி. “அதில் எங்களுக்கு பெருமைதான்” என்றான் குள்ளன். “நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன? சொல்!” என்றார் முதுவணிகர். நாடோடி “நானறிந்தவரை பசியாலும் போராலும்” என்றான். “மூடா, இந்த பாரதவர்ஷத்தின் மேல் ஒன்றை ஒன்று முட்டி மோதும் கிளைகளென ஷத்ரியர்கள் உள்ளனர். அடியில் ஒன்றோடொன்று பின்னி விரிந்திருக்கும் வேர்களென நாங்கள். வணிகத்தால் கொழிக்கிறது பாரதவர்ஷம்” என்றார் முதுவணிகர்.

“தொலைதூரத்து பழங்குடிகளைக் கூட தேடிச் செல்கின்றன வேர்கள். மறைந்துள்ளவற்றை அறிந்து அங்கு உப்புதேடிச்சென்று கவ்வுகின்றன. பாரதவர்ஷத்தில் நாங்கள் தொட்டு நிற்காத எப்பகுதியும் இங்கில்லை. தென்னகத்தின் நாகர்தீவுகள் கூட வணிகத்தால் பின்னப்பட்டு விட்டன. நாங்கள் கொண்டு வரும் பொருளின் மேல் வரிவிதித்துதான் அஸ்தினபுரியின் மாளிகைகள் எழுந்தன. மகதத்தின் கோட்டைகள் வலுப்பெறுகின்றன. இந்திரப்பிரஸ்தம் கந்தர்வர்களின் மாயநகரம் என மேலெழுந்து கொண்டிருக்கிறது” என்றார். “நாங்கள் இந்நாட்டின் குருதி. அதை மறவாதே!”

“இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றிருக்கிறீரா?” என்றான் இளையவன். “பலமுறை” என்றான் நாடோடி. கொழுத்த வணிகன் “இன்று கட்டி முடியும் நாளை கட்டி முடியும் என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறார்கள். கட்டக் கட்ட தீராது விரிந்து கொண்டே இருக்கிறது அது. மண்ணில் அதற்கிணையான பெருநகரங்கள் மிகக் குறைவாகவே இருக்குமென்று எண்ணுகிறேன்” என்றான். காந்தார வணிகர் “பாஞ்சாலத்து அரசியின் கனவு அது. இப்போதே அதை அறிந்து யவன நாட்டிலிருந்தும் பீதர் நாட்டிலிருந்தும் சோனக நாட்டிலிருந்தும் வணிகர்கள் தேடி வரத்தொடங்கிவிட்டனர். இன்னும் சில நாட்களில் அந்நகரம் பொன்னால் அனைத்தையும் அளக்கும் பெருவணிகபுரியாக மாறிவிடும்” என்றான். “அரசியின் இலக்கு அதுதான்” என்றான் குள்ளன்.

“துவாரகையை அமைக்கும்போது வணிகத்திற்கென்றே திட்டமிட்டு அமைத்தார் யாதவர். கடல்வணிகர்களையும் கரைவணிகர்களையும் அழைத்து பேரவை கூட்டி அமரவைத்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து அதை சமைத்தார். துறைமுகம் அங்காடிகள் பண்டகசாலைகள் பணியாளர் குடியிருப்புகள் ஆகியவை அனைத்தும் ஒற்றை இடத்தில் அமைந்த பெருநகர் பாரதத்தில் அது ஒன்றே. பாஞ்சால இளவரசி பெரிதாக ஏதும் உய்த்துநோக்கவில்லை. துவாரகையைப் போலவே மேலும் பெரிதாக இந்திரப்பிரஸ்தத்தை படைத்துள்ளார். அங்கு கட்டப்பட்டுள்ள சந்தை வளாகம் எந்தப் பெருவணிகனும் தன் அந்திக் கனவில் காண்பது” என்றார் முதுவணிகர். “ஆம்” என்றார் காந்தாரர்.

“இந்திரப்பிரஸ்தத்திற்கு மட்டுமே உரிய தனித்தன்மையென்பது பொன்வணிகமும் பொருள் சொற்குறிப்பு வணிகமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாது என்று அறிந்தது. அங்காடியின் நடுவே அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள அத்தனை வணிகநிலைகளில் இருந்தும் சில காலடிகளில் நடந்து பொன் வணிகனையோ சொல்வணிகனையோ அணுகிவிட முடியும். பொருளை பொன்னாகவும் பொன்னை சொல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இங்கு பத்தாயிரம் பொன் மதிப்புள்ள பொருளை விற்று செல்வத்தை பத்தே நாட்களில் தாம்ரலிப்தியில் சேர்த்துவிடமுடியும்” என்றார் கொழுத்த வணிகர். “பாரதவர்ஷமே இந்திரப்பிரஸ்தத்தை எண்ணி பொறாமை கொண்டிருக்கிறது” என்றான் இளைஞன்.

காந்தாரர் “ஆம், மகதத்திற்கு நான் சென்றிருந்தேன். அரசர் அவைக்கு என்னை அழைத்துச் சென்றனர். காந்தாரப் பெருவணிகன் என்று என்னை அறிவித்ததுமே ஜராசந்தர் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றிருக்கிறீரா என்றுதான் கேட்டார். அவர் என்ன எண்ணுகிறார் என்று நான் ஐயம் கொண்டேன். இந்திரப்பிரஸ்தத்தை புகழ்ந்து அவ்வவையில் பேசினால் என் தலை நிலைக்காது என்றறிந்தேன். இகழ்ந்துரைத்தால் பொய்யுரைப்பவனாவேன். எனவே அதன் அனைத்து சிறப்புகளையும் சொல்லி ஆனால் வணிகர்கள் அந்நகரை மிகை வரிகளுக்காகவும் காவலரின் ஆணவத்திற்காகவும் அரசியின் கட்டின்மைக்காகவும் வெறுப்பதாகவும் சொன்னேன்” என்றார். வணிகர்கள் “ஆம் ஆம், அது நன்று” என்றனர்.

“ஜராசந்தர் முகம் மலர்ந்து ஆம், வெற்று ஆணவத்தின் விளைவு அது என்றார். கையை பீடத்தில் அறைந்தபடி நோயில் எழுந்த கொப்புளம் போன்றது அது, நெடுநாள் நீடிக்காது என்று உறுமினார். நான் தலைவணங்கி நீடிக்கும் என்றேன். அவர் கண்கள் மாறுவதை கண்டவுடனே அது பாண்டவர்களின் நகரமாக இருக்க வேண்டும் என்பதில்லையே... மகதத்தின் தொலைதூரக் கருவூல நகரமாகவும் இருக்கலாமே என்றேன். சிரித்து ஆம் அது மகதத்திற்குரியது, சரியாகச் சொன்னீர் என்றார். நான் தேனீ உடல்நெய் குழைத்து தட்டுக்களைச் சமைத்து கூடு கட்டி தேன் சேர்ப்பதெல்லாம் மலைவேடன் சுவைப்பதற்காகவே என்றேன். ஜராசந்தர் சிரித்து என்னை பாராட்டினார்” என்ற காந்தாரர் சிரித்து “அரசர்கள் புகழ்மொழிகளுக்கு மயங்குவது வரை அவர்கள் நம் அடிமைகளே” என்றார்.

வணிகர்கள் உரக்க நகைத்தனர். இளைஞர் “பரிசில் பெற்றீரா?’ என்றான். சற்று கூடுதலாக அரசியல் பேசிவிட்டோம் என்ற உணர்வை அடைந்த காந்தார வணிகர் தவித்து திரும்பி அர்ஜுனனை பார்த்தார். சொற்களை கட்டுப்படுத்துவதற்காக உதடுகளை அழுத்தும் பழக்கத்தை கொண்டவர் என்பது சிறிய உதடுகளை ஒன்றுடன் ஒன்று அழுத்தி சிவந்த கோடாக அவற்றை மாற்றிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. அர்ஜுனன் அவர் விழிகளை பார்க்காமல் நிழல்களை நோக்கியவாறு அமர்ந்திருந்தான். இளம்வணிகன் கொழுத்த வணிகனின் பார்வையைக் கண்டபின் பலாக்கொட்டையை எடுத்து அர்ஜுனன் முன்னால் இருந்த கமுகுப்பாளை தொன்னையில் போட்டபின் “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்றான்.

அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “அயோத்திக்கா?” என்றான் குள்ளன். “இல்லை. அயோத்தியிலிருந்து நேற்று கிளம்பினேன்” என்றான் அர்ஜுனன். பின்பு “இந்திரப்பிரஸ்தத்திற்கு” என்றான். கொழுத்த வணிகனின் கண்களில் சிறிய ஐயம் வந்தது. “தங்களைப் பார்த்தால் படைவீரர் போல் இருக்கிறதே?” என்றான். “படைவீரனாக இருந்தேன்” என்றான் அர்ஜுனன். “வில்லவர் போலும்” என்றார் முதுவணிகர். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். அவர்கள் அனைவரும் அவனைப்பற்றி ஐயம் கொள்வது தெரிந்தது. “நான் சிவதீக்கை எடுத்து அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்” என்றான் அர்ஜுனன்.

“படைக்கலங்கள் எடுப்பதில்லையா?” என்று இளைஞன் கேட்டான். “படைக்கலம் எடுப்பது எங்களுக்கு பிழையல்ல. ஆனால் என் பொருட்டு அல்லது என் குலத்தின் பொருட்டு அல்லது என் நாட்டின் பொருட்டு படைக்கலம் எடுப்பதில்லை.” “பிறகு எவருக்காக?” என்றார் காந்தார வணிகர். “எளியோருக்காக” என்றான் அர்ஜுனன். “எளியோர் என்றால்…?” என்றார் முதியவர். “அறத்தை கோர உரிமை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “அறத்தை எவரும் கோரலாமே?” என்றார் அவர்.

அர்ஜுனன் “வணிகரே, விவாதிக்கும் தோறும் கலங்குவதும் முதற்பார்வையில் தெளிந்திருப்பதும் ஆன ஒன்றே அறம் எனப்படும்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். முதுவணிகர் “இப்போது திருடர்கள் வந்து எங்களை தாக்கி எங்கள் பொருள்களை கொள்ளை கொண்டு சென்றால் நீர் படைக்கலம் எடுப்பீரா?” என்றார். “மாட்டேன். அது உங்கள் வணிகத்தின் பகுதி. உங்கள் பொருளில் ஒரு பகுதியைக் கொடுத்து காவலரை அமர்த்திக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த நாடோடியை ஒருவர் தாக்கினார் என்றால் படைக்கலம் எடுப்பேன்” என்றான் அர்ஜுனன்.

“ஏன்?” என்றான் ஒருவன். “இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இங்கு வாழும் உரிமை உள்ளது. வலியதே வாழும் என்றால் அறம் அழியும் என்றே பொருள். மேலும் அவரிடம் படைக்கலம் என்று ஏதுமில்லை. படைக்கலமின்றி இவ்வுலகின் முன் வந்து நிற்பவனுக்கு இங்குள்ள அறம் அந்த வாக்குறுதியை அளித்தாக வேண்டும்.” நாடோடி புன்னகைத்து “பாரதவர்ஷம் முழுக்க அலைந்து திரிந்தவன் நான். ஒரு தருணத்திலும் படைக்கலம் எடுத்த்தில்லை. எங்கும் எனக்காக எழும் ஒரு குரலும் ஒரு படைக்கலமும் இருப்பதை பார்க்கிறேன். அறம் இங்கு அனைத்து இடங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது. அருகே உள்ள கைகளை அது எடுத்துக் கொள்கிறது” என்றான்.

“இந்திரப்பிரஸ்தத்தில் தங்களுக்கு யார் இருக்கிறார்கள்?” என்றான் கொழுத்த வணிகன். “யாருமில்லை. எங்கும் எவரும் இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ராகவராமனை எண்ணி இங்கு வந்தேன். செல்லும் வழியில் சற்று முன் இந்திரப்பிரஸ்தத்தைப் பற்றி நீங்கள் பேசுவதை கேட்டேன். ஆகவே அதைப் பார்க்கலாம் என்று எண்ணினேன். அங்கு செல்லும்வரை இவ்வெண்ணம் மாறாதிருக்குமெனில் இந்திரப்பிரஸ்தத்தை காண்பேன்.”

இளையவணிகன் “இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர் ஐவரில் மூவரே உள்ளனர். இளையபாண்டவர் அர்ஜுனர் காட்டு வாழ்க்கைக்கென கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள். மாவலியாகிய பீமன் பெரும்பாலும் காட்டிலேயே வாழ்கிறார். தருமர் அரியணை அமர்ந்து அரசாள்கிறார். நகுலனும் சகதேவனும் அரசியின் ஆணைகளை உளம்கொண்டு நகர் அமைக்கிறார்கள்” என்றான். “அர்ஜுனன் காடேகும் கதைகளை நான் கேட்டுள்ளேன்” என்றான் அர்ஜுனன்.

“அவருடைய காடேகலைப்பற்றி அறிய பல காவியங்கள் உள்ளன. பலவற்றை சூதர் பாடிக் கேட்டிருக்கிறேன். அவர் உலூபியையும் சித்ராங்கதையையும் சுபத்திரையையும் மணங்கொண்டு திரும்பிய கதையைச் சொல்லும் விஜயப்பிரதாபம் ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டே போகும் காவியம்” என்றார் முதியவர். “சுபத்திரை மணத்தில் அது முடிகிறது அல்லவா?” என்றார் காந்தார வணிகர். “இல்லை, அதன்பின்னரும் எட்டு சர்க்கங்கள் எழுதப்பட்டுள்ளன. சதபதர் எழுதி முடித்த இடத்திலிருந்து தசபதர் என்னும் புலவர் தொடர்ந்து எழுதியிருக்கிறார்” முதுவணிகர் தொடர்ந்து சொன்னார்.

“இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டையின் வாயிலை விஜயர் சுபத்திரையுடன் சென்றடைந்தபோது எட்டுமங்கலங்கள் கொண்ட பொற்தாலத்துடன் திரௌபதி அவர்களை வரவேற்க அங்கு நின்றிருந்தாள் என்று கவிஞர் சொல்கிறார்” என்றார் கிழவர். “சரிதான், சூதர் ஏன் சொல்லமாட்டார்? அவர்களின் கதைப்பெண்கள் களிமண்ணைப் போன்றவர்கள். அள்ளி தங்களுக்கு பிடித்த வகையில் புனைந்து கொள்ள வேண்டியதுதான். நமக்கல்லவா தெரியும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று!" என்றார் காந்தாரர். கொழுத்த வணிகன் தொடையில் அடித்து வெடித்து நகைத்தான்.

“திரௌபதி கோட்டை வாயிலுக்கு வந்திருப்பாள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை நகரே நோக்கிக் கொண்டிருக்கும். ஆனால் அக்கண்களில் அனல் எரிந்து கொண்டிருக்கும். அவ்வனலை ஒரு வேளை அர்ஜுனன் கூட பார்த்திருக்க மாட்டான். சுபத்திரை அறிந்திருப்பாள்” என்றான் இளைய வணிகன். “ஆம் ஆம்” என்றபடி கொழுத்த வணிகன் உடலை உலைத்து நகைத்தான். “சுபத்திரை இப்போது இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருக்கிறாளா?’’ என்று குள்ளன் கேட்டான். “ஆம். அங்குதான் இருக்கிறாள். இந்திரப்பிரஸ்தத்தை அவளும் விட்டுக்கொடுக்கமாட்டாள். அவளுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான் என்றார்கள். அவனுக்கு அபிமன்யு என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் பிறவிநன்னாள் சடங்குகளுக்கு மரவுரி விற்கச் சென்றிருந்தேன். மக்கள் இன்னும் அந்நகரில் முழுமையாக குடியேறவில்லை. ஆயினும் பெருவிழா அது.”

“அர்ஜுனனுக்கு முன்னரே மைந்தர்கள் இருக்கிறார்களல்லவா?” என்றான் தென்திசை வணிகன். முதுவணிகர் “திரௌபதிக்கு முதல் மூன்று கணவர்களில் மூன்று மைந்தர்கள். தருமரின் மைந்தன் பிரதிவிந்தியன். பீமசேனரின் மைந்தன் சுதசோமன். அர்ஜுனனுக்குப் பிறந்த மைந்தன் தருதகீர்த்தி. தந்தையைப் போலவே கருநிறம் கொண்டவன் என்கிறார்கள். அவன் கண்களைப்பற்றி சூதர் ஒருவர் பாடிய பாடலை சில நாட்களுக்குமுன் சாலையில் கேட்டேன். தந்தையின் விழிகள் வைரங்கள் என்றால் மைந்தனின் விழிகள் வைடூரியங்கள் என்று அவர் பாடினார்.”

கொழுத்த வணிகன் ஏப்பம் விட்டு “அரச குலத்தவர்கள் புகழுடன் தோன்றுகிறார்கள். சிலர் கடுமையாக உழைத்து அப்புகழை இழக்கிறார்கள்” என்றான். நாடோடி சிரிக்காமல் “ஆம், வணிகர்கள் பொன்னுடன் பிறப்பதைப்போல” என்றான். கொழுத்த வணிகன் “அவை மூத்தவர் ஈட்டிய பொருளாக இருக்கும்” என்றான். “எல்லாமே எவரோ ஈட்டியவைதான்” என்றான் நாடோடி. “பழியும் நலனும்கூட ஈட்டப்பட்டவையே. இவ்வுலகில் அனைவரும் சுமந்துகொண்டு வந்திறங்குபவர்களே.”

அர்ஜுனன் கால்களை நீட்டியபடி “இந்த மழை இன்றிரவு முழுக்க பெய்யும் என்று தோன்றுகிறது. நாம் படுத்துக் கொள்வதே நன்று” என்றான். இளைய வணிகன் “விடுதிகளில் மரவுரிகளை பேண வேண்டுமென்பது நெறி. மகதத்திலும் கலிங்கத்திலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அனைத்து விடுதிகளிலும் படுக்கை வசதிகள் உள்ளன” என்றான். “அயோத்தியில் என்ன அரசா உள்ளது? பழம்பெருமை மட்டும்தானே? இன்று சென்றால் சற்று முன்னர்தான் ராகவராமன் மண் மறைந்தான் என்பது போல் பேசிக்கொண்டிருப்பார்கள். சந்தையில் பொருட்களை விரித்தால் வாங்க ஆளில்லை. பொன் கொடுத்தாலும் கொள்வதற்கு பொருளில்லை” என்றார் காந்தாரர்.

“ஆம், மாளிகைகள் மழை ஊறி பழமை கொண்டுள்ளன. சற்று முன் அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குகள் போல் உள்ளன அரண்மனைகள். அதையே அவர்கள் பெருமையென கொள்கிறார்கள். அயோத்தியில் ஒருவனுடன் பேசிப்பாருங்கள். ஒவ்வொரு அரண்மனையும் எத்தனை தொன்மையானது என்று சொல்வான். புதிய அரண்மனை ஏதுமில்லையா உங்கள் நகரில் என்றேன் ஒருவனிடம். சினந்து கூச்சலிடத் தொடங்கிவிட்டான்” என்றான் இளையவணிகன். “ஆனால் பழைய பொன் என ஏதுமில்லை அவர்களிடம்” என்றான் கொழுத்தவன்.

நாடோடி “நான் வெறும் கல் தரையிலேயே படுத்துத் துயில பழகிவிட்டேன். மரவுரி எனக்கு ஒத்துக் கொள்வதில்லை” என்றான். கொழுத்த வணிகன் “எனது மூட்டையில் ஒரு மரவுரி உள்ளது. வேண்டுமென்றால் அதை அளிக்கிறேன்” என்றான். அர்ஜுனன் “அளியும். நான் அதற்கு ஒரு வெள்ளிப்பணம் தருகிறேன்” என்றான். அவன் முகம் மலர்ந்து “நான் அதை பணத்திற்கு தரவில்லை. ஆயினும் திருமகளை மறுப்பது வணிகனுக்கு அழகல்ல” என்றபடி கையூன்றி “தேவி, செந்திருவே” என முனகியபடி எழுந்து பெருமூச்சுடன் தன் மூட்டையை நோக்கி சென்றான்.

மண்டபத்தின் மறு பக்கம் இருந்த கொட்டகையில் அவர்களின் வணிகப்பொதிகள் அடுக்கப்பட்டிருந்தன. காவல் வீரர்கள் அவற்றின் அருகே மரவுரி போர்த்தி வேலுடன் அமர்ந்து துயிலில் ஆடிக் கொண்டிருந்தனர். “சுபத்திரைக்கும் திரௌபதிக்கும் பூசல்கள் என்று சொன்னார்களே?” என்றான் இளைஞன். நாடோடி சிரித்து “எவரும் சொல்லவில்லை, நீர் சொல்ல விழைகிறீர். சொல்லிக் கேட்க விழைகிறீர்” என்றான். “இல்லை, சொன்னார்கள்” என்றான் அவன் சினத்துடன். “எங்கு சொன்னார்கள்? அப்படி ஒரு செய்தியை நான் கேட்டதில்லையே” என்றான் நாடோடி.

“பூசலில்லாமல் இருக்குமா என்ன? சுபத்திரை இந்திரப்பிரஸ்தத்திற்குள் துவாரகையால் கொண்டு வந்து நடப்பட்ட செடி. நாளை அது முளைத்து கிளையாகி அந்நகரை மூடி நிற்கும். சுபத்திரையின் கொடிவழி முடிசூடும் என ஒரு நிமித்திகர் கூற்றும் உள்ளது. அதை திரௌபதியும் அறிந்திருப்பாள். பெண்ணுருக்கொண்டு இந்திரப்பிரஸ்தத்திற்குள் வந்த இளைய யாதவர்தான் அவள் என்றொரு சூதன் பாடினான்” என்றார் காந்தாரர். “அதனாலென்ன? திரௌபதியின் இனிய தமையன் அல்லவா இளைய யாதவர்?” என்றான் குள்ளன். “ஆம், அதில் ஏதும் ஐயமில்லை” என்றார் காந்தாரர். “அப்படி இருக்கையில் சுபத்திரையிடம் அவளது சினம் இன்னும் கூடத்தானே செய்யும்” என்றார் காந்தாரர்.

“ஏன்?” என்றான் இளைஞன். “உமக்கு இன்னும் மணமாகவில்லை. எத்தனை சொற்களில் சொன்னாலும் அதை நீர் புரிந்து கொள்ளப்போவதும் இல்லை” என்றார் முதிய வணிகர். குள்ளன் “ஆம் உண்மை” என வெடித்து நகைத்தான். மரவுரியுடன் உள்ளே வந்த கொழுத்த வணிகன் “தேடிப்பார்த்தேன், நான்கு மரவுரிகள் இருந்தன” என்றபின் “மூன்றை நான் பிறருக்கு அளிக்க முடியும். சிவயோகியிடமே பணம் பெற்றுக் கொண்டபின் வணிகரிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அது வணிகர்களுக்கும் மதிப்பல்ல” என்று சிரித்தான்.

குள்ளன் எழுந்து "அதைக் கொடும்" என்று வாங்கிக் கொண்டான். மெலிந்த வணிகர் “வெள்ளிப்பணத்திற்கு மரவுரியை ஒருநாளைக்காக எவரும் வாங்குவதில்லை. இரண்டு மரவுரியையும் கொடுத்தால் ஒரு பணத்திற்கு பெற்றுக்கொள்கிறேன்” என்றார். நாடோடி வெடித்துச் சிரித்து “இரு சிறந்த வணிகர்கள்” என்றான். “நீர் சொன்னது குழப்பமாக இருக்கிறது” என்றார் காந்தாரர். “சுபத்திரையின் மைந்தனுக்கு இந்திரப்பிரஸ்தத்தில் என்ன இடம்? அவன் அங்குள்ள இளவரசர்களில் இளையவன் அல்லவா?”

“இந்த அரசுக்கணக்குகள் நமக்கெதற்கு?” என்றார் ஒரு முதுவணிகர். “அஸ்வகரே, வணிகர்களுக்குத் தெரிந்த அரசியல் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அரசியலில் ஷத்ரியர்களைவிட இழப்பும் ஈட்டலும் வணிகர்களுக்கே. ஆம்… அதை அறிந்திருக்க வேண்டும். அதன் திசைவழிகளுக்கேற்ப நமது செலவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதை நாம் வழிநடத்த முடியாது. எவ்வகையிலும் அதில் ஈடுபடவும் கூடாது” என்றார் முதிய வணிகர். “சுபத்திரை அருகநெறி சார்ந்து ஒழுகுகிறாள் என்று அறிந்தேன்” என்றார் காந்தாரர். “அவளது தமையன் அரிஷ்டநேமி ரைவத மலையில் ஊழ்கமியற்றுவதாக அறிந்தேன். ஒருமுறை துவாரகையில் அவரை நானே பார்த்துளேன். பிற மானுடர் தலைக்கு மேல் அவர் தோள்கள் எழுந்திருக்கும். ஆலயக்கருவறைகளில் எழுந்திருக்கும் அருக சிலைகளின் நிமிர்வு அவரிடம் உண்டு.”

“துவாரகையின் வாயிலை அவர் கடந்து செல்வதை நானே கண்டேன்” என்றார் அவர். “மணிமுடியையும் தந்தையையும் தாயையும் குலத்தையும் துறந்து சென்றார். அவரை கொண்டுசெல்ல இந்திரனின் வெள்ளையானை வந்தது. வானில் இந்திரவில்லும் வஜ்ரப்படைக்கலமும் எழுந்தன.” நாடோடி “கூடவே ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அழித்துச் சென்றார்” என்றான். “பெண் என்று சொல்லாதே. கம்சனின் தங்கையான அவள் இளவரசி. இளவரசியின் வாழ்க்கை எளிய மானுடப்பெண்களின் வாழ்க்கையைக் கொண்டு பொருள்படுத்தத் தக்கதல்ல. அவர்கள் கருவூலப்பொருட்கள். கவர்ந்து வரப்பட்டவர்கள். கவரப்படுபவர்கள்.”

அதுவரை பேசாது மூலையில் மரவுரி போர்த்தி அமர்ந்திருந்த வெண்தாடி நீண்ட முதியவணிகர் ஒருவர் “ராஜமதியின் வாழ்க்கை அழிந்ததென்று எவர் சொன்னது?” என்றார். “ஏன், அழியாமல் என்னாயிற்று? பழி எண்ணி எவரும் கொள்ளாத பெண் அவள். பிந்திய வயதில் அல்லவா அம்மணம் அவளுக்கு வாய்த்தது? தன் ஆண்மகன் கையில் ஒரு கங்கணம் கட்டப்படுவதற்கு அப்பால் அவளுக்கு நல்லூழ் அமையவில்லையே. அதை அறுத்தெறிந்து வெற்றுடலென அவர் நகர் விட்டுச் செல்லும் செய்தியை அல்லவா கேட்டாள்?” என்றான் நாடோடி.

“ஆம்” என்றார் முதுவணிகர். “நாம் அதை எப்போதும் எண்ணுவதேயில்லை.” முதியவர் “நான் அருகநெறியினன். நான் அறிவேன்” என்றார். “அத்தனை அணிகளையும் ஆடைகளையும் களைந்து துறவு கொண்டு நகர்விட்டுச் செல்வதற்கு நேமிநாதர் குருதி வெள்ளத்தை காணவேண்டியிருந்தது. அவர் சென்று விட்டார் என்ற செய்தி அறைக்கு வெளியே நின்ற சேடியால் சொல்லப்பட்டபோதே அவள் அனைத்தையும் துறந்தாள். அதை அறிவீரா?”

அனைவரும் அவரை நோக்கினர். “நேமிநாதர் நகர் நீங்கிச் செல்லும் செய்தியை அவளிடம் எப்படி சொல்வதென்று செவிலியரும் சேடியரும் வந்து அறைவாயிலில் நின்று தயங்கினர். சொல்லியே ஆகவேண்டுமென்பதால் முதியசெவிலி வாயிலில் நின்று மெல்லிய குரலில் சொல்லத்தொடங்கினாள். அவள் சொற்கள் முழுமை அடைவதற்குள்ளேயே ராஜமதி அனைத்தையும் உணர்ந்து கொண்டாள்.  தன் மெல்லிய குரலில் நன்று நிறைக என்று மட்டும் சொல்லி அணிகளை களையத்தொடங்கினாள். அனைத்து ஆடைகளையும் களைந்து மரவுரி அணிந்தாள். தன் தலைமயிரை கைகளால் பற்றி இழுத்து வெறுந்தலையானாள். அழகிய வாயை வெண்துணியால் கட்டிக்கொண்டாள்.”

“அரண்மனைக்குள் பதினெட்டுநாட்கள் வெறும் நீர் அருந்தி ஊழ்கத்தில் இருந்தாள். பின்பு கருக்கிருட்டில் எழுந்து தன் அன்னையிடம் நான் செல்ல வேண்டிய பாதை என்னவென்று அறிந்து கொண்டேன் என்றாள். என்ன சொல்கிறாய் என்று அன்னை கேட்டாள். அவர் ஊழ்கத்தில் இருக்கும் அக்குகைவாயிலின் இடப்பக்கம் நின்றிருக்க வேண்டிய யக்ஷி நான். என் பெயர் அம்பிகை என்று அவள் சொன்னாள். தன் தமையர்களை கண்டு விடைகொண்டு அரண்மனை வாயிலில் வந்து நின்றாள்” என்றார் அருகநெறி வணிகர்.

“காலை இளவெயில் எழுந்தபோது அரண்மனை வாயிலுக்கு ஓர் இளைஞன் வந்தான். கையில் வலம்புரிச்சங்கு ஒன்றை ஏந்தியிருந்தான். அவன் சங்கோசை கேட்டு அவள் இறங்கி அவனுடன் சென்றாள். அவன் யார் என கேட்ட அரசரிடம் தன் பெயர் கோமதன் என்றான். அவனுடன் கிளம்பி நகர் விட்டுச் சென்றாள்” என்றார் அருக நெறியினர். “அவர்கள் ரைவத மலைக்குச் சென்றனர். நேமிநாதர் ஊழ்கத்தில் அமர்ந்த அக்குகைக்கு இருபக்கமும் காவலென நின்றனர். அருகர்களுக்கு காவலாகும் யட்சனும் யட்சியும் மானுட உருக்கொண்டு வந்தவர்கள் அவர்கள்.”

“கதைகள்” என்றான் இளைஞன். முதிய வணிகர் “ஆனால் காதல்கொண்ட பெண்ணும் மாணவனுமன்றி எவர் ஊழ்கக்காவலுக்கு உகந்தவர்?” என்றார். இளைஞன் “அருக நெறியினருக்கு அருகர்கள் முடிவின்றி தேவைப்படுகிறார்கள். ஆலமரம் விதைகளிலிருந்து முளைத்தெழுவது போல் அனைத்து இடங்களிலும் அவர்கள் முளைத்தெழுகிறார்கள்” என்றான். நாடோடி. “இன்பங்களில் திளைக்கும் மானுடரின் குற்றவுணர்வு அது. எங்கோ சில தூயர் அவர்களுக்காக குருதியும் கண்ணீரும் சிந்தவேண்டும். அவர்களை தெய்வங்களென்று நிறுத்துவார்கள்” என்றான். இளையவன் “பலாக்கொட்டைகள் இருக்கின்றன. அனலிட வேண்டுமா? இப்போதே நடுசாமம் அணுகிக் கொண்டிருக்கிறது” என்றான். கொழுத்த வணிகன் “ஆம், கரியும் அளவுடனே உள்ளது. நாம் அதை வீணடிக்கவேண்டியதில்லை” என்றான்.

அர்ஜுனன் “ஆம், இந்த அனல் விடியும் வரைக்கும் போதும்” என்றபின் மரவுரியை சருகில் விரித்து அதன் மேல் கால் நீட்டி படுத்துக்கொண்டான். அனைவரும் சிறு குரலில் உரையாடியபடி படுத்துக்கொண்டனர். அர்ஜுனன் வெளியே பெய்யும் மழையை கேட்டுக்கொண்டிருந்தான்.

பகுதி ஆறு : மாநகர் - 2

கிழக்கிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைவதற்கான மைய வணிகப்பாதையின் பெயர் அர்க்கபதம். அதன் வலப்பக்கம் அமைந்திருந்த இந்திரகீலம் என்ற பெயருடைய செம்மண் குன்றின் உச்சிமேல் வானிலிருந்து விழுந்தது போல் அமைந்திருந்த பெரிய பாறையின் மீது இந்திரனின் சிலை நின்றிருந்தது. இடக்கையில் அமுத கலசமும் வான் நோக்கி தூக்கிய வலக்கையின் நுனியில் வஜ்ராயுதமும் ஏந்தி வலக்காலை முன்னால் தூக்கி நின்றிருந்தான் விண்ணவர்கோன். அப்பெரும் பாறையில் புடைப்புச் சிற்பமாக ஐராவதத்தின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. இந்திரப்பிரஸ்தத்தை அணுகி விட்டோம் என்பதற்கான அடையாளம் அது.

சாலையின் முதல் வளைவிலேயே அச்சிலை கண்களுக்குத் தெரிந்தது. இளம்புலரியில் விழித்தெழுந்து வணிகப்பாதையில் பொதி வண்டிகளுடனும் அத்திரிகளுடனும் குதிரைகளுடனும் கழுதைகளுடனும் சிறிய குழுக்களாக வந்து கொண்டிருக்கும் வணிகர்களின் விழிகள் வானில் அச்சிலைக்காக துழாவிக் கொண்டிருக்கும். செறிந்த கூட்டங்களுக்கு மேல் இந்திரனின் கையில் வஜ்ராயுதம் தெரிந்ததுமே வணிக குழுக்களில் ஒலி எழும். பார்க்காதவர்களுக்கு பார்த்தவர்கள் சுட்டிக் காட்டுவார்கள். மெல்ல பசும் பெருக்கிலிருந்து இந்திரன் மேலெழுந்து வருவான். கீழ்வானை நோக்கிய விழிகளும் உடலெங்கும் அலை விரிந்த ஆடையுமாக.

இடக்கையில் அமுத கலசம் எழக்கண்டதுமே இந்திரப்பிரஸ்தத்தில் நுழைந்த உணர்வை வணிகர் அடைவார்கள். அர்ஜுனனின் அருகே சென்ற இளம் வணிகன் இரு கைகளையும் தூக்கி “இந்திரப்பிரஸ்தம்! இந்திரப்பிரஸ்தம் வந்துவிட்டது” என்று கூச்சலிட்டான். அர்ஜுனன் புன்னகைத்தான். “யோகியே, மண்ணில் மானுடர் அமைத்த மாநகரம் இது. யாதவர்கள் துவாரகையில் அமைத்த நகரம் இதில் பாதி கூட இல்லை” என்றான். அர்ஜுனன் “நான் அதை பார்த்திருக்கிறேன்” என்றான். “இதை பார்க்கப்போகிறீர். நீரே அறிவீர்” என்றான் இளைய வணிகன்.

சிலை அருகே பொதிவண்டிகளும் வணிகர்குழுக்களும் தயங்கின. சாலை ஓரமாக இருந்த சிறிய கல் மண்டபத்தில் இந்திர சிலைக்கு பூசனை செய்யும் நாகர்களின் குழு அமைந்திருந்தது. வணிகர்கள் அவர்களுக்கு காணிக்கை பொருட்களையும் குங்கிலியம் முதலிய நறுமணப் பொருட்களையும் அளித்து வணங்கினர். இளைய வணிகன் “இப்பகுதியெங்கும் முன்பு காண்டவ வனம் என்று சொல்லப்பட்டது, அறிவீரா?” என்றான். அர்ஜுனன் “ஆம் கேட்டிருக்கிறேன்” என்றான்.

“இளைய பாண்டவர் இங்கிருந்த நாகங்களை அழித்தார். அவரது அனல் அம்புகளால் காண்டவ வனம் தீப்பற்றி எரிந்தது. அன்று இங்கிருந்த நாகர்கள் அனைவரும் இந்திர வழிபாட்டாளர்கள். அவர்களைக் காக்க இக்குன்றின்மேல் இந்திரன் எழுந்தான் என்கிறார்கள். பன்னிரண்டு முறை கருமுகில் செறிந்து காண்டவ வனத்தில் எரிந்த அனலை முற்றழித்தது. பின்னர் இளைய பாண்டவர் தன் தந்தை இந்திரனிடம் நேருக்கு நேர் போர் புரிந்தார். தனயனிடம் போரில் தோற்கும் இன்பத்துக்காக இந்திரன் தன் வஜ்ராயுதத்தை எடுத்தபடி வானில் மறைந்தான்.”

இளம் வணிகன் தொடர்ந்தான் “அதன் பின் இங்கிருந்த நாகர்கள் இளைய பாண்டவர் முன் பணிந்து அவரது வில்லுக்கு தங்கள் கோலை அளித்தனர். அஸ்தினபுரியின் பங்கு வாங்கி பாண்டவர் பிரிந்து வந்த போது இந்தக் காட்டிலேயே தங்கள் நகரை அமைக்க வேண்டுமென்று பாஞ்சாலத்து அரசி விரும்பினார்கள். இங்கு நகரெழுந்தபோது இந்திரன் மைந்தனால் வெல்லப்பட்டது என்பதனாலும் இந்திரனால் காக்கப்படுவது என்பதனாலும் அதற்கு இந்திரப்பிரஸ்தம் என்று பெயரிட்டார்கள். இங்கு அமைந்த இந்திரன் சிலையை நாகர்களுக்கு உரியதாக்கினார்கள். இன்றும் இப்பகுதி நாகர்களால் காக்கப்படுகிறது. இங்குள்ள பதினெட்டு நாகர் ஆலயங்களும் அவற்றின் மேல் எழுந்த இந்திரனின் பெருஞ்சிலையும் அவர்களாலேயே பூசனை செய்யப்படுகிறது” என்றான்.

அர்ஜுனன் புன்னகையுடன் “ஆம், அரிய சிலை” என்றான். “இதற்கு நிகர் தாம்ரலிப்தியின் கரையில் நின்றிருக்கும் சோமனின் பெருஞ்சிலையும் தெற்கே தென்மதுரைக் கரையில் நின்றிருக்கும் குமரியன்னையின் பெருஞ்சிலையும்தான்.” அர்ஜுனன் “குமரியின் பெருஞ்சிலை பேருருவம் கொண்டது என்கிறார்கள்” என்றான். வணிகன் அதை தவிர்த்து “விண்ணில் எழும் மின்னலைப் பற்றுவது போன்ற கைகள். கலிங்கத்துச் சிற்பி கம்ரகரின் கற்பனை அது. பாரதவர்ஷத்தின் பெருஞ்சிற்பிகளில் ஒருவர். இச்சிலை ஒற்றைக் கல்லால் ஆனதல்ல. இங்கிருந்து பார்க்கையில் அப்படி தோன்றுகிறது. பதினெட்டு தனிக்கற்களில் செய்து உள்ளே குழி மீது முழை அமரும் விதத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இதை எழுப்பியிருக்கிறார்கள்” என்றான்.

“மண் நடுங்கினாலும் சரியாத உறுதி கொண்டது என்கிறார்கள்” என்று அவன் தொடர்ந்தான். “அதன் எடையே அதன் உறுதி” என்றார் பின்னால் வந்த முதுவணிகர். “விண்ணிலிருந்து மின்னலைப் பற்றி இந்திரப்பிரஸ்தத்திற்கு படைக்கலமாக அளிக்கிறது இது. இடது கையில் அமுத கலசம் அஸ்தினபுரியின் செல்வம் அனைத்தும் இனி இந்திரப்பிரஸ்தத்திற்கே என்பதை குறிக்கிறது. இன்னும் எட்டு மாதத்தில் நகரத்தின் பணிகள் அனைத்தும் முடியும் என்று சொன்னார்கள்.”

“அப்படித்தான் சொல்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் நான் வரும்போது இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிந்துவிடும் என்றனர். அதன் பிறகே தெற்கு வாயில் கோட்டை பணி தொடங்கியது” என்றான் இளம்வணிகன். “இத்தனை பெரிய மாநகரத்தை கட்டுவதற்கான கற்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டாமா?” என்றார் காந்தாரர். “இந்நிலம் காண்டவ வனமாக இருந்தபோது செந்நிறப் பெரும் பாறைகள் நிறைந்த வெளியாக இருந்தது. விண்ணை தாங்கி நிற்கும் பெருந்தூண்கள் ஒவ்வொன்றும் மரங்கள் அடர்ந்து இருந்தன. அனைத்து மரங்களையும் வெட்டி இல்லங்கள் அமைக்க கொண்டு சென்றனர்.”

“அச்செம்பாறைகளே இந்நகரை அமைக்க போதுமானவை என்று அந்தச் சிற்பிகள் கணக்கிட்டனர். ஆனால் மாளிகைகள் எழும்தோறும் கற்கள் போதவில்லை. எனவே வடக்கே தப்தவனம் என்னும் இடத்தில் இருந்த மென்பாறைகள் முழுக்க வெட்டப்பட்டு யமுனையின் நீர்ப்பெருக்கு வழியாக தெப்பங்களில் கொண்டுவரப்பட்டன. தப்த வனம் இன்று கல் பாறைகள் ஏதுமற்ற ஒரு கோடைகால மலர்த்தோட்டமாகிவிட்டது. அதற்கப்பால் இருந்த சீர்ஷகம் என்னும் பெருமலையின் அனைத்து மணல்பாறைகளும் வெட்டி உருட்டிக் கொண்டு வரப்பட்டு யமுனையினூடாக இங்கு வந்து சேர்ந்தன. கங்கைக்கரையின் ஜலபூஜ்யம் என்னும் இடத்திலிருந்து சேற்றுப்பாறைகளை பாளங்களாக வெட்டிக்கொண்டு வந்தனர். இங்குள்ள கோட்டைகள் அப்பாறைகளால்தான் அமைந்துள்ளன.”

“அரசப் பெருமாளிகைகள் சிவந்த கற்களாலும் கோட்டைகளும் காவல் மாடங்களும் பிற கற்களாலும் அமைந்துள்ளன. மானுட உழைப்பில் இப்படி ஒரு நகரம் அமையும் என்று விண்ணவர்களும் எண்ணியிருக்கவில்லை என்பதனால் எப்போதும் இந்திரப்பிரஸ்தத்திற்கு மேல் வானம் ஒளியுடன் இருக்கிறது. விண்ணூரும் முகில்களில் வந்தமர்ந்து கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் இந்நகரை விழிவிரித்து நோக்கியிருக்கின்றனர் என்கிறார்கள் சூதர்கள். இந்திரனின் வில் பல நாட்கள் இந்நகர் மேல் வளைந்திருப்பதை கண்டிருக்கிறார்கள்” என்றார் முதுவணிகர்.

நாடோடி “இந்நகர் அமைந்திருக்கும் இடத்தின் இயல்பு அது. பாரதவர்ஷத்தில் மிகக்கூடுதலாக மழை பெய்யும் இடங்களில் ஒன்று இது. பெரும்பாலான நாட்களில் இளவெயிலும் உள்ளது. விண்ணில் மழைவில் எழுவதனால்தான் இதற்கு இந்திரப்பிரஸ்தம் என்றே பெயர்” என்றான். “எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் விண்முகில் சூடி மழைவில் ஏந்திய ஒரு நகரம் பிறிதொன்றில்லை இப்புவியில்” என்றார் காந்தார வணிகர்.

இந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்லும் சாலையின் இருபுறமும் மென் மணற்கற்களால் கட்டி மரப்பட்டைக்கூரை போடப்பட்ட வணிகர் சாவடிகள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வணிகர் குழுவும் அவற்றின் குலக்குறிகள், ஊர்மரபுகளை ஒட்டி அவர்களுக்குரிய சாவடிகளை அமைத்திருந்தனர். அங்கு முன்னரே இருந்த அவர்களின் அணுக்கர்கள் வெளி வந்து கை வீசி அவர்களை வரவேற்று கூச்சலிட்டனர். ஒவ்வொரு வணிகராக விடைபெற்றுச் சென்று சாவடிகளில் தங்கினர்.

“நகருக்குள் செல்வதற்கு முன்னரே இச்சாவடிகளை அமைத்தது ஒரு சிறந்த எண்ணம். இங்கேயே பொதிகளை அவிழ்த்து சீராகப் பங்கிட்டு தேவையானவற்றை மட்டும் ஒவ்வொரு நாளும் அத்திரிகளில் ஏற்றிக் கொண்டு நகரின் பெரும் சந்தைக்கு நம்மால் போக முடியும். வணிகர்கள் மட்டுமே தங்கும் பகுதிகள் இவை. எனவே இங்கேயே ஒருவருக்கொருவர் பாதி வணிகம் நடந்து விடும்” என்றார் காந்தாரர். “வணிகரின் இடமென்பதனால் பொதுவான காவலே போதும். திருட்டுக்கு அஞ்சவேண்டியதில்லை.”

“நான் நகருள் நுழைகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “நெடுந்தூரப் பயணம். இங்கே எங்களுடன் தங்கி யமுனையில் நீராடி உணவுண்டு ஆடை மாற்றி நகர் நுழையலாமே?” என்றான் இளைய வணிகன். அர்ஜுனன் “சிவயோகி மாற்ற விரும்பும் ஆடை ஒன்றே. ஒரு முறை மட்டுமே அணியும் ஆடை அது” என்றான். பின்பு இளவணிகனின் தோளை தட்டியபடி “இந்திரனின் நகரில் இன்று மழைவில் எழுமா என்று பார்க்கிறேன்” என்று புன்னகைத்தான். “வணங்குகிறேன். என்னை வாழ்த்திச் செல்லுங்கள் யோகியே” என்றான் அவன். “செல்வம் பெருகட்டும் குலம் பெருகட்டும்” என்று வாழ்த்தியபின் அர்ஜுனன் நடந்து இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டை வாயிலை நோக்கி சென்றான்.

இந்திரப்பிரஸ்தத்தின் முதல் வெளிக்கோட்டை பெருவாயில் மட்டுமே கட்டப்பட்டு ஒரு பெருமாளிகை போல தனியாக நின்றது. அதன் வலப்பக்கம் கரிய பெருஞ்சுவர் சற்றே வளைந்து சரிவேறி சென்று உடைந்தது போல் நிற்க அதன் அருகே வண்ண உடைகள் அணிந்த பல்லாயிரம் சிற்பிகள் அமர்ந்து கற்களை உளியால் கொத்தி பணியாற்றிக் கொண்டிருந்தனர். கிளிக்கூட்டத்தின் ஓசை போல உளியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் பணியாற்றுவதை கண்காணிப்பதற்காக தோல் கூரையிட்ட மேடைக் குடில் ஒன்று அமைந்திருந்தது. அதன் வாயிலில் மூங்கில் பீடத்தில் தலைமைச் சிற்பி அமர்ந்திருக்க அருகே அவர் அடைப்பக்காரன் மூங்கில் குடுவையுடன் நின்றிருந்தான்.

கிழக்கே எழுந்த வெயில் கோட்டையின் பெரிய கற்சதுரங்களை மின்ன வைத்தது. அருகணையும்தோறும் கருங்கல்லில் உப்பின் ஒளி தெரிந்தது. கருநாகத்தின் செதில்கள் மின்னுவது போல் வெயிலில் அதன் புதிய கற்பொருக்குகள் ஒளிவிட்டன. பெருவாயிலில் மிகச்சில காவலர்களே இருந்தனர். உள்ளே செல்லும் வணிகர்களை அவர்கள் தடுக்கவோ உசாவவோ இல்லை. காவல் மாடங்களில் மடியில் வேல்களைச் சாய்த்தபடி அமர்ந்து ஒருவரோடொருவர் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்தில் சுங்க வரி இல்லை என்பதனால் காவலும் தேவையில்லை என்று திரௌபதி முடிவுசெய்திருந்தாள். ஆனால் கண்காணிப்பு எப்போதுமிருந்தது. “மிகப்பெரிய நகரம் என்பதனால் ஏற்படும் அச்சத்தை காவலின்மை போக்கிவிடும். நகரம் அவர்களுக்கு அணுக்கமானதாக ஆகிவிடும்” என்றாள்.

கோட்டை முகப்பு பதினெட்டு அடுக்குகள் கொண்ட இரு தூபிகளுக்கு நடுவே சென்ற கற்பாளங்கள் பதிக்கப்பட்ட பாதையால் ஆனதாக இருந்தது. தூபிகளின் அனைத்து அடுக்குகளிலும் வட்டமான உப்பரிகைகள் அமைந்திருந்தன. அவற்றில் காவலர் அமரவும் சாலையை நோக்கி அம்புகளை செலுத்தவும் இடமிருந்தது. தூபிகளின் உச்சி கவிழ்ந்த தாமரை வடிவ வேதிகையை சென்றடைந்தது. அதன்மேல் இந்திரப்பிரஸ்தத்தின் வஜ்ராயுதம் பொறிக்கப்பட்ட செங்காவிநிறமான பட்டுக் கொடி பறந்து கொண்டிருந்தது.

தூபிகளை இணைத்து கதவுகளேதும் அமைக்கும் எண்ணம் இல்லையென்று அதன் அமைப்பே காட்டியது. இந்திரப்பிரஸ்தம் அகழியாலோ காவல் காடுகளாலோ காக்கப்படவில்லை. ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த ஏழு கோட்டை நிரைகளே அதற்கு காப்பு. “இந்நகர் ஓர் எறும்புதின்னி. எதிரி வருகையில் தன் செதில்களை ஒன்றன் மேல் ஒன்றென மூடி உலோக உருளையென ஆக முடியும்” என்றார் வாஸ்துபுனிதமண்டலத்தை அமைத்த கலிங்கச்சிற்பியான கூர்மர்.

தூபிகள் நடுவே சென்ற பாதையில் மிகக் குறைவாகவே வணிகர்கள் உள்ளே சென்று கொண்டிருந்தனர். சிற்பிகளும் வினைவலரும் அன்றி பொதுமக்கள் என சிலரே கண்ணுக்குத் தெரிந்தனர். இந்திரப்பிரஸ்தத்தை சூழ்ந்திருந்த நாநூற்றி எழுபத்தாறு யாதவர் ஊர்களிலிருந்தும் மக்கள் நகருக்குள் குடிவரத் தொடங்கவில்லை. அவர்களுக்கு நகரில் அவர்களின் இடமென்ன என்று அப்போதும் புரியத்தொடங்கவில்லை. மக்களை உள்ளே கொண்டுவர திரௌபதி தொடர்ந்து முயற்சிகள் செய்துகொண்டிருந்தாள். ஆனால் துறைமுகம் முழுமையாக பணிதொடங்குவது வரை நகரம் முற்றமைய வாய்ப்பில்லை என அவளும் அறிந்திருந்தாள்.

முதற்கோட்டைக்கு அப்பால் நகரைச் சூழ்ந்து நறுமணம் வீசும் சந்தனமும் நெட்டி மரங்களும் வளர்க்கப்பட்ட குறுங்காடு இருந்தது. அதனூடாக சென்ற சாலை இரண்டாவது கோட்டையை சென்றடைந்தது. அக்கோட்டையும் கட்டி முடிவடையா நிலையிலேயே இருந்தது. பெரிய மணற்பொரிக் கற்கள் நீள் சதுரங்களாக வெட்டப்பட்டு ஆங்காங்கே தரையில் கிடந்தன. அவற்றை வடங்களில் கட்டி சரிவாக அமைக்கப்பட்ட மூங்கில் சாரங்களில் ஒவ்வொரு படியாக இழுத்து ஏற்றி மேலே எடுத்துச்சென்று கொண்டிருந்தனர்.

அப்பெரும் பாறைகளை மூங்கில் சாரங்களில் ஏற்ற முடியுமா என்ற ஐயமே பார்வையாளர்களுக்கு எழும். அதை வேடிக்கை பார்த்தபடி அங்கேயே நின்றிருக்கும் கும்பலில் சிலர் “எப்படி மூங்கில் எடை தாங்குகிறது?” என்று எப்போதும் கேட்பதுண்டு. ஒருமுறை முதிய வினைவலர் ஒருவர் “மூடா, ஒரு மூங்கில் அல்ல அங்கிருப்பது பல்லாயிரம் மூங்கில்கள். அப்பெரும்பாறையை கட்டியிருப்பது பல நூறு சரடுகள். அவற்றின் ஒட்டு மொத்த வலிமை அப்பெரும்பாறையை கூழாங்கல் என ஆக்கக்கூடியது” என்றார். “சூத்திரர்களின் ஆற்றல் அதைப் போன்றது. ஷத்ரியர்களை தூக்கி மேலெடுக்க நமக்கு பல்லாயிரம் கைகள் உள்ளன” என்று ஒருவன் சொல்ல கூடி நின்றவர்கள் நகைத்தனர்.

பாறைகளை அசைத்த நெம்புகோல்களையும் தூக்கி மேலேற்றிய பெருந்துலாக்களையும் பின்னிக்கட்டியிருந்த வடங்களையும் இழுக்கும் யானைகள் மிக மெல்ல காலெடுத்து வைத்து அசைவதாக தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரின் உடற்தசைகளும் இழுவிசையில் தெறித்து நின்றிருந்தன. அவ்விசைகளுக்குத் தொடர்பின்றி தங்கள் சொந்த விழைவாலேயே செல்வதுபோல சதுரப்பாறைகள் மேலேழுந்து சென்று கோட்டை விளிம்பை அடைந்தன. அங்கிருந்த சிற்பிகள் கயிறுகளில் கட்டியிருந்த சிறிய வண்ணக்கொடிகளை அசைத்து ஆணையிட ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு வடங்களை பற்றி இழுக்க அவர்கள் இழுக்கின்ற விசைகளுக்கு இயைபற்றதுபோல அசைந்தாடிச்சென்ற பாறை துலாக்கள் கிரீச்சிட்டபடி சென்று தான் அமர வேண்டிய குழியில் முழை அமர்த்தி அமைந்தது.

அங்கு எப்போதும் பார்வையாளர் இருந்தனர். கற்கள் சென்று அமர்வது நோக்க நோக்க வியப்பு குறையாததாகவே எப்போதும் இருந்தது. கூடிநின்றவர்கள் கைசுட்டி கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். “முடிவற்ற உடற்புணர்ச்சியில் இனி அவை அமர்ந்திருக்கும்” என்றார் ஒருவர். உரக்க நகைத்து “நாய்களுக்காவது நாலு நாழிகை. இவற்றுக்கு நாலு யுகம்” என்றார் இன்னொருவர். “அவர்கள் இழுப்பது போல் தெரியவில்லை. அவர்கள் இழுக்கும் திசைக்கு அந்தப்பாறை செல்லவில்லை” என்றான் ஒருவன். “மூடா, எறும்புகள் வண்டுகளை இழுப்பதை நீ பார்த்ததில்லையா ஒவ்வொரு எறும்பும் ஒரு திசைக்கு இழுக்கும். அவை ஒட்டுமொத்தமாகவே சென்ற திசைக்கு சென்று சேரும்” என்றார் ஒரு முதியவர்.

வடிவமிலாது காலவெளியில் நின்றிருந்த பாறைகள். ஒவ்வொன்றையும் சூழ்ந்திருந்தது முடிவில்லாத தனிமை. வடிவம் கொண்டு ஒன்றோடொன்று பொருந்தி அவை உருவாக்கும் வடிவம் அக்கணத்திற்கு முன் இல்லாதிருந்தது. அப்போதென உருவாகி எழுவது. அது காலத்தின் முன் நிற்கும். ஆயிரம் காலம். பல்லாயிரம் காலம். ஆனால் ஒருநாள் உதிர்ந்து அழியும். அதில் மறுப்பே இல்லை. அவ்வகையில் நோக்கினால் மாலையில் வாடி உதிரும் மலரும் அதுவும் ஒன்றே. ஆனால் பாறைகள் அங்கே கிடக்கும். மிகமெல்ல அவை கறுத்து விளிம்புகள் உதிர்ந்து தங்கள் வடிவமில்லா தோற்றத்தை மீட்கத்தொடங்கும்.

மூன்றாவது கோட்டையும் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இருந்தது. அதற்குள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட காவலர் இல்லங்கள் கூரை அற்ற நிலையில் நின்றன. “இவற்றுக்குள் ஒரு முறை வழிதவறினால் திரும்ப வருவது கடினம்” என்று அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வணிகர் சொன்னார். “ஒவ்வொரு நாளும் இவை மாறிக்கொண்டிருக்கின்றன. தென்னிலங்கை ஆண்ட ராவணன் நகருக்குள் படைகொண்டு வருபவர்களை சிக்க வைத்து விளையாடும் பொருட்டு இப்படி ஒரு சித்திரச் சுழல் பாதையை அமைத்திருந்தார் என்கிறார்கள். இதுவும் ஒரு ராவணன் கோட்டை போலிருக்கிறது. ஒவ்வொரு நாளும் யாராவது சென்று சிக்கி மீள முடியாமல் கதறி மறுநாள் மீட்கப்படுகிறார்கள்.”

இன்னொருவர் “அவை இன்று கட்டிமுடிக்கப்படவில்லை. எனவே அனைத்தும் ஒன்று போல் இருக்கின்றன. கூரை அமைந்தபின் முகப்பு எழும். அவற்றில் மானுடர் குடியேறுவார்கள். அவை அடையாளங்கள் சூடிக்கொள்ளும். அதன்பின் ஒவ்வொன்றும் தனி முகம் கொள்ளும்” என்றார். “இந்நகர் ஓர் ஒழிந்த கலம். இதற்குள் நிறைக்க மக்கள் தேவை” என்றார் ஒரு முதியவர். “யாதவர்களைக் கொண்டே நிறைப்பார்கள். அவர்கள் முதியகள்ளைப் போல. பெருகி நுரைத்து வெளியேயும் வழிவார்கள், பார்த்துக்கொண்டே இரு.”

ஒன்றினுள் ஒன்றாக அனைத்து கோட்டைகளும் பணி நடக்கும் நிலையிலேயே இருந்தன. அங்கு பல்லாயிரம்பேர் பணியாற்றியபோதும் அதன் பெருவிரிவால் அது ஒழிந்த வெறுமை கொண்டிருப்பதாகவே தோன்றியது. அங்கிருந்த நிலத்தில் பலநூறு சிறு சுனைகளும் குளங்களும் இருந்தன. அவற்றையெல்லாம் விளிம்புகட்டித் திருத்தி படியமைத்து நீரள்ளும் சகடையும் துலாவும் பொருத்தி பேணியிருந்தனர்.

கல்தொட்டிகள் நிரையாக அமைந்த குளக்கரையில் எருதுகள் நீர் அருந்திக் கொண்டிருந்தன. குளங்களில் யானைகள் இறங்கிச்சென்று நீர் அருந்துவதற்கான சரிவுப்பாதை இருந்தது. சில குளங்களில் யானைகள் இறங்கி கால்மூழ்க நின்று நீரை அள்ளி முதுகின்மேல் பாய்ச்சிக்கொண்டிருந்தன. யானையின் முகத்தில் கண்களோ மூக்கோ வாயோ இல்லை என்றாலும் எப்படி புன்னகை தெரிகிறது என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அவ்வெண்ணமே அவனை புன்னகைக்கச் செய்தது.

நான்காவது கோட்டைக்குள் எழுந்த சற்றே சரிவான நிலப்பரப்பு முழுக்க தோல்களாலும் தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில் தட்டிகளாலும் ஈச்சை ஓலைகளாலும் கட்டப்பட்ட நெருக்கமான கொட்டகைகள் அமைந்திருந்தன. கோட்டைகளையும் கட்டடங்களையும் கட்டும் ஏவலரும் வினைவலரும் அங்கு செறிந்து தங்கியிருந்தனர். காலையில் பெரும்பாலானவர்கள் பணியிடங்களுக்கு சென்று விட்டபோதிலும் கூட அங்கு ஏராளமானவர்கள் எஞ்சியிருந்தனர். அமர்ந்தும் படுத்தும் சிறு பணிகளை ஆற்றியும் அவர்கள் பேசிக்கொண்டிருந்த ஒலி திரண்டு முழக்கமாக எழுந்தது. அவர்களின் உச்சிப்பொழுது உணவுக்காக அடுமனைகள் எரியும் புகை எழுந்து கோதுமையும் சோளமும் வேகும் மணத்துடன் வானில் பரவி நின்றது.

ஐந்தாவது கோட்டை ஒப்பு நோக்க சிறியது. அதன் முகப்பில்தான் முதல் முறையாக பெரிய கதவுகள் அமைக்கும் இரும்புக்கீல்கள் இருந்தன. கதவுகள் அப்போதும் அமைக்கப்படவில்லை. அவை நகரின் மறுபக்கம் யமுனைக்கரையில் பெருந்தச்சர் குடியிருப்புகளில் தனித்தனி பகுதிகளாக கட்டப்படுகின்றன என அவன் அறிந்திருந்தான். அவன் கிளம்பும்போதே பணி நடந்துகொண்டிருந்தது. அவற்றை கொண்டு வந்து ஒன்றுடன் ஒன்று இணைத்து கோட்டை கதவாக ஆக்குவார்கள் என்றார்கள். “இணைக்கப்பட்ட கதவுகள் யானைகள் தண்டுகளை கொண்டு வந்து முட்டினால் எப்படி தாங்கும்?” என்று நகுலன் கேட்டான்.

“இணைக்கப்பட்டவை மேலும் வல்லமை கொண்டவை இளவரசே” என்றார் பெருந்தச்சரான மகிஷர். “ஒற்றைப் பெருங்கதவாக இவ்வளவு பெரிய கோட்டைக்கு அமைக்க முடியாது. அத்தனை பெருமரங்கள் தென்னகத்து மழைக்காடுகளில் கூட இருக்க வாய்ப்பில்லை. இவை கணக்குகளின் அடிப்படையில் இணைக்கப்பட்டவை. தண்டுகளோ வண்டிகளோ வந்து முட்டினாலும் அவ்விசையை பகிர்ந்து தங்கள் உடலெங்கும் செலுத்தி அசைவற்று நிற்கும்படி இக்கதவின் அமைப்பு சிற்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. மழைவெயிலில் சுருங்கிவிரிந்து மரப்பலகை விரிசலிடும். இணைக்கப்பட்டவை அவ்விரிசலுக்கான இடைவெளியை முன்னரே தன்னுள் கொண்டவை.”

“காலம் செல்லச் செல்ல ஒற்றைமரம் வலுவிழக்கும். ஆனால் இணைக்கப்பட்டவற்றின் உறுப்புகள் ஒன்றை ஒன்று இறுகக் கவ்வி மேலும் உறுதி கொள்கின்றன. இதுவரை இங்கு கட்டப்பட்ட கோட்டைக் கதவுகள் அனைத்தும் வெண்கலப்பட்டைகளாலும் இரும்புப் பட்டைகளாலும் இறுக்கப்பட்டவை. குமிழ்களாலும் ஆணிகளாலும் ஒன்றிணைத்து நிறுத்தப்பட்டவை. இக்கலிங்கக் கதவுகள் முற்றிலும் மரத்தால் ஆனவை. ஒன்றை ஒன்று கவ்வி முடிவற்ற இணைப்பு ஒன்றை நிகழ்த்தியிருப்பவை. ஒரு முறை பூட்டி விட்டால் அவற்றை அவிழ்ப்பதற்கும் எங்கள் பெருந்தச்சனே வரவேண்டும்” என்றார் மகிஷர்.

கோட்டைக்குள் அமைந்த சிற்பியர் மாளிகைகளை கடந்து சென்றான். மெல்லமெல்ல அந்நகருக்குள் உளம்நுழைந்து உரிமைகொள்வதற்கு மாறாக முற்றிலும் அயலவனாக ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தான். கோட்டைப் பணிகளுக்குப் பிறகு காவலர்தலைவர் இல்லங்களாக மாற்றும்படி அமைக்கப்பட்ட மாளிகைகள். கோட்டை அமைவதற்குள் அவ்வில்லங்களை சிற்பிகள் அமைத்து அவற்றில் குடியேறிவிட்டனர். அவர்களுக்கு அனைத்தும் செம்மையாக அமைந்தாகவேண்டும். மலைக்கு மேல் இருக்கும் பன்னிரண்டு தடாகங்களிலிருந்து குடிப்பதற்கும் நீராடுவதற்குமான நீர் சுட்ட மண்குழாய்கள் வழியாக இல்லங்களின் ஒவ்வொரு அறைக்குள்ளும் வந்தது. வெண்பளிங்குச் சுவர்களில் நீர் வழிந்து கோடை காலத்தில் குளிர்ந்த தென்றல் அறைகள் எங்கும் உலவியது.

அவ்வில்லங்களை நோக்கி நின்றபின் ஒரு வணிகன் திரும்பி “சிற்பிகள் சக்ரவர்த்திகளுக்கு நிகரான வாழ்க்கை கொண்டவர்கள். ஆயிரம் வருடம் தவம் இருந்தாலும் லட்சுமி அத்தனை அருளை நமக்களிப்பதில்லை. பதினெட்டு வருடம் கற்றால் கலைமகள் அருளுக்கு விழைவதையெல்லாம் அள்ளிக் கொடுக்கிறாள்” என்றான். “அதற்கு முற்பிறப்பில் செய்த அபூர்வமும் துணைவரவேண்டும்” என்றார் சூதர் ஒருவர்.

அந்தப்பாதையில் சென்ற அனைவரும் விழிகளென உளம் குவிந்திருந்தனர். அகத்தில் எழுந்த வியப்பை கட்டுப்படுத்தும்பொருட்டு எளிய சொற்களாக அவற்றை மாற்றிக்கொண்டிருந்தனர். வீணாக சிரித்தனர். எளிமையான அங்கதங்களை கூறினர். தங்களை அறிந்தவர் போலவும் அறியாதவர் போலவும் காட்டிக்கொண்டனர். ஒவ்வொருவரும் அந்நகரின் குடிகளாக ஒருகணமும் அயலவராக மறுகணமும் வாழ்ந்தனர்.

அவர்களில் ஒருவனாகவே அர்ஜுனன் தன்னை உணர்ந்தான். அவன் பெயரால் அமைந்த நகரம். அவனுடையதென பாரதம் எண்ணும் மண். ஆனால் ஒருபோதும் அதை அவன் தன் இடமென உணர்ந்ததில்லை. ஒவ்வொருமுறையும் முற்றிலும் புதியவனாகவே திரும்பி வந்தான். எப்போதும் அது தனக்கு அவ்வண்ணமே இருக்கப்போகிறதென அவன் உணர்ந்தான்.

பகுதி ஆறு : மாநகர் - 3

நகரின் உள்கோட்டைகள் சற்று உயரம் குறைந்தவையாகவும் சிற்பங்கள் மிகுந்தவையாகவும் இருந்தன. வாயிலின் முகப்பில் நின்றிருந்த பேருருவ வாயிற்காப்போன் சிலைகள் வலக்கையில் வஜ்ராயுதமும் இடக்கையில் அஞ்சல் அறிவுறுத்தல் குறிகளுமாக பெரிய பற்கள் செறிந்த வாயும் உறுத்து கீழே நோக்கிய கண்களும் சல்லடம் அணிந்த இடையும் சரப்பொளி அணிந்த மார்புமாக நின்றன. அவற்றின் கழல் அணிந்த கணுக்கால் உயரத்திலேயே அங்குள்ள அனைத்து வணிகர்களும் புரவி வீர்ர்களும் நடமாடினர்.

கோட்டைமேல் இந்திரப்பிரஸ்தநகரின் வஜ்ராயுதக் கொடிக்கு இருபக்கமும் நந்த உபநந்தங்கள் முழுநிலவுக்குக்கீழே பொறிக்கப்பட்ட கொடியும் பாஞ்சாலியின் வஜ்ராயுதத்தின் அடியில் வில்பொறிக்கப்பட்ட கொடியும் நகுலனின் சரபக்கொடியும் சகதேவனின் அன்னக்கொடியும் பறந்தன. வாயிலோரமாக நான்கு யானைகள் வடம்பற்றி இழுக்க நெம்புகோல் ஏந்திய பன்னிருவர் தள்ளி அமைக்க கோட்டைக் கதவுகளை பொருத்துவதற்கான கற்குடுமியை நாட்டிக் கொண்டிருந்தனர். அதை அடையாளம் கண்டுகொண்ட ஒரு வணிகன் “அரக்கர்கள் மாவிடிக்கும் உரல் என்று சிறு பிள்ளைகளுக்கு இதைக்காட்டி கதை சொல்லலாம்” என்றான். சிரிப்புடன் சிலர் அதனருகே நின்றனர்.

“ஒவ்வொரு நாளும் இப்பெருங்கதவை ஏந்தி சுழலவிட்டாக வேண்டுமே? கற்கள் எத்தனை காலம் தாங்கும் என்று தெரியவில்லை” என்றான் ஒருவன். “இவற்றின் மேல் எண்ணையிடப்பட்ட இரும்பு உருளைகள் அமைத்து அவற்றின்மேல்தான் கதவை நாட்டுவார்கள். இரும்பு உருளைகள் மேல் கதவுகள் செல்வதை தாம்ரலிப்தியில் நீ பார்த்திருக்கலாம். வெண்ணெயில் சுழல்வது போல இனிதாக ஓசையின்றி அவை இயங்கும். நாள் செல்லச் செல்ல இரும்புருளைகள் மேலும் மென்மை கொள்ளும். இப்பெருங்கதவுகளை பத்து வீரர்கள் இருந்தால் தள்ளித் திறக்கவும் மூடவும் முடியும்” என்றார் ஒருவர்.

கோட்டைக்குள் ஆறாவது வாயிலுக்கும் ஏழாவது வாயிலுக்கும் இடையில் இருந்த பகுதிகள் முழுக்க செங்கல்லால் ஆன மேடைகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சிறிய கட்டடங்களைப் போல செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அவற்றின் மேல் நின்ற பணியாட்கள் செங்கற்களை எடுத்து இழுத்துக் கட்டப்பட்ட வடங்களின் ஊடாக ஒழுகி வந்து சேர்ந்த மரக்கூடைகளில் அடுக்கினர். அவை இழுபட்டு சென்று அக்கற்கட்டுமானங்களை அடைய அங்கிருந்த செங்கல் சிற்பிகள் அவற்றை எடுத்து அடுக்கினர். கீழிருந்து வடங்களில் இழுபட்ட மரக்கூடைகளில் சுண்ணமணல் கலவை மேலே சென்று கொண்டிருந்தது. சுண்ணத்தையும் மணலையும் அவற்றை இறுக்கும் வஜ்ரங்களையும் கலந்து அரைக்கும் பெரிய கற்செக்குகள் காளைகளால் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கல்நொறுங்குவது போல செக்கு ஓடும் ஓசை கேட்டது.

அரைத்த சுண்ண விழுதை மரத்தாலான மண்கோரிகளால் வழித்தெடுத்து அருகே மலைகள் என குவித்தனர். அவற்றை இரும்புக் கரண்டிகளால் அகழ்ந்தெடுத்து மரக்கூடைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர் வினைவலர். சுண்ணம் அரைபடும் மணம் மூக்குச் சவ்வை சற்று எரிய வைத்தது. ஒருவன் அர்ஜுனனிடம் “எதற்காக இம்மேடைகள்? தெய்வங்களுக்ககாவா?” என்றான்.

அர்ஜுனன் “அவை கைவிடுபடைகளுக்கான மேடைகள்” என்றான். “அஸ்தினபுரியின் கைவிடு படைகள் இருநூறு வருடங்களாக எண்ணெய் பூசப்பட்டு ஒவ்வொரு கணமும் என காத்துள்ளன. அவற்றுக்கு மறுபக்கம் என இங்கெழுகின்றன இக்கைவிடுபடைகள். இன்று அமைபவை என்று உயிர் கொண்டு எழுமென்று மேலே நின்று குனிந்து நோக்கும் தெய்வங்களுக்கே தெரியும்” என்று அர்ஜுனனுக்குப் பின்னால் நின்ற ஒரு முதிய வீரன் சொன்னான்.

ஏழாவது கோட்டை முழுதும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அதன் கற்களுக்கு நடுவே புதிய சுண்ணக்காரையாலான இணைப்பிட்ட சதுரங்கள் பரவியிருக்க மானின் உடல்போல தெரிந்தது கோட்டைச்சுவர். வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளாக நாககன்னியர். பொன்னிற நாகபட முடியணிந்து வலக்கையில் ஐந்து தலைப் பாம்பைப் பற்றியபடி இடக்கையால் அஞ்சல் அருளல் குறி காட்டி இடை ஒசிந்து நின்றனர். அவர்களின் சிலம்புக் கால்கள் வழிச்செல்வோரின் தலை உயரத்தில் அமைந்திருந்தன.

உள்ளே புதிய மெழுகரக்கு பூசப்பட்டு முரசுத்தோல் நிறம் கொண்டு மின்னிய பெரிய கோட்டைக் கதவுகள் பொற்குண்டுகள் என ஒளிவிடும் பித்தளைக்குமிழ்களுடன் திறந்திருந்தன. அக்கதவுகளில் ஒருபுறம் இந்திரபிரஸ்தத்தின் மின்னுருச் சின்னமும் மறுபுறம் அஸ்தினபுரியின் அமுதகலசக் குறியும் இருந்தன.

அர்ஜுனன் இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டை வாயிலை அணுகி அங்கு நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கி “வாமமார்க்க சிவயோகி. நகர்புக ஒப்புதல் கோருகிறேன்” என்றான். அவன் விழிகளைப் பார்த்ததுமே காவலர் கண்கள் சற்று விரிந்து முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை எழுந்தது. “தங்கள் நகரம் இது யோகியே” என்றான். அதற்குள் அவனுக்குப் பின்னால் இருந்த கல் மண்டபத்தில் அமர்ந்திருந்த காவல்வீரர்கள் அனைவரும் தங்கள் படைக்கலங்களுடன் எழுந்து நின்றனர். காவலர்தலைவன் படிகளில் இறங்கி வந்து தலைவணங்கி “நகருக்கு நல்வரவு யோகியே” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் கைதூக்கி அவர்களை வாழ்த்திவிட்டு கோட்டைக்குள் சென்றான்.

கோட்டையிலிருந்து உள்ளே எழுந்த குன்றின்மேல் ஏறிய சுருள்பாதைக்குச் செல்லும் அகன்ற சாலை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. செல்லும்பாதை வரும்பாதை என பல்லக்குகளுக்கும் மஞ்சல்களுக்கும் இரண்டு பாதைகளும் தேர்களுக்கும் புரவிகளுக்கும் இரண்டு பாதைகளும் அத்திரிகளுக்கும் கழுதைகளுக்கும் இரண்டு பாதைகளும் பொதி வண்டிகளுக்கு இரண்டு பாதைகளும் அமைந்திருந்தன. பாதையின் இருபுறமும் பணிநடந்துகொண்டிருந்த வீடுகள் சீரான நிரைகளாக விழிதொடும் தொலைவுவரை பின்காலையின் கண்கூசும் ஒளியில் நின்று கொண்டிருந்தன.

ஒவ்வொன்றிலும் எவரோ எதையோ செய்து கொண்டிருந்தனர். மரச் சுவர்களுக்கு சுண்ணங்கள் பூசப்பட்டன. மரப்பட்டைக் கூரைகள் மேல் தேன்மெழுகும் சுண்ணமும் கலந்த சாந்து பூசப்பட்டது. கதவுகள் வடங்களால் தூக்கப்பட்டு குடுமிகளில் பொருத்தப்பட்டன. கல்உடைக்கும் ஒலியும் மரத்தின்மேல் இரும்புக்கூடம் விழும் ஒலியும் மணல்அரைபடும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன. அர்ஜுனன் உடல் வியர்வை வழிய சீரான அடிகளுடன் நடந்தான்.

நகரத்தின் முதல் வளைவுப்பாதையின் தொடக்கத்தில் இருபுறமும் இரு சிம்மங்கள் சுண்ணக்கல்லில் செதுக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டிருந்தன. பற்கள் செறிந்த பெரிய வாயை திறந்து, கூருகிர்கள் எழுந்த கைகளை அள்ளிப்பற்றுவது போல் தூக்கி, வேரென ஊன்றிய பின்னங்கால்களில் எழுந்து விடைத்த பெருங்குறிகளுடன் அவை நின்றன. கலிங்கச் சிற்பிகளால் நகரம் கட்டப்பட்டது என்பதற்கான அடையாளம் அது. தேவசிற்பியான மயனின் வழிவந்த சிம்மகுலத்துக் கூர்மரும் அவரது மாணவர் காலகரும் அதன் பெருஞ்சிற்பிகள். சிம்மங்களுக்குக் கீழே அவர்களின் குலச்சின்னமான மழு பொறிக்கப்பட்டிருந்தது.

உள்ளே செல்லும் வளைவுப்பாதையில் கருங்கற்பாளங்கள் சீராக பதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே புரவிகள் சென்று உருவான மெல்லிய தேய்தடம் இருந்தது. பாதையின் இருபுறமும் மேலிருந்துவழியும் நீர் செல்லும் சிற்றோடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவன் செல்லும்போது அந்தப்பணி நடந்துகொண்டிருந்தது. அப்பால் கட்டடங்களை நோக்கி செல்லும் முற்றத்தின் தரையில் தடித்த மரப்பலகைகள் போடப்பட்டிருந்தன. சுதையால் ஆன அடிச்சுவர்களும் மரத்தால் ஆன இரண்டாம் அடுக்குகளும் மூன்றாம் அடுக்குகளும் கொண்ட மாளிகைகள் இருபுறமும் நிரை வகுத்திருந்தன.

மிகச்சில மாளிகைகளிலேயே மக்கள் குடியேறியிருந்தனர். அவற்றிலும் கூரையிலும் சுவற்றிலும் எஞ்சும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. பெருஞ்சாலையிலிருந்து கிளை பிரிந்து சென்ற சிறிய சாலைகள் அனைத்திலும் தரையில் கற்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அத்திரிகள் இழுத்த சகடங்களில் வந்து கொண்டிருந்த கற்பாளங்களை கயிறுகள் கட்டி பெரிய துலாக்களால் தூக்கிச் சுழற்றி மண்ணில அடுக்கினர்.

சுண்ணமும் மணலும் கலந்த கலவையில் உடைந்த சிறுகற்களை கலந்து போடப்பட்ட சாந்தின்மேல் அமைக்கப்பட்ட அக்கற்களை மேலிருந்து மரத்தடிகளால் அடித்து அழுத்தி இறுக்கினர். கற்கள் ஒன்றோடொன்று பொருந்தும் விளிம்புகளை சிற்பிகள் உளிகளால் தட்டி முழைகளை நீக்கி முழுமையாக இணைத்தனர்.

அங்காடித்தெரு நோக்கி செல்லும் கிளைப்பாதையின் இருபுறமும் இரு சதுக்கப் பூதங்கள் நின்றன. வலப்பூதம் வலக்கையில் சுவடியும் மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையும் கொண்டிருந்தது. இடப்பூதம் வலக்கையில் வஜ்ராயுதமும் இடக்கையில் அடைக்கலமும் கொண்டு உறுத்து நோக்கியது. பூதங்களின் திரண்ட பெருவயிறு மீது மார்பில் அணிந்த மணியாரம் வளைந்து அமைந்திருந்தது. மின்னல்முடி சூடி காதுகளில் நாக குண்டலங்கள் அணிந்து நாககச்சையை இடையில் அணிந்து நாகக் கழல் போட்டு அவை நின்றன.

அங்காடி முற்றத்தின் நடுவே வெண்சுண்ணக் கல்லில் செதுக்கப்பட்ட குபேரனின் பெருஞ்சிலை குறுகிய கால்களும் திரண்ட பெருவயிறும் கதாயுதமும் அமுதகலசமுமாக வடக்கு நோக்கி திரும்பி அமர்ந்திருந்தது.

பெருமுற்றத்தில் கற்பாளங்களை வினைவலர் பொருத்திக் கொண்டிருந்தனர். கட்டடங்களில் பணிகள் பெரும்பாலும் முடிந்திருந்தாலும் தூண்கள் சில வண்ணம் பூசப்படாது நின்றிருந்தன. அது வெயில் வெம்மை கொள்ளும் தருணம் என்பதால் பணியாட்கள் அனைவரும் அங்காடித் திண்ணைகளில் அமர்ந்து சூடான அப்பங்களையும் இன்கூழையும் உண்டு கொண்டிருந்தனர். வளைந்த பெருஞ்சாலையில் எவரும் இருக்கவில்லை. தடதடக்கும் ஒலியுடன் ஓரிரு குதிரைகள் கடந்து சென்றன.

பெருஞ்சாலை வழியாக கற்பாளங்களையும் சுண்ணப்பொதிகளையும் மென்மணலையும் கொண்டு வரும் வண்டிகள் வரக்கூடாதென்ற நெறி இருந்தது. அதற்கான சுழற்பாதைகள் தனியாக அமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாதையின் வளைவுகளில் திரும்பும்போதெல்லாம் அப்பால் சீரான நிரைகளாக மேலெழுந்து செல்லும் அத்திரிகளையும் கழுதைகளையும் பொதி வண்டிகளையும் காண முடிந்தது, அவற்றை ஓட்டும் வினைவலர் சவுக்குகளை சுழற்றியபடி அதட்டலோசை எழுப்பினர்.

நான்காவது பாதைவளைவில் நகரின் தெற்காக வளைந்தோடும் யமுனையின் கருநீல நீர்ப்பரப்பை காணமுடிந்தது. நகரிலிருந்து ஏழு தட்டுகளாக இறங்கி நீர்ப்பரப்பை அடைந்த துறைமுகம் பெரிய கற்தூண்களின் மேல் எழுந்து நீர் வெளிக்குள் நீண்டு நின்ற பன்னிரண்டு துறைமேடைகளால் ஆனது. அதன் அனைத்து முனைகளிலும் கலங்கள் நின்றன. கரையணைவதற்காக காத்து கலங்கள் அப்பால் நீர்ப்பரப்பின் மீது நங்கூரமிட்டிருந்தன. நூற்றுக்கணக்கான எடைத்துலாக்கள் கலங்களிலிருந்து பொதிகளையும் மரத்தடிகளையும் வடங்களில் கட்டித்தூக்கி சுழற்றி கொண்டுவந்து இறக்கி அமைத்தன. அத்தனை உயரத்தில் அச்செயல்கள் மிகமெதுவாக நிகழ்வனவாக தோன்றின. பூச்சிகள் கூடுகட்டுவதுபோல. அங்கே ஒலித்த ஓசைகளை காற்று அள்ளி சுழற்றி கொண்டுவந்து அளித்தபோது ஒலிப்பிசிறுகளாக செவிகளில் விழுந்து உதிர்ந்தன அவை.

வெட்டிக்கொண்டு வரப்பட்ட கற்களை இறக்குவதற்கு பெரும் துறைமேடைகளுக்கு அப்பால் தனியாக ஒரு துறைமேடை இருந்தது. அக்கற்கள் நீருக்குள்ளேயே படகிலிருந்து இறக்கப்பட்டன. வடங்கள் கட்டி நீருக்குள்ளேயே இழுத்துக் கொண்டுவரப்பட்டு நீருக்குள் மூழ்கி நின்றிருந்த பெரிய சகடங்களின் மேல் ஏற்றி நிறுத்தப்பட்டன.

அச்சகடங்களின் மேல் வடங்கள் கட்டப்பட்டு பதினெட்டு பெருந்துலாக்களால் வண்டிகளே தூக்கப்பட்டன. நீருள் இருந்து மேலெழுந்துவந்த சரிவுப்பாதையில் மேலெழுந்து வந்த அவை நீர்கொட்டியபடி சாலைக்கு வந்தன. அதன் பின்னரே அவற்றில் காளைகள் கட்டப்பட்டன. எடை மிக்க கற்களுடன் அவ்வண்டிகள் அசைந்து எழுவதை மேலிருந்து காணமுடிந்தது.

புடைத்த தசைகளுடன் தலைகுனித்து இழுத்த காளைகளின் விசையால் மெல்ல அசைந்து வளைந்து வந்து அவை சாலைவளைவில் மேலெழும்போது மட்டும் அங்கு நிறுவப்பட்டிருந்த துலாக்களின் வடங்கள் அவ்வண்டிகளின் பின்பக்கத்து கீலில் இணைக்கப்பட்டு அவைதூக்கி மேலெழுப்பப்பட்டன. சீரான வரிசையாக ஒரு மணிமாலை இழுபடுவதைப்போல அவ்வண்டிகள் தனிப் பாதையில் நகருக்கு மேலேறிக் கொண்டிருந்தன. அவற்றின் சகட ஒலியும் கீலோசையும் எங்கிருந்தோ எழுந்து வந்து காதுகளை அடைந்தன. விழிகள் அவ்வோசையை கொண்டுசென்று அவற்றின் உருவங்களில் பொருத்தியறிந்தன.

அர்ஜுனன் வெண்சுண்ணம் குழைத்துக் கட்டப்பட்ட தூண்கள் கொண்ட பெரு மாளிகைகள் அணி வகுத்த சாலையில் நடந்தான். அனைத்து மாளிகைகளின் முகப்பிலும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி பறந்தது. ஒவ்வொரு மாளிகையும் முதல் பார்வையில் ஒன்று போல் இன்னொன்று என இருந்தன. விழிகூர்ந்தபோது ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டிருந்ததும் தெரிந்தது. உருண்ட இரட்டைத் தூண்கள் கொண்ட யவன மாளிகைகள், மேலே குவை முகடுகள் எழுந்த சோனக மாளிகைகள், செந்நிறமான கல்லால் கட்டப்பட்டு வெண்கலமுழைகள் ஒளிவிட்ட கலிங்க மாளிகைகள்.

ஒரு பகுதி முழுக்க பீதர்களின் மாளிகைகள் நிரை வகுத்திருந்தன. பீதர்நாட்டு வெண்களிமண் ஓடுகள் வேயப்பட்ட கூரைகளும், வாய்திறந்த சிம்மமுக பாம்புகள் நின்றிருந்த நுழைவாயில்களும், செந்நிற வளையோட்டுச் சரிவுக்கூரைகளும் கொண்ட மாளிகைகள். அவற்றின் தூண்களும் சுவர்களும் குருதிச்செம்மை பூசப்பட்டிருந்தன. வெண்பளிங்கால் ஆன தரையில் அச்செம்மை நீரென சிந்திக் கிடந்தது. பீதர்களின் சடைச்சிம்மங்களில் களிறு வலக்காலில் உருளையை பற்றிக்கொண்டு பல்காட்டி சீறி நிற்க பெண்சிம்மம் தலை குனிந்து நின்றது.

மேலும் மேலும் என மாளிகைகள் பெரிதாகிக் கொண்டே சென்றன. காவல்தலைவர்களது மாளிகைகள், படைத்தலைவர்களின் மாளிகைகள், பெரு வணிகர்களுக்குரிய மாளிகைகள். ஒவ்வொரு மாளிகையின் முகப்பிலும் தேர்களும் பல்லக்குகளும் நிற்பதற்கான பெருமுற்றம் அமைந்திருந்தது. தடித்த மரங்களால் தளமிடப்பட்ட அம்முற்றங்கள் நன்கு சீவித்தேய்த்து அரக்கும் மெழுகும் சுண்ணமும் கலந்து பூசப்பட்டு தேரட்டையின் உடல்வளையங்களை அடுக்கியமைத்தது போல ஈரமென மின்னிக்கொண்டிருந்தன.

அரண்மனையின் உள்கோட்டை வாயில் இறுதி வளைவுக்குப் பின்னரே தெரியத் தொடங்கியது. செந்நிறக் கற்களால் ஆன கோட்டை முகப்பின் இரு பக்கமும் சூரியனும் சந்திரனும் வாயிற்காவலர்களாக நின்றிருந்தனர். இருகைகளிலும் தாமரை மலர் ஏந்தி தலைக்குப் பின் கதிர்வளையத்துடன் சூரியன் நின்றிருக்க வலக்கையில் அல்லிமலரும் இடக்கையில் அமுதக்குவளையும் தலைக்கு முன் முழுநிலவு வட்டமுமாக சந்திரன் நின்றிருந்தான்.

கோட்டை வாயிலின் வளைவின் நடுவே இந்திரப்பிரஸ்தத்தின் வஜ்ராயுதச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. நடுவே எழுந்த துருப்பிடிக்காத இரும்புக் கம்பத்தின் உச்சியில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி காற்றில் ஓசையுடன் படபடத்தது.

சிறிய காவல்புழைகளில் காவலர்கள் ஈட்டிமுனைகள் சுடர்கொள்ள அமர்ந்திருந்தனர். காலைவெயில் பழுத்து கோட்டைநிழல் சரிந்து கருங்கல் பாளங்கள் பரப்பப்பட்ட தரையில் விழுந்திருந்தது. உள்ளே சென்ற புரவிகளையும் தேர்களையும் நிறுத்தி ஒரு சொல் கேட்டு அனுப்பினர். அர்ஜுனன் அணுகுவதற்கு முன்னரே அவன் நடையை வைத்தே அவனை அறிந்த அவர்கள் எழுந்து நின்றனர். அவன் அணுகியதும் அனைத்து விழிகளிலும் புன்னகையும் உடல்களில் பணிவும் எழுந்தது. அர்ஜுனன் தலையசைத்து புன்னகைத்தபடி உள்ளே சென்றான்.

காவல்மூத்தான் “நல்வரவு இளவரசே” என்றான். “மூத்தவர் எங்கிருக்கிறார்?” என்றான் அர்ஜுனன். “அரசவைச்சடங்குகளின் முறைமையில் அவரும் இணைந்துவிட்டிருக்கிறார். இந்நேரம் தென்னிறைமூத்தார் ஆலயங்களில் நாள்பூசனைகளை முடித்து ஓய்வெடுக்க அவைபுகுந்திருப்பார்” என்றான் காவல்மூத்தான். “பேருருவர் நகர் விட்டுச்சென்று ஒன்பது மாதங்கள் ஆகின்றன. தாங்கள் சென்ற மறுவாரமே அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.” அர்ஜுனன் புன்னகைத்தான். “இளையோர் துறைமுக கட்டுமானப் பணியில் ஒருவரும் கோட்டை கட்டுமானப் பணியில் ஒருவரும் இருக்கிறார்கள். சௌனகர் கருவூலத்தில் இருக்கிறார்.”

அர்ஜுனன் தலையசைத்து வாயிலைக்கடந்து உள்ளே சென்றான். உள்ளே கோட்டையை ஒட்டியே ஒரு பெரிய படை தங்குமளவுக்கு பல்லாயிரம் சிறிய அறைகள் கொண்ட மண்டபங்கள் ஒன்றன் மேல் ஒன்றென ஏழு அடுக்குகளாக செறிந்திருந்தன. திரும்பிப் பார்க்கையில் பெரும் தேன்தட்டு போல தோன்றியது. பெரும்பாலான அறைகள் ஒழிந்து கிடந்தாலும் அப்போது ஒரு வலுவான படை அங்கு இருந்தது.

உள் முற்றத்தில் இருபது யானைகள் நிழல் மரங்களுக்கு கீழே உடல் அசைத்து நின்றிருந்தன. அவற்றின் மணியோசைகள் மெலிதாக கேட்டன. ஒரு யானை அவனை நோக்கியது. அதன் ஓசை அவனுக்கு கேட்கவில்லை. ஆனால் அனைத்து யானைகளும் துதிக்கை நிலைக்க அவனை திரும்பிப்பார்த்தன.

செம்மண்விரிந்த செண்டுவெளிக்கு நடுவே நாற்புறமும் திறந்த மண்டபத்தின் மேல் செங்குத்தான எட்டடுக்கு சுதைக்கோபுரம் எழுந்த கொற்றவையின் ஆலயம் ஐந்தடுக்கு கருங்கல் அடித்தளத்தின்மேல் அமைந்திருந்தது. அடித்தளத்தில் துதிக்கைகோத்த யானைகள் உடல் ஒட்டி நிரைவகுத்திருந்தன. கருவறை மேலேயே கூம்பாக எழுந்திருந்த ஏழடுக்கு கோபுரத்தின் மீது கவிழ்ந்த தாமரை வடிவப் பீடிகைமேல் ஆலயத்தின் முப்புரிவேல் கொண்ட கொடி பறந்தது.

உயர்ந்த கருவறையாதலால் சாலையிலிருந்து கொற்றவையின் சிலையை பார்க்க முடிந்தது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிலை பதினாறு தடக்கைகளிலும் படைக்கலங்களுடன் அஞ்சலும் அருளலும் காட்டி யோக அமர்வில் கால்மடித்து யோகபட்டை அணிந்து அமர்ந்திருந்தது. அதன் கழல் அணிந்த வலக்கால் மலர்மாலை சூடி நகங்கள் ஒளிவிட தெரிந்தது. அங்கு பூசனையும் முறைமையும் அக்கால்களுக்கு மட்டுமே. செந்நிற ஆடை அணிந்த பூசகன் அக்கால்களுக்கு முன்னே போடப்பட்டிருந்த பெரிய மலர்க்களத்தில் காற்றில் அணைந்த அகல் விளக்குகளை மீண்டும் கொளுத்திக் கொண்டிருந்தான்.

அர்ஜுனன் தன் உடல் வியர்த்து வழிவதை உணர்ந்தான். விடிகாலையிலேயே வெயில் எழுந்து விட்டிருந்தது. அதில் நீராவி அடர்ந்திருந்தது. மழை பெய்யக்கூடும் என்று எண்ணினான். ஆனால் முகில்களின்றி வானம் முற்றிலும் நீலமாக தெரிந்தது. தென் கிழக்குச் சரிவில் மட்டும் சற்றே முகில்படலம் தெரிந்தது. அங்கிருந்து பார்க்கையில் நகரின் பாதியை வளைத்துச் சென்ற யமுனையின் கருநீல நீர்ப்பெருக்கு வானிலிருந்து பறந்து படிந்த பட்டுட் சால்வைக்கீற்றென தெரிந்தது.

நகரின் உச்சியில் செந்நிறக்கல்லில் எழுந்து நின்ற இந்திரனின் பேராலயத்தின் உச்சியில் சுதைச்சிற்பிகள் அப்போதும் பணிமுடித்திருக்கவில்லை. அல்லிவட்டங்கள்போல ஒன்றன் உள் ஒன்றாக அமைந்த ஏழுஅடுக்குகளிலும் பன்னிரு உப்பரிகைகள் மலரிதழ்களென நீட்டி நிற்க அது நீள்கூம்புவடிவமான பெரிய மலரென தோன்றியது.

சதுக்கத்திற்கு அப்பால் அரண்மனை முகடுகள் தெரியத் தொடங்கின. அத்தனை மாளிகைகளும் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. நடுவே பன்னிரண்டு அடுக்குகள் கொண்ட பெருமாளிகை. அதைச் சூழ்ந்து ஏழடுக்கு மாளிகைகளின் பதினெட்டு முகடுகள். அத்தனை உப்பரிகைகளிலும் மலர்ச்செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. கோடைகாலத்தின் இறுதி என்பதால் அவை அனைத்தும் மலர்செறிந்து வண்ணம் கொண்டிருந்தன. வெண்ணிற, செந்நிற, இளநீலநிற மலர்கள் கலந்த பூந்தோட்டம் ஒன்று தரைவிரிப்பு மடிந்தெழுந்தது போல் செங்குத்தாக நின்றது.

இருகால்களையும் முன்னால் ஊன்றி தலை தூக்கி அமர்ந்திருந்த சிம்மம் போன்றிருந்தது மைய மாளிகை.  அதன் உச்சி அடுக்கிலிருந்து அடித்தளம் வரை இரு பெரும் தூண்கள் இறங்கி வந்து மூன்று கவிழ்தாமரை பீடங்களாக மாறி மண்ணில் நின்றன. அத்தூண்களுக்கு நடுவே அரைவட்ட வடிவமான முப்பத்தியாறு வெண்பளிங்குப் படிகள் நீரலைகள் கரையணைந்ததுபோல அடுக்குகளாக தெரிந்தன. சிறிய தூண்களால் ஆன உள்அறைகள் அங்கிருந்து நோக்குகையில் விந்தையான சக்கரப்பொறி ஒன்றின் புழைகள் போல தெரிந்தன.

முகப்பு மாளிகையின் முன்னால் இருந்த அகன்ற முற்றத்தில் அவ்வேளையிலேயே நூற்றுக்கு மேற்பட்ட தேர்கள் நின்றிருந்தன. அதன் பெருவிரிவில் அவை அனைத்தும் சிறிய செப்புகள் போல் தோன்றின. இடது பக்கம் போடப்பட்டிருந்த பட்டுமஞ்சல்களும் வண்ணக்கூரையிட்ட பல்லக்குகளும் மலரிதழ்கள் உதிர்ந்து கிடப்பதை போல் தோன்றின.

பதினெட்டு யானைகள் நெற்றிப்பட்டமும் முழுதணிக் கோலமுமாக மாளிகை முகப்பில் பொன்வண்டுகள் போல் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. தேர்களை இழுத்து வந்த புரவிகள் முற்றங்களின் மறு எல்லையில் இருந்த வலது எல்லையில் இருந்த தாழ்வான மரக்கொட்டகைகளில் முன்கால் தூக்கி துயின்றும் முகத்தில் கட்டப்பட்ட பையில் கொள்ளுண்டும் வால்சுழற்றியும் நின்றிருந்தன.

முற்றத்தில் நுழைந்ததுமே சிற்றெறும்பு போல் ஆகிவிடும் உணர்வை அம்முறையும் அர்ஜுனன் அடைந்தான். நடந்து செல்லச் செல்ல அப்பெரு மாளிகை பேருருக்கொண்டு வானை நோக்கி எழுந்தது. தலைக்கு மேல் அதன் மாடஉப்பரிகைகள் சரிந்து வந்து நின்றன. செல்லும் தோறும் தொலைவு மிகுந்து வரும் உணர்வை அடைந்தான்.

காலை வெயிலில் அடுமனை கலத்தட்டு போல் பழுத்துக்கிடந்த கற்பரப்பில் தேய்ந்த மரக்குறடுகள் உரசி ஒலிக்க அவன் நடந்தான். பெரும் தூண்கள் அகன்று பருத்து தூபிகள் போல் ஆயின. அவன் அணுகியபோது அவற்றின் மூன்று கவிழ் தாமரைகளே அவன் தலைக்கு மேல் இருந்தன.

படிகளின்மேல் ஏறி இடைநாழியை அடைவதற்குள்ளாகவே உள்ளிருந்த பெருங்கூடத்திலிருந்து அமைச்சர்கள் இருவர் அவனை அடையாளம் கண்டு “இளைய பாண்டவர்!” என்று கூவி புன்னகையும் சிரித்த முகமும் குவித்த கரங்களுமாக ஓடி வந்து எதிர் கொண்டனர்.

பகுதி ஆறு : மாநகர் - 4

அர்ஜுனனை எதிர்கொண்ட சிற்றமைச்சர்கள் சுஷமரும் சுரேசரும் தலைவணங்கி முகமன் கூறினர். சுஷமர் “இந்திரபுரிக்கு இந்திரமைந்தரின் வரவு நல்வரவாகட்டும்” என்றார். சுரேசர் “ஒவ்வொரு முறையும் பிறிதொருவராக மீண்டு வருகிறீர்கள். இம்முறை ஒரு சிற்பியைப்போல் தோன்றுகிறீர்கள்” என்றார். அர்ஜுனன் நகைத்து “ஆம், கலிங்கத்திற்கு சென்றிருந்தேனல்லவா” என்றான். “அஞ்சவேண்டாம், சில மாதங்கள் இங்கிருந்தால் மீண்டும் வெறும் பாண்டவனாக மாறிவிடுவேன்.”

“தங்கள் அறிவு எங்களுக்கு பகிரப்படுகிறது. சுமை அழிந்து கிளை மேலெழுவது போல் இயல்பாகிறீர்கள்” என்றார் சுஷமர். அர்ஜுனன் நகைத்தபடி இடைநாழியில் நடக்க இருவரும் தொடர்ந்து வந்தனர். மரங்களிடையே காட்டில் விழுந்த ஒளிக்குழாய் போல வெண்ணிற உருளைத்தூண்கள் எழுந்து மிக உயரத்தில் மலர்ந்த தாமரைகள் போன்ற உத்தர சட்டத்தையும் அதற்கு மேல் கவிழ்ந்த மலர்க்குவை போன்ற மாடத்தையும் தாங்கி நின்றன. மேலிருந்து தொங்கிய வடங்களில் கட்டபட்ட மூங்கில் கூடைகளில் அமர்ந்தபடி பணியாட்கள் அங்கு சுண்ணத்தை பூசிக் கொண்டிருந்தனர். சுண்ணத்துளிகள் மேலிருந்து முத்துக்கள் போல உதிர்ந்து தரையில் விழுந்து சிதறிப் பரவின.

அர்ஜுனன் “சுண்ணமணம் இன்றி இவ்வரண்மனை ஒருபோதும் இருந்ததில்லை” என்றான். “பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடையும்” என்றார் சுஷமர். “ஐந்தாண்டுகளாக இதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றபடி அர்ஜுனன் நடந்தான். “தாங்கள் இளைப்பாறி அவைக்கு வரலாம்” என்றார் சுஷமர். “இன்று மாலை பேரரசி அவை கூட்டி இருக்கிறார்கள். காலையில் அரசரின் அவை முடிந்தது” என்றார் சுரேசர். அர்ஜுனன் “இப்போது எங்கிருக்கிறார்கள்?” என்று அவர்களை பாராமல் கேட்டான். “ஐந்தாவது இளவரசரின் அரண்மனையில்” என்றார் சுஷமர். “ஐந்தாவது மைந்தனை கருவுற்றிருப்பதாக சொன்னார்கள்.”

அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். சுரேசர் “யாதவ அரசி காலை ஆலயங்களுக்கு சென்று விட்டு சற்று முன்னர்தான் அரண்மனைக்கு மீண்டார்” என்றார். “அன்னை?” என்றான் அர்ஜுனன். “யாதவப்பேரரசி காலையில் நகர் கட்டுமான பணிகளை பார்வையிட மஞ்சலில் ஒரு முறை சுற்றி வருவார். வெயில் வெம்மை கொண்டதும் திரும்பி வந்து நீராடிவிட்டு ஓய்வெடுப்பார். உச்சிப் பொழுது உணவுக்காக விழித்தெழுவார்” என்றார். அர்ஜுனன் “விழித்தெழுந்ததும் என் வருகையை சொல்லுங்கள். நான் முகம் காட்ட வேண்டும்” என்றான்.

“இப்போது எந்த அரண்மனைக்கு?” என்றார் சுரேசர். “எனது தனி அரண்மனைக்கு” என்று சொன்னபின் அர்ஜுனன் நின்று இடையில் கைவைத்து அரண்மனையின் வலப்பக்கத்து பெரிய அவைக்கூடத்தை பார்த்தான். ஆயிரம் தூண்கள் கொண்டது என்று புகழ் பெற்றிருந்த அந்த பேரவைக்கூடம் நீள்வட்ட வடிவில் அமைந்திருந்தது. அவையை வளைத்திருந்த சுதையாலான பெருந்தூண்களுக்கு மேல் செங்கற்களை அடுக்கி மையத்தில் கவிழ்ந்த தாமரை மலர்போன்ற போதிகையில் இணைக்கப்பட்ட பெருமுகடு இளஞ்செந்நிற வண்ணத்தில் மாபெரும் மலர் போல் இருந்தது. அதன் மையத்திலிருந்து வெண்கலச் சங்கிலியில் ஆயிரம் அகல்கள் கொண்ட மலர்க்கொத்து விளக்கு தொங்கியது.

கூடத்தில் அரைவட்ட அலைவளையங்கள் போல குடிகளும் குலத்தலைவர்களும் அமர்வதற்கான மரத்தால் ஆன இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அவை அனைத்தும் காப்பிரிநாட்டு குருதிச் செந்நிற தோலுறைகளால் மூடப்பட்டிருந்தன. வலப்பக்கம் வேதியர் அமர்வதற்கான பீடங்கள் சந்தனத்தால் அமைக்கப்பட்டு வெண்பட்டு உறையிடப்பட்டிருந்தன. இடப்பக்கம் அரச குடிப்பெண்கள் அமர்வதற்கான பீடங்கள் வெண்கலத்தால் அமைக்கப்பட்டு செம்பட்டு உறையிடப்பட்டிருந்தன. பெண்கள் நிரைக்கு அருகே அணிச்சேடியருக்கான மேடையும் வைதிகருக்கு அருகே இசைச்சூதருக்கான மேடையும் அமைந்திருந்தன. நேரெதிரே அரசரும் அரசியும் அமர்வதற்கான அரியணை மேடை.

அர்ஜுனன் புன்னகைத்து திரும்பி சுஷமரைப் பார்த்து “எப்போதும் அரசி அங்கிருப்பது போன்ற விழிமயக்கு ஏற்படுகிறது” என்றான். சுஷமர் “ஒரு நாள் கூட அதில் அவர் அமராது இருந்ததில்லை” என்றார். அர்ஜுனன் இடையில் கைவைத்து நின்று அந்த அரியணையை பார்த்தான். மரத்தில் செதுக்கப்பட்டு பொன்னுறையிடப்பட்ட இரண்டு சிம்மச்சிலைகள் குருதித் துளியென ஒளிவிட்ட செவ்வைரங்களை விழிகளாக்கி திறந்த வாயுடன் வலது முன் காலை கூர்உகிர்களுடன் தூக்கி முன்னால் வைத்து நின்றிருந்தன. அவற்றின் பற்கள் அனைத்தும் வெண்ணிற வைரங்களாலும் உகிர் முனைகள் இளநீல வைரங்களாலும் அணி செய்யப்பட்டிருந்தன.

அரியணையின் தலைக்கு பின்பக்கம் பன்னிரண்டு வளைவுகளாக எழுந்த பிரபாவலயத்தில் இளஞ்செந்நிற வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. படிப்படியாக செம்மை அடர்ந்து நுனியில் அவை செந்தழல்நிற வைரங்களாக மாறின. அங்கு நின்று பார்த்தபோது அவ்வரியணை திரையசையும் நூற்றெட்டு பெருஞ்சாளரங்களிலில் இருந்து வந்த ஒளியை எதிரொளித்து துருத்திக்காற்று படும் உலைத்தீ என கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது.

“பிரபாவலயம் பார்வைக்கு அச்சமூட்டுகிறது” என்றான் அர்ஜுனன். “எப்போது இது அமைக்கப்பட்டது?” “தாங்கள் இங்கிருந்து செல்லும்போதே வேசர நாட்டு பொற்கொல்லர் பணி தொடங்கிவிட்டனர். ஆறு மாதங்களாக இங்கிருக்கின்றனர்” என்றார் சுஷமர். “இதற்கு ஆக்னேயபீடம் என்று பெயர். இப்போதே சூதர்கள் இந்த அனலிருக்கை குறித்து பாடல்களை புனைந்திருக்கிறார்கள்.” அர்ஜுனன் விழிகளில் புன்னகையுடன் நோக்க சுஷமரும் புன்னகையுடன் “அதில் அரசியன்றி எவர் அமர்ந்தாலும் எரிந்து சாம்பலாகிவிடுவார்கள். ஒருமுறை அதன் மேல் அமர்ந்த புறா ஒன்று உயிருடன் பற்றி எரிந்ததாம்” என்றார்.

பேரரசிக்கு அருகே சற்று சிறியதாக அரசரின் அரியணை இருந்தது. சிம்மங்களின் விழிகள் நிறமற்ற வைரங்களால் ஒளிவிட்டன. கால்களும் பற்களும் உப்புப்பரல் போன்ற தூய வெண்ணிற வைரங்களால் பதிக்கப்பட்டிருந்தன. இளநீல வைரங்கள் பதிக்கபட்ட பிரபாவலயத்தின் மேலே அறத்தெய்வத்தின் எருமைக்கொம்புச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அர்ஜுனன் பார்ப்பதைக்கண்ட சுரேசர் “அது தர்மபீடம் எனப்படுகிறது. அதில் அரசரன்றி எவர் அமர்ந்தாலும் அன்றே உயிர்துறப்பார்கள் என்கிறார்கள் சூதர்கள்” என்றார். “ஆனால் அரசர் பெரும்பாலும் இதில் அமர்வதில்லை.”

அர்ஜுனன் திரும்பி “ஏன்?” என்றான். “இவ்வரியணை அமைந்த பின்னர் ஒரே ஒரு முறைதான் அமர்ந்தார். வைரங்கள் சூழ அமர்ந்திருப்பது நிலையழிவை உருவாக்குகிறது என்று சொன்னார். அதன்பிறகு அப்பால் அவருக்கென அமைக்கப்பட்ட பிறிதொரு கூடத்திலேயே அவை கூட்டுகிறார். அது இதைவிட மிகச்சிறியது. அனைவரும் நிலத்தில் இடப்பட்ட கம்பளங்களின் மேல் கால்மடித்து அமரவேண்டும். நடுவே அரசரும் புலித்தோல் விரித்த மணையில் கால்மடித்து அமர்வார். அனைவரும் நிகரான உயரத்தில் அமர அவர்களுக்கு முன்னால் அனைவருக்கும் பொதுவாக ஏட்டுச் சுவடிகளும் நறுமணப்பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். தொன்மையான குடியவைகள் அவ்வண்ணம் அமைந்திருந்தனவாம். அரசர் அதையே விரும்புகிறார். பேரரசி எடுக்கும் முடிவுகளும் ஆணைகளும் இங்கு நிகழ்கிறது. தனது எண்ணங்களை அங்கே உரைக்கிறார்.”

அர்ஜுனன் “அவற்றுக்குள் முரண்பாடு இருக்க வாய்ப்பில்லை” என்றான். “ஆம். அன்றாட நீதியை மட்டுமே அவர் பார்த்துக் கொள்கிறார். அயல் உறவையும் நகர் அமைப்பையும் பேரரசியே நிகழ்த்துகிறார்” என்று சுஷமர் மிகக்கூர்ந்து சொல்லெடுத்து உரைத்தார். அர்ஜுனன் சிரித்தபடி நடந்து இடைநாழியின் மறு எல்லையை அடைந்தான். மேலேறிச்செல்லும் படிகளின் கைப்பிடியை வெண்கலத்தால் அமைத்திருந்தனர். இரண்டு ஏவலர் அதை துடைத்துக் கொண்டிருந்தனர். அர்ஜுனனைக் கண்டு அவர்கள் தலைவணங்கினர். இரண்டிரண்டு படிகளாக ஏறி மேலே சென்றான்.

அவனைக் கண்டதும் அவன் அணுக்கப் பணியாளனாகிய அநிகேதன் ஓடி வந்து தலை வணங்கி “தாங்கள் வரும் செய்தி முன்னரே வந்துவிட்டது இளவரசே” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். அவன் சாளரம் வழியாக பார்த்தபோது அவன் நகர் நுழைந்திருப்பதை அறிவிக்கும் குரங்குக்கொடி கோட்டை முகப்பில் ஏறியிருப்பதை காணமுடிந்தது. அவன் வரவை அறிவிக்கும் முரசொலி முழங்க அதை ஏற்று காவல் மாடங்களில் முரசுகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. “நான் முதலில் அம்முரசொலியை உணரவேயில்லை. உணர்ந்தபோது ஒரு அன்றாட ஒலி போல் அது ஒலித்தது. தாங்கள் இங்கிருப்பதாகவே இத்தனை நாளும் என் உள்ளம் மயங்கிக் கொண்டிருந்தது” என்றான் அநிகேதன்.

அர்ஜுனன் அவன் தோளில் கை வைத்து “நான் நீராடி உடைமாற்ற வேண்டும்” என்றான். “அனைத்தும் இன்னும் சில கணங்களில் சித்தமாகும்” என்றான் அநிகேதன். அர்ஜுனன் தன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் அமர்ந்தான். அவன் கிளம்பிச் சென்றபோது எப்படி இருந்ததோ அதே போன்று அது வைக்கப்பட்டிருந்தது. தூசியோ அழுக்கோ இன்றி, நடுவே காலம் ஒன்று இல்லாதது போல். ஒவ்வொரு முறை அங்கு மீளும் போதும் ஒரு கனவிலிருந்து விழித்துக்கொள்வதாகவே எண்ணுவான்.

எழுந்துசென்று தன் அறையின் சாளரத்து ஓரமாக இருந்த தீட்டப்பட்ட உலோகத்தால் ஆன ஆடியில் தன்னை பார்த்துக்கொண்டான். நீண்ட தாடியில் ஓரிரு நரை முடிகள் கலந்திருந்தன. தோளில் விழுந்த குழலில் நரை ஏதுமில்லை. தன் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு கண்ட அயலவனை அவன் அறிவான் என்று தோன்றியது. ஆடியிலிருந்து அவனை நோக்கியவனுக்கும் தான் என உணரும் தனக்கும் என்ன வேறுபாடு என்று எண்ணினான். கண்கள் இனிய சிறிய புன்னகையுடன் விலக்கம் கொண்டிருக்கின்றன. எதையும் நம்பாத விழிகள். எங்கும் தன்னை அமைத்துக் கொள்ளாத விழிகள்.

அர்ஜுனன் கைகளை விரித்து உடலை நீட்டி சோம்பல் முறித்தபடி திரும்பினான். மீண்டும் ஆடிப்பாவையை பார்த்து புன்னகைத்தான். கையில் பணமென ஏதுமில்லாது அங்காடிக்குச் செல்பவனின் கண்கள் என எண்ணிக்கொண்டான். சிரித்தபடி மஞ்சத்தில் வந்து அமர்ந்தபோது அநிகேதன் வந்து தலைவணங்கி “நீராட்டறை சித்தமாக உள்ளது அரசே” என்றான். “அறை நான் விட்டுச்சென்றதுபோலவே உள்ளது” என்றான் அர்ஜுனன். “உங்கள் இன்மையும் இங்குள்ள ஒன்றே” என்றான் அநிகேதன். அவன் செல்ல தொடர்ந்து வந்த அநிகேதன் அவனில்லாதபோது நிகழ்ந்தவற்றை சொல்லத்தொடங்கினான்.

நறுமண வெந்நீரில் நீராடி நீண்ட தலைமுடியையும் தாடியையும் வெட்டி சீரமைத்து அர்ஜுனன் திரும்பி வந்தான். இளஞ்செந்நிறப் பட்டாடையை அந்தரீயமாக அணிந்து மேலே பொன்னிறக்கச்சையை கட்டிக் கொண்டான். பொன்னூல் சித்திரப்பணிகள் பரவிய வெண்பட்டுச் சால்வையை தோளிலிட்ட்டான். சிறிய ஆமையோட்டுப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து மணிக் குண்டலங்களை எடுத்து காதிலணிந்தான். மார்பில் இளநீல வைரங்கள் மின்னிய தாரஹாரத்தையும் கங்கணங்களையும் கழல்களையும் அணிந்தான். பித்தளையால் ஆன பாதக்குறடுகளில் கால் நுழைத்து “கிளம்புவோம்” என்று திரும்பி காத்து நின்ற அநிகேதனிடம் சொன்னான்.

அவன் விழிகளில் இருந்த வினாவைப் பார்த்தபின் “யாதவ அரசியை பார்க்க” என்றான். “தங்களுக்காக காத்திருப்பதாக செய்தி வந்தது” என்றான் அநிகேதன். “சற்றுமுன்னர்தான் தூதன் வந்தான்.” அர்ஜுனன் “மைந்தன் இங்கிருக்கிறானா?” என்றான். அநிகேதன் “தங்கள் முகம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காடேகும்போது மைந்தருக்கு ஆறு மாதம். இப்போது சில சொற்களை சொல்லத் தொடங்கியிருக்கிறார்” என்றான். அர்ஜுனன் முகம் மலர “ஆம், என் நெஞ்சில் உள்ள முகம் சிறிய கைக்குழந்தைக்குரியது” என்றான்.

“இப்போது வாயில் கரையாத இரு பால் துளிகள் போல் பற்கள் எழுந்துள்ளன. அரண்மனைச் சேடியரில் அவரது கடி வாங்காத எவருமில்லை. ஒரே நாளில் பதினெட்டு சேடியர் முலைக் கண்களுக்கு மருந்திட்டாள் மருத்துவச்சி” என்றான் அநிகேதன். அர்ஜுனன் வெடித்து நகைத்து “நன்று” என்றான். “தாங்கள் இளமையில் இயற்றியதைவிட சற்று குறைவு என்பதுதான் அரண்மனையில் பேச்சு” என்றான் அநிகேதன்.

அர்ஜுனன் சிரிப்பு தங்கியிருந்த முகத்துடன் இடைநாழியில் நடந்து படியிறங்கியபோது கீழே சுஷமர் நின்றிருப்பதை கண்டான். அவனது புருவ அசைவைக் கண்டு தலைவணங்கி “தங்களுக்கு செய்தி” என்றார். “எவரிடமிருந்து?” என்றான் அர்ஜுனன். “பாஞ்சால அரசியிடமிருந்து. தங்களை சந்திக்க அவர் விழைகிறார்” என்றார். அர்ஜுனன் “சகதேவனின் அரண்மனையில் அல்லவா இருக்கிறார்?” என்றான். “இல்லை, அங்கிருந்து வந்துவிட்டார்கள். இப்போது பேற்றறையில் மருத்துவச்சியுடன் இருக்கிறார். அங்குசென்று அவரை சந்திக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்” என்றார். அர்ஜுனன் திரும்பிப் பார்க்க அணுக்கன் "யாதவ அரசியிடம் கூறிவிடுகிறேன்” என்றான்.

சுஷமர் “தங்களை உடனிருந்து அழைத்து வரும்படி ஆணை” என்றார். அர்ஜுனன் இயல்பாக நடந்தபடி “அதாவது பிறிதெங்கும் செல்லாமல் அழைத்து வரப்படவேண்டும்?” என்றான். சுஷமர் ஒன்றும் சொல்லவில்லை. வெளியிலிருந்து வந்த வெளிச்சத்தில் தூண்களின் நிழல்கள் நெடுந்தூரத்திற்கு வரிவரியாக விழுந்துகிடந்த இடைநாழியில் சுடர்ந்து சுடர்ந்து அணைந்தபடி அர்ஜுனன் நடக்க குறடொலியாக தொடர்ந்தபடி சுஷமர் பேசாமல் வந்தார்.

அர்ஜுனன் நின்று மறுபக்கத்தில் சென்ற இடைநாழியை பார்த்து “இது புதிதாக கட்டப்பட்டதா?” என்றான். “ஆம், இது யாதவப் பேரரசியின் அரண்மனையை மைய அரண்மனையுடன் இணைக்கிறது” என்றான். “அன்னை இவ்வழியாக அவைக்கு வருகிறார்களா?” என்றான் அர்ஜுனன். சுஷமர் “இல்லை. அவர்கள் அவைக்கு வருவதே இல்லை” என்றார். அர்ஜுனன் திரும்பி “ஒருபோதுமா?” என்றான். சுஷமர் “அரசியின் அவைக்கு வருவதில்லை” என்றார். அர்ஜுனன் தலையசைத்துவிட்டு நடந்தான்.

பெரிய அரண்மனையிலிருந்து மரப்பட்டை கூரையிடப்பட்ட இடைநாழி ஒன்று கொடியென பிரிந்து பூச்செடிகள் மண்டிய அகன்ற தோட்டத்திற்குள் இறங்கி மறுபக்கம் ஏறி இன்னொரு இடைநாழியின் நடைபாதையை அடைந்து ஆதுர சாலையை சென்று அடைந்தது. ஆதுரசாலை வாயிலிலே காத்து நின்றிருந்த அணுக்கச் சேடி தலைவணங்கி “தங்களுக்காக அரசி காத்திருக்கிறார்” என்றாள். அர்ஜுனன் அவளுடன் உள்ளே சென்றான். சுஷமர் தலைவணங்கி அங்கேயே நின்று விட்டார்.

படிகளில் ஏறி ஆதுரசாலையின் அறுகோண வடிவமான பெருங்கூடத்தை அடைந்தான். எட்டு வாயில்கள் திறந்து திரைச்சீலைகள் காற்றில் நெளியும் அசைவு அரக்குபூசப்பட்ட மரப்பலகைத்தரையில் அலைபாய கிடந்த கூடத்தில் நான்கு வாயில்கள் திறந்திருந்தன. “இவ்வழியே” என்று சேடி அதில் ஒரு வழியாக அழைத்து சென்றாள்.

கடுக்காய் கருகியது போன்ற மணமும் தீயில் சுண்டும் பச்சிலை தைலத்தின் மணமும் கலந்து வந்து கொண்டிருந்தது. தொலைவில் ஏதோ குழந்தை உரக்கக்கூவி சிரிக்கும் ஒலி கேட்டது. உள்ளே புகுந்த சிட்டுக்குருவி ஒன்று சிறகதிர குறுக்காக கடந்து சென்று மறுபக்க சாளரத்தை அடைந்தது. அசைவுகளோ பேச்சொலிகளோ இன்றி முற்றிலும் அமைதியில் ஆழ்ந்து கிடந்தது ஆதுரசாலை. காற்றில் சாளரக்கதவு மெல்ல முனகும் ஒலிகூட அண்மையில் என கேட்டது.

அணுக்கச் சேடி “இவ்வறை” என்று சொல்லி நின்றாள். அர்ஜுனன் சில கணங்கள் கதவருகே நின்று காலடியோசையை எழுப்பியபின் கதவைத் திறந்து உள்ளே சென்றான். உள்ளே வெண்பட்டு விரிக்கப்பட்ட தாழ்வான மஞ்சத்தில் உருண்ட நீண்ட தலையணைகள் மேல் இளம்பாளை தோல் வெண்மை கொண்ட பீதர்பட்டு மீது ஒருக்களித்தவளாக திரௌபதி படுத்திருந்தாள். அவன் காலடியோசை கேட்டு நாகம்போல கழுத்தைத் திருப்பி நோக்கினாள். பார்த்த முதற்கணமே பேரழகு என்ற சொல்லாக ஆனது அவன் உள்ளம்.

அவள் உடல் சற்றே சதைப்பூச்சு கொண்டு உறைகீறி எடுக்கப்பட்ட காராமணி விதை போல பளபளத்தது. ஒளிகொண்ட தோள்களிலிருந்து சரிந்த நீண்ட கைகள். தோள்வளை சற்றே நெகிழ்ந்து மென்கதுப்பில் வளையம் பதிந்திருந்த தடம் தெரிந்தது. முலைக்கச்சை நெகிழ்ந்து மேல்விளிம்பு ததும்பிய முலையிடுக்கில் ஒற்றை முத்தாரம் துவண்டு வளைந்து கிடந்தது. தொங்க விடப்பட்ட மறுகையில் இளநீல வைரங்கள் பதிக்கப்பட்ட ஒற்றைக் கடகம் தழைந்து மணிக்கட்டை ஒட்டிக்கிடந்தது. கரிய தோலில் நீல நரம்புகள் தெரிந்தன. மேலுதட்டில் மென்மயிரின் அடர்த்தி சற்றே மிகுந்திருந்தது. கன்னத்தில் இரண்டு புதிய பருக்கள்.

சரிந்து மடியிலிருந்த ஏடொன்றை நோக்கியிருந்த விழியிமைகள் விரிய நீள்விழிகளில் சிறுமியருக்குரிய உவகை எழுந்தது. புன்னகையில் மாந்தளிர் நிற இதழ்கள் விரிய உள்ளே சரமல்லிகையென வெண்பல் நுனிகள் தெரிந்தன. கையூன்றி எழுந்தபோதுதான் அவளுடைய வயிறு சற்று மேடிட்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். சுற்றிக்கட்டியிருந்த புடவை அவ்வசைவில் சற்று நெகிழ சற்றே அகன்று ஆழமிழந்த தொப்புளின் அடியில் மெல்லிய அலைகளாக பேற்றுச் சுருக்கங்கள் தெரிந்தன.

“இன்று காலை எண்ணிக் கொண்டேன்” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் சில கணங்கள் நின்றபின் அருகே சென்று மூங்கிலால் ஆன குறுபீடத்தில் அமர்ந்தான். “காலையில் முரசொலி கேட்டபோது அக்கனவு நனவானதை உணர்ந்தேன்” என்று அவள் சொன்னபோது மெல்லிய மூச்சிரைப்பும் கலந்திருந்தது. “அதன் பின் ஒருகணமும் என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. தாங்கள் நீராடி விட்டீர்களா என்று பார்ப்பதற்காக சேடியை அனுப்பினேன். அதன் பின் சுஷமரை அனுப்பினேன். பார்த்தாக வேண்டும் என்று தோன்றியது” என்றாள்.

அர்ஜுனன் கை நீட்டி அவளை தொடப்போனபின் கைகளை பின்னிழுத்துக் கொண்டான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இளையவனின் நாட்கள்” என்றான். அவள் கை நீட்டி அவன் கையைப் பற்றி பிறிதொரு கையால் பொத்திவைத்தபடி “இன்று நான் உள்ளத்தால் முற்றிலும் உங்களுக்குரியவள்” என்றாள். அர்ஜுனன் அவள் கன்னங்கள் சற்று குருதி கலந்த கருமை கொண்டிருப்பதை கண்டான். கழுத்து மென்மைகொண்டு நிறம் மாறியிருந்தது. “என்ன பார்க்கிறீர்கள்?” என்று அவள் நாணம் கலந்த புன்னகையுடன் கேட்டாள். “கருவுற்றிருப்பது பெண்கள் பேரழகு கொள்ளும் பருவம் போலும்” என்றான்.

அவள் சிரித்து “ஆண்கள் அணுக முடியாத பருவம். அதனால் அப்படி தோன்றுகிறது” என்றாள். “அணுக முடியாதென்றில்லை.” அவள் புரியாது விழிதூக்கிப் பார்த்து உடனே புரிந்து அவன் கையை அடித்து “என்ன பேச்சு இது? சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே பொறுப்பற்ற சிறுவனின் சொற்கள்” என்றாள். “மீண்டும் மீண்டும் இங்கு வந்து அப்படி ஆகிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.  “உங்கள் மூத்தவர் நகர் நீங்கிப்போய் பலமாதங்கள் ஆகின்றன. அவருக்கு முன் நீங்களும் சென்றுவிட்டீர்கள். இங்கு ஒவ்வொன்றும் முன்னரே வகுத்த தடத்தில் பிழையின்றி சென்று கொண்டிருக்கின்றன. அதுவே சலிப்பூட்டுவதாக ஆகிவிட்டது” என்றாள்.

“நீ விரும்புவது ஒழுங்கை அல்லவா?” என்றான். “நான் ஒருத்தி அல்ல, ஐவர். ஒழுங்கை விரும்பும் அரசியும் நானே. கட்டற்று பெருகவிரும்பும் கள்ளியென்றும் என்னை உணர்கிறேன்.” அர்ஜுனன் “இங்கிருந்து இந்நகரம் ஒவ்வொரு கல்லாக மேலெழுவதை பார்க்கும் பொறுமை எனக்கில்லை. சென்று சென்று மீளும்போது இது வளர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அந்த உவகைக்காகவே சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “எனக்கும் இந்நகரம் மாறாமலிருப்பது போல் உளமயக்கு உள்ளது. ஆனால் என்றாவது ஒருநாள் காலையில் எழுந்து உப்பரிகையில் வந்து நின்று நகரத்தை பார்க்கையில் ஓரிரவில் பூதங்கள் கட்டி எழுப்பிய மாயபுரிக் கதை நினைவுக்கு வருகிறது.”

“பூதங்கள் உள்ளன, மனிதர்களின் கனவில்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் சென்ற நாடுகளில் இதற்கிணையான ஒரு நகரம் கட்டப்படுகிறதா?” என்றாள். “இணையான நகரமென ஏதுமில்லை. ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு வகையானது. துவாரகை பெரு நகரமென்றால் மகதத்தின் ராஜகிருகமும் பிறிதொரு முறையில் பெருநகரமே.” அவள் விழிகள் சற்று சினத்துடன் சுருங்கின. “துவாரகை அளவுக்கு பெரிய நகரம் பிறிதெங்குள்ளது? இந்திரப்பிரஸ்தம் அதைவிடப் பெரியதாக எழுகிறது” என்றாள். “இப்போது இல்லை என்பது உண்மை. இப்பெருநகரம் கட்டப்பட்ட உடனே இதை விஞ்ச வேண்டுமென்ற எண்ணம் பல்லாயிரம் உள்ளங்களில் விதைக்கப்பட்டுவிட்டது. எங்கோ அது முளைத்து எழுந்து கொண்டிருக்கிறது.”

அவள் கண்கள் மேலும் கூர்மை கொள்ள “இல்லை, இந்நகரைவிட பெரிய நகரம் பாரதவர்ஷத்தில் இருக்கப்போவதில்லை” என்றாள். “இருந்தால்…?” என்று அர்ஜுனன் புன்னகையுடன் கேட்டான். “அது இந்நகரத்தின் துணை நகரமாக மாறும்” என்றாள். அவள் விழிகளின் ஒளியைக் கண்ட அர்ஜுனன் உரக்க நகைத்து “இதனுள் நுழையும்போதே இதைத்தான் எண்ணிக்கொண்டேன். இந்நகரம் உனது ஆணவத்தின் கல்வெளிப்பாடு. இது ஒருபோதும் கட்டி முழுமை பெறப்போவதில்லை. எங்கோ சிற்பிகளின் உளிகள் சிலம்பிக் கொண்டுதான் இருக்கும்” என்றான்.

“ஏன்?” என்று அவள் கேட்டாள். “ஏனெனில் இது ஒரு மறுமொழி. மறுமொழிகளுக்கு முடிவில்லை.” அவள் மெல்ல பீடத்தில் அமர்ந்தபோது முத்தாரம் நெகிழ்ந்து முலைக்கோடுகளின் நடுவே சென்று ஒடுங்கியது. கடகங்கள் மணிக்கட்டை நோக்கி சரிந்து ஒலி எழுப்பின. “நெடுநேரம் அமர்ந்திருக்க முடியவில்லை” என்றாள். “படுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்றான் அர்ஜுனன். “படுத்துக் கொண்டால் தலை சுழற்சி கூடுகிறது. கூடுமானவரை அமர்ந்திருக்கவோ நடக்கவோ வேண்டுமென்று மருத்துவச்சிகள் சொன்னார்கள்.”

அர்ஜுனன் “இங்கு என்ன செய்யவிருக்கிறாய்?” என்றான். “மருத்துவக்குளியல், எண்ணெய்ப்பூச்சு, சாந்து லேபனம், வெந்நீராட்டு, நறும்புகையாட்டு, அதன் பின்பு மூலிகை உணவு.” அர்ஜுனன் புன்னகைக்க “அதன்பின் துயின்றால்தான் நன்கு கனவுகள் வருகின்றன” என்று அவளும் புன்னகைசெய்தாள். “எந்தக் கனவு?” என்று அர்ஜுனன் கேட்டான். அவள் வாயெடுப்பதற்குள் “பிறிதொரு மாநகரம் அல்லவா?” என்றான். “உங்களுக்கு இது கேலி. ஆனால் இது உங்கள் நகரம். அதை மறக்கவேண்டியதில்லை” என்றாள்.

“ஆம், எங்கு சென்றாலும் வெண்முகில்நகரத்தைப் பற்றியே ஒரு சூதன் பாடிக்கொண்டிருக்கிறான். இந்திரனின் மைந்தனின் நகரம். அக்கூட்டத்தில் ஒருவராக நின்று அதைக் கேட்கையில் பல சமயம் வாய்விட்டு சிரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.” “ஏன்?” என்றாள் சினத்துடன். “விண்ணில் அமராவதியும் மண்ணில் இந்திரப்பிரஸ்தமும்தான் இந்திரனுக்கு உகந்தவை என்கிறார்கள். இந்திரனை அப்படி இரு நகரங்களுக்குள் நிறுத்திவிட முடியுமா என்ன? எங்கு வேந்தனின் கோல் எழுகிறதோ அங்கெல்லாம் எழுந்தாக வேண்டிய தெய்வம் அல்லவா அவன்?”

“அவன் எங்குமிருக்கட்டும். ஆனால் இங்கு அவன் இருந்தாக வேண்டும்” என்று அவள் சொன்னாள். “இன்னும் சில நாட்களில் கட்டுமானம் முடிந்துவிடும். இன்று காலைதான் சிற்பிகள் அனைவரயும் அழைத்து இறுதி ஆணைகளை பிறப்பித்தேன். அரண்மனைப் பணிகள் முடிந்ததும் நகரத்திற்கு மாபெரும் நகரணி விழா ஒன்றை ஒழுங்கு செய்யவேண்டும்” என்றாள். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “இப்போதே இந்நகரம் செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?”

“ஆம். அது நாம் செல்வதற்கு பிறிதொரு இடம் இல்லாததனால். ஆனால் இன்னும் இந்நகரத்தின் மிகச்சிறிய பகுதியே மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு நாடுகளையும் அழைத்து ஒரு நகரணிவிழா நடத்துவோம். அவ்விழவை ஒட்டி புலவர்கள் காவியங்கள் எழுதட்டும். சூதர்கள் கலைகளை உருவாக்கட்டும். அச்செய்தி சென்று சேரும்போதுதான் அனைத்து நிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருவார்கள். இங்குள்ள இல்லங்கள் நிறையும். நகருக்கு வடக்கும் தெற்கும் நான் அமைத்துள்ள துணை நகரங்கள் முழுமை பெறும். வணிகப்பாதைகள் அறுபடாது நீர் பெருக்கு போல் பொதிவண்டிகள் வரும்” என்றாள்.

அர்ஜுனன் “நகரம் நன்கமைந்திருந்தால் குடிவருபவர்களுக்கு என்ன?” என்றான். “இங்கு யாதவர்கள் மட்டும் குடிவருவதை நான் விரும்பவில்லை. அவர்கள் வருவதை கட்டுப்படுத்தியிருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் போர் புரியக்கூடியவர்கள் அல்ல. வணிகம் செய்யக்கூடியவர்களும் அல்ல. ஒருங்கிணைந்து பணியாற்றும் எதையும் அவர்களால் நிறைவு செய்ய முடியாது. இங்கு ஷத்ரியர் வரவேண்டும். வைசியர் வரவேண்டும். அதற்குரியவற்றை நாம் செய்வோம். இங்கு ஒரு ராஜசூயம் நிகழவேண்டும். அதன் பிறகொரு அஸ்வமேதம். வைதிகர் வந்தால் ஷத்ரியரும் வைசியரும் வந்து கூடுவார்கள்.”

“அனைத்தையும் முடிவு செய்துவிட்டாய்” என்றான். “அறிஞர்களையும் நிமித்திகர்களையும் அவையமர்த்தி அனைத்து கோணங்களிலும் பேசி முடிவெடுத்தேன். மூத்தவரிடம் அனைத்தையும் சொல்லிவிட்டேன். இளையவர்களுக்கு கருத்துகள் ஏதுமில்லை. அன்னை நான் சொல்வதற்கு முன்னரே நான் எண்ணுவதை எண்ணியிருந்தார்.”

அர்ஜுனன் “மூத்தவர் என்ன சொன்னார்?” “வீண்செலவு என்று. வேறென்ன சொல்லப்போகிறார்? இப்பெருநகரமே வெறும் ஆணவ விளையாட்டு என்று அவருக்கு தோன்றுகிறது. அப்படி பார்த்தால் அரசு என்பதே ஆணவத்தின் வெளிப்பாடுதான். அரியணையும் செங்கோலும் வெண்குடையும் ஆணவமேதான். ஆணவமென்பது தனி மனிதர்களுக்குத்தான் இழிவு. அரசு என ஆவது ஆணவமே. பெருங்காவியங்களாவதும் கலைக்கோபுரங்களாவதும் ஆணவமே. அவை தெய்வங்களுக்கு உகந்தவை.”

“இங்கு இழக்கும் செல்வத்தை விண்ணுலகில் ஈட்டிவிடலாம் என்று சொன்னால் ஒருவேளை ஒப்புக் கொள்வார்” என்றான் அர்ஜுனன். “ஒப்புக்கொண்டுவிட்டார். நான் சொல்லும் எதையும் அவரால் மறுக்கமுடியாது. ஆனால் இன்னும் அகம் மலரவில்லை.” அர்ஜுனன் “ராஜசூயத்திற்கு பாரதவர்ஷத்தின் ஆயிரத்தெட்டு வைதிகர் குலங்களில் இருந்தும் பெரு வைதிகர்கள் வருவார்கள். முனிவர்களும் புலவர்களும் பெரும் சூதர்களும் வருவார்கள். அதை அவரிடம் சொல்” என்றான்.

“அதை சொன்னேன். அது ஒன்றே அவருக்கு எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் நீங்களும் உங்கள் மூத்தவரும் இதை விரும்புவதாக ஒரு சொல் சொன்னால் அவரது தயக்கம் முற்றிலும் மறையும்” என்றாள் திரௌபதி. “இதைச் சொல்லவா இத்தனை விரைந்து இங்கு வரச்சொன்னாய்?” என்றான் அர்ஜுனன். “இல்லை. அதற்காக மட்டும் அல்ல” என்றாள். “நீங்கள் துவராகைக்குச் சென்று உங்கள் தோழரை இந்திரப்பிரஸ்தத்தின் நகரணிவிழவுக்கு அழைக்கவேண்டும்.”

“முறைப்படி அழைப்போம்” என்றான் அர்ஜுனன். “பிறரைப்போல அவர் அழைக்கப்படலாகாது. அவர் இங்கு ராஜசூய வேள்வியின் முதன்மைக் காவலராக வாளேந்தி அமரவேண்டும்.” அர்ஜுனன் சிலகணங்கள் அவளை நோக்கியபின் “நான் சொல்கிறேன்” என்றான். “யாதவ அரசியையும் அழைத்துச்செல்லுங்கள். அவளும் துவாரகை சென்று நாளாகிறது. அபிமன்யு சென்றதே இல்லை” என்றாள் திரௌபதி. அர்ஜுனன் “ஆம்” என்றான்.

அவள் புன்னகையில் முகம் மாறி “உங்கள் மைந்தன் உங்களை பார்க்க வேண்டும் என்றான்” என்றாள். “எனது மைந்தனா?” என்று சொன்னதுமே அச்சொல்லில் இருந்த பிழையை அர்ஜுனன் உணர்ந்து “சுருதகீர்த்தியை பார்க்கவேண்டுமென்று இந்நகர் நுழைந்தபோதே நானும் எண்ணினேன்” என்றான்.

அந்த வாயுதிர்சொல்லை அறியாதது போல் கடந்து “ஏனென்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களாகவே உங்களைப்பற்றி கேட்டுக் கொண்டிருந்தான். செவிலியர் மாளிகையில் அவர்கள் சொல்லும் கதைகள் எல்லாம் உங்கள் வில்திறன் கதைகள் அல்லவா?” என்றாள். சிரித்தபடி முகத்தில் சரிந்த கூந்தலை விலக்கி “தானும் இந்திரனின் மைந்தனா என்று ஒருமுறை கேட்டான். இந்திர குலத்தவன் என்று சொன்னேன். வில்பயில வேண்டும் என்றான். உன் தந்தை வருவார். அவர் உனக்கு வில்லும் அம்பும் தொட்டு எடுத்துக் கொடுக்கட்டும் என்று சொன்னேன்” என்றாள்.

பாஞ்சாலி திரும்பி அருகிலிருந்த வெண்கலத் தாலத்தை இருமுறை தட்டினாள். மறு வாயிலில் வந்து நின்று வணங்கிய செவிலியிடம் “இளவரசனை வரச்சொல்” என்றாள். அர்ஜுனன் மெல்லிய நிலையழிவொன்றை அடைந்தான். இளவரசனின் முகம் அவனுக்கு சற்றும் நினைவுக்கு வரவில்லை. நினைவை துழாவத் துழாவ எங்கெங்கோ பார்த்த ஏதேதோ முகங்கள் நினைவுக்கு வந்தன. அந்த தத்தளிப்பை அவள் அறிந்துவிடக்கூடாதே என்று முகத்தசைகளை இழுத்து மலர்த்திக் கொண்டான். ஆனால் அதற்கு பயனேதும் இல்லை. அவள் அவன் உள்ளத்தை மிக அணுக்கமாக தொடரக் கற்றவள் என்று அறிந்திருந்தான். திரும்பி அவளை பார்த்தபோது மிகுந்த உவகையுடன் அவள் கிளர்ந்து சிவந்திருப்பதை கண்டான். அது நடிப்பல்ல உண்மை என்று தோன்றியது.

வாயிலில் குழந்தையின் குரல் கேட்டது. “எங்கிருந்து வந்திருக்கிறார்?” சிறியபறவைகளுடையது போன்ற சில்லென்னும் சிறுகுரல். “கலிங்கத்திலிருந்து” என்று செவிலி சொன்னாள். கதவைத் திறந்து சுருதகீர்த்தி இருகைகளையும் விரித்தபடி ஓடி வந்து அவனைப் பார்த்ததும் தயங்கி பக்கவாட்டில் காலெடுத்து வைத்து பீடத்தின் விளிம்பை பற்றியபடி நின்றான். அர்ஜுனன் எட்டி அவன் கையைப் பற்றி தன் அருகே இழுக்க உடலை வளைத்து காலை ஊன்றி எதிர்விசை அளித்தான். அர்ஜுனன் அவனை அருகே அழைத்து தன் முழங்கால் மூட்டுகளுக்கு நடுவே நிறுத்திக்கொண்டு இரு சிறுகரங்களையும் பற்றி குனிந்து அவன் முகத்தைப் பார்த்து “நான்தான் உன் தந்தை. கலிங்கத்திலிருந்து வருகிறேன்” என்றான்.

“கலிங்கத்தில் பெருங்கலங்கள் உண்டா?” என்று அவன் கேட்டான். “மிகப்பெரிய கலங்கள் உண்டு. பீதர்களின் கலங்கள் இந்நகரின் பாதியளவுக்கு பெரியவை” என்றான் அர்ஜுனன். “இந்நகர் அளவுக்கா? இந்த அரண்மனை அளவுக்கா?” என்றான் சிறுவன். அவன் புருவங்கள் அடர்த்தியாக இருந்தன. “இந்நகர் அளவுக்கு” என்றான் அர்ஜுனன். ஐயத்துடன் அவன் தன் அன்னையை பார்த்தான். அவள் இதழ்கள் விரிய புன்னகை செய்துகொண்டிருந்தாள். “பெரிய கலங்கள்” என்று அவன் வியப்புடன் சொல்லி “மிகமிகப்பெரியவை… கோட்டை அளவுக்கு!” என்று அர்ஜுனனிடம் சொன்னான்.

அர்ஜுனன் மைந்தனின் நீண்ட குழலைத் தடவி காதுகளைப் பற்றி இழுத்தான். அவன் அர்ஜுனனின் மயிரடர்ந்த கைகளை பற்றிக்கொண்டு உடலை அவன் கால்களில் உரசியபடி நெளிந்து “நான் கப்பலில் செல்வேன்” என்றான். “மறுமுறை செல்லும்போது உன்னை அழைத்துச் செல்கிறேன். நீ கப்பலில் செல்லலாம்” என்றான் அர்ஜுனன். “கப்பலில் பெரிய பாய்களிருக்கும். அவற்றை வானிலிருந்து மாருதர்கள் குனிந்து…” என்று சொன்னபின் உதட்டை குவித்து ஊதி “பூ பூ என்று ஊதுவார்கள்” என்றான். “ஆம், அப்போது அவை பறவைகளைப்போல நீர் மேல் பறந்து செல்லும்” என்றான் அர்ஜுனன்.

“பறவைகளை போல” என்று அவன் கைகளை விரித்தான். “நான் பறவைகளை போல பறப்பேன். அதற்கான மந்திரத்தை சொல்லித்தருவதாக என் செவிலி சொன்னாள். ஆனால் பன்னிரண்டு நாள்…” என்றபின் நான்கு விரல்களை காட்டி “பன்னிரண்டு நாட்கள் மறுப்பே சொல்லாமல் உணவுண்ண வேண்டும். படுக்கச் சொன்னவுடன் படுத்து கண்களை மூடி இப்படியே தூங்கிவிட வேண்டும்” என்றான். “எத்தனை நாட்களாக அதை செய்தாய்?” என்றான் அர்ஜுனன். அவன் குழப்பத்துடன் தாயை பார்த்தபின் “நெடுநாட்களாக” என்றான். “அப்படியென்றால் சரி” என்றான் அர்ஜுனன்.

அவன் மேலும் உளவிசையுடன் “ஆனால் பதினான்கு நாட்கள் ஆனவுடன் அந்த மந்திரத்தை எனக்கு அவள் சொல்லித் தருவாள். அதன்பிறகு நான் இந்த மாளிகையின் மேலேறி இதன் குவை மாடத்திலிருந்து சிறகடித்து மேலே எழுந்து பறப்பேன்” என்றான். அவன் கையை மூக்கின் உள்ளே செலுத்தி எண்ணங்களில் சற்று அழுந்தி விழிதிரும்பி “இந்த மாடத்திலிருந்து முகடில் இருக்கும் கூம்பை பற்றி மாடத்தை தரையிலிருந்து தூக்கி விடுவேன்” என்றான். அர்ஜுனன் சிரித்து “ஆனால் கீழே போட்டுவிடக்கூடாது. உடைந்துவிடும் அல்லவா?” என்றான். “கீழே போட மாட்டேன். அதற்குள் அல்லவா அன்னை இருக்கிறார்கள்” என்றான்.

திரௌபதி நகைத்தபடி “அந்த அளவுக்கு கருணை இருக்கிறதே, நன்று நன்று” என்றாள். அர்ஜுனன் “போர்களில்தான் இளையோர் அனைவரும் தங்கள் நிறைவை கற்பனை செய்து கொள்கிறார்கள்” என்றான். “பேருருவம் கொள்ளுதல், அது ஒன்றே அவர்களின் எண்ணத்தை இயக்குகிறது” என்று திரௌபதி சொன்னாள். “இவர்களுக்கு ஒரு துணைவன் வந்திருக்கிறான், அஸ்தினபுரியிலிருந்து” என்றாள். அர்ஜுனன் “அஸ்தினபுரியிலிருந்தா?” என்றான். “ஆம், இளைய கௌரவர் சுபாகுவின் மைந்தன் சுஜயன். ஒரு சேடி அவனுடன் இங்கு வந்திருக்கிறாள்.”

அர்ஜுனன் புருவம் சுருக்கி பார்த்தான். “சிறிய உடல்கொண்ட குழந்தை. பெரும் கோழையாக இருந்திருக்கிறான். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆகவே கங்கைக் கரைக்காட்டில் உங்கள் பழைய முதுசெவிலி மாலினியின் குடிலில் கொண்டு வைத்திருந்திருக்கிறார்கள். மூன்று மாத காலம் அங்கே காட்டில் உங்கள் கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறான். அச்சம் நீங்கி ஆண்மை கொண்டுவிட்டானாம். உங்களை ஒருமுறை நேரில் பார்க்கவைக்கலாம் என்று மாலினி எண்ணியிருக்கிறார். ஓராண்டாகவே தூதுவர் வந்துகொண்டே இருந்தனர். அழைத்து வரும்படி சொன்னேன். இரண்டு மாதங்களாக இங்குதான் இருக்கிறார்கள். நீங்கள் திரும்பி வருவதற்காக காத்திருந்தார்கள்.”

அர்ஜுனன் “நான் அவனை பார்க்கிறேன்” என்றான். சுருதகீர்த்தி “சுஜயன் அண்ணா நன்கு விளையாடுகிறார். அவருக்கு நான் மூன்று கற்களை பரிசாக கொடுத்தேன். நாங்கள் இருவரும் ஒரு படகை எடுத்துக்கொண்டு யமுனை வழியாக கலிங்கத்துக்கு செல்வோம்” என்றான். அர்ஜுனன் “எதற்காக?” என்றான். “கலிங்க இளவரசியை திருமணம் செய்து கொள்வதற்காக” என்றான் சுருதகீர்த்தி. “இருவருமா? ஒரு இளவரசியை மணக்கவா?” என்றாள் திரௌபதி. அவன் குழப்பமாக இருவரையும் பார்த்தபடி “இல்லை” என்றபடி ஒரு விரலைக் காட்டி “ஆம், ஒரு இளவரசி” என்றான்.

அர்ஜுனனை ஓரக்கண்ணால் நோக்கியபின் சிரிப்பை அடக்கி “ஒரு இளவரசிக்கு எத்தனை கணவர்கள்?” என்றாள் திரௌபதி. இருவிரல்களைக் காட்டி “மூன்று” என்றான் அவன். “அபிமன்யு வருவதாக சொன்னான்.” அர்ஜுனன் சிரித்து “இன்னும் இருவரை சேர்த்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்றான். திரௌபதி அவன் கைகளை மீண்டும் அழுத்தி “என்ன பேச்சு இது?” என்றாள். “எப்போதும் சொற்களில் சித்தம் இருப்பதில்லை உங்களுக்கு” என்றாள். அர்ஜுனன் சிரித்தான்.

சுருதகீர்த்தி விழிகள் சரிய சிந்தித்து “நாங்கள் மூத்தவர் இருவரையும் சேர்த்துக் கொண்டால் ஐவராகிவிடுவோம் அல்லவா?” என்றான். அர்ஜுனன் “ஆகா... முழுமையாகவே திட்டமிட்டிருக்கிறார்கள்” என்றான். திரும்பி எழுந்துகொண்டு “நான் சுபத்திரையை பார்க்க சென்று கொண்டிருந்தேன்” என்றான். “நான் அறிந்தேன். அதற்கு முன் என்னை நீங்கள் பார்க்க வேண்டுமென்றுதான் சுஷமரை அனுப்பினேன்” என்றாள். “ஏன்?” என்றான். “ஒன்றுமில்லை. அவள் அறியவேண்டுமல்லவா?” என்றாள்.

அர்ஜுனன் “ஒவ்வொரு முறையும் அறிந்துகொண்டே இருக்கவேண்டுமா?” என்றான். “பெண்ணுக்கு இது ஒன்றை மட்டும் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்” என்றாள் திரௌபதி. அவள் முகம் கூர்மைகொள்வதைக் கண்டு புன்னகத்து “இப்போது நான் சென்று பார்க்கலாமா?” என்றான். “பார்க்கலாம்” என்றபின் “இவனையும் அழைத்துச் செல்லுங்கள். சுஜயன் அங்குதான் இருக்கிறான் என்றார்கள். அவர்கள் இணைந்து இளவரசியரை மணப்பதைப் பற்றிய திட்டங்களை முழுமைபடுத்தட்டும்” என்றாள். அர்ஜுனன் நகைத்தபடி “பார்ப்போம்” என்றான்.

பகுதி ஆறு : மாநகர் – 5

மதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து தூக்கி கீழே இறக்கினான். “தந்தையே, தந்தையே, தந்தையே” என்று அழைத்து அவன் காலை உலுக்கிய சுருதகீர்த்தி “நாம் இந்தப் புரவியிலே வரும்போது… நாம் இந்தப் புரவியிலே வரும்போது…” என்றான். “ஒரு முறை அழைத்தால் போதும்” என்றான் அர்ஜுனன். “நாம் இந்தப்புரவியில்…” என்று சொன்ன பிறகு புரவியை திரும்பிப் பார்த்து “இது சிறிய புரவி” என்றான் சுருதகீர்த்தி.

“வா! நாம் மேலே போய் உன் இளையோனை பார்ப்போம்” என்றான் அர்ஜுனன். “இளையோனை நான் இந்தப்புரவியில் ஏற்றிக்கொண்டு கொண்டு போவேன்” என்றான். “எங்கு?” என்றான் அர்ஜுனன். “கலிங்கத்திற்கு. கலிங்கத்தின் இளவரசியை புரவியில் ஏற்றி கொண்டுவருவோம்.” “நீங்கள் எந்தப்புரவியில் ஏறிக் கொள்வீர்கள்?” என்றான் அர்ஜுனன். “இதே புரவியில்தான். நான் முன்னால் ஏறுவேன். அபிமன்யு இங்கே இதோ இங்கே ஏறுவான். அதற்குப் பின்னால்…” என்று சொன்னபிறகு ஐந்து பேர் என்று விரலைக்காட்டினான் சுருதகீர்த்தி.

அர்ஜுனன் அவனை இடையைப் பற்றி சுழற்றித் தூக்கி தன் தோளில் ஏற்றிக் கொண்டான். சுருதகீர்த்தி உரக்கச் சிரித்து அர்ஜுனன் தலைமேல் அடித்து “விரைவாகப்போ! புரவியே கடுகிப்போ!” என்று கூவினான். படிகளில் ஏறி மேலே சென்று அங்கு காத்து நின்றிருந்த அணுக்கச்சேடியிடம் “என் வரவை அறிவி” என்றான் அர்ஜுனன். அவள் முகம் மலர்ந்து தலைவணங்கி “வருக இளைய பண்டவரே!” என்றபின் விரைந்து உள்ளே சென்றாள்.

அர்ஜுனன் பெருங்கூடத்தில் நுழைந்து அங்கிருந்த வெண்கலத்தால் ஆன கருடன் சிலைக்குக் கீழே அமர்ந்தான். சுருதகீர்த்தியை கீழிறக்கி திருப்பி தன் அருகே பிறிதொரு பீடத்தில் அமர்த்தினான். “அபிமன்யு என்னை விட வீரன். அவன் மூன்று குதிரைகள் மீது விரைவாக பயணம் செய்தான்” என்றான் சுருதகீர்த்தி.

“அப்படியா?” என்ற அர்ஜுனன் “என்னிடம் சொல்லவே இல்லையே” என்றான். “நான் இரண்டு குதிரைகளில் பயணம் செய்தேன்” என்றான் சுருதகீர்த்தி. “எங்கு?” என்றான் அர்ஜுனன். “தொலைவில் வேறொரு நாட்டில்” என்றபின் பெரிய இமைகள் மூட முகம் தாழ்த்தி ஒரு கணம் சிந்தித்து “கலிங்க நாட்டில்” என்றான். “எப்போது?” என்றான் அர்ஜுனன். “நாளைக்கு” என்றான் சுருதகீர்த்தி.

படிகளில் செவிலி பேசியபடி இறங்குவது தெரிந்தது. “அவன் வருகிறான்” என்றான் சுருதகீர்த்தி. “அவனும் நானும் கலிங்கத்திற்குச்சென்று…” என்றபின் அந்தச் சொற்றொடரை அப்படியே விட்டுவிட்டு பீடத்திலிருந்து இறங்கி மறுபக்கம் தெரிந்த படிக்கட்டை நோக்கி ஓடினான். படிக்கட்டில் ஒவ்வொரு படியாக அபிமன்யுவை இடைபற்றி தூக்கி இறக்கியபடி வந்த செவிலி புன்னகைத்து “இதோ உங்கள் தமையன் வந்துவிட்டார்” என்றாள். அபிமன்யு “யானையை… யானையை நான் அம்பால் அடித்து…” என்றபின் நின்று விழிவிரித்து பார்த்தான்.

“அபிமன்யூ, நாம் வெள்ளைப்புரவியில் போனோமே” என்று சொன்னபடி சுருதகீர்த்தி ஓடிச்சென்று அபிமன்யுவின் கைகளை பற்றினான். “தந்தை வந்து நம்மிடம் கேட்கும்போது நாம் வெள்ளைப்புரவியில் போவோம் என்று நான் அன்றைக்கு சொன்னேனே?” அழகிய சிறிய புருவங்கள் வளைய “வெள்ளைப்புரவியா?” என்ற அபிமன்யு வெளியே முற்றத்தை நோக்கி கைசுட்டி “நான் அங்கே வெள்ளைப்புரவியில் போவேன்” என்றான். இருவரும் உடனடியாக எழுந்த எண்ணத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் போல வாயிலை நோக்கி ஓட தலைப்பட்டனர்.

செவிலி இருவர் கைகளையும் பிடித்து நிறுத்தி “தந்தை வந்திருக்கிறாரல்லவா? அவரைப் பார்த்து வணங்கிவிட்டு செல்லுங்கள்” என்றாள். “ஆம், தந்தை” என்றபடி அபிமன்யு திரும்பி அர்ஜுனனை பார்த்தான். அவன் சிறிய வாய் சற்றே திறந்தது. கைகள் தொடை தொட்டு விழுந்தன. அர்ஜுனனை பார்த்தபடி அசைவற்று நின்றான். அர்ஜுனன் சிரித்து இரு கைகளையும் நீட்டி “வா” என்றான். செவிலியின் ஆடையைப் பற்றியபடி அபிமன்யு சுழன்று பின்னகர்ந்து அவள் ஆடைமடிப்புகளுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டான்.

செவிலி “தங்கள் முகம் தெரியவில்லை” என்றாள். “ஆம், நான் விட்டுச் சென்று நெடுநாட்களாகிறது” என்றபின் “வா” என்று மறுபடியும் அழைத்தான். அபிமன்யு நன்றாக திரும்பி செவிலியின் கால்களை பற்றி ஆடைக்குள் பாதியுடலை செலுத்திக்கொண்டான். சுருதகீர்த்தி “இவன் குதிரையில் வருவேன் என்று சொன்னான். பெரிய குதிரை வேண்டுமென்று சொன்னான்” என்றான். “அவனை அழைத்துவா” என்றான் அர்ஜுனன்.

சுருதகீர்த்தி திரும்பி அபிமன்யுவின் தோளைப்பிடித்து இழுத்து “வாடா, தந்தை பெரிய குதிரையை ஓட்டுவார்…” என்றான். “மாட்டேன்” என்றான் அவன். “வாடா” என்று சொல்லி அவன் இடையை சுற்றி வளைத்தான் சுருதகீர்த்தி. அபிமன்யு “மாட்டேன் மாட்டேன்” என்று சொல்லி இறுகப் பற்றிக்கொண்டான். செவிலி அவன் சிறிய தோள்களை பற்றித் தூக்கி அர்ஜுனனை நோக்கி கொண்டுவருகையில் “மாட்டேன். அம்மாவிடம் செல்கிறேன். அன்னையிடம் செல்கிறேன்… மாட்டேன்” என்று கூச்சலிட்டு கால்களை உதறினான்.

அவனை அர்ஜுனன் அருகே கொண்டுவந்து அவன் மடி மீது வைத்தாள். அர்ஜுனன் அவனை தன் கைகளால் தூக்கி பற்றி மடிமேல் அமர்த்திக் கொண்டான். அவன் கைகளின் வலிமையை உணர்ந்ததும் தளர்ந்த கால்களுடன் அபிமன்யு அமர்ந்தான். “ஏன்? தந்தையை உனக்கு அச்சமா?” என்றான் அர்ஜுனன். இல்லை என்று தலை சாய்த்து தோள்களை ஒடுக்கிக் கொண்டான். அவனருகே வந்த சுருதகீர்த்தி சிரித்து “அஞ்சுகிறான்” என்றான். “அவன் சிறுவன்… அவனுக்கு வாளையும் அச்சம்.”

“நீ அஞ்சவில்லையா?” என்று செவிலி கேட்டாள். “இல்லை. நான் தந்தையைப் பார்த்ததும் எனக்கு உடைவாள் வாங்கித் தரும்படி கேட்டேன். பெரிய உடைவாள். இதோ இந்தத்தூண் அளவுக்கு பெரிய உடைவாள்” என்றான் சுருதகீர்த்தி. அர்ஜுனன் மார்பில் அபிமன்யு தன் முகத்தை சேர்த்துக் கொண்டான். அவன் தலையை மெல்ல வருடியபடி குனிந்து கண்களைப் பார்த்து “தந்தையிடம் நீ என்ன சொல்லப்போகிறாய்?” என்றான். ஒன்றுமில்லை என்று அவன் தலை அசைத்தான். “நீ என்னுடன் வருகிறாயா?” என்றான். அபிமன்யு “ம்” என தலையசைத்தான்.

“நான்… நான் வருகிறேன். நாங்கள் கலிங்கத்திற்கு போகும்போது உங்களையும் கூட்டிச் செல்கிறோம்” என்றான் சுருதகீர்த்தி. அவனை நோக்கி திரும்பிய அபிமன்யு “நான் கலிங்கத்துக்கு வரவில்லை. நான் தந்தையுடன் செல்கிறேன்” என்றான். சுருதகீர்த்தி “நானும் வருவேன்” என்றான். அர்ஜுனன் சிரித்து “கலிங்க இளவரசி என்னாவது?” என்றான். சுருதகீர்த்தி “கலிங்க இளவரசியை நாங்கள் கொல்வோம்” என்றான். அர்ஜுனன் சிரித்துவிட்டான். “ஏன்?” என்றான். சுருதகீர்த்தி “அவள் கெட்டவள்” என்றான். “அவள் கெட்டவள். ஆகவே நானும் கலிங்கத்திற்கு போகவில்லை. நானும் உங்களுடன் வருகிறேன்” என்றான். படிகளில் இறங்கி வரும் ஓசை கேட்டது. செவிலி திரும்பிப் பார்த்து “இளவரசர்… சுபாகுவின் மைந்தர்” என்றாள். “அவனைத்தான் எதிர்நோக்கியிருந்தேன்” என்றான் அர்ஜுனன். “இங்குதான் இருக்கிறார். எந்நேரமும் இளையோனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். மூச்சு நடுநடுவேதான் ஓடுகிறது.”

அர்ஜுனன் திரும்பி நோக்கியபோது சுஜயன் சீரான நடையுடன் அருகே வந்து நின்றான். அர்ஜுனன் அவனை நோக்கியதும் அவன் தலைவணங்கி “வணங்குகிறேன் இளையதந்தையே” என்றான். “பெரும்புகழுடன் இரு” என்றான் அர்ஜுனன். கைநீட்டி அருகே அழைத்தபடி “உன்னைப்பற்றி திரௌபதி சொன்னாள்” என்றான். அவன் நாணத்துடன் புன்னகைசெய்து “நான் உங்களைப்பற்றிய கதைகளை கேட்டேன்” என்றான். அர்ஜுனன் “யார் சொன்னார்கள்?” என்றான். “ஒரு பெரிய புத்தகத்தில் படித்து என் செவிலி சொன்னார். மாலினி என்னும் மூதாட்டியும் சொன்னார்.”

“என்ன கதை?” என்றான் அர்ஜுனன். “போர்கள்” என்றான் சுஜயன். “நீங்கள் இளவரசிகளை மணந்த கதைகள்…” அர்ஜுனன் கைகளை நீட்டி அவன் சிறியகைகளைப் பற்றி அருகணைத்தான். இடைசுற்றி வளைத்து தன் விலாவுடன் இறுக்கிக் கொண்டான். குனிந்து அவனுடைய குடுமியில் முத்தமிட்டபடி “அழகாக இருக்கிறாய். உன்னைப்பார்த்தால் உன் தந்தையை இளமையில் பார்த்தது நினைவுக்கு வருகிறது” என்றான். சுஜயன் இயல்பாக வந்து அவன் தொடைகள் மேல் கைவைத்து சாய்ந்துகொண்டு “நீங்கள் அதன் பிறகு நாகர் உலகுக்கு செல்லவில்லையா?” என்றான். “இல்லை” என்றான் அர்ஜுனன். “மணிபூருக்கு?” அர்ஜுனன் “அங்கும் செல்லவில்லை” என்றான்.

சுஜயன் விழிகளை உருட்டி எண்ணிநோக்கி “நாகஇளவரசரின் பெயர் அரவான்தானே?” என்று கேட்டான். அர்ஜுனன் “ஆம், அவன் இப்போது பெரிய சிறுவனாக வளர்ந்துவிட்டான் என்றார்கள்” என்றான். சுஜயன் “பப்ருவாகனனும் பெரிய சிறுவனாக வளர்ந்திருப்பான் அல்லவா?” என்றான். அர்ஜுனன் “இருவரும் படைக்கலப்பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்” என்றான். சுஜயன் “அதெல்லாம் பழையகதைகள் என்றார் என் செவிலி. நான் அங்கெல்லாம் சென்றதுபோல உணர்கிறேன்” என்றான்.

“நீ என்னைப்போல் வீரச்செயல்களை செய்யவேண்டும் என்று விரும்புகிறாயா?” என்றான் அர்ஜுனன். “இல்லை” என்று சுஜயன் சொன்னான். சிரித்தபடி “ஏன்?” என்றான் அர்ஜுனன். “நான் அரிஷ்டநேமியைப்போல் பெரிய யோகியாக மாறி வெள்ளை யானைமேல் ஏறி நெடுந்தொலைவுக்கு செல்வேன் என்றான். கைசுட்டி “அங்கே…” என்றான். அபிமன்யு “அரிஷ்டநேமி, அரிஷ்டநேமி, அரிஷ்டநேமி” என்றான். மேற்கொண்டு சொல் எழவில்லை. “இவனுக்கு நான் ஐந்துமுறை அந்தக்கதையை சொன்னேன்” என்றான் சுஜயன். “அரிஷ்டநேமியின் வெள்ளையானை!” என்றபின் அபிமன்யு பாய்ந்திறங்கி கைகளை தலைக்குமேல் தூக்கி எம்பிக்குதித்து “மிகப்பெரியது” என்றான்.

அர்ஜுனன் ஒரு கணம் திகைத்தபின் வாய்விட்டு சிரித்தபடி “இது யாருடைய பயிற்சி?” என்றான். நிமிர்ந்து பார்த்தபோது தொலைவில் நின்ற சுபகையை பார்த்தான். ஒரு கணம் அவன் உதடுகள் சுருங்கின. “உன் பெயர் சுபகை அல்லவா?” என்றான். சுபகை கால் தளர்ந்தவள் போல் சுவருடன் உடலை சேர்த்து நின்றபடி “ஆம்” என்று தலை அசைத்தாள். “உன்னை நினைவுறுகிறேன்” என்றான் அர்ஜுனன். அவள் தொண்டை அசைந்தது. இருமுறை உதடுகள் அசைந்தும் சொல்லெழவில்லை. பின்னர் அடைத்த குரலில் “என்னை நினைவுகூர மாட்டீர்கள் என்று நினைத்தேன்” என்றாள்.

“நினைவுறாத முகங்கள் நிறைய உள்ளன. ஆனால் உன் முகம் எப்படியோ நினைவில் நின்று கொண்டிருக்கிறது” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “தெரியவில்லை” என்றான். “இப்போது உன் விழிகளில் நிறைந்திருக்கும் இந்த உணர்வுகளை அன்றும் நான் கண்டதனால் இருக்கலாம்.” அவள் அழப்போவது போல் முகம் மாறினாள். பிறகு உதடுகளை இறுக்கியபடி தலை குனிந்தாள். சுஜயன் “இவர்தான் என் செவிலி. உங்கள் வீரக்கதைகளை இவர்தான் சொன்னார்” என்றான். “அந்த நூலில் இருந்து வாசித்து சொன்னார்.”

“நீங்கள் நாகர்களின் ஆழுலகு சென்று மீண்டதைப்பார்த்து நான் பயந்து கண்களை மூடிக்கொண்டபோது ஆயிரம் நாகங்களை பார்த்தேன். அவற்றின் கண்கள் விண்மீன்கள் போல் இருந்தன” என்றான் சுஜயன். அவன் தாடையைப்பற்றித் திருப்பி “நானும் நானும்” என்ற சுருதகீர்த்தி அர்ஜுனனிடம் “நானும் இவனும் நாகருலகிற்கு செல்வோம்” என்றான். “அங்கு சென்று வெள்ளைக் குதிரையில் ஏறி போர் புரிவோம்.” கைகளை விரித்து “வெள்ளையானையைவிட பெரிய வெள்ளைக்குதிரை!” என்றான்.

மயங்கியவன் போல் நின்ற அபிமன்யு மெல்ல உடல் திருப்பி சிறிய சுட்டு விரலைக்காட்டி “இரண்டு வெள்ளைக்குதிரை” என்றான். சுஜயன் சிரித்தபடி “இருவரும் போர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் “நீ நினைப்பதில்லையா?” என்றான். “இல்லை” என்றான் சுஜயன். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அஞ்சுபவர்கள் கொல்கிறார்கள். அஞ்சாதவர்கள் இவ்வுலகிற்கு அன்பை மட்டுமே அளிக்கிறார்கள்” என்று சுஜயன் சொன்னான். அர்ஜுனன் சற்று திகைத்து உடனே முகம் மலர்ந்து சிரித்தபடி சுபகையைப் பார்த்து “இதென்ன, நீ கற்றுக் கொடுத்த சொற்களா?” என்றான்.

சுஜயன் “இல்லை, இது அந்த நூலில் எழுதப்பட்டிருந்தது. இதை திரும்பச் சொல்லும்படி நான் கேட்டேன்” என்றான். சுபகை “திரும்பத் திரும்ப நூறுமுறை ஆயிரம்முறை இந்த ஒரு வரியை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். எத்தனை முறை சொன்னாலும் இன்னொரு தடவை சொல் என்று கேட்பார்” என்றாள். அர்ஜுனன் “அப்படியா?” என்று குனிந்து சுஜயனின் தலையை அளைந்தான். “நான் நிறைய கனவுகளை கண்டுகொண்டிருந்தேன். அவற்றில் எல்லாம் எனக்கு பேரச்சமே கிடைத்தது. படுக்கையில் சிறுநீர் கழித்தேன்” என்றான் சுஜயன். சுபகை கையால் பொத்தி சிரிப்பை  அடக்கியபடி “சிறுநீர்தான் அது என ஒப்புக்கொள்ளவே ஆறுமாதமாகியது” என்றாள்.

“நேமிநாதரின் கதை வந்த போதுதான் நான் அச்சம் கொண்டிருப்பதே எனக்கு தெரிந்தது. ஒருநாள் துயின்று கொண்டிருக்கும்போது அவர் எனது கனவில் வந்தார்” என்றான் சுஜயன். அர்ஜுனன் “எப்படி?” என்றான். “ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவுக்கு அப்பால் யாரோ நிற்பது போல் இருந்தது. நான் சென்று அந்தக் கதவை திறந்தபோது தரையிலிருந்து மேலே உத்தரம் வரை பேருருவாக உயர்ந்து அவர் நின்று கொண்டிருந்தார். பெரியசிலை என்று தோன்றியது. ஆனால் சிலை அல்ல, மனிதராகவே இருந்தார். குனிந்து என்னைப் பார்த்து அஞ்சாதே என்று சொன்னார்.”

சுஜயனின் கண்கள் குழந்தைக்குரியவையாக இருக்கவில்லை. “அவரது உள்ளங்கை என் தலையைவிட பெரிதாக இருந்தது. என் தலையைத் தொட்டு எதற்கும் அஞ்சாதே என்று சொன்னார். அஞ்சமாட்டேன் என்று சொன்னேன். அப்படியென்றால் இந்தக் கதவை மூடு என்றார். நான் திரும்ப கதவை மூடிவிட்டேன். ஆனால் கதவுக்கு அப்பால் அவர் இருப்பதை உணர்ந்தேன்.” அர்ஜுனன் வியப்புடன் சுபகையை பார்த்தான். சுஜயன் “அதன்பின் எப்போதும் அந்த மூடிய கதவே நினைவுக்கு வரும். அதற்கப்பால் அவர் நின்றிருப்பார்.” அர்ஜுனன் “அரியது! இத்தனை முழுமையான கனவு குழந்தைகளுக்கு வருமென்பதே வியப்பாக இருக்கிறது” என்றான்.

சுபகை “குழந்தைகளுக்குத்தான் தெளிவான பெரிய கனவுகள் வரும் என்பார்கள். திடீரென்று ஒரு நாள் போர்களைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். வலிப்பு வந்துகொண்டிருந்ததும் நின்று உடல் தேறத்தொடங்கியது. ஊழ்கத்தில் நின்றிருக்கும் நேமிநாதரின் சிலை ஒன்று வேண்டுமென்றார். காவலன் ஒருவனிடம் சொன்னேன். அருகநெறி சார்ந்த வணிகர் ஒருவரிடமிருந்து சிறிய மரச்சிலை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தான். அதை தன் தெய்வம் என உடன்வைத்திருக்கிறார்” என்றாள்.

“என்னிடம் அந்த சிலை இருக்கிறது” என்று சுஜயன் சொன்னான். எழுந்து இருகைகளையும் தொங்கவிட்டு தலை நிமிர்ந்து நின்றபடி “இப்படி நின்றிருக்கும் சிலை” என்றான். அபிமன்யு அவனைத் தொட்டு உலுக்கி “மூத்தவரே, மூத்தவரே, அவருடைய தோள்கள் மிகப்பெரியனவா?” என்றான். சுஜயன் “ஆம், மிக மிகப் பெரிய தோள்கள்” என்றான். “பெரிய தந்தையார் பீமனைவிட பெரிய தோள்களா?” என்றான் அபிமன்யு. “மண்ணில் எவருடைய தோள்களைவிடவும் இரு மடங்கு பெரியவை என்று நூல்களில் இருக்கின்றது” என்றான் சுஜயன். பின்பு சுபகையிடம் திரும்பி “இல்லையா?” என்றான். “ஆம்” என்றாள் சுபகை.

“அப்படியென்றால் அவர் கதைப்போரில் பெரிய தந்தையாரை தோற்கடித்து விடுவாரா?” என்று அபிமன்யு கேட்டான். “அவர் எவரிடமும் போர் புரிய மாட்டார். ஏனென்றால் மண்ணில் எவரும் அவரிடம் போர் புரியும் ஆற்றல் கொண்டவரல்ல” என்று சுஜயன் சொன்னான். அர்ஜுனன் “எந்தநூல் அது?” என்றான். சுபகை “நேமிவிஜயம் என்று ஒரு நூல் உள்ளது. அதை ஒரு வணிகரிடம் இருந்து வாங்கி வந்து வாசித்து கதை சொன்னேன்” என்றாள். “துவாரகை விட்டு சென்ற இளவரசர் அரிஷ்டநேமி பன்னிரு மலைகளில் ஊழ்கம் இயற்றி ரைவத மலையின் கற்சரிவுக்கு வந்து ஊழ்கத்தில் இருந்து பெருநிறைவை நோக்கிச்சென்றதைப் பற்றி அந்த நூல் சொல்கிறது.”

அர்ஜுனன் “அதில்தான் ராஜமதிதேவி யக்ஷியான கதை உள்ளதா?” என்றான். சுபகை “அம்பிகைதேவியும் கோமத யக்ஷனும் அவரது குகையின் இருபக்கமும் நின்றபடியே ஊழ்கம் செய்து அவருடன் விண்ணுலகம் சென்றனர். பதினெட்டு மலைகளில் பதினெட்டு சித்திகளை நேமிநாதர் அடைந்தார். முதல் மலையில் தாமசம் என்னும் கரிய எருதை கொன்றார். விழிகள் எரியும் நாகங்களையும் அனல்சிறகுகள் கொண்ட பறவைகளையும் கூருகிர்கொண்ட சிம்மங்களையும் நூறுகரங்கள் கொண்ட பாதாளதெய்வங்களையும் இறுதியில் மாரனையும் அவர் வென்றார்” என்றாள்.

சுஜயன் எழுந்து “பதினெட்டாவது தெய்வம் நேமி என்று பெயர் கொண்டது. அவரது ஆடிப்பிம்பம் போலவே அது இருக்கும்” என்றபின் கண்களை விரித்துக்காட்டி “அவர் கொள்ளும் ஆற்றலை அவரிடமிருந்தே அதுவும் கொள்ளும்” என்றான். “அதெப்படி?” என்றான் அர்ஜுனன். “ஏன் என்றால் அவர் எவரிடமும் போரிடவில்லை. போரிட்டிருந்தால் முதல் தாமசம் என்னும் எருதிடமே அவர் தோற்றிருப்பார். அவர் எதைப்பற்றியும் அஞ்சவில்லை. ஒருகணமும் விழிதிருப்பாமல் அவற்றின் விழிகளைப் பார்த்தபடி புன்னகையுடன் கைவிரித்து அணுகிச் சென்றார். முற்றிலும் அச்சமற்றவர்களை வெல்லும் ஆற்றல் தெய்வங்களுக்கு இல்லை. எனவே அவை தோற்று பின் வாங்கின.”

அர்ஜுனன் திரும்பி சுபகையை நோக்கி “ஆடிப்பாவையை அவர் எப்படி வென்றார்?” என்றான். ஊடே புகுந்து “ஆடியை வெல்வதற்குரிய வழி என்பது ஆடியிலிருந்து விலகிச் செல்வதுதான். விலகும் தோறும் சுருங்கி ஆடிக்குள்ளேயே மறையாமல் இருக்க ஆடிப்பாவையால் முடியாது” என்றான் சுஜயன். “தீயாக வரும் தெய்வத்திடம் அவர் குளிர்ந்திருந்தார். காற்றாக வந்தபோது அவர் பாறை போல் அசையாமல் இருந்தார். வஜ்ராயுதமேந்தி வந்த தெய்வங்களுக்கு முன் வெண்முகில் போல் நின்றார். இருளாக இருந்து சூழ்ந்த தெய்வங்கள் முன் ஒளியாக இருந்தார்” என்றான்.

அர்ஜுனன் “மனப்பாடமே செய்திருப்பான் போலிருக்கிறதே” என்றான். சுபகை "அந்த ஒரு நூலை நான்மட்டும் பத்து முறைக்குமேல் சொல்லியிருக்கிறேன்” என்றாள். அர்ஜுனன் சுஜயனிடம் “ஒருமுறை என்னுடன் வா. நாம் ரைவத மலைக்குச் சென்று நேமிநாதர் விண்ணேகிய அக்குகையை பார்ப்போம். அங்கு அவருக்கு நின்ற பெருங்கோலத்தில் கருங்கல்லில் சிலை இருக்கிறது” என்றான். “நீங்கள் பார்த்தீர்களா?” என்றான் சுஜயன். “ஆம், பார்த்தேன். அத்தனை அருகர் சிலைகளும் ஒன்று போல் இருக்கும். காலடியில் சங்கு முத்திரை கொண்டவர் நேமிநாதர்.”

“ஆம், அவர்கள் எந்தப் படைக்கலமும் ஏந்துவதில்லை. எந்த அடையாளமும் சூடிக் கொள்வதில்லை” என்று சுஜயன் சொன்னான். அபிமன்யு “நானும் வருவேன்” என்றான். சரிந்திறங்கி அர்ஜுனனின் கால்களின் நடுவே நின்று கைகளை அவன் தொடைகளில் வைத்தபடி “நான் பெரிய வெள்ளைக்குதிரையில் ஏறி ரைவத மலையில் சுழன்று ஏறுவேன். இதோ இப்படி வேகமாக சுழன்று ஏறுவேன்” என்றான். சுருதகீர்த்தி “நானும் வருவேன்” என்றான். அர்ஜுனன் “நாம் அனைவரும் செல்வோம்” என்றான்.

சுருதகீர்த்தி “மூத்தவர் இருவரையும் நாம் அழைத்துச் செல்ல வேண்டியதில்லை” என்றான். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “அவர்கள் கெட்டவர்கள். அவர்கள் வேண்டுமென்றால் கலிங்கத்திற்குப் போய் கலிங்க இளவரசியை மணம் செய்து கொள்ளட்டும்.” அர்ஜுனன் “கலிங்க இளவரசி உனக்கு வேண்டியதில்லையா?” என்றான். சுருதகீர்த்தி குழப்பம் கொண்டு சுபகையையும் அர்ஜுனனையும் மாறி மாறி பார்த்தபின் “நானும் கலிங்க இளவரசியை மணம் கொள்வேன்” என்றான். “நானும் நானும்” என்று அபிமன்யு குதித்தான். “என்ன நானும்?” என்றான் அர்ஜுனன்.

அபிமன்யு கைகளை விரித்து “கலிங்க இளவரசி” என்றான். கையை தலைக்கு மேல் தூக்கி “இவ்வளவு பெரிய இளவரசி” என்றான். “இளவரசி என்று இவர்கள் எதை சொல்கிறார்கள் என்றே தெரியவில்லையே. ஏதாவது எருமையோ பசுவோ ஆக இருக்குமோ?” என்றான் அர்ஜுனன். செவிலி வெடித்து நகைக்க வாய் பொத்தி சுபகை சிரித்தாள்.

பகுதி ஆறு : மாநகர் – 6

மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்!’ என்றான். செவிலி முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் பேசத்தொடங்கிவிட்டேன்” என்றான் அர்ஜுனன். சுபகை தலைவணங்கி விலகிச் சென்றாள். செவிலியும் அவளைத்தொடர்ந்து சென்றாள்.

சுபத்திரை அருகே வந்து அர்ஜுனன் எதிரிலிருந்த பீடத்தில் அமர்ந்து இரு கைகளையும் சேர்த்தபடி “என்ன சொல்கிறார் மாவீர்ர்?” என்றாள். அர்ஜுனன் திரும்பி சுஜயனை பார்த்தபடி “மாவீர்ராகிக் கொண்டிருக்கிறார். உண்மையான வீரம் என்ன என்று அறிந்துவிட்டார்” என்றான். “ஆம், இவர் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. அப்படி என்ன செய்தீர்கள் என்று அந்த தடித்த செவிலியிடம் கேட்டேன். அவள் பேரென்ன?” என்றவுடன் அர்ஜுனன் “சுபகை” என்றான்.

“அவளை அறிவீர்களா?” என்று சற்றே மாறிய விழிகளுடன் சுபத்திரை கேட்டாள். “அறிவேன்” என்றான். சுபத்திரை ஓரிரு கணங்களுக்குப்பின் அவ்வெண்ணத்தை அப்படியே தள்ளி பிறிதொரு புறத்திற்கு மாற்றி “அவள்தான் இவரை மாற்றியவள். அப்படி என்ன சொல்லிக் கொடுத்தாய் என்றேன். ஒரே ஒரு நூலை பலமுறை சொல்லியிருக்கிறாள்” என்றாள். “ஒருநூலை அல்ல, இரண்டு நூல்களை” என்றான் அர்ஜுனன். “முதல்நூல் என்னுடைய பயணங்களை பற்றியது. இரண்டாவது நூல்தான் உங்கள் குடியின் நேமிநாதரைப்பற்றியது.”

சுபத்திரை “ஆம் நான் குறிப்பிட்டது அந்த இரண்டாவது நூலை மட்டும்தான். முதல் நூலை இவர் வெறும் கதைகளாகத்தான் கேட்டிருக்கிறார். கற்றிருக்கவில்லை” என்றாள். அர்ஜுனன் அவள் விழிகளைப் பார்த்து உடனே திரும்பிக்கொண்டு அபிமன்யுவின் கன்னங்களை தடவி “வலுவான சிறிய பற்கள்… மீன்பற்களைப்போல கூரியவை” என்றான். “இன்னும் உங்களை கடிக்கவில்லையா?” என்றாள் சுபத்திரை. “இல்லை. கடிக்கவில்லை. மறந்துவிட்டான் போலிருக்கிறது” என்று குனிந்த அர்ஜுனன் “கடிக்கவில்லையா? இந்தா கடி” என்று விரலை நீட்டினான். “கடிக்க மாட்டேன்” என்றான் அபிமன்யு. “ஏன்?” அவன் தலைக்கு மேல் கைதூக்கி சுட்டு விரலை ஆட்டி “நாளைக்கு கடிப்பேன்” என்றான்.

சுபத்திரை சிரித்து “எதிர்காலத்திட்டங்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்” என்றாள். சுருதகீர்த்தி “நானும் அவனும் வெள்ளைக்குதிரையில் போய் கலிங்கத்து இளவரசியை சிறை பிடித்து அவளை கடிப்போம்” என்றான். சுபத்திரை சிரித்து பீடத்தில் நிமிர்ந்தமர்ந்து “சில நாட்களாகவே கலிங்கத்து இளவரசியின் கதை ஓடிக்கொண்டிருக்கிறது” என்றாள். “என்ன கதை அது?” என்றான். “தெரியவில்லை. அங்க நாட்டு அரசரின் கதை அது. சூர்யபிரதாபம் என்ற பெயரில் புலவர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கிறது. செவிலி ஒருத்தி சொன்னாள்.”

அர்ஜுனன் “ஓ” என்றான். “அதன் கதைத்தலைவர் கர்ணன். அதைக் கேட்ட பிறகுதான் கலிங்கத்து இளவரசி என்ற பேச்சு ஆரம்பித்திருக்கலாம். அதில் ஓர் பகுதியில் அவர் துரியோதனருக்காக வெண்புரவியில் சென்று கலிங்க இளவரசியை சிறைப்பிடித்து வருகிறார்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “ஓஹோ” என்றான். சுபத்திரை “அங்குள்ள செவிலியருக்கு அந்தக் கதை பிடித்திருக்கிறது போலும்” என்றாள். “எங்கே?” என்றான் அர்ஜுனன். “தெரியவில்லை, பாஞ்சால அரசியின் மாளிகையிலாக இருக்கலாம்.” அர்ஜுனன் அவள் விழிகளைத் தவிர்த்துத் திரும்பி சுருதகீர்த்தியிடம் ”அந்தக்கதையை உங்களிடம் சொன்னவர் யார்?” என்றான்.

“அந்தக் கதை… அது ஏட்டிலே…” என்றான் சுருதகீர்த்தி. கைவிரித்து “பேரரசியின் அரண்மனையில் உள்ள முதுசெவிலி என்னிடம் சொன்னாள். கர்ணன் வெண்புரவி மேல் போகும் கதை” என்றான். சுபத்திரை “அத்தையா அந்தக்கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறாள்? வியப்புதான்” என்றாள். அர்ஜுனன் “அன்னை அக்கதைகளை விரும்புவாள்” என்றான். “ஏன்?” என்று சுபத்திரை கேட்டாள். “அதை அவள்தான் சொல்ல முடியும்” என்றான்.

சுபத்திரை “பேரரசியை நான் வெறுமே சடங்குகளில் மட்டுமே பார்க்கிறேன்” என்றாள். அர்ஜுனன் “உன் தமையனிடமிருந்து செய்தி ஏதேனும் உண்டா?” என்றான். “இங்கு இன்னும் சில மாதங்களில் நகர்ப்பணி முடிந்துவிடும். அதன் பிறகொரு பெரிய நகரணி விழா நடக்கவிருப்பதாக சொன்னார்கள். அப்படியென்றால் அவர் இங்கு வந்து சில மாதங்கள் தங்குவார் என்றுதான் பொருள்” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “அவரை சொன்னதும் உன் முகம் மலர்கிறது” என்றான்.

“ஆம், அதில் என்ன? ஒவ்வொரு நாளும் காலையில் அவர் முகத்தை எண்ணிக்கொண்டுதான் விழிக்கிறேன். அவர் முகத்தை நெஞ்சில் நிறுத்தியபின்புதான் துயில்கிறேன் இங்கிருந்தாலும் இல்லையென்றாலும் அவர் எப்போதும் என்னுடன்தான் இருக்கிறார்.” அவன் “ஆம், நானும்தான்” என்றான். ”நம் இருவரிடையே பொதுவாக இருப்பது இந்த ஒன்றுதான்.” அவள் அவனை நோக்கி “ஆம். இது ஒன்றேனும் பொதுவாக உள்ளதே என்று எண்ணிக் கொண்டேன்” என்றாள்.

அர்ஜுனன் “நேமிநாதர் விண்ணேகிய கருநிலவு நாளை ரைவத மலையில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்” என்றான். சுபத்திரை வியப்புடன் “எப்போது?” என்றாள். அர்ஜுன்ன் “இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. நாம் செல்வோம்” என்றான். அவள் “என் தமையன் உறுதியாக வருவார். நாம் செல்வோம்” என்றாள். அவள் விழிகள் சரிந்தன. நீள்மூச்சுடன் “அவரது தோற்றம் என் விழிகளில் இன்னும் உள்ளது. அவர் இருந்த குகையையும் நின்று விண்ணேகிய பாறைகளையும் பார்த்தால் மீண்டும் அவரை பார்ப்பது போல” என்றாள்.

அர்ஜுனனின் கண்கள் வலிகொண்டவை போல் சற்று மாறின. சுபத்திரை “ரைவதமலைக்குச் செல்லும்போது நீங்கள் என்னுடன் அந்த சிவயோகியின் தோற்றத்தில் வரவேண்டும்” என்றாள், அர்ஜுனன் புன்னகைத்து “ஏன்?” என்றான். “அது என் விழைவு. இந்திரப்பிரஸ்தத்திற்குள் அன்று நுழைந்தபோதே நான் சிவயோகியை இழந்துவிட்டேன். என் நினைவுகளில் மட்டும்தான் அவர் இருக்கிறார். ரைவத மலையில் நான் அவர் கைபற்றி படிகளில் ஏறவேண்டும்” என்றாள்.

அர்ஜுனன் அபிமன்யுவை தொட்டு “உன் இடையில் இவன் இருப்பான்” என்றான். “இருக்கட்டும். இவன் அந்த சிவயோகியின் மைந்தன்” என்றாள் சுபத்திரை. “எந்த வலையிலும் சிக்காது அறுத்துக் கடந்து செல்லும் பெருவேழம் போன்று எந்தச் சூழ்கையில் இருந்தும் வெளியேறும் முழுமை கொண்ட வீரன் இவன். அந்தக் கனவைத்தான் நான் ஈன்றிருக்கிறேன்.” அர்ஜுனன் அபிமன்யுவை நோக்கி விழி கனிந்து “அவ்வாறு நிகழட்டும்” என்றான்.

அபிமன்யு “நான் உள்ளே நுழைவேன். வாளால் வெட்டி உள்ளே நுழைவேன்” என்றான். “எதற்குள் நுழைவாய்?” என்று அர்ஜுனன் கேட்டான். “பூவுக்குள்! பெரிய பூ” என்றான். “ஆயிரம் இதழ் கொண்ட பூ. அந்தப் பூவுக்குள் நான் நுழைவேன்.” அர்ஜுனன் செவிலியை நோக்க அவள் “மூடிய தாமரை ஒன்றுக்குள் இருந்து வண்டு வெளியேறி வந்ததைக் கண்டு அஞ்சி அலறினார். எப்படி அது உள்ளே சென்றது என்றார். அந்தியில் அது மூடும்போது வண்டு உள்ளே சிக்கிக்கொள்ளும் என்றேன். அன்றிலிருந்து தாமரை என்றாலே அஞ்சுகிறார்” என்றாள்.

“அஞ்சுகிறாயா?” என்றான் அர்ஜுனன் குனிந்து. “இல்லை” என்று அபிமன்யு சொன்னான். “நான் தாமரைமலரை வாளால் வெட்டுவேன். பெரிய வாளால் வெட்டுவேன்.” சுருதகீர்த்தி “நாங்கள் இருவரும் வெள்ளைக்குதிரையில் போய் பெரிய தாமரை மலர்களை வெட்டுவோம். அந்தக் குளத்தில் முதலைகள் இருக்கும். நூறு முதலைகள்… ஏழு முதலைகள். அவற்றின் வாய்க்குள் பெரிய பற்கள். குறுவாள் போன்ற பற்கள்!” என்றான். “நான் பார்த்தேன்! நானும் பார்த்தேன்!” என்று அபிமன்யு சொன்னான். சுஜயன் சிரித்து “இவர்கள் கனவு காண்கிறார்கள்” என்றான்.

சுபத்திரை “இவருக்கு காண்டீபத்தை காட்டுவதற்காகவே அந்தச்செவிலி அழைத்து வந்திருக்கிறாள்” என்றாள். அபிமன்யு “காண்டீபம்… காண்டீபம்” என்றான். சுருதகீர்த்தியும் “காண்டீபம்! காண்டீபம்!” என குதித்தான். அர்ஜுனன் சுஜயனிடம் “நீ பார்க்க விழைந்தாயா?” என்றான். “அந்நூலை படித்தால் காண்டீபத்தைப் பார்த்து தொழுது அமையவேண்டும் என்று செவிலி சொன்னார்” என்றான். “பார்ப்போம்… நானே அதைப்பார்த்து நெடுநாட்களாகின்றன” என்றான் அர்ஜுனன்.

சால்வையை எடுத்தபடி எழுந்து “நான் இவர்களுக்கு காண்டீபக்கோயிலை காட்டி வருகிறேன்” என்றான். சுபத்திரை இயல்பாக எழுந்து ஆடையை சரிசெய்தபடி “அவளை பார்த்தீர்களா?” என்றாள். அர்ஜுனன் அந்த வினாவை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கணம் குழம்பி “ஆம் பார்த்தேன்” என்றான். “என்ன சொன்னாள்?” என்றாள். எவரையும் பொருட்படுத்தாத பாவனை அதில் தெரிந்தது. அவன் புன்னகைத்தபடி “என்னிடம் அவள் எதைப் பேசினாலும் இறுதியில் அது இளைய யாதவரிடம்தான் வந்து சேரும்” என்றான்.

அவள் “ஆம்” என்றாள். “இந்நகரில் பெருங்குடியேற்ற விழா நடைபெறும்போது இளைய யாதவரை நானே சென்று அழைத்து வர வேண்டும் என்றாள். நான் ஆம் என்றேன்” என்றான் அர்ஜுனன். “ஏன், முறைப்படி அழைத்தால் அவர் வரமாட்டாரா?” என்றாள் சுபத்திரை. “இல்லை இந்நகரின் வேள்வித் தலைவராக அவர் அமர்ந்திருக்க வேண்டும் என்றாள்.” சுபத்திரை “வேள்வியா?” என்றாள். “ராஜசூய வேள்வி ஒன்று நிகழ்த்த வேண்டும் என்றாள்” என்றான்.

“அவருக்கு நாடும் நகரமும் உள்ளதே? இங்கு ஏன் வேள்வியில் அமரவேண்டும்?” என்றாள் சுபத்திரை. “அதை நீ அவளிடம்தான் கேட்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “யாதவர் வேள்விக்காவலாக அமர்வதை ஷத்ரியர் ஏற்பார்களா?” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “அவர் பேரரசின் அரசர்” என்றான். சுபத்திரை “ஏதோ திட்டம்… என்ன திட்டம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ திட்டம் இருக்கிறது அதில்” என்றாள். “அதை நீயே எண்ணி அறிந்துகொள். இவ்வரண்மனையில் உன் பணி அவளை எண்ணுவது மட்டும்தானே?” என்றபின் திரும்பி சிறுவர்களிடம் “காண்டீபத்தை பார்ப்போம், வருக!” என்றான்.

“காண்டீபம்!” என்று அபிமன்யு பளிங்கில் ஆணி உரசும் ஒலியில் கூவினான். இரு கைகளையும் விரித்து “இவ்வளவு பெரிய வில்” என்றான். அர்ஜுனன் அவனை தோள்களைப் பிடித்து சுழற்றித் தூக்கி தன் தோளில் அமர்த்திக் கொண்டான். சுருதகீர்த்தி சுஜயன் இருவரும் அவன் இரு கைகளை பற்றிக் கொண்டனர். அபிமன்யு அவன் தலைமயிரைப் பற்றியபடி கால்களை அவன் மார்பில் உதைத்து “விரைவு! புரவியே, விரைவாக” என்றான். திரும்பி சுபத்திரையிடம் “உச்சி உணவுக்கு இங்கு வந்துவிடுவேன்” என்றபடி அர்ஜுனன் வெளியே சென்றான்.

இடைநாழியில் நின்றிருந்த சுபகையை நோக்கி புன்னகைத்தான். அவள் “எங்கு செல்கிறீர்கள்?” என்றாள். “இவனுக்கு காண்டீபத்தைக் காட்டத்தான் வந்தாயா?” என்றான். அவள் முகம் சிவந்து “நானும் பார்க்கத்தான்” என்றாள். “வா” என்று சிரித்தபடி அவன் முன்னால் செல்ல அவள் மூச்சுவாங்கியபடி பின்னால் வந்தாள்.

வெளிமுற்றத்தை அடைந்து அங்கு நின்றிருந்த காவலனிடம் “படைக்கலக்கோயிலுக்கு” என்றான். “ஆணை” என அவன் தலைவணங்கினான். அங்கு நின்றிருந்த மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அவன் குழந்தைகளுடன் ஏறிக்கொண்டான். சுபகை தயங்கி நின்றாள். “ஏறிக்கொள்” என்றான். அவள் “அரசத்தேர்” என்றாள். “ஏறு” என அர்ஜுனன் கைநீட்டினான். அவள் முகம் சிவந்தது. கண்களைத்தழைத்து இதழ்களை இறுக்கியபடி அசையாமல் நின்றாள். கழுத்தின் தசைகள் அசைந்தன. “உம்” என்றான் அர்ஜுனன். அவள் தன் தடித்த கையை நீட்டினாள். அவன் அவள் மணிக்கட்டைப்பற்றி தூக்கி மேலே ஏற்றி தனக்குப்பின்னால் அமரச்செய்தான்.

தேர் பெருஞ்சாலைமேல் எழுந்து சகட ஓசையுடன் மாளிகைகளை கடந்து சென்றது. “காண்டீபம்! காண்டீபம்! காண்டீபம்!” என்று சிறுவர்கள் கையசைத்து கூச்சலிட்டனர். அர்ஜுனன் திரும்பி சுபகையிடம் “மாலினியன்னையைப் பார்க்க நான் வருவேன்” என்றான். “நானும் அங்கிருப்பேன்” என்றாள் சுபகை. தன் பதற்றத்தை வெல்ல சிரித்துக்கொண்டு “நீங்கள் இப்படி மைந்தர் சூழ வருவதை பார்க்கும்போது உங்களுக்குள் உங்கள் தமையன் பீமன் வாழ்கிறார் என்று தோன்றுகிறது” என்றாள். “நானும் அவரும் ஒன்றுதான்” என்றான் அர்ஜுனன். “அதை அவரது பெண்களிடம் அல்லவா கேட்க வேண்டும்” என்றாள் சுபகை. அர்ஜுனன் நகைத்தான்.

மாளிகைகளுக்கு தென்கிழக்கே அக்னிமூலையில் இருந்தது காண்டீபத்தின் ஆலயம். அதன் முற்றத்தில் அவர்களின் தேர்சென்று நிற்பதற்கு முன்னரே அவர்கள் வரும் செய்தியை அறிவித்திருந்தனர். அர்ஜுனன் இறங்கி மைந்தரை ஒவ்வொருவராகத் தூக்கி இறக்கினான். அபிமன்யு “தூக்குங்கள்…தூக்குங்கள்” என கை நீட்டி கால்களை உதைத்தான். அவனைத்தூக்கி தோளில் வைத்தபடி சுபகையிடம் “வருக!” என்றான் அர்ஜுனன். அவள் இறங்கி அண்ணாந்து நோக்கி “இத்தனை பெரிய ஆலயமா?” என்றாள். அர்ஜுனன் “இங்கு அனைத்துமே பெரியவைதான்” என்றான்.

சுருதகீர்த்தி “மாமரம்” என்றான். “எங்கே?” என்றான் சுஜயன். அபிமன்யு “நான் பார்த்தேன்” என்றான். அவர்கள் ஆலயத்தை மறந்து மாமரத்தை நோக்கி திரும்பினர். “மாங்காயே இல்லை” என்றான் சுருதகீர்த்தி. “இப்போது பருவம் அல்ல… வாருங்கள்” என்று சுபகை அவர்களின் தலையை தொட்டாள். “ஒருமாங்காய்!” என்று அபிமன்யூ சொன்னான். “மாங்காயா? எங்கே?” என்றான் சுருதகீர்த்தி. “அதோ…” என அவன் சுட்டிக்காட்ட அர்ஜுனன் பார்த்துவிட்டான். சுபகை “தந்தையின் விழிகள்” என்றாள். சுருதகீர்த்தியும் பார்த்தான். “ஆமாம், ஒரே ஒரு மாங்காய்” என்றான். சுஜயன் “எங்கே?” என்றான்.

அவர்களுக்காக காத்துநின்றிருந்த ஆலயப்பூசகரும் காவலர்களும் தலைவணங்கியபடி அணுகினர். சிவந்த பட்டை இடையில் கட்டி நெற்றியில் செந்நிறக் குருதிக்குறி அணிந்த பூசகர் அர்ஜுனனிடம் “காண்டீபம் தங்களுக்காக காத்திருக்கிறது இளையவரே” என்றார். அர்ஜுனன் “இவர்கள் அதைப்பார்க்கவேண்டும் என்றனர்” என்றான். “ஆம், கௌரவ சுபாகுவின் மைந்தர் வந்திருப்பதாக சொன்னார்கள்” என்ற பூசகர் “வருக இளவரசர்களே. குருகுலத்தின் நிகரற்ற பெரும்படைக்கலம் அமைந்துள்ள இடம் இது. அதன் காட்சி உங்களை வெற்றிகொள்பவர்களாக ஆக்கட்டும். அதன் பேரருள் உங்கள் தோள்களில் ஆற்றலாகவும் உள்ளங்களில் அச்சமின்மையாகவும் சித்தத்தில் அறமாகவும் வாழ்க!” என்றார்.

அவரை அவர்கள் தொடர்ந்துசென்றனர். வட்டவடிவமான கோயிலின் வட்டப்படிக்கட்டில் அவர்கள் ஏறிச்சென்றனர். உள்ளே காற்று சுழன்றுகொண்டிருந்தது. சுருதகீர்த்தி பூசகரின் அருகே சென்று “அந்த வில்லை நான் தூக்கமுடியுமா?” என்றான். “முடியாது” என்றார் அவர். “நான் வளர்ந்தால்?” என்றான். “வளர்ந்தபின் உரிய தவங்களைச் செய்தால் தூக்கலாம்” என்றார் பூசகர். “ஏனென்றால் இது வெறுமொரு வில் அல்ல. இது ஒரு தெய்வம். மண்ணில் வில்வடிவில் எழுந்தருளியிருக்கிறது.” சுருதகீர்த்தி “ஏன்?” என்றான். “தெய்வங்கள் ஏன் மண்ணுக்கு வருகின்றன என்று நாம் எப்படி அறிவோம்?” என்று பூசகர் சொன்னார்.

“பிரம்மன் தன் புருவங்களின் வடிவில் அமைத்தது இந்த வில். ஆயிரம் யுகம் இது அவர் முகத்திலேயே ஒரு படைக்கலமாக இருந்தது. பின்னர் பிரஜாபதி இதைப்பெற்று ஆயிரம் யுகங்கள் வைத்திருந்தார். அப்போது ஒளிமிக்க வெண்முகில் கீற்றாக இது இருந்தது. அவர் இதை இந்திரனுக்கு அளித்தார். ஏழுவண்ண வானவில்லென அவர் கையில் இது ஆயிரம் யுகங்கள் இருந்தது. இந்திரனிடமிருந்து சந்திரன் இதைப்பெற்று தன்னைச்சூழும் வெண்ணிற ஒளிவளையமென சூடியிருந்தார். பின்னர் வருணன் இதை அடைந்தான். திசை தொட்டு திசை வரை எழும் பேரலை வடிவில் அவரிடமிருந்தது இது.”

“இந்த நிலம் காண்டவவனமாக இருந்ததை அறிந்திருப்பீர்கள். இதை ஆண்டிருந்த நாகர்களை வெல்வது அக்னிதேவரின் வஞ்சினம். அக்னிதேவரின் கோரிக்கையின்படி அந்த மாநாகங்களை வென்று இதை கைப்பற்றியவர் இளையபாண்டவர். நாகங்களின் கோரிக்கையின்படி இந்திரன் மழைமுகிலைக்கொண்டுவந்து இக்காட்டை மூடினார். மழைத்தாரைகள் காட்டுக்குமேல் நீர்க்காடு என நின்றிருந்தன. இந்திரனை வெல்ல இளையபாண்டவருக்கு ஒரு பெரும்படைக்கலம் தேவையாயிற்று.”

குழந்தைகள் தலைதூக்கி அர்ஜுனனையே நோக்கின. அவன் புன்னகையுடன் நடந்தான். முலைகள் மேல் கைவைத்து உணர்வெழுச்சியால் உதடுகளை இறுக்கியபடி சுபகை வந்தாள். “அக்னிதேவர் வருணனிடம் கோரியதற்கேற்ப அவர் காண்டீபத்தை இந்திரன் மைந்தருக்கு அளித்தார். தொடுவானில் ஒரு துண்டை வெட்டி எடுத்ததுபோன்ற பேருருவம் கொண்ட வில் இது” என்றபடி உள்ளே அழைத்துச்சென்றார் பூசகர். “மண்ணில் ஊழை நடத்துவதற்காக பெரும் படைக்கலங்கள் பிறக்கின்றன. வீரர் கையில் அமைந்து மானுடரை ஆட்டிவைத்து மீள்கின்றன. ராகவராமன் கையில் அமைந்த சிவதனுசுக்குப்பின் இதுவே மிகப்பெரிய வில் என்கின்றனர் நிமித்திகர்.”

சுதையாலான பதினெட்டு பெருந்தூண்கள் கருங்கல்பாளங்களாலான தரையில் ஊன்றி மேலே மரத்தாலான குவைமாடத்தைத்தாங்கி நின்ற அந்த ஆலயத்தின் கருவறை நான்கு தூண்களுக்குமேல் குவைக்கூரையுடன் தனியாக நின்றது. குவைக்கூரையின் உள்ளே வான்வெளி நீலநிற ஓவியமாக தீட்டப்பட்டிருந்தது. சூரியனும் சந்திரனும் ஆதித்யர்களும் ஒளிமுடி சூடி நின்றிருக்க ஐராவதமும் உச்சைசிரவஸும் பறந்துகொண்டிருந்தன. எட்டுதிசைகளிலும் திசையானைகள் துதிக்கை கொண்டு வானை தூக்கியிருக்க திசைக்காவல்தேவர்கள் படைக்கலங்களுடன் தங்கள் ஊர்திகள் மேல் அமர்ந்திருந்தனர்.

நான்கு பக்கமும் திறந்த வாயில்கள் கொண்ட கருவறையை சுற்றியிருந்த தாழ்வாரத்தினூடாக சுற்றிவர முடிந்தது. உள்ளே செம்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தின்மேல் சந்தனமரத்தாலான மேடையில் காண்டீபம் பொன்னூல் அணிசெய்யப்பட்ட செம்பட்டால் மூடிவைக்கப்பட்டிருந்தது. அதைச்சூழ்ந்திருந்த நான்கு அணித் தூண்களில் பிரஜாபதியும் இந்திரனும் சந்திரனும் வருணனும் அருளல் கையுடன் நின்றிருக்க மேலே பிரம்மன் குனிந்து அருள்நகைப்புடன் அதை வாழ்த்தினார். காலையில் அதற்கு போடப்பட்ட மலர்மாலைகள் ஒளியுடனிருந்தன. பூசைப்பொருட்கள் அதன்முன் பலிபீடத்தில் படைக்கப்பட்டிருந்தன.

பூசகர் உள்ளே நுழைந்து அந்த செம்பட்டுத்திரையை மெல்ல விலக்கினார். வளைவுகளாகச் சுருங்கி அது இழுபட்டு விலக கடலலை விலகி எழும் கரைப்பாறை போல காண்டீபம் தெரிந்தது. பொன் உருகி வழிந்த ஓடை போல தெரிந்தது. இருபதடி நீளம் கொண்டிருந்தது. அதன் நாண் அவிழ்த்து சுருட்டப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. பொன்முனைகொண்ட மூன்று அம்புகள் அதன் நடுவே படைக்கப்பட்டிருந்தன.

“துருக்கொள்ளா இரும்பாலானது. பொன்னுறை இடப்பட்டுள்ளது” என்றார் பூசகர். குழந்தைகள் கருவறை பீடத்தை கைகளால் பற்றி நுனிக்கால்களில் நின்று அதை நோக்கின. பூசகர் அதன் பொற்செதுக்குகளை சுட்டிக்காட்டி “வலது முனையில் சங்குசக்கரம். இடதுமுனையில் மாகாளையும் சூலமும். நடுவே பிரம்மனுக்குரிய வஜ்ராயுதம். இது பரசுராமனின் மழு. அனுமனின் கதை இது... துர்க்கையின் வாளும் வேலும் பாசமும் அங்குசமும் இதோ உள்ளன. குபேரனின் உழலைத்தடி இது. அனைத்து தெய்வங்களின் படைக்கலங்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளன” என்றார்.

குழந்தைகள் மூச்சிழுத்த நிலையில் சொல்லிழந்திருந்தன. “ஒவ்வொரு கருநிலவுநாளிலும் இதற்கு குருதிபலி அளித்தாகவேண்டும். இந்நகரில் வாழும் அனைத்து படைக்கலத்தெய்வங்களும் ஒவ்வொருநாளும் கருக்கிருட்டில் வந்து இதை வணங்கிச்செல்வதாக சொல்கிறார்கள். எனவே விடிந்து ஒளியெழுவதுவரை இங்கே எவரும் இருப்பதில்லை” என்றார் பூசகர். சுருதகீர்த்தி திரும்பி அர்ஜுனனை நோக்கி பின்பு திரும்பி வில்லையும் நோக்கி நீள்மூச்சுவிட்டான். “நோக்க விழைகிறாயா?” என்றான் அர்ஜுனன்.

“எனக்கு எனக்கு” என்றான் அபிமன்யு. “நான் அதை தூக்குவேன்.” பூசகர் “அதை பிறர் தொடமுடியாது என்று நெறி உள்ளது இளையவரே” என்றார். அர்ஜுனன் கருவறைக்குள் சென்று அந்த வில்லை நோக்கி ஒருகணம் நின்றான். பின்பு “ஆழிவேந்தே” என மெல்ல சொன்னபடி குனிந்து அதைத் தொட்டு சென்னி சூடி வணங்கினான். அதன் வலது ஓரத்தைப்பற்றி இயல்பாக தூக்கினான். அது எடைகுறைவானது என்று அப்போதுதான் தெரிந்தது.

எம்பி தலைநீட்டி “அவ்வளவுதான் எடையா?” என்றான் சுஜயன். “இல்லை, முறைப்படி தூக்காவிட்டால் அசைக்கக்கூட முடியாத அளவுக்கு எடைகொள்ளும் வல்லமை இதற்குண்டு” என்ற அர்ஜுனன் அதை சற்றே வளைத்து அதன் தண்டை ஒன்றன் உள் ஒன்றாக செருகினான். அவன் கையில் அது மாயமெனச் சுருங்கி மிகச்சிறிய வில்லாக ஆகியது. “சுருங்குகிறது” என்றான் சுருதகீர்த்தி.

வலக்கையில் கையளவே ஆன சிறிய காண்டீபத்துடன் அர்ஜுனன் வெளியே வந்தான். இடக்கையில் சிறிய அம்பு இருந்தது. “இத்தனை சிறியதா?” என்றான் சுஜயன். “இலக்குக்கு ஏற்ப அது உருக்கொள்கிறது” என்றான் அர்ஜுனன். திரும்பி சுருதகீர்த்தியிடம் “வருக!” என்றபடி வெளியே சென்றான். முற்றத்தில் அவன் இறங்கியபோது அவர்கள் “நானும் நானும்” என்றபடி தொடர்ந்து ஓடிவந்தனர். அபிமன்யு “நான் வில்லை... நான் வில்லை... எனக்கு வில்” என்று சொற்களை உதிர்த்தபடியே அடிவளைவு உருவாகாத தளிர்க்கால்களை தூக்கித் தூக்கி பதித்து வைத்து அவர்களுக்குப் பின்னால் ஓடினான்.

அர்ஜுனன் வில்லை வளைத்து நாணேற்றினான். அது விளையாட்டுப்பாவை போலிருந்தது. அவன் அதைத்தூக்கி குறிநோக்கி எய்தான். பொன் முனையுள்ள அம்பு மீன்கொத்திபோல எழுந்து சென்று இலைகளை ஊடுருவி தழைப்புக்குள் நின்றிருந்த மாங்காயை கவ்வி வானில் சென்று வளைந்து கீழிறங்கியது. சுருதகீர்த்தியும் சுஜயனும் அதை நோக்கி ஓடினர். சுஜயன் அதை எடுத்தான். “புதிய மாங்காய்....” என முகர்ந்தான். அபிமன்யு “எனக்கு! எனக்கு!” என்று கூவியபடி அவர்களைத் தொடர்ந்து ஓடினான்.

சுஜயன் மாங்காயை கடிக்கப்போனபோது அபிமன்யு “கடிக்காதே” என்றான். “எனக்கு....” என்று கைநீட்டினான். சுஜயன் திகைத்து அர்ஜுனனை நோக்கினான். சுருதகீர்த்தி “அவனுக்கு பாதிபோதும்” என்றான். அபிமன்யு முகம் சிவந்து கண்கள் இடுங்க “நான் உன்னை கொல்வேன். அம்புவிட்டு தலையை அறுப்பேன்” என்றான். சுஜயன் மாங்காயை தாழ்த்தினான். சுருதகீர்த்தி அர்ஜுனனை நோக்க “அவனுக்குப் பாதி” என்றான் அர்ஜுனன்

“எனக்கு முழுமாங்காய்... இல்லையேல் நான் கொல்வேன்” என்றான் அபிமன்யு. “அவரிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள் சுபகை. சிரித்தபடி “அதற்காக வில்லேந்தவும் சித்தமாகிறார்” என்ற சுஜயன் அதை அபிமன்யுவிடம் கொடுத்தான். அவன் அதை வாங்கி தன் மார்புடன் அணைத்துக்கொண்டு புருவங்களைச் சுருக்கி அவர்களை நோக்கினான். “எத்தனை கூரிய கண்கள்!” என்றாள் சுபகை. “கண்களின் ஒளியே அம்புகளுக்கும் செல்கிறது என்பார்கள்.”

அர்ஜுனன் அபிமன்யுவையும் சுஜயனையும் சிலகணங்கள் நோக்கிவிட்டு பெருமூச்சுடன் திரும்பி ஆலயத்திற்குள் சென்றான். காண்டீபத்தை கருவறையில் முன்பிருந்த வடிவில் வைத்து தொட்டு வணங்கிவிட்டு புறம் காட்டாமல் காலெடுத்து படியிறங்கினான். திரும்பி அவன் வந்தபோது மைந்தர் அந்த மாங்காயை பந்துபோல வீசி எறிந்து ஓடிச்சென்று எடுத்து விளையாடிக்கொண்டிருந்தனர். சுருதகீர்த்தி மாங்காயை எடுத்ததும் அபிமன்யு “எனக்கு எனக்கு” என கூவினான். அதை அவன் வீச சுஜயன் பிடித்துக்கொண்டான். அபிமன்யு சிரித்தபடி அதைத் துரத்திச்சென்றான்.

“செல்வோம்” என்றான் அர்ஜுனன். “வாருங்கள் இளவரசர்களே...” என்றாள் சுபகை. சுஜயன் ஓடிவந்து தேரில் ஏறி “நான் முதலில்” என்றான். சுருதகீர்த்தி மூச்சிரைக்க படிகளில் கைகளால் தொற்றி ஏறி “நான் இரண்டாவது” என்றான். அபிமன்யு வந்து சுபகையின் ஆடையைப்பற்றி “என்னை தூக்கு” என்றான். அவள் அவனைத் தூக்கி மேலே நிறுத்த “நான் முதலில்... நான் முதலில்” என்று அவன் கை தூக்கி கூவினான்.

“நீ எப்போது கிளம்புகிறாய்?” என்றான் அர்ஜுனன். சுபகையின் கண்கள் சற்று மாறுபட்டன. “நீங்கள் என்னை மறந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்” என்றாள். “மறந்திருப்பீர்கள் என்று எண்ணியே உங்கள் முன் நின்றேன்.” அர்ஜுனன் “நினைத்திருப்பேன் என்றால் வந்திருக்க மாட்டாயா?” என்றான். “மாட்டேன்” என்றாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அறிந்த சுபகை அல்ல நான்.” அவன் “மாறிவிட்டாயா?” என்றான்.

“பார்த்தாலே தெரியவில்லையா?” என்று அவள் சொன்னாள். அவளைப்பார்த்தபடி “அப்படியானால் அன்று வெறும் உடலையா எனக்காக கொண்டு வந்தாய்?” என்றான். அவள் திடுக்கிட்டு அவனை நோக்கி “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “நீ அளித்த அது இன்றும் உன் விழிகளில் அப்படியேதான் உள்ளது” என்றான். அவள் கீழுதட்டை இழுத்து பற்களால் கடித்தாள்.

“உன்னை நினைவு கூர்ந்த அனைத்துத்தருணங்களிலும் நான் பழுத்து இறப்பை நோக்கிச் செல்லும் முதியவனாக இருந்தேன். அவற்றில் நீ இன்னும் உடல் தளர்ந்து தோல்சுருங்கி கூந்தல் நரைத்த முதியவளாக இருந்தாய். இதே விழிகளுடன்” என்றான். அவள் கண்கள் நீர் நிறைந்தன. இரு கைகளாலும் மார்பை பற்றியபடி “அய்யோ “என்றாள். “அது வெறும் கனவல்ல. முதுமை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் காண்டீபத்தை தூக்கி வீசிவிட்டு முதியவனாக நான் சென்று அமரும் இடம் எங்கோ இருக்கிறது” என்றான்.

அவள் அழுகையில் உடைந்த குரலில் “அங்கு எனக்கு ஒரு இடம் இருந்தால் என் வாழ்வு முழுமைபெறும்” என்றாள். “அங்கு இவர்கள் எவருக்கும் இடம் இல்லை. உனக்கு மட்டும்தான் இடம் உள்ளது” என்றான் அர்ஜுனன். சுபகை நீண்ட பெருமூச்சுவிட்டு “போதும். இத்தனை நாள் எனக்குள் ஓடிய வினாவுக்கான விடை இது. ஏதோ நோயின் வெளிப்பாடாக வெளிப்படும் வெறும் ஊன்கட்டிதானா நான் என்று எண்ணியிருந்தேன். என் உடலுக்கும் உயிருக்கும் உள்ளத்திற்கும் அதில் நிறைந்துள்ள அனைத்திற்கும் ஓர் இலக்குண்டு என்று இப்போது தெரிகிறது. நான் காத்திருக்கிறேன். திரும்ப மாலினி அன்னையின் தவக்குடிலுக்கே செல்கிறேன். அங்கு நானும் தவமிருக்கிறேன்” என்றாள்.

அர்ஜுனன் “ஆம், எங்கெங்கோ சென்றாலும் திரும்பி அங்கு வந்து கொண்டே இருக்கிறேன். நீ அங்கு இருப்பதுதான் உகந்தது. திரும்பி வர ஓர் இடம் இருக்கிறது என்ற எண்ணம் நன்று. மீளும்போது இல்லத்தில் அன்னை காத்திருக்கிறாள் என்று எண்ணி உலகெங்கும் அலைந்து திரியும் மைந்தனின் விடுதலையை அப்போது அடைவேன்” என்றான். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிய புன்னகைத்தாள். அவன் அவள் தோள்களில் கைவைத்து “செல்வோம்” என்றான்.

“போவோம், போவோம்” என்று அவள் ஆடையைப் பற்றி இழுத்தான் சுஜயன். அவள் கண்ணீரை இரு கைகளாலும் துடைத்து புன்னகைத்தபடி “ஆம்” என்று சொல்லி தேரிலேறிக்கொண்டாள். அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து “’செல்வோம்’’ என்று சொனான். சிறுவர்கள் “விரைக! விரைக!” என்று கூச்சலிட்டனர். அதுவே விளையாட்டாக ஆக “விரைக! விரைக! விரைக!” என்று கூவியபடி துள்ளிக்குதித்து கையாட்டினர். அர்ஜுனன் புன்னகையுடன் சாலையை நோக்கிக்கொண்டிருந்தான். மறுபக்கச்சாலையை அவள் கண்ணீருடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.

[காண்டீபம் முழுமை]


Venmurasu VIII

Kaandepam is the story of Arjuna's travels during his exile from Indraprastha and his marriages. It is also the story of his inner travels as he stumbles through and understands his relationship to his queens and his bow. Kaandeepam weaves in the story of Arishtanemi (based on Jain Tirthankaras) and juxtaposes it against Arjuna's story. Arjuna discovers the courage of Non-violence and his own path as a Karma Yogi.!