Ēḻu svaraṅkaḷ-Part-1


ஏழு ஸ்வரங்கள் I

'சித்தார்த் குருப் ஆஃப் கம்பெனிஸ்..'-ன் எம்.டி சித்தார்த்தன்.. அவனுடைய அப்பா விவேகானந்தன் ராஜ பரம்பரையில் பிறந்தவர்.. மிகப் பெரிய பாரம்பரியமான கோடிஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.. நிருபமா குருப் ஆஃப் கம்பெனிஸின் எம்.டி. அவனுடைய அம்மா நிருபமா தேசிய அளவிலான மிகப் பெரிய அரசியல் கட்சியின் தமிழகக் கிளையின் தலைவரின் மகள்.. பரம்பரைப் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.. சித்தார்த் தனுக்கு ஒரேயொரு தங்கை.. அவள் பெயர் நீரஜா..! கர்வி..! அவளுக்கு இணையான வயதுப் பெண்களிடம் கூடச் சமதையாக நின்று பேச மாட்டாள்.. சித்தார்த்தனின் சொந்த ஊர் காஞ்சிபுரம்.. இங்குதான் இவனுடைய அரண்மனை போன்ற வீடும், பாரம்பர்யமாக வரும் தொழில்களும், அவன் மிகவும் நேசிக்கும் குடும்பமும் உள்ளன. ஆனால் இவன் சென்னையில்தான் வசிக்கிறான். சென்னைக்கு மிக அருகில் உள்ள காஞ்சிபுரத்திற்கு எப்போதாவது ஒர்முறைதான் போய் வருவான்..
இவனுடைய உயிர் நண்பன் தாமோதரன்.. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவனின் அப்பா ஈஸ்வரன் ஓய்வு பெற்ற அரசாங்க அலுவலர்.. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.. காஞ்சியை விட்டு அங்கே, இங்கே நகராதவர்.. தாமோதரனின் அம்மா அம்பிகாவுக்கு மகனுடன் சென்னையில் வசிக்க ஆசையிருந்தாலும் கணவரைத் தனியே விட்டுப் போக முடியாமல் காஞ்சிபுரத்திலேயே இருப்பவள்.. நண்பனுக்காக தாமோதரனும் சென்னையிலேயே தனி வீட்டில் வசிக்கிறான்..
சிறுவயதிலிருந்து சித்தார்த்தனும்.. தாமோதரனும் இணைபிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள்.. பள்ளியில் கூடப் படித்த தாமோதரனை வெளிநாட்டில் தன்னுடன் படிக்க வைக்கிறான் சித்தார்த்தன்..
சித்தார்த்தனின் தங்கையான நீரஜாவிற்கும் தாமோதரனுக்கும் இடையில் நளினமான.. சொல்லில் வடிக்க முடியாத.. உணர்வுகளால் மட்டுமே உணரக் கூடிய மெல்லிய காதல் இழை ஓடிக் கொண்டிருக்கிறது.
சித்தார்த்தன் ஒருநாள் மகாபலிபுரத்துக்குப் போகிறான்.. மாலை மயங்கும் வேளையில் ஐந்து ரதக் கோவிலில் இருந்து 'ஏழு ஸ்வரங்களுக்குள்..' என்ற பாடல் கேட்கிறது.. அந்தப் பாடல் அவனை காந்தம் போல இழுக்கிறது.. யாரென்று போய்ப் பார்க்கிறான்.. தனித்து நின்று பாடிக் கொண்டிருந்த பெண்ணை எங்கேயோ பார்த்ததைப் போல அவனுக்குத் தோன்றி வைக்கிறது.. அவள் கண்களிலும் அதே தவிப்பு.. ஐந்து ரதக் கோவிலில் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற நூதன உணர்வு அவர்கள் இருவருக்கும் ஏற்படுகிறது..
சென்னைக்குத் திரும்பிய சித்தார்த் அந்தப் பெண்ணைச் சந்தித்ததைப் பற்றி தாமோதரனிடம் சொல்கிறான்.. தாமோதரன் கவலை கொள்கிறான்..
அந்தப் பெண்ணின் பெயர் யாமினி.. சித்தார்த் குருப் ஆஃப் கம்பெனிக்கு சித்தார்த்தனின் பெர்சனல் செக்கரட்டரி வேலைக்கான இண்டர்வியூவிற்கு யாமினி வருகிறாள்.. அந்தக் கம்பெனியின் எம்.டி தான் சித்தார்த்தன் என்பது அவளுக்குத் தெரியாது.. அவளின் புகைப்படம் ஒட்டப் பட்டிருந்த அப்ளிகேசன் பார்மைப் பார்த்த தாமோதரனுக்குள் இனம் புரியாத திடுக்கிடல் ஏற்படுகிறது.. அவளை அங்கே வேலைக்குச் சேர்க்கக் கூடாது என்று சித்தார்த்தனைத் தடுக்கிறான்.. அப்போது அங்கே வந்த நீரஜா.. காரணத்தை வினவுகிறாள்..