Nāmakkal kaviñar irāmaliṅkam piḷḷai pāṭalkaḷ III


நாட்டுப் பாடல்கள்

Back

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் III
புரட்சி கவிஞர் பாரதிதாசன்



Namakkal kavinjar V. Ramalingam Pillai (1888-1972) pATalkaL- part III
(in Tamil Script, TSCII format)
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - மூன்றாம் பாகம்
பாடல்கள் 181- 251


9. இசை மலர்

181. சத்தி தோத்திரம்

பல்லவி
சத்தி எனக்கே அருள்வாய்--பரா
சத்தியென் தாயுனை நித்தமும் தொழுதனன். (சத்தி)

அநுபல்லவி
பத்தியோ டுன்றனைப் பணிந்திடல் மறந்தேன்
பாரினிற் சுகமெல்லாம் நீயெனெத் தெரிந்தேன்
இத்தின முதலுன்றன் இணையடி புரிந்தேன்
இனிமேற் பிணியில்லை கவலைகள் துறந்தேன்! (சத்தி)

சரணங்கள்
நோய்களைத் தடுத்திட நுண்ணிய அறிவும்
நொந்தவர் தங்களைக் காத்திடப் பரிவும்
மாய்வதைக் குறைத்திட மருந்துகள் முறிவும்
மந்திர தந்திர மணியவை தெரியும் (சத்தி)

கல்லினும் கட்டுடைய தேகம்எற் கருள்வாய்
காலனை ஜெயித்திடும் கருணையும் தருவாய்
சொல்லிலும் செயலிலும் தூய்மையைத் தருவாய்
சோம்பலை யோட்டிநற் சுகமெனக் கருள்வாய் (சத்தி)

புண்ணிய பாவமென்றன் இச்சையிற் கடந்தே
பூதங்கள் ஐந்தும்மென் சொற்படி நடந்தே
எண்ணிய யாவுமென்றன் இஷ்டப்படி முடிய
ஈன்றவ ளேஉன்றன் அருள்வரத் தடையோ? (சத்தி)

182. ஒரு நாளைக்கு ஒரு தரம்

பல்லவி
ஒருநாளைக் கொருதரம்
ஒருநொடிப் பொழுதேனும்
உன்னைப் படைத்தவனை
எண்ணிச் சுகித்த துண்டோ? மனமே! (ஒரு)

அநுபல்லவி
திருநாளும், தேரும்என்று தேடி யலைந்தல்ல
சிந்தனை அலையாமல் தியானத்தில் நிறுத்தியே (ஒரு)

சரணங்கள்
விடியுமுன் விழித்தனை
வெளுக்குமுன் வீட்டை விட்டாய்
வெவ்வேறாம் இடத்துக்கு
வெளவால்போல் ஓட்டமிட்டாய்
உடலும் மனமும் சோர்ந்து
ஓய்ந்திட வீடுவந்தும்
உண்ணும் பொழுதுங்கூட
எண்ணம் நிலைப்பதில்லை. (ஒரு)

அரைக்காசுக் கானாலும்
ஒருநாள் முழுதுங்காப்பாய்
ஆயிரம் பேரையேனும்
அலுப்பின்றிப் போய்ப்பார்ப்பாய்
உரைப்பார் உரைகட்கெல்லாம்
உயர்ந்திடும் செல்வனை
உன்னுள் இருப்பவனை
எண்ணிட நேரமில்லை! (ஒரு)

சிலநாளைக் கதிகாரம்
செய்யும் ஒருவர்க்கஞ்சிச்
செய்யச்சொல் வதையெல்லாம்
செய்வாய்நீ பல்லைக்கெஞ்சி;
பலநாளும் ஜென்மமெல்லாம்
பாலிக்கும் அதிகாரி
பரமனை நினக்கவும்
ஒருகணம் உனக்கில்லை! (ஒரு)

'நாளும் கிழமை'யென்று
நல்லவர் உரைத்தாலும்
'நாளைக்கு ஆகட்டும்
வேலை அதிகம்'என்பாய்!
பாழும் பணத்தைத்தேடிப்
படும்பாடு கணக்கில்லை.
பகவானை எண்ணமட்டும்
அவகாசம் உனக்கில்லை! (ஒரு)

183. இந்திய தாய் தோத்திரம்

பல்லவி
தாயே வந்தனம்!--இந்தியத்
தாயே வந்தனம்!

அநுபல்லவி
தாரணி தன்னில் வேறிலை இணையெனப்
பூரண வளந்திகழ் புண்ணிய பூமியெம் (தாயே)

சரணங்கள்
நிலவளம் நீர்வளம் நிறைந்ததுன் நாடு;
நீண்டஉன் பரப்பிலும் வேறிலை ஈடு;
விலையிலும் விளைவிலும் மலிந்ததுன் தேசம்;
வேண்டிய யாவும்உன் எல்லையில் வாசம். (தாயே)

முப்பதும் பத்துமாம் கோடிஉன் மக்கள்;
மூவுல கத்தையும் ஆண்டிடத் தக்கார்;
அற்புத மாகிய ஆற்றல்கள் நிறைந்தாய்
அறியாத் தனத்தால் அடிமையில் இருந்தோம். (தாயே)

படையெடுத் தவரும் பசியெடுத் தவரும்
பற்பல நாட்டார் உனையடுத் தவரை
அடைவுடன் அத்தனை பெயரையும் தாங்கி
ஆதரித் தாண்டஉன் அருங்குணம் ஓங்க (தாயே)

பாஷைகள் பற்பல படித்தவள் நீயே
படித்ததன் பயன்பெறும் நடத்தையுள் ளாயே
ஆசைகள் அகற்றிய அறங்களிற் சிறந்தாய்
அன்பின் வழிகளை அனைத்தையும் அறிந்தாய். (தாயே)

ஞானமுங் கலைகளுக் கிருப்பிட மாவாய்
நாகரி கத்தின் பிறப்பிட மாவாய்
தானமும் தவங்களைத் தாங்கின துன்கை
தருமம் யாவையும் தழைத்தது மிங்கே. (தாயே)

மதவெறிக் கொடுமையை மாற்றும்உன் பொறுமை
மற்றவர் மதத்தையும் போற்றுமுன் பெருமை
சதமெனும் சத்திய சாந்தியை உரைப்பாய்
சன்மார்க் கத்தவர் சிந்தையில் இருப்பாய். (தாயே)

184. கடவுளை அறிந்தவர்

பல்லவி
அவரே கடவுளை அறிந்தவராவர்
அனைவரும் மதித்திடத் தகுந்தவராவர் (அவரே)

அநுபல்லவி
துன்பப் படுவோர் துயரம் சகியோர்
துடிதுடித் தோடி துணைசெயப் புகுவார்
இன்பம் தனக்கென எதையும் வேண்டார்
யாவரும் சுகப்பட சேவைகள் பூண்டார் (அவரே)

சரணங்கள்
பசியால் வாடின எவரையும் பார்த்துப்
பட்டினி தமக்கெனப் பரிதபித் தார்த்து
விசையாய் முடிந்ததை விருப்புடன் கொடுப்பார்
வீண்உபசாரம் விளம்புதல் விடுப்பார் (அவரே)

நோயால் வருந்திடும் யாரையும் கண்டு
நோன்பெனச் செய்வார் எல்லாத் தொண்டும்
தாயாம் எனவே தம்சுகம் எதையும்
தள்ளிவைத் தருகினில் தானிருந் துதவும். (அவரே)

185. சத்தியம் மறந்தனை

பல்லவி
சத்தியம் மறந்தனை சாந்தம் குறைந்தனை
சத்யாக்ரஹம் விட்டு மனமே!

அநுபல்லவி
உத்தம விழியினை உலகினுக் குணர்த்திட
உன்னை யன்றோ நம்பி யிருந்தேன்?

சரணங்கள்
உடல்பொருள் ஆவியும் உண்மைக்குத் தத்தம் என்றே
ஓயாமல் உரைத்தனை மனமே!
கடல்பெரும் பயன்வந்து கைகூடும் சமயத்தில்
கைவிட நினைத்தனை மனமே! 1

அதிகார அகந்தையை அகற்றிட வேண்டுமென்றே
அதற்கென்றே முன்வந்தாய் மனமே!
சதிகார ருடன்சேர்ந்தே அதிகார வெறிகொண்டு
சங்கற்பம் மறந்தனை மனமே! 2

அன்பின் வழிநடந்தே அறங்கள் நிலைநிறுத்த
அர்ப்பணம் நான்என்றாய் மனமே!
துன்பம் மிகக்கொடுக்கும் ஆசைகள் தூண்டிட
தூய்மையிற் குறைந்தனை மனமே! 3

186. உண்மை வளர்ந்திடாமல்

பல்லவி
உண்மை வளர்ந்திடாமல் ஒழுக்கம் உயர்ந்திடாமல்
உண்டோ சுதந்தரமே? (உண்)

அநுபல்லவி
பெண்மை நிறைந்தவெறும் பேதைகள் பக்தியென்ற
பேச்சுக்கோ அளவில்லை சீச்சீஇதென்ன தொல்லை; (உண்)

சரணங்கள்
அதிகாரம் செலுத்திடும் ஆசை மிகவுண்டு
அதனாலே பணம்சேர்க்கும் ஆத்திரமே கொண்டு
எரிகின்ற வீட்டிலே எடுத்தது லாபமென்னும்
எண்ண முடையவர்க்கு நண்ணுமோ சுதந்தரம்? (உண்)

நாவினிற் சுதந்தரம் நாட்டம் பணத்தில்குறி
நல்லதோ பொல்லாதோ வந்தவரையில்சரி
பாவபுண் ணியமெல்லாம் பண்டைக்கா லத்துப்பேச்சு
பாதகம் குறையாமல் பாவனை எதற்காச்சு? (உண்)

சாத்திரம் வேதமெல்லாம் நாத்திகத் தாடுது
சாமிகள் கோவிலிலே தாமங்கே வாடுது
மாத்திரை அளவேனும் மனதில் நினைவில்லார்க்கு
மங்கள சுதந்தரம் எங்கே வருமவர்க்கு? (உண்)

187. தருணம் இதுவே

பல்லவி
தருணம் இதுவே, தருமம் இதுவே,
தமிழா! எழுந்திரடா.

அநுபல்லவி
கருணையின் வடிவாம் கலைகளின் முடிவாம்
காந்தியென் றொருமுனி 'சாந்தி'யென் றழைக்கிறார். (தரு)

சரணங்கள்
வள்ளுவர் வாழ்க்கையும் திருக்குறள் வகுத்ததும்
தள்ளருள் தாயுமா னவருடல் தகித்ததும்
வள்ளலி ராமலிங்க சுவாமிகள் வடித்ததும்
கள்ளமில் பட்டினத்தார் கவலையும் இதற்கே. (தரு)

சைவர்கள் பூண்டதும் சமணர்கள் மாண்டதும்
வைணவர் வருத்தமும் புத்தர்கள் வாட்டமும்
மையற ஏசுதான் சிலுவையில் மரித்ததும்
மஹம்மது நபியவர் மகிழ்ந்ததும் இதற்கே. (தரு)

கம்பன் கவித்திறமும் வில்லியின் சந்தமும்
செம்பொருள் சேக்கிழார் தேடத் தெரிந்ததுவும்
பைம்பரஞ் சோதியார் பாடிகப் பகர்ந்ததுவும்
நம்பின யாவரும் நவின்றதும் இதுவே. (தரு)

நால்வர் தேவாரமும் ஔவைநன் மொழிகளும்
ஆழ்வா ராதியர் அனுபவ உரைகளும்
பால்வரும் திருப்புகழ் ஆதிய பனுவலும்
மேல்வரும் கதிக்கென விளம்பிய திதுவே. (தரு)

யாகங்கள் முயன்றதும் யோகங்கள் பயின்றதும்
மோகங்க ளைவிடுத்த முனிவரர் பற்பலர்
சாகங்க ளைப்புசித்துத் தவங்கிடந் துழன்றதும்
ஆகமம் பற்பலவும் அலைந்ததும் இதற்கே. (தரு)

188. சுதந்தரச் சூரிய உதயம்

பல்லவி
சுதந்தரச் சூரியன் உதிக்கிற நேரம்
தூங்காதே தமிழா! (சுதந்)

அநுபல்லவி
விதம்வித மாகிய புதுமணம் விரிந்திடும்
விண்ணொளி தனிற்பல வண்ணங்கள் தெரிந்திடும் (சுதந்)

சரணங்கள்
அடிமை கொடுத்தஇருள் அகன்றிடப் போகுது
ஆசைப்ப டிநடக்க வெளிச்சமும் ஆகுது
கொடுமை விலங்கினங்கள் குகைகளுக் கோடிடும்
கொஞ்சும் பறவைக்குலம் வானத்தில் பாடிடும் (சுதந்)

ஒடுக்கும் தரித்திரத்தால் உடலும் குறுகிநின்று
உள்ளவர் முன்னிருந்தே உளறும் எளியரைப்போல்
நடுக்கும் குளிர்ப்பயமும் நம்மைவிட்டகன்றிடும்
நாட்டினில் இச்சைப்படி நம்குடித் தனம்செய்வோம். (சுதந்)

உரிமை சிறிதுமின்றி ஊரைப்ப றித்துஉண்டே
உழைப்பின்றிச் சுகித்திடும் ஊனரைப் போல்இருட்டில்
திரியும் திருடர்பயம் தீர்ந்திடும் நேரம்இனித்
தீனரும் அச்சம்விட்டே ஆன சுகங்கள்பெறும். (சுதந்)

189. சும்மா கிடைக்குமோ?

பல்லவி
சும்மா கிடைக்குமோ சுதந்தர சுகமது--மனமே!

அநுபல்லவி
சுத்தமும் பக்தியும் சத்தியம் இல்லாமல்
சூரமும் வீரமும் சொல்லுவ தால்மட்டும் (சும்மா)

சரணங்கள்
உழுது பயிரிடாமல் உணவுகள் கிடைக்குமோ?
உழைப்பும் களைப்புமின்றி உரிமைகள் அடுக்குமோ?
அழுது அழுதுருகி அன்பின்கண் ணீர்பெருக
ஆர்வத்தால் அனைவர்க்கும் சேவைகள் செய்யாமல். (சும்மா)

என்னுடைச் சுகங்களில் இம்மியும் குறையாமல்
எல்லாரும் தியாகம்செய்ய இல்லையென் றேசுவேன்
'சொன்னதைச் செய்வதும் செய்வதே சொல்வதும்'
சுலபமோ நான் அந்தச் சுத்தத்தில் குளிக்காமல். (சும்மா)

ஒற்றுமை பேசுவேன் உடன்கூடி நிற்காமல்
ஒவ்வொரு சமயத்தில் வெவ்வேறு சொல்லுவேன்
கற்றஎன் வித்தையை காட்டின தேயன்றிக்
கசிந்து கசிந்துருகிக் காரியம் செய்யாமல். (சும்மா)

சத்தியம் சாந்தமென்பேன் சட்டென் றதைவிடுத்துச்
சரித்திரப் படிஅது சரியல்ல வென்றுசொல்வேன்
வைத்தஎன் கொள்கையில் வைராக்ய மில்லாமல்
வார்த்தைக்கும் செய்கைக்கும் வேற்றுமை விலகாமல் (சும்மா)

190. திருமுடி சூட்டிடுவோம்

பல்லவி
திருமுடி சூட்டிடுவோம்--தெய்வத் தழிழ்மொழிக்கு! (திரு)

அநுபல்லவி
வருமொழி எவருக்கும் வாரிக் கொடுத்துதவி
வண்மை மிகுந்ததமிழ் உண்மை உலகறிய (திரு)

சரணங்கள்
பெற்றவ ளைஇகழ்ந்து மற்றவ ரைத்தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்ற அரசிழந்தே உரிமை பெருமை குன்றி
உள்ளம் வருந்தினதால் பிள்ளைகள் சீர்குலைந்தோம்! (திரு)

அன்னையை மீட்டும்அவள் அரியணை மீதிருத்தி
அகிலம் முழுதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்!
முன்னைப் பெருமைவந்தே இன்னும் புதுமைபெற்று
முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே! (திரு)

தாயின் மனம்குளிர்ந்தால் தவம்அது வேநமக்கு
தாரணி தன்னில்நம்மை யாரினி மேல்இழ்வார்?
நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
நூலும் கலைகளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம். (திரு)

191. கோலாட்டாம்

பல்லவி
கொஞ்சும் கிளிமொழிக் கோதைய ரேநாம்
கூடி யாடுவோம் கோலாட்டம்.

அநுபல்லவி
மிஞ்சும் பலவித நோய்களைத் தடுத்திட
மெல்லிய ரேவழி சொல்லிடுவோம். (கொஞ்)

சரணங்கள்
நோய்கள் மிகுந்தது எதனா லேயென்று
நுண்ணறி வோடதை எண்ணிடுவோம்
தாய்கள் குழந்தையை வளர்த்திடும் வழிகளைச்
சரிவரச் செய்திடத் தெரிவதில்லை. (கொஞ்)

பிஞ்சில் வெம்பிய காய்கறி யென்றும்
பெரிதாய்ச் செழித்ததைக் கண்டதுண்டோ?
அஞ்சில் கெட்டது ஐம்பது வயதிலும்
அழியா திருப்பினும் செழியாது. (கொஞ்)

தாயுந் தந்தையும் தவறுசெய் தாலது
தனையரைச் சேர்வது பொய்யாமோ?
சேயைச் சிசுவினில் கவனிக் காவிடில்
சென்மத் தால்வரும் நன்மையுண்டோ? (கொஞ்)

பிஞ்சில் வெம்பிய தவறுசெய் தாலது
தனையரைச் சேர்வது பொய்யாமோ?
சேயைச் சிசுவினில் கவனிக் காவிடில்
சென்மத் தால்வரும் நன்மையுண்டோ? (கொஞ்)

கருவில் வளர்ப்பார் கடவுள்; பூமியைக்
கண்டபின் வளர்ப்பது நாமன்றோ?
அறிவின் நாமதை அறிந்தே வளர்த்திடில்
ஆயுள் நீண்டிடும் நோயுமில்லை. (கொஞ்)

விதியாற் சாவதும் இருந்தா லும்பலர்
வீணாய்ச் சாவதும் உண்டென்றும்
மதியால் நாமதை மாற்றிட லாமென்ற
மாமுனி யவர்மொழி இகழாதே. (கொஞ்)

192. சுகாதாரக் கும்மி

கும்மி யடிபெண்ணே கும்மிய டிகுல
தெய்வத்தைக் கும்பிட்டுக் கும்மியடி
நம்முடைத் தேசத்தில் நோய்களில் லாமலே
நாடு செழித்திட வேணுமென்று. 1

செத்தவர் தம்மை எழுப்பித் தரவல்ல
சித்த ரிருந்த திருநாட்டில்
எத்தனை யெத்தனை நோய்களி னால்மக்கள்
ஈசலைப் போல மடிவதென்ன! 2

ஈச னளித்த அறிவிடுந் தும்நல்ல
இயற்கை விதிகளை விட்டுவிட்டு
மோச மிருந்த பகட்டுடை வாழ்க்கையில்
மோகம்வைத் தேஇந்த மோசமுற்றோம்! 3

சுத்த உணவிலும் சுத்த உடையிலும்
சொன்ன விதிகளை விட்டு விட்டோம் ;
நித்தங் குளிப்பதும் பத்தியங் காப்பதும்
மெத்தக் குறைந்தது தேசத்திலே. 4

காலையி லெழுந்து நீராடல் கொஞ்சம்
கர்த்தனை யெண்ணித் துதிபாடல்
மாலையி லோடி விளையாடல் இந்த
மார்க்கத்தை விட்டனர் மக்களெல்லாம். 5

அளவை யறிந்து புசிப்பதில்லை தங்கள்
அளவை யளந்து வசிப்பதில்லை
களவுக்குப் பின்னால் கதவை அடைப்பவர்
காரியம் போலடி கண்மணியே! 6

நல்ல வழக்கங்கள் உள்ளவர் தங்களை
நாடுமோ நோய்களும் எந்நாளும்?
நல்ல வழக்கங்கள் நாளும் வளர்ந்திட
நாடு செழித்திட வேணுமடி. 7

193. தீர்க்கதரிசி

பல்லவி
தீர்க்க தரிசிசொன்ன மார்க்க மதனைவிட்டுத்
திரும்புவ தென்ன மனமே! (தீர்க்)

அநுபல்லவி
பார்க்குள் பெரியவர்கள் பார்த்த அனுபவத்தைக்
காக்கும் படியுதித்த காந்தி யெனும்பெரிய (தீர்க்)

சரணங்கள்
ஆண்மை மறந்தவர்க்கும் ஆளும் திறமையுண்டோ?
அன்பைத் துறந்தவர்க்கும் இன்ப நிலையுமுண்டோ?
பான்மை அறிந்திருந்தும் மேன்மை வழியைவிட்டுப்
பற்பல எண்ணிஎண்ணி அற்பத் தனத்திற்பட்டு (தீர்க்)

அன்பிற் குயிர்விடுதல் ஆண்மை யதுவேயாகும்;
ஆசை அதிகப்பட்டால் ஆளும் திறமைபோகும்;
துன்பம் சகித்துப்பெற்ற தூய்மை மிகுந்திடும்
துறவி உனக்குச்சொன்ன அறவுரை இகழ்ந்தனை. (தீர்க்)

உண்மை யுறுதியின்றி உண்டோசு தந்தரம்?
உயர்ந்த ஒழுக்கமின்றி வேறுள்ள தந்திரம்
என்னென்ன செய்திடினும் ஏதும் பலித்திடுமோ?
என்னும்பொய் யாமொழியைச் சொன்ன பெருந்தவசி (தீர்க்)

194. நல்ல வழி

பல்லவி
நல்ல வழியிருக்க அல்லல் வழிநினைத்து
நாளும் அலைந்தாய் நெஞ்சமே! (நல்ல)

அநுபல்லவி
தொல்லை முனிவரர்கள் சொல்லிய வழியது
சுதந்தர நாட்டிற்குச் சொல்லுதற் கெளியது. (நல்ல)

சரணங்கள்
கடியும் புலிகரடி கொடிய மிருகமில்லை
கள்வர்கள் பயமில்லை பள்ளம்மே டுள்ளதல்ல
குடியுங் கொலைகளவும் அடியும் வழிப்பறியும்
கொஞ்சமும் அதிலில்லை நெஞ்சமே நீசெல்ல. (நல்ல)

கோபமென் னும்வெயிலின் தாபமங் கடிக்காது
குரோதமெ னும்பனியின் குளிர்வந்து நடுக்காது
சாபம் பிறர்க்குச்சொல்லும் தாகமும் எடுக்காது
சங்கடப் பேய்கள்நம்மை அங்கே தும் தடுக்காது. (நல்ல)

நாடும் மதங்களெல்லாம் கூடும்அவ் வழிசென்று
நாலிரு வழிகட்கும் நடுவா னத்துவொன்று
பாடும் மறைகளெல்லாம் தேடும் அதனையென்றும்
பத்தி யுடையவர்க்குப் பாதை மிகவும்நன்று. (நல்ல)

ஆய்ந்த பெரியவர்கள் தேர்ந்ததும் அவ்வழி
ஆனந்த சுதந்தரம் போனவர்க் கங்குவெளி
காந்தி முனிவன்சொல்லும் சாந்தமென் றொருமொழி
காட்டிய வழிசென்றால் வீட்டை யடைவாய்தெளி. (நல்ல)

195. தேசத் தொண்டு

பல்லவி
தேசத் தொண்டுகள் செய்திடுவோம்
தெய்வம் துணைவரக் கைதொழுவோம். (தேசத்)

அநுபல்லவி
நம்முடை நாட்டை நாம்ஆள
நன்மைகள் முன்போக் இனிமீள
எம்முடைய ராஜ்ஜியம் இதுவென்றே
இந்தியர் மகிழ்ந்திடச் சொந்தமென்றால். (தேசத்)

சரணங்கள்
பஞ்சக் கொடுமையை ஒழித்திடவும்
பாரத நாடினிச் செழித்திடவும்
அஞ்சும் அடிமைத் தனம்நீங்கி
அன்பின் ஆண்மை வேண்டுமென்றால் (தேசத்)

சோறும் துணியும் இல்லாமல்
சோம்பியங் கெவரும் நில்லாமல்
வீறும் புதுமைப் பொதுவாழ்வின்
விடுதலை யின்பம் வேண்டுமென்றால் (தேசத்)

பட்டினி கிடப்பவர் இல்லாமல்
படிக்கா தவரெனச் சொல்லாமல்
எட்டின மட்டிலும் எல்லாரும்
இன்புறும் ராஜ்ஜியம் தென்படவே. (தேசத்)

இந்தியர் எல்லாம ஒருஜாதி
யாருக்கும் இங்கே ஒருநீதி
நொந்தவர் ஒருவரும் இல்லாத
நூதன அரசியல் உண்டாக்க (தேசத்)

ஜாதிக் கொடுமைகள் நீங்கிடவும்
சமரச உணர்ச்சிகள் ஓங்கிடவும்
நீதிக் கெல்லாம் இருப்பிடமாய்
நிற்குமோர் அரசியல் உருப்படவே (தேசத்)

வரிகளை யெல்லாம் குறைத்திடவே
வரும்படி விளைவுகள் நிறைத்திடவே
விரிகிற பொதுப்பணச் செல்வையெல்லாம்
வெட்டிச் சிக்கனம் தொட்டிடவும் (தேசத்)

பணத்தின் பெருமையைப் போக்கிவைப்போம்
பண்டங் களின்விலை தூக்கிவைப்போம்
குணத்தின் பெருமைகள் இல்லாத
குலமும் பிறிதினிச் செல்லாது. (தேசத்)

மனிதனை மனிதன் ஏய்ப்பதையும்
மக்களைப் போரில் மாய்ப்பதையும்
தனியரு வழியில் தடுத்திடஓர்
தருமம் உலகினில் தழைத்திடவே. (தேசத்)

சத்திய வாழ்வினை நாடுதற்கும்
சாந்தப் பெருமைகள் கூடுதற்கும்
உத்தமக் காந்தியின் உபதேசம்
உலகுக் கோதும் நம்தேசம். (தேசத்)

தாழ்ந்தவ ரென்பவர் இங்கில்லை;
தரித்திரம் நமக்கினிப் பங்கில்லை;
வாழ்ந்திடும் வரையிலும் புகழ்செய்வோம்
வானிலும் உயர்வாய் வாழ்ந்திடுவோம். (தேசத்)

196. கண்டதுண்டோ சொல்லுவீர்?

பல்லவி
கண்டதுண்டோ சொல்லுவீர்--எங்கள்
காந்தியைப் போல்ஒரு சாந்தனை இவ்வுலகம் (கண்)

அநுபல்லவி
எண்டிசை எங்கணும் மண்டலம் முழுதிலும்
இந்தச் சரித்திரம்போல் எந்தக் கதையும் உண்டோ? (கண்)

சரணங்கள்
பண்டைக் கதைஎதிலும் படித்திலம் இவர்போல்
பக்தி வைராக்கியம் சுத்தச் செயல்படைத்தோர்
தொண்டர் குலத்துக் கெல்லாம் துணைதரும் பெருந்தவம்
துறந்தவர் யாவரினும் சிறந்திடப் பிறந்தவர். (கண்)

சித்தத்தைச் சுத்திசெய்ய மெத்தச் சிறந்தவழி
சித்தன்இக் காந்தியின் பக்தி புரிவதுதான்
நித்தம் ஒருதடவை காந்தியை நினைத்திடில்
நிச்சயம் இப்பிறப்பின் அச்சம் அகன்றுவிடும். (கண்)

ராமன் பெயரைச் சொல்லி ஏமனை எதிர்த்தவர்
ரகுபதி ராகவரின் வெகுமதி பலித்தவர்
தேமொழி ராமபக்தன் த்யாகைய சாமியைப்போல்
திவ்விய பகுளபஞ்சமிதினில் தேகம்விட்டார். (கண்)

197. எம்மான் காந்தியை மறப்போமோ

பல்லவி
எண்ணிய தவங்களை எடுத்தது முடித்துள
எம்மான் காந்தியை மறப்போமோ!

அநுபல்லவி
புண்ணிய நதிகளும் கண்ணிய மடைந்தன
புனிதன் அஸ்திகள் புகுந்ததனால் (எண்)

சரணங்கள்
வானமும் வையமும் வணங்கிடும் ஐயன்
வரந்தரும் தேவரும் வரம்பெறும் மெய்யன்
ஞானமும் தவங்களும் நயம்பெறும் துறவி
நால்வகை யோகமும் சால்புறும் பிறவி (எண்)

அண்டமும் சிறிதெனும் அமைதியின் பெருமை
அதைவிடப் பெரிதெனும் அருள்புரி அருமை
கண்டில தாகிய கடவுளின் நிலையை
காட்டிடும் காந்தியின் தெய்வீகக் கலையை. (எண்)

மன்னுயிர் வாழ்ந்திடத் தன்னுயிர் கொடுத்தான்
மாபெரும் கருணையின் பரமனை அடுத்தான்
பொன்னுடல் சுமந்ததும் தீமையைப் போக்க
புகழுடன் இறந்ததும் அறங்களைக் காக்க. (எண்)

198. பகைவனுக்கருள் செய்

பல்லவி
பகைவனுக் கருள்தர மிகமகிழ் காந்தியைப்
பாடுவ தேதவ மாம். (பகை)

அநுபல்லவி
தகைபெரும் சால்பினை அகமுறப் போற்றிடில்
தரணியில் பகைமை உண்டோ? (பகை)

சரணங்கள்
மனிதப் பிறவிகளை மிருகங்கள் ஆக்கிவிட்ட
மாச்சரி யங்களெல்லாம் மறையத்தான் தேகம்விட்ட
புனிதப் பிறவியந்தப் புண்ணியன் காந்தி எண்ணம்
போற்றுவ தேதவங்கள் ஆற்றுவ தாகும்திண்ணம். (பகை) 1

ஆறறி வுள்ளதென்று கூறும் மனிதர்குலம்
அறிவைப் பறிகொடுத்துப் பகைமை வெறிபிடித்துச்
சீறி விழுந்தழியும் சின்னத் தனம்ஒழியும்
சிந்தையில் காந்தியைநாம் வந்தனை செய்துவரின். (பகை) 2

கொஞ்சிக் குலவினர் அஞ்சிப் பதைபதைக்கக்
கூடி வசித்தவரைத் தேடிக் கொலைபுரியும்
நஞ்சிற் கொடியபகை நெஞ்சைவிட் டகன்றிட
நல்லதுணை நமக்கு வல்லவன் காந்தியின்பேர். (பகை) 3

199. கண்ணில் மறைந்து கருத்தில் நிறைந்தவர்

பல்லவி
கண்ணில் மறைந்து மக்கள் கருத்தில் நிறைந்துவிட்ட
காந்தியை மறப்போமா! (கண்)

அநுபல்லவி
மண்ணில் மனிதர்குலம் எண்ணில் நலம்அடைய
மார்க்கம் கொடுக்கும் இந்த தீர்க்க தரிசிகதை. (கண்)


சரணங்கள்
உன்னும் பொழுதிலெல்லாம் உள்ளம் மகிழ்ச்சி பொங்கும்
உண்மையின் அச்சமற்ற தன்மை நிலவித்தங்கும்
பொன்னும் புகழும்பெற பொறுமை இழந்தலையும்
புத்திக் குறைவுகளும் மெத்தத் திருந்தலுறும். (கண்)

பேசும் பொழிதிலெல்லாம் ஈசன் நினைவுதரும்
பேதைமை விட்டொழியும் பேரருள் கிட்டிவரும்
பாசமும் பந்தம் அற்ற பணிகளில் பக்திநண்ணும்
பாரில் மனிதரெல்லாம் யாரும்சமமென் றெண்ணும். (கண்)

கேட்ட வுடன்மனத்தின் வாட்டம் அகன்றுவிடும்
கீழ்மைக் குணங்களெல்லாம் ஓட்டம் பிடித்துக்கெடும்
ஆட்டம் அலைச்சல்தந்த ஆசைகள் ஓய்ந்துவிடும்
ஆண்டவன் சந்நிதியின் ஆனந்த சாந்திதொடும். (கண்)

200. வள்ளல் காந்தி மகான்

பல்லவி
வள்ளுவன் குறள்களை வாழ்க்கையில் நடத்திய
வள்ளல் காந்தி மகான் (வள்ளு)

அநுபல்லவி
தெள்ளிய அறிவெனும் திருக்குறள் அறங்களைச்
செய்தவர் யாரெனும் ஐயம் அகன்றுவிட (வள்ளு)

சரணங்கள்
ஒன்றாய் நல்லது கொல்லா விரதமும்
உயர்வால் அடுத்தது பொய்யாச் சரதமும்
என்றார் அதன்படி இவர்போல் நடந்தவர்
எவரும் இலரெனப் புவனம் வியந்திட (வள்ளு)

இன்னா செய்தவர்க்கும் இனியவை புரிந்தவன்
இறப்பினும் பிறஉயிரை எடுப்பதை மறந்தவன்
பொன்னே கொடுப்பினும் புகழே கிடைப்பினும்
புண்ணியம் நீங்கின எண்ணமும் விடுபவன். (வள்ளு)

துறவறம் வியந்திட இல்லறம் தொடர்ந்தவன்
துன்பங்கள் இடையிலும் இன்பங்கள் அடைந்தவன்
பெறலரும் வெற்றிகளைப் பிழையற்ற நல்வழியில்
பெற்றவர் காந்தியைப்போல் மற்றவர் இல்லையென. (வள்ளு)

201. சபதம் செய்துகொள்வோம்

பல்லவி
சபதம் செய்துகொள்வோம்--காந்தி
சந்நிதி முன் இந்த (சபதம்)

அநுபல்லவி
சத்திய சோதனை மெய்த்தவம் ஆற்றிய
உத்தமன் காந்தியின் பக்தியின் நித்தமும் (சபதம்)

சரணங்கள்
ஜாதியில் எவரையும் தாழ்வெனக் கருதோம்
சமமுற யாவரும் சுகமுறத் தருவோம்
போதைகள் எதையும் பொருளெனத் தீண்டோம்
பூமியில் எவருக்கும் தீமையை வேண்டோம். (சபதம்)

உண்மைகள் அல்லன உரைத்திட மாட்டோம்
உயிர்க்கொலை செய்வதைப் பொறுத்திட மாட்டோம்
பெண்மையின் பெருமையைக் கெடுப்பதும் எண்ணோம்
பிறமத தூஷணை தொடுப்பதும் பண்ணோம். (சபதம்)

உழவையும் தொழிலையும் உயிரெனக் காப்போம்
உழைப்பின்றிச் சுகிப்பதையும் பழிப்புடன் பார்ப்போம்
தொழுதுண்டு வாழ்வதைத் துச்சமென் றிகழ்வோம்
தோட்டியின் வேலையும் மேலெனப் புகழ்வோம் (சபதம்)

202. கவலைகள் சிதையும் கதை

பல்லவி
காலையும் மாலையும் காந்தியின் கதையைக்
கருத்துடன் படிப்பவர் கவலைகள் சிதையும் (காலை)

அநுபல்லவி
மேலுள பரம்பொருள் மீதுளம் பொருந்தும்
மீறிய வெறிகளும் ஆறிடத் திருந்தும் (காலை)

சரணங்கள்
நூலுரை கல்வியும் நுணுங்கிய கேள்வியும்
நோக்கிடும் நலங்களைச் சீக்கிரம் அடைந்திட
மாலுறும் மதவெறி மமதைகள் தெளியும்
மரணம் என்பதன் அச்சமும் ஒழியும். (காலை)

ஒழுக்கமும் சீலமும் உயர்ந்திடும் தினமும்
உத்தம நெறிகளை உகந்திடும் மனமும்
வழுக்கியும் தீயவை வாயில் வராது
வைவது கேட்பினும் வருத்தம் தராது. (காலை)

ஏழைகள் எனச்சொல்லி இழிவுகள் புரியார்
ஏறிய செல்வரும் அழிவுகள் தரியார்
வாழிய யாவரும் வாழ்ந்திட என்றே
வையகம் முழுதையும் வாழ்த்துவர் நன்றே. (காலை)

203. நினைக்க நினைக்க உளம் இனிக்கும்

பல்லவி
நினைக்க நினைக்க இனிக்க இனிக்க இன்பம்
நிறைந்திடுமே எங்கள் காந்தியை நாம் (நினை)

அநுபல்லவி
பனிக்கப் பனிக்கக் கண்கள் ஆனந்த பாஷ்பம் வர
பரமன் தரிசனத்தைச் சிரமமமின்றிப் பெறுவோம் (நினை)

சரணங்கள்
மூப்பெனும் காந்தியிடம் முருகன் இளமை கொஞ்சும்
முன்வர யாவருக்கும் மின்னெனச் சக்தி விஞ்சும்
தாய்ப்பெரும் அன்புசிவம் தாண்டவம் புரிந்திடும்
தரித்திரம் காமனைப்போல் பார்வையில் எரிந்திடும். (நினை)

கர்மபலன் கருதா கண்ணன் நினைவு வரும்
காரிய முயற்சியில் மாருதி ஊக்கம் தரும்
தர்மபலன்க ளெல்லாம் தானம்செய் துயிர்விட்ட
தன்னிகர் அற்ற அந்த கர்ணன் பெருமை கிட்டும். (நினை)

தந்தை சொல் மிக்கதொரு மந்திரம் இல்லையென்ற
தசரத ராமபிரான் நிசமிகும் நேமம் ஒன்றும்
சிந்தையில் கஸ்தூரிபாய் சீதை சிறப்பு பொங்கும்
சிறுமைகள் விட்டொழியும் பெருமை நிரம்பித் தங்கும். (நினை)


204. நிலைகொண்ட மெய்ஞ்ஞானக் கலை தந்தவர்

பல்லவி
நிலைகொண்ட மெய்ஞ்ஞானக் கலைதந்த காந்திக்குச்
சிலைவைத்து விட்டால்மட்டும் சிறப்பாமோ? (நிலை)

அநுபல்லவி
அலைகொண்ட நம்மனத்தில் அவன்கொண்ட செம்மைதங்கி
அதன்படி நடப்பது அதுவன்றோ இனி வேண்டும்? (நிலை)

சரணங்கள்
அச்சிட்டுப் புத்தகத்தில் மெச்சிப் புகழ்ந்துகொட்டி
ஆலயம் கட்டிவைத்துக் கோலங்கள் செய்துவிட்டு
நச்சிட்ட ஆசைகளால் நாளும் அலைந்துழன்றால்
நமக்குத்தான் பயன்என்ன? நாட்டுக்கும்என்ன நன்மை? (நிலை)

பொன்னால் உருவம் செய்து மணிகள் புதைத்திழைத்து
பொழுதுக்கும் முன்நின்று தொழுதாலும் பயன்என்ன?
எந்நாளும் காந்தி வாழ்வை இதயத்தில் வைத்துயார்க்கும்
இம்சை செய்யாதிருந்தால் நம்செயல் அதுபோதும் (நிலை)

குணங்கள் உயரவன்றோ கோயில்கள் கட்டினோம்
கும்பிட்டு விட்டுநித்தம் வம்பிட்டு வாழ்வதுபோல்
குணமென்னும் நலமெல்லாம் குடிகொண்ட இந்நாட்டின்
குலதெய்வம் காந்திக்குச் சிலைமட்டும் போதாது. (நிலை)


205. மனிதப் பிறப்பின் புதுமை

பல்லவி
மனிதப் பிறப்புக்கொரு புனிதப் புதுமைதந்த
மாதவன் காந்தி மகான்

அநுபல்லவி
நினைதற் கரியஒரு மிகவும் புதியநெறி
நித்திய நல்லொழுக்க சத்திய சோதனையால் (மனித)

சரணங்கள்
காட்டில் தனித்திருந்து காய்கனி மூலம்உண்டு
கடுந்தவம் தமக்கென்றே புரிந்த கதைகளுண்டு
நாட்டில் வசித்துப்பிறர் நலத்துக்கென்றே உழைத்த
நற்றவம் காந்தியைப்போல் மற்றவர் யாரிழைத்தார்? (மனித)

உலகைத் துறந்த பின்னும் உடலிற் பிரியம் வைத்தே
ஓடுவர் காய்கற்பம் தேடுவர் காட்டைச் சுற்றிச்
சலுகைப் பிறஉயிர்க்கே; தன்னுயிர் ஆசைவிட்டு
சாதித்த நன்னெறியால் போதித்த பொன்மொழியால். (மனித)

உணவில் கிடைப்பதல்ல உடைகள் கொடுப்பதல்ல
உடலைப் பொறுத்ததல்ல உணர்வைக் கடைப்பிடித்து
மணலில் நதிஅடியில் மறைந்துள்ள ஊற்றினைப்போல்
மக்களுக் குள்ளிருக்கும் சக்தியைப் போற்றினதால். (மனித)


206. காணாத அற்புதங்கள் கண்டது

பல்லவி
காணாத அற்புதங்கள் கண்டதே இவ்வுலகம்
காந்தி மகான் வாழ்வில் (காணா)

அநுபல்லவி
காணாத நல்லறிவைக் கொடுக்கும் அவர்வழியைக்
கொள்ளா விடில்உலகில் கொடுமைகள் குறையாது. (காணா)

சரணங்கள்
பொறுக்கி எடுத்த சொல்லைப் புதுக்கி அமுதம்பூசிப்
புளித்த செவிகள்கூடக் களித்து வியக்கப் பேசி
முறுக்கி எதிர்த்தபேரும் செருக்கை மறந்துஐயன்
முன்வந்து பொன்தந்து சொன்னபடிக்குச் செய்யும். (காணா)

உண்ணா விரதம் கொண்டே உலகை நடுங்கச்செய்து,
ஒவ்வொரு மனிதரும் உள்ளம் திருந்தச் செய்தும்
கண்ணாரக் கண்ட தெய்வம் காந்திஒருவரென்று
கைகுவித் துலகெல்லாம் மெய்சிலிர்த் திறைஞ்சிட (காணா)

கொடுமையை எதிர்த்திடச் சிறைவாசம் சென்றவன்
கொலைஎண்ணாப் போர்செய்து கொடுங்கோலை வென்றவன்
மடமையில் இறுகிய தீண்டாமை மறைந்தது
மதுஎன்ற அரக்கனும் முதுகிட்டுப் பறந்தனன். (காணா)


207. காந்தியை நினை

பல்லவி
காந்தியை நினைப்பதே கடவுளை நினைப்பதாம்
கருத்தினில் இருத்திடுவோம்

அநுபல்லவி
சாந்தமில் லாமல் சமரசம் இல்லை
சமரசம் இலையேல் சந்தோஷம் ஏது? (காந்தி)

சரணங்கள்
சாந்தத்தின் சாகரம் காந்தியின் சரிதம்
சத்திய சேகரம் காந்தியின் விரதம்
தேர்ந்திடில் இதைவிட வேறெது தெய்வம்
தினந்தினம் காந்தியை நினைத்திடில் உய்வோம். (காந்தி)

ஊணிலும் உடையிலும் உரையிலும் சுத்தன்
உள்ளும் புறமும்ஒன்றாம் உண்மையின் பக்தன்
காணரும் கடவுளைக் காட்டிடும் துணைவன்
காந்தியின் வழியின்றிக் கதிஎது இணையாம். (காந்தி)

கொடுமையை வெறுக்கவும் கொலைவழி மறுக்கவும்
கோபக் குரோதங்களின் கூட்டுற வறுக்கவும்
கடுமொழி விலக்கவும் கபடத்தைத் தொலைக்கவும்
காந்தியின் நினைவன்றி மாந்தரின் இலக்கெது? (காந்தி)


208. கருணை வளர்க்க வேண்டும்

பல்லவி
காந்தி உகுத்த ரத்தம் மாந்தர் அகத்திருந்து
கருணை வளர்க்க வேண்டும்

அநுபல்லவி
ஆழ்ந்து குமுறுகின்ற போர்வெறிச் சூதுகளைத்
தூரத் தொலைந்து மக்கள் ஈரம் இரக்கம் பெற (காந்தி)

சரணங்கள்
மோகம் வெறித்தயுத்த மேகப்படலம் நம்மை
மூடிக் கழுத்தறுக்கத் தேடித் திரிகின்றதன்
வேகம் குறைக்கவென்றே தேகம்விடுத்தஐயன்
வீரரும் தீரர்களும் விழுந்து வணங்கும் துய்யன். (காந்தி)

விஞ்ஞானத் திமிர்உந்த வெற்றிக்கு வெறிவந்து
வீண்பட்ட கொலைசெய்யும் நாண்கெட்ட மனிதர்க்கே
அஞ்ஞானம் விட்டொழித்த மெய்ஞ்ஞானம் காட்டஎன்றே
அல்லும் பகலும் எண்ணிச் சொல்லும் செயலும்தந்த (காந்தி)

இதந்தரும் என்றுநம்பிச் சுதந்தரம் நொந்து பெற்றும்
இம்சைமிகுந்து மக்கள் துவம்சம் புரிதல்கண்டு
மதந்தரும் வெறிகளை நிதந்தரப் பார்ப்பதிலும்
மாறுதல் நல்லதென்றே ஆறுதல் சொல்லிமாண்ட. (காந்தி)


209. தெய்வத்தின் நாதம்

பல்லவி
காந்தியின் போதம் கருணைசங் கீதம்!

அநுபல்லவி
தேர்ந்திடில் அதுதான் தெய்வத்தின் நாதம்! (காந்தி)

சரணங்கள்
ராகமும் தாளமும் ரகுபதி அமைப்பு
ரஸனையும் பாவமும் ராகவன் சமைப்பு
வேகமும் கதிகளும் வித்தைப்ர சண்டம்
விரவலும் பரவலும் விஸ்தார அண்டம். (காந்தி)

களைத்தவ ரெல்லாம் செழித்திடும் ஓசை
களித்தறம் மறந்தவர் விழித்திடும் பாஷை
சுளித்தவர் யாவரும் சிரித்திடும் பாட்டு
சூதர்கள் உள்ளமும் தீதறும் கேட்டு. (காந்தி)

கல்வியும் கேள்வியும் களித்துளம் குளிரும்
கலைகளும் புதுப்புது கிளைதரத் துளிரும்
செல்வமும் வறுமையும் சேர்ந்து கொண் டாடும்
சிறுமையும் பெருமையும் செயல்மறந் தாடும். (காந்தி)


210. தேவருள் தெய்வம்

பல்லவி
மனிதருள் தேவன் தேவருள் தெய்வம்
காந்தியை மறக்காதே!

அநுபல்லவி
புனிதருள் புனிதன் பூமியின் விந்தை
பொய்யா நெறிப் புதுமை. (மனித)

சரணங்கள்
நினைவுறும் போதே நெஞ்சகம் குளிரும்
நிறைந்தநம் அகந்தைகள் நீங்கிடும் எளிதில்
சினமெ னும்பகைமை இனமற மறையும்
சீலமும் ஒழுக்கமும் மேலுற நிறையும். (மனித)

வம்புகள் துன்புசெய் வாதுகள் மறப்போம்
வறியவர் நொந்தவர் வாழ்வுறப் புரப்போம்
அன்புகள் செய்திடும் ஆசைஉண் டாகும்
அழிவுகள் செய்திடும் இழிகுணம் போகும். (மனித)

உலகினர் யாவரும் ஒருகுலம் என்னும்
உண்மையை அடிக்கடி உணர்ந்திடப் பண்ணும்
பலவித வெறிகளின் பயித்தியம் தெளியும்
பகவான் விளங்கிடும் காந்தியின் ஒளியால். (மனித)


211. மறந்திடுவாயோ?

பல்லவி
மறந்திடுவாயோ மனமே காந்தியை
மறந்திடுவாயோ?

அநுபல்லவி
அறந்தரும் அண்ணலவன்
மறைந்தனன் கண்ணிலென (மறந்)

சரணங்கள்

பெருந்தவத் தோர்என
அறிந்துள யாரினும்
அருந்திறல் நிறைந்தவன்
அற்புதம் புரிந்தவன். (மறந்)

அவன்பெயர் மொழிந்திடில்
எமன் பயம் ஒழிந்திடும்
தவம் தரும் நலங்களைச்
சுயம்பெற பலம் வரும். (மறந்)

தீமையின் இடையிலும்
வாய்மையும் நடுநிலை
நேர்மையும் நினைப்பினில்
தூய்மையும் பலித்திடும். (மறந்)

பணபலம் நடுங்கிடப்
படைபலம் ஒடுங்கிடக்
குணநலம் கொடுத்தநம்
குலப்புகழ் நிறுத்தினான். (மறந்)


212. நடை தரும் வேதம்

பல்லவி

கடவுளின் தூதன் காந்தி மகாத்மா!

அநுபல்லவி

நடைதரும் வேதம்--ஞான சங்கீதம்!

சரணங்கள்

நினைத்திடும் பொழுதே மனத்துயர் தீரும்
நெருங்கிட உணர்ந்தால் பெருங்குணம் சேரும்
அனைத்துள நேரமும் அவன்கதை ஓதின்
அன்பையும் அருளையும் அறிந்திடப் போதும். (கடவு)

கல்வியும் கேள்வியும் கருதிடும் பயனும்
கருணையின் நிலைசொல்லும் கலைகளின் நயனும்
பல்வித வேள்வியின் பலன்கள் கைகூடும்
பரம்பொருள் தூதன்நம் காந்தியைப் பாடின். (கடவு)

கோபமும் தாபமும் கூண்டோடு மறையும்
கொடுமையும் வணங்கிடும் குணநலம் நிறையும்
மாபெரும் காந்தியின் மகிமையைத் தொழுதால்
மண்டலம் எங்கணும் சண்டைகள் ஒழியும். (கடவு)


213. அருட்பெருஞ் சோதி

பல்லவி

அருட்பெரும் ஜோதியின் தனிப்பெரும் சுடராம்
அண்ணல் காந்தி மகான்

அநுபல்லவி

பொருட்பெரும் அவன்அருள் பொன்னெறி போற்றிடில்
பூமியில் நிறைந்துள தீமைகள் மறைந்திடும். (அருட்)

சரணங்கள்

பஞ்சமும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்திடும்
பாதகம் செய்யச் சொல்லும் தீதுகள் குறைந்திடும்
கொஞ்சமும் இன்பமில்லாக் கோடானு கோடிமக்கள்
கும்பி எரிச்சலெல்லாம் அன்பின் குளிர்ச்சிபெறும். (அருட்)

ஜாதி மதக்கலகம் சண்டைகள் தீர்ந்திடும்
சமுதா யங்களில் சமரசம் சேர்ந்திடும்
நீதி நெறிதவறா நினைவுகள் வளர்ந்திடும்
நித்திய வஸ்துஉண்மை பக்தியும் கிளர்ந்திடும். (அருட்)

அரசியல் துறையிலும் ஆட்சியின் முறையிலும்
அயலெந்தக் காரியம் முயல்கிற நெறியிலும்
உரைசெயில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும்
உண்மையின் ஒளிதொடும் நன்மையின் வழி சொலும். (அருட்)


214. தியாகராஜன்

பல்லவி

தெய்வத்தின் ஒரு பெயர் தியாகராஜன் என்பதனைத்
தெரிவிக்க வந்தகாந்தி தேவதூதன்

அநுபல்லவி

வையத்தில் காந்தியைப்போல் பிறர்க்கென்றே வாழ்ந்திட்ட
வண்மையின் த்யாகத்தில் உண்மையில் யாருமில்லை. (தெய்)

சரணங்கள்

இந்நிலத் துயரெல்லாம் தன்னலம் தருவது
இல்லாமை என்பதெல்லாம் ஈயாமல் வருவது
மன்னுயிர் வாழ்ந்திடத் தன்னுயிர் கொடுப்பது
மனிதர் குலத்துக்கெல்லாம் புனிதர்க்கே அடுப்பது. (தெய்)

காவியும் உடுக்காமல் காட்டுக்கும் செல்லாமல்
கர்மத்தில் தனக்கென்றோர் காமமும் இல்லாமல்
பூவுல கினில்மக்கள் துன்பத்தைப் போக்கிடப்
பொன்னுயிர் கொடுப்பவர் தன்னரும் பக்தரெனும் (தெய்)

சின்ன வயதுமுதல் தந்நலம் மறந்தவர்
தீமையுற் றவர்க்கெல்லாம் தாய்மையே புரிந்தவர்
இன்னுயிர் பிறர்வாழ விருப்புடன் ஈந்தவர்
இவரேஅத் தியாகராஜன் இறைவனைச் சேர்ந்தவர். (தெய்)


215. தமிழின் சாரம்

பல்லவி

தமிழ்மொழி சாரம் காந்தியின் தீரம்
தமிழா மறக்காதே!

அநுபல்லவி

அமிழ்தென நிரந்தரம் அறிவினை வாழ்த்திடும்
அன்பின் பணிபுரிந்தே அருளின் நெறிதெரிந்த (தமிழ்)

சரணங்கள்

கொல்லா விரதமும் பொய்யாக் கொள்கையும்
குலமுறை அறம்எனக் கொடுப்பது தமிழே.
எல்லா விதத்திலும் உலகம் கெட்டதெல்லாம்
இந்த இரண்டறத்தின் சிந்தனை விட்டதனால் (தமிழ்)

தன்னுயிர் இழப்பினும் பிறஉயிர் அழிப்பதைத்
தவிர்ப்பது ஒன்றே தவங்களிற் சிறப்பெனச்
சொன்னதும் செய்ததும் தொடர்ந்ததைப் பணிவதும்
தொல்குலத் தமிழரின் நல்வழக் காகும் (தமிழ்)

காமமும் கோபமும் கபடமும் தாங்கி
கசடறக் கற்றதனை நடத்தையில் தாங்கி
ஏமமும் ஜாமமும் ஈசனை வணங்கி
எல்லாம் அவன் செயல் என்பதில் இணங்கும். (தமிழ்)


216. இலக்கிய இலக்கணம்

பல்லவி

இலக்கணம் மிகப்புது இலக்கணம் பெற்றது
இலக்கணம் புதியதோர் இலக்கியம் கற்றது
எம்மான் காந்தியினால்

அநுபல்லவி

புலைக்குணம் மிகுந்துள பூமியைச் சீர்திருத்த
புண்ணியர் பற்பலபேர் எண்ணி எழுதிவைத்த (இலக்)

சரணங்கள்

சத்தியம் தெய்வமென்று சாதித்த பேர்கள்உண்டு ;
சாந்தத்தைப் பற்றிநின்று போதித்த தீரர்உண்டு ;
உத்தமன் காந்தியைப்போல் மெத்தப் புதுமுறையில்
உழைத்தவர் யாருமில்லை உலகில்இது வரையில். (இலக்)

உயிரைத் திரணம் என்றே உண்மைக் குழைத்த துண்டு ;
உடலை மறந்து நன்மை ஊருக் கிழைத்த துண்டு ;
உயிரைப் பயணம்வைத்தே உலகுக் குதவிசெய்ய
உரைசொல்லிச் சொன்னபடி உயிர்தந்த காந்திமெய்யால். (இலக்)

சொல்லில் இனிமைவார்த்துச் செயல்களில் சுத்தம்பார்த்துச்
சொல்லுக்கும் செயலுக்கும் பேதம்வராமல் காத்துக்
கல்லும் கனியச்செய்யும் காந்தியின் வாழ்க்கை யன்றோ
கல்விக்கும் இலக்கியம் கருணைக்கும் இலக்கணம்? (இலக்)


217. இறவாமல் இருக்க

பல்லவி

இறவாமல் என்றென்றும் காந்தி இருக்கவேண்டின்
மறவாமல் அவர்தந்த மார்க்கம் நடக்கவேண்டும்.

அநுபல்லவி

பிறவாப் பெரும்பிறவி பிரிந்தாரே காந்திஎன்று
பறவாய்ப் பறந்ததெல்லாம் பாசாங்கு அல்லவென்றால். (இற)

சரணங்கள்
எல்லா மதங்களுக்கும் இறைவன் ஒருவனேதான்
எந்தெந்த ஜாதியாரும் வந்திருக்கும் ஜோதிஅது
அல்லாவும் ஈஸ்வரனும் அனைத்தும் அவனேஎன
அனுதினம் பிரார்த்தித்தே அறிவிக்கும் காந்தி அண்ணல். (இற)

இன்பமும் துன்பமும் எல்லார்க்கும் ஒன்றேதான்
இம்சை பிறர்க்குமட்டும் என்றேனும் நன்றாமோ?
அன்புசெய் வாழ்க்கைதான் அறிவாகும் தமக்கென
அணுவேனும் பொய்யின்றி அனுஷ்டிக்கும் காந்திஐயன். (இற)

உழைப்பின்றிச் சுகிப்பதும் சுகமின்றி உழைப்பதும்
உலகத்தில் என்றென்றும் கலகத்தை விளைவிப்பது.
இளப்பமாய் நினைக்காமல் எல்லாரும் உழைத்திடில்
இம்சை குறைக்கவந்த காந்தீயம் செழித்திடும். (இற)


218. மகிமை மனிதன்

பல்லவி

புனிதன் காந்தியை நினைக்கும் பொழுதே
புலன்களுக் கெட்டாப் புதுமைகள் தோன்றும்.

அநுபல்லவி

மனிதன் என்று மண்ணில் உதித்தவருள்
மற்றவர் யாவர்இந்த மகிமை படைத்தவர்கள்?

சரணங்கள்

கல்வி நிறைந்தவர்கள் கலைகள் சிறந்தவர்கள்
கர்மம் உகந்தவர்கள் தர்மம் மிகுந்தவர்கள்
நல்வழி நின்றவர்கள் நானிலம் எங்குமுண்டு
நாமம் நினைத்தவுடன் ஏமன் பயமகற்றும். (புனி)

தவசு புரிந்தவருள் தானம் சொரிந்தவருள்
தந்நலம் முற்றும்விட்டுப் பன்னலம் தந்தவருள்
இவர்வழி வாழ்ந்தவர்கள் எண்ணற்ற பேர்களிலும்
எவர்க்குமில் லாதஎதோ இவர்க்குள் இருந்ததென (புனி)

போதிக்க என்றுவந்த புண்ணிய வான்களுக்குள்
பூமியிற் கண்டபல அவதார புருஷருள்
சாதித்துச் சத்தியத்தைச் சோதித்தும் ஆதம்பல
சக்தியைக் காட்டினவர் மற்றில்லை என்னத்தகும். (புனி)


219. அமுத வழி

பல்லவி

அறிவைக் கடைந்தெடுத்த அருளைக் கலந்துதரும்
அமுதன்றோ காந்தி வழி

அநுபல்லவி

உறவைக் கெடுத்துமக்கள் உயிரை வதைத்தேஇந்த
உலகை நலித்துவரும் கலகக் கொடுமைதீர (அறி)

சரணங்கள்

இறுகிக் கிடக்கும்பல இழிவான வழக்கங்கள்
இளகும் படிக்கேயோர் இனிமையை அளிக்கவும்
குறுகிக் கிடந்தமனம் குமுறிப் புரட்சி கொண்டு
கொடுமையை எதிர்க்கவும் மடமையை உதிர்க்கவும் (அறி)

மதமென்றும் நிறமென்றும் மொழியென்றும் வழியென்றும்
மக்களைப் பிரித்தென்றும் துக்கத்தைப் பொழிகின்ற
சதிகார ஆசைகளின் அதிகாரம் தொலைக்கவும்
சன்மார்க்க சமரசம் நமதென்றும் நிலைக்கவும். (அறி)

வீரத்தின் பேரைச்சொல்லி வெறிதந்து போரைமூட்டும்
வீணுரை சூழ்ச்சியெல்லாம் நாணுறச் செய்(து)ஓட்டும்
தீரத்தின் சாத்வீகத்தைத் த்யாகத்தின் தெய்விகத்தைத்
திடமான மெய்யுணர்வைத் தெரிவித்தே உய்யவைக்கும். (அறி)


220. நலம் பெற உழைப்போம்

பல்லவி

இந்தியத் தாயின் இயல்பாகும்
எம்மான் காந்தியின் செயல்யாவும்.

அநுபல்லவி

முந்தினள் உலகினில் யாவரினும்
முப்பகை வென்றநல் மூதறிவின் (இந்திய)

சரணங்கள்

அந்தமில் இறைவனின் அருள்நாடும்
அன்பே அறிவெனத் தினம்தேடும்
செந்தமிழ் மொழிதரும் சீலமெலாம்
சேர்ந்தது காந்தியின் வேலையெல்லாம் (இந்திய)

இமயம் மலைமுதல் ஈழம்வரை
எண்ணரும் த்யாகிகள் இன்றுவரை
தமதரும் தவத்தால் தரும்ஞானம்
தரணியில் இன்றுள மெய்ஞ்ஞானம் (இந்திய)

அந்தமெய்ஞ் ஞானத்தின் ஒளியாகும்
அற்புதன் காந்தியின் வழியாகும்
இந்தநம் உரிமையை இழப்போமோ?
இப்புவி நலம்பெற உழைப்போமே. (இந்திய)


221. அச்சங்கள் நீங்கும்

பல்லவி

நித்தமும் ஒருதரம் காந்தியை நினைத்தால்
நிச்சயம் நம்முடை அச்சங்கள் நீங்கும்

அநுபல்லவி

சத்தியம் வலுத்திடும் சாந்தியும் பலித்திடும்
நித்திய ஒழுக்கங்கள் நேர்மையில் நிலைத்திடும் (நித்த)

சரணங்கள்

மானிடப் பிறவியின் மகத்துவம் விளங்கும்
மன்னுயிர் யாவிலும் தன்னுயிர் துலங்கும்
யான்என தென்றிடும் அகந்தைகள் கருகும்
ஆண்டவன் நினைவுடன் அன்புகள் பெருகும். (நித்த)

சுதந்தரம் என்பது சுத்தசன் மார்க்கம்
சூழ்ந்துள யாவர்க்கும் சுகந்தரப் பார்க்கும்
இதந்தரும் பணிசெயல் என்கடன் என்னும்
இங்கிதப் பெருங்குணம் தங்கிடப் பண்ணும், (நித்த)


222. குளிர்ந்திடும் செழுங்கனல்

பல்லவி

காந்தியை நினை மனமே--உண்மைச்
சாந்தியைப் பெற தினமும். (காந்தி)

அநுபல்லவி

மாந்தருள் அற்புதம் மாநிலப் பெருந்தவம்
கூர்ந்திடும் அறிவினுள் குளிர்ந்திடும் செழுங்கனல் (காந்தி)

சரணங்கள்

சோர்ந்திடும் பொழுதெல்லாம் சோகத்தைப் போக்கவும்
சுழன்றிடும் அறிவினைத் தெளிந்திடத் தேக்கவும்
நேர்ந்திடும் கவலையை நீக்கவும் மருந்தாம்
நினைத்திடும் பொழுதே இனித்திடும் நறுந்தேன். (காந்தி)

மோகன தாஸன் கரம்சந்த் காந்தி
முத்தரும் சித்தரும் முயன்றிடும் சாந்தி
சாகரம் நாணுறும் சற்குணப் பெருமை
சமரச உணர்ச்சியின் கற்பகத் தருவாம். (காந்தி)

வேறுதவம் நமக்கு வேண்டிய தில்லை
வித்தகன் காந்திபெயர் விருப்புடன் சொல்ல
கூறும் தவப்பலனைக் கொடுத்திடும் அதுவே
குறைவற்ற வாழ்க்கையும் நடத்திடல் பெறுவோம். (காந்தி)


223. அன்பிற்கு உயிர் தந்தோன்

பல்லவி

பிறர்க்கென்றே தம்முயிரை பிரியத்துடன் கொடுத்தோர்
பிறருண்டோ காந்தியைப் போல்!

அநுபல்லவி

மறக்கொலை போரிற்சிக்கி மரிப்பவர் எங்குமுண்டு
மற்றும் பலவழியில் மனமின்றிச் சாவதுண்டு (பிறர்)

சரணங்கள்

உயிரைப் பணையம்வைத்தே உண்மைக் குழைப்பதுவே
உத்தம சேவையென்று நித்தநித் தமும்சொல்லி
அயர்வின்றி மரணத்தில் அச்சத்தை இகழ்ந்தேசி
அன்பிற்கே உயிர்தரும் ஆற்றலின் புகழ்பேசி (பிறர்)

நமனும் நடுங்கிவிட்ட நவகாளி பிணக்காட்டில்
நடையாய் நடந்துகாந்தி நலிந்திட்ட குணம் காட்டும்
சமனும் உயர்வுமில்லாச் சன்மார்க்கம் வகுத்ததன்
சாதனைக் கேபல வேதனை சகித்ததை (பிறர்)

உண்ணா விரதம்கொண்ட ஒவ்வொரு தடவையும்
உயிர்தந்து உயிர்வந்த உண்மை உலகறியும்
கண்ணாரக் கண்டதெய்வம் காந்தியின் தியாகத்தில்
கட்டோடு விட்டொழிப்போம் மதவெறி மோகத்தை. (பிறர்)


224. ஊனுடல் கொண்ட ஒரு தெய்வம்

பல்லவி

மானிட வர்க்கம் கண்டறியா ஒரு
மாபெரும் புதுமை காந்தி மகான்!

அநுபல்லவி

வானுறை தெய்வம் ஊனுடல் கொண்டு
வையகத் தேபுது வழிகாட் டியதென (மானிட)

சரணங்கள்

இந்திய நாட்டினில் இப்பெரும் அற்புதன்
எம்மிடை பிறந்ததும் ஒப்பரும் நற்பதம்
நம்திரு நாடே நானிலம் முழுதிலும்
ஞான ஒளிபரப்பும் மோனம் அறிந்ததென (மானிட)

அன்பும் அருளும் அறிவும் ஆற்றலும்
அறநெறி வழுவா ஒழுக்கம் போற்றலும்
இன்பம் தருகிற எல்லாக் குணங்களும்
இப்படிச் சிறிதும் தப்பற இணங்கிட (மானிட)

சத்திய சாந்தம் உத்தமம் என்று
சாதனை புரிந்தவர் மெத்தவும் உண்டு
நித்தமும் வாழ்க்கையில் எல்லா நிலையிலும்
நிறைகுறை யாதவர் இவர்போல் இலையென (மானிட)


225. பண்பை வளர்க்கும் காந்தி

பல்லவி

உயிரைக் கொடுத்துநமக் குரிமை கிடைக்கச் செய்த
உத்தமன் காந்திநம் உயிரன்றோ!

அநுபல்லவி

பயிரை வளர்க்கும் நீர்போல் பண்பை வளர்க்கும் காந்தி
பக்தி கெடாதிருந்தால் மெத்தச் சிறைப்படைவோம் (உயிரை)

சரணங்கள்

அரசியல் சுதந்தரம் அடைந்தது பெரிதல்ல
ஆன்ம சுதந்தரத்தை அழித்துவிடவும் வல்ல
பரிசுடை மோகம்நம்மைப் பற்றிக் கொள்ளாதபடி
பரமார்த்த எண்ணங்கள் பழுதுபடாமல் காத்து (உயிரை)

அந்நிய நாடுகள்போல் அயலாரைச் சுரண்டிட
ஆதிக்கம் தேடுகின்ற நீதிக்குறை செய்யாமல்
இன்னுயிர் கொடுத்தேனும் இந்தியத் தாய்நாட்டின்
இணையற்ற நன்னெறியைத் துணைகொள்ளும் வழிகாட்டி. (உயிரை)

ஆண்சிங்கம் அதைப்போல் ஆற்றல் வளரச்செய்தே
அத்துணை சக்தியையும் அன்பில் கிளரச்செய்து
வீண்சிங்கம் உட்பகை யாவும் விலகச்செய்து
விஞ்ஞானத் தீமைநீக்க மெய்ஞ்ஞான வேள்விக்காக. (உயிரை)


226. ஏற்ற மருந்து

பல்லவி

சாந்தியைக் கொடுப்பது காந்தியின் திருப்பேர்
சந்தமும் அதனைச் சிந்தனை செய்திடுவோம்.

அநுபல்லவி

மாந்தருள் பகைமையை மதவெறிக் கொடுமையை
மாற்றி விடுவதற்கே ஏற்ற மருந்ததுவே (சாந்தி)

சரணங்கள்

கோபத்தை அடக்கவும் குரோதத்தை ஒடுக்கவும்
குற்றத்தைத் தடுக்கவும் குணநலம் கொடுக்கவும்
பாபத்தை ஒதுக்கவும் பரமனைத் துதிக்கவும்
பயமற்று வாழ்ந்திடும் பரிசுத்தம் பலிக்கவும் (சாந்தி)

சமதர்ம உணர்ச்சியின் சந்தோஷம் வளர்ந்திடும்
சாதி மதங்களென்னும் சழக்குகள் தளர்ந்திடும்
அமைதிகள் நிறைந்துள்ள சமுதாயம் நிலவிடும்
அக்கம்பக் கங்களெல்லாம் அன்போடு குலவிடும் (சாந்தி)


227. எளியவர்க் குழைத்தவர்

பல்லவி

சுகபோக கங்களின் சூழ்ச்சியில் மயங்கா
சுகிர்தன் காந்தி மகான்!

அநுபல்லவி

இகபோ கங்களைத் துறந்தவர் தமக்குள்
இவர்போல் எளியவர்க் குழைத்தவர் எவரே? (சுக)

சரணங்கள்

ஏழைகள் குடிசையே இறைவன் கோயில்
என்றவர் தரித்திர நாராயணர் என
வாழியென் றவர்களை வாழ்த்திட வாழ்ந்து
வறுமையின் கொடுமையை வீழ்த்திடச் சூழ்ந்து. (சுக)

எளியவர் நலமுறச் செல்வரை இகழான்
ஏழைகட் குதவா எவரையும் புகழான்
பழிசெய்து பெறுகிற சுகங்களைப் பழித்தான்
பக்தியின் வருகிற சக்தியை அளித்தான் (சுக)

தீனர்கள் பணியே திருப்பணி என்று
தினந்தினம் அதற்கே மனந்தர நின்ற
வானுயர் காந்தியை வணங்குதல் ஒன்றே
வறுமையின் கொடுமையைப் போக்கிடும் நன்றே! (சுக)


228. கடமையும் கருணையும்

பல்லவி

கடமையும் கருணையும் இப்படிக் கலங்கிட
காந்தியைப் போலிங்கு வாழ்ந்தவர் யார்?

அநுபல்லவி

உடைமையும் உரிமையும் கடமைகள் தருமென
உணர்ந்திடச் செய்தவர் காந்தியன்றோ? (கடமை)

சரணங்கள்

கடமை உணர்ந்தவனே உடைமைக் குரியவனாம்
கருணை சிறப்பதுவும் கடமை தெரிவதனால்
மடமை பெருகுவதும் கடமை மறப்பதனால்
மாநிலத் தவர்க்கிந்த ஞானம் பிறப்பதற்கே (கடமை)

சத்தியக் குறியே கடமையைக் காட்ட
ஸாத்விக நெறியே உரிமையைக் கூட்ட
நித்திய சேவையால் பொதுநலம் நாடி
நெடுநிலம் முழுவதும் உடைமைகொண் டாடி (கடமை)

கடமைகள் புரிவதில் கருணையை மறவான்
கருணையென் றறநெறி கடமையைத் துறவான்
உடைமைகள் இழப்பினும் உரிமையைப் பிரியான்
உரிமைகள் மறுப்பினும் உயிர்க்கொலை புரியான். (கடமை)


229. கடவுளைக் காட்டும்

பல்லவி

கல்வியினால் வரும் நல்லறி வூட்டும்
காந்தியின் வாழ்வே கடவுளைக் காட்டும்

அநுபல்லவி

செல்வமும் கீர்த்தியும் செருக்குகள் ஒழியும்
சீரியன் காந்தியின் சிந்தனை வழியே. (கல்வி)

சரணங்கள்

தன்பலம் அல்லது பிறர்வசம் தணியான்
தன்னுடல் சுசிகரம் பொன்னெனப் புனைவான்
என்னொரு விஷயமும் உணர்ந்திடும் இயல்பான்
எதையும் முற்றிலும் அறிந்தபின் முயல்வான். (கல்வி)

இயல்புடை பாசங்கள் எதும்அவற் கில்லை
இரக்கமும் ஈகையும் எண்ணரும் எல்லை
முயல்வதன் ஆற்றலில் முடிவிலன் காந்தி
முற்றிலும் பேரின்பக் கடலெனும் சாந்தி (கல்வி)

எண்குணத் தோன்எனும் இறைவன் இயல்பை
எளிதினில் காட்டும் காந்தியின் செயல்கள்
விண்ணகத் தோரெனும் தேவரும் வியக்கும்
விந்தைநம் காந்தியர் தந்தநல் இயக்கம். (கல்வி)


230. கலகக் கலி தீர்க்கும் வழி

பல்லவி

கலகங்கள் இல்லாமல் உலகெங்கும் வாழ்ந்திட
காந்தியின் வழிதான் கலிதீர்க்கும்

அநுபல்லவி

விலங்குகள் மக்களெல்லாம் விஞ்ஞான வெறிவிட்டு
வித்தகன் காந்திசொல்லும் சத்தியம் வழிபட்டு (கலக)

சரணங்கள்

அரக்கரின் கதைபோல அழிக்கவே பலம்தேடி
ஐயையோ மனிதர்கள் அலைகின்றார் கொலைநாடி
இரக்கம் புரிவதற்கே ஈசன்கொடுத்த ஜன்மம்
இப்படி அழிவதைத் தப்பிட வேணும் என்னின் (கலக)

அன்பை மறந்துவரும் அறிவினால் பயனில்லை
அருளைத் துறந்துபெறும் ஆற்றல் மிகவும்தொல்லை
இன்பம் குலைவதெல்லாம் எந்திர மோகத்தால்
என்பதை அறிந்திடில் துன்பங்கள் குறைந்திடும். (கலக)


231. கருணை வழி

பல்லவி

காந்தியை விட்டால் கதிவேறில்லை
கருணையின் வழிகாட்ட

அநுபல்லவி

சாந்தியைப் போதிப்பவர் சங்கோப சங்கமுண்டு
சாதித்துக் காட்டினவர் ஏதிந்தக் காந்தியல்லால் (காந்தி)

சரணங்கள்

வேதமும் சாஸ்திரமும் வீதியிற் பின்தொடர
வேள்வியும் தவங்களும் ஆள்செய்து முன்படர
போதனை செய்வதிலும் சாதனை வேண்டுமென்று
பொழுதும் பிறர்க்குழைத்த முழுதும் கருணைவள்ளல். (காந்தி)

கொன்றிட எண்ணித் தன்மேல் குண்டொன்றை வீசிவிட்ட
கொடியனை மன்னிக்கவும் இடைசென்று பேசிவிட்ட
கன்றுடைப் பசுவைப்போல் கரைந்து கரைந்து மக்கள்
கலிதீர வேண்டுமென்று பலியாகத் தன்னைத்தந்த (காந்தி)

ஏழைக் குருகினவர் எவருண்டு இவர்போல
எங்கெங்குச் சென்றாலும் என்றென்றும் அதுவேலை
பாழுக் குழைத்தாரென்று பழிவரப் பொறுப்போமா
பாரெங்கும் காந்தியத்தை ஊரெங்கும் பரப்புவோம். (காந்தி)


232. ஒன்றை உணர்விக்க வாழ்ந்த ஒரு காந்தி

பல்லவி

உடலுக்கும் உயிருக்கும் உள்ளே இருக்கும் ஒன்றை
உணர்விக்க வாழ்ந்தவர் ஒரு காந்தி

அநுபல்லவி

கடலுக்குள் அலைபோல உலகத்தில் நிலைகெட்டுக்
கரையேறத் தவிக்கின்ற கணக்கற்ற நமக்கெல்லாம் (உட)

சரணங்கள்

உணவும் உடையுமின்றி உறுபொருள் இல்லையென்று
ஓய்வின்றி அலைந்துபின் மாய்கின்ற மனிதர்கள்
பணமும் பதவிக்கென்று பாதகம் பலசெய்து
பாவத்தை வளர்க்கின்ற தாபத்தை விலக்கிட (உட)

இன்றுள்ளார் நாளைக்கில்லை என்பதைத் தினம்கண்டும்
இச்சைப் படிக்குச்சென்று கொச்சை யின்பமும்கொண்டும்
என்றென்றும் உள்ளவர்போல் கொன்றும்தன் நலந்தேடி
இம்சையில் உழல்கின்ற நம்செயல் திருந்திட (உட)

உயிருக்கும் மேலுள்ள ஒருசத்தை மெய்ப்பிக்க
உடலைச் சுமந்திருந்தார் உலகத்தை உய்விக்க
பெயருக்கு உணவுண்டு பிறருக்காய் உடைகட்டிப்
பெரும்பாலும் மக்களைப்போல் அரும்பாடு பட்டாரேனும் (உட)


233. கருணாமூர்த்தியின் பரிணாமம்

பல்லவி

கருணா மூர்த்தியின் பரிணாமம் திரு
காந்தி மகான் வாழ்க்கை

அநுபல்லவி

அருணோதய மெனஅருள் ஒளி உதிக்கும்
அண்ணல் காந்தியை எண்ணிடில் நமக்கும் (கருணா)

சரணங்கள்

உடைமை தனக்கென ஒருபொருள் வேண்டான்
உயிரையும் பிறர்க்கென உதவுதல் பூண்டான்
கடமை என்பது கருணையைப் புரிகிற
காரியம் அல்லது வேறிலை எனும்ஒரு (கருணா)

விருப்பும் வெறுப்பும் தொடரா விரதன்
வேற்றுமை யாவிலும் ஒற்றுமை கருதும்
சிரிப்பும் மகிழ்ச்சியும் பரப்பிடும் செல்வன்
சினமெனும் தீமையைச் சிறைசெய வல்லன் (கருணா)

தரணியில் யாவரும் தன்இனம் என்றே
தயையடு அணைத்திடும் குணப்பெரும் குன்றாம்
மரணமும் துன்பமும் மருட்டா வித்தன்
மாநிலம் முழுவதும் வணங்கிடும் சுத்தன். (கருணா)


234. சொல்லவொண்ணாப் பெருமை

பல்லவி

சொல்லில் அடங்குமோ காந்தியின் பெருமை?
சொன்ன வரைக்கும் சுகிர்தம்?

அநுபல்லவி

கல்லும் புல்லும் கனிந்து கசிந்து ருகும்
கருணையின் வடிவென அருள்நெறி காட்டிய (சொல்)

சரணங்கள்

அன்பினை விட்டொரு இன்பமும் இல்லை
அகிலம் கண்டுள அறிவின் எல்லை
துன்பம் செய்வதைத் தொழிலெனத் தொடரும்
தூர்த்தரும் வியந்திடும் கீர்த்திகள் படரும். (சொல்)

பொய்யும் வஞ்சமும் புலையும் கொலையும்
போர்வெறிக் கொடுமையும் சீர்குலைந் தலையும்
வையம் திருந்திடும் வழிதர என்றே
வாழ்ந்துதன் உயிரையும் ஈந்தனன் அன்றோ! (சொல்)

நற்குணம் என்பன யாவையும் கூடி
நானிலம் முழுவதும் நலம்பெற நாடி
அற்புதப் புதுமுறை அறவழி காட்டும்
அமரரும் அறிய அன்பினை ஊட்டும். (சொல்)


235. காந்தி ஜயந்தி

பல்லவி

காந்தியின் திருநாள் இது கண்டீர்
கடமைகள் நமக்கெலாம் மிகஉண்டு

அநுபல்லவி

சாந்தியைக் கோரிச் சகலமும் துறந்த
சத்துவ போதன் புத்தனும் பிறந்த (காந்தி)

சரணங்கள்

சாந்தத்தின் பலன்களும் சத்திய நலன்களும்
சமரச வாழ்க்கையின் அமைதியும் துலங்கிட
வாழ்ந்துநன் னெறிகளை வகுத்துத் தொடுத்தவர்கள்
வடித்துக் கொடுத்ததெல்லாம் நடத்தி முடித்த வள்ளல். (காந்தி)

அன்பின் கலைபுரிந்து அருளின் நிலைதெரிந்து
அச்சமும் ஆசைகளும் மிச்சமில்லா தகற்றி
இன்ப நிலையுரைத்த எண்ணரும் யோகிகள்
எண்ணிய நல்லறங்கள் பண்ணிமுடித்த எங்கள் (காந்தி)

தானமும் தருமமும் தவங்களும் மதங்களும்
தாரணி முயன்றுள வேறுள நெறிகளும்
ஞானம் பெறமுயலும் நல்வழி யாவையும்
நாடும் குணங்களெல்லாம் கூடிநிறைந்த எங்கள் (காந்தி)


236. சிறீ சுப்பிரமண்ய பாரதி

பல்லவி

சுதந்தர ஞானத்தின் சுடரொளி தீபம்
சுபசிறீ சுப்பிரமண்ய பாரதி நாமம்.

அநுபல்லவி

நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்
நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம் (சுதந்)

சரணங்கள்

அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து
ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து
கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு
கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு! (சுதந்)

தெய்வத் தமிழ்மொழியில் புதுமைகள் சேர்த்துத்
தீரம் விளங்கச்சுத்த வீரமும் வார்த்து
வையம் முழுதும்அதை வணங்கிடச் செய்யும்
வாய்மையும் தூய்மையும் வளர்த்திடும் ஐயன்! (சுதந்)

பெண்ணின் பெருமைகளைக் காத்திடும் கோட்டை
பேதையர் என்பதனைக் கடிந்திடும் சாட்டை
உண்மை அறிவுகளை உணர்த்திடும் போதம்
உத்தம தத்துவங்களை ஒலித்திடும் கீதம்! (சுதந்)


237. சுதந்தர தினம்

பல்லவி

விடுதலை அடைந்து விட்டோம்--உலகம்
வியந்திடும் படிக்கொரு நயந்திகழ் விதத்தினில் (விடு)

அநுபல்லவி

நடுநிலை தாங்கிடும் நம்மர சோங்கிட
நாநிலம் முழுதுக்கும் ஞானப் பணிபுரிய (விடு)

சரணங்கள்

பாரதி மெய்ப்புலவன் வாக்குப் பலித்ததென
பண்டுநம் தாதாபாய் கண்ட கனவிதென
தீரன் திலகரிஷி த்யாகம் திகழ்ந்திடவும்
தெய்விக காந்திதவம் வையம் புகழ்ந்திடவும் (விடு)

அந்நியப் பிடிப்புகள் அகன்றத னால்மட்டும்
ஆனந்த சுதந்தரம் அடைவது வெகுகஷ்டம்
உன்னத லட்சியங்கள் ஓங்கிட வேண்டும்அதில்
உத்தமன் காந்திவழி தாங்கிட வேண்டும்இனி (விடு)

கிடைத்த விடுதலையைக் கெடுத்து விடாதபடி
கீழான ஆசைகட்குக் கொடுத்து விடாமல்இடம்
அடுத்திடும் யாவரையும் அன்பின் வழிமதித்தே
அகிலம் முழுதும்காந்தி அருளைப் பரப்புதற்கே (விடு)


238. நல்ல சமயம்

பல்லவி

நல்ல சமயமடா--இதை--நழுவவிடுவாயோ!

அநுபல்லவி

நாட்டிற் சுதந்தரம் நாட்டி மனிதருள்
தீட்டுந்தீண் டாமையுந் தீர்த்து விடுதற்கு (நல்ல)

சரணங்கள்

காந்தியைப் போல்தலைவர்--எந்தக்--காலத்திற்கிட்டுமடா?
வாய்ந்த தருணமிதை--நீ--வழுவி யிழப்பாயோ?
சூழ்ந்திடும் துன்பங்கள்--வீழ்ந்திட நாமினி
வாழ்ந்திட வும்மனச்--சாந்தி யடையவும் (நல்ல)

வேதம் ஒலிக்குதடா--காந்தி--ஓதும் மொழிகளிலே
கீதை ஜொலிக்குதடா--அவர்--செய்யும் கிரியையெல்லாம்
வேற்றுமை யில்லாமல்--நாட்டின் நலத்தினைப்
போற்றின யாரையும்--கூட்டி உழைத்திட (நல்ல)

பண்டைய காலந்தொட்டு--நம்முள்--பாசம் பிடித்தபல
வண்டை வழக்கங்களை--இனி--வாரி யெறிந்துவிட்டு
பத்தி வளர்த்தினிச்--சுத்த வழிகளில்
நத்தி அனைவரும்--ஒத்துச் சுகித்திட (நல்ல)


239. சாந்தியே காந்தி

பல்லவி

சாந்தியின் விரிவுரை காந்தியின் சரித்திரம்
தமிழா மறவாதே

அநுபல்லவி

தேர்ந்தவர் ஞானமும் தெளிந்தவர் மோனமும்
செந்தமிழ் நூல்களெல்லாம் சந்ததம் கோருகின்ற (சாந்தி)

சரணங்கள்

நாட்டைத் துறந்தவரும் வீட்டை மறந்தவரும்
நானா விதம்பல தானம் புரிந்தவரும்
ஏட்டைத் தினம்புரட்டி எண்ணிப் படிப்பவரும்
எல்லா விதத்திலும் நல்லோர் விழைந்திடும் (சாந்தி)

வேதங்கள் தேடுவதும் கீதங்கள் பாடுவதும்
வேள்வி முயன்றதுவும் கேள்வி பயின்றதுவும்
காதம் பலநடக்கும் காவடி யாத்திரையும்
கற்றவர் மற்றவரும் முற்றும் விரும்புகின்ற (சாந்தி)

முந்திநம் முன்னவர்கள் நொந்து தவம்புரிந்து
முற்றும் அறங்களினால் பெற்ற பெரும்பயனாம்
இந்திய நாட்டினுக்கே சொந்தப் பெருமைஎன்றே
எந்தெந்த நாட்டவரும் வந்து பயிற்சிபெறும். (சாந்தி)


240. ஆடு ராட்டே

பல்லவி

ஆடுராட்டே சுழன் றாடுராட்டே

அநுபல்லவி

சுழன்று சுழன்று சுழன் றாடுராட்டே--இனிச்
சுகவாழ்வு வந்ததென்று ஆடு ராட்டே!

சரணங்கள்

பாபம் குறையுமென்று ஆடுராட்டே--இனிப்
பயங்கள் மறையுமென்று ஆடுராட்டே
கோபம் குறையுமென்று ஆடுராட்டே--நல்ல
குணங்கள் மிகுந்ததென்று ஆடுராட்டே! 1

மேலான ஜாதியென்று மிகப்பேசி--மிக
மாறான காரியங்கள் செய்துவாழும்
மாலான ஜனங்களின் வஞ்சனை எல்லாம்--இனி
மாண்டு மடியுமென்று ஆடுராட்டே! 2

பட்டணத்து வீதிகளில் சுற்றியலைந்து--மிகப்
பாடுபடும் கிராமத்துப் பத்தினிப் பெண்கள்
இஷ்டமுடன் தம்குடிசை நிழலிருந்து--நூல்
இழைத்துப் பிழைப்பதென்று ஆடுராட்டே! 3

கள்ளுபீர் சாராயம் காமவகைகள்--கெட்ட
கஞ்சா அபின்க ளெல்லாம் ஓடியளிக்க
பிள்ளைகுட்டிப் பெண்ஜாதி வயிறார--உண்ணப்
பெற்றதே சுதந்தரமென் றாடுராட்டே! 4

உழுது நெய்துபல தொழில்செய்து--பொருள்
உதவும் வாணிபமும் முயல்வதல்லால்
தொழுது பணிபுரியும் தொழில்களெல்லாம்--இனித்
தோல்வி யடையுமென் றாடுராட்டே! 5

வம்பளந்து வீண்பொழுது போக்கமாட்டார்--பெண்கள்
வாசலிலே கூட்டமிட்டுப் பேசமாட்டார்
துன்பமில்லை சோம்பியவர் தூங்கமாட்டார்--குடி
சுத்தப்படு மென்று சொல்லி ஆடுராட்டே! 6

ஜாதிஜனக் கட்டுகளை மதிக்காமல்--நித்தம்
தானடித்த மூப்பாக வாழ்ந்ததெல்லாம்
நீதிநெறி தெய்வவழி நினைத்தினிமேல்--சுகம்
நிரம்பத் திரும்புமென்று ஆடுராட்டே! 7

ஆங்கிலம் படித்தோமென் றகங்கரித்துச்--சொந்தம்
அக்கம்பக்கம் யாரெனிலும் மதியாமல்
தாங்களே பெரியரென் றிருந்ததெல்லாம்--இனித்
தலைகுனிந் தோடுமென்று ஆடுராட்டே! 8

சர்க்கார் மனிதரென்று மதிமயங்கிக்--குணம்
தக்கா ரெனினும்அவ மதித்தவர்கள்
சர்க்கார் ஜனங்களென்று மதிதெளிந்து--இனித்
தாழ உரைப்பரென்று ஆடுராட்டே! 9

படித்தோம் படித்தோமென்று பட்டங்காட்டி--ஏழைப்
பாமரரை ஏய்த்து வாழ்ந்தவ ரெல்லாம்
நடித்த நாடகங்கள் தவறென்பதைக்--கண்டு
நல்வழி நடப்பரென்று ஆடுராட்டே! 10

அந்நியர்கள் நூல்கொடுத்தும் ஆடைகொடுத்தும்--நம்
அங்கத்தை மூடுகின்ற பங்கமொழியும்
கன்னியர்கள் நூற்கப்பல காளைகள் நெய்ய--நாம்
காத்துக் கொள்வோம் மானமென்று ஆடுராட்டே! 11


241. சுக வாழ்வு

சுதந்தரம் இல்லாமல் இருப்பேனோ?--வெறும்
சோற்றுக் குயிர்சுமந்தே இறப்பேனோ? (சுத)

விடுதலை யடையாமல் விடுவேனோ?--என்னை
விற்றுடல் வளர்ப்பதில் கெடுவேனோ? (சுத)

மானத்தைப் பெரிதென்று மதிப்பேனோ?--அன்றி
மாற்றவர்க் குழைத்துடல் நசிப்பேனோ? (சுத)

தொழுதுடல் சுகிப்பதைத் தொலைப்பேனோ?--இன்றித்
தொழும்பனென் றேபெயர் நிலைப்பேனோ? (சுத)

பயமின்றித் தருமத்திற் குழைப்பேனோ?--விட்டுப்
பாவங்க ளுக்கொதுங்கிப் பிழைப்பேனோ? (சுத)

ஞான சுதந்தரத்தை அடைவேனோ?--இந்த
ஊனுக்கு ழைத்தடிமை தொடர்வேனோ? (சுத)


242. கர்ப்பிணிகளை நடத்தும் முறை

பல்லவி

கர்ப்பிணிப் பெண்டுகளைக் கருணை யுடன்மிகவும்
கவனிக்க வேண்டுவமே.

அநுபல்லவி

அற்பமென் றவர்களை அசட்டைசெய் வீரெனில்
ஆண்டவன் சாபமுண்டு

சரணங்கள்

கொஞ்சும் மொழிகள்சொல்லிக் கோதை யிளங்கொடியைக்
குதூகலப் படுத்துவைப்பீர்
அஞ்சும் படிக்குச்செய்து அடிப்பதும் திட்டுவதும்
ஐயையோ ஆகாது. (கர்ப்)

குற்றங்கள் செய்திடினும் முற்றும் மனம்பொறுத்துக்
குணமுடன் வார்த்தைசொல்வீர்
சற்றும் அவர்மனதில் சஞ்சல மொன்றுமின்றிச்
சந்தோஷம் புரிவீர். (கர்ப்)

நல்ல கதைகள்தினம் சொல்லிய வர்மனதை
நயம்படச் செய்துவைப்பீர்
அல்லும் பகலும்அவர் ஆண்டவ னைத்துதித்து
அறஞ்செய வரந்தருவார். (கர்ப்)


243. கொடியைப் போற்றிக் கும்பிடு

பல்லவி

கொடியைப் போற்றிக் கும்பிடு
கொடுமை தீரும் நம்புநீ

அநுபல்லவி

அச்சம் போக்கும் கொடிஇது ;
ஆண்மை நல்கும் கொடிஇது ;
இச்செகத்து வாழ்வினை
இன்ப மாக்கும் கொடிஇது. (கொடி)

சரணங்கள்

பரத நாட்டின் கொடிஇது ;
பழமை யான கொடிஇது ;
விரத மாகப் போற்றினால்
விருப்பம் யாவும் சித்தியாம். (கொடி)

சத்தியத்தின் கொடிஇது ;
சக்தி தந்த கொடிஇது ;
புத்தி மிக்க ஞானிகள்
பூஜை செய்த கொடிஇது ; (கொடி)

மரணமென்ற எண்ணமே
மனத்தி லின்றிச் செய்திடும்
திரண மாக எதையுமே
தியாகம் செய்யத் தந்திடும். (கொடி)

கட்டு விட்ட மக்களை
அன்பு கொண்டு கட்டியே
ஒற்று மைப்ப டுத்தவே
உறுதி யான கொடிஇது. (கொடி)

ஜாதி பேதத் தீமையைச்
சாம்ப லாக்கும் கொடிஇது ;
நீதி யான எதையுமே
நின்று காக்கும் கொடிஇது. (கொடி)

ஊழி தோறும் புதியதாம்
உறுதி கொண்ட கொடிஇது ;
வாழி வாழி நம்கொடி!
வாழ்க வாழ்க நாடெல்லாம்! (கொடி)


244. வைஷ்ணவன் என்போன் யார்?

பல்லவி

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)

சரணங்கள்

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;
உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோ தும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம். (வைஷ்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்
நாயக னாகிய சிறீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்
ஆகும்அவனே வைஷ்ணவனாம். (வைஷ்)

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமுடை வார்கள் எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரை சேர்வார். (வைஷ்)


245. கொடி பறக்குது

பல்லவி

கொடிபறக்குது கொடிபறக்குது
கொடிபறக்குது பாரடா!
கோணலற்ற கோலில்எங்கள்
கொடிபறக்குது பாரடா!

சரணங்கள்

சிறைகிடந்து துயரமடைந்த
தேசபக்தர் நட்டது
தீரவீர சூரரான
தெய்வபக்தர் தொட்டது.
முறைகிடந்து துன்பம்வந்து
மூண்டுவிட்ட போதிலும்
முன்னிருந்து பின்னிடாமல்
காக்கவேண்டும் நாமிதை! (கொடி)

வீடிழந்து நாடலைந்து
வினையிழந்த நாளிலும்
விட்டிடாத தேசபக்தர்
கட்டிநின்று காத்தது ;
மாடிழந்து கன்றிழந்து
மனையிழக்க நேரினும்
மானமாக நாமுமிந்தக்
கொடியைக்காக்க வேண்டுமே! (கொடி)

உடலுழைத்துப் பொருள்கொடுத்தும்
உயிரும்தந்த உத்தமர்
உண்மையான தேசபக்தர்
ஊன்றிவைத்த கொடிஇது ;
கடல்கொதித்த தென்னமிக்க
கஷ்டம்வந்த போதிலும்
கட்டிநின்று விட்டிடாமல்
காக்கவேண்டும் நாமிதை! (கொடி)

மனமுவந்திங் குயிர்கொடுத்த
மானமுள்ள வீரர்கள்
மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது!
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்துபோக நேரினும்
தாயின்மானம் ஆனஇந்தக்
கொடியை யென்றும் தாங்குவோம்! (கொடி)


246. நானோ சண்டாளன்!

சண்டாளன் என்று விலக்கப்பட்டவன் கேள்வி:

பல்லவி

நானோ சண்டாளன்!--சரி
தானோ உங்களுக்கு?

சரணங்கள்

தாயை யிகழ்ந்தவன் சண்டாளன் ;
தந்தையை நொந்தவன் சண்டாளன் ;
தூயவர் நல்லோர் பெரியோரைத்
தோஷ முரைத்தவன் சண்டாளன் ;
தீயவை செய்தே பலர்ஏசத்
தின்றுழல் கின்றவன் சண்டாளன் ;
ஏவின செய்வேன் குற்றமிலேன்
எளியவ னானேன் என்பதற்கே. (நானோ)

வீட்டை மறந்தவன் சண்டாளன் ;
வேசியர்க் கலைபவன் சண்டாளன் ;
நாட்டைக் காட்டிக் கொடுத்ததனால்
லாப மடைந்தவன் சண்டாளன் ;
பாட்டைத் தனிவழி வந்தோரைப்
பதுங்கி யடிப்பவன் சண்டாளன் ;
ஓட்டைக் குடிசையில் வாழ்கின்றேன்
ஒருசிறு பாபமும் அறியாத (நானோ)

நன்றி மறந்தவன் சண்டாளன் ;
நயமுரை வஞ்சகன் சண்டாளன் ;
கொன்று சுகித்தவன் சண்டாளன் ;
கோப மிகுந்தவன் சண்டாளன் ;
கன்று நலிந்திடப் பாலெல்லாம்
கறந்து புசித்தவன் சண்டாளன் ;
ஒன்றுந் தெரியேன் "ஏழை" எனும்
ஒன்றே என்குறை அதற்காக (நானோ)

கள்ளைக் குடிப்பவன் சண்டாளன் ;
காமத் தலைபவன் சண்டாளன் ;
கொள்ளை அடிப்பவன் சண்டாளன் ;
கூடிக் கெடுப்பவன் சண்டாளன் ;
'அள்ளித் தெறிக்கா'ப் பணக்காரன்
ஆபத் துதவான் சண்டாளன் ;
வெள்ளைத் துணியன் றில்லாமல்
வேலைசெய்வேன்; அதற்காக (நானோ)

தெய்வ மிகழ்ந்தவன் சண்டாளன் ;
தீனரைக் கெடுத்தவன் சண்டாளன் ;
பொய்யுரை பேசிப் பிறர்கேடே
புரிந்து பிழைப்பவன் சண்டாளன் ;
'ஐயா அடைக்கலம்' என்றோரை
ஆதரிக் காதவன் சண்டாளன் ;
வெய்யில் மழையென் றில்லாமல்
வேண்டிய செய்வேன்; அதற்காக (நானோ)

ஆலயத் துள்ளே அபசாரம்
அறிந்தே புரிந்தவன் சண்டாளன் ;
கூலியை மறைத்தவன் சண்டாளன் ;
கோள்சொலிப் பிழைப்பவன் சண்டாளன் ;
வேலியைக் கடந்தே பிறன்பயிரை
வேண்டுமென் றிழித்தவன் சண்டாளன் ;
காலையும் மாலையும் இல்லாமல்
கஷ்டப் படுவேன் கள்ளமிலேன். (நானோ)

வட்டிபெ ருக்கி ஏழைகளின்
வாழ்வு கெடுத்தவன் சண்டாளன் ;
பட்டினி எளியவர் ஆசையுடன்
பார்த்திட உண்பவன் சண்டாளன் ;
ஒட்டிய வழக்கில் பணத்திற்கா
ஓரஞ் சொன்னவன் சண்டாளன் ;
அட்டியில் லாமல் சொன்னதெலாம்
அடியேன் கேட்டேன்; அதற்காக (நானோ)

தானங் கொடுப்பதைத் தடுப்போனும்
தவத்தைப் பழிப்பவன் சண்டாளன் ;
மானங் கெடுத்தவர் சோறுண்டு
வயிறு வளர்ப்பவன் சண்டாளன் ;
கானும் கரடும் உங்களுக்கா
கல்லிலும் முள்ளிலும் பாடுபடும்
ஏனிங் கென்னைச் 'சண்டாளன்'
என்பது? சரியோ உங்களுக்கே? (நானோ)


247. கேள்விகள்

பல்லவி

கதர்த் துணியுடுத்தச் சித்தமில் லாதநீ
கத்தி யெடுத்தென் செய்குவாய்?

அநுபல்லவி

பித்தரைப் போலவே மெத்தப் பிதற்றுகின்றாய்
சற்று நினைத்தே உய்குவாய் (கத)

சரணங்கள்
கள்ளுக் கடைகளிலே உள்ளம் மயங்கினநீ
கஷ்டங்கள் சகிப்பாயோ!
வெல்லும் சமர்க்களத்தில் கொல்லென முன்னின்று
வீரமும் வகிப்பாயோ! (கத)

சாதி மதக்கலகப் பேதம்வி டாதநீ
தைரிய மடைவாயோ!
ஓதும் சமர்முனையில் ஏதும் கவலையின்றி
உயிரதை விடுவாயோ! (கத)

சத்தியம் பேசவும் மெத்தப் பயந்திடும்நீ
சண்டையிற் செய்வதென்ன?
சுத்தமும் வீரனைப்போல் யுத்தமே பேசுகிறார்
சூதனு முய்வதுண்டோ! (கத)

உஷ்ண ஜலம்படவும் கஷ்டம் பொறாதவர்
உடன்கட்டை ஏறுவரோ!
இஷ்ட முனக்கிருந்தால் நஷ்டமில் லாவழி
இதைவிடக் கூறுகிறேன். (கத)


248. கதர்த்துணி வாங்கலையோ!

பல்லவி

கதர்த்துணி வாங்கலையோ--அம்மா!
கதர்த்துணி வாங்கலையோ--ஐயா! (கதர்)

சரணங்கள்

ஏழைகள் நூற்றது; எளியவர் நெய்தது;
கூழும்இல் லாதவர் குறைபல தீர்ப்பது. (கதர்)

கன்னியர் நூற்றது; களைத்தவர் நெய்தது;
அன்னதா னப்பலன் அணிபவர்க் களிப்பது. (கதர்)

கூனர்கள் நெய்தது; குருடர்கள் நூற்றது ;
மானமாய்ப் பிழைக்க மார்க்கம் தருவது. (கதர்)

தாழ்ந்தவர் நூற்றது; தளர்ந்தவர் நெய்தது;
வாழ்ந்திடும் உங்கட்கும் வாழ்த்துகள் சொல்வது. (கதர்)


249. தமிழன் பாட்டு

பல்லவி

தமிழ னென்று சொல்லடா!
தலைநி மிர்ந்து நில்லடா! (தமிழா)

சரணங்கள்

அமுத மூறும் அன்பு கொண்டிங் கரசு செய்த நாட்டிலே
அடிமை யென்று பிறர்ந கைக்க முடிவ ணங்கி நிற்பதோ!
இமயம் தொட்டுக் குமரி மட்டும் இசைப ரந்த மக்கள்நாம்
இனியும் அந்தப் பெருமை கொள்ள ஏற்ற யாவும் செய்குவோம். (தமிழா)

குஞ்சைக் காக்கும் கோழி போலக் குடியைக் காத்த மன்னர்கள்
கோல்ந டத்த அச்ச மின்றி மேல்நி னைப்புக் கொண்டுநாம்
பஞ்ச பூத தத்து வங்கள் பக்தி யோடு முக்தியைப்
பார்சி றக்கச் சொன்ன நாமும் சீர்கு றைந்து போவதோ? (தமிழா)

உலகி லெங்கும் இணையி லாத உண்மை பாடும் புலவர்கள்
உணர்ச்சி தன்னை வானைத் தாண்டி உயரச் செய்யும் நாவலர்
கலக மற்றுக் களிசி றக்கக் கவிதை சொன்ன நாட்டிலே
கைகு வித்துப் பெயர்கள் பாடிக் காலந் தள்ளல் ஆகுமோ? (தமிழா)

கங்கை யோடு பெருமை கொண்ட காவி ரிப்பொன் னாட்டிலே
கவலை யின்றிச் சோறி ருக்கக் கலைக ளெண்ணி வாழ்ந்தநாம்
மங்கி மங்கி வறுமை மிஞ்ச மதிம யங்கி மாய்வதோ!
மாநி லத்தில் சோற்றுப் பஞ்சம் மறையு மாறு மாற்றுவோம். (தமிழா)

சித்தி ரத்தில் மிகஉ யர்ந்த சிற்ப நூலின் அற்புதம்
சின்னச் சின்ன ஊரிற் கூட இன்னு மெங்கும் காணலாம்;
கைத்தி றத்தில் ஈடி லாத கல்வி தந்த தமிழர்நாம்
கைந்நெ றித்து வேலை யின்றிக் கண்க லங்கி நிற்பதேன்? (தமிழா)

எண்ண மற்றும் விசன மற்றும் எங்கும் செல்வம் பொங்கவே
எந்த நாளும் ஆடல் பாடல் எழில ரங்கம் ஓவியம்
பண்ண மைந்த சூழலும் யாழும் பக்க மேளம் யாவையும்
பாருக் கீந்து மகிழ்ச்சி யின்றி நாமி ருத்தல் பான்மையோ! (தமிழா)

விண்ம றைக்கும் கோபுரங்கள் வினைம றக்கும் கோயில்கள்
வேறு எந்த நாட்டி லுண்டு வேலை யின்வி சித்திரம்?
கண்ணி றைந்த காவ ணங்கள் கனிகள் மிக்க சோலைகள்
கண்ட போது பண்டை யெங்கள் நாக ரீகம் காட்டுமே. (தமிழா)

மனித வாழ்வில் இன்ப மென்று சொல்லு கின்ற யாவையும்
மற்ற வாழ்வில் உதவு மென்று நம்பு கின்ற ஞானமும்
தனிமை யான முறையில் யார்க்கும் தந்த திந்தத் தமிழகம்
தட்டி டாது தெய்வ மின்னும் கிட்டி நம்மைக் காக்குமே. (தமிழா)


250. புது வாழ்வு

பல்லவி

புதுவாழ்வு வரவேணும்
வரவேணும் எங்கள்
பொதுவாழ்வு பலமுற்றுத்
தரவேணும் புகழே! (புது)

சரணங்கள்

தமிழ்நாட்டின் மனைதோறும்
புதுவாழ்வு வந்து
தனியான தருமத்தின்
சுகமுற்றும் தந்தே
அமிழ்தான மொழிபேசி
அகிலத்தில் காணும்
அனைவோரும் உறவாக
அதுசெய்ய வேணும்.
நமதான இந்நாடு
நமதாக வென்றே
நாணோடு கோணாத
பணிசெய்து நின்றே
சமமாக எல்லாரும்
நல்வாழ்வு பெறவே
சரியான வழிகாண
உபகாரம் அதுவாம். (புது)

புவிமீது வெகுகாலம்
புகழோடு நின்றோம்
புலவர்கள் துதிபாடும்
பெருவாழ்வு கண்டோம்
தவமாதி அறமான
தரணிக்குத் தந்தோம்
தலையாய கலைவாணர்
வமிசத்தில் வந்தோம்.
அவமானம் மிகுகின்ற
அடிமைத் தனத்தால்
நவஜீவன் அதுசேர
புதுவீறு கொள்வோம்
'நாமார்க்கும் குடியல்லோம்'
எனுமாறு சொல்வோம். (புது)

அதிகாலை எழுகின்ற
கதிரோன்தன் உறவால்
அலர்கின்ற மலர்போல
புதுவாழ்வு பெறுவோம்
புதிதான உணர்வோடும்
உலகத்தில் எங்கும்
புலனாகும் கலையாவும்
நிலையாக இங்கும்
விதிகூட வழிவிட்டு
விலகிற்று எனவே
விதமாக விதமாக
விரிகின்ற நினைவால்
இதமாக எல்லாரும்
இனிதாக வாழ்வோம்
என்கின்ற கலைசொல்லும்
மன்றங்கள் சூழ்வோம். (புது)

மரணத்தில் அஞ்சாத
மனவீரம் வேண்டும்
மனதுக்குள் மருளாத
மதிசாந்தம் வேண்டும்
இரணத்தை எண்ணாமை
எவருக்கும் வேண்டும்
இழிவான மொழிபேசிக்
களியாமை வேண்டும்.
திரணத்தின் அளவாகப்
போகங்கள் எண்ணித்
தேசத்தின் பொதுவாழ்வின்
சேவைகள் பண்ணும்
அரண்ஒத்த நிலையான
அறமின்னும் வளர
அறிவான புதுவாழ்வு
வரவேணும் குளிர. (புது)

அறிவோடும் திறனோடும்
அன்போடும் கூடி
அருளோடும் உறவான
புதுவாழ்வை நாடி
செறிவோடு நிறைவாக
இந்நாட்டில் யாரும்
சிறுவாழ்வு இதுபோக
பெருவாழ்வு சேரும்
துறவோடு பொதுவாழ்வின்
துயர்நீங்க மிக்கத்
துணிவோடு பணிசெய்து
துணையாக நிற்கும்
குறியோடு புதுவாழ்வு
அதுபெற்று விட்டால்
குறையேதும் இனியில்லை
சுகமுற்று விட்டோம். (புது)


251. வாழிய கொடியே!

பல்லவி

கொடியைக் கும்பிடுவோம்--நம்முடை நாட்டின்
கொடியைக் கும்பிடுவோம்.

சரணங்கள்

எந்தக் கடவுளை எவர்தொழு தாலும்
எத்தனை வேற்றுமை நமக்கிருந் தாலும்
இந்தியர்க் கெல்லாம் பொதுவாம் தெய்வம்
இந்தக் கொடியே இதிலென்ன ஐயம்! (கொடி)

சத்தியப் பாறையில் வேர்ஊன் றியகொடி
சாந்தக் கோலின் உச்சியில் மணிமுடி
நித்திய மாகிய சுதந்தர வாழ்வினை
நித்தமும் நினைத்திட நின்றெமை ஆள்வது. (கொடி)

சமரசம் காட்டிடும் துகிலினை வீசிச்
சச்சர வாறிடத் தென்றலிற் பேசி
அமைதியும் அன்புடன் அனைவரும் பொதுவாம்
அரசியல் நடத்திட அறிகுறி இதுவாம். (கொடி)

காற்றொடு பெருமழை கலந்தடித் தாலும்
கடுத்தவர் இருந்திடில் படையெடுத் தாலும்
போற்றிஇக் கொடியினை உயிரெனக் காப்போம்!
பூதலம் வியந்திடும் புகழோடு பூப்போம்! (கொடி)

ஏழையும் செல்வனும் எனதென தென்றே
எல்லோ ரும்தொழ நடுவினில் நின்றே
வாழிய வையகம் வாழ்ந்திட வேண்டி
வாழிய கொடியே! வாழ்கபல் லாண்டு! (கொடி)



Comments