Citampara mum'maṇikkōvai


பிரபந்த வகை நூல்கள்

Back

சிதம்பர மும்மணிக்கோவை
ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்




குமரகுருபரர் அருளிச்செய்த
சிதம்பர மும்மணிக்கோவை





காப்பு


செம்மணிக்கோ வைக்கதிர்சூழ் தில்லைச்சிற் றம்பலவன்
மும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும் - எம்மணிக்கோ
அஞ்சக் கரக்கற்ப கத்தா ரிறைஞ்சுமஞ்சு
கஞ்சக் கரக்கற்ப கம்.
1


நூல்

நேரிசையாசிரியப்பா
பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பி னானில வளாகமும்
ஏனைப் புவனமு மெண்ணீங் குயிரும்
தானே வகுத்ததுன் றமருகக் கரமே
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையுங் காப்பதுன் னமைத்தபொற் கரமே
தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவ தாரழல் வைத்ததோர் கரமே
ஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின்
றூட்டுவ தாகுநின் னூன்றிய பதமே
அடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம்
கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே
இத்தொழி லைந்துநின் மெய்த்தொழி லாகப்
பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென
நோயுண் மருந்து தாயுண் டாங்கு
மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப
வையமீன் றளித்த தெய்வக் கற்பின்
அருள்சூற் கொண்ட வையரித் தடங்கட்
டிருமாண் சாயற் றிருந்திழை காணச்
சிற்சபை பொலியத் திருநடம் புரியும்
அற்புதக் கூத்தநின் னமுதவாக் களித்த
நல்லற நூல்களிற் சொல்லறம் பலசில
இல்லறந் துறவற்ற மெனச்சிறந் தனவே
அந்நிலை யிரண்டினுண் முன்னது கிளப்பிற்
கற்றநூற் றுறைபோய்க் கடிமனைக் கிழவன்
நற்குண நிறைந்த கற்புடை மனைவியோ
டன்பு மருளுந் தாங்கி யின்சொலின்
விருந்து புறந்தந் தருந்தவர்ப் பேணி
ஐவகை வேள்வியு மாற்றி யிவ்வகை
நல்லற நிரப்பிப் பல்புகழ் நிறீஇப்
பிறன்மனை நயவா னறன்மனை வாழ்க்கைக்கு
வரையா நாளின் மகப்பேறு குறித்துப்
பெருநலந் துய்க்கும் பெற்றித் தன்றே
மற்றையது கிளப்பின் மனையற நிரப்பி
முற்றுணர் கேள்வியின் முதுக்குறை வெய்திப்
பொருளு மின்பமு மொரீஇ யருளொடு
பொறையு மாற்றலு நிறைபே ரொழுக்கமும்
வாய்மையுந் தவமுந் தூய்மையுந் தழீஇ
ஓரறி வுயிர்க்கு முறுதுய ரோம்பிக்
காலோய் நடைய னாகித் தோலுடுத்
தென்பெழு மியாக்கையன் றுன்புறத் துளங்காது
வரையுங் கானு மெய்திச் சருகொடு
கானீ ரருந்திக் கடும்பனிக் காலத்து
மாநீ ரழுவத் தழுங்கி வேனில்
ஐவகை யழலின் மெய்வருந்த வருந்தி
இவ்வகை யொழுகு மியல்பிற் றன்றே, அதனால்
இந்நிலை யிரண்டு மெம்மனோர்க் கியலா
நன்னிலை யாகலி னந்நிலை நிற்றற்
குரனு மாற்றலு மின்றி வெருவந்
தௌிதனற் றமியனே னரியது பெறுதற்
குளதோ நெறியொன் றுணர்த்துமி னீரென
முத்தலந் தலங்களுண் முத்தித் தலமா
இத்தல முடைத்தெனெ விசைத்தனர் சிலரே
அறிஞராங் குரைத்த வுறுதிக் கட்டுரை
உலகியல் வழக்கும் புலனெறி வழக்குமென்
றிருவகை வழக்கினு நிலைபெற் றன்றே, அவற்றுள்
ஆரூர்ப் பிறத்த னேர்படி னல்லது
செயற்கையி னெய்து மியற்கைய தன்றே, அதாஅன்று
காசியி லிறத்த னோக்கித் தேசம்விட்
டறந்தலைத் தந்த வரும்பொரு டாங்கிப்
பிறன்பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு
கழிபெருங் கான நீங்கி வழியிடைத்
தீப்பசிக் கிரங்கி நோய்ப்பனிக் கொதுங்கிப்
பல்பிணிக் குடைந்து செல்லுங் காலத்
திடைச்சுரத் திறவா தின்னுயிர் தாங்கிக்
கிடைத்தன னாயி னடுத்தநல் லொழுக்கமோ
டுடல்விடு காறுமத் தடநகர் வைகி
முடிவது கடைபோக முடிவதோ வரிதே, அதனால்
சிற்றுயிர்க் கிரங்கும் பெரும்பற்றப் புலியூர்
உற்றநின் றிருக்கூத் தொருகா னோக்கிப்
பரகதி பெறுவான் றிருமுன் பெய்தப்
பெற்றன னளியனேன் பற்றில னாயினும்
அன்பிலை கொடியையென் றருளா யல்லை
நின்பதம் வழங்குதி நிமலவென் றனக்கே
மருந்துண் வேட்கையன் மனமகிழ்ந் துண்ணினும்
அருந்துழி யொருவ னருவருப் புறீஇத்
தன்முகஞ் சுளித்துத் தலைநடுக் குற்றுக்
கண்ணீர் வீழ்த்துக் கலுழ்ந்தனன் மாந்தினும்
வாய்ப்புகு மாயினம் மருந்திரு வருக்கும்
தீப்பிணி மாற்றுத றிண்ணமே யன்றி
நொதுமலும் பகையும் போக்கி யொருபொருள்
விழுத்தகு கேண்மையோர்க் குதவல்
வழக்குமன் றைய மன்றுடை யோர்க்கே.
2


நேரிசைவெண்பா
மன்றம் பொகுட்டா மதிலிதழா மாடங்கள்
துன்றும் புயல்கள் சுரும்பராப் - பொன்றங்கும்
நற்புண்ட ரீகமே யொக்கு நடராசன்
பொற்புண்ட ரீக புரம்
3


கட்டளைக்கலித்துறை
புரமொன் றிரண்டும் புகையழ லுண்ணப் புவனமுண்ணும்
சரமொன் றகிலஞ் சலிக்கவெய் தோய்சலி யாநடஞ்செய்
வரமொன் றிரண்டு மலர்த்தாளு மூன்றிற்றன் மாமகுடம்
பரமொன்று மென்றுகொல் லோகொண் டவாவப் பதஞ்சலியே
4


நேரிசையாசிரியப்பா
சலியாது முயன்ற தவப்பெருந் தொண்டர்
பலநா ளோதிக் கலைமுற்று நிரம்பி
அளவையி னளந்துகொண் டுத்தியிற் றௌிந்து
செம்பொரு ளிதுவெனத் தேறி யம்பலத்
தாரா வன்பினோ டகனமர்ந் திறைஞ்சிப்
பேரா வியற்கை பெற்றனர் யானே
சரியையிற் சரியாது கிரியையிற் றளரா
தியோகத் துணங்கா தொண்பொரு டூக்காது
வறிதே நின்றிரு மன்ற நோக்கிப்
பிறவா நன்னெறி பெற்றன னன்றே
முட்புறம் பொதிந்த நெட்டிலைக் கைதை
சுரிமுகப் பணிலமொடு சூலுளைந் துழிழ்ந்த
தரளம் வெண்மடற் றாங்குவ தம்ம
கருங்கழிக் கரையில் வெண்பொடி பூசி
இருந்தவ முஞற்றியு மியாம்பெறற் கரிய
செஞ்சடைக் கிடந்த வெண்மதிக் கடவுள்
வருகவென் றழைத்துப் பெருநயப் பெய்திக்
கண்ணீர் வாரக் கலந்துடன் றழீஇ
உண்ணென வெண்சோ றேந்தித் தண்ணென
உடுக்கணத் தொடுமவ் வுடுபதிக் கடவுளை
மடற்றலைத் தாங்கி வைகுவது கடுக்கும்
நெய்தலொடு தழீஇய மருத வேலித்
தெய்வப் புலியூர் வைதிகக் கூத்த
பொன்னிறப் புறவுங் கருநிறக் காக்கையும்
மன்னுமா லிமய வரைப்புறஞ் சேர்ந்துழி
இருதிறப் பறவைக்கு மொருநிற னல்லதை
நிறம்வேறு தெரிப்ப துண்டோ விறைவநின்
இன்னருள் பழுத்த சந்நிதி சேர்ந்துழி
இருவேம் பெற்றது மொருபே றாகலின்
வேற்றுமை யுளதோ வில்லை
ஆற்றசால் சிறப்பி னனையரோ டெனக்கே
5


நேரிசை வெண்பா
ஓட்டுவிக்கக் கூட்டினைவிட் டோடும் பொறியரவைந்
தாட்டுவிக்குஞ் சித்தர்நீ ரானக்காற் - கூட்டமிட்டு
மன்றாடு மும்மையொரு மாசுணநின் றாட்டுவிக்க
நின்றாடு கின்றதென்கொ னீர்
6


கட்டளைக்கலித்துறை
நீருண்ட புண்டரி கத்துணைத் தாணிழற் கீழ்ப்பொலியும்
சீருண் டடித்தொண்டு செய்யா வெனக்குஞ்சிற் றம்பலத்தெம்
காருண்ட கண்டனைக் கண்டன னாலக் கடலமுதம்
ஆருண்டனர்மற் றவரெவ ரேனு மமரர்களே
7


நேரிசையாசிரியப்பா
அமரர் கோமக னரும்பெறல் வாழ்க்கையும்
இருநிதிக் கிழவ னொருபெரு வெறுக்கையும்
ஐங்கணைக் கிழவன் றுஞ்சா நலனும்
ஒருவழிக் கிடைப்பினும் வெருவந்து கலங்கிக்
கைத்தூண் வாழ்க்கை யுத்தம யோகிகட்
கெத்திறம் வைகினு மிடையூ றின்றே யானே
வளியுண் புளிப்பும் பித்துண் கைப்பும்
ஐயுண் மதுரமு மல்லன பிறவும்
நாச்சுவை யறிய நல்கின மேற்சென்
றதுவது வாக வழுந்திப் புதிதுண்டு
கழிபெருங் காம மூழ்கி முழுவதும்
பாவமும் பழியு மேவுவ தல்லது
செம்பொரு டெரிந்து சிற்றறி வொரீஇ
ஐம்புல னடக்கி யறந்தலை நின்று
தீநெறி விலக்கி நன்னெறிப் படர்தற்
குரனில் காட்சி யிழுதைய னாதலிற்
பூவாது பழுக்குஞ் சூலடிப் பனசம்
பார்கிழித் தோடிப் பணியுல களந்த
வேர்தொறும் வேர்தொறும் வெவ்வேறு பழுத்து
முட்புறக் கனிக டூக்குவ தொட்பமொடு
பதஞ்சலி முனிவனைப் பார்கொளத் தந்த
பிலங்கொளக் கொடுக்கும் பலங்கள்பல நிகர்க்கும்
மல்லலம் பொழில்சூழ் தில்லை வாண
வரமொன் றிங்கெனக் கருளல் வேண்டும், அதுவே
பெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி
பலதொடுத் திசைத்த வொருதுணி யல்லது
பிறிதொன்று கிடையா தாக வறுமனைக்
கடைப்புறத் திண்ணை யல்லது கிடக்கைக்
கிடம்பிறி தில்லை யாக கடும்பசிக்
குப்பின் றட்ட புற்கையூ ணல்லது
மற்றோ ருண்டி வாய்விட் டரற்றினும்
ஈகுந ரில்லை யாகநா ணாளும்
ஒழுக்க நிறைந்த விழுப்பெருங் கேள்வி
மெய்த்தவர் குழாத்தொடும் வைக வித்திறம்
உடனீங் களவு முதவிக் கடவுணின்
பெரும்பத மன்றியான் பிறிதொன்
றிரந்தனன் வேண்டினு மீந்திடா ததுவே
8


நேரிசை வெண்பா
வேதண்ட மேபுயங்கள் விண்ணே திருமேனி
மூதண்ட கூடமே மோலியாம் - கோதண்டம்
ஒற்றைமா மேரு வுமாபதியார் நின்றாடப்
பற்றுமோ சிற்றிம் பலம்
9


கட்டளைக்கலித்துறை
பற்றம் பலமிதித் துத்துதித் தேசெவ்வி பார்த்துப்புல்லர்
வெற்றம் பலந்தொறு மெய்யிளைத் தேறுவர் வீணர்கெட்டேன்
குற்றம் பலபொறுத் தென்னையு மாண்டுகொண் டோன்புலியூர்ச்
சிற்றம் பலங்கண்டு பேரம் பலத்தைச்செய் யாதவரே.
10


நேரிசையாசிரியப்பா
செய்தவ வேட மெய்யிற் றாங்கிக்
கைதவ வொழுக்கமுள் வைத்துப் பொதிந்தும்
வடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன
கடவுண் மன்றிற் றிருநடங் கும்பிட்
டுய்வது கிடைத்தனன் யானே யுய்தற்
கொருபெருந் தவமு முஞற்றில னுஞற்றா
தௌிதினிற் பெற்ற தென்னெனக் கிளப்பிற்
கூடா வொழுக்கம் பூண்டும் வேடம்
கொண்டதற் கேற்பநின் றொண்டரொடு பயிறலிற்
பூண்டவவ் வேடங் காண்டொறுங் காண்டொறும்
நின்னிலை யென்னிடத் துன்னி யுன்னிப்
பன்னா ணோக்கின ராகலி னன்னவர்
பாவனை முற்றியப் பாவகப் பயனின்யான்
மேவரப் பெற்றனன் போலு மாகலின்
எவ்விடத் தவருனை யெண்ணினர் நீயுமற்
றவ்விடத் துளையெனற் கையம்வே றின்றே, அதனால்
இருபெருஞ் சுடரு மொருபெரும் புருடனும்
ஐவகைப் பூதமோ டெண்வகை யுறுப்பின்
மாபெருங் காயந் தாங்கி யோய்வின்
றருண்முந் துறுத்த வைந்தொழி னடிக்கும்
பரமா னந்தக் கூத்த கருணையொடு
நிலையில் பொருளு நிலையற் பொருளும்
உலையா மரபி னுளங்கொளப் படுத்திப்
புல்லறி வகற்றி நல்லறிவு கொளீஇ
எம்ம னோரையு மிடித்துவரை நிறுத்திச்
செம்மைசெய் தருளத் திருவுருக் கொண்ட
நற்றவத் தொண்டர் கூட்டம்
பெற்றவர்க் குண்டோ பெறத்தகா தனவே.
11


நேரிசை வெண்பா
தக்கனார் வேள்வி தகர்த்துச் சமர்முடித்த
நக்கனார் தில்லை நடராசர் - ஒக்கற்
படப்பாய லான்காணப் பைந்தொடிதா ளென்றோ
இடப்பாதந் தூக்கியவா வின்று.
12


கட்டளைக் கலித்துறை
இனமொக்குந் தொண்டரொ டென்னையு

மாட்கொண்ட வீசர்தில்லைக்
கனமொக்குங் கண்டத்தெங் கண்ணுத

லார்சடைக் காடுகஞ்ச
வனமொக்கு மற்றவ் வனத்தே

குடிகொண்டு வாழும் வெள்ளை
அனமொக்குங் கங்கை யருகேவெண்

சங்கொக்கு மம்புலியே.
13


நேரிசை யாசிரியப்பா
புலிக்கான் முனிவற்குப் பொற்கழல் காட்டிக்
கலிக்கா னிவந்த கட்டில் வாங்கி
மாயோன் மணிப்படப் பாயலு மெடுத்து
வறும்பாழ் வீட்டில் வைத்துக்கொண்டிருந்
துறங்காது விழித்த வொருதனிக் கள்வ
காற்றேர்க் குடம்பைக் காமப்புட் படுக்கத்
தீப்பொறி வைத்த திருநுதற் கண்ண
ஆதி நான்மறை வேதியற் பயந்த
தாதை யாகிய மாதவ ரொருவரும்
இருங்கா ளத்தி யிறைவர்முன் னுண்ண
அருஞ்சா பத்தா லமுதமூ னாக்கும்
நற்றவ வேடக் கொற்றவ ரொருவரும்
ஒருபிழை செய்யா தருள்வழி நிற்பவவ்
விருவர்கண் பறித்த தரும மூர்த்தி
முட்டையிற் கருவில் வித்தினில் வெயர்ப்பில்
நிற்பன நௌிவ தத்துவ தவழ்வ
நடப்பன கிடப்பன பறப்பன வாகக்
கண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடிப்
பிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு
நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங்
கெண்ணான் கறமு மியற்றுதி நீயென
வள்ளன்மை செலுத்து மொண்ணிதிச் செல்வ
அளியன் மாற்றமொன் றிகழாது கேண்மதி
எழுவகைச் சனனத் தெம்ம னோரும்
உழிதரு பிறப்பிற் குட்குவந் தம்ம
முழுவது மொரீஇ முத்திபெற் றுய்வான்
நின்னடிக் கமலம் போற்றுப விந்நிலத்
தொருபது வகைத்தாம் யோனிதோ றுழன்றும்
வெருவரும் பிறப்பின் வேட்கைய னாகிநின்
சந்நிதி புக்குமத் தாமரைக் கண்ணான்
துஞ்சினன் றுயிலொரீஇ யெழாஅன்
அஞ்சினன் பொலுநின் னாடல்காண் பதற்கே
14


நேரிசை வெண்பா
ஆட்டுகின்றோ ரின்றிமன்று ளாடுமா னந்தத்தேன்
காட்டுகின்ற முக்கட் கரும்பொன்று - வேட்டதனை
உற்றுநெடு நாளாக வுண்ணுமொர் மால்யானை
பெற்றதொரு கூந்தற் பிடி.
15


கட்டளைக்கலித்துறை
பிடிப்ப துமக்கெனை வேண்டின்வெங்< கூற்றெனும் பேர்முடிய
முடிப்பது மத்த முடியார்க்கு வேண்டுமுக் கட்பரனார்
அடிப்பது மத்தொன் றெடுத்துத்தென் பான்முக மாகநின்று
நடிப்பது மத்தன்மை யாநம னாரிது நாடுமினே.
16


நேரிசையாசிரியப்பா
மின்வீழ்ந் தன்ன விரிசடைக் காட்டிற்
பன்மாண் டுத்திப் பஃறலைப் பாந்தட்
சிறுமூச்சிற் பிறந்த பெருங்காற் றடிப்ப
விரிதிரை சுருட்டும் பொருபுனற் கங்கை
படம்விரித் தாடுமச் சுடிகைவா ளரவின்
அழற்கண் கான்றவவ் வாரழல் கொளுந்தச்
சுழித்துள் வாங்கிச் சுருங்கச் சுருங்காது
திருநுதற் கண்ணிற் றீக்கொழுந் தோட
உருகுமின் னமுத முவட்டெழுந் தோடியக்
கங்கை யாற்றின் கடுநிரப் பொழிக்கும்
திங்களங் கண்ணித் தில்லை வாண
அன்பருக் கௌியை யாகலி னைய
நின்பெருந் தன்மை நீயே யிரங்கி
உண்ணின் றுணர்த்த வுணரி னல்லதை
நுண்ணூ லெண்ணி நுணங்க நாடிப்
பழுதின் றெண்ணிப் பகர்து மியாமெனின்
முழுது மியாரே முதுக்குறைந் தோரே
நால்வகைப் பொருளு நவையறக் கிளந்த
வேத புருடனு மியாதுநின் னிலையெனத்
தேறலன் பலவாக் கூறின னென்ப, அதாஅன்று
முன்னைநான் மறையு முறைப்பட நிறீஇய
மன்னிருஞ் சிறப்பின் வாதரா யணனும்
கையிழந் தனனது பொய்மொழிந் தன்றோ, அதனால்
தௌிவில் கேள்வியிற் சின்னூ லோதி
அளவா நின்னிலை யளத்தும் போலும்
அறிவு மாயுளுங் குறையக் குறையாத
பையுணோ யெண்ணில படைத்துப்
பொய்யுடல் சுமக்கும் புன்மை யோமே
17


நேரிசை வெண்பா
புனையேந் தருவுதவு பொன்னரி மாலை
வனையேம் பசுந்துழாய் மாலை - பனிதோய்
முடிக்கமலஞ் சூடினோன் மொய்குழலோ டாடும்
அடிக்கமலஞ் சூடினோ மால்
18


கட்டளைக்கலித்துறை
சூடுங் கலைமதி யைத்தொட ராதுபைந் தோகைக்கஞ்சா
தோடும் பொறியர வொன்றுகெட் டேன்மறை யோலமிட்டுத்
தேடும் பிரான்றிருக் கூத்தினுக் கேமையல் செய்யுமென்றும்
ஆடுந் தொழில்வல்ல தாகையி னாலவ் வருமைகண்டே.
19


நேரிசையாசிரியப்பா
கட்புலங் கதுவாது கதிர்மணி குயிற்றி
விட்புலஞ் சென்ற மேனிலை மாடத்து
வல்லியி னுடங்கு மயிலிளஞ் சாயற்
சில்லரித் தடங்கட் டிருந்திழை மகளிர்
அளவில் பேரழ காற்றியும் வாளா
இளமுலைத் தொய்யி லெழுதிய தோற்றம்
தருநிழற் செய்த வரமிய முற்றத்
தமரர் மாதரோ டம்மனை யாடுழி
இமையா நாட்ட மிருவர்க்கு மொத்தலின்
நற்குறி தெரிதற்கு நாகிளங் குமரர்
விற்குறி யெழுதி விடுத்தது கடுக்கும்
வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்
பொன்னடிக் கொன்றிது பன்னுவன் கேண்மதி
என்றுநீ யுளைமற் றன்றே யானுளேன்
அன்றுதொட் டின்றுகா றலமரு பிறப்பிற்கு
வெருவர லுற்றில னன்றே யொருதுயர்
உற்றுழி யுற்றுழி யுணர்வதை யல்லதை
முற்று நோக்க முதுக்குறை வின்மையின்
முந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்
சின்னீர்க் கழிநீத் தஞ்சா னின்னும்
எத்துணைச் சனன மெய்தினு மெய்துக
அத்தமற் றதனுக் கஞ்சல னியானே
இமையாது விழித்த வமரரிற் சிலரென்
பரிபாக மின்மை நோக்கார் கோலத்
திருநடங் கும்பிட் டொருவனுய்ந் திலனாற்
சுருதியு முண்மை சொல்லா கொல்லென
வறிதே யஞ்சுவ ரஞ்சாது
சிறியேற் கருளுதி செல்கதிச் செலவே
20


நேரிசை வெண்பா
சென்றவரைத் தாமாக்குந் தில்லைச்சிற் றம்பலத்து
மன்றவரைத் தாமாக்க வல்லவர்யார் - என்றுமிவர்
ஆடப் பதஞ்சலியா ராக்கினா ரென்பிறவி
சாடப் பதஞ்சலியார் தாம்.
21


கட்டளைக்கலித்துறை
தாமக் குழலினல் லார்விழி மீன்பொரச் சற்றுமினிக்
காமக் கருங்குழியிற்சுழ லேங்கலந் தாடப்பெற்றேம்
நாமப் புனற்கங்கைப் பேராறு பாயநஞ் சங்களத்தும்
வாமத் தமுதமும் வைத்தாடு மானந்த மாக்கடலே.
22


நேரிசையாசிரியப்பா
கடங்கலுழ் கலுழிக் களிநல் யானை
மடங்கலந் துப்பின் மானவேல் வழுதிக்
கிருநில மகழ்ந்து மெண்ணில்பல் காலம்
ஒருவன் காணா தொளித்திருந் தோயை
வனசப் புத்தேண் மணிநாப் பந்திக்
கவனவாம் புரவியிற் காட்டிக் கொடுத்துப்
பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்
ஐந்திணை யுறுப்பி னாற்பொருள் பயக்கும்
காமஞ் சான்ற ஞானப் பனுவற்குப்
பொருளெனச் சுட்டிய வொருபெருஞ் செல்வ
திருத்தொண்டத் தொகைக்கு முதற்பொரு ளாகி
அருமறை கிளந்தநின் றிருவாக்கிற் பிறந்த
அறுபதிற் றாகிய வைம்பதிற்று முனிவருள்
ஒருவனென் றிசைத்த விருபிறப் பாள
வரைசெய் தன்ன புரசை மால்களிற்
றரைசிளங் குமரர் திருவுலாப் போதத்
தவளமா டங்க ளிளநிலாப் பரப்பிச்
செங்கண்யா னைக்கு வெண்சுதை தீற்ற
முதிரா விளமுலை முற்றிழை மடந்தையர்
கதிர்செய் மேனிக்குக் கண்மலர் சாத்தக்
கடவுட் களிற்றிற் கவின்கொளப் பொலிந்த
உடலக் கண்ண ரொருவ ரல்லர்
இருநிலத் தநேகரென் றெடுத்துக் காட்டும்
திருவநீண் மறுகிற் றில்லை வாண
வேய்ச்சொற் றொக்க வாய்ச்சொற் போல
விரிச்சியிற் கொண்ட வுரைத்திற நோக்கி
வினைமேற் செல்லுநர் பலரே யனையர்க்
கவ்வினை முடிவதூஉங் காண்டு மதாஅன்று
பல்லியும் பிறவும் பயன்றூக் காது
சொல்லிய பொருளுந் துணிபொரு ளுடைத்தெனக்
கொண்டோர் கொளினுங் குறைபாடின்றே, அதனால்
யாவர் கூற்றுநின் னேவலி னல்லதை
நிகழா நிகழ்ச்சி யுணராது போலும்
குழந்தை யன்பிற் பெரும்புகழ் நவிற்றிநின்
ஆணையி னின்ற வென்னை
நாணிலை கொல்லென நகுவதென் மனனே.
23


நேரிசை வெண்பா
மன்றுடையான் செஞ்சடைமேல் வாளரவுக் குள்ளஞ்சி
என்றுமதி தேய்ந்தே யிருக்குமால் - நின்றுதவம்
செய்யுமுனி வோர்காமத் தீப்பிணிக்கஞ் சித்தமது
பொய்யுடலை வாட்டுமா போல்.
24


கட்டளைக்கலித்துறை
வாடிய நுண்ணிடை வஞ்சியன் னீர்தில்லை மன்றினுணின்
றாடிய கூத்த னலர்விழி முன்றி லரும்பகலும்
நீடிய கங்குலுங் கண்ணிரண் டாலுற நெற்றிக்கண்ணாற்
கூடிய தீப்பொழு தாகுங்கொன் மாலைக் கொடும்பொழுதே.
25


நேரிசையாசிரியப்பா
கொடியு முரசுங் கொற்றவெண் குடையும்
பிறர்கொளப் பொறாஅன் றானே கொண்டு
பொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கிச்
செவியிற் கண்டு கண்ணிற் கூறி
இருநிலம் புரக்கு மொருபெருவேந்தன்
மிக்கோ னொருவன் வெறுக்கை நோக்குழித்
தொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற
இழப்புறு விழும மெய்தி யழுக்கறுத்து
மற்றது பெறுதற் குற்றன தெரீஇ
அயிற்சுவை பெறாஅன் றுயிற்சுவை யுறாஅன்
மாணிழை மகளிர் தோணலங் கொளாஅன்
சிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து
கவலையுற் றழிவதூஉங் காண்டும் விறகெடுத்
தூர்தொறுஞ் சுமந்து விற்றுக் கூலிகொண்டு
புற்கையு மடகு மாந்தி மக்களொடு
மனையும் பிறவு நோக்கி யயன்மனை
முயற்சியின் மகனை யிழித்தன னெள்ளி
எனக்கிணை யிலையென வினையன்மற் றொருவன்
மனக்களிப் புறீஇ மகிழ்வதூஉங் காண்டும், அதனால்
செல்வ மென்பது சிந்தையி னிறைவே
அல்கா நல்குர வவாவெனப் படுமே
ஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை
உவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும்
அவாக்கடல் கடத்தற் கரும்புணை யின்றே, அதனால்
இருபிறப் பியைந்த வொருபிறப் பெய்தும்
நான்மறை முனிவர் மூவா யிரவரும்
ஆகுதி வழங்கும் யாக சாலையிற்
றூஉ நறும்புகை வானுற வெழுவ
தெழுநாப் படைத்த முத்தீக் கடவுள்
கடலமிழ் துமிழ்ந்தாங் கவியமிழ் துண்ண
வரும்பெருந் தேவரை வானவர் கோனொடும்
விருந்தெதிர் கொள்கென விடுத்தது கடுக்கும்
வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்
அருள்பெற் றுய்தற் குரிய னியானெனிற்
பல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த
அல்லல் செய்யு மவாவெனப் படுமவ்
வறுமையி னின்றும் வாங்கி
அறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே.
26


நேரிசை வெண்பா
என்செய்தீர் தில்லைவனத் தீசரே புன்முறுவல்
முன்செய் தெயிலை முடியாமற் - கொன்செய்த
பொற்புயங்க நாணேற்றிப் பொன்மலையைத் தேவரீர்
மற்புயங்க ணோவ வளைத்து.
27


கட்டளைக்கலித்துறை
வள்ளக் கலச முலையெம் பிராட்டி வரிநயனக்
கள்ளச் சுரும்பர் களிக்கின்ற வாசடைக் காட்டிற்கங்கை
வெள்ளத்தை மேலிட்டு வெண்டா தணிந்து விராட்புருடன்
உள்ளக் கமலத்தி னூறுபைந் தேறலை யுண்டுகொண்டே.
28


நேரிசையாசிரியப்பா
கொண்டல்கண் படுக்குந் தண்டலை வளைஇத்
தடம்பணை யுடுத்த மருத வைப்பின்
இடம்புரி சுரிமுக வலம்புரி யீன்ற
தெண்ணீர் நித்திலம் வெண்ணில வெறிப்ப
ஊற்றெழு தீம்புனல் பாற்கட லாக
விரிதிரைச் சுருட்டே யரவணை யாகப்
பாசடைக் குழாங்கள் பசுங்கதிர் விரிக்கும்
தேசுகொண் மேனித் திருநிற னாகப்
பொற்றாது பொதிந்த சேயிதழ்க் கமலம்
மலர்விழி முதல பலவுறுப் பாக
அங்கணோர் வனசத் தரசுவீற் றிருக்கும்
செங்கா லன்னந் திருமக ளாகப்
பைந்துழாய் முகுந்தன் பள்ளிகொண் டன்ன
அந்தண் பூந்தட மளப்பில சூழ்ந்து
பல்வளம் பயின்ற தில்லையம் பதியிற்
பொன்னின் மன்றிற் பூங்கழன் மிழற்ற
நன்னடம் புரியு ஞானக் கூத்த
ஒருபெரும் புலவனோ டூட றீரப்
பரவை வாய்தலிற் பாயிரு ணடுநாள்
ஏதமென் றுன்னா திருகா லொருகாற்
றூதிற் சென்றநின் றுணையடிக் கமலத்
தீதொன் றியம்புவல் கேண்மதி பெரும
அலையா மரபி னாணவக் கொடியெனும்
பலர்புகழ் சேரிப் பரத்தையொடு தழீஇ
ஏகலன் றணந்தாங் கென்னையு முணராது
மோகமொ டழுந்தி முயங்குறு மமையத்
தங்கவட் குரிய தங்கைய ரிருவருட்
குடிலை யென்னு மடவர லொருத்தி
எய்தரும் புதல்விய ரைவரைப் பெற்றனள்
மோகினி யென்பவண் முவரைப் பயந்தனள்
ஆகிய புதல்விய ரங்கவர் மூவருட்
கலையெனப் பெயரிய கணிகைமற் றொருத்தி
தானு மூவரைத் தந்தன ளவருள்
மானெனப் பட்ட மடவர லொருத்தி
எண்மூன்று திறத்தரை யீன்றன ளித்திறம்
நண்ணிய மடந்தைய ரையெழு வரையும்
கிளப்பருங் காமக் கிழத்திய ராக
அளப்பில் கால மணைந்தனன் முயங்குழி
முறைபிறழ்ந் திவரொடு முயங்குத லொழிகென
முறைபிறழ்ந் தெவரொடு முயங்குத லொழிகென
அறிஞராங் குணர்த்த வஞ்சின னொரீஇ
நின்னிடைப் புகுந்தனன் மன்னோ வென்னிடை
ஞான வல்லியை நன்மணம் புணர்த்தி
ஆனா ஞேயத் தரும்பொருள் வழங்கி
இறவா வீட்டினி லிருத்திக்
குறையாச் செல்வரொடு கூட்டுதி மகிழ்ந்தே.
29


நேரிசை வெண்பா
கூடுங் கதியொருகாற் கும்பிட்டாற் போதுமென
நாடு மவிநயத்தை நண்ணிற்றால் - ஓடியகட்
காதனார் காணவொரு கால்காட்டிக் கையமைத்து
நாதனார் செய்யு நடம் 30


கட்டளைக்கலித்துறை
நடிக்கச் சிவந்தது மன்றெம் பிராட்டி நறுந்தளிர்கை
பிடிக்கச் சிவந்தது மன்றுகொ லாமெம் பிரானென்றும்பர்
முடிக்கச் சிவந்தன போலுங்கெட் டேன்புர மூன்றுமன்று
பொடிக்கச் சிவந்த நகைத்தில்லை யான்மலர்ப் பூங்கழலே.
31

சிதம்பர மும்மணிக்கோவை முற்றிற்று.



Comments