Tirunaṟaiyūr nampi mēkaviṭu tūtu


பிரபந்த வகை நூல்கள்

Back

திருநறையூர் நம்பி மேகவிடு தூது
பிள்ளைப்பெருமாளையங்கார்



திருநறையூர் நம்பி மேகவிடு தூது
பிள்ளைப்பெருமாளையங்கார் எழுதியது(? )



Source
    திருநறையூர் நம்பி மேகவிடு தூது.
    இது மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் ''செந்தமிழ்'' உதவிப்பத்திராதிபர்
    இராமாநுஜையங்காரால் பரிசோதிக்கப்பெற்றது,
    செந்தமிழ்ப் பிரசுரம் - 43.
    மதுரைத் தமிழ்ச்சங்கமுத்திராசாலைப்
    பதிப்பு - 1921.
    -----------

ஸ்ரீ:
முகவுரை.

அமிழ்தினுமினிய தமிழ்மொழியகத்தே அகப்பொருளும் புறப்பொருளும்பற்றி ஆன்றோசா லழகுபெறப் பாடப்பட்ட பிரபந்தங்களும் அனந்தமே. அவற்றுள் தூதுப்பிரபந்தங்களு மடங்கும்.

மேகவிடு தூது என்பது மேகமாகிய விடு தூதையுடையதென விரியு மன்மொழித்-தொகையாய்ப் பிரபந்தத்துக்குப் பெயராயிற்று. மேகத்தைத் தூதுவிட்ட விருத்தாந்தமுடையதென்பது கருத்து.

திருநறையூர்நம்பி மேகவிடு தூது என்னுமிது, 'காமப்பகுதிக்கடவு ளும்வரையார்' என்ற விதிப்படி, திருநறையூரிலே கோயில்கொண்டெழுந் தருளியுள்ள நம்பியிடத்து மால்கொண்ட ஒரு தலைவி, அவரிடத்தே தன்னாற்றாமையைத் தெரிவித்து அவரணிந்த திருத்துழாய்மாலையை வாங்கிவரும்படி மேகத்தைத் தூதுவிடும் விருத்தாந்தத்தை விடயமாக வைத்து மிகவும் நயமுடையதாகப் பாடப்பட்டிருப்பதொரு கலிவெண் பாட்டு.

திருநறையூர் என்பது சோழநாட்டுத் திருப்பதியுள் ஒன்று. சோழன் கோச்செங்கணான், நம்பியைப்பணிந்து சேரபாண்டியர்களை வெல்லுதற்கு வெற்றிவாள்பெற்ற தலம் இது. இன்னும், இதன் மான்மியமெல்லாம் இந்நூலின் 60-முதல் 140-வரையுள்ள கண்ணிகளால் விளங்கும்.

இப்பாட்டின் முதலிலுள்ள '' போதுமணவாளணங்கு'' என்னுஞ் செய்யுளால் இது திவ்யகவி பிள்ளைப்பெருமாளையங்காரால் இயற்றப் பட்டதென்று தெரிகிறது. ஆழ்வாராசார்யர்களைப் பின்பற்றி அவர்கள் மங்களாசாசனம் செய்து போந்த திவ்யதேசங்களுக்கெல்லாம் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியும் அவற்றுட்சிறந்த கோயில், திருமலை, திருமாலிருஞ் சோலைமலை என்ற மூன்று திவ்யதேசங்களுக்கும் முறையே திருவரங்கத் தந்தாதி, திருவரங்கக்கலம்பகம், திருவரங்கத்து மாலை; திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி; அழகரந்தாதி என்ற பிரபந்தங்களும் அருளிச்செய்த திவ்யகவி, ஆழ்வார்களுள், ''மாறன்பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கங்கூறவவதரித்த" திருமங்கைமன்னனைப் பின் பற்றி, அவர் அதிகமாக ஈடுபட்டுப் பல திருப்பதிகமருளிச்செய்து மடலியற்றிய திருநறையூர்நம்பி விஷயத்திலிப் பாட்டையியற்றினா ரென்பது பொருத்த மானதென்று தோன்றுகிறது.
மேலும், இப்பாட்டு சொன்னோக்கும்பொருணோக்குந்தொடைநோக்கு நடைநோக்குந்துறையினோக்கோ டெந்நோக்குங்காண இலக்கியமா' யமைந் திருப்பதும்,

    "கேசவனையேசெவிகள் கேட்கதிருவரங்கத்
    தீசனையேசென்னியிறைஞ்சிடுக நேசமுடன் கண்ணனையே
    காண்கவிருகண்ணிணர்கொள்காயாம்பூ
    வண்ணனையேவாழ்த்து கவென்வாய்''

என்ற திருவரங்கக்கலம்பகச் செய்யுளோடொப்ப இப்பாட்டின் 192-முதல் 198-வரையுள்ள கண்ணிகள் அமைந்திருப்பதும், இதில் பலவிடத்தும் அஷ்டப்பிரபந்த-நடையோடொத்த நடை விரவிவருவதும் அவ்வாறு கொள்வதற் காதாரமாகும்.

இப்பாட்டு இருநூறுகண்ணிகளாற் பல அரிய விஷயங்களை விளக்கி அநேக சரிதங்களும், மடக்கு, முரண், உவமை, பின்வருநிலை, சிலே கை முதலிய பல அணிகளும் உடையதாய்ப் படிப்பவர்க்கு மிக்க இனி மையுடையதாகவும் எளிதிற் பொருள் விளங்குவதாகவும், கற்போர்க்குச் செய்யுள் செய்யுந்திறமையை உண்டாக்க வல்லதாகவும் இயற்றப்பட்டிருக்கிறது.

இப்பிரபந்தம் இதற்குமுன் அச்சிடப்பெற்றிருப்பினும், பிரதிகள் கிடைத்தற்-கரிதாயிருப்பது பற்றிக் குறிப்புரையுடன் இப்பொழுது செந்தமிழ்ப்பிரசுரமாக வெளியிடப்பட்டது.

இதை யச்சிட்டதிற் சிற்றறிவுடைய என்னால் ஏற்பட்ட பிழைகளை அறிஞர்கள் பொறுத்துத் திருத்தியளிக்குமாறு வேண்டுகிறேன்.

        இங்ஙனம், இராமாநுஜையங்கார்,
        உதவிப்பத்திராதிபர், செந்தமிழ்,
-------------

திருநறையூர் நம்பி மேகவிடு தூது.

தனியன்.
நேரிசை வெண்பா.
போதுமண வாளணங்கு.புல்லுநறை யூர்நம்பி
மீதுமண வாளரருண் மேகவிடு தூது தனைச்
சொல்லுவார் கேட்பார் துதிப்பாரிம் மேதினிமேல்
வெல்லுவா ரெல்லாம் விரைந்து.

காப்பு
நம்மாழ்வார்.
நாரணனை யெவ்வுயிர்க்கு நாயகனை யண்டாண்ட
பூசணனை நாகணையிற் புண்ணியனை-வாரணமுன்
வந்தானை யேத்து மறையா யிரந்தமிழாற்
றந்தானை நெஞ்சே தரி.

திருமங்கையாழ்வார்.
நாட்டியசீர்த் தென்னறையூர் நம்பி திருவடிக்கே
சூட்டியதோர் மேகவிடு தூதுக்குக் கூட்டம்
பொலியன்ப ரேத்தும் புனலாலி நாடன்
கலியன் பரகாலன் காப்பு.

நூல்.
கலிவெண்பா.

சீர்கொண்ட செங்கமலச் செல்வத் திருமகளு
நீர்கொண்ட வேலை நிலமகளு-மேர்கொண்ட         1

காந்தண் மணிக்கடகக் கையா லடிவருடப்
பாந்தண் மணிச்சுடிகைப் பாயன்மேற்-சேர்ந்துறங்குஞ்         2

செங்கண்மா லுந்தித் திருத்தா மரைப்பிறந்த
வங்கண்மா ஞாலத் தனைத்துயிர்க்குந்-தங்காமும்         3

மாரி வழங்குதன் மாறாமே கைம்பாறு
காரிய மென்று கருதாமே-பாரிற்         4

அளிக்கின்ற தண்ணந் துளியமுத நல்கி
யளிக்கின்ற கொண்மூ வரசே-களிக்கின்ற         5

மேலுலக மேறி விரிஞ்சநா மம்படைத்து
நாலு திசைமுகமு நண்ணுதலான்-மாலுமா         6

நீலநிற மாகி நிறைகமலக் கண்ணாகிக்
கோல வளையாழி கொள்கையாற் - சூலம்         7

விரவிய பாணியாய் மின்னையிடம் தாங்கி
யாவ மணியு மழகால்-வரமளிக்கு,         8

மெத்தே வருக்கு மிறைவராய் மேலாய
முத்தே வருநிகரா மூர்த்தியே-மைத்தகன்ற         9

வானத்து ளேபிறந்து வானத்து ளேதவழ்ந்து
வானத்து ளேவளரும் வானமே-வானத்து         10
--------
1. முதல் 19-கண்ணிவரை மேகத்தின் சிறப்புக் கூறப்படுகிறது
2. கடகம்-வளை. பாந்தள்-பாம்பு. சுடிகை - தலை.
3. உந்தி-கொப்பூழ். தங்கா - தங்கி.
5. கொண்மூ, புயல், கொண்டல், மேகம், மஞ்சு, மங்குல், கனம், எழிலி, பயோதாம், விண், கார், கந்தரம், மாரி என்பன ஒருபொருட் சொற்கள்.

6. இது முதல் மூன்று கண்ணிகளால் முறையே பிரும்ம விஷ்ணு, ருத்திரர்க்கும் மேகத்துக்குஞ் சிலேடை கூறப்படுகின்றது. அவற்றுள், பிரமனுக்கும் மேகத்துக்குஞ் சிலேடை வருமாறு:--
மேலுலகமேறி-1.சத்தியலோகத்தை யடைந்து, 2. ஆகாயுமாகிய இடத்தை யடைந்து, விரிஞ்சநாமம் படைத்து - விரிஞ்சன் என்னும் பெயரையடைந்து,
2. பரந்த அச்சத்தை விளைக்கக்கூடிய கடல்நீரைக்கொண்டு, நாலு திசை முகமு நண்ணுதலால் 1. நான்குதிக் கிலுமுகத்தையுடைமையால்; 2.நான்கு திக்கிலுஞ் செல்லுதலால்.,
7. திருமாலுக்கும் மேகத்துக்குஞ் சிலேடை. மாலும்-மயக்கத்தைச்செய்கின்ற. மா-பெருமைமிக்க.
நிறைகமலக் கண்ணாகி- 1. தாமரைப் புஷ்பம் போன்ற ஆயிரம் கண்களை யுடையனாய், 2. மிக்கநீரைத் தன்னிடத்தே கொண்டதாய். கோலவளையாழி கொள்கையால்-1. அழகிய சங்கு சக்கரங்களைத் தரித்தலால், 2. அழகிய சங்குகளையுடைய (அல்லது உலகைச் சூழ்ந்துள்ள) கடலையுட்கொள்ளுதலால்,
8. சிவனுக்கும் மேகத்துக்குஞ் சிலேடை. சூலம் விரவியபாணியாய் 1. சூலாயுதம் பொருந்திய கையை யுடையவனாய், 2. சூற்கொண்ட நீருடன் கூடிய அழகுடையதாய். மின்-1. பார்வதி,2. மின்னல். இடந்தாங்கி-1.இடப் பாகத்தே கொண்டு, 2. தன்னிடத்தே கொண்டு. அரவம்-1. பாம்பு, 2. ஒசை.

9. படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலு மியற்றற்குரிய எல்லா வன்மையுமுடைய நின்னிற் சிறந்தா ரொருவருமில்லை யென்பது குறிப்பு.
10. இது சொற்பொருட் பின்வரு நிலை, வானத்துளே வளரும் வானம் என்றது முரண்விளைந்தழிந்த வியப்பு. வானத்து வேலை-பெரிய சங்கினையுடைய கடல்.
--------

வேலைவாய் நீரருந்தி வெற்பி லாசிருந்து
சோலைவாய்க் கண்டுக்குத் தோன்றலே -ஞாலமிசைத்         11

தானமு மெய்யுந் தருமமுங் கல்வியு
மானமுந் தானமு மாதவமு-நானக்         12

கருங்கொண்டை மங்கையர்தங் கற்புநிலை நிற்ப
தருங்கொண்ட லேயுனைக்கொண் டன்றோ-நெருங்குமுவ         13

ராழிநீர் துய்ய வமுத ரானதுவும்
வாழிடூ யுண்ட வளமன்றோ -தாழுமடி         14

யாவுஞ்சிந் தாமணியு மம்புயமுஞ் சங்கமுங்
காவும் பணியவுயர் கார்வேந்தே-நாவினாற்         15

சாதகமுந் தோசைத் தனிமயிலும் போலவே
மேதகையை நின்வாவை வேட்டிருந்தேன்-பூதலத்துப்         16

பல்லுயிருங் காக்கப் பரமா முனக்கெனது
புல்லுயிருங் காக்கிற் புகழன்றோ-வல்லதொரு         17

சீருயிரு மேகமே செங்கண்மாற் காளானே
னாருயிரு மேகமே யல்லவோ-போரவ         18

நீலமஞ்சே கேட்டியா னின்னையல்லா தென்னையிந்தக்
காலமஞ்சே லென்பாரைக் காண்கிலே-னோலமறா         19

விண்மாரி யேபெருமான் வேரித் துழாய்வேட்டென்
கண்மாரி பெய்வதெல்லாங் கண்டாயே- தண்மை         20
----------

11. கண்படுத்தல் - உறங்குதல். (இது குறிப்புமொழி)
12. நானம்-கத்தூரி.
14. பிறரா லமுதநீருண்ணப்படினும் அது ஆழி நீர்போ லுவராவதாக நீ யாழிநீரையுண்ணினும் அது அமுத நீராக வெளிவிடுதலால் யான்சொல்லு மவற்றுள்ள குற்றங்களை நீக்கிக் குணமுடையனவாகக் கூற வல்லை என்பது குறிப்பு. பிறவும் இங்ஙனமே காண்க.
15. ஆ-காமதேனு. அம்புயம், சங்கு என்பவை இங்குப் பதுமநிதி, சங்கநிதிகளை யுணர்த்திவந்தன. கா-கற்பகச் சோலை. கொடையான் மிக்க இவை பணியும் படியுயர்தல் - தன்னை அவை களும் விரும்பி எதிர்பார்க்கும்படியான கொடையான் மிகுதல்.
16. மேதகையை-முன்னிலை விளி. மேம்பட்ட தகுதியையுடையோய் என்பது பொருள். வேட்டல்-விரும்புதல்.
17. பரம்-பொறுப்பு. இது முதல் 27 ஆங் கண்ணிவரை தலைவி மேகத்தை நோக்கித் தனது எளிமை கூறுகிறாள்.
18. சீருயிரும்-சிறப்பா லுயர் தலையுடைய. அகரம் தொடை நோக்கி இகரமாய்த் திரிந்து நின்றது. முதல் அடியில் மேகமென்றும் இரண்டாமடியில் ஏகம் என்றும் பிரிக்க. ஏகம்-ஒன்று.
20 வேரி-வாசனை.
------

விளையும் பயோதரமே வெம்பாத செம்பொ
னளையும் பயோதரமே யானேன்-கிளைபிரியாக்         21

கோல மழையே குயின்மா ரனையந்திக்
கால மழையாமே காப்பாரார்-நீலநிற         22

மங்குலுக்கு வேந்தே மலர்க்கண் புதைத்தனைய
கங்குலுக்கு நெஞ்சங் கரைகின்றே-னிங்கு         23

நடந்தகன மேமுலையி னாலுந் தரள
வடந்தகன மேசெய்து மாய்த்தேன்-விடந்திரண்ட         24

திங்களெழி லிக்குச் சிலைமார வேண்முனியி
லெங்களெழி லிக்கரசே யென்செய்கேன்-மங்கலமா         25

மிந்திரவில் வாங்கி யெழுகின்ற மைப்புயலே
வந்திரவில் வாடை வருத்துங்காண்-அந்தரத்து         26

விண்ணே யுனக்கிவற்றை விண்டுரைத்தே னல்லாதெ
னுண்ணேய வேட்கையெவர்க் கோதுவேன்-கண்ணழலால்         27

வெந்தா னிலத்துக்கும் வீறாகத் தாங்குகையான்
மந்தா னிலத்துக்கும் வாய்திறவே-னந்தக்         28

குருத்தத்தை மாரன் குரகதமா மென்றே
வருத்தத்தை யங்குரைக்க மாட்டேன்-கருத்துள்ள         29

மாதண் டலைவாய் மது கரத்துக் கும்மவன்றன்
கோதண்ட நாணென்று கூறேனான்-மூதண்ட         30
----------

21. பயோதரம்-1 மேகம்,2 தனம். வெம்பாதசெம்பொன்-தேமல்.
23. கங்குல்-இரவு.
24. நாலுதல்-தொங்குதல். தாள் வடம் - முத்துமாலை. தகனம் செய்து- எரித்து.
25. எழில் இக்குச்சிலை- அழகிய கருப்புவில். மாரவேள் - மன்மதன்.

26. இந்திரவில்- வானவில். வாடை இரவில் வந்து வருத்து மெனக் கூட்டுக.
27. வேட்கை - காதன் மிகுதி.
28. இதுமுதல் 36 வரை யுள்ள கண்ணிகளாற் றென்றல், கிளி முதலியன தூது செல்லத் தக்கனவல்லவென்று தலைவி கூறுகிறாள். கண்ணழலால் வெந்தான்- மன்மதன். நிலத்துக்கும் - பூமியில் பொடியாயுதிர்ந்து வீழ்ந்தும். வீறாக--வன்மையடையும்படி. (இறந் தொழிந்த மன்மதனும் இயங்கும்படி), தாங்குகையால்--தேராயிருந்து தாங்குதலால். மந்தானிலம்-தென்றற்காற்று.
29. குருத் தத்தை-நிறத்தையுடைய கிளி. மாரன்-மன்மதன். குரகதம்- குதிரை.
30. தண்டலை-சோலை. வண்டு. கோதண்டநாண்-வின்னாண்.
-------

கோளக் குயிற்கெல்லாங் கோவே யவன் றனது
காளக் குயிற்குங் கழறோனா-னாளொன்றி         31

லன்புறா வுக்கு மரசனுட லீர்வித்த
புன்புறா வுக்கும் புகன்றிடேன்-மென்புரத்துக்         32

கோம்பிக் குடல்பனிக்குங் கொச்சைமட மஞ்ஞைக்குஞ்
சோம்பித் தளருந் துயர்பணியேன்-றேம்பிரச         33

நிற்கின்ற பூவைக்கு நீள்குழலார் சொல்லியதே
கற்கின்ற பூவைக்கும் கட்டுரையேன்-பொற்கால்         34

வெறிப்பதும் வீட்டன்னம் வெண்பாலு நீரும்
பிறிப்பதுபோ னட்புப் பிரிக்குங்-குறிப்பறிந்து         35

காதலா லுள்ளக் கவலை யதுகேட்க
வோதலா காதென் றுரையாடே-னாதலா         36

லுள்ளே புழுங்குவ தன்றி யொருவருக்கும்
விள்ளே னுனக்கு விளம்பினேன்-றெள்ளியநூ         37

லோதுவா ரெல்லா முதவுவார்க் கொப்புரைக்க
வேது வாய் நின்ற வெழிலியே-பூதலத்துப்         38

பெய்யுதவி யும்புரிந்தாற் பேச்சுதவி யுஞ்சிறிது
மெய்யுதவி யும்புரிய வேண்டாவோ-துய்ய         39

அடலாழி யானடிக்கே யன்பாய காதற்
கடலாழி மூழ்கினேன் கண்டா-யுடல்வாடி         40
------------

31. குயின்-மேகம். காளம்-சிறுச் சின்னம். கழறுதல் -சொல்லுதல். நாள் ஒன்றில்-ஒருகாலத்தில்..
32. அன்புற- அன்புற்று. உக்கும் - மனம் கரையும். அரசன்- இங்கு சிபிச் சக்கரவர்த்தி. உடல்-சரீரம். ஈர்வித்த-அறுக்கச் செய்த. புகலுதல் - சொல்லுதல். மென்புரம்-மெல்லியவுடல்.
33. பனித்தல்-நடுங்குதல். கொச்சை -இழிவு. மஞ்ஞை-மயில்.பணித்தல்- சொல்லுதல். தேம்பிரசம்-இனியதேன்.
34. பூ வைக்கும்-பூச்சூடிய. பூவை-நாகணவாய்ப்புள். கட்டுரைத்தல் - சொல்லுதல்.

35. வெறி-வாசனை. பதுமம் - தாமரை. அன்னம், பாலையும் நீரையும் பிரித் தருந்துமென்பது கவிமரபு. இது 'நீர் பிரித்தமிர் துணுநீர்மையினோதிமம் - ஓரிருபான்மைக் குவமைய தாகும்' என மாறனலங்காரத்துள்ளும், "பாலிருந்த நீர் பிரிப்பீர்" என அழகர்கலம்பகத் துள்ளும் பயின்றுள்ளது.
38 முதல் 51 வரையுள்ள கண்ணிகளால், மேகத்தினிட மமைந்த தூது சொல்லற்குரிய தகுதி விளக்கப்படுகிறது.
38. ஆதலால் நீ எனக்குத் தவறாது தவுவாயென்பது குறிப்பு.
39. பேச்சுதவி - தூது சொல்லல். மெய்யுதவி-சரீர உபகாரம்; அது தூது செல்லல்.
40. அடல்-வலி. ஆழி-சக்கரம். கட லாழி - இருபெயரொட்டுப்பண்புத் தொகை. ஆழ்கடல் என்பது பொருள்.
-----------

விம்முகிலே சந்தாக மீளத் திருமால்பான்
மைம்முகிலே சந்தாக மாட்டாயோ-பெய்ம்மதவேள்         41

தண்ணப்பஞ் செய்வதெலாந் தாமோ தானடிக்கீழ்
விண்ணப்பஞ் செய்தருள வேண்டாவோ-வெண்ணத்தின்         42

சீதானை நீயிரந்து தெய்வத் துழாய்கொணர்ந்தெ
னாதரவு தீர்த்தருள லாகாதோ-கேதகைக்கு         43

மின்கேள்வ னாக்கியநீ விண்ணோர் பெருமானை
யென்கேள்வ னாக்கினா லேராதோ-முன்கேட்டு         44

மெள்ளரிய தாம மெனக்குதவா யேலுனக்கு
வள்ளலெனு நாமம் வழுவாதோ-தெள்ளுகடன்         45

ஞாலத் துளவமே நல்லிளமை போகாமற்
கோலத் துளவமே கொண்டுதவாய்-சீலத்தா         46

லூனா யுடலா யுறுதுணையாய்த் தெய்வமா
யானா மருந்தாயென் னாருயிரா-யானாத         47

நெஞ்சமாய்க் கண்ணாய் நினைவாய் வினையேற்குத்
தஞ்சமாய் நின்ற தனிமுதலே-பஞ்சவர்க்காய்         48

மெய்த்தூது சென்றவரை வெல்லவே வெண்சங்கம்
வைத்தூது செங்கமல மாயோன்பா-லித்தூது         49

நல்லதெனக் காரே நடந்தருள வேண்டுநீ
யல்லதெனக் காரே யருள்செய்வார்-சொல்லித்         50
----------

41. விம்மு கிலேசம்- அதிகரித்த | கவலை. சந்து-தூது. மதவேள் – மன்மதன்.
42. தண் அப்பு அஞ்சு எய்வது - குளிர்ந்த (புஷ்ப) பாணங்களைந்தையும் எய்வது. விண்ணப்பம் செய்தல் - சொல் லுதல். வெண் ணத்தின் சீதரன்-வெள்ளிய சங்கத்தினையுடைய திருமால்.
43. கொணர்ந்து - கொண்டுவந்து. ஆதரவு-விருப்பம். கேதகை - தாழை.
44. கேள்வன்-கணவன்,

45. தாமம்-மாலை.
46. ஞாலம்-உலகம். அவம்-வீண். கோலம்-அழகு. துளவம்-திருத்துழாய். உதவுதல் - கொடுத்தல். சீலம்-தூய்மை.
48. தஞ்சம் புகலிடம்.
50. நல்லதெனக் காரே எனவும், அல்லது எனக்கு ஆரே எனவும் பிரிக்க
--------

தருதுமெனக் கந்தரமே சாற்றாயே லுய்யக்
கருதுமெனக் கந்தரமே கண்டாய்-பெரிது         51

மெனைத்தோன்றி யோதுயா மெய்தினார் பார்மே
அனைத்தோன்றி யோது துழன்றார்--நினைத்தார்         52

தமது பிறப்பறுக்குத் தாயாகி மேனா
ளமுதிற் பிறந்தாள்பா லன்றோ-நமது         53

கருமஞ் சனையவற்காய்க் காய்கதிரைப் பாய்ந்து
பொருமஞ் சனைசிறுவன் போனான்-றரணிதனின்         54

மீது பாவை விடமுண் டவனன்றோ
மாது பரவை மனைவந்தா-னாதலா         55

லோ து மிவரி லுயர்ந்தோ ரிலையன்றே
தூதுபுரிந் தோரைத் தொகுத்துரைத்தேன்-ஆதலாற்         56

றேனின் புறத்தூது தெய்வத் துளவினன்பால்
யானின் புறத்தூ தெழுந்தருளாய்-வானிற்         57

திவலை பிலிற்றிவருந் தெய்வமே நீயென்
கவலையறத் தூதுபோங் காலைக்-குவலயத்தி         58

லெம்பிரா னூரு மவர்பெயரு மெற்பயின்ற
தம்பிரான் செய்தமையுஞ் சாற்றக்கேள்-உம்பரிற்         59

பன்னிருவர் மான்றேர்ப் பரிதிக் கடவுளரு
மன்னிருவர் தெய்வ மருத்து வரு-மொன்னலரைப்         60
-----------

51. கந்தரமே! "சொல்லித் தருதும்" எனச் சாற்றாயேல் உய்யக்கருதும் எனக்கு அந்தரமே எனக் கூட்டுக. கந்தரம்--மேகம். தருதும்-தனித்தன்மைப்பன்மை . அந்தரம் முடிவு.
52. முதல் 57 வரையுள்ள கண்ணிகளால், தலைவி மேகத்தை நோக்கித் தூதுசெல்லுதல் இழிவாகக்கருதப் படாது தொன்றுதொட்டு உயர்வாக மதிக்கப்பட்டதென்று சரித்திர ஆதாரங்கொண்டு விளக்கி அதைத் திருநறையூர் நம்பியிடம் தூது சென்று வரும்படி வேண்டுகிறாள்
53. அமுதிற்பிறந்தாள் என்பது இங்கு சீதையையுணர்த்திற்று.
54. கருமஞ்சு அனையவன்--கரிய மேகம்போலு மிராமன். காய்கதிர்-சூரி யன். அஞ்சனை சிறுவன் - அனுமன். தரணி-பூமி.

55. பாவை-1. கடல், 2. பரவை நாச்சியார்.
57. தேன் இன் புறத்து ஊது எனவும், யான் இன்புறத் தூது எனவும் பிரித்துப் பொருள் கொள்க.
58. திவலை-துளி. பிலிற்றி-துளித்து. குவலயம்-பூமி.
59. முதல் 133 வரையுள்ள கண்ணிகளால் தலைவி, தான் விரும்பிய தலைவன து ஊரும், பெயரும், சிறப்பும், பிறவும் தலவரலாறு மாகியவற்றைக் கூறுகிறாள்.
60. ஒன்னலர்-பகைவர்
---------

பாயும் விடையர் பதினொருவ ருந்திசையிற்
காயுங் கடாயானைக் காவலருந்-தூயகதிர்         61

வெண்ணிலா விட்டு விளங்குங் கலாமதியு
மெண்ணிலாத் தாரகையி னீட்டமுங்-கண்ணி         62

லருடருமா ஞானத் தருந்தவர் நாகர்
தெருடரும் விஞ்சையர் சித்தர்-கருட         63

ரரக்க ரியக்க ரவுணர் முதலோர்
பரக்குங் கணங்கள் பலரும் பெருக்கறா         64

நீரேழு மேழு நினது பெருங்கணமும்
பாரேழு மேழு பருப்பதமு-மீரே         65

முடுக்கும் புவனமு மாடகமால் வெற்பு
மெடுக்கு மாவரசு மெல்லாந்-தொடுக்கத்தான்         66

முண்டக நாபி முளைக்குஞ் சதுமுகனோ
டண்ட வளாக மடங்கலுங்கண்-கண்டளித்து         67

முன்னிய வண்ண முடித்து விளையாடும்
தன்னிகரில் லாத தனிமுதல்வன்-அன்னமாய்.         68

மீனாகி யாமையாய் வெள்ளேன மாய்மடங்கன்
மானாகி மாயையாய் வாமனமாய்-ஆனாத         69

மானிடராய்ப் பாய்பரியாய் வாழு மடியவர்க்குத்
தானிடராற் றப்புகுந்த தம்பிரான்-மேனாளிற்         70
-----------

62. தாரகை-விண்மீன். ஈட்டம் - கூட்டம்.
63. தெருள் -தெளிவு.
66. ஆடகமால்வெற்பு- மகமேரு. அரவரசு-ஆதிசேடன்.

67. முண்டகம்-தாமரை. நாபி- கொப்பூழ். சதுமுகன்-பிரமன்.
69. ஏனம்-பன்றி. மடங்கல்மான் நரசிங்கம்.
70. இடர்-துன்பம்.
---------

பைந்நாகப் பள்ளிமேற் பங்கயங்கள் பூத்தொளிரு
மைந்நாகம் போற்கண் வளருநாட்-பொன்னாய         71

வன்ன முளரி மலர்த்தவிசில் வீற்றிருக்கு
மன்ன முணர்த்தவுண ராமையா-லென்னையல்லா         72

லிந்நித் திரைமடந்தை யெய்தலுமா யிற்றோவென்
முன்னித் திரைமடந்தை யூடினளா-வந்நிலையே         73

காயத்திரியுங் கலைமகள்சா வித்திரியு
மாயத் தெரிவையரா யாங்குவர-நேயத்தார்         74

கோலத்தாள் கைதொழுது கூரிலைய முக்கவட்டுச்
சூலத்தா ளேவற் றொழில்கேட்ப-ஞாலத்து         75

மானிட மங்கை வடிவாக வந்துறையுங்
கானிடம் யாதென்று கண்சாத்தி-யானா         76

நலமாகும் யோசனையோர் நாற்றிசையு முத்தித்
தலமாஞ் சுகந்தவனந் தன்னு-ௗலமாற         77

வான் றிகழுங் கங்கைமுதன் மங்கைமார் மார்கழியிற்
றோன்றியமுற் பக்கத் துவாதசியிற் றேன்றிகழுங்         78

கந்த னனையக் குடைந்தாட லான திக்கு
வேந்தனென நாமம் விளம்பியே-பாய்ந்த         79

திருமணிமுத் தாறலைக்குந் தீரத்தி னின்ற
மருமருவு வஞ்சியின்கீழ் வைக-வருகாக         80
-----------

71. நாகப்பள்ளி-பாம்பணை. ஒளிர்தல்-விளங்குதல். மைந்நாகம்-நீலமலை.
72. வன்னம்-நிறம். தவிசு -ஆசனம். உணர்த்த-துயிலெழுப்ப.
73. நித்திரைமடந்தை - நித்திரா தேவி. உன்னி-எண்ணி. திரைமடந்தை-இலக்குமி. ஊடினளாக என்பது ஊடினளாக எனக் கடைக்குறையாயிற்று .
74. ஆயத்தெரிவையர்-பாங்கியர்.
75. கோலத் தாள்-அழகிய திருவடி. சூலத்தாள்-துர்க்கை
76. கண்சாத்தி- பார்த்து.
77. அலம் மாற-பாவம் நீங்க.

78. முற்பக்கம்-சுக்கிலபக்ஷம்.
80. தீரம்-கரை.மருமருவு-வாசனை பொருந்திய. வஞ்சி-ஒரு மரம். அருகு- பக்கம்.
----------

வானமே தாவி வளரு மகிழடியின்
ஞானமே தாவியெனு நன்முனிவன்-றானெய்திச்         81

செய்ய கமலத்துச் செய்யவளைக் கண்டுவந்தே
யையர் பயந்தெடுத்த வன்னையார்-துய்யபெய         82

ரூரே தெனப்பெயரு மூருமிலை தந்தைதாய்
நீரே யெனமுனிவ னெஞ்சுருகிப்-பாரேத்த         83

மன்னிள வஞ்சியின்கீழ் வந்துறைத லாற்பெயரு
மென்னிள வஞ்சியா ரென்றுரைத்துத்-தன்னுழையி         84

லான வரமுனிவ னவ்வனத்துக் கொண்டிருப்ப
வானவர் தோலா வலிதோற்றுத்-தானவரால்         85

விண்ணா டிழந்து விரிஞ்சனொடு கூப்பிடுநாட்
டண்ணார் துழாய்மா தவனுணர்ந் து-நண்ணார்         86

மிடைகெடுத்து மென்று விடைகொடுத்த பின்னர்க்
கிடைகெடுத்த செந்துவர்வாய்க் கிள்ளை-யடைகொடுத்த         87

புண்டரிக மாளிகைமேற் பூவை தணந்தமையு
மண்டரெலா மாற்ற லகன்றமையுங்-கண்டருளிச்         88

செந்திருவை நாடுவான் றெய்வ வடிவகற்றி
யைந்துருவ மாகி யவனிமேல்-வந்தருளி         89

யாடற் பறவை யாச னகல்விசும்பு
தேடத் திசையனைத்தும் தேடியநா-ணிடுஞ்         90
---------

81. வானமே தாவி-ஆகாயத்தின் கட்பரந்து. மகிழ்-வகுளமாம். மேதாவி- சுகந்தவனத்திலிருந்த ஒரு முனிவன்.
85. தானவர்- அசுரர்.
87. கிடை-செந்நெட்டி. துவர்-பவளம். கிள்ளை-கிளி. கிள்ளை, பூவை என்பன இங்கு ஆகுபெயராய் நின்று இலக்குமியை யுணர்த்தின.
88. தணத்தல்-பிரிதல். அண்டர் | தேவர்.
89. தெய்வவடிவு- அப்ராக்ருத திவ்யசரீரம். ஐந்துருவம்-பஞ்சபூதமயமான
மானிடசரீரம். அவனி-பூமி.

90. ஆடல்-வலி. பறவையரசன்- கருடன்.
------------

சுகந்தவன நோக்கித் துணையாய செல்வி
யுகந்தவன மீதென்றுணர்ந்து-புகுந்தருள         91

மேதாவி கண்டு விருந்தளிப்ப வெவ்வுயிர்க்கு
மாதாவி னல்லான் மகிழ்ந்ததற்பின்-போதார்         92

முருகுவளை மொய்குழலை முன்றிறனிற் கண்டு
பெருகுவளை முன்கை பிடிப்பத்திருமகளுங்         93

காதலால் வந்தநம்பி கைப்பிடித்தா னென்றலறிக்
கோதிலா மாமுனியைக் கூவுதலும்-வேதியனுங்         94

கண்புகையச் செய்ய கதிர் புகையக் கார்வெளிற
விண்புகைய வாய் துடிப்ப மெய்பதற-மண்புகைய         95

வந்தான் கரகநீர் வாங்கிச் சபிப்பதற்கு
முந்தாமுன் சங்காழி முன்காட்டச்-சிந்தை         96

மயங்கினா னஞ்சினான் வாய்குழறிப் பார்மேன்
முயங்கினான் செங்கை முகிழ்த்தான்-றியங்கி         97

பழுதான் றுளவின்மா லஞ்சலென வானோர்
விழுதா மரைத்தாளில் வீழ்ந்து-முழுது         98

மறியாமை செய்தே னதுபொறுத்தி யென்ன
வெறியாழி யம்மா னிரங்கிச் செறிதுழாய்க்         99

கோதை மணம்புணர்ந்த கொண்டலுமப் புண்டரிக
மாதை மணம் புணர்ந்து வைகியபி-னீதி         100
-----------

92-93. போது-பூ. முருகு-வாசனை. வளைதல்-சூழ்தல், மொய்குழல்- அடர்ந்த கூந்தல், அது இங்கு அன்மொழித் தொகையாய் இளவஞ்சியாரை யுணர்த் திற்று. முன்றில் - முன்முற்றம்.
96. கரகம் - கமண்ட லம்.
97. கைமுகிழ்த்தல்-கைகூப்புதல்.
100. கோதை- ஆண்டாள்.
---------

யறந்திறம்பா கேமியா னவ்வனஞ்சேர் கைக்கும்
பிறந்தார்கள் வீடு பெறற்குஞ்-சிறந்தமலர்         101

மாமாதின் பேரே வழங்குகைக்குக் கேட்டவர.
மாமா தவனுக் கருளியபின்-பூமாதைப்         102

பாமாதுள் ளிட்டார் பணிந்து விடை கொடுபோய்த்
தேமா மலரோன் செவிப்படுப்ப-நாம்         103

மறையாள னவ்வனத்து வந்தரசி னீழன்
முறையாய வேள்வி முடித்துப்-பொறையார்ந்த         104

பாதார விந்தம் பணிந்தேத்தப் பாற்கடலிற்
சீதார விந்தத் திருவினொடும்-பூதலத்தோர்         105

பேறுபெற வேபஞ்ச போ வடிவுகந்து
வீறுபெற மாமுனிக்கும் வீடருளிக்-கூறரிய         106

ஞாலத் தெழுபத்து நான்கு சதுரயுகம்
நீலத் தடவரைபோ னின்றபிரான்-மேலைச்         107

சிகரக் குடகிரியிற் சென்றிழிந்து கீழை
மகாக் கடல்வயிறு மட்டு-மகலிடத்திற்         108

பாசங் கிழித்துப் பரவி மதகிடறி
யாரஞ் சுருட்டி யகிலுருட்டி--நார         109

நுரையெறிந்து வித்துருமக் கொத்து இடங்கத்
திரையெறிந்து முத்தஞ் சிதறிக் கரையில்         110
--------------

101. அறந்திறம்பா நேமியான் திருமால்.

103. தேம்-தேன். நாமம்-புகழ்.
104. பொறையார்ந்த – எல்லாவற்றையுந் தாங்கிய.
106. பேறு-சதுர்விதபுருஷார்த்தம்.
109, பாரம்-கரை, மதகு - மடை.
110. வித்துருமக்கொத்து - பவளக் கொத்து. துடங்க- அசைய.
------------

கொழிக்குங்கா வேரி குதித்தோடப் பாய்ந்து
சுழிக்குங்கா வேரித் துறையா-னெழிற்கருகி         111

யோங்கிப் பகலிருளை யுண்டாக்கி யேசுரும்பைத்
தாங்கிப் புயறடுத்த தண்டலையுந்-தேங்கமலப்         112

பூமிசை யன்னம் பொருந்தி வலம்புரியு
நேமியு மேந்திய நீள்கயமுங்-காம         113

ருளமகிழ வெண்ணிலா வொண்கதிரைக் கன்னல்
வளமதனை யீன்ற வயலு-மளவின்றித்         114

தன்னையே போலத் தழைப்பத் தரணிக்கோ
ரன்னையே போல வருள்செய்வான்-மன்னு         115

மருநறையூர் வீதி மணிமாடக் கோயிற்
றிருநறையூர் வாழ்வாசு தேவ-னிரணியனைப்         116

பாரி லுாங்கிழித்த பன்னகத்தான் பன்னகத்தான்
வாரிநிகர் வண்ணத்தான் வண்ணத்தா-னாரிடத்துந்         117

தண்ணளியான் றண்ணளியான் றாழ்ந்தவன சக்கரத்தான்
கண்ணினழ கார்முகத்தான் கார்முகத்தான்-விண்ணுலகி         118

னல்லசுரர்க் கண்ணியா னாறு துழாய்க் கண்ணியான்
புல்லசுரர்க் குக்கொடியான் புட்கொடியான்-றொல்லிலங்கை         119

வஞ்சனை யங்கறுத்தான் வாய்ந்தவடி வங்கறுத்தான்
கஞ்சனைமுன் கண்சிவந்தான் கண்சிவந்தான்-றுஞ்சுக்         120
------------

111. சிதறி-சிதறப்பட்டு. கொழிக்குங் கா-கொழித்தற்கிடமாகிய சோலை, வேரி-தேன்
112. சுரும்பு-வண்டு. இடறி-மோதி. ஆரம்-சந்தனம். நாரம்
113. வலம்புரி - ஒருவகைச்சங்கு. நேமி-சக்கரவாகப்பறவை. கயம்-தடாகம். காமர்-அழகு, மன்மதனுமாம்.

114, கன்னல்--கரும்பு.
115. தரணி- பூமி.
116. மருநறையூர்வீதி – வாசனை பொருந்தியதேன் ஒழுகுகின்ற தெரு.
117. பன்னகத்தான் -1. பலநகங்களையுடையான், 2. பாம்பை (அணையாக) உடையான், வாரி-கடல். வண்ணத்தான்-1, நிறத்தையுடையவன், 2. செழுமையான சங்கத்தையுடையவன்
118. அளி-1, கருணை, 2. வண்டு. வனசம்- தாமரை, கரம்-கை, 1. அழகு ஆர்முகத்தான். 2. கார்முகத்தான் - வில் லையுடையான்.
119. நல்ல சுரர்க்கு அண்ணியான் - நல்ல தேவர்களுக்குக் கிட்டுமவன் .
கண்ணி- தலைச்சூட்டு. புட்கொடி – கருடக்கொடி.
---------

திரையான் மலரிந் திரையான் கவிகை
வரையான் செழுந்து வரையான்-றரையான         121

மங்கையான் வேதநிய மங்கையான் சென்னியிலோர்
கங்கையான் சூடியகாற் கங்கையான்-பங்கயக்கை         122

யாரணன் கேசவ னாழியா னச்சுதன்
காரண னெம்பெருமான் காகுத்த-னாரணன்         123

யாதவன் கண்ண னிருடிகே சன்முகுந்தன்
மாதவ கோவிந்தன் வைகுந்தன்-சீதரன்         124

மாய னனந்தன் மதுசூதனன்றிருமா
லாயன் முராரி யருளாளன்-ஹயகழற்         125

றேவாதி தேவன் றிருநா யகத்தேவன்
றாவா விடர்கெடுத்த தம்பிரா-னோவாப்         126

படந்திகழு மாடரவப் பாய்க்கிடந்து மேலா
மிடந் திகழ்வை குந்தத் திருந்து நடந்து         127

பொறையூ ரடிக்கமலம் பூத்தோய வந்து
நறையூரு ணின்றருளு நம்பி-மறையூரு         128

மாயிரம் பேழ்வா யநந்தன் பணாடவிமேன்
மாயிரு ஞால மகிழ்ந்திறைஞ்சச்-சேயிருந்தா         129

ரண்டர் குழாமு மருந்தவ ரீட்டமும்
தொண்டர் குழாமுந் தொழுதேத்தப்-பண்டைத்         130
--------------

121. திரை-இங்கு, திருப்பாற்கடல். இந்திரை- இலக்குமி. வரைக்கவிகையான் எனக் கூட்டுக. வரை-கோவர்தனகிரி. கவிகை-குடை, செழுந் து வரையான்-செழுமையான துவராபதியையுடையான்.
122. வேதநியமம் கையான் - வேத விதிகளை விரும்புமவன் (பிரமன் )சென்னி , கம் என்பன தலையென்னும் பொருளையுணர்த்தி நின்றன, கம் கையான் . தலையைக் கையிலுடையான். (சிவன்)

126. தாவாவிடர்- கெடாத துன்பம்.
127. திகழ்தல்-விளங்குதல்.
128. பூ-பூமி. தோய-படிய.
129. பேழ்வாய்-பெரியவாய். அநந்தன்- ஆதிசேடன். பணாடவி-படத்தொகுதி.
--------

திருவாய் மொழியுந் திருமொழியும் வேதாத்
தருவாய் மொழியுந் தழைப்ப-வொருவாத         131

திங்களு நாளுந் திருவிழா நின்றோங்க
மங்கல வெண்சங்கம் வாய்பிளிற-வங்கமர்ந்து         132

நன்பஞ்சேர் நாடகக்கா னம்பிக்கு நாயகித
னின்பஞ்சேர் நாளி லினிதொருநாள்-அன்பமர்ந்து         133

தன்னிசையாற் புள்வேந்தன் சாமவே தம்பாடு
மின்னிசையாற் பள்ளி யெழுந்தருளி-மன்னிச்         134

சிலம்புதிரை மோதுந் திருமணிமுத்தாற்றி
னலம்புதிரு மஞ்சனநீ ராடி-நலம்பாவு         135

சேலை களைந்தணிந்து தெய்வப் பசுந்துளப
மாலை புதிய வகைசூடிக் - கோலம்         136

தயங்குதிரு வாரா தனைகொண்ட பின்ன
ரியங்குகடற் சங்க மிசைப்பப்-பெயர்ந்தோர்         137

திருந்துமணி மண்டபத்துச் சிங்கஞ் சுமந்த
வருந்தவிசி னேறி யருளிப்-பொருந்தியதால்         138

வேதமும் வேதாந்த மெய்த்ததிரு வாய்மொழியு
நாதமுங் கேட்டு நயந்துருகி-யோது         139

மருண வடவரையி னம்பொற் குவட்டிற்
மருண மவுலி தயங்கத்-திருநாம         140
-------------

131. திருவாய்மொழி – நம்மாழ்வாரருளிச்செய்தது. திருமொழி-திருமங்கையாழ்வார் முதலியவர்களருளிச்செயல். வேதா-பிரமன், வாய்மொழி-வேதம்.
132. பிளிற-முழங்க.
134. முதல் 200 வரையுள்ள கண் ணிகளால் தலைவி திருநறையூர் நம்பி யை உலாவரும்போது கண்டு மையல் கொண்டமை கூறி அம்மையல் தீர அவரிடம் சென்று திருத்துழாய்மாலை வாங்கிவரும்படி மேகத்தை வேண்டுகிறாள்,

135. சிலம்பு திரை - ஒலிக்கின்ற அலை.
139. நாதம்
140. அருணம்-கருமை கலந்த சிவப்பு. தருணம்-புதுமை. மெளலி-கிரீடம்.
---------

மிட்ட வதனத் தெழுதிய கத்தூரி
வட்ட மதியின் மறுவேய்ப்பக்-கிட்டரிய         141

தேங்குழைக்கீழ்க் கற்பகத்திற் செம்பாம்பு சூழ்ந்ததெனப்
பூங்குழைக்கீழ் வாகு புரிதயங்கப்-பாங்கிற்         142

பதிக்குங் கவுத்துவமு மார்பும் பரிதி
யுதிக்கு மாகதக்குன் றொப்பக்-குதித்தொருகாட்         143

கால்வீழ்ந்த கங்கை விலங்கிக் கடிமார்பின்
மேல் வீழ்ந்த தென்னமுந் நூல் விட்டிலங்கச்-சூல்வீங்கு         144

கொண்டலின்கீழ்த் தோன்றுங் குடதிசையிற் செக்கரென
விண்டிலங்கு பொன்னாடை மெய்யசையத்-தொண்டரெலாம்         145

பற்றிக் கழலவிடாப் பாதார விந்தத்தின்
வெற்றிக் கழலின் வெயிலெறிக்க-மற்றுந்தான்         146

வேண்டும் பலகலனு மேகவடி விற்கேற்பப்
பூண்டுகேளபம் புயத்தணிந்து-நீண்டகடற்         147

பெண்ணாடியதன் பெரிய திருவடிவைக்
கண்ணாடி மண்டிலத்திற் கண்சாத்தி-வண்ணத்         148

திருமருங்குற் கேற்றதொரு சிற்றுடைவாள் வீக்கி
யிருமருங்கு மைம்படையு மேந்தித்-திருமறுகிற்         149

போதரலு நாற்கடல்சூழ் பூதலத்தும் வானத்து
மாத ரரம்பையர்கள் வந்தீண்டிப்-பாதர்         150
-----------

141. வதனம்-நெற்றி.
142. குழை- 1. தழை, 2. குண்டலம், வாகுபுரி-தோள்வளை.
143. பரிதி-இரவி.
144, கடி-விளக்கம். முந்நூல்-யஜ்ஞோபவீதம். சூல்-கருப்பம்.
145. குட திசை-மேற்றிசை. செக்கர்-செவ்வானம்.

147. கலன்- ஆபரணம். களபம்-சந்தனக்குழம்பு.
148. கடற்பெண்--இலக்குமி. நாடிய - விரும்பிய.
149. மருங்குல்-இடை, மருங்கு-பக்கம். வீக்கி கட்டி. மறுகு-வீதி.
150. போதால்-வால். ஈண்டி-நெருங்கி.
---------

தொழுவார் வளைகலைநாண் சோர்வார் மயலா
யழுவார் முலைபசலை யாவார்-குழுவாகி         151

யம்மா தர் நிற்ப வருவினையேன் கைதொழுதேன்
விம்மா வெதும்பா மெலிவானே-னெம்மானுக்         152

கென்னெஞ்சு மென்கலையு மென்னாணுஞ் சங்குமவன்
நன்னெஞ் சறியத் தனிதோற்றேன்-பின்னுமொரு         153

விண்ணப்ப முண்டென்று மெய்ந்நடுங்கிக் கைகூப்பி
வண்ணத் து கிலொ துக்கி வாய்புதைத்துக்-கண்ணுதலாம்         154

வீரன் சிலையிறுத்த வேந்தே வினைவிளைக்கு
மாரன் சிலையிறுக்க வாராதோ-பாரமலை         155

யன்றெடுத்த கையா லழல்வீ சியதென்றற்
குன்றெடுத்த போது குறையாமோ-நின்றெறிக்குஞ்         156

செய்ய கதிர்மறைத்த சீராழி யான்மதியின்
வெய்ய கதிர்மறைக்க வேண்டாவோ-கையமைத்து         157

முன்னநீ வாயடக்கு முந்நீரை யென்பொருட்டா
லின்னநீ வாயடக்கி லேலாதோ-பன்னகத்தின்         158

பூமாமே ழுந்துளைத்த போர்வாளி புன்குயில்வாழ்
மாமரமொன் றுந்துளைக்க மாட்டாதோ-சேமலைந்து         159

மாவாய் பிளந்த மரகதமே வம்புரைப்பார்
நாவாய் பிளந்தா னகையாமோ-பூவாய்த்த         160
---------

151. கலை-உடை. மயல்-காமமயக் கம்.
155. பாரமலை-பெரியமலை. அது இங்குக் கோவர்த்தனத்தை யுணர்த்தும்.
156. தென் றற்குன்று - தென்றல் பிறப்பதற்கிடமாகிய பொதியமலை.

158. முந்நீர்-கடல். கையமைத்துக் கடல்வாயடங்கச் செய்தது இராமாவதாரத்தில். இது, “வென்வேற் கௌரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பௌவ மிரங்கு முன்றுறை, வெல்போரிராம னருமறைக் கவித்த, பல்வீழாலம்போல, வொலியாவிந்தன்றிவ் வழுங்கலூரே" என அகநானூற்றிலும் (செய். 72)
"'மாயோ வடக்கு, நெடுங்கடல்போலடங்கி நிற்க'' ''இமைக்குங் கடலேழிலே காந்தராம், னமைக்குங் கடல் பார்த் தமர்ந்தீர்" எனத் தேவையுலாவிலும் (கண்ணி – 91, 317) பயின்றுள்ளது.
159. வாளி-அம்பு. சே- எருது.
--------

தூய குருந்தொசித்த தோளாய் செவிவெதுப்பு
மாயர் குழலொசித்தா லாகாதோ- மாயமாய்க்         161

காதிச் சுழல்காற்றைக் காய்ந்த வாடையாய்
வாதிச் சுழல்காற்றை மாற்றாயோ-மோதிவரும்         162

மண்ணாறு நீங்க வழிகண்ட நீயெனது
கண்ணாறு நீங்கவழி காட்டாயோ-தண்ணார்ந்த         163

தாது திரும் பைந்துழாய் தாராயேற் கண்ணனென
வோது திரு நாமமா சுண்ணாதோ-வீதிருக்க         164

நீநெடுமா லான நிலை நின்சே வடிதொழுது
நானெடுமா லாகவோ நம்பியே-மாநிலத்துப்         165

பாவையர்கைச் சங்கம் பறிப்பதற்கு நின்சங்கர்
தீவகமோ நேமித் திருமாலே-மேவத்         166

திருக்கடைக்கண் சாத்தாய் திருவாய் மலரா
யருட்கடலே யென்னு மளவின்-மருக்கமலை         167

நாதன் சிறிதே நகைகோட்டி வெண்கோட்டு
மாதங்க மீதே மறைதலாற்-சீதரன்றன்         168

வையம் புதைக்கு மலர்கருதி மாரவே
ளெய்யம்பு தைக்கு மிலக்கானேன்--செய்யநிறப்         169

பீதகவா டைக்கும் பெரிய திருவரைக்கும்
பாதகவா டைக்கும் பரிவானே-னாதலா         170
------------

162. மாயமாய்ச் சுழல்காற்றைக் காதிக்காய்ந்த நீ எனக் கூட்டுக. உழல் காற்று - உழல்தற் கேதுவாயிருக்கும் (அதாவது வருத்தும்) காற்று.
163. கண்ணாறு- கண்ணிலிருந்து பெருகும் நீர்ப்பெருக்கு.
164. கண்ணன் - திருமால். இது சிலேடையால், கண்ணோட்டமுடைய னென்னும் பொருளை யுணர்த்திற்று.)
165. நெடுமால்-1. திருமால் 2 (பெரியமயக்கம்.)
166. தீவகம்- இணக்குப்பார்வை . (பார்வைமிருகம்.)

168. நகைகோட்டி சிரித்து. கோடு- கொம்பு. மாதங்கம்-யானை.
169. வையம் புதைக்குமலர் - உலகினை யுள்ளடக்கின தாமரைமலர் போ லுந் திருவடி. கருதி-நினைத்து.
170. பீதக ஆடை- பொன்னாடை. பாதகவாடை-கொடிய வாடைக்காற்று.
------------

லந்திக் கமல னணையுங்கொ லென்றிருந்தே
னுந்திக் கமலத் துளமானேன்-கொந்துற்ற         171

கொய்துழாய் மார்பகலங் கூடுங்கொ லோவெனவே
கைதுழாய் மண்சுழித்துக் கைசோர்ந்தே-னெய்தி         172

பயனாலுங் காண வரியான் கரிய
புயனாலுங் காணமால் பூண்டேன்-வயமாரன்         173

ராதை திருப்பவளந் தான்வேட் டிளந்தென்ற
லூதை திருப்பவள மொல்கினேன்-மாதுவரை         174

யாயன் பவனிதொழு தன்றுமுத லின்றளவும்
தூய நயனந் துயினீங்கி-யாயொறுக்கப்         175

பந்து கழன்மறந்து பாவை கிளிதுறந்து
சந்து பனிநீர் தனத்தகற்றி-வெந்துயராய்ப்         176

போதக் கலனிழந்து பூவிழந்து நீரிழந்து
காதற் சிறையிருத்தல் கண்டாயே-மாதுளபத்         177

தாரானை வேட்கையெல்லாந் தந்தானை மும்மதமும்
வாரானை யன்றழைக்க வந்தானைக்-காரான         178

மெய்யானை யன்பருக்கு மெய்த்தானைக் கண்கைகால்
செய்யானை வேலையணை செய்தானை-வையமெலாம்         179

பெற்றானைக் காணப் பெறாதானைக் கன்மழையிற்
கற்றானைக் காத்ததொரு கல்லானை-யற்றார்க்கு         180
-----------

171. அந்தி மாலைக்காலம்.அமலன்- மலமற்றவன். உளம்-மனது. கொந்து - பூங்கொத்து.
172. மண்சுழித்தல்-கூடலிழைத்தல்.
174. திருப்பவளம்-அழகிய பவளம் போலும் அதரம். ஒல்குதல்-சுருங்குதல்.
175. யாய்-தாய். ஒறுத்தல்- தண்டித் தல்.
178. வார்தல் ஒழுகுதல்.
180. கற்றான்-கன்றோடு கூடிய பசு. இது, சாதியொருமை. கல்லான்-கோவர்த்தனத்தைக் குடையாகவுடையான்.
-----------

வாய்ந்தானைச் செம்பவள வாயானை மாமடியப்
பாய்ந்தானை யாடரவப் பாயானைப்-பூத்துவரை         181

மாமாலைக் கண்டந்தி மாலைவரு முன்னமே
தேமாலை வாங்க செல்லுங்காற்-பூமாயன்         182

முன்னர் தடுத்த முளரித் திருக்கரத்தா
வின்னந் தடுக்குமென வெண்ணாதே-நின்னுடைய         183

திமுழக்கின் மிக்கதெனச் செங்கண்மால் கைச்சங்கின்
வாய்முழக்கங் கேட்டு மயங்காதே-மேருவும்         184

வானச் சிலையின் வனப்புளதென் றெம்பெருமான்
கூனற் சிலைகண்டு கூசாதே-மேனிலத்து         185

மின்சோதி யெல்லாம் விழுங்குமென்று நாந்தகத்தின்
நன்சோதி கண்டு மிக நாணாதே-நின்சோதி         186

மையழகி னீல மணியழகி லெம்மான்றன்
மெய்யழகு நன்றென்று வெள்காதே- துய்யமணி         187

யாரக் கபாட மணிக்கோயில் வாசலெலாஞ்
சேரக் கடந்து திருமுன்போய்த்-தூரத்தில்         188

நின்று வணங்கி நெடிதேத்தி வாய்புதைத்துச்
சென்று பெருமான் திருச்செவியிற்-றுன்றுகடற்         189

தையற் காசேயுன் றார்வேட் டொருபேதை
மையற் கரைசேரு மாற்றியாண்-மெய்யுருகிக்         190
---------------

183. முளரி – தாமரை.
185. வனப்பு-அழகு.
186. நாந்தகம்-வாள்.
188. கபாடம்-கதவு,
--------

கொம்பனையா ளோர்விரகங் கொண்டா ளது தன்னை
யெம்பெருமான் கேட்டருளா யேதென்னிலம்பாடி         191

மட்புலனு முண்டுமிழ்ந்த மாயோ னுருவமலாற்
கட்புலனும் வேற்றுருவங் காணற்க-புட்புறத்து         192

மூர்த்தி புகழே முகப்பதல்லான் மற்றொருவர்
கீர்த்தி செவிமடுத்துக் கேளற்க- நீர்த்தாங்கப்         193

பூவெடுத்த வெண்கோட்டுப் புண்ணியனை யல்லாதென்
னாவெடுத்து வேறு நவிலற்க -கோவெடுத்த         194

கங்கை யுலவுங் கழலினாற் கல்லாதென்
செங்கை தலைமிசைபோய்ச் சேரற்க-பங்கயத்தா         195

டாக்குத் திருத்துழாய்த் தாமமண மல்லாதென்
மூக்கும் பிறிது மண மோவற்க-மாக்கடல்போ         196

லஞ்சன வண்ண னடிக்கமல மல்லாதெ
னெஞ்சமு மொன்றை நினையற்க-செஞ்சுணங்கோ         197

டிங்கெழுந்த கொங்கை யெழுபிறப்பு மெம்பெருமான்
கொங்கணைந்த தோளல்லாற் கூடற்க-மங்கைநல்லீ         198

சென்று வருந்தி யிருந்தா ளவளுக்குன்
மன்றல் கமழ்தார் வழங்கென்று-நின்றிரந்து         199

பண்டுளவத் தாமரையாள் பற்றுந் திருமார்பின்
வண்டுளவத் தார்வாங்கி வா.         200
-----------
193. தரங்கம்-அலை.
197. சுணங்குதேமல்,
198. கொங்கு- நறுமணம்,
199. மன்றல் - நறுமணம்,
-----------

    செங்கமல வயல்சேருந் திருநறையூர் வாழியே
    சீராரு நம்பியிணைத் திருவடிகள் வாழியே
    பங்கமறு மேதாவி பயந்தசெல்வி வாழியே
    பாரின்மறை தென்சொல்லாற் பகுத்துரைப்போன் வாழியே
    யெங்களெதி ராச னிணைமலர்த்தாள் வாழியே
    யீடில்வர வரமுனிவ னெப்பொழுதும் வாழியே
    செங்கைகுவித் தன்போடு சேவிப்போர் வாழியே
    செப்புவோர் வாழிசெவி சேர்ப்போரும் வாழியே.

    ---------

Comments