Tamiḻar nāṭṭup pāṭalkaḷ II
நாட்டுப் பாடல்கள்
Backதமிழர் நாட்டுப் பாடல்கள் - பாகம் 2
தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை
தமிழர் நாட்டுப் பாடல்கள் - பாகம் 2
தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை
- Source:
தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை, எம்.ஏ.எல்.டி.,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை- 600 098.
இரண்டாவது பதிப்பிற்கு முகவுரை | 5. காதல் |
முன்னுரை | 6. திருமணம் |
1. தெய்வங்கள் | 7. குடும்பம் |
2. மழையும் பஞ்சமும் | 8. சமூகம் |
3. தாலாட்டு | 9. உழவும் தொழிலும் |
4. விளையாட்டு | 10. ஒப்பாரி |
6. திருமணம்
வாழ்த்து
திருமணத்தின் போது வாழ்த்துக் கூறுதல் நமது தமிழ் நாட்டின் பழமையான வழக்கம். சிலப்பதிகாரத்தில் பண்டைக் காலத்தில் பாடப்பட்ட வாழ்த்து குறிப்பிடப் பட்டுள்ளது. அஷ்ட மங்கலங்களையும் ஏந்திய மகளிர் கண்ணகியைத் திருமண மேடையிலேற்றி,
“காதலர் பிரியாமல்
கவவுக்கை நெகிழாமல்
தீது அறுகஎன ஏத்திச்
சின்மலர் கொடு தூவி
அம்கண் உலகின்
அருந்ததி, அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார்-தங்கிய
இப்பால் இமயத்து
இருத்திய வாள் வேங்கை
உப்பாலைப் பொன்கோட்டு
உழையதா எப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒரு தனி ஆழி
உருட்டுவோன் எனவே”
என்று வாழ்த்தினார்களென்று இளங்கோவடிகள் கூறுகிறார். இம்மங்கல வாழ்த்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. மணமக்கள் வாழ்த்து முதற் பகுதி, சோழமன்னனது வெற்றியைப் போற்றிப் பாடுவது, இரண்டாவது பகுதி.
தற்காலத் திருமண வாழ்த்துக்களில் மணமகளுக்கு வாழ்த்துக் கூறுவது மட்டுமே வழக்கத்தில் இருக்கிறது. திருமணத்திற்கு முன் நிகழ்ந்த பல சம்பவங்களும் இவ் வாழ்த்தில் கூறப்படும். மணப்பந்தல் வர்ணனை, மணமகன், மணமகள் பெருமை, மணச்சடங்கு முறை, ஆரத்திப்பாட்டு முதலியன யாவும் இதனுள் இடம் பெறும்.
மண நிகழ்ச்சிகள் பலவகைப்படும். கண்ணகி கோவலன் மணம், தாலிகட்டுதல் என்ற சடங்கின்றி நடை பெற்றதென்று சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. மங்கல வாழ்த்துப் பாடல்கள் பாடியவுடன் திருமண நிகழ்ச்சி முடிவடைகிறது. கேரளத்தில் பல ஜாதியினரிடையே தாலிகட்டும் வழக்கம் இல்லை. கல்யாணச் சடங்கே மிகவும் முக்கியமானது என்பதை “சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை” என்ற பழமொழி தெளிவாக்குகிறது. சில சாதியாரிடையே மணமகள் கழுத்தில் மணமகனே தலி கட்டி ஒரு முடிச்சுப் போட்டபின் அவனது சகோதரிகள் மேல் முடிச்சுகள் போடுவார்கள். சேலம் மாவட்டத்தில் சில பகுதியில் சுமார் 30 வருஷங்களுக்குமுன் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதி்ல்லை. ஜாதியில் வயது முதிர்ந்தவர்தான் மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டுவார். ஆனால் தற்பொழுது முறை மாறி விட்டது. வயது முதிர்ந்தவர் தாலியைத் தொட்டுக் கொடுக்க, மணமகன் வாங்கி மணமகள் கழுத்தில் கட்டுவான்.
தென்தமிழ் நாட்டில் மங்கல வாழ்த்தைப் பெண்களே பாடுவார்கள். சேலம் பகுதியில் ஊர் நாவிதன் தன்னைக் கம்பன் பரம்பரையினன் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு மங்கல வாழ்த்துப் பாடுவான்.
மங்கல வாழ்த்து
(திருநெல்வேலி மாவட்டம்)
வாழ்த்துங்கள் வாழ்த்துக்கள்
வாள் விசய மைந்தருக்கு
கேளுங்கள் கேளுங்கள்
எல்லோரும் கேளுங்கள்
கோல வர்ணப் பந்தலிலே
கூறுகிறேன் கேளுங்கள்
சொர்ண மணிப் பந்தலிலே
சொல்லுகிறேன் கேளுங்கள்
இந்தச் சபை தன்னிலே
எல்லோரும் கேளுங்கள்
எங்கள் குடி தழைக்க
இளவரசு வேணுமென்று
அரசுமுதல் வேண்டுமென்று
அன்னை தவஞ் செய்து
பிள்ளை முதல் வேண்டுமென்று
பெரிய தவஞ் செய்து
பாலன் முதல் வேண்டுமென்று
பாரத்தவம் செய்து
தொண்ணூறு நாளாகத்
துளசிக்கு நீர்வார்த்து
முன்னூறு நாளாக
முல்லைக்கு நீர் வார்த்து
ஐந்நூறு நாளாக
அரசுக்கு நீர் வார்த்து
வேண தவஞ் செய்து
வேம்புக்கு நீர் வார்த்து
வெந்த மாத்தின்றால்
விரதம் கலையுமிண்ணு
பச்சை மாத்திண்ணு
பகவானைப் பூசை செய்து
செம்பொன் மலரெடுத்துச்
சிவனாரைப் பூசை செய்து
பசும் பொன் மலரெடுத்து
பார்வதியைப் பூசை செய்து
வெள்ளை மலரெடுத்து
வினாயகரைப் பூசை செய்து
நவகிரகப் பூசை
நாயகியும் தான் செய்து
அன்னையும் தந்தையும்
அருந்தவங்கள் தான் செய்து
முந்தித் தவமிருந்து
முன்னூறு நாள் சுமந்து
மங்களமாக
மைந்தரைப் பெற்றெடுத்தாள்
மலரில் உதித்தவர்தான்
மா தவத்தால் வந்தவர்தான்
பூவில் உதித்தவர்தான்
புண்ணியத்தால் வந்தவர்தான்
தவத்தால் பிறந்தவர்தான்
தருமத்தால் வந்தவர்தான்
பிச்சிப் பூத் தொட்டிலிலே
புரண்ட குமாரர்தான்
மல்லிகைப் பூந் தொட்டிலிலே
வளர்ந்த குமாரர்தான்
ஒன்றாம் வயதில்
ஒக்கப் பணி பூண்டு
இரண்டாம் வயதில்
ரத்ன மணி ஊஞ்சலிட்டு
மூன்றாம் வயதில்
முத்தால லங்கரித்து
நான்காம் வயதில்
நடக்கப் பணி பூண்டு
பத்துப் படித்துப்
பரீட்சை எல்லாம் தான் எழுதி
பாண்டித் துரைராசா
பகல் உண்டு கைகழுவி
தாம் பூலம் தரித்து
சகுனம் பார்த்து சைக்கிளேறி
கச்சேரி போயி
கமலப்பூப் பாண்டியரும்
கோர்ட்டாரு எதிரில்
குரிச்சி மேல் உட்கார்ந்து
ஜட்ஜு துரைகளுடன்
சரிவழக்குப் பேசையிலே
புத்தகமும் கையுமாய்
பேச்சுரைக்கும் வேளையிலே
கண்டு மகிழ்ந்தார்கள் எங்க
கமலப்பூ ராசாவை
பார்த்து மகிழ்ந்தார்கள் எங்க
பாண்டித் துரைராசாவை
பெண்ணுக் கிசைந்த
புண்ணியர்தான் என்று சொல்லி
கன்னிக் கிசைந்த
கணவர்தான் என்று சொல்லி
மங்கைக் கிசைந்த
மணவாளர் என்று சொல்லி
நங்கைக் கிசைந்த
நாயகர்தான் என்று சொல்லி
வலிய அவர் பேசி
வந்தார் வரிசையுடன்
பெரிய இடந்தானென்று
பெண் தாரேன் என்று வந்தார்
வாருங்கள் என்றார் எங்கள் அப்பா
வரிசை மிகவுடையார்
ஆமென்றான் எங்களம்மான்
அன்பு மிகவுடையான்
பவழ வர்ணச் சமுக்காளம்
பாண்டி மன்னர் போடுமென்றார்
முத்து வர்ணச் சமுக்காளம்
முடி மன்னர் போடுமென்றார்
தங்கக் கிண்ணியிலே
சந்தணமும் கொண்டு வந்தார்.
வெள்ளித் தாம்பாளத்தில்
வெற்றிலையும் பாக்கும் வைத்தார்
வந்த தொரு சங்கதியை
வாய் திறந்து சொல்லுமென்றார்
நாங்கள் வந்த சங்கதியை
நல முடனே சொல்லுகிறேன்
எங்கள் பொற் கொடிக்கு
உங்கள் புத்திரரைக் கேட்டு வந்தோம்
எங்கள் ஏந்திழைக்கு
உங்கள் இந்திரரைக் கேட்டுவந்தோம்
எங்கள் பைங்கிளிக்கு
உங்கள் பாலகரைக் கேட்டு வந்தோம்
கலியாணப் பேச்சு
காதாரக் கேட்டு வந்தோம்.
சந்தோஷமாகிச்
சரீரமெல்லாம் பூரித்து
மைந்தருக்குக் கல்யாணம்
மகிழ்ச்சியுடன் செய்வதற்கு
பொருத்தமது பார்க்க
புரோகிதரைத் தானழைத்து
வந்த புரோகிதருக்கு
மாம்பலகை போடு மென்றார்
கூட வந்த புரோகிதருக்கு
குரிச்சுகளும் போடுமென்றார்
சோழி பரப்பிச்
சொல்லு மென்றார் பஞ்சாங்கம்
பாசி பரப்பிப்
பாரு மென்றார் பஞ்சாங்கம்
ஐந்து பொருத்தம்
பொருந்திற்று ஏந்திழைக்கு
ஆறு பொருத்தம்
பொருந்திற்று அருங்கிளிக்கு
பத்துப் பொருத்தம்
பொருந்திற்று பாண்டியற்கு
செல்லக் கலியாணம்
சிறப்பாக நடத்தவென்று
நல்ல நாள் பார்த்து
நாள் முகூர்த்தம் தானும் வைத்தார்
செல்வருக்குக் கல்யாண மென்று
சீமையெங்கும் பாக்கு வைத்தார்
புத்திரர்க்குக் கல்யாணமென்று
பூமியெங்கும் பாக்கு வைத்தார்
தட்டாரைத் தானழைத்துத்
தாலி சமையுமென்றார்
அரிசி போல் மாங்கலியம்
ஆரிழைக்குச் சமையுமென்றார்
உளுந்து போல் மாங்கலியம்
உத்தமிக்குச் சமையுமென்றார்
தாலி சமைக்க வென்று
தாம்பூலம் தான் கொடுத்தார்
வாழைமரம் நட்டி
வாசல் அலங்கரித்து
பாக்குமரம் நட்டி
பந்தல் அலங்கரித்து
அம்மி வலமாக
அரசாணி முன்பாக
அரகரா மாங்கலியம்
ஆரிழைக்குக் கட்டுமென்றார்
சிவா சிவா மாங்கலியம்
திருக்கழுத்தில் கட்டுமென்றார்
பூவும் மணமும்
பொருந்திய தன்மைபோல்
தேவியும் மன்னவரும்
சேமமாய் வாழ்ந்திருங்கள்
பாலும் சுவையும் போல்
பார் தனிலே எந்நாளும்
பூ மகளும், நாயகனும்
பொற்பாக வாழ்ந்திருங்கள்
கன்னியோட கற்பும்
கணவனோடு மெய்மொழியும்
இந்நில மெல்லாம் விளங்க
இன்பமாய் வாழ்ந்திருங்கள்
ஆயுசு தீர்க்கமுடன்
அம்மனுட தன்னருளால்
நாயகனும், நாயகியும்
நலமாக வாழ்ந்திருங்கள்
தலைப்பிள்ளை ஆண் பெறுவீர்
தகப்பனார் பெயரிடுவீர்
மறுபிள்ளை பெண் பெறுவீர்
மாதா பெயரிடுவீர்
பிள்ளை பதினாறும் பெற்று
பெரு வாழ்வு வாழ்ந்திருங்கள்
மக்கள் பதினாறும் பெற்று
மங்கலமாய் வாழ்ந்திருங்கள்
ஆல்போல் தழைத்து
அருகு போல் வேரூன்றி
நலமுடனே எந்நாளும்
ஞானமுடன் வாழ்ந்திடுவீர்
போடுங்கள் பெண்கள்
பொன்னார் மணிக்குலவை
இன்னு மொரு குலவை
இரு வாயும் பொன் சொரிய
குறிப்பு : 'பதினாறும் பெற்று' என்ற சொற்றொடருக்கு புதிய பொருள் கூறப்படுகிறது. 'பதினாறு செல்வங்கள்' என்று பொருள் கூறி, பதினாறு செல்வங்களின் பட்டியலும் கூறப்படுகிறது. நாட்டார் நம்பிக்கையில் 16 என்பது மக்களைத்தான் குறிப்பிடும். பிள்ளைப்பதினாறு, மக்கள் பதினாறு என்ற சொற்றொடர்கள் இதனைத் தொடர்பாக்கும்.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------
எங்கிருந்து வாச்சாளோ?
திருமண விழாவின் போது மணமகன் உறவினர் ஒரு கட்சியாகவும், மணப்பெண் உறவினர் மற்றோர் கட்சியாகவும் பிரிந்து பாட்டுப் போட்டி தொடங்குவார்கள். மணமகனின் சகோதரிகள் மணப் பெண்ணைக் கேலிசெய்து பாடுவார்கள். உடனே மணப் பெண்ணின் உறவினர் மணமகனைக் கேலி செய்து பாடுவார்கள். இப்பாடல்கள் சில வேளைகள் தரம் குறைந்து ஆபாசமாகத் திகழ்வதும் உண்டு. பொதுவாக நகைச்சுவை நிரம்பியதாகவும், விவாதத் திறமையை வெளியிடுவதாகவும் இப்பாட்டுகள் அமையும்.
(மணமகன் கட்சியினர் பாடுவது)
தம் அண்ணனைக் கண்டு சரணமடைந்த அண்ணி நாழி அரிசி வடிக்கத் தெரியாத சோம்பேறி என்று அவளை ஏசுகிறார்கள் மணமகனது சகோதரிகள்.
நெய்க்கிணறு வெட்டி
நிழல் பாக்கப் போகும் போது-என்
அண்ணார் அழகைக் கண்டு
பெண்ணாள் சரணமென்றாள்
பால்கிணறு வெட்டி
பல்விளக்கப் போகும் போது-என்
அண்ணார் அழகைக் கண்டு
பெண்ணாள் சரணமென்றாள்
நாழி வரவரிசி
நயமாய் வடிக்கிறியா?
நாதேரிச் சிறுக்கிமகள்
எங்கிருந்து வாச்சாளோ
உழக்கு வரவரிசி
உருவா வடிக்கிறியா
ஊதாரிச் சிறுக்கு மகள்
எங்கிருந்து வாச்சாளோ
வட்டார வழக்கு : வரவரிசி-வரகரிசி ; உருவா-உருவாக ; நன்றாக வடிக்கிறியா?-வடிக்கத் தெரிகிறதா?; நாதேரி, ஊதாரி-வகைச்சொற்கள்.
உதவியவர் : வாழப்பாடி சந்திரன்
இடம் : வாழப்பாடி, சேலம் மாவட்டம்.
----------
குறவர் மகனோ?
(மணமகள் கட்சியினர் பாடுவது)
பெண்ணைப் பற்றி கேலிப்பாட்டுப் பாடிய மணமகனது உறவினருக்குப் பதில் அளிக்கும் முறையில் மணமகளது உறவினர் பாட்டுப் பாடுகிறார்கள். அப்பாட்டில் மணமகனைக் கேலி செய்து குறவன் மகனென்றும், அவன் காக்கைக் கருப்பென்றும் வருணிக்கிறார்கள்.
அந்தி ரயில் ஏறத்தெரியாது
அபிமன்னன் வீட்டுக்கு நீயா மருமகன்?
ஈச்சங் கொடி புடுங்கி
இருலட்சம் கட்டை பின்னும்
இந்திரர் வீட்டுக்கு
நீயா மருமகன்?
ஈச்சம் பழத்திலும்
இருண்ட கருப்பையா
இந்த மாப்பிள்ளை
நாகப்பழத்திலும்-இது
நல்ல கருப்பையா
ஆகாசம் மேலேறி
ஆடுதப்பா உன்கருப்பு
பந்தல் மேலேறி
பறக்குதப்பா உன் கருப்பு
ஒட்டுத் திண்ணை தூங்கிக்கு
பட்டுப் பாய் ஒண்ணா?
ஓணான் முதுகுக்கு
ஒரு ரூபாய் சந்தனமாம்
அரிசி பொறுக்கி மவன்
ஆனைமேல் வரும் போது
அரிச்சந்திரன் பெத்த மவள்
கால் நடையா வரலாமா?
கொள்ளு பொறுக்கி மவன்
குதிரை மேல் வருகையிலே
கோவலனார் பெத்த செல்வம்
கால் நடையா வரலாமா?
பருப்பு பொறுக்கி மவன்
பல்லக்கில் வருகையிலே
பாண்டியனார் பெத்த செல்வம்
கால் நடையா வரலாமா
கள்ளுக் கடை போவாராம்
கையில் மொந்தை எடுப்பாராம்
என்ன வென்று கேட்டால்
பசும்பால் என்று சொல்வாராம்
குதிரையடி போலே
கொழுக் கட்டை நூறுவச்சேன்
அத்தனையும் தின்னானே
அந்த உதடி மவன்
ஆனை அடி போலே
அதிரசம் நூறுவச்சேன்
அத்தனையும் தின்னானே
அந்த உதடி மவன்
வட்டார வழக்கு : அந்திரயில் தெரியாதவன்-மாலைக் கண்ணன் ; உதடி-வசைச்சொல், இந்த வசைகள் எல்லாம் மணமகனுக்காகி வந்தது.
உதவியவர் : வாழப்பாடி சந்திரன்
இடம் : வாழப்பாடி, சேலம் மாவட்டம்.
--------------
திருமணம்
திருமணத்திற்கு முன் தாலி செய்து கொண்டு மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு வருவார்கள். அவன் வரும்போது மணப் பெண் வீட்டில் கூடியிருக்கும் பெண்கள், பெண்ணை அலங்காரம் செய்து கொண்டே மணமகனது வரவை, அவளுக்கு எடுத்துக் கூறுவார்கள்.
வாராண்டி, வாராண்டி
வரிசை கொண்டு வாராண்டி
பாக்கு எடுத்துக்கிட்டு
பரியங் கொண்டு வாராண்டி
புத்தம் புதுச் சேலை
பொன்னான சவிரி செஞ்சி
தங்கத்தாலே தாலிபண்ணி
தடம் புடிச்சி வாராண்டி
சந்தனப் பொட்டழகன்
சாஞ்ச நடையழகன்
கூறை சீலை கொண்டுகிட்டு
குதிரை ஏறிவாராண்டி
இத்தனை நாளாக
எதுக்காகக் காத்திருந்தான்
இண்ணக்கிச் சமைஞ்சவளை
எடுத்துப் போக வாராண்டி
அம்மி மிதிச்சு
அரசாணி சாட்சி வச்சி
சந்திர சூரியனை
சத்தியம் பண்ணிப் போட்டு
தாய் மாமன் மகளுக்குத்
தாலி கட்ட வாராண்டி.
சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி
இடம் : பரமத்தி, சேலம் மாவட்டம்.
-----------
பெண் அழைப்பு
தென்னையும் வாழையும் கட்டி அலங்கரித்த பந்தலிலே மணப்பெண்ணை அழைத்து வந்து உட்கார வைக்கிறார்கள்.
கல்யாணம் கல்யாணம்
காரிழைக்குக் கல்யாணம்
என்னைக்குக் கல்யாணம்
இளங்கொடிக்கு கல்யாணம்
சித்திரை மாதத்திலே
சீர்பாகம் தேதியிலே
ஞாயிறு திங்களுக்கு
நல்ல புதன்கிழமை
கல்யாண மென்று சொல்லி
கடலேறிப் பாக்குமிட்டார்
முகூர்த்தம் நடக்குதிண்ணு
முடிமன்னர்க்குப் பாக்குமிட்டார்
ஐம்பத்தாறு அரசர்க்கும்
அருமையாய் சீட்டெழுதி
வாழைமரம் பிளந்து
வாசலெல்லாம் பந்தலிட்டார்
தென்னை மரம் பிளந்து
தெருவெல்லாம் பந்தலிட்டார்
பந்தல் அலங்கரித்து
பாவையை உட்காரவைத்தார்
சேகரித்தவர் : சடையப்பன்
இடம் : கொங்க வேம்பு, தருமபுரி.
-------------
சீதனம்
பணம் மிகுந்தவர்கள், மணமாகும் தங்கள் பெண்களுக்குப் பல விலையுயர்ந்த பொருட்களைச் சீதனமாகக் கொடுப்பார்கள். ஆண், பெண், உறவில் சமத்துவம் குறைந்தபின்பு ஏழைக் குடும்பங்களில் கூட சீதனமில்லாமல் மணம் நிகழ்வது அரிதாகி விட்டது. சீதனத்தை இப்பொழுது வரதட்சணையாகக் கொடுக்கிறார்கள். வரதட்சணை கொடுக்க முடியாமல் வாடும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் உள்ளன.
பணக்காரர்களுக்கு பொருள் பெரிதல்ல ; ஆகவே பெண்களுக்கு அவர்கள் விலையுயர்ந்த சீதனங்கள் கொடுப்பார்கள். சீதனம் போதாதென்று கோபித்துக் கொண்டு மேலும் அதிக சீதனம் வேண்டுமென்று கேட்கும் பேராசைக்காரர்களும் உண்டு. இப்பாடலில், நல்லதங்காளுக்கு அவள் அண்ணன் கொடுக்கும் சீதனங்கள் எவையென்று சொல்லப்படுகின்றன.
என்ன சீதனங்கள்
பெற்றாள் இளங்கொடியாள்
பட்டி நிறைஞ்சிருக்கும்
பால்மாடு சீதனங்கள்
ஏரி நிறைஞ்சிருக்கும்
எருமை மாடு சீதனங்கள்
குட்டை நிறைஞ்சிருக்கும்
குறியாடு சீதனங்கள்
ஒக்காந்து மோர் கடையும்
முக்காலி பொன்னாலே
சாய்ந்து மோர் கடையும்
சாய் மணையும் பொன்னாலே
இழுத்து மோர் கடையும்
இசிக்கயிறும் பொன்னாலே
பிள்ளைங்க விளையாட
பொம்மைகளும் பொன்னாலே
இத் தனையும் பெற்றாளாம்
இளங் கொடியாள் தங்காளாம்
மங்கல வாழ்த்து
சேலம் மாவட்டத்தில் வேளாளர் திருமணங்களில் கீழ்வரும் மங்கல வாழ்த்து பாடப்படும். வடமொழி மந்திரங்கள் உழைப்போர் குடும்பங்களில் நடைபெறும் திருமண வினைகளில் இடம் பெறுவதில்லை. இதற்கு முன்னர் இரு மங்கல வாழ்த்துக்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தாலி கட்டியவுடன் பாடப்படும் பாடல் இது.
புராண புராண வேதம்
வைய சாங்கியம்
காராள வேதருக்கும்
பாலா புளியாக்கா
ஈண தொரு மல்லி
இன மல்லி
நன்றாய் வேற்றம்
செம்பக மல்லி
நல் மாட்டுச் சாணம் கொண்டு
நல் சதுரம் வழிச்சு
சர்க்கரை குத்தி
சம்பா அரைத்து
வளமுள்ள தோட்டி
கொள மாளித்து
மாமன் கொடுக்கிற
வரிசையைக் கேளு
நாக மோதிரம்
புல்லை சரப்பளி
மேல் காது வாளி
வெள்ளை வெத்திலை
வீராணம் பாக்கு
பத்து விரலுக்கும்
பசியாணி மோதிரம்
எட்டு விரலுக்கும்
எணியாண மோதிரம்
மூங்கில் போல் சுற்றம்
முசியாமல் வாழ்ந்து
அருகுபோல் வாழ்ந்து
ஆல் போல் தழைத்து
இரு பேரும் பிரியாமல்
காராள வம்சம்
சுகமாக வாழ
குறிப்பு : வேளாளர்களுக்கு சாங்கியம் வேதம் என்று குறிப்பிடப் படுகிறது. தழைத்துக் கிளை விடுவதற்கு மூங்கில், அருகு, ஆல் இவை போல் செழித்து வளர வேண்டும்.
சேகரித்தவர் : சடையப்பன்
இடம் : அரூர்.
--------------
வாழ்த்து
அலை கடல் அமிர்தம்
திங்கள் மும்மாரியும்
செல்வம் தழைய
மணவறை வந்து
மங்களம் பாடுவோம்
நல்ல கணபதியை
நால்காலுமே தொழுதால்
அல்லல் வினைகளெல்லாம் அகலுமே
தும்பிக்கையோனை
தொழுதால் வினை தீரும்
நம்பிக்கை உண்டு நமக்கே வினாயகனே
கந்தரும் முந்திடும்
கருகிமா முகத் தோனும்
சந்திர சூரியர்
தானவர் வானவர்
முந்தியோர் தேவரும்
முனிவரும் காத்திட
நல்ல கல்யாணம்
நடந்திடச் செய்ததும்
தப்பித மில்லாமல்
சரஸ்வதி சரணம்
சீரிய தனமும்
தனமுள்ள கனியும்
பாரியோர் கதலி
பழமுடன் இளநீர்
சர்க்கரை வெல்லம்
கனியுடன் பலாச் சுளை
எள், அவல், பொரியும்
இஷ்டமுடன் தேங்காயும்
பொங்கல் சாதம்
பொறி கறியுடனே
செங்கையினாலே
திருட்டிகள் பிடித்தார்
நினைத்ததை எல்லாம்
மனத்துடன் பலியும்
கிரேதா திரேதா
கலியுகம் தன்னில்
சேரன் சோழன்
பாண்டியன் கூட
செம்மையுடனே
சிறந்திடும் மங்களம்
தாயது சுற்றம்
வாழ்வது பொருத்தம்
இந்த நாளுக்கு
இனியந்த நாளுக்கு
பக்குவம் கண்டு,
பருவம் கண்டு
திக்கிலுள்ள பேரும்
சில பேரும் கூடி
வேதியர் பக்கம்
விரைவுடன் சென்று
ஜோதிடர் அழைத்து
சாஸ்திரம் கேட்டு
இந்தப் பெண்ணையும்
இந்த மாப்பிள்ளையையும்
இருவர் பேரையும்
ராசிகள் கேட்டு
கைத்தலம் ஓடிய
கைத்தல பொருத்தம்
ஒன்பது பொருத்தம்
உண்டெனக் கேட்டு
பத்துப் பொருத்தம்
பாங்குடன் கேட்டு
முறைமைகள் ஆகுதென்று
முறையாக வந்து
பிரியமுடன் வெற்றிலை
பாக்கு பிடித்து
ஏழு தீர்த்தம்
இசைந்திடும் நீரும்
மேளம் முழங்க
விளாவிய வாழ்த்து
செங்கைச் சோற்றை
சீக்கத்தில் கழித்தார்
வர்ணப்பட்டால்
வஸ்திரம் தன்னை
நெருங்கக் கொய்து
நேராய் உடுத்தி
அன்ன முப்பழமும்
ஆநெய்ப் பாலும்
மன்னவர் உடனே
வந்தவர் உடனே
வாசல் கிளறி
மதிப்புடன் கூடி
வெற்றிலை மடக்கி
விரும்பியோர்க் கெல்லாம்
கணபதி தன்னை
கருத்துடன் நாடி
அருகது சூடி
அருளது புரிந்திட
முளரி மெச்சிட,
முகமது விளங்கிட
களரி வைத்துக்
கங்கணம் கட்டினார்
குழவிக்குக் கங்கணம்
குணமுடன் தரித்து
கொப்பேறி கொட்டி
குல தேவதையைத் தானழைத்து
செப்பமுடன் மன்னவர்க்குத்
திருநீற்றுக் காப்பணிந்து
சாந்து புனுகும்,
சவ்வாது நீரும்
சேர்ந்த சந்தனம்
சிறக்கவே பூசி
கொத்தரளி கொடியரளி
கோர்த்தெடுத்த நல்லரளி
முல்லை இருவாச்சி
முனைமுறியாச் செண்பகப்பூ
நாரும் கொழுந்தும்
நந்தியா வட்டமும்
வேரும் கொழுந்தும்
வில்வ பத்திரமும்
தண்டமாலை, கொண்ட மாலை
சுடர் மாலை தானணிந்து
ஆடை ஆபரணம்
அலங்கரித்து வீடதனில்
திட்டமுடன் பேழை தன்னில்
சோறு நிறைநாழி வைத்தார்
நெட்டுமுட்டுத் தான் முழங்க
நாட்டிலுள்ளோர் சபைக்குவர
நாட்டுக்கல் போய்
நலமாக வலம் வந்து
செஞ்சோறு அஞ்சடை
சுற்றியெறிந்து
திட்டி கழித்து சிவ
சூரியனைக் கைதொழுது
அட்டியங்கள் செய்யாமல்
அழகு மணவறை வந்தார்
மணவறையை அலங்கரித்து
மன்னவனைத் தான் இறுத்தி
இணையான தங்கை
ஏந்திழையை அழைத்து வந்து
மந்தாரைப்பூ மல்லிகைப்பூ
மரிக்கொழுந்து மாலையிட்டு
கூரை பிரித்து
குணமுள்ள மங்கையவள்
பேழை முடி தானைடுத்து
புரந்தவனைச் சுற்றி வந்தாள்
வேழ முகனை
வினாயகனைத் தானழைத்து
சந்திரரும் சூரியரும்
சபையோர்கள் தானறிய
இந்திரனார் தோழனை
இணைநோக்கி நின்ற பின்பு
தேங்காய் முகூர்த்தமிட்டு
செல்வ வினாயகரை
பாங்காகக் கைதொழுது
பரி செய்யப் போறமென்றாள்
போதவே பால் வார்த்து
போசனமும் முடித்த பின்னர்
மாதாவிடம் சென்று
மகனும் விடை கேட்க
போய்வா மகனே என்று
போற்றி மனுக்கொடுத்தார்
பேரண்டி முழுங்க
பெரிய நாதர் தானடிக்க
பூமி அதிர
புல்லாங்குழல் ஊத
எக்காளம் ஊத
எதிர்ச்சின்னம் முழக்கமிட
ஊர் மேளம் பறை மேளம்
உரும்பு துடும்படிக்க
துத்தாரி நாகசுரம்
ஜோடி கொம்பு தானூத
வலம்புரி சங்கு
வகைவகையாய் ஊதிவர
சேகண்டி மல்லாரி
திமிர்தாளம் பம்பை
பம்பை பேரணி
அமளிகள் கேட்டு
பல்லக்கு முன்னடக்க
பாரிலுள்ளோர் சூழ்ந்துவர
வெள்ளைக் குடைகள்
வெண் சாமரம் வீசிவர
விருதுகள் சுழற்றி
சூரிய வானம்போல்
தீவட்டி சகிதம்
சேர்ந்து முன்னடக்க
இடக்கை வலக்கை
இருபுறம் சூழ்ந்துவர
தம்பியானவர் தண்டிகை மேல்வர
தமையனானவர் ஆனைமேல்வர
ஆனையை மீறி
அழகுள்ள மாப்பிள்ளை
மட்டத்துக் குதிரை மேல்
வகையாய் ஏறி
சேனை படைகளுடன்
திரண்டு முன்னடக்க
பட்டப் புலவரும்
படித்த வரும் சேர்ந்துவர
கட்டியங்கள் கூறி
கவிவாணர் சூழ்ந்துவர
மேக மாஞ் சோலையில்
மீன்கள் பூத்திட
பாகமாஞ் சோலையில்
பந்தங்கள் பிடித்திட
அடியார் ஆயிரம் பேர்
ஆலத்தி ஏந்திவர
திட்டமுடன் எதிர்மாலை
சீக்கிரம் போட்டிட
அருமைப் பெரியோர்கள்
வாவென்று அழைத்து
வெகு சனத்துடனே
விடுதி வீடொதுக்கி
வாழ்வரசி மங்கைக்கு
வரிசை அனுப்பு மென்றார்
நாழிகை அரிசிக் கூடை
நன்றாக முன் அனுப்பி
பெட்டிகளும், பேழைகளும்
பொன்கலமும், சீப்புகளும்
பட்டுப் பணி மணிகள்
பூட்டி மணவறையில்
திட்டமுடன் மங்கையரைத்
திருப்பூட்டப் போறமென்று
அஷ்ட திக்கும் தானதிர
அடியுமென்றார் பேரணியை
அன்ன நடையோர்கள்
அருமைப் பெரியோர்கள்
பொன்னி வலக்கையாலே
பேழை முடி ஏந்தி நின்று
வண்ண வண்ணக் காட்சியர்க்கு
வரிசை கொண்டு வந்தோமென்று
நாட்டிலுள்ள சீர் சிறப்பை
நாட்டினார் முன்னிலையில்
கண்டு மகிழ்ந்தார்கள்
கண்குளிர யாவரும்
பூட்டு மென்றார் தாலியைப்
பெண்ணாள் திருக்கழுத்தில்
ஊட்டு மென்றார் சாதம்
உடுத்து மென்றார் பட்டாடை
சத்துச் சரப்பளியும்,
தங்கம் வெள்ளி பொன் நகையும்
மாணிக்கம் முத்து
வைடூரியம் திருப்பூட்டி
ஆணிப் பொன்னாபரணம்
அலங்கரித்துக் குலம் கோதி
அன்ன மயிலியர்க்கு
அழழு கொண்டை முடித்து விட்டு
பொன் பூட்ட வந்தோர்க்குப்
பூதக்கலம் அனுப்பிவைத்து
அன்பாக மாங்கல்யம்
அடவாகவே கொடுத்து
அத்தியார் சுத்தப்பட்டு
ஆனந்த நாராயணப்பாட்டு
மெச்சும் கலி வர்ணம்
மேகவர்ணம் தூவர்ணம்
பச்சை வர்ணம், பவளவர்ணம்
பலவர்ணக் கண்டாங்கி
மேலான வெள்ளைப்பட்டு
மேல் கட்டுங்கட்டி
கட்டியே இருக்கும்
கணபதி வாசலிலே
அருமையுள்ள பந்தலிலே
அனைவரும் சூழ்ந்து நிற்க
பெருமையுள்ள பந்தலைப்
பூவால் அலங்கரித்தார்
நாள் கலசம் நட்டு
நல்ல முகூர்த்தமிட்டு
பேக் கரும்பை நட்டு
பெருமன்னம் போட்டு வைத்து
சாரும் கரகமும்
சந்திர சூரியரும்
அம்மி வலமாக
அரசாணி முன்பாக
ஆயிரம் பெருந்திரி
அதற்கும் வலமாக
போயிருந்தார்கள்
பெருமையுடன் வாழ்ந்திடுவோர்
சுத்தமுடன் கலம் விளக்கி
சோறரிசி பால் பழமும்
பத்தியுடன் தானருந்தப்
பணித்தார் மாமன்மாரை
அருந்தி முடித்தவுடன்
அருகு வந்து தாய்மாமன்
பொட்டிட்டுப் பூமுடித்தார்
பேடாம் மயிலையர்க்கு
பட்டமது கட்டினார்
பாரிலுள்ளோர் பார்த்திருக்க
கொத்து மாலையைக்
கொண்டையில் கட்டி
சித்திரக் கலசம்
நெற்றியில் துலங்க
அலங்கரித்த பெண்ணை
அலங்காரமாய் மாமன்
மணமகன் அருகில்
அழைத்து வந்தார்.
இராமர் இவரோ,
லட்சுமணர் இவரோ
காங்கேயன் இவரோ,
கருணீகர் இவரோ
எனவே வியக்க
இருந்தவனிடத்தில்
மைத்துனனை அழைத்து
மணவறை இருத்தி
கலம் நிறை அரிசியில்
கையினைக் கோர்த்தார்
சிங்காரமாக தெய்வ
சபை தனிலே
கம்பர் குலம் வழங்கக்
கம்பர் சொன்ன வாக்கியங்கள்
வாக்கியத்தைத் தானடக்கி
மங்களங்கள் தான் பாட
அருமைப் பெரியோர்கள்
அருமை மனை செல்லலுற்றார்
கைக்குக் கட்டின
கங்கணமும் தானவிழ்த்தார்
தங்கள் தங்கத்தை
தாரை செய்து கொடுத்து
கைத்தாரை செய்த பின்பு இன்னார்
பரியம் தேதி செலுத்துவோமென்று
மண்டலமறிய
மணிவிளக்கு வைத்து
கரகம் இறக்கினார்
கன்னியுள்ள பாலனுக்கு
புடவை தனைப் போட்டு
பின்னும் தலைமுழுகி
மாமன் கொடுக்கும்
வரிசைகள் கேளாய்
காதுக் கடுக்கன்
வெள்ளிச் சரப்பளி
மோதிர கடகம்
அஷ்டக்கடகம்
தோள் வார் பசும்பொன்
துண்டுக் கடுக்கன்
அம்மி குளவி அழகு சிறு செம்பு
கட்டில் மெத்தை
கன்றுடன் பால் பசுவும்
குதிரையுடன் பல்லக்கும்
குறையாத செல்வமும்
ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி
மூங்கில் போல் கிளைகிளைத்து
மகிழ்ச்சியால் வாழ்ந்திருக்க
மக்கள் பதினாறும் பெற்று
மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்க
மங்கல நாண்பூட்ட
மகிழ்ந்தார்கள் எல்லோரும்
சுடர் வாழி முனிவர்கள்
கின்னரர்கள் வாழி
பாடுவோர், கேட்போர்
பதிவாழி !
பதி சுப்ரமணிய வாழி !
நகர் வாழி !
நாடும் சிறக்க
நனி வாழி
உய்யமா நதிமுதல்
தையல் பெண்ணாள் வாழி
வாழி வாழி என்று
வரமளித்தார் ஈசுவரனார்.
குறிப்பு : இது கோவை மாவட்டத்தில் பாடப்படும் வாழ்த்து. கம்பர் மரபினர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் நாவிதர் பாடுவார். கவுண்டர்களில் பல கிளைகள் உள்ளன. அவரவர் கிளைக்கு வெவ்வேறு பாடல் உள்ளன. எல்லாப் பாடல்களும் நாவிதர்களால் பாடப்படுவது.
சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி
இடம் : கோவை மாவட்டம்.
------------
7. குடும்பம்
இல்லறம்
குடும்ப வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே தனது கணவனையும் மகிழ்விக்கும் ஒரு பெண்ணைப் புகழ்ந்து அவள் கணவன் பாடுகிறான். குடும்ப வாழ்க்கையில் சலித்து விடாமல் சிரித்த முகத்தோடு தனது குடும்பத்தினருக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் செய்து விட்டுக் கணவனோடு, சிரித்துப் பேசிக் கொண்டே அவனைப் பராமரிக்கும் இப்பெண், இல்லற வாழ்க்கையின் தத்துவமறிந்தவள். வேலை, வேலை என்று சலித்துக் கொண்டு கணவனைக் கவனித்து அன்போடு பழகாத மனைவியர் பலர். கணவனோடு நேரம் போக்கி, குடும்பப் பொறுப்பை கைநழுவவிடும் மனைவியர் பலர். இவ்விரு வகையினரும், இல்லற வாழ்க்கையில் தோல்வியடைவார்கள். இப்பாடலில் வரும் பெண்ணோ கணவனால் புகழ் பாடப்படுவதுமின்றி குடும்பத்தினர் அனைவராலும் புகழப்படுகிறாள்.
அரிசி முளப் போட்டு
அரமனையும் சுத்தி வந்தா
அரிசி மண மணக்கும்
அரமனையும் பூ மணக்கும்
பருப்பு முளப் போட்டு
பட்டணமும் சுத்தி வந்தா
பருப்பு மண மணக்கும்
பட்டணமும் பூ மணக்கும்
வரிசை மணாளனோடு
வாய் சிரித்துப் பேசி வந்தால்
வாழ்க்கை நெய் மணக்கும்
வாசநறும் பூ மணக்கும்
வட்டார வழக்கு : முளப்போட்டு-முளைப்போட்டு.
உதவியவர் : பழனியப்பன் சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : காரிபாளையம், சேலம் மாவட்டம்.
--------------
சோற்றில் ஒரு கல்
ஒருவருக்கு ஒரு பெண். அவள் செல்லமாக வளர்ந்தவள். அவளுக்கு சமைக்கத் தெரியாது. சரியாக அரிசி களைந்து சோதிக்காமல் சமைத்து விட்டாள். கணவன் உண்ணும் பொழுது ஒரு கல் அகப்பட்டு விட்டது. உடனே சோற்றுத் தட்டையெடுத்து அவள் முகத்தில் எறிந்தான். அவள் துக்கம் பொறுக்க முடியாமல் அழுதாள். தந்தைக்குச் சொல்லியனுப்பினாள்.
தந்தை என்ன செய்வார்? காய்கறி அனுப்பினார். அவளுக்கு அரியத் தெரியவில்லை. அவரே வந்து அரிந்து கொடுத்தார். மகளின் நிலை நினைந்து வருந்தி அவளுக்குச் சமையல் கற்பிக்க ஏற்பாடு செய்கிறார்.
முத்தம்மா சமையலில் வல்லவளாகிறாள். மீனுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? பெண்ணுக்கு சமையல் கற்பிக்கவா வேண்டும்? சிறிது பயிற்சியில் அவளுக்குச் சமையல் தெரிந்து விடுகிறது. உற்சாகத்தோடு அவள் புருஷனுக்குச் சமையல் செய்து போடுகிறாள்.
முச்சி வெச்சு முறம் வெச்சு
பானை கழுவி
பன்னீருலை வச்சு
செந் நெல் அரிசி தான்
தீட்டி வடிச்சாளாம்
வடிச்சாளாம் சாதங்கறி
வாழைப்பூத் தன்னிறமாம்
பொரிச்சாளாம் பொரியல் வகை
பூளைப் பூத் தன்னிறமாம்
ஒரு வாய் சோத்திலே
ஒருகல் இருந்த தென்று
அள்ளி அறைந்தாராம்
அழகுள்ள மார் மேலே
துள்ளி விழுந்தாளாம்
தூங்கு மஞ்சக் கட்டிலிலே
சாஞ்சு விழுந்தாளாம்
சப்ர மஞ்சக் கட்டிலிலே
அடி பொறுக்க மாட்டாமல்
அப்பனோட சொன்னாளாம்.
அப்பன் மாராசன்
கொத்தோடு காய்கறிகள்
கொண்டு வந்து தந்தாராம்
அரியத் தெரியாமல்
அரமனைக்கு ஆள் விட்டாள்
சீவத் தெரியாமல்
திருமணைக்கு ஆள்விட்டாள்
அரமனை மாராசன்
திருமணையும் கொண்டு வந்து
அரிஞ்சு கொடுத்தாராம்
அழுதுத் துடித்தாராம்
அரிப்பாளாம் பொரிப்பாளாம்
முத்தம்மா
அரிசி சோறு தானிடுவாள்
முத்தம்மா
நெய்யாலே கச்சாயம்
சுடுவாளாம் முத்தம்மா
நேர மொரு பட்டுடுத்தி
வருவாளாம் முத்தம்மா
அரளிச் சுருள் ஓலையைத்தான்
அழகான கட்டிலிலே
நடுவிருந்து வாசிப்பார்
நம்பம தம்பி முத்தையா
குனிஞ்சு தான் சோறிடுவாள்
கற்பு மவள் நம்ம தங்கை
வாரி மனங் கொள்வார்
வரிசையுள்ள நம்ம தம்பி
எடுங்கடி பெண்டுகளே
எல்லோரும் தான் குலவை
போடுங்கடி பெண்டுகளே
பொன்னா லொரு குலவை
வட்டார வழக்கு : வடிச்சாள்-வடித்தாள் ; பொரிச்சாள்-பொரித்தாள் ; சாஞ்சு-சாய்ந்து ; மாராசன்-மகராஜன், தந்தையைக் குறிக்கும் ; திருமணை-திருகுமணை ; அரிஞ்சு-அரிந்து (அறுத்து) ; குனிஞ்சு-குனிந்து ; குலவை-குரவை ; மங்கலமாக-ஒலி எழுப்புவது.
உதவியவர் :புலவர் இராம இராசன்
சேகரித்தவர் :கு.சின்னப்ப பாரதி
இடம் : வேலூர், சேலம் மாவட்டம்.
-----------
சமையல்
சமையல் தெரியாதவள் படும்பாட்டை முன்னிரண்டு பாடல்களில் கண்டோம். இப்பாடலிலும் ஆக்கத் தெரியாதவள் படும் அவதியை நாம் காண்கிறோம். இவள் கணவன் கதவடைத்துக் கொல்லுகிறான். இவள் எதிர்த்து நிற்கவும் தயாராயில்லை. அவள் தகப்பனாருக்குச் சொல்லிவிடவும் தயாராயி்ல்லை. காலையில் ஓடிப்போய் விடுவதாகச் சொல்லுகிறாள்.
கான மிளகா வச்சு
கறிக்கு மசால் அரைச்சுக்கூட்டி
குழம்பு ஒரைச்சதுண்ணு
கொல்லுதாரே கதவடைச்சு !
காளான் குழம்பு வச்சு
களியவே கிண்டி வச்சு
துரந்து வச்சு ஆறித்திண்ணு
துடுப்பெடுத்துக் கொல்லுதாரே !
படிச்சவண்ணு தெரிஞ்சிருந்து
பாவி மகன் என்னைக் கூட்டி
கூழுக் காச்சத் தெரியலேண்ணு
குறுக் கொடியக் கொல்லு தாரே !
சுண்டச் செவப் பிண்ணுல்ல
சொக்கியவர் என்னைக் கட்டி
சோறு காச்சத் தெரியலேண்ணு-என்
சொகுசைக் குறைக்காரே !
அறியாத ஊரிலேயும்
தெரியாம வாக்கப் பட்டேன்
அடியாதங்க புடியாதங்க
விடியாம ஓடிப்போரேன்
வட்டார வழக்கு : ஒரைச்சுது-எரித்தது ; படிச்சவண்ணு-படித்தவள் என்று ; குறுக்கு-இடுப்பு ; சுண்டச் சிவப்பு-விரலால் சுண்டினால் சிவந்து விடும் ; அடிபுடி-சேர்ந்து வருவது வழக்கு.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-----------
இந்தாடா உன் தாலி
திருமணமானது முதல் கணவன், தன் மனைவியின் சமையலைக் குறை கூறிக் கொண்டே வருகிறான். எவ்வளவு முயன்று, ஆர்வத்துடன் சமைத்தாலும் அவனுக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. புதிய புதிய பண்டம், பணியாரங்களும், பலகாரங்களும் செய்து அவனுக்கு மகிழ்ச்சியூட்ட முயன்றும் தோல்வியடைகிறாள் மனைவி. அவளுடைய அன்பையும் தன்னை மகிழ்விக்க அவள் செய்யும் முயற்சியையும் அவன் உணர்ந்து பாராட்டவில்லை. “பொறுமை ஒரு நாள் புலியாகும்” என்று பாடினான் நாட்டுக் கவிஞன் கல்யாண சுந்தரம். அதுபோல அவள் சீறுகிறாள். தாலிக் கயிற்றை அடிமை விளக்கென எண்ணுகிற கணவனைப் பார்த்து “இந்தாடா உன் தாலி” என்று கூறுகிறாள். அவன் தன் பக்கம் பழமையான வழக்கங்கள் மட்டுமல்லாமல்,சட்டமும், நீதியும் இருப்பதாகக் கூறுகிறான். பழைய சட்டங்கள் பெண்களை அடிமைகளாக்கி கணவனுக்கு அடங்கி வாழ்வதற்குத்தானே துணை நின்றன? அவள் வழக்கத்தை மட்டுமில்லாமல், தன்னை அடிமையாக வாழக் கட்டாயப்படுத்தும் சட்ட்த்தையும் மீறுவதற்கு துணிகிறாள்.
இவ்வுரையாடல், அன்பும், பாசமும், பண்பும் கணவன் மனைவி உறவி்ல் இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. அவ்வாறில்லாது “மாட்டை வசக்கித் தொழுவினில் கட்டும் வழக்கத்தை கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார்” என்ற நிலையில் கணவன் போக்கு இருந்தால், “அதை வெட்டி விட்டோம் என்று கும்மியடி” என்று பாரதியின் புதுமைப் பெண் கூறுவதைத் தற்கால உழவன் மகள் பின்பற்றுவாளா?
பெண் : குத்தின அரிசி ஒரலிலே
கொளிச்ச அரிசி மொறத்திலே
ஆக்கின சோத்துக்கு உண்ணானம் பேசின
இந்தாடா மாமா உன்தாலி
ஆண் : தாலி குடுத்தாலும் வாங்கமாட்டேன்
தாரங் குடுத்தாலும் வாங்கமாட்டேன்
முப்பது பணத்தை முடிச்சு கட்டினு
எப்ப வருவியோ கச்சேரிக்கு
பெண் : கச்சேரிக்கும் வரமாட்டேன்-போடா
கட்டி இளுத்தாலும் நான் வல்லே.
ஆக்கின சோத்துக்கு உண்ணானம் பேசின
இந்தாடா மாமா உன் தாலி
வட்டார வழக்கு : ஒரல்-உரல் ; வல்லை-வரவில்லை ; கட்டினு-கட்டிக் கொண்டு ; உண்ணானம்-விண்ணாமை.
குறிப்பு : தென் பாண்டி நாட்டு உழவர் சாதிகளில் “அறுத்துக்கட்டும்” வழக்கம் உண்டு. மணமுறிவு சற்று எளிதாகவேயிருக்கும். ஆனால் மணமுறிவு கோருபவர்கள் “தீர்த்துக்கட்டும் கூலி” அல்லது “அறுப்புப்பணம்” என்ற தொகையை முதல் கணவனுக்குக் கொடுத்துவிட வேண்டும், பரிசத் தொகையையும் கொடுத்துவிட வேண்டும். இவற்றைக் கொடுக்க முடியாதவர்கள் ஏராளமாக இருப்பதால், மணமுறிவு கருத்தளவில் தான் எளிது.அதைத்தான் இப்பாடலில் இரண்டாம் செய்யுளில் கணவன் “முப்பது” பணம் கொண்டு கச்சேரிக்கு வா என்று கூறுகிறான்.
சேகரித்தவர் : சடையப்பன்
இடம் : சேலம் மாவட்டம்.
------------
காதோலை
புது மணப் பெண்ணுக்குத் தன் முதல் மாதக் கூலியில் கணவன் காதோலை வாங்கி வந்தான். அவனுடைய சட்டைப் பைக்குள் காதோலை கிடந்ததைக் கண்டெடுத்த மனைவி, இது எப்படி அங்கு வந்ததென்று பொய்க் கோபத்தோடு கேட்கிறாள். அவன் 'பாகற் கொடி பந்தலில் காதோலை காய்ப்பது உனக்குத் தெரியாதா?' என்று கேட்கிறான்.
பெண் : சாய வேட்டிக்காரா-நீ
சாதித் துரை மகனே
வல்லவாட்டு சேப்புக் குள்ள
வந்த தென்ன காதோலை?
ஆண் : தண்ணிக் குடத்தாலென்
தாக்த்தைத் தீர்த்த தங்கம்
பாவக் கொடி பந்தலில்
பழுத்ததடி காதோலை.
வட்டார வழக்கு : சேப்பு-சட்டைப்பை ; பாவக் கொடி-பாகற் கொடி.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம் : நெல்லை மாவட்டம்.
---------
பேயனுக்கு வாழ்க்கைப் பட்டேன்
பல ஊர்களில் அவளுக்கு முறை மாப்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுடைய பெற்றோர் பெண்ணின் அழகை மதித்து பெண் கேட்டனர். ஒர ஆண்டு கழியட்டும் என்று பெண்ணின் பெற்றோர் திருமணத்தைத் தள்ளி வைத்தனர். அதற்கும் ஒப்புக்கொண்டு மறு ஆண்டிலும் கேட்டனர். அவளுக்கு ஒரு மாமன் மகன் மீது ஆசை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பணம் இருக்கிறதென்று எண்ணி, ஒரு பேயனுக்கு அவளைக் கட்டி வைத்து விட்டனர். அவன் அவளைப் படாதபாடு படுத்தினான். அவள் தாய் வீடு திரும்பினாள். தன் மாமன் மகனைக் கண்டாள். அவளுடைய மனக்குறை அவனுக்குத் தெரியும்படி பாடுகிறாள்.
முக அழகைப் பாத்துக்கிட்டு
முத்தையாபுரத்தில் கேட்டாங்க
பல்லழகைப் பாத்துக்கிட்டு
பாண்டியா புரத்தில் கேட்டாங்க
வாயழகைப் பாத்துக்கிட்டு
வல்ல நாட்டில் கேட்டாங்க
காலழகைப் பாத்துக்கிட்டு
கைலாசபுரத்தில் கேட்டாங்க
மாட்டேன் இன்னு சொன்னதுக்கு
மறு வருசமும் கேட்டாங்க
மாமன் மகனிருக்க
மாலையிடும் சாமி இருக்க
பேசும் கிளி நானிருக்க
பேயனுக்கு வாக்கைப் பட்டு
பெரும் கஷ்டத்துக்கு ஆளாச்சே !
குறிப்பு : முத்தையாபுரம், பாண்டியாபுரம், கைலாசபுரம், வல்லநாடு-தூத்துக்குடிக்குச் சிறிது தூரத்திலுள்ள ஊர்கள்.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டம், நெல்லை மாவட்டம்.
------------
பொருந்தா மணம்
சொத்துரிமை சமுதாயத்தில் உறவுகளை நிர்ணயிப்பது வாரிசு உரிமை தான். திருமணமும் கூட மணமக்கள் பெறவிருக்கும் சொத்தைக் கருதியே நிர்ணயிக்கப்படும். இதனால் ஏற்படும் சில வினோதங்களைக் கீழே காண்போம். நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய பண்ணையாருக்கு மூன்று பெண்கள் பிறந்தனர். சொத்துக்கு ஆண் வாரிசு வேண்டுமென்று மனைவியின் தங்கையை மறுமணம் செய்து கொண்டார். அவள் இரண்டு பெண் மக்களை ஈன்றாள். ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தால் பெண்களே பிறக்கக் கூடும் என்று எண்ணி உறவில்லாத வேறு ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டான். அவளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. நான்காவது திருமணத்தைப் பற்றி பண்ணையார் எண்ணிக் கொண்டிருக்கும்போது முதல் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மூத்தவளின் மதிப்பு உயர்ந்தது. இளைய மனைவியர் சண்டை செய்து கொண்டு பிறந்த வீட்டுக்குப் போனார்கள். அடிக்கடி வந்து அமைதியைக் குலைத்து விட்டுப் போனார்கள்.
கோவில்பட்டி தாலுக்காவில் படித்த வாலிபர் ஒருவருக்கு மூன்று சகோதரிகள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் மூன்று பெண் குழந்தைகள். எல்லோருக்கும் சொத்து உண்டு. தங்களது ஒரே சகோதரனுக்கு எல்லாப் பெண்களையும் கொடுக்க முன்வந்தனர். அவர் மறுக்கவே மூத்த பெண்கள் மூவரையும் மணம் செய்து கொடுக்க முன் வந்தனர். படித்தவரும் முற்போக்கு கொள்கை உடையவருமான அவ்விளைஞர் சகோதரிகள் பகைமை கொள்வார் என்றெண்ணி நாற்பது வயது வரையும் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். சகோதரிகளின் பெண்கள் அனைவரும் மணம் செய்து கொடுக்கப்பட்ட பின்னர். அவர் உறவல்லாத ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டார்.
கிழவருக்குக் குமரியையும், குழந்தைக்குக் குமரியையும், மணம் செய்து வைப்பது சமீபகாலம் வரை வழக்கில் இருந்து வந்தது. தங்கையின் மகளை மணம் செய்து கொள்வது பரவலான வழக்கம். மகளின் மகளை மணம் செய்து கொள்வது ஆண்களுக்கு விலக்கப்பட்டதாக இருந்ததில்லை.
கீழ்வரும் பாடலில் காதலித்தவனை மணம் செய்து கொள்ள முடியாமல் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு பெண் மனம் குமுறி அழுவதைக் காணலாம்.
சோளச் சோறு திங்க மாட்டேன்
சொன்னபடி கேட்க மாட்டேன்
நரைச்ச கிழவங் கிட்ட
நானிருந்து வாழ மாட்டேன்
நாணலுத் தட்டை போல
நரைச்ச கிழவனுக்கோ
கோவப் பழம்போல
குமரி வந்து வாச்சானல்லே !
செம்புல சிலை எழுதி
சிவத்த பிள்ளை பேரெழுதி
வம்புல தாலி கட்டி
வாழுறது எந்த விதம்?
யானை அணைஞ்ச கையி
அருச் சுனரைத் தொட்ட கையி
பூனையை அணையச் சொல்லி
புள்ளி போட்டானே எந்தலையில்.
வட்டார வழக்கு : புள்ளி போட்டானே-விதித்தான் கடவுள்.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம் : கோவில்பட்டி.
----------
மோதிரம் போடவில்லை
முன்னூறு ரூபாய் பரிசம் போட்டுப் பெண்ணைக் கட்டிவைத்தான் தன் மகனுக்கு. தகப்பனது நோக்கம் 300 ரூபாய் பரிசம் போட்டால், பெண்ணின் குடும்பச் சொத்து தன்னைச் சேரும் என்று நினைத்தான். ஆனால் கலியாணத்துக்குப் பின் அவளுக்குச் சொத்து எதுவும் கிடையாது என்று அறிந்தான். அதன்பின் அவளை அவன் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். மகனும் பெண் அழகாயில்லை என்ற சாக்கால் அவளை வெறுத்தான். மூவரும் தங்கள் கருத்தை ஒருவருக்கொருவர் வெளியிடும் நாடகக் காட்சியே பின்வரும் பாடல்கள்.
மாமனார் : முன்னூரு பரிசம் போட்டு
முட்டாதாரு பெண்ணைக் கட்டி
மோதிரம் போடலைண்ணு
மூணு நாளா அழுகுறாண்டி
மருமகள் : பரிசமும் போடவேண்டாம்
பந்தி பருமாற வேண்டாம்
ஏழை பெத்த பொண்ணு நானு
ஏத்துக் கொங்க மாமனாரே
மகன் : உள்ளு வளசலடி
உன் முதுகு கூனலடி
ஆக்கங் கெட்ட கூனலுக்கோ
ஆசை கொள்வேன் பெண்மயிலே !
வட்டார வழக்கு : முட்டாதாரு-மிட்டாதார் ; பந்தி பருமாற-விருந்துகள் வைக்க வேண்டாம் ; பெத்த-பெற்ற
குறிப்பு : பெற்றோர் மடமையாலும் மோசத்தாலும் பெண் வாழ்விழந்து போகிறாள்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-----------
பொருத்தமற்ற மாப்பிள்ளை
நல்ல உடல்நலமுள்ள உழைக்கும் வாலிபன் அவன். அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது. ஆனால் அவனுக்குச் சாய்ந்து உட்காரக் கூடச் சொந்த இடமில்லை. அவளுடைய பெற்றோர்கள் அவளை கொஞ்சம் பசையுள்ள குடும்பத்தில் ஒரு நோயாளிக்குக் கட்டிவைத்தார்கள். சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் வாலிபன், மணமான பெண்ணைக் கண்டான். அவள் நிலைக்கு வருந்தி அவன் பாடுகிறான்.
நெல்லுக்காகக் கொண்டையிலே
தேங்காத்தண்டி பூமுடிஞ்சு
படமெடுத்த நாகம் போல-என்னை
பாராமலே போற புள்ள !
அண்டினயே ஆலமரம்
அடுத்த பலா மரத்தே
புடிச்சயடி முருங்கைக் கொப்பை
பொல்லாத காலம் வந்து.
வட்டார வழக்கு : அண்டினயே-அருகில் வந்தாய் ; ஆலமரம் அடுத்த பலா மரத்தை-பலமுள்ள மரத்தைப் பிடிக்காமல் முருங்கக் கொம்பை பிடித்தாயே.
குறிப்பு : தன்னை, அவன் ஆலமரத்திற்கருகில் உள்ள பலா மரத்திற்கும், அவளுடைய கணவனை முருங்கைக் கொப்பிற்கும் ஒப்பிட்டுப் பேசுகிறான்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி
-----------------
கஞ்சி காய்ச்சத் தெரியவில்லை
301 ரூபாய் பரிசம் போட்டுக் கட்டின மனைவி. அவளுக்குக் கஞ்சி காய்ச்சத் தெரியவில்லை. அலுத்து வந்த நேரத்தில் கஞ்சியாவது ஊற்ற வேண்டாமா? இந்த உதவாக்கரை பெண்ணைப் பார்த்துக் கணவன் சொல்லுகிறான்.
முன்னூத்தி ஒண்ணு வாங்கி
முடிஞ்சு ஙொப்பன் வச்சிக்கிட்டான்
கஞ்சி காய்ச்சத் தெரியலேன்னா-உன்
கழுத்தக் கட்டி நானழவா
வட்டார வழக்கு : ஙொப்பன்-உங்கள் அப்பன்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
----------
வினைக்காரன் சீமை
சந்தனம் உரசும் கல்லைப்போல் புகழ் மணக்க வாழ்ந்த குடும்பத்தில் அவள் பிறந்தாள். நல்ல நல்ல மாப்பிள்ளைகள் அவளை மணம் பேசிவந்தனர். ஆனால் அவளோ மீனுரசும் கல்லுப் போல் உலகம் இகழ வாழ்ந்த ஒரு மோசக்காரன் மீது மையல் கொண்டு அவனையே மணப்பேன் என்றாள். அவளது விருப்பத்திற்கு மாறாக மணம் நடத்த மனமில்லாத தந்தை அவளை அவனுக்கே மணம் செய்து கொடுத்தார். களவு, சூது, குடி முதலிய தீய வழக்கங்களுடைய அவளது கணவன் போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டான். அவளும் அவனுக்கு உடந்தையாக இருந்தாளென்று விசாரிக்கப்பட்டாள். அவன் நீண்டகாலத் தண்டனை பெற்றான். அவளுடைய தந்தை தன்னை நொந்து கொண்டு தன் வீட்டுக்கு அழைக்கிறார். தன் விதியால்தான் அவளுக்குத் துன்பம் வந்து சேர்ந்ததென்ற நம்பிக்கையில் அவர் தன்னை 'வினைகாரன்' என்று சொல்லிக் கொள்ளுகிறார்.
(தந்தை கூறுவது)
சந்தனம் உரசும் கல்லு-தலை
வாசலில் சாத்தும் கல்லு
மீனுரசும் கல்லுக்கில்லோ-நீ
வீனாசை கொண்டியம்மா
கச்சேரி கண்ட புள்ள
கையெழுத்துப் போட்ட புள்ள
போலீசு கண்ட புள்ள
போயிராதே கூடப்போவோம்
நனைஞ்சு துயிலுடுத்து
நைத்துயிலு மேலணைஞ்சு
விருந்தாடி வாரியாமா
வினைகாரன் சீமை தேடி
வெட்டின கட்டையிலே
வெளைஞ்ச மரிக் கொழுந்தே
வக்கத் தெரியாமே
வாட விட்டான் தேசமெல்லாம்
பாக்கத் துயில் உடுத்தி
பாலகனைக் கையிலேத்தி
விருந்தாடி வாராளில்ல
வினைகாரன் சீமைதேடி
வட்டார வழக்கு : மீனுரசும் கல்லு-தகுதியற்ற கணவன் ; விருந்தாடி-தந்தை வீட்டிற்கு வருகிறாள், வினைகாரன்-அவளைக் குறை கூறாமல் தன்னைக் குறை சொல்லிக் கொள்ளுகிறார்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி.
----------
மருந்து வைத்து விட்டாரா?
ஒருவரை மயக்கிக் கவர்ச்சிப்பதற்கும், ஒருவரை வெறுக்கச் செய்வதற்கும் மருந்து வைப்பது என்ற முறையில் கிராம மக்களுக்கு நம்பிக்கை உண்டு. இது மந்திரவாதத்தின் அடிப்படையில் நடத்தப்படும் செய்வினை. இப்பாடலில் வரும் பெண் தனது காதலனை அவனது பெற்றோர் மருந்து வைத்து மயக்கி தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகச் சொல்லுகிறாள். ஆனால் கடைசியில் மருந்தின் மயக்கமல்ல, அவனது மயக்கம்தான் தன்னைக் கைவிடக் காரணமென்றும் சொல்லுகிறாள். இளைய பள்ளி, பள்ளனுக்கு மருந்து வைத்து வசப்ப்படுத்திக் கொண்டாள் என்று முக்கூடல் பள்ளு கூறுகிறது. குருகூர்பள்ளு, அவ்வாறு கூறுவதோடு மருந்து செய்யும் முறையையும் விவரமாகக் கூறுகிறது. உறுதியின்மையை, மருந்தின் விளைவென்று நம்புவோர் காதலை உதறியவனைக் கண்டிக்க மாட்டார்கள். ஆனால் இப்பெண் அவனையே தனது அவல நிலைக்குப் பொறுப்பாக்கித் திட்டுகிறாள்.
(பெண் பாடுவது)
மறக்க மருந்து வச்சு
மன்னவர்க்கே தூது விட்டு
என்னை மறக்கச் சொல்லி
என்ன பொடி தூவினாரோ?
முந்தி அழுக்கானேன்
நுனி மயிரும் சிக்கானேன்
ஆரஞ்சி மேனியெல்லாம்
அவராலே அழுக்கானேன்
விரிச்சதலை முடியாம
வேந்தங் கூட சேராம
அரச்ச மஞ்சுச குளியாமே
அலை யுதனே இக்கோலம்
ஓலை எழுதி விட்டேன்
ஒம்பதாளு தூது விட்டேன்
சாடை எழுதி விட்டேன்
சன்னல் கம்பி வேட்டியிலே
நெடுநெடுணு வளர்ந்தவரை
நீலக்குடை போட்டவரைப்
பச்சக்குடை போட்டவரைப்
பாதையில் கண்டியளோ?
ஆத்துக்குள்ள ஆதாள-என்னை
ஆகாதென்று சொன்னவரே
தோப்புக்குள் தொயிலயிலே-என்னைத்
தொட்டிட்டும் போகலாமா?
வெள்ள வெள்ளக் கொக்கை
விளையும் சம்பா அழிச்ச கொக்கை
கண்ணியிலே பட்ட கொக்கை
கடை வீதியில் கண்டியளா?
ஆத்துக்குள்ள கூட்டிக்கொண்டு
அன்பான வார்த்தை சொல்லி
தேத்திக் கழுத்தறுத்தானே
தேவடியாள் பெத்த மகன்
மேற்கண்ட பாட்டின் கருத்தையொத்த தனிப் பாடல் ஒன்று வருமாறு :
மதுரைக்குப் போவாதிங்க
மாங்கா தேங்கா வாங்காதிங்க
மதுரைச் சிறுக்கியல்லோ
வச்சுருவா கை மருந்து
குறிப்பு : தன்னுடைய பெண்மையை அழித்தவனுக்கு, விளையும் சம்பா அழிச்ச கொக்கு என்று கூறுகிறாள்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
------------
கணவன் படிக்கும் சத்தம்
கிராமத்தில் படித்தவர்களே குறைவு. சில வருஷங்களுக்கு முன்னால் படிக்கத் தெரிந்தவனைப் பற்றி அவனது மனைவிமார்கள் பெருமையாக நினைத்துக் கொள்வார்கள்.படித்தவனின் மனைவி அவர் படிக்கும் சத்தத்தைப் புகழ்ந்து தனது தோழியரிடம் கூறுகிறாள்.
விட்டம் போட்டு வீடெடுத்து
வெளி வாசல் தொட்டில் கட்டி
வெளி வாசல் தொட்டியிலே
வெள்ளிக்கிளி கூவுதுன்னா
வெள்ளிக்கிளி சத்த மில்ல
வீமர் படிக்கும் சத்தம்
சட்டம் போட்டு வீடெடுத்து
தலைவாசல் தொட்டி கட்டி
தலை வாசல் தொட்டியிலே
தங்கக்கிளிகூவுதுன்னா
தங்கக் கிளி சத்தமில்ல
தருமர் படிக்கும் சத்தம்
வட்டார வழக்கு : தொட்டி-தொட்டில் ; வீமர், தருமர்-கணவனைக் குறிக்கும் ; வெள்ளிக்கிளி கூவுது, தங்கக்கிளி கூவுது-அவன் படிக்கும் சப்தம்.
உதவியவர் : செல்லம்மாள் சேகரித்தவர் :கு. சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
----------
படிக்கும் மாப்பிள்ளை
படிக்கிறான் என்று சொல்லிப் பெண்ணைக் கட்டிவைத்தார்கள். படித்து முடிந்ததும் பெண்ணை அனுப்பலாம் என்றிருந்தார்கள்.ஆனால் பல வருஷங்களாகியும், அவன் படிப்பு முடிந்த பாடில்லை. மனைவி அவனுடைய கல்லூரியைப் பார்த்திருக்கிறாள். அங்கேதான் படிக்கிறார், எழுதுகிறார் என்றிருந்தாள். ஆனால் எவ்வளவு நாள் தான் படித்துக் கொண்டேயிருப்பார், என்றுதான் தன்னை அழைத்துச் செல்லுவாரென்று அவள் கவலைப்படுகிறாள். வகுப்பில் அவனடையும் தோல்விகளைப் பற்றி அவளுக்குத் தெரியுமா?
பத்து பவுனழிச்சு
பர்த்தா வுக்கு காப்பி வச்சேன்
பத்தடுக்கு மாடி மேல
படிக்கிறான்னு நாங்க இருந்தோம்
படிச்சு முடிப்பாரா
பயண மெங்கும் வைப்பாரா?
எட்டுப் பவுனழிச்சு
எசமானுக்குக் காப்பி வச்சே
எட்டடுக்கு மாடி மேலே
எழுதறார்ன்னு நாங்க இருந்தோம்
எழுதி முடிப்பாரா
எண்ணங்களைச் சொல்லுவாரா?
உதவியவர் : செல்லம்மாள்; சேகரித்தவர் :கு. சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
-------------
பிறந்த வீடு
பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் உரிமையில்லாதிருந்த காலத்தில், தேர், திருவிழாக்களுக்கு பிறந்த வீடு சென்றாலும், அவர்களை அண்ணிமார் வரவேற்பதி்ல்லை. சில நாட்கள் தங்கினால் முகஞ் சிணுங்குவார்கள். கணவன் கதியற்றுப் போனால் பிறந்த வீட்டில் பெருமை கிடையாது. இக்கருத்தை 'நல்ல தங்காள்' கதை விளக்குகிறது.
பிறந்து, வளர்ந்து ஒன்றாக உழைத்து உருவாக்கிய பிறந்தகத்துச் சொத்தில் ஒரு உரிமையும் இல்லாது போவதையெண்ணி தமிழ்ப் பெண்கள் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். இவ்வுணர்ச்சியை வெளியிடும் பாடல் தமிழில் மிகப்பல.
தந்தை இறந்தபோது மகள் பாடும் ஒப்பாரியில் இவ்வுணர்ச்சி வெளிப்படுவதைக் காணலாம். மணமான பெண்ணின் தந்தையிறந்து விட்டால், அவள் இனி பிறந்தக ஆசை விட்டதென்று எண்ணுவாள். அண்ணனையும், அண்ணியையும் குறை கூறி ஒப்பாரி சொல்லுவாள்.
இப்பாடல் ஏறக்குறைய ஒப்பாரியை ஒத்துள்ளது.
மாரியம்மன் திருவிழாவிற்கு வருமாறு அண்ணன் வருந்தியழைத்ததால், அவனூருக்குச் செல்லுகிறாள் ஒருத்தி. அங்கு அவள் தங்கியிருந்த ஒரு நாளில் அண்ணி அவளுக்கு அளித்த கௌரவத்தை அவளால் தாங்க முடியவில்லை.
மாரியாயி நோம்பு
மவுத்தான மாநோம்பு
மாரி அழையு மென்றார்
மன்னவனைத் தேடுமென்றார்
மைந்தனைக் கையெடுத்து
மன்னவரை முன்னடத்தி-பொறந்த
மறநாடு வந்து சேர்ந்தேன்
மரமல்லிப் பூவுக்கு
மைந்தன் அழுதிடவும்-நான்
மன்னவரைக் கிட்ட வச்சு
மைந்தனை எறக்கி விட்டு
வண்ணமடி கூட்டி
மரமல்லி தான் பறிச்சேன்-நீ
மரமல்லியெடுக்காதே
மறுக்காத் தழையாதென்றாள்
வண்ணமடி யொதறி
மலரைக் கொட்டி விட்டு
வந்து விட்டேன் சந்நிதிக்கு
செல்லியிள நோம்பு
தேங் கொழுந்தோர் மாநோம்பு
செல்லி அழையுமென்றார்
சேவகனைத் தேடுமென்றார்
செல்வனைக் கையெடுத்து
சேவகரை முன்னடத்தி-பொறந்த
சீமைக்குப் போனாலும்
செவந்திப் பூவுக்கு
செல்வன் அழுதிடவும்-நான்
செல்வனை எறக்கிவிட்ட
சேவகரை அருகே வச்சு-நான்
சின்னமடி கூட்டி
செவந்தி பூ நான் பறித்தேன்-அண்ணி
செவந்தி பூ எடுக்காதே
செடியே தழையாதென்றாள்-நான்
சின்ன மடியொதறி
சிந்திய கண்ணோடு
திரும்பி விட்டேன் என் வீடு
வட்டார வழக்கு : மவுத்தான-மகத்தான ; மறநாடு-மறவர்நாடு ; மறுக்கா-மறுபடி ; செல்லி-கிராம தேவதை ; ஒதறி-உதறி.
உதவியவர் : தங்கம்மாள்; சேகரித்தவர் :கு. சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
----------
யாரெல்லாம் சாகவேண்டும்?
உழவர் குடும்பமொன்றில், ஒரு பெண் கடினமான உழைப்பால், பணம் சேர்த்து, சிக்கனமாக குடும்பம் நடத்தி, மிஞ்சும் பணத்தில் கோழிகள், ஆடுகள், மாடுகள் முதலியன வாங்குகிறாள். அவளுடைய முயற்சியில், வீட்டிலுள்ள ஒன்றிரண்டு பேர் ஒத்துழைக்கவில்லை. சோம்பியிருப்போர்களைப் பார்த்து 'உழைக்காமல் உயிர் வாழக்கூடாது,' என்னும் கருத்தைக் குடும்பத் தலைவி வேடிக்கையாக வெளியிடுகிறாள்.
ஆத்தங்கரை தனிலே
ஏலாலம்மிடி ஏலாலம்
ஆடு ரண்டு வாங்கி வுட்டேன்
ஏலாலம்மிடி எலாலம்
ஆடு ரண்டும் நல்லாருக்க
ஏலாலம்மிடி ஏலாலம்
அத்தை மகள் சாகவேணும்
ஏலாலம்மிடி ஏலாலம்
கொளத்தங்கரை தனிலே
ஏலாலம்மிடி ஏலாலம்
கோழி ரண்டு வாங்கி வுட்டேன்
ஏலாலம்மிடி ஏலாலம்
கோழி ரண்டும் நல்லாருக்கு
ஏலாலம்மிடி ஏலாலம்
கொழுந்தனாரு சாக வேணும்
ஏலாலம்மிடி ஏலாலம்
மாத்தாங் கரைதனிலே
ஏலாலம்மிடி ஏலாலம்
மாடுரெண்டு வாங்கிவுட்டேன்
ஏலாலம்மிடி ஏலாலம்
மாடு ரெண்டும் நல்லாருக்க
ஏலாலம்மிடி ஏலாலம்
மாமனாரு சாக வேணும்
ஏலாலம்மிடி ஏலாலம்
சேகரித்தவர் : சடையப்பன்
இடம் : சேலம் மாவட்டம்.
------------
பிள்ளைக்கலி தீரல்லியே
'ஆண் மகனுக்குத்தான் சொத்துரிமை' என்ற சட்டம் அமுலிலிருக்கும் நாடுகளில் ஆண்மகவு வேண்டும் என்ற வேட்கை மகளிர்க்கு ஏற்படுதல் இயல்பே. மணமான இரண்டொரு ஆண்டுகளில் மகப்போறு உண்டாகாவிட்டால், அவளை புக்ககத்தார் குறைகூறத் தொடங்குவார்கள். பிறந்தகத்தார் அவளை அரசமரம் சுற்றவும், தெய்வங்களுக்கு நேர்ந்து கொள்ளவும் தூண்டுவார்கள். பொதுவாகப் பிள்ளைவரம் தரும் தெய்வங்கள் பிள்ளையார், நாகர், சாத்தன், சப்தமாதர், இசக்கி முதலிய தெய்வங்கள். பெண் பிறந்தால் தாய் மகிழ்ச்சியடைவதில்லை.
குழந்தையில்லாத ஒருத்தி, தனது குறையை தகப்பனிடம் கூறுகிறாள்.
மாமரத்துப் பச்சியெல்லாம்
என்னெப்பெத்த அப்பா
மைந்தன்னு கொஞ்சையிலே
மாவாலே பொம்மை செஞ்சு-பாவிக்கு
மைந்தன்னு தந்தீங்க
மாவுந்தான் பேசலியே
என்னெப்பெத்த அப்பா
மைந்தன் கலி தீரலியே
பூமரத்துப்பச்சி யெல்லாம்
என்னெப்பெத்த அப்பா
பிள்ளை வெச்சு கொஞ்சையிலே
பொம்மை செஞ்சு பாவிக்கு
பிள்ளைனு தந்தீங்க
பொம்மையுந்தான் பேசலியே
என்னெப்பெத்த அப்பா
எனக்குப் பிள்ளைக்கலி தீரல்லியே !
வட்டார வழக்கு : பச்சி-பட்சி ; செஞ்சு-செய்து ; கொஞ்சையிலே-கொஞ்சும் பொழுது.
குறிப்பு : இப்பாடல் ஒப்பாரியின் உணர்ச்சியைக் கொண்டுள்ளது.
உதவியவர் : தங்கம்மாள் சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
----------
சக்களத்தி
அவனுக்கு மணமாகி விட்டது. ஆனால் அவன் மணந்தது அவனுடைய முறைப் பெண்ணையல்ல. வேறொரு பெண்ணை மணந்தும் முறைப் பெண்ணிடம் அவன் நட்பு வைத்திருந்து அவளுடன் குலவுகிறான். பின் ஏன் அவளை மணக்கவில்லை? சொத்து விஷயமே காரணம். அவளை மணந்தால் அவனுக்கு சொத்துரிமை கிடையாது.அவனது பெற்றோர்களுக்கும், அவளது பெற்றோர்களுக்கும், ஏற்பட்ட சச்சரவும் காரணமாகும்.
தன் கணவன் தன்னைப் புறக்கணித்து அவளுடைய முறைப் பெண்ணுடன் மகிழ்ச்சியோடிருப்பதைக் கண்டு அவளைப் பலவாறு ஏளனமாக ஏசி தன் வெறுப்பை வெளியிடுகிறாள் மனைவி.
தங்கக் கதவசைய
தலைவாசல் வேம்பசைய
வயிரக் கல்லு மின்னலுல
வந்து நிக்கா சக்களத்தி
சக்களத்தி சாவாளோ
சாமம் போல வேவாளோ?
கோட்டூரு மந்தையிலே
கொட்டு மேளம் கேட்பேனோ?
சிறு வீடு சிறு கதவு
சேர்ந்திருந்தோம் சில காலம்
என்னை மறப்பதற்கு
என்ன பொடி தூவுனாளோ?
ஈருவலிக் குச்சி போல
இடுப்பொடிஞ்ச சக்களத்தி
நல்லபாம்புக் குட்டி போல
வல்லவரைக் கை போட்டா
திண்டுக் கல்லு மூலையிலே
திண்ணு போட்டேன் கரும்புச் சக்கை
சக்கை திங்க வந்தாளோ
சாரங்கெட்ட சக்களத்தி
அடிக்கணும் குளிரும் காய்ச்சல்
ஆறு மாசம் ஒரு வருஷம்
எடுக்கணும் பாடை கட்டி
என் மனசும் பாலாக
பாட்டைப் படிக்க வச்சேன்
பை நிறையக் கட்டி வச்சேன்
பாட்டறியாச் சக்களத்தி
பையோட தூக்கிட்டாளே
நேத்தரைச்ச மஞ்சப் போல
நிறமுடையாளிங்கிருக்க
ஓசிச் சிறுக்கிக்காக
ஊரு வழி போகலாமா?
கருவ மரம் போல
கவட்டைக்கால் சக்களத்தி
என்னைக் கண்ட நேரமெல்லாம்
ஏசுராளே பொரணி
நந்தவனத்துப் பச்சை
நான் முடியும் சாதிப் பச்சை
தான் முடிய வேணுமின்னு
தவசிருக்கா சக்களத்தி
வருவாக போவாக
வாசலுல நிப்பாக
வேசை மகளாலே
வெறுத்தில்ல போராக
இலந்தைப் பழம் போல
இங்கிதமாய் நானிருக்க
சாணியுருண்டைக்காக
சாம வழி போகலாமா?
திண்ணையிலே சந்தனமோ
மேலத் தெரு பிள்ளையாலே
மேனி குலைந்ததையா
வட்டார வழக்கு : பொரணி-வீண் பேச்சு,
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம் : சிவகிரி.
-----------
மலடி
மலடி தொட்ட காரியம் விளங்காது என்று சமூகத்தில் ஒரு நம்பிக்கை. மங்கள காரியங்களுக்கு அவளை அழைப்பதில்லை. தம் குழந்தைகளை அவள் காணக் கூடாது என்று தாய்மார்கள் தமது குழந்தைகளை மறைத்து வைப்பார்கள். பிள்ளை பெற்ற மகராசிகளுக்குத்தான் மங்கள காரியங்கள் செய்வதில் வரவேற்பு உண்டு. அவர்கள் துவங்கிய காரியம் இனிது முடியும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஓர் மலடி, தன்னையே நொந்து கொள்ளுகிறாள். தான் தொட்டது விளங்காது என்று அவளே கூறுகிறாள்.
என் வீட்டுப் பக்கத்திலே அரகரா
மகனே மார்க்கண்டா
ஏனூடு தான் மரடு சிவனே
மரடியோட பேரைச் சொல்லி அரகரா
மகனே மார்க்கண்டா
மாடு ரெண்டு ஓட்டி வந்தேன் சிவனே அரகரா
பாலு குடிக்கலேண்ணு அரகரா
மகனே மார்க்கண்டா
பாலெருமை ஓட்டி வந்தேன் சிவனே
மரடியோட பேரைச் சொல்ல அரகரா
மகனே மார்க்கண்டா-அந்த
மூணெருமை தான் மரடு சிவனே
மாடு போகும் வழி தனிலே அரகரா
மகனே மார்க்கண்டா-நான்
தனிக் குளம் வெட்டி வச்சேன் சிவனே
மரடியோட பேரைச் சொல்ல அரகரா
மகனே மார்க்கண்டா-அங்க
வந்த மாடு அருந்தலையே சிவனே
ஆடு போகும் வழி தனிலே அரகரா
மகனே மார்க்கண்டா-நான்
ஆறு குளம் வெட்டி வச்சேன் சிவனே
மரடி யோட பேரைச் சொல்ல அரகரா
மகனே மார்க் கண்டா
மந்தை ஆடு அருந்தலையே சிவனே அரகரா.
வட்டார வழக்கு : மரடு-மலடு.
சேகரித்தவர் : சடையப்பன்
இடம் : அரூர், தருமபுரி மாவட்டம்.
---------
நடுச்சாவி ஆனதுவே!
(மலடி)
முன்னரே மலடியின் புலம்பலைக் குறித்து குறிப்பு எழுதியுள்ளோம். இவள் தன்னைக் காய்க்காத தென்னைக்கு ஒப்பிடுகிறாள்.
நனஞ்ச புழுதியிலே
நட்டுவச்ச தென்னம் பிள்ளே
நல்லாப் பாடருமிண்ணு
நாலு லச்சம் காய்க்குமிண்ணு
நட்டினீங்க தென்னம் பிள்ளை
நல்லாப் படராமே
நாலு லச்சம் காய்க்காமே
நடுச்சாவி ஆனதுவே !
உழுத புழுதியிலே
ஊனி வச்ச தென்னம் பிள்ளை
ஓடிப் படருமின்னீர்
ஒரு லச்சம் காய்க்கு மின்னீர்
ஓடிப் படராமே
ஒரு லச்சம் காய்க்காமே
சிந்திக் கவுந்ததுவே
சொல்லு பிழை ஆனதுவே !
வட்டார வழக்கு : இன்னீர்-என்றீர்.
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
------------
காய்க்காத தென்னை
- (மலடி)
வாசக் கருவேப்பிலே
வாங்கி வச்ச தென்னம் பிள்ளே
மட்டை புடிக்கு மின்னு
மரநெருங்கக் காய்க்கு மின்னு
நா மவுந்தேன் சில காலம்
மட்டை புடிக்காமே
மர நெருங்கக் காய்க்காமே
நா மாபாவி ஆனேனப்பா !
கோயில் கருவேப்பிலே
கொண்டு வந்த தென்னம் பிள்ளே
கொன்னை புடிக்கு மின்னு
கொலை நெருங்கக் காய்க்குமின்னு
நா குளிந்தேன் சில காலம்
கொன்னை புடிக்காமே
கொலை நெறையக்காய்க்காமே
நா கொடும்பாவி ஆனேனப்பா !
வட்டார வழக்கு : நா-நான் ; மவுந்தேன்-மகிழ்ந்தேன் ; குளிந்தேன்-குளிர்ந்தேன்.
உதவியவர் : நல்லம்மாள் சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
------------
இரவல் புருஷன்
“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம்-இருட்டறையில்
ஏதில் பிணம்தழீ இயற்று”
என்று வேசியர் உறவைக் கண்டித்தார் வள்ளுவனார். அதைக் கடைபிடித்து ஒழுக எண்ணும் இளைஞன் ஒருவன், தன்னை மயக்க இனிய மொழி பேசும் வேசியிடம் தனக்காக மணத்துக்கு காத்திருக்கும் குப்பாயியைப் பற்றி கூறி இணங்க மறுக்கிறான். இதற்குள் குப்பாயியே நேரில் தோன்றி வேசிக்குப் புத்தி கூறுகிறாள்.
வேசி : சின்ன சின்ன ரோட்டிலே
சீப்பு சீப்பா வாழைப்பழம்
இன்பமாக ரோட்டிலே
இருவருமாய்த் தின்னலாம்
அவன் : ஆத்தோரம் கொட்டாயாம்
அத்தை மகள் குப்பாயி
குப்பாயி பட்ட பாடு
கொமரிப் பெண்ணெக் கேட்டுப்பாரு
ஆத்தோரம் தோட்டக்காலாம்
அணியணியா வெத்திலையாம்
போட்டாலே செவக்கலையே
பொண்ணாளே உன் மயக்கம்
அஞ்சாறு வீட்டுக்காரி
அதிலே ஒரு பாட்டுக்காரி
பாட்டையும் பாடுவாளாம்
பசங்களையும் தேடுவாளாம்
குப்பாயி : சுத்தி பகிளிக் காரி
சுத்தாலை வீட்டுக்காரி
எட்டி எட்டிப் பார்த்தாலும்
இரவல் தாண்டி உம்புருஷன்
வட்டார வழக்கு : கொமரி-குமரி ; பகிளி-மினுக்கு ; சுத்தாலை-சுற்றுச் சுவர் ; கொட்டாய்-கொட்டகை.
சேகரித்தவர் : S. சடையப்பன்
இடம் : சேலம் மாவட்டம்.
---------
விவாகரத்து
கணவன் அவளை விவாகரத்து செய்ய முற்பட்டு விட்டான். ஆனால் அவள் கணவனைப் பிரிய உடன்படவில்லை. அவளுடைய குழந்தையையும் அவன் அவளிடமிருந்து பிரிக்கும் போது கணவனுடன் வாழாத தன்னைச் சவமாக எண்ணுகிறாள். ஆனால் தன்னுடைய வாழ்க்கைக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் குழந்தையையாவது தன்னிடம் விட்டு விடும்படி பஞ்சாயத்தாரிடம் கெஞ்சிக் கேட்கிறாள்.
பட்டுத் தலையாணி
பாட்ட முடு கச்சேரி
பட்டு நெறங் கொலைஞ்சேன்-நான்
பாட்ட முட்டு சீரௌந்தேன்
புள்ளித் தலகாணி
பொறந்த இடம் கச்சேரி
புள்ளி நெறங் கொலைஞ்சேன்-நான்
பொறந்த இடம் சீரழிஞ்சேன்
சங்கு மணியடிக்கும்
சர்க்காரு என் தொரையே
சாந்திருக்கும் போலீசாரே
சர்க்காரு வக்கீலே-நான்
தந்ததை வாங்கிக்கிட்டு-என்
சவத்தையும் விட்டுடுங்கோ
குண்டு மணியடிக்கும்
கோர்ட்டாரு என் தொரையே-நான்
குடுத்ததை வாங்கிக்கிட்டு-என்
கொளந்தையை விட்டிடுங்க
வாட்டார வழக்கு : பாட்டம்-சீவனாம்சம்.
சேகரித்தவர் : சடையப்பன்
இடம் : அரூர்.
-----------
சித்தியின் கொடுமை
அவளுடைய அம்மா தன் பெண்ணை அனாதைபோல் விட்டு விட்டு இறந்து விட்டாள். தந்தை இருக்கிறார். தந்தை தாய்க்கு ஈடாக முடியுமா? தாயில்லாப்பிள்ளை, பேச வாயில்லாப்பிள்ளை என்று சும்மாவா சொல்கிறார்கள். அநேகமாக சித்தி (அதாவது மாற்றாந்தாய்) கொடுமைக்காரியாக இருப்பதைப் போலவே அவளுக்கு வாய்த்த மாற்றாந்தாயும் அவளைக் கொடுமைப்படுத்துகிறாள். தானே வீட்டிற்கு அதிகாரியாக இருக்க வேண்டுமென எண்ணுகிறாள். அதனால் அவளைத் திருமணம் செய்து கொடுக்க எண்ணுகிறாள். உண்மையான அன்பு செலுத்தும் பெற்ற தாயாக இருந்தால் மகளை-மணம் செய்து கொடுக்கும் இடத்தைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டு மாப்பிள்ளையாகப் போகிறவனின் குண விசேஷங்களை அறிந்த பின்பே திருமணத்தை நடத்துவாள். ஆனால் அவளுடைய சித்தியோ நல்லெண்ணமில்லாதவளாதலால் அவளை ஒரு நற்குணமில்லாதவனும், நல்ல பழக்கங்கள் இல்லாதவனுமாகிய ஒருவனுக்கு மணம் செய்து வைத்து விடுகிறாள். மணமான பின்பு அவள் படும் துன்பங்களையும், இந்தத் திருமணத்திற்குக் காரணமாயிருந்த சித்தியின் கொடுமையையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.
வெங்காயம் வெங்காயம்
வதக்கி வச்ச வெங்காயம்
செங்கோட்டை அத்தான் மாரு
பெண் கேட்டு வந்தாக
எங்க ஐயா இளராசா
இல்லைண்ணு சொன்னாக
எங்கம்மா சண்டாளி
இருக்குன்னுஞ் சொன்னாளே
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-----------
வெளி வேஷம்
கிராமத்துப் பெரிய மனிதர்கள்தான் சாதிப் பிரிவினையின் பாதுகாவலர்கள். உழைப்பவர்களிடையே சாதிப் பிரிவினைகளும், முரண்பாடுகளும் நீடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஏனெனில் அவர்களது நிலச் சுரண்டல் நீடிக்க அந்நிலைமைகள் அவசியம். கீழ்சாதிக்குள் கலப்புமணம் என்றால் சீறுவார்கள். சாதி பிரிவுகளுக்குள் காதல் என்றால் குமுறுவார்கள். மேல் சாதிப் பெண்ணோடு காதல் கொண்டு, மணந்து கொள்ள முயன்றவர்களைக் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள். செவந்தி பெருமாள், தடிவீரன் போன்ற கீழ்சாதி ஆடவர்கள் வன்னியர், மறவர் போன்ற உயர்சாதிப் பெண்களோடு காதலுறவு கொண்ட காரணத்தால், நாயக்க மன்னரது மண்டலாதிபனான வடமலையப்ப பிள்ளையன் என்பவரால் கொல்லப்பட்டனர்.மதுரைவீரன், நாட்டுக்கு நற்பணி செய்திருப்பினும், அரசனது ஆசை நாயகி வெள்ளையம்மாளிடம் காதல் கொண்ட குற்றத்தால் கைகால்கள் துண்டிக்கப் பட்டு உயிரிழந்தான். இவ்வளவு கண்டிப்பாக கீழ்ச்சாதியினரின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் பெரிய மனிதர்களின் ஒழுக்கமோ என்றால் !..... வேஷம். வெளி வேஷம்தான்.
சம்பிரதி என்பது நாயக்கர் காலத்தில் பெரிய பதவி, அப்பதவி வகித்தவர் மகன் காட்டுச் சாதிப் பெண்ணை வைப்பாட்டியாகக் கொண்டுவந்து விட்டானாம் ! அதை எள்ளி நகையாடுகிறார்கள் கிராம மக்கள்.
சைவன் சைவந்தான்
சம்பிரிதி பிள்ளை மகன்
கோம்ப மலை உத்திரத்தி
கொண்டு வந்து சேத்தாரே.
வட்டார வழக்கு : உத்திரத்தி-வட திசையில் பிறந்தவள்.
குறிப்பு : கோம்பை, சிவகிரிக்கு வடக்கே உள்ளது.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-------------
கூனல் முதுகழகன்
சொந்த நிலம் கொஞ்சம் உண்டு. அதனால் தன்னைக் குபேரன் என்று எண்ணிக் கொள்ளுவான். தோற்றத்தில் குரூபி. பாட்டு அவனை எப்படி வருணிக்கிறது என்று பாருங்கள்.
சிவப்பிக்குக் காதலன் சிவத்தையாவென்று கூனனுக்குத் தெரியும். அவள் அவனையேதான் மணம் கொள்ள உறுதியோடிருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆயினும் அவளுடைய பெற்றோர்களைத் தன் பக்கம் இழுக்கச் சொந்த நிலம் என்ற தூண்டில் இருக்கிறதல்லவா? சிவத்தையாவுக்குச் சொந்தம் என்று சொல்ல கையும் காலும்தானே உண்டு. எனவே துணிந்து அவளிடமே தன்னை மணந்து கொள்ளச் சம்மதம் கேட்கிறான். அவளோ தமிழில் புதிய புதிய வசவுச் சொற்களைப் படைத்து, அரம்பாடும் கவிகளையும் தோற்கடிக்கும் வகையில் அர்ச்சனை செய்கிறாள்.
மாமன் மகனிருக்க
மாலையிடும் சாமிருக்க
ஒத்தக் கண்ணுப் பயலும் தான்
உறுதி யாண்ணும் கேட்டானே
பாதை பெரும் பாதை
பய வயிறு குழி தாழி
குழி தாழி வயிற்றுப் பய
கூத்தியாளும் கேக்கானே
உறக்கம் பிடிச்ச பய
ஒட்டுத்திண்ணை காத்த பய
கண்ணுப் பட்டை செத்த பய
காட்டமென்ன என் மேலே?
கூன முதுகழகா
குழி விழுந்த நெஞ்சுக்காரா
ஓலைப் பெட்டி வாயோட
உனக்கெதுக்கு இந்த ஆசை
அஞ்சரிசி பொறுக்கிப் பய
ஆளைக்கண்டா மினுக்கிப் பய
தேகம் குளிராட்டிப் பய
தேத்துராண்டி எம்மனசை
பரட்டைத் தலை முடியாம்
பரிசை கெட்ட திருநீரும்
வயக்காட்டு கூவை கூட
வன்மங் கூறி என்ன செய்ய?
முன்னத்தி ஒருக்காரா
மிளகுபொடி லேஞ்சிக்காரா
கழுதை உதட்டுக்காரா
காரமென்ன என் மேலே
சாணைக் கிழங்கெடுத்து
சள்ளைப் பட்டு நான் வாரேன்
எண்ணங் கெட்ட சின்னப்பய
எட்டி எட்டிப் பாக்கானே
எருமை உதட்டுக்காரா
ஏழெருமைத் தண்டிக்காரா
கழுதை உதட்டுக்காரா
காட்டமென்ன என் மேலே
மச்சு வீட்டுத் திண்ணையிலே
மத்தியான வேளையிலே
கேப்பை திரிக்கையிலே
கேட்டானே வாப்பெறப்பு
கட்டக் கட்ட உச்சி நேரம்
கரடி புலி வார நேரம்
சுடுகாட்டுப் பேய் போல
சுத்துரானே மத்தியானம்
வட்டார வழக்கு : கூத்தியாள்-வைப்பாட்டி ; வாப்பெறப்பு-வாய்ப்பிறப்பு (சம்மதம்) ; சாணைக்கிழங்கு-கரிசல் நிலத்தில் வளரும் கிழங்கு. கூழாக்கிக் குடிக்கலாம்.
கூனனை, அவள் திட்டுவதற்குப் பயன்படுத்தும் வகைச் சொற்களை கவனியுங்கள்.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம் : விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
--------
சட்டம் பொருந்தாது
முறை மாப்பிள்ளைமார் வயதில் சிறியவர்களாக இருந்தாலும், அவர்களிடம் நெருங்கி விளையாடும் உரிமை முறைப் பெண்களுக்கு உண்டு. அவர்களுடைய பேச்சில் கணவன்-மனைவி உறவுக்குரிய காதல் பேச்சுகள் காணப்படும். மணமான காதலர்களிடையே இப்பேச்சு தாராளமாக இருக்கும். மணமாகிவிட்டால் சிறிதளவு கட்டுப்பாட்டோடு, கேலியும் கிண்டலும் ஊடாடும். இவ்வழக்கம் பண்டையக் குழுமண முறையின் எச்சம் என்று முன்பே குறிப்பிட்டுள்ளேன். முறை மாப்பிள்ளைகள் முறைப் பெண்களை, கொழுந்தி, மதினி, மாமன்கள், அத்தை மகள் என்று குறிப்பிடுவர். முறைப்பெண்கள், மாப்பிள்ளைகளை கொழுந்தன், மச்சான், கொழுந்தப் பிள்ளை என்று அழைப்பார்கள். முறைப் பெண்களும், முறை மாப்பிள்ளைமாரும் கேலியாகப் பேசிக் கொள்ளும் உரையாடல் ஒன்று இப்பாடலில் காணப்படுகிறது.
கொழுந்தி : ஏறாத மலைதனிலே
இலந்தை பழுத்திருக்கு
ஏறி உலுப்புங்களேன்
இளைய கொழுந்தன் மாரே
கொழுந்தன் : ஏறி உலுப்பிடுவேன்
இங்கும் மங்கும் சிதறிடுவேன்
பார்த்துப் பிறக்குங்க
பாசமுள்ள மதினிமாரே
கொழுந்தி : இலந்தைப் பழம் போல
இருபேரும் ஒரு வயது
கொழுத்த புள்ள நான் வாரேன்
கொண்டணைச்சிப் போயிருங்க
கொழுந்தன் : கொண்டும் அணைச்சிருவேன்
கொடுங்கையிலே ஏந்திருவேன்
சரியான கொங்கைக்குச்
சட்டம் பொருந்தாதே
சித்தருவா கொய்யாதோ
சிறு மிளகு உறையாதோ
சிறுவன் கொடுத்த காசு
செல்லாதோ உந்தனுக்கு
கொழுந்தி : செம்மறி வீசக்காரா
செவத்த மச்சான் ஏ கொழுந்தா
செத்த வளர்ந்தி யிண்ணாச்
சேந்திருவேன் உன் மேலே
புதுப்பானை கருப்பழகா
போர்மன்னா தன்னழகா
சிரிப்பாணி ஏ கொழுந்தா
தினம் வருவாய் இந்த வழி
செந்தட்டிக் கொழுந்து போல
சிரிப்பாணி ஏ கொழுந்தா
இன்னும் கொஞ்சம் வளர்ந்தியானா
இறந்தாலும் மறப்பதில்லை
வட்டார வழக்கு : பிறக்குங்க-பொறுக்குங்கள் ; போயிருங்க-போய் விடுங்கள் ; சட்டம்-உடல் ; சித்தறுவா-சிறிய அறிவாள் வளர்ந்தியானா-வளர்ந்தாயானால் (வளர்ந்தாக்கி) என்றும் பேச்சு வழக்கு ; செந்தட்டி-மேலே தேய்த்தால் அரிச்சலை உண்டாக்கும் இலை.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம் : அரூர்.
-----------
நல்லவனும் கெட்டவனும்
ஊரில் நல்லவர்கள் இருப்பார்கள். பிறர் துன்பம் கண்டு பொறுக்காமல் விரைந்து வந்து உதவி செய்பவர்கள் சிலர். ஊரில் உள்ளவர்களது கஷ்டங்களைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்களும் ஊரிலிருப்பார்கள். முதலில் கூறப்பட்டவர்களைப் புகழ்ந்தும், இரண்டாவது கூறப்பட்டவர்களை இகழ்ந்தும், பாடல்கள் தோன்றும். ஊருக்கு உழைத்தவர்களைப் போற்றும் பண்பு தமிழ்நாட்டுப் பாமர மக்களிடையே சிறப்பாகக் காணப்படுகிறது. பிறரை ஏசுவதைத் தமிழ் பாமர மக்கள் விரும்புவதில்லை. ஆகவே கண்டனம் தெரிவிக்கும் பாடல்கள் ஒன்றிரண்டே காணப்படும். சிவகிரியில் வேலுச்சாமி என்றொருவர் இருந்தார். அவர் நற்பண்புகள் உடையவர். ஊரில் யாருக்கு என்ன ஆபத்து வந்தாலும் அவர் ஓடிவந்து உதவி செய்வார். அவர் இறந்து போய் விட்டார்.
ஊரில் எல்லோரோடும் வம்பு செய்து கொண்டு பிறர் துன்பத்தில் லாபம் கண்டு வாழ்ந்த ஆதினமிளகி, என்றொருவன் சிவகிரியில் வாழ்ந்து வந்தான். நல்லவர் இறந்து விட, ஊருக்கும் நாட்டுக்கும் பொருந்தாத கெட்டவன் வாழ்வதை எண்ணி ஊரார் வருந்துகிறார்கள்.
ஏறுறது வில்லு வண்டி
இறங்குறது காப்பரவு
பாக்கிறது வன்னிய மடம்
பாம்புக் கண்ணு சையலில,
கையில துறவு கோலாம்
காலில் மிதியடியாம்
டானாக் கம்பு புடிச்சுவரும்
தங்கமுடி வேலுச்சாமி
ஈரத்தலை உணத்தி
கிண்ணரி போல் கொண்டை போட்டு
வாரானாம் வேலுச்சாமி
வாச லெல்லாம் பூ மணக்க
நடுவீட்டு வாசலில
லட்ச சனம் கூடி ருக்கும்
வேலுச்சாமி இல்லாம
விரிசீணு இருக்குதய்யா
வாச நிறைஞ் சிருக்கும்
வந்த ஜனம் சூழ்ந்திருக்கும்
நடு வீட்டு வேலில்லாம
நல்லாவும் இல்லையப்பா
கடுமையா உறக்கத்தில
கணக்கான தூக்கத்தில
கூப்பிட்ட சத்தத்தில வேலுச்சாமி
குயிலுப் போல வந்திருவார்
சாஞ்சு நடநடந்து
சைசான கொண்ட போட்டு
போறாராம் வேலுச்சாமி
பொன்னு முடி களஞ்சியமே
ஊருக்கும் பொருந்திருக்கும்
உலகத்துக்கும் ஒத்திருக்கும்
நாட்டுக்கும் பொருந்திருக்கும்
நடுவீட்டு வேலுச்சாமி
ஊருக்கும் பொருந்தாத
ஒட்டச் சளவட்ட
நாட்டுக்கும் பொருந்தாத
நடு வீட்டு ஆதின முளகி
வட்டார வழக்கு: காப்புரவு-தோட்டவெளி; துறவுகோல்-திறவு கோல்; டானாக் கம்பு-வளைந்த கம்பு; கிண்ணரி-ஒரு வகை மேளம்; சைசான-அழகான; சளவட்ட-வீண் பேச்சு பேசுபவன்; ஆதின முளகி-ஒருவரின் பெயர்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி.
-----------
வெற்றிலைப் பாக்கு
ஊரில் திருவிழா. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன் தன் கடை வெற்றிலை, பாக்கு, புகையிலையின் சிறப்பைப் பாடுகிறான்.
தமிழ் நாட்டில் வெற்றிலை ஒரு மங்கலப் பொருள். 'சிவந்தவாயும் வெற்றிலையுமாக' என்று மகிழ்ச்சியோடிருப்பவனை வருணிப்பார்கள். விதவைகள் வெற்றிலைப் போடக்கூடாது. மண விழாவின்போது வெற்றிலை வழங்கப்படும். தெய்வங்களுக்கு வெற்றிலை நிவேதனமாக வைக்கப்படும். மணநாள் நிச்சயிக்கும் பொழுது மணமகனின் பெற்றோர்களும், மணமகளின் பெற்றோர்களும் வெற்றிலைப் பாக்கு மாற்றிக் கொள்வார்கள்.
தமிழரின் மங்கலச் சின்னம் வெற்றிலை. மணமாகாத இளம் பெண் வெற்றிலைப் போட்டுக் கொண்டு அவள் வாய் சிவந்தால், அன்பு மிக்க கணவன் அவளுக்கு வாய்ப்பான் என்று ஜோசியம் கூறுவார்வார்கள். மணமானவள், வெற்றிலை போட்டு வாய் சிவந்தால் கணவன் அவள்மீது, பிரியமாக இருக்கிறானென்று தோழியர் அவளை கேலி செய்வர். விழா நாளில் குத்து விளக்கு வைத்து வட்டமாகச் சுற்றி வந்து கும்மியடிக்கும் பெண்கள் வெற்றிலையைப் பற்றி பாடுகிறார்கள்.
வெத்தலைக் கடையைப் பாருங்கோ-ஏ
அஞ்சுகமே கொஞ்சுதமே
வெத்தலையை வாங்கிப் பாருங்கோ
பாக்குக் கடயப் பாருங்கோ-ஏ
அஞ்சுகமே கொஞ்சுதமே
பொவிலை வாங்கிப் பாருங்கோ
சுண்ணாம்பு கடையைப் பாருங்கோ-ஏ
அஞ்சுகமே கொஞ்சுதமே
சுண்ணாம்புக் வாங்கிப் பாருங்கோ
வாய்லே போட்டுப் பாருங்கோ-ஏ
அஞ்சுகமே கொஞ்சுதமே
வாய்சிவக்கும் அழகப் பாருங்கோ
உதவியவர்: செல்வராஜு; சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
-------------
கொழுந்தியாள் குறும்பு
புது மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு வந்திருக்கிறான். அவனுடைய கொழுந்தியாள் சுட்டிப்பெண். கொழுந்தியாளுக்கு அத்தானைக் கேலி செய்யும் உரிமை உண்டு. அவன் மேல் சந்தனத்தைக் கொட்டி, இரண்டு குங்குமக் கிண்ணங்களையும் கவிழ்க்கிறாள். அவள் தோழியரிடம் கூறுகிறாள்.
ஒரு கிண்ணிச் சந்தனம்
ஒரு கிண்ணிக் குங்குமம்
அள்ளி அள்ளிப் பூசுங்கோ
அருணப் பந்தல் ஏறுங்க
ராசாக் கணக்கிலே
ராசமக்க தோளிலே
பொறிச்ச பூவும் பொட்டியிலே
தொடுத்த பூவும் தோளிலே
ரெண்டு கிண்ணி சந்தனம்
ரெண்டு கிண்ணி குங்குமம்
அள்ளி அள்ளிப் பூசுங்க
அருணப்பந்தல் ஏறுங்க
பொறிச்ச பூவும் பொட்டியிலே
தொடுத்த மாலை தோளிலே
சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பரமத்தி, சேலம் மாவட்டம்.
-------------
புலி குத்தி வீரன்
சில பெண்கள் பொய்மைப் புலி உருவம் செய்து சோளக் கொல்லையில் வைத்திருக்கிறார்கள். அப்பெண்கள், அங்கு வரும் ஆண்களிடம் அதைக்காட்டி பயமுறுத்துகிறார்கள். தங்களை பயமுறுத்தும் பெண்களின், போக்கில் சந்தேகம் கொண்டு, ஒருவன் போலிப் புலியை நெருங்குகிறான். உடனே அப்பெண்கள் அவனைக் கேலி செய்து பாடுகிறார்கள்.
காடுசுத்தி வேலியாக்கி
கள்ளரைக் குத்தி பயங்காட்டி
கோடும் புலி குத்தி
சோடித்து வருவதைப் பாருங்கடி
பக்கத்து மரத்திலே புலி கிடக்குது
நித்திரை போவதைப் பார்த்துச் சுடு
மதுரைக்குப் போற அண்ணங்களே
என்னென்ன அடையாளம் கண்டு வந்தே?
கல்லால மண்டபம் காணிக்கை
சப்பரம் வில்வ மரந்தாண்டிக் கொண்டாந்தே?
சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பரமத்தி, சேலம் மாவட்டம்.
---------
முறை மாப்பிள்ளே
தமிழ் நாட்டில் திருமண முறைகளின் வளர்ச்சி சமூக மாறுதல்களை ஒட்டியே நிகழ்ந்திருக்கிறது என்பதை நமது இலக்கியங்களும், புராதனக் கதைகளும் மறைந்து போன சமுதாயங்களின் எச்சமாக நிலைத்து நிலவும் சடங்குகளும் பழக்கவழக்கங்களும் காட்டுகின்றன.
வரன்முறையற்ற குழு-மணமுறை தமிழ் நாட்டில் இருந்தது என்று காட்ட ஆதாரங்கள் இல்லை. ஆனால் உறவுப் பெயர்களில் சில அப்பா, சிற்றப்பா, பெரியப்பா, அம்மா, பெரியம்மா, சித்தி ஆகியனவும், கணவனது சகோதரர்களை மைத்துனன், கொழுந்தன் என்று அழைப்பதுவும் இம் மணமுறையின் எச்சங்களாக தோன்றுகின்றன, இது சொத்துரிமை தோன்றுமுன் கூட்டங்களாக வாழ்ந்து வேட்டையாடி வந்த மக்களது மணமுறையாகும்.
வேட்டையாடியும், புன்செய்ப் பயிர் செய்தும் வாழ்ந்த சிறு குடியினர் களவும், கற்புமாகிய ஒருதார மணத்தைக் கொண்டிருந்தனர். வேட்டையை ஆண் மக்களும், பயிர்த் தொழிலைப் பெண் மக்களும் நடத்தினர். இருவரும் சமூக உற்பத்தியில் பங்கு கொண்டனர். இருவருக்கும் ஏறக்குறைய சமமான உரிமைகள் இருந்தன.
விலங்குகளைப் பழக்கி உழவுக்கும், பால் முதலிய உணவுப் பொருள்கள் பெறவும் பயன்படுத்த மனிதன் கற்றுக் கொண்டான். மாடுகளைப் பழக்கத் தெரிந்த வலிமை மிக்கவன் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவன். எனவே பெண்கள் மாட்டை எதிர்த்து வெற்றி கொள்ளுபவனையே மணந்து கொள்ள விரும்புவார்கள். ஒருவனே பலரை மணந்து கொள்வும் கூடும். கிருஷ்ணன், கோபியர் கதை இவ்வளர்ச்சிக் கட்டத்திலிருந்த சிறு குடியினரிடையே தோன்றியதே. இம்முறைகளில் ஒரே தொழில் செய்பவரிடையே மணம் நடைபெறுவதில்தடை அதிகமில்லை. நிரை காப்பவனாதலால் நாலைந்து பெண்களை மணம் செய்து கொண்டு அவர்கள் கொண்டு வரும் பசு நிரைகளைக் காத்து பெருக வைத்துப் பெருமையடைவான்.
நிலப்பிரபுத்துவம் தோன்றிய பின்னர்தான் சாதிப் பிரிவுகள் கடுமையாயின. இதன் அடிப்படை, வர்க்கப் பிரிவினையே. உயர்நிலை வர்க்கங்களில் பெண்கள் அடிமையாயினர். சமூக உற்பத்தியில் அவர்கள் பங்கு பெறவில்லை. தாழ்நிலை வர்க்கங்கள், அடிமை நிலைக்குத் தாழ்ந்தன. அவர்களிடையே ஆண்களும் பெண்களும் பழகுவதற்கு தடைகள் பல இல்லையாயினும் நில உடைமையே வாழ்க்கையை நிர்ணயித்தது. எனவே சொத்து, சொந்தத்தில் உள்ளவர்களுக்குச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் உறவு முறை மணம் தோன்றியது; இதிலும் கூட அண்ணன் தங்கையாயினும், தனித்தனியாகச் சொத்து இருந்தால்தான் இவ்வுறவு.
தங்கை தன் மகனுக்குப் பெண் கேட்டு வருகிறாள். அவளைவிட அவன் பணக்காரன். பரியம் கொண்டு வந்து பெண் கேட்ட தங்கையின் பேச்சை அவன் காது கொடுத்துக் கேட்கவில்லை. மணமுறை உரிமையால் தன் மகன் அண்ணன் மகளை சிறையெடுத்துச் சென்று விடுவான் என்று தங்கை வஞ்சினம் கூறிச் சென்று விடுகிறாள்.
இது நடக்குமா? சொத்துரிமை மனித உறவு முறைகளை கட்டுப்படுத்தும் சமுதாயத்தில் இரத்த உறவுகளை சமூகம் மதிக்குமா? இரண்டு உறவு முறைகளும் சொத்துரிமையால் ஏற்பட்டவைதாமே.
அண்ணனும் தங்கையும்
பெண்: அண்ணாவே அண்ணாடத்தான்
பெருமாளே
படியளக்கும் அண்ணாடா
நாயகனே
அரிசி நல்லா அண்டைத்தான்
அஞ்சி பொதி
அர்த்த முடன் அண்டைத்தான்
கொண்டு வந்தேன்
காணப் போர
பெண் : கத்திரிக்கா அண்ணாடா
கால்தூக்கு
கணக்குடனே அண்ணாடா
கொண்டு வந்தேன்
உப்பு நல்லா அண்ணாடா
ஒரு பொதி
உணவுடனே அண்ணாடா
கொண்டு வந்தேன்
பட்டுப் பாயி அண்ணாடா
எடுத்துக்கிட்டு
பரியங்களும் அண்ணாடா
கட்ட வந்தேன்
முத்துப் பாயி அண்ணாடா
தூக்கிக்கிட்டு
முகூர்த்தங்களும் அண்ணாடா
பார்க்க வந்தேன்.
ஆண் : இத்தனையும் தங்கையரே
கொண்டு வந்தா
என்ன பலன் தங்கையே நீ
காணப் போர
பெண் : ஆலமரம் அண்ணாடா நான்
சாட்சி வச்சி
அளுது கொண்டு
அண்ணாடா போரேனடா
புளியா மரம் அண்ணாடா நான்
சாட்சி வச்சி
பொங்கிக் கொண்டு
அண்ணா போரேனடா
ஆத்துலே தான் அண்ணாடா
தலை முழுகி
அள்ளி நல்லா அண்ணாடா
சொருகி கிட்டு
குளத்துலே தான் அண்ணாடா
தலை முழுகி
கூட்டி நல்லா அண்ணாடா
எறிஞ்சேனடா
கூடுவாளா அண்ணாடா
உன் மகளும்
கொண்டு செல்ல
அண்ணாடா ஆகுமோடா
சித்தெறும்பா என் மகன்
வேசம் மாறி
சிறை எடுக்க அண்ணாடா
வருவானடா
ஆட்டையும் அண்ணாடா
உன் பட்டியுமே
நாச மத்து அண்ணாடா
போகாதா
பாம்பாக அண்ணாடா
என்மகனும்-உன் மகள்
பஞ்சணைக்கு அண்ணாடா
வருவானடா
வட்டார வழக்கு: நாசமத்து - நாசமாய்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம் : சேலம் மாவட்டம்
------------
கோடி நாட்கள் செல்லும் !
தாய் வீட்டிற்கு அவள் வந்திருந்தாள். ஒரு நாள் சென்றது. இரண்டு நாட்கள் சென்றன ; வாரம் சென்றதும் மாதமும் வந்தது. மாகளோ புகுந்த வீட்டிற்கு (புருஷன் வீட்டுக்கு) போவதாகக்காணோம். விருப்பமில்லாமல் மகள் வீட்டில் இருந்தாலும் பெற்றவர்களுக்கு மகளைப் போவென்று சொல்ல மனம் வருமா? பொறுத்துப் பார்த்தார்கள். எத்தனை நாள்தான் பொறுப்பார்கள்?
அவளுக்குப் பண்ணை, பாய்ச்சல் உண்டல்லவா? குடும்பம் உண்டல்லவா? இதையெல்லாம் கவனிப்பது யார்? புருஷனுக்குச் சமைத்துப் போடுவது யார்? இதையெல்லாம் அவர்கள் யோசிக்கிறார்கள். 'அறியாப்பிள்ளை தெரியா விட்டாலும் நாம் சொல்லித்தானே திருத்த வேண்டும்' என்று மகளை அணுகினார். தந்தை “அம்மா நீயும் வந்து மாதத்திற்கு மேல் ஆகிறதே, பொழைப்பு என்ன ஆவது? மாப்பிள்ளைக்கு ஒத்தாசைக்குத்தான் யாராவது இருக்கிறார்களா? நம்மைப் போல்தானே அவரும் ; ஒண்டி மனுசன், ” என்று ஏதேதோ சொல்லிப் பார்க்கிறார். மகளிடத்தில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. மேலும் வற்புறுத்துகிறார். மகள் இப்பொழுது வெடுக்கென்று சொல்லிவிடுகிறாள். என்னவென்று?
“அப்பா ! அவன் ஒரு குடிகாரன் கூத்திக்கள்ளன் ; அதோடு சூதாடியும் கூட. இப்படிப்பட்டவனை நீங்கள் முன்பு தெரிந்திருந்தும் கூட பணத்திற்கு ஆசைப்பட்டு யோசியாமல் திருமணம் செய்து வைத்து விட்டீர்கள். அந்தச் சிக்கலை ஒரு நாளில் அவிழ்த்துவிட முடியுமா?” என்று கேட்கிறாள். இப்படி நேரடியாகவா சொல்லுகிறாள்? இல்லை இப்படிச் சொன்னால் அதில் நயமேது? பண்பேது? பின் எப்படிச் சொல்கிறாள்? கேளுங்கள் அவள் வாயாலேயே !
(குறிப்பு: கு. சின்னப்ப பாரதி)
பருத்தி இளம் பூவு
பட்டணத்து தாழம்பூவு
பாத்து முடியாமே
படி முடிச்சு போட்டீங்க
படிமுடிச்சு சிக்கெடுக்க
பாதி நாள் செல்லுமையா
கொழுஞ்சி இளம் பூவு
கொடு முடி தாழம் பூவு
கோதி முடியாமே
கொடி முடிச்சுப் போட்டீங்க
கொடி முடிச்சு சிக்கெடுக்க
கோடி நாள் செல்லுமையா
உதவியவர் : C.செல்லம்மாள்; சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்
-----------
தூரத்து மாப்பிள்ளை
வெகு தூரத்துக்கு அப்பால் பார்க்கும் ஒருவனுக்குத் தங்கள் பெண்ணைக் கட்டி வைத்தார்கள். அவன் இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவான். மணம் முடிந்து போனவன் சில வருஷங்கள் ஊருக்கு வரவேயில்லை. பெரிய நகரங்களில் வேலைப் பார்ப்பவர்கள் குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்காததாலும், மனைவியை அழைத்துச் செல்ல வசதியில்லாததாலும், அழைத்துச் செல்லவில்லை. அவனடைய மனைவி பெற்றோர்களிடம் தன்னுடைய கவலையைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது இப்பாடல்.
மனைவி : காலடியில் பொன் பொதைச்சா
கவலையத்து இருப்பான்னு
காசுக்கே மைவாங்கி
காதத்துக்கே பொன் பொதச்சு
கவலையேத் தேடி வச்சீர்
கவலையே நீஞ்சுவனா
நீங்கிருக்கும்
கழனி வந்து சேருவனா?
தோளடியா பொன் பொதச்சு
துக்க மில்லா திருப்பான்னு
துட்டுக்கே மைவாங்கி
தூரத்துக்கே பொன் பொதச்சு
துயரத்தே நீஞ்சுவனா
நீங்கிருக்கும்
சீமை வந்து சேருவானா?
வட்டார வழக்கு: கவலையத்து-கவலையற்று ; பொன் பொதைச்சு-பொன் பூட்டி.
உதவியவர் : செல்லம்மாள்; சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்
-------------
தவிடு விற்க நேர்ந்ததுவே
ஒரு பெரிய வியாபாரியின் குடும்பத்தில் ஒரு பெண் வாழ்க்கைப்பட்டாள். வெள்ளியும் தங்கமும் வியாபாரம் செய்யும் குடும்பத்தில்தான் அவள் மருமகளானாள். ஆனால் வியாபாரம் நொடித்துப் போய்விட்டது. விறகு விற்றும், தவிடு விற்றும் பிழைக்க நேர்ந்தது. இந்த மாறுதலை அவள் வருத்தத்தோடு சொல்லிப் பாடுகிறாள்.
வெள்ளி ஒரு நிறதான்
வெங்கலமும் கால் நிறதான்
நான் புகுந்த காசியிலே
வெள்ளி வித்த கையாலே
வெறவு விக்க நேர்ந்ததுவே
தங்கம் ஒரு நிறதான்
தாமரமும் கால் நிறதான்
நான் புகுந்த காசியிலே
தங்கம் வித்த கையாலே
தவிடு விக்க நேர்ந்ததுவே
வட்டார வழக்கு: நிற-நிறை ; வெறவு-விறகு : வித்த-விற்ற ; விக்க-விற்க.
குறிப்பு :தனது பொருளாதார நிலைக்குலைவை “தங்கம் வித்த கையாலே தவிடு விற்க நேர்ந்ததுவே” என்று குறிப்பிடுகிறாள்.
உதவியவர் : செல்லம்மாள்; சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்
-----------
சின்னப்பட முடியலையே
மருமகள் பருத்தி ஆட்டி கொட்டையைப் பிரிக்க மணையிலுட்காருகிறாள். இந்த வேலை செய்தால், அவள் கையில் கொஞ்சம் காசு சேரும். இதைக் கண்ட மாமியாருக்குப் பொறுக்கவில்லை. “வீட்டு வேலை செய்யாமல் வீண் வேலை செய்கிறாயே ” என்று திட்டுகிறாள், மருமகள் தன்னுடைய வருத்தத்தை மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுகிறாள்.
நாடன் பருத்திக் கொட்டை
நானாட்ட முடியலியே
நாதேரி முண்டகிட்ட
சின்னப்பட முடியலியே
உக்கம் பருத்திக் கொட்ட
நானாட்ட முடியலியே
ஊதேரி முண்டகிட்ட
சின்னப்பட முடியலியே
உதவியவர் : பெருமாயி; சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்
-----------
மலைக் குரங்கு
இந்துக் குடும்பத்தில் மாமியார் மருமகள் சன்டை இல்லாத குடும்பமே அபூர்வம். கணவன் ஆதரவாக இருந்தால் கூட மகனிடத்தில் தன்னுடைய செல்வாக்குக் குறைந்து விடுமென்று மாமியார் மருமகளோடு சண்டை போடுகிறாள். இப்பாடலில் வரும் மருமகளுக்குச் செல்வத்துக்குக் குறைவில்லை. அவளுடைய கணவனுக்கு நல்ல செழிப்பான பூமி இருக்கிறது. அவளுடைய கணவனும் நல்ல புத்திசாலி. ஆனால் மாமியார் தொந்தரவுதான் தாங்க முடியவில்லை. மாமியார் மீது அவளுடைய கோபம் வெளியாகிறது.
பூமியுந்தான் நல்ல பூமி
எனக்கு வாய்த்த
புண்ணியரும் புத்திசாலி
புண்ணியரைப் பெத்தெடுத்த
பெருங்குரங்கே தொந்தரவு
மண்ணுந்தான் நல்ல மண்ணு
எனக்கு வந்த
மன்னவரும் புத்திசாலி
மன்னவரைப் பெத்தெடுத்த
மலைக்குரங்கே தொந்தரவு
வட்டார வழக்கு: பெருங்குரங்கு-மலைக்குரங்கு ; புண்ணியரும்-கணவரும்.
உதவியவர் : தங்கம்மாள் சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்
-----------
கொடுமை எப்பொழுது ஆறும்?
இளம் விதவை, துணையின்றி, துயரில் ஆழ்ந்திருக்கிறாள். சொத்துக்கு வாரிசாக மகன் பிறக்குமுன் அவள் கணவன் இறந்து போனான். பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அவள் அமங்கலி. பருவ இன்பம் அவளுக்கு நேர்வழியில் கிடைக்காது ; குறுக்கு வழிகளில் செல்ல விடாமல் அவளது நேர்மை தடை போடுகிறது. இந்நிலையில் “ மரமாகவாவது, பூவாகவது பிறந்திருந்தால் மனிதர்கள் போற்றுவார்களே “ என்று ஏங்குகிறாள் அவள். அவளுடைய கொடுமை எப்பொழுது ஆறும். விதவை மணத்தை பாரதியும் மற்ற சீ்ர்திருத்தம் விரும்பிய தலைவர்களும் ஆதரித்திருந்த போதிலும் சமூக பழக்கவழக்கங்களும் பழமைப்பித்தும் அதனை இன்னும் மறுத்தே வருகின்றன.
மாளிகையில் பூத்தது
மரத்திலே பூத்திருந்தா
மானுடர் அத்தனைபேர்
மரமின்னு வெட்டுவாங்க
மடமும் கட்டுவாங்க-இப்போ
மானுடர் யாரும்
மரமின்னு வெட்டவில்லை
மடமும் கட்டவில்லை
கும்பியிலே பூத்த நானு
கொம்பிலே பூத்திருந்தா
கூட்டத்தார் எல்லோரும்
கொம்புன்னு வெட்டுவாங்க
கோயிலும் கட்டுவாங்க-இப்போ
கூட்டத்தார் எல்லோரும்
கொம்புன்னு வெட்டல்லை
கோயிலும் கட்டல்லை
என்னுடைய வெங்கொடுமை
எப்பத்தான் ஆறப்போகும்.
வட்டார வழக்கு : கும்பி-வயிறு.
உதவியவர் : செல்லம்மாள்; சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்
---------
இரு தாரங்கள்
முன்னமே'சக்களத்தி' என்னும் தலைப்பில் வரும் பாடல்களுக்கு எழுதிய முன்னுரையில் இருதார மணத்தால் முதல் மனைவி, தன்னை கணவன் மறந்ததற்கு இளையாள் இட்ட மருந்தே காரணம் என்கிறாள். பின்னால் அந்த நம்பிக்கையை விடுத்து அவனையே பொறுப்பாக்கித் திட்டுகிறாள். இவள் கருவுற்றிருக்கும் பொழுதே கணவன் இளையதாரத்தை மணந்தான். குழந்தை இல்லையென்பது காரணமல்ல. வேறுகாரணம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆயினும் தனக்கு ஏற்பட்ட பாதகத்தை நினைத்து அவள் அவனைச் சபிக்கிறாள்.
வருவாரு போவாரு
வாசலிலே நிற்பாரு
சிரிச்சாலும் பேசுவாரு
சிறுக்கி வச்ச கைமருந்து
ஊருக்கில்ல போறாரு
இருக்கவில்லை போறாரு
மறுமுகம் கண்டவுடன்
மறக்க வில்லை போறாரு
மறந்தா மறப்பதில்லை
மருந்து தின்னால் ஆறுவதில்லை
செத்தால் மறப்பதில்லை
செவலோகம் சேருமட்டும்.
பாவநாசம் பார்க்கவென்று
பாவனையா அழைச்சுப் போயி
பத்துமாசம் சுமசுமக்க
பரிசு தந்த நேசமைய்யா
என்னை விட்டுட்டு
இளைய தாரம் கட்டினயே
போறவழியிலே-உன்னப்
பூ நாகம் தீண்டாதோ?
-------------
ஏன் பஞ்சம் வந்தது?
கணவன் திருச்செந்தூர் போய்த் திரும்புகிறான்.அவனைக் கேலி செய்வதற்காக மனைவி ' திருச்செந்தூரில் வேசியர் பலர் இருப்பதாகவும், இளைஞர் பலர் சுவாமி கும்மிடப் போகிற சாக்கில் அவர்களோடு உறவு கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டதாகவும்' சொல்லுகிறாள். “இப்படி இல்லறம் பேண வேண்டியவர்கள் அறம் தவறுவதால்தான் மழை பெய்யாமல் பஞ்சம் வருகிறது என்று உலகம் சொல்லுகிறது“ என்றும் சொல்லுகிறாள். கணவன் கேப்பைத்தாள் அறுத்துக் கொண்டிருக்கிறான். இச் சொல் காதில் விழுந்ததும் அவன் மனைவியைப் பார்க்கிறான். அரிவாள் கையை அறுத்து விட்டது. தன் மனைவி கற்புடையவள் அல்லவா? “நீ இப்படிச் சொன்னால் மழை போய் விடப்போகிறது. நீயும் நானும் பட்டினி கிடக்க வேண்டியதுதான். பத்திரகாளிதான் பஞ்சம் வராமல் காப்பாற்ற வேண்டும்,“ என்கிறான் கணவன்.
மனைவி: திருச்செந்தூர் ஊரிலே
தேர் நல்ல அலங்காரம்
தேவடியாள் கொண்டையிலே
பூவு நல்ல அலங்காரம்
காலையிலே கம்பி வேட்டி
மத்தியானம் மல்லு வேட்டி
சாயந்திரம் சரிகை வேட்டி
சந்தியெல்லாம் வைப்பாட்டி
மானத்துச் சூழ்ச்சியரே
மழைக்கு இரங்கும் புண்ணியரே
வைப்பாட்டி வைக்கப்போயி
வந்துதையா பஞ்சம் நாட்டில்
கணவன்: கிழக்கே மழை பொழிய
கேப்பைத் தாள் நான் அறுக்க
பாவி என்ன சொன்னாளோ?
பட்டுதையா பன்னருவாள்
இந்த மழையை நம்பி
எடுத்து வச்சேன் கம்பு விதை
வந்த மழை ஓடிட்டுதே
வடபத்திர காளிதாயே!
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : தூத்துக்குடி வட்டாரம்.
-----------
8. சமூகம்
மறவர் படை
தமிழ் நாட்டில் விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகள் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். அதற்கு முன் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்களின் சந்ததியினர் தென் பாண்டி நாட்டின் பல பகுதிகளில் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்கள் விஜய நகராட்சிக்கு உட்படாமல் பன்முறை மதுரை நாயக்கர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர். மறவர்களுக்கு ராமநாதபுரம் சேதுபதிகள் தலைமை தாங்கினர். மதுரையில் முதன் முதல் நாயக்கர் ஆட்சியை நிறுவிய விஸ்வநாத நாயக்கனையும் அவனது தளவாயான அரியநாத முதலியையும் தென்பாண்டி நாட்டில் பஞ்ச பாண்டியர்கள் எதிர்த்துப் போரிட்டனர்.இக்கதையை ஐவர் ராஜாக்கள் கதை என்று நாட்டுக் கதைப் பாடல்* விவரமாக கூறுகிறது, மறவர்களுடைய எதிர்ப்பு திருமலை நாயக்கன் காலம் வரை ஓயவில்லை. அக்காலத்தில் சேதுபதியின் படைத் தலைவனாக இருந்த சடைக்கத்தேவன் என்பவனை அடக்குவதற்காக விஜயநகரத்து தலைமைத் தளவாயான ராமப்பய்யன் மதுரை வந்து சேர்ந்தான். இவர்கள் நடத்திய பெரும் போர் இராமப்பய்யன் அம்மானை என்ற நாட்டுப்பாடலில் விரிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது.இத்தகைய போர் ஒன்றில் மறவர் படையின் வரவை வர்ணித்து பாடிய பாடல் இது.
வருகுதையா மறவர்படை
வானவில் சேனை தளம்
மறவரோடு எதிராளி
மாண்டவர் கோடிலட்சம்.
சேகரித்தவர்: M.P.M.ராஜவேலு
இடம் : தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
------
*இப்பாடல் மதுரைப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பதிப்பாசிரியர் நா.வானமாமலை.
--------------
ரயில் வண்டி
ரயில் வண்டியை புகைவண்டி என்று கூறுவது தனித் தமிழார்வத்தில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்பல்ல. அதைக் கண்ட உடனேயே ஜனங்கள் புகைவண்டி என்றே கூறினர் என்பதைப் பாடலில் காணலாம்.
ஒராம் சந்தன மரம்
கட்டை வெட்டி
ஒரு ரூவா வெள்ளி
சொப்பி லிட்டு
காதத்துலே வண்டி காணுதுபார்
கைதாத்தி மரமல்லாம் சாயுதுபார்
சுத்திச் சுளஞ்சி வரும் பொகைவண்டி
சூரமங்கலம் ஸ்டேஷன்லே நிக்கும் வண்டி
அலைஞ்சி கொலைஞ்சி வரும் பொகைவண்டி
அல்லா ஸ்டேஷனுல நிக்கும் வண்டி
வட்டார வழக்கு: சொப்பு-மரத்தால் செய்த மூடியுள்ள சிறு பாத்திரம் ; அல்லா-எல்லா ; கொலைஞ்சி-குலைஞ்சுது ; சுளஞ்சி-சுழன்று.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம் : அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------------
எதிர்ப்பாட்டு
கிராமங்களில் மாட்டுக்காரச் சிறுவர்கள் நேரத்தைப் போக்க ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். அதில் வசையும், கேலியும் கலந்து இருக்கும். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் பாடப்படுகின்றன.
ஒருவன்: வறுத்த கடலை தின்னி
வகை வகையாத் தவிடு தின்னி
சொறியாந் தவளை தின்னி
சொல்லி வாடா தெம்மாங்கை
அடுத்தவன்: எதிர்ப் பாட்டு பாடாதடா
எனக்கு வெட்கம் ஆகுதடா
சுரக்குடுக்கை வாங்கித்தாரேன்
சொல்லாதே ஓடிப்போடா
ஒருவன்: சுண்டெலி லாலா
சுடுகாட்டு மண்டெலும்பே
அண்டத்து மயிர் எலும்பே
அடக்கடா தெம்மாங்கை
சேகரித்தவர் : வாழப்பாடி சந்திரன்
இடம் : ஆத்தூர், சேலம் மாவட்டம்.
--------------
நம் ஊர்
ஊர்ப் பெருமை யாரை விட்டது? அவன் பிறந்து வளர்ந்து, காதலின்பம் நுகர்ந்து, அதன் மண்ணில் வியர்வை சிந்த உழைத்துப் பயன் பெற்ற ஊரை விட, எந்த புகழ் பெற்ற ஊரையும் அவன் மதிக்க முடியாது. திருநெல்வேலி, மதுரையிலுள்ளவர்களெல்லாம் அவனது ஊரழகைக் கண்டு அங்கு தங்கிப் போகிறார்களாம! அவ்வூர் பண்ணையார் கருத்தசாமி ஊருக்கே அழகாக விளங்குகிறாராம்.
மதுரை திருநெல்வேலி
மத்தி வத்து கோயில் பட்டி
தப்பி வந்த சனங்களெல்லாம்
தாமதிக்கும் நம்ம ஊரு
உயர்ந்த மரம் தெரியும்
உன்னதமா ஊர் தெரியும்
படர்ந்த மரம் தெரியும்
பாசமுள்ள சாமி ஊரு
மாப்பெருத்த மதுரைக் கடை
மணல் பெருத்த தூத்துக்குடி
பூப் பெருத்த மேல் மாந்தை
போக மனம் கூடுதில்லை
நந்த வனமழகு
நாமிருக்கும் ஊரழகு
கஞ்சாச் செடியழகு
கருத்தச் சாமி நமக்கழகு
சேகரித்தவர் : S.S.போத்தையா
இடம் : நெல்லை மாவட்டம்.
-----------
ஊர்களில் போட்டி
சூரங்குடியும், தங்கம்மாள்புரமும் அருகருகே உள்ள ஊர்கள். தங்கம்மாள்புரத்தார் தன் ஊர் பெருமையை சூரங்குடியாரிடம் சொல்லுகிறார்கள். அவர்கள் உடனே வேடிக்கையாக தங்கம்மாள்புரத்தை தாழ்த்தி தம் ஊரை உயர்த்திப் பாடுகின்றனர்.
தங்கம்மாள்புரத்தார்--
ஊறி ஊறித் தண்ணி யெடுக்கும்
ஊத்தப் பய சூரங்குடி
பாடிப் பாடித் தண்ணி யெடுக்கும்
பாண்டிய ராசா தங்கம்மாள்புரம்.
சூரன்குடியார்--
தட்டாம் பயிறவிக்கும்
தட்டுக் கெட்ட தங்கம்மாள்புரம்
மொச்சைப் பயிறவிக்கும்
முதலாளி சூரங்குடி.
குறிப்பு: மொச்சைப் பயிர், இழவுக்கு அவிப்பார்கள்.
சேகரித்தவர் : S.S.போத்தையா
இடம் : நெல்லை மாவட்டம்.
கீழ் வரும் பாடல்கள் பாதியாகப்பட்டன. அவற்றின் முடிவு அனுமானித்து எழுதப்பட்டது.
முட்டியிலே சோறு பொங்கி
மூடி வைக்கும் சூரங்குடி
தவலையிலே சோறு பொங்கி
தானமிடும் தங்கம்மாள்புரம்
குத்துக் கல்லு மேலிருந்து
குசும்பிழுக்கும் சூரங்குடி
வைரக் கல்லு மேலிருந்து
வழக்கு தீர்க்கும் தங்கம்மாள்புரம்
புதுமை
கோவில்பட்டி அருகில் ஜமீன் கிராமம் ஒன்றில் வாழ்ந்த விவசாயி தமது காலத்தில் நடந்த புதுமைகளை எண்ணிப் பார்க்கிறார். தாம் சிறுவனாக இருந்த காலத்திலிருந்த போக்குவரத்து முறையையும், இன்று முதியவராக இருக்கும் காலத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் நினைத்துப் பார்க்கிறார். ரயிலில்லாத காலம் அவரது இளமைப் பிராயம். இன்று ரயிலும், தந்தியும் போகாத இடமில்லை. பெரிய ஜமீன்தார் குதிரை சவாரி செய்வார். இன்று வாழும் சின்ன ஜமீன்தார் காரில் போகிறார். இந்த மாறுதல்கள் நல்லவையா, தீயவையா என்றுணர அவரால் முடியவில்லை. அவை அதிசயங்களாக மட்டும் அவருக்குத் தோன்றுகின்றன. பாலம் கட்டியது மட்டும் நன்மையாகப்படுகிறது.
வண்டி வருகுதடி
வடுகப்பட்டி முந்தலிலே
தந்தி வந்து பேசுதடி
தட்டாம் பாறை டேஷனுல
பெரிய துரை காலத்திலே
பேய்க் குதிரை சவாரி
சின்னத்துரை காலத்திலே
சிம்மம் போல மோட்டார்
கோச்சு மேலே கோச்சு வர
கொளும்புக் கோச்சு மேலேவர
நீல வர்ணக் கோச்சியிலே
நிச்சயமா நான் வாரேன்
ஆத்துல தண்ணிவர
ஆணும் பெண்ணும் அவதிப்பட
தூத்துக்குடி வெள்ளைக்காரன்
துணிஞ்சிட்டானே பாலங் கட்ட
கோணக் கோண ரயில் வண்டி
குமரிப் புள்ளே போகும் வண்டி
திருக்குப் போட்டு போகுதையா
திருமங்கலம் டேஷனுக்கு
குறிப்பு: டேஷன், ரயில், கோச்சு ஆங்கிலச் சொற்கள், பாமர வழக்காகி விட்டது. இவை யாருக்கும் விளங்கக் கூடிய முறையில் தமிழில் உருமாறி வழங்குவதால் இவை தமிழ் சொற்களாகி விட்டன.
சேகரித்தவர் : S.S.போத்தையா
இடம் : தூத்துக்குடி, நெல்லை மாவட்டம்.
-----------------
எங்கள் ராஜா
மன்னர்கள், மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் காரியங்களைச் செய்யாவிட்டால், மக்கள் நினைவில் அவர்கள் நிலைப்பதில்லை. கோவில்பட்டி தாலுக்காவில் தண்ணீர் கொடுத்தவன் தருமன். அவ்வளவு தண்ணீ்ர் பஞ்சம், ராஜா ஊர் ஊராய்க் கிணறு வெட்டி குடி தண்ணீர் வசதி செய்தார். எனவே அவர் இறந்ததை எண்ணி மக்கள் பாடும் பாடலில் அவருடைய ஞாபகம் நிலைத்து விட்டது.
ராத்திரி வண்டி காத்து
நிக்குது தங்கையா
மீள விட்டான் டேஷனிலே
நான் வந்தையா
ஊருக்குமேல் கிழக்கே
ஒவ்வொரு தண்ணீர் பந்தல்
தண்ணிப் பந்தல் வச்ச ராஜா
தவறிப் போனாரே
எங்கும் புகழ் பெற்ற ராசா
தாம்பூலவாசம்
தருமருட தோஷம்
பிச்சப்பூ வாசம்
பிள்ளை யில்லாத் தோஷம்
ஆடழுக மாடழுக
அஞ்சு லட்சம் ஜனம் அழுக
பட்டத்து யானை வந்து
பந்தலிலே நின்றழுக
யாரு வந்து அழைத்தாலும்
அசையாத எங்க ராஜா
எமன் வந்து அழைத்தவுடன்
ஏறிவிட்டார் பூந்தேரு
சேகரித்தவர் : M.P.M.ராஜவேலு
இடம் : மீளவிட்டான் பகுதி, நெல்லை மாவட்டம்.
--------------
சிவகாசிக் கலகம்
சென்ற நூற்றாண்டின் இறுதியில் நாடார் சாதியினர் வியாபாரத்தில் ஈடுபட்டு செல்வாக்குப் பெற்றனர். அவர்களுடைய பொருளாதார நிலை உயர்ந்தது. ஆனால் 'மேல் சாதியினர்' அவர்களுக்கு சமூக அந்தஸ்து அளிக்கவில்லை. ஊரிலுள்ள விசாலாட்சி கோவிலில் அவர்கள் நுழைய உரிமையில்லை. ஊரில் பெரும்பான்மையினராகவும், செல்வச் சிறப்புடையராகவும் இருந்த அவர்கள், கோவிலில் நுழையும் உரிமை கோரினர்.
இதனை மறுத்த உயர் சாதியினர் சிவகாசிக்கு அருகிலிருந்த ஊர்களில் வாழ்ந்த மறவர் சாதியினரைத் தூண்டி விட்டு, அவர்களுக்கு ஆயுதங்கள் அளித்து கலகத்தைத் தூண்டினர்.
இக்காலத்தில் மேல் சாதியைச் சேர்ந்த போலீசு உத்தியோகஸ்தர்களும், சாதிவெறியைத் தூண்டிவிட்டு, மேல் சாதிக்காரர்களோடு சேர்ந்து கொண்டனர்.
கலகம் நடந்தபோது படையெடுத்துவந்த மறவர்களில் பலர் இறந்தனர். பின்னர் வழக்கு நடந்தபோது சிலர் இறந்தனர். கலகம் நடந்தபோது வேலை பார்த்து வந்த அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பின்னிருந்து தூண்டிய மேல் சாதிப் பணக்காரர்கள் வழக்கிலிருந்து தப்பிக்கொண்டு, கூலிக்கு மாரடித்தவர்களை நட்டாற்றில் விட்டு விட்டனர். இக்கலகம் நடந்தது 1892-ல்.
இத்தொகுப்பில் கிடைத்துள்ள பாடல்களில் ஒன்று கலகத்தில் முக்கிய பங்கு கொண்ட வெள்ளைத்துரையைப் பற்றிப் புகழ்ந்து கூறுகிறது. மற்றும் ஒன்று அவர்களில் அய்யாத்துரை, ராமச்சந்திரன் ஆகியோர் அநியாயமாக இறந்து விட்டதைக் குறித்து வருந்துகிறது. இக்கலகம் நடந்தது பற்றியே அப்பாடல் பாடியவர் வருந்துகிறார். மோசடிக்கும், சதிக்கும் உள்ளான மறவர்கள், சிந்தித்துப் பாராமல் துப்பாக்கிக்கு இரையானார்களே என்று பாடகர் வருத்தம் தெரிவிக்கிறார். மேலும் இரண்டு பாடல்கள் கலகம் பற்றி மேல் விபரம் தருகின்றன.
சிவகாசிக் கலகம்-1
அண்ணன் தம்பி நாலு பேராம்
அழகான ராமச்சந்திரன்
ஆனைகுத்தும் வெள்ளைத் தேவர்
அடிச்சாராம் பட்டாளத்த
பூனைகுத்து பொன்னுச்சாமி
புலியக் குத்தும் ராமச்சந்திரன்
கலங்கிடா படை திரட்டிக்
கொல்லுதாரே சிவகாசிய
கட்டக் கட்ட வெடியெடுத்து
கரு மருந்து உள்ளடச்சு
சுட்டாரே சிவகாசிய
செந்தூளாய்ப் போகும்படி
நல்ல மறத்தி பெற்ற
நடுவப் பட்டி வெள்ளையத் தேவர்
சுட்டாராம் சிவகாசிய
செந்தூளாய்ப் போகும்படி
கருந்தூளா ஆக்குச் சய்ய
வெள்ளையத் தேவர் பட்டாக்கத்தி
ஆறுமுகம் உள்ள புத்தி
சாலாட்சி அம்மன் வெற்றி
வட்டார வழக்கு: குத்தும்-கொல்லும்; கட்ட-கட்டை; சிவகாசிய-சிவகாசியை; ஆக்குச் சய்ய-ஆக்கி விட்டது ஐயா; சாலாட்சி-விசாலாட்சி.
குறிப்பு: ஆறுமுகம் என்பவர் இப்பாடலை எழுதியவராகலாம்.
-------------
சிவகாசிக் கலகம்-2
அய்யாத்துரை தேவர்
சித்திரை மாத்தையிலே
சிறந்த செவ்வாய்க் கிழமையிலே
ஒன்பதாம் தேதியிலே-அய்யாத்துரை
உசுரு கொடுக்கப் போனாரே
நாலு மூணும் ஏழு-இந்த
இருளாண்டித் தேவரைக் கேளு
சாப்பிட்டுக்கை கழுவி
சகுனம் பார்த்து வெடியெடுத்து
போரானாம் அய்யாத்துரை
பொன்னுசுரப் போக்கழிக்க
நாலு மூணும் ஏழு-அந்த
நாச்சியரெ கேளு
ஏறினார் வில்லுவண்டி
இறங்குனார் வேங்கப் புடை
சாராய போதையினால்
சாஞ்சு விட்டார் அய்யாத்துரை
கூடப் பிறந்தவனாம்
குடிகாரச் சங்கரனாம்
குடிக்கத் தண்ணி கேட்டதுக்கு
குதித்து விழுந்து ஓடினானாம்
பணத்தைச் செலவழிச்சு
படைகளல்லாம் முன்னே விட்டு
பின்னால் போகச் சொல்லி
பின்னடித்தான் கருணாலபாண்டி
பழிப்பாட்டம் குத்தகையார்
பாண்டிய மன்னன் அய்யாத்துரை
பங்கு வாங்கப் போகப் போயி
பழிவிழுந்து மாண்டாரய்யா
ஜாதியில் மறக்குலமாம்
சாந்த குண அய்யாத்துரை
பண்டாரச் செட்டியல்ல
பட்டு மடிந்தாரய்யா
பழனியாண்டி தேவர் மகன்
பாண்டிய மன்னன் அய்யாத்துரை
பங்கு வாங்கப் போகப் போயி
பழிவிழுந்தே மாண்டாரய்யா
ஆளிலேயும் நல்லாளு
அதிகப் பூஞ் செகப்பு
தங்கமுடி அய்யாத்துரை
தரகுக் கடை வாரதெப்போ?
நெல்லளந்து சேரக்கட்டி
நெடும்பரும்ப யானைகட்டி
பொன்னளக்க மாட்டாம
போய் மாண்டார் அய்யாத்துரை
வேட்டி ரெண்டு வெள்ளவேட்டி
வீடு ரெண்டும் காரவீடு
பூஞ் செகப்பு அய்யாத்துரை
பொன்னுயிரப் போக்கழிக்க
பொண்டாட்டியைத் தவிக்க விட்டு
புள்ளைகள மருக விட்டு
போய் விழுந்தான் நாய்ச்சியார் தோட்டம்
பொருதியுள்ள அய்யாத்துரை
குறிப்பு: மறவர் கட்சியைச் சேர்ந்தவர் பாடல்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
-------
இடம் பெற்றுள்ள 'சிவகாசிக் கலகம்-2', 'அய்யாத்துரை தேவர்'என்ற பாடல் சிவகாசிக் கலகம் பற்றித் தோன்றியதன்று.'பழிப்பாட்டம்' (மலைபடு பொருட்களைச் சேகரிக்கும் உரிமை) குத்தகை தொடர்பான பிரச்சனையில் அய்யாத்துரை தேவர் என்பவர் இறந்த நிகழ்ச்சியை இப்பாடல் குறிக்கிறது.
-------------
சிவகாசிக் கலகம்- 3
வெள்ளையத் தேவன் விசாலாட்சி கோயிலை அடைக்கச் சொல்லி, கோயிலினுள் நுழைய முயன்ற இரு நாடார்களைக் கொன்றான். ஆனால் நாடார்களுக்கு ஆதரவாகப் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வந்த இரு சக்கிலியர்கள் தந்திரமாக வெள்ளையனையே கொன்று விட்டார்கள். இப்பாடல் கலகத்தின் கொடுமையைக் கூறுகிறது.
நாலு பேரு அண்ணன் தம்பி
நடுவப்பட்டி வெள்ளை ஐயா
பொட்டி ஒடைக்கு முன்னே
போட்டாரே ஏழு பேரை
வீர மறத்தி பெற்ற
வீரமுள்ள வெள்ளை ஐயா
சாலாச்சி சந்நிதியைத்
தானடைக்கச் சொன்னாரையா
மொட்டையநாடார் மகன்
முதக் குட்டி செம்புக் குட்டி
வெள்ளையத் தேவரிடம்
வெட்டுப் பட்டு சாகுறானே!
பாஞ்சாலம் குறிச்சியில
பகட மக்க ரெண்டு பேரு
அந்தரம் அடிச்சல்லவோ
தந்திரமா வெட்டினானே!
குறிப்பு: நாடார், எதிர்க்கட்சி இரண்டையும் சேராதவர்கள் எழுதியபாடல்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-------------
சிவகாசிக் கொள்ளை-4
வந்தது பாரீர் சிவகாசிக் கொள்ளையின்
வன்மையைப் பாரீர்
தந்தது பாரீர் எழுபத்தைந்தாம் ஆண்டு
வளரும் வைகாசி மீ 25-உ
இந்தச் சமாச்சாரம் நாடாக்கமார் கேட்டு
எல்லோரும் ஒன்றாக மீட்டிங்கி பேசி
எழுதினார் கடிதம்-கண்டவுடன் ஏகினார் துரிதம்
வந்தது இங்கிலீஷ் துப்பாக்கிக் குண்டு மருந்துகள்
ஈட்டி சமுதாடு நீட்டும் வல்லாயுதம்
என்னென்ன விதமாய்-பந்தோபஸ்து உன்னிதமாய்
பயங்கரம் இல்லாமல் கூட்டங்கள் கூடி
தெருக்களை நாட்டமாய் மூடி
இல்லம் தோறும் தயார் செய்து இதமாகவேதான்
இன்ன விதமாக நோட்டீஸ் வந்ததென்று
எழுதியும் அர்ச்செண்டாய்
தந்தி கொடுத்தபடி கலெக்டரும் வந்தார்
போலீஸ்காரரும் கட்டாயமாய் இருந்தார் பின்னும்
எங்கெங் கிருந்துமே நாடார்களில் சிலர்
ஏகிச் சிவகாசி நாடார்க் குதவியாய்
வந்துமிருந்தார்-பொருள் சிலர் தந்துமிருந்தார்
இன்னும் ஏராளமாகவே சண்டை செய்ய துணிந்து
இருக்கும் நாடார்கள் ரகசியம்
எல்லாம் எண்ணியறிந்தார்
தந்திரங்களெல்லா மறிந்தார் உடனே
உடனே இருக்கின்ற பேர்களுக்குத்
தைரியம் சொல்லியே
ஏகமாக வெண்டர் பிள்ளை பட்டணம் சென்று
நாட்டனைப் பிடித்தார்-
ரிக்காடுகள் நோட்டுடன் முடித்தார்
இங்கு ஏலேல சிங்கன் வெள்ளையத் தேவரும்
இன்னும் சிலபேர்கள் சண்டைக்கு
எத்தனம் செய்யத் துணிந்து
திருநெல்வேலி ஜில்லா முழுமை மலையாளம்
சேர்ந்த ஆறாம் புளிக்கோட்டைவாசல் முதல்
நடந்ததே கொள்ளை சனங்களுக்குத்
தொடர்ந்ததே சள்ளை
தூத்துக்குடி மலையாளம் திருநெல்வேலி
சுரண்டைதே நீர்க்குளம் சாத்தூர் வட்டகை முதல்
அகிலாண்ட புரம் ஒட்ட நத்தம்
அருங்குளம் பிறவும்-பின்னும்
சிவனணஞ்சபுரம்-நயினா பட்டிக் கிழங்கு
சேர்ந்த நாகலா புரம் கடலை வரதம் பட்டி
இத்தனை ஊரும் தெரியாமல்
இனம் சொல்லா ஊரும்
ஐயோ! எங்கும் கொள்ளைகள் ஐயோ
எந்தன் பிள்ளைகள் ஐயோ
என்று கூக்குரலோடு நின்று பரதவித்து
ஐயோ என்பாரும் கடவுளை நொந்தார் எல்லோரும்
அல்லாவை வேண்டி சலாபம் செய்து
நெல்லையப்பர் கடை வழி
விசுவ நாதர் கோயில் சன்னதிக்கு வர
விளைந்ததே கூட்டம்
பயந்து விலகினார் ஓட்டம்
அப்போது
வீரன் குடிமகன் சக்கணனும் அந்த
வேளையிலே ரதம் ஏறி
ஒய்யாரமாய் வேட்டை எழுப்ப
முத்து மகன் கூட்டம் குளப்ப
அந்நேரம் வேகமாக
பின் வந்து வழி கூடி
வந்தார் எல்லோரும்-கடவுளை
நொந்தார் எல்லோரும்
வட்டார வழக்கு: நாடாக்கமார்-நாடார்கள்; நாட்டன்-Norton என்னும் வழக்கறிஞர்.
குறிப்பு: இது இரு கட்சியாரையும்-நாடார், மேல் சாதியாரையும் சேராத நடுநிலையார் பாடல்.
------------
சிவகாசிக் கொள்ளை-4
சீர்வளரும் திருநெல்வேலி ஜில்லாவை
சேந்த சிவகாசி கொள்ளை தன்னை
பேர் வளரும் கும்மி பாட ஐங்கரண்
பிள்ளை மலர் பாதம் காப்போமே.
தேசம் புகழ் காசியின் சிங்காரம்
செப்ப வேணு மென்றால் ஒப்பனையாய்
வாசனும், ஆதிகேசலும் ஆயிரம்
வாயினால் சொல்ல முடியாதே
நீல மணி முத்து மாடங்களாம் அண்ட
கோளம் அளாவிய கூடங்களாம்
செல்வம் மிகுந்திடும் வெள்ளாளர் நாயக்கர்
செட்டி மறவர்க்கும் நாடார்க்கும்
பல் வகையாய்ச் சிவன் கோயில் விஷயமாய்
பார வழக்கு நடந்ததுவே.
96-ம் வருடத்தில் கார்த்திகை
சோம வாரம் அந்த உற்சவத்தில்
திண்ணமாய் நாடார்க்கும் பிள்ளை மார்க்கும் ஒரு
செய்தி நடந்ததைச் சொல்லுகிறேன் :
வெள்ளாளர் சாமியை எழுந்தருளச் செய்து
வீதி வலமாய் வருகையிலே
மெள்ளவே நாடார்கள் பத்திர காளிக்கு
மேலான உற்சவம் செய்ய வென்று
தாங்களும் சாமி எழுந்தருளச் செய்து
சந்தியிலே அவர் முந்திக் கொண்டு
பாங்காகச் சாமியைப் போக விடாமல்
பலத்த கலகங்கள் செய்தனராம்
கல்லெறிந்து சிலர் சில்லரை செய்கின்ற
காலத்தில் ஆறுமுகம் பிள்ளை
மெல்லவே தந்தியடிக்கக் கலைக்டரும்
மேவும் போலீஸ் காரர் தான் வரவே
கெட்டிக்காரர் சுத்துப் பட்டி மறவர்க்கும்
கிள்ளாக்கு வட்டிப் பிள்ளை அவர்
அட்டி இல்லாமல் அனைவரும் வந்து
அழகாய்த் திருவிழாத் தான் நடத்த
வந்த தேவ மாரைக் கொள்ளை செய்தாரென்று
வல்ல நாடார்கள் பிராது செய்தார்
தந்திரமாய் மேஜிஸ்ரட்டார் பிராதை
தள்ளி விட்டார் வெகு துல்லியமாய்
நாராயண சாமி பிள்ளை டிப்டி மேஸ்திரி
நியாய வழக்கைத் தான் உரைத்தார்
தோரணையான அதிகாரத்தால் கட்சி
தோன்றா திருந்தது சில காலம்
வல்ல அதிகாரி போன பின்பு-ஜூலை
வளரும் 18-ல்
மெள்ளவே நாடார்கள் கோயிலுக் குள்ளேதான்
மேவிட எண்ணம் துணிந்தாரே
ஆலயத்துக்குள் புகும் போது வெண்டர்
ஆறுமுகம் பிள்ளை மற்றவரும்
ஆலயம் தேடி ஈசன் சன்னதி
வழி மறித்துக் கொண்டார் அந்நேரம்
அன்று காளியம்மன் நந்தவனத்தை
அழித்தார் தேவமார்கள் எல்லோரும்
சென்று நாடார்களைக் கொள்ளை செய்வோமென்று
சிந்தனை செய்தும் இருந்தாரே
இந்தப்படி சிலர் செய்திடவே வெண்டர்
பிள்ளை முதலான மற்றவரும்
சென்றுமே அந்தக் கவர்ன் மெண்டாருக்கும்
தெரியாத ரிக்கார்டு தான் முடித்தார்.
நாடாக்கமார்கள் கொடுத்த பிராதுகள்
நன்றாச்சு கட்சி இரண்டாச்சு
வாடாதருள் பெற்ற கோயில் அடைத்துமே
வாழ் நகர் விட்டுச் சிலர் போனார்
வெள்ளாளர் நாயக்கர் செட்டிமார்கள் அவர்கள்
வேதியர் பஞ்சமச் சாதியர்கள்
துள்ளின மாடு பொதி சுமக்கும்
என்று சொல்லிய பழமொழி போல்
இந்த விதமிங்கு தானிருக்கக் கலி
இன்னொன்று செய்தானே மாபாவி
சந்தமுள மாஜிஸ்திரார் கோர்ட்டினில்
சாணார் கமுதியில் தான் நடக்க
ஆயிரம் பேருக்கு நாடார்
ஆலயத்துக்குள் வந்திருந்து
வாசல் வழியாய் வந்து புகுந்து கொண்டோம் என்று
வழக்கும் என்ற கை முழுக்கும் இட்டார்
அன்று முதல் கோயில் அடைபட்டுக் கொண்டது
அய்யோ ஆயிரம் காலத்து மாபாவி
சென்று சிவகாசி பட்டணத்தவர்கள்
செய்ததைக் கேளுங்கள் மானிடரே
சுத்துக் கிராமத்து நாடார்கள் செய்திட்ட
தொல்லைகளும் சில சொல்லுகிறோம் :
எத்து களாய்ச் சில சொத்துக்களை
ஏமாத்தம் செய்தார் சாலை ஓரம்
நாயக்கர் கம்பள மீனம் பட்டி வழி
நாடிய கைம் பெண் ஒருத்தி
மத்தியானத்தில் ஒருத்தியைக் கொன்றானாம்
மூவர்கள் நாடார்கள் கொலை செய்த கைதிக்கு
ஏழுவருடம் கொடிய தண்டனைகள் தான் முடித்து
உலகில் சுத்துப் பட்டி நாயக்கர் தேவர்க்கும்
ஓங்கிய கோபம் தணியவில்லை
மாரினேரி ஓரம் பள்ளரைக் கொலை யொன்று
பத்து மணிக்குச் செத்ததனால்
காரியம் இல்லாக் குடும்பர்க்குக்
கோபம் இருந்தது சில நாளாய்
ஏப்ரல் மாதம் இருபத்தாறாந்தேதி
எனும் சிவகாசி மறவர் வாய்ப்புடன்
கடை கட்டும் அந்த வேலை வகுத்தார்
நாடார் விரோதங் கொண்டு
நாடார் சிலபேரும் கடைக் கெட்ட விடாமல்
தடுத்துக் கொண்டு
சண்டை பேட்டையில் தாக்கினான் அக்கினி
ஊக்கமாய் வல் உலகனும் மறவரும் சேர்ந்துமே
வன்மை நாடார்களைத்தான் விரட்டி மெல்லவே
காளியம்மன் பேட்டையில் தீ வைத்து
வேடிக்கை செய்தார் அந்நேரம்
சிங்கக்குட்டி ரெங்கா ராவுத்தர் பெற்றிடும்
செகு முகம்மது காசியும்
சங்கையில்லாமல் வாள் ஆயுதம் கொண்டார்
சாடின நாடார்கள் ஓடிவிட்டார்
வட்டார வழக்கு: கிள்ளாக்கு-கிளார்க்கு ; மாஜிஸ்திரார்-மாஜிஸ்டிரேட் ; கெட்ட-கட்ட.
குறிப்பு : இப்பாடல் நாடார்களுக்கு விரோதமான கட்சியார் எழுதிய பாடல்.
சேகரித்தவர் : S.S.போத்தையா
இடம் : விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
------------
சந்தனத் தேவன்
சந்தனத்தேவன் பிரபலமான திருடன். இவனைப் பிடிக்கப் போலீசாரால் முடியவில்லை. பிடித்துத் தருபவர்களுக்கு ரூ,1000 வெகுமதி அளிப்பதாகப் பறைசாற்றப் பட்டது. பிடிக்க முன்வர யாருக்கும் தைரியமில்லை. கூட இருந்த ஒருவன் காட்டிக் கொடுத்துவிட்டான். பின்னர் சந்தனம் தூக்கிலிடப்பட்டான். அவன் மனைவி, அவனுடைய தாயாரிடம் அழுது சொல்லுவது போல கடைசிப் பாடல்கள் அமைந்துள்ளன. ஆயினும் பொருள் தெளிவாக விளங்கவில்லை.
- விளம்பரம்
> ஆயிரம் ரூபா தாரேன்
ஐக்கோட்டு வேலை தாரேன்
சந்தனத்தை பிடித்தவருக்கு
சருக்காரு வேலை தாரேன்
மக்களின் அச்சம்
ஆயிரம் ரூபா வேண்டாம்
ஐக்கோட்டு வேலை வேண்டாம்
சந்தனத்தை பிடிக்க வேண்டாம்
சருக்காரு வேலை வேண்டாம்
சந்தனத்தின் வீரம்
ஏட்டை இழுத்து வச்சு
இன்ஸ்பட்டரை கட்டி வச்சு
துவரங்காயைத் தின்னச் சொல்லி
மாட்டுரானே சந்தனமும்
மகனுக்குப் பரிசு
மகனுக்கு மல்லு வேட்டி
தாயாருக்கு சாயச் சீலை
பெண்டாட்டிக்குப் பொட்டுச் சீலை
போய் எடுத்தான் சந்தனமும்
மாயாண்டி துரோகம்
சந்தனமும் மருதமுத்தும்
சமுச்சாரம் பேசையிலே
நத்தக்கண்ணு மாயாண்டி
நாக்குத் தள்ளப் போட்டாண்டி
நீதிபதி தவிப்பு
பேரான சந்தனத்தை
பெரிய குளம் தள்ளி விட்டு
முடிவு சொல்ல மாட்டாமே
முளிக்கிறானே மாஸ்திரேட்டு
மூக்கம்மாள் தவிப்பு
சந்தனம் பெண்டாட்டி
சபை நிறைஞ்ச மூக்கம்மாளாம்
சந்தனத்தைத் தூக்கும்போது-உன்
சதுரம் கொஞ்சம் வாடுதடி
தாயிக்கு போலீசார் கூறுவது
அடிக்காலத்தா
அநியாயம் செய்யாலாத்தா
தலைக்காலை எடுத்துக்கிட்டு
நிறுத்துக்கடி உன்மகனை
வட்டார வழக்கு: சமுச்சாரம்-சமாச்சாரம் ; நாக்குத்தள்ள-தூக்கிலேற்றப் பிடித்துக் கொடுத்தான் ; சதுரம்-சரீரம்.
குறிப்பு: கடைசி இரண்டடி-தலையும் காலும் இல்லாமல் உன் மகனை எடுத்துக்கொள் என்னும் கருத்துப்பட அமைந்துள்ளது.
சேகரித்தவர் : S.M.கார்க்கி
இடம் : சிவகிரி.
-------------
சிவகிரி ஜமீன்தார்
சிவகிரி ஜமீன்தார் இறந்தபோது தோன்றிய பாடல்கள் இரண்டு கீழே தரப்படுகின்றன. அவற்றுள் முதல் பாடல் சிவகிரி ஜமீன்தார் சதியால் கொல்லப்பட்டார் என்று மறைமுகமாகக் கூறுகிறது. அவர் இறந்த இடம் குற்றாலம். சிறிய ஜமீன்தாரை சின்னசாமி என்று அழைப்பதுண்டு. அவர் வடக்கேயிருந்து வருகிறார் என்று அவரைப் பார்க்க மக்கள் கூடியிருக்கிறார்களாம்.
இரண்டாவது பாடலில் ஜமீன்தார் கலியாண மகால் கட்ட உத்தரவிட்டு, அது கட்டி முடிந்து விட்டதாகவும் ஆனால்,அம்மகாலில் அவர் உட்காரவில்லையென்றும் அதற்கு முன்னரே கைலாச குழிக்குப் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சிவகிரி ஜமீன்தார்-1
பாக்குப் பொடி நறுக்கி
பல்விளக்கித் தீத்தம் பண்ணி
காப்பித் தண்ணி சாப்பிட்டிட்டு
கச்சேரிய செய்த தெப்ப?
கச்சேரி வாசலிலே
லட்சம் ஜனம் கூடியிருக்க
கருத்த துரை இல்லாம
களையும் பொருந்தலையே
கிறிச்சு மிதியடியாம்
கீ கண்ணுப் பாருவையாம்
வடகா பிரகரைக்கு
வாரதெப்போ நம்ம துரை
சோணப் பாறை மொந்தலிலே
சூரியனும் உதிக்கு முன்னே
மண்டி போட்டுச் சுட்டாராம்
மன்னம் பொன்னு சின்னசாமி
காக்கா இறகு போல
கல்லணைத் தண்ணி போல
மறிச்சாராம் மறிபடாது
மகராஜன் ஆத்துத் தண்ணி
ஆடழுக,மாடழுக
அஞ்சாறு லட்சம் ஜனமழுக
சிவகிரி ஜனங்களெல்லாம்
தெருத் தெருவா நின்னழுக
-----------
சிவகிரி ஜமீன்தார்-2
பிறந்தது சிவகிரி
வளர்ந்தது ஆத்துப்பட்டி
மாண்டது குத்தாலம்
மகாராஜா நம்ம துரை
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லியப்பூ சேடங் கட்டி
அடிக்காக நம்ம துரை
ஆத்து மணல் தூள் பறக்க
வடக்க இருந்தல்லவோ
வாராக சின்னசாமி
பதினெட்டு பட்டி ஜனம்
பாக்க வந்து காத்திருக்கு
பட்டணங்கள் போகலாமா
பந்தயங்கள் கூறலாமா
இந்தக் கலியுகத்தில்
இஷ்டர்களை நம்பலாமா
சிவகிரி மகாராசா
செல்வத் துரை பாண்டியன்
நீசநிதியாலே மோசம் வரலாச்சே
மானழுக, மயிலழுக
மாடப்புறா கூட அழுக
சிவகிரி ஜனங்களெல்லாம்
தெருத் தெருவா நின்னழுக
கல்யாண மால்
கட்டச் சொல்லி உத்தரவு
ஒரு நாள் ஒரு பொழுது
மகாராசா உக்காந்து பாக்கலியே
காத்திய மடத்தோரம்
கைலாசகுழி வெட்டிருக்கு
வெட்டி நாளாகுது
வெரசா வரும் மோட்டார்காரே.
வட்டார வழக்கு: காத்திய மடம்-கார்த்திகை நாள் விழா நடைபெறும் மடம் ; மொந்தல்-மூலை ; அழுக-அழ
சேகரித்தவர் : S.M.கார்க்கி
இடம் : சிவகாசி, இராமநாதபுரம் மாவட்டம்.
-------------
போட்டியும் முடிவும்
விளையாட்டில் ஆரம்பிக்கும் போட்டி வினையாக வளருவதுண்டு. சில ஊர்களில் சேவல் சண்டை மனிதர் சண்டையாக முற்றி, கொலைகள் விழுவதுமுண்டு. எட்டய புரம், பாஞ்சாலக்குறிச்சியில் போட்டிக்கு, சேவல் சண்டை காரணமென்று நாட்டுப் பாடல்கள் தெரிவிக்கின்றன*தற்காலத்திலும்கூட கோஷ்டி விளையாட்டுகளின் முடிவில் கைகலப்பு ஏற்படுவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் விளையாட்டுப் போட்டியில் வெற்றி ' நமக்கே' வேண்டும் என்ற எண்ணமே. அடுத்தவருக்கு வெற்றி கிடைத்தால் நமக்கு பொறாமை மூளுகிறது. அது புகைந்து, எரியத் தொடங்குகிறது. கடைசியில் கொலையில் சென்றே முடிகிறது.
இரண்டு நெருங்கிய உறவினர்கள் (ஒன்று விட்ட அண்ணன் தம்பிகள்) சிவகிரியில் சிறந்த குஸ்தி, சிலம்பு விளையாட்டுக்காரர்களாக இருந்தனர். அவர்களுக்குள் விளையாட்டில் சிறு சண்டை ஏற்பட்டு, அது உடனே தணியாமல், தூண்டுவார் தூண்டி விட்டுப் பெரிய பகையாயிற்று. கடைசியில் ஒருவன் மற்றொருவனைக் கொன்று விட்டான். கொலையாளியும் தூக்குமரத்தில் தொங்கினான். இந்நிகழ்ச்சி 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. பயில்வான்களின் பெயர் பெரிய செந்தட்டிக்காளை, சின்னச் செந்தட்டிக் காளை.
அரண்மனைக்குக் கீழ் புறமாம்
அழகான செந்தட்டிக்காளை
சளுக்காணி செந்தட்டியை
தலையை வெட்டிக் கொண்டு போனான்
செந்தட்டிக் காளை
சிறுபுலியும் நீள் வேங்கை
கள்ளுக்கடை ஓரம்
கைலாசம் சேர்ந்து விட்டான்
கள்ளுக்கடை ஓரம்
கருப்ப சாமி கோயில் ஓரம்
மார் படர்ந்த செந்தட்டியை
மண்டி போட வெட்டி விட்டான்.
எல்லோரும் எடுக்கும் கம்பு
ஏழைக் கேத்த மூங்கில் கம்பு
சளுக்காணி எடுக்கும் கம்பு
சரியான சடுக்காக் கம்பு
சேகரித்தவர் : S.M.கார்க்கி
இடம் : சிவகிரி.
* கட்ட பொம்மு சிந்து, சிதம்பர சுவாமிகள், பதிப்பாசிரியர் நா.வானமாமலை, மதுரைப் பல்கலைக்கழக வெளியீடு,1974
-----------------
ஊமைத்துரை போட்ட கொடி
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, சிறை உடைத்து மீண்டு வந்து கோட்டையைப் புதுப்பித்து, வெள்ளையர் வெறுப்புணர்ச்சியை பல பகுதிகளிலும் பரப்பி இரண்டு ஆண்டுகள் போராடி, மருது சகோதரர்களது போரிலும் கலந்து கொண்டு வீரமரணம் எய்திய ஊமைத்துரையைப் பற்றி பல நாட்டுக் கதைகள் திருநெல்வேலி மாவட்டத்திலும், இராமநாதபுரம் மாவட்டத்திலும் வழங்கி வருகின்றன. அவனைப் பற்றி பிற மாவட்டத்தினர் அதிகமாக அறிந்திராவிட்டாலும், பெயரையாவது தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை சேலம் மாவட்டத்தில் வழங்கி வரும் இப்பாடல் காட்டுகிறது.
ஒரு மரத்தை வெட்டித்தள்ளி
ஒரு மாமரத்தை ஊஞ்சலாடி
ஊஞ்சலிலே போரகிளி-அது
ஆண் கிளியா-பொண் கிளியா
ஆண் கிளியும் இல்லம் போயா-அது
பொண் கிளியும் இல்லம் போயா
அதோ பறக்குது பார் பச்சைக் கொடி-எங்க
அழகான ஊமைத்துரை போட்ட கொடி
இரண்டு மரத்தை வெட்டித் தள்ளி
ரண்டு மாமரத்தை ஊஞ்சலாடி
ஊஞ்சலிலே போர கிளி-அது
ஆண் கிளியா-பொண் கிளியா
ஆண் கிளியும் இல்லம் போயா-அது
பொண் கிளியும் இல்லம் போயா
அதோ பறக்குது பார் பச்சைக் கொடி-எங்கள்
அழகான ஊமைத்துரைப் போட்ட கொடி
சேகரித்தவர் : s.s. சடையப்பன்
இடம் : அரூர்,தருமபுரி மாவட்டம்.
--------------
வெள்ளையர் கொள்ளை
கரும்பை விளைவிக்கும் விவசாயிகளிடம், வெள்ளையர் குறைந்த விலைக்கு கரும்பை வாங்கிக் கொண்டு போனார்கள். அவற்றையெல்லாம் கப்பலில் ஏற்றினார்கள். கடற்கரை வழியே தங்கள் ஆலைகளுக்குக் கொண்டு சென்றார்கள். கரும்பு விற்ற விவசாயி கூழ் குடித்துக் கொண்டு வாழ கரும்பை வாங்கிச் சென்ற வெள்ளையன் முப்பது முட்டையும் தின்று சாராயமும் குடிக்கிறானாம். அவனுக்கு பணம் சேர்ந்த விதம் விவசாயிக்குத் தெரியவில்லை. அரசியல் அறிவு பரவாத கிராமத்தில் வாழும் விவசாயி ஏகாதிபத்தியச் சுரண்டல் முறையை எப்படி அறிவான்? தங்களை வெள்ளையன் வஞ்சிக்கிறான் என்பது மட்டும் மங்கலாகத் தென்பட்டது. அதனால் ஏற்பட்ட வெறுப்பினால் வெள்ளையனை துரை என்று சொல்லாமல் ' பரங்கி ' என்று சொல்லுகிறான்.
ஒரு கட்டுக் கரும்பாம்-பரங்கி
ஒண்ணால் ஆயிரமாம்
அந்தக் கட்டுக் கரும்பை-பரங்கி
ஏத்தனாங் கப்பலுக்கு
கப்பலு முக்காதம்-பரங்கி
கடலு முக்காதம்
கப்பலில் இறக்கும் தண்ணியைக் குடிச்சா
தலை கிறு கிறுண்ணும்
முப்பது கோழி முட்டை-பரங்கி
முன்னூறு சாராயம்
எத்தனை திண்ணாலும்-பரங்கிக்கு
வெத்திலை திண்ணாப் போல
ரண்டு கட்டுக் கரும்பாம்-பரங்கி
ரண்டால் ஆயிரமாம்
அந்தக் கட்டுக் கரும்பை-பரங்கி
ஏத்தனாங் கப்பலுக்கு
கப்பலு முக்காதம்-பரங்கி
கடலு முக்காதம்
கப்பலிலிருக்கும் தண்ணிய குடிச்சா
தலை கிறுகிறுண்ணும்
முப்பது கோழி முட்டை-பரங்கி
முன்னூறு சாராயம்
எத்தனை திண்ணாலும்-பரங்கிக்கு
வெத்திலை திண்ணாப் போல
வட்டார வழக்கு: ஏத்தனான்-ஏற்றினான் ; வெத்திலை-வெற்றிலை.
சேகரித்தவர் : s.s சடையப்பன்
இடம் : அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------
நம்ம துரை
ஆங்கிலேயர்கள் நமது நாட்டிற்கு வந்த புதிதில் தமது வியாபார ஸ்தலங்களில் தமிழ் தொழிலாளர்களைக் கூலி வேலைக்கமர்த்தினார்கள். நமது பழக்க வழக்கங்களையும் அவரது பழக்க வழக்கங்களையும், ஒரு தொழிலாளி உற்று நோக்கினான். அவன் காணும் வேறுபாடுகளை வரிசைப்படுத்திச் சொல்லுகிறான். இப்பாடல் கார் போன்ற வாகனங்கள் பழக்கத்துக்கு வருமுன் பாடப்பட்டிருக்க வேண்டும்! அது மட்டுமல்ல; கத்தி, கொடுவாளை எதிர்த்து துப்பாக்கி கொண்டு துரைகள் சண்டை செய்தார்கள் என்ற செய்தி ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னால் இப்பாடல்களின் “ கருத்துக்கள் தோன்றியிருக்கின்றன“ என்று காட்டுகிறது. ஆனால் முதலில்பாடப்பட்டதிலிருந்து இப்பாடல் சில மாறுபாடுகளோடு காணப்படலாம். பின்னால் வரும் வழக்கங்கள் முன்பு பாடப்பட்ட பாடல்களில் புகுத்தப்படுவது நாட்டுப் பாடல்களின் மரபுக்கு உகந்ததே!
தண்ணிமேலே கப்பலோட்டும்-ஏ தங்கம்
தந்திரமா நம்ம துரை-ஏ தங்கம்
அலை மேலே கப்பலோட்டும்-ஏ தங்கம்
அறிவுள்ள நம்ம துரை-ஏ தங்கம்
இரும்புக் குறிச்சிகளாம்-ஏ தங்கம்
இங்கிலீசு புஸ்தகமாம்-ஏ தங்கம்
இருந்து கணக்கெழுதும்-ஏ தங்கம்
இன்ப முள்ள நம்ம துரை-ஏ தங்கம்
அல்லாரும் எழுதும் பேனா-ஏ தங்கம்
அந்தப் பேனா, இந்தப் பேனா-ஏ தங்கம்
நம்ம துரை எழுதும் பேனா-ஏ தங்கம்
சரியான தங்கப் பேனா-ஏ தங்கம்
அல்லாரும் குடிக்குந் தண்ணி-ஏ தங்கம்
ஆத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி-ஏ தங்கம்
நம்ம துரை குடிக்குந் தண்ணி-ஏ தங்கம்
காரமான கள்ளுத்தண்ணி-ஏ தங்கம்
அல்லாறும் ஏறும் வண்டி-ஏ தங்கம்
கட்ட வண்டி மொட்ட வண்டி-ஏ தங்கம்
நம்ம துரை ஏறும் வண்டி-ஏ தங்கம்
சரியான கோச்சு வண்டி-ஏ தங்கம்
எல்லோரும் சண்டை செஞ்சா-ஏ தங்கம்
கத்தி வரும் கொடுவா வரும்-ஏ தங்கம்
நம்ம துரை சண்டை செஞ்சா-ஏ தங்கம்
தலைக்கு மேலே பாணம் வரும்-ஏ தங்கம்
சாரி சவுக்கு குதிரை-ஏ தங்கம்
சவாரி போர குதிரை-ஏ தங்கம்
பூக் குதிரை மேலே ஏறும்-ஏ தங்கம்
பொன்னு முடி நம்ம துரை-ஏ தங்கம்
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம் : சக்கிலிப்பட்டி, அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------
தரும துரை
மன்னர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் புகழ்ந்து பாடப்படுவது அரிது. ஏனெனில் நாட்டு மக்கள் மன்னர்களை நேரில் காண்பதோ, அவர்களது அன்பை நேரில் பெறுவதோ முடியாது. சமீப கால மன்னர்கள் மக்களுடைய வாழ்க்கையில் புலப்படும்படியான பொதுநலப் பணிகள் எவற்றையும் செய்ததில்லை. தாங்கள் வாழ மாட மாளிகைகளையும், தங்கள் புகழ் விளங்க கோயில்களுக்கு மதிற்சுவர்களும், கோயில்களும் கட்டினார்களேயன்றி ராணி மங்கம்மாளைப்போல ஓரிருவர்தான் மக்கள் நலன் கருதி பொதுப்பணிகள் செய்தார்கள். முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பின் போதும், ஆங்கிலேயர்களின் படையெடுப்பின் போதும் மக்களைத் திரட்டி எதிர்த்த சிற்றரசர்கள் தோல்வியுற்று மறைந்துவிட்ட போதிலும் நாட்டுப் பாடல்களில் அவர்கள் அழியாத இடம் பெற்றார்கள். ஆனால் மக்கள் நலன் கருதாது இன்ப வாழ்க்கை நடத்தி மறைந்துபோன மன்னர்கள் நாட்டுப் பாடல்களில் இடம் பெறவில்லை. மதுரைக்கோபுரம் கட்டிய மன்னனொருவன், சாலையில் தங்கும்விடுதி கட்டி, தண்ணீர்ப் பந்தலும் வைத்ததால் இந் நாட்டுப்பாடல் புகழ்ந்து போற்றுகிறது. மதுரைக் கோபுரம் கட்டியதைவிட 'தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுக்கிற தருமம்'தான்பெரிதென்று இந்நாட்டுப் பாடல் கூறுகிறது.
கல்லுமே கல்லுமே கல்லுருட்டி
கல்லுக்கும் கல்லுக்கும் எணை கூட்டி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மன்னவன் வாரானாம் பாருங்கடி
சன்னலு,பின்னலு சாலையிலே
தங்கு மடம் ஒண்ணு கட்டி வச்சி
தவிச்ச வாயிக்கி தண்ணி குடுக்கிற
தரும துரையும் வாராராம்.
சேகரித்தவர் : S.S. சடையப்பன்
இடம் : அரூர்,தருமபுரி மாவட்டம்.
---------
தண்ணீரா வேண்டும்
கிராமத்தில் ஒரு விழா. பெண்கள் கூடி கும்மி அடிக்கிறார்கள். அவர்களது பாட்டைக் கேட்கவும், நடனத்தைப் பார்க்கவும் ஒரு இளைஞன் அருகில் வருகிறான். பொதுவாக ஆண்கள் அங்கு போவதில்லை. அது கிராமத்தின் வளமையான எழுதப்படாத சட்டம் ; அதை மீறுவதற்கு ஒரு காரணம் கண்டு பிடிக்கிறான் இளைஞன். வாழைப்பழம், சர்க்கரை, எள்ளுருண்டை யெல்லாம், தின்றதால் விக்கலெடுக்கிறதாம், தண்ணீர் வேண்டுமாம். அவர்கள் வெளிப்படையாகவே “முந்தாணி தட்டும் தூரத்தில் நெருங்க வேண்டாம், தள்ளி முக்காலிபோட்டு உட்காரவேண்டும்” என்று கூறுகிறார்கள். மூக்கறுக்கப்பட்ட இளைஞன் பழைய கதையைச் சொல்லிக் கொண்டே ஆந்தை போல விழித்துக் கொண்டு நிற்கிறான்.
ஆண் : சீப்பு சீப்பா வாளப்பளம்
சீனி சக்கரை எள்ளுருண்டை
சக்கரைத் தின்னா விக்கலெடுக்கும்
தண்ணி கொண்டாங்கடி தாதிமாரே
பெண் : கும்மியடிக்கற பெண்களாண்டே
கூட்டம் என்னா இங்கே ஆம்பிளைக்கி
முந்தாணி தாங்குது ஒத்திக்குங்க
முக்காலி போடறோம் ஒக்காருங்க
ஆண் : கொத்து கொத்தாப் புள்ளே வாளப்பளம்
கோதுமை சர்க்கரை எள்ளுருண்டை
சர்க்கரை தின்னாலே விக்கலெடுக்கும்
தண்ணி கொண்டாங்கடி தாதிமாரே
தன்னா தானான தானான-தன
தான தனனனன னானன
வட்டார வழக்கு: வாளப்பளம்-வாழைப்பழம்.
குறிப்பு: ழகரத்தை தென் தமிழ் நாட்டில் ளகரமாகவே உபயோகிப்பர்.
சேகரித்தவர் : S.S. சடையப்பன்
இடம் : அரூர்,தருமபுரி மாவட்டம்.
--------
பட்டணத்தைப் பார்த்த பட்டிக்காட்டான்
வெள்ளைக்காரன் ஆளும் காலத்தில் பட்டிக்காட்டான் பட்டணம் பார்க்க மனைவியோடு போனான். அங்கே அவன் கண்டவற்றை தான் முன் அறிந்திருந்த பொருள்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறான். விமானம், தந்தி, மின்விளக்கு இவையாவும் அவனுக்கு அதிசயத்தை உண்டாக்குகின்றன.
மானத்திலே போகுது பார்
மாடில்லாத வண்டி-அது
மஞ்சிட்டு போல் பேசுது பார்
வெள்ளெக்காரன் கம்பி
கச்சேரி மேலெரியும்
காந்தி சோதி வௌக்கு-அது
எந்நீதமாய் எரியுது பார்
வெள்ளெக்காரன் விளக்கு
பட்டணத்தை பாக்க பாக்க
பசியெடுக்கவுமில்லெ-நம்ம
பட்டிக்காட்டை சுத்திச் சுத்தி
பாக்க மனசு வல்லே
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம் : அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------
கூலிசெய்யக் காலமாச்சே!
கிராமப்புறத்தில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்த விவசாயிகள், பருவ மழையின்மையாலும், வரிப்பளுவினாலும் கடன்பட்டு நிலத்தை இழந்து விடுகிறார்கள், விவசாயக் கூலிகளாக வேலை செய்து பிழைக்கிறார்கள். கொஞ்சம் காணியுள்ள வீட்டில் பிறந்த ஒரு பெண்ணுக்கு கூலி வேலை செய்யும் இளைஞனொருவன், மணமகனாக வாய்க்கிறான். திருமணமான மறுநாள் கூழ் குடிக்க வேண்டுமானால், மணமகனும் மணமகளும் கூலி வேலை செய்தாக வேண்டும். புது மண உறவின் இன்பத்தை நுகர விடுமுறை கிடைக்கவில்லை. 'கொட்டவந்த மேளக்காரன் ஊர் எல்லை தாண்டுவதற்கு முன்னால் மண் எடுத்துக் கூலி வேலை செய்யக் காலமாகி விட்டதே', என்று ஏங்கிப் பாடுகிறாள் மணமகள்.
அரைச்ச மஞ்சா ஏழுருண்டை
கண்ணான நாதா-என்
மன்னவனே சாமி
அரைக்காத மஞ்சா ஏழு மஞ்சா
கண்ணான நாதா
கட்டான வெத்திலை ஏழு வெத்திலை
கண்ணான நாதா-என்
மன்னவனே சாமி
கட்டான வெத்திலை ஏழு வெத்திலை
கண்ணான நாதா
எடுத்து வையும் சீரு மேலே
கண்ணான நாதா-என்
மன்னவனே சாமி
எண்ணிப் பாத்துச் சொல்லுகிறோம்
கண்ணான நாதா
ஊத வந்த மக்களாம்
கண்ணான நாதா
கொட்ட வந்த கோயில் மேளம்
கண்ணான நாதா-என்
கொல்லன் மேடு தாண்டலியே
கண்ணான நாதா
மன்னவன் சாமி
மாலையிட்ட நாள் மொதலா
கண்ணான நாதா-என்
மன்னவனே சாமி
மண்ணெடுக்க காலமாச்சே
கண்ணான நாதா
கூரையிட்ட நாள் மொதலா
கண்ணான நாதா
மன்னவனே சாமி
கூலி செய்யக் காலமாச்சே
கண்ணான நாதா
வட்டார வழக்கு:கூரை-திருமணச்சோலை.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்:சேலம் மாவட்டம்.
------------
தாலிப் பொன்னிலும் மாப்பொன்னு
தாய் தங்கம் கொடுத்து நகை செய்யச் சொன்னாலும், பொன் வேலை செய்யும் தட்டான் பழக்க வசத்தால் சிறிதளவு பொன் கவர்ந்து கொள்வான் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. ஒரு பெண் வழக்கமாக ஒரு ஆசாரியிடம் நகை செய்யக் கொடுக்கிறாள். ஒவ்வொரு தடவையும் ஒரு காரணம் சொல்லி, கொடுத்த தங்கத்தைவிட எடை குறைவாக ஆசாரி நகை செய்து தருகிறான். மற்ற நகைகளில் சிறிதளவு தங்கம் குறைந்ததைக் கண்டு கோபப்படாத அவளுக்குத் தாலியில் தங்கம் குறைவதைக் கண்டு கோபம் வருகிறது. தாயின் கோபத்தை இக் கும்மி வெளியிடுகிறது.
கம்மலுக்கு அரும்பு வச்சாண்டி
ஆச்சாரியண்ணன், ஆரழகன்
வன்னிய தட்டான் வடிவழகன்
கம்மலிலேயும் கொஞ்சம், கொஞ்சம்
பழுது யிண்ணாண்டி
கொப்புக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க
ஆச்சாரியண்ணன் ஆரழகன்
வன்னிய தட்டான் வடிவழகன்
கொப்பிலேயும் கொஞ்சம் கொஞ்சம்
பழுது யிண்ணாண்டி
காப்புக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க
ஆச்சாரியண்ணன் ஆரழகன்
வன்னிய தட்டான் வடிவழகன்
காப்புலேயும் கொஞ்சம் கொஞ்சம்
பழுது யிண்ணாண்டி தாலிக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க
ஆச்சாரியண்ணன் ஆரழகன்
வன்னிய தட்டான் வடிவழகன்
தாலியிலேயும் கொஞ்சங் கொஞ்சம்
பழுது யிண்ணாண்டி
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: தருமபுரி மாவட்டம்.
-----------
தங்கச் சுரங்கம்
கோலாரிலுள்ள தங்கச் சுரங்கத்தில், தொழில் செய்யும் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களிலே ஒருவன் தனது தாயாரை வி்ட்டு தனியாக அங்கே வாழ்கிறான். சுரங்கத்தினுள் இறங்கும்பொழுது திரும்பி வந்தால்தான் நிச்சயம் என்று அவன் அஞ்சுகிறான். அன்னையை நினைத்துக் கொண்டு தைரியமாக இறங்கிச் செல்கிறான். அவன் உள்ளிருக்கும்போதே தங்கம் எடுப்பதற்காகப் பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கிறார்கள். இவ்வாறு நம் நாட்டார் ஆபத்துகளுக்கு உட்பட்டு தைரியமாக வேலை செய்து தங்கம் எடுத்துக் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் வேலை செய்தும் பட்டினியாக இருக்கும்பொழுது வெள்ளைக்காரன் தங்கக் கல்லையெல்லாம் கப்பலிலே ஏற்றித் தன் நாட்டுக்கு அனுப்புகிறான். அவன் தன் நிலையை மட்டுமல்லாமல் நாட்டின் நிலையையும் நினைத்து வருந்துகிறான். பின்வரும் பாடல் சுரண்டலை எதிர்க்கும் தொழிலாளியின் உணர்வையும் அவனது நாட்டுப்பற்றையும் வெளியிடுகிறது.
மாடு துண்ணி, மாடு துண்ணி
வெள்ளைக்காரன்-ஏலமா ஏலம்
மாயமாத்தான், மாயமாத்தான்
கிணியிறங்கி
கிணியிலத்தான்; கிணியிலத்தான்
எறங்கும் போது ஏலம், ஏலம்
தாயாரையும், தாயாரையும்
நினைக்கிறேண்டி
ஊசிபோல, ஊசிபோல
டமார் கொண்டு ஏலமே ஏலம்
ஒதுக்கி விட்டான், ஒதுக்கி விட்டான்
பொன்னுங்கல்லே
கல்லை யெல்லாம், கல்லை யெல்லாம்
ஒண்ணாச் சேத்து ஏலமே ஏலம்
கப்பலுல கப்பலுல
ஏத்திட்டானாம்
வட்டார வழக்கு: துண்ணி-தின்னி; கிணி-இறங்கு பொறி;டமார்-வெடி மருந்து.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: கொங்கவேம்பு, தருமபுரி மாவட்டம்.
-----------
இனிக்கும் பாகற்காய்
பாகற்காய் விற்பவள் அதன் கசப்பு ருசியை மாற்ற இனிப்பான பாடலொன்றைப் பாடுகிறாள்.
ஒரு கொடியை தூக்க தூக்க
ஓராயிரம் பாவக்காய்
சட்டியிலிட்டப் பாவக்காய்
சட்டி தாளிச்சப் பாவக்காய்
அரிக்கப் பொரிக்கச் சொல்லி
அய்யன் தின்ன பாவக்காய்
அப்பிடியாக் கொத்த பாவக்காய்
அஞ்சு பணத்துக்கு மாத்துலாம்
வட்டார வழக்கு: பாவக்காய்-பாகற்காய்;அப்படியாக்கொத்த-அப்படிப்பட்ட;மாத்துலாம்-குறிப்பிட்ட எடை, ஒரு எடையளவு,
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------
கோவில் மாடு!
கோவில் மாட்டுக்கு இருக்கும் மரியாதை உழைக்கும் மனிதனுக்கு இருக்கிறதா? என்று உழைப்பாளி கேட்கிறான்.
ஓர் உழவனின் தோப்பில் சண்பக மர நிழலில் கோவில் மாடு படுத்திருக்கிறது. தோப்பில் வேலை செய்து விட்டு இரு தோட்டக்காரர்கள் ஓய்வுகொள்ள வருகிறார்கள். மனிதன் படுக்க வேண்டிய புல் தரையில் மாடு படுத்திருக்கிறது. ஒருவன் அதனைக் கோலால் தட்டி எழுப்பப் போகிறான். அவனது தோழன் அவனைத் தடுத்து நிறுத்திப் பின்வருமாறு சொல்லுகிறான்.
குளுகுளுண்ணு காத்தடிக்குது
குங்குமத் தோப்பிலே
கோயில் பசுமாடு படுத்து
குறட்டை விடுகுது
கோலடிச்சுக் கூப்பிடாதே
குத்தம் வந்து சேரும்
சலசலண்ணு காத்தடிக்குது
சந்தனத்தோப்பிலே
சாமி பசுமாடு வந்து
சாஞ்சு படுத்திருக்குது
தட்டி எழுப்பாதே
தாங்கல் வந்து சேரும்
வட்டார வழக்கு: குத்தம்-குற்றம்; சாஞ்சு-சாய்ந்து;தாங்கல்-மன வருத்தம்.
உதவியவர்: பெ. இராமநாதன்; சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி
இடம்: போத்தனூர்,கோவை.
--------
சுங்கக் கேட்டு
ரிசர்வ் காடுகளில் சுங்கச்சாவடிகள் இருந்தன. வெள்ளையர் ஆட்சியில் காட்டு இலாகா அதிகாரிகளின் அட்டகாசத்துக்கு அளவேயில்லை. காட்டு இலாகா காவலர்களும் லஞ்சம் வாங்குவதற்காக கொடுமைகள் செய்வார்கள்.
இளம் பெண்ணொருத்தி பரங்கிக்கீரை பறிப்பதற்காக காட்டுக்குள் போனாள். புல், கீரை முதலியவற்றை காட்டிலிருந்து கொண்டுவர பணம் கொடுத்துச் சீட்டு வாங்க வேண்டும். பரங்கிக் கீரை விற்றாலும் சீட்டு வாங்க போதிய காசு கிடைக்காது. பல நாள் கடன் சொல்லிப் பார்த்தாள். முடியவில்லை. ஒரு நாள் நெருக்கிக் கேட்டு, அவளுடைய மேல் முருகை கழற்றி வாங்கிக் கொள்ளுகிறான்.
அவள் வயிறெரிந்து காட்டில் வெள்ளையர் ஆட்சி நடக்கிறதா அல்லது காவல்காரப் பள்ளன் ஆட்சி நடக்கிறதா, என்று கேட்கிறாள்.
சோளக் காட்டு மூலையிலே
நமது நாட்டிலே
தோத் தேனடா மேல் முருகை
சுங்கக் கேட்டிலே
கம்மங் காட்டு மூலையிலே
நமது நாட்டிலே
காடப் புறா மேயக் கண்டேன்
நமது நாட்டிலே
கொடுத்து விட்டேன் மேல் முருகை
சுங்கக் கேட்டிலே
பாவாடை கட்டிக் கிட்டு
நமது நாட்டிலே
பரங்கிக் கீரை பறிக்கப் போனேன்
சுங்கக் கேட்டிலே
பள்ளப்பயல் விசுவாசமா
நமது நாட்டிலே
பரங்கிப்பய விசுவாசமா
சுங்கக் கேட்டிலே
சிறு கீரை விசுவாசமா
நமது நாட்டிலே
சீமைப்பயல் விசுவாசமா
சுங்கக் கேட்டிலே
வட்டார வழக்கு: விசுவாசம்-ஆட்சிக்கு அடங்குவது.
குறிப்பு: வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இப்பாடல் எழுந்திருக்க வேண்டும்.
உதவியவர்: பெ. இராமநாதன், சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி
இடம்: போத்தனூர்.
------------
உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும்
அத்தை மகனும், மாமன் மகனும், மணமகன் உறவு முறையினர். அவர்கள் ஊற்றுத் தோண்டினார்கள். தண்ணீர் இறைத்து தோட்டத்துக்குப் பாய்ச்சுகிறார்கள்; அண்ணனும் ஊற்றுத் தோண்டினான். அதன் தண்ணீரும் தோட்டத்துக்குப் பாய்கிறது. அவள் இரண்டு தோட்டத்திலும் வாய்க்கால் விலக்கி வேலையில் உதவி செய்கிறாள். மைத்துனர்களைக் கேலி செய்வதற்காக இப்பாடலை பெண் பாடுகிறாள்.
ஆத்திலே ஏலேலோ
ஊத்துப் பறிச்சு
அத்தை மகன் ஏலேலோ
இறைக்கும் தண்ணி
அத்னையும் ஏலேலோ
உப்புத் தண்ணி
என் பொறுப்பு ஏலேலோ
அத்தனையும் எறைக்கும் தண்ணி
அத்தனையும் ஏலேலோ
நல்ல தண்ணி
மானத்திலே ஏலேலோ
ஊத்துப் பறிச்சு
மாமன் மகன் ஏலேலோ
ஏத்தம் வச்சு
மானுக் கொம்பு ஏலேலோ
ஏத்தம் வச்சு
மாமன் மகன் ஏலேலோ
எறைக்கும் தண்ணி
அத்தனையும் உப்புத் தண்ணி ஏலேலோ
வட்டார வழக்கு: என் பொறப்பு-அண்ணன்.
உதவியவர்: நல்லம்மாள், சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி
இடம்: பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
-----------
சோம்பேறி
அவனுக்கு ஒரு வேலையும் கிடையாது. ஊர் சுற்றுவதும், உண்பதும் உறங்குவதுமே அவன் வேலை. உழைப்போர் நடுவே ஒரு புல்லுருவி இருந்தால், அவனுக்கு வசைதான் கிடைக்கும். ஆனால் அவனுக்கு மானமிருந்தால் தானே!
வட்டம் போடும் வடக்குத் தெரு
வந்து நிற்கும் தெற்குத் தெரு
உங்குறதும் நெல்லுச் சோறு
உறங்குறதும் கார வீடு
வட்டார வழக்கு: உங்குறது-உண்கிறது.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
----------
சோம்பேறி
“யாரோ உழைக்கிறார்கள், நான் சாப்பிடுகிறேன். எங்கேயோ நெல் விளைகிறது. நெல் விளையும் ஊரின் ராஜா என் அப்பா. சீலை நெய்யும் ஊரில் இருப்பவள் என் அம்மா. ஆடு மேய்ப்பவன் என் அண்ணன். பறவை சுடுவது என் தம்பி. இத்தனை பேரும் வேலை செய்து ஒன்றொன்று கொடுத்தால் நான் ஏன் வேலை செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான் சோம்பேறி. தன்னைத்தானே கேலி செய்து கொள்ளுவது போல செய்து கொள்ளுவது போல அமைந்துள்ளது இப்பாடல்.
கட்டக் கட்ட புளியமரம் தென்புறத்திலே
காராங்கி நெல் விளையும் பட்டணத்திலே
பட்டணத்து ராசா எங்கையா
பாளையங் கோட்டை சீலைக்காரி எங்கம்மா
வெள்ளரிக்காக் கூடைக்காரி எங்கக்கா
வெள்ளாடு மேய்க்கிறது எங்கண்ணன்
சிட்டுக்குருவி தெரிக்கிறது என் தம்பி
சுட்டுச் சுட்டு திங்கிறது நான்தானே
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: பாளையங்கோட்டை.
--------
ரெங்கத்திலே
அயல்நாடு சென்று வந்தவர்கள், பெண்கள் தம்மை மதிக்க வேண்டுமென்பதற்காகப் பல பொய்க் கதைகளை புனைந்து கூறுவார்கள். இரங்கூனுக்குப் போய் திரும்பி வந்தவன் சொல்லுவதையும் அதனை நம்பாமல் கதை கேட்ட பெண்கள் கூறுவதையும் கேளுங்கள்.
(ரங்கூன் சென்று வந்தவன்)
அரிசி அரைக்கால் ரூவா
அரிக்கஞ்சட்டி முக்கால் ரூவா
சோத்துப்பானெ ரெண்டு ரூவா
சொகுசான ரங்கத்திலே
(கேட்பவர் கூறுவது)
ஓடையில் கல்லெறக்கி
ஒன்பது நாள் பாலங்கட்டி
பாலத்து மேலிருந்து
பாடிவாரார் நம்ம சாமி
காத்தோரம் சேக்குகளாம்
கைநிறைஞ்ச வாச்சுகளாம்
மணி பார்த்து வாருமையா
மகுட துரைராச சிங்கம்
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
------------
விசிறி கொண்டுவா
கணவன் சோம்பேறியாக அலைந்தான். மனைவி, அழாத குறையாக அவனை வேலைக்குப் போகும்படி வேண்டுகிறாள். ஆனால் அவனோ, அவள் சொல்லைக் கேளாமல் ஆற்று மணலில் சூதாடி காலம் கழிக்கிறான். மாலை நேரமானதும், வீட்டுக்கு வந்து சாப்பிட உட்காருகிறான். மனைவி அவனுக்கு எதுவும் பரிமாறவில்லை. அந்நேரத்தில் அடுப்பங்கரையிலிருந்து, அவனது மனைவி பாடுகிறாள்.
ஆத்து மணலிலே
கோட்டைக் கட்டி
அஞ்சாறு மாசமா
சண்டை செஞ்சு
வேத்து முகம் பட்டு
வாராரோ துரை
வெளிச் சுங்கெடுத்து வீசுங்கடி
வட்டார வழக்கு: சுங்கு-விசிறி.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------
கும்மி
கும்மிக்குப் பல நிகழ்ச்சிகளும், உணர்ச்சிகளும் பொருளாக வரலாம். குத்து விளக்கேற்றி மங்கல விழாக்களில் பெண்கள் கும்மியடிக்கிறார்கள். நிலாக் காலங்களில் விளையாட்டுக்காகவும் கும்மியடிப்பதுண்டு.
கீழ்வரும் கும்மிப் பாட்டில் காதற் குறிப்புள்ள பல பாடல்கள் ஏற்கனவே சில தொகுப்புகளில் வெளி வந்துவிட்டன. இது வரை வெளி வராத பாடல்களை மட்டும் கீழே தருகிறோம்.
கும்மியடி பெண்கள் கும்மியடி-இரு
பாதம் காணவே கும்மியடி
நம்மையாளும் காடவ ராஜனை
நாடிக் கும்மியடியுங்கடி
இந்த நிலாவும் நிலாவுமில்ல-புள்ள
நித்திரைக் கொத்த நிலாவுமில்ல
இந்த நிலாவுக்கும் சந்தனப் பொட்டுக்கும்
சம்பந்த முண்டோடி வீராயி?
ஒரு வருசமா : ஒண்ணரை மாசமா
எண்ணெயும் தேய்த்து முழுகாம
சடைவளர்ந்ததும் சன்னியாசியானதும்
சபத முண்டோடி வீராயி?
காக்காச் சோளம் கருஞ்சோளம்-புள்ள
காசுக்கு ஒரு படி விக்கயிலே
துடி துடிச்சவன் துள்ளு மீசைக்காரன்
துட்டுக் கொருபடி கேக்கராண்டி
சின்னக் கிணத்துல பாம்படிச்சு-ஒரு
சிங்காரத் தோட்டத்திலே வேட்டையாடி
வேட்டையாடி துரை வீட்டுக்கு வாராரு
வெங்கலச் சொம்பிலே தண்ணி கொண்டா
எண்ணைக் கறுப்பி இளங்கறுப்பி
எண்ணை கொண்டுபோற வாணிச்சியே
சின்னத் துரை மகன் சாராட்டு வருகுது
தீவட்டிக்குக் கொஞ்சம் எண்ணை வாரு
குறிப்பு: பிற்காலப் பல்லவச் சிற்றரசர்களை காடவ ராஜன் என்ற பெயரில் அழைப்பது உண்டு.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
------------
கள்ளப் பையன் யாரடா?
முறைப்பெண், மாப்பிள்ளைகள் பாடும் பாட்டை முறை வாதம் என்றும் முறைப்பாட்டு என்றும் அழைப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் வழங்கும் சில முறைப்பாட்டுகளை முன்னர் கண்டோம். இப்பாடல் சேலம் மாவட்டத்தில் வழங்குவது. தமிழ் நாடு முழுவதும் இவ்வகைப் பாடல்கள் வழங்குகின்றன.
பெண் : ஒரு மூசி பூப்பறிச்சு
நாங்களெப்படி சோடிச்சோம்?
நாங்கள் அப்படி சோடிச்ச பூ
நாத்தி எப்படி சோடிப்பா
நாத்தி அப்படி சோடிச்ச பூ
கரையோரம் போனதா?
கரையோரம் போன பூவு
கத்திரி பித்திரி ஆனதா?
கத்தரிக்காய் அறுக்க வந்த
கள்ளப் பையன் யாரடா?
ஆண் : நான் தாண்டி உம் புருஷன்
வழி பார்க்க வந்தண்டி
பெண் : வழிபார்க்க வந்தாயா-சாமி
வளஞ்சி கும்பிட வந்தாயா
ஊராரைத் தண்டனிட்டு உழுந்து
கும்பிட வந்தாயா
நாட்டாரைத் தண்டனிட்டு
நடுங்கிக் கும்பிட வந்தாயா
வட்டார வழக்கு: சோடித்தல்-கோர்த்து மாலையாக்குதல்; உழுந்து-விழுந்து.
சேகரித்தவர்: s.s. சடையப்பன்
இடம்: சக்கிலிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
-------------
கள்ளன் கொண்டு போனானோ?
கொண்டையில் காதலன் பூவைத்தான். அந்தப் பூவின் பிரயாணத்தை கற்பனையில் கண்ட காதலி அவனிடமே அதனைக் கூறுகிறாள். கடைசியில் அவனைக் கோபமூட்ட, “நீ வைத்த பூவை கள்ளன் திருடி விடுவானோ?” என்று கேட்கிறாள்.
சீரான நந்தப் பூ
பறிக்க வாடா சீராளா
பறிச்சு வந்த நந்தப் பூ
கொண்டையிலே வைத்தாயா?
கொண்டையிலே வைத்த பூ
படுக்கையிலே விழுந்ததா?
படுக்கையிலே விழுந்த பூ
குப்பையிலே போனதா?
கோழி கிளச்சுதா?
கோழி கிளச்ச பூ
வேலியை அணைஞ்சுதா?
வேலியை அணைஞ்ச பூ
வெள்ளங்கொண்டு போனதா?
வெள்ளங்கொண்டு போன பூவை
கள்ளன் கொண்டு போனானோ?
வட்டார வழக்கு: நந்தப்பூ-நந்தியாவட்டம்; வைத்தாயா-வைத்தாயல்லவா; கிளச்சுதா-கிளறிற்றா.
சேகரித்தவர்: s.s. சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------
கும்மி அடியுங்கோ!
பழங்காலத்தில் சில விழா நாட்களில் அரசர் பவனி வருவார். வெற்றிவாகை சூடி நகர் திரும்பும் மன்னனை வரவேற்கும் முறைகளைப் பரணிகளில் காணலாம். விழாக் காலங்களில் அரசர் பவனி வரும்போது மக்கள் கூடி அவரை வாழ்த்துவதை, பெருங்கதையிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். அரசர் அவைப் புலவர்கள் அரசரைப் பாடுவதற்கென்று அமர்த்தப்பட்ட பொழுது உலாக்களும், மடல்களும், பரணிகளும் நூற்றுக் கணக்கில் தோன்றின. முதல் பிரபந்தங்களில் காணப்பட்ட கவிதைச்சுவை வர வர வற்றி வறண்டது.
அரசர் கவிதைகளைப் பாடும் நாட்டுப் பாடல்களும் அரசர் உலாவை வருணிக்கின்றன. ஆனால் அவை பெண்களுக்கேயுரிய கும்மியைக் கையாளுவதால் அவற்றில் புதுமையைக் காண்கிறோம்.
ராஜன் வருகிற வீதியிலே-ரெண்டு
மகட தோரணம் கட்டுங்க
மகட தோரணம் கட்டுங்க-நல்ல
மாவாலே கோலங்க போடுங்க
மாவாலே கோலங்க போடுங்க-பல
பூவால பந்தலும் ஜோடிங்க
பூவால பந்தலும் ஜோடிங்க
பூவையெல்லாரும் கூடுங்க
பூவையெல்லாரும் கூடுங்க-அவரை
வாழ்த்திக் கும்மி அடியுங்க
வட்டார வழக்கு: மகடதோரணம்-மகரதோரணம், மீன் வடிவில் தென்னை ஓலையால் செய்யப்பட்ட தோரணம்; மீன், அஷ்டமங்கலப் பொருள்களில் ஒன்று ; பாண்டியர் கொடியின் சின்னம். கோலம்-மங்கல விழாவின் அறிகுறி ; தமிழ்ப் பெண்டிரைப்போல்இக்கலையில் வல்லவர் இல்லை.
சேகரித்தவர்: s.s. சடையப்பன்
இடம்: கொங்கவேம்பு, தருமபுரி.
----------
வழி நடைப் பாட்டு
தமிழகத்தில் கும்பினியார் பாளையப்பட்டுக்களுடன் பல போர்கள் நடத்தினர். அவர்களின் ஒரே மாதிரியான உடை, தொப்பி, சப்பாத்து அணிவகுப்பு, துப்பாக்கி, பீரங்கி கருமருந்து போன்ற அனைத்தும் தமிழர் அறிந்திராத போர்ச் சாதனங்கள். இதையெல்லாம் பார்த்த தமிழ் மக்களுக்கு வெள்ளையரைப் பற்றி அதிசயமான எண்ணம் வளர்ந்தது. வெள்ளையரின் வெற்றிகள் பொது மக்களை மிகவும் திகைக்கச் செய்தது. வெள்ளையர்கள் அமானுஷ்யமான திறமையுடையவர்களாக மக்களால் கருதப்பட்டனர்.
ஓர் நாடோடிக் கவிஞன் அவர்களின் நடவடிக்கைகளை விவரிக்கிறான். அம்மாதிரியான பாடல்கள் சமீப காலம் வரை நமது ஏட்டுப் பள்ளிக் கூடங்களில் கோலடிப் பாட்டாகப் பாடப்பட்டு வந்தன.
படைகள் வெள்ளைக்காரத் துரைகள்
பிடிகள் நீட்டி சலாம் செய்தார்
பட்டாளத்திலே தம்பூரடிக்கிற
பயணம் கேட்டுத் தாங்களே
அடிகள் பிடிகள் கொடிகள் மாறி
அணைத்துத் துப்பாக்கி தாங்கியே
அரசன் கருணை ரசமட்டம் துரை
அனைவரும் வந்து கூடினார்
அந்தச் சணம் பட்டாளம் கொஞ்சம்
அனேக வெள்ளைக் காரரும்
ஆயுதங்களைக் கொண்டு வந்து
மேல் பீரங்கி ஏத்தியே
செந்தூரந்தக் கர்னல் ஆட்டி
செந்தூரத்த மேட்டியும்
சூதுடன் படை வருகு தென்று
சூரங் காட்டி கோபமாய்
நெறித்துப் படைகள் முறுக்குச் சாத்தி
முறுக்கு மீசையும் கையுமாய்
பல்லைக் கடித்துக் கவர்னர் துரைகள்
படைகள் விரட்டிக் குத்தவே
குத்தும் படைகள் திரண்டு வந்து
கோட்டைக் கொத்தளம் பிடிக்கவே
கோட்டைக் கொத்தளம் பிடித்துக் கொண்டு
கூர்ந்து தெற்கே புறப்பட்டார்
மார்ச் மாதம் கோட்டைப் பிடித்து
வயணமாக நடந்து தான்
மன்னன் கர்னல் சின்னத் துரைகள்
மகிழ்ந்து காகித மெழுதவே
சென்னப்பட்டணம் கவர்னர் துரைகள்
வர்ணமாகக் கேட்டுத் தான்
செலவுக்கென்ன செய்வோ மென்று
சீறி மனதில் எண்ணியே
இளவலுடனே லட்ச ரூபாய்
இனாமாகத் தருகிறேன்
அமைத்து மருந்து குண்டு பீரங்கி
சமைத்து ரங்க ரங்கரே
குண்டு பீரங்கி சேர்த்துத் துரைகள்
குறிச்சி கட்டிலிலிருக்கவே
கமான் சொல்லிய பட்டாள மெல்லாம்
கலந்து கூடி நடக்கவே.
வட்டார வழக்கு: சூரங்காட்டி-சூரத்தனத்தைக் காட்டி; காமன்-ஆங்கிலச் சொல் (come on).
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: மீளவிட்டான்
-----------
ஒரு நூற்றாண்டுக்கு முன் நமது நாட்டில் முக்கியத்தொழில்கள் விவசாயமும், நெசவுமாகவே இருந்து வந்தன. பிற தொழில்களெல்லாம் இவற்றைச் சார்ந்தே இருந்தன. கொல்லன், தச்சன் முதலியவர்கள் உழவுக்குத் தேவையான கருவிகளைச் செய்து கொடுத்தனர். சமூக வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் வேறு தொழில்கள் இல்லை. வண்ணான், நாவிதன், கொத்தன் போன்றவர்கள் தனி மனிதனது சுக வாழ்விற்கு உதவி புரிந்தார்கள். இத்தகைய உற்பத்தி முறையில் மனித உழைப்பே முக்கியமான உற்பத்தி சக்தியாக இருந்தது. இச்சக்தி கிராம சமுதாயத்தினுள்ளே கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும், கோயில்கள் இவ்வுழைப்பின் மீது ஆதிக்கம் புரிந்தன. அதற்கடுத்தாற்போல் நிலவுடைமையாளர்களும், உயர் குலத்தினரும் ஆதிக்கம் புரிந்தனர். உழவர்கள் பெரும்பாலும், கோயில் நிலங்களையோ அல்லது நில உடைமையாளர்களின் நிலங்களையோ குத்தகைக்குப் பயிரிட்டு வந்தார்கள். கோயில் குத்தகையும் நிலவுடமையாளரின் குத்தகையும், மிக அதிகமாக இருந்தது. இச் சுரண்டல் முறையினால்தான் கோயில்களில் ஆடம்பரமான திருவிழாக்கள் நடத்தவும், நூற்றுக்கணக்கானவர்களுக்கு சோறிடவும் பொருள் குவிந்தது. மேல் வர்க்கத்தினரும் தங்கள் சுரண்டலினால் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்தனர். கிராம கைத் தொழிலாளிகள் ஆண்டுக்கொரு முறை கோயிலிலிருந்தும் நிலச்சுவான்களிடமிருந்தும் உழவர்களிடமிருந்தும் தானியத்தை ஊதியமாகப் பெற்று வந்தனர். அவர்களது வாழ்க்கை, மேல் வர்க்கத்தாரின் ஆதிக்கத்தினுள் இருந்தது.
பல நூற்றாண்டுகளாக இவ்வாறு உறங்கிக் கிடந்த கிராம வாழ்க்கை வெள்ளையர் வருகைக்குப்பின் மாறத்தொடங்கிவிட்டது. நிலவுடைமைச் சுரண்டலால் வாழ்விழந்த உழவர்கள், கைத்தொழிலாளர்கள் முதலியோர் வெள்ளைக்காரர்கள் தொடங்கிய புதுத் தொழில்களில் கூலி வேலை செய்ய கிராமங்களை விட்டு வெளியேறினர். மேற்கு மலைச் சாரலில் காடுகளை வெட்டித் தேயிலை, காப்பித் தோட்டங்களையும், புதிதாகத் தோற்றுவிக்க அவர்கள் சென்றார்கள். ரயில் பாதைகள் அமைக்கவும், ரஸ்தாக்கள் போடவும், துறைமுகங்கள் கட்டவும், ஆலைகள் கட்டவும், சுரங்கங்கள் தோண்டவும், அவர்கள் தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு மட்டுமல்லாமல், பம்பாய் முதலிய நகரங்களுங்கும், கடல் கடந்த சீமைகளுக்கும் சென்றார்கள். அங்கெல்லாம் உழைத்து உழைத்து அவர்கள் கண்ட பயன் ஒன்றுமில்லை. கிராமத்தி்லிருந்த சுரண்டல் முறை வேறு, நகரங்களிலுள்ள சுரண்டல் முறை வேறு. அங்கே எஜமானர்கள் வேறு. இங்கே எஜமானர்கள் வேறு. முதலில் சிறிதளவு சுதந்திரம் இருப்பது போல் தோன்றினும் பின்னர் அது கானல்நீர் என்று உணர்ந்தனர்.
இவ்வாறு வயல்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் உழைத்துவரும் தொழிலாளர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. இருள் நீங்கி ஒளி தோன்றும் காலத்தை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். வருங்கால நல்வாழ்வில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான் சமூகக் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனவுறுதியை அவர்களுக்குக் கொடுக்கிறது. அவர்கள் பாடும் நாட்டுப் பாடல்களில் அன்பு மலர்வதையும், உழைப்பில் ஆர்வத்தையும், நன்மையில் பற்றையும், தீமையில் வெறுப்பையும் நாம் காண்கிறோம். அவர்களது எளிய பாடல்கள் அவர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புகளையும் வெளியிடுகின்றன.
இத்தகையத் தொழில் பாடல்கள் நகர வாழ்க்கையின் போலித் தன்மையாலும், தொழில் முறைகளின் கடுமையினாலும், படிப்படியாக மறைந்து வருகின்றன. கிராமங்களில் மட்டும் பரம்பரையாக வளர்ந்த கலை மரபுகளால் பாதுகாக்கப்பட்டு, குற்றுயிரும், குலை உயிருமாக இப்பாடல்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. மிக விரைவாக சேகரிக்கப்பட்டாலன்றி இவை மறைந்து போவது உறுதி.
இத்தொகுப்பில் ஏற்றப் பாட்டுகள், பொலிப்பாட்டு, உழவுத் தொழிலோடு தொடர்புடைய பாடல்கள், வலைஞன் பாடல்கள், வண்ணார் பாட்டு, வண்டியோட்டிகளது பாடல்கள், உப்பளத்தார் பாடல்கள், தேயிலை தொழிலாளர் பாடல்கள் முதலியவை இடம் பெற்றுள்ளன. இதில் சேர்க்கப்படாத தொழில்களைப் பற்றிய பாடல்கள் சேகரித்து இனி வெளியிடப்பட வேண்டும்.
----------
உழவுக் காளை
மனிதன் வேட்டையாடி வாழ்ந்த காலம் மாறுவதற்குக் காரணமாக இருந்தது. அவன் காளைகளைப் பழக்கி உழுவதற்கு கற்றுக் கொண்டதே. அவ்வாறு உழுவதற்குப் பயன்பட்ட மாடுகள் அவனுக்கு நிலையாகத் தங்கும் வாழ்க்கையைச் சாத்தியமாக்கிற்று. அவனுக்குச் செல்வமும் பெருகிற்று. எனவே 'மாடு' என்ற சொல்லுக்கே 'செல்வம்' என்ற பொருள் வந்தது.
மாட்டைக் கவர்ந்து சென்று செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று அதனைப் பழக்கத் தெரியாதவர்கள் பழங்காலத்தில் எண்ணினர். பழக்கத் தெரிந்தவர்களோ மாட்டைப் பாதுகாக்கப் போராடினர். இதனையே 'வெட்சி' என்றும், 'கரந்தை' என்றும் புறப் பொருள் இலக்கண நூல்கள் கூறுகின்றன.
பிற்கால மன்னரும் இவ்வழக்கத்தைப் பின்பற்றியே, ஒரு நாட்டின் பசு நிரையையும், காளைகளையும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றால், நாட்டையும் கைப்பற்றலாம் என்றெண்ணினர், நாட்டின் கால்நடைச் செல்வம் போய் விட்டால் உழவுத் தொழில் முடங்கிவிடுமல்லவா?
சிற்சில பண்டைக் குழுவினர் காளையை, நந்தியென்றும், பசவன் என்றும் வணங்கினர். சமண மதத்தினர் ரிஷபதேவர் என்று முதல் தீர்த்தங்கரருக்குப் பெயரிட்டு காளையை அவரது அடையாளமாக்கினர். பிற்காலச் சைவம், அதனைச் சிவனுக்கு வாகனமாக்கியது. மனிதன் காட்டுக்காளையை பழக்கி தனது வேலைக்குப் பயன்படுத்தியதையே புராணக் கதை இவ்வாறு சொல்லுகிறது.
தற்காலத்திலும் உழவுக்குப் பயன்படும் காளையை உழவர்கள் போற்றுகிறார்கள். முதல் உழவுக்கு நாட் செய்யும் போது அதனை அலங்கரித்து, பிள்ளையாருக்கு பூசைப் போட்டு உழத் தொடங்குகிறார்கள்.
காளைகளுக்குச் செய்யும் அலங்காரங்கள் எவை என்று தெரிய வேண்டுமா? இப்பாட்டைப் படியுங்கள்.
மின்னேரு எருதுக்கெல்லாம்
என்ன என்ன அடையாளம்
நெத்திக்குச் சிட்டிகளாம்
நெலம் பார்க்கும் கண்ணாடி
வாலுக்குச் சல்லடமாம்
வாகுக்கை பொன்னாலே
கொம்புக்குக் குப்பிகளாம்
கொணவாலு சல்லடமாம்
தூக்கி வைக்கும் கால்களுக்கு
துத்திப் பூ சல்லடமாம்
எடுத்து வைக்கும் கால்களுக்கு
எருக்கம் பூ சல்லடமாம்
மண்டியிடும் கால்களுக்கு
மாதளம் பூ சல்லடமாம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு
கட்டக் காட்டுக் கொல்லையிலே-ரெண்டு
காரிக்காளை மின்னேரு
காரிக்காளை வித்த பணம்
கருத்தப் பொண்ணு மார்மேல
செங்காட்டுக் கொல்லையிலே-ரெண்டு
செக்காளை மின்னேரு
செக்காளை வித்த பணம்
செவத்தப் பொண்ணு மாருமேல
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி.
-----------
நடுகை-1
நடுகை வேலை பள்ளர், பறையர் சாதிப் பெண்கள் மட்டுமே செய்யும் வேலை. பருவ வேலைகளிலேயே நாற்று பிடுங்கி நடுவதுதான் மிகவும் நுட்பமான வேலை. முதுகு குனிந்து நெடு நேரம் சரியான இடைவெளி விட்டு நாற்றை நட்டுச் செல்வதற்குப் பயிற்சியும் அனுபவமும் வேண்டும். நடுகைப் பாடல்கள் காதலைப் பொருளாகக் கொண்டனவும் அனுதாபம், இரக்கம், கொடுமை, பரிதாபம் இவைகளைப் பொருளாகக் கொண்டனவும் உள்ளன.
நடுகைப் பாடல்கள் தற்பொழுது நிரம்பக் கிடைப்பதில்லை. ஆனால் சுமார் 600 வருஷங்களுக்கு முன்னால் நடுகைப் பாட்டையும் அதற்கு முன் பள்ளர் ஆடும் ஆட்டத்தையும், கண்டும் கேட்டும், ரங்கநாதர் கோயில் அரையரொருவர் அவற்றைக் கற்றுக் கொள்ளுவதற்காக பறைச்சேரியிலேயே சென்று தங்கிவிட்டாரென்று ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றைக் கூறும் கோயிலொழுகு குறிப்பிடுகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அழகர் கோயிற் பள்ளியில் நடுகைப் பாடல்கள் பல காணப்படுகின்றன. அதைப் பின்பற்றி எழுந்த பள்ளுகளைனைத்தும் நடுகைப் பாடல்களுக்கு இடம் கொடுக்கின்றன.
தற்பொழுது முயன்றால் இன்னும் மறைந்து விடாமல் வழங்கிவரும் பாடல்களைச் சேகரிக்கலாம்.
நெடு நேரம் குனிந்து நட்ட பெண்ணொருத்தி நிமிர்ந்து பார்க்கும்பொழுது வயல் வரப்பில் அவளது காதலன் அவளை நோக்கிப் பாடுகிறான்.
நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் குள்ளப் பெண்ணே
நாத்து நடும் கையாலே-என்னையும்
சேத்து நடலாகாதோ?
சேகரித்தவர்: வாழப்பாடி சந்திரன்
இடம்: வாழப்பாடி,சேலம் மாவட்டம்.
------------
நாத்துப் பறியே நடுவப் பறியே
நட்டுக் குனிந்து நிமிந்து நிக்கும்
நாணயமே, கண்ணே
நாந்தானடி பாடியது
உன்னைத் தாண்டி பொண்ணே
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
----------
நடுகை-2
விவசாய வேலைகளில் மிகவும் கடினமானது, நாற்று நடுவதுதான். இவ்வேலையைச் செய்வது, பள்ளர், பறையர் குலப் பெண்களே. வரப்பைச் சுற்றி ஆண்கள் நின்று கொண்டு நாற்றுக் கட்டுக்களைச் சுமந்து வயல் வெளியில் நிற்கும் பெண்களை நோக்கி வீசி எறிவர். பெண்கள் குனிந்த முதுகு நிமிராமல் விரைவாக நாற்று முடிகளை எடுத்து நடுவார்கள். தற்காலத்தில் நடுகை நடும் பெண்கள் மனதிற்குள்ளேயே ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொள்கிறார்கள். ஆனால் 30,40 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் பாடிக் கொண்டே நடுவார்கள்; வரப்பிலுட்கார்ந்து கொண்டு ஆண்களும் பாடுவார்கள். பாடல் இனிமையில் தங்களை மறந்து அதன் சந்தத்திற்கேற்ப கைகளும் விரல்களும் அசைய பெண்கள் நாற்று நடுவார்கள். இப் பாட்டுகளையும் காட்சிகளையும் ரசித்த தமிழ்க் கவிஞர்கள் முக்கூடற்பள்ளு முதலிய பிரபந்தங்களில் நடுகைக் காட்சிகளைச் சிறந்த சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர். தற்பொழுது நடுகைப் பாடல்கள் அபூர்வமாகவே பாடப்படுகின்றன. சுவைமிக்க இப்பாடல்கள் அனைத்தும் சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.
பள்ளன்: உள்ளார் உழவடிக்க
ஊர்க் குருவி நாத்தரிக்க
நார மரமடிக்க
நட்டு வாடி கட்டப் புள்ளே
நாலு மூலை சமுக்க வயல்
அதிலே நடும் குட்டப் புள்ளே
நான் போடும் நாத்துக்களை
நீ சேர்ந்து நட்டாலாகாதோ?
நாத்து நடும் கட்டப் புள்ளே
நட்டு வாடி கோயில் களம்
குத்துக் கல்லு மேலிருக்க-நீ
கூப்பிடடி நான் வருவேன்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை மாவட்டம்.
---------------
நடுகை-3
ஒரு சிறு நிலச்சுவானின் வயலில் நடுகை நடக்கிறது. பெண்கள் வேகமாக வேலையை முடித்துச் செல்லுவதற்காக அகலமாக நடுகிறார்கள். அவ்வாறு நட்டால் விளைச்சல் குறையும். அதைக் கண்ட நிலச்சுவான் அவர்களைக் கெஞ்சி நெருக்கி நடவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறான். அவர்களுக்குக் கோபம் வராமல் இருக்க நயமாக அவர்களுடைய அழகை அவர்களது காதலன் புகழ்ந்து போற்றுவதாகச் சொல்லுகிறான். ஒருத்தியின் தண்டைக்கால் அழகைக் கண்டு அவளது காதலன் ஐந்து மாதம் கொஞ்சினானாம். மற்றொருத்தியின் கொண்டை அழகைக் கண்டு அவளது காதலன் ஆறுமாதம் கொஞ்சினானாம். இவ்வாறு அவர்களது உள்ளத்தைக் குளிர்வித்து தன் ஏழ்மை நிலையையும் சொல்லி நெருக்கி நட வேண்டிக் கொள்கிறான்.
நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
பெண்டுகளே! பெண்டுகளே!
தண்டு போட்ட பெண்டுகளே!-உன்
கொண்டை அழகைக் கண்டு
கொஞ்சுறானாம் ஆறுமாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
உதவியவர்: செல்வராஜு; சேகரித்தவர்: கு. சின்ன்ப்ப பாரதி
இடம்: மடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
---------
நடுகை-4
ஆவுடைத் தங்கம் என்ற பெயருடைய சங்கரன் கோவில் தெய்வம் ஆவுடையம்மன். கூட்டமாக நின்று வயலில் பெண்கள் நாற்று நடுகிறார்கள். கூட்டமாக வேலை செய்யும் பொழுது உற்சாகம் பிறக்கிறதல்லவா? அதுவும் வேலைக்குரிய கூலியைக் குறைக்காமல் அன்போடு அழைத்துக் கொடுக்கும் ஆவுடைத் தங்கத்தின் வயலில் நடுகை நடுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. ஒரு பெண் பாடத் தொடங்கினாள்; மற்றைப் பெண்களும் சேர்ந்து பாடுகிறார்கள்.
ஆராளு நூறாளு
அருபத்தி ரெண்டாளு
ஆவுடைத் தங்கம் கையாளு
ஆல வட்டம் போடு தில்ல
அம்பது ஆள வச்சு
ஆதரவா வேலை வாங்கி
கூப்பிட்டுப் பேரு போடும்
குணமுள்ள ஆவுத்தங்கம்
வட்டார வழக்கு: ஆராளு-யார் ஆள்?; ஆல வட்டம்-கூட்டமாகச் சேர்ந்திருக்கும் அழகு; ஆவுத்தங்கம்-ஆவுடைத் தங்கம் என்பது.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-----------
நடுகை-5
வயல் வரப்பில் நின்று நாற்றுக் கட்டை இளைஞர்கள், நடும் பெண்களை நோக்கி எறிகிறார்கள்.
அவர்களில் ஒருவன் தன் காதலி வரப்பருகே வரும் பொழுது எல்லோருக்கும் பொதுவாக சில வார்த்தைகளும், அவள் காதில் மட்டும் விழும்படியாகச் சில வார்த்தைகளும் சொல்லுகிறான்.
(எல்லோரும் கேட்க)
நாத்துப் புடுங்கி வச்சேன்
நடுவத் தொளி ஆக்கி வச்சேன்
நாத்து நடும் பொம்பளையா
சேத்து நட மாட்டியாளோ
(காதலி மட்டும் கேட்க)
பொட்டிட்டு மையிட்டு
பொய்யக் கரை தீர்த்த மாடி
நட்டுட்டும் போற புள்ளை
நயன வார்த்தை சொல்லிரம்மா
வட்டார வழக்கு: தொளி-சேறு; பொம்பிளையா-பெண்பிள்ளைகாள்; மாட்டியாளா-மாட்டீர்களா?; பொய்யக்கரை-பொய்கைக் கரை, குளக்கரை; நட்டிட்டு-நட்டு விட்டு; நயன வார்த்தை-கண் சாடை.
குறிப்பு: புள்ளை (நெல்லை மாவட்டத்தில் பெண்களைப் புள்ளை என்பது சில சாதிகளில் வழக்கு) மேற் குறித்த பேச்சு வழக்கில் உள்ளவை. இப்படிப் பிறர் முன் பேசக்கூடாது என்பதைக் குறிப்பாகக் கூறுகிறாள் காதலி.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி வட்டாரம்.
----------
சரசரணு வந்திருங்க
சவுக்கையிலே இருந்திருங்க
காரியமே உண்டானா
கலகலணு பேசிருங்க
வட்டார வழக்கு: சரசரணு, கலகலணு-விரைவு குறிக்கும் இரட்டைச் சொற்கள் வந்திருங்க, இருந்திருங்க, பேசிருங்க-வந்து விடுங்கள், இருந்து விடுங்கள், பேசி விடுங்கள்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி வட்டாரம்.
----------
களை எடுத்தல்-1
நடுகையைப் போலவே களை எடுத்தலும் பெண்களின் வேலையாகும். பயிரைப் போலவே தோன்றும் களைகளைக் கூர்ந்து நோக்கிப் பிடுங்கியெடுக்க வேண்டும். சற்று அயர்ந்தால் களைக்குப் பதில் பயிர் கையோடு வந்து விடும். களை எடுத்தலும் நடுகையைப் போலவே சலிப்புத் தரும் வேலை. சலிப்புத் தோன்றாமலிருக்க வயல் வரப்பிலுள்ள ஆண்களும் வயலில் களை எடுக்கும் பெண்களும் சேர்ந்து பாடுவார்கள்.
வாய்க்கால் வரப்பு சாமி
வயக் காட்டுப் பொன்னு சாமி,
களை எடுக்கும் பெண்களுக்கு
காவலுக்கு வந்த சாமி,
மலையோரம் கெணறு வெட்டி
மயிலைக் காளை ரெண்டு கட்டி
அத்தை மகன் ஓட்டும் தண்ணி
அத்தனையும் சர்க்கரையே
உதவியவர்: பொன்னுசாமி; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: ஒலப்பாளையம்.
-------------
களை எடுத்தல்-2
களை யெடுக்கும் பெரிய குளம்
கணக்கெழுதும் ஆலமரம்
கொத்தளக்கும் கொட்டாரம்
குணமயிலைக் காணலியே
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
---------
களை எடுத்தல்-3
களை யெடுக்கும் பெரிய குளம்
கணக் கெழுதும் ஆலமரம்
கொத்தடிக்கும் கொட்டாரம்
கூறு வைக்கும் களத்து மேடு
கண்ணாடி வளையல் போட்டு
களை எடுக்க வந்த புள்ளே
கண்ணாடி மின்னலிலே
களை எடுப்புப் பிந்துதடி
வெள்ளிப் புடி வளையல்-நல்ல
விடலைப் பிள்ளை கை வளையல்
சொல்லி அடிச்சவளை-நல்லா
சுழட்டு தில்ல நெல்களையை
உதவியவர்: முத்துசாமி; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: வாழ்நாய்க்கன் பாளையம், சேலம்.
------------
களை எடுத்தல்-4
களை எடுத்துக் கை கழுவி
கரை வழியா போற புள்ளா
பரிசம் கொடுத்த மாப்பிள்ளைக்கு
பால் குடம் கொண்டு போறியா
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: மீளவிட்டான், தூத்துக்குடி, நெல்லை மாவட்டம்.
-----------
நச்சுப்புல்
களையெடுப்பு
பயிர் வளர வேண்டுமானால் நச்சுப்புல்லை நறுக்கித் தள்ளவேண்டும். நன்மை வளர வேண்டுமானால் தீமை ஒழிக்கப்படவேண்டும். இதில் சமரசமேயில்லை. நமது புராணங்கள், நாட்டுக் கதைப் பாடல்களெல்லாம் இதைத் தானே கூறுகின்றன; கண்ணன் நரகாசுரனைக் கொன்றான்; முருகன் சூரபத்மனைக் கொன்றான். நீதிக்கும் அநீதிக்குமிடையே சமரசமேது?
பயிர் வளர வேண்டுமானால் நச்சுப்புல் அழகாக இருந்தால் கூட, அவை அல்லியும் தாமரையுமாக இருந்தால் கூட அவற்றைப் பிடுங்கி எறிந்து விட வேண்டும். விவசாயி இவ்வுண்மையை அறிவான்.
பழமரத் தோட்டத்தைப் பாதுகாக்கும் உழவன் தனக்கு துணையாக உழைக்கும் உழவர்களிடம் களை வெட்டச் சொல்லுகிறான்.
ஆத்துக்குள்ளே ஏலே லோ
அத்திமரம் அகில கிலா
அத்திமரம்
அளவு பாத்து ஐலப்பிடி
அறுக்கித் தள்ளு அகிலகிலா
அறுக்கித்தள்ளு
குளத்துக் குள்ளே ஏலேலோ
கொய்யாமரம் அகிலகிலா
கொத்தித் தள்ளு
சேத்துக் குள்ளே ஏலேலோ
செம்பகப்பூ அகிலகிலா
செம்பகப்பூ
செம்மையாக ஐலப்பிடி
சேத்தெடுக்க அகிலகிலா
சேத்தெடுக்க
நாத்துக்குள்ளே ஏலேலோ
நச்சுப் புல்லு அகிலகிலா
நச்சுப் புல்லு
நச்சுப் புல்லை ஐலப்பிடி
நறுக்கித் தள்ளு அகிலகிலா
நறுக்கித் தள்ளு
உதவியவர்: ஜானகி; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: முத்துகாபட்டி,சேலம்.
---------
கமலை-1
வறண்ட பிரதேசங்களில் பூமிக்குள் இருக்கும் தண்ணீரைக் கிணறு வெட்டி கடின உழைப்பால் கமலையின் மூலம் வெளிக்கொணர்ந்து தோட்டப்பயிர் செய்வார்கள். கமலையென்ற தகரத்தாலான பாத்திரத்தில் தோலாலான வால் என்ற பையைக் கட்டிக் கயிற்று வடங்களை இணைத்து மர உருளைகளைப் பொருத்தி மாடுகளைப் பிணைத்து முன்னும் பின்னுமாக ஓட்டி நீர் இறைக்க வேண்டும். இதற்கு அனுபவம் வேண்டும். அனுபவமில்லாத அவளது மச்சான் கமலை இறைக்கத் தெரியாமல் திண்டாடுவதைக் கண்டு கேலியும், அனுதாபமும் கலந்து பாடுகிறாள்.
பொட்டலிலே வீடுகட்டி
பொழுதிருக்கத் தாலிகட்டி
கருத்தக் காளை ரெண்டும் கட்டி
கமலெறைக்கப் போகும் கருத்த துரை
பொட்டலிலே கிணறு வெட்டி
போர்க்காளை ரெண்டும் கட்டி
காப்புப் போட்ட கருத்த மச்சான்
கமலை கட்டத் தெரியலையே
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
-----------
சில நாட்களில் கமலை இறைப்பதில் தேர்ச்சிபெற்று விட்டான். அது கண்ட அவள் உளம் மகிழ்ந்து அவனைப் புகழ்கிறாள்.
கமலை யலங்காரம்
கமலை மாடு சிங்காரம்
கமலை யடிக்கும் மன்னருக்கு
கருத்தப் பொட்டலங்காரம்
சாலை யோரம் கிணறு வெட்டி
சாஞ்ச கமலை போட்டு
இழுத்து விடும் கருத்தத்துரை
இனிக்குதையா கிணத்துத் தண்ணி
மந்தையிலே கிணறு வெட்டி
மயிலைக் காளை ரெண்டு பூட்டி
சீதனம் கொடுத்தானே
சிமிட்டி பாயும் கமலைத் தண்ணி
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: கோவில்பட்டி.
----------
சில ஊர்களில் கண்மாய்ப் பாசனம், ஆற்றுப் பாசனம் உள்ள இடங்களில் மண்வெட்டியால் தண்ணீரை விலக்கி விட்டால் போதும் வேலை முடிந்தது. அவன் மடை திறந்து விட்ட நீரில் குளிப்பதில் அவளுக்குப் பெருமை, அவனுக்கும் தான்.
மண் வெட்டி கொண்டு
மடை திறக்கப் போறசாமி
மடையைத் திறந்து விடு
மஞ்ச நீராடி வாரேன்
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: கோவில்பட்டி.
----------
கமலை- 2
ஆறு குளம் இல்லாத ஊர்களில் கமலை கட்டித் தண்ணீர் இறைப்பார்கள். தண்ணீர் தோட்டப் பயிர்களுக்குப் பாயும். கமலை ஓட்டும் இளைஞனைப் பார்த்து அவனது மாமன் மகள் பாடுகிறாள்.
செடியோரம் கெணறு வெட்டி
செவலைக் காளை ரெண்டு கட்டி
அத்தை மகன் ஓட்டும் தண்ணி
அத்தனையும் சர்க்கரையே
ஆத்துக்கு அந்தப் புரம்
அஞ்சாறு தென்னமரம்
வச்ச மரம் பார்க்கப் போன
மச்சான் வரக் கண்டீர்களா?
சேகரித்தவர்: பொன்னுசாமி
இடம்: ஓலைப்பாளையம்.
---------
ஏற்றப் பாட்டு
ஆற்றுப் பாசனம் இல்லாத இடங்களில் தமிழ் மன்னர்களும், நாயக்க மன்னர்களும், குளங்களும், ஏரிகளும், கண்மாய்களும் வெட்டிப் பாசன வசதிகளை அபிவிருத்தி செய்தார்கள். அரசர்கள் போரில் வெற்றி பெற்றபொழுது வெற்றித் தூண்கள் நாட்டியது போலவே நீர் நிலைகளையும் வெட்டினார்கள். தென் பாண்டி நாட்டில் வாகைக்குளம் என்ற பெயருடைய ஏரி ஒன்று இருப்பதே சான்றாகும். நாயக்க மன்னர்கள், தாங்கள் வெட்டிய நீர் நிலைகளுக்குச் சமுத்திரம் என்று பெயர் வைத்தார்கள். அரசரது பெயர்களையும், தளவாய்களது பெயர்களையும் நினைவுறுத்தும் ஏரிகள் பல உள்ளன. உதாரணமாக விசுவநாதப் பேரேரி, வடமலை சமுத்திரம், கோபால சமுத்திரம் முதலியன.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் புதிய ஏரிகள் எவையும் தோண்டப் பெறவில்லை. பெரும்பாலான பழைய ஏரிகள் அடிக்கடி பழுது பார்க்கப்படவில்லை. அதனால் அவை மேடிட்டுப் போதுமான அளவு நீர்த் தேக்கி வைக்க வசதியற்றவை ஆயின. அவற்றிலிருந்து தண்ணீர் பாய்ந்தும் அந்த நிலங்களுக்குப் போதுமான நீர் கிடைக்காமல் போயிற்று. ஏரிகளில் நீர் நிரம்பினாலும், நாற்று வளர்ந்து, பொதி தள்ளி, மணி பிடிக்கும் தறுவாயில் ஏரி வற்றிப் போகும்.
அங்குமிங்குமுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கும். அது மடையேறிப் பாயாது. வயல் மட்டத்திற்குக் கீழே சிறிது நீர் கிடக்கும். உழைப்பின் பயன் வீணாகாமல் இருப்பதற்காக, உழவர்கள் பள்ளத்திலுள்ள நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இதற்காகப் பனையோலையாலோ, இரும்பாலோ செய்த இறவைப் பெட்டிகளைப் பயன்படுத்துவார்கள். அதன் இரண்டு முனைகளிலும், கயிறுகளைக் கட்டிப் பக்கத்திற்கு ஒருவராக நின்று கொண்டு நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இவ்வேலை மிகவும் சலிப்பைத் தருவதாயினும் வேலையின் பயனை எண்ணி அவர்கள் நீண்ட நேரம் உழைப்பார்கள். சலிப்புத் தோன்றாமலிருப்பதற்காக இறவைப் பெட்டியின் அசைவுக்கு ஏற்ற சந்தத்தில் பாடல்கள் பாடுவார்கள்.
நீரை மடையிலேற்றுவதற்கு வேறொரு கருவியும் உள்ளது. அதன் பெயர் இறைவை மரம். ஒரே மரத்தைத் தொட்டி போல் குடைந்து ஒரு ஓரத்தில் கைப்பிடிபோல் அமைத்திருப்பார்கள். அதன் நடுவே கயிற்றைக் கட்டி முக்காலி போல மூன்று கம்புகளைத் தரையில் நாட்டி அதனோடு, இறைவை மரத்தை இணைப்பர். இறைவை மரத்தின் தொட்டி போன்ற பகுதி தண்ணீரினுள் இருக்கும் கைப்பிடியை மேலும் கீழுமாக அசைத்தால், தண்ணீர் பெட்டியினுள் ஏறி மடையினுள் பாயும். இறைவை மரத்தை இயக்க ஒரே ஒரு ஆள் போதும். இப்பாடல்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகுதியாக பாடாப்படுகிறது. தென்னாற்காடு மாவட்டத்திலும் காலால் மிதித்து ஏற்றம் இறைப்பவர் ஏற்றப் பாட்டுப் பாடுவர். மேலே ஒருவன் ஏற்றத்தை மிதிக்க கீழே ஒருவன் நின்று கிணற்றிலிருந்து வெளிவரும் வாளியைத் தூக்கித் தண்ணீரை மடையில் செலுத்துவான். ஏற்றத்தின் மேலுள்ளவன் முதலடியைப் பாடி முடித்தப்பின் கீழேயுள்ளவன் அடுத்த அடியைப் பாடுவான். அப்பாடல்களில் சில விடங்களில் பாரத இராமாயண பாத்திரங்கள் வருவர்.
இத்தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஏற்றப் பாட்டுகள் பொருளைவிடச் சந்தமே முக்கியமாகத் தருகிறது. பிள்ளையார் வழிபாடு, காதல் பிதற்றல்கள், திருவிழா வர்ணனைகள், உடல்வலி தோன்றாமலிருக்கக் கடவுளை வேண்டுதல் முதலிய பல பொருள்கள் தெளிவில்லாமல் குழம்பி வருகின்றன. நட்டபயிர் விளைய வேண்டும், அறுவடைக்குப் பின் திருவிழாக்கள் நடக்கவேண்டும், திருவிழா விளையாட்டுகளில் கவலையெல்லாம் மறக்கவேண்டும் என்ற இன்ப ஆர்வம் ஏற்றப் பாட்டுகளில் பொதுவாக இருப்பதைக் காணலாம்.
--------
ஏற்றப் பாட்டு-1
பிள்ளையாரே வாரும்
பிள்ளைபெருமாளே
இளைய பிள்ளையாரே
எண்ணித் தர வேணும்
எண்ணித் தந்தாயானால்
என்னென்ன படைப்பேன்
பச்சரிசி தேங்காய்
பாலு பணியாரம்
கொத்தோடு மாங்காய்
கொலையோடு தேங்காய்
ஈனாக் கிடாறி
இடது கொங்கைப் பாலும்
வாலைக் குமரி
வலது கொங்கைப் பாலும்
தெற்கு மலையேறி தேக்கிலைப்பறித்து
தேக்கிலைக்கும் தண்ணீர்
தெளிக்கும் பிள்ளையாருக்கு
வடக்கு மலை ஏறி
வாழை இலை பறித்து
வாழெலைக்கும் தண்ணீர்
வைப்போம் பிள்ளையாரே
ஓம் முருகா வேலா
ஓடி வந்தாயானால்
ஓடி வந்தாயானால்
கோடிப் பயன் உண்டு
ஒரு பதிலே நில்லு
சிறுவன் தொலை மேலே
ஒத்த மரம் நெல்லி
உயர்ந்த மரம் தோப்பு
ஒத்திரைத்தாயானால்
சித்திரக் கார் பாயும்
ஒத்த குரல் ஓசை
நித்த மணிப் பூசை
ஓடாதே மானே
ஒளிந்திருப்பான் வேடம்
ஓடக் கரை யோரம்
வேடப்பய காவல்
ஒரு பணமாம் செம்பு
ஒளி விடுதாந்தேரு
தேரு திரண்டோட
மாலை கழண்டோட
ஓடுதையா நூறு
ஓடுதையா நூறு
பாப்பாரப் பெண்ணே
மோக்கலையா தண்ணி
மோக்கலேடா அண்ணா
முகங்கழுவப் போறேன்
பாலு என்னும் பயலே
தோழனென்னும் தோழர்
பாலு கொண்டு போன
பாலகனைக் காணோம்
தயிரு கொண்டு போன
தங்கம் வரக் காணோம்
இருண்ட நேரம் தோழா
இலுப்பமரம் தாண்டி
இருக்கச் சொல்லிப் போன
இளமயிலைக் காணோம்
இருப்பதென்றால் சொல்லு
கொடுப்போம் கலநெல்லு
இருள் ஆந்தை கூவ
மருள் ஆந்தை சாய
இரும்புலக்கை கொண்டு
திருப்பிவிட்டான் தேரை
இரும்பு வழித்தூணாம்
துலுக்கமல்லி வாசல்
இருந் தடிக்கப்பந்து
நடந்தடிக்கச் சோர்ந்தான்
இருட்டி வந்த மேகம்
மருட்டி மழை பெய்ய
முந்தின குதிரை
தாண்டுதாம் கடலை
முந்தாதே தோழா
மோசம் வரும் சொன்னேன்
முந்தி ஒரு சாமம்
முழிச்சழுதான் பாலன்
முந்தி நட்ட சம்பா
பொங்கலுக்கு நெல்லாம்
முந்திரியும் காய்க்க
மந்திரியின் தலைமேல்
முன்னே நட பெண்ணே
அன்ன நடை பார்க்க
மூக்குக்தியும் தேரடும்
மேற்கத்தியா சாடை
க்குத்தியைத் தாடி
மோதிரங்கள் செய்ய
முன்னே மலட்டாறாம்
வெள்ளம் பிறண்டோட
அஞ்சறையாம் பெட்டி
அதில் நிறைஞ்ச மஞ்சள்
அஞ்சு கொத்து மஞ்சள்
அரைக்கப்பத்து நாளாம்
அம்பலமும் கூத்தும்
ஆடுவாள் குறத்தி
அம்பனுக்கும் தெற்கே
வம்பனுடைய தேசம்
அம்பாலக் கோட்டை
ஆசாரப் பொம்மை
அன்பு மலையாளம்
தம்பி போன தேசம்
அன்பு காட்டி வார்த்தை
அழகு காட்டித் தேமல்
ஆறு அடைக்கக் கட்டை
அமுது அடைக்கச் சேனை
ஆத்து வண்டலோட
பூக்குதடி நாணல்
ஆத்தே இவள் ராணி
வார்த்தை பேச நீலி
ஆத்தாங் கரையோரம்
ஆனை விளையாட்டாம்
ஆத்தரளி தின்றால்
மாத்திரைகள் உண்டோ
ஏழு மூங்கி வெட்டி
எமதூண்டி போட்டான்
ஏழைக்குலப் பெண்ணாம்
சோலைக் குயில்போல
ஏழை வச்சான் வாழை
ஏறி வெட்டலாமோ
ஏழைக்குல வண்ணான்
சாதிலம் கேட்டான்
எழுத்தாணி கொண்டு
எழுதிய குடமாம்
குமரியின் தலைமேல்
எழுக்கோடா செட்டி
பருசப்பணம் பத்து
எழுத்து வர்ண சேலை
வெளுத்து வாடா வண்ணா
எங்கமதயாணை
கொம்பு மதயானை
வங்கணக் குறத்தி
எங்கிட்டு வருது
தங்கிச்சி வரிசை
எட்டிப் பூப்பூக்க
பொட்டில் இடும் மையாம்
எட்டுதில்லை தண்ணி
வத்து தில்லை பொய்கை
செம்பருத்தி காயாம்
இளம் பருத்தி நூலாம்
துவக்குதடி பாக்கு
தோழியிடம் சொல்ல
மணக்குதடி மஞ்சள்
மாரியிடம் சொல்ல
தோழி கட்டும் சேலை
தொண்ணூறு முழமாம்
நான் அளந்து பார்க்க
நாற்பது முழமாம்
தோழி கடல் ஏற
வாரி அலைமோத
தோத்துப் போன சேவல்
நேத்து வந்து கூவ
தோப்புக் குள்ளவாடி
தொகுத்தே கவி பாட
தோப்பிலுள்ள மாங்காய்
காப்பணமாம் நூறு
சென்றதையா நூறு
சொல்லத் தொலைமேலே
வந்ததையா நூறு
வைக்கத் தொலைமேலே
ஆலையும் கரும்பும்
ஆடி வர நூறு
சோலையும் கரும்பும்
சுத்திவர நூறு
தங்க மயில் ஏறி
சாமி வர நூறு
புள்ளி மயில் ஏறி
வள்ளி வர நூறு
ஒற்றை அடிபோல
சுட்ட ரொட்டி நூறு
ஆனை அடிபோல
அதிரசங்கள் நூறு
குதிரை அடிபோல
கொளுக் கட்டைகள் நூறு
மாடு கட்டும் தும்பு
மறு விலங்கு நூறு
கன்று கட்டும் தும்பு
கயிறணையும் நூறு
எருது கட்டத் தும்பு
எடுத்தனையா நூறு
ஆனதைய்யா நூறு
ஆறுமுக வேலா
ஒரு நூறும் போல
திரு நீறும் பூசி
இரு நூறும் பாழ்
இரணியந் தேர் ஓடி
முன்னூறூம் பாடி
மூவணத் தேர் ஓடி
நானூறும் பாடி
நாக நாதர் ஓடி
ஐந்நூறும் பாடி
ஐயனார் தேரோடி
அறு நூறும்பாடி
ஆரணித் தேர் ஓடி
எழுநூறும் பாடி
இரணியந் தேர் ஓடி
எண்ணூறும் பாடி
ஈஸ்வரந் தேரோடி
தொளாயிரமும் பாடி
ஆயிரமாங் கோடி
ஆயிரத் தைச் சேர்த்து
கோபுரத்தைப் பார்த்து
கோபுரத்து மேலே
கும்பத்திலே தண்ணி
இஞ்சிக்கும் பாச்சி
எலுமிச்சைக்கும் பாச்சி
மஞ்சளுக்கும் பாச்சி
மற்படுதாம் வெள்ளம்
கைமாத்துக்காரர்
கச்சைக் கட்டும் தோழர்
நான் இரைத்த நேரம்
நீ இரைக்க வாடா
கை வழியே வாடா
கைவலியும் தீர
மேல் வழியே வாடா
மேல்வலியும் தீர
காளியாத்தா தாயே
கால்கள் வலியாமல்
மீனாட்சி அம்மா
மேலுவலியாமல்
கருப்பண்ண சாமி
கைகள் வலியாமல்
முத்து முனியாண்டி
உத்த துணை நீயே
ஏர்வாடி அல்லா
எனக்குத் துணை நீயே!
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
-----------
ஏற்றப் பாட்டு-2
வாரும் பிள்ளையாரே!
வழிக்குத் துணையாக,
வழிக்குத் துணையாக!
எனக்குப் பயம் தீர,
மூத்த பிள்ளையாரே!
முன்னடக்க வேணும்
முன் நடந்தாயானால்
மூணுடைப் பேன் தேங்காய்
இளைய பிள்ளையாரே
எண்ணித் தர வேணும்
எண்ணித் தந்தாயானால்;
என்னென்ன படைப்பேன்
பச்சரிசி தேங்காய்;
பயறு பலகாரம்
எள்ளுடன் துவரை ;
கொள்ளுடன் பயறு
அரிசி கலந்து ;
ஆயிரம் கலமாம்
துவரைக் கலந்து ;
தொளாயிரம் கலமாம்
எள்ளு கலந்து ;
எண்ணூறு கலமாம்
மொச்சை கலந்து ;
முன்னூறு கலமாம்
மூங்கில் களைபோல ;
முன்னூறு கரும்பு,
நாணல் தட்டை போல ;
நானூறு கரும்பாம்
அகத்திக் கம்பு போல ;
ஐநூறு கரும்பாம்.
ஈனாக்கிடேறி இடது
கொங்கை பாலும்
வாலை குமரி
வருந்தி இடித்த மாவும்
சேராத பெண்கள்
சேர்ந்திடித்த மாவும்
இத்தனையும் சேர்த்து
ஆட்டுத் தடம்போல
ஆட்டுத்தடம் போல
அரியதரம் நூறு
கோழித் தடம் போல
குளக் கட்டை நூறு
யானையடிப் போல
சுட்ட ரொட்டி நூறு
பூனைத்தடம் போல
பொறி யுருண்டை நூறு
இத்தனையும் சேர்த்துப்
பொட்டணமாய்க் கட்டி
வடமலையேறி
வாழையிலை பறித்து
தெற்கு மலையேறி
தேக்கிலை பறித்து
தேக்கிலையும் தள்ளி
தென்னை ஈக்கி வாந்து
மூங்கில்களை பறித்து
ஆத்திலே முழுகி
தோப்பிலே சமைத்து
ஏத்தமை பரம்பி
ஆத்தங்கரை வேலா
அள்ளிப்பூசை கொள்ளும்
குளத்தங்கரை வேலா
அள்ளிப் பூசைகொள்ளும்
குளத்தங்கரை வேலா
கூட்டிப்பூசை கொள்ளும்
துளைக்கடை வேலா
துளையை விட்டுப் போரும்
மடைக்கரை வேலா
மடையை விட்டுப் போரும்
முப்பதிகா ரெண்டு
முப்பதிகா மூணு
முப்பதிகா நாலு
மூக்குத்தியும் தோடும்
மூக்குத்தியும் தோடும்
மேக்கத்தியா சாடை
மூக்கத்தியைத் தாடி
மேக்கத்தியா போக
முந்தி நட்ட சம்பா
முருகனுக்கே பொங்கல்
பிந்தி நட்ட சம்பா
பெருமாளுக்கே பொங்கல்
முன்னே மலட்டாறு
என்னை மிட்டாதோ
முப்பதிகாலாறு
முப்பதிகா ஏழு
முப்பதிகா எட்டு
முந்தின குதிரை
முந்தின குதிரை
சென்றதாம் மதுரை
பாண்டியன் குதிரை
தாண்டுதாம் கடலை
முக்காட்டுக்காரி
வைப்பாட்டி தானா
முக்காட்டை நீக்கி
முகம்பார்க்க வாரும்
நாவலரே கேளும்
கோவலன் கதையை
நாற்பதிகா ரெண்டு
நாற்பதிகா மூணு
நாற்பதிகா நாலு
நாக மென்ன செய்யும்
நாக மென்ன செய்யும்
காலம் வந்து சூழ்ந்தால்
நாகத்தைக் கொல்லாதே
பாவம் வரும் பெண்ணே
கோலரைக் கொண்டால்
நாகந்தலை புண்ணு
நானா கிழவி
நான் கிழவியானால்
நான் கிழவியானால்
பூமணங்களேது
நாட்டிலே ஒருத்தி
தேட்டிலே சமத்தி
நாற்பதிகா ஆறு
நாற்பதிகா ஏழு
நாற்பதிகா லெட்டு
நாகூரான் கப்பல்
நாளை யில்ல பயணம்
ஞாயிற்றுக் கிழமை
அம்பை விடலாமா
அமர்ந்த படைமேலே
அம்புக் கதிகாரி
அருச்சுனராம வீமன்
அம்பு வில்லைத்தாடா
ஆளடர்ந்து வாரான்
தொந்திப் பிள்ளையாரே
துணை கொள்ள வேணும்
ஓரடியளந்த
மாயன் பெருமாளே
ஒருபதிகா ரெண்டு
ஒருபதிகா மூணு
ஒருபதிகா நாலு
ஓரடிக்கும் கீழே
மாயன் இருப்பாராம்
ஒருபதிலே நில்லு
ஒருத்திதானா போறா
ஓடை வழியாக
ஒத்தையிலேவாடி
மெத்தையிலே சாய
ஓரென்ன வளையல்
தோரண வளைவி
ஒருபதிகா ஆறு
ஒருபதிகா ஏழு
ஒருபதிகா எட்டு
ஓடாதே மானே
ஓடாதே மானே
ஒளிந்திருப்பான் வேடன்
ஓட்டங்கண்ட மானை
வேடன் துயந்தானே
பன்னீரும் செம்பும்
பாலன் தலைமேலே
பன்னிருகால் ரெண்டு
பன்னிருகால் மூணு
பன்னிருகால் நாலு
பன்னிருகால் ஐந்து
பன்றி குத்தப் போன
பாலன் வரக் காணோம்
பன்றிகளைப் பார்த்தால்
பாரமலை போல
சிங்கம் குத்தப் போன
சீமான் வரக் காணோம்
சிங்கங்களைப் பார்த்தால்
சிறு புலிகள் போ
பன்னிரு காலாறு
பன்னிரு காலேழு
பன்னிருகாலெட்டு
பண்ணிப் பதித்தாண்டி
பண்ணிப் பதித்தாண்டி
பத்துலெட்சம் பொன்னு
எண்ணிப் பதித்தாண்டி
எட்டுலட்சம் பொன்னு
பாப்பாரப் பெண்ணே
முகப்பாயோ தண்ணி
விருந்தாடிப் பெண்கா(ள்)
இருந்தாரிப் போங்க
இருபதிகா ரெண்டு
இருபதிகா மூணு
இருபதிகா நாலு
இருக்க நல்ல சோலை
இருக்க நல்ல சோலை
குளிக்க நல்ல பொய்கை
இருக்கையிலே கண்டேன்
திருப்பதி மலையை
இருக்கச் சொல்லிப் போன
இளமயிலைக் காணோம்
இருபதிகா ஆறு
இருபதிகா ஏழு
இருபதிகா எட்டு
இருட்டு வழி போனால்
இருட்டு வழி போனால்
விரட்டுவாண்டி கள்ளன்
இரும்பு வெள்ளித்தூணாம்
துலுக்கன் பள்ளிவாசல்
இருட்டி வந்த மேகம்
மிரட்டி மழை பெய்ய
மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே
காலம்பர வேளை
சாயும் கதிரோனே
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.
-----------
ஏற்றப் பாட்டு-3
ஏற்றம் இறைக்கும் மாமன் மகனின் புகழை ஓர் இளம் பெண் பாடுகிறாள். ஏற்றத்தின் அசைவைச் சந்தமாக்கி அதற்கேற்றாற்போல் அவள் கை கொட்டிப் பாடுகிறாள். அவன் பாட்டில் ஈடுபட்டு நேரம் போனதே தெரியாமல் ஏற்றம் இறைக்கிறான். அவன் இறைத்த நீர் மஞ்சள் கொல்லைக்கும், கொய்யாத் தோட்டத்திற்கும் பாய்கிறது.
காதலன் : பட்டுப் பையாம் வெள்ளிக் குச்சாம்
தில்லாலங்கிடி லேலம்
பதினாறு வெத்திலையாம்
தில்லாலங்கிடி லேலம்
சின்னப் பையன் குடுத்த பை
தில்லாலங்கிடி லேலம்
சிரிக்கு தோடி இடுப்பு மேலே
தில்லாலங்கிடி லேலம்
காதலி : மலையோரம் கெணறு வெட்டி
தில்லாலங்கிடி லேலம்
மானுக் கொம்பு ஏத்தம் வச்சு
தில்லாலங்கிடி லேலம்
மாமன் மகன் இறைத்த தண்ணி
தில்லாலங்கிடி லேலம்
மஞ்சாத் தோட்டம் பாயுதோடி
தில்லாலங்கிடி லேலம்
குன்னோரம் கிணறு வெட்டி
தில்லாலங்கிடி லேலம்
கொய்யாக் கொம்பு ஏத்தம் வச்சு
தில்லாலங்கிடி லேலம்
கொழுந்தனாறு இறைக்கும் தண்ணீ
தில்லாலங்கிடி லேலம்
கொய்யத் தோட்டம் பாயுதோடி
தில்லாலங்கிடி லேலம்
மலையோரம் போற மாமா
தில்லாலங்கிடி லேலம்
மயிலிரண்டு புடிச்ச வாய்யா
தில்லாலங்கிடி லேலம்
குன்னோரம் போற மாமா
தில்லாலங்கிடி லேலம்
குயிலிரண்டு புடிச்சி வாய்யா
தில்லாலங்கிடி லேலம்
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம் : அரூர்,சேலம்.
---------
கதிரறுப்பு
அறுவடைக்குக் கூட்டம் கூட்டமாக உள்ளூர் வேலையாட்களும் வெளியூர் கூலியாட்களுமாக வருவார்கள். கதிரறுத்து, கட்டுக்கட்டி, களத்துக்கு தூக்கிச் சென்று, வட்டம் உதறி, புணையாலடித்து, மணி தூவி, நெல்லைக் குவியலாகக் குவிப்பார்கள். ஆண்களும் பெண்களும் பலவிதமான இவ்வேலைகளில் ஈடுபடுவார்கள். சோர்வு தோன்றும்போது அறுவடைப் பாடல்களைப் பாடுவார்கள். இப்பொழுது பாடல்கள் பாடுவது நின்று விட்டது.
இப் பாடல்களில் வேலையின் கடுமை தெரியாமல் இருப்பதற்காக காதல், இனிமை இவற்றைப் பற்றியே உழவர்களும் உழத்தியரும் பாடுவார்கள். இடையிடையே கலந்துவரும் தொடர்ச்சியான பொருள் வருமாறு பாடல்கள் அமைந்திரா.
அறுவடைப் பாடல்கள்
(பெண்)
கோடை கருதறுப் பே
கொடிக்காலே சூழ்ந்திருப்பே
நாளக் கருதறுப்பே
நானும் வந்தாலாகாதோ !
(ஆண்)
கஞ்சிக் கலயம் கொண்டு
கருதறுக்க போற புள்ளா
காக்காய் அலம்புதடி
கருத்தப் புள்ளா உங்கலயம்
(பெண்)
நெல்லுக் கதிரானேன்
நேத்தறுத்த தாளானேன்
நேத்து வந்த தோழனுக்கு
நேரம் தெரியாதோ !
(ஆண்)
கருதறுப்பில கங்காணத்திலே
கமகமங்குது குமுகுமுங்குது
கன்னத்து மஞ்சள் என்னைப்பகட்டுது
முன்னே போற பொண்ணே !
உன்னைத் தாண்டி பொண்ணே
(பெண்)
ஊரோரம் கதிரறுத்து
உரலுப் போல கட்டுக்கட்டி
தூக்கி விடும் கொத்தனாரே
தூரகளம் போய்ச்சேர
கருதறுத்துக் கிறுகிறுத்து
கண்ணு ரெண்டும் பஞ்சடைச்சி
தூக்கி விடும் கொத்தனாரே
தோப்புக் களம் போய்ச் சேர
(ஆண்)
நெல்லுக் கருதறுத்து
நிமிர்ந்து நிற்கும் செவத்தபுள்ள-என்
சொல்ல மறந்திராத-நீ
சொன்னபடி நானிருப்பேன்
(பெண்)
தும்ப மலர் வேட்டி கட்டி
தூக்குப் போணி கையிலேந்தி
வாராக எங்க மாமன்
வட்டம் உதறுதற்கே
(வேறு)
நாலு மூலை வயலுக்குள்ளே
நாற்று நடும் குள்ளத்தாரா
குலுங்குதோடி குண்டஞ்சம்பா
உன்னரிவாள் என்னரிவாள்
உருக்கு வச்ச கருக்கரிவாள்
சாயப்பிடி அரிவாள்
சம்புதடி நெல்லம் பயிர்
வெள்ளிப்பிடி அரிவாள்
வீசுதடி நெல்லப் பயிர்
அறுப் பறுத்து திரித்திரிச்சு
அன்னம் போல நடை நடந்து
சின்னக் கட்டா கட்டச் சொல்லி
சிணுங்கினாளாம் பொன்னியம்மா
வீதியிலே கல் உரலாம்
வீசி வீசிக் குத்துராளாம்
கையைப் புடிக்காதீங்க
கைவளையல் நொறுக்கிவிடும்
கண்ணாடி வலைவிதொட்டு
கருதறுக்கப் போற பிள்ள
கண்ணாடி மின்னலுல
கருதறுப்பு பிந்துதடி
வெள்ளிப்பிடி யருவா
விடலைப்பிள்ளை கையருவா
சொல்லியடிச் சருவா
சுழட்டுதையா நெல்கருதை
வட்டார வழக்கு: கருது-கதிர்; நேத்து-நேற்று; மறந்திராதே-மறந்திடாதே; அருவா-அரிவாள்.
சேகரித்தவர்: S.M.கார்க்கி ; இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
S.S. போத்தையா; இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
வாழப்பாடி சந்திரன்; இடம்: வாழப்பாடி, சேலம் மாவட்டம்.
சடையப்பன் ; இடம் அரூர், தருமபுரி மாவட்டம்.
------------
தூக்கிவிடும் !
கதிர்க் கட்டை தூக்கிவிடும்படி அறுவடைக்கு வந்த கையாளான பெண் வேண்டிக் கொள்கிறாள். களம் தூரமாயிருக்கிறாதாம். அங்கே அவருடைய மாமன் வட்டம் உதறக் காத்திருக்கிறானாம்.
ஊரோரம் கதிரறுத்து
உரலுப்போல கட்டுக்கட்டி
தூக்கிவிடும் கொத்தனாரே
தூரகளம் போய்ச்சேர
தும்பமலர் வேட்டி கட்டி
தூக்குப்போணி கையிலேந்தி
வாராக எங்க மாமா
வட்டம் உதறுதற்கே
வட்டார வழக்கு : போணி-பாத்திரம் (சோறு கொண்டு வருவதற்குப் பயன்படும்) வாராக-வருகிறார்கள். (க என்பது ஹ என்று உச்சரிக்கப்படும்)
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை.
----------
தேயிலைத் தோட்டம்
புழுதி புரளுதய்யா !
ஓர் இளம் பெண் புதிதாக தேயிலைத் தோட்டத்தில் வேலைக்கு வந்து சேருகிறாள். அதற்கு முன் அவள் நதியோரம் கிராமத்தில் நன்செய் நிலத்தில் பாடுபட்டவள். அவளுக்கு பழைய வேலைக்கும் புதிய வேலைக்கும் இருக்கிற வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. முள்ளடர்ந்த காட்டில், குளிர்காற்று வீச உடல் புழுதியால் மறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என்று தனியாக நின்று வருந்துகிறாள்.
மூணாறு சாலையிலே
முள்ளடர்ந்த காட்டுக்குள்ளே
பொன்னான மேனியெல்லாம்
புழுதி பெறளுதய்யா
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி.
--------
வண்டிக்காரன் காதலி
வண்டிக்காரன் பாரமேற்றிக் கொண்டு அயலூர் போகிறான். பாரம் விலையானால் அவளுக்கு அணிகள் வாங்கி வருவதாகச் சொல்லுகிறான்.
அவள் அழைத்துச் செல்லாமல் பசப்பு வார்த்தை சொல்ல வேண்டாம் என்று சொல்லுகிறாள்.
மேலும் அயலூரிலே தன்னை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதை வேறுபட்ட இரு உவமைகள் மூலம் வற்புறுத்துகிறாள். அவனை ஐந்தாறு பசுக்கள் நடுவிலுள்ள காளையாகவும் உவமிக்கிறாள். போதாதோ? அவன் இச்சூட்டையே நினைத்துக் கொண்டு திரும்பி வந்துவிட மாட்டானோ?
வண்டி செல்லும் ஊர்களின் பெயர்களும் பாரம் எதுவென்பதும், பாடும் பகுதிகளைக் குறித்து மாறுபடும்.
வண்டிக்காரன் : கடல புடிச்ச வண்டி
கம்பத்துக்குப் போறவண்டி
கடலை விலையானா-உனக்கு
கடகம் பண்ணி நான் வருவேன்
உப்பு முடிஞ்ச வண்டி
கொப்பாளம் போற வண்டி
உப்பு விலையானா-உனக்கு
கொப்பு பண்ணி நான் வருவேன்
காதலி : வண்டியலங்காரம்
வண்டிமாடு சிங்காரம்
வண்டிக்காரன் கூடப்போனா
மெத்த மெத்த அலங்காரம்
அஞ்சாறு பசுக்களோடே
அழக செவலைக் காளையோடே
போகுதில்லே என் எருது
பொல்லாத சீமைதேடி
கட்டக் கருத்தோடு
மெத்தக் கிழட்டாடு
மேங்காட்டை நோக்குதில்லை
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-----------
ஏலத்தோட்டம்
ஏலப் பழம் எடுப்பதற்குத் தொழிலாளர்களைப் பிரித்தனுப்புகிறார் கங்காணி. அவர்களுள் இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவன் முந்திய தினங்களில் தொழிலாளர்களை வேலை செய்ய முடியாமல் தடுத்து வீண் நேரம் போக்கச் செய்தான். அதனால் அவர்களுடைய கூலி குறைந்து விட்டது. ஒரு பெண் தைரியமாக இந்த இளைஞனை அனுப்ப வேண்டாம், பெண்களை மட்டுமே அனுப்பினால் போதும் என்று சொல்கிறாள். கங்காணியும் ஒப்புக் கொள்கிறான். அன்று பெண்கள் மட்டும் வேலை செய்து நிரம்பப் பறிக்கிறார்கள். ஏலப்பழத்தைப் பாடம் பண்ணி ராஜபாளையத்துக்கு அனுப்புகிறார்கள். பெண்களுக்கும் கூலி நிறையக் கிடைக்கிறது.
ஏலப் பழமெடுக்க
இந்தாளு வேண்டாமய்யா
பெட்டிப் பழமெடுக்க
பெண் குயில்கள் நாங்க வாரோம்
ஏத்தத்திலே பழமெடுத்து
இறக்கத்திலே பாடம் பண்ணி
இறங்குதல்லோ சரக்கு மூடை
ராஜபாளையம் சீமை தேடி
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
---------
தேயிலைத் தோட்டம்
தேயிலைத் தோட்டம் ஓர் இளைஞன் களை வெட்டிக் கொண்டிருக்கிறான். அவனுடைய காதலி கூடையெடுத்துக் கொண்டு கொழுந்து எடுக்கப் போகிறாள். இருவரும் வேலை செய்யுமிடம் பக்கத்தில் இல்லை. அவள் மேல் முனைக் காட்டுக்குச் செல்ல வேண்டும். அவனுக்கு மலைச் சாரலில் தான் வேலை. அரிசிக் கடைக்குப் போகிற சாக்கில் இருவரும் சேர்ந்து செல்லலாமா? என்று கேட்கிறாள்.
கூட மேலே கூட வைச்சு
கொழுந் தெடுக்கப் போற புள்ளே
கூடய இறக்கி வச்சு
குளிர்ந்த வார்த்தை சொல்லிப் போயேன்
ஏலமலைக்குப் போறேன்
ஏலப்பசுங் கிளியே
ஏலப்பூ வாடையிலே
என்னை மறந்திராதே
ஏத்தமடி கல்மருத
இறக்கமடி மீனாக்கொல்லை
தூரமில்ல அரிசிச்சாப்பு
துயந்து வாடி நடந்து போவோம்
கண்டியும் கண்டேன்
கல்மருத தோட்டம் கண்டேன்
தூரமில்ல அரிசிச்சாபு
துயந்து வாடி நடந்து போவோம்
வட்டார வழக்கு: கூடய-கூடையை; கல்மருத-கல்மருதத் தோட்டம்; ஏத்தம்-ஏற்றம், உயரம்; மீனாக்கொல்லை-தோட்டத்தின் பெயர்; அரிசிச்சாப்பு-அரிசிக்கடை; துயந்து-தொடர்ந்து.
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
---------
பருத்திக் காடு
பருத்தி பிடுங்கப் போகிறாள் மீனாள். அவளோடு பல பெண்கள் செல்லுகிறார்கள். பருத்திக் காட்டில் சொக்கன் அருகிலிருந்தாலும் அவளால் அவனோடு பேச முடியவில்லை. ஒரு நாள் அவளுடைய தோழிகள் வெகு தூரத்திற்குச் சென்றுவிட்டார்கள். அவள் தனியே இருக்கிறாள். இன்று பார்த்துச் சொக்கன் வரவில்லை. ஏமாற்றமடைகிறாள்.
கூலியை வீட்டில் கொடுத்துவிட்டு, சிறிதளவு சில்லறையை பெண்கள் சேமித்து வைத்துக் கொள்ளுவார்கள். அவளிடமும் கொஞ்சம் ரொக்கம் இருந்தது. தனக்கு ஏதாவது வாங்கிக் கொள்ளலாமென்றுதான் அவள் அதை வைத்திருந்தாள். ஆனால் அவள் காதலன் வெயிலில் மிதியடியில்லாமல்தான் தன்னைக் காண வரவில்லையென்று எண்ணி அவள் தனது சேமிப்பில் அவனுக்குச் செருப்பு வாங்க எண்ணுகிறாள்.
அவளுக்கு மணமானால் சிறிதளவு பணம் வேண்டும். கூலிக்குப்போய் தேவையான அளவு பணம் சம்பாதிக்க முடியாது. அவளுக்கென்று தகப்பன் விட்ட குறுக்கம், ஐந்தாறு பருத்திச் செடி வளரவே காணும். தன் புஞ்சையிலும் உழைக்கவேண்டும். உடுக்க உடையும், குடிக்கக் கூழும், கணவன் கையை எதிர்பாராமல் பெற்றுகொள்ள வேண்டும் என்று மீனாள் எண்ணுகிறாள்.
பருத்திக் காட்டுப்பொழி வழியே
பாசி வச்சுப் போற மச்சான்-நான்
ஒருத்தி எடுக்கிறது
உங்களுக்குப் புரியலயே
பருத்திப் புன்செய்ப் பொழி நெடுக
பாதை வழி போற மன்னா
சித்திரக்கால் நொந்திராம
செருப்பு வாங்கி நான் தாரேன்
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
----------
அஞ்சாறு பருத்திச் செடி
அவரு விட்ட ஒரு குறுக்கம்
செல்லச்சாமி விட்ட புஞ்செய்
மாசிப் பருத்தியடி
மலையோரம் செம்பருத்தி
ராசிப் பொருத்தமில்லை
ராமருட வாசலிலே
பருத்தி எடுக்கவேணும்
பச்சைச் சீலை எடுக்கவேணும்
ரயில்வண்டி ஏறவேணும்
ராமேஸ்வரம் போகவேணும்
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: கோவில்பட்டி, நெல்லை.
-----------
புன்செய் உழவு
மூன்று ஏர்கள் உழுகின்றன. இரண்டாவது ஏருக்குக் கழுத்தேரு என்று பெயர். முதல் ஏருக்கு முன்னத்தி ஏர் என்றும் கடைசி ஏருக்கு பின்னத்தி ஏர் என்றும் பெயர். எட்டிலிருந்து புன்செய்க் காடு தூரத்தில் இருந்தால், கலப்பையிலுள்ள மேழியையும், கலப்பைக் குத்தியையும் நுகத்தடி மீது ஏற்றி காளை பூட்டி ஓட்டிச் செல்லுவார்கள். புன்செயை அடைந்ததும் கலப்பையை இறக்கி, வடத்தை இழுத்துக்கட்டி நேராக்கி உழத்தொடங்குவர்.
மூன்று உழவர்களில் ஒருவனுக்குக் காதலி உண்டு. அவள் வேலைமுடியும் சமயம் வந்து ஓடைக்கரை கருவ மரத்தடியில் உட்கார்ந்து அவனைப் பார்த்துப் பேசிவிட்டு போவாள்.
இன்று ஏர் கட்டுமுன்பே அவள் வந்து விட்டாள். அடுத்த ஏர்க்காரன் காதலனிடம் சாடையாக அதனைக் கூறுகிறான்.அவன் அதனைத் தெரிந்திருந்தான். எனவே அவளை அனுப்பி விட்டு வருவதாகச் சொல்லி அவனிடம் ஏரைப்பூட்டச் சொல்லிவிட்டு ஓடுகிறான்.
துணைவர்கள் பொறாமையின்றி கௌரவமாக காதலர்களுக்கு உதவி செய்வதை நாட்டுப் பாடலிலும் கிராம வாழ்க்கையிலும் இன்றும் காண்கிறோம்.
(குறிப்புரை S.S.போத்தையா)
முன்னத்தேராம் பின்னத்தேராம்
மூணேரும் தனதேராம்
கழுத்தேரு கட்டுமுன்னே
கண்டேனடி கருங்குயிலே
முன்னத்தி ஏருக்காரா
முறுக்கிவிட்ட மீசைக்காரா
நீ தொட்ட கருத்தப்பிள்ளை
நிண்ணு மயங்குதாளே
முன்னத்தி ஏருக்காரா
முதலாளி பண்ணைக் காரா
நீ தொட்ட கட்டப்புள்ள
நிண்ணு மயங்குதாளே
ஓடையிலே ஓரனேறு
ஒருத்தி மகள் கருத்தாளு
கருத்தாளு பேரு சொன்னா
கனகமணி ஓசையிடும்
மூணேறு கட்டியல்ல
முகமெல்லாம் தேர் ஓடி
கழுத்தேரு கட்டையிலே
கண்டேன் கருங்குயிலே
ஏரப்புடி இளையதம்பி
இளமயில நான் தொடர
இருக்கப் பறந்திராம
என்னருமைப் பசுங்கிளியே
வட்டார வழக்கு: ஏரு-ஏர் ; கட்டையிலே-கட்டும் வேளையிலே ; பறந்திராம-பறந்துவிடாமல்.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: கோவில்பட்டி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
-----------
நெல்லிமரம் காவல்
அறுப்புக்குச் செல்லும் இளைஞன் தன் காதலியிடம் வேலை முடியும்போது தான் நிற்குமிடத்தைச் சொல்லிவிட்டு, அவளையும் எந்த இடத்தில் வேலை செய்வாய் என்பதை முன்கூட்டிச் சொல்லிவிட்டுப் போகச் சொல்லுகிறான்.
புள்ளிபோட்ட ரவிக்கைக் காரி
புளியங்கொட்டை சீலைக்காரி
நெல்லறுக்கப் போகும்போது
நான் நெல்லி மரக்காவலடி
கஞ்சிக்கலயங் கொண்டு
கருக்கரிவாள் தோளிலிட்டு
அறுப்பறுக்கப் போகும்போது
உன் இருப்பிடத்தைச் சொல்லிடடி
சேகரித்தவர்: வாழப்பாடி சந்திரன்
இடம்: வாழப்பாடி,சேலம்.
-----------
மாடு மேய்க்கும் சிறுவன்
மாடு மேய்க்கும் சிறுவன் மாட்டுக்குத் தண்ணீர் காட்ட குளத்துக்கு வருகிறான். அவனுடைய காதலி படித்துறையில் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மாட்டைத் தப்ப விட்டுவிடுகிறான். மாடு தப்பிவிட்டதை அவள் சுட்டிக் காட்டுகிறாள். ஆனால் அவன் கவலைப்படவில்லை.
பெண் : மலைமேலே மாடு மேய்க்கும் மாட்டுக் காரச் சின்னதம்பி
மாடோடிப் போகுதடா
மாமலைக்கு அந்தாண்டே
ஆண் : மாடோடிப் போனாலென்ன
மற்றொருத்தி சொன்னாலென்ன
நீ குளிக்கும் மஞ்சளுக்கு நான்
நின்னு மயங்குரேண்டி
உதவியவர் : வாழப்பாடி சந்திரன்
இடம்: சேலம் மாவட்டம்.
------------
பொழுதிருக்க வந்து சேரும்
கணவன் மாடு பிடித்துக்கொண்டு மலைக்குப் போகிறான். மனைவி கைக்குழந்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வாசலில் வந்து நின்று வழியனுப்புகிறாள். மலையில் புல் நிரம்ப உண்டு. மாடு நன்றாக மேயட்டும் என்று நினைத்து நேரத்திற்குத் திரும்பாவிட்டால் இரவில் கொடிய விலங்குகளால் ஆபத்து நேரிடக்கூடும். ஆகவே சீக்கிரம் திரும்பி விடும்படி அவனிடம் சொல்லுகிறாள். அவனோ காடுமலையெல்லாம் அறிந்தவன். மாடுகளும் வசங்கிய மாடுகள். அவை எங்கும் திசை தப்பிப் போய்விடா. ஆகவே கவலை வேண்டாமெனத் தேறுதல் சொல்லிவிட்டு அவன் புறப்படுகிறான்.
மனைவி: நாட்டுத் துறவல் குச்சி
நான் அணையும் தங்கக்குச்சி
பூட்டும் துறவல் குச்சி
போகுதில்ல ஒத்த வழி
குளத்தில் ஒருகல் உண்டும்
கூந்தல் ஒரு பாகம் உண்டும்
என்னத் தொட்ட மன்னவர்க்கு
முகத்தில் ஒரு தேமலுண்டும்
நாங்கிள் கம்பெடுத்து
நடுத் தெருவே போற மன்னா
குறுக்கே சவளுதுன்னு
கூந்தல் ஒரு பாகத்துக்கு
கணவன்: பச்சைத் துகில் உடுத்தி
பாலகனைக் கையிலேந்தி
மணக்கவே மஞ்சள் பூசி
மாதவியே பின்னே வாராள்
மனைவி: புல்காடு ரொம்ப உண்டும்
பொழுதனைக்கும் மேஞ்சிடாமல்
பொழுதிருக்க வந்துசேரும்
புள்ளிமான் பெற்ற கண்ணே
கணவன்: உழுகாத மாடா
உழவறியா காளங்கண்டா
வசக்காத மாடா
வசம் பண்ணி நிக்குதற்கு
வட்டார வழக்கு: துறவல் குச்சி-திறவுகோல் குச்சி ; பொழுதனைக்கம்-பொழுதனைத்தும் ; பொழுதிருக்க-பகல் முடியுமுன் ;உழுகாத-உழாத ; காளங்கண்டா-காளைக்கன்றா? ; வசம்-வசக்குதல்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
-----------
மந்தையில் காதல்
எருமைமாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அவன் தன் காதலியை அடிக்கடிச் சந்திப்பான். காளை மாடு மேய்க்கத் தொடங்கிய பின், அவனை அடிக்கடி காண முடிவதில்லை. ஒரு வேளை பதவியுயர்ந்த நிலைமையை அவன் காட்டிக்கொள்கிறானோ? அவள் மரியாதையின்றி அவனைத் திட்டுகிறாள். அவன் பொறுமையாகக் கேலி செய்து, நாகரத்தின வளையல் செய்து போட்டு உன்னை சிறையெடுப்பேன் என்கிறான். காதலியின் கோபம் தணிந்து அவன்மீது அன்பு காட்டுகிறாள்.
பெண்: ஏலே ஏலே சின்னப்பய
எருமை மாடு மேச்ச பய
கழுதைப் புரண்டு போனியடா
ஆண்: நண்டுக்குழி மண்ணெடுத்து
நாகரெட்ண வளவி தொட்டு
பெண்டுகள் சிறையெடுக்க
பொறந்தோமே சிங்கக்குட்டி
பெண்: மந்தையிலே நிண்ணுல்ல
மயிருலர்த்தும் மச்சாவி
கதறிவரும் கருத்தக்காளை-இங்கே
கண்ணு விட்டாலாகாதோ?
வட்டார வழக்கு: மச்சாவி-மச்சான் ; கருத்தக்காளை-காதலன் மேய்க்கும் காளையையும் குறிக்கும், காதலனையும் குறிக்கும் ; கண்ணு விட்டால்-நோட்டம் விட்டால்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
----------
உப்பளம்
தமிழ்நாடு நீண்ட கடற்கரையை உடையது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து கடற்கரையில் வாழ்ந்துவரும் மக்கள் கடல் நீரிலிருந்து உப்புக்காய்ச்சி வருகிறார்கள். பெரும்பாணாற்றுப் படையில் உப்புக்காய்ச்சும் தொழில் செய்யும் மக்கள் உமணர் என்றும், அவரது பெண் மக்கள் உமட்டியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். உப்புக் காய்ச்சும் தொழில் தமிழ் நாட்டு புராதனத் தொழில்களில் ஒன்று.
இத் தொழில் மிகவும் கடினமானது. அளத்தில் நீரில் உறைந்திருக்கும் உப்பு காலைக்கீறி வேதனையை உண்டாக்கும். கால்களில் புண்கள் தோன்றும். பழக்கமில்லாதவர்கள் வேலைக்கு வந்தால் மிகவும் துன்பப்படுவார்கள். தூத்துக்குடி அருகிலுள்ள உப்பளங்களுக்குப் பஞ்ச காலத்தில் கோயில் பட்டி தாலுக்காவிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள் ஏராளமாக வேலைக்கு வருவார்கள். வேலை செய்யத் தெரியாமல் அவர்கள் திண்டாடும் பொழுது வேலையில் பழக்கமுள்ள பெண்கள் அவர்களைக் கேலி செய்வார்கள். 'கரண்டையளவு தண்ணீர் கழுத்தளவு தண்ணீராக இருக்கிறதா?' என்று பெண்கள் கேட்பார்கள். புதிதாக வந்த இளைஞர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். பாட்டும் சிரிப்பும் கலந்து வேலையைத் தடைபடுத்தும். அப்பொழுது கங்காணிகள் அதட்டுவார்கள். கங்காணி தலை மறைந்ததும், வேலையின் கடுமையை மறக்க மீண்டும் பாட்டுப்பாடுவார்கள். இடையிடையே காதல் அரும்பும். கடுமையான வேலையும், கொடூரமான சுரண்டலும்,மனிதப் பண்பை மாய்த்துவிட முடிவதில்லை. கட்டாந்தரையிலும் ஒரு சொட்டு மழை பெய்தாலும் பசும்புல் தலை தூக்குவதில்லையா? அது போல் பஞ்சம் வாட்ட, அளத்தில் கொத்து வேலை செய்த போதிலும், இளைஞர்களுக்கிடையே, அன்பும், பரிவும் துளிர்த்துக் காதலாக வளருகிறது.
உப்பளப் பாடல்
காரப்பாடு அளத்திலேயும்
கழுத்து அளவு தண்ணிலே
நீந்தத் தெரியாம
நிற்கிறாளே என் தோழி
கங்காணி கோவத்துக் கோ
கடல் தண்ணி ஏத்தத்துக்கோ
நம்மளோட கோபத்துக்கோ
நடந்திட்டாலும் குத்தமில்லே
சம்பங்கி எண்ணெய் தேய்த்து
சாட்டைபோல முடிவளர்த்து
பந்துபோல கொண்டைபோட்டு
பாத்திக்காடு வாரதெப்போ
கருவலம்பூ கட்டை வெட்டி
கைக்கிரண்டு பலகை சேர்த்து
இன்பமான பாத்திக்குள்ளே
தங்க நின்னு வாரேனே
சாப்பிட்டுக்கை கழுவி
சமுக்கத் துண்டு கையிலெடுத்து
வாராங்க எங்க மச்சான்
வரளி மணி உப்பளக்க
இரும்பு இரும்பு திராசிகளாம்
இந்திர மணி தொட்டிகளாம்
சரிபார்த்து திராசி விடும்
தங்க குணம் எங்கமச்சான்
கண்ணாடி கால் ரூவா
காவக் கூலி முக்கால்ரூவா
தூப்புக் கூலி ஒத்தரூவா
துலங்குதையா மச்சாது அளம்
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லிகைப்பூ லாடம்கட்டி
அடிக்கிறாரையா கங்காணம்
அளத்து மண்ணு தூள் பறக்க
வேலை செய்யும் பாத்திக்காடு
விளையாடும் தட்டு மேடு
கூலி வாங்கும் கிட்டங்கிகளாம்
கூட்டம் போடும் சாயாக் கடைக
காலுலே மிதியடியாம்
கனத்த தொரு கங்காணி
நாவிலொரு சொல்லு வந்தா
நாலாயிரம் பெண் வருவோம்
வட்டார வழக்கு: மச்சாது-உப்பளச் சொந்தக்காரர் Machado.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம்: மீளவிட்டான்,தூத்துக்குடி, நெல்லை மாவட்டம்.
------------
உப்பளக் காட்சிகள்
உப்பளத்துக்கு முதலாளி வருவதேயில்லை. அபூர்வமாக வரும்போது வரவேற்புக்கு ஆடம்பர ஏற்பாடுகள் நடைபெறும். வேலை செய்பவர்கள் வெயிலில் காய்ந்து கொண்டு வேலை செய்வார்கள். ஓய்வு நேரத்தில் கூட ஒதுங்குவதற்கு ஒரு கொட்டகை இல்லை. எஜமான் வருகிறாரென்று தெரிந்ததும் கொட்டகை போடுகிறார்கள். அவர் ஒரு மணி நேரத்துக்கு மேல் தங்கமாட்டார். இதைப் பார்த்த தொழிலாளி பாடுகிறான்.
வட்டடோ உடையான் சிங்காரமாம்
வரிஞ்சு கட்டும் உப்பளமாம்
சாமிமார் வாரா வண்ணு
தனிச்சு அடிங்க கொட்டகைய
ஒருநாள் இளைஞன் ஒருவன் நல்ல துணியில் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு உப்பளத்துக்கு வருகிறான். உப்புப் பெட்டியைத் தலையில் தூக்கி குவியலில் கொண்டு வந்து கொட்ட வேண்டும். அந்த வேலைதான் அவனுக்கு. அப்பொழுது சேறும் நீரும் பெட்டியிலிருந்து வழியும். ஆகவே எந்தச் சட்டை போட்டுக்கொண்டு அளத்துக்கு வந்தாலும், சட்டையை கழற்றி வைத்து விட்டுத்தான் அவன் வேலை செய்ய முடியும். அவனைக் காதலிக்கும் பெண்ணும் அவ்வளத்தில் வேலை செய்கிறாள். அவனைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே அவள் பாடுகிறாள்.
சட்டை மேல் சட்டைபோட்டு
சரிகைச் சட்டை மேலே போட்டு
எந்தச் சட்டை போட்டாலும்
எடுக்கணுமே உப்புப் பெட்டி
அவன் சிரித்துக்கொண்டே சட்டையைக் கழற்றிவிட்டு, அவளைப் பார்க்கிறான். அவள் புதிய காது நகையொன்று அணிந்திருக்கிறாள். காசு மிச்சப்படுத்தி அவளாகவே வாங்கிய நகை. அதைப் பாராட்டி அவன் பாடுகிறான்.
போன நல்ல வருஷத்திலே
புதுக் குணுக்கு போட்டபிள்ளா
இந்த நல்லா வருஷத்திலே
ஏத்திட்டாளே வைரக்கம்மல்
சில உப்பளங்களில் கங்காணிகளின் தடபுடல் அதிகமுண்டு. அவனிடம் நிரம்பக் காசு பணம் இருக்கும். அதிகாரம், உருட்டல், மிரட்டல், டம்பம் இவை யாவையும் அவன் அபப்ாவித் தொழிலாளிகளிடம் காட்டுவான். ஆனால் அவன் உழைத்துப் பிழைக்கவில்லை. உழைப்பவர்களைப் பிடித்து வந்தால் உப்பள முதலாளி அவனுக்கு காசு கொடுப்பான். இதை உணர்ந்த தொழிலாளி மற்றவர்களுக்குக் கூறுகிறான்.
கங்காணி கங்காணி
கருத்தச் சட்டை கங்காணி
நாலு ஆளு வரலேன்னா
நக்கிப் போவான் கங்காணி
வட்டார வழக்கு: குணுக்கு-உருண்டையாகத் தெரியும் காதணி ; வைரக்கம்மல்-உண்மையில் வைரமல்ல.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டம்.
------------
மில்லாபீசு
பழைய தொழில்களில் மனிதனது தசைநார்களே உழைக்கச் சக்தியாகப் பயன்பட்டது. உதாரணமாக நெசவு செய்ய வேண்டுமானால் நெசவாளி கையையும் காலையும் வருத்தி உழைக்க வேண்டும்.
கோவில்பட்டியிலிருந்து பிழைக்கச் சென்ற நிலமிழந்த உழவர்கள் மில்லில் வேலைக்குச் சேருகிறார்கள். அவர்களுக்கு மில்லில் உள்ள இயந்திரங்களும், அவர்களை வேலை வாங்கும் இஞ்சினியரும் புதுமையாகத் தோன்றுகின்றன.
ஏதோ ஒரு 'சூச்சியத்தை' தட்டிவிட்டால் தன்னாலேயே ரோதை உருளுகிறது. அதை ஓடச்சொல்லிவிட்டு நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார் இஞ்சினியர்.
அவனது வியப்பு இப்பாடலாக உருவாகிறது.
கடலுக்கு நேர் மேக்கே
காராக்கட்டிடம் மெல்லாவுசு
இரும்புனால ரோதைகளாம்
இருகரையும் சூச்சியமாம்
தன்னாலே ஓடச் சொல்லி
தாங்குதானே இஞ்சின்துரை
பட்டிக்காட்டு பருத்திகளை
பட்டணத்து ரோதைகளை
ஓடாத ரோதைகளை
ஓட்டிவைப்பார் தாடிதுரை.
வட்டார வழக்கு: மெல்லாவுசு-மில் ஆபீசு ; ரோதை-சக்கரம் ; சூச்சியம்-ஸ்விட்ச் ; இஞ்சின் துரை-இஞ்சினியர்.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டம்.
--------
அவன் மில்லில் வேலை பார்க்கிறான். நூல் விலையாகிறது. முதலாளிக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால் அவன் வீட்டிலிருக்கும் குமரிக்குக் கலியாணம் செய்ய வழியில்லை. நூல் விலையாகிவிட்டதாம். குமரி விலையாகவில்லையாம்.
நூறு அடியாய் கோபுரமாம்
நூலு நூக்கும் மில்லாவுசு
நூலு விலை ஆகிட்டாலும்
குமரி விலை ஆகல்லையே !
தொழிலாளர் வாழ்க்கை நிலையை இப்பாடல் எவ்வளவு நன்றாகச் சித்திரிக்கிறது !
---------------
சோம்பலும் உழைப்பும்
கணவன் சோம்பேறி. மனைவி உழைப்பாளி. கணவனைப் பன்முறையும் உழைத்துப் பிழைக்குமாறு அவள் வற்புறுத்துகிறாள். அவன் இணங்கவில்லை. அவள் “கொழுக்கட்டை செய்து தருகிறேன் என்னோடு வேலைக்கு வா” என்றழைக்கிறாள். அவன் “தண்ணீர் தவிக்கும், வரமாட்டேன்” என்கிறான். அவள் படிப்படியாக அவனோடு வாது செய்து, அவனுடைய சாக்குப் போக்குகளையெல்லாம் மறுத்துரைத்து வேலைசெய்ய இணங்கும்படி செய்கிறாள். இது போன்ற பாடலொன்று நெல்லை மாவட்டத்தில் வழங்கி வருகிறது. “கீரை விதைக்கலாம் வா” என்ற தலைப்பில் அது “தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்” என்ற தொகுப்பில் வெளியாகியுள்ளது. இப்பாடல் சேலம் மாவட்டத்தில் வழங்கிவருகிறது.
பெண்: மளுக்கிட்ட கம்பிடிச்சி
கொளுக்கிட்ட வெச்சி தாரேன்
வாடா என் சாமி
ஆண்: கொளுக்கிட்ட தின்னாலே
தண்ணி தாகம் எடுக்கும்
போடி பொண் மயிலே
பெண்: தண்ணி தாகம் எடுத்தா
நீரு மோரு தாரேன்
வாடா என் சாமி
ஆண்: நீரு மோரு குடிச்சா
நித்திரையும் வந்திடும்
போடி பொண் மயிலே
பெண்: நித்திரையும் வந்தா
தட்டி எழுப்பரேன்
வாடா என் சாமி
ஆண்: தட்டி எழுப்பினால்
காலை பொறக்கும்
போடி பொண் மயிலே
பெண்: காலை பொறந்தா
கீரை வெரைக்கலாம்
வாடா என் சாமி
ஆண்: வேலி கட்டினால்
வெள்ளாடு தாண்டும்
போடி பொண் மயிலே
பெண்: வெள்ளாடு தாண்டினா
பாலு கறக்கலாம்
வாடா என் சாமி
ஆண்: பாலு கறந்தா
பூனை குடிக்கும்
போடி பொண் மயிலே
பெண்: பூனைக் குடிச்சா
பூனையை அடிக்கலாம்
வாடா என் சாமி
ஆண்: பூனையை அடிச்சா
பாவம் சுத்தும்
போடி பொண் மயிலே
பெண்: பாவம் சுத்தினா
காசிக்குப் போகலாம்
வாடா என் சாமி
ஆண்: காசிக்குப் போனா
காலை நோகும்
போடி பொண் மயிலே
பெண்: காலை நொந்தால்
குதிரை வாங்கலாம்
வாடா என் சாமி
ஆண்: குதிரை வாங்கினா
சவாரி செய்யலாம்
போடி பொண் மயிலே
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி.
-------------
மானங்கெட்ட வண்டி
கிராமத்தில் ஓரு வண்டியை வைத்து வாடகைக்கு விட்டுப் பிழைக்கிறான் இவன். வண்டிக்கு மாடு வேண்டும். அவன் வீட்டில் சோற்றுக்கு இல்லை. மாட்டுக்கு வைக்கோல் எப்படி வாங்குவது? நகரத்துக்கு வண்டியோட்டி போனால் லாந்தர் வைத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் போலீஸ்காரன் தொந்தரவு செய்து காசு பிடுங்குவான். அதற்கு எண்ணெய் வேண்டும் ; வைக்கோல் இல்லாத மாடு வண்டியிழுக்குமா?
இப்பாட்டு அவன் படும்போது மற்றொரு ஜீவனையும் நினைக்கிறான். ஈரப் புழுங்கலை வைத்துக்கொண்டு அவனுடைய மனைவி எப்படிச் சமையல் செய்யப் போகிறாளோ?
வீட்டில் சோத்துக்கில்ல
தீபத்துக்கு எண்ணெயில்ல
மாட்டுக்கு வக்கலில்ல
மானங் கெட்ட வண்டியடி
நடவாத மாட்டோட
நான்படும் பாட்டோட
ஈரப்புழுங்கலோட
என்னபாடு படுதாளோ !
வட்டார வழக்கு: இல்ல-இல்லை ; ஓட-ஓடு ; படுதாளோ-படுகிறாளோ. சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை மாவட்டம்.
-----------
உளியடிக்கும் ஆசாரி
தேர்ந்த பாறைகளின் உச்சிகளில் பழங்காலத்தில் சமணரும், பௌத்தரும் சிற்பங்கள் செதுக்கினர். சைவ, வைணவர்களும் கோயில்கள் அமைத்தனர். பாறைகளைக் குடைந்து குகைக் கோயில்கள் அமைத்தனர். கல் கட்டடங்களாகக் கோயில்களை கட்டத் தொடங்கிய சோழர் காலத்தில் குகைக் கோயில்களை அமைப்பது நின்று விட்டது. அக் கலைத் தொழிலில் திறமையுடையவர்கள், வீட்டுக்குத் தூண்களுக்கு மட்டும் மலையில் உளியடித்துக் கல் வெட்டி வந்தனர். ஆனால் இப்பொழுது அதனையும் இயந்திரங்களும், வெடி மருந்தும் செய்து விடுகின்றன. கல்லில் கற்பனைக் கனவுகளை வடித்தெடுத்த சிற்பிகளின் பரம்பரை, கல் தச்சராகி, இப்பொழுது எத்தொழிலும் இன்றிப் பட்டினியால் வாடுகிறார்கள். பாறையுச்சியில் உளியடிக்கும் ஆசாரியின் காதலி கீழ்மலையில் வேலை செய்கிறாள். அவள்தான் அவருக்குச் சோறு கொண்டு போவாள். பசித்தபோது சப்தமாக உளியடித்தால் சோறு கொண்டு வருவதாக அவரிடம் சொல்லுகிறாள்.
உச்சி மலையிலேயே
உளி யடிக்கும் ஆசாரி
சத்தம் போட்டு உளியடிங்க
சாதம் கொண்டு நான் வருவேன்
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை.
-----------------
நரிக் குறவன்
குறவர் வாழ்க்கையிலுள்ள சுதந்திரம் தமி்ழ்க் கவிகளை கவர்ந்திருக்கிறது. காதல் நூல்களையும், பக்தி நூல்களையும் குறவன் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்துச் சமய்க் குரவர்களும், கவிஞர்களும் எழுதியுள்ளனர். நம்மாழ்வார் குறம், மீனாட்சியம்மை குறம் முதலியன குறத்தி குறி சொல்லுதலைப் பின்னணியாக கொண்ட பக்தி நூல்கள். குற்றாலக் குறவஞ்சி போன்ற இசை நாடக நூல்களும் குறவன் குறத்திக் காதலையும், இறைவன் மீது சீவன் காதல் கொள்ளுவதையும் பொருத்தியும், வேறுபடுத்தியும் காட்டுகிறது. இதற்குக் காரணம் தமிழ் மணமுறையில் தோன்றிய களவு மணமும், இயற்கைப் புணர்ச்சியும் குறிஞ்சி நில மக்களின் வழிவந்த குறவர்களிடம் அழியாமல் காணப்பட்டது. நாகரிக வாழ்க்கையில் காதல் மடிந்துவிட்ட பிறகு அதை நினைந்து ஏங்குபவர்கள் குறவரது காதல் வாழ்க்கையை வியந்து போற்றினார்கள். ஆனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையின் கடுமையை இக் கவிஞர்கள் அறியவில்லை. கீழ்வரும் பாடல் அவர்கள் அன்றாட உணவினைப் பெற என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று கூறுகிறது.
ததிம்மிதா குடதகதா-தக
தத்தாரித்த கிடதக-ததிமி
குருவிக்காரர் நாங்களய்யா-இந்தக்
குவலயக் காட்டினில் குடியிருப்போம்
அரிதாகிய புலி சிறுத்தை
செந்நாய் ஓநாய்களை
நாங்கள் பிடிப்போம்-ததிம்மிதா
கூவி வரும் குள்ளநரி
கோனாயி நொள்ள நரி
கல்லின் கீழ் மேஞ்சு வரும்
கல்ல மொசல் பில்ல மொசல்
கண்டு பிடிப்போம்-மார்....ரோ
காடை கௌதாரி மைனா
கானாங் கோழி குருவிகளாம்
கண்டு பிடிப்போம்-ததிம்மிதா
அண்டத்தில் வலையைக்கட்டி
ஆகாயம் பறந்து வரும்
ஆண்கழுகு பொண் கழுகு
நாங்கள் புடிப்போம்-மார்....ரோ
அல்லடா தில்லாலே டப்பா
அலுக்கு குலுக்கு டப்பா
செம்மை குள்ளத்தாரா சிந்து
செழித்த தஞ்சாவூர் முந்து-ததிம்மிதா
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர் தாலுகா, தருமபுரி மாவட்டம்.
---------------
மாலுக்கடை
உழவன் விளைவிக்கும் பண்டங்களின் விலையைப் பெரிய வியாபாரிகளும், வர்த்தகச் சூதாடிகளும் குறைத்து விடுகிறார்கள். அதனால் எவ்வளவு நன்றாக மேனி கண்டாலும் விவசாயிக்கு பணம் மிஞ்சுவதில்லை.
மாலுக்கடை, கமிஷன் வியாபாரிக்கடை, அவர்களுடைய வியாபாராத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி, மாலுக்கடையை ஏன் கடவுள் படைத்தார் என்று கேட்கிறான். இது முதலாளித்துவ அமைப்பின் சுரண்டல் இயந்திரத்தின் ஒருபகுதி என்று அவனால் உணர முடியவில்லை.கடைதான் அவனை மோசம் செய்வதாக அவன் எண்ணுகிறான்.
களையெடுக்கும் கடமங்குளம்
கணக்கெழுதும் ஆலமரம்
விலை பேசும் மாலுக்கடை
விதிச்சாரே உடையாளி
தரகருக்கும் தட்டப் பாறை
போட்டுக் கட்டும் பொன்னிலுப்பை
விலைபேசும் மாலுக்கடை
விதிச்சாரே உடையாளி
வட்டார வழக்கு: விதிச்சாரே-விதித்தாரே ; மாலுக்கடை-கமிஷன் கடை.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரிவட்டாரம், நெல்லைமாவட்டம்.
-------------
அம்பாப் பாட்டு
வரலாற்று முன்னுரை
தமிழ் நாட்டு கீழ்க்கரை ஓரமாக பண்டுதொட்டு வாழ்ந்து வரும் மக்கள் பரதவ குலத்தினர். கடலை அடுத்து வாழ்ந்த இவர்கள் மீன் பிடித்தல், சங்கு, முத்துக்கள் எடுத்தல் முதலிய தொழில்களைச் செய்து வாழ்கிறார்கள். இத் தொழில்களைச் செய்யக் கட்டுமரங்கள், சிறு படகுகள் முதலியவற்றைச் செலுத்தும் திறமை பெற்றிருந்தனர். இந்தியக் கடற்கரை வியாபாரத்திலும் இவர்கள் நாவாய் செலுத்தி பங்கு பெற்றனர். தமிழ் நாட்டின் புராதன வாணிபத்திற்கும் இவர்களே காரணமாக இருந்திருக்க வேண்டும்.
மீன் ஓர் முக்கிய உணவுப் பொருள். அதனை கடலிலிருந்து எடுத்து அளிப்பவர்கள் வலிமை பெற்றவர்கள். முத்தும், சங்கும் வியாபாரப் பொருட்கள் ; இவை மிகுதியாகக் கிடைத்தால், அரசினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பழங்காலத்திலிருந்து தமிழ் நாட்டு மன்னர்கள் இத்தொழிலுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தனர். இத் தொழில்களைப் பாதுகாக்கவே கொற்கையில் ஓர் தலைநகரை நிறுவி அங்கு ஓர் காவற்படையையும் நிறுவியிருந்தனர். கடல் படு பொருட்களை வாங்குவதற்கு கொற்கையிலேயே ஒரு நாணய சாலையும் இருந்தது. இவையெல்லாம் பாண்டியர் பேரரசு நிலைத்திருந்த காலத்தில் நடைபெற்றது. பதினான்காம் நூற்றாண்டில் அராபியர்கள் வாணிபம் செய்வதற்காகத் தமிழ் நாட்டின் கீழ்க்கடற்கரைக்கு வந்தார்கள். தென்கடல் முத்தையும், தமிழ் நாட்டு துணி, மிளகு, அகில் முதலியனவற்றையும் ஏலம், கிராம்பு முதலிய வாசனைப் பொருள்களையும் அவர்கள் தங்கள் கப்பல்களில் ஏற்றி மேல் நாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். கடல் வாணிபத்தில் பெருநிதி ஈட்டிய அராபியர்கள் காயல் பட்டணத்தில் பண்டகசாலைகள் அமைத்தனர். பாண்டிய அரசர்களுக்கு தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்திவிட்டு முத்து வாணிபத்திற்கு ஏகபோக உரிமை பெற்றனர். அது முதல் அவர்களுக்கும், கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவருக்கும் இடையே முரண்பாடுகளும், சச்சரவுகளும் தோன்றின.
அராபியர்கள் கடற்கரை எந்த அரசின் ஆதிக்கத்திலிருந்ததோ, அவ்வரசர்களைச் சந்தித்து தங்களுடைய வாணிப உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயன்றனர். கடற்கரை ஆதிக்கம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை நாயக்க மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதிகள் ஆகிய மன்னர்களின் கைக்கு மாறி மாறி வந்தது. ஆயினும் அராபிய வியாபாரிகளுக்கும் கடற்கரை மக்களுக்கும் ஏற்பட்ட சச்சரவு தீர்ந்தபாடில்லை.
இம் முரண்பாடுகள் பெரும் போராட்டமாக மாறிற்று. அவர்களிடையே நடந்த மிகப் பெரும்போர் ஒன்றைப் பற்றி 'ஜான் நியூ காவ்' என்னும் டச்சு வியாபாரி கீழ்வருமாறு எழுதியுள்ளார்
'அராபிய வியாபாரிகள் பரதவரது மூக்கையும், காதையும் வெட்டியெறிந்துவிட்டனர். பரதவர்கள், பெரும் கோபமுற்று படை திரட்டி பழிதீர்க்கக் கிளம்பினார்கள். முதல் போரில் அராபிய வியாபாரிகள் சிலர் சிறைப்பட்டனர். அவர்களது மூக்குகளையும் காதுகளையும் அரிந்துவிட்டு அவர்களை விடுதலை செய்து அனுப்பிவிட்டனர். இந்த அவமானத்தைப் பொறுக்கமாட்டாத அராபியர்கள் முப்பதினாயிரம் வீரர்கள் கொண்ட படை ஒன்றைத் திரட்டி தூத்துக்குடிக்கருகில் பாடியிறங்கினர். ஐயாயிரம் பரதவர்கள் ஆயுதம் தாங்கி அராபியரின் படையைத் தாக்கி ஏழாயிரம் படை வீரர்களைக் கொன்றுகுவித்தனர். அவர்களுடைய படை சிதறி ஓடிற்று. இந்த வெற்றிக்குப் பின்னர் பரதவர்கள் கடற்கரை ஓரமாக இருந்த பகுதிகள் அனைத்திலும் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். அராபிய வியாபாரிகள் செலுத்திய வரியைத் தாங்களே விசுவனாத நாயக்கருக்குச் செலுத்துவதாக ஒப்புக் கொண்டனர்.
ஆனால் கப்பல் வலிமை அவர்களுக்கு இல்லாததால் முத்தையும் சங்கையும் எடுத்தாலும் அது விலையாகும் இடங்களுக்குக் கொண்டு சென்று விற்க அவர்களுக்கு வழியில்லை. நாயக்க மன்னர்களுக்கு வரிசெலுத்த அவர்களால் முடியவில்லை. வரி பாக்கிக்காக அரசர் உத்தரவினால் பல பரதவத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிலர் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.
மேற்குத் கடற்கரையில் 1540 ஆண்டு முதலாக போர்த்துக்கீசியர்கள் கடற்கரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை பரதவர்கள் அறிவார்கள். படகோட்டிகள் சிலருக்கு அவர்களோடு வாணிபத் தொடர்பு உண்டு. போர்த்துக்கீசியரிடம் பெரிய கப்பல்கள் இருப்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டால், தங்களுடைய பொருள்களை அவர்களுக்கு விற்று அவர்களுடைய உதவியால் தங்களது கஷ்டங்களிலிருந்து தப்பலாம் என்று எண்ணினார்கள். சில தலைவர்கள் கோவாவிற்குச் சென்று போர்த்துக்கீசிய அதிகாரிகளையும், கத்தோலிக்கச் சாமியார்களையும் அழைத்து வந்தனர். 1533-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர் கப்பல் படையோடு வந்து கிழக்கு கடற்கரையிலுள்ள துறைமுகப் பட்டினங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். பரதவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஞானஸ்நானம் பெற்றனர். பூனைக்குத் தப்பியோடி புலிவாயில் மாட்டிக் கொண்டது போல பரதவர் நிலையும் ஆயிற்று. போர்த்துக்கீசியர் அராபியர்களை விட மோசமாகப் பரதவர்களைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். ஒரே மதத்தைச் சேர்ந்தோராயினும், போர்த்துக்கீசியர்கள் கொள்ளைக்காரர்தான் என்பதை பரதவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருவருக்குமிடையே பெரும் போராட்டம் மூள்வதற்கு முன்பாக போர்த்துக்கீசியர் அவர்களோடு ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள். இதன்படி மணப்பாறை, ஆலந்துலா, வீரபாண்டியன் பட்டணம், புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு என்ற ஏழு துறைமுகங்களிலும் ஏற்றுமதி செய்யும் உரிமையைப் போர்த்துக்கீசியர் பெற்றனர். ஆண்டுதோறும் அவர்கள் ஒரு தொகையும், தங்கள் வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகக் கப்பமாகச் செலுத்தினர். கடற்கரைத் தலைவர்கள் சங்கு குளிப்பையும் முத்துச் சலாபத்தையும் தங்கள் தகுதிக்கு ஏற்ற முறையில் நடத்திக் கொள்ள வேண்டும்.
மதுரை நாயக்கர்கள் கப்பற்படை பலமில்லாததால் போர்த்துக்கீசியர் நடவடிக்கைகளை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அதன் பின்னர், டச்சுக்காரருடைய போட்டி ஏற்பட்டதற்குப் பிறகு நிலைமை மாறியது. போத்த்துக்கீசியரின் உரிமைகளை டச்சுக்காரர்கள் கொண்டாடத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்குக் கப்பல் வலிமை மட்டும்தான் இருந்தது. முதலில் அவர்கள் பரதவர் எதிர்ப்பைச் சமாளிக்க நேர்ந்தது. பரதவர்கள் கத்தோலிக்கர்கள் ; டச்சுக்காரர்கள் பிராட்டஸ்டெண்டுகள். காலம் செல்லச் செல்ல வெளிநாட்டு வியாபாரத்திற்கு டச்சுக் கம்பெனிகளே சாதனமாக இருந்தபடியால் அவர்களோடு வாணிபத் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் பரதவர்களுக்கு ஏற்பட்டது.
தென்னிந்திய அரசியல் அரங்கத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஓங்கியபோது டச்சுக்காரர்கள் ஆங்கிலேயரோடு வியாபாரப் போட்டியில் தோல்வியுற்றுக் கடற்கரைப் பட்டினங்களிலிருந்து வெளியேறினர்.
தமிழ் நாட்டுப் பரதவர் வீரம் மிகுந்தவர்கள். திறமை மிக்கவர்கள். தமிழ் நாட்டின் வரலாற்றில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள்.
அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் கடலில் கழியும். இன்னும் அவர்கள் மீன்பிடித்தல், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் முதலிய தொழில்களையே பெரும்பான்மையாகச் செய்து வருகின்றனர். 1533 க்கு முன்பாக அவர்கள் கடலன்னை என்னும் கடல் தெய்வத்தையும், வருணண், இந்திரன் போன்ற புராண தெய்வங்களையும், முருகன் என்ற தமிழ் தெய்வத்தையும் வணங்கி வந்திருக்கிறார்கள். கடலன்னை தற்பொழுது கன்னி மேரியாகி விட்டாள். பழங்காலத்தில் கடல் பயணத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்துகொண்டார்கள் என்பதற்கறிகுறியாக அவரது பாடல்களில் வேலனும், அல்லாவும் வணக்கத்திற்குரிய தெய்வங்களாகச் சொல்லப்படுகிறது. அவர்களுடைய பாடல்களில் ஆபத்திலிருந்து காக்கும்படி கடவுளை வேண்டிக் கொள்ளுகிறார்கள். வீட்டிலுள்ள மனைவியையும் குழந்தையையும் பற்றி அன்போடு எண்ணிப் பார்க்கிறார்கள்.அவர்கள் படகைக் கடலிலிறக்கும் பொழுதும், தண்டு வலிக்கும் பொழுதும், பாய்மரத்தை மேலேற்றி இறக்கும்பொழுதும், கடலில் போட்ட வலையை இழுக்கும்பொழுதும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த உழைப்போடு கலந்துதான் அவர்கள் பாடல் வெளியாகிறது. கடலில் செல்லும்பொழுது பல மணி நேரம் ஒருவர் மாறி ஒருவர் பாடிக் கொண்டேயிருப்பார்களாம். இம் மக்களின் பாடலுக்கு 'அம்பாப் பாடல்' என்று ஏன் பெயர் வந்தது என்று காரணம் சொல்வது கடினம். ஆனால் கடல் தெய்வம் கடலன்னை என்று அழைக்கப்பட்டதாலும், பின்னர் அத்தெய்வமே கன்னிமா என்று அழைக்கப்பட்டதாலும் இப்பாடல்கள் அம்பாள் பாடல்கள் என்று இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அம்பாள் என்னும் பெயர் பொதுவாகப் பெண் தெய்வத்தைக் குறிக்கும்.
-----------
1
ஏலோ இலோ ஈலோடு வாங்கு
வாங்குடா தோழா
வாழைத்தார் தருவேன்
தேங்காயும் மிளகும் தெரிவிட்ட பாக்கும்
மஞ்சள் இஞ்சி மணமுள்ள செண்பகம்
செண்பக வடிவேல் திருமுடிக் கழகு
வருகுது பெருநாள் தேரோட்டம் பார்க்க
தேரான தேரு செல்லப் பெண்டாட்டி
மாலை மசக்கி மையிடுங் கண்ணாள்
கண்ணுக்குச் செத்த மையிட வேணும்
பொய்யும் பிறக்குமோ பொய்க் கொடியாளே
நானிட்ட வாளை நல்ல சமத்தன்
கோழைப் பயலே கோமுட்டி வயிறா
உனக்கா எனக்கா பல்லாக்கு தனக்கா
வில்லே சரணம் வேந்தன் பாராய்
குறிப்பு: செண்பக வடிவேல்-வேலனைக் குறிக்கும். வில்லே சரணம், வேந்தன் பாராய்-இது இந்திரனையும், அவனது வில்லையும் குறிக்கும். இப்பாடல் பரதவர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவுமுன் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இப்பொழுதும் பாடப்படுகிறது.
------------
2
நாலு தண்டாம் பலவனாக்கு
நடுவ ஒரு பாய் மரமாம்
பாயிழுத்துக் கோசு ஊணி
பருமலுடன் சலுத்தணைந்து
சல் சல்லடம் சடுக்காப்பையா
நீயும் போடா கொய்யாக் கள்ளா
கொய்யாப் பழத்தின் ருசியும்
கொண்டு வந்தாலே தெரியும்
பாரக் கலவா பாப்பர மூஞ்சான்
சேரப்படுக்கும் செல்ல விலை மீன்
பாரக் குழலோ மேக வெளியாய்
ரஞ்சித நடையாள் கெஞ்சுது பாராய்
பண்ணி கிடந்து உறுமுது பாரு
பண்ணியடா ஒரு காட்டுப் பண்ணி
இன்னொரு பண்ணி வீட்டுப்பண்ணி
குறிப்பு: இப்பாட்டில் படகைக் கடலில் இறக்கிச் செலுத்தும் வரையுள்ள வேலைகள் வரிசையாகக் கூறப்படுகின்றன. மீன்களது பெயர்களும் ஒன்றிரண்டு கூறப்படுகிறது. அராபிய முஸ்லீம்களோடு செய்து சண்டையால் ஏற்பட்ட வெறுப்பு அவர்களைக் கேலி செய்யும் முறையில் 'பண்ணி' என்ற வார்த்தையில் வெளிப்படுகிறது. 'பன்றி' என்பது மக்களுக்குப் பிடிக்காது.
-----------
3
மணப்பாட்டுத் திருநாள் வருகுதடி
மதினியை ஒரு சத்தம் போடாதடி
கோட்டாத்துத் திருநாள் வருகுதடி
கொழுந்தியை ஒரு சத்தம் போடாதடி
வாடை முந்தும் கோடை முந்தும்
மாசி மாதம் கொண்டல் முந்தும்
காத்தடிச்சிக் கடல் கலங்கும்
கல்லு போட்டாத் தலை உடையும்
ஓடும் கடல் தனக்கு
உடையவளே எந்தனுக்கு
உல்லன் தட்டிப் பாயுதடி
ஓடப் படிகரை மடியை
உண்ணாமல் திண்ணாமல்
ஊர்ப்பயணம் போகாதடி
ஆளை எண்ணிப்படி போடம்மா
ஆரோக்கிய மாதாவே
4
அல்லாவோட காவலுல
ஆபத் தொன்றும் வாராம
பெரிய உந்தன் காவலுல
பேதகங்கள் வாராம
மரியே உன் காவலுல
மனதிரக்கம் வைப்பாயே
காப்பாத்த வேணுமம்மா
கன்னிமரித்தாயே நீ
பாவிக்கிரங்கும் பரிசுத்த மாதாவே
மாதாவே என்றால் மலையும் இளகுமம்மா
கர்த்தரே என்றால் கல்லும் இளகுமம்மா
கல்லும் மலையும் கரம்பக் கயிறாமோ
வில்லோ சரணமம்மா வேந்தன் மகனார்க்கு
5
வாளா வலை முடிந்து வங்கடைக்கு மால் முடிந்து
கோலா வலை முடித்து குறுக்கட்டாமல் முடித்து
காஞ்சி வனமடியே கள்ளரோட காடடியே
இருளடைந்த சோலையிலே இணைபிரிந்த மான் போல
மானோடா ஓடுறது மறியடா நல்ல தம்பி
மானோடும் தூரமெல்லாம் தானோட வல்லவியோ
வள்ளம் வித்தேன் வலையும் வித்தேன்
வாளா வலை புனையும் வித்தேன்
கொம்பை வித்தேன் குழலை வித்தேன்
குடிக்க இருந்த செம்பை வித்தேன்
எல்லாம் வித்துக் கள் குடித்தேன்
ஏங்குனாப்பில தூங்கிவிட்டேன்
தூங்கி முழிச்சபய தோணி கட்டி வாழ்ந்தபய
வாராயோ காத்த நீயே வளம் பெரிய சோழகமே
சோலையிலே அவ கிடந்து
சுட்ட நண்டுக்கால் பெறக்கி
கால் வழியே ஓடுதம்மா கடிக்கு தம்மா கட்டெறும்பு
கட்டச்சியோ நெட்டச்சியோ
காயலான் தங்கச்சியோ
தங்கச்சியோ பட்டணத்தாள்
தனியே நல்ல முரசு விட்டாள்
போடு லக்கை போடு லக்கை
கைமாத்திப் போடுலக்கை
கள்ளன் வந்தான் திருடன் வந்தான்
கட்டாமைக் காரன் வந்தான்
------------
6
சிலுவை வரைந்து கொண்டேன்
திருப்பாதம் தெண்டனிட்டேன்
கன்னி மேரி மாதாவே
கர்த்தா வே காத்தருளும்
காணிக்கை நேர்ந்தனம்மா நான் ஒரு
கைக் குழந்தை வேணுமின்னு
தெற்கே திருப்பதியாம்
தேவ மாதா சன்னதியாம்
மறப் பதில்லை திருப்பதியை
மனப் பாட்டு முனைக் குருசை
குருசே உனைத் தொழுவேன்
கும்புடுவேன் ஆதரிப்பாய்
வேளையிது வேளையம்மா
வேளாங்கண்ணி மாதாவே
மாதாவே உன்னுதவி-உன்
மகனுதவி வேணுமம்மா
தாயே உனதடிமை
தற்காக்க வேணுமம்மா
நண்டு படும் தொண்டியடா
நகர படும் நம்புதாளை
நம்பிக்கை உண்டுமம்மா
நமக்குதவி நாயனுண்டு
நாயன் அருளாலே
நான் பாடவே துணிந்தேன்
நமக்குப் படைகளுண்டு
நாத சுரக் காரருண்டு
பிச்சிச் சரமோ-நீ
பின்னி விட்ட பூச்சரமோ
பூவைச் சொரிந்தவள் நீ
போன வழி வாராளடா
பச்சை மணக்குதடி
பாதகத்தி உன் மேலே
எல்லை கடந்தாளடி
இலங்கை வனம் கடந்தாள்
தில்லை வனம் கடந்தாள்
திருவணையும் குற்றாலம்
பாராமல் போராளடி
படமெடுத்த நாகம் போல
வட்டார வழக்கு: பலவனுக்கு-பலவை நாக்கு ; கோசு-முன் வாயில் கட்டும் கயிறு ; பருமல்-பாயுடன் சேர்ந்த கம்பு ; சலுத்து-பருமலும் பாய்மரமும் சேர்த்துக்கட்டும் கயிறு ; பாரக் கலவா, பாப்பரமூஞ்சன்-மீன்களின் பெயர்கள் ; வாளா, வங்கடை, கோலா, குருக் கட்டா- மீன்களின் பெயர்கள் ; இவற்றைப் பிடிக்கத் தனித்தனி வலைகள் உண்டு.
குறிப்பு : இவை போன்ற பாடல்கள் பலவற்றை ஆ.சிவசுப்பிரமணியன் சேகரித்துள்ளார்.
சேகரித்தவர் :பீட்டர் முறாயீஸ்; அனுப்பியவர்: S.S. போத்தையா
இடம் : தூத்துக்குடி,
------------
10. ஒப்பாரி
சிறப்பாக வாழ்ந்த குடும்பத்தின் தலைவன் மாய்ந்து போனான். மனைவியைச் சிறுசிறு குழந்தைகளோடு விட்டு அவன் இறந்து போனான். அவள் வாழ்நாள் மட்டும், தான் சீரும் சிறப்புமாக வாழப் போவதாக எண்ணியிருந்தாள். புராதன நகரமான மதுரை நெடுநாட்கள் புகழோங்கி நிலைத்திருப்பது போலத் தன் குடும்பமும் நிலைக்குமென்று கனவு கண்டாள். ஆனால் திடீதென்று கணவன் மாண்டான். தந்தையும், சிற்றப்பன்மாரும் வந்தனர் ; அவர்களிடம் துயரத்தைச் சொல்லிக் கதறி அழுகிறாள் அவள்.
சீமை அழியுதுண்ணு நான்
சிந்தையிலும் எண்ணலியே ;
சீமை அழியலியே-என்
சிறப்பழிஞ்ச மாயமென்ன?
மருத அழியுதுண்ணு நான்
மனசிலேயும் எண்ணலியே !
மருத அழியலியே-என்
மதிப்பழிஞ்ச மாயமென்ன?
கடுகு சிறுதாலி
கல் பதிச்ச அட்டியலாம்
கல்பதிச்ச அட்டியலை-நான்
கழட்டி வைக்க நாளாச்சே
மிளகு சிறுதாலி
வைத்த அட்டியலு
வைச்ச அட்டியலை-நான்
முடிஞ்சு வக்க நாளாச்சே
பட்டு கழட்டி வச்சேன்
பாதம் வரை வெள்ளையிட்டேன்
சிகப்பு கழட்டி வச்சேன்-என்
தேகமெல்லாம் வெள்ளையிட்டேன்
ஆத்துல புல்லறுத்து
அறுகம்புல்லு பந்தலிட்டு
அரும மக தாலி வாங்க-ஒங்க
ஐவருக்கும் சம்மதமோ
குளத்துல புல்லறுத்து
கோரம்பா பந்தலிட்டு
குழந்தை மக தாலி வாங்க-ஒங்க
கூட்டார்க்கும் சம்மதமோ?
வட்டார வழக்கு: மருத-மதுரை ; வச்ச-வைத்த.
குறிப்பு: தனது தகப்பனையும், சிற்றப்பன்மாரையும் பஞ்ச பாண்டவர்களுக்கு ஒப்பிடுகிறார்கள். தவிர நாயக்க மன்னரை வெகுகாலம் எதிர்த்த பஞ்ச பாண்டியர்கள் என்ற குறு நில மன்னர்களை மறவர்கள் தங்களது முன்னோரெனக் கருதுகின்றனர், எனவே 'ஐவர்' என்றாள்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி,நெல்லை.
----------
சீட்டைப் பறித்தானோ?
மனைவியும் கணவனும் செல்வத்தில் திளைத்து இன்ப வாழ்க்கை நடத்தினர். அவர்கள் பொருளுக்குச் சேதம் வராமல் அரண்மனையாரும், கும்பினியாரும் காவல் முறை செய்தனர். ஆனால் உயிரைக் கொள்ளை கொண்டு போக வந்த கால தூதரிடமிருந்து யார் அவள் கணவனைப் பாதுகாப்பது? கணவன் வீரமிக்கவன், எந்தத் திருடனாலும் அவன் கையிலுள்ளதைப் பிடுங்க முடியாது. எப்படித்தான் அவன் சீட்டை கால தூதர்கள் பறித்தார்களோ? ரயிலிலேறிப் போய்க் காலையில் ஓரிடத்திலும், மாலையில் மற்றோரிடத்திலும் களவு செய்யும் பக்காத் திருடர்களைவிட கால தூதர்கள் கடிய வேகத்தில் சென்று உயிரைத் திருடும் கள்வர்களோ என்று மனைவி கேட்கிறாள்.
வெள்ளிச் சுருணை வரும்
விதமான நெல்லு வரும்
விதமான நெல் அவிக்க
மேகத்துத் தண்ணி வரும்
தங்கச் சுருணை வரும்
தனிச் சம்பா நெல்லு வரும்
தனிச்சம்பா நெல்லவிக்க
தந்தி மேல் தண்ணி வரும் !
அல்லியும் கொய்யாவும்-அரமணையில்
அலுங்கப் பழுத்திருக்க
அசையாம காலுவைக்க
அரமணையார் காவலுண்டும்
கொய்யாவும் பிலாவும்
குலையாய் பழுத்திருக்க
கூசாமல் காலு வைக்க
கும்பினியார் காவலுண்டும்
அடிக்க வந்த தூதுவரை
அடியாள் சரணமின்னேன்.
கொல்ல வந்த தூதுவரை
கோடி சரணமின்னேன்
காலை ரயிலேறி
கல்கத்தா போயிறங்கி
காசப் பறிச்சானோ
கைவிலங்கு போட்டானோ
சிகப்பு ரயிலேறி
சீமைக்கே போயிறங்கி,
சீட்டப் பறிச்சானோ?
சிறுவிலங்கு போட்டானோ
வட்டார வழக்கு: தந்திமேல் தண்ணி-அவசரமாக ; தூதுவர்-எமதூதர்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி,நெல்லை.
-----------
மதினி கொடுமை
கணவனையிழந்தவளுக்குப் பிறந்த வீட்டில் மதிப்பில்லை. அவ்வீட்டுச் சொத்து சுகங்களில் அவளுக்குப் பங்கில்லை. இதனால் புகுந்த வீட்டின் கொடுமைகளுக்கு அஞ்சி, பிறந்த வீடு செல்லுவோம் என்றால் அங்கு அவளுக்கு வரவேற்பிராது. தண்ணீர் குடிக்கத் தூரத்திலுள்ள ஊற்றுக்குப் போனால் கூட நிரம்பத் தண்ணீர் குடித்துவிடக் கூடாது என்பதற்காகத் தலையாரியைக் கூட அனுப்புகிறார்கள். கணவனையிழந்த ஒருத்தி பிறந்த வீட்டு நிலைமையை எண்ணி அங்கு தன் மதனியார் தன்னை பெருஞ் சுமையெனக் கருதுவார்கள் என்பதை இலைமறை காயாகக் கூறுகிறாள்.
கள்ளிமேல் கத்தாழ
கருணைனெல்லாம் எம்பிறப்பு
கருணணுக்கு வந்தவளே-என்னை
மதிக்காளில்லே
வேலி மேல் கத்தாழ
வீமனெல்லாம் எம்பிறப்பு
வீமனுக்கு வந்தவளே-என்னை
விலையா மதிக்காளில்ல
தண்ணி தவிச்சு-நான்
தலைமலை ஊத்துக்கே போனாலும்
தலைமலை ஊத்துலயே-எனக்கு
தலையாரி காவலுண்டும்
மெத்தத் தவிச்சு நான்
மேமலை ஊத்துக்கே போனாலும்
மேமலை ஊத்துலேயே-எனக்கு
மெல்லியரே காவலுண்டும்
பல்லிலிடும் பச்சத்தண்ணி
பழனிமலைத் தீர்த்தம் என்பார்
நாவிலிடும் பச்சத்தண்ணி
நாகமலைத் தீர்த்தமென்பார்
வட்டார வழக்கு: எம்பிறப்பு-என் உடன் பிறந்தோர் ; கத்தாழ-கற்றாழை ; மதிக்காளில்லை-மதிக்கிறாள் இல்லை.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி,நெல்லை
---------
ஆசையுண்டோ?
மங்கலப் பொருள்கள், மணம் வீசும் நறுமலர் இவையாவும் அவளுக்கு விருப்பமானவை. கணவன் இறந்ததும் இவற்றிற்கெல்லாம் இனி எனக்கு ஆசையுண்டோ? என்று கேட்கிறாள். கணவன் இறந்ததும் ஆசைகளும் இறந்துவிட வேண்டியதுதான். அது தான் சமூகச் சட்டம்.
பத்தடுக்குத் தாம்பாளம்
பால்காப்பி நெய்த்தோசை
பாத்துப் பலுமாற-அய்யோ
பத்துமணியாகும்
பத்துமணியாகும்-அய்ய
பத்தரையும் பாசாகும்
எட்டடுக்குத் தாம்பாளம்
எடுத்துவைத்த நெய்த்தோசை
எடுத்துப் பலுமாற-ஐயா
எட்டு மணியாகும்
எட்டு மணியாகும்
எட்டரையும் பாசாகும்
கோட்டை வாசலிலே
கொழுந்து வந்து விக்குதிண்ணு
கொண்டவரைத் தோத்தேன்-எனக்குக்
கொழுந்து மேல் ஆசையுண்டோ
தெக்குக் கோட்டை வாசலில
செவந்தி வந்து விக்குதிண்ணு
சீமானத் தோத்தேன்-எனக்குச்
செவந்தி மேல் ஆசையுண்டோ
வடக்குத் தலை வாசலிலே
மருவு வந்து விக்குதுண்ணு
மன்னவரத் தோத்தேன்-எனக்கு
மருவு மேல் ஆசையுண்டோ
அஞ்சு படித் துறையும்
அத்தருடன் பன்னீரும்-நான்
அள்ளிக் குளிப்பாட்ட-நான்
அகலத்தாள் ஆயிட்டேனே !
தோட்டம் படித்துறையும்
துறைமுகத்துப் பன்னீரும்
தொட்டுக் குளிப்பாட்ட-நான்
பொன்பதிச்ச மேடையில-நான்
பொன்பதிச்ச மேடையில
போக வர நீதியில்ல
காச்ச முருங்க
கல் பதிச்ச மேடையிலே
கல் பதிச்ச மேடையிலே-நான்
காலு வக்க நீதியில்ல
அரிராமர் கோட்டையில
அல்லி ஒரு பெண் பிறந்தாள்
அல்லி படுபிள்ளையில்லைம் பாதரவை
அருச்சுனரே பார்க்கலியோ
வட்டார வழக்கு: பலுமாற-பரிமாற ; தோத்தேன்-இழந்தேன் ; மருவு-மருக்கொழுந்து ; குளிப்பாட்ட-கணவனைக் குளிப்பாட்ட ; அல்லி-தன்னைக் குறிப்பிடுகிறாள் ; பாதரவு-துன்பம்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி,நெல்லை மாவட்டம்.
----------
கார் விபத்தில் இறந்தான்
ஒரு காரில் தனது எசமானனுடன் வேலைக்காரன் சென்றான். கார் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. வேலைக்காரன் இறந்துபோனான். போலீசக்காரர்கள் நொறுங்கிய காரையும், பிணத்தையும் சுற்றி நின்றார்கள். பெருங்கூட்டம் கூடிவிட்டது. டிரைவரும், எசமானும் அடிபட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்து போனவனுடைய மனைவிக்குச் செய்தி அனுப்பப்பட்டது, அவள் அழுதடித்துக் கொண்டு ஓடி வந்தாள். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவள் உள்ளே செல்ல முடியவில்லை. அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அவள் அதிகாரிகளை அழைத்து தன்னை உள்ளே விடும்படி கதறினாள். அவளை உடனே அழைத்துவர உத்தரவிட்டனர். இது போன்ற ஒப்பாரிகள் மிகவும் அபூர்வமானவை.
சாஞ்ச பணிகளாம்
சத்தமிடும் மோட்டாராம்
சத்தமிடும் மோட்டாரில்
சாஞ்சிருந்த மன்னரெங்கே?
சாஞ்சிருந்த மன்னருக்கு
தயவு சொன்ன டிரைவரெங்கே?
சத்தமும் ஆனதென்ன?-இதில்
உயிர்க்கொலையும் ஆனதென்ன?
ஜனத்தை விலக்கிவிடு
தாசில்தார் என் தகப்பா
காசு கொண்டு வந்த-என்
தருமரவே நான் பார்க்க
உருண்ட மணிகளாம்
ஓச்சமிடும் மோட்டாராம்
ஓச்சமிடும் மோட்டாரில்
உக்காந்த மன்னரெங்கே?
உண்மை சொன்ன டிரைவரெங்கே
உருண்ட மணிகளெங்கே?
ஓசையிடும் கார்களெங்கே?
ஓசையிடும் காருக்குள்ள
உட்கார்ந்த மன்னரெங்கே?
உட்கார்ந்த மன்னருக்கு
உத்திசொன்ன டைவரெங்கே?
தங்க மணிகளெங்கே?
தனிச்சு வந்த காரையெங்கே
தனிச்சு வந்த காருக்குள்ள
சாஞ்சிருந்த மன்னரெங்கே?
சாஞ்சிருந்த மன்னருக்கு
சாச்சி சொன்ன டைவரெங்கே?
பொன்னு மணிகளெங்கே?
போயி வந்த காரு எங்கே?
போயி வந்த காருக்குள்ளே
போலீசார் மன்னரெங்கே?
போலீசார் மன்னருக்கு
புத்தி சொன்ன டைவரெங்கே?
வெள்ளி மணிகளெங்கே?
விசயனார் காரு எங்கே?
விசயனார் காருக்குள்ளே
வீத்திருந்த மன்னரெங்கே?
வீத்திருந்த மன்னருக்கு
வித்தை சொன்ன டைவரெங்கே?
கூட்டத்த விலக்கி விடு
கோட்டாரே என் தகப்பா!
கோடி கொண்டு வந்த-எந்தனை
கொண்டவர நான் பார்க்க.
வட்டார வழக்கு: மணி-மாட்டுக்கு மணிபோலக் காருக்கு ஹார்ன்; ஓச்சம்-சப்தம்; டைவர்-டிரைவர் (பேச்சு)
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி,நெல்லை.
----------
கலகத்தில் இறந்தவன்
சாதிக் கலகங்கள் சிறு காரணங்களால் கூடத் தோன்றிவிடும். இத்தகைய கலகமொன்றைப் பற்றி முன்னர் கூறியுள்ளோம். கலகம் ஒன்றில் அவளுடைய கணவன் திடீர் மரணமடைந்தான். போலீசு காவலில் அவனுடைய பிணம் கிடந்தது. அழுது பிதற்றிக் கொண்டு பிணத்தைக் காண வந்த மனைவியின் ஒப்பாரி இது. இதுவும் அபூர்வமானது.
கூட்டம் நடந்த தென்ன
கொலைக் கேசு ஆனதென்ன
கூட்டத்த விலக்கி விடு
கோட்டாரே என் தகப்பா
கோடி முகத்தை நான்பார்க்க
சண்டை நடந்த தென்ன?
தனிக்கூட்டம் ஆனதென்ன?
சண்டைய விலக்கி விடு
தாசில்தார் என் தகப்பா
ஜனத்தை விலக்கி விடு
தனிமுகத்தை நான் பார்க்க
கலகம் நடந்ததென்ன
கைகலப்பு ஆனதென்ன
கலகத்தை விலக்கிவிடு
கலைக்டரே என் தகப்பா
கட்டி முகம் நான்பார்க்க
மலையிலே வாளிருக்க-நான்
மலையிண்ணு எண்ணியிருந்தேன்
மலையில் வாள் சாஞ்சவுடன்
மலைவு மெத்த தோணுதய்யா
வட்டார வழக்கு: மலையில் வாள்-கணவன். அவன் இறந்ததும் வலிமை குன்றியதாகத் தோன்றுகிறது.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி,நெல்லை.
----------
கணவனை இழந்தாள்
தாய், தகப்பன் இறந்து விட்டால், பிறரை தாய் தகப்பனென்று பாவித்துக்கொள்ளச் சொல்லி மகளைத் தேற்றலாம். “கணவனையிழந்தார்க்குக் காட்டுவதில்” என்றார் இளங்கோவடிகள். இது மனித உறவு முறிவுகளில் மிகவும் அடிப்படையானது. இது தனிப்பட்ட உணர்ச்சி வற்றிவிடுவது மட்டுமல்ல. கணவனிறந்து, ஆண் சந்ததியுமில்லாது போனால் அவளுக்குப் புகலிடம் இன்றிப் போய்விடும். அவளுடைய மைத்துனர்கள் “சோறும், துணியும்” வாங்கிக் கொள்ளத் தானம் கொடுப்பார்கள். பிறந்த வீட்டிலோ, அண்ணன் தம்பியர் மனைவிமாரது ஆதிக்கம் ஓங்கியிருக்கும். அங்கும் அமைதியாக வாழ முடியாது. ஆகவே தினசரி வாழ்க்கையிலேயே சுதந்திரமிழந்து பிறரை அண்டி வாழவேண்டிய நிலைமை தோன்றிவிடும். கணவன் சாவினால் ஏற்படும் தனிமையுணர்வு, அன்புடையவன் பிரிந்தான் என்ற எண்ணத்தால் மட்டும் ஏற்படுவதல்ல. பெண்ணினம் சமூகக் கொடுமைக்கு உள்ளாகி வாழ்க்கை முழுவதும் நைந்து சாக வேண்டியிருப்பதை எதிர்பார்த்து எழும் வேதனைக் குரலும் ஆகும். தனது நிகழ்கால வாழ்க்கை கவிழ்ந்து வருங்காலத்தில் எண்ணற்ற துன்பங்களை எதிர்நோக்கும் குழந்தையற்ற ஒரு பெண் தன் கணவன் இறந்ததும் அழுகிறாள். அவளுடைய ஒப்பாரி இது.
தோணி வருகுதுண்ணு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்ல
கப்பல் வருகுதுண்ணு-நான்
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற்கரையே ஆசையில்ல
கொச்சி மலையாளம்
கொடி படரும் குத்தாலம்
கொடிபடர்ந்து என்ன செய்ய
என் குணமுடையார் இல்லாமே
மஞ்சி மலையாளம்
மா படரும் குத்தாலம்
மா படர்ந்து என்ன செய்ய
மதிப்புடையார் இல்லாம
-----------
அருமை குறைந்தேன்
தங்கச் சிணுக்குவரி
தணலடியா மைக்கூடு
தணலடிச்ச நேரமெல்லாம்-என்
தங்கநிறம் குண்ணிருச்சே
பொன்னும் சிணுக்குவரி
புகைபடா மைக்கூடு
புகைப்படா நேரமெல்லாம்
பொன்னு நிறம் குண்ணிருச்சே
சாவுவரை துன்பம்
போலீசார் தீர்மானம்
பொழுதடைஞ்சா தீருமண்ணே
பொண்ணடிமைத் தீர்மானம்
போய் முடிஞ்சாத் தீருமண்ணே
தாசில்தார் தீர்மானம்
சாயந்தரம் தீருமண்ணே
சண்டாளி தீர்மானம்-என்
தலைமுடிஞ்சால் தீருமண்ணே
என் துயர்
சந்தன நெல்லிமரம்
சாதிப்பிலா மரமே
தன்மைகளைச் சொல்லிட்டா
தாசில்தார் கச்சேரியும்
தானே புரண்டழுகும்
குங்கும நெல்லிமரம்
கோடிப் பிலா மரமே-நான்
கொடுமைகளைச் சொல்லிட்டா
கோட்டார் கச்சேரியும்
கூடப் புரண்டழுகும்
------------
பிறந்த வீடு
பல்லு விளக்கி-நான்
பிறந்த இடம் போனாலும்
படியேறிப் போனாலும்-எனக்குப்
பல்லிலிடும் பச்சத் தண்ணி-ஐயா
பழனி மலைத் தீர்த்தமென்பார்
நாவை விளக்கி நான்
நடுத் தெருவே போனாலும்
நாவிலிடும் பச்சத் தண்ணி-எனக்கு
நாகமலைத் தீர்த்தமென்பார்
புள்ளை இடுக்கி-நான்
புறந்த எடம் போனாலும்
புள்ளைக்குச் சீருண்டும்
மத்தொரு நாள் தங்கலுண்டும்
பிள்ளைக்குச் சீருமல்ல
பின்னொரு நாள் தங்கலில்ல
மக்களை இடுக்கி நான்
மத்தொரு நாள் போனாலும்
மக்களுக்குச் சீருண்டும்
மத்தொரு நாள் தங்கலுண்டும்
மக்களுக்குச் சீரில்ல
மத்தொரு நாள் தங்கலில்ல
இவளுக்குப் பிள்ளையில்லை, பிள்ளையிருந்து கணவன் இறந்த பின் பிறந்த வீடு போனால் ஒருநாள் தங்கச் சொல்லி பிள்ளைக்கு ஏதாவது சீர் கொடுப்பார்கள். என்னை யார் அழைத்து வீட்டிலிருக்கச் சொல்லுவார்கள் என்று ஏங்குகிறாள். தண்ணீர் கேட்டால் கூட ஒரு கரண்டி நீர் கொடுத்து 'இது அபூர்வமான கோயில் தீர்த்தம்' என்று சொல்லுவார்கள். அதற்கு மேல் கொடுக்க மாட்டார்கள் என்று வருந்துகிறாள்.
-------------
நானும் உழைத்தேன்
கத்திரியும் பாவையும்
கலந்தேன் ஒரு பாத்தி
கருணன் உடன் பிறந்து-நான்
கசந்தேன் பிறந்தெடத்த
வெள்ளரியும் பாவையும்
வெதச்சேன் ஒரு பாத்தி
வீமன் உடன் பிறந்து-நான்
வெறுத்தேன் பிறந்தெடத்தெ
வெள்ளைத் துகிலுடுத்தி-நான்
வீதியில போனாக்க
வெள்ளாளன் பிள்ளையென்பார்
வீமனோட தங்கையென்பார்
இளமையில் தாய், தகப்பன், சகோதரர்களோடு இவளும் பிறந்த வீட்டு வயலில் பாத்திகட்டி கத்திரிச் செடியும் பாகைச் செடியும் பயிர் செய்து பாடுபட்டிருக்கிறாள். ஆனால் விதவையாகி பிறந்த வீட்டுக்குப் போனால், வெள்ளாளன் மகள், வீமன் தங்கை என்று ஊரார் அடையாளம் கண்டு கொள்ளுவார்கள். ஆனால் பிறந்த வீட்டில் தங்கி வாழ முடியுமா?
---------
பட்டேன் படாத துயரம் !
மடிகட்டிக்கல் பெறக்கி
மண்டலங்கள் உண்டுபண்ணி
மண்டபமும் இங்கிருக்க
மயில் போன மாயமென்ன
கூட கொண்டு கல் பெறக்கி
கோபுரங்கள் உண்டு பண்ணி
கோபுரமும் இங்கிருக்க
குயில் போன மாயமென்ன
தூண்டா மணி விளக்கு
சுவரோரம் நிண்ணெரியும்
தூசி பட்டால் மங்காது-என்னோட
துயரம் சொன்னால் மங்கிவிடும்
காந்தா மணி விளக்கு
கதவோரம் நின்னெரியும்
காத்தடிச்சா மங்காது என்னோட
கவலை சொன்னா மங்கிவிடும்
பூத்த மரம் கீழிருந்து-என்
பொண் பாட்டைச் சொல்லிவிட்டா
பூத்த மரமெல்லாம்
பூமாறிப் போயிடுமே
காய்ச்ச மரம் கீழிருந்து-என்
கவலையச் சொல்லி விட்டா
காய்ச்ச மரமெல்லாம்
காய் மாறிப் போயிடுமே
கேள்வியில்லை
தங்க மலையிலேயே
தரகறுக்கப் போனாலும்
தங்கமலைக்காரன்
தனிச்சடிச்சாக் கேள்வியில்லை
பொன்னு மலையோரம்
புல்லறுக்கப் போனாலும்
பொன்னுமலை வேடர்கள்
புகுந்தடிச்சாக் கேள்வியில்லை
வெள்ளி மலையோரம்
விறகறுக்கப் போனாலும்
வெள்ளிமலை வேடுவர்கள்
விரட்டியடிச்சாக் கேள்வியில்லை
விதவையை யாரும் மதிக்கமாட்டார்கள். துணைவனோடு வாழும்போது அவளுக்குத் துணிவு இருந்தது. ஆதரவு இருந்தது. இப்பொழுது பழைய வேலைகளுக்கு அவள் போனால் அவளை யாராவது கொடுமைப்படுத்தினால் அவளுக்கு ஆதரவு யார்? எல்லோரும் இழிவாக கருதுவதனால் வேலைக்கு போகாமல் இருக்க முடியுமா? வேலை செய்தால்தானே கஞ்சி காய்ச்ச முடியும்?
அமங்கலி
வாழயிலை கொண்டு-ஒங்க
வளசலுக்கே போனாலும்
வாழலைக்குச் சாதமில்லை-ஒங்க
வளசலோட ஆசையில்ல
தேக்க இலைகொண்டு
தெருவோட போனாலும்
தேக்கிலைக்குச் சாதமில்லை-எங்க
தெருவோட ஆசையில்ல
அல்லியும் தாமரையும்
அடரிப் படர்ந்தாலும்
அல்லி பாக்க வந்தவுக-என்னை
அசநாட்டார் என்பாக
முல்லையும் தாமரையும்
முறுக்கிப் படர்ந்தாலும்
முல்லை பாக்க வந்தவுக-எனை
மூதேவி என்பாக
படியில் அரிசி கொண்டு
பழனிமலை போனாலும்
பழனிமலைப் பூசாரி-எனக்கு
பலனும் இல்லை என்பாரு
சொளவு அரிசி கொண்டு
சுருளிமலை போனாலும்
சுருளிமலைப் பூசாரி-எனக்கு
சுகமில்லை என்பாரு
விதவை வாழ வழியற்றவள் என்பது மட்டுமல்ல. அவள் ஓர் உயிருள்ள பிணம். மங்கல நாட்கள், திருவிழாக்கள், மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் பண்டிகைகள் இவற்றில் அவள் ஒதுங்கியிருக்க வேண்டும். அவள் எதிரே வந்தால் தீயநிமித்தம்; விதவை தாயாக இருந்தாலும், மங்கல நாட்களில் ஒதுங்கியே இருக்க வேண்டும். இதுவே அவளை உயிரோடு வாட்டி வதைப்பது. ஒரு குழந்தையிருந்தால் இவற்றையெல்லாம் மறக்க அது துணை செய்யும்.குழந்தையும் அவளுக்கி்ல்லை.அவள் துயரத்தை அளவிட முடியுமா? குழந்தைக்குச் சொத்தில் பங்குண்டு. அவன் உணர்வுக்கு இனியவன் மட்டுமல்ல, வாழ்க்கைக்கு வழி உண்டாக்குபவன். அவனை வைத்துக் கொண்டு தானும் வாழலாம். தனியே இருக்கும் விதவையை மைத்துனன்மார் விரட்டிவிட்டால் என்ன செய்வது? கோர்ட்டில் நியாயம் கிடைக்குமா? குழந்தை இருந்தால் நியாயமுண்டு. இல்லாவிட்டால் நியாயமில்லை. பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாதிருக்கும் நிலையில், பெண்களுக்கு நேரும் துயரநிலையை இவள் நம் கண்முன் கொண்டு வருகிறாள்.
மஞ்சணத் தொந்தியில
மைந்தன் பிறந்தாக்க
மைந்தனக்குப் பங்குண்டும்
மதுரைக் கோட்டிலேயும் நியாயமுண்டும்
மஞ்சணத் தொந்தியில
மைந்தன் பிறக்கலியே
மைந்தனுக்குப் பங்குமில்ல
மதுரைக் கோட்டுலயும் ஞாயமில்லை
குங்குமத் தொந்தியில
குழந்தை பிறந்தாக்க
குழந்தைக்குப் பங்குமுண்டும்-மதுரைக்
கோட்டுலயும் நியாயமுண்டும்
குங்குமத் தொந்தியிலே
குழந்தை பிறக்கலயே
குழந்தைக்குப் பங்குமில்ல-மதுரைக்
கோட்டுலயும் நியாயமில்ல
மஞ்ச வச்சாப் பிஞ்செறங்கும்
மணல் போட்டா வேர் எறங்கும்
மந்திரிமார் பெத்தமக
மலடி எனும் பேரானேன்
இஞ்சி வச்சாப் பிஞ்செறங்கும்
எருப்போட்டா வேர் எறங்கும்
இந்திரனார் பெத்த மக
இருசி யெனும் பேரானேன்.
வட்டார வழக்கு: மஞ்சி-மேகம் ; மா-மாமரம் ; சிணுக்குவரி- கூந்தல் சிக்கலை எடுக்கும் இரும்பு ஊசி ; குண்ணிருச்சே-குன்றி விட்டதே (பேச்சு) ; மத்தொரு-மற்றும் ஒரு (பேச்சு) ; எடத்தே-இடத்தை ; பெறக்கி-பொறுக்கி (பேச்சு) ; நிண்ணெரியும்-நின்று எரியும் (பேச்சு) ; வளசல்-குடும்ப வீடுகளுள்ள வளைவு ; தேக்கிலை-மலையடிவாரக் கிராமங்களில் தேக்கிலையில் உணவு படைப்பார்கள் ; அடரி-அடர்ந்து ; இருசி-மலடி.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை.
----------
நின்னொரு நாள் வாழலியே
மலையோரத்துக் கிராமம் ஒன்றில் இளைஞன் ஒருவன் வாழ்ந்தான். அவனுக்கு மணமாகி மனைவியோடு இன்பமாக வாழ்ந்து வந்தான். அவ்வூராருக்கும், அடுத்த ஊரில் வாழ்ந்து வந்த வேறு ஓர் சாதியினருக்கும் நீண்ட நாளாகப் பகைமை உண்டு. இப்பகை முற்றி கலகமாக மாறிற்று. அவர்கள் படையெடுத்து வந்து பகல் வேட்டுப் போட்டு ஊரைக் கொள்ளையிட்டார்கள். இளைஞன் ஊரைக் காப்பாற்ற போராடினான். போராட்டத்தில் அவன் உயிர் நீத்தான். உளுந்தும், சாமையும் காயப்போட மலைச்சரிவுக்குச் சென்றிருந்த அவனது மனைவி செய்தி அறிந்து அரற்றினாள். அழுதடித்துக் கொண்டு ஊர் திரும்பினாள். அவனுடைய தங்கைக்கு ஆள் விட்டாள். அவள் அவனோடு வாழ்ந்தது சில ஆண்டுகளே. ஆயினும் வயல் வேலைகளை யெல்லாம் இருவரும் சேர்ந்தே மகிழ்ச்சியோடு ஒத்துழைத்துச் செய்து வந்தனர். அவளுடைய உணர்ச்சித் துடிப்பும், வருங்காலம் பற்றிய துன்ப நினைவுகளையும் எண்ணி ஒப்பாரியாகப் பாடி புலம்புகிறாள். இவளது தனிமையைப் போக்கக் குழந்தையும் இல்லை.
கொள்ளை
பட்டணமும் ஜில்லாவாம்
பவுஷாப் பிழைக்கையிலே
பகல் வேட்டுப் போட்டல்லவோ
பட்டணத்தைக் கொளைளையிட்டார்
தெக்ஷிணையாம் ஜில்லாவாம்
செருக்காப் பிழைக்கையிலே
தீ வேட்டுப் போட்டல்லவோ
தெக்ஷிணையைக் கொள்ளையிட்டார்
வருமுன் மாய்ந்தான்
உருண்ட மலையோரம்
உளுந்து கொண்டு காயப்போட்டேன்
உளுந்து அள்ளி வருமுன்னே-உன்னோட வாசலில
உருமிச்சத்தம் கேட்டதென்ன
சாய்ஞ்ச மலையோரம்
சாமை கொண்டு காயப்போட்டேன்
சாமி வருமுன்னே
சங்குச் சத்தம் கேட்டதென்ன?
பிள்ளையில்லை
முட்டங்கால் தண்ணியில
முத்தப் பதிச்சு வச்சேன்
முத்தெடுக்கப் பிள்ளையுண்டோ?-உனக்கு
முடியிறக்கப் பிள்ளையில்லை
கரண்டக்கால் தண்ணியில
காசப் புதைச்சு வச்சேன்
காசெடுக்கப் புள்ளையுண்டோ?-உனக்கு
கருமம் செய்யப் புள்ளையில்லை
பாதி நாள் வாழவில்லை
பாலூத்திப் பாத்தி கட்டி
பாக்குமரம் உண்டாக்கி
பாக்கும் தழையிலையே
பாதி நாள் வாழலையே
நெய்யூத்திப் பாத்தி கட்டி
நெல்லி மரம் உண்டாக்கி
நெல்லியும் தழையலியே-நான்
நிண்ணொரு நாள் வாழலியே
ஒப்புத் தெரியலிண்ணு
கொப்பு நிறுத்தி வச்சேன்
கொப்பைத் திருப்ப எனக்கு ஒரு
கோடை மழை யெயலியே
சீரகம் பூப்பூக்கும்
செடி முறிக்கி பிஞ்செறங்கும்
சீராளன் இல்லாம-நான்
செடியோட வாடுதனே
கொத்தமல்லி பூ பூக்கும்
கொடி முறுக்கிப் பிஞ்செறங்கும்
கூர் வாளன் இல்லாமே-நான்
கொடியோடு வாடுதனே !
லோட்டா வௌக்கி வச்சு
ரோசாப்பூ உள்ளடச்சேன்
ரோசாப்பூ கவுந்ததென்ன?-நான்
ரோசாப்பூ வாடுதனே
செம்பு விளக்கி வச்சு
செம்பகப்பூ உள்ளடச்சு
செம்பு கவுந்ததென்ன?-நான்
செம்பகப்பூ வாடுதனே !
கொழுந்தி வருவதில்லை
வெள்ளிரியும் பாவையும்
விதைச்சேன் ஒரு பாத்தி
வீமனோட தங்கையல்லோ-
வெறுத்தாள் பிறந்தெடத்த
உளுத்தம் பயிரறியேன்
உச்சிப் பயிர் நானறியேன்
ஊரார் சொல் வார்த்தைக்கு
உயிர் வச்சு நானறியேன்
பச்சைக் குருத்தோலை
பகவான் அழைச்சானோ?
எட்டுக் குருத்தோலை-ஐயா உன்னை
எமன் அழைச்சானோ?
செத்தையின்னு சேதி கொண்டு
சீதைக்கு ஆளு விட்டு
சவத்தத் தூக்கு மின்னே-என் ஐயா
சீதையுமே வந்தாளே
சிந்தாமக் குத்தி
சிதறிப் பொரி பொறிச்சு
சீதை அழுது வந்தா
சிறு மண்டபங்கள் ஓசையிட
வட்டார வழக்கு: தெஷிணை-தென்மாவட்டங்கள் ; உருமி-உடுக்கை போன்ற ஒரு தோல் கருவி.
குறிப்பு: தகப்பன் இறந்தால் பல சாதியினர் மொட்டையடித்துக் கொள்ளுவார்கள். கருமம் மூத்த மகன் செய்ய இளைய மக்கள் உதவி செய்வார்கள்.
பாதுகாவலனாக இருந்த 'சீராளன்', 'கூர்வாளன்' மாய்ந்து விட்டான். சீரகம், கொத்தமல்லி ஆகிய இளஞ்செடிகள் கணவனையிழந்தவளுக்கு உவமை. ஊரார் சொல் வார்த்தை-தங்கை அண்ணன் இருவரிடையே சண்டை மூட்டி விட்டவள்தான் என்ற பழிச்சொல்.
தென்னங் குருத்தோலையை முடைந்து அதில் பிணத்தைக் கிடத்தி பாடையுடன் தூக்கிச் செல்லுவார்கள். நெல்பொரி பொரித்து அதனை பிணத்தைத் தூக்கிச் செல்லும் வழியில் காசோடு கலந்து வாரி இறைப்பர். இன்றும் நம் தமிழகத்தில் சில பகுதிகளில் நடந்து வருகிறது.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை.
------------
பகவான் அழைச்சானோ
இவள் கணவன் கிராமத்தில் அதிகாரியாக வாழ்ந்தவன். அவன் இறந்தவுடன் அவள் அவனது பெருமையையெல்லாம் சொல்லி ஆற்றுகிறாள். இவன் திடீரென்று இறந்து விட்டதால் எதிர்பாராத துக்கத்தில் மனைவி ஆழ்ந்து விட்டாள். பல உவமைகள் மூலம் அவள் தனது துன்பத்தை வெளியிடுகிறாள்.
ஏக்கம்
சித்திரக்காலி செவந்த-நான்
செவந்த மணவாரி
உப்பூத்தி நெல்லிலே-என்ன
ஊட கலந்தியளே
நந்தவனம் பூஞ்சோலை
நடுக்கிணறு சாவடியாம்
தங்கப் புண்ணியர்-இல்லாமே-அய்யா
புதுக்கிணறு பாழாச்சே
செப்போடு போட்டு
சிங்கம் போல் தூணிறுத்தி
எப்போதும் போல-மன்னா-உம்மை
உடனிருக்கத் தேடுதனே
பத்து வகைப் பச்சிலையாம்
பார்வதியாள் மாத்திரையாம்
பார்வதியாள் உரைக்குங்குள்ளே-உம்ம
பகவான் அழைச்சானோ?
பெருமை
தூணுல சாஞ்சு-நீங்க துரைகளோட வாதாடி
தூணும் துணுக்கிட-உங்க
துரை அடிமை வாக்குரைப்பான்
கல்லில சாஞ்சு-நீங்க
கணக்கனுட வாக்குரைக்க
கல்லும் துணிக்கிட்டா-அந்தக்
கணக்கனுமே வாக்குரைப்பான்
விரலும் கணக்கெழுதும்-உங்க
வெள்ளை மொழி தூதாகும்-உங்க
கையும் கணக்கெழுதும்-உங்க
கருத்த மொழி தூதாகும்
சட்டிமேல் சட்டி வச்சு-நான்
சரியாய் பிழைச்சு வந்தேன்
சட்டி கவுந்ததென்ன?-எனக்கு
சனியன் தொயந்த தென்ன?
மடிகட்டிக் கல் எறக்கி
மண்டபங்கள் உண்டு பண்ணி,
கோபுரத்தின் கீழே நான்
குழந்தை குடியிருந்தேன்,
கூடவித்துக் கல்லெறக்கி,
கோபுரங்கள் உண்டு பண்ணி,
கோபுரத்தின் கீழே-நான்
குழந்தை குடி இருக்கேன்,
பொங்கி பொரிச்சுவச்சு-நான்
புளியம் பூச் சோறாக்கி ;
பொங்கிய சோறு உங்கக்குள்ள-எனக்குப்
போட்டானே கெடியாரம்
ஆக்கி அடுக்கி வச்சு-நான்
ஆவாரம்பூச் சோறாக்கி
ஆக்கின சோறு உங்கக்குள்ள-எனக்கு
அடிச்சானே கெடியாரம் !
திடீர் நிகழ்ச்சி
தாலியிண்ணாத் தாலி-நான்
தங்கத்தால் பொன் தாலி
தாலி கழற்றிட-எந்தன்
தருமருக்கே சம்மதமோ
குளத்தங்கரையோரம்-நான்
குயிலுணு நிக்கையிலே-என்ன
குயிலுணு பாராமே-என்னைக்
குண்டால எய்தார்கள்
ஆத்தங் கரையோரம்-நான்
அன்னம் போல் நிக்கயில
அன்ன மிண்ணும் பாராமல்-என்ன ஒரு
அம்பால எய்தார்கள்
கத்தரியும் பாவையும்
காக்கும் படுவையிலே-நான்
கர்ணனார் பெத்த மகள்-நான்
கற்பனைக்கு ஆளானேன்
வெள்ளரியும் பாகலும்
விளையும் படுகையிலே-நான்
வீமனார் பெத்த மகள்-நான்
வெயில் படக் கண்டியளோ?
வட்டார வழக்கு: சித்திரக்காலி, மணல்வாரி, உப்பூத்தி-இவை நெல்வகை உரைக்குங்குள்ளே-உரைப்பதற்குள் துணுக்கிட-அச்சமுற ; மொழி-வழி ; தொயந்தது-தொடர்ந்தது ; பெறக்கி-பொறுக்கி.
குறிப்பு : மூன்று பாடல்களிலும் கடினமாக முயன்று பெற்ற அமைதியான வாழ்க்கை சரிந்துவிட்டதை வருணிக்கிறாள். சோற்றுக்கு உவமை-புளியம்பூ ஆவாரம்பூ.
குண்டால எய்தார்கள், அம்பால் எய்தார்கள்-கணவனைக் காலதூதர்கள் திடீரென்று விலங்குகளை வேடர் எய்து கொல்வது போலக் கொண்டு போய்விட்டார்கள். அந்தத் துக்கத்தின் வேதனையை மனைவிதான் அனுபவிக்கறாள். திடீர் துன்பத்தை நமக்கு விளக்க இரண்டு உவமைகள் கையாளப்பட்டன.
கருணன், வீமன்-நாட்டுப் பாடல்களில் மக்களால் விரும்பிப் போற்றப்படும் வீரர்கள் தருமர், வீமன், கருணன், அர்ச்சுனன். இராமாயணக் கதையை விட பாரதக்கதை தான் பாமர மக்களுக்கு விருப்பமானது.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை.
---------
கும்பினியார் கொள்ளி வைத்தார்
தென் பாண்டி நாட்டில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர் மக்களிடம் இருந்த ஆயுதங்களை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர், ஆயினும் வெள்ளையரால் தங்கள் உரிமைகள் பறிபோவதை உணர்ந்த மறவர் சாதித் தலைவர்கள், ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக, அவர்களை எதிர்த்தனர். இச்சிறு கூட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டன. கலகக் கூட்டங்களைச் சேர்ந்தவர்களில் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிறைகளில் இறந்தனர். இறந்த செய்தி கேட்ட மனைவிமார் ஒப்பாரி கூறி அரற்றினர். அவ்வகை ஒப்பாரிகளில் மகன் கொள்ளி வைக்காமல், கும்பினியார் கொள்ளி வைத்தார்கள் என்று வருந்தியும், பெருமையோடு மனைவி கூறுவாள். மனைவி பட்டணம்போய் அவனைப் பார்த்துத் திரும்பும்போது புதிய சேலை முழுதும் கண்ணீர் மழையால் நனைந்து போகுமாம். அடிக்கடி பார்க்கலாமென்றால் அவனிருக்கும் சிறையை தாழ்ப்பாள் போட்டு அடைத்துவிட்டார்களாம்.
மலையைக் கரியாக்கி
மாணிக்கச் சங்கூதி
சமுத்திரத்தில் நீர் மோந்து
குருவன் குழையடுக்கி
கும்பினியார் கொள்ளிவைக்க
கருங்கடல் நீந்தி
கர்னல் குடம் எடுத்து
தாமரை நூல் போட்டு
சமத்தன் தலை விரிச்சு
பிறந்தாரைப் பாக்கலியே
தேரூத்தாம் தண்ணியாம்
பெருங்குளத்து மாவிலையே-பிறந்த வாசலில
வேதனையா நின்னழுதோம்
செம்பு தூக்கி
செவந்தி மாலையிட்டு-தெருவில வாரயில
தேசத்தோடு நின்னழுதோம்
செகப்பு ரயிலேறி-நீ வாழ்ந்த
சீமைக்கே வந்தாலும்
சீலை எடுத்திருவ
சிறு நகையும் செய்திருவ-நான்
சீல எடுத்துக் கட்டி
சிறு நகையும் மேல் பூட்டி-நீ வாழ்ந்த
சீமைக்கே வந்தாலும்
சீமையிலே பேஞ்ச மழை
சீலையும் நனைஞ்சிருச்சே
சிறு நகையும் மங்கிருச்சே
பொன்னும் ரயிலேறி-நீ வாழ்ந்த
பூமிக்கே வந்தாலும்
புடவை எடுத்திருவ
பொன் நகையும் போட்டுருவ-நான்
புடவை மடிச்சுக்கட்டி
பொன் நகையும் மேல் பூட்டி-உன்னோட
சீமைக்கே வந்தாலும்
சீமையில் பேஞ்ச மழை
புடவையும் நனைஞ்சிருமே
பொன் நகையும் மங்கிருமே
பச்சுச ரயிலேறி நீ இருக்கும்
பட்டணமே வந்தாலும்
பட்டும் எடுத்திருவ
பரு நகையும் செஞ்சிருவ
பட்டு மடிச்சுடுத்தி
பரு நகையும் மேல் பூட்டி
பட்டணமும் வந்தாலும்
பட்டணத்தில் பேஞ்ச மழை
பட்டு நனைஞ்சிருமே
பரு நகையும் மங்கிடுமே
கல்லுகட்டி வில்ல மரம்
கைலாச தீர்த்துக் கரை
கண்டா வருவ மிண்ணு
கைத்தாப்பா போட்டடைச்சே
செங்கட்டி வில்ல மரம்
செவலோகத் தீர்த்தகரை
தெரிந்தா வருவோமின்னு
தெருத்தாப்பா போட்டடைச்சே
குறிப்பு: சிறையில் இறந்தவன் பிணத்தை கும்பினியார் காலத்தில் உறவினரிடம் கொடுக்காமல் தாங்களே எரித்து விடுவார்கள். மகன் பூணூல் போட்டு ஒற்றை வேட்டி கட்டி பிணத்தை குளிப்பாட்ட நீர் கொண்டு வருவான். அதையெல்லாம் ஒரு வெள்ளைப்பட்டாள அதிகாரியான கர்னல் செய்தானோ என்று மனைவி வினவுகிறாள்.
சிறையில் இறந்தவனுக்கு வீட்டுக் கருமாதி செய்து, ஒரு குருத்தோலையை இறந்தவனது அடையாளமாக வைத்து அழுது எரிப்பார்கள்.
அவன் சிறையிருந்த இடத்துக்ககு அடிக்கடி போக முடியாது.தாழ்ப்பாள் போட்டிருக்கும். இப்பொழுது விடுதலை பெற்று அவன் சென்றுள்ள கைலாசத்துக்குப் போய் அவனோடு இருக்கலாமென்றால், அங்கும் தாழ்ப்பாள் போட்டிருக்கிறது. அவளால் போக முடியாது.
-----------
தவசப் பொங்கல் சீருமில்லை
தந்தை இறந்து விட்டார். மகளுக்கு மணமாகி அயலூரில் வாழ்கிறாள். பொங்கல்தோறும் அவளுக்கு சீர் வரிசைகள் அனுப்பி வைப்பார். அவளுக்குத் தமையன்மார் உண்டு. ஆனால் தந்தையைப்போல் அன்பாக சீர் அனுப்பி வைப்பார்களா? அவர்கள் மறந்தாலும் மதினிமார் அதனை நினைவூட்டுவார்களா? தாய் சொன்னாலும் காதில் ஏறுமா? தந்தை போய்விட்டால் மகளுக்கு அருமை பெருமை ஏது? இதனை நினைத்து மகள் உருகுகிறாள்.
வடக்கே கரத்தோட்டம்
வாழப்பூப் பூந்தோட்டம்
வளர்த்தவர் இருக்கும் வரை
வரிசைப் பொங்கல் சீருவரும்
வளர்த்தவர் காலம் போக
வாழ மடலிழந்தேன்
வரிசைப் பொங்கல் சீரிழந்தேன்
தெக்கேகரத்தோட்டம்
தென்ன மரம் பூந்தோட்டம்
தேடுனவர் இருக்கும் வரை
தெவசப் பொங்கல் சீருமுண்டு
தேடுனவர் காலம் போக
தென்ன மடலுமில்லை
தெவசம் பொங்கல் சீருமில்லை
குறிப்பு: கொங்கு வேளாளர் சமூகத்தில் மணமான தம்பதிகளை வேறே வைப்பார்கள்.அப்பொழுது வீட்டுக்கு வேண்டிய எல்லா சாமான்களையும் பெண்ணின் தந்தை கொடுக்க வேண்டும். அதன்பின், பொங்கல்தோறும் சீர் வரிசைகள் கொடுப்பார்கள். பெண்ணுக்கு குழந்தை பிறந்து சம்பந்தம் காணும் வரை சீர் கொடுக்க வேண்டும்.
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
----------
கூலிப்படி
கணவன் இறந்து போனான். குடும்ப நிருவாகம் அவளுடைய மைத்துனர்கள் கைக்கு மாறிவிடும். அதன் பிறகு அக்குடும்பத்தில் உரிமை யிழந்தவளாய், மைத்துனர்கள் கையால் படி வாங்கித் தின்னும் நிலை அவளுக்கு ஏற்படும். மேலும் வேலைக்காரியைப் போல வேலை செய்தால்தான் அக்குடும்பத்தில் அவளுக்குச் சோறு கிடைக்கும். வீட்டின் தலைவி சொத்துரிமையின்மையால், தன் கணவனது மறைவிற்கு பின் அவள் அவ்வீட்டிலேயே கூலிக்காரியாகிறாள். இந்நிலையை எண்ணி அவள் பாடுகிறாள்.
மச்சு மச்சா நெல் விளையும்
மகுடஞ்சம்பா போரேறும்
மச்சாண்டார் கையாலே
மாசப்படி வாங்கித்தி்ங்க
மாபாவி ஆனேனப்பா
குச்சு குச்சா நெல் விளையும்
குமுடஞ்சம்பா போரேறும்
கொழுந்தனார் கையாலே
கூலிப்படி வாங்கித்திங்க
கொடும்பாவி ஆனேனப்பா
வட்டார வழக்கு : மகுடஞ்சம்பா, குமுடஞ்சம்பா-ஒரு வகை நெல்.
குறிப்பு : மைத்துனர் கொடுக்கும் மாதப்படி காணாமல் அவள் கூலிவேலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. கணவனுக்கு சொந்தமான நிலமிருந்தும் தனக்கு குழந்தையில்லாததால் சொத்தில் உரிமையில்லாமல், பிறருக்கு வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைமையை எண்ணி விதவை வருந்துகிறாள்.
உதவியவர் : நல்லம்மாள் சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
---------
பஞ்சையானேன்
முத்து மழை பேயும்
மொத வாய்க்கால் தண்ணி வரும்
மொத வாய்க்காத் தண்ணிக்குத்தான்
மொளவு சம்பா நெல் விளையும்
மொளவு சம்பா நெல்லுக்குத்தா
மொதலாளியா நானிருந்தேன்
எனக்கு வந்த சாமி சின்ன நடையிழந்து
சிறு நாடு காலம் போவ
மொளவு சம்பா நெல்லுக்கு
மொற மெடுக்கப் பஞ்சையானேன்
கனத்த மழை பேயும்
கனிவாய்க் காத்தண்ணி வரும்
கனிவாய்க் காதண்ணிக்குத்தா
கடுகு சம்பா நெல் விளையும்
கடுகு சம்பா நெல்லுக்குத்தான்
கணக்காளியா நானிருந்தேன்
கணக்கரு காலம் போக
கடுகு சம்பா நெல்லுக்கு
களங் கூட்டப் பஞ்சையானேன்
வட்டார வழக்கு : மொளவு-மிளகு ; மொறம்-முறம் ; கணக்காளி-சொந்தக்காரி.
குறிப்பு : விதவையின் நிலை கண்டு அண்ணன் தம்பி, அக்கா தங்கையர் யாரும் இரங்கவில்லை. அவளைக் காண வருவதில்லை. அவளைத் தங்கள் வீடுகளுக்கு அழைப்பதுமில்லை. கணவன் வாழ்ந்தபோது அடிக்கடி விருந்தாளி வந்த சுற்றத்தார், அவனிறந்ததும் வருவதை நிறுத்தி விட்டனர். அவனா அவர்களுக்கு உறவு? உறவை ஏற்படுத்துவதும் செல்வம்தானே? கணவனோடு அவளுக்குச் செல்வம் போயிற்றல்லவா? அதை நினைத்து மனமுருகிப் பாடுகிறாள் விதவை.
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
------------
சனத்தார் அறியாங்க
இஞ்சி இலுமிச்சங்கா
எளங்கொடி நார்த்தங்கா-நா
எளப்பமாப் போறேண்ணு
எனத்தார் அறியாங்க
எம்பொழப்பைக் காணுங்க !
தண்ணி எலுமிச்சங்காய்
தனிக்கொடி நார்த்தங்காய்
சனத்தாரு கண்ணெதிரே
தனியாப் போனேன்னு
சனத்தார் அறியாங்க
தாம நிலை காணாங்க
குறிப்பு : எளங்கொடி,எனத்தார்,எளப்பம்-முதல் ஒலி 'இ' என்று கொள்க.
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
-------------
செல்வி நான் புலம்புகிறேன்
நமது பழைய சமூக வாழ்க்கையில் கணவனின் நிழல் மனைவி. அவளுக்கு இன்று எவ்வித சுகங்களும் இல்லை. கணவனோடு இருந்தால்தான் உலக இன்பங்களை அனுபவிக்கலாம். கணவன் மறைந்தால் அவை யாவும் அவளுக்கு இல்லை.
ஆலம் பலவையிலே
அரளிப்பூ மெத்தையிலே
அருச்சனரும் தேவியுமாய்
அருகிருந்து பேசிவந்தோம்
அருச்சுனரு தப்பி விட
ஆலம் பலவை விட்டே
அரளிப்பூ மெத்தை விட்டே
அரளிப்பூ மெத்தை விட்டே
அல்லியு நா புலம்புகிறேன்
சீவம் பலவையிலே
செவந்திப்பூ மெத்தையிலே
சீமான் தேவியுமாய்
சேந்திருந்து பேசி வந்தோம்
சீமானும் தப்பிவிட
சீவம் பலவை விட்டே
செவந்திப்பூ மெத்தை விட்டே
செல்வியு நா புலம்புகிறேன்
வட்டார வழக்கு : பலவை-பலகை ; நா-நான்
உதவியவர் : சி.செல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
-----------
அஞ்சிலே பூ முடிந்தாள்
பிள்ளைப் பிராயத்தில் சொத்திற்காகக் கிழவனுக்கு அவளை மணம் செய்து வைத்தார்கள். அவள் பிராயமானதும் அவன் இறந்துபோனான். அவளுக்கு தாலியறுத்து, 'நீர்பிழிதல்' என்ற சடங்கு செய்கிறார்கள். இச்சடங்குகள் குளக்கரையில் நடைபெறும். கரையில் போகும் யாரோ இங்கென்ன கூட்டம் என்று வினவுகிறார்கள். அதற்குப் பதிலளிப்பதுபோல அவள் பேசுகிறாள். குழந்தைப்பருவத்தில் மணமாகி காதலின்பம் அறியாமல், இனி அதனை நினைப்பதும் தவறென்ற நிலையில் வலிந்து துறவறத்தில் தள்ளப்பட்ட பெண்ணின் வேதனையை இப்பாட்டு விளக்குகிறது.
ஆத்துக் கருவாழே
ஆத்துலுள்ள நீர்வாழே
ஆத்தோரம் போறவங்க
ஆத்திலென்ன கூட்ட மென்றார்
அஞ்சிலே பூ முடிஞ்ச
அருங்கிளியார் கூட்டமம்மா
வையத்தார் கண்முன்னே
அப்போ கருப்பானோம்
அழகிலோர் மாட்டானோம்
கொழந்தையில் பூமுடிச்ச
குயிலாளு கூட்டமய்யா
சுத்தக் கருப்பானோம்
சொவுசிலே மாட்டானோம்
உதவியவர் : செல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம்.
----------
செல்வன் சிறுவயசு
சிறு ஆண் குழந்தையோடு மனைவியையும் விடுத்துக் கணவன் மாண்டு போனான். குழந்தையில்லாமல் விதவையாக விடப்பட்டவளின் நிலைமையை விட இவள் நிலைமை சற்று உயர்ந்ததே. மலடியான விதவை மைத்துனர்மாரிடம் 'கூலிப்படி' வாங்கித்தான் வாழ வேண்டும். இவளுக்கு மகனிருப்பதால் சொத்துரிமையுண்டு. ஆனால் சிறுமகன் துண்டு நிலத்தைப் பாதுகாக்கும் வலிமையுடையவன் அல்லவே ! சிறுநிலம் உடையவர்களுடைய நிலத்தைப் பறித்துக்கொள்ள பெருநிலக்கிழார்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்வார்கள்? களத்தில் போர் போட்டிருக்கும்பொழுது மாட்டை விரட்டியடிப்பதும், விளைந்த வயலில் எருதை விரட்டியடிப்பதும், எதிர்த்து வந்தால் வழக்குப் போடுவதுமான முறைகளால் நிலத்தை தங்களுக்கே விற்றுவிடச் செய்வதும் அவர்கள் கையாளும் முறைகள். இச் சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராட வலிமை வாய்ந்த ஆண்களாலேயே முடியாது. சிறுவன் என்ன செய்வான்? இச் சிந்தனை அவளுக்குக் கவலையை உண்டுபண்ணுகிறது.
மத்தங்கா புல்லு வெட்டி
மலையோரம் போர் போட
மலையோரம் போரிலே தான்
மாடு வந்து மேயுதிண்ணு
மாதுளம்பூ சாட்டை கொண்டு
மாட்டை விரட்டிவிட
மைந்தன் சிறுவயசு-நான்
மனசொடிஞ்சு போனேனே
இஞ்சிக்கா புல்லு வெட்டி
எடையோரம் போர்போட
எடையோரம் போரிலேதான்
எருது வந்து மேயுதிண்ணு
எலுமிச்சங்க சாட்டை கொண்டு
எருதை வெரட்டி விட
என் செல்வம் சிறுவயசு-நா
செருவடைஞ்சு போறேனே
வட்டார வழக்கு : செருவடைஞ்சு-சோர்வடைந்து ; மத்தங்கா-இஞ்சிக்கா, ஒரு வகை நெல் ; மாதுளம்பூச் சாட்டை, எலுமிச்சங்க சாட்டை-சாட்டை கம்பின் நிறம் பற்றிப் பெயர் வந்திருக்கலாம்.
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
------------
புகைபோகச் சன்னலுண்டு
வீட்டில் புகைபோகச் சன்னலுண்டு. ஆனால் அவள் உள்ளக் கிளர்ச்சிகளுக்கு வெளியீடு காணச் சன்னல்கள் இல்லை. எத்தகைய இன்ப அனுபவங்களும் அவளுக்கு விலக்கப்பட்டவை. வெளியே தலை நீட்டினால் 'பாவி' என்று உலகம் சொல்லுகிறது. உணவு உண்பது தவிர வேறு அனுபவம் அவளுக்குக் கிடையாதா?
பொன்னு அடுப்பு வச்சு
பொங்க வச்சேன் சாதங்கறி
பொங்கி வெளியே வந்தா
பொகை போவச் சன்னலுண்டு
பொங்கி வெளியே வந்தா
புருசனில்லாப் பாவியென்பார்
ஆக்க அடுப்புமுண்டு
அனலும் போவ சன்னலுண்டு
ஆக்கி வெளியே வந்தா
அரசனில்லாப் பாவியென்பார்
வட்டார வழக்கு : பொகை-புகை ; போவ-போக(போச்சு).
உதவியவர் : செல்லம்மாள் சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
---------
பனிக்காத்தும் வீசலாச்சு
கணவன் அவளுக்கு ஓர் கருங்கல் மாளிகை. அவன் உயிரோடு இருக்கும் வரை எறும்பும் காற்றும் நுழையாமல் பாதுகாக்கும் கருங்கல் கோட்டையாக அவன் அவளைப் பாதுகாத்தான். அவன் போய்விட்ட பிறகு முன்பிருந்த மண்குடிசையில் தான் வாழ்கிறாள். ஆனால் அதைச் சுற்றியிருந்த கருங்கல் சுவர் தகர்ந்துவிட்டது. ஊர்ப்பேச்சும், பிறர் கண்களும் அவளைத் துளைக்கத் தொடங்கும். இவை தான் எறும்பும், காற்றும், அவனிறந்ததும்தான் அவனுடைய பாதுகாப்புத்திறன் அவளுக்குப் புரிகிறது.
எட்டுக் கெசம் கல்லொடச்சு
எறும்பேறா மாளி கட்டி
எறும்பேறா மாளியிலே
இருந்தொறங்கும் நாளையிலே
எறும்பும் நொழையாது
எதுக்காத்து வீசாது
சின்ன நடையிழந்து
சிறுமுழியும் பஞ்சடைய
எறும்பும் நுழையலாச்சு
இருபக்கமும் பேசலாச்சு
பத்துக் கெசம் கல்லொடச்சு
பாம்பேறா மாளிகை கட்டி
பாம்பேறா மாளியிலே
படுத்தொறங்கும் வேளையிலே
பாம்பும் நொழையாது
பனிக்காத்து வீசாது
அண்ணாந்து கண்ணசைந்து
ஆவாரம் பூ வாய்மூடி
அமக்களமாப் போறான்னு
பாம்பும் நொழையலாச்சு
பனிக்காத்தும் வீசலாச்சு
வட்டார வழக்கு : நொழை-நுழை ; அமக்களமாய்-மேள தாளத்தோடு சுடுகாடு நோக்கிச் செல்லுகிறான் ; காத்து-காற்று(பேச்சு).
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
-----------
வளத்தாரை இழந்தவள்
தந்தை இறந்துபோனார். மகள் அயலூரில் இருந்து வந்திருக்கிறாள். இதுவே அவள் தந்தைவீட்டுக்கு வருவது கடைசி முறையாக இருக்குமோ? இனி எப்பொழுதாவது இவ்வூருக்குப் போக வேண்டுமென்று வாடகை வண்டி பேசச் சொன்னால், கணவனும் பிறரும் என்ன சொல்லுவார்கள்? பெற்றோரை இழந்தபின் பிறந்தவீட்டு ஆசை எதற்கு என்று கேட்க மாட்டார்களா? மதினியாருக்குக் கேட்கட்டும் என்றுதான் மகள் இவ்வாறு ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.
வண்ண சைக்கிள் வண்டி
வாடவை மோட்டார் வண்டி-நான் பிறந்த
வடமதுரை போறமிண்ணு
வாடவை பேசுமிண்ணா
வழியிலே உள்ளவர்கள்
வளத்தாரே இழந்தவங்க
வாடவைக்கு ஆசை என்ன?
வடமதுரைச் சோலி என்ன?
சின்னச் சைக்கிள் வண்டி
தீருவை மோட்டார் வண்டி
தெருவிலே உள்ளவர்கள்
தேட்டாரை இழந்தோர்க்கு
தென்மதுரைச் சோலி என்ன
தீருவை ஆசை என்ன?
வட்டார வழக்கு : வாடவை-வாடகை ; வளத்தார்-பெற்றார் ; தேட்டார்-பெற்றோர் ; சோலி-மேலை ; தீருவை-வாடகை.
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
-------------
பெண்ணாள் படும் துன்பம்
நோயாளியான ஒருவனுக்கு மணம் பேசி வந்தார்கள். பெண்ணின் தந்தை பொருளுக்கு ஆசைப்பட்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டான். திருமணமான சிறிது காலத்துக்குள் நோயாளி இறந்தான். சவ அடக்கத்துக்குப் பெண்ணின் தந்தை வந்திருக்கிறார். கலியாணம் முடிவு செய்யும் காலத்தில் தன் எதிர்பார்ப்பைப் பொருட்படுத்தாத தந்தைக்கு இப்பொழுது சூடு கொடுக்கிறாள் மகள்.
மதியம் கிளம்பி வரும்
மாய இருட்டுக் கட்டி வரும்
மறிநாட்டு ராஜமன்னன்
மாலை கொண்டு வந்ததும்
வண்டரிச்ச மாலையிண்ணு
வாங்க எறியாமே-நீங்க வளத்த
மயிலாளுக்குச் சூடினதால்
மாலைபடும் தொந்திரவு
இன்னைக்கு மயிலிவாட நேர்ந்ததுவே.
பொழுது கௌம்பி வரும்
பொன்னிருட்டுக் கட்டி வரும்
பொற நாட்டு ராசமன்னர்
பூக்கொண்டு வந்ததும்-நீங்க
புழுவறித்த பூவுண்ணு
புடுங்கி எறியாமே
நீங்க தேடிய
பொண்ணாளுக்குச் சூடினதால்
பூப்படும் தொந்தரவு-உங்களுட
பொண்ணாள் பட நேர்ந்ததுவே.
உதவியவர் : செல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
--------------
சீரான தாயிழந்தோம் !
தாயின் அன்பிற்கு ஈடானதோர் செல்வம் உண்டா? மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வந்தால் மீன் பிடித்து தம்பியின் மூலம் மகளுக்குக் கொடுத்தனுப்புவாள் தாய். இன்று தாய் இறந்துவிட்டாள். இனி தம்பி மீன் கொண்டு வருவானோ? தாய் இறந்துபோன பி்ன்பு அண்ணன் தம்பி என்ற உறவு நிலைக்குமோ?
வடக்கே மழை பேயும்
வண்ணாறு தண்ணி வரும்
வண்ணாத்துத் தண்ணியிலே
வாழை மீனுத் துள்ளி வரும்
வாழை மீனு அரிச்செடுக்க
வண்ணப் பொறப்பிழந்தேன்
வரிசையுள்ள தாயிழந்தேன்
தெற்கே மழை பேயும்
சின்னாறு தண்ணி வரும்
சித்தாத்துத் தண்ணியிலே
சிறு மீனு துள்ளி வரும்
சிறு மீனு அரிச்செடுக்க
சின்னப் பொறப் பெழந்தேன்
சீரான தாயிழந்தேன்
வட்டார வழக்கு: பொறப்பு-சகோதரன்.
உதவியவர் : ஜானகி சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
------------
பிறந்த வீட்டில் நடந்தது
பெண்ணின் தாய் தந்தையர் இறந்து விட்டனர். பிறந்த வீட்டில் அண்ணணும் மதினியும் வாழ்கிறார்கள். அண்ணன் ஆதரவாக இருந்தாலும் மதினி கடுமையாக இருக்கிறாள். தாய் தந்தையர் இருக்கும்பொழுதே மதினிக்கு இவள் வீட்டிற்கு வருவது பிடிக்காது. தாய் தந்தையர் மறைவுக்குப் பிறகு அவ்வீட்டில் என்ன மதிப்பிருக்கும் என்று அவள் எண்ணிப் பார்க்கிறாள். அண்ணன் வேலையாக வெளியே போய்விடுவார். மதினிதான் வீட்டிலிருப்பாள். அவள் தன் மீது அன்பு காட்டுவாளா என்று எண்ணிப் பார்க்கிறாள். இவ்வெண்ணங்களெல்லாம் பெற்றோரை இழந்த துன்பத்தோடு கலந்து ஒப்பாரியாக உருவாகிறது.
கம்பு விளைஞ்சிருக்கும்
காலியுமே சாஞ்சிருக்கும்-நான்
கரிக்குருவி வேஷங் கொண்டு
காலியுமே அண்டினா
கருணையண்ணன் பெண்டாட்டி
காதத்துக் கொரு கல்லெடுத்து
கடக்க விரட்டி விட்டாள்.
கருணையண்ணன் கண்டு விட்டா
கான மயிலின்னு
கழுத்தோ டணைச்சிடுவார்
கழுத்து முத்தம் தந்திடுவார்
சொகுசான சீமையிலே
சோளம் விளைஞ்சிருக்கும்
தோகையுமே சாஞ்சிருக்கும்
தோக்குருவி வேஷம் கொண்டு
தோகையில் அண்டினாலும்
துரைமார் பெண்டாட்டி
தோட்டம் ஒரு கல்லெடுத்து
தூரத் தொரத்தி விட்டாள்
துரைமார் கண்டு விட்டா
தோளோடணைத்து
தோள் முத்தம் தந்திடுவார்.
வட்டார வழக்கு: காலி-ஆடு, மாடுகள் ; தோகை-கதிர் ; துரைமார்-சகோதரர்கள் ; தொரத்தி-துரத்தி(பேச்சு).
உதவியவர் : செல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
--------------
பவுனும் மங்கியாச்சு
கணவன் இருக்கும் வரை, இன்பம் நிறைந்த சிறப்பான வாழ்க்கை அவளுக்கிருந்தது. அவன் இறந்தபின் அவளுடைய வாழ்க்கை ஒளி மழுங்கிப் போயிற்று, இதனை அவள் “பட்டு நனைந்து விட்டது,” “பவுன் மங்கி விட்டது” என்ற உவமைகளால் புலப்படுத்துகிறாள்.
பச்சை ரயிலு வண்டி
பட்டணத்துப் பொட்டி வண்டி
பட்டை உடுத்தியல்லோ
பவுன் நவை தான் பூட்டி
நீங்கள் உள்ள பட்டணத்தை
பார்க்க வந்துட்டா
பட்டணமே பேயும் மழை
பட்டு நனையாது
பவுனுமே மங்காது-நீங்க போவ
பட்டு நனைஞ்சாச்சு.
பவுனுமே மங்கலாச்சு
சின்ன ரயிலுவண்டி
சீரங்கத்துப் பொட்டி வண்டி
சீலையே உடுத்தி அல்லோ
சிறு நவை போட்டுமல்லோ
சீரங்கம் வந்து விட்டா
சீலை நனையாது
சிறு நகையும் மங்காது-நீங்க போவ
மட்டு நனைஞ்சாச்சு
பவுனுமே மங்கியாச்சு
வட்டார வழக்கு: நவை-நகை ; பொட்டி-பெட்டி(பேச்சு)
உதவியவர் : சி. செல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
------------
'தாலியைத் திருடி விட்டார்' !
கணவன் இளவயதிலேயே இறந்துவிட்டான். அவனோடு வாழ்ந்த வாழ்வையும், இறப்பையும் எண்ணி மனைவி மருகுகிறாள். இச்சிறப்புக்கெல்லாம் காரணம் தனது தாலி என்று அவள் எண்ணினாள். தனது தாலி பாக்கியம் நீடித்து நிற்கும் என்று நம்பியிருந்தாள். ஆனால், பெருந்திருடர்களான எமதூதுவர்கள் அவளுடைய தாலியைத் திருடி விட்டார்கள். அது முதல் அவள் வாழ்விழந்தவளாக, உலக, இன்பத்திற்குத் தகுதியற்றவளாக ஆகிவிட்டாள். இந்நிலையை எண்ணி அவள் சொல்லுகிறாள்.
ஆச்சா மரமே
அறுபதடிக் கம்பமே
பட்டுக் கயிறே
பனைமரத்துக் குஞ்சரமே
கண்ணே கண்மணியே
கல்கண்டு சர்க்கரையே
மெத்தக் களஞ்சியமே
விலைமதியா மாணிக்கமே
எண்ணெய்க் கறுப்பே
இரும்பான நெஞ்சகமே
செப்பேடு போட்டல்லவோ
சிங்க முகத் தூண் நிறுத்தி
எப்போதும் போல
எதிரே வரக் காண்ப தெப்போ
காந்த லைட்டுக்கு
கண்ணுச் சிமிட்டிக்கு
பம்பாய் ரோட்டுக்கு
பங்களா வீட்டுக்கு
வயிர மணித் தாலி வந்து
வாய்த்ததின்னு நானிருந்தேன்
ஆகாத மாதிருடன்
அது தடுக்க முடியாதே
வயிர மணித் தாலியை
வாரி விட்டேன் வீதியிலே
வட்டார வழக்கு: மாதிருடன்-எமதூதன்.
உதவியவர் : முத்துசாமி சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
----------
சமூகக் கொடுமை
கணவன் வாழ்ந்திருந்த பொழுது மனைவி அருகிலிருந்த நகரத்திற்குச் சென்று சேவல், பால் முதலியன விற்று வருவாள். இப்பொழுது அவள் அமங்கலியாகிவிட்டாள். அவள் தெருவழியே சென்றாள் சகுனத்தடை என்று எல்லோரும் கதவடைத்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் வரங்கொடுக்கும் தெய்வத்தின் கோயிலுக்கு அவள் சென்றாலே கோயில் பூசாரிகள் கோயிலடைத்துத் தாழ்ப்பாள் போடுவார்கள். விதவைக்குச் சொல்ல முடியாத கொடுமைகளை சமூக வழக்கங்களினால் மக்கள் இழைக்கிறார்கள். கணவன் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைவிட, வரப்போகும் துயர வாழ்க்கையை எண்ணி அவள் கண்ணீர் பெருக்குகிறாள்.
கும்பத்துப் பால் கொண்டு
கூவாத சாவல் கொண்டு
கோய நதி போனாலும்
கோய நதி பாப்பாரு
கொடுமை பெருத்த
கொடுமையா வாரா
கோயிலைச் சாத்தி
கொக்கி ரெண்டும் போடுமென்பார்
கோயிலுக்கு மேல் புறமா
குயிலி புலம்பிட்டா
கோவில் விரிசல் உடும்
கொக்கி ரெண்டும் பூட்டு உடும்
கோயிலுக்கு கீழ்புறமா
குயிலா புலம்பிட்டா
கொடுமைகளும் வெப்பம் ஆறும்
சருவத்துப் பாலுகொண்டு
சாயாத சாவல் கொண்டு
சாமி நதி போனாலும்
சாமி நதிப் பாப்பாரு
சலித்தவ வரான்னு
சாமியைச் சாத்து மென்பார்
தாழிரண்டும் போடுமென்பார்
சாமிக்கு மேல்புறமா
தங்கா புலம்பிட்டா
கதவு ரெண்டும் பூட்டு உடும்
காலிரெண்டும் நீங்கிவிடும்
சாமிக்கு கீழாக தங்கா புலம்பிட்டா
தங்கா குறை எப்ப ஆறும்.
வட்டார வழக்கு: சாவல்-சேவல் ; விரிசல்-உடைப்பு ; உடும்-விடும்.
உதவியவர் : செல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
-------------
மைந்தனை பறிகொடுத்தோம்
குழந்தைக்கு நோய்க்கண்டது. வைத்தியன் முடிதாக்கிவிட்டது என்கிறான். சேலம் மாவட்டத்தில் இப்படிக் கூறுவார்கள், நெல்லை மாவட்ட வைத்தியன் சீர்தட்டிவிட்டது என்பான். இந்நோய் காண்பதற்கு விநோதமான காரணத்தையும் கூறுவார்கள். கணவனோடு உடலுறவு கொண்ட மனைவி, குழந்தைக்கு பால் கொடுத்தால் இந்நோய் கண்டு விடுகிறதாம். வீட்டுக்கு விலக்கமான பெண் குழந்தையைத் தொட்டுவிட்டால் இந்நோய் உண்டாகி விடுகிறதாம். பல பெற்றோர்கள் இந்த மூடநம்பிக்கை காரணமாக விபூதி போடுவது, பூசை போடுவது, தண்ணீர் இறைப்பது போன்ற சிகிச்சை முறைகளை கையாளுகிறார்கள். விஞ்ஞான ரீதியால் நோயைக் கண்டு பிடித்து, அதனைப் போக்க முயலும் நவீன வைத்தியர்களிடம் கிராம மக்களில் பெரும்பாலோர் செல்வதில்லை, நாட்டு வைத்தியர்களிடம் சென்று அவர் சொன்ன மருந்து வகைகளை வாங்க முடியாமல் குழந்தையைப் பறிகொடுத்த தாய் தனது மடமையை நினைத்துப் புலம்புகிறாள்.
மச்சுவீடு கச்சேரி
மாய வர்ண மாளிகை
மைந்தன் நலங்கினதும்
மாயமுடி தாக்கினதும்
மன்னவரும் தேவதையும்
மருந்து வகை சிக்காமல்
மைந்தனைப் பறி கொடுத்தோம்
மாபாவி ஆனோமய்யா
குச்சுவீடு கச்சேரி
கோல வர்ண மாளிகையில்
குழந்தை நலங்கினதும்
குழந்தை முடி தட்டினதும்
கொண்ட வரும் தேவதையும்
கொழுந்த வகை தேடினதும்
கொழுந்த வகை சிக்காமல்
குழந்தை பறி கொடுத்தோம்
கொடும்பாவி ஆனோமய்யா
வட்டார வழக்கு: நலங்கினது-நலம் கெட்டது ; மன்னவரும் தேவதையும்-கணவரும் மனைவியும்.
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
--------
வயிற்று வலி தீரவில்லை
தந்தை நெடுநாளாக வயிற்று வலியால் துன்பப்பட்டு பல இடங்களில் மருத்துவம் பார்க்கிறார். பெரிய பெரிய பண்டிதர்கள் எல்லாம் வைத்தியம் பார்த்தும் அவருக்குக் குணமடையாமல் இறந்து விடுகிறார். அவர் மறைவுக்கு வருந்தி அவர் மகள் ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.
நாட்டு வவுத்து வலி
நாமக்கல்லு பண்டிதம்
நல்ல வழி ஆகுமின்னு
நாடெங்கும் போய்ப் பார்த்தும்
நடுச்சாமி ஆனீங்களா
சீமை வவுத்து வலி
சீரங்கத்துப் பண்டிதம்
தீரு கடை ஆகுமின்னு
சீமையெங்கும் போய்ப் பார்க்க
தீரு கடை ஆகாமே
சொல்லவிச்சுப் போனீங்களா
வட்டார வழக்கு: வவுத்துவலி-வயிற்றுவலி ; பண்டிதம்-வைத்தியம் ; தீருகடை-குணமடைதல்.
குறிப்பு : இப்பாட்டை உதவிய பாப்பாயியின் தந்தை வயிற்றுவலியால் மரணமடைந்தார். அவளே அச்சமயம் பாடிய பாடல் இது. அவளுக்குக் கல்வி அறிவு கிடையாது.
உதவியவர் : பாப்பாயி; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
----------
கவலைக்கு ஆளானேன்
தாய் இறந்துவிட்டாள்; மகள் விதவை. அண்ணனுக்கு மணமாகிவிட்டது. மதினி, மணமாகக் காத்திருக்கும் இப் பெண்ணை அன்பாக நடத்துவதில்லை. கலியாணமானால், தாயார் கப்பல் கப்பலாகச் சீர் அனுப்புவாள். அக்காலமெல்லாம் போய்விட்டது. இனி உணவு, உடைக்குக் கூடப் பஞ்சம் வந்துவிடும். தாய் மறைந்தபின் தனது வாழ்வில் ஏற்படப் போகும் மாறுதல்கள் அவளை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. அவள் ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.
வால் மிளகும் சீரகமும்
வரிசை வரும் கப்பலிலே
வனத்துக்கு அனுப்பி வைத்தேன்
சிறுமிளகும் சீரகமும்
சீருவரும் கப்பலிலே
சீரு விடும் தாயாரை நான்
சீமைக்கே அனுப்பி வைத்தேன்
கப்பல் வருமென்று
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்தவுடன் எனக்குக்
கடற்கரையும் ஆசையில்லை
தோணி வருகுதுண்ணு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்தவுடன்
துறைமுகமும் ஆசையில்லை
பத்தூர் தாயும்
பக்க உதவி செய்தாலும்
பாசமுள்ள தாய் உன்னைப்
பாடு வந்தால் தேடிடுவேன்
எட்டுர் தாயும்
எனக்குதவி செய்தாலும்
இன்பமுள்ள தாய் உன்னை
இடைஞ்சல் வந்தால் தேடிடுவேன்
சங்கம் புதர் நன்னாடு
சனம் பெருத்த ராச்சியங்கள்
இனங்களெல்லாம் ஒண்ணாக நான்
ஈசுவரியாள் துண்டு பட்டேன்
இஷ்டமுள்ள நன்னாடு
இனம் பெருத்த ராச்சியங்கள்
இனங்களெல்லாம் ஒண்ணாக நான்
ஈஸ்வரியாள் துண்டுபட்டேன்
தங்கமலையேறி எனக்குச்
சாதகங்கள் பார்க்கையிலே
தங்கமலை ராசாக்கள் என்னோட
தலை கண்டாத் தீருமினாக
பொன்னு மலையேறி எனக்கும்
பொருத்தங்கள் பார்க்கையிலே
பொன்னுமலை ராசாக்கள் என்னோட
புகை கண்டாத் தீருமின்னாக
சிற்றாடை கட்டும் பொன்னு,
சிறு சலங்கை கட்டும்பொன்னு:
சிறுசிலே அறுப்பேன் என்று
சிவன் இட்ட கட்டளையோ
பாவாடை கட்டும் பொன்னு,
பாதரசம் போடும் பொன்னு
பாதியிலே அறுப்பேன் என்று எனக்குப்
பகவான் இட்ட கட்டளையோ
கத்திரிக்காய் பச்சை நிறம் நான்
கர்ணன் உடன் பிறந்தாள்
கர்ணனுட தேவியாலே நான்
கவலைக்கு ஆளானேன்
வெள்ளரிக்காய் பச்சை நிறம் நான்
வீமனுடப் பிறந்தாள்
வீமனுட தேவியால நான்
வேசடைக்கு ஆளானேன்
அல்லியும் பிலாவும் என்னப் பெத்த அம்மா
அலுங்கப் பழுத்தாலும்
அஞ்சாமல் கால் வைக்க
அரண்மனையர் காவலுண்டு
கொய்யாவும் பிலாவும்
குலுங்கப்பழுத்தாலும்
கூசாமல் கால் வைக்க
கூட்டத்தார் காவலுண்டு
சீரகம்பூக்க சிறுமுருங்கை பிஞ்சுவிட
சீருவிடும் தாயாரை நான்
சீமைக்கே அனுப்பி வைத்தேன்
கடுகு பூப்பூக்க – கர்ணனெல்லாம் எம் பிறவி
கர்ணனுக்கு வாச்சவக என்னைக்
காசா மிதிக்கவில்லை
வட்டார வழக்கு: அரண்மனையர், கூட்டத்தார்-மதினியின் உறவினர்.
சேகரித்தவர்: குமாரி பி. சொரணம்
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
------------
மறைந்தோடி ஏன் போனீர்?
மாமனார் இறந்து போகிறார், அவருடைய பிள்ளைகளிடையே சண்டை சச்சரவு ஏற்படாமல், எல்லோருக்கும் புத்தி சொல்லி குடும்பத்தை சீராக நடத்தச் சொன்னார் அவர். பேரக் குழந்தைகளை ஆதரித்துப் புத்தி கூறினார். அவர் இறந்ததும், அவருடைய குடும்பத் தலைமையைப் புகழ்ந்து மருமகள் ஒப்பாரி சொல்லுகிறாள்.
வளர்த்தும் சமர்த்தர்களே
வல்லாமைக் காரர்களே
பிள்ளைகளை ஆதரிச்சே
வந்த புண்ணியர்க்குப்
புத்தி சொன்னீர்-நீங்கள்
பிள்ளைகளை வீதி விட்டு
பிரிந்தோடி முன் போனீர்
மக்களை ஆதரிச்சீர்
மன்னவர்க்கே புத்தி சொன்னீர்
மக்களைக் கடத்தி விட்டு
மறந்தோடி ஏன் போனீர்
வட்டார வழக்கு: புண்ணியர், மன்னவர்-இவளுடைய கணவனைக் குறிக்கும்.
குறிப்பு : முதலிரண்டு அடிகள் மாமனாரை அழைக்கும் விளி.
உதவியவர் : ஜானகி; சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
-------------
இங்கிலீசுக்காரியாலே இறந்தாரே நம்ம துரை
சிவகிரி ஜமீன்தார் ஒரு இங்கிலீஷ்காரியின் உறவால் நோய்வாய்ப்பட்டுக் கடைசியில் இறந்து போனார். அவளுக்கு ராணிப்பட்டம் வேண்டும் என்று கேட்டாளென்றும், அது முறையல்லவென்று சொன்ன பின்பு அவள் கோபித்தாளென்றும் இப்பாடல் கூறுகிறது. அவருடைய மறைவுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு வருங்கால ஜமீன்தாருக்குப் புத்தியும் புகட்டுகிறது இப்பாட்டு.
கண்ணு முழியழகர்
கருப்புக் கோட்டித் தானழகர்
பூடுசுக் காலழகர்-இந்தப்
பூலோகம் எல்லாம் கண்டதில்லை
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத்துரைப் பாண்டியர்
தங்கக் குணக்காரர்-அவர்
எங்கும் புகழானவர்
பந்தயக் குதிரை ஏறி-அவர்
பட்டணங்கள் சுத்தையிலே
எதிர்பார்த்த பெண்கள்-அதை
எண்ணவும் முடியாதய்யா
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத்துரைப் பாண்டியர்
தங்கக் குணக்காரர்-அவர்
எங்கும் புகழானவர்
ஏழாம் திருநாளாம்
எண்ணக் காம்பு மண்டபமாம்
கண்ணாடிச் சப்பரத்தை-நம்மதுரை
கண் குளிரப் பார்க்கலாமே
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத் துரைப் பாண்டியர்
தங்கக் குணக்காரர்-அவர்
எங்கும் புகழானவர்
ஐயா வட புறமாம்
அம்மையாத்தா தென் புறமாம்
ஊடே வர குணராம்
உயர்ந்ததொரு கோபுரமாம்
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத்துரைப் பாண்டியர்
ஈசன் விதியாலே
மோசம் வரலாச்சுதே
சென்ட்ரல் ஆஸ்பத்திரியில்-அவர்
சீக்காய் இருக்கையிலே
பட்டணத்து டாக்டரும்
பாங்குடனே வந்தல்லவோ
கையைப் புடிச்சுப் பார்க்க
தோஷம் பிறந்திருச்சே
பீரங்கிச் சத்தம் கேட்டு
பெஞ்சுத் துரை மாரெல்லாம்
ஏறி வந்த மொட்டக்காராம்
எண்ணத் தொலையல்லே
தடிச்சுழுத வய
தடிச்சதொரு பொய்ச் செலந்தி
மாயச் செலந்தி வந்து
மாண்டாரே நம்ம துரை
ஆடழுக மாடழுக
மாடப் புறா தானழுக
சிவகிரி ஜனங்கள் எல்லாம்
தெருத் தெருவாக நின்னழுக
வாடகை மோட்டார்க் காராம்
வந்து கிடைத்தல்லோ
சிவகிரி மகாராஜா
செத்த வுடனே யல்லோ
சுப்பையா கோயிலோரம்
சூறாவளி மங்களாவாம்
கெட்டிடங்கள் சீரில்லைனு
இடிச்சு கட்ட உத்தரவு.
டொப்பி சொகுசழகர்
துரைமார் பெரிய இடங்கள்
இங்கிலீசுக் காரியாலே
இறந்தாரே நம்ம துரை
பட்டணத்து சைசுலேயே
பாங்குடனே சேக்கு வெட்டி
சீவி விட்ட சிங்காரத்தை-இந்த
சீமை எங்கும் பார்த்ததில்லை
காணிக்கை கருவேலம் போல்
கண்டுதித்த பாண்டியரே
இறக்க கோடு விட்டு
ராணிப்பட்டம் கேக்காரே.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை.
-----------
அண்ணாச்சி மண்டபங்கள்
புகுந்த வீட்டில் சீரும் சிறப்புமாக இளங்கொடியாள் வாழ்ந்து வந்தாள். மைந்தன் பிறக்காத குறை ஒன்றுதான். அவளது சீரும் சிறப்பும் மறைந்தது. தலைவியாக வாழ்ந்த வீட்டில் கூலிப்படி வாங்கித் தின்னும் நிலைமை தோன்றும். அப்பொழுது மாடி வீட்டில் வாழ்ந்து வரும் அவள்,தன் பிறந்த வீட்டுக்குப் போனால் அங்கு அவளுக்கு அன்பும் ஆதரவும் கிட்டுமா? பிறந்த ஊரில் எல்லோரும் இன்னார் மகள் இவள் என்று கூறி அனுதாபம் கொள்ளுவார்கள். ஆனால் இப்பொழுது தாய் வீடு, அண்ணன் வீடாக அல்லவா மாறி விட்டது? அங்கு ஆட்சி செலுத்துபவள் அண்ணி அல்லவா? அவள் அமங்கலியான தான் அங்கு வந்தால் ஆக்கம் கெட்டுவிடும் என்றெண்ணி இவளை விரட்டிவிட வேண்டிய சூழ்ச்சிகளையெல்லாம் செய்வாள். எங்கும் மானத்தோடு வாழ முடியாது. இவற்றையெல்லாம் எண்ணி ஒப்பாரி பாடுகிறாள், இளங்கொடியாள்.
மைந்தனில்லை !
எட்டறையும் மாளிகையும்
எள்ளளக்கும் சாவடியும்
பத்தறையும் மாளியலும்
பஞ்சாங்கச் சாவடியும்-எனக்குப்
பார்த்தாள மைந்தனில்லை
வட்டாரங் கோட்டை
வளைவுள்ள கோட்டை
கொட்டார நிலங்களெல்லாம்
கொண்டாட மைந்தனில்லை
எட்டுக்கால் மண்டபமாம்
எள்ளளக்கும் சாவடியாம்
எள்ளளக்கும் சாவடிலே
இளம்பசுவைத் தானமிட்டோம் !
பத்துக் கால் மண்டபமாம்
பருப்பளக்கும் சாவடிலே-நாங்க
பால் பசுவைத் தானமிட்டோம்
சிறப்பு
ஆக்கச் சிறு வீடோ
ஆவி போகமே வீடோ?- நான்
ஆக்கி வெளியே வந்தா
அம்பலத்தார் ஏசுவாக
பொங்கச் சிறுவீடோ,
புகைபோகமே வீடோ,
பொங்கி வெளியே வந்தா-என்னைப்
பூலோகத்தார் ஏசுவாக,
வெள்ளைத் துகில் உடுத்தி
வீதியிலே போனாலும்
வெள்ளாளன் பிள்ளையென்பார்,
வீமனோட தங்கையென்பார்.
பச்சைத் துகிலுடுத்தி
பாதையிலே போனாலும்
பார்ப்பான் பிள்ளையென்பார்
பரமனுட தங்கையென்பார்
பத்துவகைப் பச்சிலையாம்,
பார்த்துரசம் மாத்திரையாம்,
பார்த்துரசம் மாத்திரையும்
பார்த்துரசுக்குள்ள
எமன் அழைத்தானோ?
எட்டடித்தாம்பாளம் நம்ம வாசலிலே
ஏலரிசிப் பாயாசம்-இருந்து பரிமாற
எட்டு மணியாச்சு,
பத்தடித்தாம்பாளம்,நம்ப வாசலிலே
பச்சரிசிப்பாயாசம்-பார்த்துப் பரிமாற
பத்து மணி நேரமாச்சு.
சேதம்
உச்சிமேகம் கூடி
ஊருக்கே சேதமென்ன?
ஊருக்கே சேதமில்லை
உங்களுக்கே சேதமாச்சு !
கருமேகம் கூடி
கருணனுக்கே சேதமென்ன?
கருணணுக்குச் சேதமில்லை நாங்க
கவலைக்கு ஆளானோம் !
தாய் வீடும் தன் வீடும்
தங்கரயிலேறி நான்
தாய் வீடு போகயிலே-எனக்கு
தங்க நிழலில்லை எனக்குத்
தாய் வீடு சொந்தமில்லை
பொன்னு ரயிலேறி
புகுந்த வீடு போகயிலே
பொன்னுரதம் சொந்தமில்லை
புகுந்த வீடும் கிட்டவில்லை
காட்டுப் பளிச்சி நான்
காவனத்துச் சக்கிரிச்சி
தூக்கும் பறச்சு நான்
தொழுத்தூக்கும் சக்கிரிச்சி
அண்ணன் வீடு
அன்னா தெரியுதில்ல எங்க
அண்ணாச்சி மண்டபங்கள்
மண்டபத்துக்கீழே நான்
மங்கை சிறையிருக்க
மடி கூட்டிக் கல்லெறக்கி
மண்டபங்கள் உண்டு பண்ணி
மண்டபத்துக்கீழே நான்
மயிலாள் சிறையிருந்தேன்
மயிலினும் பாராமே என்னை
அம்பு கொண்டு எய்தாக
கூடை கொண்டு கல்பெறக்கி
கோபுரங்கள் உண்டுபண்ணி
கோபுரத்துக் கீழே நான்
குயிலாள் சிறையிருந்தேன்
குயிலினும் பாராமே என்னைக்
குண்டு போட்டு எய்தாக
ஐந்து மூங்கில் வெட்டி
அடி மூங்கில் வில் விளைத்து
ஐந்து கலசம் வைத்து
அடிக்கலசம் கல்லெழுதி
முடிமன்னர் தாயாருக்கு
முழங்கும் கைலாசம்
கைலாச வாசலிலே
கண்டதெல்லாம் எங்க சனம்
பூலோக வாசலிலே
போனதெல்லாம் எங்க சனம்
பண்ணை பெருத்தா,
பலசோலிக்காரி-என்னைப் பெத்த அம்மா
தேரை நிறுத்துங்க என்னப் பெத்த அம்மா
திருமுகத்தை நான் பார்க்க !
சந்தை கிடந்ததா
என்னைப் பெற்ற அம்மா
சத்திரங்கள் தாத்தாத்தா
உனக்குக் கொட்டேது முழக்கமேது?
கோல வர்ணத் தேரேது?
கல் நெஞ்சுக்காரி வராள்,
நடத்தி விடு பூந்தேரை-நான்
ஏழு கோண மண்டபம் கழித்து-நான்
முத்துமே தந்து
முக்கடலும் போனாலும்
முத்துக் கெட்டவ வாராள்னு-என்னை
சமுத்திரமே தள்ளி விடும்
சீதை பிறந்தவிடம்,
சிறுமதுரை அடிவாரம்
சீதை விடும் கண்ணீரு
சின்னமடி நிறைந்து
திருப்பாற்கடல் நிறைந்து
கன்னி பிறந்தவிடம் ;
காசியின் அடிவாரம்
கன்னி விடும் கண்ணீர்
கப்பல் கடல் நிறைஞ்சு
கடற்கரையே போய்ப் பாய்ஞ்சு
தெற்கே மனை வாங்கி
தென்மதுரைத் தேர் எழுதி
சீரிடும் தாயாரை நான்
தெற்கே அனுப்பி வைத்தே
வடக்கே மலை வாங்கி
வடமதுரைத் தேர் எழுதி
வரிசையிடும் தாயாரை நான்
வடக்கே அனுப்பி வைத்தேன்,
நல்ல துளசியே நான்
நடுக்கரையே நாட்டி வைத்தேன்
நாலு காலப் பூசைக்கு நீ ஒரு
நல்ல மலர் ஆகலியே !
கோபுரம் ஆண்டகுடி நம்ம
குணத்தினால் கெட்ட குடி
மங்களமாய் ஆண்ட குடி நம்ம
மதியிலே கெட்ட குடி
கொத்துச் சரப்பளியாம்
கோதுமை ராக்குடியாம்
கொல்லன் அறியாம உனக்கு
கொக்கி கழண்டதென்ன?
நங்கச் சரப்பளியாம்
தாழம்பூ ராக்குடியாம்
தட்டான் அறியாம உனக்கு
தடுக்கு கழண்டதென்ன?
மூங்கப்புதரிலே நான்
முகங்கழுவப் போகையிலே
மூங்கிலு தூங்கலையே நான்
முகங்கழுவி மேடேற
தாழப்புதரிலே நான்
தலைமுழுகப் போகையிலே
தாழை தூங்கலியே நான்
தலைமுழுகி மேடேற
பழனி மலையோரம்
பனிப்புல்லாப் பொய்கையிலே-நான்
பாவி குளிப்பேனிண்ணு எனக்கும்
பாஷாணத்தை ஊற்றினார்கள்
இலஞ்சிமலைமேலே
இனிப்புல்லாப் பொய்கையிலே
ஏழை குளிப்பேன் என்று எனக்கு
இடிமருந்தைத் தூற்றினார்கள்
அரைச்ச மஞ்சள் கொண்டு நான்
ஆற்றுக்கே போனாலும்
அரும்பாவி வாராளென்று எனக்கு
ஆறும் கலங்கிடுமே
குளிக்க மஞ்சள் கொண்டு நான்
குளத்துக்கே போனாலும்
கொடும்பாவி வாராளென்று
குளமும் கலங்கிடுமே
பூமியைக்கீறி எனக்குப்
புதுப்பானைப் பொங்கலிட்டு
பூமி இளகலியே எனக்குப்
புதுப்பானை பொங்கலியே
நிலத்தைக்கீறி எனக்கு
நிறைப்பானைப் பொங்கலிட்டு
நிலமும் இளகலியே எனக்கு
நிறைபானை பொங்கலியே
சன்னல் எட்டிப் பார்த்தானோ-உனக்கு
சரவிளக்கைக் கொள்யைிட?
மண் எட்டிப் பாத்தானோ-உனக்கு
மணி விளக்கை கொள்ளையிட
ஓடிவந்து காலாற எனக்கு
ஊடே சத்திரமோ?
நடந்து வந்து காலாற-எனக்கு
நடுவே சமுத்திரமோ?
வட்டார வழக்கு : மாளியல்-மாளிகை (பேச்சு) ; கொட்டாரம்-அரண்மனை (மலையாளம்) ; மேவீடு-மாடி.
குறிப்பு : இவள் சாதியில் தாழ்ந்தவளாயினும் இவளுடைய ஆடைகளையும், அழகையும் பார்த்து இவளை உயர்ந்த சாதிகளான பார்ப்பார், வெள்ளாளர் வீட்டுப் பெண்ணோ என்று ஊரார் வியந்து கூறுவார்கள்.
இறந்தவருக்குக் கவலை இல்லை, இருப்பவர்கள் கவலைக்குள்ளானார்கள்.
பளிச்சி-பளிங்கன் மனைவி, காட்டுச் சாதியினர் பாபநாசம் முதல் சிவகிரி வரையிலுள்ள மலைச்சரிவில் சிறு சிறு கூட்டங்களாக இவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பேசுவது கொச்சைத் தமிழ். வேட்டையாடித் தின்னும் ஒரு பிரிவினரும், புன்செய்ப் பயிர், காட்டு விவசாயம் முதலியன செய்து வாழும் மற்றோர் பிரிவினரும் இருக்கின்றனர்.
சக்கிலிச்சி-தெலுங்கு பேசுவர். முற்காலத்தில் இவர்கள் தோல் தைக்கும் தொழில் செய்தனர். தற்போது தோட்டிகளாக இருக்கின்றனர். பறச்சி-தமிழ்நாட்டு விவசாயத் தொழிலாளரில் ஒரு பிரிவினர்.
தாய் இறந்துவிட்டதால் இனிப் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும், கீழ்ச்சாதிப் பெண்களைப் போல் அடிமை வேலை செய்தால் தான் இவளுக்குப் பிழைப்புண்டு என்று இவள் கூறுகிறாள்.
அன்னா-அதோ !
சிறையிருக்க-பிறந்த வீட்டில்தான், பெரியவளான பெண், வெளிவராமல் கலியாணமாகும் வரை இருப்பாள். இதை சிறையிருத்தல் என்பர்.
முதல் அடியில் தாயின் பெருமையைச் சொல்லுகிறாள். பெருத்தா-பெருத்தவள். மூன்றாவது அடியில் தாய் பெருமையுடையவளாக, சிறப்புமிக்க ஆண் மக்களைப் பெற்றும் அவளது சவ அடக்கச் சடங்கை விமரிசையாகத் தன் சகோதரர்கள் செய்யவில்லையென்று குத்திக் காட்டுவதற்காக, தாயாரை, 'சந்தையில் கிடந்தவள்', 'சத்திரம் தூத்துப் பிழைத்தவள்' என்று இழிவாகக் கூறுகிறாள்.
ஆத்தா-சில சாதியில் தாயாரை இவ்வாறு அழைப்பதுண்டு.
தெற்கே அனுப்பி வைத்தேன்-பழந் தமிழர்கள் இறந்தவர் உயிர் தெற்கே சென்று இருப்பதாக நம்பினார்கள். இதனாலேயே உயிர்த்த முன்னோர்களை “தென்புலத்தார்” என்றார் வள்ளுவர். சைவம் பரவிய காலத்தில் கைலாசம் புனித ஸ்தலமாக கருதப்பட்டது. எனவே உயிர்கள், உடலைப் பிரிந்து வடக்கே செல்வதாகவும் கூறப்படுகிறது.
எமதூதுவர், தன் தாயார் உயிரைக் கொள்ளையிட்டதைக் கூறுகிறாள்.
பிறந்த வீட்டிற்கு வருவதிலுள்ள தடைகளையும் குறிப்பிடுகிறாள்.
சேகரித்தவர் : குமாரி P. சொர்ணம்
இடம்: சிவகிரி,நெல்லை.
-----------
தங்கரதம் கேட்டீரோ
மணமான மகள் தந்தை இறந்த செய்தி கேட்டு இறந்த வீட்டிற்கு வருகிறாள். தன்னையும், தனது சகோதர, சகோதரிகளையும், தந்தை அருமையாக வளர்த்த கதையையெல்லாம் சொல்லி அழுகிறாள். இத்தகைய தந்தையின் அன்பு நீடித்து இருக்க வழியில்லாமல் இறந்து விட்டாரே என்று ஏங்குகிறாள். இனி பிறந்த வீடு தேடி வந்தால், மதினிமார் மரியாதையாக வரவேற்க மாட்டார்கள் என்றெண்ணி அழுகிறாள். அருமையாக வளர்த்த மகளை மறந்துவிட்டு எமதர்மனைக் கேட்டு தங்கரதம் கொண்டுவரச் சொல்லி தந்தை போய்விட்டாரே என்று மகள் ஆற்றாது அரற்றுகிறாள்.
பரட்டைப் புளிய மரம்
பந்தடிக்கும் நந்த வனம்
பந்தடிக்கும் நேரமெல்லாம்
பகவானைக் கைதொழுதேன்
சுருட்டைப் புளிய மரம்
சூதாடும் நந்தவனம்
சூதாடும் நேரமெல்லாம்
சூரியனைப் பூசை செய்தேன்
ஆத்துக்கு அந்தப் புரம்
ஆகாசத் தந்தி மரம்
ஆழ்ந்த நிழலுமில்லை
என்னைப் பெத்த அப்பா
எங்களை ஆதரிப்பார் யாருமில்லை
குளத்துக்கு அந்தப்புரம்
குங்குமத் தந்தி மரம்
குளிர்ந்த நிழலுமில்லை-எங்களைக்
கொண்டணைப்பார் யாருமில்லை
ஆடை கொடியிலே
ஆபரணம் பெட்டியிலே
சீலை கொடியிலே
சிறு தாலி பெட்டியிலே
நீலக் குடை பிடித்து-நீங்கள்
நிலமளக்கப் போனாலும்
நிலமும் பயிராகும்
நின்னளக்கும் தோப்பாகும்
வட்ட குடை பிடித்து
வயல் பார்க்கப் போனாலும்
வயலும் பயிராகும்
வந்தளக்கும் தோப்பாகும்
சீமைக்கு அப்பாலே-சீமை ஆண்ட
சேது பதி கட்டி வச்ச
சீட்டாடும் மண்டபங்களே
சீட்டுப் பறக்காது
சிறுகுருவி லாந்தாது-என்னைப் பெத்த அப்பா
சிட்டுப் பறந்திருச்சே-இப்போ
சிறுகுருவி லாந்திருச்சே
காசிக்கு அப்பாலே
காசி ராஜா கட்டி வச்ச
காத்தாடி மண்டபங்கள்
காகம் பறக்காது.
கருங்குருவி லாந்தாது-என்னைப் பெத்த அப்பா
காகம் பறந்திருச்சே-இப்போ
கருங்குருவி லாந்திருச்சே
பாலூற்றிச் சாந்திடுச்சி
பவளமனை உண்டு பண்ணி
பவளமனையிலேயும்-எங்கள்
பாதம் பட்டால் தோஷமின்னு
நெய்யூற்றிச் சாந்திடுச்சு
நீலமனை உண்டு பண்ணி
நீல மலையிலையும்-எங்க
நிழல் பட்டால் தோஷமின்னு
ஆத்து வயிரக் கல்லு
அமைதியாப் புத்தகங்கள்
ஆனு வழுக்கிட்டா-எங்களை
ஆதரிப்பார் யாருமில்லை
குளத்து வயிரக் கல்லு
கும்பினியார் புத்தகங்கள்
குளமும் வழுக்கிட்டா-எங்களை
கொண்டணைப்பார் யாருமில்லை
பத்து மணி வண்டியேறி-நாங்க
பசியாக வந்தாலும்
பாலும் அடுப்பி லென்பார்
சண்டாளி வாசலிலே
பச்சரிசிச் சாதம் பா
எட்டு மணி வண்டியேறி-நாங்க
எளம் பசியா வந்தாக்கா
என்னா அடுப்பி லென்பா
எள்ளரிசிச் சாதம் என்பா
சத்திரத்து வாழை-நம்ம வாசலிலே
சரஞ்சரமாய்க் காய்த்தாலும்
முத்தத்து வாழை-நாங்க
முகம் வாடி நிக்கறமே
கள்ளி இடைஞ்சலிலே
கருங்கண்ணினாய் மின்னலிலே
கரும்பா வளர்ந்த மக-நானிப்போ
கவலைக்கு ஆளானேன்.
வேலி இடைஞ்சலிலே
வெள்ளரளிப் பின்னலிலே
வேம்பா வளர்ந்த மக-நானிப்போ
வேதனைக்கு ஆளானேன்
பத்து மலைக்ககு அப்பாலே
பழுத்த கனி வாழை
பழுத்த கனியிழந்தேன்-நானிப்போ
பாசமுள்ள சொல்லிழந்தேன்
தங்க தமிளரிலே
தண்ணீரு கொண்டு வந்தேன்
தண்ணீரு வேண்டாமின்னு
என்னைப் பெத்த அப்பா
தங்க ரதம் கேட்டீயளோ
வெள்ளித் தமிளரிலே
வென்னீரு கொண்டு வந்தேன்
வென்னீரு வேண்டாமின்னு
என்னைப் பெத்த அப்பா
வெள்ளிரதம் கேட்டீயளோ
அண்டா விளக்கி
அரளிப் பூ உள்ளடக்கி
அண்டாக் கவிந்த உடன்
என்னைப் பெத்தார்-நாங்க
அரளிப்பூ வாடினமே.
தாலம் விளக்கி
தாழம் பூ உள்ளடக்கி
தாலம் கவிழ்ந்த உடன்-நாங்க
தாழம் பூ வாடினமே
நாளி மகிழம் பூ
நாகப்பட்டினம் தாழம் பூ
நடந்து வந்து சீர் வாங்க
என்னப் பெத்த அப்பா
நல்ல தவம் பெறலையே
குறுணி மகிழம் பூ
கும்பா வெல்லாம் தாழம் பூ
கொண்டு வந்து சீர்வாங்க-நாங்க
கோடி தவம் செய்ய லையே.
குறிப்பு : சத்திரத்து வாழை. இது அவர்களது சகோதரர்களின் மனைவிமாரைக் குறிக்கும். அவர்கள் வேறிடத்தில் பிறந்து இந்த வீட்டில் வந்து புகுந்தவர்கள். அவர்களைத்தான் சத்திரத்து வாழை காய்த்துக் குலுங்குகிறது என்று குறிப்பிடுகிறாள். இந்த வீட்டு முற்றத்திலேயே வளர்ந்த வாழை என்று தன்னைக் கூறிக்கொள்ளுகிறாள்.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
----------
இலங்கையிலே மாண்டதென்ன?
தந்தை அயலூருக்கு வேலையாகச் சென்றார். அங்கே திடீரென்று நோய் கண்டு மாண்டுவிட்டார். அவருடைய மகள் பெரியவளாகி வீட்டில் இருக்கிறாள். அவளுடைய தம்பி சிறுவன். இவ்வாறு திடீரென்று தங்கள் குடும்பத்தினருக்குக் கேடுவர அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. தமது தோட்டத்திற்கு வரும் மயிலையும் குயிலையும் கூட அவர் விரட்டமாட்டார். இப்படியிருக்க அவருடைய குடும்பத்திற்கு ஏன் கேடு வந்து சேர்ந்தது என்று அவளும் அறிய முடியவில்லை. இவ்வினாக்களை எல்லாம் இறந்தவரைப் பார்த்துக் கேட்டு ஒப்பாரி பாடுகிறாள் மகள்.
பத்துப் பேர் சேவகரும்
பழனிக்கே போகையிலே
பத்துப் பேர் வந்தென்ன?-நீங்க
பழனியிலே மாண்டதென்ன?
எட்டுப் பேர் கூடி
இலஞ்சிக்கே போன தென்ன?
எட்டுப் பேர் வந்த தென்ன?-நீங்க
இலஞ்சியிலே மாண்ட தென்ன?
எட்டுப் பேர் சேவகரும்
இலங்கைக்கே போனதிலே
எட்டுப் பேர் வந்ததென்ன-நீங்க
இலங்கையிலே மாண்ட தென்ன?
கூண்டு வண்டி கட்டி-நீங்க
கோட்டைக்குப் போனாலும்
கும்பா நிழலாடும்-பிடிக்க வந்த பெண்
குயில் போல வாதாடும்.
மாட்டு வண்டி
மந்தைக்கே போனாலும்
மங்கு நிழலாடும்
உங்களைப் பிடிக்க வந்த மென்
மயில் போல வாதாடும்
யானை மேல் ஜமக்காளம்
நம்ம வாசலிலே
அஞ்சு லட்சம் பஞ்சாங்கம்
அருமை மகன் கொள்ளி வைக்க
அருச்சுனர்க்கும் சம்மதமோ
குதிரை மேல் ஜமக்காளம்
நம்ம வாசலிலே
கோடிப் பேர் பஞ்சாங்கம்
குழந்தை மகன் கொள்ளி வைக்க
குடும்பத்திலே சம்மதமோ
செங்கச் சுவரு வைத்து
செவ்வரளித் தோட்டம் வைத்து
சிறு நாயைக் காவலிட்டு-நான்
சீதை சிறையிருந்தேன்
செங்கச் சுவரிழந்து
செவ்வரளித் தோட்டம் அழிந்து
சிறு நாயும் காலொடிஞ்சு-நான்
சீதை கருகறேனே.
மஞ்சக் சுவரு வச்சு
மல்லிகைப் பூத்தோப்பு வச்சு
மர நாயைக் காவலிட்டு-நான்
மாது சிறையிருந்தேன்.
மஞ்சச் சுவரிடிஞ்சு
மல்லிகைப் பூத் தோப்பழிந்சு
மர நாயும் காலொடிஞ்சு-நான்
மாது கருகறேனே
மதுரைத் தலை வாசலிலே
மஞ்சள் பழுத்திருக்கும்
மரமல்லி பூத்திருக்கும்
மறுமல்லி வாசத்திற்கு
மயிலு வந்து கூடு கட்டும்
மயிலை அடுக்கியளோ?
மயில் கூட்டைப் பிச்சியளோ?
மயிலழுத கண்ணீரு-நீங்க பெத்த
மக்கள் மேல் சாடியதோ
கோட்டைத் தலை வாசலிலே
கொன்றை பூத்திருக்கும்
குடமல்லி பூத்திருக்கும்
குடமல்லி வாசகத்துக்கு
குயிலு வந்து கூடு கட்டும்
குயிலை அடிக்கியளோ?
குயில் கூட்டைப் பிச்சியளோ?
குயிலழுத கண்ணீரு-உங்க
குழந்தை மேல் சாடியதோ?
குறிப்பு : இப்பாடல் பாடப்படும் இடங்களுக்கு ஏற்றாற் போல ஊர்களின் பெயர் மாறிவரும்.
குழந்தைமகன் தந்தையை இழந்த கொடுமைக்கு வருந்தி சகோதரி அழுகிறாள்.
தந்தை செய்த பாவங்களுக்கு குழந்தைகள் துன்பப்பட வேண்டும் என்ற கருத்து கிறிஸ்தவ சமயக் கருத்தாகும். இந்து சமய கர்மக் கொள்கையும், சமண மதத்தவரது மறுபிறப்புக் கொள்கையும், அவரவர் செய்த வினைகள் அவரவர் உயிரைத் தான் பற்றிக்கொண்டு விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் சொல்லுகின்றன. ஆனால் சாதாரண மக்கள் தாய் தந்தையரின் வினை குடும்பத்தினரை தாக்கும் என்று நம்புகின்றனர்.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை.
-----------
சின்னத் தம்பி
தன்னுடன் பிறந்த தம்பி இறந்து விட்டான். அவனைப் பெட்டிக்குள் அடைத்து புதைக்க எடுத்துப் போகிறார்கள். சகோதரி ஒப்பாரி பாடுகிறாள்.
தேக்கு பலகை வெட்டி
தெய்வலோகப் பொட்டி பண்ணி
பொட்டிக்குள்ளே சின்னத் தம்பி
போகுதுன்னா சின்ன வண்டி
சின்ன வண்டி உள்ளிருக்கும்
சின்னத் தம்பி என் பிறப்பு
குறிப்பு : தமிழ் நாட்டின் சில சாதியினர் பிணத்தைப் பெட்டியில் வைத்துப் புதைத்து மேலே சமாதி கட்டி லிங்கம் அல்லது கணபதியைப் பிரதிஷ்டை செய்கிறார்கள்.
உதவியவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், சேலம்.
-----------
அவள் குறை
அவள் விதவை. அவளது துன்பங்களைச் சொல்லி அழுதால் மரமும் உருகும் ; பறவைகளும் கண் கலங்கும். என்ன குறையென்று அவள் சொல்லா விட்டாலும், விதவைக்கு நேரும் சமூகக் கொடுமைகளையும் குடும்பத் துன்பங்களையும், பல நாட்டுப் பாடல் மூலம் நாம் அறிந்துள்ளோமல்லவா?
பூ மரத்துக் கீழ் நின்னு
பொங் கொறை சொல்லி அழுதா
பூ மரத்து மேலிருக்கும்
புறாவும் இறை உண்ணாது
மாமரத்துக் கீழ நிண்ணு
மங்க குறை சொல்லி அழுதா
மாமரத்து மேலிருக்கும்
மயிலும் இறை உண்ணாது.
வட்டார வழக்கு : பொங்கொறை-பெண் குறை.
உதவியவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்
----------
மேல் கூறிய கருத்துக் கொண்ட வேறு இரண்டு பாடல்கள் பின்வருமாறு :
எட்டு மலைக் கந்தாண்ட
ஈசுவரன் கோயில், அங்கே
ஈசுவரன் கோயிலிலே
இலந்தை படர்ந்திருக்கும்
இலந்தைப் பழம் உண்ண வரும்
எண்ணாயிரம் பச்சைக் கிளி
எங்கொறையைச் சொன்னாலே
இலந்தைப் பழம் உண்ணலையே-என்
எண்ணங்களும் நீங்கலையே
பத்துமலைக் கந்தாண்ட
பரமசிவன் கோயிலண்ட
பாவை படர்ந்திருக்கும்
பழுத்தும் போப் பழமிருக்கும்
பாவைப் பழம் உண்ண வரும்
பத்தாயிரம் பச்சைக்கிளி
பாவி என் குறைக்கேட்டு
பாவைப் பழம் உண்ணலையோ-என்னுடைய
பாதரவும் நீங்கலையே
வட்டார வழக்கு : பாவை-பாகல் ; கொறை-குறை.
உதவியவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
-----------
ஏழையாம் என் தாய்
அவளுக்கு ஆயிரக்கணக்கான சுற்றத்தார் உண்டு. ஆனால் தாய் இறந்து விட்டாள். தாய் ஏழைதான். சுற்றத்தாரில் பணக்காரர்கள் பலர் உண்டு. ஆனால் வேதனைப்படும் காலத்தில் தாயின் அன்பைப் போல சுற்றத்தாரின் பெருமையும், பொருளும் அவளைத் தேற்றுமா?
எட்டு மலைக் கந்தாண்ட
இரும்பிக் கம்பி ஆச்சாரம்
எண்ணை நிழலோடும்
எடுக்கும் பட்சி சீட்டாடும்
எட்டு லட்சம் என் சனங்க
எனக் குதவி நின்னாலும்
ஏழையாம் என் தாயி
எதிரில் வந்தார் சந்தோஷம்.
பத்து மலைக் கந்தாண்ட
பவளக்கம்பி ஆச்சாரம்
பாலும் நிழலோடும்
பறக்கும் பட்சி சீட்டாடும்
பத்து லட்ச என் சனங்க
பக்கமாய் நின்னாலும்
பால் கொடுத்த என் தாயி
பக்கம் வந்தால் சந்தோஷம்.
வட்டார வழக்கு : ஆச்சாரம்-மாளிகை.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
----------
பூஞ்செடி தழைக்கலையே
பிறவியிலேயே குழந்தை நோயுற்றிருந்தால் அவள் நோய் தீர்க்கச் செய்த முயற்சிகள் வீணாயின. பிள்ளை இறந்து போனான். இளம் தாய் பாடும் ஒப்பாரி இது.
தங்கக் குடமெடுத்து
தாமரைக்குத் தண்ணிகட்டி
தாமரை தழைக்க லையே
தங்கக் கொடி ஓடலையே
பொன்னுக் குடமெடுத்து
பூஞ்செடிக்கு நீர் பாய்ச்ச
பூஞ்செடி தழைக்க லையே
பொன்னாக் கொடி ஓடலையே
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
-------------
சிவனும் அறியலையே
மாங்கல்ய பாக்கியம் அருளும்படி அவள் தெய்வங்களை எல்லாம் பூசை செய்தாள். ஆனால் அவை கருணை காட்டவில்லை. எமனை எதிர்த்து நிற்கும் வலிமையைக் கொடுக்க தெய்வங்களால் முடியவில்லை. அவள் கணவனை எமன் பிடித்துக் கொண்டு போய் விட்டான். பூசை பலிக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் அவள் அழுகிறாள்.
பழனிக்கு மேல் புறமாய்
பன்னிரெண்டு கோபுரமும்
படிக்கும்படி பூசை செஞ்சேன் !
பாவிபடும் தொந்தரவை
பகவான் அறியலையே !
செஞ்சிக்கு மேல்புறமாய்
செல்வரெண்டு கோபுரமாம்
சிலைக்குச் சிலை பூசை செஞ்ச
சிவனோடு வாதாடி-இந்தச்
செல்விபடும் தொந்தரவை
சிவனும் அறியலையே !
வட்டார வழக்கு : செஞ்ச - செய்தேன் ; சிலைக்குச் சிலை -சிலைகளுக்கெல்லாம்.
உதவியவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
-----------
அண்ணியாள் அவதி
கணவனை இழந்தபின் புகுந்த வீட்டில் மாமியார், கொழுந்திமார் பேசும் பேச்சுத் தாங்க முடியாது போய்விட்டது. சில நாட்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்று அவள் பிறந்த வீடு சென்றாள். அங்கே அண்ணிமார்கள் 'தவித்த வாய்க்குத் தண்ணீர் ஊற்ற'க்கூட மனமி்ல்லாமல் முகத்தைச் சுளிக்கிறார்கள். மழை பெய்து செடிக்குப் பாயும் தண்ணீரைக் கூட குடிக்கவிட அவர்களுக்கு மனமில்லை. புகுந்த வீட்டில் உள்ள உரிமைகூட பிறந்த வீட்டில் இல்லாது போய் விட்டது. சில ஆண்டுகள் முன்பு வரை சட்டப்படி அவளுக்கு ஒரு உரிமையும் இல்லைதானே ! சமூக வழக்கப்படி இன்னும் பிறந்த இடத்தில் தாய் தந்தையர் மறைவுக்குப் பின் மகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இதை எண்ணி அழுதுகொண்டே அவள் புகுந்த வீட்டிற்குத் திரும்பி விடுகிறாள்.
பொன்னு மழை பெய்யும்
பூஞ்செடிக்கு நீர் பாயும்
பொறந்த எடத்துத் தண்ணியின்னும்
பூந்து குளிக்கப் போன
பெரியண்ணிங்கிறவ
பூச்சி விழுந்திச்சு இன்னா
புதுப்பாசி கப்பிச்சுன்னா
போட்டேனே பொந்தியிலே
புடிச்சனே தடம் வழியே !
தங்க மழை பெய்யும்
தாமரைக்கு நீர் பாயும்
வளர்ந்த வீட்டுத் தண்ணியின்னும்
வாரிக்குடிக்கா போனா
சின்னண்ணி இங்கிறவ
வண்டு படர்ந்ததின்னா
மலைப் பாசி கப்பிச்சின்னா
வடிச்சனே கண்ணீரை
வந்திட்டான் வளநாடு.
வட்டார வழக்கு : பொறந்த-பிறந்த ; இன்னும்-என்றும் ; பூந்து-புகுந்து ; என்கிறவள்-இன்னா என்றாள் ; பொந்தி-வயிறு ; புடிச்சன்-பிடித்தேன் ; கப்பிச்சின்னா-கப்பித்து என்றாள் ; படர்ந்ததின்னா-படர்ந்தது என்றாள்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
-----------
மதுரை நகரிழந்தேன்
அவளது சகோதரன் ரயில் வண்டி ஓட்டுகிற டிரைவர். அவன் அடிக்கடி இவள் இருக்கும் ஊருக்கு வருவான். இவளுக்கு சற்றே உடல் நலமில்லை என்றாலும், பெற்றோர் உறவினர் எல்லாம் ஓடோடியும் வந்து விடுவார்கள். அண்ணன் இறந்து போனான். அண்ணனை மட்டுமா அவள் இழந்தாள்? அண்ணன் ஓட்டிய இரயில் வண்டி செல்லுகிற மதுரை, சேலம், செஞ்சி ஆகிய நகரங்களை எல்லாம் அவள் இழந்து விட்டாள். அவ்வூர்களில் வாழும் உறவினர்களுக்குச் செய்தி சொல்ல அன்பான அண்ணன் இல்லை. இப்பொழுது உறவினர் யாரும் அவள் வீடு தேடி வருவதில்லை. அன்பு மிக்க தனது அண்ணனை எண்ணி தங்கை அழுது புலம்புகிறாள்.
மதுரையும் சேலத்தையும்
மாட்டிப் பிணைக்கும் வண்டி
எங்கூடப் பிறந்த
மார்க்கண்டன் ஓட்டும் வண்டி
மங்கைக்குச் சேதமின்னும்
மதுரைக்கு ஆள் போனா
மதுரை புரண்டு வரும்
மாப்புழுதி ஆடி வரும்
மார்கண்டன் ஓடிவரும்-இப்போ
மதுரை நகரிழந்தேன்
மார்கண்டன் மாரிழந்தேன்
செஞ்சியையும் சேலத்தையும்
சேர்த்துப் பிணைக்கும் வண்டி
என்னுடன் பிறந்த
சிறுத் தொண்டன் ஓட்டும் வண்டி
செல்விக்குச் சேதமின்னும்
செஞ்சுக்கு ஆள் போனா
செஞ்சி புரண்டு வரும்
செம்புழுதி ஆடி வரும்
என்னுடன் பிறந்த
சிறுத் தொண்டன் கோடி வரும்-இப்போ
செஞ்சி நகரிழந்தேன்
சிறுத் தொண்ட மாரிழந்தேன்.
குறிப்பு : மார்கண்டர்-சிரஞ்சீவி. அண்ணனும் சிரஞ்சீவியாக இருப்பான் என்று தங்கை நம்பியிருந்தாள். மார்கண்டன் அவனது இயற்பெயராக இருக்காது. ஒப்பாரிக்கு என்று தங்கை தேர்ந்தெடுத்துக் கொண்ட பெயரேயாம்.
சிறுத்தொண்ட நாயனார் சிவனடியாருக்காக குழந்தையை அறுத்துக் கறி வைத்துப் படைத்தார். ஆனால் சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் குழந்தையை மறுபடியும் உயிர்ப்பித்துக் கொடுத்தார். அவளுடைய அண்ணன் அப்படி உயிர் பெற்று வருவானோ?
உதவியவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
------------
பொன் ரதம் முன்னாலே
தன்னைப் பெற்ற தந்தைக்கு ரதம் சோடித்து சவ ஊர்வலம் செல்லுவதைக் குறிப்பிட்டு மகள் அழுகிறாள்.
சனிக்கிழமை ஊத்தும் தண்ணி
சாக்கடை போய்ப் பாயும்
சாக்கடை ஓரத்திலே
தங்கமல்லி பூத்திருக்கும்
தங்கமல்லி பூப்பறிச்சு
தங்கரதம் சோடிச்சா
தங்கரதம் முன்னாலே-நீர் பெத்த
பொன்னாளும் பின்னாலே
புதன் கிழமை ஊத்தும் தண்ணி
புழக்கடைக்குப் போய்ப் பாயும்
புழக்கடை ஓரத்திலே
பொன்னுமல்லி படர்ந்திருக்கும்
பொன்னுமல்லி பூப்பறிச்சு
பொன்னு ரதம் சோடிச்சா
பொன்னு ரதம் முன்னாலே-நீ பெத்த
பொண்ணாளும் பின்னாலே.
தந்தை மகளுக்குப் புத்தி சொல்ல வந்தார். அவள் அலட்சியமாக இருந்து விட்டாள். பின்னர் அவர் இறந்ததும், தனது அறியாமைக்கு வருந்துகிறாள்.
புத்தேரி ஐயாவே, புத்தியுள்ள ராசாவே,
பொட்டி வண்டி மேலேறி
புத்தி சொல்ல வந்தாயே, உன்
புத்தி சொன்ன கால்களுக்குப்
பூத்த மலரிசைத்து
பூசை செய்யாப் பாவியானேன்,
பூக்காத பூவாளோ
காஞ்சிபுரத்தய்யாவே
கருத்துள்ள ராசாவே
காரு வண்டி மேலேறி
கருத்தொரைக்க வந்தாயே
கருத்தொரைக்க வந்த உன்
கால்களில் மலரைக் கொட்டி
காலைப் பூசை செய்யாத
காய்க்காத காயானேன் !
சேகரித்தவர் : S.M. கார்க்கி்
இடம்: சிவகிரி,நெல்லை.
---------
மாரடிப்பு
ஒப்பாரி பாடும் முன்னால் பெண்கள் மாரடித்துக் கொண்டு ஒரு பாட்டுப் பாடுவார்கள். தகப்பன் இறந்து போனால் அவருடைய பெண்மக்கள் மாரடிப்பார்கள். அவரைவிட வயதில் குறைந்தவர்களும் மாரடித்துக் கொண்டு கூடச் சேர்ந்து பாடுவார்கள். அப்பாட்டில் சவ அடக்கச் சடங்குகள் பலவும் வரிசையாகக் கூறப்படும். இச் சடங்குகள் சாதிக்குச் சாதி மாறுபடும். அவை சாதி உயர்வு தாழ்வுகள் பற்றி வெவ்வேறாயிருக்கும். இவற்றில் ஒரு சாதிக்குரிய சடங்கைப் பிற சாதியினர் செய்தால் கலகம் உண்டாகி விடும். திருமலை நாயக்கர் காலத்தில் பள்ளருக்கும் பறையருக்கும், சாவின்போது எத்தனை குடைகள் பிடிக்க வேண்டுமென்பதில் சச்சரவுண்டாகிப் பெருங்கலகம் தோன்றியது. நாயக்கர் தலையிட்டு சமரசம் செய்து வைத்து சாசனம் பிறப்பித்தார். அரசாங்கம் இவ்வேறுபாடுகளைப் பாதுகாத்து நிலை நிறுத்தியது. பந்தல் போடுவது, நடைபாதையில் துணி விரிப்பது, கருமம் செய்பவனுக்குக் குடை பிடிப்பது, சங்கம் ஊதுவது, இரட்டை மேளம் வாசிப்பது இவை போன்ற வழக்கங்கள் சாதிக்குச் சாதி சமூக வழக்கங்களால் அறுதியிடப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய செய்திகள் பல நாயக்கர் கால சாசனங்களில் காணப்படுகின்றன.
மாரடிப் பாட்டு-1
ஐயாவே ஐயாவே
பாலு கொண்டு வந்தியளோ
பாதரவம் தீத்தியளோ
மோரு கொண்டு வந்தியளோ
மோட்ச கதி பெத்தியளோ
மூத்த மகன் கண்ணருகே
மோட்ச கதி பெத்தியளோ
இளைய மகன் கண்ணருகே
எமலோகம் சேர்ந்தியளோ
காலனுமே அழைச்சானோ உங்கள்
கணக்கெடுத்துப் பார்த்தானோ
எமன் அழைச்சானோ
ஏடெடுத்துப் பார்த்தானோ
மூத்த மகன் முடியிறக்க
மோட்ச கதி பெத்தியளோ
இளைய மகன் முடியிறக்க
எமலோகம் சேர்ந்தியளோ
அரையளவு தண்ணியிலே
அள்ளி வந்தார் நீர்மாலை
இடுப்பளவு தண்ணியிலே
எடுத்து வந்தார் நீர்மாலை
வருகுதில்ல நீர்மாலை
வைகுந்த வழிகாட்ட
போகுதில்ல நீர்மாலை
பூலோகம் எதித்தளிக்க
இடுகாடு தேரிறக்க
ஈண்ட பசு போதாதோ
மலையேறி மேஞ்சு வரும்
மயிலைப் பசு கோதானம்
கரையேறி மேஞ்சு வரும்
கருத்தப் பசு கோதானம்
வீதியிலே போற ரதம்
வீமனையே பெற்றெடுத்த
வெள்ளி ரதம் போகுதென்பார்.
வாழை கட்டிப் பந்தலிலே
வரிசை மக வந்து நிற்கா
வரிசை மக கையறஞ்சா
வந்த சனம் கையறையும்
சீலை கட்டிப் பந்தலிலே
செல்ல மக வந்து நிக்கா
செல்ல மக கையறஞ்சா
சேந்த சனம் கையறையும்
தடயம் விட்டு மாரடிக்க
தங்க மக வேணுமின்னு
பட்டுடுத்தி மாரடிக்க
பார மக வேணுமின்னு
கொப்புப் பூட்டி மாரடிக்க
பொண்ணடியும் வேணுமின்னு.
சேகரித்தவர் : S.M. கார்க்கி்
இடம்: சிவகிரி,நெல்லை.
----------
மாரடிப் பாட்டு-2
'மாரடித்த கூலி மடிமேலே' என்பது பழமொழி. (சொலவடை) இறப்பு என்பது இயற்கையின் நியதி என்றாலும் இறந்தோரை எண்ணி, இருப்போர் அழுது புலம்புகின்றனர்.
நரைத்துத் திரைத்து மூப்பெய்தித் தளர்ந்த காலத்தில் வரும் சாவு மகிழ்ச்சியையே அளிக்கிறது. உரிய காலத்தில் வந்த சாவை எண்ணி யாரும் ஒப்பாரி வைப்பதில்லை.
பிணத்தைக் குளிப்பாட்டி அலங்கரித்து சாய்த்து வைத்து பெண்கள் சுற்றியும் நின்று, கூந்தலை உலைத்து விட்டுக் கொண்டு, இறந்தவரது சீர்சிறப்புகளையும், நோய்வாய்ப்பட்டதையும், பிள்ளைகள் பரிவுடன் செய்த உபசரிப்புகளையும், மருத்துவத்தையும்-முடிவில் வந்த இறப்பையும்-பின்னர் நடைபெறும் இறுதிச் சடங்குகளையும் விவரித்துக் கைகளைத் தம் மார்பில் அடித்துப் பாடிக்கொண்டு சுற்றி வருவர். அதில் சோகமயமானதோர் உருக்கமும் அமைதியும் புலப்படும். கேலியும் கிண்டலும் கூட விரவி வருவதுண்டு. கிழடு, கெட்டைகள் இறந்து அங்கு மாரடித்தல் நடைபெறும்போது பார்த்தால் அது ஓர் இழவு வீடு போலத் தோன்றாது. மகிழ்ச்சிகரமான ஒரு மண விழாவைப் போலவே தோன்றும்.
மாரடித்து முடிந்த பின் கடலை, பயிறு, மாவு, பொரி, ஏதாவது தவறாமல் பரிமாறப்படும். இதையே மேற்கண்ட பழமொழி (சொலவடை) சுட்டிக்காட்டுகிறது.
(குறிப்பு : S.S. போத்தையா)
(* அளபெடை கொடுத்து நீட்டி இசைப்பர்.)
*ஆ அ தி இ கயி யிலாசத்தில்
ஆ அ தி மூலம் தன்னிடத்தில்
பாசுபதம் தான் கொடுத்தார்
பரம சிவனை நோக்கி
மக்களும் இல்லையிண்ணு
மணம் வாடித் தவசிருந்தார்
பிள்ளைகளும் இல்லையிண்ணு
புழுங்கித் தவசிருந்தார்
சித்திர புத்திரரே-நல்ல
சிவனார் பெருங்கணக்கே
மானிடர் கணக்கை யெல்லாம்
வாசித்துச் சொல்லுமின்னம்
மண்டலத்தில் போய் பிறக்கும்
மானிடரைத் திட்டம் செய்தார்
மானிட ஜென்மம் வேண்டும்-இந்த
மண்டலத்து ஆசை வேண்டும்
கண்ணான கண்ணரையா
காசி விசுவநாதையா
வந்து பிறந்தாரையா
வயசு பத்து நூறு ஆக
மக்கள் பதினாறு பெத்து
மகிழ்ச்சியுடனாண்டிருந்தார்
பிள்ளை பதினாறு பெத்து
புகழுடனே ஆண்டிருந்தார்
ஆண்டு வரும் நாளையிலே-ஒரு
அதிசயமும் கண்டாராம்
தீர்த்த மாடப் போறாமிண்ணு
தெரிசனமும் கண்டாராம்
ராமேஸ்வரம் தீர்த்தமாடி
ராமநாதர் மோட்சம்தேடி
குற்றாலம் தீர்த்தமாடி
குழல்வாய்மொழி அடிபணிந்து
சங்குமுகம் தீர்த்தமாடி
சாலாட்சம்மா அடிபணிந்து
காசியிலே தீர்த்தமாடி
காசி நாதர் மோட்சம்தேடி
இத்தனையும் தீர்த்தமாடி
இளைத்து வந்து உட்கார்ந்தார்
அத்தனையும் தீர்த்தமாடி
அலுத்து வந்து உட்கார்ந்தார்
காலோ வலிக்குதிண்ணு
கட்டிலிலே போய்ப்படுத்தார்
மேலோ வலிக்குதிண்ணு
மெத்தையிலே போய்ப்படுத்தார்
தலையோ வலிக்குதிண்ணு
தாவாரம் பள்ளிகொண்டார்
மண்டை யடிக்குதிண்ணு
மக்களெல்லாம் சூழ்ந்திருந்தார்
வரிசை மகன் பார்த்திருந்து
வைத்தியர்க்கு ஆளும் விட்டார்
ஏறினார் காரிலேயே
இறங்கினார் மதுரையிலே.
மதுரைக்கடை வீதியிலே
மன்னர் மகன் பண்டுதராம்
ஆனைக்கல்லு வீதியிலே
அதிகாரி பண்டுதராம்
ஓடி வரும் மோட்டாரிலே
உட்கார்ந்தான் வைத்தியரும்
அஞ்சி மணிக் காரேறி
அவசரமாய் வாராராம்
மருந்துப் பையை கையிலெடுத்து
மன்னர் மகன் வந்து சேர்ந்தான்
வாருமையா வைத்தியரே
வலது கையைப் பாருமையா
இருமையா வைத்தியரே
இடது கையைப் பாருமையா
கையைப் பிடித்தாரோ
கைத்தாது பார்த்தாரே
மறு வார்த்தை சொல்லாமலே
மவுனமாக இருந்தாரே
வரிசை மகன் எந்திரிச்சார்
வைத்தியர் முகம் பார்த்தார்
என்னையா வைத்தியரே
ஏதுமே பேசவில்லை
என்ன சொல்வார் வைத்தியரும்
இஞ்சி தட்டி வாருமென்றார்
பத்து வகை மாத்திரையைப்
பார்த்துரைத்தார் பண்டுதரும்
தாழம்பூக் கெண்டியிலே
தண்ணீரோ கொண்டு வந்தார்
தண்ணீர் இறங்கவில்லை
தாமரைப்பூ மேனியிலே
மாதாளம்பூக் கெண்டியிலே
மருந்து வகை கொண்டுவந்தார்
மருந்தோ இறங்க வில்லை
மல்லிகைப் பூ மேனியிலே
பஞ்சு கொண்டு பாலொழுக்கி
பட்டு கொண்டு வாய் துடைத்து
என்ன வேணுமின்னு சொல்லி
ஈஸ்வரனார் கேட்டாராம்
பொன்னும் வேண்டாம்
பொருளும் வேண்டாம்
பூலோகம் வேணுமின்னார்
காசு வேண்டாம், பணமும் வேண்டாம்
கயிலாசம் வேணுமின்னார்
அப்போ மகானிவர்க்கு
ஆயுள் முடிந்ததுவே
செப்பியதோர் காலதூதர்
சீக்கிரமாய்த் தான் வளைஞ்சார்
காலன் கொண்டு போறானே
கைலாசம் தீர்த்தமாட
எமன் கொண்டு போறானே
எமலோகம் தீர்த்தமாட
முத்துப் போல் கண்ணீரை-மக்கள்
முகமெல்லாம் சோர விட்டார்
பவளம் போல் கண்ணீரை-மக்கள்
பக்கமெல்லாம் சோர விட்டார்
குளிப்பாட்டி கோடி கட்டி,
கொண்டு வைத்தார் குறிச்சியிலே
முன்னூறு மூங்கியிலே
முதல் மூங்கி கொண்டு வந்தார்
நானூறு மூங்கியிலே
நல்மூங்கி கொண்டு வந்தார்.
மூங்கில் பாய் தானெடுத்து
முத்தமெல்லாம் பந்தலிட்டார்
தென்னம்பாய் தானெடுத்து
தெருவெல்லாம் பந்தலிட்டார்
சேப்பில் பணம்எடுத்தார் ;
சென்னப்பட்டணம் கொட்டழைச்சார்
கையில் பணம் எடுத்தார் ;
பவனி வாத்தியம் வரவழைச்சார்
அடிபடுதே மேளவகை
ஆசார வாசலுலே
முழங்குதையா மேளவகை
மூவுலகம் தத்தளிக்க
வெள்ளித் தேர் செய்தோமானால்
வேலையோடிப் போச்சுதிண்ணார்
பொன்னுத் தேர் செய்தோமானால்
பொழுதோடிப் போச்சிதிண்ணார்
மதுரைக்கு ஆளனுப்பி
மச்ச ரதம் கொண்டு வந்தார்
செஞ்சிக்கு ஆளனுப்பிச்
சேர்த்த ரதம் கொண்டு வந்தார்
காசியிலே பட்டெடுத்தால்
கனமோ குறையுமிண்ணார்
மதுரையிலே பட்டெடுத்தால்
மடிப்போ குறையுமிண்ணார்
விருதுநகர் பட்டெடுத்தால்
விரிப்போ குறையுமிண்ணார்
சாத்தூருப் பட்டெடுத்தால்
சபையோ நிறையாதிண்ணார்
பெரு நாளிப் பட்டெடுக்கப்
புறப்பட்டார் பிறந்தவரும்
நாலுகடை பார்த்து
நயமான மல்லெடுத்து
கொண்டுமே வாராராம்
கூடப் பிறந்தவரும்
வரிசை மகள் சேலைகொண்டு
வாராராம் வீதியிலே
செல்வ மகள் சேலைகொண்டு
தெருவீதி வாராளாம்
கொட்டு முழக்கமுடன்
கொண்டு வந்தாள் பந்தலுக்கு
நாலு பேர் செம்பெடுத்தால்
நடுங்கும் கைலாசம்
மூணுபேர் செம்பெடுத்தால்
முழங்கும் கைலாசம்
ஆழமுள்ள கங்கையிலே
அலரத் தலைமுழுகி
நீள முள்ள கங்கையிலே
நின்னு தலைமுழுகி
ஏழாறு தான் கடந்து
எடுத்து வந்தார் நல்ல தண்ணீர்
அஞ்சாறு தான் கடந்து
அள்ளி வந்தார் நல்ல தண்ணீர்
மூணாறுதான் கடந்து
மோந்து வந்தார் நல்ல தண்ணீர்
செங்கை மடைதிறந்து
செம்பு கொண்டு நீர் மோர்ந்து
மாராடி நூல்போட்டு
மாவிலையும் கையிலெடுத்து
கெண்டி மேல் தேங்காய் வச்சி
செவ்வரளி மாலைபோட்டு
ஒரு மகனும் செம்பெடுத்தால்
ஓடி வரும் நீர்மாலை
குளுப்பாட்டி கோடிகட்டி
கொண்டு வந்தார் பந்தலுக்கு
மாலை கையிலெடுத்தார் ;
மரக்கால் தலையில் வைத்தார்
காசி காசியிண்ணு சொல்லி
கட்டி மகன் நீர் தெளிச்சார்
சுத்தி வந்து நீர் தெளிச்சு
சூரியரைக் கையெடுத்தார்
பக்கம் வந்து நீர் தெளிச்சு
பகவானைக் கையெடுத்தார்
சீதேவி தான் வாங்கி
ஸ்ரீராமர் வீடுசேர்ந்தார்
வெள்ளி படி கடந்து
வெளியேறச் சம்மதமோ
பொன்னும் படி கடந்து
போகவும் சம்மதமோ
ஏழு நிலைக் கோபுரமாம்
ஈஸ்வரனார் பட்டணமாம்
ஈஸ்வரனார் பட்டணத்தை
இருந்து ஆளப் போறீயளோ
அஞ்சி நிலைக் கோபுரமாம்
ஐவரோட பட்டணமாம்
ஐவரோட பட்டணத்தை
அரசாளப் போறீயளோ
மூணு நிலைக் கோபுரமாம்
மூதாக்கள் பட்டணமாம்
மூதாக்கள் பட்டணத்தை
முடிசூட்டப் போறீயளோ
ஒத்துமையாய் ஊராரும்
உல்லாசத் தேர் தூக்கி
பெத்த மகன் முன்னடக்க
பெரியோர்கள் பின்னடக்க
உற்ற மகன் முன்னடக்க
உற முறையாற் பின்னடக்க
சந்தியிலே போற ரதம்
தங்க ரதம் யாரு ரதம்
தருமரைப் பெற்றெடுத்த
தங்க ரதம் போகுதென்பார்
வீதியிலே போற ரதம்
வெள்ளி ரதம் யாரு ரதம்
வீமரைப் பெற்றெடுத்த
வெள்ளிரதம் போகுதென்பார்
முக்குக்கு முக்கல்லவோ
முடிமன்னர் தோள்மாத்த
சந்திக்கு சந்தியல்லோ
சதிர் மன்னர் தோள்மாற்ற
முக்குத் திருப்பி விட
மூத்த மகன் எங்கே யென்பர்
மந்தையிலே தேரிறக்கி
மல்லிகைப்பூ சூறையிண்ணார்
கரையிலே தேரிறக்கி
கயிலாசம் போறேனிண்ணார்.
வருகுதையா பூந்தேரு
வைகுந்தம் தெத்தளிக்க
போகுதையா பூந்தேரு
பூலோகம் தெத்தளிக்க
இண்டு மணக்குதையா
இடுகாடு பூமணக்கும்
வாயை மணக்குமையா
வைகுண்டம் பூமணக்கும்
இடு காடு தேரிறக்கி
எமலோகம் போறேனிண்ணார்
சுடுகாடு தேரிறக்கி
சொர்க்க லோகம் போறேனிண்ணார்
தேரை விட்டுக் கீழிறக்கி
செல்ல மக்கள் வந்து கூடி
பொன்னரசி கையிலெடுத்து
போட்டார்கள் வாய்க்கரிசி
சந்தனக் கட்டை வெட்டி
சதுருடனே தீ மூட்டி
கொள்ளி வச்சி குடமுடைச்சி
கோலவர்ணத் தேரவுத்து
செலவு தொகை தான் கொடுத்து
செல்ல மகன் தலைமுழுகி
சிவ சிவா என்று சொல்லி
திருநீறும் தானணிந்தார்.
குறிப்பு : இதில் சாவுச் சடங்குகள் வரிசையாகச் சொல்லப்படுகின்றன.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
-----------
மாரடிப் பாட்டு-3
கவர்னர் தலைவாசலுல
கருத்த யானை கெட்டியிருக்க
கருத்த யானை கொம்பு தச்சி-இந்த
கவர்னர் துரை மாண்டதென்ன
வீமர் தலைவாசலுல
வெள்ளானை கெட்டியிருக்க
வெள்ளானை கொம்பு தச்சி
வீமர் துரை மாண்டதென்ன
கத்திரிக்காய் எங்களுக்கு
கயிலாசம் உங்களுக்கு
பூசணிக்காய் எங்களுக்கு
பூலோகம் உங்களுக்கு
வாழைக்காய் எங்களுக்கு
வைகுந்தம் உங்களுக்கு
இடிச்சமா எங்களுக்கு
இடுகாடு உங்களுக்கு
பொரிச்சமா எங்களுக்கு
பூலோகம் உங்களுக்கு
சோளப்பொரி எங்களுக்கு
சொர்க்கலோகம் உங்களுக்கு
எள்ளுக்காய் எங்களுக்கு
இடுகாடு உங்களுக்கு
குறிப்பு : இந்தப் பாட்டில் கேலியும், கிண்டலும், மகிழ்ச்சியும் கலந்திருப்பதைப் பார்க்கிறோம். கத்திரிக்காய் அதாவது பொங்கி வைத்த சோறும் கறியெல்லாம் இருப்பவர்களுக்கு.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
----------------
தருமரைத் தேடுகிறார்கள்
அவர் ஊரில் நியாயம் தீர்த்து வைக்கும் அம்பலக்காரர். இரவு பகலாக ஊர் வழக்குகளை எல்லாம் தீர்த்து வைப்பார். ஊரில் எல்லோரும் அவரை தருமர் என்று அழைப்பார்கள். போலீசார் அவருடைய உதவியை எப்பொழுதும் நாடுவார்கள். அவர் இறந்துவிட்டபொழுது அவருடைய மகள் ஒப்பாரி சொல்லி வருந்துகிறாள்.
கவனருட கச்சேரியாம்
கவனருட கச்சேரியிலே
கெடி ராந்தா நின்னெரியும்
கெடி ராந்தா நின்னெரிய
சீமையெல்லாம் தேடுதாக
தண்ணியிலே மங்களமாம்
தர்மரோட கச்சேரியிலே
தர்மரோட கச்சேரியிலே
தனிராந்த நிண்ணெரிய
தனிராந்த நிண்ணெரிய
தாமரையே தேடுதாக
தங்கமிதியடியாம்
தர்மரோட கச்சேரியாம்
தருமருக்கு வாய்த்த பிள்ளை
தம்பி சிறுசுகளாம்
பொன்னு மிதியடியாம்
போலீசார் கச்சேரியாம்
போலீசார் கையமத்த
புள்ளை சிறுசய்யா
வட்டார வழக்கு : கவனர்-கவர்னர் ; கெடிராந்தா-விடிய விடிய எரியும் மண்ணெண்ணெய் விளக்கு ; மங்களா-பங்களா ; கையமத்த-விடை கூற.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
-----------
கும்மினியாள் அழுது வந்தாள்
ஒப்பாரிகளில், மனைவி கணவனோடு வாழ்ந்த பெருமையை நினைத்தும், அது அழிந்தது குறித்து வருந்தியும் பாடுவாள். கணவனை ராமன் என்றும், தன்னை சீதை என்றும் பெருமை பாராட்டிப் பேசுவது மரபு. தமிழ் நாட்டில் நாயக்க மன்னர் ஆட்சி ஒழிந்து, நவாப் ஆட்சி சிறிது காலம் நடைபெற்றது. அதன் பின்னர் கும்பினியார் ஆட்சி தோன்றியது. அரசர் பெயரையே கேள்விப்பட்டிருந்த பாமர மக்கள் கும்பினியார் என்றால், அயல் நாட்டிலிருந்து தம்மை ஆளும் ஒரு அரசர் என்றே எண்ணினார்கள். இப்பெண் கும்பினியார் என்ற அரசனுக்கு ஒரு மனைவியைக் கற்பனை செய்கிறாள். தனக்குத் தெரிந்த ஜமீன்தாரர்களை எல்லாம் ஜெயித்து ஆட்சியைக் கைப்பற்றிய கும்பினியாரின் மனைவி மிகப் பெரிய ராணியாக இருக்க வேண்டுமல்லவா? ஆகவே தன்னை கும்பினியாள் என்றே சொல்லிக் கொள்கிறாள். கும்பினியாள் என்றாள் சக்கரவர்த்தினி என்று பொருள், சக்கரவர்த்தினிபோலச் சிறப்பாக வாழ்ந்த அவளுடைய பெருமை எல்லாம் அவள் கணவன் இறந்ததும் மறைந்துவிட்டது. தமிழ் நாட்டில் படை எடுத்து வந்து மறவர் படையைத் தோற்கடித்த பட்டாணியரை அவள் அறிவாள். கும்பினியார் வருமுன்பு அவர்கள்தான் தமிழ் நாட்டுப் பாளையங்களுக்குப் படையெடுத்து வந்தார்கள். அத்தகைய பட்டாணி ஒருவன்தான், தன் கணவனைக் கொன்றுவிட்டானோ என்று அவள் கேட்கிறாள். காலதூதர்களை பட்டாணிக்கு உவமித்துப் பேசுகிறாள்.
பட்டி லையும் பட்டு-நான்
ஒசந்த விலைப் பட்டு
ஒசந்த விலைப் பட்டிலே
ஓடி விழுந்த மாயமென்ன
மலையிலே மாதுலை
மாதம் ஒரு பூ பூக்கும்
இடையிலே ஒரு பெண் பிறந்தேன்-தான்
எடை குறைச்சல் ஆனதென்ன
சந்தனச் சடுக்கா வண்டி-நான்
தனிமைப் பட்டாள் ஏறும் வண்டி
சண்டாளி வாய்திறந்தா
தலைவாசலுமே கூட்டமாகும்
தனிமைகளைப் பார்த்திருந்து
தலை வாசலுமே பிரண்டெழும்
குங்குமச் சடுக்கா வண்டி
குயிலாளே ஏறும் வண்டி
கும்பினியாள் அழுது வந்தாள்.
கொல்லை எல்லாம் கூட்டமாகும்
கொடுமைகளைப் பார்த்திருந்தால்
கொல்லையுமே பிரண்டெழும்
குங்கும நெல்லி மரம்
கூட்டத்தார் வச்ச மரம்
கொடுமைகளைச் சொல்லி அழுதா
கோர்ட்டார் கச்சேரியும்
கூடப் பிரண்டழும்
பத்துத்தலை வாசலும்
பதினெட்டு ஆசாரமும்
ஆசார வாசலிலே
ராஜாக்கள் வந்திறங்க
அடிக்க வருவாரோ
ஆளெண்ணிப் பாப்பாரோ
அடிக்க வர ராஜாவே
ஐயா சரண மின்னே
எட்டுத் தலைவாசலும்
இருபத்தெட்டு ஆசாரமும்
கொல்ல வரு வாரோ
கொலங் குத்தி பேசுவாரோ
கொல்ல வர ராசாவே
கோடி சரண மின்னே
எட்டரங்காம் மாளிகையாம்
எடுத்தெடுக்கும் தண்டியலாம்
எடுத்தெடுக்கும் தண்டியலை
எதிர்த்திருந்து எய்தானோ
பத்தரங்காம் மாளிகையாம்
பார்த்தெடுக்கும் தண்டியலாம்
பார்த்தெடுக்கும் தண்டியலை
பார்த்திருந்து எய்தானோ
கோடி மாதுளம் பூவாம்
கோட்டாற்றுத் தாழம் பூவாம்
கோடி முடியு மின்னே
குயில் பறந்த மாயமென்ன
பதக்கு மாதலம் பூவாம்
பருவமுள்ள தாழம் பூவாம்
பாத்து முடியுமின்னே
பறந்தோடிப் போனதென்ன
அரங்கு துறந்து
அரளிப் பதி உண்டுபண்ணி
ஆண்டியார் வாழ்வதற்கு
அரும் பெடுத்தும் சாத்தலையே
பொட்டி துறந்து
பூப்பதிகள் உண்டு பண்ணி
பொண்ணடியாள் வாழ்வதற்
பூவெடுத்துச் சாத்தலையே
அல்லிப் போல் பொண்ணும்
அருச்சுனன் போல் மாப்பிள்ளையும்
அல்லி போல் வாழ
அழைத்தார் தஞ்சமின்னே
சீதை போல் பொண்ணும்
ராமர் போல் மாப்பிள்ளையும்
சீதை போல் வாழ
சீமை பொறுக்கலையே
ஆனை அலங்காரம்
அம்பாரிச் சிங்காரம்
ஆனைமேல் பட்டாணி
அம்பு கொண்டு எய்தானோ
குதிரை அலங்காரம்
கூடாரச்சிங்காரம்
குதிரைமேல் பட்டாணி
கொம்பு கொண்டு எய்தானோ.
குறிப்பு : இப்பாட்டு தமிழ் நாட்டில் பட்டாணியரும் கும்பினியாரும் சேர்ந்து மறவர் பாளையங்களை அடக்கிய காலத்தில் தோன்றியிருக்கலாம். பட்டாணியை வருணிக்கும்பொழுது தற்கால லேவாதேவிக்காரனாக வருணிக்காமல் ஆனைமேல் அம்பாரி வைத்து ஏறி வருபவனாகவும் கூடாரத்தில் வாழ்பவனாகவும் வருணித்திருக்கிறது. இது படையெடுத்து வந்த பட்டாணியரையே குறிக்கும், மறவர் பாளையங்களை அடக்கி வந்த மாபூஸ்கான் கான்சாகிப் ஆகியோர்களைப் பற்றிய நினைவு சிறிது காலத்திற்கு மறவர் பாளையங்களில் மங்கவில்லை. அதற்கடுத்து இருபது வருடங்களுக்குள்ளாக, கும்பினியார் ஆட்சி நிலைத்துவிட்டது. இப்பாடலில் இறந்து போனதாகச் சொல்லப்படும் மனிதன் இச் சன்டைகளில் இறந்தவனாக இருக்கலாம். வழக்கமாகக் கால தூதர் வருகையைக் குறிப்பிடும் ஒப்பாரி “ஆசார வாசலில் ராஜாக்கள் வந்திறங்க” என்றும், “கொல்ல வருவாரும் கொலங்குத்திப் பேசுவாரும்” என்றும் கூறகிறது. எனவே இவனுக்கு ஏற்பட்ட சாவு இயற்கை சாவு அல்ல என்று தோன்றுகிறது. இக் காரணங்களால், இப்பாடலின் முக்கிய பகுதிகள் சுமார் 230 வருடங்களுக்கு முன்னால் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறலாம்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-----------
ஆளுக்கொரு தேசத்தில்
கணவன் அயல் நாட்டில் உயிர் நீத்தான்.கருமாதியன்று சந்தனக்கட்டையின் மீது வைத்து எரித்து சாம்பலாக்கி அதனைக் கரைத்தார்கள். தீர்த்தத்தில் கரைக்க சாம்பல்கூட அவன் உடலிலிருந்து அவளுக்குக் கிடைக்கவில்லை. திடீரென்று அவன் இறந்து போனதற்கு யார் தீ நாக்குக் காரணமோ என்று அவள் எண்ணுகிறாள்.
ஆல மர மானேன்
ஆகா பெண்ணானேன்
ஆகா பெண்ணானேன்
ஆளுக்கொரு தேசமானோம்
புங்கம் பழமானேன்
பொல்லாத பொண்ணானேன்
பொல்லாத பொண்ணானேன்
புள்ளிக் கொரு தேசமானோம்
வேப்பம் பழமானேன்
வேண்டாத பொண்ணானேன்
வேண்டாத பொண்ணானேன்
விதிப் பட்டு நிக்க னில்லா !
தங்கப் புடம் போட்டேன்
தனி வயிரச் சாம்ப லிட்டேன்
தனி வயிரச் சாம்ப லிட்டேன்
தண்ணியிலே கரைச்சு விட்டேன்
பொன்னப் புடம் போட்டேன்
போகவரச் சாம்ப லிட்டேன்
போகவரச் சாம்ப லிட்டேன்
பொய்கையிலே கரைச்சு விட்டேன்
வெள்ளிப் புடம் போட்டேன்
வேனக் கரைச் சாம்ப லிட்டேன்
வைகையிலே கரைச்சு விட்டேன்
பச்சைப் பசுங்கிளி ஐயா
பாலடைக்கும் தேகமய்யா
பாலடைத்த தேகத்திலே
பட்டிச்சோ தீ நாக்கு
நீலப் பளிங்கி ஐயா
நெய்யடைக்கும் தேகமய்யா
நெய்யடைக்கும் தேகத்திலே
தீண்டிச்சோ தீ நாக்கு.
உதவியவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
----------
கொல்லைப் புஞ்செய் ஏலமாச்சே
கணவன் உயிர் வாழும் காலத்தில் சீமை அதிகாரிகள் எல்லாம் வீட்டிற்கு வருவார்கள். அவனும் பெரிய பண்ணையாராக வாழ்ந்து வந்தான். அவன் மறைந்ததும் அவன் காலத்தில் ஏற்பட்ட கடன்களுக்காக, குடும்ப சொத்து முழுவதும் ஏலத்தில் போய்விட்டது. இதை நினைத்து வருந்தி, மனைவி ஒப்பாரி சொல்லுகிறாள்.
செத்திருவ எண்ணு சொல்லி-நான்
சிந்தையிலும் எண்ணலையே
மடக்கும் ஜமக்காளம்
மகிழம்பு மெத்தையுமே
மாயமா உயிர் போக
மனசிலேயும் எண்ணலையே
சுருட்டு ஜமக்காளம்
துத்திப்பூ மெத்தைகளாம்
சூட்சுமமா உயிர் போகச்
சிந்தையிலும் எண்ணலையே
வந்திச்சே செல்வம்
வையை மணல் போல
சிந்திச்சே செல்வம்
சீமானே இல்லாமல்
சந்திரர் கூட்டம்
தணிச்ச முதலி கூட்டம்
இந்திரனார் இல்லாமே
இறங்கிச்சே ஷேத்திரங்கள்
பத்தேரும் பண்ணைகளும்
பாட்ட மரக்காலும்
எட்டேரும் பண்ணைகளும்
ஏணி வச்ச பட்டறையும்-இப்போ
மரக்கா இழந்திடுச்சே-நம்ம
மந்த புஞ்செய் ஏலமாச்சே
நாழி இழந்திருச்சே
நடுக் கிணறு ஏலமாச்சே
கூசா இழந்திருச்சே-நம்ப
கொல்லை புஞ் செய் ஏலமாச்சே
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
-------------
வாடும் மல்லிகைப் பூ !
அவள் கணவனைப் பறிகொடுத்து வாடுகிறாள். அவள் வளர்த்த மல்லிகையும், செண்டு மல்லியும் அவள் துயரம் கண்டு வாடுகின்றன.
மானம் கடன் வாங்கி
மல்லிகை நாத்து விட்டேன்
மரமேறிப் பாருங்களேன்
மங்கை புலம்புவதை
மல்லிகைப்பூ வாடுவதை
சேரக் கடன் வாங்கி
செண்டுமல்லி நாத்து விட்டேன்
செவரேறிப் பாருங்களே
சீதை புலம் புவதை
செண்டு மல்லி வாடுவதை
வட்டார வழக்கு : மானம்-பெரும் பணம் ; சேர-மிகுதியாக ; செவர்-சுவர் (பேச்சு).
உதவியவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி.
------------
மஞ்சனில்லாப் பாவி
பல ஒப்பாரிகளில் மைந்தனில்லாக் குறைக்காகப் பெண்கள் வருந்தி அழுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு வினையையும் தெய்வத்தையும் காரணம் காட்டுவார்கள். இங்கே இப்பெண் கண்காணாத சக்திகளின் மீது பழி போடாமல், உண்மையான சமூக விஞ்ஞானக் காரணத்தைக் கூறுகிறாள்.
மல்லிகைப் பூ மெத்தையிலே
மாதங்கூடத் தூங்கலையே
மாமியாள் கொடுமையினால்
மஞ்சனில்லாப் பாவியானேன்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
--------
அவசரம்
அவளுடைய தந்தை இறந்த செய்தி கேட்டு வேகமாக பிறந்த வீட்டிற்கு வரும் மகளை வழியில் தந்தையின் நண்பர்கள் தங்கிப் போகச் சொல்லுகிறார்கள். அவள் முடியாது என்று சொல்லி தந்தையின் முகம் பார்க்க ஓடி வந்து விட்டாள்.
தலைமயிரை விரிச்சு விட்டு
தருமபுரி போய் நிண்ணா-என்னைத்
தருமபுரி வைத்தியரு
தங்கிப்போ இண்ணாரு-நான்
தங்க முடியாது-எங்கப்பா வீட்டு
தங்கரதம் சிக்காது
கூந்தலை விரிச்சி விட்டு
கோசலம் போயி நிண்ணா
கோசல வைத்தியரு-என்னைக்
குந்திப் போ இண்ணாரு
குந்த முடியாது-எங்கப்பா வீட்டு
பொன்னுரதம் சிக்காது.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------
மணை போட யாருமில்லை
ஆண்டுதோறும் மகளையும், மருமகனையும் அழைத்து மணைபோட்டு வரிசை கொடுத்து தந்தை வீட்டில் உபசாரம் செய்வது வழக்கம். தந்தை இறந்துவிட்டார். அடுத்த ஆண்டில் மாரியம்மன் திருவிழா வரும். ஆனால் அவளை அழைத்து அன்போடு பாராட்ட யார் இருப்பார்கள்?
வாரம் ஒரு நாளு
வள்ளியம்மை திருநாளு
வள்ளியம்மை திருநாளில்
வரிசையிட ஒருவரில்லை
மாசம் ஒரு நாளு
மாரியம்மன் திருநாளு
மாரியம்மன் திருநாளில்
மாலையிட யாருமில்லை
மணைப்போட ஒருவரில்லை
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------
எமகிரி சேர்த்துவிட்டேன்
தாய் இறந்துவிட்டதாகச் சாவோலை வந்தது. அவள் யாரையும் அழைத்துச் செல்லாமல் அவசரமாகச் சென்று எமகிரிக்கு அனுப்பி வைத்து விட்டாள். தாய் இறந்தால் குளிப்பாட்டி அனுப்ப வேண்டிய கடமை மகளுடையது.
கல்லௌச்ச திண்ணையிலே
பொன்னௌச்ச பாய் போட்டு-நான்
சாஞ்சு படுக்கும் போது எங்கமூட்டு
சாவோலை வந்ததுங்கோ
யாரூட்டு ஓலையிண்ணும்
அசந்தன் வெகுநேரம்
வாசலிலே இருந்த வங்க
வாசித்துச் சொன்னாங்க.
அழுத பிள்ளை எடுக்காம
அவுந்த மயிர் முடிக்காம
ஏறினேன் பொட்டி வண்டி
இறங்கினேன் திண்டிவனம்
என்னைப்பெத்த ஆயாளை
எடுத்துக் குளிப்பாட்டி
எமகிரி சேர்த்து விட்டேன்.
வட்டார வழக்கு : கல்லௌச்ச-கல்லிழைத்த ; பொன்னௌச்ச-பொன்னிழைத்த ; எங்கமூட்டு-எங்கப்பன் வீட்டு ; யாரூட்டு-யார் வீட்டு (பேச்சு) ; அசந்தன்-அயர்ந்தேன்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
------------
முகக் கோடி
கணவன் இறந்த பின் மனைவிக்கு, அவளுடைய சகோதரர் கோடிப்புடவை எடுத்து முகத்தில் போடுவார்கள். இப்புடவையை முகக்கோடி என்று அழைப்பர். இச்சடங்கு வைணவப் பிரிவினரில் பத்தாம் நாளும், வேறு பிரிவினரில் பதினாறாம் நாளும் நடைபெறும். சில சாதியினரில், பிணத்தை அடக்கம் செய்து விட்டு வீடு திரும்பியவுடனே நிகழும். நல்ல காரியங்களுக்கு பட்டு எடுத்துத் தங்கைக்கு அளிக்கும் அண்ணன் கையாலே முகக் கோடி வாங்கும் நிலை ஏற்பட்டது குறித்து தங்கை வருந்துகிறாள். நல்ல காரியங்களுக்கு கடை தேடி நல்ல பட்டு எடுத்த அண்ணன், இக்காரியத்துக்கும் ஊர் ஊராக அலைந்து நல்லப் பட்டு எடுத்தாரோ என்று சொல்லி அழுகிறாள். தங்கையின் சொல் கேட்டு அண்ணன் அழுகிறான்.
சாமி பட்டு எடுத்தாலே
சாயம் குறையுமிண்ணும்
அரியூரான் பட்டெடுத்தால்
அழகு குறையு மிண்ணும்
சேலத்தான் பட்டெடுத்தால்
சீருக் குறையு மிண்ணும்
மொரப்பூரான் பட்டெடுத்தால்
மோப்புக் குறையுமிண்ணும்
அல்லி தறி மூட்டி
செல்லிக்குப் பட்டுடுத்தி-நான்
மோவாத பொண்ணா-அண்ணன்
முகத்துமேலே போட்டழுதான்
வட்டார வழக்கு : மோப்பு- ; அல்லி-பெண் ; தறிமூட்டி-தறியில் நெய்து.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
-----------
பரமனார் பக்கமில்லை
பல கோயில்களுக்கு நேர்த்திக் கடன் கழித்துப் பெற்ற மகன் தவறிவிட்டான். அவன் பிறக்கும்போது தன் மீது கருணை காட்டிய சிவன், சிறிது நாளில் கொடுத்த செல்வத்தைப் பறித்துக் கொண்டார். அவன் இல்லாமலேயே இருந்துவிட்டால் வருத்தம் அவ்வளவு தோன்றாது. கிடைத்து, சிறது காலம் அனுபவித்த பிறகு இழப்பதென்றால் தாய்க்குத் தாங்க முடியாத வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?
படி ஏறிப் பூப்பறிச்சு
பந்தறிய மாலை கட்டி
பரமனார் கோயிலுக்கு
பாலு படி கொண்டு போனேன்
பாலு படி தவறாச்சு-என்
பக்கம் மனுவுமில்லை
பரமனார் பக்கமில்லை
செடியேறிப் பூப்பறிச்சு
செண்டறிய மாலை கட்டி
சிவனார் கோவிலுக்கு
சிவபடியும் கொண்டு போனேன்
சிவபடியும் தவறாச்சு
சேர்த்த மனுவுமில்லை
சிவனார் பக்கமில்லை
சேகரித்தவர் : S.S.போத்தையர்
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
-----
பூட்டிக் கிடக்குதுங்கோ
தந்தை இறந்த சில ஆண்டுகளில் தாயும் இறந்து போனாள். தாயின் காலத்திற்குப் பிறகு அவ்வீட்டில் வாழ ஆண் பிள்ளைகள் இல்லை. வருங்காலத்தில் இவ்வீட்டைத் தேடிப்போனால் அது பூட்டிக் கிடக்குமே என்றெண்ணி வருத்தத்தோடு ஒப்பாரி சொல்லுகிறாள்.
தங்கச் சரகு கட்டி
தங்கச் சம்பா நெல்லெடுத்து
தாய் வீடு போலா மிண்ணும்
தங்கமலை தாண்டி
தவணக் கொடி ஆறு தாண்டி
தடம்புடிச்சி போய் பார்த்தேன்
சாத்தி கெடுக்குதுங்கோ
சஞ்சல மாகுதுங்கோ
சிந்திட்டன் கண்ணீரை
திரும்பினன் தென் மதுரை
பொன்னு சரகு சட்டி
புது சம்பா நெல்லெடுத்து
பொறந்த ஏடு போலா மிண்ணும்
பொன்னு மலை தாண்டி
பொற் கொடி ஆறு தாண்டி
போய்ப் பார்த்தேன் தாய் வீட்டை
பூட்டிக் கிடக்குதுங்கோ
பொங்கார மாகுதுங்கோ
வடிச்சிட்டன் கண்ணீரை
வந்திட்டன் தென் மதுரை
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அருர், சேலம்.
-------------
கூப்பிடுவார் யாருமில்லை
தாயும் தந்தையும் இறந்து விட்டனர். மகளுக்கு திருமணமாகவில்லை. தன்னைத் தகுந்த வரன் பார்த்து இனி யார் மணம் செய்து வைப்பார்கள் எண்றெண்ணி வருந்துகிறாள்.
மாரியம்மன் கோயிலிலே
மங்கை குளி குளிச்சேன்
மாதுளங்கா பட்டுடுத்தி
மாரியை வணங்கி வந்தேன்
மனையும் எதுராச்சி
மலங்கழுகு சயணமாச்சி-நான்
கொட்டியும் தண்ணீராய்
கொளத்திலே பூத்திருந்ததன்
குயிலா குணமறிஞ்சி
கூப்பிடுவார் யாருமில்லை
காளியம்மன் கோயிலிலே
கன்னி குளி குளிச்சி
கைலங்கிரி பட்டுடுத்தி
காளியை வணங்கி வந்ததன்
கானாறு எதிராச்சி
காக்கா சயண மாச்சி
தாமரையும் தண்ணீரால்
தடாகத்தில் பூத்திருந்ததன்
மயிலா குணமறிஞ்சி
வரவழைப்பார் யாருமில்லை.
வட்டார வழக்கு: சயணமாச்சி-சகுனமாச்சு ; பூத்திருந்தன-பூத்திருந்தேன்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அருர், தருமபுரி மாவட்டம்.
------------
அரண்மனையைப் பார்க்கலையே
தந்தை இறந்த செய்தி கேட்டு மகள் பிறந்த வீட்டிற்கு வந்தாள். அவளை அயலூரில் மணம் செய்து கொடுத்த பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையின் சாவிற்காகத்தான் தாய் வீட்டுக்கு வந்தாள். அவளுடைய கல்யாணத்தின் போது பேசிய வரதட்சிணை கொடுக்க முடியாததால், அவளைப் பிறந்த வீட்டிற்குப் போக கணவன் அனுமதிக்கவில்லை. அவ்வாறு பணம் கொடுக்க முடியாதவர்கள் தன்னை ஏன் மணம் செய்து கொடுக்க வேண்டும் என்று வருந்தி அழுகிறாள்.
ஆத்துக்கும் அந்தாண்டே-நீ பெத்த
அல்லியை ஏங் கொடுத்த?
ஆனைக்கு தினி கட்டி
அடி கொளம்பு லாடம் கட்டி
ஆத்தங்கரை வந்து நிண்ணன்
ஆத்தங்கரை செம்படவன்
ஆறு லட்சம் கேட்டானோ
ஆறு லட்சம் இல்லாத-எங்கப்பன் வீட்டு
அரண்மனையைப் பார்க்கலையோ
கொளத்துக்கும் அந்தாண்ட-நீ பெத்த
குயிலாளை ஏங் கொடுத்தே?
குதிரைக்கு தீனி கட்டி
கொன கொளம்பு லாடங்கட்டி
கொளத்தங்கரை வந்து நிண்ணா
கொளத்தங்கரை செம்படவன்
கோடி பணம் கேட்டானே
கோடி பணம் இல்லாத-எங்கப்பன் வீட்டு
கோட்டை போய் பார்க்கலையே
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அருர், தருமபுரி மாவட்டம்.
------------
மாண்டதென்ன திண்ணையிலே
கணவன் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டான். அவன் திடீர் மரணத்தைக் குறித்து வருந்தி துடி துடித்து மனைவி அழுகிறாள்.
சோப்பு படி கிணறு
சோமம் துவைக்கும் கல்லு
சோப்பு பெட்டி இங்கிருக்க-நீங்க
சோர்ந்ததென்ன திண்ணையிலே
மல்லு துவைக்கும் கல்லு
மாசிப்படி கிணறு
மல்லு பெட்டி இங்கிருக்க-நீங்க
மாண்ட தென்ன திண்ணையிலே
கருத்த புளியங் கொட்டை
கருத்தா பொழைக்குதுங்க-நான்
கஸ்தூரி நல்ல மஞ்சா
கனங் கொறஞ்சி நிக்கறனே
செவந்த புளியங் கொட்டை
சீரா பொளைக்குதுங்கோ-நான்
சேலத்து நல்ல மஞ்சா
சீரழிஞ்சு நிக்கரனே
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அருர், தருமபுரி மாவட்டம்.
---------
பாரமலை சாய்ந்தது
கணவனும் மனைவியும் குறைவற வாழ்ந்து வரும் பொழுது, மனைவி சில தீய நிமித்தங்களைக் கண்டாள். மலை சாய்ந்து விட்டது ; தோப்பிலிருந்த மணி உடைந்தது ; கடுகுப் பயிரும், மிளகுப் பயிரும் பயன் தரவில்லை ; இவற்றைக் கண்டு, காலனைப் போல சொல் தவறாத ஜோசியர்களிடம் சென்று வருங்காலத்தைப் பற்றிக் கேட்கச் சென்றார்கள். அவர்கள் 'எழுத்திங்க', 'பொழுது இல்லை' என்று சொல்லி விட்டார்கள். இதனால் காலம் கெட்ட காலம் சீக்கிரம் மாறும் என்றே எண்ணி வந்தார்கள். ஆனால் அவன் இறந்து விடுவான் என்று மனைவி நினைக்கவேயில்லை.
கட்டிலுக்குக் கீழே
காத்திருந்தோம் சிலகாலம்
காத்திருந்தோம் கண்ணப்பொத்தி
காலன் வந்த மாயமென்ன?
மெத்தைக்குக் கீழே
வீத்திருந்தோம் சிலகாலம்
வீத்திருந்தோம் கண்ணப்பொத்தி
வீமன் போன மாயமென்ன?
பத்துமலைக் கப்பாலே,
பார மலைக்கிப்பாலே
பாரமலை சாஞ்சொடனே
பகவானை கைதொழுதோம்
எட்டு மலைக்கப்பாலே
இலங்கை மணிதோப்போரம்
இலங்கை மணி உடச்சொடனே
இந்திரரைக் கையெடுத்தோம்
கடுகு பயிர் ஆகுமிண்ணு
காத்திருந்தோம் சிலகாலம்
முளகு பயிர் ஆகுமின்னு
முழிச்சிருந்தோம் சிலகாலம்
முளகு பயிர் ஆகவில்லை
முழிச்சிருந்தோம் வீணால
கடுவரைச்சுக் கோலமிட்டு
காலனவே வரவழைச்சி
காலன் பெருமாளும்
கட்டெடுத்து சொன்னாக
எள்ளரைச்சு கோலமிட்டு
எமனையே வரவழைச்சி
எமன் பெருமாளும்
ஏடெடுத்தும் சொன்னாக
பொன் எடுத்து கோலமிட்டு
பொழுது வரவழைச்சு
பொழுதும் பெருமாளும்
போட்டெழுத்துன்னா சொன்னாக
தங்க மலையேறி
சாதகங்கள் பார்க்கையிலே
தங்கமலை நாதாக்கள்
தகுந்தெழுத்துன்னும் சொன்னாக
ஆத்துக்கும் அந்தப்புறம்
அழகான கல்லறையே
கல்லறை மேடையிலே
கண்ணுறக்கம் வந்ததென்ன?
கரிஞ்ச நிழல் பாத்து
தாவரம் பத்தியிலே-உனக்கு
குளுந்த நிழல் பாத்து
கூட இருக்கத் தேடுதனே
ஒத்த மரமானேன்
ஒரு மரமே காலாற
பக்கமரம் இல்லாமே
பதவி குலைஞ்சேனே
சேகரித்தவர் : எஸ்.எம். கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-------
தங்க லைட்டுமில்லை
மின் விளக்குப் போல ஒளிமிகுந்த அவளுடைய வாழ்க்கையில் இன்று இருள் கப்பிவிட்டது. காரணம் கணவன் மறைந்துவிட்டான்
தங்க வள வளைச்சு
தாவரம் தொட்டி பண்ணி
தாவர தொட்டியிலே-நான்
தங்காளும் படுத்திருந்தால்-எனக்குத்
தங்கலைட் டெரியும்
தனிக் காந்தம் நிண்ணெரியும்-இப்போ
தங்க லைட்டுமில்லை-எனக்கு
தனிக்காந்தம் பக்கமில்லை
பொன்னு வளவளச்சி
பூவாரந் தொட்டி பண்ணி
பூவாரத் தொட்டியிலே
பொண்ணா படுத்திருந்தா-எனக்குப்
பொன்னு லைட்டெரியும்
புதுக்காந்தம் நிண்ணெரியும்-இப்ப
பொன்னு லைட்டு மில்லே
புதுகாந்திம் பக்கமில்லை.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
-------------
குழந்தையில்லாப் பாவி
அவளுக்குக் கோடி போடக் குழந்தையோ, அண்ணனோ இல்லை. அனாதை போலப் பரிதவிக்கிறாள்.
குச்சடி மேல் பலகை
குதிரை வால் முந்தாணி
கொண்டு வந்து கோடி போட-நான்
குழந்தை யில்லாப் பாவியானேன்
அச்சடி மேல் பலகை
ஆனைவாய் முந்தாணி
அழச்சி வந்து கோடி போட-நான்
அண்ணனில்லாப் பாவியானேன்
சேகரித்தவர் :
கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
-------------
அழாதே தங்கையரே
இதற்கு முந்தைய ஒப்பாரிகள் தாய் தந்தையரை இழந்த ஒரு பெண் தன் தாய் வீடு சென்றால், அங்கு அண்ணன் மனைவி படுத்தும் பாடுகளை விளக்கியுள்ளன. அத்தகைய வகையைச் சேர்ந்தது இவ்வொப்பாரியும். தங்கை அண்ணனிடம் முறையிடுவதையும் அண்ணன் தங்கையைத் தேற்றுவதையும் உரையாடலாக இப் பாடல் கூறுகிறது :
ஆத்துத் திருகாணி
அலைச் செடுக்கும் பட்டாணி
அன்பிலா அண்ணியிடம்
அஞ்சாத தண்ணி கேட்டேன்
அண்டா இரவல் இண்ணா
ஆத்துத் தண்ணி தூரமின்னா
அதையும் மனதில் வச்சு
அண்ணனோடு சொல்லியழுதேன்
அழாதே தங்கையரே
ஆனை சிலம்பு தரன்
ஆறு லட்சம் பொன்னு தரன்
அழாதே தங்காயிண்ணான்-எனக்கு
ஆனை சிலம்பு வேணா
ஆறு லட்சம் பொன்னும் வேணா-உன்
அன்பான வாய் திறந்து
அனுப்பி வச்சால் போது மிண்ணன்
வட்டார வழக்கு: அஞ்சாத-அஞ்சாது ; இண்ணா-என்றான் ; தூரமின்னா-தூரம் என்றாள் ; தரன்-தருகிறேன் ; போது மிண்ணன்-போதுமென்றேன்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------------
பொருத்தமில்லாத இடத்தில் பெண் கொடுத்தல்
ஒரு பெண்ணின் தாய் தந்தையர் பொருத்தமில்லாத இடத்தில் அவளை மணம் செய்து கொடுத்துள்ளதால், அவள் புருஷன் வீட்டில் பல அபவாதங்களை ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது. அவளை தகுந்த இடத்தில் மணம் செய்து கொடுத்தால் இந்த பேச்சுக் கேட்காமல் இருக்கலாமல்லவா? தந்தையின் மரணத்தின் போது அவள் இதை ஒப்பாரியில் வெளிப்படுத்துகிறாள்.
சீனா மரிக் கொழுந்து
சீட்டெழுதும் பின்னாங்கு
சீரா கொடுத்திருந்தால்
சீன்னச் சொல்லு ஏன் வருது
பீனா மரிக் கொழுந்து
பேரெழுதும் பின்னாங்கு
பேரா கொடுத்திருந்தால்
பெரிய சொல்லு ஏன் வருது
குளத்தங்கரை யோரம்
குதிரை வந்து மண்டியிடும்
குதிரைக்கும் சங்கிலிக்கும்
குலம் பார்த்துக் கோத்திருந்தால்-எனக்கு
குறைவு வந்து நேராது
ஆத்தங்கரை யோரம்
ஆனை வந்து மண்டியிடும்
ஆனைக்கும் சங்கிலிக்கும்
அளவு பார்த்துப் பூட்டிருந்தால்-எனக்கு
அலப்பு வந்து நேராது
கல் பொறுக்கும் சீமையிலே-என்னை
கட்டிக் கொடுத்தாங்க
கல்லைப் பொறுக்கு வேனோ எங்கப்பன் வீட்டு
காதவழி சேருவேனோ
முள்ளெடுக்கும் சீமையிலே-என்னை
முடிஞ்சி கொடுத்தாங்க
முள்ளைப் பெருக்குவேனோ
எங்கப்பன் வீட்டு
முல்லை வனம் சேரு வேனா.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------
மலடு இண்ணும் சொன்னாங்க
தூர தேசத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர் அவளது பெற்றோர். அதனால் அவள் தாய் வீட்டிற்கு அடிக்கடி வரமுடியவில்லை. தந்தை இறந்த செய்தி கேட்டு, வருகிறாள். குழந்தைப் பேறு பெறாத அவள் தான் 'மலடு' என்னும் பட்டம் பெற்று, தாய் தந்தையரையும் அடிக்கடி பார்க்க முடியாத தூர தொலைவில் இருந்து வாடுவதாகக் கூறுகிறாள். தந்தையின் சடலத்துக்கருகில் அழுது ஒப்பாரி பாடும்பொழுது “என்னை உள்ளூரிலேயே மணம் முடித்துக் கொடுத்தால் நான் அரிசி, பருப்பு முதலியவை கடன் கேட்டுத் தொல்லை கொடுப்பேன் என்றா வெகு தூரத்தில் மணம் செய்து கொடுத்தீர்கள்?” என்று கேட்டு அழுகிறாள்.
ஆத்துக்கு அந்தாண்ட
அன்னக்கா பின்னமரம்
அஞ்சியாறு தாண்டி-நீ பெத்த
அல்லியை ஏன் வெலை மதிச்ச
அண்டையிலே கொடுத்தாலே
அரிசி கடன் கேட்பனிண்ணும்
பக்கத்திலே கொடுத்தாலே
பருப்பு கடன் கேட்பனிண்ணும்
பத்தாறு தாண்டி-நீ பெத்த
பாங்கில வெலை மதிச்ச
ஆத்துக்கு அந்தாண்ட
எங்கப்பன் வீட்டு
ஆனை வண்டி சத்தம் கேட்டு
கொளத்துக்கு அந்தாண்ட
எங்கப்பன் வீட்டு
குதிரை வண்டி சத்தம் கேட்கும்
கோவைக்காய் நாருரிப்பேன்
கூட்டரைச்சி பொரி பொரிப்பேன்
தங்கச் சம்பா நெல் குத்தி
தயிர் சாதம் நான் சமைப்பேன்
மத்தங்கா புல்லறுத்து
மலையோரம் சாத்துனா
மலையோரம் போறவங்க
மலடு இண்ணும் சொன்னாங்க
கொடியருகன் புல்லறுத்து
கொளத்தோரம் சாத்துணா
கொளத் தோரம் போறவங்க
கொட்டு இண்ணும் சொன்னாங்க
வட்டார வழக்கு: அந்தாண்ட-அந்தப் பக்கம் ; கொளம்-குளம் ;
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
-------------
அப்பனும் கிடைக்கவில்லை
தன் புகுந்த வீட்டில் ஒரு பெண் பாடிக் கொண்டே மோர் கடைந்து கொண்டிருக்கிறாள். அவள் தந்தை இறந்து போனதாகத் தந்தி வந்தது. தான் தந்தியில் செய்தியைக் கேட்டதுமே தந்தையின் சாவுக்கு அடிக்கும் பறமேளம் தனக்கு கேட்டதாகவும், ஓடி வந்தும் தந்தையை உயிரோடு பார்க்கக் கிடைக்கவில்லையென்றும் கூறி அழுகிறாள்.
பானையிலே தயி ரெடுத்து
பாங்கான மத் தெடுத்து
பாடி கடையும் போது
பறமோளம் கேட்ட தென்ன?
யார் வீட்டு மோள மின்னும்
ஆராஞ்சி நான் பார்த்தன்
தாய் வீட்டு மோள மிண்ணும்
தந்தியிலே வந்த தெண்ணா
முந்தாணி தாரை விட்டு
முதல் மயிரைச் சிக்கொடைச்சி
அப்படியே ஓடிட்டேன்
அப்பனும் கிடைக்கவில்லை
அண்ட கதியத்தன்
அல கொலஞ்சி நிக்கரனே
வட்டார வழக்கு: பறமோளம்-சாவு வீட்டில் அடிக்கும் மேளம் ; அலகொலஞ்சி-நிலைகுலைந்து.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------
காதம் போய் நில்லச் சொன்னாள்
அவள் தாய் தந்தையரை இழந்து விட்டாள். அவளது தாய் தந்தையர் அவளைச் செல்லாக வளர்த்தது, இப்பொழுது அவளது அண்ணன், அண்ணி இருக்கும் பெரிய மெத்தை வீட்டில்தான். ஆனால் அவர்களது மரணத்திற்குத் தான் தன் துக்கம் தீர அழவேண்டுமென்றால் கூட அண்ணி “இந்த வீட்டில் அழக்கூடாது ; வேறு எங்காவது போய் அழு,” என்று கூறியதும், தனக்கு முன்னம் சொந்தமாக இருந்த நிலையையும் தற்போது இருக்கும் நிலையையும் எண்ணி அழுகிறாள்.
காஞ்சியிலே எங்கப்பன் வீடு
கடலைக்காய் மெத்தை வீடு
காசி ராஜன் பெத்த பொண்ணு
கடையோரம் நிண்ணழுதால்
கடைக்குச் சொந்தக்காரி-என்னை
காதம் போய் நில்லச் சொன்னாள்
தூரத்திலே எங்கப்பன் வீடு
துவரைக்காய் மெத்தை வீடு
துளசி ராஜன் பெத்த பொண்ணு
தூணோரம் நிண்ணழுதால்
தூணுக்குச் சொந்தக்காரி-என்னை
தூரம் போய் நில்லச் சொன்னாள்
வட்டார வழக்கு: நில்ல-நிற்க.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
------------
மடி ஏந்தி பொய்யானேன்
கல்யாண மேடையிலே கணவரின் கையைப் பிடித்ததும், அப்பொழுது நடைபெற்ற விசேஷ சம்பவங்களும் இப்பொழுது நடைபெற்றது போல் தோன்றுகிறது. ஆனால் குறுகிய காலத்தில் அவள் கணவன் அற்பாயுளில் இறந்து போனான். தன்னுடைய கல்யாணத்தையே கனவு என்று எண்ணும்படி இறந்து போன தன் கணவனுடன் தான் மகிழ்ச்சியுடன் நெடுங்காலம் வாழாமல் தன் கனவுகளைப் பொய்யாக்கி விட்டு மறைந்த தன் கணவனை எண்ணிக் கதறுகிறாள்.
மண்ணைத் திரி திரிச்சி
மறு மண்ணை வில் வளச்சி
மாளிகை மேடையிலே-நான்
மடி ஏந்தி பொய்யானேன்
கல்லைத் திரி திரிச்சி
கருமணலை வில் வளச்சி
கல்யாண மேடையிலே-நான்
கை ஏந்தி பொய்யானேன்
கத்தரிக்காய் பூ பூக்கும்
கடலோரம் பிஞ்செறங்கும்
கணக்கு பிள்ளை தங்கச்சி-நான்
கை ஏந்தி பொய்யானேன்
மல்லாக் காய் பூ பூக்கும்
மலையோரம் பிஞ் செறங்கும்
மணியக்காரன் தங்கச்சி-நான்
மடி ஏந்திப் பொய்யானேன்
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------
அழகு முகம் தென்படலை
மகள் வருவதற்கு முன் தகப்பனின் சடலத்தைச் சுற்றத்தார் சுட்டெரித்து விட்டார்கள். இறந்துபோன தந்தையின் சடலத்தையாவது காணலாம் என்று ஓடிவந்த மகள் வருமுன்பாகவே தந்தையின் சடலத்தைச் சுட்டெரித்த செய்தி கேட்டு “நான் எங்கு தேடியும் உங்கள் முகம் தென்படவில்லை, இனி எப்படி உங்களைக் காண்பேன்?” என்று அரற்றி அழுகிறாள்.
சுடலை புரமெல்லாம்
சோதிச்சு நாங்க வந்தோம்
சுடலை தென்படுது-உங்க
சோர்ந்த முகம் தென்படலை
ஆறு புர மெல்லாம்
ஆராஞ்சு நாங்க வந்தோம்
ஆறு தென்படுது-உங்க
அழகு முகம் தென் படல
வட்டார வழக்கு: சுடலை-சுடுகாடு ; ஆராஞ்சி-ஆராய்ந்து.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சக்கிலிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
--------
கருமம் செய்ய பிள்ளை இல்லை
குழந்தைப் பேற்றை விரும்பிய ஒரு பெண் பூஜை பல செய்கிறாள். குழந்தை பிறக்கவில்லை. அவள் பூஜை செய்தும் குழுந்தை பிறக்காமல் இருந்ததை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவள் கணவனும் இறந்து போகிறான். என்னதான் மற்றப் பிள்ளைகளைச் சீராட்டினாலும் தாய் தந்தையர் இறந்த பின்பு தருமஞ் செய்யவும், கொள்ளி வைக்கவும் வயிற்றில் பிறந்த மகன் தானே உரிமையுள்ளவனாகவும், அப்படிப் பெற்ற பிள்ளை கருமம் செய்வதற்குக் கொடுத்து வைக்கும் பெற்றோர்கள், ஒரு குறைவும் இல்லாதவர்கள் என்று நம் சமூகம் சொல்கிறது. கருமஞ் செய்யப் பிள்ளையில்லாதபடி கொடுத்து வைக்காதவராக ஆகி விட்டீர்களே, ஆகி விட்டோமே என்பதை எண்ணி ஏங்குகிறாள் புருஷனை இழந்த ஒரு பெண்.
ஆத்துக் கந்தாண்ட
அன்னலறி பின்னமரம்
அரும் பெடுத்துப் பூசை செய்தும்
அருங் கொளந்தைப் பஞ்சமாச்சி.
கொளத்துக்கு அந்தாண்ட
கொழுந்து வரி பின்னமரம்
கொழுந் தெடுத்துப் பூசை செய்தும்
கொளந்தைப் புள்ளை பஞ்சமாச்சி
கணுங்காலு தண்ணியிலே
காசு நிறைஞ்சிருக்கும்
காசெடுக்கப் பிள்ளையுண்டு-எனக்கு
கருமஞ் செய்ய பிள்ளையில்லை
முழங் கால் தண்ணியிலே
முத்து நிறைஞ்சிருக்கும்
முத்தெடுக்கப் பிள்ளையுண்டு-எனக்கு
முன்னே செல்லப் பிள்ளையில்லே
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------
பெண்ணாய்ப் பிறந்த குறை
அவள் தன் கணவனை இழந்து விட்டாள். புகுந்த வீட்டிலோ புருஷன் போன பின்பு மதிப்பில்லை. விதவைக் கோலத்தோடு பிறந்தவீடு சென்று என்ன பயன்? தான் கணவனுடன் வாழும் காலத்தில் தனக்கு இருந்த மதிப்பு எந்த இடத்திலும் இப்பொழுது இருக்காது. நடைப்பிணமாக வாழ வேண்டியதுதான் என்பதை அவள் உணர்ந்தாள். தான் பெண்ணாய்ப் பிறக்காமல் ஆணாய்ப் பிறந்திருந்தால், தந்தைக்குப் பின் தான் வீட்டிற்கு உரிமை உள்ளவளாக இருக்கலாம். எந்தவித சுதந்திரமும் உண்டு, அல்லது கோயில் சிலையாகப் பிறந்திருந்தாலாவது மாதம் ஒரு முறையாவது பூசைகள் நடக்கும். ஆனால் பெண்ணாய்ப் பிறந்த குறை ஒன்றினாலேயே தான் இவ்விதம் புலம்பி அழும் நிலைமை ஏற்பட்டதை எண்ணி மேலும் அழுகிறாள்.
ஆதண்டங்காய் காய்க்கும்
அலரி பூ பிஞ்சிறங்கும்
ஆணாய் பிறந்திருந்தால்
அப்பன் வீட்டு அரண்மனையில்
அம்பெடுப்பேன் வில்லெடுப்பேன்
மாரியம்மன் கோயிலண்டை
மண்ணாய்ப் பிறந்திருந்தால்-எனக்கு
மாசம் ஒரு பூசை வரும்
பெண்ணாய்ப் பிறந்த குறை
புலம்பிக் கிடக்கலாச்சு
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
--------------
பொறந்த இடம் சீரழிஞ்சேன்
இதுவும் பிறந்த வீட்டில் தந்தையின் பெருமையை நினைத்து அழும் மகளின் ஒப்பாரிப் பாடலாகும்.
புள்ளித் தலையாணி
பொறந்த இடம் கச்சேரி
புள்ளி நிறங் கொலஞ்சன்
பொறந்த இடம் சீரழிஞ்சேன்
பட்டு தலையாணை
பாட்டன் வீடு கச்சேரி
பட்டு நிறங் கொலஞ்சன்
பாட்டன் வீடு சீரழிஞ்சேன்
வட்டார வழக்கு : தலையாணை-தலையணை ; கொலஞ்சன்-குலைந்தேன்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
------------
பாம்பு ரெண்டு சீறுது
அண்ணன்மார்கள் வீட்டுக்குப் போகிறாள் தங்கை. ஆனால் அவளுடைய அம்மாவும் அப்பாவும் உயிரோடு இல்லை. அண்ணிமார்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் நாத்தியை அண்ட விடவில்லை. எங்கே தங்களின் உரிமைகளுக்கு இடைஞ்சலாக இருப்பாளோ என்று அவளைக் கொடுமைப் படுத்துகிறார்கள். தன் பிறந்த வீட்டையும், தாய் தந்தையரையும், தாகத்திற்கு உதவும் நல்ல தண்ணீராகவும், அத்தகைய நல்லவர்கள் இருந்த இடத்தில் இப்பொழுது இருக்கும் அண்ணன்மார்களின் மனைவியர் அட்டை, பாசி முதலியனவாகவும், அவர்களது குணங்கள் ஆமை, பாம்பைப்போல் சீறும் தன்மையுடையனவாகவும் இருப்பதை ஜாடையாக வருணித்து அழுது புலம்புகிறாள்.
அஞ்சி கிணற்று தண்ணி
அருங்குளத்து நல்ல தண்ணீ
அள்ளிக் குடிக்க போனா
அட்டை மிதக்குது
ஆமை ரெண்டு சீறுது
பத்து கிணற்று தண்ணீ
பாங்கிணற்று நல்ல தண்ணீ
பார்த்துக் குடிக்கப் போனா
பாசை மிதக்குது பாம்பு ரெண்டு சீறுது
வட்டார வழக்கு: அஞ்சி-ஐந்து ; பாசை-பாசி.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.
------------
நடுவில் வர அஞ்சரனே
அவள் கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். கணவன் திடீரென்று இறந்து போனான். அவளுடன் சேர்ந்த மற்றைய பெண்கள் தங்கள் கணவனுடன் சந்தோஷமாக வாழ்வதைக் காண்கிறாள். அவரவர்கள் சொந்த வீட்டில் சுப காரியங்களை அவர்கள் முன்னின்று நடத்துகின்றன. அதே போல் அவளும் நாலு பேர் முன்னிலையில் வரமுடியுமா? நல்ல காரியங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியுமா? விதவை இவற்றிற்கெல்லாம் விலக்கப்பட்டவள் தானே ! தன்னை மல்லிகைப் பூவாகவும், ஆனால் தான் உபயோகமில்லாமல் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறிக் குறைப்பட்டு அழும் மனைவியின் ஒப்பாரி.
ஊமத்தம் பூ வெல்லாம்
உள்ளிருந்து பேசுது
ஒரு சேர் மல்லியப்பூ-நான்
உள்ள வர அஞ்சரனே
நார்த்தம் பூ வெல்லாம்
நடுவிலிருந்து பேசுது-நான்
நாலு சேர் மல்லியப்பூ
நடுவில் வர அஞ்சரனே
வட்டார வழக்கு: அஞ்சரனே-அஞ்சுகிறேனே.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------
நியாயம் கிடைக்கவில்லை
குழந்தையிருந்து விதவையானால் அவளுக்குப் புகுந்த வீட்டில் ஓரளவு அதிகாரமும், சுதந்திரமும் உண்டு. சொத்துரிமையும் கிடைக்கும். குழந்தையில்லாத 'மலடி' என்னும் பட்டம் பெற்றவள் அவள். அத்துடன் கணவனும் இறந்து போனான். பிறந்த வீட்டுக்குச் செல்லலாமென்றால் அங்கும் இருக்க வழியில்லை. புகுந்த வீட்டுச் சொத்தில் தன் கணவனுக்கு உரிய பாகத்தைச் சாதாரணமாக வாயாலே கேட்கிறாள் கிடைக்கவில்லை.ஊர்ப் பொதுவில் நாட்டாண்மைக்காரர்கள் முன்னிலையில் தான் நியாயம் கேட்டாலும் தனக்கு நியாயம் கிடைப்பதாகத் தெரியவில்லையெனவும், காலம் வீணாகக் கழிகிறதே எனவும் கூறி வேதனைப்பட்டு அழுகிறாள்.
புளியாம் மரத்தின் கீழே
பொன் குறிஞ்சி போட்டிருக்கும்
பொன் குறிஞ்சி மேலிருந்து
பொண்ணு நியாயம் பேசினாலே
பொழுது வெளியாச்சு
பொண்ணு நியாயம் தீரவில்லை
மாமரத்தின் கீழே
மண் குறிஞ்சி போட்டிருக்கும்
மண் குறிஞ்சி மேலிருந்து
மங்கை நியாயம் பேசினாங்க
மாலை பொழுதாச்சி
மங்கை நியாயம் தீரவில்லை
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சக்கிலிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
------------
நொந்தவள்
சில மிருகங்கள் மனிதர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளும். தன்னுடன் மிகவும் அன்புடன் பழகும் மனிதர்கள் இல்லையென்றால் சில மிருகங்கள் உணவுகூட உண்ணாது. ஒரு பெண் விதவையாகிவிட்டாள். கணவன் பிரிவினால் அவள் மிகவும் மனம் நொந்துபோய் இருக்கிறாள். ஆனால் அவளுக்கு ஆறுதல் சொல்வார் இல்லை. தான் வளர்க்கும் காராம் பசு, அதன் கன்று, எருமை முதலியன கூட தன்னைக் கண்டு இரங்கும். தன் நிலைமை கண்டு வேதனைபட்டுத் தாங்கள் உணவு கொள்ள மனமின்றி இருக்கும். ஆனால் தன்னோடு பழகிய மனிதர்களில் ஆறுதல் சொல்லித் தேற்றுவார் யாருமில்லையே ! இது என்ன கொடுமை என்று கண்ணீர் விட்டழுகிறாள்.
காராம் பசுவு கிட்ட
கன்னி குறை சொல்லியழுதால்
காராம் பசு கூட
கடிச்ச புல்லைக் கீழே போடும்.
ஈணாத எருமைக் கிட்ட
எங்குறையை சொல்லியழுதா
ஈணாத எருமை கூட
எடுத்த புல்லைக் கீழே போடும்.
பால் குடிக்கும் கண்ணு கிட்ட
பாவி குறை சொல்லியழுதா
பால் குடிக்கும் கண்ணு கூட
பாவி குறை கேட்டழுகும்,
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----
நெஞ்சுக்குள்ள ஆத்தரனே
தன் துன்பத்தைத் தான்தான் அனுபவிக்க வேண்டும் என்று அவள் எண்ணி தன் மனத்திற்குள்ளேயே அழுது கொள்ளுகிறாள். அவள் துன்பத்தை அவள் அனுபவித்து வழக்கமாவிட்டது. மற்றவர் கேட்டு அவர்களும் மனதிற்கு வருத்தப்பட வேண்டாம். அவள் வருத்தம் தான் என்ன? குழந்தைச் செல்வத்தை அடையாதவள் என்ற ஓர் எண்ணமே போதுமே ! அத்தோடு இனி குழந்தைப் பேறு அடையாளம் என்ற நம்பிக்கைக்கு இடமில்லாமல் கணவனையும் இழந்தவளாகவும் ஆகி விடுகிறாள். துக்கத்திற்குக் கேட்க வேண்டுமா?
நெருஞ்சிப் பூ பூக்கும்
நெஞ்சுக்குள்ளே காய் காய்க்கும்-என்
நெஞ்சை விட்டு சொன்னாலே-உங்க
நெறங்கொலைஞ்சி போகு மின்னு-என்
நெஞ்சுக்குள்ளே ஆத்தரனே
மாதளங்கா பூ பூக்கும்
மனசுக்குள்ளே காய் காய்க்கும்-என்
மனசை விட்டு சொன்னாலே-உங்க
மனங்கலைஞ்சி போகு மின்னு-என்
மனசிக்குள்ளே ஆத்தரனே
வட்டார வழக்கு: ஆத்தரனே-ஆற்றுகிறேனே.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சக்கிலிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
------------
இரும்புலக்கை தூக்கலாச்சே
கணவன் உயிரோடிருந்தான். அவனுக்குப் பொங்கிப் போட்டு நிம்மதியாக வீட்டில் நிழலில் சுகமாக இருந்தாள். என்னாலுமே காலம் ஒன்றுபோல் செல்லதல்லவா? அவளுடைய அந்த நிம்மதியான வாழ்க்கைகும் தடங்கல் ஏற்பட்டது. உழைத்து சம்பாதித்துப் போட்ட கணவன் இறந்தான். குழந்தை குட்டியுமில்லை. பிறந்த வீட்டு மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கே சென்று இருக்கவும் வழியில்லை. வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது? அவள் கூலி வேலை செய்யக்கிளம்பினாள். கூலியின் விஷயம் நமக்கு தெரியாதா? ஈ விழுந்த கூழுக்காக இரும்புலக்கை தூக்கி எள்ளுக் குத்துகிறாள். சத்தில்லாத உளுத்தங் கூழுக்காக பாரமான உலக்கை தூக்கி பருப்பு இடிக்க வேண்டி இருக்கிறது. இப்படியும் தான் உயிர் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டதே என்று நினைத்துப் புலன்புகிறாள்.
எட்டு மலைக்கந்தாண்ட
ஈஸ்வரன் கோயிலாண்ட
எள்ளு ஒணத்திருக்கும்
இரும்புலக்கை சாத்திருக்கும்
ஈ விழுந்த கூழுக்காக-நான்
இரும்புலக்கை தூக்கலாச்சு
பத்து மலைக்கந்தாண்ட
பரமசிவன் கோயிலாண்ட
பருப்பு ஒணத்திருக்கும்
பார உலக்கை சாத்திருக்கும்
பாசை விழுந்த கூழுக்காக-நான்
பார உலக்கை தூக்கலாச்சே
வட்டார வழக்கு: பாசை-பாசி.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------
குயிலு போயி எங்கடையும்
அவளுக்கு அவள் கணவன் நந்தவனம். அந்த நந்தவனத்தில் குடியிருக்கும் குயிலும், மயிலும் போன்றவள் அவள். நந்தவனத்திற்கு சேதம் வந்து விட்டது ; நந்தவனம் பட்டுப் போய் விட்டது. அவள் நந்தவனம் போன்ற கணவனை இழந்தபின்பு எங்கே போவாள்? அவள் கதி என்ன? என்று எண்ணி வேதனை யடைகிறாள்.
குட்ட புளிய மரம்
குயிலடையும் நந்தவனம்
குட்டை மரம் பட்டுப் போச்சு
குயிலு போய் எங்கடையும்
மட்ட புளிய மரம்
மயிலடையும் நந்தவனம்
மட்ட மரம் பட்டுப் போச்சு
மயிலு போயி எங்கடையும்
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: கொங்கவேம்பு, தருமபுரி மாவட்டம்.
-----------
தாங்க முடியலியே
புகுந்த வீட்டின் கொடுமைகளுக்கு ஆளாகிறாள் அவள். மற்றவர்களின் கொடுமைகளுக்கு மத்தியில் அவள் இருப்பது ஈச்ச முள்ளும் தாழைமுள்ளும் குத்துவது போன்ற ஓயாத தொல்லையைத் தருகிறது.
ஈச்ச முள்ளு பள்ளத்திலே
இருந்தே சில காலம்
ஈச்ச முள்ளு குத்தரது
இருக்க முடியலையே
தாள முள்ளு பள்ளத்திலே
தங்கியிருந்தேன் சில காலம்
தாள முள்ளு குத்துது,
தாங்க முடியலியே
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------
மூடு பனி ஆத்துவேனோ
அவள் கணவன் இறந்து போனான். அவன் இருந்த வரை அவள் சந்தோஷமாக அவனோடு வாழ்க்கை நடத்தினாள். அத்தகைய வாழ்க்கையைத் தந்த அவள் கணவன் முத்து மலை, பவள மலை என்று கற்பனை செய்து பின் அந்த முத்து மலை, பவள மலைகளை கஷ்டம் என்னும் மூடுபனி மறைத்ததைப் போன்று அவள் கணவனும் மரணம் என்னும் மூடு பனியால் மறைக்கப்பட்டு விட்டான், மூடுபனி ஒரு காலம் விலகிவிடும். ஆனால் இறந்த கணவனை அவள் திரும்பக் காண்பாளா காணத்தான் முடியுமா?
முத்து மலை மேலே
மூடு பனி பேயுதுங்க
முத்தப்பெருக்கு வேனோ-நான்
மூடு பனி ஆத்து வேனோ?
பவள மலை மேலே
பாடு பனி பேயுதுங்க
பவளத்தைப் பெருக்குவேனோ-நான்
பாடு பனி ஆத்துவேனோ?
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
-------------------
பூமாலை
அவளுக்குத் திருமணம் நடந்து விட்டது. ஆனால் அவள் விபரம் தெரிந்த பெண்ணாகிய பொழுதல்ல, ஐந்து வயதில்; திருமணத்தையும் ஒரு விளையாட்டு என்று கருதும் பருவத்தில் நடந்து விட்டது. நல்ல கணவனாக இருந்தானென்றால் கவலை இல்லை. ஆனால் அவனோ அவளை மோசம் செய்து விட்டுப் போய் விட்டான். தன்னை ஏன் அவ்வளவு இளவயதிலேயே திருமணம் என்ற பந்தத்தில் சிக்க வைத்து பின் அவனையும் இழந்து துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்? தந்தையே மகளுக்கு கஷ்டத்தை கொடுக்கலாமா?
கொளத்தருகே வாள் நட்டு
கொலவாள தூலெடுத்து
கொஞ்சத்திலே கோத்த மாலை
குணமில்லா பூ மாலை
ஆத்தருகே வாள நட்டு
அடிவாள நூலெடுத்து
அஞ்சிலே கோத்த மாலே
அழகில்லா பூ மாலை
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------
கை சோர்ந்து நிக்கறனே
அவளும் ஒரு காலத்தில் ஒரு குறையுமில்லாமல் கணவனுடன் வாழ்க்கை நடத்தினாள். செல்வச் செழிப்புடன் விளங்கியது அவள் குடும்பம். ஆனால் போகிற காலத்தில் பூட்டி வைத்தாலும் போய் விடும் தன்மையுள்ளதல்லவா செல்வம்? “இன்று ஒருவனிடம் நாளை ஒருவனிடம் என்று இருக்கும் செல்வந்தான் என்னை விட்டுப் போய் விட்டது என்றிருந்தேன். ஆனால் நிலையானது என்று நான் எண்ணிய என் கணவனும் என்னை விட்டுப் பிரிந்து போக வேண்டுமா? நான் முன்னம் இருந்த நிலையை எண்ணி ஏங்க வேண்டுமா? ” என்று முகம் சோர்ந்து மனம் சோர்ந்து அழுகிறாள்.
கல்லு துரிஞ்சி மரம்
கல்கண்டு காய்க்கும் மரம்
கல்கண்டு தின்னப்பொண்ணு-நான்
கைசோர்ந்து நிக்கறனே
முள்ளு துரிஞ்சி மரம்
முட்டாயி காய்க்கும் மரம்
முட்டாயி தின்னப்பொண்ணு-நான்
முகஞ்சோந்து நிக்கிறனே
வட்டார வழக்கு: சோந்து-சோர்ந்து
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
------------
நிறுத்துனாங்க கங்கையிலே
தனிமை மிகவும் கொடியது. இணைந்து இல்லற வாழ்க்கை நடத்தி வந்த தம்பதிகளில் ஒருவர் பிரிந்து விட்டால், தனிமையில் இருப்பவர் நிலை பரிதாபத்துக்குரியது. ஆண் மகனென்றால் மறுமணம் செய்து ஓரளவு தன் துன்பத்தை மாற்றிக் கொண்டு புது வாழ்வு தொடங்குவான். பொண்ணால் அப்படி வாழ முடியுமா? கணவனுடன் அவள் முழுமை பெறுகிறாள். அவன் இறந்த பின்பு உயிர் வாழும் நடைப்பிணமா கத்தான் இருக்க முடியும். உயிர் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்குமே தவிர வாழ்க்கை சுவையில்லை.
தனிமை என்ற கொடுமையில் அவள் கஷ்டப்படுவதை மற்றவர்கள் உணருகிறார்களா?
நீளக் கெணறு வெட்டி
நெலக் கெணறு செட்டெறக்கி
நீள மிண்ணு பாக்காம-என்னை
நிறுத்தனங்கெ கெங்கையிலே
ஆளக் கெணறு வெட்டி
ஆடிக் கெணறு செட்டெறக்கி
ஆழமிண்ணு பாக்காம-என்னை
அமுத்தினாங்க கங்கையிலே
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன் இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------
பிறந்த வீடு
தெளிந்த தண்ணீரைக் குடித்து தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். அத்தகைய தண்ணீரில் ஒரு ஓணான் செத்து மிதந்தால் குடிக்க மனம் வருமா? அதை ஒதுக்கிவிட வேண்டியதுதானே. கணவனில்லா புக்ககமும் அதே போன்றதுதான். கணவனின் மறைவினால் வண்டல் கலங்கிய தண்ணீரெனக் காட்சியளிக்கிறது புருஷன் வீடு. பிறந்த வீடு செல்லத் தீர்மானித்து விட்டாள்.
தெற்கு மழை பேயும்
தென் பெண்ணைத் தண்ணி வரும்
தென் பெண்ணைத் தண்ணியிலே
தெண்டல் படிஞ்சிருக்கு
தெண்டல் ஒதுக்கிடுங்க-நான் பொறந்த
தென் மதுரை பார்க்கப் போரேன்
வடக்க மழை பேயும்
வாணியாத்து தண்ணி வரும்
வாணியாத்து தண்ணியிலே
வண்டல் படிஞ்சிருக்கு
வண்டலை ஒதுக்கிடுங்க-நான் பொறந்து
வளர்ந்த மனை பார்க்கப் போறேன்
வட்டார வழக்கு: தெண்டல்-ஓணான் ; வண்டல்-களி மண், இலை மக்கு.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
------
அணைந்த விளக்கு
கணவனை இழந்த கைம்பெண் புலம்பியழும் ஒப்பாரி பாடல் இது.
காதத்திலே நெய் விளக்கு
காணாத செல விளக்கு
காத்துப் பட்டு அமியிலியே
கண்ணு பட்டு அமிஞ்சிச்சே
சீமையிலே நெய் வௌக்கு
சிந்தாத நெல விளக்கு
தூத்தலுக்கு அமியிலியே
துயரத்துக்கு அமிஞ்சிச்சே
தாழ மரத்தாண்ட-ஒரு
தயிரு கொடம் எடுத்தேன்-நான்
தாள மரம் சாயலியே-என்
தயிரு கொடம் சாஞ்சிருச்சே
பால மரத்தாண்ட
பாலு கொடம் எடுத்தேன் நான்
பால் மரம் சாயலியே-என்
பாலு கொடம் சாஞ்சிருச்சே
வட்டார வழக்கு: அமிஞ்சிச்சே-அணைந்துவிட்டதே ; அமியிலியே-அணையலையே ; சாஞ்சிருச்சே-சாய்ந்து விட்டதே ; கொடம்-குடம்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
---------
எமனாட்ட விட்டேனே
நெடு நாட்கள் குழந்தையில்லாததால் எல்லாத் தெய்வங்களையும் வேண்டியும், பலவித நோன்புகள் அனுசரித்தும், விரதங்களைக் கைக்கொண்டும் பிறந்த குழந்தை அது. தாய் தன் உயிர் போன்ற அந்தக் குழந்தையைக் காற்றுகூட சற்று அதிகமாக அதன் மீது வீசாதபடி, இருட்டுகிற நேரத்தில் வெளியே கொண்டு போனால் பட்சி தோஷம் வரும் என்று வெளியே கொண்டு போகாமல், இருட்டில் போட்டால் இருள் அடித்துவிடக் கூடாது என்றெல்லாம் பராமரித்து வளர்த்த தன் மகன் இறந்து போனவுடன் கதறி அழுகிறாள். “என்னுடைய அடி வயிறையே அவன் பத்து மாதம் குடியிருக்கும் தொட்டிலாக்கிக் கொடுத்தேனே ; அவன் என்னுடைய குழந்தை எனக்கே சொந்தம் என்று எண்ணியிருந்த என் குழந்தையை எமன் எடுத்துக் கொண்டு போய்த் தொட்டிலாட்டும்படி விட்டு விட்டேனே” என்று மனம் வெதும்பி பெற்ற வயிறு பற்றியெரிய அழும் தாயின் பரிதாபமான கதறல்.
வரமா வரங்கெடந்து
வாசு தேவன் வரம் வாங்கி
பந்தலிலே போட்டாலே
பாவ தோஷம் அடிக்கிமிண்ணு
குழியிலே போட்டாலே
குழி தோஷம் அடிக்கிமிண்ணு
அங்கத்தை இறுக்கிக் கட்டி
அடி வயிறு தொட்டி லிட்டு
நானாட்டும் தொட்டிலிலே
எமனாட்ட விட்டேனே
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------
விருந்திட்டவள் விதவையானாள்
கணவனை மகிழ்விக்கும் பணிவிடைகளிலும், கடமைகளிலும் ஒன்றாகும், அவனுக்குப் பிடிக்கும் கறி வகைகளை அறிந்து பின் சமையல் செய்து பக்கத்தில் இருந்து பரிமாற கணவன்ருசித்து உண்டு திருப்தியாவதை மனைவி கண்டு களிப்பதாகும். மேற்கூறிய வகையைச் சேர்ந்த ஒரு மனைவி கணவனுக்குச் சமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டி நெல் வருவிப்பது முதல் அதை அரிசியாக்கிப் பின் சாதமாக்கி வைப்பதுடன் அதற்கேற்ற கறிவகைகளையும் வகை வகையாச் செய்து ஊறுகாய்கள் பல விதம் தயார்செய்து பின் கணவனைப் பல் விளக்குவதிலிருந்து வாய் கொப்பளிப்பது முதல் விசேஷ கவனிப்புச் செய்து சிறந்த வாழைகளிலிருந்து தலைவாழையிலை கொண்டு வரச் செய்து இலைமேல் நீர் தெளிப்பதற்கு பதிலாக இளநீரைத் தெளித்து சோற்றைக் கொஞ்சம் வைத்துச் சத்து நிறைந்த காய்கறி வகைகளை அதிகம் வைத்து தன் கணவன் பசியாறி உண்ட களைப்புத் தீர, திண்ணையிலே மெத்தையிலே அமர்ந்து சிரமபரிகாரம் செய்து கொண்ட தன் கணவம் இறந்ததினால் வெறிச் சென்று கிடக்கும் மெத்தையையும் பார்வையில்லாமல் இருக்கும் திண்ணையயும் கண்டு பழைய நினைவுகள் வரப் பெற்று அழுது கொண்டே அவள் கணவனுக்குச் செய்த சேவைகளை வாய் விட்டுக் கூறி அரற்றுகிறாள்.
நெல்லாலே நெல் லெடுப்பேன்
சிறு சம்பா நெல்லெடுப்பேன்
அண்ணடுச்ச நெல்லுயிண்ணா
அவிச லேறிப் போகுமிண்ணு
நேத்தடிச்ச நெல்லுயிண்ணா
நெஞ்சடச்சிப் போகு மிண்ணு
தானா பழுத்த நெல்லே
தருவிச்சேன் கப்பலிலே
உரலுலே குத்துனா
ஒண்ணு ரண்டா போகுமிண்ணு
நெகத் தாலே அரிசி பண்ணி
வெங்கலத்தில் தண்ணி யெடுத்தா
வெங்காரம் அடிக்கு மிண்ணு
புதுப்பானை தண்ணி யெடுத்தா
பொகை யேறிப் போகுமிண்ணு
ஆத்துத் தண்ணி கொண்டு வந்து
ஆக்கினேன் சாதங்கறி
நாகூரு குச் சொடிச்சி
நல்ல வாயி பல் தொலக்கி
தீத்தமலை தீத்தங் கொண்டு
திரு வாயெ கொப்பளிச்சி
பொன்னு கரண்டியிலே
பொறிச்சேன் நூறு வகை
தங்கக் கரண்டி
தாளிச்சேன் நூறு வகை
உண் ணொரு கரண்டியிலே
ஊறுகா நூறு வகை
வடக்க ரண்டு ஆளனுப்பி
வாளயெலை கொண்டு வந்தேன்
தெற்கே ரெண்டு ஆளனுப்பி
தெய்யலையும் கொண்டு வந்தேன்
எலமேல எலை பதிச்சு
எளநீரை தாந் தெளிச்சு
சோறு யிண்ணா கொஞ்சம் வைப்பேன்
சுத்து கறி ரம்ப வப்பேன்
சாத மிண்ணா கொஞ்ச வப்பேன்
சமைச்ச கறி ரம்ப வைப்பேன்
சாப்பிட்டுப் பசியாறி
சன்னலிலே கை கழுவி
சாந்திருக்கும் திண்ணையிலே-நீங்க
சாந்திருந்த மெத்தை யெல்லாம்
சலிப்படைஞ்சி கிடப்ப தென்ன
வட்டார வழக்கு: அவிச லேறி-தரம் குறைந்து ; வெங்காரம்-நெடி ; உண்ணொரு-இன்னொரு.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------
சீரழிந்தேன்
அவள் சிறுவயது முதல் செல்வமாகவும் அருமை யுடனும் வளர்க்கப்பட்டவள். ஆனால் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதானே ! தற்கால சமூக நியதியும் அவளது வாழ்க்கையும் மாறிவிடுகிறது. தனக்கு வாழைமரத்தையும் தென்னைமரத்தையும் உவமையாகக் கூறுகிறாள்.
வடக்கே நெலாக் காய-ஒரு
வாழ மரம் பூச் சொரிய
வாழ கருக் கழிஞ்சே(ன்)-நான்
வா மயிலா சீரழிஞ்சேன்
தெற்கே நிலாக்காய-ஒரு
தென்னமரம் பூச்சொரிய
தென்ன கருக்கழிஞ்சேன்-நான்
தே மயிலா சீரழிஞ்சேன்
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
------------
மனுவை இழந்தவள்
(கணவனை இழந்தவளின் ஒப்பாரி பாடல்)
மண்ணெக் கொளப்பி-ஒரு
மணக் கரும்பு நாத்துமிட்டு
மனு வெல்லாம் அந்தப் புரம்
மணிக்கரும்பு இந்தப் புரம்
சேத்தை கலக்கி-ஒரு
செங்கரும்பை நாத்து மிட்டு
சேனை யெல்லாம் அந்தப் புரம்
செங்கரும்பு இந்தப் புரம்
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
----------
தேவேந்திரன் தங்கை
அவளுக்குத் தேன் மேல் ஆசை உண்டாகிறது. உடனே தன் அண்ணனுக்குச் செய்தி அனுப்புகிறாள். அண்ணன் தங்கையிடம் மிகவும் அருமையாக நடந்து கொள்பவன் உடனே அவள் கேட்டதை அனுப்பி வைக்கிறான். அதுபோல அவள் கேட்கும் ஒவ்வொரு பொருளையும் உடனே அனுப்பி வைக்கிறான். அத்தகைய சாமான்களைப் பற்றிப் பிறர் அவளிடம் விசாரிக்கும் பொழுது தன் அண்ணன் அனுப்பியது என்று பெருமையோடு சொல்லிக் கொள்வதோடல்லாமல் அண்ணனையும் தேவேந்திரன், கர்ணன் என்று வருணித்துச் சிறப்பிக்கிறாள். அந்த அண்ணனை அவள் பிரிந்து விட்டாள். “நான் கேட்டவற்றை உடனே அனுப்பிய அண்ணன் பிரிந்து விட்டாரே ! இனி நம்மை யார் கவனிப்பார்கள்? யார்தான் கேட்டவற்றை அன்போடு அனுப்பி வைப்பார்கள்?” என்றெண்ணி துக்கம் மேலிட புலம்புகிறாள்.
தேனு மேல ஆசை வச்சி
சீட்டேழுதி நான் போட்டா
சீட் டெ படிச்சி பாத்து
தே னெ வெட்டி கீளெறக்கி
திருப்பதிக்குப் பாரஞ் செஞ்சி
தெருவிலே அனுப்பி வைச்சா
தெருவிலே கண்ட ஜனம்
தேனு வண்டி யாரு திண்ணா
தேவேந்திரன் தங்கைக்கிண்ணார்.
காய் மேல ஆசை வச்சி
கடுதாசி எழுதிப் போட்டா
கடுதாசி படிச்சி பாத்து
காயா வெட்டி கீளெறக்கி
கப்பலில் பாரஞ் செஞ்சி
கடலிலே ஓட்டிவிட்டா
கப்பலிலே இருக்கு(ம்) ஜனம்
காயிபாரம் யாரு திண்ணர்-இந்த
கர்ண னொட தங்கைக் கிண்ணார்
வட்டார வழக்கு: காயிபாரம்-காய்(வண்டி)
குறிப்பு: கர்ணன், தேவேந்திரன் கொடைவள்ளல்களாவார். ஆதலால் அத்தகைய கொடை வள்ளல்களோடு தன் அண்ணனையும் ஒப்பிடுகிறாள்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------
வேடுவர்க்குத் தங்கை
அவள் பிறந்த வீடு செல்லவேயில்லை. அவளைத் திருமணம் செய்து கொடுத்த அவளது பெற்றோர் மணம் செய்து கொடுத்த பின்னர் அவனைக் கூப்பிடவேயில்லை. பெற்றோர்களின் காலத்திற்குப்பின் உடன் பிறந்தானாவது அழைப்பான் என்று நினைத்தால் அவனும் பேசாமலிருந்து விட்டான். இந்நிலையில் வேளாளப் பெண்ணாகிய அவள் விதவையாகி விட்டாள். விதவையான பின்பு வெள்ளையுடுத்தி பிறந்த ஊருக்கு வருகிறாள். வீதியிலே அவளை இனத்தார் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஏனெனிறால் அவள் ஊருக்கு வந்து போய் இருக்கவில்லையல்லவா? ஒருத்தி அவளைப் பார்த்து “காராளச்சியாகிய நீ யார்?” என்று அறிந்துகொள்ளும் ஆவலோடு கேட்கிறாள். இதைக் கேட்ட அவள் தான் இந்நிலையில் ஊருக்கு வந்திருக்கிறோமே ! தன் சகோதரன் தன்னைப் பிறர் இனம் கண்டு கொள்ள முடியாத நிலையில் வைத்து விட்டானே ! என்ற எரிச்சலில் “நான் யாருக்கும் உறவினளல்ல. காட்டில் வாழும் வேடுவர்களின் தங்கை” என வருந்திக் கூறகிறாள்.
கருப்பருகு சேலை கட்டி-நாம் பொறந்த
காஞ்சிக்குப் போனாலே
காஞ்சி பொரம் பெண்களெல்லாம்-அங்கவரும்
காராளச்சி யாருயிண்ணர்
காராளச்சியில்லையம்மா-நான்
கர்ணனொட தங்கையிண்ண
வெள்ளருகு சேலைக்கட்டி-நான் பொறந்த
வீராணம் போனாலே
வீராணத்துப் பெண்களெல்லாம்
அங்கவரும்
வெள்ளாளச்சி யாருயிண்ணர்
வெள்ளாளச்சி யில்லையம்மா-நான்
வேடுவர்க்குத் தங்கை யிண்ணேன்
குறிப்பு: காராளச்சி-வெள்ளாளப் பிள்ளைகளில் கார்காத்தார் என்பது ஒரு பிரிவு.
வட்டார வழக்கு: காஞ்சிபொரம்-காஞ்சீபுரம்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
----------
கொடுமை செய்யும் அண்ணி
அவள் புகுந்த வீடு செழுமையுள்ளது. அவள் பட்டுடுத்தி நகைகளை யணிந்து கணவன் உயிரோடிருக்கும் காலத்தில் பிறந்த வீடு போனால், அவளுடைய அண்ணி அவளைப் பார்த்துப் பொறாமைப் படுவாள். அவள் கணவனை பிரிந்த பின்பு அண்ணனிடம் தங்குவதற்குப் போகிறாள். வாழும் காலத்திலேயே அவளைப் பார்த்து வயிற்றெரிச்சல்பட்ட அண்ணி அவள் வெள்ளையுடுத்தும் விதவையான பின்பு சும்மாயிருப் பாளா? உயிர் போன்ற கணவனே போய்விட்ட பிறகு அவளுக்கு அற்ப நகைகள் எதற்கு? பட்டுதான் எதற்கு? கண்ணீர் உகுத்தவாறு அவைகளையும் அண்ணனிடம் கொடுத்து விடுகிறாள்.
பட்டை உடுத்தி கிட்டு
பவுனு காசைப் பூட்டிகிட்டு-நான் பொறந்த
பட்டணத்தெ போனாலே
பட்டணத்தில் பேஞ்ச மழை-என்
பட்டை நனைச்சிடுச்சி
பவுனு காசு உருகிடுச்சி
பெரியண்ணன் பொண்டாட்டி-என்
பட்டை கழட்டு மிண்ணாள்
பவுனு காசை உருவுமிண்ணாள்
பட்டையும் கழட்டி விட்டேன்
பவுனு காசை உருவி விட்டேன்
அண்ணனாண்ட
சிந்திட்ட கண்ணீரை
செண்ணுட்டேன் மாளிகைக்கு
வட்டார வழக்கு: அண்ணனாண்ட-அண்ணனிடம் ; சிந்திட்ட-சிந்தி விட்டேன் ; செண்ணுட்டேன்-சென்று விட்டேன்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
----------------
தங்கியிருந்தாலாகாதோ?
அவளைப் பல நூறு மைல்களுக்கப்பால் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறது. தாய் உடல் நலமில்லாத செய்தியை அறிந்து உடனே ஓடோடி வருகிறாள் பார்ப்பதற்கு. அவள் வரும் வரை தாயின் உடலில் உயிர் தங்கியிருக்கவில்லை. அம்மாவை உயிரோடு பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்த அவளுக்குத் தன் தாயை உயிரோடு பார்க்க முடியாததால் 'உன்னுடைய அருமை மகளாகிய, என்னைப் பார்க்க ஆசையில்லையா? நான் வரும் வரை பொறுத்திருக்க முடியவில்லையா? ஏன் என்னை விட்டுப் பிரிந்து விட்டாய்?' எனத் தாயின் அருகிலுட்கார்ந்து கதறுகிறாள்.
பொன்னுக் கம்பி வில் வளச்சி
பொழுது மேலே கப்பலோட்டி-நீ பெத்த
பொண்ணாளும் வாராளிண்ணும்
பொறுத்திருந்தாலாகாதா?
தங்கக் கம்பி வில் வளச்சி
தண்ணி மேலே கப்பலோட்டி-நீ பெத்த
தங்காளும் வாராளிண்ணும்
தங்கியிருநி் தாலாகாதா?
வட்டார வழக்கு: வாராளிண்ணும்-வருகிறாள் என்றும்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம் : அரூர், தருமபுரி மாவட்டம்.
------------
பூசை முடிஞ்சு போச்சோ
கணவன் இறந்து விட்டான். மனைவி அவனுடைய பழக்க வழக்கங்களைச் சொல்லி அழுகிறாள். அவன் காலையில் குளித்து மிக ஆசாரமாக பலகையில் அமர்ந்து பூசை செய்வான். விரதங்கள் அனுஷ்டிப்பான்.
அவற்றை நினைத்துப் பொருமியவளாய்த் துக்கம் தாளாமல் 'பூசை முடிந்துவிட்டதென்று பொன்னு ரதம் ஏறி விட்டீர்களோ? தவசு முடிந்து விட்டதென்று தங்க ரதம் ஏறி விட்டீர்களோ?' என்று கூறிப் புலம்புகிறாள்.
பொன்னு விசுப்பலகை
பூசப் பொன்னா ஆசாரம்-உங்களோட
பூசை முடிஞ்சு போச்சோ
பொன்னு ரதம் ஏறினீங்க
தங்க விசுப்பலகை
தவசு பண்ணும் ஆசாரம்-உங்களோட
தவசு முடிஞ்சிடுச்சோ?
தங்க ரதம் ஏறினீங்க
குறிப்பு: பொன் ரதம், தங்க ரதம்-இறந்து போனவர்கள் அதில் ஏறிச் செல்வதாகக் கற்பனை.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
------------
அண்ணி கொடுமை
பிறந்த வீட்டில் செல்லப் பெண் அவள். ஆனால் புருஷன் வீடு போக வேண்டியவள்தானே எந்த செல்லப் பெண்ணும். பின்பு அண்ணன் மனைவிதானே வீட்டுக்கு உரிமையுடையவள். அதோடு அண்ணியாக வருபவள் குணங்கெட்ட கொடுமைக்காரியாகவும் இருந்துவிட்டால் பின் பிறந்தகத்தைப் பற்றிய ஆசை நினைவுகளைக்கூட விட்டுவிட வேண்டியதுதானே ! அவளது தந்தை இருந்த மட்டும் அபூர்வமாகப் போய் வருவாள். தந்தை இறந்த பின்பு எப்படிப் போக முடியும் அண்ணி ஆட்சி செலுத்தும் தன் பிறந்த வீட்டுக்கு? இதைக் கூறி அழுகிறாள் அவள்.
மூணுதலை வாசல்
முப்பத் தெட்டு ஆசாரம்
ஆசாரத்து உள்ளாக
அல்லி பொறந்திருக்க
அடிக்கத் துணிஞ்சாங்க
ஆள் போட்டுத் தள்ளுனாங்க
நாலு தலெ வாசல்
நாப்பத் தெட்டு ஆசாரம்
ஆசரத்து உள்ளாக
அல்லி பொறந்திருக்க
குத்தத் துணிங்சாங்க
கோல் போட்டுத் தள்ளுனாங்க
வட்டார வழக்கு: பொறந்திருக்க-பிறந்திருக்க.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------
காய்க்காத மரம்
அவள் தன் பிறந்த வீட்டுக்குப் போகாமலேயே இருந்து விட்டாள். சந்தர்ப்பங்களும், சூழ்நிலையும் அப்படி ஒரு போக முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவள் திடீரென்று பிறந்த வீட்டிற்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.காரணம் அவள் தந்தை உயிர் நீத்ததாக வந்த செய்தியே.
'நான் சலித்து ஒருநாள்கூட என் பிறந்த வீட்டில் போய் நிம்மதியாக இருந்து வரவில்லையே. அப்படி நான் பிறந்தவீடு வந்ததும் உங்கள் சாவுக்குத்தானா?' என்று இறந்த தன் தந்தையை எண்ணி ஒப்பாரி பாடுகிறாள் :
ஏலக்காய் காய்க்கும் மரம்
எளச்சி வந்தா தங்கும் மரம்
ஏலக்காய் காய்க்கலியே
எளச்சி வந்தும் தங்கலியே
ஜாதிக்காய் காய்க்கும் மரம்
சலிச்சு வந்தா தங்கும் மரம்
ஜாதிக்காய் காய்க்கலியே
சலிச்சி வந்தும் தங்கலியே
வட்டார வழக்கு : எளச்சி-இளைத்து ; சலிச்சி-சலித்து.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
--------------
கொண்டவனைக் கூட தோத்தேன்
அவள் வெளியூர் சென்று வர மிகயும் ஆசைப்படுகிறாள். மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவன் அவளை, மாயவரம், கும்பகோணம் முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்றான். ஆனால் சென்ற இடத்தில் பயங்கரக் காலராவினால் தனது தாலியை இழப்போம் என்று அவள் கனவிலும் எண்ணவில்லை. தான் ஆசையுடன் வந்த இந்தப் பிரயாணம் இன்பப் பிரயாணமாக இல்லாது பெருந் துன்பத்தைக் கொடுக்கக்கூடியதாக அமைந்ததை எண்ணி அழுகிறாள்.
மாயவரம் சங்துகு நதி
மயிலாட்டம் பார்க்கப் போனேன்
மாறா பதக்கம் தோத்தேன்
மன்னவனே கூட தோத்தேன்
கும்பகோணம் சங்கு நதி
குயிலாட்டம் பார்க்கப் போனேன்
கொத்து சரம் தோத்தேன்
கொண்டவனைக் கூட தோத்தேன்
வட்டார வழக்கு: கொத்து சரம், மாறா பதக்கம்-தாலி.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
------------
அண்ட முடியலியே
தனக்குப் பின்னால் தன் மகள் இங்கு வந்தால் வரவேற்பிாரது என்றும், அவமதிக்கப்படுவாள் என்றும் தந்தைக்குத் தெரியும். அதனால் தான் உயிரோடிருக்கும் போதும் தான் வீட்டிலிருக்கும் சமயம் வரச் செரல்லுவார் தன் மகளை. மகள் வருகிறாள் பிறந்த வீட்டில் வரவேற்று அன்புடன் ஆதரித்து “நான் இல்லாத சமயம் வராதே” என்று முன் கூட்டியே அறிவித்தாரே! அவர் நிரந்தரமாகப் பிரிந்து போய்விட்டாரே என்பதை எண்ணி அழுகிறாள். அவர் இருந்த தன் பிறந்த வீட்டை, தருமரோட மண்டபம் என்றும், ஆயிரங்கால் மண்டபம் என்றும், தந்தையைத் தருமர், அர்ச்சுனர், புண்ணியர் என்று புகழ்ந்து கூறுகிறாள்.
தங்கக் கட்டு தாம்பாளம்
தருமரோட மண்டபம்-நீங்க
தருமரும் போயி சேர-நீ பெத்த
தனியாருக்குத் தாங்க முடியல்லையே
பொன்னு கட்டு தாம்பாளம்
புண்ணியரோட மண்டபம்-என்ன பெத்த
புண்ணியரே நீ போக-எனக்கு
பொறுக்க முடியலியே
என்னை அண்டாத யிண்ணீங்களே
ஆயிரங்கால் மண்டபத்தே-என்ன பெத்த
அர்ஜூனனும் நீ போக
அண்ட முடியலியே
வட்டார வழக்கு:அண்டாத-அண்டாதே, நெருங்காதே;இண்ணீங்களே-என்றீர்களே.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
----------------
எமலோகம் போனதென்ன?
தன் பெண்ணை மிகவும் அன்புடன் பேணி வளர்த்தார் தந்தை. தன்னுடன் வெளியில் அழைத்துச் செல்வார்.அவள் முகம் வாடுவதற்குச் சம்மதிக்கமாட்டார். காற்று சற்று பலமாக அடித்தால்கூட அதனால் மகளுக்கு உடல் நலம் குறைந்து விடக் கூடாதென்று காற்றடிக்காமல் தான் மகளை மறைத்து நின்று கொள்வார். அவ்வளவு அன்பான தந்தை இறந்தவுடன் மகள் உணர்ச்சி மேலிட்டுத் தன்னை அவர் அன்போடு பாதுகாத்து வளர்த்ததை வாய்விட்டுச் சொல்லி பொருமி அழுகிறாள்.
பத்தடிக் கொட்டாயி
பவளக்கால் மேல் தூலம்
பசுங் காத்தடிக்கி திண்ணும்
என்ன பெத்த எப்பா
பக்கமாக நிறுத்தனையே
பத்தடுக்கு மெத்தை மேலே
படிக்கிறதா எண்ணியிருந்தேன்-நீங்க
படிக்க முடியாம
பரலோகம் போன தென்ன
எட்டடுக்கு மெத்தை யிலே
எழுதறா எண்ணியிருந்தேன்
எழுத முடியாம-நீங்க
எமலோகம் போன தென்ன
வட்டார வழக்கு:கொட்டாயி-கொட்டகை
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
---------------
இரவலாச்சு
அவளுக்கு மணமானது, மிக்க மகிழ்ச்சியுடன் கணவனுடன் வாழ்க்கை நடத்துகிறாள். இனி புருஷன் வீடு தான் சொந்தம். பிறந்த வீடு சொந்தமில்லை என எண்ணி இறுமாந்திருந்தாள். ஆனால் புருஷன் காலமானவுடன் புருஷன் வீடும் இரவலாகப் போனதை எண்ணி எண்ணி புலம்புகிறாள். புருஷன் போனவுடன் அவருடைய சொந்தமும் போய்விட்டது.
தங்க செவரு வச்சி
தட்டோடு போத்தனிங்கோ
தட்டோடு சொந்த மில்லே-எனக்கு
தாவு எரவலாச்சு
பொன்னு செவரு வச்சி
புது ஓடு போத்தனிங்கோ
புது ஓடு சொந்தமில்லே-எனக்கு
பூமி எரவலாச்சு
வட்டார வழக்கு:போத்தனிங்கோ-போற்றினீர்கள்;தாவு(தெலுங்கு வார்த்தை)-இடம்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
-------------
மாலை பொருத்தமில்லை
தன் மகளை தன் தம்பிக்கு மணம் செய்து வைப்பதனால் தனது பிறந்த வீட்டுச் சொந்தம் தன்னுடைய பரம்பரைக்கும் உறவு நெருக்கமாகி, சொந்தம் விட்டுப் போகாமல் இருக்கும் என்பதற்கும் தான் உடன் பிறந்தவளாதலால், தன் தம்பி நன்றாக கவனித்துக் கொள்வான் என்றெண்ணி மணம் செய்து வைக்கிறாள் தாய். ஆனால் தான் எண்ணியதற்கு மாறாகத் தன்னுடைய மகள் சந்தோஷப்படாமல் துன்பமான வாழ்க்கை நடத்துகிறாள் என்பதை அறிவதற்கு முன் இவ்வுலகைவிட்டுப் போய்விட்டாள். மகள் தாய் இறந்த துக்கத்துடன் தன் துக்கத்தையும் கூறி அழுகிறாள். தனது தாய் மாமன் வீடு தனக்கு ஆடுமாடு போன்ற மிருகங்கள் அடைக்கும் பட்டியாகத் தோன்றுகிறதேயன்றி மனிதர்கள் வாழக்கூடிய இடமாகத் தோன்றவில்லை என்பதையும் குறிப்பிடுகிறாள்.
மாதா பொறந்த இடம்
மல்லியப்பூ கச்சேரி
மாலைப் பொருத்தமில்லை-எனக்கு
மாமன் வீடு சொந்தமில்லே
தாயார் பொறந்த இடம்
தாளம்பூ கச்சேரி
தாலி பொருத்தமில்லே-எனக்கு
தாய் மாமன் சொந்தமில்லே
மாட டைக்கும் பட்டியிலே-நீ பெத்த
மங்கை யாளப் போட்டடைச்சு
மாடு படும் தும்பமெல்லாம்-இந்த
மங்கை பட்டு நிக்கிறனே
ஆடடைக்கும் பட்டியிலே-நீ பெத்த
அல்லியாளைப் போட்டடைச்சி
ஆடு படும் தும்ப மெல்லாம்-இந்த
அல்லி பட்டு நிக்கறனே.
வட்டார வழக்கு : தும்பம்-துன்பம் ; நிக்கிறனே-நிற்கிறேனே.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
-----------
விதவையின் தவிப்பு
அவள் கணவன் இறந்துவிட்டான். கணவன் பிரிந்து விட்டான் என்றால் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகள் அன்றாட வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகளின் காட்சி மனக்கண்ணில் தோன்றுகிறது.
மனத்தில் அவ்வெண்ணங்கள் தோன்றியவுடன் வாயில் அவை வார்த்தைகளாக வெளி வந்து புலம்பி அழுகிறாள். கணவன் வேலையினிமித்தமாக வெளியில் சென்று திரும்பிய பின் தான் செய்யும் பணிவிடைகள் ஒவ்வொன்றையும் கூறி அழுகிறாள்.
நானூறு வண்டியிலே
நடுவே வரும் சாமானாம்
சாய் மானப் பெட்டியிலே-என்
சாமி வரப் பாக்கலியா
சின்ன நடை நடப்பார்
தெருக் கதவை ஒந்திரிப்பேன்-நான்
தாளிப்பேன் நூறு வகை
பொன்னு கரண்டியிலே
பொரிப்பேன் நூறு வகை
வெள்ளிக்கா கரண்டியிலே
வித விதமாக் கொத்தமல்லி
சாதத்திலே கொஞ்சம் வைப்பேன்
சமைச்ச கறி ரொம்ப வைப்பேன்
ஜலம் வாங்கிக் கையலம்பி
சாப்பிட்டுத் திண்ணையிலே
மெத்தை தலை காணியிலே-இனி
கூடிப் படுப்பதெப்போ?
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
--------------
Comments
Post a Comment