Kaccikkalampakam


பிரபந்த வகை நூல்கள்

Back

கச்சிக்கலம்பகம்
பூண்டி அரங்கநாதமுதலியார்



கச்சிக்கலம்பகம்.
ஆசிரியர்: பூண்டி அரங்கநாதமுதலியார்



கச்சிக்கலம்பகம்.
ஆசிரியர்: பூண்டி அரங்கநாதமுதலியார்

Source:
கச்சிக்கலம்பகம்.
பூண்டி அரங்கநாதமுதலியாரால் இயற்றப்பட்டது.
சென்னை திராவிடரத்நாகர அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1889. (Registered Copyright)

கணபதி துணை
காப்பு
நேரிசை வெண்பா
தங்கச் சிலையேடுந் தந்தவெழுத் தாணியுங்கொள்
துங்கக் கரிமுகத்துத் தூயவனென் - சங்கையழித்
தேடெழுத் தாணி யெடுத்தறியே னிந்நூலைப்
பாடவளிப் பானற் பதம்


நால்வர் துதி
ஆசிரிய விருத்தம்
தறையின்மிசைத் தமிழ்பெருகச் சைவநெறி
      தழைப்பவவ தரித்த சால்பின்
மறையுறைவா மொருநால்வர் பதம்வரைச்
      சிரங்கொண்டு மடத்தைப் போக்கிக்
குறைவறுநாற் றோற்றத்தி னுளதாய
      துயரகலக் குறிப்ப னன்னோர்
பிறைசுமந்த சடையாரென் பிழைசுமந்த
      கலம்பகத்தைப் பெறச்செய் வாரே.


ஒருபோகு மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
தரவு
பூமேவு நான்முகனும் புயங்கவணை மாதவனு
மாமேவு நினதுமுடி மலரடிகா ணாத்திறத்தை
ஆராயு மறிவினரே யம்பலக்கூத் தாட்டினையும்
வாரார்ந்த தனத்துமையாண் மகிழ்ந்துறையு மாட்டினையுங்
கழையிழைத்த வில்லானின் கண்ணினுறு கேட்டினையும்
பிழையிழைத்த முப்புரத்தார் பீடழிந்த பாட்டினையும்
அறமேய மால்விடையா யம்புதமா யம்பாகித்
திறமேய தேவியுமாய்ச் சேர்ந்தவருங் கூட்டினையுங்
கல்லடித்தார் சிலையடித்தார் கண்பறித்தார் முதலடியார்
தொல்லைநிலம் பிறவாமே துயரறுத்த பீட்டினையும்
பாற்கடலி னமுதெழுமுன் பகைத்தெழுந்த வாலத்திற்
கேற்கவிட மமைத்தமரர்க் கின்புறச்செ யூட்டினையுங்
கிழக்குவடக் கறியாத கீழ்மையருஞ் சிறப்பெய்தி
வழக்குமிடப் புரியுணர்வு வாய்ப்பளித்த தீட்டினையு
மறிபவரா மன்றியெம்போ லறிவற்ற சிறியவர்வீ
டுறுவகைமற் றில்லையென வுணர்தெளிது காட்சிதரீஇ
மாகம்பத் தொடுமிறைஞ்சி வழிபாடு செயவுமையோ
டேகம்பத் தொருமாவி னினிதுவீற் றிருந்தருள்வோய்


ஈரடித்தாழிசைகள் - 8
இடங்கர்வாய்ப் பட்டகளிற் றின்உயிரைப் புரந்தசெயல்
கடல்வீழ்த்த நாவரையன் கன்மிதத்தற் கொப்பாமோ (1)
கைகைக்குக் கானடந்த காகுத்தன் பொறையினுநீ
வைகைக்கு மண்சுமந்த வண்மைமிகப் பெரிதன்றோ (2)
கம்பத்த னுயிர்மாயக் கடுஞ்சமர்செய் கைவலியென
கம்பத்தன் சிலையெடுக்கத் தலைநெரித்த கால்வலிக்கே (3)
கொம்பனையாள் கல்லுருவிட் டின்னுருவங் கொண்டதினுஞ்
சம்பந்த னென்பைப்பெண் ணாக்கியது சால்புடைத்தே (4)
அம்பொன்றாற் புணரிநீர் சுவறச்செ யாற்றலினும்
நம்பொன்றாப் புரமூன்றை நகைத்தழித்தன் மேன்மையதே (5)
எழுவிடையைத் தழுவிமண மெய்துமொரு செயலினுஞ்சீர்
மொழியரைய னமணர்கரி முனிவொழித்த தற்புதமே (6)
அண்டரிள மடவாரை யணைந்தவபி ராமமெனோ
பண்டிருடி மனைவியர்கள் பாடழிந்த வனப்பினுக்கே (7)
பற்குனற்கு மாயன்சு பத்திரையைத் தந்தவகை
சற்குணற்குப் பரவைதரு தண்ணளிக்கு நேராமோ (8)


அராகம் - 4
உரையிட வரியதொ ரனலுரு வொளிதர
வரைமக ளிடமுறு வகைபுரி யளியினை (1)
நிலழிடு தருவடி நிலைபெறு கருணையை
வழிபடு மவர்பெற வருள்பர வெளியினை (2)
பகலவ னனலவ னிறைமதி பரிவுறு
தகவமை யுரைமிகு தமனிய வொளியினை (3)
பழமறை யலிகெழு பலதல மருள்பய
னழகுற வருளிவ ணமர்தரு களியினை (4)


பெயர்த்தும்வந்த ஈரடித்தாழிசைகள் - 8
நறைபூத்த மலர்க்கொன்றை நளினத்தின் மாண்டதுவே
பிறைபூத்த செஞ்சடையாய் பிறங்குபுய முற்றபினே (1)
பணியணிந்தாய் மற்றதைவிற் பற்றியிசைத் தாய்கயிறாத்
திணியவைத்தாய் மந்தரத்தே நஞ்சுணவுஞ் சிறப்பாமோ (2)
மாலுலகங் காக்கநர மடங்கலுருக் கொளவம்மா
லாலுலகுக் கானதுய ரகற்றவலார் வேறுளரோ (3)
மகிழிருந்தாய் மனையென்றோ மாசுணமேற் றுயின்றானுக்
ககங்கனியச் சங்காழி யாண்டகைமுன் னருளியதே (4)
கவுணியருக் கணிமுத்தங் காதலினீந் தருள்செயலக்
கவுணியருக் கணிமுத்தங் கனிந்திட்ட பரிசன்றோ (5)
மதிக்கீற்று வேணியுற மலர்விழியு மதியான
விதிசாற்ற வறியேமுன் மேனியழ கியம்புவதே (6)
முலைக்குறியும் வளைக்குறியுங் கொண்டதற்பின் முதலவனே
இலைக்குறியுங் குணமென்ன லெவ்வண்ண மியைந்திடுமே (7)
மாவடிக்கீ ழுற்றாயுன் மலரடிக்கே மங்கலச்சொற்
பாவடுக்க நாவளிப்பாய் பழமறைசொல் பரமேட்டி. (8)


நாற்சீரீரடி யம்போதரங்கம் - 2
கரந்தயங் கன்னமழு வேந்தி நெற்றியிற்
புரந்தெறு சுடர்க்கணும் பூண்ட மேன்மையை (1)
கூற்றினைக் குமைத்திடு கோலத் தாளினை
யாற்றினை யருணட மாடும் பான்மையை. (2)


நாற்சீரோரடி யம்போதரங்கம் - 4
ஈரேழ் புவனம் பரிந்து ணேற்றினை (1)
காரூர் சடையிற் கரக்கு மாற்றினை (2)
பாரார் பெரியோர் பணியுஞ் சாற்றினை (3)
தேரார் தெளிவறு செருக்கை மாற்றினை (4)


முச்சீரோரடி யம்போதரங்கம் - 8
புரமெரி படநகை கொண்டனை (1)
புரிதவ மழிவகை கண்டனை (2)
புரையறு தசைமிகை யுண்டனை (3)
புணர்வுற வருமறை விண்டனை (4)
மணிமிட றார்தரு மிருளினை (5)
மலைவளர் காதலி மருளினை (6)
மறையளிர் தோமறு பொருளினை (7)
மகிழொடு மாவம ரருளினை (8)


இருசீரோரடி யம்போதரங்கம் - (14)
சடையுறு செல்லினை (1)       அமுதுகு பாவினை (9)
விடையுறு மெல்லினை (2)       அனலுறு கோவினை (10)
கலையளை சொல்லினை (3)       சிலையில வாவினை (11)
சிலைவளை வில்லினை (4)       தலைநதி மேவினை (12)
மலைவலி புல்லினை (5)       மறைபடு நாவினை (13)
வழிபெறு மல்லினை (6)       உலகுணு மேவினை (14)
களமில கல்லினை (7)       கரிவளர் காவினை (15)
பரவெளி யில்லினை (8)       கதிதரு மாவினை (16)


தனிச்சொல் எனவாங்கு
நேரிசையாசிரியச் சுரிதகம்
காரண வகில காரண பூரண
நாரண னறியா நாயக வேயக
முத்தே யறத்தின் வித்தே முக்கட்
சித்தே சத்தே யெத்தே வரும்பணி
அத்தா வன்னா யளிக்கொரு வைப்பே
கத்தா வெனக்கூய்க் கண்ணீர் ததும்ப
உள்ளநெக் குருக வுரோமஞ் சிலிர்ப்ப
விள்ளற் கருநின் மேன்மையைப் புகழும்
பாவலர் தமக்குப் பழவநு கூல
மேவலர் வேரற வீறிய சீல
மாதுமை பங்குறு மாண்புடைச் சீரிய
தீதெமை யணுகாத் திறமரு ளாரிய
நால்வ ரிசைத்தமிழ் நலனறி நாத
மால்வரை மங்கை மணாள நீத
கொன்றைத் தொடையணி கோனே பசுபதி
குன்றைக் குழைத்த கோதில குணநிதி
கல்லாப் புல்லேன் கனிவறு மனத்தேன்
எல்லாப் பிழையு மியற்று மேழையாற்
சொல்லப் படுமோ சொலற்கரு நின்புகழ்
புல்லப் படுமோ புரையறு நின்பதம்
உன்னப் படுமோ வுத்தம நின்னெழில்
பன்னப் படுமோ பகவ நின்னருள்
பாடப் படுமோ பண்ணவ நின்சீர்
தேடப் படுமோ சேவடி யென்னினும்
அல்லார் நஞ்சரா வக்கு மத்தமும்
புல்லு முவப்புடன் புனைந்தெனக் கனிந்து
சிற்றறி வின்னுரை செய்யுளை
முற்று நயப்பாய் மூவாக் கையனே (1)

நேரிசை வெண்பா
ஐய முறுமனமே யண்ணறிருக் கச்சியரன்
செய்ய மலரடியைச் சிந்தித்தி - நையாமே
இன்மையறி யாவீகை யெச்சமறி யாவாய்மை
புன்மையறி யாப்பொறையைப் பூண் (2)


கட்டளைக்கலித்துறை
பூண்ட வரவ மதியை யுணாது புரந்தருளு
மாண்ட வரவம் புரிவார் செயலை யழித்துவக்குந்
தாண்ட வரவ ரிணையடித் தாமரை தஞ்சமென
வேண்ட வரமளிப் பார்கச்சி யன்பர்க்கு மெய்யரணே (3)


புயவகுப்பு இரட்டை ஆசிரியச்சந்த விருத்தம்
தனதனன தந்தனத் தனதனன தந்தனத்
தனதனன தந்தனத் தனதான தந்தன

i)
அரணெரிய வந்தரத் தமரர்துயர் சிந்தவெற்
      பினையருது ரும்பெனச்சி லைகோலி விஞ்சின
அரவமரி கந்துசெக் கரினிலகு செஞ்சடைப்
      பனிமதிய நண்புறப் புரியாம கிழ்ந்தன
அகிலபுவ னங்களுக் கமுதிடுநி ரந்தரிக்
      கிடமமர்வ ரக்கொடுத் தகலாத ணைந்தன
அழலுருவ மன்றுபெற் றொருபுறவ மைந்தனுக்
      கொளிவடிவு தந்தருட் பொலிவானி மிரந்தன
ii)
கரடமத கும்பமத் தககபட தந்தியைச்
      சமர்பொருது வென்றுரித் ததளாடை கொண்டன
கடலமுதை யும்பருக் குதவவெழில் கந்தரத்
      திலகுகறை கொண்டுதிக் கிருநால ளந்தன
களபமணி யம்பிகைக் கனகதன மின்புறத்
      தழுவிவரு மங்கலச் சுவடால்வி ளங்கின
கதிர்மதிய மங்கிமுக் கணினொளித யங்கிடக்
      கடுவுடைய திண்சினத் தரவாட நின்றன.
iii)
சரமழைபொ ழிந்தபற் குன்னருள்பொ ருந்திடப்
      பகைவர்கெடு வன்படைக் கொடையாலு வந்தன
சமரபுரி கந்தனைப் புலவருய மண்டமாத்
      திறலவுணர் பங்கமுற் றிடுமாறு தந்தன
சததளம லர்ந்தபொற் றவிசினிலி ருந்தவச்
      சதுமுகன்ம றங்கெடத் தலையோட ணிந்தன
சலமிசைது யின்றசக் கரதரன லம்பெறத்
      தருமவிடை யம்புறப் பரிவோடி ணங்கின
iv)
இரவினவிர் திங்களிற் செலுமொளிபெ றுங்குழைக்
      கவுரியிட மன்பினுற் றிடவாசை மிஞ்சின
இரணியனு ரந்தொலைத் தெழுநரம டங்கலைச்
      சரபவுரு வந்தரித் தமராடி வென்றன
இடபமிசை வந்துபொற் பதநசைகொ ளன்பருக்
      குயார்பதவி தந்திசைப் பருமோகை கொண்டன
இனிமைதரு கம்பமுற் றருளநக வெந்தைநித்
      தியநிமல சுந்தரப் பரனார்பு யங்களே. (4)

ஆசிரிய விருத்தம்
புயங்கப் பணியார் புரியுண்ட புனித விடையார் புரயின்மதி
தயங்கப் பணியார் சடையாளர் தயையின் சாலைதனை நிகர்வார்
இயங்கப் பணியார் புரமெரித்த வீசர் கச்சியிடையமர்ந்தார்
மயங்கப் பணியா ரவர்திருத்தாள் வணங்கீ ரிடும்பை வற்றிடவே (5)


அம்மானை
கலித்தாழிசை
வற்றா வளக்காஞ்சி வாழ்ந்தருளே காம்பரனார்
செற்றார் புரமெரித்த தீயாகா ணம்மானை
செற்றார் புரமெரித்த தீயரே யாமாயிற்
கற்றார்க ளந்தணராக் கழறுவதே னம்மானை
கழற லறுதொழில்சோ காரணத்தா லம்மானை. (6)


நேரிசை வெண்பா
அம்மானைக் கையமைத்தா னக்காளை யோடவைத்தான்
சும்மா விருந்துமதற் சுட்டெரித்தான் - பெம்மான்
பதிக்கச்சி மேய பரமன் பணிந்து
துதிக்கத் தருவன் சுகம். (7)

கட்டளைக்கலித்துறை
சுகந்தரு கச்சிப் பதிவந் தடியர் துயர்களைவோர்
நகந்தரு மெல்லியற் காம விழியிரு நாழிநெல்லா
லுகந்தரு முப்பத் திரண்டற மோம்பச்செ யுத்தமர்பா
தகந்தரு துன்பொழிப் பார்பணி வீரவர் தாண்மலரே. (8)


ஆசிரிய விருத்தம்
மலர்க்கஞ்சன் சிரமிழந்தான் கோப்புரக்க
மலையெடுத்தான் வன்றி யானான்
சிலைக்கரும்பா னுருவழிந்தான் சேணியங்கு
மிருகதிருஞ் சிதைந்து நொந்த
கலக்கரிய பகைப்புரங்க ணீறுபட்ட
கச்சியே கம்பர் மேன்மை
நிலைப்படவா யாமையினன் றோமனமே
புகழ்ந்தடைதி நிமல வாழ்வே. (9)


வலைச்சியார் இரட்டையாசிரிய விருத்தம்

வாளைக் கயலை நிகர்த்தவெங்கண்
      வலைச்சி யீர்நும் வனப்பெவரான்
      மதிக்க வமையு மரன்கச்சி
      வந்தீ ரளவா மயறந்தீர்
தோளைத் தழுவிற் சுகம்பெறலா
      மூட லொழிவீர் நீர்க்குமிழி
      சுழிதேம் புளினந் தோன்றிடுமால்
      துயர முறுவே னடைகிழங்கா
னாளைக் கழியா திறாலிதழி
      னறவைப் பருக நச்சுறக்கொ
      ணானக் கருப்பஞ் சிலைவேளை
      நாணச் செய்வேன் மலங்குறேன்
கோளைப் போக்கற குறவைமட
      வைப்பா மகத்தைக் குழைத்தென்மேற்
      கொள்வீ ரிரத்த தென்காலான
      கொடிய பகழிக் குடையேனே (10)


கலிநிலைத்துறை
ஏனங் கொன்றா ரேனக் குருளைக ளிடர்தீர்த்தார்
மானங் கொன்றை வலன்வைத் துமைமா னிடம்வைத்தார்
தானங் குறைவார் தானத்துறையார் தமிழ்வல்லார்
கானத் துறவார் கம்பத் திடையே மகிழ்வாரே (11)


ஆசிரியச்சந்த விருத்தம்
மகிழார மாவாரை மணமேவ விழைவாய்
      மணியார மரவேயின் மலைபச்சை யுடையே
இகழீம மிசைபாடி நடமாடு மிடமா
      மிகவாத தொழிலைய மில்வாழ்வொர் மலையின்
மகவாய வொருநீலி மறைவுற்ற சலத்தாள்
      வரமைந்த னொருமாதின் வழிநின்ற திருடன்
தகவீது தெரிகாத லொழிவாயென் னுரைகேள்
      தரைமீதெந் நலமெய்தி மகிழ்வாய்மின் னரசே (12)


மடக்கு
விருத்தம்
அரசுக விதையாரும் பரசுக விதையாரும்
அடையமை மானாரும் புடையமை மானாரும்
வரமா சடையாரு முரமா சடையாரும்
வயமா திரத்தாரும் புயமா திரத்தாரும்
கரமணி வடத்தாருஞ் சிரமணி வடத்தாரும்
களிமறைப்பரியாரு மொளிமறைப் பரியாரும்
அரிப்பதி யானாருங் கிரிப்பதியானாரும்
அடியார் மாவாருங் கடியார் மாவாரே (13)


இரட்டையாசிரிய விருத்தம்

மாதுமையாள் பனிமலையில் வளர்ந்தாணிண்
      மதலையரிற் கயமு கத்தோன்
வரமுனிவன் வேண்டவட வரையேட்டிற்
      பாரதப்போர் வரைந்தா னீபப்
போதலங்க லணிகுமரன் குன்றுதொறும்
      பேருவகை பூப்ப மேவிப்
புனிதவிளை யாட்டயர்ந்தான் கச்சியமர்
      புண்ணியநீ கயிலை மேரு
மாதிரத்தே வதிந்தனையென் கல்லனைய
      மனத்தூடுன் குடும்பத் தோடு
மருவவொரு தடையுமிலை மலைசிலையா
      வளைத்தநினக்கெளிதே யென்றன்
கோதுடைய மனச்சிலையைக் குழைத்தன்பி
      னெகிழ்வித்த லைய முன்னாட்
குருகுய்ய வுபதேசங் கூறியநீ யெனக்-
      குரைத்தாற் குறைமட் டாமே. (14)


கட்டளைக்கலித்துறை
மட்டிக்குட் டங்குங் கணுநிகர் கஞ்ச மலரனைய
தட்டிக்குட் டங்கை முருகனத் தாகச்சிச் சங்கரனே
பெட்டிக்குட் டம்பண மிட்டுவப் பார்குணம் பெட்டுவினை
கட்டிக்குட் டன்றுய ரெல்லா மகன்றிடக் கண்டருளே (15)


வெண்பா
கண்டவளை மேவிக் கலந்துண்ட கள்வனொலி
கொண்டவளை நீர்க்கச்சிக் கோமானே-பண்டுனது
தாளை மருவுந் தகைமையிலா னுற்றதெவன்
தோளை மருவுஞ் சுகம். (16)


தூது-கிளி ஆசிரிய விருத்தம்
சுகமே மறைமா வடிமே வியவென்
      றுணைவற் கெளியேன் றுயரைப் பகர்வாய்
மகமே ருசிலைக் குனிவா னலனென்
      மதனன் கழையே வையம் புகைக்குஞ்
சகமே ழயின்றோன் பெயர்கொள் ளெளியேன்
      சரணா கதிசேர் தலைவேண்டினனென்
றகமே குழையப் புரிவா யெனில்யா
      னயர்தீ தகலத் தருவாய் சுகமே. (17)


கலிநிலைத்துறை
தீதறு நூலுணர் தெள்ளிய சிந்தையர் மனமூடே
காதலின் வாழே காம்பரர் முடியைக் காணவய
னேத முறக்கோ வெகின மெனப்போய் முடிகாணா
வேதனை பெற்றோ வேதனை யுற்றாள் வெளியானாள் (18)


ஆசிரிய விருத்தம்
வெளிவீட் டாரைக் காட்டாரை
      வியன்மா வாரைச் சேவாரை
ஒளிவிட் டோங்குங் கச்சியரை
      யுயர்மா மறையி னுச்சியரைக்
களியுற் றாடுங் கூத்தாரை
      யகில மனைத்துங் காத்தாரை
அளியுற் றினிது புணரந்திடுதற்
      காங்கன் செயலொன் றிலைமானே. (19)


இரங்கல் ஆசிரிய விருத்தம்
மாமையை யடைந்தாய் வானக முற்றாய்
      மழைக்கணீ ருகுத்திடப் பெற்றாய்
காமுற வணஞ்சேர் வில்வளை விட்டாய்
      கலைமதி யளித்தலைப் பெட்டாய்
நாமுற விடிக்க மின்னிடையானாய்
      நள்ளிரு ளம்பரம் போனாய்
ஏமுறு மென்போற் கொண்டலே கச்சி
      யீசனை விழைந்தனை சிறப்பே (20)


மடக்கு விருத்தம்
சிறுகாலின் மணமளவுந திருக்காஞ்சி யுள்ளீர்
சேயிழையாட் ககலுமிடைத் திருக்காஞ்சி யுள்ளீர்
மறியடு மழுவிடமார் மாசுணந்துன் புடையீர்
மங்கையணிந் திடுமுத்தம் மாசுணந்துன் புடையீர்
வெறிதாசை கூடன்மணத் துறவாலங் காட்டீர்
விதிவிழைவு கண்டவிடத் துறவாலங் காட்டீர்
அறிவேனுஞ் செயலிட்டீ ரம்பரங்கா வணமே
அளிப்பீரங் கொன்றைமல ரம்பரங்கா வணமே (21)


ஆசிரிய விருத்தம்
காரானைத் தோலுரித்த கறுப்பி னானைக்
      களித்துடல நீறணிந்த வெண்மை யானை
வாரானை யூரந்திலங்கு செம்மை யானை
      வலத்தானை யிடப்பாகப் பச்சை யானை
நீரானைச் செஞ்சடையி னெற்றி யுற்ற
      நெருப்பனைப் பொருப்பானைச் சகத்தி ரச்சீரப்
பேரானைப் பெரியானைக் கம்பத் தானைப்
      பெம்மானை யெம்மானைப் பேசு மாறே. (22)

கலி விருத்தம்
மாறி யாடு மலரடி மாமறை
கூற வாடுங் குவலயத் தின்னறந்
தேறவாடுங் தெளிதமிழ்க் கச்சியின்
பூற வாடு முளமகிழ் பொங்கவே. (23)


கைக்கிளை
மருட்பா
பொங்கு மருணயனப் பூவி னிதழகுவியு
மிங்கு மலர்க் கோதை யிதழ்வாடு-மங்குறவழ்
மாடக் கச்சியில் வாழுமெம் பெருமான்
குறையா வளக்கழுக் குன்றி
லுறைவா ளிவள்பூ வுதித்ததூயவளே (24)


மறம்
ஆசிரிய விருத்தம்
தூதுவந்த தொழிலிலாத வாவழகை யறிதியோ
தொல்லைதந்த மரபினோர்கொ டுந்தரக்கு வாரணம்
பூதலத்தி னிலையெனக்க லைவிழைத்த சிலையரே
பொன்றிணிந்த கொங்கைமான்ம கட்குறத்தி வள்ளிமுன்
போதகத்தை யேவியந்த மாதகத்தை யச்சுறப்
புரிந்தசெய்கை சாலுநுங்கு லம்புலட்ப டுத்திடச்
சூதவாழக்கை யார்துடிட்பி னாகம்வைத்த வாண்மையார்
சொன்மறைக்க வாயதாங்கொ றோற்புணரந்தி சைத்ததே (25)


கட்டளைக்கலிததுறை
இசையா ரணத்தின் முடியார் திருக்கச்சி யீசரன்பிற்
பசையா ரணங்கொரு பங்குடை யாரரிபங்கயத்தன்
மிசையா ரணங்கொழித் தோருள மேவிய மெய்யருத்தி
நசையா ரணங்குறு நானவர் நற்பத நாடுவதே (26)

ஆசிரிய விருத்தம்
நாடுந் தொண்டர் மகிழ்வெய்த நறுமா நீழ லமர்ந்தானைப்
பாடும்பணியேபணியாகக்படைத்தேன்பழையவினைதுடைத்தேன்
ஓடுங் துடியுங் கரத்தமைத்தோ னோங்கா ரத்தி னுட்பொருளைத்
தேடுந்திறத்தோர்க்கறிவித்தோன்றேவியுமையாள்காதலனே (27)


ஒருபொருண்மேல் மூன்றடுக்கிவந்த ஆசிரியத்தாழிசை
i)
காதங் கமழுங் கடியாரு மாந்தருக்கீழ்
நாதனருனாள னண்ணியசீர்ச் செவ்வி
காதிற் பண்ணாருங் கவியின்ப மானுமே
ii)
பூவின் மணமார் புனிதநறு மாந்தருக்கீழ்ச்
சேவின் மிசைத்திகழுந் தேசனயை செவ்வி
நாவின் னமுதூறு நற்சுவையை மானுமே
iii)
மண்ணிற் சிறந்த வளமளிக்கு மாந்தருக்கீழ்
விண்ணிற் பொலிந்தான் விளங்கியுறு செவ்வி
கண்ணிணையாற் காண்பரிய காட்சியினை மானுமே. (28)


வெளி விருத்தம்
மாக்கைக் குருகின் றழும்புற் றாரு மாவாரே
ஆக்கைக் கயனை யமைத்திட் டாரு மாவாரே
காக்கைக் கரியைக் கனிவித் தாரு மாவாரே
போக்கைக் கனலனைப் பொலிவித் தாரு மாவாரே (29)


களி
கட்டளைக்கலிப்பா
மாவி னீழல் வதிந்தருள் வார்கச்சி
      வாழு மின்ப மகிழ்வாய்க் களியரேந்
தேவ ரன்று சிதைந்தவ ரேமது
      வாவி சீதர னுண்ண மயங்குறின்
நாவ லாந்துமெய் பேசுவ ரின்னறை
      யுண்ட நன்மையா நற்பனை தெங்குசேர்
காலி டைப்பாடி யாடுவா மண்டரு
      கண்ணி றைந்த வமுதை யருந்தவே (30)


இதுவுமது ஆசிரிய விருத்தம்
அரவிந்த மலரின்கட் குடியனய னமரர்சுரா பானத்தாரே
வரமுறுகா விரிநதிக்கட் குடியனே திருமருவு மார்பி னானுந்
தரணியின்கட்குடியர்முனந்தவமுனிவர்சித்தரும்விண்ணவர்கடாமுங்
கரவடமேன்றிருக்கச்சிக்கண்ணுதலார்பனையின்கட்குடியர்தாமே (31)


கட்டளைக்கலிப்பா
கட்ட தும்புமி தழித் தெரியலைக்
      கச்சி நாதர் தருவ திலையெனிற்
றுட்ட மன்மத னைங்கணை யாமணச்
      சூத முல்லையச் சோகம ரவிந்தங்
கெட்ட வுற்பல மஞ்செரி போல்வருங்
      கிளிய னீர்மட நாணமச் சம்பயிர்ப்
புட்ட யங்குயி ரைந்தும வைக்கிரை
      யோவென் றோதிரச் செம்மழு வாளர்க்கே (32)


ஆசிரிய விருத்தம்
மழுவேந்து வலக்கரத்தர் மழையேந்துசடைச்சிரத்தர் வான்பு ரத்தர்
விழவாங்கு பூதரத்தர் வேளெரித்த மாவுரத்த ராத ரத்தர்
தொழவாழு மாதிரத்தர் நடமாடு மெரிசுரத்தர் தூவரத்தர்
குழையாடு செவியரத்தர் கச்சியுறை மாகத்தர் குணக்குன்றாரே (33)


சித்து ஆசிரிய விருத்தம்
குன்றைவளைத் தருள்கச்சிக் கோமானார் சித்தவுருக் கொண்ட நாள்யா
மென்றைக்குஞ் சிறப்பெய்த விச்சையுடன் கற்றவித்தை யிற்றென் றாமோ
மின்றைக்கு முடிவேந்தர் விரும்பவொரு தினத்திரும்பு தனைப்பொன் செய்வோம்
இன்றைக்குப் பொன்னளித்து நாளைவெள்ளி யியற்றினும்பின் சனிய தாமே (34)


இதுவுமது
சினியாகு மூழ்வலியாற் சகலகலை யறியுணர்ச்சி தகைபெ றாதால்
தனியாகு மெங்களுத வியைபெற்றுச் சாற்றும்ப ரடைந்தார் பொன்னில்
கனியாரும்பொழிற்கச்சிக்கண்ணுதலார்கைச்சிலம்பைக்கனகமாக்கிப்
பனியாருங்கடல்வண்ணனமார்பினைப்பொன்னிருப்பாகப்பண்ணினோமே (35)


கலிநிலைத்துறை
இருப்புக்கு வெண்பொன் பசும்பொன் னகங்கொண்ட விறைவாவெனைக்
கருப்புக் குழன்றெய்க்க வையா தருள்கூர்ந்து காப்பாய்கொலோ
பொருப்புக்கு வீழப் புலிக்காடை பொங்கப் புரஞ்செற்றசெந்
நெருப்புக்கு வதனத் திடந்தந்த வொருமா நிழற்சோதியே. (36)


நேரிசை வெண்பா
சோதிப் பரம்பொருள்வாழ் தூயவிடந் தொண்டர்நெஞ்சோ
வேதத் தனிமுடியோ வேள்விபுரி - மாதவர்வாழ்
தில்லையோ கம்பமோ சீர்க்கூட லோகயிலைத்
தொல்லைப் பனிச்சிலையோ சொல் (37)


இளவேனில் ஆசிரியச்சந்த விருத்தம்
பனிக்கால மாகப்ப லம்பூவி றைக்கும்
      பருவத்த ருட்கச்சி யிறையிங்கு வாரான்
குனிக்கோல கம்பன்ற ணிப்பென்ன சொல்வான்
      குன்றத்தி ருந்தானை மன்றத்து வைத்தே
தனிப்பாக வென்னைப்ப சக்கிக்க லந்த
      சமயத்து ரைச்சத்தி யங்கூறி யரவை
இனிப்பாரு மொழியாள னிதுசெய்த லழகோ
      வென்றேயு டன்கேட்ப னினியென்ன குணமே (38)


மடக்கு
ஆசிரிய விருத்தம்
குணதிசைவெய் யோற்கலரு மரவிந்தம் பானலமே
      குலைந்திடுந்தென் பொதியல்வரு மரவிந்தம் பானலமே
கணமாய முத்துயிர்க்கு நந்தனந்தங் கயலாமே
      கச்சியிறை தணத்தலின்வார் நந்தனந்தங் கயலாமே
அணங்கேற மதன்முளரி முலையெய்திடு மாசுகமே
      ஆசற்றா ரிதழ்பருக முலையெய்திடு மாசுகமே
வனமணியின் பரஞ்சுமந்த வாழிதயங் கருங்கலமே
      வஞ்சருக்கென் னெஞ்சரங்க வாழிதயங் கருங்கலமே (39)


பாண்
நேரிசையாசிரியப்பா
கலன்பணி யுடைதோல் கலம்பலி யோடுகொண்
டிலந்தொறு மிரந்து ணிறைதரு மொற்ற
மலைவளர் காதலி மங்கள வல்லி
சிலைவேட் களித்த சிற்சுக மங்களை
இழைவகிர் நுண்ணிடை யேந்திழை பங்கன் 5

பழைய கள்வன் பண்பினை யோர்ந்தேன்
பாணனே நின்னைப் பண்ணிசை கூட்டி
வீணையிற் பாடி விழைவை யூட்டித்
தன்வயப் படுத்தத் தந்திரங் கற்பித்
தென்வயிற் செலுத்து மிங்கித முணர்ந்தேன் 10

பாடினை யின்புறப் பாடல்கேட் டாங்கு
கூடிய கொற்றவன் குணமறி வாயோ
மலைப்பெணந் தரியை மகிழ்வாய் மணந்து
மலைப்பெணைச் சடையி லமைத்த தேனுரை
பம்பை நதிக்கரைப் பனிவரைக் குமரி 15

யம்பிகை பூசனை யாற்றின ளவளை
யுள்ளங் கலங்க வோங்குநீ ரழைத்துக்
கள்ளப் புணர்ச்சி கலந்து வடுப்பட்
டின்னமு மாறா தேய்ந்த தன்மை
யென்னவென் றுரைப்ப னிதுவலா தொருநாட் 20

டாரு வனஞ்செலீஇத் தாபதப் பன்னியர்
தெருமா லுற்றுப் பருவர லெய்தக்
கோவண நீத்துத் தீவணம் பூத்தம்
மின்னிடை யாருடன் விருப்புறப் பேசித்
துன்னிய தன்மை சொல்லுந் தகைத்தோ 25

வனிதையர் மயங்க வளைகொணர்ந் தன்று
மதுரையில் வந்த வசையே சாலுஞ்
சாலும் பாண சாலும் பாண
யாதுங் கேளேன் யானினி மயங்கேன்
போகென வுரைத்தும் போகா யந்தோ 30

அன்னை யறியா தணைந்தே னவனைப்
பின்னை யுற்றிடும் பீழை நினைத்திலன்
அகலுதி பாணா வனையறி வாளேல்
தகரு நின்சிரந் தமரும் வெகுளுவர்
நெஞ்சி லிட்ட நெருப்பின் வெட்பினை 35

வஞ்சக னறிய வழுத்துவை பாணா
மறந்தே னன்னையை மன்னனைப் புணர்ந்து
சிறந்தன மென்றே திகைத்தே னித்துணை
பட்டது சாலும் பாணனே மடவார்க்
கிட்டது தானே யியலும் பரமனை 40
வெறுத்தலும் வீணே விழைவு
பொறுத்தலு மிலனினிப் புரிவ னற்றொண்டே (40)


ஆசிரிய விருத்தம்
தொண்டர்க குறவே யானாரைத் தூய மறைமா நிழலாரை
அண்டர்க கிறையா மடலாரை யக்கு மெலும்பு மணிவாரைக்
கொண்டல் வண்ண னெண்கண்ணன் கூறற் கருஞ்சீர் கொண்டாரைத்
கண்டத் துறையு மாறுகடற் கடுவுண் டாரைத் துதிப்பாமே (41)


தூது-மேகம்
நேரிசை வெண்பா
கடுக்கைத் தொடைநயந்தேன் காதலுடை யார்யா
னடுக்கை யுறுமா நயந்தார் - கொடுக்கைக்குச்
செல்லே சிறந்தாய் திருக்கச்சி வாணர்பால்
வல்லே தொடையிரந்து வா (42)


கட்டளைக்கலிததுறை.
இரந்துயி ரோம்பிட வேழை மனங்கொதித் தின்னலுற
வுரந்தொலைந் தோயப் பலநோ யுடற்ற வுறுபசியால்
வருந்துபு மானமுந் தீரமு மங்கி மடிந்தொழிவீர்
திரந்தரு மேகம்ப வாணரை நீரென்கொல் சேர்கிலிரே (43)


தூது-நெஞ்சு
நேரிசைவெண்பா
என்னெஞ் சினுமினியா ரில்லையென வெண்ணியதைத்
துன்னற் கருங்கச்சித் தூயவர்பா - லின்னலறப்
பூங்கொன்றைத் தாரிரக்கப் போதி யெனவிடுத்தேன்
தீங்கொன்றைச் சூழ்ந்திலா தேன் (44)


கலிநிலைத்துறை
ஒன்று சூழின்வே றொன்றுமுந் துறவுணா வுலைந்து
பின்றை யெய்திடும் பெற்றியுய்த் துணர்கிலாப் பேயேன்
என்று நின்னரு ளிருங்கடல் குளிப்பதென் னரசே
மன்றி லாடிய குழகமா நீழல்வாழ் மணியே (45)


வஞ்சிததுறை
மாநீழ னல்லார்
ஆனேறு தொல்லார்
தேனேறு சொல்லார்
வானேறு கல்லார் (46)


ஆசிரிய விருத்தம்
கல்லாலின் கீழிருந்து கலைவிரித்துப்
      புணர்வளித்த கள்வ னார்க்குச்
சொல்லாலா யிரமுகமன் கூறுவையக்
      கச்சியர்க்குச் சுகுண முண்டேல்
வில்லாடும் புயல்தழி வீரும்புவையின
      றேலின்றே விழையப பெற்றாள்
அல்லோடக் கண்டவிட மாயும்வகை
      யறிவளென வறைதி மாதே (47)


நேரிசைச் சிந்தியல் வெண்பா
மாவுடையான் வெள்ளி மலையுடையா னெணடிசையாந்
தூவுடையா னால்வேதச் சொல்லுடையான் - தாவிலறச்
சேவுடையா னெங்கள்குலத்தே (48)


ஊசல்
ஆசிரிய விருத்தம்
தேவார முதலியவைந் துறுப்பும் வாழச்
      சிறந்தமறை யாகமங்கள் செழித்து வாழ்த்
தாவாத சித்தாந்த சைவம் வாழச்
      சந்தவரைச செந்தமிழ்நூல் தழைத்து வாழ
நாவாரும் புகழக்கச்சி நகரிற் காம
      நயனியடு முறையிறைசீர் நன்கு பாடிப்
பூவாரு மலர்விழியீ ராடி ரூசல்
      புத்தமுத நிகர்மொழியீ ராடி ரூசல் (49)


மதங்கி
ஆசிரிய விருத்தம்
ஆடரவ மரைக்கசைத்த வமலாதிருக் கச்சிமறு காடி மைந்த
ரூடுருவு பிணைவிழியோ டிணைவாளு மோச்சிவரு மொரும தங்கீர்
நாடவரு மிவைக்கிலக்கம் யாதோநும் மொழியமுத நல்கீர் விண்ணோர்
பாடமையப் பயவாரி கடைந்துகரம் வருந்தியதென் பண்டுதானே (50)


இடைச்சியார் ஆசிரிய விருத்தம்
பண்டுமலை கொண்டுபயோ தரத்திகலை
      வென்றிடுமைம் படையானுக்கு
மண்டுபயோ தரகிரியைக் காணிக்கை
      யிட்டீரால் வள்ளல் கச்சிக்
கண்டயங்கு மிடைச்சியீ ராடைநீக்
      காதுருசி காண்மி னென்பீர்
கொண்டவளை யுருக்காமே கொளவிணங்கீர்
      ததியெண்ணீர் நயமோர் விற்றே (51)


தூது-வண்டு நேரிசை வெண்பா
ஓர்காற் செலினறுகா லுற்றனையென் பார்வளமை
ஆர்காஞ்சி மேய வமலாதிரு-மார்பாருந்
தாராய கொன்றை தரச்சேறி வண்டேயான்
பேராத வின்பம் பெற (52)


ஆசிரிய விருத்தம்
பெரியானைப் பேரின்ப நிறைவீட் டானைப்
      பிறைமதியம் பிறங்குசடா தரனை யார்க்கு
மரியானை யடலவுணர் புரநீ றாக்க
      வழலூற்று நகையானை யரனை வேழ
வுரியானைத் திருக்கச்சி யுடையான் றன்னை
      யுன்னரிய குணநிதியை யப்பில் வேதப்
பரியானை யகநிறுவித் துதிப்பாரன்றே
      பவத்து வக்கைப் பாற்றுறுமா டவர்க ளாவார் (53)


வெறிவிலக்கு ஆசிரிய விருத்தம்
ஆடவரும் பெண்மைவிரும் பபிராமர்க் கணங்குற்ற வறிவி லேனைச்
சாடவருஞ் சிறுகாலுந் தழன்மதியுஞ் சாகரத்தி னொலியு நெஞ்சம்
வாடவரு மலர்க்கணையு மறிவீய விரிந்திடுமோ வனசத்தானுந்
தேடவரு மேகம்பர் தாமத்தைக் கொணர்வீரேற் றேறு வேனே (54)


கட்டளைக் கலித்துறை
தேறா மனத்தைத் திருப்பித் தெளிவுறச் செய்துபின்ன
ராறாத மும்மை மலப்பிணி நீங்கநல் லாற்றினுய்ப்பர்
மாறா வளக்கச்சி மாநிழ லாரு வணன்றனக்குப்
பாறா வரவ மணிந்தவா பேரருள் பாடுதுமே (55)


கட்டளைக்கலிப்பா
பாடு பட்டும் பயன்றரு கச்சிவாழ்
      பண்ண வன்னடிப் பத்தியில் பாவிகாள்
கூடுவிட்டுயிர் போம்பொழு தொன்றையுங்
      கொண்டு போதலி லாமையை யுன்னிலீர்
வீடு கட்டுவிர் வெள்ளிபொன் னீட்டுவீர்
      வேண்டு நன்மணி யாடையும் பூணுவீர்
ஏடு கட்டிய பாறயி ருண்ணுவீ
      ரெப்படிப்பெறு வீர்பொற் பதத்தையே (56)


கட்டளைக் கலித்துறை
பதஞ்சேர்த்துப் பாடியென் பாசத் தொடர்ப்பட்டுப் பாவையரிங்
கிதஞ்சேர்த்துக் கொஞ்ச மயங்கி யிடாப்பட் டிரங்குவனங்
கதஞ்சேர்த் தரைக்கசைத் தாய்கச்சி வாண கடையனெந்த
விதஞ்சேர்த னின்பதந் தாயனை யாய்கதி வேறிலையே (57)


கலி விருத்தம்
அனைத்திடமு மொளிமருவ வமைந்ததொரு விழியே
மனத்துயரை மாய்க்கவருண் மலர்ந்ததொரு விழியே
சினத்துலகைச் சிதைக்கவழல் சிறந்ததொரு விழியே
நினைத்துலகந் தொழுகச்சி நின்மலாமூ விழியே (58)


ஆசிரிய விருத்தம்
விழியால் விழியுறு பிறழ்வால் விது நிகர நுதலா னுதலுறு
      சிலையான்மென்
மொழியான் மொழியுறு சுவையான் முழுநல முலையான்
      முலையுறு பொலிவாற்பல்
வழியாற கணிகைய ருறவால் வலிகெட வயர்வே
      னினிமருள் மருவாமே
ஒழியா நலனுற வொருமா நிழலுடை யளியார்
      சடையவ ரருள்வாரே (59)


சந்த விருத்தம்
சடைகரந்த வரவமிந்து பகைமைமாறு தகைமையார்
      தாயையத்த வன்பினார் தனையிறந்த மகிமையார்
மடைதிறந்த கடலையத்த மருளகற்று மருளினார்
      மகிழ்சிறந்த முதல்வர் தங்க மலைகுழைத்தென் விறல்மதன்
படைவருத்த நெஞ்சிருப்பு வஞ்சரேன் குழைத்திலா
      பகரொணாத பண்பமர்ந்த பரமரின்னு மருகுறா
திடைமறந்த தென்கொலோவெ னிளமைநன் னலம்பெறற்
      கின்பளித்த கச்சிமேவு மிணையிலாத போதரே (60)


கட்டளைக் கலித்துறை
போதவித் தேபுக லேயற வோர்க்குநம் புந்தகையார்
தீதவித் தேறகுநற் செவ்விய னேபுலத் தெவ்வடா
வேதவித் தேமிக வேசறு வேற்கு விரைந்தருணீங்
காதவித் தேன்சுர ருண்கச்சி வாழன்பர்க் கண்ணியனே (61)


நேரிசை வெண்பா
அண்ணியரா னாரறவோர்க் கத்த ரலரிதழிக்
கண்ணியர்பூங் கச்சிநகர்க் கத்தரடி- மண்ணியமுத்
தந்தம்பற் பந்தாந் தனந்தந் தனவிடையார்
தொந்தங்கொ ளென்றன் றுணை (62)


ஆசிரிய விருத்தம்
துன்னிமித்தங் கண்டுமஞ்சா தொருதுணையும்
      பிணையாது துனைந்து சென்று
பொன்னிமித்தஞ் சிலைசுமந்து முறுவலித்துப்
      புரமெரித் தபுரை தீரெந்தாய்
என்னி மித்த மென்னகத்தே குடிபுகுந்தாய்
      திருக்கச்சி யிறைவா வேழை
தன்னிமித்தந் திருவுள்ளங் கனிந்ததன்றித்
      தகுதிமற்றென் றருக்கி னேற்கே (63)


ஆசிரிய விருத்தம்
தருக்குறு தெரிவையர் செருக்கிலே
      தளையிடு மவர்மொழி யுருக்கிலே
மருக்கமழ் குழலணி சொருக்கிலே
      மனமிவ ரிளமுலை நெருக்கிலே
பெருக்குறு விழைவமர் திருக்கினேன்
      பிசிதரு மறைமுதல் பிறையினே
டெருக்கணி கச்சியி னிறைவனா
      ரிரங்குறு மாறென் புகல்வனே (64)


மடக்கு ஆசிரிய விருத்தம்
கற்றரு மாதின் பங்குடையார்
      கச்சிய ரெனதின் பங்குடையார்
சிற்றளை யுள்ளுறை வாயலவா
      தென்வளி காதுறை வாயலவா
சுற்றுமு டைந்து வருந்திடரே
      தோற்றுமி டைந்து வருந்திடரே
பெற்றிடு முத்தம ருங்கழையே
      பேசரி யாரை மருங்கழையே (65)


பனிக்காலம் ஆசிரியச் சந்த விருத்தம்
அழைக்காம லணுகார் வெவ் வலர்கூர மாய்வே
      னையோவெ னையர்க்கு ரைப்பாரு மில்லை
கழைக்காம னெய்யுஞ் சரந்தைக்க நொந்தேன்
      கண்ணாள ரிந்தப்ப னிக்கால மோரார்
குழைத்தார் பொழிற்கச்சி வாழண்ண லாரைக்
      கும்பிட் டழைப்பீர்கு ழைப்பீர்ம னத்தைப்
பிழைத்தேன லேனென்று பிச்சாக்கி யம்பீர்
      பெண்பேதை யுய்யுந்தி றம்பாங்கி மாரே (66)


மடக்கு ஆசிரிய விருத்தம்
மாதரையிற் றருநறும்பூ விரைவிடுக்குங் காலம்
      மதன்சினந்து மங்கையரை விரைவிடுக்குங்காலம்
காதமணங் கமழ்சோலை பண்புணருங்காலம்
      கணவரிளங் கோதையர்தம் பண்புணருங் காலம்
சீதமுறு கழைக்கரும்பின் கண்டழைக்குங் காலம்
      சிற்றிடையார் தந்தலைவர்க் கண்டழைக்குங் காலம்
கோதறுசங் கினம்பழனப் பங்கமுறுங் காலம்
      குலவுகச்சி யார்பிரியப் பங்கமுறுங் காலம் (67)


வஞ்சி விருத்தம்
உறுசீர்க் கச்சி யுத்தமயான்
துறவுங் கொள்ளேன் றூய்மையிலேன்
அறமும் புரியே னமைவில்லேன்
பெறவுந் தகுமோ பேரின்பே (68)


இன்னிசை வெண்பா
.இன்படைய வேண்டி னிகலற்க-வன்பிறவித்
துன்பொழிய வேண்டினவந் துன்னற்க-அன்புருவாம்
போதனருள் வேண்டுமெனிற் பொய்யற்க-சூதகலச்
சூதநிழ லான்கழலைச் சூழ் (69)


நேரிசை வெண்பா
சூழுந் தளையாய தொல்லைப் பிறவியினைப்
போழு நவியமாம் புத்தேளிர்-தாழுநலம்
பொன்றா வளக்கச்சிப் பூங்கொன்றைக் கண்ணியர்தம்
இன்றாட் கிடும்பச் சிலை (70)


கலிநிலைத்துறை
பச்சைநி றப்பைந் தொடிவல மேவிய பசுபதியுள்
நச்சின ரொன்றினு மெச்சமு றாதரு ணனிகூர்வான்
கச்சியு றைந்தருள் கண்ணுதன் மறலிக் கண்டதனால்
அச்சமு றாதடி யவர்முன மந்தத் தணுகுவனே (71)


மடக்கு ஆசிரிய விருத்தம்
அணங்காறு தலையுள்ளா ரழக ரென்மா
      னணங்காறு தலையுள்ளா ரானா ரந்தோ
வணங்கூடு தலனலைப்பற் றுற்று மின்னாள்
      வணங்கூடு தலனலைப்பற் றறுத்த லோரார்
கணம்புரத்தைச் சாம்பருவந் திழைத்தார் கன்னற்
      கணம்புரத்தைச் சாம்பருவங் குலைப்ப துன்னார்
பணமொளிக்கும் பணிதரித்தார் கச்சி யீசா
      பணமொளிக்கும் பணிபரித்தார் பான்மை யுற்றே (72)


கட்டளைக் கலிப்பா
உற்றுப் பார்க்கிலுன் வாழ்க்கையென் னையமே
      யூரும் வெட்ட வெளியுடை தோலுனைப்
பெற்றுப் பார்க்கு ளுறுஞ்சுக மில்லையாற்
      பேதை நின்னையென் பெற்றிடப் பற்றினள்
கற்றுத் தேர்ந்த பெரியவர் வாழ்திருக்
      கச்சி மாநகர்க் கத்தவென் னத்தனே
பற்றி லாருளம் பற்றுறு பங்கயப்
      பாத னேபடப் பாம்பணி காதனே (73)


ஆசிரிய விருத்தம்
படவரவ மரைக்கசைத்த பரமா வாழும்
      பதிக்கச்சி மேயவிளம் பாவை கொங்கை
தடவரையே கரிக்கொம்பே சகோர மேமாந்
      தளிர்மேனி தமனியத்தி னொளியே கண்கள்
விடவடிவே யாசுகமே வேலே சேலே
      மென்மருங்குன் முயற்கோடே விழைந்தே னெஞ்சஞ்
சுடவகைதேர் புருவமதன் சிலையே துண்டஞ்
      சுடர்க்குடையே சுந்தரிகந் தருவ மானே (74)


தவம் கட்டளைக் கலித்துறை
மான்கொண்ட கண்ணியா மையலற் றேதவ வன்மைமரீஇ
யூன்கொண்ட துன்பை யழிக்கத் தலைப்படு முத்தமர்காள்
வான்கொண்ட வுச்சி வரைமுழை யுற்று மயர்வதெவன்
கான்கொண்ட கொன்றையர் கச்சியை யெய்திற் கலியுறுமே (75)


இரங்கல் ஆசிரியச் சந்த விருத்தம்
எய்தவம்பு தைக்குமுன்ன மற்றொர்பகழி தொட்டுவே
      ளேழையங்க நைந்துதேய வப்புமாரி பொழிகிறான்
செய்தவம்பு ரிந்திலாதெ னுய்யுமாறு முண்டுகொல்
      திகழுமாட மதியுரிஞ்சு கச்சிமேய செம்மலார்
கைதவங்க ணங்கியான்மன் மதனைவென்ற காதையென்
      காதனோக்கி யின்பளிக்க நேர்வரல்ல ரேலனை
வைதவம்பு நோக்கியேனு மனமுவக்க வந்திலர்
      மாதர்நோவ வெய்துசெல்வ மென்னவர்க்கு மங்கையே (76)


நேரிசை வெண்பா
என்னபிழை செய்தாலு மேழையே னுக்கிரங்கு
மன்னுபுகழ்க் கச்சியுறை வள்ளறான்- துன்னுமயன்
கம்மாள னீசன் சடையன் பொதுவனென்பேன்
கைம்மாறென் செய்வனோ காண் (77)


சம்பிரதம் ஆசிரிய விருத்தம்
காற்றைப் பிடித்தொர்சிறு கரகத்துண் மூடுவெங்
      கனலைவா னோங்க விடுவேம்
சேற்றைப் பிசைந்துசில தேவரையு மாக்குவெஞ்
      சீதரனை மாலாக்குவேம்
ஆற்றைச் செலுத்தியரி யேறவைப் பேமமுதை
      யாவலுடன் வாரியுண்பேம்
நீற்றைப் புனைந்தவா திருக்கச்சி போன்றதல
      நோதருஞ் சத்தி யெமதே (78)


கட்டளைக் கலிப்பா
சட்டப் பட்டவு ளம்பெற்ற சால்பினோர்
      தங்கப் பெற்றகச் சிப்பதிச் செல்வவேள்
குட்டப் பட்ட தலைவிதி யென்றலை
      கொடுமை கூரெழுத் திட்டனன் மாதர்வார்
கட்டப் பட்டத னம்பிறை வாணுதல்
      கடுவ டங்கிய கண்ணின்ம யங்குவேற்
கிட்டப் பட்டமட் டின்பமும் வாய்க்குமோ
      வீசனேயரு ணேசவி லாசனே (79)


ஆசிரிய விருத்தம்
அருணைப் பதியி னழலுருக்கொண்
      டமைந்த கச்சி யங்கணாமுன்
பெருமைப் புரத்தை யழிவெப்பும்
      பிழைத்த மதற்கொல் விழிவெப்பும்
கருமைப் பகடூர் காலனைக்காய்
      வெப்புந் தணியப் பழவடியார்
அருமைத் தமிழின் னமுதூறு
      மழையைச் சொரிந்தார் தெரிந்தாரே (80)


கொச்சக்கலிப்பா
மழைகொண்ட வுச்சியினார் வளங்கொண்ட கச்சியினார்
உழைகொண்ட கரத்தொழிலு முமைகொண்ட விடத்தெழிலுங்
கழைகொண்ட மதனழியுங் கனல்கொண்ட நுதல்விழியும்
இழைகொண்ட வுரத்தழகு மெமக்கினிய வமுதாமே (81)


கொற்றியார் ஆசிரிய விருத்தம்
ஆமைமீன் கோலமுறு மங்கமரீஇ யரவிடையா லகடு மேவி
மாமையுரு வோடுவளை சக்கரமேந் தித்திகழும் வகையாற் குல்லைத்
தாமனையப் பீரைந்து சரஞ்செய்துயர் நீக்கியரு டந்து காப்பீர்
கோமளைவா ழிடத்தர்கச்சி மறுகுலவு துளவமணக் கொற்றி யாரே (82)


கொச்சகக் கலிப்பா
மணக்கோலஞ் செய்ய மதனன் முடுகி நின்றான்
கணக்கோலங் கொங்கைக் கிடவந்தீர் கட்செவிமால்
குணக்கோலன் கச்சிக் குழகன் றிருவுலா
வணக்கோலங் காண வருவீர் மனமகிழ்ந்தே (83)


கட்டளைக்கலித்துறை
மதுவிருந் தேயளி பாடுந் தொடைபுனை மன்னருமிங்
கெதுவிருந் தேனும் பெறும்மின்ப மென்கச்சி யீசனைவான்
புதுவிருந் தேபுண்ட ரீகன முராரி புரந்தரனைப்
பொதுவிருந் தேவல் கொளும்பெரு மாவெனப் போற்றுவனே (84)


இதுவுமது
போற்றப்பல பாவுண்டு கேட்கச் செவியுண்டு பூப்பறித்துப்
தூற்றக் கரமுண்டு தாழச் சிரமுண்டு தோத்திரங்க
ளாற்றச்செந் நாவுண்டு தென்கச்சி வாணருண் டல்லலெலா
மாற்ற வருளுண்டு நெஞ்சே துயரெவன் மற்றெனக்கே (85)


கொச்சக் கலிப்பா
எனக்கே துனதருளை யெண்ணுமிய லென்றுயா
முனக்கே தெரியுமகக் குற்ற துயரமெலா
மனைக்கே தெரியுமக வறியுங்கொ லன்னைசெயல்
கனக்கேதந் தீர்த்தருள்பூங் கச்சிநகர்க் கண்ணுதலே (86)


கட்டளைக் கலித்துறை
கணங்கொண்ட பாசத் தொடரறுத் துய்யுங் கருத்துடையீர்
மணங்கொண்ட தண்டலை சூழுந் திருக்கச்சி மாநகர்வாழ்
நிணங்கொண்ட சூற்படை நின்மலன் றாளை நிதந்தொழுவீர்
பணங்கொண்ட பாம்பின் விடங்கொண்ட கண்ணியா பற்றஞ்சியே (87)


மடக்கு கட்டளைக் கலிப்பா
பரவை யாலம் பருகிய வண்ணல்விண்
      பரவை யாலம் பயின்றொரு நால்வர்தந்
தெரிவை யங்கடி செய்யர்ப் பரவையாந்
      தெரிவை யங்கடி யர்க்கருள் செம்மலார்
சிரமந் தாகினிச் செஞ்சடை யார்கொண்ட
      சிரமந் தாக்கு திருக்கச்சி நாதாதீ
யரவ மாலை யழித்தெனைக் காப்பரால்
      அரவ மாலை யணிந்தருள கத்தரே (88)


தழை ஆசிரிய விருத்தம்
கத்தனார் மகிழ்ந்த கச்சிவெற் புடையாய்
      காமனு மயங்குறு கவினார்
அத்தநீ யளித்த மாந்தழை யரிவைக்
      காருயி ரளித்தகா ரணத்தாற்
கத்தனா மநுமன் சானகிக் களித்த
      துணையமை யாழியோ விந்த்ர
சித்தனான் மடிந்த கவிக்குலம் பிழைப்பச்
      செய்தசஞ் சீவியோ தானே (89)


கலிநிலைத்துறை
தானே தன்னை நிகர்த்திடு காஞ்சித் தலமுடையான்
தேனே யமுதே கனியின் சுவையே தீந்தமிழே
கோனே யென்போர் குறைதீர்த் தென்றுங் குலைவில்லா
வானே தருவான் மாவெய் தியதென் மாதவமே (90)


பிச்சியார் ஆசிரிய விருத்தம்
என்னதவஞ் செய்தேனோ வுமைக்கம்பர் திருக்கச்சி யிடையே காணத்
துன்னவரு முடனீறுங் கல்லாடை யடுசெங்கைச் சூல முஞ்செம்
பொன்னனைய திருமேனிப் பொலிவுமே யெனைமயங்கப் புரியுங் கண்டீர்
அன்னநடைக் கன்னன்மொழிப் பிச்சியீ ரணிமுறுவ லதிகமன்றோ (91)


ஆசிரிய விருத்தம்
அதிக மன்றெளி யேந்துயர் புரிந்திடு மறக்கடை யாயுங்காற்
றுதிகொ ளேகம்ப வாணனார் தூயவ ரிதயவா லயத்தூடு
குதிகொ ளினபுரு வாயவர் மாதொரு கூறுடைக் கோமானார்
நதிகொள் வேணியா நாடுவோர் தமக்கமை நலத்தினைத் தெரிந்தாரே (92)


ஊர் நேரிசை வெண்பா
தெரிந்தார் மலர்த்தடத்தின் றெண்ணீர் துலைக்கோல்
பரந்தாழுங் கச்சிப் பதியே-கரந்தாழவெண்
மாதங்கத் தானத்தன் வாரிசத்த னேடரிய
மாதங்கத் தானத்தன் வாழ்வு (93)


ஓரொலி வெண்டுறை
வாழ்வளிக்குந் திருவிழியார் மறையளிக்கு
      மருமொழியார் வணங்கி னோர்தந்
தாழ்வகற்று மலர்ப்பதத்தார் தளர்வகற்று
      மைம்பதத்தார் தண்ணந் திங்கட்
போழ்வதியும் புரிசடையார் புகழ்க்கச்சி மேய
ஆழ்கருணை மாகடலை யடிபணிமின் கண்டீர் (94)


இரட்டை ஆசிரிய விருத்தம்
கரத்தின் வளையுஞ் சுழிவளையுங்
      கனிந்த மொழியாற் புனைவளையுங்
      கலையு மணியு மேகலையுங்
      கல்வி பயின்ற கலையறிவும்
புரத்தின் வனப்பு நூபுரமும்
      புரைதீரகத்தின் வற்புரமும்
      பொலன்றோ டணையும் பூவணையும்
      புரியும் பணியும் பொற்பணியும்
வரத்தினுத்தா ளழித்தாளம்
      மடமா னுடல மொழித்தாலும்
      வளமா வடியீ ருமைச்சரணா
      மருவப் பெற்றா ளாதலினாற்
சிரத்தி னலைமான் வைத்தீர்நுஞ்
      செந்தா மரைத்தாட் கீழேனுஞ்
      சேருந் திறத்தை யறிவாளே
      சிறியான் மதனை வென்றிடவே (95)


இரங்கல்-மடக்கு எண்சீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம்
மதனைவென்றவர் நஞ்சமார்ந்தவர் வலியாமுண்டக முள்ளியே
      மகிழ்நர்வந்திலர் மாலைதந்திலர் துயர்வ துண்டக முள்ளியே
கதமிகுந்தெழு மத்திநீர்த்துறைப் பெடைபிரிந்தில கம்புளே
      கவலைகூரவு ஞற்றிமேவுறு நறைசொரிந்தில கம்புளே
மதியினெற்றரு முத்தமேயவர் தருவதென்றரு முத்தமே
      மணியுயிர்த்திரை சங்கமேயிர வொன்றுபற்பல சங்கமே
நிதிதருந்தவ வங்கமேயினி யடைவதுந்தவ வங்கமே
      நெடியனுந்தொழு கம்பமேயுறை நிமலர்தீர்ப்பர்கொல் கம்பமே (96)


(செவியறிவுறூஉம்) மருட்பா
கம்பத திருந்துதவுங் கண்மணியைச் சிந்தித்து
நம்பத் திருந்துவீர் நானிலத்தீர் - வெம்பும்
பிணியு மூப்பும பீடழி பழியுந்
தணியா வறுமைத் தாழ்வுந் தீரும்
திருவரு ணமக்குச் சிவணத்
தருவ னன்னோன் சற்குரு வாயே (97)


இரங்கல் இரட்டை ஆசிரிய விருத்தம்
குருகு நெகிழுந் திறநவில்வாய்
      கழிசேர் குருகே குருகழியக்
      கொங்கை திதலை பூப்பவுளங்
      குலைந்தே யுடைய வுடைசோரப்
பருகும் பாலு மருந்தனமும்
      பகைக்கு மருந்தென் றறையனமே
      பழுவ மனைய குழல்பூவைத்
      தரியா மையைச்சொல் பூவையே
அருகு பயின்ற கிளையேயென்
      கிளையால் வந்த தத்தனையு
      மளந்த படியே யளந்தாலு
      மதுவே சாலு மளியினமே
முருகு விரிபூம் பொழிற்கச்சி
      மூவா முதல்வ ரளியின்மேன்
      முறையோ வளியேற் களியாமை
      கேளீ ரிதனைக் கேளீரே (98)


இரட்டை ஆசிரிய விருத்தம்
கேளோ டுற்ற கிளையறுப்பீர்
      கேத முறுவீர் கெடுமதியாற்
      கிளிவாய் வரைவின் மகளிர்பாற்
      கிட்டி மயங்கித் தியங்குவீர்
வாளா கழிப்பீர் வாழ்நாளை
      வசையே பெறுவீர் வல்வினையீர்
      வளமாந் தருவா யுலகுய்ய
      வந்த கருணை யார் கலியைத்
தோளா மணியைப் பசும்பொன்னைத்
      தூண்டா விளக்கைத் தொழுவார்தந்
      துயரக் கடற்கோர் பெரும்புணையைத்
      துருவக் கிடையா நவநிதியை
வேளா டலைமுன் றீர்த்தானை
      வேழ வுரியைப் போர்த்தானை
      வெள்ளம் பாய்ந்த சடையானை
      வேண்டிப் புரிமின் றொண்டி னையே (99)


ஆசிரிய விருத்தம்
தொண்டர் சிரத்தின் முடிக்கும்பூ
      தொழுவா ரிதய நடிக்கும்பூ
அண்டா முடியிற் றுலங்கும்பூ
      அருமா மறையி னிலங்கும்பூ
பண்டை வினைப்பற் றழிக்கும்பூ
      பணிவா ரல்ல லொழிக்கும்பூ
தெண்ட னிடுவோர்க் கருள்கச்சி
      திருவே கம்பர் பதப்பூவே (100)

கச்சிக்கலம்பகம் முற்றுப்பெற்றது

Comments