Tiruppukaḻp patippāciriyar varalāṟu
நாட்டுப் பாடல்கள்
Back
வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாறு
Source:
Project: திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாறு
Author: வ. சு. செங்கல்வராய பிள்ளை
ID: projectID4d79f03c02908
Total Pages: 52
Scanner credit: S. Anbumani (Text source: Mrs. Gnanapurani Madhvanath)
Project manager: anbupm
Volunteers: R. Aravind, S. Karthikeyan, V. Ramasami, K. Ravindran, Sriram Sundaresan, V. Devarajan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan and Thamizhagazhvan.
52 pages available in round_2 for projectID4d79f03c02908
-------------------------------------
திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாறு
முகவுரை
நன்னெறியைக் கடைப்பிடித்துக் கரையேறின பெரியோர்களின் சரித்திரம் இன்னதெனத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் பயன் தரக்கூடியது. இந்தச் சரித்திரத் தலைவரான சுப்பிரமணிய பிள்ளையவர்கள் சரித்திரத்தால் "நன்மை கடைபிடி" "முயற்சி திருவினையாக்கும்" "கடவுளை நம்பினோர் கைவிடப் படார்", என்னும் ஆன்றோர் வாக்கு மெய்ப்படுதல் நன்கு புலப்படும். இவர் இயற்றிய தனிப்பாடல்கள் இவரது முதிர்ந்த பக்தியின் நிலையைக் காட்டும். இப்பெரியாரின் சரித்திரத்தை எழுத என்னைத் தூண்டினவரும் முருக பக்தருட் சிறந்தவருமான எனது நண்பர் சென்னை போராட் ட்ரஸ்ட் ஆபீஸில் வேலையாயிருக்கும் பிரம்மஸ்ரீ ஈ. வேங்கடராவ் அவர்களது அன்பு மிகவும் பாராட்டற் பாலது. தமிழ் மக்கள் இச்சரித்திரத்தைப் படித்து உய்யும் வழி இன்னதென கைப்பிடித்துத் தமிழ்க்கடவுளாம் ஸ்ரீ சுப்பிரமணிய மூர்த்தியின் திருவருட்கு உரியராம் பெருமை யடைதல் வேண்டும் என்பது அடியேன் மனக் கருத்து. ஆறுமுகப் பெருமான் என்றும் அங்ஙனே அருள் வாராக.
சென்னை
292, லிங்கசெட்டி தெரு. வ.சு. செங்கல்வராயன்
7-20-1920
-----------------------------------------------------------
சுப்பிரமணிய பிள்ளை சரித்திரம்
காப்பு
எந்தை சரிதம் எழுதத் துணையாகுந்
தந்திமுகன் கந்தமலர்த் தாள்.
வ.த.சுப்பிரமணியபிள்ளை "சான்றோருடைத்து" என விசேடித்துச் சொல்லப்படும் தொண்டை நன்னாட்டிற் செங்கற்பட்டில் தணிகையெம்பெருமானுக்கு வழிவழியடிமையாகிய ஒரு நல்ல குலத்தில் 1846-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தனர். பிறந்த தினம் சாலிவாகன சகாப்தம் 1768-ஆம் வருஷம், கலியுகாப்தம் 4947 பராபவ வருஷம் கார்த்திகை மாதம் 28-ஆம் நாள், சுக்கிரவாரம் உத்திர நக்ஷத்திரம், ராத்திரி நாழிகை 7 5/8 என ஜாதகக் குறிப்பிற் கண்டிருக்கிறது. சீர் கருணீக ஜாதி; கௌதம மஹரிஷி கோத்திரம். குடும்பம் மிக்க ஏழைக்குடும்பம் என்றே சொல்லல்வேண்டும்.
இவர் தகப்பனார் பெயர் தணிகாசலம் பிள்ளை, தாயார் பெயர் இலக்குமியம்மாள்; இலக்குமியம்மாள் தணிகாசலம் பிள்ளைக்கு இரண்டாவது தாரம்; முதல் தாரத்துக்கு ஒரே பெண். அத் தாரம் இறந்தபின் மணஞ்செய்யப்பட்ட இலக்குமியம்மாவுக்குப் பிறந்த குழந்தைகளில் இளம் பிராயத்தில் இறந்த ஒரு ஆண் குழந்தைபோக சிவகாமியம்மா எனப் பெயர் கொண்ட ஒரு பெண் குழந்தையும், சிதம்பரம், சுப்பிரமணியன் எனப் பெயர்கொண்ட இரு ஆண் குழந்தைகளும் எஞ்சி நின்றன. சிவகாமியம்மா சபாபதிபிள்ளை என்பவரை மணந்து 1875ம் வருஷம் அவர் காலஞ்செல்ல சித்தூர் ஜில்லா புத்தூரில் வக்கீலாயிருந்த தன் மூத்தபிளளை துரைசாமி பிளளையின் ஆதரவில் இருந்து 1902ம் வருஷம் சிவபதமடைந்தனர். சிதம்பரம்பிள்ளை, துன்முகி வருஷம் (1837) பிறந்தவர். அவர் பூவிருந்தவல்லி. திருவள்ளூர் என்னும் ஊர்களிற் கோர்ட்டிற் காபீஸ்ட்டாகவும், குமாஸ்தாவாகவு மிருந்து நல்ல ஸ்திதிக்கு வந்த தனது தம்பி என்றும் உதவிய பொருள்கொண்டும் பிதுரார்ஜித பூஸ்திதியின் ஸ்வற்ப வரும்படியைக் கொண்டும் தமது வாழ்நாளைச் செலுத்தி 1898ம் வருஷம் காலஞ்சென்றனர். இளையபிள்ளையாகிய சுப்பிரமணியபிள்ளையின் சரித்திரமே நாம் இங்கு எழுதவந்தது.
சுப்பிரமணியபிள்ளையின் பிதாவாகிய தணிகாசலம் பிள்ளையோடு பிறந்த சகோதர சகோதரிகள் பதின்மர். இவர் தம் பிதா மாதா கற்பக பிள்ளை மீனாட்சியம்மா.
கற்பகபிள்ளை செங்கற்பட்டு ஜில்லா கோர்ட்டில் ரெகார்ட் கீபர் உத்தியோகத்தில் இருந்தவர். தணிகைச் சுப்பிரமணிய சுவாமி திருவடிக்கு மீளாப் பக்தி பூண்டவர். அப்பெருமான் இவரிடம் பல திருவிளையாடல்கள் புரிந்ததாகச் சொல்வதுண்டு. இவர் முதல்முதல் பூவிருந்தவல்லியில் (Poonamallee) இருந்தார். ஸ்ரீ கந்தபிரான் இவர் கனவிற்றோன்றித் தெற்கே சென்றால் வேலை கிடைக்கும் என்றாராம். அவ்வாறே செங்கற்பட்டுக்கு வர அங்கு வேலை கிடைத்தது. ஒருமுறை கிருத்திகை தினத்தில் தனது குலதெய்வம் வீற்றிருக்கும் திருத்தணிக்குப் போகாது திருப் போரூர் போக இவர் முயன்றபோது இவரைப் புலி தொடரப் பயந்து தம் பிழையை மன்னிக்க வேண்டினவுடன் புலி மாயமாய் மறைந்ததாக ஒரு சரித்திரம் எங்கள் முன்னோர் சொல்லுவதுண்டு. பிறிதொருமுறை சூனியத் தால் இவர் உடம்பில் திடீரெனக் கொப்புளங்கள் பல தோன்றி உடலம்வீங்க, அன்று இவர் ஜெபத்திற் சூனியஞ் செய்தவனைக்காட்டி அவனைத் தனது கிங்கரர்களாற் கொல்வித்ததையுங் காட்டி நோயையும் உடனே நீக்கினதாகவும், பின்னர் ஜெபத்திற்காட்டின இடத்தைச் சென்று பார்க்க அங்கு ஒருவன் உண்மையாகவே இறந்து கிடந்தல் யாவரும் கண்டனரெனவும் ஒரு அநுபவஞ் சொல்லுவதுண்டு. இத்தகைய பக்தி நிறைந்த புண்ணியர் பெற்ற மக்களுள் ஒருவராகிய தணிகாசலம்பிள்ளையும் தந்தையை போற் சிறந்தபக்தரே. இவர் சாகுமளவும் சிவபூஜை விடாது செய்தவர். நினைக்க முத்தியளிக்குந் திருவண்ணாமலையை என்றும் மறவாது அருணகிரியந்தாதியைச் சதா பாராயணஞ் செய்யும் நியமத்தவர். இவர்செய்த புண்ணியமே ஓருருக்கொண்டவர் நமது சரித்திரத்தலைவரான சுப்பிரமணிய பிள்ளை.
I. இளம்பருவம்.
(i) 1846 - 1864
இவர் சரித்திரம் எழுதுவதற்குத் தக்க ஆதாரங்கள் இவர் தமது இளம்பிராயமுதல் எழுதிவைத்திருக்கும் "தின நிகழ்ச்சிக் குறிப்புக்களே" (Diaries). தேவாரத்திற் பெரும் பாகஞ் செல்லேறி மறைந்ததுபோல இவர் எழுதிவைத்த தினநிகழ்ச்சிப் புத்தகங்களில் முக்கியமான பாகங்களிற் சில செல்லேறி மறைந்தது எமக்கு மிக்க வியாகுலத்தைத் தருகின்றது, "விளையும் பயிர் முளையிலே" என்னும் ஆன்றோர் வாக்கியத்தின் உண்மை இவர் வாழ் நாட் சரிதத்தால் நன்குவிளங்கும்: சகலவித நற்குணங்களும் அமைந்த சாந்தகுணசீலர் என்பதும், தணிகை யெம்பெரு மானிடத்துந் தண்ணிலா வேணியனாஞ் சிவபிரானிடத்துங் குன்றாத பக்திநிறைந்த உள்ளத்தவரென்பதும், சிறு வயதிலேயே நல்லாரோ டிணங்கி முன்னோர்களது நல்வழியே பற்றவேண்டும் என்னும் அவா ஒன்றையே உறுதியாகக் கைப்பிடித்துக் கரையேறினவர் என்பதும் இவர் சரித்திரத்தால் நன்கு விளங்கும். இதற்குச் சான்று இவர் தமது தினநிகழ்ச்சிப் புத்தகத்தை முதல்முதல் எழுத ஆரம்பித்தபோது எழுதியுள்ள பின்வருங் குறிப்பே:
தின நிகழ்ச்சிக் குறிப்புப் புத்தகம்: என்னுடைய பழைய உபாத்தியாயர்களுள் ஒருவராகிய சேமுவல் பிள்ளை என்பவர் இத்தகைய புத்தகம் ஒன்றை வைத்திருப்பதைக் கண்டு, அப்புத்தகத்தினின்றும் அவர் வாழ்நாட் சம்பந்தப்பட்ட சில தின நிகழ்ச்சிகளை வாசிக்க அவரை நான் கேட்டது முதல் அவ்வத்தினத்து நிகழ்ச்சிகளை அங்ஙனம் எழுதுவதின் பலன் இன்னதென்றறிந்து நானும் அவ்வாறே ஒரு புத்தகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் அவா மேலிட வேறு வேலை செய்யக்கூட மனம் வராது உடனே அவர்போல நானும் எழுத ஆரம்பித்தேன். யான் எடுத்த இவ்விரதம் நிறைவேறுமாறு கடவுள் அநுக்கிரகிப்பாராக!
வ.சுப்பிரமணியன். 15-9-1864 செங்கற்பட்டு.
சிறுவயதில் வீட்டு உபாத்தியாயரிடம் இவர் தமிழும் தெலுங்கும் வாசித்தார். இவர் தந்தையின் நண்பரான வல்லூர் சோமசுந்தர முதலியார் என்பவருடைய உதவியா 1857 ௵ நவம்பர் மாதத்திற் செங்கற்பட்டு மிஷின் கூலிற் சேர்ந்து வாசித்தார். பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் பொழுதும் பின்பு பரீக்ஷைகளுக்குப் படிக்கும்பொழுதுங் கஷ்டப்பட்டுக் காலையில் நான்குமணிக் கெல்லாம் எழுந்து படித்ததாகத் தெரிகின்றது. இவர் பள்ளிக்கூடத்திற் படித்துக்கொண்டிருந்தபொழுது நடந்த வீசேஷங்கள் ஒன்றும் அதிகமாகத் தெரியவில்லை. "பால் Paul என்னும் கிறிஸ்தவ ஞானியின் சரித்திரம்" என்னும் வியாசத்தை வெகு நன்றாக எழுதினதற்காக அப்போது செங்கற்பட்டில் ஜட்ஜாக இருந்த Mr. Philips (பிலிப்ஸ்) என்பவர் "Chamber's Encyclopoedia" (சேம்பர்ஸ் என்சைக்லோபீடியா),(ஸ்பெக்டேடர்) என்னும் புத்தகங்களை இவருக்குப் பரிசளித்ததாகத் தெரிகின்றது. தம்முடைய குடும்ப கஷ்டத்தைத் தெரிந்து சரிவரப் படித்தும் மேல்வகுப்புகளிற் படிப்பதற்கு வேண்டிய பொருளில்லாமையால் அந்தப் பள்ளிக் கூடத்திலேயே 1863ம் வருஷம் ஜுலை மாதம் 1ம்தேதி எட்டு ரூபாயில் ஒருபாத்தியாயராக அமர்ந்தார். அந்தப் பெருந்தொகையும் 1864ம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் ஆறு ரூபாயாகக் குறைக்கப்பட்டது. ஜீவனம் வெகு கஷ்டமாகவே "வறுமையாகிய தீயின்மேற் கிடந்து, நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி யருள்வாயே" என அருணகிரிநாதர் வேண்டினவாறு தணிகேசனை "மிடிதீர அருள்வாயே" எனத் தாமுந் தினந் துதித்து வந்தனர். அப்போது தமது புத்தகத்திற் பின்வருமாறு எழுதுகிறார்.
யான்படும் கஷ்டங்கள் சொல்லுக்கடங்கா. என் தமையனாரோ இன்னுங் காபீஸ்ட்; நானோ ஆறு ரூபாயில் ஒரு உபாத்தியாயர். எங்கள் வரும்படி இவ்வளவு குறைவாயிருக்க நாங்கள் எப்படிக் குடும்ப சவரக்ஷணை செய்வது? எங்கள் தந்தையோ வயது சென்றவர். தமது இறுதி நாள்களிற் பிள்ளைகளின் உதவியை அடைந்து சுகமாயிருக்கும் பாக்கியம் அவருக்கில்லையே.
சிறுவயதிலேயே தாய் தந்தையரிடத்தில் அன்பும் பக்தியும் வாய்ந்தவர் நமது சரித்திர கர்த்தா என்பது 1864ம் வருஷம் செப்டம்பர் மாதம் 26ம் தேதி அவரது புத்தகத்திற் பின் வருமாறு எழுதியுள்ளதினின்றும் புலப்படும்.
திருத்தணிக்குப் போய் இன்னுந் திரும்பிவராத என் அருமைத் தந்தை தாயர்களின் நினைவே பெரிதாய் இன்று எனக்கு அதிக மனக் கவலையாயிருக்கிறது. அவர்கள் சௌக்கியமாய்ச் சீக்கிரத்தில் திரும்பிவரக் காண என் மனம் அவாவுகின்றது. என் விருப்பத்தைத் தயை செய்து பூர்த்தி செய்யக் கருணை புரியக் கடவுளை வேண்டுகின்றேன்.
இவ்வாறு குடும்ப கஷ்டங்களால் இவர் வருந்தியிருந்த போது சென்னைக் கிறிஸ்தவ கலாசாலை உபாத்தியாயர் (டாக்டர்) மில்லர் துரை செங்கற்பட்டுக்குப் பள்ளிக்கூடப் பரிசோதனைக்கு வந்தனர். அப்போது அவரிடம் தம்முடைய கஷ்டங்களைத் தெரிவிக்கச், சென்னைக்கு வந்தால் மெட்ரிகுலேஷன் வகுப்பிற் படிப்பதற்கு வேண்டிய பொருளுதவி முதலியவற்றை மில்லர் துரை தாம் தருவதாய் ஒப்புக்கொண்டனர். தமக்கு உபாத்தியாயர் வேலை யிஷ்டமில்லாதிருந்தும் அதைவிட்டால் வேறு வேலை எங்குத் தேடுவது, தாய் தந்தையரை விட்டுப் பிரிந்து எப்படிச் சென்னைக்குப் போவது, என அஞ்சி அந்த ஆறு ரூபாய் உத்தியோகத்திலேயே சில காலம் இருந்தார். 1864 ௵ செப்டம்பர் ௴ 28௳ தமது புத்தகத்திற் பின்வருமாறு எழுதியுள்ளார்,
உபாத்தியாயராயிருக்க எனக்கு மனமே இல்லை. ஆயினும் நான் வேலையைத் திடீரென்று விட்டுவிடக் கூடாது. எதையும் ஆராயாது செய்யலாகாது.
தேக ஆரோக்கியமும் மனோ தைரியமுங் குன்றித் தாய் தந்தையர் தம்மை விட்டுப்பிரிவது சகியாது அடிக்கடிவியாகுல மடைந்தனர். தினந்தோறும் மிக்க பிரயாசைப் பட்டு உழைத்தும் மாத முடிவில் ஆறே ரூபாய் பெறுவது இவர் மனதுக்கு ஆறாத்துக்கத்தை விளைவித்தது. சென்னைக்கு வந்து படிப்பதற்கோ பொருள் இல்லை. இவரது கஷ்டதிசை இவ்வாறிருக்க, இளவயதிலேயே இவருடைய நன்றிமறவாமை தமது நண்பர் ஒருவர் தமக்கு அரையணா கொடுத்துதவினபோது இவர் எழுதியுள்ள குறிப்பால் நன்கு பெறப்படுகின்றது.
என் பிரிய நண்பர் சீநிவாசலு தபாற்செலவுக்கு அரையணா கொடுத்துதவினார். அவர் பலமுறை எனக்கு இம்மாதிரி உதவியிருக்கின்றார். நான் அவருக்கு எவ்வளவு நன்றி-யுள்ளவனாயிருக்கவேண்டும்! இத்தகைய உதவுங் குணமுடைய நண்பரைத் தந்த கடவுளுக்குப் பின்னும் எத்துணை நன்றி நான் செலுத்த வேண்டும்.
எல்லாம் இறைவன் செயல். இறைவனே தோன்றாத் துணையாய் நின்று உதவுகின்றான் என்று அடிக்கடி இறைவனுக்குத் தமது நன்றிகாட்டுதல் இவர் புத்தகத்தில் எங்குங் காணலாகும். உதாரணமாக ஒரு விஷயம் கூறுவோம். 1864௵ அக்டோபர் ௴ 16௳ செங்கற்பட்டில் மாலைப் பொழுதில் வெளிக்குச்சென்ற இடத்திற் சமீபத்திற் சீறிப் போந்த விஷநாகம் ஒன்று தம்மைக் கடியாதுவிட்ட நிகழ்ச்சியைக் குறித்துக் கடவுளுக்கு இவர் நன்றிபாராட்டுவது படிக்கப்படிக்க மனதுக்கு உருக்கத்தை மேன்மேல் உண்டுபண்ணுகின்றது. பக்திமார்க்கத்தைப் பரவச் செய்வதற்கென ஏற்பட்ட மிஷன்பள்ளியிற் படித்த கல்வியின் பயனை உண்மையிற்கிரகித்தனர் இவர் என்பது நன்கு தெரிகிறது. இவர் இதைக் குறித்து எழுதியுள்ளதாவது:
ஆ! கடவுளின் என்றும் ஓயாக் கருணையின் பிரபாவத்தை என்னென்பது! என்னே அவர்தம் அளவு படாக்கருணை! தமது சிருஷ்டியில் மிகத்தாழ்ந்ததும் இழிந்ததுமான ஜீவனிடத்தும் அவர் கருணைநோக்கம் எங்ஙனம் திகழ்கின்றது! யான் அவருக்கு எத்துணை நன்றி பாராட்டுதல் வேண்டும்! இன்று எனக்குப் புனர்ஜன்மம் தந்து உதவின இறைவனுக்குஎன்ன திருப்பணி நான் செய்யவல்லேன்! ஆ! என் தெய்வமே! காத்தளிக்குங் கடவுளே! ஏழையாகிய யான் உன் திருவடியை வணங்கி வாழ்த்தி வந்தனஞ் சொல்லுவதன்றி உன் பெருங்கருணைக்கும் வற்றாத திருவருளுக்குங் கைம்மாறு செய்ய ஒரு சிறிதும் வல்லனல்லேன்.
உண்பதற்கு நல்ல உணவுகூட இல்லாது கஷ்டதிசையில் இச்சமயம் வருந்தினரென்பது 1864௵ அக்டோபர் 20௳. "யான் உண்ணும் உணவு மிகக் கேடாயிருக்கிறது; மோர் இல்லை; நெய் இல்லை; என் உடலும் மனமும் எங்ஙனம் திடப்படும்?” என எழுதியுள்ளதால் தெரிகின்றது. இப்படியிருந்தும் ஒரு நேரமும் வீண் போக்காது தன் கல்வி யறிவை அபிவிருத்தி படுத்துவதிலேயே வெகு ஊக்கமாய் உழைத்து வந்தார். காபி எழுதி எழுதி இவர் கையெழுத்து நன்றாய்த் திருந்தி யிருந்தது. 1864௵ நவம்பர்௳ 7௳ பின்வருமாறு எழுதியுள்ளார்.
என்ஜினீயர் லெக்கெட்துரை ஒருவருக்கென நான் பெயர்த் தெழுதிக்கொடுத்த விண்ணப்பத்தில் எனது கையெழுத்தைப் பார்க்க நேர்ந்தபொழுது அது நன்றாயிருக்கிறதென்று சந்தோஷப்பட்டதாக வாசுதேவ முதலியாரும் அப்பாசாமி நாயகரும் சொன்னார்கள்.
ஆறு ரூபாய் போதாது அல்லற்பட்டுச் செங்கற்பட்டில் ஒரு ஆபீஸில் வேலையாயிருந்த வாசுதேவ முதலியார் என்பவருக்கு இரவிற் பாடஞ் சொல்லிவந்தார். ஆனால் அதுவும் சொற்ப வரும்படிதான். சரிவரக் கொடுக்கப் படவும் இல்லை. நவம்பர்௳ ஜெனரல் டெஸ்ட் பரீக்ஷைக்குப் பணங்கட்ட ஐந்து ரூபாய்க்குப் பட்ட கஷ்டம் இறைவனே அறிவன். லெக்கெட் என்ஜினீர் தமது ஆபீஸில் காபீஸ்ட் வேலைக்கு 15 ரூபா சம்பளந் தருவதாகச் சொன்னார். ஆனால் அது காயமான உத்தியோகம் அல்ல என்று அதை வேண்டாம் என்று விட்டுவிட்டனர்.
(ii) 1865 -- 1869
சென்னை வாசம்.
இவ்வாறிருக்கும் போது 1865௵ ஜனவரியில் மில்லர்துரை செங்கற்பட்டுக்கு மறுமுறை வந்தபோது அவரிடம் தங் கஷ்டத்தைச் சொல்ல அவர் "Mackintosh Scholarship Examination" என ஒரு பரீக்ஷை சென்னையில் நடத்தப்படும் என்றும், அதில் தேறினால் தாம் உதவுவதாகவும் சொல்ல, அவ்வாறே சென்னைக்குப் பிப்ரவரி மாதம் போய் அந்தப் பரீக்ஷையில் முதலாவதாகத் தேற, மில்லர் துரை, "நீ வெகு நன்றாய் எழுதினாய், நீ இவ்வளவு எழுதுவாய் என்று நான் நினைக்க இல்லை" என்று சொல்லி மாதம் எட்டு ரூபாய் ஸ்காலர்ஷிப் கொடுத்துவந்தார். கஷ்டகாலத்தில் இன்னும் படிக்கப் போவது இவர் தந்தைக்கும் தமையனுக்கும் இஷ்டமே இல்லை. அவர்களுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லி மெதுவாய்ச் சென்னைக்குவந்து பரீக்ஷையில் முதலாகத் தேறினது இவர் தந்தைக்குப் பெரிதும் சந்தோஷம் விளைவித்தது. திருவல்லிக்கேணியில் இவர் தமது அத்தைமகன் ரத்தினம் பிள்ளை யென்பவர் வீட்டில் இருந்து வந்தார்.
தமக்கு வந்த எட்டு ரூபா, நாலு ரூபா சாப்பாட்டுச் செலவுக்காக ரத்தினப் பிள்ளைக்கும், ஒரு ரூபா தன் செலவுக்கும், மூன்று ரூபா தாய்தந்தை தமையனுக்குமாகச் செல விடப்பட்டது, படிப்புக்கு வேண்டிய புத்தகங்களை ரத்தின பிள்ளையும் சில நண்பர்களும் மில்லர் துரையும் தந்து உதவினார்கள். கிறிஸ்தவ கலாசாலையில் அப்போதிருந்த உபாத்தியாயர்கள் மேக் மில்லன் துரை, கார்ஸ்லா துரை, மிவலர் துரை. வகுப்புகளில் இவர் எவ்வாறிருந்தனர் என்பது பின்வரும் குறிப்புகளில் ஏற்படும்.
28-1-1865 மேக்மில்லன்துரை நடத்திய பூகோள சாஸ்திரிப் பரீக்ஷையில் நான் எதிர்பாராத போதிலும் முதலாவதாக இருந்தேன்.
30-3-1865 மேக்மில்லன்துரை நடத்தின ஆங்கில செய்யுட் பரீக்ஷையில் 60 மார்க்குக்கு 41 மார்க் வாங்கி இரண்டாவதாக இருந்தேன். முதலாயிருந்தவர் 45 மார்க் வாங்கினார். ஆயினும் செய்யுட் பாகங்களை வசனமாக்கு வித்தலில் நான் எழுதினதே மொத்தத்தில் நன்றாயிருந்த தென்றனர்.
படிப்பு இவ்வாறிருக்கக் குடும்பகடனும் கஷ்டமும் படிப்பதற்கு முடியாத தொந்தரவுகளை அதிகரித்து வந்தன. செங்கற்பட்டிலிருந்து படிப்பதற்குச் சென்னை வரும்பொழுதும் சென்னையிலிருந்து செங்கற்பட்டுக்குத் தாய் தந்தையரைப் பார்க்கச் செல்லும் பொழுதும் தம்முடைய புஸ்தகமுதலிய சாமான் மூட்டைகளைத் தாமே தூக்கிக்கொண்டு 35 மைல் வழிநடந்து சென்றது மிக்க பரிதபிக்கத் தக்கதா யிருக்கிறது. வண்டிக்குக் கொடுக்கப் போதுமான பணம் இல்லை. அப்போது ரெயில் கிடையாது. என்ன செய்வது. தாய் தந்தையருடைய கஷ்டத்தை நிவர்த்தி செய்யாது தாம் சென்னையிற் படித்துக் கொண்டி நிப்பது இவருக்கு மெத்த மனக்கவலையாயிருந்தது. கட்ட நல்ல துணிகூடக் கிடையாது. ஜூலை௴ 3௳ "கந்தைத் துணியுடன் பள்ளிக்குப் போவது எனக்குப் பேரவமானமா யிருந்தது." -- என எழுதியுள்ளார். தம்மை யறியாது தாம் செய்த பாபங்களுக்கு அஞ்சி அஞ்சி இவர் கடவுளைப் பிரார்த்திப்பது இவருடைய நன்னெறியை நன்குகாட்டும். ஒரு முறை தெரியாது தமது கால் பட்டு ஒரு பல்லி இறந்து பட்டது. அப்போது இவர் பட்ட துயரம் சொல்ல ஒண்ணாது. இவர், புத்தகத்தில் எழுதியுள்ளதாவது.
14-7-1865 ஆ! என்னபாவி! கொடும்பாவி யான் இவ்வளவு கொடுந்தொழிலைச் செய்யத்துணிந்த மாபாவி நான் ஆதலால்தான் கடவுள் என்னை இக்கஷ்டத்துக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார். ஆ! தெய்வமே! நான் செய்தது தவறே! அதற்காக நான் பெரிதும் வருந்துகின்றேன். என் பிழையைப் பொறுத்தருள வேண்டும்.
பின்பு, தமக்காதரவாயிருந்த ரத்தின பிள்ளை சித்தூருக்கு மாற்றப்பட, இவர் இருக்க இடமும் உண்ண உணவும் இல்லாது சில நாள் கஷ்டப்பட்டார். பிறகு இருக்க வேறிடம் தேடி மில்லர் பள்ளிகூடத்துக்குச் சமீபத்தில் லிங்கசெட்டித்தெரு 307-ஆம் நம்பர் எல்லப்ப நாயகர் வீட்டில் இடம் கிடைக்க அதில் இருந்து வந்தார். இவ்வருடத்தில் U.C.S. பரீக்ஷையிற் றேறினார். இந்த கஷ்ட திசையில் மில்லர் துரை எவ்வளவோ உபகாரம் செய்ததாக இவர் எழுதியுள்ளார்.
1865 ௵ பிப்ரவரி௴ மெட்ரிகுலேஷன் பரீக்ஷையில் தேறினதாக கெஜட்டிற் கண்டபோது இவர் எழுதியுள்ளதாவது:
தேறினவர்கள் பெயர்களுள் என் பெயரைக் கண்டபோது நான் பேரானந்தம் உற்றேன். மில்லர் ஸ்கூலில் நான்தான் முதல். தன்னை நம்பின என்னைக் கைவிடாது காத்த என் கடவுளுக்கு வந்தனம். கருணாநிதிக்கு என் மனப்பூர்வ வந்தனம்! தீன ரக்ஷகனுக்கு என் மனப்பூர்வ வந்தனம்! தோன்றாத் துணைக்கு என் மனப்பூர்வ வந்தனம்! அடியேன் அவரை நம்பினேன்! அவர் அடியேனுக்கு உதவினார்! அவர் அடியேன்மீது அன்பு சுரந்து அளித்த உதவிகளுக்கெல்லாம் என்ன தொண்டு செய்யவல்லேன்! 14-2-1866
எப். ஏ. பரீக்ஷைக்குப் படிப்பது இவர் தந்தையாருக்குந் தமையனாருக்கும் இஷ்டம் இல்லை. ஏதாவது வேலை சம்பாதித்துக் குடும்ப கஷ்டத்தை நீக்கவேண்டும் என்று இவரை அவர்கள் வற்புறுத்தியும் ஏதோ சமாதானம் சொல்லி எப். ஏ. படித்தார். கலெக்டராயிருந்த ரஸாகான் சாயபு, ரிஜிஸ்ட்ரார் பெரியசாமி முதலியார், வக்கீல் ராம சந்திர ராவ் சாயப் இவர்கள் இவருடைய சகபாடிகள். சில காலம்தாமே சமைத்துச் சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போகவேண்டி யிருந்தது. ஸ்காலர்ஷிப்பாக வரும் எட்டு ரூபா போதாததால் பார்த்தசாரதி செட்டியார் என்பவருடைய பிள்ளைக்குப் பாடஞ் சொல்லி மாதம் 3 ரூபா பெற்றுவந்தார், வேறொரு இடத்தில் இரண்டு பிள்ளைகளுக்குப் பாடஞ்சொல்ல 4 ரூபா கிடைத்தது. பணம் போதாமற் கஷ்டப்பட்ட காலத்தில் வீட்டுக்காரருங் கடன்கொடுத்துதவினார். இவ்வாறு படித்துக் கொண்டிருக்கும்போதே உலகுக்குப் பயன்படக்கூடிய புத்தகங்கள் ஏதாவது எழுதவேண்டும் என்னும் ஆசை இவருக்கு இருந்ததாகத் தெரிகிறது. பஞ்சதந்திர வசனம், திரு நாவுக்கரசுநாயனார் சரித்திரம் என்னும் நூல்கள் எழுதினதாகத் தெரிகிறது. ஆனால் இவர் எழுதிவைத்தவை எங்குப் போயினவோ தெரியவில்லை. 1866-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் நாள் வெள்ளிக்கிழமை திருத்தணிகைக்குச் சென்று தமது குலதெய்வமாகிய முருகபிரானை வணங்கிப் பேரானந்தம் அடைந்தனர்.
1867-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் நாள் எப். ஏ. பரீக்ஷையில் முதல் வகுப்பிற் றேறினர். அப்போது கடவுளுக்கு நன்றி கூறி இவர் தமது புத்தகத்தில் எழுதியுள்ளது இவ்வளவவ்வளவன்று. தாம் படித்திருந்த ஒவ்வொரு வகுப்பிலும் இனாம் புத்தகங்கள் பல பெற்றனர். பின்னும் பீ.ஏ க்குப் படித்தால் தமது தாய் தந்தையருக்குக் கஷ்டமாகு மென்று வேலைக்குப் பிரத்தியனஞ் செய்து பச்சையப்பன் கலாசாலையில் ப்ரின்சிபல் லவரி துரைக்கீழ் உபாத்தியாயராகச் சிலகாலமிருந்து பின்பு மில்லர்துரை சிபார்ஸ் செய்ய ஆண்டர்ஸன் துரையாரால் க்ராண்ட் ஸ்கூலில் 40 ரூபாயில் மார்ச்சு 27 உ உபாத்தியாயராக அமர்ந்தார். பின்புதான் அலை போற்றத்தளித்த இவர் மனம் ஒருவாறு நிலைத்தது. இவர் பீ.ஏ. படிக்காதுவிட்டது மில்லர் துரைக்கு மெத்தவும் வருத்தம்.
சுப்பிரமணியம்! நல்ல சமயத்தை வீணாய் இழக்கிறாய் என்றாராம். உபாத்தியாயர் வேலை இவருக்கு எப்போதும் இஷ்டமேயில்லை. ஆதலால் இவர் மில்லர் துரையிடம் தமக்குக் கவர்ன்மெண்டு உத்தியோகம் ஏதாவது சிபார்ஸ் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார்.
அப்போது மில்லர் பள்ளிக்கூடத்திலேயே 40 ரூபாயில் ஒரு உபாத்தியாயர் வேலை காலியாக அவ்வேலைக்குச் செப்டம்பர் மீ 12 உ மாற்றி வந்து விட்டனர். ஆண்டர்ஸன் துரை 45 ரூபாய் கொடுக்கின்றேன் என்று சொல்லியும் அதை ஒத்துக் கொள்ளாது தனது ரக்ஷகராகிய மில்லர் துரையிடம் இருக்கவே விரும்பி வந்தனர். அக்டோபர் முதல் காலையிற் சிவ புராணம் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர். இவ்வழக்கம் அவர் இறுதிநாள்வரை இருந்தது. முதலிருந்தே தமிழிலும் தமிழ்க்கடவுள் மாட்டும் அன்பு ததும்பின மனநிலையையுடய இவர் டிசம்பர்மீ 28 உ ஐந்து பாடல்கள் தணிகேசத்தின்மீது பாடினதாக எழுதியுள்ளார். அவை கிடைக்கவே இல்லை. தமது கஷ்டதிசையை நீக்கித் தம்மை வழிப்படுத்தின. கடவுளுக்கு டிசம்பர் 31 உ பின்வருமாறு தமது நன்றியறிதலைக் காட்டுகின்றார்.
1865,1866 வருஷங்களில் நான்பட்ட பாட்டைப் பார்க்க, 1867 வருஷத்தில் எவ்வளவோ சுகத்திற் கடவுள் என்னை வைத்தார் என்று சொல்ல வேண்டும். என் கஷ்டங்களிற் பல இப்போது ஒழிந்தன. அடியேனுக்கு இதுகாறும் உதவி என்னைக் காத்தளித்த பெருங்கருணைக்காக, என் நாதனுக்கு, என்னை என்றுங் கைவிடாக் கடவுளுக்கு, என்னை என்றுங் காக்கும் இறைவனுக்கு, ஒப்புயர்வில்லா என் தலைவனுக்கு, தனித்து விளங்கும் என் தெய்வத்துக்கு, என் அன்புக்குகந்த ஐயனுக்கு, என் மனப்பூர்வமான வணக்கமும் வந்தனையுஞ் செலுத்துகின்றேன். புது வருடமாகிய 1868 - ல் எனக்குப் பிரியமில்லாத இவ்வுபாத்தியாயர் வேலையை மாற்றியும் அவர் திருவடியை நினைந்து நினைந்து என் கல்மனம் கரையவும் எனக்குப் பின்னுஞ் சுகந்தருவரென மிகவும் வேண்டுகின்றேன்.
இனி 1868 ஆம் வருஷத்திய நிகழ்ச்சி கூறுவாம் இவர் இவ்வருட முதல் தினந்தோறும் தணிகேசன் மீது ஒரு பதிகம் இயற்றுவதாகவும், 'தணிகையன் துணை' எனத் தினம் முப்பத்திரண்டு முறை எழுதுவதாகவும், தேவாரத்தில் ஒரு பதிகம் படிப்பதாகவும், கிருத்திகை தோறும் ஒரு கீர்த்தனை பாடுவதாகவும் ஒரு ஏற்பாடு செய்து கொண்டதாகத் தெரிகின்றது. தாம் பாடுவது சிற்சில சமயத்தில் தமக்கே நன்றாக இலை எனத் தோன்றிய போதிலும் அவன் புகழ் அதிலிருப்பதால் பாடுவது குற்றமல்ல எனத் தம்மைத்தாமே தேற்றிக் கொண்டதாகவும் ஒரு காலத்தில் தம் உற்றாரில் எவரேனும் அவை தமைப் படித்துச் சந்தோஷிக்கக்கூடும் என்றும் எண்ணந் தோன்றினதால் அவ்வழக்கத்தை நிறுத்தாதிருக்கத் தீர்மானித்ததாகவும் எழுதியிருக்கின்றார். இவ்வாறு இவர் பாடிய தனிப்பாடல்கள் பல உள்ளன. இவை வெகு சுலபமான நடையில் படிப்பவர்
மனத்தை மிக உருக்கும் தன்மை வாய்ந்தனவா யமைந்துள்ளன என்பது படிக்கும்பொழுதே தெரியும். சென்னையிலிருந்தவரையுங் கூடியபோதெல்லாம் தணிகைக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்து வந்தார். பிப்ரவரி மீ பள்ளிக்கூடத்துக் குமாஸ்தா Mr. Quinn (குவின்) என்பவர் வேறு வேலைக்குப் போக இவர் Mr. Stevenson ஸ்டீவன்சன் துரையிடம் தமக்கு உபாத்தியாயர் வேலை தேகத்துக்குச் சரிப்பட இல்லை என்று சொல்ல அவர் இவருக்கு அந்த குமாஸ்தா வேலையை ஏப்ரல் மாத முதல் தந்து உதவினார். முதலில் 40 ரூபா சம்பளந்தான் கொடுக்கப்பட்டது. இப்புது வேலையில் அதிக ஒழிவில்லாவிடினும் அது ஒருவாறு சௌகரியமாகவே யிருந்தது. சில வருஷங்களாகத் தம்மைப் பீடித்த காதுநோய் தீரவேண்டி இவ்வருடம் ஆறு கிருத்திகை திருத்தணிகைக்குப் போய்வந்தனர்.
ஜூன்மீ 25 உ (விபவ௵ ஆனி 13 உ) வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் இவருக்குக் கலியாணம் ஆயிற்று. கலியாணப்பெண் (அதாவது எனது தாயார்) இவரினும் மிக்க எழைக் குடும்பத்தைச் சேர்ந்தவரே. என் தாயாருக்கு வள்ளியம்மாள் என்றும் தாயம்மாள் என்றும் பெயர். அவருடைய பிதாவின் பெயர் ராஜகோபால பிள்ளை. மாதாவின் பெயர் பெருந்தேவியம்மா. சிவமித்ரா மஹருஷி கோத்திரம்; வைஷ்ணவ மதம்; ஆயினும் பூர்வ ஜென்ம வாசனையாலும் சிவப்பிழம்பாம் சுப்பிரமணிய பிள்ளைக்கு மனைவியாகும் விதிப்பயனாலும் எனது தாயாருக்கு அடிநாள் முதல் திருநீற்றிலுஞ் சைவத்திலும் அசையாத பக்தி ஊன்றிக்கிடந்தது. என் தாயார் ராக்ஷஸ௵ தை மீ (1856 ல்) பிறந்தவர்கள், தணிகேசனிடத்து மீளாப்பத்தி பூண்ட பெருமாட்டி. "பூமாலை புனைந்தேத்தல்" ஆகிய அரிய திருப்பணியை நாடோறுந் தவறாது இன்றும் நடத்திவரும் புண்ணிய ஜன்மம் எங்களுக்கு நோய் முதலிய வந்தால் வைத்தியருக்கு வீணாகப் பொருளைச் செலவிடவிடாது.அப்போருளைப் பவரோக வைத்திய நாத பெருமானுக்குச் செலுத்தினால் நோய் தானே விலகும் என்னும் உண்மையைப் பலமுறை பிரத்தியக்ஷமாக நிறுவித் திருநீறுகொண்டே எங்கள் பிணிகளைத் தீர்த்து வருஞ் சீலவதி. தாய்க்குத் தாயும் நோய்க்கு வைத்தியநாத பெருமான் எங்களுக்காகவே அனுப்பியுள்ள மருந்துறையுமாகிய பெருந்தகை.
கடவுளருளால் தமக்கு ஒருவாறு பொருட்கஷ்டம் நீங்கினவுடன் தமது குடும்பப் பழைய கடன்களை எல்லாம் இவர் மெதுவாகத் தாங் கஷ்டப்பட்டாவது தொலைத்து வந்தார். இவ்வருடம் ஆகஸ்டு மீ 29 உ ஸ்ரீ ஆறுமுகநாவலரை முதல்முதல் பார்த்து அவர் "சைவ சமயமே சமயம்" என்னும் தாயுமான சுவாமிகள் பாடற் பொருளைப் பிரசங்கஞ் செய்வதைக்கேட்டு மிக்க ஆநந்தம் அடைந்ததாக எழுதியுள்ளார். செப்டம்பர் முதல்தேதி சம்பளம் ரூபா ஐம்பது ஆயிற்று. இச்சமயத்திற்றான் இவர் பிரமோத்தரகாண்ட வசனம் எழுதி வந்தது கார்த்திகை கிருத்திகைக்குத் திருத்தணிக்குப் போகலாமா என இவர் யோசித்திருந்தபொழுது 17-11-1868 தேதி இரவு இவர் தாயார்வந்து "அப்பா: கோயிலுக்குப்போக மறந்தாயோ" எனச் சொல்லக் கனவுகண்டு விழித்து உடல் சிலிர்த்து நெக்குருகி இறைவனே தாய் போற் பரிந்து கடையவனேனைத் தணிகைக்கு வா என அழைத்தனர் என்று பெருமகிழ்ச்சி கொண்டு,
"போகமரு ளுந்தணிகைப் புண்ணியனே போற்றுந்தாய்
ஆக வந்து கோயிலுக் "கப்பாநீ - போக
மறந்தாயோ" என்றுதிரு வாய்மலர்ந்தா யீது
துறந்தார்க்கு மேயுண்டோ சொல்!"
"தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லையென் னுந்தரணி
நீயப் பழமொழிக் கேற்பஎன் னண்டையிந் நீளிரவில்
தாயிற் செறிந்து தணிகா சலதண் ணருளொ "டப்பா
கோயிற்குப் போக மறந்தனை யோ" என்று கூறினையே!"
"அறந்தா னியற்றுமெய் யன்ப ரிக்கநல் லாக்கமுதல்
துறந்தா ரிருக்கநின் தூயடிக் கேயென்றுந் தொண்டுசெய்து
சிறந்தா ரிருக்கச் சிறியே னிடத்தருள் வைத்துச் "செல்ல
மறந்தாயோ" என்னல் தணிகா சல! என்ன மாதவமே
"சுளித்தே முகத்தைத் தரிகின்ற தோகைச் சுகமெனுமோர்
துளித்தேன் பருகத் துவளுமித் தொல்வினைத் துஷ்டனிடம்
அளித்தோ யுவந்துவந் "தப்பா மறந்தனை யோ" எனலுங்
களித்தேன் உடலுஞ் சிலிர்த்தது காண்தணி காசலனே!
- எனப் பாடிப் பரவி 29-11-1868 தேதி கிருத்திகைத் தினம் திருத்தணிக்குச் சென்று தரிசனஞ் செய்தனர்.
1869௵ ஆகஸ்ட்டு மீ தம்புசெட்டித் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குக் குடி போயினர்.
சென்னையி லிருந்தவரையும் இவர் புதிதாகப் பார்த்த தேவாரம் பெற்ற ஸ்தலங்கள் ஆறு.
-----------------
II. உத்தியோக பருவம்
1870 - 1888
மஞ்சகுப்ப வாசம்
தமக்குந் தமது தாயாருக்குஞ் சென்னைவாசம் ஒத்துக் கொள்ளாததால் இறைவன் வெளியூருக்கு அனுப்ப மாட்டாரா என வேண்டிவந்தனர். இச்சமயம் டிஸ்டிரிக்ட் ஜட்ஜ் (ஹாட்ஸன் துரை) இவர் கையெழுத்தைப்பற்றி மில்லர் துரைக்கு வியந்தெழுதின நிமித்தம் இவர் மஞ்ச குப்பம்டிஸ்டிரிக்ட்கோர்ட்டுக்கு வேலைக்காக ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தனர். அந்த ஜட்ஜ் 35 ரூபாயில் ஒரு குமாஸ்தாவேலை இவருக்குக்கொடுக்க 1869 ௵ டிசம்பர் ௴ 22 உ சென்னையை விட்டு நீங்கி 1870 ௵ பிப்ரவரி௴ 1உ மஞ்சகுப்பம் வந்து ஜில்லா கோர்ட்டில் வேலை ஒப்புக் கொண்டனர். அப்போது இவர் செய்து கொண்ட வைராக்கி யத்தில் ஒன்று கிருத்திகை தோறும் ஒருபலம் கற்பூரம் தீபாராதனைசெய்து முருகனைத் தொழுவது. இப் பிரதிக்ஞை இவர் இறுதிநாள்வரை தவறாது நடந்தது.
அந்த வருஷமுடிவில் (1-12-1870) (முதல் குமாஸ்தா) வேலை (ரூபா 70) யாயிற்று. வழக்கமாகக் கோர்ட்டில் வேலை என்றும் அதிகமாகத்தான் இருந்தது.ஒரு தினம் வேலையில்லாது சும்மா இருக்க நேரிட்ட போது வேலையில்லாது சும்மா இருத்தல் வேலைசெய்வதிலும் அதிக உபத்திரவமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிறார்.
1871 ௵ தான் இவருக்கு முதல் முதல் திருப்புகழ் அச்சிடவேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இவ்வருஷ முதல் தான் திருப்புகழ் ஓலைப் புத்தகங்கள் சேகரிக்க ஆரம்பித்தார். எனது பிதாவை அவர்களுக்கு முதல் முதல் திருப்புகழில் ஆசை எப்படி உண்டாயிற்று என்று நான் ஒரு முறை கேட்டேன். சிதம்பரம் தீக்ஷிதர்கள் ஒரு சம்வாதத்தில் தங்கள் பெருமையைக் காட்ட மேற் கோள்களாகப் பல நூல்களினின்று பாடல்கள் எடுத்துக் +காட்டினதாகவும், அச்சமயம்,
"வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே புகனை புரிகோவே"
எனவரும் "தாது மாமலர் முடியாயே" என்னுந் திருப்புகழ்ப் பாடலையும் எடுத்துக்காட்டி யிருந்ததாகவும், அப் பாடலின் தேனொழுகும் இனிமை தம் மனதை மிக்குங் கவர்ந்து திருப்புகழில் ஆசை உண்டுபண்ணினது என்றும், இத்தகைய அற்புதப் பாடல்கள் பதினாறாயிரம் அருணகிரி நாதர் பாடியிருக்க ஓராயிரமேனுங் கிடைத்து அச்சிட்டால் தாமெடுத்த ஜன்மம் பலன் பட்டதாகும் என நினைத்த தாகவும் கூறினார்.
1872 ௵ ஏப்ரல் ௴ 18 உ இவரது அருமைத்தாய் இறக்க இவர் பட்ட துயரம் இறைவனே அறிவான். தாயா ரிடத்தில் நிறைந்த பக்தியும் ஆசையும் உள்ள மகனாதலால் இவர் இறுதி வரையுஞ் சகிக்க முடியாது வருந்தினர். மே ௴ 10 உ இவருக்கு சீமந்த கலியாணம் நடந்தது. ஆகஸ்ட்டு முதல் தேதி பிறந்த சீமந்த புத்திரி செப்டம்பர் மீ 13 உ இறந்து பட்டது. இவ் வருடம் ஜூன் மீ 21 உ முதல் பிள்ளையார் பூஜை செய்யும் வழக்கத்தை மேற்கொண்டனர்
1874 ௵ பிப்ரவரி மீ 20 உ ஜட்ஜ் சுவின்டன் துரையிடம் ஒரு கைக் கடிகாரம் பரிசு பெற்றனர். தம்மால் இயன்ற அளவு சிவகைங்கரியத்திலும் சிவதரிசனையிலுமே தமது ஒழிவு காலத்தைப் போக்க விரதங் கொண்டனர். இவ் வருடம் திருத்தணி திருக்குளத்துக் கெதிரில் தீபம் ஏற்றும் படி ஒரு ஏற்பாடு செய்தார். பிரமோத்தா காண்ட வசனம் என்னும் தாமெழுதிய வசன நூலைச் சென்னைத் தமிழ் உபாத்தியாயர்கள் சின்னசாமி பிள்ளை, கணபதிபிள்ளை இவர்களிடம் பார்த்துத் திருத்தித் தரும்படி அனுப்பினார். சிதம்பரத்தில் ஒரு கட்டளை அருச்சனை ஏற்படுத்தினார். அக்டோபர் மீ 26 உ ஒரு பெண் குழந்தை இவருக்கு பிறந்தது. இதன் பெயர் வள்ளிநாயகி. இந்த அம்மா இப்போது மஞ்சகுப்பத்தில் முனிசிபல் கௌன்சிலராயிருக் குந் தங்கவேலு பிள்ளையின் மனைவியாய் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மீது எனது தந்தையாருக்கு மிகப்ரீதி. தங்கவேலுபிள்ளை என் தகப்பனாரின் அத்தை பேரன்.(மகன் வயிற்றுப்பிள்ளை)
1875௵ டிசம்பர் ௴ 28 உ சென்னையில் தமக்கு ஆதரவாயிருந்த ரத்தின பிள்ளை (அத்தை மகன்) இறக்க இவர் மிக்க துயரம் அடைந்தனர்.
1876௵ ஜனவரி ௴ ஸ்ரீ ஆறுமுக நாவலருடைய சைவ வினாவிடை இரண்டாம் பாகம் ஒரு புத்தகங் கிடைக்க அதில் தனக்கு விருப்பமுள்ள திருப்புகழ்ப் பாடல்கள் ஆறு இருப்பதைக்கண்டு மிகவும் மனமகிழ்ந்தனர். ஏப்ரல் மீ 14 உ பின்வருமாறு எழுதியுள்ளார்.
இன்று "நல் வெள்ளிக்கிழமை" என்னும் பண்டிகை நாள். அருணகிரிநாதருடைய திருப்புகழ்ப் பாடல்களை ஓலைப் புத்தகத்தினின்றும் பெயர்த்தெழுத இன்று ஆரம்பித்தேன். எவ்வளவு பாடல் சேகரிக்கக் கூடுமோ அவ்வளவு சேகரித்து,நல்ல தமிழ் வித்துவானால் அவை தம்மைத் திருத்துதல் என் கருத்து. இம்முயற்சி நிறைவேறக் கடவுளே அருள் புரியவேண்டும்.
செப்டம்பர் ௴ 24 உ மஞ்சகுப்பம் மிஷன் ஸ்கூல் தமிழ் உபாத்தியாயர் சிவ சிதம்பரமுதலியாரவர்களைக் கொண்டு திருப்புகழ் திருத்த ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது. டிசம்பர் ௴ 31 உ.
"திருப்புகழ்ப் பாட்டுக்களைச் சேகரஞ் செய்து வரு கின்றேன். முருகப் பெருமானுடையை அநுக்கிரகத் தினாலே ஆயிரம் பாடலாவது திருத்தமாக அகப்பட்டால் அச்சிட்டு விடலாம். ஜனோபகாரமாயும் வெகு புண்ணிய மாயுமிருக்கும்."
--என எழுதியுள்ளார். வெள்ளிக்கிழமைகளிற் சிவதரிசனஞ் செய்யாது இரவில் உண்ணுவதில்லை என்னும் விரதம் தம்முடைய முப்பத்தோராம் ஆண்டில் மேற் கொண்டதாகக் குறித்துள்ளார்.
1877 ௵ ஜனவரி ௴ 1 உ சென்னைக்கும் மஞ்சகுப்பத் துக்கும் ரெயில் ஏற்பட்டது. திருத்தணி முதலிய இடங்களுக்கு வருவதற்கு மிக்க சௌகரியமாயிற்று. ஜூலை மீ 6 உ செங்கற்பட்டிலுள்ள பிதிரார்ஜித வீட்டில் தம்முடைய சிற்றப்பாருடைய கால் பாகத்தை விலைக்கு வாங்கினார். வருகின்ற வரும்படி முன் தாம்பட்ட கஷ்ட நிலைக்கு எவ்வளவோ மேலாயிருந்தபோதிலும் நிலைமைக்கு ஏற்ற தருமஞ் செய்ய வேண்டும் என்னும் அவா ஒருபாலும் சுற்றத்தினருக்கு உதவிவேண்டும் என்னும் எண்ணம் ஒரு பாலுமாகச் சம்பளத்தில் ஒன்றும் பாக்கி நிற்பதில்லை. இவ்வருடம் ஜூலை ௴ 27 உ ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் மங்களநாயகி. கல்வியிலும் அறிவிலும் மிகச் சிறந்து விளங்கின இப்பெண்மணி இளம் பிராயத்திலேயே கொடிய நோயாற் பீடிக்கப்பட்டு 1898 ௵ மார்ச்சு ௴ 12 உ மதுரையில் இறந்து பட்டது. இக் குழந்தை அடிக்கடி நோயால் வருந்தினது இவருக்கு மிக மனவேதனைக் கிடமா யிருந்தது. 1877 ௵ (முனிசீப்) பரீக்ஷை தேறினது முதல் வழக்கமாயிருந்த கிருத்திகை விரதத்துடன் அப்பரீக்ஷையின் நன் முடிபு தெரிந்ததினம் முக்கோடி ஏகாதசியாதலின் முக் கோடி ஏகாதசி விரதமும் அநுஷ்டித்து வந்தார். இவ் வருஷமுடிவில் பின்வருமாறு எழுதியுள்ளதினின்று அவர் மனநிலை விளங்கும்.
டிஸ்டிரிக்ட் முன்சீபுக்கு வேண்டிய எல்லாப் பரீக்ஷைகளி லும் தேறியாயிற்று. ஒரு சிவ ஸ்தலத்தில் எனக்கு முன்சீப் வேலை கிடைத்தால் நான் என்னை மஹா சுக புருஷன் என்று கருதுவேன். ஆபீஸ் வேலையைச் சரிவரச்செய்து எல்லாம்வல்ல கருணாநிதியின் புகழ் நூல்களைப் படிப்பதி லும், அவனைத் துதிப்பதிலும், அவனுக்குத் தொண்டு செய்வதிலுமே என் காலமெல்லாம் நிம்மதியாய்க் கழிப் பேன்.
1878 ௵ ஜனவரி௴ 19 உ இரவு தம்முடைய கனவில் ஸ்ரீ சுப்பிரமணியாசுவாமி கோழிக் கொடி கொடிவிளங்க மயில் வாகனத்தின் மீது பொன்னிறச் சோதி பொலிய வீற்றிருக்கத் தரிசித்ததாக எழுதியுள்ளார். ஜூன் ௴ 28 உ காஞ்சீபுரம் புத்தேறித் தெரு அண்ணாமலை பிள்ளை யென்பவர் 750 பாடல் உள்ள திருப்புகழ் ஓலைப் புத்தகந் தந்து உதவினதைப் பெரு மகிழ்ச்சியுடன் குறித்துள்ளார். செப்டம்பர் ௴ 30 உ சிதம்பரத்துக் கடுத்த பின்னத்தூர் சீநிவாசபிள்ளை 400 பாடலுள்ள ஓலைப் புத்தகங் கொடுத்ததாகவும், அதற்கு முன்னரே அவர் கொடுத்த ஒரு புத்தகத்தில் 120 புதுப் பாடல்கள்அகப்பட்டதாகவும் எழுதியிருக்கிறது. இந்தப் புண்ணியவான்களுக்குத் தமி ழுலகம் மிக்க கடமைப் பட்டிருக்கிறது.
1879 ௵ ஜனவரி 21 உ இவர் எழுதின பிரமோத் தரகாண்ட வசனம் (முதற்பதிப்பு) அச்சாகி வெளிவந்தது. ஏப்ரில் ௴ 1 உ முதல் எட்குமாஸ்தா வேலையாய்ச் சம்பளம் நூறுரூபாய் ஆயிற்று. ஜூலை மீ 28 உ எழுதியுள்ள ஒரு குறிப்பாற் காஞ்சீபுரஸ்தல வாசம் இவருக்கு வெகு ஆசையா யிருந்ததென்று தெரிகிறது. செப்டம்பர் ௴ 1 உ ஜட்ஜ் இர்வின் துரை இவருக்கு முன்சீப் வேலை கொடுக்க வேண்டுமென்று ஹைகோர்ட்டுக்கு எழுதினார். எழுதியுமென்ன?வேளை வந்தால் தானே கிடைக்கும்! இது முதல் எட்டு வருஷம் அதிக பிரயத்தினப்பட்ட பின்பே இறைவன் திருவருளால் அவ்வேலை கிடைத்தது. டிசம்பர் ௴ 5 உ ஸ்ரீ ஆறுமுக நாவலர் சிவபதவியடைந்ததைக் கேட்டு இவர் பட்ட துயரஞ் சொல்லொணாது. இதைக் குறித்துப் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"இம்மஹானுடைய பெரு முயற்சியால் தான் தமிழ் மொழியிற் சிறந்த கந்தபுராண முதலிய நூல்கள் தமிழுல குக்குக் கிடைத்தன. இவர் எழுதிய பெரிய புராண வசனம் நல்ல தமிழ் நடைக்கு இலக்கியமாக உள்ளது. இவரைப் போற் சிறந்த வசன நூலாசிரியர் இது வரையும் யாரும் இல்லை. சைவநெறி சிறிதும் வழாது நடந்துவந்த மஹா நுபாவராகிய ஸ்ரீ ஆறுமுக நாவலர் சிவபெருமானுடைய பாதாரவிந்தங்களைச் சேர்ந்து பேரின்பவாழ்வையடைந்து நித்தியாநந்தத்தி லிருப்பாரென்பதற்கு ஐயமில்லை 9-12-1879."
1879 ௵ ஜூலை முதல்தேதி முதல் காலணா கார்ட்டு ஏற்பட்டதும்,1880 ௵ ஜனவரி முதல் தேதி மணி ஆர்டர் ஏற்பட்டதும் மிக்க சௌகரியத்தை உண்டு பண்ணினதாக எழுதியிருக்கிறார்.
1880 ௵ அக்டோபர் ௴ 3 உ ஞாயிற்றுக் கிழமை மாளைய அமாவாசை இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததைக் குறித்து எழுதியதாவது.
"எல்லாம் வல்ல கருணைக் கடலின் திரு வருளால் இன்று பகல் 3 1/4 மணிக்கு எனக்குப் புத்திர பாக்கியங் கிடைத்தது. எனக்குப் பேராநந்தமாய் இருக் கிறது. கடவுளின் எல்லையிலாத இத்திருக்கருணைக்கு மிக்க நன்றியுள்ளவனா யிருக்கின்றேன். அவனருளாலேயே இக் குழந்தை விருத்தி யடைய வேண்டும். புத்திர பாக்கியமாகிய பெரும் பேறு எனக்குக் கிடைத்தது ஸ்ரீ தணிகை யாண்ட வனுடைய அநுக்கிரகமே."
இந்தக் குழந்தையே எனது தமையனார் ஷண்முகம் பிள்ளை. இவர் இப்போது ஹைகோர்ட்டில் உத்தியோகத் தில் இருக்கிறார்.
1881 ௵ மார்ச்சு ௴ 20 உ கருங்குழி ஆறுமுக ஐயர் (வீர சைவர்) 900 பதிகமுள்ள திருப்புகழ்ப் புத்தகங் கொண்டு வந்து உதவினர். நமது சரித்திர கர்த்தா தமிழ்ப் பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்து வந்ததாகவுந் தெரிகிறது. ஏப்ரல் 23 உ ஜனவிநோதனி என்னும் பத்திரி கையில் தாம் எழுதியனுப்பிய "கிரிசெல்டர் என்னும் நன் மனையாட்டி" யின் கதை வெளி வந்ததாக எழுதி யுள்ளார். லீவ் நாள் கிடைத்த போதெல்லாம் சிவ ஸ்தலங்களையும் திருவிழாக்களையும் வெகு ஆவலாய்த் தரிசித்து வந்தனர். இவர் தரிசித்த முக்கிய ஸ்தலங்களும் உற்சவங்களும் இவை யென அநுபந்தத்திற் காட்டி யிருக்கின்றேன்.
அநுபந்தம்
திருத்தணியிற் சீர் கருணீக ஜாதியர் மடத்தைப் புதுப்பிக்க 1881 ஆம் வருடத்திலேயே இவருக்கு எண்ணம் தோன்றிச் சிலதொகை அனுப்பினதாகத் தெரிகிறது. இவ்வருடம் அக்டோபர் மீ 6 உ மஞ்சகுப்பத்தில் ஒரு வீடு வாங்கினார். அப்போது பின்வருமாறு எழுதியுள்ளார்.
"இவ்வூரிலேயே தங்குங் கருத்துடன் நான் இவ்வீடு வாங்கவில்லை. இவ்வூரிலிருக்கும் வரையும் சௌக ரியமாக இருப்பதற்கே வாங்கினேன். காஞ்சீபுரத்தி லிருக்கவும் அத்தலத்திலேயே ஸ்ரீ ஏகாம்பர நாதரைத் தரிசித்திருந்து இறத்தலுமே என் ஆசை."
1882 ௵ ஜனவரி 11, ஏப்பிரல் 11 தேதிகளில் ஜட்ஜ் நெல்சன் துரை இவருக்கு முனிசீப் வேலை கொடுக்க வேண்டுமென்று சிபார்ஸ் கடிதங்கள் ஹைகோர்ட்டுக்கு எழுதினார். பிப்ரவரி மீ 5 உ திருப்பாதிரிப்புலியூரில் வந்திருந்த திருப்புகழ் சுவாமி எனப்படும் தண்டபாணி சுவாமிகளைப் போய்ப் பார்த்தார். பிப்ரவரி மீ 6 உ தாம் வாங்கின புது வீட்டுக்குக் குடி வந்தார். சிவபூஜை வேளை யிற் பாராயணம் செய்வதற்கு நன்கு பொருந்திய "தோத் திரத் திரட்டு" என்னும் நூல் மஞ்சகுப்பத்தில் துறவறத்தி லிருந்த சதாசிவம்பிள்ளையவர்கள் சொந்த உபயோகத்துக் காக இவ்வருடம் அச்சிடுவித்ததில் இவர் உதவினதாகத் தெரிகின்றது. இப்புத்தகத்தில் அச்சு எழுத்துக்கள் மிகப் பெரியனவாய்ப் படிப்பதற்கு வெகு நேர்த்தியாயிருக் கின்றன. ஜூலை௴ 15 உ இவருடைய மாமனார் காலஞ் சென்றனர். செப்டம்பர் 27 உ சிவஸ்தல அகராதி என்று ஒரு புத்தகம் எழுதுவதற்கு வேண்டிய விஷயங்களைச் சேகரிப்பதாகப் பின்வருமாறு எழுதியிருக்கின்றார்.
அடுத்த டிசம்பர்௴ வெளியிடும் உத்தேசத்துடன் சிவஸ்தல அகராதி என்னும் நூலுக்கு வேண்டிய விஷயங்களைச் சேசரித்து வருகிறேன்.
இவ்வெண்ணம் 23 வருடங்கள் கழித்து நிறைவேறினதைப் பின்னர் கூறுவோம்.
1883 ௵ ஆகஸ்ட்டு௴ 15 உ இரண்டாவது புத்திர னாகிய நான் பிறந்தேன். டிசம்பர் மீ 13 உ இவர் தகப்ப னார் சாமன்று கூடச் சிவபூஜை செய்து "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்" என்னும் பாடலைத் தமது பிள்ளைக்கும், மருமகளுக்கும் தேறுதலாகச் சொல்லித் தமது 83 - ஆம் வயதிற் சிவபதஞ் சார்ந்தனர். அப்பொழுது தந்தை பிரிவாற்றாது தமது சரித்திர கர்த்தா ஆற்றொ ணாத் துயரம் அடைந்தனர்.
1884 ௵ பிப்ரவரி, மார்ச்சு மாதங்களில் முதல் முதல் கூடலூர் முன்சீப் வேலை பதில் பார்த்தார்.
1885 ௵ பிப்ரவரி௴ 28 உ கும்பகோண மஹாமக தீர்த்த ஸ்நாநம் இவருக்குக் கிடைத்தது. ஜூன் மாதம் மஞ்சகுப்பந் தேவஸ்தான கமிட்டி மெம்பராக நியமிக்கப் பட்டார். செப்டம்பர் மாதம் மறுமுறை கூடலூர் முன்சீப் வேலை பதில் பார்த்தார்.
1886 ௵ மார்ச்சு௴ சிதம்பரங் கோயில் வழக்கில் இவர் ஒரு சாக்ஷியாக விசாரிக்கப்பட்டார். அதைக்குறித்து 27-3-1886 தேதியில் இவர் எழுதியுள்ளதாவது:-
சிதம்பரம் கோயில் வழக்கில் என்னை ஒரு சாக்ஷியாக விசாரித்தார்கள். சிவாலயங்களுக்குள் மிகச் சிறந்தது சிதம்பரம் என்றும், சிற்சபையை அதியவசியமின்றித் தொட்டு வேலை செய்வது அதன் மகிமைக்குக் குறைவுண்டாக்கும் என்றுஞ் சொன்னேன்.
ஜூலை௴ விழுப்புரத்தில் முன்சீப் வேலை பார்த் தார். ஆகஸ்ட்டு ௴ இவருக்கு மூன்றாவது புத்திரர் ஆறுமுகம் பிள்ளை பிறந்தார். இப்பிள்ளை இப்போது சென்னை ஸ்மால்காஸ் கோர்ட்டில் வேலையிலிருக்கிறார். ஆகஸ்ட்டு 31 உ முதல் டிசம்பர்௴ 13 உ வரையும், பின்பு 1887 ஜனவரி 7 உ முதல் மார்ச்சு 6 உ வரையும், கோர்ட்டு சிரஸ்ததார் வேலை பதில் பார்த்து வந்தார். 1886 ஹ டிசம்பர் 12 உ தனது நாற்பத்தோராவது வயது ஆரம்பத்திற் பின்வருமாறு எழுதுகிறார்.
"இன்று எனது நாற்பத்தோராவது வயது ஆரம்பம். நாற்பது வருடங்கள் போய்விட்டனவே! பிரமோத்தர காண்ட வசனம் வெளியிட்டதைத் தவிர உபயோகமான விசேட வேலை ஒன்றும் நான் செய்யவில்லையே!
1887 ஆகஸ்ட்டு மீ 26 உ முதல் அக்டோபர் 20 உ வரையும் ஷோலிங்கரிலும் (சோழலிங்கபுரம்) அக்டோபர் 26 உ முதல் 1888 ஹ ஜனவரி 12 உ வரையும் திருவள்ளூரிலும், பிப்ரவரி 16 உ முதல் ஏப்ரல் 15 உ வரையும் விழுப்புரத்திலும் முன்சீப் வேலை பதில் பார்த்தார். எவ்வளவோ முறை சென்னைக்குச் சென்று ஹைகோர்ட் ரிஜிஸ்ட்ராரையும் ஜட்ஜுகளையும் பார்த்ததும் மஞ்சகுப்பத்திலிருந்த ஜட்ஜுகள் ஒவ்வொருவரும் அதிக சிபார்ஸ் செய்துங்கிடையாத முன்சீப் வேலை காயமாயிற்று என்று 1888 ஹ ஏப்ரல் மீ 25 உ தெரிய வந்தது. அன்றைய தினம் தமது புத்தகத்திற் பின் வருமாறு எழுதுகிறார்.
"சேலம் ஜில்லா நாமக்கல்லுக்குக் காயம் முன்சீபாக உத்திரவு கெஜட்டிற் பார்த்துச் சந்தோஷமுற்றேன். நான் பிரிவது தனக்கு வருத்தமாயிருந்த போதிலும் உயர்ந்த உத்தியோகத்துக்கு நான் போவது தனக்கு அதிக சந்தோஷ மென்றும், சரிவர வேலை செய்து மேன்மேலும் உயர்ந்த பதவி நான் அடைய வேண்டுமென்றும் ஜட்ஜ் பென்ஸன் துரை சொன்னார். அவருடைய அன்பார்ந்த ஆசிர்வாதத்துக்கு நான் வந்தனங் கூறினேன். ஒரு வேளை ஜான்ஸன் துரை சென்னைக்குப் போன போது என்னைப் பற்றி பார்க்கர் துரையிடம் சிபார்ஸ் செய்திருப்பார். இத்தனை நாள் பொறுத்தாவது வேலை காயமாயிற்றே என்று சந்தோஷம். எனக்கு என்றும் பெருந்துணையாகவும் எய்ப்பில் வைப்பாகவும் இருக்கும் ச்ரீ தணிகையாண்டவரை என் நெஞ்சங்குளிர வணங்கி வாழ்த்துகின்றேன். அவரே எனக்குக் கதி.
இவர் மஞ்சக்குப்பத்திலிருந்த பதினெட்டு வருஷ காலத்திற் புதிதாகத் தரிசித்த தேவாரம் பெற்றஸ்தலங்கள் நாற்பது.
1888 - 1891
நாமக்கல் வாசம்.
நாமக்கல் முன்சீப் வேலையை 1888 ஹ மே மீ 29 உ செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர். நாமக்கல்லிற் சிவன் கோயில் ஒன்றும் இல்லாதிருந்தது இறைவனது சோதனை போலத் தோன்றி இவர் மனதுக்குத் துயரம் விளைத்தது. மே மீ 31 உ இதைக் குறித்து எழுதுவதாவது:
பெரிய ஊராகிய இந்த நாமக்கல்லில் ஒரு சிவன் கோயிலோ சைவக்கோயிலோஇல்லாதிருப்பது ஆச்சரிய மாகவும் மெத்த வருத்தத்தைத் தரத்தக்கதாயும் இருக்கிறது. குளக்கரையில் ஒரு பிள்ளையார் இருக்கிறார்; இவரே இவ்வூர்ச் சைவர்களுக்குள்ள மூர்த்தி.
ஜூன் மீ 1 உ வெள்ளிக்கிழமை பின் வருமாறு எழுதுகிறார்.
"இன்று சுக்கிரவாரமாதலால் இரவில் குளத்தடியிலிருக்கும் பிள்ளையாரைப் போய்த் தரிசித்துவிட்டுப் பின்பு நாமகிரியம்மனையும் நரசிம்ஹ சுவாமியையும் போய்த் தரிசித்தோம்."
சிவாலயம் இல்லாததால் நாமக்கல்லில் இருந்தவரையும் வெள்ளிக்கிழமைகளிற் செங்கழுநீர்விநாயகர் என்னுந் திருநாமமுடைய ஷ பிள்ளையாரைத் தரிசித்துப் பின்பு ஸ்ரி ரங்கநாதரையும் ரங்க நாயகியையும், சங்கரயணரையுந் தரிசித்து வந்தார். ஆருத்ரா, சிவராத்திரி போன்ற விசே ஷ தினங்களில் நாமக்கல்லுக்கு 3 மைல் தூரத்திலுள்ள வல்லிபுரம் என்னும் க்ஷேத்திரத்திற்குச் சென்று சிவதரிசனஞ் செய்துவந்தார். ஜூலை மீ 2 உ இரு நூறு ரூபா சம்பளங் கிடைத்தபோது,
"முதல் முதல் சம்பளம் 200 ரூபா வாங்கப் பெற்றேன். ச்ரீ தணிகை யாண்டவரின் பெருங் கருணைக்கு அடியேனது மனப்பூர்வ வந்தனம்."
என எழுதியுள்ளார். முன்சீப் வேலை காயமானதால் திருவள் ளூருக்கு அடுத்த திருப்பாசூரிலிருக்கும் முருகபிரானுக்கு வேல் வைப்பதாய்த் தாம் முன்பு சொல்லியிருந்ததால் அவ்வாறே வேலாயுதம் ஒன்று செய்து செப்டம்பர் மீ சமர்ப்பித்தார்.
1889 வருஷம் ஜனவரி மீ 1 உ மஞ்சகுப்பத்தில் தமக்கிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறு மனை வாங்கினார். ஜூன் மீ 10 உ தமது மூத்த குமாரத்தி வள்ளிநாயகி யம்மாளுக்கு மஞ்சகுப்பத்திற் கலியாணம் நடத்திவித்தார். ஆகஸ்டு மீ 16 உ தமிழ்ப்பண்டிதர் சேலம் சரவண பிள்ளையுடைய நட்பு கிடைக்கப் பெற்றார். செப்டம்பர் மீ கிருத்திகை விரதம் இருக்க ஞாபக மறதியால் தவற இறைவன் தமது ஒரு பக்கத்திற்பச்சை மயில் ஒன்றை அணைத்துக் கொண்டு இவர் குடியிருந்த வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த ஓரையங்கார் கனவில் லங்கோடும் முள் மிதியடியும் விளங்க ஒரு பரதேசிபோலத் தோன்றி "நான் பழநியினின்றும் திருத்தணிகைக்குப் போகின்றேன். உன் வீட்டுக்கு எதிர் வீட்டிற் சொல்ல வந்தேன். அவ் வீட்டுக் கதவு சாத்தியிருக்கிறது. நீ அவர்களிடம் போய்த் திருத்தணிகைக்கு அவர்களை வரச்சொல்" எனக் கூறி மறைந்தனர். இக்கட்டளையை யறிந்து அதனைச் சிரமேற் கொண்டு மார்கழி மீ திருத்தணிக்குச் சென்று இறைவனைத் தரிசித்து அவர் பேரருளைச் சிந்தித்து மகிழ்ந்தார். டிசம்பர் 25 உ சிதம்பரத்தில் நடராஜ பெருமானைத் தரிசிக்கப் பெற்று
“தீபாராதனையின் போது நடராஜரைத் தரிசிக்கையில் என் கன்மனமுங் கசிந்து கண்ணீர் பெருகியது. இது ஆச்சரியம். [இன்று எனக்குச் சுதினம்] --என எழுதியுள்ளார்.
1890-ம் வருடம் பிப்ரவரி 23-ம் நாள் குறித்துள்ளதாவது :-
இன்று காலை ஜட்ஜ் வியர் துரையைப் பார்த்தேன். 1889-ம் வருடத்தில் நான் செய்த வேலை வெகு திருப்திகரமாயிருக்கிறதென்று அவர் சொன்னார். பொம்மல்பாளையம் வழக்கில் நான் வெகு பிரயாசை எடுத்துக் கொண்டெழுதிய தீர்மானங்கள் வெகு நன்றாயிருந்ததென்றுங் கூறினார். என்வேலை தமக்குத் திருப்தி என்று அவர் சொன்னது எனக்குச் சந்தோஷந் தந்தது. என்னுடன் வெகுப்ரீதியாய் 15 நிமிஷம் பேசிக் கொண்டிருந்தார்.
மார்ச்சு மாதம் 3-ம் நாள் திருப்பாசூர் கோயில் எதிரில் கருங்கல் ஸ்தம்பம் நாட்டி விளக்குவைக்க ஏற்பாடு செய்தார். நாமக்கல் செங்கழுநீர் விநாயகருக்குத் திருமஞ்சனத்துக்காக ஒரு குடம் வாங்கிக் கொடுத்தார். மார்ச்சு மாதம் 25-ம் நாள் திருப்பாதிப்புலியூர் சிதம்பரவாத்தியார் திருப்புகழ் பரிசோதிக்க நாமக்கல்லுக்கு வந்தார். இவ்வாத்தியார் செங்கழுநீர் விநாயகர் மீது நவரத்திநமாலை என அருமையான சிறு நூலொன்றியற்றினார். ஒவ்வொரு மாதமுங் கடைசிச் சனிக்கிழமைக்கு முன் சனிக்கிழமை விடுமுறையாகும் என நவம்பர் மாதம் 11-ம் நாள் கெஜட்டிற் பிரசுரஞ் செய்யப்பட்டது இவருக்கு ஸ்தலங்கள் தரிசிப்பதற்கு அநுகூலமாயிற்று.
1891-ம் வருடம் ஏப்ரல் மாதம் 22-ம் நாள் இவர் வீட்டிற் சேலம் பண்டிதர் சரவணபிள்லை இயற்பகை நாயனார் புராணம் பிரசங்கித்தார். ஜூன் மாதம் 5-ம் நாள் மஞ்சக்குப்பத்திற் சிதம்பர வாத்தியாரைக் கண்டு திருப்புகழ் வேலையைப் பூர்த்தி செய்வதற்கு வேண்டிய தொகையை அவருக்குத் தந்து அவரால் முதற்பாகம் செம்மைப்படுத்தப்பட்டது. ஜூன் 12-ம் நாள் திருத்தணி கருணீகர்மடம் மராமத்துக்காக பணம் அனுப்பினார். தமிழ் வாத்தியார் நிலையாய் நாமக்கல்லில் தங்காததால் திருப்புகழ் வெளிவருவது தடை படுகிறதே என வருந்தினார். டிசம்பர் கடைசியிற் கும்பகோணத்துக்கு மாற்றப்பட்டார். நாமக்கல்லை விட்டு நீங்கும்பொழுது பசுவின் கன்று ஒன்றை திருச்செங்கோட்டு அர்த்த நாரீசுரருக்கென விடுத்தனர்.
நாமக்கல்லில் இருந்த காலத்திற் புதிதாகத் தரிசித்த தேவாரம் பெற்ற ஸ்தலங்கள் பதினான்கு.
1892 - 1894
கும்பகோண வாசம்.
1892 ஹ ஜனவரி மீ 2 உ கும்பகோணம் முன்சீப் வேலையை ஒப்புக் கொண்டனர். மார்ச்சு 16 உ திருத்தணி மடத்துக்காகப் பின்னும் பணம் அனுப்பினார். மார்ச்சு மீ 20 உ ஞாயிற்றுக்கிழமை சிவபுரம் என்னும் ஸ்தலத்தைத் தரிசித்து எழுதுவதாவது:-
கும்பகோணத்துக்கருகில் இவ்வளவு சிவஸ்தலங்கள் இருப்பது எனக்கு ஆனந்தமாயிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு ஸ்தலமாவது தரிசித்து என் வாழ்நாள் பலன்படுகிறது.
மே மீ 16 உ சேலம் தமிழ்ப் பண்டிதர் சரவணபிள்ளை கும்பகோணம் வந்திருந்து திருப்புகழ் அச்சிடத் தயாரா யிருந்தவைகளை ஒருமுறைபார்வையிட்டுத் திருத்த வேண்டுவனவற்றைத் திருத்திப் பெரிதும் உதவினார். மே மீ திருத்தணிக்கு வந்து புத்தூரில் வக்கீலாயிருந்த தமது தமக்கை குமாரன் துரைசாமி பிள்ளையின் உதவியால் கருணீகர் மடம் மேலண்டைபாகங் கட்டி முடிந்ததைப் பார்த்து மகிழ்ந்தார். பிறகு சென்னைக்கு வந்து திருப் புகழ் முதற்பாகம் அச்சிடுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்தார். கோடை மாத விடுமுறைகள் தோறும் தாம் உத்தியோகத்திலிருந்தவரையும் ஒவ்வொரு வருஷமும் திருத்தணிக்கு வந்து சுவாமி தரிசனஞ் செய்து "என் ஆண்டவரைக் கண்குளிரக் கண்டு பேரானந்தம் அடைந்தேன் எனத் துதித்துள்ளார். சென்னைக்கு வரும்போதெல்லாம் மில்லர் துரை யவர்களைக் கண்டு தமது நன்றி செலுத்தி வந்தார். கிருத்திகை தினங்களில் திருத்தணிதவிர வேறு தலங்கள் தரிசித்தாற் கஷ்டம் நேரிடுவது கற்பகபிள்ளை நாள் முதல் இக்குடும்பத்துக்குத் தெரிந்த விஷயம். ஆதலால் கும்பகோணத்தி லிருந்தவரையும் கிருத்திகை வராத லீவ் நாள்களிலெல்லாம் ஏதேனுஞ் சிவஸ்தலங்களுக்குப் போய் வந்தார். ஜூலை மீ முதல் 250 ரூபா சம்பளம் ஆயிற்று. ஒவ்வொரு வருஷமுங் கார்த்திகை கிருத்திகை தோறும் "திருவண்ணாமலை தீபதரிசனம் எனக்கென்று கிடைக்குமோ அறியேன்" என ஏங்குவர். 1892 ஹ டிசம்பர் மீ 11 உ நந்தன ஹ கார்த்திகை மீ 28 உ இவருடைய 47 - ஆவது வயது ஆரம்பம். அன்று முதல் கந்தரனுபூதி பாராயணம் வைத்துக் கொண்டதைக் குறித்துப் பின் வருமாறு எழுதுகிறார்.
எனது 47 - ஆவது வயதாரம்பமுதற் கந்தரநுபூதி பாராயணம் வைத்துக் கொண்டேன். மொத்தம் 51 பாடலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, ஞாயிறு 12, திங்கள் 6, செவ்வாய் 6, புதன் 6, வியாழன் 6, வெள்ளி 7, சனி 8 பாடல்களாக வாரத்துக்கொருமுறை பாராயணம் முடியும். என் ஆயுள் நாள் முடியும் வரையும் இவ்வழக்கம் தடையின்றி நடைபெறுமாறு கடவுளை வேண்டுகிறேன். 30-12-1892.
இந்த எண்ணம் வீண் போக வில்லை. இவர் இறுதிநாள் வரை இவ்வழக்கந்தவறாது அனுசரிக்கப்பட்டது.
1893 ஹ சிவராத்திரியன்று இன்னம்பர், புறம்பயம், விஜயமங்கை, வைகாவூர் என்னும் நான்கு பாடல்பெற்ற தலங்களைத் தரிசிக்கப்பெற்ற தமது பாக்கியத்தை நினைந்து ஆநந்தித்தார். மார்ச் 31 உ திருவாரூர்த் தேர்த் திருவிழாவைத் தரிசித்ததைக் குறித்து எழுதுகிறார்.
"காலையிற் கமலாலயத்தில் ஸ்நாநஞ்செய்து தியாகராஜருடைய ரதத்தைத் தரிசித்தோம். இரதம் ஓடுவதையுங் கண்டோம். அது மிகவும் கெம்பீரமாயிருந்தது. திரளான ஜனங்கள் கூடியிருந்தார்கள். திருவாரூரில் ரதோஸ்சவ தரிசனம் அவசியம் செய்யவேணும். "ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே" என்று அப்பர் சுவாமிகள் திருவாரூர்த் தேரைச் சிறப்பித்துப் பாடியிருக்கின்றார். 'திருவாரூர்த் தேரழகு' என்று பழமொழியும் உண்டு. சுவாமியின் இரதம் ஓடுவதைக் கண்டபோது என் கன்மனமுங் கசிந்துருகிற்று. ஆராமையுண்டாயிற்று. என் பாக்கியமே பாக்கியம்."
தாம் போய்த் தரிசித்த அநேகதலங்களிற் கோயில்கள் கவனிப்பாரின்றிப் பூஜையற்றுக் கிடப்பதைக் கண்ணுற்று மிக வருந்தினர். ஏப்ரில் மீ 26 உ அரிசிற்கரைப் புத்தூர் என்னுந் தலத்தைத் தரிசித்து எழுதுவதாவது:
"கோயில் மெத்த பரிதாபமான ஸ்திதியிலிருக்கிறது. எல்லாம் இடிந்து கிடக்கிறது. குருக்கள் சிறிதும் கவனிக்கிறதாகக் காணோம். சண்டேசுர நாயனாருக்குப் பூஜையே கிடையாது. அப்படிப் போட்டு வைப்பது அதிபாதகமென்றும் இது முதல் பூஜை செய்து வரும்படிக்குங் குருக்களிடத்திற் சொன்னேன். கோயிலுக்கு 3 வேலி நிலம் இருக்கிறதாம். தர்மகர்த்தாவும் இருக்கிறாராம். தரும கர்த்தா இப்படியும் சிரத்தையற்றிருப்பாரா! ஐயோ பாவம்!"
ஜூலை மீ 2 உ
நாகப்பட்டினம் சப்ஜட்ஜ் ராமசாமி ஐயங்காரைப் பார்த்தேன். என் தீர்மானங்களின் நியாயப் பொருத்தத்தைக் குறித்து அவர் மிக மகிழ்ச்சி கொண்டனர்.
- என எழுதியுள்ளார்.
கும்பகோணம் முன்சீப் வேலை எவ்வளவு உபத்திரவமாயிருக்கும் என்பது யாவருக்குந் தெரிந்த விஷயம். இந்த உபத்திரவத்துடன் 1893 - ஆம் வருஷம் இவர் 23 பாடல் இலாத தலங்களையுந் தரிசித்தார்.
1894 ஹ பிப்ரவரி மீ 24 உ சிவ சிதம்பர முதலியார் சிவகதியடைந்ததைக் கேட்டுத் திருப்புகழ் அச்சாகி வரும் வரை அவர் இல்லையே என வருந்தினர். இவ்வருஷம் அடிக்கடி கட்டி முதலிய நோயால் வருந்தினர். திருத்தணிகைத் திருக்குளத்தில் மாலையில் அநுஷ்டானஞ் செய்து குளக்கரையிலிருந்தபடியே சுவாமி கோயிலை நோக்கித் தொழுவது இவருக்கு எப்பொழுதும் பேரானந்தத்தை விளைவித்தது. ஜூன் மீ 2 உ -
"சாயரக்ஷை திருக்குளத்தில் அநுஷ்டானம் முடித்துக் கொண்டு அங்கிருந்தபடியே சுவாமி கோயிலை நோக்கித் தொழுதேன். இப்படிச் செய்வது எனக்கு அதிக பிரியமாயிருக்கிறது" என எழுதியுள்ளார்.
கும்பகோணத்திலிருந்த காலத்தில் இவர் புதிதாகத் தரிசித்த தேவாரம் பெற்ற ஸ்தலங்கள் நாற்பத்தாறு.
1894 - 1897
திருத்தருப்பூண்டி வாசம்.
கும்பகோணத்திலிருந்து திருத்தருப்பூண்டிக்கு மாற்றப் பட்டு 1894 வருஷம் ஜூன் மீ 16 உ அங்கு வேலையை ஒப்புக் கொண்டார். அவ்வூரில் ஒரு சிறு பள்ளிக் கூடமே இருந்தமையால் என்னையும் என் தமையனாரையும் திருவாரூருக்குப் படிக்க அனுப்பினார். நவம்பர் 3 உ -
" இன்றிரவு சூரசம்ஹார உற்சவம் நடந்தது. கந்த புராணம் வாசித்து வருகையில் இன்று சரியாய் சூரன் வதைப்படலம் படித்து முடிக்க நேர்ந்தது. இது ஆச்சரியம்" என எழுதியுள்ளார்.
1895 - ஆம் வருஷம் ஏப்ரல் 9 உ திருப்புகழ் முதற்பாகம் பயின்டாகிச் சென்னையிலிருந்து பிரதிகள் திருத்தருப் பூண்டிக்கு வந்தன.
"24 வருஷத்துக்கு முன் ஆரம்பித்த வேலை முடிய இந்தக் காலஞ் சென்றது. இப்போதும் பாதிதானே ஆயிற்று"
- என வருந்தி எழுதியுள்ளார். தேவஸ்தானத்தார் விருப் படத்தின்படி திருத்துறைப்பூண்டி மான்மியம் என்னும் புத்தகம் எழுதி வந்தார். ஏப்ரல் மீ 15 உ அதைக் குறித்துப் பின்வருமாறு எழுதியுள்ளார்:
வில்வாரணிய ஷேத்ரம் எனப்படும் திருத்துறைப் பூண்டி ஸ்தல மான்மியத்தை எளிய வாசன் நடையில் எழுதி வருகிறேன். நாற்பது அத்தியாயங்களுள்ளன. பத்து அத்தியாயம் எழுதி முடிந்தது. முழுதும் முடிந்ததும் கோயிற் செலவில் புஸ்தகம் அச்சிடப்படும்.
ஏப்ரல் 22 உ சேலம் தமிழ்பண்டிதர் சரவணா பிள்ளை திருத்தருப்பூண்டிகு வர அவரால் திருப்புகழ் ஏனைய பாடல்களையும் இவர் பரிசோபித்தார். இவரது வேண்டுகோளால் திருவாரூர்ப் புராணம் அச்சிடப் பட்டது. மேமீ 12 உ.
வடபாதிமங்கலம் சோமசுந்தர முதலியாரைப் பார்த் துத் திருப்புகழ்ப் பிரதி ஒன்று தந்தேன். என் வேண்டு கோட்கிணங்கி அவர் அச்சிட்ட திருவாரூர்ப் புராணம் இரண்டு பிரதிகள் அவர் எனக்குத் தந்தார்.
- என எழுதியுள்ளார். ஆகஸ்ட்மீ 16 உ "கற்பூரம் பலம் 3 1/2 அணா சொல்லுகிறார்கள். அந்த விலைக்கும் அகப்படவில்லை. இது என்ன ஆச்சரியம்" என்றெழுதி யிருக்கிறார்கள். இப்போது பலம் ஒரு ரூபாயுஞ் சொல்லு கிறார்களே. இதை என்ன என்று சொல்லுவது!
1896 ஹ ஜனவரி மீ 6 உ முதல் (300 ரூபா சம்பளத்தில்) இரண்டாவது கிரேட் முன்சீபாகப் பதில் பார்த்து வந்தார். ஏப்ரில் 20 உ திங்கட்கிழமை புதிதாகக் கட்டி முடிந்த கட்டடத்திற் கோர்ட்டு வேலை ஆரம்பித்தார். அம்மாதம் அங்கு வந்த பண்டிதர் சரவணபிள்ளையுடன் சென்று எட்டுகுடி சித்ரா பௌர்ணமி உற்சவந்தரிசித்தார். ஜூன் மீ 4 உ திருத்தணி கோயில் பலிபீடத் தருகின் தள வரிசை செய்வதற்குங் கருணீகமடத்துக் கிணற்றைப் பழுது பார்ப்பதற்கும் பணம் அனுப்பினார். அக்டோபர் மீ 29 உ கும்பகோணம் நாகேசுரஸ்வாமி கோயில் அம்மனுக்கு வெள்ளி ஒட்டியாணஞ் செய்து சமர்ப்பித்தார்.
1897 ஹ பிப்ரவரி மீ 21 உ வேதாரணியத்திற் பண்டார சந்நிதி யவர்களைப் பார்த்து அவ்வூர் ஸ்தல புராணம் அச்சிடும்படி செய்வித்தார். வேதாரணியத்தைத் தரிசித்து-
"திவ்விய தரிசனம்; மனதுக்கு மிகவும் ஆநந்தமாயிருந்தது. முக்கியமாய் வேதாரணியேசுர ஸ்வாமி சந்நிதி மிக மகிமையுள்ள தாய் விளங்குகிறது. எதிர் பாராமலிருந்தபோது வேதாரணியேசுரர் என்னைத் தம்மிடம் வலுவிலிழுத்து அவருடைய அருமையான தரிசனத்தைத் தந்தது அவருடைய பெருங்கருணைத் திறத்தைக் காட்டுகிறது."
- என மகிழ்ந்து எழுதியுள்ளார். ஏப்ரில் மீ 21 உ
"இந்த ஊர் (திருத்தருப் பூண்டி) ஸ்தல புராணம் வசனமாக நான் எழுதியது அச்சாய் வந்துவிட்டது. இந்தச் சிறு நன்மையாவது நான் செய்யும்படி நேர்ந்தது சந்தோஷமாயிருக்கிறது.
கோயிலார் செலவில் அச்சிடப்பட்டது. கோயிலார் எனக்கு 15 காபிகள் கொடுத்தார்கள்.
எனக் குறித்துள்ளார். மே மீ 1 உ திருமங்கலம் முன்சீபாக மதுரைக்கு மாற்றப் பட்டதைக் கேட்டு எழுதுகிறார்:
மதுரையில் உள்ள திருமங்கலம் முன்சீபாக மாற்றி யிருப்பதாக உத்தரவு கிடைக்கப் பெற்றேன். மதுரை தூரமாயிருந்த போதிலும் மஹா சிவக்ஷேத்திர மாதலின் எனக்கு அங்குப்போவது சந்தோஷம். எம்பெருமானையும் அவர் விசேஷ உற்சவங்களையும் என் மனமுங் கண்ணுங் குளிரத் தரிசிக்கும்படியான பாக்கியமும் எனக்குக் கிடைக் கிறதே! எல்லாம் சிவபெருமானுடைய திருவருளே."
இவர் முன்சீபாயிருந்த ஒவ்வொரு ஊரிலும் இருந்த \ ஜனங்கள் இவர் மாற்றப்பட்டு வேறு ஊருக்கு வரும் சமயத்தில் மிக வருந்தினார்கள். மதுரைக்குமாற்றப்பட்ட பொழுது திருத்தருப்பூண்டி வக்கீல்கள் கூடி இவர் கோர்ட் டில் இருப்பது போல ஒரு படம் பிடித்தார்கள். ஊரில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் கூடிக் கோயிலில் எல்லா சுவாமிகளுக்கும் அபிஷேகஞ் செய்வித்தார்கள். சிலர் சிவபுராண பிரசங்கங்கள் வைத்தார்கள். ஒருவர் ருக்மணி கலியாணம் பாகவதரைக் கொண்டு பிரஸங்கஞ் செய்வித்தார். புறப்படுஞ் சமயத்தில் திருத்தருப்பூண்டி ரெயில்வே ஸ்டேஷனில் இவருக்கு மாலையிட்டுப் புகைப் படம் பிடித்தனர்.
திருத்தருப் பூண்டியிலிருந்த காலத்திற் புதிதாகத் தரிசித்த தேவாரம் பெற்ற ஸ்தலங்கள் ஐம்பத்தைந்து.
1897 - 1898
மதுரை வாசம்
1897 ௵ ஜூலை௴ 2உ மதுரை வந்து சேர்ந்தார். இங்கு அதியற்புதமான ராகத்துடன் திருப்புகழ் பாடுந் திறமைவாய்ந்த பேறையூர் ஜமீந்தார் நாகையசாமி தும்மிச்சி நாயகரவர்களுடைய நட்பு நவம்பர் 19 உ இவருக்குக் கிடைத்தது. டிசம்பர் மீ 1 உ இரண்டாவது க்ரேட் காயமாயிற்று
1898 ௵ ஜனவரி௴ 9 உ ஜட்ஜ் ஆர்ஸ்பால் துரையைப் பார்த்தார். அப்போது இவர் எழுதியுள்ளதாவது:
ஒரு அப்பீல் கேஸ் தன்னிடம் வந்ததில் நான் எழுதின வாக்கு மூலக் குறிப்புக்களைக் கண்டு என் கையெழுத்தைத் தெரிந்து கொண்டதாகவும் என் கையெழுத்து வெகு தெளி வாகவும் நன்றாகவும் இருக்கிறதென்றும் ஜட்ஜ் சொன்னார்.
தமிழ்ப் பண்டிதர் சிவசிதம்பர முதலியாரியற்றிய "நாமக்கல் செங்கழுநீர் விநாயகர் நவரத்நமாலை" என்னும் நூல் பிப்ரவரி௴ மதுரையில் இவரால் அச்சிடப் பட்டது.அபிஷேகத்துக்குப் பால், தயிர் வைப்பதற்காக ஐந்து வெண்கல கிண்ணங்கள் செய்வித்துத் திருவேடகங் கோயிலுக்கு மார்ச்சு௴ 4 உ அனுப்பினார். இந்த அற்ப தருமமாவது செய்யும்படி சுவாமி அருள் செய்ததற்காகச் சந்தோஷப்படுகிறேன்என்றெழுதியிருக்கிறார். மார்ச்சு௴ 12 உ சனிக்கிழமை இவருடைய குமாரத்தி மங்களநாயகி யம்மா மதுரையிற் சிவபதவியடைந்தனர். அப்பொழுது இவர் வருந்தி எழுதியவதாவது:
" 'நமச்சிவாய வாழ்க' என்னும் திருவாசகம் படித்துச் செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப்பணிந்து' என்று முடிக்கும்போது அவள் பிராணன் போய்விட்டது. சுவாமியிடத்தில் அவளுக்கு உறுதியான பக்தி. மெத்த நெறியானவள். அவள் சுவாமியினுடைய திருவடியைச் சேர்ந்தாள் என்பதிற் சந்தேகமில்லை. அவள் சுகப்பட்டு விட்டாள். நாங்கள் துக்க சாகரத்தில் முழுகி னோம். எங்கள் துயரஞ் சொல்ல ஒண்ணாது. என் செய்வேன்! விதியை விலக்க வல்லார் யார்?" இறந்த நாள் ஞாபகக் குறிப்புக்காக பின்வரும் வெண்பா இவர் இயற்றி யுள்ளார்.
'ஏ விளம்பி மாசி யிறுதிமுப்ப தாந்தேதி
பாவுசனி வாரமிருட் பஞ்சமியில் – மேவு
விசாகமதில் மங்களமா மெல்லி தணிகை
விசாக னடிமே வினாள்.'
இந்தத் துக்கத்தினாலும் விதிப்பயனாலும் மே-ஜூலை மாதங்களில் இவருக்கு உடம்பு மெத்த பலஹீனப்பட்டு வந்தது. ஜூன் 18 உ எழுதுகிறார்.-
மூன்றாஞ் சனிக்கிழமை. அமாவாசை. இன்றும் நாளையும் கோர்ட்டில்லை; வேலையுமில்லை. இருந்தும் வெளியே போகக் கூடாத ஸ்திதியிலிருக்கிறேன். தேகம் அவ்வளவு துர்ப்பலமாயிருக்கிறது. இது என்ன பாபம். காலம் வீணாய்க் கழிகிறது. உடம்பு நல்ல ஸ்திதியிலிருந் தால் திருப்பூவணத்துக்கும் திருவாதவூருக்கும் போய்ச் சுவாமி தரிசனஞ் செய்து வருவேன்."
பின்பு நோய் அதிகரித்து உணவு குறைந்து கொண்டே வந்தது. ஜூன்௴ 29 உ--
கால் நோய் மிக அதிகரித்து வலி அசாத்தியமாயிருக் கிறது. நடக்கவே முடியவில்லை. என் வேதனை என்று தீரும்! சுவாமீ! பட முடியவில்லையே"
-- எனத் துக்கித்துள்ளார். ஜூலை 21 உ முதல் மூன்று மாதம் லீவ் வாங்கிக் கொண்டார். உத்தியோகத்துக்கு வந்தது முதல் இதுவரையும் வீணாக லீவே வாங்கின தில்லை. நோய்க்குக் காரணம் வயிற்றில் வலது பக்கத்திற் சீழ் கட்டிக்கொண்டிருப்பதென்று முனிசிபல் ஆஸ்பத்திரி வைத்தியர் சாமிநாதபிள்ளையவர்கள் கண்டு பிடித்து அதற்கு வேண்டிய சிகிச்சை செய்து ஜூலை 31 உ மயக்கங் கொடுத்து கட்டியைக் கீண்டு சீயை வெளிப்படுத்தி நோயை நீக்கிச் சௌக்கியப்படுத்தினார். இந்தப் புண்ணியவானுக்கு எங்கள் குடும்பம் மிகக் கடமைப்பட்டிருக்கிறது. அக்டோபர்௴ 21 உ லீவ் முடிய கோர்ட் வேலையை ஒப்புக் கொண்டார். டிசம்பர் 8 உ இவருடைய தமையனார் சிதம்பரபிள்ளை இறந்துவிட்டதாகத் தந்தி வந்து ஆறாத் துயரம் அடைந்தனர். டிசம்பர் கடைசியில் மதுரையிலிருந்து மானாமதுரைக்கு மாற்றப்பட்டதாக உத்தரவு வந்தது. மதுரையிலிருந்த காலத்தில் இவர் புதிதாய்த் தரிசித்த தேவாரம் பெற்ற ஸ்தலங்கள் நான்கு.
இவர் அடிநாள் முதல் எழுதிவந்த தின நிகழ்ச்சிக் குறிப்பு என்னும் புத்தகங்களில் ஒவ்வொரு வருஷ முடிவி லும் அவ்வருஷத்திய நிகழ்ச்சிகளின் சுருக்கம் ஒன்று எழுதி யுள்ளார். அவை (பொது விஷயம்). (உத்தியோக விஷயம்), (புதிதாய்ப் பார்த்த பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடலில் லாத ஸ்தலங்கள்), (மறுமுறை பார்த்த ஸ்தலங்கள்), (பிறப்புக் குறிப்பு); (இறப்புக் குறிப்பு), (கலியாணங்கள்), (குடும்ப விஷயங்கள்), (முடிவுரை - தெய்வ வணக்கம்) என்னும் பகுப்புக்களின் கீழ் எழுதப்பட்டுள்ளன. இப்பகுப் புக்களுள் "முடிவுரை-தெய்வ வணக்கம்" என்னும் பகுப் பின் கீழ்த்தாம் அபாயகரமான நோயினின்றுங் கடவுளி னாற் காக்கப்பட்ட 1898 - ஆம் வருட முடிவுரை இவர் எழுதியதைஅன்பர்கள் காணக் கீழ் எடுத்துக் காட்டுவது பொருத்தமெனத் துணிந்தேன்.
இயமன் வாயினின்றும் என்னை மீட்டதற்காக எனது கடவுள் ஸ்ரீதணிகை யாண்டவருக்கு என் வணக்கமும் நன்றியுங் கூறி இவ்வருட நிகழ்ச்சிச் சுருக்கத்தை முடிக் கின்றேன். அவர் பொன்னார் திருவடியே எனக்குச் சரணம். அடுத்த வருணம் நல்ல வருஷமாயிருந்து அவரரு ளால் அதிக சிவஸ்தலங்களைத் தரிசிக்கும் பாக்கியங் கிடைக்க வேண்டுகின்றேன். இவ்வருஷம், அதுவும் வருஷ முடிவில், ஒரே ஒரு ஸ்தலந்தான் (திருப்பூவணம்) தரிசித் தேன். திருத்தணிகேசன் திருவடிகளே சரணம்.
1899 -1901
மானாமதுரை வாசம்
மதுரையை விட்டு 1898 ௵ டிசம்பர்௴ கடைசியில் நீங்கி, 31 உ திருப்பூவணத்தைத் தரிசித்து, 1899 ௵ ஜனவரி ௴ 2 உ மானாமதுரை வந்து சேர்ந்தார். 1899 ௵ பிப்ரவரி மீ தமது மூத்த குமாரன் சண்முகம்பிள்ளை மதுரையில் F .A. பரிக்ஷையில் தேறினதும் சென்னையில் தாம்வாசித்திருந்த மில்லர் கலாசாலையிலேயே அவரையும் படிக்கும்படி அனுப்பினார். மில்லர் துரையும் தம் மாணாக்கனுடைய குமாரன் தங்கீழ்ப்படிக்க வந்ததற்கு நிரம்பசந்தோஷப் பட்டார். நானும் என் தம்பியும் மதுரையிலேயே படித்து வந்தோம். ஏப்ரல் மீ திருச்சுழியல் என்னும் ஸ்தல தரிசனத் துக்காகப் போயிருந்து பொழுது திருப்புகழ் ஓலைப் புத்தகத் துக்காக வழக்கம் போல விசாரித்ததில் திருவுத்தரகோச மங்கை மங்களேஸ்வரி பிள்ளைத் தமிழ் என்னும் நூல் கிடைக் கப்பெற்று,
- திருப்புகழுக்காக விசாரித்ததில் மங்களேஸ்வரி பிள்ளைத் தமிழ் கிடைத்தது. 'மங்களேஸ்வரி' திருவுத்தரகோசமங்கைத் தேவியார் திருநாமம் பார்த்து அச்சிடலாமா என யோசிக் கிறேன். இது கிடைத்தது பாக்கியமே."
- என எழுதியுள்ளார். என்னைக்குறித்து எந்தையார் எழுதியுள்ள ஒரு விஷயத்தை, அவருக்கு என்மீதிருந்த அன்பின் அளவைக் காட்டுதற் பொருட்டு, இங்கு எழுத விரும்புகிறேன்.
"வெளி நாட்டுப் பிரயாணங்களில் நன்மை" என்னும் விஷயத்தை குறித்து நல்ல வியாசம் எழுதினதற்காக டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் பார்ட்ரிஜ் துறை செங்கல்வராய னுக்கு ஒரு கடிகாரம் இனாம் தந்தனர். இவ்விஷயங் கேட்க எனக்கு வெகு சந்தோஷமா யிருக்கிறது. செங்கல்வராயன் மிகக் கஷ்டப்பட்டுழைக்கின்றான். அவனுக்குத் தெய்வந் துணை செய்கின்றது.
டிசம்பர் 13 உ சேலம் பண்டிதர் சரவணபிள்ளை வந்திருந்து திருப்புகழ் இரண்டாம் பாகத்துக்கு வேண்டிய பாடல்களைப் பரிசோதித்து 30 உ சேலம் சென்றார். அப்போது அவர் பாடின சிறப்புப்பாயிரம் மிக அருமையானது. படிக்க மிக இனிமையாயிருக்கும் டிசம்பர் மீ 18 உ மானாமதுரையில் ஆருத்ரா தரிசனஞ் செய்து பின்வருமாறு எழுதுகிறார்:
"இன்று ஆருத்ரா தரிசனம் கோயிலுக்குச் சென்று நடராஜரையும் சிவகாமியம்மையையும் தரிசித்தோம். அடியார் கூட்டம் அதிகமாயிருந்தது. கொடும்பாவியாகிய எனக்கும் இந்தப் புண்ணியதினத்திலே இப்படிப்பட்ட திவ்ய தரிசனம் கிடைத்ததே என்று என் கல்மனமும் உருகிக் க ண்ணீரும் பெருகிற்று. எல்லாம் சிவன் செயலே. சிவா நுக்கிரகமே."
தாங் கேட்டுக்கொண்டபடி மதுரைக்கோயில் கீழைக் கோபுரத்தில் 1900 ௵ பிப்ரவரி௴16 உ முதல் தீபம் ஏற்றி வருகிறார்களென்றும் மற்றைக் கோபுரங்களிலும் சீக்கிரத் தில் தீபம் ஏற்றப்படும் என்றும் பெருமகிழ்ச்சியுடன் பிப்ரவரி௴ 19 உ எழுதியிருக்கின்றார். ஏப்ரில்௴ 21 உ திருப்புகழ் இரண்டாம் பாகத்துப் பாடல்கள் சென்னைக்கு அச்சிட அனுப்பினார். மே ௴ 20 உ மதுரைக்கு வந்தபோது நாலு கோபுரங்களிலுந் தீபம் வைத்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். குருசாமி சாஸ்திரியார் என்பவரை வைத்துக் கொண்டு வடமொழியிலிருந்த திருப்புனவாயில் ஸ்தல் புராணத்தைப் படித்து முடிந்ததாக செப்டம்பர் ௴ 2 உ எழுதியிருக்கிறார். அதை வசன ரூபமாக இவர் எழுதி வைத்ததிற் சிலபாகங்கள் இன்னும் இருக்கின்றன. எங்கே யாவது சிவலிங்கமோ பிள்ளையாரோ கவனிப்பாரின்றி வெயிலில் இருந்தால் அம்மூர்த்திக்கு ஒரு கொட்டகை யாவது போடும்படி செய்விப்பது இவர் வழக்கம். மானா மதுரை சிவன்கோயில் கோபுரத்திலும் விளக்கு வைக்கும் படி ஏற்பாடு செய்தார். அதற்காகக் கோபுரத்துத் திண்ணையிலிருந்து முதல் நிலைக்கு ஏறுவதற்காகப் பலமான மர ஏணி ஒன்று செய்வித்தார். டிஸ்டிரிக்ட் ஜட்ஜுக்கு எழுதி விநாயக சதுர்த்திக்கு லீவ் விடும்படி செய்தார்.
1901 ௵ஜனவரி௴ உத்தரகோசமங்கைக்குப் போயிருந்த பொழுது உத்தரகோசமங்கை பிள்ளைத்தமிழ் ஓலைப் புத்தகம் பிறிதொரு பிரதி கிடைத்தது. டிசம்பர் 11 உ முதல் பென்ஷன் என்று பிப்ரவரி ௴ 18 உ உத்தரவு வந்தது. அப்போது இவர் எழுதினது கவனிக்கற்பாலது.
ஐம்பத்தைந்தாவது வயது முடிகின்ற அடுத்த டிசம்பர் 11 உ முதல் பென்ஷன் என்று உத்தரவு இன்று வந்தது. ஆபீஸ் வேலைகள் நீங்கிக் கடவுளருளால் என் முழுப் பொழுதையும் அவருக்கும் அவர் திருப்பணிக்குஞ் செலவிடக் கூடுமெனக் களிக்கின்றேன்.
இவ்வருட ஆரம்பத்தில் நானும் என் தம்பியும் சென்னைக்கு வந்து மில்லர் ஸ்கூலிற் சேர்ந்தோம். பிப்ரவரி 24 உ மானாமதுரைக்குச் சமீபத்திலுள்ள இளையான் குடி மாறநாயனார் ஸ்தலமாகிய இளையான்குடியைத் தரிசித்த தாகவும், நாயனார் நெல்வாரிவந்து சுவாமிக்கு அமுதளித்த புலம் சாகுபடியில்லாமல் இரண்டு வெற்றிலைத் தோட்டங் களின் நடுவில் இருக்கிறதாகவும், கால் காணிக்குங் குறைவான சிறுபுலம் எனவும், குருக்களுக்குச் சொந்தம் எனவும், அதற்கு "முளைவாரி அமுதளித்த நாற்றங்கால்" என்பது பெயர் எனவுங் குறித்துள்ளார்.மே ௴ 27 உ திருவுத்தரகோசமங்கை மங்களேசுரி பிள்ளைத்தமிழ் அச்சாகி வெளிவந்தது. இம்மாதம் சென்னையில் லிங்க செட்டித் தெரு 292 - ஆம் நம்பர் வீட்டை வாங்கினார். ஜூன் ௴ மானாமதுரை ஸ்தலபுராணம் இவரால் வசன ரூபமாக எழுதி முடிந்தது. அம்மாதந்தான் இராமேசுர தரிசனம் இவருக்குக் கிடைத்தது. செப்டம்பர் ௴15 உ மானாமதுரை சோமநாத சுவாமி கோயிலில் அநேக காலமாக பிரதிஷ்டை யில்லாமலிருந்த நடேசமூர்த்தி சிவகாமியம்மை விக்கிரகங்கள் (சிலை) இவருடைய முயற்சியாற் பிரதிஷ்டை செய்யப்பட்டன. டிசம்பர் மீ 11 உ பென்ஷன் வாங்கிக் கொண்டார். அச்சமயத்தில் இவர் எழுதிய மானாமதுரை ஸ்தலபுராண வசனம் அச்சாகி வந்தது. அப் புத்தகத்தை அநேகருக்கு இனாங் கொடுத்து, அவ்வூராரெல்லாம் இனி இத்தகைய புண்ணியவானைக் காண்பதொன்றோ என இரங்க, அத்தலத்து வீற்றிருக்கும் ஸ்ரீ ஆநந்தவல்லியையும் சோமநாதரையும் வணங்கி விடை பெற்றுக்கொண்டு, ஊரினின்றும் 12 உ நீங்கி, வழியில் திருப் பூவண நாதரையும், மதுரை மீனாக்ஷிசுந்தரேசுரையுந் தரிசித்து, திருப்பாதிரிப்புலியூர் வந்து ஸ்ரீ பாடலீசுரருக்கும் பெரியநாயகி யம்மைக்கும் அபிஷேகஞ் செய்வித்துச் சென்னையில் தமது சொந்த வீட்டுக்கு 29 உ வந்து சேர்ந்தார்.
மானாமதுரையிலிருந்த காலத்தில் இவர் புதிதாகத் தரிசித்த தேவாரம் பெற்ற ஸ்தலங்கள் எட்டு.
சிவஸ்தலத்தில் உத்தியோகங் கிடைக்காதா என விரும்பின இவருக்குக் கடவுள் சிவன் கோயில் இல்லாத நாமக்கல்லில் முதலில் வேலை கொடுத்தார்.
"மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்."
என்னும் ஆன்றோர் வாக்கு பொய்யாகா வண்ணம் 3 1/2 வருஷம் நாமக்கல் செங்கழுநீர் விநாயகரைத் தரிசித்து வணங்கினதின் பலனால் அன்றோ பின்னர்ச் சோழநாட்டி லும் பாண்டிய நாட்டிலும் வேலை கிடைக்கப்பெற்று அநேக சிவஸ்தலங்களையும் திருவிழாக்களையும் கண்ணுறும்படி யான பாக்கியம் இவருக்குக் கிடைத்தது!
கடைநாட் பருவம் 1902 - 1909
இளைப்பாறவேண்டிய தமது ஈற்றுக் காலத்தில் நோய் என்னும் பகைவன் கொண்டொழிந்த நாள்கள் போக ஏனைய காலமெல்லாம் இறைவன் திருப்பணிக்கே இவர் எண்ணியவாறே செலவழித்தனர். இவர் பென்ஷன் வாங்கின பிறகு புதிதாகத் தரிசித்த பாடல் பெற்ற ஸ்தலங் கள் 3; பாடல் பெற்ற ஸ்தலங்கள் 274 க்கு இவர் 176 ஸ்தலங் கள் பார்த்திருப்பதாக ஏற்படுகிறது. இங்கு இவருடைய ஒழுக்க விசே ஷத்தைக் குறித்து எழுதுவது மிகப் பொருத்த மாம்.அதிகாலையில் எழுந்து வெளியில் உலவி வந்து திருநீறிட்டுக் கந்தரனுபூதி பாராயணஞ் செய்து தேவாரப் பதிகம் படித்துப் பின்பு ஏதேனும் சிவபுராணம் படிப்பார். 8 மணி முதல் 10 மணிவரை உத்தியோகத்திலிருந்த பொழுது கோர்ட்டு வேலையும் பென்ஷன் வாங்கின பிறகு சிவ நூலாராய்ச்சியுஞ் செய்து வந்தார். ஸ்நாநஞ் செய்து அநுஷ்டானம் விநாயக பூஜை முடித்துத் திருத்தணிகேசர் படத்துக்குத் தீபாரதனை செய்து கந்தபுராணம் படித்துப் பிறகு சாப்பிட்டு 11 மணிக்குக் கோர்ட்டுக்குப் போவார். பென்ஷன் வாங்கின பிறகு திருப்புகழோ சிவஸ்தல மஞ்சரியோ இவைகளுக்கு வேண்டியதை ஆராய்ந்து வந்தார். மாலையில் அநுஷ்டானம் செய்து தேவாரம் முதலிய படித்துச் சிவாலயத்துக்குச் சென்று இரவு 8 மணிக்குப் போஜனம் முடித்துக் கொண்டு நித்திரைக்குப் போவதன் முன் "சிவகவசம்" சொல்லிவிட்டு உறங்குவர். அடிநாள் முதல் கடைநாள் வரை தினநிகழ்ச்சிக் குறிப்பும் வருவாய்செலவுக் கணக்கும் செம்மையாய் எழுதி வைத்துள்ளார். பொடி போடுதல் முதலிய வழக்கங்கள் இவரிடங் கிடையா. எவருடனும் மெதுவான குரலில் திருத்தமான தமிழிற் பேசுவார். பொறுமை, வாய்மை முதலிய சகல நற்குணங்களும் நிரம்பி யாவராலும் நடைச் சிறப்புக்கும் பத்திப் பெருக்குக்கும் பெரிதும் மதிக்கப் பட்டார்.
1902 ௵ ஜனவரி ௴ திருப்புகழ் இரண்டாம் பாகம் வெளி வந்தது. காஞ்சீபுரத்தில் தமது மிகுதிக்காலத்தைக் கழிக்க இவருக்கு அதிவிருப்பம். தகுந்த வீடு கிடைக்காததாலும், அடிக்கடி சுவாமி தரிசனஞ்செய்யத் திருத்தணிக்கும், பிள்ளையைப் பார்க்கச் சென்னைக்கும் வரவேண்டியிருக்கு மென்பதாலும், பென்ஷன் வாங்குதலை மாத்திரம் காஞ்சீபுரத்தில் வைத்துக்கொண்டு பன்னாள் திருத்தணியிலும் சின்னாள் சென்னையிலும் பென்ஷன் வாங்குந் தினங்களிற் காஞ்சியிலுமாகக் காலங்கழித்து வந்தார். ஜனவரி 17 உ சித்தூர் ஜில்லா புத்தூர் சிவன் கோயிலுக்கு ஒரு வெண்கல விபூதி மடல் வாங்கிக் கொடுத்தார். ஜனவரி மீ முதல் திருத்தணியிலேயே தங்கிப் பலநாள் முயற்சி செய்துவந்த கருணீக மடங் கட்டுவித்தலைத் தொடங்கி முடித்தனர். மார்ச்சு மீ 28 உ சென்னைக்கு வந்தபோது டாக்டர் மில்லர் துரையும், இவரும், பிள்ளைகளாகிய நாங்கள் மூவரும், ஆகிய ஐவருடைய படம் எடுக்கப்பட்டது. டாக்டர் மில்லர் துரையுடைய அன்பு என்றும் பாராட்டற்பாலது. டிசம்பர் மீ இவருடைய தமக்கையார் சிவகாமியம்மாள் காலஞ்சென்றார்.
1903 ஹ பிப்ரவரி மீ 9உ இவருடைய மூத்தகுமாரர் ஷண்முகபிள்ளையின் கலியாணம் புத்தூரில் நடந்தது. பிப்ரவரிமீ 27உ780 பாடலுள்ள திருப்புகழ் ஓலைப் புத்தகம் ஒன்று திருமாகறல் என்னும் ஊரிலிருந்து கிடைக்க அதில் ஒரே ஒரு புதுப்பாடல் கிடைத்தது. மார்ச்சு 22 உ ச்ரீ காளத்தி நாதருக்குப் பெரிய தானங்கள் இரண்டு செய்தனுப்பினார். ஜூன் 29 மீ என தமையனார் ஷண்முகபிள்ளையின் மனைவி சிவபதம் அடைய இவர் துக்கத்துக்காளானார். ஜூலை 28 உ கீழைத் திருத்தணி ஆறுமுகசுவாமி கோயிலுக்குப் பெரிய மணி ஒன்று செய்வித்துக் கோயிலிற் கட்டி வைத்தனர். டிசம்பர் 11 உ இவர் எழுதியுள்ள குறிப்பாவது-
"சோபகிருதுஹ கார்த்திகை மீ 26 உ சுக்கிரவாரம் இரவு 9 மணிக்கு திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சந்நிதானத்தில் எரிகிற தூங்கா விளக்கு ஐந்தில் ஒன்றை ரூபா 350 வாங்கி என்னுடையதாக்கி ஏற்றுவித்தேன். இனி சரியாய் எரிந்துவரும். ஆபத் சகாய விநாயகமூர்த்தி சுவாமி, தெய்வாயானை, வள்ளியம்மை யிவர்களுக்கு அர்ச்சனை செய்வித்துத் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் எப்போதும் எரிந்துவரவேண்டும். ஹ ரூபா 350 - க்கும் நிலம் வாங்கி சுவாமி பேரால் தஸ்தாவேசு ஏற்படுத்தி, அந்த வரும்படியிலிருந்து தீபம் ஏற்றுவிக்கப்படும். நெடு நாளா எனக்கிருந்த இவ்வெண்ணத்தை என் 58 ஆம் வயது ஆரம்பமாகும். இன்று நிறைவேற்றுவித்ததற்காக ஸ்ரீ தணிகையாண்டவருக்கு என் மனதார அநேக வந்தனங்கள் அன்புடன் அளிக்கின்றேன்."
1904 ஹ என் தாயார் அடிக்கடி நோயாய்ப் படுத்துக் கொண்டது இவருக்கு மனதுக்கு மெத்த கவலைக்கிடமாயிருந்தது. ஆகஸ்ட்டுமீ 5உ ஆடி கிருத்திகையன்று தணிகையெம் பெருமானது தரிசனம் கிடைக்கப்பெற்று,
"சுவாமியைக் கண்ணாரக் கண்டேன். பேரானந்தங் கொண்டேன். அர்ச்சனை செய்து கொண்டு திரும்பினேன். என் அதிர்ஷ்டவசத்தால் இன்றும் சுவாமி தரிசனம் கிடைத்தது. என் பாக்கியமே பாக்கியம்."
- என எழுதியுள்ளார். ஆகஸ்ட்டுமீ 15உ
"குரோதிஹ ஆடிமீ 32உ இன்று காலை திருக்குளத்துக்கு வடவண்டை கரையிலிருக்கும் அரசமரத்தடியில் நாகத்தைப் பிரதிஷ்டை செய்தோம். சுமார் 30 வருஷத்துக்கு முன் செய்த பிரார்த்தனை இப்போது இந்த க்ஷேத்திரத்தில் நிறைவேறியது."
- எனக் குறித்துள்ளார். இந்த மாதம் "சுந்தர விலாசம்" என்றொரு ஓலைப் புத்தகங் கிடைக்க அதைக் காபி செய்து வைத்தார். இது கூடிய சீக்கிரத்தில் அச்சிடப்படும், செப்டம்பர்மீ திருத்தணி சுவாமி பள்ளியறைக்கு படுக்கை, மெத்தை, தலையணைகள் முதலியன செய்வித்துத் தந்தார். இவர் விருப்பத்துக்கிணங்கி மஹா மஹோ பாத்தியாயர் சாமிநாதையரவர்கள் அச்சிட்ட திருப்பூவணநாதருலா டிசம்பர் மீ வெளிவந்தது.
1905 ஹ பிப்ரவரி மீ நான் எம். ஏ. பரீக்ஷையில் தேறினதைக் கேட்டு மகிழ்ந்தார். மார்ச்சு, ஏப்ரில் மாதங்களில் பல வருஷங்களுக்கு முன் தாம் எழுதிவந்த சிவஸ்தல அகராதி என்னும் நூலைத் தயார் செய்து வந்தனர். இந் நூலுக்கு என்ன பெயர் சூட்டலாம் என யோசித்திருந்தார். அப்பொழுது மஹாமஹோ பாத்தியாய சாமிநாதையர் அவர்களைக் காண நேரிட "சிவஸ்தலமஞ்சரி" எனப் பெயரிடலாம் என்று அவர் சொல்ல, "சிவஸ்தலமஞ்சரி" என்று சொல்லலாமா என இவர் கேட்க, அவர் சிவஸ்தலமஞ்சரி என்னும் பெயரே நன்கு பொருந்தும் என அவ்வாறே நூலுக்குப் பெயர் சூட்டப் பட்டது. ஜூலைமீ 6உ இவருடைய மூத்த குமாரர் ஷண்முகம்பிள்ளைக்கு சென்னையில் (இரண்டாவது தாரம்) விவாகம் நடந்தது. இந்த மாதம் சிவஸ்தலமஞ்சரி (முதற் பதிப்பு) அச்சாகி வெளிவந்தது. காஞ்சிபுரத்துக் கடுத்த முட்டவாக்கம் என்னுங் கிராமத்தில் 2 ஏகரா நிலம் வாங்கினார். ஆறுபடை வீடுகளில் ஒன்றாகிய பழமுதிர் சோலை கள்ளழகர் கோயிலில் மறுபடியும் ஸ்தாபிக்கப்படவேண்டும் என்பதற்கு இவர் மிகுந்த பிரயாசை எடுத்து, "நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களுக்கு ஒரு விண்ணப்பம்" என ஒரு பத்திரிகை அச்சிட்டு அவர்களுக்கு அனுப்பினார். டிசம்பர் 10உ திருவண்ணாமலைக்குக் கார்த்திகை தீபதரிசனஞ் செய்யச் சென்றார். மலைமேல் தீபந் தெரிந்த பொழுது எல்லாரும் ஹரஹர என்று ஆரவாரித்தார்களாம். அப்பொழுது இவர் தமது கன்னெஞ்சும் உருகிக்கரைந்ததென்று எழுதியிருக்கிறார். டிசம்பர்மீ 13உ (விசுவாவசு ஹ கார்த்திகை 28 உ) தமது அறுபதாவது வயது ஆரம்பத்தில் திருக்கோவலூர் என்னும் ஸ்தல தரிசனங் கிடைக்கப்பெற்று.
"சுவாமி தயவினால் 60 - ஆம் வயது ஆரம்பமாகிற இன்று பாடல் பெற்ற ஸ்தலத்தில் இருக்கும்படியான பாக்கியத்தைப் பெற்றேனே!" என்று சந்தோஷப் பட்டார். கிருத்திகை தினத்தில் திருத்தணி தவிர வேறு தலத்துத் தரிசனம் எங்கள் குடும்பத்துக் காகாது என்றிருந்தும் திருவண்ணாமலை பேரவா வினுடன் தரிசித்த காரணத்தாலோ வேறு என்ன காரணத்தினாலோ அங்கிருந்து வந்தது முதல் 1906ஹ முற் பகுதியிற் சென்னையில் நோயாயிருந்து மதுரையில் இருந்தபோது வந்த கட்டி போல வயிற்றிற் கட்டி கண்டு டாக்டர் எம். கிருஷ்ணசாமி ஐயரவர்கள் ஏப்ரல் மீ அதைக் கீணிச் சீயை வெளிப்படுத்திச் சிகிச்சை செய்ய ஸ்ரீ தணிகேசன் அருளாற் சௌக்கியமடைந்தார். டாக்டர் அவர்கள் பேருதவி என்றும் பாராட்டற்பாலது. ஜூலைமீ திருப்புகழ் மூன்றாம் பாகத்துக்கிருந்த எண்பது பாடல்கள் பண்டிதர் பிரமஸ்ரீ அனந்தராமையர் அவர்களைக்கொண்டு திருத்தப்பட்டன. செப்டம்பர்மீ 7உ வெள்ளிக் கிழமை வெள்ளியாற் செய்யப்பட்டுத் தங்க கில்ட் கொடுக்கப்பட்ட புதிய வேலாயுதத்தைத் தணிகை யெம்பெருமானுக்குச் சமர்ப்பித்தார். அக்டோபர் மீ மறுபடியும் வயிற்றுக்கட்டி புறப்பட்டுத் தானே உடைந்து சீக்கிரத்தில் வருவாயிற்று. டிசம்பர் 11 உ-
"எனது அறுபதாம் வயது 13 உ முடிகின்றது; அன்று திருத்தணிக்குப் போய் நீண்ட காலமாகிய அறுபது வருஷம் என்னைக் காத்தளித்த பெருங்கருணையைப் பாராட்டி என் வணக்கத்தையும் நன்றியையுங் கூறி என் குலதெய்வமாந் தணிகைநாதருடைய சரணங்களில் வீழ்ந்து அவருக்கு ஒரு அபிஷேகஞ் செய்ய நான் விரும்புகின்றேன்."
- என்று எழுதியிருக்கிறார். அவ்வாறே சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்படியான பாக்கியத்தைப் பெற்றார். சஷ்டி பூர்த்தி அங்ஙனம் நிறைவேறிற்று.
1807 ஹ ஜனவரி மீ பிரமோத்தரகாண்ட வசனம் (இரண்டாம் பதிப்பு) அச்சிடப் பட்டு ஏப்ரல் மீ வெளி வந்தது. இவ்வருடம் என்தமையனார் B.L. பரீக்ஷை தேறியதைக் கேட்டு மிக்க சந்தோஷமுற்றார். ஏப்ரல்மீ முட்ட வாக்கத்துக் கடுத்த அகரத்தில் 21 - காணி நிலம் ஒத்திக்கு வாங்கினார். ஜூன் மீ 27 உ தணிகையெம்பெருமானுக்குப் பால் காவடி எடுத்து அபிஷேக அலங்கார தீபாரதனை செய்து அவர் சந்நிதியில் எனக்கு மணஞ் செய்வித்தார். நவம்பர்மீ 21உ என் தமையனாருக்கு ஆண் குழந்தை (மயிலேறும் பெருமாள்) பிறந்தது. பேரன் பிறந்தபொழுது இவர் அளவிலா ஆநந்தம் உற்றார்.
1908 ஹ மார்ச்சுமீ 23உ திருப்புகழ் முதற்பாகம் இரண்டாம் பதிப்பு அச்சுக்குக் கொடுக்கப்பட்டது. இவ்வருடம் திருத்தணியிலிருந்தபொழுது கடுமையான சுரம் ஒருமுறை வந்தது. அப்போது இவர் வெகுநேரம் மிகப் பலத்த குரலுடன் அநேகந் தேவாரப் பாக்களைப் பாடிக் கதறி -
" ஆகம்பத் தரவணையான் அயனறிதற் கரியானைப்
பாகம்பெ ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை மதிட்கச்சி
யேகம்ப மேயானை யென்மனத்தே வைத்தேனே."
என்னும் அப்பர் சுவாமிகள் தேவாரத்தை யீற்றிற் கூறி முடித்து, இவர் நோய் எவ்வாறு முடியுமோ, இது ஜன்னியோ, என அஞ்சிநின்ற எங்களை நோக்கித் தமக்கு தற்காலம் சாவில்லை யென்றும், தாம் எங்கே இறந்த போதிலும் தமது எலும்புகளில் ஒன்றையேனுந் திருத்தணிகைக்கு கொண்டுவந்து அதை சுவாமியின் கோபுரத்துக்கு நேரே புதைக்க வேண்டும் என்றுஞ் சொல்லி அவ்வாறே செய்கின்றோம் என எங்களிடம் வாக்குறுதியும் பெற்றுக்கொண்டார். பின்னர் இறைவனருளால் உடம்பு சரிப்பட்டது.
மே மீ திருத்தணி மடத்துக் கிணறு பழுது பார்க்கப் பட்டது. ஜூன் மீ திருநீடுர்த் தலபுராணத்தை அச்சிட்டு உலகுக்கு உதவினர். ஜூலை மீ 12 உ இவருடைய மூன்றாவது குமாரனுக்கு (ஆறுமுகம் பிள்ளைக்கு)ச் சேயூரிற் கலியாணம் நடந்தது. ஆகஸ்ட்டுமீ 6உ இவருடைய மாமியார் காஞ்சியிற் காலஞ் சென்றனர். செப்டம்பர் மீ திருத்தணி திருப்புகழ் தனியாய் அச்சிடப் பட்டது. டிசம்பர் மீ பழநிக்குச் சென்று இவ்வளவு காலஞ் சென்றேனும் பழனியாண்டவரைத் தரிசிக்கும்படியான பெரும் பாக்கியம் பெற்றேன் எனப் பேராநந்தம் உற்றார்.
தள்ளாமை மேற்பட்டு அடிக்கடி அலைவது கஷ்டமாய்விட பென்ஷன் வாங்குவதை காஞ்சிபுரத்தினின்று சென்னைக்கு 1909ஹ ஜனவரி மீ மாற்றிக் கொண்டனர். 1909 ஹ மார்ச்சு மீ 24உ சென்னையிலிருந்து கடைசியாகத் திருத்தணிகைக்குச் சென்றார். அங்கு ஏப்ரல் 11உ கடைசியாக மலைக்குச் சென்று திருத்தணி கேசனைத் தரிசித்து ஒரு சஹஸ்ரநாம அருச்சனையுஞ் செய்வித்தார். தமிழ் வருடப் (சௌமிய) பிறப்புக்குத் தம் மக்களுடன் இருக்கக் கருதி ஏப்ரல் மீ 12உ சென்னைக்குத் தஞ் சொந்த வீட்டுக்கு (292, லிங்கசெட்டித் தெரு) வந்து சேர்ந்தார். ஏப்ரல் 16உ வெள்ளிக் கிழமை இரவு படுக்கைக்குப் போவதற்கு முன் என்னைக் கூப்பிட்டுப் பீரோவைத் திறக்கச்சொல்லி திருப்புகழ் முதற்பாகம் (இரண்டாம் பதிப்பு) அச்சாகி வந்து அடுக்கி வைத்திருந்ததைக் கண்ணுற்று மிகவும் சந்தோஷத்துடன் வீட்டு மாடியிலுள்ள ஹாலில் கட்டிலின் மேல் மெத்தைமீது வழக்கம்போலச் சிவகவசம் சொல்லிவிட்டு ஒரு நோயுமின்றிப் படுத்துறங்கினார். இரவு 12 மணிக்கு எங்களை எழுப்பித் தமக்கு அதிகமாக வியர்ப்பதாகச் சொன்னார். ஜன்னல்களைத் திறந்து அவர் உடம்பைத் துடைத்தோம். பின்னர் மார் வலிப்பதாகச் சொன்னார். மான் கொம்பிழைத்துப் பூசினோம். கட்டிற் சட்டங்கள் ஒரு வேளை உடம்பை உறுத்துமென்று மெத்தையைக் கட்டிலுக்குச் சமீபத்திற் கீழே விரித்தோம். 'நீங்கள் நல்ல வேலை செய்தீர்கள்; எனக்கு மார்வலி நின்றுவிட்டது; நீங்கள் தூங்குங்கள்' எனச் சொல்லி அவர் படுத்துக் கொள்ள எல்லோரும் படுத்துறங்கினோம். சனிக்கிழமை (ஏப்ரல் 17 உ) காலையில் அவர் எழுந்து தமது படுக்கையில் உட்கார்ந்தபடியே " இப்போது மணியென்ன" என்று கேட்டார். ஆறு மணி, என்று சொன்னோம். சொல்லி முடியுமுன் உட்கார்ந்திருந்தவர் அப்படியே எங்கள் கைகளிற் சாய்ந்து அறுமுகப் பெருமானைக் கண்டு தரிசித்து சஹஸ்ரநாம அருச்சனை செய்வித்த தினத்துக்கு ஆறாம் நாள் அவரது திருவடி சேர்ந்தனர். அப்போது எங்கள் துக்கத்தை என்னென்றெடுத்துரைப்பது? அன்று மாலை 6 1/2 மணிக்கு எல்லோருக்கும் முடிவிடமாம் சுடலை "மூல கொத்தளத்துக்கு" இவரது உடலம் எடுபட்டுத் தகன கைங்கரியம் நடந்தது. காளமேகப்புலவருடைய உடலம் சுடலையில் எரிவதைக்கண்டு "வேகின்றதையையோ மண்டின்ற பாணமென்ற வாய்" என் இரட்டைப் புலவர்கள் புலம்பினார்களாம். அது போல நாங்களும்,
நூற்றுக் கணக்கா நுதற்கண்ணன் ஆலயங்கள்
போற்றிப் பணிந்த புநித உடலம் எரி
யேற்றித் தொலைகிறதே! ஈசா! ஐயோ! என்றே
சாற்றிப் புலம்பித் தளர்ந்துருகி நின்றோமே.
பின்னர், ஞாயிறு காலை (18-4-1909) "பால் தெளி" நடந்தவுடன் அவர் எங்களுக்கு முன்பிட்ட கட்டளைப்படி அவர் எலும்புகளை ஒரு மட்பாண்டத்திற் சேர்த்துத் திருத்தணிகைக்குக் கொண்டுபோய் அங்குச் சைவர்களைச் சமாதி வைக்கும் இடம் திருத்தணிகேசன் கோபுரத்துக்கு நேராயிருப்பதால் அங்கே அஸ்திகளை அடக்கஞ்செய்து, அவ்விடத்திற் சிறு கட்டிடங் கட்டி, நந்தி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு சிலையிற் பின் வருமாறு குறித்து வைத்தோம்.
திருத்தணிகைக்குச் செல்லும் அன்பர்கள் இதை இன்றுங் காணலாகும். இவர் காயமாகிய வெற்றுடம்பு மாய்ந்த முடிவு இது; எனினும், மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வது போல மாயாத இவர் புகழ் உடம்பு இப்பூவுல குள்ளளவும் நிலவுமன்றோ! இவர் அச்சிட்டு உதவிய திருப்புகழ் சிவனடியார்களுக்கு எஞ்ஞான்றும் புதையல் போன்ற பெருந்தனமாய் விளங்குமன்றோ!
கந்த னார்புகழ் காட்டுந் திருப்புகழ்
எந்தை நீயிவ் வுலகுக் கிடரறத்
தந்து செய்த உதவி தரணியில்
எந்த நாளும் இனிது நிலவுமே.
திருத்தணிகேசன் துணை.
திதிநாட் குறிப்பு
சித்திரைஐந் தாந்தினத்திற் சேர்சௌ மியவாண்டிற்
சுத்தகிருஷ்ண பக்ஷந் துவாதசியில் - ஒத்தசனி
வாரம்பூ ரட்டாதி மற்றெந்தை யீசனடி
சேருந்நா ளாமே தெளி.
முடிவுரை.
மன்றுள் நடிக்கும் பெருமானார் மைந்தர் பாத நீழலிலே
நின்று களிக்கும் பெரியோனே! நியம நெறியைக் காட்டுவித் தோய்!
உன்றன் மகவா யானுதித்த ஒன்றை நினைந்தே யாநந்தம்
என்றும் எங்கும் எனக்குளதால் இனியான் வேண்டேன்பிறபெருமை

Comments
Post a Comment