Srī kacciyappamuṉivar pirapantaṅkaḷ II


பிரபந்த வகை நூல்கள்

Back

ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் II



கவிராஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள்
பாகம் 2
4. கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடு தூது.
5. பஞ்சாக்கரதேசிகரந்தாதி. (குறிப்புரையுடன்)



கவிராஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் - பாகம் 2

உள்ளடக்கம்
4. கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடு தூது.
5. பஞ்சாக்கரதேசிகரந்தாதி. (குறிப்புரையுடன்)

Source:
கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்கள்.
முதற்பகுதி .
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து
இருபத்தொன்றாவது குருமஹாசந்நிதானம்
ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகள்
கட்டளையிட்டருளியபடி அவ்வாதீன வித்துவான்
த. ச. மீனாட்சி சுந்தரம்பிள்ளையால்
பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கப்பெற்றன.
உரிமை பதிவு .       விசய - புரட்டாசி 1953.
விசய - புரட்டாசி / முதற்பதிப்பு-1953.
திருவாவடுதுறை ஆதீன வெளியீடு 71.
அச்சிட்டது ஸ்ரீ முருகன் அச்சகம், கும்பகோணம்
கலைமகள் விழா வெளியீடு
--------
சிவமயம். - திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீ மெய்கண்டதேவர் திருவடி வாழ்க.
ஸ்ரீ மாதவச் சிவஞானயோகிகள் திருவடி வாழ்க.
ஸ்ரீ கச்சியப்பமுனிவரர் கழலடி வெல்க.

திருவாவடுதுறையாதீனம்.
ஆனந்த வாழ்வி லடியாரெல் லாரு மகங்களிப்ப
நானிந்த மாயத் தொடக்கினில் வீழ்ந்து நலிதனன்றோ
வானந்த நீண்ட மதிலா வடுதுறை வாழ்முதலே
தேனுந்து பங்கயத் தாளாய்பஞ் சாக்கர தேசிகனே.

திருச்சிற்றம்பலம்.

4. கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூது.


காப்பு.

மணிநீர்ப் புவிவியக்கும் வண்காஞ்சி வைப்பிற்
பிணிநீர் மலம்பெயர்க்கும் பெம்மான் – அணிசீர்செய்
வண்டு விடு தூதுக்கு வான்பொருளெ லாநிரம்பக்
கண்டுவிடு முக்கட் களிறு.

திருவழங்கும் பல்கலையுஞ் சேர்க்குமிடர் தீர்க்கும்
அருள் வழங்கு மானந்த மாக்கும் – மருவழங்கும்
ஆத்தி மதிமிலைந்த வானந்த ருத்திரனைத்
தோத்திரஞ்செய் வார்க்குத் துனைந்து.

நூல்.

1. பூமாது புல்கும் புயல் வண்ணப் புத்தேளும்
நாமாது புல்குநளி னத்தோனுங் – கோமானும்

2. வானவரு மண்ணவரும் வானடைய வைந்தொழிலும்
தானடவி நின்ற தனிமுதல்வன் – வானமுதற்

3. பூதமுதற் காரணமாய்ப் பூத பவுதிகமாய்ப்
பேதமு மான பெருஞ்சோதி – கோதகன்ற

4. சிற்றறிவுக் குள்ளே செறிந்து திருமேனி
முற்று மெடுத்த முறைமையான் – முற்ற

5. மறையாக மங்கலைகண் மற்றுங் கிளந்து
முறையாவும் வைத்த முனைவன் – முறைபுரியும்

6. ஆருயிர்க்குப் போக மருத்தித் திறம்புயிர்கட்
கோருமருந் துன்ப முறுத்துவோன் – சாருடலின்

7. ஐந்தவத்தைச் சாக்கிரத்தி னார்வினையிட் டாவிகட்கு
மைந்துமல மிந்துவென வாட்டுவோன் – முந்து

8. மலமாற வண்கருணை மாறா வருளின்
நிலைமாறு பாக நிறுப்போன் – மலமூன்றும்

9. போக்கி முழுத்த புகருயிரை யாங்கறிவின்
ஆக்கித் தனைக்காட்டு மாண்மையான் – ஊக்கியெழும்

10. எற்றந் தவிர்த்தொளியி னேய்த்துத்தன் னோடொருக்கி
அற்ற நிலையரு ளானந்தன் – ஒற்றைமறை

11. மாவு மிருசுடரும் வான்விலங்கு மொண்கோட்டத்
தேவியமை தீர்த்தங்க ளோரிரண்டும் – மேவினர்க்குப்

12. பல்பவத்துத் தாதையரைத் தாயரைப்பல் கேளிரையில்
வொல்பவத்துக் காட்டுமிட மோர்மூன்றும் – வெல்பனுவல்

13. வாக்கியிழி மூகையென மூகை மொழி வாக்கியென
ஆக்குவது நீரமுத மார்த்துவதுந் – தேக்கெறிய

14. வேட்டன யாவும் விளைப்பதுவு மென்னவிருள்
ஓட்டுமணித் தெற்றி யொரு மூன்றும் – ஈட்டுழவொன்

15. றின்றி விளைப்பதுவித் திட்டஞான் றேவிளைவு
துன்றுவது கொய்யுந் தொறுமீள – நன்று

16. விளைவதென மும்மை வியனுலகும் போற்றும்
வளமலிந்த தெய்வவயன் மூன்றும் – ஒளிருமென்றூழ்

17. வேத னரியானை விண்ணோர் தொழத்தெரிக்கும்
ஆதி மடங்க லணை நான்கும் – மாதரமிழ்

18. தூற்றுபொலம் பூஞ்சூத மொண்ணிழல்சா யாக்காஞ்சி
தோற்றுகாய் பூவில் சுவைப்புளியல் – வேற்றலரும்

19. பூக்கு மிருப்பைமலர் பொன்னத்தி யென்றுவிண்ணைத்
தாக்குங் கடவுட் டருவைந்தும் – தேக்கமலம்

20. எல்லிற் பகற்குமுத மேய்ந்தலர்வ தோர்நாளத்
தல்லிக் கமலத் தலர்மூன்று – புல்லுவது

21. வானர மாக்குவது வண்மை தருவதொன்னார்க்
கூனமுய்ப்ப தாந்தடங்க ளோரைந்தும் – வானமழை

22. காலமன்றிப் பெய்யக் கரைமஞ்ஞை வேட்டவெலாம்
சாலவரு ணேமிமறை சாற்றுகிளி – நூலிசைவல்

23. பூவை முழுதுணர்க போதங் கணித்தாந்தை
பாவு புகழ்ப்பறவை யோராறும் – தேவர்மொழி

24. கேட்ப வுரகாமொழி கேட்பவிண்ணூர் காணவிழு
தேற்பதின்றித் தீப மெரியமுயற் – கார்ப்பொடிபம்

25. மங்கத் திசைமயக்க மல்கவொலித் துந்துமிகள்
பொங்கத் திகழ்ந்த பொதுவேழும் – தங்குபிணி

26. சீப்ப மனக்கினிய சேர்ப்ப விழைந்தவெலாம்
யாப்பமணி யேரிசைப்ப வேமருவுக் – கோப்பப்

27. புரவலன் வாழ் வுய்க்கமெய்ஞ்ஞா னம்புணர்த்த வீடு
தரவமைந்த தண்பொய்கை யெட்டும் – வரவிமையோர்

28. ஆக்கவிடந் தீர்க்கசித்தி யார்த்தவுயிர் நல்கவழக்
கூக்கி யறுக்க வுறுபிணிபுண் – போக்கவுடல்

29. பட்ட துணிபொருத்தப் பாற்றவினை மெய்ஞ்ஞானம்
ஒட்ட வமைந்தசிலை யொன்பதும் – அட்டும்

30. இரசதம்பொ னாரமில கிந்திர நீலம்
குருவிந்தங் கோதில் வயிரம் – புருடரா

31. கங்கலுழப் பச்சை கதிர்த்தவயி டூரியமென்
பொங்கு மழை நல்குபொழி லொன்பதும் – தங்கில்

32. திசைமயக்கக் கல்விநலந் தேற்றமருள் சோரர்க்
கிசைவிக்கப் பல்வடிவு மேய்ப்ப – வசைவினைஞர்

33. மூங்கையுறப் பாதலத்தின் முற்றுபிலங் காட்டவுற்றோர்
தாங்கள்பிறர் காணாத் தகுதிபெற – ஓங்கொளிப்பொன்

34. மாணிக்க மாரி பொழியவரஞ் சாவாமை
பேணிக் கொடுக்கப் பிறங்குபகல் – ஏணிரவு

35. மாறுபெறக் காட்ட வமைந்து வயங்கியிடர்க்
கூறுசெயு மன்ற மொருபதும் – பாறயிர்நெய்

36. தேன்கருப்பஞ் சாறு திகழ்ந்தனநன் முத்திநெறி
வான்கதிமற் றேனையுல கத்துவழி – தான் கருதக்

37. காட்டுவன சாயை பிணிப் பக்கலந்தோர் தாமயரார்
மீட்சியுற வித்தின்றி மென்பயிர்கள் – ஈட்ட

38. இயைந்ததறு நீரினவென் றெவ்வுலகும் போற்ற
உயர்ந்மணிக் கூவல்பதி னொன்றும் – நயந்துதன்பால்

39. இட்ட வெட்கு நெய்யொருபா லீயுந் தனிச்செக்குந்
தொட்டனபொன் னாக்குஞ் சுடர்ச்சிலையும் – முட்டும்

40. வினைப்பயனைத் தாமே விளைக்குமொரு கல்லுந்
தனைப்பொருவுங் கற்பாவை தானும் – எனைத்துமருள்

41. தாவா வயிரவனார் தாங்குநட னச்சிலம்பார்ப்
போவாது கேட்கு மொலியிடமும் – பாவாணர்

42. எண்ணித் தளரவின்னு மீண்டுபல விம்மிதமும்
அண்ணற் கவுரியறச் சாலைகளும் – நண்ணிக்

43. குடக்கோடி நீர்கரக்குங் கோணைநத மொன்றும்
இடக்காம ரேரி யிரண்டுந் – தொடக்கீர்த்து

44. முத்தியருண் மண்டபங்கண் மூன்று நிலநான்கும்
அத்தன்மகிழ் புட்கரிணி யாங்கைந்தும் – உத்தமிமுன்

45. காத்தமத மாறுங் கடிநதிக ளோரேழும்
ஆத்தனருள் பீட மவையெட்டும் – சாத்தர்களோர்

46. எண்மருந் துர்க்கையர்க ளெண்மருங் காளியர்கள்
எண்மருமாற் குச்சிறந்த வெட்டிடமும் – விண்ணவரும்

47. பற்றியெழு வாரத்தும் பாய்ந்தாட மிக்குரிமை
உற்றமணித் தீர்த்தங்க ளொன்பதும் – முற்றுமலம்
48. போக்க வமைந்தசிவ புண்ணியங்கள் பத்துமவை
ஆக்குமருண் மூர்த்தம் பதினொன்றும் – தேக்குபுகழ்

49. மந்திரமைந் தோடாறு மான நலனளித்துப்
பந்தமறுக் கும்பெயர்கள் பன்னிரண்டும் – இந்து முடி

50. வாய்ந்தவிறை யோன்பல் வளம்பதியு ளுஞ்சிறந்தேர்
ஏய்ந்த தலங்க ளிருபதும் – ஆய்ந்துமையாள்

51. முட்டா தெடுத்தவற முப்பத் திரண்டுமவட்
கொட்டாய கோட்டமுத லொள்ளிடமும் – மட்டூறும்

52. கோதைக் கடம்பன் குமரகோட் டம்முதலாம்
தீதற்ற பற்ப றிருநகரும் – போதகத்துப்

53. பிள்ளை பலதளியும் பீடுடைவெய் யோன்முதலோர்
கொள்ளுமுயர் தேவ குலத்திரளும் – தெள்ளுபல

54. தீர்த்தமுந் தேவர் திரளும் பிறவுநனி
கூர்த்த வளமுங் குடிகொண்டு – பார்த்தலையில்

55. ஓங்கிய காஞ்சி யொருநகரா யந்நகரில்
தேங்கிய தீர்த்தத் திரளாகித் – தாங்குமருள்

56. ஏகம்ப நாதரா யென்று மினிதிருந்தும்
பாகம் பலவான பல்லுயிர்க்கும் – மோகம்

57. படைத்தமலந் தீர்ப்பப் பரிந்ததிரு வுள்ளம்
தொடுத்த கருணை துனைய – அடுத்தருளும்


58. மற்றுமொரு மூன்றுகம்பம் வாலீச நந்தீசம்
வெற்றிமயா னம்விண்டு வேசமெழின் – மத்தள

59. மாதவே சஞ்செவ்வந் தீசம் வருணேசம்
மாதலீ சந்திரு மாற்பேறு – தீதில்

60. அனந்தபத்ம நாபேச மானவகத் தீசம்
கனிந்தகட கேசங்காப் பீசம் – முனைந்தவிரா

61. மேச்சுரம் வெல்பரசு ராமேச் சுரமபிரா
மேச்சுரம் வாழ்விச் சுவநாதம் – தூச்சிவாத்

62. தான நவக்கிரகே சம்யோகா சாரியர்சூழ்
தானமங்க ளேசந்தா னேதோன்றும் – தானம்

63. இறவாத்தா னஞ்சுரக ரேசந்தீர்த் தேசம்
பிறவாத்தா னங்கச்ச பேசம் – நெறிக்காரைக்

64. காடுசாத் தீசங் கயிலாயங் கற்கீசம்
ஆடகே சஞ்சீ ரமரேசம் – நாடும்

65. இரேணுகே சஞ்சவுன கேசங்கா மேசம்
பராசரே சம்பாண்ட வேசம் – வராக

66. புரமணிகண் டேச்சுரநற் புண்ணிய கோடீச்
சுரஞ்சத்த தானஞ்சோ மேசம் – பரவுமிட்ட

67. சித்தி யயிராப தேசமோ ணன்காந்தன்
பத்திபுரி சூழல் பகர் முத்தீசம் – சுத்த


68. அநேகதங் காவதம்வா ணீசமந்த கேசம்
இனாத லறுஞ்சலந்த ரேசம் – பணாதரே

69. சம்பணம ணீசஞ்சார்ந் தாசயந் தக்கேசம்
வம்பில்சித் தீச மதங்கேசம் – நம்புமரி

70. சாப பயந்தீர்த்த தானமா லிங்கமா
தீபதே சம்விடுவச் சேனேசந் – தாபமறு

71. வன்னீச் சுரநார சிங்கீச் சுரமாண்டு
கன்னீச் சுரமாகா ளேச்சுரம் – வன்மீக

72. நாதம் பலபத் திரராம நாதமச்ச
நாதமுயர் முக்கால ஞானேசம் – காதம்பம்

73. ஒத்தூர் சதுரா னனசங் கரமும்பர்
ஏத்துமறை நூபுரங்கண் ணீச்சுரம் – தோத்திரிக்கும்

74. வீரரா கேச்சுரநல் வீராட்ட காசஞ்சீர்
பாரளாஞ் சேனா பதீச்சுரம் – ஏரளாம்

75. மேற்றளிகா ரோணம் விளங்கு பனங்காட்டூர்
போற்று குரங்கணின்முட் டம் போக்கும் – நீற்றும்

76. உருத்திரர் சோலையீ ரொன்பதின்மர்ச் சேர்த்த
உருத்திரர் நூற்றுவர்க ளுற்றுக் – கருத்திசையப்

77. பத்திபுரி நூற்றுப் பதினெண் டளிபிறவாய்
அத்தளிக டோறு மவிர்கின்ற – முத்து முதற்


78. பல்வகைப்பல் வேறு மணியினும் பாய்கதிரோன்
எல்வகைமைக் கேற்ப விலங்கியாங் – கல்கலுறும்

79. வெவ்வே றுருக்கொண்டு வேவ்வேறு பேர்கொண்டு
வெவ்வே றருள்கள் விளைத்தாலும் – எவ்வமறும்

80. மானிடரின் வானவர்கள் வானவரின் மாமலரோன்
ஆனவனின் மாயோ னவன்றன்னின் – ஞானமிகும்

81. மாதவர்க ளன்னவரின் மாகணங்க ளன்னவற்றிற்
சாதலறும் பூதத் தலைவர்கள் – ஓதவரிற்

82. சேயிலைவே லோனவனிற் றிண்களப மற்றதனிற்
பாயமணி மேகலைய பார்ப்பதி – மீயுயர்ந்தாங்

83. கேனையர்கள் போற்று மிடமூர்த்தந் தம்மினுமம்
மானனைய நோக்கி வழிபட்டுத் – தான்மகிழ்ந்த

84. தூங்குசினை மாவடியுஞ் சோதிலிங்க முஞ்சிறந்த
ஓங்குருத்தி ரேச வுயரிலிங்கம் – ஆங்கவற்றோ

85. டொக்கு முமையா ளுருப்பாதி தன்காணி
கைக்கொண்ட வேகன் கதியமுழு – மெய்க்கொண்டு

86. நாமமுங் கொண்ட நலத்தகையோர் போற்றுதலிற்
காம ரவற்றுள்ளுங் காழிலோர் – தாமருவும்

87. ஆனந்த ருத்திரே சத்தமல மூர்த்தமே
தானந்த னோடுந் தலையாவ – தூனம்

88. தவிர்பொருள்கள் பற்பலவுந் தாழ்வில்சுக மற்றும்
அவிர்துறக்க மாதி யவையும் – இவர்கின்ற

89. மேலான வின்ப விளைவுந் தலைமைகளும்
மாலாவ வென்று மதித்தொரீஇச் – சாலாத

90. ஆனந்தத் தானந்த லின்றி யினிதெழூஉம்
ஆனந்த மிக்களிக்கு மாட்சியால் – தானந்த

91. ஆனந்த நாம மளாவலி னத்தகைய
ஆனந்த ருத்திரே சத்தென்றும் – ஆனந்தன்

92. ஏகம்பம் போல வினிதரசு வீற்றிருந்து
மாகம் பணிய வளங்கொழிப்போன் – மேகம்

93. படியுமிளந் தெங்கு பயில்கமுகஞ் சூதம்
கடிகொள் வருக்கை கதலி – அடரும்

94. முருகு நரந்த முகிழ்தாடி மங்கள்
கருனைமஞ்ச ளிஞ்சி கலந்து – பெருகு

95. வளங்கொள் படப்பை மருங்குடுத்துத் தீந்தேன்
துளங்குமலர்ப் பிண்டிதொகு நாகம் – இளங்கணிகள்

96. ஆர நறுந்தேக் ககில்சரள மாச்சாமந்
தாரமுருக் குத்தா தகிவெள்ளில் – வேரல்

97, மருதுகுமிழ் போதி மகிழ்வழைபுன் னாகத்
தருவெவையும் வேலியெனச் சார்ந்து – முருகுவிரி

98. மல்லிகை சாதி மயிலை குருக்கத்தி
முல்லை குளவி முதிர்செருந்தி – வில்லங்

99. கணவிரங்கூ தாளங் கடுக்கை கடம்பு
மணம்விரிந்த நந்தியா வட்டம் – இணர்விரியும்

100. பாடல நீள்சண் பகந்தமா லங்கோங்கு
நீடிய நந்த வனநிரந்து – தோடுவிரி

101. தேங்கமல மொண்குமுதஞ் செங்கழுநீர் நீலநெய்தல்
ஆங்கமலி பொய்கை யணியோடை – தேங்குபுனல்

102. வாவிநறுங் கூவன் மணற்கேணி வண்புனற்கால்
தேவரும் வீழச் செறிந்தோங்கிப் – பூவைமயில்

103. கிள்ளை புறாச் சேக்குங் கெழுமணிசெய் மாடநிரை
அள்ளுமெழின் மேடை யகன்றெற்றி – ஞெள்ளல்

104. தலைப்பெய்த வீதி தலைத்தலைகேர் போகி
மலைப்பெய்த யாரு மலிந்து – நிலைப்பெய்தி

105. வந்தொழுகும் வேக வதிமருங்கு வீற்றிருந்த
அந்தநெடுஞ் சூழ லதினின்றும் – சுந்தரஞ்சேர்

106. வானுலக மேன்மை பெற மண்ணுலகஞ் செம்மாப்ப
ஈனவிடர் முற்று மிரிந்தோட – ஆன

107. அறந்தழைப்ப வன்ப ரகந்தழைப்ப வன்பின்
திறந்தழைப்பச் செல்வந் தழைப்ப – மறந்தழைத்த

108. வேற்கணா ருள்ளம் விடை கொள்ள நல்லுலா
ஏற்குமா கொள்ள வினிதுறீஇ – மாற்குமால்


109. கொள்ளுந் திருவழகு கொண்டுவெவ் வேறுபல
ஒள்ளிய வூர்தி யுவந்தருளி – நள்ளுறுநாள்

110. தெள்ளிதிற் காலந் தெரிப்போர் துயிலெழுப்பப்
பள்ளி யறைதணந்து பாவையொடு – மெள்ளப்

111. புறம்போந் தருளிப் பொழிகதிர்மா ணிக்கத்
திறம்பூண்டு விண்ணோங்கு செல்வ – நிறம்பூண்டு

112. பன்மணி மாலைகளும் பல்கனி மாலைகளும்
பன்மலர் மாலைகளும் பைம்பொன்னின் – வின்மலிய

113. ஆக்கிய பூந்தொடையு மாடிகளுஞ் சாமரையும்
தூக்கியகஞ் சுற்றிற் றுயல்கிற்பப் – பூக்கணமும்

114. மிக்க மருக்கொழுந்தும் வெய்யமரு வும் வேரும்
தொக்க படலை சுடர்ப்பட்டும் – தக்கவெலாம்

115. சித்திரித்த பட்டுஞ் செறிய விதானித்துப்
பைத்த மணிக்கம் பலம்படுத்துப் – பித்தியெலாம்

116. கண்ணடியும் பாவைகளுங் காமர் மணிவிளக்கும்
வண்ணமலர்ப் பட்டும் வதிவித்துத் – திண்ணிய தூண்

117. வாருறைகள் சேர்த்து மருங்குமலி பூம்பந்தர்
ஆருமணித் தூண்க ளவைதோறும் – நேரும்

118. கதலி மடற் பூகங் கனிபலவும் யாத்து
மதவுவண்ணத் தூசு வயக்கிக் – கதிர்பசும்பொற்


119. சுண்ணமுந் தாதுந் தொகுவிரையும் பன்மணியும்
கண்ணகு பூவுங் கமழ்சாந்தும் – வெண்ணிறத்த

120. வான்பொரியு மச்சுதமும் வண்கடுகுங் குங்குமமும்
நானநறு நீரு நனிசிந்திக் – கானமென

121. நீண்ட கொடிநிறுவி நித்திலப்பொற் றோரணங்கள்
காண்டகைய சுற்றிற் கதிர்ப்பித்துப் – பூண்டகைய

122. பாவை நடமாடப் பல்லோ வியப்படங்கள்
கோவைபட வாங்காங்குக் கொள்வித்துப் – பாவு

123. படம்விரித்து நான்முகத்தோன் பார்த்தயிர்ப்பச் சீர்த்த
தடவுமணி மண்டபத்தைச் சார்ந்து – கடவுள்,

124. மடங்கலணை யேறி வதிந்து பழைய
விடங்கவணி முற்றும் விலக்கி – உடங்கமர்ந்த

125. பாவைமகி ழெண்ணெய் பயினெல்லி மாமஞ்சள்
ஆவின்வரு மைந்து மளாவியது – தாவினறும்

126. பாறயிர்நெய் தேன்வேழப் பைஞ்சாறு பல்லமிர்தம்
வீறு பலவிரத மென்கனிகள் – ஊறுமிள

127. நீர்சந் தனக்குழம்பு நீவில் விரைநறுநீர்
கூர்சந்த வேதக் குருக்கலநீர் – சீர்தந்த

128. எல்லா முறையி னினிதாடி மெய்யீரம்
நல்லா யிழைப்பட்டி னன்கொற்றி – வில்லார்

129. மணித்தலைநாண் கொண்டு வயங்கரையின் முற்றும்
மணிக்குயின்ற பொன்னாண் வயக்கித் – தனக்குமிச்சில்

130. காப்பட்ட கோவணமு னண்ணிடத்தி லொண்கிரணத்
துப்பட்டுக் கோவணத்தைச் சூழ்வித்து – நீப்புறுவர்

131. கொம்பனையார்க் கன்றிவறங் கூரா வுறுப்பனைத்தும்
செம்பட் டுடையாற் றிகழ்வித்து – வம்புடைமேற்

132. செம்பொற் கிரணச் செழுந்தூ சிருபாலும்
பம்புற்ற தொங்கல்பயி லச்சாத்தி – நம்புற்ற

133. குங்குமங் கோரோ சனைபுழுகு கத்தூரி
பொங்குகருப் பூரம் புதுப்பனி நீர் – எங்கும்

134. விரைக்கக் குழைத்தெடுத்த மென்னறும்பூஞ் சாந்தம்
வரைக்குநிகர் மார்ப மெழுகித் – திரைக்கும்

135. மதுமலர்ப்பூந் தாது மணிதகர்த்த சுண்ணம்
அதிகவிரைத் தூளியுமே லட்டிக் – கதுவு புனல்

136. ஈரம் வறள வியம்பு புகையைந்தும்
சாரன் மழையிற் றவழ்வித்துப் – பாரக்

137. கருநீற வாருயிர்க்குக் காசற்ற கற்பத்
திருநீறு நெற்றி திருத்திக் – குருநீ

138. றழியாது பாங்க ரடியருளந் தோறும்
ஒழியாத் திலக முறுத்துப் – பொழிசீதக்

139. கங்கைமக ளோடு கலைமதியஞ் சேர்ந்திருத்தல்
தங்கு மிடமுறையிற் சான்றாலும் – அங்கே

140. விதிர்க்கு முலகர் விழிக்கொளிப்பான் போலக்
கதிர்க்குமணி மோலி கவித்துக் – கொதிக்குமொரு

141. கொக்கிறகோ வென்னக் குருவயிரங் கைசெய்த
தொக்கதிர்ச் சூட்டுச் சுடர்வித்துத் – தக்கதந்தை

142. தாயுந் தளரச் சரந்தொடுக்குந் தீக்கடவுட்
காயுங் கடவுள் கதிர்ப்பெய்தல் – ஏயுமஃ

143. தென்றாலுந் தீயார்க் கிடங்கொடா ரென்பதுற .
வென்றாலும் பட்ட மிளிர்வித்து – நன்றே

144. களிக்குமுடன் மாயுங் கரிசடுத்தா ரேனும்
அளிக்குணத்தா ரங்கமழி யாமை – தெளிக்குதல் போல்

145. வெற்றி மதனுயர்த்த வெய்யகொடி வீற்றிருந்த
கொற்ற மகரக் குழையணிந்து – பெற்றசுகம்

146. நல்லா ரிடத்திற் பிறந்தாலு நல்லார்தாம்
செல்லா விடத்திற் செறித்தாலும் – பொல்லாதார்

147. பண்பிற் றிரியாப் பரிசேபோ லாலாலம்
கண்பொத்து நீலக் கறைமிடற்றுத் – திண்புலத்தார்

148. மீட்டுமொரு சூழ்ச்சியினவ் வெய்யோரை மாய்ப்பது போல்
ஈட்டுமணிக் கட்டுவட மேய்வித்து – வேட்டுழல்சிற்

149. றின்பினர்க ளின்ப விளைவேயென் றேமாப்ப
அன்பினர்க ளாரா வருளென்னும் – கொன்பல்


150. வளைத்தழும்புங் கொங்கை மணிச்சுவடுங் கண்கள்
திளைப்ப வெளிச்சிறப்ப வேனும் – அளிப்பின்

151. றிருவர்பா லெய்தார்க ளெண்ணவெண்ணி யாங்குக்
குருமணிக்கே யூரந்தோட் கோத்து – மருமத்துப்

152. பொன்னரி மாலைகளும் பூவினறுந் தொங்கல்களும்
மின்னகு மொன்பான் வியன்றெடையும் – நன்னர்

153. இலைமுகப்பைம் பூணு மிருங்கண்ணித் தாரும்
குலவு செழுங் கொன்றையொடுங் கூர்த்திட் – டுலகமெலாம்

154. காப்புக் கமைந்ததற்கோர் காப்பின்றே யாதலிற்பொற்
காப்புக்குங் காப்புக் கரமாக்கி – நீப்பிலொற்றை

155. ஆழி யுருட்டு மகங்கை விரறோறும்
ஆழி பலபூண் டவிர்வித்துப் – பீழை

156. கழல வினைகள் கழல் மலங்கள்
கழலக் கழல்கழற்கால் வீக்கிக் –கழல்முன்னர்ப்

157. போதந் தொளித்த புரையோனைக் கொன்றுபுவி
மீது தனைவிளங்கு வித்ததிறல் – மாதவனைத்

158. தாட்கவைஇக் காணவினிச் சாரென் றழைப்பனபோல்
ஆர்க்கு மறைநூ புரமணிந்திட் – டேற்கவின்னும்

159. வேண்டு மணிபலவு மெய்ப்படுத்து வெங்கதிரோன்
காண்டகு மண்டிலத்துக் கண்ணுற்று – மாண்டதன

160. தேர்விளக்கி யாங்கரவுண் டீனுமதி போலுறைபோய்ச்
சீர்விளங்கு மாடி தெரிந்தருளிப் – பார்துளங்கப்
161. பல்லியங்க ளார்ப்பவிரு பாற்கவரி துள்ளமணி
வில்லுமிழ் வெண்கவிகை மேனிழற்ற – மெல்லமெல்ல

162. வேத்திரத்தின் கையர் மிடைசனநீக் கக்கொடுபோய்
யாத்த வெழினி யிடம் வீழ்த்து – மூத்தவன்பின்

163. வைத்தநறும் பாளிதமும் வண்டயிர்நெ யக்காரம்
மெத்து சுவைப்பயறு மென்கடுகு – பொத்து

164. புளிமுதல்வெவ் வேறுவிராய்ப் போக்கின் றமைத்த
மிளிரமுதும் வெற்ற வமுதும் – ஒளிர்கருனை

165. பாகு துவையல் பலவறைய லாதிகளும்
பாகமுற வூறும் பலகாயும் – மாகமுஞ்சென்

166. றார்கடிய நோலை யடைநெய்க் களிமிதவை
வார்கழையின் பாகு மணற்பாகு – சீர்கலவும்

167. சிற்றுண்டி பற்பலவுந் தேநீ ரிளநீர்வார்
உற்ற கழைநீ ருறுநீர்மோர் – பொற்ற

168. பலகனியின் சாறுநறும் பாறயிர்தேன் மற்றும்
கலவு மருளாற் கரந்தொட் – டிலகு

169. கலங்கழித்துக் கைபூசிக் காமர் கவுளின்
அலங்குபஞ்ச வாச மடுத்துத் – துலங்குப்பட்டின்

170. ஆனன நீவி யரும்புகைபஃ றீபவகை
ஊனமினீ றாடி யொளிர்கவிகை – பானிறத்த


171. சாமரை யாலவட்டஞ் சாந்தாற்றி பற்பலவும்
ஏம முறவினிது கொண்டருளி – நான்மறையும்

172. அன்பர் தொடுத்த வருந்துதியும் பல்லியமும்
முன்பு தொடங்க முறையாற்கேட் – டின்பக்

173. குலமுருக்கொண் டாலன்ன கோதையர்நேர் நேரே
கலவி நடமாடல் கண்டு – சுலவியெழும்

174. கற்பூர தீபமெதிர் கண்டடுத்தோர் யாவர்க்கும்
பொற்பூரு நீறு புரிந்தருளி – அற்பூறும்

175. காமன் குடைக்குக் கலைநிரப்புஞ் சென்னிமதி
வாமக் கலைகண் மலிந்தெழுந்து – சேமக்

176. குளிர் நிரப்பிற் றென்னக் குருமணிகால் யாத்த
ஒளிநிரப்பும் வெண்கவிகை யோங்கத் – துளிநிரப்பிக்

177. கங்கை நதியைக் கரந்த பெரும்பகையால்
துங்கக் கடற்றலைவன் தூண்டுதலும் – பொங்கிப்

178. பொரவெழுந்த வெண்டரங்கம் போன்மெனவெப் பாலும்
சுரர்மகிழ்ந்த சாமரைக டுள்ள – வருதரங்கம்

179. கண்டு பொரனுமக்குக் காரியமன் றென்றூக்கம்
கொண்டு விலக்குங் குறிப்பேபோல் – ஒண்டாளம்

180. சுற்றி னழுத்திச் சுடர்விரிக்குஞ் சாந்தாற்றி
பொற்றமணி யாலவட்டம் போந்தசைய – வெற்றி


181. விருது பலமுழங்க வெண்சங்க மார்ப்ப
இருபுறமுந் தாரை யிரங்கக் – கருவிநிறை

182. பாவலர்க ணாவலர்கள் பல்கவிதை யேத்தெடுப்பப்
பாவலர்க டங்கள் பணிசெய்யக் – காவலர்கள்

183. நீதி பிறழாமை நின்றே வலரேவல்
ஆதி நடத்தி யருகுவரப் – போதுசொரிந்

184. தாவலங் கொட்டி யடியார் குலங்களிப்ப
நாவலந் தீவு நனிசிறப்பப் – பூவலயம்

185. மெத்திய வெய்யோன் விழுக்கிரணம் பாவாமல்
நித்தில வூர்தி நிழல்செய்ய – நித்திலத்த

186. மாலைக் கவிகை மழகதிரோ னேர்கலிகை
சாலக் கதிர்க்குந் தனிப்பிச்சம் – கோலக்

187. கொடிநிரையும் பல்காடு கூர்ந்தவென வாலக்
கடிநிறைத்த காவணத்தி னின்றும் – நெடிதெழுந்து

188. பல்லுறுப்பு முற்றிப் பசும்பொன் குயின்றமணி
அல்லிறுக்குங் கோயி லகத்துலாய்ச் – செல்லிறுக்கும்

189. கோபுர வாயிற் குழாங்கண் டுளங்களிப்ப
மாபுர வீதி மருங்கெய்தி – ஆபுரத்தில்

190. ஏவற்ற பொற்சிலைநே ரெய்துவதோ வென்னநனி
மூவுற்ற செம்பொன் முழுத்தேரில் – பூவுற்ற


191. சிங்கத் தவிசிற் றிகழ்ந்தேறி யைங்கரன் முன்
துங்கக் குலத்தேர் துனைந்தூர – மங்கையமை

192. நன்னர்க் கடம்ப னவையில் விறற்சண்டன்
பின்னர்ப் பொலந்தேர் பெரிதூர – முன்னர்

193. வரத்தி னருள் பெற்ற மத்தளமா யோன்றன்
கரத்தினனி யொத்திக் களிப்ப – நரைத்தலையோன்

194. தாளம் பிடிக்கத் தனிவிசும்பு காவலோன்
வாளம் பிடித்து மருங்கணைய – வேளம்

195. பிடித்தறியார் செங்கைதிரை யீந்து தனதன்
பொடித்தநறும் பாகடைப்பை பூணக் – கடித்தேன்

196. துளிமலர்மெல் வாசந் துதைந்துகுளிர் கொண்டு
வளியிளங்கா லாய்மருங்கு வாவ – நளிகொள்

197. தனிநீர்க் கடற்றலைவன் சார்ந்திறைவர் மெய்யில்
பனிநீர்த் திவலை பனிப்பக் – கனிதே

198. மதுபருக்கம் பான்மற்றும் வந்தடியா ருய்ப்பக்
கதுமென வெய்யோன் கனலி – விதுமூவர்

199. சுத்தி புரிந்து துணைக்கை யிடையேந்தி
அத்த நுகர்கென் றளித்துவர – எத்திசையும்

200. போற்றுயரீ சானன் புனிதனருள் பெற்றெய்தி
ஏற்றுமிசை யேற்றுக் கொடியுயர்ப்ப – ஆற்று பணி


201. நீக்கிக் கழியு நிலையினரை நன்னெறியில்
தாக்கி யமன் றலைநிறுவப் – போக்கின்றி

202. மற்றை யமரர்களும் மாநகரி னாட்சியரும்
உற்ற தொழின்மை யுஞற்றிவர – முற்றும்

203. இரவுபகல் காட்டு மெறுழுருளை மான்றேர்
வரதன் மணிவீதி வந்தான் – புரவளிக்கும்

204 அத்திர சாலை யமுதடு சாலையா
வைத்த தனிச்சே வகன்வந்தான் – பைத்தமணி

205. நாகமு நீள்கோட்டு நாகமுஞ் சூழ்ந்திருப்ப
மாகரும் போற்றுமுடை யான் வந்தான் – ஆகும்

206. பரிசமுருக் காண்டல் பகர்கேள்வி யோர்பால்
மருவுமணிப் பூணினான் வந்தான் – பரவை

207. அலைத்தும் புவிபெயர்த்திட் டந்தரத் தோங்கி
மலைத்த விடைக்கொடியான் வந்தான் – நிலைத்த

208. கடவுளர்தம் மாதர் களம்வறங்கூ ராது
மிடல்படைத்த நன்மிடற்றான் வந்தான் – படர்கருமம்

209. ஈட்டா ருயிர்விழிக ளெல்லா முருக்காணக்
காட்டாகு முக்கண்ணி னான்வந்தான் – வேட்ட தருள்

210. ஆனந்த ருத்திரத்தெம் மண்ணல்வந்தா னென்றோதை
வானுந்து சின்ன மலிந்தூத – ஞான


211. உறுவ ருவவும் பனவ ருவவும்
மறைக ளொலியின் மலியச் – செறியும்

212. மதலை நிரையின் வரிசை யெனத்திண்
மதமைக் களிறு மருவப் – பிதிரும்

213. திரையி னிரைக டிரள்வ தெனப்பல்
பரியி னிரைகள் படரப் – பெரிய

214. பகடு கடவிப் பரவு மரையர்
மகுட நிரைகள் வயங்கப் – புகரில்

215. கடவுண் மகளிர் கலவி முறையின்
நடன வகைக ணவிலப் – படகம்

216. பதலை முருடு பணவ முழவம்
முதல பலவு முழங்க – மதிவெல்

217. வளைகள் குழல்கள் வயிர்க ணரம்பின்
கிளைக ளினிது கிளர – ஒளிசெய்

218. மடல்கொ டருவின் மலரி னமரர்
படியிற் றிடறு படுப்ப – அடியர்

219. உதவு கனக மழையொ டுதவும்
உதக மதனை யொழிப்ப – மதவொண்

220. பொழில்கண் மழைகள் பொருவ தெனப்பொன்
செழிபன் மணிகள் சிதறப் – பொழியும்


221. கனிகள் கழையின் றுணிகள் பொரிகள்
சனமெய்த் தலையிற் றதையக் – கனக

222. தருவுங் கொடியுந் ததையப் பதண
நிரையு மெவரு நெருங்க – விரவு

223. மனிதர் குலமு மலர்வ தெனப்பல்
புனித மரமும் பொலிய – இனிய

224. புகைவிண் பொதியப் பொழிசெங் கிரணப்
பகல் செ லிரவிற் பயில – நிகழும்

225. இருளை யிழையி னொளியு மிரத
உருவி னொளியு மொறுப்பத் – தரையின்

226. வணங்கிடை மங்கையர் வண்ட லிகந்து
சுணங்கிவர் கொங்கை துளங்க – இணங்கி

227. மணந்தவழ் தொங்கன் மணந்து குழன்று
வணர்ந்து சுரிந்து மலிந்து – தணிந்து

228. பொருந்தள கங்கள் சரிந்து சரிந்து
வெரிந்தலை யொன்றி விளங்கப் – பரந்து

229. நெருங்கிய கொங்கை நிலந்திவள் வம்பு
மருங்கொளி யுந்து வடங்கள் – ஒருங்கு

230. செழுந்தோடை யொன்றனோ டொன்று செறிந்து
விழுந்து தவழ்ந்து விலங்க – எழுந்து


231. பணிந்த நிதம்ப மணிந்த வடங்கள்
பிணைந்து தழங்கல் பிறங்க – நிணந்து

232. கிடந்து சிலம்பு சதங்கை கிளர்ந்து
நுடங்கிடை நொந்தது நொந்த – திடங்கண்

233. டிருந்தெழு கென்று விளம்புவ தென்னத்
திருந்தடி நின்று சிலம்ப – விரைந்து

234 நடந்து தொடர்ந்து நனந்தலை ஞெள்ளல்
மிடைந்து சனங்கள் விலங்கப் – படர்ந்து

235. புகுந்தெதிர் நின்று பொழிந்தலர் செங்கை
முகிழ்ந்து சிரங்கொடு முந்தி – நெகிழ்ந்த

236. உளங்கொ டிறைஞ்சி யுவந்து நிமிர்ந்து
துளங்கி மருங்கு துவன்ற – வளங்கொள்

237. விசும்பர மங்கையர் விண்ணிட மெங்கும்
அசைந்தலர் சிந்தி யணங்கக் – கசிந்தெவரும்

238. போற்ற நெடுங்கொடியும் பூந்தோ ரணத்திரளும்
தோற்றிய மாடந் தொறுந்தீபம் – ஏற்றிநறும்

239. பூரண கும்பம் பொருத்திநறு நீர்தெளித்துக்
காரணவ வோங்குநடைக் காவணமிட் – டேரணவும்

240. வீதி யிடைக்கடவி வெய்தெதிரே தோற்றுதலும்
போதுமட மாதரொடு போந்தேனும் – நாதன்

241. கருணை பொழிமுகமுங் காதலெலாம் வல்லே
அருள வலர்ந்த விழியும் – பருதிபல

242. கோடி யொருங்கு குழீஇயனைய செக்கரொளி
நீடு முருவினிறை கோலமும் – பீடும்

243. மழுமான் றரித்து வயங்குமிரு கையும்
முழுவான் பயத்தை முனிந்து – செழுவான்

244. வரம்வழங்க வைத்த மலர்ந்தவிரு கையும்
பரம்வழங்கு பாதத் துணையும் – உரங்கிடந்த

245. கேழில் பிரணவம்போற் கேசரங்கொண் டேமலர்ந்த
கேழிதழித் தாரின் கெழுதகையும் – வாழிநனி

246. கண்டேன் புரிமுறைமை காணேன் கதழ்வினுளம்
விண்டேன் வெதும்பி மெலிந்தனேன் – தண்டாப்

247. புகுமுகம்யான் வீழப் பொழிகருணை காட்டி
நகுநயமு நல்கினா னேனும் – தொகுதவத்துள்

248. ஏது குறையுளதோ வெம்பெருமான் றான்கருதும்
தீதி றிருவிளையாட் டோவறியேன் – மாதவற்குச்

249. சங்காழி முன்னிங்குத் தந்தாரென் பார்கவர்ந்த
சங்காழி யென்கைத் தரவிரையார் – இங்கே

250. கலையொருவர்க் குய்த்தளித்தா ரென்பார் பறித்த
கலையெனக்கு நல்கக் கடுகார் – விலகவிங்கு

251. வேகவதி நீர் தடுத்தா ரென்பா ரெனதுவிழி
வேகவதி நீரை விலக்கிலார் – மாகளங்க

252. மேனிப் பசப்பரிக்கு வீத்தாரென் பாரெனது
மேனிப் பசப்பரிக்க மேவிலார் – ஊனவிட

253. வெப்பொழிய விண்டுவைத்தம் பானிறுவி னாரெனது
வெப்பொழியப் பானிறுவ மேவிலார் – ஒப்பனையாட்

254. காகங் குழைந்தா ரளியேன்றன் பாற்குறுகும்
ஆகங் குழையு மருளிலார் – சாகரத்தைத்

255. தாக்கியன்று காஞ்சி தனைக்காத்தா ரின்றுமது
தாக்கியெனைக் காப்பத் தயவிலார் – ஓக்கியசெங்

256. கல்லெறிக்குத் தம்பாதங் காணிகொடுத் தாரென்கண்
நல்லெறிக்குத் தந்திணிதோள் நல்கிலார் – வல்லி

257. அறமுழுது மாக்க வமைத்தாரிக் காம
அறமொன்றுந் தாமாக்க வண்ணார் – உறுவெப்புக்

258. கண்ணனுக்கிங் கானந்தங் காட்டினார் காதலித்தேற்
கெண்ணனுக்கு மானந்த மேய்த்திலார் – கண்ணனயன்

259. பூமகளிர் தம்மைப் புணரவளித் தாரிங்கிப்
பூமகளே னைத்தாம் புணர்கிலார் – தோமிலாக்

260. காப்பு நடனமிங்குக் கைக்கொண்டா ரென்னாவி
காப்பவுளஞ் சற்றுங் கடைப்பிடியார் – யாப்பு

261. மறைபுறத்தே செல்லாமை மீட்டுவளர்த் தாரென்
மறைபுறத்தே செல்லாமை வையார் – குறுகொருவன்


262. புண்ணுருவ மாற்றிப் புரவளித்தா ரிங்கெனது
புண்ணுளத்தை மாற்றிப் புரவளியார் – எண்ணில்

263. இடர்துமித்தன் மூத்தபிள்ளைக் கேய்த்தா ரெனக்கோர்
இடர்துமிக்கத் தாமிங் கிசையார் – படருமிரு

264. மாலாரைத் தம்முருவா வைகுவித்தா ரிங்கடுத்த
மாலேனைத் தம்முருவா வைகுவியார் – மாலோ

265. டலருடையா னைத்தோ ளணைத்தார்மா லோடிங்
கலருடையே னைத்தோ ளணையார் – குலவுகற்ப

266. காலத்துங் காஞ்சி யழியாமை காட்டினரிக்
காலத்தென் காஞ்சிதனைக் கட்டழித்தார் – கோலத்தம்

257. கைப்பட்ட மென்றுரும்பாற் காமருவிண் ணோர்தூண்டு
மொய்ப்பட்ட வெம்படைகண் மொத்தினார் – மெய்ப்பட்ட

268. வெல்லுருவ முற்றும் விராய்நிறைத்த வென்னுள்ள
வல்லிரும்பைப் பூவின் மலக்கினார் – வெல்லெரியின்

269. மூவ ருடல்குளிர்ப்ப முன்னினார் தண்மதிக்கென்
ஒவி லுயிர்வெதும்ப வுன்னினார் – மேவுதலும்

270. பொய்யழிய வேதவியா சன்மையல் போக்கினார்
மெய்யழிய வென்கண்மயல் வீக்கினார் – வெய்யவுறு

271. சாப மவரவர்க்குச் சாய்த்தார் கழையாய
சாப மெனக்குத் தகவைத்தார் – கோப


272. மகர வலிதொலைத்தா ரம்மகர மைந்தன்
மகர வலிவளர வைத்தார் – புகழ்வையம்

273. சுத்தி யொருதடத்துத் தோற்றினார் யான்சுத்தி
முத்த மிகழு முறைவைத்தார் – ஒத்த

274. அயிரா பதத்தி னருள்வைத்தார் யாரும்
அயிரா பதத்தி னருள் வையார் – அயராமைப்

275. பாலுத்தி யோர்முனிக்குப் பாலித்தா ரிங்கெனக்குப்
பாலுணவு வேண்டாப் பகை செய்தார் – சால

276. இரவு தமக்குரிமை யாக்கினா ரென்பால்
இரவிகல்வ தாக விசைத்தார் – பரவம்

277. அதிசயித்த வைந்தடத்தோ டாருமெனை யெண்ணி
அதிசயித்த வாறுதட மென்ன – வதனார

278. விந்தம் விழிக்குவளை மென்முகையும் பூவிரிவும்
அந்தி பகலுமுற வாக்கினார் – இந்தமுறைக்

279. கோட்டிபுரி கின்றார்முன் கோதற்ற நூன்முறையின்
வேட்டடியிற் பூசை விளைத்துவரம் – ஈட்டியநற்

280. காமனை யிங்குக் கடிவரோ பூசைபுரி
சோமனைக் காதத் துணிவரோ – பூமலியக்

281. காலிறைவன் றூவிக் களித்தலான் மெல்லவரும்
காலினை யிங்கே கழிப்பரோ - கோலவிமிற்


282. சேவினிது பூசைபுரி செய்கையான் மற்றிங்குச்
சேவின் மணியைச் சிதர்ப்பரோ – பூவியப்ப

283. ஆண்பெண்மை யாக்கினா ரப்பெண்ணை வாழன்றில்
மாண்பின்மை யாக மதிப்பரோ – காண்பினிய

284. மாவடியின் வாழ்க்கை மருவினா ரம்மாவிற்
கூவு குயிலைக் குமைப்பரோ – ஆவதிவண

285. என்னேயென் றெண்ணத் திரங்கினே னங்ஙனே
கொன்னே யுறுதி குறிக்கொண்டேன் – முன்னே

286. அரிதாழ்ந் தயனோ டளிப்பவுல கேத்தி
அரியோ டுலகயனு மீன்றான் – கருடன்

287. இகலோ டரவலைத்தா னேத்தியர வேத்திச்
சுகமே கருடவெனச் சொற்ற – திகவின்

288. றிரணியன்பூ சிப்பவர மீந்தார்பூ சித்த
நரமடங்க றாக்க நயந்தார் – பரவியொரு

289. வாணன்பூ சிப்பநொச்சி வாயில்காத் தார்நேமிப்
பாணிபூ சிப்பவன் பாடழித்தார் – மாணவரம்

290. அந்தகன் பூசைக் களித்தார் ரவனையொரு
மைந்தனைவிட் டாருயிரை வாங்கினார் – மைந்து

291. சலந்தரன்பூ சிப்பத் தகவளித்தார் தாமே
சலந்தகவன் னானுயிரைச் சாய்த்தார் – வலந்தொழுத


292. கச்சபத்துக் கீந்தார் கடலலைப்ப வைங்கரற்கு
வெச்செனத் தாக்கும் விடைகொடுத்தார் – மச்சம்

293. நயக்கவர மீந்தார் நவைகண்டு வாட்கண்
புயக்கவொரு மைந்தனைப்போ வித்தார் – வியக்கவரம்

294. வன்றிக் களித்தார் மறலமருப் புப்பறித்தல்
வென்றிக் குமரற்கு மேவித்தார் – ஒன்று வரம்

295. வாமனனுக் கீந்தார் வயக்கவயந் தண்டவனோர்
மாமகனுக் காகமகிழ்சிறந்தார் – நாம

296. நரமடங்கல் போற்றவர நல்கினார் மைந்தன்
சரபமெனத் தாக்கமகிழ் சார்ந்தார – விரகவர்பால்

297. இவ்வா றிருத்தலா லெண்ணி லடுத்தயர்ப்பின்
ஒவ்வாது சேட்படுத லுண்மையால் – எவ்வாறும்

298. தீங்குபுரி மாரன் செழுந்திங்க ளாதியொரீஇப்
பாங்கெனக்கு நல்கப் படர்வரே – ஈங்கென்றும்

299 இட்டசித்தி நாத ரெனவிருப்பார் மற்றெனக்கும்
இட்டசித்தி யாக்க விசைவரே – விட்டவொரு

300. பூவுக்குங் கண்வாங்கும் புண்ணியனார் நொந்தவென
தாவிக்குங் காவ லமைப்பரே – மேவியிங்குப்

301. பன்னாளும் வைகும் பயனாற்றம் மோடொன்றா
எந்நாளும் வாழ்க்கை யிசைப்பரே – பன்னாளும்


302. தீதிரண்டி னானுமிங்குச் செய்திருந்தே னாயிடினும்
தீதெவர்க்கு மிங்குத் திருப்பணியாய் – மேதகுமா

303. றாக்குவார் தம்மையுளத் தாக்கு மளியேற்கும்
ஆக்கி யணைய வமைவரே – போக்கென்

304. றறியாப் பருவத் தடிபிழைத்தே னேனும்
பிறியாக் கருணைப் பெருமான் – குறியாத

305. தக்கனிங்குச் சாரத் தவறு தவிர்த்தவற்கு
மிக்க தலைமை விளைத்திட்டார் – தொக்க தமக்

306. கன்பரைப் பாழ்மதத்தி லாழ்த்தினோர் நண்ணுதலும்
கொன்பெரும் பாவங் குறைத்திட்டார் – முன்பிருவர்

307. யான் முதன்மை யான்முதன்மை யென்றிகந்தா ரெய்துதலும்
தான்முதன்மை யென்னத் தவறழித்தார் – பான்மை

308. திரிந்தொட் டகவடிவாய்ச் சேர்சனற்கு மாரற்
கரிந்து பிழை யெவ்வரமு மார்த்தார் – பிரிந்தவுளத்

309. தாழிகடைந் துங்கடுவை யாரக் கொடுத்துமுற்ற
பிழையம ரர்க்குப் பிரித்திட்டார் – வாழிமுன்னர்த்

310. தக்கனொடு கூடித் தவறிழைத்த விண்ணோர்கள்
தொக்கடைய நன்மைச் சுரப்பளித்தார் – மிக்கமர்த்த

311. வாளவுணர்த் தாம்வெல்ல யாம்வென்றா மென்றிகலி
ஆளமரர் சார வருள்கொழித்தார் – தோளிணைகள்


312. கண்டூதி நீவ வறைகூவுங் காழவணன்
தொண்டூற மீட்டுநலந் தோற்றினார் – பண்டேவல்

313. கண்டூ றுவணற்குக் காட்டாப் பிழையண்மி
விண்டேறு வாழ்வருள் வீக்கினார் – வண்டூதும்

314. தேங்கடப்பந் தாரான் றிருவருளி னேவலினை
நீங்கி யணையவரு ணீடினார் – ஓங்கல்

315. மகள் வாள் விழிபுதைத்து வந்தடிமை செய்யத்
தகவாள் கலப்புத் தரித்தார் – இகவாத

316. இத்தகைமை மிக்காரமற் றென்னையுந் தண்ணருளின்
வைத்தடிமை கொள்ள மதிப்பரென – ஒத்தெழுந்தேன்

317. தூதொருவர்க் காகத் துனைந்தார் தமையடுத்த
தூது வறிதாகச் சூழ்கலார் – ஆதலினால்

318. தூதுவிடிற் பாணித்தல் சூழா ரெனத்துணிந்தேன்
போதுநெகிழ்த் தூதும் பொறிவண்டே – தாதளாய்ப்

319. பில்குமது வுண்ணும் பிரமரமே மென்மலரின்
மல்கு மமளி மதுகரமே – நல்குமிசைக்

320. காளம் பயிலுங் கருஞ்சுரும்பே பூஞ்சோலைத்
தானம் பயிலுந் தகைலஞிமிறே – மானமிகு

321. சிம்புளுக்கு மஞ்சாத் திறலரியே சீறிவரும்
வெம்பரிக்கு மஞ்சா விறற்றும்பி – வெம்புலிகள்


322. தாக்குதற் கஞ்சாத் தனிமாவே குட்டிதழீஇ
ஊக்குதல்செய் யாத வுயர்மந்தி – ஏக்குலங்கள்

323. தாங்கி யுகையாத சாதகமே வில்லுதைப்பத்
தீங்கு புரியாச் சிலீமுகமே – ஓங்குரிமை

324. நெஞ்சத்தைத் தூண்டுவோ மென்னி னெடுவீதி
மஞ்சன் மணித்தேர் மருங்கெய்தி – என்செய்தி

325. கேட்கவெனத் தாழ்ந்து கிளப்ப முயன்றுபல்கால்
மீட்கப் பதமின்மை மேவலால் – தாட்கமலம்

326. கண்டுகொண்டே யண்ணல் கவின்வீதி தோறுமுலாக்
கொண்டருளிக் கோயில் குறுகிமணி – மண்டும்

327. உவளகத்திற் செல்ல வுடன்சென்ற தாங்கும்
இவறியது கூறவிட மின்றிக் – கவலுவதே

328. போலுமத னாலின்னும் போந்ததிலை போந்திடினும்
மாலுவது மீட்டும் வழங்காதே – சாலவிங்கு

329. நன்றுறுத்தப் போத னயந்தாலும் பல்புலனும்
சென்றுசென்று பற்றுதலுஞ் செய்யுமே – மன்றவங்கே

330. புண்டபெருங் காரியத்தைப் பொச்சாத் தலுங்கூடும்
மாண்டதன்று தூதுக்கு மற்றதுதான் – காண்டகைய

331. அன்னத்தைத் தூண்டின் மறையன்ன மன்றொருபொய்
சொன்ன பிழையாற் றொகுமன்னம் – என்னவும்


332. நம்பர் திருவுள்ள நாடுவன வல்லவன்றிக்
கொம்பனையாட் கன்னக் குருகன்றே – நம்பலுறும்

333. ஊர்தி யஃதிதனை யுய்த்தறியின் முற்றாமை
சார்வது முண்டு தகவன்றே – சீர்வதியும்

334. கிள்ளையைத் தூண்டிற் கிளந்தவலா லங்குரைக்குக்
கொள்ளக் கிளவாத கொள்கைத்தே – ஒள்ளிழையாள்

335. கைக்கிள்ளை யிக்கிள்ளை காணினுங் காரியந்தான்
பொய்க்கு மதுவும் பொருந்தாதே – மெய்க்குமொரு

336. பூவையைப் போக்கிலது போநெறியிற் கண்டோர்கள்
மேவினர் பற்றின் விடுதியின்றே – மேவவொரு

337. நன்புறவைத் தூண்டினது நாளுந்து துண்டொழிக்கும்
என்புறத்துத் தூதாக வெண்ணுமே – துன்பறியா

338. அன்றில்குயி றென்ற லவைவிடின்மா றாப்பகையாய்
ஒன்றுவன தூதா யுதவுமே – அன்றியுங்கேள்

339. எண்காற்புள் ளானார்க் கிருகாற்பு ளெவ்வெவையும்
கண்காணுந் தூதாங் கடனிலவே – ஒண்காரைத்

340. தூண்டி னதன்செலவு சூழ்ந்துவரப் பாணித்தல்
வேண்டுமத னாற்பிழையே மேவுமே – ஊண்டிகழும்

341. காருவரி சொல்லோ கடுங்குரல் வாய்திறப்பின்
ஆரழலே சிந்து மவையன்றிச் – சீரரையன்


342. வாகனமா யன்னான் வழியேவ லாற்றுவது
வேக வளியெதிரின் மீள்வதே – போகவது

343. செந்தமிழைச் செம்பொன்னைச் சேர்ப்பினவை தாஞ்செல்லா
பந்த முறக்கொடுபோம் பாலவே – முந்துய்த்தும்

344. வேற்றொருவர் வாய்திறக்க வேண்டுமே யென்செய்கை
வேற்றொருவர் காணா விதியதே – கோற்றொடிக்கைப்

345. பாங்கிமுத லோரைப் படர்விக்கப் பல்வழியும்
ஈங்கெனக்குச் சற்று மிசைவின்றே – ஈங்குரைத்த

346. பல்வகைய தூதும் பதனறிந்து சேய்நின்று
சொல்வகையி னன்றித் துணிபொருளை – நல்குவகை

347. காட்டுவன வல்லவே கண்ணிய பூங்கடுக்கைத்
தோட்டலர்த் தாரிற் றுனைந்தேறி – வேட்டதிது

348. நல்கெனமுன் னத்தி னவின்றருளி நாதனார்
செல்கென மீள்வதுநின் செய்கையே – புல்குதவம்

349. ஆற்றி மறையு மரவு மதியுமற்றும்
ஏற்ற மிகுமணியா யேய்ந்திருக்கும் – நீற்றர்

350. திருவுருவின் மீது திகழ்தெய்வத் தாரில்
மருவுதவ நீவளரா யேனும் – ஒருவிலுயிர்

351. ஆக்கைபொருண் மூன்று மளிக்கவென நேர்ந்தேற்கு
நீக்க மருந்துணையாய் நேர்வதே – போக்கில்


352. அரிய தவமா மகத்தீடு முற்றும்
பிரணவ மாகப் பிறங்கி – விரவுமணம்

353. எண்டிசையும் போர்ப்ப விறைவரே போலுயர்வு
கொண்டநறுங் கொன்றைக் கொழுந்தாரில் – தண்டுளித்தேன்

354. வாய்மடுத்துத் தேக்கெறிந்து மன்னுகளி மிக்குளர்ந்து
தாய்மறிந்து தாதளவித் தங்குநலம் – வேய்மதித்த

355. தோளியொரு பாலார்பாற் றுன்னுமங்கே யும்பெறுவை
மீளி புரியினிங்கு மேவுவை – கேளளியே

356. தூதுவிடு வார்க டுணிந்தபொரு ளேயிசையும்
தூதுபுரி வார்க்குமெனிற் சொல்லுவதென் – நீதகவில்

357. தோற்றுதலா னின்குலத்தைத் தூய்மைப்படுத் தாயதுவும்
நோற்றதே நீயதன்பா னோக்குதலின் – ஏற்றுருவாய்

358. மாயனனி தாங்கும் வரத னுருக்காணத்
தூயதிரு மேனி தொடநிகரின் – றாய

359. அருள் பெரிதுந் தாங்க நின்போ லார்பெற்றார் பெற்றார்
மருள்சிறிதுந் தாங்கவா ராரே – தெருளரியே

360. முன்னின்ப நின்னின்ப முற்றிய வென்னின்பம்
பின்னின்ப மன்றிப் பிறிதுண்டே – அன்னை நீ

361. ஆதற் குரிமை யடுத்தலா னிற்றூது
போதற்க ணாக்கப் புகன்றனேன் – போதுற்றி


362 வேட்ட பொழுதி னதுவாயே மேவினாய்
ஈட்டமிதன் மேலு மெனக்குண்டோ – பாட்டளியே

363. தன்பெருமை தானறியாத் தன்மையன்போல் வையகத்து
நின்பெருமை நீயு நினைகலாய் – முன்பொருநாள்

364. நின்னுருவங் கோடலா னன்றே நெடுவேலான்
முன்னிய வேத முழுதுணர்ந்தான் - நின்ன

365. தரியெனு நாம மணிதலான் மாயன்
இரவி வலாரியிவர் முன்னோர் – பரசுகரத்

366. தானந்த ருத்திரனுக் காளாய்ப் பணிபுரிந்து
வானந் தரிக்கும் வரம்பெற்றார் – மான

367. மடங்கலும் பார்ப்பதிக்கு வாகனமா யையற்
கிடங்கொளணைக் காலா யியைந்தே – தொடங்கரிய

368. எண்ணின்மிரு கக்குலமு மேத்து மரசுரிமை
மண்ணில் விரவி வயங்கிற்றே – கண்ணுதிறல்

369. வாசுகி யாதியுநம் மன்ன னடிபோற்றி
ஆசையுல கம்பரித்தின் பார்ந்தனவே – பேசியநின்

370. மந்தியெனு நாம மரீஇயன்றே நீமருவும்
கொந்தவிழ்கா வானரங்கள் கொண்டவே – உந்துபெயர்ச்

371. சாகஞ் சிலீமுகஞ் சார்ந்தன்றே விற்கணையும்
வேகம் பகைக்கழித்து வீறுவதும் – நீகொள்

372. அளியென்னு நாம மணிந்த கருணை
களியெவர்க்கு மாற்றுவது காண்டி – ஒளிர்தருநின்

373. வண்டென்னு நாம மணிந்த வளைமகளிர்
தண்டளிர்க்கைச் சீரளிக்குந் தன்மைத்தே - வண்டேநின்

374 நாமமே யண்மினர்க்கு நன்மை தருமென்றால்
நாமிநீ நல்கல் வியப்பேயோ – காமருநின்

375. எங்கும் வழங்கு மியற்பெயர்த்தெங் கையணியும்
நுங்குலமெங் கூந்த னுழைந்துளரும் – எங்கெவர்க்கும்

376. கண்ணிற் சிறந்த வுறுப்பில்லை யெங்கண்ணின்
வண்ண நினக்குரிய வண்ணமே – கண்ணலமந்

377. தாடு தொழிலு நின்தேயங் கோடரியும்
கூடியநின் னாமமெனக் கூறுவதே – பாடகத்தாள்

378. எய்திய நூபுரங்க ளேங்க வவற்றுள்ளே
பெய்தது மந்தப் பெயருடைத்தே – ஐதுலகில்

379. மிக்குரிமை யிவ்வாறு வீறினேன் மிக்குணர்ந்த
தக்கவருஞ் சாற்றத் தகுமிஃதத் – தக்கவெனை

380. வில்லிற் குணமாய் விசித்தேற்றி நுங்குலத்தை
வெல்லத் தொடுத்து மெலிவிக்கும் – வல்லமத

381 மார னுடற்ற வருந்தி யருங்கவலை
சாரவது நீபார்க்கத் தக்கதோ – வாரமென்ப

382. தல்ல லடையி னலர்விழிக்கு வாரிமைபோல்
மெல்லுடைக்குக் கைபோல் விரைவதன்றோ – நல்லளியே


383. நின்னியற்பேர் கொண்ட நிரைவளைக ளென்கையில்
நின்னையன்றி யாரே நிறுத்துவார் – அன்னோநின்

384. றன்னுருவம் போலுந் தடங்கண் பொழிபுனனின்
றன்னையன்றி யாவர் தவிர்த்திடுவார் – மின்னையார்

385. மேனி திதலை விழைவவெனப் பூத்தகணி
கானிவர் சண்பகமுங் காலுழக்காய் – ஆன

386. உரியை நீ யல்லாலெ னொள்ளிய மேனி
நெரிதிதலை யாரே நிறுப்பார் – விரிநீழல்

387. மாவிற் பலாசில் வளர்கூ விளத்தினறும்
பூவின் மதுவுண்ணப் புக்குலாய் – மேவுதொறும்

388. தன்னை வலம்புரிந்த தென்று தவமாக்கும்
மன்னனை நீ யண்ம மகிழ்வாயே – துன்னி

389 இரப்ப தரிதா லிரப்பி னிரந்த
சுரப்பதின்மேற் றொல்லுலகிற் சீர்த்தி – நிரப்பதில்லை

390. அத்தகு சீர்த்தி யளிக்கலான் மேவாமை
பைத்த பெரும்பார் பகருமே – எத்திறத்தும்

391. வண்டங்கே செல்லின் மதுமலர்த்தார் மன்னவனார்
வண்டிங்கே நல்க மதிப்பரே – மண்டி

392. முருகா ரளியங்கே முன்னினாற் செம்மல்
பெருகா ரளியெறுவ துண்டே – மருவுபொறி


393. வாளரி யங்கே மருவின் வெதும்பிவிழும்
நீளரிக் கண்ணீர் நிகழாதே – கோளில்

394. மதுகர மங்கே வழங்கினுயிர் வேவ
விதுகரம் வெப்புவிளை யாதே – கதுவலுறச்

395. சஞ்சரிக மங்கே தலைப்பட்டா லென்கரங்கள்
அஞ்சரி கங்கணங்க ளாருமே – விஞ்சலுறும்

396. சஞ்சா யகமங்குச் சார்ந்தாற் றிறன்மாரன்
வெஞ்சா யகமிங்கு மேவாதே – அஞ்சாச்

397. சுரும்படரி னங்கே சுரும்பிவர்வார் வில்லின்
பெரும்படரி னங்கம்பீ றாதே – விரும்பி

398. ஒருமந்தி யங்கே யுறினழலிற் சீறி
வருமந்தி மாருதம் வாட்டாவே - பொருவில்

399. பிரமரங்க ணல்கிப் பெயரினா னந்தப்
பரமரங்க ணல்குபய னுண்டே – கரிசில்

400. வரிஞிமிறு செல்லின் மணிமுலைக்குச் சாந்திங்
குரிஞிமிறு கத்துற்ற தாமே – உரிய

401. அறுகாற் பறவை யடுப்பினிரண் டென்னப்
பெருகாற் பறவை பிழை யாவென் – றுறுகாதல்

402. மல்க விரந்தேன் வறங்கூரா மேசேறல்
நல்குகட னென்று நயப்பாயே – நல்கி


403. இலளிதைக்கு மூவரையு மீனவர மீந்தார்
பலருடலும் புக்கமரும் பண்டன் – உலையப்

404. புரியமர்மிக் காற்றிப் புகல்காம நல்கல்
திரிபுர சுந்தரிக்குச் செய்தார் – வரைமாதின்

405. பூங்கரத்துக் காப்புக் கடகம் புணர்த்தினார்
ஆங்கவள்வீழ்ந் தேதழுவ வாக்கினார் – பாங்கவடான்

406. மஞ்சணீ ராடவது வார்ந்தொழுக வக்கரையில்
மஞ்சணீர்க் கூத்தரென வைகினார் – வஞ்சியவள்

407. நீக்கிய கோசமென நின்றகன்னி தன்னையுமில்
ஆக்கிநகர்க் காவ லருளினார் – மாக்கருங்கண்

408. மங்களை வேட்ட வரமளித்தார் காளிக்குப்
பொங்குகட றாக்கும் பொலிவளித்தார் – மங்கை சிறை

409. மீள விராமற்கு வீரமளித் தாரணங்காய்
ஆள விரேணுகைக்கன் பாக்கினார் – நீளும்

410. சிறைகருடன் றாய்க்கொழிப்பச் செய்தார்சா பத்தின்
மிறைதிருமா துக்குமையால் வீத்தார் – மறையவனோ

411. டூடிய வாணி யறவாக்கி னார்பெண்மை
கூடிய மாலைக் குறித்தணைந்தார் – நாடிய

412. மாண்டுகன்னு மாமுனியால் வானை யரம்பையர்கட்
கீண்டிய போக மியைவித்தார் – நீண்டவருள்


413. கண்டூ றுரையார்க்கே கைகொடுப்பா ரன்னவர்பால்
பெண்டூது செல்லவெவர் பெட்கலார் – வண்டே

414. மிஞிறே யளியே விளரியரி யேநின்
மிஞிறுஞிமி றாக விளங்க – விமிழ்கின்ற

415. வைசாகி வைகாசி வாய்ந்த பறையலகே
ஐதாம் பலகறையென் றானவே – மை தீரும்

416. நீர்க்கீழ் நகர்ப்புறங்கீழ் நீரே புறநகரே
சேர்க்குமின்முன் முன்றிலெனச் சேர்ந்தவே – பார்க்கண்

417. இருந்தா னிருந்தானே பார்க்க ணெழுந்து
திரிந்தான் றிரிந்தா னெழுந்தென் – றிருந்தனவே

418 தத்தந் திணைக்குரிமை சாற்றுகரு வும்பொழுதும்
ஒத்து முறழ்ந்து முறுவனவே – வைத்தபொருள்

419. வெண்பா முதனான்கும் வேதியர்முன் னோர்நால்வர்
ஒண்பாவென் றோத லுறழ்ந்தனவே – ஒண்பாத்

420. தளைமுதலுந் தம்மு ளுறழ்ந்தனவே காவி
ஒளிர்மதியொண் காம விதியே – வளரும்

421. துடிகனியே தோமி றுகடினியே யான
படியேநீ யெத்தொழிலைப் பார்த்துப் – பிடிசெயினும்

422. அண்ண லருளு மதுவே நெறியாக
நண்ணுமது போனலக்கு மாயினும் – மண்ணவர்க்குக்


423. கீழாக வைத்த கிளர்தொழில்சற் றும்புரியாய்
வீழாக மேற்றொழிலு மேவாயே – வாழாகப்

424. பூவிலிருந் தூது முறைபுரித லேயன்றி
மேவு மரசுரிமை மேவாயே – தாவிலாச்

425. சந்திசைவ தல்லாற் றகுபயனுண் டாமேனும்
கொந்துபடு மத்தியிவர் கோளிலாய் – எந்திடத்தும்

426. வாசந்தி யென்பாரை யன்றிநீ போதியென்பார்
பேசுந் திருவேதும் பேணிலாய் – ஆசில்

427. கரவீரங் கொண்டு கதழ்வாய்மற் றாங்கே
விரவாக் கணியோர்ந்து மேவாய் – பரவாம்பல்

428. அம்போ ருகத்தா ரமர்வா யுயர்வேனும்
வம்போடு கோளி மருவுகிலாய் – நம்பும்

429. குவலயநீ வேண்டிற் குறிக்குமுனந் தாட்கீழ்
அவலமற வாவதே யன்றோ – கவலையற

430. நாகம் புகுவாயந் நாகந் துறந்துரிய
சோகம் படர்வாய் துறையனைத்தும் – நீகண்டு

431. நீத்தவே யன்றோ நிகர்ப்பாரார் நின்னையினி
ஆத்தனுக்கு நின்போ லடுத்தாரார் – மூத்தபெரும்

432. தேவரு நின்னைச் சிரமேற்கொள் வாரென்னின்
யாவரே நின்னை யிகப்புறுவார் – போவதுசெய்


433. தங்கங்கே பல்பொழிலு மங்கங்கே பல்கயமும்
அங்கங் கமரர்கள்பூங் கோயிலும் – அங்கங்கே

434. விம்மிதப் போதுகளு மெய்த்தருவு முள்ளவற்றுள்
இம்மெனுங் காலமுஞ்சென் றெய்தாமைக் – கொம்மெனப்போய்த்

435. தூதிதுவா லென்றுரிமை சூழ்ந்தவிட மாதுமுடி
மாது மறியா மரபெய்திச் – சோதிதிகழ்

436. ஆனந்த ருத்திரனா ரஞ்செழுத்து நெஞ்சாக்கி
ஊனந் தபும்பணிவு முள்ளாக்கிக் – கானம்

437. தழைத்தமலர்க் கொன்றைத் தனித்தா ரிவர்ந்து
மழைத்தமது வுண்டு மகிழ்ந்து – செழித்ததற்பின்

438. காந்தாரம் பாடு கனலிற் றழல்கின்ற
காந்தாரங் கொங்கை கலப்பிப்பார் – சேந்திடநாச்

439. சாதாரி யோது தமியே னிறையோடும்
சாதாரி யின்னே தவிர்த்தருள்வார் – மீதான

440. தாண்டகம் பாடு தமியேனை விட்டங்கே
தாண்டகங் கொண்டு தரவருவார் – ஈண்டும்

441. இராகங்கண் முற்று மியம்பிங் கிருவேம்
இராகங்க ளொற்றித் திணைவார் – பராவும்

442. கவுசிகம் பாடு கடிதடமே னில்லாக்
கவுசிக நிற்கும்வகை காண்பார் – இவறுசுவை


443. ஆர்நட்ட பாடை யறைதி யெனக்கிங்காம்
வார்நட்ட பாடை மருவியார் – பார்நட்ட

444. சீகா மரம்பாடு தேம்பு மெனையிணர்த்த
சீகா மரம்புரையச் செய்தருள்வார் – பாகாச்

445. சிகண்டிதனைப் பாடு தெரிவருமா னந்தச்
சிகண்டி தமை வேட்டதெனத் தேர்வார் – புகன்றவிசைக்

446. காம்போதி பாடுநெடுங் காம்போதி வில்லினார்
காம்போதிக் கென்னைக் கவல்வியார் – தேம்பாமை

447. நைவளம் பாடு நனிதேவ நாயகரென்
நைவளம் பார்த்து நலந்தருவார் – நைவில்

448. புறநீர்மை பாடு புகழ்தருமே கம்பர்
புறநீர்மை யென்பாற் புகுத்தார் – செறிநீர்மைப்

449. பஞ்சுரம் பாடு படர்கூர்ந்த வென்னுடற்குப்
பஞ்சுர மென்னும் பரிசுணர்வார் – எஞ்சலின்றிச்

450. செவ்வழி பாடு செறிந்திருக்கை யாங்குணர்ந்து
செவ்வழியே யாக்குந் திறநினைவார் – எவ்வழியும்

451. கொல்லி முழுதுங் குறித்தோ திதுவுமுயிர்
கொல்லியவட் கென்னக் குறிக்கொள்வார் – மெல்ல

452. விளரியெடுத் தோது விரவிரக்க மிக்கு
விளரியவென் மேனிவிழி யுய்ப்பார் – வளருமிசை


453. நேர்திறம் பாடொழியா நீரினளென் றேயருட்கண்
நேர்திற மல்லா நிலையருளார் – சீர்திகழப்

454. பாலை முழுதும் பயிறந் தவறுணர்ந்து
பாலை யுரிப்பொருளைப் பாற்றுவார் – சாலக்

455. குறிஞ்சி யனைத்துங் குழைந்துபல்கா லோது
குறிஞ்சி யுரிப்பொருளுட் கொள்வார் – உறுஞ்சுரும்பே

456. எல்லா முரைத்தாங் கிசையெழுப்பிப் பாடுவல்யான்
நல்லா யவர்செழுந்தார் நல்குவார் – வல்லையான்

457. போய்வரினு மவ்வளவும் போற்றரிது நீயுயிரை
மாய்வதிடை போலும் வதிந்தாலும் – ஆய்மலர்த்தார்

458. தந்தளிப்ப தண்மித் தழுமளவு மாற்றுதற்கே
அந்தநலந் தாரி னமையாதே – எந்தவழி

459. மாதர் பிரியாமை வாழுமா னந்தேசர்
போதுவரென் றையுறவு பூணுதியேல் – ஓதுவல்கேள்

460. ஈங்கிடையே யாவி யிறந்தாலு மாவடியில்
ஓங்கிய வைந்தொழில்செ யுத்தமனார் – பாங்குபெறத்

461. தந்தாள் குறித்துத் தவிர்ந்தேற் குடலியக்கம்
தந்தாண் முறையவர்க்குச் சத்தியமே – அந்தோமுன்

462. மாயன்முத லோருடலை மாய்த்தெதிர்ந்த பண்டனுயிர்
சாய வழித்துத் தகமுன்போற் – காயம்


463. கொடுத்தருளுங் கச்சி மயானத்தெங் கூத்தர்
அடுத்த வினையுடலீ தாகி – விடுத்திடினும்

464. ஆக்கை யிதுபோ வளித்துப் பெருங்கருணை
வீக்க லவர்க்கு விளையாட்டே – போக்கில்

465. அமிர்தசஞ் சீவி யவிர்வெள்ளிக் கீந்து
துமியுடற் தீசியெனுந் தொல்லோற் – கிமிழ்கொளீஇ

466. வச்சிர யாக்கை வழங்குமிட்ட சித்தீசர்
மெச்சவுயிர் நல்கல் வியப்பேயோ – அச்சோ

467. இறவாத்தா னத்தி லிருந்தருளா னந்தர்
இறவாமை நல்கலெளி தன்றோ – குறிமாவே

468. பெண்ணுருவி னீங்காப் பெருந்தகைமை யானந்த
அண்ண லியற்கை யறியாய்நீ – எண்ணில்

469. நிறைந்தநெய்போ லெங்கு நிறைந்துலக மெல்லாம்
அறிந்துலக மேதுமறி யாதான் – செறிந்துயிர்க்கு

470. வெவ்வே றுடலம் விளைத்துத் திருமேனி
வெவ்வே றெடுக்கும் விரகினான் – எவ்வேறும்

471. ஆவோனொவ் வோருருவே யாங்காங் குறக்காட்டி
மேவா மலத்தை விளித்திடுவான் – ஓவாது

472. வல்லி யொருபான் மகிழ்ந்திருக்க வேயன்றே
மெல்லியன்மான் மாதுநல மேவினான் – நல்லவெழில்

473. தாரு வனத்துத் தகுமடவார் தானையெலாம்
பாருக் களித்துப் படர்ந்திட்டான் – ஆர

474. அரவமதி நீங்கா தமர்வனகா ணாமை
இருமடவார்க் கின்பமியைக் கின்றான் – ஒருமதுரை

475. அங்கயற் கண்ணி யறியாமை மாதர்பலர்
செங்கைவளை யேற்றிநிறை சிந்தினான் – அங்கங்கே

476. மின்னனையார்க் கையன் விளைத்த திருக்கருணை
இன்னும் பலவா லெனக்கின்னே – தன்ன றுந்தார்

477. தந்தருளி நீயிங்கே சாருமுன்னே தான்வரினும்
வந்திடுவன் செய்கை மதிப்பாரார் – அந்தில்

478. இருந்தருள்வா னாயிடினு மெம்பெருமா னுக்குத்
திருந்துதிரு மேனியெங்கு மன்றோ – விரிந்தவுல

479. கெங்குந் திருவடிக ளெங்குந் திருக்கரங்கள்
எங்குங் கருணை யெழுமுகங்கள் – எங்கும்

480 மலர்ந்த விழிகளெங்கும் வார்செவிக ளெங்கும்
அலர்ந்தவரக் காம்பலன வாய்கள் – இலங்கும்

481. மணிநாசி யெங்குமாய் மன்னி யிருப்பன்
பிணியா வருக்கும் பெயர்ப்பான் – பிணியேதும்

482. இல்லா னுறாதே யுறுவா னிறைஞ்சுநர்பாற்
செல்லாமே செல்வான் செறிவரங்கள் – எல்லாம்

483. கொடாதே யெவர்க்குங் கொடுப்பா னுருவம்
மடாதே விழிக்கண் மடுப்பான் – விடாதுரைகள்

484. கேளாதே கேட்பான் கிளவாதே தான்கிளப்பான்
மூளாதி மோவாதே மோக்கிற்பான் – வாளாங்

485. குழல்வார் தமையு முறப்பிணிப்பான் விட்டுக்
கழல்வாரை யுங்கழல வொட்டான் – தொழிலனைத்தும்

486. செய்யாதே செய்குவான் செய்தொழிற்குத் தக்கபயன்
நையா ருயிர்நுகர நாட்டுவான் – எய்யாமை

487. ஆருயிர்கள் பேரின்ப வாழி படிநெறியிற்
சாரும் விரகன்றித் தானினையான் – ஓரும்

488 தனைநோக்கு மாருயிரைத் தானோக்கி மூல
மனைநோக் கறத்தன்பால் வைப்பான் – வினைசாம்ப

489. எவ்வளவுந் தன்பா லிசையக் கருதுவார்
அவ்வளவுந் தம்பா லிசைந்தணைவான் – எவ்வெவர்தம்

490. கண்ணுக்குங் காணான் கருத்துக்குஞ் சேய்மையான்
வண்ண வுரைக்கும வளவாதான் –திண்ணிய

491. வாண னறைகூவ வாகுபல வுந்துணித்தான்
ஓணன் பொரக்கருணை யூக்கினான் - பூணும்

492. சலந்தரனைத் தேய்த்தான் சமர்த்த விராமற்
கலங்கு பரிசொன் றளித்தான் – இலங்குமையோ

493. டொற்றிப்ப வைம்பூ வறுத்தானை நீற்றினான்
பொற்றவருள் கல்லெறிக்குப் பூண்பித்தான் – முற்றிழையாள

494. வாட்கண் புதைப்ப மருங்கொழித்தான் மெய்குழையத்
தோட்கொண் டணையநலஞ் சூழ்ந்தணைந்தான் – தாட்பணிய

495. ஏவிய செவ்வேட் கினித்துசெய் தானவன்றன்
ஏவலொழி யக்கழுவா யேலென்றான் – பூவினுக்கு

496 மாயனொரு கண்ணளிப்ப வாங்கினான் வன்றொண்டற்
கேயவொளிக் கண்ணொன் றினிதளித்தான் – தூய

497. மறைக்கோ வணத்தான் மறைச்சிலம்பான் மாவான்
மறைக்கோ வறிவரிய மாண்பான் – நெறிக்கோள்

498. உயிருக் குயிரா னுயிரறிவுக் கெட்டான்
பயிலுயிர்க்கே யின்பருளும் பண்பான் – பயிலுநர்க்குக்

499. கண்ணுமா னந்தங் கனிவாயு மானந்தம்
வண்ண வதனமு மானந்தம் – தண்ணறல்சேர்

500. வேணியுமா னந்தம் வியன்மார்பு மானந்தம்
பூணுமா னந்தம் புயங்கரந்தாம் – நாணுடையும்

501. ஆனந்த மானந்த மானந்த மானந்தம்
ஆனந்த மெவ்வறுப்பு மானந்தம் – ஆனந்தன்

502. காஞ்சியுமா னந்தமாய்க் காணநிற்பா னத்தகைய
வாஞ்சையுறு மானந்த வள்ளறன் – காஞ்சனத்த

503. கோயிலை முற்றிக் குறுகி முறைமையால்
நீயணவி யான்சொ னெறியுளிநின் – றாயிடையே

504. பூங்கொன்றை வாங்கியிங்குப் பொற்பக் கொணர்ந்தென்றும்
ஓங்கு பெரு வாழ்க்கை யுதவு.

திருச்சிற்றம்பலம்
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடு தூது முற்றிற்று.

ஸ்ரீ மெய்கண்டதேவர் மிளிர்கழல் வெல்க.
ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள் மலரடி வாழ்க.
ஸ்ரீ கச்சியப்பமுனிவரர் கழலடி வாழ்க.
திருச்சிற்றம்பலம்.
கவிராக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்கள்.
5. பஞ்சாக்கரதேசிகரந்தாதி.

திருவாவடுதுறையாதீனம்.

மும்மைப் பொருட்கு மிலக்கணங்கண் மொழிந்த விரண்டு காலத்தும்,
தம்மிற் றிரியா வகைகாட்டித் தானாந் தன்மை மிகத் தேற்றி,
நம்மைப் பணித்த புகழ்த்துறைசை நமச்சி வாய தேசிக ன்றன்,
செம்மைப் பதுமத் தாண் மலரென் சிந்தைத் தடாகத் தலருமால்.
        - திருவானைக்காப்புராணம்.

பஞ்சாக்கரதேசிகரந்தாதி.
கட்டளைக்கலித்துறை.

பதிபசு பாசத்தைப் பாசம் பசுபதி யாக்கியொரீஇப்
பதிபசு வாகப் பசுபதி யாக்கிப்பின் னும்பயிற்றிப்
பதியெனத் தானாய்ப் பயிலுந் திருவா வடுதுறைசைப்
பதிவளர் பஞ்சாக் கரவனை யென்சொல்லிப் பாடுதுமே.         (1)

பாடுதும் பஞ்சாக் கரவனை யென்று படர்தலொடுங்
கூடுவ தன்னவன் பாத மதுவந்து கூடுதலும்
நீடுவ தின்ப மனவாக்குக் காய நிகழ்செயலற்
றோடுவ வாளாங் கிருப்பதல் லாற்பின்னை யொன்றில்லையே.         (2)

ஒன்றில்லை யாக வுயிருள தாக வுருவங்கொண்டு
தென்றில்லை யாடி துறைசையிற் பஞ்சாக் கரவன் சென்று
நின்றில்லை யாதியென் றானின்ற யான்சென்று நின்றிறலும்
நன்றில்லை தீயது மில்லை சொல் லாவொன்று நண்ணியதே.         (3)

நண்ணிய பாசஞ் சடமா ணவமறி னானெனவே,
கண்ணுவ தின்றுயி ரொன்றா யுணர்த்துங் கதியறிவைத்
திண்ணிய பாச வறிவு பசுவறி வென்று செப்பி
எண்ணுவ தென்னை யியம்பாய்பஞ் சாக்கர வின் குருவே.         (4)

குருவா யருள லுயிர்க்கின்மை யாருங் குறிக்கொடுய்ய
அருவா யருவுரு வாயுரு வாயவை தானெனநற்
பெருவான் பொருடன் பெரும்பெய ரேபெய ராகவந்த
ஒருவாய்மை தன்னை நினையினு முள்ள முருகுவதே.         (5)

உருகுங் கருணைப் பெருந்திற நோக்கி யுலைமெழுகாய்ப்
பருகுந் தணப்பற வானந்தத் தேறல் பமரமெனத்
திருகும் வினையின் றிருக்கறுத் தாண்டுதன் சேவடிக்கீழ்த்
தருகின்ற பஞ்சாக் கரவனொடாடிய தாழ்குழலே.         (6)

தாழ்கின்ற கூந்தன் மலர்சூட்டித் தையலர்த் தோயுமின்பத்
தாழ்கின்ற வென்னைத்தன் பாதத்தி லார்வ மளித்துளத்தைப்
போழ்கின்ற வைம்பொறி போழ்ந்துபஞ் சாக்கற பூரணன்மெய்
வாழ்கென்று சென்னி மலர்க்கைவைத் தானின்ப மல்கியதே.         (7)

மல்கிய சஞ்சிதக் காட்டை யெரிவாய் மடுத்துடலிற்
புல்கிய வின்பத்துன் பங்களெல் லாம்பின்பு பூப்பதின்றி
அல்கிய பஞ்சாக் கரதே சிகனரு ளாற்கவர்ந்து
நல்கிய வாய்மைக்குக் கைம்மாறு கண்டில னல்குதற்கே.         (8)

நல்குந் தொழிறனக் கேயன்றி யில்லா நலத்தகைசீர்
பல்குந் துறைசைப்பஞ் சாக்கர தேவன் பணித்திடுங்கான்
மெல்குந் திறமெனக் குள்ளத னால்விளை கின்றவெல்லாம்
ஒல்குந் திறமின்று காட்டினன் யானென தேடியதே. (9)

ஓடிய தாணவ முற்றது பாசகன் மங்களொத்த
வாடின பல்வகைத் தோற்ற மலரயன் மான்முதலோர்
வீடினர் செய்கை விளைந்தது போகம் வியன்றுறைசை
நீடிய பஞ்சாக் கரவன் முகிழ்த்த நிலாநகைக்கே.         (10)

நகைக்கின்ற செங்கனி வாயு மெதிர்ந்தோர் நவைமுழுதும்
துகைக்கின்ற பேரருட் பார்வையு மும்மலத் தொக்குவிடத்
தகைக்கின்ற சின்முத் திரையுந் தனிக்கரப் புத்தகமும்
உகைக்கின்ற வாலென்னைப் பஞ்சாக் கரவனொண் பூங்கழற்கே. (11)

கழற்கா லரவிந்தங் கைகூப்பப் பஞ்சாக்கரவனெங்கோன்
அழற்கா லனைவந்து சாரலொட் டான்றனு வைப்படைப்பப்
புழற்கா லரவிந்தப் புத்தேளை நாடலொட் டான்புனவேய்ங்
குழற்கான வாயற் கிடமினி யாதன்ன கொள்கையனே.         (12)

கையம்பு மூவுல குண்டது நண்மல ரொன்றுண்டதால்
ஐயம்பு வேளை யமலன்பஞ் சாக்கர வண்ணல்பொற்றாள்
நெய்யம்பு பாறயி ராட்டி வணங்கிய நேயரொன்றும்
எய்யம் பிறவென வெல்லா மெடுத்து விழுங்கியதே.         (13)

விழுங்கிக் கிடந்த வொளியறல் பார்த்து மிடையிருள்போல்
ஒழுங்கிக் கிடந்தவெ னுள்ளத் தொழிவுகண் டோங்கிருளும்
அழுங்கக் கடைக்கணித் தாண்டான்பஞ் சாக்கர வண்ணலினிப்
புழுங்கக் கடவதொன் றில்லையெஞ் ஞான்றும் புணர்ப்பன்றியே.         (14)

அன்றிய நீத்த மடுத்தான் சடைக்க ணடற்கெழுமான்
ஒன்றிய வோதை மடுத்தான் செவிக்க ணுலகமுற்றும்
கன்றிய வால மடுத்தான் களத்துக் கருதியென்னை
வென்றியம் பாத மடுத்தான்பஞ் சாக்கர மெய்த்தவனே.         (15)

தவமாய்த் தவம்புரி வானாய்த் தவப்பய னாய்க்கொடுக்கும்
அவனா யிருக்கும்பஞ் சாக்கர மூர்த்தியை யாரறிவார்
நவமாத் தொழிற்கு வருமுருப் போலருண ஞானநல்கிப்
பவமாய்க்க வந்த பவம்பரி யாமை யிருந்திடினே.         (16)

இருந்திடிற் பஞ்சாக் கரவன பதத்திடை யான்மலமும்
இருந்திடுஞ் சற்றெழி னாங்கே யெழுந்தினி நீயெனக்கு
விருந்தென வாய்ப்பெயு மீட்டு மிராமை வீடுப்பினந்தோ
பொருந்திடு மெல்லா மவன்பெயர் பொள்ளென வோதுவதே.         (17)

ஓதுவ தாகிய பஞ்சாக் கரன்பெய ரொண்மறையின்
மீது வதிவது நட்போ டிகலை விளக்குவதும்
போதுவ தும்பின் புணர்வது முன்னாய்ப் புணர்மயக்கம்
காதுவ துங்கழன் றுள்ளது மெல்லாங் கருதிடினே.         (18)

கருதிடு மென்னைத்தன் னுள்ளே யிருத்துங் கதிப்பின்மலம்
பொருதிடும் போகப் புணர்ப்பா யிருக்கும் புரைதவத்தால்
இருதிடு நாமமெய் தார்க்கிரு ளாயே யிருக்கு மருள்
விருதிடும் பஞ்சாக் கரவன் விரைப்பூங் கழற்றுணையே.         (19)

துணைமா முலையுமை காணச் சுடர்மணி யம்பலத்தே
இணையா வருமன்றி யாடும்பஞ் சாக்கர வெந்தைபிரான்
அணையா வெனையணைப் பான்பிற கேசெல்லு மாரருளே
*யணையாப் பவக்கட லேற்றிய வாறற் புதநெஞ்சமே.         (20)

நெஞ்சே புறுதி யறிந்திலை போலு நினைப்பினங்கே
அஞ்சே லெனநின் றருளும்பஞ் சாக்கர வண்ணலிரு
செஞ்சே வடியை யிகந்தய லேபுலன் சென்று பற்றி
நஞ்சே யனைய வினைவழிச் சேற னயந்தனையே.         (21)

நயந்தரு நல்லவந் தான்மகிழ் வாய்நல்ல வல்லநெஞ்சே
பயந்தரி னாங்கே பனிப்பா யறிந்தநின் பண்புநன்றே
வியந்துனக் குள்ள தருளும்பஞ் சாக்கர மெய்ப்பொருளோ
டியைந்தவை தாக்கா திருக்கறி யாதுட லாயிருந்தே.         (22)

இருந்தேன் மலத்தி லளற்றிரை யாய்நல னேதுமில்லேன்
பொருந்தே னடியர் குழாத்தைப் பொருந்துவன் புல்லியரைத்
திருந்தேன் றிருந்தும் வகைகளெல் லாஞ்செய்து நிற்கின்றதால்
மருந்தே யனையபஞ் சாக்கர தேவன் மலர்ப்பதமே.         (23)

பதமலர் கண்டோ ரெறுழ்ப்பக டூர்தி பதிகுறுகார்
இதமருள் செங்கைகண் டோர்பிர மன்கை யெழுதப்படார்
கதமலை யீருரி போர்த்தருள் பஞ்சாக் கரவனுதன்
மதவிழி கண்டோர் தூரப்பர் மதவேண் மலர்க்கணையே.         (24)

கணை யுண்ட தேரு மிருளுண்ணு மாழியு மக்கணையும்
பிணையுண்ட தேரைப் பரிக்குஞ் சிலையும் பிறங்கவெல்லாம்
அணைவொன்ற வாக்கும் வலவனு மேங்க வசித்ததென்ப
இணையொன்று மில்லாத் துறைசையிற் பஞ்சாக் கரவின்பமே.         (25)

இன்ப மிது வெனப் பஞ்சாக் கரவ னிணைப்பதத்தில்
அன்பிற் பிணைந்த வடியரல் லான்மற்றை யாரறிவார்
ஏன்பிற் பிணைவது கண்டுந் தொடர்ச்சியெல் லாஞ்சுகமா
வன்பிற் பிணைந்திடு மாலாதி யோரு மதித்தனரே.         (26)

மதிப்பிக்கு மென்னைத் தன் பாதத்தை யாங்கே வயங்கி நிற்கும்
உதிப்பிக்கு மன்பை யுறுசுவைத் தெள்ளமு தாயுகக்கும்
கதிப்பிக்கு மாணவ மாயைகன் மங்களின் கட்டறுக்கும்
பதிப்பிக்கும் பஞ்சாக் கரவன்றன் பாலெனைப் பாதங்கொண்டே. (27)

கொண்டலங் கண்டமுங் கொக்கரைக் கூத்துங் குறுநகையும்
மண்டிலங் கொண்டவிர் செஞ்சடைக் கற்றையும் வான்பிறையும்
தண்டளிர்ப் பாதமும் பஞ்சாக் கரவன் றயங்கருளும்
உண்டன கண்டவன் றேயெனை மீட்டு முமிழ்வின்றியே.         (28)

இன்றேயெஞ் ஞான்று மொழியாத வின்பத் துறைபடிய
நன்றே யருளும்பஞ் சாக்கர நாத னளின்பத்த
தன்றே விரவு நிலையறி யாதது போலழுத்தி
வென்றே விரவு மலமறி யாமை விடுத்தனமே. (29)

விடுத்தன மென்று பகர்ந்தத னால்விடு மோமலமும்
அடுத்தன மென்று பகர்ந்தத னாலண்மு மோவருளும்
மடுத்தருள் பஞ்சாக் கரவன் மலர்ப்பதத் தேயழுந்திக்
கெடுத்தென தியானெனுஞ் சேட்டைப் பகுப்புங் கெடினல்லதே. (30)

அல்லவிர் கண்டனெண் டோளன்முக் கண்ண னழற்கரத்தன்
எல்லுமிழ் மேனியன் பஞ்சாக் கரவ னெனக்கிரங்கிச்
சொல்லிய ஞானந் துவந்துவம் பாற்றித் தொக்காருயிராய்ப்
புல்லிய ஞான மிரண்டுமல் லாற்புக லொன்றில்லையே.         (31)

இல்லை யிறைவனென் பார்க்கு மிறையென்ற மாத்திரையால்
நல்ல வருளும்பஞ் சாக்கர நாத னளின பதம்
சொல்ல நினைய விறைஞ்சப்பெற் றார்க்குத் துகட்கிழங்கைக்
கல்லி யருள்வதி னையுறல் வேண்டுங்கொல் காசினிக்கே.         (32)

காசினி மீது பிறந்தவர் தம்முளுங் காவிரிசூழ்ந்
தாசிறு நாட்டுற் பவித்தவர் தூய ரவர்களுள்ளும்
மாசறு பஞ்சாக் கரவன் வதியா சூரினுற்றோர்
தேசுறு தூய ரவருளுந் தூயர்சென் றேத்துகரே. (33)

ஏத்துநர் தம்மு ளிருந்துதன் பாதத்தை யேத்து விக்கும்
சாத்துநர் தம்மு ளிருந்து தன் போதலர் சாத்துவிக்கும்
பாத்துநர் தம்மு ளிருந்துநட் போடிகல் பாத்துவிக்கும்
ஆத்தன்பஞ் சாக்கர வண்ண லருளு மருளிதுவே.         (34)

இதபுரி வேனென வொன்றனை மேற்கொண் டிடைவிடுக்கும்
மதுபுரி வேனென் றடுக்கு மயர்க்குமற் றாலுயிரிற்
கதுவிய தன்மை கரிசறுத் தாண்டபஞ் சாக்கரவன்
முதுநல முற்றுமுற் றாது முற்றின்புந் திளைத்திடுமே.         (35)

திளைத்திடுந் தன்மையிற் றானா யிருக்குந் திகழவருள்
வளைத்துமற் றேனை யிடங்களில் வேறா யிருக்கும்விண்ணின்
முளைத்தெழு வெண்மதிக் கண்ணியன் பஞ்சாக் கரவன் முன்னோன்
வளைத்தழும் பாளன்மெய்ம் மாதவர் போற்றிய மாதவனே.         (36)

மாதவம் யாதும் புரிந்தறி யேன்வண் மலர்ப்பதத்துப்
போதவர் தீரும் பொழிந்தறி யேனெதிர் போதலுமே
வீததை சோலை விரைசூழ் துறைசைப்பஞ் சாக்கரவன்
தீதற வாண்ட விரகினை யென்னென்று செப்புவதே.         (37)

செப்பற் கரியன சிந்தைக் கரியன சேர்பொருளொன்
றொப்பற் கரியன வுள்ளே விரவியொண் மாமதிபோல்
பப்புற்ற வாணவம் பாற்றி வருவன பண்பினர்க்கு
வைப்பிற் பொலிவன பஞ்சாக் கரவன் மலரடியே.         (38)

அடியோ ரிரண்டி னுலகொரு மூன்று மடக்கியதால்
வடிவாளி வாரசிலை வையகந் தாங்கு மதுகையதான்
முடியா முதல்வன்பஞ் சாக்கர மீளி முழுமணித்தேர்ப்
படியோ ரிறையு முருளிட மில்லாப் பரப்பினதே.         (39)

பரப்புற்ற தேர்க்கமை பாகனும் பாகம் பயந்தவனும்
இரப்புற்று நாடவெட் டாதிறந் தோங்கின வின்பவெள்ளம்
விருப்புற்ற வன்பர்க் கருளும்பஞ் சாக்கர மெய்ப்பொருடன்
குருப்பெற்ற வேணி முடியுங் குரைகழற் பாதமுமே.         (40)

பாதங்க ணான்குமவைத தானவை நல்கும் பதங்கள்வைத்தான்
வேதங்க ணான் கும்வைத் தான்விரை யாக்கலி வீறவைத்தான்
பூதங்க ளாதிவைத் தான்புரை யாத புகர்மலத்தின்
ஏதங்கள் பாறவைத் தானெழிற் பஞ்சாக் கரவிறையே.         (41)

இறைவீற் றிருந்துபஞ் சாக்கர நாத னிறைசெலுத்தும்
முறைநாடி னேனை முறைமுறை யாங்கொன் முகிழ்ப்பவற்றுண்
மறையா யிருப்பதொன் றின்றாக வெங்கும் வதிந்தறிந்து
பெறயா வருக்கு மவையவ ராலுய்க்கும் பெற்றியனே.         (42)

பெற்றி யொருவர்க் கறிவரி யான்பெரு வள்ளன்மையை
உற்றறிந் தான்மற்றை வள்ளன்மை வள்ளன்மை யாயுறுமே
பற்றிக லின்றிப் பயன்விழை யாதுபஞ் சாக்கரன்போல்
முற்று மளிப்பவர் யார்முடி வானவர் தம்முளுமே.         (43)

உள்ளும் புறமு மொருதன்மைக் காட்சியர் தாமுலகில்
நள்ளும் பரிசின ரேனும் வினைவழி நண்ணகிலார்
தெள்ளும் பெரும்புகழ்ப் பஞ்சாக் கரவன் றிருவடியை
விள்ளும் பரிசின ரெல்லாம் விடுத்தும் விடுக்கலரே.         (44)

விடுக்கலர் பற்றினொ டார்வங் கதியை விரும்புகிலார்
தொடுக்கலர் பஞ்சாக் கரவன் பதத்துச்சொன் மாமலர்கள்
கொடுக்கல ராவி யுடல்பொரு ளாங்குக் கொழுஞ்சுவைத்தேன்
மடுக்கல ரன்பரைப் போனடிப் பார்க்கென் வருவதுவே.         (45)

வருவதும் போவது மாயுழல் வீர்வம்மின் வந்தனிரேல்
தருநிதி சிந்தா மணிகாம தேனுவுந் தந்தருளும்
பொருவறு போக மெலாந்தரும் போக மெலாம்வெறுத்தால்
ஒருவரு முத்திய நல்கும்பஞ் சாக்கர வொள்ளொளியே.         (46)

ஒளிக்கு முயிர்களுக் குள்ளே மலத்தி னொளித்தவுயிர்க்
களிக்குந் தனுகர ணாதி யளித்த வவற்றொடிருள்
விளிக்கு முளைத்த வுயிரினைப் பஞ்சாக் கரவிமலன்
தெளிக்கும் பளிக்கி னிழல்போ லுடலந் திரிவிக்குமே.         (47)

விக்கு ளிருமன் முயலகன் குட்டம்வெப் புப்பெருநோய்
தொக்கு வயிற்றுறு நோய்சூலை நோயோடு சூழ்ந்தடினும்
நக்கு நலத்தகு பஞ்சாக் கரவ னளினபதம்
புக்கு விடினங்க ணெல்லாமின் பாகப் பொலிதருமே.         (48)

பொலிந்தன மன்னோ தணியுந் தணிந்தன வேபொலியும்
கலந்தன மன்ற தணக்குந் தணந்தன வேகலவும்
சலந்தரு வையத் தியற்கை தனைக்குறித் தாழன்மினோ
நலந்தரு பஞ்சாக் கரவனை நாடி நயமின்களே .         (49)

கள்ளுண்ட வாளிச் சுவையுண்ட கார்முகக் காளையுடல்
விள்ளுண்ட கண்ணன்பஞ் சாக்கர நாதன் விரைமலர்த்தாள்
நள்ளுண்ட நெஞ்சுண் டவன்பெயர் பூண்டநன் னாவுமுண்டால்
எள்ளுண்ட வல்வினைக் கஞ்சுவ தின்றினி யெய்தினுமே.         (50)

எய்தடு முப்புரத் தெண்ணிய மூவ ரெரிபிழைப்பச்
செய்தவன் பஞ்சாக் கரவன் றிருவடித் தாமரைக்கீழ்ப்
பெய்தடச் சூழ்ந்த பெயரா வினையைப் பிழைப்பித்துய்தி
வெய்தரு ளுந்திறத் தென்னினி வேறு விளம்புவதே.         (51)

விளம்புவ தென்னினிப் பஞ்சாக் கரவன்வெல் பூங்கழற்றாள்
உளம்புகு வோர்கட் குறுவினை யாது முறாதுமெய்யே
களம்படு செந்தீக் கதுவி னிழலுடல் காயுங்கொலோ
அளம்படு புற்போ லணைந்துட னீங்கிய தாருயிரே.         (52)

உயிர்தா முயிர்க்கு முடலினல் லாதின்பத் துன்பமொன்றும்
பயிலா பிறவுட லெங்கு மிருந்துமப் பண்பினவாற்
செயிர்தீர்ந்து பஞ்சாக் கரவன் றிருவடி சென்றுபற்றின்
மயரா ருடல் மிருந்தும் பயனென் மருவுவதே.         (53)

மருவுவ தொன்றை யரிதுபஞ் சாக்கர வான்பொருளின்
அருள்வழி யன்றி யொருவலு மொன்றை யரிதுமன்ற
ஒருவலு மொன்றைமற் றொன்றை யுறலுமெல் லாமவன்றன்
திருவடி யேயென்று சிந்திகண் டாய்மலந் தேய்ந்தறுமே.         (54)

அற்றாலு மென்னை புறத்தே பயில்பொரு ளானவெலாம்
கற்றாலு மென்னை யரிதா கியகல்வி காசில் புகழ்
பெற்றாலு மென்னைபஞ் சாக்கர நாதன் பிறங்கருளில்
உற்றாலும் யானென தென்னுஞ் செருக்கொழி யாவிடினே.         (55)

வீடுக்குங் கணையெறு ழூர்தி மனைவி விலங்கலந்தோட்
படுக்குங் கலனு மொருபொருளே கொண்ட பண்ணவன்சீர்
கொடுக்குந் துறைசைப்பஞ் சாக்கர நாதன் குலப்புகழைத்
தொடுக்கும் பரிசுபெற் றாம்பெறு மாறின்று சூழ்பவமே.         (56)

பவம்பல கோடி வருமாறு நாவிற் பயிற்றியிட்ட
அவம்பல கோடியும் பஞ்சாக் கரனைப் புகழ்ந்தறுத்தாம்
தவம்பல கோடிய சிந்தைய தாணினைந் தேதணந்தாம்
நீவந்தால் கோடி யுடற்றீங் கிறைஞ்சுபு நீத்தனமே.         (57)

நீத்தனங் காணினிகழுஞ் சுகமென தியானிலவப்
பாத்தனங் காணிற் படுவதொன் றில்லைப்பஞ் சாக்கரவன்
பூத்தசெந் தாமரைத் தாளுங் கரமும்புன் மூரனிலா
யாத்தசெவ் வாயு முகமுமெல் லாமின்பத் தேயெழுமே.         (58)

எழுந்தது பஞ்சாக் கரவன் றிருவரு ளெங்குமதில்
விழுந்ததென் புல்லறி வாங்கே யருளாய் மிளிர்ந்தனவால்
அழுந்திய பாசமென் றெண்ணிய மாயை யருவினையும்
தழுந்தரம் வேறினி யில்லையின் பொன்றே தலைப்பட்டதே.         (59)

பட்டது பாசமென் பாரது மாயும் படியறியார்
ஒட்டிய தாரரு ளென்பா ரஃதுறு முண்மையெய்யார்
அட்டுல கெல்லா மளிக்கும்பஞ் சாக்கர வண்ணலருள்
முட்டறு ஞான முகிழா வளம்படை மூர்க்கர்களே.         (60)

மூர்க்கரைப் போல முதுமா தவர்க்கு முனிவுசெய்து
பார்க்குளெஞ் ஞான்றும் பருவரு வேனையும் பார்த்தருளாய்
கார்க்கதிர் தோகை யெனவடி யார்கள் கலந்தெதிர்நின்
றார்க்குந் துறைசைப்பஞ் சாக்கர நாத வருட்குருவே.         (61)

குருமணி மோலித் துருவன் பிணித்த கொழுங்கயிற்றின்
ஒருவுதல் கோளுக் கிலையெத் திசையி னுறினுமவ்வா
றருண்மணி யாகிய பஞ்சாக் கரவ வடியெனுகின்
திருவடி நீங்காத் திறம்யாங் கிருப்பினுஞ் செய்தருளே.         (62)

அருணட மாடிய பஞ்சாக் கரவன் முன் பைந்தொழில்கொண்
டிருணட மாடிய வம்பல வாண னெனக்களித்த
திருநடங் காணிற் செயிரை விழுங்கித் திசைவிழுங்கி
உருநட மாடவெ னுள்ளம் விழுங்கி யுகந்ததுவே.         (63)

உகந்தவ னெல்லாப் பொருட்கும்பஞ் சாக்கர வுத்தமனை
அகந்தனிற் சற்றே யடுப்பிற் கதிகளெல் லாமடுப்பர்
இகந்திடிற் சற்றே யெழுநான்கு கோடி நரகும்வல்லே
புகுந்துபல் லூழி பெயர்ந்து மெழாது புழுங்குவரே.         (64)

புழுங்கும் பெரும்பழி வந்தாலு மென்னின்பம் போர்த்துளத்தை
விழுங்கும் பெரும் புகழ் வந்தாலு மென்வினைப் பாலதென்றும்
அழுங்கும் படியதன் றேயருட் பஞ்சாக் கரவன்பதத்
தொழுங்கும் பெருநிலைக் கூறவற் றாலில்லை யுற்றுநில்லே.         (65)

நில்லென்று செந்தீ நிரையி னிறுவினு நீடுசெல்லல்
கல்லென்று தீய திறத்தி னெடுப்பினுங் காய்ந்து நயந்
தல்லொன்றி வாளாங் கலையாது பஞ்சாக் கரவனருள்
புல்லொன்று பாரங் கழிப்பதென் றேயின்பம் பூணுகவே.         (66)

பூணுங் கடவுளைப் பஞ்சாக் கரவனைப் பூண்டுகொண்டு
காணுங் கடனால் வருவினை மாய்க்குங் கடனதன்றி
மாணுங் கரிசுடற் கேன்ற வினையை மறுப்பவுழந்
தேணுங் கெடேன்மின் குறுகா தொழியா வெறுழுடைத்தே.         (67)

உடைத்தைங் கலையும் பரானந்த வின்ப முறப்பயிற்றி
விடைத்தங்கு மேவு மொழியா வினையின் விறன்முருக்கித்
துடைத்தங் கருளும்பஞ் சாக்கர நாதன் சுடர்ப்பதத்துள்
அடைத்தங் கிருப்ப வறியா துளமயல் விட்டனவே.         (68)

விட்டனம் யானென தென்னுஞ் செருக்கை விடுத்தலொடும்
கெட்டன மத்தகு கேட்டினை யேகிளர் வாழ்க்கையெனப்
பட்டனம் பஞ்சாக்கரவன் பதமலர்ப் பூசனையே
தொட்டன மிந்தத் தொடர்பினை யாவர் துளக்குநரே.         (69)

துளக்கும் வினையுட னிற்பத் தொகுமுயிர் வாங்கலெவ்வா
றளக்கற் கரியபஞ் சாக்கர நாதனென் றையுறன்மின்
வளக்குஞ் சாந்தன் வயிற்றுட் செறிவினை வாங்கிக்கொண்டு
விளக்கட் கனிதன் புறம் விடல் கண்டன மேதினிக்கே.         (70)

மேதினி மீதும் விரவுவ தீவினை யேன்சிரத்தும்
போதுவ வீதென்ன வற்புதம் போக்கின் மறைமுடிவும்
மாதவர் நெஞ்சு மலையான் மடந்தை வளைக்கரமும்
நீதியிற் றைவரும் பஞ்சாக் கரவ னெடும்பதமே.         (71)

பதந்தர வல்லவன் பஞ்சாக்கரவன் பசுபதிநல்
இதந்தரு மீச னிறையெட் டுருவத்த னெண்குணத்தான்
சுதந்திர முள்ளவ னென்றுசொன் மாத்திரை சூழ்ந்தவர்க்கும்
கதந்தரு வல்வினை காவத நூறு கடந்திறுமே.         (72)

இறுகின்ற மாலைய தாக்கை யிதுதனைப் பேணிக்கொண்டே
தெறுகின்ற வல்வினை வாயழி வேனைச்சென் றேத்து நாபால்
உறுகின்ற பஞ்சாக் கரவனவ் வூழ்வினை தன்னடியால்
அறுகின்ற தாக்கியஞ் சேலிங்கண் வாவென் றருளினனே.         (73)

அருள்கின்ற காலமெஞ் ஞான்றும்பஞ் சாக்கர வாண்டகைக்காம்
இருள்கின்ற வாணவத் தேகிடந் தெய்த்தின்பத் துன்பந்துய்த்துத்
தெருள்கின் றிலாவுயிர்க் கேசென்று சேரும் பருவங்கண்டாய்
மருள்கின்ற வன்னெஞ்ச மேமதி யாயின்று வாய்த்திடுமே.         (74)

வாய்த்த துடலிது பஞ்சாக் கரவன் மலர்ப்பதத்தை
ஏத்துத லாலென் றிறுமாந் திருந்தவே னெண்ணமெல்லாம்
தீத்தெறு பஞ்சாய்ச் சிதையப் பலகதி சென்றுசென்று
பூத்திடு மாறு புரட்டிய தாற்புல் வினையடுத்தே .         (75)

அடுத்த வினைக்கினி யஞ்சேன்பஞ் சாக்கர வாரியன்முன்
விடுத்திருண் மூழ்கும் பிழையிற் பருவம் விளைத்துடலம்
கொடுத்தங்கும் விட்டிது காறும் விளைத்தகுற் றங்களுநீத்
தெடுத்தவ னின்னு மெடுப்பனென் றுண்மையை யெண்ணினனே. (76)

எண்ண மெலாந்த னிணையடி யேறவைத் தானியம்பும்
*வண்ண மெலாந்தன் பெயராக வைத்தனன் வாருடலிற்
பண்ண லெலாந்தன் பணியாக வைத்தனன் பண்ணவர் சூழ்
அண்ணல்பஞ் சாக்கர வேந்த லருளுமி தற்புதமே.         (77)

அற்புத மேனிய னாந்திருச் சிற்றம் பலவனறற்
புற்புதம் போலுருக் கொண்டபஞ் சாக்கர பூரணனைச்
சிற்பர மென்றுள்ள வாறறி யார்செயிர் தீர்தொழிலைந்
துற்பவ மாக்கு முருவத்தி னுண்மையு முன்னலரே.         (78)

உன்னிய காலை யுறவா யினிக்குஞ்சற் றேயயர்ப்பின்
அன்னிய மாக வகன்றே கவற்று மன்னியமாய்
மன்னிய பஞ்சாக் கரவன் வயங்கரு ளோங்கியக்காற்
பொன்னியல் காலைப் புரையிருள் போன்மலம் பொன்றுவதே.         (79)

பொன்றுஞ்சு முன்றி லுடையவ ராகப் பொலிதரினும்
மின்றுஞ்சு வேலரை யஞ்சுவர் வேலர் வெருவுவராற்
கொன்றுஞ்சு தேவரைத் தேவரு மஞ்சுவர் கோகனதத்
தென்றுஞ்சு பஞ்சாக் கரவன் றிருவடித் தேசினர்க்கே .         (80)

தேசிக நாதன் சிவஞான தேவன்செங் கைத்தல முன்
வீசிநின் றாடிய வம்பல வாணன் வியனுலகம்
பேசிய பஞ்சாக் கரவன் பிறங்கருட் டாண்மலரைக்
கூசிநின் றேத்திய மாதவத் தார்க்கென் குறையுளதே.         (81)

குறையுண்ட நெஞ்சும் பழியுண்ட செய்கையுங் குற்றமெலாம்
உறையுண்ட வாக்கு மெனக்களித் தானுற் றுளாரெவர்க்கும்
நிறையுண்ட வாக்கும் புகழுண்ட செய்கையு நீடுமின்பப்
பொறையுண்ட நெஞ்சு மளித்தான்பஞ் சாக்கர பூரணனே.         (82)

பூரணன் பஞ்சாக்கரவனென் செய்யும் புலைநெஞ்சமே
ஆரண மார்க்கம் விடுத்தே யரவக லல்குனல்லார்
வாரணி கொங்கை முயக்கே யமர்ந்து வருந்திடும்பைக்
காரண மேதொகுத் தாயது கூட்டுங் கடனவற்கே.         (83)

அவனென் றுலகம் புகழும்பஞ் சாக்கா வாண்டகையை
எவனென்று முன்னி யிகந்தனை யாலெ னிழுதைநெஞ்சே
பவன்றவன் சங்கரன் பார்ப்பதி பாகன் பரன்சிவனாம்
உவனென்று தேறி யொழியா யொழியா வுறுபகையே.         (84)

உறுபகை யாளர் துவன்றினு நட்பின ரோங்கினுமென்
முறுகிய வின்ப மடுப்பதுண் டேற்பகை யான் முருக்கப்
பெறுவதொன் றில்லையின் னாங்குள தேற்பெய ராதுறவால்
நிறுவவு நீக்கவும் வல்லன்பஞ் சாக்கர நின்மலனே.         (85)

நின்மலன் பேரறி வாளன்பஞ் சாக்கர நிர்க்குணன்மற்
றன்மலத் தாழ்புல் லறிவுடை யேனுட னாயமர்ந்து
தன்மலர்ப் பாதந் தலைத்தந்துந் தாழ்விலன் சார்களங்க
வின்மதி வாழும் வெளிக்கென்னை தாழ்வு விரவுவதே.         (86)

விரவிய வான்வளி தீவிரி நீர்வியன் பாரவையாய்ப்
பரவிய பான்மதி யாய்க்கதிர் கால்பகல் வானவனாய்ப்
புரவிய லாருயி ராய்நின்ற பஞ்சாக் கரப்பொருளைக்
கரவியல் சீரருண் மாறாது காணுங் கடனரிதே.         (87)

அரிதுதன் பாதத் தடைவா ருயிர்க்கென வன்றுதொட்டுக்
கரிசறு மூர்த்தி தலந்தீர்த்த மாயமர் காரணனை
விரிபுகழ்ப் பஞ்சாக் கரவனை மெய்யன்பி னாலுளத்தே
பரிபவம் பெற்றார் பெறார்மலந் தான்செய் பரிபவமே.         (88)

பவமெழு கோடி யெடுப்பினு மென்னைபஞ் சாக்கரவன்
நவநவமாகப் புணருந் தொறுமின்ப நல்குகின்ற
தவமலி யிப்பவம் போல்வாய்ப் புறினிந்தத் தன்மையின்றி
அவமுறி னிந்தப் பவமுங் கடுக வவிதனன்றே .         (89)

நன்றே யடுப்ப தருளிற் கலந்த நலத்தவர்க்கும்
இன்றே யிறந்த பவங்களி னீட்டு மிருவினையுட்
சென்றே பயப்ப வெவையவை பஞ்சாக் கரச்செம்மறான்
நன்றே புணர்த்தும் புணர்த்தினு மேறா நிலைவைக்குமே .         (90)

வைப்பா யிருக்கும்பஞ் சாக்கர நாதன் மலர்ப்பதமே
துப்பா யழுந்தின் மலைநேர் வினையு மெரித்துரும்பர்
ஒப்பா யவியம் பதைப்பிற் கடுகு முயர்மலையாம்
இப்பா லனநெஞ்ச மேநினக் காம்வழி யெய்துகவே.         (91)

எய்துவ திங்கிடை யொன்றில்லை பஞ்சாக் கரவிறைவன்
உய்திற நாடிமுன் செய்வினை யூட்டி யொழிக்குங்கண்டாய்
நைதிறந் தீவினைக் கெண்ணலு நல்லதென் றொன்றனையே
செய்திற நாடலும் வேண்டா வவனடி சிந்திநெஞ்சே.         (92)

நெஞ்சே நினக்கு நெடும்பகை நீயந் நிலையறியா
தஞ்சே லெனவருள் பஞ்சாக் கரவ னவையவரால்
எஞ்சாது நீமுன்ன ரீட்டிய கூட்டி யிடும் பொழுது
நஞ்சே யெனமுன் னிலைபகை யாகவு நாடினையே.         (93)

நாடுவ தெல்லா மருளும்பஞ் சாக்கா னற்பதமே
கூடுவ தெல்லா மவனடி யார்தங் குழாத்திடையே
வீடுவ தெல்லா மறிவிலர் சேர்ச்சியென் றாய்விடினே
நீடுறும் வேறின்ப முண்டேனும் வேண்டா நெடுநிலத்தே.         (94)

நிலங்கா லகழ்ந்து நெடுமா லறியா நிகரில்பதம்
மலங்கா லறுக்கும்பஞ் சாக்கர நாதன் மலியருளால்
நலங்கா முறாவெனக் கெண்மையின் முற்றுநன் றுய்த்தளித்தான்
கலங்காமை யின்மையின் மற்றதற் கேற்குங் கடனிலனே.         (95)


இலம்பட லாவது பஞ்சாக் கரவ னெழிலருளில்
நலம்புரி வோர்க்குல கத்துறு செல்வங்க ணண்ணுவதே
குலம்புரி செல்வங்க ளாவன கோதி லடியவர்க்குச்
சலம்புரி வையகத் தாறிலம் பாடு தழைப்பனவே.         (96)

தழைக்கின்ற போதி வனமுஞ்செந் தாடொழு காலமிதென்
றழைக்கின்ற வன்பர்கள் சோடையுங் கண்டா ரகமுழுதும்
குழைக்கின்ற பஞ்சாக் கரவன்மெய்க் கோலமுங் கோதிறவம்
இழைக்கின்ற சூழலு மென்பன நீங்கா திருப்பனவே.         (97)

இருப்பன நெஞ்சன்பல் லூழியெல் லாம்பெயர்ந் தாலுமெம்பால்
விருப்பின னாத லரிதெனப் பஞ்சாக் கரவிமலன்
பொருப்பினை வாங்கிற் றெனவெனை யாண்ட புதுமையினாற்
கருப்படு மாறினிச் செல்லவொட் டானருட் காப்பிடுமே.         (98)

இடுவதெல் லாமவன் றன்குண மென்குண மேற்றல்வினை
யடுவதெல் லாமவன் றன்குண மென்குண மாக்கன்மெய்ம்மை
தொடுவதெல் லாமவன் றன்குண மென்குணந் தோல்வியிவை
படுவன வாயினும் பஞ்சாக் கரவன் பரிவுளனே.         (99)

உளநின்று காணி னொளிப்பனங் கேயெ னுளமொளிப்பின்
வெளிநின்று காணப் படுவன் விரிகடற் றெள்ளமிழ்தும்
தெளிவுண்ட தேறலுங் கைப்பவென் சிந்தை யெலாமினிப்பன்
பளகறுத் தாண்டப்பஞ் சாக்கர நாத பசுபதியே.         (100)

திருச்சிற்றம்பலம்.
பஞ்சாக்கரதேசிகர் அந்தாதி முற்றியது.

ஸ்ரீ மெய்கண்டதேவர் மிளிர்கழல் வெல்க.
ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள் மலரடி வாழ்க.
ஸ்ரீ கச்சியப்ப முனிவரர் கழலடி வாழ்க.
திருச்சிற்றம்பலம்.

பஞ்சாக்கரதேசிகரந்தாதி - குறிப்புரை.

1. பதி பசு பாசத்தை- அநாதி நித்தியப்பொருள்களாகிய பதி பசு பாச மென்னும் மூன்றனையும், பாசம் பசு பதி ஆக்கி - ஐந்தொழி லியற்றுங்கால் எய்திய சகலாவஸ்தையில் பாசமும் பசுவும் பதியுமாகிய முறையில் முன்பின்னாக நிற்கச்செய்து. பசு – ஆன்மா, ஒரீ இ- அந்த நிலையின் நீங்கி. பதி - பதிநெறியில்.
ஆக - ஒழுகியவழி. பசு - ஆன்மாவை. பதி ஆக்கி - பதியின் தன்மை எய்தச் செய்து (தூயதாக்கி). பின்னும் பயிற்றி - அது சீவன் முத்தி நிலையில் நிற்குங்காறும் அந்நிலையில் நழுவாதிருக்கச் செய்து. (இவ்வகையால்) தான் - அவ்வான்மா. பதியென ஆய்ப் பயிலும் - பதிபோலச் சிவத்தன்மை முழுதும் விளங்கப் பெற்றுப் பயிலுதற்கு ஏதுவாகிய. திருவாவடுதுறைசைப் பதி - திருவாவடுதுறை என்னும் திருப்பதியில். வளர்-எழுந்தருளியிருக்கின்ற. பஞ்சாக்கரவனை -ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகமூர்த்தியை. என் சொல்லிப் பாடுதும் - எவ் வியல்பின னென்று சொல்லிப் பாடுதும் என்பதாம்.
முன்பின்னாக நிற்கச்செய்தலாவது - பாசம் முற்படப் புலப்பட்டும், பசு அதனால் தொழிற்பட்டும், பதி தொழிற்படுத்தியும் நிற்குமாறு செய்தல் . ஆக - காரணப்பொருட்டு. பாசம் பசு பதி யாக்குதலாவது- கேவலநிலையினின்றும் சகலநிலை யெய்துவித்தல். பதி பசுவாக என்றது ஆன்மாப் பதிநெறியில் ஒழுகிநிற்றலை யுணர்த்திற்று. பசு பதி யாக்கி என்புழி ஆக்கச் சொல் அத்துவ சுத்தியால் ஆன்மாவைத் தூயனாக்கிப் பதியின் றன்மை யெய்துவித் தலை யுணர்த்திற்று. தான் பதி யென ஆய் என்புழி ஆக்கச் சொல் ஆன்மாப் பரமுத்தியில் சிவானந்தாநுபவ நிலையில் உறைத்து நிற்றலை உணர்த்திற்று.
ஆக்கி ஆக்கிப் பயிற்றித் திருவாவடுதுறைசைப் பதிவளர் பஞ்சாக்காவ னெனவும், ஆய்ப் பயிலும் திருவாவடுதுறைசைப் பதிவளர் பஞ்சாக்கரவ னெனவும் முடிக்க.

2. படர் தல் - நினைத்தல். அன்னவன் பாதம் கூடுவது என்க . இன்பம் நீடுவது.
நிகழ் செயல் - அவற்றிற்கு நிகழும் செயல்கள்.

3. ஒன்று இல்லையாக - தனக்கென உருவம் ஒன்றும் இல்லையாகவும். உயிர் உளதாக - உயிரென்பது ஒன்று இருப்பதை யுத்தேசித்து. தென்றில்லையாடி யாகிய பஞ்சாக்கரவன் உருவங் கொண்டு சென்று நின்று. இல்லை ஆதி - தற்போத முனைப்பு இல்லையாவாயாக. நின்றயான் - தற்போத முனைப்புடன் நின்ற யான். சென்று நின்று இறலும் - அவன் உபதேசித்த நெறிவழிச் சென்று நின்று தற்போதமுனைப்பு ஒழிதலும். சொல்லா ஒன்று - சிவானந்தம். ஒன்றில்லையாக என்பதற்கு அத்துவிதச் சொற்கு ஒன்றென்னும் பொருளில்லையாம்படி என்று பொருள் கோடலு மாம்.

4. பாசம் சடமானதால், பாசவறிவு என்பது யாது? உயிர் ஆணவம் நீங்கியவழி நானென்று கருதுமாறின்மையின், பசு வறிவு என்பது யாது? என்றும் ஒருநிலையில் நின்று உணர்த்துவது பதியறிவு ஒன்றேயாம். இங்ஙனமாக அப்பதியறிவைப் பாச ஞானம் பசுஞானம் என்பவற்றோடு ஒருங்கு சேர்த்துப் பதிஞான மென்பது யாது? அருளவேண்டும் என்பதாம். இந்த ஞானத் தின் இயல்புகள் சிவஞானபாடியத்திற் கூறப்பட்டன.

5. உயிர்க்கு அநுக்கிரகம் செய்வது சிவமேயன்றி ஏனை உயிர்களல்ல என்பதை யாரும் தெரிந்து பிழைக்க. பெருவான்பொருள் - சிவம். அப்பொருட்கு வாசகம் ஸ்ரீ பஞ்சாக்ஷரம். அருவாயும் அருவுருவாயும் உருவாயும் அவைதானெனவும் வந்ததேயன்றி ஸ்ரீ பஞ்சாக்ஷர தேசிக மூர்த்தியாகவும் எளிவந்த வாய்மை என்க.

6. தாழ்குழல் நோக்கி உலை மெழுகு போல உருகும். பமரம் - வண்டு : பிரமரமென்னும் வடமொழித்திரிவு. தணப்பற - நீக்கமின்றி. தேறலைப் பருகும். திருக்கு - குற்றம்.

7. ஆர்வம் - போன்பு. மெய் - சிவமாக.

8. சஞ்சிதம் - அநுபவிக்க வாராமற் குவிந்து கிடக்கும் கன்மத்தொகுதி. உடலிற் புல்கிய இன்பத் துன்பங்கள் - பிராரப்த கன்ம பலன்கள் . சஞ்சித
வினைத்தொகுதியைத் தன்றிரு நோக்காலெரித்தலும், பிராரப்தவினைப்பயனைத் தான் ஏற்றுக்கோடலும் ஆகிய இவற்றின் விரிவைச் சிவஞான மாபாடியத்திற் காண்க. கைம்மாறு நல்குதற்குக் கண்டிலனென்க. பூப்பது தொழின் மேனின்றது.

9. நலத் தகை - அன்மொழித்தொகை : நலத் தகையாகிய பஞ்சாக்கர தேவன். அவன் பணித்திடுங்கால் எனக்கு மெல்குந் திறமுள்ளது. மெல்குதல் - மென்மையாதல். ஒல்குதல் - குழையும். யான் எனது - அகங்கார மமகாரம். ஓடியது தனித் தனி கூட்டுக.

10. உற்றது - சகசமாயுற்றதாகிய . ஆணவம் ஓடியது. பாசமாகிய கன்மங்கள். பல்வகைத் தோற்றம் வாடின - அண்டச முதலாயின ஒழிந்தன. தோற்றம் இன்மையின் அயன் மால் முதலானோர் செய்கை வீடினர். நகைக்கு - உருபுமயக்கம்.

11. எதிர்ந்தோர் - எதிர்ப்பட்டோர் . நவை - குற்றம். துகைத்தல் - கெடுத்தல். தொக்கு - சம்பந்தம். தகைத்தல் - தடுத்தல். உகைத்தல் - செலுத்தல். துறைசையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பஞ்சாக்கர தேசிக மூர்த்தியின் திருவுருவை வியந்தவாறு.

12. தமது திருவடித்தாமரைகளைத் தொழுதால் ஸ்ரீ பஞ்சாக்கர தேசிக மூர்த்திகள் இயமனை நம்பாற் சாரவொட்டார். அழற்காலன் - அழலைப்போலுங் காலன். தது - உடல் . புழல் - உட்டுளையுடைய. கால் - நாளம். அரவிந்தப் புத்தேள் - பிரமன். இங்ஙனம் படைப்புக் கடவுட்கும் அழித்தற் கடவுட்கும் தத்தஞ் செயல் செய்ய இடமில்லையாக, திருமாற்கும் தன் செயல் செய்ய இடமில்லையென்பதாம். கானம் - பாட்டு. ஆயன் - கண்ணன். ஸ்ரீ பஞ்சாக்கர தேசிக மூர்த்திகள் அவ்விதஞ் செய்யும் தன்மை யுடையார் என்க.

13. கை யம்பு ஈண்டுத் திருமால். அப் பிரான் உலகுண்டது கிருஷ்ணாவதார நிகழ்ச்சி. கண்மலர் ஒன்று - நெற்றி விழி . ஐ அம்பு வேளை உண்டது - மன்மதனை உண்டது. அம்பு – நீர். எய்யம் - அறியோம். "எய்யாமையே அறியாமை' என்பது தொல்காப்பியம். அம்பு கண் என்பன ஒவ்வொன்றே யுண்டன : திருவடியோ வணங்கிய அன்பர் பிறவற்றைச் சிறிதுமறியோம் என்னுமாறு எல்லாவற்றையும் எடுத்து விழுங்கியதென்க.

14. ஒளி அறல் - ஒளியின் நீக்கம். மிடைதல் - நெருங்குதல். ஒழுங்கி - ஒழுங்குப்பட்டு. உள்ளத்து ஒழிவு - தற்போத நீக்கம். ஓங்கிருள் - ஆணவம். மாக்கள் சிந்தையுட்
சார்ந்துநின்ற பொங்கிய இருளாதலின் ஓங்கிருளெனப்பட்டது. மழுங்குதல் - கூரில்லா தொழிதல் : அஃதாவது, அது நித்தப்பொருளாயினும் கேடு விளை யாதிருத்தல். எஞ்ஞான்றும் அவனைப் புணர்தலன்றி வேறு புழுங்கக்கடவது யாதுமில்லை.

15. அன்றுதல் - பகைத்தல். நீத்தம் - கங்கை நீர்ப் பெருக்கு. சடைக்கண் நீத்தமடுத்தான். அடல்-கொல்லுதல். ஓதை-ஓசை. செவிக்கண் மடுத்தான். களத்தில் ஆலத்தை மடுத்தான். அவை போல என்னையும் கொடிய பொருளாகக் கருதித் திருவடிக்கண் மடுத்தானெனச் சமற்காரமாகக் கூறினார்.

16. கொடுக்கும் அவன் - தவப்பயனைக் கொடுக்கும் அவ னென்க , 'செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பானும்' கூறியவாறு. தொழிற்கு வரும் நவமா உரு - நவந்தரு பேதம். பவம் - பிறவி. பவம் - திருவுருத்தோற்றம். அத்திருவுருவி னிடத்து அன்பு செலுத்தாதிருப்பின் யாரும் அப்பெருமானை அறியாரென்றவாறு.

17. யான் பஞ்சாக்கரவன் பதத்திடை இருந்திடின் மலமும் சேட்டை புரியாது இருந்திடும்; கற்றுத் தற்போதம் எழின் மலமும் உடனே எழுந்து நீ எனக்கு விருந்தென்று சொல்லித் தன்வாய்ப் பெய்யும். அத்துன்பங்கண்டு மீட்டும் அவனடிக்கீழ் இராமல் ஒழியின், ஐயோ எல்லாத் துன்பங்களும் என்பாற் பொருந்திடும். ஆதலின், அப்பெருமானது திருநாமத்தை ஓதுக . ஓதுவதென்பது கொள்ளப்படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே' என்பது போல நின்றது.

18. ஓதுவது - ஓதப்படுவது. மறையின் மீது வதிவது - வேதத்தின் நடுநாயகமா யிருப்பது, நட்பையும் இகலையும் விளக்குவது. நீங்குவதும் பின் புணர்வதும் முன்பு சேர்ந்த மயக்கத்தை யொழிப்பதும் அது நீங்கிய வழி எஞ்சி நிற்பதுமாகிய வெல்லாம் அவன் பெயரே என்க. இது ஸ்ரீ பஞ்சாக்கர தேசிக மூர்த்திகள் திருநாமப் பொருளை விளக்கியவாறு.


19. பூங்கழற்றுணை கருதிடும் என்னைத் தன்னுள் இருத்தும்: மலம் கதிப்பின் என்னோடு பொருதலைச் செய்யும் போகப் புணர்ப்பா யிருக்கும். புரை - சிறப்பு.
இருது இடு நாமம் - பருவம். தவத்தால் பருவமடையாதவர்கட்குக் கழற்றுணை இருளாயே இருக்கும். அருள் விருதினையுடைய.

20. அணையா - தன்னைச் சேராத. அணைப்பான் - பானீற்று வினையெச்சம். பிறகே செல்லும் - தன்பின் செல்லுகின்ற. புணை - மரக்கலம். நெஞ்சினை நோக்கிக் கூறியவாறு.

21. அங்கே - நினைத்த அவ்விடத்தே. செஞ்சேவடி- மிகச் சிவந்த திருவடி : 'செஞ்செவ்வே' ளென்றாற் போல. இகந்து - நீங்கி. புலனைச் சென்று பற்றி. சேறல் - செல்லுதல். நயத்தல் - மகிழ்தல். நெஞ்சே! நீ யுனக்கு உறுதியின்னதென்பதனை யறிந்திலை போலும்.

22. நெஞ்சே நல்லன வந்தால் மகிழ்வாய்: நல்லன வல்லா தனவற்றை நின் தீவினைக்குப் பயனாக . அவன் கொடுத்தால் நடுங்குவாய் நீ செய்த வினைக்கீடாக உள்ளதை அருள் புரியும் பஞ்சாக்கர மூர்த்தியோடு இயைந்து உடலாயிருந்து வியந்து அவை தாக்காது இருக்க அறியாமல் மகிழவும் பனிக்கவும் அறிந்த நின் பண்பு நன்றாயிருக்கின்றது.

23. அளறு - நாகம். நரகத்திற்கு இரையாய் இருந்தேன். அற்பரைப் பொருந்துவேன் . திருந்தேன்-வினைப்பெயர். மருந்து - அமிர்தம்.

24. எறுழ் - வலிமை. பகடூர்தி - இயமன். குறுகார் - அடையார். கதமலை - யானை : அன்மொழித்தொகை. மதவிழி - வலிய விழி. திருவடி இயமனையும், செங்கை பிரமனையும், நுதல் விழி மன்மதனையும் ஒறுத்தமையின் அவற்றைத் தரிசித்தோர் முறையே இயமபுரம் சேராமையும், பிரமன் கையால் எழுதப்படா மையும், மன்மதபாணம் வருத்தாமையும் பெறுவரெனப்பட்டது.

25. கணை - திருமால். அது உண்ட தேர் - கீழும் மேலுமுள்ள உலகங்கள். இருள் உண்ணும் ஆழி - சூரிய சந்திரர். தேரைப் பரிக்கும் சிலை - மகாமேரு. வலவன் - பிரமன். ஏங்க நம்மால் ஆவது யாதுமில்லையே யென ஏங்குமாறு. அசித்தது - சிரித்தது.

26. வன்பு - வலிமை.

27. மதிப்பிக்கும் - நினைக்கும்படி செய்யும். அன்பை உதிப் பிக்கு மென்க. கதிப்பிக்கும் - கதியிற் செல்லுமாறு செய்யும். என்னைப் பதிப்பிக்கும்.

28. கொண்டல் - மேகம். மண்டலம் - வட்டம். என்னை மீட்டும் உமிழ்வின்றி உண்டன.

29. நளினம் - செந்தாமரை மலர். கேவல நிலையிற் சிவத்தை யறியாது மலத்தில் அழுந்திக் கிடந்தது போலச் சுத்த நிலையின் மலத்தை யறியாது சிவத்தில் அழுத்திக்கிடந்தமை கூறியவாறு.

30. அடுத்தனம் - அடைந்தோம். எனது என்னும் மமகாரத்தைக் கெடுத்து . கெடினல்லது மலமும் விடுமோ அருளும் அண்முமோ.

31. அல் - இருள். எல் - ஒளி. துவந்துவம் - இன்பத் துன்பங்கள். ஞானம் இரண்டு - அபர பர ஞானங்கள் .

32. சொல்ல நினைய இறைஞ்ச - திரிகரணத்தானும் வழிபட . துகட்கிழக்கு- இங்கே ஆணவமாகிய கிழங்கு. கல்லுதல் தோண்டுதல். நாதன் அருள்வதின் என்க. காசினிக்கு-உருபுமயக்கம்.

33. ஆசு - குற்றம். இறுதல் - ஒழியும். வதிதல் - எழுந்தருளியிருத்தல். அரசூர் - திருவாவடுதுறை.

34. பாத்துநர் - பகுத்துணர்வோர். ஆத்தன் - வடமொழித் திரிவு. அவனன்றி யாதும் நிகழா தென்பது உணர்த்தியவாறு.

35. உயிரின் தன்மை கூறியவாறு. ஒன்றனைச் செய்யத் தொடங்கி இடையில் அதனை விடுத்து வேறொன்றனைச் செய்யத் தொடங்கும். அதனையும் மறந்து விடும். இவ்வித உயிர் ஸ்ரீ பஞ் சாக்கரநாதன் முதுநலம் உற்றாலும் முடிவுறக் கொள்ளாது. ஆயினும் பூர்ண வின்பத்தை யனுபவிக்கும். முதுநலம் - ஈண்டு ஆனந்தம்.

36. அருள் விளைத்துத் தானாயிருக்கும் என்க. வளைத் தழும்பாளன் என்பது காஞ்சிப் புராணத்தா லறியப்படுவது.

37. வீ - பூ. ததைதல் - நெருங்குதல். விரகு - உபாயம்.

38. மாமதிபோற் பப்புற்ற வாணவம் பாற்றி என்பதை 'மன்னுமிருளை மதிதுரந்த வாறு' எனவரும் வெண்பாவா னறிக. வைப்பு - நிக்ஷேபநிதி.

39. வடிவாளி அடக்கியது. மதுகை - வலிமை, சிலை-வில்: ஈண்டு மேரு .
மீளி - வலியோன், படி - பூமி, தேராகிய படி என்க.

40. பாகன் - பிரமன். பாகற் பயந்தவன் - திருமால். குரு - நிறம். முடியும் பாதமும் அவ்விருவரும் இரப்புற்று நாடவும் எட்டாது கடந்து உயர்ந்தன என்க. அவ்விருவரும் அகங்காரத்தால் நாடத்தொடங்கினராதலின் கண்டிலரென்பது. 'இன்பவெள்ளம் விருப்புற்ற அன்பர்க் கருளும் பஞ்சாக்கர மெய்ப்பொருள்'
என்பதனாற் பெறப்படும்.

41. பாதங்கள் நான்கு - சரியாதி. பதங்கள் நான்கு - சாலோ காதி. வேதங்கள் நான்கு - இருக்காதி. விரையாக்கலி - ஆணை. பூதங்களாதி - பூத முதலாகிய தத்துவங்கள். புரையாத - இழிந்த. புகர் மலம் - குற்றமாகிய ஆணவமலம்.
ஏதங்கள் - கேடுகள்.

42. இறை - இறைமை. பஞ்சாக்கரநாதன் அரசு செலுத்தும் முறையை நாடின் ஏனைய முறையனைத்தும் முறையாதலில்லை. முகிழ்ப்ப - இனித் தோன்றுவன : அவை பிராரத்தம்.

43. முற்செய்யுளின் இறைமைகூறி இச்செய்யுளின் வள்ளன்மை கூறுகின்றார். பற்று இகல் - விருப்பு வெறுப்பு. விழையாது - விரும்பாமல்.

44. உள்ளும் புறமும் ஒருதன்மைக் காட்சியர் - சிவஞானிகள். உலகில் நள்ளும் - உலகத்திற் பொருந்தியிருக்கும். விள்ளுதல் - நீங்குதல். பரிசு - தன்மை . பஞ்சாக்கரவன் றிருவடியை அடைந்த சீவன் முத்தர் உலகியலிற் பொருந்தி நின்றாலும் அவர் வினைவழி நண்ணகிலார்: அவன் றிருவடியை அடையாத ஏனையோர் எல்லாம் விடுத்தனராயினும் வினைவழி விடுக்கலர். 'உள்ளும் புறமு மொருதன்மைக் காட்சியருக் - கெள்ளுந் திறமேது மில்’ என்பது திருவருட்பயன்.

45. ஆர்வம் - கண்ட பொருள் மேற் செல்லும் பற்றுள்ளம். பொருள் என்பது ஈண்டு வினை.

46. வருதல் - பிறத்தல். போதல் - இறத்தல். இவை இப் பொருட்டாதலைப் ‘போக்கு வரவு புரிய' என்பதனான் அறிக. தரு. கற்பதரு . நிதி - சங்கநிதி முதலியன . பொரு - உவமை. ஒருவ அரும் முத்தி - பிரிதல் இல்லாத வீடு.

47. கேவலம் சகலம் சுத்தமென்னும் அவத்தை மூன்றினும் பஞ்சாக்கர விமலன் உயிர்கட்கு அருள் புரியுமாறு கூறுகின்றது இச்செய்யுள் . உளைத்த - வருத்திய. தெளிக்கும் - தெளிவிக்கும்.

48. விக்குண் முதலிய நோய்கள் சூழ்ந்து வருந்தினும் நக்குப் பஞ்சாக்கரவன் திருவடி புகின் அவை யெல்லாம் இன்பமாகப் பொலியும்.

49. மன்ற - நிச்சயமாக : 'மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்' என்பது தொல்காப்பியம். கலவும் - சேரும். சலம் - வஞ்சம். உலகியல் கூறித் தெருட்டியவாறு.

50. கள்ளுண்ட வாளி - மலர். சுவை யுண்ட கார்முகம் - கரும்பு. அவற்றைக் கைக்கொண்ட காளை - மன்மதன். அவனது உடலை விள்ளுண்ட கண்ணனாகிய பஞ்சாக்கர நாதன். வினைக்கு அஞ்சாமைக்குக் காரணம் கூறியவாறு.

51. எண்ணிய மூவர்-சுபுத்தி, சுசீலன், சுதன்மன். திருவடித் தாமரைக்கீழ் என்னைப் பெய்து என்க. வெய்து - விரைந்து

52. நிழலுடல் - சாயாசரீரம். அளம் - உப்பளம்.

53. உயிர்கடாம் பயிலா என்க. அப்பண்பின - இன்பத் துன்பம் பயிலாப் பண்பின. செயிர் - குற்றம். மயரார் - மயங்கார்.

54. அருள்வழியன்றி மருவுவது அரிது: ஒருவலும் அரிது.

55. பொருளான வெலாம் அற்றாலும் என்னை? அருளின் உற்று.
ஆலும் - பெயரெச்சம்.

56. ஒரு பொருள் - திருமால். பவம் பெறுமாறு இன்று.

57. திரிகரணத்தாலும் செய்த தீங்குகள் நீங்குமாறு கூறுகின்றது. பஞ்சாக்கரனைப் புகழ்ந்து நாவிற் பயிற்றியிட்ட அவம் பலகோடியும் அறுத்தாம். சிந்தைய - சிந்தையிலுள்ள தீங்குகள் : வினையாலணையும் பெயர். கோடிய - பெயரெச்சம். அவன் தாளை நினைந்து சிந்தையிலுள்ள தீங்குகளைத் தணந்தாம். இறைஞ்சி உடற்றீங்கு நீத்தனம்.

58. நீத்தனம், பாத்தனம் - வினையெச்சமுற்று.

59. எங்கும் எழுந்தது. அதில் புல்லறிவு விழுந்தது. அருளாய் மிளிர்ந்தன. பாசங்களென்று எண்ணப்பட்ட மாயை கன்மங்கள். தழுந்தரம் - தழுவுந்தரம்.

60. மூர்க்கர் என்பார் : மாயும்படி அறியார்: அஃதுறும் உண்மை எய்யார். எய்யாமை - அறியாமை.

61. முனிவு - வெறுப்பு: ஆகுபெயர். பருவருதல் - துன்பப் படுதல். கார்க்குஅதிர் - மேகத்தைக் கண்டு ஆரவாரிக்கும்.

62. குரு - நிறம். கிரகங்களனைத்தும் துருவனாற் பிணிக்கப் படுவதென்பது நூற்கொள்கை.


63. இருள்நடமாடலாவது - ஊன நடனம்: செயீர் - குற்றம்.

64. கதி - மேலான நிலை இகத்தல் - நீங்குதல்.

65. பழியும் புகழும் வினையால் வருவன. அப்புகழும் பழியும் பஞ்சாக்கரவன் பதத்து ஒழுங்குபட்டு நிற்கும் பெருநிலைக்கு ஊறு செய்யா: ஆதலின், அவன்
பதத்துற்று நில் என்க.

66. நீடுசெல் - நெடுந்தூரம்போ , அல்கல் - தங்காதே. திறத்தின் - திறத்தினின்றும். நிறுவிற் காய்ந்தும் எடுப்பின் நயந்தும்: நிரனிறை. புல் - முதனிலைத் தொழிற்பெயர். பாரமாவது வினைப் பயனை நுகர்வித்தல்.

67. மாணும்வினை என்க. பிராரத்தவினை தாக்காதிருத்தற்கு உபாயங் கூறியவாறு.

68. ஐங்கலை-நிவிர்த்தியாதி பஞ்சகலைகள் . உளத்தை மயலில் விட்டனம்.

69. செருக்கை விட்டனம் : அதனால் உலக நிலைபற்றிப் பார்க்குமிடத்துக் கேடு அடைந்தோம்: அக்கேடே சிறந்த வாழ்க்கையாக் கொண்டோம். ஸ்ரீ பஞ்சாக்கரநாதன் திருவடிப்பூசனை தொடங்கினோம்: இந்தத் தொடர்பை எவர் நீக்குவரென்க.

70. குஞ்சரம் - விளம்பழத்திற்கு வருவதோர் நோய் : சிந்தாமணி யுரையில் நச்சினார்க்கினியர் இவ்வாறு கூறினர். தன் வயிறு என்பது விளம்பழத்தின் உள்ளிடம். விளக்கட்கனி - விளங்கனி. தன்புறம் என்புழி - தான் உள்ளிருப்ப அந்நோய் புறம். மேதினிக்கு - உருபுமயக்கம்.

71. பஞ்சாக்கரவன் நெடும்பதம் விரவுவ போதுவ ஈதென்ன அற்புதம்.
போக்கு - குற்றம் : "போக்கறுபனுவல் '' என்றார் பனம்பாரனர்.

72. சொல்மாத்திரையில் வணங்குபவர்க்கும் வல்வினை இறும்.

73. மாலையது - இயல்பினையுடையது. பஞ்சாக்கரவன் அழிவேனை ஆக்கி வாவென் றருளினன்.

74. பருவமென்பது உயிர்களுக்கேயன்றிப் பஞ்சாக்கர ஆண்டகைக்கில்லை. ஆதலின், நீ இப்பொழுது அவனை நினையின் அவனருள் உனக்கு வாய்த்திடும்.

75. கதி - பிறவி. புல்வினை - இழிவான தீவினை : வினைத் தொகையுமாம். அடுத்துப்புரட்டியது.

76. ஆரியன் - ஆசாரியன் . கேவல நிலையினும் ஐந்தொழில் செய்து, பக்குவப்படுத்திச், சகல நிலைக்குக் கொண்டுவந்து, அச்சகல நிலையில் நாம் செய்த குற்றங்களையெல்லாம் நீக்கி நம்மைத் தாங்கும் பஞ்சாக்கரமூர்த்தி இன்னும் நம்மைத் தாங்கி மேனிலையிற் சோப்பனென்னும் உண்மையை உணர்ந்தேன் என்றவாறு.
    "பண்டிகந் திருளிற் பட்ட படர்பெரும் பிழையை நீயே
    கண்டொரு செயலு மில்லாக் காலத்துக் கருணை வைத்துக்
    கொண்டிடும் பருவ நோக்கிக் கோளைமெய் யருளிற் றந்த
    வண்டனிப் பிழையுள் வையா தளிப்பதின் றரிது போலும் ''
என இவ்வாசிரியர் தணிகைப் புராணத்து அருளியதுங் காண்க.

77. பஞ்சாக்கர ஏந்தல் வைத்தான், வைத்தனன், வைத்தனன் என்க.

78. உலகினர் சிற்பரமென்று அறியார்: அதுவேயுமன்றி, ஐந்தொழிற்பொருட்டுக் கொள்ளும் உருவத்தின் உண்மையும் அறியார்.

79. அநந்யம் - வேறன்மை . பொன் - சூரியன்.

80. துஞ்சுதல் - நிலைபெறுதல் : பெருஞ்செல்வரென்றபடி. வேலர் - அரசர். கொன் - அச்சம். தென் - அழகு . தாமரை மலரின் அழகும் கெடுதற்குக் காரணமாகிய பஞ்சாக்கரவன்றிருவடி.

81. கூசுதலாவது அப்பெருமானது உயர்வும் தமது இழிவும் நோக்கியவழி நிகழ்வது.

82. உற்றிலா எனக்குக் குறையுண்ட நெஞ்சு முதலியன அளித்தான்.

83. ஆரண மார்க்கம் - வேதாகமநெறி, அரவு - ஆகுபெயா. முயக்கு - முயக்கம். இடும்பைக் காரணம் - துன்பம் நுகர்தற்குரிய காரணத்தை .

84. இழுதை - பேதை.

85. இன்னாங்கு - துன்பம். உறவாற் பெயராது. இன்பம் நிறுவவும் இன்னாங்கு நீக்கவும் வல்லன் பஞ்சாக்கர நின்மலனே.

86. அல் மலம் - இருண்மலம். இறைவன் மலஞ்சார்ந்த உயிரோடு கலந்திருப்பினும் மலம் அவனைத் தாக்காதென்பது உவமை வாயிலாக விளக்கப்பட்டது.

87. கால் - வினைத்தொகை. அஷ்டமூர்த்தியாய் நிற்குமாறு கூறியது. கரவு இயல் சீர் அருள் - வெளிப்படாது மறைதல் இயலுகின்ற சிறப்பினையுடைய திருவருள்

88. அடைவு - அடைதல் . பரிபவம் - முன்னது வினைத்தொகை : பின்னது வியாகூலம்.

89. இப்பவம் போல் வாய்ப்புறின் பவமெழுகோடி யெடுப்பினும் என்னை என்க.

90. அருளிற் கலந்த நலத்தவர் சீவன்முத்தர். இறந்த - கழிந்த. சென்றே பயப்ப - பிராரத்தம். ஏறா நிலை - ஆகாமியம் சேராதநிலை.

91. துரும்பர் - போலி . அழுந்தின் அவியும் பதைப்பின் மலையாம்.

92. தீவினை நீங்க எண்ணுதலும் , நல்வினை செய்ய நாடலும் வேண்டா .

93. நெஞ்சே உனக்குப் பகை நீயே. நீ முன்னர் ஈட்டிய வினைப் பயன்களை அவ்வவர் முன்னிலையாகப் பஞ்சாக்கரவன் கூட்டும் பொழுது.

94. நாடுவதெல்லாம் நற்பதம், கூடுவதெல்லாம் அடியார் குழாம், வீடுவதெல்லாம் அறிவிலர் சேர்க்கை .

95. கால் அகழ்தல் - கால் யாத்தலென்பது போல நின்றது. மலத்தை அடியோடு அறுக்கும். இச்செய்யுட்பொருளை
"என்னா லறியாப் பதந்தந்தா யான தறியா தேகெட்டேன்,
உன்னா லொன் றுங் குறையில்லை"
என்னும் திருவாக்கான் அறிக.

96. அடியார்க்கு நல்குரவும் செல்வமும் கூறியவாறு. சலம் - வஞ்சம்.

97. போதி - அரசமரம். சோடை - ஈண்டு ஆசைமிகுதி.

98. இரும்பு போன்ற மனத்தன் என்று கருதி. மலையை வளைத்தாற்போல . காப்பு - தடை.

99. உயிர்க்கும் இறைவற்குமுள்ள வேறுபாடு கூறுமுகத்தால் பஞ்சாக்கரமூர்த்தியின் பேரருள் விளக்கியவாறு.

100. உளநின்று காணலாவது திரிவுகாட்சி. உளமொளித்தலாவது தெளிவு காட்சி. இக்காட்சியின் இயல் சிவஞானமாபாடியத்து நன்கு விளக்கப்பட்டது. பளகு அறுத்தல் - குற்றம் நீக்குதல்.

குறிப்புரை முற்றிற்று.


சிவமயம்.
திருச்சிற்றம்பலம்

"பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்
பதியினைப் போற்பசு பாசம அநாதி
பதியினைச் சென்றனு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசரி லாவே."

"ஆன்கனறு தேடி யழைக்கு மதுபோல
நானகன்றுய் நாடி யழைத்தே னென்நாதனை
வான்கனறுக் கப்பாலாய நின்ற மறைப்பொருள்
ஊன்கனான நாடிவந் துட்புது தானே.''

தத்துவம்.

"ஆகின்ற தொண்ணூறே டாறும் பொது எனபர்
ஆகின்ற வாறு றறுஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்
காகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே.''
திருச்சிற்றம்பலம்.
        - திருமூலதேவநாயனார்.


சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
ஆதீன வெளியீடுகள்.

1. முத்தி பஞ்சாக்கர மாலை - பஞ்சாக்கர தேசிகர்மாலை- பதவுரையுடன் .
2. ஞானபூசாவிதி - பழையவுரையுடன்.
3. நல்லூர் மாசிமகோற்சவ வைபவம்.
4. மண்ணிப்படிக்கரை ஸ்தலமகாத்மியம்.
5. காருண்யாமிர்த தீர்த்தமகிமை.
6.இராமாயண தாற்பரியசங்கிரகம் உரையுடன்.
7 ஸ்ரீ மாதவச் சிவஞானசுவாமிகள் மீது தோத்திரப்பா உரையுடன் (முதற்பாகம்)
8 சிவஞானபோதம் - சூத்திரமூலமும் உரையும்.
9 சித்தாந்தமரபு-சித்தாந்தமரபு கண்டனம் - சித்தாந்தமரபுகண்டன கண்டனம் குறிப்புடன்.
10 ஸ்ரீ நமச்சிவாயமூர்த்தி மும்மணிக்கோவை.
11. திருநெல்வேலித்தேவாரப்பதிகம் உரையுடன்.
12. ஸ்ரீமாதவச் சிவஞான சுவாமிகள் மீது
13 தோத்திரப்பா உரையுடன் (உ-ம் பாகம்) சைவசமயம்.
14 பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி-உரையுடன்.
15 சித்தாந்தப் பிரகாசிகை - குறிப்புடன்.
16. சுதந்திரத்திருநாள்.
17. கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடு தூது -டாக்டர் ஸ்ரீமத் உ.வே.சா - உரையுடன்.
18. திருச்செந்தூர் - கடற்கரை முருகர் கோயில் (ஆங்கிலம்)
19. ஞான சூடாமணி.
20. சிவஞான போதம்
21 ஸ்ரீமாதவச் சிவஞான சுவாமிகள் சிற்றுரை (அச்சில்)
ஸ்ரீசுவாமிநாத தேசிகர் பிரபந்தத்திரட்டு (அச்சில்)
22. பூப்பிள்ளையட்டவணை முதலியன.
23 சதமணிக்கோவை பொழிப்புரை.
24. திருவள்ளுவரும் பெரிய புராணமும்.
25 சமயம்.
26 திருச்சிற்றம்பலதேசிகர் கலம்பகம் உரையுடன்.
27. அத்துவிதவாக்கியத் தெளிவுரை.
28. சிவஞானபோதம் பன்னிரு சூத்திரம் உரை.
29. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் உரையுடன்.
30. சிவஞானசித்தியார் ஆராய்ச்சி (வேறுபதிப்பு )
31. திருப்பள்ளியெழுச்சி (வேறுபதிப்பு )
32. முத்தி பஞ்சாக்கரமாலை முதலியன.
33. ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகள் பிரபந்தங்கள் 1.
34, 35. துண்டுப்பிரசுரங்கள்.
36. திருவாவடுதுறையாதீன வரலாறு.
37. பாரத்தாற்பரிய சங்கிரகம் உரையுடன்.
38. உலகுடைய நாயனார் கழிநெடில் குறிப்புரை.
39 கலைசைப்பதிற்றுப்பத்தந்தாதி (மாதவ) குறிப்புரை
40. அம்பலவாண தேசிகா நினைவுமலர்.
41 சந்தானாசாரிய புராண சங்கிரகம்.
42. சந்தான குரவர் நான்மணிமாலை.
43. விநாயகரகவல் உரை.
44. திருவுந்தியார் உரை ... (மெய்கண்ட - 1)
45. திருக்களிற்றுப்படியார் உரை .... (மெய்கண்ட - 2)
46. கயிலைபாதிகாளத்திபாதியந்தாதியுரை.
47 நமச்சிவாயமூர்த்தி ஆற்றுப்படை (வேறுபதிப்பு )
48. சைவப்பேரரசு.
49. திருவஞ்சைக்களம் தேவாரப்பதிகம் உரை.
50. திருமந்திர சிந்தனை (நவாக்கரி)
51. வடதிருமுல்லைவாயிலந்தாதியுரை (மாதவ)
52. போலிவினா மறுப்பு.
53. சோமேசர் முதுமொழி வெண்பா மூலம் (மாதவ)
54. சிவஞானபோதம் பழையவுரை ..... (மெய்கண்ட - 3)
55. திருக்கோகர்ணம் தேவாரப்பதிகம் உரை.
56. திருஞான சாகரம்.
57. இருபா இருபது உரை. .... (மெய்கண்ட- 5)
58 துகளறு போதம் பொழிப்புரை.
59. கந்தபுராணதத்துவம்.
60. சகலகலாவல்லி மாலை உரை.
61. திருவெம்பாவை பதவுரை பொழிப்புரைகள் :
62 திருப்பருப்பதம் தேவாரப்பதிகம் உரை
63. திருவெம்பாவைக்கருத்து முதலியன.
64. சிவபூசைத்திரட்டு.
65. சிவப்பிரகாசம் உரை. ... (மெய்கண்ட - 7)
66. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் ஆராய்ச்சி.
67. இரட்டையர் பிரபந்தங்கள் : தில்லைக்கலம்பகம், திருவாமாத்தூர்க்கலம்பகம்,
ஏகாம்பரநாதருலா முதலியன.
68. அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் ....... (மாதவ)
69. செம்பியன்மாதேவியார். .... (கல்வெட்டு)
70. தொட்டிக்கலை - மதுரகவி - ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் பிரபந்தங்கள். (முதற்பகுதி)
71. கவிதாக்ஷஸ - ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரபந்தங்கள். (முதற்பகுதி)
72. ஸ்ரீ காசிகணடம் முழுவதும் மூலம்.

குறிப்பு :- ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் முதற்பகுதி வேண்டுவோர் ஆதீனம் லைபரேரியனுக்கு 10-அணா தபால். தலைச்சீட்டு அனுப்பிப்பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் ஒருபிரதியே பெறுவதற்குரியர்.
--------- ௨
சிவமயம்.
கற்கு நூன் முறை.

திருவாவடுதுறை ஆதீனத்து வித்துவசிகாமணி ஸ்ரீ சபாபதி நாவலரவர்கள் விதிப்படி வித்தியாரம்பஞ் செய்து நல்லாசிரியரை யடைந்து நற்றமிழ் நூல் கற்கப்புகு நன்மாணாக்கர் முன்னர்த் தமிழ் நெடுங் கணக்காய்ந்து கொண்டு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி முதலிய உலக நீதி நூல்களைக் கற்றுப் பின்னர் அவைகளின் பொருள்களை நன்று தெரிந்து கொள்க.

அதற்குப் பின் நிகண்டு கற்று அது கூறஞ் சொற்பொருளுணர்ந்து முதுமொழி வெண்பா , நீதிநெறிவிளக்கம், நாலடி, ஆசாரக்கோவை முதலிய நீதி நூல்களைக் கற்று அவற்றின் பொருளைய மவற்றின்கண் வரும் நிகண்டுச்சொற்களையும் நன்றாக வறிந்து கொள்க.

அதற்குப் பின் சைவநன்மாணாக்கர் சைவாசாரியர்பால் வைதிக சைவசாத்திர மோதுதற்கு வேண்டுஞ் சைவ சம்ஸகாரமும் வைணவ நன்மாணாக்கர் வைணவ ஆசாரியர்பால் வைணவ நூல் ஓதுதற்கு வேண்டும். வைணவ சம்ஸ்காரமும் விதிப்படி பெற்று, முறையே பஞ்சாக்கர அட்டாக்கர மந்திர தந்திர செபவனுட்டான முடையராய்த் , தேவாரந் திருவாசக நாலாயிரப்பிரபந்த மென்னுந் தமிழ் வேதங்களைப் பண்முறையாகவுஞ் சுத்தாங்கமாகவுமோதப் பழகிக்கொள்க.

அதன்மேல், நல்லியற் புலவரியற்றிய தமிழிலக்கணச் சுருக்கங் கற்றுக்கொண்டு திருவிசைப்பா, திருமந்திரம், திருப்பல்லாண்டு, பதினொராந்திருமுறைப் பிரபந்தங்கள், குமரகுருபர முனிவர் பிரபந்தங்கள், சிவப்பிரகாசமுனிவர் பிரபந்தங்கள், சிவஞான யோகிகள் பிரபந்தங்கள், அவர் மாணாக்கர் பிரபந்தங்கள் முதலியவைகளையும் பெரிய புராணம், கோயிற்புராணம் காஞ்சிப்புராணம், தணிகைப்புராணம், திருவிளையாடற் புராணம், பிரமோத்தரகாண்டம், காசிகண்டம், பிரபுலிங்கலீலை, பாகவத முதலிய தமிழ்ப்புராணங்களையும், இராமாயணம், பாரதமென்னுந் தமிழி திகாசங்களையும் முறையாற்கேட்டு இலக்கியவறிவு ஈட்டிக்கொள்க.

அதன்மேல் நன்னூல், இலக்கண விளக்கம், யாப்பருங்கலம், காரிகை, அகப் பொருள் விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, வெண்பாப்பாட்டியல், தண்டியலங்காரம், வீரசோழியம், நேமிநாதமென்னும் இலக்கண நூல்களையவற்றின் காண்டிகை விருத்தியரைகளோடுளங் கொளக் சற்றுக் , கற்றவிலக்கியங்களில் இப்பஞ்சலக்கண நூல் விதிக ளமைவர நன்று பயில்க.
இதுகாறு கூறிய இவ்விலக்கிய இலக்கண நூலுரைகண் முறையா லுளங் கொளக் கற்றுத் தமிழ்ப் புலமை யெய்திய நன்மாணக்கா இளம் தமிழ்ப்புலவர் (F.A.) என்னுங் கல்விப் பட்டாபிதானத்துக் குரியரென் றுணர்க.

அதன்மேல், தொல்காப்பிய வெழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரங்களை இளம் பூரணம் சேனாவனாரயம், நச்சினார்க்கினிய மென்னு முரைகளோடு நன்று கற்றுச் , சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி, நைடதம், இரகுவம்ச மென்னுந் தமிழ்க்காவியங்களை உரைகளோடு நன்று ஆராய்ந்து கொள்க.

அற்றே லஃதங்ஙனமாக ,
    "சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே –
    தூக்கிய தேசித்தார் சோமேசா –
    நோக்கிற் பயனில் சொற் பாராட்டு வானை
    மகனெனல் - மக்கட் பதடி யெனல்''

என்று ஆசிரியர் சிவஞானயோகிகளருளிச் செய்தலின் சிந்தாமணிப்பயிற்சி யுஞ் சிந்தாமணி யென்ற துபலக்கணமாகலின், அது போலுஞ் சிலப்பதிகார மணிமேகலை சூளாமணிப் பயிற்சியுஞ் சைவ வைணவ நன்மாணாக்கர்களுக்கு ஆகாவெனின், அஃதொக்குமன்னாயினும், சிந்தாமணிமுதலிய காவியங்களிற் பொதுவான உலகியல் நீதி வைராக்கியங் கூறப்படுதலானும், தொல்காப்பிய வியற்றமிழ்ப் பிரயோக மிக வருதலானும், அப்பய னோக்கிச் சைவ வைணவ நன்மாணாக்க ரவையுங் கற்கற்பாலரென் றெடுத்தோதினாம். இனிச் சைவ வைணவ நன்மாணாக்கரக் காவியங்களைக்கற்க வேண்டின் தத்தஞ் சமய சித்தாந்தப் பார்வையாற் கற்க.

ஆத்தனூல்களிற் போல வவற்றின்க ணழுந்தற்க வென்பார், ''சிந்தாமணிப் பயிற்சி தீது'' என்றார். பயிறல் பலகா லுளங்கொள வழுந்தி யாராய்தல். மன மொன்றிலழுந்தின் அதன் வண்ணமாய் மாறுமென்ப தனுபவ மாகலின், வேதப்புறமாய அவ்வாருகத பெளத்த காவியங்களிற் பலகா லழுந்திப் பயில்வோர் தம் வைதிக நெறி கைவிட் டவை கூறுங் கொள்கை செத்தரா அவை திகராவ ரென்பது பெரியோர் கருத்தென்க. வைதிக காவியங்களி னியல்பும், அவைதிக காவி யங்களினியல்பும் வைதிக்காவிய தூடண மறுப்பில் விரித்தோதினாம்.

அதன்பின், தருக்கசங்கிரக தீபிகை தருக்க பரிபாடை கற்றுத் தருக்க வறிவுடையராகுக. அதன்மேல், இறையனாரகப்பொருளுரை பிரயோகவிவேகவுரை, இலக்கணக்கொத்துரை, தொல் காப்பியச்சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச்சூறாவளி யென்பவற்றை மதியமையக் கற்று இலக்கணவறிவு விரியச் செய்து கொண்டு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, கல்லாடம், பெருந்தேவனார் பாரத மென்னுஞ் சங்க விலக்கியங்களை யவற்றுரைகளோ டாராய்ந்து, பின்னர்த் திருக்குறள் திருக்கோவை யென்னுந் தெய்வ விலக்கியங்களைப் பரிமேலழகியாருரை பேராசிரியருரைகளோ டறிவமையப் பலமுறை நன்றாராய்ந்து தமிழ்ப்புலமை நிரப்பிக்கொள்க.

இன்னும், தமிழ்ப் பெரும்புலமைக் கின்றியமையாத வட மொழி இலக்கிய விலக்கண வாராய்ச்சியும், பூகோள ககோள கணித நூலாராய்சசியும், தருக்க நூலாராய்ச்சியும் ஈட்டிக்கொள்க. இது காறுங் கூறிய நூலுரைகளை இவ்வாறு கசடறக் கற்று முதிர்ந்த நன்மாணாக்கர் முதுதமிழ்ப்புலவர் (B.A.) என்னும் பட்டாபிதானத் துக்குரியரென் றுணர்க.

இங்ஙனந் தமிழிலக்கண விலக்கிய முதலிய வித்தைகள் கற்று முதிர்ந்தோருட் சைவ நன்மாணாக்கர், சைவாசாரியரை யடைந்து வழிபட்டு மந்திராதிகாரம் அர்ச்சனாதிகாரம் யோகாதிகாரங்களை நன்று பயக்குஞ் சைவசமய விசேட தீக்கையுற்று சைவசமயநெறி , சிவதருமோத்தரம், பரமத்திமிரபானு, ஞானாமிர்தம், தத்துவப்பிரகாசம், சோமசம்பு சிவாசாரியார் கிரியாகாண்டக்கிரமாவலி , சித்தாந்த சாராவலி யென்பனவற்றையும், சதுர்வேத்தாற்பரியசங்கிரகம், சிவதத்துவவிவேகம், சிவகாணாமாதம் பாரததாற்பரிய சங்கிரகம், இராமாயணதாற்பரியசங்கிரகம், பிரமதருக்கத்தவமென்பன வற்றையுங் கற்று, வைதிக சைவவறிவுடையராய், வைதிக சைவானுட்டானங்கைவரப் பயின்று கொள்க.

சுத்தாத்து விதிகளான சித்தாந்த சைவ நன்மாணாக்கர் கைவல்லியம் வேதாந்த சூடாமணி முதலிய கேவலாத்துவித வேதாந்த சாத்திரங்களைக் கற்க வேண்டின், தஞ்சித்தாந்தப் பார்வையாற் கற்க. இது விசிட்டாத்துவித வைணவ நன்மாணாக்கர்களுக்கு மொக்கும்.

சைவ நன்மாணாக்கருட் சித்தசுத்தி மிகவுடையராய் நித்தியா நித்திய விவேக வுணர்வு தோன்றிப் பிறவிக் கஞ்சி வீடுபேற்றினவாமிக்குடைய பரிபாகிகளான நல்லோர், சித்தாந்த சைவ ஞானாசாரியரை யடைந்து வழிபாடாற்றி அகங்கார மமகாரத் தியாச்சியஞ் செய்து நிருவாண விஞ்ஞான தீக்கையுற்று' சிவஞான போதம், சிவஞானசித்தி, சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய வத்துவித சைவசித்தாந்த நூல்கள் பதினான்கையும் அவற்றினுரை களோடும், வேதாந்த சித்தாந்த சாத்திரப் பொருளனைத்தையும் ஐய விபரீதமற வடக்கி விளக்கும் சகல கலாரூபமான சிவஞான மாபாடியத்தினோம் ஞானாசாரியரை வழிபட்டு, முறையாற் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் செய்து, சிவானுபவங் கைவருமாறு சிவோக மென்னு மத்துவித நிட்டை பேணுக.

இங்ஙனம் ஞானாதி காரிகளான நல்லோர் ஈசாவாசியம். கேனம், பிரச்சினம், முண்டகம், மாண்டூக்கியம், தைத்திரீயம், ஐதரேயம், சாந்தோக்கியம், பிருகதாரணியகம், சுவேதாச்சுவதரம் கைவல்லியம், அதர்வசிரசு அதர்வசிகை யென்னுஞ் சைவோப நிடதங்களையும், பவுட்கரம், மிருகேந்திரம், தேவிகாலோத்தரம், சருவஞானோத்தர முதலிய சைவாகமங்களையும் தாங்கற்றுணாந்த வேதாந்தத் தெளிவான திராவிட சைவ சித்தாந்தப் புலமைக் கரணாக வாய்ந்துணர்ந்து கொள்க.

ஈண்டுச் சொல்லிய வுபநிடதங்களின் மெய்ப்பொருள்க ளாண்டாண்டுத் துவித - விசிட்டாத்துவித - கேவலாத்துவித பாடிய வுரைகளாற் பேதிக்கப்பட்டிருத்தலின், சைவ சித்தாந்த ஞானகுருவருளுபதேச மாந்திரப் பார்வையாலவற்றின் மெய்யுணாந்து சுத்தாத்துவிதநிலைக் கடைப்பிடி யுறுதியுறுக.

அதன்மேல், இங்ஙனங் கூறிய வேதாந்தத் தெளிவான சைவ சித்தாந்த ஞானானுபவ தெய்வத்திருவருளிலக்கியமான தேவாரந் திருவாசகந் திருக்கோவை யுத்தரவேத முதலிய திருமுறைகளைத் திருவருட்கண்ணா லென்று மாராய்ந்து ஓதிப், பரமசிவன்றிருவடிக் கீழ்ப்பிரிவறப் பொருந்துஞ் சீவன்முத்தி யுண்மைநிலை தலைக்கூடி வாழ்க.

வைணவநல்லோர், தத்துவசேகரம், தத்துவத்திரயம், சீவ சனபூஷண முதலிய தஞ்சமய சாத்திரம் முறையாற் கேட்டுச் சிந்தித்து விசிட்டாத்துவித சித்தாந்தந் தேறி, நாலாயிரப்பிரபந்தங்களைத் திருவருட் பார்வையா னென்று மாராய்ந்து, நாராயண மூர்த்தி திருவடிக்கீழிருக்குஞ் சரணாகதிநிலை தலைக்கூடி வாழ்க.

மேற்கூறிய முது தமிழ்ப்புலமையோ டிங்ஙனங் கூறிய வேதாந்த சித்தாந்த சாத்திரப்புலமையு நன்கு கைவரப்பெற்றார் முதுதமிழ்ப் பெரும்புலவர் (M. A.) என்னும் பட்டாபிதானத்துக்குரிய ரென்றுணர்க.

திருச்சிற்றம்பலம்.

Comments