Nāmakkal kaviñar irāmaliṅkam piḷḷai pāṭalkaḷ I


நாட்டுப் பாடல்கள்

Back

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் I
புரட்சி கவிஞர் பாரதிதாசன்



Namakkal kavinjar V. Ramalingam Pillai (1888-1972) Songs- part I
(in Tamil Script, TSCII format)
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - முதல் பாகம்


1. பரமன்

உலகெலாம் படைத்துக் காத்தே
உருவிலா தழித்து நாளும்
உண்மையாய் எண்ண மாளா
ஒருவனாய் அருவ னாகிச்
சலமிலா தெண்ணு வோர்க்குச்
சத்திய மயமே யாகித்
தனித்தனி பிரிந்த போதும்
தானதிற் பிரியா னாகி
மலரின்மேல் தேவ னாகி
மாதொரு பாக னாகி
மாலொடு புத்த னாகி
மகம்மதாய் ஏசு வாகிப்
பலபல தெய்வ மாகிப்
பற்பல மதங்க ளாகிப்
பக்குவப் படியே தோன்றும்
பரமனார் பெருமை போற்றி.

2. கடவுள்

இல்லாத கால மில்லை
இருக்கின்ற பொருள்ஒன் றில்லை
எண்ணாத எண்ண மெல்லாம்
எண்ணியும் எட்ட வில்லை
சொல்லாத வேத மெல்லாம்
சொல்லியும் சொன்ன தில்லை
சூட்டாத நாமம் இல்லை
தோன்றாத உருவ மில்லை
அல்லா வாய்ப் புத்த னாகி
அரனரி பிரம்ம னாகி
அருளுடைச் சமணர் தேவும்
அன்புள்ள கிறிஸ்து வாகிப்
கல்லாத மனத்திற் கூடக்
காணாமல் இருப்பா ரந்தக்
கடவுளென் றுலகம் போற்றும்
கருணையைக் கருத்தில் வைப்பாம்.

3. இறைவன்

அன்பினுக் கன்பாய் வந்தும்
அறிவினுக் கறிவாய் நின்றும்
அறிந்தவர்க் கெளிய னாகி
அல்லவர்க் கரிய னாகி
முன்பினும் நடுவொன் றின்றி
முதுமறை தனக்கு மெட்டான்
மூடர்கள் மனத்திற் கூட
மூலையில் ஒதுங்கி நின்று
செம்பினும் கல்லி னாலும்
செய்தவை எல்லா மாகிச்
சிலந்திபோற் கூடு கட்டிச்
சிலுவையில் மறைந்தான் போல
என்பினுக் கென்பா யென்றும்
எம்முளே விளங்கு கின்ற
எழுசுடர் சோதி யான
இறைவனை இறைஞ்சி நிற்பாம்.

4. சொல்வதற்கு முடியாத சக்தி

இல்லையென்று சொல்வதற்கும்
இருக்கின்ற ஒருபொருளாய்
இருப்பதென்பார் ருசுப்படுத்த
இல்லாத தும்அதுவாய்
அல்லவென்று மறுப்பதிலும்
அங்கிருந்து பேசுவதாய்
ஆம்என்ற மாத்திரத்தில்
அறிந்துவிட முடியாதாய்
வல்லமென்று அகங்கரித்தால்
பலங்குறைக்கும் வல்லமையாய்
வணங்கிஅதைத் தொழுவார்க்கு
வலுவில்வரும் பெருந்துணையாய்ச்
சொல்லையத்துச் செயல்மனமும்
தூயவர்க்கே தோற்றுவதாய்ச்
சொல்வதற்கு முடியாத
சக்திதனைத் தொழுதிடுவோம்.

5. சூரியன் வருவது யாராலே ?

சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
தரையில் முளைத்திடும் புல்ஏது ?
மண்ணில் போட்டது விதையன்று
மரஞ்செடி யாவது யாராலே ?
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்
கருவில் வளர்ப்பது யார்வேலை ?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ ?

எத்தனை மிருகம்! எத்தனைமீன்!
எத்தனை ஊர்வன பறப்பனபார் !
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !
எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள் !
எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்
யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ' நிர்வாணம்'
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

6. பராசக்தி

நூறென்று மனிதர்க்கு நீதந்த வயசினில்
கூறென்று பலநோய்கள் பங்கிட்டுக் கொள்ளுதையோ!
ஆரெம்மைக் காப்பவர் அன்னையே உன்னையன்றி.?
பாரெம்மைக் கடைக்கண்ணால் தேவி பராசக்தீ!

நீதந்த உடல்கொண்டு நின்புகழ் துதிக்குமுன்
நோய்வந்து புகுந்தெம்மை நொடிக்குள் மடிப்பதென்றால்
தாய்தந்தை நீயன்றித் தஞ்சம் பிறிதுமுண்டோ
வாய்தந்து வாவென்று வரமருள்வாய் தேவீ!

தாயை மறந்திருக்கும் குழந்தைகள் ஸகஜந்தான்;
சேயை மறந்தவளைச் செகமின்னுங் கண்டதில்லை.
நீயே எம்மைமறந்தால் நிலையெமக் கேதுவேறே?
நோயே மிகநலிய நொந்தனம், வந்தருள்!

நித்தம் உனைநினைந்து நியம முடன்வசிக்கச்
சுத்த மனநிலையும் சொல்லும் செயலும் தந்து
சுற்றும் பலபிணிகள் தொடரா தருள்புரியாய்
சத்திய மாய்விளங்கும் தேவீ பராசக்தி!

7. கண்ணன் பக்தி

கண்ணன் பக்தி சேர்ந்திடில்
கவலை யாவும் தீர்ந்திடும்.
மண்ணை வாரித் தின்றவன் ;
மலையைத் தூக்கி நின்றவன். .(கண்)

வீட்டில் திருடும் வெண்ணெயை
வெளியில் தானம் பண்ணுவான் ;
நாட்டில் சிறுவர் யாவரும்
நன்மை கொள்ளக் கூவுவான். (கண்)

பெண்ணைக் காணில் ஓடுவான் ;
பிறரைக் காணில் வாடுவான் ;
எண்ணம் என்ன தீயதோ !
இல்லை ; முற்றும் தூயதே. (கண்)

எண்ணி றந்த கோபிகள்
இவனு டன்சல் லாபிகள் !
பெண்ணில் காமம் அல்லவே
பிள்ளை பெற்ற தில்லையே. (கண்)

தூய அன்புக் காதலைத்
துலங்க வைக்கும் ஜோதியான்
நேய மாகும் கண்ணணை
நிந்தை நீக்கி எண்ணுவோம். (கண்)

என்றும் என்றும் பாலனாய்
இன்பக் கேலி லோலனாய்க்
கன்று காலி மேய்ப்பதில்
களித்து லோகம் காப்பவன். .(கண்)

புலனை வெல்லும் கீதையைப்
புகலும் கண்ணன் மேதையை
நலனி லாத காமியாய்
நாம்நி னைத்தல் தீமையாம். (கண்)

ஆண்மை என்ற வன்மையும்
அன்புப் பெண்மை மென்மையும்
மாண்பிற் சேர்ந்த வேலையே
மாயக் கண்ணன் லீலையே. (கண்)

8. கண்ணன் லீலை

கண்ணன் என்றஒரு சிறுவன்-என்
கருத்தைக் கொள்ளைகொண்ட ஒருவன்
எண்ண எண்ண அவன்பபெருமை-தனை
என்ன சொல்லுவேன் அருமை !

சிறுவன் என்று நினை யாமல்-அவன்
செயலைக் கூந்துநினைப் போமேல்
திறமை யோடுசெயல் புரியும்-நல்ல
தீரம் நம்மனதில் விரியும்.

அன்பு என்றஒரு எண்ணம்-தரும்
அழகு வடிவமே கண்ணன்.
துன்பம் நேருகிற போது-எண்ணித்
துயரம் தீரஒரு தோது.

சூது போலப்பல புரிவான்--உலகச்
சூதை வெல்லவழி தருவான்.
தீது போலஒன்று செய்வான்--அதில்
திகழும் நன்மைபல பெய்வான்.

ஆணின் அழகுமிக வருவான்--பெண்கள்
ஆவிசோர மயல் தருவான்.
நாணிப் பெண்அருகிற் செல்வாள்--அவன்
நகைத்துப் பெண்வடிவு கொள்வான்.

பெண்ணின் வடிவழகில் வந்தே--ஆண்கள்
பித்து கொள்ள மயல்தந்து
கண்ணைச் சிமிட்டுவதற் குள்ளே--ஓரு
காளை ஆண்வடிவு கொள்வான்.

தாயைப் போல்எடுத்தே அணைப்பான்-உடனே
தந்தை போற்கடிந்து பணிப்பான்.
மாயக் காரமணி வண்ணன்-வெகு
மகிமைக் காரன்எங்கள் கண்ணன்.

கலகப் பேச்சும்அவன்வேலை--மாற்றும்
கருணை வீச்சும்அவன் லீலை
உலகம் முழுதும்அவன் ஜாலம்--அதை
உணர்ந்து கொள்வதே சீலம்.


9. கண்ணன் உறவு

கண்ணன் உறவைப் பிரியாதே
காரியம் இன்றித் திரியாதே
எண்ணம் தூயது என்றானால்
எதுசெய் தாலும் நன்றாகும்.

ஊக்கமும் உறுதியும் உண்டாகும்
உழைப்பிலும் களைப்பெதும் அண்டாதே.
ஆக்கமும் ஆற்றலும் பெறலாகும்
ஆயன் கண்ணன் உறவாலே.

துன்பம் எதையும் தாங்கிடலாம்
துயரம் உடனே நீங்கிடலாம்
அன்பும் அறிவும் பெரிதாகும்
அச்சம் என்பதும் அரிதாகும்.

சிரிப்பும் களிப்பும் நிறைந்துவிடும்
சிடுசிடுப் பெல்லாம் மறைந்துவிடும்
விருப்பம் எதும் சித்திபெறும்
வித்தகக் கண்ணன் பக்தியினால்.

மாடுகள் மேய்க்கும் வேலையிலும்
மகிழ்ந்திடும் கண்ணன் லீலைகளால்
பாடுபட் டுழைத்திட அஞ்சோமே
பாரில் யாரையும் கெஞ்சோமே.

தூதுவன் ஆகித் துணைவருவான்
தொழும்பனைப் போலும் பணிபுரிவான்
ஏதொரு தொழிலும் இழிவல்ல
என்பது கண்ணன் வழிசொல்லும்.

எல்லா உயிரும் இன்பமுறும்
இன்னிசை பரப்பித் தென்புதரும்
புல்லாங் குழலை ஊதிடுவான்
பூமியின் கடமையை ஓதிடுவான்.

பக்தருக் கெல்லாம் அடைக்கலமாய்ப்
பாதகர் தங்களை ஒடுக்கிடுவான்
சக்திகள் பலவும் தந்திடுவான்
சங்கடம் தீர்த்திட வந்திடுவான்.

ஆடலும் பாடலும் மிகுந்துவிடும்
அழகன் கண்ணன் புகுந்தஇடம்
ஓடலும் ஒளித்தலும் விளையாட்டாம்
ஒவ்வொரு செயலும் களியாட்டே.

10. கண்ணன் பாட்டு

கண்ணன் வருகிற இந்நாளே
களிப்புகள் தருகிற நன்னாளாம்
திண்ணம் அவனருள் உண்டானால்
தீங்கெதும் நம்மை அண்டாது.

அசுரத் தனங்களை இகழ்ந்திடவும்
அன்புக் குணங்களைப் புகழ்ந்திடவும்
விசனம் என்பதை ஒழித்திடவும்
வித்தகக் கண்ணன் வழித்துணையாம்.

அரசரின் குலத்தில் பிறந்தாலும்
ஆயர்தம் குடிசையில் வளர்ந்தவனாம்.
ஒருசிறு பேதமும் எண்ணாமல்
ஒற்றுமை காட்டும் கண்ணாளன்.

எங்கும் எதிலும் வேடிக்கை
இழைப்பது கண்ணன் வாடிக்கை
இங்கும் நாம்அதைக் கடைப்பிடித்தால்
இன்பம் வாழ்க்கையில் தடைப்படுமா?

அடுக்குப் பானையை உருட்டிடுவான்:
அதட்டப் போனால் சிரித்திடுவான்.
துடுக்குக் கண்ணனைக் கண்டவுடன்
தோன்றிய கோபம் சுண்டிவிடும்.

ஒன்றும் தெரியாப் பாலன்போல்
உலகை நடத்தும் லோலன்காண்.
என்றும் இளமை குறையாமல்
எல்லாப் பொருளிலும் உறைவான்காண்.

நம்பின மெய்யரைத் தாங்கிடுவான் ;
நடிக்கும் பொய்யரை நீங்கிடுவான்.
வம்புகள் செய்தால் செல்லாவாம் ;
வாதுகள் அவனிடம் வெல்லாவாம்.

கல்வியில் தேறிச் சிறந்திடலாம் ;
கலைகளின் ரசனை நிறைந்திடலாம் ;
பல்வித நன்மைகள் பெறலாகும் ;
பாலன் கண்ணன் உறவாலே.

பண்ணும் காரியம் முற்றிலுமே
பழுதில் லாமல் வெற்றி பெறும்.
கண்ணன் திருவருள் சூழ்ந்திடுவோம் ;
கவலையில் லாமல் வாழ்ந்திடுவோம்.

11. வருவாய் முருகா

வாவா முருகா! வடிவேல் முருகா!
காவாய் முருகா! கடிதே முருகா!
தேவா உனையே தினமும் தொழுவேன்
தீவாய் பிணியைத் தீரித் தினமே.

அழியா அழகா! அறிவாம் முருகா!
கழியா இளமைக் கடலே முருகா!
மொழியா இன்பம் அடையும் முறையை
ஓளியா தருள்வாய் ஒருவா முருகா!

குறையா அழகே! குமரா முருகா!
மறையா வையம் அறியா ஒருவா!
சிறைவா யுலகில் சிறுகும் எளியேன்
சிறுகா விதமுன் திறமே தருவாய்!

தளரா உடலும் சலியா உயிரும்
குளறா உரையும் குறையா அறிவும்
வளரா வாடா வடிவம் உடையாய்!
எளியாய்! அடியார்க் களியே! ஒளியே!

நரையும் திரையும் நணுகா முருகா!
கரையும் பிணியும் களையன் றறியாய்
விரியும் உலகின் விரையே முருகா!
வருவாய் முருகா! வரமே தருவாய்!

12. முருகனென்ற சிறுவன்

முருகனென்ற சிறுவன்வந்து
முணுமுணுத்த சொல்லினால்
முன்னிருந்த எண்ணம்யாவும்
பின்னமுற்றுப் போனதே!
அருகுவந்து மனமுவந்தே
அவனுரைத்த ஒன்றினால்
அடிமையென் மனத்திருந்த
அச்சமற்றுப் போனதே!

இளமையந்த முருகன்வந்து
என்னோடொன்று சொல்லவே
என்னுளத்தி ருந்தபந்தம்
ஏதுமற்றுப் போனதே!
வளமையுற்ற இளமைபெற்று
வலிமிகுந்த தென்னவே
வந்ததே சுதந்திரத்தில்
வாஞ்சையென்ற ஞானமே!

அழகனந்த முருகன்வந்தென்
அருகிருந்த போதிலே
ஐம்புலன்க ளுக்கொடுங்கி
அஞ்சியஞ்சி அஞ்சிநான்
பழமையென் உடற்கண்வைத்த
பற்றுயாவும் அற்றதால்
பாரிலென்னை யாருங்கண்டு
பணியுமாறு செய்ததே!

அன்பனந்த முருகன்வந்
தழைத்திருத்தி என்னையே
அஞ்சல்அஞ்சல் அஞ்சலென்
றகங்குழைந்து சொன்னதால்
துன்பமிக்க அடிமைவாழ்வில்
தோய்ந்திருந்த என்மனம்
சோகம்விட்டு விடுதலைக்கு
மோகமுற்று விட்டதே!

13. முருகன்மேற் காதல்

முருக னென்றபெயர் சொன்னால்--தோழி!
உருகு தென்றனுளம் என்னே!
பெருகி நீர்விழிகள் சோர--மனம்
பித்துக் கொள்ளுதுள் ளூர! (முரு)

கந்த னென்றுசொல்லும் முன்னே--என்
சிந்தை துள்ளுவதும் என்னே!
உந்தும் பேச்சுரைகள் உளறி--வாய்
ஊமை யாகுதுளம் குளிர! (முரு)

வேல னென்றபெயர் கேட்டே--ஏனோ
வேர்வை கொட்டுதுதன் பாட்டில்!
கால னென்றபயம் ஓடிப்--புதுக்
களிசி றக்குதடி சேடி. (முரு)

குமர னென்றஒரு சத்தம்--கேட்டுக்
குளிர வந்ததடி சித்தம்!
அமர வாழ்வுபெறல் ஆனேன்--இனி
அடிமை யார்க்குமிலை நானே! (முரு)

குகனெனச் சொல்வதற் குள்ளெ--நான்
அகம்ம றந்தேன்அது கள்ளோ!
தகதக வென்றொரு காட்சி--உடனே
தண்ணென முன்வரல் ஆச்சு! (முரு)

ஆடும் மயிலில்வரக் கண்டேன்--சொல்ல
அழகும் அதைவிடஒன் றுண்டோ?
வீடு வாசல்பொருள் எல்லாம்--துச்சம்
விட்டு மறந்தனடி நல்லாள்! (முரு)

பச்சைக் குழந்தையவன் மேலே--என்றன்
பற்று மிகுந்ததெத னாலே?
இச்சை யாரமிகத் தழுவி--நானும்
இணங்கி யிருந்தனின்பம் முழுகி! (முரு)

கள்ளங் கபடமற்ற பாலன்--மேலே
காதல் கொண்டஎன்னை ஞாலம்
எள்ளி ஏளனம்செய் தாலும்--நான்
எதற்கும் அஞ்சிலன்எக் காலும்! (முரு)

முருகன் கந்தன்வடி வேலன்--ஞானத்
திருக்கு கன்குமரன் சீலன்
சிறுகு ழந்தையா னாலும்--அவனைத்
திரும ணம்புரிவன் மேலும்! (முரு)

வேறு பெயரைச்சொன் னாலும்--சற்றும்
விரும்ப மாட்டெனெந்த நாளும்!
தூறு பேசுவதை விட்டே--எனக்குத்
துணைபுரி முருகனைக் கட்ட. (முரு)

14. பிரார்த்தனை

உலகெலாம் காக்கும் ஒருதனிப் பொருளே!
உன்னருள் நோக்கி இன்னுமிங் குள்ளோம்.
இந்திய நாட்டை இந்தியர்க் கென்று
தந்தனை யிலையோ? தவறதில் உண்டோ?
காடும் மலைகளும் கனிதரும் சோலைகள்
ஓடும் நதிகளும் உள்ளன எவையும்
இங்கே பிறந்தவர் எங்களுக் கிலையோ?
எங்கோ யாரோ வந்தவர் துய்க்கச்
சொந்த நாட்டினில் தோன்றிடும் செல்வம்
எந்த நாட்டிலோ எங்கோ போய்விடக்
கஞ்சியு மின்றிக் கந்தையும் இன்றி
அஞ்சிய வாழ்வின் அடிமையிற் கிடந்து
நொந்தனம் கொள்ளை நோய்களாற் செத்து
காட்டிடை வாழும் விலங்கினுங் கேடாய்க்
நாட்டிடை யிருந்தும் நலிந்தனம் ஐயோ!
யாருடை நாடு? யாருடை வீடு?
யாருடைப் பாடு? யார்அனு பவிப்போர்!
பிறந்த நாட்டினிற் பிறவா தவரிடம்
இரந்து நின்(று)அவர் ஏவலே செய்தும்
உடலே பெரிதென உயிரைச் சுமந்திடும்
ஊனமிவ் வாழ்வினை ஒழித்திடத் துணிந்தோம்!
ஞான நாயகா! நல்லருள் சுரந்தே
ஆண்மையும் அறிவும் அன்பும் ஆற்றலும்
கேண்மையும் பிறர்பால் கேடிலா எண்ணமும்
அடிமை ஒருவருக் கொருவர்என் றில்லாக்
குடிமை நீதியின் கோன்முறை கொடுத்துச்
சோறும் துணியும் தேடுவ தொன்றே
கூறும் பிறவியின் கொள்கையென் றின்றி
அளவிலா உன்றன் அருள்விளை யாட்டின்
களவியல் போன்ற கருணையின் பெருக்கின்
உளவினைத் தேடி உணர்ந்திட வென்றே
வளமும் எங்கள் வாழ்நாட் போக்கி
மங்களம் பாடி மகிழ்ந்திடத் தருவாய்
எங்கும் இருக்கும் எழிலுடைச் சோதி!

15. அனைத்தும் நீயே

ஆற்றல்கள் அனைத்தும் நீயே
அருளுவாய் எனக்கும் ஆற்றல்;
போற்றிடும் வீரி யம்நீ
எனக்கதைப் புகட்ட வேண்டும்;
மாற்றரும் பலங்கள் நீயே
மற்றெனைப் பலவா னாக்கு;
சாற்றரும் ஜீவ சத்தே
சத்தினை எனக்குத் தாராய்.

தீமையை வெறுத்து நீக்கும்
தீரமாய்த் திகழ்வாய் நீயே
வாய்மையில் எனக்கும் அந்த
வலிமையை வழங்க வேண்டும்;
தாய்மையின் சகிப்பு நீயே
தந்தருள் சகிப்புத் தன்மை;
தூய்மைசேர் ஒழுக்க வாழ்வில்
துலங்கிடும் ஆன்ம ஜோதி.

உடலினும் உயிருக் கப்பால்
உயிர்ந்தொளிர் ஆன்ம சக்தி!
கடலினும் பெரிதாம் உன்றன்
கருணையில் மூழ்கச் செய்வாய்;
அடைவரும் அமைதி தந்தே
அன்பெனும் அமுத மூட்டி
மடமைகள் யாவும் மாற்றி
மங்களம் அருள்வாய் போற்றி.

16. நெஞ்சோடு பிணங்கல்

எண்ணரிய நெடுங்காலம் இடைய றாமல்
எண்ணியெண்ணித் தவவலிமை உடைய ராகித்
திண்ணியமெய் யறிவறிந்து தெளிந்த முன்னோர்
பண்ணியநற் பழக்கமெல்லாம் பழித்தாய் நெஞ்சே!

எத்திசையும் பிறநாட்டார் ஏற்றி பேசும்
பக்திமிகும் இலக்கியத்தின் மணமே வீசும்
முத்தமிழின் வழிவந்தும் முன்னோர் தம்மைப்
பித்தரென்றே எண்ணுகின்றாய் பேதை நெஞ்சே!

நாத்திகந்தான் நாகரிகச் சின்னம் போல்
மூத்தறிந்த முன்னோரைப் பின்னம் பேசிச்
சூத்திரத்தில் ஆடுகின்ற பொம்மை யேபோல்
சொந்தபுத்தி இழந்துவிடல் நன்றோ? சொல்வாய்.

ஆத்திசூடி நல்லறிவை அழித்து விட்டாய்
ஆசாரக் கோவைதன்னை இழித்து விட்டாய்
பார்த்திதனை அன்னியவரும் பரிகசித்தார்
பாவமிதைப் புண்ணியம்போல் மிகர சித்தாய்.

தள்ளரிய தெய்வத்தின் நினைவு கூட்டும்
பிள்ளையார் சுழிபோட்டுக் கடிதம் தீட்டும்
தெள்ளறிஞர் நமதுமுன்னோர் செயலைக் கூட
எள்ளிநகை யாடுகின்றாய் ஏழை நெஞ்சே!


2. தமிழ்த்தேன் மலர்

17. அமிழ்தத் தமிழ்மொழி

அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி
அன்னை வாழ்க வாழ்கவே.

வைய கத்தில் இணையி லாத
வாழ்வு கண்ட தமிழ்மொழி
வான கத்தை நானி லத்தில்
வரவ ழைக்கும் தமிழ்மொழி
பொய்அ கந்தை புன்மை யாவும்
போக்க வல்ல தமிழ்மொழி
புண்ணி யத்தை இடைவி டாமல்
எண்ண வைக்கும் தமிழ்மொழி
மெய்வ குத்த வழியி லன்றி
மேவும் எந்தச் செல்வமும்
வேண்டி டாத தூய வாழ்வைத்
தூண்டு கின்ற தமிழ்மொழி
தெய்வ சக்தி என்ற ஒன்றைத்
தேடி தேடி ஆய்ந்தவர்
தெளிவு கண்ட ஞான வான்கள்
சேக ரித்த நன்மொழி.

உலகி லுள்ள மனிதர் யாரும்
ஒருகு டும்பம் என்னவே
ஒன்று பட்டு வாழும் மார்க்கம்
தொன்று தொட்டுச் சொன்னது;
கலக மற்ற உதவி மிக்க
சமுக வாழ்வு கண்டது;
கடமை கற்று உடைமை பெற்ற
கர்ம ஞானம் கொண்டது;
சலுகை யோடு பிறமொ ழிக்கும்
சரிச மானம் தருவது;
சகல தேச மக்க ளோடும்
சரச மாடி வருவது;
இலகும் எந்த வேற்று மைக்கும்
ஈசன் ஒன்றே என்பதை
இடைவி டாமல் காட்டும் எங்கள்
இனிமை யான தமிழ்மொழி.

கொலைம றுக்கும் வீர தீரக்
கொள்கை சொல்லும் பொன்மொழி;
கொடியவர்க்கும் நன்மை செய்யக்
கூறு கின்ற இன்மொழி;
அலைமி குந்த வறுமை வந்தே
அவதி யுற்ற நாளிலும்
ஐய மிட்டே உண்ணு கின்ற
அறிவு சொல்லும் தமிழ்மொழி;
கலைமி குந்த இன்ப வாழ்வின்
களிமி குந்த பொழுதிலும்
கருணை செய்தல் விட்டி டாத
கல்வி நல்கும் மொழியிது;
நிலைத ளர்ந்து மதிம யங்க
நேரு கின்ற போதெலாம்
நீதி சொல்லி நல்லொ ழுக்கம்
பாது காக்கும் தமிழ்மொழி.

அன்பு செய்தும், அருள் அறிந்தும்,
ஆற்றல் பெற்ற அறமொழி;
அறிவ றிந்து திறமை யுற்றே
அமைதி மிக்க திருமொழி;
இன்ப மென்ற உலக றிந்த
யாவு முள்ள கலைமொழி;
இறைவ னோடு தொடர்ப றாமல்
என்று முள்ள தென்றமிழ்.
துன்ப முற்ற யாவ ருக்கும்
துணையி ருக்கும் தாயவள்;
துடிது டித்தே எவ்வு யிர்க்கும்
நலம ளிக்கும் தூயவள்;
தென்பு தந்து தெளிவு சொல்லும்
தெய்வ மெங்கள் தமிழ்மொழி;
திசைக ளெட்டும் வாழ்த்து கின்ற
இசைப ரப்பச் செய்குவோம்.

பழிவ ளர்க்கும் கோப தாப
குரோத மற்ற பான்மையும்,
பகைவ ளர்க்கும் ஏக போக
ஆசை யற்ற மேன்மையும்,
அழிவு செய்யக் கருவி செய்யும்
ஆர்வ மற்ற எண்ணமும்,
அனைவ ருக்கும் நன்மை காணும்
வித்தை தேடும் திண்ணமும்
மொழிவ ளர்ச்சி யாக்கு மென்ற
உண்மை கண்டு முந்தையோர்
முறைதெ ரிந்து சேர்த்த திந்த
நிறைமி குந்த முதுமொழி.
வழிய றிந்து நாமும் அந்த
வகைபு ரிந்து போற்றுவோம்;
வஞ்ச மிக்க உலக வாழ்வைக்
கொஞ்ச மேனும் மாற்றுவோம்.

18. தமிழ் வாழ்க!

தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில்
அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும்.
நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம்
தமிழர்க்கும் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம்.

பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே
உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே.
துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்;
அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே.

அன்பென்ற அதைமிக்க அறிவிக்க நின்று
துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே
இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்;
தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம்.

அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம்
பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்.
இருள்கொண்ட உள்ளத்தில் இயல்பான பழியைத்
தெருள்கொள்ள ஒளிதந்து திகழ்கின்ற மொழியெ.

அறிவென்று பெயர்கொண்ட அதைமட்டும் நாடும்;
குறிகொண்டே உலகெங்கும் குறைவின்றித் தேடும்;
வெறிகொண்ட இனம்என்று வெகுபேர்கள் போற்றும்
நெறிகொண்ட தமிழ்மக்கள் நிறைகண்ட மாற்றம்.

கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம்;
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்;
அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்;
மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்.

அறமன்றிச் செயலொன்றும் அறியாத மொழியாம்;
மறமென்ற செயல்என்றும் மதியாத மொழியாம்;
நிறமென்று மதமென்று நிந்தித்தல் அறியாத்
திறமுள்ள தமிழென்று திசைமெச்சும் நெறியாம்.

குணமென்ற அதைமட்டும் கும்பிட்டு நாளும்
பணமென்ற பலமென்ற பயமின்றி வாழும்
இணையற்ற உறுதிக்கு இசைமிக்க வழியாம்
மணமிக்க தமிழென்ற மதிமிக்க மொழியாம்.

பலகாலம் பலநாடும் பரிவோடு சுற்றி
உலகோரின் பலசொல்லை உறவோடு கற்று
விலகாத நட்பிற்கு வெகுகெட்டி வேராம்;
தலையாய அறிவிற்குத் தமிழென்று பேராம்.

எந்தெந்த நாட்டின்கண் எதுநல்ல தென்றே
அந்தந்த மொழிதந்த அறிவின்கண் நின்று
முந்துள்ள இவையென்ற முறையுள்ள எல்லாம்
தந்துள்ள தொகைபோலும் தமிழென்ற சொல்லாம்.

விரிகின்ற அறிவோடு விரிகின்ற நிலையால்
திரிகின்ற உலகத்தைத் தெரிகின்ற கலையால்
சரியென்ப தொன்றன்றிப் பிறிதொன்றில் சலியாப்
பெருமைத்து தமிழென்ற பெயர்தந்த ஒலியாம்.

சீலத்தை இதுவென்று தெரிவிக்கும் நூலாம்;
காலத்தைத் தூரத்தைக் கருதாது மேலாம்
ஞாலத்தை அண்டத்தை நாமாக எண்ணும்
மூலத்தை உண்ர்வெங்கள் மொழிஉண்டு பண்ணும்.

பிறநாடு பிறர்சொத்து பிறர்சொந்தம் எதையும்
உறநாடிச் சதிசெய்தல் உன்னாத மதியும்
இரவாமல் எவருக்கும் ஈகின்ற நயனும்
அறமேதும் தமிழ்கற்று அடைகின்ற பயனாம்.

விஞ்ஞானம் அதனோடும் விளையாடி நிற்கும் ;
மெஞ்ஞானம் அதைமட்டும் மிகநாடிக் கற்கும்;
பொய்ஞ்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும்
அஞ்ஞானம் இல்லாமை அதுபெற்ற புகழாம்.

கொல்லாமை பொய்யாமை எனுமிவ்வி ரண்டில்
எல்லாநல் அறமுற்றும் இடைநிற்றல் கண்டு
சொல்லும் செயலாலும் மனதாலும் தொழுதோர்
நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும்.

19. தமிழன் இதயம்

தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும் ;
அன்பே அவனுடை மொழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் ;
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான் ;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

'பத்தினி சாபம் பலித்துவிடும்'
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச்
செய்தவன் துறவுடை ஓரரசன்.

சிந்தா மணி,மணி மேகலையும்,
பத்துப் பாட்டெனும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.

தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும்புகழாம்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.

உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை ; சரித்திரம் அசைபோடும் ;
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.

யாழும் குழலும் நாதசுரம்
யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.

'கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும் ;
எல்லாப் புகழும் இவைநல்கும் ;'
என்றே தமிழன் புவிசொல்லும்.

மானம் பெரிதென உயிர்விடுவான் ;
மற்றவர்க் காகத் துயர்படுவான் ;
தானம் வாங்கிடக் கூசிடுவான் ;
'தருவது மேல்' எனப் பேசிடுவான்.

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம் ;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறைகுறை யாமல் செய்தவனாம்.

உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன் ; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான் ;
சாந்தம் தவறா துடனிருந்தான்.

20. இளந்தமிழனுக்கு

இளந்த மிழா! உன்னைக் காண
இன்ப மிகவும் பெருகுது!
இதுவ ரைக்கும் எனக்கி ருந்த
துன்பம் சற்றுக் குறையுது!
வளந்தி கழ்ந்த வடிவி னோடும்
வலிமை பேசி வந்தனை.
வறுமை மிக்க அடிமை நிற்கு
வந்த ஊக்கம் கண்டுநான்
தளர்ந்தி ருந்த சோகம் விட்டுத்
தைரி யங்கொண் டேனடா!
தமிழர் நாட்டின் மேன்மை மீளத்
தக்க காலம் வந்ததோ!
குளிர்ந்த என்றன் உள்ளம் போலக்
குறைவி லாது நின்றுநீ
குற்ற மற்ற சேவை செய்து
கொற்ற மோங்கி வாழ்குவாய்!

பண்டி ருந்தார் சேர சோழ
பாண்டி மன்னர் நினைவெலாம்
பாயுமேடா உன்னை யின்று
பார்க்கும் போது நெஞ்சினில்!
கொண்ட கொள்கை அறம்வி டாமல்
உயிர்கொ டுத்த வீரர்கள்
கோடி கோடி தமிழர் வாழ்ந்த
கதைகள் வந்து குத்துமே!
மண்ட லத்தே இணையி லாத
வாழ்வு கண்ட தமிழகம்
மகிமை கெட்டே அடிமைப் பட்டு
மதிம யங்கி நிற்பதேன்?
செண்டெ ழந்தா லென்னப் பாய்ந்து
தேச முற்றும் சுற்றிநீ
தீர வீரம் நம்முள் மீளச்
சேரு மாறு சேவைசெய்.

அன்பி னோடும் அறிவு சேர்ந்த
ஆண்மை வேண்டும் நாட்டிலே;
அச்ச மற்ற தூய வாழ்வின்
ஆற்றல் வேண்டும் வீட்டிலே.
இன்ப மான வார்த்தை பேசி
ஏழை மக்கள் யாவரும்
எம்மு டன்பி றந்த பேர்கள்
என்ற எண்ணம் வேண்டுமே.
துன்ப மான கோடி கோடி
சூழ்ந்து விட்ட போதிலும்
சோறு தின்ன மானம் விற்கும்
துச்ச வாழ்வு தொட்டிடோம்!
என்ப தான் நீதி யாவும்
இந்த நாட்டில் எங்கணும்
இளந்த மிழா! என்றும் நின்றே
ஏடே டுத்துப் பாடுவாய்!

பணமி ருந்தார் என்ப தற்காய்ப்
பணிந்தி டாத மேன்மையும்
பயமுறுத்தல் என்ப தற்கே
பயந்திடாத பான்மையும்
குணமி ருந்தார் யாவ ரேனும்
போற்று கின்ற கொள்கையும்
குற்ற முள்ளோர் யாரென் றாலும்
இடித்துக் கூறும் தீரமும்
இனமி ருந்தார் ஏழை யென்று
கைவி டாத ஏற்றுமும்
இழிகு லத்தார் என்று சொல்லி
இகழ்த்தி டாமல் எவரையும்
மணமி குந்தே இனிமை மண்டும்
தமிழ்மொ ழியால் ஓதிநீ
மாநி லத்தில் எவருங் கண்டு
மகிழு மாறு சேவைசெய்.
ஓடி ஓடி நாட்டி லெங்கும்
உண்மை யைப்ப ரப்புவாய்;
ஊன மான அடிமை வாழ்வை
உதறித் தள்ள ஓதுவாய்;
வாடி வாடி அறம்ம றந்து
வறுமைப் பட்ட தமிழரை
வாய்மை யோடு தூய்மை காட்டும்
வலிமை கொள்ளச் செய்குவாய்;
கூடிக் கூடிக் கதைகள் பேசிச்
செய்கை யற்ற யாரையும்
குப்பையோடு தள்ளி விட்டுக்
கொள்கை யோடு நின்றுநீ
பாடிப் பாடித் தமிழின் ஓசை
உலக மெங்கும் பரவவே
பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப்
பணியு மாறு சேவைசெய்.

தமிழ னென்ற பெருமை யோடு
தலைநி மிர்ந்து நில்லடா!
தரணி யெங்கும் இணையி லாஉன்
சரிதை கொண்டு செல்லடா!
அமிழ்த மென்ற தமிழி னோசை
அண்ட முட்ட உலகெலாம்
அகில தேச மக்க ளுங்கண்
டாசை கொள்ளச் செய்துமேல்
கமழ்ம ணத்தின் தமிழில் மற்ற
நாட்டி லுள்ள கலையெலாம்
கட்டி வந்து தமிழர் வீட்டில்
கதவி டித்துக் கொட்டியே
நமது சொந்தம் இந்த நாடு
நானி லத்தில் மீளவும்
நல்ல வாழ்வு கொள்ளச் சேவை
செய்து வாழ்க நீண்டநாள்!

21. தமிழன் குரல்

' தமிழன் குரல்' எனும் தனிஓசை
தருமம் உணர்ந்திட நனிபேசும்;
அமிழ்தம் போன்றுள அழிவில்லா
அறிவே அதுதரும் மொழியெல்லாம்.

கொல்லா விரதம் குறியாக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைத்திடும் அன்பறமே.

அருள்நெறி அறிவைத் தரலாகும்;
அதுவே தமிழன் குரலாகும்;
பொருள்பெறா யாரையும் புகழாது;
போற்றா தாரையும் இகழாது.

அன்பும் அறமும் ஊக்கிவிடும்;
அச்சம் என்பதையும் போக்கிவிடும்;
இன்பம் பொழிகிற வானொலியாம்;
எங்கள் தமிழெனும் தேன்மொழியே.

குற்றம் கடிந்திடக் கூசாது;
கொச்சை மொழிகளில் ஏசாது;
முற்றும் பரிவுடன் மொழிகூட்டி
முன்னோர் நன்னெறி வழிகாட்டும்.

தமிழின் பெருமையை மறந்துவிடின்
தாரணி மதிப்பில் குறைந்திடுவோம்;
தமிழன் குரலொடு ஆர்த்திடுவோம்;
தமிழக உரிமையைக் காத்திடுவோம்.

22. தமிழரின் பெருமை

தமிழா! உனக்கிது தருணம் வாய்த்தது
தரணிக் கெல்லாம் வழிகாட்ட.
'அமுதாம் என்மொழி; அறமே என்வழி;
அன்பே உயிர்நிலை' என்றுசொலும் .. (தமிழா!)

சைவமும் வைணமும் சமணமும் பவுத்தமும்
தழைத்தது செழித்தது தமிழ்நாட்டில்.
வையகம் முழுவதும் வணங்கிடும் குணங்களை
வாழ்ந்தவர் உன்னுடை முன்னோர்கள். .. (தமிழா!)

எங்கோ பிறந்தவர் புத்தர் பெருமையை
ஏத்திப் பணிந்தவர் தமிழ்நாட்டார் ;
இங்கே அங்கே என்ற வுரைவுகளை
என்றும் பிரித்திலர் தமிழ்நாட்டார். ... (தமிழா!)

ஏசு தமிழரலர் என்றகா ரணத்தால்
இகழ்ந்து விடுவதில்லை தமிழ்நாட்டார் ;
பேசும் தமிழருள் கிறுஸ்துவைப் போற்றும்
பெருமை யுடையவர்கள் பலபேர்கள். ... (தமிழா!)

மகமது பிறந்தது மற்றொரு தேசம்அவர்
மகிமை விளங்குமிந்தத் தமிழ்நாட்டில் ;
அகமகிழ்ந் தனுதினம் நாகூர் ஆண்டவனை
ஆரார் தொழுகிறார் அறியாயோ? .. (தமிழா!)

உலகின் மதமெலாம் ஒவ்வொரு காலத்தில்
ஓடிப் புகுந்ததிந்தத தமிழ்நாட்டில் ;
கலகம் சிறுதுமின்றிக் கட்டியணைத் தவற்றைக்
காத்து வளர்ந்தவர்கள் தமிழ்நாட்டார். ...(தமிழா!)

தன்னுயிர் நீப்பினும் பிறர்கொலை அஞ்சிடும்
தருமம் வள்ர்த்தவர்கள் தமிழ்நாட்டார் ;
மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடல்
மண்டிக் கிடப்பதுன்றன் தமிழ்மொழியே. ...(தமிழா!)

கொல்லா விரதமே நல்லார் வழியென்று
கூறி நடந்தவுன்றன் குலமுன்னோர்
எல்லா விதத்திலும் எவரும் மதித்திடும்
ஏற்ற முடையதுன் இல்லறமாம். .. (தமிழா!)

உலகம் முழுவதும் கலகம் உறுதுபார்!
உன்பெருங் கடமைகள் பலவுண்டு ;
விலகும் படிசெய்யும் வெறிகொண்ட பேச்செல்லாம்
விலக்க விழித்தெழு வாய்தமிழா! .. (தமிழா!)

இந்தியத் தாய்மனம் நொந்து கிடக்கையில்
இனமுறை பேசுகின்றார்! இழிவாகும் ;
அந்தப் பெரியவளின் அடிமை விலங்கறுத்துன்
அன்பை நிலைநிறுத்(து) அகிலமெல்லாம். ... (தமிழா!)

தமிழகம் வாழ்கநல் தமிழ்மொழி வளர்ந்தெம்மைத்
தாங்கிடும் இந்தியத்தாய் தவம்பலிக்க
குமிழும் நுரையுமென்னக் கூடி மனிதரெலாம்
கொஞ்சிக் குலவிடுவோம் குவலயத்தில். ... (தமிழா!)

23. தமிழ் நாடு எது? தமிழன் யார்?

வலைவீச ஆசைதரும் அலைவீசும்
வயலும்மற்ற வளங்க ளாலோ
விலைவாசிக் கவலையின்றி விருந்தோம்ப
எதிர்பார்க்கும் விருப்பத் தாலோ
'தலைவாசற் கதவினுக்குத் தாள்பூட்டே
இல்லாத தமிழ்நா டெ'ன்று
பலதேசம் சுற்றிவந்த மகஸ்தனிசும்
புகழ்ந்துரைத்த பழைய நாடு!

பற்றொழித்த பெரியவரே பகுத்தரைக்கும்
அரசுமுறை பணிந்து போற்றிக்
கற்றறிந்த அரசர்களே காவல்செய்த
சரித்திரமே காணும் நாடு;
மற்றெரிந்த வீரனென்று மமதையுள்ள
மன்னவரை மதிக்கா நாடு;
சற்றொருவர் வருந்திடினும் தாம்வருந்தும்
அரசாண்ட தமிழர் நாடு.

வேங்கடமும் குமரியிடை விரிகடல்சூழ்
நிலப்பரப்பை வேறாய் ஆண்டு
வாங்குகிற வரிப்பணத்தின் வரையறுக்க
அரசமுறை வகுத்த தல்லால்
ஈங்குவட இமயம்வரை இந்தியரின்
நாகரிகம் ஒன்றே யாகும் ;
தாங்கள்ஒரு தனியென்று தடைபோட்டுத்
தருக்கினவர் தமிழர் அல்லர்.

விசைச்சொல்லும் உலகநடை வெவ்வேறு
நாடுகளில் விரியும் ஞானம்
பகைச்சொல்லும் பலபாஷை அறிவெல்லாம்
தமிழ்மொழியில் பலக்க வென்றே
திசைச்சொல்லுக் கென்றுதனி இடங்கொடுத்தார்
இலக்கணத்தில் தெரிந்த முன்னோர்
இசைச்சொல்ல இதைப்போல வேறுமொழிக்
கிலக்கணநூல் எங்கே? காட்டு!

எந்தமொழி வந்திடினும் தமிழ்மொழியை
என்னசெய்யும்?' என்றே முன்னோர்
வந்தபிற மொழியையெலாம் வரவேற்றுத்
தமிழ்மொழியை வளரச் செய்தார் ;
செந்தமிழின் சரித்திரத்தைத் தெரியாமல்
மக்களுக்குத் திரித்துக் கூறி
இந்திமொழி வந்ததென்ற இகழ்ந்துரைப்போர்
தமிழ்நாட்டின் பெருமை எண்ணார்.

பூச்சிபூழு உயிர்களையும் சமமென்று
போற்றினவர் தமிழ ராவார் ;
பேச்சிலுள்ள வேற்றுமைக்கு மனிதர்களைப்
பிரித்துவிடத் தமிழர் பேசார் ;
ஏச்சிலொரு இன்பமுள்ளோர் எக்காலும்
தமிழர்களின் இனத்தைச் சேரார் ;
கூச்சலிட்டு வசையுரைப்போர் கொச்சைகளே
அதற்குநல்ல சாட்சி கூறும்.

வேறெவரும் நுழையாமல் வேலியிட்டுத்
தமிழ்நாட்டார் வாழ்ந்த தில்லை ;
கூறுபடும் பலநாட்டார் கூடிநலம்
குலவியதித் தமிழர் நாட்டில் ;
மாறுபடும் பலமதமும் மருவிமனம்
கலந்ததெங்கள் தமிழன் மாண்பு ;
தேறிமனம் தெளிவடைவோம் ; தமிழர்களின்
பெருங்குணத்தைத் தெய்வம் காக்கும்.

24. வடநாட்டில் கொடுமை*

கோபமும் கொதிப்பும் குமிறிடும் படிபல
கொடுமைகள் நடக்குது வடநாட்டில் ;
தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்
தமிழா! உன்குணம் தவறிடுமோ?

அன்னிய மதமென அடிக்கடி பழகிய
அயலுள மக்களைக் கொல்லுவதை
என்னென உரைப்பது ஏதென வெறுப்பது
எண்ணவுங் கூடத் தகுமோதான்?

வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்
வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ?
ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்
அழகிது தானோ? ஐயையோ!

பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்
பிள்ளையை மடிப்பதும் பேய்செயுமோ?
வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்
விட்டிடப் படுமோ? தமிழ்மகனே!

அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்
அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால்
இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை
எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ?

தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது
தீயினைத் தீயால் அவிப்பதுபோல்
வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!
வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ?

அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல
அன்புள நம்தமிழ்த் திருநாட்டில்
கொடைக்குணம் மிகுந்ததம் குலத்தவர் காத்தனர்
கொள்கையை நாம்விடக் கூடாது.

வேற்றுமை பலவிலும் ஒற்றுமை கண்டிடும்
வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு.
மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்
மதமெனக் கொண்டவர் தமிழர்களே.

எம்மதம் ஆயினும் சம்மதம் என்பதை
ஏந்தி நடப்பது தமிழ்நாடு.
அம்மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்
அசைந்திட லாமோ தமிழறிவு?

மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை
மாநிலம் இன்னமும் சகித்திடுமோ?
விதவிதம் பொய்சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்
வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம்.

* நவகாளி அட்டூழியம் கேட்டுப் பாடியது

25. தமிழ் மக்கள்

நிலைபெற்ற அறிவென்ற
நிதிமிக்க நல்கும்
நிறைவுற்ற அருள்கொண்ட
நிகரற்ற தெய்வம்
கலைமிக்க தமிழன்னை
கழல்கொண்டு பாடிக்
கனிவுற்ற மனமொத்த
களிகொண்டு கூடி
அலையற்ற கடலென்ன
அமைவுற்று நாளும்
அகிலத்தின் பலமக்கள்
அனைவைர்க்கும் உறவாய்த்
தலைபெற்ற புகழ்கொண்டு
தவமிக்க ராகித்
தயவொன்றிப் பயமின்றித்
தமிழ்மக்கள் வாழ்வோம் ;
தமிழ்மக்கள் வாழ்வோம்.

26. பாரதி பாட்டு

அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்
அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்
பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,
'நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை
நீக்காமல் விடுவதில்லை!' எனமுன் வந்து
துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்
தூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.

படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்
பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்
துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,
'எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை
இப்பொழுதே இக்கணமே!' என்றென் றார்த்திங்(கு)
அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்
அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்!

புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்
புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்
சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே
தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி
எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி
'இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!' என்று
பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்
பண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.

எத்தாலும் பணந்தேடி இன்பம் நாடி
உண்டுடுத்தே இறப்பதனை இகழ்ந்து தள்ளிப்
பித்தாகித் தான்பிறந்த பரத நாட்டின்
பிணிவீட்டல் ஒன்றினுக்கே பாடிப் பாடி
முத்தாதி மணிகளெனும் சொற்க ளோடு
முப்பழத்தில் சுவைகூட்டி முனிவி லாது
சத்தான வீரத்தின் சாறும் சேர்த்துக்
கவிசமைத்த பாரதியின் தகைமை என்னே!

நடித்தொழுகித் துதிபாடி நலங்கள் நாடி
நரைத்திறந்து மறைந்திடும்நா வலர்போ லன்றி
வெடித்தெழுந்த பக்தியோடு பரத நாட்டின்
விடுதலைக்குப் பாடுவதே வெறியாய்க் கொண்டான்
இடித்தெழுந்து தேன்பொழியும் சொற்க ளோடும்
இளங்கதிரும் முழுமதியும் இணைந்தா லென்னப்
பொடித்துடலம் புளகமுற அச்சம் போக்கிப்
புகழ்புரியும் பாரதியின் புலமை தானே.

'மேனாட்டுப் புதுமொழிகள் வளர்ந்து நாளும்
மிகக்கொழுத்துப் பளபளத்து மேன்மை மேவ
மிக்கசுதைப் பழந்தமிழ்த்தாய் மெலிந்தா'ளென்றும்
தாய்நாட்டைத் தமிழ்மொழியை மறந்தீர் ஐயோ!
தமிழர்களே! தளதளத்து மூச்சு வாங்கித்
தலைவணங்கி உடல்சுகித்தீர் தவத்தால் மிக்க
வானாட்டுத் தேவர்களும் அறிந்தி டாத
வளமிகுத்துச் செழுசெழுத்து வாழ்ந்த நாட்டை
வறுமைதரும் அடிமையினில் வைத்தீ ரென்று
பாநாட்டிப் பலவழியிற் பாடிப் பாடிப்
படித்தவுடன் பதைபதைக்க வீர மூட்டும்
பாரதியின் பாடல்களின் பண்தான் என்னே!

"பாலொழுகும் சிறுகுதலை மகனைப் பார்த்துப்
'படையெடுத்தார் பகையாளர்; மகனே! நீபோய்
வேலொழுகும் போர்களத்தில் வெல்வா யன்றேல்
வெம்படையை மருமத்தில் வாங்கென்' றேவும்
சீலமிகும் பெண்மணிகள் திகழ்ந்த நாட்டைச்
சிற்றடிமைக் கொப்பிவிற்றுத் தின்றீர்!" என்று
தாலுழுது பறைசாற்றித் தமிழ்ப்பா வோதித்
தட்டியெழப் பாரதிதான் கவிசெய் தானே!

'அருமகனைத் தேர்க்காலில் அரைத்த வேந்தும்
பழியஞ்சித் தன்கையை அரிந்த கோனும்
தருமமிலை கோவலனைக் கொன்ற தென்று
தானறிந்த அக்கணமே சவமாய் வீழ்ந்த
பெருமையுள்ள திறல்வேந்தர் பின்னே வந்தீர்
பித்தடிமைக் குற்றேவல் பிழைத்தீர்' என்றே
உருகிமனம் விரிந்துயரும் கவிக களாலே
உணர்வளித்த பாரதியின் உரைதான் என்னே!

பாரிமுதற் சடையப்ப வள்ள லென்று
பாவலர்கள் நாவிலுறை பலபேர் வாழ்ந்து
சீரிலகும் தமிழ்மொழியின் இனிய ஓசை
திசையனைத்தும் போயலிக்கச் செய்த நாட்டில்
ஊறியநற் சுவையழுகும் கவிக ளாலே
ஊக்கமிகத் தமிழ்நாட்டிற் குணர்வைத் தந்த
பாரதியார் மிகக்கொடிய வறுமை மேவப்
பார்த்திருந்த தமிழுருற்ற பழிதான் என்னே!

சோற்றினுக் கறிவை விற்றுத்
தூர்த்தரைப் புகழ்ந்து பாடிச்
சோம்பரைச் செல்வ ரென்று
தொழுதுடல் சுகித்து வாழ்ந்து
கூற்றினுக் குடலம் போகக்
குப்பையிற் கவிகள் சோரக்
குறிவிடா திறந்து போகும்
கவிகளின் கூட்டம் சேரார்
வேற்றவர்க் கடிமை நீங்கும்
விடுதலை வரமே வேண்டி
வீரமும் ஞானம் பொங்கச்
சக்தியின் வேள்வி பாடி
நாற்றிசைத் தமிழ ரெங்கும்
நாட்டினைப் பணியச் செய்த
நாவலர் சுப்ர மண்ய
பாரதி நாமம் வாழ்க!

27. தமிழ்ப் பணி

தமிழன்னை திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழ்தம் தமிழ்மொழி என்றாரே!
அப்பெயர் குறைவது நன்றாமோ?

அன்பு நிறைந்தவள் தமிழன்னை
அருளை அறிந்தவள் தமிழன்னை
இன்பக் கலைகள் யாவையுமே
ஈன்று வளர்த்திடும் தேவியவள்.

பக்தி நிறைந்தது தமிழ்மொழியே
பரமனைத் தொடர்வது தமிழ்மொழியே
சக்தி கொடுப்பவள் தமிழ்த்தாயே
சமரசம் உரைப்பவள் தமிழ்த்தாயே.

வண்மை மிகுந்திடும் மனமுடையாள்
வாய்மையை வணங்கும் இனமுடையாள்
தண்மை அளித்திடும் இலக்கியத்தாள்
தாரணி புகழ்ந்திடும் இலக்கணத்தாள்.

மாநிலம் முழுதும்ஓர் சமுதாயம்
மக்களுக் கெல்லாம்தொருநியாயம்
தானென அறிஞர்கள் தலைவணங்கும்
தருமம் வளர்த்தவள் தமிழணங்கே.

அந்நிய மொழிகளை அருவருக்கும்
அற்பத் தனங்களை அவள்வெறுக்கும்
நன்னயம் மிகுந்தவள் தமிழ்மாதா
நாகரி கத்தின் தனித்தூதாம்.

பற்பல் மொழிகளைப் பகுத்தறிந்தாள்
பாருள அறிவினைத் தொகுத்துரைப்பாள்
அற்புத மாகிய மனப்பெருமை
அடங்கிய தேதமிழ்த் தனிப்பெருமை.

மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர்போல்
மதிப்பது தமிழ்மொழி முன்னுரையாம்
தன்னலம் துறந்திடும் தகவுடையாள்
தவநெறி வாழ்க்கையின் புகழுடையாள்.

அந்நிய வாழ்க்கையின் ஆசையினால்
அன்னையை மறந்தோம் நேசர்களே!
முன்னைய பெருமைகள் முற்றிலுமே
முயன்றால் தமிழகம் பெற்றிடுமே.

புதுப்புது ஒளிகளில் அலங்கரிப்போம்
பூரணம் தமிழ்எனத் துலங்கவைப்போம்
மதிப்புடன் படித்தவர் மகிழ்ந்திடுவார்
மாநிலத் தறிஞர்கள் புகழ்ந்திடுவார்.

அன்னிய மொழியே தினம்பேசி
அன்னையைப் பணிந்திட மனம்கூசி
இன்னமும் இருந்தால் தமிழ்மொழியே
இறந்திடும் உனக்கிது பெரும்பழியே.

தமிழன் என்பதை மறக்காதே
தாய்மொழிப் பெருமையைத் துறக்காதே
'அமிழ்தம் தமிழ்மொழி' ஐயமில்லை
அகிலம் நுகர்ந்திடச் செய்திடுவோம்.

28. தமிழிசையின் தத்துவம்

'இசை'எனல் கருத்துடன் ஓசையும் இசைவதாம்.
'கற்றலில் கேட்டலே நன்றெ'னும் கட்டுரை
படிப்பிற்கு மட்டுமா? பாட்டிற்கும் உண்டு.
படித்துக் கற்றிடும் அறிவைப் பார்க்கினும்
கேட்டுக் கற்றிடும் அறிவே கெட்டியாம்.
என்னும் தத்துவம் இசையினால் பலம்பெறும்
செவிவழி நுழைந்தே உணர்ச்சியைத் திரட்டி
அறிவைத் தேடும் ஆவலுண் டாக்கி
எண்ணச் செய்கிற ஓசையே இசையாம்.
ஓசைகள் மட்டுமே உணர்ச்சிஉண் டாக்கலாம்.
அழுவதற் கென்றோர் ஓசையை அறிவோம் ;
சிரிப்பதைக் காட்டும் சத்தமும் தெரிவோம் ;
அச்சம் குறிக்கிற ஒலியையும் அறிவோம் ;
அதிசயப் பட்டால் அதற்கொரு தனிஒலி ;
ஐயம் வினாக்களும் ஓசையால் அறியலாம் ;
அபயக் குரலையும் ஓசையால் அளக்கலாம் ;
எல்லா உணர்ச்சியும் ஓசையால் எழலாம் ;
எனினும் ஓசையே இசை ஆகாது.
'சங்கீதம்' என்பது ஓசையின் சங்கதி.
சப்த சுரங்களைச் சமர்த்தாய்க் கலந்து
நீட்டலும் குறுக்கலும் தெளித்தலும் செய்து
நிரவல் செய்து பரவல் நிரப்பிக்
கற்பனை மிகுந்த ஓசைகள் காட்டலே
சாமான்ய மாகச் 'சங்கீதம்' என்பது.
அதிலே மட்டுமோர் ஆனந்த மிருக்கலாம்.
நாதப் பிரம்மமும் அதிலே நாடலாம் ;
அதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி இல்லை ;
ஓசையை மட்டும் ரசிப்பவர் உண்டு.
ஆனால் அவர்கள் அதற்கெனப் பழகினோர்.
அப்படிப் பழகினோர் மிகச்சிலர் ஆவர் ;
அவர்களைப் பற்றியும் அக்கறை இல்லை.
பொதுஜன மனத்தில் அறிவைப் புகட்ட
இனிய ஓசையால் உணர்ச்சியை எழுப்பப்
'பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
தத்துவம் இதனை மனத்தில் தாங்கி,
புதுப்புது 'மெட்டை'யும் இசையிற் புகுத்திப்
பழைய 'சிந்துகள்' 'பதங்கள்' 'வண்ணமும்',
தமிழின் சொந்தச் சந்தம் பலவும்
அழிந்துபோ காமல் அவற்றையும் போற்றித்
'தமிழிசை' வளர்ப்பது தமிழன் கடமையாம்.
சங்கீ தத்தையும் தமிழன் கைவிடான்.
சரித்திரம் அறிந்த சத்தியப் படிக்கு
யாழின் விதங்களும், குழலினம் அனைத்தும்,
வாத்தியக் கருவிகள் வகைகள் பலவும்,
ஏழு சுரங்களை இயக்கும் விதமும்,
'கர்நா டகத்துச் சங்கீதம்' என்றே
அழைக்கப் படுகிற அந்தக் கலையும்
தமிழன் ஆதியில் வளர்த்துத் தந்ததே.
இன்றைய தினத்திலும் இந்தக் கலைகளில்
தலைசிறந் துள்ளவன் தமிழனே யல்லவா?

29. சேர்த்து வைத்த செல்வம்

"தன்குஞ்சு ஒன்றே பொன்குஞ்சு என்று
கன்னங் கறுத்த காக்கையும் கருதும்"
என்னும் பழமொழி இயல்புக் கிணங்க
அவரவர் மொழியே அவரவர்க் குயர்ந்ததாம்.
ஆயினும் தமிழை அதற்காய்ப் புகழ்ந்திடோம்.
பழமை மிக்கது தமிழெனும் மொழியாம்.
ரசங்கள் நிறைந்த ராமா யணத்தை
வான்மீகி முனிவன் வரைந்த போதே
தமிழர் நாட்டைத் தனியே புகழ்ந்தான் ;
ஆட்சியின் சிறப்பையும் அதிலே சொன்னான்.
வான்மீகி காலம் வரையறை அற்றது ;
அதற்கும் முன்னால் ஆண்டனர் தமிழர் ;
இலக்கண அமைப்பிலும் இலக்கியச் சிறப்பிலும்
தனிப்பட் டுயர்ந்தது தமிழ்மொழி என்றே
ஆராய்ந்தறிந்த அனைவரும் சொல்லுவர்.
எந்த மொழியையும் இகழ்ந்திடாத் தமிழன்
பற்பல பாஷைகள் நன்றாய்ப் படித்தும்
அறிவையே நாடி அலசிப் பார்த்தும்
உலகத்தி லுள்ள உயர்ந்த கருத்துகள்
எல்லாம் நிறைந்த இலக்கியம் உள்ளதாய்ச்
சேர்த்து வைத்த செல்வம் தமிழ்மொழி
இன்று நேற்று ஏற்பட்ட தன்று ;
மூவேந்தர் ஆட்சிக்கு முன்னா லிருந்தே
இந்திய நாட்டிலும் அந்நிய இடத்திலும்,
திரவியம் தேடித் திரைகட லோடியும்,
கப்பல் ஓட்டிக் கடலைக் கடந்தும்,
அந்நிய மன்னர் அழைப்புக் கிணங்கியும்,
எவரும் மதித்தே எதிர்கொள்ளும் இனமாய்,
எங்கும் சென்றே எவரோடும் பழகி
ஆண்டுகள் பற்பல ஆயிர மாக
வாழ்ந்த தமிழர் வருந்திச் சேர்த்தது.
உலக வழக்குடன் ஒட்டியே நின்று
'கன்னித் தமி'ழென இன்னும் களிக்கப்
புதுப்புது அறிவுகள் புகுதற் கிடந்தர
எண்ணிச் செய்த இலக்கணம் உள்ளதாய்,
உண்மை அறிவில் ஊன்றிய வேருடன்
பருத்துப் படர்ந்த பற்பல கிளையுடன்
விழுதுகள் எண்ணில வெவ்வெறு தாங்க
ஊழிக் காற்றே உரத்தடித் தாலும்
அசைக்க முடியா ஆல மரம்போல்
நேர்ந்தவர்க் கெல்லாம் நிழலே கொடுத்தும்
அலுப்பைத் தீர்த்தும் அமைதியைத் தந்தும்
கவிதையும் காட்டி, களிக்கச் செய்திடச்
செழித்து நிற்பது செந்தமிழ்ச் சிறப்பு ;
தமிழைப் போற்றுதல் தமிழரின் கடமை.
தமிழின் வளர்ச்சியை மனத்தில் தரித்தும்
அந்நியர் அறிவையும் தமிழில் பிணைத்தும்
தொழில்முறை அறிவுகள் தமிழில் தொகுத்தும்
ஏனைய நாட்டின் எல்லா அறிவும்
தமிழில் உண்டெனத் தருக்கும் படியாய்ச்
செய்து வைப்பதே தமிழ்மொழிச் சேவை.

30. கவிதை என்றால் என்ன?

அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
பாடு படாமல் பாடம் பண்ணவும்,
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே 'கவிதை' எனப்படும்.
'கவிதை' என்பது கற்பனை உள்ளது ;
கூட்டியும் பேசும் ; குறைத்தும் கூறும் ;
பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
ஐந்தும் மூன்றும் ஆறு என்கிற
கணக்கே யாகும் ; கவிதையா காது.
கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!

31. தமிழைப் பேணுவோம்

பாஷைக ளெல்லாம் பசையற நாணிக்
கூசிக் கூசிக் குறைபடச் செய்யும்
வாசத் தமிழை வரையிலாத் தொன்மையை
வீசும் தமிழை விரிந்த கடலினைத்
தேனினும் பாகினும் தெள்ளிய அமுதினும்
ஏனினும் எதனினும் இனித்திடும் தமிழைத்
தின்னத் தின்னத் தெவிட்டாத் தமிழைப்
பன்னப் பன்னப் பலக்கும் தமிழைக்
கொள்ளக் கொள்ளக் குறாயாத் தமிழைக்
கள்ளக் கபடுகள் இல்லாத் தமிழைப்
படிக்கப் படிக்கப் பயனே தந்து
குடிக்கக் குடிக்கக் குறையா அமுதை
என்தாய் மொழியினை என்னுடைத் தமிழை
உன்தாய் மொழியினை உம்முடைத் தமிழை
எம்மையும் உம்மையும் மற்றுமிங் கெவரையும்
செம்மையாம் நம்முடைச் சிறுபிரா யத்தினில்
தொட்டிலில் விட்டுக் கட்டிலில் வைத்துத்
தோளிலும் மார்பிலும் தூக்கித் திரிந்து
பாலூட்டி வளர்த்த பாவையாம் தமிழைத்
தாலாட்டி வளர்த்த தாயாம் தமிழைச்
சீராட்டி வளர்த்த சீர்பெறும் தமிழைப்
பாராட்டி வளர்த்த பழையதோர் தமிழைக்
கோவண முடுத்துப் பாவாடை தந்த
தேவியாம் தமிழைத் தெய்வநற் றமிழை
ஆசையாம் மனைவியை அகத்தினில் விட்டு
சேவையை விரும்பும் வெறியரைப் போன்ற
பாஷையை மறந்த பாதகர் பிறந்து
தேசமிந் நாட்டின் தீவினை யாலே
சீச்சீத் தமிழெனச் சீறிப் பழித்து
நாசியை நீட்டி நாய்போல் விழுந்து
ஏசித் திரியும் இழிவுடை மாக்கள்
பேசவும் கூசிடும் பேயர்கள் பிறந்து
தன்னை வளர்த்த தமிழைப் பேசுதல்
குன்றுந் தொழிலெனக் கூசியே நின்று
பன்னப் பன்னப் பல்லைக் காட்டிடும்
சின்னஞ் சிறியவர் பிறந்தத னாலே
தாயை மறந்த தடியர்கள் போல
வாயைத் திறந்தொரு வார்த்தை சொல்லவும்
உரிமையாம் பாஷையைத் தெரியா திருப்பது
பெருமையென் றெண்ணும் பேயெனு மாக்கள்
குங்குமம் சுமந்த கழுதையே போலத்
தம்முடைப் பாஷையைத் தாமுண ராமல்
அத்துடன் அதனை அவமதித் தேசும்
பித்தரும் பதரெனும் சுத்தநிர் மூடர்கள்
பிறந்தத னாலே பெருமை மறந்து
சிறந்த நாளும் சீரும் குறைந்து
மண்ணிற் கிடக்கும் மணியே போலும்
அற்பரை அண்டிய விற்பனர் போலும்
ஆதர வில்லா வித்தையே போலும்
அணைப்பவ ரில்லாக் குழந்தையே போலும்
அநுபவ மில்லா அறிவே போலும்
மங்கிக் கிடக்கும் மருவிலாத் தமிழை
இங்கிதத் தமிழிழை இனிமையாம் தமிழை
அந்த நாளினற் சந்திர முடியோன்
சுந்தரப் படுத்த வந்துநின் றருளி
விருத்தியே செய்யக் கருத்தினி லெண்ணிப்
பெருத்த கேள்வியர் பெரியவர் சபையெனச்
சங்கரன் தானே அந்தத் தலைவனாய்த்
தங்கியே நடத்திய தனிப்பெரும் சபையெனச்
சுத்தரும் சித்தரும் பக்தரும் துதிக்க
இத்தரை யெல்லாம் இசைகொண்டு நின்றே
உலகெலாம் அழியினும் விலகிடாப் புகழொடும்
அலகிலாக் கல்விக் களஞ்சிய மாகித்
தெய்வப் பலகையைத் தன்னிட மடக்கி
ஐயமில் லாத அருந்தமி ழளித்த
சித்திரச் சபையாம் மெய்த்திருச் சபையாம்
முத்தமிழ்ச் சங்கம் விளங்கிய தமிழைத்
தாயெனப் பேணித் தமிழ்ர்கள் யாவரும்
ஓயா துழைத்தே ஒப்பிலா மொழியெனப்
புதுப்புதுக் கவியும் புகழ்பெரு நூல்களும்
விதவிதம் படைத்து வேறுள நாட்டவர்
யாவரும் வியக்க அரியா சனத்தில்
மேவிடச் செய்ய விரைகுவம் இன்றே.

32. தமிழ் இசை

தன்நாட்டுத் தாய்மொழியில் எவரும் கேட்கத்
தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு வேண்டு மென்ற
நன்னாட்டத் துடன்ராஜா நம்சர் அண்ணா
மலையவர்கள் அதற்காகப் பரிசு நாட்டத்
தென்னாட்டுத் சிதம்பரத்தில் அறிஞர் கூடித்
தமிழ்மொழிக்குத் தேவையென்று தீர்மா னித்தால்
எந்நாட்டு யாராரோ எங்கோ கூடி
ஏசுவதும் பேசுவதும் என்ன விந்தை!

வந்தஎந்தப் பிறமொழிக்கும் வரவு கூறி
வகைசெய்து வாழ்வளித்து வரிசை யெல்லாம்
தந்தவர்கள் தமிழரைப்போல வேறு யாரும்
தாரணியில் இணைசொல்லத் தகுவா ருண்டோ?
அந்தப்பெருங் குணத்திலின்னும் குறைவோ மில்லை;
ஆனாலும் தமிழினங்கள் வாழ வேண்டின்
சொந்தமொழிக் கலைகளெல்லாம் சுருங்கித் தேயப்
பார்த்திருந்தும் சோம்புவதும் அறிவோ சொல்வீர்?

முக்கிமுக்கிப் பயின்றுபல முயற்சி செய்து
மூக்காலும் வாக்குரைத்து, மூச்சு வாங்கத்
திக்குமுக்க லாடுகின்ற பாஷைக் கெல்லாம்
சிறப்பாகும் சங்கீதத் திறமை யென்றும்
சிக்குமுக்காம் உச்சரிப்புச் சிறிதும் வேண்டாச்
சீரிலகும் எழுத்தியல்பு சேர்ந்த தாகித்
தக்கமிக்கோர் இனிமையெனும் தமிழில் நாதச்
சங்கீதம் குறைவென்றால் தரிக்க லாமோ?

நாதமெனும் பிரமத்தைப் பணிவோம்; ஆனால்
நாமறியா மொழியில்நமக் கேதுநாதம்?
கீதமென்று புரியாத பாட்டைக் கேட்டுக்
கிளர்ச்சிபெறா உண்ர்ச்சியிலே கீதம் ஏது?
வாதமென்ன? இதிலெவர்க்கும் வருத்தம் ஏனோ?
வாய்மணக்கப் பிறமொழியை வழங்கினாலும்
ஓதியும் உணர்ந்ததுவும் தாய்ப்பா லோடும்
ஊட்டியதாம் தாய்மொழிபோல் உதவா தொன்றும்

கலையென்றால் உணர்ச்சிகளைக் கவர வேண்டும் ;
களிப்பூட்டி அறிவினைப்போய்க் கவ்வ வேண்டும் ;
நிலைகொள்ளாச் சிந்தனையை நிற்கச் செய்து
நீதிநெறி தெய்வநினைப் பூட்டற் கன்றோ?
விலையில்லாப் பெருமைபல உடைய தேனும்
விளங்காத பாஷையிலே பாட்டைக் கேட்டுத்
தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட் டாலும்
தனக்கதுவோர் கலையின்பம் தருவ துண்டோ?

'சங்கீதம் பாடுதற்கும் மொழிக்கும் என்ன
சம்பந்தம்?' என்றெவரும் சாதிப் பாரேல்,
இங்கேதும் தடையில்லை ; ஏற்றுக் கொள்வோம் ;
எல்லாமே தமிழ்பாட்டா யிருந்தா லென்ன ?
சிங்கார வாதங்கள் பலவும் பேசிச்
சிறப்பான முயற்சியிதைச் சிதைக்க லாமோ?
தங்காமல் தயங்காமல் தளர்த்தி டாமல்
தமிழ்நாட்டார் இச்செயலைத் தாங்க வேண்டும்.

கேட்டிருந்தார் பாடினவர் எல்லாம் சேர்ந்து
கெடுத்துவிட்ட காரியத்தைக் கிண்டிக் கிண்டி
நாட்டிலின்னும் இதற்குமொரு சண்டை யின்றி
நல்லஒரு தமிழ்ப்பண்ணை நடத்த வேண்டும் ;
பாட்டினுடன் இலக்கியமும் படியப் பாடிப்
பருந்தோடு நிழல்சொல்லும் பான்மை காப்போம் ;
கூட்டமிட்டுப் பேசிவிட்டு மறந்தி டாமல்
குற்றமிதைத் தமிழ்நாட்டிற் குறைக்க வேண்டும்.

பலநாட்டுச் சங்கீதம் நமக்கு வேண்டும்?
பற்பலவாம் முறைகளையும் பழக வேண்டும் ;
விலைகூட்டிக் கலையறிவை வாங்கி யேனும்
விதம்விதமாய்த் தமிழ்மொழியில் விரிக்க வேண்டும் ;
அலைநீட்டும் கடல்கடந்த அறிவா னாலும்
அத்தனையும் தமிழ்வழியில் ஆக்க வேண்டும் ;
நிலைநாட்டித் தமிழ்க்கலைகள் வளர்ச்சிக் கென்றே
நிச்சயமாய் உழைக்கஒரு நிலையம் வேண்டும்.

ஆதலினால் தமிழ்நாட்டில் தமிழ்பாட்டிற்கே
ஆதரவிங் ககத்தியமாய் அதிகம் வேண்டும் ;
காதலினால் தாய்மொழியைக் காப்ப தன்றிக்
கடுகளவும் பிறமொழிமேற் கடுப்ப தல்ல ;
தீதில்லா திம்முயற்சி சிறப்புற் றோங்கத்
திருவருளைத் தினந்தினமும் தொழுது வாழ்த்தி
வாதெல்லாம் விலக்கி, கலை வாண ரெல்லாம்
வல்லநல்ல தமிழ்பாடி வாழ வேண்டும்.

33. திருக்குறள் பெருமை

அமிழ்தமென்று மிகமகிழ்ந்தே
அறஞர்யாரும் போற்றிட
அறிவறிந்த மொழிஇதென்றே
அகிலமெங்கும் ஏற்றிடும்
தமிழ்மொழிக்கிங் கழிவிலாத
தன்மைசூட்டி வைத்ததும்
தரணியெங்கும் இணையிலாத
இல்லறத்தை நத்திடும்

அமைதிமிக்க ஜனசமூகம்
தமிழரென்ற கீர்த்தியும்
அடிமையற்ற குடிமைபெற்ற
அரசுகண்ட நேர்த்தியும்
இமையவர்க்கும் நெறிபுகட்டும்
எங்கள்தெய்வ வள்ளுவன்
இங்குரைத்த குறள்களென்ப
ஈந்தநன்மை அல்லவோ!

காடுசென்று குகையடைந்து
கண்கள்மூடி எண்ணியும்
காவிகட்டி ஓடெடுத்துக்
கஷ்டவாழ்க்கை பண்ணியும்
தாடிவைத்து மொட்டைதட்டித்
தவசியென்ற பேருடன்
தரணிமெச்ச ஊர்கள்சுற்றித்
தருமபோதம் கூறியும்

கூடுவிட்டுக் கூடுபாயும்
சித்து செய்யக் கோரியும்
கோடிகாலம் வாழஎண்ணிக்
காயகற்பம் தேரியும்
தேடுகின்ற உண்மையாவும்
ஓடிவந்து நிற்குமே
தெய்வவாக்கு வள்ளுவன்
திருக்குறள்கள் கற்கவே.

அன்புதந்த அருள்விளக்கி
அறிவுசொல்லும் அறமொழி
ஆன்மஞானம் என்றுசொல்லும்
அதையும்சேரப் பெருவழி
துன்பமென்ற உலகவாழ்வில்
துயரம்ஏதும் வந்திடில்
துணைபுரிந்தே அருகிருந்து
தோது சொல்லும் மந்திரி.

இன்பம்என்று தவறுசெய்து
நோய்கள்சேரக் கண்டதும்
இடைபுகுந்து மாற்றுரைத்தே
இடரைநீக்கும் பண்டிதம்
தென்புமிக்க தூயவாழ்வின்
தெளிவு காட்டும் பண்பதாம்
தெய்வஞான வள்ளுவன்
திருக்குறள்கள் என்பவாம்.

34. தமிழ் வளர்க்கச் சபதம்

சீர்திறந்த தமிழர்களின் புத்தாண் டிந்தச்
சித்திரையில் தொடங்குகிற திறத்தால் இன்று
பார்புரந்த மனுநீதிச் சோழன் பண்டோர்
பசுவினுக்கும் சமதர்மம் பரிவாய்ச் செய்தான் ;
ஏர்சிறந்த ஒருமகனை ஈடாய்த் தந்தான் ;
இணையறியாப் பெரும்புகழைத் தமிழுக் கீந்தான் ;
தேர்சிறந்த தியாகேசன் திருவா ரூரில்
திகழுமிந்தச் சபைதனிலோர் சபதம் செய்வோம்!

அமிழ்தமென எவ்வுயிர்க்கும் அன்பு செய்தே
அருள்நெறியைப் புகட்டுவதே அறமாய்க் கொண்ட
தமிழ்மொழியின் பெருங்குணத்தின் தாரா ளத்தைத்
தடுக்கவரும் துடுக்குகளைத் தவிர்க்க வேண்டும்.
நமதருமை முன்னோர்கள் நெடுநா ளாக
நடத்திவந்த நன்னெறியை நலியப் பேசி
அமைதிமிக்க தமிழ்வாழ்வைக் குலைக்க எண்ணும்
அநியாயம் முழுவதையும் அகற்ற வேண்டும்.

பாண்டியரும் சோழர்களும் சேர மன்னர்
பாடுபட்டுப் பயிர்செய்த நாக ரீகம்
நீண்டுயர்ந்து கோபுரங்கள் வடிவாய் நின்று
நிரந்தரமாம் பரம்பொருளின் நினைவு கூட்டித்
தூண்டியநல் லுணர்ச்சிகளின் தொகுப்பே யன்றோ
தொன்றுதொட்டு இன்றளவும் தொடரும் நூல்கள்?
ஈண்டிவைகள் யாவினையும் இகழ்வோ மானால்
என்னமிச்சம் தமிழ்வளர்ச்சி இனியும் உண்டோ?

கோயில்களின் பெரும்பயனைக் குறைத்துப் பேசிக்
கும்பிடுவோர் நம்புவதைக் குலைத்தும் ஏசித்
தூயவழி வாழ்வதற்கு நல்லோர் கண்ட
துறவுமனப் பொறையறிவைத் தோஷம் சொல்லி
வாயில்வந்த கொச்சைகளால் வசைகள் வீசி
வகுப்புகளில் வெறுப்புகளே வளரச் செய்யும்
ஞாயமற்ற பேச்சுகளை நீக்கா விட்டால்
நம்முடைய தமிழ்வாழ்வு நாச மாகும்.

முன்னோர்கள் யாவரையும் மூட ரென்றும்
மூவேந்தர் பரம்பரையும் அமைச்சர் முற்றும்
சொன்னவர்கள் சூழ்ச்சிகளைச் செய்தா ரன்றிச்
சொந்தபுத்தி இல்லாத வீணர் என்றும்
பொன்னாலும் புகழாலும் மயக்க வொண்ணாப்
புலவர்களின் இலக்கியங்கள் பொய்க ளென்றும்
என்னேரம் பார்த்தாலும் இகழ்வே யானால்
எப்படிநம் தமிழ்மொழிக்கு வளர்ச்சி ஏறும்?

ஏனென்று கேட்பதற்கோ எவரும் இன்றி
எழில்மிகுந்த தமிழ்வாழ்வை இகழ்ந்து பேசிக்
கோனென்ற யாவரினும் குணமே மிக்க
மூவேந்தர் நெறிமுறைக்கும் குற்றம் கூறும்
நானென்ற அகங்காரம் நம்மைச் சூழ
நல்லதமிழ் வளர்ச்சியினி நமக்கும் உண்டோ?
தேனென்ற நமதுமொழி வாழ வேண்டின்
தீவிரமாய் இந்நிலையைத் தீர்க்க வேண்டும்.

நித்தியமாம் சத்தியமே நெறியாய்க் கொண்டு
நெற்றிக்கண் ஈசனுக்கும் குற்றம் காட்டும்
சுத்தமுள்ள பெரும்புலவர் வழியில் தோன்றிச்
சுகபோக ஆசைகள்த் துறந்து வாழ்ந்த
எத்தனையோ பெரியவர்கள் இசைத்த நூல்கள்
ஏளனத்தால் இழிவடைய விட்டோம் இந்நாள்
அத்தனையும் அழிந்தொழிய விடுவோ மானால்
அதன்பிறகு தமிழ்வளர்ச்சி ஆசை என்னாம்?

புதுமையென்றும் புரட்சியென்றும் புனைந்து கூறிப்
புவியறிந்த உண்மைகளைப் பொருள்செய் யாமல்
முதுமொழிகள் யாவையுமே மோசம் செய்யும்
மூடபக்தி யாகுமென முரண்டு சொல்லிச்
சதிபுரியத் துணிந்துவிட்டோம்; தமிழ்தாய் நொந்து
தவிக்கின்றாள்; தான்வளர்த்த தருமம் எல்லாம்
கதியிழந்து போகுமெனக் கண்ணீர் கொட்டிக்
கதறுகின்றாள் அவள்பெருமை காப்போம் வாரீர்!

விஞ்ஞானக் கலைகளெல்லாம் விரித்திட் டாலும்
வேறெவர்க்கும் அழிவுசெய்ய விரும்பி டாத
மெய்ஞ்ஞானக் கருணைவழி காக்கும் மேன்மை
மிகப்படைத்த தமிழ்மனசை மிகவும் தூற்றி
அஞ்ஞானப் பொய்களையே அடுக்கிக் கொண்டிங்
கருந்தமிழின் பெருவாழ்வை அழிக்க எண்ணும்
பொய்ஞ்ஞானத் தீமைகளைப் போக்க வேண்டும்
புத்தாண்டுச் சபதமிதைப் புனைவோம் இன்று.

தெள்ளியநல் அறங்களையே தெளிவாய்ச் சொல்லித்
தினையளவும் பிசகாமல் நடந்து காட்ட
வள்ளுவனே மறுபடியும் வந்தான் என்ன
வழிகாட்டித் திருக்குறளை வாழ்ந்த வள்ளல்
பிள்ளைமனப் பேரறிஞன் பெம்மான் காந்தி
பெருநெறியே தமிழ்தாயின் பேச்சா மென்று
கள்ளமற நாமறிந்து கொள்வோ மானால்
காத்திடலாம் தமிழ்மொழியை; வளர்ச்சி காணும்.

3. காந்தி மலர்

35. காந்தி அஞ்சலி

சமனி லாத இந்த நாட்டின்
ஞான வாழ்வின் சக்தியைச்
சரிச மான மாக மற்ற
உயிரை எண்ணும் சாந்தியை
அமர னாகி நம்மைக் காக்கும்
அண்ணல் காந்தி ஐயனை
அஞ்ச லிக்கும் யாவ ருக்கும்
சஞ்ச லங்கள் தீருமே.

36. மகாத்மா

இத்தனைநாள் உலகமெல்லாம் இருந்தறிந்த
பெரியவர்கள் இசைத்த ஞானம்
அத்தனையும் ஓருருவாய்த் திரண்டதெனக்
கலியுகத்தே அவத ரித்தோன்
சத்தியமே மந்திரமாம் சாந்தமொன்றே
தந்திரமாம் சமயம் தந்த
உத்தமனாம் காந்திமுனி உச்சரித்த
சாத்விகத்தை உறுதி கொள்வோம்.

37. கண்கண்ட தெய்வம்

காந்திக்கு நிகர்வேறும் உண்டோ--மக்கள்
கண்கண்ட ஒருதெய்வம் அன்றோ?
சாந்திக்கும் புகழ்தந்த சாந்தன்--உலகில்
சன்மார்க்க வாழ்க்கைக்கு வேந்தன்.
மரணத்தை இனிதாக்கும் ஐயன்--என்றும்
மனதுள்ளும் சினமற்ற மெய்யன்
இரணத்தை எய்யாத வீரன்--காந்தி
இணையற்ற மெய்ஞ்ஞான தீரன்.

உயிருள்ள உடலங்கள் எல்லாம்--ஈசன்
உறைவென்று பணிகின்ற நல்லோன்
துயருற்ற எவருக்கும் துணையாம்--காந்தி
தொடர்பின்றி எதுவாழ்வின் புணையாம்.

வையத்தை வாழ்விக்க வந்தான்--மக்கள்
வானத்தின் சக்திபெறத் தந்தான்
தெய்வத்தின் பெயர்தியாக ராசன்--என்று
தெரிவிக்க உயிர்தந்த நேசன்.

பகவானைத் தரிசிக்க என்று--நாமும்
பலவான ஊர்தேடிச் சென்று
மிகவாக வாடுதல் வேண்டாம்--காந்தி
மெய்வாழ்வு பாடுதல் பூண்டால்.

தானங்கள் வெவ்வேறு செய்து--நல்ல
தவமென்றே ஆகுதி பெய்து
மோனங்கள் தருகின்ற யாவும்--காந்தி
முறைதந்த வழிவாழ மேவும்.

38. கடவுளைக் காட்டும் காந்தி

ஒப்புடன் உண்மைக் காக
உயிர்தர வேண்டும் என்றே
எப்படி விரும்பி னாரோ
அப்படி இறந்தார் காந்தி.
இப்படி உயிரை ஈந்தோர்
உலகினில் எவரும் இல்லை
தப்புற நினைக்க வேண்டாம்
தர்க்கமும் தருமம் அல்ல.

அற்புதப் பிறவி காந்தி
அற்புத மரண முற்றார்;
கற்பனை கடந்த சாந்தன்
கடவுளிற் கலந்து கொண்டார்;
பற்பல நினைந்து பேசிப்
புலம்புதல் பயித்தி யந்தான்!
நற்குணச் சீலன் காந்தி
சொற்படி நடப்போம் வாரீர்.

உடலோடு வந்து போகும்
உருவினில் தெரிவ தன்றிக்
கடவுளை உலகில் யாரும்
நேருறக் காண்ப தில்லை;
அடைவரும் கருணை அந்தக்
கடவுளின் அன்பு தன்னை
நடைமுறை வாழ்விற் செய்த
காந்தியே நமது தெய்வம்!

எத்தவம் முயலு வோர்க்கும்
இருந்திட வேண்டு மென்னும்
சத்தியத் தூய வாழ்வின்
சற்குணப் பாறை போன்று
நித்தமும் நமக்கு முன்னால்
நின்றுகொண் டறிவு சொல்லும்
உத்தமன் காந்தி எம்மான்
உடலுக்கா உளைந்து போவோம்?

நோன்புடன் மறைந்த காந்தி
நுண்ணிய உடலின் சாரம்
சாம்பலில் கரைந்து இன்று
நதிகளிற் கலந்து சத்தாய்த்
தேம்பிடும் உலகம் தேறத்
திரைகடல் மூலம் சென்று
ஏம்பலைப் போக்கி ஞான
எழுச்சியைக் கொடுக்கும் எங்கும்.

சூரியன் இறப்பான்; காணும்
சந்திரன் சூன்ய மாவான்;
பாரொடு விண்ணில் மின்னப்
பார்க்கிற யாவும் மாயும்.
தேரிய அறிவு கூறும்
தெய்விக மெய்ம்மை காட்ட
நேரிய காந்தி ஞானம்
நிரந்தரம் நிலைத்து வாழும்.

39. தூய்மை ஜோதி

நீறு பூசு வோர்களும்
நெற்றி நாமப் பேர்களும்
வேறு பொட்டு சந்தனம்
வேண்டு கின்ற மைந்தரும்
கூறும் சின்னம் இன்றியும்
கொள்கை யோடு நின்றிடும்
மாறு கொள்ளும் யாவரும்
மகிழும் காந்தி தேவராம்.

அமிழ்த மொத்தே அறிவினில்
அழிவி லாத நெறிதரும்
தமிழ றிந்த சத்தியம்
காந்தி வாழ்ந்த தத்துவம்
தமைய றிந்த முனிவரும்
தம்ம டங்கும் அனைவரும்
அமைதி தேடும் சாந்தியே
ஐயன் எங்கள் காந்தியாம்.

மூச்ச டக்கும் யோகமும்
முறைபு ரிந்த யாகமும்
பேச்ச டக்கும் மோனமும்
பேசும் தர்க்க ஞானமும்,
கூச்ச மற்ற பக்தியும்
குணந லத்தின் சக்தியும்
தேர்ச்சி கொள்ளும் கருணையே
காந்தி வாழ்ந்த அருணெறி.

வீரம் பேசும் வெறியரும்
வெற்றி நாடும் குறியரும்
ஈரம் அற்ற நெஞ்சரும்
இழிவு கற்ற வஞ்சரும்
ஓரம் சொல்லு வோர்களும்
உண்மை அஞ்சும் பேர்களும்
தூரம் ஓடக் காய்ந்திடும்
தூய்மை ஜோதி காந்தியாம்!

40. இணையிலர் காந்தி

பிறப்பிலும் பெரியவர் பெம்மான் காந்தி
இறப்பிலும் இணையிலர் எம்மான் காந்தி
துறப்பிலும் நிகரிலர் தூயோன் காந்தி
மறப்பதும் நமக்கது மாபெரும் பாவம்.

அறிவினில் ஆழியன் அரும்பெரும் காந்தி
நிறைகுண நலங்களில் நேரிலன் காந்தி
குறிசொலும் அனுபவக் குன்றாம் காந்தி
நெறிதரக் காந்தியின் நேரெவர் உலகில்!

மேழியின் சிறப்பினை மீட்டவர் காந்தி
ஏழையின் பெருந்துணை எமதரும் காந்தி
கோழையும் திடம்பெறக் கொடுத்தவர் காந்தி
வாழிய காந்தியின் வழிகொடு வாழ்வோம்.

கள்ளினை ஒழித்தவர் கடனறி காந்தி
கதருடை தந்தவர் கணக்கறி காந்தி
வெள்ளையர் தாமே விருப்புடன் ஆட்சி
விட்டிடச் செய்தது காந்தியின் விநயம்.

அன்பினை அறிந்தவன் அருள்தரும் காந்தி
துன்பினை மறந்திடத் துணைதரும் எவர்க்கும்
இன்பினை அல்ல(து) எண்ணாப் பெரியோன்
செம்பொருள் உரைத்தவர் யாரினும் சிறந்தோன்.

சோர்ந்துழல் ஏழைகள் சுகம்பெற வேண்டின்
சோம்பிடும் செல்வம் சூதுகள் நீங்க
மாந்தருக் குள்ளே மதவெறி போகக்
காந்தியை மறந்தால் கதிநமக் கேது?

41. அன்பின் உருவம்

அன்பின் உருவம் காந்திமகான்
அருளின் சிகரம் மாந்தருக்கு
தென்பின் நிலையம் திருவுள்ளம்
தெளிவாம் அறிவின் பெருவெள்ளம்
துன்பம் நேர்ந்திட வருமாகில்
துயரம் தீர்ந்திடத் திருநாமம்
முன்பிவ் வுலகம் கண்டறியா
முற்றிலும் அதிசயத் தொண்டர்பிரான். ..(அன்)

இந்திய நாட்டின் அருள்ஞானம்
இதுவெனக் காட்டிய பெருமானாம்
தந்தையும் தாயாம் தனித்தலைவன்
தாரணி நலமுற ஜனித்தஇவன்
சிந்தையும் சொல்லும் செயல்யாவும்
சீலமும் சத்திய இயல்பாகும்
விந்தையின் விந்தை காந்தியரின்
விடுதலை நாட்டிய சாந்தவழி! .. (அன்)

புண்ணியத் திருநாள் இதிற்கூடி
புனிதன் காந்தியின் துதிபாடின்
எண்ணிய காரியம் ஜயமாகும்
ஏமனைக் காணினும் பயம்ஏது?
மண்ணிடை மதவெறி மடிந்துவிடும்
மாந்தருள் சமரசம் படிந்துவிடும்
கண்ணியம் மிகுந்திட வாழ்ந்திடுவோம்
கல்வியும் கலைகளும் சூழ்ந்திடவே. .. (அன்)

வேறு

கொல்லுகின்ற தில்லையென்ற நல்லோர்கள்பேர்
குவலயத்தில் வாழுமென்று சங்கூதுவோம்!
வெல்லுகின்ற போதுமாசை விட்டார்களே
வீரர்தீரர் சூரரென்று சங்கூதுவோம்!

சாந்திசாந்தி சாந்தியென்று சங்கூதுவோம்
சாத்திரங்கள் முடிவிதென்று சங்கூதுவோம்
காந்திகாந்தி காந்தியென்று நம்நாட்டிலே
கால்நடக்கும் வேதமென்று சங்கூதுவோம்.

வேறு

நேய மற்ற மதவெ றிக்கு
நிலைய மான தேசமாம்
பேயும் கூட நடுந டுங்கிப்
பேத ளித்துக் கூசுமாம்
நாய்ந ரிக்கும் அச்ச மூட்டும்
நவக ளிக்குள் காந்திதான்
போய்ந டத்தும் யாத்தி ரைக்குள்
புனித அன்பு சேர்ந்ததாம்.

தெய்வம் என்று உலகம் நித்தம்
தேடு கின்ற ஒன்றுதான்
வைய கத்தில் 'அன்பு' என்ற
வார்த்தை யாக நின்றதே!
ஐயன் எங்கள் காந்தி வாழ்க்கை
அற்பு தத்தை நாடினால்
மெய்யு ணர்ந்தே அன்பு சொல்லும்
மேன்மை யாவும் கூடுவோம்.

42. எவர் சாதித்தார்?

கருணையின் பெருமையைப் போதித்தார்
காந்தியைப் போல்எவர் சாதித்தார்?
மரணமும் அவரிடம் அன்புபெறும்
மற்றது எதுதான் துன்பமுறும்?

சத்திய நெறிதரும் சாத்திரமாம்
சாத்விக வாழ்க்கையின் சூத்திரமாம்
உத்தமன் காந்தியை மறந்துவிடின்
உண்மைச் சுதந்திரம் மறைந்துவிடும்.

புலையும் கொலையும் புரியாமல்
புண்ணிய எண்ணம் பிரியாமல்
உலகம் இதுவரை கண்டறியா
உயிர்வழி விடுதலை கொண்டுவந்தான்.

அணுகுண் டாலும் துன்ப முறா
ஆன்ம பலத்துடன் அன்புதரும்
இணைகண் டறியாச் சக்திதனை
எம்மிடைப் புகுத்திய சித்தனிவன்.

இந்திய நாட்டின் மெய்யறிவை
இதுவெனக் காட்டிடும் ஐயனிவன்
நிந்தையும் புகழ்ச்சியும் கலைக்காத
நிம்மதிக் கேஅவன் இலக்காவான்.

யுத்தம் வருமோ எனஓடுங்கி
ஒவ்வொரு நாடும் மனநடுங்கிச்
சித்தம் திகைக்கிற இப்போதில்
சிறப்புறும் காந்தியின் மெய்ப்போதம்.

அன்னிய அறிஞர்கள் அனைவருமே
ஆசையின் காந்தியை நினைவுறநீ
என்ன பயித்தியம் உன்றனுக்கே
ஏன்பிற நினைப்புகள் இந்தியனே!

சாந்தியை அறிந்தது நம்நாடு!
சத்தியம் காத்தது நம்நாடு!
காந்தியைத் தந்தது நம்நாடு!
கருணையின் வழியே நம்நாடு!

43. உத்தமன் காந்தி

உள்ளம் உருகுது கள்ளம் கருகுது
உத்தமன் காந்தியை நினைத்துவிட்டால்
வெள்ளம் பெருகிடக் கண்ணீர் வருகுது
வேர்க்குது இன்பம் தேக்குதடா!

சித்தம் குளிர்ந்துள பித்தம் தெளிந்திடும்
சீரியன் காந்தியின் பேர்சொன்னால்
புத்தம் புதியன முற்றும் இனியன
பொங்கிடும் உணர்ச்சிகள் எங்கிருந்தோ!

கிளர்ச்சிகொண் டான்மா பளிச்சென மின்னுது
கிழவன் காந்தியின் பழமைசொன்னால்!
தளர்ச்சிகள் நீங்கிய வளர்ச்சியில் ஓங்கிய
தாட்டிகம் உடலில் கூட்டுதடா!

சோற்றையும் வெறுக்குது காற்றையும் மறக்குது
சுத்தனக் காந்தியின் சக்திசொன்னால்!
கூற்றையும் வெருட்டிடும் ஆற்றலைத் திரட்டிடக்
கூடுத டாமனம் தேடுதடா!

தூக்கமும் கலைந்தது ஏக்கமும் குலைந்தது
துன்பக் கனவும் தொலைந்ததடா!
வாழ்க்கையும் திருந்திடா நோக்கமும் விரிந்தது
வள்ளலக் காந்தியின் நினைப்பாலே!

வஞ்சனை நடுங்கிடும் வெஞ்சினம் அடங்கிடும்
வாய்மையன் காந்தியின் தூய்மை சொன்னால்
அஞ்சின மனிதரும் கெஞ்சுதல் இனியிலை
ஆண்மையும் அன்பும் அருளுமடா!

ஜீவர்கள் உலகுள யாவரும் சமமெனச்
செய்கையில் காட்டிய காந்தியடா!
பாவமும் பழிகளும் தீவினை வழிகளும்
பதுங்கும டாகண்டுள் ஒடுங்குமடா!

எழுபதும் ஐந்தும் குழகுழ வயசினில்
என்னே காந்தியின் இளமையடா!
முழுவதும் அதிசயப் பழுதறு வாழ்க்கையின்
முத்தன டாபெரும் சித்தனடா!

காந்தியின் தவக்கனல் சூழ்ந்ததிவ் வுலகினைக்
காம தகனம்போல் எரிக்குதுபார்!
தீய்ந்தன சூதுகள் ஓய்ந்தன வாதுகள்
திக்குத் திசையெலாம் திகைத்திடவே!

ஏழைகள் எளியரின் தோழன்அக் காந்தியை
எப்படிப் புகழினும் போதாதே!
வாழிய அவன்பெயர் ஊழியின் காலமும்
வையகம் முழுவதும் வாழ்ந்திடவே!

44. வையகம் வாழ்த்தும் காந்தி

அடிமையின் அச்சம் போக்கி
அச்சத்தை அடிமை யாக்கிக்
குடிகளைக் கோன்க ளாக்கிக்
கோன்களைக் குடிக ளாக்கி
மடமையை மதியாய் மாற்றி
மதிக்கும்ஓர் புதுமை கூட்டித்
திடமுறச் செய்த காந்தி
திருக்கதை மறக்க லாமோ?

மேழியைச் செங்கோ லாக்கிச்
செங்கோலை மேழி யாக்கி
ஏழையின் துயரம் நீக்கித்
துயரத்தை ஏழை யாக்கிக்
கோழையை வீர னாக்கி
வீரத்தின் கொலைகள் நீக்கும்
வாழிய காந்தி நாமம்
வையகம் உளவ ரைக்கும்.

தூய்மையின் துணிவுண் டாக்கித்
துணிவினைத் தூய்மை யாக்கி
வாய்மையின் வறுமை போக்கி
வறுமையும் வாய்மை காக்கத்
தீமையைத் தீமை யாலே
தீர்த்திட முடியா தென்று
தாய்மையே செய்த காந்தி
தவம்செய்த தவமாம் அன்றோ?

உள்ளத்தைக் கோயி லாக்கி
உண்மையைத் தெய்வ மாக்கிக்
கள்ளத்தைக் கடிந்து நீக்கிக்
கருணையின் காட்சி கண்டான்
எள்ளத்த ஆசை யின்றி
'என்கடன் பணியே' என்ற
தெள்ளுற்ற தியாகி காந்தி
கண்கண்ட தெய்வ மன்றோ?

அன்பினைத் தகழி யாக்கி
அறிவினை நெய்யாய் வார்த்து
வன்புலக் காம மாதி
வர்க்கத்தைத் திரியாய் வைத்துச்
செம்பொருள் காணும் தூய்மைச்
செழுங்கணல் பற்றச் செய்தே
இன்பருள் கருணை ஜோதி
ஏந்திடும் காந்தி நாமம்.

வஞ்சமும் பகையும் போரும்
வையகம் முழுதும் ஓங்கிப்
பஞ்சமும் பசியும் நோயும்
படுத்திடும் கொடுமை நீங்கத்
தஞ்சமொன் றுண்டோ காந்தி
தந்துள வழியை விட்டால்?
அஞ்சலி செய்வோம் காந்தி
அண்ணலின் அருளைப் போற்றி.

காந்தியை மறந்து விட்டால்
கதிநமக் கில்லை கண்டீர்
சாந்தியை இழப்போம் மக்கள்
சமரச வாழ்வு குன்றும் ;
சேர்ந்திடும் தீமை யாவும் ;
திரும்பவும் அடிமை வாழ்வு
நேர்ந்திடல் ஆகும் உண்மை
நித்தமும் நினைக்க வேண்டும்.

45. அற்புதன் காந்தி

ஜயஜய காந்தியின் திருப்புகழ் பாடி,
தெய்வம் தொழுவோம் அனைவரும் கூடி.
பயனுற காந்தியின் புதுநெறி பயின்று
பாரத நாட்டினர் பலம்பெற வேண்டும். .(ஜய)

காந்தியின் வாழ்வே கடவுளைக் காட்டும்
கல்விகள் தேடிடும் கருணையை ஊட்டும்
சாந்தியைப் புகட்டிடும் சாத்திரம் அதுவே
சத்திய நெறிதரும் சூத்திரம் அதுவே. .. (ஜய)

இந்திய மக்களின் சுதந்திரக் கீதம்
எம்மான் காந்தியின் இணையறு போதம்
சிந்தனை செய்வார் வந்தனை புரியும்
தெய்விக மந்திரம் அதுவெனத் தெரியும். ..(ஜய)

இல்லறம் துறவறம் இரண்டிலும் சிறந்தே
இந்திய விடுதலைக் கருந்தவம் புரிந்து
சொல்லறம் முழுவதும் சுதந்திர தேவி
தூமலர்ப் பதங்களில் தொழுதனன் தூவி. .. (ஜய)

நால்வகை யோகமும் நடத்திய ஞானி
நாட்டின் பெருமையைக் காத்தநல் மானி
தோல்வியும் வெற்றியும் தொடமுடி யாது
துலைபோல் சமரச நிலபிரி யாத .. (ஜய)

அரசியல் சூதுகள் அனைத்தையும் அகற்றி
அன்பின் வழிவரும் ஆற்றலைப் புகுத்தி
உரைசெயல் அரிதெனும் உறுதியைக் கொடுத்தான்
உலகினில் புதிதெனும் அறப்போர் தொடுத்தான். . (ஜய)

மண்டலம் முழுவதும் சண்டைகள் மலிய
மாந்தர்கள் பெருந்துயர் சேர்ந்துளம் நலிய
கண்டுள பின்னரும் காந்தியை நினையார்
கல்லையும் மண்ணையும் கட்டையும் அனையார். .. (ஜய)

யுத்தக் கொடுமைகள் உலகினில் ஒழிய
உதித்தநம் காந்தியின் உயர்ந்தநல் வழியை
இத்தரை யெங்கணும் பரப்பிடும் கடமை
இந்திய மக்களின் பரம்பரை உடைமை.

காந்தியின் அருந்தவம் பலித்திடும் காலம்
கண்முன் இருப்பதை அறிந்திலம் போலும்
ஓய்ந்திடும் சண்டைபின் ஒவ்வொரு நாடும்
ஒப்பரும் காந்தியின் உரைகளைத் தேடும்.

இமயமும் குமரியும் இருக்கிற வரைக்கும்
இப்பெரும் உலகினில் அவன்பெயர் சிறக்கும்!
சமயமும் நிறங்களும் சமமெனக் கருதும்
சகலரும் காந்தியை வணங்குவர் பெரிதும்!

மன்னரும் வீரரும் மந்திரி மார்கள்
மண்ணொடு மண்ணாய் மறைந்திடு வார்கள்
உன்னரும் காந்தியின் பெரும்பெயர் ஒன்றே
உலகினில் நிரந்தரம் ஒளிதரும் அன்றோ?

இன்னொரு தம்பதி இவர்களைப் போல
எங்குளர் எனமனம் களித்திடும் சீலம்
அன்னைகஸ் தூரியின் அரும்புகழ் சூழும்
அற்புதன் காந்தியின் பெரும்பெயர் வாழும்.

46. சத்தியமூர்த்தி நம் காந்தி

சாந்தியே உருவாய் வந்த
சத்திய மூர்த்தி யான
காந்தியே உம்மைக் காணக்
கணக்கிலா ஜனங்க ளெங்கும்
காந்தமொன் றணுக ஓடும்
ஊசிகள் காட்சி போலப்
போந்ததும் தரிச னத்தால்
பொறுமையைக் கற்க வேண்டி.

மூவுல கொருங்கே யாண்டு
முடிவிலாச் செல்வ மெய்தி
ஏவலில் மமதை கொண்ட
இரணியன் உய்யு மாறு
தாவிய தூணி லன்று
தனியுருத் தாங்கி வந்த
சேவகன் மெச்சு கின்ற
சிறுவனே யன்ன சீலா.

பகையினால் கொன்று வென்று
பயம்பட வாழ்ந்து வந்த
வகையிலாச் சாதி யோரை
வழிபடச் செய்ய வேண்டி
மிகமிகத் துன்ப முற்றும்
மென்மையால் வென்று கொண்ட
மகம்மது நபியே என்று
மதியுளார் சொல்வா ருன்னை.

அன்பொரு வடிவாய் வந்தாய்
அற்புதச் செயல்கள் காட்டித்
துன்பமே சூழ்ந்த தெய்வத்
துரோகிகள் செய்கை யாலே
வன்பெரும் சிலுவை தன்னில்
வைத்தவர் அறைந்த போதும்
இன்பமே நுகர்ந்த தேவன்
ஏசுவே என்பா ருன்னை.

கனவினிற் பிணிமூப் போடு
சாவினைக் கண்ட பின்னர்
இனியிதன் ரகசி யத்தை
இன்னதென் றறிவோ மென்று
கனதன ராஜ போகக்
கட்டெலாம் விட்டொ ழித்த
புனிதன்அப் பௌத்த னென்று
போற்றுவா ருன்னை யாரும்.

அடிதடி வாழ்க்கை கொண்டும்
அன்பினை மறந்து நாளும்
கொடியதாம் பணப்பே யாலே
குவலயம் அயர்ந்து நொந்து
முடிவிதற் கெங்கே யென்று
முரண்படு கின்ற காலை
விடிவது பொழுது போல
வீசிய துன்றன் காந்தி.

குண்டுபீ ரங்கி யாலும்
கோடியந் திரங்க ளாலும்
மண்டிய செல்வத் தாலும்
மயக்கிடும் பொருள்க ளாலும்
சண்டைகள் ஜயத்தி னாலும்
சலிப்பின்றிச் சுகமெங் கென்று
மண்டல மிருண்ட போது
மதியெனத் தோன்றி னாய்நீ.

சாந்தமொன் றில்லை யென்றால்
சௌக்கிய மில்லை யென்றே
ஆய்ந்தவர் சொன்ன தெல்லாம்
அகந்தையால் மறந்து விட்டு
மாந்தினர் கள்ளே யென்ன
மயக்கமுற் றிருந்த காலை
காந்தியென றொருவன் தோன்றிக்
காத்தவன் உலகை என்ப.

சத்தியன் என்பா ருன்னைச்
சாந்தமே யென்று சொல்வார்
பித்தனே யாவான் என்பார்
பேடியென் றொருசார் சொல்லும்
சுத்தனே என்பா ரில்லை
துரோகியென் பாரு முண்டு
இத்தனை பெயரும் தாங்கும்
இதுவன்றோ பெரியார் செய்கை?

நம்மையும் புனித ராக்கி
நம்மையாண் டடிமை செய்தார்
தம்மையும் புனித ராக்கித்
தரணியில் தரும நீதி
மும்மையும் உயிர்க்கச் சாந்த
மூலமந் திரத்தைக் காட்டும்
செம்மைசேர் ராட்டி னத்தின்
திகிரியைச் சுழற்றி விட்டாய்.

உனைவிடப் பெரியார் இந்த
உலகினில் இல்லை யென்று
நினைவினிற் பெரியா ருன்னை
நிரந்தரம் போற்று கின்றார்
இனியவுன் பெருமை யெல்லாம்
இந்திய மாதா பெற்றாள்
அனையவள் பெற்ற கீர்த்தி
அடியமும் பெற்ற தன்றோ?

ஆண்டவன் ஆணை தாங்கி
அன்பினை நாட்ட வென்று
பூண்டஉன் கொள்கை யெங்கும்
பூமிவே ரூன்று மட்டும்
நீண்டஉன் வழிசி றக்க
நிமலனாம் கடவுள் மாட்டு
வேண்டுவோம் என்று சொல்லல்
வெற்றுரை யாகு மன்றே.

47. புகழவொண்ணாக் கருணை ஜோதி

மதபேத மாச்சரியம் மறைய வேண்டும் ;
மனிதரெலாம் ஒருகுலமாய் வாழ வேண்டும் ;
விதம்வேறு நிறம்வேறு வினைகள் வேறாம்
விகற்பமெலாம் ஒருகடவுள் விளையாட் டென்ற
நிதமான மெய்யறிவின் நிலைய மாகி
நிறைவான பெருங்கருணை ஜோதி காட்டும்
பதியாகும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
திருநாமம் என்றென்றும் பாரில் வாழ்க!

ஆயுதங்கள் மிகச்சிறந்த ஹிட்லர் எங்கே?
அவன்துணைவன் முஸலோனி அகந்தை எங்கே?
மாயமிகும் போர்புரிந்த டோஜோ எங்கே?
மாநிலத்தைச் சீர்குலைத்து மறைந்தார் அன்றோ?
பேய்புகுந்த பிணக்காடாய் உலகைக் கண்டும்
பின்னும்அந்தப் போர்வெறியைப் பேச லாமோ?
தாயறிந்த அன்பினையே உருவாய்த் தாங்கும்
தவசிஎங்கள் காந்திசொலும் சாந்தி கொள்வோம்.

இன்பதுன்பம் எவ்வுயிர்க்கும் ஒன்றே என்றே
ஈ, எறும்பு, புழுக்களுக்கும் இரக்கம் காட்டி
அன்புவழி வாழ்ந்தவர்கள் தமிழர் நாமே
அருள்மிகுந்த ஒருநாடு தமிழ்நா டாகும்.
முன்பிருந்த தமிழறிஞர் சேர்த்து வைத்த
மூதறிவே மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
நம்பனிவன் சரித்திரமே உலகைக் காக்க
நாமெல்லாம் கடவுளிடம் நயந்து கேட்போம்.

கொல்லாமை பொய்யாமை இரண்டும் சேர்ந்த
கூட்டுறவே மெய்ஞ்ஞானக் குணமாம் என்ற
நல்லாண்மை அறம்வளர்த்த தமிழ்நாடொன்றே
நானிலத்தில் அமைதிமிக்க நாடாம் என்றும்
வல்லாண்மை நமக்குவர வாழ்ந்து சென்ற
வள்ளுவனே மறுபடியும் வந்தான் என்னச்
சொல்லாண்மைப் புகழ்வொண்ணாக் கருணை ஜோதி
சுத்தன்எங்கள் காந்திமகான் நாமம் வாழ்க!

அணுகுண்டு வித்தைகளும் அணுக வொண்ணா
அப்பாலுக் கப்பாலாம் அறிவாய் நிற்கும்
இணையற்ற பெருங்கருணை எல்லாம் வல்ல
இறைவனையே மூச்சாக இழுத்துப் பேசித்
துணைகொண்டு அவனருளைத் தொடர்ந்த காந்தித்
தூயவனே இந்தியத்தாய் ஜோதி யாகும்
அணைகண்டு மதவெறியை அடக்கித் தேக்க
அவன்வழியே மக்களுக்கு அமைதல் வேண்டும்.

சாந்தவழி உலகமெலாம் போற்ற வேண்டும் ;
சத்தியத்தை அரியணையில் ஏற்ற வேண்டும் ;
மாந்தருக்குள் போர்வெறிகள் மறைய வேண்டும் ;
மக்களிடம் அன்பறங்கள் நிறைய வேண்டும் ;
சோர்ந்துழலும் ஏழையெலாம் சுகிக்க வேண்டும் ;
சுத்தர்களே அரசாட்சி வகிக்க வேண்டும் ;
காந்திமகான் திருநாமம் வாழ வேண்டும் ;
கடவுளென்ற பெருங்கருணை காக்க வேண்டும்.

48. சத்திய சீலன்

துறந்தவர் மிகுந்த நாட்டைத்
துறந்திடும் துன்ப மெல்லாம்
துறந்தவர் குறைந்த நாட்டைத்
தொடர்ந்திடும் துன்ப மெல்லாம்
அறிந்தவர் மொழிக ளாலும்
அனுபவ அறிவி னாலும்
அறிந்தனம் அதனை யிந்தத்
தேசமும் மறந்த தந்தோ!

வான்முறை மழைபெய் யாது
மாநிலம் வளமை குன்றும்
கோன்முறை கோணும் மற்றும்
குடிவளம் குறைந்து வாடும்
சாண்வயி றதற்குக் கூடச்
சரிவரக் கிடைக்கா தூணும்
தான்எனும் அகந்தை நீத்த
தவசிகள் குறைந்த நாட்டில்.

அன்னஅத் துறவு பூண்டோர்
அரிதெனப் போன தாலோ
சொன்னவர் துறவி யென்றோர்
தூய்மையிற் குறைந்த தாலோ
முன்னைய வளங்கள் குன்றி
முதுமறைப் பெருமை விட்டுக்
குன்றிய வாழ்க்கை வந்து
குறைந்ததிப் பரத நாடு.

அக்குறை நீங்க வென்றே
ஆண்டவன் அனுப்ப வந்தோன்
இக்கணம் இந்த நாட்டின்
இருள்மிகும் அடிமை நீங்க
முக்குணம் அவற்றுள் போற்றும்
முதற்குணம் வழியே காட்டும்
சத்குரு வான காந்தி
சத்திய சீலன் தானே.

தாங்கண்ட இன்பம் இந்தத்
தரணியோர் பெறுமா றெண்ணி
ஆங்கென்றும் ஈங்கென் றோடி
அறப்பறை அடிக்கும் காந்தி
தீங்கென உலகம் சொல்லும்
செய்கையோர் சிறிது மில்லார்
நாங்கொண்ட பெருமை எங்கும்
நல்லவர் யாருங் கொள்வார்.

மனிதர்கள் கடவு ளாகார்
கடவுளர் மனித ராவார்
புனிதமும் பொறுமை யாவும்
பொய்யிலா வாழ்வும் பற்றிக்
கனதையும் கருணை பொங்கும்
காந்திபோல் வாரை விட்டு
இனியரு கடவு ளென்பார்
எங்குளார்? எங்கு ளாரே?

கடவுளே பொய்யென் றாலும்
கண்டவ ரிலையென் றாலும்
உடனுல குயிர்ஒன் றிற்கும்
ஒருசிறு தீங்கு மெண்ணார்
கடனறி சாந்தக் குன்றாம்
காந்திபோல் வாரை யன்றி
உடலுயிர் உள்ளார் தம்மில்
உவப்பது யாரை? யாரை?

நம்பின பேருக் கேனும்
நம்புத லற்றோர்க் கேனும்
அம்புவி ஏழைக் காக
அருந்துயர் அனைத்தும் தாங்கி
வெம்பிய செய்தா ருக்கும்
வெருவுள எண்ணான் சொல்லான்
இம்பரின் காந்தி வாழ்வை
இலையென மறுக்கப் போமோ?

ஈரமும் இரக்கம் மட்டும்
இருப்பவர் யாரும் எங்கும்
ஓரமும் பொய்யும் நீக்கி
உயர்குணம் யாவும் காத்து
யாரொரு சிறியர்க் கேனும்
யாதொரு தீங்கும் ஒப்பான்
சீரியன் காந்தி வாழ்வைச்
சிறப்பியா திருப்ப தெங்கன்?

ஒன்றினை ஒன்று மாய்த்தே
ஒருவரை ஒருவர் வாட்டித்
தின்றுடல் சுகிக்கு மிந்தத்
தீமைசூழ் உலகந் தன்னில்
தன்றுணைச் சுகங்கள் விட்டுத்
தளர்ந்தவர்க் குடலை யீந்து
நின்றிடும் காந்தி வாழ்வை
மறப்பதோ, நினைப்ப தோதான்?

தன்னுயிர் போவ தேனும்
பிறர்துயர் சகிக்க மாட்டான்
பொன்னுயிர் பொதுமைக் கீந்துப்
பொறுப்பதே மானம். அ·தே
இன்னுயிர் மனித வாழ்வின்
ரகசிய மாகு மென்றே
உன்னிய காந்தி வாழ்க்கை
தாழ்ந்ததோ உயர்ந்த தோதான்?

"வாழ்ந்தவர் வாழ்ந்த வாழ்வின்
வழியிழி வழக்கத் தாலே
'தாழ்ந்தவர்' என்பார் தம்மைப்
பிரிகிலேன், பிரித்து வைத்தால்
வீழ்ந்துயிர் விடுவேன்" என்ற
காந்தியின் விரத வார்த்தை
போழ்ந்துளங் கலங்கி டாதார்
பூமியில் உண்டோ மக்கள்?

'சத்தியம்' 'சாந்தம்' என்னச்
சலிப்புறக் கேட்ட வெல்லாம்
பொத்திய உடைஒன் றோடு
புறத்தொரு அழகு மின்றி
நித்தமும் தன்பாற் குற்றம்
நெருப்பெனக் காய்ந்து நீக்கிச்
சுத்தமாம் காந்தி யாகத்
தோன்றிடக் கண்டோம் இன்று.

'சாந்தம்' என் றதுதான் இன்று
சபர்மதிச் சாலை நீங்கி
ஏந்திய கொள்கைக் காக
எரவாடா சிறையில் தங்கிப்
பாந்தவர் தாழ்ந்த வர்க்காய்ப்
பட்டினி யிருப்பே னென்றே
ஆய்ந்தவர் அறிவில் என்றும்
காந்தியாய் அரசு கொள்ளும்.

சத்தியம் வெல்லு மென்றால்
தவமது பலிக்கு மானால்
உத்தமன் கடவு ளென்ற
ஒருபொருள் உண்மை யானால்
இத்துறை எங்கள் காந்தி
இடருறா வண்ணங் காத்து
வைத்திட வேண்டும் இந்த
வையகம் வாழ்த்தும் என்றும்.

49. தவமே தவம்

கதைகளிற் கேட்ட துண்டு
கடவுளின் கருணை தன்னைக்
கவிதையிற் படித்த துண்டு
கருணையின் பெருமை தன்னை
வதைபெற உடலை வாட்டி
வரும்பல துன்பம் தாங்கி
வையகம் துயரம் தீர
வைப்பது தவந்தான் என்றும்
விதம்விதம் பாடி னாலும்
விளங்கின தில்லை முன்னே;
வித்தையின் வித்தை போல
விந்தையின் விந்தை காட்டிச்
சிதைவுற வெறிகள் மிஞ்சி
சீர்குலைந் திருண்ட நாட்டில்
சிந்தனை ஜோதி காந்தி
தவத்தினால் தெரியக் கண்டோம்.

கல்லையும் கனியச் செய்து
நெருப்பையும் தணித்துப் பொல்லாக்
கயவர்தம் மனத்தைக் கூட
நயமுறச் செய்து காட்டும்
எல்லையில் லாத நன்மை
தவத்தினால் இயலும் என்றே
ஏட்டினிற் படித்த போதும்
ஏளனம் செய்தோம் அன்றோ?
சொல்லரும் ஞான வாழ்வின்
சுடரெனும் காந்தி எம்மான்
சூறையும் கொலையு மாக
மதவெறி சூழக் கண்டு
தில்லியில் தவமேற் கொண்டு
திருத்திய திறத்தைக் கண்டால்
தெய்வமே நம்முன் வந்து
தெரிசனம் கொடுத்த தன்றோ!

செந்தமிழ் அறிவில் எங்கும்
செறிந்துள போத மாகிச்
சிறந்தநம் கலைக ளெல்லாம்
தினந்தினம் தெரியக் காட்டும்
இந்தியர் போற்றி வந்த
இப்பெரும் ஞான வாழ்வை
இழந்தனம் அழிவே செய்யும்
எந்திர மோகம் மிஞ்சி
நொந்துநொந் தறிஞர் வாடும்
உலகுடை நோய்கள் தீர
நோன்பிருந் தறங்கள் ஊட்டும்
காந்தியின் நோக்கம் ஒன்றே
வெந்துயர் போக்கும் ஜாதி
வெறிகளை விலக்கச் செய்யும்
வேறெது நம்மைச் செய்த
விமலனைக் காட்டும் மார்க்கம்?

வாய்மையும் அன்பும் சேர்ந்த
வடிவமே கடவுள் என்று
வாய்ப்பறை சாற்று கின்றோம்
வாதித்து எழுது கின்றோம்
தீமையே செய்த பேர்க்கும்
நன்மையே செய்வோம் என்று
தினந்தினம் மதத்தின் பேரால்
ஜெபமணி உருட்டு கின்றோம்
நாம்ஒரு சகிப்புக் காட்ட
நேர்ந்திடும் நாளில் மட்டும்
நல்லதைத் தீய தென்போம்
தீயதை நல்ல தென்போம்
வாய்மையின் வைப்பாம் காந்தி
வள்ளலார் வழியே போற்றி
வையக மாந்த ரெல்லாம்
நலமுற வாழ வேண்டும்.

தரணியோர் பாப மெல்லாம்
தன்பிழை எனமேற் கொண்டு
தனியரு மனித னாகத்
தவமிருந் துலகம் ஏங்க
மரணம்என் பதுவும் கூட
மருண்டயல் புரண்டு போக
மாநிலத் தறிஞ ரெல்லாம்
வியந்துடன் மகிழ்ந்து வாழ்த்த
புரணியும் பொய்கள் கூட்டம்
புகலிடம் தேடி யோடப்
புண்ணிய எண்ணம் நம்மைப்
பிரிந்தவை புகுந்து கொள்ளக்
கருணையின் பெருமை தன்னைக்
கைக்கனி என்னக் காட்டும்
காந்தியின் பெருமை தன்னால்
கடவுளின் பெருமை கண்டோம்!

50. காந்தியிடிகள் பெருமை

இந்திய நாடு சுதந்திர மெய்தநல்
தந்திரம் தந்தவர் யார்?--சிறு
கந்தை 'பக்கீ'ரென்று தந்தொரு வன்சொன்ன
காந்தி யென்னும் பெரியார்.

அஞ்சிக் கிடந்தநம் நெஞ்சந் துணிந்திட
ஆண்மை எழுப்பின தார்?--ஒரு
வஞ்ச மிலாதவர் வாய்மையின் தூய்மையின்
வாழ்க்கையர் காந்தியவர்.

ஆயுதம் இன்றியும் யாரும் வணங்கிடும்
அன்பைப் பெருக்கின தார்?--சற்றும்
சாயுதல் செய்திடாச் சத்திய மூர்த்திநம்
தவமுனி காந்தியவர்.

நாட்டினுக் காயுயிர் கேட்பினும் தந்திட
நானென்று முன்வருவோர்--பலர்
போட்டியிட் டேவர வீரம் புகுத்தினர்
புண்ணியவர் காந்தியவர்.

அடிபட்டு மாளவும் சிறைபட்டு வாழவும்
அச்ச மகற்றின தார்?--உண்மை
குடிகொண்டு கோபத்தைக் குறைவற நீக்கிய
குணமுயர் காந்தியவர்.

பேதைய ரென்றுநாம் பேசிய பெண்களும்
வீதியில் நம்மிலுமே--இங்கு
நீதியில் லாமுறை அரசை எதிர்த்துடன்
நின்றிடக் காந்திசெய்தார்.

சின்னஞ் சிறிய குழந்தைக ளும்இன்று
ஜெயஜெய வென்றுசொல்லி--எங்கும்
கன்னெஞ் சுருகிடத் தேசத்தி னைத்தொழக்
காந்திஜி செய்துவிட்டார்.

தீண்டப்ப டாதென்று மனிதரைச் சொல்வது
தீமையில் தீமையென்றே--அதைப்
பூண்டொடும் போக்கநாம் விரதம் புனைந்தது
புண்ணியவர் காந்தியினால்.

'தன்னை வதைப்பவர் தங்களுக் கும்அன்பைத்
தாங்குவ தேதவமாம்'--என்று
முன்னைஇந் நாட்டினில் சொன்னவர் சொற்களை
முற்றுவித் தார்காந்தியார்.

'உடலினும் உயிரினும் உள்ளிருக் கும்ஒன்(று)
உயர்ந்தது காணும்'என்றே--இந்தக்
கடலுல கத்தினில் கண்ணுக்கு முன்னாகக்
காட்டிவிட் டார்காந்தியார்.

காந்தி யெனும்பெயர் சாந்தம் எனும்சொல்லின்
காட்சியின் சாட்சியென்றே--இனி
மாந்தர்கள் எங்குமே ஏந்தி அதன்வழி
மங்களம் எய்திடுவார்.

51. காந்தியரே, தொழுகின்றோம்!

காந்தியெனும் பேரொளியே!
கருணைமொழி வான்முகிலே!
சாந்திநிறை பாத்திரமே!
சன்மார்க்க சாத்திரமே!
மாந்தருக்குள் மாமணியே!
மாநிலத்தின் அற்புதமே!
ஏந்துபுகழ் மோகனமே!
என்சொல்லி அஞ்சலிப்போம்.

இதமுரைக்கும் வானொலியே!
இருள்கிழிக்கும் மின்விளக்கே!
பதமறிந்த பேச்சாளா!
பயனறிந்த எழுத்தாளா!
மதவெறிக்கே பலிபுகுந்த
மாயாப் பெரும்புகழே!
துதிஉரைக்கச் சொல்லறியோம்
தொழுகின்றோம் துணைபுரிவாய் ;

அன்பெடுத்த திருவுருவே!
அருள்அமரும் ஆசனமே!
துன்பமுற்றோர் துணைக்கரமே!
துயர்நீக்கும் தூதுவனே!
இன்பமெலாம் பிறர்க்குதவி
இன்னலெலாம் தாங்கிநிற்கும் ;
தென்பிருக்கும் தேசிகமே!
திருவடிக்கே அஞ்சலித்தோம்!

இல்லறத்தின் சிறப்பிடமே!
துறவறத்தின் இருப்பிடமே!
நல்லறங்கள் யாவினுக்கும்
நடுவான நன்னெறியே!
தொல்லறத்தின் புதுப்பதிப்பே!
தோல்வியிலாச் சால்புடையாய்!
சொல்லுரைக்கப் போதாத
சுசிகரமே! தொழுகின்றோம்.

சாதிமத பேதமிலாச்
சமதர்ம சந்நிதியே!
நீதிநெறி பிசகாமல்
நிறுத்தளக்கும் துலாக்கோலே!
வாதுபுரி வம்புகளின்
வாயடைக்கும் வல்லமையே!
ஏதுபுகழ் சொல்லியுனை
அஞ்சலிப்போம் எம்மானே!

வலிமைக்கும் சூரியனே!
வழிகாட்டும் தாரகையே!
குலவவரும் சந்திரனே!
குளிர்ச்சிதரும் மென்காற்றே!
புலமைதரும் பொன்மொழியே!
புதுமைதரும் நன்மருந்தே!
தலமறிந்த தனித்தலைவ!
தாள்பணிந்தோம்! அஞ்சலித்தோம்!

மதிகலங்கா மந்திரியே!
மாசுபடாத் தந்திரியே!
சுதிகலங்கா யாழிசையே!
சுவைகுறையாச் சொல்லடுக்கே!
நிதிமயக்கா மனநிறைவே!
நிலைகலங்கா நிம்மதியே!
கதிகலங்காச் சாரதியே!
அஞ்சலித்தோம் காத்தருள்வாய்.

தேடறிய செல்வமே!
தெவிட்டாத தெள்ளமுதே!
ஏடறியா ஞானமே!
எழுத்தறியா வித்தகமே!
பாடறியா உழைப்பே!
பயன்கருதாத் திருப்பணியே!
ஈடறியா உத்தமனே!
என்சொல்லி அஞ்சலிப்போம்!

மண்கண்ட மாதவமே!
மறைகண்ட சாதகமே!
கண்கண்ட தெய்வமே!
கலைகண்ட நல்லுணர்வே!
பண்கொண்ட இன்சொல்லே!
பணிகொள்ளும் நன்னயமே!
எண்கொள்ளா மேதையே!
என்சொல்லி அஞ்சலிப்போம்!

கல்விதரும் நல்லறிவே!
கவிதைதரும் கற்பனையே!
செல்வமெனும் பொருளெல்லாம்
சேர்ந்திருக்கும் பொக்கிஷமே!
நல்வினைக்கு நாயகமே!
நடுநிலைக்குத் தாயகமே!
சொல்வதற்கு வேறறியோம்!
காந்தியரே! தொழுகின்றோம்!

பகைமைபுகா அரண்மனையே!
படைதொடுக்கா ராணுவமே!
புகையறியாச் சுடர்விளக்கே!
புண்படுத்தாத் தவக்கனலே!
வகையறியா மானிடர்க்கு
வரமளிக்கும் நல்வாழ்வே!
தொகையறியாப் பொற்குவையே!
தொழுகின்றோம் துணைபுரிவாய்!

கொலைமறுத்த போர்வீரா!
குடிஒழித்த பேராளா!
நிலைஇழிந்த ஹரிஜனங்கள்
நிமிர்ந்துலவும் முதுகெலும்பே!
கலைமறந்த குடிசைகளைக்
காக்கவந்த கைத்தொழிலே!
அலைமறந்த குணக்கடலே!
காந்தியரே! அஞ்சலித்தோம்!

மரணமெனும் பெரும்பயத்தை
மாற்றிவிட்ட மந்திரமே!
திரணமென மதித்துயிரை
ஈடுவைக்கும் பெரும்தீரா!
தருமணமதில் வந்துதவி
வெற்றிதரும் தைரியமே!
கரணமெலாம் உன்வசமாய்க்
கைகுவித்தோம் காத்தருள்வாய்!

ஏழைகளின் பெருந்துணையே!
எளியவரின் நல்லுணர்வே!
மேழியரின் மெய்க்காப்பே!
மெலிந்தவரின் புகலிடமே!
ஊழியரின் ஊழியனாய்
உலகைவென்ற ஒப்புரவே!
வாழியநின் திருநாமம்
வையமெங்கும் வாழ்வுதரும்.

52. காந்தி வழி வாழ வேண்டும்

கல்லாலும் செம்பாலும் கடவு ளாக்கிக்
கற்பூரம் காட்டிவிட்டால் போதும் என்றே
எல்லாரும் நினைத்துவிடச் செய்து நித்தம்
தெய்வத்தை ஏமாற்றி வாழ்ந்தோம் என்று
சொல்லாலும் செயலாலும் எண்ணத் தாலும்
சுத்தமுள்ள பக்திநெறி சொல்லித் தந்து
கல்லாத எளியவர்க்கும் கடவுள் தன்மை
கண்ணாரக் காட்டுமெங்கள் காந்தி வாழ்க்கை.

எந்திரங்கள் பெருகிமட்டும் என்ன நன்மை?
ஏராளச் சரக்குகளைக் குவித்தும் என்ன?
தந்திரங்கள் மிகப்பயின்றும் தருவ தென்ன?
தரணியெங்கும் பலகலைகள் தழைத்தும் என்ன?
சிந்தனையில் கருணைமட்டும் இல்லை யானால்
சீரழியும் உலகமென்ற சேதிக் கென்றே
வந்துதித்துத் திருவருளை வாழ்ந்து காட்டும்
வள்ள லெங்கள் காந்திவழி வாழ வேண்டும்.

மந்திரிகள் தந்திரிகள் மலிந்தால் என்ன?
மண்டலத்தை ஒருகொடிக்கீழ் ஆண்டால் என்ன?
அந்தரத்தில் தோன்றுகின்ற அனைத்தும் வென்றே
அண்டமெலாம் நமதாட்சி ஆனால் என்ன?
எந்தஒரு உயிரிடத்தும் கருணை காட்டும்
இரக்கமொன்றே இவ்வுலகை வாழ வைக்கும்
அந்தஒரு அறிவினுக்கே உடலம் கொண்டோன்
ஐயன்எங்கள் காந்திநாமம் வாழ்க! வாழ்க!

விஞ்ஞானச் சக்திகளால் வென்றால் என்ன?
விதம்விதமாய்ச் சுகப்பொருள்கள் விரிந்தா லென்ன?
இஞ்ஞாலத் துயிர்களெல்லாம் மகிழ்ந்து வாழ
இம்சையற்ற சமுதாயம் வேண்டு மானால்
பொய்ஞ்ஞான மதவெறிகள் போக வேண்டும்
பொறுமைதரும் கருணைஒன்றே பொருளாம் என்ற
மெய்ஞ்ஞானம் நமக்குவர வாழ்ந்து சென்ற
மேதையெங்கள் காந்திமகான் நாமம் வாழ்க!

எண்ணரிய தேசபக்தர் உயிரை ஈந்தே
எத்தனையோ துன்பமெல்லாம் சகித்த தாலே
மண்ணுலகில் வேறெவரும் அறியா நல்ல
மார்க்கத்தால் விடுதலையை மலரச் செய்தோம்
புண்ணியநல் அறநெறிசேர் அரசு நாட்டிப்
புவியெங்கும் சாந்தவழி போதம் காட்ட
அண்ணல் எங்கள் காந்திமகான் திருநா மத்தை
அனுதினமும் போற்றிசெய்ய அருள்வாய் தேவா!

53. காந்தி வாழ்க

காந்தி நாமம் வாழ்க வென்று
கைகு வித்துக் கும்பிடு
சாந்த மாக உலக மெங்கும்
சண்டை யின்றி இன்புறும்.

அருளி தென்ற பொருள றிந்த
அந்த ணர்க்குள் அந்தணன்
தெருள டைந்த மனித வர்க்கம்
தீமை தீர வந்தவன்.

கொலைம றுத்துப் பொய்த விர்த்துக்
கொடுமை நீங்கப் பண்ணிணான்
தலைசி றந்த காந்தி சேவை
விலைம திக்க ஒண்ணுமோ?

யுத்த மென்றே உலக முற்றும்
மெத்த நொந்த இந்தநாள்
சத்த மின்றி அன்பு செய்யும்
சாந்த மார்க்கம் தந்துளான்.

எந்த நாடும் விடுத லைக்கா
எண்ணில் துன்பம் எய்திட
இந்த நாட்டின் சொந்த ஆட்சி
எளிதில் கூடச் செய்தவன்.

தீமை செய்து நன்மை சேரத்
தேவ ராலும் ஒல்லுமோ?
வாய்மை தன்னை வற்பு றுத்தி
வாழ்ந்து காட்டும் வல்லவன்.

எண்ணி றந்த ஞான வான்கள்
இந்தப் பூமி கண்டது
மண்ணில் எங்கள் காந்தி போல
மற்றொ ருத்தர் உண்டுகொல்?

மாந்தர் எங்கும் கலக மின்றி
மருவி வாழக் கோரினால்
காந்தி மார்க்கம் ஒன்றை யன்றிக்
கதிந மக்கு வேறிலை.

இந்தி யாவின் பெருமை முற்றும்
இந்தக் காந்தி மார்க்கமே
அந்த ஞான உரிமை தன்னை
அழிவி லாது காக்கவே!

கட்டி நின்று காந்தி செய்யும்
கருணை வாழ்வை ஒட்டியே
கிட்டி விட்ட சொந்த ஆட்சி
கெட்டுப் போக விட்டிடோம்!

54. சஞ்சலத்தை நீக்குவாய்

அமர னாகி எம்மைக் காக்கும்
அண்ணல் காந்தி ஐயனே!
அஞ்ச லித்து நிற்கும் எங்கள்
சஞ்ச லத்தை நீக்குவாய்!
சமனி லாத சாந்த ஞான
சத்தி யத்தின் நிலையமே!
சரிச மான மாக மற்ற
உயிரை எண்ணும் தலைவனே!
நமது நாடு உலகி னுக்கு
ஞான சேவை பண்ணவே
நானி லத்தில் இவ்வி டத்தை
நாடி வந்த விண்ணவா!
அமைதி மிக்க அறிவி னோடும்
அன்பு மிக்க ஆற்றலும்
அருள வேணும் அப்ப னேஉன்
அடிப ணிந்து போற்றினோம்.

நீபி றந்த போது தேசம்
நிலைகு லைந்து நின்றது
நிந்தை மிக்க அடிமை வாழ்வில்
நொந்து நொந்து வாடினோம்!
தாய்சி றந்த அன்பி னோடு
துன்ப முற்றும் தாங்கினாய்
தனியி ருந்து தவமி யற்றித்
தைரி யத்தை ஊட்டினாய்!
வாய்மை அன்பு வெல்லு கின்ற
வழிந டந்து காட்டினாய்!
வைய மென்றும் கண்டி லாத
வலிமை எம்முள் கூட்டினாய்!
போய்ம றைந்த ஞான வாழ்வு
புதுமை கொள்ளச் செய்தனை!
புண்ணி யத்தில் முன்னி லாத
கண்ணி யத்தைப் பெய்தனை!

தண்டு மிண்டு தலையெ டுத்துத்
தாறு மாறு மிஞ்சவும்,
தரும நீதி தெய்வ பக்தி
தலைவ ணங்கிக் கெஞ்சவும்,
மண்ட லத்தில் எந்த நாடும்
அமைதி யின்றி மருளவும்,
மக்கள் யாரும் யுத்த மென்று
நடுந டுங்கி வெருளவும்,
கண்டு நொந்து அறிஞர் யாரும்
கவலை கொண்டு ஏங்கினார்
காந்தி தேவ! நீந டந்த
கருணை மார்க்கம் ஓங்கவே
தொண்டு செய்திவ் வுலகி லுள்ள
துயரம் போக்க எண்ணினோம்
துணையி ருக்க வேண்டு மென்றே
அஞ்சலித்து நிற்கிறோம்!

55. காந்தியே வாழ்க! வாழ்க!

ஏட்டள விருந்த வேதம்
இதுவென எடுத்துக் காட்டி
எழுத்தள விருந்த கீதம்
செய்கையில் ஏந்தி நின்று
வீட்டள விருந்த காதல்
விருந்தொடு விரியச் செய்து
விருந்தள விருந்த நேசம்
வியன்பெரு நாட்டிற் காக்கி
நாட்டள விருந்த அன்பை
நானிலம் முழுதும் நீட்டி
நானிலத் தெவர்க்கும் அன்பே
நாதனைக் காண்ப தென்று
காட்டினை! சொல்லா லல்ல
ஒழுக்கத்தால் கருணை வாழ்வின்
காந்தியே வீசும் சாந்தக்
காந்தியே வாழ்க! வாழ்க!

பக்தியென் றாடு கின்றோம்
பஜனையாம் பாடு கின்றோம்
பாகவ தம்மென் றிங்குப்
படிக்கிறோம் பலநூல் நித்தம்
முக்தியென் றோது கின்றோம்
மோட்சமே பேச்சி லெல்லாம்
மோனமும் ஞான மென்ன
மொழிகிறோம் முற்றும் நாளும்
சத்தினைப் போக விட்டுச்
சக்கையைப் பற்றி வாழ்ந்தோம்
சாத்திர சாரந் தன்னைச்
சால்புடன் உணர்ந்த தக்கோர்
கத்துவ தென்றும் மாறா
ஒழுக்கத்தின் கருணை வாழ்வின்
காந்தியே வீசும் சாந்தக்
காந்தியே வாழ்க! வாழ்க!

நெற்றியில் நீறு நாமம்
நிறைந்திடப் பூசி யென்ன?
நியமும் நிஷ்டை யென்று
நீண்டதால் நேர்வ தென்ன?
பற்றிய ஜெபம் செய்மாலைப்
பகலிர விருந்து மென்ன?
பார்த்தவர் மருளும் யோக
ஆசனம் பழகி யென்ன?
சுற்றிய எவரும் நம்மால்
துன்புறாத் தூய வாழ்வும்
தோன்றிய ஜீவ ரெல்லாம்
துணையெனக் கருது மன்பும்
கற்றனை வாழ்வில் என்றும்
காட்டினை கருணை வாழ்வின்
காந்தியே வீசும் சாந்தக்
காந்தியே வாழ்க! வாழ்க!

திடமொடும் உதித்த ஞானத்
திருவரு ளடைந்த பேரும்,
தெளிந்தவர் மொழிந்த வற்றைத்
திளைந்ததில் தெரிந்த பேரும்,
அடவியில் இருந்து நாளும்
அருந்தவம் புரிந்த பேரும்,
அடைக்கலம் குருவை நாடி
அருள்வழி அறிந்த பேரும்,
இடம்நிறம் கால மென்னும்
இவைகளில் எதில் வந்தாரும்,
இவ்வுல குதித்த பின்னர்
இந்தநா ளளவும் யாரும்
கடவுளின் இருக்கை கண்டோர்
காட்டிய கருணை வாழ்வின்
காந்தியே வீசும் சாந்தக்
காந்தியே வாழ்க! வாழ்க!

முனிவரர் கோடி கோடி
முயற்சியால் சிறந்த நாட்டை
மூடவெம் மதியி னாலே
முயக்கினோம் அடிமை வாழ்வில்
தனிவரும் துயரில், நோயில்
தரித்திரத் தாலே வாடித்
தளிர்ந்திடும் ஏழை மக்கள்
துயரத்தைத் தாங்கி நின்றாய்
இனிவரும் அணித்தே யென்ன
எண்ணவும் முடியா மேன்மை
இப்பெரும் உன்னைப் பெற்றும்
சோம்பினோம் இகழ்ந்து நின்றோம்
கனிபெரும் தூய வாழ்வின்
கண்ணெனும் கருணை வாழ்வின்
காந்தியே வீசும் சாந்தக்
காந்தியே வாழ்க! வாழ்க!

என்கடன் பணிகள் செய்து
கிடப்பதே யென்று முற்றும்
ஏழைகட் காக வாழ்ந்தோர்
எண்ணிலா ரிருந்த நாட்டைத்
துன்புடை யடிமை வாழ்வின்
துயரிடை யழுத்தி விட்டோம்
தூயவர் சொல்லை யெல்லாம்
தூற்றினோம் காற்றி லையோ!
வன்பெரும் மிடியால் வாடும்
வறியவர்க் குழைத்தா லன்றி
வாழ்விலை நமக்கே யென்று
வகுத்தனை! உணர்ந்தோ மையா!
கன்மன முடையோ ரேனும்
கனிந்திடும் கருணை வாழ்வின்
காந்தியே வீசும் சாந்தக்
காந்தியே வாழ்க! வாழ்க!

56. பூனா வெடிகுண்டு

விந்தையில் விந்தை! காந்தியின் மேலும்
வெடிகுண்டை யாரோ வீசினராம்!
ஹிந்தும தத்தில் வந்தவர் யாரும்
இப்படி யும்செய ஒப்புவரோ!
நிந்தையில் நிந்தை இதைவிட வேறும்
இந்திய நாட்டிற்கு வந்திடுமோ!
இந்தவி பத்தில் காந்தியைக் காத்தது
எந்தப் பொருளதைச் சிந்தை செய்வோம்.

சத்தியம் மெய்யே, சாந்தமும் மெய்யே
சாதித் துயர்ந்திட்ட சாதுக்கள்மெய்
நித்தமும் நின்று நம்மை நிறுத்து
நீதி செலுத்திடும் ஜோதியும்மெய்
பொய்த்திடும் பொய்யே போனது ஐயம்
புண்ணியம் என்பதும் உண்மைஅதை
உத்தமர் காந்தியின் மெய்த்தவ வாழ்வினில்
உண்டு வெடித்திட்ட குண்டுசொலும்.

மடமையி னாலே செய்தனர் என்றே
மன்னித்து வாழ்த்திய பொன்னுரையால்
அடவியிற் சென்றே ஐம்புலன் வென்றார்
அந்தணர் முந்துரை தந்தவெலாம்
நடைமுறை தன்னில் தினசரி வாழ்வில்
நாட்டிடைக் காந்திஜி காட்டிவிட்டார்
கடவுளும் உண்மை; கருணையும் உண்மை ;
காத்திடும் என்பதும் பார்த்துவிட்டோம்.

தாழ்ந்தவ ரேனும் வாழ்ந்தவ ரேனும்
சத்தியம் நாடிய பத்தரலால்
வேந்தருங் காணா வேதியர் காணா
வேறொரு சக்தியின் பேரருளால்
மாந்தருள் தெய்வம் நம்பின வர்க்கு
மனத்துறை இன்பம் எனத்தகுமோர்
காந்தியும் தப்பிக் கருணையும் தப்பிக்
கடவுளும் தப்பிப் பிழைத்தனரே!

பொங்கிய 'போலி'ச் சநாதன கோபம்
பூனாவில் அன்று வெடித்ததுவோ!
அங்கொரு தீங்கும் யாருக்கு மின்றி
அன்புருக் காந்தியும் துன்பமிலார்
சங்கெடுத் தூது! மங்களம் பாடு!
சாந்தி உலகுக்குக்கு காந்தியினால்
எங்கணும் சாந்தி யாவர்க்கும் சாந்தி
என்ற முதுமறை நின்றதுபார்!

57. ஜோதி மறைந்துகொண்டதே!

சத்தியத்தின் ஓயாத சங்க நாதம்
சாந்திதரச் சலியாத வேத கீதம்
நித்தியநன் னெறியறிவை நீட்டும் சப்தம்
நிரந்தரமாம் மெய்ஞ்ஞானக் குழலின் ஓசை
மெய்த்தவத்தை நினைப்பூட்ட மீட்டும் வீணை
மேலான குணங்களையே மேவும் பாடல்
உத்தமருள் உத்தமனாம் காந்தி யென்ற
தேனொழுகும் வானொலியும் ஓய்ந்து போச்சே!

முத்திவழி காட்டுகின்ற மோன தீபம்
மூடமன இருளகற்றும் முழுவெண் திங்கள்
வித்தைகளின் நித்தியவி வேக பானு
விடியிருளில் தடைவிலக்கும் வெள்ளி விண்மீன்
எத்திசைஎம் மாலுமிக்கும் இடம்கண் டேற
இமயமென இலங்குகலங் கரைவி ளக்காம்
உத்தமருள் உத்தமனாம் காந்தி என்னும்
ஒப்பரிய ஜெகஜ்ஜோதி ஒளிந்த தையோ!

சூரியனும் சந்திரனும் தொலைந்தா ரென்ன
சுற்றியுள்ள மீன்களிலும் இருளே சூழ
காரிருளில் கடியஇருள் கவிந்து யாரும்
கண்ணிழந்து புண்ணிழந்து கலங்கி ஏங்க
நேருகின்ற பொழுதி லெல்லாம் கவலை நீங்க
நிச்சயம்தான் உள்ளிருந்தே ஒளியை நீட்டும்
யாருமிந்த உலகில்இது வரையிற் காணா
அற்புதமின் சாரசக்தி அறுந்து போச்சே!

எப்படித்தம் உடல்வளர்த்தும் எதுசெய் தாலும்
என்னென்ன காயகற்பம் இழைத்துண் டாலும்
தப்பிடவே முடியாது தடையில் லாமல்
தலைசிறந்த மனிதர்களும் சாக வேண்டும்.
முப்பொழுதும் உலகநலம் மூச்சாய்க் கொண்டு
முறைதவறாத் தவவாழ்வே முடித்த காந்தி
இப்படித்தம் உயிர்கொடுத்த பெருமை யன்றோ
என்றென்றும் நின்றொளிரும் இரவி யாகும்?

உலகறிந்த அறிவையெலாம் ஒன்றாய்ச் சேர்த்தே
ஒருசிறிய காந்தி என்ற உடலில் வைத்தார்
அலகில்பல அற்புதங்கள் நடத்தி வைக்கும்
ஆண்டவனின் திருவுளத்தை அறிவார் யாரோ!
இலகும்ஒரு காந்தியிடம் இருந்த சத்தை
இவ்வுலகில் பலபேர்கள் பகிர்ந்து கொண்டு
கலகம்வரின் அங்கங்கே கருணை காட்டிக்
காக்கவென்றே இறைவனிதைக் கருதி னானோ?

மதவெறிகள் மாச்சரியம் மறைந்தா லன்றி
மாநிலத்தில் உயிர்வாழ மாட்டேன் என்னும்
இதயமுறும் சத்தியத்தை இசைத்தார் காந்தி
இஷ்டம்போல் உயிர்அதற்கே ஈந்தார் எம்மான்.
உதயமுற நம்மனத்தில் உணர்ச்சி உண்டேல்
உலகமெல்லாம் கலகமிலா துய்ய வேண்டின்,
மதவெறியும் இனவெறியும் மறைய வேண்டும்
மற்றும்ஒன்று மொழிவெறியும் மாற வேண்டும்.

உடலமென்ற சிறுகூண்டிங் கொழிந்தா லென்ன?
உள்ளிருந்த ஒருபொருளுக் கழிவு முண்டோ?
கடவுளென்ற ஒருமகிமை இருந்தா லன்றோ
காந்திஎன்ற பெரும்பெயரும் இறந்த தாகும்?
திடமுறுவோம் தீரமுடன் நம்மைச் சூழ்ந்த
தீமைகளைத் தீரமுடன் தீர்க்கா விட்டால்
'அடிமைஅச்சம்' நமைவந்தே அழுத்திக் கொள்ளும்
அண்ணலையும் அவமதித்த அதம ராவோம்.

வள்ளுவரின் வழிவளர்ந்த தமிழா! நீதான்
வாய்மையுடன் தாய்மைஅறம் வளர்த்த வள்ளல்
தெள்ளுதமிழ் நூல்களெல்லாம் தெளிவாய்ச் சொல்லும்
தெய்வபெருங் கருணையையே செய்தார் காந்தி.
கொள்ளைகளும் கொலைவெறியும் குமுற வாடும்
குவலயத்தில் கொடுமைகளைக் குறைக்க நீதான்
அள்ளியெங்கும் தமிழ்மொழியின் அறிவை வீசி
ஐயனெங்கள் காந்திவழி அஹிம்சை காப்பாய்.

மாந்தரென இவ்வுலகில் பிறந்த பேருள்
காந்தியைப்போல் மற்றொருவர் வந்த தில்லை.
சாந்தமுழு சைதன்ய மூர்த்தி யென்னும்
சர்வேசன் சகலகலா சக்தி தன்னைத்
தேர்ந்தவருள் காந்தியினும் தெளிந்தா ரில்லை
தெரிந்திருந்தும் மரணமிதில் தேடிப் பார்த்தால்
காந்தியையும் கடந்தஒரு பொருள் உண்டென்று
கட்டாயம் நாம்அறியக் கடவோம் அன்றோ?

கோழைகள்போல் குலைவதனால் பயனொன் றில்லை
கொலைவழிகள் கூண்டோடு மறையச் செய்தே
ஏழைகளோ கொடுமைகளோ எங்கு மின்றி
இந்தியத்தாய் நாடிதனை இலங்கச் செய்வோம்
ஊழிதொறும் அவன்நினைவு உதவ வேண்டி
உத்தமனைக் குலகுருவாய் பஜனை செய்து
வாழிஜெய வாழிஜெய வாழி காந்தி
வள்ளலார் திருநாமம் வாழ்க என்போம்.

58. விண்ணிலிருந்து அண்ணல் வருகை

ஞான மென்று சொல்லு கின்ற
நல்ல சக்தி யாவையும்
நானி லத்தில் காந்தி யென்று
மேனி பெற்று வந்தன.
ஈன மிக்க அடிமை வாழ்வின்
இடர்மி குந்து நொந்தநம்
இந்தி யாவின் விடுத லைக்கு
விந்தை மிக்க நன்னெறி
தான்ந டந்து வெற்றி தந்து
தரணி முற்றும் வாழ்ந்திட
தனது சொந்த உடலைக் கூட
தத்த மாகத் தந்துபின்
வானகத்தி ருந்து நம்மை
வாழ்த்தும் காந்தி தேவதை
வைய கத்தில் மீண்டும் நம்மை
வந்து பார்க்கும் நாளிது.

தெய்வ மேனி யோடு காந்தி
திகழ நம்முன் நிற்கிறார்!
திருவ டிக்கு மாலை சூட்டி
தியான பூசை செய்குவோம்.
வையம் வாழ நல்வ ரங்கள்
வாங்கிக் கொள்ள நல்லநாள்
வஞ்ச மற்ற நெஞ்சி னோடு
அஞ்ச லித்து நின்றுநாம்
ஐயன் காந்தி காட்டு கின்ற
அன்பு வாய்மை போற்றினால்
அச்ச மேது? பிச்சை கேட்கும்
அவதி ஏது அவனியில்?
உய்ய வேறு மார்க்க மில்லை
காந்தி பக்தி ஒன்றுதான்
உலகில் இன்று குமுறு கின்ற
கலகம் தீர நன்றுகாண்.

உணவி லாமல் ஏழை மக்கள்
உடல் பதைத்து வாடலும்
உணர்வி லாத தன்ன லங்கள்
பதுக்கி வைத்து மூடலும்
குணமி லாத செல்வம் செய்யும்
கோடி கோடி துன்பமும்
கொடுமை செய்திவ் வுலகை ஆளக்
கோரு கின்ற வம்புகள்
பணமி லாத ஒன்றுக் காகப்
பாத கங்கள் புரிவதும்
பாவ புண்ணி யங்க ளென்ற
பயமி லாது திரிவதும்
அணுபி ளக்கும் குண்டு செய்திவ்
வகில நாசம் எண்ணலும்
அத்த னைக்கும் மாற்று நல்கும்
அமரன் காந்தி அண்ணல்தான்.

59. காந்தி சொல்லை ஏந்தி நிற்போம்

அடிமைத் தனத்தை விட்டோம்--ஆனால்
அன்பை மறந்து கெட்டோம்
மடமைத் தனத்தை வென்றோம்--ஆனால்
மமதை நிறைந்து நின்றோம்
கொடுமை எதிர்த்து வந்தோம்--இன்று
கொள்கை உதிர்த்து நொந்தோம்
உடைமை அடையப் பெற்றோம்--ஆனால்
உண்மைப் பிடிகள் அற்றோம்.

பதவியை ஏசி வந்தோம்--இன்று
பதவிக்கே ஆசை தந்தோம்
உதவிகள் தேடிச் செய்தோம்--இந்நாள்
உதவியை நாடி வைதோம்
மதவெறி தீமை என்றோம்--நாமும்
மாறிப் பொறாமை கொண்டோம்
இதுவும் சுதந்திரந் தானோ?--இனி
என்ன இதந் தருமோதான்?

ஒற்றுமை வேண்டும் என்றோம்--இந்நாள்
உறவறத் தூண்டு கின்றோம்
வெற்றுரை விட்டு ழைத்தோம்--இன்று
வேற்றுமைப் பட்டி ளைத்தோம்.
பெற்றசு தந்திரத்தை--நாம்
பேணி இதம் பெறத்தான்
நற்றவன் காந்தி சொல்லே--எந்த
நாளிலும் ஏந்தி நிற்போம்.

60. காந்தியமே உலகைக் காக்கும்

ஜயஜய காந்தியின் திருப்புகழ் பாடு
ஜகத்தினுக் கரும்பணி வேறிலை ஈடு
நயமிக மாந்தருள் நட்புகள் வளரும்
நகைமுகம் இனியசொல் எங்கணும் ஒளிரும்
தயவொடு தருமமும் தானமும் ஓங்கும்
தரித்திரக் கொடுமைகள் யாவையும் நீங்கும்
பயமற உலகினில் பற்பல நாடும்
பகையற வாழ்ந்திடல் அதனாற் கூடும்.

இத்தரை மீதினில் இதுவரை தோன்றி
இகபரம் இரண்டிலும் சிந்தனை ஊன்றி
முத்தரும் யோகரும் முனிவரும் யாரும்
முற்றிய அறிவென முடிவுறக் கூறும்
சத்திய சாந்தச் சமரசம் மேவும்
சாதனை யென்கிற போதனை யாவும்
புத்துயிர் பெற்றிடக் காந்தியும் பிறந்தார்
பூமியில் இந்தியத் தாய்மிகச் சிறந்தாள்.

அன்பறம் பெருகிட அதுதுணை புரியும்
அரசியல் முறையிலும் அதன்பொருள் விரியும்
துன்பமுற் றவர்களின் துயர்களைக் குறைக்கும்
தூய்மையும் வன்மையும் தொழில்களில் நிறைக்கும்
இன்பமும் செல்வமும் பொதுப்பொருள் ஆகும்
இரப்பவர் என்பதும் இல்லாது போகும்
வம்பரும் வணங்கிடும் காந்தியின் போதம்
வளர்ப்பது வேநம் வாழ்க்கையின் கீதம்.

61. எச்சரிக்கை

எச்ச ரிக்கை எச்ச ரிக்கை
எச்ச ரிக்கை கொள்ளு வோம்
அச்ச மற்ற வாழ்வுகாண
இச்சை யுற்ற யாவரும்

கலக மற்று மனிதர் வாழக்
காந்தி மார்க்கம் ஒன்றுதான்
உலகி னுக்குத் தேவை யென்ற
உண்மை கண்டு கொண்டபின்

காந்தி போதச் சேவை செய்யக்
கங்க ணத்தைப் பூண்டநாம்
நேர்ந்த வாறு பேசிக் கொண்டு
நிலைகு லைந்து நிற்கிறோம்.

காந்தி காந்தி காந்தி யென்று
காத டைக்கக் கூவினோம்
காந்தி சொன்ன சாந்தி மட்டும்
காதில் ஏற வில்லையே!

சத்தி யத்தை வாழ்ந்து காட்டும்
சாந்த மூர்த்தி காந்தியை
நித்தம் நித்தம் வாழ்த்தி விட்டு
நெஞ்சில் உண்மை பெற்றிலோம்.

கோப மற்ற காந்தி யாரைத்
தலைவ ராகக் கொண்டநாம்
தாப மற்ற வார்த்தை பேசத்
தண்மை கூடப் பெற்றிலோம்.

பதவி யற்ற சேவை செய்யப்
பாடம் சொல்லித் தந்தநாம்
பதவி பற்றி உதவி யற்ற
பலவும் பேசித் திரிகிறோம்.

பூசை யோடு கோயி லுக்குள்
பூட்டி வைக்கும் சாமிபோல்
ஓசை யோடு காந்திப் பொம்மை
ஊர்வ லங்கள் செய்கிறோம்.

பகைவ ருக்கும் நன்மை செய்யப்
பரிவு கற்றுக் கொண்டநாம்
மிகவும் நல்ல நண்ப ரோடும்
பகைமை கொள்ள மிஞ்சினோம்.

அணுவை யும்பி ளந்த ழிக்கும்
ஆயு தங்கள் வந்தபின்
முணுமு ணுத்துக் கனவிற்கூட
மூர்க்கப் பேச்சு செல்லுமோ?

இந்த நாட்டின் ஞான மார்க்கம்
என்ற ஒன்றை விட்டுநாம்
எந்தக் குண்டைக் கொண்டு மற்ற
எவரை வெல்லப் போகிறோம்?

62. காந்தி வழி

கொல்லா திருப்பது ஒன்றேதான்
கூறும் அஹிம்சை என்றல்ல
எல்லாச் செயலிலும் நன்னோக்கம்
இணைந்த(து) அஹிம்சை தன்னாக்கம்
பொல்லா தவர்க்கும் தீங்கெண்ணாப்
புனிதம் அதனுடைப் பாங்கென்ன
சொல்லாற் சொன்னதைச் செய்தவனாம்
சொல்லரும் காந்திநம் மெய்த்தவனே.

புண்ணுண் டாக்கிடப் பேசாமல்
புரைதரும் எழுத்தால் ஏசாமல்
பண்ணும் காரியம் அனைத்திலுமே
பழுதற அருள்நெறி நினைத்தவனாம்
அண்ணல் காந்தியின் புகழேதான்
அஹிம்சை என்பதன் அகராதி
எண்ணில் அஹிம்சா அறநெறியை
இவன்போல் நடத்திய பிறரறியோம்.

கோபம் எதிலும் கொள்ளாது
கொண்டவர் தமையும் எள்ளாது
பாபம் என்றதைப் புரியாது
பகவான் சிந்தனை பிரியாது
தீபம் போல்அருள் ஒளிவீசும்
திருத்திட வேநன் மொழிபேசும்
சாபம் நீக்கிய காந்திமகான்
சத்தியச் சுதந்தரச் சாந்தநெறி.

அச்சம் என்பதை அறியாது
ஆசை எதிலும் குறியாது
துச்சம் தனதுயிர் எனவெண்ணித்
துன்பம் நீக்கிடத் துணைபண்ணும்
பச்சைக் குழந்தையின் களிப்போடும்
பழுத்தநற் கிழவரின் விழிப்போடும்
விச்சை புரிந்தது காந்திமகான்
விடுதலை தரவரும் சாந்தவழி.

கோழைத் தனமதில் கிடையாது
கொள்கையில் சோர்வு அடையாது
வாழைக் கனியினும் மென்மையது
வயிரம் உருக்கெனும் வன்மையது
கூழைக் கும்பிடு போடாது
கொச்சை வெற்றிகள் நாடாது
ஏழை எளியவர் குறைநீக்கும்
எண்ணம் ஒன்றே அதன்நோக்கம்.

விஞ்ஞா னத்தின் வேகத்தால்
விரிந்துள எந்திர மோகத்தால்
அஞ்ஞா னங்கள் மிதமிஞ்சி
அழித்திடு மோநமை எனஅஞ்சும்
இஞ்ஞா லத்தின் துயர்நீக்க
இந்தியத் தாயின் பெயர்காக்க
மெய்ஞ்ஞா னத்தின் உருவேபோல்
மேவிய காந்தியின் வரவாலே

ஆயுத பலங்களில் மதிப்பிழந்தோம் ;
ஆன்ம பலத்தின் துதிப்பறிந்தோம் ;
தீயன போர்வெறி இழுக்குகளைத்
திக்குகள் யாவினும் முழக்கிடுவோம்,
தாயினும் இனியவன் இந்நாட்டின்
தந்தைநம் காந்தியின் வழிகாட்டும்
தூயநல் லருள்நெறி சூழ்ந்திடுவோம் ;
துன்பமில் லாமல் வாழ்ந்திடுவோம்.

63. காந்தியமும் தமிழனும்

பரதேசி என்றுவந்தோர் யாரா னாலும்
பரிவோடே உபசரித்துப் பங்கும் தந்த
ஒருதேசம் உலகத்தில் இருக்கு மானால்
உண்மையது தமிழ்நாடு ஒன்றே யாகும் ;
வருதேச காலத்தின் வர்த்த மானம்
வகைவேறு காட்டுகின்ற வருத்த மொன்றும்
கருதாமல் நமதுகுணம் கலைந்தி டாமல்
கருணையன்றே பின்பற்றிக் கடமை செய்வோம்.

தமிழ்நாட்டின் சரித்திரத்தை மனத்தில் வைத்துத்
தாராளத் தமிழர்களின் தன்மை காத்தே
அமிழ்தான தமிழ்மொழியில் அடங்கி யுள்ள
அகிலத்தின் நல்லறிவாம் அனைத்துங் கண்டு
நமதாகும் மிகச்சிறந்த நாக ரீகம்
நானிலத்துக் கிப்போது நன்மை காட்ட
எமதாகும் மிகப்பெரிய கடமை யென்றே
எண்ணியெண்ணித் தீர்மானம் பண்ண வேண்டும்.

பலபலவாம் தீர்மானம் படிக்க வேண்டா ;
பகட்டாகப் பேசிமட்டும் பயன்வா ராதே ;
உலகினுக்கு வேண்டுவதும் ஒன்றே ஒன்றாம் ;
உத்தமனார் காந்திவழி உபதே சந்தான்
கலகமின்றி மனிதரெல்லாம் கலந்து வாழக்
கருணைவழி காட்டஒரு கட்சி வேண்டும் ;
இலகுமிந்தத் திருப்பணியை உலகுக் காற்ற
இந்தியரே மிகமிகவும் ஏற்ற மாவார்.

64. சொன்னபடி செய்வோம்

வானிருந்து ஒருதேவன் வலிய வந்து
வகைகெட்ட மனிதருக்கு வழியைக் காட்டி
தானிருந்து நமக்காகத் தவங்க ளாற்றித்
தருக்கான தூஷணைகள் பலவுந் தாங்கி
மோனநெறி தவறாத காந்தி யாக
முன்னிருந்து காரியங்கள் முயலும் வேளை
ஏனிருந்து நாம்பலவும் எண்ண வேண்டும்
என்னசொன்னார் காந்தியதைப் பண்ணு வோமே.

காந்தியர்க்குக் கைபோல உதவி நின்று
கடல்கடந்த ஆப்பிரிக்காக் கண்டந் தொட்டுச்
சேர்ந்திருந்து பாடுபட்டு ஜெயமும் பெற்ற
சிறப்பெல்லாம் தமிழருக்கே மிகவும் சேரும்.
நேர்ந்திருக்கும் நெருக்கடியை வெல்ல இன்றும்
தமிழர்துணை காந்தியவர் நினைப்பார் உண்மை
சோர்ந்துவிடக் கூடாது தமிழா! காந்தி
சொன்னபடி செய்வதுதான் உன்றன் ஜோலி.

65. காந்தீய சேவை

சாந்தி சாந்தி சாந்தி யென்று
சங்கு கொண்டே ஊதுவோம் ;
சோர்த்தி ருக்கும் உலகி னுக்குச்
சுகமெ டுத்தே ஓதுவோம்.
மாந்த ருக்குள் கோப தாப
வாது சூது மாறவே
காந்தி சொன்ன மார்க்க மின்றிக்
கதிந மக்கு வேறிலை.

தமிழ ருக்குக் கருணை எண்ணம்
தாயின் பாலில் தந்தது
குமிழை யத்த உயிரை நல்ல
கொள்கைக் கீய முந்திடும்
அமுத மொத்த காந்தி மார்க்கம்
தமிழ கத்தின் செல்வமாம்
நமது சேவை அதனை ஏந்தி
நாட்டி லெங்கும் சொல்வதாம்.

66. தமிழா மறக்காதே!

காந்தியை மறைக்காதே--தெய்வக்
கருணையத் துறக்காதே ;
சாந்தியை இழக்காதே--என்றும்
சத்தியம் அழிக்காதே. (காந்தி)

வள்ளுவன் திருக்குறளைத்--தந்து
வான்புகழ் பெருக்கடைந்த
தெள்ளிய அமிழ்தமெனும்--மொழியாம்
தெய்வத் தமிழ்மகனே! .. (காந்தி)

திருக்குறள் அறிவெல்லாம்--ஒன்றாய்த்
திரண்டுள நெறியெனவாம்
உருக்குறள் காந்திமகான்--தந்துள
ஒப்பரும் சாந்த வழி. ... (காந்தி)

அவ்வழி பற்றிநின்றோம்--உலகின்
அற்புத வெற்றி கண்டோம்
எவ்வித இடைஞ்சலையும்--அதனால்
எளிதில் கடந்திடலாம். ..(காந்தி)

போர்வெறிக் கெடுபிடியால்--அஞ்சிப்
பூதலம் நடுநடுங்க
நேர்ந்துள சமயம்இதில்--காந்தியின்
நினைப்பே அமைதிதரும். ..(காந்தி)

ஒவ்வொரு காரியமும்--பகவான்
உணர்வொடு கோருவதாய்த்
தெய்வீக பக்தியுடன்--தேசத்
திருப்பணி சக்திதரும். .. (காந்தி)

பிரார்த்தனை செய்யாமல்--காந்தி
பெயர்த்தடி வைப்பாரோ?
பார்த்தோம் கண்ணார--அதனால்
பயன்பெற எண்ணோமா? .. (காந்தி)

பக்தியில் குறைந்துவிட்டோம்--மோகம்
பதவியில் நிறைந்துவிட்டோம்
சத்திய சாந்தத்தில்--மிகவும்
சலிப்பெனச் சோர்ந்துவிட்டோம். .. (காந்தி)

வேறுள பேச்செல்லாம்--சற்றே
விலக்கிநம் மூச்செல்லாம்
தேறிய காந்திவழி--மீண்டும்
திடமுற ஆய்ந்திடுவோம். .. (காந்தி)

காந்தியம் நம்உடைமை--அதனைக்
காப்பது நம்கடமை
காந்தியம் வாழ்ந்தொளிர--தெய்வக்
கருணையைச் சூழ்ந்திடுவோம். .. (காந்தி)

67. படிப்பினை

காந்தியைப்போல் அதிகாலை விழிக்க வேண்டும்
கடவு ளென்ற கருணையைநாம் கருத வேண்டும்
காந்தியைப்போல் காற்றாட உலவ வேண்டும்
களைதீரக் குளிர்நீரில் முழுக வேண்டும்
காந்தியைப்போல் அளவாகப் புசிக்க வேண்டும்
கண்டதெலாம் தின்னாமை காக்க வேண்டும்
காந்தியைப்போல் ஒழுங்காகத் திட்டம் போட்டுக்
காரியங்கள் செய்முறையில் கடமை வேண்டும்.

சொன்னசொல்லை காந்தியைப்போல் காக்க வேண்டும்
சோம்பலதைக் காந்தியைப்போல் துறக்க வேண்டும்
மன்னவனோ பின்னெவனோ காந்தி யைப்போல்
மனிதரெல்லாம் சமமென்று மதிக்க வேண்டும்
சின்னவரோ கிழவர்களோ எவரை யேனும்
சிறுமையின்றிக் காந்தியைப்போல் சிறப்புத் தந்தே
'என்னகுறை? எங்கு வந்தீர்?' என்னக் கேட்டும்
இன்முகமுமாய்க் குலவுகின்ற எளிமை வேண்டும்.

குற்றமொன்று நாம்செயினும் காந்தி யைப்போல்
கூசாமல் மன்னிப்புக் கோர வேண்டும் ;
மற்றவர்கள் பெரும்தவறு செய்திட் டாலும்
மன்னித்துக் காந்தியைப்போல் மறக்க வேண்டும் ;
உற்றவர்கள் பிழையெனினும் ஒளித்தி டாமல்
ஓரமின்றிக் காந்தியைப்போல் உண்மை காட்டிச்
சற்றுமவர் துன்பமுறாச் சலுகை பேசிச்
சரிப்படுத்தும் காந்தியைப்போல் சகிப்பு வேண்டும்.

67. படிப்பினை

காந்தியைப்போல் அதிகாலை விழிக்க வேண்டும்
கடவு ளென்ற கருணையநாம் கருத வேண்டும்
காந்தியைப்போல் காற்றாட உலவ வேண்டும்
களைதீரக் குளிர்நீரில் முழுக வேண்டும்
காந்தியைப்போல் அளவாகப் புசிக்க வேண்டும்
கண்டதெலாம் தின்னாமை காக்க வேண்டும்
காந்தியைப்போல் ஓழுங்காகத் திட்டம் போட்டுக்
காரியங்கள் செய்முறையில் கடமை வேண்டும்.

சொன்னசொல்லை காந்தியைப்போல் காக்க வேண்டும்
சோம்பலதைக் காந்தியைப்போல் துறக்க வேண்டும்
மன்னவனோ பின்னெவனோ காந்தி யைப்போல்
மனிதரெல்லாம் சமமென்று மதிக்க வேண்டும்
சின்னவரோ கிழவர்களோ எவரை யேனும்
சிறுமையின்றிக் காந்தியைப்போல் சிறப்புத் தந்தே
'என்னகுறை? எங்கு வந்தீர்?' என்னக் கேட்டும்
இன்முகமுமாய்க் குலவுகின்ற எளிமை வேண்டும்.

குற்றமொன்று நாம்செயினும் காந்தி யைப்போல்
கூசாமல் மன்னிப்புக் கோர வேண்டும் ;
மற்றவர்கள் பெரும்தவறு செய்திட் டாலும்
மன்னித்துக் காந்தியைப்போல் மறக்க வேண்டும் ;
உற்றவர்கள் பிழையெனினும் ஒளித்தி டாமல்
ஓரமின்றிக் காந்தியைப்போல் உண்மை காட்டிச்
சற்றுமவர் துன்பமுறாச் சலுகை பேசிச்
சரிப்படுத்தும் காந்தியைப்போல் சகிப்பு வேண்டும்.

எத்தனைதான் கடிதங்கள் வந்திட் டாலும்
காந்தியைப்போல் சலிப்பின்றி எல்லோருக்கும்
நித்தநித்தம் தவறாத கடமை யாக
நிச்சயமாய்ப் பதில்எழுதும் நியமம் வேண்டும்
புத்திகெட்ட கேள்விசிலர் கேட்டிட் டாலும்
பொறுத்துவிடை காந்தியைப்போல் புகல வேண்டும்
பத்தியம்போல் பதற்றமுள்ள பாஷை நீக்கிப்
பரிவாகப் பணிமொழிகள் பதிக்க வேண்டும்.

புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாய் எண்ணிக்
காந்தியைப்போல் பொதுநோக்கும் பொறுமை வேண்டும்
மகிழ்ச்சியிலே மதிமயங்கித் தடுமா றாமல்
காந்தியைப் போல் மனதடக்கப் பயில வேண்டும்
வெகுட்சிதனை வேரோடு களைந்து நீக்கக்
காந்தியைப்போல் விரதங்கள் பழக வேண்டும்
நிகழ்ச்சிகளைக் காந்தியைப்போல் நிறுத்துப் பார்த்து
நேர்மையுடன் குற்றமெல்லாம் நீக்க வேண்டும்.

வருகின்ற யாவருக்கும் எளிய னாகக்
காந்தியைப்போல் வரவேற்கும் வழக்கம் வேண்டும்
தருகின்ற சந்தேகம் எதுவா னாலும்
காந்தியைப்போல் தணிவாகத் தர்க்கம் செய்து
திரிகின்ற மயக்கத்தைத் தீர்த்து வைத்து
திடமறிந்த வழிகாட்டும் தெளிவு வேண்டும்.
புரிகின்ற புத்திமதி எதுசொன் னாலும்
புண்ணின்றிக் காந்தியைப்போல் புகட்ட வேண்டும்.

எத்தொழிலைச் செய்தாலும் காந்தியைப் போல்
எஜமானர் கடளென எண்ண வேண்டும்
சத்தியத்தைக் கருணையுடன் சாதித் திட்டால்
சரியாக மற்றதெல்லாம் சாயும் என்ற
பத்தியத்தைக் காந்தியைப்போல் பார்த்துக் கொண்டால்
பாதகமோ சாதகமோ பலன்க ளெல்லாம்
நித்தியனாம் சர்வேசன் கடமை யென்ற
நிஜபக்தி காந்தியைப்போல் நிலக்க வேண்டும்.

உழைப்பின்றிச் சுகம்விரும்பல் ஊனம் என்று
காந்தியைப்போல் எல்லோரும் உணர வேண்டும்
அழைப்பின்றித் துன்பமுற்றோர் அருகில் ஓடி
காந்தியைப்போல் அவர்க்குதவும் அன்பு வேண்டும்
பிழைப்பின்றிப் பரதவிக்கும் ஏழைமக்கள்
பின்பற்றிக் கைத்தொழிலின் பெருமைகொண்டு
களைப்பின்றிப் பசிதீரும் வழியைக் காட்டக்
காந்தியைப்போல் கைராட்டை நூற்க வேண்டும்.

மனிதரெல்லாம் ஒருகடவுள் மக்க ளென்று
காந்தியைப்போல் மனமார மதிக்க வேண்டும்
புனிதமுள்ள பரம்பொருளின் பெயரைச் சொல்லிப்
போர்மூட்டும் மதவெறியைப் போக்க வென்றே
அனுதினமும் தவங்கிடந்த காந்தி அண்ணல்
அனுஷ்டித்த சமரசத்தில் ஆர்வம் வேண்டும்
தனதுமதம் தனதுஇனம் மேல்என் றெண்ணும்
தருக்குகளைக் காந்தியைப்போல் தவிர்க்க வேண்டும்.

சிறுதுளியும் வீண்போகாச் செலவு செய்யும்
காந்தியைப்போல் சிக்கனங்கள் பழக வேண்டும்
பிறிதொருவர் பாடுபட்டுத் தான்சு கிக்கும்
பேதைமையைக் காந்தியைப்போல் பிரிக்க வேண்டும்
நெறிதவறி வருகிறது சொர்க்க மேனும்
நீக்கிவிட காந்தியைப்போல் நேர்மை வேண்டும்
குறிதவறிப் போகாமல் ஒழுக்கம் காத்துக்
குணநலத்தின் காந்தியைப்போல் கொள்கை வேண்டும்.

வீரமென்றும் வெற்றியென்றும் கோப மூட்டி
வெறிகொடுக்கும் பேச்சையெல்லாம் விலக்கி எங்கும்
ஈரமுள்ள வார்த்தைகளை எவர்க்கும் சொல்லி
இனிமைதரும் காந்தியைப்போல் இரக்கம் வேண்டும்
காரமுள்ள கடும்சொல்லைக் கேட்டிட் டாலும்
காந்தியைப்போல் கலகலத்துச் சிரித்துத் தள்ளிப்
பாரமுற்ற மனநிலையைப் பாது காத்துப்
பகைமையெண்ணாக் காந்திமுறை பயில வேண்டும்.

பொதுநலத்தைக் காந்தியைப்போல் மொழுதும் எண்ணிப்
பொறுப்புணர்ந்து சேவைகளைப் புரிய வேண்டும்
பொதுப்பணத்தைக் கண்போலப் போற்றி எந்தப்
பொழுதுமதன் கணக்குகளைப் பொறித்து நீட்டித்
துதிப்பதற்கோ தூற்றுதற்கோ கொடுத்தி டாமல்
தூய்மையுள்ள அறங்களுக்குத் துணைமை யாக்கும்
மதிநலத்தை காந்தியைப்போல் மனதிற் காத்து
மக்களுக்குத் தொண்டுசெய்வோர் மலிய வேண்டும்.

மதமெனுமோர் வார்த்தையையே மறந்து வாழ்ந்தான்
மாசறியா அன்பினையே வளர்த்த வள்ளல்
சதமெனுமோர் சத்தியத்தைச் சார்ந்தி டாத
சடங்குகளை விட்டொழிக்கச் சக்தி தந்தான்
விதவிதமாய் உடைநடைகள் விரிந்திட் டாலும்
வேற்றுமையுள் ஒற்றுமையே விளக்கி வைத்தான்
இதம்மிகுந்த காந்திஎம்மான் சரித்தி ரம்தான்
இந்நாட்டின் வேதமென இசைக்க வேண்டும்.

ஜாதிகுலம் பிறப்பையெண்ணும் சபலம் விட்டோன்
சமதர்ம சன்மார்க்கம் சாதித் திட்டோன்
நீதிநிறி ஒழுக்கமென்ற நிறைக ளன்றி
நேர்மையற்ற தேர்வுகளை நீக்கி நின்றோன்
ஆதிபரம் பொருளான கடவுட் கல்லால்
அகிலத்தில் வேறெதற்கும் அஞ்சாச் சுத்தன்
ஜோதிபெருங் கருணைவள்ளல் காந்தி சொல்லே
சுருதியென மக்களெலாம் தொழுதல் வேண்டும்.

மந்திரங்கள் ஏவாமல் மயங்க வைத்தான்!
மாயங்கள் புரியாமல் மலைக்கச் செய்தான்!
தந்திரங்கள் இல்லாமல் தலைவன் அனான்!
தண்டனைகள் பேசாமல் தணியச் செய்தான்!
அத்தரங்கம் ஒற்றரில்லா அரச னானான்!
அண்ணலெங்கள் காந்திசெய்த அற்பு தங்கள்
எந்தஒரு சக்தியினால் இயன்ற தென்றே
எல்லோரும் கூர்ந்தறிய எண்ண வேண்டும்.

போனவிடம் எங்கெங்கும் புதுமை கொள்ளும்
புகுந்தமனை ஒவ்வொன்றும் பூரிப் பாகும்
கானகமும் கடிமனைப்போல் களிப்புச் செய்யும்
கல்லணையும் மெல்லணையாய்க் கனிவு காட்டும்
ஈனர்களும் தரிசனத்தால் எழுச்சி கொள்வார்
இமையவரும் அதிசயித்தே இமைத்து நிற்பார்
தீனரெல்லாம் பயமொழிவார் தீரன் காந்தி
திருக்கதையே தெருக்களெலாம் திகழ வேண்டும்.

பாடமெல்லாம் காந்திமயம் படிக்க வேண்டும்
பள்ளியெல்லாம் காந்திவழி பழக வேண்டும்
நாடகங்கள் காந்திகதை நடிக்க வேண்டும்
நாட்டியத்தில் காந்திஅபி நயங்கள் வேண்டும்
மாடமெல்லாம் காந்திசிலை மலிய வேண்டும்
மனைகளெல்லாம் காந்திபுகழ் மகிழ வேண்டும்
கூடுமெல்லா வழிகளிலும் காந்தி அன்புக்
கொள்கைகளே போதனையாய்க் கொடுக்க வேண்டும்.

கல்வியெல்லாம் காந்திமணம் கமழ வேண்டும்
கலைகளெல்லாம் காந்திகுணம் காட்ட வேண்டும்
சொல்வதெல்லாம் காந்திஅறம் சொல்ல வேண்டும்
சூத்திரமாய்க் காந்தியுரை துலங்க வேண்டும்
வெல்வதெல்லாம் காந்திவழி விழைய வேண்டும்
வேள்வியென்றே அவர்திருநாள் விளங்கவேண்டும்
நல்வழிகள் யாவினுக்கும் நடுவாய் நின்ற
நாயகனாம் காந்திசொன்ன நடத்தை வேண்டும்.

குண்டுபட்டும் திடுக்கடைந்து குலுங்கி டாமல்
கொள்கைதரும் ராமஜெபம் ஒன்றே கூறிக்
கொண்டமனச் சாந்திநிலை குலைத்தி டாமல்
கோணலுற்ற வாய்வெறித்துக் குளறி டாமல்
அண்டையயல் துணைதேடி அலண்டி டாமல்
அமைதியுடன் பரமபதம் அடைந்தார் காந்தி
கண்டதுண்டோ கேட்டதுண்டோ கதைதா னுண்டோ
கற்பனையாய் இப்படிஓர் கவிதான் உண்டோ?

காடுமலை குகைகளிலே தவங்கள் செய்து
காலன்வர வஞ்சாத கதைகள் உண்டு
மேடைகளில் உயிர்கொடுப்பேன் என்று சொல்லும்
மெலுக்கான வாய்வீரர் வெகுபே ருண்டு
நாடுகெடும் மதவெறியை மாற்ற வேண்டிக்
குண்டுபட்டே நான்சாக வேண்டும் என்றார்
ஈடுசொல்ல முடியாத தியாகம் செய்ய
இப்படியார் காந்தியைப்போல் உயிரை ஈந்தோர்?

சத்தியமே தம்முடைய தெய்வ மாகச்
சாந்தநிலை குறையாநல் தவசி காந்தி
இத்தகைய மரணமுற்ற தேனோ என்றே
இறைவனுக்குச் சாபமிட்டிங் கேங்கு கின்றோம்
பக்தர்கள்தாம் கோருகின்ற படியே முத்தி
பாலிப்ப தன்றோஅப் பகவான் வேலை?
அத்தகைய சாவேதான் அடைய வேண்டி
ஆசைசொன்னார் காந்தியதை அமலன் ஈந்தான்.

கூழுமின்றிப் பரதவிக்கும் ஏழை மக்கள்
குறைதீர்த்துப் பொய்சூது கொலைகள் நீக்கி
வாழுமுறை இன்னதென வாழ்த்து காட்டி
வானுறையும் தெய்வமென எவரும் வாழ்த்த
மாளும்முறை இதுவெனவே மனிதர் போற்ற
மாநிலத்தில் கண்டறியா மரணம் ஏற்றான்
நாளும்அவன் பெரும்புகழை நயந்து போற்றி
நானிலத்தோர் நல்வாழ்வு நாட வேண்டும்.


68. உலகம் வாழ்க!

கவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை
கற்பனைக்கிங் கிலையந்தக் காளி தாசன்
செவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை
தேசீய பாரதியின் திறமும் இல்லை
புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து
புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த
உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா
உத்தமராம் காந்தியரை உவந்து பேச.

சொல்லுவது எல்லார்க்கும் சுலப மாகும்
சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்
எல்லையின்றி நீதிகள் எழுது வார்கள்
எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார்
தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்
சொன்னதுபோல் செயல்முயன்றார் இவரைப் போல
இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்.

கொலைகளவு பொய்சூது வஞ்ச மாதிக்
கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக் கொண்டு
தலைசிறந்த பிறவியென்னும் மனித வர்க்கம்
சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி
உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ
ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி
விலைமதிக்க முடியாத செல்வ மன்றோ?
வேறென்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்?

புத்தர்பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும்
போதிமர நிழல்ஞானம் நினைக்கும் போதும்
கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவை தன்னில்
களிப்போடே உயிர்கொடுத்த கதையைக் கேட்டும்
சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையும் காத்த
தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போதும்
உத்தமரைக் கண்டோமா என்னும் ஏக்கம்
ஒவ்வொருநாள் நமக்கெல்லாம் உதிப்ப துண்டே!

"குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம்வரத் தடியால் ரணமுண் டாக்கி
நாற்புறமும் பலர்உதைத்து நலியத் திட்ட
அத்தனையும் நான்பொறுத்தே அஹிம்சை காத்தும்
அனைவரையும் அதைப்போல் நடக்கச் சொல்லி
ஒத்துமுகம் மலர்ந்(து)உதட்டில் சிரிப்பி னோடும்
உயிர்துறந்தால் அதுவேஎன் உயர்ந்த ஆசை"

என்றுரைத்த காந்தியைநாம் எண்ணிய பார்த்தால்
எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகு மன்றோ?
நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில்
நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ?
கன்றினுக்குத் தாய்ப்போல உயிர்கட் காகக்
கரைந்துருகும் காந்தியைநாம் நேரில் கண்டோம்
இன்றுலகின் துயர்நீக்கச் சிறந்த மார்க்கம்
எடுத்துரைக்கக் கொடுத்துவைத்தோம் இருந்து கேட்க.

கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம்
கடலென்றால் குறைவாகும் கருணை வெள்ளம்
புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை
பொறுமையெனும் பெருமைக்குப் போற்றும் தெய்வம்
தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி
தளர்வாகும் எழுபதுடன் ஒன்ப தாண்டில்
யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம்
ஒப்பரிய காந்தியரால் உலகம் வாழ்க!

69. சங்கநாதம் கேட்குது

சாந்த காந்தி சத்தி யத்தின்
சங்க நாதம் கேட்குது!
ஆய்ந்து பார்க்கத் தேவை யில்லை
அதிலி ருக்கும் நன்மையை
மாந்த ருக்குள் சமுக வாழ்வு
மாறு மிந்தப் பொழுதிலே
சோர்ந்தி டாமல் நமது நாட்டை
துயில்எ ழுப்பும் ஓசையாம்.

இடிஇ டித்து மின்னல் மின்னி
இருள் கவிந்தே எங்கணும்
கிடுகி டுத்து உலக மெங்கும்
கிலிபி டித்த வேளையில்
குடுகு டுத்த கிழவர் காந்தி
குமரர் நாணக் கூவினார்
துடிது டித்து உண்மை போற்றும்
தொண்டர் யாரும் கூடுவோம்.

வீடு பற்றி வேகும் போது
வீணை மீட்டும் வீணர்போல்
நாடு முற்றும் புதிய வாழ்வை
நாடு கின்ற நாளிலே
பாடு மிக்க சேவை விட்டுப்
பதவி மோகம் பற்றினால்
கேடு என்ற எச்ச ரிக்கை
கிழவர் காந்தி கூக்குரல்.

கடல்க லங்கப் புயல டித்துத்
தத்த ளிக்கும் கப்பலின்
திடமி குந்த தெளிவு கொண்ட
திசைய றிந்த மாலுமி
இடம றிந்து காலங் கற்ற
இந்த நாட்டின் மந்திரி
கடன றிந்த காந்தி போதம்
கவலை போக்கும் மந்திரம்.

கர்ம வீரன் காந்தி என்னும்
காள மேகக் கர்ஜனை
தர்ம மான மழைபொ ழிந்து
தரணி முற்றும் குளிரவே
வர்ம மான வார்த்தை யாவும்
வாது சூது செய்திடும்
மர்ம மான எதையும் விட்ட
ராஜ மார்க்க மதிதரும்.

வீர மென்றும் சூர மென்றும்
வெறிகொ டுக்கும் பேச்சினால்
கார முள்ள வார்த்தை யாவும்
யாரை என்ன செய்திடும்?
தீரர் ஞான காந்தி சங்கம்
திசைமு ழங்கக் கேட்குது
சேர வாரும் மனித வாழ்க்கை
சீர்தி ருத்த வேண்டுவோர்.


4. தேசீய மலர்

70. "கத்தியின்றி ரத்தமின்றி"

கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்! . .(கத்தி)
ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்
குயிர்ப றித்த லின்றியே
மண்ட லத்தில் கண்டி லாத
சண்டை யன்று புதுமையே! .(கத்தி)
குதிரை யில்லை யானை யில்லை
கொல்லும் ஆசை யில்லையே
எதிரியென்று யாரு மில்லை
எற்றும் ஆசை யில்லதாய் . .(கத்தி)
கோப மில்லை தாப மில்லை
சாபங் கூறல் இல்லையே
பாப மான செய்கை யன்றும்
பண்ணு மாசை யின்றியே . .(கத்தி)
கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட! . .(கத்தி)
காந்தி யென்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்த ருக்குள் தீமை குன்ற
வாய்ந்த தெய்வ மார்க்கமே . .(கத்தி)

71. என்னுடை நாடு

"இந்திய நாடிது என்னுடை நாடே"
என்று தினந்தினம் நீயதைப் பாடு ;
சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள
தூங்கிக் கிடந்தது போனது மாள ;
வந்தவர் போனவர் யாரையும் நம்பி
வாடின காலங்கள் ஓடின தம்பி!
இந்தத் தினம்முதல் "இந்தியநாடு
என்னுடை நாடெ"ன்ற எண்ணத்தைக் கூடு.

கன்னி இமயக் கடலிடை நாடு
கடவுள் எமக்கெனக் கட்டிய வீடு ;
என்ன முறையி(து) ஏனிதை வேறு
இன்னொரு நாட்டினர் ஆள்வது கூறு ;
சொன்னவர் கேட்டவர் யாரையும் நம்பிச்
சோர்ந்து கிடந்தது தீர்ந்தது தம்பி!
என்னுடை நாட்டினை நானிருந் தாள
இந்தத் தினம்முதல் எண்ணுவன் மீள.

தன்னுடை வேலையைத் தான்செய்வ தாலே
தப்புவந் தாலும் சுதந்தரம் மேலே ;
இன்னொரு யாருக்கும் இதிலென்ன கோபம்?
என்றன் உரிமைசொன் னாலென்ன பாபம்?
அன்னியர் ஆள்வதில் நன்மைவந் தாலும்
அடிமையின் வாழ்வது நரகம்எந் நாளும்
என்னுடை வீட்டுக்கு நான்அதி காரி
என்பது தான்சுய ராச்சிய பேரி.

பாரத நாடென்றன் பாட்டன்றன் சொத்து ;
பட்டயத் துக்கென்ன வீண்பஞ்சா யத்து?
யாரிதை வேறோர் அன்னியர் ஆள?
அஞ்சிக் கிடந்தது போனது மாள ;
'வாரவர் போறவர்' யாரையும் நம்பி
வாடின காலங்கள் ஓடின தம்பி!
வீரமும் தீரமும் வெற்றுரை யாமோ?
விடுதலை வேண்டுதல் விட்டிடப் போமோ?

'முத்தமிழ் நாடென்றன் முன்னையர் நாடு ;
முற்றிலும் சொந்தம் எனக்கெ'னப் பாடு ;
சற்றும் உரிமையில் லாதவர் ஆளச்
சரிசரி யென்றது போனது மாள ;
பக்தியின் அன்பினில் பணிபல செய்வோம் ;
பயப்பட்டு யாருக்கும் பணிந்திடல் செய்யோம் ;
சத்தியம் சாந்தத்தில் முற்றிலும் நின்றே
சடுதியில் விடுதலை அடைவது நன்றே.

72. வாழ்க நம் நாடு

நம்நாடு செழிக்க வேண்டும்
நாமெலாம் களிக்க வேண்டும்
நம்நாடு மட்டும் வாழப்
பிறர்நாட்டைத் தவிக்கச் செய்யும்
வெம்நாடு களுக்கே லாமோர்
விழுமிய ஞான மார்க்கம்
எம்நாடு தந்த றென்றே
இந்தியன் மகிழ வேண்டும்.

கண்டவர் மகிழ வேண்டும்
கேட்டவர் புகழ வேண்டும்
கொண்டவர் குலவ வேண்டும்
குறைந்தவர் நிறைந்து மெச்ச
அண்டின எவரும் அச்சம்
அடிமையை அகற்று மாறு
தண்டமிழ் அலைகள் வீசி
நம்நாடு தழைக்க வேண்டும்.

இலக்கண உயர்விற் சொல்லின்
இனிமையிற் பொருளில் வாழ்வின்
விலக்குகள் விதிகள் வைக்கும்
விதத்தினில் விநயம் தன்னில்
கலைக்கொடு தனிமை காட்டும்
கவிதையின் கனிவில் கற்றோர்
தலைக்கொளும் தமிழைப் போற்றி
நம்நாடு புதுமை தாங்கும்.

எந்தநாட் டெவர்வந் தாலும்
எம்மொழி பேசி னாலும்
சொந்தநாட் டவர்போ லிங்குச்
சுகித்துநிம் மதியாய் வாழத்
தந்தநா டுலகி லிந்தத்
தமிழகம் போலொன் றுண்டோ?
அந்தநம் புகழைக் காத்து
நம்நாடு அன்பே ஆற்றும்.

அன்பினால் கலந்து வாழ்ந்தே
'ஆரியன்' 'அயலான்' என்னும்
வன்பெலாம் வருமுன் னாலே
வள்ளலார் வளர்த்த வாய்மை
என்பெருந் தமிழா லிந்த
இருநில மக்கட் கெல்லாம்
இன்பமே தருவ தாக
நம்நாடே இசைக்க வேண்டும்.

அன்னியம் அறிவிற் கில்லை
அன்பிற்கும் அளவே இல்லை
என்னவே உலகில் மற்ற
எவரெவர் மொழியும் ஆய்ந்து
தன்னொடும் வாழ வைத்த
தமிழ்மொழி பெருமை தாங்கி
நன்னெறி விளக்காய் நின்று
நம்நாடு நலமே நல்கும்.

புதுத்துறை அறிவைத் தேடிப்
போயலைந் துழன்று நாடி
விதப்பல விஞ்ஞா னத்தை
விரித்திடும் மெய்ஞ்ஞா னத்தால்
பொதுப்படக் கலைக ளெல்லாம்
தமிழிலே புதுமை பூண
மதிப்பொடே எவரும் போற்ற
நம்நாடு மணக்க வேண்டும்.

தமிழர்கள் உலகுக் கீந்த
வள்ளுவர் தானோ என்ன
அமிழ்தினும் உயர்ந்த தான
அறமெலாம் நடந்து காட்டும்
கமழ்மணம் உலகம் போற்றும்
காந்தியார் ஏந்தும் கொள்கை
நமதெனும் பெருமை யோடு
நம்நாடு நன்மை பேசும்.

தாழ்வுகள் யாவும் போகத்
தரித்திரக் கொடுமை நீங்கிச்
சூழ்கடல் உலகில் மக்கள்
சுதந்திரத் துடனே வாழ்ந்தே
ஆழ்கலை அறிவும் ஓங்கி
ஆண்டவன் அன்பைக் கண்டு
வாழ்ந்திட வேண்டு மென்றே
நம்நாடு வாழ வேண்டும்.

73. சுதந்திரச் சபதம்

அவரவர் உழைப்பின் பலன்களை முழுதும்
அவரவர் உரிமையால் அடைந்து
சுவையுள வாழ்க்கைக் கவசிய மான
பொருளெலாம் சுலபமாய்க் கிடைத்துப்
புவியினில் எல்லா வசதியும் பெற்றுப்
பூரண வளர்ச்சியிற் பொலிதல்
எவரொரு பேர்க்கும் மறுக்கொணா உரிமை ;
இந்தியர் எமக்குமாம் இதுவே.

இயற்கையா மிந்த உரிமையைப் பறிக்க
இடையிலே தடையென நின்று
செயற்கையா லடக்கிக் கொடுமைகள் புரியும்
தீமைசேர் அரசியல் எதையும்
முயற்சியால் திருத்த முடியாது போனால்
முற்றிலும் அதனையே நீக்கி
அயர்ச்சியில் லாத அரசுமற் றொன்றை
அமைப்பதும் குடிகளின் உரிமை.

ஆங்கில ஆட்சி இந்திய நாட்டை
அடிமைநா டாக்கின தோடு
தாங்களே சுகிக்கும் தந்திர முறையால்
தரித்திரம் தலைவிரித் தாட
ஈங்குள ஏழைக் குடிகளின் வளத்தை
ஈப்புலி என்னவே உறிஞ்சி
ஓங்கிய செல்வம், அரசியல், ஆன்ம
உணர்ச்சியும் கலைகளும் ஒழித்தார்.

ஆதலால் இந்த ஆங்கிலத் தொடர்பை
அடியடும் அகற்றிட வேண்டும் ;
பூதலம் அறிந்த பூரண மாம்சுய
ராச்சியம் புதியதா யமைப்போம்
ஏதொரு நாடும் ஆதிக்க மெதுவும்
இந்தநாட் டெதிலுமில் லாத
தீதிலா நிலையை அடைந்திடல் நன்மை ;
திடமுடன் நம்பினோம் இதையே.

அந்தநன் னிலையை அடைந்திட நமக்கிங்
கதிகமாய்ப் பலன்தரும் மார்க்கம்
நிந்தனை மிகுந்த கொலைவழி யல்ல ;
நிச்சயம் கண்டுகொண் டோமால்?
முந்திநாம் கொண்ட சாத்விக முறையால்
முற்றிலும் முன்னேற்ற மடைந்தோம் ;
இந்தியா இனியும் அதனையே தொடரும்
எண்ணிய சுதந்திரம் எய்தும்.

உத்தம மான சாந்தநல் வழியில்
உரிமையால் சுதந்திர மடைய
நித்திய மான பரம்பொருள் சாட்சி
நிபந்தனை சிலவுமேற் கொண்டு
பத்திய மாக அதன்படி நடந்து
பணிசெய்வோம் என்றுநாம் இன்று
சத்தியம் செய்து சபதமும் கொள்வோம்
சந்ததம் இந்தியா வாழ்க!

சாந்தவாழ் விற்கும் சாத்விகப் போர்க்கும்
ஜனங்களைத் தகுதியாக் கிடவும்
கூர்ந்துநாம் கொண்ட நிர்மாணத் திட்டம்
குறைவற நாட்டினிற் பரவிச்
சார்ந்தநற் கதரும் சாதிகள் சமயச்
சமரச சல்லாப வாழ்வும்
தேர்ந்தநற் சேவை தீண்டாமை ஒழித்தல்
சிறப்புறச் செய்திடல் வேண்டும்.

எட்டிய மட்டும் ஜனங்களுக் குள்ளே
சமரச எண்ணமே பரப்பி
முட்டிடும் சாதிச் சண்டைகள் நீக்கி
முரண்படு வேற்றுமை மாற்றிப்
பட்டினிப் பஞ்சம் படிப்பிலாத் தன்மை
பற்பல கொடுமையால் நொந்தே
ஒட்டுதல் மறுத்தே ஒதுக்கின பேரை
உயர்த்திடப் பலவிதம் உழைப்போம்.

ஆங்கிலர் நடத்தும் ஆதிக்க மதனை
அழித்திட அமைத்துளோம் எனினும்
நாங்களோர் நாளும் இங்கிலிஷ் காரர்
நாசத்தை விரும்பிட மாட்டோம் ;
ஈங்குள அவர்கள் எத்தொழில் செயினும்
இன்பமாய் வாழ்ந்திட இசைவோம் ;
தாங்களே எஜமான் என்றிடும் தருக்கைத்
தடுப்பதே நாம்கொண்ட வேலை.

இந்துக்க ளிடையே தீண்டாத பேர்கள்
ஹரிஜன ஏழைகள் தம்மைப்
பந்துக்கள் போலப் பரிவுடன் நடத்தி
அவருடன் பழகுதல் வேண்டும் ;
நிந்தித்து நீக்கல் சாத்விக நெறிக்கு
நிச்சயம் தடையென நிற்கும் ;
சிந்தித்து நமது தினசரி வாழ்வில்
தீண்டலை மறந்திடல் தேவை.

மதங்களின் பெயரால் மாறுபட் டிடினும்
மற்றுநம் சுகதுக்க மெல்லாம்
நிதங்கலந் தெல்லா விதத்திலும் பின்னி
நீக்கொணாத் தொடர்புகள் உடைத்தாம் ;
இதங்கலந் திடநாம் இந்தியத் தாயின்
மக்களே என்பதை நினைத்து,
விதங்களை மறந்து வேற்றுமை துறந்து
விரவிநாம் நடந்திடல் வேண்டும்.

கதரும் ராட்டையும் கண்களாம் நமக்குக்
கருதிடில் நிர்மாணக் கணக்கில் ;
எதிலும் சுகமிலா ஏழைக் கிராமம்
எழுநூ றாயிரம், அவற்றில்
பதிலும் பேசிடாப் பாமர மக்களின்
பட்டினிக் கொடுமையை மாற்றக்
கதியென அவர்க்குப் புத்துயிர் கொடுக்கக்
கைத்தொழில் ராட்டையும் கதராம்.

ஆகையால் நாமும் அனுதினம் நூற்போம் ;
ஆடையும் கதரன்றி அணியோம் ;
போகமாய்க் கிராமக் கைத்தொழில் செய்த
பொருளையே கூடிய மட்டும்
ஓகையால் வாங்கிப் பிறரையும் அதற்கே
உதவிடத் தூண்டுவோம் ; உண்மை ;
சாகுமோ என்னும் கைத்தொழில் எல்லாம்
தழைத்துயிர் பெற்றிடச் செய்வோம்.

காங்கிரஸ் கொள்கைக் கட்டளை தம்மைக்
கடமையிற் பணிவுடன் காப்போம் ;
ஓங்கிடும் போது சத்தியப் போரில்
உவப்புடன் கலந்துகொள் வதற்கே
ஆங்கது கூவி அழைத்ததும் உதவ
ஆயத்த மாகவே இருப்போம் ;
ஈங்கிவை எங்கள் சத்தியம் சபதம்
இந்தியா சுதந்திரம் பெறவாம்.

74. இந்தியத் தாய் புலம்பல்

காலக் கதியடியோ
கைவிரித்து நான்புலம்ப
ஆலம் விதையெனவே
அளவிறந்த மக்கள்பெற்றும்
ஞாலத்தில் என்னைப்போல்
நலிந்தா ளருத்தியுண்டோ?
நீலக் கடலுலகில்
நீடித்தும் பிள்ளைகளால்
கோல மிழந்துநிலை
குலைந்துருகி வாடுகின்றேன்!

மெத்தப் பகட்டுடையாள்
மேற்கத்திப் பெண்ணொருத்தி
'அத்தை'யெனக் கூவியென்றன்
ஆசார வாசலிலே
தத்தித் தடுமாறித்
தலைவணங்கி நின்றிருந்தாள்.
"புத்தம் புதியபெண்ணே
போந்தகுறை என்னசொல்லு
சித்தங் கலங்காதே
சின்னவளே" என்றுசொன்னேன்.

வெள்ளைத் துகிலுடுத்து
வெட்டிருந்த பட்டணிந்து
கள்ளக் குறிசிறிதும்
காட்டா முகத்தினளாய்
அள்ளிச் செருகிவிட்ட
அழகான கூந்தலுடன்
பிள்ளை மொழிவதெனப்
பின்னுகின்ற சொற்பேசி
மெள்ளத் தலைகுனிந்தே
மெல்லியலாள் நின்றிருந்தாள்.

"எங்கிருந்தே இங்குவந்தாய்?
என்னகுறை பெண்மணியே?
சங்கிருந்த வெண்ணிறத்தாய்!
சஞ்சலத்தால் வந்ததுண்டோ?
இங்கிருந்தே உள்ளதைநீ
என்னுடைய மக்களுடன்
பங்கிருந்து கொள்வாய்நீ
பயமொழிவாய்" என்றுசொல்லி
இங்கிதம்நான் சொன்னவுடன்
இருதாளும் மண்டியிட்டு.

குன்றி உரைகுழறிக்
குளிரால் நடுங்கினள்போல்
சின்னஞ் சிறுகுரலால்
சிந்தைமிக நொந்தவளாய்
"உன்னுடை னேபிறந்தோன்
ஊரைவிட்ட ஆரியனாம்
முன்னம் உனைப்பிரிந்து
மேல்நாடு மேவினவன்
அன்னவன் புத்திரிநான்
அத்தைநீ சித்தம்" என்றாள்.

"நெஞ்சம் கலங்காதே
நீயெதற்கும் அஞ்சாதே
தஞ்ச முனக்கிருப்பேன்
தையலே மெய்யிதுகாண் ;
கொஞ்சும் இளமையினில்
குறையுனக்கு வந்ததென்ன?
பஞ்சை யெனத்தனியே
பட்டணத்தை விட்டுவந்தாய்
வஞ்சி யிளங்கொடியே
வந்துபசி யாறுகென்"றேன்.

சற்றுத் தலைநிமிர்ந்தாள்
தையலவள் புன்சிரிப்பை
உற்ற முகத்தினொடும்
உள்ளம் குளிர்ந்தவள்போல்
சுற்றி அயல்பார்த்துச்
சொன்னபடி என்னுடனே
முற்ற மதனைவிட்டு
முன்கட்டில் வந்துநின்று
தத்தியதன் மேல்நடக்கத்
தயங்கினவள் போலநின்றாள்.

"தாவில்லை உள்ளேநீ
தாராள மாய்வரலாம்
வா" என்று சொன்னவுடன்
வல்லியவள் மெல்லவந்தாள் ;
தூவெள்ளை யானஅவள்
துணியும் அணியிழந்தும்
தாவள்ய மானஅந்தத்
தையலவள் மெய்யழகில்
கோவென்று கூட்டமிட்டென்
குழந்தைமார் கூடிவிட்டார்.

ஆனபடி என்னுடனே
அன்னமந்தக் கன்னிவர
மேனியவள் ஆடையெல்லாம்
வாடையன்று வீசியது.
"ஏனி· திளங்கொடியே!
என்ன?" என்று கேட்டதற்கு
"மீனுணவும் ஊனுணவும்
மெத்தஉண்ட தந்தையரே
தேனுங் கனிகாய்என்
தேசத்தில் கொஞ்சம்" என்றாள்

சொல்லி முகஞ்சுளித்தாள்
சோக மதைமாற்றி
கொல்லைச் சிறுவீட்டிற்
கொண்டவளைச் சென்றிருத்தி
மல்லிகை முல்லைமலர்
மணமிகுந்த நன்னீரால்
அல்லி நிறத்தவளை
அங்கமெல்லாம் நீராட்டி
மெல்லத் துவட்டிவிட்டு
மெய்யழகு செய்துவைத்து

தக்க உடைகொடுத்து
டாக்காவின் சல்லாவால்
மிக்க விலையுயர்ந்து
மிகமெலிந்த ஆடையினால்
ஒக்க அவளைமிக
ஒய்யாராம் செய்துவிட்டுப்
பக்கம் உடனிருத்திப்
பரிந்தே விருந்துமிட்டேன்
துக்கம்மிக ஆறியவள்
துதித்தாள் மிகவும் என்னை.

என்னுடைய மக்களுடன்
என்வீட்டுத் தாதியரும்
இன்னும் பணியாட்கள்
எல்லோரும் பக்தியுடன்
என்ன சிறுகுறையும்
ஏதுமவட் கில்லாமல்
சொன்னபடி எல்லாரும்
சோடாச உபசாரம்
பண்ணியந்தப் பெண்மணியைப்
பார்த்து வந்தார் நேர்த்தியுடன்.

அஞ்சி அடக்கமுடன்
அத்தையென்ற பக்தியுடன்
வஞ்சி யிளங்கொடியாள்
வாழ்ந்திருந்தாள் வீட்டில்என்றன்
குஞ்சு குழந்தையெல்லாம்
கோதையவள் தன்னிடத்தில்
கொஞ்சி விளையாடிக்
குலவி மகிழ்ந்திருந்தார்
நெஞ்சம் மிகக்களித்து
நிம்மதியாய் நானிருந்தேன்.

இந்தவிதம் என்வீட்டில்
என்னுடைய மக்களினும்
சொந்தம்மிகக் கொண்டாடிச்
சொன்னபடி கேட்டுவந்தாள்
வந்திருக்கும் நாளையிலே
ஒருநாள் அருகில்வந்து
"எந்தனுடை ஊரின்மேல்
ஏக்கமின்று வந்ததனால்
உன்றனுடை உத்தரவில்
ஓலைவிட ஆசை" என்றாள்.

"என்ன தடைஇதற்கே?
எழுதுவாய்" என்றுசொன்னேன்.
சொன்னவுடன் என்றனக்குத்
தோன்றா மொழிகளிலே
கன்னியவள் தன்னவர்க்குக்
காகிதமும் போட்டுவிட்டாள்
பின்னைச் சிலநாளில்
பெண்ணவளின் தன்னினத்தார்
அண்ணனென்றும் தம்பியென்றும்
அக்கமென்றும் பக்கமென்றும்

வந்தார் பலபேர்கள்
வந்தவரைச் சொந்தமுடன்
தந்தே னிடமவர்க்கும்
தக்க விருந்துமிட்டேன்
சந்தேகம் நானவர்மேல்
சற்றும் நினைக்காமல்
அந்தோ! இருந்துவிட்டேன்
அந்தஒரு காரணத்தால்
நொந்தேன் நிலைதவறி
நோவேன் விதியினையே.

அன்னவர்கள் கொண்டுவந்த
அழகாம் பலபொருள்கள்
மின்னுகின்ற கண்ணாடி
மினுக்குகின்ற பொம்மைகளும்
இன்னும் மயக்குகின்ற
என்னென்ன வோபொருள்கள்
என்னுடைய மக்களுக்கே
எடுத்துக் கொடுத்தவளாய்க்
கன்னி யவள்சிரிக்கக்
களித்துவிட்டார் மக்களெல்லாம்.

நாளுக்கு நாளதன்மேல்
நலிந்தபடி என்வீடு
மேலுக்கு மேலாக
மிகவும் பயந்தவள்போல்
'பாலுக்குங் காவலொடு
பூனைக்கும் தோழன்' என்றே
தோல்நிற்க உள்ளிருந்த
களைமறைந்த கொள்கையெனக்
கோல்செய்த என்வாழ்வைக்
குலைத்துவிட்டாள் மெல்லமெல்ல.

என்ன உரைத்தாளோ!
ஏதுமருந் திட்டாளோ!
அன்னைதந்தை தெய்வமென்றே
ஆரா தனைபுரிந்த
என்னுடைய மக்களென்னை
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை ;
சொன்னபடி கேட்பதில்லை ;
'தூ'வென்றும் 'போ'வென்றும்
கன்னியவள் மோகத்தால்
காலால் எனைஉதைப்பார்.

கொண்ட சமயம்விட்டார்
குலதெய்வப் பூசைவிட்டார்
பண்டைப் பெருமையுள்ள
பக்திகளும் விட்டொழிந்தார் ;
கண்டபடி உண்டுடுத்துக்
கண்டபடி யாய்க்களித்துப்
பெண்டொருத்தி தன்மயக்கில்
பெற்றஎன்னை யும்இகழ்ந்து
சண்டையிட்டுத் திரிவார்நான்
தவங்கிடந்த மக்களெல்லாம்.

75. நாட்டை மறந்தனை மனமே!

நாட்டை மறந்தனை மனமே
நாளுமிங் கெளியவர் வருந்தும்
பாட்டை நினைத்திலை சிறிதும்
படித்தனை யதன்பயன் இதுவோ?
பூட்டிய விலங்குடன் புலம்பும்
பெற்றபொன் னாட்டினைப் போற்றாய்
ஏட்டிற் படித்தனை அறநூல்
ஏதும்உன் செய்கையில் இல்லை.

வேதம்வே தாந்தங்கள் வளர்த்து
வேண்டிய வளம்முற்றும் பொருந்திப்
பூதங்கள் விபத்துகள் குறைந்து
பூமியில் இணையற்ற நாட்டில்
சாதமும் வயிற்றிற்கில் லாமல்
சாகாதும் பிணமெனத் தளர்ந்தோம்
ஏததன் காரணம் என்றே
எண்ணவும் மாட்டனை நெஞ்சே!

தன்னுயிர் போற்பிற உயிரைத்
தாங்கிய பெரியவர் வாழ்ந்து
பொன்னொளி வீசிய நாட்டின்
புகழறம் நீபிறந் தழித்தாய்
அன்னியர்க் குளவுகள் சொல்லி
அவர்தந்த எச்சிலை அருந்தி
உன்னுடன் பிறந்தவர் வருந்த
உடல்சுகித் திருந்தனை மனமே!

மாற்றலர்க் கிடங்கொடுத் தேழை
மக்களைப் பிழிந்துடல் வளர்த்தாய்
கூற்றுவன் கணக்கிடும் நாளில்
கூறுவை பதிலென்ன மனமே!
வீற்றிருந் தாண்டஉன் அரசை
விற்றுடல் சோம்பினை யினிமேல்
ஆற்றுவை இப்பழி அகற்ற
அன்னையின் விடுதலைக் கறமே.

சொந்த சுதந்தரம் மறந்தாய்
சோற்றினுக் குடல்சுமந் திருந்தாய்
பந்தம கன்றிட நினையாய்
பாரதத் தாயினைப் பாடாய்
அந்தமி லாதவள் செல்வம்
அன்னியர்க் கிழந்தனை குடிகள்
கந்தையும் கஞ்சியும் அற்றார்
காரணம் நீயெனக் கருதாய்.

அடிமையிற் பழகினைப் பொழுதும்
ஆண்மையை மறந்தனை முழுதும்
குடிமுறை குறைந்தனை சிறிதும்
குலமுறை நினைந்திலை பெரிதும்
மிடிமையிற் கிடந்ததுன் நாடு
மேன்மையை இகழ்ந்ததுன் வீடு
மடமையில் மயங்கியிப் பிறப்பின்
மகிமையை மறந்தனை மனமே!

கொண்டவள் குலக்கொடி வாடக்
கூத்தியர் மையலிற் குறையும்
வண்டர்கள் எனவல்ல முன்னோர்
வழக்க ஒழுக்கத்தை மறந்து
கண்டவர் சிரித்திடக் களித்து
கற்றவர் மொழிகளைப் பழித்தாய்
அண்டிய அயலவர் மயக்கால்
அழித்தனை மனையறம் அறிவோ?

ஜாதியை மதத்தினைப் பழித்துச்
சண்டையில் உவந்தனை மனமே
வாதுகள் மிகுந்தன நாட்டில்
வறியவர் வரிகளால் வருந்த
ஏதினி விடுதலை எனவே
யாவரும் ஏங்கினர் நல்லோர்
ஓதிய ஒற்றுமைக் குழைத்தே
ஒப்புற ஒழுகுவை உயர்வாய்.

தேனுள்ள தாமரை மேலே
தினமுள்ள தவளையைப் போலே
நானுள்ள இப்பெரும் நாட்டின்
ஞாலமெல் லாந்திரண் டாற்போல்
ஊனுள்ள தேகத்தி னோடும்
உன்முன்னே காந்தியன் றுற்றும்
ஏனென்ன என்றிலை மனமே
இருந்தென்ன போயென்ன நீயே!

ஆண்டவன் உனக்கென்ற நாட்டில்
அன்னியர்க் கரசளித் தடிமை
பூண்டுடல் வளர்த்தனை நெஞ்சே!
புண்ணியம் உனக்கிலை; நரகே.
மீண்டுமுன் நாட்டினை மீட்க
மெய்ப்பொருள் ஆவியும் ஈந்தே
ஆண்டொழில் புரிகுவை யாயின்
ஆன்ம சுதந்திரம் அடைவாய்.

76. சுதந்திரம் வேண்டும்

கண்ணொளி யின்றி மற்றக்
கட்டழ கிருந்தா லென்னப்
பண்ணளி இனிமை யூட்டாப்
பாட்டுகள் கேட்ப தென்னப்
புண்ணியப் புகழொன் றில்லாப்
பொற்பொதி யுடையார் போலும்
திண்ணிய சுதந்தி ரத்தின்
தெரிசனம் இல்லா வாழ்க்கை.

உண்டிகள் பலவும் செய்தே
உப்பிலா துண்ணல் போலும்
கண்டொரு கனிவு சொல்லக்
கனிவிலான் விருந்து போலும்
பெண்டரும் அழகு மிக்காள்
பிரியமில் லாமை யக்கும்
தொண்டுசெய் துரிமை யின்றிச்
சுகித்துடல் வளர்க்கும் வாழ்க்கை.

அன்பறம் வளர்த்தி டாமல்
ஆற்றலும் அறிவும் குன்றும்
வன்புகள் சூதும் வாதும்
வழக்குகள் வளரும் வாழ்வின்
இன்பமும் ஊக்கம் ஆன்ம
எழுச்சியும் இன்றி என்றும்
துன்பமும் சோம்பல் சூழும்
சுதந்தரம் இல்லா நாட்டில்.

கல்வியும் கலைகள் யாவும்
களைமிகும் பயிர்க ளாகும்
செல்வமும் புகழும் தேயும்
செருக்கவர் தருக்கி வாழ
நல்லவர் வருந்தி வாட
நடுநிலை ஞாயங் கெட்டுத்
தொல்லைகள் கட்சி கட்டும்
சுதந்திரம் இழந்த நாட்டில்.

இச்சைபோல் இருந்து வாழ
ஈப்புழு எறும்பும் கோரும் ;
உச்சமாம் மனித ஜென்மம்
சுதந்திர உணர்ச்சி யின்றி
நச்செனும் அடிமை வாழ்வை
நயந்திட ஞாய முண்டோ?
நிச்சய சபதம் பூண்டு
சுதந்திரம் நிலைக்கச் செய்வோம்.

உலகினுக் கறிவு தந்த
உண்மைகள் மிகுந்து ஞானக்
கலைகளைக் கணித்து ஜீவக்
கருணைசேர் நமது நாடு
பலபல கொடுமை முற்றிப்
பதைத்திடும் பிறநாட் டார்க்கு
நலமெடுத் துரைக்க வேண்டும்
சுதந்திரம் நமக்கு வேண்டும்.

77. சுதந்திரமில்லா ஒரு நாடு

சுதந்திரத் திருநாள் தொழுவோம்நாம்
துன்பம் தொலைந்தினி எழுவோம்ஆம்
நிதந்தரும் தரித்திரம் நீங்கிடுவோம்
நீதியும் அறங்களும் ஓங்கிடுவோம். . .(சுதந்தர)

கோயில் குளங்களை இடித்தெரியும்
குழந்தைகளை பெண்களைக் கொலைபுரியும்
பேயின் கூத்தினைத் தடுத்திடவே
பெரிதும் சுதந்திரம் தொடுத்திடுவோம். . .(சுதந்தர)

மூர்க்கர்கள் உலகினை ஆள்வதையும்
முற்றிலும் தருமம் தாழ்வதையும்
போக்கிடச் சுதந்திரம் வேண்டிடுவோம்
புண்ணிய முறைகளில் ஆண்டிடுவோம். .(சுதந்தர)

பகைவர்கள் தங்களுக் குபசாரம்
பக்தரைச் சிறையிடும் அபசாரம்
நகைமிகும் அரசியல் முறைமாற
நம்முடைச் சுதந்திரம் நிறைவேற . .(சுதந்தர)

சுதந்திரம் இல்லா ஒருநாடு
சூழ்புலி பேய்மிகும் பெருங்காடு ;
எதிர்த்திடும் துயர்களைச் சகித்திடுவோம் ;
எம்முடைச் சுதந்திரம் வகித்திடுவோம். . .(சுதந்தர)

பொதுஜன நாயக முறைகாணும்
பூரண சுதந்திரம் பெறவேணும் ;
எதுதடை நேரினும் அஞ்சாமல்
எவரையும் அதற்கினிக் கெஞ்சாமல் . .(சுதந்தர)

78. சுதந்தரத் தேவி

சுதந்தரத் தேவியைத் தொழுவோம் வாரீர்
சுகம்பெற அதுதான் வழியாம் பாரீர்
பதந்தரும் மானிடப் பண்புகள் வளரும்
பரமனை உணர்ந்திடப் பக்தியும் கிளரும்.

விடுதலை யடைந்தது சுதந்தரம் இல்லை
வெற்றிகள் என்பதும் வெறிதரும் தொல்லை
கெடுதலை நீக்கிடக் கிருபைகள் செய்யும்
கேண்மையின் வடிவே சுதந்தரத் தெய்வம்.

அன்னிய உதவியை அவசியம் நீக்கும் ;
அதுதான் சுதந்தர ஆற்றலைக் காக்கும் ;
பொன்னிலும் உயர்ந்தது சுதந்தரச் சிறப்பு ;
பொறுமையும் வாய்மையும் அதற்குள பொறுப்பு.

ஆயுத வெறிகளை அப்புறம் ஒதுக்கி
அன்பின் நெறிகளில் அரசியல் புதுக்கி,
சாய்கிற வரையிலும் சமரசம் பரப்பி,
சண்டைகள் விலக்குதல் சுதந்தரப் பொறுப்பு.

அற்புதன் காந்தியின் அறநெறி கொண்டோம் ;
அடிமை விலங்குகள் அகன்றன கண்டோம் ;
கற்பெனக் காந்தியின் நன்னெறி காப்போம் ;
கருணையும் ஆற்றலும் கலந்திட நோற்போம்.

79. நம் சுதந்தரம்

சுதந்தரம் அடைந்தோம் என்ற
சுகங்களை அடையு முன்னால்
எதிர்ந்தன எதிர்பா ராத
இடர்பல சகித்து வென்றோம்
முதிர்ந்துள யுத்த வேகம்
முற்றிலும் மறைந்து போகும்
விதந்தனில் நமது நாட்டின்
சுதந்தரம் உதவ வேண்டும்.

அரும்பெரும் காந்தி யண்ணல்
அற்புத அறிவு சேர்ந்த
பெருந்திறல் காங்கி ரஸ்தன்
பெருமையிற் குறைந்து போகக்
குறும்புகள் வளர்ந்தி டாத
குறியுடன் கொள்கை காத்து
விரும்பிடும் ராம ராஜ்ய
சுதந்தரம் விளங்க வேண்டும்.

அதிகார மோக மின்றி
ஆதிக்க தாக மின்றிச்
சதிகார எண்ணம் சேராச்
சமதர்ம உணர்ச்சி யோடு
துதிபாடி நாட்டை வாழ்த்தும்
தொண்டர்கள் சூழ்ந்து நிற்கும்
நிதியாக காங்க்ரஸ் நின்று
சுதந்தரம் நிரக்க வேண்டும்.

காந்தியை மறந்தி டாமல்
கருணையைத் துறந்தி டாமல்
சாந்தியிற் குறைந்தி டாமல்
சத்தியம் இரிந்தி டாமல்
மாந்தருக் கறிவு காட்டும்
மாபெரும் சோதி யாக
நேர்ந்துள நமது நாட்டின்
சுதந்தரம் நிலைக்க வேண்டும்.

பாரினில் ஒருநா டேனும்
நம்மிடம் பகைகொள் ளாமல்
சீரிய முறையில் ராஜ
நீதியின் செம்மை காத்துப்
போரிட நினைப்பா ருண்டேல்
புலிகண்ட மான்போல் அஞ்சத்
தீரமாய் நமது நாட்டின்
சுதந்தரம் திகழ வேண்டும்.

ஆயுத வெறிகள் மிஞ்சி
அழிவுக்கே முனைந்து நிற்கும்
தீயன குறிகள் கண்டே
உலகெலாம் திகைக்கும் துன்பை
நாயகன் காந்தி தந்த
நன்னெறி தன்னைக் காட்டும்
தாயகம் நமது நாட்டின்
சுதந்தரம் தடுக்க வேண்டும்.

80. சுதந்தரச் சபதம்

அன்னியர்கள் நமைஆண்ட அவதி நீங்கி
அரசுரிமை முழுவதையும் அடைந்தோம் நாமே
என்னினும்என்? சுதந்தரத்தின் இன்பம் காண
எவ்வளவோ மனமாற்றம் இன்னும் வேண்டும் ;
தன்னலமே பெரிதாகக் கருதி டாமல்
பொதுநலமே தன்னலமாய்த் தரிக்க வேண்டும் ;
பொன்னின்உயர் சுதந்தரத்தைப் பாது காக்கப்
பொறுப்புணர்ந்து கடமைகளைப் புரிய வேண்டும்.

உயிர்கொலையை அஞ்சிஅஞ்சி ஒதுக்க வேண்டும் ;
உயிர்கொடுக்க அஞ்சாத உறுதி வேண்டும் ;
பயிற்சியுடன் அன்புநெறி பழக வேண்டும் ;
பல்லுயிரும் நல்லுறவாம் பரிவு வேண்டும் ;
முயற்சிமிக உணவளிக்கும் தொழில்க ளெல்லாம்
முன்னேறப் புதுமுறையில் முனைதல் வேண்டும் ;
உயர்ச்சியென்றும் தாழ்ச்சியென்றும் பேதமின்றி
உழைப்புகளில் சமமான ஊக்கம் வேண்டும்.

அஞ்ஞானச் சூழ்நிலையை அதிக மாக்கி
அருள்மறந்த செயல்களுக்கே ஆசை மூட்டும்
விஞ்ஞான வெறிமறைய வேண்டு மென்ற
வித்தகமாயச் சத்தியத்தின் விளக்காய் நிற்கும்
இஞ்ஞாலம் இதுவரைக்கும் காணாத் தூயன்
எம்மான்அக் காந்திமகான் ஏந்திச் செய்த
மெய்ஞ்ஞானத் தவநெறியால் நமது தேசம்
மேவியநல் சுதந்தரத்தின் மேன்மை காப்போம்.

81. காந்தி தந்த குடியரசு

எண்ணரிய தியாகிகளை எழும்ப வைத்த
எழுதரிய காந்திமகான் தவத்தி னாலே
மண்ணுலகம் இதுவரையில் அறியா நல்ல
மார்க்கத்தில் அடிமைமனம் மறையச் செய்து
கண்ணனைய சுதந்தரத்தின் காட்சி மேவக்
கருதரிய குடியரசு தொடங்கக் கண்டோம்
திண்ணமுடன் காந்திவழி நிற்போ மானால்
தீராத குறைகளெல்லாம் தீர்ந்து போகும்.

புண்படுத்தல் எதற்கெனினும் தீதே என்றும்
பொதுவான நல்லறிவை மிகவும் போற்றி
உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டு மின்றி
உயிர்களுக்கும் சமதர்ம உணர்ச்சி காட்டும்
பண்புடைய மனப்பான்மை பலிக்க வேண்டி
பக்தியுடன் காந்திவழி பயில்வோ மானால்
மண்புகழும் குடியரசு நமதே யாகும் ;
மனிதருக்குள் சண்டைகளை மறையச் செய்வோம்.

சட்டதிட்டச் சிறப்புமட்டும் சரிசெய் யாது
சைந்நியத்தின் மிகுதிமட்டும் சாதிக் காது
கட்டுதிட்ட உணர்ச்சியுடன் குடிக ளெல்லாம்
கடமையெனப் பொறுப்புகளைக் கருத வேண்டும்.
திட்டமிட்டுக் காத்திருந்து சேவைசெய்யும்
தியாகபுத்தி குடியரசின் தேவை யாகும்.
வட்டமிட்டு நம்மறிவைப் பாது காக்க
வள்ளலந்தக் காந்தியைநாம் வணங்க வேண்டும்.

பிறநாட்டு வழிகளைநாம் பின்பற் றாமல்
பிற்போக்கு வெறிகளுக்கும் இடங்கொ டாமல்
திறம்காட்டி மெய்யறிவின் தெளிவும் சேர்ந்த
சீலர்களைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்து கொண்டால்
உறங்காமல் காந்திமகான் உபதே சத்தை
ஊரூராய்ப் பரப்புவதில் ஊக்கம் கொள்வோம் ;
அறங்காட்டும் புதுமுறையில் ஆட்சி செய்வோம் ;
அதற்கென்றே அவதரித்தார் அண்ணல் காந்தி.

எந்திரங்கள் தந்தவெறி குறைய வேண்டும் ;
எங்கெங்கும் கைத்தொழில்கள் நிறைய வேண்டும் ;
தந்திரங்கள் பணம்பறித்தல் தடுக்க வேண்டும் ;
தன்னலங்கள் தலையெடுப்பை ஒடுக்க வேண்டும் ;
சிந்தனையில் தெய்வபயம் சேர வேண்டும் ;
செய்கையெல்லாம்பொதுநலத்தைக்கோர வேண்டும் ;
மந்திரமாய்க் காந்திமகான் திருநா மத்தை
மக்களெல்லாம் மறவாமல் ஜெபிக்க வேண்டும்.

82. கற்பகச் செடி

சுதந்தரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்
சுகந்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ?
பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும்
பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?
இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
எல்லாம் சுதந்தரம் இருந்தால்தான்.
நிதந்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
நிச்சயம் சுதந்தர நிலைவேண்டும்.

சோறும் துணிமணி சுகங்களைக் காட்டிலும்
சுதந்தர உணர்வே மேலாகும்
கூறும் நலங்களை விலைகொடுத் தாயினும்
கொள்ளத் தகுந்தது சுதந்தரமே.
வீறும், கருணையும், வித்தக ஞானமும்
விளைவது சுதந்தர விருப்பத்தால்
தேறும் பொழுதினில் சுதந்தரம் தொழத்தகும்
தெய்வம் என்பது தெளிவாகும்.

உத்தமன் காந்தியின் மெய்த்தவ பலத்தால்
உலகம் இதுவரை கண்டறியாச்
சுத்தநல் வழிகளில் சுதந்தரம் அடைந்தோம்
சொல்லரும் பாக்கியம் நமதாகும் ;
கைத்தலம் கிடைத்துள கற்பகச் செடிஇதைக்
காயவும் கருகவும் விடமாட்டோம்
சத்திய சபதம் பக்தியில் காப்போம்
சர்வே சன்துணை புரிந்திடுவான்.

83. தேசீய வாரம்

தேசீய வாரத்தைச் சிந்திப்போம்--இந்தத்
தேசத்தின் தந்தையை வந்திப்போம்
மாசற்ற காந்தியின் நாமமே--என்றும்
மனிதர் குலத்துக்குச் சேமமாம்.

சேவைகள் காரியம் வெல்லுமா--அன்றிச்
செல்வச் செருக்குகள் செல்லுமா
தேவை நமக்கின்று சேவைதான்--அது
தெய்வக் கருணையை மேவுமால்.

சத்தியம் நம்மிற் குறைந்ததால்--பல
சங்கடம் வந்து நிறைந்ததே.
பத்தியம் விட்டுப் பிரிந்திடில்--என்ன
பயனுள வாகும் மருந்துகள்?

நீரில் குளித்திடும் ஆசையால்--சேற்றை
நிறையத்தன் மேனியில் பூசல்போல்
ஊரைத் திருத்திட எண்ணினோம்--சொந்த
ஊழல் மிகுந்திடப் பண்ணினோம்.

ஒற்றுமை சேரப் புகுந்தவர்--தம்முள்
ஒருவரை ஒருவர் இகழ்ந்தனர் ;
குற்றம் நிறைந்தது நாட்டிலே--உண்ணக்
கூழும்கு றைந்தது வீட்டிலே.

84. இலங்கைச் சுதந்திர கீதம்

வீர கேசரி என்ன நின்றுநம்
வெற்றி யோசை முழக்குவோம்
விட்டொ ழிந்தது கெட்ட காலமும்
வீழ்ந்த ழிந்தன தீமைகள்
தூரம் ஓடின சூது வாதுகள்
சூழ்ந்தி ருந்தன யாவையும்
சூடு பட்டன கேடு கெட்டன
சூழ்ச்சி வஞ்சனை ஆட்சிகள்!
கோர மாகிய அடிமை வாழ்வெனும்
கொடுமை தந்தன மடமைகள்
குற்றம் முற்றிலும் பற்று விட்டன
கூடி விட்டது விடுதலை
ஈரம் மிக்க இலங்கை நாடினி
இன்ப மோங்கி இலங்கவே
இன்று தொட்டுச் சுதந்த ரம்தரும்
இனிய வாழ்வு துவக்கினோம்.

ஏசு நாதனைப் புத்த தேவனை
ஏற்ற முள்ள மகம்மதை
இணையி லாதநம் காந்தி அண்ணலை
ஈன்று மெய்ப்புகழ் ஏந்திடும்
ஆசி யாவினில் பகுதி யாகிய
அழகு சொட்டு மிலங்கையில்
ஆதி வந்தவர் பாதி வந்தவர்
யாவ ராயினும் இவ்விடம்
வாச மாயுள மக்கள் யாவரும்
நேச மாயினி வாழவே
வம்பு துன்புகள் வாதபேதமும்
வந்தி டாவகை ஆளுவோம்.
ஈச னுண்மையை எண்ணு புண்ணிய
இந்த நாட்டு நினைப்புடன்
எதிரி யென்றிட எவரு மின்றியே
சுதந்த ரக்கொடி ஏற்றுவோம்.

மலைவ ளத்திலும் நதிவ ளத்திலும்
மரவ ளத்திலும் மிக்குளோம்
மதிவ ளர்த்தினி நிதிவ ளர்த்திடும்
மார்க்கம் முற்றிலும் தீர்க்கமாம் ;
கலைவ ளர்த்தொரு நிலைகொ டுத்திடும்
கருணை வாழ்வு நடத்துவோம்
கடமை செய்தபின் உரிமை எய்திடும்
கதிய றிந்த கருத்துடன்
கொலைவ ளர்த்திடும் மதவெ றித்திமிர்
கொடுமை முற்றிலும் அற்றதாய்க்
குவல யத்தவர் கவலை யற்றிடக்
கூடு மானதைச் செய்யவே
அலைக டல்நடு அரண மைந்துள
அழகு கொஞ்சு மிலங்கையில்
அச்ச மற்ற சுதந்த ரத்துடன்
ஆண்மை யோடர சாளுவோம்.

சேர சோழரின் பாண்டி மன்னரின்
செந்த மிழ்த்திரு நாட்டுடன்
சேர்ந்தி ருந்திட நேர்ந்தி டும்படி
செய்து வைத்தது தெய்வமே!
தீர யோசனை செய்யி லிந்தநம்
தீவின் நன்மைகள் யாவையும்
திட்ட மாகவும் ஒட்டி நிற்பது
தேவி இந்தியத் தாயுடன்
தூர மாகிய தேச மக்களின்
தொடர்பு வேண்டிய தென்னினும்
தொன்று தொட்டுளம் ஒன்று பட்டுள
தொலைவி லாத சரித்திரம்
வாரம் மிக்குள இந்தி யாவுடன்
நாரம் மிக்குள நட்புடன்
வந்த இந்த சுதந்த ரத்தினை
எந்த நாளிலும் வாழ்த்துவோம்.

புத்த தேவரின் போத நன்னெறி
போற்றும் சிங்கள மக்களும்
பூர ணத்தமிழ் ஞான மென்பதைப்
பூசை செய்திடும் தமிழரும்
ஒத்து வாழ்வது மெத்த வும்சுல
பத்தி லாவது உண்மையால்
உன்ன வேறினி என்ன வேற்றுமை?
ஒன்று மேயிலை என்னலாம்.
சத்தி யத்தினும் சாத்வி கத்தினும்
சார மாகிய காந்தியின்
சமர சத்தினி சங்க நாதம்
முழக்கு கின்றஇச் சமயமே
யுத்த மென்கிற பித்தை வெட்டிட
உலகி னுக்கொரு உதவியாய்
ஊழி யம்செய ஈழ நாடுதன்
உரிமை பெற்றதை வாழ்த்துவோம்.

85. ஆயுத பலத்தை நம்பாதே

ஆயுத பலத்தை நம்பாதே
ஐரோப் பியர்போல் வெம்பாதே
ஞாயமும் அன்பும் நமதுதுணை
நமக்கார் உலகில் வேறுஇணை?

எந்திர சக்திகள் ஏய்த்துவிடும்
எய்தவர் தமையும் மாய்த்துவிடும்
தந்திர யுக்தியும் சதமல்ல
தாரணி மதிப்பது அதையல்ல.

சாகிற துணிச்சல் போதாது
சற்குணம் இலையேல் தீதாகும்
வேகிற நெருப்பால் சமைத்திடலாம்
வெறுந்தணல் உணவாய் அமைந்திடுமோ?

தைரியம் எத்துணை இருந்தாலும்
தர்மமும் கருணையும் பொருந்தாமல்
செய்கிற தெல்லாம் சிறுமை தரும்
செம்மையும் நன்மையும் வறுமையுறும்.

வீரரும் சேனையும் வேண்டியதே
வெல்லவும் கொல்லவும் தூண்டிடவா!
ஈரமும் இரக்கமும் கெடுத்தவரை
இடித்துரைத் தறவழி நடத்திடவே.

விஞ்ஞா னத்தால் கொல்லுவதை
வீரர்கள் போரெனச் சொல்லுவதோ?
அஞ்ஞா னத்தின் வடிவன்றோ
அணுகுண் டாகிய வெடிகுண்டு?

கண்டுபி டித்தவர் நடுங்குகிறார்!
காணா தவர்கள் ஒடுங்குகிறார்!
மண்டலத் தறிஞர்கள் மயங்குகிறார்!
மறைத்திட முயற்சியில் தியங்குகிறார்!

கொல்லும் வித்தைகள் பெருகுவதா!
கொஞ்சிடும் வாழ்வினி அருகுவதா!
சொல்லும் வல்லவர் சொல்லுங்கள்
சுதந்தரம் இதற்கா சொல்லுங்கள்?

இதுதான் தருணம் அடுத்துளது
இம்சையின் தீமையை எடுத்துரைக்க.
பொதுவாய் உலகினில் போர்வெறியை
போக்கிடப் புகல்வோம் ஓர்நெறியை.

உத்தமன் காந்திசொல் கடைப்பிடித்தால்
உண்மையில் போர்களைத் தடைப்படுத்தும்
சத்தியம் சாந்தமும் வளராமல்
சண்டையின் மோகமும் தளராது.

இந்திய மக்கள் பொதுச்சிறப்பாம்
இம்சை வழிகளில் அதிவெறுப்பே ;
வந்தனை புரிவது வாய்மைகளை
வணங்குதல் வாழ்க்கையின் தூய்மையரை.

கொலைவழி மறுப்பவர் தமிழ்மக்கள்
கொள்கையில் சிறப்பவர் தமிழ்மக்கள்
நிலைதரும் வள்ளுவன் மொழிகற்போர்
நிச்சயம் காந்தியின் வழிநிற்பார்.

86. புரட்சி வேண்டும்

புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும்
புரட்சி வேண்டும்டா!
புரட்சி என்னும் சொல்லின் பொருளிலும்
புரட்சி வேண்டும்டா!

புத்தம் புதிதென நத்தப் படுவதைப்
புரட்சி என்றிடலாம் ;
நித்தம் கண்டுள சொத்தை வழிகளில்
புரட்சி நின்றிடுமோ!

மருட்சி தந்திடும் முரட்டு வார்த்தையில்
புரட்சி வந்திடுமோ?
திரட்சி யாகிய மகிழ்ச்சி வாழ்க்கையைத்
தீயன தந்திடுமோ!

பொதுநலம் வந்திடப் புதுவழி தந்தால்
புரட்சி அதுவாகும் ;
சதிபல செய்திடும் வழிகளில் விழுவதும்
புரட்சி மதியாமோ?

வேதனை யேதரும் தீதுள நெறிபல
புரண்டு வீழ்ந்திடும்ஓர்
போதனை தந்திடும் நூதன வழிகளில்
புரட்சி சூழ்ந்திடுவோம்.

சூதுகள் அரசியல் நீதிகள் என்றிடும்
சுத்தப் பொய்யுரையை
வீதியில் சந்தியில் விழிக்க விட்டொரு
புரட்சி செய்திடுவோம்.

கொன்று குவிப்பதை வென்றி எனச்சொலும்
கொச்சை எண்ணமெலாம்
சென்று மறைந்தன என்று சொலும்ஒரு
புரட்சி பண்ணிடுவோம்.

சண்டையும் கொலைகளும் பண்டைய நாள்முதல்
கண்டு சலித்ததடா!
வண்டர்கள் வழிகளைக் கொண்ட புரட்சியில்
நன்மை பலித்திடுமோ?

தீமையி னால்எதும் நன்மைகள் வரினும்
தேய்ந்தவை மாய்ந்துவிடும்.
வாய்மையின் அன்பால் வருகிற நலமே
புரட்சி வாய்ந்ததுவாம்.

உத்தமன் காந்தியின் உபதே சம்தான்
புரட்சி போதனையாம் ;
சத்திய நெறிதரும் சாத்விக முறையே
புரட்சி சாதனையாம்.

87. மன்னவன் நானே

மன்னவன் நானே மந்திரி என்சொல்
மற்றவர் யாருக்குச் சுற்றமிது?
என்னுடை நாடு என்னுடை வீடு
யாரிதில் என்னை மிரட்டுவது!
அன்னியர் இங்கே உள்ளவர் யாரும்
அண்டிப் பிழைத்திட வந்தவரே!
என்னுடை ஏவல் சொன்னதைச் செய்தோர்
என்னை அடக்குதல் இன்னுமுண்டோ?

என்னுடைக் காடு என்னுடைப் பாடு
என்றன்வெள் ளாமையை யார்அறுக்க?
மன்னவன் நானே மந்திரி என்ஆள்
மற்றவர் யாரிதை ஒத்துக்கொள்ள!
சொன்னதைச் செய்து பண்ணையைக் காக்கச்
சோற்றுக்கு வந்தவன் மாற்றியதேன்?
இன்னமும் இந்தச் சின்னத் தனத்தில்
ஏங்கிக் கிடந்திடத் தூங்குவனோ!

என்னுடைப் பெட்டி என்னுடைத் துட்டு
யாரிடம் சாவி இருத்தல்சரி?
பொன்னையும் வெள்ளிச் செம்புஎன் றாலும்
பூட்டவும் நீட்டவும் என்பொறுப்பு ;
சின்னப் பயலோநான் சித்தம்கெட் டேனோ
சீச்சீ! ஏன்இந்த ஏச்செனக்கு?
மன்னவன் நானே மந்திரி வைப்பேன்
மற்றவர் யாருடைச் சித்தம்அது?

மந்திரி நானே மன்னன் ஆவேன்
மற்றவர் யாருக்குக் குற்றம்இதில்?
இந்திய நாட்டில் நொந்தவ ரின்றி
இன்னர சாக்குவேன் என்னரசை!
அந்தமி லாதான் ஆண்டவன் தந்தான்
ஆரிய நாடென்றன் ஆட்சியன்றோ!
சிந்திய செல்வம் சேகரம் செய்து
சீக்கிரம் பாக்கியம் ஆக்கிவைப்பேன்!

88. புது வழி

எத்திசையில் எம்மொழியில் எவர்வாய்ச் சொல்லில்
எப்படியாய் வரும்கதைகள் எதுவா னாலும்,
சத்தியத்தின் வழிகாட்டும் அறிவை யெல்லாம்
தமதாக்கிக் கலைவளர்த்த தமிழர் நாட்டில்,
இத்தினத்தே கூட்டியுள்ளோம் இனிதே எண்ணி
இந்தியத்தாய் சுதந்தரத்தை எய்தும் மார்க்கம்
நித்தியமாம் அறங்களையே நினைவில் வைத்து
நிந்தையில்லாச் செயல்முறைகள் நிறுவ வேண்டும்.

மன்னவரைச் சதிபுரிந்து வெட்டி மாய்த்தும்,
மாறுபட்ட கருத்துடைய வார்த்தை யன்றைச்
சொன்னவரைச் சுட்டெரித்தும், துன்மார்க் கத்தால்
அயல்நாட்டைப் படையெடுத்துத் துன்பம் செய்தும்,
இன்னபல கொடுமைசெயும் பிறநாட் டாரை
இந்நாட்டின் விடுதலைக்குப் பின்பற் றாமல்
முன்னையநம் நாகரிகம் முரண்ப டாமல்
முடிவுசெய்வீர் சுதந்தரப்போர் முறைக ளெல்லாம்.

அடிமைகொளும் நம்விலங்கை அகற்ற வேண்டும் ;
அதையும்உயர் அன்பின்வழி அகற்ற வேண்டும் ;
கொடுமைசெயும் வழக்கமெல்லாம் கொளுத்த வேண்டும் ;
ஒருவருக்கும் கொடுமையின்றிக் கொளுத்த வேண்டும் ;
'முடியுமெனில் அப்படியே முடிப்போம் ; இன்றேல்
முயற்சியோடு நாமெல்லாம் முடிவோம்,' என்னும்
திடமதுதான் தீரமோடு வீர மாகும் ;
தெரிந்துரைகள் அதற்குதவச் செப்பு வீரே.

ஒருபகுதியில் ஒருஜாதி ஒரும தத்தார்
ஒன்றாகச் சேர்ந்திருந்தார் உறவாய் என்னும்
மருவாத பழங்கால நிலைமை யெல்லாம்
மலையேறிப் போனதுகாண் ; மண்மேல் இந்நாள்
ஒருநாட்டில் பலமதங்கள் பலநாட் டாரும்
ஒன்றாகச் சேர்ந்திருக்கும் உறவே வேண்டும் ;
பெருநீதி இதைமனத்தில் பிசகி டாமல்
பேசிடுவோம் விடுதலையின் பேச்சை யெல்லாம்.

வள்ளுவரின் வாழ்க்கைதனை நினைப்பு மூட்டி
வான்புகழும் திருக்குறளை நடந்து காட்டும்
கள்ளமிலாக் காந்திமுனி காட்டித் தந்த
கருணையோடு சத்தியத்தின் வீரம் சேர்ந்த
தெள்ளியநல் புதுவழியே உலகுக் கின்று
தேவையென்று தெரிந்தவர்கள் செப்பு கின்றார்
தள்ளரிய அப்பெரிய தவத்தைத் தாங்கத்
தமிழர்கள்நாம் மிகமிகவும் தகுதி ஆவோம்.

89. தமிழ் வழி அரசு

தமிழ்மொழி வளர்த்த ஞானம்
தரணியில் பரவி எங்கும்
தமிழ்வழி அரசு நீதி
தழைத்திட முடியு மானால்
குமிழ்தர உலகை வாட்டும்
கொடுமைகள் குறையும், உண்மை,
அமிழ்தினை உண்டா லென்ன
அனைவரும் சுகித்து வாழ்வோம்.
சிலம்பினைக் காட்டிக் கேட்ட
கண்ணகி சீற்றம் கண்டு
குலம்பழி கொண்ட தென்று
குமுறிய துயரால் நொந்து
நலம்பிழைத் தறத்தைக் கொன்ற
நாணத்தால் உயிரை விட்ட
தலம்புகழ் மன்னன் காதை
தமிழுக்கே சொந்த மாகும்.

கன்றினை மைந்தன் கொல்லக்
கதறிய பசுவைப் பார்த்தான்
'இன்றுனக் குற்ற துன்பம்
எனக்குறச் செய்வேன்' என்று
தன்மகன் உயிரைக் கன்றின்
உயிருக்கே ஈடாய்த் தந்து
வென்றிகொள் நீதி மன்னன்
வேறெந்த மொழியில் உண்டு?

கொண்டவன் அயலூர் போகக்
குலமகள் தனித்த வீட்டை
அண்டினர் கதவைத் தட்டில்
கரத்தினை அறுப்போம் என்று
விண்டதை மறந்து செய்த
குற்றத்தால் விதித்த வாறே
தண்டனை தனக்கே தந்த
மன்னனும் தமிழ னாகும்.

திடமிகும் தெய்வ பக்தன்
தீவிர தேச பக்தன்
கடமையும் தீர வீரக்
கருணசேர் கட்ட பொம்மன்
'அடிமையாய் வாழ மாட்டேன்
அன்னியர்க் கஞ்சேன்' என்று
கொடுமையை எதிர்த்து நின்ற
கொள்கையும் தமிழின் கூற்றாம்.

உள்ளமும் உடலும் கூம்ப
உலகெலாம் வணங்கும் ஜோதி
வள்ளலக் காந்தி செய்த
அறந்தரு வாழ்க்கை முற்றும்
தள்ளரும் அறங்க ளாகத்
தமிழ்த்திருக் குறளில் முன்பே
வள்ளுவன் வாழ்ந்து சொன்ன
கொலைதவிர் வாய்மை யாகும்.

90. சாந்தி தரும் கொடி

கற்புடைப் பெண்கட் கெல்லாம்
கணவனே தெய்வ மென்பார் ;
சொற்பொருள் அறிந்தோர்க் கெல்லாம்
சொன்னசொல் தெய்வ மென்பார் ;
மற்பெரும் வீரர்க் கெல்லாம்
மானமே தெய்வ மாகும் ;
நற்பெயர் நாட்டிற் காக்கும்
நமக்கிந்தக் கொடியே தெய்வம்.

அன்னிய கொடிக ளெல்லாம்
அரசியல் ஒன்றே பேசிப்
பொன்னியல் போக வாழ்வின்
பொதுநலம் தனையே கோரும் ;
என்னுடைப் பரத நாட்டின்
இக்கொடி இந்த வாழ்வின்
பின்னையும் அறிவு தேடும்
பேரின்பம் தனையும் பேசும்.

பிறநாட்டுக் கொடிக ளெல்லாம்
பிறநாட்டைப் பிடிக்க எண்ணி
மறம்நாட்டி மக்கள் தம்மைச்
சண்டையில் மடியச் செய்யும் ;
அறம்நாட்டி உலகை யாண்ட
அரியநம் கொடியோ, மூன்று
நிறம்காட்டி நிலையா யுள்ள
நீதியே ஓத நிற்கும்.

பச்சையாம் நிறத்தினாலே
பசுமையாம் அன்பை யூட்டும் ;
நிச்சயம் வெள்ளை அந்த
நிமலமாம் உண்மை நீட்டும் ;
துச்சமிவ் வுலக மென்னும்
துறவினைக் காவி சொல்லும் ;
அச்சமில் குடிசைக் கூலி
அதிலொரு ராட்டை காட்டும்.

தருமமே குறியாக் கொண்டு
தனக்கென்று எதையும் வேண்டாக்
கருமமே கடனென் றோதிக்
கருணையின் வழியே காட்டி
வருமமும் வஞ்சம் நீக்கும்
வாழ்க்கையை வகுத்துப் பேசும்
பெருமைநம் கொடியைப் போலப்
பிறிதொரு கொடியும் உண்டோ!

இந்திய மகனே! இந்த
இணையிலாக் கொடியைக் காத்தல்
முந்தியுன் முன்னோர் தந்த
அறமெலாம் முடிப்ப தாகும்
எந்தஓர் நாட்டிற் கேனும்
எதிரியாய் எடுத்த தல்ல
சந்ததம் உலகுக் கெல்லாம்
சாந்தியைத் தரவே யாகும்.

91. இளைஞரின் சபதம்

'எந்தத் தேசம் எந்தக் குண்டை
எந்த நாட்டிற் போடுமோ'
என்று மக்கள் உலகில் எங்கும்
ஏங்கும் இந்த நாளில்
இந்த நாடு பெற்றெ டுத்த
இளைஞர் யாரும் கூடுவோம் ;
இன்பமாக மனிதர் வாழ
ஏற்ற மார்க்கம் நாடுவோம் ;
சொந்த ஞானத் தெளிவு கொண்டு
வந்த நம்சு தந்தரம்
சுத்த மாக நின்று சாந்த
சத்தி யத்தைக் காக்கவே
தந்து போன இந்த நாட்டின்
தந்தை யாகும் காந்தியைத்
தாழ்ந்து போற்றி உலக முற்றும்
வாழ்ந்தி ருக்கப் பண்ணுவோம்.

இமயம் தொட்டுக் குமரி மட்டும்
இங்கி ருக்கும் யாவரும்
இந்தி யாவின் மக்க ளென்ற
சொந்தம் காணச் செய்குவோம்.
சமயம் என்றும் ஜாதி என்றும்
சண்டை யற்று வாழவும்
சமதை யாக மொழிகள் யாவும்
சலுகை பெற்று வளரவும்
அமைதி யாக தேச சேவை
அச்ச மின்றி ஆற்றுவோம் ;
அவதி மிக்க ஏழை மக்கள்
வறுமை போக மாற்றுவோம் ;
நமது நாடு உலகி னுக்கு
நல்ல மார்க்கம் காட்டவே
நாங்கள் என்றும் பணிபு ரிந்து
வெற்றி மாலை சூட்டுவோம்.

முன்னி ருந்த நமது நாட்டின்
முனிவர் கண்ட ஞானமே
முற்று மிந்த உலகி னுக்கும்
உற்ற நன்மை யானது
என்ன துன்பம் எந்த வேளை
எங்க டுத்த போதிலும்
எந்தை காந்தி தந்த சாந்த
மந்தி ரத்தை ஓதுவோம் ;
தன்ன லம்ம றந்து நாட்டின்
நன்ன லத்தைத் தாங்கவும்
தரணி தன்னில் யுத்தம் என்ற
இரணப் பேச்சு நீங்கவும்
மன்ன னிந்த பரத நாட்டின்
மகிமை காக்கும் ஜவஹர்லால்
மாசி லாத சேவை செய்து
பேசும் நீதி தவறிடோம்.

92. தேசபக்தர் திருக்கூட்டம்

தேச பக்தர்திருக் கூட்டம்--தேச
சேவை செய்வதெங்கள் நாட்டம் ;
பாச பந்தமெல்லாம் ஓடி--விடப்
பாரதப் பெருமை பாடி. . . .(தேச)

பிச்சை யெடுக்கவந்த தல்ல--வேறு
பிழைக்க வழியிலையென் றல்ல
இச்சை வந்துமிகத் தள்ள--தேசம்
இருக்கும் நிலைமைதனைச் சொல்ல. .(தேச)

தூங்கித் தூங்கிவிழும் தமிழா!--உன்
தூக்கம் போக்கவந்தோம் தமிழா!
ஏங்கிப் படுத்திருக்கும் தமிழா!--உன்னை
எழுப்ப வந்தசக்தி தமிழா! . .(தேச)

எழுந்து நின்றுகண்ணைத் துடைத்தே--உன்
இருகை யாலும்கொடி பிடித்தே
அழுந்திக் கீழிருந்து வாடும்--அன்னை
அடிமை நீக்கவழி தேடும் . . .(தேச)

வெட்டி வெட்டியெறிந் தாலும்--எமை
வேறு ஹிம்சைபுரிந் தாலும்
சுட்டி ரத்தம்சொரிந் தாலும்--நாங்கள்
தூய்மை மாறிடோம் நாளும். . .(தேச)

சாந்த மூர்த்தியந்தக் காந்தி--சொன்ன
சத்தி யந்தனையே ஏந்தி
மாந்தர் யாருமினி உய்ய--உயர்
மார்க்க போதனைகள் செய்ய. . .(தேச)

தேவி சக்திதுணை கொண்டு--இந்தத்
தேசம் சுற்றிவர வென்று
கூவிக் கூவியெங்கள் தொண்டு--செய்யக்
குறைகள் தீருமினி நன்று. . .(தேச)

93. சத்தியச் சங்கு

'சத்தியம் நிலைக்கும்' என்று சங்கூதுவோம்!
'சாந்தமே ஜெயிக்கும்' என்று சங்கூதுவோம்!
'நித்தியம் கடவுள்' என்று சங்கூதுவோம்!
'நீர்க்குமிழாம் வாழ்க்கை' என்று சங்கூதுவோம்!

'நீதியே நிலைக்கும்' என்று சங்கூதுவோம்!
'நியாயமே கெலிக்கும்' என்று சங்கூதுவோம்!
'வாது சூது பொய்மையாவும் ஒன்றோடொன்றாய்
வம்புகொண்டு மறையும்' என்று சங்கூதுவோம்!

'புண்ணியம் பலிக்கும்' என்று சங்கூதுவோம்!
'பொறுமையே கெலிக்கும்' என்று சங்கூதுவோம்!
'மண்ணிற்செய்த நன்மைதீமை யல்லாமலே
மற்ற தொன்றும் மிச்சமில்லை' என்றூதுவோம்!

'தருமமே நிலக்கும்' என்று சங்கூதுவோம்!
'தானமே தழைக்கும்' என்று சங்கூதுவோம்!
'கருமமே சிறக்கும்' என்று சங்கூதுவோம்!
'கடவுளுண்மை வடிவம்' என்று சங்கூதுவோம்!

'உண்மையைக் கடைபிடித்து யர்ந்தவர்களை
உலகமோசம் என்னசெய்யும்?' என்றூதுவோம்!
'தண்மையான சாந்திபெற்ற தக்கோர்முன்னே
சஞ்சலங்கள் ஓடும்' என்று சங்கூதுவோம்!

'கோபமற்றுக் குணமிகுந்த நல்லோர்முன்னால்
கூர்மழுங்கும் ஆயுதங்கள்'என் றூதுவோம்!
'பாபமற்ற வாழ்க்கையுள்ள பண்பாளரைப்
. பயமுறுத்த ஒன்றுமில்லை,' என்றூதுவோம்!

'அன்புகொண்டு ஆசையற்ற நல்லார்களை
அரசனும் வணங்கும்' என்று சங்கூதுவோம்!
'வன்புதுன்பம் வஞ்சமாயம் எல்லாமிதோ
வழிகொடுத்து விலகும்' என்று சங்கூதுவோம்!

'கொல்லுகின்ற தில்லையென்ற நல்லோர்கள்பேர்
குவலயத்தில் வாழும்' என்று சங்கூதுவோம்!
'வெல்லுகின்ற போதுமாசை விட்டார்களே
வீரர்தீரர் சூரர்' என்று சங்கூதுவோம்!

'ஆன்மசக்தி கண்டுகொண்ட அன்பாளரை
அடிமையாக்க யாரும்' இல்லை என்றூதுவோம்!
தான்மறந் தகந்தைவிட்ட தக்காரையே
தலைவணங்கும் உலகமென்று சங்கூதுவோம்!
சாந்திசாந்தி சாந்தியென்று சங்கூதுவோம்!
'சாத்திரங்கள் முடிவி¦'தன்று சங்கூதுவோம்!
காந்திகாந்தி காந்தியென்று நம்நாட்டிலே
கால்நடக்கும் வேதமென்று சங்கூதுவோம்!

94. சங்கொலி

சங்கொலி எழுந்தது சங்கட மழிந்தது
தைரியம் கொள்வாய் தமிழ் மகனே!
கங்குலும் கழிந்திடும் கதிரொளி பொழிந்திடும்
கவலையெ லாம்விடு தமிழ் மகனே!

கூரிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும்
குறுகிப் படுத்திடல் இனிவேண்டா!
பேரருள் சுரந்திடும் பெருவழி திறந்திடும்
பேதமை விடுவாய் தமிழ் மகனே!

திருட்டுகள் நீங்கிடும் தீயன நடுங்கிடும்
தீனர்க்க பயக்குரல் சங்கோசை!
இருட்டினிற் செய்திடும் யாவையும் மறைந்திடும்
எழுந்து கடன்முடி தமிழ் மகனே!

சூதரும் குடியரும் சுருக்கெனப் பயப்படும்
சுதந்திரச் சங்கொலி கேட்குதடா!
வேதமும் கலைகளும் வித்தைகள் விளங்கிட
விடிந்திடும் சஞ்சலம் விட்டிடுவாய்!

மங்களச் சங்கொலி மகிழ்தரக் கேட்குது
மயக்கம்விட் டெழுந்தினி மறைபாடு!
எங்கணும் யாவினும் இருந்தருள் கடவுளும்
இருக்குது பயமிலை எழுந்திரடா!

95. இணையில்லாக் கொடி

இந்திய நாட்டின் இணையிலாக் கொடியே
இயங்குவாய் என்றும் வயங்கொளி பரப்பி
தந்திரம் மோசம் தன்னலம் கருதா
சத்தியம் நிறைந்த உத்தம வாழ்வின்
எந்திரப் பேயின் இறுமாப் பழித்து
ஏழ்மையும் தாழ்மையும் இல்லா தொழித்துச்
சந்திர சூரியர் வந்துபோம் வரையிலும்
தன்னர சாட்சியின் சின்னமாய் நிற்பாய்!

பாரத நாட்டின் பகையிலாக் கொடியே!
பன்னலம் மிகுந்த உன்னுடை நிழலில்
ஊரெலாம் செழித்து உயிரெலாம் களித்து
யாரொடும் எவரும் அன்பே அறமென
பாரிடைக் கடவுள் படைத்ததன் பொருள்கள்
பங்கிட மூளும் பகைத்தி றம்குன்றி
நேரிய வாழ்வில் நியாயம் நிலவிடும்
நீதிசேர் அரசின் ஜோதியாய் நிற்பாய்!

ஆருயிர் நாட்டின் அரசியற் கொடியே!
ஐம்புலன் வென்று செம்பொருள் கண்ட
வீரிய ஞான வித்தகர் தங்கி
வேதம் வளர்த்த இமய மலையின்
ஊரிய மனிதன் உளம்மிக மகிழ
உன்னதச் சிகரத் துச்சியில் நின்று
பாருள யாரும் பணிந்திடு மாறு
பற்பல ஊழி பறந்திடு வாயே!

96. கொடி வணக்கம்

கொடிவ ணக்கம் செய்வோம்--நாட்டின்
குறைகள் நீங்கியினி உய்வோம்
முடிவ ணங்கியதைப் பற்றி--அதன்
மூன்று நிறக்குறிகள் சாற்றி . .(கொடி)

புதுமை யானகொடி பாரீர்--வேறு
பூத லத்திலிலை தேரீர்
முதுமை யாயெவர்க்கும் பொதுவாம்--வாழ்வின்
முறையைக் காட்டுவதும் இதுவாம். .(கொடி)

பச்சை யானஒரு தோற்றம்--நமக்குப்
பக்தி வேண்டுமெனச் சாற்றும் ;
இச்சை யானபொருள் கூடப்--பக்தி
இருக்க வேணுமதை நாட. . .(கொடி)

துய்ய வெள்ளைநிறக் காட்சி--உண்மை
துலங்கு மென்பதற்குச் சாட்சி
மைய மாகநிற்கும் மர்மம்--சத்யம்
மதங்கள் யாவினுக்கும் தர்மம். .(கொடி)

துறவின் வர்ணமந்தக் காவி--உலகின்
துக்கப் பூட்டினுக்குச் சாவி ;
சிறையும் வீடுமதற் கொன்றே--என்னும்
சேதி ஓதுவதற் கென்றே . .(கொடி)

நடுவில் ராட்டையன்று பார்ப்போம்--அதில்
நலிந்த பேர்க்குக்கஞ்சி வார்ப்போம்
வடுவி லாததொழில் நூற்றல்--குடிசை
வாழும் ஏழைக்கென்று சாற்றல். .(கொடி)

பக்தி, சத்தியம், தியாகம்--இவற்றின்
பண்பே வாழ்க்கையின் யூகம்
நித்தம் நித்தமிந்த நீதி--தம்மை
நீட்டும் இக்கொடியின் ஜோதி. .(கொடி)

ஜாதி பேதமதில் இல்லை--மற்றும்
சமய பேதமதில் இல்லை
நீதி யானபல முறைகள்--தமக்கு
நிலைய மாகும்அதன் குறிகள். .(கொடி)

என்ன புதுமையிது பாரும்--கொடி
ஏதிது போலென்று கூறும்.
அன்னைக் கொடியிதனைப் பாடு--அதன்
அடியில் நின்றுபுகழ் கூடி. . .(கொடி)

ஏழை எளியவர்கள் யார்க்கும்--பயம்
இல்லை யென்னஅறங் காக்கும்
வாழி நமதுகொடி வாழி--புது
வாழ்வு தந்தினிது ஊழி. . .(கொடி)

97. 'ஜேய் ஹிந்த்'

'ஜேய் ஹிந்த்' என்கிற
ஜீவநன் னாதம்
தேசத்தில் ஒற்றுமை
சேர்க்கின்ற கீதம்
பேய்கொண்ட தென்ன
நமைப்பிடித் தாட்டும்
பேத உணர்ச்சியை
நாட்டைவிட் டோட்டும். .(ஜேய்)

அச்சத்தைப் போக்கி நல்
ஆண்மையைப் போற்றி
அடிமைக் குணங்களை
அடியோடு மாற்றி
துச்சம் உயிரெனத்
தொண்டுகள் செய்யத்
தூண்டிடும் சக்திகள்
ஆண்டிடும் துய்ய .(ஜேய்)

விடுதலை ஆர்வத்தில்
வேகத்தை மூட்டி
வீரத் தனங்களில்
ஆசையை ஊட்டி
துடிதுடிப் போடிந்தத்
தேசத்தில் எங்கும்
சொல்லித் தராமலும்
சொல்லி முழங்கும். . .(ஜேய்)

'வந்தே மாதரம்'
பாடி வணங்கி
வாழ்த்திநம் அன்னையின்
வெற்றி முழங்கி
'தந்தோம் உன்றன்,
சுதந்தரம்' என்றே
தைரியம் சொல்வது
'ஜேய் ஹிந்த்' அன்றோ! .(ஜேய்)

வாலிபர் நெஞ்சின்
வசீகர மாரன்
வரையற்ற த்யாகி
சுபாஷ்சந்த்ர வீரன்
கோலிய சேனையின்
விடுதலை கோஷம்
குறையாது ஜேய் ஹிந்த்
மேலுள்ள பாசம். . .(ஜேய்)


Comments