Pirapantattiraṭṭu XXX


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XXX
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 30 (3119-3220)
ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் மாலை



காப்பு.



3119. - பொன்மலர் தடித்துந் தனிதமு முறுகார்ப் புயலிவர் தந்தையே பொருவ,
வென்மல ரெயிறு முழக்கமும் வாய்ந்த வெறுழ்க்கரு மூடிக முகைத்துப்,
பன்மலர் முடிமுன் னடிவரை மலர்ந்து பயிலுமோ ரத்தியைத் துதிப்பாந்,
தென்மலர் துறைசைச் சுப்பிர மணிய தேசிகன் மாலைசீர் பெறவே. - 0

நூல்.


3120 - பூமலி நினதா ளுள்ளுபு துதித்துப் போற்றிடும் வாஞ்சையே மதனுக்,
காமலி மூன்று மொருவழிப் படுவா னாரறுள் புரியுட லாதி,
தாமலி தரக்கே ளாதளித் தாய்க்குத் தகுவதோ வருளெனக் கேட்ட,
றூமலி யறவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 1


3121 - எண்ணுத றுதித்த லியற்றவல் லாநீ யெற்றைக்கு நம்மடித் தொழும்பே,
பண்ணுக வென்றாய் மெய்ப்பணி யென்று பற்றினனிதுகொளற் பொருட்டோ,
நண்ணுகூற் றுதைத்துங் கல்லெறி யேற்று நயந்துமுன் பழகிய தைய,
சுண்ணவொண் மாடஞ் சூழ்பெருந்துறைசைச் சுப்பிர மணிய தேசிகனே. - 2


3122 - எம்மையாள் பொருட்டுக் கயிலையு மழுமா னிலகிய திருக்கைசார் வடிவுஞ்,
செம்மைசால் பெயரு நீத்துவே றடைந்தாய் திகழ்தரு முன்னுள மூன்று,
தம்மை நோக் குறினின் றுள்ளமூன் றனுக்குந் தாழ்ந்தன வென்றுளந் தெளிந்தேன்,
சும்மைநீர்த் தடங்கள்சூழ் பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 3


3123 - கேவலஞ் சிவாத்து விதம்விசிட் டத்துக் கெழுமுமத் துவிதமோம் பாது,
நாவலந் தருசுத் தங்கொளென் றருள நாடுகே வலத்தினின் றெடுத்து,
மாவலம் படருஞ் சகலத்து விடுத்தாய் வருவியாய் சுத்தமீ தென்னே,
தூவல கலைஞர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிரமணியதே சிகனே. - 4


3124 - இன்றுநீ யடியார் தமக்கரு டிறத்தா லெழும்புகழ்ப் படலமிக்கெழுந்தே,
யன்றுநீ புனைந்த வம்பரங் கிழித்த ததுகுறித் துணர்தரி னின்று,
நன்றுநீ பித்தன் றானெனல் விளக்கு நாடுறின் மற்றது மருளே,
துன்றுவா னவர்கள் சூழ்பெருந் துறைசைச் சுப்பிரமணியதே சிகனே. - 5


3125 - மதிகதி ரிரண்டு முகவிழி யவற்றுண் மதியமுள் ளுவப்பவோர் மலரைப்,
பதிதர முடியிற் கொண்டனை மற்றைப் பரிதியு முவப்போர் மலரை,
நிதிநிக ரடியிற் கொளல்கட னளித்தே னீகொளென் னிதயதா மரையைத்,
துதிபெறு முனிவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 6


3126 - நிறைதகை யழிந்தும் வெண்மையே வாய்ந்து நெடியகட் குறுந்தொடி யவர்பான்,
முறைதிறம் புற்றுங் களங்கமிக் கமைந்து முனிதகக் கோடியு மடைந்த,
பிறைமதி முடியிற் கொண்டநீ யது போற் பிறங்குமென் மதியடிக் கொளினென்,
றுறைதொறு மெகினம் பயில்பொழிற் றுறைசைச் சுப்பிரமணியதே சிகனே. - 7


3127 - மருவிவே தண்டத் திருந்தநீ யடியேன் வன்மனத் திருந்திட லரிதோ,
பொருவிலவ் வரைமே னிசிகர னொருவன் போயற வூன்றிய நின்றா,
ளொருவிவன் மலம்போ யொழியமற் றிதன்க ணூன் றிட லரியதோ சொல்லாய்,
துருவிமான் முதலோர் சூழ்பெருந் துறை சைச் சுப்பிர மணியதே சிகனே. - 8


3128 - வளை தரு புறத்துக் கருகிருட் படலம் வயங்குநின் பார்வையா லன்றி,
விளைதரு மற்றொன் றால்வில குவதோ விராவகத் திருட்பட லமுநின்,
னளைதரு கருணைப் பார்வையா லன்றி யகல்வதி லனமினா ரோடு,
துளைதரு பெருநீர்த் துறைகள்சூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 9


3129 - கோலநின் செந்தா மரையடி விட்டார் கூற்றுவ னடிவிடா தவரே,
சீலநி னங்கைச் செய்யதா மரைதஞ் சென்னிமேல் வைத்திடப் பெறாதார்,
சாலவு மொருதா மரைத்தவி சமர்வான் றன்கை வைத் திடுதல்பெற் றவரே,
சூலநின்றொளிரு மாளிகைத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 10


3130 - அத்தநின் றடந்தோட் செங்கழு நீரை யவாவிய வரிமதர்மழைக்கட்,
புத்தமு தனையா டளவமு மசோகும் பொன்னிறம் பொலிதளர் மாவு,
நித்தில முயிர்க்குஞ் சலசமும் பெற்றா ணீலமும் பெறுகுவள் போலுந்,
துத்தமொய்த் திசைக்கு மளிப்பொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 11


3131 - மன்னிய நினது நாமவைந் தெழுத்தை வயங்குநின் பாலுறப்பெற்று,
மின்னிய மனத்துச் சுமந்திடா ரெல்லாம் விரிஞ்சனார் நல்குபல் லெழுத்தை,
முன்னிய துயரத் தொடுகருந் தலையின் முழுக்கவுஞ் சுமப்பவ ரன்றோ,
துன்னிய கழனி சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 12


3132 - பித்தவென் றிகழோம் பெண்கொடி மனைவாய்ப் பேயுறங கிருட்பொழு தின்னே,
யத்தசெல் லென்னோந் துதிபுரிந் திதய மாய வம் போருகத் திருத்தி,
நித்தம் முவப்போ மடிகளுக் கெதன்க ணிகழ்விருப் பருள்செயல் வேண்டுஞ்,
சுத்தநற் றவத்தார் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 13


3133 - மதிக்குமா ரூரின் மறுகுவன் பூவின் மலிகரு கிருளிடை மலர்ந்து,
திதிக்குநின் பாதச் செய்யதா மரைக டெண்டிரை யுடுத்த வா ரூரிற்,
கதிக்குமெம் மனமா மறுகுவன் பூவிற் கவினுற மலர்தருமென்றே,
துதிக்குமோர் கடமை பூண்டனந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 14


3134 - தவருடை யலைவே ளெய்வது குறியார் தழையுநின் செங்கழு நீர்வேட்,
டிவருடை யிழந்தா ளென்பது குறியா ரெம்மனை மார்கணேற் றிராவை,
யவருடை யறுத்தா ரின்னமும் பசலை யழ கிய மேனியிற் றீரா,
டுவருடை யிதழா ளருள்புரி துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 15


3135 - ஐயநின் பொதுநா மத்தலாற் சிறப்பி னமைந்தநா மத்தினுமெமக்கு,
மெய்யகன் குறலாற் பொதுமையி னன்றி மேவிய சிறப்பினு மடிமை,
யுய்யநன் குறலா மெனத்துணிந் திருந்தோ முதுநிறை வேறுமா றருள்வாய்,
துய்யநற் புலவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 16


3136 - கொலைகுறித் தெடுத்தல் செய்திடா மழுவிற் கொண்ட தன் றுன்றிரு மேனி,
யலைபுரிந் தெம்மை யடர்த்திடும் பந்த மடங் கலு மடர்த்திடற் கன்றோ,
தலைமைமற் றதுகொண் டதுசெயா திருக்குந் தன்மைசான் றவர்க்கழ காமோ,
தொலைவில்பல் வளமுஞ் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 17


3137 - கருவிகை யிகப்பிற் போதமாம் போதங் கையிகப் பிற்றிரு வருளா,
மருவிய வருள்கை யிகப்பினின் பாமிம் மாண்புநின் னோக்கினா லன்றி,
யொருவிய மற்றை யொன்றனா லாமோ விரைப்பவ ருரையெலா மாயுந்,
துருவிய புகழோ யருட்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 18


3138 - இருங்கடற் புவியி லிடமறப் பரந்த தெழுந்துமே லிடத்தினும் பரந்த,
தொருங்குநின் புகழ்மற் றின்னுமஃ தவாவி யுறமுய றன்மைதேர்ந் தன்றே,
யருங்கலை வாத வூரர்முன் னினைப்பே ராசைவா ரியனெனப் புகன்றார்,
சுருங்கைநீர் முழுக்க மறாவயற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 19


3139 - மதிநதி மழுமாந் முதலிய மறைத்து மாரவேண் மேற்பகைமறையாய்,
பொதியுமத் திறத்தா லுன்னையா னகண்ட பூரணசிவனெனத் தெளிந்தே,
னதிர்கட லுலகிற் றெளிதரார் தாமு மறிதரப் புகலுவேன் கண்டாய்,
துதியொடு புலவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 20


3140 - ஐயயான் வெளிப்பட் டிடினடங் குவைநீ யடங்கியல்யா னீவெளிப் படுவை,
வெய்யயா னடங்கும் வகைபுரிந் தொருநீ வெளிப்படா திருப்பதென் னுரையாய்,
வையமே லுயர்தம் முதன்மையை மறந்து வாழ்நரு முளர்கொலோ மதித்துத்,
துய்யமா தவர்கள் சூழ் பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 21


3141 - என்றுநாம் விரும்புஞ் செங்கழுநீரை யிவள்விரும் பினளெனச் சினந்து,
கன்றுமா மதியங் கனன்றெழு முழக்கங் கான்றெழு முயிர்த்தவா ரிதியுங்,
கொன்றுதீர் குவனென் றுடையவேள் சிலையிற் கோறொடு மடந்தையென் செய்வா,
டுன்றுநீள் கருணை செய்தருடுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 22


3142 - யான்முத லென்றே யெழுவனெப் பொழுது மெய்தறி யாமைநீ யொருநான்,
றான்முத லென்றே யெழுதலஃ தன்றே சத்திய மென்பராய்ந் தமைந்தா,
ரூன்முத லியவென் னொழிவினுக் கெதிர்பார்த் துறுதலென் னுரைத்திடல் வேண்டுஞ்,
சூன்முதல் பணைத்த கழனிசூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 23


3143 - அடியவ னீயென் றாவண நீயே யமைத்தவை புகூஉவழக்காடி,
நெடியவா ரூரர் தம்மையாண் டாய்க்கு நிகழுமோ ராவண மெழுதிக்,
கொடியயாங் கொடுப்போ மறுத்திடோ மடிமை கொண்டுநன்றாடரத் தடையென்,
றுடியமை யிடையார்சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 24


3144 - பாலைநேர் மொழியாள் வேண்டுவார் வேண்டும் படியருள் படியனீ யென்று,
மாலையே வேண்ட மாலையே யளித்தாய் மாலையே நினக்குமீ தைய,
நூலையோ ரெவரு மயக்கறுத் தாளு நோன்மைய னென்பது பொய்யோ,
சோலைமேன் முகில்வந் துலாவருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 25


3145 - அன்றுவண் கூட னகரின்மா பாவி யாயினா னொருவனை யாண்டாய்,
நன்றுமற் றதனாற் பெரும்புக ழடைந்தாய் நாயினேன் றன்னையு மாண்டா,
லின்றுமற் றதனாற் பெரும்புகழ் படுமே யிலாபமெண் ணார்களு முளரோ,
துன்றுமெய்த் தவத்தார் நிறைபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 26


3146 - உயரிய வொழுக்க மெனும்பெருங் கரையு ளுண்மையென் றுரைத்திடு மவலிற்,
பெயர்வில்சே தனமென் றுரைத்திடுஞ் சேற்றிற் பெருகுறு மன்பெனும் புனலின்,
மயர்வறத் தோன்று நின்னடிக் கமலம் வகுத்தவை யிலாதவென் னுள்ளத்,
துயரறை யகத்துந் தோன்றுமோ துறைசைச் சிப்பிர மணியதே சிகனே. - 27


3147 - நாடுநின் னடிக டியானியா ருவந்து நயத்தக வெடுத்தெடுத் துரையார்,
நீடுமண் டோயப் பணிதரா ருலகி னிகழ்தலிற் புள்விலங் காதி.
கூடுமஃ றிணையாய் நிகழ்வதே நன்று குறித்துரை நிந்தையின் மையினார்,
சூடுமெய்த் தவத்தர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 28


3148 - வரைகெழு நினது புயத்தையா னவாவ மற்றையப் புயம்வட வரையைப்,
புரைதப முன்னங் குழைத்ததா மந்தப் பொருபகை நினைந்ததற் கெதிராம்,
விரைகெழு வரையி லுதித்தமெல் வளியும் வெப்பமிக் குறவெனை வருத்துஞ்,
சுரைநுக ரளிபண் பயில்பொழிற்றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 29


3149 - கலைபல பயின்று தெளிந்தவர் வருந்திக் கற்றதற் குறுபயனாக,
மலைவரு நினையே பாடுதல் சிறப்பு மற்றுள பசுக்கண்மேற் பாட,
லலைவரு தீம்பா லட்டெடுத் திழிநாய்க் காங்கலங் கவிழ்ப்பது போலாந்,
தொலைவில்பல் வளஞ்சா லற்புதத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 30


3150 - முற்றிய கருணை நின்னையா னவாவ முன்னமோர் மாங்குயிறன்னைப்,
பற்றிய பகையிற் றடிந்தனை யாமப் பகைநினைந் தன்னை மார்க் கொல்லாச்,
செற்றிய சிறையக் குயிலின மளியேன் செவிவெதுப் பேறமீக் கூவுஞ்,
சொற்றியென் றருள்வாய் நன்றுசா றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 31


3151 - கருமல விருட்டுள் யானென தென்னக் கதித்தெழு மொருமதி தோன்ற,
வொருவில்பல் கொடுமைப் பனிவிரா யுடற்ற வுற்றதோ ரென்னிடத் தினுமுன்,
றிருவடிக் கமல மெங்ஙன மலருந் தேசிகோத் தமப்பெரு மானே,
சுருதியா யிரமு முழக்கறாத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 32


3152 - தெரிந்துனை விழைந்தேன் மதன்மணக் கோலஞ் செய்யவந் தானிது முறையோ,
புரிந்தபொன் மலரா லாகிய பாயல் பொங்கழ றருமொரு மலர்க்கு,
விரிந்தவெந் தழன்முன் றந்தனை யாம்பின் விரைந்தவை மாறுசெய் வனபார்,
சொரிந்தவெண் டரள நிலாவருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 33


3153 - மதியினை வருத்து நின்னடிக் கமல மாண்பையம் மதியினால் வருந்தும்,
பொதியசெங் கமல மெண்ணியுள் ளுடைந்து பொலிவிர குளசில பொலிவான்,
விதியினைச் சுமந்து முறாமையின் விளர்ப்ப வெள்ளிய தாமரை யென்பார்,
துதிபயில் கவிஞர் கழகமார் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 34


3154 - மறையவன் படைத்தன் மாயவன் புரத்தல் வாய்த்திடாவொருதிரு வுருவ,
மறைபெரும் புகழ்நீ கொண்டகா ரணத்தா லன்ன நான் முகவிதி படைத்த,
னறைகெழு துளவத் தாரினான் புரத்தனவில்பல வுருவம்யா மொழிந்தேந்,
துறைகெழு பொன்னி வளப் பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 35


3155 - மேவிய கிரியை ஞானமென் றேத்த விளங்குநின் றிருவடிக் கமலம்,
பாவிய சுவைப்பே ரானந்தத் தேறல் பருகுபு தேக்குமிக் கெறிவான்,
வாவிய வடியேன் மனக்கருஞ் சுரும்பர் வந்துவீழ் நாளுமுண் டாமோ,
தூவியந் தோகை பயில்பொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 36


3156 - எனக்குனைக் கொடுத்து நினக்கெனைக் கோட லியல்பிஃ தன்றியொப் பில்லா,
நினக்கெனைக் கொடுத்தென் றனக்குனைக் கோடனீதியன் றேமுத னீயே ,
மனக்குவப் புறுத்தும் பலகதந் திரனீ மற்றஃ தில்லவ னடியேன்,
சொனக்குல மதில்கோ புரம்பொலி துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 37


3157 - மருளக லடியார் சூட்டிய கழுநீர் மாலைநின் சேவடிப் பொலித,
லிருள்படு பொழுதி லெழுமொரு கொழுந னெழின்மிக மணத்தலா லங்குப்,
பொருள்பெறு தானு மடுத்துற மணத்துப் பொலிந்துவாழ்ந் திருப்பது புரையுஞ்,
சுருள்விரி கதலிப் பொங்கர்சூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 38


3158 - கறையடி வராகங் குரண்டமீன் மதியங் கரையிலை முதற்பல வற்றை,
நிறைவலி தபநீ செய்தனை யவற்றி னித்தில மனைத்துமப் பகையான்,
முறைமையி னுன்றோ ளவாவிய வென்னை முறுகுவெப் புறுத்திவாட் டுவபார்,
துறைதொறுஞ் சங்கம் பயில்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 39


3159 - அகத்திரு ளடியார்க் கொழிப்பவ னீயென் றறைந்திட லுண்மையே யழகு,
நகத்திகழ் நினது தோளணி கழுநீர் நயந்த நா னிப்புறத் திருளும்,
புகத்தியங் கிடுவே னொழித்திடாத் திறமென் புகலுதி புண்ணியப் பொருளே,
சுகத்தியன் முனிவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 40


3160 - மேயநீ புறத்து வெளிப்படு திறத்தால் வெவ்வினைக் குழிசியாம் யாமும்,
பாயநின் னடிக்கீ ழடங்கினம் புறத்தே பண்பினவ் வாறுமற் றகத்தே,
நாயநீ வெளிப்பட் டிடினின தாட்கீழ் நாங்கணன் கடங்கிவாழ்ந் திடுவோந்,
தூயமா தவருண் மணியெனுந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 41


3161 - அடுத்தடி யடைந்தார் தம்பசு போத மடங்குறா வகையுப தேசித்,
தெடுத்தநான் முகற்குங் கூற்றுவன் றனக்கு மிடையறாத் தொழில்வளர்த் திடுவார்,
மடுத்தவா ரியரோ நோக்கினா லனைத்தும் வாங்கியாங் கசைவற விருத்தித்,
தொடுத்தபே ரின்ப மருத்திடுந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 42


3162 - கற்றவர் நின்னை யவாவின ரெல்லாங் கழன்றவ ரென் பது மெய்யே,
யுற்றமற் றிவளு முன்னல மவாவி யுடைகல முணவொடு துறந்து,
செற்றநாண் மடமை முதலிய துறந்து செவிலிதா யிகுளைய ராதிச்,
சுற்றமுந் துறந்தா ணன்றிது துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 43


3163 - ஒளிகெழு மாற்றா லுயர்கன கமும்பொன் னுற்றகா ரிரும்பும்பொன் னதுபோற்,
களிகெழு பசுபோ தந்தப வடைந்தார் களைப்புரந் தினிதருள் புரியு,
மளிகெழு நீயுங் குருவது சிறிது மாற்றறி யார்களுங் குருவே,
துளிகெழு மதுவத் துணர்ப்பொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 44


3164 - உற்றவர் பிறவிக் கடல்கடப் பதனுக் கொள்ளிய மரக்கல மாகிப்,
பற்றமை திரோத மருளெனப் பட்டுப் பரந்தநின் றிரு வடி யாய,
பொற்றசெம் மணிக்கு நாயினேன் மனமம் பொற்றக டாகு நா ளுளதோ,
சொற்றபல் வளத்தாற் பொலிபுகழ்த் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 45


3165 - கலகமொன் றெனுமா மலமிரண் டென்னக் கரைதரு கருமமூன் றென்ன,
நிலவுறு மாயை யாயவிம் மூன்று நிகழ்ச்சியற் றொழிதரு பாக்குக்,
குலவுநின் றிருவாய் வயின்வரு கூற்றங் கூற்ற மாய்க் கூடுநா ளென்றோ,
சுலவுநீ ருலகம் புகழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 46


3166 - அடியவர் மலத்தை யழித்திடு திறத்தி னாம்பிர தாபமு மவர்க்குப்,
படியில்பே ரின்ப மளித்திடு திறத்திற் படுபெருங் கீர்த்தியு மெழுந்து,
வடிவமாய்ச் சேந்து விளர்த்துறும் பரிதி மதியென வந்ததத் தியாசந்,
தொடியணி மடவார் பயில்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 47


3167 - திருவடி யாய கமலத்தி லொடுக்கஞ் சிவணுதன் முன்னமக் கமல,
மருவடி யெழுத்தில் லவற்றொடுங் குதலே மானுமென் றனையரு ளின்றேற்,
பொருவடி யந்த மிலாநினை யென்றும் புகழ்ந்துபா டிடுவர மளித்தி,
துருவடி யவர்சூழ் தருபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 48


3168 - கறைதபு காட்சிச் சிவப்பிர காசர் கருணையா லினிதுற வகுத்த,
வறையகத் திருக்கை விதித்தன ரெனினு மடியரே மனத்தறை யிருக்கை,
நிறைபெரும் புகழோய் விலக்கினர் கொல்லோ நீயிஃ தொழிப்பது தகுமோ,
துறைதொறு மடவா ராட்டயர் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 49


3169 - கோலமார் பிடக ரெற்றைக்கு மருந்து கொண்டுறச் சுமப்பது மூன்றா,
ஞாலமார் பிணிய ரவையறர் கன்றோ நலமிகுபோதநீ சுமத்தல்,
சீலமார் பவர்மும் மலமறற் கன்றோ சிறியனேன் விலக்குளேன் கொல்லோ,
சூலமார் மணிமா ளிகைப்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 50


3170 - இவள்விழி மழைநேர் குவளைநே ரென்ப ரிருநிச மெவ்விதத் தென்னிற்,
றிவளுரு நின்னை விழைந்திடை யறாது செறிய நீர்பொழிதலி னானுந்,
தவழ்மதி யுதிக்கு மிரவுகண் படாத தன்மையினானுமென் றருள்வாய்,
துவள்கொடிமுகில்கீண் டெழுமதிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 51


3171 - நிலவுமுன் மாலை விரும்பின ளதற்கு நீயொரு சேய்ஞலூர் மறையோ,
குலவுசீர்ப் புதல்வி யல்லையென் றனன்முன் னுண்மையே யின்றுபல் லோருங்,
கலவுறக் கொடுப்ப துண்டென மொழிந்தான் கருதிவண் முதுக்குறை வெந்னே,
சுலவுபூஞ் சோலை முகிலளாந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 52


3172 - பற்பலர் சூழப் பவனிநீ வந்தாய் பார்த்திரு கைம்மலர் குவித்தாள்,
பொற்பவிர் மடந்தை யதற்கணி வளைகள் பொருக்கெனக் கவர்ந்தனை முன்னா,
ளற்புற விடுதல் செய்தனை யிந்நா ளமைதரக் கவருவை யெனிலுன்,
சொற்புகழ் நன்றா யிருந்தது துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 53


3173 - வணங்கினர் வறுமை நோயொடு மலநோய் மாறிட வம் பொன்வட் டகையி,
லிணங்கிய சுவண நீறுநன் களிப்பா யெடுத்திடக் குறைபடா மையினாற்,
குணங்கெழு பதும நிதியென வதனைக் கபறித்தனங் குரவர்க ளேறே,
சுணங்கிள முலையார் பயில்பெருந்துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 54


3174 - கூடிநின் றிருமுற் பணிந்துவீழ் போதே கூடிய கருமலம் வீழு,
நாடியங் கெழுபோ தருள்விரா யெழுநீ நல்குநீற் றாலுடல் விளர்ப்ப,
நீடிய விளர்த்த வுடம்புமற் றொன்றா நிலத்திது சிலரெண்ணா தென்னே,
சூடிய புகழாற் பொலிபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 55


3175 - மலம்வியா பகமோ வியாப்பியங் கொல்லோ மருவிய வெனக்கென விரண்டு,
மலவது வியாத்தி நாக்கநாங் கிடுமென்றருளுநின் வாய்மொழி யவ்வா,
றிலகுவா னீக்க மியற்றிடா தென்னே யிசைத்தசொன் முடிப்பவர் வேறோ,
சுலவுதீர் மனத்தர் தொகுபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 56


3176 - கருதுறு கரும காண்டமு ஞான காண்டமு மிருபதமாக,
மருவுப நிடத மேற்பரப் பாக வண்குமி ழோரெழுத் தாகப்
பொருவறப் பொலிமுற் பாதுகை யெனவிப் போதது போற்றவெற்கருள்வாய்,
சுருதியா னெடுமால் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 57


3177 - தேடிய மாலார்க் கரியைமுன் னாளுஞ் சிறந்தவிந் நாளுமத் தகையை,
வாடிய மடவார் வளையுடை கவர்ந்தாய் மாதர்பா லின்றுமத் தகையை,
கூடிய வளைமுன் னிட்டநீ யின்று குவிகரம் பிடித்திடா வகையென்,
சூடிய மாலை யெனுமரு டுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 58


3178 - கருவிழிச் செவ்வா யென்மகள் வருத்தங் காண்பது நினக்கழ காமோ,
பொருவில்சங் கரனே நீயென வான்றோர் புகன்றிடு மாற்றமும் பொய்யோ,
மருவுசெங் குவளை மதன்கருங் குவளை மறிதரச் செயுமெதி ரென்றோ,
சுருதியா யிரமு முழக்கறாத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 59


3179 - மன்னுநின் காவிக் கொடிமிசை யெழுந்து வானகத் தாடுத லமரீர்,
மின்னுநுண் மருங்கு லரம்பையர் போகம் வெறுத்தெனையுடையவ னாமம்,
பன்னுற் வம்மி னெனவிளித் திடுமப் பண்புதேர்தரினரு ளாமே,
துன்னுபல் கழனி வளமலி துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 60


3180 - ஆன்றநின் கருணை யென்னென வுரைக்கே னையநின்பணிக்கமை நாற்கால்,
சான்றபல் பசுவு நின்பொது நாமந் தம்முடற் பொறித்திடப் படுவ,
வேன்றவிவ் விருகாற் பசுவெனு மெங்கட் கியைந்தில வவைசெய்புண் ணியமென்,
றோன்றவெவ் விடத்துங் கழகமார் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 61


3180 கற்பக மாலை புனைபவர் நறிய கமலமா லிகைபுனை பவர்பா,
செற்படுந் துளவ மாலிகை புனைவா ரிவரெலா நின்றிரு வடிச்சூட்,
டற்புத மாலை புனையுமெங் களைநே ராவரோ வடர்மல மொழிந்து,
சொற்புனை நின்னைக் கலத்தலார் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 62


3182 - மந்தண மாகவோதிம மேயென் மயலெலாந் திருச்செவிக் கேற்றிச்,
சந்தமென் கழுநீர் வாங்கிவா வென்றா டனிமுடி முன்புணராது,
நொந்தயான் செவிப்பா லடைந்திடு மாறு நோற்றிலே னென்றது மறுப்பச்,
சுந்தர மடவா ளயர்ந்தன டுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 63


3183 - மான்மிகு மென்னை வந்துநீ புணர்தல் வழக்கொலா தென்றியேல் விரைத்த,
தேன்மிகு கழுநீ ரருள்செயல் வேண்டுந் திருந்துறா ததுவுமென் றிடின்முன்,
பான்மிகு திருப்பூ வணத்தொரு மான்கைப் படர்நகக் குறிகொண்ட துரைப்பேன்,
சூன்மிகு சங்கம் புலம்புநீர்த் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 64


3184 - ஒள்ளிய நினது குடைமதி மதவே ளுடற்றுவா னடைந்தஞான் றவன்பா,
லள்ளிய கவிகை யென்னலாங் காம மாற்றுவதில்லையே யென்னி,
னள்ளிய வுயிர்கட் கினத்தியல் பானே நாளுமாமறிவெனல் பொய்யோ,
துள்ளிய கயன்மீப் பாய்வயற் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 65


3185 - வெள்ளிமால் வரையோ முலைவரை யொருநெல் வேலிவே யோதொடித் தோள்வே,
யொள்ளிய பிறையோ நுதற்பிறை கண்ணா யுறுமதி யோமுக மதிய,
நள்ளிய நீலி வனக்கத லியோவென்னகுதுடைக் கதலியென் செய்வேன்,
றுள்ளிய வரான்மீ தெழுபுனற்றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 66


3186 - உள்ளுமெய் யடியார் சூட்டுமென் பூவுள் ளுன்னடிக் கேற்றிய நீலம்,
விள்ளுபன் மலரே வுடையவன் வயமாய் வெங்கொலை புரிந்ததன் றீமை,
தள்ளுதல் குறித்து விரும்பிநின் னடியாஞ் சார்புபெற் றமர்வது மானுந்,
துள்ளிய கயல்விண் கிழிக்குநீர்த் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 67


3187 - காதன்மெய் யடியார் நின்னெதிர் நின்று கவின்றதீ பங்கொடு வளைத்தன்,
மேதகு பரிதி மண்டில மானும் விளங்கத னடுவணீ பொலித,
லோதரு மனைய மண்டில நடுமுன் னுறைதரு தன்மையே காட்டுஞ்,
சூதமுற் றருக்க டுறுபொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 68


3188 - விட்டது யாரை முன்னர்வா சனைதான் வெண்பொனாலியன்றபா துகையே,
நட்டதுன் மலர்த்தா ளதுகுறித் திடுங்கா னகுகதிர் வெள்ளியங் கிரிமேற்,
பட்டது பயின்ற பழக்கம தன்றோ பசுவருக் கைச்சுளை கடுவன்,
றொட்டது மந்திக் கீபொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 69


3189 - நின்னிரு மருங்கி லடியர்போற் றிடுங்கா னெடியவெண்சாமரை பனித்தன்,
மன்னிரு வகைய ஞானமு மெழுந்து வயங்கலு மனையவை யுயிர்த்த,
மின்னிரு வகைய புகழுமாங் கெழுந்து மேவுறத்துள்ளலும் பொருவுந்,
துன்னிரு பயனோ டின்பரு டுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 70


3190 - பிறையுரு வென்னத் தலைவளை தண்டம் பிறங்கிநின் றிருமுனம் பொலித,
லறைதரு கிரியா குருக்களென் றுரைக்கு மானைகட் கங்குச மென்கோ,
வுறைதரு வெள்ளி பொன்னெனு மீன்க ளுரந்தபு தூண்டிலென் றுரைக்கோ,
துறைபல கெழுமு பொன்னிசூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 71


3191 - அந்தநா ணின்னைப் புகழ்ந்துபா டினருக் களித்தரு ளியானமா திகளை,
யிந்தநா ணீயே கொண்டனை யவற்றா லிவர்களுக் கென்பய னென்று,
சந்தமார் திருத்தாண் மலர்நிழன் மட்டே தரல்குறித்தனையது போதுஞ்,
சுந்தரக் கனக மதில்வளை துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 72


3192 - வெள்ளியங் கயிலை யமர்ந்தநாள் வெய்ய விடமெடுத் தயின்றனை யிங்கு,
வள்ளிய வருளி னமருநா ளதுபோல் வலிவிளக் குவதெவன் செய்தா,
யுள்ளிய வடிவே னறிவெடுத் தயின்றா லொத்ததென்றியாவரும் புகழ்வார்,
துள்ளிய கயல்சா லிலஞ்சிசூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 73


3193 - பொறையெனுங் குலையு ளன்பெனு நிறைந்த புனல்படு மெய்யடி யவர்த,
நிறைமன மெனுநற் றடத்துற மலரு நின்னடித் தாமரை மலரிற்,
சிறைபடு மடியே னறிவெனும் வண்டு சேர்ந்துவாழ்ந் தமருநா ளுளதோ,
துறையுணர் புலவர் புகழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 74


3194 - வஞ்சனேன் மலநின் றாட்கெதிர் நமனோ வாய்ந்தகைக் கெதிர்விதி தலையோ,
மஞ்சவாங் களத்திற் கெதிர்கொடு விடமோ மறைந்தகட் கெதிர்சிலை மதனோ,
வெஞ்சுறா நெடிய சடைக்கெதிர் புனலோ வினியவாய் நகைக்கெதிர்புரமோ,
துஞ்சன்மே வுதற்கு நவில்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 75


3195 - மதித்திடு முனையான் கண்டநாண் முதலா மாரவேள் கணைக்கிலக் காகிப்,
பதித்திடு மயற்சேற் றாழ்தனனந் றாமோ பரிந்தருள் செய்திலா யென்னின்,
விதித்திடு கனவில் வந்தெனைப் புணர்தல் வெளிப்பட யாவர்க்கு முரைப்பேன்,
றுதித்திடு வளஞ்சான் மாளிகைத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 76


3196 - அறைதரு கருணை யாழிநீ யெனவாங் காறுகால் செல்லுமே யென்று,
சிறையளி தூது சேறியென் றியம்பச் செறிந்தவெண்காற்புள்ளா கினன்மு,
னிறையவ னவன்பாற் குறைந்தகா லுடையேனேகிலே னெனத்தளர் தருவா,
டுறாபல கெழுமு காவிரித்துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 77


3197 - மதித்திடு வளஞ்சான் மதுரையி லெல்லாம் வல்லசித் தெனப்பொலிந் தனைமு,
னுதித்திடு மடியேன் மனங்குழை வித்தா லுறைசெயு மதுபுதுக் கியதாங்,
கதித்திடு மந்நா ளுஞற்றிய தென்னிற் காலவேற் றுமையுனக் குண்டோ,
துதித்திடு முனிவர் நிறைபெருந்துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 78


3198 - முத்தவெண் ணகையார் முயக்கமே பொருளா முன்னு வார் குழாத்தொடுங்கலந்து,
சித்தமா ழாந்தா யென்றெனைப் பேசிச் சிரிப்பையேன் முன்ன மாரூரி,
னத்தநேர் குழலாண் மனைவயிற் றூது நடந்ததை யுரைத்துனைச் சிரிப்பேன்,
சுத்தமா தவத்தர் நிறைபெருந்துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 79


3199 - தரையுற மெழுகி யொருபொழு துண்ட தவத்தினால் யான்பெறு மகட்கு,
விரைநறு மாலை தருதியின் றென்னின் மேவருதீக்கையா வதுசெய்,
புரைதபு முடலா தியவொரு மூன்றும் பொலியுமுன் வயத்தவா மன்றே,
சுரையடிக் கமல மலர்புனற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 80


3200 - இழித்தவூ னருந்த லோப்புகென் றெங்கட் கியம்பிமுன்னாளொரு கிராதர்,
கழித்தவூ னுகர்ந்தாய் விதிவிலக் கொழிந்தாய் கடையனேற் கின்னருள் புரிந்தாற்,
சுழித்தநீ ருலகி லென்செய்தாயென்றோர் தோடநிற் குரைப்பவ ருளரோ,
தொழித்தளி முரலுமலர்ப்பொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 81


3201 - கலைபல வையந் திரிபறி யாமை கழிதர வுணர்ந்துளாரெனினு,
மலைவினின் செவ்வாய் மொழியன்றி முத்தி வாய்ப்பரோபலபொறி யிருந்து,
மலைகடற் புடவி யிடைப்படு பொருள்கண் ணன்றிநோக் கிடுநரு முளரோ,
துலைநிகர் நடுவோர் நிறைபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 82


3202 - ஆற்றிடு தொழிலுங் கொண்டிடு முகமு மைந்துமுன்னொருமுகந் தரித்துக்,
காற்றிடு மலமைந் திப்பொழு தென்னிற் கவினுமிம் முகப்புகழ் பெரிதா,
லூற்றிடு கருணை யுவட்டெழ வடியா ருள்ளத்துள் ளுறைகுரு மணியே,
தோற்றிடு மதியந் தவழ்மதிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 83


3203 - ஆன்றநின் பவனி கண்டநாண் முதலா வரியநின் றோளலர் வேட்டுக்,
கான்றவூ ருள்லார் வாயலர் மதவேள் கையலர் நிரம்புறவேற்று,
மான்றநெஞ் சினளாய்க் கண்ணலர் பொழிவாள் வயங்குநின்னுளத்தலர் கருணை,
தோன்றவென் றடைவாள் சொற்றிவான் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 84


3204 - வடவரை கோட்டி வாசுகி பூட்டி வனத்துழாய்க் கோலொன்று கூட்டித்,
தடமதில் வீட்டிப் பெருவிறல் காட்டித் தயங்குநீ யொருமலர் தொடுக்க,
வுடன்முனிந் தனைபன் மலர்தொடுத்தவ்வே ளுடற்றுபோ ரெங்ஙனம் பொறுப்பேன்,
சுடர்விடு கொடிமாளிகைப்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 85


3205 - வல்லைநின் னடியெந் றலைமிசை யேற்றின் மலரவன் கைவரைந் திடலவ்,
வெல்லைதீர் தலினான் மலர்க்கைமற் றனையா னிருந்தலை யொன்றுவென் றதுமு,
னொல்லைமென் மலர்த்தா ளன்னவ னெண்கை யொருங்குவென் றஃதிதன் புகழென்,
றொல்லைநற் றவத்தார் நிறைபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 86


3206 - புன்மையேந் தலைமே னினதுகைக் கமலம் பொலிதரக் குவிந்துமே விடுமோர்,
நன்மைசார் தலின்மற் றயன்கர கமல நாடொறு மலர்ந்துநீங் கிடுமத்,
தன்மைதே ராத மடவரப் பிரமன் றன்றொழில் வளர்ப்பவ ரன்றோ
தொந்மைமா தவத்தர் நிறைபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 87


3207 - பராரையா லமர்ந்தான் முன்னமிப் பொழுது பராவர சமருவான் விழையிற்,
றராதல முவவா தென்னவுங் கேளா டலைவன்மற் றவனலா திலையென்,
றராவக லல்கு லன்னமென் னடையாளயருவாண் முதுக்குறைந் தனள்காண்,
சுராதிபர் விரும்பிச் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 88


3208 - வெய்யவா பாச மார்க்கமத் தனையும் வீட்டுநின் றிருவடி யடைந்தே,
னையவெங் காலன் வீசுபா சத்தோ டைவகைப் பாசமுங் கழல,
வுய்யவாழ் நினது முகத்துநம் பாசமொளிர்தரப் புரிந்தனை யுய்ந்தேன்,
றுய்யமா தவர்கள் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 89


3209 - புல்லிய வோரூ ரேனுமில் லென்று புகன்றுமற் றதற்குமா றாக,
நல்லியல் வெண்ணெய் நகுபுகழ்த் துறையூர் நலமலி கடந்தைகொற் றவனூர்,
வில்லிய றிருவா வடுதுறை புரப்பாய் வெறுத்த மூன் றூர்மகிழ் தரவோ,
சொல்லிய வவற்றொன் றாகிய துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 90


3210 - உன்னிடைக் களங்க முறுதலி னுறாமென் றுரைத்தியேன் முன்னையம் மதியந்,
தன்னிடை யமர்ந்தாய் களங்கமங் கிலையோ சாற்றெனி னியாதுசாற் றிடுவா,
யென்னிடை யதுநே ரென்றமர்வாயே லெய்தரும் புகழ்நினக் குண்டாந்,
துன்னிடை மடவார் சூழ் பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 91


3211 - கரிகுழைத் தெழுதிப் புனைதரப் பெற்ற கண்கணின் றிருவுருக் கண்டு,
வரிவளைக் குலத்தைக் கையினின் றொழிக்க மலர்க்கர நன்றுகொ லென்னப்,
புரியுமக் கயற்கண் முத்துகப் பொறாது பொம் மல்வெம் முலைமுத்தங் கருகுஞ்,
சுரிகுழற் கருள்வ தென்றுவான் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 92


3212 - பாயவெப் பகலா நின்னுடை யுளத்திற் பதிதர வமர்தரே மென்னின்,
மேயமுற் பரிதி மண்டலத் தமர்ந்த வித்தகன் யாரெனக் கேட்ப,
னாயவிவ் வினாவிற் கெவ்விடை கொடுப்பா யத்தகு தோல்வி நிற் காமோ,
தோயமென் கழனி வளப்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 93


3213 - வேண்டமுன் கண்டத் தடக்கிய விடத்தை வெளிவிடுத்தெனவிரு ணிமிரு,
மாண்டசெஞ் சடைநீர் கொதிப்பொடு வெளியே வந்தெனப் பானிலா விரியும்,
பூண்டவெம் பணியி னுயிர்ப்பென விளங்கால் போதரு மெங்ஙனம் பொறுப்பா,
டூண்டநின் றவிரா விளக்கனா டுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 94


3214 - ஆன்றநீ மிசைந்த பரிகலச் சேட மன்புமிக் கேற்றமாதவருக்,
கேன்றவெம் பசிநோய் மருந்துகொ லுடலி லெய்திய நோய்தெறு மருந்தோ,
சான்றமும் மலநோய் தவிர்த்திடு மருந்தோ தவாவதன் பெருமையா துரைக்கேன்,
றோன்றமெய்ஞ் ஞானம் பயில்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 95


3215 - கையினுந் தவிர்த்தாய் நுதலினுந் தவிர்த்தாய் கடுந்தழ லனையது குறித்து,
நையினு நைக நினையெதிர்ப் பட்ட நங்கைமார் காலியங் குறுவான்,
செய்யினு நன்று காலியங் குறுவான் செய்தன ரன்னதை நன்றோ,
துய்யினுங் கூர்த்த மதியர்சூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 96


3216 - மிடைசடை மறைத்து நீயெழுந் தருளி மேவினை யாயினு நினக்குப்,
புடையுற மலர்க்கை கொடுப்பவ ரினையன் பொற்சடை யுடையன்முன் னென்று,
தடையற வெவரு மறிதரு பாக்குத் தாஞ் சுமந் துணர்த்திடத் தெளிந்தேன்,
றொடைமதுப் பிலிற்றுங் காவ ணத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 97


3217 - வழிவழி யடியர்க் கணுத்துணைப் போதம் வயங்குமேற் பொறாமையு மனையார்,
கழியவின் படையு மவாவுமற் றனையார் கருமல மேலடு முனிவு,
மொழிநம பிரம வெனுமினா மொழியு முடையையா னீயுமீ தறனே,
சுழியலை யெறியும் பொன்னிசூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 98


3218 - கற்றவ ருவக்குங் கல்வியில் யானுங் கடலகத் தங்கணப் புனல்சார்ந்,
துற்றதேற் றிருத்த மாவது கடுப்ப வுன்பெரும் புகழ்விர வுதலாற்,
குற்றமின் றாகிச் செய்யுளா மென்றே குணமில்புன் சொற்கொடு துதிகள்,
சொற்றன னுவந்து கோடிவான் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 99


3219 - மண்ணிய கருணைப் பெருஞ்சயி லாதி மரபுபல் லூழியும் வாழ்க,
வின்னிய முகிலின் முழங்கவெக் காலு மிலங்குநின் சந்நிதி வாழ்க,
பன்னிய நினது நாமவைந் தெழுத்தும் பல்லிடந் தொறும்பு கூஉ வாழ்க,
துன்னிய நின்சீர் வாழ்கவான் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே. - 100

சுப்பிரமணியதேசிகர்மாலை முற்றிற்று.
--------------------------


*சிறப்புப்பாயிரம்.
திருவாவடுதுறையாதீனத்து ஆறுமுகசுவாமிகளியற்றியது.
*இது பழையபதிப்பைச்சார்ந்தது.

அறுசீர்கழிநெடிலடியாசிரியவிருத்தம்


3220 - யாமாலை நீங்கவரு டுறைசையிற்சுப் பிரமணிய வெங்கோமான்மேற்,
பூமாலை வாடுறுநன் மணிமாலை பொள்ளலுறும் பொன்னாற் செய்த,
மாமாலை தேய்வுறுமுத் தாமாலை வெள்ளையென மதித்துநாராற்,
பாமாலை தொடுத்தணிந்தான் மீனாட்சி சுந்தரனாம் பாவ லோனே. - 101


Comments