Māṉ viṭu tūtu
பிரபந்த வகை நூல்கள்
Backமான் விடு தூது
குழந்தைக் கவிராயர் இயற்றியது
(குறிப்புரையுடன்)
மான் விடு தூது
குழந்தைக் கவிராயர் இயற்றியது (குறிப்புரையுடன்)
Source:
உ
சிவமயம்
மிதிலைப்பட்டிக் குழந்தைக்கவிராயர் இயற்றிய
மான் விடு தூது(குறிப்புரையுடன்)
பதிப்பாசிரியர்
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்யகலாநிதி
டாக்டர் உ.வே சாமிநாதையர்
சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், மயிலாப்பூர்
யுவ வருடம் பங்குனி மாதம்
கலைமகள் வெளியீடு-6
1936
All Rights Reserved] [விலை 6 அணா
இப்புத்தகத்தில் அடங்கியவை
பக்கம்
1. முகவுரை .. .. i
2. குழந்தைக்கவிராயர் .. .. v-x
3. நூலாராய்ச்சி .. .. xi-xviii
[மானின் பெருமை - தூதுசென்றோர் - தசாங்கம் -வடுகநாததுரை - பாட்டுடைத்தலைவரின் பெருமை - பவனிச் சிறப்பு - மகளிர்
கூற்று - குறள் அமைப்பு - அணிகள் முதலியன - செய்யுள் நடை.]
4. தாண்டவராய பிள்ளை.. .. xix-xx
5. மான்விடுதூது மூலமும் குறிப்புரையும் .. 1-30
[காப்பு - மானின் பெருமை - தூது சென்றவர்கள் - மற்றத்தூதுப் பொருள்களின் குறைகள் - தசாங்கம் - பொதியின்மலை - வைகைநதி - தென்பாண்டி நாடு - முல்லைமாநகர் - குவளைமாலை - குதிரை - யானை - மேழிக்கொடி - முரசு - வேற்படை - ஆனை - வடுகநாத துரையின் பெருமை - தலைவன் பெருமை - அவன் செய்த தர்மங்கள் - அவயவச் சிறப்பு - தந்தை முதலியோர் - தலைவன் பவனிவரத் தொடங்கல் - அணிகளை அணிதல் - யானையின் சிறப்பு - பவனிவரல் - வாத்தியங்கள் - மற்றச் சிறப்புக்கள் - சின்னம் ஒலித்தல் - குழாங் கொண்ட மகளிர் செயல் - குழாங்களின் கூற்று - தலைவி தலைவனது பவனிகாண வருதல் - தலைவி மயல் கொள்ளல் - தலைவி தூதுரைக்கும் சமயத்தைக் கூறுதல் - வாழ்த்து.]
-----------------------------------------------------------
உ
முகவுரை
---------
தூதென்பது ஒருவர் தம்முடைய கருத்தை வேறொருவருக்கு இடைநின்ற ஒருவர் வாயிலாகக் கூறி விடுப்பது. அரசர்கள் பகையரசர்கள்பாலும், புலவர்கள் உபகாரிகளின்பாலும், தலைவி தலைவன்பாலும், தலைவன் மணத்தின் பொருட்டுத் தலைவியைச் சார்ந்தோர் பாலும், ஊடலை நீக்கும் பொருட்டுத் தலைவியின் பாலும் தூதுகளை அனுப்புதல் மரபு.
இராமாயணத்தில் வரும் அங்கதன் தூது முதலியனவும், பாரதத்திலுள்ள உலூகன் தூது, சஞ்சயன் தூது, கிருஷ்ணன் தூது என்பனவும் பகையரசர்கள்பால் விடுத்த தூதுகளாகும். கோவை நூல்களில் தூதிற் பிரிவென்னும் கிளவியிற் சொல்லப்படும் தூதும் இதனைச் சார்ந்ததே. திருக்குறளில் தூதென்னும் அதிகாரத்தில் இவ்வகைத் தூது செல்வாருடைய இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன்பால் அன்னச்சேவலை விடுத்ததாகப் புறநானூற்றிற் கூறப்படும் தூது புலவர் உபகாரியின்பால் விடுத்ததற்கு உதாரணமாகும். குணமாலை சீவகனுக்குக் கிளியை விடுத்தது போன்றவை தலைவி தலைவனுக்குத் தூது விட்டனவாம். தலைவன் மணப்பொருட்டாகத் தூதுவிடுதல் கோவை நூல்களாற் புலனாம். சுந்தரமூர்த்திநாயனார் சிவபிரானை தூதுவிட்டதும் பிறவும் தலைவியின் ஊடலை நீக்கத் தலைவன் தூது விட்டனவாம்.
இவற்றுள், தலைவி தலைவன்பால் விடும் தூதும், தலைவன் தலைவியின்பால் விடும்தூதும் பொருளாகத் தனியே அமைந்த பிரபந்தங்கள் பல தூதென்னும் பெயருடனே தமிழிலும் பிறமொழிகளிலும் வழங்குகின்றன. இப்பெயர்கள் தூதுவிடப்படும் பொருள்களின் பெயர்களைச் சார்ந்தே வழங்கும். இவை இரண்டனுள் முன்னது களவுக்காலத்தும், பின்னது கற்புக் காலத்தும் பெரும்பாலும் நிகழ்வனவாம். தமிழிலுள்ள தூதுப்பிரபந்தங்களில் தலைவி தலைவன்பால் தூதுவிட்டனவே மிகுதியாக உள்ளன.
தலைவனப் பிரிந்த காமமயக்கத்தால் தலைவி அஃறிணைப்பொருளையும் உயர்திணைப் பொருளையும் தூது விடுப்பதாகச் செய்தல் கவிமரபு. அஃறிணைப் பொருள்களை அங்ஙனம் விளித்துக் கூறுதல் 'காமமிக்க கழிபடர் கிளவி' யென்று சொல்லப்படும்; "சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச், செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்" (தொல். பொருள். சூ. 2) என்பது இதற்குரிய விதி. இங்ஙனம் தலைவி தூதுவிட முயலுதலை வரைந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாகிய எட்டுவகை மெய்ப்பாடுகளுள் தூது முனிவின்மை என்பதனுள் அடக்குவர் (தொல். மெய்ப். சூ. 23); தூது முனிவின்மை - புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுமின் அவர்க்கென்று தூதிரந்து பன்முறையானும் சொல்லுதல்' என்பது பேராசிரியர் உரை.
இவ்வாறு விடப்படும் தூதைப் பொருளாகவுடைய செய்யுட்கள் முற்காலத்து நூல்களிலும் பிற்காலத்து நூல்களிலும் உள்ளன. அகநானூற்றுள், "கானலுங் கழறாது" (170) என்னும் செய்யுளில் ஒருதலைவி நண்டைத் தூதுவிட்ட செய்தியும், ஐங்குறு நூற்றில் "சூழ்கம் வம்மோ" (317) என்னும் செய்யுளில் நெஞ்சைத் தூதுவிட்ட செய்தியும் காணப்படுகின்றன. பரிபாடலிலுள்ள "தூதேய வண்டின் தொழுதி" என்னும் பகுதி வண்டைத் தூதுவிடும் மரபையும், நற்றிணையில் உள்ள "சிறுவெள்ளாங் குருகே" (70) என்பது வெள்ளாங் குருகைத் தூதுவிடுவதையும் புலப்படுத்துகின்றன். தேவாரத்திலும், திவ்யப்பிரபந்தங்களிலும், அந்தாதி, கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களிலும் பல செய்யுட்கள் தூதாக அமைந்துள்ளன.
தூது விடுதற்குரிய பொருள் இவைதாமென்ற வரையறையில்லை. இரத்தினச்சுருக்கத்துச் செய்யுள் ஒன்று, அன்னம், மயில், கிள்ளை, மேகம், நாகணவாய்ப்புள், பாங்கி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்னும் பத்துப் பொருள்களைக் கூறுகின்றது. இவற்றுள் ஒவ்வொன்றற்கும் தனித்தனியே இலக்கியமாக அமைந்த நூல்கள் முன்பு இருந்தனபோலும்; இப்பொழுது அன்னம், நாகணவாய்ப்புள், குயில் என்பவற்றைத் தூது விட்டதாக் அமைந்த நூல்கள் தமிழிற் காணப்படவில்லை. மேற்கூறிய பத்தையும் தூது விட்டதாகத் தானப்பாசாரியாரென்னும் ஓருபகாரிமீது திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப்பட்ட (1)தசவிடுதூது என்னும் நூலொன்றுண்டு. இந்தப் பத்தையும் அல்லாத வேறு பல பொருள்களைத் தூது விட்டதாக அமைந்த தமிழ் நூல்கள் பல. ஒருவகையிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை வெவ்வேறு புலவர்கள் இயற்றியிருக்கிறார்கள். தூதுப் பிரபந்தங்கள் கலிவெண்பாவிற் செய்யப்படுதல் வேண்டுமென்பது இலக்கணம்.
______________________
(1). இப்போது அது கிடைக்கவில்லை.
தம்தம் கற்பனைத்திறத்துக்கு எவ்வெப்பொருள் ஏற்புடையனவாக இருக்கின்றனவோ அவ்வப் பொருள்களைத் தூதுவிடுத்ததாகப் புலவர்கள் பிரபந்தங்களை இயற்றியிருக்கின்றனர். அவற்றுள் இந்த மான்விடுதூதும் ஒன்றாகும்.
இந்நூல் மிதிலைப்பட்டியில் வாழ்ந்த குழந்தைக்கவிராயர் என்பவரால் அவர்காலத்தே சிவகங்கை ஸம்ஸ்தானத்தில் பிரதானியாக இருந்த முல்லையூர்த் தாண்டவராயபிள்ளையென்னும் வேளாளகுல திலகர்மீது இயற்றப் பெற்றது. "குழந்தை சொன்னதென்றோ" என்று இந்நூலில் வரும்பகுதி இந்நூலாசிரியரின் பெயரைப் புலப்படுத்துகின்றது.
மானின்பெருமையை இது விரிவாக முதலில் விளக்குகின்றது; பின்பு முற்காலத்துத் தூது சென்றார் இன்னார் இன்னார் என்பதையும், தூதுக்குரிய பத்துப் பொருள்களை விடாமைக்குக் காரணத்தையும் தெரிவிக்கின்றது. அப்பால் சிவகங்கை ஸம்ஸ்தானாதிபதியாகவிருந்த வடுகநாததுரையின் பெருமையையும், பாட்டுடைத் தலைவராகிய தாண்டவராயபிள்ளையின் சிறப்பையும், அவர் செய்த தர்மங்களையும், அவருடைய அவயவச்சிறப்பையும், அவருடைய தந்தை தமையன்மார் தம்பியர் பிள்ளைகள் முதலியோரைப் பற்றிய செய்திகளையும் விளக்குகின்றது. பிறகு அவர் பவனிவந்த சிறப்பும், அப்போது பல மகளிர் அவரைக்கண்டு மயல்கொண்டு வருந்தியதும், தலைவி சென்று பவனி கண்டு ஆசைகொண்டு வருந்தியதும் கூறப்படுகின்றன. அவற்றின்பின் தலைவி, தூதனுப்பப்படும் மானுக்கு இன்ன இன்ன வேளைகளிற் போதல் கூடாதென்பதையும் இன்ன சமயத்திற் போய் மாலை வாங்கிவரவேண்டுமென்பதையும் அறிவுறுத்தும் பகுதி அமைந்துள்ளது.
தலைவன், தலைவியின் விருப்பத்திற்கு உடம்பட்டானென்பதை அறிவிக்கும் அடையாள்ம் மாலையாதலின், இத்தகைய தூதுப்பிரபந்தங்கள் பெரும்பாலனவற்றில் தலைவனிடம் சென்று மாலை வாங்கிவரும்படி தலைவி கூறுவதாக உள்ள செய்தி அமைந்திருக்கும்.
இந்தநூல், முதலிற் காப்புச்செய்யுளான வெண்பா வொன்றையும் இறுதியில் வாழ்த்துச் செய்யுளொன்றையும் பெற்று 301 கண்ணிகளால் ஆகியது.
சொன்னயம் பொருணயம் செறிந்த இத்தூதின் ஏட்டுப் பிரதி யொண்று சற்றேறக்குறைய 50 வருஷங்களுக்கு முன்பு மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக்கவிராயரவர்கள் வீட்டிலிருந்து எனக்குக் கிடைத்தது. அதன் இறுதியில், 'குழந்தையன் மானை விடு தூது முற்றும்' என்று எழுதப் பெற்றிருந்தது.
இறைவன் திருவருளால் இன்றியமையாத பகுதிகளுக்குக் குறிப்புரை எழுதப்பெற்று இந்நூல் இப்பொழுது பதிப்பிக்கலாயிற்று. இதனுள்வந்துள்ள மான்றேயம், புல்வாய்மாது முதலியவற்றைப் பற்றிய செய்திகள் விளங்காமையால் குறிப்புரை எழுதக்கூடவில்லை. நாளடைவில் விளங்குமென்றெண்ணுகின்றேன்.
தமது 'கலைமகள்' பத்திரிகையின் வாயிலாக இதனை வெளிவரச் செய்த அப்பத்திரிகையின் ஆசிரியர் ம-௱-௱- ஸ்ரீ ரா. நாராயணசாமி ஐயரவர்கள்பால் மிக்க நன்றியறிவுடையேன். இவர்கள் இவ்வாறு செய்விப்பது பல பிரபந்தங்களை நான் வெளிப்படுத்தற்கு ஒரு தூண்டுகோலாகின்றது.
இந்த நூலை ஆராயும்போதும் ஒப்பு நோக்கும்போதும் உடனிருந்து உதவி செய்தவர்கள் சிரஞ்சீவி வித்வான் வி. மு. சுப்பிரமணிய ஐயரும், சிரஞ்சீவி வித்துவான் கி. வா. ஜகந்நாதையரும், சிரஞ்சீவி வித்துவான் ச. கு. கணபதி ஐயரும் ஆவர்.
'தியாகராஜ விலாஸம்' }
திருவேட்டீசுவரன்பேட்டை} இங்ஙனம்,
12-2-1936 } வே. சாமிநாதையர்.
________________
குழந்தைக் கவிராயர்.
இந்த நூலை இயற்றிய குழந்தைக் கவிராய ரென்பவர் சிவகங்கை ஸம்ஸ்தானத்தைச் சார்ந்த மிதிலைப்பட்டியென்னும் ஊரினர்; பரம்பரையாகத் தமிழ்ப்புலமை வாய்ந்த குடும்பத்திற் பிறந்தவர். இவர்களுடைய முன்னோர்கள் பண்டைக் காலத்தில் தொண்டை நாட்டிலுள்ள** மல்லையென்னும் ஊரில் இருந்தவர்கள். அவர்களுள் ஒருவராகிய சிற்றம்பலக் கவிராயரென்பவர் வெங்களப்ப நாயகர்மீது ஒரு குறவஞ்சி பாடிச் சாலிவாகன சகாப்தம் 1570 (கி.பி. 1647-48)- ஆம் வருஷத்தில் மிதிலைப்பட்டியை மடப்புறமாகப் பெற்றார். அது முதல் அவருடைய பரம்பரையினர் அவ்வூரிலேயே வாழ்ந்து வரலாயினர். அவர்கள் பண்டார மென்றும் கவிராயரென்றும் வழங்கப்படுவரென்று பட்டயங்களால் தெரியவருகின்றது.
** மல்லை - மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரம்.
குழந்தைக்கவிராயர், மங்கைபாகக் கவிராயரென்பவருடைய புதல்வர். அம்மங்கைபாகக் கவிராயர் நத்தம் ஜமீன்தாராகிய இம் முடிலிங்கைய நாயகர் குமாரர் சொக்கலிங்க நாயகர்மீது வருக்கக் கோவை பாடிச் சாலிவாகன சகாப்தம் 1635 (கி. பி. 1712-3) - ஆம் வருஷத்தில் பூசாரிப்பட்டி யென்னும் ஊரைப் பெற்றார். இச்செய்தி ஒரு தாமிரப்பட்டயத்தால் வெளியாகிறது.
இந்நூலாசிரியருடைய முன்னோரும் பின்னோரும் பாடிய நூல்கள் அள்வில. தென்னாட்டில் தங்கள் தங்கள் காலத்தே அங்கங்கே யிருந்துவந்த சிற்றரசர்களாலும் ஜமீன்தார்களாலும் பெரிதும் ஆதரிக்கப்பட்டு அவர்களால் பல கிராமங்களும் வரிசைகளும் பெற்றிருக்கின்றனர். தாம் பிறரால் ஆதரிக்கப் பெற்றுச் செல்வத்தை ஈட்டியதன்றி அங்ஙனம் ஈட்டியவற்றைப் பிற வித்துவான்களுக்கும் கொடுத்து அவர்களாற் பாராட்டப் பெற்ற பெருமை இப்பரம்பரையினருக்கு உண்டு. இவர்கள் புதிய நூல்களை இயற்றியதோடு பழைய நூல்களைப் படித்தும் ஆராய்ந்தும் தொகுத்தும் வந்தார்கள். இவர்களுடைய வீட்டில் இன்றும் தமிழ்த்தாயின் அணிகல்களாகிய நூல்கள்பல் இருத்த்லைக் காணலாம். நான் பதிப்பித்த பழைய நூல்களின் ஏட்டுப் பிரதிகள் பல இப்பரம்பரையினரிடத்திலிருந்து கிடைதன. அவை இயன்றவரையில் திருத்தமுற்று விளங்கும்.
குழந்தைக் கவிராயர் பலஜமீந்தார்களாலும் பிரபுக்களாலும் ஆதரிக்கப் பெற்றார். இம்மான்விடு தூதின் பாட்டுடைத் தலைவரும் சிவகங்கை ஸம்ஸ்தானத்துப்பிரதானியுமாகிய தாண்டவராய பிள்ளையென்பவரால் பலவகையான வரிசைகளைப் பெற்றார். அவர்மீது இயற்றிய இந்த மான்விடு தூதை யன்றி அவ்வப்போது அவரைப் பாராட்டிப் பாடிய தனிப்பாடல்கள் அளவிறந்தன.
ஒரு சமயம், பஞ்சம் வந்தகாலத்தில் தாண்டவராய பிள்ளை ஏழைமக்கள் பலரை அன்னமிட்டுக் காப்பாற்றினார். அதனைப் பாராட்டி இக்கவிராயர் இயற்றிய பலசெய்யுட்களுள் ஒன்று வருமாறு :-
மற்றச்சமயங்களில் அவர்மீது இவர்பாடிய செய்யுட்களிற் சில வருமாறு:-
இக்கவிராயர் பாடிய செய்யுட்களைக் கேட்டு மகிழ்ந்த தாண்டவராய பிள்ளை இவருக்கு ஆயிரக்கலம் நெல் அளக்கும்படி கட்டளை யிட்டார். அக்கட்டளையை உத்தியோகஸ்தர்கள் நிறைவேற்றத் தாமதித்தார்கள்; அப்பொழுது அதனைக் குறிப்பாகத் தெரிவித்தற்கு,
"ஒறுப்பான காலத்தி னென்மாரி யாக வுதவிசெய்யும்
கறுப்பாவுன் யோகந் தழைக்கு மடாவெந்தக் காலமுமே."
* இதன் முன் இரண்டடிகள் இப்பொழுது கிடைக்கவில்லை.
தமக்குத் தாண்டவராயப்பிள்ளை ஆயிரங்கல நெல் வழங்கிய இச்செய்தியை இக்கவிராயர் இந்நூலில்,
தம்முடைய செய்யுட்களில் தாண்டவராயபிள்ளை மிக்க விருப்பமுடையவரென்பதை,
தம்மைப் பலபடியாக ஆதரித்துப் போற்றிய தாண்டவராய பிள்ளை இறந்தபோது இவர் மிகவருந்திப் பாடிய செய்யுள் வருமாறு:-
இப்புலவரை ஆதரித்தவர்களுள் புதுக்கோட்டை அரசராக இருந்த திருமலைத் தொண்டைமானென்பவரும் ஒருவர். அவரை இவர் பாராட்டிய பாடல்களிற் சில வருமாறு :-
1. "அந்தமிகு பொன்மலைக்குப் புராரிகையாற் சலனமுண்டங்
கரனார் மேவ
வந்ததொரு வெண்மலைக்குத் தசமுகனாற் சலனமுண்டு
மாயன் கையால்
சந்தமரு வியகோவர்த் தனமலைக்குச் சலனமுண்டு
தான சூரன்
இந்த்ரகுலன் றென்கோடித் திருமலைக்குச் சலனமென்றும்
இல்லைத் தானே."
2. *"உத்தரதிக் கினிற்பெரிய பொன்மலையொன் றிருத்தலினா லோங்கு ஞான
சித்தர்வித்யா தரர்முனிவர் யாவருமே புகலிடமாச் சென்று வாழ்ந்தார்
இத்தலஞ்சேர் தென்கோடித் திருமலைதக் கணதிசையில் இருத்த லாலே
நித்தமறை வேதியரும் பாவலரு மாதுலரும் நிலைபெற் றாரே."
3. "கொக்கோடி யடைகிடக்கக் குருகோடி விளையாடுங் கோடி நாடன்
தைக்கோடிப் பிறைபோலத் தமிழ்க்கோடிப் புலவர்வந்தாற் சலிப்பில் லாமல்
திக்கோடி யலையாமற் றினங்கோடி கொடைகொடுக்கும் திரும லேந்த்ரன்
எக்கோடி யானாலு மிவன்கோடி காலமட்டும் இருப்பன் றானே."
இவர் இங்ஙனம் பல தனிப்பாடல்களை அவ்வப் போது பாடினாலும் மான்விடு தூதையன்றி வேறு நூல் இயற்றியதாக இப்போது தெரியவில்லை.
-----
* இச்செய்யுள், "வடதிசை யதுவே வான்றோ யிமயம், தென்றிசையாஅய் குடியின் றாயிற், பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே" (132) என்னும் புறநானூற்றுச் செய்யுட் பகுதியை நினைப்பிக்கின்றது.
நூலாராய்ச்சி
இந்த நூலில் குழந்தைக்கவிராயர் மானின் பெருமையைப் பலபடியாக எடுத்துக் கூறிப் பாராட்டுவதனால் தமக்குள்ள விரிந்த நூலறிவையும், புலமைத் திறத்தையும், தாண்டவராய பிள்ளையின் பெருமையை விரித்துக்கூறுமுகத்தால் தம்முடைய செய்ந்நன்றி யறிவையும் வெளிப் படுத்துகின்றார்.
மானின் பெருமை
மான் தேவாமுதங் கடைந்த காலத்தில் தோன்றிய சந்திரனிடத்தே இருந்ததென்பதும், சிவபெருமான் திருக்கரத்தில் இருக்கும் பெருமை வாய்ந்த தென்பதும், திருமகள் மானுருவம் பெற்ற செய்தியும், வள்ளி நாய்ச்சியார் மான் வயிற்றில் அவதரித்ததும், கலைக்கோட்டு முனிவர் மான் கொம்பைப் பெற்றதும், ஒருமானைத் துரத்திச் சென்றமை காரணமாகத் துரியோதனாதியரது ஏவலினாற் காளமா முனிவர் செய்த யாகத்திலிருந்தெழுந்த பூதத்தினின்றும் பாண்டவர் தப்பியதும், துர்க்கைக்கு மான்வாகனமாக இருப்பதும், மானை யெய்த பாவத்தால் பாண்டுவென்னும் அரசன் இறந்ததும், மான் வாயுவுக்கு வாகனமாக இருப்பதும் ஆகிய புராண இதிகாச வரலாறுகளை எடுத்துக்காட்டி மானைப் பாராட்டுகின்றார். சிவபெருமான் மானைத் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் செய்தியை,
மானென்னும் பெயரைத் தன்பெயரின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள கலைமான் (கலைமகள்) தம் நாவில் இருத்தலினாற் பிரமதேவர் பெருமையுற்றா ரென்றும், பரமசிவன் திருமால் அரசர்கள் ஆகியவர் மானென்பதை ஒருபகுதியாகக்கொண்ட பெருமானென்னும் பெயரைப் பெற்று வீறு பெற்றன ரென்றும், அப்படியே தத்தம் பெயரில் ஒருபகுதியாக மானென்பதை யுடைமையால் அந்திமான் சந்திமானென்னும் வள்ளல்களும், சேரமான் பெருமாணாயனாரும் புகழ்பெற்றனரென்றும் சாதுரியமாகப் பாராட்டுகின்றார்.
மானுக்குரிய பெயர்கள் சிலவற்றாற் குறிக்கப்படும் வேறுபொருள்களைப் பற்றிய செய்திகளை மானுக்குரியனவாகத் தோற்றும்படி அமைக்கின்றார்: வில்லுக்கும் மானுக்கும் உரிய பெயராகிய சாரங்கமென்பதை அமைத்து,
அருணனுக்கும் மானுக்குமுரிய பொதுப்பெயரை யமைத்து, 'இருளை நீங்கச் செய்வது அருணோதயம்' என்று சொல்லுகின்றார். மானுக்குரிய புல்வாயென்னும் பெயரைக் குறிப்பாக எண்ணிப் பகைவர் வாயிற் புற்கௌவுதல் கண்டால் அரசர்கள் அவரைத் துன்புறுத்தாமல் விடும் செய்தியைத் தெரிவிக்கின்றார். ஆடைக்குரிய பெயராகிய கலையென்பது மானுக்குமுரித்தாதலை யெண்ணி,
பின்னும் அகத்திய முனிவர் (25), நல்லியல்புடையோர் (35), சிற்றினஞ் சேராதவர் (41), பெரியோரைத் துணைக் கொள்வோர் (43), பாகவதர் (45) ஆகியவர்கள் செயலை மானின் செயலாகச் சிலேடையில் அமைக்கின்றார்.
மான்றேசம், மானூர், மான்பலம், கலையூர் என்பவற்றைப் பற்றிய செய்திகளையும், தென்பாகை நாட்டிலுள்ள புல்வாய் மாதென்னும் ஒருத்தி வழக்குத் தீர்த்தல் முதலியவற்றைச் செய்யும் வரலாற்றையும் கூறி மானுக்கு ஏற்றம் கற்பிக்கின்றார்.
மகளிர் கண்களுக்கு மான்கண்ணை உவமை கூறும் மரபைப் புலப்படுத்தி,
" பண்போன் மொழிபயிலும் பாவையர்க்கெல் லாமிரண்டு
கண்போல வந்த கருங்கலையே" (48)
என்று பாராட்டுகின்றார்.
"துணையேவன் காமத் துயர்க் கடலை நீந்தும், பிணையே" (52)
என்றவிடத்துப் பிணையென்ற சொல் தெப்பமென்றும் மானென்றும் இருபொருள் பயந்து அவ்வுருவகத்தை அழகுபெறச் செய்கின்றது.
மானுக்குரிய பெயர்களாகிய அருணம், கலை, சாரங்கம், நவ்வி, பினை, மறி, மிருகம், வச்சயம் என்பவற்றை அங்கங்கே எடுத்தாண்டுள்ளார்.
தூது சென்றோர்.
பண்டைக் காலத்தில் தூது சென்றவர்கள் இன்னார் இன்னாரென்று கூறும் பகுதியில் சுந்தர மூர்த்திநாயனாருக்காகச் சிவ பெருமான் தூது சென்றதும், பாண்டவர் பொருட்டுக் கண்ணபிரான் தூது சென்றதும், இந்திரன் திறத்தில் நளன் தூது சென்றதும், தமயந்தியின் பால் நளன்விடுக்க அன்னம் தூது சென்றதும், குணமாலை ருக்குமிணி என்பவர்கள் ஏவலால் கிளி தூது சென்றதுமாகிய வரலாறுகள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.
தூதுக் குரியனவாகிய குயில் முதலிய பத்தும் குறைபாடுடையன வென்பதை அவ்வப் பொருளின் இயல்புகளை வேறுபொருள் தோற்றும்படி கூறி உணர்த்துகின்றார்.
தசாங்கம்
பாட்டுடைத் தலைவருக்குரிய தசாங்கம் கூறும் வாயிலாகப் பொதியில் மலை, வைகைநதி, தென்பாண்டிநாடு, முல்லை மாநகர், குவளைமாலை, குதிரை, யானை, மேழிக்கொடி, முரசு, வேற்படை என்பவற்றைப் பாராட்டுகின்றார்.
பொதியில் மலையைப் பாராட்டுகையில், அதனைச் சிவபெருமான், திருமால், பிரமதேவர், தேவேந்திரன் என்பவர்களோடு சிலேடையமைய உவமிக்கின்றார். வைகைநதியைத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரது ஏடேறச் சைவநிலை யீடேறவைத்த பெருமையையும், மாடேறுஞ் சொக்கர் மதிச்சடையில் மண்ணேற வைத்தபெருமையையும் உடையதென்று புகழ்கின்றார். தென்பாண்டி நாட்டின் இயற்கைவளங்களை வருணித்து, "பாவேந்தர், நாவேந்து தென்பாண்டி நாடு" எனக்கொண்டாடுகின்றார். முல்லைமாநகரை அழகிய சிற்ப இலக்கணங்களமைந்த வீடுகள் பல வுடையதென்று புனைகின்றார். குதிரையை,
"காற்கதியுங் காற்கதியே காணுமென் வீரிரண்டு
காற்கதியி லைந்து கதிகாட்டி" ப்
போரில் வலம்புரியும் ஆற்றலுடைய தென்கின்றார். யானையை, "காலனுங் கண்புதைப்பக், கொண்டலெனநின்ற திருங்குஞ்சரம்" என்று உணர்த்துகின்றார். வேற்படையைப்பற்றிச் சொல்லும் பகுதியில் போர்க்களத்தில் நிகழும் பல செய்திகள் காணப்படுகின்றன. பகைவர்களுடைய நாற்படைகளும் அழிந்து வீழ்வதும், பேய்கள் பேரூக்கத்துடன் உணவுண்டு பசியாறி மகிழ்வதுமாகிய செய்திகள் இதன்கண் உள்ளன. " அன்று கலிங்கத் தமர்க்களத்துக் கொப்பாக, இன்று கிடைத்தது" என்று பேய்கள் புகன்றன வென்றவிடத்துக் கலிங்க்கத்துப்போரை இவர் எடுத்துக்கூறுகின்றார்.
வடுகநாத துரை
பாட்டுடைத்தலைவராகிய தாண்டவராய பிள்ளையைப் பிரதானியாகக் கொண்ட வடுகநாததுரையின் இயல்புகள் ஒருபகுதியிற் சொல்லப்படுகின்றன, அவர் சிவகங்கை ஸ்ம்ஸ்தானத்துக்குத்தலைவர். சிவகங்கையென்னும் குளமொன்று அந்நகரிலுள்ளது. அது மிக்க சிறப்புள்ளதுபற்றி அதன் பெயரே அந்நகருக்கும் அமைந்தது. இங்ஙனமே தீர்த்தப்பெயரையுடைய ஊர்கள் தமிழ்நாட்டிற் பல உண்டு. இக்காரணம் பற்றியே சிவகங்கை இந்நூலில் குளந்தையென்னும் பெயராற் பாராட்டப்படுகிறது.
வடுகநாததுரையின் முழுப்பெயர் "ராசபுலி முத்து வடுகநாத பெரியுடையான்" என்பது. அவர் திருக்கோட்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாளிடத்துப் பேரன்புடையவரென்றும், பெருஞ் செல்வத்தையுடையவரென்றும்,திரிபுவனச் சோமன் என்னும் உபகாரியைப் போன்றவரென்றும், இராமநாதபுர அரசருக்குத்துணையாக நின்றவரென்றும், சசிவர்ண துரையின் குமாரரென்றும் இவ்வாசிரியர் தெரிவிக்கின்றார். அச்சசிவர்ண துரையின்மீது ஒருபுலவரால் இயற்றப்பெற்றதும் வண்டோச்சிமருங்க்கணைதலென்னும் துறையைப் பொருளாகவுடைய 400 செய்யுட்களடங்கியதுமாகிய ஒருதுறைக்கோவையொன்றுண்டு.
பாட்டுடைத்தலைவர் பெருமை
தாண்டவராய பிள்ளையைப் பாராட்டுகையில் அவர் வேளாள குலத்திற் பிறந்தவரென்னும் காரணம்பற்றிப் பல வேளாளப் பெரியோர் செய்த அருமைச் செயல்கள் அவர் செய்தன்வாக ஏற்றிச் சொல்லப்படுகின்றன. இங்ஙனம் அரசர்களையும் பிரபுக்களையும் அவரவர் முன்னோர்களுடைய செயல்களைச் செய்தவர்களாகப் பாராட்டுதல் புலவர்கள் மரபு. இந்த வகையில், ஒரு வேளாளர் மேகத்தின் கால்விலங்குவெட்டுவித்த்து, எழுபது வேளாளர் பழையனூர் நீலியின் பொருட்டுத் தம் உயிரை நீத்தது, அயன்றையென்னும் ஊரிலிருந்த சடையனெனும் உபகாரி கருப்பஸ்திரீயின் முதுகிற் சுடுசோறளித்து, இளையான்குடி மாறநாயனார் நெல்முளை வாரிச் சிவபிரானுக்கு அன்னமிட்டது, நின்றைக் காளத்தி முதலியார் பாம்பின்வாயிற் கை நீட்டியது,சடையப்ப வள்ளல் பட்டாடை கீறிச் சோழனுக்குச் சிலந்தியைக் காட்டியது,
----
1ஒருவர் முழங்கையைச் சந்தனக்கட்டையாகக் கொண்டு அரைத்தது என்பவற்றை அவர் செயல்களாக ஏற்றிக்கூறுகின்றார்.
அவர் ஸம்ஸ்தானத்தைக் காக்குந் தொழில்பூண்ட உரிமை பற்றிச் சில இடங்களில் திருமாலுக்குரிய பெருமைகளை உடையவராகப் பாராட்டப்படுகின்றார். இங்ஙனமே ஆட்சிபுரியும் மன்னர்களைத்திருமாலாகப் பாவித்தல் ஆன்றோர் மரபென்பது, "திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே யென்னும்" என்ற ஆழ்வார்திருவாக்கால் உணரப்படும்.
இந்த வகையில் திருமாலுக்குரிய பொது இயல்பையும் செயலையும்,
"கோகனகை, வந்து குடியிருக்கு மார்பினான்" (171)
"வாரணங் கூப்பிடுமுன் வந்தேன்வந் தேனென்ற, நாரணன்" (146)
என்றும், திரிவிக்ரமாவதாரச் செயலை,
" . . . தரணிமுற்றும்
ஓரடி கொண்டளந்தங் கோரடி நூக்கிநின்ற, ஈரடி" (22)
என்றும், இராமவதாரத்தில் நிகழ்ந் தவற்றிற் சிலவற்றை,
"மாப்பதுமன் போலவே வந்தமுனி நல்யாகம்
காப்பனெனச் சென்றமலர்க் காலினான்" (170)
" . . . போயளவி
இன்றிளைத்தாய் நாளைவா வென்றே யிராவணற்கு
நன்றுரைத்த தாண்டவ ராயமன்னன்" (146-7)
"கோட்டிலங்கை ராவணனைக் கொன்று விபீடணனை, நாட்டுதுரை"
என்றும், கண்ணபிரானுடைய திருவிளையாடல்கள் சிலவற்றை,
" . . ஐவர் பேரிடரைத்
தீர்த்தவரா யன்புபுரி சீதரமால் -- பார்த்தனுக்குக்
காண்டா வனதகனங் காண ரதமூர்ந்தோன்" (177 - 8)
"நிலவுஞ் சகட நெறுநெறென வீழக்
கலகலென நீட்டுதண்டைக் கால்" (218)
"மலையேந்தி யான்புரந்த மால்" (277)
"....போரிற் - சவிச்சக்ரம்
ஆதவன்மே லேவிநின்றே யாரிருள்பூ ரித்துநின்ற, மாதவனை" (274)
என்றும் தாண்டவராய பிள்ளையின் மேல் ஏற்றிக் கூறியிருத்தல் காண்க.
------
1இங்ஙனம் செய்தவர் மூர்த்திநாயனார்; அவர் வைசியர்; ஆதலின் வேளாளர்களுள் இங்ஙனம் செய்த ஒருவர் உண்டென்று கொள்ள வேண்டும்.
பின்னும் தீர்க்காயுள், அழகு, பகைவரையடும் வீரம், வண்மை ஞானம், அருங்குணங்கள், குதிரையைச் செலுத்தும் ஆற்றல், வினயம், புலவர்களை ஆதரிக்கும் தன்மை முதலிய இயல்புகள் உடைமை காரணமாக உபசார வழக்குப் பற்றி இவ்வாசிரியர் அங்கங்கே அவரை மார்க்கண்டன், மன்மதன், அபிமன், சோமன், சனகன், காரியென்னும் வள்ளல், சீவகன், முருகன், கன்னன், நகுலன், சூரியன், சந்திரன், இந்திரன், சிபிச்சக்கரவர்த்தி, போசன் என்பவர்களாகப் பாராட்டுகின்றார்.
அவர் பல தலங்களில் இயற்றிய தருமங்கள் விரிவாகச் சொல்லப்படுகின்றன். அவருடைய கால், மார்பு, கை, நாசி, காது முகம் என்பவற்றை அவற்றின் செயல்களை எடுத்துக் கூறிப் புகழ்கின்றார். அவருடைய தந்தையார், தமையன்மார், தமையன்மாருடைய பிள்ளைகள், குமாரர், மருமான் என்பவர்கள் பெயர்களை உணர்த்துகின்றார். தம்மை ஆதரித்த செல்வர்கள் மீது புலவர்கள் இயற்றிய தூதுகள் பலவற்றில் இங்ஙனமே பாட்டுடைத் தலைவருடைய தந்தை முதலியோரை உணர்த்தும் பகுதிகள் அமைந்துள்ளன்.
பவனிச் சிறப்பு
தலைவர் புறப்படுதற்கு முன்னர் ஆடையணிகளை அணிவதாக அமைந்த பகுதியில் அவருக்குரிய அலங்காரங்கள் பல சொல்லப்படுகின்றன. அவை தலைப்பாகை, மாணிக்கம் முத்து மரகதம் முதலிய மூன்றும் பதித்துப் பூ வடிவமாகச் செய்யப்பட்ட காதணி, முருகு, பச்சை வச்சிரப் பதக்கம், கண்டசரம், வாகு வலயம், கைச்சரடு, காலிலணையும் மிஞ்சி என்னும் அணிகலங்களும், குவளை மாலையும், சலவையாடை, பீதாம்பரம் என்னும் உடைகளும், வெண்ணீறு, கத்தூரித் திலகமென்னும் நெற்றியலங்காரங்களும், குற்றுடை வாளும், மிதியடியுமாம். இவற்றால் அக் காலத்திலுள்ள பிரதானிகளின் கோலம் ஒருவாறு மனத்திற் புலனாகின்றது.
பவனிச் சிறப்பைக் கூறுகையில் உடன்வந்த பரிவாரங்களாக நால்வகைப் படை ஒட்டகங்கள் என்பவற்றையும், மன்னியவார், இராசவார், ராவுத்தர், துப்பாக்கிக்காரர், தோமரத்தர், கேடயக்காரர், விற்காரர், சட்டையிட்ட பிரதானிகள், வாட்காரர், சக்கராயுதம் பிடித்தோர், வாத்தியக்காரர், பரதநாட்டியம் புரியும் மாதர், ஆலத்தி யெடுக்கும் மாதர், கட்டியக்காரர், பராக்குச் சேவகர்கள், அடைப்பைக்காரர், காளாஞ்சிக்காரர், சாமரை வீசுவோர், சின்னம் ஊதுவோர் என்பவர்களையும் அமைக்கின்றார். இப்பகுதியில் நகரா,பேரி, தகுணி (தகுணிச்சம்), இரட்டைச் சங்கு, தொண்டகப்பறை, சல்லரி, துந்துமி, மத்தளம், தாளம், கிடுபிடி, நாகசுரம், வாங்கா, கானா, கொம்பு, தம்புரு, வீணை, சுரமண்டலம் என்னும் வாத்தியங்கள் சொல்லப்படுகின்றன.
மகளிர் கூற்று
தலைவர் பவனி வருகையில், 'ஏழ்பருவமாதர் கண்டு மாலாகி' இவர் பவனி வந்த யானையைப் பார்த்து, "யானையே! உன் காலே உரலாகவும் உன் கொம்பே உலக்கையாகவும் கொண்டு எங்களைத் துன்புறுத்தும் மன்மதனுடைய வில்லாகிய கரும்பை இடிக்க மாட்டாயோ? வயல்களிலே விளையும் கரும்பைத்தின்கின்ற நீ மன்மதன் கரும்பைத் தின்னக்கூடாதோ? அது கசக்குமோ? பகைவர்களுடைய குடைகளையெல்லாம் சிதைக்கும் நீ மன்மதன் குடையாகிய சந்திரனைச் சிதைக்கும் ஆற்றல் அற்றாயோ? குறுமுனியாகிய அகத்தியருடைய குறியகைக்குள் அடங்கியதும் எங்களுக்குத் துன்பத்தைத் தருவதுமாகிய இந்தக் கடலை உன்னுடைய நீண்ட கைக்குள்ளே அடக்கமுடியாதோ? பகைவர்களுடைய செய் குன்றுகளை யெல்லாம் அழிக்கும் இயல்புடைய உன்னால் நாங்கள் துன்புறும்படி வீசும் தென்றலை உண்டாக்குகின்ற பொதியில்
மலையை அழித்தல் ஆகாதா? எங்களிடம் பேசாமலிருக்கிறாயே: உனக்கென்ன மதமா? நால்வாயிருந்தும் பேசாதவிதம் என்ன?" என்று முறையிடும் பகுதி மிக்க நயமுடையதாக அமைந்துள்ளது.
குறள் அமைப்பு
"சிற்றின மஞ்சும்" என்னும் திருக்குறளை 40-ஆம் கண்ணியிலும், "அரியவற்றுள்" என்னும் குறளை 42-ஆம் கண்ணியிலும், "பிறவிப்பெருங்கடல்" என்பதை 44-ஆம் கண்ணியிலும், "தொகச்சொல்லி" என்பதை 293-ஆம் கண்ணியிலும் இவ்வாசிசிரியர் இந் நூலில் அமைத்து அழகு செய்திருக்கிறார்.
அணிகள் முதலியன
உவமை, உருவகம், சிலேடை, சொற்பின் வருநிலை என்னும் பொருளணிகளும், திரிபு, மடக்கென்பவையும், தொனியும் அங்கங்கே அமைந்துள்ளன.
'தனந்த தனனா தனந்த தனனா'
என்றும்,
'தனதந் தனதந் தனதந் தனதந்'
என்றும்,
'தான தன தான தன தான தன தான தன'
என்றும்,
'தந்தனந்த தந்தனந்த தந்தனந்த தந்தனந்த'
என்றும்,
'தத்தனத்த தத்தனத்த தத்தனத்த தத்தனத்த'
என்றும் வரும் குழிப்புககளை யுடைய சந்தங்களை இவர் ஆண்டிருக்கின்றனர்.
செய்யுள் நடை
இந்நூல் வடசொற்கள் விரவியும், உலகவழக்குச் சொற்களும் திசைச் சொற்களும் அங்கங்கே அமைந்தும், பழமொழிகள் இடையிடையே பெற்றும் எளிதிற் பொருள் புலப்படும் இனிய நடையையுடையதாகி விளங்குகின்றது. இதில் வந்துள்ள உலகவழக்குச் சொற்களில் சில வருமாறு : துரை, பிசகு, தப்பிதம், சொந்தம், மெத்த, கெடி,கெருவிதம், நோண்டல், திட்டவட்டம், தாபரிப்போன், உதாகரிகன், சலவை, மிஞ்சி, நகரா, கிடுபிடி, கேப்புலி முதலியன.
தெப்பத்துக்குரிய புணையென்னும் சொல்லைப் பிணையென்றும் மானுக்குரிய அரிணமென்பதை அருணமென்றும் சார்ங்க மென்பதைச் சாரங்கமென்றும் அமைத்திருக்கின்றார்.
இந்நூலைப் படித்து இன்புறுபவர்களுக்கு இதன் ஆசிரியர், கருத்துக்களை அலங்காரமாக வெளியிடுபவரென்பதும், பண்டை இதிகாச புராணச் செய்திகளை மிக அறிந்தவரென்பதும், பழைய நூல்களைப் பயின்று அவற்றிலுள்ள கருத்துக்களை இடமறிந்து வெளியிடுபவரென்பதும், திருக்குறளின்பாற் பேரன்புடையவ ரென்பதும், தமிழன்பு வீறியவரென்பதும், உபசாரிகளை வாயார வாழ்த்தும் இயல்பினரென்பதும் வெளியாகும்.
-----------------
தாணடவராய பிள்ளை
மான்விடு தூதின் பாட்டுடைத் தலைவராகிய தாண்டவராய பிள்ளை இற்றைக்குச் சற்றேறக்குறைய 230 - வருஷங்களுக்கு முன் கார்காத்த வேளாள குலத்திலே காத்தவராய பிள்ளை என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தவர். இவருடைய ஊர் முல்லையூரென்பது. இளமைப் பருவத்திலிருந்தே நல்லறிவு வாய்க்கப் பெற்றார். இவருடைய பரம்பரையினர் கணக்கெழுதும் உத்தியோக முடையவர்கள். இவர் காலத்தில் சிவகங்கை ஸம்ஸ்தானத் தலைவராக இருந்த ராசபுலி வடுகநாத துரை யென்பவர் இவருடைய அறிவின் திறமையயும், ஆற்றலையும் உணர்ந்து இவரைத் தமக்கு மந்திரியாக அமர்த்திக்கொண்டார். அதுமுதல் ஸம்ஸ்தானத்துக் காரியங்கள் யாவற்றையும் இவர் மிகவும் திருத்தமாகவும் சிறப்பாகவும் நடத்தி வந்தார்; இவருடைய அதிகார ஒழுங்கினால் ஸம்ஸ்தானாதிபதி யாதொரு கவலையுமின்றி வாழ்ந்து வந்தார். இவருக்கு அவர் பல்லக்கு, தண்டிகை, கவரி, குடை, காளாஞ்சி, குதிரை, ஊர் முதலிய வரிசைகளை வழங்கினார்.
இவருக்கு இராமகிருஷ்ண பிள்ளை, விசிவநாத பிள்ளை, சூரிய நாராயண பிள்ளை என்னும் மூன்று தமையன்மார் இருந்தனர்; அம்மூவர்களுக்கும் பத்மநாப பிள்ளை, சசிவர்ணராச பிள்ளை, சுப்பிரமண்ய பிள்ளை என்பவர்கள் புதல்வர்கள்; இவர்களுள் இன்னவர் இன்னவருடைய குமாரரென்று விளங்கவில்லை. தாண்டவராய பிள்ளைகு இராமகிருஷ்ண பிள்ளையென்ற ஒரு குமாரர் இருந்தனர். இவருடைய சகோதரி கணவராகிய நமச்சிவாய பிள்ளையென்பவருக்குச் கைலாசபிள்ளை யென்றொரு புதல்வர் உண்டு.
தாண்டவராய பிள்ளை வீரமும், கணக்கின் நுட்பமும் தெளிந்த அறிவும், இன்னாரை இன்னபடி நடத்தவேண்டுமென்னும் தகுதியுணர்ச்சியும், ஸம்ஸ்தானத்தின் வளங்களை மிகுக்கும் வழிகளை யறிந்து முயலும் முயற்சியும், தைரியமும் உடையவர்; தம்மை அடுத்தவரைத் தாய்போல ஆதரிப்பவர்; பின்பு என்செய்வதென்று கருதாமல் வழங்கும் வண்மையினர்; சொன்ன மொழி தவறாத வாய்மையை யுடையவர்; துட்டரை அடக்கி அஞ்சச் செய்யும் பராக்கிரமம் பொருந்தியவர்; நல்லோருக்கு நன்மை புரிபவர்; கல்வி கேள்வியில் விருப்பமுடையவர்; ஸங்கீதத்திற் பயிற்சியும் அதனைக் கேட்பதிற் பெருவிருப்பமும் உள்ளவர்; தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் தன்மையினர்; தம்முடைய உறவினரை மதித்துப் பாதுகாப்பவர்; நியமமும் அனுட்டானமும் உடையவர்; பூசை முதலியவற்றைப் பக்தியுடன் செய்பவர்; பலவகையான தருமங்கள் புரிந்தவர்; 'தன்மசரீரன் தருமசகாயன்' என்றும், 'ஆர்க்கும், உபகாரஞ் செய்யவென்றே யோதுநூல் கற்றோன், அபகாரஞ் செய்ய வறியான்' என்றும் பாராட்டப் பெறுபவர்.
இவர் இயற்றிய தர்மங்கள் அளவிறந்தன: குன்றக்குடியிலுள்ள முருகக் கடவுள் திருக்கோயிலைப் புதுப்பித்தார்; வையாபுரி யென்னும் தடாகத்தை அமைத்து அதற்கு அழகியபடித்துறையும் அதனைச் சுற்றிலும் நந்தவனமும் வேத பாடலசாலையும் நிறுவினார். இவற்றோடு முருகப்பெருமானுக்கு நித்தியக் கட்டளை, துவாதசிக் கட்டளை, தைப்பூசக் கட்டளை என்பவை நன்கு நடைபெறச் செய்தார்; திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதளீசுவரர், வயிரவ மூர்த்தி, பிரான்மலையில் எழுந்தருளியுள்ள மங்கைபாகர், வயிரவர், திருக்கோட்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் என்னும் மூர்த்திகளுக்கு மண்டபம், மதில், நந்தவனம், வாகன, நெய் விளக்கு முதலியவற்றை அமைத்து நித்திய நைமித்திகங்கள் குறைவின்றி நடந்துவரச் செய்தார். தென்பாகநேரி யென்னும் ஊருக்கு வடக்கே யிருந்த பெரிய காட்டை அழித்து ஊராக்கி அங்கே சோலைகளையும் ஒரு பெரிய தடாகத்தையும் அமைத்து அத்தடாகம் தம்முடைய அரசர் பெயரினால் 'முத்து வடுகநாத சமுத்திரம்' என்று வழங்கச் செய்தார். இங்ஙனமே அரசர் பெயரால் தடாகங்கள் வழங்கும் மரபு, மதுரையைச் சார்ந்த வண்டியூர்த் தெப்பக் குளத்தின் பெயராகிய திருமலைராஜ சமுத்திரமென்பதனாலும் தெரியவருகிறது. சோழபுரம் என்னும் ஊரில் திரியம்பக தீர்த்தத்தை இவர் உண்டாக்கினார்; வைகைநதிக் கரையிலுள்ள பரம்பைக்குடியில் குளம் கிணறு முதலியன வெட்டித் தண்ணீர்ப் பந்தல், நந்தவனம், பூஞ்சோலை, மடம், தருமசத்திரம் ஆகியவற்றை இயற்றினார்; அன்னதானம் மிகுதியாகச் செய்வித்தனர்; இதனை இந்நூல், "முந்தப், படிக்கட் டளையாய்ப் பசித்துவந்தோர்க் கெல்லாம், கொடிக்கட்டி யன்னங் கொடுத்தோன்' என்று சிறப்பித்துக் கூறும்.
இத்தகைய 'அறச்செயல்களைப் புரிந்து புலவர் பாடும் புகழுடையவராக விளங்கிய இவரைக் குழந்தைக் கவிராயர், நாவலர் தாரு என்றும் கன்னாவதார வுபகாரி யென்றும், வாணர் புரவலனென்றும், புகழாபரணனென்றும் பாராட்டுதல் தன்மை நவிற்சியாகுமேயன்றி மிகையாகாது.

காப்பு
(நேரிசை வெண்பா)
சங்கநிதி தென்முல்லைத் தாண்டவ ராசசெய
துங்கன்மிசை மான்விடு தூதுக்குப் - பொங்கு
புவிநா யகனன்பர் போற்றுங் கசமு
கவிநா யகனிதங் காப்பு.
நூல்
(மானின் பெருமை)
1.
பூமேவு கோகனகப் போதி லரசிருக்கும்
மாமேவு பைந்துளப மாதவனும்-தேமேவு
2.
புண்டரிக வீட்டோனும் பொன்னுலகை யாள்வோனும்
அண்டருந் தானவரு மங்கையினாற்-கொண்டெடுத்த
3.
மந்தரமும் வாசுகியும் வாரிதியு மேவருந்த
அந்தவமு தங்கடையு மந்நாளிற்-சிந்தைமகிழ்
4.
சந்திரனே தேகமெனத் தண்பாற் கடன்மீது
வந்துற் பவித்த மதிமானே-ஐந்து
5.
தலையரையன் சென்னிகவர்ந் தாருமணஞ் செய்ய
மலையரையன் பெற்றெடுத்த மாதைத்-தலைநாள்
6.
ஒருகால் பிடித்திருந்தா ருன்னையுல குய்ய
இருகால் பிடித்திருந்தா ரென்றும்-திருமாலும்
7.
கூரங்க மானபடை கொண்டிருந்துந் தென்னிலங்கை
சாரங்க மேகுரங்காச் சாதித்தான்-காரங்கம்
8.
பெற்றோன் மனைவியைநீ பெற்றிருந்தா யுன்மகிமை
மற்றோர்கொண் டாட வசமாமோ-பொற்றோட்டின்
9.
உந்திக் கமலத்தே யுற்பவித்தோன் மாமறைகள்
வந்திக்கச் செய்த மகத்துவமும்-புந்திக்குள்
10.
எண்ணிச் சராசரங்க ளீரே ழுலகமெல்லாம்
பண்ணிக்கை வந்திருந்த பாங்குமேல்-எண்ணுங்கால்
11. - நத்திருந்த வெண்கலைமா னாவிற் பிரியாமல்
வைத்திருந்த வீறன்றி மற்றுமுண்டோ-கொத்திருந்த
12. - அஞ்சுதலை யோன்மதலை யாறுதலை வேன்முருகன்
உஞ்சு தலையெடுக்க வுன்மகளைக்-கொஞ்சுமொழி
13. - வள்ளியைக் கொண்டிருந்தான் மான்மருக னம்முறையால்
வெள்ளிமலை யோனுனக்கு மெய்த்தமையன்-வெள்ளிமலை
14. - தங்கமலை பெற்றுவந்த சங்கரனார் மேம்பாடும்
செங்கமலை மாலிரட்சை செய்திறமும்-செங்கோலைத்
15.
துன்ன நடத்துவதுந் தொக்கபடை தற்சூழ
மன்னரென வந்த விறுமாப்பும்-இந்நிலமேல்
16.
உன்னாமந் தானுமெத்த வுண்டுபெரு மானென்னல்
தன்னாமம் பெற்றபலத் தாலன்றோ-மன்னுகலைக்
17. - கோட்டு முனிவனுக்குன் கோட்டி லொருகோடு
நாட்டுசென்னி மேலிருந்த நல்வரத்தால்-மோட்டு
18. - மகரக் கடலுறங்கு மாலை யயோத்தி
நகரிற் புகவழைத்தா னாடிச்-செகதலத்தில்
19. - விள்ளுமந்தி மானென்று மிக்கசந்தி மானென்றும்
வள்ளல்கட்குப் பேர்கொடுத்த வச்சயமே-எள்ளாத
20. - மின்வண்ணப் பின்னலான் வேதண்ட கூடத்தே
பொன்வண்ணத்தந்தாதிபோந்துரைப்போன்-உன்வண்ணப்
21. - பேர்படைத்த சேரமான் பெற்றபே றிவ்வுலகில்
ஆர்படைத்தார் வேந்த ரருங்கலையே-கூரும்
22. - இருணாடு மூடாம லேவிளங்கச் செய்வ
தருணோத யத்தினா லன்றோ-அருணமே
23. - வஞ்சனை செய்காள மாமுனிவ னேவலினால்
எஞ்சலில் பூத மெழுந்துருத்துப்-பஞ்சவரைக்
24. - கொல்லவந்த போதவரைக் கொல்லாம லேபுரந்த
வல்லமை மாயனுக்கும் வாராதே-சொல்லுகின்ற<
25. - எள்ளவரை தானடக்கி யீரக் கடலையுண்டாய்
உள்ள கலைமுழுது மோங்கநின்றாய் - புள்ளிபெற்ற
26. - பொன்னுழையே கும்பனுக்குப் போதித்த தோமுனிவன்
தன்னுழையே நீபடித்த சாதளையோ - இந்நிலமேல்
27. - மான்றேச மென்றுமதில் வாசிமெத்த வாசியென்றும்
தான்றேசஞ் சொல்வதென்ன தப்பிதமோ - கான்றேசம்
28. - சொந்தமென்று பன்மிருகஞ் சூழ்ந்தாலு மென்னதென்று
வந்து மொழிய வழக்குண்டோ - சந்ததமும்
28. - தேனூருஞ் சோலை செறியுங் கலையூரோ
மானூரோ நீயிருக்கும் வானகரம் - கானூரும்
30. - பொன்னம் பலத்தே புலிபாம் பிருத்தலினால்
உன்னம் பலத்தினுக்கே யொப்பாமோ - தன்மையாய் 30
31. - நாடுநக ரம்பலமெந் நாளுமுன்பேர் பெற்றதுபோற்
கூடுமோ காவலர்க்குங் கூடாதே - நீடுசெய
32. - மாதினைநீ தாங்கு மகிமையன்றி மற்றவட்கு
மேதினியி லுண்டோ விசேடமே - மோதுதெவ்வர்
33. - கிட்டுஞ் சமர்க்குடைந்து கெட்டோருன் பேர்கண்டால்
வெட்டுந் தலையும் விலகுவார் - அட்டதிக்காம்
34. - தானங்காக் குந்தேவா தாழ்குழலா ராடவர்க்கு
மானங்காக் குந்துரையே வான்பிணையே - கானமுனி
35. - சாபத்துக் கஞ்சுவாய் சாலமொழி வார்கண்டால்
நீபத் தடிவிலகி நிற்பாயே - கோபத்திற்
36. - பாண்டுவெனுஞ் சந்த்ரகுலன் பார்முழுது மோர்குடைக்கீழ்
ஆண்டுபுகழ் கொண்ட வரசர்கோன் - தாண்டுகலை
37. - மானையெய்த தீவினையால் வானகரி னாடிழந்து
கானடைந்து வானுலகங் கைக்கொண்டான் - ஞானமுனி
38. - வேத வியாசன் விரித்துரைத்த பாரதத்தில்
ஓதுகதை பொய்யோ வுலகறியும் - ஆதலினாற்
39. - கோல விரிப்புலியைக் குஞ்சரத்தைக் கொன்றுமுயல்
காலின்மிதித் தோனுன்னைக் கைக்கொண்டான் - ஞாலத்தில்
40. - சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாய்ச் சூழ்ந்து விடுமென்று - கற்றே
41. - அறிதலி னாலே யபாயமா மென்று
சிறிய வரையிணங்காச் செல்வா - மறியே
42. - அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளலென்று - பாணித்
43. - தரிய வரத்தினையுண் டாக்கும் பெரிய
வரையுறவு கொண்டபுத்தி மானே - வரையாப்
44 - பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தாரென்ற-முறையால்
45. - துறவாகக் காயிலைக டுய்த்தே யரிதாள்
மறவாத பாக வதனே-உறநாடிற்<
46. - கட்புலங்கா ணாரூபக் கால்வாதத் தைத்தாங்கி
விட்புலமு மேழ்கடலு மெத்திசையும்-பெட்புமிகு
47. - தண்டலமும் வெற்புஞ் சராசரமு நின்றசைய
மண்டலமும் வீதியுஞ்செல் வாசியே-கண்டுகனி
48. - பண்போன் மொழிபயிலும் பாவையர்க்கெல் லாமிரண்டு
கண்போல வந்த கருங்கலையே-நண்பாகத்
49. - தீராத வல்வழக்குத் தேறாக் களவுகன்னம்
பேரான வெல்லைப் பிசகுமுதல்-ஆராய்ந்து
50. - சுத்த னசுத்தனென்று சோதனையாய் நாக்குமழு
வைத்தோதக் கற்பித்த வல்லமைகள்-அத்தனையும்
51. - தென்பாகை நாட்டிற் சிறந்தபுல்வாய் மாதென்றே
அன்பாகச் சொல்ல வவதரித்தாய்-இன்பாம்
52. - துணையேவன் காமத் துயர்க்கடலை நீந்தும்
பிணையே கருணைப் பெருக்கே-இணையான
53. - காது நடந்தவிரு கண்ணார்க்கு மாடவர்க்கும்
தூது நடந்தாரைச் சொல்லக்கேள்-மாதுபங்கர்
54. - ( தூது சென்றவர்கள் )
சுந்தரர்க்கப் பானாளிற் றூதுசென்றார் பாண்டவர்க்குச்
செந்திருமா றூதாகச் சென்றாரே-இந்திரற்கே
55. - அந்தநளன் றூதுசென்றா னந்நளனுக் கோதிமந்தான்
சந்து நடந்தகதை தப்பிதமோ-முந்தக்
56. - குணமாலை ருக்குமணி கொண்டமய றீர
மணமாலை கிள்ளைதர வாழ்ந்தார்-தணவாத
57. - ( மற்றத் தூதுப்பொருள்களின் குறைகள் )
வாளகண்டஞ் செல்லும் வரிக்குயிலைத் தூதனுப்பிற்
காளகண்ட நல்வசனங் காட்டுமோ-தாளமலர்
58. - ஏற்கு மதுகரத்தை யேவின் மதுபானி
நாக்குக் குழறுமே நவ்வியே-மூக்கிலே
59. - கோபத்தைக் காட்டுமொரு கொண்டைமயில் போய்க்க
லாபத்தைக் காட்டுமில்லை லாபமே-சோபத்தால்
60. - அன்னத்தைத் தூதுவிட்டா லவ்வன்னம் பாலுக்கும்
பின்னத்தைக் காட்டுமிதம் பேசாதே-சொன்னத்தைச்
61. - சொல்லுமே யல்லாமற் றொன்ற விரித்துரைத்து
வல்லமையாய்க் கிள்ளைசொல்ல மாட்டாதே-மெல்லவே
62. - எத்திசையுஞ் செல்லு மிளம்பூவை தூதுசென்றால்
கத்திகை வாங்கக் கலங்குமே-மெத்தவே
63. - மேகங் கடுகுரலாய் விள்ளுமல்லா னின்போலப்
பாகமுட னின்சொற் பகராதே-மோகமிஞ்சிக்
64. - கண்டுயிலும் வேளையினிற் கண்டவனி ருத்திரனைக்
கொண்டுவந்த பாங்கியென்பாற் கூடுமோ-தண்டாத
65. - என்னெஞ்ச மாங்கவன்பா லெய்தி யெனைமறந்து
வன்னெஞ்ச மாயிருந்தால் வாயுண்டோ-தென்மலையத்
66. - தென்றலைத் தூதுவிட்டாற் றென்றல் சலனகுணம்
மன்றலணி வாங்குமிங்கு வாராதே-துன்று
67. - கலையே மணிமே கலையே தவிர்ந்தேன்
அலையேய் துரும்பா யலைந்தேன்-மலையாமற்
68. - காக்கும் பிணையேவன் காமக் கடற்கரையிற்
சேர்க்கும் பிணையே செழுங்கலையே-ஆர்க்குமிகும்
69. - ஆசைதந்தோன் பேருமவ னாடு மவனூரும்
மாசில் புகழும் வழுத்தக்கேள்-தேசுதரும்
70. - ( தசாங்கம் - பொதியின்மலை )
அம்புதமு மம்புலியு மாடரவுஞ் சென்னியின்மேற்
பம்புதலா லீசன் படிவமாய்-அம்பரமும்
71. - பொன்னுமணிக் கோடும் பொருந்திச் சிலைதிகிரி
மன்னுதலான் மாலின் வடிவமாய்-இந்நிலமேல்
72. - நான்முகஞ் சாகைபல நண்ணிப்பல் பூப்படைத்து
மான்மகன் போல வளஞ்சிறந்து-மேன்மை
73. - அரம்பைபலர் தற்சூழ்ந்தே யண்டருல கெய்தித்
திரம்பெறலாற் றேவேந் திரன்போல்-உரம்பயின்று
74. - சந்தனமுங் காரகிலுந் தம்மிற் றலைசிறந்து
வந்த பொதிய மலையினான்-செந்தமிழின்
75. - (வைகை நதி)
ஏடேறச் சைவநிலை யீடேறத் துள்ளுபுனல்
கோடேறக் கூடல் குடியேறப்-பீடேறு
76. - மூரிக் கயன்மகர மோதித் திரையேற
வாரிப் புனலும் வளர்ந்தேறப்-பாரித்து
77. - மண்டு புகழேற மாறன் வியப்பேறக்
கண்டு சமணர் கழுவேறத்-தண்டுளப
78. - மாடேறுஞ் சொக்கர் மதிச்சடையின் மண்ணேற
நாடேறும் வைகை நதியினான்-சேடேறும்
79. - (தென்பாண்டி நாடு)
பூங்காவு மாங்குயிலும் பூட்டு மொழிக்கரும்பும்
வாங்காத கீத வரிச்சுரும்பும்-நீங்காத
80. - வாவித் தலமும் வனச மலர்க்காடும்
காவிப் புதுமலருங் கம்பலையும்-பூவைக்கும்
81. - தென்மலய மாருதமுஞ் சேயிழையார் தங்குழுவும்
மன்மதனார் பாளையந்தான் வந்ததென-நன்மைதிகழ்
82. - தேவேந்து நாட்டினுக்குச் செவ்விதென்று பாவேந்தர்
நாவேந்து தென்பாண்டி நாட்டினான்-பூவேந்து
83. - (முல்லை மாநகர்)
வாணிக்கு நாதனவை வந்திருக்க வேணுமென்று
காணிக்கை யாய்ச்சமைத்த காரணமோ-வேணிக்கு
84. - வேந்த னுலகம் வெளிறிடவே வேண்டுமென்று
வாய்ந்தசெம் பொன்னால் வகுத்ததோ-தேர்ந்துவச்ர
85. - வண்ண னுலகு வறியதென்று சொல்லுதற்குப்
பண்ணிச் சிறந்த படிவமோ-எண்ணுங்கால்
86. - மண்மகளுக் காக வகுத்தமணிப் பீடமோ
திண்மைசெறி பேரழகு சேரிடமோ-உண்மை
87. - தெரிந்துரைக்க வல்லவரார் சிற்பநூல் கற்றோர்
புரிந்தசிற்ப மென்றுலகம் போற்ற-விரிந்தமணிக்
88 - கூடமு மேல்வீடுங் கோபுரமு மாமறுகும்
மாடமுஞ்சேர் தென்முல்லை மாநகரான் - நாடமிர்தும்
89. - (குவளை மாலை)
கண்டு நிகர்மொழியார் கண்னு மவர்மனமும்
வண்டுஞ் செறிநீல மாலிகையான் - விண்டோர்
90. - (குதிரை)
மகுட முடியிடறி மாதிரமும் வானின்
முகடு நிறைபடல மூட - விகடர்
91. - கெடியரணு நெஞ்சிற் கெருவிதமுங் கூட்டி
அடியின் குரத்துகள தாக்கிக் - கொடியவிட
92. - நெட்டரவு மேனி நெறுநெறெனக் கண்பிதுங்க
அட்ட கிரிநின் றசையவே - வட்டமிட்டுக்
93. - காற்கதியுங் காற்கதியே காணுமென வீரிரண்டு
காற்கதியி லைந்து கதிகாட்டிப் - பாற்கடலில்
94. - மாதவனுங் கற்கி வடிவங் கரந்துநிற்க
ஆதவ னேழ்பரியு மஞ்சவே - நாதன்
95. - வலம்புரி போலவன் மானித்துப் போரில்
வலம்புரியுங் கோரரண வாசியான் - சலம்புரிந்து
96. - (யானை)
திக்கயங்கண் மாதிரத்திற் சென்று புறங்கொடுப்பத்
தொக்கயங்க டொக்கெனவே சூறையிட்டு - மிக்க
97. - சிகர வடவரையைச் சீறித் தகர்த்து
மகர வுததி மடுத்துப் - பகரும்
98. - வடவைக் கனலவித்து வான்பிறையை யெட்டித்
தடவிக் குணக்கெடுத்துத் தாளாற்-புடவிமன்னர்
99. - கொத்தளத்தைக் கோட்டையினைக் கோட்டைக்குக் காக்கவைத்த
அத்தளத்தை யெல்லா மணுவாக்கி-எத்தளமும்
100. - கண்டு நடுநடுங்கக் காலனுங் கண்புதைப்பக்
கொண்டலென நின்றதிருங் குஞ்தரத்தான்-மண்டலத்தில்
101. - (மேழிக்கொடி)
ஆர்க்கு மதியா தவர்பகையு மஞ்சவே
பார்க்கின்ற மேழிப் பதாகையான்-நீர்க்குலவு
102. - (முரசு)
நத்தோலும் வாரியென்ன நாதரொரு மூவரென்ன
முத்தோலுங் காட்டு முரசினான்-எத்திக்கும்
103 - (வேற்படை)
காற்படையுந் தேர்ப்படையுங் கைக்கிரியு மாவுமாம்
நாற்படையுஞ் சூழ ரணபேரி-ஆர்ப்பரித்து
104. - வெற்றிசொல்லி வந்த விகட மருவலர்கள்
கொற்றமுங் கொற்றக் குடையுமேல்-அற்றுவிழ
105. - மாதரங்கம் போல மறுகிக் குதித்துவரு
மாதுரங்க மெல்லா மறுகிவிழ-மோதிவரு
106. - . சிந்துரங்கள் கோட்டுச் சிரந்துணிந்து கைதுணிந்து
சிந்துரங்க ளாகித் திகைக்கவே-வந்த
107. - முடித்தேர்க டட்டழிந்து முட்டுந் துரங்கம்
மடித்தே வலவன் மடிய-அடுத்துநின்று
108. - பாரிட் டெதிர்த்த படைவீரர் சென்னிகு
பீரிட் டிரத்தம் பெருகவே-தாரிட்ட
109. - தோடுணிய வாடுணியத் துள்ளித் திரண்டுவரு
தாடுணிய மோட்டுத் தனுத்துணியக்-கோடுணிய
110. - விற்றுணியச் செங்கை விரறுணிய வெற்றிசொன்ன
சொற்றுணிய நாக்குத் துணியவே-பற்றுணிய
111. - ஒட்டகங்கள் கோடி யுருளச் செயபேரி
பெட்டகங்கள் போலப் பிறழவே-கட்டழிந்து
112. - சாளையப் பட்டுச் சளப்பட்டுத் தாமிருந்த
பாளையப் பட்டும் பறிபட்டு-மூளைகொட்டக்
113. - கட்டித் தயிரெனவே கண்டுசில பேயருந்தி
எட்டிக் கொழுப்பை யிழுக்கவே-தட்டுசிறை
114. - வட்ட மிடுங்கழுகு வந்துகுடல் பற்றியெழல்
பட்ட மிடுங்கயிறொப் பாகவே-கொட்டும்
115. - குருதி முழுகிநிணங் கொண்டுபருந் தேகல்
கருதுங் கருடனெனக் காணப்-பெருகிவரு
116. - நன்னீ ரெனவொருபேய் நாடித் தசையருந்திச்
செந்நீர் குடித்துத் திகைக்கவே-துன்னி
117. - வறட்டுக் கிழட்டுப்பேய் வாய்க்கொழுப்பை நோண்டிக்
கறட்டுப்பேய் தின்று களிக்க-முறட்டுப்பேய்
118. - வாங்கித் தினுந்தசையை வந்தொருபேய் தட்டிவிட
ஏங்கிப் பசியா லிருந்தலற-ஆங்கொருபேய்
119. - பேய்ப்பொட்ட லிட்ட பெருங்களத்திற் றின்றதசை
வாய்ப்பட்ட தென்று மகிழவே-கூப்பிட்டே
120. - அன்று கலிங்கத் தமர்க்களத்துக் கொப்பாக
இன்று கிடைத்த தெனப்புகலத்-துன்றுபல
121. - கூளி நடனமிடக் கொக்கரித்தே யுக்ரசெய
காளி மகிழக் கவந்தமிரு-தாள்பெயரக்
122. - காகம் பருந்து கழுகுநிழற் பந்தரிட
மாகமின்னார் கல்யாணம் வாய்த்ததென-ஓகைபெறச்
123. - சொல்லு மருவார் தொடியிடற வெந்நாளும்
வெல்லுமுனை கொண்டவடி வேலினான்-ஒல்லுமணி
124. - (ஆணை)
வட்டநெடு வேலா வலயம் விளங்குபுவி
அட்டதிசை யுஞ்செலுத்து மாணையான்-இட்டமிகச்
125. - (வடுகனாததுரையின் பெருமை)
சந்ததமுங் கோட்டிச் சவுமியநா ராயணரை
வந்தனைசெய் தொப்பமிடு வண்கையான்-நந்துலவு
126. - தென்குளந்தை மேவுஞ் செயசிங்கங் கோகனக
மின்குழந்தை போலும் விசித்திரவான்-முன்குழந்தை
127. - ஆமப் பருவத்தே யம்பொற் சுடிகைதந்த
சோமனுக்கு நேராந் துரைராயன்-பூமன்
128. - முரசுநிலை யிட்டு முடிதரித்தே சேதுக்
கரசுநிலை யிட்ட வபயன்-வரசதுரன்
129. - தண்டளவ மாலைச் சசிவர்ண பூபனருள்
கொண்ட லுபய குலதீபன்-மண்டலிகன்
130. - ராச புலிவடுக நாத பெரியுடையான்
ராச னிவனாண்மை நாகரிகன்-யோசனையும்
131. - (தலைவன் பெருமை)
மந்திரமு மொன்னார் வணங்கத் தனுவெடுத்த
தந்திரமு நீயோகத் தன்மையும்-வந்த
132. - திரமாங் கணக்கினுட்பந் திட்ப நிதானம்
பரராச வட்டமுணர் பாங்கும்-தரம்பகுத்துத்
133. - திட்டவட்ட மாய்நிதியந் தேடுவதுஞ் சீமைநவ
சட்டமெனக் காக்குஞ் சமர்த்துமேல்-வட்டமாம்
134 - வல்லமையுங் காதல்விசு வாசமுங்கண் டேநமக்கு
நல்லமைச்ச னென்று நவமணிப்பூண்-பல்லக்குத்
135. - தண்டிகை யூர்கவரி தண்கவிகை காளாஞ்சி
கண்டிகை முத்தங் கவனமாத்-திண்டிறல்சேர்
136. - மத்தகெச மாதி வரிசைநல்கு மந்த்ரிதள
கத்த னுபய கனயோகன்-நித்தநித்தம்
137. - ஈகைக் கிணையென்றோ வேற்றலருந் தண்ணளியோ
மேகத்தின் கால்விலங்கு வெட்டுவித்தோன்-ஆகையினால்
138. - காராள னாகினான் கங்கைசுத னாயினான்
பாராம னீலி பழி துடைத்தோன்-பேராகச்
139. - சூலி முதுகிற் சுடுசோ றளித்துமொரு
சூலி பசியாற்றத் தூங்கிரவிற்-சாலி
140. - முளைவாரி யன்னமிட்டோன் முத்தமிழ்க்குப் பாம்பின்
வளைவாயிற் கைநீட்டும் வள்ளல்-இளையாமற்
141. - பட்டாடை கீறிப் பருஞ்சிலந்தி காட்டிவெகு
நெட்டாய் விருது நிறுத்தினோன்-மட்டாரும்
142. - பைந்தருவுக் கொப்பென்றோ பாலிக்கு முன்கையைச்
சந்தனமாய் வைத்தரைத்த தாடாளன்-முந்தக்
143. - கொடுக்குங் குணமோ குழந்தைசொன்ன தென்றோ
அடுக்கு மவன்மீதி லன்போ-எடுக்கும்
144. - இருநிதியு நெல்லா யிரக்கலமுந் தந்தே
ஒருகவிதை கொண்டுபுக ழுற்றோன்-பெருமைசேர்
145. - (அவன் செய்த தர்மங்கள்)
கோலமிகு குன்றாக் குடியிலே நீடூழி
காலமெல்லா நிற்கவே கற்கட்டிச்-சூலத்திற்
146. - றன்னூற்றுக் காணத் தடாகப் பிரதிட்டைசெய்து
செந்நூற் றுறையாற் சினகரமும்-பொன்னாற்
147. - படித்துறையும் பூந்தருவும் பைந்தருவும் வேதம்
படித்துறையு மண்டபமும் பாங்காய்-முடித்துவைத்தே
148. - போற்றிய வையா புரியென்று பேருமிட்டு
நாற்றிசையோர் போற்றுவள்ளி நாதருக்கே-தோற்றுதினக்
149. - கட்டளையுந் த்வாதசிக் கட்டளையுந் தைப்பூசக்
கட்டளையு மேநடத்துங் கங்கைகுலன்-மட்டுவிரி
150. - சீதளியார் புத்தூர்த் திருத்தளியார் கொன்றைவன
நாதனார் வயிரவ நாதருக்கும்-சீதமலர்
151 - நல்லமங்கை பாகருக்கு நம்பும் வயிரவர்க்கும்
வல்ல திருக்கோட்டி மாதவர்க்கும்-கல்லியன்முன்
152. - மண்டபமு நெய்விளக்கு மாமதிலும் வாகனமும்
தண்டலையும் வில்வத் தளமலர்கள்-கொண்டதோர்
153. - நித்தியநை மித்தியமு நேயமாய்த் தானடக்கப்
பத்தியுட னேயமைந்த பண்பினான்-நத்துலவு
154. - தென்பாக நேரிக்குச் சேர்ந்த வடபாலில்
வன்பாங் கரடிபுலி மான்மரைகள்-துன்பான
155. - கள்ளர் குடியிருக்குங் காட்டைவெட்டி நாடாக்கிப்
புள்ளலம்பு சோலை புதுக்கியே-பள்ளநீர்
156. - முன்பார் புகழ முனைவேந்தர் கொண்டாட
வன்பாரை வெட்டியுநீர் மல்கவே-அன்பாரும்
157. - மண்டலிகன் முத்து வடுகநா தச்சமுத்ரம்
கண்டுபுகழ் கண்டமார்க் கண்டனாம்-கொண்டல்
158. - அரசன் பெரியவுடை யான்மகிழ்ந்து வெற்றி
புரிகின்ற சோழ புரத்தில்-திருவளரும்
159. - கந்தவனப் பொய்கைக் கரையினுக்கு மேற்றிசையில்
அந்தமிகு பாற்கடலி தாமென்னச்-சந்ததமும்
160. - செய்கை தவறா திருந்ததிரி யம்பகப்
பொய்கைதனைக் கண்டிருந்த புண்ணியவான்-செய்திகழும்
161. - வைகை நதிநீர மானபரம் பைக்குடியிற்
பொய்கைசெறி கூபம் புனற்பந்தல்-மைகவியும்
162 - நந்தவனம் பூஞ்சோலை நன்மடமு மேயிற்றி
அந்தணர் சாலை யமைத்துவைத்தே-முந்தப்
163. - படிக்கட் டளையாய்ப் பசித்துவந்தோர்க் கெல்லாம்
கொடிக்கட்டி யன்னங் கொடுத்தோன்-வடிக்கட்டும்
164. - தன்ம சரீரன் றரும சகாயனெழில்
மன்மத ரூபனடல் வாளபிமன்-நன்மைசேர்
165. - தன்னை யடுத்தோரைத் தாய்போலத் தாபரிப்போன்
பின்னையெண்ணா மற்கொடுக்கும் பேராளன்-பொன்னைப்
166. - புதைப்பார் மணாளன் புருடமக மேரு
சுதைப்பார் புகழ்விளைக்குஞ் சோமன்-சுதைப்புவியைக்
167. - காக்குங் கருணா கரனா மனுநீதன்
வாக்கி லிரண்டுரையா மானபரன்-ஆர்க்கும்
168. - உபகாரஞ் செய்யவென்றே யோதுநூல் கற்றோன்
அபகாரஞ் செய்ய வறியான்-சுபகாரி
169. - துட்டருக்கு நிட்டூரன் றுட்டருக்கு மார்பாணி
சிட்டருக்கு நன்மைபுரி செங்கோலான்-மட்டுவிரி
170. - ( அவயவச் சிறப்பு )
மாப்பதுமன் போலவே வந்தமுனி நல்யாகம்
காப்பனெனச் சென்றமலர்க் காலினான்-ஆர்ப்பரித்துச்
171. - சொந்தமென விந்தையுறை தோளினான் கோகனகை
வந்து குடியிருக்கு மார்பினான்-வந்தவரை
172. - வங்கணங் கட்டி வசந்தத் தியாகநல்கக்
கங்கணங் கட்டுமிரு கையினான்-கொங்கு
173. - பரந்த மடவார் பயோதரத்தி லேந்தும்
நரந்தம் பரிமளிக்கு நாசி-பொருந்தினோன்
174. - ஆனவித்தை யெல்லா மறிந்தாலுங் காந்தருவ
கானவித்தை கேட்குமிரு காதினான்-நானிலத்திற்
175. - கீர்த்தி கரித்துக் கிளைக்கின்ற சந்த்ரவிம்பம்
மூர்த்தி கரித்த முகத்தினான்-பார்த்திபரில்
176. - மூவேந்தர் போலவந்து முத்தமிழை யாராய்ந்து
பாவேந்தை வாழவைத்த பாக்கியவான்-பூவேந்து
177. - (தந்தை முதலியோர்)
காத்தவரா யன்பாலன் காணுமைவர் பேரிடரைத்
தீர்த்தவரா யன்புபுரி சீதரமால்-பார்த்தனுக்குக்
178. - காண்டா வனதகனங் காண ரதமூர்ந்தோன்
வேண்டார் வணங்கவரி வில்லெடுத்தோன்-சேண்டாங்கி
179. - நில்லாமற் றிக்கயங்க ணேர்ந்தாலு நல்லதென்று
மல்லாட மார்புதட்டும் வல்லமையான்-நல்லாரை
180. - ஆய்ந்தா தரிக்கு மறிவினான் மேருவரை
சாய்ந்தாலு மீளநடுந் தந்திரவான்-ஏந்துமலர்த்
181. - தேன்றொட்ட விந்திரவி தெற்குவடக் கானாலும்
தான்றொட்ட வாரந் தவறாதான்-கான்றொட்ட
182. - செய்க்குவளை நித்திலஞ்சூழ் தென்முல்லை யாதிபதி
மைக்குவளை மாலையணி மார்பினான்-திக்கு
183. - விசையஞ் செலுத்தி விருதொன்று கட்டி
இசையெங்கு மேசெலுத்து மெங்கோன்-திசையாள்
184. - அதுலன் குளந்தைக் கரசன் மகிழும்
சதுரனாம் ராமக்ருஷ்ணன் றம்பி-மதுரமொழி
185. - சொன்னவிச்வ நாதனுக்குஞ் சூரியநா ராயணற்கும்
பின்னவன் கீர்த்திப் பிரதாபன்-மன்னுகலி
186. - கோபன் கவிவேந்தர் கொண்டாட வந்தபற்ப
நாபன் சசிவன்ன ராசனுக்கும்-சோபந்தீர்
187. - சோமன் குலத்தருமன் சுப்பிர மண்யனுக்கும்
சேமநிதி யான சிறுதாதை-பூமணிகா
188. - உந்துதிருப் பாற்கடலி லுற்பவித்த தண்மதிபோல்
முந்து வலம்புரியின் முத்தம்போல்-வந்த
189. - நனையகஞ்சேர் நீலமணி ராமக்ருஷ்ண மாலைத்
தனைய னெனமகிழ்ந்த தந்தை-அனகன்
190. - தருநமசி வாயமன்னன் றந்தகயி லாசன்
மருக னெனவந்த மாமன்-உரிமை
191. - அடர்ந்த கிளையா னகந்தை யறியான்
மடங்க லெனவே வயங்கொள்-படையான்
192. - தொழுந்த கைமையான் சுகந்த புயவான்
எழுந்த பிறையா யிரங்கள்-தொழுவோன்
193. - பரதந் திரசம் பனதந் திரசிந்
திரதன் சுமுகன் செனகன்-சரதன்
194. - பொருமந் தரதிண் புயமண் டலிகன்
தருவுங் கரமுஞ் சரியென்-றருளவரு
195. - காரியுப காரியதி காரிவிவ காரிகுண
வாரிநிதி வாரியருள் வாரிமழை-மாரிமத
196. - வாரணங் கூப்பிடுமுன் வந்தேன்வந் தேனென்ற
நாரணன் றாண்டவ ராயமன்னன்-போரளவி
197. - இன்றிளைத்தாய் நாளைவா வென்றே யிராவணற்கு
நன்றுரைத்த தாண்டவ ராயமன்னன்-நின்றெதிர்த்து
198. - வன்மை புரிந்தோரும் வந்துசர ணென்றடைந்தால்
நன்மைபுரி தாண்டவ ராயமன்னன்-சொன்மருவு
199. - தாகரிகன் மாற்றலர்பாற் சங்க்ராம கெம்பீரன்
நாகரிகன் றாண்டவ ராயமன்னன்-மாகனகக்
200. - கோட்டிலங்கை ராவணனைக் கொன்று விபீடணனை
நாட்டுதுரை தாண்டவ ராயமன்னன்-கூட்டுசுண்ணம்
201 - வல்லசுர மஞ்சரிக்கு மாலைதரு கந்தபொடி
நல்லதென்ற தாண்டவ ராயமன்னன்-சொல்லுநெறி
202. - கோடா மனுநீதி கொண்டிருந்து வைகைவள
நாடாளுந் தாண்டவ ராயமன்னன்-வாடாத
203. - (தலைவன் பவனி வரத்தொடங்கல்)
தென்னவன்போற் பூலோக தேவேந் திரன்போல
மன்னு பவனி வருவதற்கு-முன்னமே
204. - நித்திய தான நியம மனுட்டானம்
பத்தி தரும்பூசை பண்ணியே-மொய்த்தகன
205. - சுற்றம் விருந்துத் தொகுதிபல தற்சூழ
உற்ற வறுசுவை சேருண்டி-முற்ற
206. - அருந்திமலர் வாய்பூசி யாசார மீதில்
இருந்துமின்னார் கண்ணாடி யேந்தத்-துரைவடுக
207. - (அணிகளை அணிதல்)
நாதமன்ன னுக்கன்றி நானிலத்து வேந்தைவணங்
காதமுடி மேற்பாகு கட்டியே-காதிலணி
208. - மாணிக்க முத்து மரகதப்பூ மூவருடல்
காணிக்க வந்த கவின்காட்டப்-பூணிழையார்
209. - கூடி முருகனென்று கும்பிடவே மேற்காதில்
ஆடு முருகி னணியணிந்து-சேடுதிகழ்
210. - வாக்கிலுறை வெண்கமல மாதுவெளி வந்ததென
ஆக்கமிகும் வெண்ணீ றலங்கரித்துத்-தீர்க்கமாய்ப்
211 - பார்க்கின் முகமதியின் பாற்களங்கம் வேண்டுமென்றோ
சேர்க்குங்கத் தூரித் திலதமிட்டு-நீக்கமின்றி
212. - இச்சைசெறி கோகனகைக் கிட்ட திரைபோலப்
பச்சைவச்ரம் வைத்த பதக்கமிட்டுக்-கச்சையடர்ந்
213. - தோங்கத் தனம்படைத்த வொண்டொடியார் காமசரம்
தாங்கரத்ன கண்ட சரந்தாங்கிப்-பூங்கரத்திற்
214. - சங்குவளை மாலைசிந்தித் தாழ்குழலார் பின்றொடரச்
செங்குவளை மாலை திருத்தியே-பொங்குமுன்னீர்
215. - மாகுவலை யந்தாங்க வைத்த மணிச்சுமடாம்
வாகு வலைய மணிதரித்து-மாகர்
216. - சுரதருவிற் காமவல்லி சுற்றியது போல
விரலணியுங் கைச்சரடும் வேய்ந்தே-அரையிற்
217. - சலவைகட்டி யொன்னார் தருங்குருதி மாந்திப்
புலவுகக்குங் குற்றுடைவாள் பூட்டிக்-கலகம்
218. - நிலவுஞ் சகட நெறுநெறென வீழக்
கலகலென நீட்டுதண்டைக் காலில்-இலகுரத்ன
219. - மிஞ்சியிட்டுக் கொற்றம் விளக்கு மணியோசை
அஞ்சியிட்ட பேருக் கபயமென-விஞ்சு
220. - வரையில் வெயிலெறிக்கும் வாறுபோற் பீதாம்
பரவுத்த ரீகம் பரித்துத்-தரணிமுற்றும்
221. - ஓரடி கொண்டளந்தங் கோரடி தூக்கிநின்ற
ஈரடியும் பாவடியி லேற்றியே-ஏரடர்க்கும்
222. - (யானையின் சிறப்பு)
பாடகச் சீறடியார் பங்கயக்கை லாகுதர
ஆடகப்பொன் கூடத் தயல்வந்து-ஓடைமின்னல்
223. - கொண்டிருண்டெ ழுந்துநின்ற கொண்டலென்ற பண்புகொண்டு
தண்டரங்க மொண்டகும்ப சம்பவன்றி-ரண்டவங்கைத்
2240. - தொண்டலங்கொ டுண்டுமிழ்ந்து தொந்தமென்று மன்றிலண்டர்
கண்டபண்ட ரங்கனந்த கன்கரத்தி-ரண்டுகண்பு
225. - தைக்கமொத்தி ருத்ரமிக்க தட்டியட்ட திக்கயத்தின்
மத்தகத்தி னைத்தகர்த்து வட்டமிட்டெ-திர்த்தகற்கி
226. - கத்திகட்டி விட்டமத்த கத்தினத்தி யைத்துகைத்துச்
சத்திரக்க ரத்தரைத்த லத்தினற்சி-ரத்தையெற்றி
227. - யுத்தரங்க மீதி லுருத்த ரணவீர
பத்திரன் போன்முசலம் பற்றியே-நித்தநித்தம்
228. - விந்தை கொலுவிருக்கும் வெற்பொன்று கான்முளைத்து
வந்து நடைபயின்ற வாறென்ன-முந்துதெவ்வர்
229. - சிந்துஞ் சதுரங்க சேனா சமுத்திரத்தை
மந்தரம் போல மதித்துவெற்றி-தந்துநின்று
230. - (பவனிவரல்)
நந்தா வளக்கரட நால்வாய்ப் பனைத்தடக்கைத்
தந்தா வளப்பவனி தான்வரலும்-பிந்தாக்
231. - குடைநெருங்கக் கோடி கொடிநெருங்கக் காலாட்
படைநெருங்கத் தாவு பரிமா-புடைநெருங்க
232. - மள்ளர் குரவை மலிய மதாவளத்தின்
வெள்ள மிகுதி மிடையவே-துள்ளிவிட்டு
233. - மன்னிய வார்பெலமா மல்லா ரிராசவார்
துன்னியவரா வுத்தரணி சூழ்ந்துவர-மின்னுவெள்ளித்
234. - . துப்பாக்கி யூழியத்தர் தோமரத்தர் கேடயத்தர்
தப்பாது விற்காரர் தற்சூழக்-குப்பாய
235 - நேரிசத்தர் வாட்காரர் நேமிதரித் தோர்களிரு
பாரிசத்துங் கேப்புலியொப் பாகவரத்-தாரிசைத்த
236. - (வாத்தியங்கள்)
ஒட்டகத்தின் கூன்முதுகி னோங்குமத குஞ்சரமேற்
கொட்டுநக ராபேரி கொண்டலின்வாய்-விட்டதிரத்
237. - . தண்டகந் தாங்குந் தகுணியுங் கோடிணையும்
தொண்டகமுஞ் சல்லரியுந் துந்துமியும்-விண்டதொனி
238. - மத்தள தாள வகையுங் கிடுபிடியும்
தொத்திலகு நாக சுரத்தொனியும்-சத்திக்கும்
239. - வாங்காவுங் கானாவும் வாங்கா மணிக்கொம்பும்
பூங்காமன் றூரியத்தைப் போன்முழங்க-நீங்காத
240. - தம்புரு வீணை சரமண் டலம்வரியாத்
தும்புரு கானத் தொனிகூட்டப்-பம்பு
241. - (மற்றச் சிறப்புக்கள்)
பரதவிட மாதர் படிதம் பயிற்றச்
சுரதவிட வாரயினி சுற்ற-உரதருண
242. - கட்டியத்தர் வேத்திரக் கையாற் பராக்கென்னத்
தட்டி வருஞ்சந் தடிவிலக-மட்டுவிரி
243. - பொன்னடைப்பை காளாஞ்சி பூஞ்சிவிறி வீசுகுஞ்சம்
சொன்னடக்கை யோரேந்திச் சூழ்ந்துவர-அன்னடக்கும்
244. - சந்த்ர கிரண சமுக மிருபாலும்
வந்ததென்ன வெண்சா மரையிரட்டச்-செந்தமிழின்
245. - (சின்னம் ஒலித்தல்)
நாவலர் தாருவந்தான் ராயர்மகிழ் மந்த்ரிவந்தான்
பூவலரு நீலப் புயன்வந்தான்-ஆவறரு
246. - பொன்னா பரணன் புகழா பரணமெனும்
கன்னாவ தாரவுப காரிவந்தான்-பொன்னாரும்
247. - மாதர் மடலெழுது மால்ராம க்ருஷ்ணமன்னன்
சோதரனா முல்லைத் துரைவந்தான்-மேதினியில்
248. - கொட்டமிடுங் கள்ளர் குறும்படக்கு வோன்வந்தான்
வட்டமிடு மாநகுலன் வந்தானே-றிட்டெதிர்த்துச்<
249. - சீறுஞ் சமர திவாகரன்வந் தான்விருது
கூறும் விகடர் குடாரிவந்தான்-வீறு
250. - சரணென் றடைந்தோரைத் தள்ளாத கங்கை
வருண குலதிலகன் வந்தான்-தருண
251. - கரதல பற்பநிதி காத்தவ ராயன்
வரதனையன் வந்தான்வந் தானென்-றொருதாரை
252. - சின்னவொலி மேருத் திரைக்கடலி னாட்டியநாள்
மன்னுமொலி போல மலியவே-கன்னியெயில்
253. - (குழாங்கொண்ட மகளிர் செயல்)
மண்டபமு நந்தா வனமு மலர்வீடும்
கொண்ட பெருந்தெருவுங் கோபுரமும்-மண்டிவிளை
254. - யாடுகின்ற பேதையரே யாதியா யேழ்பருவ
வாடுமிடை யார்கோடி மாலாகி-ஓடிவந்துட
255 - கண்ட வுடன்கமலக் கைகுவித்தார் மெல்லமெல்லக்
கொண்டுநட தந்தியெனக் கும்பிட்டார்-மண்டலமேல்
256 - ஆணி லழகனிவ னாமென்பார் கண்காண
வேணு மனந்தமென்பார் மெல்லியலார்-சேணிக்கு
257 - மாரனோ விந்திரனோ மாமாலோ சூர்தடிந்த
வீரனோ பாருமென்பார் மெல்லியலார்-மாரனென்றாற்
258. - கன்னற் சிலையுண்டே காணரதி யோநாமும்
வன்னிப் பரியெங்கே மாரனென்றாற்-பொன்னிலகு
259. - விண்ணாடர் கோமானேல் வெள்ளைமத யானையுண்டே
கண்ணா யிரமெங்கே காட்டுமென்பார்-எண்ணாமல்
260. - முன்னகத்தை யேந்து முகில்வண்ண னாமாயிற்
பன்னகத்தை யுண்ணும் பரியெங்கே-அந்நகத்தை
261. - தாக்குமயில் வீரனென்றாற் சந்ததமு நீங்காமற்
காக்கு மயில்வா கனமுண்டே-பார்க்கினிவன்
262. - மேழி விருதால் விருதுசின்னஞ் சொல்லுவதால்
வாழி குவளைமலர் மாலையால்-ஆழிதொட்ட
263. - ராகவன்கைத் தாண்டவ ராயமன்ன னாமென்றே
மாகவன மாகவே வந்துநின்ற-வேகமிக
264. - (குழாங்களின் கூற்று)
உன்கா லுரலா வுலக்கை மருப்பாக
வன்காமன் றன்சிலையை மாட்டாயோ-நன்கானச்
265. - செய்க்கரும்பு தின்னத் தெவிட்டாதோ மன்மதனார்
கைக்கரும்பு தின்றாற் கசக்குமோ-மைக்களிறே
266. - கொட்டமிடுந் தெவ்வர் குடையைச் சிதைப்பதலால்
வட்ட மதன்குடைக்கு மாட்டாயோ-குட்டைமுனி
267. - தன்கைக் கடங்குமிந்தத் தண்கடலை நீண்டிருந்த
உன்கைக்கு ளேயடக்க வொண்ணாதோ-பொன்கொட்டிக்
268. - கப்பமிடார் செய்குன்றைக் கட்டழிப்பாய் தென்மலையை
அப்பரிசு செய்யவுன்னா லாகாதோ-செப்பும்
269. - மதமோ மொழிந்திடநால் வாயிருந்துங் கூறா
விதமேதோ வேழையர்கண் மீதும்-கதமுண்டோ
270. - என்றார் நமதுபணி யெல்லாமுங் கைக்கொண்டால்
நன்றா மமைச்சருக்கு ஞாயமோ-குன்றாத
271. - வள்ளத் தனத்தியர்கள் வஞ்சரைச் சூறைகொள்வோன்
கள்ளத் தனத்தையெங்கே கட்டுரைப்போம்-தெள்ளுதமிழ்
272. - மல்லையான் சொல்லு மதுர கவிக்கல்லால்
முல்லையா னம்பான் மொழிவானோ-மெல்லியலீர்
273. - அந்தமல்லர் கோட்டைகட்டி யாளுகின்றான் பஞ்சணையில்
வந்தமல்லர் கோட்டைகட்ட வாரானோ-சொந்தச்
274. - செயமங்கை வீற்றிருக்குஞ் செம்பொன் மணிக்குன்றாம்
புயமங்கை யாற்றழுவப் போமோ-பயமென்றே
275. - ஏழையர் வார்த்தைசெவிக் கேறுமோ மேனியெல்லாம்
மாழையுருக் கொண்டோமோ வாருமென்னச்-சூழநின்று
276 - (தலைவி தலைவனது பவனி காணவருதல்)
கன்னியர்க ளின்னபல கட்டுரைக்கும் வேளையினில்
மன்னுமத யானையின்முன் வந்துநின்றேன்-கன்னற்
277 - சிலையேந்து சிங்கார தேக மதனை
மலையேந்தி யான்புரந்த மாலைத்-துலைசேர்
278. - சிவிச்சக்ர வர்த்தியைப்போற் சேர்ந்தோரைக் காத்த
புவிச்சக்ர வர்த்தியைமுன் போரிற்-சவிச்சக்ரம்
279. - . ஆதவன்மே லேவிநின்றே யாரிருள்பூ ரித்துநின்ற
மாதவனை நீள்கருணை வாரிதியை-மோது
280. - பரதிமிர ராசியடர் பாற்கரனை யார்க்கும்
சரதகுண சந்த்ரோ தயனை-விரவு
281. - காதலபங் கேருகனைக் காத்தவ ராயன்
வாதனய னான மணியச்-சருவும்
282. - விரவலர் கோளரியை விற்பனனை வாணர்
புரவலனை நீலப் புயனை-இருநிதியைக்
283. - (தலைவி மயல்கொள்ளல்)
கண்டேன் திருவழகைக் கண்குளிரச் சேவித்தேன்
கொண்டே னதிமோகங் கொண்டமயல்-விண்டுரைக்க
284. - இவ்வேளை நல்வேளை யென்றுசொல்லும் வேளையினிற்
செவ்வேழங் கான்மீறிச் செல்லவே-வெவ்வேல்
285. - மதனம்பு பாய வரிக்கணம்பு பாய
விதனமொடு சோர்ந்து மெலிந்தேன்-பதன
286. - இடைதுவளக் குன்றமென வேந்துவளக் கொங்கை
நடைதுவள மெல்ல நடந்தேன்-புடைதழுவு
287 - விஞ்சுசகி மார்செறிந்து மேலணைத்துக் கொண்டேக
நெஞ்சு சகியே னிலைதளர்ந்தேன்-பஞ்சணையிற்
288 - சேர்த்தினார் பன்னீர் தெளித்தார் தழலினிடை
வார்த்தவெண்ணெய் போலவுள்ளம் வாடினேன்-கூர்த்துமுகம்
289. - பாராத வன்மயலாற் பாவி யுடல்வருந்தத்
தேராத வன்குடபாற் சென்றொளித்தான்-பேராத்
290. - துருத்திதென்றன் மாலை சுடர்மதியம் வெள்ளி
உருத்தசெழுந் தீயி னுருக்கி-விருத்தமதன்
291. - வாரி யிறைப்பதுபோல் வன்னிலவு வீசவிரா
ஓருகமே யாகி யுடலயர்ந்தேன்-பாரறிய
292. - அம்பலரும் பாரலரு மாக்கினான் மன்மதன்கை
அம்பலருக் காரவமே யாக்கினான்-அன்பு
293. - தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூதென்-றகத்தறிந்தே
294. - புத்திமான் சந்து பொருந்துவாய் நீநினைந்தாற்
சித்தியா மென்றே தெளிந்துரைத்தேன்-பத்தியாய்ப்
295 - (தலைவி தூதுரைக்கும் சமயத்தைக் கூறுதல்)
பூசைபண்ணும் வேளையினிற் போகேல் சமத்தான
ராசவட்ட வேளையிலு நண்ணாதே-யோசனைசெய்
296. - தானாபதியர் தளகர்த்தர் காரியத்தர்
ஆனாத போது மணுகாதே-தானாக
297. - ஒப்பமிடும் வேளையிலு மொன்னார் திறைகொணர்ந்து
கப்பமிடும் வேளையிலுங் கட்டுரையேல்-எப்புவிக்கும்
298 - பேராட்டும் வாணர் ப்ரபந்தகவி வந்திருந்து
பாராட்டும் வேளை பகராதே-சீராட்டும்
299. - உல்லாச மன்மதன்போ லொண்டொடியார் கூட்டமிடும்
சல்லாப வேளையிலுந் தானுரையேல்-வல்லாள
300 - போசன் கொலுப்பெருக்கிப் போசனமுந் தான்பண்ணி
வீசுமலர்ச் சப்ரமஞ்ச மீதினிலே-நேச
301. - மிதசனங்க டற்சூழ வீற்றிருக்கும் வேளை
மதுமலர்த்தார் வாங்கிநீ வா.
--------------------------------------------------
குறிப்புரை
காப்பு :
முல்லை - முல்லையூர். இது பாட்டுடைத்தலைவராகிய தாண்டவராய பிள்ளையின் ஊர். தாண்டவராயர்; சிவகங்கை ஸம்ஸ்தானத்தில் ஸ்தானாபதியாக இருந்தவர். புவிநாயகன் - திருமால். திருமாலும் அன்பரும். கசம் முகம் விநாயகர்; கசமுகம் - யானைமுகம்
கண்ணி, 1. மா - திருமகள். மாதவன் - திருமால்
4. சந்திரனிடத்திலுள்ள களங்கத்தை மானென்பது வழக்கமாதலின் இங்ஙனம் கூறினார். மதிமான் - அறிவுடையவனென்பது வேறுபொருள்.
4-5. ஐந்து தலையரையன் - பிரமதேவர், கவர்ந்தார் - சிவபெருமான்.
5-6. சிவபெருமான் உமாதேவியாரைத் திருமணம் செய்துகொண்ட பொழுது வைதிகமரபின்படி தேவியாரின்
ஒருகாலைப்பிடித்து அம்மி மீது ஏற்றிய செய்தி இங்கே குறிக்கப்பட்டுள்ளது.
6. சிவபெருமான் திருக்கரத்தில் மானின் பின்னிரண்டு கால்களே அமைந்துள்ளனவென்பது இங்கே அறிதற்குரியது.
7. படை-பஞ்சாயுதங்கள். சாரங்கம்-வில்; மானென்பது வேறு பொருள்; சாரங்கமென்பது சாரங்கமென்றும் வழங்கும்; "சாரங்க பாணியாஞ் சக்கரத்தார்" என்று காளமேகம் இங்ஙனமே சிலேடையில் அமைத்திருக்கின்றனர். குரங்கா-வளைத்து.
7-8. காரங்கம் பெற்றோன்-திருமால். மனைவி- திருமகள். வள்ளி நாய்ச்சியாரைப் பெற்ற மான் திருமகளின் கூறென்பராதலின் அம்மானாகிய திருமகளை ஒருமான் பெற்றிருக்க வேண்டுமென்று கருதி இங்ஙனம் கூறினார்.
11. நத்து-விருப்பம்; சங்குமாம். கலைமான்-சரசுவதி, ஆண்மான்; சிலேடை.
13. மான்மருகன்: சிலேடை. திருமகளுக்குச் சிவபெருமான் தமையனாரென்று கூறும் ஒரு வழக்குண்டு. திருமகள் மானுருவங்கொண்ட செய்தியை நினைந்து இங்ஙனம் கூறினார்.
14. செங்கமலை மால்-திருமகளையுடைய திருமால்.
16. பெருமான் - பெருமையையுடையான், பெரியமான், தன்னாமம் - உன்னுடைய பெயர்.
16-8. கலைக்கோட்டு முனி - ரிச்யசிருங்கர். அவர் தசரத சக்கரவர்த்திக்காகப் புத்திரகாமேஷ்டியாகம் செய்தவர்.
19. அந்திமான் சந்திமானென்பவர்கள் இடையெழு வள்ளல்களைச் சார்ந்தவர்கள். வச்சயம்-மான்.
20. பின்னலான்- சிவபெருமான். வேதண்டம்-கைலை.
22. அருணம் என்பது மானுக்கும் பெயர்; அரிணமெனவும் வழங்கும்; பரிதி யென்பது பருதி யென்று வழங்குதல் போல.
23-4. காளமாமுனிவன் - துரியோதனாதியர் ஏவலின்படி யாகம் செய்த முனிவர். இங்கே சொல்லப்பட்ட வரலாற்றைப் பாரதம் நச்சுப்பொய்கைச் சருக்கத்தால் உணரலாம்.
25-6 மானுக்கும் அகத்திய முனிவருக்கும் சிலேடை. எள் அவரைதான் அடக்கி - எள்ளையும் அவரையையும் தின்று உள்ளே அடக்கி; எள்ளவரைதான் அடக்கி - யாவரும் இகழ்வதற்குரியதாகும்படி விந்தமலையை அடக்கி. கடலை - கடலையை, சமுத்திரத்தை. கலை - மான்கள், நூல்கள், சாதனை - பயிற்சி.
27. வாசி - குதிரை. கான்தேசம் - காட்டிடம்.
28. மிருகமென்னும் பெயர் மானுக்குண்மையை நினைந்து இங்ஙனம் கூறினார்.
29. கலையூர் மானூரென்பன இப்போது சேது ஸம்ஸ்தானத்திலுள்ள ஊர்கள்.
31.2 செயமாது - துர்க்கை; அவள் வாகனம் மான்; இதனைக் கலையானத்தி யென்னும் பெயராலறிக.
32. தெவ்வர் - பகைவர்.
33. பேர் - புல்வாய்; பகைவருடைய வாயிற் புல்லைக்கண்டால்; புற்கௌவிய பகைவரைக் கொல்லாமல் விடுவது இயல்பு; "பகைவர் புல்லார்க" ஐங்குறுநூறு, 4.
34. குழலார்க்கும் ஆடவர்க்கும். கலையென்னும் பெயர் ஆடைக்கும் மானுக்கும் உண்மையைக் கருதி இங்ஙனம் கூறினார்.
34.5. கானமுனி சாபத்துக்கு - காட்டில் உன்னை முனிகின்ற வில்லுக்கு. சாலம் ஒழிவார் - வலையை விட்டிருப்பாரை. முனிவர்களது சாபத்துக்கு அஞ்சுவாய், மாயவார்த்தைகளைப் பேசுவார்களைக்கண்டால் விலகி நிற்பாயென்பது வேறொரு பொருள்.
36. சந்திரகுலத்திற் பிறந்த பாண்டு மகாராஜன்.
36.7- இதிற்கண்ட சரித்திரத்தின் விரிவைப் பாரதத்திற் சம்பவச் சுருக்கத்தால் அறியலாம்.
36.9. புலியும் குஞ்சரமும் தாருகாவனத்துமுனிவர் யாகத்தில் உண்டாக்கி விடுத்தவை; கொன்றோர் - சிவபெருமான். முயல் - முயலகன். மற்ற விலங்குகளை அடக்கினவர் உன்னை ஆதரிக்கின்றாரென்பது வேறு பொருள்.
41. சிறியவரை - சிறியமலைகள்; என்பது மரமில்லதபொற்றைகளை சிறுமையுடையோர்களை யென்பது வேறுபொருள்.
43. அரிய மேன்மையான தினையை விளைக்கும் பெரிய மலைகளை நாடும் புத்தியுடைய மானே; அரியவரங்களைத்தரும் பெரியவர்களைச் சாரும் அறிஞனேயென்பது வேறு பொருள்.
45. அரிதாள் - தினையரிந்த தாள், திருமாலின் திருவடி.
46. கட்புலங்காணா ரூபம் - அரூபம், கால் வாதம் - காற்றாகிய வாதம்; வாதக்காலை யுடையவனென்பது வேறுபொருள்.
46-7. வாயுவிற்கு வாகனம் காற்று. வாசி - வாகனம்.
48. மகளிர் கண்ணிற்கு மான்கண்ணை உவமை கூறுதல் மரபு.
52. பிணை - புணை; தெப்பம்.
53. கண்ணார் - மகளிர்.
54. பானாளில் - இடையாமத்தில்.
55. சந்து - தூது,
57. வாள்-ஒளி. காளகண்டம் - குயில்; விஷம்பொருந்திய கழுத்தையுடையதென்பது மற்றொரு பொருள்.
58. மதுபானி - தேனைக்குடிப்பது, கட்குடியன்.
59. கோபம் - இந்திரகோபப்பூச்சி, சினம். கலாபம் - தோகை, கலகம். சோபம் - சோகம்.
60. பிரிக்குமேயன்றிச் சேர்க்காதென்பது கருத்து.
62. பூவை - நாகணவாய்ப்புள்; மைனா. கத்திகை வாங்க - மாலையை வாங்க, கத்தியைக் கையில் வாங்க.
63. பாகம் - பக்குவம்.
64. பாங்கி - உஷையின் பாங்கியான சித்திரலேகை.
66. மன்றல் - மணம். அணி - அண்ணி.
67. மேகலை - இடையணி.
69. வழுத்த - சொல்ல.
70. பொதியிலுக்கும் சிவபெருமானுக்கும் சிலேடை. அம்புதம் - மேகம். பம்புதல் - பரவுதல்.
70-71. பொதியிலுக்கும் திருமாலுக்கும் சிலேடை. அம்பரம் - மஞ்சள், கடல். பொன் - தங்கம், திருமகள். கோடு - சிகரம், சங்கு. சிலை - ஒருமரம், வில். திகிரி - மூங்கில், சக்கரம்.
72. பொதியிலுக்கும் பிரமதேவருக்கும் சிலேடை. நான்முகம் - நான்கு பக்கத்திலும், நான்கு முகங்கள். சாகை - வேத சாகைகள், மரக்கிளைகள். பூ - மலர், பூமி. மான்மகன் - திருமாலின் குமாரராகிய பிரமதேவர்.
73. பொதியிலுக்கும் இந்திரனுக்கும் சிலேடை. அரம்பை பலர் - வாழையும் பலரும், பல தேவமகளிர்.
74-5. செந்தமிழின் ஏடு - திருஞான் சம்பந்தமூர்த்தியின் திருப்பாசுரம் வரையப்பெற்ற ஏடுகள். கோடு - கரை.
76. கயல் வையையிலுள்ளது; மகரம் கடலிலுள்ளது. பண்டைக் காலத்தில் வையை கடலில் கலந்ததுண்டு. பாரித்து-பரவி.
77. மாறன்-கூன்பாண்டியர். 78. சேடு-பெருமை.
79. பூட்டும்-மன்மதன் வளைத்தற்கு நாண் பூட்டுகின்ற. மொழி - கணு; "மொழியு மினியீர்" அழகர் கலம்பகம்.
81. பாளையம்-படைவீடு.
83. அவை-நாளோலக்கம்; ஆஸ்தானம். வேணி-ஆகாசம்.
84. வேந்தன்-இந்திரன். 84-5. வச்ரவண்ணன்-குபேரன்.
89. கண்டு - கற்கண்டு. நீலமாலிகை - குவளைத்தார்; இது வேளாளர்க் குரியது.
90. படலம் - புழுதித்திரட்சி. விகடர் - வேறுபாட்டையுடைய பகைவர்கள்;
.
91. கெருவிதம் - இறுமாப்பு. 92. நெட்டரவு - ஆதிசேடன்.
93. காற்கதி - காற்றினது வேகம்; காற்பாகமாகிய வேகம். ஐந்து கதி - மல்லகதி முதலிய ஐந்து; விக்கிதம் முதலிய ஐந்துமாம்.
94. கற்கிவடிவம் - பத்தாவது அவதாரமாகிய குதிரையின் உருவம்.
95. ரணவாசி - போர்க்குதிரை.
96. மாதிரம் - திசை. தொக்கயங்கள் - டக்கயங்கள்; கொடிகள். தொக்கு - தோல்.
98. குணக்கெடுத்து - கோணலை நீக்கி.
99. அத் தளம் - அந்தச் சேனை.
101. மதி ஆதவர் பகை - ராகு கேதுக்கள்
102. நத்து ஓலும் - சங்குகள் முழங்கும். நாதரொரு மூவர் - திரிமூர்த்திகள். முத்தோல் - மூன்றுநிறமுள்ள தோல்கள்; ஏற்றுத்தோல், எருமைத்தோல், ஆட்டுத்தோல் எனினுமாம்.
103. காற்படை - காலாட்படை. கைக்கிரி - யானை. மா - குதிரை. ஆர்ப்பரித்து - முழங்கி.
104. விகடமருவலர்கள்:90. 105. தரங்கம் - அலை.
106. சிந்துரங்கள் - யானைகள். சிந்து உரங்கள் ஆகி - வலி சிந்தியனவாகி; உரம் - வலி
107. தட்டு - தேரின் உறுப்பு. வலவன்-தேர்ப்பாகன்.
108. குபீரிட்டு - பொங்கி.
109. மோடு - உயரம். கோள் - கொள்கை.
110. பல் துணிய. 111. பெட்டகங்கள் - பெட்டிகள்.
112. சாளையப்பட்டு - குடிசைகள் இருக்குமிடம்; இவை கைந்நிலையென வழங்கும். சளப்பட்டு - கலக்கப்பட்டு.
பாளையப்பட்டு - படைதங்கிய இடம்.
114. பட்டம் - காற்றாடி. பருந்து வெள்ளை நிறம்; கருடன் செந்நிறமுள்ளது.
116. தசையருந்தி நன்னீரெனச் செந்நீரைக் குடித்து.
117. கறட்டுப்பேய் - குள்ளமான பேய்.
119. பொட்டல் - வெளியான இடம். கூப்பிட்டு - கூவி.
120. கலிங்கதேசத்தரசனோடு கருணாகரத் தொண்டைமான் செய்த போர்ச்சிறப்பைக் கலிங்கத்துப்பரணியால் உணரலாகும்.
121. கூளி - பெண்பேய். கவந்தம் - தலைபோன உடம்பு.
122. மாகமின்னார் - அரம்பையர். போரில் இறந்தவர்கள் வீரசுவர்க்கம் அடைதலும் தேவமகளிரை அடைதலும் மரபென்று நூல்கள் கூறும்.
123. முனை - போர்.
124. வேலாவலயம் - கடல்வட்டம்.
125. கோட்டி - திருக்கோட்டியூர். ஒப்பம் - கையெழுத்து. நந்து - ச்ங்கு.
126. தென்குளத்தை - சிவகங்கை. கோகனக மின் - திருமகள்; அவள் குழந்தை காமன்.
127. சுடிகை - சுட்டி. சோமன் - சோழநாட்டுத் திரிபுவனத்தில் வாழ்ந்த ஓருபகாரி; "கையை விரித்தழைக்கக் கண்டு குழந்தைச் சோமன், செய்யசுட்டி யீந்தான் றினகரா" தினகரவெண்பா, 26.
129. சசிவர்ண பூபன் - சசிவர்ண துரை; இவர் சிவகங்கையை ஆண்டவர்களுள் ஒருவர்.
131. மந்திரம் - ஆலோசனை. நீயோகம் - நியோகமென்பதன் விகாரம்.
135. கவன மா - வேகத்தையுடைய குதிரை.
136. தளகர்த்தன் - படைத்தலைவன்.
137. வேளாளர்களில் ஒருவர் உக்கிரபாண்டியனாற் சிறையிடப்பட்ட மேகங்களைப் பிணைகொடுத்து விலங்கு தறிக்கச் செய்தனரென்ற வரலாற்றை நினைந்து இங்ஙனம் கூறினார்.
138. பழையனூர் நீலிக்காக எழுபது வேளாளர் தம் உயிரை நீத்த வரலாறு இதிற் குறிப்பிக்கப்பட்டது;
"மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத் தாங்கள்,
கூறியசொற் பிழையாது துணிந்து செந்தீக் குழியிலெழு பதுபேரு முழுகிக் கங்கை,
ஆறணிசெஞ்சடைத்திருவா லங்காட் டப்ப னண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கிழ்மெய்ப்,
பேறும்பெறும் வேளாளர் பெருமை யெம்மாற் பரித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ"
---சேக்கிழார் புராணம்.
139. சூலிமுதுகில் - கருப்பஸ்திரீயின் முதுகில். சோறளித்தவன் - அயன்றையென்னும ஊரிலிருந்த சடையனென்னும் உபகாரி; தொண்டை மண்டலசதகம், 10-ஆம் செய்யுளைப் பார்க்க. சூலி பசி - சிவபெருமானது பசியை.
140. அன்னமிட்டோன் - இளையான்குடி மாறநாயனார். வள்ளல் - நின்றைக்காளத்தி முதலியார்.
141. நிறுத்தினோன் : சடையப்பவள்ளல்; தொண்டைமண்டல சதகம், 13-ஆம் செய்யுளைப் பார்க்க.
143. குழந்தை : இந்நூலசிரியர் பெயர்; இளங்குழந்தை யென்பது வேறுபொருள்.
145. குன்றாக்குடி - குன்றக்குடி.
146. செந்நூல் - செவ்விய சிற்பசாஸ்திரம்.
147. பூந்தரு - மலர்மரங்கள், படித்து உறையும் மண்டபம்.
149. கங்கைகுலன்: வேளாளர் கங்காகுலத்தினரெனப்படுவர்.
150. சீதளி- திருப்புத்தூர்ச் சிவாலயம். கொன்றை: திருப்புத்தூர்த்தலவிருட்சம். பைரவமூர்த்தி சந்நிதி இத்தலத்தில் விசேடமுடையது.
151. மங்கைபாகர்: திருக்கொடுங்குன்றத்துச் சிவபெருமான் திருநாமம். மாதவன் - ஸ்ரீ சௌமியநாராயணப்பெருமாள்.
152. தண்டலை - சோலை. வில்வத்தளமும் மலர்களும்.
156. பார் - வன்னிலம்.
158. பெரியவுடையான் - வடுகநாத துரை.
162. சாலை - சத்திரம்.
165. தாபரிப்போன் - நிலைபெறச்செய்பவன்.
166. மணாளன் - தலைவன். அவர்களை அடக்கி அவர்கள் பொன்னைத் தனக்குப் பயன்படச்செய்பவனென்பது கருத்து.
167. கருணாகரன் - கலிங்கப்போர் வென்ற சோழசேனாபதி.
168. சுபகாரி - சுபத்தை உண்டுபண்ணுபவன்.
170. பதுமன் - பிரமன். முனி - விசுவாமித்திரர்;
"வந்து முனியெய்துதலு மார்பிலணி யாரம்,
அந்தர தலத்திரவி யஞ்சவொளி விஞ்சக்,
கந்தமல ரிற்கடவு டன்வரவு காணும்,
இந்திர னெனக்கடி தெழுந்தடி பணிந்தான்"
(கம்ப. கையடைப்.) என்பதில் விசுவாமித்திரமுனிவருக்குப் பிரமதேவரை உவமைகூறியது காண்க. காலினான் - இராமன்.
171. விந்தை - வெற்றிமகள். கோகனகை - திருமகள்.
172. வங்கணம் - அன்பு.
174. காந்தருவகானவித்தை - ஸங்கீதவித்தையை.
175. கீர்த்திகரித்து - புகழை உண்டாக்கி. மூர்த்திகரித்த - உருவுகொண்ட.
177. தீர்த்து அவர் ஆய் அன்புபுரி சீதரமால்; அவர் - பஞ்ச பாண்டவர்.
179. நேர்ந்தாலும் - எதிர்த்தாலும்.
181. அமிர்தகிரணத்தை யுடைமையால் தேன் தொட்ட இந்து என்றார்; இந்து - சந்திரன்.
182. செய்க்கு - வயல்களில். வளைநித்திலம் - சங்குகளிலிருந்து உண்டான முத்துக்கள்.
184. அதுலன் - ஒப்பிலாதவன். குளந்தை - சிவகங்கை.
187. பூமணிகா - அழகிய சிந்தாமணியும் கற்பகமும்.
191. மடங்கல் - சிங்கம். வயம் - வெற்றி.
192. பிறை ஆயிரங்கள் தொழுவோன் - தீர்க்காயுளை உடையான்; ஆயிரம்பிறை கண்டோரென்று முதியோரைக் குறித்தல் ஒருமரபு; "ஆயிர மதியங்கண்ட முந்தைவே தியராத்தோன்றி" (திருவிளை. 63 : 68); 61 : 40.
193. தந்திரசிந்து - சேனையாகியகடல். செனகன் - ஜனகராஜனைப் போன்றவன்.
194. மந்தரம் - மந்தரமலையைப்போன்ற. தரு - கற்பகம். சரி - ஒப்பு.
195. காரி - கடையெழுவள்ளல்களில் ஒருவன். குணவாரி - குணக் கடல். மாரி மதம் - மழையைப்போன்ற மதத்தையுடைய.
199. சங்க்ராமம் - சண்டை. 198-9. சொல்மருவு உதாகரிகன்.
200. கோடு - சிகரம்.
201. சீவகனென்றபடி. சுரமஞ்சரி - சீவகன்மனைவி. மாலை - குணமாலை.
206. வாய்பூசி - வாயைச்சுத்தம் செய்துகொண்டு. ஆசாரம் - அரசிருக்கை.
207. பாகு - தலைப்பாகை.
208. மூவர் - திரிமூர்த்திகள். காணிக்க - காட்ட.
209. முருகன்-முருகென்னும் ஆபரணத்தையுடையான், முருகக் கடவுள்.
212. கோகனகை - திருமகள். பதக்கம் - மார்பில் அணிந்து கொள்ளும் ஆபரணம்.
213. தாழ்குழலார் சங்குவளையையும் மாலையையும் சிந்தித்தொடர.
215. மா குவலையம் - பெரிய பூமி. சுமடு - சும்மாடு, மணியாலாகிய வாகுவலையம். மாகர் - தேவர்.
216. கைச்சரடு - கைத்தோற்கட்டி.
217. சலவை - வெளுத்த ஆடை. குறிய உடைவாள்.
218. கண்ணபிரானாகப் பாவித்தபடி. சகடம் - சகடாசுரன்.
219. மிஞ்சி - ஒருவகைக் கால்விரலணி.
220. வரை - மலை. வாறு: "வந்து நடைபயின்ற வாறென்ன" (228) என்பர்பின். "வல்லோ னுலாவந்த வாறென்ன" (சொக்கநாதருலா.) பரித்து - தாங்கி.
221. பாவடி - மிதியடி.
222. ஓடை - நெற்றிப்பட்டம்.
223. கும்பசம்பவன் - அகத்தியன்; அங்கை - அகங்கையை ஒத்த.
224. தொண்டலம் - துதிக்கை. பண்டரங்கன் - சிவபெருமான். சிவபெருமானும் யமனும் கண்புதைக்க.
225. ருத்ரம் - கோபம். மிக்கு அதட்டி. கற்கி - குதிரை.
225-6. கற்கியையும் அத்தியையும் துகைத்து. சத்திரக் கரத்தரை - சஸ்திரங்களையுடைய கையினர்களை; சஸ்திரம் - வாள்முதலிய படைகள்.தலத்தில் - பூமியில்.
227. யுத்தரங்கம் - போர்க்களம். முசலம் - உலக்கை.
228. விந்தை - வெற்றிமகள்.
230. கரடம் - மதம் பாய்கின்ற சுவடு. தந்தாவளம் - யானை.
232. குரவை - குரவைக்கூத்து; குரவைப்பாட்டுமாம். மதாவளம் - யானை.
233. மன்னியவார் - மன்னியர்கள்; ஒருவகைச் சிற்றரசர்கள். ராவுத்தர் - குதிரைவீரர்.
234. குப்பாயம் - சட்டை.
235. நேரிசத்தர் - எறிபடையையுடையார்; நேரிசம் - அம்பு முதலியவை. நேமி - சக்கரம். பாரிசம் - பக்கம்.
236. நகரா - ஒருவாத்தியம். பேரி - முரசு. கொண்டலின் - மேகத்தைப்போல.
237. தண்டு அகம்தாங்கும். தகுணி - தகுணிச்சம். கோடு இணை - இரட்டைச்சங்கு. "முன்னொற்றையிரு சங்கமுடனூத" வி. பா. நிரை மீட்சி. 5.
238. கிடுபிடி - ஒருவாத்தியம்.
240. சரமண்டலம் - ஸ்வரமண்டலம்;
"சரமண்ட லத்தி னிசையென் செவிக்கட் டனஞ்சயன்கைச்,
சரமண்ட லத்திசை யிற்பொருட் கேகினர் தாமதியார்"
(மயிலையந்தாதி, 89.) இது சுரமண்டலமென்றும் வழங்கும்.
241. படிதம் - கூத்து. அயினி - சோறுகலந்த ஆலத்தி. தருணம்- இளமை.
242. கட்டியத்தர் - கட்டியம் கூறுபவர். வேத்திரம் - பிரம்பு.
243. குஞ்சம் - ஈயோட்டி. டக்கையோர்; டக்கை - ஒரு வாத்தியம். நடக்கும் - ஓடும்.
244. நீலம் - குவளைமாலை.
248. மாநகுலன் - குதிரையைச் செலுத்துதலில் வல்ல நகுலனைப் போன்றவன்.
249. விகடர் - பகைவர்; குடாரி - கோடரி.
251-2. தாரையின் ஒலியும் சின்னத்தின் ஒலியும்.
253. நந்தாவனம் - நந்தவனம். மலர்வீடு - மலர்மண்டபம்; லதாக் கிருகமென்று கூறப்படும். மண்டி - நெருங்கி.
254. மாலாகி - மயலடைந்து.
255. தந்தி - யானையே.
256. காண அனந்தம் கண்வேணும்; அனந்தம் - அளவின்மை.
256-7. இக்கு மாரன் - கறுப்புவில்லையுடைய மன்மதன். சூர்தடிந்தவீரன் - முருகக்கடவுள்.
258. கன்னற்சிலை - கரும்புவில். இரதியையன்றி ஏனையோர் கண்களுக்குக் காமன் புலப்படான். வன்னி - கிளி.
260. முன் நகத்தை; நகம் - கோவர்த்தனகிரி. பன்னகம்-பாம்பு. பரி-கருடன். அந்நகத்தை-கிரவுஞ்சகிரியை.
261. தாக்கும் அயில் வீரன்; அயில் - வேல்.
262. விருது - இங்கே கொடி; வேளாளருக்கு மேழிக்கொடியும் குவளைமாலையும் உரியன. ஆழி - மோதிரம்.
259-62. " இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த,
அந்தரத்தா னென்னிற் பிறையில்லை--யந்தரத்துக்,
கோழியா னென்னின் முகமொன்றே கோதையே,
ஆழியா னென்றுணரற் பாற்று" என்னும் பழம் பாடல் இதன் பொருளோடு ஒத்துள்ளது.
263. ராகம் வன் கை - செம்மையையுடைய வலிய கை.
264. சிலையை - கரும்பாகியவில்லை. மாட்டல் - இடித்தல்.
265. செய்க்கரும்பு - வயலில் விளையும் கரும்பு.
266. தெவ்வர் - பகைவர். குடைக்கு - குடையைச் சிதைத்தற்கு. மாட்டாயோ - வன்மையில்லாயோ. குட்டைமுனி - அகத்தியர்.
268. தென்மலை - பொதியின்மலை; தென்றற்காற்றின் பிறப்பிடமாதலின் அம்மலையைத் தலைவி வெறுத்தனள்.
269. நால்வாய் - நான்றவாய்; நான்குவாயென்பது தொனி. கூறா விதம் ஏதோ. கதம் - கோபம்.
270. பணி - ஆபரணம்.
271. தனத்தியர்கள்; தன்மைப்பொருளது.
272. மல்லையான் - மல்லையூரிலிருந்தவன். மல்லையென்பது மிதிலைப் பட்டிக் கவிராயர்களுக்குரிய அடைமொழி. முல்லையான் - முல்லையூரான்; என்றது இப்பாட்டுடைத் தலைவரை.
273. பஞ்சணையில்..... கட்ட : குறிப்பு.
274. வீரமுடையார் தோளில் செயமங்கை இருப்பதாகக் கூறுதல் மரபு;
"என்னேய் சிலமாத ரெய்தற் கெளியவோ,
பொன்னே யனபாயன் பொன்னெடுந்தோள் - முன்னே,
தனவேயென் றாளுஞ் சயமடந்தை தோளாம்,
புனவேய் மிடைந்த பொருப்பு." புயம் அங்கையால். போமோ - முடியுமோ.
275. மாழையுரு - பசலைநிறம்.
276. இன்ன பல - இத்தகைய சொற்கள் பலவற்றை.
277. ஆன் புரந்த - பசுக்களைப் பாதுகாத்த. துலை - தராசுத்தட்டு.
278. சிவி - சிபி. சவிச்சக்ரம் - ஒளியையுடைய சக்கராயுதத்தை.
279. பூரித்து - நிறைத்து.
280. பரதிமிர ராசி - பகைவர்களாகிய இருட்கூட்டத்தை. பாற்கரனை -சூரியனைப்போன்றவனை. சரதகுணம் - சரஸகுணம்.
281. வரதனயன் - வரத்தாற்பெற்ற பிள்ளை.
282. விரவலர் - பகைவர். கோளரி - சிங்கம். வாணர் - புலவர். நீலப்புயனை - குவளை மலர்மாலையை யணிந்த தோளையுடையவனை.
283. விண்டு உரைக்க - வெளிப்படையாகச் சொல்ல.
285. வரிக்கண் அம்பு; அம்பு - நீர். பதனம் - பாதுகாப்பு.
287. சகிமார் - தோழியர். சகியேன் - பொறேனாகி.
289. பாராதவன் - தலைவன். பாவியென்றது தன்னையே. தேர் ஆதவன். குடபால் - மேற்றிசையில்.
290. மாலையிற் சுடரும் மதியம். உருத்த - வெம்மையாகிய.
292. அம்பல் - சிலர்கூறும் பழிமொழி. அரும்புதலார்ந்த அலர்; அலர் - பலர்கூறும் பழிமொழி. அம்பாகிய அலருக்கு. ஆரவம் - பகை.
293. இது திருக்குறள்.
294. புத்திமான் - புத்தியையுடைய மான், அறிவுடையவன். சந்து - தூது. சித்தி - காரியம் கைகூடல்.
295. சமத்தானம் - ஸம்ஸ்தானம்.
296. தளகர்த்தர் - சேனாபதியர். ஆனாதபோது - நீங்காத காலத்தில்.
297. ஒப்பம் - கையொப்பம். ஒன்னார் - பகைவர். திறை - கப்பப் பொருள்கள்.
298. பேரைச் செலுத்துகின்ற. வாணர் - புலவர்.
299. உல்லாசம் - மிக்க களிப்பு. சல்லாபம் - அளவளாவல்.
300. கொலு - திருவோலக்கம். சப்ரமஞ்சம் - கட்டில்.
301. மிதசனங்கள் - அளவான பரிசனங்கள்.

-
* "ஒர்தட்டி லேபொன்னு மோர்தட்டி லேநெல்லு மொக்கவிற்கும்
கார்தட் டியபஞ்ச காலத்தி லேகவி வாணருக்கு
யார்தட்டி னுந்தட்டு வாராது காத்தன்ன தானந்தந்து
மார்தட் டினான்முல்லைத் தாண்டவ ராய வரோதயனே"
மற்றச்சமயங்களில் அவர்மீது இவர்பாடிய செய்யுட்களிற் சில வருமாறு:-
-
1 ** "கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பசியாம லிருக்கத்தான் பதமத்தான் எழுதி னானா
அல்லத்தா னென்கலியை வெல்லத்தா னின்னைத்தான் அல்லா மற்றான்
சொல்லத்தான் வேறுமுண்டோ முல்லைத் தாண் டவராய சுகிர்தவேளே."
2. "செஞ்சிதஞ்சை மதுரைமைசூர் மாறு பாஷை
செந்தமிழின் கனமறிந்து செய்ய மாட்டார்
மஞ்சுநிகர் கம்பளத்தார் கொடுத்தி ளைத்தார்
வளர்பாக நேரிக்கு வடபாற் கெல்லாம்
பஞ்சவிலக் கணமறிந்தார் மெத்த வுண்டு
பாவாணர் கவிதையவர் பாற்செல் லாது
தஞ்சமினி வேறுமுண்டோ முல்லை வேந்தே
தாண்டவரா யாகுவளைத் தாரி னானே."
[ பாகநேரி - ஒரூர். பஞ்ச இலக்கணம் - பஞ்சத்தின்தன்மை]
** இச்செய்யுளும் சில வேறுபாடுகளுடன் வேறு ஒருவர் இயற்றியதாக வழங்குகின்றது.
3. "வெற்றியிலே கன்னனைவென் றபிமன் மாதா
மிடற்றிலே பொட்டைவைத்தான் விளங்கு மேழி
பற்றியகே தனத் துரைதாண் டவரா சேந்த்ரன்
பசுந்தமிழி னாவலர்க்குப் பணமு நெல்லும்
சுற்றியகே யூரமணித் தொடையு மீந்து
சுகந்தசசந் தனம்பூசித் தொடுஞ்ச வாதால்
நெற்றியிலே பொட்டைவைப்ப தல்லாற் சீட்டு
நெல்லிலே பொட்டைவைக்க நேமி யானே."
[ மிடற்றிலே பொட்டு; பொட்டு - தாலி.
நெல்லிலே பொட்டு; பொட்டு - கருக்காய்.
4. "மகரநெடுங் கடலுலகம் புகழு முத்து
வடுகநா தேந்தரதுரை மகிழ்ப்ர தானி
சுகாதிமன் மன்மதன்றாண் டவரா சேந்த்ரன்
சொன்னமொழி தவறாத சுத்தி கண்டு
பகருநெடுந் திருமாலு நெயிற்கை யிட்டான்
பகீரதியும் பதினெட்டாம் படிமேற்கொண்டாள்
நிகர்பெறுக சேந்திரனு முதலைப் பள்ளம்
நீந்தினான் செவனுமழு வேந்தி னானே."
5. "மாசற்றிடு திருமேனியில் வடுவுற்றது போலே
மதனபபயல் கணைசற்றுடல் வந்துற்றன வையோ
காயத்தனை புண்ணானது துட்டத்தனை யிடமாய்க்
கையத்தனை யானான்மகண் மெய்யெத்தனை நோமோ
வாசற்படி கடவாளிவண் மயலெப்படி யறிவாள்
மனதுக்கொரு தடை சொல்பவர் வையத்திலு முளரோ
ஆசைப்பட வேபோய்மகண் மோசப்பட வசமோ
அருள்தாண்டவ ராயாதமி ழறியும்பெரு மானே."
இக்கவிராயர் பாடிய செய்யுட்களைக் கேட்டு மகிழ்ந்த தாண்டவராய பிள்ளை இவருக்கு ஆயிரக்கலம் நெல் அளக்கும்படி கட்டளை யிட்டார். அக்கட்டளையை உத்தியோகஸ்தர்கள் நிறைவேற்றத் தாமதித்தார்கள்; அப்பொழுது அதனைக் குறிப்பாகத் தெரிவித்தற்கு,
-
"அருள்விசய ரகுநா தப் பெரியவுடை யாத்தேவர்
அவர்கள் தந்த
நிருபமுந்தாண் டவராய சாமிசொன்ன வுத்தரவும்
நிலையா வென்றால்
துருவனுடைய பட்டமும்போய்ப் பஞ்சகருத் தாக்களுடைத்
தொழிலு மாறி
இருசுடரு மொளிமழுங்கி யெழுபுவியு மிருளுறைந்த
வென்ன லாமே"
"ஒறுப்பான காலத்தி னென்மாரி யாக வுதவிசெய்யும்
கறுப்பாவுன் யோகந் தழைக்கு மடாவெந்தக் காலமுமே."
* இதன் முன் இரண்டடிகள் இப்பொழுது கிடைக்கவில்லை.
தமக்குத் தாண்டவராயப்பிள்ளை ஆயிரங்கல நெல் வழங்கிய இச்செய்தியை இக்கவிராயர் இந்நூலில்,
-
"முந்தக், கொடுக்குங் குணமோ குழந்தைசொன்ன தென்றோ
அடுக்கு மவன்மீதி லன்போ - எடுக்கும்
இருநிதியு நெல்லா யிரக்கலமுந் தந்தே
ஒருகவிதை கொண்டுபுக ழுற்றோன்" (143-4)
தம்முடைய செய்யுட்களில் தாண்டவராயபிள்ளை மிக்க விருப்பமுடையவரென்பதை,
-
" ........................................தெள்ளுதமிழ்
மல்லையான் சொல்லு மதுர கவிக்கல்லால்
முல்லையா னம்பான் மொழிவானோ" (271-2)
தம்மைப் பலபடியாக ஆதரித்துப் போற்றிய தாண்டவராய பிள்ளை இறந்தபோது இவர் மிகவருந்திப் பாடிய செய்யுள் வருமாறு:-
-
"கருணா கரமுல்லைத் தாண்டவ ராயகங் காகுலனே
இருணாடு நீவந் திராநாடு நீவந் திருந்தசபை
பொருணாடு நாவலர் வித்யாப்ர சங்கம் பொருந்துமையோ
தருணா தருண மறிந்தே யுதவுந் தயாநிதியே."
-
"தோடசைந் தாடுங் கனகாம் பரமயச் சோதியருட்
பீடிசைந் தோன்முல்லை ராமக்ருஷ் ணேந்த்ரன் பிடித்தெழுதும்
ஏடசைந் தாற்றெய்வ நாடசைந் தாடு மெழுத்தின் முனைக்
கோடசைந் தாலசை யுஞ்சக்ர வாளக் கொடுமுடியே."
-
"அண்டர்தொழுஞ் சிங்கையிற்சே வகராயா கேட்டாயோ ஜயோ வுன்றன்
வண்டுவிழி மலர்மாதர் பூரணைபுட் கலைதாலி வாங்கி னாரா
விண்டுலவு கள்ளர்கள்வந் தென்பிறகே தொடர்ந்துவந்த மேலாஞ் சாதிப்
பெண்டுகளை யணிகவர விட்டாயே கெட்டாயே பேர்பட் டாயே"
இப்புலவரை ஆதரித்தவர்களுள் புதுக்கோட்டை அரசராக இருந்த திருமலைத் தொண்டைமானென்பவரும் ஒருவர். அவரை இவர் பாராட்டிய பாடல்களிற் சில வருமாறு :-
1. "அந்தமிகு பொன்மலைக்குப் புராரிகையாற் சலனமுண்டங்
கரனார் மேவ
வந்ததொரு வெண்மலைக்குத் தசமுகனாற் சலனமுண்டு
மாயன் கையால்
சந்தமரு வியகோவர்த் தனமலைக்குச் சலனமுண்டு
தான சூரன்
இந்த்ரகுலன் றென்கோடித் திருமலைக்குச் சலனமென்றும்
இல்லைத் தானே."
2. *"உத்தரதிக் கினிற்பெரிய பொன்மலையொன் றிருத்தலினா லோங்கு ஞான
சித்தர்வித்யா தரர்முனிவர் யாவருமே புகலிடமாச் சென்று வாழ்ந்தார்
இத்தலஞ்சேர் தென்கோடித் திருமலைதக் கணதிசையில் இருத்த லாலே
நித்தமறை வேதியரும் பாவலரு மாதுலரும் நிலைபெற் றாரே."
3. "கொக்கோடி யடைகிடக்கக் குருகோடி விளையாடுங் கோடி நாடன்
தைக்கோடிப் பிறைபோலத் தமிழ்க்கோடிப் புலவர்வந்தாற் சலிப்பில் லாமல்
திக்கோடி யலையாமற் றினங்கோடி கொடைகொடுக்கும் திரும லேந்த்ரன்
எக்கோடி யானாலு மிவன்கோடி காலமட்டும் இருப்பன் றானே."
இவர் இங்ஙனம் பல தனிப்பாடல்களை அவ்வப் போது பாடினாலும் மான்விடு தூதையன்றி வேறு நூல் இயற்றியதாக இப்போது தெரியவில்லை.
-----
* இச்செய்யுள், "வடதிசை யதுவே வான்றோ யிமயம், தென்றிசையாஅய் குடியின் றாயிற், பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே" (132) என்னும் புறநானூற்றுச் செய்யுட் பகுதியை நினைப்பிக்கின்றது.
நூலாராய்ச்சி
இந்த நூலில் குழந்தைக்கவிராயர் மானின் பெருமையைப் பலபடியாக எடுத்துக் கூறிப் பாராட்டுவதனால் தமக்குள்ள விரிந்த நூலறிவையும், புலமைத் திறத்தையும், தாண்டவராய பிள்ளையின் பெருமையை விரித்துக்கூறுமுகத்தால் தம்முடைய செய்ந்நன்றி யறிவையும் வெளிப் படுத்துகின்றார்.
மானின் பெருமை
மான் தேவாமுதங் கடைந்த காலத்தில் தோன்றிய சந்திரனிடத்தே இருந்ததென்பதும், சிவபெருமான் திருக்கரத்தில் இருக்கும் பெருமை வாய்ந்த தென்பதும், திருமகள் மானுருவம் பெற்ற செய்தியும், வள்ளி நாய்ச்சியார் மான் வயிற்றில் அவதரித்ததும், கலைக்கோட்டு முனிவர் மான் கொம்பைப் பெற்றதும், ஒருமானைத் துரத்திச் சென்றமை காரணமாகத் துரியோதனாதியரது ஏவலினாற் காளமா முனிவர் செய்த யாகத்திலிருந்தெழுந்த பூதத்தினின்றும் பாண்டவர் தப்பியதும், துர்க்கைக்கு மான்வாகனமாக இருப்பதும், மானை யெய்த பாவத்தால் பாண்டுவென்னும் அரசன் இறந்ததும், மான் வாயுவுக்கு வாகனமாக இருப்பதும் ஆகிய புராண இதிகாச வரலாறுகளை எடுத்துக்காட்டி மானைப் பாராட்டுகின்றார். சிவபெருமான் மானைத் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் செய்தியை,
-
"மலையரசன் பெற்றெடுத்த மாதைத்-தலைநாள்
ஒருகால் பிடித்திருந்தா ருன்னையுல குய்ய
இருகால் பிடித்திருந்தார்"
மானென்னும் பெயரைத் தன்பெயரின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள கலைமான் (கலைமகள்) தம் நாவில் இருத்தலினாற் பிரமதேவர் பெருமையுற்றா ரென்றும், பரமசிவன் திருமால் அரசர்கள் ஆகியவர் மானென்பதை ஒருபகுதியாகக்கொண்ட பெருமானென்னும் பெயரைப் பெற்று வீறு பெற்றன ரென்றும், அப்படியே தத்தம் பெயரில் ஒருபகுதியாக மானென்பதை யுடைமையால் அந்திமான் சந்திமானென்னும் வள்ளல்களும், சேரமான் பெருமாணாயனாரும் புகழ்பெற்றனரென்றும் சாதுரியமாகப் பாராட்டுகின்றார்.
மானுக்குரிய பெயர்கள் சிலவற்றாற் குறிக்கப்படும் வேறுபொருள்களைப் பற்றிய செய்திகளை மானுக்குரியனவாகத் தோற்றும்படி அமைக்கின்றார்: வில்லுக்கும் மானுக்கும் உரிய பெயராகிய சாரங்கமென்பதை அமைத்து,
-
" ....................திருமாலும்
கூரங்க மானபடை கொண்டிருந்துந் தென்னிலங்கை
சாரங்க மேகுரங்காச் சாதித்தான்"
அருணனுக்கும் மானுக்குமுரிய பொதுப்பெயரை யமைத்து, 'இருளை நீங்கச் செய்வது அருணோதயம்' என்று சொல்லுகின்றார். மானுக்குரிய புல்வாயென்னும் பெயரைக் குறிப்பாக எண்ணிப் பகைவர் வாயிற் புற்கௌவுதல் கண்டால் அரசர்கள் அவரைத் துன்புறுத்தாமல் விடும் செய்தியைத் தெரிவிக்கின்றார். ஆடைக்குரிய பெயராகிய கலையென்பது மானுக்குமுரித்தாதலை யெண்ணி,
-
".............தாழ்குழலா ராடவர்க்கும்
மானங்காக் குந்துரையே"
பின்னும் அகத்திய முனிவர் (25), நல்லியல்புடையோர் (35), சிற்றினஞ் சேராதவர் (41), பெரியோரைத் துணைக் கொள்வோர் (43), பாகவதர் (45) ஆகியவர்கள் செயலை மானின் செயலாகச் சிலேடையில் அமைக்கின்றார்.
மான்றேசம், மானூர், மான்பலம், கலையூர் என்பவற்றைப் பற்றிய செய்திகளையும், தென்பாகை நாட்டிலுள்ள புல்வாய் மாதென்னும் ஒருத்தி வழக்குத் தீர்த்தல் முதலியவற்றைச் செய்யும் வரலாற்றையும் கூறி மானுக்கு ஏற்றம் கற்பிக்கின்றார்.
மகளிர் கண்களுக்கு மான்கண்ணை உவமை கூறும் மரபைப் புலப்படுத்தி,
" பண்போன் மொழிபயிலும் பாவையர்க்கெல் லாமிரண்டு
கண்போல வந்த கருங்கலையே" (48)
என்று பாராட்டுகின்றார்.
"துணையேவன் காமத் துயர்க் கடலை நீந்தும், பிணையே" (52)
என்றவிடத்துப் பிணையென்ற சொல் தெப்பமென்றும் மானென்றும் இருபொருள் பயந்து அவ்வுருவகத்தை அழகுபெறச் செய்கின்றது.
மானுக்குரிய பெயர்களாகிய அருணம், கலை, சாரங்கம், நவ்வி, பினை, மறி, மிருகம், வச்சயம் என்பவற்றை அங்கங்கே எடுத்தாண்டுள்ளார்.
தூது சென்றோர்.
பண்டைக் காலத்தில் தூது சென்றவர்கள் இன்னார் இன்னாரென்று கூறும் பகுதியில் சுந்தர மூர்த்திநாயனாருக்காகச் சிவ பெருமான் தூது சென்றதும், பாண்டவர் பொருட்டுக் கண்ணபிரான் தூது சென்றதும், இந்திரன் திறத்தில் நளன் தூது சென்றதும், தமயந்தியின் பால் நளன்விடுக்க அன்னம் தூது சென்றதும், குணமாலை ருக்குமிணி என்பவர்கள் ஏவலால் கிளி தூது சென்றதுமாகிய வரலாறுகள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.
தூதுக் குரியனவாகிய குயில் முதலிய பத்தும் குறைபாடுடையன வென்பதை அவ்வப் பொருளின் இயல்புகளை வேறுபொருள் தோற்றும்படி கூறி உணர்த்துகின்றார்.
தசாங்கம்
பாட்டுடைத் தலைவருக்குரிய தசாங்கம் கூறும் வாயிலாகப் பொதியில் மலை, வைகைநதி, தென்பாண்டிநாடு, முல்லை மாநகர், குவளைமாலை, குதிரை, யானை, மேழிக்கொடி, முரசு, வேற்படை என்பவற்றைப் பாராட்டுகின்றார்.
பொதியில் மலையைப் பாராட்டுகையில், அதனைச் சிவபெருமான், திருமால், பிரமதேவர், தேவேந்திரன் என்பவர்களோடு சிலேடையமைய உவமிக்கின்றார். வைகைநதியைத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரது ஏடேறச் சைவநிலை யீடேறவைத்த பெருமையையும், மாடேறுஞ் சொக்கர் மதிச்சடையில் மண்ணேற வைத்தபெருமையையும் உடையதென்று புகழ்கின்றார். தென்பாண்டி நாட்டின் இயற்கைவளங்களை வருணித்து, "பாவேந்தர், நாவேந்து தென்பாண்டி நாடு" எனக்கொண்டாடுகின்றார். முல்லைமாநகரை அழகிய சிற்ப இலக்கணங்களமைந்த வீடுகள் பல வுடையதென்று புனைகின்றார். குதிரையை,
"காற்கதியுங் காற்கதியே காணுமென் வீரிரண்டு
காற்கதியி லைந்து கதிகாட்டி" ப்
போரில் வலம்புரியும் ஆற்றலுடைய தென்கின்றார். யானையை, "காலனுங் கண்புதைப்பக், கொண்டலெனநின்ற திருங்குஞ்சரம்" என்று உணர்த்துகின்றார். வேற்படையைப்பற்றிச் சொல்லும் பகுதியில் போர்க்களத்தில் நிகழும் பல செய்திகள் காணப்படுகின்றன. பகைவர்களுடைய நாற்படைகளும் அழிந்து வீழ்வதும், பேய்கள் பேரூக்கத்துடன் உணவுண்டு பசியாறி மகிழ்வதுமாகிய செய்திகள் இதன்கண் உள்ளன. " அன்று கலிங்கத் தமர்க்களத்துக் கொப்பாக, இன்று கிடைத்தது" என்று பேய்கள் புகன்றன வென்றவிடத்துக் கலிங்க்கத்துப்போரை இவர் எடுத்துக்கூறுகின்றார்.
வடுகநாத துரை
பாட்டுடைத்தலைவராகிய தாண்டவராய பிள்ளையைப் பிரதானியாகக் கொண்ட வடுகநாததுரையின் இயல்புகள் ஒருபகுதியிற் சொல்லப்படுகின்றன, அவர் சிவகங்கை ஸ்ம்ஸ்தானத்துக்குத்தலைவர். சிவகங்கையென்னும் குளமொன்று அந்நகரிலுள்ளது. அது மிக்க சிறப்புள்ளதுபற்றி அதன் பெயரே அந்நகருக்கும் அமைந்தது. இங்ஙனமே தீர்த்தப்பெயரையுடைய ஊர்கள் தமிழ்நாட்டிற் பல உண்டு. இக்காரணம் பற்றியே சிவகங்கை இந்நூலில் குளந்தையென்னும் பெயராற் பாராட்டப்படுகிறது.
வடுகநாததுரையின் முழுப்பெயர் "ராசபுலி முத்து வடுகநாத பெரியுடையான்" என்பது. அவர் திருக்கோட்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாளிடத்துப் பேரன்புடையவரென்றும், பெருஞ் செல்வத்தையுடையவரென்றும்,திரிபுவனச் சோமன் என்னும் உபகாரியைப் போன்றவரென்றும், இராமநாதபுர அரசருக்குத்துணையாக நின்றவரென்றும், சசிவர்ண துரையின் குமாரரென்றும் இவ்வாசிரியர் தெரிவிக்கின்றார். அச்சசிவர்ண துரையின்மீது ஒருபுலவரால் இயற்றப்பெற்றதும் வண்டோச்சிமருங்க்கணைதலென்னும் துறையைப் பொருளாகவுடைய 400 செய்யுட்களடங்கியதுமாகிய ஒருதுறைக்கோவையொன்றுண்டு.
பாட்டுடைத்தலைவர் பெருமை
தாண்டவராய பிள்ளையைப் பாராட்டுகையில் அவர் வேளாள குலத்திற் பிறந்தவரென்னும் காரணம்பற்றிப் பல வேளாளப் பெரியோர் செய்த அருமைச் செயல்கள் அவர் செய்தன்வாக ஏற்றிச் சொல்லப்படுகின்றன. இங்ஙனம் அரசர்களையும் பிரபுக்களையும் அவரவர் முன்னோர்களுடைய செயல்களைச் செய்தவர்களாகப் பாராட்டுதல் புலவர்கள் மரபு. இந்த வகையில், ஒரு வேளாளர் மேகத்தின் கால்விலங்குவெட்டுவித்த்து, எழுபது வேளாளர் பழையனூர் நீலியின் பொருட்டுத் தம் உயிரை நீத்தது, அயன்றையென்னும் ஊரிலிருந்த சடையனெனும் உபகாரி கருப்பஸ்திரீயின் முதுகிற் சுடுசோறளித்து, இளையான்குடி மாறநாயனார் நெல்முளை வாரிச் சிவபிரானுக்கு அன்னமிட்டது, நின்றைக் காளத்தி முதலியார் பாம்பின்வாயிற் கை நீட்டியது,சடையப்ப வள்ளல் பட்டாடை கீறிச் சோழனுக்குச் சிலந்தியைக் காட்டியது,
----
1ஒருவர் முழங்கையைச் சந்தனக்கட்டையாகக் கொண்டு அரைத்தது என்பவற்றை அவர் செயல்களாக ஏற்றிக்கூறுகின்றார்.
அவர் ஸம்ஸ்தானத்தைக் காக்குந் தொழில்பூண்ட உரிமை பற்றிச் சில இடங்களில் திருமாலுக்குரிய பெருமைகளை உடையவராகப் பாராட்டப்படுகின்றார். இங்ஙனமே ஆட்சிபுரியும் மன்னர்களைத்திருமாலாகப் பாவித்தல் ஆன்றோர் மரபென்பது, "திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே யென்னும்" என்ற ஆழ்வார்திருவாக்கால் உணரப்படும்.
இந்த வகையில் திருமாலுக்குரிய பொது இயல்பையும் செயலையும்,
"கோகனகை, வந்து குடியிருக்கு மார்பினான்" (171)
"வாரணங் கூப்பிடுமுன் வந்தேன்வந் தேனென்ற, நாரணன்" (146)
என்றும், திரிவிக்ரமாவதாரச் செயலை,
" . . . தரணிமுற்றும்
ஓரடி கொண்டளந்தங் கோரடி நூக்கிநின்ற, ஈரடி" (22)
என்றும், இராமவதாரத்தில் நிகழ்ந் தவற்றிற் சிலவற்றை,
"மாப்பதுமன் போலவே வந்தமுனி நல்யாகம்
காப்பனெனச் சென்றமலர்க் காலினான்" (170)
" . . . போயளவி
இன்றிளைத்தாய் நாளைவா வென்றே யிராவணற்கு
நன்றுரைத்த தாண்டவ ராயமன்னன்" (146-7)
"கோட்டிலங்கை ராவணனைக் கொன்று விபீடணனை, நாட்டுதுரை"
என்றும், கண்ணபிரானுடைய திருவிளையாடல்கள் சிலவற்றை,
" . . ஐவர் பேரிடரைத்
தீர்த்தவரா யன்புபுரி சீதரமால் -- பார்த்தனுக்குக்
காண்டா வனதகனங் காண ரதமூர்ந்தோன்" (177 - 8)
"நிலவுஞ் சகட நெறுநெறென வீழக்
கலகலென நீட்டுதண்டைக் கால்" (218)
"மலையேந்தி யான்புரந்த மால்" (277)
"....போரிற் - சவிச்சக்ரம்
ஆதவன்மே லேவிநின்றே யாரிருள்பூ ரித்துநின்ற, மாதவனை" (274)
என்றும் தாண்டவராய பிள்ளையின் மேல் ஏற்றிக் கூறியிருத்தல் காண்க.
------
1இங்ஙனம் செய்தவர் மூர்த்திநாயனார்; அவர் வைசியர்; ஆதலின் வேளாளர்களுள் இங்ஙனம் செய்த ஒருவர் உண்டென்று கொள்ள வேண்டும்.
பின்னும் தீர்க்காயுள், அழகு, பகைவரையடும் வீரம், வண்மை ஞானம், அருங்குணங்கள், குதிரையைச் செலுத்தும் ஆற்றல், வினயம், புலவர்களை ஆதரிக்கும் தன்மை முதலிய இயல்புகள் உடைமை காரணமாக உபசார வழக்குப் பற்றி இவ்வாசிரியர் அங்கங்கே அவரை மார்க்கண்டன், மன்மதன், அபிமன், சோமன், சனகன், காரியென்னும் வள்ளல், சீவகன், முருகன், கன்னன், நகுலன், சூரியன், சந்திரன், இந்திரன், சிபிச்சக்கரவர்த்தி, போசன் என்பவர்களாகப் பாராட்டுகின்றார்.
அவர் பல தலங்களில் இயற்றிய தருமங்கள் விரிவாகச் சொல்லப்படுகின்றன். அவருடைய கால், மார்பு, கை, நாசி, காது முகம் என்பவற்றை அவற்றின் செயல்களை எடுத்துக் கூறிப் புகழ்கின்றார். அவருடைய தந்தையார், தமையன்மார், தமையன்மாருடைய பிள்ளைகள், குமாரர், மருமான் என்பவர்கள் பெயர்களை உணர்த்துகின்றார். தம்மை ஆதரித்த செல்வர்கள் மீது புலவர்கள் இயற்றிய தூதுகள் பலவற்றில் இங்ஙனமே பாட்டுடைத் தலைவருடைய தந்தை முதலியோரை உணர்த்தும் பகுதிகள் அமைந்துள்ளன்.
பவனிச் சிறப்பு
தலைவர் புறப்படுதற்கு முன்னர் ஆடையணிகளை அணிவதாக அமைந்த பகுதியில் அவருக்குரிய அலங்காரங்கள் பல சொல்லப்படுகின்றன. அவை தலைப்பாகை, மாணிக்கம் முத்து மரகதம் முதலிய மூன்றும் பதித்துப் பூ வடிவமாகச் செய்யப்பட்ட காதணி, முருகு, பச்சை வச்சிரப் பதக்கம், கண்டசரம், வாகு வலயம், கைச்சரடு, காலிலணையும் மிஞ்சி என்னும் அணிகலங்களும், குவளை மாலையும், சலவையாடை, பீதாம்பரம் என்னும் உடைகளும், வெண்ணீறு, கத்தூரித் திலகமென்னும் நெற்றியலங்காரங்களும், குற்றுடை வாளும், மிதியடியுமாம். இவற்றால் அக் காலத்திலுள்ள பிரதானிகளின் கோலம் ஒருவாறு மனத்திற் புலனாகின்றது.
பவனிச் சிறப்பைக் கூறுகையில் உடன்வந்த பரிவாரங்களாக நால்வகைப் படை ஒட்டகங்கள் என்பவற்றையும், மன்னியவார், இராசவார், ராவுத்தர், துப்பாக்கிக்காரர், தோமரத்தர், கேடயக்காரர், விற்காரர், சட்டையிட்ட பிரதானிகள், வாட்காரர், சக்கராயுதம் பிடித்தோர், வாத்தியக்காரர், பரதநாட்டியம் புரியும் மாதர், ஆலத்தி யெடுக்கும் மாதர், கட்டியக்காரர், பராக்குச் சேவகர்கள், அடைப்பைக்காரர், காளாஞ்சிக்காரர், சாமரை வீசுவோர், சின்னம் ஊதுவோர் என்பவர்களையும் அமைக்கின்றார். இப்பகுதியில் நகரா,பேரி, தகுணி (தகுணிச்சம்), இரட்டைச் சங்கு, தொண்டகப்பறை, சல்லரி, துந்துமி, மத்தளம், தாளம், கிடுபிடி, நாகசுரம், வாங்கா, கானா, கொம்பு, தம்புரு, வீணை, சுரமண்டலம் என்னும் வாத்தியங்கள் சொல்லப்படுகின்றன.
மகளிர் கூற்று
தலைவர் பவனி வருகையில், 'ஏழ்பருவமாதர் கண்டு மாலாகி' இவர் பவனி வந்த யானையைப் பார்த்து, "யானையே! உன் காலே உரலாகவும் உன் கொம்பே உலக்கையாகவும் கொண்டு எங்களைத் துன்புறுத்தும் மன்மதனுடைய வில்லாகிய கரும்பை இடிக்க மாட்டாயோ? வயல்களிலே விளையும் கரும்பைத்தின்கின்ற நீ மன்மதன் கரும்பைத் தின்னக்கூடாதோ? அது கசக்குமோ? பகைவர்களுடைய குடைகளையெல்லாம் சிதைக்கும் நீ மன்மதன் குடையாகிய சந்திரனைச் சிதைக்கும் ஆற்றல் அற்றாயோ? குறுமுனியாகிய அகத்தியருடைய குறியகைக்குள் அடங்கியதும் எங்களுக்குத் துன்பத்தைத் தருவதுமாகிய இந்தக் கடலை உன்னுடைய நீண்ட கைக்குள்ளே அடக்கமுடியாதோ? பகைவர்களுடைய செய் குன்றுகளை யெல்லாம் அழிக்கும் இயல்புடைய உன்னால் நாங்கள் துன்புறும்படி வீசும் தென்றலை உண்டாக்குகின்ற பொதியில்
மலையை அழித்தல் ஆகாதா? எங்களிடம் பேசாமலிருக்கிறாயே: உனக்கென்ன மதமா? நால்வாயிருந்தும் பேசாதவிதம் என்ன?" என்று முறையிடும் பகுதி மிக்க நயமுடையதாக அமைந்துள்ளது.
குறள் அமைப்பு
"சிற்றின மஞ்சும்" என்னும் திருக்குறளை 40-ஆம் கண்ணியிலும், "அரியவற்றுள்" என்னும் குறளை 42-ஆம் கண்ணியிலும், "பிறவிப்பெருங்கடல்" என்பதை 44-ஆம் கண்ணியிலும், "தொகச்சொல்லி" என்பதை 293-ஆம் கண்ணியிலும் இவ்வாசிசிரியர் இந் நூலில் அமைத்து அழகு செய்திருக்கிறார்.
அணிகள் முதலியன
உவமை, உருவகம், சிலேடை, சொற்பின் வருநிலை என்னும் பொருளணிகளும், திரிபு, மடக்கென்பவையும், தொனியும் அங்கங்கே அமைந்துள்ளன.
'தனந்த தனனா தனந்த தனனா'
என்றும்,
'தனதந் தனதந் தனதந் தனதந்'
என்றும்,
'தான தன தான தன தான தன தான தன'
என்றும்,
'தந்தனந்த தந்தனந்த தந்தனந்த தந்தனந்த'
என்றும்,
'தத்தனத்த தத்தனத்த தத்தனத்த தத்தனத்த'
என்றும் வரும் குழிப்புககளை யுடைய சந்தங்களை இவர் ஆண்டிருக்கின்றனர்.
செய்யுள் நடை
இந்நூல் வடசொற்கள் விரவியும், உலகவழக்குச் சொற்களும் திசைச் சொற்களும் அங்கங்கே அமைந்தும், பழமொழிகள் இடையிடையே பெற்றும் எளிதிற் பொருள் புலப்படும் இனிய நடையையுடையதாகி விளங்குகின்றது. இதில் வந்துள்ள உலகவழக்குச் சொற்களில் சில வருமாறு : துரை, பிசகு, தப்பிதம், சொந்தம், மெத்த, கெடி,கெருவிதம், நோண்டல், திட்டவட்டம், தாபரிப்போன், உதாகரிகன், சலவை, மிஞ்சி, நகரா, கிடுபிடி, கேப்புலி முதலியன.
தெப்பத்துக்குரிய புணையென்னும் சொல்லைப் பிணையென்றும் மானுக்குரிய அரிணமென்பதை அருணமென்றும் சார்ங்க மென்பதைச் சாரங்கமென்றும் அமைத்திருக்கின்றார்.
இந்நூலைப் படித்து இன்புறுபவர்களுக்கு இதன் ஆசிரியர், கருத்துக்களை அலங்காரமாக வெளியிடுபவரென்பதும், பண்டை இதிகாச புராணச் செய்திகளை மிக அறிந்தவரென்பதும், பழைய நூல்களைப் பயின்று அவற்றிலுள்ள கருத்துக்களை இடமறிந்து வெளியிடுபவரென்பதும், திருக்குறளின்பாற் பேரன்புடையவ ரென்பதும், தமிழன்பு வீறியவரென்பதும், உபசாரிகளை வாயார வாழ்த்தும் இயல்பினரென்பதும் வெளியாகும்.
-----------------
தாணடவராய பிள்ளை
மான்விடு தூதின் பாட்டுடைத் தலைவராகிய தாண்டவராய பிள்ளை இற்றைக்குச் சற்றேறக்குறைய 230 - வருஷங்களுக்கு முன் கார்காத்த வேளாள குலத்திலே காத்தவராய பிள்ளை என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தவர். இவருடைய ஊர் முல்லையூரென்பது. இளமைப் பருவத்திலிருந்தே நல்லறிவு வாய்க்கப் பெற்றார். இவருடைய பரம்பரையினர் கணக்கெழுதும் உத்தியோக முடையவர்கள். இவர் காலத்தில் சிவகங்கை ஸம்ஸ்தானத் தலைவராக இருந்த ராசபுலி வடுகநாத துரை யென்பவர் இவருடைய அறிவின் திறமையயும், ஆற்றலையும் உணர்ந்து இவரைத் தமக்கு மந்திரியாக அமர்த்திக்கொண்டார். அதுமுதல் ஸம்ஸ்தானத்துக் காரியங்கள் யாவற்றையும் இவர் மிகவும் திருத்தமாகவும் சிறப்பாகவும் நடத்தி வந்தார்; இவருடைய அதிகார ஒழுங்கினால் ஸம்ஸ்தானாதிபதி யாதொரு கவலையுமின்றி வாழ்ந்து வந்தார். இவருக்கு அவர் பல்லக்கு, தண்டிகை, கவரி, குடை, காளாஞ்சி, குதிரை, ஊர் முதலிய வரிசைகளை வழங்கினார்.
இவருக்கு இராமகிருஷ்ண பிள்ளை, விசிவநாத பிள்ளை, சூரிய நாராயண பிள்ளை என்னும் மூன்று தமையன்மார் இருந்தனர்; அம்மூவர்களுக்கும் பத்மநாப பிள்ளை, சசிவர்ணராச பிள்ளை, சுப்பிரமண்ய பிள்ளை என்பவர்கள் புதல்வர்கள்; இவர்களுள் இன்னவர் இன்னவருடைய குமாரரென்று விளங்கவில்லை. தாண்டவராய பிள்ளைகு இராமகிருஷ்ண பிள்ளையென்ற ஒரு குமாரர் இருந்தனர். இவருடைய சகோதரி கணவராகிய நமச்சிவாய பிள்ளையென்பவருக்குச் கைலாசபிள்ளை யென்றொரு புதல்வர் உண்டு.
தாண்டவராய பிள்ளை வீரமும், கணக்கின் நுட்பமும் தெளிந்த அறிவும், இன்னாரை இன்னபடி நடத்தவேண்டுமென்னும் தகுதியுணர்ச்சியும், ஸம்ஸ்தானத்தின் வளங்களை மிகுக்கும் வழிகளை யறிந்து முயலும் முயற்சியும், தைரியமும் உடையவர்; தம்மை அடுத்தவரைத் தாய்போல ஆதரிப்பவர்; பின்பு என்செய்வதென்று கருதாமல் வழங்கும் வண்மையினர்; சொன்ன மொழி தவறாத வாய்மையை யுடையவர்; துட்டரை அடக்கி அஞ்சச் செய்யும் பராக்கிரமம் பொருந்தியவர்; நல்லோருக்கு நன்மை புரிபவர்; கல்வி கேள்வியில் விருப்பமுடையவர்; ஸங்கீதத்திற் பயிற்சியும் அதனைக் கேட்பதிற் பெருவிருப்பமும் உள்ளவர்; தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் தன்மையினர்; தம்முடைய உறவினரை மதித்துப் பாதுகாப்பவர்; நியமமும் அனுட்டானமும் உடையவர்; பூசை முதலியவற்றைப் பக்தியுடன் செய்பவர்; பலவகையான தருமங்கள் புரிந்தவர்; 'தன்மசரீரன் தருமசகாயன்' என்றும், 'ஆர்க்கும், உபகாரஞ் செய்யவென்றே யோதுநூல் கற்றோன், அபகாரஞ் செய்ய வறியான்' என்றும் பாராட்டப் பெறுபவர்.
இவர் இயற்றிய தர்மங்கள் அளவிறந்தன: குன்றக்குடியிலுள்ள முருகக் கடவுள் திருக்கோயிலைப் புதுப்பித்தார்; வையாபுரி யென்னும் தடாகத்தை அமைத்து அதற்கு அழகியபடித்துறையும் அதனைச் சுற்றிலும் நந்தவனமும் வேத பாடலசாலையும் நிறுவினார். இவற்றோடு முருகப்பெருமானுக்கு நித்தியக் கட்டளை, துவாதசிக் கட்டளை, தைப்பூசக் கட்டளை என்பவை நன்கு நடைபெறச் செய்தார்; திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதளீசுவரர், வயிரவ மூர்த்தி, பிரான்மலையில் எழுந்தருளியுள்ள மங்கைபாகர், வயிரவர், திருக்கோட்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் என்னும் மூர்த்திகளுக்கு மண்டபம், மதில், நந்தவனம், வாகன, நெய் விளக்கு முதலியவற்றை அமைத்து நித்திய நைமித்திகங்கள் குறைவின்றி நடந்துவரச் செய்தார். தென்பாகநேரி யென்னும் ஊருக்கு வடக்கே யிருந்த பெரிய காட்டை அழித்து ஊராக்கி அங்கே சோலைகளையும் ஒரு பெரிய தடாகத்தையும் அமைத்து அத்தடாகம் தம்முடைய அரசர் பெயரினால் 'முத்து வடுகநாத சமுத்திரம்' என்று வழங்கச் செய்தார். இங்ஙனமே அரசர் பெயரால் தடாகங்கள் வழங்கும் மரபு, மதுரையைச் சார்ந்த வண்டியூர்த் தெப்பக் குளத்தின் பெயராகிய திருமலைராஜ சமுத்திரமென்பதனாலும் தெரியவருகிறது. சோழபுரம் என்னும் ஊரில் திரியம்பக தீர்த்தத்தை இவர் உண்டாக்கினார்; வைகைநதிக் கரையிலுள்ள பரம்பைக்குடியில் குளம் கிணறு முதலியன வெட்டித் தண்ணீர்ப் பந்தல், நந்தவனம், பூஞ்சோலை, மடம், தருமசத்திரம் ஆகியவற்றை இயற்றினார்; அன்னதானம் மிகுதியாகச் செய்வித்தனர்; இதனை இந்நூல், "முந்தப், படிக்கட் டளையாய்ப் பசித்துவந்தோர்க் கெல்லாம், கொடிக்கட்டி யன்னங் கொடுத்தோன்' என்று சிறப்பித்துக் கூறும்.
இத்தகைய 'அறச்செயல்களைப் புரிந்து புலவர் பாடும் புகழுடையவராக விளங்கிய இவரைக் குழந்தைக் கவிராயர், நாவலர் தாரு என்றும் கன்னாவதார வுபகாரி யென்றும், வாணர் புரவலனென்றும், புகழாபரணனென்றும் பாராட்டுதல் தன்மை நவிற்சியாகுமேயன்றி மிகையாகாது.
உ
மிதிலைப்பட்டிக் குழந்தைக்கவிராயர் இயற்றிய
மான் விடு தூது
(நேரிசை வெண்பா)
சங்கநிதி தென்முல்லைத் தாண்டவ ராசசெய
துங்கன்மிசை மான்விடு தூதுக்குப் - பொங்கு
புவிநா யகனன்பர் போற்றுங் கசமு
கவிநா யகனிதங் காப்பு.
நூல்
(மானின் பெருமை)
1.
மாமேவு பைந்துளப மாதவனும்-தேமேவு
2.
அண்டருந் தானவரு மங்கையினாற்-கொண்டெடுத்த
3.
அந்தவமு தங்கடையு மந்நாளிற்-சிந்தைமகிழ்
4.
வந்துற் பவித்த மதிமானே-ஐந்து
5.
மலையரையன் பெற்றெடுத்த மாதைத்-தலைநாள்
6.
இருகால் பிடித்திருந்தா ரென்றும்-திருமாலும்
7.
சாரங்க மேகுரங்காச் சாதித்தான்-காரங்கம்
8.
மற்றோர்கொண் டாட வசமாமோ-பொற்றோட்டின்
9.
வந்திக்கச் செய்த மகத்துவமும்-புந்திக்குள்
10.
பண்ணிக்கை வந்திருந்த பாங்குமேல்-எண்ணுங்கால்
11. - நத்திருந்த வெண்கலைமா னாவிற் பிரியாமல்
வைத்திருந்த வீறன்றி மற்றுமுண்டோ-கொத்திருந்த
12. - அஞ்சுதலை யோன்மதலை யாறுதலை வேன்முருகன்
உஞ்சு தலையெடுக்க வுன்மகளைக்-கொஞ்சுமொழி
13. - வள்ளியைக் கொண்டிருந்தான் மான்மருக னம்முறையால்
வெள்ளிமலை யோனுனக்கு மெய்த்தமையன்-வெள்ளிமலை
14. - தங்கமலை பெற்றுவந்த சங்கரனார் மேம்பாடும்
செங்கமலை மாலிரட்சை செய்திறமும்-செங்கோலைத்
15.
மன்னரென வந்த விறுமாப்பும்-இந்நிலமேல்
16.
தன்னாமம் பெற்றபலத் தாலன்றோ-மன்னுகலைக்
17. - கோட்டு முனிவனுக்குன் கோட்டி லொருகோடு
நாட்டுசென்னி மேலிருந்த நல்வரத்தால்-மோட்டு
18. - மகரக் கடலுறங்கு மாலை யயோத்தி
நகரிற் புகவழைத்தா னாடிச்-செகதலத்தில்
19. - விள்ளுமந்தி மானென்று மிக்கசந்தி மானென்றும்
வள்ளல்கட்குப் பேர்கொடுத்த வச்சயமே-எள்ளாத
20. - மின்வண்ணப் பின்னலான் வேதண்ட கூடத்தே
பொன்வண்ணத்தந்தாதிபோந்துரைப்போன்-உன்வண்ணப்
21. - பேர்படைத்த சேரமான் பெற்றபே றிவ்வுலகில்
ஆர்படைத்தார் வேந்த ரருங்கலையே-கூரும்
22. - இருணாடு மூடாம லேவிளங்கச் செய்வ
தருணோத யத்தினா லன்றோ-அருணமே
23. - வஞ்சனை செய்காள மாமுனிவ னேவலினால்
எஞ்சலில் பூத மெழுந்துருத்துப்-பஞ்சவரைக்
24. - கொல்லவந்த போதவரைக் கொல்லாம லேபுரந்த
வல்லமை மாயனுக்கும் வாராதே-சொல்லுகின்ற<
25. - எள்ளவரை தானடக்கி யீரக் கடலையுண்டாய்
உள்ள கலைமுழுது மோங்கநின்றாய் - புள்ளிபெற்ற
26. - பொன்னுழையே கும்பனுக்குப் போதித்த தோமுனிவன்
தன்னுழையே நீபடித்த சாதளையோ - இந்நிலமேல்
27. - மான்றேச மென்றுமதில் வாசிமெத்த வாசியென்றும்
தான்றேசஞ் சொல்வதென்ன தப்பிதமோ - கான்றேசம்
28. - சொந்தமென்று பன்மிருகஞ் சூழ்ந்தாலு மென்னதென்று
வந்து மொழிய வழக்குண்டோ - சந்ததமும்
28. - தேனூருஞ் சோலை செறியுங் கலையூரோ
மானூரோ நீயிருக்கும் வானகரம் - கானூரும்
30. - பொன்னம் பலத்தே புலிபாம் பிருத்தலினால்
உன்னம் பலத்தினுக்கே யொப்பாமோ - தன்மையாய் 30
31. - நாடுநக ரம்பலமெந் நாளுமுன்பேர் பெற்றதுபோற்
கூடுமோ காவலர்க்குங் கூடாதே - நீடுசெய
32. - மாதினைநீ தாங்கு மகிமையன்றி மற்றவட்கு
மேதினியி லுண்டோ விசேடமே - மோதுதெவ்வர்
33. - கிட்டுஞ் சமர்க்குடைந்து கெட்டோருன் பேர்கண்டால்
வெட்டுந் தலையும் விலகுவார் - அட்டதிக்காம்
34. - தானங்காக் குந்தேவா தாழ்குழலா ராடவர்க்கு
மானங்காக் குந்துரையே வான்பிணையே - கானமுனி
35. - சாபத்துக் கஞ்சுவாய் சாலமொழி வார்கண்டால்
நீபத் தடிவிலகி நிற்பாயே - கோபத்திற்
36. - பாண்டுவெனுஞ் சந்த்ரகுலன் பார்முழுது மோர்குடைக்கீழ்
ஆண்டுபுகழ் கொண்ட வரசர்கோன் - தாண்டுகலை
37. - மானையெய்த தீவினையால் வானகரி னாடிழந்து
கானடைந்து வானுலகங் கைக்கொண்டான் - ஞானமுனி
38. - வேத வியாசன் விரித்துரைத்த பாரதத்தில்
ஓதுகதை பொய்யோ வுலகறியும் - ஆதலினாற்
39. - கோல விரிப்புலியைக் குஞ்சரத்தைக் கொன்றுமுயல்
காலின்மிதித் தோனுன்னைக் கைக்கொண்டான் - ஞாலத்தில்
40. - சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாய்ச் சூழ்ந்து விடுமென்று - கற்றே
41. - அறிதலி னாலே யபாயமா மென்று
சிறிய வரையிணங்காச் செல்வா - மறியே
42. - அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளலென்று - பாணித்
43. - தரிய வரத்தினையுண் டாக்கும் பெரிய
வரையுறவு கொண்டபுத்தி மானே - வரையாப்
44 - பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தாரென்ற-முறையால்
45. - துறவாகக் காயிலைக டுய்த்தே யரிதாள்
மறவாத பாக வதனே-உறநாடிற்<
46. - கட்புலங்கா ணாரூபக் கால்வாதத் தைத்தாங்கி
விட்புலமு மேழ்கடலு மெத்திசையும்-பெட்புமிகு
47. - தண்டலமும் வெற்புஞ் சராசரமு நின்றசைய
மண்டலமும் வீதியுஞ்செல் வாசியே-கண்டுகனி
48. - பண்போன் மொழிபயிலும் பாவையர்க்கெல் லாமிரண்டு
கண்போல வந்த கருங்கலையே-நண்பாகத்
49. - தீராத வல்வழக்குத் தேறாக் களவுகன்னம்
பேரான வெல்லைப் பிசகுமுதல்-ஆராய்ந்து
50. - சுத்த னசுத்தனென்று சோதனையாய் நாக்குமழு
வைத்தோதக் கற்பித்த வல்லமைகள்-அத்தனையும்
51. - தென்பாகை நாட்டிற் சிறந்தபுல்வாய் மாதென்றே
அன்பாகச் சொல்ல வவதரித்தாய்-இன்பாம்
52. - துணையேவன் காமத் துயர்க்கடலை நீந்தும்
பிணையே கருணைப் பெருக்கே-இணையான
53. - காது நடந்தவிரு கண்ணார்க்கு மாடவர்க்கும்
தூது நடந்தாரைச் சொல்லக்கேள்-மாதுபங்கர்
54. - ( தூது சென்றவர்கள் )
சுந்தரர்க்கப் பானாளிற் றூதுசென்றார் பாண்டவர்க்குச்
செந்திருமா றூதாகச் சென்றாரே-இந்திரற்கே
55. - அந்தநளன் றூதுசென்றா னந்நளனுக் கோதிமந்தான்
சந்து நடந்தகதை தப்பிதமோ-முந்தக்
56. - குணமாலை ருக்குமணி கொண்டமய றீர
மணமாலை கிள்ளைதர வாழ்ந்தார்-தணவாத
57. - ( மற்றத் தூதுப்பொருள்களின் குறைகள் )
வாளகண்டஞ் செல்லும் வரிக்குயிலைத் தூதனுப்பிற்
காளகண்ட நல்வசனங் காட்டுமோ-தாளமலர்
58. - ஏற்கு மதுகரத்தை யேவின் மதுபானி
நாக்குக் குழறுமே நவ்வியே-மூக்கிலே
59. - கோபத்தைக் காட்டுமொரு கொண்டைமயில் போய்க்க
லாபத்தைக் காட்டுமில்லை லாபமே-சோபத்தால்
60. - அன்னத்தைத் தூதுவிட்டா லவ்வன்னம் பாலுக்கும்
பின்னத்தைக் காட்டுமிதம் பேசாதே-சொன்னத்தைச்
61. - சொல்லுமே யல்லாமற் றொன்ற விரித்துரைத்து
வல்லமையாய்க் கிள்ளைசொல்ல மாட்டாதே-மெல்லவே
62. - எத்திசையுஞ் செல்லு மிளம்பூவை தூதுசென்றால்
கத்திகை வாங்கக் கலங்குமே-மெத்தவே
63. - மேகங் கடுகுரலாய் விள்ளுமல்லா னின்போலப்
பாகமுட னின்சொற் பகராதே-மோகமிஞ்சிக்
64. - கண்டுயிலும் வேளையினிற் கண்டவனி ருத்திரனைக்
கொண்டுவந்த பாங்கியென்பாற் கூடுமோ-தண்டாத
65. - என்னெஞ்ச மாங்கவன்பா லெய்தி யெனைமறந்து
வன்னெஞ்ச மாயிருந்தால் வாயுண்டோ-தென்மலையத்
66. - தென்றலைத் தூதுவிட்டாற் றென்றல் சலனகுணம்
மன்றலணி வாங்குமிங்கு வாராதே-துன்று
67. - கலையே மணிமே கலையே தவிர்ந்தேன்
அலையேய் துரும்பா யலைந்தேன்-மலையாமற்
68. - காக்கும் பிணையேவன் காமக் கடற்கரையிற்
சேர்க்கும் பிணையே செழுங்கலையே-ஆர்க்குமிகும்
69. - ஆசைதந்தோன் பேருமவ னாடு மவனூரும்
மாசில் புகழும் வழுத்தக்கேள்-தேசுதரும்
70. - ( தசாங்கம் - பொதியின்மலை )
அம்புதமு மம்புலியு மாடரவுஞ் சென்னியின்மேற்
பம்புதலா லீசன் படிவமாய்-அம்பரமும்
71. - பொன்னுமணிக் கோடும் பொருந்திச் சிலைதிகிரி
மன்னுதலான் மாலின் வடிவமாய்-இந்நிலமேல்
72. - நான்முகஞ் சாகைபல நண்ணிப்பல் பூப்படைத்து
மான்மகன் போல வளஞ்சிறந்து-மேன்மை
73. - அரம்பைபலர் தற்சூழ்ந்தே யண்டருல கெய்தித்
திரம்பெறலாற் றேவேந் திரன்போல்-உரம்பயின்று
74. - சந்தனமுங் காரகிலுந் தம்மிற் றலைசிறந்து
வந்த பொதிய மலையினான்-செந்தமிழின்
75. - (வைகை நதி)
ஏடேறச் சைவநிலை யீடேறத் துள்ளுபுனல்
கோடேறக் கூடல் குடியேறப்-பீடேறு
76. - மூரிக் கயன்மகர மோதித் திரையேற
வாரிப் புனலும் வளர்ந்தேறப்-பாரித்து
77. - மண்டு புகழேற மாறன் வியப்பேறக்
கண்டு சமணர் கழுவேறத்-தண்டுளப
78. - மாடேறுஞ் சொக்கர் மதிச்சடையின் மண்ணேற
நாடேறும் வைகை நதியினான்-சேடேறும்
79. - (தென்பாண்டி நாடு)
பூங்காவு மாங்குயிலும் பூட்டு மொழிக்கரும்பும்
வாங்காத கீத வரிச்சுரும்பும்-நீங்காத
80. - வாவித் தலமும் வனச மலர்க்காடும்
காவிப் புதுமலருங் கம்பலையும்-பூவைக்கும்
81. - தென்மலய மாருதமுஞ் சேயிழையார் தங்குழுவும்
மன்மதனார் பாளையந்தான் வந்ததென-நன்மைதிகழ்
82. - தேவேந்து நாட்டினுக்குச் செவ்விதென்று பாவேந்தர்
நாவேந்து தென்பாண்டி நாட்டினான்-பூவேந்து
83. - (முல்லை மாநகர்)
வாணிக்கு நாதனவை வந்திருக்க வேணுமென்று
காணிக்கை யாய்ச்சமைத்த காரணமோ-வேணிக்கு
84. - வேந்த னுலகம் வெளிறிடவே வேண்டுமென்று
வாய்ந்தசெம் பொன்னால் வகுத்ததோ-தேர்ந்துவச்ர
85. - வண்ண னுலகு வறியதென்று சொல்லுதற்குப்
பண்ணிச் சிறந்த படிவமோ-எண்ணுங்கால்
86. - மண்மகளுக் காக வகுத்தமணிப் பீடமோ
திண்மைசெறி பேரழகு சேரிடமோ-உண்மை
87. - தெரிந்துரைக்க வல்லவரார் சிற்பநூல் கற்றோர்
புரிந்தசிற்ப மென்றுலகம் போற்ற-விரிந்தமணிக்
88 - கூடமு மேல்வீடுங் கோபுரமு மாமறுகும்
மாடமுஞ்சேர் தென்முல்லை மாநகரான் - நாடமிர்தும்
89. - (குவளை மாலை)
கண்டு நிகர்மொழியார் கண்னு மவர்மனமும்
வண்டுஞ் செறிநீல மாலிகையான் - விண்டோர்
90. - (குதிரை)
மகுட முடியிடறி மாதிரமும் வானின்
முகடு நிறைபடல மூட - விகடர்
91. - கெடியரணு நெஞ்சிற் கெருவிதமுங் கூட்டி
அடியின் குரத்துகள தாக்கிக் - கொடியவிட
92. - நெட்டரவு மேனி நெறுநெறெனக் கண்பிதுங்க
அட்ட கிரிநின் றசையவே - வட்டமிட்டுக்
93. - காற்கதியுங் காற்கதியே காணுமென வீரிரண்டு
காற்கதியி லைந்து கதிகாட்டிப் - பாற்கடலில்
94. - மாதவனுங் கற்கி வடிவங் கரந்துநிற்க
ஆதவ னேழ்பரியு மஞ்சவே - நாதன்
95. - வலம்புரி போலவன் மானித்துப் போரில்
வலம்புரியுங் கோரரண வாசியான் - சலம்புரிந்து
96. - (யானை)
திக்கயங்கண் மாதிரத்திற் சென்று புறங்கொடுப்பத்
தொக்கயங்க டொக்கெனவே சூறையிட்டு - மிக்க
97. - சிகர வடவரையைச் சீறித் தகர்த்து
மகர வுததி மடுத்துப் - பகரும்
98. - வடவைக் கனலவித்து வான்பிறையை யெட்டித்
தடவிக் குணக்கெடுத்துத் தாளாற்-புடவிமன்னர்
99. - கொத்தளத்தைக் கோட்டையினைக் கோட்டைக்குக் காக்கவைத்த
அத்தளத்தை யெல்லா மணுவாக்கி-எத்தளமும்
100. - கண்டு நடுநடுங்கக் காலனுங் கண்புதைப்பக்
கொண்டலென நின்றதிருங் குஞ்தரத்தான்-மண்டலத்தில்
101. - (மேழிக்கொடி)
ஆர்க்கு மதியா தவர்பகையு மஞ்சவே
பார்க்கின்ற மேழிப் பதாகையான்-நீர்க்குலவு
102. - (முரசு)
நத்தோலும் வாரியென்ன நாதரொரு மூவரென்ன
முத்தோலுங் காட்டு முரசினான்-எத்திக்கும்
103 - (வேற்படை)
காற்படையுந் தேர்ப்படையுங் கைக்கிரியு மாவுமாம்
நாற்படையுஞ் சூழ ரணபேரி-ஆர்ப்பரித்து
104. - வெற்றிசொல்லி வந்த விகட மருவலர்கள்
கொற்றமுங் கொற்றக் குடையுமேல்-அற்றுவிழ
105. - மாதரங்கம் போல மறுகிக் குதித்துவரு
மாதுரங்க மெல்லா மறுகிவிழ-மோதிவரு
106. - . சிந்துரங்கள் கோட்டுச் சிரந்துணிந்து கைதுணிந்து
சிந்துரங்க ளாகித் திகைக்கவே-வந்த
107. - முடித்தேர்க டட்டழிந்து முட்டுந் துரங்கம்
மடித்தே வலவன் மடிய-அடுத்துநின்று
108. - பாரிட் டெதிர்த்த படைவீரர் சென்னிகு
பீரிட் டிரத்தம் பெருகவே-தாரிட்ட
109. - தோடுணிய வாடுணியத் துள்ளித் திரண்டுவரு
தாடுணிய மோட்டுத் தனுத்துணியக்-கோடுணிய
110. - விற்றுணியச் செங்கை விரறுணிய வெற்றிசொன்ன
சொற்றுணிய நாக்குத் துணியவே-பற்றுணிய
111. - ஒட்டகங்கள் கோடி யுருளச் செயபேரி
பெட்டகங்கள் போலப் பிறழவே-கட்டழிந்து
112. - சாளையப் பட்டுச் சளப்பட்டுத் தாமிருந்த
பாளையப் பட்டும் பறிபட்டு-மூளைகொட்டக்
113. - கட்டித் தயிரெனவே கண்டுசில பேயருந்தி
எட்டிக் கொழுப்பை யிழுக்கவே-தட்டுசிறை
114. - வட்ட மிடுங்கழுகு வந்துகுடல் பற்றியெழல்
பட்ட மிடுங்கயிறொப் பாகவே-கொட்டும்
115. - குருதி முழுகிநிணங் கொண்டுபருந் தேகல்
கருதுங் கருடனெனக் காணப்-பெருகிவரு
116. - நன்னீ ரெனவொருபேய் நாடித் தசையருந்திச்
செந்நீர் குடித்துத் திகைக்கவே-துன்னி
117. - வறட்டுக் கிழட்டுப்பேய் வாய்க்கொழுப்பை நோண்டிக்
கறட்டுப்பேய் தின்று களிக்க-முறட்டுப்பேய்
118. - வாங்கித் தினுந்தசையை வந்தொருபேய் தட்டிவிட
ஏங்கிப் பசியா லிருந்தலற-ஆங்கொருபேய்
119. - பேய்ப்பொட்ட லிட்ட பெருங்களத்திற் றின்றதசை
வாய்ப்பட்ட தென்று மகிழவே-கூப்பிட்டே
120. - அன்று கலிங்கத் தமர்க்களத்துக் கொப்பாக
இன்று கிடைத்த தெனப்புகலத்-துன்றுபல
121. - கூளி நடனமிடக் கொக்கரித்தே யுக்ரசெய
காளி மகிழக் கவந்தமிரு-தாள்பெயரக்
122. - காகம் பருந்து கழுகுநிழற் பந்தரிட
மாகமின்னார் கல்யாணம் வாய்த்ததென-ஓகைபெறச்
123. - சொல்லு மருவார் தொடியிடற வெந்நாளும்
வெல்லுமுனை கொண்டவடி வேலினான்-ஒல்லுமணி
124. - (ஆணை)
வட்டநெடு வேலா வலயம் விளங்குபுவி
அட்டதிசை யுஞ்செலுத்து மாணையான்-இட்டமிகச்
125. - (வடுகனாததுரையின் பெருமை)
சந்ததமுங் கோட்டிச் சவுமியநா ராயணரை
வந்தனைசெய் தொப்பமிடு வண்கையான்-நந்துலவு
126. - தென்குளந்தை மேவுஞ் செயசிங்கங் கோகனக
மின்குழந்தை போலும் விசித்திரவான்-முன்குழந்தை
127. - ஆமப் பருவத்தே யம்பொற் சுடிகைதந்த
சோமனுக்கு நேராந் துரைராயன்-பூமன்
128. - முரசுநிலை யிட்டு முடிதரித்தே சேதுக்
கரசுநிலை யிட்ட வபயன்-வரசதுரன்
129. - தண்டளவ மாலைச் சசிவர்ண பூபனருள்
கொண்ட லுபய குலதீபன்-மண்டலிகன்
130. - ராச புலிவடுக நாத பெரியுடையான்
ராச னிவனாண்மை நாகரிகன்-யோசனையும்
131. - (தலைவன் பெருமை)
மந்திரமு மொன்னார் வணங்கத் தனுவெடுத்த
தந்திரமு நீயோகத் தன்மையும்-வந்த
132. - திரமாங் கணக்கினுட்பந் திட்ப நிதானம்
பரராச வட்டமுணர் பாங்கும்-தரம்பகுத்துத்
133. - திட்டவட்ட மாய்நிதியந் தேடுவதுஞ் சீமைநவ
சட்டமெனக் காக்குஞ் சமர்த்துமேல்-வட்டமாம்
134 - வல்லமையுங் காதல்விசு வாசமுங்கண் டேநமக்கு
நல்லமைச்ச னென்று நவமணிப்பூண்-பல்லக்குத்
135. - தண்டிகை யூர்கவரி தண்கவிகை காளாஞ்சி
கண்டிகை முத்தங் கவனமாத்-திண்டிறல்சேர்
136. - மத்தகெச மாதி வரிசைநல்கு மந்த்ரிதள
கத்த னுபய கனயோகன்-நித்தநித்தம்
137. - ஈகைக் கிணையென்றோ வேற்றலருந் தண்ணளியோ
மேகத்தின் கால்விலங்கு வெட்டுவித்தோன்-ஆகையினால்
138. - காராள னாகினான் கங்கைசுத னாயினான்
பாராம னீலி பழி துடைத்தோன்-பேராகச்
139. - சூலி முதுகிற் சுடுசோ றளித்துமொரு
சூலி பசியாற்றத் தூங்கிரவிற்-சாலி
140. - முளைவாரி யன்னமிட்டோன் முத்தமிழ்க்குப் பாம்பின்
வளைவாயிற் கைநீட்டும் வள்ளல்-இளையாமற்
141. - பட்டாடை கீறிப் பருஞ்சிலந்தி காட்டிவெகு
நெட்டாய் விருது நிறுத்தினோன்-மட்டாரும்
142. - பைந்தருவுக் கொப்பென்றோ பாலிக்கு முன்கையைச்
சந்தனமாய் வைத்தரைத்த தாடாளன்-முந்தக்
143. - கொடுக்குங் குணமோ குழந்தைசொன்ன தென்றோ
அடுக்கு மவன்மீதி லன்போ-எடுக்கும்
144. - இருநிதியு நெல்லா யிரக்கலமுந் தந்தே
ஒருகவிதை கொண்டுபுக ழுற்றோன்-பெருமைசேர்
145. - (அவன் செய்த தர்மங்கள்)
கோலமிகு குன்றாக் குடியிலே நீடூழி
காலமெல்லா நிற்கவே கற்கட்டிச்-சூலத்திற்
146. - றன்னூற்றுக் காணத் தடாகப் பிரதிட்டைசெய்து
செந்நூற் றுறையாற் சினகரமும்-பொன்னாற்
147. - படித்துறையும் பூந்தருவும் பைந்தருவும் வேதம்
படித்துறையு மண்டபமும் பாங்காய்-முடித்துவைத்தே
148. - போற்றிய வையா புரியென்று பேருமிட்டு
நாற்றிசையோர் போற்றுவள்ளி நாதருக்கே-தோற்றுதினக்
149. - கட்டளையுந் த்வாதசிக் கட்டளையுந் தைப்பூசக்
கட்டளையு மேநடத்துங் கங்கைகுலன்-மட்டுவிரி
150. - சீதளியார் புத்தூர்த் திருத்தளியார் கொன்றைவன
நாதனார் வயிரவ நாதருக்கும்-சீதமலர்
151 - நல்லமங்கை பாகருக்கு நம்பும் வயிரவர்க்கும்
வல்ல திருக்கோட்டி மாதவர்க்கும்-கல்லியன்முன்
152. - மண்டபமு நெய்விளக்கு மாமதிலும் வாகனமும்
தண்டலையும் வில்வத் தளமலர்கள்-கொண்டதோர்
153. - நித்தியநை மித்தியமு நேயமாய்த் தானடக்கப்
பத்தியுட னேயமைந்த பண்பினான்-நத்துலவு
154. - தென்பாக நேரிக்குச் சேர்ந்த வடபாலில்
வன்பாங் கரடிபுலி மான்மரைகள்-துன்பான
155. - கள்ளர் குடியிருக்குங் காட்டைவெட்டி நாடாக்கிப்
புள்ளலம்பு சோலை புதுக்கியே-பள்ளநீர்
156. - முன்பார் புகழ முனைவேந்தர் கொண்டாட
வன்பாரை வெட்டியுநீர் மல்கவே-அன்பாரும்
157. - மண்டலிகன் முத்து வடுகநா தச்சமுத்ரம்
கண்டுபுகழ் கண்டமார்க் கண்டனாம்-கொண்டல்
158. - அரசன் பெரியவுடை யான்மகிழ்ந்து வெற்றி
புரிகின்ற சோழ புரத்தில்-திருவளரும்
159. - கந்தவனப் பொய்கைக் கரையினுக்கு மேற்றிசையில்
அந்தமிகு பாற்கடலி தாமென்னச்-சந்ததமும்
160. - செய்கை தவறா திருந்ததிரி யம்பகப்
பொய்கைதனைக் கண்டிருந்த புண்ணியவான்-செய்திகழும்
161. - வைகை நதிநீர மானபரம் பைக்குடியிற்
பொய்கைசெறி கூபம் புனற்பந்தல்-மைகவியும்
162 - நந்தவனம் பூஞ்சோலை நன்மடமு மேயிற்றி
அந்தணர் சாலை யமைத்துவைத்தே-முந்தப்
163. - படிக்கட் டளையாய்ப் பசித்துவந்தோர்க் கெல்லாம்
கொடிக்கட்டி யன்னங் கொடுத்தோன்-வடிக்கட்டும்
164. - தன்ம சரீரன் றரும சகாயனெழில்
மன்மத ரூபனடல் வாளபிமன்-நன்மைசேர்
165. - தன்னை யடுத்தோரைத் தாய்போலத் தாபரிப்போன்
பின்னையெண்ணா மற்கொடுக்கும் பேராளன்-பொன்னைப்
166. - புதைப்பார் மணாளன் புருடமக மேரு
சுதைப்பார் புகழ்விளைக்குஞ் சோமன்-சுதைப்புவியைக்
167. - காக்குங் கருணா கரனா மனுநீதன்
வாக்கி லிரண்டுரையா மானபரன்-ஆர்க்கும்
168. - உபகாரஞ் செய்யவென்றே யோதுநூல் கற்றோன்
அபகாரஞ் செய்ய வறியான்-சுபகாரி
169. - துட்டருக்கு நிட்டூரன் றுட்டருக்கு மார்பாணி
சிட்டருக்கு நன்மைபுரி செங்கோலான்-மட்டுவிரி
170. - ( அவயவச் சிறப்பு )
மாப்பதுமன் போலவே வந்தமுனி நல்யாகம்
காப்பனெனச் சென்றமலர்க் காலினான்-ஆர்ப்பரித்துச்
171. - சொந்தமென விந்தையுறை தோளினான் கோகனகை
வந்து குடியிருக்கு மார்பினான்-வந்தவரை
172. - வங்கணங் கட்டி வசந்தத் தியாகநல்கக்
கங்கணங் கட்டுமிரு கையினான்-கொங்கு
173. - பரந்த மடவார் பயோதரத்தி லேந்தும்
நரந்தம் பரிமளிக்கு நாசி-பொருந்தினோன்
174. - ஆனவித்தை யெல்லா மறிந்தாலுங் காந்தருவ
கானவித்தை கேட்குமிரு காதினான்-நானிலத்திற்
175. - கீர்த்தி கரித்துக் கிளைக்கின்ற சந்த்ரவிம்பம்
மூர்த்தி கரித்த முகத்தினான்-பார்த்திபரில்
176. - மூவேந்தர் போலவந்து முத்தமிழை யாராய்ந்து
பாவேந்தை வாழவைத்த பாக்கியவான்-பூவேந்து
177. - (தந்தை முதலியோர்)
காத்தவரா யன்பாலன் காணுமைவர் பேரிடரைத்
தீர்த்தவரா யன்புபுரி சீதரமால்-பார்த்தனுக்குக்
178. - காண்டா வனதகனங் காண ரதமூர்ந்தோன்
வேண்டார் வணங்கவரி வில்லெடுத்தோன்-சேண்டாங்கி
179. - நில்லாமற் றிக்கயங்க ணேர்ந்தாலு நல்லதென்று
மல்லாட மார்புதட்டும் வல்லமையான்-நல்லாரை
180. - ஆய்ந்தா தரிக்கு மறிவினான் மேருவரை
சாய்ந்தாலு மீளநடுந் தந்திரவான்-ஏந்துமலர்த்
181. - தேன்றொட்ட விந்திரவி தெற்குவடக் கானாலும்
தான்றொட்ட வாரந் தவறாதான்-கான்றொட்ட
182. - செய்க்குவளை நித்திலஞ்சூழ் தென்முல்லை யாதிபதி
மைக்குவளை மாலையணி மார்பினான்-திக்கு
183. - விசையஞ் செலுத்தி விருதொன்று கட்டி
இசையெங்கு மேசெலுத்து மெங்கோன்-திசையாள்
184. - அதுலன் குளந்தைக் கரசன் மகிழும்
சதுரனாம் ராமக்ருஷ்ணன் றம்பி-மதுரமொழி
185. - சொன்னவிச்வ நாதனுக்குஞ் சூரியநா ராயணற்கும்
பின்னவன் கீர்த்திப் பிரதாபன்-மன்னுகலி
186. - கோபன் கவிவேந்தர் கொண்டாட வந்தபற்ப
நாபன் சசிவன்ன ராசனுக்கும்-சோபந்தீர்
187. - சோமன் குலத்தருமன் சுப்பிர மண்யனுக்கும்
சேமநிதி யான சிறுதாதை-பூமணிகா
188. - உந்துதிருப் பாற்கடலி லுற்பவித்த தண்மதிபோல்
முந்து வலம்புரியின் முத்தம்போல்-வந்த
189. - நனையகஞ்சேர் நீலமணி ராமக்ருஷ்ண மாலைத்
தனைய னெனமகிழ்ந்த தந்தை-அனகன்
190. - தருநமசி வாயமன்னன் றந்தகயி லாசன்
மருக னெனவந்த மாமன்-உரிமை
191. - அடர்ந்த கிளையா னகந்தை யறியான்
மடங்க லெனவே வயங்கொள்-படையான்
192. - தொழுந்த கைமையான் சுகந்த புயவான்
எழுந்த பிறையா யிரங்கள்-தொழுவோன்
193. - பரதந் திரசம் பனதந் திரசிந்
திரதன் சுமுகன் செனகன்-சரதன்
194. - பொருமந் தரதிண் புயமண் டலிகன்
தருவுங் கரமுஞ் சரியென்-றருளவரு
195. - காரியுப காரியதி காரிவிவ காரிகுண
வாரிநிதி வாரியருள் வாரிமழை-மாரிமத
196. - வாரணங் கூப்பிடுமுன் வந்தேன்வந் தேனென்ற
நாரணன் றாண்டவ ராயமன்னன்-போரளவி
197. - இன்றிளைத்தாய் நாளைவா வென்றே யிராவணற்கு
நன்றுரைத்த தாண்டவ ராயமன்னன்-நின்றெதிர்த்து
198. - வன்மை புரிந்தோரும் வந்துசர ணென்றடைந்தால்
நன்மைபுரி தாண்டவ ராயமன்னன்-சொன்மருவு
199. - தாகரிகன் மாற்றலர்பாற் சங்க்ராம கெம்பீரன்
நாகரிகன் றாண்டவ ராயமன்னன்-மாகனகக்
200. - கோட்டிலங்கை ராவணனைக் கொன்று விபீடணனை
நாட்டுதுரை தாண்டவ ராயமன்னன்-கூட்டுசுண்ணம்
201 - வல்லசுர மஞ்சரிக்கு மாலைதரு கந்தபொடி
நல்லதென்ற தாண்டவ ராயமன்னன்-சொல்லுநெறி
202. - கோடா மனுநீதி கொண்டிருந்து வைகைவள
நாடாளுந் தாண்டவ ராயமன்னன்-வாடாத
203. - (தலைவன் பவனி வரத்தொடங்கல்)
தென்னவன்போற் பூலோக தேவேந் திரன்போல
மன்னு பவனி வருவதற்கு-முன்னமே
204. - நித்திய தான நியம மனுட்டானம்
பத்தி தரும்பூசை பண்ணியே-மொய்த்தகன
205. - சுற்றம் விருந்துத் தொகுதிபல தற்சூழ
உற்ற வறுசுவை சேருண்டி-முற்ற
206. - அருந்திமலர் வாய்பூசி யாசார மீதில்
இருந்துமின்னார் கண்ணாடி யேந்தத்-துரைவடுக
207. - (அணிகளை அணிதல்)
நாதமன்ன னுக்கன்றி நானிலத்து வேந்தைவணங்
காதமுடி மேற்பாகு கட்டியே-காதிலணி
208. - மாணிக்க முத்து மரகதப்பூ மூவருடல்
காணிக்க வந்த கவின்காட்டப்-பூணிழையார்
209. - கூடி முருகனென்று கும்பிடவே மேற்காதில்
ஆடு முருகி னணியணிந்து-சேடுதிகழ்
210. - வாக்கிலுறை வெண்கமல மாதுவெளி வந்ததென
ஆக்கமிகும் வெண்ணீ றலங்கரித்துத்-தீர்க்கமாய்ப்
211 - பார்க்கின் முகமதியின் பாற்களங்கம் வேண்டுமென்றோ
சேர்க்குங்கத் தூரித் திலதமிட்டு-நீக்கமின்றி
212. - இச்சைசெறி கோகனகைக் கிட்ட திரைபோலப்
பச்சைவச்ரம் வைத்த பதக்கமிட்டுக்-கச்சையடர்ந்
213. - தோங்கத் தனம்படைத்த வொண்டொடியார் காமசரம்
தாங்கரத்ன கண்ட சரந்தாங்கிப்-பூங்கரத்திற்
214. - சங்குவளை மாலைசிந்தித் தாழ்குழலார் பின்றொடரச்
செங்குவளை மாலை திருத்தியே-பொங்குமுன்னீர்
215. - மாகுவலை யந்தாங்க வைத்த மணிச்சுமடாம்
வாகு வலைய மணிதரித்து-மாகர்
216. - சுரதருவிற் காமவல்லி சுற்றியது போல
விரலணியுங் கைச்சரடும் வேய்ந்தே-அரையிற்
217. - சலவைகட்டி யொன்னார் தருங்குருதி மாந்திப்
புலவுகக்குங் குற்றுடைவாள் பூட்டிக்-கலகம்
218. - நிலவுஞ் சகட நெறுநெறென வீழக்
கலகலென நீட்டுதண்டைக் காலில்-இலகுரத்ன
219. - மிஞ்சியிட்டுக் கொற்றம் விளக்கு மணியோசை
அஞ்சியிட்ட பேருக் கபயமென-விஞ்சு
220. - வரையில் வெயிலெறிக்கும் வாறுபோற் பீதாம்
பரவுத்த ரீகம் பரித்துத்-தரணிமுற்றும்
221. - ஓரடி கொண்டளந்தங் கோரடி தூக்கிநின்ற
ஈரடியும் பாவடியி லேற்றியே-ஏரடர்க்கும்
222. - (யானையின் சிறப்பு)
பாடகச் சீறடியார் பங்கயக்கை லாகுதர
ஆடகப்பொன் கூடத் தயல்வந்து-ஓடைமின்னல்
223. - கொண்டிருண்டெ ழுந்துநின்ற கொண்டலென்ற பண்புகொண்டு
தண்டரங்க மொண்டகும்ப சம்பவன்றி-ரண்டவங்கைத்
2240. - தொண்டலங்கொ டுண்டுமிழ்ந்து தொந்தமென்று மன்றிலண்டர்
கண்டபண்ட ரங்கனந்த கன்கரத்தி-ரண்டுகண்பு
225. - தைக்கமொத்தி ருத்ரமிக்க தட்டியட்ட திக்கயத்தின்
மத்தகத்தி னைத்தகர்த்து வட்டமிட்டெ-திர்த்தகற்கி
226. - கத்திகட்டி விட்டமத்த கத்தினத்தி யைத்துகைத்துச்
சத்திரக்க ரத்தரைத்த லத்தினற்சி-ரத்தையெற்றி
227. - யுத்தரங்க மீதி லுருத்த ரணவீர
பத்திரன் போன்முசலம் பற்றியே-நித்தநித்தம்
228. - விந்தை கொலுவிருக்கும் வெற்பொன்று கான்முளைத்து
வந்து நடைபயின்ற வாறென்ன-முந்துதெவ்வர்
229. - சிந்துஞ் சதுரங்க சேனா சமுத்திரத்தை
மந்தரம் போல மதித்துவெற்றி-தந்துநின்று
230. - (பவனிவரல்)
நந்தா வளக்கரட நால்வாய்ப் பனைத்தடக்கைத்
தந்தா வளப்பவனி தான்வரலும்-பிந்தாக்
231. - குடைநெருங்கக் கோடி கொடிநெருங்கக் காலாட்
படைநெருங்கத் தாவு பரிமா-புடைநெருங்க
232. - மள்ளர் குரவை மலிய மதாவளத்தின்
வெள்ள மிகுதி மிடையவே-துள்ளிவிட்டு
233. - மன்னிய வார்பெலமா மல்லா ரிராசவார்
துன்னியவரா வுத்தரணி சூழ்ந்துவர-மின்னுவெள்ளித்
234. - . துப்பாக்கி யூழியத்தர் தோமரத்தர் கேடயத்தர்
தப்பாது விற்காரர் தற்சூழக்-குப்பாய
235 - நேரிசத்தர் வாட்காரர் நேமிதரித் தோர்களிரு
பாரிசத்துங் கேப்புலியொப் பாகவரத்-தாரிசைத்த
236. - (வாத்தியங்கள்)
ஒட்டகத்தின் கூன்முதுகி னோங்குமத குஞ்சரமேற்
கொட்டுநக ராபேரி கொண்டலின்வாய்-விட்டதிரத்
237. - . தண்டகந் தாங்குந் தகுணியுங் கோடிணையும்
தொண்டகமுஞ் சல்லரியுந் துந்துமியும்-விண்டதொனி
238. - மத்தள தாள வகையுங் கிடுபிடியும்
தொத்திலகு நாக சுரத்தொனியும்-சத்திக்கும்
239. - வாங்காவுங் கானாவும் வாங்கா மணிக்கொம்பும்
பூங்காமன் றூரியத்தைப் போன்முழங்க-நீங்காத
240. - தம்புரு வீணை சரமண் டலம்வரியாத்
தும்புரு கானத் தொனிகூட்டப்-பம்பு
241. - (மற்றச் சிறப்புக்கள்)
பரதவிட மாதர் படிதம் பயிற்றச்
சுரதவிட வாரயினி சுற்ற-உரதருண
242. - கட்டியத்தர் வேத்திரக் கையாற் பராக்கென்னத்
தட்டி வருஞ்சந் தடிவிலக-மட்டுவிரி
243. - பொன்னடைப்பை காளாஞ்சி பூஞ்சிவிறி வீசுகுஞ்சம்
சொன்னடக்கை யோரேந்திச் சூழ்ந்துவர-அன்னடக்கும்
244. - சந்த்ர கிரண சமுக மிருபாலும்
வந்ததென்ன வெண்சா மரையிரட்டச்-செந்தமிழின்
245. - (சின்னம் ஒலித்தல்)
நாவலர் தாருவந்தான் ராயர்மகிழ் மந்த்ரிவந்தான்
பூவலரு நீலப் புயன்வந்தான்-ஆவறரு
246. - பொன்னா பரணன் புகழா பரணமெனும்
கன்னாவ தாரவுப காரிவந்தான்-பொன்னாரும்
247. - மாதர் மடலெழுது மால்ராம க்ருஷ்ணமன்னன்
சோதரனா முல்லைத் துரைவந்தான்-மேதினியில்
248. - கொட்டமிடுங் கள்ளர் குறும்படக்கு வோன்வந்தான்
வட்டமிடு மாநகுலன் வந்தானே-றிட்டெதிர்த்துச்<
249. - சீறுஞ் சமர திவாகரன்வந் தான்விருது
கூறும் விகடர் குடாரிவந்தான்-வீறு
250. - சரணென் றடைந்தோரைத் தள்ளாத கங்கை
வருண குலதிலகன் வந்தான்-தருண
251. - கரதல பற்பநிதி காத்தவ ராயன்
வரதனையன் வந்தான்வந் தானென்-றொருதாரை
252. - சின்னவொலி மேருத் திரைக்கடலி னாட்டியநாள்
மன்னுமொலி போல மலியவே-கன்னியெயில்
253. - (குழாங்கொண்ட மகளிர் செயல்)
மண்டபமு நந்தா வனமு மலர்வீடும்
கொண்ட பெருந்தெருவுங் கோபுரமும்-மண்டிவிளை
254. - யாடுகின்ற பேதையரே யாதியா யேழ்பருவ
வாடுமிடை யார்கோடி மாலாகி-ஓடிவந்துட
255 - கண்ட வுடன்கமலக் கைகுவித்தார் மெல்லமெல்லக்
கொண்டுநட தந்தியெனக் கும்பிட்டார்-மண்டலமேல்
256 - ஆணி லழகனிவ னாமென்பார் கண்காண
வேணு மனந்தமென்பார் மெல்லியலார்-சேணிக்கு
257 - மாரனோ விந்திரனோ மாமாலோ சூர்தடிந்த
வீரனோ பாருமென்பார் மெல்லியலார்-மாரனென்றாற்
258. - கன்னற் சிலையுண்டே காணரதி யோநாமும்
வன்னிப் பரியெங்கே மாரனென்றாற்-பொன்னிலகு
259. - விண்ணாடர் கோமானேல் வெள்ளைமத யானையுண்டே
கண்ணா யிரமெங்கே காட்டுமென்பார்-எண்ணாமல்
260. - முன்னகத்தை யேந்து முகில்வண்ண னாமாயிற்
பன்னகத்தை யுண்ணும் பரியெங்கே-அந்நகத்தை
261. - தாக்குமயில் வீரனென்றாற் சந்ததமு நீங்காமற்
காக்கு மயில்வா கனமுண்டே-பார்க்கினிவன்
262. - மேழி விருதால் விருதுசின்னஞ் சொல்லுவதால்
வாழி குவளைமலர் மாலையால்-ஆழிதொட்ட
263. - ராகவன்கைத் தாண்டவ ராயமன்ன னாமென்றே
மாகவன மாகவே வந்துநின்ற-வேகமிக
264. - (குழாங்களின் கூற்று)
உன்கா லுரலா வுலக்கை மருப்பாக
வன்காமன் றன்சிலையை மாட்டாயோ-நன்கானச்
265. - செய்க்கரும்பு தின்னத் தெவிட்டாதோ மன்மதனார்
கைக்கரும்பு தின்றாற் கசக்குமோ-மைக்களிறே
266. - கொட்டமிடுந் தெவ்வர் குடையைச் சிதைப்பதலால்
வட்ட மதன்குடைக்கு மாட்டாயோ-குட்டைமுனி
267. - தன்கைக் கடங்குமிந்தத் தண்கடலை நீண்டிருந்த
உன்கைக்கு ளேயடக்க வொண்ணாதோ-பொன்கொட்டிக்
268. - கப்பமிடார் செய்குன்றைக் கட்டழிப்பாய் தென்மலையை
அப்பரிசு செய்யவுன்னா லாகாதோ-செப்பும்
269. - மதமோ மொழிந்திடநால் வாயிருந்துங் கூறா
விதமேதோ வேழையர்கண் மீதும்-கதமுண்டோ
270. - என்றார் நமதுபணி யெல்லாமுங் கைக்கொண்டால்
நன்றா மமைச்சருக்கு ஞாயமோ-குன்றாத
271. - வள்ளத் தனத்தியர்கள் வஞ்சரைச் சூறைகொள்வோன்
கள்ளத் தனத்தையெங்கே கட்டுரைப்போம்-தெள்ளுதமிழ்
272. - மல்லையான் சொல்லு மதுர கவிக்கல்லால்
முல்லையா னம்பான் மொழிவானோ-மெல்லியலீர்
273. - அந்தமல்லர் கோட்டைகட்டி யாளுகின்றான் பஞ்சணையில்
வந்தமல்லர் கோட்டைகட்ட வாரானோ-சொந்தச்
274. - செயமங்கை வீற்றிருக்குஞ் செம்பொன் மணிக்குன்றாம்
புயமங்கை யாற்றழுவப் போமோ-பயமென்றே
275. - ஏழையர் வார்த்தைசெவிக் கேறுமோ மேனியெல்லாம்
மாழையுருக் கொண்டோமோ வாருமென்னச்-சூழநின்று
276 - (தலைவி தலைவனது பவனி காணவருதல்)
கன்னியர்க ளின்னபல கட்டுரைக்கும் வேளையினில்
மன்னுமத யானையின்முன் வந்துநின்றேன்-கன்னற்
277 - சிலையேந்து சிங்கார தேக மதனை
மலையேந்தி யான்புரந்த மாலைத்-துலைசேர்
278. - சிவிச்சக்ர வர்த்தியைப்போற் சேர்ந்தோரைக் காத்த
புவிச்சக்ர வர்த்தியைமுன் போரிற்-சவிச்சக்ரம்
279. - . ஆதவன்மே லேவிநின்றே யாரிருள்பூ ரித்துநின்ற
மாதவனை நீள்கருணை வாரிதியை-மோது
280. - பரதிமிர ராசியடர் பாற்கரனை யார்க்கும்
சரதகுண சந்த்ரோ தயனை-விரவு
281. - காதலபங் கேருகனைக் காத்தவ ராயன்
வாதனய னான மணியச்-சருவும்
282. - விரவலர் கோளரியை விற்பனனை வாணர்
புரவலனை நீலப் புயனை-இருநிதியைக்
283. - (தலைவி மயல்கொள்ளல்)
கண்டேன் திருவழகைக் கண்குளிரச் சேவித்தேன்
கொண்டே னதிமோகங் கொண்டமயல்-விண்டுரைக்க
284. - இவ்வேளை நல்வேளை யென்றுசொல்லும் வேளையினிற்
செவ்வேழங் கான்மீறிச் செல்லவே-வெவ்வேல்
285. - மதனம்பு பாய வரிக்கணம்பு பாய
விதனமொடு சோர்ந்து மெலிந்தேன்-பதன
286. - இடைதுவளக் குன்றமென வேந்துவளக் கொங்கை
நடைதுவள மெல்ல நடந்தேன்-புடைதழுவு
287 - விஞ்சுசகி மார்செறிந்து மேலணைத்துக் கொண்டேக
நெஞ்சு சகியே னிலைதளர்ந்தேன்-பஞ்சணையிற்
288 - சேர்த்தினார் பன்னீர் தெளித்தார் தழலினிடை
வார்த்தவெண்ணெய் போலவுள்ளம் வாடினேன்-கூர்த்துமுகம்
289. - பாராத வன்மயலாற் பாவி யுடல்வருந்தத்
தேராத வன்குடபாற் சென்றொளித்தான்-பேராத்
290. - துருத்திதென்றன் மாலை சுடர்மதியம் வெள்ளி
உருத்தசெழுந் தீயி னுருக்கி-விருத்தமதன்
291. - வாரி யிறைப்பதுபோல் வன்னிலவு வீசவிரா
ஓருகமே யாகி யுடலயர்ந்தேன்-பாரறிய
292. - அம்பலரும் பாரலரு மாக்கினான் மன்மதன்கை
அம்பலருக் காரவமே யாக்கினான்-அன்பு
293. - தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூதென்-றகத்தறிந்தே
294. - புத்திமான் சந்து பொருந்துவாய் நீநினைந்தாற்
சித்தியா மென்றே தெளிந்துரைத்தேன்-பத்தியாய்ப்
295 - (தலைவி தூதுரைக்கும் சமயத்தைக் கூறுதல்)
பூசைபண்ணும் வேளையினிற் போகேல் சமத்தான
ராசவட்ட வேளையிலு நண்ணாதே-யோசனைசெய்
296. - தானாபதியர் தளகர்த்தர் காரியத்தர்
ஆனாத போது மணுகாதே-தானாக
297. - ஒப்பமிடும் வேளையிலு மொன்னார் திறைகொணர்ந்து
கப்பமிடும் வேளையிலுங் கட்டுரையேல்-எப்புவிக்கும்
298 - பேராட்டும் வாணர் ப்ரபந்தகவி வந்திருந்து
பாராட்டும் வேளை பகராதே-சீராட்டும்
299. - உல்லாச மன்மதன்போ லொண்டொடியார் கூட்டமிடும்
சல்லாப வேளையிலுந் தானுரையேல்-வல்லாள
300 - போசன் கொலுப்பெருக்கிப் போசனமுந் தான்பண்ணி
வீசுமலர்ச் சப்ரமஞ்ச மீதினிலே-நேச
301. - மிதசனங்க டற்சூழ வீற்றிருக்கும் வேளை
மதுமலர்த்தார் வாங்கிநீ வா.
--------------------------------------------------
காப்பு :
முல்லை - முல்லையூர். இது பாட்டுடைத்தலைவராகிய தாண்டவராய பிள்ளையின் ஊர். தாண்டவராயர்; சிவகங்கை ஸம்ஸ்தானத்தில் ஸ்தானாபதியாக இருந்தவர். புவிநாயகன் - திருமால். திருமாலும் அன்பரும். கசம் முகம் விநாயகர்; கசமுகம் - யானைமுகம்
கண்ணி, 1. மா - திருமகள். மாதவன் - திருமால்
4. சந்திரனிடத்திலுள்ள களங்கத்தை மானென்பது வழக்கமாதலின் இங்ஙனம் கூறினார். மதிமான் - அறிவுடையவனென்பது வேறுபொருள்.
4-5. ஐந்து தலையரையன் - பிரமதேவர், கவர்ந்தார் - சிவபெருமான்.
5-6. சிவபெருமான் உமாதேவியாரைத் திருமணம் செய்துகொண்ட பொழுது வைதிகமரபின்படி தேவியாரின்
ஒருகாலைப்பிடித்து அம்மி மீது ஏற்றிய செய்தி இங்கே குறிக்கப்பட்டுள்ளது.
6. சிவபெருமான் திருக்கரத்தில் மானின் பின்னிரண்டு கால்களே அமைந்துள்ளனவென்பது இங்கே அறிதற்குரியது.
7. படை-பஞ்சாயுதங்கள். சாரங்கம்-வில்; மானென்பது வேறு பொருள்; சாரங்கமென்பது சாரங்கமென்றும் வழங்கும்; "சாரங்க பாணியாஞ் சக்கரத்தார்" என்று காளமேகம் இங்ஙனமே சிலேடையில் அமைத்திருக்கின்றனர். குரங்கா-வளைத்து.
7-8. காரங்கம் பெற்றோன்-திருமால். மனைவி- திருமகள். வள்ளி நாய்ச்சியாரைப் பெற்ற மான் திருமகளின் கூறென்பராதலின் அம்மானாகிய திருமகளை ஒருமான் பெற்றிருக்க வேண்டுமென்று கருதி இங்ஙனம் கூறினார்.
11. நத்து-விருப்பம்; சங்குமாம். கலைமான்-சரசுவதி, ஆண்மான்; சிலேடை.
13. மான்மருகன்: சிலேடை. திருமகளுக்குச் சிவபெருமான் தமையனாரென்று கூறும் ஒரு வழக்குண்டு. திருமகள் மானுருவங்கொண்ட செய்தியை நினைந்து இங்ஙனம் கூறினார்.
14. செங்கமலை மால்-திருமகளையுடைய திருமால்.
16. பெருமான் - பெருமையையுடையான், பெரியமான், தன்னாமம் - உன்னுடைய பெயர்.
16-8. கலைக்கோட்டு முனி - ரிச்யசிருங்கர். அவர் தசரத சக்கரவர்த்திக்காகப் புத்திரகாமேஷ்டியாகம் செய்தவர்.
19. அந்திமான் சந்திமானென்பவர்கள் இடையெழு வள்ளல்களைச் சார்ந்தவர்கள். வச்சயம்-மான்.
20. பின்னலான்- சிவபெருமான். வேதண்டம்-கைலை.
22. அருணம் என்பது மானுக்கும் பெயர்; அரிணமெனவும் வழங்கும்; பரிதி யென்பது பருதி யென்று வழங்குதல் போல.
23-4. காளமாமுனிவன் - துரியோதனாதியர் ஏவலின்படி யாகம் செய்த முனிவர். இங்கே சொல்லப்பட்ட வரலாற்றைப் பாரதம் நச்சுப்பொய்கைச் சருக்கத்தால் உணரலாம்.
25-6 மானுக்கும் அகத்திய முனிவருக்கும் சிலேடை. எள் அவரைதான் அடக்கி - எள்ளையும் அவரையையும் தின்று உள்ளே அடக்கி; எள்ளவரைதான் அடக்கி - யாவரும் இகழ்வதற்குரியதாகும்படி விந்தமலையை அடக்கி. கடலை - கடலையை, சமுத்திரத்தை. கலை - மான்கள், நூல்கள், சாதனை - பயிற்சி.
27. வாசி - குதிரை. கான்தேசம் - காட்டிடம்.
28. மிருகமென்னும் பெயர் மானுக்குண்மையை நினைந்து இங்ஙனம் கூறினார்.
29. கலையூர் மானூரென்பன இப்போது சேது ஸம்ஸ்தானத்திலுள்ள ஊர்கள்.
31.2 செயமாது - துர்க்கை; அவள் வாகனம் மான்; இதனைக் கலையானத்தி யென்னும் பெயராலறிக.
32. தெவ்வர் - பகைவர்.
33. பேர் - புல்வாய்; பகைவருடைய வாயிற் புல்லைக்கண்டால்; புற்கௌவிய பகைவரைக் கொல்லாமல் விடுவது இயல்பு; "பகைவர் புல்லார்க" ஐங்குறுநூறு, 4.
34. குழலார்க்கும் ஆடவர்க்கும். கலையென்னும் பெயர் ஆடைக்கும் மானுக்கும் உண்மையைக் கருதி இங்ஙனம் கூறினார்.
34.5. கானமுனி சாபத்துக்கு - காட்டில் உன்னை முனிகின்ற வில்லுக்கு. சாலம் ஒழிவார் - வலையை விட்டிருப்பாரை. முனிவர்களது சாபத்துக்கு அஞ்சுவாய், மாயவார்த்தைகளைப் பேசுவார்களைக்கண்டால் விலகி நிற்பாயென்பது வேறொரு பொருள்.
36. சந்திரகுலத்திற் பிறந்த பாண்டு மகாராஜன்.
36.7- இதிற்கண்ட சரித்திரத்தின் விரிவைப் பாரதத்திற் சம்பவச் சுருக்கத்தால் அறியலாம்.
36.9. புலியும் குஞ்சரமும் தாருகாவனத்துமுனிவர் யாகத்தில் உண்டாக்கி விடுத்தவை; கொன்றோர் - சிவபெருமான். முயல் - முயலகன். மற்ற விலங்குகளை அடக்கினவர் உன்னை ஆதரிக்கின்றாரென்பது வேறு பொருள்.
41. சிறியவரை - சிறியமலைகள்; என்பது மரமில்லதபொற்றைகளை சிறுமையுடையோர்களை யென்பது வேறுபொருள்.
43. அரிய மேன்மையான தினையை விளைக்கும் பெரிய மலைகளை நாடும் புத்தியுடைய மானே; அரியவரங்களைத்தரும் பெரியவர்களைச் சாரும் அறிஞனேயென்பது வேறு பொருள்.
45. அரிதாள் - தினையரிந்த தாள், திருமாலின் திருவடி.
46. கட்புலங்காணா ரூபம் - அரூபம், கால் வாதம் - காற்றாகிய வாதம்; வாதக்காலை யுடையவனென்பது வேறுபொருள்.
46-7. வாயுவிற்கு வாகனம் காற்று. வாசி - வாகனம்.
48. மகளிர் கண்ணிற்கு மான்கண்ணை உவமை கூறுதல் மரபு.
52. பிணை - புணை; தெப்பம்.
53. கண்ணார் - மகளிர்.
54. பானாளில் - இடையாமத்தில்.
55. சந்து - தூது,
57. வாள்-ஒளி. காளகண்டம் - குயில்; விஷம்பொருந்திய கழுத்தையுடையதென்பது மற்றொரு பொருள்.
58. மதுபானி - தேனைக்குடிப்பது, கட்குடியன்.
59. கோபம் - இந்திரகோபப்பூச்சி, சினம். கலாபம் - தோகை, கலகம். சோபம் - சோகம்.
60. பிரிக்குமேயன்றிச் சேர்க்காதென்பது கருத்து.
62. பூவை - நாகணவாய்ப்புள்; மைனா. கத்திகை வாங்க - மாலையை வாங்க, கத்தியைக் கையில் வாங்க.
63. பாகம் - பக்குவம்.
64. பாங்கி - உஷையின் பாங்கியான சித்திரலேகை.
66. மன்றல் - மணம். அணி - அண்ணி.
67. மேகலை - இடையணி.
69. வழுத்த - சொல்ல.
70. பொதியிலுக்கும் சிவபெருமானுக்கும் சிலேடை. அம்புதம் - மேகம். பம்புதல் - பரவுதல்.
70-71. பொதியிலுக்கும் திருமாலுக்கும் சிலேடை. அம்பரம் - மஞ்சள், கடல். பொன் - தங்கம், திருமகள். கோடு - சிகரம், சங்கு. சிலை - ஒருமரம், வில். திகிரி - மூங்கில், சக்கரம்.
72. பொதியிலுக்கும் பிரமதேவருக்கும் சிலேடை. நான்முகம் - நான்கு பக்கத்திலும், நான்கு முகங்கள். சாகை - வேத சாகைகள், மரக்கிளைகள். பூ - மலர், பூமி. மான்மகன் - திருமாலின் குமாரராகிய பிரமதேவர்.
73. பொதியிலுக்கும் இந்திரனுக்கும் சிலேடை. அரம்பை பலர் - வாழையும் பலரும், பல தேவமகளிர்.
74-5. செந்தமிழின் ஏடு - திருஞான் சம்பந்தமூர்த்தியின் திருப்பாசுரம் வரையப்பெற்ற ஏடுகள். கோடு - கரை.
76. கயல் வையையிலுள்ளது; மகரம் கடலிலுள்ளது. பண்டைக் காலத்தில் வையை கடலில் கலந்ததுண்டு. பாரித்து-பரவி.
77. மாறன்-கூன்பாண்டியர். 78. சேடு-பெருமை.
79. பூட்டும்-மன்மதன் வளைத்தற்கு நாண் பூட்டுகின்ற. மொழி - கணு; "மொழியு மினியீர்" அழகர் கலம்பகம்.
81. பாளையம்-படைவீடு.
83. அவை-நாளோலக்கம்; ஆஸ்தானம். வேணி-ஆகாசம்.
84. வேந்தன்-இந்திரன். 84-5. வச்ரவண்ணன்-குபேரன்.
89. கண்டு - கற்கண்டு. நீலமாலிகை - குவளைத்தார்; இது வேளாளர்க் குரியது.
90. படலம் - புழுதித்திரட்சி. விகடர் - வேறுபாட்டையுடைய பகைவர்கள்;
.
91. கெருவிதம் - இறுமாப்பு. 92. நெட்டரவு - ஆதிசேடன்.
93. காற்கதி - காற்றினது வேகம்; காற்பாகமாகிய வேகம். ஐந்து கதி - மல்லகதி முதலிய ஐந்து; விக்கிதம் முதலிய ஐந்துமாம்.
94. கற்கிவடிவம் - பத்தாவது அவதாரமாகிய குதிரையின் உருவம்.
95. ரணவாசி - போர்க்குதிரை.
96. மாதிரம் - திசை. தொக்கயங்கள் - டக்கயங்கள்; கொடிகள். தொக்கு - தோல்.
98. குணக்கெடுத்து - கோணலை நீக்கி.
99. அத் தளம் - அந்தச் சேனை.
101. மதி ஆதவர் பகை - ராகு கேதுக்கள்
102. நத்து ஓலும் - சங்குகள் முழங்கும். நாதரொரு மூவர் - திரிமூர்த்திகள். முத்தோல் - மூன்றுநிறமுள்ள தோல்கள்; ஏற்றுத்தோல், எருமைத்தோல், ஆட்டுத்தோல் எனினுமாம்.
103. காற்படை - காலாட்படை. கைக்கிரி - யானை. மா - குதிரை. ஆர்ப்பரித்து - முழங்கி.
104. விகடமருவலர்கள்:90. 105. தரங்கம் - அலை.
106. சிந்துரங்கள் - யானைகள். சிந்து உரங்கள் ஆகி - வலி சிந்தியனவாகி; உரம் - வலி
107. தட்டு - தேரின் உறுப்பு. வலவன்-தேர்ப்பாகன்.
108. குபீரிட்டு - பொங்கி.
109. மோடு - உயரம். கோள் - கொள்கை.
110. பல் துணிய. 111. பெட்டகங்கள் - பெட்டிகள்.
112. சாளையப்பட்டு - குடிசைகள் இருக்குமிடம்; இவை கைந்நிலையென வழங்கும். சளப்பட்டு - கலக்கப்பட்டு.
பாளையப்பட்டு - படைதங்கிய இடம்.
114. பட்டம் - காற்றாடி. பருந்து வெள்ளை நிறம்; கருடன் செந்நிறமுள்ளது.
116. தசையருந்தி நன்னீரெனச் செந்நீரைக் குடித்து.
117. கறட்டுப்பேய் - குள்ளமான பேய்.
119. பொட்டல் - வெளியான இடம். கூப்பிட்டு - கூவி.
120. கலிங்கதேசத்தரசனோடு கருணாகரத் தொண்டைமான் செய்த போர்ச்சிறப்பைக் கலிங்கத்துப்பரணியால் உணரலாகும்.
121. கூளி - பெண்பேய். கவந்தம் - தலைபோன உடம்பு.
122. மாகமின்னார் - அரம்பையர். போரில் இறந்தவர்கள் வீரசுவர்க்கம் அடைதலும் தேவமகளிரை அடைதலும் மரபென்று நூல்கள் கூறும்.
123. முனை - போர்.
124. வேலாவலயம் - கடல்வட்டம்.
125. கோட்டி - திருக்கோட்டியூர். ஒப்பம் - கையெழுத்து. நந்து - ச்ங்கு.
126. தென்குளத்தை - சிவகங்கை. கோகனக மின் - திருமகள்; அவள் குழந்தை காமன்.
127. சுடிகை - சுட்டி. சோமன் - சோழநாட்டுத் திரிபுவனத்தில் வாழ்ந்த ஓருபகாரி; "கையை விரித்தழைக்கக் கண்டு குழந்தைச் சோமன், செய்யசுட்டி யீந்தான் றினகரா" தினகரவெண்பா, 26.
129. சசிவர்ண பூபன் - சசிவர்ண துரை; இவர் சிவகங்கையை ஆண்டவர்களுள் ஒருவர்.
131. மந்திரம் - ஆலோசனை. நீயோகம் - நியோகமென்பதன் விகாரம்.
135. கவன மா - வேகத்தையுடைய குதிரை.
136. தளகர்த்தன் - படைத்தலைவன்.
137. வேளாளர்களில் ஒருவர் உக்கிரபாண்டியனாற் சிறையிடப்பட்ட மேகங்களைப் பிணைகொடுத்து விலங்கு தறிக்கச் செய்தனரென்ற வரலாற்றை நினைந்து இங்ஙனம் கூறினார்.
138. பழையனூர் நீலிக்காக எழுபது வேளாளர் தம் உயிரை நீத்த வரலாறு இதிற் குறிப்பிக்கப்பட்டது;
"மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத் தாங்கள்,
கூறியசொற் பிழையாது துணிந்து செந்தீக் குழியிலெழு பதுபேரு முழுகிக் கங்கை,
ஆறணிசெஞ்சடைத்திருவா லங்காட் டப்ப னண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கிழ்மெய்ப்,
பேறும்பெறும் வேளாளர் பெருமை யெம்மாற் பரித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ"
---சேக்கிழார் புராணம்.
139. சூலிமுதுகில் - கருப்பஸ்திரீயின் முதுகில். சோறளித்தவன் - அயன்றையென்னும ஊரிலிருந்த சடையனென்னும் உபகாரி; தொண்டை மண்டலசதகம், 10-ஆம் செய்யுளைப் பார்க்க. சூலி பசி - சிவபெருமானது பசியை.
140. அன்னமிட்டோன் - இளையான்குடி மாறநாயனார். வள்ளல் - நின்றைக்காளத்தி முதலியார்.
141. நிறுத்தினோன் : சடையப்பவள்ளல்; தொண்டைமண்டல சதகம், 13-ஆம் செய்யுளைப் பார்க்க.
143. குழந்தை : இந்நூலசிரியர் பெயர்; இளங்குழந்தை யென்பது வேறுபொருள்.
145. குன்றாக்குடி - குன்றக்குடி.
146. செந்நூல் - செவ்விய சிற்பசாஸ்திரம்.
147. பூந்தரு - மலர்மரங்கள், படித்து உறையும் மண்டபம்.
149. கங்கைகுலன்: வேளாளர் கங்காகுலத்தினரெனப்படுவர்.
150. சீதளி- திருப்புத்தூர்ச் சிவாலயம். கொன்றை: திருப்புத்தூர்த்தலவிருட்சம். பைரவமூர்த்தி சந்நிதி இத்தலத்தில் விசேடமுடையது.
151. மங்கைபாகர்: திருக்கொடுங்குன்றத்துச் சிவபெருமான் திருநாமம். மாதவன் - ஸ்ரீ சௌமியநாராயணப்பெருமாள்.
152. தண்டலை - சோலை. வில்வத்தளமும் மலர்களும்.
156. பார் - வன்னிலம்.
158. பெரியவுடையான் - வடுகநாத துரை.
162. சாலை - சத்திரம்.
165. தாபரிப்போன் - நிலைபெறச்செய்பவன்.
166. மணாளன் - தலைவன். அவர்களை அடக்கி அவர்கள் பொன்னைத் தனக்குப் பயன்படச்செய்பவனென்பது கருத்து.
167. கருணாகரன் - கலிங்கப்போர் வென்ற சோழசேனாபதி.
168. சுபகாரி - சுபத்தை உண்டுபண்ணுபவன்.
170. பதுமன் - பிரமன். முனி - விசுவாமித்திரர்;
"வந்து முனியெய்துதலு மார்பிலணி யாரம்,
அந்தர தலத்திரவி யஞ்சவொளி விஞ்சக்,
கந்தமல ரிற்கடவு டன்வரவு காணும்,
இந்திர னெனக்கடி தெழுந்தடி பணிந்தான்"
(கம்ப. கையடைப்.) என்பதில் விசுவாமித்திரமுனிவருக்குப் பிரமதேவரை உவமைகூறியது காண்க. காலினான் - இராமன்.
171. விந்தை - வெற்றிமகள். கோகனகை - திருமகள்.
172. வங்கணம் - அன்பு.
174. காந்தருவகானவித்தை - ஸங்கீதவித்தையை.
175. கீர்த்திகரித்து - புகழை உண்டாக்கி. மூர்த்திகரித்த - உருவுகொண்ட.
177. தீர்த்து அவர் ஆய் அன்புபுரி சீதரமால்; அவர் - பஞ்ச பாண்டவர்.
179. நேர்ந்தாலும் - எதிர்த்தாலும்.
181. அமிர்தகிரணத்தை யுடைமையால் தேன் தொட்ட இந்து என்றார்; இந்து - சந்திரன்.
182. செய்க்கு - வயல்களில். வளைநித்திலம் - சங்குகளிலிருந்து உண்டான முத்துக்கள்.
184. அதுலன் - ஒப்பிலாதவன். குளந்தை - சிவகங்கை.
187. பூமணிகா - அழகிய சிந்தாமணியும் கற்பகமும்.
191. மடங்கல் - சிங்கம். வயம் - வெற்றி.
192. பிறை ஆயிரங்கள் தொழுவோன் - தீர்க்காயுளை உடையான்; ஆயிரம்பிறை கண்டோரென்று முதியோரைக் குறித்தல் ஒருமரபு; "ஆயிர மதியங்கண்ட முந்தைவே தியராத்தோன்றி" (திருவிளை. 63 : 68); 61 : 40.
193. தந்திரசிந்து - சேனையாகியகடல். செனகன் - ஜனகராஜனைப் போன்றவன்.
194. மந்தரம் - மந்தரமலையைப்போன்ற. தரு - கற்பகம். சரி - ஒப்பு.
195. காரி - கடையெழுவள்ளல்களில் ஒருவன். குணவாரி - குணக் கடல். மாரி மதம் - மழையைப்போன்ற மதத்தையுடைய.
199. சங்க்ராமம் - சண்டை. 198-9. சொல்மருவு உதாகரிகன்.
200. கோடு - சிகரம்.
201. சீவகனென்றபடி. சுரமஞ்சரி - சீவகன்மனைவி. மாலை - குணமாலை.
206. வாய்பூசி - வாயைச்சுத்தம் செய்துகொண்டு. ஆசாரம் - அரசிருக்கை.
207. பாகு - தலைப்பாகை.
208. மூவர் - திரிமூர்த்திகள். காணிக்க - காட்ட.
209. முருகன்-முருகென்னும் ஆபரணத்தையுடையான், முருகக் கடவுள்.
212. கோகனகை - திருமகள். பதக்கம் - மார்பில் அணிந்து கொள்ளும் ஆபரணம்.
213. தாழ்குழலார் சங்குவளையையும் மாலையையும் சிந்தித்தொடர.
215. மா குவலையம் - பெரிய பூமி. சுமடு - சும்மாடு, மணியாலாகிய வாகுவலையம். மாகர் - தேவர்.
216. கைச்சரடு - கைத்தோற்கட்டி.
217. சலவை - வெளுத்த ஆடை. குறிய உடைவாள்.
218. கண்ணபிரானாகப் பாவித்தபடி. சகடம் - சகடாசுரன்.
219. மிஞ்சி - ஒருவகைக் கால்விரலணி.
220. வரை - மலை. வாறு: "வந்து நடைபயின்ற வாறென்ன" (228) என்பர்பின். "வல்லோ னுலாவந்த வாறென்ன" (சொக்கநாதருலா.) பரித்து - தாங்கி.
221. பாவடி - மிதியடி.
222. ஓடை - நெற்றிப்பட்டம்.
223. கும்பசம்பவன் - அகத்தியன்; அங்கை - அகங்கையை ஒத்த.
224. தொண்டலம் - துதிக்கை. பண்டரங்கன் - சிவபெருமான். சிவபெருமானும் யமனும் கண்புதைக்க.
225. ருத்ரம் - கோபம். மிக்கு அதட்டி. கற்கி - குதிரை.
225-6. கற்கியையும் அத்தியையும் துகைத்து. சத்திரக் கரத்தரை - சஸ்திரங்களையுடைய கையினர்களை; சஸ்திரம் - வாள்முதலிய படைகள்.தலத்தில் - பூமியில்.
227. யுத்தரங்கம் - போர்க்களம். முசலம் - உலக்கை.
228. விந்தை - வெற்றிமகள்.
230. கரடம் - மதம் பாய்கின்ற சுவடு. தந்தாவளம் - யானை.
232. குரவை - குரவைக்கூத்து; குரவைப்பாட்டுமாம். மதாவளம் - யானை.
233. மன்னியவார் - மன்னியர்கள்; ஒருவகைச் சிற்றரசர்கள். ராவுத்தர் - குதிரைவீரர்.
234. குப்பாயம் - சட்டை.
235. நேரிசத்தர் - எறிபடையையுடையார்; நேரிசம் - அம்பு முதலியவை. நேமி - சக்கரம். பாரிசம் - பக்கம்.
236. நகரா - ஒருவாத்தியம். பேரி - முரசு. கொண்டலின் - மேகத்தைப்போல.
237. தண்டு அகம்தாங்கும். தகுணி - தகுணிச்சம். கோடு இணை - இரட்டைச்சங்கு. "முன்னொற்றையிரு சங்கமுடனூத" வி. பா. நிரை மீட்சி. 5.
238. கிடுபிடி - ஒருவாத்தியம்.
240. சரமண்டலம் - ஸ்வரமண்டலம்;
"சரமண்ட லத்தி னிசையென் செவிக்கட் டனஞ்சயன்கைச்,
சரமண்ட லத்திசை யிற்பொருட் கேகினர் தாமதியார்"
(மயிலையந்தாதி, 89.) இது சுரமண்டலமென்றும் வழங்கும்.
241. படிதம் - கூத்து. அயினி - சோறுகலந்த ஆலத்தி. தருணம்- இளமை.
242. கட்டியத்தர் - கட்டியம் கூறுபவர். வேத்திரம் - பிரம்பு.
243. குஞ்சம் - ஈயோட்டி. டக்கையோர்; டக்கை - ஒரு வாத்தியம். நடக்கும் - ஓடும்.
244. நீலம் - குவளைமாலை.
248. மாநகுலன் - குதிரையைச் செலுத்துதலில் வல்ல நகுலனைப் போன்றவன்.
249. விகடர் - பகைவர்; குடாரி - கோடரி.
251-2. தாரையின் ஒலியும் சின்னத்தின் ஒலியும்.
253. நந்தாவனம் - நந்தவனம். மலர்வீடு - மலர்மண்டபம்; லதாக் கிருகமென்று கூறப்படும். மண்டி - நெருங்கி.
254. மாலாகி - மயலடைந்து.
255. தந்தி - யானையே.
256. காண அனந்தம் கண்வேணும்; அனந்தம் - அளவின்மை.
256-7. இக்கு மாரன் - கறுப்புவில்லையுடைய மன்மதன். சூர்தடிந்தவீரன் - முருகக்கடவுள்.
258. கன்னற்சிலை - கரும்புவில். இரதியையன்றி ஏனையோர் கண்களுக்குக் காமன் புலப்படான். வன்னி - கிளி.
260. முன் நகத்தை; நகம் - கோவர்த்தனகிரி. பன்னகம்-பாம்பு. பரி-கருடன். அந்நகத்தை-கிரவுஞ்சகிரியை.
261. தாக்கும் அயில் வீரன்; அயில் - வேல்.
262. விருது - இங்கே கொடி; வேளாளருக்கு மேழிக்கொடியும் குவளைமாலையும் உரியன. ஆழி - மோதிரம்.
259-62. " இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த,
அந்தரத்தா னென்னிற் பிறையில்லை--யந்தரத்துக்,
கோழியா னென்னின் முகமொன்றே கோதையே,
ஆழியா னென்றுணரற் பாற்று" என்னும் பழம் பாடல் இதன் பொருளோடு ஒத்துள்ளது.
263. ராகம் வன் கை - செம்மையையுடைய வலிய கை.
264. சிலையை - கரும்பாகியவில்லை. மாட்டல் - இடித்தல்.
265. செய்க்கரும்பு - வயலில் விளையும் கரும்பு.
266. தெவ்வர் - பகைவர். குடைக்கு - குடையைச் சிதைத்தற்கு. மாட்டாயோ - வன்மையில்லாயோ. குட்டைமுனி - அகத்தியர்.
268. தென்மலை - பொதியின்மலை; தென்றற்காற்றின் பிறப்பிடமாதலின் அம்மலையைத் தலைவி வெறுத்தனள்.
269. நால்வாய் - நான்றவாய்; நான்குவாயென்பது தொனி. கூறா விதம் ஏதோ. கதம் - கோபம்.
270. பணி - ஆபரணம்.
271. தனத்தியர்கள்; தன்மைப்பொருளது.
272. மல்லையான் - மல்லையூரிலிருந்தவன். மல்லையென்பது மிதிலைப் பட்டிக் கவிராயர்களுக்குரிய அடைமொழி. முல்லையான் - முல்லையூரான்; என்றது இப்பாட்டுடைத் தலைவரை.
273. பஞ்சணையில்..... கட்ட : குறிப்பு.
274. வீரமுடையார் தோளில் செயமங்கை இருப்பதாகக் கூறுதல் மரபு;
"என்னேய் சிலமாத ரெய்தற் கெளியவோ,
பொன்னே யனபாயன் பொன்னெடுந்தோள் - முன்னே,
தனவேயென் றாளுஞ் சயமடந்தை தோளாம்,
புனவேய் மிடைந்த பொருப்பு." புயம் அங்கையால். போமோ - முடியுமோ.
275. மாழையுரு - பசலைநிறம்.
276. இன்ன பல - இத்தகைய சொற்கள் பலவற்றை.
277. ஆன் புரந்த - பசுக்களைப் பாதுகாத்த. துலை - தராசுத்தட்டு.
278. சிவி - சிபி. சவிச்சக்ரம் - ஒளியையுடைய சக்கராயுதத்தை.
279. பூரித்து - நிறைத்து.
280. பரதிமிர ராசி - பகைவர்களாகிய இருட்கூட்டத்தை. பாற்கரனை -சூரியனைப்போன்றவனை. சரதகுணம் - சரஸகுணம்.
281. வரதனயன் - வரத்தாற்பெற்ற பிள்ளை.
282. விரவலர் - பகைவர். கோளரி - சிங்கம். வாணர் - புலவர். நீலப்புயனை - குவளை மலர்மாலையை யணிந்த தோளையுடையவனை.
283. விண்டு உரைக்க - வெளிப்படையாகச் சொல்ல.
285. வரிக்கண் அம்பு; அம்பு - நீர். பதனம் - பாதுகாப்பு.
287. சகிமார் - தோழியர். சகியேன் - பொறேனாகி.
289. பாராதவன் - தலைவன். பாவியென்றது தன்னையே. தேர் ஆதவன். குடபால் - மேற்றிசையில்.
290. மாலையிற் சுடரும் மதியம். உருத்த - வெம்மையாகிய.
292. அம்பல் - சிலர்கூறும் பழிமொழி. அரும்புதலார்ந்த அலர்; அலர் - பலர்கூறும் பழிமொழி. அம்பாகிய அலருக்கு. ஆரவம் - பகை.
293. இது திருக்குறள்.
294. புத்திமான் - புத்தியையுடைய மான், அறிவுடையவன். சந்து - தூது. சித்தி - காரியம் கைகூடல்.
295. சமத்தானம் - ஸம்ஸ்தானம்.
296. தளகர்த்தர் - சேனாபதியர். ஆனாதபோது - நீங்காத காலத்தில்.
297. ஒப்பம் - கையொப்பம். ஒன்னார் - பகைவர். திறை - கப்பப் பொருள்கள்.
298. பேரைச் செலுத்துகின்ற. வாணர் - புலவர்.
299. உல்லாசம் - மிக்க களிப்பு. சல்லாபம் - அளவளாவல்.
300. கொலு - திருவோலக்கம். சப்ரமஞ்சம் - கட்டில்.
301. மிதசனங்கள் - அளவான பரிசனங்கள்.
-----------------------------------------------------------
Comments
Post a Comment