Pirapantattiraṭṭu - I


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு - I
சிவஞானயோகிகள்


சிவஞானயோகிகள் அருளிச் செய்த பிரபந்தத்திரட்டு - I
1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி.
2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி



கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிடமகாபாஷ்யகர்த்தராகிய
சிவஞானயோகிகள் அருளிச் செய்த பிரபந்தத்திரட்டு

இராமநாதபுர சமஸ்தானம்
ம-ள-ள-ஸ்ரீ பொன்னுச்சாமித்தேவரர்களுடைய புத்திரர்
ம-ள-ள-ஸ்ரீ பாண்டித்துரைத்தேவரவர்கள் விரும்பியவண்ணம்

மதுராபுரிவாசியாகிய இ.இராமசுவாமிப்பிள்ளை என்று
விளங்குகின்ற ஞானசம்பந்தப்பிள்ளையால்
அகப்பட்டபிரதிகள்கொண்டு பரிசோதித்து
சென்னை: இந்து தியாலஜிகல் யந்திரசாலையிலும்
சித்தாந்த வித்தியாநுபாலனயந்திரசாலையிலும்
பதிப்பிக்கப்பட்டது
----

கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி.

    காப்பு.


    பருத்துடையவளங்காட்டுமிளங்காட்டு
          நகர்ப்பதிற்றுப்பத்தந்தாதித்,
    திருதொடையலெம்பெருமான்
          சேவடியிற்சூட்டவருள்செழிந்துநல்கு,
    முருத்தெழுந்துமும்மலக்கந்தினைப்
          பிடுங்கியுயிர்ப்போதக்க வளமாந்திக்,
    கருத்துடையசிவானந்தக்களி
          மிகுத்துத்திரியுமதகளபந் தானே. - 1

    நூல்.


    உலகமெங்குமொருவடிவாகிநின்<
    றிலகுபேரொளிபோலுமிலங்கெழி
    லலகிலாவளமாரிளங்காட்டகங்
    குலவுகோயில்குடிகொண்டவெந்தையே. - 2


    கொண்டன்மேனிக்குழகனுநான்முகப்
    புண்டரீகப்புலவனுநாடொணா
    மண்டுதீப்பிழம்பாகியவயங்கினா
    னண்டர்சூழிளங்காட்டுறையண்ணலே. - 3


    அண்ணிக்குங்கரும்பாகியமுதமாய்க்
    கண்ணுக்குண்மணியாய்க்கனிதேறலாய்
    வண்ணச்சீரிளங்காட்டிறைவான்பொரு
    ளுண்ணப்புக்கவென்னெஞ்சையுருக்குமே. - 4


    உருகிமொண்டுகொண்டுண்டுகளித்துளம்
    பெருகிவாழ்ந்திடப்பெற்றனன்பூம்பொழி
    லருகுசூழிளங்காட்டிலளியராய்ப்
    பருகுவார்க்கினிக்கும்பசந்தேறலே. - 5

    <
    தேறலேனைத்தெருட்டிச்சிவமனுக்
    கூறியாளக்குருவுருக்கொண்டவ
    னாறுபூம்பொழினல்லிளங்காட்டுறை
    பாறுநச்சும்படைமழுவாளனே. - 6


    நேயமாகிநினைதொறுநெஞ்சக
    மாய்விலாவின்பவாரியின்மூழ்குமால்
    வாய்மையாளர்வளரிளங்காட்டுறை
    பாய்விடைப்பரமேட்டிபொற்பாதமே. - 7


    பாதலம்பகிரண்டப்பரப்பெலொஞ்
    சோதிவண்ணச்சுடரொளியாமென
    நீதியாலுணர்வாரகநீங்கலான்
    காதலிப்பவர்வாழிளங்காடனே. - 8


    காடுகொண்டசடைமுடிக்கண்ணுத
    றோடுகொண்டகடுக்கைத்தொடையலா
    னேடுகொண்டபொழிலினங்காட்டினான்
    வீடுகொண்டனன்மீட்டெனதுள்ளமே. - 9


    உள்ளத்துள்ளமுதூறியுணர்தொறுந்
    தெள்ளத்தேறித்தெளிந்தசிவானந்த
    வெள்ளத்தேதுளைவார்க்குவிளங்குவான்
    கள்ளத்தார்க்கரியானிளங்காடனே. - 10


    இளமையுமனைவாழ்க்கையினின்பமும்
    வளமையும்பொருளாகமனங்கொள்வீ
    ரளியில்காலனணுகுமன்றென்செய்வீர்
    களவிலாவிளங்காடனைவாழ்த்துமே. - 11


    வேறு
    வாழ்த்துகிலேன்றிருப்புகழை
          மனங்கொளேன்றிருவடியைத்
    தாழ்த்துகிலேன்சென்னியினைத்த
          மியினைக்கருக்குழியில்
    வீழ்த்துவையோபேரறிவை
          விளக்குவையோவறியகிலே
    னூழ்த்தமலர்ப்பொழில்புடை
          சூழிளங்காட்டிலுறைவானே. - 12


    உறைவானையெவ்விடத்து
          முயிர்க்குயிராயங்கங்கே
    நிறைவானையசைவின்றி-
          நிற்பானையேனோர்க்கு
    மறைவானையிளங்காட்டில-
          மர்ந்திருந்தவான்பொருளை
    யிறையானையெம்மானையெப்-
          பொழுதுமறவேனே. - 13


    மறவாதபெருங்கவலை-
          மறிகடலிலகப்பட்டுத்
    துறவாததுயர்த்திரையாற்றொடக்-
          குண்டுமெலிகின்றேன்
    பிறவாதவரமருளிப்-
          பேறளிப்பதெந்நாளோ
    வறவாணர்புகழ்ந்தேத்து-
          மிளங்காட்டிலம்மானே. - 14


    அம்மானேயிளங்காட்டிலாண்டகையேயெனையாண்ட
    பெம்மானேயருட்கருணைப்பெருமானேயிமையோர்க
    டம்மானேயென்றுநாத்தழும்பேறவுளங்குழைய
    விம்மாநெக்குருகுவாரெமையாளும்வித்தகரே. - 15


    வித்தகமாநடுக்கடலில்விடமெழலுநடுநடுங்கி
    நத்தனயன்முதலானோரோட்டெடுப்பநலிவகற்றி
    மத்தமிடற்றிளங்காட்டுவான்பொருளையன்றியுமோர்
    கத்தனுளனென்பாரையாங்காணக்கடவோமே. - 16


    கடக்களிற்றினுரிபோர்த்த-
          விளங்காட்டுக்கண்ணுதலோன்
    விடச்செருக்கும்புரச்செருக்கு-
          மிக்கசலந்தரன்செருக்கு
    முடைத்தருளியருளானேலும்-
          பர்களும்பூவலயத்
    திடத்துறையுமாந்தர்களு-
          மெவ்வண்ணமுய்வாரே. - 17


    உய்யலாநெறிகோடியுலவாதவிடும்பையினான்
    மையலாம்பரசமயப்படுகுழியின்மாள்வேனைத்
    தையலாளொடும்போந்துதண்டலைசூழிளங்காட்டி
    லையர்தாம்வெளியேநின்றாடல்கொண்டதற்புதமே. - 18


    அற்புதமாமிளங்காட்டிலாண்டகையைமதியாமே
    புற்புதம்போற்பிறந்திறக்கும்புல்லியரைத்துணைகொண்டே
    வற்புதவஞ்சிறுவிதிசெய்மகச்சாலைச்சிறப்பெல்லாங்
    கற்பொடிபோற்சிந்தியவாகாண்மினோநமரங்காள். - 19


    காளையராயுலகனைத்துங்கவிகைநிழற்கீழடக்கித்
    தாளையொன்னார்முடிவருடத்தருக்கெய்தியிருந்தோரு
    மீளையராயிம்மையேயிரந்துழலக்காண்கையினா
    லாளுடையானிளங்காட்டைவிரைந்தடைவாரறிவினரே - 20


    அறிவுருவாயகண்டிதமாயானந்தமயமாகிக்
    குறியிறந்தபரம்பொருளோர்குறியுருவங்கொண்டருளிச்
    செறிபொழில்சூழிளங்காட்டிற்றிகழ்ந்திருந்துமுணரார்கள்
    வறிதேபொற்கொழுக்கொண்டுவரகினுக்கேருழுவாரே. - 21


    வேறு.

    வாரார்களபக்குவிமுலையார்மையற்கலவிநலம்வேட்டும்
    பேராவிடராலிதுகாறும்பேதுற்றுழன்றேனெனையாள்வாய்
    நீரார்கழனிபுடையுடுத்தநிகழ்சீரிளசைப்பதியுடையாய்
    போரார்கணிச்சிப்படையேந்திப்பொதுவிற்குனிக்கும்பெருமானே. - 22


    பெருகிக்கிடந்தநிராலம்பப்பேரானந்தப்பெருங்கடலுட்
    பருகித்துளைந்துதிளைத்தாடிப்பதைப்பற்றிருக்கவரமளித்தான்
    கருவிப்புயல்சூழ்மணிமாடங்கவினுமிளசைக்கடிநகர்வா
    யருவிப்பனைக்கைமதவேழத்துரிபோர்த்தாடுமம்மானே. - 23


    ஆடுங்கறங்கின்யோனிதொறுமலமந்தழுங்கிப்பிறந்திறந்து
    வீடுஞ்சிறியேன்றனக்குனதுவிரைத்தாமரைத்தாளருள்வாயோ
    தேடும்பிரமன்றிருமாலுந்தெருமந்தேங்கத்தழற்பிழம்பாய்
    நீடும்பொருலேயிளசையில்வாழ்நிருத்தாபுரத்தையெரித்தோனே. - 24


    எரித்தானெனதுவல்வினையினிருள்சேர்பிறவிப்பெருங்காட்டைத்
    தெரித்தான்மூன்றுபொருளுண்மைதெரித்துப்பாசமிரண்டினையு
    மிரித்தானென்னைத்தன்னுள்ளேயிருத்தியென்பாற்சுகவடிவாய்த்
    தரித்தானிளசைப்பதிவாழுந்தக்கோனெவர்க்குமிக்கோனே. - 25


    கோனேயென்னைவலிந்தடிமைகொண்டமுதலேபெருங்கருணைத்
    தேனேயிளசைப்பதிவாழுஞ்சிவனேயடியார்தமக்கருளு
    வானேதேவரான்கன்றுபோலத்திரியவரமளித்தா
    யானேறுயர்த்தாயிதற்கெவனோவடியேனுதவுங்கைம்மாறே. - 26


    மாறாக்கருணைச்சிவானந்தவாழ்வையிந்தாவெனக்காட்டி
    யேறாக்குழிநின்றெடுத்தேற்றியென்போலுருக்கொண்டெய்திடவுந்
    தேறாப்புலையேனினியுன்றன்றிருத்தாள்சேர்வதெவ்வாறோ
    நீறாப்பொலிந்ததிருமேனிநித்தாவிளசைப்பதியானே. - 27


    பதிக்கப்பெற்றேனுளத்தையவன்பாதாம்புயத்திலெஞ்ஞான்றுந்
    துதிக்கப்பெற்றேனஞ்செழுத்துஞ்சூழப்பெற்றேனிளசைநகர்
    மதிக்கப்பெற்றேனவனன்றிமற்றோர்தெய்வமிலையென்றே
    யுதிக்கப்பெற்றேன்சிவஞானமின்னும்பெறும்பேறொன்றுளதோ. - 28


    ஒன்றிக்கிடந்துபதைப்பறநின்றுணர்வார்தமக்கேயல்லாமற்
    கொன்றைச்சடிலத்திருமவுலிக்குழகனிளசைக்கடிநகரான்
    மன்றற்கமலச்சேவடிகள்வற்றிப்புற்றாய்மரமாகி
    நின்றற்புதமாந்தவஞ்செயினுங்காண்பார்க்கெளிதோநெறிதேர்ந்தே. - 29


    தேராமூடரொடும்பழகித்தெளியும்பகுதியுணராமே
    காரானுகைக்குமறக்கடவுள்கத்துக்குணவாயிருந்தாய்நீ
    வாராய்மனமேயினியேனுமன்றற்பொழில்சூழிளங்காட்டிற்
    போரானேற்றுப்பெருந்தகைதன்பொற்றாளிறுகப்பற்றாயே. - 30


    பற்றிகிடந்தபசுபாசப்பரப்பைக்கடந்தபரவெளியின்
    முற்றிக்கிடந்தசிவானந்தமுழுத்தேனுகர்வார்க்ககவிளக்காஞ்
    சுற்றிக்கிடந்தமலர்ப்பொதும்பர்துனிக்குநறுந்தேன்வழிந்தொழுகி
    வற்றிக்கிடந்தமடுநிறைக்குமிளசைப்பதியான்மலர்ப்பதமே. - 31


    வேறு.

    பதராகியபல்சமயக்குழிவீழ்ந்
    ததராமெனநம்பியகந்தையினான்
    மதராதெனையாண்டருள்வாயிளசைப்
    புதராலறியப்படுபுண்ணியனே. - 32


    புண்ணாகியுலைந்துபுழுங்கிமன
    மெண்ணாதனயாவையுமெண்ணியெணி
    மண்ணாயழியாதுவரந்தருவா
    யண்ணாவிளசைப்பதியாண்டகையே. - 33


    ஆண்டானலிபெண்ணெனவாயிளசை
    யாண்டானெயின்மூன்றையுமட்டருளு
    மாண்டானெனநின்றவனாதியருக்
    காண்டானவையாவுமமைத்தவனே. - 34


    தவமேதுபுரிந்தனனோதமியே
    னுவமானமிலாயுகளப்பதமு
    நவமாரிளசைக்கடிமாநகர்வாழ்
    புவனேசவெனுச்சிபொறித்திடவே. - 35


    பொறியாகியவைம்புலவேடர்களாற்
    பிறியாவிடர்மூழ்குபுபேதுறுவேன்
    சிறியேனுனசேவடிசேருவேனோ
    வறிவேயிளசைப்பதியுற்புதனே. - 36


    நேர்ந்தார்புரநீற்றியநீறுடையான்
    பேர்ந்தார்தலைமாலைபிறங்கியிட
    வார்ந்தாடுசடைப்பெருமானிடமாஞ்
    சார்ந்தார்பிரியாவிளசைப்பதியே. - 37


    பதியாமிளசைப்பதியாள்பவனுக்
    கதிகாபுரியம்பலமாலவன
    மதுராபுரியேடகமாதைநணா
    முதுகுன்றுதிருக்குடமூக்கிவையே. - 38


    வையந்தொறுமோடிவருத்தமுறா
    துய்யும்படிகண்டனனோருறுதி
    கையொன்றிளசைக்கடிமாநகர்வாழ்
    செய்யன்கழற்சேவடிசேர்வதுவே. - 39


    சேரும்படியெப்படிதிட்பமுட
    னாருந்தெளியாதவரும்பொருளை
    யேரொன்றிளசைப்பதியெம்பெருமான்
    பாருந்திசையும்பரவும்மனமே. - 40


    மனமும்முரையும்மதியுஞ்செயலு
    மெனதுந்தனதும்மிடருந்நலனுஞ்
    சினமுங்கெடவோர்மொழிசெப்பியவா
    கனமொன்றிளசைப்பதிகாவலனே. - 41


    வேறு.

    வலந்தருகாமனைமாட்டியகண்ணா
    லனந்தருசீரிளசைப்பதிநாத
    னுலந்தவர்வெண்டலையொண்கயிலேந்தி
    யிலந்தொறும்வெண்பலியேற்றமையென்னே. - 42


    என்னையெடுத்துவிழுங்கியெனெக்கே
    தன்னையளித்தருடத்துவநாதன்
    மின்னிளசைப்பதிமேவியிடத்தே
    கன்னியைவைத்தகருத்திதுவென்னே. - 43


    கருத்தையொருக்கிநினைப்பவர்கட்கே
    தரித்துவெளிப்படுசாலிளசைக்கோன்
    புரத்திடையன்று பொருக்கெனவாங்கே
    சிரித்தெரிவைத்தசெயற்கையிதென்னே. - 44


    செயற்கையனைத்துமறச்சிறியேனுக்
    கியற்கையளித்தருள்சீரிளசைச்கோன்
    வியத்தருகோசிகமாதிவெறுத்துக்
    கயத்துரிபோர்த்தகணக்கிதுவென்னே. - 45


    கணக்குவழக்கொடுகத்துமதத்தார்
    பிணக்கையறுத்தபிரானிளசைக்கோ
    னிணத்தொகைமல்கியநெட்டுடலென்பை
    மணத்தொடையாகமலைந்தமையென்னே. - 46


    தமைத்தெளிவுற்றதவத்தினர்தம்பா
    லிமைப்புவிழிப்பறவாழிளசைக்கோ
    னமைத்திடுமச்சுதனாரணனேடக்
    கமைக்கனலாய்நிமிர்காட்சியிதென்னே. - 47


    என்னைமுழுக்கவிழந்தவிடத்தே
    தன்னைவிளக்கியசாலிளசைக்கோன்
    மன்னமுதத்தினைவானவருண்ண
    வுன்னுவிடத்தினையுண்டமையென்னே. - 48


    உண்டிலையென்றுமுணர்ச்சிகழன்றோர்
    கண்டுதொழுங்கவினாரிளசைக்கோன்
    றண்பெறுகுங்குமசந்தம்வெறுத்து
    வெண்பொடிபூசியவித்தகமென்னே. - 49


    வித்தகலோகமனைத்தினும்வேறா
    யத்துவிதப்பொருளாமிளசைக்கோன்
    மத்தமனச்சிறியேன்பிறவாமைச்
    சித்தியளித்தசிறப்பிதுவென்னே. - 50


    என்னதியானெனுமிந்தமயக்கைத்
    தன்னருளாலொழிக்கும்மிளசைக்கோன்
    கன்னிகுயத்தொடுகைவளைகட்கே
    கொன்னுறுமேனிகுழைந்தமையென்னே. - 51


    வேறு.

    என்னினிச்செய்யவல்லாரெறுழ்வலித்தடந்தோள்கொட்டிக்
    கொன்னுறுபாசந்தண்டங்குடங்கையிலேந்திநக்குப்
    பின்னிறுமிருள்போற்கூற்றங்குறுகுவான்பெட்டகாலைத்
    தன்னைநேரிளசைக்கோமான்றாளிணையிறைஞ்சாதோரோ. - 52


    சாவோரீஇப்பன்னாளிந்தததரணியாண்டிடினுமாள
    மேவொணாதிற்றைஞான்றேவிளியினும்விளிகயாக்கை
    காவொடுகழனிசூழுங்கடிநகரிளசைக்கோமான்
    சேவடிவழுத்தப்பேற்றொமினிப்பெறுஞ்செல்வம்யாதோ. - 53


    யாதுமோரறிவிலாதவெளியனேன்கருவில்வீழ்ந்து
    பேதுறாதெளிவந்தாண்டகருணையின்பெருமையென்னே
    தாதுறுநறவமாந்தித்தனைமறந்தறுகான்மூசும்
    போதலர்சோலைவேலிப்பூம்புனலிளசையானே. - 54


    யாம்பரம்பரமென்றுன்னியிருவரும்பொருதஞாட்பின்
    மேம்படக்கிளைத்தசெந்தீவெற்பெனவடிவங்காட்டிப்
    பூம்பொழிலிளசைக்கோமான்பொள்ளெனத்தோன்றிலானே
    னாம்பிறரவரையன்றோதேவெனநம்புமாறே. - 55


    மாறிலாக்கருணைகாட்டும்வளரொனிநயனமூன்றுஞ்
    சீறுமாடரவம்பூணுந்திருமுகப்பொலிவும்வெள்ளை
    நீறுபூத்தலர்ந்தமெய்யுநெறிகுழலிமயவல்லி
    கூறுமாயிளசைக்கோமானென்னுளங்குடிகொண்டானே. - 56


    கொண்டதோலெலும்புமச்சைகுருதிநீர்நரம்புமூளை
    மண்டியகுரம்பைவாழ்க்கைவாழ்வினிப்போதும்போதும்
    வண்டமிழிளசைவேந்தேவறியனேனுலந்துபோனேன்
    றண்டிரைப்பரமானந்தசலதியிலழுத்திடாயே. - 57


    அழுதழுதலறியேங்கியகங்குழைந்துருகிநெக்குத்
    தொழுதெழுமடியாருள்ளந்தொறுந்தொறுங்கோயில்கொண்டான்
    பழுதுதீரிளசைவைப்பிற்பகிரண்டங்குலுங்கநின்று
    கழுதினந்துணங்கையாடகடித்திடுங்கருணைவாழ்வே. - 58


    கருணையாலிளசைமேவுங்கடவுளேயடியனேனுக்
    கிருவினைத்தொடக்கைநீக்கியிடையறாதுதவல்வேண்டு
    முருவுயிருணர்வாயெங்குமொழிவறநிறைந்துமண்டிப்
    பொருவில்பேரொளியாயோங்கும்பூரணானந்தவாழ்வே. - 59


    ஆனந்தமயமாய்நின்றவரும்பெருஞ்சோதிதானோ
    ரானந்தவடிவங்காட்டியருளினாலிளசைமேவி
    யானந்தமடியேற்கீந்தவருளினைநினைக்குந்தோறு
    மானந்தமேலிட்டென்னையங்கமேயாக்கற்பாற்றே. - 60


    பாற்றிருநீறுபூத்தபவளவெற்பனையபச்சைக்
    கோற்றொடிமணந்தமேனிக்குழகனேயிளசையானே
    யூற்றமாமயராவன்பினுன்னடிநிழற்கீழ்த்துஞ்சும்
    பேற்றினுக்கலந்துபோனேன்பிஞ்ஞகாவருள்செய்வாயே. - 61


    வேறு.

    வாய்த்தவினையொத்துழிமலப்பிணியவிழ்த்து
    மூர்த்திகொடுவந்தருளிமுத்திநலநல்கு
    மாத்தனிளசைப்பதியினைந்தொழினடிக்குங்
    கூத்துடையன்யாவனவன்யாங்கடொழுகோவே. - 62


    தொழாதுதிரியும்புலையர்சூழலிலுறாமே
    வழாதநெறியீதெனவகுத்தருளியன்பர்
    குழாமொடுமிணங்கிமகிழ்கூரவருள்செய்தாய்
    விழாவணியறாமறுகுசூழிளசைவேந்தே. - 63


    வேந்தரெனமண்முழுதும்வெண்குடையுளாக்கி
    யேந்தரியணைத்தவிசிருந்தரசுசெய்யும்
    வாய்ந்தவளமொன்றெனமதித்திடுவாயோ
    வாய்ந்தலிளசைப்பரமனாளுமடியாரே. - 64


    அடித்தலமுடித்தலமரிக்குயமனுக்குங்
    கிடைப்பரியசோதிவடிவாகியகிரீசன்
    மடற்பொதியவிழ்ந்தபொழில்சூழிளசைவந்தெ
    னிடர்க்கடலகற்றிடவுஞற்றுதவமென்னே. - 65


    தவங்களொருசற்றுமிலிபுல்லியர்தநட்பே
    யுவந்துதிரிகின்றபுலையேனுமுலவாத
    பவங்களைவதெப்படிபகர்ந்திடுதியையா
    நவங்கொளிளசைப்பதியினாளுமகிழ்வோனே. - 66


    மகிழ்ச்சிமிகுமன்பினனல்சேர்மெழுகுமான
    நெகிழ்ச்சியுறநெக்குருகிநெஞ்சுகரைவெய்தி
    முகிழ்த்தமலர்கொண்டுநினைமுப்பொழுதுமேத்த
    விகழ்ச்சியறுசீரிளசையெந்தைவரநல்கே. - 67


    வரங்கள்பலவுஞ்சுரர்பதங்களுமயங்கா
    வுரம்பெருகுசித்திகளும்வித்தைகளுமொக்கத்
    திரண்டுவருமேயிளசைநாதனதிருத்தாள்
    பரந்தமலரிட்டுவழிபட்டவர்கள்பாலே. - 68


    பார்ப்பதியணங்கினொருபாற்பதியுமெம்மான்
    சூற்புயறவழ்ந்துலவுசோலைபுடைசூழ
    மேற்படுவளம்பலவுமேவுமிளசைக்கோ
    னேற்புடையதாளிணையிருப்பிடமெனெஞ்சே. - 69


    நெஞ்சுமுரையுஞ்செயலுநேர்ந்தபொறிதானோ
    ரஞ்சுமுனசேவடியிலாக்கியெனையாள்வாய்
    நஞ்செதிர்வுகண்டுளநடுங்கிமுறையோவென்
    றஞ்சிவருவோர்க்கருளுமாரிளசைவாழ்வே. - 70


    வாழுநெறியாவையுமறந்துபுலையாகித்
    தாழுநெறிகொண்டுதிரிகின்றதமியேனைச்
    சூழும்வினைவல்லிருடொலைந்திடுவதெந்நா
    ளாழுமகழ்சூழிளசையாளுடையகோவே. - 71


    வேறு
    உடையநாயகன்றிருவடித்தொழும்புசெய்தும்பரார்தமக்கெட்டாச்
    சடிலவான்முடியிளசையானளித்திடுந்தத்துவநெறிதேர்ந்தே
    யடையவுந்தமக்குள்ளுறத்தாமவற்றுள்ளுளுமானந்த
    மிடையறாமலேகண்டுகொண்டிருப்பவரெம்மையாளுடையாரே. - 72


    யாரும்யாவுமாஞ்சராசரத்தொகுதியிலிரண்டறக்கலந்தோங்கிப்
    பாரும்விண்ணுமற்றனைத்துமாய்நிறைந்ததோர்படரொளிப்பரப்பூடே
    காருலாம்பொழிலிளசையுமெம்பிரான்கருதரும்பல்கோடி
    சூரியப்பிரகாசநேருருவமுந்தோன்றுமாகண்டேனே. - 73


    கண்டகண்டவெள்ளிடையெலாமிளசைவாழ்கருணையங்கடல்காள
    முண்டகண்டமுநான்குதிண்டோளும்வேளுருவினையருவாக்க
    விண்டகண்டழலுருவமுமுமையவண்மேவியவிடப்பாலுங்
    கொண்டகண்டமாய்நின்றதோர்குறியன்றிப்பிறகுறிகாணேனே. - 74


    காணுமாறுமற்றரிதரிதாமெனக்கணிப்பிலாப்பலசாகைக்
    கோணைமாமறையாவையுந்தனித்தனிகுழறுவதல்லாமன்
    மாணுமாறிதுதானெனக்காட்டிடவல்லதேயிளங்காட்டிற்
    பேணுநாயகனடியவர்க்கெளியவன்பெற்றயயைமுறையோடே. - 75


    முறைபிறழ்ந்திடாவடியவர்குழுமியமுதுநகரிளங்காட்டிற்
    கறைவிளங்கியகண்டர்தமருளினாற்காண்பவர்தமக்கல்லா
    லறைகழற்றிருமாலயன்முதலியோர்க்காயினுமெளிதாமோ
    விறையுநீங்கிடாதிரண்டறக்கலந்துவாழின்பநிட்டையின்சீரே. - 76


    நிட்டையாவதுநெட்டுயிர்ப்பறவுடனிமிர்த்துவார்விழிமூடிப்
    பட்டவாயினீர்வறந்திடவடதிசைப்பார்த்துறைந்திடும்யோகோ
    சட்டகத்தினைப்பிரிதுளப்பதைப்பற்றுச்சாகிராதீதத்தே
    சுட்டிறந்துநின்றிளசைநாயகன்கழல்சூழ்ந்திடுஞ்செயலன்றோ. - 77


    அன்றுதொட்டிதுகாறும்வல்வினையினாலலக்கழிந்துழல்பேயேன்
    பொன்றிடாப்பரமானந்தவெள்ளமாய்ப்போக்கொடுவரவின்றி
    யென்றுமோரியல்பாகியபராபரத்திரண்டறக்கலந்தொன்றாய்
    நின்றுவாழ்ந்திடப்பெறுவனோவிளசைமாநெடுநகரமர்ந்தானே. - 78


    தானையாமெனக்குயவரியதளினைத்தரித்துமன்றிடையாடும்
    வானுளோர்களுக்கறிவரும்பரம்பொருண்மண்ணிடையெளிவந்து
    தேனுலாம்பொழிலிளசையிற்குடிகொண்டுசிறியனேன்பசுஞானக்
    கூனைநீக்கிவந்தாண்டிடயான்முனங்குயிற்றியதவமென்னே. - 79


    என்னுடைப்பெருந்தன்மையும்யானுமிங்கெய்திடாவகையென்பாற்
    றன்னுடைப்பெருந்தன்மையுந்தானுமாய்த்தணப்பறநடிக்கின்றான்
    கொன்னுடைப்படைத்தண்டமொன்றெடுத்தெதிர்குறுகியசமன்வீர
    முன்னுடைத்திடவுதைத்திடுமிளசைமாமுதுநகர்ப்பெருமானே. - 80


    பெருமதிக்கெலாம்புகழ்ந்திடுமிளசையம்பெரும்பதிதனின்மேய
    திருமதிக்கொழுந்திலகியசடைமுடிச்சிற்பராவெஞ்ஞான்று
    மொருமதிப்படநிலைபெறாதநுதினமுழிதருகறங்கேய்ப்பத்
    திரியும்வன்மனக்குரங்கினைநிலைபெறத்திருத்துவதெவ்வாறே. - 81


    வேறு.
    எவ்வமுகந்தையுமிழிவுமானமு
    மவ்வியநெஞ்சமுமனைத்துநீங்குமா
    னவ்வியங்கரத்தவனிளசைநாயகன்
    செவ்வியபொலங்கழல்சிந்தைசெய்யினே. - 82


    செய்யவன்கருகியதிருமிடற்றினான்
    வையகமளந்தவன்வழுத்துதாளினான்
    மெய்யடியவர்புகழிளசைமேவிய
    வையனைமறக்கிலென்னாவியுய்யுமே. - 83


    உய்வகைநாடுநருறுதியோர்ந்திடிற்
    சைவநேர்சமயமுஞ்சங்கரர்க்குநேர்
    தெய்வமுமிளசையிற்சிறந்தபாக்கமு
    மெவ்வுலகத்தினுமில்லையில்லையே. - 84


    இல்லெனிலுண்டுளதென்னிலில்லையா
    மல்லதங்குருவெனிலருவுமாகுமாற்
    செவ்வியல்சோலைசூழிளசைச்செம்மலான்
    பல்குசீர்யாவரேநவிற்றற்பாலரே. - 85


    பாலனைக்கூற்றுவன்பற்றிக்கோடலே
    மேல்கொடுவருதலுமுதையில்வீட்டினான்
    சோலையின்மதிதவழிளசைத்தோன்றலா
    னேலுமெய்யடியவர்க்கெளியனல்லனே. - 86


    அல்விளக்காகியவாக்கைதன்னைநா
    னெல்லிளக்காயிடக்காண்பதெந்தநாள்
    சொல்விளக்கியபுகழ்த்தொண்டைநாட்டுக்கோர்
    நல்விளக்காகியவிளசைநாதனே. - 87


    நாதனுமென்னுடைநட்புமொக்கலுந்
    தாதையுந்தாயருமகவுந்தாரமும்
    யாதுமாயிருந்தெனையெளிவந்தாண்டனன்
    மேதகுவளம்பயிலிளசைவேந்தனே. - 88


    வேந்தராய்க்கவிஞராய்விச்சைகற்றுணர்
    மாந்தராயறிஞராய்வாழவேண்டுவீர்
    பூந்தராய்க்கவுணியன்போற்றுமெந்தையைச்
    சாந்தராயிளசையிற்சார்ந்துகண்ணுமே. - 89


    கண்ணுதன்மதிமுடிக்கமலக்காலனைக்
    கண்ணுதன்மதிமுடிக்கமலக்காலனை
    யண்ணலாம்பொதுவிளங்காட்டினானையா
    மண்ணலாம்பொதுவிளங்காட்டினானையே. - 90


    காட்டினானுலகெலாங்கனவுபோன்மென
    வாட்டினான்பிறவிவேர்வாட்டிச்சென்னிமேற்
    சூட்டினான்றிருவடிதொலைவிலானந்த
    மூட்டினாளிலசையிலுறையுமன்னனே. - 91


    வேறு.
    மன்னுமோர்கணப்போதாயினுநிலையாமதித்திடற்கரியலிவ்வுடம்பை,
    யென்னதென்றெண்ணியிதற்கெனத்தொடங்கியினிலாக்களவுபொய்காம,
    முன்னியமதமாற்சரியமாங்காரமுலப்பிலாவெகுளியுற்றந்தோ,
    பன்னெடுங்காலமழுங்குமாறெவனோபசும்பொழிலிளசைநாயகனே. - 92


    நாயினுக்கிரையோநரியினுக்கிரையோநகுநடைக்குழிவிழிப்பிறழ்பற்,
    பேயினுக்கிரையோகழுகினுக்கிரையோ பெரிதுநாறியபுழுக்குரம்பை,
    யீயினுக்கிரையோயாதினுக்கிரையோ யான்சுமந்துழன்றிடப்பணித்தாய்,
    தாயினுக்கழகோகுழவியைவருத்தல்சாற்றிடாயிளசைவானவனே. - 93


    வானறல்வளிதீமண்ணெனுமிவற்றால்வனைந்ததோற்குழிசியைக்குருதி
    யூனொடுபிசைந்துவைத்தபாழ்ஞ்சுவரை யொன்பதுவாயினுமலமே
    தான்வழிந்தொழுகும்விடக்கினைத்துயரந் தனக்கொருகொள்கலந்தன்னை
    யானிதைச்சுமந்துதிரிவதுமுறையோ விளசையம்பதியமைந்தவனே. - 94


    அமையுமிவ்வுடலேபொருளெனவோம்பி யடியவர்யாரையும்பணிகொண்
    டிமையளவேனுநன்னெறிதேராதிதற்குமேற்கதியிலையென்றே
    தமையுணர்ந்தவர்போனாடகநடித்துத் தழற்படுநரகினுக்கிரையாய்ச்
    சுமையெடுதலுத்தேனிளசைவாழ்முதலேதுடைத்திடாதிருப்பதெற்றினுக்கே. - 95


    எத்தனையுடலமும்மையிலெடுத்தே மெத்தனையினியெடுப்பனவு
    மத்தனையன்றோவிவ்வுடற்பயனென் றறிந்திடாதிதனையேபொருளாக்
    கத்தியுமிதற்கோரூறுவந்துற்றாற் கலுழ்ந்துவெந்துயர்க்கடல்குளித்தும்
    பித்தரின்மயங்கித்திரிவதென்னேயோ பேசிடாயகத்தியீச்சுரனே - 96


    அகத்தியீச்சுரனைக் காட்டிவீடளிக்கு மறிவினைத்தஞ்சமாமுடலென்
    றிகத்திலேயின்பந்துய்த்திடவறியா ரேவல்கொள்வோர்க்குநற்கரணம்
    புகப்பெறுநரிநாய்கழுகுக்குப்போகம் புழுவுக்குபுவனமற்றதுபோற்
    சகத்திடைத்தமக்குத்தனுவெனுமிதனைத் தாமெனவிழையுமாறென்னே. - 97


    என்பினைநரம்பைமூளையைமயிரை யிறைச்சியைக்குருதிசுக்கிலத்தைப்
    பின்புறுந்துவக்கைவேறுவேறாகப் பிரித்துப்பைமறியெனநோக்கி
    யன்புறுமறிவாற்பௌதிகமெனநீத் தாண்டமாவிளசைநாயகன்ற
    னின்பவாரிதியிற்றுளைந்திடப்பெறாதார்க்கிறப்பதும்பிறப்பதுமியல்பே. - 98


    இயலிசையுணர்ந்துமாசறத்தெளிந்தும் யாவரும்புகழ்ந்திடப்பெற்று
    மயலறுபொன்போற்சுவைபெறப்பேசிமன்பதைப்பரப்பெலாம்வசித்துங்
    கயல்விழிமடவார்புணர்ச்சியைவெறுத்துங்காற்றினைச்சருகினைநுகர்ந்தும்
    பயில்வுறும்பவவேரறுங்கொலோவிளசைப் பராபரனருள்பெறாதவர்க்கே. - 99


    தவறுமிக்கிழைத்தாற்கழுத்தினிலிறைவன் சாற்றொணாப்புழுத்தலைநாயை
    யவமுறப்பிணித்தான்முகஞ்சுழிந்தழுங்கியருவருத்தரையனையிரந்து
    நவில்பிணிப்பகற்றவிழைவரேயல்லா னன்கெனமதிப்பரோவதுவே
    யுவமையென்றுணர்ந்தோருடலையோம்புவரோவிளசைவாழொருவனைமறந்தே. - 100


    மறந்தருநெடுவேன்மைந்தனைப்பயந்துமகிழ்பிரதானநாயகிபாற்
    சிறந்துவாழிளங்காட்டகத்தீயீச்சுரன்றாள் சேர்ந்துநின்றொன்றுபட்டதுவா
    யுறங்கியெங்கெழிலென்ஞாயிறென்றிறுமாந்துறையுமெய்யடியவர்தமது
    நிறைந்தபல்கீர்த்தியிடைவெளியின்றி நிரந்தனவுலகமெங்கணுமே - 101

    ஆகச்செய்யுள் 101.

    மெய்கண்டதேவர்திருவடிவாழ்க
    சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.
    ------------

    கணபதி துணை
    திருச்சிற்றம்பலம்

    திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிடமாகாபாஷ்யகர்த்தராகிய
    சிவஞானயோகிகள் அருளிச்செய்த பிரபந்தத்திரட்டு

    2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி.

    காப்பு.


    பாமாலைக் குறுமணமாம் புகழ்க்குளந்தாபுரிப் பதிற்றுப்பத்தந்தாதித்
    தேமாலையெம்பெருமான்றிருவடியிற் புனையவருள்செழித்துநல்கு
    மாமாயைத்தொடரறுத்துப்பசுபோதக்க வளமுண்டுமதமேல்கொண்டு
    காமாதித்தறிபிடுங்கிவினைக்கடலை யுழக்கிவருகளபந்தானே. - 1
    நூல்.


    சீருங்கல்வியுஞ்செல்வஞானமும்
    பாரும்விண்ணும்பரிக்குமிறைமையுஞ்
    சாருந்தென்குளந்தாபுரிமேவிய
    காருண்கண்டனைக்கைதொழுவார்கட்கே. - 1


    கட்டறுத்துக்கரிசறுமானந்த
    நிட்டையீதெனக்காட்டிமுன்னிற்குமாற்
    சிட்டர்சூழுந்திருக்குளத்தூரினு
    ளட்டமூர்த்தியுமாகியவண்ணலே. - 2


    அண்ணலைக்குளத்தூரினமுதினைக்
    கண்ணினுண்மணியைக்கனிதேறலை
    யெண்ணியெண்ணியிராப்பகலேத்தநான்
    பண்ணுமெய்த்தவமென்கொலிப்பாரிலே. - 3


    3 பாரும்விண்ணும்பவனனுமங்கியு
    நீரும்வேரறநீக்கிப்பரத்தினி
    லாருமன்பர்க்ககவிளக்காயினான்
    யாருமேத்துங்குளந்தையிலீசனே.. - 4


    ஈசனேகுளத்தூருமென்னெஞ்சமும்
    வாசமாகமகிழ்ந்தருள்சோதியே
    நீசனேனுக்கும்வேண்டுநிரந்தரம்
    பாசமுன்றன்பதாம்புயத்தாகவே. - 5


    ஆகமங்களருமறையாவையு
    மேகமாய்த்துதித்தேத்துமறிவரும்
    யோகமூர்த்தியென்பார்குளத்தூரினு
    ணாகரேத்தநடிக்கும்பிரானையே. - 6


    பிரானென்றுன்னிப்பெருங்குளத்தூருறை
    புராணன்றன்னடிபோற்றவறிகிலார்
    தராதலத்துடல்பெற்றதவப்பயன்
    விராவலின்றிவிளிதருமுமரே. - 7


    மருவுமைம்புலவஞ்சார்தங்களாற்
    றெருமருஞ்சிறியேனையஞ்சேலெனா
    வருளும்வார்த்தைக்கலந்தனனையனே
    யொருகுளந்தையுறையுமெய்ச்சோதியே. - 8


    சோமசேகரன்றொல்குளத்தூருறை
    சோமநாதனெவர்க்குந்தொடர்வருஞ்
    சோமலோகன்றுணையடிபோற்றினச்
    சோமனாதுதுரக்குந்திருக்கையே. - 9


    திருக்குளந்தைவருஞ்செயலார்கடைத்
    திருக்குளந்தையலையிடஞ்சேர்த்தக
    திருக்குளந்தைவிழியவன்சேர்விடந்
    திருக்குளந்தைதெரிசித்தயாங்களே. - 10


    வேறு.
    யாதுமறிவொன்றில்லாதவெனையும்பொருளாத்தடுத்தாண்ட
    மாதுபாகன்றிருக்குளத்தூர்வரதன்கருணைப்பெருக்கத்தை
    யோதியோதியுன்னுதொறுமுள்ளமுருகுமயிர்சிலிர்க்குங்
    காதல்பெருகும்புளகிக்குங்கண்ணீர்ததும்புங்கடியேற்கே. - 11


    கடியாரிதழிச்சடைமுடியுங்கண்கண்மூன்றுங்குறுநகையும்
    வடியார்சூலத்தனிப்படையும்வரைநேர்புயங்களொருநான்கும்
    பொடியார்நுதலுந்திருமுகத்தின்பொலிவுங்காட்டியுளம்புகுந்தர
    னடியார்வழுத்தத்திருக்குளத்தூரமருங்கருணைப்பெருமானே. - 12


    மானேர்நோக்கின்மடநல்லார்மாயவாழ்வின்மதிமயங்கி
    யானாவிடும்பைக்கடலழுந்துமடியேன்றனக்கோர்புணையாகு
    மூனேயுயிரேயுணர்வேயென்றொக்கக்கலந்துசிவானந்தத்
    தேனேயான திருக்குளத்தூரிறைவன்கமலச்சேவடியே. - 13


    சேவார்பெருமான்றிருக்குளத்தூர்சேரப்பெற்றேன்றிருப்புகழை
    நாவால்வாழ்த்தக்கைகுவிக்கமனத்தானினைக்கநறுந்தேனார்
    பூவானீராலனுதினமும்போற்றப்பெற்றேனாங்கவனு
    மாவாவெனவந்தாண்டருளப்பெற்றேன்பிறவியற்றேனே. - 14


    அற்றார்க்கற்றபரம்பொருளையமலானந்தப்பெருவாழ்வைச்
    செற்றார்புரங்கடீமூளச்செய்தகுளத்தூர்ப்பெம்மானைச்
    சற்றாகிலுநீநினைந்தறியாய்சழங்கன்மனனேயமன்றூதர்
    பற்றாநிற்கவரின்வறிதுபரிவாயேதுபுரிவாயே. - 15


    வாய்மையொழுக்கந்தவஞ்சீலம்வணக்கம்பொறுமையறிவடக்கந்
    தூய்மைதவறாமெய்யடியார்தொழும்புக்கிரங்கியேனோர்க்குச்
    சேய்மையவனாய்த்திருக்குளத்தூர்வரைப்பின்வைகுஞ்சிவபெருமா
    னாய்மேற்றலிசிட்டாங்கெனையுநயந்துவந்தாட்கொண்டானே. - 16


    கொண்டான்பிரமன்முடைத்தலையைக்குடங்கைத்தலத்துக்குறுமூரல்
    லிண்டானவுணர்புரமூன்றுமொருங்குவேவநுதல்விழியாற்
    கண்டான்காமனுடல்பொடியாக்கடிபூம்பொழில்சூழ்குளத்தூரிற்
    றண்டாதுறையும்பெருங்கருணைத்தகைசேர்ஞானப்பெருவாழ்வே. - 17


    வேலையலைபோற்பிறந்திறந்துமெலியாவண்ணஞ்சிவஞான
    நூலையுணர்ந்துமனோலயமாய்நுவலற்கரியபரானந்தப்
    பாலைநுகர்ந்துவாதனையுங்கழன்றுவாழப்பணிப்பதென்றோ
    சோலைபுடைசூழ்திருக்குளத்தூர்ச்சோதிப்பொருளாந்தொல்லோனே. - 18


    தொல்லைநாளேநமைவணங்காத்துட்டனிவனென்றுன்னாது
    வல்லையணைந்தாட்கொள்ளாயேன்மற்றோர்துணைவேறெனக்குளதோ
    வல்லைநிகருங்கருஞ்சுரிமென்கூந்தல்முதவல்லியெனு
    முல்லைநகைவாணுதல்பாகாமுறைதேர்குளத்தூருறை‍வோனே. - 19


    உறையுளாகத்திருக்குளத்தூருறையும்பெருமான்பதாம்புயத்தை
    யிறையும்வழுவாதகங்குழையவேத்திப்பரசுமடியவர்க்கு
    முறையேதொண்டுசெய்திருக்குமுடியாப்பேறுதனைப்பெற்றுக்
    குறையாவின்பப்பெருங்கடலிற்குளித்தேனென்றுங்களித்தேனே. - 20


    களிறானவைந்தும்வயமாவடக்கியொருபாலிருந்துதனிவாய்
    வளியூடெழுப்பியிடைபிங்கலைக்கண்மருவாதவண்ணமொருவித்
    தெளிவானகுண்டலிநிசத்தியோடுசெறியிந்துவட்டமதுவுண்
    டொளியாயுறங்கவருளுங்குளந்தையுடையான்கடைக்கணருளே. - 21


    அருமேனிகொண்டுமுருமேனிகொண்டுமருள்கூரிரண்டுமருவுந்
    திருமேனிகொண்டுமலநோய்துரந்துசிறியேங்களுய்யுமுறையாற்
    கருமேனிநீத்தகருணைப்பெருக்கையளவிட்டியாவரறிவார்
    செருமேனிமிர்ந்தமதனற்கடந்ததிருவார்குளந்தைமுதலே. - 22


    முதிரும்பல்கோடிசமயப்பிணக்கர்முறைகெட்டுழன்றுமயலா
    யதுதெய்வமென்றுமிதுதெய்வமென்றுமமைவுற்றிடாமலலைவார்
    மதநம்பியானுமருளாமலுண்மைவழிகாட்டியாண்டுகொளுவாய்
    கதமொன்றியானையுரிபோர்த்துகந்தகமலாகரத்துநிறைவே. - 23


    நிறைவாகியெங்குமசைவின்றியன்பர்நினைவூடெழுந்தமுதலே
    மறைநான்குமின்னுமுறையிட்டுழன்றுமறியப்படாதவரதா
    சிறைநீருடுத்தமதில்சூழ்குளந்தைநகர்வாழவந்தசிவமே
    யிறைவாவரங்கடருசோமநாதவெனவேத்தெடுப்பதெனதே. - 24


    எனதல்லதொன்றையெனதென்றுகொண்டுமருளான்மயங்குமெளியே
    னுனதன்பர்தங்கள்பணிசெய்துமெய்ம்மையுணருந்திறத்தையருள்வாய்
    கனமொன்றுசோலைபுடைசுற்றுகின்றகவினார்குளந்தைநகராய்
    மனமொன்றுபட்டுநினைவோர்தமக்குவெளிநின்றஞானவடிவே. - 25


    வேலிற்றிகழ்ந்துகயலிற்பிறழ்ந்துவிடமொப்பவெப்பமருவிப்
    பாலிற்றெளிந்துபிணையைத்துரத்தியரிசூழ்பரந்துபடைவேள்
    கோலிற்பயின்றுகுமிழின்மறிந்துகுழையூடுசெல்லும்விழியார்
    மாலிற்படாதுன்னடியேவழுத்தவருளாய்குளந்தையானே. - 26


    அருமந்ததேவர்பலர்கூடிவேலையமுதங்கடைந்தபொழுதின்
    வெருவந்துவீயவதன்மேலெழுந்தவிடமுண்டுகந்தவிமலன்
    பருவங்கள்கண்டுகுருமேனிகொண்டுகதியுய்க்குமாதிபகவன்
    மருவுங்குளந்தைநகரம்வணங்கவெதுபோலுமுன்செய்தவமே. - 27


    தவமேதுமின்றிமுழுமூடனாகிமயலாலுழுன்றுதரைமே
    லவமேபுரிந்துகலரோடிணங்கியுடலோம்பிமாளுமடியா
    னிவனாகுமென்றுபழியாதிரங்கியெனையாண்டுகோடல்கடனே
    நவமார்குளைந்தைந்கராயரங்கினடமாடுமுக்கண்மணியே. - 28


    மணிகண்டனென்றுமுமைபங்கனென்றுமறையோதியென்றுமழுமா
    னணிகொண்டசெங்கையிதழாளனென்றுமடியார்க்குநல்லனெனவும்
    பணிகொண்டவேணிமுடியான்குளந்தைபதியாம்விருப்பனெனவுந்
    தணிவொன்றுசிந்தையொடுபாடுமன்பர்சரணென்றலைக்குமலரே. - 29


    மலர்மங்கைகேள்வன்மலராசனத்தன்மருவும்பரோலமிடவு
    மலரங்கையேந்திமுனிவோர்களெங்குமலமந்துநாடியிடவுங்
    கலகங்கள்கொண்டுமறைநான்குநின்றுகதறித்திரிந்தலையவு
    மிலமென்குளந்தைநகரானெனக்குமெளிவந்தவாறிதெவனோ. - 30


    வேறு.
    எவ்வநோய்களுமிடும்பையுமகந்தையுமிழிபு
    மெளவியப்புலைநெஞ்சமுமனைத்துநீங்கிடுமா
    னவ்வியேந்தியநறுமலர்க்கையினான்கருணைப்
    பெளவமானவன்குளந்தைமாநகர்பணிபவர்க்கே. - 31


    பவளக்காடுமொய்த்தனையசெவ்வேணியும்பதியுந்
    தவளத்திங்களங்கீற்றுமெண்புயங்களுந்தறுகட்
    கவளத்தோலுரிவீரமுங்காட்டியெம்பெருமான்
    குவளைப்பொய்கைசூழ்குளந்தையிற்குடியிருந்தனனே. - 32


    குடியிருப்பதென்னெஞ்சகம்பூண்பதுகொடும்பாம்
    படிமிதித்துநின்றாடிடஞ்சுடுவனமணியும்
    பொடியுடுப்பதுதோலெனிற்குளந்தைமாபுரிவா
    ழடிகளைத்தொழுந்தெய்வமென்றார்மதிப்பவரே. - 33


    மதியிலார்சிலரிரண்டுகாற்பசுக்களின்மனிதர்
    துதிசெயாதிகழ்கின்றதாற்சிறுமையோதுதியாற்
    கதியைவேண்டிமாலயன்முதற்கடவுளர்வழுத்திப்
    பதியுமன்பினாற்பணிசெயுங்குளந்தையெம்பரற்கே. - 34


    பரந்துவானமுந்திசைகளுங்கணத்தினிற்படர்ந்து
    கரந்துசெல்லுமென்னெஞ்சினைக்குவித்துநின்கழற்கீழ்
    நிரந்தவன்பினாலிருத்திடநிறுத்துநாளுளதோ
    விரந்தவன்பருக்கெளியனாங்குளந்தைவாழிறையே. - 35


    இறையுநீங்கிடாவானந்தவெள்ளமாமின்பத்
    துறையிலேபடிந்தெனைமறந்ததீதமாந்தொன்மை
    நிறைவுவேண்டினேனையனேநினைந்துவேண்டினர்க்குக்
    குறைவிலாவரங்கொடுத்தருள்குளந்தைநாயகமே. - 36


    நாயினுக்குணவாகுமிவ்வுடம்பினைநானே
    பேயெனச்சுமந்திதுவரையெய்த்தனன்பிரியா
    நேயனேயினியாற்றிலன்குளந்தைவாழ்நிமலா
    காய்களிற்றுரிப்போர்வையாயுனக்கடைக்கலமே - 37


    அடைக்கலம்புகுந்தேனுனக்கடியனேன்றன்னைப்
    புடைத்துவெந்நரகிடைவையோபுனிதரானவர்க்குக்
    கிடைக்குநின்னடிக்கீழிருத்திடுவையோவறியேன்
    மடைக்கணித்திலஞ்சொரிதிருக்குளந்தைவாழ்முதலே. - 38


    வாழ்வைமெய்யெனநம்பிநின்னடியிணைமறந்து
    தாழ்வுசெய்திடுஞ்சிறியனேனாயினுந்தக்கோய்
    சூழிசூழ்திருக்குளந்தைவாழ்சோமநாயகனே
    யாழ்வுறாதெடுத்தாள்வதுன்னருளினுக்கழகே. - 39


    அழிதகும்புலையுடற்பொறைதாங்கிநின்றலைவீர்
    கெழுவுநன்னெறியுமக்கியானுணர்த்துவன்கேண்மின்
    றொழுமினெம்பிரானடியிணையேத்துமின்சூழ்மி
    னெழுமின்றென்குளத்தூரினைச்சேருமினினிதே. - 40


    வேறு

    இனியவனுலகுக்கெல்லாமெம்மனோர்பிறவித்துன்பத்
    துனிதவிர்த்தருளவேண்டித்தோளொருநான்குஞ்செவ்வாய்க்
    கனிமொழியிடமுங்காளகண்டமுங்கண்கண்மூன்றுங்
    குனிமதிக்கீற்றுங்காட்டிக்குளந்தையிற்குடிகொண்டானே. - 41


    கொண்டதுவிடாதுபற்றிக்குருமொழிதவாதுநின்று
    தொண்டுசெய்யடியார்ஞானச்சுடரினைத்தீண்டுமுள்ளப்
    புண்டரீகங்கள்கோயிலென்பராற்புடைசூழ்செல்வத்
    தண்டலைக்குளந்தைவைப்பிற்றண்ணருளாளனார்க்கே. - 42


    ஆளரியேறேபோலவைம்புலக்கரிக்குழாத்தைக்
    கோளறமுருக்கிஞானக்குரைகடல்படிந்துசெய்ய
    தாளதாமரைக்கீழ்வைகத்தண்ணளிசுரந்தெனுள்ளே
    வாளொளிமயமாய்நின்றான்குளந்தையின்மருவுந்தேவே - 43


    மருமலர்மாலைசூட்டேன்வாயினாற்றுதிக்கமாட்டே
    னிருவினைப்பிணக்கைவீட்டேனிதயத்திலறிவைநாட்டேன்
    பெருகுமெய்*தவங்களீட்டேன்பேயேனுய்யும்வண்ண
    மருளுமாறெவனோசொல்லாயணிபொழிற்குளந்தையானே. - 44


    யாவனங்கங்கேயெள்ளுக் கெண்ணெய்போனிறந்துநின்றான்
    யாவன்முக்குணங்கடம்மின் மூவரையீன்றபெம்மான்
    யாவன்முத்தொழிலுமூவ ரியற்றிடப்பணிந்தானந்தத்
    தேவனேயெமையாட்கொள்ளக்குளந்தையிற்சிறந்துளானே. - 45


    சிறந்ததோர்தெய்வமான்றிருக்குளத்தூரின்மன்னு
    மறந்திகழ்விடையோனாதலாயவும்வேண்டுங்கொல்லோ
    மறங்கிளர்புரமூன்றட்டஞான்றுமான்முதலாந்தேவர்
    புறங்கிளர்கருவியாகிப்போந்தவாறறிந்துளார்க்கே. - 46


    அறிபறியாமைநீத்தவறினையறிந்துவஞ்சம்
    பிறிவுறத்துரியாதீதப்பேரின்பநிலையினொன்றாய்ச்
    செறிபுறும்வாழ்க்கையந்தோதிருக்குளத்தூரின்மன்னு
    மிறைவனையிறையென்றுன்னாரெப்படியெய்துவாரே. - 47


    வாரறுத்தெழுந்துவீங்கிமதர்த்தடிகனத்துவெற்பைப்
    போரினில்வென்றுமெள்ளப்புடைபரந்திறுமாந்தோங்கிச்
    சீருறுகளபந்தோய்ந்தசெப்பிளங்கொங்கைபாகன்
    சார்புகழ்குளந்தைவாணன்சரணமேசரணமாமே. - 48


    சரண்பிறிதில்லைநீயேதஞ்சமென்றடந்தோர்தம்மை
    முரண்படாவுண்மைகாட்டிமுத்திதந்தளிக்கவல்லோ
    னரண்பயில்குளத்தூர்மன்னுமண்ணலேயன்றிநீர்சூழ்
    திரண்டசீருலகந்தன்னிற்றேரினும்யாருளாரே. - 49


    உள்ளதுமிலதுமாகுமுருவமுமருவுமாகுங்
    கள்ளமும்வெளியுமாகுங்கருணையுமறமுமாகும்
    பள்ளமுமேலுமெங்கும்படரொளிப்பிழம்பாய்நிற்கும்
    வள்ளலுந்தானேயாகுங்குளந்தையின்மருவுந்தேவே. - 50


    வேறு.
    மருவுமாணவக்குறும்பினைவேரறமாற்றியாநந்தத்தே
    யொருமைபூண்டுநின்றிரண்டறக்கலந்துவாழுண்மையைப்பெறப்பெற்றேன்
    கருவிமேகமொத்திலங்கியகந்தரக்கடிபொழிற்குளந்தைக்கோன்
    றிருவடித்துணைநெக்குநெக்கேத்திடுஞ்செய்தவப்பயனாலே. - 51


    செய்தவப்பயனில்லவர்காண்பரோதிருக்குளத்தூர்மன்னு
    மைதழைத்தகண்டப்பிராணியற்கையுமற்றவனடியார்க்கு
    மெய்தழைப்பவந்தருள்புரிமுறைமையுவிளங்கிழையுமைகாணக்
    கைதழைத்தவம்பலத்தினின்றாடிடும்பெருங்கருணையுந்தானே. - 52


    தானலாதவிவ்வுடம்பினைத்தானெனத்தருக்கியிப்பிரபஞ்சத்
    தீனவாழ்க்கையைவேட்டழிந்துழலுமிவ்வுயிருமற்றுனைப்போல
    வானபேரறிவுடைத்தெனக்கூறுவதறிந்தவர்க்கடாதன்றே
    பேனவார்திரைத்தடங்கள்சூழ்குளந்தையிலமர்ந்தருள்பெருமானே. - 53


    மானமாயுடல்பொருளெனுமிவற்றொடுமன்னுமாவியைக்கூட
    ஞானதீக்கையினுனதெனக்கொடுப்பதுநயந்துணரிந்திருந்தேயுந்
    தேனலர்ந்தபூம்பொழிற்குளத்தூருறைசெல்வனேயிவ்வான்மா
    வீனநீங்குதன்வயத்தனாந்தன்மையனென்பர்கள்சாலாரே. - 54


    சாலவும்பெரியவனுநீயல்லதுசாற்றின்வேறிலையென்றுஞ்
    சாலவுஞ்சிறியதுமுயிரென்றும்வேதாகமமுதலெல்லாஞ்
    சாலவோதுவதறிந்துமொப்புரைப்பவர்தன்மையையென்சொல்வேன்
    சாலமேழையுஞ்சாய்த்தவன்றொழருவந்தனிக்குளத்தூரானே. - 55


    குளந்தைமாநகரமர்ந்தருள்கொழித்திடுங்குழகனேயடியேனுக்
    களந்தறிதிடாப்பரமதப்பிணக்கினிலகப்படாதிருண்மாயை
    பிளந்தநின்னடியாரடித்தொழும்பினிற்பிறழ்ந்திடாதொருஞான்றும்
    வளந்தரும்பவிமீதினிற்பிறந்திடாவரங்கடந்தருள்வாயே. - 56


    அருள்பழுத்ததென்குள்ந்தைமாநகருறையண்ணலுக்கிடமாகுந்
    திருவல்லந்திருவேகம்பமிடைச்சுரந்திருக்கச்சூர்திருமுல்லை
    மருகல்காளத்தியொறறியூர்வான்மியூர்மாகநல்வலிதாய
    முருகன்பூண்டிபாசூர்திருக்கழுகுன்றமுதுகுன்றம்வேற்காடே - 57


    காளையாய்க்குளத்தூரமர்ந்தருளியகண்ணுதற்ப்பெருமாற்குத்
    தோள்களாயிரந்திருமுடியயிரந்தொழில்களாயிரஞ்செய்ய
    தாள்களாயிரம்விழிகளுமாயிரந்தானமாயிரம்பேரின்
    கோள்களாயொரங்குணங்களாயிரமெனக்கூறுவருணர்ந்தோரே. - 58


    உணர்ந்துளோருளத்தகரபுண்டரீகமுந்துவாதசாந்தமுமும்பர்
    வணங்குமாதித்தம்ண்டலநடுவுநான்மறைகளின்முடிவுஞ்சீ
    ரிணங்குசோமலோகமுந்திருவம்பலத்திடமுந்தென்குளத்தூர்வாழ்
    குணங்கடந்தவர்சிறப்பிடமாமெனக்கூறிடுமறைநூலே - 59


    மறையவன்றலைமலர்ந்தகைத்தலத்தினுமாயவன்விழிப்போதை
    யறைகழற்பதாம்புயத்தினுங்கண்டவரஞ்சிறைச்சுரும்பார்த்து
    நறவுவாய்மடுத்துறங்குதாமரையினல்லோதிமம்விளையாடுஞ்
    சிறைசெய்நீர்க்குளத்தூர்பிரான்றனக்குமேற்றெய்வமுண்டென்னாரே - 60


    வேறு.
    என்னேயடியேனிதுகாறுமெலிந்
    தன்னோவெனநோவதறிந்திலையோ
    பொன்னேமணியேகுளந்தாபிரிவாழ்
    மன்னேயெனையாளமதித்திலையோ. - 61


    மதித்துன்னடியேமனநெக்குருகத்
    துதிக்குஞ்சிறியேன்றுயர்தீர்த்திலையே
    யெதிர்த்துன்றனையேயிகழ்வார்குளத்தூர்ப்
    பதிக்கன்புடையாய்பரமாநுடரே. - 62


    பரமாநுடர்நின்றுபழித்திடவே
    தரமானபிறப்பையெடுத்தன்னான்
    வரனேகமலாகரமாநகர்வா
    ழானேயினியென்றருள்கூடுவதே. - 63


    கூடாரெதிரேசிறுமைக்குடியாய்
    வாடாமலரெனக்குவரந்தருவாய்
    பீடார்புகழ்சேர்பெருந்தண்டகமா
    நாடாள்கமலாகரநாயகனே. - 64


    கனலிற்படுபாந்தள்கடுத்திடநான்
    றினமிப்படிநைவதுசி்த்தமதோ
    வினியெத்திறமுன்னருளெய்துவனோ
    புனிதக்கமலாகரபோதகனே. - 65


    தகுமோபிறிதுன்சரணேசரணம்
    புகுதுஞ்சிறியேன்புனல்சூழுலகோர்
    நகுமாறுதிரிந்துநடுங்குவது
    மிகுசீர்க்கமலாகரவிண்ணவனே. - 66


    விண்ணாடருமெண்ணரும்வித்தகனே
    பெண்ணாணவியானபெரும்பொருளே
    கண்ணார்கமலாகரநாயகனே
    யண்ணாவெனையாளுவதுன்கடனே. - 67


    கடலார்விமுண்டுகலங்கிமையோ
    ரிடர்தீர்த்தவனென்றுனையேத்தினனா
    னுடலால்வருதுன்பமொழித்தருள்வா
    யடலார்கமலாகரவாண்டகையே. - 68


    கையுஞ்சிரமும்விழியுங்கழலு
    மெய்யும்முனதாகவிதித்தருளாய்
    செய்யுந்தடமுந்திருவும்புடைசூழ்ந்
    துய்யுங்கமலாகரவுத்தமனே. - 69


    உத்திப்பணிபூண்டருளுத்தமனைப்
    பத்திக்கெளிவெந்தபரம்பொருளை
    முத்திக்கமலாகரமுன்னவனை
    யெத்திக்கினுமேத்தியிறைஞ்சுதுமே. - 70


    வேறு.
    இறைவனேகுளத்தூரிலிருந்தருளும்பெம்மானே
    முறைபிறழானந்தமுத்திநெறிதந்தருளி
    நிறைவுடையமெய்யடியார்நீடுபெருந்திருக்கூட்டத்
    துறையுளெனைச்சேர்ந்தாயையென்சொல்லித்துதிப்பேனே. - 71


    துதிப்பதற்குவாயமைத்தாய்சூழ்வதற்குத்தாளமைத்தாய்
    மதிப்பதற்குமனமைத்தாய்வணங்குதற்குத்தலையமைத்தாய்
    கதிப்பதற்குநூலமைத்தாய்கடிக்குளத்தூரமந்தறிவி
    லுதித்தவுனக்கடியேங்களுதவுவதென்கைம்மாறே. - 72


    மாறுபடாப்பெருங்கருணைவாரிதியாய்நிறைந்திருந்து
    மாறுவகைச்சமயத்துமவ்வவர்கட்கவ்வவையா
    நீறுபுனையடியார்க்குநின்மலப்பேரொளிமயமாந்
    தேறுமவரகத்தினிற்குந்திருக்குளந்தைப்பதியானே. - 73


    பதிகடாறுஞ்சென்றேத்திப்பரகதிக்குவழிதேடேன்
    மதியுடையநின்னடியார்வழித்தொண்டின்முறைநில்லேன்
    றுதிபெருகுந்தென்குளத்தூர்ச்சுடர்க்கொழுந்தேயடியேனை
    யதிகமாந்தொழும்பேற்றியாட்கொள்வதெவ்வாறே. - 74


    எவ்வாற்றானாய்ந்தாய்ந்துபார்த்திடினுமெயின்மூன்றிற்
    றெவ்வாற்றுந்தொழில்கடந்துதிருக்குளத்தூரமர்ந்தருளி
    யவ்வாற்றைமுடிக்கணிந்தவற்புதனேயல்லாம
    லிவ்வாற்றானிதுதெய்வமெனப்பிறிதுகாணேனே. - 75


    காண்கின்றகண்ணொளியுங்கதிரொளியுமெனக்கலந்து
    பூண்கின்றவதீதநிலைபுலையேற்குங்கிட்டுவதோ
    பாண்கொண்டமதுரமொழிப்பரையமுதவல்லியொடு
    மாண்பொன்றுதிருக்குளத்தூர்மன்னியசீர்மறைப்பொருளே. - 76


    பொருப்பரையனருந்தவத்தாற்புவிதழைப்பவீன்றெடுத்த
    திருப்பரையினுடன்குளத்தூரமர்ந்தருளிச்செங்கரத்து
    நெருப்பரையினக்குமணிநீள்சடைமேலறுகணியும்
    விருப்பரையன்பால்வணங்கார்மெய்யுரையைவேண்டேனே. - 77


    வேண்டாதகொடுந்தக்கன்வேள்வியகத்துடனிருக்க
    மூண்டார்கள்பட்டதெல்லாந்தெரிந்துணர்ந்துமூதறிவோ
    ராண்டானைத்திருக்குளத்தூரமர்ந்தருளியிருவருக்கு
    நீண்டானையிகழ்வாரைநெஞ்சாலுமணுகாரே. - 78


    கார்கொண்டமணிமிடறுங்கருணைபொழிவிழிமூன்று
    நீர்கொண்டசடைமுடியுநிலவொழுகுங்குறுநகையுஞ்
    சீர்கொண்டமுகப்பொலிவுந்திருக்குளந்தைநகராள
    னேர்கொண்டபதாம்புயமுமென்னுளம்விட்டகலாவே. - 79


    அகலாதசீர்க்குளந்தையணிமறுகிற்சோமேச
    ரிகலார்வெள்விடையேறியிசைமுழங்கவிரவெல்லாம்
    பகலாகவெழுந்தருளுந்திருவிழாப்பரிசுதனைத்
    தகவாரத்தரிசித்தோர்தரையிலினிப்பிறவாரே. - 80


    வேறு.
    பிறப்பதுமிருப்பதும்பெரிதுநோயினா
    லிறப்பதுமேதொழிலென்னிலென்செய்வேன்
    சிறப்புறுவளம்பயிறிருக்குளந்தையி
    னறப்பெருஞ்செல்வியோடமர்ந்தவீசனே. - 81


    ஈசனேகுளந்தைவாழிறைவனேகொடும்
    பாசமுந்தண்டமும்பற்றியந்தகன்
    காய்சினத்துடன்வருங்காலைநீயலாற்
    பேசிடினருந்துணைபிறிதொன்றில்லையே. - 82


    இல்லமுமக்களுமெழிலுஞ்சுற்றமுஞ்
    செல்வமுங்கூடவந்திடுவதில்லையே
    நல்லருட்குளந்தையினாதனைத்தொழு
    தல்லலையறுத்திடுமறிவிலீர்களே. - 83


    களிம்புதோய்செம்பெனக்கலந்தமாசினிற்
    பளிங்கெனக்கிடந்தவிப்பாவியேனினித்
    தெளிந்திடத்திருவருள்செய்திடாய்மணி
    விளிம்பிழைத்துயர்மதிற்குளந்தைவேந்தனே. - 84


    வேந்தராயுலகெலாமாளவேண்டினுஞ்
    சாந்தராய்முத்தியைச்சாரவேண்டினு
    மாந்தர்காள்குளந்தையிலிறையைவாழ்த்துமி
    னோர்ந்துளோர்க்கிதுவலாலுறுதியில்லையே. - 85


    இல்லையென்றிழிப்பினுமிரந்துபின்செலும்
    புல்லறிவாளர்காள்குளந்தைப்புண்ணியன்
    மல்குறவிம்மையுமறுமையுந்தருஞ்
    செல்வமென்றறிந்துமென்சேவியாததே. - 86


    தேமலர்ச்சந்திரதீர்த்தமாடிநஞ்
    சோமநாதனுக்கலர்தூய்க்குளந்தையின்
    யாமமாயினும்வதிந்திருக்கப்பெற்றவர்
    காமனைக்காலனைக்காயவல்லரே. - 87


    வல்லுறழ்தடமுலையமுதவல்லியா
    மெல்லியற்றேவியுந்தானுமேன்மைசேர்
    செல்வமாக்குளந்தைபோலெனதுசிந்தையு
    நல்லெழிற்கோயில்கொண்டருளுநாதனே. - 880


    நாதனேபோற்றிதென்குளந்தைநண்ணிய
    போதனேபோற்றிமால்போதனாடொணாப்
    பாதனேபோற்றிவெம்பவந்தொலைத்தருள்
    வேதனேபோற்றியென்விமலபோற்றியே. - 89


    போற்றினோர்மலத்தொகையிரியப்புந்தியின்
    மாற்றருமானந்தவாரிநல்குமா
    லேற்றவன்குளந்தையினிளம்பிறைச்சடை
    நாற்றியபிரான்பெயர்நமச்சிவாயவே. - 90


    வேறு.
    வாயுரைமொழியார் பிறன்பொருள்
          விழைவார் வஞ்சகநெஞ்சகம் பொதிவார்,
    தீயனமகிழ்வார்நல்லனவிகழ்வார்
          செருக்கினாற்றம்மையே மதிப்பார்,
    பேயராமவர்பாலிரந்துசென்றுழலாப்
          பெருவரமொன்றெனக்கருள்வா,
    யாயனேகுளந்தைத்திருநகரமர்ந்தவருட்
          பெருங்கருணைமா மலையே. - 91


    மலைதொறுந் திரிந்தும் வெண்பொடி
          யணிந்து மந்திரமோதியுந் தீர்த்தத்,
    தலைபுனல்குடைந்து மொழுக்கினிற்றவறா
          தற்புததவம்பலபுரிந்துஞ்,
    சிலைவரையாகவளைத்தருள் குளந்தைச்
          சிவபிரான் முடிதவழொற்றைக்,
    கலையவனடியார்தமையிகழ்ந்துரைப்பார்
          கயவரிற்கயவ ராகுவரே. - 92


    ஆகுதிப்புகைபோ யமரரைவிளிக்கு-
          மந்தணர்குழாம்பயில்குளத்தூ,
    ராகுவாகனனைக் குமரனைப்பயந்த-
          வண்ணலா ரடியவர்க்கடியா,
    ராகுமெய்த்தவத்தோரூழிபேர்ந்திடினுமசை-
          விலாநிலையராய்ப்பிறவி,
    யாகுலந்தூர்ப்பார்யாரவர்பெருமையறிந்-
          தெடுத்தோதவல்லவரே. - 93


    வல்லையேன்மனமேமாயமாமுடல-
          வாழ்க்கையைக் கடந்துபேரின்ப,
    வெல்லையைத்தலைப்பட்டிருப்பதற்குறுதி
          யியம்புவன்றிருக்குளத்தூர்வாழ்,
    கொல்லைமான்மறிசேர்கையவனடியார்
          குரைகழல்கொண்டுபூண்டுறைதி,
    முல்லைவாணகையார்மையலையறுக்க-
          முயலுதியிது வுனக்கறிவே. - 94


    அறிவிலாமாந்தர்நல்லனென்றுரைக்க-
          வல்லனென்றுரைக்க மற்றவராற்,
    செறிபயனுளதோ நெஞ்சமேகுளத்தூர்ச்
          சிவபிரானொருவனேயகத்துப்,
    பிறிவிலாத்துணையாயுடனிருந்தறிந்து
          பெரும்பயனளிப்பவனவனே,
    நெறியினாலறியவேண்டுமென்றிதனை
          நினைந்திடாய் நன்று நின்னறிவே. - 95


    நின்னையும்பொருளாய் மதிப்பரோபெரியோர்
          நெஞ்சமேதிருக்குளத்தூர்வாழ்,
    சென்னியாறமைத்த புராணனைமறந்துஞ்
          சிந்தனைசெய்யுமாறறியாய்,
    மன்னியவழுக்குங்குருதியுமெலும்பு
          மச்சையுமிறைச்சியுமயிருந்,
    துன்னியமுடைத்தோன்மலப்பொதியிதனைச்
          சுகமெனவிரும்பிமேவினையே. - 96


    வினையினுக்கமைந்தபயன்வருமல்லான்-
          மிகைகுறையாகுமோ வறிதே,
    யினைவதாற்பயனின்றெனப்பிறரெவர்க்கு-
          மெடுத்தெடுத்தோது மாறறிவாய்,
    தினையளவேனுநீதெளிந்திலையாற்
          றிண்ணியநெஞ்சமேசீசீ,
    யுனையுமோர்துணையாக் கொள்வரோகுளந்தை
          யுத்தமன்கருணை பெற்றவரே. - 97


    பெற்றவர்பிறந்தாருடன்பிறந்தவர்கள்
          பெயர்குலங்காணிசெல்வங்க,
    ளுற்றவரென்னுமயக்கிவையனைத்து
          முடம்பிதுகழிந்தபினுளவோ,
    பற்றிடுஞ்சிலநாள்வாழ்க்கையைநிலையாப்-
          பரிந்தனை போலுநீநெஞ்சே,
    யெற்றையுந்துணையாயிருப்பதுகுளத்தூ-
          ரெம்பிரான்றிருவடியன்றே. - 98


    அன்றுதொட்டிதுநாளளவுமாணவத்தானறி-
          விழந்தழுங்கியநெஞ்சே,
    யுன்றனக்குயிராயுடனிருந்துணர்த்து-
          முண்மையையின்னமுமுணரா,
    யென்றினித்தெளிவா யெதிர்ந்தவர்புரங்க
          ளெரியெழக்குறுநகைமுகிழ்த்த,
    கொன்றைவார்சடையான் றிருக்குளத்தூரிற்
          குலாவினோன் றிருவருள்கொண்டே. - 99


    கொண்டலுஞ்சமழ்ப்பக்கவிஞருக்குதவுங்-
          கொள்கையோர்குழாம்பயில்கீர்த்தித்,
    தண்டகநாடுங்குளந்தையும்வாழ்க
          சாரமுதாம்பிகைவாழ்க,
    வண்டர்கோன்சோமநாயகன்வாழ்கவ-
          வன்றிருவடித்தொழிற்குரிய,
    தொண்டர்பார்மீதெண்செல்வராய்
          வாழ்ந்துதுதியொடும்பெறுகமெய்ச்சீரே. - 100

    ஆகச்செய்யுள் 101
    குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி முடிந்தது.

    மெய்கண்டதேவர் திருவடி வாழ்க.
    சிவஞானயோகிகள் திருவடி வாழ்க.
    ------------------------------

Comments