Pirapantattiraṭṭu XXIX


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XXIX
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" : பகுதி 29 (3016-3118)
அகிலாண்டநாயகிமாலை



சிவமயம்
செல்வவிநாயகர்.


3016 - திருவளர் கபோல மதப்பெருக் குண்டு
        தெவிட்டுகார் வண்டின மெழுந்து,
மருவளர் செய்ய சாந்தினுண் மறைந்த
        மத்தக மீதுதங் கிடுதல்,
கருவளர் மணிகள் பதித்தபொற் குடத்திற்
        கவின வீற் றிருந்தருள் கொழிக்கு,
முருவளர் செல்வ விநாயகன்
        பொற்றாளுபயபங் கயமுடிக் கணிவாம். - 0


நூல்.


3017 - பூமலி செய்ய பொலிமணித் தோடு
        புதுவெயி லெறித்து முண் மலர்ந்த,
தேமலி யாம்பற் செய்யவாய் முளைத்த
        சிறுநகை யிளநிலா வெறித்து,
மாமலி குழனின் றவர்முக மலர்கண்
        வளந்தர முன்புவந் தருள்வாய்,
காமலி வானும் புகழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 1



3018 - வடதிசை யவனுஞ் சமழ்ப்புறக் கனகம்
        வாய்ந்துதென் றிசைநகத் தமருங்,
குடமுனி யவனுஞ் சமழ்ப்புறக் கல்வி
        கூர்ந்துமிக்குயர்ந்தவர் பலருந்,
தடமலர் புரைநின் முகத்திரு கடைக்கட்
        சார்பொருங் குற்றவ ரன்றோ,
கடவுளர் மனம்புக் கமர்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 2



3019 - விழிவிருந் துதவு நின்றிரு மணத்தில்
        விமலனார் கரமலர்மேற்கொண்,
டொழிவரு கருங்கன் மிசையுறு நின்றா
        ளுற்றவென்கரமலர் மேற்கொண்,
டிழிவற வடியேன் மனக்கலி னிடத்து
        மியைந்துறு மென்றுனைத் துதித்தேன்,
கழிநசை முனிவர் புகழ்திரு
        வானைக்காவகி லாண்டநா யகியே. - 3



3020 - அடியனேன் கொடிய னென்றுமுன் வருதற்
        கஞ்சினை யென்னின்வெங் கூற்ற,
மடியமுன் னுதைத்தான் றுணையடைந்
        தேனும் வருமதிமற் றதுநினக் கரிதோ,
நெடியவன் பிரம னிந்திரன் முதலோர்
        நித்தமும் தாழ்ந்துசூழ்ந் தேத்திக்,
கடியவெவ் வினைதீர்ந் துயர்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 4



3021 - பாவிநீ நின்முன் வருவது தகாதென்
        பரிசினுக் கென்பையேன் முன்ன,
மாவிசூழ் மதுரை யகத்துமா பாவி யாயினா
        னொருவன்முன் முக்கட்,
கோவினோ டடைந்த குணத்திநீ யலையோ
        குலவதுமறந்தனை கொல்லோ,
காவியங் கழனி சூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 5



3022 - பண்டுநீ பெருமா னருள்வழி புகலிப்
        பாலனுக் களித்தனை ஞான,
மண்டுமற் றதனான் முழுப்புகழ் நினக்கே
        யாயதோ விரங்குபுநீயே,
தொண்டுகொண் டடியேற் களித்தனை
        யாயிற் றூயநிற் கேமுழுப்புகழாங்,
கண்டுநேர் மொழியார் பயிறிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 6



3023 - அளவறு பிழைகள் பொறுத்தரு ணின்னை
        யணியுருப் பாதியில் வைத்தான்,
றளர்பிழை மூன்றே பொறுப்பவ டன்னைச்
        சடைமுடி வைத்தன னதனாற்,
பிளவியன் மதியஞ் சூடிய பெருமான்-
        பித்தனென் றொருபெயர் பெற்றான்,
களமர்மொய் கழனி சூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 7



3024 - 3024.
பெரும்புக ழமைந்த நின்பதி யென்னும்
        பிரணவ குஞ்சர நின்கை,
யரும்புவிற் கரும்பு விரும்புபு கவரு
        மடல்புரிந் தென்றுளங் குறித்தோ,
வரும்புகர் முகங்கொ ளங்குச பாசம்
        வயங்குற வேந்தினை நாளுங்,
கரும்புய னிறத்தோன் சூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 8



3025 - யானென தென்னுஞ் செருக்கிழந் தவர்மற்
        றிழப்புறார் நின்னையீ துண்மை,
தானென மறைகண் முழங்கவு முணராச்
        சழக்கனே னினையிழந் துழல்வேன்,
மீனென வயங்குங் கண்ணினாய் கொடியேன்
        வினைக்குமோ ரிறுதியுண் டாங்கொல்,
கானென வரம்பைசூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 9



3026 - விழியிடந் தப்பி மகவரிந் தூட்டி
        விருப்புறு தந்தைதா டடிந்து,
பழியகன் மனையை யுதவிமற் றின்னும்
        பலசெயற் கரியசெய்தார்க்கே,
மொழியுநின் கொழுந னருள்செய்வா னென்னான்
        முடிதராதென்றுனை யடைந்தேன்,
கழியுணர் வுடையார் புகழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 10



3027 - வழிபடு மடிய ராயினார் தமக்கே
        வழங்குதுங் கருணைவேறாய,
பழிபடு மவர்க்கு வழங்குறா மென்னிற்
        பயோதர மருதமு னன்றிப்,
பொழிசுவை நறுநீர் புல்லுவர் நிலத்தும்
        பொழியுமே புண்ணியப் பொருளே,
கழிதலி றென்னங் காத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 11



3028 - கொடியவ னிவற்கு மருள்புரி யென்றுன்
        கொழுநனுக் கெனைக்குறித் துணர்த்த,
முடிவிலின் னருளா லெண்ணினை யேலம்
        முதல்வனின் னூடலையுணர்த்த,
வடிபணி பொழுதி லுணர்த்திடல்
        வேண்டு மஃதுடன் பலிக்குநீ யறிதி,
கடிதலில் கழகஞ் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 12



3029 - தாவருஞ் சிருக்கு மணிவடஞ் சங்கு
        சக்கரஞ் சூற்படை யிலைவே,
லோவருஞ் சிறப்பின் வேறுவே றேந்து
        முண்மையா லொண்மல ரோன்முன்,
மூவரு மியற்று மூவகைத் தொழிற்கு
        மூலநீயென்பது தெரிந்தேன்,
காவரு மலர்நல் கிடுந்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 13



3030 - தாயினைக் கொன்றுந் தந்தையைக் கொன்றுந்
        தவலரு மனைவியைக் கொன்றுஞ்,
சேயினைக் கொன்றுங் கடும்பினைக் கொன்றுஞ்
        சேர்ந்தவர்க் கருள்வனின் கொழுநன்,
வீயினைப் பொருவும் பதமடைந் தார்க்கே
        விருப்பினீ யருள்வதோர்ந் தடைந்தேன்,
காயினைச்சுமந்த பொழிற்றிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 14



3031 - குற்றியை யடைந்த பசும்புலை யுழுநர்
        கொடியவன் னாஞ்சிலென் செயுமப்,
பெற்றியி னின்னை யடைந்தநா யேனைப்
        பிறையெயிற் றந்தகன் கரத்துப்,
பற்றிய தண்டப் படைசெய லென்னே
        பரவிய கருணைவா ரிதியே,
கற்றிணி மதில்கள் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 15



3032 - முடிமிசை யொருமந் தாகினி வாழ
        முதல்வன்வைத் திடுதலிற் சிறந்த,
கொடியவ ளென்றி யார்நினைப் பவர்கா
        கோதர மெருக்கெலும் பாதி,
படிதரு மிடத்திற் சற்றிட முடம்பிற்
        பாதியோ விடமருட் டாயே,
கடிமலர்த் தடங்கள் சூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 16



3033 - பெருவள னமைந்த நீருரு வாய
        பெருந்தகை நீருரு வாய,
வொருகுல மகளை மலர்மிசைத் தேவு
        முணர்தராக் காட்டிடை மறைத்தா,
னருகுநுண் ணிடைநிற் கஞ்சியே யன்றே
        லணியுருப் பாதிமற்றிலையோ,
கருமுகி றவழு மதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 17



3034 - அலையடி யடைந்த வகத்தடி நிலையா
        தலையடியேற் கிரங்குபுபுன்,
றலையடி சூட்டிப் பிடியடி யென்பான்
        றடியடி விலக்கியாளிமய,
மலையடி யுதித்து வளர்ந்துவெண் ணாவன்
        மரத்தடி வாழ்பவற் புணர்ந்தாய்,
கலையடி யுணர்ந்தார் புகழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 18



3035 - இருவினைச் சிமிழ்ப்புண் டுழல்கொடி
        யவன்மற் றிவற்கரு ளென்றிரங் குபுநின்,
னொருமுத லவனுக் குணர்த்துதி
        வருத்த முன்னலுன் பரிசினுக் கடாது,
வருபசுங் குழவிக் குறுபிணி தீர்க்கு
        மருந்தனை யன்றியார் நுகர்வார்,
கருமுகி லுறங்கு மதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 19



3036 - எடுப்பது பிச்சை யேந்துவ தோடாங்
        கியக்குவ தொற்றையே றரைக்க,
ணுடுப்பது புன்றோன் மற்றிவர் மனையா
        யுற்றநீ யுயிர்வயிற் றழலா,
யடுப்பது தவிர வூட்டுத லாதி
        யறமெலாம் வளர்ப்பையீ தழகே,
கடுப்பது தவிர்ந்த மதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 20



3037 - முற்றவம் புரிந்து முழுமலந் துமித்த
        மோனமெய்ஞ் ஞானிய ரன்றி,
மற்றவர் கவரப் படுங்கொனின் கருணை
        வானகத் தெழுமதிக் கதிரை,
நற்றவம் புரிந்த சகோரமோ கொடிய
        நவில்கருங் காகமோ கவருங்,
கற்றவர் புகழ்ந்து சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 21



3038 - தொண்டவாய் மனமா திகளொருங்
        குய்க்குந் தூயவ ரன்றிமற் றோரு,
மண்டரா தியரு மணுகரு நின்றா
        ளடைவரோ வளவறு மேன்மை,
கொண்டவான் கங்கை யடைவதோ திமமோ
        குரண்டமோ குணப்பெருங் குன்றே,
கண்டவர் பவங்கா ணாத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 22



3039 - இடையறா வன்பின் மெய்கொடு துதிப்பா
        ரின்றுதி முன்னர்மெய்ந் நிழல்போற்,
புடையறா வினையேன் பொய்கொடு
        துதிக்கும் புன்றுதி யெங்ஙன மென்னி,
னடையறாத் தேமாங் குயிற்குர லெதிரோ
        ரரிட்டமுங் கதறுதல் பொருவுங்,
கடையறா மரு தஞ் சூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 23



3040 - மறைபல துதிக்கு நின்பெரும் புகழை
        வழுத்திய வான்றவர் நாவு,
மறையுமோ மற்றைப் புல்லிய தெய்வத்
        தமைபுக ழறையுமே லினிமை,
நிறைதரு கருப்பஞ் சாறவா வியநா
        நிம்பநெ யவாவுதல் போலுங்,
கறையறு வளமை மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 24



3041 - மனைதொறு மிரப்புத் தொழில்கொடு
        புகுவார் மறலிதனாலயம் புகுவார்,
நினைதர முடியாக் கருக்குழி பலவு
        நிரம்புற வோடுபு புகுவா,
ரினையவர் புகாநின் றிருப்பெருங் கோயி
        லேழையேன் புகவருள் புரிவாய்,
கனைகடல் வாவி சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 25



3042 - எண்ணருங் கொடிய பாதகம் பலவு
        மியற்றுமா பாவியா னெனினு,
நண்ணரு நினது திருவரு டோயி
        னண்ணுத லரிதுகொல் புனிதம்,
பண்ணருங் கொலைசெய் வாளும்பொன்
        னாமே பரிசனவேதிதீண் டுதலாற்,
கண்ணருங் கழனி சூழ்திரு வானைக்
        காவகி லாண் டநா யகியே. - 26



3043 - முழுவதுங் குணமே நாடின்முற் றாது
        முகுந்தனா தியரிடத் தினுநீ,
பழுதற வுணர்த்தா விடினுணர் வாரோ
        பரமனைப் பண்டவர் புரிதோ,
மெழுதரி தவரு மின்னரே லம்ம
        வென்செயல் யாதெனப் புகல்கேன்,
கழுவிய மணியிற் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 27



3044 - உலகிடை யழுத பிள்ளைபால் குடிக்கு
        முண்மையென் றுரைப்பதற் கேற்ப,
விலகுசீ காழி மழவழ வளித்தா
        யின்முலைப் பாலழா விடினு,
மலகற விரங்கி யளிப்பவ ரிலையோ
        வத்தகு மழவியா னருள்வாய்,
கலகமில் கழகஞ் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநாயகியே. - 28



3045 - அழுமழ வொன்றற் களித்தனன் றீம்பா
        லம்பலத் தாடிய பெருமான்,
பழுதற நீயு மளித்தனை தீம்பால்
        பசித்தழு மிளமழ வொன்றற்,
கொழுதரு மிவற்றா னினக்குறு புகழ்போ
        லெம்பிராற் குண்டுகொ லியம்பாய்,
கழுமணிச் சிகரி பொலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 29



3046 - இடையறா வன்பு பெருக்கிநீ பூசை
        யியற்றிட வினிதுள முவந்து,
சடையறா முடியோ னுறைதரப் பெற்ற
        தண்ணிழ னாவலந் தருவோ,
புடையறா தமர ருறைதரப் பெற்ற
        பொலந்தரு வோசிறந் ததுகட்,
கடையறாக் கருணை யாய்திரு
        வானைக் காவகி லாண்டநாயகியே. - 30



3047 - சிறுபிறைக் கொழுந்து வீற்றிருத்
        தலினாற் றேவதேவன்றிரு முடிமேன்,
மறுவிலச் சுவடு பொலிதரு மைய
        மருவுறா தஃதுமற் றெவர்க்கு,
முறுமறைக் கரிய நின்னடி யகத்து
        மொளிருமச் சுவடுகா ரணமென்,
கறுவொழித் துரைப்பாய் புகழ்த்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 31



3048 - எதிர்மலர் தொடுத்த மாரவே ளுடல
        மெரிக்குண வாக்கிய பெருமா,
னதிர்வரு மெய்யிற் பாதிநீ கவர்ந்தா
        யமைதர முழுவதுங் கவர்ந்தா,
லுதிர்தலி னினது திறமையா ருணர்வா
        ரோங்கவன் வியாப்பியப் படலாற்,
கதிர்படு மிதுவே யருடிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 32



3049 - தவவலி யுடையோர் பலரையு மயக்கிச்
        சடைமுடி யோனெதிர் மயங்கி,
யிவருமம் மயக்காற் புணர்ந்தொரு மகவு
        மீன்றமான் மோகினி தனித்துப்,
பவர்படர் வனம்புக் குறைதன்மற் றவன்மெய்ப்
        பாதிநீ கவர்ந்ததோர்ந் தன்றோ,
கவலரும் வளமை மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 33



3050 - நீயெனப் பெருமான் விரும்பியோர் தினத்து
        நிகழ்தரப் பொலிவதும் புவிக்குத்,
தாயெனப் படுநீ யவனெனப் பொலியுந்
        தன்மையும் வேறலே மென்று,
சேயெனப் படுபல் லுயிர்க்கெலா முண்மை
        தெரிப்பது போலுமீ தருளே,
காயெனப் பவமுற் றகழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 34



3051 - பரவுநங் கருணை வான்றவ முடையார்
        பாலலாற் புன்மையோர் பாலும்,
விரவுமோ வென்னி னெழுபெரு வெள்ளம்
        விரிதரு வாரிதி மட்டோ,
வுரவுதீ ருறவி யளையினும் புகுமே
        யுவமையில கோமளக் கொழுந்தே,
கரவுதீர் முனிவர் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 35



3052 - சடையெனும் வனத்து வாழ்தருங் கங்கை
        தனித்துறை வாள்கொலென் றெண்ணி,
விடைமிசைப் பெருமா னவளுயிர் வாழ்வான்
        மிலைந்தனன் கொன்றையாங் கன்னப்,
பெடையன நடையா யனையவன் றனைநீ
        பித்தனென் றெண்ணுதல் பிழையே,
கடையுறா வளமை மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 36



3053 - பரவுறு முலகத் துயிரெலா மீன்று
        பருவர லவையுறா தோங்க,
வுரவுறு கருணை யால்வளர்த் திடுநீ
        யொருமலை மகளென வுதித்து,
விரவுறு புறவு கிளிமயில் பூவை விரும்புபு
        வளர்த்தவா றென்னே,
கரவுறு மவர்கா ணாத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 37



3054 - பரிதிவந் துதய மெழமுறுக் குடையும்
        பங்கய மலர்மிசை யுறைவா,
ரரிமறு மார்பு மயன்றிரு நாவு மமர்பவ
        ரென்பர்நின் முகமாம்,
விரிமலர்க் கமலத் துறவரென் றுணரார்
        மேதினி மடமையென் சொல்கேன்,
கரிசறு வளமை மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 38



3055 - விரும்புநின் செங்கை தாங்கலா லிரண்டாம்
        வேற்றுமை விரித்துரை செய்யா,
தரும்புதா மரைதாங் குவாரென லான்மூன்
        றாவதும் படுசொலும் விரிக்கும்,
பெரும்புவி மலர்பூ மாதெனும் பெயர்கள்
        பெறும்வினைத் தொகைகுணத் தொகைப்பேர்,
கரும்புபைங் கமுகிற் பொலிதிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 39



3056 - நந்திய வறியா மையினினைத் துதிப்பே
        னாயினே னாயினுமதனான்,
முந்திய வினைமுற் றொழிதரா துறையு
        முறைமையென் மறவியி னேனு,
முந்திய வழலைத் தொடிற்சுடா துறுங்கொ
        லொழிவருங் கருணைவா ரிதியே,
கந்திதென் பொருவப் பொலிதிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 40



3057 - அங்கையேந் துறுபைங் கிள்ளையின் மொழியோ
        வறுமுகக் குழவிவாய் மொழியோ,
சங்கையே குழையாக் கொண்டவ னூடறணித்திடப்
        புகலுமின் மொழியோ,
மங்கைநின் செவிக்கு நாயினேன் புன்சொன்
        மற்றுநீ யிரங்கலெவ் வாறோ,
கங்கைதாழ் பொன்னி சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 41



3058 - ஒப்பினின் புகழே கேட்கவென் செவிகண்
        ணோங்குநின் னுருவமே காணத்,
தப்பினின் றனையே பாடிட வாய்கை
        தவாது நின் னடிப்பணி யாற்ற,
விப்படி யுறுமேற் செங்கதி ருதய
        மெத்திசை யெழினுமற் றென்னே,
கப்பிணர்த் தருக்கள் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 42



3059 - ஓதுறு முறைமை யொன்றின்முன் மூன்று
        ளொருசிறி யேற்குநின் பதிக்கும்,
போதுறு குழனீ நடுப்பொலி தலினாற்
        புரிந்து நின் பதியொடு மெனைப்பின்,
றீதுறு மிரண்டி னீக்கியொன் றாக்குந்
        திறனினக் கன்றியார்க் குளது,
காதுறு கண்ணார் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 43



3060 - கோவண மறையாக் கொண்டனன் பெருமான்
        கொண்டனை நீயுமே கலையாத்,
தூவண வவன்மா தேவன்மா தேவி
        துதிக்குநீ யெனிற்றிரு நெடுமா,
லேவண வவற்கு நீவியாப் பியமென்
        றிசைப்பதெங் ஙனமருட் டாயே,
காவண மறுகு மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 44



3061 - பொறியரி தொடரு மருமலர்த் தாளோன்
        பொலியனந் தொடர்சடா முடியோ,
னறியுநின் கொழுநன் பொறியரி தொடரு
        மலர்க்குழ லினைநடை யன்னஞ்,
செறிதரத் தொடர்மென் பதத்தினை யெனினீ
        தேவொடு மாறுளாய் கொல்லோ,
கறிபயி லளிசூழ் பொழிற் றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 45



3062 - திருந்துறு தந்தை யாகிய வரையைத்
        திரிபுர மெரித்த நாட் குழைத்த,
பெருந்திற லுணர்ந்தம் மலையுள மகிழப்
        பெருந்தகை நிறமுலைக் கோட்டாற்,
பொருந்துறக் குழைத்தாய் போலுநின்றிறமை
        புகலுதற் கடங்குமோ தாயே,
கருந்துழாய் மார்பன் புகழ்திருவானைக்
        காவகி லாண்டநா யகியே. - 46



3063 - மறைமுதல் பொருவ வேந்தினை நீயு
        மலர்புரை தருகையில் வன்னி,
யுறைதரு மனையா னிறமுநின் னிறமு
        மொத்தன வாயினுமவன,
தறைதரு மெழுநா வதுநின தொருநா
        வதுசெவி யவாமொழியதுதான்,
கறையற வெதுநீ புகறிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே - 47



3064 - குடகட லொடுங்கு மிரவிதண் மதியங்
        குணகட லுதிக்குமென் றுரைக்கும்,
படவர வேந்து முலகநின் னொருகைப்
        பங்கயத் தொடுங்குநின் கொழுநன்,
றடமலர் வதனத் துதிக்குமென் றுணராத்
        தன்மையென் மென்மைசான் மயிலே,
கடவுளர் பலருஞ் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 48



3065 - பெருவழக் கெடுத்துப் பேரவை யேறிப்
        பேசுவ குறையறப் பேசி,
யொருதிரு நாவ லூரனை யாண்டா
        னோங்குவெண் ணாவ லூ*ர*ண்ண,
லருளொடு நீயு மத்தகு செயலொன் றாற்றினன்
        றென்றியா னினைந்தேன்,
கருளற வொளியின் மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 49



3066 - முதுபுக ழுடைநின் பதியிரு பாத
        முழுமலர்க் கருச்சனையாற்றின்,
மதுமல ரொன்று குறையினு மதற்கு
        மாறுகண் ணிடந்திடல் வேண்டு,
மதுசெய மாயோ னல்லன்யா னின்பொன்
        னடியருச் சனைசெய்வான் புகுந்தேன்,
கதுமென வருள்செய் தருடிதரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 50



3067 - தருமமென் றுரைக்கு மளியமர் நின்கைத்
        தாமரை மலரின தலர்ச்சி,
பெருமதி மலர்ச்சி மாற்றுமென் றுரையார்
        பெருமதி யவர்ச்சியே செழித்த,
மருமலி கமல மலரின தலர்ச்சி
        மாற்றுமென்றுரைப்ப ரீதென்னே,
கருணையங் கடலே யருட்டிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 51



3068 - நீவினோ தத்தா னின்பதி முகக்க
        ணிகழ்கைசேர்த் தெடுத்திடுங் கால,
மோவிய மனையாய் கணமுமின் றுனக்கஃ
        தும்பரா தியபல வுயிர்க்கு,
மேவிய கோடி யுகம்பல வாமவ்
        விநோதநீ யாற்றுதறகாது,
காவியங் கண்ணார் பயிறிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 52



3069 - தென்னவன் புரிந்த பெருந்தவப் பேற்றாற்
        செழுந்தழ லகத்தொரு மகவே,
யென்னநீ யுதித்த வாஞ்சையுட் குறித்தே
        யிறைநுதற் கண்புதை யாது,
மன்னமற் றிருகண் புதைத்தனை நின்னை
        மதிக்குல மென்பதோர்ந் திலையோ,
கன்னவி றோளார் பயிறிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 53



3070 - அரும்புமோர் நின்கைக் கணிபல வணிந்துள்
        ளவாவொடு தாங்குமா தர்களை,
விரும்புபு சுமக்கு மெல்லிதழ்க் கமல
        மெய்த்தவமுடையன வெனவே,
யிரும்புவி புகன்றா லனையமா தர்கட
        மிருந்தவப் பெருமையென் புகல்கேன்,
கரும்புநேர் மொழியார் பயிறிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 54



3071 - சிலம்பகத் துதித்த நின்னடி தற்சூழ்
        சிலம்பகத் துதித்தமா தரைவல்,
வலம்பகப் பொலியு முலையினா யங்கை
        மலரகத் துதித்தமா தென்ன,
வுலம்பகப் பொருதோ ளரன்முடிக் கொளாமை
        யுணர்ந்தன்றோ வூடலிற் றாக்குங்,
கலம்பக முலாமுற் புனைதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 55



3072 - பெரியவர்க் கிடுக்கண் புரிவதை யுணர்ந்து
        பெரும்புகழ்த் தந்தைதன் மரபென்,
றரியவர் சிந்தை யாலயம் புகுவா யயர்ந்துமெண்
        ணாமல்வண் குறிஞ்சிக்,
குரியவன் கரத்துப் புகூஉக்குரு குப்பே
        ரொருவரை கொன்றனை யழகே,
கரியவன் பிரமன் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 56



3073 - நினையுணர் மகடாய் மரபென வொருமா
        னெடுங்கையேந்தினன் பெம்மா னம்மான்,
றனையுணர் மகன்றாய் மரபெனக் கிள்ளை
        தன்னைநின் கையிலேந் தினையால்,
வினையுன ரார்சொன் னீயுநின் பதியும்
        விரும்புறு மாடலென் னுரைக்கேன்,
கனையுண ரளிசூழ் பொழிற்றிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 57



3074 - பொலிதரப் பசந்து நீர்மழை யெங்கும்
        பொழியுமே புயலது போல,
மலிதரப் பசந்து நீயும்வண் கருணை மழைபொழி
        குவைகொடு வினையான்,
மெலிதர லுற்ற வெனையொழித் திடுவான்
        விதியெவன் விமலமெய்ச் சுடரே,
கலிதரு துயர்சா ராத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 58



3075 - நறையிலா மலரோ நயமிலா மொழியோ
        நயனமில் லாதவாண் முகமோ,
பொறையிலாத் தவமோ மகவிலா மனையோ
        புனலிலா வோடையோ நீதி,
முறையிலா வரசோ மதியிலா விரவோ
        மூடனேன் பத்தியில் பாடல்,
கறையிலா வளமை மலிதிரு வானைக்
        காவகிலாண்டநா யகியே. - 59



3076 - குணமிலேன் மொழிபா நயமில தெனினுங்
        குறித்ததை யேற்றருள் செய்ய,
விணர்மலி குழானிற் கேதகுஞ் சிலம்பி
        யியற்றுநூற் பந்தரு முவந்து,
புணரருள் புரிந்தா னின்பதி யந்தப்
        புராணநீ யோர்ந்தனை யன்றே,
கனமலி முனிவர் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 60



3077 - வரிவிழிக் குடைந்த மானையு நுதற்கு
        மானுறாப் பிறையையு மல்குற்,
கிரிதரும் படவெவ் வரவையு மருங்குற்
        கிணைதராத் துடியையுஞ் சுமந்தான்,
றுரிசறு வனப்பார் நின்னுறுப் பினுக்குத்
        தோற்றறும் விசேடமென் றுணர்ந்தே,
கரியகண் டத்தோ னருட்டிதரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 61



3078 - பொறையரு ளடக்க மன்புப சாரம்
        பொலியுமா சாரநல் வாய்மை,
யறைதரு மின்ன குறையுளே னெனினு
        மடிமையே நினக்கியா னுறுப்புக்,
குறையுடை யாரு மக்களென் றெடுத்துக்
        கூறுவருலகர்நீ யுணர்வாய்,
கறையற விளங்கு மருட்டிரு வானைக்
        காவகிலாண்டநா யகியே. - 62



3079 - உரைசெய்வெண் ணாவனிழலுறை பெருமா
        னோங்கருண் முறைசெலுத் தியகோன்,
விரைசெய்பூங் கொன்றை யவனென நீயும்
        விருப்பொடு செலுத்திடல் வேண்டும்,
புரைசெயென் பாலே மற்றது செலுத்திற்
        பொருப்பின்மே லிடுசுடர் போலாங்,
கரைசெயா வளங்கண் மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 63



3080 - புண்ணிய வெள்ளை நாவலோ னாரம்
        பூண்டவ னெனும் பெயர் புனைந்தான்,
றண்ணிய குணத்து நீயுமென் பாட றழுவுபு
        பூணுவை யாயி,
னண்ணிய பாடல் பூண்டவ ளெனுமோ
        ரரும்பெயர் நினக்குமுண் டாமே,
கண்ணிய வரங்க டருதிரு வானைக்
        காவகிலாண்டநா யகியே. - 64



3081 - தழைசெய்வெண் ணாவ னறுநிழ லுறைவான்
        றனிமுத லவனொரு பாகத்,
துழைசெயொள் விழியா யுறைகுவை நீமற்
        றுன்னடி நிழலிலெஞ் ஞான்றும்,
விழைசெயா னுறையப் புரிந்திடி னதனான்
        மிக்கபுண் ணியநினக் குண்டே,
கழைசெய்பூங் கழனி பொலிதிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே. - 65



3082 - பிரம்படி பட்டுங் கல்லடி யேற்றும்
        பிறைபொரு வில்லடி கொண்டு,
நிரம்புற வருள்வா னோங்குவெண்
        ணாவ னிழலுறை பவனடி யார்பா,
லுரம்பயி லவன்போ னீயவ்வா றேற்றின்
        புதவுந ளல்லண்மெல் லியனீ,
கரம்பறு கழனி மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 66



3083 - பற்பல ரறியப் பித்தனென் றெள்ளிப்
        பனவபோ வென்றுளார் தமையும்,
பொற்பலர் பெருமான் விடாமென
        வாண்டு புரந்தன னங்ஙன மின்றி,
வெற்பலர் மருந்தே துதித்துவா வென்னும்
        வினையினேன் றனைவிட விதியென்,
கற்பலர் நந்த வனத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 67



3084 - தேவியோ டினிது வந்தருள் புரிந்தான்
        சிவனடி யார்க்கென்ப தன்றி,
யாவிநேர் கொழுந னோடுவந் தாண்டா
        ளம்மையென்பாரிலை யன்னே,
மேவியச் சீர்த்தி நினக்குறா விதமென்
        விளம்பிட வேண்டுநா யேற்குக்,
காவியார் தடஞ்சூழ் தருதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 68



3085 - அடியவர் குறிப்போர்ந் தாண்பனை காய்க்க
        வாற்றெதிர் செல்லவே டென்பின்,
பொடிமட வரலா கக்கராம் விழுங்கும்
        பொருடரச் செய்தனன் பரமன்,
கொடியனேன் குறிப்போர்ந் துன்னடிக் கன்பு
        கொளப்புரி வதுமுனக் கரிதோ,
கடிமலர்த் தடங்கள் சூழ்திருவானைக்
        காவகி லாண்டநா யகியே. - 69



3086 - அயனரி குலிச னமரருண் ணடுங்க
        வடர்ந்தெழுங் கொடுவிடம் வாங்கி,
நயனமூன் றுடையா னுண்டனன் முன்ன
        நங்கைநின் பவளவா யமிர்தப்,
பயனுணர்ந் தன்றோ வலனெனி னனைய
        பரமனெவ் வாறுணத் துணிவான்,
கயன்மலர்த் தடங்கள் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 70



3087 - ஒளிமிகு சம்பு லிங்கநா யகர்போ
        லுடையையா னுதல்விழி நீயு,
மளிமிகு மனையார் மாரனை யெரித்தார்
        யாரைநீ யெரித்தனையம்மா,
விளிமிகு நாயேன் வினையினை யெரித்தா
        லிரும்புக ழவரினு நினைக்காங்,
களிமிகு மமரர் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 71



3088 - நெடுவலி கொடுமா மேருவிற் பிடித்தாய்
        நீயஃ துணர்குவன் யானு,
மடுதிறற் சூலி பிடித்தன னென்பா
        ரவனியுட் சிலர்கருத்தென்னோ,
விடுகிடை நீயு மவனும்வே ரல்லீ
        ரென்பதை யுணர்ந்தனர் கொல்லோ,
கடுவிழி மடவார் பயிறிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 72



3089 - அம்பலத் தாட வெடுத்ததா டுணையென்
        றறைவனோர் கான்மலை யரையன்,
வம்பலர் முன்றிற் றிருமணத் தம்மி வைத்ததா
        டுணையென்ப னோர்காற்,
செம்பொரு டுணியா னென்றனை யிகழே
        றேர்ந்தொரு வழிநின்றே னன்னாய்,
கம்பலர்த் தடஞ்சூழ் தருதிருவானைக்
        காவகி லாண்டநா யகியே. - 73



3090 - எதிரறு பொதுவிற் குறட்பிணர் வெரிந்மே
        லியைத்திடறகாதென வுணர்ந்து,
முதிருணர் வுடைய பரன்மறைச் சிலம்பார்
        மொய்வலத் தாணிறீஇ யிடத்தா,
ளதிர்வர வெடுத்தான் வழுதியவ் வருமை
        யறிதரான் பிழைத்தனன் பொறுத்தாய்,
கதிரருட் கழகே யதுதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 74



3091 - பரவுவெண் ணாவ னீழலோ னிடத்தாள்
        பற்றிய வென்முனங் குறுக,
வுரவுசெய் தண்ட தரனுள நடுங்கு
        முதைத்ததத் தாளெனவுன்னி,
விரவுமப் பதநின் பதமன்றோ வதனை
        மென்பத மென்பதென் விளம்பாய்,
கரவுறாப் புலவர் புகழ்திரு வானைக்-
        காவகி லாண்டநா யகியே. - 75



3092 - ஒருகருங் கேழ லுருவெடுத் திணையி
        லுன்பதி யடிமலர் காண்பான்,
பெருநில மகழ்ந்த மாயவ னினது
        பிறங்குபே ராலயஞ்சூழ்ந்த,
பொருவினீ றிட்டான் மகிலடி கண்டாற்
        போதுமே புண்ணியக் கொழுந்தே,
கருள்கடிந் தொளியின் மலிதிரு
        வானைக் காவகி லாண்டநாயகியே. - 76



3093 - உயன்மறந் தடருந் திரிபுரஞ் சிதைப்பா
        னொருவரை யெளிதினிற் குழைத்த,
பயன்மதி முடித்த பாடல்சால் பெருமான்
        பாழியந் தடநெடுந் தோள்கள்,
வியன்முலைக் கோட்டாற் குழைத்தருணினக்கு
        மெல்லிய லெனும்பெயர் தகுமோ,
கயன்மலர்த் தடங்கள் மலிதிரு வானைக்
        காவகி லாண்டநாயகியே. - 77



3094 - மையவாண் மகனெள் ளெச்சிலுண் டாற்கு
        மகிழ்ந்தருள் செய்துநின் கொழுநன்,
மெய்யவாஞ் சீர்த்தி படைத்தன னெனக்கு
        விரும்பிநீ யருளுவை யாயி,
னையபெண் மகளெள் ளெச்சிலுண் டானுக்
        கருளினா ளெனும்புகழ் நினக்காங்,
கையர்வந் தணுகற் கருந்திரு வானைக்
        காவகி லாண்டநாயகியே. - 78



3095 - புனல்பயி றவளை முழங்கநின் கொழுநன்
        புகழ்ப்பெயருரைத்ததா வுணர்ந்து,
மினல்பயில் கனகம் வீசினா னொருவன்
        மெய்ம்மையே நின்பெயருரைக்கு,
முனல்பயில் குழாம்பு கேன்றொழேன்புகழே
        னுவந்திடே னெங்ஙன முய்வேன்,
கனல்பயின் மணிமாமதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநாயகியே. - 79



3096 - மாவியல் பெருமான் மான்பிறை
        சுமந்தேன் வாமபா கத் தினி தமரு,
நீவிளை யாடற் கென்பனம் பற்க
        நிகழஃ திடைமருதூரின்,
மேவியோ ரரசில் விழுங்கிய தாதி
        வெறுப்பன மறைப்பதற்கென்று,
காவியங் கண்ணா யுணர்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 80



3097 - அண்டகோ டிகளென் றுரைத்திடுஞ் சிற்றி
        லமைத்தமைத் தாடிடு வாய்நீ,
துண்டவாண் மதியஞ் சூடிய சடிலச்
        சுந்தரனழித்தழித் தாடும்,
பிண்டநூ லென்றும் பேதைநீ யனையான்
        பித்தனென் றுரைப்பது மெய்யே,
கண்டவா மொழியார் பயிறிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 81



3098 - மகளென நினைந்து தாயென விளித்த
        மலையிறை மனையறி யாமை,
புகரறு பிரமன் முதற்பல வுயிர்க்கும்
        பொருந்துதா யாமுனைக் கணேச,
னகநகு முருகக்கடவுடா யென்று நவிலறி
        யாமையை யேய்க்குங்,
ககனமே லோங்கு மதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 82



3099 - இலங்கற முப்பத் திரண்டென வகுத்தாங்
        கிகலற வவையெலாம் வளர்த்து,
மலங்குயிர் பலவும் புரக்குநீ கொடியேன்
        மாட்டருள் புரியினஃ தவற்றுட்,
டுலங்குமொன் றோடுசே ராதுகொ றனிப்பிற்
        சொற்றிமுப் பத்துமூன் றென்றே,
கலங்கலில் வளமை மலிதிருவானைக்
        காவகி லாண்டநா யகியே. - 83



3100 - இளைத்தடைந் தேனை யாடியென் றுனையா
        னிரந்திரந் தேத்தநீ யிரங்கி,
வளைத்தபே ரருளா லாளுவ தனிலு
        மன்றநீ யேயருள் புரிந்தான்,
முளைத்தசீர் பரவ விடமிலை கேட்டோ
        முகின்மழை வழங்கிடுந் தாயே,
களைத்தடஞ் சிகரி சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 84



3101 - பிழைபல வுடையே னாயினு மவற்றைப்
        பேதைநீ யென்பதற் கிணங்கக்,
குழைமனத் தகற்றி யாளவே வேண்டுங்
        கூர்ந்தினி தாண்டிடா யென்னின்,
மழைமலர்க் கூந்தற் கங்கையைப் புகழ்வேன்
        வைவரே நொந்தவர் தாயே,
கழைமலி கழனி சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 85



3102 - சடைமிசை மாதை நோக்கியா ரெனினீ
        சங்கர னீரென்பான் முகமு,
னிடைதெரி தரலென் னென்னினோக் குறுநின்
        னெழின்முக முதனிழ லென்ப,
னுடையநா யகிநீ மறுத்திடிற் பிறராலுணரென்பா
        னுணரவல் லவர்யார்,
கடையுற லொழிந்த வளத்திருவானைக்
        காவகி லாண்டநா யகியே. - 86



3103 - எனக்கருள் செயினின் கொழுநனைப் புகழ்வே
        னிமயநின்றந்தையைப் புகழ்வேன்,
மனக்கினி தாநின் மைந்தரைப் புகழ்வேன்
        மலரினின் றோழியர்ப் புகழ்வே,
னினக்கினி யவரா மடியரைப் புகழ்வே
        னின்னையும் புகழுவேன் றாயே,
கனக்கடி மதில்சூழ் தருதிருவானைக்
        காவகி லாண்டநா யகியே. - 87



3104 - பூவண நகரிற் பொன்னனை யாளிற்
        புகுந்தனன் முன்புகாமாரி,
தூவண வன்பி னைந்திணை யெனிநூல்
        சொற்றதை விளக்கின னென்னின்,
மாவணத் தளிர்நேர் மேனியா யுலக
        மாதுகொ னீவிடை யிதற்கென்,
காவண நிறைவீ தித்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 88



3105 - பேயொடு நடிக்கும் பித்தனே யென்றோ
        பெருங்கதி யிலியிவ னென்றோ,
தாயொடு தந்தை யில்லவ னென்றோ
        தம்பிரா னொருதிருமேனி,
நீயொரு பாதி நின்முனோர் பாதி
        நிலவுறக் கொண்டது நன்றே,
காயொரு வாத்தென் பொலிதிரு
        வானைக் காவகி லாண்டநாயகியே. - 89



3106 - மோகினி யுருக்கொண் டொருதரம் புணர்நின்
        முன்னவன் றனக்குமோர் பாதி,
யேகலி லெழினின் றனக்குமோர் பாதியெம்பிரான்
        மேனியி லென்றா,
லாகியநீயே யவனெனத் தெரிந்தே னல்லையென்
        றாற்பொறுப் பாயோ,
காகனஞ் சுமக்கும் வளத்திரு வானைக்
        காவகி லாண்டநாயகியே. - 90



3107 - பல்லுல கீன்ற நின்றிரு வுதரப் பாலுள
        தென்னுநின் னிடைநே,
ரொல்லுமா றிலதா யினுமொரு பக்க
        மொத்தலிற் சிருட்டியை யாற்றும்,
வெல்லுநா யகன்கைத் துடியெனி னின்றன்
        மெல்வ யிற் றிற்கது புகழோ,
கல்லுமா மலத்தர் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநாயகியே. - 91



3108 - வண்படு கருப்புச் சிலைகொடு நெடிய
        வலிபடு மேருவிற்கொண்ட,
தண்படு மதியஞ் சூடியைப் பொருது
        சயம்படு நகைபுரிந்துவப்பா,
யொண்படு வலர்க்குப் பசும்புல்வன் படையென்
        றுரைப்பதை விளக்கினை தாயே,
கண்படு மனச்செய் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநாயகியே. - 92



3109 - தேவிநின் னிடைதோ ளொத்திடு குணத்தாற்
        சிதம்பர தலத்தும்வேய் வனத்து,
மேவிய நகைமுத் தணிமுலை யொக்கும்
        விதத்தினாற் றிருமுல்லை வாயில்,
பாவிய கயிலை யிடத்தும்வீற் றிருப்பன்
        பரன்றலை மதியனே யன்றோ,
காவியன் ககன முறுந்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 93



3110 - சுவைபடு கனிசெய் பனசநெட் டரம்பை
        சூதமா மலகம்வெண் ணாவ,
லிவைமுதற் பலவான்றருநிழ லுறைவா
        னினியநின் மொழிச்சுவை யவாவி,
நவைபடு கொடிய வச்சிர வனமு
        நயந்தனன் பித்தனா தலினாற்,
கவைபடு சூலி யெழிற்றிரு வானைக்
        காவகி லாண்டநாயகியே. - 94



3111 - இறையவன் வாமத் துறையுநீ தொழில்செ
        யுமையவர் தருப்பணங் காட்ட,
மறைவின்மற் றதனை நோக்கியவ் விறைவன்
        வலப்புறத் தொருமடக் கொடிநன்,
குறைவதென் னெனமற் றவனொடு பிணங்கே
        லுற்றுநோக் கிடிற்பிழை யில்லான்,
கறைமலி களத்தன் வனத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 95



3112 - கொடியது பிறத்த லதனினு மம்ம
        கொடியதே யிறத்தலிவ் விரண்டுந்,
தடிதர நினைந்தேன் றந்தைதா யில்லான்
        றறுகண்வெங் கூற்றுதைத் தாற்குன்,
னடியனென் றுணர்த்தி யருள்விலக் குவையே
        லகிலமீ தொருகதி யுண்டோ,
கடிமலர்த் தடங்கள் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 96



3113 - தடியுண லென்றும் வனசரர் பெருமான்
        றருதடி மிசைந்தன னொழிக,
மிடியிடை யவர்மா லென்றுநிற் களித்தான்
        மேனியிற் பாதியா தலினாற்,
படிவிதி விலக்கி லான்பர னென்னைப்
        பற்றியா டற்கவை குறியான்,
கடிதரா துணர்த்து நீதிரு வானைக்
        காவகி லாண்டநாயகியே. - 97



3114 - வரக்கருங் கொண்மூ மழைபொழி யாதேன்
        மண்பயிருயும்வகை யுண்டோ,
திரக்கடுங் கவலை சிதைதரப் பல்காற்
        செய்யும் விண் ணப்பநீ யுணர்ந்து,
மிரக்கமில் லவள்போ லிருத்தியேற்
        கருணை யெங்கினி யிருப்பது தாயே,
கரக்கரும் வளங்கண் மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 98



3115 - மாயவ னாயோர் பாதியில் லவளாய்
        மற்றொர்பா தியுங்கவர்ந் தனையா,
னாயகன் மேனி யெனினவன் வடிவ
        நாடொறு மறைந்ததா யிருக்கச்,
சேயமண் சத்தி மயமெனா தந்தோ
        சிவமய மென்பதென் னுரையாய்,
காயமீ தெழுந்த மதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 99



3116 - பனிபடு நின்றாட் பங்கயம் பொங்கு
        பனிவரை யகநக நிகழுந்,
துனிபடு பொழுது பரன்முடி மதியந்
        துண்ணெனத் தாக்குநீர் வாவி,
நனிபடு முட்டாட் பங்கயம் பெறுமோ
        நவின்றன விணையிலென் றுணர்ந்தேன்,
கனிபடு பொழில்விண் கமழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே. - 100


திருவானைக்கா அகிலாண்டநாயகிமாலை முற்றிற்று.

*சிறப்புப்பாயிரம்
தஞ்சை, சதாவதானம்
ம-ள-ள-ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்களியற்றியது.
* இது பழையபதிப்பைச் சார்ந்தது.

3117 - ஞான கேத்திரத் தமரகி லாண்டநா யகித
னீன மில்பதத் தியற்றமிழ் மாலையொன் றியற்றி
மான மார்ந்தமீ னாட்சிசுந் தரநன்னா வலவ
னூன மோவுறப் புனைந்தன னுலகுவப் புறவே. - 1



3118 - அன்ன மாலையைச் சோமசுந் தரப்பெய ரமைந்த
நன்னர் மேவிய சுகுணனச் சியற்றிநல் கென்று
பன்ன நன்றென்று தியாகரா சப்பெயர் படைத்த
மன்னு நாவலன் பதிப்பித்து வழங்கினன் மகிழ்ந்தே. - 2

சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
-----------------------

Comments