Pukaiyilai viṭu tūtu


பிரபந்த வகை நூல்கள்

Back

புகையிலை விடு தூது
சீனிச்சர்க்கரைப்புலவர்



சீனிச்சர்க்கரைப்புலவர் இயற்றிய
"புகையிலை விடு தூது"



சீனிச்சர்க்கரைப்புலவர் இயற்றிய
"புகையிலை விடு தூது"


Source:
சீனிச்சர்க்கரைப்புலவர்
இயற்றிய "புகையிலை விடு தூது"

பதிப்பாசிரியர்:
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்திய கலாநிதி
டாக்டர் உ.வே. சாமிநாதையர்

All rights reserved , 1939
விலை இரண்டணா.
---------------------------


கணபதி துணை


முகவுரை

தூதுப் பிரபந்தங்கள் இந்த நாட்டிலுள்ள இலக்கிய மொழிகள் எல்லாவற்றிலும் உண்டு. தமிழ்ப்பிரபந்தங்களில் ஏனையவை பெரும்பாலும் தமிழுக்கே உரியனவாயிருப்பத் தூதைமாத்திரம் எல்லாமொழிப் புலவர்களும் தம் செய்யுட்டிறத்தைக் காட்டுவதற்குரிய கவனாக மேற்கொண்டமை அப்பிரபந்தத்தின் சிறப்பைப் புலப்படுத்தும். காளிதாஸ மகாகவி பாடிய மேகஸந்தேசம் ஒரு மேகவிடுதூதே. அதனைப் பின்பற்றி நூற்றுக்கணக்கான காவியங்கள் வடமொழியில் எழுந்துள்ளன.

தூது நூல்கள் இருவகைப்படும். தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் அவள்பால் விடுப்பது ஒருவகை; தலைவனது அருள் வேண்டித் தலைவி விடுப்பது ஒருவகை. தமிழில் இவையிரண்டும் கலிவெண்பாவால் அமைக்கப்படும்.

புலவர்கள் கடவுளர் மீதும், ஆசிரியர் மீதும், உபகாரிகள்மீதும் பாடிய தூதுப்பிரபந்தங்கள் பலவாகும். தூதாகச் செலுத்தப்படும் பொருள் உயர்திணையாகவும் அஃறிணையாகவும் இருக்கும். அஃறிணைப்பொருள்கள் தூது சென்றுவரும் ஆற்றலுடையனவல்லவாயினும் காமமயக்கத்தால் அவற்றிற்கு அவ்வாற்றல் இருப்பதுபோலப் பாவித்து உரைப்பதாகச் செய்யுள் செய்வது புலவர் மரபு.

இவ்வாறு பொருள்களைத் தூதுவிடும் செய்தியைச் சொல்லும் செய்யுட்கள் தமிழில் தொன்றுதொட்டு வித்துவான்களாற் பாடப்பெற்றுள்ளன. தனிப்பிரபந்தமாக வழங்குதல் பிற்காலத்தில் உண்டானதென்றே தோற்றுகின்றது.

தூதுப்பொருள்கள் பத்தென்பது பழைய வரையறை;

    "இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
    பயம்பெறுமே கம்பூவை பாங்கி-நயந்தகுயில்
    பேதைநெஞ்சந் தென்றல் பிரமரமீ ரைந்துமே
    தூதுரைத்து வாங்குந் தொடை"

என்னும் இரத்தினச் சுருக்கச் செய்யுளில் அப்பத்தையும் காணலாம். புலவர்கள் இயற்றியுள்ள தூதுப்பிரபந்தங்களை ஆராயின் இவ்வரையறைக்கு மிஞ்சிய பலபொருள்கள் தூதுப்பொருள்களாகச் செய்யுட்கு உதவுவதைக் காணலாம். வித்துவான்கள் தத்தம் கருத்துக்கும் கற்பனைக்கும் ஏற்ற பொருள்களைத் தூது விடுவதாக அமைப்பதே வழக்கமாக இருக்கின்றது.

ஒருவரைப் புகழ்ந்து பாடுவதற்குத் தூதுப்பிரபந்தங்களைப் புலவர்கள் பயன்படுத்துவதைப்போல், இகழ்ந்து பாடுவதற்கும் இப்பிரபந்தம் ஒரு கருவியாவதுண்டு. மிதிலைப்பட்டிக் கவிராயர்களுள் ஒருவர் தமக்கு இடையூறு செய்த ஒருவர்மீது ”கழுதைவிடுதூது” என்று ஒரு பிரபந்தம் இயற்றியுள்ளார். அத்தூது ஒரு வசைப்பிரபந்தம்.

பாட்டுடைத்தலைவருக்கு ஏற்ற பொருளைத் தூது விடுதலும் புலவர் தம் விருப்பத்திற்குரிய பொருளைத் தூதுவிடுவதாக அமைத்தலும் வழக்கம்.

புகையிலைவிடுதூது என்னும் இது சீனிச்சர்க்கரைப் புலவரென்பவரால் பழனிமலையிற் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியக் கடவுள்மீது இயற்றப்பெற்றது; ஒரு தலைவி புகையிலையை அக்கடவுள்பால் தூதனுப்புவதாக அமைந்தது. இது 59 கண்ணிகளை உடையது. இத்தூதில் புகையிலையின் பெருமைகளே முதல் 53 கண்ணிகளில் சொல்லப்படுகின்றன. தூதுவிடும் செய்தி ஏனைய ஆறுகண்ணிகளிற் சுருக்கமாக அமைந்துள்ளது. இதனால் இதைப்பாடிய புலவர் புகையிலையைச் சிறப்பிப்பதற்காகவே இதனைப் பாடியிருக்கவேண்டுமென்று தெரிகின்றது.

பாட்டுடைத் தலைவரான பழனியாண்டவருக்குப் புகையிலைச் சுருட்டு நிவேதனமுண்டென்று சிலர் சொல்லக் கேட்டதுண்டு. விராலிமலையில் அத்தகைய நிவேதன முண்டென்று தெரிகின்றது. இந்தப் புலவருக்கும் புகையிலை போடும் வழக்கம் இருக்கலாம். இந்த இயைபுகளே இந்தப் பிரபந்தத்தைப் பாடுவதற்கு காரணமாக இருந்தன போலும். புகையிலை மிகுதியாகப் பயிரிடப்படுகின்ற இடங்கள் சூழ்ந்த பழனிக்கு அருகில் வசித்த உபகாரி ஒருவர் கேட்டுக்கொள்ள இயற்றியதாகக் கூறப்படுவதும் உண்டு.

இதன் ஆசிரியராகிய சீனிச்சர்க்கரைப் புலவரென்பவர் பரம்பரைப் புலமை வாய்ந்த குடும்பத்தில் உதித்தவர். இராமநாதபுரம் ஸம்ஸ்தான வித்துவானாக விளங்கிய சர்க்கரைப் புலவரின் குமாரர்; மயூரகிரிக்கோவை இயற்றிய சாந்துப்புலவரின் தம்பியார். இவருடைய காலம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியுமாகும். இவர் திருச்செந்தூர்ப் பரணியென வேறொரு பிரபந்தமும் இயற்றினரென்று கூறுவர்.

இப்பிரபந்தத்தில் புகையிலையின் பெருமையும், புகையிலையினாற் செய்யப்படும் சுருட்டு, சாராயம், பொடி என்னும் பொருள்களைப்பற்றிய பாராட்டும் காணப்படும். புகையிலைக்குத் திருமாலும், சிவபெருமானும், பிரமதேவரும், தமிழும்,முருகக்கடவுளும் சிலேடைவகையில் உவமை கூறப்படுகின்றனர். புகையிலையின் காரமும், பித்தந்தரும் இயல்பும், மலர் வித்து என்பவற்றையுடைமையும், பாடஞ் செய்யப்படுலும், தாகத்தைத் தீர்க்க உதவுதலும், வியாபாரத்தால் லாபம் உண்டாக்குதலும் அங்கங்கே சொல்லப்படும்.

தமிழுக்கும் புகையிலைக்கும் சிலேடையமைந்த பகுதியில் கோவை, வளமடல், சந்தப்பா, பரணி என்பன குறிக்கப் பெறுகின்றன.

புகையிலையின் வரலாறாக இப்பிரபந்தத்திலே கூறப்படும் கற்பனைக் கதை வருமாறு:--

ஒருமுறை மும்மூர்த்திகளுக்குள்ளே ஒரு வழக்கு உண்டாயிற்று. அதனைத் தீர்த்துக்கொள்ளும்பொருட்டு அவர்கள் தேவர்கள் கூடியுள்ள சபைக்குச் சென்று தம் வழக்கை எடுத்துரைத்தனர். தேவர்கள் அவற்றைக் கேட்டபின், "உங்கள் வியவகாரத்தைப் பிறகு கவனித்துக்கொள்வோம்" என்று சொல்லி அம்மூவர்களிடத்தும் வில்வம், திருத்துழாய், புகையிலை என்னும் இவற்றைக் கொடுத்து இவற்றை மறுநாள் கொண்டுவரச் சொல்லியனுப்பினர்.

அவர்கள் மூவரும் அங்ஙனமே சென்றனர். சிவபெருமான் பாற் கொடுத்தபத்திரமாகிய வில்வத்தைக் கங்கையின் அலை கொண்டு போயிற்று; திருமாலிடம் கொடுத்த திருத்துழாயைப் பாற்கடலிலுள்ள அலை கொண்டு போயிற்று. பிரமதேவர் தாம் பெற்ற புகையிலையைத் தம் நாவிலுள்ள கலைமகளிடத்தில் கொடுத்து வைத்திருந்தார்.

மறுநாள் மூவரும் விண்ணவர் சபைக்கு வந்தபோது தேவர்கள், "முன்னே நாம் கொடுத்தபத்திரங்களைக் கொடுங்கள்" என்று கூறவே சிவபெருமானும் திருமாலும் விழித்தனர்; "எங்கள் பத்திரங்கள் போயின" என்று அவர்கள் கூறினர். அது கண்டு மகிழ்ச்சியுற்ற பிரமதேவர் கலைமகளிடத்திலிருந்து புகையிலையை வாங்கி, "இதோ, எனக்கு அளித்த பத்திரம்" என்று முன் வைத்து, "மற்றவர்கள் பத்திரங்கள் போயின; என்னுடையது போகையிலை" என்று கூறினார். அவர் கூற்றில் புகையிலையென்பதன் மரூஉவாகிய போகையிலையென்னும் பெயர் தோற்றியது; பிரமதேவரிடமிருந்து நழுவாமல் அவருக்கு உரிதயதானமையின் அதனைப் பிரம்ம பத்திரம் என்று யாவரும் அன்றுமுதல் வழங்கலாயினர். பிரமதேவர் தாம் கூறிய வழக்கில் வெற்றிபெற்றனர். ஏனை இருவரும்தம் வழக்கிழந்தனர்.

புகையிலையைப் பற்றி நம் நாட்டில் பல வேறு கற்பனைக் கதைகள் வழங்கிவருகின்றன. அவற்றுள் ஒன்றை இப்புலவர் இப்பிரபந்தத்தில் அமைத்தார்.

புகையிலைச் சுருட்டைப் பற்றிய செய்திகளாக இதில்வருவன: புகையுடையது, தம்பம் போல்வது, அனலேந்துவது, நுனியிற் சாம்பலையுடையது; ஆகாயம் சுருட்டுப் புகைபோல இருப்பதால் இறைவன் ஆகாயமே திருமேனியாக ஆனாரென்பர்.

    "கற்றுத் தெளிந்த கனபரபல வான்களுமுன்
    சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ"

என்பது சுருட்டை நினைந்து பாராட்டியது.

புகையிலைக்காம்பு என்பது வழக்கு; அதனையமைத்து,

    ''தாம்பூல நாவுக்குச் சாரமது தானுமுன்றன்
    காம்பி லடக்கமன்றோ கட்டழகா"

என்று இவ்வாசிரியர் புகழ்கின்றார்.

புகையிலையினால் செய்யப்படும் பொடியின் மகிமை,

    "வாடைப் பொடிகதம்ப மானவெல்லா முன்னுடைய
    சாடிப் பொடிக்குச் சரியுண்டோ"

என்ற கண்ணியிலே சொல்லப் பெறுகின்றது.

ஒரு சிட்டிகைப்பொடிக்காகத் தம் நிலையையும் மறந்து பிறரைக் கெஞ்சும் மனிதர் பலரை நாம் பார்க்கிறோம். இப்புலவரும் அத்தகையோரைப் பார்த்திருக்கிறார்;

    "சொற்காட்டு நல்ல துடிகார ராரை
    பற்காட்ட விட்ட பழிகாரா"

என்ற கண்ணியே அதற்கு அடையாளம்.

புகையிலை விளையும் இடங்களாகக் காங்கேயம், யாழ்ப்பாணம், அழகன்குளம், பரத்தைவயல் என்பனவும், கானக்கறுப்பனென்னும் புகையிலைச்சாதியும் இவரால் உணர்த்தப்பெறுகின்றன. எல்லாவற்றிலும் பரத்தை வயலில் விளையும் புகையிலையே சிறந்ததென்று இவர் கூறுகின்றார்.

புகையிலைக்கு இவ்வளவு சிறப்புக்கூறும் இப்புவருக்கு அது 'தமிழ் போல நாவில் விளையாடி'யது என்று கொள்வதிற் பிழையொன்றுமில்லை.

புகையிலை இந்த நாட்டிற்கு வந்த புதிய பொருள். ஆயினும் அதனைப் பாராட்டிய புலவர்கள் இவரையன்றி வேறு சிலரும் உண்டு. அதனைப் பற்றிய தனிப்பாடல் ஒன்று வருமாறு:

    "நாலெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும்
    காலுந் தலையுங் கடைச்சாதி-மேலாக
    ஒட்டு முதலெழுத்து மோதுமூன் றாமெழுத்தும்
    விட்டாற் பரமனுக்கு வீடு."

[நாலெழுத்துப் பூடென்றது புகையிலையை. காலும் தலையுமென்றது அப்பெயரிலுள்ள முதலும் கடையுமாகிய எழுத்துக்களை; அவை புலை யென்பன; புலை-கடைச்சாதி. முதலெழுத்தும் மூன்றாமெழுத்தும் விட்டால் எஞ்சி நிற்பன, கைலை என்னும் இரண்டெழுத்துக்கள்; கைலை, சிவபெருமான் இருப்பிடம்.]

பொடியைப்பற்றி வழங்கும் தனிப்பாடல் ஒன்று வருமாறு:

    “ஊசிக் கழகு முனைமழுங் காமை யுயர்ந்தபர
    தேசிக் கழகிந் திரிய மடக்க றெரிகலன்சேர்
    வேசிக் கழகின் னிசைபல நூல்கற்ற வித்வசனர்
    நாசிக் கழகு பொடியெனக் கூறுவர் நாவலரே.”

மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய மாணாக்கரும் கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்தவருமாகிய வித்துவான் சி. தியாகராச செட்டியார் திருவானைக்காவில் பொடி வியாபாரம் செய்யும் சோமசுந்தரம் பிள்ளை என்பவரையும் அவர் விற்கும் பொடியையும் சிறப்பித்து ஒரு சமயம் ஒரு செய்யுள் இயற்றினார். அது வருமாறு:

    ”கொடியணி மாட மோங்கிக் குலவுசீ ரானைக் காவிற்
    படியினி லுள்ளார் செய்த பாக்கிய மனையான் செங்கைத்
    தொடியினர் மதனன் சோம சுந்தரன் கடையிற் செய்த
    பொடியினைப் போடா மூக்குப் புண்ணியஞ் செய்யா மூக்கே.”

இவற்றைப் போல வேறு செய்யுட்களும் உண்டு. அவை இப்போது கிடைக்கவில்லை.

இந்தச் சிறுபிரபந்ததைக் கலைமகள் வாயிலாக வெளியிடுவதற்கு இடமளித்த ஸ்ரீமான் ரா. நாராயணஸ்வாமி ஐயரவர்களுடைய அன்பு பாராட்டுதற்குரியது.

’தியாகராஜ விலாசம்’ இங்ஙனம்,
திருவேட்டீசுவரன்பேட்டை வே. சாமிநாதையர்
14-8-39
-----------------------------------------------------------


கணபதி துணை

சீனிச்சர்க்கரைப் புலவர்
இயற்றிய "புகையிலை விடு தூது"


[திருமாலுக்கும் புகையிலைக்கும் சிலேடை ]

1.
சீர்தந்த மாநிலத்திற் செல்வப் பயிர் தழைப்ப
நீர்தந்த பச்சை நிறங்கொண்டே- ஏர்தந்து

2.
கார மணைந்து கனநீரிற் கண்வளர்ந்து
பாரை மணந்து படியளந்து-சாரமுடன்

3.
எல்லார்க்கு மாலா யிசைந்து பரந்தோங்கிப்
பல்லா யிரவடிவம் பாரித்தே-அல்லாமல்

4.
அம்புகையிற் சாரங்க மான தனுவெடுத்துத்
தம்ப வரிவடிவந் தானாகிச்-சொம்புடனே

[சிவபெருமானுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

5.
தோலுரியும் போர்த்துத் துலங்கவன லேந்திநிறை
பாலத்து வெண்ணீறு பாலித்தே-கோலமுள்ள

6.
பாசடையுங் கொண்டு பசுங்கொழுந்து பாலுகந்து
காசடையா ருக்கருமை காண்பித்துக்-காசினியில்

7.
அம்பலத்துண் மேவிநிறைந் தங்காடி நின்றுநல்ல
தம்பமெனப் பித்தேறித் தாணுவாய்-இன்பமுடன்

8.
நன்பிரமை கொண்டு நலத்தினா னற்பதங்கொண்
டன்பர்சுமை தாங்க வரனுமாய்-பண்பாய்

[பிரமதேவருக்கும் புகையிலைக்கும் சிலேடை]

9.
மறைவாய் வளர்ந்து மனுக்களுண்டு பண்ணி
நிறைவாய நாலுமுக நேர்ந்து-பிறர்தேறா

10.
வாசவனஞ் சேர்ந்து மலர்க்கொம்பு தாங்குதலாற்
றேசு தரும்பிரம தேவனுமாய்-நேசமுள்ள

11.
முத்தே வருமாய் முளைத்தெவருங் கொள்ளவரும்
சித்தே புகையிலையே செப்பக்கேள்-வித்தகமாய்

[தமிழுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

12.
ஏடதனை யாய்ந்தே யிலகுபதி கஞ்சேர்த்துப்
பாடமது போற்றிமொழி பன்னியே-கூடுபல

13.
கோவை புனைந்து குறித்து வளமடல்சேர்
பாவுசந்த மேவிப் பதங்கொண்டு-சேவைபெறக்

14.
கட்டமைந்து நற்பரணி கண்டுவிலைக் கானபின்பு
செட்டமைதந்து பின்மதுரஞ் சேரவே-மட்டில்லாத்

15.
தாவில்பல வித்தையுடைத் தாகித் தமிழ்போல
நாவில் விளையாடு நாமகளாய்ப்-பூவுலகில்

[புகையிலையின் வரலாறு]

16.
வந்த புகையிலையுன் மாமகத்து வங்களைநான்
எந்த விதமென் றியம்புவேன்-விந்தையதாய்

17.
மூவரொரு வர்க்கொருவர் முன்னொருகால் வாதாகித்
தேவ சபையகத்துச் செல்லவே-மேவிவிண்ணோர்

18.
உங்கள்விவ கார முரைப்போம்பின் னாகவென்று
தங்குமொவ்வோர் பத்திரம தாகவே-அங்கவர்பாற்

19.
கூவிளமும் பைந்துளவுங் கொள்ளும் புகையிலையும்
தாவளமாய்க் கைகொடுத்துத் தாமனுப்ப-ஆவலுடன்

20.
பின்மூவ ரந்தப் பெருஞ்சபையில் வந்தவுடன்
முன்கொடுத்த பத்ர முறைப்படியே-அன்பினுடன்

21.
தாருமென்ற போதிற் சதாசிவனார் பத்திரமும்
கார்வண்ணர் பத்திரமும் காணாமல்-நேரான

22.
கங்கை யிடத்துங் கவின்பாற் கடலிடத்தும்
பொங்குமலை தான் கொண்டு போகவே-இங்கிதஞ்சேர்

23.
ஓகையுட னேபிரம னுற்ற நமதுபத்ரம்
போகையிலை யென்று புகன்றுடனே-வாகுகலை

24.
வாணிதிருக் கையினின்றும் வாங்கியிந்தா வென்றுவைக்க
நாணியிரு வோரு நயவாமற்-பூணும்

25.
வழக்கிழக்கச் செய்தந்த வானோர்முன் வெற்றி
விளக்கவுன் னாமம் விளக்கத்-துளக்கமொடு

26.
ப்ரம்மபத்ர மென்றெவரும் பேசவே வந்துதித்த
தன்மப் புகையிலையே சாற்றக்கேள்-இன்னம்

[புகையிலையின் பெருமை]

27.
குடியாத வீடு குணமாகா தென்றும்
விடியாதென் றுங்கூறல் வீணோ-படிமேற்

28.
குடியா தவனாநீ கொற்றவன்கா ணுன்னைக்
குடியா தவன்சா குடியே-வடிவாக

29.
எட்டுமா சித்திதரு மேகசித்து மூலிகைக்கும்
இட்டமா நீகலப்ப தில்லையே-திட்டமுடன்

30.
வாடைப் பொடிகதம்ப மானவெல்லா முன்னுடைய
சாடிப் பொடிக்குச்ச ரியுண்டோ-நாடியே

31.
கற்றுத் தெளிந்த கனப்ரபல வான்களுமுன்
சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ-மற்றொப்பில்

32.
ஆகாய முன் புகைபோ லானமையா லேயரனார்
ஆகாய மேகாய மாயினார்-வாகான

33.
தாம்பூல நாவுக்குச் சாரமது தானுமுன்றன்
காம்பி லடக்கமன்றோ கட்டழகா-வீம்பாகப்

34.
பூராய மான பொருளை வெளிப்படுத்தும்
சாராயந் தானுனக்குத் தம்பியோ-நேரா

35.
அதனகா மீசுரமா யார்க்குமயல் பூட்டும்
மதனகா மீசுரமச் சானோ-விதனமற

36.
மோகப் பயிராய் முளைத்த புகையிலையே
தாகப் பயிரான சஞ்சீவீ-ஆகத்தின்

37.
அச்ச மகற்றுவிக்கு மாண்பிளைநீ யுன்றனக்கோர்
அச்சமகத் துக்குவர லாகுமோ-விச்சையுடன்

38.
காரமுங் காயக் கடுமையுமுண் டாமுனக்கோர்
ஈரவெங்கா யப்பகையு மேதையா-கூரும்

39.
தகையிலையன் றோதெரியுந் தானுன் னருமை
புகையிலையே தெய்வப் பொருளே-சகமேவும்

40.
பூத்தான மாகப் பொருந்துதிரு மாதுவளர்
பூத்தான மான புகையிலையே- பார்த்தாய்ந்து

41.
நண்ணிய மாதவத்தோர் நாடோறுந் தேடுகின்ற
புண்ணிய மான புகையிலையே--எண்ணியெண்ணிக்

42.
கொத்தடிமை யாக்கிக் குடிகுடியா யாண்டுவரும்
புத்தமுத மான புகையிலையே-வர்த்தனைசேர்

43.
லாபமும் வர்த்தகர்க்கு நம்புவிடர் கட்குச்சல்
லாபமுங் காட்டு நயக்காரா-சோபமுடன்

44.
வெட்டுண்டு பின்னே வெயிலிற் கிடந்தாலும்
கட்டுண்டு வந்ததென்ன காரணங்காண்-தொட்டாற்

45.
குறுகுறுத்துத் தும்முங் குணத்துடனே பின்னும்
கிறுகிறுப்ப தென்ன கெறுவம்-முறுகப்

46.
பகைக்கட்டாய்க் கட்டும் படுசூலைக் கட்டும்
புகைக்கட்டா லோடாதோ போக-நகையாக

47.
முன்பொரும லையை முனிந்துவெகு வாய்மலைபோற்
றன்பொரும லைத்தீர்க்குஞ் சாமியே-அன்பாகப்

48.
பாவியுனை நட்டுப் பலன்காணார் தம்மைமுழுப்
பாவியென்று சொல்வார் பலருமே-நாவினாற்
49.
சொற்காட்டு நல்ல துடிகார ராரையும்போய்ப்
பற்காட்ட விட்ட பழிகாரா-கற்கவென்று

50.
பார்த்திப ரான பரத்தை வயற்குடியார்
போற்றிவளர்க்கும் புகையிலையே-தோத்திரமாம்

51.
காங்கயம் யாழ்ப்பாணங் கானக் கறுப்பனுடன்
பாங்குபெறு குள்ளம் பலவாக-நீங்கா

52.
அழகன் குளமுதலா மானசரக் கெல்லாம்
பழகு முனக்கிணையோ பார்க்கின்-புளகமது

53.
கொண்ட புகையிலையே கொள்ளு மெனதுமயல்
உண்டதனை நின்பா லுரைக்கக்கேள்-வண்டிசைந்த

[பழனியாண்டவர் பெருமை]

54.
பூங்கடப்ப மாலையான் போரசுரர் தங்களுயிர்
வாங்கடப்ப வேலையான் வாலவுருப்-பாங்குபெறு

55.
கந்தன் முருகன்வேள் காங்கேயன் வள்ளிபுணர்
சொந்தமண வாள துரந்தரிகன்-அந்தம்

56.
தருபழனி யுரனெங்கள் சண்முகவேள் வீதிக்
கொருபவனி மாமயின்மே லுற்றான்-வருபவனி

[தூது சென்றுவர வேண்டுதல்]

57.
சேவிக்க யான்போய்த் தெரிசிக்கு மவ்வளவிற்
கோவித்து மாரனம்பு கொல்லவே-ஆவலுடன்

58.
ஆகினே னென்மயக்க மாருரைப்பா ருன்னையன்றி
வாகுபெற நீபோய் வகையாக-ஓகையுடன்

59.
சென்றுரைத்துத் திண்புயமேற் சேர்ந்திலங்கு பூங்கடப்ப
மன்றல்கமழ் தார்வாங்கி வா.

------------

அரும்பத உரைகள்


1. செல்வப்பயிர்-செல்வத்தை அளிக்கும் பயிர், வளப்பமிக்க புகையிலைப் பயிர். நீர் தந்த பச்சை நிறம்-நல்ல
நீர்மையைத் தந்த பச்சைநிறம், நீரால் தரப்பெற்ற பசிய நிறம். ஏர்-எழுச்சி.

2. காரம்-மேகத்தினது அழகு, புகையிலைக் காரம். பாரை மணந்து-பூமிதேவியை மணம் செய்துகொண்டு,
பூமியோடு பொருந்தி. படி அளந்து- பூமியை அளந்து, வியாபாரம் செய்வோருக்குக் கூலி கொடுப்பதற்குக்
காரணமாகி.

3. மால்-திருமால், மயக்கம். பாரித்து-தாங்கி

4. திருமாலுக்கு: அம்பையும் திருக்கரத்திற் சாரங்கமென்னும் வில்லையும் எடுத்துத் தூணில் நரசிங்க வடிவத்தோடு
தோன்றி. புகையிலைக்கு: அழகிய புகையிலே சார்ந்த உடலாகிய உருவத்தை யெடுத்துத் தூண் போன்ற
வரிகளையுடைய வடிவத்தையுடையதாகி; சுருட்டாக உபயோகப்படும் நிலையைக் குறித்தபடி. வரி -
புகையிலையிலுள்ள நரம்புக்கோடுகள். சொம்பு-அழகு.

5.சிவபெருமானுக்கு: யானைத் தோலாகிய உரியை மேலே போர்த்து, விளங்கும்படி திருக்கரத்திலே நெருப்பை
ஏந்தித் தம் திருநெற்றியிலே வெண்ணீற்றை யணிந்து; தோல்-யானை. பாலம் - நெற்றி. புகையிலைக்கு: தோலாகிய
போர்வையைப் போர்த்து (சுருட்டு நிலையி லிருக்கும்போது) நெருப்பை ஏந்திச் சாம்பலையும் கொண்டு.

6.சிவபெருமானுக்கு: வில்வம் முதலிய பசிய இலையை (அன்பர்கள் பூசிக்க) மேற்கொணடு, பசிய கொழுந்து
போன்ற உமாதேவியாரை ஒரு பக்கத்திலே ஏற்றருளி, குற்றமடையாத தூயவர்களுக்கு அரிய பொருளாகிய
முத்தியைக் காட்டி; புகையிலைக்கு: பச்சையிலையைக் கொண்டு பசிய கொழுந்தையும் பக்கத்திலே உடையதாகிப்
பொருளில்லாதாருக்கு அரியதாகி. அடை-இலை. பால்-பக்கம். காசு-குற்றம், பொருள். அருமை- அரிய முத்தி,
அரிதாதல்.

7. சிவபெருமானுக்கு: சிற்சபையிலே பொருந்தி நிறைந்து அங்கே திருநடனம் செய்து நல்ல தூணைப்போலப்
பித்தேறித் தாணுவென்னும் பெயருடையோராய்; புகையிலைக்கு: சபைகளிலே நிறைந்து கடைத்தெருவிலே
நின்று நல்ல தூணைப்போலப் பித்த குணம் மிக்குத் தம்பம்போன்ற உருவத்தை உடையதாகி. அங்காடி-
கடைத்தெரு. தாணு-சிவபெருமான், தூண்.

8. பிரமை-பித்து,மயக்கம்.

9. மறைவாய்-வேதத்தினிடத்திலே, மறைவாக. மனுக்கள் உண்டுபண்ணி-மனிதர்களைச் சிருட்டித்து,
மனிதர்க்குரிய கள்ளை உண்டுபண்ணி; புகையிலையிலிருந்து ஒருவகைச் சாராயம் உண்டாக்குவர். நாலு
முகம்-நான்கு திருமுகங்கள், நான்கு திசையிலும்.

10. வாசவனம் சேர்ந்து- வாசஞ்செய்யும் அந்னப்பறவையைச் சேர்ந்து, தங்குதற்குரிய ஜலத்திற் சேர்ந்து.

12. ஏடு-பனையோலை, இலை. பதிகம்-தேவாரப்பதிகம், நடுவதற்குரிய செடி. பாடம்-மூலபாடம்,
பக்குவஞ்செய்தல்.

13. கோவை-ஒருவகைப் பிரபந்தம், கோத்ததொடர். வளமடல்-ஒருவகைப்பிரபந்தம்,வளப்பமுள்ள இலை.
பாவுசந்தம்- பரவிய செய்யுட்சந்தம், பரவிய அழகு. பதம்-செய்யுட்பாகம், பக்குவம்.

14. கட்டு-யாப்பு, கட்டுதல். பரணி-ஒரு வகைப் பிரபந்தம், சாடி.

15. வித்தையுடைத்தாகி-வித்தைகளையுடையதாகி, விதைகளையுடையதாகி.

16. மகத்துவம்-பெருமை.

17. மூவர்-மும்மூர்த்திகள்.

19. கூவிளம்-விலவம். தாவளமாய்-பற்றுக்கோடாக.

20. பத்ரம்-இலை.

21. சதாசிவனார் பத்திரம்-வில்வம். கார்வண்ணர் பத்திரம்- துளசி.

22. கங்கையின் அலை வில்வத்தைக் கொண்டு போயிற்று; பாற்கடலின் அலை திருத்துழாயைக்
கொண்டுபோயிற்று.

23. ஓகை-மகிழ்ச்சி. போகையிலை-போதல் இல்லை; புகையிலை 'போகையிலை' என்று மரூஉ வழக்கிலே
வழங்குவது இங்கே நினைப்பதற்குரியது.

25. துளக்கம்-நடுக்கம்.

28. குடி ஆதவனாம் நீ. சா குடி-சாவுங்குடி

30. வாடைப்பொடி-வாசனைப்பொடி. கதம்பம்-ஒருவகை வாசனைப்பொடி. சாடிப்பொடி-ஜாடியிலே வைத்துள்ள
பொடி. சரி-ஒப்பு.

31. சுற்று-சுருள்.

32. ஆகாயமானது உன் புகைபோல இருப்பதனாலேதான் சிவபெருமான் அவ்வாகாயமே தம்முடைய
திருவுருவமாயினார். காயம்-திருவுருவம்.

33. காம்பு: புகையிலைக் காம்பு என்பது வழக்கு. 'வகைதொகையில்லாத கணக்கும் புகையிலையில்லாத பாக்கும்
வழ வழ கொழ கொழ' என்பதொரு பழமொழி.

34. பூராயம்-பூர்ணம்.

35. அதன் அகா - அந்தச் சாராயத்திற்குள்ளே இருப்பவனே. மீசுரமாய் - அதிகமாக. மதன காமீசுரம் -
கஞ்சாக்கலந்த மதனகாமேசுர லேகியமென்னும் மருந்து; எழுவாய். விதனம் - துக்கம்.

38. காயக்கடுமை - சம்பாரத்தின் உறைப்பு. புகையிலைக் காரத்துக்கு மேலே காரமின்மையால், ஈர
வெங்காயத்தைப் பிறர் உண்ண அஞ்சினாலும் புகையிலை போடுவோர் அதனை அஞ்சாது உண்பாரென்னும்
கருத்தை நினைந்து கூறியது இக்கண்ணி. ஈர வெங்காயம் - பச்சை வெங்காயம். கூரும் - மிகுதியாகும்.

39. உன் அருமையைத் தகை இலையன்றோ தெரியும் - உனது அருமையைத் தகுதியையுடைய
வெற்றிலையன்றோ அறியும். வெற்றிலை இலையெனவும் வழங்கும்.

40. பூவைத் தானமாகப் பொருந்துந் திருமாது. அத்தகைய திருமாதும் பூமியும் உனக்குத் தானப் பொருளாகும்
புகையிலையே. பணங்கொடுத்துப் புகையிலை வாங்குவதனாலும் நிலத்திலே புகையிலையைப்
பயிரிடுவதனாலும் இவ்வாறு உரைத்தார்.

42. வர்த்தனை - விற்பனை.

43. சோபம் - துயரம்.

44. கட்டு - புகையிலைக்கட்டு; தேகக்கட்டென்பது வேறுபொருள்.

47. முருகக்கடவுளாகக் கூறியபடி; முன்பு ஒரு மலையை முனிந்து மலைபோன்ற வருத்தத்தைத் தீர்க்கும்
முருகக்கடவுளே; சாமி-முருகக்கடவுள். புகையிலைக்கு: முன்னாலே பொருகின்ற நீரினது அலையை முனிந்து,
மலைபோலக் குவிக்கப்பெற்று, மனிதனது பொருமலைத் தீர்க்கும்; பொருமல் - துன்பம் வயிற்றுப் பொருமலுமாம்.


48. பாவி உனை நட்டு - பரப்பி உன்னை நிலத்திலே நட்டு; பரவி உன்னை நண்பாக்கியென்பது வேறுபொருள்.

49. துடிகாரர் - சுறுசுறுப்புள்ளவர்.

50. பரத்தைவயல்: ஓரூர்.

51-52. பல ஊரில் விளைவனவும் பல பெயர் உள்ளனவுமாகிய புகையிலையின் வகைகள் பரத்தைவயற்
புகையிலைக்கு இணையில்லை யென்றபடி.

54. அடப்ப வேலையான் - அடம்பு படர்ந்த கடற்கரையை யுடையவன். வாலவுரு - பாலசுப்பிரமணியத்
திருவுருவம். துரந்தரிகன் - துரந்தரன்; காரியத்தைமுடிக்கும் ஆற்றலுடையோன்.

57-58. ஆவல் உடன் ஆகினேன் - உடனே ஆசையுடையவளாயினேன்.

-------------
புகையிலைவிடு தூது முற்றிற்று

Comments