Taṇikaip pathu


நாட்டுப் பாடல்கள்

Back

திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப்பகுதியும்
வ. சு. செங்கல்வராய பிள்ளை



வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
தணிகைப் பத்து


    Source:
    தணிகைமணியின் "தணிகைப் பத்து"

    தணிகைமணியின் நூற்று இருபத்தைந்தாம் ஆண்டு
    நிறைவு நாள் வெளியீடு (15-8-1883 - 15-8-2008)

    திருத்தணிகேசர் துணை
    "திருத்தணிகேசர் எம்பாவை, பள்ளி எழுச்சி"
    தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்கள் எம்.ஏ.
    இயற்றியவை
    1959
    ஸ்ரீ வள்ளிமலை சுவாமி சச்சிதாநந்தா
    திருப்புகழ்ச் சபையின் வெளியீடு
    விலை 10 காசு
    ------


    1. திருத்தணிகேசர் எம்பாவை




    காப்பு

    கொம்பாற் கதைஎழுது கோவே! தணிகேசர்
    ”எம்பாவை” ”பள்ளி எழுச்சி” யெனும் - *எம்பாவை
    உன்னருளால் வந்த உயர்நூல்கள் என்றுணர்ந்திங்
    குன்னி மகிழும் உலகு. -


    நூல்

    மாலாலுங் காணரிய மன்னே! மறைமுதலே!
    நூலாலும் நோக்கரிய நுண்ணியனே! புண்ணியனே!
    வேலா! விசாகா! விமலா! விளங்குதண்டைக்
    காலா! கடம்பா! கருதுமடி யார்களநு
    கூலா! குமரா! குழகா! கிரிகுமரி
    பாலா! எனத்தணிகைப் பண்ணவனை யாம்வாழ்த்த
    [1]மாலாநீ தூக்க மயக்கங் கொளாதெழுந்து
    பாலார் தடநீர்ப் படியேலோ ரெம்பாவாய்! 1 *எம்பாவை - எமது பாடலை
    [1].மாலா - மாலாக (மயக்கமாக) - 1


    வண்ண முளரி மயிலோன் திருமுகங்கள்
    வண்ண வனஜம் வரதன் திருக்கரங்கள்
    வண்ணப் பதுமம் தணிகேசன் வார்கழல்கள்
    வண்ணக் கமலமே வள்ளி திருமுகமும்
    வண்ணச் சலசமே வள்ளி திருக்கரமும்
    வண்ண நளினமே வள்ளி திருவடியும்
    வண்ணம் இவற்றையெலாம் பெண்ணே! வழுத்திநீ
    உண்ணெக்கு நின்றே உருகேலோ ரெம்பாவாய்! - 2


    வடிந்ததுதன் மாயமெனும் வாட்டத் துடனே
    மடிந்து விழவே மடங்கல்முகத் தானைக்
    கடிந்ததணி கேசரையான் காண்பதென்றோ என்னும்
    இடிந்த மனத்துடனே ஏந்திழைஏன் தூக்கம்!
    விடிந்த தறியாயோ! வேலவனார் வேலால்
    ஒடிந்து விழச்சூரை ஓட்டிக் கடற்கண்
    தடிந்ததிறம் பாடச் சரவணதீர்த் தத்தே
    படிந்து மகிழப் படியேலோ ரெம்பாவாய்! - 3


    சிங்கார வேலனைச் சிக்கற் பெருமானை
    மங்காத சூரனை மாய்த்தவடி வேலவனை
    நங்காத லுக்குரிய நாயகனைத் தூயவனைப்
    பொங்காசை யோடின்று போற்றிப் பணிவதற்கே
    வங்கார மாலையணி வண்ணக் கிளிமொழியே!
    இங்கேநீ ஏனோதான் இன்னும் ஏழாதுதுயில்
    பங்காகக் கொண்டாய்? பளிச்சென் றெழு!தணிகைக்
    கொங்கார் தடத்திற் குளியேலோ ரெம்பாவாய்! - 4


    ஆறு திருஎழுத்தை அன்பாக உச்சரித்து
    நீறு தனையிட்டு நித்தலுமே சேய்க்குரிய
    ஆறு படைவீட்டை ஆசையோ டேநினைத்தே
    'ஏறு மயிலேறும் எந்தை தணிகேச!
    வேறு கதியில்லை வேலவனே நீயன்றிப்
    பேறு பெறவந்தோம் பெம்மானே!' என்றென்றே
    ஊறு மொழிகொண்டே ஒண்கிளியே! உள்ளன்பிற்
    [1]பாறுவேற் கையானைப் பாடேலோ ரெம்பாவாய். - 5


    [2]தந்திநந்தி கும்பமுநி தாமரையான் பாமடந்தை
    அந்திநிறத் தையன் அனந்தன் அகோரன் அரி
    அந்தஇசை நாரதன் [3]ஆகண்ட லன்ராமன்
    சந்தநிறை எங்கள் தயாளன் அருணகிரி
    இந்தவகை எல்லோரும் ஏத்தும் திருத்தணியைப்
    புந்தியிற் போற்றிப் பொருப்பை வலம்வந்து
    சுந்தரப் பெண்ணே!நீ தூயநீர் ஆடுதற்கு
    விந்தைநந்தி யாற்றை விழையேலோ ரெம்பாவாய்!
    [1].பாறு - பருந்து [2].தந்தி - பாம்பு; வாசுகி,
    [3].ஆகண்டலன் - இந்திரன் - 6


    [1] கந்தபுராணம் (7-17)
    [1]. இப்பாடல்களை (7-17) ஓதுதல் கந்தபுராணத்தைப்
    பாராயணஞ் செய்த பலனைத் தருவதாகும்

    தேவர் முறையீடு

    பொல்லா அசுரரெலாம் புண்படுத்த வந்துள்ளோம்
    கல்லால் நிழற்கீழாய்! காத்தருள்செய் எங்களையென்
    றெல்லா [2]விபுதர்களும் ஏங்கி முறையிடலும்
    நல்லான்நம் சம்பு நயந்துதன் கண்வழியே
    [3]எல்லார் பொறிகள் இருமூன்றங் குய்த்திடலும்
    வல்லாளன் சூராரி வந்த விநோதத்தைப்
    பல்லா யிரமுறைநீ பாடிக் கசிந்துருகி
    நல்லாய்! பெறுவாய் நலமேலோ ரெம்பாவாய்!
    [2]. விபுதர் - தேவர், [3]. எல் - ஒளி - 7


    முருகன் உதித்தல்

    வந்த பொறிகளையவ் வாயு கொடுபோக
    அந்தக் கனல்சுடலும் ஆற்றாது தீயின்கை
    இந்தா எனக்கொடுக்க ஏந்தியத் தீக்கடவுள்
    நொந்தே நடந்துபோய் நோன்மைபெறு கங்கையிலே
    தந்தே செலலுமத் தாய்கங்கை தாங்காது
    தந்தாள் மடுவாம் சரவணத்தில், மற்றாங்கு
    வந்தார்நம் சாமி வனஜமிசை; லீலையிதைச்
    சிந்தா குலந்தீரச் செப்பேலோ ரெம்பாவாய்! - 8


    ஆறுகுழந்தைளாய்க் கார்த்திகை மாதர்களின் பால் உண்டது.

    கூத்தன் சாமி குமரன் திரு அழகைப்
    பார்த்துப் பரவசங்கொள் கார்த்திகைப் பெண்அறுவர்
    தீர்த்தனுக்குப் பால்தருவன் நான்நான் எனச்செப்பும்
    வார்த்தைகளைக் கேட்ட வரதன் அவர்கொண்ட
    [1]ஆர்த்தி தனைநீக்க ஆறு குழவிகளாய்ப்
    பூர்த்திசெய்தான் ஆங்கவர்கள் பூண்ட விருப்பமதை;
    நேர்த்தியாம் இச்செயலை நித்தம் துதித்தண்ணல்
    கீர்த்திதனை வாயாற் கிளத்தேலோ ரெம்பாவாய்!
    1. ஆர்த்தி - மனவேதனை. - 9


    தேவி அணைக்க ஒரு குழந்தையாய் ஆனது

    சேயவன் வந்த சிறப்பைச் சிவபெருமான்
    தாயவள் பார்வதிக்குச் சாற்றஅபி ராமியவள்
    நேயமொடு கங்கை நிலைக்கணே சென்றுகண்டு
    தூய அறுவரையும் தூக்கி அணைத்தலுமே
    மாயமாய் ஓருருவாய் ஆறு மலர்முகமாய்ப்
    பாயும் அருள் பாலிக்கும் பன்னிரண்டு கண்களுமாய்
    ஆய வடிவழகன் அண்ணல் எனத்தெரிந்து
    சேயவன் தன்புகழைச் செப் பேலோ ரெம்பாவாய். - 10


    ஆட்டு வாகனம் கொண்டது

    நாரதனார் அன்றுசெய்த யாக நடுஎழுந்த
    கோரநிறை ஆட்டின் குரூரத்தைக் கண்டதனைச்
    சார எவரும் தயங்குதரு ணத்துத்தன்
    வீர இளவல் தனைஏவ வீரரவர்

    தீர முடன்[1] தகரைச் [2]செவ்வே பிடித்துவர
    ஆர அதன்மீ தமர்ந்துவிளை யாடித்தன்
    ஈர நிறைபண்பை எல்லாரும் காணவைத்த
    சூரச் செயலதனைச் சொல்லேலோ ரெம்பாவாய்! - 11


    பிரமனைக்குட்டியது

    எட்டுணையும் தேறா இளவல் இவனென்று
    பட்டஎண்ணத் தாலே பணியாம லேஅன்று
    நெட்டுடனே செல்லும் நிலைகொண்ட நான்முகனைக்
    கிட்டப் பிடித்துவந்தே ஓம்பொருளைக் கேட்கஅவன்
    திட்டமாயச் சொல்லத் தெரியாம லேவிழிக்கச்
    சிட்டித் தொழிலைநீ செய்வதெங்ஙன் என்றவனைக்
    குட்டிச் சிறையிட்ட கோமான் திறம்பாடிச்
    [3]சட்ட மகிழ்வோம் சதாவேலோ ரெம்பாவாய். - 12


    தந்தைக்கு உபதேசம்.

    "ஏனோ பிரமனை ஏங்கவிட்டாய் அச்சிறையில்
    தேனார் மொழிப்பிள்ளாய்! செப்பாய்" எனக்கேட்ட
    மானார் கரத்தார் மகிழச் சிறைவிடுத்தக்
    கூனார் பிறையரவர் கூறுவையோ நீ அந்த
    ஆனாத மெய்ப்பொருளை என்ன அவர்க்குமுறை
    தானான அந்நெறியிற் போதித்த தற்பரனை
    ஊனோ டுளமும் ஒருங்கே உருகிடநீ
    நானா வகைபாடி நாடேலோ ரெம்பாவாய்! - 13


    தாரகாசுர சம்மாரம்.

    மாயம் பலசெய்ய வல்லவனாம் தாரகனை
    மாயம் பலசெய் கிரவுஞ்ச மாமலையை
    நேயம் பிறங்கவே நின்றுபணி வானவர்ரம்
    [4]ஆயம் களிக்க அடல்வேலால் அட்டவனைத்
    தேயம் புகழத் திருத்தணியில் வீற்றிருக்கும்
    ஞாயம் தெரிந்தஎங்கள் நாயகனை, மாரனைமுன்
    காயம் தொலையவே காய்ந்தவன்தன் பாலகனை
    நீயன் புடனே நினையேலோ ரெம்பாவாய்!
    [1].தகர்-ஆடு, [2].செவ்வே-செம்மையாக,
    [3]. சட்ட- நன்றாக, [4]. ஆயம்- கூட்டம்; திரள்.
    - 14


    சூரனிடம் தூதனுப்பினது.

    தீதுசெய்யும் சூரூனிடம் செல்லுகநீ சென்றவன்முன்
    'தீதொன்றும் செய்யாமல் தேவர் சிறைமீட்சி
    நீதி முறையில் நிகழ்த்துக, மற்றந்த
    நீதி தவறில் நிகழ்போரில் மாளுவை'என்
    றோதி வருகஎன ஓர்வீர வாகுவைமுன்
    தூதுவிட்ட நீதிநெறிச் சுப்பிரமண் யப்பெருமான்
    ஆதி முதல்வன் அயனாதி மூவர்தொழும்
    சோதி அருளைத் துதியேலோ ரெம்பாவாய்! - 15


    சிங்க முகாசுர சம்மாரம் - சூரசம்மாரம்

    காரவுணன் வானோர் கடுஞ்சிறைவி டாமையினாற்
    போரதனை ஏற்றந்தப் பொல்லா அசுரரைஒரு
    சேர அழித்துச்[1]சூர் செல்வர் தமை அழித்து
    வீரநிறை சிங்க முகவன் விழவீட்டி
    ஈரமிலா நெஞ்சோ டிருங்கடல்வாய் மாவுருக்கொள்
    சூரையிரு கூறாக்கிச் சுந்தரச் சேவலெனத்
    தீர மயிலென்னத் தேர்ந்தெடுத்த சீரதனைப்
    பாரநிறை காவியமாப் பாடேலோ ரெம்பாவாய்!
    [1]. சூர் செல்வர் - சூரனுடைய பிள்ளைகள். - 16


    தேவசேனை வள்ளி திருமணம்

    தேவர் சிறைமீட்டுத் தேவர்சே னாபதி,பின்
    தேவர்கோன் தான்வளர்த்த செல்வி தனைமணந்தே
    ஏவரே செவ்வேளை இங்கிவர்போல் பத்திசெய்வார்
    ஆவலோ டென்றே அகிலமெலாம் கொண்டாடும்

    பாவைவள்ளி தன்னைப் பலவகையாற் சோதித்தப்
    பூவை தனைமணந்த புண்ணியனை மூவர்தொழும்
    தேவைத் திருத்தணிகை வந்தமர்ந்த சேய்புகழை
    [1]ஓவலின்றி நித்தம் உரையேலோ ரெம்பாவாய்!
    [1]. ஓவலின்றி- இடைவிடாது - 17


    இந்துமுகப் பெண்ணரசீ! இன்னே எழுந்திருநீ!
    கந்த புராணக் கதைமுழுதும் கேட்டறிந்தாய்!
    சிந்தை குளிர்ந்தாய்; திருத்தணிகைச் செம்மலுக்கும்
    தந்தி முகவற்கும் தாய்மார் இருவருக்கும்
    முந்தி அபிஷேகம் செய்வதற்கு முற்படுநீ
    சந்தத் திருப்புகழைச் சந்தம்வழு வாதிசைப்போம்
    இந்த முறைப்படிநாம் என்றும் இருப்போமேல்
    எந்தக் குறையும் இலையேலோ ரெம்பாவாய்! - 18


    எந்தை அருணகிரி யீந்த திருப்புகழை
    வந்த இசையில் வழுவின்றி உச்சரித்து
    மந்த நடையில் மலையேறிச் சென்றுநிதம்
    நந்தம் தணிகைமலை நாயகனை நாம்பரவப்
    பந்தம் தொலையும் பழவினைகள் அற்றொழியும்
    சிந்தை தெளியும் சிவலோகம் கைகூடும்
    அந்தமிலா ஆநந்தம் ஐயன் அருளுவனால்
    எந்த வகையும் இனிப்பேலோ ரெம்பாவாய்! - 19


    வாழி

    வாழி தணிகேசர், வாழிசுர குஞ்சரியார்,
    வாழி வனசரர்மான், வாழி வடிசுடர்வேல்,
    வாழி அறச்சேவல், வாழி கலாபமயில்,
    வாழி படைவீடாம் ஓராறு மாதலங்கள்,


    வாழி தமிழ் நூல்கள், வாழி தமிழன்பர்,
    வாழி திருப்புகழ்சொல் மாதவர்கள் யாவருமே,
    வாழி தணிகைமலையை வந்திப்போர் சிந்திப்போர்,
    வாழியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்! - 20

    திருத்தணிகேசர் எம்பாவை முற்றும்.
    ---------------------

    2. திருத்தணிகேசர் திருப்பள்ளியெழுச்சி




    [1]காலை எழுந்துநின் நாமங்கள் கூறிக்
          காதலோ டம்மை உமாதேவி மைந்த!
    வேலைப் பிடித்த கரதல! என்றும்
          மேதகு வள்ளி மணாளனே! என்றும்
    சாலப் புகழ்ந்துகண் ணீரு*ருகப் பாடித்
          தணிகை மலைப்படி ஏறிவந் துள்ளோம்;
    ஆலைக் கரும்பே!கற் கண்டே!எங் கண்ணே!
          ஆறு முகா!பள்ளி எழுந்தரு யாயே.
    [1]. 'காலையில் எழுந்துன் நாமமெ மொழிந்து காதலுமைமைந்த என' ஓதி - திருப்புகழ் 871. - 1


    கவிக்கர சென்கின்றஅருண கிரிப்பேர்க்
          கண்மணி பாடிய நின்திருப் புகழைச்
    சுவைக்கமு தோஇது தேனது தானோ
          சொல்லுதற் கில்லையென் றேகளிப் புடனே
    தவிப்பெலாம் நீங்கநின் சந்நிதி தன்னில்
          தாளங்கள் சத்திக்கப் பாடிநிற் கின்றோம்
    [2]புவிக்குயி ராம்திருத் தணிமலை வாழும்
          புண்ணிய னே!பள்ளி எழுந்தரு ளாயே.
    [2]. 'புவிக்குயிராகும் திருத்தணி' திருப்புகழ் 258. - 2


    திருப்புகழ்ப் பஜனைசெய் பக்தர்கள் ஒருபால்,
    திருமுரு காறுசொல் அன்பர்கள் ஒருபால்,
    விருப்புடன் நின்பெயர் ஜெபிப்பவர் ஒருபால்,
    மெல்லிசை பாடுநன் மாதர்கள் ஒருபால்,

    மருப்பெறு மாலை தொடுப்பவர் ஒருபால்,
    வாத்திய இன்னிசை முழக்குநர் ஒருபால்,
    இருப்ப தெலாமறிந் தெந்தணி கேச!
    எந்தை!நீ பள்ளி எழுந்தரு ளாயே. - 3


    மாலொடு நான்முகன் ஆதிய வானோர்
          வந்துகை கூப்பியே வாழ்த்திநிற் கின்றார்
    பாலொடு தேன்பழம் நெய்தயிர் கொண்டு
          பக்தர் குழாங்களும் வந்துள பாராய்!
    வேல்கொடு சூரனை மாக்கடல் நடுவே
          வெட்டிப் பிளந்திட்ட வீராதி வீர!
    சேலொடு வாளைகள் பாய்வயற் றணிகைச்
          செம்மலே! நீபள்ளி எழுந்தரு ளாயே! - 4


    [1]கறைநின்ற கண்டன் அகத்தியன் நந்தி
          கலைமகள் இசைமுநி நாரதன் ராமன்
    மறையவன் விண்டு புரந்தரன் நாகம்
          வழிபட நின்ற வழித்துணை நாத!
    சிறைபடா நீரெனக் கண்கள்நீர் பாயச்
          சிந்தைநின் பாலதா வந்துநிற் கின்றோம்
    மறையொலி பேரிகை போலொலி தணிகை
          மாமணி யே!பள்ளி எழுந்தரு ளாயே.
    [1]. தணிகையிற் பூஜித்து வழிபட்டவர்கள் - 5


    திங்கள் அணிந்தசெஞ் சடையவன் நந்தி
          தென்தமிழ் மாமுநி ராமன் இவர்க்கும்
    மங்கல் இலாத பெரும்புகழ் வாய்ந்த
          வள்ளல் அருண கிரிக்கும் உகந்து
    பொங்கு களிப்புடன் போதனை செய்த
          புண்ணிய னே!தணி கேச!நீ இப்போ
    தெங்களுக் கும்உப தேசங்கள் செய்ய
          எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
    [2]. 'பேரிகைபோல் மறைவாழ்த்த' திருப்புகழ்- 291.
    [3]. உபதேசம் பெற்றவர்கள். - 6


    அண்ணல்நின் மலைநீல கிரியென்பர் ஆன்றோர்
          அப்பெயர்க் காரணம் [1]நீன்மலர் மூன்று;
    [2]எண்ணுதற் கரியநின் சத்திகள் மூன்று;
          ஏந்தல்!நின் மலைச்சிக ரங்களும் மூன்று;
    கண்ணிய! [3]நீவிரும் பும்மலை மூன்று;
          காதல்நின் அடியராச் சிறந்தவர் [4]மூவர்;
    எண்ணுறு காலமெ லாந்திகழ் தணிகை
          எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
    1. நீன்மலர் - நீலமலர்; 'காலைப்போதினில் ஒருமலர், உச்சி வேலைப்போதினில் ஒருமலர், மாலைப்போதினில் ஒருமலர்' கந்தபுராணம், வள்ளி திருமணம் - 222.
    2. இச்சை, கிரியை, ஞானம்.உரை 56.
    3. திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு - சுந்தரந்தாதி
    4. மூவர் - நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர். - 7


    [5]ஓதங்க மாமறை உச்சித் தலத்தும்
          ஓதன்பர் சிந்தையாம் வாரிஜத் திடையும்
    நீதங்க இச்சைகொள் தணிகைத் தலத்தும்
          நித்தமும் நிற்கின்ற வித்தகத் தேவே!
    [6]மாதங்கம் ஆசைகொள் [7]மாதங்கை தொட்டாய்
          [ 8]மாதங்கம் ஆசைகொள் எம்மைக்கை விட்டாய்!
    ஈதெங்ஙன் என்றுனைக் கேட்கவந் தேம்யாம்
          எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
    5. 'அடியவர் சிந்தை வாரிஜ நடுவினும், வேதநன் முடியினும்' -திருப்புகழ் 289.
    6. மாதங்கம் - யானை, ஐராவதம்.
    7. மாது அங்கை - தேவசேனையின் திருக்கை.
    8. மா + தங்கம் - பொன், - 8


    நூல்கற்ற மாஞானப் புலமைய ரேனும்
          நுண்ணிய சாத்திரம் ஆய்ந்தவ ரேனும்
    [9]தால் பெற்ற பாக்கியத் தால்தணி மலையைத்
          தாம்பாடி னல்லால்ஓர் நன்மை பெறாரே;
    [1]மால்பெற்ற [2]மகவென வள்ளிக தொட்டாய்
          [3]மால்பெற்ற மகவெமை ஏனோகை விட்டாய்?
    வேல்பெற்ற கைய!நீ காரணம் செப்ப
          விரும்புகின் றேம்; பள்ளி எழுந்தரு ளாயே!
    [9]. தால் - நா.; [1]. மால்--திருமால்; [2]. மகலவு - குழந்தை.
    [3]. மால் - ஆசைகள். - 9


    வேட உருவுடன் வள்ளியை நாடி
          வேட்டை புரிந்த களைப்பது தானோ?
    வேட உருவுடன்[4] வெண்பாவுக் காக
          வெய்யிலிற் போந்த இளைப்பது தானோ?
    பாடல் பலபல பாடினோம் கேட்டும்
          பாராய் திருத்தணி கேசநீ ஏனோ!
    சேடனீ சும்மா இருத்தல் தகாது
          செம்மலே! நீ பள்ளி எழுந்தரு ளாயே.
    [4]. பொய்யா மொழிப் புலவரை ஆட்கொண்ட வரலாறு. - 10


    கருக்கெட வேண்டிநின் தணிமலை வந்தோம்
          காமாதி எண்ணங்கள் தூர எறிந்தோம்
    [5]திருக்குளம் நீங்கநின் திருக்குளம் படிந்தோம்
          செவிக்குண வாகநின் திருப்புகழ் கேட்டோம்
    உருக்கமோ டுன்திரு நாமங்கள் அனைத்தும்
          ஓதிய படிமலைப் படிகளில் ஏறிச்
    [6]சுருக்கவுன் திருமுகம் காணவந் துள்ளோம்
          சுந்தர னே!பள்ளி எழுந்தரு ளாயே.
    [5]. திருக்கு + உள்ளம், மாறுபாடு - வஞ்சனை கொண்ட உள்ளம்.
    [6]. திருக் +குளம் - சரவணப் பொய்கை. 7. சுருக்க - விரைவாக. - 11


    வாழிநின் பன்னிரு தோள்களும் வாழி
    வாழிநின் மூவிரு முகங்களும் வாழி
    வாழி மலைதொளை வேற்படை வாழி
    வாழிநின் சேவற் கொடியது வாழி.

    வாழி நின் வாகன மாமயில் வாழி
    வாழிநல் வாரண மாமகள் வாழி
    வாழி புனமறப் பைங்கிளி வாழி
    வாழி தணிமலை அடியரெல் லாமே . - 12
    திருத்தணிகேசர் திருப்பள்ளி எழுச்சி முற்றும்.
    --------------
    நூல்கள் வந்தவழி

    எந்தைதணி கேசர்இணையடிப் பத்திதனில்
    முந்துமா ணிக்க முதல்வரவர் - சிந்தைவழி
    'எம்பாவை' 'பள்ளி எழுச்சி' இவைவந்த
    எம்பால் இறைவன் இருந்து.
    -------


    திருத்தணிகேசன் துணை

    3. தணிகை - அன்னைப் பத்து




    தணிகை மலையினர் தாரணி மார்பர்
    மணிகை யுடையவர் அன்னே என்னும்
    மணிகை யுடையவர் வள்ளியை நாடி
    வணிகராய் வந்தனர் அன்னே என்னும். - 1


    வள்ளி கணவனார் வானவர் காவலர்
    புள்ளி மயிலினர் அன்னே என்னும்
    புள்ளி மயிலினர் பூதலத் தேவந்தென்
    உள்ளங் கவர்ந்தனர் அன்னே என்னும். - 2


    சிந்தைக் குகந்தவர் செங்கோட்டு வேலவர்
    கந்தக் குருமணி அன்னே என்னும்
    கந்தக் குருமணி காலைத் தொழவினை
    பந்தத் தொடரறும் அன்னே என்னும். - 3


    கொங்கே நிறைதணிக் குன்றிடை வாழ்பவர்
    எங்கே ஒளிக்கின்றார் அன்னே என்னும்
    எங்கே ஒளிப்பினும் என்னை மறந்துழி
    இங்கே உளனென்பர் அன்னே என்னும். - 4


    பண்ணுக் குடையவர் பாட்டுக் குருகுவர்
    கண்ணுக் கினியரால் அன்னே என்னும்
    கண்ணுக் கினியரென் காட்சியிற் பட்டதும்
    உண்ணெக் குருகுவன் அன்னே என்னும். - 5


    ஆறு திருமுகம் ஆறு திருப்பதி
    ஆறு திருஎழுத் தன்னே என்னும்
    ஆறு திருஎழுத் தாலென் வினைத்தொகை
    நீறு படும்படும் அன்னே என்னும். - 6


    ஆற்றிலே தோன்றிய ஐயர் எனதுள்ளே
    தோற்றம் அளித்தனர் அன்னே என்னும்
    தோற்றம் அளித்தென்னுள் சோதி சுடர்வதாற்
    கூற்றம் கலங்குமால் அன்னே என்னும். - 7


    வேடர் மகளையும் வேழ மகளையும்
    கூடி மகிழ்வரால் அன்னே என்னும்
    கூடி மகிழ்பவர் என்னையும் கூடிட
    நாடி வருவரோ அன்னே என்னும். - 8


    அந்தப் புகழ்சொல் அருண கிரிக்குமுன்
    சந்தம் அளித்தவர் அன்னே என்னும்
    சந்தம் அளித்தவர் சார்பலாற் சார்பிலை
    இந்த உயிரினுக் கன்னே என்னும். - 9


    அத்தர் அறுமுகத் தானந்தக் கூத்தரென்
    சித்தத் திருக்கின்றார் அன்னே என்னும்
    சித்தத் திருந்தெனைச் செந்நெறிக் கேசெல்ல
    வைத்துக் களிக்கின்றார் அன்னே என்னும். - 10



    திருத்தணிகேசன் துணை

    4. திருத்தணிகைக் கலிவெண்பா


    சீரோங்கு வேற்றடக்கைச்
    சீமானே! தென்தணிகை
    ஏரோங்கு கோயி
    லிருப்பானே! பேரோங்கு

    வள்ளிமலை வாழ்வே!
    வயலூர்ப் பெருமானே!
    வெள்ளிமலை நாதர்
    விழைந்தறியத் - தெள்ளுபொருள்

    சொற்ற குருவே!
    சுரகுஞ் சரிதழுவு
    நற்றவமே! எட்டிகுடி
    நாயகமே! - கற்றவர்கள்

    கண்டு விழுங்குங்
    கனியே! கடலமுதே!
    வண்டுபண் செய்யும்
    மலர்த் தொடையாய்! அண்டினருக்

    கொன்றைத் தருவாய், மற்
    றோரிருவர் பாலுகந்தாய்
    அன்றுதொழ *மூவர்க்
    கருள் புரிந்தாய் - நன்றுபுகழ்

    -----------------
    * திருத்தணிகையில் வீரட்டேசர் கோயில், விஜயராகவப்
    பெருமாள் கோயில், பிரமதீர்த்தம் இதற்குச் சான்று.

    சொன்ன ஒரு நால்வர்
    சுவைப்பாட்டி லேயமர்ந்தாய்
    பின்னமற நின்ற
    பெருமானே! - என்னை

    வருத்துமைவர் வல்லாட்டை
    மாய்த்துமெய்ஞ் ஞானக்
    கருத்தர்சே ராறிதெனக்
    காட்டித் - திருத்தியுறத்

    தக்க நிலைவைப்பாய்
    *சத்த இருடிகளும்
    புக்குப் பணியப்
    புகலளித்தாய் - முக்கட்

    கரும்பளித்த கண்ணே!
    கவினிறைநற் பண்ணே!
    சுரும்பமரும் நீபத்
    தொடையாய்! விரும்புவரம்

    வேண்ட வெறாதுதவு
    வேந்தே! பரங்குன்றில்
    வேண்டு மமரர்
    மிக மகிழ - வேண்டிவரு

    தேவர் தலைமகனாந்
    தேவேந் திரன் மகளை
    மூவர் மகிழ மண
    முன்செய்தாய்! - யாவர்க்கும்

    தீரதீர சூரைச்
    செகுப்பதற்குச் செந்தூரில்
    வீரவீர வீராதி
    வீரனாய்த் - தேரமர்ந்த
    -----------------------
    * திருத்தணிகையில் சப்த ருஷிகள் பூசித்தனர்; அந்த இடம்
    ஏழுசுனை என்று இப்போது வழங்குகின்றது.

    தேவே! நஞ் செல்வத்
    திருவாவி னன்குடியாய்!
    சேவேறும் எந்தை
    செவிக்கினிய - பாவேறு

    மந்திரத்தை ஏரகத்தில்
    வாய்விட் டுரைத்தருளுஞ்
    சுந்தரத்துச் சோதிச்
    சுடர்ப்பிழம்பே! - *சந்தமலை

    தோறும்விளை யாடுகுக!
    சோலைமலை வாழிறைவ!
    ஆறுபடை வீட்டி
    லமர்ந்தோனே! - நீறுபுனைந்

    தேத்தி நினைப்போர்
    இதயத் தமர்ந்துதவி
    தோத்திரமுஞ் சொல்வதற்குச்
    சொல்லருளும் - மூர்த்தியே!

    ஆறு திருவெழுத்தும்
    அன்பின் நிலைகண்டு
    கூறுவமர் கண்ணிற்
    குடிகொள்வோய்! - ஈறிலாய்!

    ஓரெழுத்தி லாறெழுத்தை
    ஓதுவித்தாய் என் தலையின்
    ஈரெழுத்தை மாற்றாத
    தென்னேநீ - நீரெழுத்தாய்;

    நீலமலர் கண்டாலுன்
    **நீலகிரி யேத்துவேன்;
    நீலக் கடல்கண்டால்
    நீலநிறக் - கோலமயில்
    ----------
    *குன்றுதோறாடல், ** நீலகிரி - நீலோற்பலகிரி; திருத்தணிகை

    தன்னை நினைந் தேபணிவேன்
    சண்முகா! என் முன்னே
    பொன்னனையார் கண்தான்
    புலப்பட்டால் - மின்னயில்வேல்

    சட்டென்று தோன்றிச்
    சரணளிக்கும்; எங்கேனும்
    சுட்ட பொரிகாணிற்
    சுந்தர! என் - திட்டியிலே

    தாரகையெ லாம்பொரியாத்
    தான்கொறித்த நின் *சேவல்
    நேரெதிரே வந்து
    நிலைகாட்டும்; - ஆரமுதே!

    சுண்டைக்காய் விற்கின்ற
    சோலிக் குறத்திசெலின்
    இண்டைக்கே வெட்சிபுனை
    எம்மானே! 1கண்டைச்சீ

    என்றஇனிப் பேகொண்ட
    இன்பமொழி யாள்வள்ளி
    குன்றி லுறையுங்
    குறப்பேதை - என்றனையாள்

    அம்மைபுரி பேரன்பும்
    ஆறுமுகத் தப்பாவுன்
    செம்மைநிறை பேரருளுந்
    தேறுவேன்; - 2 சும்மை

    ---------------------------
    * தாரகை (நட்சத்திரங்களை) கோழி நெல்லாக் கொறித்ததைக்
    கல்லாடத்திற் காண்க.

    1. கண்டு - கற்கண்டு 2. சும்மை - ஒலி

    இடியும் மழையும்
    எதிரின் இடையே
    துடியாஞ் 1சசிவல்லி
    தோன்றி - அடிமலர்தான்

    இந்தா எனத்தந்
    தெனக்கபயம் சொல்லிமிக
    நந்தா வளங்கள்
    நயந்தருளும்; எந்தாய்

    2. முருகன் தனிவேல்
    முனிநங் குருவென்
    றருள்கொண் டறியார்
    அறியும் - தரமோ"

    முருக முருக
    முருக முருகென்
    றுருகி உரைப்போர்
    உரையென் - னருகில்

    உறக்கேட்டால் இவ்வுலகம்
    உய்யஓ ரன்பர்
    திறப்பட்டாற் சொற்சந்தஞ்
    சேரும் - அறப்பாக்கள்

    ஆகுந் திருப்புகழென்
    அங்கம் புளகிக்கப்
    பாகுங் கசந்திடப்
    பண்ணியென்றன் - தேகமெலாம்

    இன்பம் எழச்செய்யும்;
    ஈசா! இவ் வாறேநான்
    அன்பு குறையா
    அடிமையாய் - என்புருகி

    1. சசிவல்லி - தேவசேனை; 2. கந்தரநுபூதிச் செய்யுள்.

    கந்தா! முருகா!
    கருணா கர!குமரா!
    மந்தா கினிமைந்த!
    வானோர்தஞ் - சிந்தா

    குலந்தவிர்த்த கோமானே!
    கும்பிடுவார்க் கென்றும்
    மலந்தவிர்க்கும் வாழ்வே!
    வணங்கார் - பலந்தவிர்க்கும்

    பண்ப! திருப்புகழைப்
    பாடிப் பணிவோர்தம்
    நண்ப! எனத்துதித்தே
    நான்மீட்டும் - மண்புகா

    வண்ணமெனை யாண்டருள்வாய்
    வள்ளால்! தணிகேச!
    எண்ணமிஃ தீடேற வே.
    -----------


    5. தணிகை நவரத்நமாலை (காமாலை நீங்க)




    பாமாலை சூடிப் பணிவேன் எனைவருத்துங்
    காமாலை தீரக் கனிந்தருள்வாய் - பூமாலை
    என்றாய் புனைய மகிழ்எந்தாய் தணிகைமலை
    நின்றாய் உனையே நிதம். - 1


    நிதமும் பணிவேன் உனைப் போற்றி
    நீயல் லாமற் பிறரொருவர்
    சதமு முண்டோ என்றனக்குச்
    சாரங் கதிதான் வேறுண்டோ? - 2


    அதமுஞ் செயுங்கா மாலையெனும்
    அந்நோய் தீரத் திருவாக்கால்
    இதமுண் டாகுஞ் சொல்லொன்றை
    இயம்பாய் தணிகை மலைக்கரசே. - 3


    மலைக்கர சேநீ வாழ்காவிச்
    சிலைக்குரு கேனென் தேகத்தைக்
    கலக்கமு றச்செய் காமாலை
    தொலைக்கும்வி தந்தான் சொல்லாயோ. - 4


    சொல்லா யோஎனைச் சூழுங்காமாலை நோய்
    நில்லா தோடு நெறியிஃ தாமென
    நல்லா நேரத்து தணிகை நயந்தமர்
    இல்லா கக்கொளு மெந்தை இறைவனே. - 5


    எந்தையே இறைவனே என்று நாடொறுஞ்
    சிந்தையே தணிகையிற் சேர்ப்பன் என்னுடல்
    வந்துமே கூடுகா மாலைநோய் தெறக்
    கந்தனே நின்னருள் காட்ட வேண்டுமே. - 6


    காட்ட வேண்டுநின் காட்சி கொண்டுநான்
    வாட்ட வேண்டுங்கா மாலை நோயதை
    ஓட்ட வேண்டுநா னுற்ற தீவினை
    பாட்ட றாத்தணிப் பதியில் வேலவா - 7


    வேலவா! தணிகை மேவு வேந்தனே! நீலத்தோகை
    மேலவா! குரவு நீபம் வெட்சிகூ தளவிருப்ப!
    மாலவா நீங்க என்கா மாலை நோய் நீங்க வுன்றன்
    பாலவா ஓங்க உள்ளப் படரொழித் தருள்வாய் ஐயா! - 8


    ஐயா உனையன்றி யார்துணை யிவ்வை யகந்தனிலே
    பையா டரவெடுத் தாடு மயிலிவர் பன்னிரண்டு
    கையா எனைநலி காமாலை தீரக் கடைக்கணிப்பாய்
    செய்யாய் சிவந்த உடையாய் தணிகைச் சிவக்கொழுந்தே! - 9


    தேவே தணிகைக் குமரா எனைச்சேரு மாலை
    நோவே ஒழியச் செயுமாரருள் நோன்மைக் கீடா
    யீவே னெதைநான் புனைந்தேனடி யேனுமன்பர்
    பாவே றடிக்கிந் நவரத்தினப் பாவின் மாலை. - 10

    7-6-1921



    6. தணிகை நாயகன் மாலை


    Source:
    தணிகைமணிராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராய பிள்ளை எம். ஏ.,
    இயற்றியது.
    ஆகஸ்ட் 1943
    All Rights Reserved.
    292, லிங்கசெட்டித் தெரு,
    சென்னை விலை 0-4-0
    -----------------------------------------------------------

    பாரத்வாஜி
    முகவைக் கண்ண முருகனார் அருளியது.

    திருத்தணிகை நாயகன் சேவடிக்கே காதற்
    கருத்துணவு செய்த களிப்பான் - மருத்தணியா
    தோங்குமண மாலை யுவந்தணிந்தா னுண்டியளித்
    தாங்குசெங் கல்வரா யன்.
    -----------------------------------------------------------

    முகவுரை

    திருத்தணிகேசன் திருவருளாற் சென்ற சுபானு வருஷம் ஆவணி 1ந் தேதி (15-8-1883) பூராட நாளிற்
    பிறந்த அடியேனுக்கு இப்பொழுது அறுபது ஆண்டு நிறைவாகின்ற நலங் கருதித் திருத்தணிகேசனது
    திருவருளைப் பாராட்டிப் போற்றி 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' அவன் அளித்த
    சொன்மலர்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே சமர்ப்பித்த மாலையாகும் இந்நூல்.

    தணிகை நாயகனே! தேவர் கோன் மகளை ஏற்ற
    உனது திருவருள் வேடர் மகளையும் ஏற்றதல்லவா? அது
    போலப், பெருமானே! நக்கீரர், அருணகிரிநாதர் ஆதிய
    பெருந் தமிழ்ப் புலவர்கள் பாடிய திப்பாடலை
    ஏற்றருளிய நீ,

    "அடியேன் உரைத்த புன் சொல்
    அது மீது நித்தமுந் தண்
    அருளே தழைத்துகந்து - வரவேணும்"

    சுபாநு வருஷம்,
    15-8-1943.       வ.சு. செங்கல்வராய பிள்ளை.
    -----------------------------------------------------------

    திருத்தணிகேசன் துணை

    சிறப்புப் பாயிரம்
    பஞ்சலக்ஷண சரபம் இராசப்ப நாவலர்
    பௌத்திரரும் பூவிருந்தவல்லி போர்டு உயர்தரப்
    பாடசாலைத் தமிழாசிரியருமாகிய,

    திருவாளர் ஜ. ராஜு முதலியார் அவர்கள்
    இயற்றியது.



    அணிகைநா டோறுங் குவித்தடி யவர்கள்
          அடிமலர் வணங்கி வாழ்த் தோதுந்
    தணிகைநா தன்பாற் சமைந்தபே ரன்பாற்
          றகைபெறப் புனைந்தணி வித்தான்
    'தணிகைமா மணி'யென் றறிஞர்க ளிசைத்த
          தகைபெறு செங்கல்வ ராயன்
    மணிகளிற் சிறந்த மணிகளாய்த் தேர்ந்தோர்
          மாலையை மாண்புற மாதோ. - 1



    2. வம்மினோ வுலகீர்! தணிகைநா யகன்றன்
          மலரடிக் கிசைந்தமா லையிதைக்
    கைம்மலர் கூப்பித் தணிகைநா யகன்றன்
          கழலிணை யணிந்துள மலரைப்
    பெய்ம்மினோ வீடு பெறுமினோ என்று
          பேசுவ தன்றிநன் காய்ந்தால்
    எம்மனோ ரெங்ங னினியநன் மாலை
          யிதன் பெருஞ் சீருரைப் பதுவே? - 2


    உள்ளவு மினிக்கும் உரைக்கவு மினிக்கு
          முன்னியே யேட்டினி லெழுதிக்
    கொள்ளவு மினிக்குங் கேட்கவு மினிக்குங்
          குமரநா யகன்றிரு வடிக்கே
    பள்ளநோக் கியநல் வெள்ளநீ ரென்னப்
          பத்திமை யளித்திடு மின்ப
    வள்ளலாந் தணிகை நாயகன் மாலை
          மணிநெடுங் கடலுல கினிலே. - 3

    திருத்தணிகேசன் துணை
    6. தணிகை நாயகன் மாலை
    காப்பு

    ஆபத் சகாய விநாயகர் துதி


    திருவளர் தணிகை நாயகன் கழற்கே
          செவ்விய சொல்லொடு பொருள்சேர்
    மருவளர் மாலை புனைய, அம் மாலை
          மகிதலத் திலகிடப் பணிவேன்
    செருவளர் வேடர் மகளைமற் றன்னான்
          திருமணஞ் செயவுத வியநல்
    லுருவளர் பவளமேனியர் ஆபத்
          சகாயரெம் உத்தமர் கழலே. -
    நூல்


    தோத்திரம்
    வேதநா டரிய விழுப்பெரும் பொருளே!
          வேதியா! வேதனுக் கன்று
    போதனை புரிந்த புண்ணிய மூர்த்தீ!
          புகலியிற் கவுணிய னாகி
    மாதுமை தந்த பாலமு துண்டு
          மண்டலம் விண்டலம் வியப்பக்
    கோதிலாத் தமிழை இசையொடும் விரித்த
          குமரனே! தணிகை நாயகனே! - 1


    சங்கத்துப் புலவர் வணங்கவே அன்று
          சாரதா பீடத்தி லமர்ந்தே
    அங்கர்த்தம் அவர்கள் அகப்பொருட் குரைப்ப
          அரும்பொருள் ஈதெனக் குறித்த
    துங்கப்பொன் மணியே! ஆருயிர்த் துணையே!
          தூயநற் சோதியுட் சோதீ!
    அங்கத்தைப் பெண்ணா ஆக்கிய அரசே!
          அற்புதா! தணிகை நாயகனே! - 2


    ஆறுபடை வீடு

    திருப்பரங் குன்றத் தலத்திடை ஒருபால்
          தெய்வநா யகியுற அமர்ந்து
    கருப்பவ மகற்றுஞ் செந்திலிற் சேனைக்
          கணங்களின் தலைவனென் றிலங்கிப்
    பொருப்பினிற் சிறந்த பழநியங் கிரியிற்
          புதுப்புதுக் கோலங்கள் காட்டிக்
    குருப்புகழ் பெற்றாய் ஏரகத் தலத்திற்
          குரவனே! தணிகை நாயகனே! - 3


    குன்றுதோ றாடுங் குமரனே! சோலைக்
          குன்றது மறைந்ததிக் காலம்
    என்றுநான் ஏங்கா வண்ணம்நீ அருள்கூர்ந்
          திடங்கொள் என் நெஞ்செனுங் கல்லில்;
    மன்றுதோ றாடும் வள்ளலின் மகனே!
          வரத! நல் மாணிக்க மணியே!
    உன்றிரு வடியை உன்னுவார்க் கருளும்
          ஒள்ளியாய்! தணிகை நாயகனே! - 4


    முருகர் பெருமை - அன்பே அவர்க்கு வேண்டியது

    கணக்கிலை குலமே கணக்கிலை பிறப்பே
          கணக்கெனக் கன்புதான் என்னுங்
    கணக்கினைக் காட்டக் குலம்பிறப் புயர்ந்த
          கன்னிகை தெய்வநா யகியோ
    டிணக்கம தாகக் குறவர்கூட் டத்தாள்
          எயினச்சி வள்ளியை மணந்தாய்
    குணக்கொடு நான்கு திசையடி யார்கள
          கும்பிடுந் தணிகை நாயகனே! - 5


    முருகன் பெருமை- அறிதற்கரிய தன்மை

    வண்டின துருவை எடுத்துநீ யன்று
          மறைப்பொருள் ரகசியம் கேட்டாய்
    பண்டொரு வேங்கை உருவதைத் எடுத்தே
          பாவையவ் வள்லிபால் நின்றாய்
    மிண்டொரு வேடன் செட்டிநன் மாடு
          மேய்ப்பவன் எனப்பல வேடம்
    கொண்டவுன் தன்மை அறிபவர் யாரே?
          கோதிலாத் தணிகை நாயகனே! - 6


    வாணுதற் குறவி வள்ளியை யன்று
          மணந்தனை களவியல் வழியில்;
    பேணுதற் கறியா முரடனோர் கவியைப்
          பேதுற வைத்தனை சுரத்தில்;
    நாணுறச் செய்தாய் கீரனை வெருட்டி;
          நாத உன் தன்மையா ரறிவார்?
    காணுதற் கரிதுன் மாயங்களெல்லாம்;
          கள்வன்நீ தணிகா நாயகனே! - 7


    முருகர் வீரம்

    சூரகம் நடுங்கச் சத்திவேல் விடுத்தாய்;
          சூர்ப்பினோன் சிங்க முகப்பேர்க்
    கோரகம் நூற்றுப் பத்துடை யோனைக்
          கொன்றனை குலிசமாப் படையால்;
    தாரகன் எனப்பேர் இருவரைச் சமரிற்
          சாய்த்தனை; போரினில் நின்போல்
    ஏரக அரசே! யாவரே வல்லார்?
          ஏத்தருந் தணிகை நாயகனே! - 8


    முருகர் சகலகலாவல்லப மூர்த்தி.

    கோனென யாரைக் கூறலாம் சகல
          கூறுடைக் கலைகளுக் கெல்லாம்
    வானினில் மண்ணில் எனமுனம் எழுந்த
          வழக்கது தேவிபாற் செல்லக்
    கானெனுங் குழலாள் குமரனே உன்னைக்
          காட்டிடக் கலையெலாம் வல்லோன்
    நானென மார்பைத் தட்டிய பெருமை
          நலஞ்செறி தணிகை நாயகனே! - 9


    முருக நாம விசேடம்

    ஐயனே எனது கண்ணெனும் வண்டுன்
          அழகிய அடிமலர் நாடும்
    செய்யநீ என்னுள் அறிவெனத் திகழ்ந்து
          தீயன விலக்குதி யதனால்
    மெய்யவுன் நாமம் முருக என் பதையே
          மெய்த்துணை யாநிதம் பகர்வேன்
    செய்யலாஞ் செந்நெற் கதிர்பொலிந் திலங்கு
          செம்மைசேர் தணிகை நாயகனே! - 10


    முருகஎன் றந்நாள் முறையிடு நங்கை
          முறிந்தகை நலமுறப் பெற்றாள்
    முருக என் றன்றாற் றுப்படை பாடி
          முநிவனக் கீரனும் உய்ந்தான்
    முருகஎன் கின்ற நாம விசேடம்
          முற்றுநான் இங்ஙனம் அறிந்தும்
    முருகஎன் றோதேன் ஈதென்ன பாவம்!
          முத்தனே! தணிகை நாயகனே! - 11


    முருகர் லீலைகள்:

    பிரமனோடு நக்கீரனோடு லீலைகள்

    பாவலன் கீரன் வணங்கிலன் என்னும்
          பான்மையைக் கண்டுநீ வெகுண்டு
    பாவினிற் சிறந்த திருமுரு காற்றுப்
          படையவன் பாடவுஞ் செய்தாய்!
    பூவினன் நின்மாட் டடைந்ததண் டனையால்
          பொருளுணர்ந் துணர்வினைப் பெற்றான்!
    தேவ!நின் கோபம் நன்மையே பயக்குந்
          திறத்தது தணிகை நாயகனே! - 12


    இடும்பனொடு லீலை

    அகத்திய ரேவல் அதுசெயக் கருதி
          அன்புடன் சிகரங்கள் இரண்டை
    மகத்துவம் அறிந்து தோளினில் தாங்கி
          வந்தவன் இடும்பனை மடக்கிச்
    சகத்துளோர் போற்றும் பழநியி லாண்ட
          சண்முகா! பருப்பதப் பிரியா!
    சுகத்தினிற் சிறந்த மயில்பரி கொடியாங்
          கருணையாய்! தணிகை நாயகனே! - 13


    ஔவையொடு லீலை

    கொடுபழம் என்று கேட்டநல் லவ்வை
          குலைந்திட வேண்டிய பழந்தான்
    சுடுபழந் தானோ சுடாப்பழந் தானோ
          சொல்லுதி யென்னமற் றவளுஞ்
    சுடுபழம் என்ன விடுபழம் மணலிற்
          றோய்ந்ததை எடுத்தவ ளூத
    கடபட என்ன நகைத்தங்கொ ராடல்
          காட்டிய தணிகை நாயகனே! - 14


    மாடு மேய்ப்பவனாய் வந்த லீலை

    ஏனந்த நாகம் படமெடுத் தாட
          இல்லையென் றொருகவி தொடங்கித்
    தானந்தக் கவியை முடித்திட அறியான்
          தவித்த அப் புலவனுள் நாண
    மானந்து முளத்தன் அடியனுக் காக
          "மயிற் கொத்துக் கஞ்சி"யென் றுரைத்தே
    ஆனந்த மாக அக்கவி முடித்த
          ஆண்டவா! தணிகை நாயகனே! - 15


    திருப்புகழ் வெளியிட அருளியது

    கடன்மடை திறந்த வெள்ளமே என்னக்
          கவிபொழி அருண கிரிப்பேர்
    அடன்மலி அண்ணல் வாழ்வுக்கு நானூற்
          றைம்பது வருடங்கள் பின்னர்த்
    திடமலி பத்தி எந்தையைக் கொண்டு
          திருப்புகழ் வெளிவரச் செய்தாய்
    மடமலி யடியேன் தனக்குமோர் பணியை
          வைத்தருள் தணிகை நாயகனே! - 161


    துணை நீயே

    ஏழிசை நீயே, இசைப்பயன் நீயே,
          இனியநல் லமுதமு நீயே,
    காழியில் உதித்த கவுணியன் நீயே,
          கசிந்துள முருகுநல் லடியார்
    தோழனும் நீயே, துணைவனும் நீயே,
          சுந்தரச் சோதியே! என்றிவ்
    வேழைநா யடியேன் உனைத்துணை கொண்டேன்
          இன்பமே! தணிகை நாயகனே! - 17


    கிளிவிடு தூது

    எங்கள்நா யகனே! உன்னிடந் தூதாய்
          எதை அனுப் புவதென அறிந்தேன்
    மங்கலப் பாவாம் திருப்புகழ் சொன்ன
          வாசகக் கிளியதே உன்பால்
    தங்கிநீ உகக்கச் செந்தமிழ்ச் சொல்லால்
          தனியனேன் துயரெலாம் உரைக்கும்
    அங்கதன் சொல்லுக் கிரங்கிநீ என்பால்
          அருளுவை தணிகை நாயகனே! - 18


    வண்டுவிடு தூது.

    உள்ளதே உரைப்பேன் முன்புநீ வண்டின்
          உருவதை எடுத்தகா ரணத்தால்
    வள்ளலே! பண்செய் வண்டுமிங் குனக்கு
          மகிழ்ச்சியைத் தருவதோர் தூதாம்;
    துள்ளுமா ணவத்தன் அனுப்பின திந்தத்
          தூதென விலக்குதல் செய்யா
    தெள்ளுத லின்றி ஏழையிவ் வடியேற்
          கிரங்குதி தணிகைநா யகனே! - 19


    தன்குறை கூறித் தண்ணருள் வேண்டுதல்

    எத்துணைப் பிழைகள் யானியற் றிடினும்
          எந்தையே! நீ பொறுத் ததனால்
    பித்தனைப் போலப் பற்பல பொல்லாப்
          பிழையெலாஞ் செய்தனன் பேதை
    முத்தனை யானே! மணியனை யானே!
          மூர்க்கனேற் குய்யுநா ளுளதோ?
    தத்தைபோல் மொழியாள் வள்ளிகைப் பிடித்த
          சாமியே! தணிகை நாயகனே! - 20


    மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
          மதியிலான் கதியிலான் வம்பன்
    சட்டவோர் நிமிட நேரமு நினையாச்
          சழக்கனிங் கிவனென என்னைச்
    சிட்ட!நீ துறக்கிற் சேர்கதி யுளதோ
          சிறியஇப் பேதையேன் தனக்கு;
    வட்டவார் சடையெம் வள்ளலுக் குகந்த
          மைந்தனே! தணிகை நாயகனே! - 21


    உனைத்தினந் தொழுதே உன்னியல் பனைத்தும்
          உரைத்திலேன் நெஞ்சநெக் குருகித்
    தினத்தினம் உனது திருப்புக ழோதேன்
          சேர்ந்திடேன் உனதடி யவரை
    மனத்தினில் உனது மலர்ப்பதம் நினைந்தே
          வலம்வரேன் உன்திரு மலையை
    எனைத்தொடர் வினைகள் எங்ஙனே தொலையும்?
          ஈசனே! தணிகை நாயகனே! - 22


    நன்கவி பாடிப் பேரரருள் பெற்ற
          நாவலர் தமதுசொற் பாவைப்
    புன்கவி யென்றே அடக்கமுற் றுரைத்தால்
          பொருளொடும் இலக்கணம் அறியா
    என்கவி கவியாஞ் சத்தமும் பெறுதற்
          கிடம்பெறா தென்பதை யுணர்ந்தேன்
    வன்கவி பறழோ டுழிதருஞ் சாரல்
          மலைதிகழ் தணிகை நாயகனே! - 23


    அரவொலி கேட்டுங் கசிந்திடேன் உள்ளம்,
          அறுமுக! குருபர! குமர!
    சரவண! முருக! எனச் சொலித் தாழேன்
          தாழ்பவர் குழுவினுஞ் சாரேன்
    புரைமிக உடையேன் எனினுநீ என்னைப்
          புறக்கணி யாதிவன் ஏழை
    இரவல னென்றே கடைக்கணித் தருள்வாய்,
          இறைவனே! தணிகை நாயகனே! - 24


    வணக்கமோ டுன்னை வாழ்த்துமா றறியேன்,
          வணங்கிய வாழ்த்துநின் னடியார்
    இணக்கமோ இல்லேன், இணங்குவோ ருறையும்
          இடத்தையும் அணுகிலேன், அந்தோ!
    கணக்கிலாக் காலம் வீணினிற் கழித்தேன்,
          கடையனேன் கதிபெறல் எங்ஙன்?
    குணக்கெழு வோனை வலக்கணாக் கொண்ட
          கோலனே! தணிகை நாயகனே! - 25


    அடியனேன் செய்த பாவங்கள் பலவும்
          அடிக்கடி நெஞ்சுறுத் துவதால்
    படியிலே பெரியோர் சந்நிதி தன்னிற்
          பாவியேன் செல்லவுந் துணியேன்
    விடிவதெஞ் ஞான்றென் வினையிருட் சூழல்?
          வீட்டின்பம் கிட்டுவ தெங்ஙன்?
    செடியனேன் உய்யும் நாளும்ஒன் றுண்டோ?
          தெய்வமே! தணிகை நாயகனே! - 26


    செப்பிடேன் உனது திருப்புக ழதனைச்
          சேர்ந்திடேன் உனதடி யவரோ
    டப்படி யிருந்தால் எப்படிக் கதிநான்
          அடைவனோ அறிந்திலேன் அந்தோ
    இப்படி தனிலே வீணிலே பிறந்திங்
          கிறப்பதோ என்தலை யெழுத்து
    மைப்படி கண்ணி வள்ளிதோள் மணந்த
          மகிபனே! தணிகை நாயகனே! - 27


    கருவினிற் கிடந்த நாள்முதல் துணையாய்க்
          கனிவுகொள் தாயினுஞ் சால
    மருவிநீ பரிந்தென் உடலிடங் கொண்டாய்!
          வள்ளலுன் கருணையை நினைந்தே
    அருவிபோல் மேன்மேற் கண்ணினீர் சொரியேன்
          ஆனந்தங் கொண்டுகூத் தாடேன்
    இருவினை தொலைப்ப தெங்ஙனம் அறியேன்!
          என்பொனே! தணிகை நாயகனே! - 28


    ஆய்ந்தவோர் ஞானம் இலாமையால் அந்தோ
          அறிவிலி பாவங்கள் செய்தேன்
    வாய்ந்ததீ வினைகள் இவ்வுல கிடையே
          வரவரப் பெருகுவ தல்லால்
    ஓய்ந்தபா டறியேன் ஓய்வதற் குற்ற
          உபாயமுந் தேடிலேன், சூரைப்
    பாய்ந்தவே லதனைப் பாடிநான் உய்யப்
          பண்ணுதி தணிகை நாயகனே! - 29


    ஈசனே! பாச நாசனே! இமையோர்
          ஏத்திடு சிவகுக! பரனே!
    தேசனே! உன்னைப் பூசனை புரியேன்
          செபித்திடேன் உனதுமந் திரத்தை
    நேசநே ரொழுக்கஞ் சற்றுமில் கள்வன்
          நீள்பவம் பெருக்குமோர் மூடன்
    நீசனே யிவனென் றெனைப்புறந் தள்ளேல்
          நீதனே! தணிகை நாயகனே! - 30


    தினத்தினம் எனது பொழுதுவீண் பொழுதாச்
          சிதைவதைக் கண்டுள நொந்தும்
    மனத்தொடு வாக்குக் காயமிம் மூன்றும்
          மயிலவ உன்றனக் காக்கேன்!
    எனைத்தொடர் வினைகள் எங்ஙனம் ஒழியும்
          என்றுநான் சுகம்பெறு வேனோ?
    சினத்தைநிந் தனைசெய் முநிவரர் போற்றுஞ்
          சீலனே! தணிகை நாயகனே! - 31


    தேனிஃ தெனவும் அமுதிஃ தெனவும்
          திதிக்குமத் தமிழ்ச்சுவை பருக
    மீனவ னாகி மதுரைமா நகரில்
          வேந்தனாய் வீற்றிருந் தவனே!
    வானவர் விருந்தே! வழித்துணை மருந்தே!
          வருந்துவேன் பலதுயர்க் கிடையே
    ஏனெனக் கேளா திருப்பது மழகோ?
          எந்தையே! தணிகை நாயகனே! - 32


    தூண்டிடா விளக்கே! சுடர்மணித் திரளே!
          சுந்தர மந்தரச் சோதீ!
    வேண்டுவார் வேண்டும் வரமெலாம் அளிக்கும்
          வேலவா! சூழுமிப் பிறவி
    தாண்டுவார் ஓதும் திருப்புகழ்ப் பாவைச்
          சாற்றவும் போற்றவும் நியமம்
    பூண்டுவாழ் வாழ்க்கை அடியனுக் கருளாய்,
          புண்ணியா! தணிகை நாயகனே! - 33


    பணியுமா றறியேன் பணிந்துநிற் பரவிப்
          பராபர குருபர எனநீ
    றணியுமா றறியேன் நன்னெறி மறைத்தே
          ஆட்சிசெய் ஐம்புலச் சேட்டை
    தணியுமா றறியேன் தயாபர! உனது
          சார்பலாற் சார்பிலை யென்றே
    துணியுமா றறியேன் நற்கதி காணத்
          துணைபுரி தணிகை நாயகனே! - 34


    எங்களா ருயிரே! இமையவர்க் கரசே!
          இன்பமே பெருகுறும் ஊற்றே!
    சங்கநான் மறையோர் முறைமுறை பழிச்சும்
          சண்முகா! சரவணோற் பவனே!
    துங்கவார் சடையார்க் கருமறை விரித்த
          தூயவா! பிறவியென் கின்ற
    பங்கமே இல்லா வகையெனக் கருள்வாய்
          பண்ணவா! தணிகை நாயகனே!. - 35


    என்னவே லையில்நான் ஈடுபட் டிடினும்
          ஈச,உன் கழல்கள் என் மனத்தில்
    மன்னுதல் வேண்டும், மாசிலா மணியே!
          வரமிதைத் தந்தருள் புரிதி
    அன்னைமா ரிருவர் நீங்கிடாக் கருணை
          அண்ணலே! அறுமுகத் தரசே!
    உன்னுவா ருன்னும் வரமெலாம் அருளும்
          உத்தமா! தணிகை நாயகனே! - 36


    என்னதான் நல்ல மதியது புகட்டி
          இருத்திநல் வழியிலென் றாலும்
    சொன்னசொற் கேளா மனக்குரங் கிதன்றன்
          துடுக்கினை ஒடுக்கிநீ ஆள்வாய்,
    பின்னுவார் சடையான் பின்னையங் கேள்வன்
          பிரமனும் பணிந்து பூசிக்க
    அன்னவர் வேண்டும் வரமெலாம் அளித்த
          ஆதியே! தணிகை நாயகனே! - 37


    ஐயகோ நல்ல வழியிலே இருத்தி
          ஆண்டவன் திருவருள் கிடைக்கும்
    மையலே கொண்டு பலபல நினையேல்
          வாழியென் நெஞ்சநீ என்று
    பையவே சொல்லிப் பழக்கினும் படியாய்
          பகையிதை வெல்லுமா றுளதோ?
    ஐயனே! சூரைத் துணித்தடக் கியவே
          லத்தனே! தணிகை நாயகனே! - 38


    பின்வரு நிகழ்ச்சி யின்னதென் றறியாப்
          பேதைமை யுடைய இவ் வாழ்வில்
    முன்வரு மார்க்கம் இஃதென அறியும்
          முயற்சிகள் செய்திடேன், நன்மை
    என்வரு மென்று கருதிநான் உள்ளேன்
          எங்ஙனம் உய்வனோ அறியேன்!
    பொன்வரு மேனிப் பூரணா! ஞானம்
          புணர்த்துதி, தணிகை நாயகனே! - 39


    கடலலை போலத் தொடருறும் எண்ணம்
          கணக்கில என்மனத் தெழுந்தே
    அடல்கொளு மதனால் உனைநினை முயற்சி
          அயர்வுறும் சோர்விதைத் தொலைக்க
    உடலிடங் கொள்வாய் உத்தமோத் தமனே!
          உமையருள் பாலனே! அசுரர்
    குடலெனு மாலை சூடுவேற் கரத்துக்
          கொற்றவா! தணிகை நாயகனே! - 40


    சங்கரன் புதல்வா! சரவண! முருகா!
          தாரகற் செற்ற எம் சாமீ!
    ஐங்கரன் துணைவா! ஆறுமா முகவா!
          அத்தனே! பக்தவத் சலனே!
    கங்கைதன் மகனே! கந்தனே! குமரா!
          கவுரிகான் முளை! யென நாளும்
    பொங்குள மகிழ்ச்சி என்றெனக் கருள்வாய்
          புலவனே! தணிகை நாயகனே! - 41


    அன்றுநீ "உலகம் உவப்ப" என்றெடுத்தே
          அருளினை வாக்குநக் கீரற்
    கென்றுநான் கண்டே எனக்கருள் வாக்கென்
          றிரங்குவேன் பன்முறை பணிந்தே;
    சென்றுநீ மணந்தாய் வேட்டுவ மகளைத்
          தேவர்கோன் திருமகள் இருப்பக்,
    குன்றமே வில்லாக் குனித்தவர் புதல்வா!
          குழகனே! தணிகை நாயகனே! - 42


    பிறர்மனை வாயில் காத்துநான் தயவு
          பெற்றிட விரும்புதல் அழகோ?
    அறவழி நின்றே அறுமுக குமர
          ஆண்டவ எனவுனைத் துதிக்குந்
    துறவுகொள் மனத்துத் தூயர்வா ழிடத்திற்
          சோர்விலா திணங்கிடும் அந்தப்
    பெறவரி தாகும் பேற்றினைத் தருவாய்
          பிஞ்ஞகா! தணிகை நாயகனே! - 43


    காத்திருந் தாலுன் சந்நிதி வாயில்
          காத்திடும் பாக்கியம் வேண்டும்,
    பார்த்திருந் தாலுன் திருவுரு அழகே
          பார்த்துநான் மகிழ்ந்திடல் வேண்டும்,
    யாத்திருந் தாலுன் புகழ்சொலும் பாக்கள்
          யாத்துநான் களிப்புறல் வேண்டும்
    ஏத்தருந் திறல்சேர் வேற்படை யரசே!
          ஏகனே! தணிகை நாயகனே! - 44


    சத்திவே லேந்துஞ் சண்முகா! உனது
          தாண்மலர் நெஞ்சினி லிருத்திப்
    பத்தியாற் பாடிப் பணியுமா றறியேன்
          பவத்தொழில் பற்பல புரிவேன்
    எத்தன்நான் எனினும் வேல்மயில் சேவல்
          என்னுமிம் மூன்றெயும் ஓதி
    நித்தமே பணியும் நினைவதைத் தருவாய்,
          நிமலனே! தணிகை நாயகனே! - 45


    தணிகை நாயகனே! தணிகை நாயகனே!
          தணிகையில் எங்கள் நாயகனே!
    தணிகை நாயகனே! தணிகை நாயகனே!
          தணிகையில் எங்கள் நாயகனே!
    தணிகை நாயகனே! தணிகையாய்! என்றே
          சதாவுனைப் பாடுமப் பணியே
    பணியதா இந்தப் படிறனுக் கருள்வாய்
          பைம்பொனே! தணிகை நாயகனே! - 46


    திரைகுலாங் கங்கைச் சுத! குக! உனது
          திருவடிக் கன்புபூண் டவராய்
    வரைகுலாந் தணிகைப் புராணமன் றுரைத்த
          வண்டமிழ்ப் புலவரோ ரிருவர்
    உரைகுலாம் பாக்கள் ஓதியிங் குணர்ந்தே
          உய்யுநாள் எளியனுக் குளதோ?
    அரைகுலாஞ் சதங்கை நாததத் துவஞ்சொல்
          அழகனே! தணிகை நாயகனே! - 47


    தாயினு நல்ல தலைவவோ என்றும்
          சண்முக குமரனே என்றும்
    வாயிலு மனத்தும் உன்னையே வழுத்தும்
          வரமிதைத் தந்தருள் செய்து
    நோயினு நலிசெய் துயரினும் படாத
          நுண்ணிய திறத்தையுந் தருதி
    காய்நிலை யறிறாச் செழுங்கனி யென்னக்
          கவின்பெறு தணிகை நாயகனே! - 48


    பிறந்தநாள் உன்னைப் பேசுநாள் என்றே
          பெரியவர் குறித்ததை உணர்ந்தும்
    சிறந்தநாள் வழியைத் தேடிலேன் வீணே
          சிதறினேன் எனதுகா லத்தை
    மறந்திடா துன்னை வழுத்தியே உய்யும்
          வகைதனைக் கண்டிலேன், உனைநான்
    இறந்துபோம் அன்று மறக்கினும் குறிக்கொள்
          என்னைநீ தணிகை நாயகனே! - 49


    நினைவில னெனினும் நினைந்துனை யேத்தி
          நித்தமுந் தொழுமவ ரிடத்தை
    வினவில னெனினும் என்னையோர் பொருளா
          விரும்பிநீ என்னிடை வந்து
    நனவினி லருளும் பாக்கிய மதனை
          நாதனே! விழைந்தனன் எனக்குக்
    கனவினி லேனும் உய்யுமா றொருசொல்
          கழறுதி தணிகை நாயகனே! - 50


    ஏறுவா கனமாக் கொண்டவ ருவக்க
          ஈறிலா மொழியதை யவர்தாம்
    தேறுமா றுரைத்த தேசிகோத் தமனே!
          சீறியே ஏமனென் னுயிரைக்
    கூறுசெய் போதுன் நாமம்ஓ திடவும்
          "குமரனே நம" எனும் எழுத்தோ
    ராறுமெ னெஞ்சிற் றோன்றவும் அருளாய்
          ஐயனே! தணிகை நாயகனே! - 51


    ஆணவ மோடத் துவிதம தானேன்
          அவ்வகை யேநிறை பொருளாம்
    தாணுநின் னோடத் துவிதம தாகச்
          சாருநாள் எளியனுக் குண்டோ?
    வேணவா வுடனே அகத்தியன் பிரமன்
          விண்டுபு ரந்தரன் ஈசன்
    பூணதாம் நாகம் வழிபட அருள்செய்
          புராணனே! தணிகை நாயகனே! - 52


    தோளின்மேல் வைத்த ஆட்டினைத் தேடிச்
          சோர்வுறும் இடையனே போல
    நாளுமே என்னுள் நாதநீ யிருந்தும்
          நாயினேன் கண்டிலேன் உன்னைக்
    கோளுமோர் நாளும் தீயன எனினும்
          குறிக்கொள்நீ என்னையு மிரங்கி
    ஆளியோ டரிகள் திரிதரு கயிலை
          யனையநற் றணிகை நாயகனே! - 53


    திருவணா மலையிற் றோற்றிய பெருமான்
          திருப்புகழ் பாடிய பெருமான்
    கருவணா வண்ணம் உலகின ருய்யுங்
          கதிவழி காட்டிய பெருமான்
    குருவணா என்றுன் குரைகழல் பணியக்
          கோதிலாச் சந்தமும் பொருளும்
    தருவணா என்றே உனைத்தொழ அருள்வாய்
          சண்முகா! தணிகை நாயகனே! - 54


    ஆரமு தன்ன வாக்கினன் எங்கள்
          அருண கிரிப்பெயர் வள்ளல்
    ஈரம தோடிவ் வுலகின ரெல்லாம்
          இடரொழிந் தின்புற வேத
    சாரம தாகப் பாடிய ஞானத்
          தமிழ்மறைத் திருப்புகழ்ப் பாவை
    வாரம தாக உருஎணி ஓதும்
          வகையருள் தணிகை நாயகனே! - 55


    அண்டரோ டிருக்கும் அரும்பதம் வேண்டேன்
          அயன்திரு மாலவர் பதமும்
    கொண்டுநான் சுகிக்க விரும்பிலேன், குமர
          குருபர எனநிதம் உருகிப்
    பண்டவ றாதுன் திருப்புகழ் பாடிப்
          பரவியே பணிசெயும் உண்மைத்
    தொண்டரோ டிணங்கும் பேறதே வேண்டும்
          சுவாமியே! தணிகை நாயகனே! - 56


    பன்னகா பரணர்க் கோம்பொருள் உரைத்த
          பராபர குருபர மூர்த்தி!
    என்னவே கத்தில் உலகியல் ஆசை
          இயற்கையில் என்மனத் துளதோ
    அன்னவே கத்தில் உன்றன்மே லாசை
          அமைந்துநான் உய்ந்திடல் வேண்டும்
    முன்னவா! இந்த என்னவா தன்னை
          முடித்துவை தணிகை நாயகனே! - 57


    அற்புதன் உனது தந்தைமுன் னொருநாள்
          அருச்சனை பாட்டெனக் குறித்த
    சொற்பொருள் அறிந்த நாள்முதற் றூய
          சொன்மல ரதுகொடுன் னடிக்கே
    நற்பத மாலை எண்ணில சூட்ட
          நாயினேன் விழைந்தனன் எனக்குக்
    கற்பனை சிறந்த வாக்கினை நீயே
          கனிந்தருள் தணிகை நாயகனே! - 58


    ஆலந்தான் அமுதா உண்டவர் நீசொல்
          அருமறைப் பொருளினை என்ன
    மூலந்தான் இதுவென் றரும்பொருள் விரித்த
          முன்னவ! என்னுயிர்த் தலைவ!
    ஏலந்தான் கமழும் குழலினள் வள்ளி
          யின்புறு நாயக! எனது
    காலந்தான் வீணாக் கழிவுறா வண்ணம்
          காத்தருள் தணிகை நாயகனே! - 59


    எத்துணை யிடர்கள் எனைநலிந் தாலும்
          எள்ளள வேனும்நின் னடிக்கண்
    பத்திமை குறையா மனநிலை வேண்டும்
          பணிசெயுந் தொண்டதே வேண்டும்
    அத்தகைத் தொண்டு முடக்குறா வண்ணம்
          ஐயனே! நோயிலா வாழ்வும்
    சுத்தம்நல் லகத்தும் புறத்தினும் வேண்டும்
          தூயனே! தணிகை நாயகனே! - 60


    சூரனுக் கரணாத் தொடர்ந்தெங்கும் போந்த
          தொல்கிரி எழுகிரி சாய்த்த
    வீரநின் கைவே லதைவிடுத் தென்னை
          விடாதெழு வினைக்கிரி தொலைப்பாய்,
    சாரநின் கழற்கே ஆறெழுத் தோதிச்
          சண்முக சண்முக என்றே
    ஈரநெஞ் சினனாய்ச் செபித்திடும் பேற்றை
          யீந்தருள் தணிகை நாயகனே! - 61


    உன்னையே ஒழிய ஒருவரை அறியா
          உண்மையன் புள அடி யார்கள்
    பின்னையே நின்று காப்பதுன் பெருமைப்
          பெற்றி;மற் றங்கதன் மெய்ம்மை
    தன்னையே விளக்கும் வள்ளிசன் மார்க்க
          தருமம்;அத் தருமநன் னெறியை
    நின்னையே நம்பிப் பற்றுதற் கருளாய்,
          நிருமலா! தணிகை நாயகனே! - 62


    மண்ணைமுன் இரந்த மாலவன் மருகன்
          மறையவர் மனைதொறும் அன்பால்
    நண்ணிமுன் அன்னம் அடியனுக் காக
          நண்பகல் இரந்தவன் புதல்வன்
    அண்ணல்நீ அதனால் உன்னிடம் அடியேன்
          அருளன்பொ டறனிவை இரந்தால்
    தண்ணளி யாலென் இரத்தலை வெறுக்கேல்
          சாந்தனே! தணிகை நாயகனே! - 63


    முருகரை வைதல்

    முத்தமி ழாலே வைபவர் தமையும்
          முனிவின்றி வாழவைப் பாயென்
    றுத்தமப் புலவர் உரைத்தன ரதனால்
          ஓடுடன் கோவணந் திருடும்
    பித்தனார் புதல்வன், அளைகள வாணி
          பேணுமோர் மருகன், ஓர் பெண்ணை
    எத்தினால் மணந்த கள்வனென் றுன்னை
          ஏகவன் தணிகை நாயகனே! - 64


    இறைவனொடு மன்றாடி வேண்டுதல்

    கண்பிசைந் தழநீ தரிக்கலாற் றாது
          கடிதினில் தாயவள் விடைமேல்
    விண்மிசை வந்தே ஞானபோ னகத்தை
          வேண்டியே அளித்தனன் உனக்கு
    பண்பிசை வேலா வந்தரு ளென்றே
          பாவியேன் அழுதழு தழைத்தும்
    நண்பிசை அஞ்சேல் எனுஞ்சொலுங் கேளேன்
          ஞாயமோ? தணிகை நாயகனே! - 65


    சிறப்பினை உணரான் நீற்றினைப் பேணான்
          செழியன்மாட் டருளது வைத்தே
    அறப்பெருங் கருணை யாலவன் இருகூன்
          அப்படித் தொலைத்தவுன் றனக்குச்
    சிறப்பினை உணர்ந்தே நீற்றினைப் போற்றும்
          செயலுள எனக்குறு மிந்தப்
    பிறப்பினின் முடங்கு கூனொன்றைத் தீர்த்தல்
          பெரியதோ? தணிகை நாயகனே! - 66


    ஐயனே! உனது வாக்கினிற் பிறந்த
          அருமையாற் பனையது சிவத்தைப்
    பையவே கூடிற் றெனமிகப் பெரியார்
          பகர்ந்தனர் ஆதலால் இந்த
    மெய்யதே அறியா வன்பனை அழிவில்
          வீடுறும் வகைக்குநீ அருளி
    உய்யவே வைப்பாய் ஒப்புயர் வில்லா
          ஒருவனே! தணிகை நாயகனே! - 67


    பாருளார் புகழ எலும்பினின் றொருபூம்
          பாவையை எழுப்பிய உனக்குச்
    சீருலாம் உயிரோ டுடலது கொண்டே
          தியங்குமிவ் வேழையின் நாவில்
    ஏருலாம் இனிய நல்லதேம் பாவை
          எழுப்புதல் அரியதோ இயம்பாய்
    காருலாங் குன்று தொறுமினி துலவுங்
          கடவுளே! தணிகை நாயகனே! - 68


    தண்ணறுஞ் சோலை மருவுகுற் றாலத்
          தலமதில் அகத்திய னார்க்குக்
    கண்ணன் வாமனனை வாமனாஞ் சிவனாக்
          கவினுறக் குறுகுதற் குற்ற
    கண்ணிய மான தந்திர மதனைக்
          காட்டினை எனக்கிந்தச் சீவன்
    புண்ணியச் சிவனாக் குறுகுமோர் வழியைப்
          புகன்றருள் தணிகை நாயகனே!. - 69


    ஒன்றைமூன் றாகப் பெருக்கவும் வல்லை
          ஓதிநீ கண்ணனை நோக்க
    அன்றுமுக் கண்ணன் ஆயினன் அவனும்
          அங்ஙனே கணக்கனா மென்னை
    என்றுமுக் கணக்க னாக்குவை அறியேன்
          எளியனேற் கப்படி ஒருநாள்
    துன்றுமோ? துன்றிச் சுகம் பெறுவேனோ?
          சொல்லுதி தணிகை நாயகனே! - 70


    காணுதற் கரிய கயிலையைக் காணக்
          கவலைகொள் கீரனு வக்க
    நீணுதற் கண்ணர் உரைத்தமா கயிலை
          நேர்தரும் காளத்தி யென்று
    பேணுதற் குரிய சூழ்ச்சியை உரைத்தாய்
          பேயனேற் கயிலையெ னுளத்திற்
    பூணுதற் குற்ற சூழ்ச்சியிப் பொழுதே
          புகலுதி தணிகை நாயகனே! - 71


    கல்லடி பெற்றுக் கதியளித் தனர்முக்
          கண்ணர்நின் தந்தைமற் றொருநீ
    நல்லடி கொடுத்தே னும்மெனக் கருள்வாய்
          நாதனே எனவுனைப் பணிவேன்
    சொல்லடி யழகு சிறிதுமில் கவிநான்
          சொலினுமென் மீதுநீ மகிழ்வாய்
    பல்லடி யார்கள் ஜனவரி முதல்நாள்
          பரவிடு தணிகை நாயகனே! - 72


    அன்றொரு யாகத் தெழுந்தவல் லாட்டை
          அடக்கிநீ யானமாக் கொண்டாய்
    இன்றென துடல்வாழ் ஐவர்வல் லாட்டை
          எந்தைநீ அடக்குதல் வேண்டும்
    என்றுநான் உனது மலரடி தினமும்
          இறைஞ்சுகின் றேனருள் புரிதி
    குன்றுதோ றாடல் உவந்திடு குமர
          குருபர! தணிகை நாயகனே! - 73


    ஏழகம் அடக்கி யானமாக் கொண்ட
          இறைவனே! எனதுபொல் லாத
    பாழகம் அடக்கி மோனமா நிலையைப்
          பரிந்தளித் தருளுதி! புலராக்
    காழகம் புலர உடுத்துக்கை கூப்பிக்
          கண்மழை பொழியுநின் னடியார்
    வாழகம் தேடி யேவிளை யாடும்
          வள்ளலே! தணிகை நாயகனே! - 74


    பூவினைக் கொய்யேன் மலரடி போற்றேன்
          பூதலத் தேபல மயக்கில்
    மேவின னாகிச் செந்நெறி துறந்து
          வினையதே பெருக்குவ னெனினும்
    மாவினைத் தொலைத்த வீரனா முனக்கென்
          மாவினை தொலைத்தல்தான் அரிதோ?
    சேவினை யேறுஞ் செம்மலா ரளித்த
          செல்வமே! தணிகை நாயகனே! - 75


    வரத்தினர் மூவா யிரவரை வெல்லும்
          வழிதனை யறிந்திலேன் என்று
    சிரத்தையோ டுன்னைத் தியானித்த விஜயன்
          திகைப்பறத் தந்திரம் உரைத்தாய்
    உரத்தினர் ஐவர் என்னிடை யிருந்தே
          ஓரஒட் டார்உன்னை! அவரைத்
    தரத்தினில் வெல்லும் தந்திரம் யாதோ
          சாற்றுதி தணிகை நாயகனே! - 76


    தம்பியர் பானு கோபன்செய் மாயத்
          தடையினிற் பட்டஅப் பொழுதே
    வெம்பிநீ திருக்கை வேலதை விட்டு
          மீட்டனை அவர்தமை; உன்னை
    நம்பிய நானும் மாயையிற் பட்டே
          நடுங்குகின் றேனதை யறிந்தும்
    எம்பிரான்! ஏனோ திருவருள் புரியா
          திருத்திநீ தணிகை நாயகனே! - 77


    இந்திர ஞாலத் தேரைநீ நோக்கி
          இருத்தியென் னிடத்தில்நீ என்னத்
    தந்திரம் ஒழிந்து மற்றந்தத் தேரும்
          தங்கிய துன்வயின்; அதுபோல்
    அந்தரக் கறங்கும் ஆடுபம் பரமும்
          அனையஎன் ஆட்டங்கள் ஒழிந்து
    சுந்தர! நின்பால் நானுறற் குரிய
          சொல்லருள் தணிகை நாயகனே! - 78


    சைவர்கள் விழுங்கும் ஆனந்தக் கனியே!
          சார்ந்தவர்க் கெய்ப்பினில் வைப்பே!
    மெய்வரை போன்ற அசுரர்எண் ணிலர்கள்
          வேதனை புரியமற் றவரை
    நைவகை செய்த பெருந்திறற் குமர
          நாயக! உன்றனக் கிந்த
    ஐவர்செய் ஆசும் அறுத்தெனை யாளல்
          அரியதோ? தணிகை நாயகனே! - 79


    உன்னிரு தாள்கள் அருச்சனை புரிந்த
          ஒள்ளியர் கச்சியப் பருக்கு
    முன்னிரு வினைதீர் கந்தபு ராணம்
          முழுமையும் திருத்திநீ அளித்தாய்,
    என்னிரு கண்ணே! கண்ணினுள் மணியே!
          யான்சொலும் பாடலைத் திருத்த
    உன்னருள் கூடும் பேற்றினை விழைந்தேன்
          ஒப்பிலாத் தணிகை நாயகனே! - 80


    கவிசொலேன் என்று தருக்கிய முரட்டுக்
          கவிஞன்மாட் டோர்கவி பெறவே
    புவிதனிற் சுரத்தில் வெயிலினிற் சென்று
          புரையுள பாடலைப் பெற்றாய்
    தவிதவிப் புற்றே நலபல பாடல்
          சாற்றிநான் சாமிவா எனினும்
    செவிதனிற் கொள்ளாய் ஈதுனக் கழகோ?
          செய்யனே! தணிகை நாயகனே! - 81


    ஊமனா யிருந்த பாலன் நா வினிலே
          உனதுகை வேல்கொடு பொறித்துப்
    பாமனா அவனைச் செய்த அக் கருணைப்
          பான்மையைக் கண்டிங்கு நானும்
    வாமனார் மருகா! நெஞ்சினிற் செஞ்சொல்
          வாரிதி மடைதிறந் தாற்போல்
    தாமனா எனக்கென் றுன்னடி பணிந்தேன்
          தயைபுரி தணிகை நாயகனே! - 81


    ஆறுமா தத்திற் கலைகளெல் லாமோர்
          அரையனங் கறிந்திட அவற்குத்
    தேறுமா றுரைத்த மந்திரி மூலம்
          செய்தனை இஃதுனக் கரிதோ?
    வீறுமோ ரறிவும் அறிவினை அறியும்
          விளக்கமும் வித்தைக ளனைத்தும்
    ஊறுறா வண்ணம் ஓரிமைப் பொழுதில்
          உணர்த்துவை தணிகை நாயகனே! - 83


    அற்புதஞ் செறிந்த சித்திர நிறைந்த
          அருமைசேர் பாடல்கள் சொல்லும்
    நற்பதம் உனக்கிங் கில்லைபோ என்று
          நாதநீ கூறுவை யாகில்
    சொற்பதம் வேண்டாம் "சொல்லறச் சும்மா
          சுகமுற இருத்தி"யென் றேனும்
    அற்பனுக் கொருசொல் வழங்குதி கருணை
          அண்ணலே! தணிகை நாயகனே! - 84


    பத்த வத் சலனே! ஆணவங் கொண்ட
          பன்றியின் எயிற்றினைப் பறித்தங்
    கத்தனுக் களித்த அடன்மிகு மரசே!
          ஆணவ மென்னுமோர் ஏனம்
    சுத்தசன் மார்க்க நெறிமறைத் தென்னைச்
          சோகத்திற் படஇடர் செய்யும்
    தத்ததை நீக்கிச் சத்திய ஞானந்
          தந்தருள் தணிகை நாயகனே! - 85


    நன்றி பாராட்டல்

    அன்னைநீ யேயென் அத்தனு நீயே
          அன்பினுக் குரியசெல் வனுநீ
    என்னையோர் பொருளாக் கருதிநீ யாண்ட
          எளிமையை என்றுநான் மறக்கேன்
    பொன்னைமா தரையும் மண்ணையும் நாடாப்
          புநிதர்தம் நெஞ்சகம் பொலியும்
    தன்னைநே ரில்லாச் சச்சிதா நந்த
          தாணுவே! தணிகை நாயகனே! - 86


    அன்பொழு கடியா ரவரொடுங் கூடேன்
          அண்ணல்நின் திருப்புகழ் பாடேன்
    பொன்பொருள் கவலை பற்றிய அதனால்
          போற்றிலேன் உன்னைநான் எனினும்
    என்பொழு தெல்லாம் ஞாநசம் பந்தர்
          இன்னிசைப் பாடலை ஆய்ந்தே
    நன்பொழு தாக நயந்தருள் செய்தாய்
          நல்லனீ! தணிகை நாயகனே! - 87


    தலமெலாஞ் செல்லேன், தீர்த்தங்கள் படியேன்
          தாண்மலர் போற்றிலேன் எனது
    மலமெலாம் போக்கும் மார்க்கத்தை உணரேன்
          வகையிலேன் மூடனா னெனினும்
    நலமிலா னிவனென் றெனையொதுக் காது
          நாத! நீ யாண்டதும் வியப்பே!
    சலமெலாம் போற்றுஞ் சரவணப் பொய்கைத்
          தடங்குலாந் தணிகை நாயகனே! - 88


    என்னையோர் பொருளாக் கருதிநீ என்றன்
          இளமைதொட் டெனையக லாமல்
    அன்னையே போல அநுதினம் காக்கும்
          அருமையை நினைதொறும் உள்ளம்
    உன்னையே நாடி மகிழ்வுறும் உன்றன்
          ஒப்பிலாக் கருணையை வியக்கும்
    பொன்னையே நிகர்க்குந் திருவுரு அழகா!
          பூரணா! தணிகை நாயகனே! - 89


    காயிலாக் கனியே! உனைநிலை யாகக்
          கருதுறா ஏழைநா யடியேற்
    கேயவே "தணிகை மணி"யெனும் பட்டம்
          எண்ணவை முன்புசூ ரியனார்
    கோயிலா தீனத் தலைவர் மீனாக்ஷி
          சுந்தர தேசிகக் கோமான்
    வாயிலா அளித்த கருணையை மறவேன்
          வரதனே! த ணிகை நாயகனே! - 90


    வான்பெற வானோர் வேண்டிடச் சூரை
          வதைத்தவே லாயுதத் தேவே!
    யான்பெறத் தகாத பெருமைகள் பல இங்
          கெனக்களித் தருளினை அதனால்
    தேன்பெறு கடப்ப மாலையாய்! உனது
          திருவருட் பெருமையே துலங்கும்!
    மான்பெறு கண்ணி வள்ளிதாள் பணியு
          மணாளனே! தணிகை நாயகனே! - 91


    கத்தனே! கருணை வெள்ளமே! கண்ணைக்
          கண்ணிமை காப்பது போலப்
    பித்தனே னென்னைத் தீயவாம் வினைகள்
          பீடியா வகைபுரக் கின்றாய்
    இத்தனை கருணைக் கேழைநா யடியேன்
          எவ்விதத் தகுதியை யுடையேன்
    சித்தனே! சித்தர் நாடுறு திருவே!
          சேந்தனே! தணிகை நாயகனே! - 92


    தூவிநற் பீலி மாமயி லூருஞ்
          சுப்பிர மணியனே! வானோர்
    கூவியங் கழைத்தும் காணுதற் கரிய
          கோலனாய் நிற்குநீ இந்தப்
    பாவியின் ஆவி அதனிலே புகுந்த
          பாக்கியம் செப்புறுந் தகைத்தோ!
    காவியின் மலர்கள் நாடொறு மலருங்
          கவின்பொலி தணிகை நாயகனே! - 93


    அந்தணச் சிறுவ னாகிநீ யிந்த
          அடிமைதன் கனவினில் ஒருநாள்
    வந்தெதிர் நின்று வழியதை மறித்து
          மறந்தனை எலுமிச்சம் பழத்தைக்
    கந்தரந் தாதி தன்னிலே என்று
          கனிவுடன் மொழிந்துபின் மறைந்த
    அந்தமாக் கருணைக்கென்னகைம் மாறிங்
          காற்றுவன் தணிகை நாயகனே! - 94


    காவடி மேளம் என்றும் ஓயாத
          கண்ணியஞ் சேர்திருப் பழநி
    ஆவினன் குடியைக் கண்டுநான் தொழுதே
          ஆனந்தம் அடையநீ செய்தாய்!
    தேவர்கள் தேவே! ஏரகத் தரசே!
          செந்திலம் பதியமர் சேயே!
    மூவரும் வணங்கும் பரங்குன்றம் அமர்ந்த
          முதல்வனே! தணிகை நாயகனே! - 95


    விரிபொழில் வீழி மிழலையைக் காண
          விரும்பின அடியனுள் ளுவக்க
    அரிபணி வீழி மிழலையுங் காட்டி
          அன்பொடு மப்பய ணத்தில்
    உரியணி சட்டை நாதர்வாழ் காழி
          உத்தமத் தலத்தையுங் காட்டித்
    திருவருள் புரிந்த கருணையை மறவேன்
          செம்மலே! தணிகை நாயகனே! - 96


    வேலின் சிறப்பு

    வேலதே சிவமஞ் செழுத்தெனச் சொற்றார்
          விரிபுகழ்ப் பாவல ரதனால்
    வேலதே நினைக்க, வேலதே ஓத,
          வேலதே யான்தொழ என்றன்
    பாலதே சிவனார் அஞ்செழுத் தோதும்
          பயனெலாம் எனஉணர்ந் தேன்யான்
    தோலதே உடையாக் கொண்டவர்க் கோர்சொல்
          சொல்லிய தணிகை நாயகனே! - 97


    மயிலின் சிறப்பு

    காண்டகு மயிலுக் கொருபெயர் நீல
          கண்டமென் பாரத னாலே
    ஆண்டவன் நீல கண்டத்தைத் துதிக்க
          அதில்வரு பயனெலாம் மயிலை
    வேண்டியான் துதிக்க எளிதினிற் கூடும்;
          வேல் மயில் இரண்டையும் நினைக்க
    ஈண்டிடு பலன்கள் இவையெனக் கூற
          இயலுமோ? தணிகை நாயகனே! - 98


    சேவலின் சிறப்பு

    சேவலுக் கியான் செய் தக்ககைம் மாறு
          செகத்தினில் இல்லை; என் உயிரின்
    காவலுக் கதைப்போல் துணைபிறி தில்லை;
          காலையில் நாடொறுங் கூவி,
    மாவலைப் போக்கும் ஞானசூ ரியனாம்
          வள்ளலே உனைநினைப் பிக்கும்;
    ஆவலோ டதனை யானினைந் தேத்த
          அருளுதி தணிகை நாயகனே! - 99


    வேல், மயில், சேவல் தியானப் பலன்

    ஐயனே உனது வாகன மாகும்
          ஆடுமாப் பரிதனைப் போற்ற
    மெய்யதா யெனதா ணவமது தொலையும்;
          வீறுசே வற்கொடி தன்னைத்
    துய்யமா நிலையில் தியானிக்க ஞானம்
          துலங்கும்; நின் வேற்செபம் கதியை
    உய்யுமா றருளும்; உண்மையீ துண்மை
          உண்மையே தணிகை நாயகனே! - 100


    தணிகைச் சிறப்பு

    சகந்தனில் ஞானம் வேண்டிடில் உள்ளத்
          தவிப்பதை அடக்குக, மற்றங்
    ககந்தனில் அடக்கம் வேண்டிடில் தணிகை
          அடைக, என் றாரர னார்தாம்!
    சுகந்தமே குன்றாத் திருப்புகழ்ப் பாக்கள்
          சொல்லிய வே சொல்லி யேத்த
    உகந்திடு வானே! உயர்மறைப் பொருளே!
          ஒளிவளர் தணிகை நாயகனே! - 101


    தணிகையின் பிறபெயர்கள்

    உற்பல கிரிமூ லாத்திரி கணிகா
          சலமுயர் இந்திர நகரி
    கற்பசித் கந்த பர்வதம் சீபூ
          ரணகிரி நாரதப் பிரியம்
    நற்ப்ரண வார்த்த நகரம் அகோர
          கைவல்யப் பிரதமென் றின்ன
    பற்பல பெயர்கொள் சீருறு செல்வப்
          பதியதாந் தணிகை நாயகனே! - 102


    தணிகை ஆலயங்கள்

    நந்தியாற் றுதக்கில் வீராட்ட காச
          நாதனா ராலயம், தெற்கில்
    எந்தைநீ சாமி நாதனா யமரும்
          ஈச்சுரம், அங்கதன் அருகே
    வெந்தநீ றணிந்து தவத்தினி லிருந்த
          விஜயரா கவர்தளி, தென்பால்
    சந்தமார் சத்த கன்னியர் கோயில்
          தழைத்திடுந் தணிகை நாயகனே! - 103


    தணிகைத் தீர்த்தங்கள்

    இந்திர தீர்த்தம் நாரத தீர்த்தம்
          எழிலகத் தியமுனி தீர்த்தம்
    செந்திரு கணவன் விட்டுணு தீர்த்தம்
          சேடதீர்த் தம்மிவை மலைமேல்,
    நந்தியாற் றுடனே சரவணப் பொய்கை
          நாடுமேழ் சுனைமலைக் கீழ்பால்,
    அந்தணன் பிரம தீர்த்தமு நடுவண்
          அமைந்துள தணிகை நாயகனே! - 104


    தணிகேசர் அழகு

    விண்டு நான் முகன்செய் பூசனை யுகந்த
          மேலவா! நின்தணி மலையைப்
    பண்டுநான் செய்த புண்ணிய வசத்தாற்
          பணிந்திடும் பாக்கியம் பெற்றேன்
    அண்டர்நா யகனே! அரிதிரு மருகா!
          அழகிய நின்திருக் கோலம்
    கண்டஎன் கண்கள் பிறபொருள் கண்டு
          களிக்குமோ? தணிகை நாயகனே! - 105


    தணிகைக் காட்சிகள்

    ஒப்பிலி உனது திருவடி அழகை
          உளக்கிழி வரைபவர் ஒருபால்,
    திப்பிய இசைசேர் திருப்புகழ்ப் பாக்கள்
          செவியுற மகிழுநர் ஒருபால்,
    மைப்படி கண்ணி வள்ளிதாள் பணிந்து
          மகிழ்ந்துள நெகிழ்பவர் ஒருபால்,
    இப்படிப் பலவே றடியவர் கூடும்
          எழிலுறு தணிகை நாயகனே! - 106


    கிருத்திகை தோறும் பலதிசை யடியார்
          கெழுமுமத் திருக்குளக் காட்சி
    அருத்தியோ டன்பர் ஆறறு பதுவாம்
          அழகிய மலைப்படி யேறித்
    திருத்தியோ டுனது திருப்புகழ் பாடிச்
          செல்லுமக் காட்சிமற் றெனது
    வருத்தமே தீர்க்கும் பல்வகைக் காட்சி
          மறப்பனோ? தணிகை நாயகனே! - 107


    பிரார்த்தனை

    நன்கவிப் புலவர் தணிகையின் பெருமை
          நலபல பாடலாற் பாடி
    உன்கரு ணைக்குப் பாத்திர மானார்;
          ஒருவகை ஞானமு மில்லா
    என்கவி எவ்வா றுனையுகப் பிக்கும்?
          என்பொனே! எளியனே னிட்ட
    புன்கவி மாலை தனையுமேற் றருள்வாய்!
          புநிதனே! தணிகை நாயகனே! - 108
    ------------------



    முருகனே ஓலம்! முதல்வனே ஓலம்!
          மூவர்கள் தம்பிரான் ஓலம்!
    அருகனாப் பத்தர்க் கருளுவாய் ஓலம்!
          அரவணைத் துயிலுறு மாயன்
    மருகனே ஓலம்! மயிலனே ஓலம்!
          வள்ளிம ணாளனே ஓலம்!
    உருகுவா ருள்ளத் துறைபவ ஓலம்!
          ஓலமெந் தணிகை நாயகனே! - 1


    வேலினுக் கபயம், மயிலினுக் கபயம்,
          வீறுசே வற்கொடிக் கபயம்!
    சேலினுக் கிணையாம் கண்ணினள் தேவ
          சேனையின் திருவடிக் கபயம்!
    பாலினுக் கிணைமென் மொழியினள் வள்ளி
          பாததா மரைகளுக் கபயம்!
    ஆலனுக் குணர்த்துங் குரவநின் கழற்கே
          அபயநான் தணிகை நாயகனே! - 2


    சரணமெ மரசே! சரணமெ மறிவே!
    சரணநீ பவளமே னியனே!
    சரணமெ முயிரே! சரணமெ முணர்வே!
    சரணநீ பரமதே சிகனே!
    சரணமெந் திருவே! சரணமெங் குருவே!
    சரணநீ குருவிலா தவனே!
    சரணமெங் கதியே! சரணமெம் விதியே!
    சரணநீ தணிகை நாயகனே! - 3


    அடைக்கலம் வேந்தா! அடைக்கலம் சேந்தா!
    அடைக்கலம் அடைக்கலம் பரனே!
    அடைக்கலம் குமரா! அடைக்கலம் குழகா!
    அடைக்கலம் அடைக்கலம் குகனே!
    அடைக்கலம் மயிலா! அடைக்கலம் அயிலா!
    அடைக்கலம் அடைக்கலம் பெருமான்!
    அடைக்கலம் முருகா! அடைக்கலம் முதல்வா!
    அடைக்கலம் தணிகை நாயகனே! - 4


    அத்தனே போற்றி! ஆதியே போற்றி!
    அறுமுக குருபர போற்றி!
    சுத்தனே போற்றி! சோதியே போற்றி!
    சுடர்மணித் தீபமே போற்றி!
    முத்தனே போற்றி! முருகனே போற்றி!
    முதல்நடு இறுதியே போற்றி!
    புத்தனே போற்றி! பழையனே போற்றி!
    போற்றியெந் தணிகை நாயகனே! - 5


    நமோநம தேவே! நமோநம கோவே!
    நமோநம புவன நாயகனே!
    நமோநம சேயே! நமோநம வேளே!
    நமோநம கருணை நாயகனே!
    நமோநம வீரா! நமோநம தீரா!
    நமோநம குமர நாயகனே!
    நமோநம வேலா! நமோநம சீலா!
    நமோநம தணிகை நாயகனே! - 6


    மங்களம் மயில! மங்களம் வரத!
    மங்களம் சரவண பவனே!
    மங்களம் முருக! மங்களம் குமர!
    மங்களம் சிவகுரு பரனே!
    மங்களம் குழக! மங்களம் அழக!
    மங்களம் அறுமுக குகனே!
    மங்களம் பவனே! மங்களம் சிவனே!
    மங்களம் தணிகை நாயகனே! - 7


    ஜேஜெய வேலா! ஜேஜெய மயிலா!
    ஜேஜெய குறமின் நாயகனே!
    ஜேஜெய குகனே! ஜேஜெய பரனே!
    ஜேஜெய குலிசை நாயகனே!
    ஜேஜெய அழகா! ஜேஜெய குழகா!
    ஜேஜெய அகில நாயகனே!
    ஜேஜெய குமரா! ஜேஜெய முருகா!
    ஜேஜெய தணிகை நாயகனே! - 8


    வாழ்த்து
    வாழிநின் தடந்தோள், வாழிநின் முகங்கள்,
    வாழிநின் திருக்கையில் நெடுவேல்,
    வாழிநின் சேவல், வாழிநின் ஊர்தி,
    வாழிநின் திருவடி மலர்கள்,
    வாழியெம் உயிராம் தாய்வள்ளி யம்மை,
    வாழிநல் வாரண மங்கை,
    வாழிநின் அடியார், வாழிநின் புகழ்நூல்,
    வாழிநீ தணிகை நாயகனே! - 9

    வேலு மயிலுந் துணை.


    திருத்தணிகேசன் துணை

    7. தணிகைத் தசாங்கம்


    நேரிசை வெண்பா



    செய்யவாய்ப் பைங்கிளியே சேயோன் திருத்தணிகைத்
    துய்யன் திருநாமஞ் சொல்லுதியால் - மெய்யன்
    அமரர்சிறை மீட்ட அறுமுகவன் வேலன்
    குமரனிறை யோன்மூவர் கோ. - 1


    காதன் மொழிக்கிளியே கந்தன் திருத்தணிகை
    நாதன் மகிழ்ந்துறையு நாடுரையாய் - ஏதுங்
    குறையிலா அன்பிற் குகனென்பார் நெஞ்சே
    உறையிலா நாடென் றுணர். - 2


    தித்திக்குஞ் சொற்கிளியே தேவன் திருத்தணிகை
    அத்த னுறையும் அரும்பதியென்? - முத்தித்
    திருப்புகழ்செய் தார்க்குச் சிவஞானங் கூடும்
    இருப்பிடமாஞ் செய்ப்பதிய தே. - 3


    வண்ணக் கிளியே வரதன் திருத்தணிகை
    அண்ணற் குகந்தநல் லாறுரையாய் - மண்ணிற்
    புகுந்தவர்தம் உண்மாசு போக்கிப் புலன்சேர்
    அகந்தவிர்க்கு மெய்ந்நந்தி யாறு. - 4


    கிள்ளைக் கணிகலமே கேடில் திருத்தணிகை
    வள்ளற் குகந்த மலைபகராய் - உள்ளிற்
    பினாகி யருள்பெம்மான் பேணுமலை வேண்டில்
    வினாவுள் விடையுளதே மேல். - 5


    அமுதமொழிக் கிள்ளாய் அமலன் தணிகை
    உமைதனய னூர்தி யுரையாய் - திமிதிமெனக்
    கார்கண்டு கூத்தாடு காமர் பசுந்தோகை
    சீர்கொண்ட சேந்தனூர் தி. - 6


    கொஞ்சுமொழிக் கிள்ளாய் குமரன் திருத்தணிகை
    மஞ்சனவ னென்றும் மகிழ்படையென் - மிஞ்சிவரு
    வாரிதியும் பூதரமும் மாமரமும் வீழ எறி
    கூரிதழ்வேல் ஏந்துங் குகன். - 7


    நண்பூடு கொள்கிளியே நாதன் திருத்தணிகைப்
    பண்பூடு கொண்டான் பறையியம்பாய் - எண்பூ
    இடுதொண்டர் மெய்குளிர இன்னார் நடுங்கப்
    படுதொண்ட கங்காண் பறை. - 8


    தேமிக்க செஞ்சொற் செழுங்கிளியே நந்தணிகைச்
    சாமிக் குகந்ததாந் தாருரையாய் - பூமிக்குள்
    வெங்கலரே னுந்தணிகை வேட்டோர்க் கருள்சேய்க்குக்
    கொங்கலர்தார் தண்கடம்பா கும். - 9


    கற்றவின்சொற் பைங்கிளியே காதலனார் நந்தணிகைக்
    கொற்றவன்கைக் கொண்ட கொடிகூறாய் - உற்றவிண்ணில்
    ஊழியாம் போதும் உலவா உடுக்கொறித்த
    கோழியாங் கொண்ட கொடி. - 10


    திருத்தணிகேசன் துணை

    8. தணிகைப் பதிகம்.


    பண் - தக்கராகம்; ராகம் - காம்போதி
    ('மடையில் வாளை' என்னும் தேவாரப் பண்)



    செய்த தீய வினைக ளவைதீர
    எய்தி நாளுந் தணிகை யேத்துவோம்
    வெய்ய சிங்க முகன்றன் விரிதலை
    கொய்த வீரங் குறித்துப் பாடுவோம். - 1


    சிந்தை வாக்குத் தேகம் யாவையும்
    எந்தை யுனக்கே யடிமை யீந்தனன்
    பந்தம் யாவும் பாற்றி நின்கழல்
    தந்து காக்கத் தயவு செய்குவாய். - 2


    வள்ளி தெய்வ யானை மகிழ்கின்ற
    வள்ளல் வாழுந் தணிகை மலைக்கணே
    உள்ள பூடுக் குள்ள மெய்த்தவம்
    எள்ளு மடிமைக் கில்லை ஐயகோ! - 3


    தேவ தேவ செய்ய வேலவா
    பாவ நாச பழநி தணிமலை
    கோவல் நாகை கூட லாலவாய்
    மேவு நாத வேண்டுந் தவநெறி. - 4


    சித்தர் தேவர் சென்னி கைகூப்பி
    நித்தம் ஏத்தும் நிமலன் தணிகையை
    வைத்த சிந்தை வாய்ந்த வாழ்க்கைசேர்
    பத்தர் பாதம் பரவிப் பணிகுவாம். - 5


    தேனைப் பாலைத் தெவிட்டா அமுதுடன்
    ஆநெய்ச் சேர்த்த அமுதம் இதுவென
    கானச் சுவையுங் கலந்த திருப்புகழ்ப்
    பாநற் சுவையைப் பருக லின்பமே. - 6


    அன்ப ருள்ளம் அதுவே கோயிலாம்
    என்பு பூண்ட இறைவன் குமரனுக்
    கன்பு பூண்டே அவனைப் போற்றுமின்
    இன்ப துன்பம் என்றும் இல்லையாம். - 7


    கொங்க டம்பு குரவ மல்லிகை
    செங்க டம்பு சேரு நின்கழல்
    தங்கு முள்ளஞ் சார்த லில்லையேல்
    எங்கு மென்றும் இன்பம் இல்லையே. - 8


    சோதி மயிலைச் சூட்டுச் சேவலை
    நீதி வேலை நித்தம் போற்றியே
    ஓதி யுய்யும் உள்ளந் தந்தருள்
    ஆதி தணிகை யமரு நாதனே. - 9


    வேல வேல விமலை பார்வதி
    பால பால பக்தர் பாலனே
    சீல சீல தெய்வ வள்ளிசேர்
    கோல கோல தணிகைக் கோலனே. - 10



    9. தணிகாசல நாதர் பல்லாண்டு




    பல்லாண்டு தென்பரங் குன்றக் குகனுக்குப் பல்லாண்டு
    பலாலாண்டு செந்திற் பதிவரு தூயர்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டு தென்பழநிப்பதி வேலர்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டு நந்தணி காசல நாதர்க்குப் பல்லாண்டே. - 1


    பல்லாண்டு வள்ளியை நாடிச்சென் றாருக்குப் பல்லாண்டு
    பல்லாண்டு வாரணங் கைப்பிடித் தாருக்குப் பல்லாண்டு
    பல்லாண்டு மாமயி லேறிய தேவுக்குப் பல்லாண்டு
    பல்லாண்டு நந்தணி காசல நாதர்க்குப் பல்லாண்டே. - 2


    பல்லாண்டு தேவர்க் கரியராய் நின்றார்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டெ னாவியுள் நீங்கா திருப்பார்க்குப் பல்லாண்டு
    பல்லாண் டுருகில் உடனாம் ஒருவர்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டு நந்தணி காசல நாதர்க்குப் பல்லாண்டே. - 3


    பல்லாண் டொளித்தும் ஒளியா திருப்பார்க்குப் பல்லாண்டு
    பல்லாண் டணுஅண்ட மாகுஞ் சிறியர்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டங் கண்டம் அணுவாம் பெரியர்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டு நந்தணி காசல நாதர்க்குப் பல்லாண்டே. - 4


    பல்லாண்டு தாரக சங்கார மூர்த்திக்குப் பல்லாண்டு
    பல்லாண்டு சிங்கனை மாள்வித்த மூர்த்திக்குப் பல்லாண்டு
    பல்லாண்டு சூரனை யட்டருள் மூர்த்திக்குப் பல்லாண்டு
    பல்லாண்டு நந்தணி காசல நாதர்க்குப் பல்லாண்டே. - 5


    பல்லாண்டொ ராற்றுப் படைக்குவந் தாருக்குப் பல்லாண்டு
    பல்லாண்டு சந்தப் புகழ்மகிழந் தாருக்குப் பல்லாண்டு
    பல்லாண் டலங்காரப் பாட்டுக் குகந்தார்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டு நந்தணி காசல நாதர்க்குப் பல்லாண்டே. - 6


    பல்லாண்டந் தாதியில் வெற்றிதந் தாருக்குப் பல்லாண்டு
    பல்லாண் டநுபூதி பாடப்பெற் றாருக்குப் பல்லாண்டு
    பல்லாண் டிணையில் வகுப்பணிந் தாருக்குப் பல்லாண்டு
    பல்லாண்டு நந்தணி காசல நாதர்க்குப் பல்லாண்டே. - 7


    பல்லாண்டு பாண்டிப் பரங்கிரிச் சாமிக்குப் பல்லாண்டு
    பல்லாண்டு சோழநாட் டேரகத் தீசர்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டு கொங்கிற்செங் கோட்டுக் குமரர்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டு தொண்டைநாட் டெந்தணி கேசர்க்குப் பல்லாண்டே. - 8


    பல்லாண்டு சச்சிதா நந்தர் திருப்புகழ்ப் பல்லாண்டு
    பல்லாண்டு சொல்ல அருளும் பரமர்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டு பாரினில் உள்ள திருப்புகழ்ப் பத்தரெலாம்
    பல்லாண்டு வாழ அருள்தணி கேசர்க்குப் பல்லாண்டே. - 9


    பல்லாண்டு கீரனை யாட்கொண்ட வள்ளற்குப் பல்லாண்டு
    பல்லாண் டருண கிரிக்கருள் செய்தார்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டொ ரூமையைப் பாடச்செய் தாருக்குப் பல்லாண்டு
    பல்லாண்டிந் நாயையும் பாடவைத் தாருக்குப் பல்லாண்டே. - 10


    பல்லாண்டு [1]த்யாகர்க்கு ராமராய் நின்றார்க்குப் பல்லாண்டு
    பல்லாண்டு [2]முருகர்க்கு ரமணராய் நின்றார்க்குப் பல்லாண்டு
    பல்லாண் டவரவர்க் கவ்வதாய் நின்றார்க்குப் பல்லாண்டு
    பல்லாண் டெனக்குத் தணிகையில் நின்றார்க்குப் பல்லாண்டே. - 11

    ---------------------
    [1].தியாகர் - த்யாகப் பிரமம்:
    [2]. முருகர் - ஸ்ரீ ரமண சந்நிதி முறைஆசிரியர்



    திருத்தணிகேசன் துணை

    10. தணிகை - தனிப்பாடல்கள்


    ("இரவு 4 1/2 மணிக்கு நல்ல கனவு கண்டேன். கனவின்
    கருத்துப்பின்வரும் பாடல்களிற் காண்க) 19-8-1933

    1. கனாநிலை

    சந்நிதியி னின்றுபுக ழந்தாதி
    பாடுந் தருணத்தி லந்தாதியில்
    தணிமலைக் குரியதாம் சேர்ப்பது
    மாலெனத் துவக்குந் தனிப்பாடலை
    அந்நிலையி லோதுதற் கடியேன் மறந்திடலு
    மன்றிரவு லென் கனவிலே
    அண்டியொரு விப்பிரச் சிறுவனாய்த் தோன்றி
    யுடையங்கம் பிரகாசமாக

    நன்னிறத் தேகத்தில் வெண்ணிறத் திருநீறு
    நன்றொளிர எதிரில் நின்று
    "நல்லஎலு மிச்சம் பழமொன்று கந்தரந்
    தாதியில் மறந்தனை" யென
    என்னெதிரில் நின்றநீ சிறுவனலை முருகனே
    என்றுரைத் தியான் பிடிக்க
    எழுமுனே சிறிதோடி எழிலுரு மறைந்த
    முருகேச தணிகேச இறையே.

    விழித்த நிலை

    ஓடி மறைந்த உடனே யென்
          உடலஞ் சிலிர்க்க விழித்தெழுந்தேன்
    நாடி யெனையும் ஒரு பொருளா
          நயந்த கருணை என்னென்றேன்
    வாடி வாடி முருகேசா வாவா
          என்றே அலறினேன்
    தேடி யுனையான் பிடிக்குமொரு
          திறமே தென்றே திகைப்புற்றேன்.

    வேண்டுநிலை

    திகைக்கு மென்னையுந் தேற்றுதல் வேண்டுமே
    றுகைக்கு முந்தைக்கன் றோம்பொருள் சொற்றனை
    நகைக்கு நானிலங் கைவிழல் நன்னெஞ்சக்
    குகைக்கு டங்கு குழந்தைக் குமரனே.

    2. ஆறெழுத் தோது மறிவுமில்லை
          ஆறுமுகா என்று சொல்வதில்லை
    நீறெடுத் தென்றுந் தரிப்பதில்லை
          நின்புகழ் என்செவி கேட்பதில்லை
    மாறுபட் டென்னை மயக்குகின்ற
          வஞ்சப் புலன்களின் சேட்டையாய
    ஊறெழத் துய்யும் வகையராய
          உத்தமனே தணிகைத் துரையே.

    அஞ்செழுத் தென்று நினைப்பதில்லை
    அரகர சிவசிவ வேல உன்றன்
    கஞ்சமலர்ப் பதந் தஞ்சமென்று
    கண்டிகை நீறு புனைவதில்லை


    வஞ்ச மனத்தினிலஞ் சொடுக்கி
    வைகலும் பூசனை செய்வதில்லை
    உஞ்சும்வகை யெனக்கின் றருளாய்
    உத்தமனே தணிகைத் துரையே.

    சந்தத் தமிழிறை ருக்குவேத
    சாரத் தமிழ் சொல் இறை முருக
    கந்த கடம்ப குக குமர
    கார்த்தி கேயாசிவ சண்முகா என்
    றெந்தப் பொழுதினும் என்றனாவில்
    இந்த நாமங்கள் யான் ஏத்துதற்குத்
    தந்தருள் நின்னருள் சுவாமிநாத
    தற்பரனே தணிகைத் துரையே.

    3. திருத்தணிப்பதி
    கருத்தில் வைத்திடில்
    வருத்தமொன்றிலை
    பெருத்த நன்மையே.

    தணிகை மாமலை
    பணிய நாடொறும்
    நணுகி டாவினை
    அணுகுமேதிரு.

    காவியங்கிரி
    நாவிலென்றுமே
    ஓவலின்றியே
    நீவிளம்புக.

    நீலமாமலை
    வேலவேல என்
    றோலமேயிடு
    சீலமேயுறு.

    ஆரமேவுகல்
    லாரமாமலை
    வீரவேல் கழ
    லாருநாடுக.

    ('பிருந்தாவனமும் நந்தகுமாரனும்'- பண்ணில் பாடியது)

    4. தணிகா சலமும் எங்கள் குகேசனும்
    யாவருக்கும் பொதுச்செல்வ மன்றோ!
    ஏனோ! கண்ணே! இந்த விசாரம்
    யார்தான் அருளால் வாழாதாரே
    வேலின் துணைநமக் கிருப்பதி னாலே
    காலனும் ஓலமிட் டோடானோ!
    பத்தியிலே நம்புத்தி கலந்தால்
    உலகே ஊஞ்சலில் ஆடாதோ!
    கந்தனின் உன்னத லீலையை நினைத்தால்
    தன்னையே மறந்திடச் செய்யாதா!
    ஏனோ கண்ணே இந்த விசாரம்
    யார்தான் அருளால் வாழா தாரே!

    5. புத்தேள் பதினாறு

    1. வேளைத் தணிமலைவாழ் வேந்தை அறுமுகப்புத்
    தேளைத் தொழுவாய் தினம்.

    2. நாளை எனாமல்நீ நந்தணிகை வாழ்வுறுபுத்
    தேளை வணங்கு தினம்.

    3. காளைக் குமரனைக் கந்தனை வேற்கரப்புத்
    தேளைக் கருது தினம்.

    4. பானை மணங்கமழும் பண்பார் தணிகைபுத்
    தேளை நினைநீ தினம்.

    5. வேளைப் படஎரித்த மெய்த்தேவின் சேயைப்புத்
    தேளைப் புகல்நீ தினம்.

    6. வாளைமீன் பாயும் மடுசேர் தணிமலைப்புத்
    தேளை வழுத்து தினம்.

    7. வேளை பாராது வியன்தணிகைச் சேயைப்புத்
    தேளைநீ ஏத்து தினம்.

    8. பூளை எருக்கு புனைசிவனார் சேயைப்புத்
    தேளை நீ வாழ்த்து தினம்.

    9. தாளைத் தொழுது தணிகை மலைவாழ்புத்
    தேளைத் துதிநீ தினம்.

    10. தோளைக் குளிரத் தொழுது தணிகைபுத்
    தேளைப் பகர்நீ தினம்.

    11. கோளைக் குறியாதே கொங்கார் தணிகைபுத்
    தேளைக் குறிநீ தினம்.

    12. தேளைப்பட அரவைச் சேர்சடையர் சேயைப்புத்
    தேளைப் பரவு தினம்.

    13. ஈளை தொடராது காண்எந்தை தணிகைப்புத்
    தேளை உரைநீ தினம்.

    14. சூளைச்செங் கல்போன்ற தூய்மையுடன் சேயைப்புத்
    தேளைப் பணிநீ தினம்.

    15. ஆளைப்பார் என்றமரர் அன்புகொளச் சேயைப்புத்
    தேளைச்சூழ் வாய்நீ தினம்.

    16. மூளை யிலையுனக்கு முத்துக் குமரனைப்புத்
    தேளைநீ ஓது தினம்.
    ---------------

    (முருகன் கருணை நினைந்து பாடியது)

    6. கந்தனே! கருணைக் கடலே! உமை
    மைந்தனே! மணியே! மணவாளனே!
    தந்தையே

    என்ன கருணைதான் என்மீ துனக்கைய
    என்ன திருத்தொண்டு யான்செய்தேன் - என்ன
    குணங்கண்டோ என்னைநீ கோதாட்டிக் கொண்டாய்
    மணங்கொண்ட வள்ளிகண வா.

    கந்தனென என்மனம் ஓர்நிலை காணக் கருணைபுரி
    கந்த நமகந் தநம எனயான் கதறிடத்தன்
    சந்தனக் காப்புத் திருவுறு என்மனம் தங்கிடவே
    தந்தனன் ஓர்வரம் தென்தணி காசலச் சண்முகனே.

    திருவடியிற் சிலம்பொலிகள் ஆர்ப்பக் கண்டேன்
          செந்நிறத்துத் திருமார்பிற் புரிநூல் கண்டேன்
    ஒருவடிவில் ஆறுமுகத் தழகு கண்டேன்
          ஒளிவீசும் வடிவேலின் பொலிவுங் கண்டேன்
    குருவடிவில் தந்தைக்கு ஞான போதம்
          குறித்தருளும் மவுனநிலை தானுங் கண்டேன்
    தருவடிவில் குறுமகள்முன் நிற்கக் கண்டேன்
          தணிகைமலைச் சாமியைநான் கண்ட வாறே.



Comments