Tiruttaṇikaip purāṇac curukkam
நாட்டுப் பாடல்கள்
Back வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
திருத்தணிகைப் புராணச் சுருக்கம்
வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
திருத்தணிகைப் புராணச் சுருக்கம்
Source:
"திருத்தணிகைப் புராணச் சுருக்கம்"
சென்னை
பிரின்டர்ஸ் அச்சுக் கூடத்திலும்
டயமண்டு அச்சுக் கூடத்திலும் பதிப்பித்தது.
துந்துபி வைகாசி / May, 1922.
Copyright reserved.
இந்தப் புத்தகம் சென்னை லிங்கசெட்டித் தெரு,
292 நெ. வீட்டிற் கிடைக்கும்.
----------------
உ
கணபதி துணை
வேலு மயிலுந் துணை
முகவுரை.
திருத்தணிகைப்புராணம் இயற்றினார் கச்சியப்பமுநிவர், இது தமிழிலக்கியங்கள் பலவற்றினுஞ் சிறந்தது. ஆயினும், இது பல்லோருக்கும் பொருள்விளங்குவது அரிதாகலின், ஒரு சிறிது. இதற்கிணங்க, எமக்குத் தெரிந்தவரை, வசனநடையில் மிகவுஞ் சுருக்கமாகத் 'திருத்தணிகை மான்மியம்' எனப் பெயர்புனைந்து இச்சிறு புத்தகத்தை எழுதலாயினோம். கந்தபுராணத்தைத் தழுவியும் இம்மான்மியம் எழுதப்பட்டுள்ளது. திருத்தணிகை யாண்டவன் புகழைத் தமிழறிந்தார் யாவரும் அறியவேண்டுமென்னுங் கருத்துடன் எழுதப்பட்ட இப்புத்தகத்துள்ள குற்றங் குறைகளைப் பொறுத்தருளும்படிக் கற்றுணர்ந்த பெரியோர்களைப் பிரார்த்திக்கின்றோம்.
292, லிங்க செட்டித் தெரு,
1-6-1922. சென்னை.
வ.சு.ச. வ.சு.செ.
-----------------
படல அகராதி.
--------------------------------------------------
படலம் - பக்கம்
-------------------------------------------------
அகத்திய னருள் பெற்றது. - 7
இந்திர னருள் பெற்றது. - 13
இராம னருள் பெற்றது. - 15
களவுப் படலம் - 16
குமாரேசப் படலம் - 5
ஸ்ரீ பரிபூரணநாமப் படலம் - 9
திருநகரப்படலம் - 1
திருநாட்டுப்படலம் - 1
நந்தியுபதேசப்படலம் - 6
நாக மருள் பெற்றது - 14
நாரண னருள் பெற்றது. - 12
நாரத னருள் பெற்றது. - 29
நைமிசைப் படலம். - 2
பிரம னருள் பெற்றது. - 12
பிரமன் சிருஷ்டி பெற்றது. - 6
புராண வரலாறு - 2
வள்ளிநாயகி திருமணம். - 22
விடையருள் படலம் - 23
வீராட்டகாசப் படலம் - 3
---------
திருத்தணிகை மான்மியம்.
[* உடுக்குறி யுற்றது தணிகைப் புராணத்துப் பாடல்]
-----------------
1. திருநாட்டுப் படலம்.
திருத்தணிகை யென்னும் மஹா க்ஷேத்திரம் தொண்டை நாட்டிற் காஞ்சீபுரத்துக்கு வடக்கு 25-மைல் தூரத்தில் உள்ளது.
------------
2. திருநகரப்படலம்.
இத் தணிகைமா நகரத்தில் வைகுண்டம், பிரமலோகம், பொன்னுலகம் என்னும் மூன்று உலகங்களில் உள்ள செல்வங்களெல்லாம் நிரம்பியுள்ளதாலும், எம்மை யாண்டவர் வள்ளியம்மையொடு களவிற் பல விளையாடல்கள் செய்து
பின்னர் அவ்வம்மையாருடன் வந்தமர்ந்துள்ள காரணத்தாலும் இத்தலத்துக்கு இணையே கிடையாது.
*சேயிடை யிருந்து கேட்பினுந் தொழினுஞ் செப்பினுஞ் சித்தம் வைத்திடினும்
ஆயிடை வதித லாதிகள் செயினு மலகில்பல் பவத்தினு மீட்டு
மாயிரு லினையுஞ் சவட்டிமீ ளாத வரம்பிலின் புறுத்துவ தென்றாற்
காயிலை வேலோன் தணிகையின் பெருமை கட்டுரைக் கடங்குவ தன்றே.
தூரத்திலிருந்து இத்தலத்தின் பெயரைக் கேட்டாலுந் தொழுதாலுஞ் சொன்னாலும் நினைத்தாலும் பேரின்பங் கிடைக்கும். இக்கருத்தைத் "தூரத் தொழுவார் வினை சிந்திடு" எனவரும் இத்தலத்துத் திருப்புகழ் *84-ஆம் பாடலிற் காண்க.
---------------------
3. நைமிசப் படலம்.
இத் தணிகாசலத்தின் பெருமைகளை யெல்லாம் முத்தியின்பம் வேட்ட முநிவர்களுக்குச் சூத முநிவர் பின்வருமாறு உரைத்தருளினார்:-
-----------------
4. புராண வரலாற்றுப் படலம்.
ஆறுமுகக் கடவுள் வீற்றிருந்தருளுந் தலங்கள் பல வுள்ளன. அவைதம்முள் அதி வீசேஷமானவை சயந்தபுரம், குமராசலம், திருவேங்கடம், ஸ்ரீ பூரணகிரி என்னும் நான்கு தலங்கள். இவை தம்முட் சிறந்தது ஸ்ரீ பூரணகிரி என்னுந் தணிகை. பொன்னுலகத்துள்ள செல்வங்களெல்லாம் தன்வயின் நிறைந்துள்ள காரணத்தால் (1) "ஸ்ரீபூரணகிரி" எனவும், அடியவர் இச்சை ஒரு க்ஷணப்பொழுதிற் சித்திக்கு மாதலால் (2) "க்ஷணிகாசலம்" (கணிகவெற்பு) எனவும், மூலகாரணனான சிவபிரானே முருகபிரானை மூலகாரணனெனத் தொழுத காரணத்தால் (3) "மூலாத்திரி" எனவும், நீலோற்பல மலர் நித்தமு மலர்தலின் (4) "அல்லகாத்திரி", (5) "நீலோற்பலகிரி", (6) "உற்பலகிரி", (7) "கல்லாரகிரி", (8) "காவிமலை", (9) "நீலகிரி" (10) "குவளைச்சிகரி" எனவும், கற்பமுடிவிலும் அழியாமையாற் (11) "கற்பசித்" எனவும், சூரனொடு செய்தபோரும், வேடரொடு செய்த கலாமுந் தணிந்த இடமாதலால் (12) "தணிகை" (13) "செருத்தணி" எனவும், முருகக் கடவுள் பிரணவப் பொருளைச் சிவபிரானுக்கு உபதேசஞ் செய்த ஸ்தான மாதலால் (14) "பிரணவார்த்த நகரம்" எனவும், இந்திரன் வரம் பெற்ற ஸ்தல மாதலால் (15) "இந்திர நகரி" எனவும், நாரதர் பிரியமுற்ற ஸ்தல மாதலால் (16) "நாரதப் ப்ரியம்" எனவும், அகோரன் என்னும் தவசி மோக்ஷ வீடு பெற்ற முதுநகராதலால் (17) "அகோர கைவல்ய ப்ரதம்" எனவுங், கந்த மூர்த்தி வீற்றிருப்பதால் (18)"ஸ்கந்தகிரி" யெனவும் இவை போன்றன எண்ணிறந்த பெயர்கள் இத்தலத்துக்கு உண்டு. ----------
5. வீராட்டகாசப் படலம்.
திருக்கயிலாயத்திற் பரமேஸ்வரன் பார்வதி சமேதராய்க் குமாரக் கடவுள் மத்தியில் வீற்றிருப்ப எழுத்தருளியிருந்தார். அப்பொழுது முத்தியை விரும்பின கணத்தலைவனான சந்திரகாசன் என்பவன் அங்கு வந்து ஸ்வாமியின் திருவடியில் வீழ்ந்து வணங்கிப் பிரணவோபதேசம் பெற்றனன். இவ்வுபதேச நுட்பப் பொருளெலாந் தெரிந்தும் தெரியாதது போலக் குமாரக்கடவுள் கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் ஒரு சமயம் சிவபிரானைத் தரிசிக்கச்சென்ற பிரமதேவர் அகந்தையால் தம்மை வணங்காது செல்வதைக் கண்ட குமரவேள் வீரவாகுதேவரை விளித்து அப்பிரமனைப் பிடித்து வா என்றனர். அவர் அவ்வாறே பிடித்துவரத் தம்முன் நடுநடுங்கி நின்ற பிரமதேவரை நோக்கி, எம்பிரான் 'நீ யாதின் மிக்கவன்? வாழ்வின் மிக்கவன் என்றால் எந்தையாம் சிவபிரானை நித்தலும் வந்து வணங்க வேண்டிய அவசியமில்லை; வீரத்தின் மிக்கவன் என்றால் என் தம்பி வீரவாகுவால் இப்பொழுது கட்டுண்டு நிற்பதுபோலக் கட்டுண்ணமாட்டாய்; எல்லாவற்றையும் நான் சிருஷ்டிப்பேன் என்று சொல்லுவாயாகில் உன்னையுந் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ சிருஷ்டிக்க வில்லை' என்றிங்ஙனம் பல கூறியருளியுந் தம்மை வணங்காது மௌனஞ் சாதித்த பிரமதேவரைக் குட்டிச் சிறையிடுவித்தார். பின்னர்த் திருவேங்கட மலையிற் கோயில்கொண்டருளிச் சிருஷ்டித் தொழிலைத் தாமே மேற்கொண்டனர். சில காலஞ் செல்லத் திருமால் முதலினோர் சிவபிரானிடத்தில் இந் நிகழ்ச்சிகளைத் தெரிவிக்க, அவர்
ஞானசத்தி ஸ்வரூபனான நமது குழந்தை வேறு நாம் வேறு அல்ல; அவனுக்கு அன்பு செய்தவர் எமக்கு அன்பு செய்தவராவர்;
அவனுக்குப் பிழை செய்தவர் எமக்குப் பிழை செய்தவராவர்" எனக்கூறி ஆணவங்கொண்ட பிரமனைச் சிறையினின்றும் விடுத்தலரிது என்றார். விஷ்ணு முதலினோர் பின்னும் இரந்து வேண்டச் சிவபிரான் நந்தி தேவரிடஞ் சொல்லியனுப்பத் தந்தை விரும்பியவாரே குமாரக்கடவுள் பிரமதேவரைச் சிறையினி்ன்றும் விடுத்துக் கயிலைக்கு வரச் சிவபிரான் குமரனைத்தழுவி, 'ஏனோ பிரமனைச் சிறையிலிட்டாய்' எனப், 'பிரணவப் பொருள் தெரியாதவன் சிருஷ்டித் தொழில் செய்யலாமோ' எனக் குமரக்கடவுள் விடையளித்தனர். சிவபிரானும், 'மைந்தனே! உனக்குத் தெரியுமானாற் பிரணவப் பொருளைக் கூறுக' என்ன, முருகக்கடவுள் அதனைச் சொல்ல வேண்டிய முறைப்படிச் சொல்ல வேண்டும் என்னச் சிவபிரானும் அதற்கிசைந்து, "நீ விருப்பமுற்றுறையுந் தணிகை மலைக்கு உபதேசம் பெறும்பொருட்டு நாம் வருகின்றோம்; மாசி மகமும் வருகின்றது; அப்பொழுது உணர்த்துவாயாக" என்றனர். அவ்வாறே தணிகை மலைக்கு வடகிழக்கெல்லையில் ஒரு க்ஷணநேரம் தணிகேசனைச் சிவபிரான் தியானித்தமர, குருநாதனும் சிவபிரானிருந்த இடத்துக்குத் தென்திசையில் வந்தமர்ந்து பிரணவப் பொருளெலாந் தந்தைக்கு உபதேசஞ் செய்தனர். தனக்குத் தானே மகனுங் குருவும் சிஷ்யனுமாகிய சதாசிவ மூர்த்தி பிரணவ ஸ்வரூபனாகிய குமாரக் கடவுளின் வீரத்தைக் கருதி மகிழ்ந்து ஆர்ப்பரித்தனர்.
ஆதலால் அவ்விடத்துக்கு வீராட்டகாசம் என்னும் பெயருண்டாயிற்று. இங்ஙனம் ஆர்ப்பரித்த சிவபிரான் அங்கேயே சிவலிங்க ரூபமாயமர்ந்தனர். வீராட்டகாசரையும் அவருக்குச் சமீபத்திலுள்ள அவரது ஆசானாகிய ஆறுமுகக் கடவுளையும் வணங்குபவருடைய பிறவிநோய் தீரும். கீழைத் திருத்தணிக்குச் சமீபத்தில் நந்தியாற்றுக்குத் தென்கரையில் ஆறுமுகஸ்வாமி கோயிலும் வடகரையில் வீராட்டகாசர் கோயிலும் உள்ளன. சிவபிரானுக்குத் திருத்தணிகாசல மூர்த்தி பிரணவோபதேசஞ் செய்ததைத் திருப்புகழ் 1, 4, 6, 9, 14, 15, 21, 23, 37, 39, 41, 59, 65, ஆம் பாடல்களிற் காண்க.
----------------------------
6. குமரேசப் படலம்
ஒரு முறை குமாரக் கடவுள் ஞான சத்தியைப் பெற விரும்பிக் கயிலைக் கங்கையைத் தணிகைக்கு வரவழைத்துத் தாமிருக்கும் இடத்துக்கு வடகீழ்ப் பக்கத்தில் ஆபத்சகாய விநாயக மூர்த்தியைத் தாபித்து வழிபட்டுச் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து முறைப்படி பூசிக்கச் சிவபிரான் எதிர் தோன்றி 'உனக்கு வேண்டிய வரம் யாது,'? என்ன "அவுணர் உயிரைக் குடிக்கும் நும் ஞானசத்தி வேண்டும்" என்ன நீலகண்டரும் அவ்வரத்தைத் தந்து இலிங்கத்திடை மறைந்தருளினார். இவ்விலிங்கம் குமாரலிங்கம் எனப் பெயர்பெறும்; இது மலைமீது கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. ஞானசத்தி பெற்ற ஸ்வாமிக்கு ஞானசத்திதரர் என்றும் அவரால் வரவழைக்கப் பெற்ற கயிலைக் கங்கைக்குக் *குமார தீர்த்தம் என்றும் பெயர் போந்தன. மாசி மகத்தில் இத்தீர்த்தத்தில் ஸ்நாநஞ் செய்து குமாரலிங்கத்தையும் ஞானசத்திதரரையும் தரிசித்தல் மிகவும் விசேஷமானது. முருகபிரான் ஞானசத்திதரராய்த் திருத்தணிகையில் வீற்றிருப்பதைத் திருப்புகழ் 51, 56 ஆம் பாடல்களிற் காண்க.
---------------------
* இது மலைக்குக் கிழக்கில் அடிவாரத்தி லுள்ளது; சரவணப் பொய்கை என வழங்குகின்றது. "திருக் குள நாளும் பலத் திசை மூசுந் திருத்தணி" திருப்புகழ் [11]
-----------------------------
7. பிரமன் சிருஷ்டிபெறு படலம்.
சிறைவிடுபட்ட பிரமதேவர் தம்முடைய உலகத்துக்குச் சென்று சிருஷ்டித் தொழில் செய்ய முயன்றும் அஃது இயலாமை கண்டு மனநொந்து சிவபிரானை நோக்கித் தவஞ் செய்தார். சிவபிரான் பிரம தேவருக்கு முன் தோன்றியருளித் தணிகாசலத்தின் பெருமையைக் கூறி நீ நமது குமரனை நோக்கி அத்தலத்தில் தவஞ் செய்தால் உன் எண்ணம் நிறைவேறு மென்றனர். அவ்வாறே பிரமதேவரும் விருத்தபுரம் எனப்படும் தணிகை நகரை யடைந்து மலைக்குக் கீழ்த்திசையில் தீர்த்தம் ஒன்று உண்டு பண்ணி, ஆபத் ஸகாய விநாயகரைப் போற்றிக் குமாரலிங்கத்தைத் துதித்து வேற்கரத்தண்ணலின் பாத தாமரையில் வீழ்ந்து வணங்கித் தவஞ் செய்தனர். ஸ்வாமி அருள் சுரந்து எதிர் தோன்றி வேட்ட வரம் எல்லாந் தந்தருளினர். வைகாசி விசாகத்திற் *பிரம தீர்த்தத்தில் ஸ்நாநஞ் செய்வது மகா விசேடம். பிரம தேவர் பூசித்துத் தொழுததைத் திருப்புகழ் 14-ஆம் பாடலிலும், சிவபிரான் தணிமலையை மெச்சிப் புகழ்ந்ததை 32-ஆம் பாடலிலுங் காண்க.
* பிரமதீர்த்தம் மலைக்குக் கிழக்கே படி ஏறிச்செல்லும் வழியிற் பாதி தூரத்தில் வலப்பால் இருக்கிறது.
----------------------
8. நந்தி யுபதேசப் படலம்.
ஒரு முறை நந்தி தேவர் சிவபிரானை வணங்கிப் பேரின்பமாம் முத்தி நிலையை விளக்கியருளல் வேண்டும் எனப் பிரார்த்தித்தனர்.முக்கட் பெருமான் "நீ தணிகாசலத்துக்குச் சென்று தவம் புரிந்தால் நமது குமரன் தெய்வநதி யொன்றை வரவழைத்து உன்னை அதில் தோயச்செய்து பரிசுத்தமாக்கிப் பேரின்ப நிலையையும் விளக்கியருள்வான்" என்றனர். அத்திருமொழியைக் கேட்ட நந்திதேவர் அவ்வாறே திருத்தணிகைக்கு வந்து ஒரு குகையிற் பல காலந்தவஞ்சைய்ய மயில்வாகனப் பெருமான் எதிர் தோன்றி, நந்தியின் உடலைத் தமது திருக்கரத்தால் தடவியருளி, "மிக்க தவஞ் செய்து உடல் வருந்தினை. நீ வேண்டிய வரம் யாது?" என, நந்திதேவர் 'சிவதத்துவ அமிர்தம் எனப்படுந் தீர்த்தத்தை வரவழைத்து அதில் யான் தோய்ந்து எழவும், பதி, பசு, பாச இலக்கணங்கள் யான் உணர்ந்து உய்யவும் தேவரீர் அருளல் வேண்டும்' என்ன, முருகபிரானும் தணிகைக்கு நிருதி திசையிலிருந்து அத்தீர்த்தத்தை வரவழைக்க அது தணிகை மலையை வலமாக வந்து வீராட்ட காசத்தை நணுகிப் பின்னர்க் கடலிற் புகுந்தது. அந்தத் தீர்த்தத்துக்கு "நந்தி நந்தினி", "நந்தி யாறு" எனவும், நந்திதேவர் தவஞ் செய்திருந்த குகைக்கு "நந்தி குகை" எனவும் பெயர் போந்தன. நந்தி தேவர் அந்நதியில் மூழ்கிப், பதி, பசு, பாச இலக்கணங்க ளெல்லாம் உபதேசிக்கப் பெற்றனர். இந்நதியில் தைப்பூசத்தில் ஸ்நாநஞ் செய்வது மகா விசேடம். உபதேசம் பெற்ற நந்திதேவர் கோயிலை வணங்கி, அப்பாற் குன்றினை வணங்கிப் பிறகு நந்தியாற்றை வணங்கிப் பின்னர் அவ்வூர் எல்லையை வணங்கித் தணிகைமலை கண்ணுக்கு மறையு மட்டும் அத்தலத்தையே கண்ணுற்றவராய்ப் புறங்காட்டாது சென்று கயிலையங்கிரியை யடைந்தனர்.
-------------------
9. அகத்திய னருள்பெறு படலம்.
அகத்திய முநிவர் ஒரு முறை சிவபிரான் திருவடியில் வீழ்ந்து வணங்கிச், "செந்தமிழ் என்னும் பாஷையை யெனக்கு அறிவுறித்தி ஞானமும் அருளல் வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டனர். சிவபிரான், " எவ்வரம் வேண்டு மென்றாலும் யாம் உபதேசம் பெற்ற ஸ்தானமாகிய தணிகை மலைக்குச் சென்று வேலவனை நோக்கித் தவஞ் செய்வாயாக; உன் எண்ணம் நிறைவேறும்; அத் தலத்துக்குப் போகலாம் என ஒருவன் நினைத்தாலும், அவ்வூர்ப் புறமாகச் சென்றாலும், செல்வேன் எனப் பத்தடி தூரம் நடந்தாலும், அவனுடைய நோயெலாங் கொத்தோடு தொலைந்து போகும்.
அத்தலத்தில் உள்ள குமார தீர்த்தம் குட்டநோய், வாதநோய், சூலை நோய் முதலிய நோய்களையும், பூதம், பேய் முதலியவற்றால் உண்டாகுந் துன்பங்களையும் நீக்கிக், கல்விச்செல்வம், பொருட்செல்வம், மக்கட்பேறு முதலிய சகல ஐசுவரியங்களையுங் கொடுக்கும். அத்தலத்தின் பெயர்களுள் ஒன்றை ஒரு முறை கூறினும் பாவக் குப்பைகள் பாழ்படும்; ஞான சித்திகள் கையுறும். அத்தலம் மலமாகிய இருட்டை விலக்கும் ஞானசூரியன்; மருட் பிணியை நீக்கு மருந்து; விரும்பிய பொருள்களைத் தருஞ் சிந்தாமணி. கார்த்திகைக் கிருத்திகையில் அத்தலத்திற் குமாரக்கடவுளை வணங்குபவர் முத்தி கூடுவர்; அங்கே ஆறெழுத் தோதுபவர் சாரூப பதவி சார்வர் கணிகையரைக் காணும் விருப்பத்தாலோ வேறு எவ்வித காரணத்தாலோ தணிகையை யடைந்து முருகக் கடவுளைப் பணிந்து வணங்குபவர் கந்தலோகத்தை அடைவர். அத்தலத்திற் செய்யுந் தானம் மற்றைய தலங்களிற் கொடுப்பதினும் கோடி மடங்கு விசேடமாகும். அங்கு முருகக்கடவுள் இச்சை, ஞானம், கிரியை யென்னும் மூன்று சத்திகளும் மூன்று இலைகளாகக் கிளைத்தெழுந்த வேலாயுதத்தை வலக்கையிலேந்தி, இடது கையைத் தொடையிலிருத்தி ஞான சத்தி தரன் எனத் திருப்பெயருடன் விளங்குவார்.
அவனுடைய திருவுருவை நினைத்துத் தியானிப்போர் சாயுஜ்ய பதவி யெய்துவர்'- என் றின்னபல விசேடங்களை எடுத்து ஓத, அகத்தியர் கேட்டுப் பரமாநந்தம் உற்று உடனே விடைபெற்றுத் தணிகை மலைக்கு வந்தார்; நந்தியாற்றில் ஸ்நாநஞ் செய்தார்; வீராட்டகாசத்தையும் சாமிநாத னாலயத்தையுங் கண்டு தொழுதார்; அங்குச் சமீபத்திலுள்ள சிவகங்கையைத் தரிசித்து அதன் கரையில் ஆதிவராஹபுரம் எனப்படுந்தானத்திற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூசித்தார். பின்னர் ஆறுமுகப்பெருமானைக் குறித்துப் பல நாள் அருந்தவம் இயற்ற, இறைவன் எதிர் தோன்றி, அகத்தியருக்குத் தமிழ்ப் பாஷையின் இலக்கண மெல்லாம் ஓதி ஞானோபதேசமுஞ் செய்தனர். அகத்தியருந் தணிகை மலையிற் பல நாள் இருந்து பின்னர்ப் பொதிய மலைக்குச் சென்றனர்.
---------------------
10. ஸ்ரீபரிபூரண நாமப் படலம்.
முன்னொரு கற்பத்திற் பிரபாகரன் என ஒரு அரசன் இருந்தான். அவன் மனைவி பெயர் சுகுமாரி. இவருக்கு நான்கு மக்கள் பிறந்தனர். இந் நால்வருக்கும் சூரன், பதுமன், சிங்கன், தாரகன் என்று பெயர். தந்தையின் பிறகு இந்நால்வரும் அரசாண்டனர். ஒருமுறை அகத்திய முநிவர் இவர்களிடம் வர, சூரனும் பதுமனும் அவரை வரவேற்று வணங்க, அவர் இவர்களுக்குக் குமாரக் கடவுளின் பெருமையை எடுத்தோதினர். பின்ன ரொருநாள் திருணபிந்து முநிவர் சிங்கனுக்குந் தாரகனுக்குந் காளியின் பெருமையையும் ஹரிஹர புத்திரனான சாத்தாவின் பெருமையையும் ஓதினர். சூரன், சிங்கன், தாரகன் என்னும் மூவரும் குமாரக் கடவுள், காளி, சாத்தா என்பவர்களுக்கு முறையே வாகனமான மயில், சிங்கம், யானை ஆகும் பேற்றையும், பதுமன் குமாரக் கடவுளின் கொடியான கோழியாகும் பேற்றையும் அடைய விரும்பி மிக்க ஆசையோடு அவ்வக் கடவுளை நோக்கித் தவம்புரிந்தார்கள். முன்னமே வாகனமும் கொடியுமாய் இருந்த மயிலும், கோழியும் இவர்கள் இவ்வாறு தங்கள் பதவியைக் கவரத் தவம் புரிவதை யறிந்து 'எங்கள் பதவியை நீங்கள் கவர்ந்துகொள்ள முயலுவதாற் பூதகணங்களாகக் கடவீர்கள்' என இந் நால்வரையும் சபித்தன. இங்ஙனம் சாபத்தாற் பூதகணங்களான நால்வரும் சிவகணங்களோடிருந்தபொழுது தேவர்களுடன் கூடிக் கொண்டு அசுரர்களை வேரறுக்க, அசுரர் தலைவன் இவ்விஷயத்தைச் சிவபிரானிடம் விண்ணப்பிக்கச், சிவபிரானும் 'எமது உத்தரவு இல்லாமல் நீங்கள் தேவர்களுக்கு உதவிபுரியும் பொருட்டுக் காவல்விட்டுப் போனீர்கள். இனி அசுரர் குலத்திற் பிறந்து அத்தேவர்களுக்கே துன்பம் உண்டுபண்ணகடவீர்கள்' எனச் சபித்தனர்.
இங்ஙனம் அவுணர் குலத்தில் உதித்த சூரன், பதுமன் (சூரபத்மன்), சிங்கன் (சிங்கமுகாசுரன்), தாரகன் (தாரகாசுரன்) என்னும் இவர்கள் தேவர்களுக்குப் பெரிதுந் துன்பம் விளைகித்தனர். நிற்க, தவஞ்செய்திருந்த இவர்களைச் சபித்த மயிலையுங் கொழியையுங் குமாரக் கடவுள் கோபித்துத் "தவத்தை குலைத்த பாபத்தால் நீங்கள் எமக் கருகிலிருக்கும் பேற்றை இழந்தீர்கள் " என்று அவைகளை நீக்க, அவை காஞ்சிமா நகருக்கு வந்து முருகக் கடவுளை நோக்கித் தவஞ்செய்து அவரடி திருவடி நீழலையடைந்தன. சூரபதுமனும் அவன் தம்பியருஞ் செய்யுங் கொடுமைகளைச் சகிக்க முடியாத தேவர்களுடைய வேண்டுகோளுக் கிரங்கி ஸ்ரீ சுப்பிரமணிய மூர்த்தி போருக் கெழுந்தறுளித் சூரபதுமனைப் பிளந்தேறியச் சூரன் மயிலாகவும் பதுமன் கோழியாகவும் மாறி முதலில் தாம் இச்சித்த வண்ணமே முருகபிரானைத் தாங்கும் மயிலாகவும் கொடியாகிய கோழியாகவு மாயினர்.சிவபிரானது சாபத்தால் அசுரரான சிங்கனுந் தாரகனும் முருகக் கடவுளாற் சம்ஹாரஞ் செய்யப்பட்ட பிறகு தாம் முதலில் எண்ணிய கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளக் கருதி, நந்தி தேவரிடம் போய் "ஐயனே! காளியின் வாகனமான சிங்கமும் ஹரிஹர புத்திரரின் வாகனமான யானையு மாகும் பேறு கிடைக்கக் கருதிப் பல நாள் நாங்கள் தவஞ் செய்தோம். இடையூறுகள் பல வந்தன. எங்கள் எண்ணத்தை இனியேனும் நிறைவேற்றவேண்டும்" எனப் பிரார்த்திக்க, நந்தி தேவரும் அது வரையிலும் வாகனங்களாய் முத்தியை நாடியிருந்த (காளியின் வாகனமாகிய) சிங்கத்துக்கும் (ஹரிஹரபுத்திரரின் வாகனமான) யானைக்கும் முத்தி தந்து, சிங்கனையும் தாரகனையும் முறையே காளிக்கும் ஹரிஹர புத்திரர்க்கும் புதுவாகனங்க ளான சிங்கமும் யானையுமாக அனுப்புவித்தனர். இவ்வாறு நால்வர் கோரிக்கையும் நிறைவேறிற்று.
சூரசம்ஹாரஞ் செய்த சுப்பிரமணியமூர்த்தியைத் தேவர்கள் பூஜை செய்தனர். தேவர் தலைவனாம் இந்திரன் திருப்பரங்குன்றத்திற்றன் மகளான தேவசேனையை ஸ்வாமிக்கு மணஞ் செய்வித்தான். பிறகு தேவசேநா சமேதராய் முருகக் கடவுள் கந்த வெற்புக்குச் சென்று அங்குத் தேவசேனையை நிறுத்தித் தாம் மாத்திரம் தணிகையங்கிரிக்கு வந்தமர்ந்தனர். அசுரர்கள் ஆண்டிருந்த உலகங்களிற் சேகரிக்கப் பட்டிருந்த பொன்னுலகத்து அரும்பொருள்களான காமதேனு, சிந்தா மணி முதலிய பல வளங்களையும் முருகக் கடவுள் தனிகைமலையிற் சேர்ப்பித்தருளிய காரணத்தால் அம்மலை ஸ்ரீ பூரணகிரி எனப் பெயர் பெற்றது.
---------
11. பிரம னருள்பெறு படலம்.
ஒரு காலத்திற் பிரமதேவர் சரஸ்வதியொடு திருத்தணிகைக்கு வந்து வேற்படையண்ணலைப் பூசித்து வழிபட அவர் பிரமதேவர் முன் எழுந்தருளி உனக்கு வேண்டிய வரம் யாதெனப் பிரமதேவர் 'ஸ்வாமி! எங்கள் உலகத்திருந்த செல்வங்களை யெல்லாம் சூரபத்மன் தனது நாட்டுக்குக் கொண்டு போயினன்; அவை யெல்லாம் இப்பொழுது தணிகாசலத்தில் உள்ளன; அவைதமைப் பெற விரும்புகிறேன்; பின்னும் என்மனைவி பூசித்த லிங்கம் சரஸ்வதி லிங்கம் எனவும் என் பெயரால் விளங்கும் பிரமதீர்த்தம் சரஸ்வதிதீர்த்தம் எனவும் வழங்குமாறும். அத்தீர்த்தத்தில் மார்கழித் திருவாதிரைப் பௌர்ணமியிற் செய்யும் ஸ்நாநம் மிக்க பலனைத் தருமாறும் அருள் புரிய வேண்டும்', எனப் பிரார்த்திக்க முருகக் கடவுள் அவ்வாறே வரந்தந்து மறைந்தருளினர். பிரமதேவர் வழிபட்டதைத் திருப்புகழ் 14-ஆம் பாடலிற் காண்க. ----------------
12. நாரண னருள்பெறு படலம்.
ஒருகாலத்தில் மஹாவிஷ்ணு தணிகை மலைக்குச் சமீபத்தில் வந்து அதற்கு மேற்கு 1 1/2 - யோசனை தூரத்தில் ஒரு நகரத்தை உண்டாக்கி அங்கு ஓர் இலிங்க மூர்த்தியைத் தாபித்து ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கித் தமது உள்ளதை அடக்கித் தவமியற்றினர், சிவபிரான் விஷ்ணு மூர்த்திக்கு எதிர்தோன்றி, 'அன்ப! தணிகை நாயகனைத் தொழுது உன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்' என்று சொல்லி, அவர் விரும்பிய வண்ணம் அன் நகரத்துக்கு மாதவபுரம் எனப் பெயர் வழங்குமாறு அநுமதிதந்து மறைந்தருளினர். பின்னர் விஷ்ணு மூர்த்தி தணிகை மலையை யடைந்து குமார தீர்த்தத்தில் ஸ்நாநஞ் செய்து வெண்ணீறும் ருத்ராக்ஷ மாலையும் அணிந்து தணிகைமலைக்கு மேற் பாரிசத்தில் விளங்கின ஒரு சுனைக் கரையில் தமது உடம்பிற்புற்று மூடப் பலகாலந் தவஞ்செய்தனர். அத்தவத்துக் கிரங்கித் தணிகாசல மூர்த்தி மயில் வாகனத்தின் மீது வந்து விஷ்ணுமூர்த்திக்குக் காட்சிதந்து அவரைநோக்கி " நீ மாதவஞ் செய்து இளைத்தனை " எனக் கூறித் தமது திருக்கரத்தால் விஷ்ணுமூர்த்தியின் உடலைத் தைவர, அவர் தமது கைம்மலர்களைக் கூப்பி உள்ளம் பூரிப்பத் தோத்திரஞ்செய்து , சாருகாசுரனாற் கவரப் பட்ட தமது சக்கிரம், சங்கு முதலியவைகளைத் தாம் மீட்டும் பெறுமாறு விண்ணப்பஞ்செய்ய வேலவரும் அவற்றைத் தந்தருளி, இந்தச் சுனையிற் பங்குனி யுத்திரமும் ஞாயிற்றுக்கிழமையுங் கூடிய சுபதினத்தில் ஸ்நாநஞ் செய்பவர்கள் தாம் நினைத்தவை எல்லாங் கைகூடப் பெறுவர் எனக் கூறி மறைந் தருளினார். விஷ்ணு மூர்த்தி வழிபாடு செய்ததையுஞ் திருப்புகழ் 14-ஆம் பாடலிற் காண்க.
----------------
13. இந்திரா னருள்பெரு படலம்.
தணிகைமலைக்குச் சமிபத்தில் தென்பாரிசத்திற் கடப்பமரஞ் செறிந்த சூழலில் இந்திரன் ஒரு ஊரையும் தீர்த்தத்தையும் உண்டு பண்ணிச் சிவலிங்கமுந் தாபித்தான். அவ்வூருக்குக் கடம்பமாநகரம் எனவும் ஸ்வாமிக்கு அமராபதீசுரர் எனவும் பெயர் வந்தன. பின்னர் இந்திரன் தணிகைமலையை யடைந்து மலைக்கு தென்புறத்தில் ஒரு சுனை யிருப்பதைக் கண்டு ஸ்வாமியை நித்தம் அருச்சிக்க நினைத்துத் தேவ லோகத் திருந்து உற்பலக் கொடியை வரவழைத்து அச் சுனையில் அதை வளர்க்கக் கருதிச் சுனைக் கரையில் விநாயக மூர்த்தியைப் பூசித்தான். அதனால் அம்மூர்த்திக்குச் செங்கழுநீர் விநாயகர் எனப்பெயர் வந்தது. காலை, உச்சி, மாலை என்னும் மூன்று வேளைகளிலும் நீலோற்பலம் மலர அம்மலர்களால் இந்திரன் தணிகை நாதனைத் தினந்தோறும் முக்காலமும் அர்ச்சித்துப் பணிந்துவர, அவர் இந்திரனுக்கு எதிர் தோன்றி 'நீ வேண்டிய வரம் யாது?' என, அவன் 'ஸ்வாமி! தேவர்களெல்லாம் இங்குத் தங்களை வழிபட வந்துள்ளார்கள்; அவுணர்களாற் கவரப்பட்ட எங்கள் பொன்னுலகத்துச் செல்வமெல்லாம் இங்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கின்றன; அவைதமைப் பெற விரும்புகின்றோம்; மேலும், இந்தச் சுனையில் நீலோற்பலமலர் எக்காலத்துந் தவறாது மலரவும், தாங்கள் இம்மலர்களை யணியவும், அதனால் எனக்கு இடர் ஒழியவும், இத்தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டவர்களுடைய வினைகளெல்லாம் அகலவுந் திருவருள் புரியவேண்டுமென்று பிரார்த்திக்க, இறைவன் அவ்வாறே வரந் தந்து, காமதேனு, சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி முதலியவைகளை யெல்லாம் இந்திரன் பெறும்படி யருளிச்செய்து மறைந்தனர். இந்திரநீலச் சுனையின் தீர்த்தமும் மலரும் இன்றும் ஸ்வாமிக்கு உபயோகப்படுகின்றன. இதனால் திருத்தணிகைக்கும் இந்திரநகரம் என்னும் பெயர் வந்தது. இவ்வாறு இந்திரனும் தேவர்களும் வழிபட்டதைத் திருப்புகழ் 14, 34, 56, 64 ஆகிய பாடல்களிலுங், குவளைமலர் மலருவதை 5, 22, 25, 26, 27, 31, 36, 37, 40, 44, 51, 52, 62, 63 ஆகிய பாடல்களிலுங் காண்க.
-------------------------
14. நாக மருள்பெறு படலம்.
திருப்பாற்கடல்கடைந்த காலத்து மத்தாகிய மந்தரமலையிற் கயிறாக இருந்து அதனில் உரைந்து இழுக்கப்பட்டமையால் வாசுகியென்னும் பாம்பு உடல் முழுதும் புண்ணாகி மெலிவுற்றது. அவ் வாசுகி தணிகை மலைக்குவந்து அதன் மேல்பா*கத்திருந்த சுனையொன்றில் மூழ்கித் தணிகைநாதரை நோக்கித் தவம்புரிந்து அவரருளால் நோய் நீங்கிச் சுகப்பட்டது. அந்தச் சுனை நாகசுனை எனப் பெயர்பெறும். அதில் ஸ்நாநஞ் செய்பவர் நோய் தீர்ந்து சுகமுறுவர். வாசுகி வழிபட்டதைத் திருப்புகழ் 60-ஆம் பாட்டிற் காண்க.
---------------------
15. இராம னருள்பெறு படலம்.
தந்தையின் சொல்வழி ஸ்ரீராமர் கானகத்து வாழுங் காலத்திற் சீதாதேவி காணாது போக, இராமர் அகத்திய முநிவரை யடைந்து 'ஜாநகியை வௌவின தீயரை வெல்லும் சத்தியை எனக்குத் தந்தருளல் வேண்டும்' எனப் பணிந்து கேட்டுக் கொண்டனர். முநிவரும் விபூதி ருத்ராக்ஷங்களின் பெருமையையும் அவைகளின் இலக்கணத்தையும் அவருக்குக் கூறி 'இவைகளைச் சாதனமாகக் கொண்டு சிவபூஜை செய்து உன் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்' என்றனர். அவ்வாறே இராமர் பூஜை செய்யச் சிவபிரான் தோன்றியருளி 'யாம் உனக்குச் சிவஞானம் தருகின்றோம்; அது பெற்றால் மாநுட வாழ்க்கை மாயை என உனக்குப் புலப்படும்' என்றனர். இது கேட்ட இராமர் சிவபிரான் திருவருளை மறுத்தற் கஞ்சி, அவர் திருவடியிற் பன்முறை விழுந்து வணங்கி "ஐயனே! இருவினை யிடையிட்ட கொடியேன் அடியேன்; ராக்ஷதர் செய்கையை எண்ணும் பொழுதெல்லாம் கோபம் உண்டாகின்றது; சீதையின் உருவை நினைக்கும் பொழுதெல்லாம் காமம் உண்டாகின்றது" என்று சொல்லச் சிவபிரான் நகைத்து இராமருக்கு வேண்டிய ஆற்றலையும் ஆயுதங்களையுந் தந்து மறைந்தருள இராமரும் அவற்றின் உதவியால் இராவண சம்ஹாரஞ் செய்தார்.
பின்பு ராமேஷ்வரத்திற் சிவபூஜை முடித்து, "அந்தோ! சிவபிரான் எனக்கு ஞானோபதேசஞ் செய்கின்றேன் என்றபொழுது மோகத்திற் பட்டவனாய்ச் சமயத்தை வீணே இழந்து விட்டேனே" என மன மிக நொந்து, இனியாகிலும் ஞானம் பெற வேண்டுமெனக் கருதிச் சிவத்தியானத்திலிருந்தனர். சிவபிரான் பிரத்யக்ஷமாகி 'உன் உள்ளம் இன்னும் அடங்கவில்லை; உள்ள மடங்காவிட்டாற் சிவஞானங் கிட்டாது; நீ திருத்தணிகைக்குச் சென்றால் உள்ளமு மடங்கும்; ஞானமும் பெறுவை' என்று திருவாய்மலர்ந்தருளி மறைந்தனர். அவ்வாறே ஸ்ரீராமர் திருத்தணிகைக்கு வந்து அங்குள்ள நந்தி தீர்த்தம் முதலிய தீர்த்தங்களில் ஸ்நாநஞ் செய்து தவத் திருந்தனர். முருகபிரானும் பிரசன்னராய்ச் சிவஞானம் பாலித்தருளினார். இராவண சம்ஹாரஞ் செய்து ஜயித்து வந்தமையால் இராமமூர்த்திக்கு விஜயராகவஸ்வாமி என்னும் பெயர் வந்தது. இம்மூர்த்தி விஜய வல்லித்தாயார் சமேதராய்க் கீழ்த் திருத்தணியில் நந்தி யாற்றுக்கும் ஆறுமுகஸ்வாமி கோயிலுக்குந் தென்பால் திருக்கோயில்கொண்டெழுந்தருளியிருக்கின்றார்.
-----------------------------
16. களவுப் படலம்.
மஹாவிஷ்ணுவின் பெண்களான கற்பிற் சிறந்த சுந்தரவல்லி அமுதவல்லி யென்பவர்கள் வேலாயுதக்கடவுளைத் திருமணஞ் செய்யக் கருதிக், கங்கைச் சரவணத்துக் கருகில் தவஞ்செய்ய முருகபிரான் எதிர் தோன்றி, "அமுதவல்லி! நீ இந்திரனிடஞ் சென்று வளருவாயாக; சுந்தரி! நீ பூலோகத்திற் சிவமுநிவரிடந் தோன்றி வேட ரகத்தில் வளருவாயாக; உங்கள் இருவர் கருத்தையும் ஈடேற்றுவோம்" எனச் சொல்லி மறைந்தருளினார். அவ்வாறே அமுதவல்லி தேவேந்திரனிடந் தோன்றி அங்கு ஐராவதம் என்னுந் தெய்வயானையால் வளர்க்கப்பட்டுத் "தெய்வயானை" என்னும் பெயர்பெற்றுத் திருப்பரங்குன்றத்தில் முருகக்கடவுள் தம்மைத் திருமணஞ் செய்யப்பெற்றாள். சுந்தரியோ தனது வடிவை நீக்கிச் சூக்கும தேகத்தோடு தொண்டை நாட்டில் மேற்பாடி* என்னும் ஸ்தலத்துக்குச் சமீபத்தில் மலைச்சாரலில் தவமியற்றி நின்றாள். அதே மலைச்சாரலில் இதற்கு முன்னரே தவத்திருந்த சிவமுநி என்பவர் ஒரு பெண்மான் உலாவுவதைக் கண்டு அதன் அழகு தம்மனத்தைக் கவரக் காட்சியால் இன்பமநுபவித்து ஆசைநீங்கி முன்போலத் தவத்திலுற்றனர். அச்சமயத்தில் அம் மானினுடைய வயிற்றிற் கருவாகச் சுந்தரி சென்றமைந்தனள். கருப்பமுற்ற மான் வள்ளிக்கிழங்குகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு குழியிற் குழந்தையைப் பிரசவித்து அது தன் இனமாக இல்லாதிருப்பதைக் கண்டு மருண்டு அதனை விட்டுப் போய்விட்டது.
குழந்தை குண்டலமுஞ் சிறுதொடியும் கோல்வளையுமாகிய பழைய பல ஆபரணங்களுடனும் தழையாலாகிய ஆடையுடனும் பூர்வஞானமின்றி விளங்கியது. இங்ஙனம் தனியாய் விடப்பட்ட குழந்தை மிகவும் இனிமையான மெல்லிய குரலில் அழுததை, இறைவ னருளால் அங்குத் தனது மனைவியுடனும் பரிசனருடனும் வந்த, தவஞ் சிறந்த வேடர் தலைவனான நம்பிராஜன் கேட்டு, மிகவும் மனமகிழ்ந் தெடுத்து, மகட்பேறின்றி வருந்தின நமக்கு மலைக்கடவுளே இக்குழந்தையைக் கொடுத்தருளினாரென உள்ளம் பூரித்துக் கிழங்கெடுத்த வள்ளிக் குழியிற் கிடக்கின்ற மணி விளக்குப் போன்ற சுந்தரியை, "இந்தா! இஃதோர் இளங் குழந்தை" யென்றெடுத்துச் சிந்தாகுலந் தீரத் தேவி கையில் ஈந்தனன். வில்லை நிலத்திலிட்டு எழுந்து பாய்ந்து ஆர்ப்பரித்து ஆநந்தக்கடலில் மூழ்கிச் சிரித்துத் தோள்புடைத்து, முற்பிறப்பில் நாம்செய்த நல்லதவம் என்று கூறினான். வேடராஜன் மனைவியும் மிக்க விருப்பத்தால் தனது தனத்தில் ஊறின பாலை யூட்டினாள். வேடராசன் மீண்டு சிறுகுடிலுக்குப் போய்த் தனது சுற்றத்தாருடன் விருந்துண்டு தொண்டகப்பறை முழங்கக் குரவைக் கூத்தாட்டுவித்தான்.அப்பால் முருகக்கடவுளுக்குத் திருவிழாக் கொண்டாடி வெறியாட்டுச் செய்வித்தான். குழந்தைக்குக் காப்பிட்டு *காட்பாடி ஜங்ஷனுக்குச் சமீபத்திலுள்ள திருவலம் ஸ்டேஷனிலிருந்து 8-மைல் மேற்பாடி. வள்ளிமலை மேற்பாடியிலிருந்து 1-மைல்; திருவலம் ஸ்டேஷனிலிருந்து 9-மைல். அதனை மயிலிறகு கட்டப்பட்ட அழகிய தொட்டிலி லிட்டார்கள். முதிர்ந்த மூதாளர் வந்துகூடி வள்ளிக்குழியில் வந்திடலால் இவள் நாமம் "வள்ளி" எனக்கூறினார்.
குறவர் கோமான் வள்ளிநாயகியாரைத் தன்மகளென்று அன்பால் வளர்த்தான். ஆவா! குறவர் தவம் யாரளக்க வல்லாரே! வள்ளியம்மைக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் செல்ல, ஜாதி வழக்கப்படித் தினைப்புனங் காக்கும்படிப் பரண் கட்டிக்கொடுத்தனர். கவணெறிந்து கிளி, புறவு முதலியன தினையைச் சேதஞ் செய்யாதவாறு வள்ளியம்மை 'ஆலோலம்' சொல்லிக் காலங்கழித்து வருநாளில், நாரதமுநிவர் தணிகாசலத்துக்குச் சென்று வேற்படையண்ணலை வணங்கி, "இறைவனே! இத்தலத்துக்கு மேற்றிசையிற் சமீபமாகவே மேற்பாடி யிருக்கிறது. அத்தலத்துக்கு அருகில் அழகெலாந் திரண்ட வள்ளி யென்னும் மாது ஒருத்தி உள்ளாள். அவளைக் கண்டதும் அழகிற் சிறந்த ஐயனே! நீங்களே அவளுக்குரியவரென நினைந்து, உங்களிடம் ஓடி வந்தேன். எல்லாம் தெரிந்த இறைவனாயினும் உங்களுக்குத் தெரியாததுபோல என் ஆசை மிகுதியாற் சொன்ன குற்றத்தைப் பொறுத்தருளல் வேண்டும். தேவரீரே சென்று கண்டு கொள்வீராக" எனக் கூறினர்.
இது கேட்ட ஸ்வாமி நாரதருக்கு விடை கொடுத்தருளித் தாம் தனியாகக் கட்டழகுள்ள காளையாய் ஒரு வேட்டுவக் கோலத்துடன் வேட்டையாடி வருபவர்போல வள்ளிமலையை யடைந்து, அங்கே புதையலைக் கண்டாற்போல வள்ளிநாயகியாரைக் கண்டு, மெல்ல நெருங்கி, இன்பவார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்குஞ் சமயத்திற் கொம்புகளை யூதிக்கொண்டு வேடர்கள் சூழ நம்பிராஜன் வந்தான். உடனே வேற்படை வீரன், அடிமுதல் வேதங்களாக, நடுவிடம் சிவாகமங்களாகக் கிளைகளெல்லாம் பலகலைகளாக, ஒரு வேங்கை மரத்தி னுருவமாகி நின்றனன். வேடர் தலைவன் வள்ளிநாயகியாரைக் கண்டு அவளுக்கு வள்ளிக்கிழங்கு, மா, தேன், பால் முதலியன கொடுத்துப் பின்னர்ப் புதிதாய் நின்ற வேங்கை மரத்தையுங் கண்டான். அவனுடன் வந்த மறவரானோர் விம்மித முற்றுக் கோபங்கொண்டு, இம்மரம் இதற்கு முன் இங்கில்லை. இப்பொழுது தோன்றி நிற்பதால் தீங்கு வந்திடுதல் திண்ணம்; இதனையிப் பொழுதே முறித்திடுங்கள்; பறித்திடுங்கள்; தறித்திடுங்கள்; தாமதியாதீர்கள் என்று கூறினார்கள். வேட ராசன் இவர்களையெல்லாம் விலக்கி, வள்ளி நாயகியாரை நோக்கி, ‘இதுவரையும் இல்லாது, இம்மரம் இப்பொழுது இங்கு நிற்கும் வரலாற்றின் உண்மையைச் சொல்லுக’ என்ன, வள்ளியம்மை ”யான் அறியேன்; திடீரென விண்ணகத்திருந்து நமது குலதெய்வமே இதைக் கொண்டு வந்து சேர்த்தது போலும்.” என்று சொல்ல, ”நன்று; அது உனக்கு நிழல் தரும்” எனச் சொல்லி, வேடராசன் வேடர் கூட்டத்துடன் திரும்பிச் சென்றனன். வள்ளியம்மையும் அம்மரத்தைத் தழுவிய கொடிபோல அதைத் தழுவி அதன் மலர்களைத் தன் கூந்தலில் வைத்து மகிழ்ந்தனள். பின்னர் ஒருநாள் வள்ளியம்மையின் தந்தை வருஞ் சமயத்து முருகக்கடவுள் தமது ஓரம்சத்தை வேங்கை மரத்தி லிருத்திப் பிறிதோ ரம்சத்தொடு விருத்தாப்பிய வேடங்கொண்டு குறவர் தலைவன் எதிர் சென்று அவனுக்குத் திருநீறு அளித்து ஆசி கூறினர். வேடனும் இன்று நமக்கு நல்ல நாள் என மகிழ்ந்து 'சாமிக்கு என்ன வேண்டும்?' என, முருக வேளும் 'யாம் இம்மலையிலுள்ள குமரி ஆடவந்தோம்' என்றனர். வேடனும், 'அங்ஙனமாயின் நீர்சொன்ன தீர்த்தத்தில் நித்தலுமாடி இவ்வேங்கை மர நிழலி லுள்ள தினைப்புனத்துத் தனித்திருக்கும் எம்மகட்குந் துணையாக இருங்கள்' என உரைத்துப் போயினான்.
அவன் போயின பின்னர்க் கிழவர் பசியால் மிக வாடினவர்போலத் துடிக்க, வள்ளியம்மை தேன் கலந்த தினைமாவை அளிக்க, அதனை வாங்கிவாங்கி யுண்டனர். பின்னர் "ஐயோ! தாகமாய் இருக்கிறதே" எனத் துடித்தனர். வள்ளியம்மை, 'இந்த மலைக்கு அப்பால் ஏழு குன்றுகளைக் கடந்து சென்றால் ஆங்கொரு சுனையிருக்கிறது' என்று சொல்லக் கிழவரும் 'எனக்கு நாவுலர்ந்து விட்டது. இம்மலைச் சாரலின் வழிகளை நான் ஒரு சிறுதுந் தேரேன். நீ நடக்கப் பான் மாறாது உடனே வந்து சுனை நீரைக் காட்டுதி' என்ன, அவ்வம்மை உடன் செல்லச் சென்று, சுனைநீர் பருகினதும், அம்மையை நோக்கி, "நான் குமரியாட வந்தேன் எனக்கூறினது உண்மையாயிற்று; இந்தத் தீர்த்தத்தைப் பருகினதும் என் மூப்பு பிந்தியது; உன்மேற் காமம் முந்தியது; என் ஆகத்தை வருத்தின தாகத்தைத் தணித்தாய்; மேகத்தை யொத்த கூந்தலையுடையாய்! என்னை வருத்தும் மோகத்தையுந் தணிப்பாயானால் என் குறை முடிந்தது" என இரங்கிக் கூறினர்.இதைக்கேட்ட வள்ளியம்மை நடுநடுங்கிக் கோபத்தாற் பெரு மூச்செறிந்து "நரைத்த கிழவரே! உமக்கு நல்லுணர்வு சற்று மில்லையே; நீர் எத்துக்கு மூத்தீர்?" இழிகுலத்தாளாகிய என்னை யிச்சித்தீர்; பித்துக்கொண்டாற்போற் பிதற்றுகின்றீர்" எனக்கடிந்து பேசக் கிழவர் அவ்வம்மையின் பாதத்தில் விழுந்து அவற்றைப் பிடித்துக்கொள்ள, வள்ளியம்மை காலை உதறிக்கொண்டு திரும்பி வெகு வேகமாய் ஓடினள். இதைக்கண்ட எம தையன் தணிகை ஆபத்ஸகாயராம் தமது தமையனாரைத் தியானிக்க அவரும் மதயானை உருவோடு தம்பிதனக்காக வனத்தணைந்து வள்ளியம்மை ஓடிவரும் வழியிற் பிளிறிக் கொண்டு குறுக்கே மறித்ததுபோல எதிர்வந்தார். வள்ளியம்மையும் எதிர்த்துவரும் யானையைக்கண்டு மிகப்பயந்து வந்தவழியே திரும்பி ஓடிவந்து, கிழவரைப் பார்த்து 'என்னை இவ்யானையினின்றுங் காத்தருள்க' எனச் சேர்ந்து ஒருபால் தழுவிக்கொண்டனள். மற்றொருபால் யானையின் கோடுபட, இவைகளுக்கு நடுவே, ஸ்வாமி வயிரத்தூண்போல நின்று, பின்னர்த் தாம் முதன் முதல்கொண்ட கட்டழகுள்ள காளை யுருவத்தோடு தோன்றி "அஞ்சல் அஞ்சல்" எனத் தமது கரத்தால் வள்ளியை அணைத்து, யானையையுங் கும்பிட, யானை மறைந்தது. தம்பியை இடரினின்றும் நீக்கி அவர் நினைத்த மாதையுங் கூட்டுவித்த காரணத்தால் தணிகாசலத்திலுள்ள விநாயக மூர்த்திக்கு ஆபத்ஸகாயர் எனப்பெயர் போந்தது. இவ்வாறு தம்பிக்கு உதவினதைப் திருப்புகழ் விநாயகர் துதியிற் காண்க. நிற்க, காளை யுருவங்கொண்ட கள்வரும், "வள்ளி; இஃதெல்லாம் இம்மலை வேந்தனாகிய முருகன் கூத்து; நீ அஞ்சாதே" எனச் சொல்லித் தேற்றி வள்ளியம்மையோடு கூடி மகிழ்ந்திருந்தனர்.
தினைப்பயிர் முதிர்ந்து கதிர்விடுத்தன. வள்ளியம்மை புனம் விடுத்துத் தாய் தந்தையரிடஞ் சேர்ந்தனள். கொள்கை வேறாகிப்பாவையுடன் விளையாடுதலையும் கழங்காடுதலையும் முன்போல மடவாருடன் பேசுதலையும் விடுத்துப் புலம்பினள். செவிலியும் அன்னையும் மகளை யுற்று நோக்கி 'உனக்கு மேனி வேறாகியது. குற்றம் வந்தவாறென்?' என வற்புறுத்திக் கூறிச் செற்ற மெய்தி அவளை இனிப் புறம்போக லாகாதெனக் கூறி வீட்டிலிருத்தினார்கள். மகளை மலைத்தெய்வந் தீண்டிற்றென்று வெறியாட்டு நடத்தினார்கள்.அப்பொழுது வேலன்மேல் வந்து தோன்றி 'இவள் தமியளாகி யிருந்த புனத்தில் தொட்டனம். எமதுள்ள மகிழுமாறு பெருஞ்சிறப்புச் செய்வீராயின் இக்குறை நீங்கும்' என்று குமரவேள் குறிப்பாகக் கூறியருளினான். இம்மொழி தன்செவிப்புலம் புகுந்த அளவே வள்ளியம்மை அவச நீங்கி யெழுந்தனள். அப்படியே சிறப்புச் செய்வேனென்று செவிலித்தாய் பிரார்த்தனை செய்து துதித்தாள்.
தாயுந் தமரும் நாயும் நகரும் பேயும் பிறவும் தூங்கும்படியான நள்ளிரவில் முருகபிரான் வள்ளியம்மையைக் களவாக வீட்டினின்றும் கொண்டுபோய்விடத் துயிலுணர்ந்த வேடர்களெல்லாம் தொடர்ந்து வந்து சூழ்ந்து போர்செய்து விடுத்த அம்புகளெல்லாம் அண்ணல்மேற் படுவதை அம்மைநோக்கிப் பதைபதைத்து, 'ஐயனே'. நீர் சும்மா விருத்தலாகாது. வேலாயுதத்தை ஏவி இவர்களை அடுதல் வேண்டும்' என்ன, எம்பிரான் அருளாற் கொடியாக நின்ற கோழி நிமிர்ந்தெழுந்து கொக்கரிக்க, இடிபோன்ற அவ்வொலியின் அதிர்ச்சியால் நம்பிராசனும் அவன் புதல்வரும் தமரும் யாரும் மாண்டு வீழ்ந்தார்கள். ஸ்வாமியும் வள்ளியம்மையுடன் தணிகை மலைக்குச் சென்றனர். வள்ளியம்மையைக் கண்ட நாரதர் பேராநந்தம் உற்று, "தாயே! நீ முன் செய்த தவப்பயனால், எங்கள் தணிகை நாயகரே பல திருவிளையாடல்களியற்றி உன்னை இங்குக் கொண்டு வந்தனர்" எனக் கைகூப்பிக் கூறித் தொழுது, ஸ்வாமியை நோக்கி, "ஸ்வாமி! வேடரெல்லாம் உயிர் பெற்றெழ அருளல் வேண்டும்" என வேண்டினர். முருகபிரானும் உடனே அவ்வாறே யருள் செய்து அவர்கள் முன் எழுந்தருள, உயிர் பெற்றெழுந்த வேடர்கள், 'சாமி! வேலியே பயிரை மேய்வதென்றால் வேறு காப்பு என்ன இருக்கிறது? ஆயினும் எங்கள் குடியின் பெயர் கெடாமல் நாங்கள் தத்தஞ் செய்ய நீங்கள் எங்கள் வள்ளியைத் திருமணஞ்செய்து கொள்ளுங்கள்' என வணங்கிக் கூறினர். ஸ்வாமியும் "நன்று; நீங்கள் யாவரும் நமது தணிகைமலைக்கு வாருங்கள். அங்கே மணஞ்செய்வோம்" எனச்சொல்லி வள்ளியம்மையோடு திருத்தணிகைக்கு வந்து அங்கிருந்த வீரவாகு தேவர் முதலிய தம்பியர்க ளெல்லாம் வணங்க வீற்றிருந்தனர். இவ்வாறு முருகபிரான் வள்ளியம்மை காரணமாகப் பித்தனைப்போ லுழன்று லீலைகள்புரிந்து, ஈற்றில் அவ்வம்மையை மயக்கித் தணிகையில் மகிழ்ச்சியோடு வந்தமர்ந்தனர் என்பதைத் திருப்புகழ் 21, 41, 42, 43, 49-ஆம் பாடல்களிற் காண்க.
----------------------------
17. வள்ளிநாயகி திருமணப் படலம்.
இவ்வாறு வள்ளிநாயகியைத் தணிகை நாயகன் கொண்டு வந்ததை மதித்துக் குமார லிங்கத்திருந்துஞ் சிவபிரான் உமாதேவி யாரொடு வெளிவந்து தோன்ற, முருகவேள் தாய்தந்தையைப் பணிந்து நிற்கச் சிவபிரான் முருகவேளைத் தழுவி "மைந்த! உன் திருமணங்காண வந்தோம்" என்றனர். அங்கிருந்த நாரத முநிவரும் இம்மாசி மாதத்திற் பூச நக்ஷத்திரம் திருமணத்துக்கு ஏற்ற நாளென்றனர். திருக்கலியாணம் நடத்துவிக்கும் கர்த்தாவாக அமர்ந்த ஆபத்ஸகாய விநாயகமூர்த்தி தமது தம்பியை நோக்கிக் 'கந்தகிரியிலுள்ள தேவசேனையை வரவழைப்பாயாக' என்றனர். முருகபிரானும் கந்தகிரிக்கு வீரவாகு தேவரை அனுப்பினார். கலியாண மண்டபம் தேவதச்சனால் மஹா விசித்திரமாக அமைக்கப்பெற்றது.தேவகோடிகள் திருத்தணிகைக்கு வந்து சேர்ந்தன. முநிவரர் குழாம் தணிகையை நாடி வந்தன. தேவசேனை யம்மையும் வந்து சேரத் திருக்கைவேற் பெருமான் அவ்வம்மையைத் தமது இடப் பாகத்து அமர்த்தினர். பின்னர் திருமண நாள் வரப் பிரமதேவர் சமுதை, தருப்பை முதலியன கொண்டுவந்து சேர்த்தனர். சிவபிரானும் உமாதேவியும் ஒரு பீடத்தி லமர்ந்தனர்.
வள்ளியம்மையை வளர்த்த பிதாவாகிய நம்பியென்ற பெயருள்ள வேடர் தலைவனும், "சதாசிவ மூர்த்தியின் அழல்விழியின் வந்த வேலவனுக்கு என்பால் வந்த கொம்பினைக் கொடுத்தேன்" என்று தன்வழிப் பெயருங்கூறித் தன் மனைவி வாச நீர் வாக்க ஏற்றுத் தத்தஞ்செய்யத் தேவதேவ னாகிய திருத்தணிகை யாண்டவன் வள்ளியம்மையை யேற்றருளினார். நாரத முனிவர் வேதவிதிப்படித் திருமணச் சடங்குகளைச் செய்தார். தத்தஞ் செய்ய, வேலவன் ஏற்ற அப்பொழுதே, வள்ளியம்மைக்குத் தேவதேஜஸ் பொலிந்தது. கண் இமைக்க இல்லை; உருவம் நிழல் தரவில்லை; மாலை வாட இல்லை; உடலில் மாசுந் தூசுந் வேர்வையுஞ் சேரவில்லை; அவரணிந்த புஷ்பத்தில் வண்டுகள் சேரவில்லை; தெய்வக்கோல முழுதும் ஒருங்கேயுற்றது; கண்டோர் அதிசயித்தனர். வேடர் கூட்டத்தாரும் 'இவள் எம்மிடத்தில் வந்தது எம் பெருந்தவமே' யென்றார். இந்நிகழ்ச்சிகளையெல்லாம் நோக்கியிருந்த தேவேந்திரன் 'நம்மகளை நாம் வழிய வேண்டிக்கொடுத்தோம். இவ் வேட ராசன் மகளை இறைவனே நாடிச்சென்று கொண்டுவந்தனர். இவ்வேடராசன் என்ன தவஞ் செய்தானோ' எனப் பிரமித்தனன். திருக்கலியாணம் ஆனவுடன் ஸ்வாமி தந்தை தாயர்களை வணங்க, அவர்களும் ஆசிர்வாதஞ் செய்து, கயிலைக்குச் சென்றனர்கள். ஸ்வாமியும் வள்ளியம்மையோடு திருத்தணிகையில் இன்பமுற்றிருந்தனர்.
-------------
18. விடையருள் படலம்.
பின்னர், விஷ்ணு வேதா முதலிய தேவர்கள் எல்லாம் விடைபெற்றுத் தத்தம் ஊருக்குச் சென்றனர். நம்பி வேடனும் முருகவேளின் திருவருள் பெற்றுத் தன் ஊருக்குச் சென்றான். யாவரும் சென்ற பிறகு, வள்ளியம்மை தேவசேனையின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினள். தேவசேனையும் வள்ளியை அணைத்தெடுத்து எனக்குத் தங்கைபோலச் சிறந்த துணையாக வந்தனை என்று சொல்லித் தனது நாயகரை வணங்கி "இவள் யார்? ஏன் வேடர் மரபில் உதித்தனள்?" என வினவ, முருகவேளும் மன மகிழ்ந்து இவர்கள் இருவரும் முன்னர் அமுதவல்லி, சுந்தரவல்லியா யிருந்த வரலாறுகளைக் கூறிப் பின்னுஞ் சொல்லுகின்றார்: "ஒருமுறை கண்ணுவ முநிவர் மஹா விஷ்ணுவைக் காணும் பொருட்டு வைகுந்தத்திற்குச் சென்றனர். உபேந்திரன் முதலியோர் சூழச் சபையில் லக்ஷ்மி தேவியோடு வீற்றிருந்த பெருமாள், அவரைக் கவனியாது அசட்டை செய்யக் கண்ணுவர் இவன் அகந்தை நன்றென வெகுண்டு, இவ்விஷ்ணு "மூகைமைப் பிறவி எண்ணில உறுக" எனச் சபித்துப் 'பல பிறவி மானாகக் கடவை' என லக்ஷ்மியையுஞ் சபித்து, உபேந்திரன் முதலியோரை, "நீங்கள் வேட்டுவப் பிறவி எண்ணில எடுமின்" எனச் சபித்து மீண்டேகினர். இச்சாப மொழிகளைக் கேட்ட விஷ்ணு முதலினோர் அஞ்சிநடுங்கிச் சிவபூசைசெய்து சிவத்தியானஞ்செய்ய, சிவபிரான் கண்ணுவ முநிவரை வரவழைத்து 'இவர்கள் செய்த அபசாரத்துக்காக ஒரு பிறவியொடு சாப நிவாரணமாகும்படி அநுக்கிரகஞ் செய்க' என்றனர். அவரும் திருவுள்ளப்படி யென்றனர்.
இச்சாபாநுக்கிரஹத்தால் விஷ்ணுமூர்த்தி சிவமுநிவர் என்னும் மௌனமுநியாகி, மேற்பாடிக்கு அருகில் மலைச்சாரலில் தவத்தமர்ந்தனர். லக்ஷ்மி மானாகி அம்மலையில் திரிந்தனள். உபேந்திரன் முதலினோர் வேடராஜனான நம்பி முதலிய வேடர்களாக அம்மலையில் உற்பவித்தனர். உபேந்திரனேவேடராஜ னான நம்பி. மைந்தர் பலர் இருந்தும் மகளின்றி அவன் வருந்தியிருந்து, விஷ்ணுவாகிய சிவமுநிவருக்கும் மானாய்த் திரிந்த லக்ஷ்மிக்கும் பிறந்த சுந்தரியாகிய இவ் வள்ளியைக் கண்டெடுத்து வளர்த்து வந்தான்"- என்று இவ்வாறு வேலவர் தமது தேவியரிருவருக்கும் விஷயங்களை விரிவாக விளக்கியருளினார். அப்பொழுது வள்ளிநாயகியார் கடவுளை வணங்கித் திருத்தணிகையின் பெருமையைக் குறித்து வினவ, இவ்வுலகத்திலுள்ள உயிர்களெல்லாம் நற்கதி யடையும்படித் திருத்தணிகையில் வீற்றிருந்தருளுந் தணிகாசல மூர்த்திபே ரருளுடன் பின்வருமாறு அம்மலையின் சிறப்புகளை யெல்லாம் எடுத்தோதினார்:
*என்று மிங்குநாம் மன்ற வைகுதல்
நின்று நீலமே நன்று ணர்த்துமே.
இந்த சுனையிற் சூரியன் உதிக்கும்பொழுது ஒரு மலரும், உச்சிப்பொழுதில் ஒரு மலரும், மாலைப்பொழுதில் ஒரு மலரும், ஆக எக்காலத்தும் மூன்று நீலோற்பல மலர்கள் தவறாமல் ஒழிவின்றித் தினந்தோறும் மலரும்.
*காலை காய்பகல் மாலை மா மலர் நீல
நேரவிங் கால வமர்கின்றாம்.
இந்த மலையைத் தொழுதுள்ளவர்களுடைய பாவங்களெல்லாம் நீங்கும். அன்புடன் இம்மலைக்கு வந்து இந்தச் சுனையில் முறைப்படி ஸ்நாநஞ்செய்து எம்மை வணங்குபவர்கள் எமது திருவடி நிழலில் வாழ்வார்கள். ஐந்து தினங்கள் இம்மலையினைச் சேர்ந்து எமது பாதமே கதியென உள்ளத்தில் நினைத்து எம்மை வழிபடுபவர்கள் தமது விருப்பங்கள் எல்லாம் நிறைவேறப்பெற்று ஈற்றிற் பேரின்ப வீட்டினையடைந்து வாழ்வார்கள்.
தேவ ராயினும், முனிவர ராயினும், சிறந்தோர் எவ ராயினும், பிறந்தபின் இவ்வரை தொழாதார் மரம், புல் முதலிய அசையாப் பொருளினுங் கீழ்ப்பட்டவர்களாவார். பூப்பிரதக்ஷணஞ் செய்தாலும் (உலகுவலம்வரினும்) அவரது பாவம் நீங்காது. பாதகங்கள் பலசெய்தவ ராயினும், தினந்தோறும் பாவம் செய்பவர்க ளாயினும், எம்மீதுள்ள விருப்பத்தால் தணிகை மலைக்கு வருவார்களாயின், அவர்களே பிரம விஷ்ணுக்களினுஞ் சிறந்தோர்; எல்லாவற்றினும் மேம்பட்டவர். இம்மலையிலுள்ளோர் செய்த ஒரு தருமம் பலவாகி வளரும்; அவர்கள் பல பாவங்கள் செய்தாலும் அவை அற்ப மாகி ஒருசேரத் தேய்ந்தொழியும். இதுவேயன்றி யிவ்விடத்தில் அநந்தகோடி அற்புதங்க ளுண்டு. ]
இந்தவாறு குமரக்கடவுள் கூற, அவைகளைக்கேட்டு வள்ளி நாயகியார் நன்றென மகிழ்ந்து, 'உலகிலுள்ள மலைகளிற் சிறந்த இந்தத்தணிகை மலையின் தன்மையை உமது திருவருளால் அறியப் பெற்று அடியேன் உய்ந்தேன்' என்றார். இம்மலைச் சாரலில் ஒருபால் முருகக்கடவுளும் வள்ளிநாயகியாரும், பிரம விஷ்ணுக்களால் அறியப்படாத சிவபெருமானுடைய ஐவகை உருவங்களில் ஒன்றை ஆகமப்படி ஸ்தாபித்து வழிபட்டு வணங்கி அருள்பெற்றனர்.
இச்சாசக்தி யாகிய வள்ளியம்மையுங் கிரியாசக்தி யாகிய தேவ சேனையும் முறையே வலப்பாலும் இடப்பாலும் அமர, ஞான சக்தியைத் தமது திருக்கரத் தேந்தி, முச்சக்தியுடனும் முருகக் கடவுள் இத் தணிகாசலத்தில் வீற்றிருந் தருளுவர். இதனை இத்தலத்துக்குரிய திருப்புகழ் 14, 18, 20, 23, 27, 37, 38, 52 -ஆம் பாடல்களிற் காண்க.
----------------------
19. நாரத ரருள்பெரு படலம்.
ஒரு முறை நாரதர் கயிலைமலைக்குச் சென்ற சிவபெருமானை வணங்கித் திரும்பிவரும்பொழுது, பிரமலோகத்தை யடைந்து, தன் தாதையாகிய பிரமனைக்கண்டு வணங்கி "எந்தாய்! எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன: உதாரணமாக, (1) யானை, குதிரை, பல்லக்கு, தேர் முதலியன இருக்கச் சந்திரசேகரப் பெருமான் ஏனோ ருஷபத்தை வாகனமாகக்கொண்டார்? (2) நல்லவாசனைத் திரவியங்கள் பல இருக்க ஏனோ திருநீற்றைப் பூசிக்கொள்கின்றார்?" எனப் பிரமனும் 'இவ் வினாக்களுக்கு விடையளிக்க நான் வல்லனல்லன். சிவபிரானே அவைதம் உண்மையை உணருவார். அவரன்றி அவர் நெற்றிக்கண்ணிற் றோன்றிய வேலாயுத மூர்த்தியு மறிவர். இவர் இருவர் தவிரப் பிறர் அறியார். நீ தணிகை மலைக்குச் சென்றுவிசாகப் பெருமாளை வணங்குவாயாகில் உன் ஐயங்கள் யாவும் தெளியும்' என்றனர். நாரதர் 'கந்தகிரி முதலிய பல இருக்கத் தணிகைமலையை ஏனோ சிறப்பித்துக்கூறினீர்?' எனப் பிரமதேவரும் தணிகை மான்மியங்களை எல்லாம் நாரதருக்குச் சொல்லினார். நாரதரும் தந்தையின் உபதேசமொழிகளைக் கேட்டு புளகாங்கிதம் உற்றுத் தணிகைக்கு வந்து இலிங்கப் பிரதிஷ்டைசெய்து பூசித்தனர். இவ்விலிங்கம் நாரதலிங்கம் எனப்பெயர் பெறும்.
பின்னர் மலைமீது சென்று வேலவரைத் தரிசித்து வீணையில் இசை கூட்டிப் பாடிப் போற்றித் தவஞ்செய்தார். இறைவனும் எதிர்தோன்றி, உனக்கு வேண்டுவதென் னென, நாரதர் தமது இரண்டு ஐயங்களையும் முதலிற் கூறினர். சுவாமியும் "(1) விஷ்ணு முதலிய சிறந்த தேவர்களும் அழிந்துபோவதை யுணர்ந்த தரும தேவதை தவஞ்செய்து, இறைவனை இடபமாகத் தாங்கும் அழியாத பெரும் பேற்றைப் பெற்றது (2) இப்படிச் சிறந்த தேவர்கள் அழிந்து *நீறாகத் தாம் அந் நீற்றை அணிவதாற் சிவபிரான் அநாதி மூர்த்தி *யென்பது விளங்கும்" எனக்கூறி, அவ்விரண்டு சந்தேகங்களையும் போக்கிப் பின்னும் நாரதருக்கிருந்த எல்லாச் சந்தேகங்களையும் நீக்கியருளினார். நாரதரும் தணிகாசலமூர்த்தியை வணங்கி மனத்தெளி வடைந்தனர்.
பின்னும் இத்தலத்தில் அகோரன் என்னும் மறையவன் ஞாயிற்றுக் கிழமையில் *விஷ்ணு தீர்த்தத்திலும், திங்கட்கிழமையிற் சிவகங்கையிலும், நந்தியாற்றிலும்,செவ்வாய்க் கிழமையில் நாரத தீர்த்தத்திலும், நாகதீர்த்தத்திலும், புதன்கிழமையிற் பிரமதீர்த்தத்திலும்,வியாழக்கிழமையில் இந்திரநீலச் சுனையிலும், வெள்ளிக்கிழமையிற் குமார தீர்த்தத்திலும், சநிக்கிழமையில் அகஸ்திய தீர்த்தத்திலும் ஸ்நாநஞ்செய்து, பிறவி நோய் தீர்ந்து முத்தியடைந்தனன். இவ்வளவே யன்றி எந்தத் தீர்த்தத்தி லேனும், எந்தத் தினத்தி லேனும் ஸ்நாநஞ் செய்து, எங்கள் குமரேசனை வழிபடுபவர்களுடைய எல்லாப் பாவங்களும் நீங்கும்; அவர்கள் எல்லாப் பேற்றையும் பெறுவர் என்று சூதமுநிவர் கூற, இம் மான்மியங்களைக் கேட்ட முநிவர்கள் யாவரும் ஹரஹர என மனமுருகி உடனே தணிகை மலைக்கு வந்து வேலவரைத் தொழுது பேரின்பமுற்றனர்.
------------------------
அநுபந்தம் I
திருத்தணிகைத் தீர்த்தங்கள்.
1. குமார தீர்த்தம்:- இது மலையின் கீழ்ப்பக்கம் அடிவாரத்திலுள்ள திருக்குளம்; "சரவணப் பொய்கை" என வழங்கும். இத்திருக்குளத்தைச் சுற்றிப் பல ஜாதியாருக்குரிய மடங்கள் இருக்கின்றன. திருத்தணியின் இந்தப் பாகத்துக்கு மடங் கிராமம் என்று பெயர். சுரம் முதலிய எந்ந நோயிருந்தபோதிலும் இத்தீர்த்தத்தில் அஞ்சாது ஸ்நானஞ் செய்யலாம்.
2. நந்தி யாறு:- இது கீழைத் திருத்தணியின் வடகோடியில் இருக்கின்றது. ஆற்றின் தென்கரையில் ஆறுமுகஸ்வாமி கோயிலும், விஜயராகவ ஸ்வாமி கோயிலும், வடகரையில் வீராட்டகேசர் கோயிலும் உள்ளன.
3. பிரம தீர்த்தம்:- இது கீழ்ப்புறமிருந்து மலைமேற் செல்லுகையில் நடுவழியில் வடவண்டை யிருக்கின்றது; இதனைப் பிரமசுனை யென்பர்.
4. விஷ்ணு தீர்த்தம்:- மலையின்மேல் மேற்பக்கத்திற் குருக்கள்மார் வீடுகளின் எதிரிலுள்ளது.
5. நாக தீர்த்தம்:- இதற்கு ஆதிசேஷ தீர்த்தம் என்றும் பெயர்; விஷ்ணு தீர்த்தத்துக்கும் அப்பால் மேற்கே சென்றால், தென்புறமிருக்கின்றது.
6. அகஸ்திய தீர்த்தம்:- இது ஆதிசேஷ தீர்த்தத்துக்குத் தென்கிழக்கிலுள்ளது.
7. இந்திரநீலச் சுனை:- இது கல்லார தீர்த்தம் என வழங்கும். மலைமேல் தெற்குப் பிரகாரத்துக்குத் தெற்கேயுள்ள பிரபலமான சுனை; இந்தத் தீர்த்தந்தான் ஸ்ரீ தணிகாசல மூர்த்திக்குத் திருமஞ்சன மாவது. இதில் எப்பொழுதாவது ஜலமில்லாவிட்டால் ஆறு பேர் சென்று யாற்றுஜலம் கொண்டு வருவது வழக்கம்.
இந்திரன் ஐராவதத்தைத் தெய்வயானை யம்மையாருக்கு சீதனமாகக் கொடுத்த பின்பு அதிருஷ்டஹீனனாய்த் தன் செல்வங் குறைதலைக் கண்டு, இந்தச் சுனையை உண்டாக்கி, அதிற் செங்கழு நீ்ர்க் கொடிகளை நட்டு, முப்போதும் அலர்ந்த புஷ்பங்களால் அர்ச்சனை செய்தான். முருகக்கடவுள் அவனுடைய வழிபாட்டுக்கு இரங்கி, வெள்ளை யானையைப் பொன்னுலகத்திலேயே வைத்துக்கொள்ளும்படித் தேவேந்திரனுக்குச் சொல்ல, அவன் அவ்வாறு செய்தால் தத்தாபஹாரம் என்னும் தோஷம் உண்டாகு மென்று அதற்கு இணங்காதிருக்க, யானையும் முருகக்கடவுளுக்கு வாஹனமும் அடிமையு மாயிருத்தலே தனக்கு மேலான பதவியென்று விண்ணப் பிக்கத், தேவேந்திரன் 'இந்தயானை தங்கள் சந்நிதியிலேயேயிருந்து என்னுலகை நோக்கியிருக்குமானால் எனது செல்வம் குன்றாது; எனக்கு எல்லாப் பாக்கியமும் உண்டாகும். அங்ஙனம் ஸ்வாமி திருவருள் புரியவேண்டும்' என்று பிரார்த்தித்தான். முருகக் கடவுளும் அவ்வாறே அநுக்கிரஹித்தனர். அதனால் இப்பொழுது திருத்தணிகையில் ஸ்வாமி சந்நிதிக்கு வெளிப்பிரகாரத்தில் த்வஜ ஸ்தம்பத்துக்கு அருகிலிருக்கும் ஐராவதமாகிய யானை இந்திரதிக்காகிய கிழக்குநோக்கி, முருகக்கடவுள் அருளியவாறே, அவர் தன்மீது ஆரோஹணித்தற்குத் தான் சித்தமாக இருக்கும் நிலையில் இருக்கின்றது. இந்திரன் சீதனமாகக் கொடுத்த பெரிய சந்தனக்கல் கோயிலுக்குள் ஆபத்ஸகாய விநாயக மூர்த்திக்கு எதிரில் இருக்கின்றது.
8. நாரத தீர்த்தம்:- இது அகஸ்திய தீர்த்தத்துக்குக் கிழக்கேயுள்ளது.
9. சிவகங்கை:- இது இன்னதெனத் தெரியவில்லை; ஆயினும் கோயிலுக்குட் பிரகாரத்தில் வாயு (வடமேற்கு) மூலையில் ஆறுமுகஸ்வாமிக்குச் சித்திரை, மாசி பிரும்மோற்ஸவங்களில் ஒன்பதாம்நா ளிரவிலும், ஐப்பசிமாதம் சுக்கிலபக்ஷம் ஸ்ரீ ஸ்கந்த ஷஷ்டியன்றும், மார்கழிமாதம் திருவாதிரை நக்ஷத்திரத்திலும், அபிஷேகாதி அலங்காரங்கள் நடக்கும் மேடையின் கீழேயுள்ளதாகச் சொல்லப்படும் ஸ்கந்த கைலாச தீர்த்தமாக இருக்கலாமெனத் தோன்றுகின்றது.
10:- ஏழு சுனை:- திருத்தணிகாசலமூர்த்தி வீற்றிருக்கும் மலைக்குத் தென் கீழ்த்திசையில் மலைச்சாரலில் ஏழுசுனைகளும் கன்னிகைகள் கோயிலும் இருக்கின்றன. இந்தச் சுனைகள் சப்தருஷிகளால் உண்டாக்கப்பட்டன வென்றும் ஆன்றோர் உரைக்கின்றனர். ஆயினும் இது கன்னியர் கோயிலென்று வழங்குகின்றது. மாசிமாதம் *பிரும்மோற்ஸவங்களில் பதினோராநாள், கொடியிறங்கினபின், ஸ்ரீ தணிகாசல மூர்த்தி இவ்வெழுசுனைக் கருகிலுள்ள மண்டபத்துக்கு எழுந்தருளுதல்
வழக்கம்.
----------------
அநுபந்தம். II
திருத்தணிகை உற்ஸவாதிகள்
I. நித்திய உற்சவம்.
காலை சந்தியானவுடனும், அர்த்தஜாம தீபாராதனைக்கு முன்னும் ஸ்வாமி பல்லக்கில் உட்பிரகாரம் சுற்றிவருவார். அர்த்த
ஜாமம் ஆனவுடன் பள்ளியறை ஸ்வாமி தினம் ஒரு அம்மனுடன் சுற்றி வருவார். காலையில் யதாஸ்தானம் வருவார்.
II. வார உற்சவம்
ஒவ்வொரு சுக்கிரவாரத் திரவும் சுக்கிரவார அம்மன் என வழங்கும் கஜலக்ஷ்மி அம்மன் கிளிவாகனத்திற் ப்ராகார
ப்ரதக்ஷிணம் வரும்.
III. பக்ஷ உற்சவம்.
பிரதோஷ தினங்களில் இரவில் சின்ன உற்சவர் வெளிப் பிரகாரம் பிரதக்ஷிணம் வருவர்.
IV. மாத உற்சவம்.
1. சித்திரை, ஆடி, தை இம்மூன்று மாத முதல் தேதிகளிற் பெரிய உற்சவர் புறப்படுவார். மற்றை மாதங்களில் முதல்தேதியிற் சின்ன உற்சவர் புறப்படுவார்.
2. விசாக நக்ஷத்திரந்தோறும் இரவிற் சின்ன உற்சவர் வெளி பிரகார பிரதக்ஷிணம் வருவார்.
3. கிருத்திகை நக்ஷத்திரந்தோறும் பொன்மயில் மீது பெரிய உற்சவர் வருவார். ஆடி கிருத்திகை, கார்த்திகை
கிர்த்திகைகளில் வெள்ளி மயில் மீது வருவார்.
4. சுக்கிலபக்ஷ ஷஷ்டி திதி தோறும் இரவிற் பெரிய உற்சவர் வெளிப்பிரதக்ஷிணம் வருவார்.
5. பௌர்ணமை தோறும் பெரிய உற்சவர் புறப்படுவார்.
6. அமாவாசை தோறும் பெரிய உற்சவர் புறப்படுவார்.
குறிப்பு:- சின்ன உற்சவர் புறப்படு நாளும் பெரிய உற்சவர் புறப்படும் நாளும் ஒன்று சேர்ந்தால் (உதாரணமாக, விசாகமும்
ஷஷ்டியும்) பெரிய உற்சவரே புறப்படுவார்.
------------------------------
V. வருஷ உற்சவம்.
[*உடுக்குறியுற்றன வீசேஷ உற்சவங்கள்.]
மலைக்குக்கீழ் வரும்போழுதெல்லாம் பெரியஉற்சவர்தான் வருவார்.
1. ஆடி.
(1) முதல்தேதி:- தக்ஷிணாயன புண்யகாலம் - இரவிற் பெரிய உற்சவர் மலை மேல் வெளிப் பிரதக்ஷிணம் வருவார்.
(2)* கிருத்திகைக்கு முன் ஐந்து தினங்கள் பெரிய உற்சவர் மாலையிற் கீழே வந்து குமார தீர்த்தப் பிரதக்ஷிணம் வருவார். முதல் நாள் ஒன்று, இரண்டாம் நாள் மூன்று, மூன்றாம் நாள் ஐந்து, நான்காம் நாள் ஏழு, ஐந்தாம் நாளாகிய பரணியன்று ஒன்பது சுற்றுக்கள்; ஒவ்வொருநாளும் கடைசியாகிய சுற்று சஹஸ்ரேசுரரையும் சேர்த்துச் செய்யப்படும். கிருத்திகை முதல் மூன்றுநாள் தெப்பல் உற்சவம்; அளவிறந்த கூட்டம்; திவ்யமான காட்சி. தெப்பலிற் ஸ்வாமி கிருத்திகையன்று 3, மறுநாள் 5, மூன்றாநாள் 7 சுற்றுக்கள் வருவார்.
-----------
2. ஆவணி
(1) சிராவணம் (திருவோணம்) - பவித்ரோற்சவம். காலையில் விசேஷ தீபாராதனை. இரவிற் பெரிய உற்சவர் வெளிப் பிரதக்ஷிணம் வருவார். சிராவணத்தன்று காலை எல்லா மூர்த்திகளுக்கும் பவித்திரந் தரித்தல்.
(2)விநாயக சதுர்த்தி - இரவில் விநாயகர் உற்சவம்.
-------------
3. புரட்டாசி.
(1) நவராத்திரி உற்சவம்- சுக்கிலபக்ஷம் பிரதமையிலிருந்து சுக்கிரவார அம்மன் சர்வவாத்தியமண்டபத்திற் கொலு வீற்றிருக்கை.
(2) விஜய தசமி யன்று பெரிய உற்சவர் மாலையிற் கீழேயிறங்கி தேவடியாள் குளம் பிரதக்ஷிணம் வருவார். வன்னிமர சேவை.
---------
4. ஐப்பசி
கந்தர் சஷ்டி:- சுக்கிலபக்ஷம் பிரதமை ஆரம்பம். ஐந்துநாள் பெரிய உற்சவர் இரவில் வெளிப்பிரதக்ஷிணம் வருவார். ஆறாம் நாள் ஆறுமுகஸ்வாமி வெளிப்பிரதக்ஷிணம் வருவார். ஆறு நாளும் பெரிய உற்சவருக்கும் ஆறுமுக ஸ்வாமிக்கும் அபிஷேகம்.
------------
5. கார்த்திகை
சோமவாரந்தோறும் பெரிய உற்சவர் ப்ராகார பிரதக்ஷிணம் வருவார்.
பரணிதீபமும், கிருத்திகை தீபமும் விசேஷம்; உள்ளே ஸ்தபன மண்டபத்திற் பிரதான விளக்கு ஒன்றுடன் இன்னும் ஆறு நெய் விளக்குகளுக்குப் பூஜை; சுமார் 120-நெய் விளக்குகள் ஏற்றப்படும். கிருத்திகையிரவு ஸ்வாமி சந்நிதிக்கு வடகிழக்கிலுள்ள பச்சரிசி மலைமீது தீபஉற்சவம்; மலைமேல் வெளிப்பிரகாரத்தில் ஈசான மூலையிற் சொக்கபானை நடக்கும். பிரதான விளக்கு பலிபீடத்துக்கு அருகில் வைக்கப்படும்; அவ்விளக்கிலிருந்து சொக்கபானை ஏற்றப்படும். சொக்கபானையானபின் அர்த்தஜாம பூஜை நடக்கும்.
-------------
6. மார்கழி.
சுமித்திரேசுரர் திருவாதிரைக்கு முன் ஒன்பது நாளும் வெளிப்பிரதக்ஷிணம் வருவார். ஆருத்ரா தினத்துக்கு முன் நாள் இரவுஷண்முகஸ்வாமிக்கு அபிஷேகம். வெளிப்பிரதக்ஷிணம் பாதிதூரம் வருவார். வெள்ளை சாத்துபடி; ஆருத்ரா காலை-தரிசனம்; ஷண்முகஸ்வாமி வெளிப்பிரதக்ஷிணம் முழுமையும் வருவார். திருவாதிரை காலை சுமித்திரேசுரர் குமார தீர்த்தத்துக்கு வந்து சஹஸ்ரேசுரர் கோயிலில் இறங்கித் தீர்த்தமாடிப் போவார்.
----------------
7. தை
(1) சங்கிராந்தி:- பெரிய உற்சவர் வெளிப் பிரதக்ஷிணம்வருவார்.
(2) மாட்டுப் பொங்கல்:- மாலையில் மலைக்கு மேற்கில் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டுமைல் தூரத்திலுள்ள ஐயன் குளத்துக்குப் பெரிய உற்சவர் புறப்பாடு; மாடுமடக்குதல்.
(3) கன்று பொங்கல்:- காலையிற் பெரிய உற்சவர் மலைக்குக் கிழக்கில் இறங்கிவந்து கிராமப்பிரதக்ஷிணம். மாலை 3 -மணிக்குமேல் ரெட்டியார் குள மண்டபத்தில் அபிஷேகம்.
(4) தைப்பூசம்:- மாலையில் மூலவருக்கு மது கலச அபிஷேகம்; பாவாடை சாத்துதல்; அன்னநிவேதனம். இரவு - தங்க மயில்வாகன சேவை; பெரிய உற்சவர் புறப்பாடு.
(5) தைப் பூசத்துக்கு அடுத்தநாள் பெரிய உற்சவர் மலைக்கு மேற்கிலும் கிழக்கிலும் உள்ள கருணீகர் மண்டபங்களில் இறங்குவார். பின்பு மலைமேற் குதிரைவாகன உற்சவம்.
தைம் மாதம் 27-ஆந் தேதி "வர்த்தந்தி உற்சவம்"; மாலையில் நூற்றெட்டு சங்கு அபிஷேகம் ஆனபிறகு சாயரக்ஷைதீபாராதனை; இரவு - பொன்மயில் வாகனம்.
-----------
8. மாசி
(1) விசாகத்தில் - தவனோற்சவம் - மூன்றுநாள் நடக்கும்.
*(2) பிரமோற்ஸவம் - மக நக்ஷத்திரத்திற்குப் பத்து நாள் முன்னாக ஆரம்பம்; உற்சவ மூர்த்தி பெரிய உற்சவர்; உற்சவம் மலைமேலே நடக்கும்; த்வஜாரோஹணத்துக்கு முன் நாள் இரவு விநாயகர் உற்சவம் - அங்குரார்ப்பண உற்சவம் - சுமித்திரேசுரர் (அஸ்திர தேவர்) புறப்பாடு; இந்திர தீர்த்தத்திலிருந்து தாசி தலையிற் புற்று மண் கொண்டுவரப்படும்.
முதல் நாள்:- காலை - த்வஜாரோஹணம்; இரவு - கற்பக விருக்ஷம் - (அது பழுதுபட்டபடியால் ஸ்வாமி விமானத்தின் மீது வருவார்).
இரண்டா நாள்:- காலை - சூர்யப்பிரபை; இரவு - பூதவாகனம்.
மூன்றா நாள்:- காலை - சிங்கவாகனம்; மாலை - ஆட்டுவாகனம்.
நான்கா நாள்:- காலை - பல்லக்கு; மாலை - நாகவாகனம்.
ஐந்தா நாள்:- காலை - அன்னவாகனம்; மாலை - வெள்ளிமையில் வாகனம்.
ஆறா நாள்:- மாலை ஆறு மணிக்கு முன் புலிவாகனம்; தாசிகளது மஞ்சள்நீர் உற்சவம். இரவு - யானைவாகனம்; காமக்கூத்து - தேவதாசிகளுள் ஒருத்தி மன்மத வேஷத்துடன் புன்னைக்காய் கொண்டு ஆடல்.
ஏழா நாள்:- காலை - ரதோற்சவம்.
எட்டா நாள்:- காலை - யாளிவாகனம்; மாலை - ஸ்வாமி கிழே ஆறுமுக ஸ்வாமிகோயிலில் ஊஞ்சலாடுதல்; இரவு - ஸ்வாமி மலைக்கு மேற்புறத்துப் போய் அடிவாரத்தி லிறங்குதல்; கன்னமிடுதல்; வள்ளியைத் திருடுதல் - வேடர் கூட்டக் காட்சி; பிறகு, குதிரை வாகனம்; பின்னர் இரவு 3 - மணிக்கு வள்ளியம்மை திருக்கலியாணம்.தேவசேனை கதவடைக்கிறது; பதினைந்து நிமிஷம் பாடல் மங்களம், பின்னர்க் கதவு திறப்பது.
ஒன்பதா நாள்:- காலை-இந்திர விமானம். மாலை - (ஆறுமணி) கந்தபொடி உற்சவம்; இரவு - ஷண்முக ஸ்வாமிக்கு அபிஷேகம், உற்சவம் - பாதி பிரதக்ஷிணம் வருதல்.
பத்தா நாள் - மாசி மகம். காலை - (அஸ்திர தேவர் குமார தீர்த்தத்துக்கு வருவார்). ஷண்முகஸ்வாமி - முழுப்பிரதக்ஷனம் வருதல். மட்டையடி சேவை; தாசிகள் மட்டையா லடித்தல்.மாலை - குமாரதீர்த்தத்துக் கருகில் தீர்த்தவாரி; மண்டபத்திற் பெரிய உற்சவருக்கு அபிஷேகம். இரவு - மூன்றுமணிக்குக் கொடியிறங்குதல் ; (த்வஜ அவரோஹணம்).
பதினோரா நாள்:- இரவு - பத்துமணிக்கு மலைமேல் அரண்மனைக் கருகில் பந்தம்பறி உற்சவம்; வள்ளியம்மை
தேவசேனைக்கு சமாதானம்.
பிரமோற்சவம் முடிந்த மறுநாள் ஸ்வாமி எழுசுனைக்குப்போய் வருவார். இது மாமியார்வீடு எனப்படும்; இங்கே கலியாண மருவுண்ணுதல்.
--------
9. பங்குனி
* அஸ்த நக்ஷத்திரம் - ஆற்று உற்ஸவம் எனவழங்கும் திருவூறல் உற்சவம்; மலைக்கு மேற்கு 2-மைல் தூரத்தில் நந்தியாற்றங் கரையிற் பெரிய உற்சவருக்கு அபிஷேகம் இரவில் திருவூறல் உற்சவம்.
-----------
10. சித்திரை
பிரமோற்ஸவம்:- சித்திரை நக்ஷத்திரத்துக்குப் பத்துநாளைக்கு முன்பு ஆரம்பம்; மாசி பிரமோற்சவம் எப்படியோ அப்படியே; ஆனால் வேடர் உற்சவ மாத்திரம் கிடையாது. எட்டாநாள் இரவு தேவசேனை திருக்கலியாணம். வள்ளியம்மை கதவடைப்பது. இந்தப் பிரமோற்சவம் முடிந்த மறுநாள் பெரிய உற்சவர் திருத்தணிக்குக் கிழக்கில் 6- மைல் தூரத்திலுள்ள விநாயகபுரம் (மாமியார் வீடு எனப்படும் தேவசேனையின் தாயார் வீடு) போய்வருவார்.
-----------
11. வைகாசி
1. விசாகம்:- பெரிய உற்சவருக்கு மாலையில் அபிஷேகம்; இரவு - வெளிப்பிரதக்ஷிணம் வருவார்.
2. வசந்தோற்ஸவம்:- சுக்கிலபக்ஷம் பிரதமை முதல் பத்து நாள் நடக்கும் - துவாதசி - மாலை - ஐயன்குள உற்ஸவம். பத்து நாளும் பெரிய உற்சவர் சர்வவாத்திய மண்டபத்துக்கு வருவார். எட்டாவது நாள் பகல் பெரிய உற்சவருக்குக் கச்சேரி மண்டபத்தில் அபிஷேகம். *ஒன்பதா நாள் பெரிய உற்சவருக்குப் பள்ளியறை சமீபத்திற் பகல் 1-மணி முதல் 5-மணி வரையில் விசேட அபிஷேகம்; அன்றிரவு குருக்கள்மார் உற்சவம்.
--------
12. ஆனி
ஆனி மாதத்தில் விசேட உற்சவங்கள் ஒன்றுமில்லை.
குறிப்பு:-
ஷண்முகஸ்வாமி புறப்பாடு:- இவர் மலைவிட் டிறங்குவதில்லை; மலைமேலே வெளிப் பிரதக்ஷணம்; பிரம்மோற்ஸவ தினங்களில் இரண்டு நாள், ஐப்பசி சஷ்டி ஒரு நாள், மார்கழி திருவாதிரை ஒரு நாள்; ஆக நான்கு தினங்கள்.
பெரிய உற்சவர் மலைக்குக் கிழக்கே இறங்கிவரும் நாள்கள்:- (1)கன்று பொங்கல், (2) தைப்பூசத்துக்கு அடுத்த நாள். (3) பிரம்மோற்ஸவம், (4) ஆடித்தெப்பம், (5) விஜயதசமி.
மலைக்கு மேற்கே இறங்கிவரும் நாள்கள்:- (1) ஆற்று உற்சவம், (2) தைப்பூசத்துக்கு அடுத்த நாள். (3) மாட்டுப் பொங்கல், (4) பிரமோற்சவம், (5)வைகாசி ஐயன்குளத் திருவிழா.
வேலு மயிலுந் துணை.
-----------------------------------------------------------

-
*செம்மைய ஞான சத்தித் திருவுருக் கொண்ட செம்மல்
எம்மின்வே றல்லன் யாமு மவனின்வே றல்லேங் கண்டீர்
அம்மழ வடிவி னான்பா லன்புசெய் தவர்பி ழைத்தோர்
நம்மடித் தொண்டு செய்தோர் நவைபடப் பிழைத்தோ ராவர்.
ஞானசத்தி ஸ்வரூபனான நமது குழந்தை வேறு நாம் வேறு அல்ல; அவனுக்கு அன்பு செய்தவர் எமக்கு அன்பு செய்தவராவர்;
அவனுக்குப் பிழை செய்தவர் எமக்குப் பிழை செய்தவராவர்" எனக்கூறி ஆணவங்கொண்ட பிரமனைச் சிறையினின்றும் விடுத்தலரிது என்றார். விஷ்ணு முதலினோர் பின்னும் இரந்து வேண்டச் சிவபிரான் நந்தி தேவரிடஞ் சொல்லியனுப்பத் தந்தை விரும்பியவாரே குமாரக்கடவுள் பிரமதேவரைச் சிறையினி்ன்றும் விடுத்துக் கயிலைக்கு வரச் சிவபிரான் குமரனைத்தழுவி, 'ஏனோ பிரமனைச் சிறையிலிட்டாய்' எனப், 'பிரணவப் பொருள் தெரியாதவன் சிருஷ்டித் தொழில் செய்யலாமோ' எனக் குமரக்கடவுள் விடையளித்தனர். சிவபிரானும், 'மைந்தனே! உனக்குத் தெரியுமானாற் பிரணவப் பொருளைக் கூறுக' என்ன, முருகக்கடவுள் அதனைச் சொல்ல வேண்டிய முறைப்படிச் சொல்ல வேண்டும் என்னச் சிவபிரானும் அதற்கிசைந்து, "நீ விருப்பமுற்றுறையுந் தணிகை மலைக்கு உபதேசம் பெறும்பொருட்டு நாம் வருகின்றோம்; மாசி மகமும் வருகின்றது; அப்பொழுது உணர்த்துவாயாக" என்றனர். அவ்வாறே தணிகை மலைக்கு வடகிழக்கெல்லையில் ஒரு க்ஷணநேரம் தணிகேசனைச் சிவபிரான் தியானித்தமர, குருநாதனும் சிவபிரானிருந்த இடத்துக்குத் தென்திசையில் வந்தமர்ந்து பிரணவப் பொருளெலாந் தந்தைக்கு உபதேசஞ் செய்தனர். தனக்குத் தானே மகனுங் குருவும் சிஷ்யனுமாகிய சதாசிவ மூர்த்தி பிரணவ ஸ்வரூபனாகிய குமாரக் கடவுளின் வீரத்தைக் கருதி மகிழ்ந்து ஆர்ப்பரித்தனர்.
-
*தனக்குத்தா னேமக னாகிய தத்துவன்
தனக்குத்தா னேயொரு தாவருங் குருவுமாய்த்
தனக்குத்தா னேயருட் டத்துவங் கேட்டலுந்
தனக்குத்தா னிகரினான் தழங்கிநின் றாடினான்.
ஆதலால் அவ்விடத்துக்கு வீராட்டகாசம் என்னும் பெயருண்டாயிற்று. இங்ஙனம் ஆர்ப்பரித்த சிவபிரான் அங்கேயே சிவலிங்க ரூபமாயமர்ந்தனர். வீராட்டகாசரையும் அவருக்குச் சமீபத்திலுள்ள அவரது ஆசானாகிய ஆறுமுகக் கடவுளையும் வணங்குபவருடைய பிறவிநோய் தீரும். கீழைத் திருத்தணிக்குச் சமீபத்தில் நந்தியாற்றுக்குத் தென்கரையில் ஆறுமுகஸ்வாமி கோயிலும் வடகரையில் வீராட்டகாசர் கோயிலும் உள்ளன. சிவபிரானுக்குத் திருத்தணிகாசல மூர்த்தி பிரணவோபதேசஞ் செய்ததைத் திருப்புகழ் 1, 4, 6, 9, 14, 15, 21, 23, 37, 39, 41, 59, 65, ஆம் பாடல்களிற் காண்க.
----------------------------
6. குமரேசப் படலம்
ஒரு முறை குமாரக் கடவுள் ஞான சத்தியைப் பெற விரும்பிக் கயிலைக் கங்கையைத் தணிகைக்கு வரவழைத்துத் தாமிருக்கும் இடத்துக்கு வடகீழ்ப் பக்கத்தில் ஆபத்சகாய விநாயக மூர்த்தியைத் தாபித்து வழிபட்டுச் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து முறைப்படி பூசிக்கச் சிவபிரான் எதிர் தோன்றி 'உனக்கு வேண்டிய வரம் யாது,'? என்ன "அவுணர் உயிரைக் குடிக்கும் நும் ஞானசத்தி வேண்டும்" என்ன நீலகண்டரும் அவ்வரத்தைத் தந்து இலிங்கத்திடை மறைந்தருளினார். இவ்விலிங்கம் குமாரலிங்கம் எனப் பெயர்பெறும்; இது மலைமீது கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. ஞானசத்தி பெற்ற ஸ்வாமிக்கு ஞானசத்திதரர் என்றும் அவரால் வரவழைக்கப் பெற்ற கயிலைக் கங்கைக்குக் *குமார தீர்த்தம் என்றும் பெயர் போந்தன. மாசி மகத்தில் இத்தீர்த்தத்தில் ஸ்நாநஞ் செய்து குமாரலிங்கத்தையும் ஞானசத்திதரரையும் தரிசித்தல் மிகவும் விசேஷமானது. முருகபிரான் ஞானசத்திதரராய்த் திருத்தணிகையில் வீற்றிருப்பதைத் திருப்புகழ் 51, 56 ஆம் பாடல்களிற் காண்க.
---------------------
* இது மலைக்குக் கிழக்கில் அடிவாரத்தி லுள்ளது; சரவணப் பொய்கை என வழங்குகின்றது. "திருக் குள நாளும் பலத் திசை மூசுந் திருத்தணி" திருப்புகழ் [11]
-----------------------------
7. பிரமன் சிருஷ்டிபெறு படலம்.
சிறைவிடுபட்ட பிரமதேவர் தம்முடைய உலகத்துக்குச் சென்று சிருஷ்டித் தொழில் செய்ய முயன்றும் அஃது இயலாமை கண்டு மனநொந்து சிவபிரானை நோக்கித் தவஞ் செய்தார். சிவபிரான் பிரம தேவருக்கு முன் தோன்றியருளித் தணிகாசலத்தின் பெருமையைக் கூறி நீ நமது குமரனை நோக்கி அத்தலத்தில் தவஞ் செய்தால் உன் எண்ணம் நிறைவேறு மென்றனர். அவ்வாறே பிரமதேவரும் விருத்தபுரம் எனப்படும் தணிகை நகரை யடைந்து மலைக்குக் கீழ்த்திசையில் தீர்த்தம் ஒன்று உண்டு பண்ணி, ஆபத் ஸகாய விநாயகரைப் போற்றிக் குமாரலிங்கத்தைத் துதித்து வேற்கரத்தண்ணலின் பாத தாமரையில் வீழ்ந்து வணங்கித் தவஞ் செய்தனர். ஸ்வாமி அருள் சுரந்து எதிர் தோன்றி வேட்ட வரம் எல்லாந் தந்தருளினர். வைகாசி விசாகத்திற் *பிரம தீர்த்தத்தில் ஸ்நாநஞ் செய்வது மகா விசேடம். பிரம தேவர் பூசித்துத் தொழுததைத் திருப்புகழ் 14-ஆம் பாடலிலும், சிவபிரான் தணிமலையை மெச்சிப் புகழ்ந்ததை 32-ஆம் பாடலிலுங் காண்க.
* பிரமதீர்த்தம் மலைக்குக் கிழக்கே படி ஏறிச்செல்லும் வழியிற் பாதி தூரத்தில் வலப்பால் இருக்கிறது.
----------------------
8. நந்தி யுபதேசப் படலம்.
ஒரு முறை நந்தி தேவர் சிவபிரானை வணங்கிப் பேரின்பமாம் முத்தி நிலையை விளக்கியருளல் வேண்டும் எனப் பிரார்த்தித்தனர்.முக்கட் பெருமான் "நீ தணிகாசலத்துக்குச் சென்று தவம் புரிந்தால் நமது குமரன் தெய்வநதி யொன்றை வரவழைத்து உன்னை அதில் தோயச்செய்து பரிசுத்தமாக்கிப் பேரின்ப நிலையையும் விளக்கியருள்வான்" என்றனர். அத்திருமொழியைக் கேட்ட நந்திதேவர் அவ்வாறே திருத்தணிகைக்கு வந்து ஒரு குகையிற் பல காலந்தவஞ்சைய்ய மயில்வாகனப் பெருமான் எதிர் தோன்றி, நந்தியின் உடலைத் தமது திருக்கரத்தால் தடவியருளி, "மிக்க தவஞ் செய்து உடல் வருந்தினை. நீ வேண்டிய வரம் யாது?" என, நந்திதேவர் 'சிவதத்துவ அமிர்தம் எனப்படுந் தீர்த்தத்தை வரவழைத்து அதில் யான் தோய்ந்து எழவும், பதி, பசு, பாச இலக்கணங்கள் யான் உணர்ந்து உய்யவும் தேவரீர் அருளல் வேண்டும்' என்ன, முருகபிரானும் தணிகைக்கு நிருதி திசையிலிருந்து அத்தீர்த்தத்தை வரவழைக்க அது தணிகை மலையை வலமாக வந்து வீராட்ட காசத்தை நணுகிப் பின்னர்க் கடலிற் புகுந்தது. அந்தத் தீர்த்தத்துக்கு "நந்தி நந்தினி", "நந்தி யாறு" எனவும், நந்திதேவர் தவஞ் செய்திருந்த குகைக்கு "நந்தி குகை" எனவும் பெயர் போந்தன. நந்தி தேவர் அந்நதியில் மூழ்கிப், பதி, பசு, பாச இலக்கணங்க ளெல்லாம் உபதேசிக்கப் பெற்றனர். இந்நதியில் தைப்பூசத்தில் ஸ்நாநஞ் செய்வது மகா விசேடம். உபதேசம் பெற்ற நந்திதேவர் கோயிலை வணங்கி, அப்பாற் குன்றினை வணங்கிப் பிறகு நந்தியாற்றை வணங்கிப் பின்னர் அவ்வூர் எல்லையை வணங்கித் தணிகைமலை கண்ணுக்கு மறையு மட்டும் அத்தலத்தையே கண்ணுற்றவராய்ப் புறங்காட்டாது சென்று கயிலையங்கிரியை யடைந்தனர்.
-------------------
9. அகத்திய னருள்பெறு படலம்.
அகத்திய முநிவர் ஒரு முறை சிவபிரான் திருவடியில் வீழ்ந்து வணங்கிச், "செந்தமிழ் என்னும் பாஷையை யெனக்கு அறிவுறித்தி ஞானமும் அருளல் வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டனர். சிவபிரான், " எவ்வரம் வேண்டு மென்றாலும் யாம் உபதேசம் பெற்ற ஸ்தானமாகிய தணிகை மலைக்குச் சென்று வேலவனை நோக்கித் தவஞ் செய்வாயாக; உன் எண்ணம் நிறைவேறும்; அத் தலத்துக்குப் போகலாம் என ஒருவன் நினைத்தாலும், அவ்வூர்ப் புறமாகச் சென்றாலும், செல்வேன் எனப் பத்தடி தூரம் நடந்தாலும், அவனுடைய நோயெலாங் கொத்தோடு தொலைந்து போகும்.
-
*அத்தலந் தன்னையா மடைகு வாமெனப்
புத்தியி னினைப்பினும் புறத்திற் செல்லினும்
பத்தடி நடப்பினும் பரித்த நோயெலாங்
கொத்தோடு மவர்புறம் வழிக்கொண் டோடுமே.
அத்தலத்தில் உள்ள குமார தீர்த்தம் குட்டநோய், வாதநோய், சூலை நோய் முதலிய நோய்களையும், பூதம், பேய் முதலியவற்றால் உண்டாகுந் துன்பங்களையும் நீக்கிக், கல்விச்செல்வம், பொருட்செல்வம், மக்கட்பேறு முதலிய சகல ஐசுவரியங்களையுங் கொடுக்கும். அத்தலத்தின் பெயர்களுள் ஒன்றை ஒரு முறை கூறினும் பாவக் குப்பைகள் பாழ்படும்; ஞான சித்திகள் கையுறும். அத்தலம் மலமாகிய இருட்டை விலக்கும் ஞானசூரியன்; மருட் பிணியை நீக்கு மருந்து; விரும்பிய பொருள்களைத் தருஞ் சிந்தாமணி. கார்த்திகைக் கிருத்திகையில் அத்தலத்திற் குமாரக்கடவுளை வணங்குபவர் முத்தி கூடுவர்; அங்கே ஆறெழுத் தோதுபவர் சாரூப பதவி சார்வர் கணிகையரைக் காணும் விருப்பத்தாலோ வேறு எவ்வித காரணத்தாலோ தணிகையை யடைந்து முருகக் கடவுளைப் பணிந்து வணங்குபவர் கந்தலோகத்தை அடைவர். அத்தலத்திற் செய்யுந் தானம் மற்றைய தலங்களிற் கொடுப்பதினும் கோடி மடங்கு விசேடமாகும். அங்கு முருகக்கடவுள் இச்சை, ஞானம், கிரியை யென்னும் மூன்று சத்திகளும் மூன்று இலைகளாகக் கிளைத்தெழுந்த வேலாயுதத்தை வலக்கையிலேந்தி, இடது கையைத் தொடையிலிருத்தி ஞான சத்தி தரன் எனத் திருப்பெயருடன் விளங்குவார்.
-
*செங்கமல மலரேய்க்கு மொருதிருக்கை குறங்கமைத்துச் செம்பொன் மேருத்
துங்கவரிச் சிலைக்கடவு ளருள்ஞான சத்தியொரு தொடிக்கை யேந்திப்
பொங்குமருட் கருணைவிழிக் கடையொழுக மலர்ந்தமுகப் பொலிவினோடும்
அங்கணமர் ஞான சத்தி தரனையகத் துறநினைப்போர் அவனே யாவர்.
அவனுடைய திருவுருவை நினைத்துத் தியானிப்போர் சாயுஜ்ய பதவி யெய்துவர்'- என் றின்னபல விசேடங்களை எடுத்து ஓத, அகத்தியர் கேட்டுப் பரமாநந்தம் உற்று உடனே விடைபெற்றுத் தணிகை மலைக்கு வந்தார்; நந்தியாற்றில் ஸ்நாநஞ் செய்தார்; வீராட்டகாசத்தையும் சாமிநாத னாலயத்தையுங் கண்டு தொழுதார்; அங்குச் சமீபத்திலுள்ள சிவகங்கையைத் தரிசித்து அதன் கரையில் ஆதிவராஹபுரம் எனப்படுந்தானத்திற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூசித்தார். பின்னர் ஆறுமுகப்பெருமானைக் குறித்துப் பல நாள் அருந்தவம் இயற்ற, இறைவன் எதிர் தோன்றி, அகத்தியருக்குத் தமிழ்ப் பாஷையின் இலக்கண மெல்லாம் ஓதி ஞானோபதேசமுஞ் செய்தனர். அகத்தியருந் தணிகை மலையிற் பல நாள் இருந்து பின்னர்ப் பொதிய மலைக்குச் சென்றனர்.
---------------------
10. ஸ்ரீபரிபூரண நாமப் படலம்.
முன்னொரு கற்பத்திற் பிரபாகரன் என ஒரு அரசன் இருந்தான். அவன் மனைவி பெயர் சுகுமாரி. இவருக்கு நான்கு மக்கள் பிறந்தனர். இந் நால்வருக்கும் சூரன், பதுமன், சிங்கன், தாரகன் என்று பெயர். தந்தையின் பிறகு இந்நால்வரும் அரசாண்டனர். ஒருமுறை அகத்திய முநிவர் இவர்களிடம் வர, சூரனும் பதுமனும் அவரை வரவேற்று வணங்க, அவர் இவர்களுக்குக் குமாரக் கடவுளின் பெருமையை எடுத்தோதினர். பின்ன ரொருநாள் திருணபிந்து முநிவர் சிங்கனுக்குந் தாரகனுக்குந் காளியின் பெருமையையும் ஹரிஹர புத்திரனான சாத்தாவின் பெருமையையும் ஓதினர். சூரன், சிங்கன், தாரகன் என்னும் மூவரும் குமாரக் கடவுள், காளி, சாத்தா என்பவர்களுக்கு முறையே வாகனமான மயில், சிங்கம், யானை ஆகும் பேற்றையும், பதுமன் குமாரக் கடவுளின் கொடியான கோழியாகும் பேற்றையும் அடைய விரும்பி மிக்க ஆசையோடு அவ்வக் கடவுளை நோக்கித் தவம்புரிந்தார்கள். முன்னமே வாகனமும் கொடியுமாய் இருந்த மயிலும், கோழியும் இவர்கள் இவ்வாறு தங்கள் பதவியைக் கவரத் தவம் புரிவதை யறிந்து 'எங்கள் பதவியை நீங்கள் கவர்ந்துகொள்ள முயலுவதாற் பூதகணங்களாகக் கடவீர்கள்' என இந் நால்வரையும் சபித்தன. இங்ஙனம் சாபத்தாற் பூதகணங்களான நால்வரும் சிவகணங்களோடிருந்தபொழுது தேவர்களுடன் கூடிக் கொண்டு அசுரர்களை வேரறுக்க, அசுரர் தலைவன் இவ்விஷயத்தைச் சிவபிரானிடம் விண்ணப்பிக்கச், சிவபிரானும் 'எமது உத்தரவு இல்லாமல் நீங்கள் தேவர்களுக்கு உதவிபுரியும் பொருட்டுக் காவல்விட்டுப் போனீர்கள். இனி அசுரர் குலத்திற் பிறந்து அத்தேவர்களுக்கே துன்பம் உண்டுபண்ணகடவீர்கள்' எனச் சபித்தனர்.
இங்ஙனம் அவுணர் குலத்தில் உதித்த சூரன், பதுமன் (சூரபத்மன்), சிங்கன் (சிங்கமுகாசுரன்), தாரகன் (தாரகாசுரன்) என்னும் இவர்கள் தேவர்களுக்குப் பெரிதுந் துன்பம் விளைகித்தனர். நிற்க, தவஞ்செய்திருந்த இவர்களைச் சபித்த மயிலையுங் கொழியையுங் குமாரக் கடவுள் கோபித்துத் "தவத்தை குலைத்த பாபத்தால் நீங்கள் எமக் கருகிலிருக்கும் பேற்றை இழந்தீர்கள் " என்று அவைகளை நீக்க, அவை காஞ்சிமா நகருக்கு வந்து முருகக் கடவுளை நோக்கித் தவஞ்செய்து அவரடி திருவடி நீழலையடைந்தன. சூரபதுமனும் அவன் தம்பியருஞ் செய்யுங் கொடுமைகளைச் சகிக்க முடியாத தேவர்களுடைய வேண்டுகோளுக் கிரங்கி ஸ்ரீ சுப்பிரமணிய மூர்த்தி போருக் கெழுந்தறுளித் சூரபதுமனைப் பிளந்தேறியச் சூரன் மயிலாகவும் பதுமன் கோழியாகவும் மாறி முதலில் தாம் இச்சித்த வண்ணமே முருகபிரானைத் தாங்கும் மயிலாகவும் கொடியாகிய கோழியாகவு மாயினர்.சிவபிரானது சாபத்தால் அசுரரான சிங்கனுந் தாரகனும் முருகக் கடவுளாற் சம்ஹாரஞ் செய்யப்பட்ட பிறகு தாம் முதலில் எண்ணிய கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளக் கருதி, நந்தி தேவரிடம் போய் "ஐயனே! காளியின் வாகனமான சிங்கமும் ஹரிஹர புத்திரரின் வாகனமான யானையு மாகும் பேறு கிடைக்கக் கருதிப் பல நாள் நாங்கள் தவஞ் செய்தோம். இடையூறுகள் பல வந்தன. எங்கள் எண்ணத்தை இனியேனும் நிறைவேற்றவேண்டும்" எனப் பிரார்த்திக்க, நந்தி தேவரும் அது வரையிலும் வாகனங்களாய் முத்தியை நாடியிருந்த (காளியின் வாகனமாகிய) சிங்கத்துக்கும் (ஹரிஹரபுத்திரரின் வாகனமான) யானைக்கும் முத்தி தந்து, சிங்கனையும் தாரகனையும் முறையே காளிக்கும் ஹரிஹர புத்திரர்க்கும் புதுவாகனங்க ளான சிங்கமும் யானையுமாக அனுப்புவித்தனர். இவ்வாறு நால்வர் கோரிக்கையும் நிறைவேறிற்று.
சூரசம்ஹாரஞ் செய்த சுப்பிரமணியமூர்த்தியைத் தேவர்கள் பூஜை செய்தனர். தேவர் தலைவனாம் இந்திரன் திருப்பரங்குன்றத்திற்றன் மகளான தேவசேனையை ஸ்வாமிக்கு மணஞ் செய்வித்தான். பிறகு தேவசேநா சமேதராய் முருகக் கடவுள் கந்த வெற்புக்குச் சென்று அங்குத் தேவசேனையை நிறுத்தித் தாம் மாத்திரம் தணிகையங்கிரிக்கு வந்தமர்ந்தனர். அசுரர்கள் ஆண்டிருந்த உலகங்களிற் சேகரிக்கப் பட்டிருந்த பொன்னுலகத்து அரும்பொருள்களான காமதேனு, சிந்தா மணி முதலிய பல வளங்களையும் முருகக் கடவுள் தனிகைமலையிற் சேர்ப்பித்தருளிய காரணத்தால் அம்மலை ஸ்ரீ பூரணகிரி எனப் பெயர் பெற்றது.
---------
11. பிரம னருள்பெறு படலம்.
ஒரு காலத்திற் பிரமதேவர் சரஸ்வதியொடு திருத்தணிகைக்கு வந்து வேற்படையண்ணலைப் பூசித்து வழிபட அவர் பிரமதேவர் முன் எழுந்தருளி உனக்கு வேண்டிய வரம் யாதெனப் பிரமதேவர் 'ஸ்வாமி! எங்கள் உலகத்திருந்த செல்வங்களை யெல்லாம் சூரபத்மன் தனது நாட்டுக்குக் கொண்டு போயினன்; அவை யெல்லாம் இப்பொழுது தணிகாசலத்தில் உள்ளன; அவைதமைப் பெற விரும்புகிறேன்; பின்னும் என்மனைவி பூசித்த லிங்கம் சரஸ்வதி லிங்கம் எனவும் என் பெயரால் விளங்கும் பிரமதீர்த்தம் சரஸ்வதிதீர்த்தம் எனவும் வழங்குமாறும். அத்தீர்த்தத்தில் மார்கழித் திருவாதிரைப் பௌர்ணமியிற் செய்யும் ஸ்நாநம் மிக்க பலனைத் தருமாறும் அருள் புரிய வேண்டும்', எனப் பிரார்த்திக்க முருகக் கடவுள் அவ்வாறே வரந்தந்து மறைந்தருளினர். பிரமதேவர் வழிபட்டதைத் திருப்புகழ் 14-ஆம் பாடலிற் காண்க. ----------------
12. நாரண னருள்பெறு படலம்.
ஒருகாலத்தில் மஹாவிஷ்ணு தணிகை மலைக்குச் சமீபத்தில் வந்து அதற்கு மேற்கு 1 1/2 - யோசனை தூரத்தில் ஒரு நகரத்தை உண்டாக்கி அங்கு ஓர் இலிங்க மூர்த்தியைத் தாபித்து ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கித் தமது உள்ளதை அடக்கித் தவமியற்றினர், சிவபிரான் விஷ்ணு மூர்த்திக்கு எதிர்தோன்றி, 'அன்ப! தணிகை நாயகனைத் தொழுது உன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்' என்று சொல்லி, அவர் விரும்பிய வண்ணம் அன் நகரத்துக்கு மாதவபுரம் எனப் பெயர் வழங்குமாறு அநுமதிதந்து மறைந்தருளினர். பின்னர் விஷ்ணு மூர்த்தி தணிகை மலையை யடைந்து குமார தீர்த்தத்தில் ஸ்நாநஞ் செய்து வெண்ணீறும் ருத்ராக்ஷ மாலையும் அணிந்து தணிகைமலைக்கு மேற் பாரிசத்தில் விளங்கின ஒரு சுனைக் கரையில் தமது உடம்பிற்புற்று மூடப் பலகாலந் தவஞ்செய்தனர். அத்தவத்துக் கிரங்கித் தணிகாசல மூர்த்தி மயில் வாகனத்தின் மீது வந்து விஷ்ணுமூர்த்திக்குக் காட்சிதந்து அவரைநோக்கி " நீ மாதவஞ் செய்து இளைத்தனை " எனக் கூறித் தமது திருக்கரத்தால் விஷ்ணுமூர்த்தியின் உடலைத் தைவர, அவர் தமது கைம்மலர்களைக் கூப்பி உள்ளம் பூரிப்பத் தோத்திரஞ்செய்து , சாருகாசுரனாற் கவரப் பட்ட தமது சக்கிரம், சங்கு முதலியவைகளைத் தாம் மீட்டும் பெறுமாறு விண்ணப்பஞ்செய்ய வேலவரும் அவற்றைத் தந்தருளி, இந்தச் சுனையிற் பங்குனி யுத்திரமும் ஞாயிற்றுக்கிழமையுங் கூடிய சுபதினத்தில் ஸ்நாநஞ் செய்பவர்கள் தாம் நினைத்தவை எல்லாங் கைகூடப் பெறுவர் எனக் கூறி மறைந் தருளினார். விஷ்ணு மூர்த்தி வழிபாடு செய்ததையுஞ் திருப்புகழ் 14-ஆம் பாடலிற் காண்க.
----------------
13. இந்திரா னருள்பெரு படலம்.
தணிகைமலைக்குச் சமிபத்தில் தென்பாரிசத்திற் கடப்பமரஞ் செறிந்த சூழலில் இந்திரன் ஒரு ஊரையும் தீர்த்தத்தையும் உண்டு பண்ணிச் சிவலிங்கமுந் தாபித்தான். அவ்வூருக்குக் கடம்பமாநகரம் எனவும் ஸ்வாமிக்கு அமராபதீசுரர் எனவும் பெயர் வந்தன. பின்னர் இந்திரன் தணிகைமலையை யடைந்து மலைக்கு தென்புறத்தில் ஒரு சுனை யிருப்பதைக் கண்டு ஸ்வாமியை நித்தம் அருச்சிக்க நினைத்துத் தேவ லோகத் திருந்து உற்பலக் கொடியை வரவழைத்து அச் சுனையில் அதை வளர்க்கக் கருதிச் சுனைக் கரையில் விநாயக மூர்த்தியைப் பூசித்தான். அதனால் அம்மூர்த்திக்குச் செங்கழுநீர் விநாயகர் எனப்பெயர் வந்தது. காலை, உச்சி, மாலை என்னும் மூன்று வேளைகளிலும் நீலோற்பலம் மலர அம்மலர்களால் இந்திரன் தணிகை நாதனைத் தினந்தோறும் முக்காலமும் அர்ச்சித்துப் பணிந்துவர, அவர் இந்திரனுக்கு எதிர் தோன்றி 'நீ வேண்டிய வரம் யாது?' என, அவன் 'ஸ்வாமி! தேவர்களெல்லாம் இங்குத் தங்களை வழிபட வந்துள்ளார்கள்; அவுணர்களாற் கவரப்பட்ட எங்கள் பொன்னுலகத்துச் செல்வமெல்லாம் இங்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கின்றன; அவைதமைப் பெற விரும்புகின்றோம்; மேலும், இந்தச் சுனையில் நீலோற்பலமலர் எக்காலத்துந் தவறாது மலரவும், தாங்கள் இம்மலர்களை யணியவும், அதனால் எனக்கு இடர் ஒழியவும், இத்தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டவர்களுடைய வினைகளெல்லாம் அகலவுந் திருவருள் புரியவேண்டுமென்று பிரார்த்திக்க, இறைவன் அவ்வாறே வரந் தந்து, காமதேனு, சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி முதலியவைகளை யெல்லாம் இந்திரன் பெறும்படி யருளிச்செய்து மறைந்தனர். இந்திரநீலச் சுனையின் தீர்த்தமும் மலரும் இன்றும் ஸ்வாமிக்கு உபயோகப்படுகின்றன. இதனால் திருத்தணிகைக்கும் இந்திரநகரம் என்னும் பெயர் வந்தது. இவ்வாறு இந்திரனும் தேவர்களும் வழிபட்டதைத் திருப்புகழ் 14, 34, 56, 64 ஆகிய பாடல்களிலுங், குவளைமலர் மலருவதை 5, 22, 25, 26, 27, 31, 36, 37, 40, 44, 51, 52, 62, 63 ஆகிய பாடல்களிலுங் காண்க.
-------------------------
14. நாக மருள்பெறு படலம்.
திருப்பாற்கடல்கடைந்த காலத்து மத்தாகிய மந்தரமலையிற் கயிறாக இருந்து அதனில் உரைந்து இழுக்கப்பட்டமையால் வாசுகியென்னும் பாம்பு உடல் முழுதும் புண்ணாகி மெலிவுற்றது. அவ் வாசுகி தணிகை மலைக்குவந்து அதன் மேல்பா*கத்திருந்த சுனையொன்றில் மூழ்கித் தணிகைநாதரை நோக்கித் தவம்புரிந்து அவரருளால் நோய் நீங்கிச் சுகப்பட்டது. அந்தச் சுனை நாகசுனை எனப் பெயர்பெறும். அதில் ஸ்நாநஞ் செய்பவர் நோய் தீர்ந்து சுகமுறுவர். வாசுகி வழிபட்டதைத் திருப்புகழ் 60-ஆம் பாட்டிற் காண்க.
---------------------
15. இராம னருள்பெறு படலம்.
தந்தையின் சொல்வழி ஸ்ரீராமர் கானகத்து வாழுங் காலத்திற் சீதாதேவி காணாது போக, இராமர் அகத்திய முநிவரை யடைந்து 'ஜாநகியை வௌவின தீயரை வெல்லும் சத்தியை எனக்குத் தந்தருளல் வேண்டும்' எனப் பணிந்து கேட்டுக் கொண்டனர். முநிவரும் விபூதி ருத்ராக்ஷங்களின் பெருமையையும் அவைகளின் இலக்கணத்தையும் அவருக்குக் கூறி 'இவைகளைச் சாதனமாகக் கொண்டு சிவபூஜை செய்து உன் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்' என்றனர். அவ்வாறே இராமர் பூஜை செய்யச் சிவபிரான் தோன்றியருளி 'யாம் உனக்குச் சிவஞானம் தருகின்றோம்; அது பெற்றால் மாநுட வாழ்க்கை மாயை என உனக்குப் புலப்படும்' என்றனர். இது கேட்ட இராமர் சிவபிரான் திருவருளை மறுத்தற் கஞ்சி, அவர் திருவடியிற் பன்முறை விழுந்து வணங்கி "ஐயனே! இருவினை யிடையிட்ட கொடியேன் அடியேன்; ராக்ஷதர் செய்கையை எண்ணும் பொழுதெல்லாம் கோபம் உண்டாகின்றது; சீதையின் உருவை நினைக்கும் பொழுதெல்லாம் காமம் உண்டாகின்றது" என்று சொல்லச் சிவபிரான் நகைத்து இராமருக்கு வேண்டிய ஆற்றலையும் ஆயுதங்களையுந் தந்து மறைந்தருள இராமரும் அவற்றின் உதவியால் இராவண சம்ஹாரஞ் செய்தார்.
பின்பு ராமேஷ்வரத்திற் சிவபூஜை முடித்து, "அந்தோ! சிவபிரான் எனக்கு ஞானோபதேசஞ் செய்கின்றேன் என்றபொழுது மோகத்திற் பட்டவனாய்ச் சமயத்தை வீணே இழந்து விட்டேனே" என மன மிக நொந்து, இனியாகிலும் ஞானம் பெற வேண்டுமெனக் கருதிச் சிவத்தியானத்திலிருந்தனர். சிவபிரான் பிரத்யக்ஷமாகி 'உன் உள்ளம் இன்னும் அடங்கவில்லை; உள்ள மடங்காவிட்டாற் சிவஞானங் கிட்டாது; நீ திருத்தணிகைக்குச் சென்றால் உள்ளமு மடங்கும்; ஞானமும் பெறுவை' என்று திருவாய்மலர்ந்தருளி மறைந்தனர். அவ்வாறே ஸ்ரீராமர் திருத்தணிகைக்கு வந்து அங்குள்ள நந்தி தீர்த்தம் முதலிய தீர்த்தங்களில் ஸ்நாநஞ் செய்து தவத் திருந்தனர். முருகபிரானும் பிரசன்னராய்ச் சிவஞானம் பாலித்தருளினார். இராவண சம்ஹாரஞ் செய்து ஜயித்து வந்தமையால் இராமமூர்த்திக்கு விஜயராகவஸ்வாமி என்னும் பெயர் வந்தது. இம்மூர்த்தி விஜய வல்லித்தாயார் சமேதராய்க் கீழ்த் திருத்தணியில் நந்தி யாற்றுக்கும் ஆறுமுகஸ்வாமி கோயிலுக்குந் தென்பால் திருக்கோயில்கொண்டெழுந்தருளியிருக்கின்றார்.
-----------------------------
16. களவுப் படலம்.
மஹாவிஷ்ணுவின் பெண்களான கற்பிற் சிறந்த சுந்தரவல்லி அமுதவல்லி யென்பவர்கள் வேலாயுதக்கடவுளைத் திருமணஞ் செய்யக் கருதிக், கங்கைச் சரவணத்துக் கருகில் தவஞ்செய்ய முருகபிரான் எதிர் தோன்றி, "அமுதவல்லி! நீ இந்திரனிடஞ் சென்று வளருவாயாக; சுந்தரி! நீ பூலோகத்திற் சிவமுநிவரிடந் தோன்றி வேட ரகத்தில் வளருவாயாக; உங்கள் இருவர் கருத்தையும் ஈடேற்றுவோம்" எனச் சொல்லி மறைந்தருளினார். அவ்வாறே அமுதவல்லி தேவேந்திரனிடந் தோன்றி அங்கு ஐராவதம் என்னுந் தெய்வயானையால் வளர்க்கப்பட்டுத் "தெய்வயானை" என்னும் பெயர்பெற்றுத் திருப்பரங்குன்றத்தில் முருகக்கடவுள் தம்மைத் திருமணஞ் செய்யப்பெற்றாள். சுந்தரியோ தனது வடிவை நீக்கிச் சூக்கும தேகத்தோடு தொண்டை நாட்டில் மேற்பாடி* என்னும் ஸ்தலத்துக்குச் சமீபத்தில் மலைச்சாரலில் தவமியற்றி நின்றாள். அதே மலைச்சாரலில் இதற்கு முன்னரே தவத்திருந்த சிவமுநி என்பவர் ஒரு பெண்மான் உலாவுவதைக் கண்டு அதன் அழகு தம்மனத்தைக் கவரக் காட்சியால் இன்பமநுபவித்து ஆசைநீங்கி முன்போலத் தவத்திலுற்றனர். அச்சமயத்தில் அம் மானினுடைய வயிற்றிற் கருவாகச் சுந்தரி சென்றமைந்தனள். கருப்பமுற்ற மான் வள்ளிக்கிழங்குகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு குழியிற் குழந்தையைப் பிரசவித்து அது தன் இனமாக இல்லாதிருப்பதைக் கண்டு மருண்டு அதனை விட்டுப் போய்விட்டது.
குழந்தை குண்டலமுஞ் சிறுதொடியும் கோல்வளையுமாகிய பழைய பல ஆபரணங்களுடனும் தழையாலாகிய ஆடையுடனும் பூர்வஞானமின்றி விளங்கியது. இங்ஙனம் தனியாய் விடப்பட்ட குழந்தை மிகவும் இனிமையான மெல்லிய குரலில் அழுததை, இறைவ னருளால் அங்குத் தனது மனைவியுடனும் பரிசனருடனும் வந்த, தவஞ் சிறந்த வேடர் தலைவனான நம்பிராஜன் கேட்டு, மிகவும் மனமகிழ்ந் தெடுத்து, மகட்பேறின்றி வருந்தின நமக்கு மலைக்கடவுளே இக்குழந்தையைக் கொடுத்தருளினாரென உள்ளம் பூரித்துக் கிழங்கெடுத்த வள்ளிக் குழியிற் கிடக்கின்ற மணி விளக்குப் போன்ற சுந்தரியை, "இந்தா! இஃதோர் இளங் குழந்தை" யென்றெடுத்துச் சிந்தாகுலந் தீரத் தேவி கையில் ஈந்தனன். வில்லை நிலத்திலிட்டு எழுந்து பாய்ந்து ஆர்ப்பரித்து ஆநந்தக்கடலில் மூழ்கிச் சிரித்துத் தோள்புடைத்து, முற்பிறப்பில் நாம்செய்த நல்லதவம் என்று கூறினான். வேடராஜன் மனைவியும் மிக்க விருப்பத்தால் தனது தனத்தில் ஊறின பாலை யூட்டினாள். வேடராசன் மீண்டு சிறுகுடிலுக்குப் போய்த் தனது சுற்றத்தாருடன் விருந்துண்டு தொண்டகப்பறை முழங்கக் குரவைக் கூத்தாட்டுவித்தான்.அப்பால் முருகக்கடவுளுக்குத் திருவிழாக் கொண்டாடி வெறியாட்டுச் செய்வித்தான். குழந்தைக்குக் காப்பிட்டு *காட்பாடி ஜங்ஷனுக்குச் சமீபத்திலுள்ள திருவலம் ஸ்டேஷனிலிருந்து 8-மைல் மேற்பாடி. வள்ளிமலை மேற்பாடியிலிருந்து 1-மைல்; திருவலம் ஸ்டேஷனிலிருந்து 9-மைல். அதனை மயிலிறகு கட்டப்பட்ட அழகிய தொட்டிலி லிட்டார்கள். முதிர்ந்த மூதாளர் வந்துகூடி வள்ளிக்குழியில் வந்திடலால் இவள் நாமம் "வள்ளி" எனக்கூறினார்.
குறவர் கோமான் வள்ளிநாயகியாரைத் தன்மகளென்று அன்பால் வளர்த்தான். ஆவா! குறவர் தவம் யாரளக்க வல்லாரே! வள்ளியம்மைக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் செல்ல, ஜாதி வழக்கப்படித் தினைப்புனங் காக்கும்படிப் பரண் கட்டிக்கொடுத்தனர். கவணெறிந்து கிளி, புறவு முதலியன தினையைச் சேதஞ் செய்யாதவாறு வள்ளியம்மை 'ஆலோலம்' சொல்லிக் காலங்கழித்து வருநாளில், நாரதமுநிவர் தணிகாசலத்துக்குச் சென்று வேற்படையண்ணலை வணங்கி, "இறைவனே! இத்தலத்துக்கு மேற்றிசையிற் சமீபமாகவே மேற்பாடி யிருக்கிறது. அத்தலத்துக்கு அருகில் அழகெலாந் திரண்ட வள்ளி யென்னும் மாது ஒருத்தி உள்ளாள். அவளைக் கண்டதும் அழகிற் சிறந்த ஐயனே! நீங்களே அவளுக்குரியவரென நினைந்து, உங்களிடம் ஓடி வந்தேன். எல்லாம் தெரிந்த இறைவனாயினும் உங்களுக்குத் தெரியாததுபோல என் ஆசை மிகுதியாற் சொன்ன குற்றத்தைப் பொறுத்தருளல் வேண்டும். தேவரீரே சென்று கண்டு கொள்வீராக" எனக் கூறினர்.
இது கேட்ட ஸ்வாமி நாரதருக்கு விடை கொடுத்தருளித் தாம் தனியாகக் கட்டழகுள்ள காளையாய் ஒரு வேட்டுவக் கோலத்துடன் வேட்டையாடி வருபவர்போல வள்ளிமலையை யடைந்து, அங்கே புதையலைக் கண்டாற்போல வள்ளிநாயகியாரைக் கண்டு, மெல்ல நெருங்கி, இன்பவார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்குஞ் சமயத்திற் கொம்புகளை யூதிக்கொண்டு வேடர்கள் சூழ நம்பிராஜன் வந்தான். உடனே வேற்படை வீரன், அடிமுதல் வேதங்களாக, நடுவிடம் சிவாகமங்களாகக் கிளைகளெல்லாம் பலகலைகளாக, ஒரு வேங்கை மரத்தி னுருவமாகி நின்றனன். வேடர் தலைவன் வள்ளிநாயகியாரைக் கண்டு அவளுக்கு வள்ளிக்கிழங்கு, மா, தேன், பால் முதலியன கொடுத்துப் பின்னர்ப் புதிதாய் நின்ற வேங்கை மரத்தையுங் கண்டான். அவனுடன் வந்த மறவரானோர் விம்மித முற்றுக் கோபங்கொண்டு, இம்மரம் இதற்கு முன் இங்கில்லை. இப்பொழுது தோன்றி நிற்பதால் தீங்கு வந்திடுதல் திண்ணம்; இதனையிப் பொழுதே முறித்திடுங்கள்; பறித்திடுங்கள்; தறித்திடுங்கள்; தாமதியாதீர்கள் என்று கூறினார்கள். வேட ராசன் இவர்களையெல்லாம் விலக்கி, வள்ளி நாயகியாரை நோக்கி, ‘இதுவரையும் இல்லாது, இம்மரம் இப்பொழுது இங்கு நிற்கும் வரலாற்றின் உண்மையைச் சொல்லுக’ என்ன, வள்ளியம்மை ”யான் அறியேன்; திடீரென விண்ணகத்திருந்து நமது குலதெய்வமே இதைக் கொண்டு வந்து சேர்த்தது போலும்.” என்று சொல்ல, ”நன்று; அது உனக்கு நிழல் தரும்” எனச் சொல்லி, வேடராசன் வேடர் கூட்டத்துடன் திரும்பிச் சென்றனன். வள்ளியம்மையும் அம்மரத்தைத் தழுவிய கொடிபோல அதைத் தழுவி அதன் மலர்களைத் தன் கூந்தலில் வைத்து மகிழ்ந்தனள். பின்னர் ஒருநாள் வள்ளியம்மையின் தந்தை வருஞ் சமயத்து முருகக்கடவுள் தமது ஓரம்சத்தை வேங்கை மரத்தி லிருத்திப் பிறிதோ ரம்சத்தொடு விருத்தாப்பிய வேடங்கொண்டு குறவர் தலைவன் எதிர் சென்று அவனுக்குத் திருநீறு அளித்து ஆசி கூறினர். வேடனும் இன்று நமக்கு நல்ல நாள் என மகிழ்ந்து 'சாமிக்கு என்ன வேண்டும்?' என, முருக வேளும் 'யாம் இம்மலையிலுள்ள குமரி ஆடவந்தோம்' என்றனர். வேடனும், 'அங்ஙனமாயின் நீர்சொன்ன தீர்த்தத்தில் நித்தலுமாடி இவ்வேங்கை மர நிழலி லுள்ள தினைப்புனத்துத் தனித்திருக்கும் எம்மகட்குந் துணையாக இருங்கள்' என உரைத்துப் போயினான்.
அவன் போயின பின்னர்க் கிழவர் பசியால் மிக வாடினவர்போலத் துடிக்க, வள்ளியம்மை தேன் கலந்த தினைமாவை அளிக்க, அதனை வாங்கிவாங்கி யுண்டனர். பின்னர் "ஐயோ! தாகமாய் இருக்கிறதே" எனத் துடித்தனர். வள்ளியம்மை, 'இந்த மலைக்கு அப்பால் ஏழு குன்றுகளைக் கடந்து சென்றால் ஆங்கொரு சுனையிருக்கிறது' என்று சொல்லக் கிழவரும் 'எனக்கு நாவுலர்ந்து விட்டது. இம்மலைச் சாரலின் வழிகளை நான் ஒரு சிறுதுந் தேரேன். நீ நடக்கப் பான் மாறாது உடனே வந்து சுனை நீரைக் காட்டுதி' என்ன, அவ்வம்மை உடன் செல்லச் சென்று, சுனைநீர் பருகினதும், அம்மையை நோக்கி, "நான் குமரியாட வந்தேன் எனக்கூறினது உண்மையாயிற்று; இந்தத் தீர்த்தத்தைப் பருகினதும் என் மூப்பு பிந்தியது; உன்மேற் காமம் முந்தியது; என் ஆகத்தை வருத்தின தாகத்தைத் தணித்தாய்; மேகத்தை யொத்த கூந்தலையுடையாய்! என்னை வருத்தும் மோகத்தையுந் தணிப்பாயானால் என் குறை முடிந்தது" என இரங்கிக் கூறினர்.இதைக்கேட்ட வள்ளியம்மை நடுநடுங்கிக் கோபத்தாற் பெரு மூச்செறிந்து "நரைத்த கிழவரே! உமக்கு நல்லுணர்வு சற்று மில்லையே; நீர் எத்துக்கு மூத்தீர்?" இழிகுலத்தாளாகிய என்னை யிச்சித்தீர்; பித்துக்கொண்டாற்போற் பிதற்றுகின்றீர்" எனக்கடிந்து பேசக் கிழவர் அவ்வம்மையின் பாதத்தில் விழுந்து அவற்றைப் பிடித்துக்கொள்ள, வள்ளியம்மை காலை உதறிக்கொண்டு திரும்பி வெகு வேகமாய் ஓடினள். இதைக்கண்ட எம தையன் தணிகை ஆபத்ஸகாயராம் தமது தமையனாரைத் தியானிக்க அவரும் மதயானை உருவோடு தம்பிதனக்காக வனத்தணைந்து வள்ளியம்மை ஓடிவரும் வழியிற் பிளிறிக் கொண்டு குறுக்கே மறித்ததுபோல எதிர்வந்தார். வள்ளியம்மையும் எதிர்த்துவரும் யானையைக்கண்டு மிகப்பயந்து வந்தவழியே திரும்பி ஓடிவந்து, கிழவரைப் பார்த்து 'என்னை இவ்யானையினின்றுங் காத்தருள்க' எனச் சேர்ந்து ஒருபால் தழுவிக்கொண்டனள். மற்றொருபால் யானையின் கோடுபட, இவைகளுக்கு நடுவே, ஸ்வாமி வயிரத்தூண்போல நின்று, பின்னர்த் தாம் முதன் முதல்கொண்ட கட்டழகுள்ள காளை யுருவத்தோடு தோன்றி "அஞ்சல் அஞ்சல்" எனத் தமது கரத்தால் வள்ளியை அணைத்து, யானையையுங் கும்பிட, யானை மறைந்தது. தம்பியை இடரினின்றும் நீக்கி அவர் நினைத்த மாதையுங் கூட்டுவித்த காரணத்தால் தணிகாசலத்திலுள்ள விநாயக மூர்த்திக்கு ஆபத்ஸகாயர் எனப்பெயர் போந்தது. இவ்வாறு தம்பிக்கு உதவினதைப் திருப்புகழ் விநாயகர் துதியிற் காண்க. நிற்க, காளை யுருவங்கொண்ட கள்வரும், "வள்ளி; இஃதெல்லாம் இம்மலை வேந்தனாகிய முருகன் கூத்து; நீ அஞ்சாதே" எனச் சொல்லித் தேற்றி வள்ளியம்மையோடு கூடி மகிழ்ந்திருந்தனர்.
தினைப்பயிர் முதிர்ந்து கதிர்விடுத்தன. வள்ளியம்மை புனம் விடுத்துத் தாய் தந்தையரிடஞ் சேர்ந்தனள். கொள்கை வேறாகிப்பாவையுடன் விளையாடுதலையும் கழங்காடுதலையும் முன்போல மடவாருடன் பேசுதலையும் விடுத்துப் புலம்பினள். செவிலியும் அன்னையும் மகளை யுற்று நோக்கி 'உனக்கு மேனி வேறாகியது. குற்றம் வந்தவாறென்?' என வற்புறுத்திக் கூறிச் செற்ற மெய்தி அவளை இனிப் புறம்போக லாகாதெனக் கூறி வீட்டிலிருத்தினார்கள். மகளை மலைத்தெய்வந் தீண்டிற்றென்று வெறியாட்டு நடத்தினார்கள்.அப்பொழுது வேலன்மேல் வந்து தோன்றி 'இவள் தமியளாகி யிருந்த புனத்தில் தொட்டனம். எமதுள்ள மகிழுமாறு பெருஞ்சிறப்புச் செய்வீராயின் இக்குறை நீங்கும்' என்று குமரவேள் குறிப்பாகக் கூறியருளினான். இம்மொழி தன்செவிப்புலம் புகுந்த அளவே வள்ளியம்மை அவச நீங்கி யெழுந்தனள். அப்படியே சிறப்புச் செய்வேனென்று செவிலித்தாய் பிரார்த்தனை செய்து துதித்தாள்.
தாயுந் தமரும் நாயும் நகரும் பேயும் பிறவும் தூங்கும்படியான நள்ளிரவில் முருகபிரான் வள்ளியம்மையைக் களவாக வீட்டினின்றும் கொண்டுபோய்விடத் துயிலுணர்ந்த வேடர்களெல்லாம் தொடர்ந்து வந்து சூழ்ந்து போர்செய்து விடுத்த அம்புகளெல்லாம் அண்ணல்மேற் படுவதை அம்மைநோக்கிப் பதைபதைத்து, 'ஐயனே'. நீர் சும்மா விருத்தலாகாது. வேலாயுதத்தை ஏவி இவர்களை அடுதல் வேண்டும்' என்ன, எம்பிரான் அருளாற் கொடியாக நின்ற கோழி நிமிர்ந்தெழுந்து கொக்கரிக்க, இடிபோன்ற அவ்வொலியின் அதிர்ச்சியால் நம்பிராசனும் அவன் புதல்வரும் தமரும் யாரும் மாண்டு வீழ்ந்தார்கள். ஸ்வாமியும் வள்ளியம்மையுடன் தணிகை மலைக்குச் சென்றனர். வள்ளியம்மையைக் கண்ட நாரதர் பேராநந்தம் உற்று, "தாயே! நீ முன் செய்த தவப்பயனால், எங்கள் தணிகை நாயகரே பல திருவிளையாடல்களியற்றி உன்னை இங்குக் கொண்டு வந்தனர்" எனக் கைகூப்பிக் கூறித் தொழுது, ஸ்வாமியை நோக்கி, "ஸ்வாமி! வேடரெல்லாம் உயிர் பெற்றெழ அருளல் வேண்டும்" என வேண்டினர். முருகபிரானும் உடனே அவ்வாறே யருள் செய்து அவர்கள் முன் எழுந்தருள, உயிர் பெற்றெழுந்த வேடர்கள், 'சாமி! வேலியே பயிரை மேய்வதென்றால் வேறு காப்பு என்ன இருக்கிறது? ஆயினும் எங்கள் குடியின் பெயர் கெடாமல் நாங்கள் தத்தஞ் செய்ய நீங்கள் எங்கள் வள்ளியைத் திருமணஞ்செய்து கொள்ளுங்கள்' என வணங்கிக் கூறினர். ஸ்வாமியும் "நன்று; நீங்கள் யாவரும் நமது தணிகைமலைக்கு வாருங்கள். அங்கே மணஞ்செய்வோம்" எனச்சொல்லி வள்ளியம்மையோடு திருத்தணிகைக்கு வந்து அங்கிருந்த வீரவாகு தேவர் முதலிய தம்பியர்க ளெல்லாம் வணங்க வீற்றிருந்தனர். இவ்வாறு முருகபிரான் வள்ளியம்மை காரணமாகப் பித்தனைப்போ லுழன்று லீலைகள்புரிந்து, ஈற்றில் அவ்வம்மையை மயக்கித் தணிகையில் மகிழ்ச்சியோடு வந்தமர்ந்தனர் என்பதைத் திருப்புகழ் 21, 41, 42, 43, 49-ஆம் பாடல்களிற் காண்க.
----------------------------
17. வள்ளிநாயகி திருமணப் படலம்.
இவ்வாறு வள்ளிநாயகியைத் தணிகை நாயகன் கொண்டு வந்ததை மதித்துக் குமார லிங்கத்திருந்துஞ் சிவபிரான் உமாதேவி யாரொடு வெளிவந்து தோன்ற, முருகவேள் தாய்தந்தையைப் பணிந்து நிற்கச் சிவபிரான் முருகவேளைத் தழுவி "மைந்த! உன் திருமணங்காண வந்தோம்" என்றனர். அங்கிருந்த நாரத முநிவரும் இம்மாசி மாதத்திற் பூச நக்ஷத்திரம் திருமணத்துக்கு ஏற்ற நாளென்றனர். திருக்கலியாணம் நடத்துவிக்கும் கர்த்தாவாக அமர்ந்த ஆபத்ஸகாய விநாயகமூர்த்தி தமது தம்பியை நோக்கிக் 'கந்தகிரியிலுள்ள தேவசேனையை வரவழைப்பாயாக' என்றனர். முருகபிரானும் கந்தகிரிக்கு வீரவாகு தேவரை அனுப்பினார். கலியாண மண்டபம் தேவதச்சனால் மஹா விசித்திரமாக அமைக்கப்பெற்றது.தேவகோடிகள் திருத்தணிகைக்கு வந்து சேர்ந்தன. முநிவரர் குழாம் தணிகையை நாடி வந்தன. தேவசேனை யம்மையும் வந்து சேரத் திருக்கைவேற் பெருமான் அவ்வம்மையைத் தமது இடப் பாகத்து அமர்த்தினர். பின்னர் திருமண நாள் வரப் பிரமதேவர் சமுதை, தருப்பை முதலியன கொண்டுவந்து சேர்த்தனர். சிவபிரானும் உமாதேவியும் ஒரு பீடத்தி லமர்ந்தனர்.
வள்ளியம்மையை வளர்த்த பிதாவாகிய நம்பியென்ற பெயருள்ள வேடர் தலைவனும், "சதாசிவ மூர்த்தியின் அழல்விழியின் வந்த வேலவனுக்கு என்பால் வந்த கொம்பினைக் கொடுத்தேன்" என்று தன்வழிப் பெயருங்கூறித் தன் மனைவி வாச நீர் வாக்க ஏற்றுத் தத்தஞ்செய்யத் தேவதேவ னாகிய திருத்தணிகை யாண்டவன் வள்ளியம்மையை யேற்றருளினார். நாரத முனிவர் வேதவிதிப்படித் திருமணச் சடங்குகளைச் செய்தார். தத்தஞ் செய்ய, வேலவன் ஏற்ற அப்பொழுதே, வள்ளியம்மைக்குத் தேவதேஜஸ் பொலிந்தது. கண் இமைக்க இல்லை; உருவம் நிழல் தரவில்லை; மாலை வாட இல்லை; உடலில் மாசுந் தூசுந் வேர்வையுஞ் சேரவில்லை; அவரணிந்த புஷ்பத்தில் வண்டுகள் சேரவில்லை; தெய்வக்கோல முழுதும் ஒருங்கேயுற்றது; கண்டோர் அதிசயித்தனர். வேடர் கூட்டத்தாரும் 'இவள் எம்மிடத்தில் வந்தது எம் பெருந்தவமே' யென்றார். இந்நிகழ்ச்சிகளையெல்லாம் நோக்கியிருந்த தேவேந்திரன் 'நம்மகளை நாம் வழிய வேண்டிக்கொடுத்தோம். இவ் வேட ராசன் மகளை இறைவனே நாடிச்சென்று கொண்டுவந்தனர். இவ்வேடராசன் என்ன தவஞ் செய்தானோ' எனப் பிரமித்தனன். திருக்கலியாணம் ஆனவுடன் ஸ்வாமி தந்தை தாயர்களை வணங்க, அவர்களும் ஆசிர்வாதஞ் செய்து, கயிலைக்குச் சென்றனர்கள். ஸ்வாமியும் வள்ளியம்மையோடு திருத்தணிகையில் இன்பமுற்றிருந்தனர்.
-------------
18. விடையருள் படலம்.
பின்னர், விஷ்ணு வேதா முதலிய தேவர்கள் எல்லாம் விடைபெற்றுத் தத்தம் ஊருக்குச் சென்றனர். நம்பி வேடனும் முருகவேளின் திருவருள் பெற்றுத் தன் ஊருக்குச் சென்றான். யாவரும் சென்ற பிறகு, வள்ளியம்மை தேவசேனையின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினள். தேவசேனையும் வள்ளியை அணைத்தெடுத்து எனக்குத் தங்கைபோலச் சிறந்த துணையாக வந்தனை என்று சொல்லித் தனது நாயகரை வணங்கி "இவள் யார்? ஏன் வேடர் மரபில் உதித்தனள்?" என வினவ, முருகவேளும் மன மகிழ்ந்து இவர்கள் இருவரும் முன்னர் அமுதவல்லி, சுந்தரவல்லியா யிருந்த வரலாறுகளைக் கூறிப் பின்னுஞ் சொல்லுகின்றார்: "ஒருமுறை கண்ணுவ முநிவர் மஹா விஷ்ணுவைக் காணும் பொருட்டு வைகுந்தத்திற்குச் சென்றனர். உபேந்திரன் முதலியோர் சூழச் சபையில் லக்ஷ்மி தேவியோடு வீற்றிருந்த பெருமாள், அவரைக் கவனியாது அசட்டை செய்யக் கண்ணுவர் இவன் அகந்தை நன்றென வெகுண்டு, இவ்விஷ்ணு "மூகைமைப் பிறவி எண்ணில உறுக" எனச் சபித்துப் 'பல பிறவி மானாகக் கடவை' என லக்ஷ்மியையுஞ் சபித்து, உபேந்திரன் முதலியோரை, "நீங்கள் வேட்டுவப் பிறவி எண்ணில எடுமின்" எனச் சபித்து மீண்டேகினர். இச்சாப மொழிகளைக் கேட்ட விஷ்ணு முதலினோர் அஞ்சிநடுங்கிச் சிவபூசைசெய்து சிவத்தியானஞ்செய்ய, சிவபிரான் கண்ணுவ முநிவரை வரவழைத்து 'இவர்கள் செய்த அபசாரத்துக்காக ஒரு பிறவியொடு சாப நிவாரணமாகும்படி அநுக்கிரகஞ் செய்க' என்றனர். அவரும் திருவுள்ளப்படி யென்றனர்.
இச்சாபாநுக்கிரஹத்தால் விஷ்ணுமூர்த்தி சிவமுநிவர் என்னும் மௌனமுநியாகி, மேற்பாடிக்கு அருகில் மலைச்சாரலில் தவத்தமர்ந்தனர். லக்ஷ்மி மானாகி அம்மலையில் திரிந்தனள். உபேந்திரன் முதலினோர் வேடராஜனான நம்பி முதலிய வேடர்களாக அம்மலையில் உற்பவித்தனர். உபேந்திரனேவேடராஜ னான நம்பி. மைந்தர் பலர் இருந்தும் மகளின்றி அவன் வருந்தியிருந்து, விஷ்ணுவாகிய சிவமுநிவருக்கும் மானாய்த் திரிந்த லக்ஷ்மிக்கும் பிறந்த சுந்தரியாகிய இவ் வள்ளியைக் கண்டெடுத்து வளர்த்து வந்தான்"- என்று இவ்வாறு வேலவர் தமது தேவியரிருவருக்கும் விஷயங்களை விரிவாக விளக்கியருளினார். அப்பொழுது வள்ளிநாயகியார் கடவுளை வணங்கித் திருத்தணிகையின் பெருமையைக் குறித்து வினவ, இவ்வுலகத்திலுள்ள உயிர்களெல்லாம் நற்கதி யடையும்படித் திருத்தணிகையில் வீற்றிருந்தருளுந் தணிகாசல மூர்த்திபே ரருளுடன் பின்வருமாறு அம்மலையின் சிறப்புகளை யெல்லாம் எடுத்தோதினார்:
- [கந்தபுராணம் - வள்ளியம்மை திருமணப்படலம்]
செங்கண் வெய்யசூர்ச் செருத்தொழி லினுஞ்சிலை வேடர்
தங்களிற் செயுஞ் செருத்தொழி லினுந்தணிந் திட்டே
யிங்கு வந்தியா மிருத்தலாற் செருத்தணி யென்றோர்
மங்க லந்தரு பெயரினைப் பெற்றதிவ் வரையே. (216)
முல்லை வாணகை யுமையவள் முலைவளை யதனான்
மல்லன் மாநிழ லிறைவரை வடுப்படுத் தமரும்
எல்லை நீர்வயற் காஞ்சியி னணுகநின் றிடலாற்
சொல்ல லாந்தகைத் தன்றிந்த மால்வரைத் தூய்மை. (217)
விரையி டங்கொளும் போதினுள் மிக்கபங் கயம்போல்
திரையி டங்கொளும் நதிகளிற் சிறந்தகங் கையைப்போல்
தரையி டங்கொளும் பதிகளிற் காஞ்சியந் தலம்போல்
வரையி டங்களிற் சிறந்ததிந் தணிகைமால் வரையே. (218)
கோடி யம்பியும் வேய்ங்குழ லூதியுங் குரலால்
நீடு தந்திரி யியக்கியும் ஏழிசை நிறுத்துப்
பாடி யுஞ்சிறு பல்லியத் தின்னிசை படுத்தும்
ஆடு தும்விளை யாடுதும் இவ்வரை யதன்கண். (219)
மந்த ரத்தினும் மேருமால் வரையினும் மணிதோய்
கந்த ரத்தவன் கயிலையே காதலித் ததுபோற்
சுந்த ரக்கிரி தொல்புவி தனிற்பல வெனினும்
இந்த வெற்பினில் ஆற்றவு மகிழ்ச்சியுண் டெமக்கே. (220)
வான்றி கழ்ந்திடு மிருநில வரைபல அவற்றுள்
ஆன்ற காதலா லிங்ஙன மேவுதும் அதற்குச்
சான்று வாசவன் வைகலுஞ் சாத்துதற் பொருட்டால்
மூன்று காவியிச் சுனைதனி லெமக்குமுன் வைத்தான். (221)
காலைப் போதினி லொருமலர் கதிர்முதி ருச்சி
வேலைப் போதினி லொருமலர் விண்ணெலா மிருள்சூழ்
மாலைப் போதினி லொருமலர் ஆகவிவ் வரைமேல்
நீலப் போதுமூன் றொழிவின்றி நித்தலு மலரும். (222)
ஆழி நீரர சுலகெலா முண்ணினு மளிப்போர்
ஊழி சேரினு மொருபகற் குற்பல மூன்றாய்த்
தாழி ருஞ்சுனை தன்னிடை மலர்ந்திருந் தவிரா
மாழை யொண்கணா யிவ்வரைப் பெருமையார் வகுப்பார். (223)
இந்த வெற்பினைத் தொழுதுளார் பவமெலா மேகும்
சிந்தை யன்புட னிவ்வரை யின்கணே சென்று
முந்த நின்றவிச் சுனைதனில் விதிமுறை மூழ்கி
வந்து நந்தமைத் தொழுதுளார் நம்பதம் வாழ்வார். (224)
அஞ்சு வைகலிவ் வகன்கிரி நண்ணியெம் மடிகள்
தஞ்ச மென்றுளத் துன்னியே வழிபடுந் தவத்தோர்
நெஞ்ச கந்தனில் வெஃகிய போகங்கள் நிரப்பி
எஞ்ச லில்லதோர் வீடுபே றடைந்தினி திருப்பார். (225)
தேவ ராயினு முனிவர ராயினுஞ் சிறந்தோர்
ஏவ ராயினும் பிறந்தபி னிவ்வரை தொழாதார்
தாவ ராதிகள் தம்மினுங் கடையரே தமது
பாவ ராசிக ளகலுமோ பார்வலஞ் செயினும். (226)
பாத கம்பல செய்தவ ராயினும் பவங்கள்
ஏதும் வைகலும் புரிபவ ராயினும் எம்பால்
ஆத ரங்கொடு தணிகைவெற் படைவரேல் அவரே
வேதன் மாலினும் விழுமியர் எவற்றினும் மிக்கார். (227)
வேறு.
உற்பல வரையின் வாழ்வோர் ஓரொரு தருமஞ் செய்யிற்
பற்பல வாகி யோங்கும் பவங்களிற் பலசெய் தாலும்
சிற்பம தாகி யொன்றாய்த் தேய்ந்திடும் இதுவே யன்றி
அற்புத மாக இங்ஙன் அநந்தகோ டிகளுண் டன்றே. (228)
*என்று மிங்குநாம் மன்ற வைகுதல்
நின்று நீலமே நன்று ணர்த்துமே.
இந்த சுனையிற் சூரியன் உதிக்கும்பொழுது ஒரு மலரும், உச்சிப்பொழுதில் ஒரு மலரும், மாலைப்பொழுதில் ஒரு மலரும், ஆக எக்காலத்தும் மூன்று நீலோற்பல மலர்கள் தவறாமல் ஒழிவின்றித் தினந்தோறும் மலரும்.
*காலை காய்பகல் மாலை மா மலர் நீல
நேரவிங் கால வமர்கின்றாம்.
இந்த மலையைத் தொழுதுள்ளவர்களுடைய பாவங்களெல்லாம் நீங்கும். அன்புடன் இம்மலைக்கு வந்து இந்தச் சுனையில் முறைப்படி ஸ்நாநஞ்செய்து எம்மை வணங்குபவர்கள் எமது திருவடி நிழலில் வாழ்வார்கள். ஐந்து தினங்கள் இம்மலையினைச் சேர்ந்து எமது பாதமே கதியென உள்ளத்தில் நினைத்து எம்மை வழிபடுபவர்கள் தமது விருப்பங்கள் எல்லாம் நிறைவேறப்பெற்று ஈற்றிற் பேரின்ப வீட்டினையடைந்து வாழ்வார்கள்.
-
* ஐந்து நாளசைந் தெந்த மிணையடி வந்து
வணங்கினோர் பந்தம் பாற்றுவார்.
தேவ ராயினும், முனிவர ராயினும், சிறந்தோர் எவ ராயினும், பிறந்தபின் இவ்வரை தொழாதார் மரம், புல் முதலிய அசையாப் பொருளினுங் கீழ்ப்பட்டவர்களாவார். பூப்பிரதக்ஷணஞ் செய்தாலும் (உலகுவலம்வரினும்) அவரது பாவம் நீங்காது. பாதகங்கள் பலசெய்தவ ராயினும், தினந்தோறும் பாவம் செய்பவர்க ளாயினும், எம்மீதுள்ள விருப்பத்தால் தணிகை மலைக்கு வருவார்களாயின், அவர்களே பிரம விஷ்ணுக்களினுஞ் சிறந்தோர்; எல்லாவற்றினும் மேம்பட்டவர். இம்மலையிலுள்ளோர் செய்த ஒரு தருமம் பலவாகி வளரும்; அவர்கள் பல பாவங்கள் செய்தாலும் அவை அற்ப மாகி ஒருசேரத் தேய்ந்தொழியும். இதுவேயன்றி யிவ்விடத்தில் அநந்தகோடி அற்புதங்க ளுண்டு. ]
இந்தவாறு குமரக்கடவுள் கூற, அவைகளைக்கேட்டு வள்ளி நாயகியார் நன்றென மகிழ்ந்து, 'உலகிலுள்ள மலைகளிற் சிறந்த இந்தத்தணிகை மலையின் தன்மையை உமது திருவருளால் அறியப் பெற்று அடியேன் உய்ந்தேன்' என்றார். இம்மலைச் சாரலில் ஒருபால் முருகக்கடவுளும் வள்ளிநாயகியாரும், பிரம விஷ்ணுக்களால் அறியப்படாத சிவபெருமானுடைய ஐவகை உருவங்களில் ஒன்றை ஆகமப்படி ஸ்தாபித்து வழிபட்டு வணங்கி அருள்பெற்றனர்.
இச்சாசக்தி யாகிய வள்ளியம்மையுங் கிரியாசக்தி யாகிய தேவ சேனையும் முறையே வலப்பாலும் இடப்பாலும் அமர, ஞான சக்தியைத் தமது திருக்கரத் தேந்தி, முச்சக்தியுடனும் முருகக் கடவுள் இத் தணிகாசலத்தில் வீற்றிருந் தருளுவர். இதனை இத்தலத்துக்குரிய திருப்புகழ் 14, 18, 20, 23, 27, 37, 38, 52 -ஆம் பாடல்களிற் காண்க.
----------------------
19. நாரத ரருள்பெரு படலம்.
ஒரு முறை நாரதர் கயிலைமலைக்குச் சென்ற சிவபெருமானை வணங்கித் திரும்பிவரும்பொழுது, பிரமலோகத்தை யடைந்து, தன் தாதையாகிய பிரமனைக்கண்டு வணங்கி "எந்தாய்! எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன: உதாரணமாக, (1) யானை, குதிரை, பல்லக்கு, தேர் முதலியன இருக்கச் சந்திரசேகரப் பெருமான் ஏனோ ருஷபத்தை வாகனமாகக்கொண்டார்? (2) நல்லவாசனைத் திரவியங்கள் பல இருக்க ஏனோ திருநீற்றைப் பூசிக்கொள்கின்றார்?" எனப் பிரமனும் 'இவ் வினாக்களுக்கு விடையளிக்க நான் வல்லனல்லன். சிவபிரானே அவைதம் உண்மையை உணருவார். அவரன்றி அவர் நெற்றிக்கண்ணிற் றோன்றிய வேலாயுத மூர்த்தியு மறிவர். இவர் இருவர் தவிரப் பிறர் அறியார். நீ தணிகை மலைக்குச் சென்றுவிசாகப் பெருமாளை வணங்குவாயாகில் உன் ஐயங்கள் யாவும் தெளியும்' என்றனர். நாரதர் 'கந்தகிரி முதலிய பல இருக்கத் தணிகைமலையை ஏனோ சிறப்பித்துக்கூறினீர்?' எனப் பிரமதேவரும் தணிகை மான்மியங்களை எல்லாம் நாரதருக்குச் சொல்லினார். நாரதரும் தந்தையின் உபதேசமொழிகளைக் கேட்டு புளகாங்கிதம் உற்றுத் தணிகைக்கு வந்து இலிங்கப் பிரதிஷ்டைசெய்து பூசித்தனர். இவ்விலிங்கம் நாரதலிங்கம் எனப்பெயர் பெறும்.
பின்னர் மலைமீது சென்று வேலவரைத் தரிசித்து வீணையில் இசை கூட்டிப் பாடிப் போற்றித் தவஞ்செய்தார். இறைவனும் எதிர்தோன்றி, உனக்கு வேண்டுவதென் னென, நாரதர் தமது இரண்டு ஐயங்களையும் முதலிற் கூறினர். சுவாமியும் "(1) விஷ்ணு முதலிய சிறந்த தேவர்களும் அழிந்துபோவதை யுணர்ந்த தரும தேவதை தவஞ்செய்து, இறைவனை இடபமாகத் தாங்கும் அழியாத பெரும் பேற்றைப் பெற்றது (2) இப்படிச் சிறந்த தேவர்கள் அழிந்து *நீறாகத் தாம் அந் நீற்றை அணிவதாற் சிவபிரான் அநாதி மூர்த்தி *யென்பது விளங்கும்" எனக்கூறி, அவ்விரண்டு சந்தேகங்களையும் போக்கிப் பின்னும் நாரதருக்கிருந்த எல்லாச் சந்தேகங்களையும் நீக்கியருளினார். நாரதரும் தணிகாசலமூர்த்தியை வணங்கி மனத்தெளி வடைந்தனர்.
பின்னும் இத்தலத்தில் அகோரன் என்னும் மறையவன் ஞாயிற்றுக் கிழமையில் *விஷ்ணு தீர்த்தத்திலும், திங்கட்கிழமையிற் சிவகங்கையிலும், நந்தியாற்றிலும்,செவ்வாய்க் கிழமையில் நாரத தீர்த்தத்திலும், நாகதீர்த்தத்திலும், புதன்கிழமையிற் பிரமதீர்த்தத்திலும்,வியாழக்கிழமையில் இந்திரநீலச் சுனையிலும், வெள்ளிக்கிழமையிற் குமார தீர்த்தத்திலும், சநிக்கிழமையில் அகஸ்திய தீர்த்தத்திலும் ஸ்நாநஞ்செய்து, பிறவி நோய் தீர்ந்து முத்தியடைந்தனன். இவ்வளவே யன்றி எந்தத் தீர்த்தத்தி லேனும், எந்தத் தினத்தி லேனும் ஸ்நாநஞ் செய்து, எங்கள் குமரேசனை வழிபடுபவர்களுடைய எல்லாப் பாவங்களும் நீங்கும்; அவர்கள் எல்லாப் பேற்றையும் பெறுவர் என்று சூதமுநிவர் கூற, இம் மான்மியங்களைக் கேட்ட முநிவர்கள் யாவரும் ஹரஹர என மனமுருகி உடனே தணிகை மலைக்கு வந்து வேலவரைத் தொழுது பேரின்பமுற்றனர்.
------------------------
அநுபந்தம் I
திருத்தணிகைத் தீர்த்தங்கள்.
1. குமார தீர்த்தம்:- இது மலையின் கீழ்ப்பக்கம் அடிவாரத்திலுள்ள திருக்குளம்; "சரவணப் பொய்கை" என வழங்கும். இத்திருக்குளத்தைச் சுற்றிப் பல ஜாதியாருக்குரிய மடங்கள் இருக்கின்றன. திருத்தணியின் இந்தப் பாகத்துக்கு மடங் கிராமம் என்று பெயர். சுரம் முதலிய எந்ந நோயிருந்தபோதிலும் இத்தீர்த்தத்தில் அஞ்சாது ஸ்நானஞ் செய்யலாம்.
-
"எத்துயர்த் திரளு மத்தினத் தகற்றுஞ்
சரவணப் பொய்கைத் தடம்புனற் றுளைந்து."
-தணிகையாற்றுப்படை.
2. நந்தி யாறு:- இது கீழைத் திருத்தணியின் வடகோடியில் இருக்கின்றது. ஆற்றின் தென்கரையில் ஆறுமுகஸ்வாமி கோயிலும், விஜயராகவ ஸ்வாமி கோயிலும், வடகரையில் வீராட்டகேசர் கோயிலும் உள்ளன.
3. பிரம தீர்த்தம்:- இது கீழ்ப்புறமிருந்து மலைமேற் செல்லுகையில் நடுவழியில் வடவண்டை யிருக்கின்றது; இதனைப் பிரமசுனை யென்பர்.
4. விஷ்ணு தீர்த்தம்:- மலையின்மேல் மேற்பக்கத்திற் குருக்கள்மார் வீடுகளின் எதிரிலுள்ளது.
5. நாக தீர்த்தம்:- இதற்கு ஆதிசேஷ தீர்த்தம் என்றும் பெயர்; விஷ்ணு தீர்த்தத்துக்கும் அப்பால் மேற்கே சென்றால், தென்புறமிருக்கின்றது.
6. அகஸ்திய தீர்த்தம்:- இது ஆதிசேஷ தீர்த்தத்துக்குத் தென்கிழக்கிலுள்ளது.
7. இந்திரநீலச் சுனை:- இது கல்லார தீர்த்தம் என வழங்கும். மலைமேல் தெற்குப் பிரகாரத்துக்குத் தெற்கேயுள்ள பிரபலமான சுனை; இந்தத் தீர்த்தந்தான் ஸ்ரீ தணிகாசல மூர்த்திக்குத் திருமஞ்சன மாவது. இதில் எப்பொழுதாவது ஜலமில்லாவிட்டால் ஆறு பேர் சென்று யாற்றுஜலம் கொண்டு வருவது வழக்கம்.
-
"காலை நண்பகல் மாலைமுப் பொழுதும்
வைகல் வைகன் மலர்மூன்று தெரிக்கும்
நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது".
-தணிகை யாற்றுப்படை.
இந்திரன் ஐராவதத்தைத் தெய்வயானை யம்மையாருக்கு சீதனமாகக் கொடுத்த பின்பு அதிருஷ்டஹீனனாய்த் தன் செல்வங் குறைதலைக் கண்டு, இந்தச் சுனையை உண்டாக்கி, அதிற் செங்கழு நீ்ர்க் கொடிகளை நட்டு, முப்போதும் அலர்ந்த புஷ்பங்களால் அர்ச்சனை செய்தான். முருகக்கடவுள் அவனுடைய வழிபாட்டுக்கு இரங்கி, வெள்ளை யானையைப் பொன்னுலகத்திலேயே வைத்துக்கொள்ளும்படித் தேவேந்திரனுக்குச் சொல்ல, அவன் அவ்வாறு செய்தால் தத்தாபஹாரம் என்னும் தோஷம் உண்டாகு மென்று அதற்கு இணங்காதிருக்க, யானையும் முருகக்கடவுளுக்கு வாஹனமும் அடிமையு மாயிருத்தலே தனக்கு மேலான பதவியென்று விண்ணப் பிக்கத், தேவேந்திரன் 'இந்தயானை தங்கள் சந்நிதியிலேயேயிருந்து என்னுலகை நோக்கியிருக்குமானால் எனது செல்வம் குன்றாது; எனக்கு எல்லாப் பாக்கியமும் உண்டாகும். அங்ஙனம் ஸ்வாமி திருவருள் புரியவேண்டும்' என்று பிரார்த்தித்தான். முருகக் கடவுளும் அவ்வாறே அநுக்கிரஹித்தனர். அதனால் இப்பொழுது திருத்தணிகையில் ஸ்வாமி சந்நிதிக்கு வெளிப்பிரகாரத்தில் த்வஜ ஸ்தம்பத்துக்கு அருகிலிருக்கும் ஐராவதமாகிய யானை இந்திரதிக்காகிய கிழக்குநோக்கி, முருகக்கடவுள் அருளியவாறே, அவர் தன்மீது ஆரோஹணித்தற்குத் தான் சித்தமாக இருக்கும் நிலையில் இருக்கின்றது. இந்திரன் சீதனமாகக் கொடுத்த பெரிய சந்தனக்கல் கோயிலுக்குள் ஆபத்ஸகாய விநாயக மூர்த்திக்கு எதிரில் இருக்கின்றது.
8. நாரத தீர்த்தம்:- இது அகஸ்திய தீர்த்தத்துக்குக் கிழக்கேயுள்ளது.
9. சிவகங்கை:- இது இன்னதெனத் தெரியவில்லை; ஆயினும் கோயிலுக்குட் பிரகாரத்தில் வாயு (வடமேற்கு) மூலையில் ஆறுமுகஸ்வாமிக்குச் சித்திரை, மாசி பிரும்மோற்ஸவங்களில் ஒன்பதாம்நா ளிரவிலும், ஐப்பசிமாதம் சுக்கிலபக்ஷம் ஸ்ரீ ஸ்கந்த ஷஷ்டியன்றும், மார்கழிமாதம் திருவாதிரை நக்ஷத்திரத்திலும், அபிஷேகாதி அலங்காரங்கள் நடக்கும் மேடையின் கீழேயுள்ளதாகச் சொல்லப்படும் ஸ்கந்த கைலாச தீர்த்தமாக இருக்கலாமெனத் தோன்றுகின்றது.
10:- ஏழு சுனை:- திருத்தணிகாசலமூர்த்தி வீற்றிருக்கும் மலைக்குத் தென் கீழ்த்திசையில் மலைச்சாரலில் ஏழுசுனைகளும் கன்னிகைகள் கோயிலும் இருக்கின்றன. இந்தச் சுனைகள் சப்தருஷிகளால் உண்டாக்கப்பட்டன வென்றும் ஆன்றோர் உரைக்கின்றனர். ஆயினும் இது கன்னியர் கோயிலென்று வழங்குகின்றது. மாசிமாதம் *பிரும்மோற்ஸவங்களில் பதினோராநாள், கொடியிறங்கினபின், ஸ்ரீ தணிகாசல மூர்த்தி இவ்வெழுசுனைக் கருகிலுள்ள மண்டபத்துக்கு எழுந்தருளுதல்
வழக்கம்.
----------------
அநுபந்தம். II
திருத்தணிகை உற்ஸவாதிகள்
I. நித்திய உற்சவம்.
காலை சந்தியானவுடனும், அர்த்தஜாம தீபாராதனைக்கு முன்னும் ஸ்வாமி பல்லக்கில் உட்பிரகாரம் சுற்றிவருவார். அர்த்த
ஜாமம் ஆனவுடன் பள்ளியறை ஸ்வாமி தினம் ஒரு அம்மனுடன் சுற்றி வருவார். காலையில் யதாஸ்தானம் வருவார்.
II. வார உற்சவம்
ஒவ்வொரு சுக்கிரவாரத் திரவும் சுக்கிரவார அம்மன் என வழங்கும் கஜலக்ஷ்மி அம்மன் கிளிவாகனத்திற் ப்ராகார
ப்ரதக்ஷிணம் வரும்.
III. பக்ஷ உற்சவம்.
பிரதோஷ தினங்களில் இரவில் சின்ன உற்சவர் வெளிப் பிரகாரம் பிரதக்ஷிணம் வருவர்.
IV. மாத உற்சவம்.
1. சித்திரை, ஆடி, தை இம்மூன்று மாத முதல் தேதிகளிற் பெரிய உற்சவர் புறப்படுவார். மற்றை மாதங்களில் முதல்தேதியிற் சின்ன உற்சவர் புறப்படுவார்.
2. விசாக நக்ஷத்திரந்தோறும் இரவிற் சின்ன உற்சவர் வெளி பிரகார பிரதக்ஷிணம் வருவார்.
3. கிருத்திகை நக்ஷத்திரந்தோறும் பொன்மயில் மீது பெரிய உற்சவர் வருவார். ஆடி கிருத்திகை, கார்த்திகை
கிர்த்திகைகளில் வெள்ளி மயில் மீது வருவார்.
4. சுக்கிலபக்ஷ ஷஷ்டி திதி தோறும் இரவிற் பெரிய உற்சவர் வெளிப்பிரதக்ஷிணம் வருவார்.
5. பௌர்ணமை தோறும் பெரிய உற்சவர் புறப்படுவார்.
6. அமாவாசை தோறும் பெரிய உற்சவர் புறப்படுவார்.
குறிப்பு:- சின்ன உற்சவர் புறப்படு நாளும் பெரிய உற்சவர் புறப்படும் நாளும் ஒன்று சேர்ந்தால் (உதாரணமாக, விசாகமும்
ஷஷ்டியும்) பெரிய உற்சவரே புறப்படுவார்.
------------------------------
V. வருஷ உற்சவம்.
[*உடுக்குறியுற்றன வீசேஷ உற்சவங்கள்.]
மலைக்குக்கீழ் வரும்போழுதெல்லாம் பெரியஉற்சவர்தான் வருவார்.
1. ஆடி.
(1) முதல்தேதி:- தக்ஷிணாயன புண்யகாலம் - இரவிற் பெரிய உற்சவர் மலை மேல் வெளிப் பிரதக்ஷிணம் வருவார்.
(2)* கிருத்திகைக்கு முன் ஐந்து தினங்கள் பெரிய உற்சவர் மாலையிற் கீழே வந்து குமார தீர்த்தப் பிரதக்ஷிணம் வருவார். முதல் நாள் ஒன்று, இரண்டாம் நாள் மூன்று, மூன்றாம் நாள் ஐந்து, நான்காம் நாள் ஏழு, ஐந்தாம் நாளாகிய பரணியன்று ஒன்பது சுற்றுக்கள்; ஒவ்வொருநாளும் கடைசியாகிய சுற்று சஹஸ்ரேசுரரையும் சேர்த்துச் செய்யப்படும். கிருத்திகை முதல் மூன்றுநாள் தெப்பல் உற்சவம்; அளவிறந்த கூட்டம்; திவ்யமான காட்சி. தெப்பலிற் ஸ்வாமி கிருத்திகையன்று 3, மறுநாள் 5, மூன்றாநாள் 7 சுற்றுக்கள் வருவார்.
-----------
2. ஆவணி
(1) சிராவணம் (திருவோணம்) - பவித்ரோற்சவம். காலையில் விசேஷ தீபாராதனை. இரவிற் பெரிய உற்சவர் வெளிப் பிரதக்ஷிணம் வருவார். சிராவணத்தன்று காலை எல்லா மூர்த்திகளுக்கும் பவித்திரந் தரித்தல்.
(2)விநாயக சதுர்த்தி - இரவில் விநாயகர் உற்சவம்.
-------------
3. புரட்டாசி.
(1) நவராத்திரி உற்சவம்- சுக்கிலபக்ஷம் பிரதமையிலிருந்து சுக்கிரவார அம்மன் சர்வவாத்தியமண்டபத்திற் கொலு வீற்றிருக்கை.
(2) விஜய தசமி யன்று பெரிய உற்சவர் மாலையிற் கீழேயிறங்கி தேவடியாள் குளம் பிரதக்ஷிணம் வருவார். வன்னிமர சேவை.
---------
4. ஐப்பசி
கந்தர் சஷ்டி:- சுக்கிலபக்ஷம் பிரதமை ஆரம்பம். ஐந்துநாள் பெரிய உற்சவர் இரவில் வெளிப்பிரதக்ஷிணம் வருவார். ஆறாம் நாள் ஆறுமுகஸ்வாமி வெளிப்பிரதக்ஷிணம் வருவார். ஆறு நாளும் பெரிய உற்சவருக்கும் ஆறுமுக ஸ்வாமிக்கும் அபிஷேகம்.
------------
5. கார்த்திகை
சோமவாரந்தோறும் பெரிய உற்சவர் ப்ராகார பிரதக்ஷிணம் வருவார்.
பரணிதீபமும், கிருத்திகை தீபமும் விசேஷம்; உள்ளே ஸ்தபன மண்டபத்திற் பிரதான விளக்கு ஒன்றுடன் இன்னும் ஆறு நெய் விளக்குகளுக்குப் பூஜை; சுமார் 120-நெய் விளக்குகள் ஏற்றப்படும். கிருத்திகையிரவு ஸ்வாமி சந்நிதிக்கு வடகிழக்கிலுள்ள பச்சரிசி மலைமீது தீபஉற்சவம்; மலைமேல் வெளிப்பிரகாரத்தில் ஈசான மூலையிற் சொக்கபானை நடக்கும். பிரதான விளக்கு பலிபீடத்துக்கு அருகில் வைக்கப்படும்; அவ்விளக்கிலிருந்து சொக்கபானை ஏற்றப்படும். சொக்கபானையானபின் அர்த்தஜாம பூஜை நடக்கும்.
-------------
6. மார்கழி.
சுமித்திரேசுரர் திருவாதிரைக்கு முன் ஒன்பது நாளும் வெளிப்பிரதக்ஷிணம் வருவார். ஆருத்ரா தினத்துக்கு முன் நாள் இரவுஷண்முகஸ்வாமிக்கு அபிஷேகம். வெளிப்பிரதக்ஷிணம் பாதிதூரம் வருவார். வெள்ளை சாத்துபடி; ஆருத்ரா காலை-தரிசனம்; ஷண்முகஸ்வாமி வெளிப்பிரதக்ஷிணம் முழுமையும் வருவார். திருவாதிரை காலை சுமித்திரேசுரர் குமார தீர்த்தத்துக்கு வந்து சஹஸ்ரேசுரர் கோயிலில் இறங்கித் தீர்த்தமாடிப் போவார்.
----------------
7. தை
(1) சங்கிராந்தி:- பெரிய உற்சவர் வெளிப் பிரதக்ஷிணம்வருவார்.
(2) மாட்டுப் பொங்கல்:- மாலையில் மலைக்கு மேற்கில் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டுமைல் தூரத்திலுள்ள ஐயன் குளத்துக்குப் பெரிய உற்சவர் புறப்பாடு; மாடுமடக்குதல்.
(3) கன்று பொங்கல்:- காலையிற் பெரிய உற்சவர் மலைக்குக் கிழக்கில் இறங்கிவந்து கிராமப்பிரதக்ஷிணம். மாலை 3 -மணிக்குமேல் ரெட்டியார் குள மண்டபத்தில் அபிஷேகம்.
(4) தைப்பூசம்:- மாலையில் மூலவருக்கு மது கலச அபிஷேகம்; பாவாடை சாத்துதல்; அன்னநிவேதனம். இரவு - தங்க மயில்வாகன சேவை; பெரிய உற்சவர் புறப்பாடு.
(5) தைப் பூசத்துக்கு அடுத்தநாள் பெரிய உற்சவர் மலைக்கு மேற்கிலும் கிழக்கிலும் உள்ள கருணீகர் மண்டபங்களில் இறங்குவார். பின்பு மலைமேற் குதிரைவாகன உற்சவம்.
தைம் மாதம் 27-ஆந் தேதி "வர்த்தந்தி உற்சவம்"; மாலையில் நூற்றெட்டு சங்கு அபிஷேகம் ஆனபிறகு சாயரக்ஷைதீபாராதனை; இரவு - பொன்மயில் வாகனம்.
-----------
8. மாசி
(1) விசாகத்தில் - தவனோற்சவம் - மூன்றுநாள் நடக்கும்.
*(2) பிரமோற்ஸவம் - மக நக்ஷத்திரத்திற்குப் பத்து நாள் முன்னாக ஆரம்பம்; உற்சவ மூர்த்தி பெரிய உற்சவர்; உற்சவம் மலைமேலே நடக்கும்; த்வஜாரோஹணத்துக்கு முன் நாள் இரவு விநாயகர் உற்சவம் - அங்குரார்ப்பண உற்சவம் - சுமித்திரேசுரர் (அஸ்திர தேவர்) புறப்பாடு; இந்திர தீர்த்தத்திலிருந்து தாசி தலையிற் புற்று மண் கொண்டுவரப்படும்.
முதல் நாள்:- காலை - த்வஜாரோஹணம்; இரவு - கற்பக விருக்ஷம் - (அது பழுதுபட்டபடியால் ஸ்வாமி விமானத்தின் மீது வருவார்).
இரண்டா நாள்:- காலை - சூர்யப்பிரபை; இரவு - பூதவாகனம்.
மூன்றா நாள்:- காலை - சிங்கவாகனம்; மாலை - ஆட்டுவாகனம்.
நான்கா நாள்:- காலை - பல்லக்கு; மாலை - நாகவாகனம்.
ஐந்தா நாள்:- காலை - அன்னவாகனம்; மாலை - வெள்ளிமையில் வாகனம்.
ஆறா நாள்:- மாலை ஆறு மணிக்கு முன் புலிவாகனம்; தாசிகளது மஞ்சள்நீர் உற்சவம். இரவு - யானைவாகனம்; காமக்கூத்து - தேவதாசிகளுள் ஒருத்தி மன்மத வேஷத்துடன் புன்னைக்காய் கொண்டு ஆடல்.
ஏழா நாள்:- காலை - ரதோற்சவம்.
எட்டா நாள்:- காலை - யாளிவாகனம்; மாலை - ஸ்வாமி கிழே ஆறுமுக ஸ்வாமிகோயிலில் ஊஞ்சலாடுதல்; இரவு - ஸ்வாமி மலைக்கு மேற்புறத்துப் போய் அடிவாரத்தி லிறங்குதல்; கன்னமிடுதல்; வள்ளியைத் திருடுதல் - வேடர் கூட்டக் காட்சி; பிறகு, குதிரை வாகனம்; பின்னர் இரவு 3 - மணிக்கு வள்ளியம்மை திருக்கலியாணம்.தேவசேனை கதவடைக்கிறது; பதினைந்து நிமிஷம் பாடல் மங்களம், பின்னர்க் கதவு திறப்பது.
ஒன்பதா நாள்:- காலை-இந்திர விமானம். மாலை - (ஆறுமணி) கந்தபொடி உற்சவம்; இரவு - ஷண்முக ஸ்வாமிக்கு அபிஷேகம், உற்சவம் - பாதி பிரதக்ஷிணம் வருதல்.
பத்தா நாள் - மாசி மகம். காலை - (அஸ்திர தேவர் குமார தீர்த்தத்துக்கு வருவார்). ஷண்முகஸ்வாமி - முழுப்பிரதக்ஷனம் வருதல். மட்டையடி சேவை; தாசிகள் மட்டையா லடித்தல்.மாலை - குமாரதீர்த்தத்துக் கருகில் தீர்த்தவாரி; மண்டபத்திற் பெரிய உற்சவருக்கு அபிஷேகம். இரவு - மூன்றுமணிக்குக் கொடியிறங்குதல் ; (த்வஜ அவரோஹணம்).
பதினோரா நாள்:- இரவு - பத்துமணிக்கு மலைமேல் அரண்மனைக் கருகில் பந்தம்பறி உற்சவம்; வள்ளியம்மை
தேவசேனைக்கு சமாதானம்.
பிரமோற்சவம் முடிந்த மறுநாள் ஸ்வாமி எழுசுனைக்குப்போய் வருவார். இது மாமியார்வீடு எனப்படும்; இங்கே கலியாண மருவுண்ணுதல்.
--------
9. பங்குனி
* அஸ்த நக்ஷத்திரம் - ஆற்று உற்ஸவம் எனவழங்கும் திருவூறல் உற்சவம்; மலைக்கு மேற்கு 2-மைல் தூரத்தில் நந்தியாற்றங் கரையிற் பெரிய உற்சவருக்கு அபிஷேகம் இரவில் திருவூறல் உற்சவம்.
-----------
10. சித்திரை
பிரமோற்ஸவம்:- சித்திரை நக்ஷத்திரத்துக்குப் பத்துநாளைக்கு முன்பு ஆரம்பம்; மாசி பிரமோற்சவம் எப்படியோ அப்படியே; ஆனால் வேடர் உற்சவ மாத்திரம் கிடையாது. எட்டாநாள் இரவு தேவசேனை திருக்கலியாணம். வள்ளியம்மை கதவடைப்பது. இந்தப் பிரமோற்சவம் முடிந்த மறுநாள் பெரிய உற்சவர் திருத்தணிக்குக் கிழக்கில் 6- மைல் தூரத்திலுள்ள விநாயகபுரம் (மாமியார் வீடு எனப்படும் தேவசேனையின் தாயார் வீடு) போய்வருவார்.
-----------
11. வைகாசி
1. விசாகம்:- பெரிய உற்சவருக்கு மாலையில் அபிஷேகம்; இரவு - வெளிப்பிரதக்ஷிணம் வருவார்.
2. வசந்தோற்ஸவம்:- சுக்கிலபக்ஷம் பிரதமை முதல் பத்து நாள் நடக்கும் - துவாதசி - மாலை - ஐயன்குள உற்ஸவம். பத்து நாளும் பெரிய உற்சவர் சர்வவாத்திய மண்டபத்துக்கு வருவார். எட்டாவது நாள் பகல் பெரிய உற்சவருக்குக் கச்சேரி மண்டபத்தில் அபிஷேகம். *ஒன்பதா நாள் பெரிய உற்சவருக்குப் பள்ளியறை சமீபத்திற் பகல் 1-மணி முதல் 5-மணி வரையில் விசேட அபிஷேகம்; அன்றிரவு குருக்கள்மார் உற்சவம்.
--------
12. ஆனி
ஆனி மாதத்தில் விசேட உற்சவங்கள் ஒன்றுமில்லை.
குறிப்பு:-
ஷண்முகஸ்வாமி புறப்பாடு:- இவர் மலைவிட் டிறங்குவதில்லை; மலைமேலே வெளிப் பிரதக்ஷணம்; பிரம்மோற்ஸவ தினங்களில் இரண்டு நாள், ஐப்பசி சஷ்டி ஒரு நாள், மார்கழி திருவாதிரை ஒரு நாள்; ஆக நான்கு தினங்கள்.
பெரிய உற்சவர் மலைக்குக் கிழக்கே இறங்கிவரும் நாள்கள்:- (1)கன்று பொங்கல், (2) தைப்பூசத்துக்கு அடுத்த நாள். (3) பிரம்மோற்ஸவம், (4) ஆடித்தெப்பம், (5) விஜயதசமி.
மலைக்கு மேற்கே இறங்கிவரும் நாள்கள்:- (1) ஆற்று உற்சவம், (2) தைப்பூசத்துக்கு அடுத்த நாள். (3) மாட்டுப் பொங்கல், (4) பிரமோற்சவம், (5)வைகாசி ஐயன்குளத் திருவிழா.
வேலு மயிலுந் துணை.
-----------------------------------------------------------
Comments
Post a Comment