Koṭi mullai


நாட்டுப் பாடல்கள்

Back

கொடி முல்லை (கவிதை)
கவிஞர் வாணிதாசன்



கொடி முல்லை (கவிதை)
கவிஞர் வாணிதாசன்



கொடி முல்லை (கவிதை)
கவிஞர் வாணிதாசன்

Source:
கொடி முல்லை (கவிதை)
கவிஞர் வாணிதாசன்
வாணிதாசன் பதிப்பகம்
3. காமராஜர் தெரு, இந்திரா நகர், முதலியார் பேட்டை
புதுச்சேரி – 605004
விலை ரூ. 10 .00
முதற் பதிப்பு : அக்டோபர், 1950 இரண்டாம் பதிப்பு : ஏப்ரல், 1958
மூன்றாம் பதிப்பு : ஜூன், 1983 நான்காம் பதிப்பு : ஆகஸ்டு 1986
ஐந்தாம் பதிப்பு : 1993 ஆறாம் பதிப்பு : ஏப்ரல் 1995
உரிமை ஆசிரியருக்கே
அச்சிட்டோர் : ஸ்ரீ கோமதி அச்சகம்
64, மல்லன் பொன்னப்பன் தெரு, சென்னை 5, போன் 844554
------
இரண்டாம் பதிப்புக்கு - கவிஞரின் முன்னுரை

நானும், என் நண்பர் சென்னை முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் திருமலை செங்கல்வராயன் அவர்களும் மாமல்லபுரம் சென்றிருந்தோம்.

கலையும், மலையும், கத்து கடலும் என் கருத்தைக் கவர்ந்தன; கற்பனையைத் தூண்டின் அதன் விளைவே இச்சிறு நூல்.

மக்கள் மன்றத்தில் இதை வைக்கிறேன். மதிப்பிட வேண்டியது அவர்கள் பொறுப்பு.

முதற் பதிப்பைப் புதுக்கோட்டைச் செந்தமிழ் நிலையத்தார் வெளியிட்டனர். இப்பதிப்பைச் சென்னை மலர் நிலையத்தார் வெளியிட்டுள்ளனர். இருவர்க்கும் என் நன்றி! - வாணிதாசன்

மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பதிப்புகள் பாரி நிலைய வெளியீடாக வந்துள்ளன. வளமார் தமிழே வாயுரைக்கும் சொல்லெல்லாமாகத் திகழ்ந்தவர் வாணி. அவர் 'கொடி முல்லை ' தமிழ் நெஞ்சங்களிலே பற்றிப் படர்ந்து மணம் பரப்பும் என்பதில் ஐயமில்லை.
- பாரி நிலையத்தார்

ஆறாம் பதிப்பு வாணிதாசன் பதிப்பக வெளியீடாக வருகின்றது. கொடிமுல்லை க(வி)தை பிறந்தமைக்கான காரணத்தை வாணிதான் கூறியுள்ளவாறே மேலே அச்சிட்டுள்ளோம். இது படைப்பைப் பற்றிய படைப் பாளரின் வாக்குமூலம். இவ்வாக்கு மூலம் கொடிமுல்லைஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
- வாணிதாசன் பதிப்பகத்தார்
--------------------
படைப்பு

என் ஆசிரியர் கவியரசர் பாரதிதாசன் அவர்கட்கு
- இந்நூல் படைப்பு –
--------------------

மாந்தர்
    அழகன் - கதைத் தலைவன்
    கொடிமுல்லை - கதைத் தலைவி
    நலம்பாடி - பல்லவ நாட்டுப் புலவன்
    அல்லி - கொடிமுல்லையின் தோழி
    மாமல்லன் - பல்லவ நாட்டு அரசன்
    செங்காந்தள் - பல்லவ நாட்டு அரசி
    நுழைபுலத்தான் - பல்லவ நாட்டு அமைச்சன்
    மானவன்மன் - இலங்கை இளவரசன்; மாமல்லனுக்கு உறவினன்
    பல்லவ நாட்டுப் படைத் தலைவன்
    தீங்குயிலாள் -- நாட்டியப் பெண்
    -------------------

கொடி முல்லை - இயல் 1

அவை கூடிற்று.
புலவன் பாட்டொன்றை நீட்டினான்.

திருவாழும் மண்டபத்தில் புலவர் நின்றார்;
'செந்தமிழ் போல் வாழ்க' என்றார். அரசன் வந்தான்!
கருவிழிக்கு மையெழுதி அங்குள் ளோரைக்
கடைக்கண்ணால் விழுங்கிற்றுப் பணிப் பெண் கூட்டம்!
’வருகளங்கள் தமிழ்மறவன்' என்றார் கூத்தர்;
'வானோங்கக் கொற்ற மென்றார் மறவர் கூட்டம்
இருகையும் இள நகையும் காட்டி வேந்தன்.
'இருந்திடுக அவரவர்கள் இருக்கை என்றான்.

திருவிருந்த வீடுகடை திறந்தான்; அங்குச்
சேர்ந்திருந்த தமிழ்ப்புலவர், கலைஞர், ஆற்றில்
பெருகிவரும் வெள்ளத்தை மடைகள் போலப்
பெற்றிருந்தார்; உளங்களித்தார்; 'வாழ்க' என்றார்.
அருகிருந்த நுழைபுலத்தான், அமைச்சன், 'இங்கோர்
அழகாட உமதருளுக் கேங்கு' தென்றான்.
'சரி' யென்று தலை அசைத்தான் வேந்தன் கூடச்
சுவரெல்லாம் எதிரொலிக்கும் சதங்கைக் கேற்ப !

உள்ளத்தில் எழுகின்ற எண்ணம் தன்னை
உருவாக்கிச் சுழல்விழியால் பாம்புக் கையால்
வள்ளலென வழங்குகின்றாள்; மெய்சிலிர்க்க
வாயசைத்துக் கொஞ்சுகின்றாள்: ஆங்கி ருந்தோர்
அள்ளுகின்றார் விழி இரண்டால், கொள்ளை இன்பம்!
அரசன் மெய் மறந்திருந்தான்; மூரல் பூத்தான்;
'தெள்ளிய செந் தேன்கலைகள் வாழ்க்கைக்' கென்றான்.
நூலிடையாள் தீங்குயிலாள் நாணி நின்றாள்.

தமிழ்க்கலைக்கு வாழ்த்துரைத்தா னமைச்சன்; வெள்ளித்
தவிசிருந்த புலவ னெழுந் தென்றன் சொந்தத்
தமிழ்நாடும் கலைமொழியும் வாழ்க' என்றான்;
தடந்தோளன் படைத்தலைவன், கலையே எங்கள்
அமிழ்’ தென்றான்; பொற்பதக்கம் கெட்டி முத்து
மணிமாலை பரிசாக அரசன் தந்தான்.
சிமிழ்க்காத அவையோரைக் குளிர்ந்து நோக்கிச்
சித்திரமே செல்வதைப்போல் வணங்கிச் சென்றாள்.

நாட்டு நிலை விளக்கி நின்றான் நுழைபுலத்தான்;
நடுவயலின் நிலை சொன்னார் உழவர் ; வெற்றி
நாட்டுகின்ற படை நிலையை வன்மன் சொன்னான்.
நன்றி' யென்றான் மாமல்லன். அங்குச் சூழ்ந்த
கூட்டத்தை விலக்கியொரு புலவன் வந்தான்;
கும்பிட்டான்; நறுக்கொன்றை எடுத்து நீட்டிப்
'பாட்'டென்றான். 'பாடு கென வேந்தன் சொல்லப்
பலாமொய்க்கும் ஈப்போல அவையோர் சூழ்ந்தார்.

அவையோர்முன் புலவன் பாடிய பாட்டு

என்றும் பெயர் நிலைக்க
ஏதேனும் செய்திடுதல்
குன்றுநிகர் வேந்தர்க்(கு)
உரியதுகாண் - நன்றே
தமிழ்நாட்டில் இல்லாத்
தனிப்பெருமை மூதூர்
இமைப்பொழுதில் ஆக்க எழு!
------------

இயல் 2

அரசனும் அமைச்சனும் மூதூர் சமைக்க முடிவு கட்டினர்.

'பொன்னலைகள் வீசுகின்ற கடலோ, வானிற்
புது நாடோ, மலைசெறிந்த காடோ , என்றன்
அன்னை எழில் கலையரசி தீட்டுகின்ற
அழகுதிரைச் சீலையோ, செங்குருதி ஆறோ,
பொன் பழுக்கும் பேருலையோ, அந்தி வானம்?
புதுமையடா புதுமை!' யென்றான் கச்சி வேந்தன்.
'ஏன் அரசே! வணக்க மென்றான் நுழைபுலத்தான்.
எழிலுலகம் பின்னிழுக்க மன்னன் வந்தான்.

யொன்றுது சொகசத்துப்

நான் நினைத்த நினைப்பைப் போல் புலவன் ஓலை
நறுக்கினிலே பாட்டிசைத்தான்; விந்தை! விந்தை!
ஏன்வாழ்ந்தார் என் முன்னோர்? இந்த நாட்டில்
ஏது செய்தார்? புதுமையொன்றும் இல்லை! இல்லை!
நான் செய்வேன் அப்புதுமை; ஆய்ந்து சொல்லாய்
நல்லமைச்ச!' என அரசன் நவின்றான். 'செத்துப்
போனவரைப் பழிகூற வேண்டாம், வேந்தே!
புகழ்நடுக' என அமைச்சன் எடுத்துச் சொன்னான்

மாமல்லன் ஏதேதோ எண்ணிப் பின்னர்
மானவன்மன் என் மகளை மணக்கும் முன்னே ,
ஏமம் சேர் நிலாமுற்றம், வசந்த வாவி,
எழிற்கூடம், கற்சிலைகள் நிறைந்த குன்றும்,
தாமமைப்போம் நம் பேரால் ஓரூர்' என்றான்.
நல்ல தென்றான் நுழைபுலத்தான். அரசன் மீண்டும்
'நாமழிந்து போனாலும் ஊரும் பேரும் ந
ம் நாடு போல் நிலைக்கச் செய்வோம்' என்றான்

'நாள் பார்க்க வேண்டு' மென்றான் மாமல்லன். 'நன்
னாளென்ன செய்யு?' மென்றான் அமைச்சன். 'வானக்
கோள் பார்க்க வேண்டு மென்றான் அரசன். 'வேந்தே!
கடைக்காலக் கொள்கையிது : வீணர் சூழ்ச்சி;
ஆள்வினையை நம்பாது மக்கள் வீழும்
அளறுமிகு முள் நிறைந்த பாட்டை ; காலில்
தேள் கொட்ட நெறிதென்னைக் கேற் லுண்டோ?
செப்பிடுவீர்' என வணங்கி அமைச்சன் சொன்னான்.

இக்கால வழக்கத்தைச் சார்ந்து நாட்டில்
இருந்து குடி செய்யவில்லை என்றால், மக்கள்
பொக்கையனால் போனதுவே பொரிமா வென்பார்;
போன பொரி மாத்தேறார்; புளிபி ழிந்த
தொக்காம் இக் கொடும் பழக்கம் ; அதற்கு நாமோ
தோற்பாவை; அதைமீற முடியா தப்பா!
எக்காலம் பகுத்தறிவு பெற்று மக்கள்
எதிர்ப்பாரோ அன்றிடரும் தீரும்' என்றான்.

இசைந்திட்டான் அரைமனதாய் நுழைபு லத்தான்!
என் செய்வான்? 'நம்மக்கள் நிலையில் வாறே
திசைகெட்டுப் போனதிலோ புதுமை இல்லை;
செய்தித்தாள் எடுத்தெழுதி நன்னாள் பார்த்துத்
திசை பார்த்துச் செல்க' என்றான். நிறைந்த ஏரிச்
சிறகியென வாள் மறவர் பறந்தார் ஊரார்
இசைமீட்டி 'மாமல்லன் எண்ணம் முற்றும்
இனிது முடி வடைக' வென்று வாழ்த்தினாரே!
------------

இயல் 3

வழியில் முளைத்த காதல்.
கருவிழிகள் ஒன்றை ஒன்று கவ்வின.

தேன் ததும்பும் பூப்பறித்தாள் முல்லை ; நாறும்
செடி பறித்தாள் தொடுத்திட்டாள்; ஆங்கு வந்த
மானைத் தன் மார்பணைத்தாள்; 'போ! போ!' என்று
வந்த இளம் பசுங்கன்றை விரட்டி நின்றாள்.
'ஏன் இந்த ஓரவஞ்சம்?' என்று கிள்ளை
இணைந்தவளைத் தொடர்ந்துவரும்; அணிலைத் தாவும் !
பூனையைப் போல் தொடர்ந்தல்லி வந்தாள்; கண்ணைப்
பொத்தி நின்றாள். கொடிமுல்லை அல்லி' என்றாள்.

'பள்ளியிலே படிப்பவர்கள் இன்பச் சிட்டு!
பதைபதைப்பு நிறை ஆட்டுக் குட்டி! இன்று
பள்ளியிலே நாம் படித்த நாளைப் போலப்
பறந்தோடி உனைப்பிடிக்க எனது நெஞ்சம்
துள்ளுதடி! ஓடென்றாள் அல்லி! ஆனால்
தொடு பார்ப்போம்' எனப்பாய்ந்தாள் முல்லை ! இன்பம்
அள்ளுதற்குப் பெட்டையினைத் துரத்திச் செல்லும்
ஆண் கோழி போல் அல்லி துரத்து கின்றாள்!

கிளையடர்ந்த மரம் சுற்றிச் செடிகள் நீக்கிக்
கெக்கலித்துக் கொடிமுல்லை தாவி வந்தாள்;
தளிர்மேனி வியர்த்தாடை நனைய, மேதி
வாலொத்த சடை அலைய, உயர்ந்த சங்கு
வளையொலிக்கக் கொடிமுல்லை தொடரும் அல்லி
வழிபார்த்துப் பறந்தாள்; மேல் விளைவு காணாள்.
களைநீங்க வேர் மீது தலையை வைத்துக்
கண்ணுறங்கும் காளையின் மேல் தடுக்கி வீழ்ந்தாள்!

மருண்டெழுந்தான் ; தலைமாட்டில் இருந்த
குத்து வாளெடுத்தான் நொடிப்பொழுதில் ; தன் மேல் வீழ்ந்த
சுருண்டகுழல் இளங்கொடியைக் கண்டான்; கைவாள்
தொலைவினிலே வீசிவிட்டான்; குனிந்து தூக்கி
மருண்டாயோ? அஞ்சாதே!' என்றான். அந்த
வல்லிதலை குனிந்து நின்றாள்; கடைக்கணித்தாள்.
கருவிழிகள் ஒன்றையொன்று தாவி தாவிக்
கவ்வுகின்ற வேளையிலே அல்லி வந்தாள்.

'மன்னிக்க வேண்டு மென்றாள் எங்கோ பார்த்துக்
கொடிமுல்லை ; மழைபட்ட மதியை ஒத்தாள்!
மன்னிப்புக் குரியவன் நான்' என்றான் அந்த
வழிப்போக்கன் . அல்லி இடை மறித்துச் சொல்வாள்;
'மன்னிப்புக் கார்பொறுப்பு? தடுத்த இந்த
மரவேரே' எனச் சிரித்தாள். 'இல்லை! இல்லை!
என்னுடைய குற்றமிரண்டென்றான் ஏந்தல்.
“ஈதென்ன புதுமையடி ' என்றாள் அல்லி.

எழுந்திருந்தான்; தோற்பையை எடுத்தான்; 'ஊருக் (கு)
எப்பக்கம் நலம்பாடி இல்லம் ? ' என்றான்;
செழுந்தேனாம் கொடிமுல்லை விழியைப் பார்த்தான்;
செயல்மறந்தான். 'எவ்வூரோ?' என்றாள் அல்லி.
'எழுகடலார் தென்னிலங்கை அழகன் என்பேர்;
இவ்வூரில் கலைக்கோயில் சமைக்க வேந்தன்
எழுதிட நான் இங்கு வந்தேன்' என்றான் தச்சன்.
'இப்படிப் போய்த் திரும்புங்கள்' என்றாள் அல்லி.

அடிபட்டுக் கால் முறிந்த மானைப் போல்
அவளவனைப் பார்த்திருந்தாள் , ஊரை நோக்கி
நடக்கின்றான் கற்றச்சன் தலையைத் தாழ்த்தி;
நான் மாட்டேன்' என்று மனம் அவளைத் தாவும்!
நடக்க அவன் கால் மறுக்கும்; இதற்குள் ளாக
நானூறு முறை திரும்பிப் பார்த்தான்; கட்டுக்
கடங்காத உள்ளத்தை அவள் பால் விட்டுக்
கள்ளுண்டான் போல் நடந்து சென்றிட்டானே!

அழைக்கின்ற குரல் கேட்டான்; நின்றான்; அல்லி
தலைதெறிக்க அங்கோடி வந்தாள்; காய்ந்த
தழையின் மேல் அவன்வீசி மறந்து வந்த
கைவாளைத் தந்திட்டாள். அழகன் மின்னும்
குழையாளே! உன்தலைவி ஊரைப் பேரைக்
கூறாயோ?' எனக்கேட்டான். உயிர் போனாலும்
பிழையாத மாமல்ல அரசன் நோற்றுப்
பெற்றமகள் கொடிமுல்லை ' என்றாள்; போனாள்!
---------------

இயல் 4

அழகன் நினைவெல்லாம் அவள் பால் இருந்தது.

குன்றுகளைப் பிளக்கின்றார் இளைய தச்சர்;
கொல்லன்கல் உளிவடித்து வழங்கு கின்றான்;
நின்றிருக்கும் சோம்பேறி ஆளைப் பார்த்து
'நில்லாதே! போ! போ போ!'' என்றான் வெண்ணெய்க்
குன்றைப்போல் மேலாடை தலையில் சுற்றிக்
கொண்டிருக்கும் ஆளோட்டி ; தட்டைப் பந்தர்
ஒன்றிரண்டிற் குள்ளிருந்து கலைக்கோ யிற்குச்
சிலை செய்வோர் உளி ஓசை எழுப்புகின்றார்.

சிற்றுளியை எடுத்தழகன் செதுக்குகின்றான்,
செய்தொழிலில் அவன் நினைவு செல்ல வில்லை ;
சற்றமர்ந்தான் பசுந்தென்னைக் கீற்றின் மீது ;
தன்மனத்திற் கேதேதோ சொல்லிப் பார்த்தான்;
பெற்றவள் சொற் கேளாது மண்ணிற் கேகும்
பிள்ளையைப் போல் அவன் மனது சோலை கண்ட
நற்றமிழாள் கொடிமுல்லை யாளைத் தாவி
நாலாறு காதமொரு நொடிக்குள் பாயும்!

நலம்பாடி அங்குவந்த தறியான் தச்சன்;
நாட்டத்தைக் கூரையின் மேல் நிறுத்தி, 'என்றன்
கலைக்குயிர் நீ! என்வாழ்வின் இன்பம் நீயே;
கண்ணும் நீ ! கற்பனையும் நீயே!" என்றான்;
தலைசாய்த்து முழந்தாளைத் தழுவிக் குத்திச்
சாய்ந்தாடிக் கொண்டிருந்தான்; மூச்செறிந்தான்.
'அலைமோதும் கடல் கண்டேன் தோழா!' என்று
நலம்பாடி அவனருகில் வந்தான்; நின்றான்.

நெடுமூச்சு விட்டழகன் நிமிர்ந்தான்; 'ஏதோ
நினைவினிலே படிந்திருந்தேன்; உன்னிடத்தில்
நெடு நாளாய் ஒன்று சொல்ல நினைத்தேன் தோழா!
நினைவெல்லாம் அவள் பறித்தாள் சோலை தன்னில்;
தொடுவேலை மேல் நினைவு பாய வில்லை;
அவள் தூய விழிஎங்கும் தோன்று' தென்றான்.
'சுடுகாதல் நோய்வலிமை கண்டேன்! கண்டேன்!
அஞ்சாதே!' என்று நலம் பாடி சொன்னான்.
-----------------

இயல் 5

மகளுக்கு மணம் முடிக்குமாறு அரசி மன்னவனை வேண்டினாள்.

செவ்வல்லி தீச்சுடர் போல் மலரும் ; மேற்குத்
திசை மறையும் பரிதி கண்டு முளரி கூம்பும்;
அவ்வோடை பூக்காத ஆம்பல் நோக்கி
அண்டிவரும் நீர்ப்பாம்பு காதல் பேச ;
’எவ்வுயிரும் காதலியை மறப்ப தில்லை'
எனத்திங்கள் கீழ்வானில் ஒளியைப் பாய்ச்சும்!
அவ்வேளை மாமல்லன் , 'புலவோய்! நல்ல
அடைத்தேனைத் தமிழ்ப் பாட்டில் பிழிக!'' என்றான்.

விளங்காத சொல் நிறைந்த பாட்டைக் கேட்டு
‘மிக இனிமை மிக இனிமை' என்பார் உண்டு;
களஞ்சிந்திக் கிடக்கின்ற பதரைப் பார்த்துக்
களிப்படையும் சிறுவரிவர்; கல்ம னத்தை
இளகவைப்ப தெவர் பாட்டு? போர்மு கத்தே
எழுச்சியுறச் செய்வதியார் பாட்டு? மற்றும்
உளம்வாட்டும் கொடுந்துயரை மாற்று கின்ற
ஓசை நிறை பாட்டெங்கள் தமிழ்ப்பாட் டேயாம்!''

என்றுரைத்தாள் பல்லவ நாட்டரசி . மக்கள்
ஏன் உணர வில்லை யென்றான் அரசன். 'வந்தோர்
கொன்றுவிட்டார் பகுத்தறிவைக் கடவுள் பேரால்
கூசாமல் கதை சொல்லி, மக்கட் குள்ளே
இன்றிருக்கும் அளவில்லாச் சாதிச் சண்டை,
என் கடவுள் உயர்ந்தவரென் றெதிர்க்கும் சண்டை
நன்றாமோ?' எனக் கேட்டான் புலவன். வேந்தன்,
நாமாள இவை இன்றேல் முடியா' தென்றான்.

எய்வதற்குக் குறிபார்த்த வேடன் போற் பேச் (சு )
எடுத்திட்டாள் செங்காந்தள்; அரசன் நோக்கிச்
'கொய்யாப் பூக் கொடிமுல்லை நீலக் கண்கள்
குளிர்மையற்றுப் போனதை நான் கண்டேன்! கண்டேன்!
மைதீட்ட மறுக்கின்றாள்; நாறும் முல்லை
மலர் தொடுக்க வெறுக்கின்றாள்; கனாக்காண் கின்றாள்;
மெய்ப்பாட்டை நான் கண்டேன்; கூறு கின்றேன்;
விரைவினிலே மணம் முடிப்பீர் மகளுக் கென்றாள்.

'வயது வந்த பெண்களுடல் மாறி மாறி
வளர்வதிலும் தளர்வதிலும் புதுமை இல்லை ;
கயல்விழியாள் கொடிமுல்லை மீது வீணே
கண்டபடி உளறாதே' என்றான் மல்லன்.
இயன் மொழியில் பேர் பெற்ற புலவன் சொல்வான் :
எழுகின்ற கலைக்கோயில் எடுத்த பின்னர்
மயிலியலாள் கொடிமுல்லை யாளை வேந்தன்
வழங்கிடுவான் மானவன்மற் கஞ்சேல்!' என்றான்.
----------------

இயல் 6

மானவன்மன் மன்னன் மகளை விரும்பினான்: அவள் மறுத்தாள்.

தீங்குயில்கள் மரக்கிளையில் சிறகடிக்கும் :
தென்னையிலே கூடமைக்கும் காக்கை: காயைத்
தாங்காமல் அசைந்தாடும் வாழை மீது
தத்தையிணை பொன்னூசல் ஆடும்; ஈந்தில்
தூங்குகின்ற புற்கூட்டில் சாம்பற் சிட்டு
தொத்திவிழும் அணிலிணையைப் பழிக்கும்! மாலை
ஆங்குவந்தாள் கொடிமுல்லை; யாழின் நாணை
அசைத்திட்டாள்; இசை வெள்ளம் எங்கும் பாயும்!

மயிலொத்த கொடிமுல்லை ஆட்டம் கண்டே
மரங்கொத்தி துணைத்தாளம் சேர்க்கும் ; குன்றின்
அயலோடும் காட்டாறு முழவை மீட்டும்
அம்பைப்போல் மீன் கொத்தி அவள் கண் கண்டு
கயலென்று பாய்ந்துவரும் அந்த வேளை
கல்வீசிப் புள்ளோட்டி வன்மன் வந்தான்.
வெயிலொளியைக் காட்டுகின்ற குழைக ளாட
'மிகமகிழ்வு வருக' என்றாள்; எதிர்கொண்டாளே!

’ஆட்டத்தை நானிங்குக் கண்டேன்; தோகை
அழகுமயில் அசைந்தாடிற் றடடா! நீல
நாட்டத்தின் சுழற்சி யென்றான். 'பொய் பொய்! என்றாள்.
‘நலமறிவேன்' என்றுரைத்தான். 'பகைவிரட்டி
ஓட்டுவதில்' எனச் சிரித்தாள் விடியற் காலை
உவமையிலாப் பேரெழிலே தமிழ்த்தாய் மக்கள்
நோட்டத்தில் வல்லுநர்கள் ' என்றான் வன்மன்.
கொடிமுல்லை நூறுமுறை உண்மை என்றாள்.

கீழ்வானை இருள்விழுங்கக் கண்டான் வன்மன்;
கிளிமொழியே!' எனவெழுந்தான் : மலையின் உச்சி
தாழ்கின்ற செம்பரிதி பார்த்த வண்ணம்
தமிழ்மறவன் மானவன்மன் சொல்வான்: 'என்றன்
யாழ் நீ நான் அதை மீட்டும் நாளெந் நாளோ?
யாக்கைநிலை யற்றதடி! விரைவோம்' என்றான்.
தாழ்குரலில் 'எனை மறந்து விடுவீர் வேந்தே!
தடியடியால் காய்பழுப்ப தில்லை யென்றான்.

’இதை உன்வாய் சொல்லுவதோ? நீயும் நானும்
இளமைமுதல் சேர்ந்திருந்தோம் வீட்டிற்குள்ளே;
புதுப்பாவை தேர் ஏற்றி இழுத்தோம்; ஆடும்
பொன்னூசல் மீதிருந்தோம்; நீயே என்றன்
முதுகினிலே கிள்ளிப்பின் சிரித்தாய்: நானோ
முல்லைப்பூ மாலையையுன் கழுத்தி விட்டேன்:
சிதைக்கின்றாய் என் இன்பக் கோட்டை எல்லாம்;
மறுமுறையும் இப்படி நீ செப்பேல்' என்றான்'

தலைகுனிந்து நின்றிருந்தாள் முல்லை. குன்றைத்
தகர்தோளான் விடைபெற்றான்; நடக்க லுற்றான்;
கலகலென உலகப் பெண்ணுடனே இங்குக்
களித்திருந்து வீட்டையும் பரிதி போலச்
சிலைவழியை மானவன்மன் திரும்பிப் பார்த்தான்;
நிற்கின்றான்; அடியெடுத்து வைக்கின் றான்பின்;
வலைப்பட்ட மீனொப்ப அவள் மைக் கண்ணில்
அகப்பட்ட மன மடக்கி நடந்திட்டானே!
--------------

இயல் 7

அழகன் அவள் உருவை ஏட்டில் தீட்டினன் 'அவளை அடைய
ஒரு வழிகாட்டு' எனப் புலவனைக் கேட்டனன்

சரிகைப்பூப் போட்ட கரு வானச் சேலை
தனையுலகக் கட்டிலின் மேல் போர்த்தாள்; காய்ந்த
இரும் பொத்த தொழிலாளி, அசல் சோற்றை
இரந்துண்டு வாழ்த்திடுவோர், உண்ட சோறு
செரிக்காத துயரொன்றே கண்ட செல்வர்,
மற்றுள்ள உயிர்மீதும் உறக்கம் என்னும்
அரிசி எடைப் பொடி இயற்கை இறைத்தாள்! 'இந்தா!
உன்வரிசை செல்லா: தென் றழகன் சொன்னான்.

நலம்பாடி குறட்டை விட்டுத் தூங்கி விட்டான்.
நமதழ்கன் ஏதேதோ முணுமுணுத்தான்;
தலையணை மேல் கையூன்றிப் பிடரி தாங்கிக்
கிணறேறத் தத்தளிக்கும் நல்ல பாம்பின்
நிலையினிலே படுத்திருந்தான் ஏதோ வொன்றை
நினைத்தெழுந்தான் படுக்கைவிட்டு விளக்கைத் தூண்டிப்
பலநிறத்தைக் குழைத்தெடுத்தான்; தூங்கு கின்ற
பாவலனைப் பார்த்திட்டான்; தீட்டி னானே!

படமெடுத்தான்; நிறுத்திவைத்தான்; தலையைத் தாழ்த்திப்
பரிவோடு பார்த்திட்டான்; களித்தான்; 'உன்னை
அடையும் நாள் என்வாழ்வின் திருநாள் என்றான்.
அவ்வேளை நலம்பாடி விழித்துக் கொண்டான்;
அடி மேலோர் அடிவைத்து வந்தான்; 'ஆஆ
அச்சடித்து விட்டாயே! நமது நாட்டுக்
கொடிமுல்லை இளவரசி யாளைத் தீட்டக்
கூறினனோ நமதரசன் மல்லன்?' என்றான்.

வியப்போடு கற்றச்சன் புலவன் நோக்கி
மீறிவரும் சிரிப்படக்கி, 'இல்லை! இல்லை!
கயற்கண்ணாள் என் இன்பத் தலைவி; உள்ளக்
கடலலைக்கும் கதிர்க்கற்றை! இந்த ஊரின்
அயலுள்ள சோலையிலே என்றன் உள்ளம்
அள்ளிவிட்டாள் வரும்போதே ; அந்நாள் தொட்டுச்
செயலற்றேன்; இளவரசி மூங்கில் தோளைச்
சேரவழி செய்திடுவாய் தோழா!' என்றான்.

பித்தமென்றன் தலைக்கேறி விட்டதென்று
பேசாமல் இருக்கின்றாய் போலும் தோழா!
எத்திக்கும் கற்சிலையால் தமிழர் பண்பை
எதிர் நிறுத்தம் அழகனறி விழப்ப துண்டோ?
தித்திக்கும் கற்சிலையால் தமிழர் பண்பை
எதிர் நிறுத்தும் அழகனறி விழப்ப துண்டோ?
தித்திக்கும் அவள் வாய்ச்சொல் இதோ என் காதில்
பிழை இன்றிக் கேட்கின்றேன்; இதழின் மேலே
தத்துகின்ற அவள் நகையென் கண்ணிற் றோன்றும்
கடைத்தேற வழியெனக்குச் சாற்றாய் தோழா!

நலம்பாடி அவன்வாயைப் பொத்திச் சொல்வான்.
நாட்டு நிலை அறியாத புதிய வன் நீ;
உலைவைத்துக் கொள்கின்றாய் நீதான் உன்றன்
உயிருக்கே; கா துண்டு சுவர்கட் கெல்லாம்;
வலைவீசு வாருண்டா முழும திக்கு?
மறிகடலை வயலாக்க முனைவா ருண்டா?
மலையினுக்கும் மடுவிற்கும் உள்ள வேறு
பாடுனக்கும் அவளுக்கும் ; கூடா' தென்றான்.

’காதலென்று பிதற்றுகின்றாய்; அவளோ இந்தக்
கழுக்குன்றத் திளவரசி ; மான வன்மன்
காதலியாய் மணம் பெற்று வாழ்வாள்; நீயோ
கலைக்கோயில் முடித்தரசன் பரிசைப் பெற்று
மோதுகடல் சூழிலங்கை நாட்டில் எந்த
மூலையிலோ வாழ்ந்திருப்பாய் ; துருத்தி யாலே
ஊதுகின்ற கொல்லனுக்கேன் குரங்கின் சேட்டை?
உன் மனதில் அவள் நினைவை மாற் றென் றானே!

கற்றச்சன் கூறுகின்றான் : 'தோழா! உண்மைக்
காதலை நீ அறியாயோ? வாழ்க்கை யென்னும்
நற்றேரின் அச்சவளாம்! நானோ ஆணி!
நம் தமிழர் வாழ்ந்த முறை இதுதான் நண்பா!
கற்றவனே, இப்படி நீ பழம்பஞ் சாங்கம்
கடைப்பிடித்தால் இவ்வுலகக் கல்லார் மீது
குற்றமொரு நாளுமில்லை ; அடிமை வீழ்ந்து
குடி கெட்டுப் போனதிலோ புதுமை இல்லை!

கண்ணில்லை காதலுக்கு ; மேலும் கீழும்
கணக்கில்லை தமிழருக்கு? நற்கு லத்துப்
பெண்ணின்பம் வேறோசொல்? படித்த நீயே
பிரித்துரைத்தல் சரிதானோ? உன்னைப் போல
மண்மீது வாழ்கின்றார் தன்ன லத்தார்;
வான் கொள்ளி அவர் தலை மேல் வீழ்க! இந்நாள்
பெண்ணுரிமை இல்லையெனில் நமது மக்கள்
பேசுகின்ற விடுதலைக்கென் மதிப்போ? சொல்வாய்!

அவளுள்ளம் சோலையில் நான் கண்டேன்! கண்டேன்!
என்னறிவை அவளிடத்தே விட்டு வந்த
தவளறிவாள்; என் வாழ்வின் தழை பூஞ் சோலை!
தமிழின்பம் அவளுதடு! குளிர்ந்த நீலக்
குவளைமலர் அவள் கண்கள்! இடையோ ஈயார்
கூறுமொழி ! பேச்சிள நீர்! வாயோ அல்லி!
தவளப்பல் அவள் நகையைக் கண்டால் வாழ்வேன்;
தப்புவிக்க ஒருவழிந் செய்வாய் தோழர!

நலம்பாடி இவையெல்லாம் கேட்டிருந்தான்; :
’நான் செய்வ திதிலொன்று மில்லை' யென்றான்.
கலங்கிய கண் ணானழகன் புலவன் நோக்கிக்
'கரையேற்று வாழ்த்திடுவேன் ; இன்றேல் வீழ்வேன் ;
கொலை உன்மேல் சாருமடா, தோழா! என்னைக்
குறைகூறிப் பயனில்லை; காப்பாய்' என்றான்.
‘நிலையாகச் சொல்லுகிறேன் : அழகா, என்னை
நீநம்பிப் பயனில்லை; மறந்தி' டென்றான்.
-------------------

இயல் 8

நலம்பாடியிடம் அழகனைப் பற்றித் தச்சர்கள் முறையிட்டார்கள்.

”சிலநாளாய் அழகனிங்கு வருவ தில்லை ;
செய்தொழிலைக் கண்ணெடுத்தும் பார்ப்ப தில்லை.
கலைக்கோயில் என்றவுடன் 'சீச்சி! பாகற்
கா' யென்று சொல்கின்றான்; அந்தோ! அந்த
மலைப்பக்கம் போகின்றான்; படுத்துறங்கி
வருகின்றான் அந்தியிலே; கடலை மூக்குக்
கலகலப்பும் அவன் சொல்லில் இல்லை! இல்லை!
காவலனோ இதையறிந்தால் துன்ப மாமே!

நெடுநாளாய் உம்மிடத்தில் சொல்ல நாங்கள்
நினைத்திருந்தோம்; உயிர்த் தோழர் நீரா யிற்றே'
முடிமன்னன் மாமல்லன் குறித்த நாளில்
கலைக்கோயில் முடிவடைய வில்லை என்றால்,
இடிவீழ அருகிருந்த தென்னை ஆவோம்!
இதற்கேற்ற வழி செய்வீர்; 'உங்கள் சொல்லின்
படி நடப்பான் எந்தலைவன் அழகனென்று
பலர் சொல்ல நாங்களிங்குக் கேட்டிருந்தோம்'

என்றுரைத்தார் அழகன்கீழ் இருந்து வேலை
இயற்றுகின்ற கற்றச்சர். தலையைத் தாழ்த்திச்
சென்றிட்டான் நலம் பாடி அவர்கள் காட்டும்
திசை நோக்கி மலையோரம் ; அழகன் அந்தக்
குன்றின் மேல் புலப்படவே இல்லை; சற்றுக்
குளிர் நீழல் அமர்ந்திட்டான்; உளியின் ஓசை
குன்றிடுக்கில் அருகிவரக் கேட்டான்; பார்த்தான்;
குகையுள்ளே அழகன்கல் செதுக்கக் கண்டான்.

'கத்திக்கும் தானினி மேல் அஞ்சேன்; வேந்தன்
காவலுக்கும் நானஞ்சேன் : தமிழைப் போலத்
தித்திக்கும் கொடிமுல்லை யாளே! உன்னைச்
சேரவழி அழகனுக்குக் காட்டா யோ ? சொல்!
செத்தொழிவேன் நீ இன்றேல்' என்ற பேச்சைச்
செவிமடுத்தான் நலம் பாடி ; உளியால் நன்கு
சித்திரத்தில் அன்றிரவு தீட்டி வைத்த
கொடிமுல்லை உருவத்தைச் செதுக்கக் கண்டான்.

கொடிவழியாய் நலம் பாடி இல்லம் சேர்ந்தான்;
குகையுள்ளே கண்டதெல்லாம் எண்ணிச் சோர்ந்தான்;
'இடுக்கணிலே உதவுவதே இனியர் செய்கை'
என்றதவன் நல்லுள்ளம்! 'நச்சுப் பாம்பின்
கடிபட்டார் பிழைத்திடுவார் ; தோள ணைப்பே
'காதலுக்கு மாற் றென்றான்; தீட்டி வைத்த
படமெடுத்தான்; கீழ்வைத்தான்; நீண்ட நேரம்
பார்த்திருந்தான்; தலையசைத்தான்; வெளியிற் போனான்.
---------------

இயல் 9

கொடிமுல்லை அழகனை நினைந்து ஏங்கினாள், மறைந்த புறா வந்தது.

பலகணி மேல் இருகையைக் கட்டி ஊன்றிப்
படுத்திருந்தாள் கொடிமுல்லை ; அவள்மைக் கண்கள்
செலவில்லை எதன்மீதும் ; தோட்டத் துள்ளே
இசைக்கின்ற தீங்குயிலை சீச்சி !' என்றாள்?
'அலைகின்றாய் என் மனம்போல்' என்றாள் சன்னல்
அருகினிலே படர்ந்தேறும் கொடியைப் பார்த்து ;
'கலைஞன் என் உளம்பறித்தான்; அவனை என்றன்
கைச் சிறைக்குள் அடைக்கும் நாள் எந்நாள்? என்றாள்.

'என்னுள்ளம் அவனைவிட்டு நீங்கா தென்றும்;
ஏங்குகின்றேன் : எனக்குதவி செய்வார் யாரே?
தென்னையில் இணைந்திருக்கும் பெட்டைச் சிட்டே!
சென்றெனது நிலையுரைப்பாய்; அந்தோ! நானும்
உன்னைப்போல் களிப்படைய வேண்டா வோ? சொல்!
உதவிடுவாய்; இங்குள்ள மக்கள் எல்லாம்
தந்நலத்தை வேற்கொண்டார்: என்றன் உள்ளத்
தகையுரைக்க அஞ்சுகின்றேன்; செல்க!'' என்றாள்.

கிண்ணத்தில் தேன் வார்த்து வந்தாள் அல்லி?
'கிழித்த பலாச் சுளையோடு கனிமா வாழை
உண்’ணென்று கெஞ்சி நின்றாள்; காய்ந்த பாலில்
ஒருசிறிது குடி' யென்றாள். மீண்டும் மீண்டும்
புண்ணினிலே நெருப்புற்றாள் போலெ ழுந்தே
கொடிமுல்லை உரைத்திட்டாள் : ''பேதாய்! என்றன்
எண்ணத்தை அறியாமல் உண் உண்' என்று
வதைக்கின்றாய்; எழுந்தோடிப் போவாய்'' என்றாள்

எழுந்திருந்து கிளிக்கூண்டின் அருகில் வந்தாள்;
என் உயிரே? பசுங்கிள்ளாய்! அவன்பேர் சொல்லப்
பழகிவிட்டாய்; நீ என்றன் உண்மைத் தோழி!
பறந்துபோ அவனருகே; துயரைச் சொல்லு;
விழுதாலின் பழந்தருவேன்' என்றாள்; கிள்ளை
மீண்டுமவன் பேருரைக்கக் களித்தாள்! அல்லி அ
ழுதோடி அங்கு வந்தாள்; இணைந்திருந்த
ஆண்புறாவைக் காலைமுதல் காணோ' மென்றாள்.

எங்கெங்கோ தேடிவிட்டேன்; காணோ மம்மா?
என் செய்வேன் ? ஒரு நொடியும் பேட்டை விட்டுத்
தங்கினதைக் கண்டதில்லை' என்றாள் அல்லி ,
'சரி! தேடிக் கொண்டுவந்து சேர்ப்பாய்! இன்றேல்
இங்கிருந்து விலக்கிடுவேன்' என்று சீறி
எழுந்தோடிப் பா' ரென்றாள் முல்லை ; காலைத்
திங்களைப்போல் ஒளியிழந்த கண்ணாள்! அல்லி
செடி கொடிகள் மரக்கிளைகள் தேடிப் பார்த்தாள்.

கொடிமுல்லை தனித்திருந்த புறாவைத் தூக்கிக்
கூறுகின்றாள்; நீபேதை! நாட்டில் அன்புப்
பிடியினிலே விடுபட்டார் இலவே இல்லை;
'பெண்களெலாம் வகையறியா தாணைப் பார்த்துக் .
குடி கெடுத்தார், கூத்தியர்பாற் சென்றார்' என்று
கூசாது பழிக்கின்றார்; வற்றா அன்பைக்
கொடுத்திருந்தால் தலைவன் தன் தலைவி விட்டுக்
குறுக்குவழி செல்வானோ? நீதான் சொல்லேன்!''

என்றுரைத்துக் கொண்டிருந்தாள் முல்லை ; அங்கே
இறங்கிற்றுப் பிரிந்து சென்ற சேவற் புள்ளும்;
சென்றோடி அதைப் பிடித்தாள்; காலில் ஏதோ
தென்பட்டது); அதையவிழ்த்தாள்; வெள்ளைத் தோலில்
அன்றந்தச் சோலையிலே நடந்த யாவும்
அழகு பெற வரைந்திருக்கக் கண்டாள்; கீழே
என்றும் நான் உன் நினைவால் வாடுகின்றேன்; வ
ழிசெய்வாய்' என்றெழுதி இருக்கக் கண்டாள்.

அன்போடு கொடிமுல்லை ஓவியத்தை
மார்பணைத்துக் கொண்டிருந்தாள்; அவனைச் சேர
என் செய்வேன்? யார்துணையைப் பெறுவேன்; காவல்
இருப்பவரை ஏமாற்றப் போமோ?'' என்றாள்.
பொன் பெற்றுத் துய்க்கவழி அறியா ஏழை!
அறை புகுந்தாள் புறரத்தேடச் சென்ற அல்லி!
என்னுயிரை மீட்பாயோ?" என்றாள் முல்லை.
'இப்பொழுதே உயிர் கொடுப்பேன்' என்றாள் அல்லி.

உள்ளத்தைக் கொடிமுல்லை திறந்துவிட்டாள்!
'ஊம்' கொட்டிக் கேட்டிருந்தாள் அல்லி: அம்மா!
கள்ளவழி நானறிவேன்; அஞ்சேல், யாரும்
காணாமல் இன்றிரவே அவரை இங்குத்
தள்ளிவந்து சேர்க்கின்றேன் : கலங்கேல்' என்றாள்.
கொடிமுல்லை அவளுடைலைத் தழுவிச் சொல்வாள் :
'வெள்ளத்தில் நீ என்னைக் கரையில் சேர்த்தாய்;
விளக்கொளியே! உன்னயென்றும் மறவேன்' என்நாள்
------------------

இயல் 10

கிளியைக் கூண்டிலடைக்க மானவன்மனுக்கு அரசி ஆலோசனை கூறுகிறாள்.

பொன் வேண்டு மென்கின்றார் ஏழை மக்கள் ;
புகழ் வேண்டு மென்கின்றார் ஈயாச் செல்வர்;
முன்போலத் தமிழர்களை நுங்காய் எண்ணி
விழுங்கிவிட முனைகின்றார் ஒண்ட வந்தார்;
தன்னிளமைச் செங்காந்தள் வேண்டுமென்று
தவிக்கின்றாள் சோலையிலே! அந்த வேளை
பொன்மொழியான் நலம் பாடி அங்கு வந்தான்;
'புதுமையுண்டோ இளவரசி போக்கில்?' என்றான்.

ஒளி இழந்து மானவன்மன் அங்கு வந்தான்;
உட்கார்ந்தான்; மூச்செறிந்தான்; தலை இருந்த
புளிமூட்டை இறக்கிவைத்த வழிப்போக்கன் போல்
புண்பட்ட உள்ளத்தைத் திறந்தான்; 'கன்னித்
தளிர்மேனி கொடிமுல்லை மனத்தை யாரோ
தட்டிக்கொண் டோடிவிட்டான்' என்றான்; மன்னி
'கிளிபரப்ப தெங்குண்டு? மீண்டும் சென்று
கெஞ்சிப்பார்! இல்லையென்றால் மிஞ்!' சென் றாளே.

தந்நலத்தை விரும்புகின்ற தந்தை தாய்மார்
தமிழகத்தில் இருந்ததில்லை; இச்சை போலத்
தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வோர்
தமிழில்லம் பெற்றிருந்த தாலே நாட்டில்
துன்பமெனும் பேச்சில்லை ; அடிமை இல்லை,
தோள்வலிமை குன்றியது மில்லை; இந்நாள்.
பொன்னிருந்தால் கிழவனுக்கும் பெண் கொடுப்பார்!
காதலென்றால் பைத்தியமோ' என்பார் பெற்றோர் .

'இந்நிலையில் இருக்கின்ற தமிழர் நாட்டில்
கொடிமுல்லை என் செய்வாள்? பேதை!' என்று
தன்னுள்ளே நலம்பாடி எண்ண மிட்டான்.
மானவன்மன் அரசிக்குத் தலைவணங்கிச்
சென்றிட்டான்; செங்காந்தள் புலவன் நோக்கிச்
செப்புகின்றாள்; 'கயவாகை மீண்டும் வென்று
தென்னிலங்கை இவனாளச் செய்வோம்; என்றன்
திருமகளை இவனுக்கே கொடுப்போம்' என்றாள்.
----------------

இயல் 11

காதலர்கள் கூடித் திளைத்தனர். மறைந்திருந்து மானவன்மன் அவர்களைக் கண்டான்.

பள்ளத்து நீர் மீதும், தென்னை வாழைப்
பசுமட்டை செடி கொடிகள் மீதும் தூய
வெள்ளிஒளி பூசி எழும் திங்கள்! காதல்
வெற்றி பெறக் கொடிமுல்லை நின்றிருந்தாள்;
கள்ள வழி நிலவறையின் பக்கம் சென்றாள்;
'இன்னும் ஏன் அல்லிவரக் காணோம்?' என்றாள்
உள்ளத்தே அவளறியா இன்பம் துள்ள
உட்கார்ந்தாள்; ஏதேதோ எண்ண மிட்டாள்;

'கண்ணே! நீ அவர்கண்டால்கீழே நோக்கும்
வழக்கத்தைக் கட்டோடு விலக்கி ' டென்றாள்;
'பெண்குலத்திற் குயர் அணியே! நாணே! என்னைப்
பிரிந்தோடிப் போ!'' என்றாள்; 'வானில் ஊரும்
தண்மதியே! நீ தோற்று விட்டாய் என்றாள்!
‘தழைத்திடுக்க உன் வெற்றி' என்று சொல்லிக்
கண் பொத்திப் பின்னிருந்தான் அழகன்! வெட்கிக்
கார்முகிலில் போய்மறையும் வானத் திங்கள் !

'பவளமல்லி நீ' என்றான் அழகன்; நீரோ
அதில் மொய்த்துப் பாடுகின்ற சுரும்பர்' என்றாள்.
’குவளைப்பூ நீ ' என்றான்; நீரோ அந்தக்
குட்டையிலே தேங்கும் நீர்' என்றாள். 'பூத்துத்
துவளுகின்ற கொடிமுல்லை நீயே' என்றான்;
'கொழுகொம்பு நீர் ' என்றாள். விம்மும் தோளை
அவனுடல் மேல் அவள் சாய்த்தாள்; அட்டா, அங்கே.
அழிந்ததொரு செங்கருப்பங் காடு தானே!

'மங்காத என் கலையின் சுடரே! என்னை
வாழ்வித்தால்! நீவாழி!' என்றான்; மற்றும்
‘திங்களென்று சொல்லிடுவார் உன் முகத்தை ;
உவமையினைத் தேடாத குறைதான் என்பேன்;
திங்களுக்குக் கறையுண்டு; வளர்ச்சி யுண்டு.
தேய்தலுண்டு ; போத்தரையன் மகளே! உன்னை
எங்களரும் தூயதமிழ் என்பேன்; "என்னை
எதிர்த்தாலும் எதிர்க்கட்டும்; அஞ்சேன்' என்றான்

கட்புலனால் கொடிமுல்லை அழகன் தோளைக்
கற்கண்டாய் உண்டிருந்தாள்; கிளையின் உச்சி
சொட்டுகின்ற தேனொத்த அவன் வாய்ச் சொல்லைக்
காதிரண்டால் சுவைத்திருந்தாள்; அவனை வாரிப்
பட்டு மெத்தை அவள் தொடை மேல் கிடத்தி வைத்துப்
பரிவோடு கன்னத்தைத் தடவி விட்டாள்;
’கட்டுக்கும் முட்டுக்கும் அஞ்சிவாழ்ந்தால்
காதலெங்குத் தழைத்திருக்கும்? சொல்வீர்!'' என்றாள்.

’பெண் இனங்கள் காதலுக்காய்ச் சுற்றம் நட்புப்
பெற்றோர் சொல் மறுத்தெதிர்க்க வேண்டும்; காதல்
கண்ணாகும் நம் நாட்டிற் கென்று தேறி
இடி விழினும் அஞ்சாது காத்தல் வேண்டும்;
பெண்ணுரிமை யற்றதனால், அந்தோ! நாடு
பீடிழந்த தென்றுணர வேண்டும்; நீயோ
மண்ணரசி! நான் கல்லைச் செதுக்கும் தச்சன்!
வாக்களிப்பாய் ; எதிர்த்துலகை மிதிப்போம்!'' என்றான்.

*வானின்றி வாழ்கின்ற பச்சை யுண்டோ?
மடங்குதிரை நீர் நிலைகள் இன்றேல் இங்கு
மீனுண்டோ? மண்ணுலகில் இன்று வாழும்
மிகச்சிறிய உயிர் உண்டோ வெய்யோன் இன்றேல்?
தேனுண்டோ மலர் இன்றேல்? இன்பம் சேர்க்கும்
குளிர் நிலவு கதிரின்றேல் உண்டோ? இங்கு
நானுண்டோ நீ இன்றேல்?' என்றான் தச்சன்
கொடிமுல்லை நாம் எதிர்த்து வாழ்வோம்' என்றாள்.

தலைகாலே தெரியாது காத லர் கள்
தனித்தமிழின் இன்பத்தைத் துய்ப்பார் போல
நிலையற்றுக் கிடந்தார்கள் தோட்டத் துள்ளே!
கொடிமுல்லை ' நீர் இங்குச் செதுக்கு கின்ற
கலைக்கோயில் நிலை எனக்குச் சொல்வீர், என்றாள்.
'மலைசெதுக்கிக் கற்கோயில் ஐந்து செய்தேன்;
சிலைவிழியே! உன்னுருவை அவற்றி லொன்றில்
சீர்பெறவே வைத்திடுவேன் ; அழியா தென்றான்

படுக்கையிலே துயிலாது மான வன்மன்
படுத்திருந்தான்; நள்ளிரவில் எழுந்திருந்தான்;
அடிமேலோர் அடிவைத்து முல்லை தூங்கும்
அறை நோக்கித் தோட்டத்தைக் கடந்து வந்தான்;
குடிகாரர் பொலங்குப் பேசிப் பேசிக் |
கூத்தடிக்கும் இருவரையும் கண்டான்; ஆலின்
அடிமரத்தின் நீழலிலே பதுங்கி நின்றான்;
அனற்கண்ணால் இமைக்காது பார்த்தி ருந்தான்.

நின்றொற்றுக் கேட்டிருந்தான் மான வன்மன்.
'நெடுந்தோள ! என்னுருவைக் காணும் நன்னாள்
என்?' றென்றாள் கொடிமுல்லை . அழகன் சொல்வான்;
'எழுகின்ற கலைக்கோயில் அருகிலுள்ள
குன்றினிலே ஒரு குகையில், அட்டா! உன்றன்
குறுநகையும் சேல்விழியும் தோன்ற நீயே
நின்றிருப்பதைப்போலச் சிலைசெய் துள்ளேன்;
நீவந்தால் நாளைக்கே பார்ப்பாய்!" என்றான்.

நெடுநேரம் கழிந்தோடி விட்டதென்று
நினைவூட்டக் கிளை கூவும் கீச்சான்; வெள்ளி
தொடுவானில் சீய்த்தெழும்பும் ! அழகன் மார்பில்
தோய்ந்திருந்த கொடிமுல்லை கலங்கி நின்றாள்;
'பிடிபடுவோம் இனி இங்கு நாமிருந்தால் ;
பிரிந்திடுவோம் என்னுயிரே! என்றாள்; நாளைத்
தடை இன்றிக் கூடிடுவோம்; அஞ்சேல் என்றன்
தமிழ்ச்சுவையே! போய்வருக!' என்ற ணைத்தான்.

அடியெடுத்து வைத்திட்டாள்; திரும்பி வந்தாள்;
அணைத்திட்டாள்; முத்தமழை பொழிந்தாள்; வேடன்
அடிபட்டுத் தத்தளித்துத் தப்பிச் செல்லும்
புள்ளைப்போல் அவளவனை விட்டுச் சென்றாள்.
நடந்து செல்லும் அவள் முதுகின் எழிலைப் பார்த்து
’நாளைவரை நான் பொறுக்கப் போமோ?'' என்றான்
கொடுமையிலும் கொடுமையடா, அந்தோ, காதல்
கொண்டவர்கள் கூடிப்பின் பிரிந்து செல்லல்!
---------------

இயல் 12

மானவன்மன் மறைந்திருந்து அழகன்மேல் வாளோடு பாய்ந்தான்.
முகமூடி யணிந்த ஒருவன் காத்தான். நலம்பாடியிடம் அழகன் நடந்ததைக் கூறினான்.

எண்ணத்தைத் தன்னருகே விட்டுச் செல்லும்
எழிலுருவைப் பார்த்தழகன் கல்லாய் நின்றான்;
பண்மீட்டும் முன்னெழுந்த பறவை யொன்று;
பால் நிலவோ அடிசாயும்; வீட்டை நோக்கிக்
கண்ணிழந்து நடக்கின்றான் அழகன். அங்குக்
காத்திருந்த மானவன்மன் பதுங்கி வந்தான்;
'பெண்வேட்டைப் பரிசிந்தா!' என்று கையில்
பிடித்திருந்த வாளோடு முதுகில் பாய்ந்தான்.

பின்புறமாய் அவன்கையில் இருந்த வாளைப்
பிடுங்கிக்கொண் டோருருவம் சிரிக்கக் கண்டான்;
'என்னை இங்குத் தடுப்பதியார்?' என்றான் வன்மன்
முகமூடி இரையாதே; கொல்வேன்; மான
வன்மன் நீ என்பதை நான் அறிவேன்; இங்கு
வந்ததையும் நான் அறிவேன்; சீச்சி! நீயோ
முன் வாழ்ந்த தமிழ்மறவர் பெயர் கெ டுக்க
முளைத்திட்டாய்: ஓடிப்போ ; பிழைப்பாய்' என்றான்.

தன் செயலை எண்ணிவெட்கி மான வன்மன்
தலைதாழ்த்தி ஓடிவிட்டான். அழகன் சொல்வான்:
என்னுயிரை எங்கிருந்தோ வந்து காத்தீர்!
இதற்கென்ன கைம்மாறு செய்வேன்?' என்றான்.
முன்பாக இங்கிருந்து தப்பி ஓடிப்
பிழைத்துப் போ' என்று முகமூடி சொன்னான்;
‘அன்’பென்றான் அழகன் கை கூப்பி நின்றான்;
அவன் வந்த நிலவறையின் வழியே மீண்டான்.
# #

பெருந்துயிலில் நலம் பாடி ஆழ்ந்திருந்தான்;
பிரப்பம்பாய் விட்டழகன் எழுந்தான்; இன்பப்
பெருக்காம்நற் றமிழ்ப் பாட்டு சுவர்கள் மோதிப்
புரண்டங்குப் பாய்ந்தோடும்! அவன் மெய்ப் பாட்டை
உருவாக்கச் சொல்லுண்டோ? உவமை யுண்டோ?
உளி அரசன் நலம் பாடி தூங்கும் கட்டில்
அருகினிலே போய்ப் பள்ளி எழுக' என்று
திருப்பாவை அத்தனையும் ஒப்பித் தானே!

எழுந்திருந்தான் தமிழ்ப்புலவன் ; அழகன் நோக்கி
ஈதென்ன புதுமையடா? சில நா ளாய்நீ
அழுதிங்குக் கிடந்தாயே ; இன்றுன் போக்கில்
பல மாறி விட்டதென்றான். அழகன் சொல்வான்:
’கொழுகொம்பைக் கொடி சுற்றிக் கொண்ட தண்ணே!
குளிர் தேனை ஈ மொய்த்துக் கொண்ட தண்ணே !
பழுவேறிச் சிறுமுயலார் முழுநிலாவைப்
பற்றிவிட்டார்! சிரிக்காதே! உண்மை என்றான்.

கொடிமுல்லை நிலை சொல்லிப் பணிப்பெண் அல்லி
கூப்பிட்டுப் போனவழி விளக்கிச் சொன்னான்:
கொடிமுல்லைப் பெண்ணோடே இரவு முற்றும்
கூடி இன்பம் அடைந்திருந்த நிலையைச் சொன்னான்;
கொடுவாளால் மானவன்மன் பதுங்கி என்னைக்
கொல்வதற்கு நினைத்திருந்தான்; அந்த வேளை
தடுத்தாண்டான் முகமூடி ; யாரோ அந்தத்
தமிழ்மறவன்? நீடூழி வாழ்க' என்றான்.

'மலைக்குகையில் அவளுருவை உரித்துக் கல்லில்
வைத்துள்ளேன்; புலவா! கேள்; இங்கெழுந்த
கலைக்கோயில் ஐந்தினிலே ஒன்றில் அந்தக்
கற்சிலையை நிலைநாட்டி வைப்பேன்; என்றும்
அலைமோதும் கடல்மல்லை என்னுள் ளத்தை.
உளித்திறனை அழியாது காத்து நிற்கும்;
விலை இல்லாப் புகழன்றி மண்ணில் வாழ்நர்
விரும்புவது வேறுண்டோ? சொல்க!'' என்றான்.
---------------

இயல் 13

அழகன் மானவன்மனை உளியால் குத்தினான் குகை கொலைக்கள் மாயிற்று.

இன்பத்தில் திளைத்தழகன் வந்தான்; தச்சர்
இயற்றுங்கற் கோயிலின் முன் நின்றான்; சொல்வான்:
'முன்னவர்கட் கெட்டாத உங்கள் சொந்தக்
கற்பனையை, முழுத்திறத்தைக் காட்டி விட்டீர்!
என் பெயரை நிலைநாட்டி விட்டீர்; வாழி!
எழுத்தினிலும் தொழிலினிலும் புதுமை கண்டால்
முன்னேறும் நம்நாடு ; விரைவில் கோயில்
முடித்திடுவீர்!' என்றவரை ஊக்கி னானே!

மலைக்குகையை அவன்நோக்கி நடந்தான்; செல்லும்
வழியுள்ள பொருளெல்லாம் மாறி மாறிச்
சிலைவிழியாள் கொடிமுல்லை உருவைக் காட்டும் ;
சிரித்திரவு வரைமனமே பொறுப்பாய் என்றான்;
குலைத்திடுவார் இங்குண்டோ? அவளும் நானும்
குளம் அல்லி ; நலம் பாடி அன்று சொன்ன
மலையினுக்கும் மடுவிற்கும் உள்ள வேறு
பாருண்மைக் காதலுக்கு வணங்கும்!'' என்றான்.

குகையினிலே அவன் செதுக்கி வைத்திருக்கும்
கொடிமுல்லைச் சிலையருகே நின்றான்; நீயோ
நகைக்கின்றாய்: பேசாயோ? எனைவாழ் விக்கும்
நற்கலையே! நானடிமை உனக்கெந் நாளும்!
பகைக்கஞ்சேன்; என் கலையின் பரிசு நீயே!
பார்க்கின்றாய்! பேசாயோ? நாலிரண்டு
தொகைப்பாட்டே! இங்குள்ளோர் உனை எந் நாளும்
தொழுதிருக்க நான் சமைத்தேன்; வாழி!' என்றான்.

சிற்றுளியை எடுத்தழகன் மீண்டும் அந்தச்
சிலைதிருத்திக் கொண்டிருந்தான். அங்கு வந்து
கற்சிலையை மானவன்மன் முறைத்துப் பார்த்தான்;
கல்லுடைக்கும் பெருஞ்சுத்தி விரைந்தெ டுத்துப்
பொற்புடைய அச்சிலைமேல் அடித்தான். சீறிப்
புலிபோல மானவன்மன் பார்வை நோக்கிச்
சிற்றுளியால் குத்திவிட்டான் அழகன். கும்பல்
சேர்ந்ததடா! தலைக்காட்டை எங்கும் பாரே!

பிழை இல்லை அழகன் மேல்' என்றார் உண்மை
பிழை ஆயும் ஒரு சாரார்; 'மான வன்மன்
பிழைப்பதினி அருமை' என்றார் பலபேர், அவ்வூர்ப்
பெருந்தலைகள் கையுயர்த்திக் கூவிக் கூவிக்
'தொழுவாருக் கடுத்தபடி அரசன் என்று
தொன்று தொட்டு வருகின்ற பழக்கம் மீறி
வழுச் செய்தான் கற்றச்சன்; கீழ்மேல் என்ற
வரம்பினையே மறந்து விட்டான்; படட்டும்!'' என்றார்.

தெருவெல்லாம் சில வீணர் கூடிக் கூடிச்
செந்தமிழர் சீர்குலைத்த வரலாற்றைப் போல்,
இருவருமே ஓர் பரத்தை வீட்டில் முன்னாள்
இருந்ததினால் ஏற்பட்ட கொலைதான்' என்றே
உருவாக்கி விட்டார்கள்; அந்தோ! இன்னும்
உரைப்பதெல்லாம் உண்மை என்று நம்புகின்ற
பெரியார் வாழ் தமிழகத்தே கட்டி விட்ட
பேச்சிற்கு மதிப்பற்றுப் போமோ? சொல்லீர்!
----------------

இயல் 14

அழகன் கொலைக்குற்றம் சாற்றப் பட்டான் அவையில் அறம் சார்பாக வாதாடியும் அழகன் இறப்பதே தீர்ப்பென அரசன் கூறினான்.

பல்லவனை எதிர்பார்த்துக் காவலர்கள்,
படைத்தலைவன் , மறையோதி. நுழைபு லத்தான்,
நல்லநெறி நூலுணர்ந்தோர், சிறைகாப் பாளன்,
நலம்பாடி முதலியவர் அவையில் சூழ்ந்தார்!
அல்லெல்லாம் புயலடித்த சிற்றூர் போல
அழகனங்குக் காவலர்கள் நடுவில் நின்றான்!
கொல்லேறு போல்மல்லன் வந்தான்; 'இந்தக்
குற்றத்திற் குரியதென்ன? சொல்வீர்!'' என்றான்.

நெறி நூலில் வல்லவனங் கெழுந்து சொல்வான்;
''நேர்மையற்றார் எவர் தலையும் பல்லவர்கள்
குறிதவறிப் போனதில்லை ; கீழ்மேல் என்ற
குலம் எண்ணா தழகனிங்குச் செய்த செய்கை
அறுதி இட்டுக் கூறுகின்றேன்: கொடிய குற்றம்!
மனுவாதி அறநூல்கள் 'வேந்தன் செய்த
நெறிதவறி நின்றார்க்குக் கழுவே' என்று
செப்புவதை நினைத்துரிய செய்வீர்" என்றான்.

ஒத்துக்கு மத்தளம் போல் ஆங்கி ருந்த
புரி நூலான் உரைத்திட்டான் : வெற்றி வேந்தே!
குத்துண்ட மானவன்மன் பல்லவர்கள்
கொடிவழியில் தொடர்புடையோன்: விலையே இல்லா
முத்துவிளை கடல் சூழும் இலங்கை நாட்டை
முடிசூடிச் சின்னாளில் ஆளும் வேந்தன்;
மெத்த வலி கயவாகைக் கடல்கடந்து
வெற்றி கொண்ட நம் படையின் தலைவன்' என்றான்.

உன் கருத்தைப்[*] போத்தரையன் சொல்க' ஏன்றான்.
ஒளித்தவிசை நுழைபுலத்தான் விட்டெழுந்து
'மன்னர்மா மன்னவனே! குற்றவாளி
வாய் பிடுங்கிக் கோடாது துலைபோல் தூக்கி
முன்னவர்கள் தீர்ப்புரைத்தார்; நீரோ இன்று
முறைதவறிப் பறக்கின்றீர்; எதையும் சற்று
முன் பின்னே ஆய்ந்துணர்ந்த பின்னர் நல்ல
முடிவிற்கு வருவதுதான் மேன்மை ' என்றான்
-------
[*] போத்தரையன் - பல்லவ அரசர்களை குறிக்கும்பட்டப் பெயர்

'மான வன்மன் நரசிம்ம வர்மன் வீட்டு
மாப்பிள்ளை என்பதை நீ மறந்தாய் போலும்;
நான் விரும்பேன்; பிழை ஆய்ந்து கடத்தேன் நாளை'
என்றிட்டான் மாமல்லன் . அமைச்சன் சொல்வான் :
மானந்தான் தமிழருக்குப் பெரிது. நாட்டில்
பழிதாங்கி வாழ்வதுவோ ? உமது முன்னோர்
மானவன்மன் என்றும் மற் றொருவ னென்றும்
வழிதவறி நடந்ததுண்டோ ? சொல்வீர்!" என்றான்.

தலைதாழ்த்தி நின்றிருந்த அழகன் சொல்வான்:
தமிழரசே! நான் குற்ற வாளி அல்லேன்.
கலைஞருக்குக் கலை உயிராம் ! பல நா ளாகச்
செதுக்கிவைத்த கற்சிலையை மானவன்மன்
குலைத்ததனால் நான் வெகுண்டேன்; இதுவே உண்மை!
குற்றம் யார் மேல்?. என்றான். அவையில் வாழ்நர்
கலைஞனையும் அரசனையும் மாறிமாறிக்
கண்டிருந்தார்; துணிவில்லாக் கோழை மக்கள்!

'என் மகளின் சிலை செதுக்க யாரடா நீ?'
என்றிட்டான் மாமல்லன்; கோவைக் கண்ணன்!
'என்னரசே! கண்ணுக்கு நாட்டில் உள்ள
எழிலெல்லாம் பொது' என்றான் அழகன். 'சீச்சி!
உன் குற்றம் குற்றமடா!'' என்றான் வேந்தன்.
'ஒல்லுவதோ இப்பழி ? கற்சிலைய ழித்தால்
என் செய்யார் அதை உயிராய் ஓம்பும் தச்சர்?'
என்றிட்டான் கலையரசன் பதைப் தைத்தே!

உம்புகழை வா தாவி இன்னும் சொல்லும்!
*புலிகேசி உயிருண்ட உமது வாளின்
செம்மையை நீர் கறை செய்து கொள்ள வன்றோ
நினைக்கின்றீர்? சீர்மிகுந்த அரசே! குற்றம்
நம்முடைய மானவன்மன் செய்த தாலே
நடந்த கொடும் செயலிதுகாண்; கருணை செய்வீர்;
உம் புகழுக் கிது நல்ல காட்டாம்!'' என்றே
ஒளி இழந்து நலம் பாடி வணங்கிச் சொன்னான்.
-------
* புலிகேசி மாமல்லனின் தந்தையோடு போர்புரிந்த அரசனாவான். அவனை மீண்டும் மாமல்லன் வென்று அவன் கோ நகரான வாதாவியைக் கைப்பற்றி அழித்து வெற்றித் தூண் நட்டான்.

'குற்றமிவன் மேலில்லை என்று நானும்
கூறுகின்றேன், என்றமைச்சன் சொன்னான்; நூலைக்
கற்றுணர்ந்த அவைப்புலவர் பலரும் சேர்ந்து
கலைஞனுக் கருள்புரிக! நாட்டில் என்றும்
சிற்றுளியால் செதுக்கிவைத்த சிலையே மக்கள்
வாழ்ந்த நிலை தெரிவிக்கும், புகழை நாட்டும்.
மற்றவைகள் அழிந்தொழியும்; இதற்குக் காட்டு
மாமல்ல@ சிற்றன்னவாயில்' என்றார்.
------
@ மாமல்லனின் தந்தை மகேந்திரன்; தன் காலத்தில் புதுக்கோட்டைச் சீமையில் சிற்றன்ன வாயில் என்ற ஊரில் சமணர். கோயில் ஒன்று செய்வித்தான். அது நல்ல வேலைப்பாடமைந்த குகைக் கோயில்.

தங்குபுகழ் மாமல்லன் சீறிச் சொல்வான்;
'யாவையுமே சரியென்று பொறுத்திட்டாலும்.
எங்களரும் குடிப்பெயரைக் கறையே செய்தான்;
ஈதென்ன புதுமை? என்பீர், என்றன் வாயால்
உங்கள்முன் சொல்வதற்கே கூசும் உள்ளம்;
உயர்சாதி என்பதையும் மறந்து தீயோன்
எங்களரும் கொடிமுல்லை அறிவை மாய்த்தான்;
இவனுக்கா இரங்குவது? கழுவே'' என்றான்.

தலைதாழ்த்தி இருந்திட்டார் அவையில் உள்ளோர்;
தமிழ்ப்புலவன் நலம் பாடி எழுந்தான்; சொல்வான்;
'அலைமோதும் பல்லவ நாட்டரசே! நீவிர்
அறியாத திங்குண்டோ? காத லுக்குத்
தொலை தூரம் சாதிமதம்; அரசன், ஆண்டி,
சொக்குமெழில் இவ்வுலகில் ஆணும் பெண்ணும்
தலைப்பட்டுக் களவுவழி இன்பம் துய்க்க
யார் குற்ற வாளியென்று சாற்றப் போமோ?

'நல்விருப்பம் இருவருக்கும் இன்றேல் பேசும்
நாட்டத்திற் கெத்தொழிலும் இல்லை; பூண்ட
பல்வளையல் கழன்றோடி வீழ்வ தில்லை ;
இரவெல்லாம் படுக்கையிலே புரள்வ தில்லை;
சொல்லில்லை; ஊடலில்லை; ஊடிப் பின்னர்த்
தோளோடு தோள் பின்னும் செய்கை இல்லை!
பல்லவனே! காதலர்கள் நிலை அறிந்தும்
பழி அழகன் மேல் சொல்ல வேண்டாம்' என்றான்.

என் இச்சை போலெதையும் செய்வேன்; யாரும்
எனைத்தடுக்க உரிமையில்லை ; இன்று மாலை
கொன்றொழிப்பீர் கழுவேற்றி; தச்சன் செய்த
குற்றத்திற் கொரு நொடியும் கருணை இல்லை'
என்றிட்டான் மாமல்லன். அந்த வேளை
இறகொடிந்து பறந்துவரும் மயிலைப் போல
நின்றிருந்த கூட்டத்தை விலக்கி வந்து
கொடிமுல்லை நெடுமரம்போல் வீழ்ந்தாள், சொல்வாள்;

'கற்றவரே! அவையோரே! தான்வலிந்து
கைக்கொண்டேன் அவருறவை; இதுவே உண்மை!
குற்றத்தைச் செய்தவளும் நானே ஆவேன்;
குடிப்பெயரை அழித்தவளும் நானே ஆவேன்;
கற்றச்சர் செய்த பிழை ஒன்றுமில்லை;
கருணை செய்வீர், இன்றேல் என் உயிரை மாய்ப்பீர்!
குற்றத்தைச் செய்தவருக்குரிய தீர்ப்பைக்
கொடுப்பது வே தமிழரசர் முறையாம்!'' என்றாள்.

நலம்பாடி எழுந்திருந்தான் :"அரசே! நேற்று
நடந்தவற்றிற் கச்சாணி நானே; உங்கள்
தலைமகளாம் கொடிமுல்லைப் புறாவைக் கள்ளத்
தூதுவிட்டேன் தமிழ்க்கலைஞன் நிலையைக் கண்டு ;
கலை அரசன் இதையறியான், அன்று மாலை
’கையோடே கொடிமுல்லை அழைத்தாள்' என்று
சிலைவிழியாள் அல்லிவந்தாள்; அழைத்துச் சென்றாள்
தீம்பழத்தை வெறுத்துண்ண மறுப்பார் உண்டோ?

''காதலுக்குக் கொடிமுல்லை இணங்க வில்லை;
கட்டாயப் படுத்தியவள் தோளைச் சேரப்
பாதகனாம் மானவன்மன் வந்தான் ; இன்பக்
காதலரைப் பார்த்திட்டான்; பதுங்கி நின்றான்.
ஈதெல்லாம் நானறிவேன்; தொடர்ந்தேன்; ஆடை
இழந்தவன் கைபோலவரைக் காத்தேன்; வன்மன்
சூதாக அழகன் மேல் பாயும் வேளை
தோன்றினேன் முகமூடி உருவில் '' என்றான்.

பதைபதைத்து மாமல்லன் எழுந்திருந்தான்;
படுகளத்து மறவன்போல் சிரித்தான்; என்னைக்
கதை கேட்டுக் கொண்டிருக்கும் பிள்ளை என்று
கருதிவிட்டீர் போலும் நீர் ; இச்சை போல
எதையும் நான் செய்திடுவேன் ; அழகன் மாலை
இறப்பதுவே தீர்ப்'பென்றான்! தாளம் சேர்த்துக்
குதிக்கின்ற தெருக்கூத்து முடிந்த பின்னர்
செல்கின்ற கும்பலைப்போல் அவையோர் சென்றார்!
----------------

இயல் 15

நலம்பாடி நண்பன் அழகனுக்குத் தன்னுயிரைக் கொடுத்தான். தப்பிய அழகன் தன் தோகை மணல் வெளியில் இறந்திருக்கக் காண்கிறான்.

கறுப்பாடை அணிந்தழகன் கழுவிற் கேகக்
காத்திருந்தான்; அவ்வேளை படையைச் சேர்ந்த
நிறத்தாடை உடுத்தொருவன் சிறைக்குள் வந்தான்;
'நேரத்தைக் கடத்தாதே; உடையை மாற்று;
புறப்பட்டுப் போவெளியில்; குதிரை யுண்டு;
புலவன் உன் வழி பார்த்துக் காத்திருப்பான்;
மறுக்காதே ; காதலியை மீட்கச் செல்! செல்!
என்றுரைத்தான் வாயோடே! அழகன் மீண்டான்.

'தெருநடுவே இந்நேரம் அழகன் அந்தோ!
செத்திருப்பான்' என்று பலர் பேசக் கேட்டுச்
சிரித்திட்டான் நலம் பாடி வாழும் இல்லத்
திசை நோக்கி மாற்றுருவில் வரும் கற் றச்சன்!
இருள் கிழிக்கும் கழுவேற்றும் அறிவிப்போசை!
தனக்காக இறந்தவனை எண்ணி எண்ணி
இருபடையின் இடைப்பட்ட மாற்றான் போல
நலம்பாடி இல்லத்தை அழகன் சார்ந்தான்.

வீடெல்லாம் தாழ்குரலில் 'நண்பா! நண்பா!
என்றழகன் விளித்திட்டான் ? பதிலே இல்லை!
கூடத்தைக் கடந்தோடித் தோட்டம் சுற்றிக்
கூப்பிட்டான்; பதிலில்லை! திரும்பி வந்தான்;
மாடத்தில் எரிகின்ற அகல்விளக்கின்
மருங்கினிலே தன் பெயருக் கெழுதி வைத்த
ஏடொன்றைப் பார்த்திட்டான்; ஏட்டைத் தூக்கி
எரிகின்ற அகற்றிரியைத் தூண்டி விட்டான்.

'என்னோலை நீகாணும் இந்த நேரம்
இறந்திருப்பேன் கழுவினிலே; கலங்கேல் நண்பா!
உன்காதற் கொடிமுல்லைப் பெண்ணும் நீயும்
ஊரைவிட்டு நள்ளிரவில் தப்பிப் போவீர்;
உன் வருகைக்காக அவள் கடலோரத்தே
உயர்பனையின் கீழ்க்காத்து நிற்பாள்; செல்க!'
என்றெழுதி இருந்த அந்த ஓலை கண்டான்;
'இறந்தாயோ?' எனக்கதறித் தரையில் வீழ்ந்தான்!

கண் விழித்தான் சிறு நேரம் சென்று தச்சன்;
கனாப்போலத் தோன்றிற்று நடந்த யாவும்;
மண்விளக்கின் ஒளியினிலே மீண்டு மந்த
வளைந்த சுருள் ஓலையினைப் படித்துப் பார்த்தான்;
'மண்மீது (ரீயன்றி எனக்குக் காதல்
வாழ்வேனோ?' எனத்தலையில் அறைந்து கொண்டான்;
பெண்ணுலகே வெற்றிகொள்ளும் காளை நெஞ்சை !
அழகன் மேல் பிழைபேசல் முறைதான் ஆமோ?

கடற்கரையே நோக்கியவன் மனமும் காலும்
ஓட்டத்தில் போட்டியிடும் ; கடிக்கப் பாய்ந்து
படமெடுத்துச் சீறுகின்ற பாம்பை யொத்த
அலைமோதும் மணற்பரப்பில் பனையைக் கண்டான்;
'கொடிமுல்லை ! கொடிமுல்லை !' என்று சுற்றிக்
கூப்பிட்டான்; பதிலில்லை! அங்கும் இங்கும்
துடிதுடித்துப் பாய்ந்தழகன் ஓடிப் பார்த்தான்;
காலிடறித் தொப்பென்று மணலில் வீழ்ந்தான்!

குருதியிலே தோய்ந்து கொடி முல்லை அங்கே
குற்றுயிராய்க் கிடந்திட்டாள்! அழகன் வான
இருள் கிழிக்கும் மின்னொளியில் அவளைக் கண்டான்;
என்னுயிரே!' எனவாரி அணைத்தான் மார்பில்!
அருகிவரும் சிறுகுரலில் 'அழகா' என்று
கூப்பிட்டாள் : அந்தோ! நான் காத்திருந்தேன்;
வரவில்லை நீர் ; செத்தே போனீ ரென்று
மண் வெறுத்தேன்; உயிர் மாய்த்துக் கொண்டேன்' என்றாள்.
---------------

இயல் 16

அழகன் உலகை வெறுத்தான்: உணர்ச்யால் வசை மொழிந்தான்;
கடலுள் வீழ்ந்து தன்னுயிரைப் போக்கிக் கொண்டான்.

கற்றச்சன் அவளுடல் மேல் வீழ்ந்து வீழ்ந்து
சிறு பிள்ளை போற்கதறி அழுதான்; 'கண்ணே!
உற்றாரும் உறவும் நீ என்றே இந்நாள்
உயிர் வாழ்ந்தேன்; எனைவிட்டுப் பிரிந்தாய்; கண்கள்
பெற்றிழந்த குருடன் நான்; அந்தோ! உன்னைப்
பிரிந்திங்கே உயிர்வாழ என்னால் ஆமோ?
பொற்கொடியே! என் உயிரே! உனைத்தொ டர்ந்து
புறப்பட்டேன்? என்றவளை வாரிக் கொண்டான்.

'சிறை மீட்டான் உயிர் கொடுத்து நீயும் நானும்
சேர்ந்துலகில் வாழ்ந்திருக்கப் புலவன்; அந்தோ!
மறைந்ததடி உன் உயிர் தான்! இனிமேல் இந்த
மண்ணுலகும் விண்ணுலகும் குப்பைக் கூளம்!
கறையில்லா முழுமதியே! மணியே! உன்னைக்
கை நழுவ விட்டுப்பின் வாழ்தல் உண்டோ?
அரைநொடியும் உனைப்பிரிய மனமில்லாத
அழகனிதோ புறப்பட்டேன் : இங்கென் வேலை?

'எனக்காகத் தூது விட்டாய்; மான வன்மன்
உயிர் உண்ண எத்தனிக்கும் வேளை காத்தாய்;
எனக்காக அவை எதிர்த்தாய்; நான் காணாத
எவனோபோல் உயிர் கொடுத்துச் சிறையை மீட்டாய்;
உனைக்காணப் பெறுவேனோ? நண்பா நண்பா !
உன் கொடைக்குப் பலனில்லை; பனையின் கீழே
எனக்காகக் கொடிமுல்லை உயிரை விட்டாள்!
இதோ நொடியில் புறப்பட்டேள்; இங்கென் வேலை?

'பாழாக்கி விட்டதடா தமிழர் பண்பைப்
பலசரக்குக் குடிபுகுந்து! மானம், வீரம்
தாழ்ந்ததடா! நம் நாட்டில் நரிக்குட்டிக்குத்
தலைதாழ்த்தும் அரிக்கூட்டம் தமிழ ரென்றால்
வாழ்வெதற்கு? நீள்புகழ்தான் நமக்கிங் கேனோ?
மண்ணாகிப் போகட்டும் அடிமை நாடு;
பாழ்செய்தீர் என் வாழ்வை அவளும் நீயும்;
பற்றில்லை; புறப்பட்டேன்; இங்கென் வேலை?'

கடற்கரையின் ஓரத்தே இருக்குஞ் சிற்பக்
கலைக்கோயில் மின்னொளியில் கண்டான்; ஏரி
மடையுடைந்து பாய்ந்துவரும் புனலைப் போலக்
கற்கோயில் நோக்கியவன் பாய்ந்து வந்தான்;
கிடத்தினான் காதலியின் பிணத்தை அங்குக்
கிடக்கின்ற கற்றூண் மேல்; சுற்றிச் சுற்றி
நடக்கின்றான்; ஏங்குகின்றான்; செதுக்கி வைத்த
நற்சிலையைப் பார்த்தழுது நின்கின்றானே!

'சிங்கத்தின் தலை செதுக்கித் தலையின் நீண்ட
சீர்மிகுநற் றூண் செதுக்கித் தூணின் உச்சி
மங்காத தாமரைப்பூ செதுக்கிச் செப்பு
மலைக்கடைந்த கலைக்கோயில் கல்லில் செய்தேன்;
சிங்கனுக்கும் புகழ் சேர்த்தேன்; கலைக்கும், என்றன்
சிற்றுளிக்கும் புகழ் சேர்த்தேன்; மறந்தான் மல்லன்;
பொங்கு துள்ளம்; என் வாழ்வுக் கலையை, முல்லைப்
பூச்செடியை வேரறுத்தான்; இங்கென் வேலை?

'தீட்டாத ஓவியத்தை உளியால், என்றன்
திறமையினால் பாறையெலாம் செதுக்கி வைத்தேன்;
காட்டுதற்கு முடியாத கங்கை யாற்றுக்
கரைக்காட்சி என்னுளிகள் என்றும் காட்டும்!
காட்ட கத்துக் குன்றிலெலாம் சிம்ம வர்மன்
கலைப்பற்றை நிலைநாட்டி விட்டேன்; முல்லைக்
கூட்டுறவால் துளிர்த்தோங்கும் என்றன் வாழ்வுக்
கலைமறந்தான் மாமல்லன் : இங்கென் வேலை?

முல்லை நில இடையன் பால் கறக்கும் காட்சி
மூட்டாதோ பேரின்பம்? கன்றை நக்கும்
நல்லாவின் தாயன்பும் இல்லம் பேணும்
நற்பண்பைக் காட்டாதோ?* பூனையொன்றும்
சொல்லாதோ பகல் வேடத் துறவி செய்கை?
தூய தமிழ் நாட்டிற்கும் மல்ல னுக்கும்
கல்லுளியால் பெருஞ்சிறப்பைத் தேடித் தந்தேன்;
கருவழித்தான் என் வாழ்வை ; இங்கென வேலை?
------
கங்கைக்கரைக் காட்சி : பாறையில் செதுக்கப் பட்ட உருவங்களில் தவம் செய்யும் முனிவர்கள் முன் எலிகள் அச்சமின்றி உலவ, பூனையொன்று பின் கால்களில் நின்று முன் காலை உயர்த்திக் கண் மூடி யோகம் செய்யும் நி லையில் உள்ளது.

'மரத்தேரைப் போன்றிங்குத் தனித்த கல்லில்
வார்த்தெடுத்து வைத்துள்ளேன் தேர்கள் ஐந்து !
பொருத்தமில்லை என்றெதரால் கூறக் கூடும்?
புதுக்கலைகள் இவையெல்லாம் ; இவைபோல் உண்டோ?
அருங்கலையின் பெருஞ்சிறப்பைப் பல்லவர்கள்
நற்பெயரை அழியாது நிலைக்க வைத்தேன்!
கருத்திழந்தான் மாமல்லன்; என்றன் வாழ்வுக்
கலைமுல்லை உயிர் பிரித்தான்; இங்கென் வேலை?

'கல்லொன்றால் மதயானை ஒன்றுண் டாக்கிக்
காண்பவரின் கருத்தீர்க்க நிறுத்தி யுள்ளேன்;
சொல்லுவரோ கல்லென்று? நீண்டு தொங்கும்
தும்பிக்கை எவர் தொடுவார்? அஞ்சி நிற்பார்!
மல்லாரும் தமிழ்நாட்டுக் கலையின் மேன்மை
வாய்விட்டுக் கூறுதற்கே யாரா லாகும்?
மெல்லடியாள் கொடிமுல்லை என்றன் வாழ்வு!
வேரறுத்தான் மாமல்லன்; இங்கென் வேலை?

'மலைகுடைந்து குகைக்கோயில் நுழையும் வாயில்
வரிசையாய் நிற்கின்ற சிங்கத் தூண்கள்,
சிலை இரண்டு முன்வாயிற் படிக்கும் காவல்,
வருவோரைச் சிரித்து வர வேற்கத் தூணில்
நிலைபெற்ற நூலிடையாள் சிலைகள்; என்றன்
நெஞ்சறிவின் படைப் பலவோ? மறுக்கப் போமோ?
தொலைத்து விட்டான் என் வாழ்வைக் கலையை மல்லன்:
தோகைமயில் உயிர் நீத்தாள்; இங்கென் வேலை?

காட்டானைக் கூட்டத்தை, மானை, நீலக்
கருங்கடலின் வண்ணத்தான் படுக்கைப் பாம்பைக்
காட்டுதற்கும் மலைகுடைந்து செதுக்கி யுள்ளேன்;
கைத்திறத்தை என்னுளியைப் புகழார் உண்டோ?
நாட்டிற்கும், நரசிங்கப் பல்ல வற்கும்
நற்புகழை நான் சேர்த்தேன்; கைம்மா றென்ன?
தீட்டாத ஓவியமாம் என்றன் வாழ்வுக்
கொடிமுல்லை செத்தொழிந்தாள்; இங்கென் வேலை?

கற்பனையைக் கலைவளத்தை ஏற் ஒண்ணாக்
காடார்ந்த மலையெல்லாம் கொட்டி வைத்தேன்;
விற்போரில் நரசிங்கன் அடைந்த வெற்றி
விலையில்லா இக்கலைகட் கீடா கும்மா?
கற்சிலைகாள்! மலைக்குகைகாள்! நீங்கள் இந்தக்
கருத்திழந்த பல்லவனுக் கறிவிப் பீரோ?
பொற்புடைய கலையூற்றை இழந்தேன்; வாழேன்;
புளிக்குதெனக் கிவ்வுலகம் இங்கென் வேலை?

நாணற்றால் வில் வெற்றி உண்டோ? யாழின்
நரம்பற்றால் நல்லிசையைக் கேட்கப் போமோ?
பூணற்றால் மதயானை அரசர் கோட்டைப்
புறமதிலைப் பெயர்த்திடுமோ? இயற்கைக் காட்சி
காணுகின்ற விழியற்றால் கலைதான் உண்டோ?
கற்பனையின் பெருக்குண்டோ? என்றன் வாழ்வின்
மாணிக்கச் சுடரொளியாள் செத்தாள்; இந்த
மண்ணுலகம் புளிக்குதெனக் (கு)! இங்கென் வேலை?

'காதலுக்கு மதிப்பில்லா இந்த நாட்டைக்
கருக்கிடுவாய் தூய தமிழ் அன்னாய் ; மக்கள்
சாதலுக்குப் பயந்ததனால் கொடுமை யெல்லாம்
தாங்கி இங்கு வாழ்கின்றார்; ஆரியத்தை
ஆதரித்த தாலன்றோ தமிழர் வாழ்வு,
கலையெல்லாம் அழிந்தொழிந்த திந்த நாட்டில்?
தீதெல்லாம் நன்மையென அரசன் எண்ணச்
செய்தெது? புறப்பட்டேன்; இங்கென் வேலை?

'கலைஞனுக்கு மதிப்புண்டு பழங்காலத்தே ;
காசில்லாப் புலவனுக்கும் அவ்வா றாகும்;
அலைந்துவந்த களை நீங்க முரசு கட்டில்
அயர்ந்தானுக் கோரரசன் கவரி வீசும்!
கலைக்கோயில் சமைக்கவந்தேன்; சோலை யுள்ளே
காதல்வந்து குதித்ததடி இயற்கை அன்னாய்!
விலைகொடுத்து வாங்குவதோ உலகில் காதல்?
வேலை இல்லை இவ்வுலகில்; புறப்பட் டேன் நான்!

என் மனம் போல் கொந்தளிக்கும் கடலே, கேள் நீ;
என்ன பிழை செய்தேன் நான்? ஆராயாமல்
உன் கரையின் தலைவன் போத் தரையன் மூவர்
உயிருண்டான்! இது முறையோ? நீதான் சொல்லேன்?
நன்மையினை நிலைநாட்ட வேண்டு மென்றால்
நாட்டிலுள்ளோர் இதை உணர வேண்டும் : சொன்னேன்!
உன் வலிமை காட்டிடுவாய்; எழுந்து பொங்கி
ஊரழிப்பாய் ; பல்லவனை ஒடுக்கு வாயே!

'காராகி வான் தவழு கின்றாய் நீயே!
கடும் பஞ்சம் போக்குகின்ற அன்னை நீயே!
பாரிலுள்ளோர் நீ வெகுண்டால் எதிர்க்கப் போமோ?
பல உயிர்க்கும் தாய் நீயே! கெஞ்சு கின்றேன்;
நேரில்லா இவ்வரசும், ஆரியத்தால்
நிலைகெட்ட தமிழ்நாடும் இருந்திங் கென்ன?
நீர் பெருக்கி அழித்தொழிப்பாய் ; மீண்டும் நல்ல
நெறிசெல்லும் தமிழ்நாடு முளைக்க வேண்டும்!

அரசனுக்கும் ஆண்டிக்கும் வேறு வேறு
சட்டதிட்டம் அற்றுலகம் வாழ வேண்டும்;
அரசன் தன் இச்சையைப் போல் எதையும் செய்யும்
அடுக்காத செயல் மண்ணில் ஒழிய வேண்டும்;
கரையில்லாப் பெருங்கடலே! தனித்திங்கின்று
கலங்குகின்றேன்; மாமல்லன் எனது வாழ்வைத்
தரைமட்டம் செய்துவிட்டான்; சீறிப் பொங்கிப்
பழிவாங்கு! தப்பாதே!' என்றான்; வீழ்ந்தான்!
-------

வாணிதாசனின் பிற படைப்புகள்
    1. தமிழச்சி - 1949
    2. பெரிய இடத்துச் செய்தி - 1951
    3. தொடுவானம் - 1952
    4. எழிலோவியம் - 1954
    5. வாணிதாசன் கவிதைகள் - 1956
    6. பொங்கற் பரிசு - 1959
    7. தீர்த்த யாத்திரை-1959
    8. இன்ப இலக்கியம்- 1959
    9. குழந்தை இலக்கியம் -1959
    10. சிரித்த நுணா-1963
    11. இரவு வரவில்லை -1963
    12. பாட்டுப் பிறகுமடா-1963
    13. இனிக்கும் பாட்டு -1965
    14. எழில் விருத்தம் - 1970
    15. பாட்டரங்கப் பாடல்கள் - 1972
    16. வாணிதாசன் கவிதைகள் தொகுதி - 2 - 1981
    17. வாணிதாசன் கவிதைகள் - தொகுதி - 3 - 1984
    18. விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ - 1989
    அச்சிட்டோர் : ஸ்ரீ கோமதி அச்சகம், சென்னை - 600 005


Comments