Eṟipatta nāyaṉār carittirak kīrttaṉai


நாட்டுப் பாடல்கள்

Back

எறிபத்த நாயனார் சரித்திரக் கீர்த்தனை
வெங்கடசுப்பையரவர்கள்



வெங்கடசுப்பையரவர்கள் இயற்றிய
எறிபத்த நாயனார் சரித்திரக் கீர்த்தனை



வெங்கடசுப்பையரவர்கள் இயற்றிய
எறிபத்த நாயனார் சரித்திரக் கீர்த்தனை

Source:
வெங்கடசுப்பையரவர்கள் இயற்றிய
எறிபத்த நாயனார் சரித்திரக் கீர்த்தனை.

இஃது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்வான் நா. கதிரைவேற்
பிள்ளையவர்கள் விருப்பத்திற்கிணங்க, கருவூரிலிருக்கும் கோயம்பள்ளி
சுப்பிரமணியய்யர் குமாரர் மகா-ள-ள ஸ்ரீ வெங்கடசுப்பையரவர்கள்
இயற்றியதை, கருவூர் சைவமதபரிபாலன திருஞானசம்பந்த
நிலையம் ஸ்ரீ-ல-ஸ்ரீ கந்தசாமித்தம்பிரான் சுவாமிகளவர்களால்
கருவூர் “விவேகபாநு அச்சியந்திரசாலையிற்” பதிப்பிக்கப்பட்டது.
1923.
-----------------

எறிபத்த நாயனார் சரித்திரக் கீர்த்தனை.

சாத்துக் கவிகள்.

இஃது கோயமுத்தூர் வித்வான் கந்தசாமி முதலியாரவர்கள் குமாரர் வக்கீல்
மகா-ள-ள ஸ்ரீ C.K. சுப்பிரமணிய முதலியார் B.A., அவர்களாலியற்றியது
அறுசீர்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

சிவனடியார்க் கிடர் செய்வார் தமைத்தடிந்த வெறிபத்தர்
        செய்ய காதை,
யுவகைதருங் கீர்த்தனமா யுரைத்தழியாப் புகழ்பெற்றா
        னுணருங் கீர்த்தித்,
தவநிறையுங் கருவூர்வாழ் மாமறையோன் செவிக்கினிமை
        தகவாச் செய்தான்
கவனமுறு வேங்கடசுப் பையரெனும் பெயரோங்கு
        கவிவல்லோனே.
-----------

காங்கயம் அஷ்டாவதானம் V.சேஷாசல நாயுடு அவர்கள் இயற்றியது.

விருத்தம்.

சங்கீத சாகித்யத் துறையுணர்வோன் கண்ணப்பர்
        சரிதந்தன்னை
அங்கீதத் தாலுரைத்த வருட்பிரகாசப்புலவ
        ன்மார் யாரும்
இங்கீதல்லாதுபதி யேது நமக் கெனுங்கருவை
        யிசைந்து வாழ்வு
தங்கீத லிணைகரத்தான் மறையவர் குலோத்துங்கன்
        சத்ய வாக்கியன் (1)
புங்கமிகு கவுண்டினிய கோத்திரச் சுப்பிரமணிய
        புனிதன் செல்வன்
தங்கு மெங்கள் வேங்கிடசுப்புப் பேர்கொள் தமிழ்ச்சிங்கம்
        தகவினாய்ந்து
பங்கமிலாத் திருத்தொண்டர் புராண சரிதத்திலெறி
        பத்தர் சீர்த்தி
பொங்குமியலிசையாகப் புனைந்துரைத்தான் செவிக்கமுதாய்ப்
        புகல்வதாமே. (2)
-------------

தரங்கம்பாடியைச் சார்ந்த பிறையாறு மகா-ள-ள ஸ்ரீ நா. பெ. இராமச்சந்திரநாயுடு
அவர்கள் இயற்றியது

அறுசீர்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

நத்தாருங் கடற்புவியி லெறிபத்தர் சரிதையை நாமகளுங் கான
வித்தாரு நாரதனும் வாணனுஞ்சே டனுங்கூடி வியக்கச் செய்தான்
சத்தாருங் கீர்த்தனையா மறையவர்தங் குலக்கருவைத் தலத்துவாழுங்
கொத்தாருமணியுரத்து வேங்கிடசுப்பையனெனுங் குணவான்மாதோ
---------------

வீராக்ஷிமங்கலம் மகாவித்வான் மகா-ள-ள ஸ்ரீ கந்தசாமிக் கவிராயர்
அவர்கள் மாணாக்கர் குறிச்சி கம்பளியம்பட்டி மகா-ள-ள ஸ்ரீ
முத்துசாமிக்கவுண்டரவர்களியற்றியது.

அறுசீர்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

மருவூர்தா மரையிறையு மாதவனுந்
        தேடறிய மங்கைபாக
மருவூர்நன் னரையிறையு மனமுருகு
        மெறிபத்தர் மருவுங்காதை
கருவூர்செம் மறையுணரும் வேங்கடசுப் பையனெனுங்
        கனவான் சென்மக்
கருவூர் சென் னெறிமறியக் காசினியிற்
        கீதமதாய்க் கழறினானே.
---------

திருநெல்வேலி ஜில்லா சிவகங்கை சமஸ்தானம்
இராயகிரி மகா-ள-ள ஸ்ரீ அருணாசலக் கவிராயரவர்களியற்றியது.

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஈரெட்டுக் கலைமதிபோன் றிலகுமுக வசீகரமு
        மிறுகக் கட்டும்
வாரெட்டுங் கனதனத்தாண் மருவுமிடப் பாகனுமே
        மயங்கச் செய்தான்
காரெட்டுங் கருணையெறி பத்தர் புகழ் கீதமதாய்க்
        கருவூர் வாழும்
பாரெட்டுத் திசைபரவும் வேங்கடசுப் பையனெனும்
        பாவலோனே .
---------

எறிபத்த நாயனார் சரித்திரக் கீர்த்தனை.


முகவுரை.

ஐயன்மீர் யான் கல்லாதானாயினும் கசடறக் கற்ற செந்நாப்புலவர் பல்லோரது
நட்பினானும் அன்னவரது கல்வி கேள்வியின் மிகுதியானும், ஆன்ம கோடிகளைக் காக்கும் ஆநிலை நாதனது பேரருளினானும், ஒழிவுறுங் காலங்களிற் சிவனடியார்களது சரிதங்களிற் சில கீர்த்தனங் கூறியும், சிவபெருமான் மீது பதங்கள் பாடியும் வருமென்னை யாழ்ப்பாணத்து
மேலைப்புலோலி மகா வித்வான் நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் மேற்கூறிய கீர்த்தனங்களைக் கேட்டுவந்து தம்மூர் உபய கதிர்காமத் தல புராணத்தைக் கீர்த்தனங் கூறும்படி கேட்டவண்ணங்கூறி முடித்துக் கொடுத்த பின்னர் இத்திருத்தொண்டர் புராணத்தையுங் கீரத்தனங் கூறவேண்டுமென வற்புறுத்தினமையின் அவரது திருவாக்கைச் சிரமேற்கொடு இவ்வெறிபத்த நாயனாரது திவ்விய சரிதங் கீர்த்தனமாய் கூறி முடித்துக் கொடுக்கலாயினேன்.

எனினும், கல்லாதாருரைக்குங் கவிதையிற் சொற் குற்றம் பொருட் குற்றமுண்டாவ தியற்கை யென்பதனை ஆன்றோரிகழாது ஆதரிப்ப தன்னவர் பெருமைக்கோ ரணிகலமாக் கொண்டொழுகுதலினால் யானுமக்கல்லாதாரி லொருவனாதலி னெனது கவிதையிலுறுங் குற்றங்களனைத்தினையும் பொறுத்தாதரித்தற்கா யிங்ஙனம் வந்தனம் தந்தனன்.

இப்படிக்கு,
சு. வெ.
---------

திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய
திருக்கருவூர்த் திருவானிலைத் தேவாரப்பதிகம்
பண் -- இத்தளம்

தொண்டெலாமலர் தூவி யேத்தநஞ் - சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்டனார்கரு வூருளானிலை - யண்டனாரரு ளீயு மன்பரே.

நீதியார்நினைந்தாய நான்மறை யோதி யாரொடுங் கூடவார்குழைக்
காதினார்கரு வூருளானிலை - யாதி யாரடி யார்த மன்பரே.

விண்ணுலாமதி சூடி வேதமே - பண்ணுளார்பர மாய பண்பினர்
கண்ணுளார் கருவூருளானிலை - யண்ணலா ரடியார்க்கு நல்லரே

முடியர் மும்மத யானை யீருரி - பொடியர் பூங்கணைவேளைச் செற்றவர்
கடியுளார் கருவூரு ளானிலை - யடிகள் யாவையு மாய வீசரே.

பங்கயம்மலர்ப் பாதர் பாதியோர் – மங்கையர்மணிநீல கண்டர்வான்
கங்கையார் கருவூருளானிலை - யங்கை யாடவரத் தெம்மண்ணலே.

தேவர் திங்களும் பாம்புஞ்சென்னியின் -- மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவலர் கருவூரு ளானிலை - மூவராகிய மொய்ம்ப ரல்லரே.

பண்ணினார்படியேற்றர் நீற்றர்மெய்ப் பெண்ணினார்பிறை தாங்கு நெற்றியார்
கண்ணினார் கருவூரு ளானிலை - நண்ணினார்நமை யாளு நாதரே.

கடுத்தவாளரக்கன் கயிலையை - யெடுத்த வன்றலை தோளுந் தாளினா
லடர்த்தவன் கருவூரு ளானிலை - கொடுத்தவன்னருள் கூத்த னல்லனே.

உழுது மாநில தேன மாகிமா - றொழுது மாமல ரோனுங் காண்கிலர்
கழுதினான் கருவூரு ளானிலை - முழுது மாகிய மூர்த்தி பாதமே.

புத்தர் புன்சமணாதர் பொய்யுரைப் - பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய்ப்
பத்தர்சேர் கருவூரு ளானிலை - யத்தர் பாதமடைந்து வாழ்மினே

கந்தமார் பொழிற் காழி ஞானசம் - பந்தன் சேர்கருவூரு ளானிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர் - சிந்தையிற் றுயராய தீர்வரே.

திருச்சிற்றம்பலம்.
--------------

சிவமயம்.
எறிபத்த நாயனார் சரித்திரக் கீர்த்தனை

விநாயகர் துதி.
(இசைநடைக் கண்ணி)

திருவாநிலையுறு பசுபதி தேவன்றிருவடிசேர்
பெருவாளெறிபத்தர் சரிதையைப் பேசுவதற்கே.
குருவாகிய நால்வாயொற்றைக் கொம்பானையின் முகத்தோன்
இருமாமரை மலர்த்தாளிணை யேத்திப்பணிவேனே.

கீர்த்தனம்.
இராகம் – நாட்டை. தாளம் - ஆதி.

பல்லவி
        விநாயகா சாணம் கஜானன

அநுபல்லவி.
        அநாதரக்ஷக ஆபத்பாந்தவ
        அருணகோடி தே ஜோன்மய சின்மய (விநா)

சரணம்.
        மூலாதாரமூஷிகவாகன மோதகப்பிரியநாதா
        நாலாகியமறை போற்றிய பாதா
        நற்கருவூராநிலை வந்தசுந்தர (விநா)
-----------

கலைமகள் துதி.
(இசைநடைக் கண்ணி)
பங்கேருகன் மனையாள் வெளைப்பணியாள் வெள்ளையுடையாள்
செங்காந்தளினிறச் சேவடி சென்னிக்கணிவேனே.

கீர்த்தனம்
இராகம் – சுருட்டி. தாளம் - சாப்பு.

பல்லவி.
        கலைவாணீ யுனதிணைமலர்க் கழல்வணங்கினேன்

அநுபல்லவி.
        சலியாதேபாடுந்திறமை தானெனக்களிப்பாயே வெள்ளைக் (கலை)

சரணம்.
        உள்ளத்தைக் கொண்டுண்டுறங்கி ஓங்காரப் பிரணவத்தின்
        வள்ளலென்னும் பசுபதியை மன நினையாதிருந்தேன்
        கள்ளனென்று கைவிடாது காப்பாயருள் பூப்பாய்
        வெள்ளையாடை புனையுந்தாயே வேண்டியவரந்தருவாயே. (கலை)
----------

நால்வர் துதி.
(இசைநடைக் கண்ணி)
சீகாழியன் வாகீசன் மெய்திகழ் சுந்தரன் முதலாம்
பாகார்மொழிதிருத் தொண்டர்கள் பதமென்றலைக் கணியே

கீர்த்தனம்.
இராகம் – சங்கராபரணம். தாளம் – ஆதி.
பல்லவி.
        நால்வர் பதமலரே யெந்நாளும் துதிப்பீரே
அநுபல்லவி.
        மால்வராது மதர்வேல்விழி மாதர்மையல் புகுத்திடாது
        காலும்வெஞ்சமக்கடவுள்பாசம் காட்டிடாது முட்டிடாது. (நா)
சரணம்.
        இருவினைவாராமலோட்டும் ஈசனன்புமனநாட்டும்
        பரிவோடு முத்தி வழிகாட்டும் பசுபதிமலரடியிற் கூட்டும். (நா)
-----------

சபாபதி துதி.
(இசைநடைக் கண்ணி)
அலகைக்கென வுந்தூக்கிய வானந்த நடேசன்
இலகுந்திரு மலர்ப்பாதங்க ளேத்தாதவ ரெவரே.

கீர்த்தனம்.
இராகம் = இந்துஸ்தானி. தாளம் - சாப்பு.

பல்லவி.
        சபாபதியே சக தலாதிபதியே
அநுபல்லவி
        கபாலியே கிருபாநிதியே காக்கக்கடனே யெந்தாயே (சபா)
சரணம்.
        அம்பலத்தாடிய பாதம் பணியா நாயினேன்
        உம்பரும்புகழுன் பெருமை யோதிடாத வாயினேன்
        சம்பரனைச் செற்றவனைத் தடித்தவனே பெருந்தவனே
        நம்பினேனுன் பாதமலரை நற்கருவூர் வாழ்பவனே (சபா)
-------------

முருகர் துதி.
(இசைநடைக் கண்ணி)
மஞ்சேயெனுங்குழலாள் வள்ளிமகிழ்னன் அரிமருகன்
செஞ்சேவடிகளை நாளுமென் சிரத்தே யணிவேனே

கீர்த்தனம்.
இராகம் – காம்போதி. தாளம் – சாப்பு.

பல்லவி.
        ஆறுமுகா பன்னிருகையா

அநுபல்லவி.
        சூரனைந்தடிந்த சுந்தரமெய்யா

சரணம்
        காளையேறுங் கண்ணுதற்குப் பாலனே கன்னிவள்ளிக்குத்
        தோளணையுஞ் சோதியே துய்ய கருவூர் வாசியே. (ஆறு)

-----------

அலங்காரவல்லி சவுந்தரநாயகி துதி.
(இசைநடைக் கண்ணி)

அழகென்ப தோருருவாகிய வம்மானிருதாளும்
புழுகுங்கமழலங் காரியின் பொற்றாமரைத் தாளும்
வழுவின்றி யெந்நாளுஞ்சிர மணிவோர்க்கிரு வினை தான்
வருமென்று சொல்வாரும் அந்த மகிமீதினி லுளரோ.

கீர்த்தனம்.
இராகம் – கல்யாணி. தாளம் - சாப்பு.

பல்லவி.
        நம்பினேனே யேழைநானே வுங்கள்சீரடி
அநுபல்லவி.
        தும்புருநாரதாதியர் போற்றும்
        சுந்தரியலங்காரவல்லி யுங்கள்பாதம். (நம்)

சரணம்.
        பாடத்தெரிந்தவனோ பகவதி யுங்களைக் கொண்
        டாடத் தெரிந்தவனோ அருமறை முடிவினில்
        தேடத் தெரிந்திடாத திகழொளிகான் நிதம்
        நாடித்திரியுமெனை நாடிவரந்தர . (நம்)
------------
திருநந்திதேவர் துதி .
(இசைநடைக் கண்ணி)
மழுவேந்திய வானோன் பதம் மாறாது சுமக்கும்
வழுவாதவெள் ளேற்றின்பத மலர்கண்மற வேனே.

கீர்த்தனம்.
இராகம் – கேதாரகெள்ளம். தாளம் - ஆதி.
பல்லவி.
        வந்தித்தே னந்திதேவா வுன்பதமலரை
அநுபல்லவி.
        சிந்தித்தேன் பந்தவினை தீர்ப்பாய்
        காப்பாய் செழுஞ்சுடரே (வந்)
சரணம்.
        ஆரணனீ நாரணனீ யாநிலையீசற் கானவனீ
        பூரணனீ பூசுரனீ புகலுங்கருவூர் வாசனுனீ . (வந்)
-------------------

தலமகிமை
(இசைநடைக் கண்ணி)

கொங்கேழ் சிவதலஞ் சொல்பவர் குறிப்பார்முதற் கருவூர்
எங்கோன் பசுபதி வாழ்ந்திடும் இவ்வாநிலைதனையே
பங்கேருகன் முதலாயினர் பணியுந்தல மெனலால்
எங்கும்புகழ்தல் மற்றைய தெதுவென்று சொல்வேனே.

கீர்த்தனம்.

இராகம் – பியாக்கடை. தாளம் - சாப்பு.

பல்லவி.
        ஆநிலைத்தலம்போலே யிந்த அகிலத்திலுண்டோமேலே.

அநுபல்லவி.
        மாநிலம் புகழ்ந்தேத்துந் தலம்
        மறையவர்தினம் வாழ்த்துந் தலம்
        வானுறைபவர் வணங்குந் தலம்
        மறைவினில் இயங்குந் தலம் (ஆநி)

சரணம்.
        ஒருதரங் கருவூரென்பவர்க் குற்றிடாது பாசபந்தம்
        இருவினைகளைத் தீர்ப்பதற்கு மேற்றதெவர்க்குஞ் சொந்தம்
        வரும்வரும் யுகங்களிலழியா வாழ்வுடையது மாண்புடையது
        நிரதமும் சிவசாம்பிராஜ்ஜியம் நேர்ந்தளிப்பது சார்ந்திருப்பது (ஆநி)

-----------

முர்த்தி விசேடம்.
(இசைநடைக் கண்ணி)

இடர் தீர்ப்பவனடியார்களுக் கெம்மான் சிவ பெம்மான்
விடையான்புலி யுடையான்பெரு வினையேற்கரு ளுடையான்
மடைவாய்வருகடலோவென வருநறைமலர்த்தொடையான்
சுடர்மணிமுடியானன்பர் தொழுதேத்துஞ் சேவடியான்
வானாடரும் மண்ணாடரும் மகிழ்ந்தே யனுதினமும்
தானாடுமா நிலைமூர்த்தியின் சரிமூர்த்தியெங்குளவே.

கீர்த்தனம்.
இராகம் – காம்போதி. தாளம் - ஆதி.

பல்லவி.
        பசுபதி மூர்த்தி போலப் பாரினிலொருமூர்த்தி
        படைத்ததோ விந்தக்கீர்த்தி.
அநுபல்லவி.
        சசிதரமூர்த்தியவர் சங்கரமூர்த்தியவர்
        விசிகந்தொடுக்க மகமேருவளைத்ததவர். (பசு)
சரணம்.
        ஆதியாய் நடுவுமாய் முடிவுமாயிருப்பவர்
        அண்டகோடிகளெல்லாம் அன்னையாய்ப்படைப் பவர்
        சோதியாய் விளங்கிடும் துய்யவர்மெய்யவர்
        சொல்லுங்கருவூராநிலை நிலைத்திருப்பவர். (பசு)
------------

தீர்த்த விசேடம்.
(இசைநடைக் கண்ணி)
மேனாடிழிவருகங்கையின் மேம்பட்டிடப்புனிதம்
தானேசெயும் பலதீர்த்தமத் தலத்தன்றியெங்குளதே.
---------

அவையடக்கம்.
(இசைநடைக் கண்ணி)
பூமேலவன் படைப்புக்கெதிர் புகல்கின்ற குலாலன்
தாமே படைத்திடும் பெறியது சாராததுபோலே,
வானேயெனுந்தமிழின்கடல் மகிழ்ந்துண்டவர்களின்முன்
நானே சொலப் புகுந்தேனிதை நன்றன்று கொள்வாரோ

கீர்த்தனம்.
இராகம் – கானடா. தாளம் - சாப்பு.

பல்லவி.
        பொறுப்பீரே யென்பிழையை
        புலவரெனும் பெரியவரே.
அதுபல்லவி.
        மறுப்பீரோ உங்கள்சிறு மைந்தர்சொலு
        மழலைச்சொல்லை (பொறு)

சரணங்கள்.
        ஏடறியேன் எழுத்தறியேன் இலக்கணவிலக்கிய மறியேன்
        பாடும்வழி பகர்ந்தறியேன் பதமறியேன் விதமறியேன். (பொறு)
        கற்காதானாயினும்யான் கருவூராநிலையீசன்
        பொற்பாதமடைந்ததொண்டர் பூஞ்சரிதம் புகலலுற்றேன் (பொறு)
----------------------

நாட்டுச் சிறப்பு.
(இசைநடைக் கண்ணி)
௸ வேறு.
மாதந்தோறும் மும்மாரி வழங்கும் விளைவோ பெருவாரி
காதும்வறுமையை யறியாதே களிக்குங்கொங்கெனும் வளநாடே

கீர்த்தனம்.
இராகம் – தோடி. தாளம் - ஆதி.

பல்லவி.
        எங்குநாடினாலுமிந்தக் கொங்குநாடுபோலவளம்
        தங்குநாடு கண்டபேருண்டோ .
அநுபல்லவி.
        அங்கநாடுவங்கநாடு அந்தமாங்கலிங்கநாடு
        துங்கநாடு தங்கநாடு சோழ சேர பாண்டிநாடு. (எங்கு)
சரணங்கள்.
        விளைவிற்குறை வில்லாநாடு வேண்டிய பொருள் கிடைக்குநாடு
        தளைவிற்சிறந்து விளங்குகாடு சத்தியந் தப்பாத நாடு. (எங்கு)
        கொலைகளவுபொய் யில்லாநாடு கூரறிவோ ருறையுநாடு
        கலகமின்றி வயங்குநாடு கருணைமாரி பொழியுநாடு. (எங்கு)
-------------

நகரச்சிறப்பு.
(இசைநடைக் கண்ணி)
அந்நாட்டிற் கொருதிலதம்போல் ஆநிலையென்னுங் கருவூராய்
மன்னும்நகரத்தின்வளமை மகிழவுரைத்தற்கென்வசமோ

கீர்த்தனம்.
இராகம் – அடாணா. தாளம் - ரூபகம்.

பல்லவி.
        கருவூர் நகர்போலே இந்தக் காசினியிலுண்டோ மேலே.
அநுபல்லவி.
        பெரும்பேறுள தானதினாலே
        பேசப்புகுந்தனன் மாசற்றொருக்காலே. (கரு)
சரணம்.
        வானமளாவும்கோபுரங்கள் மேருமாமலை யன்னகொத்தளங்கள்
        பானத்தும்வெண்சுவர்த்தலங்கள் விரிபாதலஞ்சேரகழ்க்குழிகள்
        பூநத்துங்கோயில்கள் பொன்னத்தும் வாயில்கள்
        போசனச்சாலைகள் வாசனச்சோலைகள்
        வானத்துறாதவளங்கள் நிறைந்து வயங்கும்பெருநகர்
        எங்கும் புகழ்நகர். (கரு)

மன்னுமறையவர் தெருக்கள் பல மன்னருறைகின்ற
        தெருக்கள்
துன்னும்பூவைசியர் தெருக்கள் மற்றும் சொல்லும்
        வருணத்தார் தெருக்கள்
அன்னநடை மின்னரசியர் தெருக்கள் அல்குல்
        விற்கும்பொன்னனையவர் தெருக்கள்
இன்னம் சொலப்புகின் எத்தனை தெருக்கள்
        எண்ணிக்கைசொல்பவர் மண்ணுக்குள்ளேயெவர்.

சங்கரவென்பவர் பலபேர் சிவ சம்போவென்
        றார்ப்பவர் பலபேர்
திங்கள்சூடியெனப் பலபேர் துதி செய்துமகிழ்பவர்
        பலபேர்
செங்கையின்மான் மழுவுந்தரித்தோய் எனச்
        செப்பித்துதிப்பதில் முற்படுவார்பலர்
அங்கயற்கண்ணி யலங்காரவல்லியோ
        டாடும்பரனே யென்றாடிடுவார்பலர். (கரு)
------------

(இசைநடைக் கண்ணி)
அக்கோலக்கைலைக்கோவே இக்கோவென்றார்ப்பதுவேபோல்
அக்கோவென்று குயிற்கூடி மிக்கானந்தமுறக்கூவும்

மாஞ்சோலையும்வளர் பூஞ்சோலை மகரந்தம்பரவுஞ்சோலை
தேஞ்சோலையும் தென்னஞ்சோலை திகழுந்தீங்கமுகஞ்சோலை

முப்போகம்விளையும் செந்நெல் மூரித்தண்டேந்திய கன்னல்
எப்பாரும் புகழுங்கருவூர் எழினகர்தன்னி லிருப்பவரில்

ஈயாதவரே யிலையென்றால் இல்லாதவரெவரென்றிடுவேன்
செய்யாதவரிலை சிவனடிமை சேராதவாரிலை யவனடியை.
===========
௸ வேறு.
அரசியல்.

இம்மாண்புடை யெங்கோன் பசுபதிவாழ் கருவூரைச்
செம்மாண்பொடு செங்கோல் செலுத்திடுவான் புகழ்ச்சோழன்

கைம்மா வுரிபோர்த்தான் கழல்கணமாயினு மறவான்
செய்மாண் புளதொண்டர்களிற் சிறந்தோன் மிகத்தெளிந்தோன்

உறையூருரைபவன் பற்றலர்க்கொரு கோளரியனையான்
குறைவில் நிதியுடையான் தயையுடையான் தருகொடையான்

குடநாட்டவர் கொணருந் திறைகொளவேண்டியே கருவூர்
தடமா நகர்வந்தான் பெருந்தானை புடைசூழ

நதிவேணியின் பிறைசூடிய நாதன் பசுபதிவாழ்
புதுவாலயம் புகுந்தான் சரண்புரிந்தான் இலம்புகுந்தான்

மனுநீதியின்படியே முறை பிறழாதுதன் வளநா
டனைவோர்களும் புகழும்படி யரசாண்டிருநாளில்.
--------------
சரிதை.
கீர்த்தனம்.
இராகம் - கேதாரகெள்ளம். தாளம் - சாப்பு.

பல்லவி
        எறிபத்தரென்றொரு பெரியவர் இருந்தார் கருவூரில்
அநுபல்லவி
        கறைபற்றிய சண்டற்கடியவர்கட் கிடர்புரிவோர்
        முறைதப்பிய ரெனவேயவர் முடிவீழ்த்திடும் வடிவாளினர் (எறி)
சரணம்.
        அறம் பிறழாதவர் பசுபதி யடிமலர்களை நிதமும்
        குறைவின்றியே மனக்கோயிலிற் குடிவைத்தவர் சகமும்
        நிறைமும்மலப் பெருவாரிதி நில்லாதவர் பரத்தின்
        கரைகண்டவர் கறைகண்டனின் கழல்கண்டவர்க் கருந்
        தொண்டவர். (எறி)
-----------

(இசைநடைக் கண்ணி)
சொல்லரிதாஞ் சிவபத்தருளே துய்ய வர்மெய்யவர் பொய்யுறையா
நல்லவராமெறி பத்தருறை நன்னகர்கரு வூராநிலையில்
மாமறையவர் குலத்தினிலுதித்தோன் மறைநான்கும் மாசறப் படித்தோன்
சாமமறைப்பண்பாடுவதில் தக்கோன் தக்கோன் மிக்கோனே
ஆகியமாதவன் சிவகாமியாண்டா ரென்றிடு மந்தணனே
போகியு மயனரிமுதலோரும் புகழுஞ் சைவத்தவமுதியோன்.

கீர்த்தனம்,
இராகம் – தோடி. தாளம் - சாப்பு.

பல்லவி
        சிவகாமியாண்டாரெனச் செப்புமொருவ ரிருந்தார்.
அநுபல்லவி.
        பவசாகரங் கடந்தவரவர்
        பசுபதிமலரடி நினைந்தவர். (சிவ)
சரணம்.
        மாசிலாத மனத்தவர் மெய்யில் மருவுவெண்ணீ றிடுத்தவர்
        ஏசிலாத வக்கமாலை யெத்தனையோ தரித்தவர்
        பூசனைக்காமலர் பறிக்கும் பூங்குடலைகை பிடித்தவர்
        தேசுலாஞ்சடலத்தவர் நாளுஞ் செப்பும்பெரும்புகழ் மிக்கப்
        படைத்தவர். (சிவ)

விருத்தம்.
நாதமடுக்குங் கடற்பள்ளி நளினமலரோன் முதலாய
வாதமடக்கித் தவம்புரியு மண்ணோர் விண்ணோர்நிதம்பணியும்
போதமடுக்கு மாநிலைவாழ் புலவராற்றுச் செஞ்சடையோன்
பாதமலர்க்குப் பூமாலை பரிவிற்சூடும் பெரியோனே.
-----------

(இசைநடைக் கண்ணி)
ஆறேறுஞ் சடைமுடியானார் அழலேறும் முக்கட்பரனார்
நீறேறுந் திருமேனியனார் நெடுமால் விடையேறுஞ்சிவனார்.

பொற்பாதங்களிற் பூந்தொடையல் புரிந்தணிவித் திடவைகறையில்
அற்புதவிற்பனர் சிவகாமியாண்டா ரெழுவார்நாடோறும்

சூதநதிப் படித்துறையோகிச் சொல்லு முறைப்படியே மூழ்கி
ஆதபனொளி திகழ்சிவகாமி யாண்டார் திருவெண்ணீறணிந்து

காலைக்கட னங்கனமுடித்து கடிகமழ் பூங்குடலைகள் துடைத்து
கோலைநுழைத்துத்தோளெடுத்து குறித்திடுநந்தனவனமடுத்து
---------
புட்பவிதி.
கீர்த்தனம்.
இராகம் - தேசிகதோடி. தாளம் -- ஆதி.
பல்லவி.
        பூசனைக்காகாமலரே புகலக்கேண்மினே.
அநுபல்லவி.
        நாசியினான் முகந்தமலர் நள்ளிருளிற் பறித்தமலர்
        நவிலுமெச்சில் தெரித்தமலர் நடக்குங்காலில் மிதித்தமலர்.
சரணங்கள்.
மழுவுடையான்றனக்கென்றே வைத்தநந்தவனத்துமலர்
        மாண்புறுமுத்தமமலராம் வனத்துமாமலர்
பழித்திடுமத்திமமலராம் பாரிலுள்ளோர்தமக்குமலர்
        பரிந்தணியவளர்த்த மலர் பகரில தமமானமலர்.
எருக்கிலையாமணக்கிலையிலெடுத்தமலர் வெடித்தமலர்
        எச்சம்பட்டமலர் சிலந்தியேறிச் சென்றமலர்கள்
முறுக்குளதாயினும்புடவை முடிந்தமலர் விழுந்தமலர்
        முகிழ்த்திக்கரம் பொதித்தமலர்மூழ்க நீரிலாழ்த்தியமலர்
உடல்கழுவாதெடுத்தமலர் உதிர்ந்தமலர் சிதைந்தமலர்
        ஓங்குமரும்பிலெடுத்துபூத்து ஒளிகொண்மாமலர்
மடலவிழ்ந்துதேன்பருக வண்டுகிண்டிவந்தமலர்
        வைத்துதலையிலெடுத்தமலர் மாசுறும்புழுக்கடித்தமலர் (பூச)

விருத்தம்.
இக்காலத்திம்மலரென் றியம்புகின்ற புட்பவிதியினிதறிந்தோர்
அக்காலத்தம்மமரல்லா தெடுப்பரோ யானே னறைதல்வேணடும் -
செக்கோலச் சடையார்க்கு மம்மையாக்கும் விநாயகர்க்குஞ் சிரமாறுள்ள -
வக்கோல வறுமுகர்க்கு மற்றை மற்றைத் தேவருக்கு மலர்கொய்தாரே.

கீர்த்தனம்.
இராகம் - இந்துஸ்தானி காப்பி. தாளம் - சாப்பு.

பல்லவி
        அலர் பறித்தார் சிவகாமி யாண்டாரெனும் பெரியவரே.

அநுபல்லவி.
        மலர்பறித்தார் பசுபதீசர் வனசமலாடியிற் சேர்க்க (அல)
சரணம்.
        செங்கதிரோனெழுவதன்முன் செவ்வரிமதுநுகர்வதன்முன்
        பங்கமிலா மற்றையோர் மலர்பறிப்பதற்குப் புறப்படுமுன் (அல}
        தும்மலிருமல் கொட்டாவி சோர்வுகாட்டு நெட்டுயிர்ப்பு
        அம்மலர்களிற் பட்டிடாது அடக்கிவாயைத் துணியிற்கட்டி (அல)

(இசைநடைக் கண்ணி)
பறிக்கும்பறிக்கும் பன்மலர்கள் பரிவுடனேபெருங்குடலைகளில்
நிறைத்துநிறைத்தா நிலைகோயில் நேர்வாரோரிடத் தேயிடுவார்

மாசுறுமாமலர்களைநீக்கி மற்றுளமலர்களையேதேக்கி
தேசுறுமன்பெனும் பூக்கொய்து திகழ்மனமெனுநாரிற் கோத்து

தொடுப்பவர்போலக்கரமலரால் தொட்டுவகிர்ந்தநாரதனால்
தொடுப்பாரிண்டை தொடையலெனச் சொல்லும்பலபல வகைசெய்து

அறுகாலப்பூசனைகட்கும் ஆநிலைநாதற்கேயேற்கும்
சிறுகால்வண்டிமிருந்தொடையல் செய்துகொடுத்தேவரு நாளில்

மாநிலமெல்லாம் கொண்டாடி மகிழ்நவராத்திரி யெனுந்திருநாள்
தானதுவந்திடப்புகழ்ச்சோழன் தன்ன காலங்கரித்தனரே.

கீர்த்தனம்.
இராகம் - சஹானா. தாளம் - சாப்பு.

பல்லவி.
        பட்டணம் சிங்காரஞ் செய்தாரே திருவாநிலை
அநுபல்லவி
        அட்டதிக்கெலாமிவன்புகழ்பாட அந்தரத்தவர் வியந்துகொண்டாட
        அட்டலக்குமிகளும்நடமாட ஆநிலைநாதனருளதுநீட
சரணம்.
        மகரதோரணங்கள் நிறைநிறைகாட்டி
        வாழைகமுகுகன்னல் வாயிலில்நாட்டி
        சகமகிழும்புலிக் கொடிகளைநீட்டி
        தமனியமேயென ஓவியந்திட்டி (பட்)
-------------

(இசைநடைக் கண்ணி)
அவ்விந்திரன்நகரோ மலரமர்ந்தணனகரோ
மைவந்திடுதிருமேனியன் வாழ்கின்ற நன்னகரோ.

கைமேலொரு மானேந்திய கறைகண்டனன்னகரோ
எம்மானுடனேநட்டவ னிருக்கின்றபொன்னகரோ.

என்றென்றுமூவுலகங்களு மெழில்கண்டுகொண்டாட
நன்றொன்றியதிருவாநிலை நகரான்புகழ்ச்சோழன்

அகிலம்புகழ் நவராத்திரியா மொவ்வொருநாளும்
மிகவும்புகழ்பெற வைபவம் விளைவித்திடுநாளில்.

நவமித்தினமே யெய்திட நகரத்தவ ரெல்லாம்
பவனித்தெரு வழிவந்தனர் பலபல்லியமொலிக்க
-----------

௸ வேறு.
பட்டத் துற்றமதக்களிறைப்பாகர் கொணர்ந்தாம்பிரநதியில்
விட்டுத் துப்புறவேகழுவி விதவித மாயலங்கரித்து
பக்கத்திருவர்நின்றுவரப் பாகரிலிருவர் மேற்கொள்ள
மிக்கப்பெருமைம் மலைபோலே வீதியினிற்புறப்பட்டதுவே.

கீர்த்தனம்.
இராகம் - கல்யாணி. தாளம் - சாப்பு.

பல்லவி
        பட்டவர்த்தனம் புறப்பட்டது பாரீர்.
அநுபல்லவி
        அட்டதிக்கயங்களலறியோட அந்தரத்தவர் வியந்துநாட
        மட்டரும்புகழ்ச் சோழன்பெரும்புகழ்
        மண்ணும் விண்ணும் உள்ளவரையிலும் நீட. (பட்ட)
சரணம்.
        வைக்குமடி யொவ்வொன்றுக்கு மாநிலம்வளைந்துநெழியுதே
        மேருமலையினும்பெரு வரைவந்ததென வளர்ந்துமிருக்குதே
        மைக்குலமுகில்பிழி படும்படி மழைக்கை தூக்குதே, பெரு
        வாரிதியுடைந்து வந்ததுவோவென மதசலம்வருதே
        கைக்கடங்காமல் பாகர்தத்தளிக்க
        கண்டுநமனும் நடுங்கிப்போயொளிக்க
        தைக்குமோசையண்டஞ் செவியடைக்கத்
        தண்ணளி யாநிலையப்பன் சந்தோஷிக்க (பட்ட)
----------

(இசைநடைக் கண்ணி)
காதாலூழிக்கால்வரவும் கண்ணாற்செந்தீப்பொறிதரவும்
தீதேதோ வருமென்றெவரும் திகைத்தோடத்தெருவந்ததுவே

பேரிமுழக்கங் குழலோசை பிடிசங்கார்வத்தோடவ்வூர்
வாரியலும்முலைமடவாரும் வருகும்பவனித்தெருவழியே.

சாமரைபோடத் தண்குடைநீழற் றங்கியேகரிபரித்தேரேறி
தாமரைமலர்க்கையிளங்குமரர் சதிராய்வருமத்தெருவழியே

மதவெற்பம் போல் மால்யானை மருண்டதுவென்ன வெகுண்டோட
கதைவாள்தண்டங்கொடுபாகர் கரிமத்தகமீதேமோதி

அடக்கமுயன்று மடங்காமல் அத்தெருவழியேவருங்காலை
மடக்கவிழ்ந்தமலர்கொய்து மறையோன்சென்றானதன்முன்னே
---------------------

கீர்த்தனம்.
இராகம் -- சங்கராபரணம். தாளம் - ஆதி.

பல்லவி
        வந்தார் சிவகாமியாண்டார்
        மலரெடுத்துத்தே வாலயம்புக
அநுபல்லவி
        மந்தாரைகொன்றைமருவு மருக்கொழுந்
        துந்தாமரைமகரந்தம்பெருகிய
        குந்தம்விரிந்தசுகந்தராஜமும் செவ்
        வந்தியும் கூவிளமுங் குருந்தங்கொண்டு (வ)
சாணம்.
        தாதவிழ்மாதுளை சம்பகங்கல்லாரம்
        போதவிழ் நீலம் பொலியசோகஞ்சூதம்
        பாதரிபொன்னலரி செவ்வலரியோ
        டேதமிலாமலரேந்திய தண்டொடு (வ)
----------------

(இசைநடைக் கண்ணி)
குடலைகணியப்பூக்கொய்துக் கொண்டுமுன்செலுமம் மறையோனைத்
தடங்கொள் புழைக்கையாற் பிடித்துத்தானக்கரிமலர்சிந்தியதே

விருத்தம்.
மதுமலர்க்கு லைச்சிதைந்திடப்பறித்து
        மதகரியகலலுந்தொண்டர்
புதைபடுங்கண்ணாய்ப் பிறந்தவன் கைக்கோற்
        போக்கிய போதவன்மனம்போற்
பதைபதைத்திட்டார் பாரினில்வீழ்ந்தார்
        பண்ணுவதறிந்திலரானார்
மதியொருவாறுதேறினாரெழுந்தார்
        மான்மதயானைபின் சென்றார்.

துக்கடா .
இராகம் - கேதாரகௌளம். தாளம் - ரூபகம்.
துடந்தேகினாரந்தத் துதிக்கையானையைப்பற்ற
அடர்ந்தேகினாரந்தோ வந்தோ சிவனேயென்று (துட)

கீர்த்தனம்.
இராகம் – சங்கராபரணம். தாளம் - சாப்பு.

பல்லவி.
        எங்குபோகிறாய் நானுனையேன் விடுவேன் மதகரியே
அநுபல்லவி.
        திங்கள் சூடிக்காமலரைச் சிதறி உதறியெறிந்து நீயே (எங்)
சரணம்.
        சோழனிடத்துறு கொழுப்போ தொந்தரைசெய்வதில்விருப்போ
        ஊழிக்காற்றுபோலநீயேன் ஓடுகிறாய் வாவா இப்போ
        ஏழைப்பார்ப்பான் வெறுங்கையனோ எண்ணிப்பாரோர் தண்டுளனோ
        தாழைமுள்ளுக்கஞ்சுமுயல்தானுமுண்டோவிடுவேனோ (எங்)

விருத்தம்.
கைகொண்ட வென்றண்டிற் கஞ்சியன்றோ கால்கடுக்க
        ஓடுகின்றாய் கனவயிற்றுப்,
பைகொண்ட மட்டிலுண்டு புகழ்ச் சோழற்குப் பகைகாணி
        லென்செய்வாய் பாவி நீயே,
மைகுன்றமதுபோல உயர்ந்திருந்தும் மாமறையோன்
        றருமலரைச் சிந்தியேகல்,
செய்கின்ற வறங்களிலொன்றாய் நினைத்துச் செய்தா
        யோநின்னறிவு செப்பொணாதே.
---------
கீர்த்தனம்.
இராகம் - தோடி. தாளம் - ஆதி.

பல்லவி
        புத்திகெட்ட மதகரியே போகாதே நில்லாய்
அநுபல்லவி.
        சத்திகெட்டதோ அச்சந்தானோ உண்மையைச் சொல்லாய் ()
சரணம்.
        வீரமிலையோ யுனக்கு வேந்தனிட்ட கட்டளையோ,
        தூரவேகில் செய்தகுற்றம்தொலையுமென்று செல்கிறாயோ ()

விருத்தம்.
தடுக்கமுயலாதொரு கைம்பெண்டடலிவளர்த்த தனயனென்ன
வெடுக்குமலரைநீ சிந்தியேகல் வழக்கோ விதுதகுமோ
துடுக்குமுயலுங் குரக்கினமே தூங்கும்பொழிலே யிருப்பிடமா
யடுக்குமுனக்கு மதன்குணமே யந்தோவந்த தறியேனே.
------------

கீர்த்தனம்
இராகம் - சுருட்டி. தாளம் - ஆதி.

பல்லவி.
        எங்குஓடினாலுமுனை யேன் விடுவேன்மதகரியே
அநுபல்லவி.
        சங்கரர்க்குத் தந்தமலர் தன்னைச்சிந்தியதாலே (எங்)
சரணம்.
        வைகறையிலெழுந்து நிதம் மதுமலரைக் கொய்து கொய்து
        பெய்குடலைகளைச் சிதைத்துப் பெருமையாக நீ யித்தினம் (எங்)

விருத்தம்.
அரசிலையோ அரசாணையிலையோ யன்பராரிலையோ
        ஊரிலையோ அடியேன்றந்த -
பிரசமலாக்குடலைகளைப் பாவியானை
        பிடிங்கியதற்கேனென்று பேசுவோர்கள் -
புரசனரில் யாரேனுமிலையோ ஏழைபுலம்புமொலி
        யாவர் செவி புகவுமில்லை -
விரிசடையாயர் நிலையில் விளங்குகின்ற வெள்விடையா
        யென்னென்று விளம்புவேனே.

கீர்த்தனம்.
இராகம் - தோடி. தாளம் - ஆதி.
பல்லவி.
        முறையிலையே கேள்வி முறையிலையே
        முதுமறையவ னழுகுரலினுக் கொருமனு (முறை)
அநுபல்லவி.
        கறைமிடற்றெந்தாய் கவனமொடிந்த
        மறையவன்றந்த மலர்கரிசிந்த (முறை)
சரணம்.
        இந்நாளறியேன் இடரென்பதையே
        என்னோவின்றைக் கெதுவோதெரியேன் (முறை)

விருத்தம்.
சிகைதட்டி முடிந்திட்டு உடைவிசித்துத்
        திகழ்பஞ்சகச்சத்தை பிறுக்கிக் கட்டித்
தொகைபட்டவீரமெல்லாம் வாயாற்பேசிச் சொல்லாத
        சொல்லெல்லாம் சொல்லிக்கொண்டு -
பகைபட்ட பேரைக்கண்டோடுமெங்கள் பார்ப்பார்போல்
        வெறுங்கையனோ பாராயென்று -
மிகைபட்டமதவானை பின்னேயோடி மெலிவுற்றாரத்
        தொண்டர் நலிவுற்றாரே.

விருத்தம்.
ஓடினார் யானை கூட உருகினாருடன் வியர்ப்ப
வாடினாரதனைக்கொல்ல வகையிலராகிநின்று
தேடினார் துணையிலார்க்குத் தெய்வமே துணையென்றெண்ணி
நாடினார் பசுபதீசர் நன்மலரடி கண்மாதே.
-----------
ஆனந்தக்களிப்பு.
ஒருநாளும் காணாத காக்ஷி - காண - வுற்றதர்குப்பசுபதி நீயே சாக்ஷி
தறுகண்யானைகையோச்சி நான் தந்தமலரைப்பறித்தெறிந்ததே சீச்சி

உனக்கென்று மலர் கொணர்ந்தேனே - நான்
        ஒன்றிலும் தப்பிதம்செய்தறியேனே.
கனற்குன்றமாய் வளர்ந்தோனே இந்தக்
        காரணம்வாய்த்ததற் கென்செய்குவேனே.
முப்புரமெரித்த முக்கண்ணா இங்கு
        முறையிடுமேழை யைக்காத்திட நண்ணா
தப்புறமிருந்திட வொண்ணா தைய
        அரகரபசுபதியே அந்தி வண்ணா .
----------
விருத்தம்.
அன்றுமாரனை யெரித்தகனற்கண்ணை வேண்டிலேனையா நின் முன் -
சென்றவாரணமுறித் தகரமலரை விரும்பிலேன் றிரிபுரத்தோர் -
கன்றநாரண நாமத்தாலெய்த பகழி தரக்கருத்திற் கொள்ளேன் -
இன்று வாரணமெய்ய நமன்பட்டபதமலரை யிச்சித்தேனே.

கீர்த்தனம்.
இராகம் - பியாகடை. தாளம் - சாப்பு.

பல்லவி
        ஏழைக்கிரங்கிவாராய் இன்னேர மின்னருள்தாராய்.
அநுபல்லவி.
        வாழைகமுகஞ்சோலைசூழ வாழுங்கருவூரோய்கண்பாராய் ()
சரணம.
        உனது தொண்டருக்குள்ளே நானொருவனல்லவோ எனக்
        குவந்தருள் புரிவாயென்றடிக்கடியேன் சொல்லவோ
        மனதுவல்லையோ வந்தொருவார்த்தை சொல்லக்கோபமோ
        வருந்த வருந்த வருமமோ என்வள்ளலுக்கிது தருமமோ.

விருத்தம்.
நச்சரவிற் கொடியவனோநஞ்சினிலும் கடுவுளனோ நன்மலர்க்கை
வைச்சமழுப்படையினிலு மெரிகுணத்தில் வல்லவனோ வரதா நின்பால் -
தைச்சமனமுடையவன்மே லேன்கிருபைசெயவில்லை சாற்றாயென்றும் -
பச்சைமயிலுமைபாகாவிடைவாகா திருக் கருணைபாராய் வாராய்.

கீர்த்தனம்.
இராகம் – எதுகுலகாம்போதி. தாளம் -ஆதி.
கண்ணிகள்

அந்தோவினையேனழுகண்ணீரோ ராறாய்ப்பெருகியும்வாராதே
சிந்தாகுலமும்தீராதே நீ செய்வது நியாயமோபசுபதியே

தாழாவினையேன்றருமாமலரைச் சதிசெய்வாரணமேற்கிருபை
வாழாதிருப்பதுதகுமோ தகுமோ வாராய்வாராய் பசுபதியே.

வேதன் காணாமுடியாய் இலைமேல்விமலன் காணாவடியாய் நெடியோய்
சூதொன்றறியாச் சிறியேனிடரைத் தொலைப்பாய் தொலைப்பாய்பசுபதியே.

அஞ்சா நெஞ்சத்தவனா யிவ்வூர் அரசன் விட்டமதக்களிறால்
நெஞ்சம் புண்ணாய் நொநதேன் நொந்தேன் நேராய் நேராய் பசுபதியே.

விருத்தம்
கண்கொடுக்க வேனல்லேன் கடி மணந்த கன்னிதரமணமில்லேன்
        கடவுள் வைகைத் -
தண்தடுக்கப்பரிசளிக்கும் வசதியல்லேன் தலைமகனைச்
        சமைத்துதவத்தக்கோனல்லேன்
பண்கொடுக்குமறைபாடும் பார்ப்பானென்று பகவ
        நீயருள்சுரந்து பாராயாகில்
எண் கொடுக்குமலர் போனவின்று பூசைக்கென் செய்வேனென்
        செய்வே னென் செய்வேனே .

கீர்த்தனம்.
இராகம் - கானடா. தாளம் - ஆதி.
பல்லவி
        தேவசங்கரனே மஹா தேவசங்கரனே
அநுபல்லவி.
        தேவசங்கரனே சிவனே சிவதாவரந்தருவாரிதியே
        பூவருந்திருமாலயனுந்துதியே வழங்குபாராபரனே (தே)
சரணம்.
        பாலசந்திரசேகரனே கடலாலமுண்டகிருபாகரனே
        நீலகண்டநிரந்தரனே வருகாலகாலனே சுந்தரனே (தே)
        வாரணத்துரிபோர்த்தவனேசக காரணத்தவனே தவனே
        ஆரணத்துறைமேலவனே பரிபூரணத்திலும் பூரணனே (தே)

விருத்தம்.
இனம்பிரிந்த மான்போலத்தனியே நின்று ஏங்குகின்ற
        வேழையின் மீதேனின்னேரம் -
மனம்பிரிந்ததையையோ சொல்வாயைய மானுடையாய்
        மழவிடையாய்மலர்பறித்துத் -
தினம்புரிந்த திருத்தொண்டிற் குற்றமொன்றும் செய்தறியேன்
        செய்தோரைச் சேர்ந்தேனல்லேன் -
கனம்புரிந்து பூசையின்று தாழ்க்காதென்னைக் காத்திடுவாயா
        நிலைவாழ் கருணைத்தேவே.
----------

(இசைநடைக் கண்ணி)
தந்தாய் சிவதாதாயே சிவதா தனிமுதலே சிவதா சிவதா
வந்தாள் சிவதா மருவார்கொன்றை மலர்முடியாய் சிவதா சிவதா.

கீர்த்தனம்.
இராகம் - ஆனந்தபைரவி. தாளம் - ஆதி.
கண்ணிகள்.

மனதார மலர்பறித்துக் கொண்டுவந்தேனே
வழிமறித்தேபாவியானை சிந்தநொந்தேனே
தனதாநின்றாண்மலர்க்குச் சாற்றவந்தேனே
தருகண்யானை சிந்தமனம் தளர்ந்து நொந்தேனே (ம)

ஐயநின்றாள்தொண்டனன்றோ அரஹரா சம்போ
ஆதரிப்பாராருமின்றி யலைகிறேனிப்போ
வையமெல்லாம் புகழ்படைத்த வஞ்சிவனத்தனே
மாலயனாதியர்கள் தேடும் மலர்பதத்தனே. (ம)

ஆடாவைப்பூடணமா யணிந்தமெய்யனே
அன்பனெனைக்கைவிடாம லாள்வாயையனே
வாடுமெளியோற்குதவ வரலாகாதோ
மங்கைபாகாயிந்தவேளை வருமம் தானேதோ.

விருத்தம்.
நஞ்சுடைய கடலொலியினாலோ சென்னி நாடிய கங்கையினார் வத்காலோ வந்தாள் -
துஞ்சிடு முப்புரத்தோர்களிரைச்சலாலோ தும்புருநாரதர் பாடுங்கீதத்தாலோ -
அஞ்சலிசெய் தொண்டரிடுமரவத்தாலோ ஐயஉந்தன் காதுசெவிடாகியின்று
கெஞ்சுகின்ற வேழைகுரல் நின்செவிக்குக் கேட்காமற் போச்சுதோ
        கிளத்துவாயே.
-----------

விருத்தம்.
அம்பலத்திலாடியதா லலுந்திட்டாயோ அவுணரொடுசமர்
        செய்து சாத்திட்டாயோ -
செம்பதுமமுகப்பாவையிடத்திற் றூது சென்றதினாற்
        சோர்ந்தாயோ தென்னவர்கோன் -
வம்படியிலிளைத்தாயோ வானோன்மைந்தன்
        வாங்குவில்லானொந்தாயோ வாராயென்று -
நம்புமெளியேன் கூவவிடத்தைவிட்டு
        நகராமலிருப்பதுவுநியாயந்தானோ.
---------

(இசைநடைக் கண்ணி)
என்றேறியபுகழ் சிவனடியாரங்கிடு கூக்குரல் கொண்டொருதூதன்
சென்றேறியபுகழெறிபத்தர் தஞ்செவியிற் சொல்லியதேயென்ன
அன்றேறியவக்கணமே வாள்கொண்டங்கிடர் செய்பவர்களை நேரே
கொன்றேறியபுகழ்படைக்கும் தொழிலர் குதிகுதித்தோடி வந்தனரே.
-----------
கீர்த்தனம்.
இராகம் - இந்துஸ்தான் காப்பி. தாளம் - சாப்பு.
பல்லவி.
        அஞ்சேலஞ்சேலைய நெஞ்சந் தடுமாறி யாகம் நோகா
        தீரிங்கடியேன் வந்தேன் வந்தேன்
அநுபல்லவி.
        செஞ்சேவடிசரணஞ் சரணமிடர் செய்தவராரையா
        செப்பிடு வீரையா. (அஞ்)
சரணம்.
        மன்னரிழைத்ததோ மற்றவரிலெவரின்னல் விளைத்தாரோ
        இன்னதென்றேழைக்குச்
        சொன்னவுடனே மழுக்கொண்டவர்தலை தூக்கிடுவேனுயிர்
        போக்கிடுவேனையா. (அஞ்)
-----------

(இசைநடைக் கண்ணி)
இத்தகவாப் பெருவாளெறிபத்தரியம்பிய மொழியைக்கேட்டலுமே
சித்தமுறுங்கலி தீர்ந்தாரெனவே செப்பிடுவாரவரப்பொழுதே
வித்தகளெங்கோன் ஆநிலைநாதன் விரிமலரடிகட்கேநிதமும்
பத்தியுடன் கொணரும் நறைமலரைப் பாராண்டருளும் புகழ்ச்சோழன்

பட்டமதக்களிறுக்கிரமாகவே பாகர்களுடனே வந்தென்னைத்
தொட்டுமலர் சிந்திப்போயதுபின் தொடர்ந்தேனதனுடன் தொலைதூரம்
நெட்டணையோ மலையோ பெருவரையோ நீண்டிடுகால்கள் முளைத்ததென
வெட்டெனமானோ மனமோவென்று விரைந்தோடியதென் செய்வேனே.

விருத்தம்.
பாயிரமறைகட் கெட்டாப்பண்ணவன் பதமலர்க்குக்
தூயவனெடுத்துவந்த சுதைதருபூக்கடன்னை
மாயிருஞாலங்காக்குமன்னவன்கரியோ சிந்திப்
போயது வென்னச்செந்தீப் பொறியெழக்கண் சிவந்தார்.
----------
கீர்த்தனம்.
இராகம் - முகாரி. தாளம் - சாப்பு.

பல்லவி.
        காட்டில் திரியுமிந்த யானையா மலர் சிந்திப்போவது
அநுபல்லவி
        நாட்டிற்றிரியும் மன்னனிடும் நல்லுணவால் உடல் கொழுத்து
        மேட்டியென்று மனநினைத்துமேவுந்திறனை யானறியேனோ ()
சரணம்.
        தானேதன்தலையில் மண்ணைத்தட்டிப் போடும்புத்தியினால்
        வானேயெனும்வாயிலுமண் வந்துவிழத்தேடிக்கொண்டது ()

விருத்தம்.
மாரனை யெரித்த போதும் மறலியையுதைத்தபோதும்
காரணமதில்கள் மூன்றும் கனலெழச்செய்தபோதும்
நீரணிசடையினாற்கு நேர்ந்தவெங்கோபச்செந்தீ
யோருருவாகிப் பத்தருருவெடுத் தென்ன நின்றார்

ஊழியினெழுந்ததீயோ உக்கிரனுருவந்தானோ
ஆழியினெழுந்த ஆலகாலமோ அரசன்விட்ட
தாழியின்வயிற்றுயானை தன்னுயிர்போக்கவிந்த
நாழிகைதனிலுதித்த நமனெனும் வடிவந்தானோ.
----------

(இசைநடைக் கண்ணி)
என்றென்றங்கங்கிருந்தமாந்தர் இன்னணமோதவ்வெறிபத்தர்
கன்னெஞ்சினராய் யானையின்பின்னே கடிதேகிக்கொண்டிது சொல்வார்.

கீர்த்தனம்.
இராகம் - தன்னியாசி. தாளம் - ஆதி.

கண்ணிகள்.
ஓடுகின்றமதகரியே உன்வலியுமென்வலியும்
ஆடுகின்றவமரிலே கண்டறிகுவோம் நில்லாய்

வாடுகின்ற மாமறையோன் மலர்சிந்தியகரவலியும்
நாடுமென்கைவாள் வலியும் நனிகாண்போம் நில்லாய்

உனைவளர்க்குமன் வலியும் ஒட்டுகின்றபேர்வலியும்
இனமறியக்கண்டிடுவோம் ஏகாதே நில்லாய்

கீர்த்தனம்.
இராகம் - பூரிகல்யாணி. தாளம் - ஆதி.
பல்லவி.
        நில்லு நில்லு மதகரியே இது
        நேர்மையாமோ மதகரியே.
அநுபல்லவி.
        சொல்லு மாதவன் கொணர்ந்ததூ மலரைத்
        தூற்றிச்சிந்தியதி லேற்றமாமோசற்று (நி)
சரணம்.
        நால்வகைப் படையிலோரினத்தனாய்
        நடுவணின்று சமர்பொருது நீ
        கால்வருந்தமறையவனுக்கஞ்சி வெரிந்த
        காட்டியோடுவது மேட்டியாமோசற்று
-----------

விருத்தம்.
காற்றினுங் கடிதினேகுங் கடகரியதனைக் கொல்லுங்
கூற்றெனக்கைவாளேந்திக் கொண்டெறிபத்தரேகி
நாற்றிசையெங்குங் கீர்த்தி நண்ணிடத்துதிக்கைபற்றி
யாற்றொணாச்சினத்தீமூளவதஞ் செய்தாரதஞ்செய்தாரே.

கீர்த்தனம்.
இராகம் - செஞ்சுருட்டி. தாளம் - ஆதி.
பல்லவி.
        யானையைத் தடிந்தார் பெருவாளெறி பத்தர்
அநுபல்லவி.
        மானையேந்தியகரத்தர் மலரடிமறவாச் சித்தர் (யானை)
சரணம்.
        கோடையிடிபோலவது கூச்சலிட்டலறக் கடல்
        தேடியோடியது வெள்ளச் செங்குருதி வட வரை
        நாடி வேரறுந்து வீழ்ந்த தோவெனவிழுந்தததை
        நாடினவரச்சங்கொடு வாடியே யுடல் நடுங்க. (யானை)

-----------------

விருத்தம்.
கோடையிடி யெனவலறியானை வீழக்
        கொண்டசின மாறாதுபாகரோடும்
கூடவருமிருவரையுந் தடிந்து வீழ்த்திக்
        குவலயத்தி லிழந்தவர்கண் படைத்தாற்போல.

ஆடிநின்றா ராநந்தக் கடலிலாழ்ந்தார்
        அங்குநின்றாரின்னமு மென்னாமோவென்று
வாடியவரவர் வாயில் வந்தவெல்லாம்
        வழங்குவார்மனநொந்து புழுங்குவாரே

கீர்த்தனம்.
இராகம் - சாமா. தாளம் - சாப்பு.
கண்ணிகள்
ஒருநாளும் காணாத விபரீதங்களைக்காண
வுற்றதேனின்றென்பார் சிலபேர்கள்
தாரையாளுமன்னவன் தலையானை பட்டதே
தன்னங்கக் குறைவென்பார் சில பேர்கள்

பாராதபரிதாபம் பார்த்திடக்கண்கள் செய்
பாவந்தானோவென்பார் சிலபேர்கள்
வாகாதபெரும்வசை வந்ததே யிவ்வூர்செய்
மாபாவமேதென்பார் சில பேர்கள்.

கொல்லாமை யறமெனவறியாத குணக்கேடன்
கொண்டானேவாளென்பார் சிலபேர்கள்
எல்லாரும் கூடிநாமிவனைப் பிடித்துச் செல்வோம்
ஏந்தல் முன்னே யென்பார் சிலபேர்கள்.

விருத்தம்.
மடியாது வரம்பெற்ற மார்க்கண்டனேயோவிம் மறையோனென்பார் -
படிமீதுவிழுந்திறந்த நமனேயோவிப்பகடுபாரீரென்பார் -
அடியார்க்கு வருமிடரைத் தீர்த்தாளுந்திருக்கடவூரானே யிந்த -
விடனேகியெறிபத்தத் திருவுருவம் படைத்தானோ இயம்புகென்பார்.

முத்தகவெண்குடையரசு முனியாது விடுக்கினு நம்முக்கணெம்மான் -
கைத்தலவெம்மழுவேனுங்கடகனலேனும் மிவனைக்காயாமற்றான் -
வைத்திடுமோ வைத்தாலும் வாணரகம் விடுத்திடுமோவாய்மையில்லாப் -
பொய்த்தமனக் கள்வனந்தோ கொலைத்தொழிற்கேயிவ்வேடம் பூண்டானென்பார்.

சொல்லாருஞ் சிவனடியார் கொலைத்தொழிலும் புரிவரோ சொல்வீரென்பார் -
வல்லானே புவியரசன் மதக்களிறும் பாகர்களுமாண்டதற்குக் -
கொல்லாது விடுவனோ விட்டாலுஞ் செங்கோற்குக் குற்றமென்பார் -
அல்லாமலிவன் வினை தானெப்படியோ யாமொன்றுமறியோமென்பார்.
---------

(இசைநடைக் கண்ணி)
அந்நகரத்தவர் பல்லோரும்
அவரவர்வாயில் வந்தலெலாம்
சொன்னயமென்பது பாராதே
தூடணைபூடணை செய்காலை.

ஒற்றலரிற் சிலராசனிடம்
உற்றதுரைக்கச் சென்றனர்கள்
மற்றவரிற்சிலர் பாகர்களின்
மனைகளிலே சென்றோதினர்கள்.

ஓதிய சொற்கேட்டுப் பாகர்
ஒண்டொடியார்கள் மனநொந்து
ஒதியவிழ்ந்திடவே யோடி
ஓலமிடும் வகையென்னென்பேன்.

கீர்த்தனம்.
இராகம் – காம்போதி. தாளம் – சாப்பு.
பல்லவி.
        ஆவிதியே இந்த வினைக்காளாக்கினையே
அநுபல்லவி.
        பாவியிவனாலெந்நாளும் பரிதவிக்கச்செய்தனையே
சரணம்.
        சுட்டிகட்டிப் பொட்டுமிட்டுச் சுரிகுழலில் மலர் முடித்து
        தொட்டகணவனுடன் கூடிச் சுகியாமற்செய்தனையே (ஆவி)

        திருவிழந்து மருவிழந்து தீராதவிதனங்கொண்டு
        தெருவிழுந்து கதறியழச் செய்தாயே செய்தாயே (ஆவி)

விருத்தம்.
மண்படைத்தமலரவனே யாங்களுந்தன்மக்களன்றோ இந்த
        வினைவந்து நொந்து -
புண் படைத்த மனத்தினராயிருந்து வாழப் புரிந்திட்டதழகாமோ
        புகலாயோ ரெண் -
கண்படைத்து மென்னபயன்கண்டோரேசுங் கன்மனத்தாய்
        நின் குணத்தைக்கண்டேயன்றோ -
எண் படைத்த பொற்கோயிலியற்றி வைத்து
        ஏத்தாமலிருக்கின்றாரின்னந்தானே.
----------

(இசைநடைக் கண்ணி)
என்றென்றிங்ஙனமின்னண நிகழ
வேகியவொற்றர்களரசனிடம்
சென்றங்க நிலந்தோய விழுந்து
சிரமேற்கைகுவித்தே நின்று.

பொன்றங்கும் முடியோயெம்மரசே
பொருனையிலாடி வரப்போன ,
குன்றம்மெனுநின் பட்டத்து மதக்
கோட்டானையையும் பாகரையும்.

கொன்றானொருவன் காரணமறியோம்
கோமகனே யென்றோதிடவும்
கன்றாமன்னன் கட்கனல் சிந்தக்
கரிபரித்தேரும் காலாளும்

முன்னே பலவும் பின்னே பலவும்
முதுகடலோ வெனவே செலவும்
என்னே யென்னே யிக்கூத்தென்னே
யென்றெல்லோருமியம்பிடவும்.

நல்லவயப்பரிமீதேறி
நாடாளும் பெரும்புகழ்ச் சோழன்
அல்லல்வினை தீர்த்திடவருவானவன்
போல் வந்தான் கொலைக்களமே.

விருத்தம்.
எழுகடலும் பொங்கியதோ விவ்வூருக்கின் றெவ்வரசன்
        படையெடுத்து வந்திட்டானோ -
பழுதிலரசாளு நம்வளவனார்க்குப் பகையுமுண்டோவெனப்பலரும்
        பகரக்காதிற் -
குழையசைய நவமணியாபரணமின்னக் குனிசிலையுங்கூர்வாளுங்
        கரத்திற்றங்க -
மழைமுகிலின் குமுறலென முாசமார்ப்ப வந்திட்டான்
        புகழ்ச்சோழமன்னன்றானே.
-----------------


கீர்த்தனம்.
இராகம் - பாசு. தாளம் -ஆதி.
பல்லவி.
        மன்னாதி மன்னன் புகழ்ச் சோழமார்த்தாண்டன்
        வந்தானெறிபத்தர் முன்.
அநுபல்லவி.
        கன்னாதியர் தோற்குமீகையங்கையன்
        கடுக்கையங்கண்ணி சூடிக்கன்பாந்துய்யன்.
சரணம்.
        தன் சேனைமுற்செல்லத் தார்வேந்தர்பிற்செல்ல
        எந்நாளும் வாராத இடர்வந்ததேயென்ன (மன்)
-------


(இசைநடைக் கண்ணி)
வாயுவேக மனோவேகம்மென
வந்தமன்னவன் கண்முன்னே
காயுமாற்றலரில்லாததனைக்
கண்டான் கரியும் பாகர்களும்.

மாண்டிருப்பது நோக்கினனெவ்வழி
மீண்டு சென்றனர் பற்றலரென்னலும்
ஆண்டகைத்திருமலரடி மேற்றொழு
தீண்டபாகரியம்பினருண்மையை.

கீர்த்தனம்.
இராகம் - பூரிகல்யாணி. தாளம் - ஆதி.
பல்லவி.
        சொல்லக் கேளுமையா புகழ்ச் சோழராஜனே
அநுபல்லவி.
        வெல்லும்பகைவரிங்கொருவரும் மேவிவந்தாரில்லையில்லை (சொ)

சரணம்.
நீறுபூத்த நெருப்புப் போல நேரில் நிற்கும் வாளரிந்தவாறு
செய்தனரேயன்றி மற்றையாரும் செய்தாரில்லை (சொ)
----------

(இசைநடைக் கண்ணி)
பாகர்களோதிய சொற்கேட்டுப்
        பாராண்டருளும் புகழ்ச் சோழன்
ஆகநடுங்கக் குதிரையிழிந்
        தரவக்குழையோனன்பரலால்.

துணியாக்காரியஞ் செய்யார்
        தூயவரிவரென்றே நினைந்தான்
தணிவீரென்றான்றன் படையைத்
        தாழ்ந்தானடியவரடிமீதில்.

கீர்த்தனம்.
இராகம் - பியாகடை. தாளம் – ஆதி.
பல்லவி.
        வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் உங்கள்
        மலரடியிணைக்கு வந்தனம்
அநுபல்லவி.
        இந்தநாளென்னிடர் வந்ததோ வேழையேன்
        சிந்தைநோய்தீரநீர் செப்புவீரையரே (வந்த)
சரணம்.
        யானையென் செய்யினும் அங்கதன்மேலேறிவந்த
        சேனையென் செய்யினும் செப்பொணாத விக்கொடுமை
        ஏனையாசெய்திட்டீர் எம்பெருமானடியவர்
        தானிதோ செய்குவார் தக்கதோமிக்கதோ. (வந்த)
----------

(இசைநடைக் கண்ணி)
ஐயா நீ கேள் சிவகாமி
யாண்டாரென்றிடுமாமறையோன்
நெய்யாறாய் வருமாமலரை
நிமலன்பாதயுகங்களின் மேல்

சூடத்தந்தான் குடலைகளில்
துற்குணமேற்கொண்டிப்பகடு
சாடிக்கையாற்றித்தெரியத்
தாழானாகித்தான் செப்ப.

அப்பகடைக்கொன்றேன்பாகர்
அடக்கமுயலுந்தொழிலிலராய்
தப்புச் செய்தாரிறுமாந்து
தடிந்தேனவர்களைத்தப்பாமோ.

என்றார் வடிவாளெறிபத்தர்
இவர்தானென்றவரடிதாழ்ந்து
மன்றன்மலரைச்சிதைத்தெறிந்த
மால்யானையையும் பாகரையும்

கொன்றீரேனுஞ் சிவரபராதம்
கொடியேனைச்சேர்ந்ததினாலே
என்றலைதுணிப்பீரிக்களத்திடையே
என்றான் புகழோங்கிய சோழன்

விருத்தம்.
மன்னவன் குடையினீழல் வாழ்ந்திடு முயிர்கள்செய்யு
மின்னலால் விளையும்பாவ மேந்தலைச் சேருமென்று
முன்னவர் மொழிந்தவாய்மை முரணாமோ யானைசெய்த
வின்னலுக் கிலக்கியானே யென்றலை துணித்திடிரே.

கீர்த்தனம்.
இராகம் – சஹானா. தாளம் - ஆதி.
பல்லவி.
        என்றலை கொய்வீ ரிப்பழி தீர்ப்பீர்
        ஏழைக்கிது செய்வீர்
அநுபல்லவி.
        கொன்றையந்தொடைப் பண்ணவனுக்காக்
        கொண்டுவந்த மலர் சிந்தியதற்காக (என்ற)
சரணம்.
        தீராத்தீவினை திறத்தீமை தீவிரமா யோட
        நீரார்புவியில் தம்பெரும்புகழ் நிலைக்கவண்டம் பழிக்குமுன்னம் (என்ற)

விருத்தம்.
ஐயநின் வாளாற்கொய்ய வருந்தவ மெனதுசென்னி
செய்யிலை யேழைகையிற் சிக்கிய வாளைக்கொண்டு
பய்யவே தலைதுணிப்பீ ரென்னலும் பகவன்றொண்டர்
கையினால் வாங்கிக் கொண்டார் காவலன் கருத்தறிந்தார்.
------------
(இசைநடைக் கண்ணி)
இத்தகவாகப் புகழ்ச்சோழன் இரந்து தந்தான் கைவாளைப்
பத்தருங்கொண்டார் பார்மன்னன் பணிந்தானெழுந்தான் குதி கொண்டான்.

கீர்த்தனம்.
இராகம் - கானடா. தாளம் - சாப்பு.
பல்லவி.
யான்செய் தவமின்று பலித்ததே எனை
யடர்ந்தபாவங்கள் விடுத்ததே.
அநுபல்லவி.
தேன்பெய்மலர்கரி சிந்தியது முன்
செய்த தவமேயன்றி வேறிலை (யான்)

சரணம்.
மங்கைபாகனதடி மறந்து பொய் வாழ்வைநம்பியபாவமும்
மட்டறும்பழிகூறுமிப்பெரு மண்சுமத்தியபாவமும்
செங்கைவாள் கொடென் சிரந்துணித்திடில் திருமொன்றிவர் கையின் மேல்
திட்டமாகவேதந்திட்டேன்பல தீட்டுக்கொருமுழுக்கெனத் துணிந்திட்டேன் (யான்)

----------

(இசைநடைக் கண்ணி)
தன்பாகரையும் யானையையும் தடிந்ததற்காக நோகாமல்
என்றலைதுணிப்பீ ரென்றுடைவா ளீய்ந்தானிவன்போலெரிகதிரோன்

குலத்துதித்தாரிலரென்றே கூர்வாளெறிபத்தர்தேர்ந்து
அலக்கணுற்றாரென்செய்தேன் அந்தோகெட்டேனென் செய்வேன்

என்செய்வேனினியென்செய்வே னிப்பூவுலகத்தவரெல்லாம்
என்செய்தானென்றேசுமொழி ஏந்திக்கொண்டேனென்செய்வேன்

இப்படுபழியைக்கைப்படுவானா லென்றலைதன்னைத்துணித்திடா
தொப்பனையாகா வசையும்போகா துலகந்தனிலென்றெறிபத்தர்

மைப்படுகண்டன் மலரடிநெஞ்சில் வைத்தவராகித் தன்வாளைக்
கைப்படவேந்தித் தன்களமரிவது கருமந்தானென் றுட்கொண்டார்.

கீர்த்தனம்.
இரரகம் - காம்போதி . அடதாளம்.
பல்லவி.
        ஏழைகையாற் செய்தபாவம் ஏழைகையால் தீர்வதல்லால்
        எவர்தீர்த்திடவரினுந்தீருமோ .
அநுபல்லவி.
        வாழையடிவாழையென வளருமல்லாவிந்தப்பழி
        தாழ்வுறுமோ சனனமரணம் தானணுகாதே போகுமோ
சரணம்.
        பல்லுயிருங்காக்குமிந்தப் பார்த்திபனே தன்னுயிரை
        வல்லுயிராயெண்ணவில்லை வாள்கொடுத்தான் தன்னுயிர்க்கு
        கல்லுயிரோவென்னுயிர்தான் கற்கண்டோசருக்கரையோ
        நல்லுயிரோநாறுமுடல் நாடிநிற்குமிவ்வுயிரால் (ஏழை)
-------------

(இசைநடைக் கண்ணி)
என்றென்றிவ்வா றெறிபத்தர் எண்ணிக்கொண்டுடைவா ளோங்கப்
பொன்றங்கும் முடிபுகழ்ச்சோழன் பூரித்தாநந்தங்கொண்டு.

ஐயாபுநிதன் நானானேன் அரிவாளா லென்றலைகொய்வீர்
மெய்யாவென்றானவரடிமேல் வீழ்ந்தானெழுந்தான் வேல்வேந்தன்.

குனிந்துநின்றான் நெடுநேரம் கூர்வாளவனது களந்தன்னைத்
துனைந்திடாதது கண்டுசிரம் தூக்கிப்பார்த்தான் புவிமன்னன்.

பார்க்கப்பகவன் றொண்டர்கைப் பற்றியவாளவர்களமீதில்
சேர்க்கக்கண்டான் மெய்சோர்ந்தான் தெருண்டான் மருண்டான்செப்பிடுவான்,
-------------

கீர்த்தனம்.
இராகம் - பியாகடை. தாளம் - ஆதி.
பல்லவி.
        நில்லும் நில்லும் நில்லுமையா நினைத்ததென்ன சொல்லுமையா.
அநுபல்லவி.
        அல்லல்வினை தீருமையா அடியேனைக் கண்பாருமையா
சரணம்.
        என்னைநத்திவரும் பழிக்கு என்றலையேயதற்கிலக்கு
        தன்னைநத்திடாப் பழிக்கேன் றலைகொடுக்க நீர்துணிந்தீர்.

கீர்த்தனம்.
இராகம் - கமாஸ். தாளம் - ஆதி.
பல்லவி.
        என்ன செய்யத் துணிந்திட்டீரையா
        என்னன்பின் மெய்யா.
அநுபல்லவி.
        என்ன செய்யத் துணிந்துவிட்டீர்
        ஏழையெந்தன் கையைவிட்டீர்
        சொன்ன சொல்லை மறந்திட்டீரையா
        துணைவாட்கையா.
சரணம்.
        நான் கொடுத்த வாளுங்கொண்டீர்
        நற்குணத்தை யேன்மறந்தீர்
        தேன்கொடுக்கும் மொழிபகர்ந்திட்டீர்
        செய்யாதுவிட்டீர்.
--------------

(இசைநடைக் கண்ணி)
ஆறாய்க் கண்ணீர் பெருகக்கோன் அன்பர்கையைப்பிடித்திடலும்
மாறாக்குணராய் வன்றொண்டர் மன்னன் கையை விலக்கிடலும்

தன்னைச்சார்ந்தது பழியென்றே தணிந்தீர்ப்பான் மன்னவன்வாளை
என்னைச்சார்ந்த தெனச்சொல்லி யீயாதிழுப்பா ரெறிபத்தர்.

விருத்தம்.
பத்தர்கைவாளரசீர்ப்பப் பகவன்றொண்டர்
        பார்மன்னன் கைவாளைப் பற்றாதீர்ப்ப
இத்தகவா நெடுநேர மீர்ப்பவீர்ப்ப
        ஈசன்மலரடிப் போதிலிசையநாளும்
வைத்தமனத்தினர்க் குற்ற வழக்கைத்தீர்க்க
        வல்லவரா ரவரன்றி மக்களுள்ளே
எத்தகைய பேராலு மாகாவாகா
        வென் செய்வார் சுற்றிநின்றா ரென்செய்வாரே.
-------------

(இசைநடைக் கண்ணி)
தொண்டரும் சோழனுமிவ்வாறாய்த்
தோற்காராகியுறுங் காலை

எண்டிசை கேட்டிட விண்வாணி
இயம்பிய தொருமாற்றங் கேண்மோ.

கீர்த்தனம்.
இராகம் – மோகனம். தாளம் - சாப்பு.
பல்லவி.
        நிறுத்தும் நிறுத்தும் வாள்மன்றாட்டம்
        நிகழ்ந்ததுபோதும்.
அநுபல்லவி.
        பொறுத்துக்கொள்ளும் நான் சொல்லும்
        பொய்யாமொழியை மெய்யாக்கொள்ளும் (நிறு)
சரணம்.
        உங்கள் பத்தியுலகறிந்திட
        ஓங்குநல்லறம் தழைத்தோங்கிடத்
        திங்கள் சூடி யிறைவன்செய்த
        திருவிளையாடல் புகழெழ (நிறு)
-------------
(இசைநடைக் கண்ணி)
அன்பர்காளும் தன்புலகம் அறிதற்காகவே சிவபெருமான்
தன்றிருவிளையாடல்செய்தான் றணிவீரென்றுமறைந்திடலும்
யானையெழுந்தது பாகரெழுந்தனர் அச்சிவகாமியாண்டார்கை
தானுறுகுடலைகள் மலர்கணிறைந்தன தற்பரனருளென்னென்பேனே

கவிக்கூற்று.
கீர்த்தனம்.
இராகம் – பிலஹரி. தாளம் - சாபு.
பல்லவி
        என்னசொல்வே னிந்தக்காக்ஷி
        யெங்கும் கண்டறியேன்
அநுபல்லவி.
        கன்னல் கமுகஞ் சோலைசூழும்
        கருவூர் செய்த பாக்கியந்தான் (என்ன)
சரணம்.
        மரித்தபாக ருயிர்த்தெழுந்ததும்
        மாண்டயானை பிழைத்து வந்ததும்
        விரித்துவான முரைத்த கன்றதும்
        விரிமலர்க் குடலைக ணிறைந்ததும். (என்ன)
------------

(இசைநடைக் கண்ணி)
பூமழை பெய்தார் துந்துபியார்த்தார்
புரந்தரன் முதற்றேவர்கள்

மாமறை சொல்லியே வாழ்த்தினர் பூசுரர்
மன்னர்கள் ஜயஜயவென மொழிந்தார்.

மதுமலர் கொண்டம் மறையோனும்
வாளெறிபத்தர் தமைப்பரவி

விதுவளர் மெளலிப்புனிதன்றாள்
மேவச் சென்றான் பொற்கோயில்

மகிமன்னன் பதயுகங்களின்மேல்
வாளெறிபத்தர் வணங்கிட்டுப்

புகழுனதே யென்றா னரசன்
போற்றிச் சொன்னா னுமதென்றே.
-------------
கீர்த்தனம்.
இராகம் – கமாஸ். தாளம் - ஆதி.
பல்லவி.
        உம்மாலிந்தப் பெரும்பாக்கியம்
        உற்றதே யெறிபத்தரே.
அநுபல்லவி.
        கைம்மாவொடு பாகராருயிர்
        களைந்ததாலிது விளைந்ததல்லவோ (உம்மா)
சரணம்.
        விண்டலத்தினில் மொழிபிறந்ததும்
        வீந்தவுடலிலுயிர் நிறைந்ததும்
        வண்டார்மலர் சிந்திப்போனது
        மறையவர்கரம் மருவிவந்ததும் (உம்மா)
-----------

(இசைநடைக் கண்ணி)
உத்தமபத்தர்களி வ்வாறாய்
ஒருவரை யொருவர் புகழ்ந்தாடி
அத்தன் றிருவரு ளல்லாமல்
ஆமோவென்றவ னடிதாழ்ந்தார்.

கீர்த்தனம்.
இராகம் – பரசு. தாளம் - ஆதி.
கண்ணிகள்.
        தேவாதி தேவனே சம்போ சங்கரனே
        சிரித்து முப்புர மெரித்து நஞ்சுண்டு
        கறுத்த சுந்தானே. (தேவா)

        பூவாழயன் காணாத புரத்தனே யுயர்சிரத்தனே
        பூரித் தெங்களிடர் தீரத் திருவருள்
        சாரத் தருந்தவனே. (தேவா)

        காரானையுரித்துப் போர்த்த கரத்தனே கந்தரத்தனே
        கலக்கமுற்றவ ரலக்கணைத்தூர
        விலக்கிடும் பரனே. (தேவா)
--------


(இசைநடைக் கண்ணி)
மன்னனும் பத்தரு மிவ்வா றாய்
வானவன் மலரடி வாழ்த்தியபின்
நின்னில மேகென வெறிபத்தர்
நிகழ்த்தப் பிரியா நெஞ்சினனாய்
பட்ட மதக்களி றோடெழுந்த
பாகரும் மன்னருந் தற்சூழ
எட்டுத்திக்கும் புகழெய்த
இல்லஞ்சென்றான் புகழ்ச்சோழன்.

அடியார்க்குறு மிடர் தீர்ப்பாராய்
ஆநிலைநாதன் பணியொன்றே
யுடையாராய்ப் பின்னெறிபத்தர்
உற்றார் கணங்களுக் கதிபதியாய்
கருவூரானைக் கைதொழுவார்
கருவூறாரக் கண்ணுதலும்
தருவூரதுவே தகுமூரே
தருவூராமோ தகுமூரே.

-------------


கீர்த்தனம்.
இராகம் – சுருட்டி. தாளம் - சாபு.
பல்லவி.
மங்களம் மங்களம் மங்களம் மாதேவருக்கு
மங்களம் மங்களம் மங்களம்.
அநுபல்லவி.
அங்கயற்கட் சுந்தரியணைந்த தோழருக்கு மெழில்
தங்குமலங்கார வல்லி சாரவரம் தந்தவர்க்கு (மங்)
சரணம்.
தும்பி முகன்றந்தையருக்கு அறுமுகனைத் தோற்றுவித்த வெந்தையருக்கு
வெம்பிய நஞ்சுண்டவருக்கு வாகனமாக வெள்ளை விடை கொண்டவருக்கு
அம்பிகையோர் பங்கருக்கு அரவணியும் துங்கருக்கு
உம்பர் தொழும் பாதருக்கு உலகநிறை நாதருக்கு (மங்)
       
மான்மழுவேந்திடுமவர்க்கு சிவகாமியாண்டார் மனமகிழ மலர் தந்தவர்க்கு
வான்புகழ்ச் சோழனைக் காத்தார்க்கு எறிபத்தர்க்கு மாறிலாப்பதங்கொடுத்தார்க்கு
தேனுபூசை ஏத்தவர்க்குச் செப்புமம்பலக் கூத்தருக்கு
ஞானிகள்தொழு மீசருக்கு நற்கருவூர் வாசருக்கு (மங்)
----------

பயன்.
(இசைநடைக் கண்ணி)
இச்சரிதஞ் சொல்வோர் கேட்போர்
இணையிலராகிப் புவிவாழ்ந்து
அச்சுதன் நாடியுமறியாதா
னவனடி மலரிணை யணைவாரே.

எறிபத்த நாயனார் சித்திரக் கீர்த்தளை முற்றிற்று

Comments