Kūḷappa nāyakkaṉ viṟali viṭu tūtu


பிரபந்த வகை நூல்கள்

Back

கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது
சுப்ர தீபக் கவி



கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது
ஆசிரியர் சுப்ர தீபக் கவி



    Source:
    கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது
    ஆசிரியர் சுப்ர தீபக் கவி
    பதிப்பாசிரியர் ராய. சொக்கலிங்கன்
    பக்கம் - 176.
    விலை ரூபாய் மூன்று
    கிடைக்கும் இடம் பாரதி பிக்சர் பாலெஸ், காரைக்குடி.
    சௌத் இந்தியா பிரஸ், காரைக்குடி.
    -------------------

    நூல் முகம்

    தோற்றுவாய் விறலியைத் தூது போக்குவது விறலி விடு தூது. பிணக்குக் கொண்ட மனையாளிடம் அவளைப் பிரிந்து சென்ற கணவனின் செய்தியையும் வருகையையும் சொல்லி, போனவனைப் பரிவோடு வரவேற்க அவளை இணக்கவல்ல இளங்குமரிக்கு விறலி என்று பெயர்.

    - நீங்கி வெறுப்பு
    ஆன மடவார்க்கும் ஆடவர்க்கும் நல்லசமா
    தான நிதான அவ தானியே! 17- ம் கண்ணி

    என விறலியை அழைக்கின்றான் இந்நூலில் தூதுவிடும் நாயகன். விறல் என்ற சொல்லுக்கு வலிமை என்று பொருள். விறலி, வலிமையுடையாள்.

    கூளப்ப நாயக்கன்

    இவ் விறலி விடு தூது நாகம கூளப்ப நாயக்கன்மீது பாடப்பெற்றது. நாகம கூளப்ப நாயக்கன் என்பவன் மதுரை ஜில்லாவிலுள்ள நிலைக்கோட்டை என்னும் பகுதியின் தலைவனாக இருந்தவன். அவன் இந் நூலாசிரியரைப் பெரிதும் ஆதரித்தவன். பாட்டுடைத் தலைவனாகிய கூளப்ப நாயக்கன் ஆசிரியரால் தேன் ஒழுகும் தமிழில் மிகப் பலபடப் பாராட்டப் பெறுகின்றான்.

      குன்றில் கருதார் குடும்பம் குடிஏற
      முன்றில் குமுறுமணி மும்முரசான் - நின்றஅடி
      தூக்கினார் சென்னி துடிக்கத் துணித்துவிடும்
      ஆக்கினா சக்கரம் போல் அணையான். 50 - 51

      தண்தார் மகுடம் தடவும் ஜயவீர
      கண்டா மணிமுழங்கும் காலினான் - மண்டு சமர்
      யுத்தகளத்து ஒன்னார் உயிர்மேய்ந்த குற்றுடைவாள்
      வைத்தணைத்துக் கட்டும் மருங்கினான். - கைத்தலத்தில்
      ஐந்தருவும் ஐந்து விரல் ஆகித் தருவ எனச்
      செந்தமிழ்க்கு நல்குமலர்ச் செங்கையான் - பைந்தொடியார்
      பொன்முலையாம் கோட்டில் புதுக்கலவைச் சேறு ஊட்டி
      மன்மதநல் நூல் எழுதும் மார்பினான். 53 - 56

      சாய்த்த மதிமுகத்துத் தையலார் முத்தம்இட
      வாய்த்த முழுமதிபோல் மாமுகத்தான் - காத்தருளும்
      எம்பிரா னார்கோயில் ஈசரடி எந்நாளும்
      செம்பொன்முடி தாங்குமலர்ச் சென்னியான் - உம்பர் தொழும்
      நின்மலனார் வெண்ணீற்று நெற்றிக்கண் காணாத
      மன்மதன்காண் என்னும் வடிவினான். 61 - 63

    என்பன கூளப்ப நாயக்கனைப்பற்றிய புகழ்ச்சிகளுட் சில.

    இவற்றுள் "நின்மலனார் வெண் நீற்று நெற்றிக்கண் காணாத மன்மதன்காண்" என்ற சொல் தொடரின் அருமையை அப்படியே நுகர்ந்து பருகி வியந்து, இந் நூலாசிரியர் காலத்து வாழ்ந்த பாவலர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பார், ஆசிரியர் இறந்தபோது சொல்லிய பின்வரும் வெண்பா நோக்கத்தக்கது.

      செய்ய கொழுதைச் சிவசுப் பிரதீபா!
      வெய்ய கொழுந்தழலில் வேவதே! ஐயகோ!
      "நின்மலனார் வெண்ணீற்று நெற்றிக்கண் காணாத
      மன்மதன்காண் " என்று சொன்ன வாய்.

    கூளப்ப நாயக்கன் இந்நூலாசிரியர் காலத்தவனே. இந் நூலாசிரியர் இவன் மீது இத் தூது தவிரக் காதல் ஒன்றும் செய்திருக்கின்றார். அதற்குக் கூளப்ப நாயக்கன் காதல் என்று பெயர். இவ் இரண்டு நூல்களும் அதி மதுரம் வாய்ந்தவை. கூளப்ப நாயக்கன், நாகம கூளேந்திரன், பெரிய நாகன என்பன இவன் பெயர்கள். இவன் தந்தை பெயர் சிந்தம் கூளேந்திரன்.

      சிந்தமக ளேந்திரதுரை சிங்காசனாதிபதி
      தந்தசௌ பாக்கிய சம்பன்னன். 85
      சிங்காசனாதிபதி சிந்தமகூ ளேந்திரன் அருள்
      எங்கோன் பெரியநா கேந்திரன். 490
      பெஞ்சை நகர்ச் சிந்தமன் நற் பேறே! 1091

    என்பன இவன் தந்தையைப் பற்றிக் கூறப்படுவன. இவனுக்குச் சிந்தமன் என ஒரு தம்பி இருந்ததாகத் தெரிகிறது. "குமார துரைச் சிந்தமன்" என ஆயிரத்துத் தொண்ணூற்று ஆறாம் கண்ணியிலும் "கூளேந்திரன் தம்பியாம் சிந்தமன்" என்று ஆயிரத்து நூற்றி
    ஆறாம் கண்ணியிலும் சொல்லப்படுகின்றன.

      ஐம்பதூர்க் கேகி அலைந்து பலன் ஏதென்றே
      ஒன்பதூர்க் கேக ஒருமித்தேன். 993

    என்பதுபோன்ற சிலவற்றால் இவனுக்கு ஒன்பது ஊர்கள் சிறப்பாக இருந்தன எனக் கொள்ளலாம். இவனுடைய தலைநகருக்கு 'பெஞ்சை ' அல்லது 'நவபுரி' என்று பெயர். இவன் திருமால் வழிபாடு உடையவன் என்பதை

    திம்மராயப்பெருமாள் செஞ்சரண சேகரனை 24

    என்பது போன்றவற்றால் அறிகிறோம்.

    சுப்ர தீபக் கவி

    இந்த நூலின் ஆசிரியர் பெயர் சுப்ர தீபக் கவி. இவர் மதுரை ஜில்லா திருமங்கலம் பகுதியினர். இன்னார் பிறந்த வகுப்பில் தட்டார் என்ப. இவர் நிறைந்த புலமை வாய்க்கப் பெற்றிருந்தார். இவர் பாட்டுக்களெல்லாம் தேனும் பாலும் பெருகி ஆறாக ஓட்டமெடுப்பது போன்ற இனிமையும் ஒழுங்கும் கொண்டவை. இவர் எக்காலத் தவர் என்பதை அறியத்தக்க திறவுகோல் இந்நூலின் உள்ளேயே இருக்கின்றது. அதனைத் தேடி எடுக்கும் சிரமம் கூடப் படிப்பவர்க்கு வேண்டாம். அச்சாவியை இங்கு எடுத்து வைக்கிறேன்.

      திக்கெல்லாம் கொண்டாடும் செங்கோள் விஜயரங்க
      சொக்கநா தேந்த்ர துரைராஜன் - சக்ரபதி
      சேதுபதி பாண்ட்யகுல தெட்சண சிங்காசன ந
      ராதிபதி மெச்சு நரபாலன். 34 , 35

    என்ற கண்ணிகள் நூலாசிரியர் காலத்தைக் கணிக்க நன்கு உதவுகின்றன. விஜய ரங்க சொக்கநாத துரை ராஜனால் பாராட்டப் பெற்றவன் கூளப்பநாயக்கன் என்பதால் அவன் காலத்தவனாகவே கூளப்பநாயக்கன் இருத்தல் வேண்டும். கூளப்பநாயக்கன் காலத்து உடன் இருந்தவனே சுப்ரதீபக்கவி என்று சொல்ல வேண்டுவதே இல்லை. இக்கண்ணிகளில் கூறப்படுபவனே ஒரு காலத்தில் மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கன் என்பவன். இவன் மதுரையை ஆண்ட காலம் கி. பி. 1706 - முதல் 1732 எனச் சரிதம் கூறும். இந்தக்காலமே கூளப்பநாயக்கன் காலமும் சுப்ரதீபனின் காலமும் என்பதில் ஐயம் இல்லை. எனவே ஏறக்குறைய இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கிடையில் தோன்றியது இந்நூல் என்று கொள்ள வேண்டும்.

    இந் நூலாசிரியராகிய சுப்ரதீபர், பெரும் புலவராக இருந்து, மதுரைச் சோமசுந்தரக் கடவுள்மீது திருவிளை யாடல் புராணம் இயற்றிய கல்விக்கடல் பரஞ்சோதி முனிவரிடம் கல்வி கற்றவர் என ஊகிக்க இடம் இருக்கிறது.

      கோமுனிவர் கொண்டாடும் கூடல் பரஞ்சோதி
      மாமுனிவர் செம்பொன் மலர்ப்பாதம் நான் மறவேன்

    என்று சுப்ரதீபக் கவி, தாம் பாடிய கூளப்ப நாயக்கன் காதலில் கூறுவதால், கவி முனிவர் மாணாக்கர் எனவும் ஆசிரியர் அஞ்சலியாகவே இப்பாட்டைச் செய்தார் என்றுமே கொள்ள வேண்டுவதாகிறது.

    நூல் வரலாறு

    நூலின் கதை என்ன என்று பார்க்கலாம்.

    காவிரியாகிய பெண், தனது அலைகளாகிய கைகளால் திருவடி வருடத் திருமால் அறிதுயில் கொண்டிருக்கும் திருவரங்க நகரிலே பிறந்தான் ஒருவன். ஐயங்கார் மரபிலே தான். அவன் பெயரே அட்டாவதானி. அவனுக்கு வேறு இயற்பெயர் ஏதும் இருப்பதாக நூலில் சொல்லப்படவில்லை. "அட்டாவதானி என்ப தாயினேன்" எனவும் "அட்டா
    வதானி என் பேர் " என் றும் தன்னை அவன் அறிமுகப்படுத்துகிறான் இரண்டு இடங்களில்.

    அந்த அட்டாவதானி, தமிழ்நாட்டின் வட எல்லையான திருப்பதியிலே வாசுதேவ ஐயங்கார் மகளை மணம் புரிந்தான். அந்நங்கையின் பெயர் பூங்காவனம். அட்டா-வதானம் வல்ல அவன், அவனுக்கு இன்பக்கனியாக அமைந்த அப் பூங்காவனத்தோடு சீரங்கத்திலே இனிய வாழ்க்கை நடத்துவானாயினான். அங்ஙனம் வாழ்ந்த அட்டாவதானி பக்கத்து ஊரான திருச்சிராப்பள்ளியில் நாட்டம் செலுத்தலானான். அங்கு இன்பரசவல்லி யென்னும் விலைமாதின் வலையில் வீழ்ந்தான்.

    இதனை அறிந்தாள் பூங்காவனம். விளைந்தது பூசல். இல்லாள் ஏச்சைப் பொறுக்க-மாட்டாமல் புறப்பட்டான் வீட்டை விட்டு அவதானி. பற்பல ஒளர்களையும் சுற்றி விட்டுச் சோலைமலை வந்து சேர்ந்தான். அவ் அழகர் கோவிலில் ஞானியையன் என்ற ஒரு நண்பனைப் பெற்றான். 'சொக்கேசர் வாழும் மதுரை நகர் கண்டு தொழுது வர நீரும் உடன் வரவேண்டும்' என ஞானியையனை அழைத்தான் அவதானி. 'வேண்டாமப்பா அது; அங்கு போனால் நீ மாட்டிக்கொண்டுவிடக் கூடும்; அங்கே மதனாபிஷேகம் என ஒரு வேசி இருக்கிறாள்; அவளால் குடி கெட்டவர் அநேகர்' என, அவள் பிறப்பு வளர்ப்பு செய்கை முதலியவற்றை எடுத்து விரிவாக உரைக்கின்றார் ஞானியையர். அப்படி யொன்றும் தன்னைப்பற்றி அஞ்ச வேண்டாம் எனச் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு மதுரை அடைகிறான் அவதானி.

    மதுரை மீனாளை வணங்கினான்; சொக்கேசர் தாள் பணிந்தான்; ஆயிரக்கால் மண்டபத்துள் நுழைந்தான். அங்கே நடந்து கொண்டிருந்தது நடனம். ஞானியையன் சொன்னது சரியாக முடிந்தது. "ஆயிரக்கால் மண்டபத்தில் கண்டான் மதனாபிஷேகத்தை". அந்த விண் தலத்தை விட்டு வந்த மேனகையைக் கண்டவுடன் என்ன ஆனான்? அவளுடைய கொண்டைச் சொருக்கு அழகும் முத்துத் துராய் அழகும் செவ்வாய் முருக்கு அழகும் சேலை முகப்பில் கருக்கு அழகும் வேல் அழகு போன்ற விழி அழகும் தண்டையிட்ட கால் அழகும் பொற் கடகக் கை அழகும் ஓலை இட்ட காது அழகும் வச்ரமணிக் கச்சு இறுக்கும் மார்பு அழகும் சோதி முகத்து அழகும் துங்க ரத்ன மாது ரதி கட்டு அழகும் பொட்டு அழகும் கச்சை கட்டி வந்த கட்டு மட்டு அழகும் கண்டு மயங்கி யே போனான். ஆட்டம் முடிந்தது. புறப்பட்டாள் வீட்டுக்கு மதனாபிஷேகம். பின் தொடர்ந்தான் அவதானி, ஞானியையனை ஏமாற்றிவிட்டு,

    மதனாபிஷேகம் வீட்டின் உள்ளே நுழைந்து விட்டாள், அவதானி. நின்றான் வாசலில், என்ன விசேடம் என்றாள் ஒரு தோழிவந்தது. "நம்பர் சொக்கலிங்கர் முன் நின்று ஆடி வந்த பெண் அரசி யார்?" என்று கேட்டான் அவதானி. 'ஓகோ! அது தெரிய வேண்டுமா? "மாணிக்கமாலை பெற்ற வச்சிரத்தை, கும்பகுடக் காணிக்கு வாய்த்த கனதனத்தை, ஆணி முத்தை, விண் இச்சைகொள்ள வந்த மேனகையை, பெண்ணுக்குப் பெண் இச்சை கொள்ள வந்த பெண் அமுதை, எண் அரிய சாத்ரவித கொக்கோக சாரத்தை, மேல் விருது பாத்திர சிரோ மணியை, பைங்கிளியை, வாய்த்த மடமானை, மரகதத்தை, மன்மத குடோரியை, செந்தேனை, மதனாபிஷேகத்தை" நீர் தெரிந்துகொள்ள வில்லையா? நன்றாக இருக்கிறது" என்று கேட்டு விட்டாள், கைம்மருந்துச் சொக்கி என்னும் தோழி. 'சரி; இருக்கட்டும்; வரலாமோ?' என்றான் அவதானி. 'நன்றாக வரலாம், வெள்ளையப்பன் தான் வேண்டுவது' என்றாள் பாங்கி.

    "வெள்ளைப்புது வெட்டு மின்னலாய் அப்படியே அள்ளிக் கொடுத்"து அனுப்பினான். பிறகு அவதானிக்கு ராஜ உபசாரம் நடந்தது. மதனாபிஷேகத்தின் இன்ப வாரிதியில் சிலகாலம் மிதந்தான் அவதானி. அவனிடம் இருந்த பொருள் முழுதும் பலவகையாகவும் அவள் கைக்கு மாறும்வரைப் பொறுத்திருந்தாள் மதனா பிஷேகம். எல்லாம் தீர்ந்தது; வெறுங்கையன் ஆனான் அவதானி. துரத்த வகைதேடினர் தாயும் மகளும். வந்தது சண்டை . வழக்குச் சபை ஏறியது. அம்பலத்தார் ஒருவகையாக வழக்கை ஒழித்து அவதானியை விடுதலை செய்து விட்டனர்.

    அவதானி மதுரை ஈசனை வணங்கி விட்டுப் புறப் பட்டான். எங்கே? பாடல் தலைவனாகிய கூளப்பநாயக்கனிடம். தனது அட்டாவதானத் திறமையை அங்கே காட்டிப் புகழ்பெற்றான். ஏராளமான பரிசில்கள் கிடைக்கின்றன அவதானிக்கு. எல்லாவற்றையும் கொண்டு சிறப்பாகத் திரும்புகின்றான் தன் வீடு நோக்கி. தனக்கு முன்னதாகத் தன்மனையாட்டி பால் செல்க "தோகை விறலி நீ தூது" என விறலியைத் தூதாக விடுக்கின்றான் அவதானி. இதுவே கதை.

    யாப்பு

    இந்நூல் 1144 கண்ணிகள் கொண்ட கலிவெண்பாவால் ஆக்கப்பெற்றிருக்கிறது. எனினும் 41, 42, 318, 319, 394, 395, 570, 571, 1073, 1074, 1075 ஆகிய பதினொரு கண்ணிகள் கலிவெண் பாவில் அமைய வேண்டிய வெண் தளை யாப்புக்கு மாறுபட்ட டிருக்கின்றன. இவற்றை யாப்புக்கு அமைய நான் திருத்த விரும்பவில்லை. ஆசிரியர் அவ் இடங்களிலெல்லாம் யாப்பை முரணினாலும் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் கருதியே செய்தனர் என எனக்குத் தோன்றுவதாலேயே. அவ் இடங்களில் சந்தநயம் ஒன்றுக்கே ஆசிரியர் சிறப்புத் தந்தார் என்றே நான் நினைக்கிறேன். இவ் விஷயத்தை விரித்தால் நூல் முகம் பெருகி விடும் என அஞ்சி விடுக்கின்றேன். பாவலர் அவ் அவ் இடங்களை ஆராய்ந்து முடிவுகட்டட்டும்.

    மொழி

    கொச்சைச் சொற்கள் இந் நூலில் இடம்பெற்றுத் தான் இருக்கின்றன. என்னால் வெளியிடப்பெற்ற சேதுபதி விறலி விடு தூது முன் உரையில் கூறப்பெற்ற காரணத்தையே இதற்கும் சொல்லுகிறேன். சொற்களைக் கண்டு ஒழுக்கம் வாய்ந்தவர் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை. இன்பத்தை இல்லில் ஒல்லுமாறு நுகர்வாரை எந்தச் சக்தியும் தடுத்தல் முடியாது; தடுக்கவும் கூடாது.

    நூல் நயம்

    இந் நூல் வடித்த சுவையுடையது. இம் முகப்பில் நூலின் உள்ளிருந்து எந்தப் பகுதியைச்
    சான்றாக எடுத்துக் காட்டுவது என்று தோன்றவில்லை. அத்தனையும் தித்திப்பு. கற்பனைக் களஞ்சியம் இந்நூல்.

      பெஞ்சை நகர் வாழப் பெருஞ்சீர் வளர்ந்தோங்க
      கஞ்சமலர் மாது களிகூர.-வஞ்சகமும்
      பொய்யும் பறந்தோடப் புண்ணியமும் தண் அளியும்
      மெய்யும் கலந்து விளையாட்- பெய்யும் மழை வானம்
      வழங்க மனைவாழ்க்கை ஓங்க அன்ன
      தானம் வழங்கத் தவம் ஓங்க - நான்மறைக்கும்
      நல் நிதியாம் மேகவண்ண நாதர் திம்மராயர் திருச்
      சந்நிதியில் பூஜை தழைத்தோங்க - இந்நிலத்தில்
      எங்கோன் அபிஷேகம் ஏந்தி மநு விஞ்ஞானச்
      செங்கோல் அரசு செலுத்து நாள் 62-66

    எனக் கூளப்ப நாயக்கன் செயல் சிறப்பித்துக் கூறப் படுகிறது.

    மதனாபிஷேகத்தின் தாய் மாணிக்கமாலை கருவுற்ற காலத்து மண்ணைத் தின்றாளாம். கருவுற்ற பலருந்தான் மண் தின்கின்றனர். மாணிக்கமாலை மண் தின்றதைக் கவி செய்யும் கற்பனை சால அழகுடையது. தன் கருவில் இருக்கும் மகளிடம் சிக்கும் பிறர் வாயில் அள்ளிப்போடப் போகும் பொருளைத் தன் வாயில் போட்டுப் பார்த்தாள் தாய் என்று வருகின்றது பாட்டு.

      ஊடு தரித்த பிள்ளைக்கு உள்ளாவார் வாயில் அள்ளிப்
      போடுவதைத் தன் வாயில் போட்டு அறிந்தாள் 142

    பெண்ணைத் தொட்டிலில் என்ன சொல்லி ஏற்றினாள்?

      வீடேறப் பண்டைமுதல் மேல் ஏறத் தன் குடும்பம்
      ஈடேறப் பொன் தொட்டில் ஏற்றினாள் 176

    தாராட்டினாள் குழந்தையை. எவ்வாறு?

      வாரா தவர்ஆர் ஆர் ? வந்து மடிச் சீலை கொட்டித்
      தாரா தவர்ஆர் ஆர்? தந்து அணையில் சேராதார்
      ஆராரார் சேர்ந்துனக்குள் ஆசை கொண்டு சுற்றாதார்
      ஆராரார் என்றுதா ராட்டினாள் 177, 178

    மகள் மதனாபிஷேகத்தை எப்படி வளர்த்தாள் என்று நினைக்கிறீர்கள்? கூளப்ப நாயக்கன் புகழைத் தமிழ்ப் பாவலர் வளர்ப்பது போல வளர்த்தாள்.

      கிளைப் பெரிய நாகேந்திரன் கீர்த்தியைச் சொல் வாணர்
      வளர்ப்பது போல் பெண்ணை வளர்த்தாள் 180

    மதனாபிஷேகம் செய்த திருவிளையாட்டைச் சொல்லுங்கால் தவயோகிகளைக்கூட ஒரு உலுக்கு உலுக்கி விட் டாள் என்கின்றார்.

      மூட்டுவிக்கும் யோக முனிவோ ரையும் பொம்மல்
      ஆட்டுவிக்கும் தோல் உருப்போல் ஆக்கினாள் 210

    அவளைக் கண்ட சில சந்யாசிகள் மயங்கி ஐயோ வீணாக ஏன் இந்தத் துறவு கொண்டோம்' என வருந்தினராம்.

      மின் ஆசை கொள்ளாமல் விணுக்குக் கொண்டோம் இச்
      சந்நாசம் என்று தளர்வாரும் 367

    வையை நதியைப் பற்றி,

      வையகமேல் எய்தியசீர் வைதிக நூல் மெய் ஒலிசேர்
      மொய் திரை நீர் வையை 393
      செழுந்திரை நீர் வையை 562
      தூவு திரைவையை 566
    என வழுத்துகின்றார், ஆசிரியர்.

    அவதானி வழக்கமாகச் செய்யும் கடவுள் வழிபாட்டை மறந்து மதனாபிஷேகத்தின் மையலிற் கிடந்து உழன் றமை பற்றி ஒரு சமயம் பேசுகின்றான் பின்வருமாறு:

      செங்களபக் கொங்கை தெரிசனமல்லாது சிவ
      லிங்க தெரிசனத்தை நீக்கினேன் - அங்கசவேள்

      மா பூஜை வேளை அவள் வாயமிர்தம் உண்பதல்லால்
      தேபூஜை மேற்கவனம் தீர்ந்துவிட்டேன். 647, 648

    சபையாரிடம் வழக்கு உரைக்குங்கால் அவதானி கூறுகின்றான்: 'அவள் சொல்வ-தெல்லாம் முழுப்பொய். ஒருவன் அவள் வாயில் முத்தம் கொஞ்சும் போது இன்னொ ருவனால் சற்று முன் தன் வாயில் உமிழப்பட்ட வெற்றிலை ரசத்தைக் கொடுப்பார்க்குச் சத்தியம் ஏது?' என்று

      - வந்து ஒருவன்
      முத்தம் கொளும் வாய்க்கு முன் ஒருவன் தான் கொடுத்த
      அத்தம் பலங்கொடுப்பார்க்கு ஆணையுண்டோ? 895

    சபையார் அவதானி ஆகிய ஐயங்காரைப் பார்த்து,

      மந்திர நூல் வாயால் மதுவாய் ரசம் கொள்ள
      எந்த வகை துணிவாய் எண்ணினீர்? 923

    எனக் கேட்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது.

    அவளை விட்டு விலகிவந்த பிறகு, அவளுக்கு வீணாகக் கொட்டிய பொருளுக்கு இரங்கி,

      மால் அழகருக்கு வயிரத்தால் மின் எறிந்தால்
      போல் அழகாம் அங்கிபண்ணிப் பூட்டினமோ? 956

    என அவதானி வருந்துகிறான்.

    முன்புத்தி சொன்ன ஞானியையர் கடைசியாகச் சந் திக்கிறார் அவதானியை. 'ஐயோ? எப்படி இருந்தீர் அன்று! இப்படி உடம்பெல்லாம் இளைத்து உருத்தெரி யாது போய் விட்டீரே' என்று அவர் கேட்கும் போது,

      - முன் உமது
      கையைவிட்டு வேசிமகள் கால்பிடிக்கச் சென்றேன் நான்
      மையை இட்ட கண்ணிக்கு மாலானேன் பைய உண்டை
      கூட்டியிட்டாள் கைப்பொருளைக் கொள்ளையிட்டாள் - கைக்குரங்கா ஆட்டியிட்டாள் இக்கோலம் ஆக்கியிட்டாள் 180, 181

    என்று அவதானி கூறுவதைக் கேட்கப் பரிதாபமாக இருக்கிறது.

    மதனாபிஷேகத்தோடு தான் அனுபவித்த காலை அவள் அணிந்திருந்த மூக்குத்தியின் இடையூற்றைப் பற்றி,

      முத்தம் இட ஒட்டாத மூக்குத்தியைக் கழற்றி
      முத்தம் இட்டேன் 598

    என அவதானி கூறுவது நகைச்சுவை வாய்ந்தது.

    அவதானி மதனாபிஷேகத்தோடு இன்பக் கடல் ஆடுங்கால் அவள் கண்ணாடி போன்ற ஒளிவிடும் கையைப்பிடித்து அவளை முன்னால் உட்கார வைத்து அவள் கையில் தன் முகம் பார்த்த அழகை , கவி, நயம் சொட்ட உரைக்கின்றார்:

      மின் இருக்கும் நுண் இடையாள் மென்கமலக் கைபிடித்து
      முன் இருத்திக் கொண்டு முகம்பார்த்தேன் 489

    அட்டாவதானி தன் வித்தையை நாகம கூளப்ப நாயக் கன் அவையில் காட்டியபோது சபையார் வியந்து கூறிய முறையை,
      கம்பனாம் என்றார் கவிராஜர் 1097

    எனக் கூறுவதிலிருந்து சுப்ரதீபக் கவிராயருக்குக் கவிக் சக்கிரவர்த்தி கம்பனிடம் மிகச் சிறந்த மதிப்பு இருந்தது என்று தெரிகின்றது.

      எல்லோரும் செம்பொன் இறைத்தார்ஐ ஆனனம்சூழ்
      நல்லாச னன் பெரிய நாகேந்திரன் - செல்வத்
      துரைஎனக்கு அங்கு ஆட்டினான் சொர்ணாபி ஷேகம் 1132, 1133

    என நாகம் கூளேந்திரன் தனக்குச் செய்த சிறப்பைப் போற்றும் கவியை நாமும் போற்றுவோம்.

    இறுவாய்

    இத்தூது, இனிப்புப் பொருள்களால் செய்த ஒரு பண்டம் என்று சொல்லுதல் மிகையன்று. தனித்தனி முக்கனிபிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி, சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே, இனித்த நறுந் தேன் பெய்து, இளஞ்சூட்டில் இறக்கி, எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுது இந் நூல்.

    அமராவதிபுதூர்,
    காந்தி ஆண்டு 80, கார்த்திகை 12 ) ராய. சொ.
    -------------

    பொருள் அடக்கம்
      1 விறலி புகழ்
      2 தன் கதைச் சுருக்கம்
      3 பாடல் தலைவன் சிறப்பு
      4 தசாங்கம்
      5 பிற சிறப்புக்கள்
      6 அவதானி பிறப்பு முதலியன
      7 யாத்திரை புறப்படல்
      8 ஞானியார் நல் வழி நவிலல்
      9 மதனாபிஷேகத்தின் பிறப்பு
      10 மதனாபிஷேகத்தின் வளர்ப்பு
      11 மதனாபிஷேகத்தின் பருவக் குறி
      12 மகட்குத் தாய் போதிப்பு
      13 மதனாபிஷேகத்தின் திருவிளையாடல்
      14 தோழிகள் திறமை
      15 மதனாபிஷேகத்தின் மேல் மையல் கொண்டோர்
      16 அவதானி மதுரைநகர் அடைதல்
      17 மதனாபிஷேகத்தைக் கண்டு மருளல்
      18 தோழிகள் சூழ்ச்சி
      19 பணிப்பெண்கள் வழிபாடு
      20 மனைக்குட் சேறல்
      21 மதனாபிஷேகத்தின் வரவேற்பு
      22 மாமியாரின் முகமன்
      23 படுக்கை அறை அலங்காரம்
      24 மாமியின் சீர் வரிசை
      25 படுக்கை சேர்ந்தமை
      26 போகம் நுகர்தல்

      27 கலவிப் புகழ்ச்சி
      28 புணர்ச்சி வருத்தம் போக்கல்
      29 விடிந்தபின் மயக்கம்
      30 மூலிகை சேர்த்தல்
      31 கடைச்சரக்குச் சேர்த்தல்
      32 பிராணிகளின் உறுப்புச் சேர்த்தல்
      33 மருந்து கலந்து கொடுத்தல்
      34 மருந்துண்டு மதி மயங்கல்
      35 வஞ்சகச் சதி
      36 திருவிழாக் காணச் செய்தல்
      37 திரும்புகையில் செய்த மோசம்
      38 கிழவி பொய்ப் புலம்பல்
      39 நகை செய்து கொடுத்தல்
      40 ஆடை வாங்கிக்கொடுத்தல்
      41 பலவகைக் கடன் தீர்த்த ல்
      42 சாமி பூஜைக்குக் கொடுத்தல்
      43 தன்னிடம் மிச்சமிருந்ததைக் கொடுத்து வைத்தல்
      44 பலவகையாகப் பணம் பிடுங்கல்
      45 மீதியை விற்று வெறுங்கையன் ஆதல்
      46 துரத்த வழி தேடல்
      47 மதனாபிஷேகம் தன்னை ஏசுதல்
      48 தாய் மகளை ஏ சல்
      49 சண்டை போடல்
      50 பஞ்சாயத்துச்சபை புகல்
      51 கிழவி அறிவிப்பு
      52 அவதானி அறிவிப்பு
      53 தாய்க்கிழவி மறுப்பு
      54 சபையார் விசாரணை
      55 மருந்திட்டது அறிந்தவகை கூறல் நடு
      56 சபையார் ஆறுதல் மொழி –
      57 தான் கலக்கமுற்றுத் தெளிதல்

      58 கோயில் வழிபாடு
      59 கூளப்ப நாயக்கன் கட்டளை காண்டல்
      60 இழந்த பொருளுக்கு வருந்தல்
      61 கூளப்ப நாயக்கனிடம் செல்லத்துணிதல்
      62 மதுரை விட்டுச் செல்லல்
      63 ஞானி ஐயரை மறுபடியும் காண்டல்
      64 ஞானி ஐயர் தேறுதல் கூறல்
      65 திரு ஏடகம் கண்டமை
      66 நாட்டு வளம்
      67 திம்ம ராயரை வணங்கல்
      68 நகர்ச் சிறப்பு
      69 அரண்மனை காண்டல்
      70 கொலுச் சிறப்பு
      71 வித்தை அரங்கேற்றல்
      72 வெகுமதி பெற்றமை
      73 விறலி விடு தூது
      ------------

    கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது

    காப்பு
    நேரிசை வெண்பா .
    பொங்கு பெரும் செல்வப் புகழ்பெரிய நாகன்;
    போர்த் துங்கன் விறலிவிடு தூதுக்கு - மங்களம்சேர்
    பஞ்சவர்சீர்க் காதையை முன் பைம்பொன்நெடுங் குன்றிடுகைக்
    கஞ்சமலர்க் குஞ்சரமே காப்பு.
    ----
    காப்பு: நாகன், கூளப்ப நாயக்கன் பெயர். போர்த் துங்கன்: போர்வல்ல மேன்மை வாய்ந்தவன். பஞ்சவர் : பாண்டு மக்கள் ஐவர். காதை: பாரதம். பைம்பொன் நெடுங் குன்று, மேருமலை. இடுதல்: எழுதுதல். கஞ்சமலர் : தாமரைப்பூ . கைக்குஞ்சரம்: கணபதி. காப்பு: காக்கட்டும். மேருமலையை ஏடாகவும் தனது தந்தத்தை எழுத்தாணி யாகவும் கொண்டு விநாயகன் பாரதக்கதையை எழுதி னன் என்பது தொன்று தொட்ட வழக்கு. 'ஏடாக மாமேரு வெற்பு ஆகவங்கூர் எழுத்தாணி தன் கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ" என்பது பாரதக் காப்பு.


    நூல்
      1. விறலி புகழ். (1-18)

      கார்பூத்த மேனிக் கருணைத் திருநெடுமால்
      பார்பூத்த உந்திப் பரந்தாமன் - நீர்பூத்த 1
    --------

    1. கார் : மேகம். கார்பூத்த மேனி : முகில் போல் பொலியும் உடம்பு. பார்: உலகம். உந்தி : கொப்பூழ். பார் பூத்த உந்தி : உலகத்தைத் தந்த கொப்பூழ். பரந்தாமன் : திருமால். நீர்பூத்த : நீர்மல்கிய.
    ----------
      வேலை, குமு றக்கடைந்த வேலை வரும் தெள்ளமுதும்
      ஆலை தரு வெண்சாறு அடுபாகும் - பாலும் 2

      கனியும் சருக்கரையும் கற்கண்டும் நாவுக்கு
      இனிய பசுந் தேனும் இணக்கி - தனியாக 3

      மத்தித்து எடுத்த மதுரத்துக்கு எண்மடங்கு
      தித்திப்புக் கேட்போர் செவிக்கேறத் தத்தைகள் போய்க் 4

      குன்று ஏறத் தோற்றுக் குயில்மா மரந்தோறும்
      சென்று ஏற வாணி சிறுகுமரி - நின்று ஒதுங்கி 5

      விண்ஏற அந்தரத்தில் விஞ்சையர் ஏறக்கனிந்த
      பண்ஏறப் பாடும் இசைப் பாடினியே ! - உண்மையருள் 6

      போதிக்கும் மெய்த்தவத்தோர் புத்திக்கு இடையூறாய்
      நாதிக்கும் ஏழிசைக்கு நாயகமே! - கீதக் 7
    --------
    2. வேலை: கடல் . குமுற: ஓலம் இட. கடைந்தவேலை : கலக்கிய காலத்து . தெள் அமுது: தெளிந்த அமிழ்தம். ஆலை : இயந்திரம். வெண்சாறு: கருப்பஞ்சாறு. சுடு பாகு : காய்ச்சிய கட்டி .
    3. இணக்கி : ஒன்றாகப் பொருத்தி.
    4. மத்தித்து : திரட்டி. மதுரம்: இனிப்பு. தத்தை : கிளி.
    5. குன்று: மலை. வாணி : கலைமகள். வாணியாகிய சிறு குமரி.
    6. விண் : வான் உலகம். அந்தரமும் அதுவே. விஞ் சையர் : வித்தியாதரர் என்னும் இசைவல்ல ஒரு கூட்டத் தார். பண்: இசை. பாடினி: விறலி.
    7 . நாதித்தல் : நாதத்தை உண்டாக்குதல்.
    -----------

      கொழுந்தோடி மன்னவராம் குன்றிற் படரக்
      கொழுந்தோடி பாடி வரும் கொம்பே!- எழுந்தசிமிழ் 8

      கண்டார் ஆ கத்திலொரு காமப்பேய் ஏற்றுவிக்கும்
      கண்டாரா கத்தில் வல்ல காரிகையே! - கெண்டை நெடும் 9

      கண்சுருட்டி யோகர் கருத்தறிவெல்லாம் சுருட்டிப்
      பண்சுருட்டி பாடும் உயிர்ப் பாவையே ! - ஒண்கிரணக் 10

      காந்தாரக் கொங்கையின் மேல் கைத்தம் புருவணைத்துக்
      காந்தாரம் ஏற்றும் கனிமொழியே ! - சேந்தவரி 11

      அம்பகாம் போதில் அணங்கும் இணங்கும் இசைக்
      கும்பகாம் போதிரச கும்பமே! - தும்புருதன் 12
    ----------
    8. முதல் வரியைக் கொழுந்து ஓடி எனப் பிரித்தல் வேண்டும். இரண்டாவது அடி கொழுந் தோடி; அதற் குக் கொழுமையான தோடி ராகம் என்பது பொருள். கொம்பே! கொம்பை ஒத்தவளே. சிமிழ்: டப்பி போன்ற தனம்.
    9. கண்டார் ஆகத்தில் : பார்த்தவர்கள் உடம்பில். கண்டா ராகம் , ஓர் இராகம்.
    10. கண் சுருட்டி : கண்ணைச் சிமிட்டி. இரண்டா வது, சுருட்டி: வாரி. பண் சுருட்டி : சுருட்டி ராகம்.
    11. காந்தாரக் கொங்கை : காந்து ஆரக் கொங்கை எனப்பிரிக்க. ஒளிவிடுகின்ற ஆரம் அணிந்த கொங்கை. ஆரம், மாலை; அல்லது சந்தனம். காந்தாரம் : ஓர் பண். சேந்த: சிவந்த . வரி : கோடு.
    12. அம்பகம் : கண். அம்போது : அழகிய பூ. அம் . பக அம் போதில் அணங்கு: கண் அனைய அழகிய தாமரைப் பூவில் வாழும் பெண். இசைக்கும்ப காம்போதி ஓர் இராகம். ரச கும்பம் : இனிமை பொதிந்த குடம். தும்புரு: வீணையில் வல்ல ஓர் வானுலக வாசி.
    --------

      பாகரஞ்சி தத்தனியாழ் பட்டுறையில் இட்டயர
      மேகரஞ்சி பாடும் விறலியே !- லோகத்தில் 13

      கங் காக அறிவின்றிக் கலந்தனில்வைத் துண்பாரை,
      தேகி என் பார்க் கீயாத தீயாரை - ராகமெனுங் 14

      கள்ளக் கயிறு கொண்டு கட்டி உருட்டிவிழித்
      துள்ளுமுனைச் சாட்டை கொண்டு சுண்டியே - தெள்ளமிர்தத் 15

      தீங்கு தலைச் சொல்லால் திகிலேற்றித் தேட்டையெல்லாம்
      வாங்கிவிட வல்ல மதங்கியே ! - நீங்கி வெறுப்பு 16

      ஆன மடவார்க்கும் ஆடவர்க்கும் நல்ல சமா
      தான நிதான அவ தானியே! - கானவித்தைப் 17

      பாட்டையெல்லாம் கற்ற பனிமொழியே ! நான்பட்ட
      பாட்டையெல்லாம் சற்றே பகரக்கேள்!- வேட்டமனை 18
    ------------
    13 . பாக ரஞ்சிதத் தனி யாழ்: பக்கத்திலேயுள்ள இனிக்கும் ஒப்பற்ற யாழ். மேகரஞ்சி: ஓர் இராகம்.
    14 . காக அறிவு: காக்கையைப் போல இனத்தை அழைத்து உண்ணும் அறிவு. 'காகம் உறவு கலந்துண் ணக் கண்டீர்" என்றார் தாயுமானப் பெரியார். கலம் : பாத் திரம். ராகம்: இசை .
    15. விழி துள்ளு முனை சாட்டை : கண்ணாகிய துள்ளுகின்ற நுனியை உடைய சாட்டை..
    16. தீம் கு தலைச்சொல்: இனிக்கின்ற இளம் பேச்சு. திகில்: மயக்கம். தேட்டு: செல்வம். மதங்கி : விறலி.
    17. சண்டை பிடித்துக்கொள்ளும் கணவன் மனைவி களைச் சமாதானம் செய்துவைக்கும் அவதானம் வல்லவள். கான வித்தை : இசைக்கலை.
    18 . பனிமொழி : குளிர்ந்த பேச்சு. பட்டபாட்டை யெல்லாம் : அனுபவித்த சிரமங்களையெல்லாம் பகர. சொல்ல. வேட்ட: மணந்து கொண்ட
    -----------

      2. தன்கதைச் சுருக்கம் (19 -33 )

      ஆட்டியுடன் போட்டிவிளைத்து ஆட்டிவிட்ட பம்பரம் போல்
      நாட்டையெல்லாம் சுற்றியதும் நான் ஒருநாள் - தோட்டு இதழிப் 19

      பூஉடையான் தென்மதுரை புக்கதுவும் அங்கேயோர்
      தேவடியாள் கைக்குள்ளாய்ச் சிக்கியதும் - பாவிகிழ 20

      ஓரி என்கைப் பொன்னை உறிஞ்சியதும் போழ்வாய்த்துக்
      சாரிசதி செய்ததுவும் வைத்துவும் போராடி 21

      மேரைகெட அம்பலத்தில் விட்டதுவும் வாய்ப்பகட்டால்
      ஊரைவிடப் பற்றி எனை ஓட்டியதும் - பேராசை 22

      அங்கே இருக்கமான தாகிவழி கொண்டு புகல்
      எங்கே என்று ஒன்பதூர்க்கு ஏகியதும் - சங்கேந்தும் 23

      திம்மராயப்பெருமாள் செஞ்சரண சேகரனை
      மும்மதமால் யானைமூர்த் தன்னியனை - ரம்ய 24

      கருணா கரனைக் கனயோக வானை
      பொருநா வலர்பூ ஷணனை - இருநிதியைச் 25
    -----
    19. தோட்டு இதழி: இதழ்களையுடைய கொன்றை.
    20. பூ உடையான் : சிவபெருமான்.
    21. ஓரி: நரி. போழ்வாய் துச்சாரி : பிளந்தவாயை யுடைய தீயாள்.
    22. மேரை: மரியாதை. அம்பலம் : சபை.
    23. ஒன்பதூர்: கூளப்பநாயக்கன் ஊர்.
    24. திம்மராயப்பெருமாள்: பாட்டுடைத் தலைவர் னின் வழிபடு கடவுளாகிய திருமால். செஞ்சரண சேகரன் : செவ்வியபாதம் பற்றியோன். மூர்த்தன்னியன்: முதல்வன்.
    25. நாவலர் பூஷணன்: புலவர்க்கு ஆபரண மானவன். இருநிதி: பெருஞ்செல்வம்.
    -------------

      சந்த்ரமுக மந்த்ரதள தந்த்ரகொலு இந்திரனைச்
      சிந்தமகு மார செய்தானை - முந்து 26

      நிலைக்கோட்டை யானை நெடுங்கலியைத் தூரத்
      தொலைக்கோட்டும் தியாக துரையை - மலைக்கோட்டில் 27

      ஆளை வைத்துப் பார்க்கும் அறுபத்து நாலு மன்னர்
      பாளையத்தை வென்ற படையானை - வாள் அரசர் 28

      வெஞ்சமருக்கு அஞ்சா விருது வென்றி வாகனை நம்
      பெஞ்சை நகர் காக்கும் பெருமானை – வஞ்சகர்க்கோர் 29

      தண்டப் பெரும்புலியைச் சாமித் துரோகரைக்காய்
      வெண்டயத்தாட் சூரியனை வீரியனை - மண்டலிகர் 30

      மாகனகம் கப்பமிடும் வாயிலா னைப் பெரிய
      நாகமகூ ளேந்த்ர நராதிபனை - யோகனை, யான் 31

      பாடியதும் ஐயன் முகம் பார்த்ததுவும் என் கலிவிட்டு
      ஓடியதும் பாக்கியம்வந் துற்றதுவும் - நாடி இங்கே 32

      நான்வந் ததுவும் நடுமதியி லே இரண்டு
      மான்வந் தனையவிழி மாதேகேள்! - - தான பரன் 33
    -------
    26. மந்த்ரம் : மந்திரிகள். தளம் : வரிசை. தந்த் ரம்: சேனை . சிந்தமன்: தந்தை பெயர். ஜெயதரன்: வெற்றியையே அணிபவன்.
    27. நிலைக்கோட்டை : கூளப்பநாயக்கனின் ஊர். நெடுங்கலி : பெரிய வறுமை. மலைக்கோடு : மலை உச்சி.
    29. பெஞ்சை நகர், அவனது நகரம்.
    30. சாமித் துரோகம் : எஜமானனுக்குத் துரோகம் செய்பவர். வெண்டயத்தாள் : வீரக்கழல் அணிந்த கால். மண்டலிகர் : பூமியாள் மன்னர்.
    31. மாகனகம் : மிகுந்த தங்கம். கப்பம்: திறைப் பொருள். யோகன் : யோகம் வல்லான்.
    33. சந்திரனுக்கு நடுவிலே இரண்டு மான்கள் வந்தன போன்ற கண்களையுடையவளே! தானபரன் : கொடையையே தாங்கியவன்.
    ----------

      3. பாடல் தலைவன் சிறப்பு (34- 35)


    திக்கெல்லாம் கொண்டாடும் செங்கோல் விஜயரங்க
    சொக்கநா தேந்த்ர துரைராஜன் - சக்ரபதி 34

    சேதுபதி பாண்ட்யகுல தெட்சணசிங்காசன ந
    ராதிபதி மெச்சு நரபாலன் - கோதில் 35

    4. தசாங்கம் (36-51)

    உருப்பான்மை வெண்பிறைமேல் ஊர்வது தன்கோல
    மருப்பாகும் பன்றி மலையான் - திரைக்கரத்தில் 36

    ஆரமணி ஆரமணி ஆரமணி வாரி நடு
    வாரி இடுங்குடவ மாந்தியான் - தார்வேந்தர் 37

    வீதிக்கு வீதி விவாக மணிமுரசம்
    நாதிக்கும் பாண்டிவள நாட்டினான் - ஆதித்தன் 38

    தேர் ஊர் அருண ஜெயகோ புரநிலைக்குள்
    ஊர் ஊர் எனும் ஒன்பது ஊரினான் - கூரியபோர் 39
----------
34 . சொக்கநா தேந்த்ர துரைராஜன்: மதுரை நகர்க்கு ஒரு காலத்தில் தலைமை பூண்ட சொக்கநாத நாயக்கன்.
35. கோது இல்: குற்றம் அற்ற.
36 . உருப்பான்மை: வடிவத்தின் தன்மை. கோல மருப்பு: அழகிய தந்தம். பன்றிமலை : வராககிரி. திரைக் கரம்: அலைகளாகிய கைகள்.
37. ஆரம் அணி ஆரம் மணி ஆரமணி என்று பிரிக்க ஆரம்: சந்தனம். அணி ஆரம்: அழகிய பூமா லைகள். மணி : ரத்னங்கள். ஆரமணி: முத்து மாலைகள். வாரி: அள்ளி . வாரி நடு : கடலின் நடுவே. குடவந்தி, ஆற்றின் பெயர்.
38 . நாதிக்கும் : ஒலிக்கும். ஆதித்தன்: சூரியன்.
39. அருணம்: சிவப்பு நிறம்.
--------------

    வேலைவைக்கும் செங்கருங்கண் மின்னார் இதய வண்டு
    மாலைவைக்கும் பூந்தளவ மாலையான் - கோல 40

    முகமிலங்கு பணியணிந்து முதுகணைந்த கலனை கொண்டு
    தகதகென்று நடைபிறந்து சமரடர்ந்து - பகைவர் தங்கள் 41

    தலையினின்று திமிதி திந்தி தகுதி தந்த என நடஞ்செய்து
    உலவிவந்து கனக தண்டை ஒலி மிகுந்து - கலகலென்று 42

    கொஞ்சிடச்ச தங்கையிட்ட கொண்ட லொத்தி டுந்திறத்த
    வெஞ்சினப்ர சண்ட உக்ர வெண்பரியான் - விஞ்சு கரம் 43

    ஒன்று படைத்து வரும் ஓங்கலுக்கொப் பாஇரண்டு
    வென்றிப் பிறைசுமந்த மேகம் எனத் - துன்று 44

    மதங்கள் எனும் மூன்று மாரிசிந்தப் பாகர்
    ஒதுங்கநால் வாயால் உதறி -- அதிர்ந்து பொரும் 45

    அஞ்சார் உதிரத்தை ஆறாக்கி ஓரேழு
    மஞ்சார் புனலை மடுத்துறிஞ்சிக் - குஞ்சரங்கள் 46
---------
40. வேலை வைக்கும் செங்கருங்கண்: வேலைப் பதித்த சிவந்த கரிய கண். மின்னார் இதய வண்டு மாலை : மின் அனைய நங்கையர் உள்ளமாகிய வண்டு வரிசை.
தளவம்: முல்லை .
41. பணி: நகை. கலனை : குதிரையின் சேணம். சமர் அடர்ந்து : அமர் செய்து.
42 . திமிதி திந்தி தகுதி தந்த: ஒலிக் குறிப்பு. கனகதண்டை : பொற் சதங்கை .
43. கொண்டல் : மேகம். திறத்த: திறமையுடை யன் . வெண்பரி : வெள்ளைக் குதிரை .
44. ஓங்கல்: மலை. பிறை: சந்திரன்.
45.. மாரி : மழை. நால்வாய்: தொங்குகின்ற வாய்.
46. உதிரம்: ரத்தம். ஓர் ஏழு மஞ்சு ஆர்புனல் : ஏழு மேகங்களின் நீர். குஞ்சரங்கள் : யானைகள்,
----------

    என்பதோர் எட்டும் இணையில்லை என்று அகற்றி
    ஒன்பதூர் வீதி உலாவியே - வம்புரைப்போர் 47

    பைம்பொன் முடி இடறிப் பத்து நகமும் தேய்ந்த
    கும்பாண கம்பீர குஞ்சரத்தான் - அம்புவியில் 48

    காந்து கலியை வெட்டும் கண்டகோடாரியைப்போல்
    ஏந்து வெள்ளைப் பக்கறையி டாலினான் - சாய்ந்தோடிக் 49

    குன்றில் கருதார் குடும்பம் குடி ஏற
    முன்றில் குமுறுமணி மும்முரசான் - நின்ற அடி 50

    தூக்கினார் சென்னி துடிக்கத் துணித்துவிடும்
    ஆக்கினா சக்கரம் போல் ஆணையான் - பாக்கியவான் 51

    5. பிற சிறப்புக்கள் (52-96 )/

    கற்பகமாம் பட்டரையங் கார்கருணை யேமணக்கும்
    பொற்கமலம் போன்ற மனப் பூரணவான் - பற்றலார் 52

    தண் தார் மகுடம் தடவும் ஜயவீர
    கண்டா மணிமுழங்கும் காலினான் - மண்டு சமர் 53

    யுத்தகளத்து ஒன்னார் உயிர் மேய்ந்த குற்றுடைவாள்
    வைத்தணைத்துக்கட்டும் மருங்கினான் - கைத்தலத்தில் 54
----------
48. கும்பம்: குடம் போன்ற மத்தகம்.
49. கலி: பாபம். பக்கறை: துணி. இடால்: கொடி.
50. கருதார். தன்னை நினையாத பகைவர். முன் றில் : வாசல்.
52 . பற்றலார் : எதிரிகள்.
53. மண்டு : நெருங்கிய
54. ஒன்னார்: பகைவர். குற்று உடைவாள் : சிறிய கத்தி. மருங்கு: இடை.
------------

    ஐந்தருவும் ஐந்து விரல் ஆகித் தருவஎனச்
    செந்தமிழ்க்கு நல்குமலர்ச் செங்கையான் - பைந்தொடியார் 55

    பொன்முலையாம் கோட்டில் புதுக்கலவைச் சேரட்டி
    மன்மதநல் நூலெழுதும் மார்பினான் - நன்மை தரும் 56

    வெற்றிச் சிறு பெண் விளையாடும் சிற்றில் எனச்
    சுற்றியகே யூரமணி தோளினான் - கற்றவராம் 57

    கோக்குலத்தைக் காத்தருளும் கோபாலர் வேயிசைபோல்
    வாக்குமது ரம்பொழியும் வாயினான் - நாக்குளிரச் 58

    சொல் இரசங்கள் துவர்ப்பென்று தள்ளி இன்பக்
    கல்வி ரசம் பருகும் காதினான் - வல்ல 59

    மருவலரை வெட்டுகின்ற வாள் போல் முகத்தில்
    கருணை உலவுமலர்க் கண்ணான் -- இரவின் உடல் 60
---------
55. ஐந்தரு: கற்பகம் முதலிய கேட்டன கொடுக் கும் மரங்கள். பைந்தொடியார் : பசுமையான வளையல் அணிந்த நங்கையர்.
56. கோடு : கொம்பு. புதுக்கலவைச் சேறு : அன்று கலந்த சந்தனக் குழம்பு. மன்மத நல்நூல் : காம நற்கலை.
57. சிற்றில் : சிறுவீடு, கேயூரம் : தோளில் அணியும் நகை.
58. கோக்குலம் : பசுக் கூட்டம். கோபாலர் : இடையர். வேய் இசை: குழல் ஓசை .
59. பருகுதல்: குடித்தல்.
60. மருவலர் : எதிரிகள். இரவின்: இரவிலே.
------------

    சாய்த்த மதிமுகத்துத் தையலார் முத்தமிட
    வாய்த்த முழுமதிபோல் மாமுகத்தான் - காத்தருளும் 61

    எம்பிரா னார்கோயில் ஈசரடி எந்நாளும்
    செம்பொன்முடி தாங்குமலர்ச் சென்னியான் - உம்பர் தொழும் 62

    நின்மலனார் வெண்நீற்று நெற்றிக்கண் காணாத
    மன்மதன்காண் என்னும் வடிவினான் - தன்னுடைய 63

    வல்லக்கு வார்குலத்தில் வாள் வேந்தர் கண்குளிரப்
    பல்லக்கு மேலுலவும் பாக்கியவான் - வில்லேற்றிக் 64

    கைகொண்டு பொற்படியில் கால் கொண்டு பஞ்சகதி
    மெய்கொண் டனையபரி மேற்கொண்டு - செய்யாண 65

    துங்க தள கர்த்தர் துரை மக்கள் வாள் பிடித்துச்
    சிங்கமெனச் சுற்றித் திரண்டுவர - மங்குல் எனக் 66

    கூனல் முதுகு ஒட்டகமேல் கொட்டுகின்ற டம்மாரம்
    யானையின் மேல் பேரி அதிர்ந்துவரச் - சேனையொடு 67

    தாக்குமறு மண்டலிகர் தங்களுக்குச் சென்று சொல்லும்
    கூக்குரல் போல் வீரசின்னம் கொம்பூத - நோக்கும் 68
-------
61. முழுமதி : பூரணச்சந்திரன்.
62 . மலர்ச் சென்னி : மலர் சூடிய தலை. உம்பர்: தேவர்.
63. நின்மலனார்: சிவனார். இவன் சிவனால் எரிக் கப்படாத காமன்.
64. வல்லக்க வார்குலம, கூளப்ப நாயக்கனுடைய குலம்.
65. பஞ்ச கதி : ஐந்து வேகம். பரி : குதிரை .
66. மங்குல்: மேகம்.
67. கூனல் : வளைந்த. டம்மாரம், பேரி, பறை வகைகள்.
68. மறுமண்டலிகர் : வேற்றரசர்.
----------

    பரிதி பகைக்கும் பகை எழுந்த தென்ன
    விருதுகரு டாலவட்டம் வீசத் - தரளக்கால் 69

    வெள்ளைக் கொடியாடை மேகம் கிழித்து வரப்
    பிள்ளைப் பிறைபோல் ப்ர காசிக்க - வெள்ளை வட்டச் 70

    சித்ரக் குடைகள் ஜெயமாதுக் கிட்டநிழல்
    முத்துமணிப் பந்தரென மொய்த்துவர --- கைத்தலத்தில் 71

    கத்தி பிடித்து வெள்ளி கட்டின துப்பாக்கிகொண்டு
    பத்து லட்சம் காலாட் படைநடக்க - தத்து பரி 72

    கொக்குநரை யான்கைக் குமரி என ராவுத்தர்
    கைக்குள் அடங்காது கால் மீற - நெய்க்கவளம் 73

    கூட்டி இரை ஊட்டி இரு கொம்புகத்தி பூட்டி மதம்
    மூட்டிவிட்ட மால்யானை முன் நடக்க - கூட்டமிட்டு 74

    வாரிட்டு அணிவகுத்து வாதிட்ட வேற்றரசர்
    போரிட்ட வெங்களத்தில் போயெதிர்த்து - நேரார்மேல் 75
----
69. பரிதி: ஆதவன். தரளம் : முத்து.
70. பிள்ளைப்பிறை: இளஞ் சந்திரன்.
71. சித்ரம்: ஓவியம். முத்துமணிப் பந்தர் : முத் திழைத்த காவணம்.
72 . தத்து பரி: தாவும் குதிரை.
73. கொக்கைப் போலவும் நாரையைப் போலவும் குமரியைப் போலவும் கைக்குள் அடங்காது எனக் கொள்க. நரையான் : நாரை. ராவுத்தர் : குதிரைத் தலைவர்.
74. இரை: உணவு. மால் : பெரிய.
75. வார் இட்டு: கச்சைகட்டி. நேராா : எதிரிகள்,
-----------

    சுட்டபீ ரங்கித் தொனியும் புகையும்சூல்
    இட்ட முகிலும் இடியும் என - பட்டயங்கள் 76

    வீசுவதும் வெட்டுவதும் மின்னலென வீரர் சிலை
    பூசலம்பு மாரிமழை போற்பொழிய - தேசப் 77

    பரதளங்கள் பட்டுருளப் பாய்ந்த பெரும் செந்நீர்ப்
    பிரளயப்ர வாகம் பெருக - சிரதலத்தில் 78

    ஆளை இருப்புலக்கை யானை அடிக்கவிழு
    மூளை நுரைத்திரளாய் மொய்த்தோட - வாளால் 79

    படுந் தீரர் ஏறிவரும் பல்லக்குப் பேய்க்கு
    விடுந்தோணி போலும் மிதப்ப - கிடந்து சிலர் 80

    வேர்த்துப் பரிசை கொண்டு மேன்முடிச் சென்னி எட்டிப்
    பார்த்துக் கமடம் எனப் பதுங்க - போர்த்தலையில் 81

    மந்திரவாள் வேந்தர் மகுடத் துதிர்ந்த ரத்னம்
    இந்திரகோ பங்கள் எனச்சிதற - செந்தறுகண் 82

    விந்தை மிடி தீர வெற்றிப் பயிர் ஏற்றி
    வந்து கொலுவிருக்கும் வாள்வீரன் - முந்து பெரும் 83
--------
76. சூல் இட்ட முகில்: கருக்கொண்ட மேகம். பீரங்கிப் புகை முகிலுக்கும் சுடும் ஒலி இடிக்கும் உவமை. பட்டயம் : வாள் .
77 . பூசல் அம்பு : சண்டைக்கணை . மாரிமழை: ஒரு பொருள் கொண்ட இரு மொழி.
78 . பர தளங்கள்: மாற்றார் படை. செந்நீர் : இரத் தம். பிரளயப்ரவாகம் : ஊழிக்காலப் பெருக்கம்.
79. திரள் : கூட்டம்.
81. பரிசை : கேடயம். சென்னி எட்டிப்பார்த்து : தலையை நீட்டிப்பார்த்து . கமடம்: ஆமை.
82 . இந்திர கோபம் : பட்டுப் பூச்சி.
83. விந்தை : வீரத்திருமகள். மிடி: வறுமை.
---------

    பாதலத்தில் வேரோடிப் பாரில் படர்ந்து வட
    பூதரத்தில் ஏறும் புகழினான் - நீதி பான்

    சிந்தமகூ ளேந்த்ர துரை சிங்காச னாதிபதி
    தந்தசௌ பாக்கிய சம்பன்னன் - செந்துவர்வாய்க் 85

    காமவடி வேல்விழியார் கைவடிவெல்லாம் எழுதும்
    நாமவடி வேற்பெரிய நாகேந்திரன் - சேமநிதி 86

    ஊரா திபன்வாழ்வை ஒக்கும் நவகோடி
    நாராயணன் பெரிய நாகேந்திரன் - சேரலராம் 87

    ஆட்டுக்கூட்டங்களிலோர் ஆண்புலிபோல் பாயும் நடு
    நாட்டுக்கூ ழிற் பெரிய நாகேந்திரன் - 'பூட்டுசிலை 88

    அம்பொன்றால் ஈவேன் அரசுக்கு வீடணா,
    நம்பு' என்ற மால் பெரிய நாகேந்திரன் - தம்பமென 89

    லோகம் சுமப்பதனால் ஓராயிரமௌலி
    நாகம் பொரும் பெரிய நாகேந்திரன் - பாகெனுஞ்சொல் 90

    பாவுக்கே றிக்கனகப் பல்லக்கே றிப்புலவோர்
    நாவுக்கே றும் பெரிய நாகேந்திரன் - வாவி திகழ் 91
-------
84. வட பூதரம்: இமயமலை.
85. சிந்தம் கூளேந்த்ர துரை : பாடல் தலைவனின் தந்தை .
86. வடி : கூர்மை . நாமம் : அச்சம்.
87. சேரலர்: பகைவர்.
88. கூழ்: உணவுவகை.
89. 'ஓர் அம்பினால் இராவணனை வென்று உனக்கு அரசு தருவேன்; வீடணா! நீ நம்பலாம்' என்று உரைத்த ராமனே இவன் எனக் கொள்க.
90. ஓராயிரம் மெளலி நாகம் : ஆயிரம் தலைப்பாம்பு என்னும் ஆதிசேஷன் பொரும் ஒத்த. பாகு : வெல்லப்பாகு.
91. வாவி : தடாகம்.
-------------

    பெஞ்சை நகர் வாழப் பெருஞ்சீர் வளர்ந்தோங்கக்
    கஞ்சமலர் மாது களிகூர - வஞ்சகமும் 93

    பொய்யும் பறந்தோடப் புண்ணியமும் தண் அளியும்
    மெய்யும் கலந்து விளையாட - பெய்யுமழை 94

    வானம் வழங்க மனைவாழ்க்கை ஓங்க அன்ன
    தானம் வழங்கத் தவமோங்க - நான்மறைக்கும் 95

    நன் நிதியாம் மேகவண்ண நாதர் திம்ம ராயர் திருச்
    சந்நிதியிற் பூஜை தழைத்தோங்க - இந்நிலத்தில் 95

    எங்கோன் அபிஷேகம் ஏந்திமநு விஞ்ஞானச்
    செங்கோல் அரசு செலுத்து நாள் - சங்கேந்தும் 96

    6. அவதானி பிறப்பு முதலியன (97-120 )

    காரங்க மேனிக் கடவுள் இருக்கும் அந்தச்
    சீரங்கத் தேபிறந்தேன்; செல்வத்தில் - ஈரைந்தோடு 97

    ஆறு வயதினுக்குள் ஆரியமும் வேதமும் நா
    ஏறித் தமிழ் நூல் இலக்கணத்தில் - மீறினேன்; 98

    வால சரஸ்வதி என் வாக்கிற்பர சன்னமதா
    நாலு கவித்திறனும் நானறிந்து - வேலும் 99
------
92 . கஞ்சமலர் மாது : தாமரை வாழ திரு.
93. தண் அளி: குளிர்ந்த கருணை .
95. மேகவண்ண நாதர் : முகில் நிறத் தலைவர்.
96. அபிஷேகம் ஏந்தி : திருமுடி சூடி. மநுவிஞ் ஞானச் செங்கோல் அரசு : மக்கட்கேற்ற மேலான அறி வுச்சுடர் ஆட்சி. சங்கு ஏந்தும் : சங்கைத் தாங்கும்.
97. கார் அங்க மேனி. மேக நிற வண்ணம்.
97-98.. ஈரைந்தோடு ஆறு வயது : பதினாறு வயது. ஆரியம்: வடமொழி. வேதம்: மறை.
99. நாலு கவித்திறன் : ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் நால்வகைக் கவியிலும் திறமை.
----------

    மயிலும எனச் சொன்ன உரை மாறாமல் சொல்லக்
    கயிலாட சிங்கி கழற்ற - அயலொருவன் 100

    சொன்னவினாச் சொல்ல எதிர் சூதாடப் பின் முதுகு
    தன்னில் எறிந்தகல்லும் தான் எண்ண - பன்னுவது 101

    ரங்கவிளை யாட்டிற் கடி பார்க்கச் சொற்புலவோர்
    தங்கள் கவியை அவதானிக்க - சங்கத்தில் 102

    எட்டெட் டெழுத்தாணிக் கேற்றகவி சொல்லவும் நான்
    அட்டாவ தானி என்ப தாயினேன் - மாட்டார் 103
--------
100. லாட சிங்கி : பின்னல் சங்கிலி. அயல்: பக்கத்தில்.
101. சொன்ன வினாச் சொல்ல : கேட்ட கேள்விக்குப் பதில் கூற.
102. அவதானிக்க: விரித்துரைக்க . சங்கம்: கூட் டம்.
103. எட்டெட்டு : பதினாறு. அல்லது அறுபத்தி நான்கு. அட்டாவதானி: எட்டு விஷயங்களில் ஒரே சமயம் கருத்துச் செலுத்துபவன்.
அஷ்டாவதானம்: 1. வேலும் மயிலும் என்று மாறி மாறி ஓயாமல் சொல்லல்;
2. லாட சங்கிலி கழற்றல் மாட்டல்; 3. வினாவிற்கு விடை கூறல்; 4. சொற்கேட்டான் ஆடல்; 5. முதுகில் எறியும் கற்களைத் திரும்பிப் பாராமல் உணர்ச்சி கொண்டு கணக்கிடல்; 6. சதுரங்கம் ஆடல்; 7. பாட்டுக்குப் பொருள் சொல்லல். 8. எழுத்தாளர்க்குக் கவிபாடல்.
-----------

    திருப்பதியி லேவாசு தேவன் மகளைக்
    கருப்புருவ இன்பக் கனியை - விருப்பமுள்ள 104

    பூங்கா வனத்தைப் பொருத்த முடன் வேட்டுப்
    பாங்கான வாழ்விற் பயிலுநாள் - ஆங்கு செல்வத்து 105

    ஈசர் திருச் சந்நிதியில் ஏந்திழையார் தம்மிலொரு
    தாசிமேல் வைத்தேன் தயவு நான் - நேசமாய் 106

    இந்தரங்கத் தேதிரிந்தேன் இன்பரச வல்லி இடத்துத்
    திரிந்தேன் ஆசையால் - அந்தத் 107

    திரிச்சிராப் பள்ளிக்குச் செல்லா திருக்கத்
    தரிச்சிரா தென்மனது தானும் - ஒருத்தன் 108

    அறியாச் சிறுவனுடன் யான் ஒருநாள் அந்த
    வெறியார் குழல்பரத்தை வீட்டில் - பிரியமுடன் 109

    சென்றிருந்து வந்தேன் திடுதிடென் ஓடிப்போய்க்
    குன்றிருந்த கொங்கைக் குலமனையாட்கு உன்கணவர் 110
--------
104. கருப்பு உருவ இன்பக்கனி : கரும்பு போல் இனிக்கும் சுவைமிக்க பழம்.
105. பூங்காவனம், அவதானி மனையாள் பெயர். வேட்டு: மணந்து.
106. ஈசர் : திருச்சிராப்பள்ளி இறை சிவனார்.
107. இந்து அரங்கம்: திங்கட் கூட்டம். இன்ப ரச வல்லி : அத்தாசியின் திருநாமம்.
108. தரிச்சிராது: பொறுத்து இராது. ஒருத்தன் : ஒருவன்.
109. வெறி: மணம். குழல்: கூந்தல். பரத்தை : வேசி.
110. திடுதிடு : ஒலிக்குறிப்பு. குன்று: மலை.
---------

    ஓடத்தில் ஏறினார் உத்தரியம் போக்கடித்தார்
    நாடிச் சிரகிரியை நண்ணினார் - கூடவந்த 111

    என்னைச் சவுக்கையில்வைத்து இன்பரச வல்லி எனும்
    பொன்னனையாள் வீட்டிற்குள் போய்ப் புகுந்தார் - அந்நேரம் 112

    மிஞ்சிமிஞ்சிப் பேசினாள் வேசி மகள் அதற்கு
    அஞ்சி அஞ்சிப் பேசினார் ஐயங்கார் - வஞ்சி அந்த 113

    வீட்டுக் கதவடைத்தாள் மெள்ள மெள்ளக் கொஞ்சினாள்
    காட்டுப் புறாவோசை காட்டினாள் - வீட்டைவிட்டு 114

    வந்தார் நம் ஐயர் என்னை வாவென்றார் காவிரியில்
    சந்திபண்ணி இக்கரையில் தாண்டினார் - இந்த ஊர்க்கு 115

    என் மார்க்கம் சொல்லாதே என்று சொன்னார் என்றந்தத்
    துன்மார்க்கப் பையலெல்லாம் சொல்லிவிட்டான் - வன்மம் 116
---------
111. ஓடம் : தோணி. அந்த நாளில் சீரங்கத்தி லிருந்து திரிச்சிராப்பள்ளி போவதாயின் காவிரியைக் கடக்கத் தோணி ஏறியாகவேண்டும். உத்தரியம் : மேல் வேட்டி. இன்பரச வல்லியிடம் விரைந்து செல்லும் நினை வில் மேல் வேட்டியைக்கூடத் தவற விட்டுவிட்டார் அவதானியார் . சிரகிரி : திருச்சி .
112. வஞ்சி : கொடி போன்றவள்.
114. காட்டுப் புறா ஓசை : காட்டுப் புறாப்போல ஒலிசெய்தல்; அது காதல் இன் இசை.
115. சந்தி : சந்தியாவந்தனம். இந்த ஊர்க்கு : இந்த ஊரார்க்கு.
116. என் மார்க்கம்: எனது நடத்தை . பையல் : பையன். இவன் துன்மார்க்கத்தை வெளிப்படுத்தி விட்டான் என்ற கோபத்தால் பையனைத் துன்மார்க்கன் என்கிறான் அவதானி.
----------

    தொடுத்தாள் கடுகடுத்தாள் தூங்குமஞ்சம் விட்டுப்
    படுத்தாள் பகைஞரைப்போற் பார்த்தாள் - அடுத்தடுத்து 117

    வேண்டினேன் குட்டு வெளியாக்கு வேன் என்னைத்
    தீண்டாதே என்றாள் சிராப்பளியில் - ஆண்டவள்பாற் 118

    செல்லாய் என்றாள் பரத்தை தேடுவா ளே என்றாள்
    சொல்லாத வார்த்தை சில சொல்லினாள் - இல்லாள் 119

    வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல் அவ்இல்
    புலிகிடந்த தூறாய் விடுமென்று - உலகறியச் 120

    7. யாத்திரை புறப்படல் (121-144)

    செப்பினாள் அவ்வையென்று தேர்ந்தேன் இராத்திரியே
    தப்பினேன் கைக்கடங்கத் தக்கது கொண்டு - அப்பால் 121

    அதிசயங்கள் ஆன தலம் யாவும் அறிவோம்
    நதிகள் பல மூழ்குவோம் நாமென்று - இதயமாய் 122

    வெள்ளை நாவல்பழுக்கும் மிக்கபதி யும்நரிகள்
    துள்ளுபரி யானதொரு தொல் நகரும் - தெள்ளு தமிழ் 123
------------
117. தூங்கும் மஞ்சம்: படுக்கும் கட்டில்.
118. குட்டு; ரகசியம். ஆண்டவள் பால்: உன்னை அடிமைப்படுத்தி ஆட்கொண்ட தாசியிடம்.
229. இல்லாள் : மனையாள்.
120. வலி கிடந்த மாற்றம்: பெரும்படியான பேச்சு. இல் : வீடு. தூறு: மரத்தின் அடி.
121. தேர்ந்தேன் : தெளிந்தேன். தப்பினேன்: கிளம்பிவிட்டேன். கைக்கு அடங்கத்தக்கது: கை அடக்க மான பொருள்கள்.
122. தலம்: திருப்பதிகள். இதயமாய் : மனமார .
123. வெள்ளை நாவல் பழுக்கும் மிக்க பதி, ஜம்பு கேஸ்வரம் என்னும் திருவானைக்கோவில். நரிகள் துள்ளு பரியான தொல்நகர் : மதுரை மாநகரம்.
---------

    செப்பக் கதவு திறந்த ஊரும் கருங்கல்
    கப்பலென வந்த கடற்பாதியும் - இப்புறத்தில் 124

    பாங்குடைய ஆண்டு பனிரெண்டுக் கோர்கால்மா
    மாங்க நீர் பொங்கும் வளம்ப தியும் - பூங்குடத்தில் 125

    அங்கத்தை மங்கைவடிவு ஆக்கின ஊ ரும் தமிழ்க்குத்
    தங்கத்தை எந்த தனியூரும் - செங்கருங்கட் 126

    காகம் எரியக் கனல்வீசும் மாமலையும்
    யோகம் கழுகுசெயும் ஒண்கிரியும் - வேகமிக்க 127

    கான் தாண்டு வெம்முதலை கவ்வியுண்ட பிள்ளை தனை
    மூன்றாண்டு சென்றழைத்த மூதூரும் - மான் தான் நேர் 128

    தாசிக்கு எழுந்த தனத்தைலிங்கம் என்றொருவன்
    பூஜித்துப் பேறு பெற்ற பொன்னகரும் - நேசித்து 129
-----
124. க உ ச. தமிழ் பாடக் கதவு திறந்த ஊர், மறைக்காடு என்னும் வேதாரணியம். கருங்கல் கப்பலாக நாவுக்கரசர் மிதந்துவந்த கடற்பதி, திருப்பாதிரிப்புலியூர்.
125. மாமாங்க நீர் பொங்கும் வளம் மல்கியபதி, திருக்குடந்தை என்னும் கும்பகோணம்.
126. அங்கத்தை மங்கை வடிவு ஆக்கின ஊர், திருஞானசம்பந்தர் எலும்பைப் பெண் ஆக்கிய சென்னை யின் ஒருபகுதியாகிய திருமயிலாபுரி. தமிழ்க்குத் தங்கத் தைத்தந்த ஒப்பற்ற ஊர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமிழ்ப்பாடலுக்குத் தங்கம் கொடுத்த ஊராகிய விருத் தாசலம் என்னும் முதுகுன்று.
127. கனல் வீசும் மாமலை, திருவண்ணாமலை. ஒண்கிரி; திருக்கழுக்குன்றம்.
128. கான் தாண்டு: வாய்க்காலில் தாவுகின்ற. வெம்: கொடிய . மூதூர், சுந்தரமூர்த்திகள் முதலையுண்ட பிள்ளையை அழைத்த அவிநாசி என்னும் ஊர்.
----------

    மைந்தன் உடல் அரிந்து மாதவத்தோர்க் கிட்டுவினைப்
    பந்தம் அரிந்தோன் பழம்பதியும் - சொந்தமாம் 130

    ஆட்டைப் புலிகாக்கும் அம்பலமும் நாலுவசி
    நாட்டி நடுக்குதிக்கும் நன்னகரும் - காட்டெயினன் 131

    கண்ணைப் பறிகொடுத்த கற்பதியும் வண்ணான்தன்
    பெண்ணைப் பறிகொடுத்த பேரூரும் - மண்ணுலகில் 132

    தீண்டாதார் எச்சில் செழுமறையோர்க்கு ஈந்தாலும்
    வேண்டாம் என தேற்கும் மெய்ப்பதியும - மாண்டவர் தம் 133

    காதில் உப தேசம் கடவுள் சொல்லும் பதியும்
    சீதரன்மா யாபுரியும் சேவித்து - நாதிக்கும் 134

    சங்கமுகந் தங்கெ றித ரங்கமுக கங்கையுடன்
    சங்கமுக தீர்த்தமெல்லாம் தானாடி -அங்கிருந்து 135
-----
130. பழம் பதி, சீராளனை அறுத்துக் கடவுளுக்கு உணவு சமைத்த சிறுத்தொண்டன் வாழ்ந்த செங்காட் டங்குடி.
131. ஆட்டை : நடனத்தை . புலி: வியாக்ரபாத முனிவர். அம்பலம் : சிதம்பரம்.
132 . கற்பதி, கடவுளுக்குக் கண் கொடுத்த கண்ணப்பர் திருக்காளத்தி.
133. எனா து: ஏன்று சொல்லாது.
134. இறந்தவர் காதில் கடவுள் உபதேசம் சொல்லும் பதி, காசிநகர் . சீதரன் மாயாபுரி, அரித்து வாரம். சீதரன், ஸ்ரீதரன் என்பதன் திரிபு. ஸ்ரீதரன் திருவை மார்பில் அணிந்த திருமால்.
135. சங்கம்: சங்குகள். தரங்கம்: அலை. சங்கமுகம் : கங்கா சாகரம், கங்கை கடலோடு கலக்கும் இடம்.
-----------

    கங்குல் பகலாக் கடலோட்டக் கப்பலிலோர்
    திங்களில் வந் தெய்தினேன் சேதுவினில் - மங்காத் கங்கா 136

    தனுக்கோடி தர்ப்ப சயனம் பணிந்து
    மனுக்கோடி சூழ்செந்தூர் வந்தேன் - கனத்த 137

    திருப்பதிகள் ஒன்பதும் நான் சேவித்தங் குள்ள
    அருட்பொலியும் தீர்த்தமெல்லாம் ஆடி - தருப்பொலியும் 138

    குற்றாலம் நெல்வேலி கோதைவில்லிபுத்தூர் வந்து
    உற்றேன் திருச்சுழிகை ஊர்பணிந்தேன் - நெற்றிவிழித் 139

    தம்பிரான் பூவணத்தைச் சந்தித்தேன் சங்கேந்தும்
    எம்பிரான் சோலைமலைக்கு எய்தினேன் - - பைம்பொன் 140

    தலை அருவி ஆடியெங்கள் சங்கத்து அழகர்
    மலரடியைப் போற்றி மகிழ்ந்தேன் - தலமகிமை கசக 141
-----------
136. கங்குல் : இரவு. திங்கள் : மாதம் சேது : தனுக்கோடி.
137 . தர்ப்ப சயனம்: திருப்புல்லாணி . மநுக் கோடி சூழ் செந்தூர் : மக்கள் கோடிக்கணக்கில் கூடுகின்ற திருச்செந்தூர்.
138 . திருப்பதிகள் ஒன்பது : திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஆழ்வார்கள் பாடிய ஓன்பது வைணவத் தலங்கள். அருட் பொலியும் தீர்த்தம் : கருணை ததும்பும் தீர்த்த ம்.
138, 139. தருப் பொலியும் குற்றாலம்: மரவளம் மல்கிய குற்றாலப்பதி. கோதை: ஆண்டாள் . நெற்றிவிழி : நெற்றிக்கண் .
140. தம்பிரான்: சிவன். பூவணம் : திருப்புவனம். சோலை மலை : அழகர் மலை.
141. சங்கத்து அழகர்; சோலைமலை இருக்கும் பெருமாள்.
-----------

    ஆன தினால் அஞ்சுநாள் அங்கிருந்தேன் அங்கேயோர்
    ஞானியையன் தன்னுடனே நட்பானேன் -மேன் மையீர்! 142

    சொக்கர் மதுரை தொழுதுவர வேநீரும்
    ஒக்கவர வேண்டும் எனஉரைத்தேன் - தக்கோன் 143

    நகைத்தான் இவ் வண்ணம் நடந்த கதை உண்டு
    தொகுத்தமறை வேதியரே! சொல்வேன் - மிகுத்தபுகழ் 144

    8. ஞானியார் நல்வழி நவிலல் (145-150 )

    மேவிச் சிறந்த கொந்தி வேந்தன்ஒற்றி யூர்த் திருநாள்
    சேவிக்கப் போக மனம் சிந்தித்தான் - தாவில் 145

    அமைச்சன் அங்கே சென்றக்கால் அங்கொருத்தி வல்லி
    உமைச்சதிசெய் வாளென்று உரைத்தான் - அமைச்சனுரை 146

    மிஞ்சி நடந் தான் அந்த வேசைகைக்குள் சிக்கினான்
    வஞ்சி மருந்தால் மதிகெட்டான் - குஞ்சரமும் 147

    நாடும் நகரும் நவநிதியும் வாங்கினாள்
    ஓடும் குழையுமா ஓட்டினாள் - ஆடுகின்ற 148
------------
143. ஒக்க : உடன் . தக்கோன்: தகுதிவாய்ந்த அந்த ஞானியையன்.
144 . தொகுத்த மறை : தொகுக்கப்பட்ட வேதம்.
145. கொந்தி வேந்தன் : கொந்தி என்னும் நாட்டு அரசன். ஒற்றியூர் : திருவொற்றியூர். தாவு இல்: குற்றம் அற்ற.
146. அமைச்சன் : மந்திரி. வல்லி, ஈண்டுத் தாசிப்பெண்.
147 . மிஞ்சி : கடந்து. மதி : புத்தி. குஞ்சரம்: யானை.
148. ஓடு: பிச்சை எடுக்கும் பாத்திரம். குழை: இலை.
-------------

    கூத்தாடி கள்வன்போற் கோலம் பூண் டாடுவதைப்
    பார்த்தீர் இலையோசொற் பாவலீர்?-வாய்த்த 149

    கறைக்கண்டர் தென்மதுரை காணவென்றால் ஆங்கோர்
    தொறட்டுண் டதனை நான் சொல்வேன் - பொறுத்தக்சம் 150

    9. மதனாபிஷேகத்தின் பிறப்பு (151-165 )

    அட்டதிக்கும் சூழ்கோவில் ஆலவாய்ச் சொக்கருக்குத்
    தட்ட தெடுக்கும் தகையினாள் - வட்டமுலை 151

    மாணிக்க மாலையெனும் மங்கையொரு பெண்ணடிதன்
    காணிக்குத் தேடக் கருத்தாகி - ஊணைத் 152

    தறைமெழுகி உண்டு தவங்கிடந்து மெத்தக்
    குறைகள் எனக்குறிகள் கேட்டும் - பெறுவதற்குச் 153

    செப்புத் தகடெழுதிச் செம்பொற் கழுத்தில் இட்டும்
    கெர்ப்பத்துக் காமருந்து கிண்டியுண்டும் - தப்பாத் 154

    திருவனந்தல் சேவித்தும் செண்பகப்பூ வாசம்
    மருவனந்த நந்தனங்கள் வைத்தும் - திரை உடலை 155
--------
150. கறைக் கண்டர் : விஷத்தைக் கழுத்திலே வைத்த சிவனார். தொட்டு: சங்கடம். பொறுத்த கசம் : தாங்கிய யானை.
151 . ஆலவாய்: மதுரை. தட்டது எடுக்கும் : தட்டுத் தூக்கும் பணிமேற் கொண்ட. தகை : அழகு.
152 . மாணிக்கமாலை, மதனாபிஷேகத்தின் தாய். ஒரு பெண் அடி தண்காணிக்குத் தேட: தனது காணியை ஆள வழித்தோன்றலாக ஒரு பெண் பெற , ஊண் : உணவு.
155. திருவனந்தல் சேவித்தல்: அதிகாலை வணக்கம். அனந்த நந்தனங்கள் : பல நந்த வனங்கள். திரை உடல் : சுருக்கம் விழுந்த உடம்பு.
-------------

    வேற்றொருவர் கண்டு விரும்பாத நாள் தாழை
    காற்றடிக்கப் பூத்த கதைபோல - சாற்றும் 156

    அரிவை தெரிவைகடந் தப்பால் நடக்கும்
    பருவத்தே கர்ப்பம் படைத்தாள் - நரைவீழ் 157

    தலையிற் கறுப்பிறங்கிச் சாய்ந்ததெனத் தொங்கும்
    முலையிற் கறுப்பு முதிர - கலக 158

    விழிவேல் குழியமுகம் வெண்மதியம் ஆக
    எழில்மேனி பச்சை நரம்பு எய்த - தழைதரும்சூல் 159

    கொண்ட வயிறு பெஞ்சைக் கூளேந்திரன் சத்திரத்தில்
    உண்டுவரு வோர் வயிற்றை ஒப்பாக - தண்தேன் 160

    அளிக்குடிக்கும் காராளர் அம்புளியங்காய்க்கும்
    புளிக்குடிக்கும் முன்னமிச்சை பூண்டாள் - களிக்க வயிற்று 161

    ஊடு தரித்தபிள்ளைக் குள்ளாவார் வாயில் அள்ளிப்
    போடுவதைத் தன்வாயிற் போட்டறிந்தாள் - கூடிவந்த 162
-------------
156. வேற்றொருவர் கண்டு விரும்பாத நாள்: ஒருவரும் ஆசைப்படாத கிழப்பருவம்.
157: அரிவை: இருபது வயது முதல் இருபத் தைந்து வயதுக்கு உட்பட்ட பெண் . தெரிவை: இருபத் தாறு வயது தொட்டு முப்பத்தொரு வயதுக்குட்பட்ட நங்கை .
159. குழிய: குழி வீழ. சூல்: கருப்பம்.
160. பெஞ்சைக் கூளேந்திரன்: கூளப்பநாயக்கன்.
161. அளி , அள்ளி என்பதன் இடைக்குறை. தார் : மாலை . அம் : அழகு. களிக்க : மகிழச்சியுற.
162 . தரித்த: உண்டான. 'பிள்ளைக்கு உள்ளா வார் வாயில் அள்ளிப் போடுவதை : மதனாபிஷேகத்தின் வலையில் வீழ்வார் வாயிலே அள்ளிப்போடும் மண்ணை. தன்வாயிற் போட்டு அறிந்தாள் : தன் வாயிலே போட்டுத் தெரிந்து கொண்டாள். கருவுற்றவர் மண் தின்னும் இயற்கை இவ்வளவு நயமாகக் கூறப்படுகிறது. -----------

    மாதமொரு பத்தாய் வயிறுளைந்து பெற்றாள் அவ்
    வேதனையால் மூர்ச்சையாய் மெய்சோர்ந்தாள் - தாதிமார் 163

    பெண்ணென்றார் காதிற் பிழிந்த மருந்தது போல்
    துண்ணென்று எழுந்து துயர் தீர்ந்தாள் - வண்ண மணிப் 164

    பொற்றொடிக்கை மங்கைநல்லாள் பொன்காய்க்கும் பூடொன்று
    பெற்றது போல் ஈன்றெடுத்த பெண் கொடியை - மற்றுளார் 165

    10. மதனாபிஷேகத்தின் வளர்ப்பு (166-189 )

    ஏந்தி இரு கையால் எடுத்து நறு நீராட்டிப்
    பூந்துகிலால் மெய் துவட்டிப் போற்றினார் - வாய்ந்த சங்கிற் 166

    சேனையுடன் வஞ்சத் திருட்டும் மருட்டும் அவ
    தானப் புரட்டும் தனம் பறிக்க - மானிடர்க்குச் 167

    செய்யுங் கபடுமகா தித்திரிப்பும் ஆகாசப்
    பொய்யுங் கலந்து புகட்டினாள் - 'செய்யபசுந் 168

    தேனே! கனியே! தெவிட்டாத தெள்ளமுதே!
    மானே! என் கண்ணே ! மரகதமே! - நான்ஈன்ற 169

    பொன்னே!' என எடுத்துப் பொற்குறங்கின் மீதேற்றி
    மின்னேர் இடையாள் விழிபரப்பி - நன்னுதலிற் 170
------
163. உளைந்து : வலித்து.
164 . துண் என்று : விரைந்து.
165. தொடி : வளையல். பூடு: செடி.
166 . நறு: நல்ல . பூந்துகில் : மெல்லிய ஆடை. மெய்துவட்டி : உடலைத் துடைத்து.
167. சேனை : குழந்தைக்கு ஊட்டும் முதற்பால். தனம் : பணம்.
169. மரகதம்: பச்சை .
170. குறங்கு: துடை. நுதல் : நெற்றி.
----------

    பாப்பிட்ட சொல்லி வெள்ளிப் பட்டம் என வெண்நீற்றுக்
    காப்பிட்டாள் சிற்றடிக்கும் காப்பிட்டாள் - சேப்பிட்ட 171

    செய்க்குவளைக் கண்மயிலே! செம்பொனுள்ள பேர்களையும்
    கைக்குள்வளை என்றுவளை கைக்கிட்டாள் - சிக்காப்புள் 172

    ஒட்டுக்குள் ளாவது போல் உள்ள பணக்காரர்களுன்
    பொட்டுக்குள்ளாக என்று பொட்டிட்டாள் - பொட்டெனவே 173

    வேந்தர் புதையல் வெளியாக்கும் அஞ்சனம்போல்
    வாய்ந்தவடி வேல்விழிக்கு மையிட்டாள் - காந்திமுக 174

    வன்னக் கமலமதில் வண்டிருந்தாற் போல மகள்
    கன்னத்தின் மீதோர் கறுப்பிட்டாள் - சொன்ன தனம் 175

    வீடேறப் பண்டைமுதல் மேலேறத் தன் குடும்பம்
    ஈடேறப் பொன் தொட்டில் ஏற்றினாள் -'தேடி உன்பால் 176
-----------
171. பா பிட்ட சொல்லி : பாடவல்ல - பிட்டுப் போன்ற இனிய சொல்லினள். வெண் நீற்றுக் காப்பு: திரு நீற்றுக் கோடு. காப்பு: தண்டை .
172. செய்: வயல். குவளை : நீலோற்பலம். கைக்குள் வளை: கையடக்கமாகச் சுருட்டு. சிக்காப்புள் : பிடிபடாத பறவை.
173. ஒட்டு: குருவி பிடிக்க இணைத்துவைக்கும் பசை. பொட்டென : விரைவாக .
174. அஞ்சனம் : மை. காந்தி : ஒளி.
175. வன்னக் கமலம்: அழகிய தாமரை . குழந்தை கட்குக் கன்னத்தின் மீது ஒரு கறுப்புப்புள்ளி வைப்பது அழகை மேலும் எடுத்துக் காட்ட. "வன்னப் புதுமதியில் வந்த களங் கம் போலே, கன்னத்தின் ஊடே கறுப் பிட்டாள்" என்றார் சேதுபதி விறலி விடு தூதுடையாரும்.
----------

    வாரா தவராரார் ? வந்து மடிச் சீலைகொட்டித்
    தாரா தவராரார் ? தந்தணையிற் - சேராதார் 177

    ஆராரார்? சேர்ந்துனக்குள் ஆசைகொண்டு சுற்றாதார்
    ஆராரார்?" என்று தா ராட்டினாள் - தாராட்டிச் 178

    சீராட்டி முன் இருத்திச் செங்கைகொட்டிக் காட்டி மஞ்சள்
    நீராட்டி அந்தி நிலாக்காட்டி - பாரில் 179

    கிளைப்பெரிய நாகேந்திரன் கீர்த்தியைச் சொல் வாணர்
    வளர்ப்பதுபோல் பெண்ணை வளர்த்தாள் - முளைக்குமகள் 180

    தள்ளி நடந்தாள் அதுகண்டு தாய்க்கிழவி
    துள்ளி நடந்தாள் துயர் தீர்ந்தாள் - பிள்ளை ஒரு 181

    சிற்றாடை கட்டித் தெருவில் வரக் கண்டு திட்டி
    சுற்றாம லே திட்டி சுற்றினாள் - மற்றும் அந்த 182

    வம்பி மகள் மழலை வார்த்தையைக் கேட்டு ஆடவரைத்
    தம்பியென்று சொல்லத் தலைப்பட்டாள் – அம்புயச்செங் 183
-------------
177 . வாராதவர் ஆர் ஆர் ? தாராதவர் ஆர் ஆர் ? எனப் பிரிக்க. அணை : படுக்கை .
178. ஆர் ஆர் ஆர் ? எனக் கொள்க. தாராட்டி னாள்: தாலாட்டினாள் .
179. செங்கை கொட்டிக் காட்டி : கையைச் சேர்த் துக் கொட்டி விளையாட்டுக் காட்டி, அந்தி நிலாக்காட்டி : மாலைப்பிறையைக் காண்பித்து.
180. கிளைப் பெரிய நாகேந்த்ரன்: பெருங்கிளை தாங்கும் நாகம் கூளப்பநாயக்கன். கீர்த்தியை: புகழை. சொல்வாணர் : புகழ்பாடுவோர் . முளைக்கும் மகள் : வளர்ந்து வருகின்ற பெண்.
181. தள்ளி : தள்ளாடி.
182. திட்டி சுற்றாமல்: கண் ஏறுபட்டு விடாமல்.
183 . வம்பி, தாயாகிய மாணிக்க மாலை. அம் புயம்: தாமரை.
----------------

    கைக்குவளை யிட்டுக் கடகம் பவளமிட்டுத்
    தக்கையிட்ட காதில் தளப்பமிட்டு - பக்கத்தில் 184

    கொண்டை இட்டுக் குப்பி இட்டுக் கொப்பிட்டுக் காலில் வெள்ளித்
    தண்டை இட்டுச் செம்பொன் சதங்கை இட்டு - வெண் தரள 185

    மாலை இட்டி அரட்டை அரைஞாண் மருங்கில் இட்டு
    வேலை இட்ட கட்டிநெற்றி மேலிட்டு - கோலச் சிந் 186

    தாக்கிட்டுச் செம்பவளத் தாழ்வடங்கள் இட்டுவர
    மூக்குத் தளுக்கிட்டு முத்தமிட்டு - நாக்குளிர 187

    வார் இட்ட கொங்கை மதனாபிஷேகம் எனப்
    பேர் இட் டுலகறியப் பேச்சிட்டாள் - ஆரியமும் 188

    கன்னடமும் கட்டிக் கரும்பு போ லேவடுகும்
    பன்னு தமிழும் படிப்பித்தாள் - மன்மதவேள் 189
-----------
184. கடகம் : தோள் வளை. தக்கை, காதுத் தொளை தூர்ந்து போகாதிருக்கப் போடும் நெட்டித் துண்டு. தளப்பம் : காது அணிவகை.
185. குப்பி, ஓர் ஆபரணம். வெண் தரளம் : வெண்முத்து.
186. இரட்டை அரைஞாண் : இரண்டு கொடிகள் கொண்ட அரைக் கயிறு. மருங்கு: இடை. வேலை இட்ட சுட்டி: வேலாயுதம் பொறிக்கப்பட்ட நெற்றிச் சுட்டி .
186, 187 . கோலம் : அழகு. சிந்தாக்கு : ஓர் அணி. வச்ர மூக்குத் தளுக்கு: வைர மூக்குப் பொட்டு.
188 . வார்: ரவிக்கை . ஆரியம்: வடமொழி .
189. வடுகு: தெலுங்கு . மன்மத வேள்: மன்மத னாகிய வேள்.
----------

    11. மதனாபிஷேகத்தின் பருவக்குறி (190-200 )

    சிற்பரத அல்குல் சிறியாள் வயது ஏழில்
    நற்பரதம் எல்லாம் நடித்தறிந்தாள் - உற்பனமாம் 190

    மோனவித்தை உள்ள முனிவோரை யும் மயக்கும்
    கானவித்தை எல்லாம் கரைகண்டாள் - மேனிக்குள் 191

    வாடை மஞ்சள் பூசுவதும் மல்லிகைப்பூச் சூடுவதும்
    ஆடவரை வீட்டுக்கு அழைப்பதுவும் - ஓடிப் 192

    பிலுக்குவதும் கிட்ட நின்று பேசயிலே முத்துக்
    குலுக்குவதும் கொஞ்சுவதும் கொங்கைத் - தலைக்கறுப்பை 193

    முந்திகொண்டு வெட்கம் போல் மூடுவதும் காமுகரை
    அந்திமட்டும் வைத்துவிளை யாடுவதும் - வந்தவரை 194

    வாள்வீச்சுப் போல வரிவிழியால் வெட்டுவதும்
    போழ்வாய்ச்சி கண்டுடம்பு பூரித்தாள் - வேளனையார் 195
---
190. சிற்பரத அல்குல் : சிற்பக் கலைப்படி அமைக் கப்பட்ட தேர் அனைய அல்குல். பாதம்: நடனக்கலை. உம் பனம் : விரைந்து அறிதல்.
191. மோனம: வாய் பேசாமை . கான வித்தை : இசைக்கலை. கரைகண்டாள : முழுதும் அறிந்தாள். மேதினி: பூமி.
192. வாடை : மணம.
193. பிலுக்குதல்: தளுக்குப்பண்ணுதல். முத்துக் குலுக்குதல் : ஒரு உலுக்கு உடலுக்கு தல்.
194 . முந்தி : சேலைத் தலைப்பு. அந்தி சாயும் பொழுது.
195. வரி விழி: கோடு படர்ந்த கண். போழ் வாயச்சி: பொக்கை வாய்த் தாய். வேள் அனையார்: காமனை நிகர்த்த காமுகர்.
-----------

    கைக்குள்வச மாகிவந்து காலைப் பிடிக்குமந்தச்
    சொக்குப் பொடிமருந்தும் சொல்லிவிட்டாள் - சொக்கர் புது 196

    மண்டபத்தின் முன்னே வசந்தன் திருநாளில்
    எண் திசையோர் மெச்ச அரங்கு ஏற்றினாள் - ஒண்தொடிக்குச் 197

    சின்னச் சிமிழாகிச் செப்பாகித் தேங்காயாய்
    வன்னத் தனங்கள் வளர்ந்தேறக் - கன்னிகையாள் 198

    தன்னை அறிந்தாள் தழுவினாள் தன் பழைய
    பொன்னை ஒரு பக்கம் புதைத்துவைத்தாள் - மன்னவர்கள் 199

    சுற்றுவதும் காமுகரைத் தோய மகட்குமனம்
    பற்றுவதும் கண்டறிந்தாள் பப்பரத்தி - பெற்றெடுத்த 200
--------
196. சொக்குப் பொடிமருந்து : மயங்கவைக்கும் மருந்து :
196, 197 . சொக்கர் புதுமண்டபம்: சொக்கே சரின் மதுரையிலுள்ள புதுமண்டபம். வசந்தன் : மன்ம தன். எண் திசையோர்: எட்டுத் திக்கிலுள்ளவர். அரங்கு ஏற்றுதல் : அம்பலம் ஏறச் செய்தல். ஒள் தொடி : ஒளி செய்யும் வைரக்காப்பு அணிந்த மதனாபிஷேகம்.
198. சின்னச் சிமிழ்: சிறிய டப்பி. செப்பு: கிண் ணம். வன்னத் தனங்கள் : அழகிய கொங்கைகள்.
199. அறிந்தவள் தாய்க் கிழவி. தழுவினாள்: மகள் செயலுக்கு மெச்சித் தழுவிக் கொண்டாள். புது வருவாய்க்கு இடம் தந்து பழைய நிதியை மூடிவைத்து விட்டாள்.
200. தோய: அணைய. பப்பரத்தி: பம்பரம் போலச் சுற்றித் திரிபவள்.
------------

    12. மகட்குத் தாய் போதிப்பு (201- 306)

    மானே! என் கண்ணே ! மயிலே! குயிலே!செந்
    தேனே! மதனாபி ஷேகமே! - மீனீன்ற 201

    குஞ்சுக்கு நீச்சும் கொடும்பாம்பின் குட்டிக்கு
    நஞ்சும் கொடுத்தவரார் நங்கையே - செஞ்சிலைக்கைச் 202

    சீவகனுக் கங்கொரு பெண் சிங்கமொரு கன்றீனும்
    பாவனை போ லே எழுதிப் பக்கத்தில் - ஓவியமாக் 203

    காரானை ஒன்றெழுதிக் காட்ட அரிக் கன்று துள்ளிப்
    போராடிப் பாய்ந்த கதை பொய்யலவே-யாருக்கும் 204

    சாதித் தொழில் தனக்குத் தானே வரும் ஒருவர்
    போதிக்க வேண்டுமோ? பொற்கொடியே! மாதர்க்குள் 205

    உன் புத்தி என் புத்திக் கோரிரட்டி யாகினும் என்
    தன் புத்தியும் மகளே! சற்றே கேள்! - ஒன்பதூர்க் 206

    கொஞ்சு பரிநகுலன் கூளேந்த்ரன் பன்றிமலை
    மஞ்சட் குளியை மறவாதே! – மஞ்சள் 207

    மணங்காட்டி ஆட்பிடிக்கும் வாடைப் பொடியின்
    குணங்காட்டிக் கண்காட்டிக் கோலம் - இணங்கிய பொன் 208
------------
202 . சிலை: வில்.
203. கன்று ஈனும் பாவனை : குட்டி போடும் மாதிரி.
204. கார் ஆனை : கறுப்பு யானை. அரிக் கன்று: சிங்கக்குட்டி.
206. இரட்டி : இருமடங்கு.
207. கொஞ்சு பரி நகுலன் : கொஞ்சும் குதிரையை யுடைய நகுலனை ஒத்தவன்.
208. வாடைப் பொடி : வாசனைத் தூள்.
-----------

    உத்தரியம் சற்றே ஒருபால் தெரியவிட்டுக்
    குத்து முலைச் செம்பொற் குடம் காட்டி - முத்துநகை 209

    காட்டிவகை காட்டி நடை காட்டி இடை காட்டி நயம்
    காட்டி இளை யோர்க்காசை காட்டுவாய்! - கோட்டுமுலை 210

    சாய்ந்தால் முகம் திரைத்தால் சல்லிக்கா சொன்றும் உனக்கு
    ஈந்தா தரிப்பவரார் ஏந்திழையே! - ஆய்ந்த பஞ்சுப் 211

    பெட்டி போ லே நரைத்த பெண்கள் கையில் என்னவரும்!
    சட்டி சுறண்டவரும் தையலே!- கட்டழகின் 212

    வாலிபத்தே தேட்டில் மனம்வைத்தால் பொன் தகட்டால்
    வேலி இட்டுக் கட்டலாம் வீடெல்லாம் - காலைப் 213

    பிடிப்பார் ! முழுப்புரட்டுப் பேசி இலை கீறி
    மடிப்பார் ! தருவார்! வருவார் ! - படுக்கை விதம் 214

    காட்டுவேன் என்பார் அக் கள்ளவண்டர் தங்களை உன்
    வீட்டில் அழையாதே மெல்லியலே! வீட்டில் வந்து 215

    பாயப் புகட்டுவிதம் பண்ணுவார்க் குப்புழுதி
    வாயிற் புகட்டும் மயல் பூட்டு! - நீ ஒருத்தர்க்கு 216
---------
209. உத்தரியம் : மேலாடை. ஒருபால் : ஒரு பக்கமாக. முத்து நகை : முத்துப்போன்ற பல்.
210. கோடு: கொம்பு.
211. திரைத்தால் : சுருக்கம் கண்டால் : ஆய்ந்த ஆராய்ந்த.
213. தேட்டில்: பணத்தில் பொன் தகடு : தங்கப்பாளம்.
214. இலை: வெற்றிலை.
216. பாய் : புகுவதற்கு. பகட்டுவிதம்: ஏமாற்று வித்தை .
-------------

    ஆசைவைத்தால் பின் ஒருத்தர் அண்டார் உடன் ஒத்த
    வேசையர்க்கெல்லாம் நகைப்பாம் மெல்லியலே - காசுபணம் 217

    குப்பல்குப்பலாகக் குவித்தாலும் வாலிபத்தில்
    வைப்பிருக்கச் சற்றுமனம் வையாதே! - செப்பு

    முலையைக் கசக்கிவிட்டு முட்டாள் சர்சத்து
    அலையவிடும் பேரை அழையாதே - சிலைநுதலாய் !

    முன்பின் அறியார் முடிப்பாகப் பொன் எழுநூற்று
    ஒன்பது தந் தாலும் மனம் ஒவ்வாதே! இன்பமுடன் 220

    கூடுவார் நித்திரை நீ கொள்வது பார்த்துப் பொடியைப்
    போடுவார் சேலைவர்க்கம் பொன் உடைமை - சோடினையாய்ச் 221

    சேரச் சுருட்டி அப்பால் செல்வார் விடிந்ததற்பின்
    யாரைப் போய்க் கேட்பது நாம் ஆரணங்கே! - ஊரிலே 222

    தந்தைக்கீழ்ப் பிள்ளை உண்டு தாய்க்கீழ்ச் சிறுவருண்டு
    வந்தால் மறைய வரச்சொல்லி தந்தம தால் 223
----------
217 . அண்டார்: நெருங்கமாட்டார்.
218. குப்பல் கும்பலாக : கும்பல் கும்பலாய். வாலிபம்: இளம் பருவம். வைப்பு இருக்க : ஒரேயொரு வருக்கு வைப்பாக இருக்க . செப்பு : கிண்ணம்.
219. சிலை நுதல் : வில் நெற்றி.
220. ஒவ்வாதே : உடன்படாதே.
221. பொடி : மயக்க மருந்து. வர்க்கம் : வகை. சோடினை : ஒழுங்கு.
222 . சேர : ஒருசேர . உ உங. மறைய : ரகசியமாக . தந்தம் : பல்.
----------

    வாயில் வடுச் செய்யாமல் மார்பில் நகம் வையாமல்
    தோயும் இதங் காட்டிச் சுகங்காட்டு - சேயிழையே! 224

    அந்தி படப்பணயம் அத்தரொக்கம் ஆகவந்தால்
    சொந்தமுள்ள பேர் தனக்குச் சொல்லியே - முந்திவந்து 225

    சாரமுண்பாய் நீ அவன் பின் சக்கையைத்தின்
    பானென முன் நேரம் அழைத்தனுப்பு நேசமாய் - தூரத்து 226

    இருந்து வந்து கூடிவிடிந் தேகுவார் தம்மேல்
    பரிந்தாசை போற்பிறகே பற்றி - பிரிந்திருக்க 227

    மாட்டேனே உன்னாலே மாப்பிளைமார் ஆசையெல்லாம்
    போட்டேனே என்ன பொடி போட்டாய் நீ - வீட்டில் 228

    தனித்திருக்கப் போமோடா! சாமீ! உன் தம்பல்
    இனித்திருக்கும் தாடா! இருடா ! - சனிக்கிழமைக்கு 229

    அப்பாலோ நீ வருவாய் ! ஆணையிடு ! முக்காலும் ;
    தப்பாதே! என்றனுப்பு தார்குழலே! மைப்பொருங்கண் 230

    மாதுநல்லாய்! வேறு மருந்தேன் அவர் திரும்பும்
    போது வருமே புதையலெல்லாம் - காதல் கொண்ட உங்க 231
---------
224. வடு: தழும்பு. மார்பில் நகம் வையாமல் : அவன் மார்பிலே நகக் குறியைப் பதித்து விடாமல். தோயும் இதம்: நுகர்ச்சி நயம்.
225. பணயம் : பணம். அத்த ரொக்கம் : கையில் ரொக்கப் பணம்.
227 . பரிந்து: விருப்பங்காட்டி.
229. தம்பல்: தம்பலம்.
230. முக்கால் : மும்முறை .
-------

    மன்னவரைத் தூங்குசப்ர மஞ்சத்தின் மீதிருத்திப்
    பொன் அவரைக் கேளாமற் புல்லினால் - மின் அரசே! 232

    ஊர்க்கும் சலுகைநம்மோ டொத்தவர்க்கும் எண்ணிக்கை
    யார்க்கும் கனத்தகுடி ஆகலாம் - பார்க்குள்ளே 233

    புல்லுவிற்றும் கீரைவிற்றும் பொன் கொடுப்பார்
    காண் நமக்குக் கொல்லிமலைப் பாவாய்! குலதெய்வம் - பல் விழுந்த 234

    கூனற் கிழவன் கொடுக்கும் பணயமதில்
    நானக் குழலே! நரை உண்டோ ? - மானமின்றி 235

    அப்பன் வருவான் அவன் பின் மகன் வருவான்
    தப்புமுறை என்று தள்ளாதே! - இப்புவியில் 236

    மாலைக் குளியர் வெகு மாமாயக் கள்ளர் தங்கள்
    ஜோலிக்குப் போகாதே தோகையே! - வேலையின்றித் 237

    தத்தையனை யாரைத் தழுவிப் பணம் பறிக்கும்
    எத்தரை நாம் எத்துவதும் எத்துகாண் ! - சித்ரா 238

    கதையைக்கேள் என்பருவ காலத்தில் இந்தப்
    பதியிலோர் குச்சிலியப் பையல் - மதுரை 239
-------------
232. சப்ரமஞ்சம்: கட்டில். புல்லினால்: அநுபவித் தால்.
235. பணயமதில்: பணத்தில் . நானக் குழல் : கஸ் தூரி அணிந்த கூந்தல்.
237. மாலைக் குளியர் : மாலைப் போதில் நீராடு வோர்.
238. தத்தை : கிளி.
241. பதி : ஊர். குச்சிலியப் பையல்: குச்சுக்கூட இல்லாத பயல்.
------------

    மழுங்குணி என்னும் பேரான் மாதர் தனத்தைத்
    தழுவிப் பறிப்பான் தனத்தை - முழுதும் 240

    கிழக்குத் தெருவின் நெட்டைக் கிஷணாளின் வீட்டைக்
    குளப்பறியா கப்பறித்தான் கூடி - முளைத்தெழுந்த 241

    செப்பு முலைமாதே! சிவிலிபுத் தூர்த்தாசிக்
    குப்பி உடைமையெலாம் கொள்ளை கொண்டான் - வைப்பென்று 242

    தந்திரமா கப்பசப்பித் தஞ்சாவூர்ச் சொல்லிதனைக்
    கந்தை பொருத்தவிட்டான் கைம்மருந்தால் - இந்த வகை 243

    ஆங்கவனுக் கேகொடுத்தார் அல்லாது அவன் பொருளை
    வாங்கினபேர் இல்லை என் மேல் மாலாகி - ஈங்கு வந்தான் 244

    குன்றுமுலை யாய்! கொழுத்த குட்டி அகப்பட்டது
    என்று பூரித்தேன் இருதோளும் - அன்றுமுதல் 245

    மாட்டுப் பரங்கிக்காய், மாதே! தினங்கறியாக்
    கூட்டிக்கொண் டாங்கவனைக் கூடியே - வீட்டில் வந்த 246

    நாலாம் நாள் அல்லில் நடுச்சாமம் சோதித்துக்
    காலில் தொடுசெருப்புக் கட்டியே - மேலெல்லாம் 247
-----
240. முதலாவது தனம், கொங்கை; இரண்டா வது தனம், பொருள்.
241. நெட்டைக் கிஷணாள் : உயரமாக இருந்த கிருஷ்ணாள் என்னும் வேசி. குளப் பறியாக : குளம் தோண்டுவது போல.
243. பசப்பி : பசப்புவார்த்தை கூறி. கந்தை பொருத்த: கிழிந்த துணி கட்ட.
244 . மாலாகி: மயக்கங் கொண்டு உசுரு. பூரித்தேன் : பருத்தேன்.
246. கூடி : அணைந்து .
247. அல் : இரவு.
-----------

    வெண்ணீறு பூசியைந்து வீரசடை பின்னிவிட்டுப்
    பெண் நீலி என்று கண்டோர் பின்வாங்க - எண்ணமின்றிக் 248

    கள்ளும்சோ றுங்கைச் சுரிகையுமாய்ப் போய்க்கழுவில்
    கள்ளன் வலது குதிக் கால் நரம்பில் - மெள்ள 249

    விளக்கெரித்து நெய்வடித்து வீட்டில் வந்து நன்றாய்
    உழக்கரிசி பெய்து ஊற வைத்து - புளிப்பில்லாச் 250

    சாற்றிலிட்டும் பாற்குழம்பின் சர்க்கரையில் கூட்டி இட்டும்
    சோற்றிலிட்டும் நெஞ்சைச் சுழலவிட்டு - வேற்றவன்உ 251

    பாயத்தால் தேடும் பணப்புற்றி லேகரடி
    வாயைவைத்தாற் போலுறிஞ்சி வாங்கிவிட்டேன் - பேய்போலக் 252

    கையிலுள்ள தெல்லாம் போய்க் கப்பரை ஒன் ஹேந்தி அதோ
    தெய்வமே என்று திரிகிறான் - நெய்யரிசி 253

    நாளுக்கு நாட்செலவாய் நங்காய் உனக்கு வரும்
    ஆளுக் கிருக்கு தின்னம் ஆழாக்கு - வாள்விழியாய்! 254
---------------
248. ஐந்து வீர சடை : ஐந்து பிரிவாகத் தொங் கும் வீரச் சடை.
249. சுரிகை: கத்தி.
251, 252. வேற்றவன்: அந்த மழுங்குணி என்ப வன். உபாயத்தால் : தந்திரத்தால் . பணப்புற்றிலே கரடி வாயை வைத்தால் போல் : பணப்பொந்திலே, ஈசல் புற்றிலே கரடி வாயை வைத்தது போல.
254. கப்பரை : பிச்சைச்சட்டி .
----------

    வேடிக்கை யாய்மாசி வீதியிலே நாம் உலவ
    ஆடிக்கு முன்னே என் ஆசை எனத்- தேடு நிதி 255

    உள்ளவரை மெள்ள உபாயமாய்க் கூட்டிப்போய்க்
    கொள்ளும் பவள முத்துக் கோவைவடம் - உள்ள 256

    கடையும் சவுளிக் கடையும் பார்த் தையா
    கிடையாச் சரக்குக் கிடைத்தது - அடைவாய் என் 257

    முத்தண்ட மாலையைக்கா தோலையைப் பொன்
    மோதிரத்தை வைத்தென்றா லுங்கடுக வாங்கித்தா - பத்தஞ்சு 258

    வட்டி சுமந் தாலுமப்பால் வாங்கலாம் என்பாய் அச்
    சொட்டனுக்கு நெஞ்சு சுறுக்கென்னும் - பொட்டெனத்தன் 259

    கைத்தனத்தை ஈவான் கடையிலே உள்ள சரக்கு
    அத்தனையும் வாங்கி அறையிலிடு -வைத்து 260

    மருந்திடுப்பிற் கட்டி வருவார் சிலர்மேல்
    இருந்து டம்பை வாட்டி எடுப்பார் - பரிந்தணைந்து 261
-----------
255. மாசி வீதி: மதுரை நகரில் நாற்புறமும் உள்ள பெரிய வீதிகள். ஆடிக்குமுன் : ஆடி மாதம் பிறப் பதற்கு முன்னர் . தேடு நிதி: தேடிய பொருள்.
256. மெள்ள : மெதுவாக . உபாயம் : தந்திரம். பவளம் முத்துக்கோவை வடம் : பவளமும் முத்தும் கோத்த மாலை.
257. அடைவாய்: அடகுவைத்து.
258. கடுக: விரைவாக
259. என்பாய்: என்று உரைப்பாய். சொட்டன்: சொத்தைப்பயல். பொட்டென்: விரைவாக .
260. கைத் தனத்தை: கைப்பொருளை . அறையில் இடு: அறையினுள் வைத்துப்பூட்டு.
262. பரிந்து அணைந்து : விரும்பி மேவி.
-------------

    கைச்சரசம் போல் தடவிக் கண்டு பிடித்துடனே
    பிச்சுப் பிடுங்கி எறி பெண் அணங்கே! - லச்சை அற 262

    மன்மத நூலைப் படித்த வம்பரை என் ஆணையுன்றன்
    ஜென்மஜென்மம் உள்ள மட்டும் சேராதே! - சன்யாச 263

    ருத்திராட் சப்பூனை ரூபர்சிலர் உண்டு வந்தால்
    மெத்தையிலே வைத்து விளக்கணைத்து - சத்தமின்றிக் 264

    கூடையிலே ஆள் வந்து கூப்பிட்டால் ஐயர் தமைக்
    கூடையிலே மூடிவைத்துக் கூப்பிடுநீ - பாடிக் 265

    கடுக்கன் அலைக்கும் கவிப்புலவர் வந்தால்
    துடுக்காய் ஒரு வார்த்தை சொல்வார் - கொடுக்க என்றால் 266

    ஐந்து பொன்னும் வாங்கார் அரைப்பணமே போதுமென்பார்
    சிந்தை அவர் மகிழச் செய்திட்டால் - நந்தம் 267

    இசைபாடு வார்கூடா தென்றால் கொடிய
    வசைபாடு வார்கெடுமே வாழ்வு - அசை அளவும் 268
---------
262 . லச்சை அற; வெட்கம் கெட.
263. மன்மத நூல்: காம சாத்திரம். வம்பரை : வம்புக்காரரை . என் ஆணை: தாயாகிய என்மீது ஆணையாக.
264 . ருத்திராட்சப் பூனை ரூபர் : ருத்திராட்சம் தரித்த பூனையைப் போலப் பிறரை ஏமாற்றும் வேஷக் காரர். சத்தம் இன்றி : ஓசைப்படாமல்
265. கூடையிலே : கலக்கும் போது.
266. கடுக்கன் அலைக்கும் கவிப்புலவர் காதுக் கடுக்கனை ஆட்டுகின்ற கவிபாடும் பாலவர். துடுக்காய்: வெடுக்கென்று.
267 . அரைப் பணம் : பாதிப்பணம் அன்று; இடையின் அடியிலுள்ள பாம்புப் படம். நந்தம்: நம்முடைய.
268. இசை: புகழ். வசை : இகழ்.
---------

    அஞ்சுகின்ற கச்சேரி ஆட்சே வகர்வந்தால்
    வஞ்சி! அவர் ஈந்ததை வாங்கிக்கொள் - கொஞ்சமென 269

    எண்ணாதே! கைம்முதல்மற் றென்னபோம் ஓர்செம்பு
    தண்ணீர்போம்! நாம் இடும் பொய்ச் சத்தியம் போம் - பெண் அணங்கே! 270

    வா என்று அழைப்பார் மணியப் பிலுக்கர் சும்மா
    போ என்று சொன்னாலும் பொல்லாப்பு - பாவையே! 271

    சாதனையாச் சோலையிலே தம்பலத்தின் சாறு உமிழ்ந்து
    சூதகமா னேன் என்று தூர இரு - மாதவிடாய் 272

    ஆன நா ளிற்பணயம் அத்தரொக்கம் காணிலொரு
    பானை வெந்நீர்க் காக எண்ணிப் பாராதே! - நானுன்மேல் 273

    மோகமுற்றேன் நீ என் மேல் மோகமில்லை என்று சிலர்
    தோகைநல்லாய்! உன்கருத்தைச் சோதிப்பார் - ஓகோ நீர் 274

    என்னமாச் சொல்லவந்தீர் என்னாசை உம்மேல் என்று
    அன்னமே என் தலைதொட்டு ஆணையிடு - சொன்ன அந்தப் 275

    பொய்யாணை யாற்சீவன் போகுதோ பார் எனக்குத்
    தையால்! அவ் ஆணை தயிர்ச்சாதம் - கையில் 276
-----------
269. வஞ்சி: பெண்ணே .
271. பிலுக்கர்: பகட்டுக்காரர்.
274. மோகம் : ஆசை. சோதித்தல் : பரிசோ தித்தல்.
275. ஆணையிடு: சத்தியம் செய்.
276. சீவன்: உயிர். பொய்ச் சத்தியம் தயிர்ச் சாதம் சாப்பிடுவது போல.
-------------

    இருட்டினில் செல்லாப்பணத்தை ஈந்து படுத்துக்
    கருக்கலிலே போவாரைக் காட்டித் - தரச் சொல்லு 277

    வாய்மட்டாப் பேசினால் மானே முசலின்மேல்
    நாயைவிட்டாற் போலெழுப்பி நம்மைவிடு! கோயிலுக்குள் 278

    நம்பியார் ஐயருடன் நானுண்டு நம்பியார்
    தம்பியா ரைக்கூடிச் சஞ்சரிநீ - அம்பெனுங்கண் 279

    மைவித்தாரக்குயிலே! வாய்வித்தாரக்காரன்
    கைவித்தா ரக்காரன் கையைவிடு ! - செய்யுமறைக் 280

    கட்டளையார் வந்தாலுன் கைம் மருந்தா லே அறிவைத்
    தட்டழியப் பண்ணித் தனம்பறிந் !- அட்டிலிலே 281

    சோறு சமைக்கும் சுயம்பாகி வந்தாக்கால்
    வேறுமொரு வேளாண்மை வேண்டுமோ ! - சாறும் 282

    பரும்படியாச் சம்பாவும் பாற்குழம்பும் நெய்யும்
    வரும்படிந்த கட்டளையாய் மானே ! - தரும் பொருளை 283
---------
279. அம்பு எனும் கண் : பாணம் என்று சொல் லக்கூடிய கண்.
280. வாய் வித்தாரக்காரன்: வாய்வீச்சு வீசுபவன். கைவித்தாரக்காரன்: கையை விரித்துவிட்டுப் போவோன். கையைவிடு : இவர்களை யெல்லாம் தள்ளிவிடுவாயாக!
280, 281. மறைக்கட்டளையார் : வேதத்தை முறையாகப் படிப்போர். அறிவைத் தட்டு அழியப்பண்ணி தனம் பறி : அறிவை நிலை குலைத்துப் பொருளைக் கவர். அட்டில் : அடுப்பு.
282 . வேளாண்மை : உபகாரம். சாறு: ரசம்.
283.பரும்படியும் சம்பாவும்: பெரிய படிக் கணக்கில் சம்பாச் சோறும். பாற் குழம்பு: திரட்டுப்பால். வரும் படிந்த கட்டளையாய்: பொருந்திய தினக் கட்டளையாய் வந்து கொண்டே இருக்கும்.
----------

    வெம்பளிக்கை பண்ணாதே வெஞ்சினப்பண் டாரிவந்தால்
    உம்பளிக்கை ஊர்வரத்தை ஒக்குமே - சம்பளத்தைக் 284

    கூட்டிச் சுமத்திவைப்பான் கோயிற் கணக்கன் ஒரு
    வேட்டுப்போட் டுப்போத வீட்டிலழை! ஆட்டுவிக்கக் 285

    கால் பிடித்த நட்டுவனார் கையைப் பிடித்தழைத்தால்
    வேல் படைத்த கண்மயிலே! மேவிவிடு!- சாலநெடு 286

    நேரஞ்செல்லாமல் நெடுகுடசக்காரனை முன்
    நேரம் அழைத்தனுப்பு நேசமாய் - சாரமுள்ள 287

    நாடகத்துப் பாங்கு நமக்கு நடத்துவிக்கும்
    பாடகனை யுந் தனது பண்ணிக்கொள் ! - கூடுதித்திக் 288

    காரனையும் கைத்தாளக் காரனையும் எக்காளக்
    காரனையும் கூடி இதம் காட்டாதே!- தூறு 289
------------
284. வெற்பளிக்கை: அலட்சியம். பண்டாரி: பொக்கிஷதார்.
285. வேட்டுப் போட்டு : குண்டு போட்டு. போத: வரும்படி . ஆட்டுவிக்க : நாட்டியம் பயிற்ற.
286. கால் பிடித்த : காலைக் கையால் பிடித்த. மேவி விடு : அணைந்து விடுக. சாலநெடு : மிக நீண்ட .
287 . குடசம்: மலை மல்லிகைப்பூ. முன்நேரம்: அந்திப் பொழுது. சாரம்: ரசம்.
288 . பாடகன் : பாட்டுக்காரன். தனது பண்ணிக் கொள் : சொந்தமாக ஆக்கிக்கொள். தித்தி : துருத்தி என்னும் இசைக்கருவி.
289. எக்காளம் : ஊ தும் கருவி. தூறு: விரிந்த .
-----------

    தலையராய்க் கைத்தாழைத் தம்பியராய்ப் பீறல்
    கலையராய் உன் அழகைக் கண்டு - விலைகொடுத்தால் 290

    வாங்குவாய் ! சற்றே மருவுவான்! பேய்ப்படுவான்
    தூங்குவான்! போவான்! சுகமறியான்! - பூங்குயிலே ! 291

    மஞ்சத்தில் நீயும் ஒரு மாப்பிளையு மாயிருந்து
    மிஞ்சுசர சத்திலொரு வேற்றான்வந்து - அஞ்சாறு 292

    தந்தால் அவனைச் சமையல் வீட்டில் பதுக்கிச்
    செந்தேனே! மெல்லச் செறுமுவேன் - வந்தணைந்து 293

    கொல்லைக்குப் போன குணம் போற்கை காலலம்பி
    மெல்லப்போ நம்மை எவர் வெல்லுவார் - நல்ல 294

    உடந்தையா கத்திரிந்த உத்தியோகஸ்தர்க்கு
    இடைஞ்சல் வந்தால் உன்னையும்வந் தேய்ப்பார் - மடந்தையே! 295
------------
290. கைத்தாழைத் தம்பியராய் : கையிலே கண்ட செடிகளைத் தூக்கித் திரிபவராய். பீறல்: கிழிசல். கலை: வேட்டி. விலை : போகத்திற்குக் கிரையம்.
291. சற்றே மருவுவான் : கொஞ்சம் தழுவுவான். பேய்ப்படுவான்: பேய்பிடித்தவன்.
292. அஞ்சாறு : அஞ்சு ஆறு ரூபாய் :
293. செறுமுவேன் : செறுமிச் சத்தம் கொடுப் பேன். வந்து அணைந்து: அந்தச் சரச சல்லாபத்தை விட்டுச் சமையற்கட்டுக்கு வந்து அங்கு பதுங்கி யிருப்பவனை அணைந்து.
294. கொல்லைக்குப் போன குணம் போல் : கொல் லைப்பக்கம் போய்வந்த மாதிரியாக:
295. உத்தியோகஸ்தர்: அதிகாரிகள்.
-------------

    காணிக்கை யானேன் உன் கண்டியைத்தா தண்டையைத்தா
    மாணிக்க மாலையைத்தா வைத்து நான் -- காணிக்கை 296

    தீர்ந்த மறு மாதம் திருப்பித் தருவனென்பார்
    ஏந்திழையே ! நீசற் றிணங்காதே! - காந்தாரி 297

    தாய்க்கிழவி சம்மதித்தால் சம்மதமென் பாய் எனது
    வாய்க்குப் பயந்தவர்பின் வாய் பேசார் - நோக்கமாய் 298

    என்னைக் கலந்தவர்கள் என்றாலும் கைந்நிறையப்
    பொன்னைக் கொடுத்தாற் புணர்ந்துவிடு ! - மின்னே! 299

    பறவைமிருகங்கள் முறை பார்க்குமோ வேசி
    முறை பார்க்க வேபிழைப்பு மோசம் - சிறுபோதே 300

    தேடியல்லோ வன்பிற் சிலம்பியென்றும் மன்னவரைக்
    கூடு திருவாரூர்க் கொண்டியென்றும் - ஆடவரைத் 301

    தெட்டும் பெருங்குண்டைத் திம்மியென்றும் கொண்டையிற்பூ
    மட்டுண்ட ஒற்றியூர் வல்லியென்றும் - சிட்டர் தொழும் 302
-------------
296. காணிக்கையானேன்: செலுத்த வேண்டிய பொருட்கடனாளியாகிவிட்டேன். வைத்து: அடகுவைத்து.
297 . காந்தாரி : பொல்லாதவள்.
300. சிறுபோது: காலாகாலம்.
301. வன்பு: வலிமை கொண்டி, ஒரு வேசியின் பெயர்.
302. தெட்டுதல்: வஞ்சித்தல். குண்டைத் திம்மி : குண்டையூர்த் திம்மி என்னும் பெயரினாள். மட்டு : தேன் சிட்டர்: மேலோர்.
------------

    பூவணமாம் பொன்னகரிப் பொன்னனையாள் என்றும் உடற்
    பூவணமாம் தென்உறையூர்ப் பொன்னி என்றும் - தேவர்தொழும் 303

    சொக்கேசர் கோவில் துணைக் கொடியென் றும் புவிக்குள்
    மிக்கான பேர்படைத்தார் மெல்லியலே !- அக்காலம் 304

    வண்ணமாற்றுப் பசும்பொன் வாங்க ஒருத்தி செய்த
    கிண்ணமாற்றுக்கதையைக் கேட்டிலையோ! பெண்ணணங்கே! 305

    என்றிப் படித்தாய் இயம்பினாள் புத்தி அதை
    அன்றிப் படித்தாள் அநேக புத்தி - அன்றுமுதல் 306

    13. மதனாபிஷேகத்தின் திருவிளையாடல் (307 -311 )

    காதல் மதம் மீறிவரும் காமுகராம் யானைகளைக்
    கோதும்உகிர் அங்குசத்தால் குத்தி இதம் - ஓதி அந்த 307
-------------
303. பூவணம் : திருப்புவனம். பொன்நகரி: அழகிய நகரம். பொன்னனையாள், திருவிளையாடற் புராணத்தில் வரும் ஓர் தாசி. உடல் பூ வணமாம்: பூப்போன்ற உடல் பெற்றவள்.
304 . மிக்கான பேர்: மேலான பெயர்.
305. மாற்றுப் பசும் பொன் : மாற்றுயர்ந்த பசுமை மிக்க தங்கம் வாங்க: பெற. ஒருத்தி : மேல் குறித்த பொன்னனையாள். கிண்ணம்: பித்தளைக்கிண்ணம் முதலியன. கதை : திருப்புவனத்தில் பொன்னனையாள் என்னும் தாசிக்காகக் கடவுள் ரசவாதம் செய்து பித்தளை
யைப் பொன் ஆக்கிய திருவிளையாடற் கதை.
306. அதை அன்றி: அதைத்தவிர .
307 . மீறி : பொங்கி . கோதும்: தடவுகின்ற. உகிர் அங்குசம் : நகமாகிய யானை நிரடும் குறடு.
------------

    மாரன் அரண்மனைக்குள் வைத்தணைத்துச் சேர்ந்துரச
    சாரக் கரும்பு தனையூட்டி - மூரல்வாய்த் 308

    தம்பற் கவளம் தனைக் கொடுத்துக் கும்பமுலைக்
    கம்பத்துடன் பிடித்துக் கட்டினாள் - அம்பரத்தீ 309

    மூட்டுவிக்கும் யோக முனிவோ ரையும் பொம்மல்
    ஆட்டுவிக்கும் தோலுருப்போல் ஆக்கினாள் - தீட்டியவேல் 310

    வண்ணக் குடை அரசர் மாநிதியாம் முந்நீரை
    உண்ணக் குறுமுனியை ஒப்பானாள் - பெண்ணுக்குத் 311

    14. தோழிகள் திறமை (312 -316 )

    தோழிமார் கைமருந்துச் சொக்கி என்றும் சாராயத்
    தாழி என்றும் தூது சவுந்தி என்றும் - ஏழுமதில் 312
---------
308 : மாரன் அரண்மனை : மன்மத மண்டபம். ரச சாரக் கரும்பு: செங்கனிவாய் இதழ் அமுது . மூரல்: பல்.
309. தம்பற் கவளம்: வெற்றிலை உருண்டை கும்பம் : குடம். கம்பம்: தூண்.
309, 310. அம்பரத் தீ மூட்டுவிக்கும் யோக முனி வோர் : ஆகாயம் அளாவத் தீ மூட்டி வேள்வி செய்ய வல்ல தவயோகிகள். பொம்மல் ஆட்டுவிக்கும் தோல் உரு: பொம்மலாட்டம் காட்டும் தோல் வடிவப்பாவை. யோகி களைக்கூட உயிரற்ற பொருளாக ஆக்கிவிட்டாள்.
311. மாநிதி: பெருஞ் செல்வம். முந்நீர்: கடல். உண்ண : பருக . குறுமுனி: அகத்தியன். அகத்தியன், கடலைக் குடித்தான். மதனாபிஷேகம், மன்னர்களின் பெருஞ் செல்வமாகிய கடலைக் குடிப்பதற்குத் தயாராகி அதனால் அத் தமிழ் முனிவனுக்கு ஒப்பாகிவிட்டாள்.
312. தாழி : பாத்திரம்.
-------------

    ஏறி என்றும் தஞ்சாவூர் எத்தி என்றும் மாமாயக்
    காரி என்றும் குண்டுணிவாய்க் கள்ளி என்றும் - மாறாட்டக் 313

    குள்ளி என்றும் மாயக் குருவி என்றும் மாரீசக்
    கள்ளி என்றும் பத்துப் பேர்; காமுகரை - மெள்ளப் 314

    பொருத்துவார் ஊடலாய்ப் போவாரை மோடி
    திருத்துவார் தாராரைச் சிம்பித் துரத்துவார் 315

    கல்லிலே நார் உரித்துக் காண்பார் நனைந்த இடம்
    கல்லுவார் தாமும் ஒரு கை பார்ப்பார் - மெல்லி நல்லார் 316

    15. மதனாபிஷேகத்தின் மேல் மையல் கொண்டோர் (317 -390 )

    இவ்வாறு செய்ய இரு நிதியம் தேடுமந்த
    மைவார் விழியாள் மதிநுதற்கும் - செவ்விக் 317
---------------
314. மாரீசம் : வஞ்சகம்.
312 முதல் 314 முடிய: 1. கைமருந்துச் சொக்கி , 2. சாராயத் தாழி, 3. தூது சவுந்தி, 4. ஏழு மதில் ஏறி, 5. தஞ்சாவூர் 6. த்தி, 6. மா மாயக்காரி, 7. குண்டுணிவாய்க் கள்ளி, 8. மாறாட்டக் குள்ளி, 9. மாயக் குருவி, 10. மாரீசக்களளி; இப் பதின்மரும் மதனாபிஷே கத்தின் தோழிகள்.
315. பொருத்துவார்: கொண்டுவந்து சேர்ப்பார். ஊடல்: சிறுசண்டை . மோடி : பிணக்கு. சிம்பி: கோபித்து.
316. கருங்கல்லிலே நார் உரித்துப் பார்த்து விடு வார்; பரம் கொஞ்சம் கண்டால் அந்த இடத்தைத் தோண்டி எடுத்துவிடுவார்; மதனாபிஷேகத்தின் சிறப்பை வைத்து கொண்டு தாங்களும் ஒருகை பார்த்தே விடுவார்.
317. இரு நிதியம்: பெரும் பொருள். மை வார் விழி: மை தீட்டிய நீண்ட கண். மதி நுதல் : திங்கள் அனைய நெற்றி. செவவி: அழகு.
----------

    கொடி இடைக்கும் நிலவுஎறிக்கும் குறுநகைக்கும் ஒயில் விளைத்த
    பிடி நடைக்கும் வயிரமிட்ட பரமைமிகுத்த - தொடிகளுக்கும் 318

    அலை உதித்த அமுதெனச்சொல் அருமொழிக்கும் இருவிழிக்கும்
    மலைகளொக்கும் முலைகளுக்கும் மனது வைத்து - வலையினுக்குள் 319

    மான்சிக்கினாற்போல் மருள்வாரும் தூண்டியிலே
    மீன் சிக்கினாற்போல் மெலிவாரும் - ஏன் சிக்கிக் 320

    கொண்டோம் என்று உள்ளம் கொதிப்பாரும் கூடி இன்பம்
    கண்டோம் என்று உள்ளம் களிப்பாரும் - கண்டு அனைய 321

    பேச்சுமடந்தைக்குப் பிடிக்கும் மன தாசை என்று
    பூச்சு மருந் திட்டணையப் போவாரும் - வாய்ச்சுதேன்றே 322
------------
318 . கொடி இடை : கொடி போன்ற இடுப்பு. நிலவு எறிக்கும் குறுநகை . நிலவை வீசுகின்ற புன் சிரிப்பு. ஒயில் விளைத்த பிடிடை : ஒய்யாரம் நல்கும் பெண் யானையின் நடையை நிகர்த்த நடை. வயிரம் இட்ட ப்ரபை மிகுத்த தொடிகள் : வைரமணிகள் அழுத்திய ஜோதி மிக்க வளைகள்.
319. அலை உதித்த அமுதெனச் சொல் அரு மொழி: பாற் கடலில் பிறந்த தேவாமிர்தம் எனச் சொல்லத்தகும் அருமையான பேச்சு. இரு விழி : பெரிய கண்கள். மனது வைத்து: மனசைப்பதித்து.
320. மதனாபிஷேகத்தால் தாக்குண்டு, வலையில் சிக்கி மயங்கும் மானானார் சிலர்; தூண்டிலில் விழுந்து துடித்து வருந்தும் மீன் போல் ஆனார் வேறு சிலர்.
321. கண்டு: கற்கண்டு.
322. பூச்சு மருந்து : பூசும் மருந்து.
-------------

    யார்க்கும் பொடி போடும் ஆயிழை முன் வாடைமணம்
    சேர்க்கும் பொடி பூசிச் செல்வாரும் - ஊர்க்கிணங்கத் 323

    தந்தனத்தை ஈந்து சரிந்ததனக் காரி பண்ணும்
    தந்தனத்துக் குள்ளாய்த் தளர்வாரும் - தந்திரமாய் 324

    மாதைப் பசப்ப என்று வாசல் மட்டும் வந்து நரைப்
    பூதத்தைக்கண்ட கலப்போவாரும் - 'கோதாய்! உன் 325

    கால் பிடிக்க வோ? அடைப்பை கட்டவோ? செண்பகப்பூ
    மேல் பிடிக்க வோ? விசிறி வீசவோ? - கோலமலர் 326

    கட்டவோ? கட்டழகி! கண்ணுறங்கப் பொற்குறங்கு
    தட்டவோ?" என்றருகில் சார்வாகும் - வெட்டிவேர் 327

    மண்டுகுழலாள் குளித்த வாடை மஞ்சள் நீரை அள்ளிக்
    கொண்டு தலை மேல் தெளித்துக் கொள்வாரும் - அண்டர்பிரான் 328
---------
323. பொடி போடுதல் : மயங்க வைத்தல். ஆயி ழை: இங்கு மதனாபிஷேகம். வாடை மணம், ஒரு பொருட் சொற்கள். வாடை மணம் சேர்க்கும் பொடி : வாசங்கலந்த தூள் .
324. தம் தனம்: தங்கள் பணம். சரிந்த தனம் : சாயந்தஸ்தனம். அத்தனக்காரி, தாய், தந்தனம் : சூழ்ச்சி. உள்ளாய்: உட்பட்டு.
325. மாது, மதனாபிஷேகம். நரைப் பூதம், மாணிக்க மாலை. அகல : தூரத்தே .
326. அடைப்பை: வெற்றிலைப் பை. செண்பகப் பூ மேல் : செண்பகப் பூ போன்ற பொன் நிறமும் மென்மை யும் கொண்ட உடம்பு.
327 . கட்டழகி : உடையாத எழில். பொற் குறங்கு தட்டல் : பொன் அனைய துடையைத் தட்டுதல். குறங்கு: துடை.
328. மண்டு குழல்: நிறைந்த கூந்தல். அண்டர் பிரான்: தேவேந்திரன்.
-------------

    சன்னிதியில் சந்தடியில் தள்ளுண்டு வீழ்வார்போல்
    பின்னுகுழ லாளைப் பிடிப்பாரும் - பின்னொருத்தன் 329

    வீட்டிலிருக்க வெளியிலே நின்றுசன்னை
    காட்டித் திரிந்து கரை வாரும் - வீட்டு இறப்பை 330

    அண்டிக் கலவிசெயும் ஆரம்பம் கேட்டுவெட்டித்
    துண்டித்தாற் போலத் துடிப்பாரும் - கண்டனையாள் 331

    ஜோதிமுக மஞ்சள் துவண்டதுகிற் போர்வையுடன்
    வீதிதொறும் போய்ப்பிலுக்கி மீள்வாரும் - காதளவும் 332

    மைப்பட்ட கண்ணிசப்ர மஞ்சத்தின் மேற்காலைத்
    துப்பட்டி கொண்டு துடைப்பாரும் - செப்பமுள்ள 333

    தெப்பத் திருநாளில் தெப்பக் குளத்து மங்கை
    தெப்பத்தே ஏறிவரும் சீராட்டில் - அப்பம் 334

    வடை சுசியன் தோசை வகைகள் பணியாரம்
    கடையிலே கொண்டு மாடி கட்டி - சடுதியிற் போய் 335
-------------
330. சன்னை : சாடை. கரைதல்: உருகுதல். வீட்டு இறப்பு: வீட்டுத் தாழ்வாரம்.
331. அண்டி : நெருங்கி .
332 . மதனாபிஷேகத்தின் மஞ்சள் அப்பிய ஆடை யுடன் வீதி வீதியாகச் சென்று இது அவள் மஞ்சள் என்று பெருமை பேசுகின்றார் சிலர். பிலுக்குதல்: பெரு
மையாகக் காட்டுதல்.
333. சப்ர மஞ்சம்: கட்டில், காலை, அவள் காலை. செப்பம் ; ஒழுங்கு.
334 . சீராட்டு : சிறப்பு.
335. சுசியன்: ஓரு இனிப்பு உணவுப் பண்டம், சடுதி : விரைவாக
--------------

    நாரிகையி லேகொடுக்க நாடி வட மோடும் ஆள்
    வாரியிலே ஓடி வருவாரும் - பேராம் 336

    வசந்தன் திருநாளில் மண்டபத்தில் மங்கை
    இசைந்து நடம்புரியும் ஏல்வை - கசங்காமல் 337

    மல்லிகைப்பூச் செண்டு மருக்கொண்டு சந்தடியை
    மெல்ல விலக்கிவரும் வேளையிலே - நல்ல படைக் 338

    கம்பால் அடிபட்டுக் கத்தியினால் நொந்துடம்பு
    செம்பால் ஒழுகத் திரிவாரும் - தம்பிரான் 339

    பல்லக்குக் கூடிப் பதினாறு நாழிகைமேல்
    வல்லொக்கும் கொங்கை வளைவுக்கு செல்லுகையில் 340

    குக்கல் வாய் காட்டிக் கொடுக்கத் தலையாரி
    கைக்கு ஏகப்பட்டுக் கட்டுண்டு - கக்குரத்தம் 341

    மூக்கிட் டொழுக முழங்கை இடி பட்டு நெஞ்சிற்
    சீக்கட்டி கொண்டு திரிவாரும் - தூக்குமஞ்சத் 342
---------
336. நாரி, இங்கு மதனாபிஷேகம். நாடி விரும்பி. வடமோடும் ஆள்வாரி: தெப்பக் கயறு கொண்டு ஆள் ஓடும் வரிசை. பேர் ஆம்: பெயர் பெற்ற .
337. வசந்தன்: காமதேவன். ஏல்வை : சமயம்.
338. மரு: மணமுள்ள ஓர் இலை வகை. சந்தடி : கூட்டம். மெல்ல : மெதுவாக.
339. செம்பால் : இரத் தம் . தம்பிரான்: இறைவன்.
340. பதினாறு நாழிகை மேல்: நடுச் சாமத்திற்கு மேலாக, வல்: சொற்கேட்டான் ஆடும் காய், வளைவு. வீடு. கைப்பிடி நாயகன் தூங்கையிலே " வன்ற பாட்டில் " அயல் வளைவில் " எனப் பட்டினத்தடிகள் பகர்கின்றார்.
341. குக்கல்: நாய். குக்கல் வாய் : நாயின் குரல். தலையாரி : காவல் தலைவன். கட்டுண்டு : கட்டப்பட்டு. கக்கு ரத்தம் : கக்கிய இரத்தமானது.
342. தூக்கு மஞ்சம்: ஊஞ்சல்.
------------

    தேஒருவன் வீட்டில் இருக்க அது காணாமல்
    போய் ஒருவன் வீட்டில் புகுதவே - ஞாயமற்ற 343

    பூசல் விளைத்துப் பொறாமையினா லேவாது
    பேசி வெளியிற் புறப்பட்டு - ரோசமுடன் 344

    மாதொருத்திக் காப்பொருத வாலியும் சுக்ரீவனும் போல்
    வீதியிலே மற்கட்டி வீழ்வாரும் - பாதையில் தீ 345

    வட்டி வெளிச்சம் மினுமினென வந்தியர்முன்
    கட்டியங்கள் கூறக் கடுநடையாய் - தொட்டு வரும் 346

    பாதக் குறட்டில் பவளக் குமிழ் இலங்க
    மாது மணவறைக்குள் மன்னர் வரும் - போதில் அந்த 347

    வீட்டிற் பரண் ஏறி மேவுந் தொழில் அமளி
    கேட்டுப் பதுங்கிக் கிடப்பாரும் - பாட்டிளஞ்சொல் 348

    மாங்குயிலைப் போல மருவக் கனவுகண்டு
    தூங்குகையில் இந்திரியம் சோர்வாரும் - ஈங்கிவளுக்கு 349
----------
343. அது காணாமல் : அதைப் பாராமல் . புகுத: நுழைய.
344 . பூசல் : சண்டை . விளைத்து : உண்டாக்கிக் கொண்டு. வாது பேசி: தர்க்கம் பேசி .
345. மாது ஒருத்திக்காக: சுக்ரீவன் மனைவிக்காக . பொருத: போர் புரிந்தது. மற்கட்டி : மல்லுக்கட்டி.
346. வந்தியர்: துதி பாடுவோர் . கடுநடையாய் : விரைவாக . தொட்டு வரும் : அணிந்து வருகின்ற.
347 . பாதக்குடு: கால் கட்டை . பவளக் குமிழ் இலங்க : அக் கட்டையில் பவளத்தால் வைத்துப் பதிக் கப்பட்ட குமிழ் விளங்க . மணவறை: வாசனை வீசும் சயன அறை.
348. பரண் : மச்சு . மேவுந் தொழில் : சேர்க்கை . அமளி: ஆரவாரம்.
-----------

    ஈயவகை காணோம் இரதம் பொன்னாக்குவது
    பாயம் என்று மித்ரம் பலகூட்டித் - தீயில் 350

    கூருo குகையிலே வைத்துக் குனிந்தூ தி வாதப்
    புகையிலடி பட்டுப் புகைந்து - திகைதெரியா 351

    மாலைக்கண் ணாகி மதிமயங்கித் தங்கள் தங்கள்
    காலைக்கண் ணாக்கிவழி காண்பாரும் - வாலிபத்தில் 352

    பூணார் முலையாட்காப் பொன் திருடிக் கை இரண்டும்
    சாணாகக் கண்டு தளர்வாரும் -- வாணுதற்காத் 353

    தாங்கன்னம் இட்டுத் தலையைக் கடைக்காசு
    வாங்கென்ன விட்டுடலை மாய்ப்பாரும் - தூங்கிவிழும் 354

    வண்ணான் நரைமயிரும் மாதவிடாய்த் தம்பலமும்
    பெண்ணாய்த் தலையோடும் பிள்ளை ஒன்றும் - சுண்ணாம்புப் 355

    பானை போ லே நரைத்த பாவிபடுக் கைத்தலத்தில்
    பூனைபோற் தோண்டிப் புதைப்பாரும் - மானனையாள் 356

    இட்ட மருந்தால் இருமல் பிடித் தோயாமல்
    நாய்போற் குரைப்பாரும் - ஒட்டிய புண் 357

    என்பவர்க்கு நாணி இரசம்தின் மின்கரும்பு
    தின்பவர்க்கு நாணித் திரிவாரும் - பொன் சரிகைச் 358
--------
350. இரத்தம் பொன்னாக்குவது : ரசவாதத்தினால் பிறவற்றைத் தங்கம் ஆக்குவது. உபாயம் : தந்திரம்.
351. வாதம்: காற்று. திகை: திக்கு.
352. மாலைக் கண் பார்வை மங்கிய கண். காலைக் கண்ணாக்குதல்: காலினால் தடவித் தடவி வழி கண்டு பிடித்தல்.
353. பூண்: நகை. வாள் நுதல் : ஒளியுள்ள நெற்றி.
356. பாவி, இடையூறாக இருக்கும் தாய்க் கிழவி.
-------------

    சேலை கொடுத்ததற்குச் சீமாட்டி என் கொடுத்தாள்
    சூலை கொடுத் தாளென்று சொல்வாரும் - மூல அரை 359

    ஆப்புக்குச் சத்திரமிட் டாவிகாக் கக்காக்காய்த்
    தோப்பிற் கிடந்து துடிப்பாரும் - மாப்பிளைமார் 360

    வைத்த நகக்குறியை மங்கை இரு கொங்கையிற்கண்டு
    எய்த்து நெடுமூச் செறிவாரும் - முத்து முத்தாய்ப் 361

    பேசினா லும்போதும் பேதைமைத் தூஷணமாய்
    ஏசினா லும்போதும் என்பாரும் - பாசிழையாள் 362

    கொந்தலரும் பூ அணை மேல் கும்பகர்ண லீலை செய்ய
    இந்திரன் போல் பக்கத் திருப்பாரும் - ஐந்து பத்து 363

    மாடுவிற்றோம் நூறு மறிவிற்றோம் ஏழுமந்தை
    ஆடுவீற்றோம் வீட்டில் அடிமைவிற்றோம் - தேடரிய 364

    வெண்கலத்தாற் குத்துவிளக்குவிற்றோம் காணிவிற்றோம்
    உண்கலத்தை விற்றோம் உடைமைவிற்றோம் - பெண் செலவுக்கு 365

    என்னத்தை கேட்க வந்தால் என்னத்தை நாம் கொடுப்போம்
    என்னத்தைச் சொல்லுவோம் என்பாரும் - முன்னம் இந்த 366
----------
361. சூலை: ஒரு முடக்கு நோய். கூசா. சத்திரம் இடல்: கத்திகொண்டு கிழித்தல்.
362 . தூஷணம் : இகழ்ச்சி. ஏசுதல் : வைதல். பாசு இழை: பசுமையான ஆபரணம்.
363. கொந்து அலரும் : பூங்கொத்து மலர்கின்ற. பூ அணை : அழகிய : படுக்கை . கும்பகர்ண லீலை : நல்ல. தூக்கம்.
364 . மறி: மான் இனம். மந்தை : கூட்டம்.
365. காணி : நிலம். உண் கலம்: சாப்பிடும் வட் டில். பெண் : மனையாள்.
366 . என் அத்தை : என் மாமி. என்னத்தை : எதை. என்னத்தைச் சொல்லுவோம் : என்ன சொல்வது.
--------------

    மின்னாசை கொள்ளாமல் வீணுக்குக் கொண்டோம் இச்
    சன்னாசம் என்று தளர்வாரும் - என்ன செய்வோம் 367

    பங்கை விற்றும் ஈந்தோம் பணம் இனும் தா போவென்றாள்
    எங்கே சுமை எடுப்போம் என்பாரும் - ரங்குலுக்கு 368

    தித்திலோ னுக்காக செல்லேனு போங்குலு நாம்
    இத்தனையும் தொற்றழிந்தோம் என்பாரும் - அத்தையார் 369

    சூளை மகளுன்னு சொர்ணவெல்லா தக்கொண்டு
    நாளை என்றாள் என்று மனம் நைவாரும் - நாளிலே 370

    பாண்டி நாட்டிச்சி பணம் உறிஞ்சினாள் நாங்கள்
    ஆண்டியா னோம் என் றலைவாரும் - ஆண்டியர்தம் 371
--------
367. துறவு வேடத்தை முன்னரே ஆராயாமல் கொண்டு விட்ட சிலர், இந்த மதனாபிஷேகம் இருக்கும் உலகில் அவளை அணையாமல் சந்யாசம் கொண்டது வீண் என்று கவலைப்படுகிறார்.
368 . எங்கே சுமை எடுப்போம்: அவளுக்குக் கொடுப்பதற்குப் பணம் பெற எங்கே போய் மூட்டை தூக் குவது. ரங்குல் : வேசை.
369. தித்திலோ ................. போங்குலு: இவைகள் தெலுங்கு வார்த்தைகள். இவைகள் உடைமைகளின் பெயர்களாக இருத்தல் கூடும் எனத் தோன்றுகிறது.
370. சூளை மகள்: வேசி மகள். நன்னு சொர்ண வெல்லா தக்கொண்டு : இவைகளும் தெலுங்கு மொழிகளே. நன்னு : என்னுடைய . சொர்ண வெல்லா: பொன்னை யெல்லாம் . தக்கொண்டு தான் கவர்ந்து.
371. பாண்டி நாட்டிச்சி : பாண்டி நாட்டுக்காரி.
-------------

    தொண்டுபோய் வேடம் போய்த் தோகைக்குடையவரைக்
    கொண்டுபோய்க் கையிற் கொடுப்பாரும் - கண்ட செட்டு 372

    மோசமாச் சுக்காண் முதலுக்குப் புல்வாண்டைக்
    காசுமில்லை என்று கரை வாரும் - வேசை இவட்கு 373

    ஈந்த பொருளை வட்டிக் கீந்தோமா? நாம் இருக்க
    வாய்ந்த மச்சு வீடுகட்டி வைத்தோமா? - கூந்தலிளம் 374

    பேடைமயில் போல் வீட்டுப் பெண்டாட்டிக் கேஉடைமை
    சொடினையாப் பூட்டிச் சுகித்தோமா? - ஆடுகொண்டு 375

    விட்டோமா? மாடுகொண்டு விட்டோமா? தெய்வத்துக்கு
    இட்டோமா? தேகி என்பார்க் கீந்தோமா? - அட்டதிக்கும் 376

    நாடிப் புகழ்பெரிய நாகமன்போற் பாமாலை
    சூடித் தியாகம் சொரிந்தோமா? - தேடு நிதி 377

    தன்னைக் கொடுத்துத் தரித்திரத்தை வாங்கினோம்
    என்ன வியாபாரம் என்பாரும் - இன்னவகை 378

    காமுகரெல்லாமயங்கக் காளத்தி யையன்மகன்
    ஆம்ஒருவன் இவ்வூரன் ஆதியையன் - சேம 379
-------------
372 . ஆண்டியர்க் குரிய தொண்டையும் விட்டு வேடத்தையும் கலைத்து தையலார் தம் இடமிருந்து தூது சென்று பிழைக்கப் புகுந்து விட்டார் சிலர்.
373. புல்வாண்டைக் காசு : சிறு நாணய வகை.
374. மச்சு வீடு: மாடி வீடு.
375. சோடினை : அலங்காரம். சுகித்தல்: அநுபவித்தல்.
377 . தியாகம் : கொடை.
379. காமுகர் . காமப் பித்தர். சேமம் : காவல்.
--------

    மதுரைக் கொருநாட்போய் மாசித் தெருவில்
    விதிவசத்தால் கண்டான் அம்மின்னை - மதி நுதலாள் 380

    மையலுக்குள் வீழ்ந்தான் வடுச் செய்த மாமரத்தில்
    மெய்உரிஞ்சப் போய்க்கவரி வீழ்ந்தாப்போல் - கையில் 381

    இருந்ததெல்லாம் வீட்டில் இருந்ததெல்லாம் ஆஸ்தி
    இருந்ததெல்லாம் தோற்றான் இரந்தான் - மருந்தினால் 382

    கள்ளுண்டார் போலக் கலங்கினான் வாசலிலே
    தள்ளுண்டான் தன் ஒழுக்கம் தப்பினான் - விள்ளுவதென்? 383

    ஆதியையன் என்னும் பேர் அன்றே போய் இப்பால்வி
    யாதியையன் என்னும்பேர் ஆயினான் - பாதி 384

    உடலாகி ஒட்டிய புண் உள்ளுருக்க யார்க்கும்
    தொடலாகாச் சீச்சிரங்கு சூலை - கொடிய 385

    அரையாப்பு மேகவெட்டை அண்டத்து வாதம்
    புரைவாய்ப் பவித்திரம் புகைச்சல் - இருமல் 386

    இளைப்புப் பொடுகு மருந்திட்ட நோய் பித்தம்
    களைப்புமாய்ப் பூனைபோற் கத்தி - கிழக்கே 387

    அடுத்த மனையில் அருகு திண்ணை தன்னிற்
    படுத்துக் கிடக்கின்றான் பாரும் - படித்தவரே! 388
------------
380. மின்: மதனாபிஷேக மின்னல்.
381. மையல்: காம மயக்கம். மெய் உரிஞ்ச: உடம் பை உரச. கவரி: மான்.
382 . ஆஸ்தி: சொத்து. இரந்தான்: பிச்சை எடுத்தான்.
383. தள்ளுண்டான்: தள்ளப்பட்டான். ஒழுக்கம் : நடை. விள்ளுவதென்: என்ன சொல்ல இருக்கிறது.
388. அருகு திண்ணை : ஒட்டுத் திண்ணை .
----------

    இப்படியாத் தேடியுண்ணும் ஏந்திழையாள் வாழ்மதுரைக்கு
    எப்படிப்போ வீர்வருவ தெப்படிக்காண்? - செப்பும் அவ 389

    தானியைய ரே என்று தக்க புத்தி போதிக்க
    ஞானியைய ரைப்பார்த்து நான் விரத்தி - ஆனேன் 390

    16. அவதானி மதுரை நகர் அடைதல் (391 -400 )

    இருப்புத்தூ ணிற்கறையான் ஏறுமோ? போம்போம்
    நெருப்பிற் புழுவிழுமோ? நீர் என் - கருத்தை 391

    அறியீர்என் றேன் நல்லது ஐயரே என்று
    பிறியாமல் வந்தார் என் பின்னே - நெறியினிற்போய் 392

    வையகமேல் எய்தியசீர் வைதிக நூல் மெய்ஒலிசேர்
    மொய் திரைநீர் வையையில்யான மூழ்கியே - உய்யப் 393

    படியுமடி யவர் கொடிய படிறுசெயும் இடர்முழுதும்
    அடருமெழு கடலினிடை ஆடி - கிடையாப் 394
--------------
390. விரத்தியானேன் : உலக ஆசைகளில் வெ . றுப்புக்கொண்டு விட்டேன்.
392. நெறி: வழி.
393. வையக மேல் எய்தியசீர் வைதிக நூல், ஞான சம்பந்தர் தேவாரம். மெய் ஒலி: அப்பாடலின் உண்மை இசை. மொய் திரை: நிறைந்த அலை. உய்ய : கடைத்தேற .
394. படிதல் : நீராடல். படிறு : வஞ்சகம். எழு கடல்: மதுரை நகரிலுள்ள ஒரு தீர்த்தம். தடாதகைப் பிராட்டியின் தாயாகிய காஞ்சனமாலை கடலாடக் கருதிய மை காரணமாகத் தடாதகைக்குக் கணவனாக வாய்த்த சோமசுந்தரக் கடவுள், கடலேழும் ஒருங்கு திரண்டு மதுரைக்கே வருமாறு அழைத்தார் என்பது திருவிளை யாடற் கதை.
----------

    பரத்துக்கே விருப்புற்றோர் பவத்துக்கோர் நெருப்பொப்பாம்
    அருட்பொற்றா மரைக்குப்போய் ஆடி - உருச் செபிக்கும் 395

    ஐந்தெழுத்தைச் சிந்தைவைத்திட் டன்பருக்குச் சஞ்சலத்தைச்
    சிந்து சித்திக் குஞ்சரத்தைத் தெண்டனிட்டு - கந்தபுஷபக் 396

    கற்பகமெ னப்பொலிக டப்பநிழலிற்குலவும்
    அற்புதகயற்கண்உமை யைத் தொழுது - சிற்பரத்தில் 397

    நேசர்மன வாசர்பவ நாசர்கயி லாசர்சக
    தீசர் மது ரேசர் அடி யான்போற்றி - நேசமுடன் 398
-------------
395. பரம்: பரலோக வாழ்வு. பவம்: பிறவி. பொற்றாமரை: மதுரைக் கோவிலுக்குள் உள்ள தீர்த்தக் குளம். உரு: மந்திரம்.
396. ஐந்து எழுத்து : சிவாயநம, அல்லது நம சிவாய என்னும் பஞ்ச அட்சரம். சஞ்சலம்: கவலை. சிந்து : போக்குகின்றன. சித்திக் குஞ்சரம்: சித்தி விநாய கன். தெண்டன் இட்டு: கும்பிட்டு. கந்த புஷ்பம் : மண
முள்ள மலர்.
397. கற்பகம் எனப் பொலி கடப்ப நிழலிற் குல வும் : கற்பக மரம்போல விளங்கா நிற்கும் கடம்ப மர நிழ லிலே வீற்றிருக்கின்ற. மதுரைத் தலவிருட்சம் கடம்பு. கயற் கண் உமை: அங்கையற்கண் அம்மை - மீனாட்சி . சிற்பரம்: பேர் அறிவு. அதாவது மெஞ்ஞானம்.
398. மனவாசர்: உள்ளக் கமலத்தில் உறைபவர். பவநாசர்: பாவங்களை அழிப்பவர். கைலாசர்: கைலாயத் திலே இருப்பவர். சக தீசர்: உலகத் தலைவர். மதுரேசர் : மதுரைச் சொக்கர்.
-------------

    துங்கப்ர காரத்தைச் சுற்றி வடகுடபால் ச
    ங்கப் புலவர் தமை ஏத்தி - எங்குமுள்ள 399

    தீயமா பாதகமும் தீரத் தீர்த்த ம் பருகி
    கோபுரத்தை நான் நீங்கி - ஆயிரக்கால் 400

    17. மதனாபிஷேகத்தைக் கண்டு மருளல் (401 -439 )

    மண்டபத்திற் கண்டேன் மதனாபிஷேகத்தை
    விண்டலத்தை விட்டுவந்த மேனகையை - கொண்டைச் 401

    சொருக்கழகும் முத்துத் துராயழகும் செவ்வாய்
    முருக்கழகும் சேலை முகப்பில் - கருக்கழகும் 402

    வேலழகு போன்ற விழியழகும் தண்டை இட்ட
    கால் அழகும் பொற்கடகக் கை அழகும் - ஓலை இட்ட 403

    காதழகும் வச்ரமணிக் கச்சிறுக்கும் மார்பழகும்
    சோதி முகத்தழகும் துங்கரத்ந - மாதுரதி 404
-----------
399 துங்கம்: உயர்வு. வட குடபால் : வட மேற் குப் பக்கத்திலே யுள்ள . சங்கப் புலவர் : சங்கத்தார் நாற்பத்து ஒன்பதின்மர்.
400. மாபாதகம் : கொடும் பழி. தீர்த்த ம் பருகி : மாபாதகத் தீர்த்தம் குடித்து. நாயகர் : சோக்கேசர். ஆயிரக்கால் : ஆயிரங்கால்கள் கொண்ட :
401. விண் தலம்: வான் உலகம். மேனகை : விண்ணுலக நங்கையருள் ஒருத்தி.
402. முத்துத் துராய் : முத்துப் பதித்த, தலையில் முன் அணியும் நகை. முருக்கு : முருக்கம்பூ . கருக்கு கரை .
404. வச்ரம் : வைரம். கச்சு : ரவிக்கை . வச்ரமணிக் கச்சு இருக்கும் மார்பு: வைரமாலை அணிந்த கச்சை இறுக்கும் கொங்கை. துங்க ரத்னம் : மாசற்றமணி. மாது ரதி: ரதிதேவி போன்றவள்.
---------

    கட்டழகும் பொட்டழகும் கச்சைகட்டி வந்த கட்டு
    மட்டழகும் கண்டு மயங்கினேன் - கிட்ட வந்த 405

    நாட்டத்தைக் கண்டு நடந்து சிலைக் காமனும் பூந்
    தோட்டத்தைக் கொள்ளை கொண்டு தோன்றினான் - வாட்டும தன் 406

    கையம்பு பாயவஞ்சிக் கண்ணம்பு பாயநின்று
    தொய்யும் மான் போலத் துவக்குண்டேன் - தெய்வசுதி 407

    காணும் இசைராகம் கைத்தாளம் மத்தளம்கை
    வீணை பல கைத்தித்தி வேணுசுரம் - கோணாமல் 408

    கூடும் சுருதியுடன் கொம்பனையாள் சங்கீதம்
    பாடும் சுருதி இன்பம் பாலிக்க - ஆடவரை 409

    எய்யுமத வேள்கைக்கு இசையுமலர் ஈவாள் போல்
    தையலாள் புஷ்பாஞ் சலிசெய்தாள் - செய்து பிள்ளை 410
------------
405. கச்சை: நடனமாடக் கட்டுவது. கட்டு மட்டு: கட்டுக்கோப்பு.
406. சிலைக் காமன் : வில்வேள். பூந்தோட்டத்தைக் கொள்ளை கொண்டு தோன்றினான்: மலர்ச் சோலையை அப் படியே கொள்ளை யடித்துக்கொண்டு வந்துவிட்டான். ஏன்? கூட்டத்தில் உள்ள எல்லோர் மீதும் அம்மலர்களை
அம்பாக விடுவதற்குத்தான்.
407 . மதன் கைக்கணை ஒருபால் பாய, அவள் கண் அம்பு ஒருபுறம் குத்த எய்த்து இளைத்தமான்போலச் சோர்ந்துவிட்டேன்.
408. கைத்தித்தி: கைத் துருத்தி வாத்தியம் வேணு: புல்லாங்குழல்.
409. கொம்பனையாள் : மலர்க கொம்பை ஒத்தவள் பாடும் சுருதி இன்பம் பாலிக்க: பாட்டோசை இன்பம் தர.
410. இசையுமலர்: பொருத்தமான பூக்கள். புஷ் பாஞ்சலி: பூத்தூவி வணங்கல்.
விறலி விடு தூது
----------

    யார்கவுத்து வங்கொண்டான் ஆட விளையநயி
    னார்கவுத்து வங்கொண்டு நண்ணினேன் - சேரும் 411

    நிலைக்கிடை கொண்டாள் மருட்டும் நீலமலர்ச் செங்கண்
    வலைக்கிடை கொண்டாள் என் மனத்தை - கலைப்பரத 412

    முந்தோர் எடுப்பெடுத்தாள் மூரிவில்லைப் பூட்டி என்மேல்
    வந்தோர் எடுப்பெடுத்தான் மன்மதவேள் - நந்தி சொன்ன 413

    சொற்கட்டி லாரி தொடுத்தாள் முன் நின்றவரை
    மற்கட்டு வாள் போல் மறையநின்றேன் - பொற்கடகக் 414

    கைச்சலாங் கொண்டாள் கனம் பேசலாம் இதற்கே
    மெச்சலாம் என்றுரைத்தார் விஞ்சையோர் - மெச்சும் 415

    தருக்கொண்டாள் மற்றோர் சதிகொண்டாள் கண்டே
    மருட்கொண்டிருக்க எனை வைத்தாள் - விரித்தசுருள் 416

    பாதி நடித்தாள் கீதம் பாடினாள் பூப்போட்டு
    வாதில் நடித் தாரும் மயங்கினார் - சூது முலை 417

    மாதுபிர பந்தம் வகுத்தால் இதற்குரைப்பது
    ஏது பிர பந்தம் என எண்ணினேன் - நாதப் 418

    பதசாரி சாரிகொள்ளப் பார்வேந்தா ஈந்தார்
    முதுசாளி கைப்பொன் முடிப்பை - எதிராக 419

    நின்றவின யங்கள் செய்தாள் நிட்டூரி என்மனது
    கன்ற வினயங்கள் செய்தாள் கண்ணாலே - மன்றிலொரு சட்ட 420

கோப்பெடுத்தாள் வேந்தர் பொன்னைக் கொள்ளை கொள்ளக் கள்ளி இந்தக்
கோப்பெடுத்தாள் என்றார் என் கூட வந்தோர் - காப்பான 421
----------
413. மூரி : வலிமை .
415. விஞ்சையோர் : விற்பன்னர்கள்.
416. மகள் கொண்டிருக்க : மயக்கம் பெற்றிருக்க .
417. வாதில் நடித்தார் : தர்க்க நடிகர்கள் . சூது :
419. சாளிகை : பணப்பை.
----------

    தாரணிகொண் டாள்வோர் தடமகுடம் தம்பிக்கப்
    பேரணிகொண் டாள் ஆசைப் போய்கொண்டேன் - ஆரணங்கு 422

    சக்கணிநின் றாடச் சபையிலே ஓடி அந்த
    மைக்கணியை முத்தாட வாஞ்சித்தேன் - இக்கனையாள் 423

    செய்லாகு வித்தையினால் செம்பொனுடல்ஓமென் என்
    கய்லாகில் ஏந்தக் கருத்தானேன் - மய்வாளும் 424

    கய்வாளும் என்னை வெட்டக் கள்ளி ஒரு கூத்துவிதம்
    செய்தாள் அம் மான்வலையிற் சிக்கினேன் - தொய்யாமல் 425

    தேசிகத்தில் ஓர் நடனம் செய்தாள் கடையிலுள்ள
    கோசிகப் பொன் ஆடையெல்லாம் கொள்ளை கொண்டாள் - பேசும் 426

    நயமங் கலப்பெண் நடம்பல செய்தாள்
    செயமங் களம் பாடித் தீர்த்தாள் - மயல் கொண்ட 427
-----------
422 . தாரணி : உலகம். தட மகுடம் : பெருமுடி. தம்பிக்க : அசைவற்று மெய்ம்மறந்திருக்க.
423. மைக்கணியை : மை தீட்டிய கண்ணாளை . முத் தாட: முத்தம் இட. வாஞ்சித்தேன் : விரும்பினேன். இக்கு அனையாள் : கரும்பு போன்றவள்.
424. செம்பொன் உடல் : அவள் செவ்விய பொன் மேனியை. ஓம் என : ஆகா என்று இரைந்து கொண்டு. கைலாகில்: கைத் தாங்கலில். மய்வாள் : மை அணிந்த கண் ஆகிய வாள்.
425. கயவாள் . அவள் கையில் ஏந்தி ஆடியவாள். தொய்யாமல் : தளராமல்.
426 . தேசிகம்: நடனவகைகளுள் ஒன்று. கோசி கம்: பட்டு. கோசிகப் பொன் ஆடை : பட்டினால் நெய்த தங்கச் சரிகையாடை.
427 . தீர்த்தாள் : முடித்தாள். மயல்: மயக்கம்.
-----------

    பேதையேன் தன்மனதும் பெண்களும் பின் னே தொடர
    மாது மனைக்கே வழிக்கொண்டாள் - காதில் விசைப் 428

    பந்தடிபோற் துள்ளிப் பரதவித்தேன் பாங்கனை அச்
    சந்தடியிற் கைையவிட்டுத் தப்பினேன் - மந்த்ரசெப் 429

    சுற்றம் எனும் தளையும் தோழனெனும் பாகனும் நல்
    புத்தி எனும் அங்குசமும் போக்கியே - மத்தமிஞ்சப் 430

    பெண் ஆனையைத் தொடரும் பேரானை யேபோலப்
    பண்ணார் மொழியாள் பின் பற்றினேன் - வண்ணமலர்க் 431

    காலில் இட்ட தண்டை கலின்கலின் என் றோலம் இட
    மேலில் இட்ட பூஷணப்பொன் மின்எறிப்ப - வாலிபர்கண்டு 432

    அண்ணாந்த கொங்கைக்கு அறிவைக் கொடுத்திலையிற்
    சுண்ணாம்பி டாமல் சுருட்டியுண்ண - கண் இரண்டும் 433
------------
428 . பேதையேன் தன்மனது : புத்தி தடுமாறிய என் மனம். பெண்கள் : தோழிப்பெண்கள்.
429. பாங்கன் : புத்தி சொல்லிக் கூடவந்த ஞானி யையன். சந்தடியில்: கூட்டத்திற்குள்ளே .
430. சுற்றம் எனும் தளை : உறவு என்ற பிணைப்பு. தோழன் எனும் பாகன்: நன்பன் ஆகிய யானைப்பாகன். புத்தி எனும் அங்குசம் : அறிவு என்னும், யானையை அடக்கும் அங்குசம் . " உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்" என்றார் புலவர். 'உரன்' அறிவு. தோட்டி' அங்குசம். மத்தம்: மதம்.
431. பேரானை : பெரிய யானை. பண் : இசை.
432 . கலின் கலின். ஒலிக்குறிப்பு. மின் எறிப்பு: டால் அடிக்க.
433. அண்ணாந்த: மேல் நோக்கிய அறிவைக் கொடுத்து : அறிவைப் பறிகொடுத்து. இலை: வெற்றிலை. மதனாபிஷேகம் நடனம் முடிந்து மீனாட்சி கோவிலில் நின்றும் தன்வீடு செல்கிறாள, வீதி வழியாக அவளைக் கண்டு மெய்ம்மறந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த ஒரு சிலர், சுண்ணாம்பு தடவ மறந்து வெறும் வெற்றிலை
யைச் சுருட்டி அப்படியே விழுங்குகிறார்.
---------

    மங்கைமேல் ஆக வருவாரும் போவாரும் தங்களிலே
    தங்கள் தலைமோத- துங்கமத 434

    அத்தியின் மேல் செல்லும் அரசர் இவள் கொங்கைகளும்
    மத்தகமும் நோக்கி மதிமருள் - தத்துபரி 435

    கால்மீறி னாற்போற் கலினம் நெகிழவிட்டு
    மால்மீறி னார்எதிரே மாறிவிழ - வேல்விழியாள் 436

    சந்தன கும்ப தனங்கள் சுமந்திடை
    நைந்தனம் என்று நடுங்கிட - வந்து தன் 437

    பொன்முகப்பு மாளிகையில் போய்ப் புகுந்தாள் நின்றேன் நான்
    முன்முகப்பு வாயிலிலோர் மூங்கைபோல் - என் முன் ஒரு 438

    செக்கு வருவது போல் சீமாட்டி கைம்மருந்துச்
    சொக்கி என்னும் பாங்கிவந்து தோன்றினாள் - மைக்குழலாள் 439
--------------
434. வீதியிற் செல்வோர் அவளையே பார்த்துக் கொண்டு ஒருவரோடொருவர் மோதி வீழ்கின்றார்.
435. அத்தி: யானை. மத்தகம் : கொங்கையை நிகர்த்த யானை மஸ்தகம். மதிமருள்: புத்தி தடுமாற. தத்து பரி : தாவிச்செல்லும் குதிரை .
436. கால் மீறுதல் : கால் தவறிவிடுதல். கலினம் : கடிவாளம் . நெகிழ : தளர்ந்துவிட. மால் : மயக்கம்.
437 . நைந்தனம்: தேய்ந்து விட்டோம்.
438. மூங்கை : ஊமை . சங்க. சீமாட்டி : மதனாபிஷேகம். பாங்கி: தோழி. மைக் குழலாள்: மேகம் போன்ற கூந்தலுடைய அந்தக் கைமருந்துச் சொக்கி.
----------

    18. தோழிகள் சூழ்ச்சி (440 -467 )

    ஆர்என்றாள் உங்களூர் யாதென்றாள் ஏதுங்கள்
    பேர் என்றாள் அண்டியண்டிப் பேச்சிட்டாள் - காரிகையே! 440

    சீரங்கம் எங்கள் பதி சிங்கையர் என் தகப்பன்
    சாரங்க பாணியையர் தம்பி நான் - நாரணையர் 441

    சுப்பையரென் மாமனார் சோமாசிப் பட்டர்பெரும
    அப்பையங்கார் தாம் எங்கள் அத்தம்பி - செப்பு கவி 442

    அட்டாவதானி என்பேர் ஆயிழை என் மனைவி
    மட்டார் குழலி மனவெறுப்பால் - விட்டேகி 443

    நாடிவந்தேன் உங்கள் பதி நம்பர் சொக்க லிங்கர் முன்னின்று
    ஆடிவந்த பெண்ணரசி யார் என்றேன் - ஆடவரே! 444

    மாணிக்க மாலைபெற்ற வச்சிரத்தைக் கும்பகுடக்
    காணிக்கு வாய்த்த கன தனத்தை - ஆணிமுத்தை 445

    விண்இச்சை கொள்ள வந்த மேனகையைப்பெண்ணுக்குப்
    பெண் இச்சை கொள்ள வந்த பெண் அமுதை - எண்ணரிய 446
------
440. அண்டி அண்டி : நெருங்கி நெருங்கி. "ஏது பதி? ஏது பெயர்? யாவர் உறவு?" என்ற கவிச் சக்கிர வர்த்தி வாக்கை இக் கண்ணி ஒக்கும்.
441. பதி : ஊர். சசங. மட்டு : தேன்.
445. காணி: உரிமை. காணிக்கு வாய்த்த கும்ப குடக் கன தனத்தை என அன்வயப் படுத்துக.
446. விண்: விண்ணவர். 'பெண்ணுக்குப் பெண் இச்சை கொள்ள வந்த பெண் அமுது' என்பது, "கண் பிற பொருளிற் செல்லா கருத்தெனின் அஃதே கண்ட பெண்பிறந்தேனுக் கென்றால் என்படும் பிறருக்கு" என்று சீதையைக் கண்டு சொல்லும் சூர்ப்பணகையின் கூற்றை நினைப்பூட்டுகிறது.
----------

    சாத்ரவித கோக்கோக சாரத்தை மேல்விருது
    பாத்திரசி ரோமணியைப் பைங்கிளியை - வாய்த்தமட 447

    மானை மரகதத்தை மன்மதகு டோரியைச்செந்
    தேனை மதனாபி ஷேகத்தை - நானிலத்தோர் 448

    எல்லாம் அறிந்திருக்க யாமறியோம் என்ற விதம்
    சொல்லீர் என்றாள் மயலைத் தூண்டினாள் - மெல்லி நல்லாய்! 449

    இன்றைக் கெவர் வருவார் ஏந்திழைக்கென் றேன் அந்தப்
    குன்றைப் பொருத்தமுலைக் கொம்பனையாள் - அன்றதற்குப் 450

    பட்டணத்துப் பாரபத்யம் பாஸ்கரைய னோ? கோட்டைக்
    கட்டளையா னோ? பாயக் கட்டுபல - பட்டடையிற் 451

    சோலையப்ப பிள்ளையோ? சுற்று தடைகட்டு
    மாலையப்ப பிள்ளையோ? வாசல்வழிச் சாலை அஞ்சற் 452

    காரமணியம் கனக சபாபதியோ?
    பாரணிலா யமமணியம் பங்காறோ? - சீர் அணவு 453

    ஆனை மணியம் அரசப்ப னோ? தர்ம
    தான மணியம் சதாசிவனோ? - மேன்மை தரும் 454

    கோயில் துறைமணியம் கும்பலிங்கப் பிள்ளையோ?
    ஆயத் துறைமணியம் ஆண்டியோ - ஓயவறுகா 455

    மோட்ட மணியம் முருகப்பா னோ கீரைத்
    தோட்ட மணியம்நெட்டைச் சொக்கனோ? - மாட்டுவரிக் 456

    காரனோ? பாசிவரிக் காரனோ? பீரங்கிக்
    காரனோ? பொற்கொடிமேற் காதலொடும் - ஓர் இரவில் 457
--------------
447. கோக்கோக சாரம் : கோக்கோக நூலின்ரசம்.
449. எல்லாம் அறிந்திருக்க : உலகப் பிரசித்த மாக இருக்க .
450. குன்றைப் பொருத: மலையோடு போர் தொடுத்த .
-----------

    எத்தனையோ பேர் இங்கே எத்தனையோ பொன் கொடுவந்து
    எத்தனையோ சொல்வார்கள் எத்துக்கள் - உத்தமி தான் 458

    அங்கவரி லே ஒருவர்க் கானாலும் வாய்நேராள்
    சிங்கம் சிறுதேரை தின்னுமோ? - உங்களைப்போல் 459

    நற்குணமுள் ளார் தமையே நாடுவாள் வேந்தர் தரும்
    பொற்குவைக்கும் உள்ளம் பொருந்தாள் காண்! - சொற்புலமை 460

    வீறுடைய ராகிய நல் வேதியரே! என்று சில
    கூறி அதன் பின்னே அக் கோதை அங்கே - தூறுதலைத் 461

    தூது சவுந்திக்குச் சொன்னாள் பயிலாக
    ஏதுக் கழைத்தீர் என வந்தாள் - மாதுக்கின்று 462

    ஆர் வருவார் சொல் என்றேன் ஆருமில்லைப் பொன் கொடுத்து
    நீர்வருவீர் ஆகில் இங்கே நிற்பானேன்? - வாருமென்றாள் 463

    முத்தனைய முத்துநகை மோகவல்லிக்குப் பணயம்
    எத்தனை பொன் சொல் என் றியம்பினேன் - அத்தைக்கு 464

    முன் நூறு பொன்மகட்கு முந்நூறு பொன் எனக்குப்
    பின் நூறு பொன்தோழிப் பெண்களுக்கு - சொன்னது 465

    ஒரு நூறு பொன்னும் ஒரு முடிப்பாய்த் தந்து
    வருவீரேல் வாருமென்றாள் மங்கை - துரைமதுரை 466
--------
459. வாய் நேராள் : உடன்பட மாட்டாள்.
460. பொற் குவை: தங்கக் குப்பை.
461. வீறு : சிறப்பு. வேதியரே : மறை பயின்ற வரே. தூறுதலை : பரட்டைத்தலை.
464 . பணயம் : பணம்.
465. முன் நூறு பொன் : முதலிலே நூறு பொன். மகட்கு முந்நூறு : மதனாபிஷேகத்துக்கு மூன்று நூறு.
466. மங்கை: தூது சவுந்தி என்னும் தோழி.
-------------

    வெள்ளைப் புது வெட்டு மின்னலாய் அப்படியே
    அள்ளிக் கொடுத்தங் கனுப்பினேன் - உள்ளிருந்து 467

    19. பணிப்பெண்கள் வழிபாடு (468 -472 )

    பைந்தார் அணிகூந்தல் பைங்கனிவாய்ப் பெண்கள் சிலர்
    வந்தார் தொழுதார் வரச்சொன்னார் - சந்தனத்தி 468

    கைவிளக்குக் கொண்டுவந்தாள் கால்விளக்க நல்ல தண்ணீர்
    தெய்விகொண்டு வந்தாள் பொற் செம்பிலே - மைவிழியாள் 469

    அங்கி பிடித்தாள் அடைப்பை வரிசைசின்னத்
    தங்கி பிடித்தாள் தனிப்படிக்கம் - செங்கலவை 470

    பூசினாள் பூச்சி வந்து பூமுடித்தாள் பூவிமெல்ல
    வீசினாள் பொன்கவரி வெண்கவரி - ராசி 471

    கயிலாகு தந்தாள் என் கால்நோகும் என்று
    வெயிலாள்பாவாடை விரித்தாள் - ஒயிலாகப் 472

    20. மனைக்குட் சேறல் (473 -475 )

    பம்புபெரு போனுட் பகட்டறியாப் பாய்புலிபோல்
    அம்பொன் நெடுமனைக்குள் யான் சென்றேன் - செம்பவளப் 473
--------
467 . வெள்ளைப் புது வெட்டு மின்னல் : கண்ணைப் பறிக்கும் வெண்மையான புது நாணயங்கள்.
468. தார் : மாலை. சசுக. கால் விளக்க: கால் கழுவ.
470 . அடைப்பை: வெற்றிலைப் பை. கலவை : சந்த னம்.
472. கைலாகு தரல் : கை கொடுத்தல், பாவா டை விரித்தல்: நடப்பதற்குத் துயில் பரப்புதல்.
468 முதல் 472 வரை. சந்தனத்தி, தெய்வி, அங்கி, சின்னத் தங்கி, பூச்சி, பூவி, பொன் கவரி, ராசி, வெயிலாள் ஆகிய பெயர்கள் பூண்ட பணிப் பெண்கள்.
------------

    போதிகைக்கால் ஏந்து சிங்கப் பொங்கல் தங் கச்சவுக்கை
    மீதுரத்னக் கம்பள விசாலத்தில் - மோதுகரிக் 474

    கோட்டாரக் கொங்கையார் கொண்டுவந்து திண்டருகு
    போட்டார் துரைப்பாங்கு போலிருந்தேன் - வாள் தடங்கண் 475

    21. மதனாபிஷேகத்தின் வரவேற்பு (476 -493 )

    வட்டமிட்ட கொங்கை மதனாபிஷேகமும் நான்
    கட்டிவிட்ட பொன்முடிப்பைக் கைக்கொண்டே - இட்ட 476

    தருக்குடையேன் தன்னை வந்து சந்திக்க ரண்டு
    பருக்கும் எலுமிச்சம் பழங்கள் - மருக்கொழுந்துச் 477

    செண்டுகொண்டு தன்னிடத்திற் சென்றிருந்த
    என்மனதும் கொண்டு கொண்டு வந்து நின்று கும்பிட்டாள் - ஒண்டொடியாள்

    காதலரைச் சேர்ந்தறியாக் கன்னிபோல் சூதறியாப்
    பேதை போற் கூசிமெள்ளப் பேசினாள் - 'மாதவரே! 479
-----------
473, 474 . பம்பு: நெருங்கிய பெரு: பெரிய. போன் : மலைக்குகை. பகட்டு : வஞ்சனை. பாய் புலி: பாயும் புலி. செம்பவளப் போதிகை: சிவந்த பவளத் தால் ஆக்கப்பட்ட போதிகை. போதிகை என்பது தூணின் தலையிலே பொருத்தப்படும் ஒரு கட்டை. பொங் கல்: பொலிவு மிகுந்த சவுக்கை : சவுக்கமாகக் கட்டப் பட்ட ஓர் கூடம். மோது கரி : போர் யானை.
475. கோட்டாரக் கொங்கையார் : தந்தம் போன்ற மாலை அணிந்த ஸ்தனத்தையுடையார். அருகு : பக்கத் தில். துரைப் பாங்கு போல் : துரை மாதிரியாக, ஆடம்பா மாக.
479 . கட்டி விட்ட : கட்டி அனுப்பிய
-------------

    மண்டபத்தில் ஆடினேன் வந்து நின்றீர் உம்மை நான்
    கண்டுமய லாகி என்பக் கத்துவோர் - ஒண்தொடியை 480

    மெள்ளப்போய்க் கூட்டிவா வீட்டிலென்றேன் மாரீசக்
    கள்ளி குழப்பிக் கழப்பிவிட்டாள் -- தெள்ளு தமிழ்ப் 481

    பாட்டிலே வல்லீர்! என் பங்கிற் குலதெய்வம்
    வீட்டிலுமைக் கூட்டிவந்து விட்டதே - வீட்டில் வரத் 482

    தாங்கலேன் வாசல் தலைக்கடையில் நிற்பானேன்?
    பாங்கியேன்? வந்தாற் பணயம் ஏன்? - நீங்கள் நல்ல 483

    பூவைக்கண் டேமுடித்துப் போவோம் என் றெண்ணினீர்!
    மேவிச்சென் றால் நான் விடமாட்டேன்! - தேவரீர்! 484

    சித்தமெங்கள் பாக்ய' மென்று செப்பினாள் சாலவித்தை
    அத்தனையும் மெய் என்றே யான் இருந்தேன் - கைத்தலத்தால் 485

    மின் இருக்கும் நுண் இடையாள் மென்கமலக் கைபிடித்து
    முன் இருத்திக் கொண்டு முகம் பார்த்தேன் - கின்னரத்தைக் 486

    கூட்டினாள் ஏந்து முலைக் கோட்டினாள் தந்திரியை
    மீட்டினாள் சங்கீத வெல்லச்சாறு - ஊட்டினாள் 487
---------------
480. மயலாகி: மயங்கி. சஅக. வீட்டில்: வீட்டிற்கு.
483. தாங்கல் : தடை. பணயம் ஏன்? பணம் இதெல்லாம் ஏதுக்கு.
484. மேவிச் சென்றால்: அணைந்து விட்டுப் போவ தானால்.
485. கைத்தலத்தால் : என் கையினால் .
486. மென் கமலக் கை பிடித்து : மெல்லிய பூப் போலும் அவள் கையைப் பிடித்து கின்னரம்: யாழ்.
478 . தந்திரி : யாழின் நரம்பு . மீட்டினாள் : தடவி னாள். வெல்லச்சாறு : வெல்லத்தில் பிழிந்தெடுத்த ரசம் : --------------

    சொக்கேசர் மேற்கவியும் சொக்கேசர் தம்பாதி
    மிக்கான அங்கயற்கண் மேற்கவியும் - தக்கபுகழ்ப் 488

    பாண்டித் துரைமீதிற் பாட்டும் படித்ததற்பின்
    ஆண்ட நிலைக்கோட்டை யாதிபன்மேல் - தூண்டுபுகழ்ச் 489

    சிங்காசனாதிபதி சிந்தமகூ ளேந்த்ரனருள்
    எங்கோன் பெரியநா கேந்திரன் மேல் - மங்கை சுகம் 490

    பதம் படித்தாள் வண்ணம் படித்தாள் என் காதுக்கு
    இதம் படைக்கும் தேன் போல் இனிக்க - விதம் படைக்கும் 491

    முற்கட்டும் பாகமும் சீர் மோனை களும் பொருளும்
    பிற்கட்டும் முன்முரணும் பின் முரணும் - நற்கட்டாம் 492

    சொற்கட்டும் கண்டுவிலை தொண்ணூறு பொன்பெறுமோர்
    கற்கட்டு மோதிரத்தைக் கையிலிட்டேன் - விற்பிடித்து 493

    22. மாமியாரின் முகமன் (494-514 )

    வாங்கினாற் போல வளைந்த வறட்டுடலும்
    தாங்கிவைத்த காலும் தடிக்கம்பும் - தேங்காய்க் 494

    குடுக்கை போல் வாயும் கொடுவாயும் சற்றே
    நடுக்கும் தலையும் நரையும் -பொடிக்கொக்கு 495
-------------
488. அங்கயற்கண்: மீனாட்சி .
489. பாண்டித்துரை : பாண்டி நாடாண்ட தலை வன்.
490. மங்கை : மதனாபிஷேகம். சகங. கற்கட்டு மோதிரம் : கல் இழைத்த மோதிரம்.
494. வாங்குதல் : வளைத்தல். வறட்டு உடல் : பசை யற்ற மேனி.
495. கொடுவாய் : வடியும் வாணீர். பொடிக் கொசுகு : சிறு கொசுகு.
--------------

    மொய்த்த கண்ணும் காற்று முட்டி முன்பறியப் பின்பறியக்
    குத்திருமல் போட்டலைக்கும் கோப்புமாய் - வித்துக்கு 496

    விட்ட சுரைக்காய் போல் விழுந்து முழங் காலதனைத்
    தொட்டமுலைத் தாய்க்கிழவி தோன்றினாள் - கிட்டவர 497

    நாணமுற்றாள் மாமி என்று நான் அறியத் தன் உடம்புக்
    கோணலுக்குள் ளே சற்றே கோணினாள் - தூண்ஒதுங்கி 498

    "வந்தீரோ! எங்கள் வரிசைத் துரையே! நீர்
    சந்தோஷமாக இங்கே தான்வரவே - இந்தமனை 499

    என்ன தவம் செய்ததோ என்பதை முன்பிறப்பில்
    என்ன தவம் செய்திருந்தாளோ? - கன்னிமுந்தா 500

    நாள் இரவு கண்டகனா நன்மையும் என் பேதைமணித்
    தோள் இடது பக்கம் துடித்ததுவும் - ஆள்வரத்தில் 501

    காகம் கதறியதும் கட்டைச்சி தும்மியதும்
    தோகைக் கொருகுறத்தி சொன்னதுவும் - யோகம் வரப் 502

    பல்லி நிமித்தம் பலகால் இயம்பியதும்
    சேர்க்கும் என்று நங்கையுடன் - சொல்லிவைத்தேன் 503

    அப்படியே வந்தீர் என் ஆசை மகள் குணத்தை
    இப்படியென் றே அறியீர் இன்னமு நீர் - பொய்ப் புரட்டுச் 504
------------
498. தூண் ஒதுங்கி: தூணின் புறத்தே மறைந்து
நின்று .
499. இந்த மனை : இவ் வீடு.
500. கன்னி : என் மகளாகிய கன்னி.
501. நன்மை வருவதற்கு அறியும் குறியாகப் பெண்களுக்கு இடது தோள் துடிக்கும் என்பர்.
503. பலகால் : பலமுறை .
504. இப்படி : இன்ன விதம்.
---------------

    சாலவித்தைப் பெண்கள் தடத்தில் மிதித்தறியாள்
    மாலவித்தைப் பெண்கள் மனைக்கேகாள் - நாலு 505

    பரத்தையரைப் போலே பணங்காசு தேடும்
    கருத்துண்டோ காயக்கம் காணேன் - ஒருத்தர்கிட்ட 506

    மானாளை விட்டேனோ? மாயக் கிரந்தி வந்த
    தானால் ஒருகாசுக் காகுமோ? - நான்ஈன்ற 507

    மாதுக்கு ராஜ வளர்ச்சியே அல்லாமல்
    ஏதுமறி யாள்சிறியாள் இன்னங்காண்! - பேதைக்குக் 508

    கொஞ்சவயதானாலும் கூடி உமைக்கலந்து
    கொஞ்ச வயதுகாண் கொற்றவரே!- வஞ்சிநல்லாள் 509

    தன்மனதுக் கேற்கச் சவதரித்தாற் பொன்கோடி
    மன்மதன் தந் தாலுமினி வாங்காள்காண்! - என்மகட்குப் 510

    பாலிலே மெள்ளப் பழம் நழுவி வீழந்தவிதம்
    போல வந்து வாய்த்தீர் புலவரே! - நீலி ஒரு 511

    பேய்ப்பிள்ளை பெற்றேன் பிடிப்புவிடா மற்கொண்ட
    மாப்பிளையும் பெண்ணுமாய் வாழ்ந்திருங்கள்! மாப்பிளைக்கு 512
----------
505. தடத்தில் : அடி பட்ட இடத்தில். மால வித் தைப் பெண்கள் : மயக்குக் காரிகள்
506. பரத்தை : தேவடியாள். காயக்கம்: மோக மயக்கம்.
509. கொஞ்ச வயது : சிறுவயது. கொஞ்ச வயது காண் : கொஞ்சுவதற்குப் பொருத்தமான வயதே.
510. சவதரித்தால் : ஒத்து நடந்தால்.
512. பிடிப்பு விடாமல் கட்டு நீங்காமல் . "கவவுக் கை ஞெகிழாமல்" என்றார் இளங்கோ அடிகள். சேர்த் தியகை ஞெகிழாமல் சேர்ந்து சேர்ந்து " என்றுரைத்தார் பாரதம் பாடிய வில்லிபுத்தூரார். "வளி: இடை போழப் படாஅ முயக்கு." என்று இயம்பினார் புலவர். வளி : காற்று. காற்றுக்குக்கூட இடையே புகுந்து பிரிக்க முடியாத சேர்க்கை
-----------

    நித்திரைக்கு மெத்த நெடுநேரம் ஆகுதுபோ
    தத்தைமொழி யாய்!" என்று சன்னை சொல்லி - அத்தையரும் 513

    போயினார் பாங்கியரும் போயினார் செம்பவள
    வாயினாள் உள்வீட்டில் வாருமென்றாள் - சேயிழையாள் 514

    23. படுக்கை அறை அலங்காரம் (515 -527 )

    முன் சென்றாள் பின் சென்றேன் முன்முகப்பு வாசலிலோர்
    பொன்கொண் டிழைத் தரத்னப் போதிகையோ? - மின்கொண்ட 515

    சித்ரக் கொடுங்கையோ? செம்பொன் நிலை யோகதவிற்
    பத்தி இட்ட கண்ணாடிப் பட்டமோ?- கத்திரிப்பு 516

    வேலை நிரைத்த புது மேற்கட்டி யோ? சிறந்த
    மாலை நிறைத்த வரிசையோ? - கோலவரக் 517

    காலிட்ட தூங்குமஞ்சக் காந்தியோ? பட்டாடை
    மேலிட்ட மல்லிகைப்பூ மெத்தையோ? - ஏல்வைகண்டு 518
----------------
513. சன்னை சொல்லி : சாடையாகச் சொல்லி.
514. உள் வீடு! உள் அறை. சேய் இழை: செவ் விய அணி பூட்டிய மதனாபிஷேகம்.
515. பொன் கொண்டு இழைத்த ரத்னப் போதி கை : பொன்னினால் செய்து நவமணிகள் பாதிக்கப்பெற்ற தூணின் சிகரங்கள்.
516. கொடுங்கை : வளைந்த தொங்கல்.
517, 518 . வசரக் காலிட்ட தூங்கு மஞ்சக் காந்தி: வைரக்கால் வைத்து தொங்குகின்ற ஊசலின்ஒளி. பட்டாடை மேல் இட்ட மல்லிகைப்பூ மெத்தை : மல்லிகை மலர் பரப்பப்பெற்ற வில்வெட்டு மெத்தை. ஏல்வை : சமயம்.
--------------

    தாங்கிய தீ வட்டிக்குத் தானே தயிலம் விடப்
    பாங்கில்வைத்த சூத்திரப்பொற் பாவையோ? - தூங்குமஞ்சப் 519

    பக்கத்தில் வெள்ளிப் படிக்கமோ பள்ளியறைத்
    திக்குக்குத் திக்குமதிற் சித்திரத்தில் - மைக்கருங்கண் 520

    பெண் இரதி போல் ஆறு பேர்க்கொருவ னேலீலை
    பண்ண எழுதிவைத்த பாவனையோ? - தண் அளியோன் 521

    மேற்கொண் டொருமடந்தை மிக்காம லீலைசெயக்
    கார்க்கொண்டை பின்சரியக் கால் எழுப்பி - போர்க்கலவி 522

    ஆட்டத்திற் சூதகமும் ஆக எழு திக்கழுவில்
    போட்ட விதம் போலிருந்த பொங்கமோ? வாட்டமுற 523

    மோடிவைத்த பெண்கமல முன்கைபிடித்துக்கடைக்கண்
    நாடிவைத்தாள் என்று நயம் பேசச் - சூடகக்கை 524

    தன்னைக் குவித்துத் தலைவன் தலையில் அந்த
    மின்னளையாள் தாடனஞ்செய் விந்தையோ? - பின் ஒரு பால் 525

    அம்பனைய கண்ணியும் ஓர் ஆளும் தலைமாறிச்
    சும்பனங்கள் செய்யும் தொழில்விதமோ? - சம்பரமங்கள் 526
--------------
519. தயிலம் : நெய். பாங்கு: பக்கம். சூத்திரப் பொற்பாவை: தங்கத்தால் செய்த விசைப் பொம்மை.
520. திக்குக்குத் திக்கு: எல்லாப் பக்கமும். மதில் சித்திரத்தில் சுவரில் எழுதப்பட்ட ஓவியத்தில்.
521. பாவனை : மாதிரி.
522. கார்க்கொண்டை : முகில் அனைய கூந்தல்.
523. பொங்கம்: மகிழ்ச்சி.
524. மோடி : மகுடி. சூடகம்: வளையல்.
525. தாடனம் செய்தல் : அடித்தல்.
526. சம்ப்ரமங்கள்: சிறப்புகள்.
-----------

    சொல்ல முடியாது தூங்குமஞ்சத் தேறினேன்
    மெல்ல விழும் கொப்பத்தில் வேழம் போல் - நல்ல தங்கத் 527

    24. மாமியின் சீர்வரிசை (528 - 532)

    தட்டிலே பாக்கு வெள்ளித் தட்டிலே வெள்ளிலைபொற்
    பெட்டியிலே மல்லிகைப்பூ பிச்சிப்பூ - வெட்டிவேர் 528

    தந்தச் சிமிழிற் சவாதுகுணாப் பட்டைதனில்
    கெந்தப் பொடி பவளக் கிண்ணத்திற்கு சந்தனங்கள் 529

    கூறுங் கிளிமொழியைக் கூடின் விடாயாறித்
    தேறும் பொழுதிலுண்ணச் சிற்றுண்டி - வேறுசில 530

    பீங்கானிற் பன்னீர் பிடி செம்பி லேவெந்நீர்
    தேங்காய் முலையார் சிலபேர் கொண்டு - ஆங்கு வந்து 531

    மாமிவர விட்ட வரிசை என்று வைத்து நின்றார்
    காமி அவர்களைக்கண் காட்டினாள் - சேமமணி 532

    25. படுக்கை சேர்ந்தமை (533 -539 )

    வாசற் கதவடைத்தாள் மங்கைநல்லார் போனதற்பின்
    பேசிக் குணாலமிட்டுப் பேதை போற் - கூசி 533
---------
527. கொப்பம் : யானை பிடிக்க வெட்டும் குழி. வேழம் : யானை.
528 . வெள்ளிலை: வெற்றிலை.
529. பவளக் கிண்ணம்: பவளத்தைத் தோண்டிச் செய்யப்பட்ட கிண்ணம்.
530. விடாய்: களைப்பு. சிற்றுண்டி : பலகார வகை ருங்க. பிடி செம்பு: கைப்பிடி வைத்த செம்பு.
532 . காமி : மதனாபிஷேகம். சேமம் : காப்பாக அமைந்த .
533. மங்கை நல்லார் போனதற்பின் வாசற்கதவு அடைத்தாள் என மாற்றிப் பொருள் கொள்க. குணாலம் இட்டு: ஆனந்தக் கூத்து ஆடி.
-------------

    மதிவதனம் கோட்டி வளை திருத்தி நின்றாள்
    புதிய மணவறைப்பெண் போலே - மதனாபி 534

    ஷேகமே! என் பிராண ஸ்நேகியே! தாங்காதென்
    மோகமே! என்றவளை முந்திபிடித்து - ஏக 535

    சயனத் திருத்திமுகம் தன்னில் முகம் சேர்த்து
    நயனத்தில் வைத்தேன் நயனம் - தயவுவரப் 536

    பேசிமலர் மல்லிகை வேர் பிச்சி முடித்துக் கலவை
    பூசிச்சவ் வாது புனுகணிந்து - நேசம் 537

    பிடிக்கக் கொடுத்தாள் பிளவுதாம் பூலம்
    மடித்துக் கொடுத்தாள் தன் வாயாற் - கடித்துக் 538

    கொடுத்தாள் சில சுருளைக் கொஞ்சிமடி மீதிற்
    படுத்தாள் புளகம் படைத்தேன் - எடுத்தணைத்துக் 539

    26. போகம் நுகர்தல் (540 -579 )

    கொங்கை முகம் பிடித்துக் கொங்கைவாய்த் தேன் குடித்துச்
    செங்கை கொடு நெகிழ்த்தேன் சேலைதனை - அங்கவள் என் 540

    சோமன் உரிந்தாள் துடைமேல் துடை போட்டாள்
    காமம் ஒழுகவிட்டாள் காமியத்தை - காமக் 541

    கலைமுறையே ஆலிங்கனங்கள் ஐந்து செய்தோர்
    முலை சுவைத்து மற்றோர் முலையை - மெலநெருடிக் 542
--------------
534 . மதி வதனம் கோட்டி : சந்திரன் அனைய முகத்தை வளைத்து வளை திருத்தி : கை வளையை ஒழுங்கு செய்வது போல் தடவி.
536. நயனம் : கண்.
539. புளகம்: மெய்ச் சிலிர்ப்பு.
541 சோமன்: வேட்டி.
542. ஆலிங்கனங்கள்: தழுவுதல் வகை.
------------------

    கைமூலம் உண்டு கவுள் மாங்கனி சுவைத்து
    மைவிழியில் நாவைவைத்து வாங்கிநகம் - பையத் 543

    தலை அழுத்தி உந்தி தனில் மகரம் கீறி
    கலவைக் கழுத்தணைத்துக் கட்டி - நிலைமைபெறச் 544

    சாதி குணங்குறிகள் தத்துவங்கள் தேர்ந்து சுக
    மாது பருவ வகைகண்டு - சோதித்து 545

    அறிந்து பதினைந் தமுதநிலை ஆராய்ந்து
    இறங்குமிடம் ஏறு மிடம்கண்டு - அறிந்துவிடத் 546

    தானம் அகற்றி உள்ளந் தாளை வருடி இன்ப
    மான விரல் சுவைத்துள் அந்தரங்கத் - தேனிறால் 547

    மெல்ல மெல்ல நீவி விரல் கொண்டு சுற்றி அந்த
    வல்லிமேல் என்கண் வரிசிலையிற் - சொல்லும் 548

    அகார உகார எகார ஐகார
    இகாரக் கணைகளைவைத் தெய்து - மகாசுகநீர் 549

    பாய்ந்தொழுகச் சேர்ந்தணையிற் பஞ்சகர ணத்தின் மேல்
    லாந்த கரணமுத லாங்கரணம் - வாய்ந்தமகிழ் 550

    அந்தக் கரணம் அவட்கும் எனக்கும் ஒன்றாய்
    முந்தக் கலவிப்போர் மூளவே - சந்தனப் பொற் 551
--------------
543. கை மூலம் : உள்ளங்கை . கவுள் மாங்கனி : கன்னமாகிய மாம்பழ அலகு.
544. உந்தி : கொப்பூழ். மகரம் கீறி : மகரம் போலத் தடவி.
545. தேர்ந்து : ஆராய்ந்து.
547 . அந்தரங்கத் தேன் இறால்: ரகசியமான தேன் ராட்டு.
548. நீவி : தடவி.
550. அணை : படுக்கை .
--------------

    குங்கும கும்பகு டங்களை வென்றத
    னங்கள்பு யங்கள் த தும்பிஞெ - முங்கிட 552

    மங்கை குறங்கென் மருங்கில் நெருங்க என்
    அங்கை நகங்கள் அழுந்தம யங்கி 553

    அணைந்து குழைந்து மெய் அன்றில் இரண்டு
    பிணைந்த விதங்கள் பிணைந்து - மணங்கமழ் 554

    ஆகமும் ஆகமும் ஆவியும் ஆவியும்
    மோகமும் மோகமும் மூரலும் - ஆகவோர் 555

    எட்டுடன் எட்டை இரட்டிசெய் தத்தொகை
    ரட்டி செய் திட்ட வகைத்தொழில் - இட்டமுடன் 556

    கண்ணாடியில் ரதியும் காமனும்கற் கின்றதெனக்
    கண்ணாடியில் ஒருபால் காண்பிக்கப் - பெண்ணரசி 557

    தண்டரளப் பூண்மார்பு தாங்கி உயர்ரதியின்
    மண்டலம் போல் முன் இருத்தி வார்குழல்மேல் - வண்டெழுந்து 558
------------
552, ததும்பி : மலர்ந்து. ஞெமுங்குதல் : அழுந்து தல், குங்கும கும்ப குடங்களை வென்ற தனங்கள் புயங் கள் ததும்பி ஞெமுங்கிட எனப் பதம் பிரிக்க.
553. மங்கை குறங்கு: அவள் துடை. என் மருங்கு: எனது இடுப்பு.
554. பிணைந்து : பின்னி.
555. ஆகம்: உடல். ஆவி : உயிர். மோகம்: ஆசை. மூரல் : புன்முறுவல்.
556. எட்டுடன் எட்டு : பதினாறு. அதனை இரட்டி செய்தால், முப்பத்திரண்டு. அத் தொகையை இரட்டித் தால் அறுபத்து நான்கு. அறுபத்து நான்கு வகை யான கலவித் தொழில்.
558. தண் தரளப் பூண் : குளிர்ந்த முத்துமாலை.
----------------------

    சங்கீதம் பாடத் தனங்கள் தாளம் போடச்
    செங்கனிவாய்மென்குதலை தீங்குழல்போற் - பொங்கு அமுத 559

    மங்கைநல்லாள் ஆயிரக்கால் மண்டபத்தில் ஆடினள் போல்

    அங்கும் ஒரு மன்மதக்கூத்தாடினாள் - பைங்குழலாள் 560

    கற்ற கழைக்கூத்தும் காட்டி வலசாரி
    சுற்றி இடசாரி சுற்றினாள் - மற்றுமந்தப் 561

    பைந்தொடிக்கைத் தானம் பளீல் பளீல் என்றுவிழக்
    கந்தமலர்க் கைவளை கலீல் என்னக் - கந்தரத்தில் 562

    ஒன்று குகுகு என ஒன்று குமுகுமென
    ஒன்றுகுங் குங்கென்ன ஓசை தரக் - குன்றாத 563

    புள்ஒலி எட் டுங்குமுறப் போதாக் குறைக்கு வித்தைக்
    கள்ளி நொடிப்பின் வகை கைநொடித்தாள் - மெள்ளமத 564

    பீடத்தில் வைத்தேன் பெருங்காம வாரிதியில்
    ஓடத்தில் வைத்த மயில் ஒப்பானாள் - கூடுகின்ற 565
-------------
559. மென்கு தலை : மெல்லிய மழலை மொழி : தீங்குழல் : இனிக்கும் குரல் ஓசை .
560 . மன்மதக் கூத்து : காம நாடகம்.
561. கழைக் கூத்து : மூங்கிலின் மேல் நின்று ஆடும் கூத்து . சாரி : பக்கம்.
562 . பளீர் கலீல் ஒலிக் குறிப்பு. கந்தரம். கழுத்து.
563. குன்றாத : குறையாத .
564. புள் ஒலி : பறவை ஓசை . கைநொடித் தல் : சுடக் கொடித்தல்.
565. பெரும் காமவாரிதி : காமப் பெருங்கடல்.
-------------

    மின் அனையாள் தன் அறிவும் மெய்யும் புதுமலரும்
    தன்நலனும் பொன்மருங்கும் தள்ளாடச் - சின்ன பின்னக் 566

    கோவை வடந்திருத்திக் கூந்தல் புறத்தொதுக்கி
    வேர்வை வழித்து மெள்ள வீசியே - காரிகையை 567

    முத்தமிட ஒட்டாத மூக்குத்தி யைக் கழற்றி
    முத்தமிட்டேன் மெச்சி எனை முத்தமிட்டாள் - முத்தையன் 568

    ஆமடா கொங்கைகளுக்கு ஜந்துகிரும் வைத்தக்கால்
    நோமடா மன்மதநல் நூல் படித்த - சாமி 569

    இறுகிறுகு சமயமென இனிய மொழி குழற இள
    முறுவலது வெளிறமுலை முனைபருக - மறுகுகொடி 570

    இடை துவள நுதல் நெளிய இலகும் இதழ் பதற இரு
    துடைகள்பட படெனவரு சுக்சலதி - கடலுடைத்துக் 571

    கொண்ட பெருக் கென்னக் குபீலென்று பாய அதில்
    ஒண்தொடியும் நானும் உருவிலியும் - தண் தரள 572
--------------
566. மெய் : உடம்பு. நலன் : அழகு. மருங்கு: இடை. சின்ன பின்னம்: அலங்கோலம்.
567 . கோவைவடம் திருத்தி : கோத்த மாலையை ஒழுங்குப்படுத்தி
568. முத்தம் இட ஒட்டாத மூக்குத்தியைக் கழற்றி : முத்தம் கொடுக்க விடாமல் தடுக்கும் மூக்குத்தி யைக் கழற்றி விட்டு. மெச்சி எனை : என்னைப் பாராட்டி .
569. ஐந்து உகிர் : ஐந்து நகங்கள்.
570: முனை : நுனி. பருக : சுவைக்க.
571. இதழ் பதற : உதடு துடிக்க . சுக சலதி : இன்பக் கடல்.
572 . ஒண்தொடி : மதனாபிஷேகம். நான் : அவ தானி. உருவிலி : மன்மதவேள்.
---------------

    மெத்தையும்கைந் நீச்சும் மிதப்புமா கச்சோப்
    நித்திரை போய்ச் சற்றே நினைவுவந்து - தத்திரமாய்ரு என் 573

    எனகலையைச் சுற்றி இடுக்கி முகங்கோட்டிப்
    பொன்கதவைத் தள்ளிப் புறப்பட்டாள் - முன்பு செலும் 574

    மோகினியின் செல்லும் முனிபோல யான் சென்றே
    போக நீர் பன்னீரால் போக்கியே - நாகரிக 575

    மங்கை யுடன் திரும்பி வந்தேன் மலரணையிற்
    செங்கை வளை நெறிந்து சிந்தியதும் - அங்கவிழ்ந்த 576

    மாலைஒரு பக்கம் வதங்கிக் கிடந்ததும்பொன்
    ஓலை ஒரு பக்கம் ஒதுங்கியதும் - கோலமுத்தம் 577

    சிந்தியதும் செம்பவளம் சிந்தியதும் கண்டே என்
    சிந்தை அறிவை அங்கே சிந்தினேன் - வந்திருந்த 578

    குன்றைப் பொருத்தமுலைக் கொஞ்சுமொழிக் கிஞ்சுகவாய்
    மன்றற் குழலி மடிசாய்ந்தேன் - என் தலையைச் 579

    27. கலவிப் புகழ்ச்சி (580 -587 )

    சுற்றிக் கிரணத் தொடிவளைக்கை யாற்றனது
    நெற்றிக்கொருபால்நெரித்திட்டாள் - கற்ற தொழில் 580

    காட்டினீர் ஐயா என் கண் திட்டி பட்டதின்பம்
    பூட்டினீர் கண்டேன் புருஷரையும் - நாட்டிலே 581
-----------------
573. சோப நித்திரை : அயர்ச்சித் தூக்கம். தத்திரம் : சாமர்த்தியம்.
574. என்கலை: என்னுடைய வேட்டி.
575. நாகரிகம். இங்குக் கண்ணோட்டம் என்னும் பொருளில் இல்லை; தற்கால நாகரிகமே.
576. குன்றைப் பொருத: மலையோடு போர் இட்ட. கிஞ்சுகம் : சிவப்பு. மன்றல் குழலி: மணம் தங்கிய கூந்த லாள. மடி சாய்ந்தேன் : மடியிலே படுத்தேன்.
-------------

    உங்களைப்போ லேகலவிக் குத்தரிக்க வல்லவர் யார்?
    இங்கு வரக் காணேன் இதுவரைக்கும் - தங்காத 582

    கோழிப்போ கக்காரர் கோட்டைவாசற்காரர்
    சூழத் திரிவார் தொடருவார் - பாழறுவார் 583

    தன்போகம் முந்தவிட்டுத் தப்புவரே அல்லாமல்
    என்போகம் முந்துவிப்பார் இல்லையே - அன்பரே! 584


    ஆணெல்லாம் உம்மைப்போல் ஆணாகு மோமுருங்கைத்
    தூணெல்லாம் நல்வயிரத் தூணாமோ?- வீணே 585

    முருக்கமலர் ஆர்தாம் முடிப்பார்? முடித்தால்
    மருக்கொழுந்தின் வாசம் வருமோ? - ஒருத்தர் முகம் 586

    பாரேன் இனி எனக்குப் பள்ளியறை மாப்பிளையும்
    நீரே சரி என்றாள் நேசம்போற் - காரானைக்கு 587

    28. புணர்ச்சி வருத்தம் போக்கல் (588 -590 )

    ஊட்டும் கவளம்போல் உண்ணக் கனிகொடுத்தாள்
    கோட்டும் குழலி குழம்புப்பால் - நாட்டம 588

    விரும்பக் கொடுத்தாளம் மின்னாள் அதரக்
    கரும்பைப்போ லேருசிக்கக் காணேன் - திரும்ப 589
-----------
584.. பாழறுவார்: பாழாகப் போவார்.
587 . நேசம் போல் : அன்புடையவள் போல. கார் ஆனைக்கு: கரிய யானைக்கு.
588 . கவளம்: உருண்டை . கோட்டும் குழலி சுருண்ட கூந்தலாம். குழம்புப்பால். பாசந்தி : நாட்டம் கண்.
589. அம் மின்னாள் அதரக் கரும்பு : அம்மின் அனையாளின் இதழ்க் கரும்பு ருசி. இதழ்ச்சுவைக்கு இணையாக வில்லை பாற்குழம்புச் சுவை. திரும்ப : மறுபடி யும்.
-------

    நடந்த கலவிசொல்ல நாலுநாட் செல்லும்
    விடிந்து தயம் எய்தினான் வெய்யோன் - மடந்தைநல்லாள் 590

    29. விடிந்தபின் மயக்கம் (591 -602 )

    மேலிலங்கு மஞ்சள் பட்டு வெண்பூணூல் பொன் பூணூல்
    போலிலங்கக் கண்டு மனம் பூரித்தேன் - சால 591

    அழுந்து நகக்குறியை ஆடவர்கண் டேங்கச்
    செழுந் திரைநீர் வையையில்யான் சென்றேன் - தொழுங் குலத்து 592

    நான் அவள் மேல் ஆசையினால் நாயுருவி என்று குப்பை
    மேனிபிடுங்கிப்பல் விளக்கினேன் - மோனமந்த்ர 593

    தர்ப்பணத்தை நீக்கித் தலைமுழுகி னேன்கலவி
    உற்பனத்தை எண்ணி உருச் செபித்தேன் - பொற்புடைய 594

    மாயத் திரியைவிட்டு வந்து நெடு நேரமென்று
    காயத்திரியை விட்டேன் காமிபோல் - தூயமணி 595

    தூவுதிரை வையையிலோர் சோமன் மறந்தேன் முன்
    காவிரியிற் போட்ட கலக்கம்போல் - தீவிரமாய்ப் 596
------------
590. வெய்யோன்: சூரியன்.
591. மஞ்சள் அப்பப்பட்ட பூணூல், வெள்ளி தங் கமாக மாறியமையால் ஒரு பூரிப்பு. சால் : நன்றாக
592. ஆடவர் கண்டு ஏங்க: ஆண்பிள்ளைகளெல் லாம் பார்த்து ஏக்கம் அடைய
595. மாயத்திரி : மாயக்காரி. காயத்திரி : காயத் திரி ஜபம்.
596: முன் திருவரங்கத்திலிருந்து திரிசிராப்பள் ளிக்கு இன்பரச வல்லியிடம் போங்கால் காவிரியில் உத்த ரியம் போக்கடித்தது போல தூவுதிரைவையையிலோர் சோமன் மறந்தார் அவதானியார் . "ஓடத்தில் ஏறினார் உத்தரியம் போக்கடித்தார், நாடிச் சிரகிரியை நண்ணி னார்" என்பது இந்நூலின் ககக - ம் கண்ணி .
-------------

    போனேன் அவள்மனையிற் பொற்கொடியாள் சொற்படி ஓர்
    மானாள் எனை அழைத்து வாரும் என்று - மீனாட்சி 597

    ஆயிவீட் டிற்சமையல் ஆச்சுதுபோம் என்றாள் நான்
    போயிருந்து சாப்பிட்டேன் போஜனத்திற் - காய்கறிகள் 598

    இன்ன தென் அறியேன் இன்னரசம் என்றறியேன்
    கன்னிமேல் வைத்த கவனத்தால் - என்னுடைய 599

    கைஈரம் ஆறுமுன்னே காதலியை வந்தணைந்து
    சையோக வைபோக சம்போக - மெய்போகம் 600

    ஆகச் சுகித்தேன் அகப்பட்டேன் பாய்மரத்திற்
    காகத்தை ஒத்தேன் என் காதலால் - மோகவலைப் 601

    பூட்டுக்குள் ளானேன் அப் போழ்வாய்ச்சி கைம்மருந்துக்
    கூட்டுக்குள் ளே அடைக்கக் கோப்பிட்டாள் - காட்டு 602
----------
599. இன்ன ரசம் என்றறியேன்: இன்ன சுவை என்றே தெரியவில்லை; உறைப்புப் புளிப்பு இனிப்பு வேறு பாடு கூட விளங்கவில்லை. காரணம்? கவனம் எல்லாம் கன்னிமேல்.
600. கை உலரும் முன்பே காதலியை வந்து அணைந்து அனுபவித்தேன்.
601. பாய்மரத்தில் அகப்பட்ட காகமானேன் ; கடலில் கப்பலின் பாய்மரத்தில் அகப்பட்ட காகத்துக்கு வேறு புகல் இடம் இல்லை. "எங்கும் போய்க் கரைகாணாது எறி கடல்வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப் பறவை போன்றேனே." என்றார் குலசேகர ஆழ்வார். வங்கம் : கப்பல். கூம்பு : பாய்மரம்.
602. போழ்வாய்ச்சி : கிழவி. கோப்பு இட்டாள் : திட்டம் போட்டு விட்டாள்.
-------------

    30. மூலிகை சேர்த்தல் (603-614 )

    மருந்துவகை நாவடக்கி வாதம் அடக்கி
    கருந்துவரை பாடவரை கஞ்சா - பெருந் தும்பை 603

    ஆதளை மேற் புல்லுருவி ஆவிரை மேற் புல்லுருவி
    மாதளை மேற் புல்லுருவி வல்லாரை - தூதுவளை 604

    பேய்ப்பீர்க்குப் பேய்முசுட்டை பேய்ச் சிமிட்டி பேய்ப்புடலை
    நாய்ப்பாகல் நாயுருவி நாய்வேளை - நாய்க்கோட்டான் 605

    புன்னைப்பூ வன்னிப்பூ பூளைப்பூ தாழைப்பூ
    முன்னைப்பூ மாம்பூ முருக்கம்பூ - சின்னிப்பூ 606

    பூலாவேர் சங்க வேர் புங்க வேர் தைவளை வேர்
    வேலாவேர் நெட்டி வேர் வெட்டிவேர் - பாலை வேர் 607

    அத்திக்காய் துத்திக்காய் அல்லிக்காய் நெல்லிக்காய்
    கத்தரிக்காய் பேய்ச்சுரைக்காய்காஞ்சிரங்காய் - மத்தங்காய் 608

    நின்று சிணுங்கி நிலம் புரண்டி ஆலின்கீழ்க்
    கன்று பணமுறிஞ்சிக் காஞ்சோறி - குன்றி இலை 609

    பின்தொடரி முன்தொடரி பெண்தொடரி ஆண்தொடரில்
    பொன்தொடரி ஐவாய்ப் புலிதொடரி - இன்பூறல் 610

    ஆனை வணங்கி அழுகண்ணி தொழுகண்ணி
    பூனை வணங்கிப் புளிமடலை - ஊனா 611

    தலைசுருளி நன்னாரி தான்றி வெள்ளைத் தோன்றி
    மலைகலக்கி தேட்கொடுக்கு வாகை - இலைக்கருநா 612

    ரத்தங்காய்ப் பிஞ்சு தம் ரத்தம் பூப் பிஞ்சுமலை
    நத்தைச்சூரிக்கொழுந்து நாட்டகத்தி - சித்தகத்தி 613

    தோதகத்தி வட்டநரைத் தோதகத்தி பஞ்சமா
    பாதகத்தி சூரியனைப் பாம்பணையும் - போதிற் கசகசா 614
------------
603, முதல் சாகச முடிய மூலிகைகளின் பெயர்.
604 . சூரியனைப் பாம்பு அணையும் போதில் : சூரிய கிரணம் உண்டான சமயத்தில்.
-------------

    31. கடைச் சரக்குச் சேர்த்தல் (615 -623 )

    கருத்து வகை யாய்த் தேடிக் கட்டிக் கடையில்
    மருத்துவகை கஸ்தூரி மஞ்சள் - அரைத்தசித்ர சாகரு 615

    மூலம் செவிட்டாதி மூலம் கடையினிற்றக்
    கோலம் தாம் பூலம் குரோசாணி - ஏலம் வெங் 616

    காரம் சீனக்காரம் கற்பூர சாரம் அரி
    தாரம் நவ சாரம் சவுக்காரம் - காரீயம் 617

    துத்தம் துரிசு துருசா வசப்படுத்தும்
    கொத்தமல்லி வெய்விளக்கம் குங்குமப்பூ - முத்தக்கா 618

    செட்டுப் பணவிடை இந்துப்பு வெடி வாண உப்புக்
    கட்டுப்பு வீட்டிற் கறியுப்பு - மட்டிப்பால் 619

    இஞ்சி லவங்கம் இதன் பத்ரி சிங்களத்தோர்
    கஞ்சியிலே போடும் கசகசா - மஞ்சள் 620

    அதிமதுரம் ஆசை அதிமதுரம் - ஆக்கும்
    சதகுப்பி சாதிக்காய் பத்ரி - அதிவிடயம் 621

    பாக்குச் சிறுதேக்குப் பாஷாணம் வேப்பம் புண்
    ணாக்கு நிருவிஷமுள் ளாவியும் புண்ணாக்கு பச்சை 622

    நாபி அபினி முதல் நாலு முழம் நாலுமுலைப்
    பாவி சவதரித்துப் பாரிலுள்ள - சீவன் 623
------------
615. மருந்து, மருத்து என எதுகை நோக்கி வலித்தல் விகாரம் பெற்றது.
620. சிங்களத்தோர்: இலங்கைத் தீவிலுள்ள சிங்களவர்.
623. நாலு முழம் நாலும் : நாலு முழம் தொங்கும். சவதரித்து : தேடிச் சேர்த்து.
615, முதல் 623 முடியக் கடைமருந்து வகைகள்.
-----------

    32. பிராணிகளின் உறுப்புச் சேர்த்தல் (624- 636)

    மருந்துவகை செவ்வரணை வால் ஆந்தைப் பிச்சு
    பருந்து நகம்முதலைப் பல்லு - குரங்கின் 624

    திரியம் மர அட்டை செவ்வட்டை பெட்டை
    நரிமுதுகுத் தோல் உடும்பு நாக்கு - குருகு 625

    முனைவாய் கருஞ் சேவல் முள்ளு வெள்ளைப் பல்லி
    சினவலியாண் காடைச் சிறகு - பனையடியிற் 626

    குன்னான்கண் வாகைமேற் கூகைகீழ் வாய் அலகு
    செந்நாய்ப் பவனவாய் தேவாங்கு - கன்னம் 727

    வலியான் கழுத்து மணிக்காடை முட்டை
    எலி மூளை பன்றி இறைச்சி - புலி மீசை 628

    வல்லூற்று வல் எலும்பு மாடப்புறாவினெச்சம்
    கல்லூரிக் கொம்பு கவரிமயிர் - நல்ல பாம்பு 629

    ஈரல் அலைஈற் றெருமை இளங்கொடிசெம்
    பூர முசற்புழுக்கை புற்றின் மேல் - தேரைக்கால் 630

    தூக்கணாங் குஞ்சு சுழல்வண்டு நண்டுகருங்
    காக்கை நிணம் காராக் கருமுலைப்பால் - நாக்குப் 631

    புழுப்பூனைப் பீசம் பொலிப்புக் கடாவின்
    கொழுப்புப் பெருச்சாளிக் குட்டி - பழுத்தமா 632

    வவ்வாற் றலை குதிரை வாயின் நுரைகரடிச்
    சவ்வு கிழ வானை மதம் சங்கிலூன் - நவ்விரத்தம் 633

    கன்னிகழியாத பிள்ளை காதிற் சிறு குறும்பி
    தன்னை அறியாள் தலையிற்பேன் - சின்ன அட்டை 634

    வாற்குருவிச் சந்தெலும்பு வானம்பாடிக்குடலுள்
    ஊர்க்குருவிக் கொக்கரை தன் ஊருக்கு - மேற்குக் 635
    --------
    624. முதல் 634 முடியப் பிராணிகளின் அங்கங்கள்.
    ----------

    கரட்டோரித் தொண்டை கரட்டோந்தி மண்டை
    வரட்டோரி தேடி வகையால் - நிறுத்து 636

    33. மருந்து கலந்து கொடுத்தல் (637 -641 )

    வன மருந்தெல்லாம் தயிலம் வாங்கிக் கடையில்
    கனமருந்தெல்லாம் பேய்க் கரும்பு - தனில் வடித்த 637

    சாற்றில் அரைத்துத் தசையூனைத் தாழியிலே
    ஊற்றிய சாராயத்தில் ஊறவைத்துச் சோற்றடுப்பிற் 638

    செம்மிப் புதைத்து மறு திங்களிலெல்லாமருந்தும்
    அம்மியிலே இட்டுமகள் அங்குலினீர் - செம்மை தரும் 639

    நாக்கில் அழுக்கு நகத்தழுக்குக் காலடி மண்
    மூக்கில் வியர்வும் விட்டு மூன்று நாள் - தாய்க்கிழவி 640

    மைப்போல் அரைத்துருட்டி மங்கைநல்லாள் இந்த உண்டை
    தப்பா தெனக்கொடுத்தாள் சர்ப்பனையால் - அப்பளத்தில் 641

    34. மருந்துண்டு மதி மயங்கல் (642- 648)

    இட்டாள் பழத்திலே இட்டாள் சுண் ணாம்பிலே
    இட்டாள் மதி மயக்கம் எய்தினேன் - விட்டிருக்கக் 642

    கூடாது கண்ணுறக்கம் கொள்ளாது சாப்பாட்டைத்
    தேடாது வேறுமனம் செல்லாது - பேடனையாள் 643

    மோக சமுத்திரத்தில் மூழ்குவதல் லாது பிர
    வாக நதியை மறந்துவிட்டேன் - மோகனஞ்செய் 644
----------
636. வரட்டு ஓரி: வரட்டு நரி போன்ற தாய்க் கிழவி.
638. தாழி : பாத்திரம்.
641. மறு திங்களில் : மறுமாதத்தில். கசக. சர்ப்பனை : வஞ்சனை.
643. பேடு அனையாள் : பெண் பறவையை நிகர்த் தவள்.
644 . பிரவாக நதி : பெருக்கெடுத் தோடும் வையை ஆறு.
-----------

    சித்தசனன் மந்த்ரகலை தேர்ந்தறிவ தல்லாது
    நித்தியசெப் மந்திரத்தை நீக்கினேன் - தத்துவரிக் 645

    கண்ணிசெயும் மோடிக்குக் கால் பிடிப்ப தல்லாது
    புண்ய நமஸ்காரங்கள் போட்டுவிட்டேன் - பெண் அணங்கின் 646

    செங்கள்பக் கொங்கை தெரிசனமல்லாது சிவ
    லிங்க தெரிசனத்தை நீக்கினேன் - அங்க சவேள் 647

    மாபூஜை வேளையவள் வாயமிர்தம் உண்பதல்லால்
    தேபூஜை மேற்கவனம் தீர்ந்துவிட்டேன் - கோபமுற்ற 648

    35. வஞ்சகச் சதி (649 -653 )

    நாட்டமறிந் தென்னை நரைக்கிழவி மெல்ல ஒரு
    பூட்டகந்தான் பேசினாள் பொன் பறிக்க - தாட்டிகரே. 649

    ஆடித் திருநாள் அழகருக்கின் றாகு தந்த
    வேடிக்கை பார்க்க வெகுஜனங்கள் - கூடியே 650

    செல்கின்றார் நீங்களும் போய்த் தீர்த்தத்தில் ஆடி வந்தால்
    நல்ல பலன் எங்களுக்கு நண்ணாதோ ? - கல்வியீர்! 651

    என்றாள் அவ் வார்த்தைக் கிருந்தால் அறிவிலியாம்
    சென்றாலும் மங்கைமேல் தேட்டமாம் - என்று செழுந் 652
--------------
645. சித்தசனன் மந்த்ரகலை : காம ரகஸ்ய சாஸ் திரம். தேர்ந்து : தேர்ச்சி பெற்று . நித்ய ஜெபமந்திரம்: நித்திய கர்மா நுஷ்டானம். தத்துதல் : தாவுதல். வரி : ரேகை.
646 : மோடி : ஊடல்.
647. களபம் : சந்தனம். அங்கசவேள் : மன்மதன்.
648 . தே பூஜை: கடவுள் வழிபாடு. சோபமுற்ற : மெலிவு பெற்ற.
649. பூட்டகம்: வஞ்சகம்.
650. அழகர் : அழகர் கோவில் இறைவர். சுருக. நண்ணாதோ : வரமாட்டாதா.
-----------

    தேனே ! மதனாபி ஷேகமே! நீவருவை
    ஆனால் திருநாட்கு அழகென்றேன் - நானும் உம்மைக் 653

    36. திருவிழாக் காணச் செய்தல் (654 -661 )

    காணா திருந்தாலென் கண்ணுறங்கு மோ என்று
    பூணார் முலையாள் புறப்பட்டாள் - பாணிப்பாப் 654

    பித்தளையினால் உடைமை பெண்ணுக்குப் பூட்டிவிட்டே
    அத்தை தொடர்ந்தாள் அடிப்பிறகே - பத்துப் பேர் 655

    பாங்கியரும் இன்றி வரும் பாவையுடன் சென்றழகர்
    ஓங்குமலைத் தீர்த்தம் உவந்தாடிப் - பூங்குழலாய்! 656

    மானும் கலையும் நரை மந்தியும் போ லே இறங்கித்
    தேனுந்து பூந் துளவச் செங்கண்மால் தானேறும் 657

    தேருக்குப் பின்னாகச் சென்றோம் ஓர் பாண இசைத்
    தூரத்தே ஞானியையன் தோன்றினான் - தேருக்குப் 658
-------------
654. பாணிப்யா: பொருத்தமாக.
656. பாங்கியரும் இன்றி: தோழியரே இல்லாமல். ஓங்கு மலைத் தீர்த்தம் : உயர்ந்த மலை அருவி நீர். உவந்து ஆடி : மகிழ்ந்து குளித்து. பூங்குழலாய், என்பது இங்கு விறலியைப் பார்த்துச் சொல்வது.
657 . மானும் கலையும் நரை மந்தியும் போலே இறங்கி : பெண்மானும் ஆண்மானும் நரைத்த குரங்கும் போல, அவளும் நானும் கிழவியும் மலையினின்றும் கீழே இறங்கி . மான் என்பது இங்கு பெண்மானைக் குறிக் கிறது. கலை: ஆண்மான். "மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவிவர" என்கின்றார் கம்பர்.
658. பாண இசைத் தூரத்தே : இசைக் கோஷ்டி யோடு சிறிது தூரத்தில்.
----------

    பக்கத்தி லேஒதுங்கிப் பாந்தினேன் அப்புறத்தோர்
    தக்கமறை யோன்மனையில் தங்கினேன் - கக்கத்தில் 659

    தூக்கிட்ட தோசைச் சுமையும் மடிதனிலே
    பாக்கிட்ட கைவாளப் பையுமாத் - தாய்க்கிழவி 660

    மாதைத் தொடர்ந்துவர மங்கை எனைப் பின்தொடரப்
    பாதைவழிக் கொண்டேன் பரிசுடனே - பாதை 661

    37. திரும்புகையில் செய்த மோசம் (662 -675 )

    அரைநாழிகைக்கப்பால் அத்தை குறுகி
    வரைமா முலையாய்! மறந்தேன் - சரிகை இட்ட 662

    சேலை என்றாள் ஓடித் திரும்புகிறேன் நில்லுமென்று
    வாலிபப் பெண் மேலென் மனங்கிடக்கக் - காலிற் 663

    கடுமையுள ஓட்டமெலாம் காட்டினேன் என் பின்
    குடுமியிலே தட்டக் குதிக்கால் - விடுதியில் போய் 664

    மீளுமுன்னம் மங்கையிட்ட வேற்றுடைமை யைக் கழற்றிப்
    பீளை தள்ளும் கண்ணி பிழைகேடி - ஆளுடனே 665

    போனாள் மதுரைக்குப் போய்த் துகிலை நானெடுத்து
    மானாளைத் தேடி வரும் வேளை - தேனனையாள் 666
-----------
659. பாந்தினேன்: பதுங்கினேன். ஏன்? முன்னே புத்தி சொன்ன ஞானியையன் கண்ணில் படாமல் இருப்ப தற்காகத் தான்.
660 தூக்கிட்ட : தொங்க விட்ட. தோசைச் சுமை: பெயர்பெற்ற அழகர் கோவில் தோசை மூட்டை. கைவாளப்பை: வெற்றிலைப்பை .
662 . அரை நாழிகைக் கப் பால்: அரைநாழிகை நேரம் நடந்தபிறகு . குறுகி : குறுக்கிட்டு. வரை : மலை.
665 . மீளுமுன்னம் : திரும்புவதற்கு முன்னே . வெற்றுடைமை : வெறும் பித்தளை நகை. பீளை : கண் அசடு. பிழைகேடி : தவறானவள்; கேடுகாரியும் கூட.
666 . துகில்: சேலை. வரும் வேளை: வருஞ் சமயம்.
--------

    ஊரின் முருங்கை உருவிய கோல் போல் நின்றாள்
    மாரியெனக் கண்ணீர் வழிந்தோடக் - காரிகையே! 667

    என் என்றேன் விம்மிவிம்மி ஏக்கம் போல் நாக்குழறி
    முன்னின்று மெள்ள மொழியலுற்றாள் - அன்னை 668

    வருவார் நம் ஐயர் வழியிற் பறியார்
    திருநாட் சனத்துடனே செல்வோம் - அரிவையே! 669

    வா என்றாள் விட்டு வர மாட்டேன் நான் நீ பயந்தாற்
    போ என்றேன் கோபமாய்ப் போயினாள் - கூஎன்றாற் 670

    கேள்வியுண்டோ வந்தான் கிழவன் ஒருவன் ஐயோ
    போழ்வாய் நரைத்ததலைப் பூண்கட்டு - நீளத் 671

    தடிக்கொம்புக் காரன் தனிவழியில் என்னை
    அடித்துப் பறித்தான் அகன்றான் - திடுக்கிட்டேன் 672

    என்றாளைத் தேற்றி அதற்கு எண்ணமேன் உன் அதிர்ஷ்டம்
    ஒன்றுமேல் லட்சம் உடைமையாம் - நின்று 673

    வருந்தாதே என்று மதுரைக்கு வந்து
    திருந்திழையாள் வீட்டிலே சென்றேன் - மருந்துருட்டி 674
----------
667 . ஊரின் முருங்கை உருவிய கோல் போல் நின்றாள் : ஊராருக் கெல்லாம் பொதுவான இலை முழுதும் உருவப்பெற்ற முருங்கைக் குச்சிபோல ஒரு நகையும்
இல்லாமல் நின்றாள். மாரியென: மழை நீர் போல.
668. என்: என்ன நடந்தது.
669 . விட்டு அவரை விட்டு.
673. அதற்கு எண்ண மேன்: அதற்காக ஏன் யோஜிக்கிறாய். உன் அதிர்ஷ்டம் : உன் அதிர்ஷ்டத்தா லேயே இது நடந்தது. லட்சம் உடைமையாம் : ஏராள மான நகைகள் உனக்கு வரும்.
674. மருந்து உருட்டி: மருந்து உருட்டும் தொழி லுடைய தாய்க்கிழவி.
--------

    அங்கேவந் தாள் மகளை ஆவலாய்ப் பார்த்துடைமை
    எங்கே என்றாள் பறிபோச் சென்றுரைத்தாள் - செங்கை 675

    38. கிழவி பொய்ப் புலம்பல் (676 -704 )

    நெரித்தாள் பதறி நெரித்தகையை விட்டுப்
    பிரித்தாள் வயிற்றைப் பிசைந்தாள் - ஒருத்தருமில் 676

    லாத இடத்துடைமைக் காசையாய் உன்னுயிரைச்
    சேதப்படுத்திலென்ன செய்குவேன்? - பேதை 677

    மகளே எனக்கதறி வாய்விட் டழுது
    வெகுவாய்ப் பரிதவித்து விம்மி - நகைகளெல்லாம் 678

    போச்சுதே கோவிலுக்குப் போக வரத் தடை யொன்று
    ஆச்சுதே ஊரும் அறிந்ததே - ஏச்சொன்று 679

    வந்ததே பண்ணி மறித்தும் இடக் காசுபணம்
    சிந்துதோ கண்டேன் உன் தேட்டை நான் - வந்தடித்துக்

    கள்ளர் பறித்தநகை கைக்கு வரு மோஉடைமை
    உள்ளதெல்லாம் ரத்த உடைமையே - அள்ளி அள்ளி 681

    எண்ணி இட்ட செம்பொன் இருநூறு நான் கொடுத்துப்
    பண்ணி இட்ட கொப்பும் பறிபோச்சோ! - புண்ணியவான்

    திக்கடைய வெற்றிகொண்ட சிந்தமகூ ளேந்த்ரனிட்ட
    கைக்கடகம் போலும் இனிக் காண்பேனோ! - விக்ரமகோ 683
--------
680. பண்ணி மறித்தும் இட: திரும்பச் செய்து போட. காசு பணம் சிந்துதோ: பணம் காசு கிடந்து இரையுதா. கண்டேன் உன் தேட்டை நான்: உன் சம் பாத்தியம் எனக்குத் தெரியுமே.
681. ரத்த உடைமையே : ரத்தம் சிந்திச் சேர்த்த பொருள்கள் அல்லவா.
683. திக்கு அடைய: திசை முழுதும். சிந்தம் கூளேந்திரன்: கூளப்ப நாயக்கனின் தந்தை.
---------

    தண்டசர பாணி துரைச் சாமரா யன் கொடுத்த
    கண்டசரம் ஏன் இவட்குக் காட்டினேன்! - அண்டலரை 684

    வெட்டியவாள் வீரன் விருபாட்சி யான் கொடுத்த
    ஒட்டியாணம் போல் உண்டாமோ ! - சிட்டர் புகழ் 685

    ஆணிக் கனகநிதி அப்புராயன் கொடுத்த
    மாணிக்க மாலையைப்போல் வாய்க்குமோ ! - வாணர்புகழ் 686

    அம்மைராயன் கொடுத்த ஆணிமுத்துத் தாழ்வடத்தைக்
    கொம்மைமுலை யாட்கேன் கொடுத்தேனான்! - நம்முடைய 687

    வல்லக் கொண்டையனருள் வச்ரக் கணையாழிக்
    கல்லுக் கொருவர் விலை காண்பாரோ! - வல்லிசெய்த 688

    கின்னரிப்பாட்டுக்குக் கொடிக்காமை யன் கொடுத்த
    பொன்னரைஞாண் பொற்கிடைக்கப் போகுதோ! - மன்னர்புகழ் 689

    கச்சுமுலை யாளுக்குக் காளிங்கன் முன் கொடுத்த
    பொற்சிமிக்கி போற்கிடைக்கப் போகுதோ! - குச்சிலியக் 690
-------
684. அண்டலர் : தன்னை அடையாதவர்.
685. சிட்டர்: மேலோர்.
686. ஆணிக் கனக நிதி: மாற்றுயர்ந்த பொற் குவியல். மாணிக்கமாலை : சிகப்பு மணியாலாய சரம். வாணர்: கவி வாணர்.
687. கொம்மை: இளமை, வட்டம், திரட்சி முதல் லிய எல்லாப் பொருளிலும் வரும் சொல்.
688. வச்ரக் கணையாழிக் கல் : பெரிய ஒற்றை வைர மோதிரம். ஒருவர் விலை காண்பாரோ : யாராவது விலை மதித்து விடுவார்களா?
689 கின்னரிப்பாட்டு : வீணையோடு கூடிய பாட்டு. கெடிக்காமையன் : ஒருவன் பெயர்.
690. சிமிக்கி: ஒரு நகை. குச்சிலியம் கூர்ஜர நாடு.
----------

    கெங்காசி ராவளித்த கெம்பிழைத்த மோதிரம் போல்
    இங்கார் கொடுப்பார்சொல் ஏந்திழையே! – மங்கைபுரி 691

    நாட்டியத்தைக் கண்டு மெச்சி நத்தத்து லிங்கேந்திரன்
    போட்ட கொலுசு எண்ணூறு பொன்பெறுமே! - வாட்டமில்லாக் 692

    கோகனகவதனன் கோபால ராயனருள்
    மோகனபபொன் மாலை முற்றும் மோகனமே! - போகத் 693

    திருமலை கண்ட மன்னன் தந்தருள்சிந் தாக்கை
    இருமுலையாட் கேன்கழுத்தில் இட்டேன் - கருணை நிதி 694

    பூசாரி ராயனிட்ட பொற்சவளி போலவும் ஓர்
    ஆசாரி பண்ண அறிவானோ! - தேசமெச்சும் 695

    போடிமகி பன்கொடுத்த பொற்சுட்டி கட்டிவிட்டுப்
    போடி என்றேன் என்னமதி போனேனான்!- தாடகையை 696

    அம்பிற் பொருராம பக்த துரை அன்று தந்த
    தும்பிப் பதக்கவிலை சொற்பமோ ! - சொம்பு பெறும் 697

    நாடகத்தைக் கண்டு மெச்சி நம் முத்தையன் அளித்த
    பாடகத்தைக் கண்டாற் பசிபோமே! - நாடு புகழ் 698
--------
691. கெம்பு : சிகப்பு. மங்கை புரி: மகள் செய்த
693. கோகனக வதனன் : தாமரை முகத்தான். மோகனமே : மயக்கத் தக்கதே.
போகம் : இன்பம்.
694: திருமலைகண்ட மன்னன் : திருமலை நாயக்கன் மால் எழுப்பிய மன்னன்.
சிந்தாக்கு : அட்டிகை.
695. சவளி: கழுத்தணி நகை. காக்கா . போடிமகிபன் : போடிநாயக்கனூர் ஜமீந்தார்.
697. தும்பிப்பதக்கம் : யானை முகப் பதக்கம். சொம்பு : அழகு.
698 . பாடகம் : காலில் அணியும் அணி.
-----------

    தொட்டரா யன் கொடுத்த சோடுவச்ர ஓலையும் பொற்
    பட்டை அரைஞாணும்விலை பண்ணுவதோ! - வெட்டுகின்ற 699

    வாளுலவும் செங்கண் மடந்தைபொட்டுக் காறை எந்த
    ஈளுவன் வீட்டில் இருக்குதோ!- தாளவட்டப் 700

    பூணார் முலையாட்குப் போட்ட வெள்ளித் தண்டை எந்தச்
    சாணான் வளவிற்போய்ச் சார்ந்ததோ!- வீணே என் 701

    மானாளைக் கொள்ளை கொண்டோன் வச்ர முருகை எந்தக்
    கோனான் தன் கையிற் கொடுத்தானோ! - ஆனாலும் 702

    மூவைந்தாம் பாட்டிகண்ட மூக்குத் தளுக்கை என்ன
    பூவென்றெங் கே எறிந்து போட்டானோ! - பாவைநல்லாய் 703

    என்ன செய்வோம் நாமினிமேல் என்றாள் கிழவியையும்
    கன்னியையும் தேற்றிக் கணக்கேற்றி -- அந்நேரம் 704

    39. நகை செய்து கொடுத்தல் (705 -710 )

    ஐயா யிரம் பொன் அவல் போலப் பார்வையிட்டுக்
    கையாரத் தட்டான் கடையிலிட்டுச் செய்த 705

    உடைமை எல்லாம் அந்த உருப்படியே இட்டு
    வடிவை எல்லாம் பார்த்து மகிழ்ந்தேன் - கொடி இடையை 706

    மஞ்சத்திற் கூடி மகிழ்ந்திருக்கும் போதொருநாள்
    பஞ் சொத்த கூந்தலாள் பையவந்து - வஞ்சியே! 707
-----------
699. சோடு வச்ர ஓலை : இரண்டு வைரக்கம்மல்.
700. காறை: ஓர் நகை.
710. வளவு : வீடு; வளைவு என்னும் சொல்லின் சிதைவு.
704. கணக்கேற்றி : கணக்கைக் கூட்டி .
705. கையார் : கை நிறைய.
706. அந்த உருப்படியே: பழைய நகை மாதிரியே . வடிவு: அழகு.
707 . பஞ்சு ஒத்த கூந்தலாள் : பஞ்சு போன்ற நரை மயிர்க் கிழவி. பைய: மெதுவாக.
---------

    கோயிலுக்குப் போ என்றாள் கோடியில்லை சேலை எல்லாம்
    சாயமில்லை என்று சலிப்பானாள் - பேயே! 708

    பிறந்த ஊருக்குப் புடவை ஏன் நம்மை
    அறிந்தவரே அல்லால்மற் றார்காண் -- நறுங்குழலாய்! 709

    பொன்னின் குடத்துக்குப் பொட்டிடலேன் போ என்றாள்
    அந்நேரம் மாதை அழைத்துப்போய் - நன்னிசெட்டி 710

    40. ஆடை வாங்கிக் கொடுத்தல் (711 -727 )

    கட்டுவர்க்கச் சேலைக் கடையில் இடைக்கிசைந்த
    பட்டுவர்க்கம் பார்த்துப் பளபளப்பாம் - மட்டு வர்க்கப் 711

    பாவாடை இட்டமொழிப் பாவைக்குப் பொன்ரவிக்கை
    பாவாடை வர்க்கம் பதினாறு - மேவி இரு 712

    செப்புவர்ணப் பூமுலைக்குச் செம்பருத்திப் பூ நிறத்துக்
    கொப்புவர்ண மாத் தீர்ந்த கோப்புவர்ணம் - இப்புவியில் 713

    ஆதிவண்ணம் போலும் அழகுடையா ளுக்கிசைந்த
    வீதிவண்ணச் சேலை ஒன்று விந்தையாம் - வாது மத 714

    பாணத் தார்க்கூந்தற் பவளவாய்ப் பைந்தொடிக்கு
    வாணத்தார்ச் சேலை வகை மூன்று - வேணுமணி 715

    முத்து வண்ண மூரல் நல்லாள் மூலைக்குள் வைத்துடுக்க
    முத்துவண்ணச் சேலையிலே மூன்றுவகை - வைத்த திருச் 716
--------
710. நன்னிசெட்டி, ஒருவன் பெயர்.
711 வர்க்கம் : வகை, மட்டு: தேன்.
712. பாவாடை : பாட்டு மணம்.
715. தார்க் கூந்தல் : மாலையணிந்த குழல். வேணு மணி: மூங்கில் ஈன்ற முத்து.
716. மூரல் : பற்கள்.
--------

    சூரணவர் ணத்திலகு சுட்டிநுத லாட்கிசைந்த
    நாரணவர் ணச்சேலை நாலைந்து - போரிற் 717

    படை முறிச்சுக் குத்திய கட் பாவையாள் கட்ட
    உடை முறிச்சுக் குத்தியிலே ஒன்று - தொடையல் 718

    சொருகு மணிக்குழலாள் சோடினையாக் கட்ட
    அருகுமணிச் சேலையிலே அஞ்சு - பிரிவு கொண்டு 719

    செல்லாச்சே லைப்பொருங்கட் சேயிழையாள் கட்ட நல்ல
    சல்லாச்சே லைத்தரமாய்த் தானிரண்டு மெல்லமெல்ல 720

    வாள் எழுத்தோள் ஆடவரை மாலழுத்து வாள் உடுக்க
    ஆள் எழுத்துச் சேலையிலே ஆறேழு - நீள் எழில்சேர் 721

    சுந்தரத்தோள் மங்கைக்குத் தொட்டிழுத்துக் கட்ட நல்ல
    சந்திரகாந் தக்கச்சுத் தானைந்து - அந்தரத்தில் 722

    இந்திரகா விற்குலவு ரம்பையனை யாட்கிசையச்
    சந்திரகா விச்சேலை தானிரண்டு- சிந்து மழை 723

    மாரிக் கொடியின் மருங்கிற் கிணங்கியஸ்
    தூரிக் கொடிச்சேலை சோடிரண்டு - காரிகைக்குக் 724

    காங்குசரிகைச்சேலை கம்பா வரித் துகில் பட்
    டாங்குகம்பிச் சேலை அரைவர்ணம் - தாங்குசிலம்பு 725
------
717. சுட்டி நுதல் : சுட்டியென்னும் நகையணிந்த நெற்றி.
718 . தொடையல்: மாலை.
720. செல்லா: சென்று. சேலைப் பொருங்கண்: மீனோடு போர் செய்யுங் கண்.
721. வாள் : ஒளி. எழுத்தோள் : தூண் போன்ற தோள் . மால் : மயக்கம்.
722 . கச்சு : ரவிக்கை . அந்தரம் : விண்ணுலகம்.
723. இந்திரகா: தேவநாட்டுப் பொழில்.
725. பட்டாங்கு சேலை.
-----------

    எச்சரிக்கை என்னும் இடைக்குச் சரிதென்றற்
    குச்சரிகை வர்க்கமெல்லாம் கொண்டீந்தேன் - உச்சிதமாத் 726

    தாய்க்கிழவி கேட்டாள் தனக்கிரண்டு சேலை
    அந்தப் பேய்க்குதவா விட்டாற் பிழைப்போது? - பாக்களந்த 727

    41. பலவகைக் கடன் தீர்த்தல் (728 -732 )

    வன்னி என்றும் பாலளந்த மாரியென்றும் நெய்யளந்த
    சின்னி என்றும் நெல்லளந்த சொல்லி என்றும் - எந்நேரம் 728

    வைவதுவும் போவதுவும் வாசலிலே நின்றலம்பல்
    செய்வதுவும் போலிட்டாள் தித்திரிப்பு - கைமேலா 729

    அந்தக் கடன்காரர்க் கென்றே நான் ஐம்பது பொன்
    இந்தக் கடன்காரிக் கீந்துவிட்டேன் - அந்தி சந்தி 730

    தாய்குடிக்கப் பெண் குடிக்கச் சாராயம் ஊற்றி வெறிப்
    பேய்பிடிக்க விட்டநெட்டைப் பிச்சிவந்து - ஞாயமோ 731

    தப்பறைக் காரி என்று சண்டைக்கு வாய்திறந்தாள்
    முப்பது பொன் போட்டு வாய் மூடிவிட்டேன் - செப்புமுலை 732

    42. சாமி பூஜைக்குக் கொடுத்தல் (733 -738 )

    மங்கை வயிற்றை வலிக்குதென்று மார்க்கமிட்டாள்
    அங்கை தொட்டக் காலதிகம் ஆகுதென்றாள் - எங்கள் 733
------
725, 726 . "சிலம்பு எச்சரிக்கை என்னும் இடை” என்பது ”உபய தனம் அசையில் ஒடியும் இடை நடையை ஒழியும் ஒழியும் என ஒண் சிலம்பு. அபயம் அபயம் என அலற நடைபயிலும் அரிவையீர் கடைகள் திறமினோ" என்ற கலிங்கத்துப் பாணிப் பாட்டோடு ஒக்கும்.
729. அலம்பல்: கலகம். தித்திரிப்பு: கபடம்.
732. தப்பறை: சூது.
----------

    குலதெய்வம் பண்ணுதிந்தக் கோட்டாலை என்றாள
    கலைகுலைந்து சோர்வடையும் கண்ணாள - சிலை நுதலாய்! 734

    தெய்வக் குறைக்கென்ன செய்யவேணும் சொலென்றேன்
    கையில் அரிவாளும் கட்டளையாச் செய்த 735

    உருவேணும் பொற்குசசு உறு மாலை வேணும்
    இருகாலுக் குச்சிலம்பும் ஈனாப-புருவைகளும் 736

    செஞ்சே வலுமவேணும், சேவிக்கும் பம்பைக்கோர்
    அஞ்சாறு பொன வேணும் ஆடிவரக் - குஞ்சமிட்டுப் 737

    பூங்கப் பரையெடுத்துப் பூசையிட வேணுமென்றாள
    ஆங்கப் படிக்கீந்தேன ஐம்பது பொன் - தாங்கருங்கண் 738

    43. தன்னிடம் மிச்சமிருந்ததைக் கொடுத்து வைத்தல் (739 -740 )

    வாளை தா வுங்காது மாது நல்லாய் நான் கேட்ட
    வேளை தா என்றவள் தன் வீட்டிலே - ஆழாக்கு 739

    முத்துவைத்து வைத்தேன் முடிப்பாஓர் ஆயிரபொன்
    வைத்துவைத்தேன் பின்னுமொரு மாணிக்கம் - சித்திரக்கால் 740
--------
734. கலை: ஆடை .
736. உரு: வடிவம். பொற்குசசு உறுமாலை : தங்கக் குஞ்சம் கட்டிய தலைப்பாகை. எனாப் புருவை: குட்டி போடாத ஆடு.
737 . பம்பை: பறைக்கொட்டு. குஞ்சம்: பூங் கொத்து.
738. கப்பரை : பிச்சைப்பாத்திரம். தாங்க அருங்கண்: பாயப் பெற்றோரால் பொறுக்க முடியாத நிலையை உண்டாக்கும் கண்.
739 . வாளை : மீன . வேளை : சமயம். தா: தருவா
யாக.
740. மாணிக்கம் : சிகப்பு.
---------

    44. பலவகையாகப் பணம் பிடுங்கல் (741 -752 )

    கட்டிலென்றும் கட்டிலின்மேற் கட்டிக்க லாத்தென்றும்
    வட்டிலென்றும் சிப்பு வகை என்றும் - கட்டுமட்டாம் 741

    குத்துவிளக் கென்றும் குடப்பால் எருமை என்றும்
    பத்தணையேர் என்றும் பசுக்களென்றும் - மெத்தை என்றும் 742

    மச்சுவீ டென்றும் மனைக்கு திர்கள் என்றுமங்கை
    மெச்சிவிளை யாடிநிற்க மேடை என்றும் - கச்சிறுக்குங் 743

    கொங்கைச் சிமிழமாது கூடப் பிறந்த சின்னத்
    தங்கச்சி கால்களுக்குத் தண்டை என்றும் - இங்கிதமாய் 744

    ஆடவிட்ட நட்டுவனார்க்கு அங்கி என்றும் சங்கீதம்
    பாடவிட்ட பாடகற்குப் பாகை என்றும் - சேடியர்க்குக் 745

    கம்பிகுறிச் சேலை என்றும் காதோலை என்றும் வெள்ளித்
    தம்பிக்கை என்றும் தவலையென்றும் - செம்பென்றும் 746

    தந்தச் சிமிழிற் சவாதென்றும் ஆண்டியப்பன்
    கந்தபொடி என்றும் கதம்பமென்றும் - சந்தனங்கள் 747

    என்றும் ஆடிக் கழிவுக் கேற்றதென்றும் தைப்பொங்கற்கு
    என்றும் சிவராத்திரிக்கென்றும் - நின்று 748
-----------
741. எசக. சகலாத்: ஒருவகைத் துணி. வட்டில் : உண் கலம்.
742. குடப்பால் எருமை: குடம் பால் கறக்கும் மேதி.
743. குதிர்: நெல் கொட்டி வைக்கும் பெரிய பாத் திரம். மேடை: செய் குன்று.
745. அங்கி: சட்டை. பாகை : தலைப்பாகை. எச சு. தம்பிக்கை : சிறு செம்பு.
747 . ஆண்டியப்பன் கந்தபொடி, அக்காலத்தில் மிகவும் பேர் பெற்றிருந்த ஒரு பொடி போலும்.
-------

    தலை தடவி மூளை தனை உறுஞ்சு வார்போல்
    பலவிதமாய் எய்ச்சுப் பசப்பிக் - கலவை அணிந்து 749

    ஓங்கும் இளமுலையாள் ஊனிருக்க வேஉயிரை
    வாங்குவது போற்பொருளை வாங்கிவிட்டாள் - சோங்கிலிட்டுக் 750

    கட்டிய செம் பொன்னைக் கடலிற் கவிழ்த்ததுபோல்
    ஓட்டொழியத் தோற்றுவிட்டேன் உள்ளதெல்லாம் – இட்ட 751

    மருந்தால் இருளும் மருளுங்கொண் டாற்போல்
    இருந்தேன் கொடுக்கவகை இன்றி - உரிந்து 752

    45. மீதியை விற்று வெறுங்கையன் ஆதல் (753-755 )

    கலைவிற்றேன் காதிற் கடுக்கனையும் விற்றேன்
    மெலிவுற்றேன் தாய்க்கிழவி வீட்டுச் செலவுக்குத் 753

    தத்திரமாய்க் கேட்டாள் தலை கவிழ்ந்து நான் துரும்பு
    குத்துவதைக் கண்டாள் குறிப்பறிந்தாள் - எத்தி என்னைத் 754

    தாரைவிட்ட வேல்விழியாள் தாய்க்கிழவி வார்த்தை யைக் கேட்டு
    ஊரைவிட்டுப் போக்க உபாயமிட்டாள் - சேர என்றும் 755
---------
749. ஏச்சுப் பசப்பி : தழுக்குப் பண்ணி ஏமாற்றி .
750. ஊன் இருக்க உயிரை வாங்குவது போல் : உடம்பு இருந்தபடி இருக்க உயிரைக் கவர்வது போல. சோங்கு: கப்பல்.
751. ஒட்டு ஒழிய: கொஞ்சமும் இல்லாமல்.
752. இருள்: அறியாமை. மருள்: மயக்கம்.
753. கலை : வேட்டி.
754. தத்திரம்: எதுகை நோக்கி தந்திரம் தந்திர மாயிற்று. துரும்பு குத்துவது, கீழ் நோக்கி எதையா யாவது கிளறிக்கொண்டிருப்பது.
755. தாரைவிட்டவேல் : ஒழுங்காக வடித்துச் செய்யப்பெற்ற வேல். அவ்வேல் போலும் விழியாள், மதனாபிஷேகம். உபாயமிட்டாள் : தந்திரம் செய்தாள்.
-------

    46. துரத்த வழி தேடல் (756 -759 )

    மின்புறங்காட் டும் சயனம் மேற்படுத்தால் என்புறத்தில்
    பின்புறங்காட்டிப் படுப்பாள் பேசாமல் - அன்புடனான் 756

    செய்யா உபசாரம் செய்யப்போனாலும் முழங்
    கையால் இடிப்பாள் கடுகடுப்பாய் - பையவே 757

    அன்னை வந்து தன்னை அழைக்கச் செறுமுமந்தச்
    சன்னையறிந் தென்னை விட்டுத் தானேகி - பொன்முடிப்பு 758

    வாங்குவதும் கூடுவதும் வந்தெனரு கிற்படுத்துத்
    தூங்குவது மாகத் தொழில் எடுத்தாள் - பாங்கியரிற் 759

    47. மதனாபிஷேகம் தன்னை ஏசுதல் (760 -763)

    கோப்புடைய மாயக் குருவியைவிட் டுப்பழைய
    மாப்பிளைமார் தம்மை வரச்சொல்லி - 'பேய்ப்படுவாய் 760

    அன்னியர்கள் வந்தால் அருகில் போய் நானிருந்தால்
    சன்னை தெரியாதோ சவுங்கலே! என்னடா! 761

    போடா வெளியிற் புதுமண்ட பத்திருந்து
    வாடா!" எனச் சொலுவாள் மட்டுமிஞ்சி - ஓடியங்கள் 762

    சொல்லத் தொடுத்தாள் துரத்திடினும் பூட்டிய செக்
    கெல்லைவிட்டுப் போகா எருதானேன் - மெல்ல 763
----
756. மின் புறங்காட்டும் சயனம்: மின்னல் பயந்து முதுகு காட்டி ஓடத்தக்க ஒளிபெற்ற படுக்கை .
758. சன்னை : ஜாடை.
761. சன்னை : குறிப்பு.
762. புது மண்டபத்திருந்து வாடா: கொஞ்சம் புதுமண்டபத்திலே போய் உட்கார்ந்திருந்து விட்டு வாடா. மட்டு மிஞ்சி : அளவு கடந்து ஓடியங்கள் : கேலிப் பேச்சு.
---------

    48. தாய் மகளை ஏசல் (764 -772)

    மகளை அழைத்து மருட்டுருட்டி சொல்வாள்
    "தகல் பாசிப் பார்ப்பான் சதமோ - முகமாயம் 764

    என்ன செய்தான் நீ அவனுக் கேற்ற உடன்படிக்கை
    என்ன சொன்னாய் பார்த்தவருக் கேற்குமோ - மின்னே! 765

    கொடுக்குமட்டும் வாங்கிக் கொடாதிருந்தால் விட்டு
    முடுக்கலல்லோ வேசி முறைமை - எடுப்பார்கைப் 766

    பிள்ளையோ நீயுமென்ன பேய்ப்பிள்ளாய்! மாப்பிளைமார்
    கள்ளரைப்போ லே திரியக் காரணமேன் - மெள்ள மெள்ள 767

    ஓடங் கடக்கவிட்டால் ஓடக்காரன் தலையிற்
    போடுவது சொட்டென்பார் பூதலத்தோர் - வாடீ 768

    சிலைநுதலாய் ! நானுனக்குச் சேர்த்த மருந்துக்கு
    மலையும் நகர்ந்து வருமே - முலை வயிற்றைத் 769

    தொட்டதோ கன்னம் சுரித்ததோ கூந்தல் நரை
    இட்டதோ மேனி இளைத்ததோ - தொட்டவனை 770

    விட்டுப் பிரிந்தக்கால் வேறுபிழைப்பில்லையோ
    முட்டி வாங்கிப்பயலோ மோப்பாச்சு - கெட்டிகெட்டி 771

    ஊரைவிடப் பற்று " என்றாள் ஊதாரி வீட்டிறப்புக்
    கூரையில் ஒன்றிக்கேட்டுக் கொண்டேனான் - மேரை தப்பி 772
--------
764. மருட்டி உருட்டி, தாய்க் கிழவி. தகல்பாசி : புரட்டன்.
765. உடன்படிக்கை : ஒப்பந்தம்.
766. முடுக்கலல்லோ : விரட்டுதல் அல்லவா .
768. சொட்டு: குட்டு.
772 . பற்று. துரத்தியடி . ஊ தாரி: வாயாடி. இறப்பு: தாழ்வாரம். மேரை: மேன்மை.
---------

    49. சண்டை போடல் (773- 811)

    நன்றி மறந் தாரை நடுக்கேட்கு மோதெய்வம்
    என்று சொல்லி வந்தேன் எதிரே நான் - என்றவுடன் 773

    ஆங்காரம் இட்டாள் என் ஆஸ்தியெலாம் தன்கையால்
    வாங்காமல் வாங்கிவிட்ட மாமியார் - ஆங்குவரும் 774

    பேய்மடயர் பொன்னாம் பெருங்குளத்து நீரைத்தன்
    வாய்மடையா லேஉறிஞ்சும் மாமியார் - ஈயாரைப் 775

    புல்வாயைக் கண்ட புலிபோலப் போய்ப் பிடிக்கும்
    வல்வாய்க் கிழநெட்டை மாமியார் - பல்லுவிழும் 776

    கோப்புளதன் மூப்பைக் கொடுத்திளமை வாங்க மொட்டை
    மாப்பிளைமா ரைத்தேடும் மாமியார் - கேப்பைக்கும் 777

    பிஞ்சுமாங் காய்க்கும் பிளவுக்கும் வெற்றிலைக்கும்
    மஞ்சளுக்கும் சஞ்சரிக்கும் மாமியார் - மஞ்சத்தே 778

    தேற்றித் தனை முன்பு சேர்ந்த பணக்காரர்முறை
    மாற்றிமக ளுக்கிணக்கும் மாமியார் - போற்றிவைத்த 779

    காசழியா மல் திரியும் காவிப்பற் காரரைத்தன்
    வாசல் மிதிக்கவொட்டா மாமியார் - ஆசை கொண்டு 780

    சேயிழையைச் சேர்ந்தவரைத் தேற்றிக் கழுத்தறுக்கும்
    ஆயுதம்போ லுங்கருநாக் கத்தையார் - மேய ஒரு 781
-----
774 . ஆங்காரம்: கடுஞ்சினம்.
775. பேய்மடயர் : பேய் பிடித்தது போன்ற அறி யாமை நிரம்பியவர்.
776. புல்வாய்: மான். வல்வாய்: வலிய வாய்.
778 . பிளவு: பாக்கு. சஞ்சரித்தல் : முறைதவறி நடத்தல்.
779 . இணக்கும் : பொருத்துகின்ற.
--------

    செம்பிலே தண்ணீரும் சீலைப்பா யுங்கொடுபோய்
    அம்பலத்தி லே படுக்கும் அத்தையார் - வெம்புலிபோல் 782

    தாட்டிகரையும் பிடித்துத் தாலதத்திம் மா" என்று
    ஆட்டிப் பணம் பறிக்கும் அத்தையார் - மோட்டுப் 783

    பொலிப்பாட்டைப் போலே புறப்பட்டாள் அன்று
    பொலிப்பாட்டுப் பாடப் புகுந்தாள் - வலுத்தவர் போல் 784

    "என்ன சொன்னாய் பார்ப்பான் நீ இன்னம் ஒருக் காற்
    சொல்லு கன்னத்தி லே அறைவார்க் காணேனே - சின்னம் 785

    சிறுக்கி உனக்கு நன்றாச் சிக்கினா ளோ நான்
    கிறுக்குப் பிடித்த கிழவி - - உறுக்கி 786

    வசமாக்க வல்லோ வகை செய்தாய் வைப்பு
    நிசமாச்சோ குல்லாலி நீயோ - பசிவேளைக்கு 787

    ஏது கொடுத்தாய் நீ இத்தனை காலந் திரிந்தாய்
    போதுமினிப் போ என்றாற் போகாயோ - மாதுனக்குத் 788

    தாய்மாமன் பிள்ளையோ தாலிகட்டித் தந்தேனோ
    நீமாத் திரமகட்கு நேசமோ - மாமிகிட்டத் 789

    தந்த பணம் சேதமுண்டோ சாண் வயிற்றுப் பிச்சைக்கு
    வந்தவனும் பெண்ணுக்கு மாப்பிளையோ - சொந்தமாக் 790
--------
782. தாட்டீகர் : பலம் வாய்ந்தவர். தாலக்க திம்மா: ஆட்டக் குறிப்பு. மோடு : உயரம்.
784. பொலிப்பு ஆடு : மாப்பிளைக்கடா. பொலிப் பாட்டு: வசைப்பாட்டு.
786 . உறுக்கி : அதட்டி .
789. நீமாத்திரம் : நீ மட்டுந்தானா.
-------

    கிட்டக் கிடக்கக் கிடைப்பாளோ தேவடியாள்
    இட்டொருவ னைச்சோர்வ தெத்தனை நாள் - குட்டுணி உன் 791

    வாணாளை வாங்கிடுவேன் வாயை மூ டுன் வயிறு
    சாணோ முழமோ சவுங்கலே - நாணமற்ற 792

    மூடாஇ தேது முழக்கம் வெளியிலே
    வாடா ஒருகால் மதிகேடா - நாடலாம்" 793

    என்று புடவை இறுக்கினாள் நானவளைத்
    தின்றுவிடத் தக்க சினமானேன் - "நன்றியற்ற 794

    பாவி நீ கேளாய் பழங்கதைசெந் தீ இடைப்பட்டு
    ஆவிவிடும் பாம்பை எடுத் தாதரிக்கத் தாவி 795

    நளன்கரத்திற் தீண்டியது நன்மை செய்யக் கர்மம்
    விளைந்த கதை என்னளவும் மெய்யே - உளம் பதறிப் 796

    பேசலா மோநீ புறம்விடலா மோதுடுக்காய்
    ஏசலா மோ கொடுத்த தில்லையோ - ராசியமேன் 797

    செட்டிகளுக் கெல்லாம் தெரியாதோ நான் கொடுத்த
    கட்டி வராகன் கணக்குண்டோ - தட்டார் 798

    அறியாரோ ஊரார் அறியாரோ உன் நெஞ்சு
    அறியாதோ தோஷம் அலவோ - மறுபடி உன் 799
-----
791. குட்டுணி : மற்றவரால் குட்டுப்படுபவன்.
792. வாணாள் : உயிர்.
793. நாடலாம் : பார்க்கலாம் ஒரு கை.
794. என் அளவும் மெய்யே : என் வரையும் உண்மையே.
797. புறம் விடலாமோ? தள்ளலாமா . கொடுத்த தில்லையோ : நான் தந்தது ஒன்றுமே இல்லையா. ராகிய மேன்: ரகசியம் என்ன.
798 . செட்டிகள்: வியாபாரிகள்.
-----

    கிட்டவைத்த என் முடிப்போ கேளாய் கிழப்பிணமே
    எட்டுத் தலைமுறைமட டிங்குண்டே - கெட்ட புத்திக் 800

    கந்தலே" என்றேன் " கவட்டில் நுழையடா
    சந்தையின் மாங் கொட்டாய் சரசம்போல் - முந்துன் 801

    வளவிற் சில உடைமை வைத்துவைத்தேன் என்றாய்
    களவாணி யப்பயலே கண்ணைக் கிளறட்டோ 802

    பின் ஆசை வேண்டாம் புறப்பட்டுப் போ" என்றாள்
    அந்நேரம் ஓர்வடுகன் ஆயுதமும் - கன்னப் 803

    பரிசையும் தன் காலிலே பாப்பாசும் போட்டுப்
    பெரியபட்டை நாமமும் தன் பின்னே - ஒருவனுமாய்க் 804

    கக்கத்தில் வாளிடுக்கிக் காச்சுமூச் சென்றுவந்தான்
    பக்கத்தி லேசலுகை பாராட்டி - வெட்கமறந்து 805

    ஆடாத கூத்தெல்லாம் ஆடியே அம்பலத்தில்
    வாடா என் றென்னை வறட்டுத்தோய்ப் - பாடி 806

    மடியைப் பிடித்தாள் மயிரைப் பிடித்தேன்
    தொடையிலடி பட்டதவள் தோற்பை - மடிநழுவித் 807

    தொங்கியகை வாளமென்று தூக்கிச் சுருட்டியெடுத்து
    அங்கையினாற் கக்கத் தடக்கினேன் - மங்கை என்னைத் 808
--------
801. சரசம் போல் : விளையாட்டுப் போவ.
802. வளவு: வீடு. கண்ணைக் கிளறட்டோ : கண்ணைத் தோண்டி எடுத்து விடவா.
803. வடுகன்: தெலுங்கன் :
804. பாப்பாசு: செருப்பு.
805. காச்சு மூச்சு, பேச்சொலி .
806. அம்பலம் : சபை.
808. கைவாளம் என்று : வெற்றிலைப்பை என நினைத்து.
----------

    தள்ளினாள் அஞ்சாறு தாக்கினேன் பொக்கை வாய்க்
    குள்ளி பிடித்தாள் குடுமியை - உள்ளூரார் 809

    50. பஞ்சாயத்துச் சபை புகல் (810-812)

    கூடி விலக்கிவிட்டார் கூகூ என் றம்பலத்தில்
    ஓடினாள் நானும் உடன் சென்றேன் - தாடகைபோற் 810

    போயப் பொழுதே புதுமண்டபத்திலந்தக்
    கோயிற் தலத்தாரைக் கூட்டமிட்டாள் - வாய்விட்டு 811

    அழுதாள் மகளை அருகே நிறுத்தித்
    தொழுதாள் மடைமாறி சொல்வாள் - பழியஞ்சிப் 812

    51. கிழவி அறிவிப்பு (813 -861 )

    பட்டரே! தேவேந்திர பட்டரே! மீனாட்சி
    பட்டரே! காமாட்சி பட்டரே - இட்டநர 813

    சிங்கையரே! நாரணைய தீட்சதரே! செவ்வந்தி
    லிங்கையரே! எங்கள் சொக்கலிங்கையரே! சங்கராச் 814

    சாரியாரே! அனந்த சாஸ்திரியா ரே!கைவிஸ் |
    தாரியா ரே! கோவில் ஸ்தானிகரே! - ஊருக்குள் 815

    ஞாயம் இலையோ நடுவிலையோ பார்ப்பாரப்
    பேய்பிடித்த தேஎனது பெண்பிளையைக் - கோயிலுக்குள் 816

    அஞ்சாறு மாதமாய் ஆடிப்பாடித்திரியச்
    சஞ்சாரம் கண்டீரோ சர்ப்பனையாய் - பஞ்சமா 817

    பாவி இந்தப் பார்ப்பான் பணயம் கொடுத்தொருநாள்
    மேவி இருந்தான் விடிந்தவுடன் - போவானென்று 818
------
809. தாக்கினேன் : கொடுத்தேன்.
810. அம்பலம் : வழக்குரை மன்றம்.
812 . மடைமாறி : புரட்டுக்காரி.
817. சஞ்சாரம்: நடமாட்டம். சர்ப்பனை : வஞ்ச கம். பஞ்சமா : ஐம்பெரும்.
--------

    எண்ணினேன் என்னமருந் திட்டானோ என்னவகை
    பண்ணினா னோமத நூல் பாடமோ - பெண் அணங்கை 819

    வைப்பென்று பேரிட்டான் வட்டிலிற்கஞ் சிக்குமகள்
    உப்பென்று கேளாது உபாயமிட்டான் - கைப்பிடித்துக் 820

    கொண்டானைப் போலக் குடிலமிட்டான் ஆண்பூண்டு
    கண்டாலும் பேசாமல் கட்டிவிட்டான் - ஒண்தொடிக்கு 821

    வாடைப் பொடியிட்டான் வாய்ப்பூட் டெனக்குமிட்டான்
    கோடைச் சுழித்துவைத்துக் கொள்ளையிட்டான் -- மாடாயோர் 822

    பட்டிவைக்கிறேன் பலதொம் பைக்கூட்டாற் சம்பா நெல்
    கட்டிவைக்கிறேன் பொற் கடாரங்கள் - எட்டேழு 823

    தூங்கவைக்கி றேன் என்றான் சோற்றுக்குத் தூங்கவைத்தான்
    ஏங்கவைத்தான் அம்பலத்தில் ஏற்றிவைத்தான் - வீங்கலிவன் 824

    இங்கு வந்த நாள் முதலா ஏது கொடுத் தான் தனக்குக்
    குங்குமச்சம் பா அரிசி கொள்ள என்றும் - பொங்கலுக்குப் 825
-
819. மதநூல் பாடமோ: காமக்கலையை அப் படியே உருப்போட்டவனோ.
821. கொண்டானைப்போல : மணந்துகொண்ட வனைப்போல். குடிலமிட்டான்: வஞ்சித்துவிட்டான்.
822. கோடைச் சுழித்துவைத்து: ஒரு கோடு கிழித்து அதற்குள் எங்களை அடக்கி .
823. பட்டி: கொட்டில் நிறைய. தொம்பைக்கூடு: நெற்குதிர். கடாரம்: கொப்பரை .
824. தூங்க: தொங்க. வீங்கல்: தடியன்.
-------

    பாசிப் பயறென்றும் பாலென்றும் நெய் என்றும்
    தோசைக் குளுந்தென்றும் சோமனென்றும் - பூசுவதுக்கு 826

    ஆனசவ்வா தென்றும் அலகு பாக் கென்றும் ரச
    பானவர்க்கம் என்றும் பகலிரவாய் - ஏனோ 827

    படுக்கைக்கு வாழைப் பழமென்றும் கேட்பான்
    கொடுக்கும் கடன்போற் கொடுத்தேன் - மடக்கொடியாள் 828

    பொட்டொழியக் காதிற் பொகட்டவொரு தோடொழிய
    ஒட்டொழியத் தோற்றோம் உடைமை எலாம் - பட்டிமகன் 829

    மோகினி மந்த்ரம் முழுதுமறி வான்மதனன்
    ஆகமங்கள் எல்லாம் அவதானம் - நாகரிகப் 830

    பொட்டறிவா னாம் தண்டுப் பூச்சறிவா னாம் போகக்
    கட்டிறிவா னாம்ஒருநாள் கைவாளத் தட்டறையிற் 831

    சோதித்தேன் சின்ன மயிர்த் தோலும் நரிக் கொம்பும்வி
    பூதிக் கிழியும் பொடியுமதில் -ஏ துக்கு 832

    உருட்டிவைத்தா னோசில உண்டையும் நான் கண்டேன்
    திருட்டுப் புரட்டனென்று தேர்ந்தேன் - அரைக்காசுத் 833

    தொண்டனிவன் அம்பலத்திற் சோதிப்பார் என்றிங்கே
    கொண்டு வருவானோ கொண்டுவரான் - வண்டனிவன் 834

    மானேர் விழியணங்கு மாதவிடாய் ஆனக்கால்
    தானே விட வருவான் தண்ணீரை - மா நுடமோ 835
-------
827. அலகு பாக்கு: இலைப்பாக்கு.
829. பொகட்ட ஒரு தோடு: போட்ட ஒரு தோடு. ஒட்டொழிய: முழுதும் போகுமாறு.
830. மதன் ஆகமங்கள் எல்லாம் அவதானம் : காமலீலை நூல்கள் அனைத்தும் தலைகீழ்ப்பாடம்.
832. விபூதிக்கிழி: திருநீற்றுப்பை.
835 மானுடமோ : மனிதன் தானா இவன்.
--------

    அல்லும் பகலும் அடைத்தகத வைத்திறவான்
    மெல்லியலைச் சற்றும் வெளியில் விட்டான் - சொல்லுவதென் 836

    பத்து விசையாம் பகலுக்கும் ராத்திரிக்கும்
    பத்து விசைக்கும் என்றன் பாவைபோல் - உத்தரிக்க 837

    ஆர்க்கு முடியுமிவன் ஆனாலும் முன்பிறப்பில்
    ஊர்க்குருவி யோபெண் உடம்பிலே - தீர்க்க ஒண்ணா 838

    நோவொதுங்க விட்டானே நூறுவய துப்பயிர்க்குப்
    பூவொதுங்க விட்டான் பொறுபொறென்று - பாவிமகன் 839

    சொன்னங் கொடுப்பனென்று சொன்னது உண்டல்லாமல்
    என்ன கொடுத்தான் இதுவரைக்கும் - என்மகட்கு 840

    மோகங் கொடுத்தான் முளையரையாப் புக்கொடுத்தான்
    மேகங் கொடுத்தான் மெலியவிட்டான் -- ஆகம் 841

    சிரங்கானாள் தம்பி இட்ட தீ மருந்தால் மாது
    குரங்கானாள் குத்திருமல் கொண்டாள் - மருந்து 842

    கொடுப்பவரார் புண்ணுக்குக் கூசாமற் கிட்டப்
    படுப்பவரார் என்மகளைப் பாவி - கெடுத்தானே 843

    தேட்டுவந்து சேரும் சிறுவயதிற் போக்கறுவான்
    வீட்டிற் புகுந்தான் விடுதிபோல் - நாட்டமாய்க் 844
--------
836. சொல்லுவதென்: என்ன சொல்ல இருக் கிறது.
837. பத்து விசை. பத்துத்தரம். உத்தரித்தல்: ஈடுகொடுத்தல்.
838 . ஊர்க்குருவி, காமத்தொழில் வல்லது போலும். தீர்க்க ஒண்ணா: தீர்க்கமுடியாத.
839. நோவு ஒதுங்க: பிணி தங்க.
840. சொன்னம்: தனம்.
841. ஆகம்: உடம்பு.
844. தேட்டு: சம்பாத்தியம். போக்கறுவான்: போக இடம் அற்றவன்.
விடுதிபோல்: விடுதி மாடு போல.
----------

    கூடவந்தங் கிந்தக் குடுமித் தலையைக் கண்டு
    ஆடவர்கள் எல்லாம் அகன்றுவிட்டார் - தேடாமல் 845

    நித்திரைக்குப் பொன் நூறு நித்தம் கொடுத்துவந்த
    முத்திரைப்பண் டாரமோ மோடிவைத்து - மெத்தக் 846

    கறுப்பானான்; மாலை கட்டிக் கன்னியப்பன் முற்றும்
    வெறுப்பானான்; மெய்காவல் வேலன் - சிறுக்கிமேல் 847

    ஆசைவைத்த வாத்தியார் ஐயர் முறை தப்பிதமாப்
    பாஷைவைத்துப் போனார் பகையானார் - காசுபணம் 848

    மாரி எனச் சொரிந்த மாரியப்பன் சண்டை இட்டு
    வீரிவள விற்போனான் மீள்வானோ-தேரேறப் 849

    பொன்னுடைமை பூட்டிவிட்ட பொன்னப்பன் அந்தி சந்தி
    சன்னையிட்டுப் பார்த்தான் சலித்துவிட்டான் - பின்னை 850

    வரத்துமில்லைத் தானும் வழங்கானோர் சேலை
    தரச்சொன்னாள் இன்றைக்குச் சண்டைக்கு - ஒருப்பட்டான் 851

    வைதான் எனையும் மயிர்பிடித்தான் செய்யாது
    செய்தான் மகளைச் செவியிலே - கையால் 852

    அடித்தான் விலக்கு மவரைமுழங்கையால்
    இடித்தான் கரத்தினால் என்னை - இடுப்பொடியப் 853
------
845. அகன்று விட்டார்: சென்று விட்டனர்.
848. பாஷைவைத்து : வை துவிட்டு.
849. மாரி என: மழை போல சொரிந்த: கொட்டிய வீரி வளவு : வீரி என்னும் வேசி வீடு. தேர் ஏற: தேரிலே ஏறி இருக்க. சுவாமி தேரில் வருங்கால் முறைத்தாசியும் தேரில் ஏறியிருப்பது மரபு.
851. ஒருப்பட்டான் : வந்து விட்டான்.
---------

    போட்டானங் கேமூர்ச்சை போனேன் எழுந்திருந்தேன்
    கேட்டார் சிரிக்க வல்லோ கீர்த்திவைத்தான் - ரூட்டி செய்தது 854

    ஏதென்று நீர் கேட்டால் என்ன சொல்வான் தாய்க்கிழவி
    சூதென்பான் வாரிச் சொரிந்த பொருட்-சேதம் 855

    கணக்குண்டோ என்பான களரிமெச்ச இந்தத்
    துணுக்குண்ணி யோகொடுப்பான் சொர்ணம் - பணக்கவளம்

    மாந்தரிட்டுக் கட்டி வளர்த்தகடாக் கையிலே
    பாய்ந்தகதை மெய்யாய்ப் பலித்ததே - ஈந்ததில்லை 857

    தாயும் மகளும் ஒரு தாமரையில் நீரானோம்
    பேயும் இரங்குமே பெண் என்றால் – தூயவரே 858

    கண்டநடுப் பேசிக் கணக்குப் பார்த்துப்பொருளைத்
    தெண்டித்து வாங்கி இந்தச் சேமனை நீர் - கண்டிப்பா 859

    மெட்டுக் கடக்க வெருட்டிடுமென் றாள் என்ற
    சட்டித் தலைப்பேயைத் தான மர்த்திப் - பட்டன்மார் 860

    நில் என்றார் உன்வழக்கை நிர்ப்பாக்கியாநீயும்
    சொல் என்றார் சொல்லத் தொடங்கினேன் - கல்லும் 861

    52. அவதானி அறிவிப்பு (862-900 )

    கரையுமே மாயமாக் கள்ளிசொன்ன வார்த்தைக்கு
    உரையும் எதிர்வழக்கும் உண்டோ - ஒருநாள் 862
--
854. மூர்ச்சை போனேன்: மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். ரூட்டி : அட்டூழியம்.
856. களரி : அம்பலம். துணுக்குண்ணி : அகப் பட்டதைப் பொறுக்கித் தின்பவன்.
859. கண்டநடு : அறிந்த நியாயம். தெண்டித்து : இவனுக்குத் தண்டனை தந்து. சேமன் : அயோக்கியன்.
860, மெட்டு. கவுரவம்.
862. ஒரு நாள் : ஒரு காலத்தில்.
---------

    நடந்த கதை கேளீர் நடுக்காட்டு நீலி
    தொடர்ந்தாளோர் செட்டிதனைச் சூதாய் - நடந்தவன்கைப் 863

    பத்திரத்தால் தப்பிப் பழையனூர் அம்பலத்தில்
    மொய்த்திருந்த வேளாளர் முன் சென்றாள் - சத்துருப் போல் 864

    ஆலங்காட் டுப்பேய் அதோ வருகு தென்மனையாள்
    கோலங்காட் டிப்பகட்டிக் கொண்டென்றான் - நீலியெனும் 865

    கள்ளி முலைப்பாலும் கண்ணீரும் கால்கழுவக்
    கள்ளியொன்றைப் பிள்ளையாக் கையேந்தி - மெள்ள வந்து 866

    நாட்டிலே கண்டதுண்டோ நல்லோரே! என்னை நடுக்
    காட்டிலே விட்டார் கணவனார் - மீட்டுமவர் 867

    கிட்டவந்தார் நான் பயந்து கெஞ்சிவந்தேன் வாளுருவி
    வெட்டவந்தார் முன்னாள் விதிப்படியோ - முட்ட முட்டப் 868

    பேயென்றார் என்னை இந்தப் பிள்ளைகள்ளிக்கொப்பென்றார்
    தாயென்றார் இல்லை தமர் இல்லை - தூயவரே! 869

    பீர்விட்ட பால் முலைக்கீழ்ப் பிள்ளையைவிட் டானது தான்
    ஆர்கிட்டப் போம் என் றறியலாம் - பாருமென 870

    விட்டாள் சபையிலது மெள்ளத் தவழ்ந்துமடி
    தொட்டேறச் செட்டி துணுக்கென்றான் - ஒட்டாரம் 871
-----
863. நடந்த கதை : நடந்த பழங் கதை.
864. பழையனூர் அம்பலம் : பழையனூர் என்ற ஊர்ச்சபை.
865. கோலம்: வடிவம்.
866. கள்ளி: கள்ளிச்செடி.
869 . தாய் என்றார் இல்லை தமர் இல்லை : எனக் குத் தாயும் இல்லை; சுற்றமும் இல்லை.
871. மடி : வணிகனின் மடியை. துணுக்கு : அச்சக் குறிப்பு. ஓட்டாரம்: பிடிவாதம்.
--------

    பண்ணுகிறான் செட்டி என்றார் பார்த்தவரெல்லாமவள் என்
    கண்ணாணை நீலி என்றான் கால் நடுங்கி -- பெண்ணலது 872

    சத்துருப்பேய் ஆகிச் சதி செய்தால் நாங்களுனக்கு
    இத்தனை பேரும் பழிகாண் என்றுரைத்துப் - பத்திரத்தை 873

    வாங்கி வணிகனையும் மார்க்கமிட்ட நீலியையும்
    பாங் கிலொரு வீட்டில் படுக்கவைத்து - தூங்குமெனப் 874

    பூட்டிக் கதவடைத்துப் போயினார் பேய்மதியோர்
    வாட்டமிட்ட நீலிபழி வாச்சதென்றே - ஊட்டி 875

    பிடித்தாள் வணிகன் பிடரிதனைக் கையால்
    ஒடித்தாள் கடித்தாள் உதிரம் - குடித்தாள் பின் 876

    நீண்டாள் பிளந்தெறிந்தாள் நெஞ்சிற் குடர்மாலை
    பூண்டாள் எழுந்தாள் பொருள்வணிகன் - மாண்டதற்பின் 877

    கண்டார் வழக்கையெந்தக் கற்பனையாற் சற்பனைகள்
    விண்டாலும் பெண் வார்த்தை மெய்யேகாண் - அண்டினர்க்கூறு 878
------
874 . மார்க்கம் இட்ட நீலி: வழக்குரைத்த நீலி என்பவள் . பாங்கில்: பக்கத்தில்.
875. பேய் மதியோர்: பேய்ப்புத்தியுடையார். ஊட்டி : குரல்வளை .
876. உதிரம்: ரத்தம்.
878 . கற்பனையால் சர்ப்பனைகள் விண்டாலும் பெண் வார்த்தை மெய்யே : வஞ்சனையாகக் கற்பித்துச் சொன்னாலும் பெண் பேச்சை உண்மை என்று கொள் வது இயல்பாகி விட்டது.
876 முதல் 878 முடியத் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக வழங்கிவரும் பழையனூர் நீலி என்பவளின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வணிகனைப் பழி வாங்க எண்ணிய நீலியின் கூற்றை நம்பித் தீர்ப்பளித்து வணிகன் உயிரைப் போக்கக் காரணமாக இருந்த சபை யார் அத்தனை பேரும் அப்படியே நெருப்பில் வீழ்ந்து இறந்தனர் என்பது கதை. அதனைச் சேக்கிழார் புரா ணம் பாடிய சைவப் பெரியார் உமாபதி சிவம் பின்வரும் சிறந்த பாடலால் செப்புகின்றார்:
"மாறுகொடு பழையனூர்
      நீலிசெய்த வஞ்சனையால்
      வணிகன் உயிர் இழப்பத் தாங்கள்

கூறிய சொற் பிழையாது
      துணிந்து செந்தீக் குழியில் எழு
      பது பேரும் முழுகிக் கங்கை

ஆறணிசெஞ் சடைத்திருவா
      லங்காட்டப்பர் அண்டமுற
      நிமிர்ந்தாடும் அடியின் கீழ்மைப்

பேறுபெறும் வேளாளர்
      பெருமை எம்மாற் பிரித்தளவிட்டு
      இவளவெனப் பேச லாமோ"
-----

    ஆக்கி நடுக்காட்டில் அடித்துப் பறித்தூரிற்
    கூக்குரலும் இட்டாற்பின் கூறுவதென் - வாய்க்காலினம் 879

    பூண்ட பரி எடுத்துப் போட்டதுமல்லாது குழி
    தோண்டுதென்றால் நானினிமேற் சொல்வானேன் - ஆண்டமறை 880

    அந்தணரே நானிவள் மேல் ஆசை கொண்டேன் மோசமதாய்
    இந்த விதிவருமென் றெண்ணாமல் - முந்த முந்தக் 881

    கூனி மருந்தை இட்டுக் கூறுகொண்டாள் அன்றுமுதல்
    மேனி ஒடுங்கினேன் மெய்மறந்தேன் - நானிவட்கு 882
--------
879. கூக்குரல்: கூச்சல். வாய்க்கலினம்: வாய்க் கடிவாளம்.
880 . குதிரை தூக்கிப்போட்டது மல்லாமல் குழி தோண்டியது போலிருக்கிறது இவள் செயல்.
882. கூ றுகொண்டாள். அவள் பக்கம் என்னை ஆக்கிக்கொண்டு விட்டாள். மேனி : உடல்.
-------

    முன்னாட் கடனை முதலிடுவார் போற்கொடுத்த
    பொன்னோபொற் பூந்துகிலோ பூஷணமோ - சொன்ன செலவு 883

    அத்தனைக்கும் வீணே அழித்ததெல்லாம் யான்கணக்கிட்டு
    எத்தனை யென் றுங்கட்கு இயம்புவேன் - நித்தநித்தம் 884

    வல்லார் தனத்திசொந்த வைப்பென்று பேரெனையும்
    அல்லாமல் போக்குவரத் தாயிரம் பேர் - நல்லவள் போல் 885

    உள்ளதெலாம் மெள்ள உபாயமா வாங்கி எனைத்
    தள்ளிவிடக் கள்ளி தளமெடுத்தாள் - உள்ளுடையப் 886

    பேசினாள் சும்மா புறப்பட்டுப் போடா என்று
    ஏசினாள் நீ கொடுத்த தென் என்றாள் - கூசாமல் 887

    முந்தி மடிபிடித்தாள் முன் தானை யைக்கிழித்தாள்
    சந்தியிலே பூணூல் தனை அறுத்தாள் - இந்தநரைத் 888

    தாட்டானை வந்தென் தலையிலொரு குட்டுப்
    போட்டாளென் குட்டெல்லாம் போச்சையா - மோட்டு 889

    வடுகனை என் மேல் விடுத்தாள் மற்றொருவ னானால்
    விடுவானோ புண்ணியவான் விட்டான் - இடுதூறாய் 890
------
883 . துகில்: ஆடை. பூஷணம்: நகை.
885. வல் ஆர் தனத்தி: சூதுக்காய் போன்ற கொங்கையுடையாள். வைப்பென்றுபேர். எனக்கு அவள் வைப்பாட்டி என்று பெயர் மட்டும்.
886. உபாயமா: தந்திரமாக. தளம் எடுத்தாள் : படையெடுத்தாள். உள் உடைய : மனம் ஒடியும்படியாக
888. முந்தி: விரைந்து முன் தானை : வேட்டி முனை.
889. தாட்டானை : கிழக்குரங்கு. என் குட்டு : எனது மரியாதை.
890. இடு தூறாய்: அவதூறு செய்து.
--------

    அந்தக் கிழவி அலக்கழிக்கப் பார்த்திருந்த
    இந்தக் குமரி ஏன் என்றாளோ - சந்த்ர 891

    கலைவாள் நுதலணங்கே காதலென்மேல் உண்டோ
    இலையோ உனக்கென்றேன் எட்டித் - தலைமேற் 892

    சளக்கென் றடித்தாள் சதிகாரி வீட்டு
    விளக்கில் அடித்தாள் பின் வெள்ளி - முளைக்குமுன்னே 893

    முந்திபோட் டுன் மேலே முக்காலும் ஆசை என்று
    சந்திவீரப்பன் முன்னே தாண்டினாள் - வந்தொருவன் 894

    முத்தம் கொளுவாய்க்கு முன்னொருவன் தான் கொடுத்த
    அத்தம் பலங்கொடுப்பார்க் காணையுண்டோ - வித்தகரே! 895

    மேனியிட்டு நல்ல மெருகுபிள்ளை யார் போலே
    யானிருந்த தீர்க்கம் அறியீரோ? - கூனி எனக்கு 896

    இட்ட மருந் தாலும் இவள் கொடுத்த புண்ணாலும்
    ஓட்டி உலர்ந்த உடலானேன் - மட்டைக்கு 897

    இறுத்ததெல்லாம் போகட்டும் என்பொருள் ஈ தென்று
    மறித்து மொரு பொன்முடிப்பு வைத்தேன் - 898
-----
891. அலக்கழித்தல்: மானத்தை வாங்குதல்.
892. 893, 894. முன் கூடிய காலத்தில் அவள் செய்த சத்தியங்கள்.
895. ஒருவனிடம் முத்தம் கொண்ட வாய்க்கு இன்னொருவன் தன் வாயில் போட்ட வெற்றிலையை இடு வார்க்குச் சத்தியம் ஏது.
896. மெழுகு பிள்ளையார் போலே : மெழுகு தீற் றிய பிள்ளையாரைப் போல வழுவழுப்பாகப் பருமனாக .
897 . இறுத்தது : கொட்டியது. நிறத்த : நிறம் விளங்குகின்ற.
-----

    மாணிக்கம் ஒன்று மணிமுத் தொருறங்கை
    பேணிவைக்கச் சொல்லிவைத்தேன் பெண்ணிடத்தில் ஏணியைவைத்து 899

    ஏறவிட்டு வாங்கி எனை இக்கோலம் கண்ட சுழல்
    மாறிகிட்ட வாங்கி வழங்குவீர் - வேறெனக்குத் 900

    53. தாய்க்கிழவி மறுப்பு (901 - 906)

    தஞ்சமில்லை நீங்களே தஞ்சம் என்றேன் அந்நேரம்
    தொஞ்சமுலைக் காரி துடிதுடிப்பாய் - வஞ்சத் 901

    திருடனிவன் கூத்திச் செலவுக்கும் போக்கி
    ஒருமுடிப்பை வைத்ததுவும் உண்டோ - மருதம் 902

    குடியிருக்கு தே அழகர் கோவில்பதி னெட்டாம்
    படியிருக்கு தேமுதலைப் பள்ளம் - நடு ஞாயம் 903

    சொல்லுதே சிங்கம் பிடாரி துடியாமல்
    கொல்லுதே தீர்த்துக் கொடுக்கிறோம் - அல்ல என்றால் 904

    என்னைக் கிடத்தி எனது மகள் தாண்டமகள்
    தன்னைக் கிடத்திநான் தாண்டுகிறேன் - சொன்னதென்ன 905

    தெள்ளிமையோ முற்பிறப்பிற் சீர்கேடன் என்மகட்குப்
    பிள்ளையோ என்றாள் பெரியோர் முன் - கள்ளிசொல்லைக் 906
--------
899. மாணிக்கம் : சிகப்புக்கல். சிறங்கை : கைப் பிடியளவு :
900. சுழல் மாறி கிட்ட: முடிச்சு அவிழ்க்கி இடம்.
901. தஞ்சம்: புகல் இடம்.
902. மருதம் : மருதாயி.
903. பதினெட்டாம் படி : பதினெட்டாம் படிக் கறுப்பன். முதலைப் பள்ளம் : முதலைப் பள்ளச்சாமி.
906. தெள்ளிமை : சாமர்த்தியம். முன் : முன்பாக .
--------

    54. சபையார் விசாரணை (907-908)

    கேட்டு நகைபுரிந்தார் கிட்ட அழைத் தென்னை அவர்
    கூட்டத்துக் குள் இருத்திக் கூறுவார் - வாட்டமுற்ற 907

    மாதவரே வேசி மருந்திட்டாள் என்றீர் அச்
    சேதி உமக் கெங்கே தெரிந்ததென்றார் - காதல் தந்த 908

    55. மருந்திட்டது அறிந்த வகை கூறல் (909 -918 )

    முத்தனையாள் நேற்றிரவு மூலைக்குள் வைத்து நிறை
    குத்தி அரக் குக்குடித்துக் கூட்டமிட்டிவ் - அத்தைமுதல் 909

    வெள்ளாட்டிகளும் குடித்து வெறிபிடித்துத்
    துள்ளாட்டம் ஆடமங்கை தூஷணித்து - தள்ளித் 910

    தலைக்கடையில் விட்டாளென் தன்னை ஒருத்தன்
    விலக்கெருது போற்புகுந்தான் வீட்டில் - மலக்கமாய்த் 911

    திண்ணைத் தலையிற் படுத்திருந்தேன் குண்டுணிவாய்க்
    கண்ணியங்கே வந்தாள் கலைநெகிழ்த்து - உண்ணும் 912

    அரக்கு வெறியால் அவள் என் மேல் வீழ்ந்து
    குரக்கு வெறி போற்குறியில் குய்யம் - பொருத்தி எனைப் 913

    பண்ணாத கோலமெலாம் பண்ணினாள் ஆர்க்குமொரு
    பெண்ணாசை யானாற் பிடிக்குமே - அண்ணர்களைச் 914

    சம்போகம் செய்வது போல் தன்னாலே ஆவதெலாம்
    அம்பாரும் கண்ணிபார்த் தாகாமல் - வெம்பியே 915
-----
909. அரக்குக் குடித்து : மருந்துண்டு.
910. வெள்ளாட்டி: வேலைக்காரி .
911. மலக்கம் : வருத்தம்.
912. திண்ணைத்தலை: திண்ணை ஓரம். கலை . நெகிழ்த்து ; ஆடையை உரிந்து.
913 . குய்யம் : குறி .
-------

    காட்டு மருந்தும் கடைமருந்தும் ஊன்மருந்தும்
    கூட்டியிட்டால் ஆசை ஒரு கோதைமேல் - நாட்டம் வர 916

    ஒட்டுமோ என்றாள் உடந்தையா கத்திரித்த
    வட்டமுலை யாள்சொல் வகைவகையாற் - சிட்டரே 917

    இந்தவிதம் நானறிந்தேன் என்றுரைத்தேன் கேட்டு நல்ல
    விந்தை எனச் சிரித்தார் மேலோர்கள் - சிந்தைநொந்த 918

    56. சபையார் ஆறுதல் மொழி (919 -933 )

    பூசுரரே வேத புனிதரே அம்பலத்தில்
    தாசியுடன் ஏறத் தகாது காண் - வேசி ஒரு 919

    செய்யமறை வேதியனைச் சென்னியிற்கல் இட்ட கதை
    ஐயரே நீர் தாம் அறியீரோ? – கையில் 920

    திரவியத்தை வாங்கிஉமைச் சீவனுடன் விட்ட
    மரியாதைக் குண்டோ வழக்கு - பெரியோரே

    வேதியராய் உள்ளவர்கள் வேசியரைக் கண்டாக்காற்
    காத வழிவிலகல் காரியங்காண் - ஓதுமறை

    மந்திர நூல் வாயால் மதுவாய் ரசம் கொள்ள
    எந்த வகை துணிவாய் எண்ணினீர் - சிந்தைமயல் 923
--------
917 . ஒட்டுமோ : விடுமா.
918. விந்தை : வேடிக்கை.
922. விலகல்: விலகுதல்.
923. மதுவாய் ரசம்: தேன் வாய் அமுது. 'ஓது மறை மந்திர நூல் வாயால் மதுவாய் ரசங்கொள்ள என்பது 'ஆரணவாயினர் மாடு ஆடு கோழி அடித்து அவித்துப் பாரணம் செய்யப் பழகிக்கொண்டார் மது பானத்திலும் பூரணர் ஆயினர். " என்ற அறிஞர் வேத நாயகம் பிள்ளையின் பாட்டோடு ஒருவாறு பொருந்து வது.
-----

    தீர்த்தவா சிக்குத் திரவியமெல் லாங்கொடுத்துத்
    தீர்த்தவா சிக்கடனைத் தீர்த்துவிட்டீர் - கீர்த்தியா 924

    நாமறியாக் கூத்து நடித்துவிட்டீர் உம்மளவோ
    மாமறையோர்க் கெல்லாம் வசையாச்சே - சேமநிதி உரு

    தன்னைப் பறித்தாள் தரச்சொல்லும் என்றீர் அப்
    பொன்னை இனிக் கேட்கப் போகுமோ - பொன்னைப்போற்

    கூட்டிய செந் தேனெடுத்துக் கொண்டபேர் தம்மை அவர்
    ஓட்டியஈத் தெண்டிப்ப துண்டோகாண் - சூட்டரவின்

    வாய்க்குள் அகப்பட்ட மண்டூக முடியானை
    வாய்க்குள் அகப்பட்ட வான்கரும்பும் - தீக்குள்ளே

    விட்ட நறு நெய்யும் வெயின் முகத்தி லேவெடிக்கப்
    பட்ட கமரில் விட்ட பாற்குழம்பும் - கட்டு புகழ்

    பாங்கினால் தேடாப் பரமலுத்தர் கைப்பொருளும்
    வாங்கினால் இப்பொருளும் வாங்கலாம் - நாங்கள் சொன்ன 930

    புத்திவழி நின்றாற் பொருளரிதோ நீர்கற்ற
    வித்தையிலே செம்பொன் விளையுமே - எத்தும் சுங்க 931
--------
924. தீர்த்தவாசிக்கு: தீர்த்த வகைக்கு.
925. உம் அளவோ: உம் வரைக்குத்தானா. வசை: இகழ்ச்சி. சேமநிதி: பாதுகாப்புப் பொருள்.
926. சூட்டரவு: கொண்டையுடைய பாம்பு.
928. மண்டூகம்: தவளை .
929. கமர்: பிளவு.
930. பரம லுத்தர் : பெரும் லோபிகள்.
931. அரிதோ: அருமையோ. விளையும் : உண் டாகும்.
----------

    பரத்தையருக் கீந்ததிலும் பத்தத் தனையாய்
    வரத்தக்க யோகம் வருங்காண் - கருத்திலே

    எண்ணி இடையாது இருக்கும் ஊர்க் கேகுமென்று
    புண்ணியர் தாம் தம்மனையிற் போயினார் - பெண் அணங்கைப் 933

    57. தான் கலக்கமுற்றுத் தெளிதல் (934-939 )

    பின் நடத்திச் செல்லினவள் பின் அழகைப் பாரேனோ
    முன் நடத்திச் சென்றாள் முழுப் பாவி - நன்னீர்க்கட்டு 934

    ஆகும் குளத்தில் அனுபவித்து வற்றியபின்
    ஏகும் பறவைகள் போல் ஏகினாள் - மோகமுற்ற 935

    என்னைக் கிழவி இடர்செய் தெனைப்பிரியாக்
    கன்னி தனைப்பிரிவு கண்டாளே - இந்நாட்டில்

    மாட்டுமதித் தாய்க்கிழவி மாமிதலை யிற்கல்லைப்
    போட்டுப் புறப்பட்டுப் போவோமோ - நாட்டமுற்ற

    ஊர் எங்கே தோழர் எங்கே உற்றார் எங் கேமனைவி
    யார் எங்கே அட்டாவ தானி எனும் - பேரெங்கே

    நானா விதமுமெண்ணி நட்டாற்றுக் கோரையைப்போல்
    ஆனோம் எனக்கலக்கம் ஆயினேன் - யானே 939

    58. கோயில் வழிபாடு (940 - 947)

    எனைத்தேற்றிக் கொண்டுபோய் எங்கள் சொக்கலிங்கம்
    தனைப்போற்றி என்கவலை சாற்றி - அநுக்கிரகம் 940
------
932 . பத்தத்தனை : பத்துப் பங்கு.
933. இடையாது : வருந்தாமல் இருக்கும் ஊர் : சொந்த ஊர். பெண் அணங்கு: மதனாபிஷேகம்.
934. முழுப் பாவி, தாய்.
937 . மாட்டுமதி : தடிப்புத்தி.
939. நானாவிதம் : பலவகையாக.
940. சாற்றி : சொக்கலிங்கத்திடம் சொல்லி
----------

    பெற்றிரண்டாம் செம்பொற் பிரகாரம் யான்வலமாச்
    சுற்றி வயிரவசு வாமியையும் - முற்றும்

    வணங்கியம்பொற் கம்பம் தனக்கு வடபால்
    இணங்கும் திருவாசற் கிப்பால் - மணங்கமழ்பூ

    மாலை நிரைத்த மணிவாசல் முன் முகப்பிற்
    சேலை நிரைத்த திருவிளக்கும் - பாலரவி

    காந்தி தரநிரைத்துக் கட்டளைக்குக் கட்டளையாய்
    வாய்ந்ததெலாம் சொர்ண மயமாக்கி - தேய்ந்தமுனை

    நெட்டிலைவேற் சங்க நிதிக்கரசன் ஆபரணப்
    பெட்டி திறந்தபிர காசம்போல் - சட்டப் 945

    புழுகு மணக்கப் பொலிந்த அறை கண்டு
    தொழுதேன் அதிசயமும் தோன்றப் - பழுதில்

    மறையோன் மணியம் வரதையன் என் போன் அவ்
    அறைவாசலில் இருந்தான் ஐயா - நெறி யுடையாய்

    59. கூளப்ப நாயக்கன் கட்டளை காண்டல் (948- 950)

    ஆரு பயம் ஈதென்றேன் ஆடலப யன்முல்லைத்
    தாருலவு மேருத் தடம்புயமால்- பாராளும் 948
-----------
942. அம் பொற் கம்பம்: அழகிய தங்கக் கொடி மரம். வடபால்: வடக்குப் பக்கம்.
943 நிரைத்த : வரிசையாகத் தொங்கவிட்ட. சேலை நிரைத்த : திரிகளை வரிசையாகப் போட்ட பாலரவி : இளஞ் சூரியன்.
945. நெட்டிலைவேல் : நீண்ட இலைபோன்றவேல். சங்கநிதிக்கரசன் : குபேரன்.
948. ஆடல் : போர்வல்ல. அபயன் : காப்பாற்று பவன். தார்: மாலை. மேருத் தடம்புயமால் : மகாமேருவை ஒத்த விசாலமான தோளுடைய திருமால் அனையான்.
-----------

    யோக மகராஜன் ஒன்பதூர் வாழ் பெரிய
    நாகமகூ ளேந்த்ர நரபாலன் - தோகைமயில்

    மீனாட்சி அம்மைக்கும் மிக்கசொக்கலிங்கருக்கும்
    தானாட்சி யான உப சாரமா - மேன்மை அபி

    ஷேகமது மாலை சிறப்பமுது தீபமுதல்
    ஆகநடப் பிக்கும் அறை என்றான் - மோகம் நமக்கு 950

    60. இழந்த பொருளுக்கு வருந்தல் (951- 958)

    இட்டணையும் கன்னிக்கு இறைத்ததெல்லாம் இப்படி யோர்
    கட்டளையாச் செய்து பலன் கண்டோமோ - சிட்டர் தொழும் 951

    அங்கயற்கண் அம்மைக்கு அழகு திரு வாச்சியொன்று
    தங்கத்தினாலே சமைத்தோமோ - சங்கரர் சொக் 952

    கையர் மகிழ்ந் தேற அபிஷேக பண்டாரம்
    செய்த்திருத் தேர்போலச் செய்தோமோ -வைபோகம்

    பெற்றபுது மண்டபத்தில் பின்புறமும் முன்புறமும்
    பொற்றகடு கொண்டழுத்திப் போட்டோமோ மற்றுமெங்கள் 955

    மாலழகருக்கு வயிரத்தால் மின்எறிந்தாற்
    போலழகாம் அங்கிபண்ணிப் பூட்டினமோ - சாலை அறம் 956
--------
949. யோக மகராஜன் : நல்ல யோகமுள்ள மன்னர் மன்னன்.
951. மதுமாலை: தேன் பிலிற்றும் மலர் மாலை. சிறப்பமுது: சிறந்த பொங்கல். தீபம்: திருவிளக்கு. நடப் பிக்கும் அறை : நடத்திவைக்கும் அறை. மோகம்: ஆசை.
952 . கன்னி : மதனாபிஷேகம். கருங. அங்கயற்கண் அம்மை: மீனாட்சித்தாய்.
956. சாலை அறம்: ரோடு போடும் தர்மம்.
----------

    செய்தோமோ கோதானம் செய்தோமோ பூதானம்
    செய்தோமோ சத்திரங்கள் செய்தோமோ -- துய்யநிதி

    ஆரிடத்தில் வாங்கி அரும்பலனைத் தேடுவோம்
    பேர்படைத்த பெஞ்சைப்ர தாபன் ஒன்ப - தூர்படைத்த 958

    61. கூளப்ப நாயக்கனிடம் செல்லத் துணிதல் (959 - 965)

    ஐயன் பெரிய நா கையனிடம் செல்வோமோ
    செய்யுமறை வேதியரே செப்புமென்றேன் - எய்து திருப்

    பாற்கடலுக் கேகினவர் பால் குடியா ரோ இதற்கு
    மேற்புத்தி யுங்கேட்க வேணுமோ - சூற்கொண்டு 960

    பெய்யும் மழைக்கு நனையாத பேருமவன்
    கையிலேற் காதவரும் காணேன் நான் - ஐயமின்றிப் 961

    போம் என வெண் ணீறு தந்து பூசிவிட்டார் சந்தனத்தை
    ஆம் எனச் சொல் கேசர் அடிபணிந்து - மாமேவு 962

    கூடலழகர்மதன கோபாலர் பூந்துளவ
    ஏடலரும் தார்வீர ராகவமால் - மாடேறும் 963

    நல்லாண்டவர்யார்க்கும் இம்மையிலே நன்மைதரு
    மல்லாண் டவர் பாதம் வாழ்த்தியே - செல்வ 964

    மடந்தை அங்கயற்கண்ணி வாசல் அறச் சாலை
    கடந்துமறு வீதி கடந்து நடந்துவரப் 965
---
957. கோதானம் : பசுத்தானம். பூ : பூமி.
958. பெஞ்சைப் பிரதாபன்: பெஞ்சை நகர்ப் பிர பலவான்.
961. அவன் கையில் ஏற்காதவர் : அவன் கையி னால் ஏதேனும் வாங்காதவர். ஐயம்: சந்தேகம்.
962 . மா : திருமகள்.
963. கூடல் : மதுரை. ஏடு அலரும் : இதழ் விரிகின்ற.
965. கடந்து : நீங்கி.
--------

    62. மதுரை விட்டுச் செல்லல் ( 966 -974)

    பின் இழுக்கும் ஓர்காலைப் பெண்ணாசை மாமிசினம்
    முன் இழுக்கும் ஒர்காலை மூன்று தரம் - பின்னே 966

    திரும்புவதும் மீள்வதுமாய்ச் சீமாட்டி ஆசைக்
    கரும்பை நினைந்தேன் கருத்தில் - விரும்புமவள் 967

    குன்றிருக்கும் மென்முலைமேற் கூடிக் கலந்த சுகம்
    இன்றொருத்தன் பாங்காய் இருக்குமோ - மன்றலர் தார்ச 968

    சுற்றாட நான்படுத்த தூங்குமஞ்ச மீதிலொரு
    பற்றாப் பயலும் படுப்பானோ - மற்றுமந்தச் 969

    சந்தியிலே மாமி இட்ட சண்டையிலே வந்த ஒரு
    தொந்தி வடுகன் சுகிப்பானோ - முந்திவிளை 970

    ஆடி அநுராகம் பாடிவிளை யாடி நான்
    கூடியதெல்லாம் நினைத்துக் கொள்வாளோ - மேடையின் மேல் 971

    கிண்ணமுலைமேற் பதித்தகிள்ளைப்பார்த்தென்னையும் சற்று
    எண்ணி நெடுமூச் செறிவாளோ - எண்ணிற் 972

    படாதபாடித்தனையும் பட்டேன் என் பாவம்
    இடாதோ பிரமனார்க் கென்றே - தடாமல் 973

    வடக்கு முகக்கோட்டை வாசல் நடுக் கட்டு
    முடக்கில் வரும் போதெனக்கு முன்னே - அடக்கமுள்ள 974

    63. ஞானியையரை மறுபடியும் காண்டல் (975 - 981 )

    மானா பரஞானி ஐயன் மதுரைக்கன்று
    ஏனோவந் தான் என் எதிராக- நானவனைக் 975
----
968. பாங்கு: பக்கம்.
972. கிள்ளு : நகக்குறி அடையாளம்.
975. மானாபரன் : மானத்தையே அணிந்தவன். ஏனோ: எதற்காகவோ.
-----

    காணும் அளவிற் களவாண் டவன்போலென்
    சாணுடம்பும் குன்றி ஒரு சாணானேன் - நாணயமாய் கூசா 976

    மாமி தனைக் கண்ட மருமகள் போல் ஆனேனைச்
    சாமி எனை அன்பாய்த் தழுவினான் - நாமறிய 977

    ஆனைபோ லே இருந்தீர் ஐயரே உம் உடம்பு
    பூனை போ லேஒடுங்கிப் போவானேன் - ஆன இது 978

    என்னவகை என்றான் மற் றேதுவகை நீர்முதலே
    சொன்னவகை கேளாத தோஷவகை - முன் உமது 979

    கையை விட்டு வேசிமகள் கால்பிடிக்கச் சென்றேன் நான்
    மையை இட்ட கண்ணிக்கு மாலானேன் - பைய உண்டை 980

    கூட்டியிட்டாள் கைப்பொருளைக் கொள்ளையிட்டாள்
    கைக்குரங்கா ஆட்டியிட்டாள் இக்கோலம் ஆக்கி இட்டாள் - கேட்டார் 981

    64. ஞானியையர் தேறுதல் கூறல் (982 - 993)

    நகைப்பாரென் றேனிதற்கு நாணமேன் யார்க்கும்
    வகை தப்பா மோசம் வராதோ - பகுத்தறிவாம் 982

    இந்திரன் மெய் யோனிக்கண் ஈரைஞ்ஞ றானதுவும்
    அந்தணனார் சென்னியிலொன் றற்றதுவும் - சுந்தோப் 983

    சுந்தர் மடிந்ததுவுஞ் சுக்ரீவனால் வாலி
    முந்த முடிந்ததுவும் முன் ஒருநாள் - கந்தன் 984

    மரமானதும் இலங்கை வாழ்வேந்தன் சிந்து
    சிரமானதுவும்வச்ர தேகத்து - உரம் படைத்த 985
---------
979 . வகை: காரணம்.
983. மெய்: உடம்பிலே. யோனிக்கண்: யோனி யாகிய கண். ஈர் ஐஞ்ஞறு : ஆயிரம். அந்தணனார் : பிர்மதேவர். சென்னி : தலை.
985. இலங்கை வாழ் வேந்தன் : இராவணன். சிந்து சிரமானதூ தலையற்ற உடலானது.
---------

    கீசகனார் மாண்டதுவும் கேட்டீர் இலையோ பெண்
    ஆசையால் என்ப தறியீரோ - பூசுரரே 986

    கைப்பொருள் போச் சென்று கவலையேன் கல்வி ஒன்றால்
    மெய்ப்பொருளாம் பாவலர்க்கு வேளாண்மை - இப்புவியில் 987

    "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
    மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னனுக்குத் 988

    தன்தேசம் அல்லாற் சிறப்பில்லைக் கற்றோர்க்குச்
    சென்ற இடம் எல்லாம் சிறப்பு' என்று - நன்றிபெற 989

    அவ்வைசொன்ன நீதி அறியீரோ நீரினிமேல்
    இவ்விடம் விட் டுங்களூர்க் கேகுமென்று - தெய்வ 990

    மறைவல்லோன் என்னை வழிவிடுத்துப் பார்த்துத்
    தறுகி நின்றான் என் மேல் தயவால் - நெறியுடனே 991

    ஐம்பதூர்க் கேகி அலைந்து பலன் ஏதென்றே
    ஒன்பதூர்க் கேக ஒருமித்தேன் - முன்பு கருங் 922

    காகம் இடத்திருந்து கைக்கு வலப்புறத்தில்
    ஏகக் கருடன் இடமாக - யோகபலம் 993

    65. திரு ஏடகம் கண்டமை (994 -999)

    இன்றுவந்த தாகும் நமக்கு என்று வந்தேன் ஏடகத்திற்
    சென்றுவந்தே அந்தச் சிவனாரை - அன்று தெரி 994

--------
986. பூசுரர்: இவ்உலகத்தேவர்.
988. மாசு அற: சிக்கு நீங்க. சீர்தூக்கின் : நிறுத்துப்பார்த்தால். மன்னனில்: அரசனை விட.
989. நன்றிபெற: நன்றாக கூகூக. மறைவல்லோன் : வேதம் அறிந்தவன்.
992 ஒருமித்தேன்: முடிவு செய்தேன்.
993.வாசி வலம், கருடன் இடம் நல்ல சகுனம் என்பர்.
994. ஏடகம்: திருவேடகம் என்னும் பாண்டி பதினான்கில் ஒரு ஸ்தலம். அந்தச் சிவனார் : அங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.
-------------

    சித்தேன் என் பூர்வ ஜெனன தோஷங்களெலாம்
    எத்தேசம் கண்ட தென அறியேன் - அத்தலத்தில் 995

    வேம்பு கரும்பாமாம் வெண்மணலோ நீறாமாம்
    தாம்புவிடு நீர் அமிர்தம் தானாமாம் - தேம்பும் 996

    வறியேன் மருந்தின் மயக்கமும் நோ யுந் தீர்த்து
    அறிவாளன் ஆக்கிவிட்டது அவ்வூர் - நெறியுடனே 997

    அற்றைநாள் தங்கி அருணோதயத்தெழுந்து
    மற்றைநாள் மேற்கு வழிகொண்டேன் - வெற்றி புரி 998

    கோடு கொண்ட மால்யானைக் கூளேந்திரன் ஒன்பதூர்
    நாடுகண்டேன் என்கவலை நான்காணேன் - ஆடகவான் 999

    66. நாட்டு வளம் (1000 - 1012)

    எட்டியபூஞ் சோலை எழிற்கமுகும் வாழைகளும்
    கட்டியபூங் காவணமாக் காண்பிக்க - விட்ட 1000

    வருக்கை பலாக்கனியை மந்தி இரு கைக்கொண்டு
    இருக்குமது மத்தளக்கொட் டென்ன - உருக்கும் இசை 1001

--------
995. எத்தேசம் கண்டதென அறியேன். எந்தத் தேசத்தை நாடி ஓடிவிட்டதெனத் தெரிய வில்லை.
996 தாம்பு : கயிறு. தேம்பும் கலக்கமுற்ற.
997 . வறியேன்: வறுமையுற்றேனது. அவ் ஊர் : ஏடகம.
998. அருணோதயம் : காலை ச் செவ்வானத் தோற்றம்.
999. கோடு : தந்தம் மால்: பெரிய ஆடகவான் : பொன் உலகம்.
1000. எட்டிய: அளாவிய . கமுகு : பாக்கு.
1001. வருக்கை பலா ஒரு பொருளன. வருக்கை என்றாலும் பலாவே. மந்தி: குரங்கு.
--------------

    வண்டு தித்தி கூட வரிக்குயில்கள் பண்பாடக்
    கண்டு கிளிகள் கவி பாடத் - தண்டாத 1002

    மன்றலந்தார் அல்லிமலர் வாடைக்காற் றாலடிபட்டு
    ஒன்றொடொன்று தாளம் போல் ஒத்திசைப்ப - நின்றுலகில் 1003

    நீலவன்னத் தோகை நெடுஞ்சிறகை மேல் விரித்துக்
    கோல வனிதையர்போற் கூத்தாடச் - சோலைக்குள் 1004

    ஆங்குந்தி பாயும் அலரோடை வாளை வாள்
    வாங்கிய வீச்சு வளங்காட்டப் - பூங்காவில் 1005

    வந்து நுழைந்து செல்லும் வாளிரவி கூத்துக்குப்
    பந்தம் பிடிக்கும் படி சிறப்ப- முந்த 1006

    முகைத்திருக்கும் முல்லை மலர் மொய்த்திருந்து பார்ப்போர்
    நகைத்திருக்கும் பாவனையாய் நண்ண - மிகுத்த பொறி 1007

    வண்டாடும் செங்காந்தள் வாடையா லே அசைந்து
    கொண்டாடு வோர்கைக் குணம் காட்டக் - கண்டெதிர்புன் 1008

1002 . தித்திகூட : துருத்தி வாத்தியம் வாசிக்க. தண்டாத: குறையாத.
1003. மன்றல்: மணம். அம் தார் : அழகிய மாலை.
1004. நீலவன்னத் தோகை: நீல நிற மயில். கோல வனிதையர் : அழகிய மங்கைமார்.
1005. அலரோடை : பூ மல்கிய நீர் நிலை. வாளை வாள் : மீனாகிய கண்.
1006. இரவி: சூரியன். பந்தம் : தீவர்த்தி . படி : மாதிரி.
1007 : முகைத்திருத்தல் : அரும்பியிருத்தல். மொய்த்து : கூடி. பொறி: புள்ளி.
1008. வாடை: வடகாற்று.
----------

    நாக மலரும் நறுங்கொன்றைப் பூவிதழும்
    த்யாகமெனப் பொன்னுமுத்தும் சிந்தி நிற்பத் - தோகைவிரித்து 1009

    ஆடுகின்ற மஞ்ஞை எதிர் அன்னம் பறந்து வந்து
    போடுகின்ற வெண் தூசு போற்படிய - நீடுவயற் 1010

    சாலிக் கதிர்க்குலையும் தாமரையும் அந்தநறுஞ்
    சோலைக்குள் மன்னர்குழாம்சூழ்ந்த தொக்கும் - சோலைவளம் 1011

    ஏதென்று சொல்வேன் இருதோளும் பூரித்தேன்
    வேதன் தொழுங்கோயில் மேட்டிலே - சீதையுடன் 1012

    67. திம்மராயரை வணங்கல் (1013 -1019)

    மாதவனைக் கண்டேன் என் வல்வினை யெல் லாமுடனே
    ஆதவனைக் கண்ட பனி ஆக்கினேன் - பாதம் 1013

    தொழுது திம்ம ராயா? துதித்துனைப்பா டாமல்
    பழுதிலே வேசையரைப் பன்னி - முழுவதுமுன் 1014

    மீன வடிவை அந்த மின்னார்கள் என்றும் நீ
    ஆனசிங்க ரூபமிடை ஆமென்றும் - மேன்மையுடன் 1015

    மைக்கிசைந்த ரூபத்தை மங்கையார் கூந்தலென்றும்
    கைக்கிசைந்த சங்கைக் கழுத்தென்றும் - திக்கனைத்தும் 1016

---------
1009. நறும்: நல்ல . த்யாகம் : கொடை. தோகை : மயில் இறகு.
1010. மஞ்ஞை : மயில். தூசு : ஆடை .
1011. சாலி: நெல். குழாம் : கூட்டம்.
1012 . பூரித்தேன்: பருத்தேன். வேதன் : பிரமன்.
1013. மாதவன் : திருமால்.
1014. திம்மராயன் : அப்பெருமாள் பெயர். பன்னி : பேசி.
1015. மீனவடிவு: மச்சாவதாரம். சிங்க ரூபம் : நரசிங்க அவதாரம்.
1016. மை : மேகம்.
------------

    தந்திப் புவனமெலாம் தந்தவனைத் தந்தமலர்
    உந்தி திருமுகத்துக் கொப்பென்றும் - சந்ததமும் 1017

    வேயடுத்த நின் இசையை மின்னார் வசனமென்றும்
    நீபடுக்கும் பாயை நிதம்பமென்றும் - வாய்பிதற்றிப் 1018

    பாடினேன் இந்தப் பலன்கண்டேன் சிந்தைமலர்
    சூடினேன் பாதம் தொழுதெழுந்தேன் - ஆடி 1019

    68. நகர்ச் சிறப்பு ( 1020 - 1024)

    அளகாபுரிக்கும் அமராவதிக்கும்
    வளமாம் நவபுரிக்கு வந்தேன் - பளபளெனும் 1020

    செம்பொன் நெடுமதிலும் தேரோடும் விதிகளும்
    கும்ப முடிநிரைத்த கோபுரமும் - அம்பரத்தில் 1021

    ஆற்றுநீர் அள்ளி அருக்கன் உடல் குளிரத்
    தூற்றிய பொன் மாடத் துயிற்கொடியும் - நீற்றொளிசேர் 1022

----------
1017. தந்து இப்புவனமெலாம் எனப்பிரிக்க . தந்த வன்: பிர்மா. அவனைத் தந்த மலர் உந்தியுடையான் திருமால். இது "மூவுலகும் நன்றானை முன் ஈன்றான் " என்ற கம்பர் வாக்கின் வழிவந்தது.
1018 . வேய்: புல்லாங்குழல். படுக்கும் பாய் : அநந் தன் என்னும் பாம்பரசன்.
1019. சிந்தைமலர் : மனத் தாமரை.
1020. அளகாபுரி: குபேரன் ஊர். அமராவதி : இந்திரன் நகர். வளம் ஆம்: செழுமையான . நவபுரி : பாட்டுடைத் தலைவனுடைய நகரம்.
1021. கும்பமுடி : குடச்சிகரம். நிரைத்த : வரிசை யாக வைத்த. அம்பரம் : ஆகாயம்.
1022 . ஆறு : ஆகாய கங்கை . அருக்கன்: சூரியன்.
--------------

    தன்னிறத்தைப் பொன்னிலத்துத் தந்திக்கீந் தந்நிலத்துப்
    பொன்னிறத்தைப் பெற்ற புரிசைகளும் - இன்ன அழகு 1023

    அத்தனையும் கண்டு மகிழ்ந்து ஐயன் அகோபிலனாம்
    கர்த்தனையும் கண்டு கமலத்தாள் - பத்தியுடன் 1024

    69. அரண்மனை காண்டல் (1025 - 1034)

    சேவித்தேன் கோவிலுக்குத் தென்புறத்திற் கற்பகப்பூ
    நீவித்தேன் ஊற்றும் நெடுமதிலும் - மேவுமுகம் 1025

    இட்ட மணிப் பொற்குடங்கள் எட்டுவகைச் செந்திருவின்
    வட்டமுலை போலிலங்கு மாளிகையும் - தொட்டுக் 1026

    குழைக்கின்ற நல்குரவு கொண்டேனை வாவென்று
    அழைக்கின்றது போல் நின் றாட்டம் - தழைக்கின்ற 1027

    சிங்கார வெள்ளைச் செய்தாலும் கண்டி துவே
    எங்கோன் அரண்மனை என் றெய்தினேன் - துங்கப் 1028

    படையால் திருடர் பயத்தால் கொடையால்
    அடையாத வாசலுக்குள் ஆனேன் - தடவிகட 1029
-----
1023. பொன் நிலம் : விண்நாடு. தந்தி: வெள்ளை யானை . புரிசை : கோட்டை. இன்ன: இம்மாதிரியான .
1024. அகோபிலன், அத்திருமால் திருப்பெயர். கமலத்தாள் : அடிக்கமலம்.
1025 . கற்பகப் பூ நீவி : விண்ணிலுள்ள கற்பகப் பூவைத் தடவி.
1026. எட்டுவகைச் செந்திரு : அஷ்ட லெட்சுமி.
1027 . நல்குரவு: வறுமை.
1028 . ஜெய டால்: வெற்றிக் கொடி. எங்கோன்: எந்தலைவன் கூளப்பநாயக்கன். துங்கம்: பரிசுத்தம்.
1029. தடவிகட : விசாலமாகப் பெருமதம் பொழி யும்.
------------

    காந்து கழற்சிறுகண் காரானை நிற்ப அது
    ஏந்துகொம்பைக் கண்டு பகீல் என்று மனம் சோர்ந்து நான் 1030

    வெல்லவிட்ட பூண்முலையாள் மென்முலைமேல் என் மனதைச்
    செல்லவிட்டேன் மெள்ளத் திரும்பினேன் - செல்வமுதல் 1031

    வாசலுக்குள் மன்னர் வருவாரும் போவாரும்
    "ஜே ஜே" எனும் சந்தடிக்கும் சிக்கினேன் - வீசுகின்ற 1032

    பட்டைக்கம் புக்குப் பயந்தெனைப்பின் பற்றி வந்த
    மொட்டைக் கலியன் முடுக்குண்டான் - கிட்டப்போய் 1033

    அத்தினேன் கொல்லரெனை யாரென்றார் அப்பா நான்
    வித்துவான் என்று சொன்னேன் விட்டுவிட்டார் - மொய்த்தமணிப் 1034

    70. கொலுச் சிறப்பு (1035 - 1096)

    பத்தி விலாசப் பவளக்காற் போதிகைப்பூ
    வைத்த கனகமணி மண்டபத்தில் - இத்திகிரி 1035

    வாழலோ கம்புரக்கும் மால் பெரிய நாகேந்த்ர
    கூளபூ பாலன் கொலுவாகத் தோளில் 1036
---------
1030 . காந்து தழற் சிறுகண் : தீ உதிர்க்கும் சிறிய கண். பகீல் என்று : குபீர் என.
1031. வெல்ல விட்ட: என்னை வெல்ல வெளியில்
விட்ட.
1032. சந்தடி : கூட்டம்.
1033, மொட்டைக் கலியன்: வெறுந் தரித்திரம் என்போன். முடுக்குண்டான்: உதைபட்டான்.
1034. அத்தினேன்: எட்டிப் பார்த்தேன். கொல்லர் : எதிரியைத் தொலைக்கவல்ல வாயில் காப் போர்.
1035. இத் திகிரி: இச் சக்கரத்தால்.
1036. புரக்கும்: காக்கும். கொலுவாக: கொலு விருக்க.
------------

    ஜெயமாது கூத்தாடத் திங்கள் முக மேற்பங்
    கயமா து தன்கருணை காட்டக் - கயிலேந்து 1037

    நெய்வடித்த வாள் செவிக்கு நேராக நின்றெனக்கூண்
    எவ்விடத்தை யாசொல் எனக்கேட்பச் - செவ்விபூஞ் 1038

    சந்திர காவித் தலைப்பாகை மேற்கவிகை
    சந்த்ரோ தயகாந்தி தான் காட்ட - சுந்தரமும் 1039

    திக்கனைத்தும் சுற்றுச் சிறகடிக்கொள் கீர்த்தியைப்போல்
    மிக்கிரட்டைப் பாவாடை வீசி நிற்கச் செக்கர் 1040

    அவிரொளிரத் தாங்கி அடுத்திருபால் வீசும்
    கவரி உபய நிறங் காட்டக் - கவலைப்படும் 1041

    சொற்காட்டும் ஒன்னார் தொழுது விழுந்து கெஞ்சிப்
    பற்காட்டும் சென்னி பதித்தமணி - முற்காட்டும் 1042

    சாமித் துரோகரைப்போல் தண்டை முகப்பில் வெற்றிச்
    சோமத் தலைபோலச் சோதிவிட-வீமரண 1043

    தீர துரை மக்கள் ஜெயமந் திரிமாரும்
    வீர தள கர்த்தர்களும் வேந்தர்களும் -- பார்மதிக்கும் 1044
----------
1037 . ஜெயமாது : வெற்றித்திரு. பங்கயமாது : பாக்கியலெட்சுமி.
1038 . நெய்வடித்தவாள் : நெய் தடவிய கூரிய வாள். ஊண் எவ் இடத்து : உணவு எங்கே.
1039. கவிகை: வெண்கொற்றக் குடை. சந்தி ரோதய காந்தி: திங்களின் புறப்பாட்டு ஒளி. அந்தரம் : வான்.
1040. சிறகடிக் கொள் கீர்த்தி : சிறகின் அடியில் பொருந்தும் புகழ். பாவாடை : வீசும் ஒருவகைத் துகில் விருது.
1041. கவரி : சாமரை. உபயம்: இரண்டு .
1042 . ஒன்னார்: எதிரிகள்.
1044. தளகர்த்த ர்: படைத்தலைவர்.
-----------

    தானா பதிகளும்ப்ர சண்ட நியோகிகளும்
    நானா கலை தெரிந்த நாவலரும் - கோன்முறைமைக்கு காசரு 1045

    இந்த வகைக் கிந்தவகை இன்பம் தருவதென்ன
    வந்து பர ராஜர் மநுக்கேட்பச் - செந் திருவாழ் 1046

    துய்ய வதன சந்த்ர சோபைநறுந் தெள்ளமுதைத்
    தையல் நல்லார் செங்கட் சகோரமுண்ணக் - கைகுவித்து 1047

    வாரிட்ட ராணு வரிசையாய் நிற்க எதிர்
    காரிட்ட யானை நின்று காதாட்டத் - தாரிட்டுப் 1048

    பொன்னின் முகப்பூட்டுப் பூட்டி நிரைத்தடில்லி
    வன்னப் பரிகனைத்து வாவி நிற்க-- எந்நேரம் 1040

    கூடும் சன ஊழியக்காரர் கோடி செயந்
    தேடும் கனசேரு வைக்காரர் - சோடிட்டுத் 1050

    தத்தரமாய்க் காலிலிட்ட தண்டைகளும் கேடயமும்
    கத்தியுமாய் வந்து நின்று கைகுவித்துச் - சித்தம் வரச் 1051

    சிங்களத்தை வெட்டிச் சிறைபிடிக்க வோ நாங்கள்
    வங்களத்தி லேகலகம் வைக்கவோ - பங்கமிலா 1052
---------
1045. நானாகலை: பலவித சாஸ்திரம்.
1047 . வதன சந்த்ர சோபை : முக மதி ஒளி. கட் சகோரம் : கண்ணாகிய சகோரப்புள். சகோரம்: நிலவு உண்ணும் பறவை.
1048. வார் இட்ட : கச்சை கட்டிய . ராணு: ராணு வத்தின் கடைக்குறை. தார் : மாலை.
1049. பொன்னின் முகப்பூட்டு : தங்கத்தால் செய்த முக நகை . டில்லி வன்னப் பரி: நிறமான டில்லிக் குதிரை . வாவி : தாவி .
1050. கோடி ஜெயம் : ஏராளமான வெற்றி. சோடு : செருப்பு.
1052 . சிங்களம்: இலங்கை வங்களம்: வங்காளம்.
----------

    வல்லத்துக் கோட்டையைப் போய் வாங்கவோ வாங்காத
    கொல்லத்தைக் கொள்ளையிட்டுக் கொள்ளவோ - மெல்லப்போய்ச் 1053

    சொல்லையா என்னத் துடிமணியக் காரர்பணம்
    செல்லும் வரவும் செவிக்கேற்ற - நெல்லு நிதி 1054

    ஆயக்க மும் செலவும் ஆதாய மும்கழிவும்
    வாயிற் கணக்கர் வந்து வாசிக்கத் - தேயத்துக் 1055

    கோவோலை வாசகத்தைக் கூறுவார் தாம் எழுதி
    ஏவோலைக் கொப்பம் இடச்சொல்லத் - தாவித் 1056

    தகரும் தகரும் தலையும் தலையும் தகரும்
    தகரும் எனத் தாக்க - விகட நட 1057

    மல்லராய் முற்பகையும் அல்லராய்க் கட்டிவிழும்
    மல்லராய்க் கைகுவித்து வாங்கி நிற்ப - வெல்லக் 1058

    குறும்புள்ளாய் அங்கைக் குறும்புள்ளாய்க் கோபக்
    குறும்புள்ளாய்ப் பாய்ந்து குதி கொள்ளப் - பறங்கிகளும் 1059
----------
1053. கொல்லம் : மலையாளத்திலுள்ள ஓர் ஊர்.
1054. செவிக்கேற்ற : காதிலே போட.
1055. ஆயக்கம். மொத்தப் புள்ளி. தேயம்:தேசம்.
1056 . கோ ஓலை : அரசருக்கு எழுதும் ஓலை. ஏவு ஓலை: ஏவுகின்ற சீட்டு. ஒப்பம் : கையெழுத்து.
1057. தகரும் தகரும்: ஆடும் ஆடும். தகரும் தகரும் என : ஒடியும் ஒடியும் என்று சொல்லும்படி .
1058. மல்லர் : மல்யுத்தம் செய்வோர் . கட்டி விழும் மல்லர் : மல்லுக்கட்டி விழுபவர். வெல்ல : வெற்றி கொள்ள .
1059. குறும்புள்ளாய்: சிறுபறவையாய். அங் கைக்கு உ றும் புள்ளாய்: கைக்குள் அடங்குவனவாய். கோபக் குறும்பு உள்ளாய்: சினக்குறும்பு உள்ளன வாய். பறங்கிகள் : வெள்ளைக்காரர்கள்.
------------

    சோனகரும் தந்த துரித வராகனிது
    சீனர்வர விட்ட சிவிகை இது - யானைகட்டி 1060

    மிண்டுகொண்ட மைசூர் மேல் வேட்டை போய் நம்முடைய
    தண்டுகொண்டு வந்த தனங்களிவை - மண்டலிகர் 1061

    இட்ட திரைகள் இவைபராக் கென்று சொல்லிக்
    கட்டியர்கொண் டாடக் கனபேரி-கொட்டரணம் 1062

    மல்லாரி கொட்ட அகோபிலமால் கோயிலார்
    எல்லாரும் ஓர்பால் இனி திருப்ப - நல்லமிர்த 1063

    போஜனாங் கூளபூ பாலனச முத்திரத்து
    மாஜனமும் மன்றாடி மங்கலத்து - மாஜனமும் 1064

    வத்தலக் குண்டு மகாஜனமும் மாற்றூராம்
    அத்தலத்தில் வைதிக நூல் அந்தணரும் - வித்வஜனர் 1065

    பட்சமுறும் எங்கோன் பவிசும் பலன்களும் என்று
    அட்சயமாம் என்றட் சதை வழங்க-ரட்சகனாம் . 1066
-----------
1060. சோனகர் : யவன தேசத்தார். சீனர்: சினத் தார். சிவிகை: பல்லக்கு.
1061. மிண்டுகொண்ட : வலிமை பெற்ற வேட் டைபோய்: வேட்டையாடப் போய். தண்டு: படை. தனம் : பொருள்.
1062. திறை: கப்பம் கட்டியர் : கட்டியங் கூறு வோர். கன பேரி: கனத்த முரசு.
கலசங. மல்லாரி: ஒர் வகைவாத்தியக்கருவி. ஓர்பால் : ஒரு புறம்.
1064. கூளபூபாலன் சமுத்திரத்து மாஜனமும் : கூளப்பநாயக்கனது கடலனைய உறவினர்களும்.
1065. வித்வசனர் : படிப்பாளிகள்.
1066. பவிசு: பெருமை. அட்சயமாம்: வாழட்டும். ரட்சகன்: காக்கின்றவன்.
---------

    கோரசிங்க ரூபஉக்ர கோதண்ட பாணியைப்போல்
    வீரசிங் காதனத்தில் வீற்றிருந்தான் - சூரியன்முன் 1067

    பங்கயம்போ லானேன் பரபரெனச் சென்றெதிரே
    செங்கைதனை ஏந்திச் செயமென்றேன் - இங்கே 1068

    இருமென்றென் ஐயன் இடங்காட்டப் பெற்றேன்
    அருகிலிருந் தேன்மகிழ்ச்சி ஆனேன் - கருணைபுரிந்து 1069

    என்மேல் விழிவைத் தான் எங்கோன் குறிப்பறிந்து
    பொன்மேவும் பெஞ்சைப் புரந்தரா! - மன்னா 1070

    நிகளங்கா! மல்லா! நிலைக்கோட்டை ராயா!
    அகளங்கா! ஆளுக் கபிமா! - நகைமுகப்ர 1071

    தாபா! ககள கோ தண்டா ! விருது பண்டு
    பாபா! வலக்கவம்ச பாக்யகுல - தீபா! 1072

    சுமுகப்ர முகலளித சுகுணகுண ரவியனைய
    சமுகநகை முக்கமல தளநயனா! - அமிர்தரச 1073

----
1067. கோர சிங்க ரூபம்: அச்சுறுத்தும் நரசிம்ம வடிவம். கோதண்டபாணி: கோதண்டம் என்னும் பெயர் கொண்ட வில்லைக் கையிலே ஏந்திய தசர த ராமன்.
1068. பங்கயம்: தாமரை. பரபரென : விரைவாக ஏந்தி : தூக்கி. ஜெயம்: வெற்றி.
1070. விழிவைத்தான்: கண்பார்த்தான். புரந் தரன்: இந்திரன்.
1071. ராயன் : அரசன். அகளங்கன் : களங்க மற்றவன். அபிமன்: அபிமன்யூ என்னும் அழகன்.
1072 . வலக்க வம்சம், பாடல் தலைவனுடைய குலம்.
1073. ரவி: சூரியன். நயனம் : கண்.
------------

    மதுரவித வசனமிர்த மதமெழுது புயசயில
    சதுர தட கடகரட சமரகரி! - உதயகெரு 1074

    விதநடன பரிநகுல விகடமிகு மகுடமுடி
    அதிர அடி வருடுசரண் அடலபய ! - அதுலகுல! 1075

    சந்திர சிந்துர சந்தன குங்கும
    மந்தர கொங்கை மடந்தையர் - சுந்தர! 1076

    கல்விப் பெருங்கடலே! கற்பகக்கன் றே! கமலச்
    செல்விக்கு வாய்த்த திரவியமே! - வெல்லுமதக் 1077

    கூன்கோட்டு யானைக் குறுகார் எனுங்காட்டு
    மான் கூட்டம் சாடும் வரிப்புலியே! - மீன் கூட்டம் 1078

    பாதிக் குறநிவந்த பன்றிமலைச் சாரலிலே
    ஆதிக்கம் செய்திருக்கும் ஆளியே! - ஓதுபகை 1079
--------
1074. வசன அமிர்தம் : இனிய பேச்சு. புய சயிலம: தோள் மலை. சதுரன் : கெட்டிக்காரன். தடம் : பெரிய. கடம் : மதம். கரடம் : மதம்பாய் சுவடு . சமரம் : போர். கரி : யானை.
1074, 1075. கெருவிதம்: பெருமிதம். நடன பரி நகுலன் : நாட்டியக் குதிரைத் தலைவன். அதிர: அதிர்ச்சி பெற. அடல் : வலிமை. அபயன் : அச்சமற்றவன். அது லன்: ஒப்பற்றவன். குல: நல்ல குலத்திலே பிறந்தவனே.
1076. மந்தரம்: மந்தரமலை.
1077 . கற்பகக் கன்று: கொடையில் கற்பக தரு வின் பிள்ளை. கமலச் செல்வி : தாமரை மேவு திருமகள்.
1078 . கூன் கோடு: வளைந்த தந்தம். குறுகார்: அடையாதவர். சாடுதல்: மோதுதல். வரிப்புலி : கோடு கள் பெற்ற புலி.
1079. பாதிக்கு உற: பாதிக்குப் பொருந்த. பன்றிமலை: பாடல் தலைவனுடைய வராக கிரி. ஆதிக்கம் : அதிகாரம். ஆளி : சிங்கம்.
------------

    வீரமண்ட லீகரெனும் வேழங் களை விழுங்கும்
    பாரகண்ட பேரண்டப் பட்சியே! - சேரலராய் 1080

    அண்டிப் பொருவோர் அரிக்குலத்தை வாளுகிராம்
    தண்டிற் கிழிக்கும் சரபமே! - திண்டிறல்வேற் 1081

    போஜேந்த்ரா! சக்ர புவனேந்த்ரா! ராஜாதி
    ராஜேந்த்ரா! தீனஜன ரட்சகா!- வீசுதிரை 1082

    ஆற்றிலே நாலும் அது தினமும் பொன்னூ றும்
    ஊற்றிலே ஆறும் உடையானே! - ஏற்றமுள்ள 1083

    பத்தூாஒவ் வொன்றாப் படைக்கும் தலையூராம்
    நத்தூரும் ஒன்பதூர் நாயகனே!- மொய்த்த கடல் 1084

    ஒப்பத் திரண்டதளம் உள்ள சதுர் ஊடியங்கள்
    முப்பத் திரண்டு பெற்ற மொய்ம்பனே! - இப்புவியில் 1085
---------
1080. மண்டலீகர் : மண்டலம் ஆள் மன்னர். வேழம் : யானை. பாரகண்டம் : பெரிய கழுத்து. பேரண்டப் பட்சி என்பது யானையை விழுங்கும் வலிமை வாய்ந்த புள். சேரலர் : நண்ணாதார்.
1081. பொருவோர் : போர் செய்வோர் . அரிக் குலம் : சிம்மக் கூட்டம். வாள் உகிராம் தண்டு : ஒளிமிக்க நகமாகிய கதை. சரபம், சிங்கத்தையும் கொல்ல வல்ல எட்டுக் கால்கள் பெற்ற ஒரு பறவை என்ப.
1082 . தீன ஜன ரட்சகன் : ஏழைகள் பங்கன்.
1083 . நான்கு ஆறுகளும் ஆறு நீர் ஓடைகளும் உடையான்.
1084. தலையூர் : தலை நகரம். நத்து ஊர் : சங்கு தவழும்.
1085. தளம்: சேனை . சதுர் ஊடியங்கள் : தேர் யானை குதிரை காலாள் ஆகிய நால்வகைப்படை. மொய்ம்பு: வலிமை.
--------------

    அண்டலரை வெல்லும் அறுபத்து நாலு மன்னர்
    கண்டசெய துங்கரண கங்கணனே!- மிண்டுகொண்டு 1086

    சண்டைக்கு டில்லித் தளம்வந்த தானாலும்
    கண்டுமலை ஏறாத கண்டனே! - தண்ட ஜெய 1087

    தண்டனே! காரியத் தண்டனே சூகரவே
    தண்டனே! வீரியகோ தண்டனே! - தண்தளவத் 1088

    தாரனே! சற்குணவிஸ் தாரனே! கற்றவர்க்கு
    தாரனே! அற்றவர்க்கா தாரனே! - ஆரழுத 1089

    சோமனே! அன்னசத்ர சோமனே! கற்பகப்பூங்
    காமனே ! விற்கரும்புக் காமனே! - நாமகள் சேர் 1090

    பெஞ்சை நகர்ச் சிந்தமனற் பேறே! சரத்கால
    மஞ்சைநிக ருத்தியாக வள்ளலே!- அஞ்சித் 1091

    தொழுதுங்க வேந்தருக்குத் துள்ளுசீட் டொப்பம்
    எழுதும் பெரியநா கேந்த்ரா ! - எளியோர் 1092
--------
1086. அண்டலர் : பொருந்தாதார் .
1087 . டில்லிப்படை போருக்கு எழுந்து வந்தால் அதைக் கண்டதும் மலையிலே ஏறிக்கொள்வது அந்நா ளில் பெரிதும் இருந்த ஓர் நிலை. இப்பாட்டுடைத் தலை வன் பயந்து மலை ஏற மாட்டானாம்.
1088 சூகரவே தண்டம். பன்றி மலைத்தொடர். தளவம்: முல்லை .
1089. தார் : மாலை. கற்றவர்க்கு உதாரன்: படித்த வர்க்கு நிறையக் கொடுப்பவன். அற்றவர்க்கு ஆதாரன்: ஏழைகட்குப் பற்றுக்கோடானவன்.
1091. நற்பேறு: நல்ல பாக்கியம். சரத்கால மஞ்சு: ஐப்பசி, கார்த்திகை மாதங்களாகிய கூதிர்காலத்து மேகம்.
1092 . துங்கம் : பரிசுத்தம். துள்ளு சீட்டு : அபய ஓலை.
------------

    கரங்கள் விரித்தேற்கக் கன்றுகண்ட ஆப்போல்
    இரங்கும் பெரியநா கேந்த்ரா !- வரங்கள் 1093

    செருக்குமத ரூபம்போல் சிங்காசனத்தில்
    இருக்கும் பெரியநா கேந்த்ரா!- பருக்கும் 1094

    மழைக்கும் கம்ப மதயானை வீரிட்டு
    அழைக்கும் பெரியநா கையா!- தழைத்த புகழ்க் 1095

    கூள மகீபன் குமாரதுரைச் சிந்தமனாம்
    வாளபய சோதரவ சீகரனே ! - நீள்சகல 1096

    71. வித்தை அரங்கேற்றல் (1097 -1101)

    சம்பனா! என்று தமிழ்பாடி னேன் தமிழிற்
    கம்பனாம் என்றார் கவிராஜர் - சொம்புபெறக் 1097

    கட்டாக நூறு கவிசொன்னேன் அங்கே என்
    அட்டாவ தானம் அரங்கேற்றினேன் - அட்டாங்க 1098

    யோகக்கா வித்துகிலோர் உள்ளம் மகிழ்ந்தமிர்த
    பாகம் எனச் சொல்லப் பண்ணினேன் - த்யாகநிதி 1099
-------------
1092. ஆ: பசு.
1094. மதரூபம் : மன்மத வடிவம்.
1095. மழைக் கும்ப கம்பமத யானை : குடம் போன்ற மத்தகம் உடைய கட்டுத்தறியை முறிக்கும் மழை போல் மதம் சொரியும் யானை. வீரிட்டு: கத்தி. இக்கண்ணிக்குத் திருமாலின் அவதாரமே என்பது கருத்து.
1096. குமார துரை: குமார ராஜா; சிந்தம் னின் சகோதர்.
1097 . கம்பன் ஆம் என்றார் கவிராஜர் : என்னைக் கம்பன் என்று கூறினர் அங்குள்ள கவிராயர்கள். சொம்பு : எழில்.
1099 காவி அணிந்த யோகிகள் கூட மன மகிழ்ந்து தேவாமிர்தம் என்று சொல்லச் செய்தேன். த்யாக நிதி: கொடை வள்ளல்.
---------------

    என்னும் பெரியநா கேந்திரன் அகளங்க
    மன்னன் திருவாய் மலர்ந்தருளி - என்னைக் 1100

    கவிச்சக்ரவர்த்தி என்றான் காவலா நீயே
    புவிச்சக்ரவர்த்தி எனப் போற்றச் - செவிக்கு நல்ல 1101

    72. வெகுமதி பெற்றமை ( 1102 -1137)

    முத்துக் கடுக்கனொடு முன்கை தனக்கிணங்கும்
    அத்த கடகம்ரத்ன ஆரமணிக் - கொத்துச் 1102

    சரப்பணிதும் பிப்பதக்கன் சாலுவை பொற் காந்தி
    பரப்பியிடு பொற்சரிகைப் பாகை - தரித்தருள் 1103

    தாம்பரங்கள் ஈந்தான் தருப்போல் அவனெனக்கங்கு
    ஆம்பரிசில் ஈயும் அதற்கு முன்னே - மேம்படு பேர் 1104

    தீட்டு புகழ்க் கல்லூர்வாழ் திப்பணவேள் என் தலைக்குச்
    சூட்டஒரு முத்துத் துராயீந்தான் - தாட்டி கோத் 1105

    தண்டனெனும் கூளேந்திரன் தம்பியாம் சிந்தாமனோர்
    கண்டசரம் ஈந்தான் கழுத்துக்குக் கொண்டலெனும் 1106
---------
1100. நாகேந்திரன், மன்னன் : கூளப்பநாயக்கன்.
1101. கவிச் சக்ரவர்த்தி: கவி மன்னர்க்கெல்லாம் மன்னன். புவிச் சக்ரவர்த்தி : புவி வேந்தர்க் கெல்லாம் வேந்தன்.
1102. அத்த கடகம் : கைக்கடகம் என்னும் அணி. ஆரம் : மாலை.
1103. தும்பிப்பதக்கன் : யானை முகப்பதக்கன். சாலுவை: கம்பளப்போர்வை. சரிகைப்பாகை : கெண் டைத் தலைப்பாகை.
1104. மேம்படு பேர்: சபையிலுள்ள மேலோர்.
1106. கொண்டல்: மேகம்.
------------

    முத்துராயன் கொடுத்தான் முன்னணிசு மாக்கியணன்
    பத்துவரா கன்பெறவோர் பாகீந்தான் - சித்தசனாம் 1107

    கங்கப்பன் கைக்கொலுசு நல்கினான் மோதிரமென்
    செங்கைவிரலுக்கணிந்தான் சிந்தமவேள் - தங்கவளை 1108

    ராஜகோபாலையன் நல்கினான் சீர்கொள் முத்துப்
    போஜனொரு முத்துவடம் பூட்டினான் -- பேசுபுகழ்ச் 1109

    சாந்தபூ பறிகொடுத்தான் சாலுவைநல் நாகரத்னம்
    ஈந்தான் கொடிநாகன் என்கையில் - வாய்ந்த புகழ் 1110

    நல்லையனான் நச்சும் நடைப்பரிசந் தான்உலகம்
    சொல்லும் பணிக்காயன் சொக்கலிங்கம் - மல்லிகைப்பூத் 1111

    தையலங்கி ஒன்றெனக்குத் தந்தான் பெரியதம்பி
    துய்யவெள்ளிக் குண் டொடு சொக் காய் தந்தான் - பொய்யுரையாக் 1112

    கூளக் கணக்கன்மணி குண்டலந்தந் தானிரண்டு
    தோளிற் குணுக்களவாய்த் தூங்கவே - வேளைக்கு 1113

    உதவியதம் பான் கொடுத்தான் ஒன்பது பொன் பட்டுச்
    சதுரன்கைலாச தயாளு - புதுவயிரத் 1114

    தண்டோட்டி தந்தான் சவாதுப் பரணி தந்தான்
    கொண்ட சொக்க லிங்கன் கொடுத்தானோர் - முண்டாசு 1115

    சட்டமிடும் சொக்கலிங்கன் தந்தான் கணையாழி
    கட்டழகன் பாசிபந்து கட்டினான் - பட்டை 1116
------
1107 . பத்துவராகன் : முப்பத்தைந்து ரூபாய். பாகு : தலைப்பாகை. சித்தசன்: மதன்.
1111. நச்சும்: விரும்பும். பரி : குதிரை.
1112. அங்கி: சட்டை. வெள்ளிக் குண்டொடு சொக்காய்: வெள்ளிப் பொத்தானுடன் சட்டை.
1114. மணிக்குண்டலம் : ரத்னக் குழை.
1116 . பரணி: டப்பி. கககக. கணையாழி : மோதிரம்,
--------------

    அரைஞாண் தந் தான் பொன் அரைச்சட்டை தந்தான்
    வரிசையாம் ராம மகிபன் - முருகுமுத்துச் 1117

    சின்னான் உதவினான் தீரன் வடகூளன்
    பொன்னால் விருது தண்டை பூட்டினான் - மின் எறிக்கும் 1118

    தாயித்து ராமனன்று தந்தான் திருமலையன்
    நேயத்தாற் பொற்பூ நிசாறு தந்தான் - தூய துணைக் 1119

    காமனீந் தான்நற் கறவைஐந்து கண்டையிட்ட
    சோமனீந் தான் அரைக்குச் சோடாகச - சோமனெ னும் 1120

    சோலை சிவப்புத்துப் பட்டிதந் தான்மாடன்
    பாலுக்குக் காராம் பசு தந்தான் - மால் குழந்தை 1121

    வேலன் எனக்கிரண்டு வெள்ளை எரு தாய்மேகம்
    போலக் கொடுத்தோட்டிப் போ என்றான் - சீலிபூ 1122

    பாலன் கொடுத்தானோர் பச்சைவடம் சோடங்கி
    நாலு முடிப்பு ரொக்கம் நல்கினான் - சீலனெனும் 1123

    நல்லமரு தன் கொடுத்தான் நல்ல குதிரைமறி
    கல்விதெரி சிக்கணனென் கண்குளிரக் - கொல்லத்துப் 1124

    பச்சைக்க பாய் தந்தான் பாரியொத்த காமியங்கே
    மெச்சி எனக்கிரண்டு மேதி தந்தான் - உச்சிதமாக் 1125
-----------
1117. அரைச்சட்டை : சிறு காற்சட்டை. ககக அ. மின் எறிக்கும் : ஒளி வீசுகின்ற .
1118. பொற்பூ நிசாறு: அழகிய பூவைத்துத் தைத்த நீண்ட காற்சட்டை.
1120. கறவை: பசு . கண்டை இட்ட சோமன் : கண்டை வேட்டி.
1122 . வெள்ளை எருது: வெள்ளைக்காளை .
1123. பச்சை வடம் : பச்சை மாலை.
1124. மறி: மான்.
1125. கபாய்: அங்கி. மேதி: எருமை. உச்சிதம்: உயர்வானதாக.
------------

    கூதலுக்குப் போர்வை தந்தான் கொண்டபூ பன்உலக
    நாதன் சகலாத்து நல்கினான் - மாதங்கக் 1126

    கட்டி கொடுத்தனன்நா கக்கவுண் டன் குருவா
    ரெட்டி கொடுத் தானதற்கு ரெட்டிப்பு - தட்டிலிட்டு 1127

    நாழிமுத்தை முத்தையவேள் நல்கவர தப்பனொரு
    தாழிவில்லை போட்டான் சமுகத்தில் - வாழி என 1128

    ரங்கையனீந் தானங்கோர் ரத்னகண்டிராமையனார்
    துங்கன் கொடுத்தான் பொன் தொண்ணூறு - திங்கள் முக 1129

    வீரப் பெருமாள் விரலுக்கு வச்சிரக்கல்
    சேருற்ற பொன்மோ திரந் தந்தான் - கோர 1130

    அநுமத் துவசர் அருங்கருட டாலர்
    கனவிருது சிங்கடாற் காரர் - என வாழும் 1131

    எல்லாரும் செம்பொன் இறைத்தாரை ஆன்னஞ்சூழ்
    நல்லாச னன் பெரிய நாகேந்திரன் - செல்வத் 1132

    துரை எனக்கங் காட்டினான் சொர்ணாபி ஷேகம்
    வரை எனத்தந் தானோர் மதமா - தரளக் 1133
-------
1126. மாதங்கம்: பெருமை வாய்ந்த தங்கம்.
1127 . ரெட்டிப்பு : இரண்டு மடங்கு.
1128 . நாழி : ஒருபடி.
1129. ரத்ன கண்டி: மணி மாலை.
1130 . வச்ரக்கல்: வைரம்.
1131. அநுமத்துவசர் : குரங்குக் கொடியாளர். கருடடாலர் : கருடக்கொடியினர். சிங்க டாற்காரர்: சிங்கக் கொடியினர்.
1132 . இறைத்தார்: வாரிச் சொரிந்தனர். ஐ ஆன னம் சூழ் நல் ஆசனன் : ஐந்து முகங்கொண்ட நல்ல இருக்கையுடையான்.
1133. ஆட்டினான் சொர்ணாபிஷேகம் : தங்கத்தி னால் என்னை முழுக்காட்டினான். வரை எனத் தந்தான் ஓர் மதமா : மலைபோல ஒரு மதயானையைத் தந்தான். தரளம் : முத்து .
------------

    கவிகை தந்தான் வெள்ளைக் கவரி தந்தான் செம்பொற்
    சிவிகை தந்தான் காந்தி சிறந்த - ரவிபோல் 1134

    இருட்டகற்றும் தீவட்டி ஈந்தான் மதிபோற்
    சுருட்டி தந்தான் தந்தான் துவஜம் -- பெருத்த சில 1135

    ஊர் தந்தான் உப்பளிக்கை ஊர்தோறும் பண்ணைவைக்க
    ஏர் தந்தான் வாழ்வுக்கு இடந் தந்தான் – ஆர்தந்தார் 1136

    இந்தத் தியாகம் இவனைப்போல் வாவி அர
    விந்தத்தி யாகவந்த மெல்லியலே! - இந்த விதம் 1137

    73. விறலி விடு தூது (1138 -1144 )

    என்செய்தி யாதிதொடர்ந் தெல்லாம் உனக்குரைத்தேன்
    பொன் செய்த எம் மூர்க்குப் போயினி நீ - மின்செய்த 1138

    சிற்றிடையாள் ஆகிய என் தேவியாரைக்கண்டு
    நற்றிறம்சேர் வீணை நயம்பாடி - மற்றவளுக்கு 1139

------
1134 . கவிகை: குடை, கவரி: சாமரம். செம் பொற் சிவிகை: தங்கப் பல்லக்கு. காந்தி சிறந்த : ஒவி மிகுந்த . ரவி: சூரியன்.
1135. சுருட்டி : விருதுகளுள் ஒன்று. துவஜம் : கொடி .
1136. உம்பளிக்கை : மானிய நிலம். வாழ்வுக்கு இடம் தந்தான் : இவ் உலகில் எனக்கும் ஒரு சிறந்த வாழ் வுக்கு இடம் உண்டாக்கினான்.
1137 . தியாகம் : கொடை. வாவி அரவிந்தத்தி யாக வந்த மெல்லியலே: தடாகத்திலுள்ள அரவிந்தம் என்னும் தாமரையுறை திருவைப்போல இருக்கும் மென்மை வாய்ந்தவளே . இது விறலியை விளித்துச் சொல்லுவது.
1138. ஆதி: முதலியன.
1139. என் தேவியாரைக்கண்டு: என் மனைவியா ரைப் பார்த்து . வீணை நயம்பாடி: வீணாகானத்தை அவள் காதில் ஏற்றி.
--------------

    என் குறையை மெள்ள இயம்பி எதிர் சொல்லுமந்தப்
    பொன் குறையும் கேட்டேல் போக்கியே - நன்குறுமென் 1140

    ஆசைமனை யாட்டி தனக்கு ஐயங்கார் இன்னுமொரு
    வேசைமனைக் கேகுவரோ விட்டெனவால் - ஓசனையும் 1141

    கொள்ளாமல் என் சபதம் கூறி முன்னைக் குற்றம் நினைந்து
    எள்ளாமல் கற்பின் இயல்போதி - உள்ளாரப் 1142

    பண்பாடி உட்காம பாணம் படச்செய்து
    நண்பாடி என் வரவை நன்கேற்றுக் - கண்பார்க்க 1143

    ஓகையாய் முன்போல் உறவாக்கச் செல்வாழி
    தோகை விறலிநீ தூது! 1144
-----
1140. மெள்ள இயம் மெதுவாகச் சொல்லி. ஊடல்: பிணக்கு.
1141. ஐயங்கார் : உன் கணவனார். ஆல்: அசை. ஓசனை : யோசனை.
1142 . எள்ளாமல்: இகழாமல். கற்பின் இயல்பு ஓதி : கற்பின் தன்மையை அவளுக்கு எடுத்துச் சொல்லி. உள் ஆர: மனம் நிறைந்து மகிழ .
1143. பண்பாடி : இசைபாடி. உட்காமபாணம் படச்செய்து : உள்ளே மதன்கணை பொருந்துமாறு ஆக்கி. நண்பு ஆடி: நட்புக்கொண்டு. என் வரவை : எனது வருகையை. நன்கு ஏற்றுக் கண்பார்க்க: நன்றாக ஏற்றுக்கொண்டு கடைக்கண் செலுத்த .
1144 . ஓகையாய் : மகிழ்ச்சியாக. முன்போல் உறவு ஆக்க : முன்னைப்போல உறவுகொள்ள . தோகை விறலி நீ செல் தூது : மயிலனைய விறலியே நீ தூது செல்க! வாழி: வாழ்வாயாக!

விறலி விடு தூது முற்றும்

------------

Comments