Srī kuḻaikkātar pirapantattiraṭṭu


பிரபந்த வகை நூல்கள்

Back

ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு
>



ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு
2- குழைக்காதர் பிள்ளைத்தமிழ், இதரப் பாடல்கள்




ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு
2- குழைக்காதர் பிள்ளைத்தமிழ், இதரப் பாடல்கள்

Source:
ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு
(நூல்கள், பதவுரை, விசேடவுரை முதலியவற்றுடன் கூடியது.)
(Sri Kuzhaikathar Prabandha Thirattu)
உரையாசிரியர் - பதிப்பாசிரியர்
திருமதி பத்மஜா அனந்தராமன் எம்.ஏ.
ஆங்கிலப் பேராசிரியர், மதிதா இந்துக் கல்லூரி,
பேட்டை, திருநெல்வேலி - 10
கிடைக்குமிடம்:
1, சிவபுரம் தெரு, திருநெல்வேலி ஜங்ஷன், 627001.


குழைக்காதர் பிள்ளைத்தமிழ்

நூல்முகம்

பிள்ளைத்தமிழ்

'பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈடுத்
தொண்ணூற் றாறெனுந் தகைய '

எனப் ' பிரபந்த மரபியல் 'சிற்றிலக்கியஙளை வகைப்படுத்துகிறது. சிற்றிலக்கியங்களில் முதலிடம் பெறுவது
பிள்ளைத்தமிழ். பாட்டியல் நூலார் பலரும் பிள்ளைத்தமிழுக்கே முதலிடம் தந்துள்ளனர். இது சீரும் சிறப்பும் பெற்றுச்
சிறந்திருக்கும் பிரபந்தமாகும். இவ்விலக்கிய வகைக்கு வித்து பழந்தமிழ் நூலான தொல் காப்பியத்தில்
உள்ளது என்பதினை

' குழவி மருங்கினும் கிழவதாகும் '
(தொல்: பொருள் : புறத். 29)
என்ற நூற்பா விளக்குகிறது.

பிள்ளைத் தமிழ் வாழ்வின் முதனிலை என்பதால் மட்டும் மேன்மை அடைவதில்லை.ன பிரபந்தங்களுள் முதன் முதல்
உருபெற்றது இதுவே எனலாம். பெரியாழ்வார் தம் திருமொழியில் கண்ணனின் பிள்ளைப் பருவத்தில் நிகழ் வனவற்றைப்
போற்றிப் பாடி சிறந்த சொற் சித்திரங்க ளாகப் படைத்து பிள்ளைத் தமிழுக்குத் தொடக்கம் செய்துள்ளார். நாச்சியார்
திருமொழியில் 'சிற்றில் சிதையேல்' என சிறுமியர் விண்ணப்பம் செய்யும் திருமொழி உள்ளது. பெரிய திருமொழியில்
திருமங்கை மன்னன் ' சப்பாணிப் பருவம்' பாடுகின்றார். இராகவனுக்குத் தாலாட்டுப் பாட குலசேகரப் பெருமாள்
'தாலேலோ' எனப் பாடியுள்ளார். ஆண்டாளும், குலசேகராழ்வாரும் பிள்வளக்கவி யமுதைத் தெவிட்டாத இன்பமாக
வாரிவழங்கித் தந்திருக்கின்றனர்.

'மூன்று முதல் இருபத்தொன்றனுள் ஒற்றை பெறு திங்கள் தனிற் பிள்ளைக் கவியைக் கொள்ளே' எனச் சிதம்பர பாட்டியல் பிள்ளைக் கவி பாடும் பருவத்தை விளக்குகிறது. பிள்ளைக் கவியில் வரும் பத்து பருவங்களையும் மூன்று முதல் இருபத்தோரு திங்களில் பாடுவது உண்டு. ஒற்றைப்பட்ட திங்களில் பாடுவது நல்லதென்பர். பாட்டுடைத் தலைவனது குழந்தைப் பருவத்தைக் காப்பு, தாய், செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, சிறுபறை முழக்கல், சிற்றியல சிதைத்தல், தேர் உருட்டல் எனப் பத்து பருவங்களாகப் பகுத்துக்கொண்டு ஒவ்வொன்றிற்கும் பத்து செய்யுட்களாக ஒன்றித்த மாதங்களில் பாடப் பெறுவதாகும். இது ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும். மேலேசுட்டிய ஆண்பாலுக்குப் பத்து பருவங்களில் இறுதி மூன்றான சிறுபறை, சிற்றில் - சிறுதேர் நீக்கி அவற்றிற்குப் பதிலாகக் கழங்கு, அம்மானை, ஊசல் ஆகியவற்றை அமைத்துப் பாடுவது பெண்பால் பிள்ளைத் தமிழாகும்.

மனித உறவுகள் பலப்பல. அவற்றுள் மிகப் புனித மானதும், இயல்பாக எழுவதும் குழந்தையிடம் தோன்றுகிற அன்புதான். இந்த அன்பையே இறைவனுக்கும் தமக்கும் உள்ள தொடர்பாகக் கொண்டு வாழ்ந்த அடியார்கள் பலர். தெய்வங்களையாவது, பெரியோரையாவது குழந்தையாகப் பாவித்துக் காப்புப்பாடி, செங்கீரை ஆடவா என அழைத்துத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பர். இந்த பாவனையின் முதிர்ச்சியில் பாட்டுடைத் தலைவன், "குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி வருவான்; சப்பாணி கொட்டுவான்; சிறுபறை முழங்குவான்; சிறுதேர் உருட்டுவான்; இவ்வாறு தோன்றிய இலக்கிய வகையே பிள்ளைத் தமிழாகும். நாளடைவில் பாடவேண்டிய முறை பற்றிய இலக்கணம் பிறந்தது.

குழைக்காதர் பிள்ளைத் தமிழ்:

குழைக்காதர் பிள்ளைத் தமிழில் முதல் பருவமாகிய காப்புப் பருவத்தில், நம் புலவர் சரசுவதி துதியுடன் தம் சமய
மரபிற்கேற்ப ஆழ்வார்கள் பன்னிருவரையும் காக்கும் தெய்வமாக வைத்துப் பாடியுள்ளார். ஒரு காலை நீட்டி, ஒரு காலை மடக்கி, கைகளைத் தரையில் ஊன்றி, தலை நிமிர்த்தி, முகம் அசையக் குழந்தை ஆடுவது செங்கீரையாட்டம். இதனைச் சிறந்த சொல்லோவியமாக கவிஞர் அமைத்துள்ளார்.
    "ஒளிர் பட்டாடையுடன் மகர குண்டலமாட
    திருவரையின் மணியசைந்தாட"
ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் மிகவும் இனிமையாக
    "செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாளா
    செங்கீரை யாடியருளே "
எனப் புலவர் பாடுகிறார். தாலாட்டைக் கேட்பதாக அமைவது தாலப்பருவம். இசைக்கு மயங்காதவர்தான்
உண்டோ! இசையை இரசிக்கத் தெரியாதவன் ஒரு விலங்கு என மேனாட்டு அறிஞர் ஒருவர் கூறுகிறார்.
அதனினும் குழைக்காதர் தாலாட்டு கேட்போருக்கே துயிலினை வரவழைப்பதாக அமைந்துள்ளது.
    "................. மரகதமா
    மணியே தாலோ தாலேலோ
    மகரக் குழையே யென்னிருகண்
    மணியே தாலோ தாலேலோ !"
குழந்தை கையோடு கைசேர்த்துத் தான் செய்த அரிய செயலைத் தானே ஆரவாரித்து அனுபவிக்கும் பருவம்
சப்பாணிப் பருவம்.

தத்தித் தத்தி தளர் நடையில் குழந்தை நடந்து வருவதைக் கவிதையின் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டுவது வாரானை
என்ற வருகைப் பருவம்.

திருவாயின் முத்தமருளே, கனிவாயின் முத்தமருளே எனக் குழந்தையிடம் முத்தப் பருவத்தில் வேண்டுகிறார். வானத்துச்
சந்திரனை விளையாட வரும்படி அழைப்பதாக அமைந்துள்ளது அம்புலிப் பருவம்.
    "ஆழிநீர் வண்ணனாம் வாழி மாதவனுடன்
    அம்புலி யாடவாவே!"
சிறுபெண்கள் கட்டி விளையாடும்மணல் வீட்டை
    "பொருனைத் தடந்துறைவா
    சிறியேந் சிற்றில் சிதையேலே"
எனப் பாடுவது எட்டாவது பருவமாகிய சிற்றில் பருவம். "சிறுபறை கொட்டியருளே, சிறுதேர் உருட்டியருளே" என
பிள்ளைத் தமிழ் முற்றுப் பெறுகின்றது.

இந்நூலின் பாட்டுடைத் தலைவனை இராமனாகப் பாவித்து, வில்லை முரித்து, அவள் சீதையினை மணம் புரிந்து,
இராவணன் முதலிய அரக்கர்களை அழித்த வீரச் செயல்களை நம் புலவர் பாடுகின்றார். பெருமாள் இராம பிரானாகப்
புரிந்த செயல்களே இங்கு மிகுதியாகக் காணப் படுகின்றன. இனிய, எளிய சொற்களால், கற்பனை நயம் கலந்து மிகவும்
அருமையாக இப்பிரபந்தம் அமைந்துள்ளது. குழைக்காதர் என்று ஆழ்வார் நாயகி அக மகிழ்ந்து சூட்டிய பெயரால்
இப்பிரபந்தத்தைப் பாடியவர் தென்திருப்பேரையில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் எனத் தெரியவருகிறது. ஆசிரியர்
துதியிலிருந்து கரு0ணயும் கம்பீரமும் வாய்ந்த தோற்றத்தையுடைய இரகுநாத பட்டர்என்ற வைணவர்புலவரின் குரு என்று
தெரியவருகிறது. ஆனால் புலவரின் பெயர், காலம் வாழ்க்கைக் குறிப்பு ஒன்றும் புலனாகவில்லை. நூலின் பலவிடங்களில்,
"நூற்றெண்மர்" மரபினரைப் புலவர் புகழ்ந்து பாடக் காண்கிறோம். இந்நூலின் முதற் பருவத்தின் முதற் செய்யுளிலே

'நூற்றெண்மர்சிந்தை குடிகொண்டிருக்கும் பாமாலை, எனக் குறிப்பிடுகிறார். நூலினிடையே 'நூற்றெண்ம
ரோடு விளையாடுமால்' எனக் குழந்தை தெய்வத்தினை வேண்டுகிறார். இறுதிச் செய்யுளிலே,

" சீர்பெருகும் வண்மை நூற்றெண்மர் வாழி" என வாழ்த்துகிறார். பல இடங்களில் 'குலநாத்' எனப் பரவுகிறார். ஏற்கனவே
இவ்வூர் மக்கள் குழைக்காதரை கோயிலில் குடிகொண்டிருப்பவர் எனக் கருதாது, தத்தம் வீட்டுக் குழந்தையாக சீராட்டி,
பாராட்டுவதுண்டு. மேலும், வாரிசு இல்லாத இவ்வூர்க்காரர்கள் தங்கள் நகையினை இப்பெருமானுக்கு சூட்டி
மகிழ்வதுண்டு. பிள்ளைத் தமிழ் முழுவதும் புராணக் கதைகள், வரலாற்றுச் செய்திகள் விரவி வருகின்றன.

புலவர் பெயர் தெரியாமலும், இதுவரை அச்சு வாகனம் ஏறாத "குழைக்காதர் பிள்ளைத் தமிழ்" என்ற இந்த எளிய, இனிய
சிற்றிலக்கியம் சொல்தோறும் தேனொழுகும்; கற்றோர் காவினை கனியச் செய்யும்; கேட்போர் மனதினைக் கரையச்
செய்யும்.
    வாழ்க குழைக்காதர் பெருமை
    வளர்க குழைக்காதர் இலக்கியம்.

குழைக்காதர் பிள்ளைத் தமிழ்
1. காப்பு




நம்மாழ்வார்
பூமாது குடி கொண்டு வீற்றிருந் தரசு புரி
       பொற்புலவு பாதுமா சனப்
    பொழி கருணை யொடு பெருகு ஞான வெள் ளத்தலை
       புரட்டு திரு முத்தி ரைக்கைக்
கோமானை யெழுதரிய சதுமறையும் அள்ளிக்
       கொழித்து வண் தமிழ் படுத்திக்
    கூறுதிரு வாய்மொழி யோர் நாலாயிரஞ் செய்த
       குருகை முனி யைப்பர வுதும்
தேமா நறுங்கனித் தேன் மதகி னூடுபாய்
       திருவழுதி வளநா டனைத்
    தென் திருப் பேரை நகர் காவலனை
       நூற்றெண்மர் சிந்தைகுடி கொண்டிருக்கும்
மாமால் வருணன் வந் தடிபரவும்
       ஆழிநீர் வண்ணனைப் புயல் வண்ணனை
    வானப்பி ரானைநம் குலநாத னைப் புகழும்
       வண்தமிழ்ச் சொல்தழை யவே. - 1



சரஸ்வதி
அஞ்சிறைய வரிவண் டுழக்கிக் கணைக்
        காலசைத்துப் பொலன்தா தளைந்(து)
    அடை கிடந் தாலித்து வாய் மடுத் துத்
       துதைந் துளிநறவு கூட்டுண்ணமென்
பிஞ்சு மடல் முகை முறுக் கவிழும் வெண்
        தாமரைப் பீடத்தி னினிதிருக்கும்
    பெடை யோதி மஞ் செஞ்சொல் மடமாது
        வெண்ணிறப் பெண்ணுரு தாள்துதிப்போம்.
பஞ்சனைய பரிபுரத் தளிரடித துடியிடைப்
      பணை முலைக் கனிவாய் மொழிப்
    பைந்தொடிச் சீதையை மணம் புணர
        மிதிலையம் பதிபுகுந் தாடு ஜனகன்
செஞ் சிலையி றுத்தமாக ரக்குழைக் கடவுளைத்
       திருவழுதி வளநா டனைத்
    தென் திருப் பேரைநகர் காவலனை
        வாழ்த்துமென் செந்தமிழ்ச் சொல்தழை யவே. - 2



ஆண்டாள்
மண் மகளு மாய்ப் பின்னை மடமகளு மாய்
       மிதிலை வரு ஜனகனுக்கு மகளாய்
    மங்கலச் சொல் திருப் பல்லாண்டு
       செம்பவள வாய்திறந் தோதி னோன்தன்
பெண்மகளு மாய்வந் தரங்கேசர் முதலைந்து
       பேருக்கு மொரு தே வியாய்ப்
    பேர்பெற்று மாலைசூ டிக் கொடுத் தருளிய
       பிராட்டியை வணங்கல் செய்வாம்
தண் மதியி னகடுதொடு மாடமா ளிகை
       நெடிய தமனியப் பொற்குன் றமும்
    சதுமறைக் குரிய வேள் வியும்யாக சாலையும்
       சந்நிதியில் நூற்றெண் மரும்
கண்மணி யெனத் தகைய பிள்ளைக்கு ழாமுமலி
       காவு சூழ் பேரை யூரன்
    கருணையொடு வருணன் அடிபரவும் மக ரக்குழைக்
       கடவுள் சொல் தழைய வென்றே. - 3



பொய்கையார்
பாரரா வணனெனும் படுபழிக் கஞ்சாத
       பாவி கொலை களவு கபடம்
    பழகுபா தகன் மெளலி யொடு பதும துகன்படல்
       பண்டுகோ தண்டம் வாங்கும்
வீரமே கந்திருக் கோவலூரிடைகழியின்
       வெளிநிற்ப ஒவ்வொரு வர்மேல்
    மிகநெருக் குண்டபுகழ் மூவரில் பொய்கையார்
       மென்சரணம் அஞ்சலி செய்வாம்
தாரை வேல் விழிபாய வாலிமார் புருவ ஒரு
       சரம் விடுத் துக்கொன் றவன்
    தம்பிக்கு மகுடம் கவித்தர சளிக்கின்ற
       தாமோ தரக்கு ழகனைப்
பேரையா திபனைநங் குலநாத னைத் துழாய்ப்
       பெம்மானை அம்மா னையே
    பேசுஞ் செழுந்தமிழ்ப் பிள்ளைக் கவிக் குள்ள
       பேதைமை பொறுத் தரு ளவே. - 4



பூதத்தார்
ஆரணப் பொருள் நான்கும் யாகமோரைந்து
       நூ லைந்தொடைந் தெட்டு நியமம்
    ஆறுதொண் ணூற்றாறு தத்துவம்
       சித்தியெட் டைம்புல டைக்கு ஞானக்
காரணச் சுடர்விளக் கொளிகொண்டு யாவுமொரு
       கரைகண்டு புகழ் கொண் டசொல்
    கருணாகரக் குரிசில் உயர் பூத ஆழ்வார்
       கழற்கால் வணங்கல் செய்வாம்
பூரணக் கலைமதியின் நிலவொழுக ஆம்பல் மென்
       புரிமுறுக் கவிழ் வாவியம்
    புனல் படியும் வன்கரா வதுவந் திழுக்க அப்
       பொழு தாதி மூலமென்றே
வாரணப் பகடலறி வீரிடக் காத்தருள் செய்
       மையாழி நீர் வண் ணனை
    வானப்பி ரானைநங் குலநாத னைப்புகழும்
       வண்தமிழ்ச் சொல்தழை யவே - 5



பேயாழ்வார்
தெளிக்கும் கொழும்பிரசம் ஊற்றிருக் கும்
       கலூழி திரை மண்டி மடு நிறையவே
    தேக் கெறியும் வெள்ளப் பெருக்கில்
       பொலன்தாது சிந்தக் குடைந்து பம்பிக்
களிக்குஞ் சிறைச் சுரும் பிசைமுரல
       முகைவிண்ட கடிகமழ் பசுந்தண் துழாய்க்
    கடவுள் திரு வந்தாதி புகலு மயிலையர்கோன்
       கழற்கால் வணங்கல் செய்வாம்
துளிக்குந் திரைப் பொருநை மதகினொலி யும்
       பழஞ் சுருதிமறை யவர்கள் ஒலியும்
    சொல்லரிய பிள்ளைக் குழாவொலியும்
       மங்கலத் தூயமுர சத்தொடு பரி
மளிக்குந் திருப் பேரை மணி வண்ணனைப்
       புயலை மகரக்குழைக் கட வுளை
    வானப்பி ரானைநங் குலநாத னைப் புகழும்
       வண்தமிழ்ச் சொல் தழை யவே. - 6



திருமழிசை
கொந்தர் பசுந்துளவு பழுது தள் ளிச்செழுங்
       குளிர் கறுந் தொடையல் சேர்த்துக்
   குலவுமணி முடிமீது கைபுனைந் தாழிமால்
       குரைகழ லிணங்கத் திரு
அந்தாதி யொடுதிருச் சந்தநூற் றிருபதையும்
       அமுதூறு திருவி ருத்தம்
   ஆகச் சொல் மாலையணி யோகப்பி ரான்
       மழிசை யாதிபனை யே பரவுதும்
நந்தா வளம் பெற்ற திருவழுதி நாடும்
       வளர் நகரமும் உரிய கோமான்
   நாரணன் பூலோக காணன்
       அச்சுதா னந்தகோ விந்தன் முற்றும்
வந்தாத ரித்துவரு ணன்பரவும் ஆழிநீர்
       வண்ண நிகர் முகில்வண் ணனை
   வானப்பிரான் அதிர்வளைக்கை மகரக் குழைய
       மாதவன் சொல் தழையவே. - 7



குலசேகரர்
வள்ளவாய் நெகிழத் துளிக்கும் பசுந்தேறல்
       மலர்மங்கை திகழ் வஞ்சியும்
      வளமை தரு குடநாடும் வான் பொருநையும்
        கொல்லிவரையும் உரிமைச் சேரர்கோன்
புள்ளவா வுறு நீல மாலிகை கிடந்த
       புயபூதரன் சூலசே கரன்
      பொருசிலையை நெடிய வடவரை மிசை
       பொறித்த வண் புகழ் வேந்த னினிது காக்க,
அள்ளல் வாய்ப் பழனத் தடந்தொறுஞ்
       சுரிசங்கம் அகடுளைந் தின்ற முத்தும்
      அம்பொற் பசும்பாளை தயைவிழ்க் கும்
       கமுகின் அணிமுத்தும் நிலவுங் காலக்
கள்ளரு நறுமலர்க் குமுதம் விரி பேரை
       வரு கருணா கரக்குரி சிலைக்
      கடவுளைக் குலநாத னைப் புகழ்ந் தேத்துமென்
       கவிதையின் சொல்தழை யவே. - 8



பெரியாழ்வார்
விடங்காலும் வாளரா வரசுக்கு
      முணர்வரிய மிக்க சங்கத் தமிழினால்
    மீனவன் மதிப்ப வரி யாசனமி ருந்தினிது
      வென்று மூதூர் மதுரையின்
அடங்காத பரசமய மதமறுத் துக்
      கிளியறுத்துவே ழப்பிட ரிருந்து
    ஆழி மாலைக் கண்டு வாழிபா டும்
      பெரிய ஆழ்வார் தமைத்து திப்பாம்
தடங்கா வடுக்கக் கிடக்கின்ற கல்லுருத்
      தவிர முனி பின்னடந்து
    சரண பங் கேருகத்து கலினிக்கும்
      பசுந்தண் டுழாய்க் கொண்டல் கேணிக்
கிடங்கா னதிற் பகட் டிளவாளை துள்ள
      மைக் கெணடைவிளை யாடு புனல்சூழ்
    கெழுதகைய தென்பேரை வளமலிதருந்தூய
        கேசவன் சொல்தழை யவே. - 9



தொண்டரடிப் பொடி
பண்ணாலிலை யிற்கண்டுயில் ஞான
        பராபரர் காவிரி நீர்
    படியு மரங்கர்க்குச் சொல்மாலை
        படிந்தடியிற் சூட்டி
வண்டார் துளவத் தொடைமுடி சூடி
        வணங்கும் தவராசன்
    மண்டங் குடிவாழ் தொண்டரடிப் பொடி
        வர முனியைத் தொழுவாம்.
குண்டாரு நதிப்புனல் அனல் குமுறக்
        கோதண்டம் வாங்கிக்
    குழைய வளைத் தொரு மகழி
        கொடுத்தருன் கோமேதக நீலம்
தண்டாமரை மலரும் பேரையில்வரு
        தாமோதரர் தூய
    தமிழ்தெரி பிள்ளைக் கவி வழுவாதெழு
        தரணியில் நிலை பெறவே. - 10



பாணர்
வச்சிரக் குலிசபதி முனிவரிமை யவர்
        சது மறைக்கடவுள் மழுவ லாளன்
   வந்தடி பணிந்து தொழு மெந்தைக்கு
        முத்திதரு வைகுண்ட பதவியானுக்(கு)
அச்சுதப் பச்சை மாலுக்கு அருமறைப் பொருட்
        கருமணிக் கண்மலர் படைத்(து)
   அமலனாதிப் பொருளுரைக் கின்ற
        குரிசில் பாணாழ்வாரையே பரவுதும்
கச்சறப் பொருமிப் புடைத்துச் சினத்துக்
        கனத்தடி பரந்து விம்மிக்
   கண்கறுத் தமிர்தம் பொதிந்த
        குங்கும முலைக் கற்புடைச் சீதையாளை
நச்சி தற்சிலை வளைக்கும் பசுந்தண்டுழாய்
        ராமாவதார தீர
   நாராயணன் வழுதிநாடன் நங்குலநாதன்
        நல்தமிழ்ச் சொல் தழையவே. - 11



திருமங்கை யாழ்வார்
சிறியதிரு மடல்பெரிய திருமடல்
        திருமொழி செழுந்தமிழ் நெடுந்தாண் டகம்
   சிறக்கின்ற சொற்குறுந் தாண்டகம்
        விதிமுறை தெளிந்த வெழு கூற்றி ருக்கை
நறிய துள வணியுமுகி லுக்குரைக் கும்
        மங்கை நாற்கவிப் பெருமா னைமுன்
   நான்மறைப் பொருளுக்கு மெட்டாவரும் பொருளின்
        நற்பொருள் கவர்கள்வனைப்
பறிமுதல் திரும்பக் கொடாதனைத்துந்
        திருப்பணி செயும் புகழ் வேந்தனைப்
   பலகாலும் நெஞ்சில் வைத்தவனடிக் கமலமலர்
        பரிவொடு பணிந்தேத் துதும்
உறிமிசையிருந்த அளை களவினால் வாரி
        அன்றொருதிவலை சிந்தாதுணும்
   உயர்புகழ்ப் பேரைவரு குலநாதன்
        முதுகவிதை உலகெங்கணும் தழையவே. - 12



மதுரகவி
முடிக்கும் பசுந்துழாய்ச் சக்ராயுதக் கடவுள்
        முளரியங் கண்ணனுக்கு
    முதுமறை தெரிந்துதிரு வந்தாதி யாசிரியம்
        முறைவழா வடிதொறுஞ் சொல்
வடிக்குஞ் செழுந்தமிழ்ப் பாடலாயிரமும்
        மகிழ் மாறனுரை செய்தரு ளவே
    வரிசை யொரு பட்டோலை எழுது மொரு
        மதுரகவி வரமுனி வனைப்பர வுதுங்
குடிக்குந் தடந்திரைப் புனல்யாவு மொரு
        முகங் கொண்டு வரு ணன்படி யவே
    கூடு பொருனைத்துறைக் குலநாத னுயர்மாட
        கூடங்க டோறும் நெடுவான்
இடிக்குங் கருங்கொண்டல் கண்படுக் கும் பேரை
        எம்பிரான் வானப் பிரான்
    இருசரணமலர் சூடுமெனது கன
        கவிதை உலகெங்கணுந் தழைய வென்றே. - 13



எம் பெருமானார்
முதியகவி நாவலர் தம்பிரான் திருஞான
        முத்திரைக் கடவுள் திருவாய்
   மொழிதனக் குரைவிரித் தெழுது
        பிரவுடவாக்கி முழுதுமன் யர்க்கு வாழ்வு
புது நறவு கக்கித் துளிக்குஞ் சரோருகப்
        பொற்கழற் கருணா கரன்
   புகலரிய பரசமய திமிராரி வண்
        புகழ்ப் பூதூர னைப்பர வுதும்
சது மறையு மறிவரிய குலநாதன்
        முத்தொடலை தத்தும் தடம் பொருநையின்
   தருமநெறித் தவறாத் திருவழுதி வளநாடு
        தழையவரு கருணை மேகம்
விதிமுறையி னொடு தொழுது வருணன்
        ஆ ராதனை செய் விமலன் மக ரக் குழை யமான்
   விரவுஞ் செழுந்தமிழ்ப் பிள்ளைக் கவிக்குள்ள
        மிக்கசொல் தழைய வென்றே. - 14
காப்பு முற்றும்.
----------------

2. செங்கீரைப் பருவம்



வானாடரும்பொற் பொகுட்டா சனப்
        பதும மண்டபத் தரசி ருக்கும்
    மறைக் கிழவ னும்சடை முடிக்கட வுளும்
        குலிச வச்ரா யுதத்த லைவனும்
பூ நாறு வெட்சியந் தெரியல் புனை குமரனும்
        புகர் முகத் தவனு மதியும்
    பொங்கு சுடரிரவியுந் துங்கமுனி வரும் நெடும்
        பொற் கோயில் வலம் வந்து நம்
கோனாக வருண னாராதனை செய் மஞ்சனக்
        கொலுவில் வந்தடி வணங்கிக்
    கும்பிட்டு நின்று சே விப்ப நற் சேவைபுரி
        கோசலைக் கிரு கண்மணியே
தேனாறு பச்சைப் பசுந்துழாய் மேகமே
       செங்கீரை யாடி யருளே
    செல்லத் திருப்பேரை வல்லிக்கு
        மணவாள செங்கீரை யாடிஇருளே!. - 1



முருகொழுகு பங்கயத் தடமு நீள் குளனும் அனை
        மோதும் புனற் சுழியினும்
    முதிராத விளமணலும் நடைவரம்பும் செய்ய
        முதுகுரம்பும் கரும்பும்
அருகு நெட்டிலை முடத்தாழை நிழலும் வேலி
        அடரும் செழுஞ் சோலையும்
    அம்பொற் பசும்பாளை தளையவிழ்க்கும் கமுகின்
        அணி வனமுமதகி னூடும்
சொருகு குழல் மகளிர் குடமுலை யசைய நுணுகிடைச்
        சுமக்கின்ற பொற்குடத்தும்
    சுடர்மணிப் பொற்றடந் தேரோடும் வீதியும்
        சுரிமுகச் சங்க மூரும்
திருவழுதி நாடாள பரமபத வீடான
        செங்கீரை யாடியருளே
    செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள
        செங்கீரை யாடி யருளே. - 2



அறுகால் வரிச் சுரும் படைகிடக் கும்
        குழ லரக்கி மண் டோத ரிகழுத்
    தழகு தா லிச்சரடு தரையில்வீழப்
        பருந் தாய் வெங்கழுகு மொய்ப்ப
மறுகால் நெடுஞ்சிகர மாடமா ளிகையிடிய
        வலதுகட் கடைதுடிப்ப
    வாசல்தொறு நெய்தலம் பறைகொட்ட
        லங்கை யழல் மண்டி வான் முகடு தாவக்
குறுகாத வல்லசுரர் செவியடைப் பக்
        கொழுங் குருதி வாய் கொப்பளிப்பக்
    கொடிய ராவணன் மகுடமுடி சிதற வரிசிலை
        குழைத்து வெஞ் சமர்மு கத்துச்
சிறு நாணொலிக் கொண்டு விளையாடு மேகமே
        செங்கீரை யாடி யருளே
    செல்வத் திருப் பேரைவல்லிக்கு மணவாள
        செங்கீரை யாடி யருளே. - 3



இருகுழையு மணிகுதம்பையு மாட
        வெயில் விரிந் திலகு குறு முறுவ லாட
    இணைதிருக் கையிலணி வளையாட மென்சுரும்பு
        இசைமயில் துளவ மாடப்
பொருவுமிரு சிலை நுதலில் வேர்வாட வே
        பொங்கு புழுதி திரு மேனி யாடப்
    புழுகொழுகு கரிய குழல் சரிய வரைவடமு நூ
        புரமுந் தயங்கியாட
முருகுவிரி தருநறுங் கமல மதிமுக விட்டம்
        முழுநிலா வீசியாட
    முதிய வா வைர் முனிவ ரமரர் கோன் வாலையவள்
        முறை யெடுங் காண வந்தார்
திருவரையின் மணியசைந் தாடக் குழைந்தினிது
        செங்கீரை யாடி யருளே
    செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள
        செங்கீரை யாடி யருளே. - 4



சந்தன கதம்பப் படீரகுங் குமமுலைத்
        தையல் மர கதவல் லிசெஞ்
    சடிலேசர் வாமத் திருப்ப நான்பறைபரவு
        சது முகப் பிரமன் நாவில்
இந்து நுதல் வாணி சந்தத மிருப் பப் பணிந்
        திருசரணமலர் சூடுவோர்
    இதயதாமரை மலரு நூற்றெண்மர் சிந்தையினும்
        இசைபாடி வண்டுக் கிண்டக்
கொந்தவிழ் நறுங்கமல மலராசனக் கோயில்
        குடியிருக்கும் பரிமளக்
    கோமளக் கொடிவல்லி மாமதுர வாயாள்
        குழைக்காத நாயகியெனும்
சிந்துரப் பிடியொடும் விளையாடு மேகமே
        செங்கீரை யாடி இருளே
    செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள
        செங்கீரை யாடி யருளே. - 5



ஒள்ளொளி விரித்த சிறு கிண்கிணியு நூபுரமும்
        உபய சரணத்திலாட
    ஒளிர்மணிப் பட்டாடையாடஅரைவடமாட
        உச்சியின் மிலைச்சு பரிதி
நள்ளிடை வயங்கு பொற்சூழியத் தொகையாட
        நகுநிலா முறுவலாட
    நவமணிச் சுட்டியொடு கட்டு பொற்பட்டமும்
        நன்னுதற் பொட்டுமாடத்
துள்ளியெறி திரைமகர ஜலராசி படுசெழுந்
        துய்ய செம்பவள மேனி
    தொய்யக் குழைந்தாடு பண்டியுந் தொந்தியும்
        துணைநெடுங் குழையுமாடத்
தெள்ளமுத மணிவாயினுள் ளொழுகி வழியவே
        செங்கீரை யாடி யருளே
    செல்வத்திருப்பேரை வல்லிக்கு மணவாள
        செங்கீரை யாடி யருளே. - 6



நிரையும் பசும் பொன்னி மாடகூ டமும் மேடை
        நிழன் மணிச் சாளரத்தும்
    நெடுநிலா முற்றத்தும் வாவிதொறு நீராடி
        நிறை நறுந் தாது பூசி
வருமந்த மாருதத் திளைய மென்காலசைய
        மாவிளங் குயில்கள் கூவ
    மயிலாட அளிபாட வேனில் வேளரசு புரி
        வழுதி வளநாடு தழைய
விரையும் தடம் புனல் பெருக்காறெடுத் தோட
        எழில் மயில் தழைப் பீலியும்
    இணையிலா மணியாரமும் யானை வெண் கோடும்
        எற்றி யெற்றிச் சுருட்டித்
திரைவந்து கரைமோது பொருநையந் தண்துறைவ
        செங்கீரையாடி யருளே
    செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள
        செங்கீரை யாடி யருளே. - 7



எத்திக்கும் வண்புகழ் தழைத்த திருவாய்ப்பாடி
        இடையர்தங் குடில்கள் தோறும்
    இருகயிற் றுறியடுக் கியமணிக் கலசத்
        திருக்கும் தயிர்க் கட்டிகண்
டொத்திக்கை யிட்டுரல் மிதித்தேறி யடிகுந்தி
        யொரு திவலை சிந்தாமலே
    ஒண்பவள வாய் மருந்துண்டிருங் கள்வனென்
        றுரலோடு கட்டியவர் கை
மத்திட்டடிப்ப விருகண் பிசைந்தழு தரையன்
        மணிபொத்தியாடி மறுகால்
    வாயூறியச் சுவை கனிந்தாய்ச்சிய ரடைபட
        வற்றக் கறந்து காய்ச்சும்
தித்தித்த பாலுக்கு மிச்சித்து நின்றவா
        செங்கீரையாடி யருளே
    செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள
        செங்கீரை யாடி யருளே. - 8



தாதவிழ் பசுந்துளவ மாலையாடச் சிறிய
        தமனியச் சுட்டியாடத்
    தருண மரகத வயிர வலையமாடப் பொற்
        றடந் திருத் தோள்களாடக்
காதுதிரு மணிமகரக் குண்டலமு மாடக்
        கவின்பொலியு மேனியாடக்
    கதிர்முத்து வடமாட மதுரித்த செந்தமிழ்
        கற்றவர்கள் கொண்டாடவே
வாதுபுரி கொடிய சேனாபதி யிராவணன்
        மனவலிகள் திண்டாட நீள்
    வானத்திருந்து துந்துபியாட மலர்மாரி
        வானர் பொழிந்தாடவோர்
சீதர முகுந்த பேராயிர முகந்தவர்
        செங்கீரை யாடி யருளே
    செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள
        செங்கீரை யாடி யருளே. - 9



அலைவலைக்குங் கருங்கடலும் வரன் முகடு தொடும்
        அம்பொற் கொடிக் குழா மொய்த்து
    ஆதவன் பொற்றடந்தேர் தடுக்குஞ் செம்பொன்
        அணிமாட கூடங்களும்
நிலை வளைக்கும் பகழிலங்காபுரத் திறைவ
        னெடிய ராவணன் மகுடமும்
    நீலிதாடகை மார்பும் மாரீசனும் பார
        நிஷ்டூரவதி காயனும்
கொலை வளைக்கும் கும்பகர்ணனும் நிகும்பனும்
        குறுகாத வல்லசுரரும்
    கொடிய வாலியு மரமொரே ழுருவக்
        குழைத்து வடிவாளி தொடவெம்
சிலைவளைக்கும் திருக்கைத் தாமரைக் கொண்டல்
        செங்கீரை யாடி யருளே
    செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள
        செங்கீரை யாடி யருளே! - 10
முற்றும்.
--------

3. காலப் பருவம்



கயங் கொண்டலம்பித் திரையெறியுங்
        கடல் சூழுலக முழுவதும் வெண்
    கவிகை நிழற்கீழினி தடக்கிக்
        கருணை புரிந்து நாடொறு நின்
றியங்குஞ் சரங்களனைத்தையு மற்றெல்லா
        உயிருந் தன்னுயிர் போல்
    இரங்கிக் காக்குமரசர் பிரான்
        எங்கோன் தசரதப் பெருமான்
முயங்கும் பிராட்டிமார் மூவரவர்க்குள்
        முதன்மைத் தலைவி யெனும்
    முற்றா முலைக் கோசலை வயிற்றில்
        முளைத்து மடிமேற்கிடந்து தனி
வயங்குங் கிரண மரகத மாமணியே
        தாலோ தாலேலோ
    மகரக் குழையே யென்னிரு கண்மணியே
        தாலோ தாலேலோ. - 1



பண்ணார் மதுரம் பழுத்தொழுகிப்
        பாகூற்றிருந்து கனிந்த மொழிப்
    பவளத் திருவாய் மணிமுறுவல்
        பங்கேருகக் குங்குமச் சுவட்டுப்
பெண்ணார முதத் திருமடந்தை
        பிரியா மருமத் தினிதிருக்கும்
        பேராயிரம் பெற்றுடைய திருப்
        பேரைப் பிரானே முறுக்கவிழ்பூந்
தண்ணார் துளவப் புயசயில
        தாமோதர சீதர முகுந்தா
தமரக் கடலிற் புனல் முகந்து
        தழைக்குங் கயஞ்சூற் கார்மேக
வண்ணா உலகன்றளந்த நெடுமானே
        தாலோ தாலேலோ
    மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே
        தாலோ தாலேலோ. - 2



முளைக்குந் தவளக் கற்றை நிலா
        முழுவெண் திங்கள் திருவதன
    முற்றா முலைக் கோட்டர மகளிர்
        முதுபேராயத்தவர் மருங்குற் (கு)
இளைக்குங் கொடிபோற் கொலி நுடங்க
        எழில் மாமணிச் சூளிகை முகட்டின்
    இணைக்கும் பசிய மரகதங் கான்
        றெறிக்குங் கிரணக் கொழுந்தோடிக்
கிளைக்குந் துணர்க் கற்பகச் சோலைக்
        கிடையே தழைய வாகாச
    கெங்கைக் கரையில் பசும்புலெனக்
        கிட்டிச் சுரபி மணிநாவால்
வளைக்கும் பசும் பொற்றலங்கள் மலி
        வளஞ்சேர் நாடா தாலேலோ
    மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே
        தாலோ தாலேலோ. - 3



இடிக்குங் கடுஞ்சொற் கொடும் பாவி
        இழைக்குந் தறுகட்கஞ்சன் விடுத்
    திடுகோக்களிற்றின் புகர் முகத்திலேந்தும்
        பிறைக் கிம்புரி மருப்பை
ஒடிக்குந் தடக்கைச் செழும்புயலே
        உணர்வுக் குணர்வே என்னுயிரே
    ஒழியாப் பிறவிக் கடல் சுவற்றி
        உயர் வீடளிக்கும் பெருமானே
முடிக்கும் பசுந்தண் துழாய் மாலை
        முடிக்கும் குழகா வானவர்க்கும்
    முதுநான் மறைக்கும் எட்டாத
        மூலப் பொருளே பாகுபெற
வடிக்குந் தமிழ்த் தெதிருப்பேரை மாலே
        தாலோ தாலேலோ
    மகரக் குழையே நூற்றெண்மர்
        வாழ்வே தாலோ தாலேலோ. - 4



கருதுஞ் சமய மோராறுங்
        கணிக்கும் பொருளே யவட்டெறியும்
    கருணைக்கடலே செழுங்கமலக்
        கண்ணா கண்ணினுண் மணியே
திருகுஞ் சினவானவுணர் படச் சிலை
        கால் வளைத்துப் போர்முகத்துச்
    செல்லும் புயலே உறியில் வெண்ணெய்
        திருடும் குழகா பேய் முலைப்பால்
பருகும் பவளக் கனிவாயா
        பசுந்தார்த் துளவம் அணிமுகுந்தா
    பங்கேருகச் செஞ்சரண நெடும்
        படப்பாந்தளின் மேல் நடித் திரட்டை
மருதந் தவழ்ந்து சகடுதைத்த மாலே
        தாலோ தாலேலோ
    மகரக் குழையே யென்னிரு கண்மணியே
        தாலோ தாலேலோ. - 5



சொல்லற் கரிய கிரண நெடுஞ்
        சுடராழியினாற் கதிர் மறைத்த
    சுருதிப் பொருளே குருகூரன்
        சொற்பா அமிர்தங் கனிந்த செவிச்
செல்வக் குழகா பாட்டாய்ந்து
        சிறைவண்டலம்பிக் கண்படுக்கும்
    செழுந்தார்த்துளவு மணங் கமழும்
        சிகரப்புய பூதர முகுந்தா
அல்லிக் கமலப் பொகுட்டு மட
        அனஞ்சேர் வழுதித் திருநாடா
    அடிவைத்தெரரு மூவுலகமும்
        அன்றளக்கும் புயலே சேறுடைக்கும்
மல்லர் பழனத் திருப்பேரை
        மாலே தாலோ தாலேலோ
    மகரக் குழையே நூற்றெண்மர்
        வாழ்வே தாலோ தாலேலோ. - 6



இடையிற் றொடியக் கனத் தடிக்கொண்
        டிளகித் ததும்பிப்பணைத் திறுமாய்
    தேந்து களபப் புளக முலையில்வத்
        துவர் வாயம்புயப் பொற்
பெடையைத் தழுவியனு தினமும்
        பிரியா திருக்கும் திருமார்பா
    பெருவா ரிதி சூழ் நிலவலயம்
        பெண்ணுக் கிணங்கும் புயசயிலா
படையிற் சுமந்த கொழு நுழைந்த
        பழனக் கொஞ் சேற்றினில் வரம்பில்
    பாகுபாடு நெட்டிலைக் கரும்பில்
        பசும் பூங்காவில் மணலினில் வாய்
மடையிற் பணிலந் தவழ் பேரை
        மாலே தாலோ தாலேலோ
    மகரக் குழையே நூற்றெண்மர்
        வாழ்வே தாலோ தாலேலோ. - 7



அடியார் பிறவிக் கடல் சுவற்றி
        அழியாப் பரமபதங் கொடுக்கும்
    ஆழிப் புயுலே பணா மகுடத்
        தடல் வாளரவின் கண்பிதுங்சு
நடியா நிற்கு மொரு குழகா
        நாராயண சீதா முகுந்தா
    நண்ணும் புலவன் கனி கணன்பின்
        நற்பாய் சுருட்டிச் சொல் தமிழ்க்கும்
படிமேல் நடக்கு மிருசாண்
        பங்கேருக அன்றனல் கொளுந்தப்
    பரவைக் கொருகாய் கணை தொடுத்த
        பாரப்புய பூதரத் திலங்கும்
வடிவார் திகிரிப் படை சுமந்த
        மாலே தாலோ தாலேலோ
    மகரக் குழையே நூற்றெண்மர்
        வாழ்வே தாலோ தாலேலோ - 8



கருணை பெருகி யுவட்டெறியக்
        கற்றா நினாயின் பின் நடந்து
    கானந் தழைப்பத் துணைக் கமலக்
        கழற்கால் பின்னிக் கன்றொடுகுன்(று)
உருகும்படி வேய்ங்குழல் வாய்வைத்(து)
        ஊதும் புயலே அடியவர்தம்
    ஒழியாய் பிறவித் துயரகற்றி
        உள்ளத் திருக்கும் திருக்கறுத்து
நிருதர் குலமும் வேரறுத்த நிமலா
        சமராடி டுந்திகிரி
    நீலக் குழகா மணநாற
        நிரைக்கும் பசுந்தண் துழாய் முகுந்தா
வருணன் புரவும் இருசரண
        மாலே தாலோ தாலேலோ
    மகரக் குழையே நூற்றெண்மர்
        வாழ்வே தாலே தாலேலோ - 9



விட வாளரவக் கயிறு
        வெற்பிற் பிணித்து விசித்திறுக்க
    விரிதெண் திரை நீர்க்கடல் முகட்டின்
        விண்ணோர் அமுதங்கடைந்த அந்நாள்
அடருங் கிரணக் கெளத்துவமும்
        அருமைத் திருவும் தடமார்புக்(கு)
    அமைத்துத் திருப் பாலாழி யினும்
        அரங்கத்தினுங் கண்துயில் பெரும
குடவால் வளை சூலுளைந்து செத்தேன்
        கொழிக்கும் பொலன் தாமரைப்பொகுட்டில்
    குளிர் முத்துயிர்ப்ப, கருவென்னக்
        கொணர்ந்தஞ் சிறைய விளம்பேட்டு
மடநாரைகள் கூண்டடை செறிக்கும்
        வளஞ்சேர் நாடா தாலேலோ
    மகரக் குழையே நூற்றெண்மர்
        வாழ்வே தாலோ தாலேலோ - 10
முற்றும்.
-------------------

4. சப்பாணிப் பருவம்



அரமகளிர் தங்கழுத்தணியுநாணகலாமல்
        ஐந்தருவடிக் கொடாமல்
    அயிராவதப் பெரும் பகடொளித்தோடி
        நீளலை கடல் புக்கிடாமல்
திரளவடிகொண்ட தெள்ளமுதமது கொள்ளை போய்த்
        தேவர்கள் நடுக்குறாமல்
    தேவேந்திரற் கரசு மகுடபங்கம் வந்து
        சிறை சாரவுட்புகாமல்
கரதூடணன் திரிசிரர நிகும்பன் கும்ப
        கன்னனிந்திர செயித்து
    கலங்காத ராவணன் மடிய லங்காபுரங்
        கனல் கொளுந்ததப் பெருவிரல்
சரடு பூட்டிச் சிலைக் கடை குழைக்கும் கொண்டல்
        சப்பாணி கொட்டியருளே
    சந்தனச் சோலை செறி தெந்திருப் பேரை முகில்
        சப்பாணி கொட்டியருளே. - 1



அமரர் கின்னரர் முனிவர் கிம்புருடரும் பரவும்
        அயிராவதப் பாகனும்
    அம த்திடையுலவு கங்கைப் பெரும்பாவை
        அலை யெறிய விட்ட சடிலத்து
உமையையொரு பங்குடைக் கடவுளுந் தொழுது
        உளமுவப்ப அமராரு சுடர்வேல்
    ஊறுபடு நயனப் படீர குங்கும முலைக்கு
        ஒல்குமொரு நுண் மருங்குல்
குமுதவாய் மடம,ங்கை தேவகிக்குள்ளம்
        குழைந்து கண்களி கூரவே
    கோசலைக் கினிய கைக்கோமளக் குழவியே
        கோதிலா மழைவள்ளலே
தமரவரி வண்டடை கிடந்த முளரிக் கைகொடு
        சப்பாணி கொட்டியருளே
    சந்தனச் சோலை செறி தென்திருப் பேரைமுகில்
        சப்பாணி கொட்டியருளே. - 2



வேதங்களோடைந்து பூதங்களும் அயன்
        விதிக்கின்ற பல்லுயிர்களும்
    மிக்கவைம் பொறிகளும் எட்டெழுத்தும்
        நின்று விளையாடுமொரு குழவியே
எதங்களைத் தடியரிருவினை தடிந்து
        பேரின்பத்திருத்து மொளியே
    இலகு சுடர்வேல் விழி துரோபதை தனைச்
        சிறிதும் எண்ணாது துகிலுரிதரும்
போதந்த வேளை வந்துதவு சீதர துழாய்ப்
        பூதரப்புய முகுந்தா
    பொருவரிய வண்டகோளகை முகடுகிறியப்
        பொன்னுலகு மேவுபாரி
சாதங் கொணர்ந்தருள் பின்னைக் களித்தவன்
        சப்பாணி கொட்டியருளே
    சந்தனச் சோலைசெறி தென்திருப் பேரை முகில்
        சப்பாணி கொட்டியருளே. - 3



அடங்காத எழுபது வெள்ளஞ் சேனையுங்கை
        அமைக்கும் படைத்தலைவன்
    அநுமன் முதலாய் சுக்ரீவனுஞ் சென்று கடல்
        அணைகட்டி லங்காபுரம்
தொடர்ந்தேறியொரு சிலைக் கடை குழைத்தருகணை
        துரந்திராவாணன் மகுடமும்
    துகள் படுத்திச் சனகி சிறைமீட்டதண்ணத்
        துழாய்க் காள மேகங் கொடு
விடந்தாவு பஃறலைக் கட்செவி கிடந்தாட
        விரிதிரைக் கங்கையாட
    வேணியாடக் காளி தன்னுடன் வாதாடு
        வெள்ளிப் பொருப்பினன் பால்
தடந்தாரு வேரொடு புரந்தான் கொணர்ந்தமான்
        சப்பாணி கொட்டியருளே
    சந்தனச் சோலை செறி தெந்திரும் மேரை முகில்
        சப்பாணி கொட்டியருளே. - 4



மண்டுதிரை யெறி மகர சல ராசி யேழு
        நெடுவரை யேழும் அகில மேழும்
    வானகமும் உயர்திசையும் வயிறு தங்கப்பவள
        வாய் மடுத்தங் காந்து முன்
உண்டுமிழு நீனிறக் குழவி நெடுவாலி மார்(பு)
        உருவ வொரு சர்ம் விடுக்கும்
    ஒண்திறற் செங்கை தடங்குரிசில் வேதாந்த
        உபநிஷத ஞானதீபம்
புண்டரிக மலர்முகை முறுக்கவிழு மோடையிற்
        புக் கிடங்கர்க்கு வெருவிப்
    போரானை மூலமென்றோதா முன்னோடியொரு
        புள்ளரசுமீது வருபைந்
தண்டுழாய் புனை கொண்டலண்டர் நாயகனினிது
        சப்பாணி கொட்டியருளே.
    சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை முகில்
        சப்பாணி கொட்டியருளே. - 5



வண்ணந் தழைந்த கடலுலக முழுதும்
        பரதன் மணிமுடி கவிப்ப நீ வெவ்
    வன மேகெனுஞ் சிறியதாய் சொல் தலைக்கொண்டு
        மணி நெடுஞ் சீரை சுற்றிப்
பெண்ணென்ற சீதையொடு மிளையவன் தன்னொடும்
        பெருங்கானகத்தில் புகும்
    பெம்மான் நறுந்துளவ மாலிகாபரணன் முது
        பேரின்ப வீடளிக்கும்
கண்ணன் சிலைக்கடை குழைத்திலங்காபுரங்
        கட்டழிக்கும் தேவர் கோன்
    கருணைப் பெருக்காறு வட்டெடுத் தலைமண்டு
        காளமேகந் துளி படும்
தண்ணந் தடந்திரைப் பொருநையாம்
        தண்துறைவ சப்பாணி கொட்டியருளே
    சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை குயில்
        சப்பாணி கொட்டியருளே, - 6



உடுக்குந்திரைக் கருங்கடலாடை நிலவலயம்
        உதரத் தினுள்ளடக்கி
    ஒருசிறிய குறளுரு வமைந்த நெடுநேமிமரல்
        உபய சரணார விந்தத்(து)
எடுக்கும் பனிக்குறுந் திவலைபடு மலரிட்
        டிறைஞ்சி வருணன் பரவுவோன்
    இசைபாடி ஒருகோடி அறுகாய்நுதைந்தாடும்
        ஈர்ந்து ழாய்ப்படலை மாயன்
மடுக்குங் கொழுஞ்சுடர்ப்பருதி வானவனுதய
        வரை பசும்புரவி பூட்டி
    வருமணிப் பொற்றடந் தேர்க்கிடுஞ் சித்திர
        வட்டாழி யொட்டி முட்டித்
தடுக்கும் பொல புரிசை சூழ் வழுதி நாடனொரு
        சப்பாணி கொட்டி யருளே,
    சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை முகில்
        சப்பாணி கொட்டி யருளே, - 7



மான வேலரசர்தொழு மிதிலாபுரிச் சனகன்
        மாதேவி மணி முன்கைமேல்
    வைத்து முத்தாடும் பசுங்கிளி யெனத்தூய
        மஞ்சனஞ் செய்து செம்பொன்
மேனி முழுவது நலங்கிடுசெய்து கொங்கைக்கு
        மென்களப மள்ளி யப்பி
    விரைநறுந்தார் குழலின் மீதணிந் தஞ்சனம்
        விளங்கு கட்டையி னெழுதிக்
கூனிளம்பிறை நுதல் கஸ்தூரி தீட்டிநற்
        குளிர்மணிச் சுடிகை நாற்றிக்
    கோல்வளை திருத்தி மணிமேகலை மருங்கினிற்
        கொய்து கொய்தினிது டுக்கும்
சானகி பெருங்காம வெள்ளந் திளைத்தவன்
        சப்பாணி கொட்டி யருளே
    சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை முகில்
        சப்பாணி கொட்டி யருளே. - 8



கக்கக் கொழுங் குருதி நரிபிடுங்கத்தசை
        கவர்ந்துயிர் குடிப்ப மறவி
    கருநிறத் தாடகையை வதை படுத்தசிலைக்
        கடை குழைத்தடிகணை தொடுந்
தொக்கிற் பெருந்தவக் கௌசிகன் வேள்வியும்
        சுருதிநூல் முறை முடித்துச்
    சொல்லரிய முதிலாபுரிச் சனகன்வில்
        கண்டதுண்டப் படுத்து மெங்கோன்
செக்கச் சிவக்குங் கொழும்பவள வார்க்கதிர்ச்
        செஞ்சுடாவி மணிமுடிச்
    சிவசங்கரக் கடவுள் கண்கள்களி கூரச்
        சிறந்தருள் புரிந்து சங்கு
சக்கரத்துணை செங்கை யொக்க்கச் சிவப்பவொரு
        சப்பாணி கொட்டி யருளே,
    சந்தனச் சோலைசெறி தென்திருப்பேரை முகில்
        சப்பாணி கொட்டி யருளே. - 9



பட நடுங்கக்கண்பிதுங்கப் பணாமுடிப்
        பஃறலைக்கட் செவியின் மேல்
    பபுரி முறுகித்திருகி நடனஞ்செயும் சரண
        பங்கேருகக் குழகன் வெவ்
விடரகற்றிச் செனன வலையறுத்துத்
        தொடரீரேறி வீடு குடிபுக்கு
    எக்காலமும் அரசிருப்பக் கடைக்கண்ணோக்
        கின்னருள் புரிந்த நெடுமால்
மடமயிற் சாயற் பசுங்கிள்ளை யங்குதலை
        மணிவல்லி தூயவல்லி
    வளந்திருப் பேரை வல்லி குங்கும
        மிருகமத சந்தனப் பாளிதத்
தடமுலைச் சுவடுபொருது பூதமணி மார்பனொரு
        சப்பாணி கொட்டி யருளே,
    சந்தனச் சோலைசெறி தென்திருப்பேரை முகில்
        சப்பாணி கொட்டி யருளே. - 10
முற்றும்.
------------------

5. முத்தப் பருவம்



சொற்ற நான்மறை புக்கிருக்கு மிடமாதலால்
        சுரிசங்கு இடம் புரிதலால்
    துய்ய மலர் மாளிகைச் செல்வி பேரமுதந்
        துளிக்குமென் றின்புறுதலால்
மற்றுலகின் வாழ்பல்லுயிர்க் கிரங்குந்
        சத்யவாய்மை குடிகொண்டுறைதலால்
    மங்கலப் புனிதமாம் சகலமுந் திருவுள
        மகிழ்ந்திரங்கிச் சிறிது நீ
முற்றுமதி யோடர வதுகெழுக் கம்பூவும்
        மொய்க்கும் செழுங் கொன்றையும்
    மூரித் திரைப்பாய் சுருட்டித்தருங் கய்கை
        முதுநீரும் வரவு சோதிக்
கற்றைவார் சடைமுடிச் சிவனு மயனுந்தொழக்
        கனி வாயின் முத்தமருளே
    காவுசூழ் தென்பேரை ஆழிநீர் வண்ணநின்
        கனி வாயின் முத்தமருளே. - 1



தழைமடற் பச்சைப்பசும் பூகமணி மிடறு
        தளையவிழ்க்கும் பாளை வாய்த்
    தருமுத்தமும் பச்செணக் கிரண மடருமுது
        தாற்றிளங் கதலி வாழை
உழைமுத்து முடலிழுக் குண்டுநியு மென்கரும்பு
        ஒளிர் முத்துமாலை வாயிட்டு
    உடனெருக்கும் பொழுது கணுவினில் வெடித்
        துதிரும் உம்பர் வான்முகடுதூங்கும்
மழை முத்தமுந் துளிபடும் பொழுது
        செவ்வுக்கு வாராது வடிவுதகரும்
    வளர் புண்டரீகப் பொகுட்டு முத்தஞ்சிறைய
        வண்டு கால்கொடு துவைக்கும்
கழை முத்தமுங்கதிர் வெதுப்புண்டு நீறுமொடு
        கதிர் முத்து நிகரல்லவே
    காவுசூழ் தென்பேரை ஆழிநீர் வண்ணநின்
        கனிவாயின் முத்தமருளே. - 2



முனியுமிள வலும்முடன் வரத்தன் திருந்தாளின்
        முளரித் துகட்க ருங்கல்
    முனியிட்ட சாபந் தவிர்த்து முன்னுருவெய்த
        முது கருணை யோடளித்துச்
சனகன் மிதி லாபுரிச் சிலைவளைத் துச்சீதை
        தனைமணம் புணர் தண்டுழாய்ச்
    சக்ராயுதக் கடவுள் குலநாதன் முத்
        தத்தும் தடம் பொருநையான்
இனிய சதுமாமரைக் கொகுமுதல்வன் வருணன்வந்து
        எக் காலமும் பரவுவோன்
    இலகுகொடி மணிமாட வழுதிவள நாடன்
        நூற்றெண் மரொடும் விளையாடுமால்
கனியும் முதும்பாகு மூறிக் கலந்தசொற்
        கனி வாயின் முத்தமருளே,
    காவுசூழ் தென்பேரை ஆழிநீர் வண்ணநின்
        கனி வாயின் முத்தமருளே. - 3



பொருதிரை சுருட்டுமணி மகரசல ராசிதரு
        புது முத்தமுங் கைதொடேம்
    புலவு நாறிச்சுற வெறிந்துடல முவரிப்
        ரினற் பங்க மூடெழுதலால்
பருக மதுரித்தபா கூற்றிருந் தொழுகும்
        பசும் கரும்பீன்ற முத்தும்
    பலமொழிக் கவடு படுமாதலால தனையும்
        படுபழி யறிந்து வேண்டேம்
இருநிலத்துச் சிவத்துக் கண்டமும்
        கருப்பென்று வேய்முத்தம் தொடேம்
    இனிமேலு நினது கனிவாய் முத்தினுக்
        குவமை யேதெடுத்துக் கூறுவேன்
கருதுமுது நான்மறைகொரு முதல்வனே செழுங்
        கனி வாயின் முத்தமருளே
    காவுசூழ் தென்பேரை ஆழிநீர் வண்ணநின்
        கனி வரயின் முத்தமருளே - 4



உலைவளைக்குங் கொழுங்களல் வாய்த்துருத்தி வைத்து
        ஊத வெம்பொறிசிந்த வெந்து
    உருகுங் கருங்கல்லுருக் கோடிரும்பு னாழ்து
        ஒன்றா யடித்து நீட்டித்
தலை மடுத்ததை முனைபடுத்திக் குணக்கறத்
        தட்டியர மிட்டராவிச்
    சமைந்தொப்ப மிட்டுக் கடைந்தவடிவேல் பொரு
        தடங்கட் செழுங் குமுதவாய்
மலை வளைக்குஞ் செழுங்களப குங்குமமுலை
        மடந்தை தெய்வீக போக
    மடமயிற் சீதைப் பிராட்டியை
        மணம்புணர வளமருவு மிதிலாபுரிச்
சிலை வளைக்கும் பசுந்தண் துழாய் மேகமே
        திரு வாயின் முத்தமருளே
    தெந்திருப்பேரை வருநங் குழைக்காதநின்
        திருவாயின் முத்தமருளே - 5



பம்புதிரை வாரிதி வடிவம்பலத்துளி
        படுங்ககன முகடு கோத்துப்
    பரக்கும் படிக்கும் முன்பெய்தகண் மாறியிற்
        பதறியா நிரை கெடாமல்
தம்ப மற்றிடையர் மடியா தேழுநானாமுது
        தடவரை யெடுத் தேந்துமென்
    தாமரைச் செங்கை தடங் குரிசிலே
        சங்கு சக்ராயுதக் கடவுளே
கம்ப மதமால்யானை மூலமென் றோதஒரு
        கருடன் பிடர்த் தலைவரும்
    காராழி மணிவண்ண பேராயிரம் பெற்ற
        கருணாகரக் குரிசிலே
செம்பளமுங் குமுதமுங் கவிருமொத்தநின்
        திருவாயின் முத்தமருளே
    தென் திருப்பேரை வருகங் குழைக்காதநின்
        திருவாயின் முத்தமருளே - 6



பொங்கு வெண்டிங்களங் கவிகை வருமிரணியன்
        புகல வவன்
    புகலாம் லெந்தை நாராயணன் தன்பெயர்
        புகன்ற திலெழுந்து கோபித்து
அங்கை மலர்மீது சங்காழி யேந்தியும்
        அயனுமவிர் சடைப் பெருமானுமுன்
    அஞ்சிப் பதுங்கித் திரிந்தனர் மறந்தனைகொல்
        அரி யெங்கெனப் புடைப்பப்
பங்கமுறும் அக்கனகன் மார்பம் பிளந்திழி
        பசுங்குடர் பிடுங்கி ரத்த
    பானம் பணித்தடந்தோள் மாலை சூடவே
        பண்டுகளி கொண்டோர் தூணில்
சிங்கவடிவாய் வந்த எங்கள் குலநாதநின்
        திருவாயின் முத்தமருளே
    தென் திருப்பேரை வரு நம்குழைக்காதநின்
        திருவாயின் முத்தமருளே - 7



மூவா முதலா யுலகயொரு
        மூன்றும் பரவ அங்குரித்து
    முந்திக் கொரு வித்தாக வந்த
        முதுநான் மறையின் குலக்கொழுந்தே
கோவா மொளரு மரகதமே
        கொடும் பேரரக்கர் குலக்கூற்றே
    கோவாதேதிய ருளக்கமலங்
        குடிபுக் கிருக்கும் பெருமானே
தாவா வளமைக் கோசலைக்கோர்
        தவமே தவத்தின் பயனே யச்
    சனகன் தரு சானகி வேட்ட
        தடங்கை களிறே போரேறே
தேவாவமிர்தம் கனி பவளத் திருவாய்
        முத்தம் தருகவே
    தெள்ளிப் பயிலும் தமிழ்ப்பேரைச் செல்வா
        முத்தம் தருகவே. - 8



துளிங்குந் திரைப் பாற்கடல் முகட்டுத்
        தூய தரங்கத் தனந்தபுரத்
    துறைவாய் விரிகண் துயில் கூருஞ்
        சோதிச் சுடரே பேரின்பம்
அளிக்குக்குங் கருணைக் கருங்கடலே
        அழியா வீட்டுக் கொருவிளக்கே
    அமுதங் கடைந்து திரட்டியெடுத்து
        அமரர்க் குதவும் பெருமானே
களிக்குஞ் சுரும்பர் துதைத்துணந்தேன்
        கக்குங் கமல முறுக்குடையும்
    கழனித் தடஞ்சூழ் திருநாடா
        கண்ணா அரிகேசவ முகந்தா
தெளிக்கும் பொருநைந் தடந்துறைவா
        திருவாய் முத்தந் தருகவே
    தெள்ளிப் பயிலும் திருப்பேரைச்
        செல்வா முத்தந் தருகவே - 9



சந்தாடவியும் பாதிரியும் தடந்
        தாமரையும் விளை வயலும்
    சதுமா மறையும் விழாவொலியும்
        தழைக்கும் பிள்ளைக் குழாவொலியும்
நந்தா வளமைத் திருவழுதி
        நாடா பரமபத வீடா
    நறுந் தாதளையும் பசுந்தளவ
        நாராயண சீதர முகுந்தா
கொந்தார் மலர்ப்பூங் கரியகுழல்
        கொவ்வைக் கனிவாய் மணிமுறுவல்
    கொடிபோல் நுடக்குந் துடி இடையக்
        குலக் கோமளக் கோசலையளித்த
சிந்தா மணியே மரகதமே
        திருவாய் முத்தந் தருகவே
    தெள்ளிப் பயிலுந் தமிழ்ப்பேரைச்
        செல்வா முத்தம் தருகவே. - 10
முற்றும்.
-----------------

6. வருகைப் பருவம்



விதுரன் மனைவி லடிசில் நுகரும்
        விரதன் வருக வருகவே
    வித ரணிகமு மறிவு முடைய
        விமலன் வருக வருகவே
அதிரு மணியு மரையின் வடமும்
        அசைய வருக வருகவே
    அழகு கரிய குழல்கள் சரிய
        அபிமன் வருக வருகவே
புதிய மதியின் வதன வெயர்வு
        பொலிய வருக வருகவே
    பொழியு நறவு விறவு துளவு
        புனையு மனகன் வருகவே
மதுர முறு செல்வதர வமுதம்
        உதரம் வழிய வருகவே
    வருணன் வருகு முபயசரண
        வரதன் வருக வருகவே - 1



எரியுமனல் கதுவும் விழி நிருதர்கு சமர்புரி
        இகல் தொலைய விடு கணையினால்
    இருவினையும் ஒருசிறிது தொடரவரிதென வருகும்
        எவர்தமையு மடிமை கொளுமால்
முரிபுருவ நுதல வனிதை சனகி முலை முகருதழு
        முகலளித விதரணமு ளோன்
    முருகு விரிதரு துளவு மணமலிய நெடிய மணி
        முடியினணிபெற வணைகுவோன்
உரிய சதுமறையு முனிவரரு மயனொடு பரவும்
        உபயபரிபுர சரண நீ
    டுலக முழுவது முதர மையவொரு தனிநுகரும்
        ஒளிரிரவி குல மரபினோன்
நெரிய மருதமு முதிய சகருமுதை விதரணிகன்
        நிமலன ரவணை துயிலுமால்
    நிறைய மகிமையுமளவில் குணனும் வடிவழகுமுடைய
        நிகரில் முகில் வணன் வருகவே. - 2



புகலருஞ் சதுமறை யருந்தவர்
        புலவர் பண்டிதர் பலர்கொட
    புதிய பங்கய சரண் வணங்கிய
        புதிய வெண்டிரையுததி சூழ்
செகமடங்கலு நொடியினுண்டுமிழ்
        திருமணந் தொளிர் பரவவோர்
    திரிபுரந் தழல்பட முனிந்தருள்
        சிவனயன் தொழ வருகவே
தகர முங்கிய பரிமளங் கமழ்தரு
        தடம்புய செயதரா
    சமர் முகந் தனில் நிருதர் வெம்படை
        சரியிடுஞ் சிலையபிம நீள்
மகரகுண்டலமசைய இங்கெதிர்
        மகர வண் குழை வருகவே
    வருணன் வந்திரு சரண் வணங்கி
        மனதிகழ்ந் தெதிர் வருகவே, - 3



கலை மணந் தொளிர் தவள வெண்பிறை
        கதுவிடுஞ் சிலை நுதலினாள்
    கவின வந்தரு சனகி சம்ப்ரம
        கனதனம் பொருது பூதமால்
உலைமுகந்தனில் அடிபடும் பொழுது
        ஒளிரும் ஒண்சுடர் வயிரவா
    ளொடு முனிந்தடர அவுணர் பொன்றிய
        உயிரடுஞ் சமன் வருகவே
திலகலஞ்சரி துவசைந் தொளி
        திகழ வண்டின முரலவய
    செழு நறுந்துகள் முகைவிரிந்தவர்
        சிறிய பங்கயமெனு நறு
மலர்மடைந்தையும் நிலமடந்தையும்
        மருவுதிண் திறல் வரதநீள்
    மகரகுண்டலமசைய விங்கெதிர்
        மகர வண் குழை வருகவே. - 4



உளநெ கிழ்ந்திரு பொழுதும் வந்தனையொடும்
        உவந் து எநிர் பர வவே
    உபய செஞ்சரண் முடிபு னைந் தொளிர்
        உயர் பதந் தரு கருணைமால்
அளை க வர்ந்திடை மகளிர் தங்குடில்
        அணைதருங் கயிறது கொடே
    அடிபடும் பொழுதுடல் குழைந்து
        அழுதது நின்றவன் வருகவே
குளநிரம்பிய புனலினுங் கரை
        அருகு வண்டது மதகு நீள்
    குவலயம் படுதரு நெருங்கிய
        குளிர் நறும் பொழிலிடையும் வால்
வளை முழங்கிய குருகையம்பதி மருவு
        நங்கை கண்மணி நள்ளு
    வலவனிங்கித கவிதை கொண்டருள்
        மகர வண்குழை வருகவே, - 5



முடிமீதொளிர் சூழியத் தொகையின்
        முழுவெண் திய்கள் கற்றை நிலா
    மூரிக் கடல் சூழ் புவன மெனு
        முற்றுந் தழைய வடிந்த வெள்ளைக்
கொடி போலொசியுங் குழையுமணி
        குழையுங் குழையவுடல் குழையக்
    குழைத்து நுதலினிருந்திலதக்
        குறுவேர் வழிய விடைகழியின்
அடிமேலடிவைத் திருகை சுவர்
        அதனைப் பிடித்து வருதலிற்றள்
    ளாடி விழுதத் தளிப்பின் மலர்
        அங்கை பதித்துதி தவழ்ந்தெனது
மடிமீதிருந்து களப முலை வள்ளத்து
        அழுதுண்டிட வருக
    மகரக் குழையே யென்னிருகண்
        மணியே வருக வருகவே - 6



பண்டா லிலையிலரங் கத்துப்
        பாதாழியிற் கண்டுயில் கூரும்
    பச்சைப் புயலே பணா மகுடப் படப்
        பாந்தளின் கண்பிதுங்க நறுந்
தண்டாமைரச் செஞ்சரண் பெயர்த்துத்
        தள்ளிக் கடைவால் பிடித்து நெறி
    தழைக்கும் படிக்சூ நடம்புரிந்த
        தலைவா கடல் சூழ் உலகமுழு
துண்டாதர வோடுமிழ்ந் தளந்த
        வொளியே வொளிரு மரகதமே
    ஒரு வாணுதல் பண்டுளங்களிப்ப
        உயர்வான் முகடு கிழித்தெழுந்து
வண்டார் தருவின் மலர் கொணர்ந்த
        மாலே வருக வருகவே
    மகரக் குழையே யென்னிருகண்
        மணியே வருக வருகவே - 7



சிந்தாமணியே மரகதமே
        தேவே தேவர் பெருமானே
    தேடும் பொருளே நாடோறும்
        செய்யும் தவமே தவப் பயனே
எந்தாய் நந்தா விளக்கொளியே
        எங்கட்குயிரே பரகதியே
    எழுதாமறையின் வடிவே சொல்
        எழுத் தெட்டினுக்குபொரு மயமே
கொந்தார் துளவப் பசுந்தாமக்
        கோவே நிருதர் குலக் கூற்றே
    கூடுபுனல் நீராடி வலங்கொண்டு
        திருமஞ்சனக் கொலுவில்
வந்தாதரித்து வருணனடி
        வணங்கும் புயலே வருகவே
    மகரக்குழையே னென்னிருகண்
        மணியே வருக வருகவே - 8



ஆராவமுதத் தில வித ழின்
        அமுதத் திவலை மார்பெரழுக
    அரைநாண் வடமுமணியும் மருங்கு
        அசையக் குழையுங் குண்டலமும்
சீரார் திருவிற் பொலியு நுதற்றீட்டுங்
        குறுவேர் வரும்ப வருள்
    செய்யுங் கமல முகமிலங்கத் திருத்தாட்
        டுனைப் பேறேறண்டையொலி
பார்மீதெங்கள் செவிகுளிரப்
        பழக நெறி நாடோறும் வளர்
    பசுந்தார்த் துளவு மனங்கமழும்
        படிநீ நடந்துள்ளடி பெயர்த்து
வாரார் களபக் குரும்பை முலை
        வள்ளத் தமுதுண்டிட வருக
    மகரக் குழையே யென்னிருகண்
        மணியே வருக வருகவே, - 9



அருமைப் பெருமான் பிறவியொழித்து
        அருளும் பெருமான் காதல சங்
    காழிப் பெருமான் வானவர்க்கும்
        அருநான் மறைக்கு மெட்டாத
தருமப் பெருமான் பசுந் துளவத்
        தாமப் பெருமானேழுலகுந்
    தழைக்கும்படி கன்றளந்த நெடுஞ்
        சரணப் பெருமான் மன்னுயிர்க்குங்
கருமப் பெருமான் முத்திவழி
        காட்டுப் பெருமான் பூம் பொருட்டுக்
    கமலாசனத்து வீற்றிருக்கும்
        மன்னிப் பெருமான் தமிழ்க் குருகும்
பெருமைப் பெருமானென் னருமைப்
        பிள்ளைப் பெருமான் வருகவே
    பேராயிரம் பெற்றுயர்ந்த திருப்பேரைப்
        பெருமான் வருகவே. - 10
முற்றும்.
-----------------------

7. அம்புலிப் பருவம்



மதியுடைத் தாய் மண்டலம் பெற்று வான்
        முழு மதிக்கடவு ளெனவரு தலால்
    வடியிட்ட தெள்ளமுத மயமாகி
        யானந்த மகராலாயத் தெழுதலால்
நதியொடர வறுகெருக் கணியுஞ் சடைக்காட்டு
        நம்பனுக் கொரு கண்ணதாய்
    நாடொறு முயிர்ப்பயிர் தழைப்ப அருள்பொழிதலால்
        நல்துணை யுனக்கிவன் காண்
முதிர விளையுங் கொழும்பவளக் குலைச்சாலி
        மூடுதொறும் வாய்மடைதொறும்
    மூரிப் பகட்டு வரிவாளை வெடிதரவியலை
        மோதும் புனற் கேணியும்
அதிரு மணிமதகும் வளையுகள் வழுதி நாடானுடன்
        அம்புலீ ஆடவாவே
    ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன்
        அம்புலீ ஆடவாவே, - 1



இருவினைச் செனன வலைகட்டறுத்து அழியாத
        இன்ப வீடெய்தும் பொருட்(டு)
    இணை மலர்ச்சேவடி யடைந்தவர்க் குதவிடுவன்
        இவன் வருண னாதரிக்கும்
திருந் திச் சமூக தீர்த்தத் துறைத்
        தீம்புனல் திவலையொரு சிறிதுபடிலோ
    செக மண்டலத்துன்முயல் முகமண்டல முகற்கறை
        சிதைத்து வண்டடை கிடப்ப
முருகுவிரிதரு நறுங் குமுதவாய் மடமங்கை
        முகிழ்முலை மணம் புணர்ந்து
    முன்னுங் களங்கமற்றப் பாலும் வைகுண்ட
        முத்தி மண்டல மெய்தலாம்
அருமறைக் குரியவொரு பொருளா யிருப்பானிவன்
        அம்புலீ யாடவாவே
    ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன்
        அம்புலீ யாடவாவே. - 2



வெவ்வரா விடமொழுகு கறையனற் பகுவாய்
        விழுங்கி மீளவும் உமிழ்தரும்
    மச்சி லென்றுலகிலுரைசெய் வரதனாலுனுடல்
        வெளுத்தற மெலிந்து குப்புறற்
றெவ்வுலகமுந்திரிந் தாவதென் பெரியோரை
        எளியோர் துணைக் கோடல்நன்
    றிருகனற் கட்செவிப்பகை முடித்தற் குவணன்
        இவனிட்ட ஏவல் கடவான்
செவ்வுபட எட்டிரட்டித்தகலை யுடைய நீ
        சிந்திப் பதற் கரியவாம்
    திகழ் தருங்கலை யறுபத்து நாலுடைய
        வொரு செம்மலிவன் வைகுண்டமாம்
அவ்வுலக முந்தாகத் தருவன ஃதறிந்து
        அம்புலீ ஆடவாவே
    ஆழிநீர் வன்ண னெனும் வாழிமாதவனுடன்
        அம்புலீ ஆட வாவே - 3



பைத்தலை நெடுஞ் சுடிகை விடமொழுகு
        கட்செவிப் படவரவு தொடரினுநீ
    படரொளி மழுங்கி வான் முகடொளிக்குவை
        பெரும் பாம்பு தீண்டிக் கிடந்த
நித்திரை மயக்கத்து மொளி மழுங்கானிவன்
        நெடிய வானிடை நுழைந்து
    நிலையிலா தோடித் திரிந்து ழல்வை
        நீயிவன் நீடூழி யடிபெயர்ந்து
முத்த வாணகை விமலையடிவருட வானவர்கள்
        முனிவ ரஞ்சலி செய்யநீள்
    முத்திதரும் வைகுந்தம் வீற்றிருப்பவன் அந்த
        அம்புலீ ஆட வாவே
அத்தகைமை தோறு முன்னிலு முயர்ந்தவன் இவன்
        அம்புலீ ஆட வாவே
    ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன்
        அம்புலீ யாட வாவே. - 4



செங்குருதி யலைமண்டி யாறெடுத் தோடச்
        சிலைக்கால் வளைத்து விசயன்
    தேத்தரசனைக் கொன்று கூற்றருந்தும்படி
        சினத்திடும் போர் முகத்துப்
பொங்குக திராயிரம் தங்கு செஞ்சுடரவன்
        பொழுது காணாம லொளிர்செம்
    பொன்னிறத் திகிரியாலிவன் மறைத்தனனன்று
        போதாக்குறைக் கொளிரும் வெண்
சங்கு கொண்டுன்னையும் மறைந்திடாமற்
        கலை தளர்ந்து மெலிவெய்துறாமல்
    தாதள வெருப்பொடித் தெரியாமல் முன்றில்
        தவழ்ந்து விளையாட வாவென்
றங்கை மலர்விரல் குனித்துனை யழைத்தவனிவன்
        அம்புலீயாட வாவே
    ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன்
        அம்புலீ யாட வாவே. - 5



கூறருந்ததியை நீ யுடையவன் இவன் அமரர்
        கூறருந்துதியை யுடையோன்
    குறைபாடு தடங்கலை களையுடையை நீ இவனுமோ
        குறையாத கலைக ளுடையான்
வீறுதரு முருவிலி மதிங்குடையை நீயிவன்
        விரதண மதிக் குடையவன்
    விண்ணிடை கரந்தொளி யொழிந்திடுவை நீயிவன்
        வேதநுண் பொருளி னொளியான்
ஊறுபட வோடித் திரிந்திளைத் திடுவைநீ
        ஒருநாளு மிளையா னிவன்
    உவரிப் புனற் பங்க மூடுதிப்பாயிவன்
        உம்பரா ழியினுதிப் போன்
ஆறலை புரட்டு பொருனாநதித் துறைவனுடன்
        அம்புலீ ஆட வாவே
    ஆழிநீர் வண்ண னெனும் வாழி மாதவனுடன்
        அம்புலீ ஆட வாவே. - 6



சந்தப் படாமுலைத் தார்குழல் கோமளத் தையல்
        சானகி பொருட்டுத்
    தடமதி லிலங்காபுரம் பொடி படுத்தித்
        தகர்த்து முடிபத்து மண்மேல்
சிந்தச் சரந்தொட்ட சிலைவீர ராகவன்
        சிறு குழந்தைப் பிள்ளையாய்
    திருவிரற்றலை சுட்டியுனை யழைத்தால் வரச்
        செய்யா திருக்க முறையோ
முந்தப் பெருந்தக்க வேள்வியில் தேவர்கள்
        முறிந்துதிசை கெட்டோடு நாள்
    முழுமதிக் கடவுள்நீ பரிபவப் பட்டகதை
        பொழியக் கணக்கு முண்டோ
அந்தக் கணக்கின்று வந்திருக் கின்றதினி
        அம்புலீ யாடவாவே
    ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன்
        அம்புலீயாட வாவே. - 7



தவநெறிக் கௌதமன் பண்ணிய கலியுகைபுரந்
        தரனொடு மணந்த வதனால்
    தவமுனி யறைந்த சாபத்திலவள் கல்லுருத்
        தாங்கிய தொழித்த தெங்கோன்
புவனமொரு மூன்றும் ஈரடியாலக் கின்ற
        பொற்களல் துகளுனக்கும்
    புனித பூரணசெவ்வி முகமண்டலக் கறைப்
        புரைதீர வரமளிக்கும்
சிவனு மயனும் வெள்ளை அயிராவதத்தனும்
        செஞ்சுடர்க் கடவு ளோனும்
    தேவர் முப்பத்து முக்கோடியும் அறுமுகச்
        செம்மலுங் கைம்மலைக் கோட்
டவனுமுறை முறைபரவு நிகரில்முகில் வண்ணனுடன்
        அம்புலீ யாடவாவே
    ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன்
        அம்புலீ யாட வாவே. - 8



விண்டடவி முகமாயிரங் களுமொளித்து நெடு
        வெளியின் வந்தொரு முகமதாய்
    வெண்திரைக் கங்கைப் பெம்புள்னல் பரந்தென
        விரிந்தவவ் வெள்ளத்தின் மேல்
தண்டரள மணியிழந் தாகாய நள்ளிடைத்
        தயங்கிய சஞ்சல மெனத்
    தாரகைக் குலமொடு தவழ்ந்து மேன்மேலுநீ
        தலைப்பட்டு வருத லானும்
புண்டரிக மலர்முகை முறுக்குடைந்தலருமொரு
        பூவெனப் பொலிவு பெற்றாய்
    புகலரிய மதிவள முறைக்கில் முழுமதியெனப்
        புகல்கின்ற துண்மை கண்டாய்
அண்ட பகிரண்டமும் நிரம்பிய இவன்றனுடன்
        அம்புலீ யாடவாவே
    ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன்
        அம்புலீ யாடவாவே. - 9



என்னென்று நிகரிரவின் இருளன்றி நீயன்பர்
        இதய விருணீ க்கவறியாய்
    இருவிசும்பிற் பொலிகு வாயிவன் புவனர்கள்
        எங்கணும் பொலிவ தோராய்
பொன்னந் தகட்டிதழ்க் குமுத மல்லாலுளப்
        புதுமலர் திறக்க வறியாய்
    போலியல்லா இவன் போலியன்றால் வந்து
        புதுநிலா மணிமுன்றில் வாய்
மன்னுஞ் சரோருகப் படுகரும் புளினவண்
        மணற் குன்றமுஞ் சோலையும்
    மடவனப் பொடையோடு கூடிப் புணர்ந்தக
        மகிழ்த்து பிரியாது செஞ்சூட்
டன்னங்கள் விளையாடு தென்பேரை மாயனுடன்
        அம்புலீ யாடவாவே
    ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன்
        அம்புலீ யாடவாவே. - 10
முற்றும்.
----------

8. சிற்றில் பருவம்



களிக்கும் சுரும்பர் துதைந் துழுது
        கணைக் காலசைத்துச் சில்லோரை
    கனிந் தூற்றிருப்ப மிழற்று தொறும்
        கக்குங் கலுழி நறவுபரி
மளிக்கும் பசுந்தார்ச் செழுந்துளவு
        மணக்குங் குழகர் கார்மேக
    வண்ணா கருணை மடைதிறந்து
        வழியும் புயலே பேரின்பம்
அளிக்கும் பெரிய தெருவீதி
        அருகே வழிக்குப் புறம்பாக
    அறியாப் பருவப் பெண்களொடுத்
        தமைக்கும் வண்டலிது கண்டாய்
தெளிக்கும் தமிழ்த்தென் திருப்பேரைச்
        செல்வா சிற்றில் சிதையேலே
    திரையார் பொருநைத் தடந்துறைவா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. - 1



வேண்டக் கிடையா வாரமுதம்
        விரைதெண் டிரைநீர்க் கடன்முகட்டின்
    வெற்பைப் பிடுங்கி மத்தாக
        விடவா ளரவுக் கயிறுசுற்றிப்
பூண்டக் கணமே சுவைமதுரம்
        பொங்கிப் பெருகக் கடைந்தெடுத்துப்
    புலவர்க் களிக்கும் பெருமானே!
        பொருந்தா நிருதர் போரேறே!
காண்டற் கரிய கொழுங்கிரணங்
        கக்கும் பசிய மரகதமே!
    கதிரா ழியிற்செங் கதிர்மறைத்த
        கருணைப் புயலே பூமகள்கை
தீண்டச் சிவக்கும் புலனருளாற்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    திரையார் பொருநைத் தடந்துறைவா!
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. - 2



வள்ளைக் குழைவே னெருங்கருங்கண்
        மதிவா ணுதற்கோ மளப்புளக
    வனமா முலைக்குங் குமச்சுவடு
        மடவா ரொடும்போய் விளையாட
அள்ளிக் குடிக்குந் தடம் பொருநை
        ஆற்றிற் கூடு புனற்றுறையின்
    அருகிற் சிறுபே தையர்களெடுத்
        தடங்கா விருப்ப மீதூர்ந்து
தள்ளிப் பால்மாற் றரும்பசும்பொன்
        தகட்டின் வயீடூ ரியங்குயிற்றிச்
    சமைக்குந் திருமா மணிமுறத்துத்
        தருதா மரைக்கை சேப்பமணல்
தெள்ளிக் கொணர்ந்து தரவிளைத்த
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    திரையார் பொருநைத் தடந்துறைவா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. - 3



தருக்கா மலர்ப்பூம் பொழிலும் வயல்
        தடமுந் தருதென் திருப்பேரை
    தழைக்கும் படிநூற் றெண்மர்தொழுந்
        தாமோதர சீதர முகுந்தா
ஒருக்கா லெணுமவ் விருக்காலும்
        உணராப் பொருளே பரஞ்சுடரே
    ஒருவா ணுதல்பண் டுளங் களிப்ப
        உயர்வான் முகடு கிழித்தெழுந்து
மருக்கால் நறுமென் மலர்கொணர்ந்த
        மதமோ பதினா யிரங்கோப
    மங்கை யர்கள் புளகமுலை
        மணந்து கனிவா யமுதுண்ட
செருக்கோ வுனக்கீ தியல்பன்று
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    திரையார் பொருநைத் தடந்துறைவா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. - 4



கோவே கோவா மரகதமே
        கொடும்போ ரரக்கர் குலக்கூற்றே
    குளிர்பூந் துளவத் திருத்தொங்கல்
        குவவுத் தடந்தோட் காயாவாம்
பூவே பூவின் பொலன்பொகுட்டுப்
        புதுமென் மணமே யருள்சுரந்து
    பொங்கிப் பெருகி யுவட்டெறிந்து
        பொழியும் புயலே! கற்பகப்பூங்
காவே முதுகோ சலைதவமே
        கண்ணே கண்ணி னுண்மணியே
    கதிர்நித் திலவெண் மணல்நினது
        காலி னுறுத்தல் கடனன்றே
தேவே தேவப் பெருமானே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    திரையார் பொருநைத் தடந்துறைவா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. - 5



வன்னக் களபப் புளகமுலை
        மடவா ரெனுங்கோ வியர்கள்திரு
    வாய்ப்பா டியிற்புக் களைகவர்ந்த
        மணிவாய்க் கள்வ னென்று கட்டி
உன்னிப் பொருமி யழவடித்த
        துண்டே லவர்கள் விளையாடும்
    ஒளிர்நித் திலவெண் மணற்சிற்றில்
        உனக்கின் றழிக்க முறைகண்டாய்
கன்னிக் கமுக மிடறொடியக்
        காய்க்கும் பசுங்காய்க் குலைசிதறக்
    கதலிக் குலங்க ளடிசாயக்
        கயல்பாய்ந் துளைந்து வாலறையுஞ்
செந்நெற் பழனத் திருப்பேரைச்
        செல்வா சிற்றில் சிதையேலே
    திரையார் பொருநைத் தடந்துறைவா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. - 6



பண்ணே றியமென் குதலைமொழிப்
        பவளக் கனிவாய்க் குறுநகையும்
    பாரித் தோங்கிப் பூரித்த
        பைம்பொற் புயமுங் கண்டழகு
கண்ணே றெளியேம் பட்டனமென்
        றெண்ணிக் கருத்து வேறுபட
    கணக்கன் றுலகில் மன்னுயிர்க்குக்
        காவற் கடவுள் நீயன்றோ
மண்ணே ழையுமுண் டுமிழ்ந்தளந்த
        மாலே வேலைப் புனல் சுவறி
    மறுகக் கணைதொட் டிடுமுகுந்தா
        வருணன் றினமா ராதனைசெய்
தெண்ணீர்ப் பொருநைத் தடந்துறைவா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    தெளிக்குந் தமிழ்த்தென் திருப் பேரைச்
        செல்வா சிற்றில் சிதையேலே. - 7



தடிக்குஞ் சிகரப் படாம்பொதிந்த
        தடமா முலைக்குங் குமச்சுவட்டுத்
    தழைக்குங் குறுக்கண் சந்தொழுகித்
        தருபா லசோதை மகிழ்ந்தூட்டக்
குடிக்கும் புயலே யிலங்கையில்வெங்
        கொடும்போ ரரக்கர் குலக்கூற்றே
    குனிக்குஞ் சிலைக்கைத் தடக்களிறே
        கோவே பசுந்தண் டுழாய் மாலை
முடிக்கும் பொருளே முத்தொழிற்கும்
        மூவா முதடல யழியாத
    முத்திக் கொருவித் தாகவந்து
        முளைக்கும் பொருளே பாகுபெற
வடிக்குந் தமிழ்த் தென் திருப்பேரை
        மாலே சிற்றில் சிதையேலே
    மகரக் குழையே நூற்றெண்மர்
        வாழ்வே சிற்றில் சிதையேலே - 8



கொத்தோ டசையப் பசுத்துளவங்
        குடக்கூ டரும்பி முளைத்தெழுந்து
    கொழிக்குந் தவளப் பிறைநுதலிற்
        குறுவேர் வொழுக வணிந்தசுட்டி
முத்தா னதுவெண் ணிலவெறிப்ப
        முகத்தா மரையி னகையிலங்க
    முதுகுண் டலமும் வார்காது
        முழுமா மணிபொற் சோதிவிட
அத்தா வருணன் றினம்பரவும்
        அரிகேசவ நாரண முகுந்தா
    அடல்வா ளரவிற் கண்டுயிலும்
        ஆழிப் புயலே யாய்ச்சியர்கை
மத்தா லடிப்ப வெண்ணையுண்ட
        வாயா சிற்றில் சிதையேலே
    மகரக் குழையே நூற்றெண்மர்
        வாழ்வே சிற்றில் சிதையேலே. - 9



அன்போ டணைத்து முலைகொடுத்தின்
        னமுதூற்றறிருக்கும் புனலாட்டி
    அருங்கட் கடைக்கஞ் சனமெழுதி
        ஆரந் திருத்திப் பட்டுடுத்தி
உன்பே ரிடுவே னென் குழவிக்
        குள்ள தயவாற் றனிசமைத்த
    உயர்மா ளிகையு மாடரங்கும்
        ஒளிர்வே திகையு நீயழிக்க
வன்பா லோடி வரவுனக்கு
        வழக்கன் றுலகிற் சிறுபேதை
    மகளி ருந்து விளையாடும்
        வண்டற் றுகள்சே வடிபடுமே
தென்பே ரையினங் குலநாத
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    திரையார் பொருநைத் தடந்துறைவா
        சிறியேஞ் சிற்றி்ல் சிதையேலே. - 10
முற்றும்.
--------

9. சிறுபறைப் பருவம்



வானாடர் முப்பத்து முக்கோடி யுஞ்சது
        மறைக்கடவு ணான்முகவனும்
    மழுவலா ளனுமறு முகச் செம்மலுங்கைம்
        மலைக்கோட்டு வேழமுகனும்
ஏனோரும் விச்சிரக் குலிசபதி யுமகிழ்ந்
        தெண்டிசா முகப்பாலரும்
    இருவிழியு மிருசெவியு மிதயதாமரை மலர்ந்
        தெக்கால முந்தழையவே
கானூறு பச்சைப் பசும்பூக மடல்விண்டு
        கக்குங் கொழும்பிரசமுங்
    கதலிக் கொழுங்கனி யுடைந்துவழி மதுவுங்
        கலந்தோடி யலைமண்டிடத்
தேனாறு பாயும்வயல் சூழ்வழுதி நாடனொரு
        சிறுபறை முழக்கியருளே
    தென்றிருப் பெரைவரு நங்குழைக் காதமுகில்
        சிறுபறை முழக்கியருளே. - 1



பூவாருங் கொன்றைச் செழுஞ்சடா டவிமுடிப்
        புனிதபூ ரணனிரட்டும்
    பொற்றுடி யெனச்சொற் றிறம்பாத கனகவிப்
        புலவர்திண் டிமமென்னவும்
மேவுகதிர் மணிமகுட கோடிநிபு டஞ்செயும்
        விருதரசர் மணிவாசலின்
    விதரணக் கொடைவெற்றி மணவொலி கறங்குதெரு
        வீதிமும் முரசமெனவுந்
தாவுசீ ரிட்டுடன் விசித்துறுக் கித்தொணி
        தழைத்ததொண் டகமென்னவுந்
    தவறாது சதிமுறையி னண்டகோ ளகைமுகடு
        தடவியது செவிடுபடவோர்
தேவதுந் துயியெனத் திருவழுதி வளநாட
        சிறுபறை முழக்கியருளே
    தென்றிருப் பேரைவரு நங்குழைக் காதமுகில்!
        சிறுபறை முழக்கியருளே. - 2



கறைகொளுஞ் சமரில்வடி வாளொடு இராவணன்
        கைகளிரு பதும்விழுதுபோற்
    காறுடர்மண் ணில்விள்ளிக் குப்புற்று நிற்குநிலை
        கண்டுதிரு வுளமிரங்கி
உறுதிபட வின்றுபோய் நாளைக்கு வாவென்
        றுரைத்தராகவ! வெருவியன்
    றோரானை மூலமென் றோதாமுன் னோடிவந்
        துதவுமாதவ! சீதரா!
நறையொழுக மடன்முகை முறுக்கவிழ்ந் தலருமொரு
        நளினப் பொகுட்டாசன
    நள்ளிடை பதிந்துபைந் தாதளைந் திசைபாடி
        நாகிளம் பேடையோடுஞ்
சிறைவண்டு கண்படுக் கும்வழுதி நன்னாட!
        சிறுபறை முழக்கியருளே
    தென்றிருப் பேரைவரு நங்குழைக் காதமுகில்
        சிறைபறை முழக்கியருளே. - 3



அண்டபகி ரண்டமு மதிர்ந்துகுல வரையெட்டும்
        அசையாம லெண்டிசைதொறும்
    அளிகவுள கம்பக் கடாக்களிறு நிலைபெயர்ந்
        தடிச்சுவ டெடுத்திடாமற்
கொண்டவட வைக்கனற் கண்பிதுங் கக்கொடுங்
        கோளரா முடியிற்படங்
    குலுங்காம லாமைநெடு முதுகுகுளுக் காவண்ட
        கோளகையின் முகடுவெடியா
விண்டடவு தாரகைக் குலமடங் கலுமண்ணில்
        வீழாம லுயர்செழும்பொன்
    மேருகிரி சாயாம லோடியிரு கரைதோறும்
        வெண்ணிலா வுமிழுமுத்தந்
தெண்டிரை சுருட்டுபொரு னாநதி நெடுந்துறைவ!
        சிறுபறை முழக்கியருளே
    தென்றிருப் பேரைவரு நங்குழைக் காதமுகில்
        சிறுபறை முழக்கியருளே. - 4



கங்கா நதிச்செழும் புனல்யமுனை சரசோதி
        கற்புரச் சுவைமணக்குங்
    காவிரி யெனத்தேவர் வடியிட்ட வமுதேகக்
        கமழுந் திரைப்பொருநையும்
மங்காத சதுமறைக் குரியவேள் வியும்விழா
        வணியுமக வொலியுநாளும்
    வளமைபெறு குலநாத பரமபத வீடாள!
        வயல்கடொறும் வாய்மடைதொறுஞ்
சங்கார வாரஞ்செய் தகடுகளைந் தலறிக்
        தவழ்ந்தேறி முத்துயிர்க்குந்
    தண்ணந் தடந்தா மரைப் பொகுட் டாசனத்
        தமனியப் பொற்கோவிலிற்
செங்கா லனந்துயிலும் வழுதிவள நன்னாட!
        சிறுபறை முழக்கியருளே
    தென்திருப் பேரைவரு நங்குழைக் காதமுகில்
        சிறுபறை முழக்கியருளே. - 5



நீறபடு தவளவெண் பொடியாட வார்சடை
        நெடுந்திரைக் கங்கையாட
    நிலவாட முகைமுறுக் கவிழ்ந்தும்பை யாடவரன்
        நின்றாட வமரராடப்
பாறுபடு நெட்டிலைச் சுடர்வேல் விடுங்கொடும்
        படையிரா வணன் மகுடமோர்
    பத்துந் தகர்ந்தாட வெம்பேய் குறும்பேய்
        பறந்தலை கவந்தமாடத்
தாறுபடு கதலிக் கொழுங்கனி யுடைந்துவழி
        சாறுமாங் கனியினறவுந்
    தருமுடப் பலவீனற் கனியுடைந் துப்பெருகு
        தண்ணறவு மலைமண்டியே
சேறுபடு பள்ளவயல் சூழ்வழுதி நாடனொரு
        சிறுபறை முழக்கியருளே
    தென்றிருப் பேரைவரு நங்குழைக் காதமுகில்!
        சிறுபறை முழக்கியருளே. - 6



பொருதிரை யெறிசல ராசி யுடுக்கும்
        புவனத் திருமாதும்
    பொங்கு சினந்தலை மண்ட வடுஞ்சமர்
        புக்கைதிர் வருவோர்செங்
குருதி படும்படி பொருது மணம்புணர
        கொற்றக் குலமாதுங்
    கோதறு வண்புகழ் சேரனு கூலக்
        கோமள மாமாதும்
மருமலி சததள மண்டபமீது
        மகிழ்ந்துறை பூமாதும்
    வடகலை தென்கலை முழுது முணர்ந்த
        சொல் மங்கையு நாடோறும்
திருவுள மகிழ்தர வழுதி நன்னாடா!
        சிறுபறை கொட்டுகாவ
    தென் பேரையில் வருநங் குலநாதன்
        சிறுபறை கொட்டுகவே. - 7



உழுதுழு திசைபயி லளியொரு கோடி
        உதைந்து துதைந்தாட
    வொளிர் மடல் முகையவிழ் துளவமர்
        மால்குருகூர னுவந்தோதும்
பழுதறு முதுதிரு வாய்மொழி நூல்செவி
        பற்பலவுறு நேயன்
    பண்டுல கங்களை யுண்டுபி னளவு
        படுத்துந் திருமாமால்
முழுமறை முறையிடு மிருசர ணாலயன்
        மூரிக் கயமூடும்
    முதுபுன லோடையு மகழியுய் வால்வளை
        மொய்க்கும் கழனியினும்
செழுமலர் மணமலி வழுதி நன்னாடன்
        சிறுபறை கொட்டுகவே
    தென் பேரையில் வருநங் குலநாதன்
        சிறுபறை கொட்டுகவே. - 8



புவனமு மண்ட கடாகமும் வேலைப்
        புணரித் திசையெட்டும்
    பொங்கழல் கதுவிய கண்களி யானைப்
        புகர்முக மலையெட்டும்
குவடுபடும் பொலன் வடவரை முதலாங்
        குலகிரி யோரெட்டும்
    கொடுவிட முடவும் பஃறலை மகுடக
        கொளர வோரெட்டுந்
தவமுனி வர்சுரர் மகபதி முக்கட்
        சடைமுடி புடையோனும்
    சதுமுக னறுமுக னொருகொம் பேந்திய
        தந்திமுகத் தோனும்
செவிகுளி ரத்திரு வழுதி நன்னாட
        சிறுபறை கொட்டுகவே
    தென் பேரையில் வருநங் குலநாதன்
        சிறுபறை கொட்டுகவே. - 9



அளிசுற் றியதன் டறப்பொதியத்து
        அருஞ் சாரலிற் பைங்கிழங்கெடுக்கும்
   அம்பொற குழியிற் சுடர் விரிக்கும்
        அருங்கால் வயிரங் கிடந்திமைப்பத்
துளி பட்டொழுகும் வரையருவி
        சுழிக்குந் தொறும்பொன் னொழுக்கெறியச்
   சுவையூற் றிருக்கும் புனற்பொருநை
        சுருட்டுதிரைச் செம்மணி கொழிப்பத்
தளைவிட் டலரும் பசும்பாளைத்
        தலைப்பூங் கமுக மணிமிடற்றுத்
   தாங்கும் பவளக் குலைகவிப்பத்
        தடஞ்சால் வழியூர் தகடுளைந்து
வளைமுத் துதிர்க்கும் வயற்பேரை
        மாலே சிறுபறை கொட்டுகவே
   மகரக் குழையே நூற்றெண்மர்
        வாழ்வே சிறுபறை கொட்டுகவே. - 10
முற்றும்.
---------------

10. சிறுதேர்ப் பருவம்



உரைக்குஞ் சதுமா மறைதனக்கும்
        உயர்வான வர்க்குமெட்டாத
    உண்மைப் பொருளே கன்றொடுகுன்று
        உருகும்படி வேய்ங்குழலூதி
நிரைக்குப் பின்னே நடந்தருளும்
        நீலப்புயலே போரேறே
    நிமலா சமராடிடுங் கொடிய
        நிருதர் குலத்துக்கொருகூற்றே
வரைச்சந் தகிலும் செம்மணியும்
        மதவாரணக் கிம்புரி மருப்பும்
    மயிற் பீலியும் வெண்நித்திலமும்
        வாரிச்சுருட்டிக் கரைபொருது
திரைக்குந் திரைத்தன் பொருநைநதிச்
        செல்வா தடந்தேருட்டுகவே
    தென் பேரையில் நங்குலநாத!
        செம்பொற்றடந் தேருருட்டுகவே - 1



மேல்பால் முளைக்கும் பிறையெயிற்று
        வெங்கட்கொடிய நிருதர்குழாம்
    வெல்லுந் தடக்கைச் சிலைராமன்
        விரிதெண்டிரை நீர்க்கடல் முகட்டின்
பாலாட ரவிற் கண்டுயிலும்
        பசுந்தார்க் குழகன் கஞ்சன்வவிடு
    பாரச்ச கருமருது மொடி
        படத்தானெரிக்கு மொருமுகுந்தன்
கால்வாய்ப் புனலிற் கேணியினிற்
        கழுநீர்க் குழியின் வாய்மடையிற்
    கருஞ் செற்றினில் நல்லருங் கயத்தில்
        கமழ்பூந்துறையில் வெகுண்டெழுந்து
சேல்பாய் வழுதித் திருநாடா!
        செம்பொற்றடந் தேருருட்டுகவே
    தென் பேரையில் நங்குல நாத!
       செம்பொற்றடந்தேருருட்டுகவே. - 2



உருவா யுயிரா யணர்வாகி
        உள்ளும் புறனு முளனாகி
    உரைக்குஞ் சமய மாறினுக்கும்
        ஒன்றும்பலவு மாயடங்கி
அருவாய் நிறைவு நின்பெருமை
        ஆர்க்குந் தெரிய வசமன்றே
    ஆழிப் புயலே யருட்கடலே
        அரிகேசவ சீதரமுகுந்தா
மருவார் பொழியிற் கேணியில்வாய்
        மடையில் சுழியில் படுவரம்பில்
    வளைமுத் துயிர்க்குந் திருவழுதி
        வளநாட்டுறை யெம்பெருமான்
தெருவீதியில் நூற்றெண்மர் தொழச்
        செம்பொற்றடந் தேருருட்டுகவே
    தென் பேரையில் நங்குல நாத
        செம்பொற்றடந் தேருருட்டுகவே. - 3



அன்பாற் பணிந்து தினம்வருணன்
        ஆராதனை கொண்டருள்முகுந்தா
    அடியா ராசைப் புரிமுறுக்கி
        அரும்பொற்கயிற்று வடம்பூட்டி
வன்பால்விடுத்து நெகிழ்ந்து நெஞ்சம்
        மணிவிதியி னள்ளிடைநினைந்து
    வந்த ததியரிருமருங்கு மகிழ்ந்து
        முறையே பிடித்திழுப்பப்
பொன்பொற் பொருந்து செழுந்திலதம்
        புவனத்திருவாள் நுதற்றிலதம்
    பொங்கிப் பரந்த சலராசி
        புடைசுற்றிய பூலோகத்துத்
தென்பாற் றிலதமெனும் பேரைச்செல்வா
        தடந் தேருருட்டுகவே
    செழுந் தார்த்துளவு மணங்கமழும்
        தேவே தடந்தேருரட்டுகவே. - 4



தருநிழ லினிடையினிது வீற்றிருக்கும்
        புரந்தரரு முனிவரருமுளரிச்
    சதுமுகக் கடவுளும் முக்கட்கொழுங்கனிச்
        சடைமுடிச் சிவனும்வெஞ்சூர்
பொருகிரண வேலுடைப் பரமன்முருகேசனும்
        புகர் முகத்தவனும் மதியும்
    பொங்குளைப் பச்சைப்பசும் பரவியேழ்கட்டு
        பொற்றடந் தேரிரவியும்
பெருவாச லிற்புக நெருக்குண்டு
        சந்நிதிப் பேறுண்டு கிட்டுமென்றே
    பிறங்குபொற் கருடக் கொடிக்கம்பம்
        வலம்வந்து பெருக வஞ்சலிசெய்திடத்
திருமேனி மண்டபத் தரசிருக்கும் கடவுள்
        சிறுதே ருருட்டியருளே
    தென் திருப்பேரைர வருநங் குழைக்காதமுகில்
        சிறுதே ருருட்டியருளே. - 5



தந்தா னெனக்கு வரமிரண்டுந்
        தலைநாளுரைத்த சொற்படிக்குன்
    தகப்பன் புரந் முறை தருமந்
        தழைப்பஒரு கோலோச்சியெங்கும்
நந்தா வளமைப் பரதனிந்
        நாடாளுவன் நீகாடாள
    நடவென்று ரைக்க சிற்றவைசொல்
        நலமேற்றலைக் கொண்டொருபட்டுக்
கொந்தார் குழவி சனகியொடுங்
        கூடப்பிறந்த இளவலொடுங்
    கொதிக்கும் பரல்வெங் கொடுங்கானம்
        குறுகும்போழுது குளிர்ந்தலர்ந்த
செந்தா மரைப்போற் றிருமுகத்துச்
        செல்வா தடந்தேருகுட்டுகவே
    தென் பேரையில் நங்குலநாதன்
        செம்பொற்றடந் தேருருட்டுகவே. - 6



மத்தா லடிப்பு வுரல்மிதித்து
        மலர்த்தாள் குந்திட் டுறியில்வெண்ணை
    வாரிக் களவிலுண்ட கனிவாயா
        பரமபதந் தனக்கோர்
வித்தாகவும் வந்தங் குரிக்கும்
        வேதப்பொருளே யருட்கடலே
    விரைநாறிய பூம்பசுந் துளவ
        மெய்யாபொரு வெங்கரிமருப்பும்
முத்தோ டகிலும் செம்மணியும்
        முரித்திரைப்பாய் சுருட்டிமிக
    முழக்குங் கூடுபுனல் துறையா
        முதுவாளரக்கன் தலைகள்பத்தும்
கொத்தோடற வஞ்சுறு வாளிகொடுக்குங்
        புயல் தேருருட்டுகவே
    கொழிக்குந் தமிழ்த் தென்திருப்பேரைக்
        கோவே தடந்தேருருட்டுகவே. - 7



புழைத்திண் திறற்கைம் மதசலதி
        பொழியும்பிரைச் சிம்புரிக்கோட்டுப்
    புகர்மா விடங்ககர்க் குடைந்து வெரீஇப்
        புதுபூங் கேணித் தடம்புனல்நின்
றழைக்கும் புயலே நெட்டரவின்
        ஆடுங்குழகா ஒருநாளும்
    அழியாப் பரமபதம் ததியார்க்கு
        அருள்சீதர மாதவ முகுந்தா
மழைக் கொந்தளகக் குரும்பைமுலை
        மதிவாணுதல் சானகிபொருட்டு
    மதிள் சூழிலங்கை யரக்கன்
        மணிமகுடஞ் சிதறக்கோதண்டம்
குழைக்குந் தடக்கை ரகுராமா
        கொடிஞ்சித் தடந்தேருருட்டுகவே
    கொழிக்குந் தமிழ்த் தென்திருப்பேரைக்
        கோவே தடந்தேருருட்டுகவே. - 8



வாலப்பிறை வாணுதல் மடவரர்
        மலர்க்கைவளை கீழ்விழத்தொழுவோர்
    மாறாப் பிறவி வேரொடற
        வானத்தமரர் களிகூரச்
சாலப்பெரு வாளசுரர் படத்
        தருமாகதர்கள் கொண்டாடத்
    தருமந் தழைப்பக் கனகவிதைத்
        தமிழ்நாவலர் ஈடேற
ஏலக்குழல் சானகி கழுத்தினிடு
        மங்கலநாண் வாழ்வேற
    எக்காலமும் நூற்றெண்மர் குழாம்
        இதயத்திருந்து மகிழ்கூர்ந்து
கோலத் தெருவில் விளையாடிக்
        கொடிஞ்சித் தடந்தேருருட்டுகவே
    கொழிக்குந் தமிழ்த் தென்திருப்பேரைக்
        கோவே தடந்தேருருட்டுகவே - 9



மகுவார் நறுமென் மலர்கொணர்ந்து
        வழிபட்டிரு சேவடி சொரிந்து
    மயங்கும் புனல்களைந்து மொன்றாய்
        வருணன் செயும் பூசனையுவந்த
திருமா முகிலே தமிழ்க்குருகுஞ்
        செல்வக் குழகா பாட்டாய்ந்து
    சிறைவண் டலம்பிக் கண்படுக்கும்
        செழுந்தார்த் துளவப் புயமுகுந்தா
அருநான்மறை நூற்றெண்மரும் வந்து
        அங்கீகரித்து வடம்பிடிப்ப
    அம்போருகப் பூந்திருவு முந்நீர்
        அவனித்திருவு மருங்கிருப்பக்
குறுமாமணிப் பொன்மறுகி னெடுங்
        கொடிஞ்சித் தடந்தேருருட்டுகவே
    கொழிக்குந் தமிழ்த் தென்திருப்பேரைக்
        கோவே தடந்தேருருட்டுகவே. - 10

முற்றும்.

--------

நெடுங் குழைக்காதர் பிள்ளைத்தமிழ் - குறிப்புரை


1. காப்புப் பருவம்:

பொற்பு - அழகு; முத்திரை - ஞான முத்திரை; திருவாய் மொழி நாலாயிரம் செய்த - ஆழ்வார் கூறிய திருவாய் மொழி
ஆயிரமேயானாலும், நாலாயிரமும் அவர் அருளால் வெளிவந்தமையின் இங்கு உபசாரமாகக் கூறப்பெற்றது; நூற்றெண்மர்
- இவ்வூரில் குடியேறிய நூற்றெட்டுக் குடும்பத்தினர்; வருணன்.... - புண்ய தீர்த்தங்களைக் கொணர்ந்து வருணன்
பெருமாளை ஆராதித்ததாக இவ்வூர்த் தலபுராணம் கூறியதைக் குறித்தது; வானப்பிரான் - திருவாய்மொழி இவ்வூர்ப்
பதிகத்தில் நம்மாழ்வார் பெருமாளைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று.

2. உழக்கி - கலக்கி; பொலன்தாது - பொன்னிற மகரந்தம்; ஆலித்து - ஒலித்து; துதைந்து - நெருக்கி; அளி -
வண்டு; நறவு - தேன்; கூட்டுண்ண - கவர்ந்துண்ண; முகை - அருப்பு; ஓதிமம் - அன்னம்; வெண்ணிறப்பெண் -
சரசுவதி; பரிபுரம் - சிலம்பு, மகரக்குழைக் கடவுள் - மகர நெடுங்குழைக்காதர்.

3. பின்னை மடமகன் - நப்பின்னைப் பிராட்டி; திருப்பல்லாண்டு ஓதினோன் - பெரியாழ்வார்; ஐந்து பேருக்கும் ஒரு தேவி -
ஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், திருவேங்கடம், வடமதுரை இவ்வைந்தூர்ப் பெருமாளைக்
காதலித்தவள்: அகடு - வயிறு; தமனியம் -பொன்; பொன் - அழகு.

4. மௌலி - முடி; "வேல் விழியில் நீர்த்தாரை பாய" என்று கூட்டுக. தம்பிக்கு - சுக்கிரீவனுக்கு; குழகன் -
அழகன்; பெம்மான் -பெருமான்; பேதைமை - என் அறியாமையால், பிள்ளைத் தமிழில் ஏற்பட்ட குறைகள்.

5. ஆரணப் பொருள் நான்கும் -நான்கு வேதப் பொருள்களும்: யோகம் எட்டு - அஷ்டாங்க யோகம்; நூல்
ஐந்தொடைந்தெட்டு - பதினெட்டு ரகசியங்கள்; நியமம் ஆறு-வேதத்தின் ஆறங்கங்கள்; சித்தி எட்டு-அட்டமா சித்தி;
கருணாகரக் குரிசில் - அருளுக்கு உறைவிடமாகச் சிறந்து நின்றவன்; கரா-முதலை; வாரணப் பகடு-ஆண் யானை; மை-
கறுப்பு.

6.பிரசம்- தேன்; கலுழி-நீர்ப்பெருக்கு; தேக்கெதியும்- நிறையும்; பொலன்தாது-பொன்னிரமான மகரந்தம்;
பம்பி-எழுந்து; கடவுள்-கடவுளுக்கு; மயிலையர்கோன்- பேயாழ்வார்; புயலை-மேகம் போன்றவனை.

7. கொந்து-கொத்து; தொடையல்- மாலை; கைபுனைந்து- அலங்கரித்து; நந்தா-கெடாத; அதிர்வளை- முழங்குகிற சங்கு.

8. வள்ள வாய்-மலரினது கிண்ணம் போன்ற வாய்; தேறல்-தேன்; மலர் மங்கை திகழ் வஞ்சி- மகாலட்சுமிக்கு
இருப்பிடமான மலையாள தேசம்; புள் அவாவுறும் நீலமாலிகை- வண்டுகள் விரும்பும் நீலப் பூக்களாலாகிய மாலை; புய
பூதரன்-மலைபோன்ற புயங்களையுடையவள்; சிலை-வில்லாகிய கொடி; வடவரை-இமயமலை; அள்ளல்-சேறு;
சுரிசங்கம்-வளைந்துள்ள சங்கு; அகடு-வயிறு; நிலவு கால- நிலவைக் கக்க; கள்ளறா-தேன் நீங்காத.

9.வாள்- ஒளி; அரா அரசு-ஆதிசேடன்; ஆயிர நாக்குடையவன்-கல்வியிற் சிறந்தவனென்பது புராணம்;
மீனவன்-பாண்டியன் வகிடப தேவன்; மதுரை மூதூர் என்று கூப்பிடுக. வேழப்பிடர்- யானையின் கழுத்து; வாழி
பாடும்-திருப்பல்லாண்டு பாடும்; சரண பங்கேருகத்துகள்- தாமரை போன்ற கழற்கால் பொடி; கொண்டல்-மேகம்
போன்றவன்; பகட்டு-ஒளி; கெழுதகைய-உரிமையுடைய.

10.காவிரி நீர் படியும் அரங்கர்-திருவரங்கப் பெருமான்; சொல் மாலை-திருமாலை என்னும் பிரபந்தம்; படிந்
தடியில்-அடியிற் பணிந்து; துளவத் தொடை முடிசூடி- பூமாலை கட்டிச் சாத்தனார் தொண்டரடிப் பொடியாழ்
வார்; குண்டால் உததி-ஆழமான கடல்; புனல் குமுழ-கடல் வழிவிடாமல் இராமன் அக்கினி அத்திரம் கொடுத்தமை.

11. அருமணிக் கண்மலர் படைத்து - கண்ணாரக் கண்டு; அமலனாதிப் பொருள்-"அமலனாதிபிரான்" என்ற பிரபந்தம்;
நச்சி-மணஞ் செய்ய விரும்பி; சிலை வளைக்கும் - சனகன் கொடுத்த வில்லை நாணேற்றிய.

12. அரும்பொருள்-திருமால்; நற்பொருள்-திரு மந்திர உபதேசம்; பறிமுதல்-கொள்ளையடித்த பொருள் அளை-வெண்ணெய்.

13. பாடலாயிரம்-"திருவாய்மொழி" என்னும் பிரபந்தம்; மாறனுரை செய்தருளவே-நம்மாழ்வார் சொல்லிக்கொண்டுவர;
பட்டோலை எழுதும்-ஓலையிலே எழுதிக் கொள்கின்ற; ஒருமுகம்-ஒருங்கே; கூடு பொருனைத்துறை-தென்திருப்பேரை
திருமஞ்சனத்துறை; கண்படுக்கும்-தங்கித் துயில்கொள்ளும்; வானப் பிரான்-மூர்த்தியின் பெயர்.

14. திருஞான முந்திரைக் கடவுள்-நம்மாழ்வார்; பிரவுடவாக்கி-முதிர்ச்சியடைந்த சொல்திறமுடையவன்;
சரோருகம்-தாமரை; கருணாகரன்-அருளுக்கு உறை விடமானவன்; பரசமய திமராரி-புறச்சமயங்களாலாகிற இருளுக்கு
பகைவன்; பூதூரன்-இராமாநுஜர்; குலநாதன்- இந்நூலாசிரியர் குழைக்காதப் பெருமானுடன் கூடவந்த நூற்றெண்மருள்
ஒருவராதலால் குலநாதனென்கிறார், திருவாய்மொழி தனக் குரைவித்தெழுது-என்றது திருக்குருகைப் பிரான் பிள்ளாள்
பேரருளால் ஆறாயிரப்படி வியாக்கியானம் செய்தாரென்ற கருத்தை உட்கொண்டது.
-----------------
2. செங்கீரைப் பருவம்:

பொற்பதுமப் பொகுட்டு ஆசனம் எனக் கூட்டுக; பொகுட்டு-கொட்டை; மறைக் கிழவன்-பிரமன்; சடைமுடிக்
கடவுள்-சிவன்; குலிச வச்சிரரயுதம்-ஒருபொருட்பன்மொழி; வச்சிராயுதக் கடவுள்-இந்திரன்; தெரியல்-மாலை; குமரன்-
முருகன்; புகர் முகத்தவன்-விநாயகன்; புகர்முகம் யானை, சேவிப்ப - தொழ, சேவைபுரி - காட்சியளிக்கின்ற, தேன் நாறு -
தேன் மணக்கின்ற, திருப்பேரை - பூமிதேவியின் அம்சமான வடக்கு நாச்சியார்.

2. குரம்பு - அணைக்கட்டு

4. குதம் பை - காதணி.

5. படீரம் - உயரம், சடிலேசர் - சடையையுடைய சிவன், வாமம் - இடதுபுறம், குழைக்காத நாயகி - தெற்கு நாச்சியார்.

6. மிலைச்சு - அணிந்த, சூழியம் - கொண்டையணி, தொய்ய - வருந்த, பண்டி - வயிறு.

8. ஒத்திகை - செய்யப் பழகுதல், அடிகுந்தி - கால் நுனியில் நின்று.

9. துந்துபி - ஒருவகை வாத்தியம்.
--------

3. தாலப் பருவம்:

1. கயம் - ஆழம்,

2. புயசயிலம் - தோளாகிய மலை, தமரம் - ஓசை, கமஞ்சூல் - நிறைந்த கருப்பம்.

3. அர மகளிர் - தேவ ஸ்திரீகள், பேராயம் - பெருங்கூட்டம், மருங்குற்கு - இடைக்கு, சூளிகை முகட்டின் - உச்சியில், கான்று
-கக்கி, துணர் - பூங்கொத்து, சுரபி - காமதேனு.

4. தறுகண் - அஞ்சாமை, கோ - பெருமை, புகர் - புள்ளி, சிம்புரி - கொம்பில் அணிந்த பூண், சுவற்றி - வற்றவைத்து, முடிக்கும்
- தலைக்கும், முடிக்கும் - சூடும்.

5. கணிக்கும் - ஆராயும், உவட்டெறியும் - நிறைந்து வெளியே தள்ளும், பங்கேருகம் - தாமரை, சரணம் - அடி.

6. படப்பரந்தள் - படத்தையுடைய பாம்பு, பாட்டயர்ந்து - இனிய ஒலி செய்து, கண் படுக்கும் - துயிலும், சிகரப் புயபூதரம் -
உயர்ந்த தோளாகிய மலை.

7. அல்லி அகவிழ், மல்லல் - வளம், பணிலம் - சங்கு, வாய்மடை - தண்ணீர் வெளியே வருகிற மடை.

8. ஆழிப்புயலே-சக்கரப் படையைத் தரித்த மேகம் போன்றவனே; பணாமகுடம்-படங்களையுடைய தலை;
கணிகணன்-திருமழிசையாழ்வார் சீடன்;

9. கற்றா நிரை-கன்றையுடைய பசுக்கூட்டம்; திருக்கு பேதமை-மாறுபாடு; சமராடிடும்-போர் செய்யும்; திகிரி-சக்கரம்.

10. விசித்திறுக்கி-இறுக்கிக்கட்டி; குடவால்வயை-குடம் போலும் வெண்மையான சங்கு.
-----------

4. சப்பாணி பருவம்:

1. அரமகளிர்-தேவமாதர்; அடி-வேர்; பகடு-யானை; புக்கிடாமல்-புகுந்துவிடாமல்; வடிகெகண்ட- வடித்தெடுக்கப்பட்ட;
கனல் கொளுந்த-தீப்பற்றி யெரிய; இந்திர செயித்து-இந்திரசித்து; கடை-குழைக்கும்.

2. வரிவண்டு-ஒலிக்கின்ற கோகெளையுடைய வண்டு; அடைகிடந்த-அடைகாத்துக்கிடந்த.

3. பின்னை-சத்தியபாமை; பின்னைமேல் ஏற்றிக் கூறியது உபசார வழக்கு.

4. கை-ஒழுங்கு; சத்தியபாமைக்காகப் பாரிசாதம் கொண்டு வந்தபொழுது தேவலோகத்தில் அதைக் காத்துப் போரிட்ட
இந்திரன், சிவபிரான் முதலான தேவர்கள் தோற்றோட வென்று அதைத்தன்னுடைய ஊருக்குக் கொண்டு வந்தான்
கண்ணன் என்ற கதை குறிப்பிடப் படுகிறது. தடந்தாரு-பெரிய மரமான பாரிசாதம்; புரந்தான்-தன்னுடைய ஊருக்கே.

5. மகரஜலராசி-மீனையுடைய கடல்; அகிலம்-உலகம்; அங்காந்து-திறந்து; இடங்கர்க்கு-முதலைக்கு.

6. சீரை-மரவுரி; மரலிகாபரணன்-மாலையணிந்தவன்; உவட்டெழுத்து-நிறைந்து வழிந்து.

7. உபயசரணாரவிர்தத்து-இரண்டு அடித்தாமரைகளிலும்; எடுக்கும்-பறித்துக் கொண்டு வந்த; அறுகால்-- வண்டு,
திருத்துழாய் படலை மலருந் தழையும் சேர்த்துக் கட்டிய மாலை, சித்திரவட்டாழி - அழகிய வட்டமான தேர்ச்சக்கரம்,
பொலன் புரிசை - பொன் மதில்.

8. சுடிகை நாற்றி - நெற்றிச் சுட்டியைத் தொங்கவிட்டு.

9. தொக்கில் - புற்றில்லாத.

10. பவுரி - ஒருவகைக் கூத்து, மிருகமதம் - மான் மதம் - கஸ்தூரி, பானிதம் - குழம்பு.
----------------

5. முத்தப் பருவம்:

1. வேதங்கள் தங்குவதாலும், சங்கை வைத்து ஊதுகையாலும், திருமகளின் இதழமுதம் துளிக்குமென்று
இன்பமடைதலாலும், வாய்மை குடிகொண்டிருத்தலாலும் நீ வாய் முத்தம் கொடு என்று பொருள் கொள்க. சிவனுக்கும்
அயனுக்கும் பிரத்தியட்சம் என்பது தலமான்மியம்.

2. பூகம் - பாக்குமரம், தாறு - குலை, வாழையுழை முத்து - வாழையிடத்துள்ள முத்து, செவ்வு - முத்துக்கனின்
நிறையளவு, எத்தனையோ முத்தங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் குற்றம் இருக்கிறது. ஒன்றும் ஈடில்லாத உன்
வாய் முத்தம் கொடு என்கிறார்.

4. உவரி - கடல்; பங்கம் - சேறு.

6. பம்பு - நெருங்குகின்ற; வடிவம்பு - ஓரம்; ககன முகடுகோத்து - ஆகாயத் துச்சியில் நெருங்கி, தம்பம் - மற்றுக் கோடு, கவிர்
- பவளம்.

8. அங்குரித்து - முளைத்து, கோவா - கோக்காது, தரியர் - அடியார்.

9. சந்தாடவி - சந்தன மரக்காடு; நந்தா - குறையாத.
------------

6. வாரானைப் பருவம்:

1. வாரானை - வருகை; விரதன் - கொள்கையாக யுடையவன், விதரணன், விதரணிகம் - சாமர்த்தியம்.

2. கதுவும்-பற்றும்; நிருதர்-அரக்கர்; சமர்- போர்; இகல்-பகை; முகலளித விதரணமுளோன்- முக அழகும் சாமர்த்தியமும்
உள்ளவன்; உபயபரிபுர சரணம்- இருகழல்களையணிந்த திருவடிகள்; நிகரில் முகில் வண்ணன்-மூர்த்தியின் திருநாமம்.

3. உத்தி-கடல்; திருமணந்து ஒளிர் மரும-லக்ஷ்மி தங்கி ஒளிவிடும் மார்பையுடையவனே; தகரம்-மயிற் சாந்து;
சரியிடும்-அழிக்கும்; அடிம-விருப்பத்திற்கு உரியவனே.

4. கவின்-அழகு; சமன்-யமன்; மஞ்சரி-கொத்து; நறா-தேன்.

5. அளை-தயிர்; வால்வளை-வெண்சங்கு; நங்கை கண்மணி-உடைய நங்கையார் குமாரர் நம்மாழ்வார்.

6. சூழியம்-தலையில் அணியும் நகைகள்; மூரிக் கடல்-வலிமையான கடல்; இடைகழி-இரேழி.

7. பணா மகுடம்-படத்தின் உச்சி; பாந்தன்- பாம்பு; வானுதல்-சத்தியபாமை; தரு-பாரிசாதமரம்.

8. நந்தா விளக்கு- வாடாவிளக்கு; எழுதாமறை- வேதம்; தாமம்-மாலை; கூடுபுனல்-திருமஞ்சனத் துறை.

9. இலவு இதழ்-இலவுமலர் போன்ற செவ்விதழ்; மருங்கு-இடை; நுதல் தீட்டு-நெற்றியில் இட்ட குறி.

10. கரதலம்-கையிடம்; கன்னி-இலக்குமி.
-----------
7. அம்புலிப் பருவம்:

1.மதியுடைத்தாய்-மதியென்னும் பெயருடைத் தாய், அறிவுடைத்தாய்; மண்டலம் பெற்று-வட்ட வடிவம் பெற்று;
மகராலயம்-கடல்; நதி-கங்கை; அருகு-அருகம் புல்; எருக்கு-வெள்ளெருக்கு; சடைக் காட்டு நம்பன்-சடையை மிகுதியாக
உடைய சிவபெருமான்; பவளக்குலைச்சாலி-செந்நெல்; மூடுஉம் செடி. வாய்மடை-நீர் பாயும் மதகு; பகட்டு-ஒளி; வெடி
தாவி-துள்ளித் தாவி.

2. செனனவலை - பிறப்பு வலை; சமுகதீர்த்தத் துறை - கூடுபுனல் துறை; முயல் கறை - சந்திரனில் தோன்றும் களங்கம்;
சிதைத்து - போக்கி; அடைகிடப்ப - நெருங்கியிருப்ப; முருகு - தேன்.

3. அணல் - மேல்வாய்ப்புறம்; மிச்சில் - எச்சில்; குப்புற்று - தலைகவிழ்ந்து; உவணன் - கருடன்; எட்டிரட்டித்த - பதினாறு;

4. சுடிகை - உச்சி; விமலை - லக்ஷமி.

6. சந்திரனுக்கும், மகரநெடுங்குழைக்காதருக்கும் சிலேடை, சந்திரனைச் சொல்லுமிடத்தில், துவிதியையென்னும்
திதியையுடையவன், சுருங்குகிற கலைகளையுடையவன், உருவமில்லாத மன்மதனுக்குக் குடையாக உள்ளவன்;
ஆகாயத்தில் மறைந்தே ஒளி குறைந்திடுவான். ஓடித்திரிந்து இளைத்துப் போவான், உப்புக் கடலின் சேற்றிடையே
தோன்றுவான் எனவும்; மகரக்குழையனைச் சொல்லுமிடத்து, அரிய தோத்திரங்களையுடையவன், கலைகள் நிரம்பப்
பெற்று குறையாமல் இருப்பவன், திறமையான அறிவுடையவன், வேதப் பொருளின் ஒளியாக விளங்குபவன், ஒரு நாளும்
களைப்படையாதவன், மேலேயுள்ள பாற்கடலில் தோன்றுவான் எனவும் பொருள் கொள்க. ஆறலை புரட்டும் - ஆற்றில்
அலைகளைப் புரளச் செய்கின்றன.

7. சந்தம் - சந்தனம், படாம் - மேலாடை, பரிபவம் - அவமானம். அந்தக் கணக்கு - அதே நிலைமை.

8. பன்னி - பத்தினி, புரை - குறை, கைம்மலைக் கோட்டவன் - யானைக் கொம்பு உடையவன், விநாயகன்

9. நள்ளிடை - இருளிலே, சலஞ்சலம் - வலம்புரிச்சங்கு.

10. பேலியல்லா - உவமையில்லாத, இவண் போலியன்று - இவனைப் போன்றனில்லை; படுகர் - நீர் நிலை, புளினம் -
மணல் மேடு, சூடு - கொண்டை.

---------------

8. சிற்றிற் பருவம்:

1. சுரும்பர் - வண்டு; துதைந்து - நெருங்கி, சில்லோசை - சில்லென்ற ஓசை, ஊற்றிருப்ப-பெருக்கெடுப்ப, மிழற்று தொறும் -
ஒலிக்குந் தோறும்; கலுழி நறவு - வெள்ளமாகிய தேன்; வண்டல் - விளையாட்டு.

2. பொலன் தாளா - அழகிய திருவடிகளையுடைவனே.

3. வள்ளைக் குழை - வள்ளைத் தண்டு போன்ற காதில் அணிந்த குழை; கோமளம் - இளமை, வனம் - அழகு, மீதூர்ந்து -
பொங்கி, பரல் தள்ளி - கற்களைத் தள்ளி, மாற்றரும் - எத்தனை மாற்று என்றறியாத,

4. அவ்விருக்கு - பிரசித்தி பெற்ற வேதம், மென் மலர் - பாரிஜாத மலர்.

5. கோவா - கோர்க்கப்படாத, தொங்கல் மாலை, குவவு - திரட்சி, காயாவாம் பூவே - காயாம் பூப்போன்ற
நிறத்தையுடையவனே, உவட்டெறிந்து - பெருக்கு மிகுந்து, நித்தில வெண்மலர் - முத்துப்போன்ற வெள்ளிய மணல்.

6. அளை - தயிர், மோர், வெண்ணெய்; உகண்டு - உகள் என்ற பகுதியாகப் பிறந்த வினையெச்சம்.

7. கண்ணேறு - திருஷ்டி தோஷம்; காவல் கடவுள் - எல்லாவுயிரையுங் காக்கும் உனக்கு திருஷ்டி தோஷம்
எப்படி வரும்? எங்களையும் காக்க வேண்டாமா? சுவறி - வற்றி.

8. தடித்து, மலைச்சிகரம் போன்று உடையால் மூடப்பெற்ற முலை என்று பொருள் காண்க.

10. வேதிகை - திண்ணை; வன்பு - மலிமை.
---------
9. சிறுபறைப் பருவம்:

1. கைம்மலை - யானை, திசாமுக பாலர் - திக்குப்பாலகர், கானாறு - மணம் வீசும், பூகம் - கமுகு, விரசம் - தேன்.

2. புனித பூரணன்-தூய்மை நிறைந்தவன், இரட்டும்-முடிக்கும், துடி-உடுக்கை, திண்டிமம்-
புலவர் வருகையைத் தெரிவிக்கும் முரசு, நியமஞ் செபும்- கடமைகளைச் செய்யும், விருதரசர்-வெற்றிப்பட்டங்களைப் பெற்ற
அரசர், மணி வாசல்-மணி கட்டிய வாசல் விதரணக் கொடை-திறமறிந்து கொடை, மும்முரசு- கொடை,வெற்றி, மணம்
இவற்றை அறிவிக்கும் மூன்று வகை முரசுகள், விசித்திறுக்கி-கட்டியிறுக்கி, தொண்டகம்-குறிஞ்சி நிலப்பறை,
சதிமுறை-தாலி ஒத்துமுறை.

3.அண்ட கோலிகை முகடு-வானவுருண்டையின் உச்சி; கைகளிருபதும், கால்களும் தொடர்ந்து விழுவது போல
மண்ணில் வீழ்ந்து; நிலத்தை நோக்கித் தலை கவிழ்ந்து நிற்கும் நிலை; நள்ளிடை-இரவில்; நளினம்- தாமரை;
நாகிளப்பேடை-மிருந்த இளமையுடைய பெண் வ்ண்டு;கண்படுக்கும்-துயிலும்; வாளொரீஇ- வாளும் நீங்கி.

4. அண்டம்-இவ்வுலகம்; பகிரண்டம்-வெளியுலகம்; அழிவுட்கடாம்-கன்னத்திலிருந்து பெருகும் மதலம்;
கம்பக்களிறு-நடுக்கத்தைச் செய்யும் யானை; அடிச்சுவடு எடுத்திடாமல்-தடத்தை விட்டுக் கால்களையெடுத்திடாமல்;
வடவைக்கனல்-பெண்குதிரை முகத்தின் வடிவத்தோடு கடலில் ஒளிந்திருந்து ஊழியினிறுதியில் மேலெழுந்து உலகத்தை
யழிக்கும் கொடுந் தீ; கோலிரா -வலிமையுடைய ஆதிசேடன்; ஆமை- அண்டத்தைத் தாங்கும் ஆமை; முகடு
வெடியா-உச்சி வெடியாமல்.

6. புவனத் திருமாது-பூமி தேவி; கொற்றக் குலமாது-ஜயலட்சுமி; கோமளமாமாது- புகழ் என்னும் லட்சுமி; சததள
மண்டபம்-நூற்றிதழ்த் தாமரை; பூமாது-இலக்குமி; நாமாது-கலைமகள்.

7. அண்ட கடாசய்- அண்ட கோளத்தின் சுவர்; முடவு-வளைந்த உடலையுடைய.

8. கவந்தம்-உடற்குறை; தாறு-குலை.
--------------

10. சிறுதேர்ப் பருவம்:

1. சமராடிடும் - போர் புரியும்; கிம்புரி மருப்பும்- பூண்கட்டிய தந்தமும்; நித்திலம்-முத்து.

2. குழாம் வெல்லும்-கூட்டத்தை ஜயிக்கும்; கடல் முகட்டின்பால் என்றும் ஓடிபட என்றும் கூட்டுக.

3. மருவார் பொழில்-மணம் நிறைந்த சோலை; வாய் மடையில் எனக் கூட்டுக. வளை முத்துயிர்க்கும்- சங்கு முத்துக்களை
ஈனும்.

4. வன்பால் விடுத்து-கொடுமை நகே்கி; நள்ளிடை -இரவிலே; ததியார்-அடியார்; பொன்பால்-இலக்குமியிடத்து;
புவனத்திரு-பூமிதேவிக்கு; பூலோகத்துத் தென்பால்- பூமியில் தெற்குத் திசைக்கு; மகாலட்சுமிக்குப் பொட்டோ-பூதேவியின்
பொட்டோ, தென்னாட்டின் பொட்டோ எனப் புகழ் பெற்ற பேரை எனக் கூட்டுக.

5. தரு-கற்பக விருட்சம்; புரந்தரன்- இந்திரன்; சூர்-சூரபதுமன்; புகர் முத்தவன்-யானை முகத்து விநாயகன்; கருடக்
கொடிக்கம்பம்-கொடிமரம்; சந்திநிப்பேறு- சந்நிதியை அடைந்து பெருமாளைச் சேவித்தல்; கிட்டும்-பின்னராவது கிட்டும்;
திருமேனி மண்டபம்- பெருமாள் எழுந்தருளியிருக்கும் உள் மண்டபம்;

6. நந்தா வளமை இந்த நாடு-குறையாத வளத்தையுடைய இந்தக் கோசல நாடு; சிற்றவை-சிறிய தாய் கெகேயி; செல் நலமே
தலைக்கொண்-வார்த்தை நன்மையே தரும் என்று ஏற்றுக்கொண்டு; ஒருப்பட்டு- சம்மதித்து; காட்டுக்கும்
போகும்பொழுதும் முகமலர்ந்து மகிழ்ச்சியோடு இருந்த இராமா என்று பொருள்.

7. மத்தாலடிப்ப-காரியம் பொருளில் வந்தது; மலர்த்தாள் குத்திட்டு-அடிக்காலை உயர்த்தி, நுனிக் காலில் நின்று;
அங்குரிக்கும்-தோன்றும்; விரை நாறிய- மணம் வீசின; மெய்யா-உடலையுடையவனே; செம் மணி-மாணிக்கம்;
மூரித்திரைப் பாய் சுருட்டி-பெரிய அலைகளாகிற பாயிற் சுருடு்டியெடுத்து; அஞ்சுறு- அச்சத்தைத் தருகின்ற.

8. மதசலதி-மத நீராகிய கடல்; புகர்மா-புள்ளிகளையுடைய யானை; இடங்கர்-முதலை; வெரீஇ- வெருவி, பயந்து;
நெட்டரவின்-காளியன் முடிமேல்; கொடிஞ்சி-தேர்த்தட்டு.

9. வாலப்பிறை-இளம் பிறை; மாசதர்கள்-துதி பாடகர்; கோலத்தெரு-அழகு நிறைந்த தெரு.

10. மயங்கும்புலன்களனைத்தும் ஒன்றாய்-ஒருமை மனத்துடன்; பாட்டயர்ந்து-பாட்டுப்பாடி; அம்போருகப் பூந்தி-தாமரை
மலரில் வீற்றிருக்கும் இலக்குமி; முந்நீர் அவளி-கடல் சூழ்ந்த பூமி; அவளித்திரு-பூதேவி.

பிற்கூற்று:

1. முத்தி பெற்றோரு மீளவரும் பேரை-பரம பதத்தினும் இன்பம் தரும் தென்திருப்பேரை; கூ முற-விருப்பத்துடன்.

2. கோகனகம்-தாமரை; சேனேசன்-சேனை முதலியார்; செண்பகச் சடகோபன்-இராமானுஜன். எஞ்சலில்-குறையாத; நலம் பொறை திருந்து-நற்குணம், பொறுமை இவற்றிற் சிறந்த; வள்ளல்- குழைக்காதன்; உவகை பொங்கு-மிக்க மகிழ்சாசியைச் செய்கின்ற; நல்லின்ப மெய்கவி-உண்மையாகவே எல்லோர்க்கும் இன்பம் தருகின்ற; கவி-பிரபந்தம்.

முற்றும்.
-------

குழைக்காதர் சந்தானப்பத்து


மக்கட் பேறு இல்லாதவர்கள் தினந்தோறும் நீராடிய பிறகு குழைக்காதரை மனத்தில் கொண்டு ஏக்க்ர சித்தத்துடன் ஸ்ரீராமையங்கார் அருளிய இந்த பதின்மூன்றுசெய்யுட்களைப் பாரரயணம் செய்தால் நன் மகவைப் பெற்று நல்வாழ்வு பெறுவர் என்பது அனுபவ பூர்வமாகக் கண்ட உண்மை.

1. சந்தான மூர்த்தி மகரக் குழையர்தம் மேலடியேட்
சந்தானப் பத்துத் தமிழ்மாலை மாடத் தயவருள்வாய்
சந்தான மாகுந் தமிழ்ப்பேரை நங்கை தவத்துதித்த
சந்தான மாஞ்சட கோபா மகிழ்மலர்த் தாமத்தனே.

2. செந்தார் மணிமகிழ் சேர்மணி மார்பன் திருப்புயத்திற்
கொந்தாரும் பச்சைத் துழாயணி கேசவ கொண்டல் வண்ண
பிந்தாமல் நான்வந்து பொன்னடி போற்றப் பிரியமுடன்
சந்தானந் தாகுழைக் காதாதென் பேரைத் தயாநிதியே.

3. முந்தித்த காலம் பொருநா நதியினின் மூழ்கியுமே
வந்தவென் பாவம் தவிர்ந்ததிலை நியதை மாற்றுகண்டாய்
உன்பதி யார்பதம் போற்றுந் தமியன் உளமகிழச்
சந்ததி பாக்கியந் தந்தருள் பேரைத் தயாநிதியே.

4. பாகார்ந்த செந்தமிழ் பாமாலை பாடிய பாவலர்க்குப்
போகாத வல்வினை போக்குவித் தாயிந்தப் பூதலத்தில்
வாகார் மகரக் குழையா யடியன் மனமகிழச்
சாகாத சந்ததி தந்தருள் பேரைத் தயாநிதியே.

5. கையார வாரி யெடுத்தனைத் தேமுத்தங் காதலுடன்
பொய்யாமல் மைந்தன் அருள்புரி வாயிந்தப் பூதலத்தில்
அய்யா மகரக் குழையா அடிமைக் கிரங்கியிப்போ
மெய்யான சந்ததி தாருந்தென் பேரையில் வித்தகனே.

6. கூர்க்காயு மாழிக் கரத்தா யினியுன் குரைகழலே
யார்க்கார மாகத் தொழுமடி யேனுக் கருள்புரிவாய்
நீர்க்கார மேனி யழகா எனக் கின்று நிச்சயமாய்
தீர்க்காயு ளுள்ள மகன்தாதென் பேரையில் ஸ்ரீதரனே.

7. அத்திர வேல்விழி மின்னார்கள் தந்த விரகத்தினால்
தெத்திலும் தீவிழுந் தெரியாமல் உன்தன் திருவுளத்தால்
பத்திர மாக அடியேன் தனக்கோர் பலமிகுந்த
புத்திர சம்பத்தை ஈவாய்தென் பேரையில் புண்ணியனே.

8. மீனம்பு நீர்விழி யனார்கள் தந்த விரகத்தினால்
ஊனம் படுந்துயர் ஒன்றொழிப் பாயுயர் வானறலே
வானம்பு பூமி வளர்பயிர் போலுன் மலர்ப்பதத்தை
நான் நம்பி னேன்குழைக் காதாயி னியுன்ற னடைக்கலமே.

9. நத்தூர் நேமிக் கரத்தாய் இனியுந்தன் நாமத்தைநான்
எத்தூரம் போயினும் நான்மற வேனிடை மாதர்தனில்
முந்தூருங் கொங்கைய சோதைப் பிராட்டி முகத்திலிட்ட
கத்தூரி நாமத் தழகாதென் பேரையில் காதலனே.

10. மாந்திக் கிடக்கும் அடியே னுடைய மனமகிழ
சாந்தி முனிக்கருள் செய்தது போலத் தயவுசெய்து
ஏந்தி மதிக்க விளையாடப் பிள்ளை எனக்கருள்வாய்
காந்தி மதிக்கு நிகரா கியமுகக் காகுத்தனே.

11. ஒருமைந் தனுக்கு வரம்வேண்டிப் பெற்ற உடையநங்கைக்
கருமைந்த னாகி யவதரித் தாயய்யன் ராமனுக்கு
திருமைந் தனாகிய ஸ்ரீராமன் செல்வக் குடிதழைக்கக்
கருமைந்தன் தந்தருள் பேரை வகுள திவாகரனே.

12. மாவுக்கு வாசஞ் திருமால் உரையாடி மாதர் மகிழ்
பாவுக்கு வாசமகிழ் மாறன் செய்பாடல் பைந்துளவத்
தேவுக்கு வாச மடியார்கள் சிந்தையில் சேர்ந்திருத்தும்
நாவுக்கு வாசம் புகழ்பேரை வந்தருள் நாரணனே.

13. சந்தானப் பத்துந் தமிழ்மாலை நூறுந் தரித்தவர்கள்
அந்தா ரணியில்நல் லாண்பிள்ளை தான்பெற் றகமகிழ்ந்து
கொந்தார் துளவமணி மால்குழைக் காதரைக் கும்பிட்டுடன்
மந்தாத வாழ்வும் பெறுவார் அவரிந்த மாநிலத்தே.

--ஸ்ரீ ராமைய்யங்கார்

சந்தானப் பந்து- குறிப்புரை

1. தாமம்-பூ மாலை
2. கொந்தார்-கொத்தான மாலைகள்
3. தமியன்-தனித்திருப்பவன், கதியற்றவன்
5. பூதலம்-பூமி
6. கூர்-கூர்மையான
7. விரகம்-பிரிவினால்
10. காகுத்தனே-இராமனே
11. துளவம்-துளசி;
12. தேவக்கு-தெய்வத்திற்கு.

ஸ்ரீ மகர நெடுங் குழைக்காதர் திருவடிகளே சரணம்.

----------------


திருப்பேரை நாச்சியார் சோபனம்


1.தேனே தென் அமுதே நீ வாராய் - எந்தன்
சிந்தை மகிழ்ந்து பாடலைக் கேளாய்
சிரத்தையுடன் திருப்பேரை
நாயகியாள் சோபனத்தைப்
பாடாய் அருள் தேடாய்.

2. பதின்மர் ஆழ்வார்கள் பதம் போற்றி-நிதம்
பக்தியாம் நூற்றெண்மர் பதம் போற்றி
இளையவல்லி ஸ்ரீநிவாஸ ஸ்வாமி மலர் பாதத்தை
வாழ்த்தி துதி சாத்தி.

3. சதுர் முகன் தேவியரே தாயே-எந்தன்
சரஸ்வதியே வருவாயே
பேதை நான் எடுத்துரைக்கும்
பாடலை மகிழ்ந்து நீரும்
வாரும் அருள் தாரும்.

2-வது கட்டம்

1.சீர் மகிழ் பேரையில்
வாழும் குழைக்காதர்க்குச்
சிந்தை பொருந்திய பக்தராம்
சீல குணமுள்ள ராமச்சந்திர அய்யங்கார்
ஜகத்தினில் யாவர்க்கும் மித்திரராம்.

2. தர்ம நீதிகளைத் தவறாதவராம்
சத்திய அந்தணராய்
சகலரிடத்திலும் தயானுவாய் இருக்கும்
சத்வ குணமுள்ள மித்திரராம்.

3. பேர்புகழ் பிரபலமாய்
தலைப் பட்டு எங்கும்
பெரியன் கூட்டம் என்று பெயர் பெற்று
ஜாமீன் இல்லாமனே தென் திருப்பேரையில்
தர்ம கர்த்தா ராகவே பார்த்து வந்தார்.

4. பரம புருஷருட வம்சத்தில் யாவரும்
பரம்பரையாய் தர்ம கர்த்தாவாம்
மன்னுயிர் யாவரையும்
தன்னுயிர் போல் பாவிக்கும்
நாராயண ஐயங்கார் தர்மகர்த்தாவாம்.

5. உத்தம தாஸருட புத்திரி ஆழ்வார்
பாடலைக் கேட்டு மனயிரங்கி
கஷ்டத்தை தீர்ந்து காத்து ரக்ஷித்து
எங்களை கருணாநிதியே ஆதரியும்.

3-வது கட்டம்

1. ஸ்ரீதேவியும் பூதேவியும் சேர்ந்து கூடினாள்
கூடு திரு புனலில் தவம் செய்ய நாடினாள்
மாதேவியும் நதி தனிலே
மகா தவங்கள் தான் புரிய
மகர நெடுங் குழைக்காதரை
மகிமையுடனே அடைய (ஸ்ரீ)

2. நீல மேக வர்ணனை மனம் நினைந்து வாடியே
நிச்சயமாய் இருந்து தவம் செய்ய நாடியே
நிர்மலமாக மனதை நிருத்தியுருதியுடைய
நித்யானந்தப்ரபுவை அவாள்
பர்த்தாவாகவே அடைய (ஸ்ரீ)

3. அஷ்டாக்ஷர மந்திரத்தை உச்சரித்துமே
அன்புடன் ஸ்ரீ ஹரியைக் காண இச்சை கொண்டுமே
மங்கையவாள் இருவரும் சுவாமி
பங்கையத் தாளை எடுத்தாள்
மகிமையுடனே மகரக் குண்டலம்
மகத்துவமாய்க் கண்டெடுத்தாள்.

4. அற்புதமாம் குண்டலத்தின்
அழகைப் பாரடி-இதை
அணிய நாதர் எங்கிருந்து வரப்போரா ரடி
சிந்தித்தவாள் இருக்கையிலே
ஸ்ரீ கெருடன் தோளில் ஏறி
வடிந்த காதும் குழையுமாக
வந்துதித்தார் வர்களை நாடி (ஸ்ரீ)

5. குண்டலத்தைக் காதில் சாத்தி
குதூகலமாக
கூடியவாள் மணம் புரிந்தான் மங்களமாக
ஸ்ரீ லெக்ஷிமி கேசர் என்று
ஜெகத்தில் எங்கும் பேர்பாதியாய்
தென் திருப்பேரையில் வந்து
வீற்றிருந்தார் அதிபதியாய் (ஸ்ரீ)

4-வது கட்டம்

1. மங்கை தவம் நிறைவேற்ற
மகர பூவுணர் கொண்ட
நியமனங்கள் என்னவென்று கூறுவோம்
கூறுவோம் துயர் தீருவோம்.

2. நங்கையர்கள் தவத்துதித்த
மங்கைய மலர் பாதம் தன்னை
செங்கமலக் கண்ணனனைச் சேருவோம்
சேருவோம் மனம் தேறுவோம்.

3. ஏக ஜாதியாகவும் பூர்வ சிகையாகவும்
இருக்கும் இடத்தை அவர் எண்ணியே
எண்ணியே தவங்கள் பண்ணியே.

4. சாம வேத ராகவும்
சர்வ விஷ்ணு பத்தராகவும்
சேர்ந்திருக்கும் இடத்தை அவர் நாடியே
நாடியே திருப்பேரையைத் தேடியே.

5. ஊர்த்துவ குண்டலராகவும்
தாமிரபரணி தீரமாகவும்
உள்ள ஸ்தலத்தில் அவர் வந்தனர்
வந்தனர் சேர்வை தந்தனர் (மங்)


5 - வது கட்டம்

1.
மங்கையரே கூடி மகா பூஷணரை நாடி
பணிவோம் நாம் வாடி
மங்கயமலர் பாதம் தன்னை

2.
செங்கையில் கதை, சக்கரம் ஏந்திய
சாரங்க பாணியின் சந்ததமும் நாம் (மங்)

3.
நூதனமாய் சுந்தர பாண்டியன்
நூற்று எட்டு கிரகம் கட்ட
தானம் வாங்கத் தானுமொரு ஆளாய்
வந்து நின்றவரை

4.
சந்ததமும் பிள்ளைக் குழாய்
விளையாட்டை உகந்து பார்க்க
சன்னதி கருடன் வேண்டாம்
என்றுரைத்த சர்க்குணர்க்கு (மங்)

6 - வது கட்டம்

1.
மகிழ்ந்து சேவிப்போம் வாடி
மகர பூஷணன் பாதத்தை (மகி) 2
புகழ்ந்து நாம் எல்லாரும்
பூரணமாகவே கூடி
பேராபுரி நாயகி, நாதன் மலர்ப் பாதத்தை (மகி)

2.
காலையில் கூடு புனலடி
கர்ம பாசன் தன்னை நீக்கி
நாடு புகழ் தென் பேரை நாதன் மலர்ப் பாதத்தை (மகி)

3.
காடு கரை தன்னில் சென்று
கடுந் தவங்கள் செய்ய வேண்டாம்
வர்ணன் தொழும் மலர்
மாயன் மலர்ப்பாதத்தை (மகி)

4.
கலக மனம் தன்னை மாற்றி
பக்தி தன்னிலே நிறுத்தி
முக்தி மார்க்க மாகிய
மோக்ஷ சாம்ராஜ்ய மளிப்பார் (மகி)

5. பாத்திரமான அவர் சாஸ்திரம்
தன்னைப் பார்த்து
சூஸ்த்திர தார் நாமத்தை
சொல்லி சொல்லி துதிக்க (மகி)

7-வது கட்டம்.

சித்த தவம் பண்ணி திருமகரப்
பாதம் போற்றி எல்லோரும்
கேளுங்கள் இன்பமுடன் இந்தச்
சோபனத்தை, காது கொடுத்துக் கேளுங்கள்
கவலைகள் அண்ணியிலே
பொன்னும் முத்தும் கோடிச்சு
புதுமையாக வாழ்ந்த ஊரை
கிள்ளி பழுத்து வாழ்ந்திருந்தார்
கீர்த்தியான தென் திருப்பேரை
கேள்வியில்லை என்று சொல்லி
கெடுக்க வந்தான் துலுக்கனவன்
ஊர்தோறும் திருடிக் கொண்டு
ஓடி மறைந்து திரிந்தானாம்
தெய்வப் பொருளைத் திருடிக் கொண்டு
தென் திருப் பேரையை நாடி வந்தான்
குதிரையின் மேல் அவன் ஏறிக்கொண்டு
குன்று மணலில் வரும் போது
குதிரைக்குக் கண்கள் தெரியாமல்
தனக்கும் கண்கள் தெரியாமல்
தயங்கி திகைத்து நின்றானாம்
பச்சை துலுக்கனை கண்ணைக் கெடுத்து
பாளையங் கோட்டை பரக்கடித்து
வந்த துலுக்கனை மாறியடித்து
மணலுக்கப்பால் துரத்தி விட்டார்.
அப்படிப்பட்ட பெருமாளை நாங்கள்
ஆதரவாகவே கை யெடுப்போம்
முந்தி துலுக்கனை கண்ணை கெடுத்ததை
மூதாக்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்
இப்போது கோவிலில் திருடர் வந்ததை

யாவரும் அறியக் கண்டிருக்கோம்
ஐப்பசி மாதம் குழைக் காதர்க்கு
அன்புடன் ஊஞ்சல் திருநாளில்
அங்கியுடன் ஆபரணங்கள்
அணிந்து தேவிமாரோடிருக்க
கோல ஜனங்கள் கவரி வீசும்
கூடு திருப் புனல் பேரையர்க்கு
நாள் கதிர் சாத்த வேணு மென்று
மெம்பர் எல்லோருமாய் வைத்திருந்தார்
பாதி ராத்திரி வேளையிலே
யாவரும் நித்திரை செய்கையிலே
கோவில் புகுந்து கொள்ளையடிக்க
கூடியெல்லாருமா உட்புகுந்தார்
பார்த்தார் அந்தத் திருடரெல்லாம்
பல்லணி வழியா சேர்வகைகளை
எவ்வித மானாலும் சுவாமி
தூக்கி எடுத்துப் போக மனதில் எண்ணி
கடப்பாறைகம் பிதானெடுத்து
கல் பல்லாணியை வெட்டலுற்றார்
போட்ட கடப்பாறை அசைக்கமாட்டாமல்
பிரமித்து நின்றார் திருடரெல்லாம்
கொடிய பாவிகள் கதவில்
தீப்போட்டு கோவிலில் வரவழி பார்த்தார்
அவர்கள் கொணர்ந்த சாமானை
எல்லாம் அந்த அந்த இடத்திலே
வாங்கி வைத்தார்.

அரை வேஷ்டி முதல் வாங்கிவைத்து
அடித்து அப்பால் துரத்தி விட்டார்
அந்த நாளையில் கேட்டதுண்டோ
இந்தப் புதுமைகள் கண்டதுண்டோ
எங்கள் மகர குழையருக்கு
ஈடு எங்கெங்கும் தெய்வங்கள் பார்த்த துண்டோ
கலியுகத்திலே யாவருக்கும
கண் கண்ட தெய்வமாயி இருக்கார்
கூடியே மகா ஜெனங்க ளெல்லாம்
கோவில் என்று ஓடி வந்தார்
வந்து கோவில் பார்க்கும் போது
பார்த்தார்கள் அந்த ஸன்னதியில்
பல விதமான சாமான்களைக்
கத்தியிலே ஆயிரமாம்,
மண்வெட்டி கொபிலி ஆயிரமாம்
கடற்பாறை கம்பி ஆயிரமாம்
கன்னக் கபாச உரிகன் ஆயிரமாம்
பயத்து மூட்டையில் ஆயிரமாம்
சால்வைலேங்சிகள் ஆயிரமாம்
சரிகை வேஷ்டி ஆயிரமாம்
திருடர் கொணர்ந்த சாமான்களை
எல்லாம் தேர்ந்தெடுத்து
வைத்துக் கொண்டு சமரசனைகள்
சுவாமிக்குப் பண்ணி சந்தோஷமாய் வாழ்ந்திருந்தார்.

8-வது கட்டம்

சீராக வாழ்ந்திருந்தார் எல்லாரும்
சிறப்பாகயிருக்கிற நாளையிலே
கோவிலும் மடம்புளியும் கட்ட கூடிய
மகா ஜனங்கள் யோசனை பண்ணி
தாங்களெல்லாம் சம்மதித்து
தர்மகர்த்தா ராமசந்திராஐயங்கார் இடத்தில் சொன்னார்

நற்குணம் பொருந்திய தர்மகர்த்தா
ராமசந்திராஐயங்காரும் ஏதுரைப்பார்
அப்படியே ஆகட்டும் என்று
அன்பாம் அநேகம் வேதியரை அழைக்கச் சொன்னார்*

நாள் பார்த்து முகூர்த்தம் வைத்தார்
எல்லோரும் நல்லதொரு
லக்னமும் பார்த்து வைத்தார்
ஆவணி மாதத்தில் அருமையாய்
ஐந்தாம் தேதி வெள்ளிக் கிழமையிலே
அழகாக நாள் பார்த்தார்

சொக்கலிங்க முதலியா*
மணியரார் சுடுக்காக*
கொத்த மிரை அழைத்து வந்தார்
சாத்துப் பொடி வெற்றிலை பாக்கு
சடுதியில் சந்தோஷமாகவே எடுத்துக்கொண்டு
மங்களமாய் மடப்பிளிக்கு

இந்த மகா ஜனங்களும் கால் நிறுத்தினார்
வரி கல்லுக்குப் பணம் கொடுத்தார்
அப்போது மங்களமா ஜனங்களெல்லாம்
சாரங் கெட்ட பனைகள் வெட்டி
சடுதியில் சந்தோஷமாகவே நூற்றெண்படும்
பிள்ளை குழா விளையாட்ய்*
இந்தப் பொது ஜனங்கள் கல்லிமுத்தார்கள்
கல் தச்சமார் ஒரு புறமாம்
அதிலே கமாள தச்சர் மறுபுறமாம்
கொல்லமார் ஒரு புறமும்
கொத்தமார்களெல்லாம் இரு புறமாம்
கல கல குலு குலென எல்லோரும் கலந்து
ஆவன வேலைகள் செய்தார்
மடப்புளி கட்டி முடித்தார்
அப்போது மங்களமாய்
மகா ஜனங்களெல்லாம்
திருப்பணிகள் செய்து முடித்தார்.

9-வது கட்டம்

சீரான சிரத்தையுடன் ராமசந்திரஐயங்காரும்
திருப்பணிகள் செய்து முடித்தார்
அழகாக குழைக்காதருக்கு
அங்கி சாத்த வேணுமென்று
சீராகவே குழைக்காதருக்குக்
கவசம் சாத்தனார் சிரத்தையுடன்
பதிஷ்ட பண்ண வேணு மென்று
பக்தியுடன் நூற்றென்பரும்
நாச்சியாரைப் பதிஷ்டை பண்ணினால்
நன்மையுண்டாம் நமக்கென்று சொல்லி
தாயாரைப் பதிஷ்டை பண்ணி
சகல ஜனங்களும் தான் நினைத்து
வரி யெடுக்க வேணுமென்று சொல்லி
மங்களமாய் மகாஜனங்களுக்கெல்லாம்
எக்கார் வீதம் வரியெடுத்தார்
இன்பமுடன் எல்லோரும்
எண்ணி கனக சதங்கை இல்லாமல்
ஏத்தம் பண்ணினார் எல்லாரும்
சித்திரை மாதத்தில்
திங்கள் கிழமை பூசத்தில்
பரிவுடனே பன்னிரண்டாம் தேதி
பதிஷ்டை பண்ணினார் பக்தியுடன்
பதிஷடை பண்ணி நாள் முதலாய்
பரிவுடனே வாழ்ந்திருந்தார்
யாதொரு குறையும்
யாவருக்கும் இல்லாமல்
நன்மையாக வாழ்ந்திருந்தார்
தேசாதி தேசங்களில்
தீவுகரிவுகள் வந்தாலும்
எந்த குழப்பங்கள் வந்தாலும்
எங்கள் நாச்சியார்
தஞ்சமென்பாம் தாயாரே தஞ்சமென்று
சகஸ்ரநாம ஜெபங்கள் வைப்போம்
பெருமாளே நீர் தஞ்சமென்று
சொல்லி பேர் பேராய் நாங்கள்
சிறப்பு வைப்போம்.

10-வது கட்டம்

ஆற்றில் ஜலம் இல்லாமல்
அனைபேரும் தவிக்குகிறாள்
குளத்தில் ஜலம் இல்லாமல்
கோடிப் பயிர் தீயறது
இட்டதொரு வெள்ளாமை
எங்கெங்கும் தீயறது
நட்ட தொரு நடுகையெல்லாம்
நாலு திக்கும் வாடாது
வைத்ததொரு பூம்பயிர்கள்
வாடியெங்கும் தீயாது
முளைத்ததொரு மூன்றாம் பாகம்
முளைகளெல்லாம் தீயாது
பூத்திருந்த பெண்களுக்கு
போய் குளிக்க ஜலமுமில்லை
மசக்கை கொண்ட பெண்களுக்கு
மரத்தில் ஒரு பழமுமில்லை
ஆறு வெட்டி ஊத்தெடுத்து
அனைவரும் தவிக்கிறார்
நாச்சியாரும் பெருமாளும்
நன்மையாக எண்ணியவாள்
அகஸ்தியர் திருமலைக்கு
அன்புடனே எழுந்தருளி
அகஸ்தியரே கேளுமய்யா
அனைவரும் தவிக்கிறார்
அகஸ்தியர் திருவுள்ளத்தால்
ஆற்றில் ஜலம் வரவேணும்
அனைவரையும் ரட்சிக்க
ஆற்றில் ஜலம் கொணர்ந்து விட்டார்
தேவாதி தேவருமாய்
ஜகத்தை எல்லாம் ஆண்டவரும்
மூவாதி தேவரும்
மூன்றரையடி ஜலம் கொணர்ந்தார்
மேல் வரத்தும் வாராமல்
கீழ்வரத்தும் ஓடாமல்
மத்தியிலே ஜலம் கொணர்ந்தார்
நாச்சியார் மகிமையினால்
கடம்பாக்குளம் பெருக
கவலையற்று நாமிருக்க
கடம்பாக்குளம் பெருகி கார் பிசானம் பயிரோ
செழிக்க எங்கும் மழை பெய்ய
சிறுதானியம் விளைந்து வர
எங்கெங்கும் மழைபெய்ய
எப்போதும் ஜலம் பெருக
மாதம் மூன்று மழை பெய்ய
படாமல் நெல் காண
கட்டி முத்துச் சரம் போல
கதிர் ஒழுக்கு நெல் காண
கோட்டை ஒன்று வராகன் ஒன்றாய்
கொம்பனையான் விலை போட
பெருக் கமுடன் குடியேறி
பொது ஜனங்கள் வாழ்ந்திருந்தார்.

11-வது கட்டம்

பங்குனி உத்திரத்தில்
பௌர்ணமாசை தன்னிலே
வர்ணன் கொணர்ந்த சொர்ண குடத்தால்
மங்களமாய் வரு ஷிக்க
முக்தியடையும் தீர்த்தமும்
முன்செய்த பாக்கியமும்
பெற்றோமே நாங்கள் இந்த
பெருமாள் கிருபையினால்
கோடி தவம் செய்தவருக்குக்
கூடு திருபுனல் ஸ்தலம் கிடைக்கும்
ஜென் மாந்திர புண்ணியம் பண்ணின பேருக்கு
தென்திருப்பேரை ஸ்தலம் கிடைக்கும்
வந்தார்க்கு *பிக்ஷையிட்டு
வருவார்க்கு அன்னமிட்டு
தஞ்ச மென்றார்க்கு தயவு செய்வார்
தர்ம குண நாச்சியார்
தேசாதி தேசங்களில்
சேவிக்க வந்த மானிடவர்
இந்த ஊரு பெருமாளுக்கு
என்னது இச்சையென்றார்
காசு பணம் வாங்க மாட்டார்
களஞ்சியமும் கேட்க மாட்டார்
கூட்டுக்கரையும் அமிர்தகலசமும்
குழைக்காதர்க்கு இச்சை என்றார்
அந்த நாளில் அமிர்த கலசம்
நெய்யிலவாள் அமுது செய்வாள்
ஏழை எளியவர்கள் என்ன செய்வார்
என்று சொல்லி
வைக்க பணி யாரம் போதுமென்றார்
வானப்பிரானும் அப்போது
சுக்கிரவாரம் வெள்ளிக் கிழமை
திருப்பூரம் தன்னிலே
பரிவுடன் இந்தச் சோபனத்தைப்
பக்தியுடன் சொன்னார்க்கும்
சொல்லு, சொல்லு என்று சொல்லி
செவி குளிரக் கேட்டார்க்கும்
தாலி தழைத்திருப்பர்
சந்ததிகள் ரொம்ப உண்டாம்
பெருக்க முடன் தயிர் கடைவாள்
யுத்தி ரனைத் தான் பெறுவாள்
ஜன்ம தரித்ரம் நீங்கி--சிந்தையில்கவலை
யற்று, ஜனன மரண மற்று
செழிப்பாக வாழ்ந்திருப்பார்.
நாராயண தீட்சிதர் சிறையில் இருந்த காலத்தில்
உடன் இருந்தவர்கள் பாடிய செய்யுட்களிற் சில.

வெண்பா

1. கன்றும் பசுவும் கதறாமல் காத்துநெடுங்
குன்றைக் கவித்த குழைக்காதா - இன்றுமுதல்
நாளைக்கு ளெங்களுக்கு நன்மையுறக் காத்தருளிவ்
வேளைக் கிரங்குவதே மெய்.

2. இந்தவினை நீக்கி யிரங்கிக் கடைக்கண்பார்
கொந்தவிழுந் தாமக் குழைக்காதா - இந்துமுக
மண்டலத்தாய் நூற்றெண்மர் வாழ்வே மணிமகர
குண்டலத்தா யெங்களையாட் கொண்டு.

3 தென்றிருப்பே ரைப்பதிக்குத் தீங்கொன்றும் வராமல்
உன்றிருப்பே ரைப்பலகா லோதினேன் - மன்றிருபேர்
ஆயிரம் பெற்ற வழகா குழைக்காதா
நீயிரங்கிக் காப்பாய் நிதம்

4 நெல்லைதனில் வந்த நெடும்பா தகன்விளைத்த
அல்ல றவிர்த்தெம்மை யாண்டருள்வாய் நல்லோர்கள்
போற்றுந் திருப்பேரைப் புங்கவா வெவ்வினையும்
மாற்ரும் படிக்கருள் செய்வாய்.

5. உற்றசம யத்தி லுதவுந் திருப்பேரைக்
கொற்றவா செம்பொற் குழைக்காதா - முற்றுமெமைக்
காத்திரட் சிப்பாய் கலங்காம லெவ்வினையும்
தீர்த்திரட் சிப்பாய் தினம்.

6. நம்பினோந்தென்பேரை நாதகுழைக் காதநின்பொற்
செம்பதுமம் போலுநீ திருப்பதத்தை - எம்பெருமான்
எங்கள்பா லோர்தீங்கு மெய்திடா வண்ணமளித்
தங்கணுல கிற்காத் தருள்.


கட்டளை கலித்துறை

7. தென்பேரை வாழுங் குழைக்காதநின்பொற் றிருவடிகீழ்ப்
புவிபே யனைய தமியன்விண் ணப்பமேய்ப் போத ந்தந்து
வன்பே யிடர்தவிர்த் தெஞ்ஞான் மிக்கநல் வாழ்வருளி
உன்பே ரருட்குரித் தாகவைத் தாண்டரு ளுத்தமனே
--

கண்டாயோ சோதிக் கதிரவனே நீயுமிந்த
மண்டலங்கள் எங்கும்போய் வந்தாயே -தண்தமிச் - சீர்
கோடாத பேரைக் குழைக்காதர் நன்முகம்போல்
வாடாத செந்தாமரை.
--
அரசாகி தைமுழுதாண்டாலும் (இ) ன்பக்
கரை சார மாட்டார்கள் காண்டீர் - முரசாரும்
தெந்திருப்பேரைப் பதியன் சீர்கெட்டு நானிலவன்
தன் றிருப்பேரைப் புதியாதார்.

- ஸ்ரீ பிள்ளைப்பெருமானய்யங்கார்.

--------

அபிநவ காளமேகம் ஸ்ரீ அநந்தகிருஷ்ணையங்கார் இயற்றிய பாடல்கள்.

1. அம்மானை

பூந்துளவன் தென்பேரைப் புங்கவன்மண் மாவலிபால்
ஏந்துகரத்தானா விரந்தனன்கா ணம்மானை
ஏந்துகரத்தனா விரந்தனனே யாமாகில்
மாந்தர் பெருங் கன்னனென வாழ்த்துவரோ? அம்மானை
வாழ்த்தல் படியளக்க வாய்ந்ததனா லம்மானை.

2. திருப்பேரை விருத்தம்.

மருவல ரவுணா மருவலா சொரிய
மறிதிரைப் பரவையின் கண்முன்
திருவனை செய்த திருவனை மார்பன்
சிறந்தநன் மறைபுக வாழி
வருணர்க ளுடனே வருணனும் பணிய
மனைவிய ரோடினி திருக்கும்
பெருமையை யுடைய பெருமைசார் பொழிந்தென்
பேரைமா நகரது மிதுவே.!

திருப்பேரைத்தாயார் பேரில் - வெண்பா

திருப்பேரை விட்டுழுது சீர்ப்பயிர்செல் பண்ணைத்
திருப்பேரை நாயகியைச் சிந்தை - விருப்போடும்
வீறுகவி வாரமதில் மேவித் துதிப்போர்க்கு
மாறிவிடுங் கோரவறு மை.

-------------
குழைக்காதர் பேரில் மும்மண்டில் - வெண்பா

மாதவா பேரன்பா மாயா தென்பேரே யில்வாழ்
சீதரவின் மாரனெனுஞ் சேயீன்றோய் - மாதயவாய்ச்*
சீரியரை நாயேனுஞ் செர்வான்முன் னாளினிலிப்
பாரினையுண் வாயாகண் பார்.


2- வது பிரிவு

பேரன்பா மாயாதென் பேரையில் வாழ் சீதரவின்
மாரனெனுஞ் சேயீன்றோய் மாதயவாய்ச் - சீரியரை
நாயேனுஞ் சேர்வான்முன் னுளினிலிப் பாரினையுண்
வாயாகண் பார்மாத வா.


3- வது பிரிவு

மாயா ! தென் பேரையில் வாழ்சீதர! வின் மாரனெனுஞ்
சேயீன்றோய்! மாதயவாய்ச் சீரியரை - நாயேனுஞ்
செர்வான்முன் னுளினிலிப் பாரினையுண் வாயா ! கண்
பார்மாத வாபேரன் பா.


கீர்த்தனைகள் - 1

ராகம்: ஆனந்த பைரவி

பல்லவி

எத்தனை அழகு உனக்கு தென்பேரைநாதா
எத்தனை உழகு உனக்கு (எ)

அனுபல்லவி

சித்தம் உன்னைமேல் வைப்போரையும்
தினம் வழி படுவோரையும்
அத்தனை பேரையும் காத்து
ஆதரித்து ஆட்சி செய்யும் (எ)

சரணம்

1. நித்தம் நித்தம் திருமஞ்சனம் - முகில்வண்ணனுக்கு
நித்தம் நித்தம் உற்சவங்களும்
நித்தம் நித்தம் நாடி வந்த நிர்கதிகள் அற்றவர்
உற்றது துணையாயிருந்து உலகையே ரசிக்கும்

2. நன்மையே செய்திடுவார் - நம் குழைக்காதர்
நலங்களையே தந்திடுவார்
அவரையே நம்பி இருக்கும் அன்பர் அடியவர்க்கும்
ஆனந்த வாழ்வு தந்து அனுகரஹித்து காக்கும் (எ)


பாட்டு-2
ராகம்: பைரவி

பல்லவி

இந்த சுந்தரனைபாரடி எந்தன் சிந்த
அகத்தே புகுந்து சிந்திக்கச் செய்யும் அழகன் (இ)

அனுபல்லவி

செந்தமிழ் பாமாலைபூண்டு செங்கதையும் கையில்
சுந்தரி இருவரோடு தோழிக்கிணியில் எழும் தொண்டு (இ)

சரணம்
அந்த மதனோ அல்லது இந்திர தேவன்தானோ
தந்த முகுந்தன் என்னும் நாராயணனும் அவன் தானோ
எங்கள் மனம் கொள்ளை கொண்ட, எழிலோன் இவன் தானடி
சிந்தை தெளிந்து அறிந்து சொலுகிறோம் தாங்களடி (இ)

சரணம் சரணம் என்று சன்னதியில்
வருவோரைச் சாந்தமாக அனுப்பி சம்பத்தும்
தந்திடுவார் அன்றலர்ந்த தாமரைபோல் அனுதினம்
காட்சி தந்து அபயம் அபயம் என்று அனைவரையும்
காத்து வந்த தென்பேரை மாயவன் அவன் - எங்கள்
சிந்தைக் குகந்த ஜெய சுந்தரதனன் அம்மா.
---

பாட்டு - 3.

ராகம் : கர்நாடக தேவகாந்தாரி

பல்லவி

கண்டோம் கவலைகளைநாம் மறந்தோம் ஐயனை
காணவோர் ஆயிரம் கண்களும் வேண்டுமே (க)

அனுபல்லவி

சாமவேதனாம் ஸ்ரீசக்ரபாணியாம்
கதை சங்கு சக்கரம் கொண்டு சகலரையும் காப்பான் (க)

சரணம்

நம்மாழ்வார் பாடிய நம் திருவாய் மொழியும்
நாவினால் பாடினால் நன்மையெல்லாம் பெருகும்
உண்மைப் பொருளை உலகுக்கு எடுத்துரைக்கும்
உத்தமனாம் மகரக்குழையனின் பாதத்தை (க)

கோவர்த்தனத்தைக் குடையாய் பிடித்தவன்
கோபியர்களுடனே குழல் ஊதிநின்றவன்
மண்ணை வெண்ணை உண்டு மாயம்பல செய்தவன்
மாலவன் மலர்ப் பாதம் மகிழ்ந்து மகிழ்ந்து நாம் (க)
---

பாட்டு 4,

ராகம் : சிந்துபைரவி

பல்லவி
எப்படி சொல்வோமையா - உம்மை நாம்
எப்படி காண்போமையா ?

அனுபல்லவி

எந்தவினை வந்தாலும் இந்த வினைபோல
ஏங்கி ஏங்கி நாங்கள் ஏக்கம் அடைந்ததில்லை (எப்படி)

சரணம்

குமுறிக் குமுறி அழும் குழந்தைகள் நாமா இல்லையா?
கோடி கோடி செய்த வினை பொருந்தருள வில்லையா
கண்ணில் இரக்கம் கொண்டு கருணை பொழிய வில்லையா
இன்னும் ஏன் சோதனை ஏழை எங்களுக்கருள (எ)

------------

பாட்டு-5

ராகம்: கர்நாடக தேவகாந்தாரி

பல்லவி

நிகரில் முகில் வண்ணன் தங்கமே தங்கம்
நிகருக்கு நிகர் யாரோ தங்கமே தங்கம் (நி)

அனுபல்லவி

பன்னகசயனின் பாதம் தன்னை போற்றினால்
பரிவுடன் வேண்டியதை பரிந்து நமக்கருளும். (நி)

சரணம்

ஸ்ரீதேவியும் பூதேவியும் சிரித்தருகில் இருக்க
சிறிதளவின்னலும் நம்மை வந்து அணுகாமல்
பூரணதயவுடனே பொங்கி எழுந்து வந்து
புது வாழ்வு தந்து புனருத்தாரணம் போல (நி)

-----------

பாட்டு-6

ராகம்: ஸ்ரீகல்யாணி தாளம்: ஆதி

பல்லவி

வந்தருள் சக்கரகையனே உயர்வானவர்கள்
ஆதியோர் வணங்கும் அழகை மாயனே
(வந்தருள் இந்தவேளை என்னை காக்க)

அனுபல்லவி

செந்திருவுடன் அணி திருவை மருவிய
முகுந்தனே! காரி அழைத்த நந்தனே! வந்தருள்
இந்த வேளை நீ.

சரணம்

1. எந்த வேளையும் மனைவி-மைந்தர்-மாடு-மனை
என்று. சிந்தை கலங்கி நடந்த ஐந்தரிந்த, என்னை
பந்தமுற்றவனாக்கி, சொந்தமடியார்களுடன், சந்ததம்
மதிக்க வரம் தந்திடும் சுந்தரா என்முன் வந்தின்

2. வேசி, மனை, தனில், அவள், ஆசையாள்
மருவியுட்ட, நேசப்பணி செய்திட்ட ஸ்வாமி
தொண்டரையும் - தாஸன் என்றுமே
புவியோர், பூறித்திடவே, அமைத்து
மாசிலா, துலிபமணிகேசவா, இந்த
வேளை நீ.

3. பாலறும் துருவனுடன், ஒலமிட்ட,
பஞ்சாலிக்கும், சீலமில்லா,
சூரன்மகன், (பாகவாகன்) சிந்தை
மகிழ
காலமறிந்த அருள்செய்த நீல
மேகவர்ணா லோலனே. அனந்த
கிருஷ்ணன் சீலனே இந்தவேளை நீ (வந்தருள்)

---------

நாட்டுப் பாடல்கள்

குழைக்காதர் பள்ளு

பாட்டு 1.
வானரங்கள் கனி கொடுத்து (மெட்டு)

1. பக்தியாலே நாங்கள் பட்டபாடெல்லாம் போதும்
பரவசம் மிகுந்ததாலே பட்டதெல்லாம் போதும்
உந்தன் சேர்வை காண என்றும் ஆசை கொண்டோம் நாங்கள்
இதை உணர்ந்தும் நீர் பேசாமலே இருந்ததேனோ இன்றும்

2.
கலியுகத்திலே உந்தனைப்போல் கண்டதுண்டோ எங்கும்
காட்சியை நாம் கண்டதுமே பூரிக்குமே அங்கம்
எட்டுதிசை முழுதும் உந்தன் பெருமையை நாம் கேட்டும்
எட்டாத தூரத்திலே இருந்துவிட்டீர் இன்றும்.

3.
பார்புகழும் உந்தன் மேனி பச்சை வண்ணம் கண்டும்
பழபழக்கும் மேனியென்றும் அருள் உளமே கொண்டு
பச்சைக் கற்பூரம் மணக்கும் பாங்கானதீர்த்தம்
பல்லோரை வாழ்த்தும் உந்தன் சீர்சடாரி என்றும் (பக்தி)

பாட்டு 2.
நந்தவனத்திலே ஓர் ஆண்டி (மெட்டு)

மகரக்குழையின் பாதம் - நாம்
மறவோம் மறவோம் மறவோமே நாளும் (ம)

1) எண்ணங்கள் ஆயிரம் கோடி - அது
எப்போது நிறைவேறும் பார்ப்போம் நாம் தேடி (ம)

2) அன்புடன் யாவரும் தொழுதலால் 0 நாம்
அன்றூ செய்த பாவம் அப்போதே தீரும்
அருள் வடிவாம் அவர் உள்ளம், அவர்
அன்பைப் பெருவதில் நாம் கொள்ளும் இன்பம் (ம)

3) கானக்கண் கோடியே வேண்டும் - அவர்
காதில் அணியும் மகரக் குண்டலமும்
சொர்க்க வாசல் திருநாளில் அவர்
சொர்ணகலசம் போல் ஜொலித்திடுவாரே (ம)

4)
சிவப்பு மத்தாப்பும் வலையும் - அவர்
சேர்வையும் அங்கு கண்டுகளிப்போமே
கொட்டகைக்குள்ளே இருந்து - அவர்
உண்டு பவனி உலாவருவாரே (ம)

பாட்டு 3.
நிலா நிலா ஓடி வா (மெட்டு)

கண்ண கண்ணா ஓடிவா கமலக் கண்ணா ஓடிவா
நங்கள் செய்த வினை போக்கிடவே வாவா (கண்)
தென்பேரை மக்கள் துயர் தீர்த்திடவே வாவா
கருட வாகனத்தில் நீ எழுந்து வாவா (க)
தேர்மேலே ஏறிய சிங்காரனே நீ வாவா
வேக மதாய்நீதய வாகவே வா வா (க)
பாமாலைக் கொண்டு நாங்கள் பக்தியுடன் வந்து
பாங்குடனே உன் நாமம் சொல்லிடுவோம் இங்கு
பஜனைகள் செய்திடுவோம் பாங்குடனே ஒன்றி (க)

பாட்டு 4.
சிட்டுக்குருவி (மெட்டு)

பேரைநகர் வாழ் பெருமானிடம் சேதி கூறுவோம்
பிரியமுடன் ஒன்று கூடி பாடி மகிழுவோம் (பே)
பாசத்தாலே அனைவரும் நாம் பாடி ஆடியே
அவர் பாதங்களைத் தொட்டு நாமும் பூஜைகள் செய்வோம் (பே)

மலர்களை நாம் சாத்தி அவரை மகிழவைப்போமே
மகிழ்வுடனே ஏற்றிப்புகழை பாடிடுவோமே,
விழி மேல் வைத்தழகை பார்த்திடுவோமே
அவர் வந்து நம்மை ஆட்கொண்டருள் தந்திடுவாரே. (பே)

பிள்ளைக் குழாம் விளையாட்டை கண்டுகளிக்கவே
பேணி அவர் நம்மை என்றும் வாழ வைக்கவே
தர்மர் நெறியில் இருக்க என்று வழியைக் காட்டியே
அவர் நஞ்சம் நஞ்சம் என்று நாமும் வாழ்ந்திடுவோமே (பே)

------------

பாட்டு-5.
செந்தமிழ் நாடென்னும் (மெட்டு)

தென்னாட்டிலே தென்திருப்பேரையிலே
சித்தம் கொண்டு இங்கு வீற்றிருக்கும்
எங்கள் குழையனின் சிறப்பைப் போற்றியே
ஏற்றம் கொண்டு நாமும் பாடிடுவோம்
சுந்தர பாண்டியன் காலத்திலேயே
சொந்தமுடன் வந்து சேர்ந்தார்
அன்றைய நாள் முதல் இன்றைய நாள்வரை
ஆதரத் தெம்மையும் ஆண்டு வந்தார்
எந்தக் கல்யாணங்கள் வந்தாலும் நாங்கள்
எந்த தேசத்தில் இருந்தாலும்

எங்கள் மகரக் குழையனை எண்ணியே
எப்படியும் சிறப்பு வைத்திடுவோம்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
எத்தனை துயரங்கள் வந்திடினும்
அத்தனையும்அவர்அக்கணத்தில் பொடி
ஆக்கிடுவார் துயர் தீர்த்திடுவார்.
நிகரில் முகிழ் வண்ணன் நெஞ்சத்தில் புகுந்து
நித்தமும் நம்மையே ஆட்டிவைப்பார்
அத்தனையும் பொய் ஆக்கிடாமல் இன்னும்
ஆதரித்தெங்களை காத்தருளும்.

பாட்டு 6.
கிளிக்கண்ணி (மெட்டு)

தெந்திருப்பதியில் வாழும்
தெந்திருப்பேரை நாயகி பாதம்
தெம்புடனே நாம் தொழுதால் கிளியே
ஜெயம் நமக்கே கிடைக்கும்

(1)
சுக்ர வாரம் தன்னிலே
சொந்தமுடன் நம் நாயகி
ஜோராக கொலுவிருப்பாள் - கிளியே
சொகுசாக கொலுவிருப்பாள்.

(2)
மகரக் குண்டலம் அணிந்த
மகர நெடுங்குழைக்காதரின்
மாட்சி பொருந்தியதாய் நமக்கெல்லாம்
மகிழ்ச்சி அருளிடுவாள்

(3)
கனுத்திருநாளில் அவள்
கலையெல்லாம் மறக்க
காட்சியை தந்திடுவாள் - தொழும்
கழிப்புடனே மகிழ்வோம்

(4)
சாற்றுமுறை திருநாளில்
நாயகனைச் சோதித்த
நங்கையவள் பாதத்தை - கிளியே
நாமெல் லோரும் வணங்கிடுவோம்.

(5)
பேரா புரிநாயகியும் திருப்பேரை நாயகியும்
தேச மெங்கும் புகழ் பரப்பி - கிளியே
ஜெயமதை நமக்களிப்பாள்.

மங்களம்

1. கண்ணனுட சன்னதியில்
கலியன் சுவாமி எழுந்தருளி
நற்றகர் நவ திருப்பதி
பிரசாதம் கொண்டெழுந்தருளி
பட்டர்பிரான் ஸ்வாமி பணிந்து
சட்டமாய் அமர்ந்து நிற்க
அரங்க நகர் அப்பன் பார்த்து
ஆனந்தமாய் மகிழ்ந்து நின்றார். (மங்)

2. பாரெங்கிலும் சஞ்சரித்து
பக்தர்களை சீர்திருத்தி
பக்த பரி பாலருட
சித்தடி பணிந்து நின்றார்
உத்தமி தென்திருப்பேரை
நாயகி மனமகிழ்ந்து
உன்னதமாய் அன்னதானம்
பண்ணின வேதியர்கட்கும் மங்களம்
திருப்பேரை நாயகிக்கும் மங்களம்.

-------------


Comments