Aruṇakirinātar - varalāṟum nūlārāycciyum
நாட்டுப் பாடல்கள்
Back வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
அருணகிரிநாதர் - வரலாறும் நூலாராய்ச்சியும்
வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
அருணகிரிநாதர் - வரலாறும் நூலாராய்ச்சியும்
- Source:
அருணகிரிநாதர் - வரலாறும் நூலாராய்ச்சியும்
நூலாசிரியர்: டாக்டர் தணிகைமணி
வ.சு. செங்கல்வராயப் பிள்ளை எம்.ஏ., டி.லிட்.
கிடைக்குமிடம்
V.C. தணிகைநாயகன் B.Sc.,B.E.,
"சிவாலயா"
18/10, வெங்கட்ராமன் தெரு, ராஜா அண்ணாமலைபுரம்
சென்னை - 6000028.
விலை ரூ. 7.00.
6-வது நூற்றாண்டு வெளியீடு
Copy right reserved
Oct.1975 விலை ரூ. 7-00
உ
திருத்தணிகேசர் துணை.
வணக்கம்.
திருத்தணி கேசர் திருவருட்டுணை கொண்டு எங்கள் தாத்தா உயர்திரு வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பல இடங்களினின்றும் சேகரித்த ஓலைச் சுவடிகளிலிருந்து திருப்புகழ்ப் பாக்களை யாவரும் பாடி வணங்குவதற்கு முதன் முதலாக நூல் வடிவில் மூன்று பாகங்களில் அச்சேற்றி திரு முருகனுக்குத் தொண்டாற்றினார். "வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவனன்றோ" என்ற வள்ளற் பெருமானின் வாக்கிற் கொப்ப எங்கள் தந்தையார் தணிகைமணி டாக்டர் வ.சு.செ.அவர்கள் அருண கிரியார் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாக்களிலும் பிறவற்றி லும் திளைத்து, பக்தியில் ஆழ்ந்து இன்புற்று பலவகை யான ஆராய்ச்சிகளைச் செய்து தணிகையெம் பெருமானை வணங்கினார்கள்.
சைவத்திருமுறைகள் பன்னிரண்டு உள் ளதைப் போல முருகப் பெருமானுக்கும் திருப்புகழ் முதலாய நூல்களை "முருகவேள் பன்னிரு திருமுறை" என வகுத்து அதனை வெளியிட்டுப் பேரானந்தம் கொண்டனர். அருண கிரிநாத சுவாமிகளின் பாக்களைப் பல்வேறு கோணங்களில் கண்டு மகிழந்தார்கள். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றாங்கு அவற்றை நூல் வடிவாக்கித் தந்தார்கள். அந்தப் பிரதிகள் முழுமையும் தீர்ந்து விட் டன. அருணகிரிநாத சுவாமிகளின் 6வது நூற்றாண்டு விழா நாடெங்கும் சிறப்பான முறையில் நடந்துகொண்டி ருக்கின்ற இத்தருணத்தில், பல முருகனடியார்களின் வேண் டுகோளுக்கிணங்க இந்நூலை மறுமுறை பதிப்பிக்கவேண் டிய வாய்ப்பை யான் பெற்றமைக்குப் பெரிதும் களிப்படைகிறேன். எங்கள் நெஞ்சின் நீங்கா தெய்வமாம் திருத் தணிகேசனின் திருவடிகளைப் போற்றி வணங்கி உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். பக்த கோடிகளும், ஆராய்ச்சியா ளர்களும் இதனைப் பெற்று பயனடையும்படியான பாக்கியத்தைத் திருத்தணிகேசன் புரிவாராக.
சிவாலயா,
18, வெங்கடராமன் தெரு இங்ஙனம்
ராஜா அண்ணாமலைபுரம், வ.செ. தணிகைநாயகன்
சென்னை-600028.
உ.
திருத்தணிகேசர் துணை
"அருணகிரிப் பெயர் வள்ளல் சொன்ன திருப்புகழ்
வல்லவர் சீர்பாதத் தூளி என் சென்னியதே"
திருத்தணிகை யாண்டவரது தனிப்பெருந் தொண்ட ராம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளது சரித்திரம் கர்ணபரம்பரையாகப் பலவேறு வகையாகக் கூறப்பட்டு வருகின் றது. புலவர் புராணம் பாடிய ஸ்ரீ முருகதாச சுவாமிகள் முதல் பல அடியார்கள் அருணகிரியாரின் சரித்திரத்தைத் தாம் கேட்டவாறும், தமது உள்ளத்தில் இறைவன் இயக்கிய வாறும் எழுதியுள்ளார்கள். உண்மைச் சரித்திரம் இதுதான் என்று திடம்பெற உரைக்க இடந்தரவில்லை. கர்ண பரம்ப ரைச் சேதிகளை அறிய வீரம்புவோர் மேற்சொன்ன நூல் களைப் படித்து உணரலாம். இப்பொழுது யான் எழுதி யுள்ள இவ்வரலாறு கூடியவரையில் அகச்சான்று, புறச்சான் றுகளைக்கொண்டே சுவாமிகளது சரித்திரத்தைக் கூறுவதா கும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் எனப்படும் மூவர் சரித்தி ரத்தை எங்ஙனம் தேவாரக் குறிப்புகளைக் கொண்டு சேக்கி ழார் சுவாமிகள் கூறியுள்ளனரோ அங்ஙனமே சுவாமிகளின் திருப்புகழாதிய நூல்களின் குறிப்புகளைக் கொண்டு அவ ரது தலயாத்திரையாதிய வரலாற்றை எழுதவேண்டும் என் பது எனது அவா. ஆனால், அச்சேறியுள்ள திருப்புகழ்ப் பாக்கள் எல்லாம் சுவாமிகளது திருவாக்கே என உறுதியு டன் கூறுதற்கு இயலாமையானும்,மாயா பாசங்களில் தாம் அத்தகைய பாசங்களிற் பட்டதாகத் தமிழ்ப் புலவர் பெருமக் கள் எடுத்துக் கூறும் பெரு வழக்கு உண்மையானும், சிற்சில அகச் சான்றுகளைக் கூடச் சுவாமிகளின் வாழ்க்கைச் சான்றா கக் கூறுதற்கு அஞ்சி விடுத்துள்ளேன். உதாரணமாக (1) எங்கள் திருப்புகழ்ப் பதிப்பில் 392 -ஆம் பாடலில் "மனையவள் நகைக்க... தாதை தமரோடும் மனமது சலிப்ப நாயன் உளமது சலிப்ப", 732-ஆம் பாடலில் "மாத்திரை யாகிலும் நாத்தவறாளுடன் வாழ்க்கையை நீடென மதியாமல்... உழல் வேனோ, 1301- ஆம் பாடலில் 'மனைமக்கள் சுற்றம் எனும் மாயா வலையைக் கடக்க அறியாதே... நாயேன் விழலுக் கிறைத்து விடலாமோ'--என வருவன கொண்டு அருண கிரியார் மனைவி மக்களுடன் வாழ்ந்திருந்தனர் எனக்கூற இடமிருந்தும் யான் துணிந்து எழுதத் தயங்கி விடுத்துளேன். (ii) சுவாமிகளது குலம் யாது என்பது 26-ஆம் பாடலில் 'விடக்கு அன்பாய் நுகர் பாழனை' எனத் தம்மை நொந்து கொள்கின்றனர்; விடக்கு --மாமிசம். இதைக் கொண்டு இவர் புலாலுண்ணும் குலத்தினர் என்னலாமா? கந்தரந்தாதியில் இவரே 'அஜவு அநியாயஞ்செய் வேதி யரே!' (31)- (ஜீவகாருண்யம் இல்லாமல் ஆட்டை வதைத்து யாகஞ் செய்கின்ற மறையோரே") - என வேதியரையுங் கண்டிக்கின்றாரே; இவரா புலாலுண்ணுங் குலத்தவர்.- எனச் சங்கைகள் தோன்றுகின்றன. இனி அருணகிரியார் "சார்வ பௌமடிண்டிம கவி, 'அஷ்ட பாஷா பரமேசுவரர்' என்றும் இவருக்கு 'அண்ணாமலை நாதர்' என்ற பெயரும் உண்டென்றும் இவர் ஊர் முல்லண்டிரம் என்றும், இவற்றின் உண்மை அறிஞர் ஆராய்ச்சிக்கு உரியது என்றும் "சாஸனத் தமிழ்க் கவி சரிதம்" என்ற நூலில் ராவ் சாஹிப் பிரம ஸ்ரீ மு.ராகவ ஐயங்காரவர்கள் எழுதியுள்ளார்கள். அருணகிரியார் நூலில் வடமொழியின் கலப்பு அதிகமாயி ருப்பதால் இவர் அந்தணர் என்னலாம் என்னில் "அபரிமித வித்தைகளும் முருகன் திருவருளால் நிரம்பப்பெற்ற இவரு க்கு வடமொழிப் ப்ரயோகம் தானா அரிது எனவும் தோன்று கின்றது. இங்ஙனம் ஏன் இருட்சூழலில் அலைதல் வேண் டும்? இவர் குலம் யாதாயிருப்பினும் என்? இவர் தவச் செல்வர், மெய்ஞ்ஞானி எனக் கொண்டு 'மெய்ப்பொருள் காண்ப தறிவு' எனத்தேர்ந்து இத்தகைய ஆராய்ச்சி வீண் பொழுதாம் என எண்ணிச் சுவாமிகளின் குலம் தெரிய வில்லை என நூலகத்து எழுதியுள்ளேன்.
சுவாமிகள் யாத்திரை செய்த முறைப்படியே தரிசிக்கப் பட்ட 200 தலங்களின் வரிசையைக் காட்டும் அட்டவணை ஒன்றும், அகராதி முறைப்படி அத்தலங்களின் பெயர்களும், அவ்வத் தலத்துக்கு உரிய யாத்திரை வரிசை எண்ணும், அத்தலத்தைப்பற்றிச் சொல்லப்பட்ட பக்க எண்ணும் காட் டும் பிறிதொரு அட்டவணையும் சேர்க்கப்பட்டுள. நூலகத்து யாத்திரைப் பகுதியில் ஒவ்வொரு தலத்துக்குமுன் இருக்கும் எண் யாத்திரைத் தலவரிசை எண்; பின் இருக்கும் எண் அத்தலத்துக்குரிய திருப்புகழ் எண். திருப்புகழ்ப் பாடல் களின் எண்கள் எல்லாம் எங்கள் பதிப்பின் எண்களாம்.
திருத்தணிகையில் உள்ள திருக்கோலத்தின்படி ஸ்ரீ அரு ணகிரிநாத சுவாமிகளின் திருவுருவப்படமும், அவரது திருப்புகழை அச்சேற்றி உலகுக்கு அளித்த வள்ளல்--எனது தந்தையார் வ.த.சுப்பிரமணிய பிள்ளை (1846-1909) அவர்களது உருவப்படமும் சேர்த்துள்ளேன்.
இந்நூல் வெளிவருவதற்கு உதவின அன்பர்களைக் குறித்து எனது நன்றியைக் கூறுதல் அவசியமாம். அருண கிரியாரின் விரிந்த வரலாறு ஒன்று எழுத வேண்டும் என் னும் எண்ணம் எனக்கு உண்டு என உணர்ந்த ஓர்அன்பர், முருக பக்தர்களுள் முதல் வகுப்பில் முதல் அணியில் கொள்ளத்தக்க பெருமையாளர், பொருள் முட்டுப்பாட்டால் இவ்வரலாற்றை யான் அச்சிடத் தயங்குகின்றேன் எனக் கண்டு, பொருட் கவலையேயிலாத வகைக்கு ஒருவழி காட்டி உதவினர்; ஆயினும் தம் பெயரை வெளியிட வேண்டா மென்று அவர் என்னைத் தடுத்துள்ளார். 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா" என்றபடி பொருள் உள்ள பக்தர் கள் பலர் இருப்பினும் இந் நண்பரின் மாணிக்கமன்ன குண மும் திடபக்தியுமே இந்நூல் அச்சேறுதற்குப் பேருதவியாய் நின்றன. அன்பிற் தலைசிறந்த இவருக்குத் திருத்தணிகை யெம்பெருமான் சகல செல்வயோக மிக்க பெருவாழ்வையும் நோயிலா வாழ்க்கையையும் தந்து அவர் இம் 'மண்ணில் நல்ல வண்ணம்' பல்லாண்டுவாழ அருளுவாராக. இந் நூலை அச்சிடவேண்டும் எனத் தூண்டின பிறிதோரன்பர் என்ஆத்ம நண்பரும் திருவல்லிக்கேணியில் திருப்புகழ்ச் சபை ஒன்றை நிறுவி முப்பது வருஷகாலமாக இடையூ றின்றி ஞாயிற்றுக்கிழமை தோறும் தவறாது திருப்புகழ்ப் பஜனை நடத்தி வருபவருமான "திடவிய நெஞ்சுடை அடி யர்" பிரமஸ்ரீ வெங்கடராவ் அவர்களின் மூத்த குமாரரும், தந்தையைப் போலவே பத்தித் துறையில் இழிந்துள்ள பரம பக்தருமாகிய பிரமஸ்ரீ வேங்கட சுப்பிரமணிய ஐயர வர்கள். இந்த அன்பரின் மூலமாக மற்றுமோரன்பர்-- கவர்ன்மென்ட் செக்ரடேரியட்டில் அசிஸ்டன்ட செகரடரி உத்தியோகம் வகிக்கும் திருவாளர் ராவ் சாஹிப் நல்லூர்-- முருகேச முதலியாரவர்கள் B.A., கிடைத்தனர். இவர் அடக்கமாதிய சகல நற்குணங்களும் வாய்ந்த தவச்செல் வர். இவ்விருவர்களின் அளவற்ற பக்தியும் இந்நூல் வெளிவருவதற்கு உதவியாய் நின்றது. தணிகை நாயக ரின் திருவருளால் இவர்கள் சீரும் சிறப்பும் நோயிலா வாழ்வும் பெற்றுப் பல்லாண்டு பாரிடைப் பொலிவாராக. எங்கள் திருப்புகழ்ப் பதிப்பு -- மூன்று பாகங்களுக்கும் இது ஒரு தொடர்பு நூலாயுள்ள காரணத்தால் இந் நூலைத் 'திருப்புகழ் நாலாம் பாகம்' எனவும் கூறலாம். யான் எழுதியுள்ள இவ்வரலாறு பிழையிலதென்றாவது குறையிலதென்றாவது கூறத்துணிந்திலேன். அருணகிரி யாரின் வரலாற்றை ஒருவகைப்படுத்தி எழுதத்துணிந்த ஒரு முயற்சியின் பயன், ஓராசையின் நிறைவு இந்நூல் என்ற அளவுதான் துணிந்து கூறுவேன். எனது துணி வையும் குறைகளையும் ஆன்றோர் பொறுத்தருள வேண்டும்; ஆண்டவன் க்ஷமித்தருள வேண்டும்.
-
"எமை பணி விதிக்குஞ் சாமி சரவண தகப்பன் சாமி
எனவரு பெருமாளே! புவிதனில் எனக்குண் டாகு
பணிவிடை கணக்குண்டாதல் திருவுளம் அறியாதோ"
(திருப். 1178)
சென்னை,)
2-10-1947. ) வ.சு.செங்கல்வராயப் பிள்ளை
---------------------------------
உ
சிறப்புப் பாயிரவுரை.
எங்கள் பதிப்பு திருப்புகழ் மூன்றாம் பாகத்தில் யான் எழுதியுள்ள ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளின் சரித்திரஆராய்ச்சியைக் கண்டு திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள் 1926-ஆம் வருஷத்தில் எழுதி அனுப்பிய குறிப்பு.
---
உ
சிவமயம்
ஸ்ரீமான் வ.சு. செங்கல்வராய பிள்ளை எம்.ஏ. அவர்கள் எழுதியுள்ள "ஸ்ரீ அருணகிரிநாத ஸ்வாமிகளின் சரித்திர ஆராய்ச்சியை" முற்றும் நன்கு படித்தோம். இவ்வித ஆராய்ச்சியே வேண்டற்பாலது. பலர் பல காரணங்களால் சரித்திரத்தின் உண்மை காணாவாறு அமைத்து வருகிற இக்காலத்தில் தக்க ஆதாரத்தோடு வெளிவரும் இவ்வகை யாராய்ச்சி எல்லாரானும் விரும்பப்படுமென்று எண்ணுகின்றேம். இவ்வாராய்ச்சி யாளரும் இவர் பிதாவும் இவர் உடன்பிறந்தாரும் ஸ்ரீ முருகக் கடவுளிடத்து நிறைந்த பத்தியினர்; திருப்புகழ் முதலிய ஸ்ரீ அருணகிரியார் நூலில் மிக பழக்கமுடையவர்கள். இவ்வாராய்ச்சியாளர் இச்சரிதத்தைத் திருப்பாதிரிப் புலியூர்ப் பிரமோற்சவத்தினங்கமாக நடைபெறும் அவையில் உபந்நியசிக்கவும் கேட்டோம்.
அன்பு ததும்பச் சொல்லும்போது கேட்டார் எவரும் அற்புதமடையக் கண்டோம். சரிதத்தின் ஒவ்வொரு பகுதியும் திருப்புகழ் முதலியவற்றின் ஆதாரங்கொண்டே எழுதப்பட்டிருக்கின்றது. பதினாறாயிரந் திருப்புகழும் கிடைக்குமேல் இன்னும் மிகுந்த சரித்திரப் பகுதி கிடைக்குமே. இவ்வாராய்ச்சியாளர் திருப்புகழை ஆளும் வல்லமை போற்றத்தக்கது; புகழ் இவர்க்கு உரியதே. இதனை வெளிப்படுத்தும் இவர்க்கும் இவரைச் சார்ந்த ஏனையர்க்கும் வள்ளி மணாளன் வகையமை ஞான முதலிய வளன் வழங்க அப்பெருமானது அடிமலரை நினைக்கின்றாம். உலகம் இதனைக்கொண்டு உவக்குக.
-------------
ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் சரித்திர ஆராய்ச்சியிற் கூறியபடி சுவாமிகள் தரிசித்த தலவரிசை
1. தென்திசைப் பயணம் 27 திருக்கடவூர்
2. திருக்கோவலூர் 28 பாகை
3. திருவெண்ணெய் நல்லூர் 29 திருவிடைக்கழி
4. திருநாவலூர் 29A திருப்பறியலூர்
5. திருவாமூர் 30 வழுவூர்
6. வடுகூர் 31 கந்தன்குடி
7. திருத்துறையூர் 32 திலதைப்பதி
8. திருவதிகை 33 அம்பர்
9. திருப்பாதிரிப்புலியூர் 34 அம்பர் (மாகாளம்)
10. திருமாணிகுழி 35 திருநள்ளாறு
11 சிதம்பரம் 36 கன்னபுரம்
12 திருவேட்களம் 36A திருமருகல்
13 நெல்வாயில் சிவபுரி 37 திருச்செங்காட்டங்குடி
14 விருத்தாசலம் (முதுகுன்றம்) 38 திருவிற்குடி
15 கூடலையாற்றூர் 39 விஜயபுரம்
16 எருக்கத்தம் புலியூர்
(யாழ்ப்பாணாயன் பட்டினம்) 40 திருவாரூர்
17 ஸ்ரீ முஷ்ணம் (திருமுட்டம்) 41 சிக்கல்
18 கடம்பூர் 42 நாகபட்டினம்
42A தேவூர்
19 நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாபுரம்) 43 எட்டிகுடி
20 மயேந்திரப்பள்ளி 44 திருவலிவலம்
21 சீகாழி 44A கைச்சினம்
44B தண்டலை நீணெறி
22 கரியவனகர் 45 வேதாரணியம் (திருமறைக்காடு)
23 மண்ணிப்படிக்கரை 46 கோடிக்குழகர் கோயில்
24 வைத்தீசுரன் கோயில் 47 எண்கண்
24A குறுக்கை 48 குடவாயில்
24B திரு அன்னியூர் - பொன்னூர் 49 திருவாஞ்சியம்
25 மாயூரம் 50 திரியம்பகபுரம்
26 தான்தோன்றி ஆக்கூர்
52 திருவீழிமிழலை 77 திருமாந்துறை
53 திருவாவடுதுறை 78 வாலிகண்டபுரம்
54 திருப்பந்தணை நல்லூர் 79 திருநெல்வாயில் அரத் துறை
55 மருத்துவக்குடி 80 வேப்பஞ்சந்தி
56 திருவிடைமருதூர் 81 கொல்லிமலை
57 திரிபுவனம் 82 தீர்த்தகிரி
58 திருப்பனந்தாள் 83 கனகமலை
59 கும்பகோணம் 84 கொங்கணகிரி
60 சோமேச்சுரம் 85 சேலம்
61 பெரியமடம் 86 ராஜபுரம் (ராசீபுரம்)
62 குரங்காடு துறை-தென்-வட 87 திருச்செங்கோடு
63 சிவபுரம் 88 பவானி (திருநணா)
64 கொட்டையூர் 89 பாண்டிக்கொடுமுடி
64-A புறம்பயம் 90 திருப்பராய்த்துறை
65 சத்திமுத்தம் 91 திரிசிராப்பள்ளி
66 பழையாறை 92 வயலூர்
67 திருவலஞ்சுழி 92-A. உறையூர் (மூக்கீச்சுரம்)
68 திருவேரகம்-சுவாமிமலை 93 திருக்கற்குடி
69 காவளூர் 94 திரு ஆனைக்கா
70 தஞ்சை (தஞ்சாவூர் சப்தஸ்தானம்) 95 திருத்தவத்துறை
70-A (ஏழுதிருப்பதி) 96 நெடுங்களம்
71 திருவையாறு 97 அத்திப்பட்டு
71-A கண்டியூர் 98 அத்திக்கரை
72 பெரும்புலியூர் 99 குறட்டி
73 திருப் பூந்துருத்தி 100 கந்தனூர்
74 திருநெய்த்தானம்
75 திருப்பழுவூர்
102 கொடும்பாளூர் 129 பழமுதிர் சோலை (கள்ளழகர் கோயில்)
103 கடம்பந்துறை (குழித்தலை) 129A திருவாதவூர்
104 திருவாட்போக்கிரத்நகிரி 129B திருநெல்வேலி
104 திருவாட்போக்கிரத்நகிரி 130 திருச்செந்தூர்
104-A சிவாயம் 131 ஸ்ரீ புருஷமங்கை (நாங்குனேரி)
105 கருவூர் 132 வள்ளியூர்
105-A தான்தோன்றிமலை 133 அருக்கொணாமலை
106 நெருவூர் 133A கண்டி
107 வெஞ்சமாக்கூடல் 134 திருக்கோணமலை
108 புகழிமலை 135 கதிர்காமம்
108A சென்னிமலை 136 பொதியமலை (பாபநாசம்)
109 விஜயமங்கலம் 137 குற்றாலம்
110 திருமுருகன்பூண்டி 138 இலஞ்சி
111 அவிநாசி 138A திருமலை
112 திருப்புக்கொளியூர் 139 கழுகுமலை
113 குருடிமலை 139A சிவகாசி
114 ஞானமலை 139Bகொடும்பாளூர் (பரமக்குடி சமீபம்)
115 பேரூர் 140 உத்தரகோச மங்கை
116 எழுகரைநாடு 141 ராமேசுரம்
117 தென்சேரிகிரி 141A தநுகோடி
118 பட்டாலி--சிவமலை 142 திரு ஆடானை
119 சிங்கை (காங்கேயம்) 143 ராஜ கெம்பீர வளநாட்டுமலை
120 ஊதிமலை 144 திருப்புத்தூர்
121 கீரனூர் 145 விநாயகமலை
122 ஆய்க்குடி >146 கொடுங்குன்றம்
123 திரு ஆவினன்குடி - பழநி 147 குன்றக்குடி
124 பூம்பறை 148 திருப்பெருந்துறை
125 திருக்குளந்தை (பெரிய குளம்) 148A திருக்களர்
126 தனிச்சயம் 149 பெருங்குடி
126Aதிருவேடகம் 150 இஞ்சிகுடி
127 மதுரை
152 திருநாகேச்சுரம் 174 சிறுவை (சின்னம்பேடு)
153 திருத்துருத்தி (குற்றாலம்) 175 கோசை (கோயம்பேடு)
153a-- திருவண்ணாமலை 176 திருவலிதாயம் (பாடி)
153b வடதிசைப் பயணம் 177 திருமுல்லைவாயில்-வட
153c செஞ்சி 178 திருவேற்காடு
154 திரு ஆமாத்தூர்
179 பாக்கம்
155 திருவக்கரை 180 திருவாலங்காடு (பழையனூர்)
156 மயிலம் 181 முள்வாய்
157 பேறை (பெரும்பேறு) 182 வேப்பூர்
158 இந்தம்பலம் 182A. நிம்பபுரம்
159 செய்யூர் - வளவாபுரி- சேயூர் 183. தேவனூர்
160 மதுராந்தகம் 184. ஒடுக்கத்ருச்செறிவாய்
161 உத்தர மேரூர் 185. வேலூர்
162 திருக்கழுக்குன்றம் 186. விரிஞ்சிபுரம்
163 திருப்பேரூர் 187. திருவல்லம்
163A திருக்கச்சூர் 188. வள்ளிமலை
163B இளையனார் வேலூர் 189. திருத்தணிகை
164 காஞ்சீபுரம் 190. வெள்ளிகரம்
164A குமரகோட்டம் 191. திருவேங்கடம் (திருப்பதி-வடமலை)
164B காமகோட்டம் 192. காளத்தி
164C கச்சிக்கச்சாலை 193. திருமலை (ஸ்ரீ சைலம்)
165 திருவோத்தூர் 194. காசி
166 வாகை 195. மாயாபுரி
167 காமத்தூர் 196. வயிரவிவனம்
168 கோடை நகர் (வல்லக்கோட்டை)
197. கயிலைமலை
169 மாடம்பாக்கம் 197A. ஜகந்நாதம்
170 திருவான்மியூர் 198. விசுவை (விசாகபட்டினம்)
171 மயிலாப்பூர் 199. சோமநாதன் மடம் (திருவண்ணாமலை)
172 திருவொற்றியூர்
இடம் விளங்காதன:-
199A செம்பேடு 199C சிவதைப்பதி
199B *தென்றலை 199D சிறுகூர்
200 ** அமராவதி (கற்பகவூர்) கிளியாயினபின்
*கந்தரந்தாதி-82: [திருப்புகழ் 375
**கந்தரந்தாதி -29; [கந்தரலங்காரம்-87
------------------
அருணகிரியார் தரிசித்த தலங்கள்
அகராதி முறையில் தலத்துக்கு எதிரேயுள்ள எண்களில் முதல் எண் –தரிசித்த வரிசை எண் ;
பிற எண்கள் பக்க எண்கள்
அண்ணாமலை (அருணை பார்க்க) திருஇடைமருதூர் 56,44,70
அத்திக்கரை-98-69 இந்தம்பலம் 158,110 (பார்க்க)
அத்திப்பட்டு 97-69 இராமேசுரம், மேசுரராம் 141
திரு-அதிகை 8-26 இலஞ்சி 138,104
அம்பர் 33-39 இளையனார் வேலூர் 163பி, 112
அம்பர் மாகாளம்,34,39 உத்தரகோசமங்கை 14
அமராவதி-கற்பகவூர் 200-145 உத்தரமேரூர் 161,111
திரு-அரத்துறை (நெல்வாயில்)79,51 உறையூர் 92ஏ,60,61
அருக்கொணாமலை 133,101 ஊதிமலை120,79
அருணை (அண்ணாமலை)1 எட்டிகுடி 43,41,103
அவிநாசி 111,75,20,109,133 எண்கண் 47,42
அன்னியூர் 24பி,36
(பொன்னூர்-மாடம்பாக்கம் பார்க்க) எருக்கத்தம்புலியூர் 16,33
ஆக்கூர்(தான்தோன்றிமடம்) எழுகரைநாடு 116,77
திரு ஆடானை 142,105,26,37 திருஏடகம் 126ஏ,89
ஆண்டார்குப்பம் (தச்சூர்)173,146 திருஏரகம்(சுவாமிமலை) 68,46,107,108
ஆமாத்தூர் 154,109 ஏழுதிருப்பதி 70ஏ,50,70
(சப்தஸாதானம் பார்க்க)
திரு ஆமூர் 5,26
திருஐயாறு 71,50 ஒடுக்கத்துச்செறிவாய்184,119
ஆய்க்குடி 122,79 திருஒற்றியூர்172,116
திரு.ஆரூர் 40,40 திருஓத்தூர் 165,115
திரு ஆலங்காடு(பழையனூர்) 180, 118 கச்சிக்கச்சாலை 164சி
(காஞ்சீபுரம் பார்க்க)
திருஆவடுதுறை53,44 கச்சூர் 163ஏ,112
திரு ஆவினன்குடி, பழநி 123, 79 கடம்பந்துறை 103,73
திரு ஆனைக்கா 94,66 கடம்பூர்18,34
இஞ்சிகுடி 150,107 திருக்கடவூர்27,37
திருஇடைக்கழி 29,37
கண்டி133ஏ,101 குடவாயில்,48, 42
கண்டியூர்71ஏ,50 கும்பகோணம்,59,45,70
கதிர்காமம்135,101 குரங்காடுதுறை, வட-தென் 62,46
கந்தன்குடி31,39 குருடிமலை,113,76
கந்தனூர்100,69 குளந்தை,125,88(பெரியகுளம்)
கயிலைமலை197,131 குற்றாலம்,137, 104
கரியவனகர்22,35 குற்றாலம்,153,108 (திருத்துருத்தி பார்க்க)
கருவூர்105,73 குறட்டி,99,69
திருக்கழுக்குன்றம் 162,111 குறுக்கை24A,36
கழுகுமலை139,104 குன்றக்குடி,147,106
திருக்களர்148ஏ,106 கூடலையாற்றூர்,15,33
கற்குடி93,62 கூந்தலூர்,51,43
கன்னபுரம்36, 40 கைச்சினம்,44A,41
கனகமலை83, 52 கொங்கணகிரி,84,52
காசி194,131 கொட்டையூர்,64,46
காஞ்சிபுரம்164,112 கொடுங்குன்றம்,146,105
குமரகோட்டம்164A கொடும்பாளூர்,102,73,139B,104
காமகோட்டம்164B கொல்லிமலை,81,51
கச்சிக்கச்சாலை164C கோசை,175,117
காமத்தூர்167,115 கோடிக்குழகர்கோயில்,46,42
காவளூர் 69, 49 கோடைநகர்,168,115 (வல்லக்கோட்டை)
காவிரிப்பூம்பட்டினம்,21A,35 திருக்கோணமலை,134,101
காழ ,21,34 திருக்கோவலூர்,2,26
காளத்தி,192, 130 சக்கரப்பள்ளி,151,107
கீரனூர்,121, 79 சத்திமுத்தம்,65,46
சப்தஸ்தானம்,70A,70 தஞ்சை,70,49
சிக்கல்,41,40 தண்டலை நீணெறி,44B,42
சிங்கை,119,79 திருத்தணிகை,189,123,132
சிதம்பரம்,11,27,109 தநுக்கோடி,144A,105,145
சிவகாசி,139A,104 திருத்தவத்துறை,95,69
சிவகிரி,123,79
(ஆவினன்குடி பார்க்க) தனிச்சயம்,126,88
சிவதைப்பதி,199C,133 தான்தோன்றி, 105A, 74
(ஆக்கூர் பார்க்க)
சிவபுரம்63,46 திரிசிராப்பள்ளி, 91, 58
சிவமலை,123,79(சிவகிரி பார்க்க) திரிபுவனம், 57, 45
சிவாயம்,104A,73 திரியம்பகபுரம், 50, 43
சிறுகூர்,199D,133 திருப்பதி (திருவேங்கடம் பார்க்க)
சிறுவை,174,117 திருமலை, 138A, 104, 193, 130
ஸ்ரீசைலம் பார்க்க
சுவாமிமலை,68,64,107,108 (திரு ஏரகம் பார்க்க)
திலதைப்பதி, 32, 39
திருச்செங்காட்டங்குடி,37,40 தீர்த்தகிரி, 82, 52
திருச்செங்கோடு,87,52 திருத்-துருத்தி 153, 108
(குற்றாலம்)
செஞ்சி,153A,109 திருத்துறையூர், 7, 26
திருச்செந்தூர்130,91 திருத்துறையூர், 7, 26
செம்பேடு,199A,133 தென்சேரிகிரி 117, 78
செய்யூர் (சேயூர்பார்க்க) தென்றலை, 199B, 133 (அடிக்குறிப்பு)
சேலம்,85,52 தேவனூர் 183, 119
ஸ்ரீசைலம்,193,130 தேவூர், 42A, 41
சோமநாதன்மடம்,199,133 நல்லூர்ப்பெருமணம், 19, 34
(ஆச்சாபுரம்)
சோமீச்சுரம்,60,45 திருநள்ளாறு, 35, 39
ஞானமலை,114, 76 நாகபட்டினம், 52, 40
தச்சூர்,173, 116 திருநாகேச்சுரம், 152, 108
நாங்குநேரி, 131, 100
(ஸ்ரீ புருஷமங்கை பார்க்க) திருப்பாதிரிப்புலியூர், 9, 27
திரு நாவலூர், 4 26
பிரான்மலை, 146, 105 (கொடுங்குன்றம் பார்க்க)
நிம்பபுரம், 182, 119 (வேப்பூர் பார்க்க) 182A, 119 திருப்புக்கொளியூர், 112, 75
நெடுங்களம், 96, 69 புகழிமலை, 108, 74
நெய்த்தானம், 74, 50 திருப்புத்தூர், 144, 105
நெருவூர், 106, 74 ஸ்ரீபுருஷமங்கை, 131, 100
(நாங்குநேரி)
நெல்வாயில், 79, 51
(அரத்துறை பார்க்க) புறம்பயம், 64ஏ, 46
நெல்வாயில், 13, 31
(சிவபுரி) திருப்பூந்துருத்தி, 73, 50
திருநெல்வேலி, 129B, 91 பூம்பறை, 124, 88
பட்டாலியூர், 118, 78
(சிவமலை) பூவாளூர், 76, 50
பத்தணைநல்லூர், 54, 44, 70 பெரியமடம், 61, 45
திருப்பரங்குன்றம், 128, 90 பெருங்குடி, 149, 106
திருப்பராய்த்துறை, 90, 58 பெரும்புலியூர், 72, 50
பவானி, 88, 58 பேரூர், 115, 77
பேறைநகர், 157, 110
(பெரும்பேறு)
பழநி, 123, 79
(ஆவினன்குடி பார்க்க) பொதியமலை, 136, 103
(பாபநாசம்)
பழமுதிர்ச்சோலை 129, 90 பொன்னூர், 24B, 36
(திரு அன்னியூர் பார்க்க)
பழுவூர், 75, 50 திருப்போரூர் 163, 112
பழையனூர், 180, 118
(திரு ஆலங்காடு பார்க்க) மண்ணிப்படிக்கரை, 23, 35
பழையாறை, 66, 46 மதுராந்தகம், 160, 110
பறியலூர், 29A, 39 மதுரை, 127, 89
திருப்பனந்தாள், 58, 45 மயிலம் 156,110
பாக்கம், 179, 118 மயிலாப்பூர் 171,116
பாகை, 28, 37 மயேந்திரப்பள்ளிஞ 20,34
பாடி, 176, 117
(திருவலிதாயம் பார்க்க) திருமருகல் 36ஏ,40
பாண்டிக்கொடுமுடி, 89, 58 மருத்துவக்குடி 55,44
மாகாளம் 34, 39 (அம்பர் மாகாளம் பார்க்க) வாட்போக்கி 104,73 (ரத்னகிரிபார்க்க)
மாடம்பாக்கம் 169,116 திருவதாவூர் 129ஏ,91
திருமாணிகுழி 10,27 வாலிகண்டபுரம் 78,51
திருமாந்துறை 77,51 திருவான்மியூர் 170,116
மாயாபுரி 195,131 விசயபுரம் 39,40
மாயூரம் 25,37 விசயமங்கலம் 109,75
திருமுட்டம் 17,33 விசுவை 198,132
திருமுருகன்பூண்டி 110,75 விநாயகமலை 145,105
முல்லைவாயில் -வட 177117 விராலிமலை 101,71
முள்வாய் 181,118 விரிஞ்சிபுரம் 186,119
யாழ்ப்பாணாயன்பட்டினம் 16,33 (எருக்கத்தம்புலியூர்) விருத்தாசலம் 14,31,109
ரத்னகிரி 104,73 (வாட்போக்கி) திருவிற்குடி 38,40
ராமேசுரம் 141,105 வீரை 123,79 (ஆவினன்குடி பார்க்க)
ராஜகெம்பீர வளநாட்டுமலை 143,105 வீழிமிழலை 52,43
ராஜபுரம் (ராசீபுரம்) 86,52 வெஞ்சமாக்கடல் 107,74
திருவக்கரை 155,110 திருவெண்ணெய்நல்லூர் 3,26
வடுகூர் 6,26 வெள்ளிகரம் 190,128
வயலூர் 92,59,62,69,107 திருவேங்கடம் 191,129 (வடமலை)
வயிரவிவனம் 196, 131 திருவேட்களம் 12,31
வல்லக்கோட்டை 168,115 (கோடைநகர்பார்க்க) வேதாரணியம் 45,42
திருவல்லம் 187,120 வேப்பஞ்சந்தி 80,51
திதுவலஞ்சுளி 67, 46 வேப்பூர் 182,118 (நிம்பபுரம் பார்க்க)
திருவலிதாயம் 176,117 வேலூர் 185, 119
வலிவலம் 44,41 வேளூர் 24,36 (வைத்தீசுரன்கோயில்)
வழுவூர் 30,39 வேற்காடு 178,118
வள்ளிமலை 188,120 ஜெகந்நாதம் 197ஏ, 132
வள்ளியூர் 132,101 ஸ்ரீசைலம் 193,130
வளவாபுரி 159,110 (சேயூர்பார்க்க) ஸ்ரீபுருஷமங்கை 131,100
வாகை 166,115 ஹரித்துவார் 195,131 (மாயாபுரி பார்க்க)
திருவாஞ்சியம் 49,43
-
உ
திருத்தணிகையிலுள்ள
கணபதி துணை
திருத் தணிகேசர் துணை
அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்
"உனதடி யவர்புகழ் ஆய்ந்த நூலினர்... ...
உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி லுறைவோனே."
திருப். 878
1. வரலாற்றுப்பகுதி
முன்னுரை
திருக்கைவேல் அழகிய பெருமானையே தெய்வமாகக் கொண்டு வழிபட்டுப் பேறுபெற்ற தவராஜ யோகி 'ஸ்ரீ அருணகிரிநாதர்', தமிழிற் சந்தப் பாக்களுக்கு இவரே ஆதிகர்த்தா. இவர் திருவண்ணாமலையில் இருந்தவர் என்பதும், கி.பி.1450 ஆம் ஆண்டில் இருந்த பிரபுடதேவ மாராஜர் காலத்தவர் என்பதும் தவிர, இவரது குலம், இவரது தாய் தந்தையர் இன்னார், இவரது இளமைப் பருவத்து நிகழ்ச்சிகள் இவை எனத் தெளிவுறச் சொல்லக் கூடிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. ஆதலால் இவரது சரித்திர விஷயங்களை எடுத்துச் சொல்லுவதற்குத் தக்க ஆதாரங்களாய் இப்பொழுது உள்ளன இவர் அருளிய திருப்புகழாதிய நூல்களகத்துள்ள சான்றுகளும், இவருக்குப் பின்வந்த பெரியார்கள் இவரைப்பற்றிக் கூறியுள்ள விஷயங்களுமே ஆம். இவைகளைக் கொண்டும், முருகன் திருவருட்டுணைகொண்டும், இப்பொழுது கிடைத்து அச்சிடப்படடுள்ள திருப்புகழ்ப் பாக்கள் இவரது திருவாக்கே எனக் கொண்டும் இவ் வாராய்ச்சி நூல் எழுதப்படுகின்றது.
இவர், இளமையிலேயே தேவாரம், திருமந்திரம் திருமுருகாற்றுப்படை, திருக்குறள், காரிகை ஆகிய தமிழ் நூல்களிற் பழக்கம் உற்றும்[1], உலா, ஏசல், கலம்பகம், கோவை சிந்து, தூது, பரணி, மடல், மாலை எனப்படும் நூல் வகைகளிற் பயின்றும்[1] காம சாஸ்திர நூல்களை ஆய்ந்தும்[2] புலமைவாய்ந்து கவிபாடும் திறம் உடையவராயிருந்தார். இவர் முருகபிரானது பழைய வழியடிமை.[3]
---------
[1]. தேவாரம் ஆதிய நூல்களிற் பழகியுள்ளா ரென்பதற்குச் சான்று:--
(i).தேவாரம்: திரிசிராப்பள்ளி ஸ்ரீ சம்பந்தர் தேவாரம் "நன்றுடையானைத் தீய தில்லானை" என்பதைத் திரிசிராப்பள்ளித் திருப்புகழ் 332, 331-ம் பாடல்களிலும், 'போகமார்த்த பூண் முலையாள்' என்னும் தேவாரப் பதிகம் பச்சையாய் அழலில் வேகாது இருந்த சரிதத்தைத் திருநள்ளாற்றுத் திருப்புகழ் 812-ஆம் பாடலிலும் குறித்துள்ளார். ஸ்ரீ சுந்தரர், மாணிக்கவாசகர் என்பவர்தம் சரித்திர நிகழ்ச்சிகளைப் பல இடங்களில், திருப்புகழ்ப் பாடல்களிற் குறித்துள்ளார்; எங்கள் திருப்புகழ்ப் பதிப்பில் ஆராய்ச்சியிற் பார்க்க. அப்பரைக் குறித்து ஒன்றும் கிடைக்கவில்லை; எனினும் அவர் தமக்கையார் திலகவதியாரைத் திருவாமூர் திருப்புகழிற் (744) குறித்துள்ளார்.
ii) திருமந்திரம்: எங்கள்திருப்புகழ்ப் பதிப்பிற் கந்தலங்காரச் செய்யுள்கள் 6, 55, 67ன் கீழ்க் குறிப்புகளைப் பார்க்க. யான் எழுதியுள்ள "அருணகிரிநாதரும் திருமூல நாதரும் என்னும் நூலகத்தும் பார்க்கலாம்.
iii) திருமுருகாற்றுப்படை: "உலகம் உவப்ப" என்று நக்கீரருக்கு முருகவேள் அடி எடுத்துக்கொடுத்த அரிய விஷயத்தைத் தமது திருப்புகழில் (203-கடிமாமலர்) சுவாமிகள் கூறியுள்ளார்; 'அந்தணர் வெறுக்கை, எனத் தீருமுருகாற்றுப்படையில் வருவதை "வேதியர் வெறுக்கை" என வேளைக்காரன் வகுப்பில் எடுத்தாண்டுள்ளார். முருகவேளின் திருப்புயங்களின் செயல்களை நக்கீரர் திருமுருகாற்றுப்படையிற் கூறியவாறே அதற்கோர் விளக்கவுரைபோலத் தாம் பாடிய புய வகுப்பில் சுவாமிகள் விவகரித்துள்ளார். பின்னும் நக்கீரரைப்பற்றியும், திருமுருகாற்றுப்படையின் பெருமையைக் குறித்தும் பல இடங்களில் திருப்புகழிலும், கந்தரந்தாதியிலும், திருவகுப்பிலும் சுவாமிகள் சொல்லியுள்ளார். அவை ஆங்காங்குப் பின்னர் குறிக்கப்படும்.
(iv) திருக்குறள்: திருக்குறள், திருவள்ளுவரைப்பற்றித் திருப்புகழ்ப் பாக்கள் 80 (படர்புவி), 156 (அகல்வினை) பாக்களைப் பார்க்கவும்
(v) காரிகை: திருப்.500 (உரைக்காரிகை) பார்க்கவும்.
1.உலா முதலிய நூல் வகைகளைப் பற்றித் திருப்புகழ் 75 (தோலோடு), 90 (படர்புவி) பார்க்கவும்.
2. "காம சாதிதிர வாய்பா டேணிகள்" --திருப்.924
3. "பழைய நினது வழியடிமை" --திருப் 1127. (அகர). 'என்றனை வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் பெருமாளே' - -திருப்.358 (கரதல) 'முடியவழி வழியடிமை எனும் உரிமை' (சீர்பாத வகுப்பு).
4) 1. காமுகன் அகப்பட்ட ஆசை --திருப். 426
2. காமுக னாயுறு ஜாதக மாப் பாதகனாம் அடியேனையின் அருளாலே பார்ப்பாயலையோ --திருப்.685
3. மடவார் பால் ஏகாப்பழி பூணும் மருள் --திருப்.360
4. பரத்தையர் மோகப்புழுத் தொளையில் திளைத்ததனைப் பொறுத்தருளிச், சடக்கென அப்புறத்தில் அழைத்து இருத்தியளித் திடுவாயே. --திருப்.1023
5. மாதர் இருவிழியாரும் அம்புக்கும் மதனவேள் வாளிக்கும், நடுவாகிய மாலாகும் அருணகிரிநாதர். [விரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்]
-------------
விதிவசத்தால் பரத்தையர் மயக்கிற்பட்டு4, உள்ள பொருளெலாம் இழந்து, பின்னும் வேசையர்க்கு உதவப் 'புயவகுப்பில்' சுவாமிகள் விவரித்துள்ளார். பின்னும் நக்கீரரைப்பற்றியும், திருமுருகாற்றுப்படையின் பெருமையைக் குறித்தும் பல இடங்களில் திருப்புகழிலும்,கந்தரந்தாதியிலும், திருவகுப்பிலும் சுவாமிகள் சொல்லியுள்ளார். அவை ஆங்காங்குப் பின்னர்க் குறிக்கப்படும்.
பொருளுள்ளவரைத் தேடி, அவரைப் [*]பலவாறாகப் புகழ்ந்து பாடிப் பொருள்பெற்று அப்பொருள்களையும் வேசையார்க்கே ஒழித்தனர். பினனர், வறுமையும் பொல்லாப் பிணிகளும் இவரைத் தொடர்ந்து ஒடுக்கின. தன் நிலையை உணர்ந்து மிக வெட்க மடைந்தனர்.[**]
-----------------
[*] 1.மோக மாயையில் விழுந்து தணியாமல்
பெருகியொரு காசே கொடாதவரை ஐந்து
தருவை நிகரே யாக வேயெதிர்பு கழ்ந்து
பெரியதமி ழேபாடி நாடொறு மிரந்து***
[உழன்று திரிவேனோ திருப் 146
2. இயல்வாணர் தெரியும் அருமைப் பழைய
மொழியைத் திருடி நெருடிக் கவிபாடித் திரியும் மருள் [திருப் 290
3. அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிக ளாக்கிப் புகழ்ந்து,
அவரை வாழ்த் தித்திரிந்து பொருள்தேடி தெரிவைமார்க்குச் சொரிந்து
அவமே யான் திரியு மார்க்கத்து நிந்தை யதனை மாற்றிப் பரிந்து
தெளிய மோக்ஷத்தை யென்று அருள்வாயே. [திருப் 494
4. சிதரா சித்ரவித் தாரமே செப்பிடக் கேளெனா
நிற்பதைத் தவிர்வேனோ. - திருப்.1108
[**] 1. மிடியால் மயக்கம் உறுவேனோ - திருப் 214
2. வறுமையாகிய தீயின்மேற் கிடந்து, நெளியுநீள்
புழுவாயி னேற் கிரங்கி யருள் வாயே. திருப் 753
3. வேசையர் மயல் மேலாய் வெடுக்கெடுத்து மகா
பிணிமேலிட முடக்கி வெட்கு மதாமத வீணனை --திருப் 850
இவரது நிலையையும் இவர் முன் செய்துள்ள பெருந்தபோ பலத்தையும் உணர்ந்த அருணாசலேசுரரே எனத் தோற்றிய தவப் பெரியார் ஒருவர் இவர்முன் தோன்றி மிக்க அன்புடனும் இனிய வசனத்துடனும், "அன்ப! நீ தவ நிலையில் இருந்து ஆறுமுகக்கடவுளை இடைவிடாது தியானிப்பாயாக"-என உபதேசித்துச் சென்றனர். அவ்வுபதேச மொழியைப் பின்பற்றாது சிலகாலம் இவர் வீணாக்கினார். "பெரியார் உபதேசித்தும் இப்பிள்ளை நல்வழியைப் பற்ற இல்லையே"- என இனத்தாரும் ஊராரும்[*] ஏசியும், பேசியும் வருந்தினர்.
-
[*] 1. "மனையவள் நகைக்க ஊரின் அனைவரும் நகைக்க***
அடியேனை அனைவரும் இழிப்ப" --திருப். 392
2. "மால்கொடு தந்தவாய் நீர் குடித்து, நாயென முடக்கு மேல்பிணி யடுத்து,
உபாதைகள் படுத்த, தாய்தமர் குலத்தர் யாவரும் நகைக்கவே, உடல் மங்குவேளை"
--திருப். 443
3. "அமுத மொழிகொடு தவநிலை யருளிய,
பெரிய குணதரர் உரைசெய்த மொழிவகை,
அடைவு நடைபடி பயிலவும் முயலவும் அறியாத,
அசடன், அறிவிலி, இழிகுலன் இவனென இனமும்,
மனிதருள் அனைவரும் உரைசெய் அடியன் இதுபட அரிது" --திருப்.1006
[பெரிய குணதரர் என்றது அருணாசலேசுரரையும் இருக்கலாம். சிவபிரானை இவர் 'பெரியர்' என்றே அழைப்பர்.
'திரிசிர குன்றில் தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ!" -- திருப் 342 என வருவதைக்காண்க.---------------------
2. உயிரை மாய்க்கக் கருதியது.
இங்ஙனம் சிலகாலம் செல்ல, இவர் முருகவேளுக்கு வழி வழி யடிமையாதலால் முன் செய்த புண்ணியம் கை கூடும் வேளைவந்தது.; உடனே, இவரது மனநிலையும் மாறுதல் அடைந்தது. தமது தவறுகளை எல்லாம் நினைந்து நினைந்து வருந்தலாயினர் 'அந்தோ! பெரியார் கூறிய நன்னெறியைப் பயில முயலாது வீணே காலங் கழித்தேனே' - என மனம் நைந்தனர். காமுகனாய் அலையும் ஜாதகம் போலும் என் ஜாதகம்- என உளம் புழுங்கினர். "ஏழைத்தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பனைப் பணியாதே" என மணிவாசகப் பெருமான் புலம்பியவாறு தாமும் புலம்பிக் "கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ!" (கந்.அநு.24) என்றும், "சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரந்தருவாய்" (கந்.அநு.34) என்றும் முருகவேளைப் பலவாறு வேண்டித் திருவண்ணாமலையிற் பெரிய கோபுரத்து வடவாயிலில்[1] தவ நிலையில் அமர்ந்து, ஆறுமுகங்களையும் மொழிந்து மொழிந்து தியானித்தனர்.
அங்ஙனம் பலநாள் தவங்கிடந்தும் மூவாசைகளும் நீர்ப்பாசிபோல விலகுவதும் பின் கூடுவதுமாக இருந்தன. இதைக்கண்ட அருணகிரியார், "என்னே! மாயையின் வன்மை!
-
'மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகமாடை மடந்தைய ரென்றயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே' -- கந்.அநு.5
-- எனப் பிரமித்துப், 'படுவன பலவுங் குற்றம்..... கெடுவதிப் பிறவி சீ சீ' [IV-76-10] என அப்பர் சுவாமிகள் கூறியவாறு தாமும் தமது பிறவியை [2] வெறுத்து, மாயையில் வீழ்த்தனையே! முருகா! நான் ஏது பிழை செய்தேன் என ஏங்கிக் கவலுற்றுத் தமது உயிரை விடுவதே உத்தமம் எனத் துணிந்தனர்[3]. அருணைத் திருக் கோயிலின் கோபுரத்திலேறித் தமது உயிரை மாய்க்கக் குறித்தனர்.
----------------
1.1. "அடலருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகிற் சென்று கண்டுகொண்டேன்
** களிற்றுக்கு இளைய களிற்றினையே" --கந்.அலங்.காப்பு
1. 2. "ஆடக விசித்ர கன கோபுர முகப்பில் அருணாபுரியில்
நிற்கும் அடையாளக்காரனும்"- வேளைக்காரன் வகுப்பு
1.3. "அருணை யிறைவர் பெரிய கோபுரத்தில் வடபால
மர்ந்த அறுமுகப்பெருமாளே" -- திருப். 540
1. 4."அருணகிரிநாதர் அருணைச் சிகரி வடவாசலிற் பயில"
--விரிஞ்சை. பிள்ளைத் தமிழ்.
2. பாழ்வாழ் வெனுமிப் படுமாயையிலே வீழ்வாயென என்னை விதித்தனையே,
தாழ்வானவை செய்தன தா முளவா? --கந்.அநு. 31
3. 1. சடத்தில் நின்றுயிரான துறத்தற்கு ---திருப்.394
3.2.அகமதை எடுத்த சேமம் இதுவோ என் றடியனு
நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போதும். --திருப். 392
3.3. வரவர மனத் திகைத்த பாவி. --திருப்.181
3.4. உருளவெற்பேறும் அருணகிரி-மாம்பழக் கவிச் சிங்கம் --பழனாபுரி மாலை
-------------------
3. அருள் பெற்றதும் சிததந் தெளிந்ததும்
'மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாள்' தமது வழியடிமை இங்ஙனம் உயிர் துறத்தலைச் சகிப்பரோ! முகமாறும் மொழிந்தது வீண் போமோ? தமது இரண்டாவது கண்ணையும் கண்ணப்பர் பேர்க்க முயன்றபொழுது தரிக்கலாற்றாது எங்ஙனம் சிவபிரான் 'நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!" என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப! எனக் கூறிக் கண்ணப்பர் கரத்தைத் தமது கையாற் பிடித்துத் தடுத்து நிறுத்தினரோ அங்ஙனமே சிவகுமாரரும் [1]எதிர்தோன்றி, 'முடிய வழிவழியடிமை' எனும் உரிமைபெற்ற தமது அன்பருக்கு யாதொரு ஊறும் வாராத வண்ணம் அவரைத் தமது திருக்கரத்தாற் பிடித்துத் தாங்கி, அஞ்சற்க என அபயம் அளித்து மண் மிசை நிறுத்திக் காத்தனர். அடியவர் கூட்டம் தம்மைச் சூழவும்[2], வேதஒலி பக்கலில் முழக்கவும்[3], மயில்மிசைத் தமது நடன கோலத்தைக் காட்டி[4], யருளினர்.
-------
[1.1[.'அடியன் இடஞ்சற் பொடிபட முன்புற்று' --திருப்.585
[1.2]. 'தோதிமி தித்தித் தனத்த தந்தவெ னிசையோடே
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயிரான துறத்தற்
கிரக்க முஞ்சுப சோபன முய்க்கக்
கருத்தும் வந்தருள் புரிவோனே' --திருப்.394
[1.3].அகமதை எடுத்த சேமம் இதுவோஎன் றடியனு
நினைத்து நாளும், உடலுயிர் விடுத்த போதும் அணுகி -திருப்.392
[2]. கருணை யடியரொ டருணையில் ஒருவிசை
வரு....மலரடி மறவேனே. --திருப்.509
[3]. 'சுருதிபுடைதர வரு...மலரடி மறவேனே' திருப்.509
[4.1] ' மயிலேறி .. வரும்...இருமலர் சரணமும் மறவேனே' --திருப் 113
[4.2]. 'அடியன்...முன்புற்று ** மயில் மிசை நடித்து **
அழல்கிரி பதிக்குள் மருவிய பெருமாளே' - திருப். 585
[4.3]. 'தலைநாளில் ** அன்பொடு கதிர் தோகைப்பரி மேற்
கொளுஞ் செயல் மறவேனே' --திருப். 814.
[4.4]. 'பச்சைப் புரவியி னுலவு மெய்ப் ப்ரத்யக்ஷ --திருப். 550
திருமூலருக்கு 'நாதன்' என்னும் பட்டத்தைச் சிவபிரான் அளித்தது போலத் தாமும் அருணகிரியார்க்கு நாதன் என்னும் பட்டத்தை[a] யளித்து 'அருணகிரிநாத' - எனப் பெயரிட் டழைத்தனர். இவ்வன்பு "திருநாவுக்கரசு" "மாணிக்கவாசக", எனச் சிவபிரான் தமக்கு உகந்த அன்பர்களுக்குப் பெயரிட்டழைத்ததை ஒக்குமல்லவா? அங்ஙனம் அழைத்து[b] இளநகையுடன் கண்ணோக்கம் (சக்ஷு தீக்ஷை)[c] செய்தனர். திருவடி தீக்ஷையும்[d] செய்தனர்.
----
[a] 'அருணகிரி நாத எனும் அப்பனே போற்றி' -திருப். 827
[நாதன் என்னும் பட்டத்தைக் குறித்து யான் எழுதிய 'திருமூலநாதரும் அருணகிரிநாதரும்' என்னும் நூலைப்பார்க்க]
[b1]. இளநகை பரப்பி...மருவிய பெருமாளே --திருப். 585
[b 2]. சவுந்தரிகமுக...வருமுக நகையொளி --திருப். 113
[c1]. தழைந்த நயனமும் இருமலர் சரணமும் மறவேனே -திருப். 113
[c2]. பரசுதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே -திருப். 151
[c3]. நாளவ மிகையற விழியருள் தந்த பேரருள்
கனவிலு நனவிலு மறவேனே -திருப். 773
[c4]. ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கியது
பூதியடைவித்த தொரு பார்வைக்காரனும் -வேளைக்காரன் வகுப்பு
[d1]. 'அணுகி முன் அளித்த பாதம்' -திருப். 392
[d2]. 'தலைநாளிற் பதமேந்தி அன்புற' -திருப். 814
[d3. 'அருணை நகர்மிசை கருணையொ டருளிய இரு சரணமும் ** மறவேனே'
-திருப். 513,515
[d4. 'பதயுகமலர் தந்த பேரருள் கனவிலும் நனவிலும்
மறவேனே --திருப். 289
[d5]. 'அடியேனுக்கு அருள்பாலிக்குஞ் சுடர் பாதக் குகனே --திருப். 633
-----------------------------------------------------------
வேல்கொண்டு அருணகிரியார் நாவில் தமது ஆறெழுத்தைப் பொறித்து அவரது வினையை ஓட்டி முத்தமிழை ஊட்டினர் [1]. ஜெபமாலை ஒன்றை அளித்தார்[2] அவரது மலம், மாயை இடராயவற்றை ஒழித்தார்[3] ‘சும்மா இரு, சொல்லற’ என்னும் மௌனோபதேசத்தையும் [4] யோக மார்க்கங்களையும்[5] மெய்ஞ்ஞான உபதேசங்கள்[6] பலவற்றையும் உபதேசித்து 'எட்டிரண்டு' இன்னதென விளக்கமுறத் தேற்றிச்[7] சித்தத்தை தெளிவித்தார்[8].
----------------------------------------------
[1.1]. ‘அடியனிடஞ்சற் பொடிபட முன்புற்று அருளில் தொடுத்து’ -திருப். 585
[1.2]. ‘அடியேன் இருவினை தூள்படவே அயில் ஏவிய.....
மயில் வாகன’ -திருப். 725
[1. 3]. அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி அன்பொடு -திருப். 814
[1.4]. வினையோடவிடுங் கதிர்வேல் மறவே -கந். அநு. 40
[1.5]. ‘பூதலமும் எங்கிளையும் ஈடேற நாவிற் பொறித்து’ -விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ்
[1.6]. ‘அமுதால் உலகோர் இடர்நீக்கப் பாட்டு மிக ஓதமுன்
நாள் ஒருநேயன் உள்நாக்கில் தீட்டும் வடிவேல்’ -விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ்
[1.7]. ‘ஆசிலாப், பாவி லருணகிரிப் பைந்தமிழின் மாரி
பெய்ய நாவிற் றிருப்பெயரை நட்டோனை’ -இலஞ்சி முருகனுலா
[2]. ‘ஜெபமாலை தந்த சற்குரு நாதா’ -திருப். 106
[3] ‘விடியாமல மாயைகளாம் இருள் தீர்த்துத் தீர்த்து’ -விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ்
வாதனை தவிர்த்த குருநாதனும் குறத்திதிரு வேளைக்
காரனே -வேளைக்காரன் வகுப்பு
[4.1]. ‘முருகன் சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அரிந்திலனே’ -கந். அநு. 12
[4.2]. ‘அருணை நகர்மிசை கருணையொ டருளிய
மவுன வசனமும்...மறவேனே’ -திருப். 515
[4.3]. ‘அருனை நகர்மிசை கருணையொ டருளிய
பரம ஒருவசனமும்...மறவேனே’ -திருப். 513
[5] “யோகத்தா றுபதேசத் தேசிக” திருப். 68
[6.1]. துர்க்குணம் வேறாக...ஞான உபதேசம்...பேசு சற்
குருநாதா. -திருப். 950
[6.2]. ஈடேற ஞானமுரைத் தருள்வோனே -திருப். 1285
[6.3] . மருவி நாயெனை யடிமை யாமென மகிழ்மெய் ஞானமும் அருள்வோனே' - திருப். 637
[7 .1] . 'எட்டிரண்டும் அறியாத என்செவியில், எட்டிரண்டும்
இதுவா மிலிங்கமென, எட்டிரண்டும் வெளியா
மொழிந்த குரு முருகோனே!' - திருப். 612
[7. 2] . எட்ட மெழுத்து ஏழையேர்க்குப் பகர்ந்த முத்தா!
- திருப். 737
[8] . அருணையிர் சித்தித் தெனக்குத் தெளிவருள் பெரு
மாளே! - திருப். 550
-----------------------------------------------------------
4 . திருப்புகழின் முதற் சந்தம் முருகபிரான் எடுத்து கொடுத்தது
தமது தந்தையார் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு "அருச்சனை பாட்டே யாகும்" எனக் கூறியது போல முருகவேளும் அருணகியாரை நோக்கி 'நமது பாதமலரைப் பாடுக'[1] எனக்கட்டளை யிட்டார். அருணகிரியாரும் 'முருக! அடியேன் எவ்வண்ணம் நினது புகழைப் பாடுவேன்' என மயங்கி கேட்க சுவாமி இவ்வண்ணம் பாடுக என்று, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குச் சிவபிரான் அடி எடுத்துக் கொடுத்தது போல, 'முத்தைத்தரு பத்தித் திருநகை' என வண்ணப்பாவாகவே அடி எடுத்துத் தந்து மறைந்தார். முருகன் திருவருளையே துணையாகக் கொண்டு அருணகிரியாரும் முத்தைத்தரு"[2] என்னும் சந்தப்பாவை முடித்து பேருவுகை கொண்டார்.
-----------------------------------------------------
[1 .1] . "நம் பாதமலர் பாடு நீ என்ன - அடியேனும் எப்படி பாட
என்ற அளவில் பத்திதரு முத்திநகை யத்தியிறைவா- எனப் பாடென்று சொல்லி"
-விரிஞ்சை பிள்ளைத் தமிழ்
[1.2] . குருவாக வந்தருண கிரியைத் திருப்புகழ்க் கூறென
முதற் சந்தமும் திருவாய் மலர்ந்துரைசெய் குமரகுருநாதனே'
-விரிஞ்சை பிள்ளைத் தமிழ்
[1.3] . அருணகிரி நாதரை ** கவிசொலென்றே அடியெடுத்துக்
கொடுத்தவன் கனிவாயின் முத்த மருளே'
-- க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ்
----------------------------------------------------
[2] இப்பதிகத்துக்கு "முத்தித்தரு பத்தித்திருநகை, அத்திக்கறை சத்திச் சரவண, முத்திக்கொரு வித்துக்குரு பர-என ஓதும்-முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்திடு பொருள்!" என்றும் பாடபேதம் உண்டு. இங்கே 'பொருள்' என்பது விளி. பரமற்குக் கற்பிதிட்டு பொருளே! பச்சைப்புயல் மெச்சதகு பொருளே! நீ ரக்ஷிதருள்வதும் ஒருநாளே'--எனப் பொருள் கொள்ள வேண்டும். இப்பதிகக் கருத்தை 'முத்து நவ ரத்ன' என்னும் 971 -ஆம் பதிகத்திலும் காண்க. 'முத்தித்தரு பத்தித் திருநகை அத்தி' எனவும் பாடம். 'பத்திதரு முத்திநகை யத்தி யிறைவா' எனும் விரிஞ்சைப் பிள்ளைத்தமிழும், 'முத்தித் திருவென்னும் முன் பதினாயிரமாம் பத்தித் திருப்புகழைப் பாடுங்காண்' - எனவரும் தணிகை யுலாவும் ஈண்டு கவனிக்கற்பாலன. தேவசேனை முத்தித்திருமாது என்பதற்கு 'அமுதத் தெய்வானை திரு முத்திமாது, 'ஆரியகேவலி' எனவரும் திருப்புகழ்(764 ), (918 ), ஆதாரமாகும்.
-----------------------------------------------------------
5 . பெற்ற பேற்றினை நினைத்து மகிழ்தலும் பிற பேறுகளும்
நல்லுபதேசமும் அருள்வாக்கும் பெற்ற அருணகிரிநாதர் பெறற்கரிய பேற்றைத் தாம் பெற்றதை நினைத்து நினைத்து மகிழ்ந்தார். கண்பெற்ற குருடன் போலவும், காற்றிற் கலங்கிய கலத்தினர் கரைகண்டது போலவும் பேரானந்தங் கொண்டார்; பாடினார், ஆடினார், பரவினார், பணிந்தார். பிணியெல்லாம் நீங்கினவராய், முத்தமிழாதிய கலைவள்ளவராய், யோகீசுரறாய், மெய்ஞ்ஞானியராய், அகில சத்தியும் எட்டுறு சித்தியும் வாய்ந்தவராய்ப் பத்திக்கடலில் திளைத்துப் பரவசம் உற்றனர். தமக்குப் குருவாய் வந்த கோபுரத் திளையனார் சந்நிதியிலேயே தவநிலையிருந்து வந்தனர். சந்தப்பாக்களையும் நிஷ்டை கலைந்த வேளைகளிற் பாடி வந்தனர். அங்ஙனம் தவநிலையிலிருந்த பொழுது அருணாசலேசுரரும் இவர் தவ நிலைக்கு உகந்து இவர்முன் தோன்றித் திருநீறு அளித்து "நின் துயர் ஒழிக" என அநுக்கிரகித்தனர்[1]. தேவி உண்ணாமுலை யம்மையும் 'நின்பிறப் பொழிக' என ஆசிகூறி ஆணவம், மயக்கம், காமியம் என்னும் தடைகளை அகற்றி அருளினன்[2]. வள்ளியம்மையாரும் இவரது மலங்கள் பறந்தோட அஞ்சலெனக் கூறித் திருக்கரத்தால் இவர் சிரசைத் தீண்டி ஸ்பரிச தீக்ஷை செய்தனர். [3]. இங்ஙனம் தவராஜ யோகியாய், மெயஞ்ஞான மூர்த்தியாய் நமது சுவாமிகள் விளக்கமுற்றுப் பொலிந்தனர்.
-------
[1.1]. 'கமழ்மா இதழ் சடையார், அடியேன் துயர்தீர்ந்திட,
வெண்தழல் மாபொடி அருள்வோர்' -திருப்.568
[1.2]. 'எனை யடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர். --திருப். 856
[1.3]. 'எந்த னாவிக்குதவு சந்த்ர சேர்வைச் சடையர்' திருப். 901
[1.4]. 'அமுதமதை யருளி எமையாளும் எந்தை' --திருப். 211
[2.1] 'ஆணவ மயக்கமுங் க(ல்)லி, காமியம் அகற்றி,
என்றனை ஆள் உமை பரத்தி' -திருப். 647
[2.2]. 'என் மாசுரேர் எழுபிறப்பையும் அறுத்த உமை' -திருப். 439
[2.3]. 'எனையருள் வைத்திட் டாண்ட நாயகி' -திருப். 482
[3.1] கடையேன் இருவினை நோய்மலம் மாண்டிட தீண்டிய
ஒண்க கமோகினி வளி நாயகி --திருப். 568
[3.2]. இடர் கலிகள் பிணியோட எனையுமருள் குறமாது --திருப். 643
[3.3]. என்ற னுளம்புகு பாங்கிமான் -திருப். 767
----------------
6. பேறடைந்த பின்பு அருணையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்
இங்ஙனம் இறைவரது திருவருட் ப்ரவாகத்தால் அருணகிரியார் பேறுகளையும் பெற்றவராயினர். அறிவு நெறியிற் சேரப் பெற்றார்[1]. ஞானத்தையும் அபரிமித வித்தைகளையும் இமைப்பொழுதில் அறியப் பெற்றார்[2], சுக ஞானக் கடலில் மூழ்கப் பெற்றார்[3], தவ ஞானக் கடலில் ஆடப் பெற்றார்[4]. சிவச்சுடர் மனத்தினில் அழுந்த உரைசெயப் பெற்றார்[5]. சிவப் பேபுற்றினுக்கு உரியரானார்[6]. யாருக்கும் எட்டாத பொருளை உபதேசிக்கப் பெற்றார்[7]. பிரமஞான நிலையைப் பெற்றார்[8]. திருவடி தீக்ஷையால் யோகாநுபூதியையும்[9] மோன நிலையையும்
பெற்றார்[10]. மனோலயம் பெற்றார்[11]. கர்ணாமிர்தப் பதத்தைப் பெற்றார்[12].
-------
[1]. 'அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல
அடியவர்க்கு நல்ல பெருமாளே' -திருப். 12
[2]. 'அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்,
அறியென இமைப்பொழுதில் வாழ்வித்த வேதியனும்' -வுடிச்சி காவலன் வகுப்பு.
[3]. "சுக ஞானக் கடல் மூழ்கத்தந்து, அடியேனுக்கு அருள்
பாலிக்குஞ் சுடர் பாதக் குகனே" -திருப். 633
[4]. "அன்புற உபதேசப் பொருள் ஊட்டி மந்திர தவ ஞானக்
கடல் ஆட்டி என்றனை" -திருப். 814
[5]. 'தழைந்த சிவசுடர் தனையென மனதினில், அழுந்த உரை
செய வருமுக நகையொளி' -திருப். 113
[6]. "சிவப்பேறுக்குக் கடையேன் வந்துட் புகச் சீர்வைத்து" திருப். 587
[7a] 'சந்தியாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமும் இதுவென உரை செய்து' -திருப்.289
[7b] 'பரம மாயையின் நேர்மையை யாவரும்
அறிவொ ணாததை நீ குரு வாயிது, பகருமாறு
செய் தாய்முதல் நாளுறு பயனோதான்' -திருப்841
[8] ' அணுவி லணுவென நிறைந்திட்டு நின்றதொரு சம்ப்ரதாயம்
உதயமெழ... உணரும் அநுபவம் மனம்பெற் றிடும்
படியை வந்து நீ முன் உதவ' --திருப். 157
[9a] 'எனைமனம் உருக்கி யோக அநுபூதி யளித்த பாத!' -திருப்.392
[9b] 'தலைதாளிற் பதமேத்தி...சோதிக் கதிர் காட்டி...விதி
தாவி முன்பதி வெளியாகப் புக ஏற்றி' -திருப்.814
[10]. 'அரிய மோன வழி திறந்த நளினபாதம் எனது சிந்தை
அகலாதே' -திருப் 731
[11]. "மாயாதீத மனோலயத்தரு நாதா" --திருப்.705
[12]. 'எனக்குநல் கர்ணாமிர்தப் பதந் தந்த கோவே' -திருப்.908
-----------------------------------------------------------
தாம் பெற்ற ஞானநிலையின் பெருமையை வியப்பார்[1]. பாடுக நீ எனத் தமக்குக் கட்டளையிட்டும், மலங்களைக் களைந்தும், தாம்பாடிய பாடல்களை மெச்சியும் உயர்ந்த பேற்றினைத் தமக்கு அளித்தருளிய முருகவேளின் கருணையை வியப்பார்[2]. தாம்பெற்ற உபதேசச் சிறப்பால் மரணப் ப்ரமாதமும் ஒழிந்தது என மகிழ்வார்[3]. மடவார்பால் தமக்கிருந்த மயக்கு தொலைந்ததே, வீடுபேறு கைவந்ததே - என நன்றி பாராட்டுவார்[4]. ஊனக் கண்கொண்டு பெண்முகம் பார்த்து மகிழ்ந்த இப்பேதைக்கு ஞானக் கண்கொண்டு நின் ஷண்முகம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது என்ன தவப்பேறு என வியப்பார்[5]. 'காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத்தவ மெய்தியவா!' - (கந்தர் அநு.22) எனக் களிப்பார். 'அமரும் பதிகேள் அகமா மெனுமிப் பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா!' - (கந்தர் அநு. 8) எனத்தாம் பெற்ற உபதேசத்தின் ஆற்றலை அநுபவித்து உவகை கொள்வார்.
--------
[1] கரணமு மொழியத் தந்த ஞான மிகுந்த வாறென்! -திருப்.960
[2a] எமது மலத்தைக் களைந்து, பாடென அருள, அதற்குப் புகழ்ந்து பாடிய
இயல்கவி மெச்சிட்டுயர்ந்த பேறருள் முருகோனே! --திருப்.792
[2b] முன் அருணை நாடதில் ஓது திருப்புகழ் -திருப்.890
[2c] குமர! மேன்மைத் திருப்புகழை ஓதற்கெனக் கருள்வோனே. --திருப்.425
[3a] 'கரண மாய்த்தெனை மரண மாற்றிய
கருணை வார்த்தை யிருந்த வாறென்' -திருப்.1061
[3b] மரணப் ப்ரமாதம் நமக்கில்லையாம் --கந்.அலங்.21
[4a] கபடிகள் இடையினும் நடையினும் அவமே யான்
மயக்கமாய்ப் பொருள் வரும்வகை க்ருஷிபணு
தடத்து மோக்ஷம தருளிய பலமலர் - மணத்த
வார்க்கழல் கனவிலு நனவிலு மறவேனே-திருப்.344
[4b] மடவார்பால் ஏகாப்பழி பூணு மருளற
நீ தொற்றி முன்னாளு மடிமையை, யீடேற்றுத
லாலுன் வலிமையை மறவேனே. -திருப்.360
[4c] காமுக னகப்பட்ட ஆசையை மறப்பித்த
கால்களை மறக்கைக்கும் வருமோதான் -திருப்426
5. நுகப்பில் நகையில் முலையில் நுதலில் பொட்டில் விலைமாதர்,
மொழியில் அன்ன நடையில், கண்ணின் இணையில்
கனி வாயில் கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முக
நினைக்க வைத்த கன்மவசம் எப்படிக்கு மறவேனே. -திருப்.1189
-----------------------------------------------------------
அரிய மெய்ப்பொருளைப்பெற அடியேனை ஓர் உரியவனாக நினைத்து உபதேசித்த கருணையை என்னென்று கூறுவேன், (அரிதாகிய மெய்ப் பொருளுக் கடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா! கந்தர் அநு. 20)- என வியப்பார். வீண் டம்பக்காரனும், ஒன்றும் உணராதவனும், மிகப் பொல்லானுமாகிய என்னை ஆண்ட கருணையை எங்ஙனம் எடுத்து ஓதுவேன் (ஆதாளியை ஒன்றறியேனை யறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ? -கந்தர் அநு. 38) - என பிரமிப்பார். 'பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத என்னைப் ப்ரபஞ்சமென்னுஞ் சேற்றைக் கழிய வழி விட்டவா!' - 'சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்து சும்மா இருக்கும் எல்லையிற் செல்ல வழி விட்டவா!' - (கந்தர் அநலங்காரம் 1, 10) எனப் பலவாறு முருகன் கருணையை எடுத்தெடுத் துரைத்து வியந்து நன்றி பாராட்டுவர். 'ஆசார ஈனனாய் நான் இனி அழிந்திடாதே நானது ஆறுமுகங்களையும், பன்னிரு தோள்களையும், கடப்ப மாலையையும், மயில் வாகனத்தையும் புகழ்ந்து நான் ஆசுகவியாக நாடொறும் பாடியாடுதற்கும் பிறரும் அப்பாக்களை ஓதித்தீதற்று உய்யுதற்கும் வேண்டிய பாக்கியத்தைத் தரத்தக்க ஞானத்தையும் அறிவையும் அடியேற்குக் கூட்டி வைக்கப் பிரார்த்திக்கின்றேன்' என வேண்டுவார்[1].
---------------
-
1. ஆசார ஈன னாகியேமிக ஆபாச னாகி யோடி நாளும் அழிந்திடாதே,
ஈராறு தோளும் ஆறுமாமுக மோடாரு நீப வாசமாலையும்,
ஏறான தோகை நீலவாசியும் அன்பினாலே
ஏனோரும் ஓது மாறு தீதற நானாசு பாடியாடி நாடொறும்
ஈடேறு மாறு ஞான போதகம்...அன்புறாதோ! -திருப்.1129
-----------------------------------------------------------
என் வறுமை தொலைந்ததே என மகிழ்வர்[1]. என்கொடு நோயெல்லாம் பொடிபட்டனவே எனக் களிப்பார்[2].
யான் அடிநாட் செய்த பிழைகளை எல்லாம் பொறுத்து என் பிழையுடன்பட்டுத் தம் புகழைப் பாடுந் திறத்தைத்தந்து எனக்கு அநுக்கிரகஞ் செய்த பெருமானது பொறையைத் தமது பக்தர் கூட்டத்தில் என்னைச் சேர்த்து வைத்த அவரது திருவருட் கருணையை- என் சொல்லிப் புகழ்வேன் என்பார்[3]. வீணனாய்ப் பிறந்த என்னை இறவா வகைக்கு அருளி அன்பர்கள் சேரும் அமுத பதவியை எனக்கு அருளிய பெருமானே! - எனத் துதித்துக் களிப்பார்[4]. அடியேனது பாமாலையை இறைவன் ஏற்றுக் கொண்டனரே - இஃதென்ன பாக்கியம் என மகிழ்வார்[5].
------------------
[1]. 'கடையேன் மிடிதூள்பட, நோய்விடவே, கனல்மால்
வரைசேர் பெருமாளே. -திருப்.563
[2]. அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருணகிரி வாழ் பெருமாளே. -திருப்.542
[3.1]. அடிநாட்கள் செய்த பிழைநீக்கி என்னை அருள்
போற்றும் வண்மை தரும் வாழ்வே. -திருப் 321
[3.2]. 'எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற எ(ன்)னைப் பின்
பிழையுடன் பட்டு' திருப்.460
[3.3.1]. 'என் பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையை என் என்செப்பிச் செப்புவது!
ஒப்பொன்றுளதோ தான்' -திருப் 460
[3.3.2]. 'இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமிலேனை
அன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா!' கந்தர் அலங்.100
[4]. அவமே பிறந்த எனை யிறவாமல் அன்பர்புகும்
அமுதாலயம் பதவி யருள்வோனே. --திருப் 1240
[5.1]. 'நாயெனக்கும் உறவாகி நின்று கவிதையைப் புனைவோனே' --திருப் 540
[5.2]. 'மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே' கந். அநு. 29.
[5.3] 'பலபல பைம்பொற் பதக்கம் ஆரமும்
அடிமை சொலுஞ்சொற் றமிழ்ப் பனீரொடு
பரிமள மிஞ்சக் கடப்ப மாலையும் அணிவோனே' -திருப். 186
[5.4] 'அடிமை உலகறிய .. பாடும் ஆசுகவி நிகில கவிமாலை
சூடுவதும்...மணநாறு சீறடியே' --சீர்பாதவகுப்பு
-----------------------------------------------------------
இங்ஙனம் தமது பழைய அநா சார நிலை முற்றும் மாறினவராய்க் கழுவியெடுத்த மணி போலவும், களிம்பு அறுபட்ட கலம்போலவும், நோய் நீங்கினவராய், அகமும் புறமும் பளிங்கன்ன சுத்த சொரூபராய்த் திகழ்ந்து புனித தேகத்துடனும் முற்றிய ஞானத்துடனும் இவர் பொலிவதைக்கண்டும், கீதமும் தாளமும் ததும்பிப் பொலிய இவர் முருகபிரானை ஆசுகவியாகச் சந்தப்பாவாற் பாடுவதைக் கேட்டும், திருவண்ணாமலை வாசிகளும் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளவர்களும் இவர்மாட்டு அளவிடற்கரிய மதிப்பும், வியப்பும், பக்தியும், அன்பும் கொண்டனர். ஊரிலுள்ள அறிஞர்கள் யாவரும் இவர் பாடுஞ் சந்தப்பாக்களை இவருடன் கூடித் தாமும் ஓதி மகிழ்ந்தார்கள்[1].
-----
[1]. 'அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்றருணையிற் கோபுரத் துறைவோனே' -திருப்.519
----------------
7. முருகபிரான் தம்மை யாட்கொண்டதை ஜகம் அறியும்படிக் காட்டியது.
(சம்பந்தாண்டானொடு வாது)
முருகவேளின் தனி அடியார் இவரென்பதும், பெருந்தவ முனிவர் இவரென்பதும், நாடெங்கும் பரவலாயிற்று[2]. அக்காலத்துத் திருவண்ணாமலைப் ப்ரதேசத்தை ஆண்டிருந்த பிரபுடதேவமாராஜன் இவர் மாட்டு மிக்க அன்பும் பத்தியும் பூண்டவனாயிருந்தான். இறைவனது திருக்கோலத்தை எனக்குக் காட்டி யருளுக எனச் சோமாசிமாற நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வேண்டினது போலப் ப்ரபுடதேவ மாராஜனும் "தவப் பெரியோய்! உங்களை ஆட்கொண்ட முருகவேளை எனக்குக் காட்டி யருளுக" என அருணகிரிநாதரை வேண்டினன்.
-------------
[2]. அருணகிரியாரின் புகழ் நாடெங்கும் பரவிற்று, அவர் அருளிய திருப்புகழ் பிரபலம் அடைந்தது, நாற்றிசையில் உள்ளாரும் இவர் மாட்டும் இவரருளிய திருப்புகழின் மாட்டும், பெருமதிப்பு வைத்தனரென்பது --
-
"பூர்வ பச்சிம தக்ஷிண உத்தர திக்குள
பக்தர்கள் அற்புதமென ஓதும்
சித்ர கவித்துவ சத்தமிகுத்த திருப்புகழ்" -திருப் 384
"ஆபாதனேன் மிக ப்ரசித்தி பெற்று இனிது உலகேழும்
யானாக நாம அற்புதத் திருப்புகழ் தேனூற ஓதி
எத்திசைப் புறத்தினும் ஏடேவு ராஜதத்தினைப் பணித்ததும்" -*திருப்1132
என வருதலாலும், (91) திரிசிராப்பள்ளித் தலத்துது் திருப்புகழில் "343-வாசித்துக் காணொணாதது" என்பதைப் பற்றிப் பின்னர் எழுதியுள்ள குறிப்பாலும் அறிதலாகும்.
----------
இதற்கு ஆதாரமாகக் கர்ண பரம்பரைச்சேதி ஒன்றுளது. தேவி உபாசனை செய்யும் சம்பந்தாண்டான் எனப் பெயரிய ஒருவன் ப்ரபுடதேவ மாராஜனுக்கு நண்பனா யிருந்தான் என்றும், அவன் அருணகிரியாரின் புகழ் பரவுதலைக் கண்டும், ப்ரபுடதேவ மாராஜன் அவரிடம் மிக்க நண்பு பூண்டிருத்தலைப் பார்த்தும் பொறாமை கொண்டவனாய் அரசனிடத்தில் "யாரொருவர் தாம் உபாசிக்கும் மூர்த்தியைச் சபையில் வரவழைக்கின்றனரோ அவர் மாட்டே நீங்கள் அன்பு கொள்ள வேண்டும்" எனத் தூண்டினன் என்றும், அரசனும் இதை அருணகிரியார்க்குச் சொல்ல 'ஆண்டவன் திருவருள் போல' எனக்கூறி இதற்குச் சம்மதித்தார் எனவும், அரசன் ஒரு சபை[1] கூட்ட அச்சபை நடுவே சம்பந்தாண்டான் வேியை வரவழைக்க முயன்று இயலாது, தோல்வியுற்றனன் என்றும், பின்னர் நமது சந்தப் புலவர் கந்தக் கடவுளைத் தியானித்து 'என்னை ஆட்கொண்ட குரு மூர்த்தியே! குரு மலையில் வீற்றிருக்கும் பெருமானே! மலை மகள் மகனே! அரி மருகோனே! இந்தச் சபை தனில் எனது உளம் உருகவரவேண்டும்--
------------
[1]. தேவேந்திர சங்க வகுப்பை- இச்சமயத்திற் பாடித்தேவியைத் துதித்து- தேவியை வர ஒட்டாது அருணகிரி யார் தடுத்தனர் என்றும் பெரியோர் சொல்வர்.
-----------------------------------------------------------
"கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே!
சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே!" -திருப்.210
என வேண்டி, 'இறைவனே இங்குள்ள பிரபுடதேவ ராஜனது உள்ளம் நெகிழ நீ எதிர்தோன்றி உனது நடன தரிசனத்தைத் தரவேண்டும் -
பாதலத்தில் உள்ள சேடனா ராட, மேரு ஆட, காளியாட,
விடையி லேறுவா ராட, பூதவேதாளம் ஆட,
வாணி ஆட, பிரமன் ஆட, வானுளோர் ஆட, மதியாட,
மாமியா ராட, மாமனா ராட, மயிலு மாடி நீயாடி வரவேணும் -
-
"அதல சேடனாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட -அவளோடன்--
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாளம் -அவையாட;
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானுளோ ராட மதியாட
வனச மாமியாராட நெடிய மாமனாராட
[1] மயிலு மாடி நீயாடி வரவேணும்.;
'உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜன்
உளமு மாட வாழ் தேவர் பெருமாளே'. -திருப்.1056
--என நெஞ்சம் நெக்குருகத் துதித்து வணங்கினர்.
--------------
[1]. மயிலுமாடி வரவேணும்'- என்று மாத்திரம் கூறாது 'மயிலு மாடி நீயாடி வரவேணும்' என்றதன் கருத்து நீ யாடினால் தான் யாவையும் ஆடிடும் என்னும் உண்மையைப் புலப்படுத்துதற்கே. "யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே" என்னும் திருமந்திர வாக்கு (2731) ஈண்டு அறிதற்பாலது.
-----------------------------------------------------------
அடியார்க்கு எளியராம் அண்ணலும் ஒரு நொடிப் பொழுதில் திருக்கை வேல் விளங்க மயில் மீது ஆரோகணித்து வந்து சபையோர்க்குக் காட்சி தந்து[1] மறைந்தார். அரசன் முதலிய யாவரும் இது அற்புதம், அற்புதம் என வியந்து அருணகிரியாரை முருக பிரான் ஆட்கொண்டது சத்தியம், சத்தியம் எனத் துதித்துக் கூத்தாடினர். சம்பந்தாண்டான் நாணமும், பொறாமையும் தலை கொள்ளச் சபையினின்றும் மறைந்தோடினன். இங்ஙனம் சபையில் முருக பிரானை வர வேண்டிப் பாட முருக வேளும் வேண்டின வாறே ஒரு நொடிப் பொழுதிற் சபையில் தோன்றித் தரிசனம் தந்து அருணகிரியாரைத் தாம் ஆட்கொண்டதை உலகறியப் புலப்படுத்தினர் என்பது.
-
"சயிலம் எறிந்தகை வேற் கொடு, மயிலினில் வந்தெனை
யாட்கொளல், சகமறியும்படி காட்டிய குருநாதா"
--திருப்.331
எனவரும் திரிசிராப்பள்ளிப் பதிகத்தாலும்,
-
"உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒரு நொடி[2] தனில் வருமயில் விரா"
-திருப் 755
என்னும் விருத்தாச்சலத்துப் பதிகத்தாலும் தெளிவுற அறியக் கிடக்கின்றது. இந்த நிகழ்ச்சியைத் திருச் செங்கோட்டுப் பதிகம் ஒன்றில் " அருணையில் ஒரு விசை பரவ வருமதில் (வந்தது போல)" --திருப்.387- என்னும் அடியிற் குறிப்பித்துள்ளார்.
----------
[1]. "வெற்றிப் ப்ரபுடதே வக்குரிசில் பேணி யெதிர்காண,
முருகன் மயில்மேல் முடுகி வரவழைத்து வந்தது காண்"
-- தணிகையுலா
[2] .'ஒரு நொடி' என்றதனால் முருகன் வருவதற்குத் தடைபட்டு நேரமாயிற்று எனப்படும் கர்ண பரம்பரைச் சேதி தவறாம் என்க.
-----------------------------------------------------------
8. தல யாத்திரையும், தல யாத்திரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும்,
அவ்வத் தலத்துத் திருப்புகழ்ப் பாக்களிற் சிற்சில குறிப்பும்.
1. திருவண்ணாமலை -- [509 - 586]
இங்ஙனம் பெரும் புகழ் பெற்ற அருணகிரி நாதர் தாம் அருள் பெற்ற தலமாகிய அருணையிற் பல அற்புத சந்தப் பாடல்களைப் பாடினர். அருணையில் உள்ள முருகர் சந்நிதானங்கள் பலவற்றையும் துதித்துப் பாடினர்.
-
1. அருணையில் எழு நிலை சிகரி...பெருமாள் --திருப்.510, 545.
2. அருணை நவோ நிலை சிகரமீது...பெருமாள் --திருப்.526
3. அருணை குண (கிழக்குக்) கோபுரத்தி லுறைவோனே. --திருப்.523
4. அருணை உயரிய பெரிய கோபுரத்துப் பெருமாள் --திருப்.528, 529, 540, 544, 567, 572.
5. அருணை வடக்குக் கோபுரத்துப் பெருமாள். -திருப்.559
6.அருணை தென்திசை பெருமாள் --திருப் 552
7. அருணை நெடுமதில் வடசார் பெருமாள் --திருப்.533
8. அருணை கோபுரத்து பெருமாள். --திருப் 518,522,534,537.
9. அருணை கோபுரத்து உத்தர (வடக்கு) திக்குப்..பெருமாள். -திருப்.577
10. அருணை மலைப் பெருமாள் --திருப்.547,556,575
11. அருணை திரு வீதிப் பெருமாள் - -திருப்.524,525,535,538,539,555,571
என வருவன காண்க.
முதற் பதிகமாகிய 'முத்தைத் தரு ' என்பதிற் சிவபிரானுக்கு உபதேசித்த பெருமை, திருமாலின் பெருமை, சூர சம்ஹார வெற்றி கூறப்பட்டன. இங்ஙனமே திருப்புகழ் நூல் முழுமையும் இம்மூன்று விஷயங்களையே அதிகமாகக் கூறும். சுவாமிகளது சொந்த ஊர் அருணையாதலின், பழநி (96), திருச்செந்தூர் (83) இவைகளுக்கு அடுத்தபடியாக அருணையே திருப்புகழில் அதிக பாடல்களை (78)க் கொண்டதாகும். மிகப் பெரிய பாடலொன்றும் உளது ["விந்துப் புளகித" -(திருப். 585)]. வேசையர் மயக்கே தமக்குப் பெரிய இடர்ப் பாடாய் முதலில் இருந்த காரணத்தாலும், அந்த இடர் ஒழிபட்ட இடம் அருணை யாதலாலும், வேசையர் மயக்கினின்றும் தம்மை என்றுங் காத்தருள வேண்டும் என்கின்ற விண்ணப்பம் இத்தலத்துப் பாடல்கள் பல வற்றிலும் பிறதலத்துப் பாடல்களிலும் பரவியுள்ளது. மேலும், பெண்ணாசையே நீக்கரிய ஆசை ஆதலின் அதை ஒழித்தா லொழிய நாம் கரையேறுவது கூடாத காரிய மாகுமாதலின், அதை நாம் ஒழித்துக் கரையேற வேண்டும் என்னும் பெருங்கருணை காரணமாகவே சுவாமிகள் வேசையர் இன்பத்தின் தீமைகளை மிக விரிவாகவும் அழுத்தமாகவும் பன்முறை எடுத்துக்காட்டுகின்றனர். "தத்தை யங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரங் கூறிட்டு, அத்தில் அங்கு ஒரு கூறு உன் கண் வைத்தவருக்கு அமருலகு அளிக்கும் நின் பெருமை" - எனத் திருவிசைப் பாவிற் கருவூர்த் தேவர் முழங்குகின்றனரன்றோ? சுவாமிகள் அருளிய "விடமும் அமுதமும்" என்னும் 516-ஆம் பாடல் ஒன்றே பெண்கள் உருவை நாம் எவ்வண்ணம் உணருதல் வேண்டும் என்னும் உண்மை உணர்ச்சியை ஊட்ட வல்லது. சுவாமிகள் பெறற் கரிய பேற்றைப் பெற்ற தலமாதலின் அவரது சரித்திர சம்பந்தமான வீஷயங்கள் பல அருணைத் திருப்புகழ்ப் பாடல்களிற் கிடைக்கின்றன.
ஒரு தலத்தைப் பற்றிப் பாடும்பொழுது சுவாமிகள் கொள்கின்ற சில குறிப்புகள் உண்டு; (1) தலத்தின் பெயருக்கேற்பச் சந்தத்தை துவக்குவர்! தலம் 'அருணை' என்றால் "தனன" சந்தத்தில் பாடல் தொடங்கும். (2) தலத்துச் சுவாமி பெயர், தேவி பெயர் கூறப்படும். அருணைத் தலத்துத் தேவி "உண்ணாமுலை" யின் பெயர் 529-ஆம் பாடலிற் காணலாம். (3) தலவிசேடம் முதலியனவும் எடுத்துக் கூறுவர். கௌதம முநிவர் பூசித்த தலம் 'அருணை' என்பதை 516-ஆம் பாடலிலும், தேவி அருணையில் (தவங்கிடந்து) இடப்பாகம் பெற்றதை 530, 531-ஆம் பாடல்களிலும், இறைவர் ஜோதியாய் நின்றதையும், திருமால், பிரமாவுக்கு எட்டாது நின்றதையும் 535, 563 எண்களுள்ள பாடல்களிலும், முருக வேள் குருமூர்த்தியாய்த் தம் முன் தோன்றித் திருவடி சூட்டி, மௌனோப தேசஞ் செய்து ஆட்கொண்டு தெளிவு தந்ததை 515, 550 -ஆம் பாடல்லகளிலும், சிவபிரான் (அண்ணாமலையார்) திருநீறளித்துத் தமது துயரைத் தீர்த்ததையும், வள்ளியம்மை தமக்கு ஸ்பரிச தீக்ஷை செய்து வினை நோயையும் மலங்களையும் ஒழித்தருளினதையும் 568-ஆம் பாடலிலும் பாராட்டி விளக்கியுள்ளார். தீரப்புகழ்ப் பாடிய காலமெல்லாம் ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் முருகவேளின் தோற்றமே என்னுங் கொள்கையினராயிருந்தார் அருணகிரியார் என்பது அவர் முதலிற் பாடிய தலமாகிய அருணைத் திருப்புகழிலேயே இரண்டு பாடல்கள் -(547,567) சம்பந்தர் லீலைகளை முருகவேளின் லீலைகளாகவே பாராட்டுகின்றமையால் தெரியக் கிடக்கின்றது.
வள்ளியம்மையை முருக பிரான் வலிய ஆட்கொண்டதே அவருடைய பெரும்புகழுக்கு முக்கிய காரணமாயிருந்த தென்னும் ரகசியத்தை முதலிலேயே அருணகிரியார் உணர்ந்திருந்தனர் என்பது.
"குறமாதுடன் மால் கடனாம் எனவே அணைமார்பா" என்னும் (563) அருணைப் பாடலின் அருமை வாக்கியத்தால் அறிகின்றோம். இதனை "மெய்ப் பொருட் டிருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினைக்கிரிப் புறத்து உறை வேலா" என்னும் (திருப்.253) குறிப்பினாலும், "குறவிக்குக் கடவோனே" (1303) என வருவதாலும் உணரலாம். இனி, அருணைத் திருப்புகழ்ப் பாடல்களுக்கு உரிய சிற்சில குறிப்புகளை ஈண்டுக் குறிக்கலாம்.:
-
509. "குமர குருபர" - இப்பாடலின் ஈற்றடி
"அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே"
என்பதை ஸ்ரீ தாயுமானவர் " அறிஞருரை" என்னும் தலைப்பில்--
-
"அறிவை யறிவதுவே யாரும் பொருளென்
றுறுதி சொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ?"
என்னும் "எந்நாட் கண்ணி"யில் எடுத்து ஆண்டுள்ளார். 511. 'கருணை சிறிதுமில்' இது ஒரு அருமையான பாடல். முதல் நான்கு அடியில் பேரின்பப் பொருள் எங்ஙனம் எப்போது கிடைக்கும் என்பது மிக அழகாக எடுத்து விளக்கப் பட்டுள்ளது. (திருப்புகழ் ஆராய்ச்சி தலைப்பு 50 - பார்க்க) 517. "கமரி மலர்" - இச் செய்யுளில் தாள ஒலி, 'குமர குருபர', 'குமர குருபர' என ஒலித்தலைக் குறிக்கின்றார். 523. "வடவை" - இப்பாடலிற் சிவபிரானுக்கு உபதேசித்தது "மவுன மறை" எனப்பட்டுள்ளது. 526. 'அமுத'- இது தேவிதுதி நிரம்பிய பாடல். 534. "அருக்கார்" - இப் பாட்டில் வள்ளியம்மையைத் திருடின முருகர் தேவியைத் தமது தோளில் வைத்து ஒளித் தோடினதாகத் கூறப்பட்டுள்ளது. 545. "இருளளக" - இந்தப் பாட்டில் சுந்தர மூர்த்தியை ஆட்கொண்ட திருவிளையாடல் கூறப்பட்டுள்ளது. 548, 581. "கடல்பரவு", 'மொழிய' - இப் பாடல்களிற் சூரனுக்கு அரணாயிருந்த எழுகிரிகளை வேலாயுதம் அட்டது கூறப்பட்டுள்ளது. 550. 'கமல' - கண்வர்ணனை கூறும் 'கடலைச் சிறைவைத்து' (126) என்னும் பாடலின் வகையில் 'ஸ்தன வர்ணனை' கூறும் பாடல் இது. இப்பாடலின் ஈற்றடிகளுக்கு:-
-
"மமதை யொத்துக் கொக்கரித்துப் படுகள
அசுர ரத்தத்திற் குளித்துச் சசி பதி
மகள் கரத்தைப் பற்றுகொற்றக் கொடை முருகவிராலி
மலையினுச்சிப் பச்சை ரத்னக் கலவியி
னுலவு மெய்ப் ப்ரத்யக்ஷ! ரக்ஷைக் குருபர
வயலியிற் சித்தித் தெனக்குத் தெளிவருள் பெருமாளே"
என்றும் பாட பேதம் உண்டு.
551. 'கரிமுக' - இதில் 'மணிவாசகப் பெருமான்' சரிதம் கூறப்பட்டுள்ளது. 557. 'குரவ' - இப் பாட்டிற் 'குறமகளை வேளைக் காத்து அணை பெருமாளே' - என்றார். வேளைக்காத்து - காத்திருந்து, சமயம் பார்த்து எனப் பொருள் படும்.- இப் பொருளில் தான் வேளைக்காரன் வகுப்பில் வரும் வேளைக்காரனே - என்பதற்குப் பொருள் காண வேண்டும். 573. "பாண மலர்7 - அடி: 'காண அரிவை முனிற்குங் கதிர் வேலா' - என்றும் பாடம்.
இங்கு 'அரிவை' என்பது "வள்ளியம்மையை" அல்லது "முருகம்மையாரை" குறிப்பதாகக்கொள்ளலாம். 582. 'வலிவாதம்' -7- அடி - 'சூரன், சிங்கமுகன், தாருகன் - மூவரும் சொல்லப்பட்டனர். 583. 'விடுமத' -2 -அடி-வேசையரை-'நூறாயிர மனமுடை மாபாவிகள்' -என்றார். 'முப்து கோடி மனத்தியர்' என்றார் பிறிதோரிடத்து (1190); 'கோடா கோடிய மனதானார்' என்றும் கூறியுள்ளார். (1180); 'பெண்ணெனப் படுவ கேண்மோ... ஓராயிர மனத்த வாரும்' என்பது 'சிந்தாமணி 1597.'
இங்ஙனம், திருவண்ணாமலையில் தவப் பொழுதில் நின்ற அருணகிரியார் "ஞாலநின் புகழே மிக வேண்டும்" என்னும் தமிழ் மறை மொழியைப் பொன்னெனப் போற்றி நாற்றிசையிலும் முருகன் திருப்புகழைப் பரப்ப விரும்பி, நால்வரைப் போலத் தாமும் தலயாத்திரை செய்ய அருணையினின்றும் புறப்பட்டார்.
(1) தென்திசை யாத்திரை
1. திருவண்ணாமலை முதல் சிதம்பரம் வரை (9 தலங்கள்) 2-10
இன்ன வரிசையிற் சுவாமிகள் தலங்களைத் தரிசித்தார் என்று துணிவுபடக் கூற வழியொன்று மில்லை; எனினும் 'வயலூரா' எனவரும் பாடல்களில் பெரும்பாலன அவர் வயலூரைத் தரிசித்த பிறகு பாடியிருக்க வேண்டும் என்னும் ஓர் உபதேசங் கொண்டு இந்த ஆராய்ச்சி தொடங்குகின்றது. (1) திருவண்ணாமலை[1] [509-586] யினின்றும் நீங்கிச் சிவபிரான் அந்தகாசுரனைச் சங்கரித்த தலமாகிய (2) திருக்கோவலூரை[2] (738) வணங்கிச், சிவபிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஆட்கொண்ட தலமாகிய (3) திருவெண்ணெய் நல்லூரைத் (748) தரிசித்தனர்.
---------------
[1]. ஒரு ஸ்தலத்துக்கு முன் உள்ள எண் சுவாமிகளது தல யாத்திரை வரிசையைக் குறிக்கும். தலத்துக்குப் பின் உள்ள எண் அத்தலத்துக்கு உரிய திருப்புகழ்ப் பாடலின் எண்ணைக் குறிக்கும்.
[2]. 707, 708 எண்களுள்ள 'ஆதிமுதல்', 'சாலநெடு' என்னும் பதிகங்களின் ஈற்றடிக்குக் "கோவை நகர் வாழ வந்த பெருமாளே" எனவும் பாடபேதம் இருத்தலால் அப்பதிகங்களையும் 738-ஆம் பாடலுடன் இத்தலத்துக்குக் கொள்ளலாம். கோயமுத்தூரைக் கோவை என்கிறார்கள். அத்தலத்துக்கும் இம்மூன்று பாடல்களைக் கொள்ளலாம்.
------------------
திருவைண்ணெய் நல்லூரில் நடன தரிசனம்
இத்தலத்தில் முருக பிரான் தமது அற்புத மயில்மிசை திருநடன தரிசனம் தர, அதைத் தரிசித்து மகிழ்ந்து அந்த யோகானந்த நடன தரிசனத்தைக் குறிப்பிக்கும் "பல பல தத்துவம்" என்னும் பாடலைப் பாடித் 'திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத, மயிலின் மிசைக் கொடு திருநட மிட்டுறை பெருமாளே' எனத் துதித்து வணங்கினர்.
பின்பு (4) திருநாவலூரைத் (747) தரிசித்துத் (5) திருவாமூர் (744) வந்து அத்தலத்தை 'மாது புகழை வளர்க்குந் திருவாமூர்' எனக் கூறித் திலகவதியாரின் தொண்டைச் சிறப்பித்து,(6) வடுகூர் (745), (7) துறையூர் (746) என்னும் தலங்களைத் தரிசித்துத் (8) திருவதிகை (742, 743) சேர்ந்தார். 742-ஆம் பதிகத்தில் தேவியின் திருவருளால் சம்பந்தப் பெருமான் தேவாரப் பாக்களை அருளியதும், ஆற்று வெள்ளம் பெருகி வருதலைப் 'பறை' யறைவித்து முன்னதாகத் தெரிவிக்கும் வழக்கமும் குறிக்கப்பட்டுள்ளன 743-ஆம் பதிகத்தில் திரிபுரத்தை எரித்த தானம் திருவதிகை என்பதை விளக்கி, "முருகா! உனது பன்னிரு தோளையும் பகர்தற்கு எனக்கு அருள் புரிய வேண்டும்" என்னுங் கருத்துடன் - "இறை! நின் ஆறிரு புயமென உரை செய அருள்வாயே", - எனப் பிரார்த்தித்தனர். இப்பிரார்த்தனை பின்னர் வயலூரிற் சித்தித்ததைக் காண்போம். திருவதிகை யினின்றும் புறப்பட்டுத் (9) திருப்பாதிரிப் புலியூரை (749) வணங்கித் தேவி பூசித்த தலம் என அதைப் போற்றிப், பின்பு (10) திருமாணிகுழியை (750) வணங்கினர். இத்தலத்துப் பாடல் "சீரா" என்பது ஒரு படை (உடைவாள்) என்பதும், வேல் அசுரர் சம்பந்தப் பட்டவரையில் 'வஞ்சவேல்'[1] எனப்பட்டது எந்பதும் விளங்குகின்றன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சிதம்பரம் (தில்லை நகர்) வந்து சேர்ந்தார்.
------------
[1]. 750, 773-பதிகங்களில் 'வஞ்சவேல்' என்றது-வேலாயுதம் அடியார்களுக்கு உற்ற நிழலாகவும், பகைவர்களுக்கு உற்ற தழலாகவும் இருக்கும் என்னும் உண்மையைத் தெரிவிக்கின்றது. இக்கருத்தை "வாரமதாம் அடியார்க்கு வாரமாகி, வஞ்சனை செய்வார்க்கென்றும் வஞ்சனாகும் சீரரசை" என வரும் தேவாரத்திற் (அப்பர்-திருவாலம் பொழில்) காண்க.
-------------------
2. சிதம்பரம் முதல் சீகாழி வரை (10 தலங்கள்) 11-20.
தில்லையில் ஆடல் தரிசனம்
மஹா க்ஷேத்திரமான (11) தில்லை நகரின் (590-654) பெருமையைக் கண்டு பேரானந்தங் கொண்டார். திருவண்ணா மலையில் மூலை முடுக்கிலிருந்த முருகர் முகூர்த்தங்களைத் துதித்தது போலத் தில்லையிலும் பல இடங்களிலிருந்த முருக மூர்த்தியைப் புகழ்ந்து பாடினார், பரவினார். 'கனக சபைப் பெருமாளே' என்றும், திருச்சிற்றம்பலப் பெருமாளே என்றும், 'தில்லை நகர்க் கோபுரப் பெருமாளே' என்றும், 'தெற்குக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே! மேலைக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே! வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே! நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே! 'ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே!' என்றும் பலவாறாகப் பாடி யாடி மகிழ்ந்தார். நடராஜப் பெருமானே முருகராகவும், முருக பிரானே நடராஜமூர்த்தியாகவும் சற்றேனும் பேதமின்றி இவருக்குத் தரிசனம் கிடைத்த காரணத்தால்,
"மலைமகள் உமைதரு வாழ்வே நமோ நம" எனக் குகனைக் குறித்தும், "திரிபுர மெரி செய்த கோவே நமோநம"--எனச் சிவனைக் குறித்தும் கலம்பகமாக ஒரே பாடலில் வருகின்ற "அவரகுண விரகனை" என்னும் பாடல் (611) இவர் திருவாக்கினின்றும் எழுந்தது.
பின்னும், நடன ஸ்தலமாதலின் கலகல என்றும் கண கண என்றும் சிலம்பொலி, தாள ஒலி, நடன ஒலி ஒலித்த நாதமே இவரைப் பரவசப் படுத்திய காரணத்தால் இத்தலத்துப் பாடல்கள் பல வகைய நாத ஒலி நிறைந்த அற்புத கரமான சந்த பேத ஒலிகளுடன் பொலிவனவாய் விளங்குகின்றன. கிடைத்துள்ள 1307 பாடல்களுக்கு ஏற்பட்ட 1008-க்கு மேற்பட்ட சந்த பேதங்களிற் சிதம்பரத்துக்கு உரிய 65-பாடல்களுள் இரண்டு பாடல்கள் தவிர ஏனையவை தனித் தனிச்சந்தங்களாய் அமையப் பெற்று மொத்தம் 63-வகைச் சந்த பேதங்கள் கொண்டு திகழ்கின்றன. அவையும் சிலம்பொலிக்கு ஒத்தனவாய்த் தாளபேதங்கள் சிறக்க மெல்லோசை பிறங்குவனவாய் விளங்குகின்றன. அருணைக்கு (78) அடுத்தபடியே சிதம்பரமே(65) அதிக பாடல்களைக் கொண்டுள்ளதால் இத்தலத்திற் சுவாமிகள் பலநாள் இருந்திருக்க வேண்டும். இத்தலத்துப் பாடல்களிற் புலியூர், புலிசை, புலீச்சுரம், கனக சபை, கனகம்பலம், பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம், திருவம்பலம், சிதம்பரம், மன்று, தில்லை, பெரும்பற்றப் புலியூர் என்னும் நாமங்கள் யாவும் வந்துள்ளன. தில்லை வாழ் அந்தணரது சிறப்பும்[1] (625) சிவகாமி யம்மையின் திருநாமமும் (597, 600, 608,625), சிவகங்கை தீர்த்தமும் (609), சிதம்பரம் ஞான பூமியென்பதும் (627, 639), முருகரது குடைக் கூத்தும் [636], சூரசம்ஹாரம் முருகவேளுக்கு ஒரு திருவிளையாட்டே யென்பதும் [629],
----------
[1]. 625. இவ் வழகிய பாடலில் உள்ள 'வேதநூன் முறை வழுவா மேதினம் வேள்வி யாலெழில் புனைமூ வாயிர மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே' என்னும் அடிதான் எந்தையார் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழ் ஏடுகளைத் தேடி வெளியிடுதற் குக் காரணமாயிருந்தது. 1847-ஆண்டுதான் என் தந்தையாருக்குத் திருப்புகழ் அச்சிடவேண்டும் என்ற எண்ணம் முதல் முதல் உதித்தது. சிதம்பரம் தீக்ஷிதர்கள் ஒரு விவாதத்தில் தங்கள் பெருமையைக் காட்ட மேற்காட்டிய திருப்புகழ் அடியைக்கொண்ட "தாதுமாமலர் முடியாலே" என்னும் பாடலைச் சான்றாக எடுத்துக் காட்டினதாகவும், அப்பாடலின் தேனொழுகும் இனிமை தன் மனத்தை மிக்குங் கவர்ந்து திருப்புகழில் தனக்கு ஆசை உண்டு பண்ணிற்று என்றும், இத்தகைய அற்புதப் பாடல்கள் பதினாறாயிரம் அருணகிரிநாதர் பாடியிருக்க ஓராயிரமேனும் கிடைத்து அச்சிட்டால்தான் எடுத்த ஜன்மம் பலன் பட்டதாகும் எனக் கருதினேன் என்றும் எந்தையார் என்னிடம் கூறினர். [வ.த. சுப்பிரமணியப் பிள்ளை சரித்திரம் - பக்கம் 22 பார்க்க]
முருகர் செட்டி வடிவு[2] பூண்டு வள்ளியொடு விளையாடினதும் (601,612), ராவணன் கயிலையை யெடுக்க முயன்றதை - ராவணன் கையில் நகம் பிடுங்கினான் என்ற பதசாதுரியமும் (நகம் - மலை) [607], தேவி தமது கண்ணிற்[3] குடி கொண்டு விளங்குகின்றாள் என்பதும் (608), தேவி தம்மை ஆட்கொண்டருளியதும் [647], வளையல் விற்ற திருவிளையாடற் செய்தியும் [612], நோய்களின் பெயரும் [626,628], பஞ்சாக்ஷர பஞ்சபூத சம்பந்தமும் [652], பதஞ்சலி, வியாக்ர பாதர் காண நடராஜப் பெருமான் ஆடல் ஆடினர் என்பதும் [642, 643,652], மாணிக்கவாசகர் அருள் பெற்றதும்[653], கண்ணப்ப நாயனாரை ஆட்கொண்டதும் [651], பஞ்சாக்ஷரமே வேலாகச் சூரனை யட்டது என்பதும் [606], சடைக்ஷரப் பொருளை உபதேசம் பெற விரும்பியதும்[654], வள்ளிப் பிராட்டியின் கருணைத் திறமும் (649), திருவடி தீக்ஷையால் தம்மைச் சுக ஞானக்கடலில் மூழ்க வைத்து, எட்டிரண்டும்[4] இதுவாம் எனும் மெய்ஞ்ஞானம் போதித்த கருணை மூர்த்தி முருகவேள் என்பதும்(612,633,637), சம்பந்தப் பெருமான் ஞானவாளாற் சமணரை வென்றனர் என்பதும் (650), பரப்பிரம வெளி "மயிலாடு சுத்த வெளி" என்பதும் (628), இத்தலத்துப் பாடல்களில் விளக்கப் பட்ட முக்கிய விஷயங்களாகும்.
-----------------
[2]. இந்த லீலை கந்த புராணத்திற் சொல்லப்பட வில்லை.
[3]. "நின்தாள் புகழுநர் கண்ணுட்பொலிந்தோய்" கல்லாடம்[2].
[4]. 'பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினோ டிரண்டும் அறியேனையே' - என மணிவாசகனார் அருளியவாறு அருணகிரியாரும் "எட்டிரண்டும் அறியாத என்செவியில், எட்டிரண்டும் இதுவாம் இலிங்கமென, எட்டிரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே (612) எனத் துதித்து மகிழ்ந்துள்ளார்.
மேலும், இத்தலத்தில் பதஞ்சலி, வியாக்ர பாதரும் 'அரிது இது, அரிது இது' என வியக்கும்படி முருகபிரான் அருணகிரியார்க்கு நடன தரிசனம் தந்த காட்சியும் ஒரு பாடலில்(650).
-
"அரிதுயில் சயன வியாள மூர்த்தனு
மணி திகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனும்
அரிதென முறைமுறை யாடல் காட்டிய பெருமாளே"
என விளக்கப்பட்டுள்ளது. இத்தலத்துப் பதிகங்களில் மனப் பாடஞ் செய்யத் தக்க அடிகளாகக் கீழ்க் குறித்த இரண்டையுங் கூறலாம்:
-
1. இறந்திட்டுப் பெறவே கதியாயினும்
இருந்திட்டுப் பெறவே மதி யாயினும்
இரண்டிற் றக்கதோரூதியம் நீ தர இசைவாயே (631)
2. கழலிணை பணியும் அவருடன் முனிவு
கனவிலும் அறியாப் பெருமாளே -(635)
சந்த வகையாக இத்தலத்துப் பதிகங்களைப் பற்றிக் கூறப்புகின் "மருவு கடல் முகில்" என்னும் பெரிய பாடலும் (653) தவள சங்கம் போல ஓதுதற்கு இடம் தரும் மெல்லோசை மிக்க நாதம் புரளும் 'சகுட முந்தும்' என்னும் அரிய பாடலும் (641), கலவைச் சந்தமாய் ஓசையின்பம் துள்ளிக் குதிக்கும் "காய மாய" என்னும் பாடலும் (610) குறிக்கத் தக்கனவாம். அலங்கார ரசத்தைக் காணும்பொழுது, கேசாதி பார வருணனைப் பாடல் "மருவு கடல் முகில்" என்பது (653) கவனிக்கத் தக்கது. 597 -ஆம் பாடல் "மந்தர மென் குவடு" என்பதில் 7-ஆவது அடி சந்தம் பிறழா திருக்க "திந்திமி திந்திமி தோதி மிந்திமி, தீததி திந்தித தீதி திந்தித" என இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
646- 'நாட் பிறப்பு' என்னும் பாடலின் பொருள் ஓரிடத்தில் விளங்காமையால் ஓலை ஏட்டை ஆராய்ந்த பொழுது கீழ்க் காட்டிய பாடங்கள் கிடைத்தன. அத்திருத் தங்களைச் செய்து கொள்ளலாம்.
அடி 1 -- ''நாயேனரற்று மொழி'; அடி 2-'வகைக்குமுன' தருள் பேசி';
அடி3- 'தாதா எனக் குழவி வாய்பாறி நிற்குமெனை அருள் கூர';
அடி 4- 'தீராய் நினைத் தொழுதுவாரே னெனக் கெதிர் முன் வரவேணும்';
அடி 5- 'ரூபா கனத்தியரி தோலாசனத்தீயுமை';
அடி 6- 'தூதா துதித்தவர்கள் பாகா'; அடி7- 'ஞானா தனத்தியன மேராள்'; அடி
8- 'தனிப்புலியூர் வாழ்வே வுரர்த்திரளை'.
சிதம்பரத்திலிருந்தபொழுது அருகிலுள்ள [12] திரு வேட்களம் [751-752] என்னும் தலத்தைத் தரிசித்து ஆண்டவன் தமக்குப் பாத தரிசனம் தந்தும் சக்ஷு தீக்ஷை செய்தும் தம்மை ஆட்கொண்ட கருணையை மறவேன்--
-
'சரணக் கழல் காட்டி யென் ஆணவ, மலமற்றிட வாட்டிய
ஆறிரு தோளோடு, முகமாறும், பாதமும், மயிலிற்புறம்...
கருணைக்கடல் காட்டிய கோலமும் பரகதி பெற்றிட
நோக்கிய பார்வையும் மறவேனே. -[751]
என நன்றி பாராட்டிப் போற்றினர். பின்பு [13] நெல் வாயில் [சிவபுரி] [753] தரிசித்து, வறுமை காரணத்தால் அறிவிலாதவர் பாற் சிறந்த தமிழைக் கூறித் தாம் முன் வாடினதை நினைத்து வறுமைத் தீயிற் கிடக்கும் இப்புழுவுக்கு இரங்கி யருளுக என வேண்டினர். பின்பு [14] விருத்தாசலம் (754-756) அடைந்து, தலத்தின் பெயருக்கு ஏற்பக் 'குடத்தாமரை' எனப் பதிகம் [754] தொடங்கிப் பாடினர். அதில் தேவி 'விருத்தாம்பிகையை' "என தாய்" [என்+அ +தாய்: எனது ஆய்) எனப் பாராட்டியுள்ளார். 755-ஆம் பதிகம் 'திருமொழி யுரை பெற' என்பதில் - தாம் வேண்டிய வாறு உலகோர் யாவருங் காண அருணைத் தலத்தில் முருக பிரான் ஒரு நொடிப்பொழுதில் காட்சி தந்த அற்புத நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. மேலும் விருத்தாசலத்தில் இறப்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்றும், அங்கு முடிவுறும் நல் உயிர்களுக்குத் தேவி தனது முன் தானையால் வீச ஈசன் பஞ்சாக்ஷர உபதேசம் செய்வார் என்றும், அக்காரணத்தால் காசியின் மேற்பட்டது விருத்த காசியாம் விருத்தாசலம் என்றுன் கந்தபுராணம் - வழி நடைப்படலத்தில்
-
"தூசினால் அம்மை வீசித் தொடையின் மேற் கிடத்தித் துஞ்சும்
ஆசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத் தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்தக்
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையுங் கண்டான்.
எனச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ சம்பந்தப் பெருமானும் இத்தலத்துத் தேவாரத்தில் இத்தலத்தை -"முத்தி தரும் உயர் முதுகுன்றம்" (IIIதிருமுறை 99) என விளக்கியுள்ளார். இத்தலத்துக்குள்ள இம் மேன்மைகளை அருணகிரியார் "முடிபவர் வடிவறு சுசிகர முறை தமிழ் முதுகிரி வலம்வரு பெருமாளே" - என்னும் அடியிற் சுருக்கி விளக்கியுள்ளார்.
இதில் 'தமிழ் முதுகிரி' என்பது கவனிக்கற் பாலது. ஏழாம் நூற்றாண்டில் ஸ்ரீ சம்பந்தப் பெருமான் காலத்தில் தமிழில் 'முதுகிரி' என வழங்கப்பட்ட தலம். 15-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ அருணகிரியார் காலத்தில் 'விருத்தாசலம்' என்னும் வடமொழி நாமத்தால் வழங்கலாயிற்று. இப்படி அனேக தலப் பெயர்களும், சுவாமி - தேவி இவர்களின் பெயரும் தேவார காலத்தில் தமிழில் வழங்கியன திருப்புகழ்க் காலத்தில் வடமொழியில் வழங்கப் பெறலாயின. தில்லை சிதம்பரம் ஆனதும் இதற்குப் பிறிதோர் உதாரணமாம்.
இனி "எழுதிகழ் புவனம் (234)" என்னும் திருப்புகழ்ப் பாடலையும் இத்தலத்துக்கு உரிய திருப்புகழாகக் கொள்ளலாம். ஸ்ரீ சம்பந்தப் பெருமான் அருளிய முதுகுன்றம் (விருத்தாசலத்துத்) தேவாரத்தில் (1-131)
"திறங்கொள் மணித் தரளங்கள் வரத்திரண்டங் கெழிற் குறவர் சிறுமி மார்கள்
முறங்களினாற் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப் பெய் முதுகுன்றமே."
என்னும் பதிக அடி தமது நினைவுக்கு வர அருணகிரியாரும்
-
"முழுகிய புனலில் இனமணி தரளம்
முறுகிடு பவளம் மிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியும் முதுமலை"(234)
என இத்தலத்தை வர்ணித்துள்ளார்.
விருத்தாசலத்திலிருந்து புறப்பட்டு வெள்ளாறும் மணி முத்த நதியும் கூடும் (15) கூடலை யாற்றூரைப் (760) பணிந்து, பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலைக்கூறி, 'உடலிடங் கொண்டாய் யானிதற் கிலனொர் கைம்மாறே' என மணி வாசகர் கூறியவாறு "எனது ஆகமதில் வாழ்குமர!" எனப் போற்றி, கூற்று விழுந் தோட வள்ளி- தேவசேனை இருவருடனும் எனது ஆகத்தில் வாழ்பவன் செவ்வேள் என வாழ்த்திப் பணிந்தனர். பின்பு, திரு நீலகண்ட யாழ்ப்பாண நாயனாரது தலமாகிய (16) எருக்கத்தம் புலியூரைத் (763) தரிசித்து யாழ்ப்பாண் நாயன் பட்டினம் என அதைப் போற்றி, (17) திரு முட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) (764-765) சேர்ந்து அங்கு ஆண்டவனைத் தரிசித்து, 'பல வகைத்தான முத்து மாலைகளை யணிந்து அடியார் குழாத்துடனும் தேவிமாருடனும் பச்சை மயில் மீது வந்து நினது தரிசனத்தைத் தருவாயே' என (764) வேண்டி, அத்தலத்து ஆதிவராகப் பெருமாளையும் தமது பதிகத்திற் (765) குறிப்பித்தார்.
மேலும், இப்பதிகத்தில் திருமால் அமுது பங்கிட்டபோது சிவபக்தருக்கு இவ்வமுதைப் பகிர்வேன் எனப் பகிர்ந்து கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ள விஷயம் அறிந்து மகிழத்தக்கதாம். பின்பு (18) கடம்பூருக்கு (761) வந்து பணிந்து,
அங்கிருந்து (19) ஆச்சாபுர நல்லூரை (766) அடைந்து "சங்கர தியாகர் வந்துறை நல்லூர்" என விளக்கிப், பின்பு (20) மயேந்திரப் பள்ளியை (767) அடைந்து போற்றி, அத்தலத்துப் பதிகத்தில் வள்ளியம் மையை "என்றன் உளம்புகு பாங்கிமான்" எனப் புகழ்ந்தனர். அங்கிருந்து ஸ்ரீ சம்பந்தப் பெருமானது அவதார ஸ்தலமான (21) "சீகாழியைச்" (168-781) சேர்ந்தார்.
--------------------
3. சீகாழி முதல் திருவாரூர் வரை (19 தலங்கள் : 21-39)
தமது வழிபாடு கடவுளாகிய ஸ்ரீ சம்பந்தப் பெருமானது தலமாயிற்றே என மகிழ்ந்து சீகாழியிற் சில நாள் சுவாமிகள் தங்கினர். சீகாழிக்கு உரிய பன்னிரு நாமங்களில் - காழி, புகலி, சண்பை, பிரமபுரம், கொச்சை, கழுமலம், பூந்தராய் என்பன இவர் பாடிய பாசுரங்களில் வந்துள்ளன. ஞானசம்பந்தப் பெருமானது பெருமையை மனமார வாயாரத்
தமது பதிகங்களில் எடுத்து ஓதினார். சீகாழிக்கு உள்ள 14 பதிகங்களில் ஏழு பதிகங்களில் சம்பந்தப் பெருமானது லீலைகள் பாராட்டப்பட்டுள்ளன. ஸ்ரீ சம்பந்தப் பெருமான் பண்பிலாத எண்ணாயிரம் சமணரைக் கழுவேற்றியதும் (770, 771, 773, 778), சமணர் கலங்கத் தமிழ்-(தேவாரம்) கூறியதும் (775), பாண்டியனுடைய சுரப் பிணியைத் தீர்த்ததும் (770, 772), பாண்டி நாட்டில் திருநீறு பரவச் செய்ததும்(778), சம்பந்தர் கவுணிய கோத்திரத்தினர் என்பதும் (768,778), முத்தமிழாகரன் என விருது ஊதப் பெற்றவரென்பதும் (771), பால பருவத்தினர் என்பதும் (778), அவர் ஞானத் தமிழ்ப் பாடல்களை-வேதக் கவிகளைப்பாடினா ரென்பதும் (770,778) விளக்கப்பட்டுள்ளன. திருநீற்றின் சிறப்பும் (769), ஹர ஒலியின் பெருமையும் (769), நரகில் வீழ்வோர் இவரிவர் என்பதும் (769), 'பிரமபுரம்' என்பவர் மனதிலும் 'குகன்' என்பவர் மனதிலும் முருகன் அன்புடன் குடி கொள்வ ரென்பதும் (775), சந்தக் கவி நூல் முருக பிராற்குப் பிரிய மென்பதும் (776), முருகவேள் தமக்குத் தரிசனந் தந்து சக்ஷூ தீக்ஷை செய்தனரென்பதும் (773) இத்தலத்துப் பதிகங்களிற் குறிக்கப்பட்டுள. பின்னும் ஒரு பாசுரத்தில் முருக வேள் வள்ளியம்மையின் மலர்ப்பாதங்களை வருடி அவ்வம்மையாருக்கு உதவியாக ஆயால் ஓட்டும் தொண்டினைக் கூடத், தாம் அத்தொழிலுக்குப் புதிதாயிருந்தும், மேற் கொண்டு செய்தாரெனவும்-
-
"மலைதனில் ஒரு முனி தந்த மாது தன்
மலரடி வருடியெ நின்று நாடொறும்
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி கொண்டினோனே"-
(768)வம்பு=புதுமை
எனக் -கூறி மகிழ்கின்றார். இக்கருத்தைத்"தினைக் காவல் கொண்ட முருகா"(902)- என்னும் திருப்புகழிலுங் காண்க.
பின்னர்ச் சீர்காழியினின்றும் அரிதின் நீங்கி (21A) காவிரிப் பூம்பட்டினத்தைத்[1] தொழுது, பின்பு(22) கரியவனகர் (782) என்னும் தலத்தைத் தரிசித்துத் 'தமிழிற் பாடல் கேட்டருள் பெருமாளே' எனத் தமிழ்க் கடவுளைப் போற்றினர் 782 - ஆம் பாடலின் ஈற்றடிக்கு-
'கரியன னிளையத் தேவி பார்ப்பதி, யருள் செய்த குமரக்
கீரர் பாட்டியல் கருணை கொடருளிப் பாடல் கேட்டருள் பெருமாளே' -
எனப் பாடபேதம் உண்டு. பின்பு (23) திரு மண்ணிப் படிக் கரைக்கு (791) வந்தார்.
---------------------------------------------------------
[1]. காவிரிப்பூம் பட்டினம்- திருப்புகழ் வைப்பு ஸ்தலம் க்ஷேத்திரக் கோவைப் பதிகம்1304 பார்க்க'
திருமண்ணிப்படிக்கரையிற் கனா நிகழ்ச்சி
(வயலூர் முருகர் தரிசனம்)
இத்தலத்தில் இவரது கனவில் முருகபிரான் ஏகமுகத் துடன் கழலும், கடம்பமாலையும், வேலும் விளங்க மயில்மிசைத் தோன்றித் "திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ள மேலை வயலூர் என வழங்கும் 'செய்ப்பதி'யில் உள்ளேம். நமது திருப்புகழை நித்தம் பாடும் அன்பை உனக்கு அவ் வயலூரிற் ப்ரசாதிப்போம். நீ அங்கு வந்து சேருக" - எனக் கட்டளையிட்டு மறைந்தார் போலும். அருணகிரியார் விழித்தெழுந்து 'கனவிலாள் சுவாமி நின் மயில் வாழ்வும், கருணை வாரி கூர் ஏக முகமும், வீரம் மாறாத கழலும்' நீப வேல் வாகும் மறவேனே, மேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே (916) எனப் போற்றி, 'பெருமானே! நீ அடியேற்குப் புலப்பட உரைத்த வயலூர்ப் பதியை என்று காண்பேன்! உன் திருப்புகழை நித்தம் பாடும் பாக்கியத்தை என்று பெறுவேன்!' என உள்ளம் உருகி, "புயற் பொழில் வயற்பதி நலப்படு ப்ரியத்தோடு புலப்பட எனக்கருள் பெருமாளே' (271-பாடபேதம்) என்றும், "செய்ப்பதித் தலத்தினைத் துதித் துனைத் திருப்புகழ்ப் பகர்வேனோ, திருப்படிக்கரைப் பெருமாளே' (791) -என்றும் போற்றி வணங்கி வயலூரைத் தரிசிக்கும் ஆசை உந்தப் புறப்பட்டு (24) வைத்தீசுரன் கோயிலை (783-788) அடைந்தார்.
வைத்திய நாதப் பெருமாளே என முருகவேளையே துதித்து (783), தையல் நாயகித் தாயும் அவ்வம்மை பாகராம் நாதரும் பிரியப்பட முத்தந் தந்தருள் பெருமாளேஎன்று முத்துக் குமார்" எனப் பெயர் வந்ததின் காரணத்தை விளக்கி (785), அத்தலத்துச் சிவபிரான் "தீரா நோய் தீர்த்தருள வல்லான்', என்பதை 'வினை தீர்த்த சங்கரர்' என்னுந் திருநாமத்தால் விளக்கி (787), சம்பாதி, சடியு எனப் பெயரிய பறவைகள் (புட்கள்) பூசித்த தலம் 'புள்ளிருக்கு வேளூர்' (788) என்பதையும் புலப் படுத்தியுள்ளார்.- பின்பு அங்கிருந்து (24A)[1] திருக்குறுக்கையையும், (24B) [2] பொன்னூர் என்கிற அன்னியூரையும் தரிசித்து, (25) மாயூரத்துக்கு [792] வந்து இறைவன் தம்மை முதல் முதலில் பாடவைத்த அருட் பேற்றினை-
-
'எமது மலத்தைக் களைந்து, பாடென அருள, அதற்குப்
புகழ்ந்து பாடிய இயல் கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் முருகோனே. (792)
என நன்றி பார்ட்டப் போற்றினர்.
----------------
[1]. குறுக்கை - திருப்புகழ் வைப்புத் தலம். திருப்.28, 439.
[2]. தமனியப்பதி (திருப். 706) பொன்னூர் எனக் கொண்டால் இத்தலத்தைத் தரிசித்தார் எனக் கொள்ளலாம்; தமனியம் = பொன்.
பின்பு[1] தான் தோன்றியப்பர் என்னும் திருநாமத்துடன் சிவபிரான் வீற்றிருக்கும் (26) ஆக்கூரைத் (804) தரிசித்துத் (27) திருக்கடவூருக்கு (789, 790) வந்து அது காலனை ஈசன் சங்காரம் செய்த தலம் என்பதையும் அது காலனை யுதைத்தது தேவியின் சீர்பாதம் என்பதையும் தமது பாடல்களால் விளக்கினார். 790-ம் பதிகத்தில், வள்ளியை "ஓம் என்கிற உபதேசவித்துடன்" இறைவன் அணைந்தனர் என்றது கவனிக்கற் பாலது உபதேச வித்து சிவனார்க்கு அருளப்பட்டது 224 -ஆம் பதிகத்தில் காணலாகும். திருக்கடவூரை நீங்கிக் கடற் கழிக்கரையில் உள்ள (28) பாகை (793-795) என்னும் தலத்தைத் தரிசித்துக் "கடல் கழி பாயும் பாகை" என விளக்கிப், பின்பு திருக்குராமர நீழலில் முருகபிரான் அமர்ந்துள்ளதும், சேந்தனாரது திருவிசைப்பாப்பதிகத்தைப் பெற்றுள்ளதுமான (29) திருவிடைக்கழி (796-803) என்னும் திவ்ய தலத்தைத் அடைந்தார். அங்கு ஆண்டவனை வணங்கித் "திருக்குரா நீழலில் அமரும் பெருமானே! உன் திருவடியை நாடி உருகி எனது உள்ளத்தே அமுதூற உனது திருப்புகழை நான் ஓதும்படியான பாக்கியத்தை அருள வேண்டும்"-
-
[உன் கமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
உனது திருப் புகழோத அருள்வாயே"] 800
எனப் பிரார்த்தித்தனர்.
----------------
[1]. தான் தோன்றி எனவே கொங்கு நாட்டில் ஓர் ஊர் உளது. தலம் 105A பார்க்கவும். கொங்கு மண்டல சதகம் ஊர்த் தொகை பக்கம் 10.
முத்தி தரும் தலம் திருவிடைக்கழி என்பதை "முத்தியைத் தரு திருவிடைக்கழி" (799) என உலகோர்க்கு உணர்த்தினர். இத்தலத்தில் முருக பிரான் திருக்குரா மர நீழலில் அமர்ந்துள்ள திருக்கோலத்தை அப்படியே தமது உள்ளக் கிழியில் உருவெழுதிப் பின்னர்த் திருத்தணிகை முருகனை தரிசித்த காலையில் "கொந்துவார் குரவடியினும் (289)... மருவிய தணிகையில் இணையிலி" எனவும் சுவாமி மலையைத் தரிசித்த போதும் "குராவின் நிழல் மேவுங் குமாரனென[1] நாளும் குலாவி யினிதோது அன்பினர் வாழ்வே" (201) எனவும் போற்றினர். திருவிடைக்கழி ஆண்டவர் திருத்தணிகை யாண்டவர் போலவே தொடையின்மிசை இடது திருக் கையை வைத்துள்ளார்;
------------
[1]. பழநிமலையிலும் குராவடிக் குமரர் சந்நிதி ஒன்றுளது.
ஆதலால் தணிகைப் பிரானை நினைக்கும் பொழுதெல்லாம் இடைக்கழி எந்தையின் ஞாபகம் இடைக்கழியை நினைக்கத் தணிகை ஞாபகமும் அருணகிரியார்க்கு அவசியம் வரும். உதாரணமாக--
-
"கொந்துவார் குரவடியினும்...மருவிய...தணிகையில் இணையிலி" -திருப்289"
"இடைக்கழியில்..அழகிய செருத்தணியில்" - வேடிச்சி காவலன் வகுப்பு
"இடைக்கழியில் ஒரு செருத்தணியில் இனிதிருக்கும் அறுமுகன்" --பொருளகத் தலகை வகுப்பு
"ஏரகம் இடைக்கழி...ஏரணி செருத்தணியில்-வேளைக்காரன் வகுப்பு
இடைக்கழியும்...செருத்தணியென் வெற்பும்" - பூத வேதாள வகுப்பு
"திருத்தணி...கோடை... அதிப இடைக்கழிமேவு பெருமாளே" -திருப். 800
அருணகிரியார்க்கு விசேட வித்தைகளை முருகவேள் அநுகிரகித்த தலங்களுள் திருவிடைக் கழியும் ஒன்றென்பது-
-
"அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில்
அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில்
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறியென இமைப் பொழுதில் வாழ்வித்த வேதியனும்...
--வேடிச்சி காவலனே.
என்னும் திருவகுப்பால் தெரிகின்றது:
பின்பு, திருவிடைக் கழியினின்றும் புறப்பட்டுத் தக்கன் யாகத்துக்கு வந்த தேவர்களது தீமையைப் பறித்த தல மாகிய (29A)[1] திருப்பறியலூரை வணங்கிச், சிவபிரான் யானையை உரித்த தலமாகிய (30) வழுவூரை (813,814) வணங்கி, அடிநாளில் முருகபிரான் தமக்குத் திருவடி தீக்ஷை செய்து மயில்மீது தம்முன் வந்து காக்ஷி தந்து ஞானோபதேசம் செய்து உதவியதைத் "தலைநாளிற் பதம் ஏத்தி, அன்புற உபதேசப் பொருள் ஊட்டி, மந்திர தவஞானக் கடலாட்டி என்றனை...முத்தமிழூட்டி கதிர்தோகைப் பரிமேற்கொளுஞ் செயல் மறவேனே" (814) என நன்றி பாராட்டிப் போற்றினர். பின்பு (31) கந்தன் குடியை (805) வணங்கி நக்கீரருக்கு அருளினதைப் பாராட்டி, அங்கிருந்து (32) திலதைப்பதி (806-808) என்னும் தலத்துக்குச் சென்று தரிசித்து உலகர் புகழைப் போற்றாது உன் உரிமைத் திருபுகழைச் சொல்லித் திரியும் பணியே வேண்டுவேன் (808) எனப் பணிந்து, பின்பு சோமாசி மாற நாயனார் முத்தி யடைந்த தலமாகிய (33) அம்பர் (809) என்னுந் தலத்தை அடைந்து, ஆறுமுகப்பிரானது குழந்தைத் திருவிளையாடல்களைச் சிறப்பித்துப்பாடி, அதற்கு அருகில் உள்ள (34) அம்பர் மாகாளத்தைச் (810) சேர்ந்து "குரு நாதா! நான் நிதமும் "நாதா! குமரா! முருகா!" என ஓத நினது திருவருட் பேற்றினைத் தந்தருளுக" என வேண்டினர்.பின்னர், (35) 'திருநள்ளாறு' (812) வந்து சேர்ந்தனர்.
-----------------
[1]. திருப்பறியலூர் - திருப்புகழ் வைப்புத்தலம். -திருப் 439
இத்தலத்துத் தேவியார் "போக மார்த்த பூண்முலையா"ளது திருநாமங் கொண்ட திருப்பதிக ஏடு அல்லவா அன்று சம்பந்தப் பெருமான் சமணரொடு வாது செய்து நெருப்பிலிட்ட பொழுது வேகாது "பச்சை'யாயிருந்த தென்று ஞாபகம் வரத் தமது பாடலையும் தேவியின் திருமுலை வர்ணனையாகப் "பச்சை யொண்கிரி போலிரு மாதனம்" (812) எனத் துவக்கினர். இப்பதிகத்தில் "சித்தர் விஞ்சையர் மாகர் சபாஷென" என்னும் அடியில் 'சபாஷ்' என்னும் பதம் வந்திருப்பது கவனிக்கற் பாலது; இதனால் இவர் காலம் மகம்மதிய ராஜ்ய காலம் வந்த பிறகு என்பது ஏற்படும். திருநள்ளாற்றை விட்டுக் (36) 'கன்னபுரம்' (815) தரிசித்து வள்ளியைப் பின்னிரவிற் கன்னமிட்ட லீலையைப் பாடிப், பின்பு (36A) திரு மருகலைத்[1] தரிசித்து, (37) 'திருச்செங்காட்டங் குடிக்கு' 817) வந்து சிறுத் தொண்ட நாயனார் பிள்ளைக் கறியமுதளித்த பெருந்தொண்டைச் சிறப்பித்துத், (38) 'திருவிற்குடி' (818) சேர்ந்து 'குழியுற்ற அத்தி' போல மங்குவேனோ என ஆண்டவனிடம் விண்ணப்பஞ் செய்து, (39) விஜய புரத்'துக்கு (819) வந்து வணங்கித் (40) 'திருவாரூர்' சேர்ந்தனர்.
------------
1. திருமருகல்-திருப்புகழ் வைப்புத்தலம்-திருப். 165.
மறவேன் (833) எனத் திடம்பட உரைத்து, 'உன் திரு
----------------------------
4. திருவாரூர் முதல் வேதாரணியம் வரை [5 தலங்கள் 40-44]
திருவாரூரிற் (820-826) சில நாள் தங்கி மநு நீதி சோழன் அத்தலத்தில் தனது மகன் மீது தேரை ஊர்ந்த நீதியைச் சிறப்பித்துப் (825) பாடிச், (41) சிக்கல் (830-831) என்னும் க்ஷேத்திரத்தை அடைந்து 'சிக்கற் சிங்கார வேலவ: உலகோரைப் பாடிப் புகழும் புத்தியை விட்டு உனது பாத தாமரையே உற்ற பற்றெனச் சிக்கெனப் பிடித்துள்ளேன். நீ கடைக்கண் பார்த்துப் பேரின்ப வாழ்வை யருளுதல் வேண்டும்' (831) எனப் பிரார்த்தித்து, (42) நாகபட்டினம் (832-834) வந்தார். அது கடற்கரையூர் ஆதலின் கடலின் ஒலி 'ஓலம்! முருகா' என ஓலிடுவது போலத் தமது காதில் முழங்க அவ்வொலியையே முதலாகக் கொண்ட ஓலமிட்டிரைத் தெழுந்த வேலை" என வரும் பதிகத்தைப் (832) பாடிப், பெண்கள் மயக்கு என்னைத் தாக்கினும் உன் கழலை வடியே உறவாக மருவும் அழியா வரம் ஒன்ழையே யான் விரும்புகின்றேன்' எனக்கூறி, மணிவாசகப் பெருமான் "வேண்டத் தக்க தறிவோய் ந ே" என்றது போலத் தாமும் தமக்கென்று ஒரு இச்சை வேண்டாம் என்னுங் கருத்துடன் "முருகா! நீ எதைக் கொடுக்க விரும்புகின்றாயோ அதைக் கொடு ["இறைவா! எதுதா அதுதா!"] எனப்பாடி (834) வணங்கினர்.
நாகையை விட்டுத் (42A) [1] தேவூரை வணங்கி, (43) 'எட்டிகுடி' (835-838) என்னும் தலத்தை அடைந்து, பிரானைத் தரிசித்துப் பரவசம் அடைந்து, திருநாவுக்கரசு சுவாமிகள் பெண்ணாகடம் என்னும் தலத்தில் 'சிவபெருமானே- என் ஆவியைக் காக்க உனக்கு இச்சையுண்டேல், கூற்றுவன் என்னைக் கண்டதும் விலகி நிற்க (நான் உன் அடிமைப் பொருள் என்பதற்கு அடையாளமாக) உனது "மூவிலைச்சூலம் என் மேற் பொறி", "இடபம் பொறித்து என்னை ஏற்று கொள்ளாய்" என விண்ணப்பித்தது போலத் தாமும்- "நாயேன் ஓயா தலையாதே - 'தற்பொறி' வைத்தருள் பாராய் எட்டி குடிப் பதிவேலா!'- என விண்ணப்பிதது (838), 'என்றைக்கு எம்பெருமான் தமது வேற்பொறி, மயிற் பொறியிட்டு என்னை ஆண்டருள்வாரோ' எனக் கவலை கொண்டனர். எட்டி மரத்துக் "காஞ்சிரம்" என ஒரு பெயர் இருப்பதால் எட்டிகுடி என்பதை காஞ்சிரங்குடி எனப் பெயர் புனைந்து ஒரு பதிகம் பாடினர் (836). இத்தலத்தும் தாம் கனவிற் கண்ட வயலூர்ப் பெருமானை மறவாது 'வயலூரா' எனத் (838) துதித்தார். பின்பு (44) 'வலிவலம்' (842) என்னும் தலத்தை அடைந்து சீகாழிப் பதிகத்திற் (769) போலத் திருநீற்றின் பெருமையையும், ஹர ஒலியின் பெருமையையும் சிறப்பித்துப் பின்னர்க் (44A) 'கைச் சினத்தைத்[2]' தரிசித்துப் பின்னர்த் (44B)[3] 'தண்டலை நீணெறி' என்னும் தலத்தை வணங்கி (45) 'வேதாரணியம்' வந்து சேர்ந்தார்.
---------------------------------------------------------------------------------------------------
[1]. தேவூர் - திருப்புகழ் வைப்புத்தலம் -- திருப் 439
[2]. கைச்சினம் - திருப்புகழ் வைப்புத்தலம் --491-ஆம் பாடல் "முத்துரத்ன சூத்ரம்" என்பதின் பாட பேதத்தைப் பார்க்க.
[3]. தண்டலை - திருப்புகழ் வைப்புத்தலம் -- (28--திருப்)
----------------------------
5. வேதாரணியம் முதல் கும்பகோணம் வரை: (14 தலங்கள்: 45-58)
திருத்தணி, செந்தில் பழநியிற் போலப் பெருமான் (45) வேதாரணியத்திற் (843-845) சிறப்புற்று விளங்குவதைக் கண்டு தரிசித்து ஆனந்தம் உற்றார் (844-45) ராவணனைக் கொன்ற வீரகத்தி நீங்க ஸ்ரீ ராமர் அருள் பெற்ற தலமாதலின் ஸ்ரீராமர் சரிதம் இத்தலத்து மூன்று பாடல்களிலும் சொல்லப் பட்டுளது. வேதாரணியத்திலிருந்து சென்று (46) கோடிக் குழகர் கோயிலைப் (846) பணிந்து பாடினர். இத்தலத்துப் பதிகத்தில் "வன வேடர் விழ சோதி கதிர் வேலுருவு மயில் வீரா" என்றார். வள்ளியைத் திருடி வந்த பொழுது வேடர்கள் தொடர்ந்து வர அவர்களைத் தமது வேலால் முருகர் வீழ்த்தினர் என அருணகிரியார் கூறுகின்றார். இப்படியே 'பொருளின் மேல்' என்ற 341-ஆம் பாடலிலும், 'கலக சம்ப்ரம' என்னும் 940-ஆம் பாடலிலும் கூறியுள்ளார். ஆனால் கந்த புராணத்தில் முருகவேள் தமது சேவலின் ஒலியால் வேடர்களை வீழ்த்தினர் எனக் கூறப்பட்டுள்ளது. மீண்டும் வேதாரணியத்தைத் தரிசித்து (47) எண்கண் (839) என்னுந் தலத்துக்கு வந்தனர். அங்கு, 'முருகா! எனது மனம் வாக்கு, காயம் மூன்றும் உனக்கே ஆகும் வண்ணம் 'சந்ததம் புகழ்ந்து (வாக்கு), உணர்ந்து (மனம்), செம்பதம் பணிந்திரு (காயம்), என்று மொழிந்தருள்வாய்" என வேண்டினர்; பின்னர்க் (48) குடவாயில் (840-841) என்னுந் தலத்தைச் சேர்ந்து தரிசிக்க அங்கு முருகவேள் சம்பந்தப் பெருமானது "மணங்கமழ் தெய்வத் திளநலங்" காட்டச் சம்பந்தரே முருக ரெனும்படி மிக அருமை வாய்ந்த "சுருதியாயியலாய்" என்னும் (841) திவ்யமான திருப்பதிகத்தைப் பாடிப் "பெருமானே! யாவரும் அறியொணாததை நீ குருவாய் எனக்குப் பகர்ந்தாயே! இப்பேறு யான் முன்ஜென்மங்களிற் செய்த தவத்தின் பயனோ?" - எனப் பாராட்டி மகிழ்ந்தனர். இப்பதிகத்தில் பரம மாயையின் நேர்மையையும் சம்பந்தப் பெருமானது திருவிளையாடலையும் சொல்ல முடியாத அழகுடன் சொற்களை அமைத்துச் சுவாமிகள் பாடியுள்ளார். இது மனப்பாடஞ் செய்ய வேண்டிய ஓர் அருமைப் பாடலாகும்.
குடவாயினின்றும் நீங்கித் (49) திருவாஞ்சியம் (816) வந்து அத்தலத்துப் பாடலில் வாழ்க்கை நிலையாமையை விளக்கி, வயலூரையும் போற்றி, திருவாஞ்சியம் முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்று என்னும் அரிய விஷயத்தையும் "முத்தியருள்தரு திருவாஞ்சியம்" என்றதனால் விளக்கினார். சுவாமிகள் காலத்தில் வட வேங்கடத்தில் திருமால் கோயில் கொண்டிருந்தார் என்பது இப்பதிகத்தில் 'உலகீன்ற பச்சையுமை ய(ண்)ணன் வடவேங்கடத்தி லுறைபவன்' என வருவதால் தெரிகின்றது. திருவாஞ்சியத்தை விட்டபின் (50) திரியம்பக புரம் (829) என்னும் தலத்தைத் தரிசித்துப், பின்னர்க் (51) கூந்தலூரைச் (878) சேர்த்து தமது குற்றங்களை எடுத்துப் பலவாறாகக் கூறி - அத்தகைய நான் பலமலர் கொண்டோ ஒரு மலர் கொண்டோ உனது தாளைத் தொழ அருள் புரிதி என வேண்டியும், அடியார் புகழை ஆய்தலின் பலனை எடுத்துக் கூறியும் பதிகம் பாடினர். பின்பு அங்கிருந்து (52) திருவீழி மிழலைக்கு (851) வந்து, கணக்கிலாப் பிறப்பெடுக்கும் தொல்லையைக் கூறி, ஒரு முறை 'முருகா' என்ற போதிலும் உயர்கதி வரும் எனும் உண்மையை எளிய நடையில் அருமையாக விளக்கிப் பாடினார். இப்பாடல் மனப்பாடஞ் செய்து பாராயணஞ் செய்ய வேண்டிய பாடல்களுள் ஒன்றாம். இப்பாடலில் உள்ள
"ஒருகால் முருகா பரம குமரா உயிர்கா எனவோதருள் தாராய்"
"முருகா எனவோர் தரமோ தடியார் முடிமே லிணை தாள் அருள்வோனே"
என்னும் அடிகள் ஜெபத்துக் குரியன.
திருவீழிமிழலையினின்றும் (53) திருவாவடு துறை (852)க்கு வந்து சொற்பிழை வராது துதிக்க வேண்டும் என்னும் நீதியை உபதேசித்து மயில் வாகனத்தைச் சிறப்பித்துப் பாடினார். பின்பு (54) திருப்பந்தணை நல்லூர் (854-860) என்னும் தலத்தை யடைந்து 'கந்துகம்' என்னும் சொல்லுக்குப் 'பந்து' என்று பொருளிருப்பதால் அத்தலத்தை 'கந்துகாபுரி' எனப் பெயரிட்டுப் (860) பாடினர்; சிவபிரான் தம்மை அடிமையாக ஆட் கொண்டதை "எனையடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர்" எனப் பாராட்டினர் (856); சந்தத் தமிழைச் சொரிந்து நின்னைப் பாடும் பாக்கியத்தைப் பாலித்தருளுக. ["நான் உனை நிகர் சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள் தாராய்" - 860]- என வேண்டினர். பின்பு (55) மருத்துவக் குடி (853) என்னுந் தலத்தைச் சார்ந்து முத்தமிழ்ச் செழிப்பை நத்திய சீலன் முருகன் எனப்பாடி, மஹாலிங்கப் பெருமான் வீற்றிருக்கும் மஹா க்ஷேத்திரமாகிய (56) திருவிடை மருதூரைச் (862-865) சேர்ந்தனர். "பெரியவர்" வீற்றிருக்கும் பெரிய தலத்துக்குப் பெரிய பாடல் பாட விரும்பி வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே விளக்கும் 'அறுகுநுனி' என்னும் (862) பெரிய அருமைப் பதிகத்தைப் பாடி வாழ்க்கைத் துன்பங்களை விளக்கி இத்தகைய புல்லிய வாழ்வை உனது அடியார்கள் பெறுவ தென்றால் உலகம் உன்னை ஏசிடாதோ பாசநாசா! என தம்மை ஆண்ட பிரானிடம் விண்ணப்பித்தனர். எனக்குத் தவ நெறி வேண்டும் (864), சிவஞான போதம் வேண்டும் [865] குருநாதனே! நான் உன் மீது மதுரகவி பாட வேண்டும்; பேரின்பந்தரும் அறிவைப்பெற வேண்டும்; அரிய தமிழ் ஓசை ததும்பும் ஒளி வசனம் என் வாக்கினின்றும் வருகின்ற வழிபாட்டில் நான் பயிலுதல் வேண்டும். இங்ஙனம் அருள் புரிதி எனப் பொருள்படும்படி-
-
"மதுரகவி யடைவு பாடி வீடறிவு
முதிர அரியதமி ழோசை யாக ஒளி
வசன முடைய வழிபாடு சேரும் அருள் தந்திடாதோ (863)
எனப் பாடிப் பணிந்தார். பின்னர் (57) திரிபுவனத்தைத் தரிசித்து (866) முருகவேளைச் 'சித்தர்கள் தம்பிரான்' எனப் போற்றி, அங்கிருந்து (58) திருப்பனந்தாள் (861) என்னுந் தலத்தை அடைந்து 'உன் மனச் சுழற்சியை நிறுத்தவல்ல ஒரு அற்புதப் பொருள் இந்தா!" என அளித்தருளுவாய் என வேண்டித் துதித்தனர். பின்னர் அங்கிருந்து (59) கும்பகோணம் (867-874) வந்து சேர்ந்தார்.
---------------------------
6. கும்பகோணம் முதல் சுவாமிமலை வரை 9 தலங்கள்: (59-67)
அற்புதத் திருப்புகழே பாடவேண்டும் என்னுங் கருத்தே நிறைதவராய்க் "கும்பகோணத்திற் பெருமாளே! செஞ்சொல் சேர் சித்ரத் தமிழாலுன் செம்பொனார்வத்தைப் பெறுவேனோ!" - எனச் சித்ரத் தமிழ் பாடும் விருப்பினை (870) வெளியிட்டார். காலையில் எழுந்ததும் இறைவன் திரு நாமத்தைக் கூறவேண்டும் என்னும் உபதேசத்தைக் 'காலை யிலெழுந்துன் நாமமே மொழிந்து காதலுமை மைந்த என ஓதி" (871) -- என்னும் பதிக அடியில் விளக்கி யருளினார். கும்பகோணத்தில் உள்ள (60 சோமீச்சுரத்தை (874) வணங்கி "முருகா! நான் எந்த நிலையிலிருந்த பொழுதும் உனது இளமை, உனது அழகு, உனது பன்னிரு தோள் வரிசை, உனது இரு பதம், உனது ஆறுமுகம் - இவை தமை ஓதும் ஞானம் மாத்திரம் நழுவாதிருக்க வரந்தந்தருளுக" என வேண்டினர். பின்பு கும்பகோணத்தில் உள்ள (61) பெரிய மடத்தைத் தரிசித்தார். பெரிய மடம் என்பது வீர சைவ மடம். இது கும்பகோணத்தில் மஹாமக தீர்த்தத்தின் வடகரையில் உள்ளது.
-
"குடந்தையம் பதியிற் கோதிலாப் பெரிய
மடந்தனில் வாழ்வீர மயேச்சுரர் வாழியே"-
--(தச்ச யாகப் பரணி: பக்கம் 255)
இந்தப் பெரிய மடத்தில் உள்ள முருக வேளைப் 'போற்றி', 'போற்றி' எனத் துதித்து, "அருணகிரிநாத" எனத் தமக்குப் பட்டம் அளித்து அழைத்த அன்பினைப் பாராட்டி, "அருணகிரி நாத எனும் அப்பனே போற்றி" எனத் துதித்து, ஆரம்ப அறிவும் இலாத நான் நன்னெறியில் நிற்க நீ தீக்ஷை செய்தருள வேண்டும் (தலையறிவிலேனை நெறி நிற்க நீ தீக்ஷை தரவேணும்) எனப் பிரார்த்தித்தனர். அதன் பின்னர் [62] ஆடுதுறையைத் தரிசித்துத், தென் குரங்காடு துறை - வட குரங்காடு துறை [883- -885] என்னும் இரண்டு தலங்களையும் சேர்த்துப் பாடி, இப்பிறப்பேனும் உரம் (பயன்) பெற வேண்டும் [885] என வேண்டினர். பின்னர், (63) சிவபுரம் [876] என்னுந் தலத்தைப் பணிந்து அத்தலத்துப் பதிகத்தில் அசுரரை அழிக்கச் சிவபிரான்[1] வேல் தந்தனர் எனக் கூறியுள்ளார். அதன் பின் (64) கொட்டையூரைப் (875) பணிந்து அத்தலத்துப் பதிகத்தில் ராவணனுக்கு யாழ் (வீணை) கொடி என்பதையும், திருமால் பூசித்த தலம் கொட்டையூர் என்பதையும் விளக்கினார். பின்னர்ப் (64A) [2] புறம்பயம், (65, சத்தி முத்தம்[879], [66] பழையாறை [881],[67] திருவலஞ்சுழி [880] என்னும் பதிகளைப் பணிந்தார். திருவலஞ்சுழிப்பதிகத்திற் கண் வர்ணனையும்' 'எழுபது வெள்ளம் கவி' கள் [3] ஸ்ரீ ராமருக்குச் சேனையாய் உதவி புரிந்தன எனக் கூறப்பட்டதும் கவனிக்கற் பாலன. பின்னர்த் திருவலஞ்சுழியை விட்டு ஆறுபடை வீடுகளில் நான்காவதாகிய [168] திருவேரகம் என்கின்ற சுவாமி மலைக்கு [195-232] வந்து சேர்ந்தார்.
--------
[1]. "கொம்பனையார்" என்னும் பதிகத்தில் [66] தேவி தந்ததாகக் கூறியுள்ளார்.
[2]. புறம்பயம் - திருப்புகழ் வைப்புத்தலம் - திருப். 28
[3]. 'ஏற்ற வெள்ளம் எழுபதினிற்ற வென் றாற்றலாளர்" கம்ப ராமாயணம் -- நாடவிட்ட படலம் [2]
-----------------------------------------------------------
7. சுவாமிமலை முதல் --திருச் செங்கோடு வரை (19 தலங்கள் 68-86)
சுவாமி மலையில் ஆண்டவரைத் தரிசித்து அன்று சம்பந் தாண்டானொடு செய்த வாதில் "கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே! சந்தச் சபை தனில் எனதுளம் உருகவும் வருவாயே" (210) என அடியேன் அழைத்த பொழுது வந்து உதவி வெற்றி யளித்தவர் இந்தக் குருபர மூர்த்தி தானே" என்னும் மன மகிழ்ச்சியுடன் சிலநாள் அந்தத் தலத்தில் தங்கி முருக வேளைப்பாடிப் பரவினார். சுவாமிகளுடைய திருவாக்கால் தான் திருவேரகம் என்னும் படை வீட்டுத் தலம் சுவாமிமலை எனத் தெளிவு பெற விளங்கலாயிற்று. ஐயப்பாடே இல்லாது "ஏரக வெற் பெனும் அற்புத மிக்க சுவாமி மலைப்பதி" என 197, 198 எண்ணுள்ள பதிகங்களில் விளக்கியுள்ளார்.
சுவாமி மலையிற் பாத தரிசனப் பேறு
இத் தலத்தில் அருணகிரியார்க்கு முருக வேளின் "பாத தரிசனம்" கிடைத்தது. இது-
-
"தணிகை தெனக்குன் அடிகாண வைத்த
தனி யேரகத்தின் முருகோனே (199)--
என்னும் பதிக அடியால் விளங்குகின்றது.
ஆண்டவனைப் (பரமாத்மாவை) நாயகனாகவும் தன்னை (ஜீவாத்மாவை) நாயகியாகவும் பாவித்துப் பரமாத்மாவின் மேலுள்ள காதலை வெளிப்படுத்தும் முறையிற் பாடுகின்ற நூல் "உலா" எனப்படும். பரமாத்மாவை நாயகியாக வும் ஜீவாத்மாவை நாயகனாகவும் பாவித்துப் பரமாத்மாவின் மீதுள்ள காதலைப் புலப்படுத்தும் வகையிற் பாடுகின்ற நூல் "கோவை" எனப்படும். பரமாத்மாவைக் குழந்தையாகப் பாவித்து அதன் மீதுள்ள காதலைத் தெரிவிக்கின்ற நூல் "பிள்ளைத்தமிழ்" என்னும் நூலின்பாற் படும். திருவேரகத்துத் திருப்புகழில் "செகமாயை" என்னும் 199-ஆம் பதிகம் முருகரைப் பிள்ளைக் குழந்தையாகப் பாவித்துப் 'பிள்ளை முருகா! முத்தம் தா! என வேண்டும் பிள்ளைத் தமிழ் - முத்தப்பருவ இயல்பிற் கடவுளைப் பரவினதாகும். உலா வகையில் தன்னை நாயகியாக வைத்துப் பாடிப் பரவியது "தெருவினில் நடவா" என்னும் 218-ஆம் பதிகம். 207-ஆம் பாட்டிற் சுராதிபதி, மால், அயன்... சலாமிடு பெருமாள் என வருவதில் 'சலாம்' என்னும் ஹிந்துஸ்தானி மொழியுள்ளதால் முன் 35-ஆம் தலமாகிய திருநள்ளாற்றுப் பதிகத்தில் "சபாஷ்" என்பதைக் குறித்தது போல மஹம்மதிய அரசாட்சி ஏற்பட்ட பின் சுவாமிகள் காலம் என்பது தெரியக் கிடக்கின்றது. காவேரிக்கு நேர் வடக்கில் உள்ள தலம் திருவேரகம் (சுவாமி மலை) (200, 205, 209, 220) என்பதும், அது ஞான தபோவனர்கள் சேரும் தலம் (201, 202) என்பதும், இந்திரன், திருமால், பிரமன் வணங்கிய தலம் (195, 207, 219) - என்பதும், சதகோடி உதய சூரியர்களின் உருவொளி கொண்டது வேலாயுதம் என்பதும் [207], சிவபிரான் நின்று உபதேசங் கேட்க முருகவேள் குருவாயமர்ந்து யோகத்திருந்து உபதேசித்த தலம் [199, 200, 215, 219, 224, 226] என்பதும், [கயிலை மலையின்] கொடுமுடி சுவாமி மலை (221, பஞ்சாக்ஷர தியானத்தின் அவசியமும் [207] வள்ளியம்மை பொருட்டு முருகர் காதல் காட்டிய ஆடலும் [209], அவர் செட்டி வடிவுடன் வள்ளியம்மை பால் வந்த லீலையும் [215], ராமரின் பாணம் யார் யாரை அட்டது என்பதும்
[231]- சுவாமிமலைப் பதிகங்களால் அறியக் கிடக்கின்றன.
பின்னும், நக்கீரரை மிகப் பாராட்டியுள்ள பதிகம் "கடிமா மலர்க்குள்" [203] என்பது. நக்கீரரது பாட்டின் வளப்பமும், அவரது வாய்மைச் சொல்லும், அவருக்கு முருகபிரான் இலக்கணங்கள் போதித்த விஷயமும், 'உலகம் உவப்ப' என்று அடி மோனையுடன் அவருக்கு முருகவேள் அடி எடுத்துக் கொடுத்த அருட் ப்ரசாதமும் இப் பதிகத்திற் போற்றப்பட்டுள. காகத்துக்கு ஒரு விழி வந்த கதை "பாதிமதி நதி" என்னும் 225-ஆம் பாடலிற் குறிப்பிக்கப்பட்டுள்ளது. நோய் வகைகளைக் கூறிக் காம நோயால் பரத்தையர் சம்பந்தத்தால் வரும் நோய்களை 'மாதர் தரு பூஷணங்கள்' எனப் பரிகசித்துள்ள பதிகம்
வாதமொடு என்னும் 228ஆம் பதிகம். சமயத்துக்குத் தக்கபடி வேசையர் காலைப்பிடித்து வணங்கினும் வணங்குவர்; மயிரைப்பிடித்துப் பிணங்கினும் பிணங்குவர் என்பதைக் காலு மயிரும்பிடித்து என 216ஆம் பாடலில் விளக்கினர். 232ஆம் பாடலில் நூறு (அசுவமேத) யாகம் முடித்தவர்களுக்கு இந்திரபதவி கிடைக்கும் என்னும் விஷயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இத்தலத்துப் பதிகங்களில் மனப்பாடஞ்செய்யத் தக்க அருமை அடிகள்:-
-
1. 'பதினாலுலகத்தினில் உற்றுறு பத்தர்கள்
ஏது நினைத்தது மெத்த அளித்தருள் இளையோனே' (197)
2. 'சுராதிபதி மாலயனு மாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே' (207)
3. நீ வேறெனா திருக்க நான்வே றெனாதிருக்க
நேராக வாழ்வதற்கு உன்அருள் கூர (220)
சுவாமிமலையில் இருந்தபொழுது அருணகிரியார் ஸ்ரீசம்பந்தப்பெருமான் அருளியுள்ள திருவெழு கூற்றிருக்கைபோல ஓர்அருமைத் திருவெழு கூற்றிருக்கைச் செய்யுளும் பாடினார். (எந்தையார் பதிப்பில் மூன்றாம் பாகத்திற் பார்க்க) பின்னர்ச் சுவாமிகள் சுவாமிமலையை அரிதின்நீங்கிச் (69) காவளூரை (886) வணங்கித், (70) தஞ்சை மா நகர் (887-889) சேர்ந்தார். தஞ்சை ராஜகோபுரத்தின் அழகு இவர் மனதைக் கவர்ந்தது. அக்கோபுரத்தமர்ந்த முருகவேளை--
-
"வண்டுலாவிய நீபமாலை சற்றிலங்க வருவாயே
தஞ்சைமாநகர் ராஜகோபரத்தமர்ந்த பெருமாளே"
என அந்த ராஜ கோபுரத்தின் சித்திர அழகுக்கு இணையான சித்திர அழகு அமைந்த சந்த வகையிற் பாடி மகிழ்ந்தார். அப்பதிகத்திற் கிருஷ்ணபிரான் தேவலோகத்துப் பாரிஜாத விருக்ஷத்தைப் பூமியிற்கொணர்ந்த லீலையையும் பாராட்டியுள்ளார். அங்ஙனம் கொண்டு வந்தபொழுது சங்க நாதத்தால் தேவலோகத்தில் அவர் வெற்றிபெற்றதைத் திருப்புகழ் 15-ஆம் பதிகத்தில் "உம்பர் சேனை துளக்க வென் றண்ட மூடு தெழித்திடுஞ் சங்கபாணி" என்றும், 889-ஆம் பதிகத்தில் "இந்த்ர தாருவை ஞாலமீதினிற் கொணர்ந்த சங்க பாணியன் ஆதிகேசவ ப்ரசங்கன்" என்றும், 1279-ஆம் பதிகத்தில் "வானுலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை (சங்கம்) ஊதி மோகித்து விழ அருள் கூரும் நீலமேனி" - என்றும் விளக்கியுள்ளார். தஞ்சையினின்று நீங்கிச் சித்ரா பௌர்ணமி தினத்தில் திருவையாற்றை அடைந்தார். சப்த ஸ்தான உற்சவ அழகைக் கண்ணாரக் கண்டு களித்தார். அந்த (70A) ஏழு திருப்பதிகளையும் (890) ஒரு பாடலில் அமைத்துப் பாடி மகிழ்ந்தார். அந்தப் பதிகத்தில் "பெருமானே! முன் உனது பாத தாமரைகளைத் தியானித்து அருணையிற்பாடத் தொடங்கிய திருப்புகழை உள்ளங் குளிர்ந்த உவகையுடன் நான் ஓத எனக்குத் திருவருள் புரிதி" - என்னுங் கருத்தில்:-
-
"திருவையாறுடன் ஏழு திருப்பதி பெருமாளே!
சலச மேவிய பாத நினைத்து முன்
அருணை நாடதில் ஓது திருப்புகழ்
தணிய ஓகையில் ஓத தனக்கருள் புரிவாயே" (890)
என வேண்டித், (71) திருவையாறு (891), (71A)[1] கண்டியூர், (72) பெரும்புலியூர் (895), (73) திருப்பூந்துருத்தி (892), (74) திருநெய்த்தானம் (893),(75) திருப்பழுவூர் (894) என்னுந் தலங்களை வணங்கினர். திருப்பூந்துருத்திப் பதிகத்திற் செய்ப்பதிப் பெருமானைப் போற்றினர்.
---------------
[1]. கண்டியூர்--திருப்புகழ் வைப்புத்தலம். க்ஷேத்திரக் கோவைப்பதிகம் 1304 பார்க்க.
பின்னர்ப் (76) பூவாளூருக்கு (924) வந்தனர். திருஞான சம்பந்தப் பெருமான் பூவாளூரைத் தரிசித்ததாகப் பெரியபுராணங் கூறுகின்ற தென்றும், "காமர்பதியதன் கட் சில நாள் வைகி வணங்கி" (பெரியபுராணம் - ஞான சம்-347) என வருகின்ற தென்றும்,"காமர் பதி" என்று பூவாளூருக்கு ஒரு பெயர் உண்டென்றும் இத்தலம் சோழ நாட்டின் பழங்காலப் பிரிவுகளில் "மேல் மழ நாடு" என்னும் பிரிவைச் சார்ந்த தென்றும் டாக்டர் மஹா மஹோபாத்யாய சுவாமிநாதையரவர்கள் வித்துவான் தியாகராஜ செட்டியார் சரித்திரத்தில் எழுதியுள்ளார்கள். அதற்கேற்ப இத்தலத்துத் திருப்புகழில் சம்பந்தப் பெருமான் சமணரோடு வாது செய்த சரித்திரமும் பூவாளூர் மழ நாட்டைச் சேர்ந்த தென்னும் விஷயமும் கூறப்பட்டுள. இத்தலத்துத் திருப்புகழின் ஈற்றடி ஒரு ஓலைப் புத்தகத்தில் -
-
"நாத கார்த்திகையே சேயே காவிரி
யாறு தேக்கிய கால்வாய் மாமழ
நாடு போற்றிய பூவாளூருறை பெருமாளே" (924)
என்றிருந்தது. பூவாளூரைத் தரிசித்துப் பின்னர்த் (77) திருமாந்துறை [1] (903), (78) வாலிகண்டபுரம்(902) [2] தரிசித்துத் (79) திரு நெல் வாயில் அரத்துரை (762) சேர்ந்து, முனிவர்கள் பரவும் தலம் என வயலூரைச் சிறப்பித்தும், ஸ்ரீ சம்பந்தப் பெருமான் முத்துக் குடை, முத்துப்பல்லக்கு பெற்ற லீலையைப் பரவியும் போற்றினர். பின்பு (80) வேப்பஞ் சந்தி (759) என்னுந் தலத்தைப் பணிந்து, (81) கொல்லி மலைக்கு (388-389) வந்து, செட்டியாய் (ருத்ர ஜன்மராய்) முருக பிரான் வந்த லீலையைப் பாராட்டி (388), ஒன்று முதல் ஆறு வரைக்கும் வருகின்ற 'தொல்லை முதல் தானொன்று'(389) என்னும் அருமைப் பதிகத்தில் (முருக வேள் வள்ளி நாயகிக்குத்) "தழை கொண்டு சேறல்" [3] என்னும் துறைக்கு உற்ற சேதியை விளக்கினார்.
---------------------
[1]. மாந்துறை - பெயர்க் காரணம் "மாங்கனி யுடைந்து தேங்க வயல் வந்து மாண்பு நெல் விளைந்த வள நாடா" என்பதில் காண்க.
[2]. 902 - இப்பாட்டைப் பற்றிய குறிப்பொன்றைச் (21) சீகாழி (768)-ம் பக்கம் 35-ல் காண்க.
[3]. இத்துறைக்கு - திருக் கோவையார் 90-ஆம் பாடல்
"தேமென் கிளவி" என்னும் பாடலைப் பார்க்க.
பின்னர்த் (82) தீர்த்த கிரியைத் (399) தரிசித்துப் "பாட்டி லுருகிலை கேட்டும் உருகிலை" என்னும் அருமைப் பதிகத்தைப் பாடி, (83) கனக மலையையும் (400) தரிசித்துப் பாடிக், [84] கொங்கண கிரிக்கு (398) வந்ததார். கொங்கண கிரிப் பதிகம் "ஐங்கரனை ஒத்த மனம்" என்பது பலவித வேண்டுகோள்கள் அமையப் பெற்றது. இதில் மனத்தை ஐங்கரனுக்கு (விநாயக மூர்த்திக்கு) ஒப்பிட்டது ஓர் அருமையான உவமை. எங்ஙனம் இருந்த இடத்தில் (தந்தையைச் சுற்றியே) சகல லோகங்களையும் ஒரு நொடியில் விநாயக மூர்த்தி வலம் வந்தாரோ அங்ஙனம் மனமும் இருந்த இடத்தில் உலகெங்கும் சுற்ற வல்லது என்பது விளக்கப் பட்டது. மனோ வேகத்தை உளம் "ஆயிரக்கோடி சுற்று ஓடும்" என்னுங் கந்தரந்தாதியிற் (34) காணலாகும். இப்பதிகத்திற் கேட்ட வேண்டு கோள்களுள் ஒன்று கொங்குப் ப்ரதேசத்தில் தென் கரை நாட்டைச் சார்ந்த திருப்புக் கொளியூர்- அவிநாசியில் அப்பரது[1] [சிவபெருமான்] திருவருளால் ஸ்ரீசுந்தர மூர்த்தி சுவாமிகள் முதலை வாயினின்றும் பிள்ளையை வரவழைத்த ரகசியப் பொருளை [முதலை வாய்ப்பட்ட பிள்ளை உயிர் பெறவும்-உடல் கொள்ளவும்- வளரவும் வைத்த பொருளை] எனக்கு அருள்வாயே ["கொங்கில் உயிர்பெற்று வளர்த் தென் கரையில் அப்பரருள் கொண்டு உடலுற்ற பொரு ளருள்வாயே"] என்பது.
---------------------
[1]. அப்பர் - சிவபெருமான்- சிராமலை அப்பர் - 337,338, 906 பதிகங்களைப் பார்க்க.
கொங்கண கிரியினின்றும் புறப்பட்டுச் (85) சேலம் (938) தரிசித்து, (86) ராஜபுரத்துக்கு (ராசிபுரம்) - [939] வந்து தரிசித்து அத்தலத்துப் பதிகத்தில் மூவெழு வள்ளல்களைப் பற்றிக்கூறி, ராஜபுரம் 'கொங்குநாட்டைச் சார்ந்த' தென்றும், கொங்குநாடு 'கொங்கணாதி தரப் பெறுகொங்கு (நாடு)' எனவும் [939] விளக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து [87] திருச்செங்கோட்டுக்கு [367-387] வந்து சேர்ந்தார்.
----------------------------------
8. திருச்செங்கோடு முதல் திரிசிராப்பள்ளி வரை [4 தலங்கள்: 87-90]
திருச்செங்கோட்டின் உயர்ந்த மலை மீதேறித் தமதாண்டவரைத் தரிசித்தார். பரமானந்தம் அடைந்தார். முருகன் திருவுருவ அழகைத் தமது இரு கண்ணாலும் பருகினார், பாடினார், ஆடினார், பரவச முற்றார். "அப்பனே! உனது அழகைக் காண்பதற்குப் பிரமன் எனக்குக் கொடுத்துள்ள இருகண் போதுமோ! எனக்கு அவன் நாலாயிரங் கண் கொடுத்திலனே" என வருந்தி,
-
"மாலோன் மருகனை; மன்றாடி மைந்தனை; வானவர்க்கு
மேலான தேவனை, மெய்ஞ்ஞான தெய்வத்தை, மேதினியிற்
சேலார் வயற் பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே."
(கந்.அலங்.90)
என்னும் அருமைப் பாடலைப் பாடினர். 'செங்கோட்டுப் பெருமானே!' நான் எந்த இடத்தில் 'கந்தா' என அழைக்கின்றேனோ அந்த இடத்தில் [1]துணைக்கு அறிகுறியாகும்) நினது சேவலுடன் நீ வர வேணும்-
-
"செங்கோடமர்ந்த பெருமாளே!
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல்
கொண்டு வரவேணும்" (367)
என ஒரு விண்ணப்பஞ் செய்தார்.
------------------------
[1]. சேவல் என்னுஞ் சொல்லுக்குக் "காவல் (துணை)" என்றும் ஒரு பொருள் உண்டு. [கந்தர் அந்தாதி 15]
அங்ஙனே உதவுவோம் என ஒரு அறிகுறியும் இவருக்குக் கிடைத்தது. அந்தத் துணிவு பற்றிச் "செங்கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கே என் முன்வந் தெதிர் நிற்பனே" [கந்தர்- அலங்காரம் 104] என்றும்,
-
'விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா எனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே'-
(கந்.அலங். 70)
என்றும் பாடி மகிழ்ந்தார். இனித் திருச் செங்கோட்டுப் பதிகங்களில் உள்ள முக்கியமான விஷயங்களில் சில இங்கு எடுத்துக் கூறுவாம்.
(i) 'நமன் வரின் ஞானவாள் கொண்டே எறிவன்' [திருமந்திரம் 2968] எனத்திருமூலர் கூறிய வண்ணம், அருணகிரியாரும் "நாககிரிப் பெருமாளே! யமன் என்னிடம் வரின் உனதருளே படையாக அவன் மடிந்து வீழ அவனோடு நான் அமர் செய்வேன். அப்பொழுது நீ முன் அருணையில் ஒரு முறை மகா சபையிற் வந்தது போல மயில் மீதேறிப் பழைய அடியார் கூட்டத்துடன் தமிழ் முழங்க மறை முழங்க வரவேணும்'-
-
"கொடிய மறலியும் அவனது கடகமும்
மடிய ஒருதினம் இருபதம் வழிபடு
குதலை யடியவன் நினதருள் கொடு பொரும் அமர்காண
...மரகத துரகத மிசையேறிப்
பழைய அடியவ ருடன் இமை யவர்கணம்
இருபுடையுமிகு தமிழ் கொடு மறை கொடு
பரவ வருமதில் அருணையில் ஒருவிசை வரவேணும்" 387
எனப் பிர்ர்த்தித்தனர்.
(ii) 368-ஆம் பதிகத்தில் 'விலங்கல் ஒன்றாது கண்ட கண்டா' என்பதற்கு - 'மலை ஏழு (1+6) துண்டாக ஆக்கிய வீரனே' என்றும் பொருள் கொள்ளலாம். 374 ஆம் பதிகத்தில் "மலையேழு துண்டாய் எழுவர் சோரிகொண்டாறு வர வேலெறிந்தே நடனமுங் கொள் வேலா-" என வருதல் காண்க. [மலை ஏழு - ஏழு துண்டாய்; ஏழு-இடை நிலைத் தீபம்.]
(iii) 'முருகா! வேசையர் பார்வையில் அழியாமல் அம்மயக்கை அழிக்க வல்ல ஞானத்தை எனக்கென்றே பெறுமாறு (ஒப்பிலா வகையில் நான் பெற) அதிக விருப்புடையேன். நீதான் துணை செய்ய வேண்டும்'.
"பாவிகள் கடைக்கண் பார்வையி லழியாதே
விலக்கும் போதகம் எனக்கென்றே பெற
வீரப்பஞ் சாலவும் உடையேன் நான்...அருள்வாயே" 372
எனத் தனிப் பிரார்த்தனை ஒன்றுஞ் செய்தார். இவ் வேண்டுகோளின் படி கலங்காத சித்தத்தை முருகபிரான் தமக்கு அருளினார் என்பதைக்,
-
"கடத்திற் குறத்தி பிறான் அருளாற் கலங்காத சித்தத்
திடத்திற் புணையென யான் கடந்தேன்...காம
சமுத்திரமே." (கந்.அலங். 29)
என்னும் பாடலால் தெளிவாய்த் தெரிவிக்கின்றார்.
(iv) முருகன் பெருமையை "மூவர்க்குந் தோற்றக் கிடையா நீ" எனப் பொருள்படும்படி இவர்--
-
"கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங்[1, கூட்டிக்
கன்றை மேய்த்திட் டவர்க்குங்[2], கூற்றைக்
கன்ற மாய்த்திட் டவர்க்குந்[3], தோற்றக் கிடையா நீ"
--373
என இணையிலாச் சொல்லழகுடன் அமைத்த சொற் பிரயோகம் ஆயிரங்கோடி பெறும்.
------------------
1. பிரமன். 2. திருமால். 3.சிவன்.
(v) 376-ஆம் பதிகத்தில் -- "பைம் பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர் பங்கப் படச் சென்றோட்டிய வயலூரா" - என்றதில் 'அன்பன் யார்' - என்று விளங்க வில்லை. அந்த அன்பன் மகா பக்தனான நல்லியக் கோடனாய் இருக்கலாமோ என ஓர் ஐயம் நிகழ்கின்றது. நல்லியக் கோடான் என்னும் அரசன் தனது பகைவர்களின் பலத்திற்கு அஞ்சி முருகக் கடவுளை வழிபட்ட பொழுது 'கேணியில் உள்ள பூவைப் பறித்து அதையே வேலாக நிருமித்துத் தியானித்து எறி, நீ வெல்வாய்', என முருகவேள் அவன் கனவிற் கட்டளையிட, நல்லியக் கோடன் அங்ஙனமே செய்யப் பகைத்தளம் பறந்தது என்பதும், அங்ஙனம் வேலால் வெற்றி பெற்ற இடம் வேலூராயிற்று என்பதும் சிறுபாணாற்றுப் படையில் (பத்துப் பாட்டில் ஒன்று) "திறல்வேல் நுதியிற் பூத்த கேணி, விறல் வேல் வென்றி வேலூர்" - (172-3) என வருவதாலும் அதன் உரைப் பகுதியாலும் அறியக் கிடக்கின்றன.
(vi) 379, (ஆலகால) -எனும் பாட்டில் 5-7 அடிகளில் ராமாயண சுருக்கத்தைக் லாணலாம்.
(vii) திருச் செங்கோடு மறை பூசித்த தலம் என்பதைத் திருப்புகழில் "மறை குலாவு செங்கோடை நகர்" (374) என வருதலாலும், கந்தரந் தாதியில் "செழு மறை தேர் புஜகபூதரம் (82), ஆரணத் தந்தி நகர் (23), ஆரண வெற்பு (68), ஆரணத் தந்தி கிரி (90) என வருதலாலும் அறிகின்றோம்.
(viii) திருச் செங்கோடு அர்த்த நாரீசுரர் தலம் என்பதைப் "பெரியோனும் தலைவியும் பக்கத் தொக்க இருக்கும் சயிலம்" (454) எனக் காஞ்சி நகர்த் திருப்புகழிற் குறித்துள்ளார்.
(ix) சுவாமிகள் திருச் செங்கோட்டுக்கு வரும் முன்னரே-இவர் பாடிய அற்புதத் திருப்புகழ்ப் பாக்களின் பெருமை நாடெலாம் பரவிப் போற்றப்பட்டது. ஞானியரும் புலவரும் திருப்புகழ்ப் பாடல்களின் சொல்லழகையும் பொருளாழத்தையும் கண்டு வியந்தனர்: கற்று மகிழ்ந்தனர்; இதனை யுணர்ந்த அருணகிரியார்--திருச் செங்கோட்டுப் பெருமானே! நாற்றிசையிலும் உள்ள பக்தர்கள் 'அற்புதம்' என வியக்கும்படியான சந்தம் நிறைந்த உனது திருப்புகழ்ப் பாவைச் சிறிது ஓத அநுக்கிரகஞ் செய்தஉனது கருணையை மறவேன்--
-
"பூர்வ பச்சிம தக்ஷிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதமென ஓதும்
சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப் புகழைச் சிறிதடியேனும்
செப்பென வைத் துலகிற் பரவத் தெரிசித்த அநுக்ரகம் மறவேனே" (384)
எனத் தமது ஆணடவரையே பாடி நன்றி பாராட்டினர். (பூர்வம்=கிழக்கு; பச்சிமம்=மேற்கு, தக்ஷிணம்= தெற்கு; உத்தரம்=வடக்கு) 'செய்ப்பதி வைத் துலகிற் பரவ' - என்றும் பாடம் உளது.
திருச் செங்கோட்டுக்கு உரிய நாமங்களாகத் திருப்புகழில் "செங்கோடு, செங்கோடை, செங்குவடு, நாகமாமலை, நாககிரி, காளக்கிரி, உரகசிகரி, சர்ப்ப கோத்ரம், சர்ப்ப கிரி, சர்ப்பப் பொற்றை, பணி சயிலம், புஜக கோத்திரி என்னும் பெயர்கள் போந்துள. இத்தலம் கொங்குநாட்டைச் சார்ந்தது என்பது "கொங்கின் புஜக கோத்திரி (1181) கொங்கு நாட்டுத் திருச் செங்கோடு (373) என வருவதால் அறியக் கிடக்கின்றது. (29) திருவிடைக்கழி போலத் திருச் செங்கோடும் அருணகிரியார் விசேட அநுக்கிரகம் பெற்ற தலங்களுள் ஒன்றாகும் என்பது 'உரக கிரியில்...வாழ்வித்த வேதியனும்...வேடிச்சி காவலனே' என வருந் திருவகுப்பால் அறிகின்றோம். சுவாமிகள் பலநாள் திருச்செங்கோட்டில் தங்கி யிருந்தார். அப்பொழுது தெய்வத் திருமலைச் செங்கோட்டில் (23), சுழித்தோடும் ஆற்றில் (36), விழிக்குத் துணை (70), சேந்தனைக் கந்தனை (72), மாலோன் மருகனை (90), கருமான் மருகனை (91), சேலிற்றிகழ் வயல் (97), செங்கேழடுத்த (104) எனத் தொடங்கும் கந்தரலங்காரச் செய்யுள்களைப்பாடி மகிழ்ந்தார். சுவாமிகள் ஆங்காங்குப் பல சமயங்களில் தனிப்பாடல்களாகப் பாடிய கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களில் ஒரு நூறு அவராலேயோ பின்பு வேறு பெரியாராலோ தொகுக்கப்பட்டுக் கந்தரலங்காரம் என்னும் அருமைப் பெயரிடப்பட்டு, 'சலங்காணும்' என்னும் நூற்பயன் கூறும் பாட்டுடன் ஒரு நூலாக வகுக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது! நூறு பாடல்களுக்கு மேற்பட்ட காப்புச் செய்யுளும் ஆறு பாடல்களும் சுவாமிகள் வாக்காகவே காணப்படுகின்றன. இவ்விஷயத்தைப் பின் வருங் கந்த ரலங்கார ஆராய்ச்சியிற் காண்க. 'நாகாசல வேலவ நாலு கவித்தியாகா' என வரும் 'கூகா' எனத் தொடங்குங் கந்தரநுபூதிச் செய்யுளும் (11) இத்தலத்திற் பாடப்பட்டிருக்கலாம்.
இங்ஙனம் சுவாமிகள் திருச்செங்கோட்டில் இருக்கும் பொழுது 'வயலூரை' என்று காண்பேன் என மனம் நைந்து 'முருகா! நான் என்று வயலூர் (செய்ப்பதி) சேர்வேன்! என்று அத் தலத்தில் உன்னைக் கண்டு பற்றித் தொண்டு பட்டுத் தொண்டனிடுவேன்!'
-
"செய்ப்பதி மீதே --தொண்டுபட்டுத் தெண்டனிட்டுக்
கண்டுபற்றத் தண்டை வர்க்கத் துங்கரத்தப் பங்கயத்தைத் தருவாயே-(375)
எனக் கூறி உள்ளம் உருகி வணங்கித் திருச் செங்கோட்டை அரிதின் நீங்கி, வானிநதி (பவானி நதி) கூடும் (88) பவானிக்கு (திருநணாவுக்கு) (968) வந்து ஞானவாழ்வைத் தருவாயே என வேண்டினர். எந்தையார் பதிப்பில் 968-ஆம் பாடலாகிய "கலைமேவு" என்னும் பாடல் பவானிக்கு உரியது என்று ஆராய்ச்சியாளர்[1] கூறுகின்றனர். ஆராய்ச்சியின்படி அப்பாடலின் ஈற்றடி "திருவானி கூடற் பெருமாளே" என்பது.
----------
[1]. செந்தமிழ்ச் செல்வி - சிலம்பு 13-பரல் 5 - பக்கம் 239. பவ 'மார்கழி' - டிசம்பர் 1934 - ஜனவரி 1935.
வானி என்பது பவானி. திருவாணி கூடல் - எனப் பதிப்பில் இப்பொழுது இருக்கும் பாடத்துக்கு திருவும் (லக்ஷ்மியும்), வாணி (சரஸ்வதியும்) -பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் கூடிய கூடல் (மதுரை) என்பது பொருளாம். பவானியினின்றும் (89) பாண்டிக் கொடுமுடிக்கு (936-937) வந்து தரிசித்து அங்கும் வயலூரைத் தியானித்துப் பின்னர்த் (90) திருப்பராய்த்துறையை (925) வணங்கி "அற்புத மூவர் இலங்கு பராய்த் துறை" என அத்தலத்தை விசேஷித்துக் கூறித் (91) திரிசிராப்பள்ளி வந்து சேர்ந்தார்..
-----------------------
9. திரிசிராப்பள்ளியும் சுற்றியுள்ள தலங்களும் (12 தலங்கள் = 91-102)
(91) திரிசிராப்பள்ளி (329-344) மலையழகைக் கண்டார். அந்த அழகில் முருகனைக் கண்டார். திரிசிராப்பள்ளித் தியானமே முருகர் தியானமாம் என உணர்ந்தார். உணர்ந்து 'சிராப்பளி என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே' (330)-சிராப்பள்ளி எனச் செபிக்கும் அன்பர்தம் மனமாகிய இடத்தை (கோயிலாக) விரும்பி பெருமாளே - எனப் பாடிப் புகழ்ந்தார். அன்று உலகோர் காணும்படித் 'திருக்கை வேலுடன் மயில் மீது வந்து என்னை ஆட்கொண்ட உண்மையைப் புலப்படுத்திய குருநாதனே'-
-
"சயில மெறிந்தகை வேற்கொடு, மயிலினில் வந்தெனை
யாட்கொளல் சகமறியும்படி காட்டிய குருநாதா'-(331)
எனத் துதித்தார். தமது வழிபாடு கடவுளாம் சம்பந்தப் பெருமான் "நன்றுடையானைத் தீயதில்லானை...உமையொரு பாகம் உடையானை...(சென்றடையாத) திருவுடையானைச்...(சிராப்பள்ளிக்) குன்றுடையானை" - என இத்தலத்துக்குப் பாடிய தேவாரம் நினைவுக்கு வரச் "சீகாழி மாமுநி ...வந்து பாடும் திருவுடையாய், தீதிலாதவர், உமையொரு பாலான மேனியர் (332) எனவும் தமது "...உருவளர் குன்றுடையார்" (331) எனவும் தமது பதிகங்களில் வரும்படிப் பாடியுள்ளது கவனிக்கற்பாலது. திரிசிராப்பள்ளியில் இருந்தபடியே, தம்மைத்(23) திருமண்ணிப் படிக்கரை என்னும் தலத்திற் கனவிற் றோன்றி அழைத்த வயலூர்ப்பெருமானை வணங்க விரும்பி, (92) வயலூர் (904-921) சேர்ந்து தரிசித்துத் திரிசிராப்பள்ளிக்கு மீள்வர். ஒரு பதிகத்தில் (334) "ஜெகதலம் மெச்சும் வயலூர்க்கும் திரிசிராப்பள்ளிக்கும் உரிய பெருமாள் நீ" என இரண்டு தலங்களையும் இணைத்துப் பாடியுள்ளார். திரிசிராப்பள்ளிக்கு உரிய பதினாறு பாடல்களில் ஒன்பது பாடல்களில் வயலூர் சொல்லப் பட்டிருத்தலின் திரிசிராப்பள்ளியிலிருந்ௌத வயலூரைச் சில காலம் தரிசித்து வந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.
திரிசிராப்பள்ளிப் பாடல்களில் 332, 334, 339 எண்ணுள்ள பதிகங்களில் சிரகிரி என வருவதால் இம்மூன்று பதிகங்களும் "சிரகிரி" எனச் 'சென்னிமலையாண்டவன் காதல்' என்னும் நூலிற் சொல்லப்பட்ட சென்னிமலைக்கு உரிய பதிகங்களாகக் கொள்ளலாம் என மூன்றாம் பாகம் அநுபந்தத்திற் குறித்தோம். ஆனால், 332 - ஆம் பதிகத்தில் "நன்றுடையானை" என்னும் திரிசிராப்பள்ளித் தேவாரக் குறிப்பு உள்ளதாலும், 334 - ஆம்பாட்டில் வயலூருடன் சிரகிரி இணைக்கப்பட்டுள்ளதாலும் சிரகிரி எனச் சுவாமிகள் குறிப்பது திரிசிரகிரி எனக் கொள்வதே பொருந்தும் எனக் கொள்ள வேண்டும். அங்ஙனம் கொண்டால் சென்னிமலைக்குப் பாடல் கிடைக்கவில்லை எனக் கொள்ள வேண்டும்; அல்லது 339 - ஆம் பாடல் 'பகலிரவினில்' என்பதை மாத்திரம் சென்னி மலையதாக வைத்துக் கொள்ளலாம்.
திரிசிராப்பள்ளிப் பாடல்களுள் - (i) 'அந்தோ மனமே' என்னும் 330 - ஆம் பாடல் மனப்பாடஞ் செய்யத்தக்க அருமையான பாடல். அப்பதிகத்தில் உள்ள "மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உ(ய்)ய மறவாதே" - என்னும் ஒப்பற்ற உபதேசத்தைக் கைப்பற்ற வேண்டும். (ii) 338 - ஆம் பாடலில் முருகபிரான் ருத்ராக்ஷமாலை அணிந்துள்ளார் என்பது கூறப்பட்டுள்ளது. (iii) 'புவனத்தொரு' என்னும் 340 - ஆம் பாடலிற் கூறியுள்ள நரக வேதனை வர்ணனை குறிக்கத்தக்கது. 'செய்ப்பதியிற் பரமக் குருநாதா' - என்றதால் வயலூரில் குருமூர்த்தியாய் இவருக்கு அருள் செய்தது புலப்படுகின்றது. (iv) 341 - ஆம் பாடலைப்பற்றி 46 - ஆம் க்ஷேத்திரம் கோடிக்குரிய பதிகக் குறிப்பைப் பார்க்கவும். இதில் குருகு க்ஷேத்திரம் என்பது கோழியூர் -குருகு = கோழி: இந்த க்ஷேத்திரம் திரிசிராப்பள்ளி எல்லைக்கடுத்த (92A) உறையூர் என வழங்கும் மூக்கீச்சுரம்; தேவாரம் பெற்ற தலம். (v) 343 - ஆம் பதிகம். "வாசித்துக் காணொணாதது" - என்னும் அருமைப் பாடலில் பரம்பொருளின் விளக்கம் மிக அற்புதமாகக் கூறப்பட்டுள்ளது. இப் பாடலின் அருமை தெரிந்து பல பெரியோர்கள் இதை மனப் பாடஞ் செய்தார்கள்.[1].
----------------------
1 இந்த அருமையான விஷயம் திருவாளர் சைவப் பெரியார் - ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்களால் யான் அறிந்தேன். அவர் எழுதிய குறிப்பு (29-9-1946) வருமாறு:
"பதினான்கு சாத்திரங்களில் ஒன்று உமாபதி சிவம் இயற்றிய சிவப்ரகாசம். இதற்கு மதுரைச் சிவப்ரகாசர் ஒரு உரை கண்டனர். அவ்வுரையின் சிறப்புப் பாயிரத்தில் "ஓது புகழ் சகாத்தம் ஆயிரத்து நானூற் றொருபதின் மேற் செல்கின்ற காலந் தன்னில் மாதுபயில் மதுரையில் வாழ் சிவப்பிரகாசன்...தீதில் சிவப்பிரகாசச் செய்யுள் நூறுந் தேர்ந் துரையிட்டே உலகிற் சிறப்பித்தானே" என்பதிலிருந்து இவ்வுரையின் காலம் சாலிவாகன சகாப்தம் 1410-1488 A.D. என்று ஏற்படுகின்றது. இவ்வுரையில் பத்தாம் சூத்திரம் முதற் பாடல் "பொற்புது கருவி யாவும்" என்று தொடங்குவதில் தத்துவம் முப்பத்தாறும் நீங்கியே முத்தி என்பதற்குக் கோயிற் புராணத்தில் "தரை முதல் ஆறா றென வரும் நாதாதியின் மீதே" என்றும், திருக்களிற்றுப் படியாரில் " நாதாந்தத்தே இருப்பர் என்றும்", திருப் ப்புகழில் "விந்து நாத ஓசைக்குத் தூரமானது" என்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க என்ற பகுதியே திருப்புகழ்ப் பாடல ஒன்றை எடுத்துக் காட்டுவது. "வாசித்துக்
காணொணாது" எனத் தொடங்கும் பாடலில் மேலே காட்டப்பட்ட ஏது வருகின்றது. இதிலிருந்து 1488-ம் ஆண்டிலே (திருப்புகழ் பாடப்பெற்ற காலம் 1450 கி.பி. எனப்படுதலால், 38 ஆண்டுகட்குள்ளே) சித்தாந்த சாத்திர உரையில் எடுத்துக் காட்டக்கூடிய பெருமை திருப்புகழுக்கு இருந்தபடியால் திருப்புகழ் எவ்வளவு விரைவில் கற்றோரால் பாராட்டப்பட்டது என்பது புலப்படுகின்றது"
-------------
344 - ஆம் பதிகத்தில் - 'பெண்கள் மயக்கில் ஈடுபட்டு அவர்கள் பொருட்டுப் பொருள் தேடுவதிலேயே நான் அவப்பொழுது போக்கிக் கொண்டிருந்த சமயத்தில் என்னைத் தவப்பொழுது போக்கவைத்து வீடுபேறு அருளிய பெருமானே! உன் கருணையை மறவேன்!-
-
'திருச்சிராப்பள்ளி மலைமிசை நிலைபெறு பெருமாளே!
கபடிகள்...இடையினும் நடையினும் அவமேயான்
மயக்கமாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு
தடத்து மோக்ஷம தருளிய பலமலர்
மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு மறவேனே!'--
என நன்றி பாராட்டி யுள்ளார்.
திரிசிராப் பள்ளியிலிருந்து (92A) உறையூர் [மூக்கீச்சுரத்தைத் தரிசித்து, வயலூருக்குப் போகும் வழியில் உள்ள உய்யக்கொண்டான் என்னும் (93) கற்குடியைத் (345-346) தரிசித்து 'முருகா! நீ தமிழ்ப் பெருமாள், வயலூர்ப் பெருமாள், கற்குடிப் பெருமாள்,' (345) என வாழ்த்தி, 'யமதூதர் "எனக்குக் கணக்குக் கட்டு" எனக்கூறி நரக வேதனைகளுக்கு என்னை உட்படுத்து முன், பெருமானே! நீ வேலேந்தி, மயிலேறி என் பக்கம் வருவாயே' (346) என வேண்டினர். இப்பதிகத்தில் "சித்தியுடைக் கற்குடி" என்பது 'அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி' என்னும் தேவார அடியை நினைப்பூட்டுகின்றது.மூவர் தேவாரமும் பெற்ற தலம் கற்குடி. வயலூரிற் சுவாமிகள் பல நாள் தங்கினர்.
வயலூர்ப் பொய்யாக் கணபதியார் அருளியது
தம்மை யாண்ட பிரானது திருப்புகழை நிரம்பப் பாட வேண்டும் என்னும் இச்சை பொங்கி எழுந்தது. வள்ளியைத் தம்மோடு இணைக்க எண்ணிய நமது ஆண்டவரே தமது இச்சை நிறைவேற விநாயக மூர்த்தியை வேண்டினராதலின் நாமும் இத்தலத்துள்ள பொய்யா விநாயகரது திருவருளைப் பெறுவோமாகில் நமது இச்சை நன்கு நிறைவேறும்; அங்ஙனம் விநாயகப் பெருமானை வேண்டுவதற்கும் நமது ஆண்டவரது உத்தரவு வேண்டும் எனக்கருதி, முருக வேள் சந்நிதியில் நின்று 'நிசிசரரைப் பெலியிட்டருள் பெருமாளே!' உனது திருவடி, உனது சத்தி வேல், மயில், கோழிக் கொடி இவை தமைச் சதா கருதும் புத்தி எனக்கு நிலைத்திருக்க வேண்டி நான் இன்று இத்தலத்தில் வீற்றிருக்கும் "அருளிற் பொய்யாத கணபதி" யை முறைப்படி வலஞ் செய்து,மறவாது அருச்சித்து வணங்குவன் -
-
"நிசிசரரைப் பெலி யிட்டருள் பெருமாளே!
நினது திருவடி சத்தி மயிற் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட... ஒற்றை மருப்பனை வலமாக
தொப்பண குட்டொடு**வனச பரிபுர
பொற்பத அர்ச்சனை மறவேனே. [விநா. (5)]
எனப் போற்றி முருகவேளின் உத்தரவு பெற்றுப், பொய்யா விநாயகரைத் தரிசித்து அருச்சித்துப் 'பெருமானே! நீ சுப்பிரமணி படும் அப்புன மதனிடை இபமாகி (யானையாகி) அந்தக் குறமகளுடன் அந்தப் பெருமானை மணம் புரிவித்தவனல்லவா! உன்னை மட்டவிழ் மலர் கொடு பணிவேன். நீ தம்பி தனக்காக வனத்து அணைந்தவன் அல்லவா! நீ என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருளுக' - எனப் பொருள் பெற்ற "கைத்தல நிறைகனி" [விநா - (1)], 'உம்பர் தரு' [விநா - (2)] என்னும் பதிகங்களைப் பாடிய பின்னர் அக்னீசுரர் என்னுந் திருநாமமுடைய சிவபிரானது சந்நிதானத்தில் நின்று அவரையும் போற்றி வணங்கினர். இவரது ஆராமையையும் உண்மைப் பத்தியையும் கணட வரப்ரசாத மூர்த்தியாகிய பொய்யாக் கணபதியார் [1] இவரது கனவில் தோன்றி "அன்ப! நீ விரும்பிய வண்ணமே முருகவேளது மயிலையும்,கடப்ப மாலையையும், வடி வேலையும், குக்குடத்தையும், ரக்ஷைதரு சிற்றடியையும், பன்னிரு தோளையும், வயலூரை (செய்ப்பதியை) யும் வைத்து அப்பிரானது திருப்புகழ் விருப்புடன் பாடுவாயாக" என அருள் புரிந்து மறைந்தார்.
அக்னீசுரரும் இவரது கனவிற் றோன்றி முருக வேளின் திருப்புகழைச் செப்புதற்கு வேண்டிய அநுக்ரக சத்துவத்தை (வலிமையை) யளித்தனர். இங்ஙனம் தாம் பெற்ற பெரும் பேறுகளை நினைத்து மகிழ்ந்து, அருளிற் சீர் பொ(ய்)யாத கணபதியாரிடம்.
வித்தக மருப்புடைய பெருமாளே!
-
பக்கரை விசித்ரமணி பொற் கலணை யிட்ட நடை
பக்ஷியெனும் உக்ர துரகமும், நீபப் பக்குவ
மலர்த் தொடையும், **வடிவேலும்** குக்குடமும்; ரக்ஷைதரு
சிற்றடியும், முற்றிய 2 பனிரு தோளும், செய்ப்பதியும்,
வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு, செப்பென
எனக்கருள் கை மறவேனே!
எனத் துதித்து நன்றி பாராட்டியும்,
-----------------
[1]. நம்பியாண்டார் நம்பிக்குத் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார்ப் போல - அருணகிரியார்க்கு 'வயலூர்ப் பொய்யாக் கணபதியார்.
2. பன்னிரு தோளையும் பாட விரும்பியது - (8) திருவதிகை - பதிகம் 743 - பக்கம் 26 - பார்க்க.
-----------------
-
[1] "தட்டறச் சமயத்தை வளர்ப்பவள்
அத்தன் முற்புகழ் செப்ப அநுக்ரக
சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி (882 - சக்கரப்பள்ளித் திருப்புகழ்)"
என அக்னீசுரரது திருவருளை வியந்து போற்றியும் பின்னர் மகிழ்ந்தார்.
-----------------
[1]. வளர்ப்பவள் அத்தன் = சிவபிரான்; முன் = (அன்று வயலூரில்);புகழ் செப்ப = முருகபிரானது திருப்புகழைப் பாட; அநுக்கிரக சத்துவத்தை =அநுக்கிரக வலிமையை; அளித்திடு = எனக்குக் கொடுத்த; செய்ப்பதி = வயலூர்த் தலம். இந்த அடிக்குச் சிவபிரான் முன்பு உன்னைப் புகழும்படியாக அவருக்குக் (குருமூர்த்தியாய்) உண்மைப் பொருளை அநுக்கிரகஞ் செய்த (உபதேசித்த) வயலூர் முருகா எனவும் பொருள் கொள்ளலாம்.
------------
இங்ஙனம் வழிபட்டு வயலூரில் இருக்கும் பொழுது பல பல அநுக்கிரகப்பேறுகளைச் சுவாமிகள் பெற்றனர். வயலூர் அவருக்கு மிக உகந்த தலமாயிற்று. எங்ஙனம் வேல், மயில், சேவலை மறவாது தமது திருப்புகழில் வைத்துப் போற்றினரோ அங்ஙனமே பொய்யாக் கணபதியார் இட்ட கட்டளைப்படி வயலூரா, வயலூரா, என வயலூரையும் தமது பாடல்களில் வைத்துப் பாடுவாராயினார். இனி, வயலூர்ப் பதிகங்களைப் பற்றிய சில குறிப்புகளை ஈண்டுக் குறிக்கலாம்.
(i) 904 - ஆம் பதிகத்தில், "காவேரி சூழுங் குளிர் வயலூர்" என்றும், 907 - ஆம் பதிகத்தில், "த்ரிசிரகிரியயல் வயலி" என்றும், 913 - ஆம் பதிகத்தில், "அதிமோகர வயலூர்" என்றும் கூறி வயலூர் திரிசிராப்பள்ளிக்குச் சமீபத்தில் உள்ளதும், காவிரியால் சூழப்பட்டதுமான அழகிய தலம் என விளக்கியுள்ளார்.
(ii) 906 - ஆம் பாட்டில், 'முருகா! பெண்கள் மயக்கு என்னும் துக்கத்தை ஒழித்து உனது திருப்புகழைத் துதிப்பதற்கு வேண்டிய அபரிமித சிவ அறிவு என் உணர்ச்சியிற் கூடும் வண்ணம் என்னை என்று ஏற்று கொண்டு ரக்ஷித்தருள்வாயோ?
-
'பொறிச்சியர்கள் மதனகலை விதனம் - அறுவித்துத் - திருப்புகழை
உற்றுத் துதிக்கும் வகை அபரிமித சிவ அறிவு சிக்குற்று
உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ' -
என வேண்டித் துதித்தார்.
(iii) 905 - ஆம் பாட்டில் 'வேலையுறை நீட்டி' என்றதனால் வேலாயுதம் உறையில் இருந்தது என்பதும் பெறப்படும்.
(iv) 910 - ஆம் பாட்டில் தமக்கு அருள் புரிந்த பொய்யாக் கணபதியாரையும் அக்னீசுரரையும் போற்றி "அருளிற் சீர் பொ(ய்)யாத கணபதி திருவக் கீசன்வாழும் வயலி" எனச் சிறப்பித்தனர்.
வயலூரிற் சிவபிரான் திருநாமம் - அக்னீசுரர்.
(v) 913 - 'அயலூருறை மயிலா' என்பது 'அயிலூருறை (வேலூர்) மயிலா' என இருக்கவேண்டும் போலும். எதுகையையும்
நோக்குக.
(vi) 914 - ஆம் பாட்டில் திருச்செங்கோடும் வயலூரும், முருகா! உனக்குப் பிரியமான தலங்கள் - எனப் புகழ்ந்து விளக்கினார்.
(vii) 916 - ஆம் பாட்டில் வயலூர்ப் பெருமான் (23) மண்ணிப் படிக் கரையில் ஏக முகத்துடன், வீரக் கழலுடன், கடப்ப மாலையுடன், வெற்றி வேலுடன் தமது கனவிலே தோன்றித் தம்மை யாட்கொண்ட கருணையைப் பாராட்டுகின்றார்.
(viii) 917 - 5 - அடி "புக்க அனல் புனல் திரு ஏடுயவே" என்றும் பாடம்.
(ix) 918 - ஆம் பாட்டில் (956 - ஆம் பாடலிலுங் கூட) கடல் கடைந்த காலத்தில் ஒரு பாதி திருமாலும் ஒரு பாதி வாலியும் கடைந்தார்கள் என்னும் அருமை விஷயம் கூறப்பட்டுளது. வயலூர் முருகனை 'வயலை அற்புதனே' என்றும், "திருமறு (மச்ச ரேகை) ஆயிரத் தெட்டு கொண்ட அழகா" என்றுங் கூறியுள்ளார். ஆயிரத்தெட்டு மறு கொண்ட அழகு கடவுளுக்கு இருப்பதைச் சீவக சிந்தாமணி என்னும் நூலில்,
-
"செம்பொன் வரைமேற் பசும்பொன் எழுத் திட்டதேபோல்
அம்பொன் பிதிர்வின் மறு ஆயிரத்தெட் டணிந்து
வெம்புஞ் சுடரிற் சுடருந் திரு மூர்த்தி" -
என வருங் கடவுள் வாழ்த்துச் செய்யுளாலும் (2) அறிகின்றோம்.
(x) 919 - "மூரிவில் மதற்குக் காட்டு" - மன்மதனது வில்லின் வலிமைக்கு எடுத்துக் காட்டாயிருந்தார் முருகர் வள்ளிபாற் காட்டிய மோகத்தால்.
(xi) 920 - ஆம் பாட்டில் உள்ள " வேலு மயிலு நினைந்தவர் தந்துயர் தீர அருள் தரு கந்த" - என்னும் அடி மனப் பாடத்துக்கும் ஜெபத்துக்கும் உரியது.
இங்ஙனம் வயலூரிலும் திரிசிராப் பள்ளியிலும் சுவாமிகள் பல காலம் தங்கினார். அருகில் சீரங்கத்தில் ஸ்ரீரங்கராஜப் பெருமாளை அந்தணர்கள் "ஹரிஹரி கோவிந்த கேசவா!" (504) எனத்தொழுகின்ற கோலத்தைக் கண்டு களித்துத் (94) திருவானைக்கா (495-508) என்னுந் திவ்ய ஸ்தலத்தைத் தரிசித்தார். திருவானைக்கா பஞ்ச பூதஸ்தலங்களுள் அப்புஸ்தலம். "திருவானைக் காவுளானைச் செழுநீர்த்திரளைச் சென்றாடினேனே" - என்பது அப்பர் திருத்தாண்டகம். திருவானைக்காத் திருப்புகழ்ப் பதிகங்களுள் -
(i) 495 - ஆம் பதிகத்தில் விநாயக மூர்த்தியின் வருணனை
-
"குஞ்சர மாமுக விக்கினப் ப்ரபு
அங்குச பாச கரப் ப்ரசித்தன், ஓர்
கொம்பன், மகோதரன், முக்கண் விக்ரமகணராஜன்
கும்பிடுவார் வினை பற்றறுப்பவன்
எங்கள் விநாயகன் நக்கர் பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப் பி(ள்)ளை" -
என வெகு அழகாக அமைந்துள்ளது. இப்பதிகத்தில் ' சம்பு தீர்த்தமும் ', ' சுந்தர பாண்டியன் மதிலும் ' சொல்லப்பட்டுள்ளது.
(ii) 496-ஆம் பாடல்; இதில் திரு நீலகண்ட யாழ்ப் பாண நாயனார் (பாணப் பாவலர்[1] சம்பந்தப் பெருமானுடன் வந்து அவரது தேவாரத்துக்கு இசையச் சங்கீத யாழைப் பாடிய விஷயம் கூறப்பட்டுளது.
(iii) 499-ஆம் பாடல்: சிவபிரான் இத்தலத்தில் வெண்ணாவல் நீழலில் வீற்றிருப்பது சொல்லப் பட்டுளது.
(iv) 500-ஆம் பாடல் (உரைக்காரிகை) என்பதில் இருந்து, "காரிகை" என்னும் யாப்பிலக்கண நூல் இவர் காலத்தே தமிழ்ப் புலவர்களால் மிகவும் பயிலப்பட்டது என்பதும், எழுத்தாணிக்கு (இபக் கோடு) தந்தத்தினாற் செய்யப்பட்ட பிடி இருந்த தென்பதும், சிலந்தி பந்தல் வலை யிட்டுப் பூசித்த தலம் திருவானைக்கா என்பதும், " சேவிக்கும் எல்லைத் திருசாலக[2] நலமும்" எனக் காளமேகப் புலவரால் திருவானைக்கா வுலாவிற் சொல்லப்பட்டதைத் 'திருச்சாலகச் சோதி' எனச் சுவாமிகள் குறித்துள்ளதும் கவனிக்கற்பாலன.
--------------------
[1] 'செந்தமிழ் பாணனார்', 'சந்த இசைப்பாணர்', 'நல்ல இசையாழ்ப் பெரும்பாணர்' ----பெரிய புராணம்.
[2]. சாலகம்---பல கணி வழியாய் சோதியை (ஈசனை)த் தரிசித்தல், சாலகம் என்பதற்கு சிலந்தி வலை எனவும் பொருள்.
(v) 'ஓல மறைகள்' என்கின்ற 501-ஆம் பாடலிலும், 'பரிமள' என்னும் 507-ஆம் பாடலிலும் திருவானைக்காவில் தேவியின் பெயர் 'அகிலாண்ட நாயகி' என்பதைக் குறித்தும், 501-ம் பாடலில் சுவாமியின் பெயர் "வெண்ணாவல் அரசு" எனக்குறித்தும், ' காவிப்பூவை' என்னும் 503-ஆம் பாடலில் (வராக அவதாரத்து) வராகத்தை அடக்கிய மூர்த்தி ஷண்முகரே என விளக்கியும் 'குருதி' என்னும் 504-ஆம் பாடலில்--(i) ஆறங்கம் வல்லவராய் வேள்வி நடத்தும் அந்தணர்கள் சீரங்கத்திற் பள்ளி கொண்டிருக்கும் சீரங்கராஜப் பெருமாளை “ஹரிஹரி கோவிந்த கேசவ” என்னுந் திருநாமங்களாற் பூஜித்து* வணங்கினர், (ii) திருவானைக்காவிற் சிவபிரான் திருநாமம் “ஜம்பு நாதர்”, (iii)பிரமனும் இந்த்ராதி தேவர்களும் ஜம்பு நாதரை வழி பட்டனர் என்பவற்றை விளக்கியும் அருமையாகப் பாடியுள்ளார்.
அவ்வத் தலத்து சுவாமி, தேவி--திருநாமங்களைத் திருப்புகழில் அருணகிரியார் வடமொழி நாமங்களாற் கூறியுள்ளதால் 'திருநாமங்களைத் தமிழ்ப் பெயரால் தேவாரப்பாக்களிற் குறித்த நாயன்மார்கள் காலத்துக்குப் பின்னர் தான் தமிழ் நாமங்கள் வழக்கற்று வடமொழி நாமங்கள் பிரபலமாயின என்பது புலப்படுகின்றது. ‘வெண்ணாவலுளார்’ எனத் தேவாரத்தில் வந்ததை “ஜம்பு நாதர்” எனத் திருப்புகழிற் பார்க்கின்றோம்; ஆதலால், 9-ஆம் நூற்றாண்டுக்கும் 15-ஆம் நூற்றாண்டுக்கும் இடையிலுள்ள காலத்தே தான் தலப் பெயர், சுவாமி பெயர், தேவி பெயர்--இவை சிலவும் பலவும்--வட மொழியில் ஏற்பட்டுப் பின்னர் வழக்கிலும் நூல்களிலும் ஆளப்பட்டு வருவனவாயின. மறைக்காடு என்பது வேதாரணியம் எனவும், முது குன்றம் என்பது விருத்தாசலம் எனவும், ஆனைக்கா என்பது கஜாரணியம் எனவும், தேன் மொழிப்பாவை என்பது மதுர வசனாம்பிகை எனவும், அங்கயற்கண்ணி என்பது மீனாக்ஷி எனவும், தான் தோன்றியப்பர் என்பது சுயம்பு நாதேசுரர் எனவும், புற்றிடங் கொண்டார் என்பது வன்மீகநாதர் எனவும் இவை போல்வன பிறவும் வழங்கி வருவன காண்கின்றோம். [பக்கம் 32 பார்க்க]
(vi) 506-ஆம் பாடலில் ராமாயணம் (கிஷ்கிந்தா காண்டத்தையும்), 508-ஆம் பாடலில் முநிவர்கள் “ஆதித்யாய”
எனத் தர்ப்பண காயத்ரி ஜப அருச்சனை செய்வதையும், தேர்வீதியில்[1] திரு நீறிட்டான் மதில் விளங்குவதையும் எடுத்துக்
கூறியுள்ளார்.
--------------------
[1] திருநீறிட்டான் மதில் :--இது சிவபிரான் சித்தராய் எழுந்தருளித் திருநீற்றையே கூலியாகக் கொடுத்துக் கட்டுவித்தது; அவர் கொடுத்த திருநீறு அவரவர் உண்மையாகப் பாடுபட்ட அளவுக்குப் பொற்காசாக மாறிற்று, "அகில காரணர் வினைஞர் பால் பூதியை அளித்து முகில் சுலாவ நன் கிழைத்த மாமதில்"-திருவானைக்காப் புராணம். இம்மதிலை வலம் வருவோர் சகல வரங்களையும் பெறுவர்.
-------------
இறைவன் கட்டளை யிட்டபடியே வயலூரைத் திருவானைக்காப் பதிகங்கள் பலவற்றிலும் மறவாது கூறியுள்ளார்.
திருவானைக்காவுக்கு உரிய பெயர்களாகக் கஜாரணியம், காவை, கரிவனம், கயப்பதி (கயம்=கஜம்), அத்தியின் கானம் (485) என்பன வந்துள்ளன.
திருவானைக்காவைத் தரிசித்து வயலூருக்கு மீண்டு வந்து தங்கினர். இங்ஙனம் வயலூரிலிருந்து கொண்டே சுற்றியுள்ள சில தலங்களைத் தரிசித்து வயலூருக்கு மீள்வர். (95) திருத் தவத்துறை (922-923) என்னுந் தலத்தைப் பணிந்து "அறம் வள்த்த நித்ய கல்யாணி" என அத்தலத்துத் தேவியைப் போற்றினர். பின்னர் (96) திருநெடுங்களம் (896), (97) அத்திப்பட்டு (899), (98) அத்திக்கரை(900), (99) குறட்டி (897-898), (100) கந்தனூர் (901) என்னுந் தலங்களைப் போற்றப் பணிந்தார்.
-
முருகவேள் அருணகிரியாருக்கு அற்புதக் காட்சி
தந்து அவரை விராலி மலைக்கு அழைத்தது.
இங்ஙனம் வயலூரில் சுவாமிகள் இருந்த பொழுது ஒரு நாள் வயலூர்ப் பெருமானது சந்நிதியில் நின்று பத்திச் சுவை நனி சொட்டச் சொட்ட "விகட பரிமள ம்ருகமத இமசல" எனத் தொடங்கி, அரிய பெரிய திருப்புகழ்ப்பா ஒன்றைப் பாடி
-
"அயில்கையில் வெயிலெழ மயில்மிசை
அக்குக் குடக்கொடி செருக்கப் பெருக்கமுடன்
வயலி நகருறை சரவண பவகுக!
இயலும் இசைகளும் நடனமும் வகைவகை
சத்யப் படிக்கினி தகத்யர்க் குணர்த்தியருள் தம்பிரானே" (921)
என முடித்து மகிழ்ந்தார். முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைக்கும் தமிழ்க் கடவுளுக்கு இத்தகைய அருமைத் தமிழ்ப் பாடலைக் கேட்டுச் சும்மா இருக்க முடியுமா? அன்றிரவே எம்பெருமான் அருணகிரியாரது (கனவில்) ஓர் அற்புத கோலத்தோடு மயிலின் மீது வேலாயுதம் விளங்க எதிர் தோன்றி, மாணிக்க வாசகப் பெருமானுக்குத் திருப்பெருந்துறையிற் குருவாய் எழுந்தருளிய சிவ பெருமான் மறு முறை திருக்கழுக் குன்றத்தில் அருளியது போலத், திருவண்ணாமலையில் திருவடி தீக்ஷை செய்த குகப் பெருமான் மறுமுறை வயலூரிலும் அருணகிரியாரைத் தடுத்தாண்டு திருவடி தீக்ஷை செய்து[1] "அன்ப! நீ (54) பந்தணை நல்லூரில் "சந்தத் தமிழ்" சொரிந்து பாடவும் அருள் தாராய், " (860) என்றும், (56) திருவிடை மருதூரில் "மதுர கவி யடைவு பாடி...வழிபாடு சேரும் அருள் தந்திடாதோ (863) என்றும், (59) கும்பகோணத்தில் "சித்ரத் தமிழாலுன் செம்பொனார்வத்தைப் பெறுவேனோ (870) என்றும் (70A) சப்த ஸ்தானத் திருப்புகழில் "திருப்புகழ் தணிய ஓகையில் ஓத எனக்கருள் புரிவாயே" (890)- என்றும் வேண்டிய வண்ணமே மதுரமும் சித்ரமுஞ் செறிந்த சந்தத் திருப்புகழ்ப்பாக்களை மெய்யன்பு கூட்டுவிக்கும் குளிர்ந்த உவகை வெள்ளத்தில் திளைத்துப் பாடும் வரத்தை அருளினோம்.
-------------------------
[1]. "திகழ்ப்படு செய்ப் பதிக்குளெனைத் தடுத்தடிமைப்படுத்த அருட் டிருப்பழநிக் கிரிக்குமரப் பெருமாளே" (135)
"வயலி நகரில் அருள் பெற மயில் மிசை யுதவு பரி
மள...வனச மலரடி கனவிலு நனவிலு மறவேனே" (934)
"வெளிப்பட் டெனையாள் வயலூரில் இருந்த வாழ்வே" (951)
"வயலியிற் சித்தித்தெனக்குத் தெளிவருள் பெருமாளே" - (550-ன் பாட பேதம்) -பக்கம் 24 பார்க்க.
2. "பாதபங்கய முற்றிட வுட்கொண் டோதுகின்ற
திருப்புகழ் நித்தம் பாடும் அன்பது செய்ப்பதியிற்றந்தவன் நீயே" (105)
'வேலாயுதா மெய்த் திருப்புகழ்ப் பெறு வயலூரா' (877)
-----------------------------------------------------------
இனி நீ நித்தம் அத்தகைய திருப்புகழ்ப் பாக்களைப் பாடவேண்டும். யாம் உறையுமிடம் விராலிமலை. நீ அத்தலத்துக்கு வருவாயாக!' எனக் கட்டளையிட்டு, ஞானப் பொருள்களை விளக்கி, "ஞான அமுதை ஊட்டி விட்டோம், உன் மலமாசு யாவையும் வீட்டி விட்டோம்." என மிக்க கனிவுடன் உரைத்து மறைந்தார். விழித் தெழுந்த அருணகிரியார் எம்பிரானது தாளிணையைச் சற்றுங் கருதாத இவ்வடியேனை விராலி மலைக்குவா என அழைத்த கருணை யிருந்தவா றென்னே! என ஆச்சரியப் பட்டு-
-
"சோலைபுடை சுற்று வயலூரா!
தாமரையில் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பில் அடியேனை...
விராலி மாமலையில் நிற்பம் நீ கருதியுற்று
வா என அழைத்து என் மனதாசை
மாசினை யறுத்து ஞானமுதளித்த
வாரம் இனி நித்தம் மறவேனே" (915)
எனப்பாடி நன்றி பாராட்டினார். கல்லினின்றும் நார் உரித்தது போல என் நெஞ்சக் கன கல்லைக் கனியாக்கி எனக்கு அமிதப் பதவி யளித்த பெருமானே! எனப் பொருள் படும்படி--
-
"வயற்பதி மன்னா! கன்னார் (கல்-நார்) உரித்த என் மன்னா!
எனக்கு நல் கர்ணாமிர்தப் பதம் தந்த கோவோ. (908)-
என்றும்,
-
"புயற் பொழில் வயற்பதி யினிற் பொருள் ப்ரியத்தோடு
புலப்பட எனக்கருள் பெருமாளே" (271)[1]
என்றும் போற்றினர்.
-------------------
1. 271-ஆம் பதிகம் "இருப்பவல்" என்னுந் திருப்புகழ்ப் பாவின் ஈற்றடிக்கு இவ்வாறு ஒரு பாட பேதம் ஓர் ஓலைப் புத்தகத்தில் இருந்தது. (பக்கம் 36 பார்க்க)
திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசு சுவாமிகளைச் சிவபிரான் திருவாய்மூருக்கு வருக என அழைக்க அவர் எழுந்து விரைந்து சென்றது போல அருணகிரியாரும் உடனே வயலூர்ப் பெருமானிடம் "ஆண்டவனே! நீவிராலி மலைக்கு அழைக்கின்றாய், நான் செல்கின்றேன்" என விண்ணப்பஞ் செய்து விராலி மலைக்குச் சென்றனர். (101) விராலிமலையில் (350-365) இறைவனைத் தரிசித்து 'அடியேன் உனது அருள் கொண்டு உரைத்த அரிய பெரிய திருப்புகழுக்கு ('விகட பரிமள' என்னும் 921-ஆம் பாடலுக்கு) உகந்து வயலூரில் அடிமையின் முன் அற்புத கோலத்தோடு எழுந்தருளி எனது இன்னலை ஒழித்த குகமூர்த்தியே! விராலிமலைக் குருபரனே!' என வாழ்த்தி "இதமுறு விரைபுனல்" எனத் தொடங்கும் பிறிதொரு சந்தப் பெருந் திருப்புகழைப் பாடி, அதில்-
-
திரு வயலியில் அடிமைய குடிமை யி(ன்)னலற
மயலொடு மலமற அரிய பெரிய திருப்புகழ் விளம்பு மென்முன்
அற்புத மெழுந்தருள் குக! விராலிமலையுறை குரவ! (354)
- எனத் தமக்கு வயலூரிற் கிடைத்த பெறுதற்கரிய காட்சியைப் பாராட்டிப் போற்றினர். விராலிமலையிற் சில நாள் தங்கி அற்புத நிறைந்த பாடல்கள் பல பாடினர். "சீரான கோல" என்னும் 350-ஆம் பாடலினால் இறைவனது திருவோலக்க வர்ணனையும், உருத்திரசன்மர் சங்கத்தாரது கலகந் தீர்த்த திருவிளையாலலும், (பாரதத்தில்) அருச்சுனனது உயிரைக் காக்கும் பொருட்டுக் கிருஷ்ணபகவான் சூரியனைச் சக்கரத்தால் மறைத்ததும்; 356-ஆம் பாட்டினால் விராலி மலையில் பாதி தூரத்தில் உள்ள 'சந்தன கோடு' என்னும் புண்ணியஸ்தானம்-தேவ விருக்ஷங்கள் ஐந்தினுள் ஒன்றாய சந்தான விருக்ஷம் போல-இஷ்டகாமியங்களை அன்பர்களுக்கு அளிக்கும் என்பதும், 358-ஆம் பாட்டில் 'வனிதையர் தங்கள் மருங்கு இணங்கிய இளமை கிழம்படு முன் பதம்பெற உணர்வேனோ' - என்றதனால் விராலிமலைக்குச் சுவாமிகள் வந்து தரிசித்த பொழுது அவர் இளவயதினர் என்பதும், 360-ஆம் பாட்டால்-மடவார்பால் அவருக்கிருந்த மருளின் வன்மை மடியும்படியாக வெற்றிகொண்ட திருவருளின் வன்மையைப் போற்றிப் பாராட்டினர் என்ப தும், கோனாட்டு விராலிமலை (360), கோனாடு சூழ்விராலி மலை (350,351) என வருதலால் விராலிமலை [1] கோனாடு என்னும் பழைய நாட்டுப் பகுதியைச் சார்ந்த ஊர் என்பதும் தெளிவாக விளக்க முறுகின்றன. பின்னர், விராலி மலையினின்றும் பிரியா விடை கொண்டு கோனாட்டுக் கொடும் பாளூர் எனக் கொங்குமண்டல சதகத்திற் சொல்லப்பட்ட [102] கொடும்பாளூரைத் (கொடும்பையைத்) (955) தரிசித்துத் திரிசிராப்பள்ளிக்கு மீண்டு வந்தார்.
--------------------------
[1]. கோனாட்டின் எல்லை எறும்பீசர் மலைக்கு மேற்கு' மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான் மலைக்கு வடக்கு,-கொங்குமண்டல சதகம் - பக்கம் 27.
-----------------------------------------------------------
10. கடம்பந்துறை முதல் பேரூர் வரை (12 தலங்கள்: 103-114)
திரிசிராப் பள்ளியிலிருந்து (103) கடம்பந்துறை (926) என்னும் தலத்தைத் தரிசித்து அத்தலத்துப் பதிகத்தில் காவிரியின் உற்பத்தியைக் கூறி, (104) ரத்னகிரி என்னும் வாட்போக்கியைத் (347-349) தரிசித்து "ஒப்பிலா மாமணிக்கிரிவாசா" (349) என்றும் ரத்னகிரி தேவாரம் பெற்ற தல மாதலின் "நமசிவாயனொடு ரத்னகிரி வாழ்முருகனே" என்றும் போற்றி, (104A) [1] சிவாயம், என்னுந் தலத்தை வணங்கிக் (105) கருவூருக்கு (927-933) வந்தனர். தமது வழக்கம் போலக் கருவூர் என்பதற்குக் "கொப்பபுரம்" எனப் பேரிட்டுக் "கெர்ப்பபுரத்தில் அறுமுகப் பெருமாளே" என வாழ்த்தினர். (931). 932 -ஆம் பாட்டிற் பாரத விஷயங்களைக் கூறியுள்ளார். 929-ஆம் பாட்டில் முருகனைக் "கசிவார் இதயத்து அமிர்தே" என அருமையாக விவரித்துள்ளார்; கருவூரைக் குடகிற் கருவூர் என்றார். 'நிதியே, நித்தியமே, என் நினைவே' என வரும் உருக்கமான 'மதியால் வித்தகனாகி' (927) என்னும் சிறிய பாடல் இத்தலத்தது. கருவூருக்குக் கிடைத்த ஏழு பாடல்களில் 4 பாடல்களில் வயலூர் சொல்லப்பட்டுளது. 933-ஆம் பாடலில் 'வயலியல் வஞ்சியில்' என்பது "வயலியில் வஞ்சியில்[2]" என்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது. கருவூருக்கு வஞ்சி என்றும் ஒரு பெயர் உண்டு. (932-933). ஆண்டவனைக் "கருவூர் அழகப் பெருமாளே" [929] என்றும், 'எமையாள்கொள...கருவூர்தனில்மேவிய பெருமாளே' [930] என்றும் ஓதி மகிழ்ந்துள்ளார்.
----------------------------
[1]. திருப்புகழ் வைப்புத்தலம் -1304-ஆம் பதிகம் பார்க்க. சிவாயம் என்று வாட் போக்கிக்கும் ஒரு பெயர்.
[2]. (144) திருப்புத்தூர் -983-ஆம் பதிகத்தைப் பற்றிப் பின் வருவதையும் பார்க்க.
கருவூருக்கு மேற்கே 3 மைலில் (105A) தான் தோன்றி மலை என்று ஒருமலை உண்டு. 804-ஆம் பாட்டு [சூழ்ந்தேன்ற] என்பதை இத்தலத்துக்கு உரியதாகவும் கொள்ளலாம். தலம் எண் 26 பார்க்கவும்
பின்பு சுவாமிகள் [106] நெருவூரைத் [934] தரிசித்து வயலூர்ப் பெருமான் தமக்குத் திருவடி தீக்ஷை செய்த கருணையை--
-
வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை
யுதவு பரிமள மதுகர வெகுவித
வனஜ மலரடி கனவிலு நனவிலு மறவேனே. [934]
எனப் புகழ்ந்து பாடினர். இப்பாடலின் முதலடியில் 'குடில செடிலினும்' என்பது 'குடில சடிலனும்' என இருத்தல் வேண்டும் போலும்.
"குடக...நெருவை" எனத்தலம் நெருவை உள்ள இடத்தையும் குறிப்பித்தார். பின்பு [107] வெஞ்சமாக் கூடலைத் [935] தரிசித்து அத்தலத்துப் பாடலில் திருவேற்காட்டைக் கூறிப் பின் [108] புகழிமலையை (401) வணங்கி, அகத்தியர் வணங்கிய தலமென அதைப் பாராட்டி, (108A) சென்னிமலைக்கு வந்தார். 'பகலிரவினில்' என்னும் (339)-ஆம் பாட்டிற் 'சிரகிரி' என வருவதைச் சென்னிமலை எனப் பொருள்படுத்தினால் சென்னிமலைக்குத் திருப்புகழ்ப் பாடலுண்டு எனக் கொள்ளலாம். (பக்கம் 59-திரிசிராப் பள்ளியைப் பற்றிக் கூறியுள்ளதைப் பார்க்க) ஸ்ரீசம்பந்தப் பெருமானுக்கும் அப்பர் சுவாமிகளுக்கும் சிவபிரான் திருவீழிமிழலையிற் படிக்காசு தந்தது போல முருக பிரானும் அருணகிரியாரது பாட்டுக்கு உகந்து அவருக்குப் படிக்காசு அளித்ததாகச் சென்னிமலை யாண்டவன் காதல் என்னும் நூல்-
-
நாட்டில் அருணகிரி நாதன் திருப்புகழ் சொல்
பாட்டின் மகிழ்ந்து படிக்கா சளித்த பிரான்
தாலமிகுஞ் சென்னிமலை தன்னில் வளர் கல்யாண
வாலசுப்ப ராயனென்று வாணர்புகழ் வாசலினான்--
எனக் கூறுகின்றது. பின்பு (109) விஜய மங்கலத்துக்கு (940) வந் அத்தலத்துப் பதிகத்தில் வயலூரையும், வேடர்மேல் முருகர் வேல் ஏவியதையும் (பக்கம் 42 - தலம் 46 ஐ பார்க்கவும்). விஜய மங்கலத்துள்ள தாமரைத் தடாகத்தை யும் விவரித்துப் பாடல் பாடினர். அதன்பின் (110) திருமுருகன் பூண்டியைத் (946) தரிசித்து ஆண்டுக்கு ஒருநாளேனும் தபஜெபத்தை நான் மனக்கனிவுடன் தீண்டவும், உன் திருவடியைப் போற்றவும் அருளிதியெனத் துதித்தனர். இங்ஙனம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ஆண்டவனைத் தரிசித்துப்பாடித் துதிக்கும் அநுட்டானம் இப்போது திருத்தணிகைக்கு[1] அன்பர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி முதல் நாள் தரிசனத்தின் பொருட்டு டிசம்பர் இறுதிநாள் இரவு வந்து கூடி முருகன் திருப்புகழைப் பாடித் துதிப்பதற்குப் பொருந்தி யிருக்கின்றது.
----------------
[1].இவ் வழக்கம் சில வருஷ காலமாக நடைபெறுகிறது. 1912-ம் வருட முதல் எங்களால் அனுஷ்டிக்கப்பட்டு1921 முதல் வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமி சச்சிதானந்தா அவர்களால் பிரபலமாக்கப்பட்ட வழக்கம் இது.
---------------
திருமுருகன் பூண்டியிலிருந்து (111) அவிநாசிக்குப் (946-949) போய்ப் பணிந்து அது கொங்குநாட்டில் உள்ளதெனத் (948) தெரிவித்து, (112) திருப்புக் கொளியூரையும் (950-952) பரவிச் சுந்தரமூர்த்தி சுவாமிகளது ஞாபகம் மிகவும் வர அவரது சரித்திரத்தைச் சுருக்கமாகக்கூறி, அவருக்கு இறைவன் பொதி சோறளித்ததையும் திசைகாட்டி உதவியதையும் பாராட்டி, முதலையுண்ட பாலனை அவர் அழைத்த திருவிளையாடலைச் சிறப்பித்துப் புகழ்ந்து, "மதப்பட்ட" என்னும் 951-ஆம் பாடலைப் பாடி மகிழ்ந்தார். "துற்குணம் வேறாக** ஞான உபதேசம் பேசு சற்குருநாதா! உன் அற்புத சீர்பாதம் மறவேனே" (950) என நன்றியும் பாராட்டினர்.
முதலையுண்ட பாலனை ஸ்ரீசுந்தரர் அழைத்துப் புக் கொளியூர் என்னும் தலத்தில் உலகர்முன் காட்டின படியாற்புக்கொளியூரைக் "கலி புருஷனை வென்ற உண்மை அருட் சீர் விளங்கும் ஊர்" என்னும் பொருளில்-
"பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான புக்கொளியூர்" (950) - எனப் போற்றினர். புக்கொளியூரில் திருவிழாக்கள் பல நடந்தன என்பதைக் காட்ட "விழாமலி திருப்புக் கொளியூர்" (952) என்று கூறியுள்ளார். திருப்புக்கொளியூரைத் தரிசித்தபின் (113) குருடி மலை (395) யை வணங்கி அங்கு "மதுரநதி"[1] பெருகுவதைப் பாடலில் விளக்கினர். பின்பு (114) ஞானமலையைத் (391, 392) தரிசித்துத் தமது அடிநாட் சரிதத்தை ஒருவாறு விளக்கித் தாம் வாழக்கையை வெறுத்து உயிர் விடத் துணிந்த சமயத்தில் இறைவன் தம் முன் அணுகித் திருவடி தீக்ஷை செய்த கருணையை,
-
"அகமதை எடுத்த சேமம் இதுவோ என்
றடியனு நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போதும்
அணுகிமு னளித்த பாதம்" [2]
எனப் பாராட்டி, அத்திருவடியை மீண்டும் அருளுக என வேண்டினர்.
-------------------------------------
[1]. "மருத மெனு நதி" என்றும் பாடம்.
[2]. இதற்கு நான் 'உயிர்விடும் போதும் முன்போல எதிர்வந்து திருவடியைத் தந்தருளுக' எனவும் பொருள் கொள்ளக் கூடும்.
-----------
ஞானமலை, குருமலை யாய காடடர்ந்த ப்ரதேசங்களில் தனியாக யாத்திரை செய்யும் பொழுது ஒரு பெருங்காட்டில் வழிதப்பி அருணகிரியார் திகைத்துச் 'செங்கோடைக் குமரா! வழி தெரியவில்லையே' என ஆண்டவனைத் தியானித்த பொழுது, 'செங்கோடைக் குமரன் என எங்கே நினைப் பினும் அங்கே என் முன்வந் எதிர் நிற்பனே', "கந்தா எனும்போ(து) செஞ்சேவல் கொண்டு வரவேணும்", 'பயந்த தனிவழிக்குத்துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே'- என அவர் அருளிய திருவாக்கின் உண்மையை அவரே காணும்படி வேலாயுதம் அவருக்கு எப்புறத்தும் நின்று இரவும் பகலும் துணை செய்ய, முருகவேளும் ஒரு வழிகாட்டியாய் வெளிப்பட்டு வந்து உதவினர்.
இதன் உண்மையைத்
-
"தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும்
இருபுறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணைய தாகும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
எனதுளத்திலுறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே"
என வரும் வேல் வகுப்பாலும்,
"வெளிப்பட மகாடவியில் நிற்பதோர் சகாயக்காரனும் குறத்தி திருவேளைக்காரனே"-
எனவரும் வேளைக்காரன் வகுப்பாலும் அறியலாகும். இங்ஙனம் மெய் வருத்தம் பாராது கருமமே கண்ணாய் வேல்-மயில் தியானத்துடன் சுவாமிகள் மேலைச் சிதம்பரம் எனப்படும் (115) பேரூரை (953-954) அடைந்தனர்.
------------------
11. பேரூர் முதல் பழநிவரை (8 தலங்கள் 115-122)
பேரூரிற் பட்டி முநிவரை ஆட்கொண்டு அவருக்காகச் சிவபிரான் கொட்டி நடனம் ஆடினதைப் "பட்டியாள்பவர் கொட்டி யாடினர்" என்றும், காமதேனு பூசித்ததை "ஆ (பசு) சூழ் பேரூர்" என்றும் (954) புகழ்ந்து பாடினர். பிரமனும் திருமாலும் பட்டி முநிவர் கோமுநிவராகப் பேரூரில் தவஞ்செய்து சிவபிரானது நடன தரிசனத்தைக் கண்டு களித்தனரென்பதும், காமதேநு பூசித்த தலம் பேரூர் என்பதும் பேரூர்ப் புராணத்தால் தெரிகின்றன. பேரூருக்கும்-(172) திருவொற்றியூரைப்போல - ஆதிபுரி என்று ஒரு பெயர் இருத்தலாலும் நடராஜப் பெருமானைப் பற்றிக் கூறி இருத்த லாலும் "கரிய முகில்" என்னும் 690-ஆம் பாடலும் [பரூருக்கு உரியதாகக் கொள்ளலாம். பின்பு வட கொங்கு நாட்டைச் சார்ந்த (116) எழுகரை நாடு (990)[1] என்னும் தலத்தைத் தரிசித்து மிக உருக்கமான "விரகற நோக்கியும்" என்னும் அருமைப் பதிகத்தைப் பாடினர்.
------------------------
[1]. "குறவள்ளி பங்கன் எழுகரை நாடுயர்ந்த குமரன்"- தனிப்பாடல்; கொங்குமண்டல சதகம் பக்கம் 53.
------------------------------
பின்னர் (117) தென் சேரிகிரியைத் [396-397] தரிசித்துப், (118) பட்டாலி -சிவமலைக்கு [943-945] வந்தனர். இத்தலத்து மூன்று பாடல்களிலும் வயலூர்ப் பெருமானைப் போற்றியுள்ளார். 944-ஆம் பாடலில் "கொக்காக நரைகள் வருமுனம், இக்காய இளமையுடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை யருளாதோ!" என்றதனாலும் முன் (101) விராலிமலைக் குறிப்பின் கீழ்க் குறித்தவாறு இத்தல யாத்திரை செய்த பொழுதும் சுவாமிகள் இளவயதினர் என்பது நன்கு புலப்படுகின்றது. இப்பதிகத்திற் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டுச் சிவபிரான் பரவையாரிடம் தூது சென்ற லீலையைப் பாராட்டி யுள்ளார். 945-ஆம் பாடலில் "கொங்கிற் பட்டாலி" என்று பட்டாலியூர் உள்ளஇடத்தையுங் குறித்துள்ளார்.
வயலூரிற் "சிவகலை யலதினி யுலக கலைகளும் அலம் அலம்" (912) என்றவர் பட்டாலியூர்ப் பதிகத்தில் (945) சிவ நூலின் மந்த்ரப் ப்ரஸ்தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம் வம்பிற் சுற்றாது பரகதி யருள்வாயே' என்றார். 'கதற்று மநேகங் கலைக் கடலூடுஞ் சுழலாதே கழற்புணை நீ தந்தருள்வாயே,' எனத் திருப்புகழிலும் (257), 'கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமாறதுவாய் விடவோ' எனக் கந்தரநுபூதியிலும் (32) முறை யிட்டுள்ளார். இங்ஙனம் அருணகிரியார்க்குச் சுருக்க வழியே மிக ஆவல். பிறரும் அச்சுருக்க வழியையே கைப்பற்றிப் பிறவிக்கரை யேறவேண்டும் என்பது அவர் கருத்து;ஆனது பற்றித் தான்
-
"காட்டிற் குறத்திப் பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதல் மிக எளிதே...யோகிகளே"-
எனக் கந்தரலங்காரத்திலும் (85), தும்மும்போது குமரசரணம் எனச் சொல்லுங்கள், உய்வீர்கள் (துமிக் குமர சரணம் என்னீர்-உய்வீர்") எனக் கந்தரந்தாதியிலும் (97) மக்கள் சுருக்கமாகவும், சுலபமாகவும் அநுட்டிக்க க்கூடிய உபதேசங்களை அருணகிரியார் உலகுக்கு எடுத்து ஓதியுள்ளார்.
பட்டாலியினின்றும் நீங்கிப் பின்னர்ச் (119) சிங்கை (941,942,99*) க்கு வந்து தரிசித்து, (120) "ஊதி மலையை (393, 394) அடைந்தார். அத்தலத்துப் பதிகத்தில் தாம் முதல் நாளில் தற்கொலை புரியத் துணிந்த தருணத்தில் இரக்கங்காட்டி இறைவன் தம்மை ஆட்கொண்டதை சுபமளித்த கருணையைச்-
-
சடத்தில் நின்றுயிரான துறத்தற் கிரக்கமுஞ் சுப
சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் புரிவோனே (394)
- எனப் பாராட்டி மகிழ்ந்தார். அதன் பின்பு (121) கீரனூருக்கு (956) வந்து தரிசித்துத் திருமால் வாலி [1]யுடன் கீரவாரிதியை (திருப்பாற்கடலை)க் கடைந்த சரிதத்தை விளக்கிப், பின்பு (122) ஆய்க்குடியைத் (982) தரிசித்து அத்தலத்து முருகரைச் "சாம பரமேட்டியைக் காவலிடும் ஆய்க்குடிக் காவலவ"- என வணங்கிப், (123) பழநித்தலத்துக்குத் (திருவாவினன் குடிக்கு) (100- 194, 1308) வழி நடந்தார்.
-------------------------------------------
* பாட பேதம் பார்க்க. [1]. 918-ஆம் பாடலையும் பார்க்க. திருப்புகழ் முதற்பாகம் - அநுபந்தம் பார்க்க.
-----------
12. பழநி முதல் மதுரை வரை (4 தலங்கள்: 123-126)
உள்ளத்தையும் உயிரையும் ஒருங்கே கவரும் தோற்றங் கொண்ட பழநிமலை கண்ணிற் பட்டபொழுதே புளகாங்கிதம் கொண்டு பரவசமுற்று இந்நாள் காறும் பழநி, பழநி, பழநி என்று தல நாமத்தைக் கூடப் படித்துச் ஜெபிக்காது போனேனே, அங்ஙனம் ஜெபிப்பவரைக் கூடத் தலை வணங்கினேன் இல்லையே என வருந்தி-
-
படிக்கின்றிலை! பழநித் திருநாமம் ! படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை! முருகா என்கிலை! முசியாமலிட்டு
மிடிக்கின்றிலை! பரமானந்தம் மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின்றிலை! நெஞ்சமே! தஞ்சமேது நமக்கினியே. (கந்.அலங். 75)
எனப் பாடிக் கொண்டே பழநி ஊரை அடைந்தார்.
சிவமாய் விளங்குகின்ற இம் மஹா க்ஷேத்திரத்தை மனத்தினாற் கூட இதுகாறும் சேவித்ததில்லையே எனத் துக்கித்து-
"உனது பழநிமலை யெனும் ஊரைச் சேவித்தறியேனே" (166)
எனப்பாடித் தமது ஆராமையை வெளியிட்டார்.
பழநி மலையின் அடிவாரத்தி லுள்ளதும் ஆறுபடை வீடுகளில் மூன்றாவதுமான திருவாவினன்குடியை முதலில் தரிசித்தார்-அவர் காலத்திற் சேர மன்னரைச் சேர்ந்த ப்ரதேசத்திற் கொங்கு நாட்டில் "வைகாவூர் நாடு" என்னும் பகுதியைச் சார்ந்த தலம் ஆவினன் குடி. இது 'நாதவிந்து' என்னும் (100) பாட்டில் 'கொங்கு வைகாவூர் நனாடதில் ஆவினன்குடி, என வருதலால் அறியக் கிடக்கின்றது. இப்பதிகத்திற் கூறப்பட்ட ராஜ கெம்பீர நாடு என்பது சோழ நாட்டின் ஒரு பகுதி. "ஆதியந்த உலா" என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு உயிர் நண்பருமான சேரமான் பெருமாள் நாயனார் (கழறிற் றறிவார் நாயனார்) பாடிய "திருக்கைலாய ஞான உலா" என்னும் நூல். பிரபந்த வகைகளுள் ஒன்றான "உலா"க்களுள் இதுவே முதல் உலா. ஆதலால் இவ்வுலா "ஆதி உலா" என்னும் பெயரோடு விளங்கலாயிற்று. இது சைவத் திருமுறைகள் பன்னிரண்டுள் பதினோராம் திருமுறையிற் சேர்க்கப்பட்ட ஒரு அருமை யான நூல். சுவாமிகள் காலத்திற் பழநி சேர ராஜனது நாட்டைச் சேர்ந்த தலமாதலின் சேரமானையும் அவர் நூலையும் சிறப்பித்தனர் போலும். 103-ஆம் பாடலில் "ஆலிவெந்து" என்பதில் ஆலி என்பது குண்டிகை நீர். 105-ஆம் பாடலில் திருப்புகழை நித்தம் பாடும் அன்பை வயலூரிற் பெருமான் தமக்கு அருளியதைப் பாராட்டிப் புகழ்ந்தனர் (பக்கம் 70 பார்க்க) "அபராத நிந்தை" எனத் தொடங்கும் 106-ஆம் பாட்டில் முருகபிரான் தமக்கு ஜெபமாலை தந்த பேற்றைக் கூறினர். 109-ஆம் பாட்டில் "ஜெகமேல் மெய்கண்ட விறல் பெருமாளே" என்பது ருத்ர ஜன்மராய்த் தமிழாய்ந்து உண்மைப் பொருளை முடிவு கட்டிச் சங்கத்தாரது கலகந் தீர்த்த திருவிளையாடலைக் குறிக்கின்றது போலும். 110ஆம் பாட்டில் "அமரர்க் கிறையே வணங்கிய பழநித் திருவாவினன் குடி" என்பதனால் இத்தலம் இந்திரன் பூசித்ததென்று தெரிகின்றது.
111-ஆம் பாட்டு 'வஞ்சனை மிஞ்சிய' என்பதில் திருவாவினன் குடியில் உள்ள எல்லா மலைக்குன்றுகளிலும் திரு முருகன் விளையாடுகின்றான் என்பது---"திருவாவினன் குடிகுன்றுக ளெங்கினுமே வளர்ந்தருள் பெருமாளே" என வருவதால் தெரிகின்றது.
113-ஆம் பாட்டில் "யாவர்க்கும் கீழாம் அடியேனை" ஏன்றுக் கரையேற்றிய திருவடிகளை மறவேன்---
-
' சடலனை, சவுந்த ரிகமுக...பதமொடு---மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
அழுந்த உரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமும் இருமலர் சரணமும் மறவேனே '---
என்றார்.
115-ஆம் பாட்டு---குன்றுங் குன்றும்---என்பது---மெல்லோசை மிக்குச் சந்த இன்பம் ததும்பும் ஓர் அருமைப் பாட்டு.
117-ஆம் பாட்டு "புடவிக் கணிதுகில்" --என்பதில்---
-
"பரன் வெட்கிட வுளம் மிகவும் வெகுண்டக்
கனியைத் தரவிலை யென ... பழநிச் சிவகிரி
தனிலுறை கந்தப்பெருமாளே"---
என்னும் அடியில் ஈசன் பழம் தரவில்லை எந வெகுண்டு முருகன் பழநிக்கு வந்த புராண சரிதம் கூறப்பட்டுளது.
118 முதல் 123 வரையிலுள்ள ஆறுபாடலகள் "வீரையில் எழுந்தருளியுள்ள பழநிப் பெருமாளே" எனப் பொருள் தரும்படிப் பாடப்பட்டுள. சுவாமிகள் பழநியில் இருந்த காலத்தில் அவருக்கு ஓர் அரிய நண்பர் கிடைத்தார். அவரைக் கலிசைச் சேவகன் என்றும், காவேரி சேவகன் என்றும் சுவாமிகள் கூறுவர். அவர் வீரை என்னுந் தலத்தில் பழநி யாண்டவருடைய திருவுருவம் ஒன்றமைத்து வழிபட்டு வந்தார். சிறுத் தொண்ட நாயனாருடைய திருத் தொண்டையும் அவர் பணி செய்து வந்த பெருமானையும்-
-
"பொடி நுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே"
"செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே"--
எனத் திருஞான சம்பந்தப் பெருமான் தமது பதிகத்திற் பாராட்டிப் புகழ்ந்தது போல அருணகிரியாரும் கலிசைச் சேவகனாரை [1] 'மேக நிகரான கொடையான், பாரி வள்ளலுக்கு இணையான கரம் உடையான், மதனவேள் அனையான்,காவிரிக் கரையில் உள்ள கலிசை யென்னும் ஊரில் தோன்றிய வள்ளல், தனது சிந்தையிற் பழநிப் பெருமான்வீற்றிருக்கப் பெற்ற பக்தன்' என்று பலவாறு பாராட்டியும், அவர் பணிந்து வந்த வீரை நகர் வாழ் பழநிப் பெருமானைப் போற்றியும் பாடியுள்ளார்.
----------------------------
1. " மேக நிகரான கொடைமானாய காதிபதி
வாரிகலி மாருத கரோபாரி மாமதன
வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன துளமேவும் வீர" (122)
"காவிரி விளங்கு கார்கலிசை வந்த சேவகன் வணங்க
வீரைநகர் வந்து வாழ்பழநியண்டர் பெருமாளே!" (120)
----------
'முருகா! நீ கலிசைச் சேவகனது இதயத்து வீற்றிருப்பதை ஒரு பெருமையாகக் கொண்டிருக்கிறாய்!' எனப்பொருள் படும்படி - -
-
"வீறு கலிசைவரு சேவ கனதிதயம்
மேவும் ஒரு பெருமை யுடையோனே" (121)
எனவும், ' கலிசை வரு காவேரி சேவகனொ டன்பு புரிவோனே' (146) எனவும் சுவாமிகள் அந் நண்பரைப் புகழ்ந்தாரென்றால் அந்தக் கலிசைச் சேவகனுடைய பக்திக்கு ஓர் அளவுண்டோ?
126- ஆம் பாட்டு ' கடலைச் சிறை வைத்து' என்பதிற் சுவாமிகள் பெண்களின் கண்ணை வருணித்துள்ளார். சுவாமிகளது வாக்கின் வல்லபத்தையும் கவித் திறத்தையும் புலப்படுத்த இப்பாடலொன்றே போதுமானது. இப்பாடல் முருகபிரான் ருத்ர ஜன்மராய் வந்த லீலையையும் அவர் அகத்திய ராதி முநிவர்களுக்கும், சங்கப் புலவர்களுக்கும் தமிழ் குருநாதர் என்பதையும் அருமையாக விளக்குகின்றது.
131 .ஆம் பாட்டு 'திமிர வுததி' என்பது சுவாமியிடம் பிரார்த்தனை செய்ய நன்கமைந்த ஓர் அருமைப்பாடல். 135-ஆம் பாட்டு 'குறித்த மணி' என்பதில் வயலூரில் முருகவேள் தம்மை யாட்கொண்டருளியதை --
-
'திகழ்ப்படு செய்ப் பதிக்குலெனைத் தடுதடிமைப் படுத்த
அருட்டிறுப் பழநிக் கிரிக்குமரப் பெருமாளே'-
எனப் போற்றி விளக்கியுள்ளார்.
136 -ஆம் பாட்டு 'கலவியி லிச்சித்து' என்பதாலும், 110 -ஆம் பாட்டில் 'நுகர்; வித்தகம் ஆகும்' என வருவதாலும் "நீ இதை உண்க, ஞானம் பெறுவாய்! திசையெல்லாம் மெச்சும்படி செந்தமிழ்ப் பாடலைப் பாடு" என்று சொல்லிச் சம்பந்தப் பெருமானுக்குத் தேவி திரு முலைப்பால் அளித்ததாக தெரிகின்றது.
-
"நுகர், வித்தக மாகும் என்று, உமை மொழியிற் பொழி
பாலை உண்டிடும்... இளையோனே" -(110)
"பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
பகர் என இச்சித்து உகந்து கொண்டருள் தம்பிரானே"
-(136)
எனவரும் அடிகள் கவனிக்கற் பாலன.
144 . ஆம் பாட்டு 'விரை மருவு' என்பதில் உனது தண்டையணி பாதம் என்று தலைமிசை யணிந்து அழுதழுது உன் அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள் தாராய் என வருவது 'அழுதால் உன்னைப் பெறலாமே' என்னும் திருவாசகத்தை (திருச்சதகம் 90) நினைவூட்டுகின்றது.
147 . ஆம் பாட்டு "சிறு பறையும்" -என்பதால் அகத்தியர் அருச்சித்துப் பேறு பெற்றதும். 148 -ஆம் பாட்டு "சுருதிமுடி" என்பதால் சடாக்ஷர மந்திரம் "சரவணபவ" என்பதும் விளங்குகின்றன.
149-ஆம் பாட்டு-தலைவலி மருத்தீடு -என்பது நோய்-களை அகற்ற வல்ல ஒரு திருமந்திரப் பாடல்.
150-ஆம் பாடல் "கலகவாள் விழி" என்பதில் முருகனது காவிய நூலை ஆராயும் பணியே பணியாக அமையும்[1] வாழ்வை விரும்புகின்றார். இதன் கருத்து ஸ்ரீசம்பந்தப் பெருமானாகிய முருகவேள் உலகுக்கு உதவிய தேவாரத்தை ஆராயும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்; அங்ஙனம் மேற்கொள்ளுவதால் இடர்படா வாழ்வை நாம் பெறலாம்!- என்பது. இப்பாட்டில் "வனச மேல் வரு தேவா" என்றது சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலில் (தாமரை மலரில்) முருகன் தோற்றியதைக் குறிக்கும். 'சரவணை தனில் முளரியின் வரு முருகோனே' (133), 'பத்மந் தனிற் பிறந்த குமரேசா' (722), 'கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ளச் சரோருகங்கள் பயில் நாதா' (316) என வருவனவுங்காண்க, பரிபாடல் (5ல்)- 'பதுமத்துப் பாயற் பெரும் பெயர் முருக' என வருதலுங் காண்க.
-------------
[1]. "உனது காவிய நூலாராய்வேன் இடர்படாதருள் வாழ்வே நீயே தரவேணும்"-இத்திருவாக்கை மேற்கொண்டே "தேவார ஒளி நெறி" என்னும் சம்பந்தர் தேவார ஆராய்ச்சி நூலை அடியேன் எழுதி வெளியிட்டது.
----------
154-ஆம் பாடல் 'சகடத்தில்' என்பதில் இவ்வுடலைச் 'சுடு கட்டைச் சுடலைக் கட்டைக்கு இரையிட்டு' என்றது ஓர் அரிய பிரயோகம்.
156-ஆம் பாடல் "அகல் வினை" என்பதில் பழநி மலையைச் 'சிவமயமாம் நின் பழநி' என்றார். வைகை நீரில் எதிர்த்துச் செல்லும்படிச் சம்பந்த சுவாமிகள் எழுதிவிட்ட 'வாழ்க அந்தணர்' என்னும் திருப்பாசுரத்தின் பெருமையை உணர்ந்து, தேவாரத்தைத் திருக்குறளினும் மேம்பட்ட தென்றுத் தெளிவுற-
-
"முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை எழுதி
வனத்தே எற்றிய பெருமாளே"[1]-
என விளக்கியுள்ளார்.
----------
[1]. முப்பால் செப்பிய கவிதை-திருக்குறள்; மிக்க = மேம்பட்ட; ஆரத்தினை = தேவாரத்தினை; வனம் = ஜலம்; எற்றிய = எதிரேறவிட்ட.
---------
157-ஆம் பாட்டு (அதல விதல): இப்பாட்டில் தமக்கு முருக பிரான் மெய்ஞ்ஞானத்தை உதவியதை 'அணுவில் அணுவென நிறைந் திட்டு நின்றதொரு சம்ப்ரதாயம்... மனம் பெற்றிடும் படியை வந்து நீ முன் உதவ' என்கின்றார்.
160-ஆம் பாட்டு 'அறமிலா' என்பதில் வேசையர் மயக்கை 'மதன நாடக பித்து' என்றும், பழநி ஊர்க் கோயிலில் தேவி பெயர் 'பெரிய நாயகி' என்றும் விளக்குகின்றார்.
161-ஆம் பாட்டு 'ஆறுமுகம்' என்பதில் திரு நீறிடும் பொழுது ஆறு முறை ஆறு முகம் எனச் சொல்லி இடுதலின் விசேடத்தைக் குறித்துள்ளார்..
162-ஆம் பாட்டு-'இத்தாரணிக்குள்' என்பதில் 'அறுகு நுனி' என்னும் 862-ம் பாடல் போல மிக அருமையாக நமது வாழ்க்கையை வருணிக்கின்றார். இதில் எரி பட்டார் என நீரிற் படிந்து விடுபாசம் என்பது "காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே" என்னுந் திருமந்திரத்தை (145) நினைப் பூட்டுகின்றது, 'அடிய ராவிக்குள் நின்றுலவிவரு பெருமாளே' என இப்பாடலில் வருவது மிக அருமையான ஓர் உண்மை மொழி; 'ஆவியுள் நீங்கலன் ஆதி மூர்த்தி' எனவரும் சம்பந்தர் தேவாரத்தைக் (363) காண்க. 169-ஆம் பாட்டில் அடி 5-6.
-
இதய கவட்டு வாலித னுரமற விட்டவாளிய(ர்)
ரணமுக சுத்த வீரிய குணமான
இளையவனுக்கு நீண்முடி யுதவியொர் சத்ய வாசிதன்
இரத நடத்து சாரதி மருகோனே!
- என்றும் பாடம்.
170-ஆம் பாட்டு -'கரிய மேகம்' என்பதில் மார்க்கண்டேயரின் தந்தையார் தன் மகன் கசடனாய் நூறு வயது இருப்பதினும் சிவ பக்தனாய்ச் சிற்றாயுளுடன் இருப்பது மேல் எனக் கூறியது போலச் சுவாமிகளும்-
-
"மடவாருடன் மிக நாடிக் கசடனாய் வயதா யொரு நூறு
செல்வதனின் மேல் எனதாவியை நீயிரு
கமல மீதினிலே வரவே யருள் புரிவாயே" (மேல்=மேலானது)
எனப் பிரார்த்தித்துள்ளார்.
171-ஆம் பாடல் 'கரியிணை' என்பதில் -இந்நாள் போலவே சுவாமிகள் காலத்தும் பழநி மலைப் படிகளிற் குரங்குகள் விளையாடின எனத் தெரிகின்றது. வாசனையுள்ள பலாப் பழங்களைக் கீறி மலைப்படிகளில் இட்டுக் குரங்குக் கூட்டங்கள் விளையாடுகின்ற பழநி என-
-
"பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்
படியி னிட்டே குரக் கினமாடும் பழநி"-
என்னும் அடியில் விளக்கியுள்ளார். பாகல்=பலா.
173-ஆம் பாட்டு: 'கருப்புவிலில்'-- இப்பாடலின் கீழுள்ள குறிப்பில் விளக்கியபடி மூன்று திருப்புகழ்ப் பாக்களாக அமையவல்ல சித்ரகவி இது.
176-ஆம் பாட்டு 'குருதி மலசலம்' என்பதில் 'மனது பதமுற எனது தலைபதம் அருள்வாயே' என்றார். ஒரு முறைக்கு இரு முறையாக அருணையிலும் வயலூரிலும் திருவடி தீக்ஷை பெற்றிருக்க மறுபடியும் 'எனது தலைபதம் அருள்வாயே' எனப் பழநியில் வேண்டியது மிகையாகாதோ எனின்--ஆகாது. ஸ்ரீசுந்தர மூர்த்தி சுவாமிகளும் பல முறை திருவடி தீக்ஷை பெற்றார். இது "இங்கென்னைப் பலகாலு மிதித்த நீ யாரென்னக் கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ எனக்கரந்தான்" எனவரும் பெரிய புராணத்தால் அறியக் கிடக்கின்றது. மேலும் 'உணர்ந்தார்க் குணர்வரியோன் தில்லைச் சிற்றம் பலவன்' என்றார் மணிவாசகனார் திருக் கோவையாரில்; ஆதலின் மாயைகளும் வினைகளும் தம்மைத் தாக்கா திருப்பதற்கு மனோலயம் பெற வேண்டி அடிக்கடி திருவடி தீக்ஷையைவிரும்பி-
-
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற எனது தலை பதம் அருள்வாயே"-
என வேண்டினர். இந்த வேண்டுகோளுக் கிரங்கி முருக வேள் திருவடி சூட்டினாரென்பது -114-ஆம் பாடல் 'களப முலை' என்பதில் 'சிவவெற் பமர்ந்த குக வேலா-எனது தலையிற் பதங்கள் அருள்வோனே' என வருதலால் தெரிகின்றது.
177-ஆம் பாட்டு: 'குழலடவி' இப்பாடலின் பின் நாலடியிற் சிலேடை நயம் அறிந்து இன்புறத்தக்கது.
179-ஆம் பாட்டு 'ஞானங்கொள்', 190-ஆம் பாட்டு 'மூலங்கிளர்' இவை அருணகிரியார் யோகநிலைச் சித்திகள் யாவும் கைவந்த பெரியார் என்பதைப் புலப்படுத்துகின்றன.
181-ஆம் பாட்டு: 'நிகமம்'-முருகவேள் தம்மை வழி யடிமை கொண்டதை 'மனந் திகைத்த பாவியை வழியடிமை கொண்டு' என்பதால் விளக்குகின்றார்.
185-ஆம் பாட்டு; 'மந்தரம்'-பழநித் தலத்தில் அகத்திய முநிவர் பூசித்தது சொல்லப்பட்டுளது.
186-ஆம் பதிகம் 'மலரணி' -கடப்ப மாலையுடன் தாம் பாடிய தமிழ்ப் பாவையும் பன்னீரென முருகவேள் ஏற்றுக் கொண்டார் என இப்பாட்டில் விளக்கியுள்ளார். ஈற்றில், 'கதித்த மலை' என வருவது ஊற்றுக்குழி (கோயமுத்தூர் ஜில்லா) ரெயில் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது என்றும், அது சிறந்த சுப்ரமண்ய ஸ்தலம் என்றும் கூறுவர்.
189-ஆம் பாட்டு- 'முருகு செறி' -இதில் 'அமளிபடும் அமளி' என்னும் சொல்லழகு மகிழத் தக்கது.
194-ஆம் பாட்டு;-'விதமிசைந்தினி'-இதிற் பழநியைக் 'காசியின் மீறிய பழநி' என்றார்.
'நாலிலங்கதின்' (திருப்புகழ் 1-அநுபந்தம்-4-ஆவது பாடல்) என்னும் பாடலையும் சேர்க்கப் பழநிக்கு 96-பாடல்கள் உள்ளன. இத் தொண்ணூற்றாறு பாடல்களின் பிரிவு பின் வருமாறாகும்:
(ii) சிவமலை, சிவவெற்பு, சிவகிரி (பழநிக்குப் இப்பெயர்
உண்டு; சிவகிரி எனத் தனித் தலமும் உளது) ... 4
(v) பழநி, பழநிமலை, பழநிப்பதி, பழனாபுரி ... 71
-------
96
------
திருப்புகழ் பெற்ற தலங்களுள் பழநியே அதிக பாடல்களைக் (96) கொண்டிருப்பதால் சுவாமிகள் பல காலம் இத்தலத்தில் வாசஞ் செய்திருத்தல் வேண்டும்.
பின்னர்த் தெற்கிலுள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிச் சுவாமிகள் (பழநியினின்றும் புறப்பட்டுப் (124) பூம்பறை (402), (125) திருக் குளந்தை (பெரியகுளம்) (957) என்னுந் தலங்களைத் தரிசித்து, (126) தனிச்சயம் (958-959) வந்து சேர்ந்து, ஆண்டவனைத் தரிசித்து, "முருகா! நீ மயில் மீதிருப்பாய், வயலூரில் வாசஞ் செய்வாய், அன்பு படைத்த நெஞ்சில் விளங்குவாய், கொங்கு நாட்டுத் தனிச் சயம் என்னுந் தலத்தில் இனிது உறைவாய்" எனப் போற்றி, (959)த், 'தலங்கள் தோறும் சென்று திருப்புகழ் என்னும் சந்தப் பாவைப் பாடும் பணியைத் தந்து அத்தகைய கவித்துவத்தில் எனக்குப் பிரபுத்துவமும் குருத்துவமும் அருளின பெருமானே! தனிச்சயத்துப் பிள்ளைப் பெருமாளே!'--
-
'பதிபாடுங்--குறித்த நற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்து
வக் குருத்துவத் தெனைப்பணித் தருள்வோனே'-
என வாழ்த்தி வணங்கினர் (958). இதனால் திருப்புகழ்ச் சந்தப் பாவுக்கு இவரே வழி காட்டியாய், ஆதிகர்த்தாவாய்த் தலை சிறந்தவராய்க் குருமூர்த்தியாய் விளங்கினர் என்பதும், இவர் காலத்திலேயே இவரது பாடல்களின் உன்னத நிலையைக் கண்டு இவரே "சந்தப் பாக்களுக்குப் பிரபு", இவரே "குரு" என்று உலகம் பாராட்டிற்று என்பதும் நன்கு விளங்குகின்றன. பின்னர்த் தனிச்சயத்தை விட்டுச் சுவாமிகள் (126A) திருவேடகத்தைத் [1]தரிசித்துப் பின்பு (127) மதுரை மாநகர் (960-967*, 969-971, 725**) வந்து சேர்ந்தார்.
-------------------------
[1]. திருவேடகம் திருப்புகழ் வைப்புத்தலம் - க்ஷேத்திரக் கோவைப் பதிகம் 1304 - பார்க்க.
* 968 - எண்ணுள்ள பாடல் "கலை மேவு" பவானிக்கு உரியது. பக்கம் 58 - பாரிக்க.
** பாடபேதம் பார்க்க.
--------------------
13. மதுரை முதல் திருச்செந்தூர்வரை [3 தலங்கள் 127-129]
மதுரையிர் சங்கிலி மண்டபத்தில் (கிளி மண்டபத்தில்) வீற்றிருக்கும் முருகவேளைத் துதித்தும் (965), தாம் பெற்ற ஞானநிலையின் பெருமையை வியந்தும், விநாயகர் தந்தையை வலம் வரும் அளவிற் பிரான் மயில் மீதேறி உலகெலாம் வலம் வந்ததை வியந்தும் (960), மதுரையிற் சிவபிரான் "சொக்கர்" என்னுந் திருப்பெயருடையார் எனக் கூறியும் (961, 970), மாணிக்க வாசகருக்கு உபதேசித்த லீலை, நரி பரியாக்கிய திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் ஆகிய இவற்றைப் பாராட்டியும் (964), சம்பந்தப் பெருமானாய்ப் பாண்டியன் கூனையும் சுரத்தையும் தவிர்த்துச் சமணரைக் கழுவேற்றிய லீலைகளைக் குறித்தும் (963, 966) பாடல்கள் பாடினர். ஒரு பாடலில் "உனது சீர்பாதச் சிறப்பைச் செந்தமிழிற் பாட நான் விரும்புகின்றேன்" - அருள் புரிக என்று-
-
"வரிசை தரும் பதம் அது பாடி - வளமொடு செந்தமிழ்
உரைசெய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே" -
என வேண்டினர். (962). இவ்வேண்டுகோள் பின்னர் எங்ஙனம் சித்தித்தது என்பதை மேலே திருவகுப்பு என்னும் நூலைப்பற்றி எழுதுமிடத்தே விளக்குவோம்.
968-ஆம் பாடல் "கலைமேவு" என்பது பவானித் தலத்துக்கு உரியது, என்று முன்னரே (88-ஆம் தலம்-பக்கம் 58) கூறினோம். முத்தமிழும் வளர்ந்த தானம் மதுரை என்பதை விளக்க "முத்தமிழ்க் கடல்" (485) எனக் கூறி, முத்தமிழ் வல்ல சங்கப்புலவர்கள் பேர் பெற்றிருந்த அற்புத மஹாநகர் (கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீரற்புத மாநகராகிய கூடற்பதி") என அத்தலத்தைப் போற்றினர். (967)
மதுரையிலிருந்த படியே படைவீடுகளில் முதலாவதான (128) திருப்பரங்குன்றத்துக்குப் (2-15) போய்ப் பெருமானைத் தரிசித்துப், பெருமான் அங்கு தேவ சேனையை மணந்ததைக் கூறியும் (10), மணிவாசகப் பெருமானுக்கு உபதேசித்த குருநாதரும் வழிபடக் குருக்களாய் நின்ற பெரியோர் எனப் பராவியும் (4), பிரமனும், தேவர்களும், முநிவர்களும் முருகவேளை வழிபட்ட தலம் திருப்பரங்குன்றம் என விளக்கியும் (5,9). வயலூரிற் கூட்டிலிருக்கும் கிளிகள் "ஐந்துகர பண்டிதன் தம்பி" என முருகவேளை அழைக்கப் பயின்றிருந்ததை எடுத்துக் கூறியும் (14), பாரிஜாத விருக்ஷத்தைப் பூமியிற் கொண்டு வரவேண்டி சங்கநாதத்தாற் கிருஷ்ணமூர்த்தி தேவர்களைக் கலக்கின விஷயத்தைக் கூறியும் (15, 889, 1279)- பதிகங்கள் பாடி மகிழ்ந்தார். வயலூரையும் மறவாது போற்றினர். (14). பின்னர், ஆறாவது படை வீடாகிய (129) பழ முதிர் சோலை மலையைத் (433-448*, 572**, 938***) தரிசித்து அத்தலத்தில் உள்ள "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றினை "ஆயிர முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கு[1] கங்கை" எனச் சிறப்பித்து (438) , கதிர்காமத் தலத்தில் வேடனது பூஜைக்கு மகிழ்ந்ததை எடுத்துரைத்து (433) , யோகநிலை ரகசியங்களை விளக்கிப் பல தலங்களின் பெயர்களைக் கூறி (439), "ஆடு மயில்" மந்த்ர ரூபங் கொண்டது என்பதைத் தெரிவித்துச் (444) , சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை யுண்ட பாலனை அழைத்த லீலையைப் பரவிப் (446) , புகழ்ந்து பாடல்கள் பாடினார். சோலை மலையினின்றும் மீண்டு மதுரைக்கு வந்து (129A) திருவாதவூர் (365)2 சென்று வணங்கினர். பின்னர் (129B) திருநெல்வேலியைத் (846)[2] தரிசித்து, என்று காண்பேன் எனத் தாம் மிக விரும்பிய மஹா க்ஷேத்திரமான (130) திருச்செந்தூரை (16-99) அடைந்தார்.
-----------
* முத்தமிழ்க் கூடல் முதல்வன் -கல்லாடம் 77.
** பாடபேதம் பார்க்கவும்.
*** சிலம்பாறு -நூபுரகங்கை -சோலை மலையில் உள்ளது. சிலப்பதிகாரம்---காடுகாண் காதை 108-111, பரி பாடல் 15 (22 25 வரி) நாச்சியார் திருமொழி 9,10, பெரிய திருமொழி 9: 9---9 பெரியாழ்வார் திருமொழி 4-2-1. திருவேங்கடத்திற் போலப் பழமுதிர் சோலை மலையிலும் முருகன் ஆலயமும் திருமால் ஆலயமும் முதலில் இருந்தன. பழமுதிர் சோலையில் 'சரவணப் பொய்கை' என்ற தீர்த்தம் உள்ளது. 'திருமால் குன்றத்து... புண்ணிய சரவணம்' சிலப்பதி--காடு காண் 94.
[1]. இரங்குதல் = ஒலிததல்;
[2]. பாடபேதம் பார்க்க
------------------
14. திருச்செந்தூர் முதல் ஈழநாடு வரை ( 3 தலங்கள் 130-132)
"நஞ் செந்தின் மேய வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்"--- என அப்பர் சுவாமிகளாலும், மற்றும் தமிழ்ச் சங்கப் புலவர்களாலும் விசேஷித்துச் சொல்லப்பட்ட திருச்செந்தில் மாநகரைக் கண்குளிர உள்ளங் குளிரக் கண்டார்; தோள் குளிரத் தொழுதார்; கடற்கரை திருக்கோயில் பொலியும் அழகைக் கண்டார்: ஆனந்தங் கொண்டார். ஊரின் அழகையும் கோயிலின் வனப்பையும். தலத்தின் பெருமையையும், "ஜலநிதி தழுவு செந்தில் (17),செஞ்சொற் புலவர்க் கன்புற்ற திருச்செந்தில்(19), திருவளர் செந்தூர் (24,25) தென்திசைத் தென்றல் வீசும் பொழிற்செந்தில் (38), முத்துலவு வேலை நகர் (39), மனோகர செந்தில் (48), கயிலைமலை யனைய செந்திற்பதி (51), முன்றிலின்புறம் அலை பொருத செந்தில் (52), தெருவிலேயு நித்தில மெறி அலைவாய் (63), சம்புபுகழ் செந்தில் (65), சீரலைவாய் நகர் (75), வாரிதி நீர்பரந்த சீரலைவாய் (84), செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திற்பதி (95), சுந்தரமான செந்தில் (98)"- எனப் பலவாறு புகழ்ந்தார். மூதேவியாகிய
என்னை அழைத்து உனது பாதுகையைத் தந்தருளுதி (26) எனவும், எனது தலையிற் உனது திருவடியை (மறுமுறை) வைத்தருளுதி (20) எனவும் வேண்டினர். இத்தலத்திலிருந்து தானே வீரவாகு தேவர் சூரனிடம் தூது சென்றார் என்பது நினைவுக்கு வர வீரவாகு தேவரைப் புகழ்ந்தார் (20), ஆறெழுத்தின் தியானத்தை வேண்டியும், பல தலப் பெயர்களைக் கூறியும் துதித்தார் (28), தேவர் சேனாதிபதியாய் வீற்றிருக்கும் பெருமானைக் கண் குளிரத் தரிசித்துப் பல நாள் திருச்செந்தூரில் தங்கிப் பாடல்கள் பாடி மகிழ்ந்தார். பழநிக்கு அடுத்த படியாகத் திருச்செந்தூருக்குத்தான் பாடல்கள் அதிகம் (83 பாடல்கள்). இத்தலத்துக்குரிய பாடல்களில் உள்ள சில விசேஷக் குறிப்புகளைக் கூறுவாம்.
(i) 26 "அனிச்சம்" என்னும் பாடலில் தம்மை "விடக்கு அன்பாய் நுகர் பாழன்" என்றார். (விடக்கு-புலால்) இதைக்கொண்டு இவர் புலால் உண்ணும் குலத்தினர் என்றாவது வேசையர் உறவால் புலால் உண்டார் என்றாவது கொள்ளுதல் கூடாது; ஏனெனில், கந்தரந்தாதியில் வேதியர்கள் யாகத்துக்காக ஆட்டைப் பலி கொடுக்கும் வழக்கத்தை "அஜ வநியாயஞ் செய் வேதியரே" (31) எனக் கூறிக் கண்டித்துள்ளார்.
(ii)) 33 "பருத்த"- எனத் துவக்கும் பாட்டில் எனக் கென்றே சிறப்பான பொருளமையும் தமிழ்ச் சொற்களைத் தந்தருளுக என வேண்டினர்.
(iii) 37, 38 (சங்கு போல், பங்கமே) பாடல்களிற் பிரானைச் "செந்தமிழ்ப் பெருமாளே" எனப் போற்றியும் 46-(அங்கைமென்) பாடலில் பிரானை "உண்ட நெஞ்சறி தேனே" என அருமையாக வாழ்த்தியும் வணங்கினர்.
(iv) 19, 77 (அம்பொத்த, நிதிக்கு) பாடல்களில் தமிழ்ச்சந்த மறையை, முருகா! நீ சிவ பிராற்கு உபதேசித்தாய் என விளக்கினர். (தமிழ்ச்சொற் சந்தம் - தேவாரம் எனவும் கொள்ளலாம்.)
(v) 80-(படர்புவி), சுவாமிகள் காலத்திற் தீருக்குறளாதிய நூல்களைக் கற்றுப் புலவர் எனப் பலவகைப் பட்டங்களைப் பூண்டு திரிந்தவர் இருந்தார்கள் என்பது தெரிகின்றது.
(vi) 18,47,71 (கொடியனைய, அந்தகன், தரிக்கும்); நினைத்தால் முத்தியளிக்கும் சிவஸ்தலமாகிய திருவண்ணாமலைக்குப் போலத் திருச்செந்தூர்த் தலமும் தன்னைக் கருதுவார்க்கு முத்தியளிக்கும். எங்ஙனமெனில், திருவண்ணாமலைத் தலம் "யான் பரம்" என ஆணவங் கொண்ட பிரம விஷ்ணுக்களுக்கு எட்டாத தான மாதலால், அது ஆணவம் அற்றோர்க்கே சிவம் விளங்கும் என்பதைக் குறிப்பாற் காட்டி ஆன்மாக்களை உய்விக்கின்றது; அதுபோலத் திருச்செந்தூர்த் தலம்-அலைகள் மோதி ஓயுங் கடற்கரையில் உள்ள தலமாதலின் (புறத்தே அலை ஓயும் இடத்தில் முருகன் திருக்கோயில் கொண்டுள்ளது போல) அகத்தே எங்கு எப்போது மன அலை ஓய்கின்றதோ அங்கு அப்போது ஜோதி முருகன் விளங்கிக் கோயில் கொள்வான் என்பதைப் புலப் படுத்துகின்றது. இக்காரணத்தால் தான் சுவாமிகள் 47-ஆம் பதிகத்தில் "செந்திலை யுணர்ந்துணர்ந்துணர் வுற" என்றும், 18-ஆம் பதிகத்தில் "செந்திலென்றவிழ வுளது உருகி வரும் அன்பிலன்" என்றும், 71-ஆம் பதிகத்தில் "திருச் செந்திலை உரைத்துய்ந்திட" என்றும் கந்தரந்தாதியில் 'செந்தூர என்னத் தெளிதருமே' (24) 'செந்தூர் கருது' (33) என்றும் உபதேசித்துள்ளார்.
(vii) 48-'அருண மணி' இப்பதிகத்திற் செந்தூர்ப் பெருமாளே, உன் இணையடிகள் பாடி வாழ விரும்புகின்றேன். அதற்கு நீயே என் நெஞ்சிற் செஞ்சொல் தர வேணும் என வேண்டினர்.
(viii) 63- "குகர" (1) திருச்செந்தூர்த் தெருவில் அலைகள் முத்துகளை வீசுதலைக் கண்ணுற்றார். 'தெருவத்தில் வந்து செழு முத்தலைக் கொள் திருமுல்லை வாயிலிதுவே, என்னும் தமது குருநாதரது (ஸ்ரீசம்பந்தப் பெருமானது) தேவாரம் நினைவுக்கு வரத், தாமும்-
-
"தெருவிலேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற் கந்தப் பெருமாளே"-
எனப்பாடி மகிழ்ந்தார்;
(2) கடல் கொந்தளிப்பதைக் கண்டார். கடலின் அலைகள் மோதி மோதிக் கரையிற் சேர்வதைப் பார்த்தார். சிற்றின்பக் கடலில் அமிழுகின்றேனே நான்! என் மன அலை ஓய்ந்து நான் என்று கரைகாண்பது என எண்ணிக் கொண்டைக் குழலாரோடு ...அன்புற்று இன்பக் கடலூடே அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம்பொன் தண்டைக் கழல் தாராய்,- என இரங்கி வேண்டினர்.
(ix) 66 "கொம்பனை",- "என்னையும் ஒரு பொருளாக எண்ணி ஈடேற வைத்த பெருமானே! உன் திருப்புகழையே நான் பாடவும் என் நாள்கள் எல்லாம் பயன்படவும் அருளுதி"-
-
"என்றனை ஈடேற வாழ்வருள் பெருமாளே,
நமோ நம - என நாளும் உன் புகழே பாடி நானினி
அன்புடன் ஆசார பூஜைசெய்து உய்ந்திட
வீணாள் பட்தருள் புரிவாயே"-
என வேண்டினர்.
(x) 68 (சேமக்); அடியேற்கு யோக மார்க்கங்களையெல்லாம் உபதேசித்த தேசிக மூர்த்தியே! (யோகத்தாறு உபதேசத் தேசிக) எனத் துதித்தும், சகல கலாவல்லவனாகிய முருக வேளின் முன் ஏனைத் தேவர்கள் "ஊமர்கள்" என விளக்க -"ஊமைத் தேவர்கள் தம்பிரானே! " என வாழ்த்தியும் பாடினர்.
(ix) 72 "துன்பம்"-"சிந்தின் துறைதங்கிய குன்றெங்கும் சங்கு வலம்புரி பம்பும் தென்செந்தில்" -என்றதனால் கடற்றுரை ஓரத்தில் குன்றுகள் இருந்தன என்பது தெரிகின்றது. (இது இன்றும் காணலாம்) "செந்தின்மாமலை" - கந்தர் சஷ்டிக் கவசம்; "பரகிரியுலாவு செந்திமலை" திருப்.430).
(xii) 73 "தெருப்புறத்" -வடக்கே திருத்தணிகை மலையிற் பிரபலமாய் விளங்குவது போலத் தெற்கே திருச்செந்தூரிற் பிரபலமாய்ப் பொலிகின்றாய் எனப் பொருள் படத் "திருத்தணிக்குட் சிறப்பில் வாழ்...செந்தில் மேவு குகனே" எனத் துதித்தார்.
(xiii) 94 "வஞ்சம்"-திருச் செந்தூர் "மகா புநிதந் தங்கும்" தலம் என விளக்கினார். (இலை விபூதி மிக ஆசாரமாய்க் கொடுப்பதைக் கருதியும், அருச்சனை செய்யும் "போற்றிகளது" ஆசாரத்தைக் கருதியும் போலும் இங்ஙனம் போற்றப் பட்டது.
(xiv) 95 "வஞ்சகத்துடன்": "செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ் தெரி செந்திற் பதிநகர் உறைவோனே"- என்றது திருச்செந்தூர் செஞ்சொற் புலவர்கள் -சங்கப் புலவர்கள்-முதலோராற் பாராட்டப் பட்டதொரு புராதன தலமென்பதை விளக்குகின்றது. உதாரணமாக:-
1) 'உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச் சீரலைவாய்' -நக்கீரர்-திருமுருகாற்றுப்படை.
2) 'திருமணி விளக்கி னலைவாய்ச் செருமிகு சேஏய்' -பரணர் அகநானூறு 266.
3) 'வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை'-
-மதுரை மருகன் இளநாகனார் புறநானூறு 55
4) 'நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்'
- தொல். களவு.-சூ. 23 ந: பையுண்மாலை.
5) "சீர்கெழு செந்தில் ... நீங்கா இறைவன்"-சிலப். 24.
6) "நஞ் செந்தின் மேய வள்ளி மணாளன்"
-அப்பர் தேவாரம் -திருத்தாண்டகம் (மறைக்காடு)
(xv) 81-"பதும" -திருச்செந்தூரிலும் வயலூர்குரு நாதனை மறவாது துதித்தார்.
(xvi) 93-"மூளும் வினை" -மெய்யடியார்கள் வாழும் இடத்தைத் தேடிவந்து அவர்களுடன் எம்பெருமான் விளையாடுவார் என்பதை-
-
"மாசி லடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று
தேடி விளையாடியே யங்ஙனை நின்று
வாழு மயில் வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே!-
என மிக அருமையாக எடுத்துரைத்துள்ளார்.
(xvii) 66 'கொம்பனையார்' -"சங்கரி -சூரனொடெதிர் போர் கண்டு - எம் புதல்வா வாழி வாழி யெனும்படி வீறான வேல் தர " -எனச் சூர சம்ஹாரத்துக்காகத் தேவி முருகருக்கு வேல் கொடுத்ததாகக் கூறியுள்ளார். இது
-
"அழியாப் பேரளி உமைக்க ணின்று
தற்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி யரத்தநெடு வேலோய்!"
(கண் நின்று = எதிர் நின்று; தற் பெயர் புணர்த்தி= சக்தி யென்று தன் திருநாமஞ் சாத்தி; கற்பினொடு= சூரனை வெல்லென்று கற்பித்தலுடனே; அமையா வென்றி=ஒடுங்காத வென்றி; அரத்தம்= குருதி, ரத்தம்) - என வரும் கல்லாடக் கருத்தினொடு ஒத்துளது. (63) சிவபுரத்துத் திருப்புகழில் (876) 'சிவனுகந்தருள் கூர்தரு வேல் விடு முருகோனே' - என்றார். (பக்கம் 46 பார்க்க)
(xviii) 98 'விந்ததின்'-
-
"ஆறு திரு எழுத்தும் கூறுநிலை கண்டு
நின்தாள் புகழுநர் கண்ணுட் பொலிந்தோய்-
எனக் கல்லாடத்திற் பெரியார் கூறியவாறு, சுவாமிகள்
"எந்தனுளேக செஞ்சுடராகி என் கணிலாடு
தழல் வேணி எந்தையர்"-
என்றது ஓர் அனுபவ உண்மையைக் காட்டுகின்றது.
(xix) 99: "வெஞ்சரோருக" -அடி 7. "கங்கை மாமதி" என்பது பிழை. கங்கை மாதவி" என்பதே திருத்தமான பாடம்.
(xx) 54: "இன்பமும்" - இது சுவாமிகள் வாக்கல்ல; திருப்புகழ் அல்ல; சுவாமிநாத தேசிகர் பாடிய திருச்செந்தூர்க் கலம்பகத்தில் உள்ள ஒரு பாடல். திருப்புகழ்ச் சந்தத்தில் இருக்கவே யாரோ திருப்புகழ்ப் பாடல்களுடன் இதைக் கலந்து விட்டார்கள். ஆதலால் இந்தப் பாடலை எந்தையார் பதிப்பித்த திருப்புகழ் முதற் பாகத்திலிருந்து களைந்து விட வேண்டும்.
இங்ஙனம் பிற்காலத்தார் பாடின பாடல்கள் பல பழைய திருப்புகழ் ஏடுகளில் கலந்திருப்பதைக் கண்கூடாக நான் கண்டிருக்கிறேன். திருநெல்வேலிப் பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் கிடைத்த திருப்புகழ் ஏட்டுப் பிரதி இரண்டில் இராமாநுஜதாசர் பாடிய நூற்றெட்டுத் திருப்புகழுள் ஒன்றாகிய "உடைச் சேலைதா" என்னும் பாட்டு அருணகிரியாரது பாடல்களுடன் கலந்து கிடந்தது. ஒரு திருப்புகழ் ஏட்டிற் புலவர் புராணம் பாடிய முருகதாச சுவாமிகள் பாடிய பாடல்கள் பன்னிரண்டு (புதுவைத் திருப்புகழ்) கலந்து கிடந்தன. இவைதமைக் கண்டு அஞ்சித் தான் எந்தையார் திருப்புகழ் முதற் பாகம் முதற் பதிப்பின் முகவுரையில் "இவ்வளவு தூரம் ஆராய்ச்சிசெய்து ஒழுங்கு படுத்தியும் பாடல்களெல்லாம் அருணகிரிநாத சுவாமிகள் திருவாக்கிலிருந்து வந்தபடியே கலப்பு இல்லாமல் இருக்கின்றன என்று சொல்லத் துணிந்திலன்'- என எழுதியுள்ளார்கள். இதே காரணத்தால்தான் சுவாமிகளது சரித்திரத்தைத் துணிந்தெழுதுவதில் சில பாடல்கள் சந்தேகத்தை மிகவும் விளைவிக்கின்றன. ஆயினும் உண்மையை உள்ளத்தில் இயக்கும் வண்ணம் முருக பிரானைப் பிரார்த்தித்து அவர் திருவருளையே துணையாகக் கொண்டு இவ்வாராய்ச்சி நடைபெறகின்றது. நிற்க- சுவாமிகளது தல யாத்திரையைக் கவனிப்போம்.
பாலசுப்ரமண்யரது நடன தரிசனம்
சுவாமிகள் திருச் செந்தூரில் ஆண்டவரை நித்தம் தரிசித்து அருமையான பலவித சந்தங்களில் அவரைச் செந்தமிழாற் பாடி மகிழ்ந்து ஆனந்த வெள்ளத்தில் திளைத் திருக்கும் பொழுது ஒருநாள்-
-
"தஞ்சந் தஞ்சஞ் சிறியேன் மதி கொஞ்சங் கொஞ்சந்
துரையே யருள் தந்தென் றின்பந் தருவீடது தருவாயே" (94) என்றும்
"மெய்ச் சிந்தைவர என்று நின் தெரிசனைப் படுவேனோ" (47)
என்றும் இரங்கி வேண்ட, "வேண்டியபோ தடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு பெருமாள்"- தமது "மணங்கமழ் தெய்வத் திளநலங்காட்டி" அருணகிரியாரின் எதிரே குழந்தைத் திருக் கோலத்துடன் கொஞ்சிக் கொஞ்சி நடன தரிசனம் தந்தார். ["செந்திலிலும் என்றன்முன் கொஞ்சி நடனங் கொளும் கந்த வேளே (16)] அவ்வழகிய நடனத்தைக் கண்ட அருணகிரியார், "முருகா! கடம்பும், மகுடமும், செங்கையும், வேலும், ஆறுமுகமும், பன்னிரு கண்ணும், குளிர்ந்த பேரொளியும் விளங்குவதும், தண்டை, வெண்டையம், கிண்கிணி , சதங்கை, கழல், சிலம்பு என்னும் ஆறு ஆபரணங்களும் திருவடிகளிற் கணகணென்று ஒலிப்பதுமான இந்த நினது குழந்தைக் கோலம்-நடனகோலம்- என் கண்குளிர (எந்த வேளையும்) சந்தித்தல் வேண்டும்" என உள்ளம் நெகிழ்ந்து வேண்டினர். [தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தன்கழல் சிலம்புடன் கொஞ்சவே ** கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்சமலர் செங்கையும் சிந்துவேலும் கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண்குளிர என்றன்முன் சந்தியாவோ! (16)]
வில்லிபுத்தூரரொடு வாது
இங்ஙனம் சுவாமிகள் திருச்செந்தூரிற் பத்தித் துறையிழிந்து ஆனந்தவாரி படிந்திருந்த சமயத்தில்-மிகப் பிரசித்தி பெற்றவரும், பெரும் புலமை வாய்ந்தவரும், தம்மொடு வாது செய்து தோற்றவர்களது காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தைத் தமது கல்விச் செருக்காற் கையாண்டவரும், மிக அற்புதமான வாக்கிற் பாரதத்தைப் பாடியவருமான வில்லிப்புத்தூரர் என்னும் புலவரொடு வாது செய்ய நேர்ந்தது. அப்பொழுது ஆசு கவியாகச் சுவாமிகள் பாடிய நூல்தான் "கந்த ரந்தாதி" என்றும், அந்நூலுக்கு உரை வில்லிப்புத்தூரரே செய்தனரென்றும், அதில் 'திதத்த' என்று தொடங்கும் 54-வது செய்யுளுக்கு அவர் உரை கூறமாட்டாது திகைத்துத் தோல்வியுற்றனர் என்றும், அச்செய்யுளுக்கு அருணகிரிநாதரே உரையருளிச் செய்தார் என்றும், வாதில் தோல்வி-யுற்றவருடைய காதை அறுக்க வேண்டும் எனச் செய்த ஏற்பாட்டின் படி [1]) வில்லிபுத்தூரரது காதை அறுத்து இழிவு படுத்தாது, "இனிக் கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை நீங்கள் விட்டுவிட வேண்டும்" என அவருக்குப் புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடாவை [2] எறியச் செய்தனரென்றும், இதனால் அருணகிரிநாதரின் கருணைக் குணத்தை யாவரும் பாராட்டி வியந்தனரென்றும் ஆன்றோர் கூறுவர். இக்காரணத்தாலும், உலக துன்பங்களுக்கு அடிப்படைக் காரணமான 'பெண்ணாசை' யை ஒழியுங்கள், ஈதலே அறம் என்று கடைப்பிடியுங்கள் என்னும் சிறந்த உபதேசங்களையே உலகுய்யச் சுவாமிகள் பன்முறை எடுத்தெடுத்து ஓதியுள்ள காரணத்தாலும் "கருணைக்கு அருணகிரி" எனப் பழமொழியும் ஏற்பட்டது.
----------------------
[1]. 'அக்கிளிதான் - வில்லிபுத்தூ ரான்செவியில் மேலரி வாள் பூட்டியன்று
வல்லபத்தின் வாதுவென்று வந்ததுகாண்"
-தணிகையுலா.
[2]. 'எதிரும் புலவன் வில்லிதொழ எந்தை யுனக்கந் தாதி சொ(ல்)லி
ஏழைப் புலவர் செவிக்குருத்தோ டெறியுங் கருவி பறித்தெறிந்தே'
-திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்.
---------------
-
"காசுக்குக் கம்பன், கருணைக் கருணகிரி
ஆசுக்குக் காளமுகி லாவனே; - தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன்; உவக்கப் புகழேந்தி
கூழுக்கிங் கௌவையெனக் கூறு-
என்னும் தனிப்பாடலும் எழுந்தது.
வில்லிபுத்தூரரது ஆடம்பரங்களைக் கண்டோ அக்காலத்துப் புலவர்களது படாடோபங்களைப் பார்த்தோ அருணகிரியார் மிக அஞ்சி அத்தகைய ஆணவ அழுக்கு தம்மை அசுத்தப் படுத்தாதிருக்க வேண்டும் என்னுங் கருத்துடன் -
-
"சங்க பாடல், திருவளுவ தேவர் வாய்மை என்கிற
பழமொழியை ஓதியே உணர்ந்து, பல்-சந்தமாலை
மடல் பரணி கோவையார் கலம்பகம்
முதலுளது கோடி கோள் ப்ரபந்தமும்
வகை வகையில் ஆசு சேர் பெருங்கவி-சண்டவாயு
மதுரகவி ராஜனானென் வெண்குடை
விருது கொடி தாள மேள தண்டிகை
வரிசையோ டுலாவு மால் அகந்தை-தவிர்ந்திடாதோ
செந்திலில்-உரிய அடியேனையாள வந்தருள் தம்பிரானே" (80)
எனச் செந்தூர்ப் பிரானிடம் பிரார்த்தித்தனர்.
வில்லிபுத்தூரரொடு செய்தவாது திருச் செந்தூரிலேயோ, திருச்செந்தூர் தரிசித்தபின் சமீப காலத்திலேயோ நடந்திருக்க வேண்டுமென்பது கந்தரந்தாதியிற் சொல்லப் பட்ட தலங்களுள் செந்தூரே அதிகமாகக் கூறப்பட்டுள்ளதால் ஒருவாறு பெறப்படும். அந்தாதி நூறு செய்யுள்களில் 26 செய்யுள்களில் திருச்செந்தூரைப் பற்றிச் சொல்லியுள்ளார். அதற்கடுத்தபடியாகச் சொல்லப்பட்ட தலம் திருச்செங்கோடு. அது 11 பாடல்களில் தான் சொல்லப்பட்டுள்ளது. கந்தலரங்காரத்தில் 25 -(தண்டாயுதமும்), 30 (பாலென்பது), 40 (சேல் பட்டு), 46 (நீயான) என்னும் நான்கு பாடல்களும் சுவாமிகள் திருச் செந்தூரிலிருந்த பொழுது பாடிய தனிப் பாடல்கள் எனக் கொள்ளலாம்.
திருச்செந்தூர்ப் பெருமானை விட்டுப் பிரிய மனம் வராது பிரிந்து (131) நாங்குநேரி (972-974) என வழங்கும் "ஸ்ரீபுருஷமங்கையை"த் தரிசித்து, அத்தலத்துப் பாடலிலும் செந்தூர்ப் பெருமானை நினைந்து போற்றி (973)-"மாமறை முழங்கு ஸ்ரீபுருட மங்கை மாநகர்" (974) என அத்தலத்தைச் சிறப்பித்து, திருமால் கோயில் கொண்ட நூற்றெட்டு திருப்பதிகளுள் ஒன்றான தல மாயிற்றே அது என்று இரண்டு பதிகங்களில் (972,974) திருமாலின் சிறப்பை எடுத்தோதினர். 974-ஆம் பதிகத்தில் "வானவர் புகழ்ந்த கானவர்" என்றது தேவசேனையைத் தாம் வேண்ட மணந்த முருகவேள் தாமே புனத்துக்கு வந்து வேடர் மகளை மணந்தனரே; என்னை வேடர் தம் தவம் என வானவர் நினைந்து புகழ்ந்ததைக் குறிக்கின்றது. பின்பு (132) வள்ளியூரைத் (417) தரிசித்து ஈழ நாட்டுக்குச் செல்லத் துணிவு கொண்டு புறப்பட்டார்.
-----------
15. ஈழநாட்டுத் தலங்கள்: (3தலங்கள் 133-135)
கடல் தாண்டி ஈழ நாட்டை அடைந்து (133) அருக்கொணாமலை (431)யையும், (133A) கண்டியையும்*, (134) திருக் கோணமலையையும் (432) தரிசித்தார். திருக்கோண மலைப் பதிகத்தில் உள்ள "கிளிப்படு பூதி" என்பது கந்தரதுபூதி என்று பொருள் கொண்டால், இப்பாடல் அருணகிரியார் வாக்கல்ல எனவும் ஏற்படலாம். இப்பதிகம் சுவாமிகள் வாக்கென்றே கொண்டால் "கிளிப்பாடு பூதி", என்பதற்கு வேறு பொருள் ஏற்படும். அது திருக் கோணமலைக் கோபுர நிலை வாயிலிற் கிளிக்கூடு உள்ள ஒரு ஸ்தானத்தைக் குறிக்கும் எனவும் கூறுவர். திருக்கோணமலையைத் தரிசித்த பின் சுவாமிகள் (135) கதிர் காமத்தைக் (418-430) கண்டு தரிசித்தார். ஈழநாட்டுத் தலங்களைச் சுவாமிகள் நேரில் தரிசித்தார் என ஒருவாறு துணிந்து கூறலாம். "திருமகளுலாவு" என்னும் பாட்டில் (418) வரும் "பெருமாள் காண்" என்னும் காட்சிக் களிப்பாலும், "மணிதரளம் வீசி அணியருவி சூழ" (418) என மாணிக்க கங்கை நதியைக் குறிப்பிடலாலும்,
---------------------
* கண்டி - திருப்புகழ் வைப்புத்தலம். திருப். 10.
"கனக மாணிக்க வடிவனே" (427) எனக்கதிர்காம மூர்த்தியின் திருமேனி ஒளியைக் குறிப்பதாலும், "வடவையாறு சூழ் கதிர்காமம்" (419), வகிரதிர் கதிர்காமம் (422) என வருவனவற்றாலும், வாழை, மா, நெருங்கிய ஈழம் என ஈழநாட்டை வருணித்ததைக் கொண்டும் (425), உக்ர யானை (எதிர்ப்)படும் ரத்ன த்ரி கோண சயிலம், உக்ர கதிர் காமம் (426) என வருதலாலும், கதிர்காமமாகிய ஈழ நாட்டுத் தலங்களை அருணகிரியார் நேரிற் கண்டு தரிசித்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. கதிர்காமத்துக்குரிய திருப்புகழ்ப் பாக்களுள் 420-ஆம் பாடலில் (உடுக்கத்துகில்) சீதையைத் தேடிச்சென்ற ஹநுமாருக்கு முருகவேள் அருளினதைத் தெரிவித்தார் 422-ஆம் பாடலில் (கடகட) (அவசமுடன்+அ+ததி-அவசம் = மயக்கம்; ததி=சமயம்) "திரிதரு கவிஆள அயில் புயங்கொண்டு" என்றது பொய்யாமொழிப் புலவரை வேலேந்து வேடனாகச் சென்று முருகவேள் ஆட்கொண்டதைக் குறிக்கின்றது போலும். திரிதரு கவி=காட்டு வழியாகச் சென்ற புலவர் (பொய்யா மொழியார்) 423-ஆம் பாடலில் "அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த" என வருவது "வேதநெறி தழைத் தோங்க
...அழுத...திருஞானசம்பந்தர்" என்னும் பெரிய புராணப் பாடலை நினைவூட்டும். 424-ஆம் பாடல் "சரத்தே"-இப்
பாடலின் அழகிய அமைப்பு அருணகிரியார் ஒருவருக்கே அமையும் என்பது பார்க்கும்பொழுதே புலப்படுகின்றது.
425-ஆம் பாடல் (சரியையாளர்) என்பதில் வயலூரைச் செப்பி, மேன்மைவாய்ந்த திருப்புகழை ஓதும் பாக்கியத்தை எனக்கு அருளிய பெருமானே-
"குமர! மேன்மைத் திருப்புகழை யோதற்கெனக் கருள்வோனே!" எனப் போற்றி மகிழ்ந்தார். 426-ஆம் பாடலில் (பாரவித) "காமுகனாய் நான் பட்ட வலையினின்றும் அடியேனை மீட்டுப் பெண்ணாசையை மறப்பித்தது நினது திருவடியன்றோ! அதை நான் எங்ஙனம் மறப்பேன்-மறவேன், மறவேன்" எனப் பொருள் படும்படி-
-
"மாதர்- குழற் கற்றைமேல் - காதில்... முகவட்டத்தில் ..
அதிமோக காமுக னகப்பட்ட ஆசையை மறப்பித்த
கால்களை மறக்கைக்கும் வருமோதான்"-
எனக் கூறி நன்றி பாராட்டினர். 428-ஆம் பாட்டில் ("மாதர்வச") நரகில் வீழ்வார் இவரிவர் எனக் குறிப்பித்தார். கதிர்காமத்தில் வனவேடன் பூசித்த சிறப்பை 433-ஆம் பாடலில் (பழமுதிர்சோலைப்பாடல்) "வனமுறை வேடனருளிய பூஜை மகிழ் கதிர்காமமுடையோனே"- என எடுத்தோதினார்.
கதிர்காமத் திருப்புகழில் மனப்பாடஞ் செய்ய வேண்டிய அருமை அடிகளாவன:-
1) "இதமொழி பகரினும் மதமொழி பகரினும் ஏழைக் கிரங்கும் பெருமாளே" (422)
2) "அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த" (423)
கதிர்காமத்திற் சிலநாள் தங்கி வேலவரைப் பணிந்து பாடிப் பின்பு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.
--------------------
16. பொதியமலை (பாபநாசம்) முதல் திருப்பெருந்துறைவரையில்
(12 தலங்கள்: 136-147)
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள பாபநாசம் எனப்படும் (136) பொதியமலையைத் (412,413) தரிசித்து அகத்
திய மாமுநிவரது மலையென அதைப்போற்றி, "முருகா! அடியேனை நீ உன் அருகு அழைத்து மாதவர் கணத்திற்
சேருக" என அருள்புரிந்து வேற்பொறி (வேலடையாளம்), மயிற்பொறி (மயிலடையாளம்) இட்டு என்னையும்
ஒருவனாக்கி இருவினை நீக்கியாண்டருளுக:
-
"யாவரும் நகைக்கவே உடல்-மங்குவேனைக்
"குறித்து நீ யருகழைத்து, மாதவர்
கணத்து மேவென அளித்து, வேல்மயில்
கொடுத்து, வேதமும் ஒருத்தனாமென-சிந்தை கூராய்"
-எனப் பிரார்த்தித்தார். இத்தகைய வேண்டுகோளை முன்னரே (43) எட்டிகுடி என்னும் தலத்திலும் செய்துள்ளார். பின்பு (137) "குற்றாலம்" (979-981) வந்து சித்தாதியர் அங்கு திகழ்வதைக் கண்டு "சீலச் சித்தாதியர் சூழ்தரு கோலக் குற்றாலம்" என அத்தலத்தைப் புகழ்ந்தும், (979,980), அங்குள்ள சிற்றாற்றினைச் சிறப்பித்தும் (981) பாடினர். பின்னர், குற்றாலத்துக்கு அருகில் உள்ள(138) இலஞ்சிக்கு[1] (975-978) வந்து "இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சி யமர்ந்த பெருமாளே" எனச் சிலேடை நயத்துடன் பாடிப் புகழ்ந்தார். (977)- (இலஞ்சி=மடு; இலஞ்சியம்-இலஞ்சிஜம்-(சரவண) மடுவில் தோன்றியவன்). அதன்பின் தென் காசிக்கு அருகில் உள்ள பிரபல க்ஷேத்திரமான (138A) திருமலையைத் தரிசித்தார். திருமலை அழகும் திருமலை முருகன் அழகும் சொல்லும் தரத்தன அல்ல. இலஞ்சியும் திருமலையும் முருகனடியார்கள் அவசியம் பார்க்க வேண்டிய தலங்கள்: செங்கோடைப் பண்டாரத்தையா பாடிய "திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்" மிக அருமையான அழகிய நூல்; அவசியம் படிக்கத் தக்கது. திருமலைக்கோயில் அருணகிரியார் காலத்துக்குப் பின்னர் ஏற்பட்டதோ எனச் சிலர் ஐயுறுகின்றார்கள். அவர் காலத்துக்கு முன்னரே உள்ள ஆலயமாயின் 244-ஆம் திருப்புகழ் "ஒருபதும் இருபதும்" என்னும் பாடல் (193) ஸ்ரீசைலத்தைக் குறிக்காது இத்தலத்தைக் குறிக்கும் எனவும் கொள்ளலாம்.
------------------
[1]. இலஞ்சி முருகன் உலா-என்னும்நூல் அச்சாகி இருக்கின்றது. 2. சிவகாசி திருப்புகழ் வைப்புத் தலம்-க்ஷேத்திரக் கோவைப்பதிகம் 1304-பார்க்க.
------------
பின்னர் (139) கழுகுமலையைத் (414-416) தரிசித்து, "வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே" என முருகபிரானது தியாகாங்க சீலத்தைப் போற்றிக், கழுகு மலையைக் "குருகுமலை"-(416) எனவும் பாடினர்.
அதன்பின் (139A) 2சிவகாசியைத் தரிசித்துக் 139B) கொடும்பாளூரைப் (955) போற்றினர். "கலைஞரெனும் எனத் தொடங்கும் 955-ஆம் பாட்டு உத்தர கோசமங்கைக்குச் சமீபத்திலுள்ள 'கொடுமளூர்க குமரன்' கோயிலுக்கு உரியதோ அல்லது விராலி மலைக்கு அடுத்த கோனாட்டுக் கொடுமளூருக்கு [102-ஆம் தலம்] உரியதோ விளங்கவில்லை. பின்னர்த் [140] திருவுத்தர கோசமங்கையைத் [986] தரிசித்து, [141] இராமேசுரம் [987-988] சேர்ந்தார். அத்தலத்துப் பாட்டில் பிரமனைக் குட்டிய லீலையையும், இராமரது பராக்ரமத்தையும் சிறப்பித்து [987], [141-A] தநுக்கோடியையும்* [165] தரிசித்தார். பின்பு [142] திருவாடானைக்கு [985] வந்து பணிந்து, [143] ராஜகெம்பீரவளநாட்டு மலையைத் (390) தரிசித்துத் தக்ஷயாக சங்காரத்தைச் சிறப்பித்தனர். அதன் பின் (144) திருப்புத்தூர் (983-984) தரிசித்து அத்தலத்துப் பாடல்கள் இரண்டிலும் வயலூர் முருகனை மறவாது வாழ்த்தினர். 983-ஆம் பாட்டிற் சிவபிரானது பராக்ரமத்தை விவரித்தனர். இப்பாட்டில் 'வயலியல்' என்பது (933-ஆம் பாடலுக்குக் கூறியது போல) 'வயலியில்' என்றிருக்க வேண்டுமோ எனத்
தோற்றுகின்றது ( பக்கம் 73 பார்க்க). பின்னர் (145) விநாயகமலையைத் (366) தரிசித்து ஆண்டவனை "நமோ
நம" எனப் பன்முறை வரும் அருமைப் பாடலால் துதித்து, (146) பிரான்மலை (403-404) என வழங்கும் கொடுங்குன்றத்துக்கு வந்தார்.
------------
* தநுக்கோடி--திருப்புகழ் வைப்புத்தலம்---திருப். 165
பிரான் மலையில் நிர்த்த தரிசனப்பேறு
கொடுங்குன்றம் என்பது தேவாரம் பெற்ற அருமையான தலம். இங்கு முருகபிரானது சந்நிதி மிக விசேஷமானது. இத்தலத்தில் தம்மை ஆண்ட பிரானைத்---தித்தித்திருக்கும் அமுதை-அருணகிரியார் கண்டார், தொழுதார், ஆடினார், பாடினார். சுந்தரமூர்த்தி சுவாமிகளு்க்குச் சிவ பிரான் திருப்பனையூரில் திரு்ககூத்தொடு தரிசனந் தந்தவாறு சிவ குமாரரும் அருணகிரியார்க்கு இத்தலத்தில் தமது நிர்த்த தரிசனத்தைத் தந்தருளினார். அந்த நிர்த்தத்துக்கு ஏற்றவண்ணம் பெரியதொரு சந்தப் பாவை "எதிர் பொருது கவிகடின கச்சுக்களும்பொருது குத்தித் திறந்து" (404) என எடுத்து அதில் "மட்டற்ற இந்திரிய சட்டைக் குரம்பை யழிபொழுதினிலும் அருள் முருக! சுத்தக் கொடுங்கிரியில் நிர்த்தச் சரண்களை மறந்திடேனே" என வாழ்த்தி வணங்கினர்.
பின்பு (147) குன்றக்குடியை (405-411)ச் சேர்ந்தார். குன்றக்குடி என்பது மயூரகிரி, மயூராசலம் என வழங்கும் அருமைத்தலம். இத்தலத்தில் சிலநாள் தங்கி அருமையான பாடல்களைப் பாடி மகிழ்ந்தார். வயலூரையும் வயலூர்க் கணபதியையும் சிவபிரானையும் வாழ்த்தினர் (406-407). தேனாறு புடைசூழும் தலம் குன்றக்குடி எனவும் விளக்கினர். (408,411). தேனாறு கூறப்பட்டிருப்பதால் பொதுப்பாடல் 1041. "ஊனே தானா" என்பதையும் இத்தலத்துப் பாடலாகக் கொள்ளலாம். குன்றக்குடியைத் தரிசித்த பின்பு (148) திருப்பெருந்துறைக்கு (847-849) வந்தார்.
--------------
17. திருப்பெருந்துறை முதல் திருவண்ணாமலை சேரும் வரையில் (6 தலங்கள்: 148- 153)
திருப்பெருந் துறையைத் தரிசித்து, "மாணிக்க வாசகப் பெருமானார்க்கு "ஞானப்ரசங்கம்" செய்த குருவுக்கும் குருவே! "திருக் குருந்தடியமர் குருத்வ சங்கர"ரொடு வீற்றிருக்கும் பெருமானே! (847,848) என ஆண்டவனைப் போற்றினர். பின்பு (148A) *திருக்களர் என்னுந் தலத்தைப் பணிந்து, (149) பெருங்குடியை (704) வணங்கி அருமைப் பாடல் ஒன்று பாடி வயலூர்ப் பெருமானையும் வாழ்த்தினர். இந்தப் பாடலில் இலங்கை நகரில் ஹநுமார் தீயிட்ட சேதி வெகு அழகான சொற் ப்ரயோகத்தால் விளக்கப்பட்டுள்ளது.
----------------------
*திருக்களர்-திருப்புகழ் வைப்புத்தலம் 28-ஆம் பாடலைப் பார்க்க.
-----------------------------------------------------------
-
"இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கரு
ளிலெங்கணு மிலங்கென முறையோதி இடுங்கனல் குரங்கு"
- என்றார் அநுமாரை.
இலங்கையில், இலங்கிய=விளங்கின, இ(ல்)லங்களுள்"= வீடுகளுள், இலங்கு அருள் இல் எங்கணும்=விளங்குகின்ற அருட் குணம் இல்லாத வீடுகள் எல்லாவற்றிலும், (ஏ! அக்னியே!) இலங்கு=நீ இலங்குவாயாக(ஒளி வீசுக! எரிக!), என=என்று, முறையோதி=ஆணையிட்டு, கனல் இடும் குரங்கு=நெருப்பிட்ட குரங்கு- என்பது பொருங். இந்த இலங்கைப் பட்டணத்தில் அருளில்லார் வீடுகளை எல்லாம் நீ எரித்துவிடு என்று அக்கினி பகவானுக்குக் கூறி அவ்வூருக்கு நெருப்பிட்ட குரங்கு[1])
பின்பு (150) இஞ்சிகுடியைத் (811) தரிசித்து,
-
"எங்கு நினைப்போர்கள் நேச! சரவண!
சிந்துர கற்பூர ஆறு முககுக
எந்தனுடைச் சாமிநாத வயலியி லுறைவேலா!"
என அருமையாக ஆண்டவனைப் புகழ்ந்தார்; 'எங்கு நினைப் போர்கள் நேச' என்றதனால் எந்த தேசத்தில் இறைவனை
நினைப்பினும் அங்ஙனம் நினைப்போர்க்கு நேசன் முருகன்- என்பது பெறப்படும்.
இது "[2]எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் கிங்கேயென் றருள் புரியும் எம்பெருமான்" எனவரும் ஸ்ரீசம்பந்தர் தேவாரத்தை நினைவூட்டுகின்றது. இஞ்சிகுடியைத் தரிசித்த பின்பு தாம்முன்னரே தரிசித்த சில தலங்களை மறுமுறை வணங்கி, (151) சக்கரப்பள்ளி (882) என்னும் தலத்துக்கு வந்தார். அடுத்துள்ள சுவாமி மலையின் குருமூர்த்திக் கோலமும், வயலூரில் திருப்புகழ்பாடும் படித் தமக்கு அநுக்கிரகஞ் செய்ததும் அங்கு நினைவுக்கு வர, மேலே (92) வயலூரைப்பற்றி எழுதியுள்ள இடத்திற் குறித்தபடி (பக்கம் 64), இரு பொருள் படும்படி-
-
அத்தன் முற்புகழ் செப்ப அநுக்ரக
சத்துவத்தை யளித்திடு செய்ப்பதி மயிலேறி (882)-
எனத் துதித்தார்.
-----------------------------------------
[1]. கண்ணகி மதுரைக்கு நெருப்பிட்ட போது-
"பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க"-
-என்று சிலப்பதிகாரத்தில் வருவதும் காண்க.
[2]. சம்பந்தர்- பிரமபுரம். II-40-6.
பின்பு, சுவாமி மலையை மீண்டும் தரிசித்து 'வயலியில் வாழ்வே' (208) எனவும், 'வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா' (209) எனவும், வயலூர்ப் பெருமானை நினைந்து பாடினர். பின்பு (152) திருநாகேச்சுரத்தை (877) அடைந்து, யார் யார் கடையாய பிறப்பை அடைவார்கள் என்பதை அடைவுபடக் கூறித் தம்மை வயலூரில் ஆட்கொண்டு திருப்புகழ் பாடவைத்ததைப் பாராட்டி "வேலாயுதா மெய்த் திருப்புகழ்ப் பெறு வயலூரா" என வாழ்த்தினர்.
வேற்பொறி மயிற்பொறி பொறிக்கப்பெற்றது
பின்பு குற்றாலம் என வழங்கும் (153) திருத்துருத்தியை (850) அடைந்தார். இத்தலம் மாயூரத்துக்கு அருகில் உள்ளது. மூவர் தேவாரமும் பெற்றுள்ளது. ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளின் உடற்பிணி தீர்ந்த தலம். இத்தலத்தில் முருகவேள் அருணகிரியாரது கனவில் தோன்றி, "அன்ப! நீ எனக்கு அடைக்கலப் பொருள் ஆவாய்; (43) எட்டிகுடிப் பதியிலும், (136) பொதிய மலையிலும் நீ விரும்பிய வண்ணம் இதோ (உன் தோளில்) நமது வேற்பொறி, மயிற்பொறியைஇட்டோம். முத்தி தரவல்ல நமது அநுபூதியையும் அருள் மயமாம் நமது திருப்புகழையும் ஓதும் பணியையே நீ பணியாகக் கொள்வாயாக" என்று அருளி மறைந்தார். அருணகிரியாரும் விழித்தெழுந்து தமது தோளில் வேல அடையாளம் மயில் அடையாளம் இருக்கக் கண்டு மெய் சிலிர்த்து உள்ளங் குளிர்ந்து "முருகா! நாயனைய என்னையும் பொருட்படுத்தி அழைத்து, அடைக்கலப் பொருள்போல அருமை பாராட்டி, வேற்பொறி, மயிற்பொறி யிட்டனையே" என மகிழ்ந்து-
-
"அடைக்கலப் பொரு ளாமென நாயெனை
அழைத்து, முத்திய தாம் அநுபூதியெ
னருட் டிருப்புகழ் ஓதுக வேல்மயில் அருள் வோனே
எனப் போற்றி, 'இறைவா! நான் வேசையர் மயலே மேலதாய், மகாபிணி மேலிட முடங்கி வெட்க மடைந்த மஹாமத வீணன்; இனி, எனக்கு உறவாகும் பாக்கியம் வேண்டும்; அத்தகைய பாக்கியத்தைத் தந்தருளுக--
-
'வேசையர் மயல் மேலாய்-
வெடுக்கெடுத்து மகாபிணி மேலிட
முடக்கி வெட்கு மகா மத வீணனை
மினற் பொ லிப்பத மோடுற வேயருள் புரிவாயே (850).
என வேண்டிப் பணிந்தனர். சிவ பிராற்கு முருகர் முத்தமிழால் உபதேசித்தார் ('தேசிகர் சிறக்க முத்தமிழாலொரு பாவக மருள் பாலா') என்றும் கூறியுள்ளார்: [திருப்.19-77]- பக்கம் 93 பார்க்க- இறைவன் இட்ட ஆணையின்படி அநுபூதிச் செய்யுள்களும் அப்போது சில பாடினர் போலும்.
திருத்துருத்தியினின்றும் புறப்பட்டுச் சிதம்பரம், விருத்தாசலம் என்னுந் தலங்களை மறுமுறை பணிந்து (ஆகத் தென்னாட்டுத் தலங்கள் 153 தரிசித்து)முருகவேள் தம்மை ஆட்கொண்ட தலமாகிய தமது திருவண்ணாமலையை அடைந்தார்.
---------------------------------------
2. வடதிசை யாத்திரை
18. திருவண்ணாமலையிலிருந்து காஞ்சீபுரம் வரை (10 தலங்கள்: 154-163)
திருவண்ணாமலையிற் சிலகாலந் தங்கிப் பின்பு வடக்கிலுள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிப் புறப்பட்டுச் (153A)
*செஞ்சிக்கு வந்தார். பின்பு (154) திருவாமாத்தூர் (733-736) தரிசித்து மாதீசுரரையும், முத்தார்நகை யம்பிகையையும் அழகர், அழகுடையாள் எனத் தமது பதிகங்களிற் சிறப்பித்தார் (734,735). பின்னர்த் (155) திருவக்கரையைத் (727-728) தரிசித்துக் "கடிகைப் புனல் சுற்றிய திருவக்கரை" என விளக்கி, ஆண்டவரை "அடியவரிச்சையில் எவை எவை யுற்றன அவை தருவித்தருள் பெருமாளே (727) எனப் போற்றி மகிழ்ந்தும், "கொச்சை மொழிச்சி, கறுத்த விழிச்சி, சிறுத்த இடைச்சி, பெருத்த தனத்தி, குறத்தி தனக்கு மனப்ரிய முற்றிடு குமரேசா"-என அழகாகப் புகழ்ந்தும் (728) பாடினர். பின்பு (156) மயிலம் (328),
(157) பேறைநகர் (பெரும்பேறு-726), (158) இந்தம்பலம் (989) என்னுந் தலங்களைத் தொழுது, (159) *வளவாபுரி
எனப்படும் செய்யூ (சேயூ)** ருக்கு (725) வந்து 'எனதிடும்பைக் குன்றுக்கும் தனிவேலை வாங்கத் தகும்' என முன்னோர்
உரைத்தபடி-வேலேவி எனது வினையைத் தொலைத்தவனே -"அடியேன் இரு வினை தூள்படவே அயிலேவிய வளவா
புரிவாழ் மயில்வாகன" எனப்போற்றி நன்றி பாராட்டினர்.
--------------------------------
*செஞ்சி-பாடபேதஸ்தலம். 79-ஆம் பாடலின் பாட பேதம் பார்க்க.
**செய்யூர் என வழங்கும் சேயூருக்கு (சேய்=முருகர்) வளவாபுரி என்று ஒரு பெயர் உண்டு. "வளவர் வளம்பதி" எனவும் "வளவ நகரிக்குமர" என்றும் சேயூர் முருகன் பிள்ளைத் தமிழில் வருகின்றன. வளவனூர் என்று விழுப்புரம்-புதுச்சேரி ரெயில் மார்க்கத்திலும் ஓர் ஊர் உண்டு.
பின்பு (160) மதுராந்தகத்துக்கு (722-724) வந்து அங்கு 'வட திருச்சிற்றம்பலத்தில்' வீற்றிருக்கும் வடிவேலனைப் போற்றிச் (722,723) "சிவபிரானுக்கு நீ செய்த உபதேசத்தைச் சிறியேன் தனக்கும் உரைசெய்தால் உனது குருத்துவம் சற்றேனுங் குறைந்து விடுமா, என்ன?"- என மன்றாடித் துதித்து (723) வணங்கினர். மதுராந்தகத்தில் 'வட திருச்சிற்றம்பலம்' என்பது இன்ன சந்நிதி, இன்ன காரணத்தால் அப் பெயர் வந்தது என்பன விளங்கவில்லை. ஊரின் பெயருக்குத் தக்கபடிச் சந்தத்தைச் சுவாமிகள் எடுப்பர் என்பதற்கு இத்தலத்துப் பதிகங்கள் தக்க எடுத்துக் காட்டாகும்.
"மதுராந்தகத்து" என வருவதற்காகக் "குதிபாய்ந்திரத்த" "சயிலாங்கனைக்கு" எனப் பாடல்களைத் தொடங்கினர்.
மதுராந்தகத்திலிருந்து (161) உத்திரமேரூருக்கு (718-721) வந்து "தமிழ்மறையோர் வாழ் மேருமங்கை (721) எனவும், திருமால், பிரமா, விநாயகர், சிவபிரான் முதலிய யாவரும், ஞானிகளும், *ஆயிரத்திருநூறு மறையோர்களும் வாழும் தலமென்றும் (720) அத்தலத்தைப் பாராட்டியும், 'ஆயிரங்கலைகத்தா' (721) என முருகவேளைச் சீராட்டியும் அருமையான பாடல்களைப் பாடினர்.
-------------------------------------
* "தில்லை மூவாயிரவர்", "திருவீழிமிழலை ஐஞ்ஞூற்றந்தணர் (திருவிசைப்பா), சீகாழி "நான்முகனே யன்ன சீர்
நானூற்றுவர் மறையோர் (ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை-44-கண்ணி) என்பன போல.
இத்தலத்துப் பாடல்களுள்
-
"அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறியு மறிவூற அருள்வாயே" (718);
"ஆனனங்கள் மூவிரண்டும் ஆறிரண்டு தோளும் அங்கை
ஆடல் வென்றிவேலு மென்று நினைவேனோ" (719)-
என்பன மனப்பாடஞ் செய்யத் தக்க அடிகள்.;
உத்தரமேரூரிலிருந்து (162) திருக்கழுக்குன்றம் (324-327) வந்து அமராவதிக்கு ஒப்பான பெருமையுற்று
அழகுவாய்ந்த தலம் இது என அத்தலத்தைப் புகழ்ந்து (324), இது கழுகுதொழும் கிரி (325), வேதகிரி (325,
327) கதலிவனம் (325) கடலொலி போல மறையும் தமிழும் ஓதப்படும் தலம் (325) எனத் துதித்தனர். ஆறெழுத்
தின் உண்மை அனைத்தும் ஓரெழுத்திலேயே அடங்கியுளது என்பதை விளக்கிக் காட்டினர் முருகவேள்
(ஓரெழுத்தி லாறெழுத்தை ஓதுவித்த பெருமாளே-327) என்பதன் விவரம் தீர்த்தகிரிப் புராணம் -கந்த தீர்த்தச்
சருக்கத்திற் கூறப்பட்டுளது. "முழுதுணர்ந்தும் உணர்வரிய தொன்றை ஒருமொழியின் விண்ட சிறு பிள்ளை"
எனவரும் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் - காப்பு-4 இங்கு உணரத் தக்கது. இத்தலத்துப் பதிகத்தில் உள்ள
உபதேச வாக்கியமான,
"ஆறெழுத்தை நினைந்து குகா குகா என வகை வராதோ" (326)
என்பது மனப்பாடமாக ஓதி அநுட்டிக்கத் தக்கது.
திருக்கழுக்குன்றத்தினின்றும் (163) திருப்போரூருக்கு (714-717) வந்து, மூவரும் தொழும் தலம் (716) என அதைப் போற்றி, வேண்டுகோள் இலாத துதிப்பாடலாக "திமிர" (717) எனத் தொடங்கும் பாடலைப்பாடி, முருகா! பெண்ணாசை ஒழியவும், உன்னைப் புதுமலர்கொண்டு பூசித்து உன்தாளில் விழும் ஆய்ந்த அறிவு கூடிடவும் அருள் புரிவாயே (714, 716) என வேண்டினர். இத்தலத்தைப் "போரிமா நகர், சமரபுரி" எனக் கூறியுள்ளார். பின்பு, (163A) *திருக்கச்சூரையும், (163B) **இளையனார் வேலூரையும் தரிசித்து, மஹா க்ஷேத்திரமான (164) காஞ்சிமா நகரை (451-494) அடைந்தார்.
---------------
திருக்கச்சூர் -வைப்புத்தலம்-திருப்புகழ் 979.
** 670, 671 எண்ணுள்ள பாடல்கள் இளையனார் வேலூருக்கு உரியதோ, ராயவேலூருக்கு உரியதோ தெரியவில்லை.
------------
19. காஞ்சீபுரத்திலிருந்து வள்ளிமலை வரை (24 தலங்கள்: 164-187)
காஞ்சிமா நகரில் குமர கோட்டத் தடிகளை வணங்கி (494) காமகோட்டத்தில் (காமாக்ஷியம்மை கோயிலில்) உள்ள கடம்பனைப் பணிந்து, (463,464,1022), கச்சிக்கச் சாலையில் (கச்சபேசுரர் கோயிலில்) உள்ள கந்தபிரானைப் பரவி (467,489,979,485 பாட பேதம்), மற்றும் ஆலயங்களாயுள்ளன யாவற்றிலும் உள்ள குமரமூர்த்தியைக் கும்பிட்டுத், தலம் கச்சிப்பதியாதலின் வல்லெழுத்து ஓசை செறிந்தனவும், பத்திச்சுவை மிக்கனவும், மிக அருமையான சொல்லழகு பொலிவனவுமான சந்தப்பாக்கள் பல பாடினார். கச்சிப் பாடல்களில் முக்கிய விஷயங்கள்:-(1) காஞ்சிமாநகர் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த காமாக்ஷியம்மையின் தலமாதலின் இத்தலத்துப் பாக்களில் தேவியின் பெருமை சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுளது; (2) வேசையரைப் பற்றிய விஷயங்கள் வெகு குறைவாகக் காணப்படுகின்றன; (3) குமண வள்ளலைப்
பற்றியும் (452), திருச்செங்கோடு, சுவாமிமலை, தணிகை, பழநி, கதிர்காமம் என்னும் பிரபல தலங்களைப்பற்றியும் கூறப்பட்டுள [ 454, 457,462]. (4) குமரக் குழந்தையின் கையைப் பற்றி நடத்துவர் விநாயக மூர்த்தி;--- "பெரிய தும்பிக்கைக் கற்பக முற்றங் கரதலம் பற்றப் பெற்ற ஒருத்தன்" எனத் தெரிவிக்கப்பட்டுளது (454). (5) திருஞானசம்பந்தப் பெருமான் திருமாலுக்குச் சிவசாரூபம் அளித்த லீலை குறிக்கப்பட்டுளது[1] [458] (6) வந்தித்தலே அறியாத தமது பிழைகளைப் பொறுத்து முருகவேள் தம்மை ஆட்கொண்ட அருமையான பொறுமைக்கு ஒப்பு உளதோ எனப் பாராட்டப் பட்டுளது [460]. (7) தேவி கம்பையாற்றில் தவம் புரிந்ததும் [460, 492, 494], தேவி தழுவ ஈசன் குழைந்ததும் [494] தேவி 32 அறங்களை வளர்த்ததும் [460,464] சொல்லப்பட்டுள. (8) 'காளமேகப்புலவன்' [2] என்னும் சொற்றொடர்ப் பிரயோகம் [464] காளமேகப்புலவரின் காலத்துக்குச் சமீப காலத்தவர் சுவாமிகள் என்பதை நினைவூட்டுகின்றது.
------------
[1]. " முத்தமிழ் விரகர் பாட்டலங்களாற் பரஞ்சுடர் திருவுருப் பெற்றான்" முருகப்புத்தேள் அருள் விழிப் பார்வை தன்னால் முகுந்தனோர் இலிங்கமானான்" காஞ்சிப்புராணம்-திருமேற்றளிப் படலம் 11-அத்தருவேதிப் படலம் 35.
[2]. காளக்கவி என்னும் பட்டம் ஒட்டக்கூத்தருக்கும் உண்டு. [ தக்கயாகப் பரணி-70-உரை]
-------------------
(9) 476-ஆம் பதிகம் 'தத்தித' என்பதிற் பிறிதொரு சிறிய திருப்புகழ் கிடைக்கின்றது, இப்பதிகத்தில் 'சொர்க்கத்துக்கு ஒப்பற்றகச்சி' எனக்காஞ்சித் தலத்தைவிசேடித்துக் கூறியுள்ளார். (10) 480-ஆம் பதிகம் (கமலரு) என்பதன் ஈற்றடி வேல் வாங்கு வகுப்பை ஞாபகப் படுத்துகின்றது. (11) 'கொத்தார்' என்னும் 483-ஆம் பதிகத்தில் 'அ ஆ உ ஊ எனவே' என்ற இடத்து [1] உயிரெழுத்துக்கள் விட்டிசைத்த வழி வல்லெழுத்தின் ஒசை பெற்று "தத்தா தத்தத்" என்னும் சந்தக்
குழிப்பின் வன்மையை அடைந்து ஒலிப்பது மிக அருமையான ஒரு பிரயோகம். (12) 485-ஆம் பதிகம்
'சீசிமுப்புரம்' என்பதில் பல தலங்கள் கூறப்பட்டுள; (13) 486 ஆம் பாட்டில் 'கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு
கச்சியிலமர்ந்த பெருமாளே' என வருவதிற் சிலேடை அழகு பொலிகின்றது. கச்சு = ரவிக்கை: இவர் ஏறியுள்ள (மூடியுள்ள);
குரும்பை - குரும்பை போன்ற முலை: கச்சவர் = கைத்தவர், வெறுத்தவர், பெண்ணாசையை வெறுத்தவர் விரும்புகின்ற
கச்சிப் பெருமாள்' - என்பது பொருள். (14) 488-ஆம் பாடலில் வள்ளியைக் "காவற்காரி" என்றும்,தேவசேனையைத்
"தேவப் பூ" என்றும் ஓதியுள்ளார். "தேவப் பூ" என்னும் பிரயோகம் 'வள்ளிப்பூ நயந்தோயே' என்னும் பரிபாடலை
நினைவூட்டுகின்றது.
--------------------------
1. சிதம்பரச் செய்யுட் கோவைவ 61-ஆம் பாடலைக் காண்க.
------
(15) 493-ஆம் பதிகத்தில் "காந்தக்கலும் ஊசியுமேயென ஆய்ந்துத் தமிழோதிய சீர்பெறு காஞ்சிப்பதி" என்பது கந்த புராணத்தை அதன் ஆசிரியரொடு முருகவேள் பார்த்துத் திருத்திக் கொடுத்த அன்பின் சக்தியைக் குறிக்குமாயின் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் காலத்துக்குப் பின் அருணகிரியார் இருந்தனர் என்பது பெறப்படும். சைவ சித்தாந்த மகா சமாஜத் திருப்புகழ்ப் பதிப்பிலே இரண்டு பாக்களில் (525.குதலை மொழியினார் - 793 தித்தித்த மொழிச்சிகள்) கச்சியப்ப சிவாசாரியாரைப் பற்றி வருகின்றன. அவைதாம்:-
-
(i) 523. மருவு புலவனார் கவிக்கு ளேசிறு
வழுவ தறைமகா சபைக்கு ளேகியெ
வகைய பெயரதா இலக்கணாவிதி மொழிவோனே!
(ii) 793. முற்பட்ட இலக்கண நூலிடை
தப்புற்ற கவிக்கென வேஅவை
முற்பட்டு புதுத்துறை மாறிய புலவோனே!
16. தேவி திருவடியிற் சிவபிரான் வணங்கினதால் அவர் சடையில் உள்ள கொன்றை முதலியவற்றின் மணம் தேவிவின் திருவடியில் வீசுகின்றது என்றார். (457) (சித்து வகுப்பு அடி 73 பார்க்க) (17) பஞ்சபாண்டவர் பெயர் அடைமொழியின்றி வரிசையாய் வந்துள்ள அழகை 481-ஆம் பாடலிற் காணலாம். (18) 492-"வம்பறா" என்னும் பாடல் மனப்பாடஞ் செய்யத்தக்க ஓர் அருமைப் பாடல்.
"பிரமனைப் "பத்மத்தச்சன்" (451) என்றதும் சிவபிரானைத் "திரிபுரஞ் சுட்டுக் கொட்டை பரப்பும் குரிசில்" (461) என்றதும், தேவசேனையைச் "சித்ரச் [1]சொர்க்கச்[2] சொர்க்கத் தத்தை (473) என்றதும், சுவாமிகளது வாக்கின் அருமை பெருமையை நன்கு விளக்கும் சொல்லாட்சிகளாகத் துலங்குகின்றன. வல்லெழுத்தின் எழுச்சிப்பாடல்களுக்கு உதாரணமாக 473-477 எண்ணுள்ள பாடல்களைக் கூறலாம்.
-----------------
[1]சொர்க்கம்=ஸ்தனம்; 2 சொர்க்கம்= விண்ணுலகம்
அருணகிரியார் காஞ்சியில் பலநாள் தங்கியிருந்து பின்பு சேயாற்றங் கரையிலுள்ள (165) திருவோத்தூருக்குச் (681) சென்று ஸ்ரீசம்பந்தப் பெருமான் திருவாக்கால் அத்தலத்தில் ஆண்பனை பெண்பனை யானதும், அதன் பவம் மாய்ந்ததுமான லீலைகளைப் பாராட்டியும், சிவமணங்கமழும் திருவாக்காலும், திருநீற்றாலும் சமணரொடு அவர் போராடி அவர்களை வென்ற பராக்ரம ஆடலைப் போற்றியும் பாடி மகிழ்ந்தார். பின்பு (166) வாகை (994), (365-பாட பேதம்), (167) காமத்தூர் (992) என்னுந் தலங்களைப் பணிந்து காஞ்சிக்குத் திரும்பினர். காஞ்சியிலிருந்து (168) வல்லக்கோட்டை என வழங்கும் கோடை நகர்க்கு (707- 713) வந்து வயலூரை மறவாது போற்றி இன்ன இன்ன பாவஞ் செய்தோர் நரகில் வீழ்வர் (711) என உலகுக்கு உபதேசித்தார். கோடை நகரினின்றும் (169) மாடம்பாக்கம் (705-706) வந்து மனோலயம் வரும்படி உதவிய நாத (705) எனத் துதித்து, அருமையான சந்தத்தில் [1] "தமனியப்பதி இடங்கொண் டின்புறுஞ் சீர் இளைய நாயகனே" (706) எனக் குழந்தை முருகனை வாழ்த்தினர். சுவாமிகளின் நெஞ்சில் முருகனே செஞ்சொல் தருவதால், எப்படிப் பட்ட சந்தத்துக்கும் இசைய இவருக்கு வாக்கு எளிதில் அமைந்தது. கடின சந்தமுள்ள இச்செய்யுளில் இராவணன் தோள் இருபது என்பதைக் குறிக்க "இரண்டஞ் சொன்ப தொன்றேய் பணை புயத்தையும்" என எவ்வளவு நயமாக வாக்கு அமைந்துளது; பாருங்கள்!"
மாடம்பாக்கத்தினின்றும் புறப்பட்டு (170) திருவான்மியூரைத் (702) தொழுது, (171) மயிலாப்பூருக்கு (692-701) வந்து, அதைக் கடற்கரைத்தலம் என்றும் (693), அழகு, புலமை, மகிமை, வளம் பொருந்திய தலம் என்றும் (695), எலும்பினின்றும் பூம்பாவை எழும்படி அருட்பாடல் பெற்ற தலம் என்றும் (697) பாராட்டிப் புகழ்ந்தார். பின்பு (172) திருவொற்றியூரைத் (690- 691) தரிசித்து அதை ஆதிபுரி என்றும் (690), கடற்கரைத்தலம் என்றும் (691) போற்றி, செய்து, (173) ஆண்டார் குப்பம் (737) என இப்போது வழங்கும் தலத்து முருகவேளைத் "தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த பெருமாளே" என வாழ்த்தி, அவர் காலத்தில் அந்த மூர்த்தி நாற்றிசையிலும் கீர்த்தி பெற்று பிரதாபத்துடன் இருந்தனர் என்பதைக் காட்டிட-
-
"இப்பூர்வ மேற்குத்தரங்கள் தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்
கிசைந்த தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த பெருமாளே"
- எனப் போற்றி மகிழ்ந்தார். தமக்குப் பெரும் பொருளை உபதேசித்த முத்தன் (எட்டா மெழுத்து ஏறையேற்குப்
பகர்ந்த முத்தா! -737) என்றும் நன்றி பாராட்டினர்.
------------------
[1]. தமனியப்பதி-தமனியம்=பொன்.; மாடை=பொன்; தமனியப்பதி-மாடையம்பதி-மாடம்பாக்கம், தமனியப்பதி பொன்னூர்;-மாயூரத்துக்கு அருகில் உள்ள தேவாரம் பெற்ற ஸ்தலமாகிய திரு.அன்னியூருக்கும் பொன்னூர் எனப் பெயருண்டு. (பக்கம் 36 பார்க்க)
பின் னும், வேடிக்கையாக- "முருகா! நீ ஒரு நல்ல தச்சன். எந்தக் காலத்திலும் மக்கிப் போகாத சூரன் என்னும் ஒரு மாமரத்தைப் பார்த்தாய்,- அதை வேலாற் பிளந்தாய்; அம்மரத்தினின்றும் இரண்டு உருவங்கள் -ஒன்று மயில், ஒன்று சேவல்-செய்தாய்; (ஆதலால்) நீ ஒரு சித்தன். அத்தகைய சித்தப் ப்ரசித்தனாயிருந்தும் நீ ஒரு குறப் பொம்மையின் தாளின் கீழ்ப் படிந்தாய்! என்னே இது!" என்று அசதி ஆடினார்-(பரிகாசஞ் செய்தார்):
-
"எக்காலு மக்காத சூர்க்கொத் தரிந்தசினவேலா!
**தச்சா! மயிற் சேவலாக்கிப் பிளந்த
சித்தா! குறப்பாவை தாட்குட் படிந்து..அமர்ந்த பெருமாளே. 737.
என்றார். தாட்குள் படிந்து என்றும் தாட்கு உட்படிந்து என்றும் இருவகையாகப் பிரித்து "தாளிற் பணிந்து" என்றும், "தாளால் (காலால்) இட்ட வேலைகளைச் செய்து" என்றும் பொருள் கொள்ளலாம். ஆண்டார் குப்பத்திலிருந்து புறப்பட்டு இப்போது சின்னம்பேடு, சிறுவரம்-பேடு என வழங்கும் (174) சிறுவையைத் (729-732) தரிசித்து, ஸ்ரீராமரின் புதல்வர்களான "லவ குசா" என்னும் சிறுவர் அம்பெடுத்து ஸ்ரீராமருடன் பொருது ஜெயித்த இடம் சிறுவை என்பதைச்-
-
சிறுவராகி யிருவ ரந்த கரி பதாதி கொடு பொருஞ்சொல்
சிலையிராமனுட னெதிர்ந்து சரமாடிச் செயமதான நகர்...731
என விளக்கித், "திருவூரகப் பெருமாள்" வீற்றிருக்குந் தலம் எனவும் (732) விளக்கிப், பின்னர்க் (175) கோசை நகர் என்
னும் கோயம்பேட்டை (703) வணங்கிப், பின்பு (176) பாடி என வழங்கும் திருவலிதாயத்தைத் (689) தரிசித்து, (177)
"வட திரு முல்லை வாயிலை" (686-688) வணங்கி, "வருணன், பிரமன், திருமால், பூசித்துப் பொற்றிய "மாசிலாமணி"
யீசர் எனச் சிவபிரானைக் குறித்தும் (687), "முநிவோர் தவம்புரி முல்லை வடவாயில்" எனத் தலத்தின் சிறப்பெடுத்
தோதியும் (688) பாடிப் பணிந்து, (178) திருவேற்காடு (684-685) என்னும் தலத்தை அடைந்தனர். அங்கு செவ்
வேளைப் பணிந்து "நக்கீரருக்கு அருளிய பெருமாளே! வேத புரீசர்தரு சேயே! பொன்னுலகத்தாரின் பெரு
வாழ்வே! உமையாள் தரு குமரேசா!
-
"மாப்பாதகனாம் அடியேனை நின் அருளாலே
பார்ப்பாயலையோ! அடியாரோடு சேர்ப்பாயலையோ!
உனதாரருள் கூர்ப்பாயலையோ!"
-என உள்ளம் நெக்குருகிப் பாடிப் பரவினார் (685). திருவேற்காட்டை (107) வெஞ்சமாக் கூடற் பதிகத்தில் (935) "வேற்கானம்"-எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருவேற்காட்டினின்றும் புறப்பட்டுப் (179) பாக்கம் (682-683) வந்து தரிசித்துப், (180) பழையனூர் திருவாலங் காட்டைச் (677-680) சேர்ந்தார். அங்குச் சிவபிரான் காளியோ டாடிய லீலையைக் "காளியோ டாடிய நடேசுரர், அண்டரும் உ(ய்)ய நின்று ஆடுங் கூத்தன், சிவமய ஞானங் கேட்க, தவமுநிவோரும் பார்க்க, திருநடமாடுங் கூத்தர்" "முதிர்நடமாடுங் கூத்தர்" எனப் பலவாறு பாராட்டிப் புகழ்ந்து பழையனூரையும் சிறப்பித்தார் (679); முருகரைத் தினைமா இன்பா" என்றார் (677); 678-ஆம் பாட்டில் வரும் [1]"அஞ்சா நெஞ்சாக்கந் தரவல பெருமாளே" என்னும் அடி மனப் பாடஞ் செய்யத் தக்கது. திருவாலங்காட்டைத் தரிசித்தப் பின்பு (181) முள்வாய் (993) என்னுந் தலத்தை அடைந்து "மாதர் வந்திறைஞ்சு முள்வாய் என விளக்கி, அங்கிருந்து போந்து ஆற்காட்டுக்குச் சமீபத்திலுள்ள (182) வேப்பூர் (757-758) என்னுந் தலத்தைத் தரிசித்து வேல்வாங்கு வகுப்பின் கருத்தமைந்த பாடலைப் (757) பாடி, வள்ளியைத் தேடிவந்த உன் திருவடித் தாமரையை யான் பாடுதற்கு "வண் தமிழ் தா" என வேண்டினர்;
---------------------
[1]. "மங்காதிங்" என்னும் பாடல் 1183 ஈற்றடியும் பார்க்க.
வேப்பூர் என்பதற்கு நிம்பபுரம் என்னும் மறு பெயரிட்டுப் பாடல் (758) "அஞ்சுவித" என்பதைப் பாடினார். (நிம்பம்= வேம்பு): [வடக்கே ஹாஸ்பெட், ஹம்பிக்குச் சமீபத்தில் (182-A) நிம்பபுரம் என்றே ஒரு தலம் இருப்பதாகத் தெரிகின்றது]. வேப்பூரைத் தரிசித்த பின்பு (183) தேவனூர் (739-741) என்னும் தலத்தை அடைந்து "ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ", "யான் அவா அடங்க என்று பெறுவேனோ", என வேண்டிப் பணிந்தும், பிரமனொடு விளையாடி அவனைக் குட்டிய பெருமானே எனப் புகழ்ந்தும்,வள்ளியிடம் மயல் கொண்டு லீலைகள் பல செய்து அவளைச் சேர நாடிய திருடாஎன வசை யோதியும் (741) பாடி மகிழ்ந்தார். பின்னர் (184) ஒடுக்கத்துச் செறிவாய் (991) என்னுந் தலத்தைப் பணிந்து திருமால் 'தமிழ்ப்புலவர்' களின் சமத்துக் கட்டிலே அகப்பட்ட மூர்த்தி என விளக்கியும், முருகவேள் ருத்ரஜன்மராய்த் தமிழ் தேர்ந்த லீலையைப் பாராட்டியும் பாடினர். பின்பு (185) வேலூர் (ராய வேலூர்) (670-671) அடைந்து குபேர நகராம் அளகைபோற் பல் வாழ்வால் வீறிய...வேலூர், புலவர் போற்றிய வேலூர், மாதர் வந்திறைஞ்சு வேலூர் என அத்தலத்தின் சிறப்புக்களை ஓதிப் பாடினர் -- வேலூரினின்றும் (186) விரிஞ்சிபுரம் (672-676) வந்து சேர்ந்தார். அத்தலத்தைப் பிரமன் பூசித்த தலம் என்றும் (674), வேதம் முழங்கும் வீதியையுடைய தலம் என்றும் (676) சிறப்பித்தும், அத்தலத்துக்கு உரிய "கரபுரம்" என்னும் பேரை வைத்தும் பாடி மகிழ்ந்தார், இத்தலத்து "ஒருவரை" என்னும் அருமைப் பாடலில் --
-
'சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்
தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற்றுனது பொற்
சரணமெப் பொழுதுநட் பொடு நினைத் திட அருட்டருவாயே' 672
என்னும் அருமையான வேண்டுகோளை அமைத்தார். மேலும், அப்பாட்டில் மிக அழகான சொல்லமைப்பு வாய்ந்த வகையில் வள்ளிப் பிராட்டியை -
-
"குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ் சிலைநுதற்
சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக்
கொடியிடைப் பிடிநடைக்" குறமகள் -
எனச் சிறப்பிதாதார். இத்தகைய வாக்கு அருணகிரியார் ஒருவருக்கே உரிமையாய் இன்றும் விளங்குகின்றது.
பின்பு, அருணகிரியார் திருவிரிஞ்சையினின்றும் புறப்பட்டுத் (187) திருவலம் (669) வந்து தரிசித்துத் திருமாலும் பிரமனும் வலம் வந்து பூசிக்க வீற்றிருக்கும் சிவனது மூதூர் என்றும், மாதர்கள் நடன மியற்றிப் பணியும் பதி என்றும் திருவலத்தைச் சிறப்பித்துப் பாடி (188) வள்ளி மலைக்கு (313-323) வந்தார்.
--------------------
20. வள்ளிமலை-திருத்தணி: (2 தலங்கள்:188-189)
வள்ளி மலைக்கு வந்ததும் அம்மலையை வலம் வந்து, மலை முழுதும் முற்றும் ஆய்ந்து தரிசித்து, வள்ளியம்மையை மணக்க முருகபிரான் தணிகையினின்றும் தாமே வள்ளி மலைக்கு வந்து வள்ளியோடு பல லீலைகள் செய்து விளையாடின தலமல்லவா இது என மகிழ்ந்து, "முருகா! நீ எனக்கு ரகசியம் என்று உபதேசித்த பொருள் நான் வள்ளிமலையைக் கண்டவுடனே வெட்ட வெளிச்சமாய் விளங்கி விட்டது. நீ உபதேசித்த உபதேசமாவது "யாரொருவர் யான்-எனது என்னும் ஆணவ நிலை அற்று என்னை வழிபடுகின்றார்களோ அவர்களுக்கு நான் எளியன்-குற்றேவல் செய்பவன்" என்பதல்லவா! அவ்வகையில் உண்மை வழிபாடு செய்த பிராட்டி வள்ளிப்பிராட்டி. ஆதலாலன்றோ நீயே தணிகையினின்றும் வள்ளி மலைக்குத் தனியே சென்று, வள்ளியின் சன்மார்க்கத்தை உகந்து மெச்சி வள்ளியின் பொருட்டுப் பல குற்றேவல்களைச் செய்து, பல விளையாட்டுகள் விளையாடி அந்த நங்கையைத் திருமணமுஞ் செய்து உனக்குகந்த தேவியாகத் திகழும்படி வலப்பாகத்தே வைத்தாய்!" என்று தெளிவாக ஆத் தெய்வ ரகசியத்தை வெளியிட்டு (கந். அலங். 24)-
-
"கின்னங் குறித்தடியேன் செவி நீயன்று கேட்கச் சொன்ன
குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது; கோடுகுழல்
சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாணம் முயன்றவனே!"
(குன்னம்=ரகசியம்: குறிச்சி-மலைநிலத்து ஊர்-- வள்ளி மலை; சென்று-- தானே சென்று)
என்னுஞ் செய்யுளில் எடுத்துரைத்தார். பின்னும், ஒரு ரகசியத்தை எடுத்து அருணகிரியார் வெளிப்பட மொழிகின்றார். அதாவது "முருகா! நீ சிவபிரானுக்கு உபதேசித்த ரகசிய உபதேசம் 'வள்ளிச் சன்மார்க்கமே' எனத் தெரிந்து கொண்டேன்" என்று--
-
"வள்ளிச் சன்மார்க்கம்[1] விள்ளைக்கு நோக்க
வல்லைக்குளேற்றும் இளையோனே" திருப் (317)
-- என்னும் பதிக அடியில் எடுத்துரைத்துள்ளார். இங்ஙனம் உலகோர்க்கு ரகசியத்தை வெளியிட்ட அருணகிரியார் மாட்டுள்ள இந்தப் பெருங்கருணையை நினைந்து தான் 'கருணைக்கு அருணகிரி' என்ற உலக வழக்கும்,
'ஐயா அருணகிரி அப்பா உன்னைப் போல
மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்?
என்னும் தாயுமானவர் வியப்புரையும் எழுந்தன.
----
[1]. விள் ஐக்கு = வினவிய பிதாவாகிய சிவபிரானுக்கு நோக்க வல்லைக்குள் = கண்ணிமை வேகத்தில் - க்ஷண நேரத்தில், இங்ஙனம் க்ஷண நேரத்தில் முருகபிரான் சிவபிரானுக்கு உபதேசித்த தலம் திருத் தணிகை: அதனால் அத்தலத்துக்கு க்ஷணிகாசலம் என்று ஒரு பெயர். உபதேசித்ததைக் கேட்டு மகிழ்ந்து அட்டஹாசஞ் செய்ய சிவபிரான் "வீராட்டகாசர்" எனப் பெயர் பெற்றார்.
"வீராட்டகாசர் கோயில் திருத்தணியில் நந்தியாற்றுக்கு வடக்கிலும், உபதேசித்த சாமிநாதர் கோயில் நந்தியாற்றுக்கு தெற்கிலும் திருத்தணிகையூரின் வட கீழ்ப் பக்கத்தில் உள்ளன.
----------
வள்ளி மலையில் ஆண்டவனை 'வள்ளி மணவாளப் பெருமாளே' [313,314] என்றும், 'வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே' (வள்ளி மானை அடைய வேட்டை யாடிய பெருமாளே' (315-316) என்றும், 'வள்ளிக்கு வாய்த்த பெருமாளே' [317-319], 'வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே' என்றும் (320) வாழ்த்திப் பணிந்தார். திருவலம் என்னும் தலத்துக்கு அருகில் உள்ள தலம் வள்ளிமலை என்பதைக் காட்ட 'வல்ல முருகா' [314] என்றும், 'வல்லைக் குமார' (316) என்றும் வாழ்த்தினார். 'அல்லசல்' என்னும் 320 - ஆம் பதிகத்தில் --
'கல்லசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரை கண்ட புலவோனே' - என்றார்,
(கல் - அசலம். மங்கை - இமயமலை மங்கை - பார்வதி)
பார்வதி எல்லை மட்டும் எட்டின கல்விவிஷயம் அதன் வரலாறு:-
ஒரு முறை சகல கலைகளும் வல்லவர் யார் என்று தேவர், முதியவர்களுக்குள் ஒரு கேள்வி நிகழ்ந்தது. யாவரும் ஔவைப் பிராட்டியாரே சகல கலைகளும் வல்லவர் எனத் தீர்மானித்து வித்யாதாம்பூலத்தை ஔவையாரிடம் அளிக்க, ஔவையார் எனக்கு இதை வாங்கும் தகுதியில்லை, ஐந்திர வியாகரணம் இயற்றியுள்ள இந்திரனே இதற்குத் தக்க பாத்திரன் என்ன, இந்திரனை அவர்கள் அடுத்த பொழுது, இந்திரன் அகத்திய முநிவரே இத்தாம்பூலத்தைப் பெறுதற்கு உரியவர் என, யாவரும் அகத்தியரை அண்டிய பொழுது, அம் முநிவர் சரஸ்வதி தேவியே இப் பரிசைப் பெறுதற்கு உரியவள் என, அவர்கள் கலைமகளை அணுகக் கலைமகள் நான் கற்றது கைம்மண் அளவு, நான் கல்லாது எஞ்சி நிற்பது உலகளவு, இப்பரிசுக்கு நான் சற்றும் தகுதி யில்லாதவள் - தேவி - ராஜ ராஜேஸ்வரி - வாகீசுரியாம் உமா தேவியே இப் பரிசை வாங்குவதற்கு யோக்யதை உடையவள்: அங்கு செல்லுங்கள் என, அவர்கள் அங்ஙனமே சென்று தேவியை வணங்கித் தாம்பூலத்தை நீட்டத், தேவி ' என்
புதல்வன் முத்துக் குமரன் ஒருவனே சகலகலா வல்லவன். இந்தப் பெருமை அவற்கே உரியது. அவனிடம் செல்லுங்
கள்' எனத் தேவர்களும் முநிவர்களும் கந்தபுரம் சென்று முருக வேளைத் தரிசித்து வணங்கி விஷயங்களை விண்ணப்
பித்துத் தாம்பூலத்தை அளிக்க, எம்பெருமான் புன்னகை பூத்து, 'இந்த வரிசையை ஏற்றுக் கொள்வோம்' எனக் கூறி அவ்வித்யா தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது சரித்திரம். இச்சரித்திரத்தைக் கல்லசல மங்கை = பார்வதி,
எல்லையில் = வரைக்கும், விரிந்த - மேலே சென்ற (விவாதத்தில்) 'கல்வி கரை கண்ட புலவோன்'- என்னும் பெரும்பட்
டம் வாய்க்கப் பெற்ற புலவோனே' - எனக் கூறிக் குறித்து அருணகிரியார் ஆண்டவனைப் புகழ்ந்தார். இதனால் 'சகல
கலாவல்லப மூர்த்தி' என முருகவேளுக்கு ஒரு பெயர் வந்தது.
319 - ஆம் பாடலாகிய 'ககனமும்' என்னும் திருப்புகழ் 173, 476 பதிகங்கள் போலக் 'கரந்துறை செய்யுளுக்கு' ஓர் உதாரணமாம். அத்திருப்புகழுள் ஒரு குட்டி திருப்புகழ் அமைந்துள்ளது. அதன் விளக்கத்தை எந்தையார் திருப்புகழ்ப் பதிப்பிற் காணலாம்.
சுவாமிகள் வள்ளிமலையைத் தரிசித்து நேரே (189) திருத்தணிகைக்கு (249-312) வந்தார்.
திருத்தணிகைத் தரிசனம்.
தணிகைமலை யழகைப் [1] பார்த்தார். 'அழகு திருத்தணி மலையில் நடித்தருள் பெருமாளே' (285) - எனப் பாடினார்;
தணிகை ஆண்டவர் அழகைப் பார்த்தார் - 'தணிமலை அப்பனே அழகிய பெருமாளே (279), தணிகை மாமலை மணி
முடி அழகியல் பெருமாளே (282), தணிகையில் இணையிலி (289) -- எனத் துதித்தார். எங்கள் பிரானை இந்நாள் காறும்
வந்து வணங்காது போனேனே என வருந்தினார். 'முருகா! பிரமன் நேர்மையுள்ளவனாயிற்றே! அவனுக்கு நான் என்ன
குற்றம் செய்தேன். உனது தணடையந் தாள்களைச் சூடாத சென்னியையும், நாடாத கண்ணையும் பாடாத
நாவையும் எனக்கென்றே தெரிந்து அமைத்தனனே' - என நினைந்து வருந்தி - (கந். அலங். 76)
-
"கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தடாள னேதென் தணிகைக் குமரநின் தண்டையந்தாள்
சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாதகையும்
பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே"
எனப்பாடி உருகினர்.
----------
1. 'புவியில் அழகிய செருத்தணி' திருவகுப்பு -- (வேடிச்சிகாவலன் வகுப்பு): "ஏரணி செருத்தணி" ஏர் - அழகு (வேளைக்காரன் வகுப்பு).
இங்ஙனம் பாடிப் பலநாள் திருத்தணிகையில் தங்கியிருந்து ஆண்டவனைப் பணிந்து போற்றினர். சிதம்பரத்துக்கு (65 பாடல்கள்); அடுத்தபடியாக அதிக பாடலுள்ள தலம் திருத்தணிகை (64 பாடல்கள்); 127- ஆம் திருப்புகழ் 'தகைமைத்' என்பதன் பாடபேதமான- 'பழனப் பொழில் சுற்றுறு பொற்றணிகைப் பதியிற் குமரத் பெருமாளே' என்பதையும், 791-ஆம் திருப்புகழ் "அருக்கி மெத்தென" என்பதின் பாடபேதமான "திருத்தணிப் பதிப்பெருமாளே" என்பதையும் தணிகைப் பாடல்களாகக் கொண் டால் திருத்தணிகைப் பாடல்கள் 66 ஆகும். இனித் திருத் தணிகைப் பாடல்களால் விளங்குவன இவையெனக் கூறுவோம்:
தணிகைத் தலத்தைக் குறிப்பன:
தணிகைமா நகர்-(1) கழுநீர், நீலோற்பலம், என்றும் மலர்கின்ற சுனையின் சிறப்பை உடையது. (252, 269, 272, 274, 278, 283, 284, 287, 291, 295, 309, 310, 1181). (2) பல திசையிலுள்ளாரும் நாடி நெருங்கி வரும் (சரவணப் பொய்கை) என்னும் திருக்குளத்தை உடையது (258). (3) தமிழ்ப் பாக்ஷை வழங்கும் ப்ரதேசத்துக்கு வட எல்லையாக விளங்குவது (255, 257, 301). (4) முருக வேளின் திருப்புகழை ஓதுங் கருத்தினர் சேரும் பதி (259). (5) உத்தம சிவனடியார்கள், முநிக் கணத்தவர்
இமையவர், ஐந்து தலை நாகம் வழிபடும் தலம் (266, 303, 307). (6) மாதர்களும் வியக்கத் தக்க உண்மைப் பெருந் தவசினர் வாழும்பதி (277). (7) மறைமுழங்கு மாநகர் (291). (8) சிவலோகம் எனப் பாராட்டப்படும் திவ்ய க்ஷேத்திரம் (293). (9) எத்திக்கிலும் புகழப் படுவதான பிரபல ஸ்தலம் (297, 306). (10) தூரத் தொழுவார் வினை சிந்திடும் மஹாக்ஷேத்திரம். (311). (11) முருகவேள் என்றும் அகலாது வீற்றிருக்கும் அருமைப் பதி (312) (12) வள்ளிப் பிராட்டியை மயக்கி அணைத்த பின்பு முருக வேள் அவ்வம்மையாருடன் மகிழ்ச்சியுற்று வந்து அமர்ந்துள்ள மங்கல நகரம் (268, 296). (13) வள்ளி தேவசேனா சமேதராய்ப் பெருமான் கலியாண கோலமாய் அமரும் இடம் (267, 270, 285, 293). (14) தமது தந்தையாகிய சிவபிரான் தமது கழலைத் தியானிக்க அவருக்குச் (சுவாமி மலையிற் போல) சுவாமி நாதனாய் முருக பிரான் உபதேசித்த உயர் பதி (251, 300, 306). (15) கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்துக்கு உயிர் ஸ்தானம்-நடுஸ்தானம் "திரைக் கடல் சூழும்புவிக்குயிராகுந் திருத்தணி" (258) "பூவி னடுவினில் வீறு தணிமலை" (260). பூ=பூமி.
தணிகை நாயகரைக் குறிப்பன
தணிகை நாயகர் (1) தமிழ்ப்பாவினால் ஏத்தும் அடியார்களுக்கு எளியர் (264, 265). (2) மூவரும் வந்து தொழுகின்ற மூர்த்தி (261). (3) பவரோக வயித்த நாதப் பெருமாள் (293).
பாடற் குறிப்புகள்
i) 285, 288 பாடல்கள்:-சிவபிரான் திரிபுரத்தைச் சிரித்து எரித்தனர், என்பதும், மன்மதனை விழித்து எரித்தனர் என்பதும் புராணம். ஆனால் திரிபுரத்தை விழித்து எரித்தார் (அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் (திருப் 285)) என்றும், மன்மதனைச் சிரித்து எரித்தார் (மாரோன் இறக்க நகை (த்த) தாதா (திருப் 288) என்றும் அருணகிரியார் மாற்றிக் கூறுவர். இதற்கு ஆதாரம் தேவாரத்தில் உள்ளது. திரிபுரம்:-"வாலிய புரத்திலவர் வேவ விழி செய்த ஒருத்தர்" சம். தேவா (170-3 (பழுவூர்)).
மன்மதன்:- "கொம்புநல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும்" அப்.தேவா. 4-4 (ஆரூர்).
ii) 271-ஆம் பாடலில் "இருப்பவல் திருப்புகழ்" என்பது திருப்புகழின் உரத்தை (பெரு வன்மையை)க் காட்டும். அவ்வன்மையைச் "சினத்தவர் முடிக்கும்" என்னும் 263-ஆம் பாடலிற் காண்க. திருப்புகழ் இருப்பவல்-இரும்பு அவல். அவல்போல உண்ணலாம்; உண்டபின் "உண்ட நெஞ்சறி தேனைக் (46) காணலாம்; இரும்பு போல உரம் (மனோதிடம்) பெறலாம்; "மரண பிரமாதம் நமக்கில்லையாம்" , "அந்தகா வந்துபார் சற்றென் கைக்கிட்டவே"- எனக்கூறும் திடம். "இருப்பவல் திருப்புகழ்" என்பதற்கு "இருக்கன திருப்புகழ்" என்று ஒரு பாடபேதம் கிடைத்தது. இருக்கு=ருக்வேதம், அன்ன (போன்ற) - திருப்புகழ் எனப்பொருள்படும். இப்பாடலின் ஈற்றடிக்குள்ள பாடபேதங்களை பக்கம் 36, 71-ல் காண்க.
iii) 289-ஆம் பாடல்- இது ஓர் அருமையான பாடல், வள்ளியம்மையின் அழகின் வர்ணனையும், அந்த அழகில் ஈடுபட்டு முருகபிரான் மடலெழுதிய சேதியும் அழகாகக் கூறப்பட்டுள. திருவடி தீக்ஷையையும் அரிய உபதேசத்தையும் ஆண்டவன் தமக்கருளிய திருவருட்பேற்றை எடுத்துக் கூறி, இறைவனைத் "தணிகையில் இணையிலி" என வெகு அருமையுடன் பாராட்டிச் சுவாமிகள் இந்தப்பாடலில் நன்றி கூறியுள்ளார். இப்பாடலில் சஞ்சரீகரிகரம்-சஞ்சரீகம்- வண்டு; சிந்துவாரம்-நொச்சி; இதழி-கொன்றை; இந்தளாம்ருத வசனம்-இந்தளப்பண் (நாதநாமக்ரியை ராகம்) போன்ற அமிருத வசனம். ரஞ்சிதாம்ருத வசனம் என்றார் பிறிதோரிடத்து (திருப்.79)
தணிகையில் நிர்த்த தரிசனம் காணப் பெற்றது.
(iv) இத்தலத்தில் அருணகிரியார்க்கு முருகபிரான் தமது தேவிமார்களுடன் மயில்மீது நிர்த்த தரிசனத்தைத்
தந்தருளினார். இது,
-
"விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொ
டழகு திருத்தணி மலையில் நடித்தருள் பெருமாளே (285)
"தணிகைமலை தனில் மயிலில் நிர்த்தத்தில் நிற்கவல பெருமாளே" (308)
(தணிகைமலையி லரியதொரு நிர்த்தத்தில் நிற்கவல பெரு மாளே -என்றும் பாடம்.)
- எனவரும் அருமை அடிகளால் விளங்குகின்றது.
(v) அறிவை அறியும் தத்துவத்தையும் அபரிமித வித்தைகளையும் அருணகிரியார்க்கு அறுமுகப்பெருமான் அருளிய தலங்கள் ஐய்தினிலொன்று திருத்தணிகை. 'அழகிய செருத்தணியில் அறிவை அறிதத்துவமும் அபரிமித வித்தைகளும் அறியென...வாழ்வித்த வேதியனும், வேடிச்சிகாவலனே' (பக்கம் 38, 57 பார்க்க).
(vi) ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு சுவாமிகள் "திருப்புகழ் ஓதுங் கருத்தினர் சேரும் திருத்தணி (259) என்றதன் உண்மையை இப்போது திருத்தணிகையில் வருடம் தோறுங் காண்கின்றோம். எனது தமையனார் வ.சு. சண் முகம் பிள்ளை அவர்கள் 1912௵ முதல் ஜனவரி முதல் தேதி தோறும் தணிகை நாயகரைத் தரிசித்து அநுட்டித்து வந்த வழக்கத்தை அவர்கள் மூலமாய் வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமி சச்சிதானந்தா அவர்கள் 1917 டிசம்பர் 3 முதல் ஆர்வத்துடன் மேற்கொண்டு 1921௵ முதல் வருடந்தோறும் தமது அடியார்களுடன் டிசம்பர் 31 தேதியில் வந்து திருப்புகழ் பாடி அவ்வழக்கத்தை விருத்தி செய்தார். (பக்கம் 75-பார்க்க). இவ்வழக்கம் வருடம் செல்லச் செல்லப் பிரபலம் ஏறி இப்பொழுது பெரிய உற்சவம் போலப் பலதலத்து அன்பர்தம் பெருந்திரட் கூட்டமுடன் நடைபெறுகின்றது. வருஷ இறுதி நாளில் (டிசம்பர் 31௳) இரவு தணிகையில் ஒன்று கூடி நடைபெறும் திருப்புகழ்ப் பஜனைக்காட்சி "சிவ லோகம் எனப் பரிவேறு" திருத்தணிகையை உண்மையாகவே சிவலோகமெனப் பொலியச் செய்கின்றது.
(vii) திருத்தணிகைக்கு உரிய "இருமலுரோக" என்னும் (260) பாடல் எவ்வித நோயும் நம்மைப் பீடியாதிருப்பதற்கும், வினைக்கீடான நோய்வந்தால் அந்நோயின் கொடுமையைத் தணிப்பதற்கும் சிறந்த "மந்திரத் திருப்புகழாம்" என்பது பக்தர்கள் இன்றும் அநுபவத்திற் கண்டதொரு காட்சியாகும்.
(viii) "சினத்தவர் முடிக்கும்" என்னும் 263-ஆம் பாடல் திருப்புகழின் (அணுக்குண்டுக்கு மேலான) பேராற்றலை விளக்குவதாம். நினைத்த காரியம் அநுகூலமாகி ஒரு காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென்று விரும்பினால் இப்பாடற் பாராயணம் அதற்குச் சிறந்ததொரு தந்திரப் பாடலாகும். ஆகவே இது ஒரு "வீரஜயத் திருப்புகழாம்"; மேலும், திருப்புகழில் மெய்யான பத்தியுள்ள உண்மை அடியார்களுக்கு இடர் செய்வோருக்குத் திருப்புகழே நெருப்பாய் அழிவு கூட்டி வைக்கும் என்பதும் இப்பாடலால் தெளிவுறத் தெரிகின்றது. இதனைச் "சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கி எழும், அறத்தை நிலை காணும்" என்னும் வேல்வகுப்பும் வலியுறுத்தும்; பின்னும், 'சினத்தவர் முடிக்கும்' என்னும் பதிகத்தில் முதல் நான்கடியில் அடிய ரல்லாதார்க்குத் தழலாகவும் உண்மை அடியார்க்கு நிழலாகவும் திருப்புகழ் உதவுமென்று சொன்னதற்கு ஆதாரமாகப் பின் நாலடியில் -அடியரல்லாத சூரர்கள் எரிபட்டழிந்ததும், மெய்யடிமை பூண்ட வள்ளியம்மை சுகப்பட்டு வாழ்வதும் எடுத்துக்காட்டப் பட்டன. இந்தப் பாடல் இவ்வாறு திருப்புகழின் பிரபாவத்தைக் காரணம் காட்டி விளக்கும் பெருமை வாய்ந்துள தாதலால் முருகன் அடியார்கள் திருப்புகழ்ப் பாராயணத்தின் பொழுது (வள்ளியம்மை போல) அசைவற்ற உண்மைப் பத்தியைச் செலுத்தி, ஒழுக்கந் தவறாது துதிக்கவேண்டும் என்பதும், அங்ஙனம் திருப்புகழ்ப் பாராயண நியமங்கொண்டவர்களுக்கு அருள் கூடும், பகை ஒழியும், சகல சித்தியுங்கைகூடும் என்பது சத்தியம் என்பதும் நன்கு புலப்படுத்தப் படுகின்றன.
----------------------
21. வெள்ளி கர முதல் ஸ்ரீ சைலம் வரையில் (4 தலங்கள்: 190-193)
இங்ஙனம் தணிகையிற் பன்னாளிருந்த பின்னர் ஒரு நாள் "தணி கை நாயகா! நீ திருவடி தீக்ஷை செய்த பேரருளைக் கனவிலும் மறவேன் நனவிலும் மறவேன்" [தணிகையில் இணையிலி...பதயுக மலர் தந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேனே- 289] எனக்கூறி ஆண்டவனை வாழ்த்தித் தணிகையினின்றும் புறப்பட்டு, [190] வெள்ளி கரம் [660-668] என்னும் தலத்துக்கு வந்தார். "எனது ஊராகிய திருத்தணி உனது ஊராகிய வள்ளி மலையினின்றும் காதம், காதம், அரைக்காதம் (10+10+5)= (25 மைல்) தான் என வள்ளிப் பிராட்டியிடம் சொல்லி அந்த அம்மையார் மீது "மால்கொண்ட எம்பிரானே" எனவும், "கண்ணப்பர் எச்சிலை உண்ட சிவனளித்த குமரனே" எனவும் "என்றும் இளையோனே" எனவும், "மலைகிழவோனே" எனவும் நாள்தோறும் நாம் கூறினால் நூறாயிரக் [லக்ஷக்] கணக்கான நமது பிறவி ஒழியும்" எனப்பொருள் தரும் "வதன சரோருக" என்னும் மிக அருமையான பாடலை [668]க் கலவைச் சந்தத்திற் பாடியும்; மயில், கடம்பு, சிறுவாள், வேல், திருமுக சமுகம், சேவற்கொடி இவைகளைப் பரவித் தினைப்புனங் காத்த வஞ்சியின் கணவா- எனத் துதித்தால் தான் முருகவேளின் பொற்பதங்களைப் பெறலாகும்- என்னும் உபதேசத்தை எடுத்துரைlத்தும் (661); 'மெய்யர் மெய்ய! பொய்யர் பொய்ய!' என ஆண்டவனை வாழ்த்தியும் [665] பாடினர்.
வெள்ளிகரத்துத் திருப்புகழ் ஒன்பதும் 'தய்ய' சந்தங் கலந்தனவாய்ச் சொல்லழகும் பொருளழகும் நிரம்பி நவரத்னங்கள் போல விளங்கி "நவரத்னத் திருப்புகழ்" எனும் படிப் பொலிகின்றன. வெள்ளி கரத்தை விட்டுச் சுவாமிகள் [191] திருவேங்கடம், வடமலை என வழங்கும் திருப்பதியைச் (245-248, 1305*, 1306*) சேர்ந்தார். சுவாமிகள் திருப்பதிக்குச் சென்ற காலத்தில் முருகர் ஆலயத்துடன் 'வடவேங்கடத்தில்' திருமால் ஆலயமும் இருந்தது. இது [49] திருவாஞ்சியத்துத் திருப்புகழில் [816]
-------------
* திருப்புகழ் முதற் பாகத்தில் அநுபந்தம் பார்க்க.
-
"பாண்டவர்க்கு வரதன், மை உருவோன், பிரசித்த
நெடியவன் -ரிஷிகேசன், உலகீன்ற பச்சை உமைய[ண்]
ணன், வடவேங்கடத்தில் உறைபவன், உயர்சார்ங்க, கட்க,
கரதலன்"
என வருவதால் தெரிகின்றது.
ஒரு காலத்தில் முருகபிரான் பார்வதி தேவியுடன் முனிந்து பிலத்தின் வழியே வந்து ஒரு குகை வழியாகத் திருவேங்கடத்துக்கு வந்த சரிதத்தைத் திருவேங்கடத்துப் பதிகத்தில், "குகை வழி வந்த மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே" --என்னும் அடியிற் குறித்துள்ளார். எந்தையார் பதிப்பில், 245-ஆம் பாட்டின் கீழே குறித்துளுள "அண்ட மன்னுயிர்" என்னும் கந்த புராணச் செய்யுளையும் பார்க்கவும். மேலும் வேங்கட மாமலையில் உறையும் பெருமாளின் [நமது முருகரின்] அடியார்க்குதவும் பெருங்கருணையை--
-
"வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்ட வெறாதுதவு பெருமாளே" [246, 247]
என்னும் அருமை அடியால் ஒரு பாடலுக்கு இரு பாடல் முடியாகமுடித்து உலகுக்கு எடுத்துக் காட்டி யுள்ளார். அந்த வாக்கின் உண்மை 'வேங்கடேசப் பெருமாள்' என்னும் திருநாமமுடைய மூர்த்தியின் மூலம் இன்னும் ப்ரத்யக்ஷமாகக் காண்கின்றோம். உள்ளதை உள்ளபடியே எடுத்துக் காட்டும் திறத்தை-இருமல் நோயை "எலும்பு குலுக்கி விடும் இருமல்" என்னும் சொற்றொடரிற்-காணலாகும் [245].
திருவேங்கடத்தினின்றும் [192] திருக்காளத்திக்கு [587-589] வந்து தென் கயிலாயம் என அதைப் போற்றி, நரசிம்மத்தை அடக்கிய வீரபத்திரர் சூரியனைக் கடிந்த வினை ஒழியத் தவஞ் செய்த தானம் இது எனப் பொருள் படுகின்ற சரித்திரம் ஒன்றையுங் குறித்தனர் (589). இச்சரித்திரத்தின் விவரம் இன்னதென விளங்கவில்லை. பின்பு, காளத்தியை விட்டு வடக்கே வெகு தூரஞ் சென்று [193] திருப் பருப்பதம் எனப்படும் ஸ்ரீசைலம் [244] என்னும் மஹா க்ஷேத்திரத்தை அடைந்து அது காடடர்ந்த மலைப் ப்ரதேசம் என்பதைப் "பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள் பிணையமர் திருமலை" எனப் பாடி விளக்கினார்.
-----------------------------------------------------------
22. வட இந்தியா: (6 தலங்கள்: 194-199)
ஸ்ரீசைலத்தினின்றும் புறப்பட்டுத் "தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையதாகும். திருத்தணியில்
உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனதுள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே" -[வேல வகுப்பு] என்பதே ஜபமாகக் கொண்டு சடதிசை நோக்கிக் காடு, மலை, ஆறுகள் தாண்டிச் சென்று [194] காசியை [655-657] அடைந்து, "காசியிற் பிரதாபமாயுறை பெரு பெருமாளே" என்றும், 'கங்கைப் பதிநதி காசி', 'காசி கங்கை' என்றும் போற்றி, [195] ஹரித்துவார் என்கின்ற மாயாபுரி [658]யைத் தரிசித்துப், பஞ்சாப் மாகாணத்திற் சரஸ்வதி நதிக் கரையில் உள்ள [196] வயிரவி வனத்து [659] வடிவேலனை வாழ்த்திச், செல்லுதற்கரிய [197] திருக்கயிலையையும் [238-243] தூரத்தே நின்று தொழுது, சீவன் சிவச் சொரூபம் என்பதை விளக்கியும் [239], ஸ்ரீ சம்பந்தப்பெருமானைப்போல அமிர்த கவிபாட அடிமைக்கும் அருள வேண்டும்[1]' புகலியில் வித்தகர், போல அமிர்த கவித் தொடை பாட அடிமை தனக் கருள்வாயே' (242) எனப் பிரார்த்தித்தும் பாடல்கள் பாடினர்.
--------------
[1]. புகலியில் வித்தகர் = சம்பந்தர்.
ஸ்ரீ சம்பந்தப் பெருமானது திருவருள் கூடின பேற்றினால்தான், அருணகிரியார் அமிர்த கவித் தொடை பாடினர்; சந்தப்பாவில் தலைமை வாய்ந்த திறத்தினராயினர். ஸ்ரீ சம்பந்தர் தாம் அருளிய பாடல் ஒன்றில் தம்மைச் "சந்த மெல்லாம் அடிச்சாத்த வல்ல மறைஞான சம்பந்தன்" (III-8-11) என்றார். அவரைப் போலவே சொல்லாட்சி, பொருளாட்சி, சொற்சந்தம் நிரம்பும்படிப் பாட வேன்டும் என்பது அருணகிரியாரின் பேராசை. ஸ்ரீசம்பந்தப் பெருமானும் சுவாமிகளுக்குகு் கனவிலோ நனவிலோ பேரருள் புரிந்திருக்க வேண்டும்; ஆதலால் தான் திருப்புகழிலும் கந்தரந்தாதியிலும் ஸ்ரீ சம்பந்தப் பெருமானது லிலைகளையும், பெருமைகளையும், திருவருட்டிறத்தையும் மனதார வாயாரச் சுவாமிகள் பல பாடல்களில் எடுத்தெடுத் துரைத்துளு்ளார். இது மட்டுமல்ல; கந்தரந்தாதி 29-ஆம் செய்யுளில் சம்பந்தப் பெருமானை யன்றி வேறு தெய்வமே இல்லை என்றும் திடம்பட உரைத்தனர். இதனை மேலே கந்தரந்தாதி ஆராய்ச்சிப் பகுதியிற் காணலாகும்.
பின்னர்த் தெற்கே திரும்பி (197ஏ)[1] ஜெகந்நாதம், (198) விசுவை (விசாகப்பட்டினம் 995) ஆதிய தலங்களைத் தரிசித்துத் (189) திருத்தணிகைக்கு வந்து 'முருகா! நீ மகிழும்படி நான் இத்தலத்திலேயே தவநிலையிலிருந்து உனக்கு அடிமைப்பணி செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும் படி நீ கண் பார்த்தருள வேண்டும் --
-
"திருத்தணி யிருக்கும் பெருமாளே! உனது சித்தங் களிகூரத்
தவக்கடல் குளித்திங் குனக்கடிமை யுற்றுன்
தலத்தினி லிருக்கும் படி பாராய்" (262)
எனப் பிரார்த்தித்தனர். இந்தப் பிரார்த்தனையை 'அடியவரிச்சையில் எவை எவை யுற்றன அவை தருவித்தருள் பெருமாள்' எவ்வாறு முடிவு செய்தனர் என்பது பின்னர் விளங்கும். பின்பு தணிகையினின்றும் நீங்கித் தம்மை முருகவேள் ஆட்கொண்ட இடமாம் திருவண்ணாமலைக்கு வழி நடந்தனர். வழியில் ஆரணித் தாலுக்காவில் உள்ள புத்தூரைச் சேர்ந்தார். அண்ணாமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு நியமந்தவறாது பூஜை செய்து வந்தவரும் அமணர் குலத்தைக் கண்டித்தவரும், அரிய தவராஜ ராஜராக விளங்கினவரும், பெரும் புகழ்ப்பெற்ற வருமான, "சோமநாதன்" என்பவர்[2] புத்தூரில் தமக் குரிய ஒரு மடத்தில் உள்ள முருக வேளை வழிபட்டு
வந்தார்.
--------------------------
[1]. ஜெகந்நாதம் -வைப்புத்தலம் 1304.
[2]. புத்தூரில் உள்ள சிவாலயத் திருமதிலிற் காணும் சாசனம் ஒன்று (கி.பி. 1370) அம்மையப்பரான சோமநாத ஜீயர்க்கு இப்புத்தூர்க் கோயிலும் மடமும் உரிமையாக உதவப் பட்டனவாகத் தெரிவிக்கின்றது. (சாசனத்தமிழ்க் கவி சரிதம் --பக்கம் 125--126).
(199) இந்த சோமநாத மடத்திலிருந்த முருக வேளையும் நமது சுவாமிகள் பாடி, முருக நாயனாரின் பூஜைத்திறத்தை ஸ்ரீ சம்பந்தப் பெருமான் தமது பதிகத்திற் சிறப்பித்தது போலச், சோமநாதரது பத்தியையும் தவப் பண்பையும்--
-
"அரிவை ஒரு பாகமான அருணகிரி நாதா பூஜை
அடைவு தவ றாதுபேணும் அறிவாளன்
அமணர் குல காலனாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனி புகழ் சோம நாதன் மடமேவும் முருக! (828)
எனச் சிறப்பித்துப் பாடினார். ஓரேட்டுப் பிரதியில்-
"அமணர் குல காலன் மேகம் அனையகவி ராஜராஜன்"
என்றும் "சோமநாதன் மனமேவு முருக" என்றும் பாட பேதங்கள் காணப்பட்டன. இப்பதிகத்தின் ஈற்றடியாகிய
"மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு
முனிய அறியாத தேவர் பெருமாளே"--
என்பது முருகபிரானது தண்ணிய கருணையைக் காட்டுகின்றதும் மனப்பாடஞ் செய்யத் தக்கது மான அருமையான வாக்கியமாகும்.
புத்தூரினின்றும் சுவாமிகள் புறப்பட்டு, வடநாட்டு[1] யாத்திரையை முடித்துத், தமது சொந்த ஊராகிய திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.
--------------------
[1]. (199A) செம்பேடு, (199B) தென்றலை, (199C) சிவதைப்பதி, (199D) சிறுகூர் என்னும் (இடம் விளங்காத) தலங்களும் சுவாமிகள் தரிசித்தனவாம். 370, 375, 347, 605 எண்ணுள்ள பாடல்களையும் பாட பேதங்களையும் காண்க.
--------------
IX. திருவண்ணாமலையில் வாசம்
[தொகை க்ஷேத்திரப் பாடல்கள்; ஆறு திருப்பதி (449-450), குன்று தோறாடல் (233-237), க்ஷேத்திரக் கோவை (1304); பொதுப்பாடல்கள் (1,996-1303*1307)- ஆக 318 பாடல்கள் பாடினது.]
* திருப்புகழ் முதற் பாகம் அநுபந்தம் பார்க்க. தொகை க்ஷேத்திரங்களுள் ஏழு திருப்பதி-சப்தஸ்தான க்ஷேத்திரப்பதிகம் முன்னரே கூறப்பட்டது. [தலம் 70A, பக்கம் 50 பார்க்க]
திருவண்ணாமலை வந்ததும் தமக்கு உகந்த நண்பனாகிய பிரபுடதேவ ராஜனைக் கண்டார். பாணாது போன பொருளைக் கண்டது போல அரசன் இவரைக் கண்டு மகிழ்ந்து குலவிப் பேசிக் களித்தான். இமய மலை முதல் கதிர்காமம் வரையிலும் தலம் தலமாய்ச் சென்று ஆங்காங்குள்ள கோயில்களிலும், கோபுரங்களிலும்.மடங்களிலும், மார்க்கங்களிலும், தெருவிலும் உள்ள முருகர் திருவுருவைப் போற்றினது போதா தென் அருண கிரியார் திருவண்ணாமலை வந்து சேர்ந்த பிறகு உலகில் உள்ள முருகர் ஆலயம் ஒன்று கூட விடுபடக் கூடாதென்னும் கருத்துடன்--- தொகைத் தலங்களாக ஒரு சேரச் சில பதிகங்களை இருந்த இடத்தே பாடினர். அவைதாம்:--
(1) ஆறு திருப்பதி (449--450) ஆறுபடை வீடுகளையும் ஒன்று சேர்த்து 'அறுபதிநிலை மேவிய பெருமாளே' என்றும்'ஆறு திருப்பதியில் வளர் பெருமாளே ' என்றும் பாடினர். கந்தரந்தாதியைப் பற்றிக் கீழே எழுதியுள்ள ஆராய்ச்சியிற் கண்டபடி "படைவீடு" என்பது இந்த ஆறு திருப்பதிகளைக் குறிக்க வந்த பிற்கால ஆட்சி. திருப்புகழாதிய நூல்களில் ஆறு படைவீடு என்று கூறப்படவில்லை. ஆறு திருப்பதி என்றே அருணகிரியாரும் குமர குருபர சுவாமிகளும் கூறியுள்ளார்கள். ஆதலால், திருமுரு
காற்றுப் படையிற் சொல்லப்பட்ட ஆறு வீடுகள் என்பது மருவிப்பேச்சு வழக்கில் ஆற்றுப்படை வீடுகள் என ஆகிப் பின்பு படைவீடு, ஆறுபடைவீடு எனப்பேச்சு வழக்கிலும் நூல்களிலும் வழங்கலாயின--- என்பது எனது சொந்த அபிப்பிராயம். நிற்க.
450-ஆவது பாட்டில் "நாண மகற்றிய கருணை புரிவாயே" என வேண்டினது "நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணதுவாக" என்னும் திருவாசகத்தை நினை வூட்டுகின்றது. 'ஆன திருப்பதிகம் அருள்' என்பது ஈசற்கு ஆன தேவாரம் [முருகா! உனக்கு ஆன (இஷ்டமான) சந்தப் பதிகங்களைப் பாட (எனக்கு) அருளிய இளையோனே--- என்றும் பொருள் காணலாம்.]
(2) குன்று தோறாடல் [233-237] மலைக் கோயில்களை எல்லாம் ஒரு வழியாகக் 'குன்று தோறாடல் மேவு பெருமாளே' என்றும், '[பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே' என்றும், 'பல மலையுடைய பெருமாளே'[ என்றும், 'வடிவதாம் மலை யாவையும் மேவிய தம்பிரானே' என்றும் தொகுத்துப் பாடினார்--இப்பாடல்களுள் "தறையின் மாநுடர்" என்னும் மிக அழகிய அருமைப் பாடலில் (235) மனோலயம் வேண்டும் எனப் பிரார்த்தித் துள்ளார். இப் பாடலில் "பறவையான மெய்ஞ்ஞானிகள்" என்பது தம்மிடம் பிறர் அணுகாவண்ணம் தனித்து வெளியே திரியும் ஞானிகளைக் குறிக்கும் போலும். "சேரொணா வகை வெளியே திரியு மெய்ஞ்ஞான யோகிகள் " என வருவதும் இதுவே. (திருப்741). 236-ஆம் பாடல் '(வஞ்சகலோப)' என்பதில் கடையெழுவள்ளல்களில் "பாரி", "காரி" என்பவர்கள் கூறப்பட்டுள்ளார்கள். இவர்கள் வரலாற்றைச் சங்க நூல்களிற் காணலாம். 234-ஆம் பாடலில் (எழுதிகழ்) முருகவேள் ருத்ர ஜன்மராய் வந்த லீலை பாராட்டப்பட்டுளது.
(3) க்ஷேத்திரக் கோவைப் பதிகம் (1304): தேவாரத்தில் உள்ள க்ஷேத்திரக் கோவைப் பதிகங்கள் போல அருணகிரியாரும் "கும்பகோணமோ டாரூர் சிதம்பரம்" என்னும் பதிகம் ஒன்று பாடி, ஒரு ஆலயமும் விட்டுப்போகக் கூடா தென்னுங் கருத்துடன் அப்பதிகத்தின் ஈற்றடியாக --"உலகெங்கு மேவிய தேவாலயந் தொறு பெருமாளே" என மிக அருமையாக அமைத்து உலகில் உள்ள (சகல மத) தேவாலயங்களிலும் கடவு ளெனக்கருதி வழிபடப்படுகின்ற எந்த மூர்த்தியும் யான் வழிபடும் முருகவேளே--என்னும் பரமார்த்த உண்மை விளங்கும்படி முடித்தார்.
4) பொதுப் பதிகங்கள் (1, 996-1303, 1307): பின்னும் தேவாரத்தில் உள்ள பொதுப் பதிகங்கள் போல, எந்தத் தலத்தையும் குறிக்காது எந்தத் தலத்துக் கோயிலிலும்
உள்ள முருக மூர்த்தியைப் போற்றிப் பணிய உதவும் பொதுத் திருப்புகழ்ப் பாடல்கள் பல பாடினர்.
-----------------------
[1]. சிறு பாணாற்றுப் படை, புறநானூறு முதலிய நூல்களிற் காண்க.
இப்பொழுது கிடைத்து எங்கள் பதிப்பில் வெளிவந்துள்ள 1307 பாடல்களில்
-
தலப்பாடல்கள்:
ஆறு திருப்பதிகளுக்கு உரியன ... 451
பிற தலங்களுக்கு உரியன... 545
க்ஷேத்திரக் கோவை ... 1
பொதுப்பாடல்கள் .... 310
ஆக. ... 1307
இப் பொதுப்பாடல்களில் உள்ள முக்கிய விஷயங்கள் பின் வருவனவாம்:
1. முருகரும் வள்ளியம்மையும்
1. வள்ளியம்மை தவிர வேறு தஞ்சம் தமக்கு இல்லை என்று முருகவேள் தமது வேளையைப் (பொழுதை) அம்மையாருக் கென்றே போக்கினர் என்பது. (திருப் 1000)
2. உன் குழை ஓலையைத் தா. அந்த ஓலையில்-உன் கண்கள், தனங்கள் முதலியவற்றால் நான் மனந் தளர்ந்து பரிதாப நிலையில் உள்ளேன் என்று சாசனம் (பத்திரம்) எழுதித் தருகின்றேன் என்று வள்ளிப் பிராட்டியிடம் முருகவேள் கூறினது: (1002)
3. வள்ளியம்மையின் உறைவிடமாம் காட்டுக்கும் ஓர் அடிமைக் கும்பிடு போடும்படி வள்ளிபாற் காதல் மயக்கம் கொண்டார் முருகவேள் என்பது. (1151)
4. வள்ளியம்மைக்கு வழியடிமை யான் என்று முருக பிரான் மேருமலையிற் சாசனம் (பத்திரம்) எழுதிவைத்தனர் என்பது. (1199)
5. தினைப்புனத்தில் இசைபாடி வள்ளியை வசியப்படுத்தியது. (1024)
---
2. தமது சரிதத்தை விளக்குவன:
1. "குயவன் சக்கரம் ஒரு சுற்று சுற்றும் நேரத்துக்குள் என்மனம் எழுபது சுற்று சுற்றுகின்றதே! நான் சிவபதம் அடையும் நாளும் உண்டோ?" என அவர் வருந்துவது. (1009)
2. "மகளிர் கலவியில் இனி விழுகினும் உன் திருவடிதான் என் உயிர்க்குத் துணை என்று நினைப்பதையும் மொழிவதையும் மறவேன்"- என்றது. (1010)
3. அடியார்களுடைய பாதத்தைத் தொழ விரும்பினது (1038), (1273).
4. பிரபுடதேவ மாராஜனது உள்ளம் நெகிழ முருகவேளை மயில் மீது வரும்படி அழைத்தது. (1056);
5. "எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்" இதய பாவனா தீதத்தை அடைய விரும்பினது. (1048)
6. தம்மை ஒரு "நீர் ஏறாத மேடு" என்றது. (1066).
7. பெண்முகம் பார்த்திருந்த தம்மைச் சண்முகம் நினைக்க வைத்த முருகனது கருணைத் திறத்தைப் பாராட்டுவது. (1189)
8. இயற்றமிழிற் புது வழியாக முருகனைப் பாட விரும்பியது-"இயல் புதுமையாகப் பாடப் புகல்வாயே" (1025)
9. கெடுதலிலாத ஞானம், நல்ல நூல்களிற் கருத்து, பிரபஞ்ச மாயையிற் படாதவாறு ஆசைக் கடலை வென்ற நிலை, வாக்குக்கு எட்டாத பேரின்பநிலை, எந்தத் திக்கில்
உள்ளவர்களும் இது அற்புதம் என வியக்கத் தக்க தேனூறு திருப்புகழ்ப் பாவை ஓதும் திறம், யான் எனது அற்ற பெரு நிலை, மிகுந்த பிரசித்தி, பெருத்த செல்வாக்கு,
மும்மலத்துக்கும் முக்குணத்துக்கும் ஈடாய பிறவி அறுதல் ஆதிய இத்துணைப் பெரிய பாக்கியங்களை எல்லாம் எனக்கு அன்புடன் அநுக்ரகஞ் செய்த கருணையை-
முருகா! நான் மறவேன்" - எனக்கூறி மகிழ்ந்து நன்றி பாராட்டுதல்- (1132)
10. இறைவன் இறவாப்பதம்- அமுத பதத்தை தந் தருளினதைப் பாராட்டியது (1240)
----
3. பிற விஷயங்களும் சில குறிப்புகளும்.
1. 1007: "தசையும் உதிரமும்" இப்பாடலில் நாலாவது அடி-
"மறைகளின் இறுதி யறுதியிட அரிய பெறுதியை
இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே"
என்பது ஸ்ரீசம்பந்த சுவாமிகள் திருவெழு கூற்றிருக்கையில்
"இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்**
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்"-
என்ற அடிகளின் கருத்தொடு இயைந்து நிற்பது அறியத் தக்கது.
2. 1015: "எழுபது வர்க்கக் குரங்கு" -திருப். 515, 880 பார்க்க (பக்கம் 46).
3. 1019: i) "நவநாத சித்தர்கள்" -சத்தியநாதர், சதோக நாதர், ஆதி நாதர், அனாதி நாதர், வகுளி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கடேந்திர நாதர், கோரக்க நாதர்-எனப் ப்ரதான சித்தர் ஒன்பதின்மர். நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார். (தாயு. மௌன. 7)
ii) முருகப் பிரமத்துக்கு "அறிவும் அறியாமையும் கடந்த அறிவே" திருமேனியாம்.
4. 1025" முருகவேள் சம்பந்தராகத் தோன்றி மரபு நிலையாகத் தேவாரம் என்னும் "பத்தி மிக இனிய ஞானப் பாடல்" களைப் பாடினர் என்பது.
5. 1036: முருகவேளின் திருவடியே சொந்த ஊர், பெற்ற தாய், சுற்றம் -என்றது "ஊர், பெற்றதாய், சுற்றமா யுற்றதாள்".
6. 1039: அடி 3: சுவாசக் கணக்கு: அறுநூறு (600)+பதினுறழ் நூறு (10X100=1000)+ பதினிருபது நூறு (10X20X100=20000) = 600+1000+20,000= 21,000. நாழிகை ஒன்றுக்கு 360; 60 நாழிகைக்கு - 60* 360= 21600, மூலாதாரம்-சுவாசம் 600, சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம்-ஒவ்வொன்றும் 6000 ஆக- 3X6000 = 16000; விசுத்தி, ஆக்ஞை, நாதாந்தம் ஒவ்வொன்றும் 1000 ஆக -3X1000=3000; ஆக மொத்தம்-
600+18,000+3000=21,600.
7. 1041: தேனீள் கானாறாய் வீழ் சாரற் கிரி-குன்றக்குடி- (தேனாறு சூழ் குன்றக் குடி-திருப். 111. பக்கம் 106 பார்க்க.)
8. 1050: முருக பிரான் 'வேலை மறவாத கரதலர்'
9. 1052: ஞான வீட்டின் இலக்கண விளக்கம்.
10. 1055: ருத்ர ஜன்ம லீலையைப் பாராட்டியது; சங்கப் பலகையை "அரிய சாரதா பீடம்" என்றார்.
11. 1056: 'யாவையும் ஆடிடும் எம்மிறை ஆடவே' (திருமந்திரம் 273:) என்றதற் கேற்ப 'நீயாடி வரவேணும்' என்றார். நீயாடினால் தான் சேடன், மேரு முதலியன ஆடும்
என்றபடி; (பக்கம் 19 பார்க்க),
12. 1058: முதல் நாலடி; காமனை வென்ற பெரியோரின் இலக்கண விளக்கம்
13. 1060: உயிர் என்பது 'வடிவிலாப் புலம்'.
14. 1063: முதல் நாலடி; திருவடிச் சிறப்பு. திருவடியே வீடு-பரம் பொருள்: [திருமுரு காற்றுப்படை 62-63, நச்சினார்க்கினியர் உரையைக் காண்க]
15. 1064, 1069: இறத்தலை 'மறலியூர்ப்புகு மரண யாத்திரை', 'ஒருவர் வருக அரிய பயணம்'- என்றார்.
16. 1075: 'இருந்த வீடும்' என்னும் அருமைத் திருப்பாட்டு. தனித்து வழி நடந்த ஒருவரை ஒரு பூதம் தொடர்ந்தது. வழியில் ஓரிடத்தில் வரும்பொழுது அப்பூதம் தொடராமல் நின்றது. பின்னர், அந்த இடத்தை அவர் தாண்டிச் சென்றதும் பூதம் மறுபடி அவரைத் தொடர்ந்தது. அது தொடராமல் நின்ற இடத்தில் ஏதோ விசேஷம் இருக்கின்றதென அவர் அறிந்து சுற்றி வந்து குறித்த அந்த இடத்தில் வந்தபோது அப்பூதங் காணப்பட வில்லை. ஆதலால் அவர் அந்த இடத்திலிருந்த மணலெல்லாவற்றையும் அப்படியே வாரி மடியிற் கட்டிக்கொண்டு வழி நடந்தார். பூதம் அவரைத் தொடராது நின்று விட்டது. வீட்டுக்கு வந்து மணலைப் பரிசோதித்த பொழுது அம்மணற் குப்பையில் ஓர் ஏடு இருந்ததாகவும், அந்த ஏட்டில் இந்தத் திருப்புகழ்ப் பாடல் இருந்ததாகவும் இத்திருப் புகழின் சிறப்பை ஆன்றோர் கூறுவதாக எந்தையார் கூறக் கேட்டுள்ளேன்.
17. 1085: "தமிழ் பாடற் செழு மறை"-இது திருமுருகாற்றுப்படை-எனக் கொள்ளலாம். "வேதமொழி --சூட்டு கீரரியல்" (1278) என்றதனால்: 'எங்கள் கீரன் மொழியும் பசுந்தமிழெனுஞ் சொல் வேத நிலை தெரியலாம்.' (திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்- அம்புலிப் பருவம்)—என வருவதும் உணரற் பாலது. திரு முருகாற்றுப்படை வேத இசையுடன் சொல்லப்படுவதோர் தமிழ் மறை. 'கீத இசை
கூட்டி வேதமொழி சூட்டு கீரரியல்' (1278). திருப்புகழ் எங்கள் பதிப்பில் மூன்றாம் பாகத்தில் -- திருவகுப்பு பக்கம் 6-அடிக் குறிப்பைப் பார்க்க.]
18. 1097: 'கதறிமிகு குமுதமிடு பரசமயம்' -'கொந்துகா வென மொழிதரவரு சமய விரோதத் தந்த்ரவாதிகள் (திருப்.289); 'சங்கைக் கத்தோடு சிலுகிடு...சமயிகள் (திருப். 945); 'சலசல மிழற்றுஞ் சமய விகற்பமும்' (பெருங்கதை. க.32.4)- எனவருவன காண்க.
19. 1098: உலகெலாம் சுற்றி வரும் (முருகரின்) மயிலின் வேகத்தைக் கண்டு (விநாயக) யானை அஞ்சிப் பிளிறினது.
20. 1100: மாநுட உடலை (மா) மரத்துக்கு ஒப்பிட்டு விளக்கியது.
21. 1107: "ஓம் நமோ கந்த"-என்கின்ற மந்திரம் கூறப்பட்டது.
22. 1120: "அக்காலத்துக்கு உறவார் தான்"-அக் காலம்=முடிவு காலம்.
'உற்றாராருளரோ உயிர் கொண்டு போம்பொழுது'- அப்பர் IV-9-10
'அக்காலத்திற் புரக்கும் வேந்தன்'-சம்பந்தர் 97--8.
23. 1123: முருகன் திருமுகங்கள் (நெற்றி) ஆறினும் திருநீறு விளங்குதல் -'ஷட் சோதிப் பாலத்தா' ஷட்=ஆறு, பூதி=விபூதி, பாலம்=நெற்றி.
24. 1130: ஆடம்பர பூஜை, ஜெபம் முதலியவற்றால் மருளுதல் கூடாது.
25. 1149: நரகில் வீழ்வோர் இவரிவரெனல்.
26. 1171: பொய்யாமொழிப் புலவரிடம் முட்டைப் பெயர் சொல்லிக் கவிபெற்றது.
27. 1180, 1190: வேசையரைக் 'கோடா கோடிய மனதானார்,' 'முப்பது கோடி மனத்தியர்' என்றது. (பக்கம் 25 பார்க்க)
28. 1187: "வேந்தா! கடம்பு புனைந்தருள் சேந்தா! சரண் சரண்" என உரு ஏற்பது வீண் போகாத ஓர் அருமை மந்திரம் என்றது.
29. 1214: குருமலையை [சுவாமி மலையை] வியாழ கோத்திரம் என்றது. வியாறன்=குரு; கோத்திரம்=மலை.
30. 1239: i) 'சாங்கரி பாடியிட ...தாண்டவம் ஆடிய'-சாங்கரி-சங்கரி.
'மலைவளர் காதலி பாட ஆடி"'-சம்பந்தர் 359(3)
(ii) 'வாங்குகை யானை யென ஈன்குலை வாழை'—இது வாழைக் குலையை யானையின் துதி்க்கைக்கு உவமித்தது. 'முரண் வேழக் கைபோல் வாழை காய் குலையீனும்' (சம்பந்தர்-102-2); 'கதலிப் பெருங் குலைகள் களிற்றுக் கைம்முகங் காட்ட' -பெரிய புராணம்-திருநாவு-6; வாங்குதல் -வளைதல்.
31. 1240: விநாயகரொடு போட்டி போட்டதில் விநாயகர் பரிசு பெற்ற கனி 'மாதுளங்கனி' என்றது.
32. 1246: துவல்-உதிரிப் பூ, அருச்சிக்கும் பூ; 'துவலைச் சிமிழ்த்து நிற்பவள்'-(திருப்.280)- தினைப் புனக்காவலில் வள்ளியம்மை பூ கட்டிக் கொண்டிருந்தது). சிமிழ்த்தல்- கட்டுதல். 'அடியார் இடு துவல்' சம்பந்தர் 377-2.
---------
4. பொதுத் திருப்புகழ்ப் பதிக விளக்க வகுப்பு:
1. அழகிய கலப்புச் சந்தப் பாடல்கள்...1081, 1082.
2. இங்கிலீஷ் பாண்ட் வாத்திய இசைக்குப் பொருந்திய பாடல்கள்...1073, 1074.
3. ஐராவத வர்ணனைப் பாடல்...1225,
4. கந்த புராணச் சுருக்கப் பாடல்..1168.
5. கஜேந்திர மோக்ஷம் கூறுவது...1062, 1187.
6. "சாமி" எனப் பன்முறை வரும் பாடல்.. 1178.
7. சிவஸ்துதி, சிவன் பெருமை கூறும் பாடல்..1166,1177,1220.
8. தேவியின் அழகிய வர்ணனைப் பாடல்..1133
9. நரசிம்மாவதார வர்ணனைப்பாடல்..1137, 1153.
10. பதியிலக்கணம் கூறும் பாடல்...1246.
11. பல தலங்களில் பெயர்வரும் பாடல்...1181.
12. பாரதங் கூறும் பாடல்..1195.
13. பூதவேதாள வகுப்பு, போர்க்களத்தலகை வகுப்புப் போன்றன-1013,1197,1250.
14. பெரிய அரிய கலப்புச் சந்தப்பாடல்...1153.
15. மயில் வர்ணனைப் பாடல்...1095.
16. மானச பூஜைப்பாடல்...1211.
17. முருகவேளின் திரு அழகைக் கூறுவது..1277
18. மூப்பு வர்ணனை-கடைநாள் வர்ணனை..1193
19. ராமாயணம் கூறும் பாடல்..1156.
-----
5. பொதுப்பாடல்களில் மனப்பாடத்துக்கு உரிய அடிகள்.
1. அஞ்சா நெஞ் சாக்கந் தரவல பெருமாளே..1183
2.அரசாகி வாழினும் வறுமை கூரினும் நினது வார்கழ லொழிய மொழியேனே...1254
3. ஆபத்தி லஞ்சமென்ற பெருமாளே-1201
4. உளநெகிழ்ந்து அசத்தான உரைமறந்து சத்தான உனையுணர்ந்து கத்தூரி மணநாறும், உபய பங்கயத்தாளில் அபயமென் றுனைப்பாடி உருகி நெஞ்சு சற்றோதி லிழிவாமோ...1230
5. எனதியானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதயபாவனாதீதம் அருள்வாயே...1048.
6. ஏழைக்கிரங்கும் பெருமாளே...1262.
7. ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்றும் அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே..1237.
8. கலக்குண்டாகு புவிதனில் எனக்குண்டாகு பணி விடை,கணக்குண்டாதல் திருவுளம் அறியாதோ...1178.
9. காலன் ஆதி விதியோடு பிறழாத வகைதேடி யென தாவிதனை யேகுறுகி வருபோது, ஆதிமுரு காதி முருகாதிமுரு காவெனவும், ஆதிமுரு காநினைவு தருவாயே...
1242
10. பரிவால் உளத்தில் முருகா எனச்சொல்
பகர்வாழ் வெனக்கும் அருள்வாயே...1071.
11. பொற்கழலை நாடோறும் உட்பரிவி னாலோது
புத்திநெடி தாம் வாழ்வு புரிவாயே...1113.
12. யார்வேண்டி னாலுங் கேட்ட பொருளீயும்
த்யாகாங்க சீலம் போற்றி ...1257.
-----------------------------------------------------------
6. பொதுப் பாடல்களிற் கண்ட சில முக்கியமான பாட பேதங்கள்.
(1) 1040-அடி 5. "கீதம் புகழிசை நாதங் கனிவுறு
கீரன் தமிழிசை மொழியாலே
கேடும் பொருவலி மாளும் படியுடல்
கீறுங் கர அயில் உடையோனே".
அடி7. 'வேல்கொண் டமர்பரி பெருமாளே'
(2) 1055. அடி6. 'அகில நூலும் ஆராயும் இளையோனே'
(3) 1133. அடி 5-7, 'படி முறுதுங் காத்தமால் குலத்தி
...அகலிட முண்டார்க்கு நேர் கடைச்சி அருள்வோனே'.
(4) 1144- (7-அடி) "குலை குலைந்திடவே வேலே விய மயில் வீரா"- என்றும் பாடம்.
(5) 1145- (1-அடி) "ஓயாத மாமய லுழற்றினிற்படு' எனத் திருத்துக.
(6) 1179- ஈற்றடி 'வேளையிதென்றடி சென்றிறைஞ்சிய பெருமாளே' எனவும் பாடம்.
(7) 1213-7-அடி 'தாயுமானவள் நிர்க்குணி ஈறிலாத இலக்குமி தருபாலா'--எனவும் பாடம்.
(8) 1214-5-அடி 'வியாழ கோத்ர அரிதிரு மருகோனே'- என்றும் பாடம்.
(9) 1296- "தட்டுப்படாத தனி வீரா: தக்கத் த்ரிசூலி குலபாலா-மட்டுப்படாத பெரியோனே"-எனவும் பாடம்.
(10) 1301-' சுனையிற் புனத்தில் விளையாடு'-என்றும் பாடம்.
10. முடிபு (கிளி ரூபமாக அமர்ந்தது).
மேற்கூறிய பொதுப் பாடல்களிற் பல, சுவாமிகள் தல யாத்திரைகளுக்கு முன்பும், தலயாத்திரைப் பொழுதிலும் பாடியிருக்கலாம். இங்ஙனம் இறைவனது திருவடித் தாமரையில் தமது மனத்தைப் பதித்துக்,
-
சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொலைத்த வைவேல்
மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மௌனத்தை யுற்று
நின்னை யுன்ர்ந்துணர்ந் தெல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
-(கந். அலங். 19.)
என மகிழ்ந்து ஆனந்த நிலையில் இருந்தார். இப்படியிருக்கும் காலத்தே முன்னர் வாதில் தோற்று நாண்மடைந்த[1] சம்பந் தாண்டானது சூழ்ச்சியால் அருணகிரிநாதர் தமது சித்தி வல்லபத்தால் கற்பக நாட்டுப் பாரிஜாதப் பூவைக்கொண்டு வரும் பொருட்டுத் தமது உடம்பை அருணை கோயிற் கோபுரத்திற் சேமித்து வைத்துவிட்டு அங்கு இறந்து கிடந்த ஒரு கிலியின் உடலிற் பிரவேசித்து விண்ணுலகுக்குக் கிளி ரூபமாகச் சென்றனர் எனவும், அச்சமயத்திற் சம்பந்தாண்டான் "பாவலர் இறந்தனர்; அவர் உடல் திருவருணைக் கோயிற் கோபுரத்தில் உள்ளது" என்று கூற அரசனும் உண்மையை ஆய்ந்து உணராது அவ்வுடலைத் தகிப்பித்தான் என்றும், பின்னர் அருணகிரிக் கிளி பாரிஜாதப் பூவுடன் [2] திரும்பி வரக்கண்ட அரசன் ஆராயாது தான் செய்த செயலை நினைந்து நினைந்து மிக வருந்தினன் என்றும், தமது மாநுட உடல் எரிபட்டுப் போனதை அறிந்த அருணகிரியார் 'எம் உடற்சிறையை இறைவன் அழிப்பித்தது நியாயமே' [3] என மகிழ்ந்து திருத்தணிகைக்குப் போந்து தணிகைநாயகர் திருக்கரத்தே தங்கிவிட்டனர் என்றும் பெரியோர் கூறுவர்.
----------------------------------------------------------------------------------------------
[1]. பக்கம் 20 பார்க்க
[2]. அக்கிளி தான் பல்லவையுள் - மற்றொருவன் வாதுவென்று வான் பாரிஜாதப் பூக் குற்றமற மண்மேற் கொணர்ந்தது காண்." - தணிகையுலா.
[3]. 'உடல் மறைந்தது நியாயம்' என அருணகிரியார் கண்ட
உண்மையைத் திருமூல நாயனார் தமது உடல் மறைந்த
காலத்துக் கண்டனர் என்பது 'திருவருளால் அவ்வுட
லைக் கரப்பிக்க எண்ணிறந்த உணர்வுடையார் ஈசரருள்
என உணர்ந்தார்' என வரும் பெரிய புராணத்தால் தெரிகின்றது.
"ஏழையின் இரட்டைவினை யாயதொ ருடற்சிறை யிராமல்
விடுவித்தருள் நியாயக் காரனும் ...மேதகு குறத்திதிரு வேளைக்காரனே"
எனவரும் வேளைக்காரன் வகுப்பு ஈண்டு உணரத்தக்கது. சுவாமிகள் கிளி ரூபம் அடைந்த பின் அருளிய நூல் கந்தரநுபூதி என்று பெரியோர்[1] கூறுவர்; ஆராய்ச்சி வழியால் நோக்கின் திருவகுப்பு அங்ஙனம் பாடப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது. வேளைக்காரன் வகுப்பில் "உடற்சிறை விடுவித்தருள் நியாயக்காரன்" என வருவதும், வேடிச்சிகாவலன் வகுப்பில் தம்மைப் படர்க்கையிடத்தில்
-
"உரைபெற வகுத்தருணை நகலரினொரு பக்தனிடும்
ஒளிவளர் திருப்புகழ் மதாணி க்ருபாகரன்."
---------------
[1]. 'கையிலே யார் பிடிப்பார் - கந்த ரநுபூதி சொன்ன கிளி நீ பிடிக்க எய்துமோ:- இலஞ்சி முருகன் உலா. (அருணகிரியார் வாக்கு அல்ல ஏனில்; பக்கம் 101 பார்க்க)
-----------------------------------------------------------
நிற்க, இங்ஙனம் சுவாமிகளின் உடல் மறைவு பட்டதில் ஒரு தெய்வ ரகசியம் உளது. "தோற்ற முண்டேல் மரணமுண்டு" என்று ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறியுள்ளார். அவர் சொற்படி அருணகிரியாரின் மாநுட உடல் மறையவேண்டி யிருக்கிறது. உண்மை அடியார் கேட்டதைக் கொடுப்பதற்கு இறைவன் எப்பொழுதும் தயாராக உள்ளார். 'வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்' என்பது அப்பர் திருவாக்கு. 'வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரியபொருளை வேண்டுமளவிலுதவும் பெருமாளே' (416) என்றும், 'வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு பெருமாளே' (246,247) என்றும், 'அடியவ ரிச்சையில் எவை எவை யுற்றன அவை தருவித்தருள் பெருமாளே' (727) என்றும் அருணகிரியாரே கூறியுள்ளார். ஸ்ரீ மணிவாசகப் பெருமான் "அம்பலத்தாடு நின்கழற் போது நாயினேன் கூடவேண்டும் நான்" என வேண்டினார்.
அங்ஙனமே அவர் திருவம்பலத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமானது திருவடி நீழலிற் கலந்தார். நமது ஸ்ரீ அருணகிரியாரும் "முருகா! நான்--
-
'துகளில் சாயுச்சியக் கதியை யீறற்ற சொற்
சுகசொரூ பத்தையுற் றடைவேனோ" (425), என்றும்
'பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு
மவுன பஞ்சரம் பயில் தருஞ்சுக
பதம டைந்திருந் தருள் பொருந்தும் தொருநாளே (1151)
-------------
2. நூலாராய்ச்சிப் பகுதி.
திருப்புகழின் மொத்தப் பாடல் தொகை பதினாறாயிரம் என்பர்,
-
(i) "எம் அருணகிரி நாதர் ஓது பதினாறாயிரம் திருப்புகழ்
அமுதுமே" -விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ்.
(ii) "அருணகிரி நாத னறைந்தபதி னாறா
யிர கவிதை யென்றுலகில் யாரும் -உரை புகலும்
தெய்வத் திருப்புகழ்" - தணிகையுலா.
(iii) "முத்தித் திருவென்னும் முன்பதினா றாயிரமாம்
பத்தித் திருப்புகழைப் பாடுங்காண்" - தணிகையுலா.
(iv) "அருணகிரி நாதர்பதி னாறாயிரமென்
றுரைசெய் திருப்புகழை யோதீர்" - தனிப்பாடல்.
"புகலியில் வித்தகர்" (சம்பந்தர்) போல - அமிர்த கவித்தொடைபாட அருள்வாயே" (242) எனச் சுவாமிகள் கேட்டவாறு ஸ்ரீசம்பந்தர் பதினாறாயிரம் பாடல் பாடியவாறே அருணகிரியாரும் பதினாறாயிரம் பாடல் பாடினர். சம்பந்தர் தேவாரமும் அருணகிரியார் திருப்புகழும் இரண்டும் அமிர்த கவிகளே. "திருப்புகழ் அமுதுமே" என்றார் மார்க்க சகாயதேவர்.
சுவாமிகளாற் கூறப்பட்ட அடியார்கள்-- பெரியார்கள்-- திருப்புகழ் மூன்றாம் பாகத்தில் - திருப்புகழ் ஆராய்ச்சியில்-- தலைப்புக்கள் 3, 45 பார்க்க, அருணகிரியார்க்குப் பின் வந்து அவரைப் பற்றியோ அவர் நூலைப்பற்றியோ கூறியுள்ள பெரியார்கள்:-
(1) உமாபதி சிவா சாரியார் அருளிச் செய்த சிவப்ரகாசத்துக்கு உரை யெழுதிய 'மதுரைச் சிவப்பிரகாசர்' -- 1488A. D-பக்கம் 61 பார்க்க: (1-A)- மயிலம் முருகன் பிள்ளைத் தமிழ் பாடிய திருவாரூர் வைத்தியநாத தேசிகர் (இலக்கண விளக்க ஆசிரியர்) (2) சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடிய அந்தகக் கவிவீர ராகவ முதலியார்: (3) திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் பாடிய வரகவி - மார்க்க சகாய தேவர்: (4) திருப்போரூர்ச் சந்நிதி முறை பாடிய சிதம்பர சுவாமிகள்; (5), (6) தாயுமானவரும் அவர் மாணவர் அருளையரும்; (7) திரு இலஞ்சி முருகன் உலாப் பாடிய மேலகரம் பண்டாரக் கவிராயர்; (8) திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் பாடிய செங்கோடைக் கவிராஜ பண்டாரத்தையா; (9)' சென்னிமலை யாண்டவன் காதல்' பாடிய ஆசிரியர்; (10) திருத்தணிகைத் திருவிருத்தம் பாடிய தொட்டிக் கலை ஸ்ரீ சுப்பிரமணிய முநிவர்; (11) க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ் பாடிய சிதம்பர முநிவர்; (12) தணிகைச் சந்நிதி முறை பாடிய கந்தப்ப தேசிகர்.
மேற் கூறிய பெரியார்களும் சமீப காலத்திலிருந்த ஸ்ரீராமலிங்க சுவாமிகள், திருப்புகழ் முருகதாச சுவாமிகள், மாம்பழக் கவிச் சிங்கம், பாம்பன் சுவாமிகள் முதலியோரும் திருப்புகழ்ப் பெருமையையும் அருணகிரியாரின் பெருமையையும் தமது பாக்களில் மிகச் சிறப்பித்து உரைத்துள்ளார்கள். திருப்புகழ் மூன்றாம் பாகத்திற் சுவாமிகள் சரித்திர ஆராய்ச்சி அநுபந்தத்தைப் (பக்கம் 20 - 27) பார்க்க:
11. (1) திருப்புகழ்
சுவாமிகள் அருளிய திருப்புகழ் நூலினின்றும் வெளி வந்த விஷயங்கள் அவரது வரலாற்றுப் பகுதியிலேயே ஆங்காங்கு ஆய்ந்தெழுதப் பட்டது. சுவாமிகள் அருளிய பிற நூல்களையும் ஆய்ந்தால் அவர் சரித்திரமும் பிற அரிய விஷயங்களும் தெளிவுற விளங்குமாதலின் அந்நூல்களையும் ஈண்டு ஆராய்வாம்.
(2) கந்த ரந்தாதி
-
'இலகு கந்த - ரந்தாதி மேலாசை யாவதுயிர்த் தோழி
யெனும் நந்தாதி மேலான நட்பு' - தணிகையுலா
கந்த ரந்தாதி பாட வேண்டிய சந்தர்ப்பத்தை முன்னரே விளக்கியாயிற்று (பக்கம் 99). இந்நூல் சிறந்த ஒரு தமிழ்ப் புலவருடன் வாதிட்டும் பாட வேண்டி வந்த காரணத்தாலும், நூல் யமக அந்தாதி ஆதலாலும், நூலின் பொருள் எளிதில் விளங்காது. அதனால், 'கந்தரந்தாதி யைப் பாராதே கழுக்குன்றத்து மாலையை நினையாதே' என்னும் பழமொழி உலவலாயிற்று. வில்லிபுத்தூரர் செய்துள்ள உரையைக் கொண்டுதான் கந்தரந்தாதிச் செய்யுள்களுக்கு நாம்பொருள் உணரக் கூடும். தமது ஊர் அருணை ஆதலின் அருணை விநாயக மூர்த்தியையும் தமக்கு ஆதி முதல் பெருந்துணையாயிருந்த உண்ணாமுலைத் தாயையும் முதலிற் கூறித் தம்மை யாண்ட முருகவேளை உண்ணா முலையுமை மைந்தனே! சரணம் என வணக்கங் கூறி இந்நூல் தொடங்குகின்றது. நக்கீரரிடத்தும் அவர் அருளிய திருமுரு காற்றுப் படையிலும்
அருணகிரியார்க்குப் பெரு மதிப்பு உண்டு. அதனால், திருமுருகாற்றுப் படையிற் குறித்த ஆறு திருப்பதிகளின் தியானச் சிறப்பையே நூலின் முதற் பாட்டாக எடுத்துரைத்தார். இங்ஙனம் நக்கீரர், அருணகிரியார் இருவரும் இந்த ஆறு திருப்பதிகளுக்கு ஏற்றந் தந்த காரணத்தால் திருமுருகாற்றுப் படையிற் சொல்லப்பட்ட ஆறு வீடுகள் (திருப்பரங் குன்றம், திருச்செந்தூர், திருவாவினன் குடி, திரு வேரகம், குன்று தோறாடல்,பழமுதிர் சோலை) முருகன் அடியாரால் என்றும் பாராட்டப் பட்டு ஆற்றுப்படை வீடுகள் என முதலில் வழங்கிப் பின்பு 'ஆறுபடை வீடு' [1] என மருவி வழங்கலாயின - (பக்கம் 134 பார்க்க).
-----------
[1]. படைவீடு என்பதற்குள்ள தலைநகர், காவல் கொண்ட நகர் என்னும் பொருள்கள் இந்த ஆறு வீடுகளுக்கும் பொருந்தா; ஆதலின், மருஉ என இங்குக் காட்டியவாறு
கொள்வதே சாலப் பொருத்தமாம். இதனால் தான் திருப்புகழிலும் பிற பழைய பழைய நூல்களிலும் 'ஆறு படை வீடு' என எங்குங் கூறப்படவில்லை. 'ஆறு திருப்பதி' 'அறுபத நிலை', 'ஆறு நிலை' என்றே கூறப்பட்டிருக்கின்றது. பிற்கால ஆட்சியில் தான் 'ஆறு படை வீடு' என இத்தலங்கள் ஆறும் வழங்கப்பட்டுள.
-----------------------------------------------------------
சிவபிரானுக்குத் தேவாரம் சிறந்த புகழ் நூல் அங்ஙனமே முருகபிரானுக்குச் சிறந்த புகழ்நூல் திருப்புகழ் சிவபிராற் குரிய சிறந்த அகப்பொருள் இலக்கிய நூல் திருக்கோவையார், முருகபிராற்கு உரிய அருமை அகப் பொருள் நூல் கந்தரந்தாதி. இந்த அந்தாதியில் உள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் 'சி, சீ, செ, சே, தி,
தீ, தெ, தே' என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குவது ஓர் அற்புதமான விஷயம். இனி எங்கள் திருப்புகழ்ப் பதிப்பிற் காட்டப்படாத இவ்வந்தாதியிலுள்ள முக்கிய குறிப்புக்களை மாத்திரம் கீழ்க் காட்டுவாம்:
செய்யுள்: 1 (திருவாவி): இச்செய்யுள் முருகன் திருப்புகழ் நூல்களைப் பாராயணஞ் செய்யுள் முறையைத் தெரிவிக்கின்றது. இதன்படி ஆறு திருப்பதிகளை(படை வீடுகளை)த் துதித்துத் திருப்புகழ் ஓதுதல் வேண்டும்.
செய்யுள் 3. (சென்னிய): திருவேரகம் (சுவாமிமலைக்) கோயிலைக் கட்டினவன் தெய்வத் தன்மை பெற்ற சோழராஜன் ஒருவன் (கோச் செங்கட் சோழன்) எனத் தெரிவிக்கின்றார்.
செய்யுள் 6. (செவ்வந்தி): முருகபிரான் அணியும் மலர்களுள் செவ்வந்தியும் (சாமந்தியும்) நீலோற்பலமும் கூறப்பட்டுள்ளன.
செய்யுள் 8 (சீதனங்) தனத்தைப் (பொருளை) 'சீ' என இகழ்ந்தார்க்கே வள்ளியம்மையின் அநுக்கிரகம் கிட்டும் என்கிறார். வள்ளியம்மையை மணந்து முருகர் பெற்ற [1] ஐந்து சீதனங்களாவன;- (1) ஊது கொம்பு. (2) சேவற் கொடி. (3)வேலாயுதம். (4)மயில் வாகனம். (5) மலையாட்சி.
செய்யுள் 9. (சிலை மத): தென்றலை மயிலின் உச்சிட்ட எச்சில் என்றார். மயிலின் உச்சிட்டம் (எச்சில்) - பாம்பு; பாம்பின் எச்சில் - வாயு.
----
[1]. தேவசேனைக்கு உரிய பொருள் நான்கு என்றார். திருப்புகழ் 1008 ஆம்பாடலில் (நெடிய வடகுவடு): அவை தாம் (1) இடி, (2) குலிசம், (3) ஐராவதம் (4) பொன்னுலகு. "இடியு முனைமலி குலிசமும்... கன கட +இபமும் இரணிய தரணியும் உடையதோர் தனி யானை" (தனி யானை = தேவசேனை).
--------
செய்யுள் 10. (திரளக்): இது அருமையான அவையடக்கச் செய்யுள். முருகன் புகழைத் தாம் பாட முயல்வது கையாற் கடலை நீந்த முயல்வதற்கும் ஒரு குழந்தை தன்கையை நீட்டிச் சந்திரனைப் பிடிக்க முயல்வதற்கும் ஒப்பாம் என்கின்றார்.
செய்யுள் 11. (திக்கத்தி): குறக் குறச் சத்திக்கு அத்திக்கோடு பறித்துக் கொடு ஆதி! என்பதற்கு நூலில் எழுதியுள்ள உரை பிழையுள்ளது. முதலில் உள்ள 'குற' என்பதற்குக் 'குற்றுதற்கு' (குத்துதற்கு - பொடியாக்குதற்கு) எனப் பொருள் கொள்ள வேண்டும். தினையைக் குற்றுதற்கு (உலக்கைக்குப் பதிலாக) முருகவேள் யானையின் கொம்பைப் பறித்து வள்ளியம்மைக்குக் கொடுத்தாராம். இக்கருத்தைத் திருப்புகழில் "களிற்று மருப்புலக்கையினில் - தினையிற் குறுவாளை' (797) என வருமிடத்தும், 'கருங்களிற்றின் வெண் கொம்பால் கல்லுரல்வாய் நல்லார், பெருந்தினை வெண்பிண்டி யிடிப்ப...(20) என ஈங்கோய் மலை யெழுபதில் (11 - ஆம் திருமுறை) வருமிடத்துங் காண்க.
செய்யுள் 14. (செந்தில்): இது "அலரறிவுறுத்தல்" என்னுந் துறை திருக் கோவையாரில் 'அலராயிரம்' (180) என்னும் பாடலைப் பார்க்க. இப்பாட்டினாற் பிரமனைச் சிறை செய்தது வேலாயுதம் என்று தெரிகின்றது
செய்யுள்15. (திவாகர): கொடைச் சிறப்புக்குக் கர்ணனையும் பாரியையும் எடுத்துரைக்கின்றார்.
செய்யுள் 18. (தினைவேத்தி): இச்செய்யுள் பிறவியை ஒழிக்கும் வழியைக் காட்டுகின்றது.
செய்யுள் 28. (சிக்குற): "இது கெடுவாய் மனனே" என்னுங் கந்த ரநுபூதிச் செய்யுளின் (7) கருத்தைத் தழுவியது.
செய்யுள் 29. (திகழும்): (i) சம்பந்தப் பெருமானே தெய்வம் என உறுதி படக்கூறி அவர் பெருமையைச் சிறப்பிக்கின்றார்.(பக்கம் 131,132 பார்க்க)
-
"பித்தனை எங்கள் பிரானை அணைவ தெளிது கண்டீர்
அத்தனை ஞானசம் பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே"
- என்னும் நம்பியாண்டார் நம்பியின் திருவாக்கு (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி-90) இங்கு உணரற்பாலது.
(ii) திருநீறிடும்பொழுது "சீகாழி...அமராவதி, திருத்தணி" என்னும் மூன்றுதலங்களையும் தியானித்து மொழிந்து திருநீறிடுக என்ற உபதேசம் அநுட்டிக்க வேண்டியது. சீகாழி(சம்பந்தர்) பிறந்த ஊர், அமராவதி (முருகர்) புரந்த (காத்த) ஊர், திருத்தணி (முருகர் வள்ளியம்மையை மணஞ்செய்து வந்து) அமர்ந்த ஊர்.
செய்யுள் 31. (தீதா): யாகத்தில் மறையோர் அஜத்தை (ஆட்டை) வதஞ் செய்தலைக் கண்டிக்கின்றார்.
செய்யுள் 34. (திரிகை): மன அமைதிபெற இச்செய்யுளைப் பாராயணஞ் செய்தல் நன்று.
செய்யுள் 46. (செருக்கும்): 'கடம்ப' என்பதற்கு உரை 'வெட்சி மாலையை யுடையவனே ' எனப் பிழையாக உள்ளது. 'கடப்ப மாலையை யுடையவனே' என அதைத் திருத்த வேண்டும்.
செய்யுள் 48. (சேயவன்): இப்பாடல் அவசியம் மனப்பாடஞ் செய்ய வேண்டிய அருமையது. நவக்கிரக தோஷத்தை நீக்க வல்லது. நல்ல புத்தியையும், யுக்தியையும் கூட்ட வல்லது. தேவராத்தில் உள்ள "வேயுறு தோளி" என்னுங் "கோளறுபதிகம்" போன்ற பெருமை யுடையது. ஆற்றல் வாய்ந்தது. 'நாளென் செயும்' என்னும் கந்தரலங்காரச் செய்யுளுக்கு (38)த்துணை போயது.
செய்யுள் 51. (சிகைத்தோகை); இப்பாடலில் (i) திருமுருகாற்றுப் படையின் சிறப்பு மிக விசேடித்துப் பாராட்டப் பட்டுளது. தேவசேனையின் கலவி யின்பத்தினும் அதிக இன்பத்தை அந்நூல் முருகருக்குத் தந்ததாம். (ii) திருச்செந்தூரில் சமுத்திரத்தில் வதனாரம்ப தீர்த்தம் என்னும் ஸ்நாந கட்டத்தில் (துறையில்) முழுகிப் பாண்டியன் மகள்
அங்கசுந்தரிக்குக் குதிரை முகம் மாறி சுந்தர நன்முகம் கூடின சரித்திரம் இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. இச்சரித்திரத்தை எங்கள் திருப்புகழ்ப் பதிப்பில் (மூன்றாம் பாகம் -
கந்தரந்தாதி (பக்கம் 39 பாரக்க).
செய்யுள் 54. (திதத்த): இச்செய்யுளே வில்லிபுத்தூரருடன் செய்த வாதில் அருணகிரியார்க்கு வெற்றி தந்தது. தகரவர்க்க எழுத்தொன்றிலேயே அமைந்த அருமை. ஓரெழுத்துச் செய்யுள் இது.
செய்யுள் 56. (தென்னவ): இச்செய்யுளின் உரையில் ஒரு குறிப்பு கவனிக்கத்தக்கது. "முன்பின் தென்னவன் அங்கம் நீற்றல் திருத்தியது" என வருமிடத்து முன்பின் என்றதற்கு முன்=முற்காலத்தில், பின்=பின்னே கூனையுடைய எனப்பொருள் உளது. இவ்வுரை அவ்வளவு சிறப்பினதல்ல. 'முன்' என்பது காலத்தைக் குறிப்பதல்ல, இடத்தையே குறிப்பது. முன்பின் என்றதற்கு முன்னிடத்தும் (மார்பிலும்), பின்னிடத்தும் (முதுகிலும்) எனப்பொருள் கொள்ள வேண்டும். பாண்டியனுக்கு மார்பின் முன்னும், முதுகின் பின்னும் இரண்டு கூன்கள் இருந்தனவாம். அந்த இரண்டு கூனையும் சம்பந்தப் பெருமான் திருத்தி நிமிர்த்தி யருளினார். இது "ஒரு கூன்மிசை வைத்த திருக்கை, புறத்தொரு கூன்மிசை வைத்தனர் - வைத்தலுமே - இருகூனும் நிமிர்ந்தன தென்னவர் கோன் முதுகுந் தடமார்பும் இடம் பெறவே' - எனவரும் தக்க யாகப் பரணி - 216-ஆம் செய்யுளால் விளக்கம் உறுகின்றது. பரணி உரையாசிரியர் 'முன்னும்
பின்னும் ஒக்க நிமிர்ந்தவாறே தடமார்பும் அழகிய முதுகும் ஆயின' என்றார்.
செய்யுள் 59. (சேர்ப்பது) இப்பாட்டை 'எலுமிச்சம் பழப்பாட்டு' என்பர் முருகவேள். இப்பெயர் வரலாற்றையான் எழுதியுள்ள 'முருகரும் தமிழும்' என்னும் நூலிற் பக்கம் 50-51 பார்க்க.
செய்யுள் 67. (சிகண்டி) இது "நலம்புனைந் துரைத்தல்" என்னும் அகப்-பொருட்டுறையது.
செய்யுள் 71. (திங்களும்): 'என் ஐயிரு திங்களும் மாசு(ண்)ணமாக்கும் பதாம்புயன்' என்பது "அவன் கால்பட்டழிந்ததிங் கென்தலை மேலயன் கையெழுத்தே" - என்னுங் கந்த ரலங்காரச் செய்யுளை (40) நினைவூட்டுகின்றது. மடலெழுதலின் அருமை கூறும் பாடல் இது. திருக்கோவையார் பாட்டு 76-79 பார்க்க, எங்கள் பதிப்பிற் குறிப்புரையும் பார்க்க.
செய்யுள் 73. (திசாமுக): பழமுதிர் சோலையை இச்செய்யுளிலும் முதற் செய்யுளிலும் 'தண்கார் வரை' என்றும், "உவா இனன் (யானைக் கூட்டம்) குடிகொண்டவரை", 'தந்தி சமுகம் (யானைக் கூட்டம்) நண்ணும் வரை' என்றும் வருணித்துள்ளார். இக்கருத்து 'மஞ்சுசூழ் சோலை மலை' எனச் சிலப்பதிகாரத்திலும், 'திண்டிறல் மாகரிசேர் திருமாலிருஞ்சோலை' எனப் பெரிய திருமொழியிலும் வருதல் காண்க.
செய்யுள் 75. (செய்தவத்): (i) பஞ்சாக்ஷரம் ஜெபித்தலின் பயன் கூறுகின்றது. இதனால் முருகன் அடியார்களும் பஞ்சாக்ஷர ஜெபம் செய்யலாம் என்பதும் அங்ஙனம் செய்தல் விசேடம் என்பதும் புலப்படுகின்றன.
(ii) ஸ்ரீ சம்பந்தமூர்த்தி ஆண்பனையைப் பெண்பனையாக்கிய லீலையும் கூறப்பட்டுளது.
செய்யுள் 78. (திரிபுரத்): தேவிக்கு உரிய நாள் 'பூரம்' என்பது இச்செய்யுளால் தெரிகின்றது.
செய்யுள் 80. (சீராம); 'சீரா' என்பது உடைவாள்; (பக்கம் 27 பார்க்க). அச்சிட்ட உரையில் சீரா - கவசத்தை, தொட்ட - புனைந்தா என்பது சரியல்ல. சீரா = உடைவாளை; தொட்ட - பிரயோகித்த - என இருத்தல் வேண்டும். எங்கள் திருப்புகழ்ப் பதிப்பில் மூன்றாம் பாகம் - கந்தரலங்காரம் 27 - ஆம் செய்யுட் குறிப்புரையைக் காண்க.
செய்யுள் 84, (சிவசிவ): இறைவன் திருவருட் பிரகாசம் சேரச் சேரப் பொறுமை கூடிவரும்: கோபம் அழிந்து போகும் என்பது இச்செய்யுளாற் பெறப்படும்.
செய்யுள் 91 (திகிரி): அகப்பொருளில் "பகற்குறி"- இடங்குறித்தல் என்னும் துறை இச்செய்யுள். ஸ்ரீ சம்பந்தர் தேவாரத்தில் 'குன்றியூர் குடமூக்கு' என்னும் திருவலஞ்சுழிப் பாடற் கருத்தோ டொத்தது. - 'திகிரி வலம்புரி சூடியவா நன்று சேடியின்றே' - திகிரி = சக்கரம், மூங்கில்; வலம்புரி = (வலம்புரிச்) சங்கு, நந்தியா வட்டப்பூ; மூங்கிலில் நந்தியா வட்டப்பூ அடையாளம் வைத்த (பகற்குறி) நன்று. சக்கரம் சங்கைச் சூடியது நன்று (வேடிக்கை) என்றபடி. சிராமலைக்கோவையில் "சீரார் தருபுலி மேல்யானை வாழ்த்திடச் செய்தனரே" என்றது போல; புலி - வேங்கை மரம், மிருகம்: யானை - ஆம்பல் பூ, மிருகம்; வேங்கை மரத்தின் மீது ஆம்பற்பூ - அடையாளக் குறி - புலிமேல் யானை வாழ்தல் - வேடிக்கைப் பொருள்.
செய்யுள் 92. (சேடி): இது 'புதல்வன்மேல் வைத்து அணைந்த வழியூடல்' என்னும் துறை. வடசேடி, தென்சேடி என்பன வித்யாதாரர்களுடைய மலையாகிய வெள்ளியம் பெருமலையிலுள்ள பெரும் பிரிவுகளின் பெயர் (தக்கயாகப் பரணி - தாழிசை 19, 371; விசேடக் குறிப்புரை -பக்கம் 265).
செய்யுள் 96. (திருக்கை): ஸ்ரீ சம்பந்தர் தேவாரம் தமிழில் ருக்வேத சாரம் என்பதைத் 'தென்னூல் (தமிழ்) சிவபத்தி ருக்கு ஐயம்போக உரைத்தோன்' எனத் தெளிவு பெற உரைத்துள்ளார்.
செய்யுள் 97. (சிறுமிக்கு):(i) இச்செய்யுளில் உலகம் உய்யக் கருதித்[1] 'தும்மும் போதெல்லாம் 'குமர சரணம்' என்று சொல்லுங்கள் உய்வீர்கள்' என்னும் ஒரு எளிதான உபதேசத்தைச் சுவாமிகள் சொல்லியுள்ளார். இவ்வுபதேசத்தை யாவரும் அவசியம் அநுட்டித்துப் பயனடைதல் வேண்டும். (ii) வேடனாகிய கண்ணப்பரது எச்சிலை, அன்பே பிரதானம் என்று சிவபிரான் பாராட்டி உண்டது போல, வேட்டுவச்சியாம் வள்ளியம்மையின் நலத்தை அன்பே பிரதானம் என்று முருகபிரான் பாராட்டித் துய்த்த காரணத்தால் வள்ளியம்மையொடு முருகவேள் செய்த லீலைகளைக் கூறும்பொழுது அருணகிரியார்க்குக் கண்ணப்பர் ஞாபகம் வரும். திருப்புகழில் "வதன சரோருக" (668) என்னும் பாடலையும் பார்க்க.
--------
[1]. தும்மின உடனே "சிவாய" எனும் வழக்கம் முன்பு இருந்தது. இறைவன் உதவினன் தும்மினார் சிவாய போல் தொடர்ந்து- திருவாலவா யுடையார் திரு விளையாடற் புராணம் 49-10.
செய்யுள் 100. (செல்வந்தி); தேவசேனை, வேல், கழுமலம் (சீகாழி) இவைதமைத் தியானிக்க வரும் பயன்களைக் கூறும் இப்பாட்டு.
கந்தரந்தாதியின் பெருமை
இக்கந்தரந்தாதி சுவாமிகளுக்கு வாதில் வெற்றி தந்த நூலாதலாலும், வேல், மயில், சேவல், தேவசேனை, வள்ளிப் பிராட்டி, முருகர் திருவடி, முருகர் திருப்புகழ் ஆகிய இவைதமைச் சிந்தை செய்வதால் வரும் பெரும் பயனை நன்கு எடுத்து ஓதியுள்ள காரணத்தாலும் (அந்தாதி 26, 66, 100 பாக்க) இந்நூல் வேண்டிய வரமெலாம் தரவல்ல தாய்ப் பாராயணத்துக்கு மிகச் சிறந்ததாய்ப் பயன்தரு நூலாகும்; ஆயினும் பொருள் விளங்குவது கடினமாயிருப்பதால் எளிதாகப் பொருள் விளங்கும் கீழ்க்குறித்த பதினாறு பாடல்களையாவது பாராயணஞ் செய்தல் உத்தமமாம்.
3. கந்தரலங்காரம்
-
"வேலர் - அலங்காரத் துட்பொருளை யாய்வதுவே தேகங்
கலங்கா அலங்காரம்" - தணிகையுலா.
இது மிக இனிமையான ஒரு நூல். முருகன் திருவடியில் திடபக்தியை ஊட்ட வல்லது. பத்தி ரசம் நிரம்பியது. செந்தமிழ்ச் சுவை ததும்புவது. முருகன் அடியார்கள் உள்ளங் குளிரவும் உரோமஞ் சிலிர்க்கவும் ஓதி மகிழ்வது, ஒப்புயர் வற்றது. சிவபிரானுக்குத் திருவாசகம் எங்ஙனம் ருசிக்குமோ அங்ஙனம் முருகபிரானுக்குக் கந்தரலங்காரம் ருசிக்கும் என்க. அலங்காரம் நூறு பாடல்களுள் - தாம் பெற்ற பேற்றைக் கூறித் தமது ஆனந்தத்தைத் தெரிவிக்கும் பாடல்களின் இடையிடையே தமது குறைகளைக் கூறி அருள் வேண்டும் பதிகங்களும் செறிந்துள ஆதலின் இந்நூல் ஒரே சமயத்திற் பாடப் பட்டதல்ல என்றும், அப்போதைக்கப்போது சுவாமிகளது மனமும் தவமும் நின்ற வழியே சந்தர்ப்பத்துக்குத் தக்கபடித் தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுப் (பக்கம் 57 பார்க்க) பின்னர்ச் சுவாமிகளாலேயோ அல்லது அவர்தம் சீடர்களாலேயோ தொகுக்கப்பட்டுக் கந்தரலங்காரம் எனப் பெயர் வைக்கப்பட்டுச் 'சலங்காணும்
வேந்தர்' என்னும் நூற்பயனும் கூறப்பட்டிருக்க வேண்டும் என்றும் எண்ணுதற்கு இடம் இருக்கின்றது.
உதாரணமாக, முதற் பாட்டில் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா என ஆச்சரியப்பட்ட பிறகு 4 – ஆம் பாட்டில் 'செய்வ தென் யான்?' எனக் கலங்குவதற்கும் 7 ஆம் பாட்டில் 'உளத்திற், ப்ரமத்தைத் தவிர்ப்பாய் என வேண்டுதற்கும் அவசியமில்லை. ஆதலால், அருணகிரிநாதருக்குப் பூரண அருள் நிரம்புவதற்கு முன்பு பாடப்பட்டன சில,
பூரண அருள் நிரம்பின பின்பு பாடப்பட்டன பிற - என நினைக்க வேண்டியிருக்கின்றது. நூறு பாடல்களுக்கு மேற்காணும் காப்புச் செய்யுளும் ஆறு தனிச் செய்யுள்களும் நூலைத் தொகுத்த போது நூற்றுக்கு மேல் எஞ்சி நின்ற
செய்யுள்கள் போலும். இந்த ஏழு செய்யுள்களின் வாக்கு அருண கிரி நாதரது வாக்கெனவே திகழ்கின்ற அருமையது. இக் கந்தரலங்காரம் சிறந்த ஒரு பாராயண நூலாகும். இதைக் கிருத்திகை தோறுமேனும் பாராயணஞ் செய்வது உத்தமமாகும்.
எங்கள் திருப்புகழ்ப் பதிப்பிற் கூறியபடி -
என்னும் பன்னிரு பாடல்களை நித்ய பாராயணமாகக் கொள்ளலாம். இனி எங்கள் பதிப்பிற் கந்த ரலங்கார ஆராய்ச்சியில் இல்லாத ஒரு சில விஷயங்களை ஈங்கெடுத்துக் குறிப்பாம்.
காப்புச் செய்யுள் (அடலருணை): வட அருகிற் சென்று கண்டு கொண்டேன் - வட அருகில் உள்ள முருக மூர்த்தியே முதற் திருப்புகழுக்கு 'முத்தைத் தரு' என்னும் அடி எடுத்துக் கொடுத்தவர். இவரே அருணகிரியாரை ஆட்கொண்டருளிய 'கோபுரத்திளையனார்" என வழங்கும் முருகவேள்.
-
"அருணை ஆடகச் சித்ரமணிக் கோபுரத்து உத்தர திக்காக
வெற்றிக் கலபக் கற்கி யமர்வோனே. (திருப். 577)
"அருணை யிறையவர் பெரிய கோபுரத்தில் வடபால்
அமர்ந்த அறுமுகப் பெருமாளே. (திருப். 540)
"ஆடக விசித்ர கன கோபுர முகப்பிலரு ணாபுரியில்
நிற்கும் அடையாளக் கார"ன். (வேளை: வகுப்பு)
செய்யுள் 4: '(ஓர ஒட்டார்): உனதாள் சேர ஒட்டார் ஐவர் செய்வதென் யான்?' இது ஐம்புலன்களின் சேட்டையைக் கூறும் - இக்கருத்தை -
-
"ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்" - அப்பர் திருப்புகலூர்
"காயந் தன்னுள் ஐவர் நின்று ஒன்ற லொட்டார் -
- சம்பந்தர் - வலிவலம்.
என வருந் தேவார அடிகளிற் காண்க.
செய்யுள் 13. (தாவடி) அருணகிரியார் அருளிய திருப்புகழ்ப் பாக்களிலும் ஏனைய பாக்களிலும் பல பாடல்களில் முற்பாதிக்கும் பிற்பாதிக்கும் அரிய பொருத்தம் காணப்படும். அதற்கு இச்செய்யுள் ஓர் உதாரணம்: எங்ஙனம் திருமாலின் திருவடியானது கீழும் மேலும், ஆட்கொள்ளப் பட்ட மாவலியின் தலையிலும்
பட்டதோ அது போல முருகவேளின் திருவடி கீழேயுள்ள மயில்மீதும், மேலேயுள்ள தேவர் முடிமீதும், ஆட்கொள்ளப்பட்ட அருணகிரியாரின் பாவடி ஏட்டிலும் பட்டது. இதனால் பெறப்படுவது யாதெனில் மாவலியும் அருணகிரியாரும் மேலே உள்ள தேவர் சாக்ஷியாய்த்தத்தம் ஆணவம் கீழடக்கப்பட்டு இறைவனால் திருவடி தீக்ஷை
செய்யப்பட்டு ஏன்று கொள்ளப்பட்டனர் என்பது இவ்வுவமை நயம் ஓர்ந்து களிப்புறற்பாலது மாவலி திருவடி தீக்ஷையால் ஏன்று கொள்ளப்பட்டார், அருணகிரியார் அவர் அருளிய பாடல்களில் திருவடி முத்திரை வரப்பெற்று ஏன்று கொள்ளப்பட்டார்.
செய்யுள் 16. (தடுங்கோள்): 'இருந்தபடி இருங் கோள்' என்பதற்குத் தாமசம், ராஜசம் என்னுங் குணங்களாற் பீடிக்கப்படாது, எப்பொழுதும் உங்களுக்கு இயற்கையாய், அடி ஆதாரமாய்ச் சுத்த நிலையாயுள்ள சாத்துவிக குணத்துடனே இருங்கோள் - என்பது பொருளாம். தாமசம், ராஜசம் என்னும் குணங்கள் இருந்தபடியில் - இருந்த நிலையில் - இல்லாது, இருந்த நிலை மாறும்பொழுது வருங் குணங்களாம்: 'எனக்குச் சோம்பல்
வந்திருக்கிறது', 'எனக்குப் பெருங் கோபம் வந்தது' - எனும் சொல் வழக்கால் இயற்கையாகிய சாத்துவிக குணம் மாறினால் வருங்குணங்கள் தாமசம், ராஜசம் என்பன - என்பதும், கோபத்தை வர ஒட்டாது நான் சும்மா இருந்துவிட்டேன் - என்னும் சொல் வழக்கில் சாத்துவிக நிலையே நமது இயற்கை நிலை - இருந்த படி இருக்கும் நிலை - என்பதும் புலப்படுகின்றன. இனி, 'நிலையிற் றிரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது' என்னும் திருக்குறளின் கருத்துக் கிணங்க ...உயர்ந்த நிலை (பதவி) உங்களுக்குக் கிடைத்தாலும் முன் இருந்த அடக்கமுடனே, (கர்வம் படையாது), நிலை திரியாது இருந்தபடி இருங்கோள் - என்றும் பொருள் கொள்ளலாம்.
செய்யுள் 22 (மொய்தார்): 'முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்"
- முருகவேள் தன்னை வைதாரையும் வைத இடத்திலே, வைதபொழுதே – வாழ வைப்பவன் என்பதற்குச் சாக்ஷி அப்பாட்டின் முதலிலேயே 'மொய்தாரணி குழல் வள்ளியை வேட்டவன்' என்பதிற் சொல்லாமலே சொல்லப்பட்டுளது. வள்ளியை
வாழ வைத்தார் முருகர் என்பது தெரிந்த விஷயம். முத்தமிழால் வள்ளியம்மையார்
முருகரை வைதாரா என்பதை ஆராய்வாம். 'ஆம் - வைதது உண்மையே' -
இதற்குச் சான்று (வள்ளிப் பிராட்டியின் வைதற் சொல்லைக் கேட்ட அம்முருகரே
தமது கைப்பட ஆய்ந்து திருத்திய) பின்வருங் கந்தபுராணச் செய்யுளிற் காண்க.
-
"நத்துப் புரைமுடியீர் நல்லறிவு சற்றுமில்லீர்
எத்துக்கு முத்தீர் இழிகுலத்தேன் தன்னை வெஃகிப்
பித்துக்கொண் டாற்போற் பிதற்றுவீர் இவ்வேடர்
கொத்துக் கெலாமோர் கொடும்பழியைச் செய்தீரே."
(வள்ளி திருமணம் - 108)
மேற் கண்டபடி வைததே இயற்றமிழ்; வள்ளியம்மை 'இந்தளாம்ருத வசனம்' உடையாள்; 'ரஞ்சிதாம்ருத வசனமுடையாள்' என அருணகிரியார் திருப்புகழிற் (289, 79) சொல்லியுள்ளார். வள்ளி - யாழைப் பழித்த மொழியாள், பண் நிலாவிய பேச்சினள்; ஆதலின் அவள் பேச்சே இசைத் தமிழ். வள்ளிப்பிராட்டி குறத்தியாதலின்
வைத சமயத்தில் - தனது ஜாதியின் வழக்கப்படி - கையையும், உடலையும், தலையையும் தனது வைதற் பேச்சுக்கு ஒத்த வண்ணம் ஆட்டிக் கூத்துக் காட்டியிருப்பாளாதலில் அவளது ஆட்டத் தமிழே நாடகத் தமிழாம்; ஆக, முத்தமிழால் முருகரை வைதாள் வள்ளி என்பதில் ஐயப் பாடொன்றுமில்லை. 'மொய்தாரணி குழல்' என்பது அங்ஙனம் வைது வெற்றி பெற்றதற்கு அடையாள மாலையாம் (கூந்தற்) பூச்சுட்டு என்க.
செய்யுள் 24. (கின்னங்) - இச் செய்யுளில் 'குன்னம்' (உபதேசித்த ரகசியப் பொருளை) குறிச்சி - வள்ளி மலைப் ப்ரதேசம் வெளியாக்கி விட்டது என்கின்றார். இதன் விவரத்தை 188-ஆம் தலம் வள்ளி மலையின் திருப்புகழ் ஆராய்ச்சியிற் காண்க. (பக்கம் 120, 121)
செய்யுள் 26. (நீலச்): எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான் என்றது 'எங்கே நினைப்பினும் அங்கே என் முன்வந் தெதிர் நிற்பனே' (கந். அலங். 104) என்னுங் கருத்தது.
செய்யுள் 27. (ஓலையும்): 'வாகை' என்பது ஆகு பெயராய் வெற்றி நிலைத்து நிற்கும் (வேலாயுதத்தைக்' குறிக்கின்றது. சீரா என்பது சிறிய கூரிய (அரையிற் கட்டும்) உடைவாள் என்பது திருப்புகழ் 750, 1045, 1132, 1139 எண்ணுள்ள பாடல்களாலும், கந்தரலங்காரம் 81 – ஆவது செய்யுளாலும் தெளிவு பெறும்: கந்தரந்தாதி 80-ஆம் செய்யுட் குறிப்பைப் பார்க்க. (பக்கம் 156)
செய்யுள் 29. (கடத்திற்): திருப்புகழ்ப் பாடல்களிற் பல இடங்களில் வேசையர் மயக்கை வெல்லும் வழியாதோ எனக் கலங்கின கலக்கம் இறைவன் திருவருளால் அடியோடு தொலைந்தது இச் செய்யுளைப் பாடிய காலத்திலே என்பது-இச் செய்யுளால் நன்கு விளங்கும்.
செய்யுள் 31. (பொக்கக்) சந்தத் தமிழ் பாடுவதில் சுவாமிகள் வல்லவ ராதலின் கட்டளைக் கலித்துறையால் ஆய இந் நூலிலும் சில பாடல்களின் பின் இரண்டடிகள் சந்த நிறைந்த முடுக்குச் சொற்களாற் பொலியுமாறு அமைத்துள்ளார். செய்யுள்கள் 4,7,37,61,92- பார்க்க.
செய்யுள் 32. (கிளைத்துப்) : 'சூர் மார்புடன் கிரியூடுருவ'- இங்கு, 'கிரி' என்பது எழுகிரி, கிரௌஞ்சமலை அல்ல. திருப்புகழிலும் பிற நூல்களிலும் சூருடன் கிரி என வந்தால் அங்குக் கிரி என்பது எழுகிரியே ஒழிய கிரௌஞ்சமலை அல்ல, கிரௌஞ்சமலை தாரகா சுரனுக்கு உதவியா*யிருந்து அவனுடன் வேலால் அழிபட்ட மலை. சூரனுக்கு உதவியாயிருந்து வேலால் தொளைபட்ட கிரி 'எழுகிரி', 'ஏழுகிரி' எனப்படும். சூரனுக்குக் காவலாகி ஏழுகிரிகள் எப்பொழுதும் மறைந்திருந்து துணை செய்தன என்றும், சூரனையும் அம் மலைகளையும் ஒரே காலத்தில் வேலால் முருகவேள் அழித்தனர் என்றும் தக்க யாகப்பரணி 5, 170 எண்ணுள்ள தாழிசைகளாலும் அவைக்குரிய உரைப் பகுதிகளாலும் அறிகின்றோம். எழுகிரியைக் குறித்துவரும் பாடற் பகுதிகளிற் சில ஈங்கெடுத்துக் காட்டுவாம்:-
-
'கிளைபட் டெழுசூர் உரமுங் கிரியும்
தொளைபட் டுருவத் தொடுவே லனனே (கந். அநு. 4)
'உழல் சூரும் மலைமார்பும் உடனூடுற (தக்க. பரணி. 5-தாழிசை)
'எழுமலை கொல்லும் அசனி இளமயில் வள்ளி கணவன்' (௸170)
'எழுமலை பொடித்த கதிரிலை நெடுவேல் (கல்லாடம் 3)
'எழுகிரி யார்ப்பெழ வென்ற வேலா' -திருப்புகழ் 990
'எழுகிரிகள் பிளந்துவீழ எறிந்த வேலா'- ௸ 548
'எழுசயிலந் தொளைத்த சுடர்வேலா - ௸ 581.
'ஏறோங்கல் ஏழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி' ௸ 1257
' சாகர மேழுங் கிரியேழும்... காய கதிர்வேல்' ௸ 681
ஏழ்கடல், எழுவரை துகளென வடித்தவேல் - ௸ 842
'மலையேழு துண்டாய் எழுவர் சோரிகொண் டாறுவர
வேலெறிந்தே நடனமுங் கொள்வேலா' ௸ 374
[387, 613,725, 819, 1008, 1019, 1145, 1162 - எண்ணுள்ள திருப்புகழ்ப் பாக்களையும் பார்க்க.]
செய்யுள் 33. (முடியா): இது முருகபிரானது நாம பஜனை விசேடத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் அருமைப் பாடல். கந்தரந்தாதி 30 (தெய்வ)-செய்யுளும், திருப்புகழ்
668 - வதன சரோருக என்னும் பாடலும் இக் கருத்துக் கொண்டன.
செய்யுள் 37. (கண்டுண்ட): ராவுத்தன் - வேடிச்சி காவலன் வகுப்பு --அடி 22 -- குறிப்பைப் பார்க்க.
செய்யுள் 38. (நாளென்): இது 'வேயுறு தோளி பங்கன்' என்னும் தேவாரம் போன்ற கோளறு பாடல். கந்தரந்தாதி 48 'சேயவன்' என்னும் பாடலுடன் [பக்கம்
154] இதுவும் அவசியம் மனப்பாடஞ் செய்யப்பட வேண்டிய மந்திரப் பாவாகும். ஆபத்து வேளைகளிற் பெரிதும் உதவும் பெருமை வாய்ந்த பாட்டு இது.
செய்யுள் 40 (சேல்பட்) கால்பட்டழிந்தது - கந்தரந்தாதி 71 - ஆம் பாடற் குறிப்பைப் பார்க்க. பக்கம் [155]
செய்யுள் 41, (பாலே): இப்பாட்டின் மூன்றாம் அடியில் 'காலே மிகவுண்டு காலே யிலாத கணபணம்' [கால் = வாயு; கணபணம் = ஆதிசேடன் -- பாம்பு] இதன் சொல்லின்பமும் பொருளின்பமும் மகிழத் தக்கன.
செய்யுள் 44. (தோலால்): அப்பர் சுவாமிகள் --
-
'கால்கொடுத் தெலும்புமூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிரம் அட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை'
என்றார். (IV-67-3-திருக்கொண் டீச்சரம்)
செய்யுள் 46. (நீயான): 'சிவமா துடனே' என்னுந் திருப்புகழ்க் [563] கருத்தது.
-
'ஏகபோகமாய் நீயு நானுமாய் ' (862), 'நீ வேறெனா
திருக்க நான்வே றெனாதிருக்க நேராக வாழ்வதற்கு' [220]
என்பன ஈண்டு உணரத்தக்கன.
செய்யுள் 48. (புத்தியை); முருகா! எதற்கும் அடங்காததாயிருந்த சூரனது ஆணவம் நடுங்கி அழியவும் கிரௌஞ்ச கிரியின் மாயை ஒடுங்கி அடங்கவும் நீ முன்பு சத்திவேலைப் பிரயோகித்தனை! இப்போது வினையேனது ஆணவமும் மாயையும் அதேமாதிரி அடங்காத நிலையில் உள்ளன. ஆதலால், அவை தமை ஒடுக்க நீ பிறிதொரு முறை உனது சத்திவேலைப் பிரயோகிக்க வேண்டிவரும் போலும். (இவ்விஷயத்தில்) நீ யாது குறித்துள்ளாய்?
[சூரன்-கிரி-இவைகளின் நிலையினது தானோ எனது விஷயமும் என்றபடி].
செய்யுள் 49. (சூரிற்): அடியார்களின் சிறப்பைக் கூறும் அரிய பாடல் இது.
செய்யுள் 51. (மலையாறு): 18 (வையில்), 51 (மலை), 53 (வேடிச்சி), 54 (சாகை), 59 (பொங்கார), 66 (நீர்க் குமிழி), 75 (படிக்கின்றிலை), 100 (இடுதலை) -- இவை ஈதலின்
சிறப்பை எடுத்துக்கூறும் உபதேசப் பாக்களாம்.
செய்யுள் 53. (வேடிச்சி), 66 (நீர்க்குமிழி), இவை 'கெடுவாய் மனனே' என்னும் கந்தரநுபூதிச் [7] செய்யுளின் கருத்துக் கொண்டன.
செய்யுள் 54 (சாகைக்கு) : கடல்தீக் கொளுத்த சிலைவளைத்தோன் -[ஸ்ரீராமர்]
'மீனேறு குண்டகழி தீவாய் மடுத்த தனி வில்லியார்'-
[முத்துக்குமார-பிள்ளைத்தமிழ்-செங்கீரை 5],
செய்யுள் 55. (ஆங்காரம்): 'நினைப்பும் மறப்பும் அறார்'--
-
(i) 'நினைப்பு(ம்) நினைவதும் நினைப்பவனும் அறுநிலத்தில்
நிலைபெற...நிறுத்த உரியது...பெருத்த வசனமே'
(திருவகுப்பு-பெருத்த வசன வகுப்பு).
(ii) உள்ளும் புறம்பும் நினைப்பொழியில் உன்னிடையே
வள்ளல் எழுந்தருளும்...(திருக்களிற்றுப்படி-51)
(iii) உள்ளும் புறம்பும் நினைப்பறில் உன்னுள்ளே
மொள்ளா அமுதாமென் றுந்தீபற (திருவுந்தியார். 26.)
செய்யுள் 57. பொருபிடி: நாம் உண்பதற்கு முன் 'பொருபிடியுங் களிறும் விளையாடும் புனச்சிறுமான் தருபிடி காவல சண்முகவா' எனச் சொல்லித் தியானித்துப் பின்பு உண்ணுதல் நல்லதோர் அநுட்டானமாம். இவ்வுபதேசம் அன்பர்கள் அவசியம் கொள்ளத்தக்கது. சிறுமான் (லக்ஷிமி), தரு--தந்த, பிடி--வள்ளியம்மை; அல்லது
புனச்சிறுமான் (வள்ளி) காவல, தருபிடி காவல--(கற்பகத் தருவின் கீழ் வளர்ந்த) தேவசேனை காவல;--எனப்பொருள்கள் காணலாம்.
செய்யுள் 64. (பட்டி), 69 (தந்தை), 25 (தண்டாயுதம்); 'சத்திவாள்', 'ஞானவாள்', 'அவிரோத ஞானச் சுடர் வடிவாள்' என்பன இயமனை வெருட்டக்கூடிய வாள்கள்
என்பதை இம்மூன்று செய்யுள்களாலும் அறிகின்றோம். இதை 'மவுன கட்கம், மோனவாள்' என்றுங் கூறுவர். 'பரமசுக மவுன கட்கம்' யமன்முடி துணிக்கும்--என
வேடிச்சி காவலன் வகுப்பிலும், எமபடரை மோதும் மோன உரையில் உபதேச வாள்'--எனத் திருப்புகழிலும் (828) கூறியுள்ளார். 'ஞானவாள் ஏந்தும் ஐயர்' எனவரும் திருவாசகமும், 'நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்' என்னுந் திருமந்திரமும் [2968] இங்கு உணர்தற்குரியன.
செய்யுள் 70. (விழிக்குத்): முருக னடியார்க்கு இது ஒரு பெருந்துணைப்பாட்டு. திருவடித் தியானம், முருக நாம ஜெபம், திருவுருத் தியானம், வேலுமயிலுந் துணையெனும்
ஜெபம்--இவைகளின் விசேடத்தைக் காட்டும் அருமையான உபதேசப் பாடல் இது.
செய்யுள் 74. (அராப்புனை)
-
"இராப் பகலற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத், தேறல் பருகார்--திருமந்திரம் 331
--இங்கு உணர்தற்பாலது.
செய்யுள் 75. (படிக்கின்றிலை) ; "படிக்கின்றிலை பழநித்திருநாமம்" - இது 'பழநி' என்னும் ஸ்தலப் பெயரை ஜெபித்தலின் விசேடத்தைக் காட்டுகின்றது. இது அநுஷ்டானத்துக்குக் கொண்டுவர வேண்டிய ஒரு மந்திரம். தலப் பெயர்களை ஜெபித்தல் அவசியம் என்பது -"பிதற்றாய் பிறை சூடி தன் பேரிடமே' என ஸ்ரீ சம்பந்தப் பெருமான் கூறியுள்ளதால் விளங்கும் (க்ஷேத்திரக் கோவைப் பதிகம் II-39-1)
செய்யுள் 76. (கோடாத); இது திருத்தணிகையாண்டவரைத் தரிசித்து வணங்கிப் பாடுதலின் அவசியத்தை உணர்த்துகின்றது. மனத்தாற் கருதித் தியானிக்கத் திருச்செந்தூரையும் [கந்.அந். 33; திருப்புகழ் 47], வாக்கால் பெயர் சொல்லிச் செபிக்கப் பழநியையும் [கந். அலங்காரம் 75] காயத்தால் வணங்கிப் பணியக் ['கோடாத'
என்னும் இவ்வலங்காரப் பாடலால்] திருத்தணிகையையும் சுவாமிகள் குறிப்பித்துள்ளார் என்பது அறிந்து அநுட்டிக்கத் தக்கது. பக்கம் 93-ம் பார்க்க.
செய்யுள் 84. [மைவரும்]:
-
"என்பெற்ற தாயரும் என்னைப் பிணமென் றிகழ்ந்து விட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார்
உன்பற் றொழிய ஒருபற்றுமில்லை உடையவனே!"
-- என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கு இங்கு நினைவுக்கு வரும்.
செய்யுள் 85. (காட்டிற்):
-
'குறத்திபிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டிற்
புகுதல் மிக எளிதே'-
இது நாம் கடைதேறுவதற்காகச் சுவாமிகள் அருளிய சுருக்கவழி உபதேசம்; அவசியம் அநுட்டிக் வேண்டியது.
செய்யுள் 87. [குமரா]: அமராவதியில் உள்ள முருகவேளின் திருவோலக்க தரிசனையை அருணகிரியார் அடிக்கடி விசேடித்துச் சொல்லுவது உணர்தற்பாலது. அமராவதி விண்ணுலகத்துக்குத் தலைநகர், அங்குள்ள முருகவேளின் தரிசனப் பேறு ஞான தபோதனர்க்கே கிட்டுவது. அருணகிரியார் தமது ஞானக்கண்ணாலும், கிளி ரூபத்தில் விண்ணுலகுக்குச் சென்றபோது நேரிலும் தரிசித்திருக்கலாம். அங்ஙனம் தரிசித்த பிறகு அல்லது தரிசித்த பொழுது இச்செய்யுள் பாடப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு ஐயம் நிகழ்கின்றது. அருணகிரியார் விசேட அநுக்ரகம் பெற்ற தலங்களுள் அமராவதி ஒன்று என்பது-'கற்பகாடவியில் வாழ்வித்த வேதியனும் வேடிச்சி காவலனே' என வரும் வேடிச்சி காவலன் வகுப்பால் அறிகின்றோம். பூத வேதாள வகுப்பிலும் கற்பகாடவி சொல்லப்பட்டுளது. இதைப்பற்றித் திருவகுப்பு-வேடிச்சி காவலன் வகுப்புக்குரிய குறிப்பினும் கந்த ரந்தாதி 29-ஆம் செய்யுட் குறிப்புரையிலும் காண்க.
மேலும் 'ஏறுமயி லேறிவிளை யாடு முகம் ஒன்றே' என்னும் பாடலின் ஈற்றடி ஒரு ஓலைப்புத்தகத்தில் 'ஆதி அருணாசலம் என்பதற்குப் பதிலாக 'ஆதி அமராவதி அமர்ந்த
பெருமாளே' என்றிருந்தது.
செய்யுள் 95. (யான்தான்): இச் செய்யுளைத் தாயுமானவர் "யான்தான் என லறவே இன்பநிட்டை என்றருணைக் கோன்தான் உரைத்தமொழி கொள்ளாயோ" என
எடுத்தாண்டுள்ளார். இச்செய்யுளின் பொருளை உணர்ந்து கூடியமட்டும் அதன்படி நடத்தலை நமது வாழ்நாளின் நோக்காகக் கொள்ளுதல் வேண்டும். சத்தியம்-எழுவாய்; தோன் றாது-பயனிலை. யாவருக்கும் சத்தியம் தோன்றாது—எனப் பொருள் கொள்ள வேண்டும். சத்தியம்=உண்மைப் பொருள். 'தலைவி பங்கர்க்குச் சத்தியமுரைக்கும் பெரு
மாளே' திருப் 460. 'யான்தான் எனுஞ்சொல்' இரண்டுங்கெடல்:-'யானொடு தான் இலாச்சுகோதய ஞானவார்த்தை'--திருப். 1260-என வருமிடத்துங் காண்க. 'யான்' என்பது போலத் 'தான்' என்பதும் ஜீவபோதம் முனைந்து நிற்பதைக் குறிக்கும் ஒரு சொல்.
-
'தானென் றவர்முன் ஒளித்தோடித் தன்னை யிழந்தவர்முன்
யானென்று சென்றிடுங் காசிப் பிரான்' காசிக்கலம்பகம் 84.
யான்தான்-என்பதற்குத் துவைத பாவம் எனப்பொருள்
கொண்டு 'நீவே றெனாதிருக்க நான்வே றெனா திருக்க'
(திருப். 220) என்னும் அத்துவித உண்மையைக் கூறினார்
--எனவுங் கொள்ளலாம்.
-
'தான்நின்றெனைத் தனக்குள்ளே ஒளிக்குமென் தன்மை நிற்க
யான் நின்ற போதெனக் குள்ளே ஒளித்திடும்'
பண்டார மும்மணிக் கோவை-4.
'யானாகிய என்னை விழுங்கி...தானாய் நிலை நின்றது'
(கந்தர் அநு.-28) என வருவன இங்கு உணர்தற்பாலன.
4. கந்தரநுபூதி
-
அநுபூதி ஐம்பதுமே ஆருயிர் பேரின்ப
அநுபூதி நல்கும் அணி- [தணிகையுலா]
சிவபெருமானுக்கு உரிய திருமுறைகள் முதலிற் பத்து: பின்பு அவை பதினொன்றாகிப் பின்னர்ப் பன்னிரண்டாயின. அதுபோல முருகவேளுக்கும் பத்துத் திருமுறை முதலில் அமைதல் தகுதியாம்;
(i) இசைப் பாக்களாய தேவாரம் -ஏழு திரு முறைகள் அவை போல இசைப் பாக்களாய திருப்புகழை ஏழு திருமுறைகளாகப் பிரிக்கலாம். ஆறு படைவீட்டுத் திருப்புகழ்கள்- ஆறு திரு முறைகள். பிறதலங்களின் திருப்புகழும் பொதுத் திருப்புகழும் ஏழாந் திருமுறை.
(ii) இயற்றமிழில் எட்டாந் திருமுறை --திருவாசகம்--திருக்கோவையார்- இவைக்கிணையாகத் திருவாசகம் அனைய கந்தரலங்காரமும் திருக்கோவையா ரனைய கந்தரந்தாதியும் எட்டாந் திருமுறையாம் என்க.
(iii) இசைத் தமிழாய் ஒன்பதாந் திருமுறையாக விளங்கும் திருவிசைப்பாவுக்கு ஒக்க இசைப்பாவாம் திருவகுப்பு ஒன்பதாந் திருமுறையாக விளங்கும்.
[iv] மந்திர நூலாய்ப் பத்தாந் திருமுறையாக உள்ள திருமந்திர நூலுக்கு இணையாக மந்திர நூலாகிய கந்தரநுபூதி பத்தாந் திருமுறையாகக் கொள்ளப்படும்.
[v] இனித் திருமுருகாற்றுப்படை, பரிபாடலிற் செவ்வேளுக்குரிய தோத்திரப் பகுதிகள், குறுந்தொகையில் முருகர்துதி, சிலப்பதிகாரத்திற் குன்றக் குரவையில் முருகருக்கும் வேலுக்கும் உரிய பகுதிகள் கல்லாடத்தில் முருகர் துதி, சேந்தனாரது திரு விடைக் கழித் திருவிசைப்பா, குமர குருபர சுவாமிகள் அருளிய கந்தர் கலிவெண்பா, முத்துக் குமார சுவாமி பிள்ளைத்தமிழ்; * சிவப்ரகாச சுவாமிகள் அருளிய செந்தில் நிரோட்டக யமக அந்தாதி *; அந்தக்கவி-- வீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் *;விரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் *; செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் *; திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் * திருப்போரூர்ச் சந்நிதி முறை * [சிதம்பர சுவாமிகள்]; கச்சியப்ப முநிவர் அருளிய தணிகைப் பதிற்றுப் பத்தந்தாதி *; சுப்
பிரமணிய தம்பிரான் அருளிய தணிகைத் திருவிருத்தம் *; தணிகைச் சந்நிதி முறை * [கந்தப்ப தேசிகர்]; [*இந்நூல்களினின்றும் பொறுக்கிய சிலபாடல்கள்]--ஆக பதினெட்டாம் நூற்றாண்டொடு நிறுத்திப் முருகன் பதினொராந் திருமுறை என்று ஒன்று சேர்த்து அச்சிடலாம். அல்லது அவ்வடியார்கள் மனப்பான்மையின் படி அவரவர் மனதுக்கு உகந்தனவாய்ப் பின்னர் எழுந்துள்ள பல உண்மை அடியார் பாடல்களினின்றும் பொறுக்கிச் சேர்த்தும் பதினொராம் திருமுறை அமைக்கலாம்.
[vi] முருகன் அடியார் சரித்திரங்களைச் 'சேய்த்தொண்டர் புராணம்' என்னும் பெயருடன் 'தேனூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை' என்னும் ஒரு வரகவி பாடி வருகின்றார். ஓர் உண்மைப் பக்தரின் அருமை வாக்காதலின் அந்நூல்1 முருகவேளின் பன்னிரண்டாம் திருமுறையாகப் பிரான் திருவருளால் உலகில் நிலைபெற வேண்டும். எங்ஙனம் சிவபிரானுக்குரிய நூல்களிற் பத்தாந் திருமுறையாகிய திருமந்திரம் சிறந்து நிற்கின்றதோ அங்ஙனம் குகவேளுக்குரிய நூல்களிற் பத்தாந் திருமுறையான மந்த்ர நூலாகிய கந்தரநுபூதி சிறந்து விளங்குகின்றது.
--------
[1]. 'முருகவேள் பன்னிரு திருமுறை' என்று 6 தொகுதிகளாகத் தனிகைமணி அவர்களாலேயே தொகுக்கப் பட்டு உரையுடன் அச்சாகி உள்ளது.
எங்ஙனம் திருமூல நாயனார் ஆயன் உடலிற் புகுந்த பின்பு திருமந்திரம் பாடினரோ அங்ஙனம் அருணகிரியார் கிளியின் உடலிற் புகுந்த பின்பு அந்தக் கிளி பாடினது கந்தரநுபூதி யென்பது பெரியோர் கொள்கை. 'கந்தரநுபூதி சொன்ன கிளி...நீ பிடிக்க எய்துமோ' என்பது இலஞ்சி முருகன் உலா (கண்ணி 205) ஆனால் பொருள் வழி ஆயுமிடத்துக் கந்த ரலங்காரத்தைப் பற்றிக் கூறியது போலக் கந்தரநு பூதியும் சுவாமிகள் அப்போதைக் கப்போது தமக்கிருந்த மன நிலைக்கும் பத்தி நிலைக்கும் ஞான நிலைக்கும் ஒத்தவாறு தனித்தனிப் பாடிய பாடல்களின் தொகுதியாகும் எனத்
தோன்றுகிறது. கந்த ரநுபூதியைப் பொருள்வழி ஆயுமிடத்து அதிலுள்ள பாடல்கள் தவங் கிடந்த நிலையிற் பாடப் பட்டன சில; தவங்கிடந்தும் சாந்தி பெறாது கலக்க முற்றநிலையிற் பாடப்பட்டன சில; உலகுக்கு உபதேசமாகப் பாடின சில- எனப் பகுக்கக் கூடியனவாய் உள்ளன. அவைதாம்:-
(i) தவங்கிடந்த நிலையிற் பாடினவை (13): 1,2,3 6, 15, 18, 21,36, 37,40,47,48,51.
(ii) சாந்தி பெறாது கலக்கமுற்ற நிலையிற் பாடினவை (22): 4,5,9,10,16,19,23-27, 29,31-35, 39,41, 45, 46, 50.
(iii) பேறுபெற்ற ஞான நிலையிற் பாடினவை (13); 8, 11-13, 20, 22, 28, 30,38, 42-44, 49.
(iv) உபதேசப்பாடல்கள் (நெஞ்சுக்கும் உலகுக்கும் உபதேசம்) (3): 7, 14,17.
மேலும், திருத்துருத்தி என்னும் தலத்தில் இறைவன் தனது அநுபூதியைப் பாடுக என்று கட்டளையிட்ட பின் (பக்கம் 109) அநுபூதிப் பாடல்கள் சில பாடப் பட்டிருக்கலாம். எப்படியுங் கந்தரலங்காரத்துக்கு முன் அநுபூதிச் செய்யுள்கள் பல பாடப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் கந்தரலங்காரச் செய்யுள்கள் பக்தி பெரிதும் ஊறி முருகன் திருவருள் பெரிதும் நிரம்பித் ததும்பி வழியும் காலத்திற் பாடப் பட்டனவாய்த் தெரிகின்றன. பின்னும், உலகுக்கு உபதேச வகையிற் கந்த ரலங்காரத்தில் 19 பாடல்கள் உள்ளன; ஆனால் கந்த ரநுபூதியில் உலகுக்கு உபதேசப் பாடல் ஒன்றே--17- உளதென்னலாம். மேலும், அநுபூதி 51 பாடல்களில் சாந்தி பெறாது கலக்க முறு நிலையிற் பாட்டப்பட்டவை 22 பாடல்கள். அலங்காரத்திலோ தன் குறை கூறல், நெஞ்சொடு கிளத்தல்,பிரார்த்தனை என்னுந் தலைப்புக்களில் (நூற்றில்) 37 பாடல்கள் தாம் உள; ஏனையவை யமனை வெருட்டல், பிரமனை வெருட்டல், அற்புத மாலை, ஆனந்த மாலை, கோளறு பதிகம், கவசப் பதிகம், என்னும் பல வகைய உயர்நிலைப் பாடல்களாயுள்ளன. கந்த ரநுபூதியிற் பல பாடல்கள் தம்குறை கூறுவனவும், தாம் பெற்ற பேற்றை நினைத்து மகிழவனவுமாய் எல்லாம் தன்மை இடத்தனவாய் உள்ளன.
ஆகவே, பல குறைகளுக்கும் ஆளாய் உள்ள நம் போலியர் முருகனைப் போற்றி உய்வதற்கு--நித்திய பாராயண நூலாகக் கொள்வதற்கு- மிகப் பொருத்தமான நூலாகக் கந்தரநுபூதி திகழ்கின்றது. பார்ப்பதற்கு எளிதாய்த் தோன்றினும் இவ்வநுபூதி நூலின் பொருட் சிறப்பு மிக மிகப் பெரியதாம். அச் சிறப்பை உணர்ந்தே தாயுமான சுவாமிகள்.
-
“கந்தரநு பூதிபெற்றுக் கந்தரநு பூதி சொன்ன
எந்தையருள் நாடி யிருக்கு நாள் எந்நாளோ!--
என வியந்து போற்றினர். அநுபூதியின் தண்ணிய நடையையும் செவ்விய பொருளையுங் கண்டே பல்லாண்டுகளாகப் பெரியோர் இந்நூலைப் பாராயண நூலாகக்கொண்டு பலனடைந்து வருகின்றனர். இதை நித்ய பாராயணஞ் செய்ய இயலாதவர் என் தந்தையார் செய்து வந்தது போல ஞாயிறு 12, திங்கள் முதல் வியாழன் வரை--தினம் 6, வெள்ளி 7, சனி 8, பாடல்களாகப் பிரித்து வரிசையாகப் பாராயணஞ் செய்து 51 பாடல்களையும் வாரத்துக்கு ஒரு முறை முடிக்கலாம். அதுவும் முடியாதவர் ஆடும் பரி (1), கெடுவாய் மனனே (7), கார்மாமிசை (10), மாவேழ் சனனம் (39), கைவாய் (14), உருவாய் (51)-- எனத்துவக்கும் ஆறு பாடல்களை நித்ய பாராயணமாக வைத்துக் கொள்ளலாம். 51- செய்யுள்களுக்கு மேல் உள்ளனவாக அச்சிடப்பட்ட பாடல்கள் சுவாமிகள் வாக்கல்ல, அவைகள் ஒதுக்கப்பட வேண்டும். தணிகை உலாவில் “அநுபூதி ஐம்பதுமே” என்றார். இனி எங்கள் பதிப்பிற் சேர்க்கப்
படாத சிற்சில பாடற் குறிப்புக்களை இங்குக் குறிப்பேன்:
செய்யுள்: (காப்பு-நெஞ்சக்) 'நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக'--இதைக் 'கல்லை மென்கனியாக்கும் விச்சை' என்றார் திருவாசகத்தில்.
செய்யுள் 1. (ஆடும் பரி): இச் செய்யுள் தான் இந்நூலுக்கு 'மந்திர நூல்' எனப் பெயர் வந்ததற்குக் காரணமாகும் போலும். இச் செய்யுளின் முதல் இரண்டு அடிகளில் 'வேலு மயிலுந் துணை' என்னுந் திருமந்திரம் மறைபொருளா யிருக்கின்றது. அது எங்ஙனம் என விளக்குவாம். 'ஆடும் பரி வேல் அணி சேவலெனப் பாடும் பணியே பணியா(க) அருள்வாய்' என்பது முதலிரண்டடி. ஆடும் பரி=மயில்; அணி=அழகிய; சேவல்=துணை
(காவல்); சேவல் என்னும் சொல்லுக்குத் துணை, காவல் எனப் பொருள் உண்டு. கந்தரந்தாதியில் 'உயிர்ச்சேவலுக்கே' (15) என வருவதைக் காண்க. வேலும்
மயிலும் அழகிய துணையாம் எனப் பாடும் பணி; பாடும் பணி=உருப்போடும் பணி; (ஜெபம் செய்யும் பணி); பாடுதல்=கூறுதல், சொல்லுதல் (அறம்பாடிற்றே-- புறநானூறு 34); ஆகவே, 'வேலு மயிலுந் துணை' எனக்கூறும் (ஜெபிக்கும்) பணியே எனக்குப் பணியாக அமைய அருள்வாய்--என்பது பிரார்த்தனை. மயிலை முன்பு கூறி வேலைப் பின்பு கூறினது--சிவாயநம--நமசிவாய என்பது போல, “மயிலையும் அவன் திருக்கை அயிலையும்”—என வரும் கடைக்கணியல் வகுப்பு ஈற்றடியையும் இங்கு உணருக.
செய்யுள் 2. (உல்லாச): 'எல்லாம் அற'--'எல்லாம் இழந்து கந். அலங். (10).
செய்யுள் 3. (வானோ): 'ஆண்ட இடம்'--அண்ணாமலை. இதனால் 'யான் எனது' உள்ள வரையில் இறைவனை அண்ணுதல் (எட்டுதல்) முடியாது என்னும் தத்துவம்
விளக்கமாம்; இத் தத்துவத்தின் உண்மையைப் பிரமனும் மாலும் அண்ணாமலையிற் கண்டுள்ளார்க ளாதலால்.
செய்யுள் 4. (வளைபட்ட): 'கிளைபட்டெழு சூர் உரமும் கிரியும் தொளைபட்டுருவ; என்பது கந்த ரலங்காரத்தில் 'கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரியூடுருவ (32) என வருங் கருத்தது. [அச் செய்யுளின் குறிப்பைப் பார்க்க-- பக்கம் 163]
செய்யுள் 5 (மகமாயை): இச்செய்யுள் மாயையின் வன்மையைக் காட்டுகின்றது, குருவினிடம் உபதேசம் பெற்ற பின்பு தான், இம்மாயை ஒழியும் என்பது 'இப்பிரமங்கெட மெய்ப் பொருள் பேசியவா' என எட்டாம் பாடலில் விளக்கப் பட்டது.
செய்யுள் 6. (திணியான)” 'பணியா?' (பணி என்ன உளது) என வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக!” --இக் கருத்து “குறப்பெண் குறிப் பறிந்து அருகு அணைந்து உன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக் குறையிரந்து”--எனவரும் முத்துக் குமரர் பிள்ளைத் தமிழிலும் (செங்கீரை 5) காணலாகும்.
செய்யுள் 7. (கெடுவாய்): இச் செய்யுளில் உள்ள உபதேசம் உணர்ந்து அநுட்டிக்கத் தக்கது.
செய்யுள் 12. (செம்மான்): பின்னிரண்டடி 'சொல்லு கைக்கில்லை'(கந். அலங். 10) என்னும் செய்யுளின் கருத்தைக் கொண்டது.
செய்யுள் 7. (யாமோதிய): 'தாமே பெற' – தாம் என்பது வேலவரைக் குறிக்கின்றது. தாம் ஒருவரே பெறும் பொருட்டு--எனப் பொருள் படும். வேலவர் தாம் பெறுதற்காகவே எமக்குக் கல்வியும் அறிவும் தந்துள்ளார்; ஆதலால் எமது கல்வியையும் அறிவையும் அவர் பெறுமாறே செலவிடுவேன்--என்க. அவரையே புகழ்வேன்- அவரைப்பற்றியே பேசுவேன்--என்றபடி இக்கருத்தை--
-
'என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே'--
என்னும் திருமந்திரச் செய்யுளோடு (81) ஒப்பிடுக.
செய்யுள் 32. (கலையே): 'கலையே பதறிக் கதறி'-- இதன் கருத்தைக் 'கலகக் கலை நூல் பல கொண்டெதிர் கதறிப் பதறா (1142), 'கதறிய கலை கொடு' (1152), கதற்று மநேகங் கலைக் கடலூடுஞ் சுழலாதே (257) என்னும் திருப்புகழ்ப் பாக்களிற் காண்க.
செய்யுள் 36. (நாதா). முதலிரண்டடியில்—அரனார் வணங்க நீ அவருக்கு உபதேசித்த ரகசியப் பொருள் யாதோ என வினவினர். அந்த ரகசியப் பொருள் இன்னதெனப் பின்னிரண்டடியிற் சொல்லாமற் சொல்லுகின்றார். அரனார்க்கு உபதேசித்த ரகசியப் பொருள் 'வள்ளிச் சன்மார்க்கம்' என முன்னரே குறித்தோம் (பக்கம் 120, 162),
அதாவது, 'இறைவன் உண்மை அடியார்க்குக் குற்றேவலுஞ் செய்வான்' என்பதே முருகவேள் சிவனுக்கு உபதேசித்த ரகசிய உபதேசம். இங்கு உண்மை அடியாள் வள்ளி. பிரமனாதிய தேவர்களெல்லாம் சிரசிற் சூடிக் கொள்ளும் மலர்ப்பாதனாகிய நீ வள்ளியின் பாதத்தைச் சிரசிற் சூடிக் கொண்டாய் (வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப் பாதா! குறமின் பதசேகரனே!)--என்றார். இதனால் முருக வேள் வள்ளிதாசன் என்பது பெறப்பட்டது. இக்கருத்தாகிய அரும்பே 'மேதகு குறத்தி திருவேளைக் காரனே' எனவரும் திரு வேளைக்காரன் வகுப்பாகப் பின்னர் மலர்ந்தது. சிவபிரானும் தேவர்களும் உன்னை வணங்கினார்; நீ வள்ளியை வணங்கினாய் என்ற இவ்வநுபூதியின் கருத்தை- 'எங்கள் பைம்புன மேவும் தீதிலா வஞ்சியம் சீத பாதம்படுஞ் சேகரா! தண்டையங் கழல் பேணித் தேவி பாகம் பொருந்து ஆதிநாதன் தொழும் தேசிகா! உம்பர் தம் பெருமாளே (1107) - என்னும் திருப்புகழிலுங் காணலாம். முத்து பிள்ளைத்தமிழ்- செங்கீரை- 5-ஆம் பக்கம் பார்க்க.
செய்யுள் 37. (கிரிவாய்); பொறையின் விசேடத்தைக் கந்தரந்தாதி 84-ஆம் செய்யுளிலும் காண்க.
செய்யுள் 45. (கரவாகிய): குலிசாயுத! குஞ்சரவா! எனப் பிரித்துக் குலிசாயுதத்தை உடையவனே! பிணி முகம் என்னும் யானையை உடையவனே - எனப்பொருள்
காண்பர். குலிசாயுதன் (இந்திரனுக்கு உரிய) குஞ்சரத்தால் (ஐராவத யானையால்) வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு உரியவனே! என்பதும் நன்கு பொருந்தும்.
செய்யுள் 51. (உருவாய்): 'விதியாய்' என்பது உண்மை அடியவர்களுக்கு முருக வேள் (அயன் கையெழுத்தை) பிரமன் எழுதிய (விதி) எழுத்தை அழித்துத் தாமே புதிய விதியைப் பொறிப்பதை (எழுதுவதை)க் குறிக்கும். அங்ஙனம் பிரமன் எழுதிய எழுத்தை முருகவேள் அழித்து விடுவா ரென்பது பெரியோர்கள் அநுபவத்தில் கண்டது.
இதன் உண்மையை 'அவன் கால் பட்டழிந்ததிங் கென் தலை மேல் அயன் கையெழுத்தே' என்னும் கந்தரலங்காரச் செய்யுளிலும் (40), 'என் ஐயிரு திங்களும் மாசு(ண்)ணம் ஆக்கும் பதாம்புயன்' எனவரும் கந்தரந்தாதிச் செய்யுளிலும் (71)
காண்க. அங்ஙனம் பிரமன் எழுதிய எழுத்தை அழிக்குங் காரணத்தால் இறைவனே 'விதி'யாகின்றார். 'விதியான வேத விகிர்தன்' என்றார் சம்பந்தர். திருநாறையூர் (2).]
5. திருவகுப்பு
அருணகிரியார் மதுரைத் தலத்தில் முருகவேளைத் தரிசித்தபொழுது ஒரு வேண்டுகோள் செய்தனர். அதாவது,
-
'வரிசை தரும் பதம் அதுபாடி -வளமொடு செந்தமிழ்
உரைசெய அன்பரும் பகிழ வரங்களும் அருள்வாயே' திருப். (962)
என்பது. பிரசாதங்களைத் தரும் உனது அருட்பாதத்தை வளப்பம் பொருந்திய செந்தமிறால் நான் பாடவேண்டும்; அன்பர்கள் அதைக் கேட்டும் ஓதியும் மகிழ வேண்டும். இந்த வரத்தைத் தந்தருள் என்றனர். இவ்வேண்டு கோளே 'சீர்பாத வகுப்புப் பாடுவதற்கு வித்து என்க. (பக்கம் 89-90). பின்னர்ப் பொதுப் பாடல் ஒன்றில்- 'முருகா! உனது சீர் பாதங்களின் பிரசித்தி முதலாய பல லக்ஷணங்களையும் வகுத்து வகுத்து உரைக்க விரும்புகின்றேன். அந்தத் திருப்பணி நிறைவேற எனக்கு முத்தமிழ்ச்
செல்வத்தைத் தந்தருளுக-
-
'நின்பத யுகப்ரசித்தி என்பன வகுத்துரைக்க
நின்பணி தமிழ்த்ரயத்தை யருள்வாயே, (திருப். 1233)
- என வேண்டின வேண்டுகோள் சீர்பாத வகுப்பு ஆதிய எல்லா வகுப்புகளுக்கும் வித்தாகும். 'வேண்டுவார் வேண்டுவதே ஈவான்' அல்லனோ இறைவன். அங்ஙனமே
திருவகுப்புப் பாடும் பேரருளை அருணகிரியார்க்கு இறைவன் பாலித்தான். இதுவே திருவகுப்பு வரலாறு:
திருவகுப்பின் பொருள்பற்றி ஆராயப் புகுந்தால் கீழ்க் காட்டப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் வெளிவருகின்றன:
(i) திருப்புகழ், அநுபூதி, அலங்காரம் என்னும் நூல்களிற் பெண்கள் மயக்கினின்றும் என்னை விலக்கிக் காத்தருள் எனக் கேட்டுக்கொண்ட பேச்சே திருவகுப்பிற் கிடையாது.
(ii) யம பயத்தினின்றும் காத்தருள் என்னும் யமபயக் குறிப்பே எங்கும் (சேவகன் வகுப்பு ஒன்று தவிர) கிடையாது,
(குறிப்பு:- முதல் பதினெட்டு வகுப்பே அருணகிரியார் திருவாக்கு என்னும் கொள்கையில் இவ்வாராய்ச்சி எழுதப் படுகின்றது.)
(iii) திருப்புகழ் ஒன்றில் தவிர-திருவகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி என்னும் நூல்களில் வயலூர் சொல்லப்பட இல்லை. இதன் காரணம்
நன்கு புலப்பட வில்லை. 'செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் செப்பு'-(திருப். காப்பு-3) எனத் திருப்புகழ் ஒன்றையே இறைவன் குறித்தது பற்றியோ?
(iv) திருஞான சம்பந்தர் முருகரே என்னும் கொள்கை திருப்புகழிலும், கந்தரந்தாதியிலும் தான் சிறப்பிக்கப்பட்டது. கந்தரநுபூதி, கந்தரலங்காரம், திருவகுப்பு
என்னும் நூல்களிற் சம்பந்தரைப்பற்றி யாதுஞ் சொல்லப்படவில்லை.
ஆகவே, கந்தரலங்காரம் பாடும்பொழுது இருந்த நிலையிலும் மேம்பட்ட சிவஞான நிலையில் இருந்து பாடினது திருவகுப்பு என்பது விளங்குகின்றது. இத் திருவகுப்பின்
பெருமையை "நூலறி புலவ"னாம் திருமுருகன் ஒருவனே அறிவன். நூலின் உயர் பொருளாலும் திரு வேளைக்காரன் வகுப்பில்-
-
"எழையின் இரட்டைவினை யாயதொ ருடற்சிறை
யிராமல் விடுவித்தருள் நியாயக் காரனும்"
என வருவதாலும், வேடிச்சி காவலன் வகுப்பில் "அருணைநகரி னொரு பக்தனிடு...திருப்புகழ் மதாணி க்ருபாகரனும்" எனத் தம்மைப் படர்க்கை இடத்தே வைத்துக் கூறினதாலும், அநுக்கிரக விசேடமும் அநுபூதிச் செல்வமும் முற்றின நிலையில், சித்திகள் நாவுங் கைகூடின பிறகு, கிளியான பின்பு, பாடப்பட்ட நூல் திருவகுப்பு எனத் தோன்றுகின்றது. திருத்தணிகையைப்பற்றிப் பல வகுப்புகளிலும் கூறியுள்ள காரணத்தால் 'உன் தலத்தினில் இருக்கும்படி பாராய்...திருத்தணி யிருக்கும் பெருமாளே' என முன் வேண்டியவாறே (பக்கம் 132) கிளியானபின் அருணகிரியார் திருத்தணிகைக்கு வந்து திருத்தணிகேசன் திருக்கரத்தே தங்கித் திருவகுப்புகளிற் பலபாடி யிருப்பார் எனத் தோன்றுகின்றது.[1]
-------------
[1]. முதற் பதினெட்டு வகுப்புகளில் (1,3,4,6,7,9-12, 14-16) ஆகிய 12 வகுப்புகளில் திருத்தணிகை கூறப்பட்டுளது. திருத்தணிகை வராத வகுப்புகள் ஒவ்வோர் சந்தர்ப்பத்திற் பாடப்பட்டனவா யிருக்கலாம். உதாரணமாக, தேவேந்திர சங்க வகுப்பு- தேவி உபாசகனாகிய சம்பந்தாண்டானை வெல்ல வேண்டித் தேவியைத் துதித்த தென்பர். [பக்கம் 18-அடிக் குறிப்பு.]
-------------
திருப்புகழ், திருவகுப்பு, கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி-இவை அருணகிரியார்க்குப் பின்வந்த புலவர்களாற் சொல்லப்பட்டுப் பாராட்டப்பட்டுள.
இனி அந்த அந்த வகுப்பைப்பற்றி எங்கள் பதிப்பில் இல்லாத ஒரு சில முக்கிய விஷயங்களைக் குறிப்பாம்.
1. சீர்பாத வகுப்பு
(i) இவ் வகுப்பே மிகப் பிரதானமானது-ஏனெனில் முருகரினுஞ் சிறந்தது அவர் சீர்பாதம். "நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை" என்பது பரிபாடல் (IV-62). 'வீட
ளிக்குங்கால் நின்னினுஞ் சிறந்த நின் தாளிணையை உடையை' என்றார் உரை யெழுதிய ஆசிரியர். (திருமுருகாற்றுப்படை*அடி 62-63 உரையையும் பார்க்க). மேலும்,
திருவடியே இறைவனைக் குறிக்கும் ஓர் அரும்பதம்.
-
"செங்காட்டங் குடிமேய திருவடிதன் திருவருளே
பெறலாமோ திறத்தவர்க்கே"
என வரும் ஸ்ரீ சம்பந்தர் திருவாக்கு (III-63-7) ஈண்டு உணர் தற்பாலது.
(ii) அடி 23-24. அடிமை (யாகிய யான்) முடிய வழிவழி யடிமை யெனும் உரிமை (கொண்டுள்ளேன் என்பதை) முழுது உலகு அறிய (உலக முழுதும் அறிய), யான்
மழலை மொழிகொண்டு பாடும் ஆசுகவி முதல மொழிவன நிபுண ..கவிமாலை சூடுவதும் (ஆசுகவியாக 'முத்தைத்தரு' என்னும் பதிகத்தை முதலாகக்கொண்டு மொழிந்தனவாய்த் திறம் வாய்ந்தனவான கவிமாலைகளைச் சூடுவதும் சீறடியே);
மதுப முகரித..கவிமாலை' என்பது (முநிவர்களாகிய) வண்டுகளால் முகர் (முகரப்பட்ட) (மோந்து அநுபவிக்கப்பட்ட) இதம்=இனிமைதரும்-கவிமாலை எனப் பொருள்படும். இக்கருத்தை "அலந்து மதுகர முநிவர் பரவ வளர் கமலம் அனைய திருவடி யிணைகள்" எனவரும் சிவப்ரகாசக் செய்யுளிலும் (3) "முநிவராகிய வண்டுகள் ஆசைப்பட்டுத் தோத்
திரம் பண்ண நிறம் வளராநின்ற செவ்வித் தாமரை மலர் போன்ற அவனது ஸ்ரீபாதங்கள்" எனவரும் அதன் உரையினுங் காண்க. 'மவுன முகுள பரிமள நிகில கவிமாலை என்பது-தாம் மவுன நிலையைவிட்டு வாய் (அரும்பி) திறந்து பாடிய மணம்வீசும் எல்லாப் பாமாலைகளையும்- எனப் பொருள்படும். மவுனம்=மவுன நிலை; முகுளம்= அரும்புதல், மலர்தல்; நிகிலம்=எல்லாம்; இதனால் சுவாமிகள் அருணை வடவாசலில் தவந்லையில் இருந்த பொழுது 'மௌன விரதம்' அநுட்டித்து வந்தார் என்பதும், மவுன நிலைவிட்டது - முருகன் வேல்கொண்டு பொறித்தவுடன் 'முத்தைத்
தரு' என்னும் பதிகம் பாடினபொழு தென்பதும் ஒருவாறு யூகித்து அறிதலாகும்; நிகில கவிமாலை சூடுவதும்-என வருவதால் அருணகிரியார் பாடிய எல்லாக் கவிகளையும்
முருகவேள் ஏற்றுக் கொண்டார் என்பது நன்கு புலப்படுகின்றது[1]. புய வகுப்பில் 'அடிமை தொடுத்திடு புன்சொலொன்று(ம்), நிந்தியாமற் புனைந்தன' என வருவதையுங்
காண்க:
------------------
1. தாம்பாடிய திருப்புகழை ஏற்றுக்கொண்டதாக முருகவேள் ஒரு குறிப்புங் காட்டாத காரணத்தால் திருப்புகழ் பா ஏடுகளையெல்லாம் உருவி அருணகிரியார் கடலில் எறிந்து விட்டார் என்னும் கர்ண பரம்பரைக்கதை கட்டுக்கதை என இதனால் அறிகின்றோம். இறைவன் அருணகிரியார் பாடல்களை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம் அவரது திருவடி முத்திரை அப்பாடல்களில் பொறிக்கப் பட்டதே. [பக்கம் 160 பார்க்க].
-----------------------------------------------------------
2. தேவேந்திர சங்க வகுப்பு
இவ்வகுப்பிலுள்ள தேவி துதிபோல அழகும், சிறப்பும் வாய்ந்த தேவி துதி தமிழ் நூல்களிற் காண்பது அரிது.
(i) முதலடி. இரணிய சம்மாரஞ் செய்த திருமாலே தேவி (பார்ப்பதி) என்பதைத் தெரிவிக்கின்றது. இது அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே', 'காவியங்
கண்ணளாகிக் கடல்வண்ண னாகிநின்ற தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூரனாரே' எனவரும் அப்பர் தேவாரக் கருத்தது.
(ii) தாதாம்புய....பரம்பரை - தாது - அம்புய - பரம்பரை. 'அம்புயமேல் திருந்திய சுந்தரி' - அபிராமியந்தாதி.
(iii) 'உலகு எழுகடல் நிலைபெற வளர் காவேந்திய பைங்கிளி' -- காவு -- காவுதல். முதனிலைத் தொழிற் பெயர். காவு = சுமத்தல்.
(iv) 'முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே' - இதற்குத் தேவேந்திர சங்கம் முருகனை அருள்பட மொழிபவ (ரை) ஆராய்ந்து வணங்கும் - என அந்வயப்படுத்தித், தேவேந்திர சங்கத்தார் முருகனை அருள்பட மொழிபவர் யாரென ஆராய்ந்து (தேர்ந்தெடுத்து) அவரை வணங்குவர் எனப் பொருள்
கொள்ள வேண்டும். 'மொழிபவர் ஆராய்ந்து' என்பதற்கு 'மொழிபவரை ஆராய்ந்து' எனப் பொருள் காண வேண்டும். உதாரணமாகச் "சம்பந்தன் பத்தும் வல்லார் விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே" - (பிரமபுரம் -- III-56-11) என்ற இடத்து 'சம்பந்தரது பத்தும் வல்லாரை விண்ணுலகத்தார் எதிர்கொள்ள விரும்புவரே' எனப்
பொருள் காணுதல் போல. இங்ஙனம் அடியார்களைத் தேவர்கள் நாடி விரும்புவர் என்பதற்கு - 'ஆலவாயில் அண்ணலைத் தீய தீர எண்ணுவார்கள் சிந்தை யாவர் தேவரே' (III-52-11) என்னும் சம்பந்தர் தேவாரமும் சான்றாம்.
-----------------------------------------------------------
3. வேல் வகுப்பு
-
'பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கருத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்...வேல்.'
வள்ளிப் பிராட்டி இச்சா சத்தியாதலின் மறச்சிறுமி விழிக்கு வேல் நிகராகும் என்றார். வேலுக்கும் மறச்சிறுமி விழிக்கும் உருவ உவமை, பண்பு உவமை முதலிய பொருந்தும். வள்ளிப் பிராட்டியின் கண்போல நீண்டு ஒளிரும் வேல். வள்ளிப் பிராட்டியின் கண்ணோக்கால் வரும் பயன் யாவும் வேல்தரும்-என்க. பருத்த முலை முதலிய அடைமொழிகளையும் ஒருவாறு விளக்குவாம். பருத்தமுலை-பக்குவ நிலைத் தோற்றமாதலின் அது (1) தோற்றத்தையும்; சிறுத்த இடை-முலைப் பாரத்தைத் தாங்குதலால் அது (2) திதியையும்; வெளுத்தநகை -சிரித்தெரி கொளுத்துமாதலின் அது (3) சங்காரத்தையும்; கறுத்தகுழல் -இருளும் மறைப்புங் கொண்டதாதலின் அது (4) திரோபவத்தையும்; சிவத்த இதழ்- செம்மை வாய்ந்த வாய் உபதேசஞ் செய்யுமாதலின் அது (5) அநுக்கிரகத்தையும் குறிக்கும்: ஆக, வள்ளிப்பிராட்டிக்குக் கொடுத்த அடைமொழிகளால் மறச்சிறுமியிடம் பஞ்ச கிருத்திய சக்தியைக் காட்டினார். அங்ஙனமே, வேலிடத்தும் பஞ்சகிருத்திய சக்தி உண்டு. 'கண்ணாடியிற் தடம் கண்ட வேல்' (திருப். 908) ஆதலின்-தோற்றமும், வீரவாகு தேவரையும் நக்கீரரையும் காத்து அளித்த காரணத்தால்- திதியும், சூரசங்காரம் செய்ததால் சங்காரமும், அடியாரிடத்து வெம்மையை மறைத்துத் தண்ணருள் காட்டியும், பகைவரிடத்துத் தண்மையை மறைத்து வெம்மையைக் காட்டியும் ஒழுகுதலால் திரோபவமும், குமரகுருபரர் நாவிலும் அருணகிரியார் நாவிலும் பொறித்து நலந்தந்த காரணத்தால் அநுக்கிரகமும்-ஆகப் பஞ்சகிருத்திய சக்தி வேலிடத்து உண்டு என்பது விளக்கமாகின்றது. பின்னும், ஒரு விசேடம் இவ் வகுப்புக்கு உளது. இவ்வகுப்பு (தேவியினது) 'பருத்தமுலை' எனத் தொடங்குகின்றது: அதனால், ஸ்ரீ சம்பந்தப் பெருமான் 'மலைமகள் ... முலையிணையவை குலவலின்... எரியிடில் இவை பழுதிலை மெய்ம்மையே' என்று பாராட்டிய-- தீ அணுக மாட்டாத -- 'போகமார்த்த பூண் முலையாள்' எனத்துவக்கும் தேவாரப் பதிகத்தின் பெருமையெல்லாம் இவ்வேல் வகுப்பும் கொண்டதாகும். அதுபற்றி, இவ்வகுப்பின் பாராயணமானது சுரம் முதலிய வெப்பு நோய்களையும் வெல்ல வல்லது.
(ii) அடி 4. முசித்தல் = கிலேசித்தல். (iii) அடி 9. முருக்க = அழிக்க. (iv) அடி 10. விதிர்க்க = அசைக்க, (v) அடி 14. மலைகளுக்குச் சிறகுகள் இருந்ததாகவும்,
இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் சிறகுகளை அரிந்தனன் என்பதும் ஒரு சரித்திரம். (கிரி முற்றும் அரிவதொரு கிளர் வஜ்ரனென' என்பது வில்லி பாரதம் (12 - ஆம் போர் 57.) (vi) அடி 16. விருத்தன் = கிழவன், மேலோன்
வேலின் பெருமைக்குத் தக்க அருமை முறையில் இந்த வகுப்பின் பொருள் அமைந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது என்பதை இவ்வகுப்பின் முதலெழுத்தையும் கடையெழுத்தையுங் கூட்டி வரும் 'பலே!' என்னும் சொல்லைக் கொண்டே
அறிந்து மகிழ்வோம்.
4. வேளைக்காரன் வகுப்பு
அடி 1; பயபக்தியொடு வழிபடுதலே முத்தி – என மனங்கொண்டு ஒழுகும் பக்தர்கள் இக்கருத்தை—
-
'கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்'
(பெரிய புராணம்)
விமலன் குஞ்சித கமலம் கும்பிட வேண்டுவர்
வேண்டார் விண்மிசை யுலகே.'
-(சிதம்பரச் செய்யுட் கோவை 50)
நிகழ் பக்த சனவாரக்காரனும் - நினை பக்தசன வாரக் காரனும் என்றும் பாடம்.
அடி 4, 6, 24; முருகன் (1) குருநாதனாக வெளிப்பட்டுத் தமக்குச் சக்ஷு தீக்ஷை (கண்ணால் அருள் பாலித்தல்) செய்து தமது ஆணவ அழுக்கை அகற்றி ஆவியைப் பிரகாசப் படுத்தினதும் (2) திருவண்ணாமலையிற் கோபுர முகப்பில் (தம்மை யாண்ட) அடையாளக்காரனாக வீற்றிருந்து தமக்கருள் புரிந்ததும், (3) தமது வாதனையைத் (துன்பங்களைத்) தவிர்த்ததும், (4) வழி தெரியாது ஒரு பெருங்காட்டில் தாம் திகைத்த பொழுது தம்முன் வழிகாட்டியாய் வெளிப்பட்டுச் சகாயம் புரிந்ததும் (பக்கம் 76-77)-ஆய தமது சரித்திர நிகழ்ச்சிகளைச் சுவாமிகள் இவ்வடிகளால் தெரிவிக்கின்றார்.
அடி9. 'யான், எனது' அறுதல்-இது அருமையான உண்மையைத் தெரிவிக்கும் ஒரு நல்லுபதேசம். இதனை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். கந்தரலங்காரச் செய்யுள் 85 குறிப்பைப் பார்க்க- (பக்கம் 168).
அடி 12: ஏழையின் இரட்டை வினையாய தொருடற்சிறை யிராமல் விடுவித்தருள் நியாயக்காரனும்' எனக் கூறித்தமது மாநுட உடலம் மறைந்ததைப் பற்றித் தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றார் (பக்கம் 145) நியாயக்காரன் என்பதற்கு உரிய குறிப்பைப் பக்கம் 145ன் கீழ்க்காண்க. இந்த அடி-உடலைப் பற்றியுள்ள வினை நீக்கத்தைக் குறிக்கின்றது எனக் கொள்ளவுங் கிடக்கின்றது. பெருத்த வசன வகுப்பில்-
-
'இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல்
இணக்க மறவொரு கணக்கை யருள்வதும்...
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே'
என வருவதைக் காண்க.
அடி 15. மதவெற்பு-ஐராவதம்; இவரும்-- ஏறும்: யானை--தேவசேனை.
அடி 17. ஐம்முகச் சிவனே அறுமுக குகனாய் வந்தமையால் 'முக மாயக்காரன்' என்றார்.
அடி 18. 'வாரணபதி' - ஐராவதத்துக்குத் தலைவனாகிய இந்திரன். இந்திரனுக்கு அசுரரால் உற்ற பயத்தை அடிக்கடி தொலைத்து உதவிய நாரணன். வாரணபதி-
கஜேந்திரன் எனக் கொள்வாரும் உளர்.
அடி 20. த்ரிகூடகிரி - த்ரிகூடாசலம் [குற்றாலம்]
'உன் திரிகூடங் கண்டவர்க்குத் தீராத வினையுண்டோ?
- திருக்குற்றாலப் புராணம்.
கதிர்செய் மாநகரி - கதிர்காமம்.
அடி 29: மேனை அரிவைக்கு உரிய பேரன்-- மேனை-- பார்வதியின் தாயார். இமயராஜன் மனைவி. பேரன்-- மகள் வயிற்றுப் பிள்ளை.
அடி 32 வேளைக்காரன் - பொழுது போக்குபவன்-- என்னும் பொருளைக் 'குருவி யோச்சிய... திருமானை... தொழுது என்றும் பொழுது போக்கிய பெருமாளே' என வரும் திருப்புகழிலும் (1181) காண்க. 'வேளை' - என்னும் சொல் 'பொழுது', 'தக்கசமயம்' என்னும் பொருளில் ஆளப் பட்டுளது. 'வள்ளி வேளைக் காரன்' 'வேளை புகுந்து',
'வேளை என நிற்கும்' என்னும் சொற்றொடர்களை--166,498, 624, 1000, 1003, 1025, 1026, 1029, 1179, 1181,1186, 1241,1245 - எண்ணுள்ள திருப்புகழ்ப் பாக்களிற் காண்க. 'தக்க சமயம்' என்னும் பொருளில் -
-
'இதுவேளை என்று கிராத குலதிலக மானுடன் கலவி புரிவாய்' - (திருப். 1245)
'வேடர்மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா - [திருப். 1029]
'இன்புற வேளை யெனும்படி சென்றிறைஞ்சிய பெருமாளே' --[திருப். 1179]
வேடர் சிறுக்கிக்கு...'நட்பொடு வேளையென புக்கு நிற்கும் வித்தக'
--[திருப். 1186]
--என வருமிடங்களிற் காண்க.
6. பூத வேதாள வகுப்பு
அடி 1-6; 'ஆயி' என்னும் வரையில் பார்வதி தேவியைக் குறிக்கும் அருமையான துதி.
அடி 7. நக்கீரரைப் பிடித்த பூதம் குதிரை முகத்துப் பூதம் என்பது இதனால் தெரிகின்றது. வேடிச்சி காவலன் வகுப்பு 22-ஆம் அடியாலும், புயவகுப்பு 22ஆம்
அடியாலும் அது ஒரு பெண்பூதம் என்றும் தெரிகின்றது.
அடி15. 'அப்படி பத்தி பழுத்த'--அப்படி என்னும் சொல்லின் பொருள் வேடிச்சி காவலன் வகுப்பு. அடி 19-ன் குறிப்பைப் பார்க்க. [பக்கம் 191].
அடி 16. 'ஆறு நிலை' என்பது ஆறு திருப்பதி-- ஆறு படைவீடு. [பக்கம் 151-அடிக்குறிப்பு பார்க்க].
41-80 அடிகள்: பரணி நூல்களில் உள்ளவாறு மிக அருமையான 'போர்க்களத்துப் பூத வேதாள' வர்ணனை. முருகவேள் சூர சங்காரஞ் செய்த போர்க்களத்தில் உலவிய
அனேக வித பூத வேதாளங்கள்--
(1) சிறு பிள்ளைகள் புளியங் கொட்டைகளில் 'ஒற்றையா இரட்டையா' பிடித்து விளையாடுவது போல யுத்த களத்தில் இறந்து பட்ட அசுர மன்னர்களின் முடிகளினின்றும் சிதறி விழுந்த ரத்ன மணிக் குவியல்களை வைத்துக் கொண்டு ஒற்றை இரட்டை பிடித்தனவாம். (அடி 45).
(2) குகைகளில் யோகஞ் செய்யும் யோகீசுரர்கள் போல இறந்து பட்ட யானைகளின் வயிற்றிற் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தனவாம். (அடி 56).
(3) ருசிகரமான மாமிச விற்பனைக் கடை வைத்துள்ளேம் எனக் கூறி இறந்த யானைகளின் எலும்புகளைக் கொண்டு கடைகள் கட்டி வைத்தனவாம். (அடி 57).
(4) பலவித தாள பேதங்களுடன் பலவித ராகங்களைப் பாடிக் களித்தனவாம். (அடி 61-80).
அடி 63-65, 70-74: தாளங்களின் பெயர்களும், ராகங்களின் பெயர்களும், வாத்தியங்களின் பெயர்களும் சொல்லப்பட்டுள. தாளங்களுள் சச்சபுடம், சாசபுடம், சட்பிதா புத்திரிகம், சம்பத்து (வேட்டம்), உற்கடிதம்- எனப்படும் பஞ்ச தாளங்களும்; ராகங்களுள் –வாரளி சிகண்டி, பால (பாலை?), சீகாமரம், விபஞ்சி, கவுட (கவுடி?), பயிரவி, லளிதை, கவுசிகம், கவுளி, மலகரி, பவுளி (பவுரி?) வராடி, படமஞ்சரி, தனாசி, பஞ்சமம், தேசி, குறிஞ்சி என்பனவாகும்: வாத்தியங்களுள் - யாழ், உடுக்கை, இடக்கை, (போர்ப்)பறை, மத்தளம், கொட்டு வாத்தியம், துடி, சந்த்ரவளையம், (வீர)முரசு, திமில், தடாரி, குடம், பஞ்சமுக வாத்தியம், கரடி பறை (கரடிகை) கூறப்பட்டுள. [இதனால் அருணகிரியார் காலத்தில் (பதினைந்தாம் நூற்றாண்டில்) தெரிந்திருந்த தாள வகைகள், ராக வகைகள், வாத்திய வகைகள், புலப்படுகின்றன.] கால மாறாத வராளி, பால சீகாமரம், மான விபஞ்சிகை, [1]கவுட பயிரவி, [1]லளிதை கயிசிகை, கன வராடி, அரும் (அருமையான) படமஞ்சரி, தன தனாசி, விதம்படு பஞ்சமி--என அந்த அந்த
ராகத்துக்குத் தக்க அடைமொழி கொடுத்துள்ளார். கவுசிகம்--சீகாமரம்--மருதயாழ்த் திறன் வகை: வராடி, பஞ்சமம், தனாசி, சிகண்டி--இவை பாலையாழ்த் திறன் வகை; கௌடி, விபஞ்சிகை, மலகரி, குறிஞ்சி - இவை குறிஞ்சியாழ்த் திறன் வகை. பஞ்சமம் குறிஞ்சியாழ்த்திறன் வகையிலும் 2சேர்க்கப் பட்டுள்ளது. பூதவேதாள வகுப்பின் கருத்தமைந்த திருப்புகழ்ப் பா - 1013 (பக்கம் 142 பார்க்க).
---------------
[1]. "இதத்த கயிசிகம் இனித்த பயிரவி' பொருகளத் தலகை வகுப்பு (29) 'இசை தனி லினியகயி சிகை கவுட வராளி'-- புய வகுப்பு (17). 2. பிங்கல நிகண்டு.
------------------
7. பொருகளத் தலகை வகுப்பு
அடி 3. குறடு - இறைச்சி கொத்தும் பட்டை மரம், 'ஊனமர் குறடு' சிந்தாமணி 2281.
அடி 5. 'அரக்கர் முடிகளை அடுப்பு வகிர்வன அவற்றின் உலை யென இரத்தம் விடுவன', 'அவர்கர அகப்பை': அரக்கர் தம் முடிகளை அடுப்பாக அமைத்து உலை நீராக ரத்தத்தை அலகைகள் (பேய்கள்) விட்டனவாம். அரக்கர் கரம் அகப்பைகளாம். இக்கருத்தைப் பின் வரும் நூல்களிற் காண்க:
(i) ஆண்தலை - அடுப்பின் வய வேந்தர் ஒண் குருதிசினத் தீயிற் பெயர்பு பொங்க...தொடித் தோட்கை துடுப்பாக - (மதுரைக் காஞ்சி. 29-34) (ii) முடித்தலை அடுப்பாக புனற்குருதி யுலைக் கொளீஇத் தொடித் தோள் துடுப்பிற் றுழந்த வல்சி
(புறநானூறு 26). (iii) முடித்தலை யடுப்பில் தொடித்தோள் துடுப்பில் (சிலப்பதிகாரம் 26 - 242). (iv) 'அசுரர் சிரங்கள் அடுப்பா வைத்து'-போர்க் களத் தலகை வகுப்பு - அடி 24.
அடி 10. அவித்து நுகர்வன. அவித்து = வேக வைத்து.
அடி 17. துதிக்கை மலை = யானை.
அடி 20. துவக்கி - சிக்கி, மாட்டிக் கொண்டு. அவசமொடு + விக்கி (விக்க லெடுத்து):
அடி 21. துருத்தி - ஊது வாத்தியம்; நாடக அரங்கு எனவும் கொள்ளலாம்.
அடி 22. கழி நெடில் - ஐந்து சீர் அளவைக்கு மேற்பட்ட பாடல்கள்.
அடி 29. (i) 'இதத்த கயிசிகம் இனித்த பயிரவி' - பக்கம் 187 –ன் கீழ்க் குறிப்பைப் பார்க்க.
(ii) 'எழுவகை நிருத்தம்' - எழுவகைக் கூத்து - குரவை, கலி நடம், குடக் கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை, விதூடக் கூத்து (வசைக் கூத்து); வெறியாட்டு முதலாகிய கூத்துக்களும் கூட்டி ஏழென்பதுண்டு.
"எழுவகைக் கூத்தும் இழிகுலத் தோரை
யாட வகுத்தனன் அகத்தியன் தானே"
(சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை - பக்கம் 80-81 உரை)
---------
8. செருக்களத் தலகை வகுப்பு:
அடி 7-10. யானைத் தலை முத்தைச் சமையல் செய்வது: பனைக்கை மதமலை - தலை - உக்குள - தரளத்திரளை - அடியென் - உரலிட்டு - மருப்புலக்கை குத்தி - உலை வைத்து
உணவைச் சமைக்கும். யானை மத்தகத்தினின்று உதிர்ந்த முத்துக்களை - யானையின் அடியாகிய உரலிலிட்டு – தந்தம் என்னும் உலக்கையால் குத்தி - உலை வைத்துச் சமையல் செய்யும் ஒரு பேய்க் கூட்டம். 'கறையடி யானை, - பெரும் பாண்-351; கறை=உரல் 'முத்துலைப் பெய்முதுகுன்றமே'-சம்பந்தர் 131-7., 'களிற்று மருப் புலக்கையினில்... தரளத்தினை குறுவாளை...திருப். 797. 'கருங்களிற்றின் வெண் கொம்பால்...இடிப்ப' ஈங்கோய் மலை எழுபது, 20, (பக்கம் 152)
அடி 11: தடித்து=மின்னல் கட்கம்=வாள்.
அடி 13. 'அதரத்து விரற்பட வைத்து அரவத்தொடு கொக்கரிக்கும்; பிள்ளைகள் உதட்டில் விரல் வைத்து சீழ்க்கை யிடுவது (ஊதுவது) போலச் செருக்களத்திற் பேய்கள் தமது வாயிதழில் விரல் வைத்துச் சீழ்க்கை யிட்டனவாம்.
அடி 14. முக்கி-மொக்கி: நிரம்பவுண்டு.
-------------
9. போர்க் களத் தலகை வகுப்பு.
அடி 25. பாரத யுத்தத்திற் கோபாலன் பூபாரந் தீர்த்தது கூறப்பட்டுளது.
----------
10. திருஞான வேழ வகுப்பு
சிவஞானத்தைச் செயலற்ற அநுபூதி நிலையின் மீதுற்று விளங்கும் மவுன, நிர்க்குண, சிவமய ஞானக் களிறு என்றார். ஞானத்தை வேழத்துக்கு ஒப்பிடுதல் உண்டு. ' சிவ
ஞானக் கடாக் களிறு' (கந்தர் கலி வெண்பா): 'முத்தி நாடெய்த வோர் ஞான வாரணம் நல்குதி' - பண்டார மும்மணிக்கோவை 2; 'போதகம் போதகம்' - பாசவதைப்பரணி-545. (போதகம்-ஞானம், யானை): சிவஞான வேழம் (களிறு) செய்ய வல்ல பெருஞ் செயல்கள் பதினெட்டு என்கின்றார். இந்தச் சிவஞான வேழம்-
(1)உடற் சிறையை நீக்கி நிட்கள வெளியில் நிற்கும்; (2) சமய தர்க்க விரோதிகளைச் சிதறி மோதி வெருட்டும்; (3) மனத்தை[1] (நெஞ்சக் கனகல்லை) உருக்கி அழிக்கும்; (4) ஆசை, ஆணவம் என்னும் பூட்டுக்களினின்றும் விடுவிக்கும்; (5) பிறவிக் கடலைக் கடக்கும்; (6) போரிற் பகைவரை அற்புத வகையில் வெருட்டி ஓட்டும் (கடகம் = சேனை[2]); (7) இருவினைகளையும் கழல (நீங்க) வைக்கும்; (8) யோகிகளின் களைப்பை நீக்கும்; (9) பல கவலைகளையும் அழிக்கும்; (10) இறைவனது கருணைத் திருவருளையே கவளமாக மொக்கும் (திருவருளிலேயே திளைக்கும் என்றபடி); (11) காமனை வெல்லும்; (12) சகல மாயைக் கோட்டைகளையும் அழிக்கும்; (13) கோபத்தீ அவியும்படிப் பொறுமைப் ப்ரவாக நதியைப் பெருக்கும்; (14) லோபத்தையும் மோகத்தையும் அழிப்பிக்கும்; (15) மதம் என்னும் மரத்தின் வேரைப் பறித்தெறியும்; (16) ராஜதம்[3] ஆதிய முக்குண மதில்களை இடித்தழிக்கும்; (17) எண்ணிறந்த அறிவுக் கலைகளை வீசி அளிக்கும்; (18) திருத்தணிகேசரது திருப்புகழைப்பாடும் நாவலர் கூட்டம் பிரியப்படும்படி அவர்களுக்கு இனிது அருள்பாலிக்கும்.
---------------
[1]. அடி 3. "புகர் மனக்கிரி தனை முருக்குவ" என்றும் பாடம். அடி 11-ல் 'மதம்' பின்னும் வருகின்றதால் 'மனக்கிரி' என்பதே சரியான பாடம்.
[2]. அடி 5. "அப்படி ஓட மோதுவ"-என்றும் பாடம்.
[3]. அடி 11. 'ராச தாமத' என்றும் பாடம்.
---------------
11. திருக்கையில் வழக்கம்.
இவ்வகுப்பு திருத்தணிகேசரது திருப்புகழைப் படிப்பவர்க்கு அப்பெருமானது திருக்கையால் அளிக்கப்படும் ப்ரசாத மகிமையைக் கூறுவது. அடி 13-14. 'வினைப்பகை செகுப்பவன்' என்பது 'நினைப்புடை மனத்தவர் வினைப் பகையு நீயே' என்னும் சம்பந்தர் திருவாக்கை (II-30-6) நினைவூட்டுகின்றது.
------------
12. வேடிச்சி காவலன் வகுப்பு
அடி 4. சத பத்ரம் என்னும் சொல்லுக்கு 'மயில்' என்றும், 'தாமரை' என்றும் பொருள் உண்டு.
அடி 6. அருணை நகரில் ஒரு பக்தன் எனத் தம்மையே படர்க்கையிடத்துக் குறித்துத் தாம் பாடிய திருப்புகழை முருகவேள் மதாணியாகப் (பதக்கமாகத்) திருமார்பிற் புனைந்து கிருபாகர மூர்த்தியாய் விளங்குகின்றார் - என்கின்றார். படர்க்கையிடத்தில் தம்மைக் கூறினதால் இவ்வகுப்பு அருணகிரியார் கிளியான பின்பு பாடினர் என்னுங் கொள்கையை வலியுறுத்தும்.
அடி 12-13. விசேட அறிவையும், வித்தைகளையும் இறைவனிடத்தில் தாம் பெற்ற தலங்களாகத் திருவருணை, திருவிடைக்கழி, திருச்செங்கோடு, திருத்தணி, அமராவதி
கூறப்படுகின்றன. வயலூர் ஏன் விடப்பட்டிருக்கின்றது என்பது விளங்கவில்லை. திருப்புகழ் நித்தம் பாடும் பணி ஒன்றே அங்கு கிடைத்த காரணத்தாலும் திருப்புகழில் வயலூரை வைத்துப் பாடுக என்றதனாலும் பிற நூல்களில் வயலூரைக் குறிக்க இல்லை போலும். [பக்கம் 178].
அடி 19. [i] முருகவேள் தம்மை வழியடிமையாக ஆட்கொண்டு அருளிய அருட் ப்ரசாதத்தை இங்கு குறிக்கின்றார்.
2) இனிது கவி யப்படி ப்ரசாதித்த பாவலன் – இதில் வரும் 'அப்படி' என்ற சொற் ப்ரயோகம் கவனிக்கத் தக்கது. பூத வேதாள வகுப்பு 15-ஆம் அடியில் 'அப்படி பத்தி பழுத்த மனத்தினர்' என்றும், திருஞான வேழ வகுப்பு 5-ஆம் அடியில் 'கடகம் அப்படி சாயமோதுவ' என்றும், திருப்புகழ் 866-ஆம் பாட்டில் 'ஒருபொருள் அப்பர்க் கப்படி ஒப்பித்தர்ச்சனை கொண்ட நாதா' என்றும் வருவன நோக்கின், அப்படி என்னும் சொல் 'அந்நிலையில், அந்த அற்புத வகையில்', 'ஆச்சரியப் படத்தக்க வகையில்', அந்த க்ஷணத்தில் ' என்று பொருள் படும்படி உபயோகப்படுத்தப் பட்டுளது என விளங்கும். ஸ்ரீ சம்பந்தர் தேவாரத்தில் 'ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே' [திருவாவடு துறை III-4-7] என வரும் இடத்தும் இத்தகைய பொருளே. திருப்புகழ் 861-ஆம் பாட்டு நாலாவது அடியில் -'மங்கா நற்பொருளிந்தா அற்புதமென்றே இப்படி அருள்வாயே' (திருப்பனந்தாள்) என்ற இடத்தும் 'இப்படி' என்ற சொல் இத்தகைய பொருளில் வருகின்றது.
அடி 22. (i) 'இவுளி முகி'- பூத வேதாள வகுப்பு
அடி 7, குறிப்பைப் பார்க்க. இவுளி = குதிரை.
2) 'ராவுத்தன்' - குதிரை வீரனை ராவுத்தன் என்பர். [கந்தரலங்காரம் 37].
அடி 28. 'மநு பவன சித்தன்' எனப் பிரிக்கவேண்டும். மநு = மந்திரம்; பவனம் = வீடு; மந்த்ர வீட்டுக்கு உரிய சித்தன் என்க. மனோ+துக்க+பேதனன் = மனத்துயரைப்
பேதிப்பவன் (நீக்குபவன்).
-----------
14. வேல் வாங்கு வகுப்பு.
அடி 1. திடவிய - திடம் என்னும் சொல்லினின்றும் வந்த உரிச்சொல். 'திடமான', 'உறுதியுள்ள' என்று பொருள்; கனம் - என்பதிலிருந்து 'கனவிய' வந்தது போல - 'கனவிய விலை ஓலை' திருப்புகழ் 502.
அடி 3. தீமான் - தீக்குணத்த - கதர் - கதத்தினர் - கோபத்தினர். கதம் = கோபம்.
அடி 5. சிம்பெழ = துள்ளி ஓட, துண்டு துண்டாய்ச் சிதற.
அடி 9. பிரமனைச் சிறையிட்டது வேல் என்பர் அருணகிரியார். கந்தரந்தாதி 14 [பக்கம் 153 பார்க்க]. விட வசனம் - விஷம் பொருந்திய சொல். இது முருகன் கையில் உள்ள வேலுக்கு என்னால் தான் இப்பெருமைகள் எல்லாம் வந்தன என்று பிரமன் அகங்கரித்துக் கூறிய சொல் (திருமுருகாற்றுப்படை - அடி 163-165 – நச்சினார்க்கினியர் உரை)
அடி 10. எழில் வீவான் பொழில். அழகு வீந்த (அழிந்த) சிறந்த பொழில்.
அடி 11. விழைவு தரும் பத சசி - ஆசைப்படும் படியான பதத்திலுள்ள சசி (இந்திராணி). நூறு அசுவமேத யாகம் செய்தார்க்கே இந்திர பதவி கிடைத்துச் சசியை அநு பவிக்க முடியு மாதலின், திருப். 232 (பக்கம் 49 பார்க்க.) இனிமை தரும் சொற்களைப் பேசும் சசி - எனப் பொருள் கொள்ளுதல் அவ்வளவு சிறப்பினதல்ல.
அடி 13. கண்டகன் - துஷ்டன் (சிங்கமுகாசுரன்) மேல் வாங்கிளை - மேல் வாவும் கிளை. அவன் மேற்சார்ந்த உறவினர் கூட்டம்.
அடி 17. பணியாம் அங்கதர் - பாம்பாகிய தோளணி பூண்டவர், அங்கதம் - தோளணி, வாகுவலயம்.
அடி 18. ஆசாம்பரை - திக்குகளே, புடவை - திகம்பரி.
அடி 20. அபிநய பங்குரை சங்கினி - நாடக இலக்கண பாகங்களை அறிந்து கூறுபவள்: மான் ஆம் கண்ணி – மான் போன்ற பார்வை உடையவள்: ஞானாங்குரை - ஞானம்
அங்குரம் - ஞான முளை.
அடி 21. நாக அங்கதை - பாம்பைத் தோள்வளையாக உடையவள்.
அடி 22. அந்தணி - அந்தணன் என்னும் சொல்லுக்குப் பெண்பால். ஆம் - ஆங்கு - அறி - தாய் - (இன்னது) ஆம் என்பதை அறிந்து அப்பொழுதே (அடியார்களுக்கு) உதவும் தாய். 'வேண்டத்தக்க தறிவோய் நீ' திருவாசகக் கருத்து.
அடி 32. வேல் வாங்கவே - வாங்குதல் பிரயோகித்தல். வேல் வாங்குதல் என்னும் சொற்பிரயோகத்தைக் கந்தரலங்காரம் 51,77,83 எண்ணுள்ள பாடல்களில் 'மலையாறு
கூறெழ வேல் வாங்கினானை', 'வேல் வாங்கி பூங்கழல்', 'தனி வேல் வாங்கி அனுப்பிட' என வருமிடங்களிலும் காண்க. திருப்புகழ் 480-ஆம் பாட்டில் 'தேவேந்திர னகர் வாழ, விரிகடல் தீமூண்டிட, நிசிசரர் வேர் மாண்டிட, வினையறவேல் வாங்கிய பெருமாளே' என்ற இடத்தும், 1115 எண்ணுள்ள திருப்புகழில் 'பிரமா ஓட...வரை சாய ஆழி வற்றிட...சூர்மாள விக்ரம வேல் ஏவு' என்ற இடத்தும் வேல் வாங்கு வகுப்பின் கருத்தைக் காணலாகும்.
-------------
15. புயவகுப்பு.
இது அருமையாய் அமைந்து பொருள் செறிந்துள்ள வகுப்பு. முதல் பன்னிரண்டு அடிகளில் திருமுருகாற்றுப்படையை அப்படியே தழுவிப் பின்னர் முருகன் திருப்புயத்தின் சிறப்புகள் வேறு பலவற்றை எடுத்துக் கூறுகின்றது. எங்கள் பதிப்பு திருப்புகழ் மூன்றாம் பாகத்தில் அடிக்குறிப்புகளைப் பார்க்க.
அடி 40. வெருவுக வெருவ பூத பிசாசு ..போத... கண்டை வாசிக்கை கொண்டன ...புயங்களே; முருகன் திருக்கரம் ஒன்றில் 'மணி' உண்டு. ('ஒருகை பாடின்படு மணி இரட்ட'-திருமுருகாற்றுப்படை)-முருகன் திருக் கரத்தில் ஓசை தரும் மணி என்ன காரணம் பற்றி வைத்துள்ளார் என்பதை இந்த அடி விளக்குகின்றது. பூத பிசாசுகள் அஞ்சிப் போகும்படி-மணியை முழக்கி ஒலிக்கச் செய்கின்றார்- என ஏற்படுகின்றது. அது பற்றி பிசாசு சேஷ்டை, பூதசேஷ்டை உள்ள இடங்களில் இத்திருவகுப்பு ஓதுதல் சிறந்த தந்த்ர முறையாகும்.
அடி 17. ராகங்களின் பெயர்களைக் கூறி முருகர் 'இசைப் பிரியர்', என்பதைக் காட்டுகின்றது. 'ராகவிநோத' என்பது கந்தரந்தாதி 98. முருகர் வீணை வாசிப்பர் என்பதற்கு 'எம் இறை நல்வீணை வாசிக்குமே' (அப்பர்), 'விட முண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி' (சம்பந்தர்) என வரு வனவற்றை ஒப்பிடுக.
அடி 22. இயல் முநி. இயற்றமிழ் முநி-நக்கீரர் (திருமுருகாற்றுப்படை பாடினாராதலின்), நக்கீரர் ஆற்றுப்படை சொல்லிப் பரவ, முருகவேள் மலைக்குகையினின்றும் மஹாகோர குதிரை முகத்துப் பெண் பூதத்தினின்றும் அவரைக்காத்து அப்பூதத்தின் மார்பைப் பிளந்த சரித்திரம் கூறப் பட்டுளது.
அடி 24. இந்த அடி முருகவேளின் தியாகாங்க சீலத்தை (கொடைப் பெருமையை) மிக அருமையாக எடுத்துக் கூறுகின்றது. 'அடியவரிச்சையில் எவை எவை யுற்றன அவை தருவித்தருள் பெருமாளே' என்னும் திருப்புகழ்க் (727) கருத்தது. 'சிந்தாமணி, மேகம், காமதேனு (சுரபி), சங்க நிதி, பதுமநிதி (கஞ்சம்=தாமரை-பதுமம்) என்னும் இந்த ஐந்து பொருள்களின் கூட்டத்தை (பஞ்ச சாலம்-ஐந்தின் கூட்டம்) முருகவேளின் புயங்கள் கொடையில் வென்றன-என்றாவது; பஞ்ச சாலம்-ஐந்து தருக்களின் கூட்டம்)- எனக் கொண்டு சிந்தாமணி, மேகம், காம தேனு, சங்கநிதி, பதுமநிதி, கற்பகத்தரு ஐந்து (அதாவது சந்தானம், அரி சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற் பகம் என்னும் ஐவகைத் தெய்வ விருக்ஷங்கள்)-ஆகிய இவை எல்லாவற்றையும் முருக வேளின் புயங்கள் கொடைத் திறத்தில் வென்றன-என்றாவது பொருள் கொள்ளலாம்.
அடி 30. அடிமை தொடுத்திடு புன்சொல்...புனைந்தன.-சீர்பாத வகுப்பு அடி 23-24 குறிப்பைப் பார்க்க (பக்கம் 180 பார்க்க).
------------------
16. சித்து வகுப்பு.
1) அடி முதல் 36 வரை; இவை பல பச்சிலை மூலிகைகளின் பெயர்களையும் பிற மருந்து வகைகளின் பெயர்களையுங் கூறிப் பல சித்து வகைகளை விளக்குகின்றன.
2) அடி 37 முதல் 72 வரை: இது சித்தன் கூறுவது -'நான் ஒரு சித்தன்: (பல நகைகளின் பெயர்களைக் கூறி) (இந்த) நகைகளுடன் பாட்டி புதைத்து வைத்த குடத்தில் உள்ள பணத்தையுங் கொண்டு வா; அவை எல்லாவற்றையும் கூட்டி உருக்கி நான் ரசவாதஞ் செய்வேன்; அதிலிருந்து வருங் கோடிக் கணக்கான செம் பொன்னைக் கொண்டு நீ ஏழு நிலைமாட வீடு மேய்ந்து (கட்டிக்) கொள்ளலாம், இது சத்தியம். நான் கடைசியாக உண்டது தேவர்களுடன் பார்வதி கலியாணத்தின் போது; என் பசிக்குத் தக்கவாறு நீ
அமுதளித்து, விருந்து செய்து, பாக்கு, வெற்றிலை கொடுத் துச்சுகமாய் இருப்பாயாக.
3) அடி 73 முதல் 96 வரை: முருகவேளது பெருமைகளைக் கூறி மேற்சொன்ன சித்தர்களினும் மேம்பட்ட பிரசித்த சித்தர் முருகவேளின் திருப்புகழைக் கற்றவர்- என முருகன் திருப்புகழ்ப் பெருமையை எடுத்துக் கூறும் இச்சித்து வகுப்பு.
4) அடி 73-74, 'தருண சந்த்ர ரேகை விரவு மண நாறு பாதார விந்த...மாதா'-தேவியின் தாளில் இறைவன் வணங்குவதால் இறைவன் முடியிலுள்ள திங்களின் மணம் தேவியின் திருவடியிற் கமழுகின்றது -என்றார். 'திங்கட்கவின் மணநாறுஞ் சீறடி'-அபிராமி யந்தாதி-35.
குறிப்பு: 'நமச்சிவாய வாழ்க' என்னும் திருமந்திரத்தொடு திருவாசகம் தொடங்குவது போல 'அடல் புனைந்த வேலுமயிலும் என்றும் வாழி' என்னும் திருமந்திரத் தொடு
இந்த சித்து வகுப்பு தொடங்குவது கவனிக்கற் பாலது.
------------------
17. கடைக்கணியல் வகுப்பு.
முருகவேளின் மயில், அவர் திருக்கை வேல், அவர் கடைக்கண் பெருமை-ஆக இம் மூன்றையும் நாம் தியானிப்போம்-வாருங்கோள்-என உலகோர் யாவரையும் அழைத்து
அங்ஙனம் அவை தமைத் தியானஞ் செய்வதால் இன்ன இன்ன பேறுகள் கிடைக்கும் என்பதை இவ்வகுப்பால் விளக்குகின்றார் சுவாமிகள்.
அடி 3. என்றும் பெற்றடையத் தக்கதான முத்தி, செந்தமிழ் (இவையிரண்டும் கிடைக்கும் படியான) திருவருளைப் பெற நினைத்து அங்ஙனமே அவை சித்திக்கப் பெறலாம். கிடைக்கப் பெறலாம் முத்திக்கும், செந்தமிழ்க்கும் என்பன முத்தியையும் செந்தமிழையும் அருளாற் பெற-என்றபடி.
அடி 6. இருவரே இருந்த போதிலும் பலர் இருந்த போதினும் அவர் நடுவில் இருக்கும் பொழுது பார்த்தவரெல்லாம் இவன் ஒருவன் ஒப்பற்றவன் -ஒரு ஞானி-என்று பாராட்டும் படியான உணர்ச்சியைப் (பேரறிவைப்) பெறலாகும். தனித்தோ, கூட்டத்திலோ நாம் இருந்தால் தம்மை நோக்கும் பொழுதே இவர் ஓர் மாபுருஷர் என்று பிறர் எளிதிற் கண்டறியும் படியான அறிவின் பொலிவு (ஞானதேஜஸ்) நமக்குக் கூடுதலாகும்.
அடி 8. பலிப்பது அகல விடும்-(பிறவித்) தோற்றங்களை நீங்கும் படிச் செய்யும்; அல்லது (வினையீட்டங்கள்) தோன்றிப் பெருகுதலை விலக்கும்-எனக் கொள்ளலாம். 'பரமேசர் ஒரு சற்றும் உணரார்..என் ஊழ்வினை பலித்ததுவுமே (மதுரைக் கலம்பகம் 20).
அடி 10. இது 'தில்லையில் தாம் பெற்றநிர்த்த தரிசனப் பேற்றினைக் கூறுகின்றது. (பக்கம் 27-28).
அடி 15. மலைக்குப் பேரனாயிருந்தும் மலையிடியத் துணிந்தான் என்பது துஷ்ட நிக்ரகம் செய்வதில் முருகவேளின் நடுவு நிலைமையைக் காட்டுகின்றது. ஒருவர்
தனக்கு வேண்டியவராயிருந்த போதிலும் அவர் பிழையான வழியிற் சென்றால் அவரை முருகன் தண்டிப்பான் என்பது குறிப்பு.
------------------
18. சிவலோக வகுப்பு.
இவ்வகுப்பு அன்பின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது. இன்பம் தேக்கிய (நிறைந்த) அன்பே சிவலோகம் என்றார் (அடி 16). 'அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார், அன்பே சிவமாக தாரும் அறிகிலார்'-என்பது திருமந்திரம். (270). காரைக்காலம்மையார் சிவபிரானிடம் கேட்ட முதல் வரம் "இறவாத இன்ப அன்பு"- (பெரிய புராணம்-காரைக்கால் 60) இறவாத=அழிவு இல்லாத, இது தான் 'இன்பந் தேக்கிய அன்பு' இவ்வன்பு என்னும் சிவலோகம் தருவது பதினாறு பேறுகள் அவைதாம்-
(1)[பார்ப்பதி மைந்தன், கமலாலயன் (தாமரையில் இடங்கொண்டு தோன்றியவன்), படையினன், சேவகன், வரபதி, சுரபதி, கந்தன், கார்த்திகேயன், குருபரன், கதம்பன், கருணாகரன், மால் திருமகன்-ஆகிய முருகவேளின் திருவடிச் சூட்டு: (2) தீக்ஷை என்னும் குண்டலம்; (3) அணிமயச்சிவிகை;(4) அரியாசனம்; (5) பொன்னாடை,
(6) சயசாரம், (7) அத்துவித நிலை; (8) பிணியின்மை; (9) ஆக்கம்; (10) இன்பம்; பின்னும் (11) இரப்போர்க்கு ஈகை என்னும் எக்காளம்; (12) துறவு நிலையினுங் கொடை என்னும் சங்கு; (13) பொறை என்னும் முரசு; (14) தேவரும் முநிவரும் உலகோரும் இறைஞ்சும் படியான கீர்த்திக் குதிரை; (15) வெற்றி வாரணம் (யானை); (16) வினை யொழிய வல்ல சுத்த பரம மவுனம்.
வகுப்புகளின் ஆற்றல்.
மேற் சொல்லப்பட்ட திருவகுப்புகளின் ஆற்றலைப் பற்றிக் கூறுவாம்.
(1) சீர்பாத வகுப்பு: ஞானத்தை அளித்து யமபயத்தை நீக்கி, அருள் நெறியிற் சேர்த்து வினைப்பகை ஆதிய எவ்வகைப் பகையையும் அழித் தொழிக்க வல்ல மணி வகுப்பு இது.
(2) தேவேந்த்ர சங்க வகுப்பு: பூதம், பிசாசு, கடிய வினை ஆதிய துஷ்டப் பகைகளையும் யமனையும் வெருட்டு தற்கு வல்ல மந்திர வகுப்பு இது.
(3) வேல் வகுப்பு: எவ்வித ஆபத்தையும் விலக்கி உயிர்த் துணையாய் நிற்கும் ஔஷத வகுப்பு (மருந்து வகுப்பு) இது. ஆகவே, முதல் மூன்று வகுப்புகளும் மணி மந்திர ஔஷத வகுப்புகளாம் என்க.
(4)-(6) 4-ஆம் வகுப்பு-திருவேளைக்காரன் வகுப்பு 12-ஆம் வகுப்பு-வேடிச்சி காவலன் வகுப்பு. 15-ஆம் வகுப்பு-புய வகுப்பு- இம் மூன்றும் தோத்திரத்துக்கு உரியனவாய்ப் பத்தித்துறை யிழிந்து ஆனந்த வாரியில் திளைத்து நிற்பதற்கு உதவும் துதி வகுப்புகளாம் என்க.
(7) 14-ஆம் வகுப்பான 'வேல் வாங்கு வகுப்பு'-நித்திய பயத்தைத் தீர்க்கும் மருந்து வேல் வகுப்பு என்றால்- இவ்வேல் வாங்கு வகுப்பு-'அணு குண்டு வகுப்பாம்' "பெரு மருந்து வகுப்பு" என்க. போர், பூகம்பம், வெள்ளம், தீ- எனப்படும் பெரிய ஆபத்துக்களி னின்றும் நம்மை விலக்க வல்ல பேராற்றல் வாய்ந்தது.
(8) 17-ஆம் வகுப்பு: கடைக்கணியல் வகுப்பு: 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் நன்னோக்கத்துடன் உலகோரை நல்வழிப் படுத்தி அவர்களுக்கு உய்யும் வழியை எடுத்துரைக்கும் பெருங்கருணை வகுப்பு இது. பிரசங்க காலத்திற் பலருக்கும் பயன்படுவகையில் அறிவூட்டத்தக்கது. இதைத் 'திருவருட் ப்ரசாத வகுப்பு' எனவும் கூறலாம். மேற் காட்டிய இவ்வெட்டு வகுப்புகளும் பாராயணத்துக்கும் மனப்பாடத்துக்கும் மிக உரியனவாம்.
வேல் விருத்தம், மயில் விருத்தம், திரு எழு கூற்றிருக்கை.
இவை சுவாமிகள் திருவாக்காக இருக்கலாம். சேவல் விருத்தம் என்று கூட ஒரு நூல் இருக்கிறதென்று கேள்வி. அதை வைத்துள்ளோர் அதை வெளியிடல் நன்றாம். "ஆடும்பரி, வேல், அணி சேவலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய்"- என வேண்டின சுவாமிகள், வேல், மயில், சேவலைத் தனித்தனி விருத்தங்களாற் பாடி யிருக்கக்கூடும். திரு எழு கூற்றிருக்கை சம்பந்தப் பெருமான் பாடிய திரு எழு கூற்றிருக்கையைப் பின்பற்றியது. இதிற் சில பாகம் குறைவாக உள்ளது. எங்கள் திருப்புகழ் மூன்றாம் பாகத்திற் காணவும். சுவாமிகளது நூல்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகள் இவ்வாறு ஒருவாறு முடிகின்றன. இனி, சுவாமிகளது கவித்திறம், உபதேச தத்துவங்கள் முதலியவற்றை ஆராய்வாம்.
-----------------------
12. அருணகிரி நாதர் கவித்திறம்.
சுவாமிகள் வரகவி யாதலின் நால்வகைக் கவியிலும் குருத்துவம் பெற்ற கவியாவர். ஆதலின், இவரை நாற்கவி ராஜர் என்னலாம். இவர் ஆயிரக்கணக்காய் (16,000) பாடல்கள் பாடியுள்ளாராதலின் இவர் வித்தார கவியாவர்; ஓசை யின்பம் ததும்பும் பலவகைய மதுர கவிகளை- இனிய சந்தப் பாக்களைப்-பாடியுள்ளாராதலின் இவர் மதுரகவி யாவர். அத்தகைய மதுரகவிகளுக்கு உதாரணமாகத் திருப்புகழில் 115-குன்றுங் குன்றும் 126-கடலைச் சிறைவைத், 340-புவனத் தொரு, 610,-காயமாய-889- கந்தவார்-முதலிய பல பாடல்கள் உள்ளன. ஒரு திருப்புகழில் பிறிதொரு திருப்புகழ் கரந்துறையும் பாடல்களும் (173, 319, 476), ஒரே எழுத்து வர்க்கத்தில் -தகர எழுத்து வர்க்கத்தில்-சொற்கள் அமைந்துள்ள பாடலும் (திதத்தத்தத்-கந்தர் அந்தாதி 54), வல்லோசையே மிக்குவரும் பாடல்களும் (திருப்.474, 477), மெல்லோசை, இடையெழுத் தோசையே மிக்குவரும் பாடல்களும் (72,839, 664,665)- ஆகப் பலவகைய விசித்திரப் பாடல்களும் இவர் பாடியுள்ளாராதலின் இவர் 'சித்ர கவிப்' புலவராவர். திருப்புகழ், கந்தரந்தாதி முதலியன ஆசு கவியாகப் பாடிய காரணத்தால் இவர் ஆசுகவியும் [1] ஆவர். சுவாமிகளே 'நான் ஆசு பாடி யாடி நாடொறும்' (1129) என்று கூறியுள்ளார்.
---------
[1]. எழுத்தாணி முதலிய கொண்டு, யோசித்து எழுதுதலின்றி உடனுக்குடன் பேசுவது போல எளிதில் பாடும் கவி-ஆசுகவி.
2. அருணகிரியார் முத்தமிழ் அரசு
இனி, இவர் முத்தமிழ் அரசும் ஆவர்; செந்தமிழ் மணம் கமழும் அலங்காரம், அநுபூதி, அந்தாதி என்னும் இயற்றமிழ்ப் பாக்களைப் பாடித் தமது இயற்றமிழ்ப் புலமையையும், கணக்கில்லாத நுண்ணிய தாள அமைப்புகளையும், இசை நுணுக்கங்களையும் கொண்டுள்ளனவாய் இசைத் இசைத்தமிழுக்கே இலக்கியமாய் நன்கு அமைந்த "திருப்புகழ், திரு வகுப்பு" என்னும் வண்ணப் பாக்களைப் பாடித் தமது இசைத் தமிழ்ப் புலமையையும், திருப்புகழ்ப் பாக்களுள்ளும் பிற நூல்களிலும், நாடக இயலின் இனிமை பெரிதும் விளங்கப் பாடித் தமது நாடகத் தமிழ்ப் புலமையையும் சுவாமிகள்
விளங்கக் காட்டியுள்ளா ராதலின் சுவாமிகளை முத்தமிழ்ப் புலவர், 'முத்தமிழரசு' எனச் சங்கையின்றிக் கூறலாம். நாடகத் தமிழின் பொலிவு காணக்கூடிய இடங்கள் ஒருசில இவரது நூலகத்தினின்றுங் காட்டுவாம்.
1. ஜீவாத்மாவுக்குப் புத்தி புகட்டல்:
"அடா அடா! நீ மயக்கமேது சொலாய் சொலாய்!
வாரம் வைத்த பாதம் இதோ இதோ! (திருப். 441)
2. மனதுக்குப் புத்தி புகட்டல்:
"அந்தோ! மனமே! நம தாக்கையை நம்பாதே" -திருப். (330).
3: யமனோடு வாது:
1) பட்டிக் கடாவில் வரும் அந்தகா! உனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாது விடேன்***கட்டிப் புறப் படடா சத்திவாள் என்றன் கையதுவே. (கந். அலங். 64)
2) தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டிவிழ விடுவேன்**ஞானச்சுடர்வடிவாள் கண்டாயடா! அந்தகா! வந்துபார் சற்றென் கைக் கெட்டவே.(கந்அலங்25)
4. தேவர் முதலானோரைச் சூரன் போருக்கழைத்தல்.:
இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ!
அரியவன் முழுதுக்கும் அறையோ அறையோ!
எழு புவி உலகுக்கும் அறையோ அறையோ பொரவாரும் (திருப் 1140)
3. அருணகிரியார் நவரச நாவலர்
இனி, அருணகிரியாருடைய நூல்களில் நவரசங்களையுங் காணலாகும். உதாரணம்:-
[1] சிங்கார ரசம் (இன்பச் சுவை)
I. சிற்றின்பச் சுவை
கொந்துத் தருகுழல் இருளோ புயலோ!
விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ!
கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ! விழி வேலோ!
கொங்கைக் குடமிகு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
கொங்குற் றுயரல் அரவோ ரதமோ எனு மாதர் -- (திருப்-151)
II. பேரின்பச் சுவை
1. முருக மயூரச் சேவக! சரவண! ஏனற் பூதரி
முகுள படீரக் கோமள முலைமீதே--
முழுகிய காதற் காமுக! பதி பசு பாசத் தீர்வினை
முதிய புராரிக் கோதிய குருவே! யென்
றுருகியும் ஆடிப்பாடியும் இருகழல் நாடிச் சூடியும்
உணர்வினொடூடிக் கூடியும் வழிபாடுற்--
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
யுனதடியாரைச்சேர்வதும் ஒரு நாளே. திருப்,1273
2. பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கும் அமுது கண்டேன்...பரமானந்த...
சாகரத்தே. (கந்-அலங். 47)
3. நீயான ஞான விநோதந் தனையென்று நீ யருள்வாய்
சேயான வேற் கந்தனே! (கந்-அலங். 46)
4. சிவ மாதுடனே அநுபோகமதாய். (திருப். 563)
[2] ஹாஸ்ய ரசம் ( நகைச்சுவை பரிகாசம்):
1. மாதர் தோள் கூடி விளையாடும் சரச மோகம்
மாவேத சரியையோ! க்ரியா ஞான சமுகமோ. [திருப்.1050]
2. எக்காலு மக்காத சூர்க்கொத் தரிந்த...தச்சா
(பக்கம் 117 பார்க்க) (திருப். 737)
3. நீர்க்குமிழிக்கு நிகரென்பர் யாக்கை** செல்வம் மின்
போலும் என்பர்** பசித்து வந்தே ஏற்குமவர்க்கிட
என்னின் எங்கேனும் எழுந்திருப்பார். (கந். அலங் 66)
[3] கருணை ரசம்
1. பெருத்த பாருளீர்! மயிலையும் அவன் திருக்கை அயிலையும்
அவன் கடைக்கண் இயலையும் நினைத்திருக்க வாருமே!
அரசென நிரந்தரிக்க வாழலாம், அறஞ்செலுத்தி ஆளலாம்,
சித்தியாகலாம், வெற்றியாகலாம், புட்பகம் ஏறலாம்,
வெளுத்த இப அரசு ஏறலாம், உணர்ச்சி கூடலாம்,
வெற்றி பேசலாம் (கடைக்கண் இயல்பு வகுப்பு).
2. துமிக் குமர சரணம் என்னீர் உய்வீர். (கந்.அந். 97)
3. வையிற் கதிர்வடி வேலனை வாழ்த்தி வறிஞர்க் கென்றும்
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள். (கந்.அலங். 18)
4. எங்காயினும் வரும் ஏற்பவர்க் கிட்டது. (கந்.அலங். 59)
5. இலையாயினும் வெந்ததேயாயினும்...ஏற்றவர்க்கு
பகிர்ந்து வேல்வாங்கினானை வணங்கி நிலையான மாத
வஞ் செய்குமினோ. (கந். அலங். ௸ 51)
6. கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றங்கொண்டாடுவீர்காள்!
போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போமன்று பூண்பனவும்
தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவர்! ஐயோ! கெடுவீர்நும் அறிவின்மெயே. (கந்.அலங்78)
[4] ரௌத்ர ரசம் (பெருங் கோபம்):
பட்டிக் கடாவீல் வரிம் அந்தகா! உனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாது விடேன். (கந். அலங். 64)
(5) வீர ரசம். (வீரச்சுவை):
1. நாளென்செயும், வினைதான் என்செயும், எனைநாடி வந்த
கோளென்செயும், கொடுங்கூற் றென்செயும் குமரேசரிரு
தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளுங் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே. (கந்அலங் 38)
2. காலாயுதக் கொடியோன் அருளாய கவசமுண்டு
என்பால் ஆயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே. (கந்அலங்86)
[6] பயம் (பயச்சுவை):
1) இப்படி யோனிவாய்தொறும் உற்பவியா, விழா, உலகிற்
றடுமாறியே திரிதருகாலம்-எத்தனை யூழிகாலம்
எனத் தெரியாது, வாழி, யினிப்பிறவாது நீ யருள் புரிவாயே. (திருப். 1204)
2) மெய்யே என வெவ்வினை வாழ்வை யுகந்
தையோ அடியேன் அலையத் தகுமோ! (கந். அநு. 25)
3) ஒர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலரிட்டுனதாள்
சேரஒட்டார் ஐவர், செய்வதென் யான். (கந்.அலங்.4)
4) எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்துலகில் மங்குவேனோ. (திருப். 215)
[7] குற்சை ரசம். (இழிவு, அருவருப்புச் சுவை):
1) ஊனே றெலும்பு சீசீ மலங்களோடே நரம்பு கசுமாலம்
ஊழ்தோ யடைத்து மாசான மண்டும்
ஊனோ டுழன்ற கடைநாயேன். (திருப். 1220)
2) தொக்கறாக்குடில், அசுத்தம் ஏற்ற சுக துக்க
மால்கடம்** அவலப் புலால் தசை குருதியாலே
கட்டுகூட்டு, அருவருப்பு வேட்டு உழல. (திருப்.264)
[8] அற்புதம்:
(1) பேற்றைத் தவஞ் சற்றும் இல்லாத என்னைப் ப்ரபஞ்ச
மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்டவா! (கந். அலங். 1)
(2) சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (கந். அநு. 12)
(3) தீதாளியை ஆண்டது செப்புமதோ. (கந். அநு. 38)
(4) முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லு மதோ. கந்.அநு.44)
(5) எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற எ(ன்)னைப்பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொறையை
என்செப்பிச் செப்புவது! ஒப்பொன் றுளதோ தான்! (திருப்.460)
[9] சாந்தம்:
(1) பாழ்வாழ்வெனு மிப்படு மாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாமுளவோ
வாழ்வாயினி நீ மயில் வாகனனே. (கந். அநு. 31)
(2) வாழினும் வறுமை கூரினும் உனது
வார்கழல் ஒழிய மொழியேனே. (திருப்.1254)
(3) பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும்
அகந்தையையே. (கந்.அநு. 37)
------
4. அருணகிரியார் சந்தக் கவித் தலைவர்.
ஸ்ரீ சம்பந்தப் பெருமாளே அருணகிரியார்க்குச் சந்தப்பா வகையிற் குருமூர்த்தியாவர். சம்பந்தர் தம்மைச் 'சந்தமெல்லாம் அடிச் சாத்தவல்ல மறைஞான சம்பந்தன் (III-8-11 கடவூர்): சந்தமிகு ஞானமுணர் பந்தன் (II- 34-11-பழுவூர்); சந்தமே பாடவல்ல தமிழ் ஞான சம்பந்தன்- (II-12-11) -எனக் கூறியுள்ளது கவனிக்கற்பாலது. சம்பந்தர் அருளிய தேவாரத்தில் -முக்கியமாய்ப் பண்சாதாரி -திருவிராகத்தில் உள்ள சந்த பேதங்களை யெல்லாம் (III-67-81 பதிகங்கள்) அப் பெருமானது திருவருளால் நன்கு உணர்ந்து மகிழ்ந்து அருணகிரியார் பின்பற்றினர். சம்பந்தரே முருகவேள், அவரல்லது வேறு தெய்வமில்லை (அமண் சேனை...கழுமலங்கற் குரைத்தோன் அலதில்லை தெய்வங்களே -கந். அந். 29) எனப் பரவிப் பணிந்தனர். (பக்கம் 153 பார்க்க)
------------
5. அருணகிரியார் இசை ஞானியார்.
மேலும் வரகவியாதலின் முருக வேளின் தண்டையொலி, சதங்கை ஒலி, கிண்கிணி ஒலி, சிலம்பு ஒலியினின்றே சந்த கீத இலக்கண நுணுக்கங்களை எல்லாம் இவர் அறிந்தனர்.
'இசைத்திடுஞ் சந்தபேதம் ஒலித்திடும் தண்டை சூழும்
இணைப்பதம்' (திருப். 15)
'சதங்கை தருகீதம்' (திருப்.204), 'நாதகீத கிண்கிணி' (திருப். 236, 100), கிண்கிணிச் சிறு கீதம் (திருப்புகழ் 107), இனிய நாத சிலம்பு (திருப்.23) - என வருவன
காண்க. தண்டை ஒலி, கிண்கிணி ஒலி, சதங்கை ஒலி, நூபுர ஒலியினின்றும்-கீத இலக்கணங்கள் மாத்திரமன்று- மறை (ரகசியப் பொருள்கள்) கோடிக் கணக்கானவை
யுணர்ந்து மகிழ்ந்தனர். 'இனமறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை, கிண்கிணி; இலகு தண்டையம் புண்டரிகம் (திருப். 1219), 'நாத சதகோடி மறை ஒலிடும் நூபுரம்
-திருப். 703 என்கின்றார்.
-----------
6. அருணகிரியார் தாளச் செல்வர்.
தாள பேத வகைகளையும் அவைதம் நுணுக்கங்களையும் காணவேண்டில் திருப்புகழிற் காண்க எனத் தாள இலக்கண நூல்களின் ஆசிரியர்கள் எழுதியுள்ளார்-களாதலால்- தாள நுட்பமெல்லாம் உணர்ந்த உயர் பெருஞ் செல்வருமாவார் அருணகிரியார். தம்மையாண்ட ஆண்டவனது திருநாமத்தை முரச வாத்தியத்தின் தாள ஒலியிலும் அவர்
காண்கின்றார். 'குமர குருபர***குமர குருபர குமர குருபர என தாளம் குரைசெய் (ஒலிசெய்) முரசம்' (திருப். 517) என்கின்றார்.
---------------
7. அருணகிரியார் திருப்புகழ்ப் பாவகைக்கு ஆதிகர்த்தா
முருகபிரானது திருவருளால் அருணகிரியார்க்கு என்றே அவர் கேட்டுக் கொண்டபடி தனிச் சிறப்பு வகையில் புதுவகையாகச் சந்தப் பாக்கள் -அடி தொறும் தொங்கல் ஒன்றும் அழகு மிக அமையுமாறு-அமைந்தன பாடலின் முடிவு "பெருமாளே", 'தம்பிரானே' எனப்பொலிவுற அமைந்தது.
அங்ஙனம் தொங்கலுடன் பாடு என்று எடுத்துக் காட்டினவர் நமது முருகவேளே போலும். 'முத்தைத்தரு பத்தித் திருநகை' என்னும் முதல் திருப்புகழில் ஆண்டவன் 'முத்தைத் தரு' முதல் 'என ஓது'-என்னும் தொங்கல் வரையும் எடுத்துக் கொடுத்து 'ஓது' என்பதை ஏவல் வினையாக -ஓதுவாயாக-என அருணகிரியார்க்குக் கட்டளையிட்டுத் "தத்தத்தன தத்தத் தனதன" என்னும் சந்தத்துக்குத் "தனதான" என்னும் ஒரு தொங்கலையும் பூட்டிக் காட்டினர் போலும்; அங்ஙனம் பூட்டினது தங்கச் சங்கிலிக்கு ஒரு மதாணி-ஒரு பதக்கம் பிணைத்தது போலப் பொலிவைத் தருகின்றது. எடுத்துக் கொடுத்த அடியைக் கேட்ட அருணகிரியார் அடங்கா மகிழ்ச்சி கொண்டு-அவனருளாலே-'என ஓது' என்னும் ஏவல் வினையையே பெயரெச்சமாக அமைத்து-'என ஓது முக்கட் பரமற்கு' என மேற்கொண்டு பாடலைக் கொண்டு போய் முடித்தனர் போலும். சுவாமிகள் அருளிய பாடல்களுக்குத் 'திருப்புகழ்' என்னும் பெயரை அளித்தவர் வயலூர்ப் பொய்யாக் கணபதியார் போலும்.
'பக்கரை விசித்ரமணி' என்னும் விநாயகர் துதியில் -'வித்தக மருப் புடைய பெருமாளே! உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக் கருள்கை மறவேனே' என வருவது உணர்தற்பாலது. (பக்கம் 63-64 பார்க்க); திருப்புகழ் என்னும் சொற்றொடர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளால் முன்னரே ஆளப்பட்டுளது; 'திருப்புகழ் விருப்பாற் பாடிய
அடியேன் படுதுயர் களையாய்', 'திருப்புகழ் விருப்பாற் பன்னலந் தமிழாற் பாடுவேற் கருள்வாய் (பாசுபதா பரஞ்சுடரே')- (திருமுல்லைவாயில் தேவாரம்). இங்ஙனம் பொதுவாக இறைவன் புகழைக் குறிக்கும் 'திருப்புகழ்' என்னும் சொல், பின்னர் அருணகிரியாரது சந்தப் பாடலகளுக்குப் பெயராக அமைந்து, அதன் பின்னர்க் கால
முறையில், பேச்சு வழக்கில் பொருள் பெருகி, சந்தப்பாவாகத் தொங்கலுடன் பாடப்படும் எல்லாப்பாடல்களையும் குறிப்பதாயிற்று-உதாரணம்-'பஞ்சரத்னத் திருப்
புகழ்', 'ராமாநுஜதாசர் நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ்' முதலியன.
---------------
8. அருணகிரியாரின் கவித்திறம் (பொது)
ஒரு ஆசிரியருடைய கவித்திறம் சாலச் சிறந்தது எனக் கூற வேண்டுமாயின் அவரிடம் ஏனைய ஆசிரியர்களிடம் காண்பதற் கரிதான சிறந்த இலக்கணங்கள் காணப் படவேண்டும். அங்ஙனம் இருப்பதைக்கண்டு தான் ஒரு கவியின் பெயர் இஞ்ஞாலத்துப் பொலிவுற்று நிற்கும். கம்ப ராமாயணத்திலுள்ள ஆழ்ந்த பொருள், அரிய உபமானங்கள், தண்ணெனச் செல்லுநடை, இடத்துக்கேற்ற நடை அமைப்பு முதலியவைகளைக் கண்டல்லவா "கல்வியிற் பெரியவன் கம்பன்" என்னும் உலக வழக்கு அமைந்தது.
அங்ஙனமே, அருணகிரிநாத சுவாமிகளின் திருவாக்கினில், ஆழ்ந்த பொருளமைப்பு, பொருளுக்கேற்ற சந்த அமைப்பு, தடைபடா நடை, இசைக்குந் தாளத்துக்கும் இலக்கியமாய் நிற்குஞ் சந்தக்கோவை முதலியன முற்பட்டு நிற்கும் மேம்பாட்டால் அல்லவா "வாக்கிற் கருணகிரி" என்னும் அருமையான சிறப்பு அவர் வாக்குக்குக் கிடைத்தது. அத்தகைய பெரியாரின் கவித்திறத்திற் சில எடுத்து விளக்குவாம்.
(1) செய்யுள் நடை
அருணகிரியாரின் செய்யுள் நடை அவருக்கென்றே அமைந்தது. அந்நடைக்கு இணை அவருக்கு முன்னும் ஞஇல்லை பின்னும் இல்லை. அவர் திருவாய் மலர்ந்த பதினாறாயிரம் திருப்புகழ்ப் பாக்களில் இப்போது கிடைத்து அச்சேறி யுள்ளன 1307. இந்த 1307 பாடல்களில் அமைந்துள்ள சந்தவகை 1008. இந்த 1008 சந்தங்கள் தம்முள் பல பாகுபாடுகள் உள்ளன. சில சந்தங்கள் வல்லோசையே மிக்கு நிற்கும். உதாரணமாக:-
-
"தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் தனதானா"
என்னும் சந்தத்தை எடுத்துக் கொள்வோம். இந்த சந்தத்தில் அமைந்த திருப்புகழ்ப் பாடலின் ஓரடியை ஈண்டு குறிக்கின்றோம்.
"சுத்தப் பத்தித் சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக் கிளியோனே." (473)
இதற்கு -'சுத்த சொரூபியும், பத்தி நிறைந்தவளும் விசித்ர ஸ்தனங்கள் உடையவளுமாகிய தேவலோகக் கிளியான தேவசேனைக்கு இனியோனே' என்பது பொருள். இந்த வாக்கு எவ்வளவு கடினமான சந்தத்தில் எவ்வளவு எளிதாக அமைந்துள்ளது பாருங்கள். அதற்குள் 'சொர்க்கம்' என்னும் சொல் 'ஸ்தனம்', 'விண்ணுலகம்' என்னும் இரு பொருள்களில் இயைத்துள்ளதையும் நோக்குங்கள். வடமொழியும் தென்மொழியும் எவ்வளவு இனிமையாகப் பவளமும் முத்தும் போல இணைக்கப்பட்டு அழகுபெற விளங்குகின்றன என்பதையுங் கவனியுங்கள், இனி, மெல்லோசை மிகுந்த ஒரு அடியைக் காட்டுவோம்.
-
"ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்ப
சங்கம் பொருந்து மழகோனே (1237)" - இது
"தந்தந் தனந்த தந்தந் தனந்த
தந்தந் தனந்த தன தானா"
என்னும் சந்தம். 'ஐம்புலன்களையும் வென்று நிற்கும் அன்பர் உடலகத்து விளங்கும் அழகியோய்'-என்பது இவ்வடியின் பொருள். இந்தத் திருவாக்கில் உள்ள உண்மையைக் கவனிப்போம். அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே என்பது 'என் உடலிடம் கொண்டாய்' என்னும் மணிவாசகப் பெருமானார் தந்த திருவாக்கைத் தழுவுகின்றதல்லவா? எத்தகைய அன்பர் உடலிடத்து இறைவன் விளங்குவாரெனில் ஐந்திந்திரியங்களையும் வென்ற அன்பர் உடலிடத்து என்றார். ஐந்திந்திரியங்களையும் வென்றவரே மெய்ம்மை யாளர் மற்றவர் பொய்மையாளர். ஐம்புலன்களின் மயக்கத்தால்தான் நாம்மெய்ந் நெறியை விடுகின்றோம். நமது அன்பும் பொய்யாகின்றது. பொய்யற்ற அன்பே நாம் பெற வேண்டுவது. பொய்யற்ற அன்பு பிறந்த பின்னர் தான் இறைவன் நம்மாட்டு விளங்குவன். அங்ஙனம் அப்பொய்ம்மை விலகுவதற்கும் இறைவன் திருவருளே வேண்டும்-என்னும் இவ்வுண்மைகள் எல்லாம் ஈண்டு உணரற்பாலன. இது-
-
"புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத் திங்கொர் பொய்ந்
நெறிக்கே விலங்குகின்றேனை"-
"யானேபொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதா லுன்னைப் பெறலாமே"-
என்னும் திருவாசகத்தானும்,
-
'மெய்யராகிப் பொய்ம்மை நீக்கி வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே'-
என்னும் தேவாரத்தாலும் பெறப்படும்.
2. கவியமைப்பு
அருணகிரியாரின் திருப்புகழ் நடையழகு இங்ஙனம் இருக்க, கவியமைப்போ பெரிதும் வியக்கத் தக்கதாயுள்ளது. சுவாமிகளின் திருப்புகழ்ப் பாடல்களுள் மிகச் சிறிய பாடல்களும் உள; மிகப் பெரிய பாடல்களும் உள. ஒரு திருப்புகழ்ப் பாடலில் சில பாகங்களை நீக்க எஞ்சிய பாகம் பிறிதொரு பாடலா மாறும் பாடியிருக்கின்றார். தலத்தின் பெயருக் கேற்பச் சந்தம் எடுப்பார். உதாரணமாக 'விருத்தாசலம்' என்னும் தலத்துக்குப் பாட-'குடத்தாமரை' எனவும், மதுராந்தகத்து' என முடிக்கவேண்டிய வழி 'சயிலாங்கனைக்கு' எனவும் எடுத்துள்ளதை நோக்கவும். (பக்கம் 110,111). சொல்லமைப்பு மிக்க சாதுரியமாக இவருக்கு இயையும். உதாரணம்: கண்ணை வர்ணிக்குமிடத்து அது 'கோலோ வாளோ', 'வேலோ சேலோ', 'மீனோ மானோ'- எனவும், வேசையர் மயக்கைக் கூறுமிடத்து அவர் 'கொண்டைச் சொருக்கிலே', 'இன்பச் செருக்கிலே', 'நெஞசத் திருக்கிலே'-எனவும், 'அங்கங் குலுக்கிலே', 'செங்கைக் கிலுக்கிலே', 'அந்தப் பிலுக்கிலே'-எனவும் அடுக்கடுக்காகக் கூறிப் போவார். அவ்வாறே இறைவன் திரு நாமங்களும் சந்தம் எதுவாயிருந்த போதிலும் எளிதாக அடுக்கி அமையும். உதாரணம்:
-
1. குமர! குருபர! முருக! சரவண! குக! சண்முக!
கரி பிறகான குழக! சிவசுத (196)
2. வேந்த! குமார! குக! சேந்த! மயூர! வட
வேங்கட மாமலையி லுறைவோனே! (247)
3. சரவண! கந்த! முருக! கடம்ப!
தனிமயில் கொண்டு பார் சூழ்ந்தவனே! (64)
சிலேடை யழகுக்கு 177-ஆம் பாடல் 'குழல் அடவி முகில்' என்ற திருப்புகழின் பின் நான்கு அடிகளும் கரந்துறை பாட்டுக்குத் திருப்புகழில் 173-ஆம் பாடல் (கருப்புவியில்), 319-ஆம் பாடல் (ககனமும்) என்பனவும் தக்க உதாரணங்களாம்.
3. சொற்பிரயோகம்.
இவர் சொற் பிரயோகங்களிற் சில சில இடத்து வேடிக்கையுங் காட்டுவர். உதாரணம் (1) மரண யாத்திரையை 'ஒருவர் வருக அரிய பயணம்' (1069) என்பர். 'கடல்' எனக் கூறவேண்டிய வழி 'ஒற்றைப் பகழித் தூணி' (577) என்பர். ஒற்றைப் பகழி என்பது விஷ்ணு. தூணி-அவ்வம்பு கிடக்கும் இடம்-கடல், (2) வேசியரைக் 'கப்பரை கைக்கொள வைப்பவர்' (1228) என்கிறார். அஃதாவது இருக்கும் பொருள்களைக் கவர்ந்து பிச்சை யெடுக்கக் கப்பரை தேடும்படியான நிலைக்குக் கொண்டு வருபவர் என்பது கருத்து. இக்கருத்தையே "கஞ்சுளி யுந்தடி யீந்துபோவெனச் (திருப்.767) சொல்பவர் என்றார். (கஞ்சுளி=பர தேசிப்பை); பின்னும் அவரை 'அரைப்பணங்கூறும் விலையினர்' என்பர் (திருப்.884), அரைப் பணம் என்பது ஒரு விலையையும் குறிக்கும்; அல்குலையும் குறிக்கும். (பணம்= பாம்பு). (3) திருமாலைத் 'தெதி பக்ஷண செக பக்ஷணனென ஓதும் விட பக்ஷணர் திருமைத்துனன்' (1216) என்றார். அதாவது தயிரையும் நெய்யையும் உலகையும் உண்டு விடமுண்ட சிவனுக்கு மைத்துனராய் நின்றவர் என்பது பொருள். (4) நகம் (மலை-கைலைமலையை) அங்கையில் பிடுங்கின ராவணனை 'நக மங்கையிற் பிடுங்கும் அசுரன்' (607) என்றார். கையில் நகம் பிடுங்குபவன் என பரிகசிப்புத் தோன்ற அமைத்தார். (5) மன்மதனை எரித்தார் எனக் கூற வேண்டிய வழி 'மதனாரைக் கரிக்கோல மிட்டார்' (424) என்றார். இவை விரிக்கிற் பெருகும்.
4. பொருளமைப்பு.
சொல்லழகு இங்ஙனம் விளங்க, பொருளமைப்பும் மிகச் சிறந்ததாகவே பொலிகின்றது. இவருடைய உபமானங்கள் கம்பருடைய உபமானங்கள் போல் ஏனைய புலவர்களுக்கு எட்டாத உயரிய நிலையனவாய் விளங்கும். பெண்கள் வர்ணனையில் அவர்தம் அவயவ வர்ணனையைக் கூறுமிடத்துத்தான் புலவர்களின் சாதுரியம் விளங்கும். (1) பெண்களின் இடையை நூல், துடி, கொடி இவைகளுக்குச் சாதாரணமாகப் புலவர் உபமானங் கூறுவர். அருணகிரியாரோ இடையை 'மதன தநு நிகர்' (1184) இடை என்றார். மதன தநு (மன்மதன் தநு (சரீரம்)) கண்ணுக்குப் புலப்படாதது, என்பது
பொருள். அவ்விடையையே பிறிதோரிடத்து "வேதாவானோன் எழுதினானிலையோ" (150) என்றார். கூந்தலை வருணிக்க வேண்டியவழி "மாதர் மனது போற் கருகின குழல்" (1065) என்றார். தனத்தை வருணிக்க வந்தவர் 'வித்தார கவித்திறத்தினர் பட்டோலை நிகர்த்திணைத் தெழு வெற்பானதனம்' (திருப்-981) என்கின்றார். (2) பதி, பசு, பாசம் என்பதில் பதியை விளக்கப் புகுந்தவர் அதை -
-
"அவனிவ னுவனுடை னவளிவ ளுவளது இதுவுது
எனுமாறற் றருவுரு ஒழிதரு உருவுடையது பதி" (1246)
என விளக்கினார். (3) இலங்காதகனத்தைப் பற்றிக் கூறவந்தவர் - 'இலங்கை மாநகரில் இலங்குகின்ற (விளங்குகின்ற) இல்லங்களுள் (வீடுகளுள்) எந்த எந்த இல்லத்தில் அருள் இலங்க இல்லையோ அங்கெல்லாம் தீயே! நீ இலங்குக - எனத்தீயை ஏவின குரங்கு என அநுமாரை வர்ணிக்கின்றனர். இதனை -
-
'இலங்கையி லிலங்கிய இலங்களுள் இலங்கருள் இலெங்கணும்
இலங்கென முறையோதி இடுங்கனல் குரங்கு' - (704)
எனவரும் அழகிய அடியிற் காண்க. (பக்கம் 107).
5. நடைச்சிறப்பு
வசன நடைக்கும் செய்யுள் நடைக்கும் வேற்றுமை கூற வந்த ஆங்கிலப் புலவர் ஒருவர் 'சொற்கள் மிக நன்றாக அமைந்தது வசனம்' என்றும் மிக நன்றான சொற்கள் மிக நன்றாக அமைந்தது செய்யுள்' என்றும் விளக்கினார். மிக நன்றான சொற்களை மிக நன்றாக அமைப்பதில் நமது சுவாமிகள் மிக வல்லவர். உதாரணமாக - அவர் மூப்புப்பருவத்தையும் இறுதி நாளையும் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்.
-
"முனை யழிந்தது; மேட்டி குலைந்தது;
வயது சென்றது; வாய்ப்பல் உதிர்ந்தது
முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது; ப்ரபையான
முகம் இழிந்தது; நோக்கும் இருண்டது;
இருமல் வந்தது; தூக்கம் ஒழிந்தது;
மொழி தளர்ந்தது; நாக்கும் விழுந்தது... பலநோயும்
நிலுவை கொண்டது; பாய்க்கிடை கண்டது
ஜலமலங்களின் நாற்றம் எழுந்தது." (1193)
இதில் நடையின் ஒழுங்கு (Balance of Style) என்ன அருமையாக இருக்கின்றது. சிறந்த கவிகளின் பிறிதோரி லக்கணம் என்னவெனில் உள்ளதை உள்ளவாறே கண்ணெதிரே நடப்பது போலக் காட்டுவிப்பது. மூப்புற்ற நோயாளியின் நிலையைப்
-
"பீளை சாறிடா ஈளை மேலிட
வழவழென உமிழுமது கொழ கொழென ஒழுகிவிழ" (862)
என்கிறார். எவரேனும் ஒரு வரிஞராகிய தவசி 'ஐயா! அமுது படையுங்கள்' என வந்தால் - மேலை வீட்டிற்கேள் கீழை வீட்டிற் கேள் - என உலகோர் எதிர் முடுகி வெருட்டுவதை
-
"வெறுமிடியன் ஒருதவசி யமுது படை எனுமளவில்
மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி
யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்." (862)
என்றார். இங்ஙனம் இவர் நூல் முழுமையும் இவர் திறம் வளங்கும்.
-----------
6. வாக்குக் கருணகிரி
வரகவியாதலால் எவ்வளவு கடினமாக வகைச் செய்யுளும் இவருக்கு எளிதில் அமையும் என்பதற்குச் சான்று இவர் கந்தரந்தாதியில் தகர இன எழுத்து ஒன்றே வரும்படி அமைத்த -
-
"திதத் தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதித்தித்த தேதுத் துதித்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாத திதே துதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீதொத்ததே." (54)
எனும் பாடல் ஒன்றே போதும்.
இறைவனிடத்து இம் மகானாகிய கவிஞர் ஒரு வரங் கேட்கிறார். குயில்போலும் மொழி, கயல்மீன் போலும் விழி, பவளம்போலும் இதழ், வில்லைப்போன்ற நுதல், சந்திரன் போன்ற முகம், இளநகை, மேகம் போன்ற கூந்தல், மலையன்ன தனம், கொடியன்ன இடை, பிடியன்ன நடை, இவைதமை உடைய திருவன்ன குறமகள் கணவோனே சகலதுக்கமும் நீங்குதல் வேண்டும்; சகல சற்குணங்களும் சேருதல் வேண்டும்; உலகிற் புகழ்பெற வேண்டும்; நான் நல்ல நிலைபெற்று உனது அழகிய திருவடிகளை எப்பொழுதும் அன்பொடு நினைத்திடல் வேண்டும்; இவ்வரங்களை எல்லாம் அருள்செய்ய வேண்டும்; அறுமுகப் பெருமானே." என்கின்றார். இக்கருத்தை எவ்வளவு அருமையான சந்தத்தில் எவ்வளவு எளிதாக அமைத்துள்ளார் பாருங்கள்;
-
"அறுமுகப் பெருமாளே!
குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற்
சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக்
கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் புணர்வோனே!
சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்
தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனது பொற்
சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திட அருட்டருவாயே." (672)
இவ்வளவு அருமையாகப் பாடல்களைப் பாடும் திறம் இவருக்கு எங்ஙனம் வாய்த்தது? தமிழ்க் கடவுளாம் நமது முருகக் கடவுளின் திருவருளால் அல்லவா? இசைத்தமிழுக்குச்
சிறந்த முதல் இலக்கியமாயுள்ளது சம்பந்தப் பெருமானது தேவாரம். "நாளும் இன்னிசையாற் றமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்" - என் சுந்தரமூர்த்தி சுவாமிகளே வியந்தோதி உள்ளனர். சம்பந்தர் போல அமிர்த கவி பாட வேண்டும் இறைவனே என நமது அருணகிரியார் வரங் கேட்டுப் பெற்றுள்ளனர். [பக்கம் 131].
யார் வேண்டினாலும் கேட்ட பொருளீயும் த்யாகாங்க சீலராகிய தமது அறுமுகப் பெருமானும் அருணகிரியாருக்குக் கேட்டவாறே வரத் தந்து உதவினர். சுவாமிகளும் தாம் வேண்டியவாறே சகல இலக்கணங்களும் நிரம்பிய வாக்குக்கு நாயகராயினார். அதனால், 'வாக்கிற் கருணகிரி' என்னும் பழமொழியும்,
-
'வாக்கிற் கருணகிரி வாதவூ ரார்கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு
நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்
சொற்குறுதிக் கப்பரெனச் சொல்' -
என்னும் தனிப்பாடலும் எழுந்தன. மணிவாசகரது கனிவு சம்பந்தப் பெருமானது தாக்கு (ஆட்சி உரை, ஆணை உரை) அப்பரது சொல்லுறுதி, சுந்தரரது நயம், நக்கீரரது நோக்கு (சந்தர்ப்பத்துக்கு ஏற்ற நடையால், சொல்லுங் காட்சியை மனக்கண் எதிரே அப்படியே தோற்றுவித்தல்) இவையாவுங் கலந்து பொலியும் எங்கள் அருணகிரிப் பெருமானது வாக்கு. உதாரணமாக -
1. 'ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந் துரையேன்' என்னும் மணிவாசகரின் கனிவை 'உனைத்தினந் தொழுதிலன், உனதியல்பினை உரைத்திலன், பல மலர் கொடுன் அடியிணை உறப் பணிந்திலன்' என்னுந் திருப்புகழிற் காணலாம்.
2. 'வேயுறு தோளிபங்கன்' என்னும் சம்பந்தப்பெருமானது கோளறு பதிகத்தின் தாக்கை (ஆணை உரையை) 'நாளென் செயும்' என்னும் கந்தரலங்காரத்திலும் (38), 'சேயவன் புந்தி" என்னும் கந்தரந்தாதியிலும் (48) காணலாம்.
3. நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்' என்னும் அப்பர் சுவாமிகளின் சொல்லுறுதியை 'மரண ப்ரமாதம் நமக்கில்லை யாம்' என்னுங் கந்த ரலங்காரத்திற்(21) காணலாம்.
4. 'மற்றைக் கண் தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே, - என்னும் சுந்தரரது நயத்தைப் 'பாழ் வாழ்வெனுமிப் படுமாயையிலே வீழ்வா யென என்னை விதித்தனையே ** வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே' என்னுங் கந்தரனுபூதியிற் (31) காணலாம்.
4. திருமுருகாற்றுப் படையில் 'அகில் சுமந்து, ஆரமுழு முதலுருட்டி... இழுமென இழிதரும் அருவி' எனவரும் நக்கீரர் வாக்கு அருவி ஓட்டத்தை நமது மனக்கண் முன்பு காட்டுவது போல, அருணகிரியாரது - 'வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகி விழ' (திருப். 862) என்னும் வாக்கு முதுமைப் பருவத்தின் கூத்தினை அப்படியே விளக்கி நமது மனக்கண் முன்பு காட்டுகின்றது. இதுவே நோக்கு என்னும் நயம். நோக்கு என்பது: செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று. படிப்பவரது மனக்கண் முன்னர்ப் படிக்கும் நிகழ்ச்சி அவர் நேரிற் காண்பது போல அவருக்குப் புலப்பட வைத்தலே 'நோக்கு'.
இவ்வண்ணம் இறைவரிடம் வாக்கு வரம்பெற்ற அருணகிரியாரும் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என உலகுக்குத் திருப்புகழாம் அமுதத்தை, வாக்கின் பல்வகைத் திறனும் விளங்கத் திரட்டி அளித்துள்ளார். இவர் பாடிய திருப்புகழ்க் கவிச் சுவையை புலவர் ஒருவர் பின்வருமாறு வருணிக்கின்றார்.
-
"உதிருங் கனியை நறும்பாகில் உடைத்துக் கலந்து
தேனை வடித்தூற்றி யமுதி னுடன்கூட்டி ஒக்கக்குழைத்த
ருசி பிறந்து மதுரங் கனிந்த திருப்புகழ்ப் பா"
- திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்
பிறிதொரு புலவர் -
-
"சத்தநிலை வழுவாம லத்தமொரு சற்றுந் தளர்ந்து
வெளிறாமல் அமுதந் தழுவு பதினாறாயிரந் திருப்புகழ்"
(விரிஞ்சை பிள்ளைத் தமிழ்)
என்றார். இவர் கவியின் பெருமையை உணர்ந்தல்லவோ நமது தமிழ் நாட்டில் திண்ணைப்பள்ளிக் கூடங்களிற் கல்வி கற்குஞ் சிறார் முதல் கல்வி நிரம்பிய பெரியோர் வரைத் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடம் பண்ணி வந்தனர்; இன்றும் திருப்புகழின் பெருமை ஓங்கி வளர்ந்து ஊரெங்கும் உலவுகின்ற தல்லவா!
--------------
9. அருணகிரியார் அருளிய தத்வோபதேசம்
பெரியரிற் பெரியராந் தாயுமானவராற் பெரிதும் பாராட்டப்பட்டவரும், யாவதுங் கற்றோரறியா அறிவினரும், கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமை வாய்ந்தவருமான ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் தாம் அருளிய திருப்புகழாதிய நூல்களில் உலகுக்கு உய்யும் வழிகளை மிகத் தெளிவாகக் காட்டி யுள்ளனர். பிறவியென்னுங் கடலிடைப் பட்டு, துன்ப மென்னும் அலைகளில் எற்றுண்டு, பிடித்துக் கரையேறுவதற்கு ஒரு பற்றுமின்றி, சுழற் காற்று, சுறாமீன் போன்ற காமமாதிய இடையூறுகளிற் பட்டுத் தியங்கி மயங்கிக் கிடக்கும் நாம் நன்னெறியைக் கண்டு பிறவித் துயரை ஒழிப்பதற்கு வேண்டிய பல அரிய உபதேச மொழிகளை நமது அருணகிரியார் எடுத்துப் போதித்துள்ளனர். "கற்றபின் நிற்க அதற்குத் தக" எனப் பொய்யா மொழியார் கூறியவாறு, சுவாமிகளது உபதேச மொழிகளைக் கற்று அவ்வழியே நடந்து உய்தலே நமக்குக்கதி யாதலின் ஈண்டு அம்மொழிகளை ஒருவாறு திரட்டிக் காட்டுவாம்.
சுவாமிகளது உபதேச மொழிகள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற் பொருளையும் நன்கு விளக்குவன.
முதலாவது:- அறம்: ஔவைப் பிராட்டியார் ஓதியவாறு "ஈதல் அறம்" என்பதே அருணகிரியாருடைய முடிபு. ஈதலின் இன்றியமையாமையைத் தமது நூல்களிற் பல இடங்களிற் பசுமரத் தாணிபோலப் பதிவுற விளக்கியுள்ளார். தினையளவேனும் பங்கிட்டு உண்ணுங்கள், பசியுற்றவருக்குப் பகிர்ந்து கொடுக்க இசையுங்கள், அவருக்கு ஒரு பிடி யன்னமேனும் படையுங்கள், இல்லை யென்று சொல்ல நாணங்கொள்ளுங்கள், உள்ளதை மறாமல் எள்ளினள வேணும் பகிர்ந்து கொடுங்கள், நொய்யிற் பிளவள வேனும், தவிடளவேனும் தானமிடுங்கள்-இதுவே வினை தொலையும் வழி-எனப் பலவாறாக எடுத்தோதி உள்ளார்.
-
'தினையளவு பங்கிட்டுண்கை' (திருப். 17)
'பசியுற் றவருக் கமுதைப் பகிர்தற் கிசையாதே' (249)
'இல்லையென நாணி உள்ளதின் மறாமல் எள்ளி னள வேனும், பகிராரை' (666)
'பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் படையாதே. '(675)
'தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர் தாழாதீயேன்' (1062)
'இரவோருக் கேது மித்தனை தானமிடாதவர் ஏழ் நரகுழல்வாரே' (1149)
'தான மென்று மிடுங்கோள்',
'நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்' (கந்.அலங்.16,18)
'கரவாதிடுவாய்..சுடுவாய் நெடுவேதனை தூள் படவே' (கந்.அநு. 7)
என வரும் அமுத மொழிகள் ஆழ்ந்த பொருளின.. இனி இரண்டாவது-பொருள். 'பொருள் என்பது யாது? எது உண்மைப் பொருள்? எப்பொருளை நாம் பற்றினால் மூன்றாவதாகிய 'இன்பம்' கிடைக்கும்-என்பதையும் சுவாமிகள் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். நம் உணர்விற்கு எட்டிய பஞ்ச பூதங்கள் தாம் பொருளோ? அல்லது பஞ்ச பூதங்கள் யாவை என ஆராயும் அறிவு தான் பொருளோ? நான்மறைகள் என்கின்றார்களே அவைதாம் பொருளோ? அல்லது 'நான்' 'நான்' என்கின்றோமே அதுதான் பொருளோ? அல்லது 'மனம்' என்பது தான் பொருளோ? அல்லது, இறைவனால் ஆட்கொள்ளப்படும் இடந்தான் பொருளோ?-
-
'வானோ புனல்பார் கனன்மா ருதமோ? ஞானோ
தயமோ? நவினான் மறையோ? யானோ? மனமோ?
எனையாண்ட இடந் தானோ? பொருளாவது சண்முகனே'. (கந்.அநுபூதி 3)
-என்னும் வினாக்களை முதலில் எழுப்பிப் பின்னர் இவை யெல்லாம் அல்ல, உண்மைப் பொருள் சொல்லுந் தகைமைத்தல்ல. அது கிடைக்கப் பெறின் மூவாசையும் தாமே அறும், இறப்பு நீங்கும் எனவிடையையுஞ் சுவாமிகளே சுட்டிக் காட்டினர். இது,
-
'வள்ளிகோன் அன்று எனக்கு உபதேசித்த தொன்றுண்டு
கூறவற்றோ', (கந். அலங்.9)
'சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள்
ஒன்றும் அறிந்திலனே' (கந். அநு. 12)
'அமரும் பதி கேள் அகமா மெனுமிப் பிமரங் கெட மெய்ப்
பொருள் பேசியவா' (கந். அநு. 8)
'கூகா என என்கிளை கூடியழப் போகா வகை மெய்ப்
பொருள் பேசியவா.' (கந். அநு. 11)
எனவருந் திருவாக்கால் அறியக் கிடக்கின்றது. இம்மட்டோடு நிறுத்தாது 'பொருள்' இன்னதென விரித்து விளக்காது போயின் உலகுக்கு என்ன பயன் எனக்கருணை கூர்ந்து பொருள் இலக்கணத்தையும் சுவாமிகள் பகுத்துக்காட்டி உள்ளார். ஸ்ரீ மணிவாசக சுவாமிகள் சுருக்கமாக எடுத்தோதிய 'பொருளின்' இலக்கணத்தையே நமது சுவாமிகள் விரிவாக எடுத்து விளக்குகின்றார். மணிவாசகனார் பொருளை விளக்கு மிடத்து,
-
'விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொருள்'
'உற்ற ஆக்கையி னுறுபொருள் நறுமலரெழுதரு நாற்றம் போற்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம் பொருள் அப்பொருள்',
என்றனர். நமது அருணகிரியாரும் அதனையே,
-
'சிவமான தொலைவிலாப் பொருள்', (1063)
'கலை கொடு சுட்டாத் தீர்பொருள்' , (1152)
'பரசமய ஒரு கோடி குருடர் தெரி வரியதொரு பொருள்' (1097)
எனக்கூறிப், பின்னும்,
-
'பாணிக்குட் படாது, சாதகர் காணாச் சற்றொணாது,
வாதிகள் பாஷிக்கத் தகாது, பாதக பஞ்ச பூத பாசத்திற்படாது,
வேறொருபாயத்திற் புகாது, பாவனை பாவிக்கப் பெறாது,
வாதனை நெஞ்சமான ஏணிக்கு எட்டொணாது; மீதுயர்
சேணுக்குச் சமான நூல்வழி யேறிப்பற்றொணாது;
நாடினர் தங்களாலும் ஏதுச் செப்பொணாத தோர் பொருள்', (1174)
என விளக்கினர். இவ்வாறு எதிர் மறை முகத்தான் விளக்கினதோடு அமையாது,
'அறிவை அறிவது பொருள்' (509) என்றும், அவ்வ
றிவே இறைவன் திருமேனி என்பதும் விளங்க, (1019)
-
'அறநூலும், அகலிய புராணமும், ப்ரபஞ்ச சகலகலை நூல்களும்,
பரந்த அருமறை யநேகமும் குவித்தும் அறியாத அறிவும்,
அறியாமையுங், கடந்த அறிவு திருமேனி என்று
உணர்ந்து உன் அருண சரணாரவிந்தம் அடைவேனோ?
எனத் தெளிவுபடக் கூறினர், அறிவே இறைவன் என்பது
-
'அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவே'
'தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாந்
தேற்றனே'; 'ஆதி போற்றி அறிவே போற்றி.'
எனவரும் திருவாசகத்தாலும்,
-
'அறிவே நின்னை யல்லால் இனி யாரை நினைக்கேனே'
எனவரும் சுந்தரர் தேவாரத்தானும் அறியக்கிடக்கின்றது. இனி இப்பொருளை எய்தும் வழியாது என்பதையும் சுவாமிகள் விளக்கியுள்ளார். இப்பொருளை எய்தும் வழி மிக அரியதாதலின் 'அரியபொருள்' என்றே ஆன்றோர் கூறியுள்ளனர். 'அரியபோருளே அவிநாசி யப்பா பாண்டி வெள்ளமே,' 'பெருமறை தேடிய அரும் பொருள்' என மாணிக்கவாசகரும் கூறியுள்ளனர். இந்தப் பெரும் பொருள் தோற்றம் இறுதி இல்லாத பொருள்; கலைகளுக்கு எட்டாதது; அப்பொருளை அடைய வேண்டுமாயின் உண்மை அன்புடன் இறைவன் திருவருளைப் பரவ வேண்டும்; பந்த பாசங்கள் நீங்கவேண்டும், பிரபஞ்ச விஷயங்கள் விலக வேண்டும்; உரை, உணர்வு, செயல் என்னும் மூன்றும் அடங்கி மும்மலங்களும் நீங்கவேண்டும், இருவினையையும் உதறல்வேண்டும், 'யான்' 'எனது' என்னும் ஆணவ நிலை நீங்குதல் வேண்டும்--பின்னரே அது கிடைக்கும் என்றனர் அருணகிரியார், இதனைக், (511)
-
'கலைகொடு கருத அரியதை, விழி புனல்வர மொழி குழறா
அன்பு உருகி உனது அருள் பரவுகைவரில், விரகொழியில்,
உலகியல் பிணைவிடில், உரை, செயல், உணர்வு கெடில்,
உயிர் புணர் இருவினை அளறது போக உதறில் எனது எனும்
மலம் அறில், அறிவினில் எளிது பெறல் என மறை பறை
யறைவ தொர் உதய மரணமில் பொருள்,'
எனத் திருப்புகழில் விளக்கி உள்ளார்.
இத்துணைப் பாடுபட்டுக் கிடைத்த பொருளே மூன்றாவதாகிய நித்திய இன்பத்துக்குச் சாதனமாம் எனச் சுவாமிகள் கூறுகின்றார். இந்த இன்பத்தை
-
'அபரிமித கருதியும் அடக்குந் தனிப்பொருளை எப்பொரு
ளும் ஆய அறிவை யறிபவர் அறியும் இன்பம்' [1127]
என்றனர். இந்த இன்பந்தான் உண்மையின்பம். இதனையே மணிவாசகனாரும் 'எங்குமிலாத தோரின்பம்,' 'ஆராத இன்பம்', 'ஆற்றா இன்பம்' என்றனர். இதனையே நமது சுவாமிகளும்' பரமானந்த சாகரம்' என்றனர். இவ் வின்பத்தின் அளவு அன்பின் அளவினது என்பதை மணி வாசகனார் ' காயத்துள் அமுது ஊற ஊற நீ கண்டுகொள்' எனச் சுட்டிக் காட்டினர்: அருணகிரியாரும்,
-
'மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள அரும்புந்தனிப்
பரமானந்தம் தித்தித்தறிந்த அன்றே கரும்புந்துவர்த்
துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே' (கந்த. அலங். 6)
என்றனர். அப்பர் சுவாமிகளும் -
-
'திருப்புத் தூரனைச் சிந்தை செயச் செயச்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே'
என்றனர். திருமந்திரமுடையாரும்,
-
'விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்புங்
கைத்தது தேனும் புளித்ததே' (2976)
என்றனர்.
இந்தப் பரமானந்த வெள்ளமாகிய இன்பங் கிடைக்கப் பெறின், நான்காவதான 'வீடு' கூடிற்றென்க.மெய்வீடு பரம சுக சிந்து' (501) என்றனர் அருணகிரியார். அவரே இவ் வீடு ' நாற்கரணமும் ஐந்து பூதமும் அறியாதது: இரவு, பகல், ஆதி, அந்தம், இவை ஒன்றும் இல்லாதது, மாயை இடைபுகாதது, ஆனாத சுக மகோததி, பரமஞான வீடு' என் றனர்; இதை
-
'அஞ்சுவித பூதமுங், கரண நாலும், அந்தி பகல் யாது
மறியாத அந்தம, நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு
வீடு' " மாமாயை இடைபுகாது ஆனாத சுக மகோதாதி பரம
ஞான வீடு"
எனவருந் திருப்புகழாற் (758,1052) பெற்றாம்.
இவ்வுலக மாயையிற் பட்டு வருந்தும் ஆன்மாக்கள் நன்னெறியைப் பற்றிக் கடையேற வேண்டும் என்னுங் கருணையே காரணமாக , உலகத்துள்ளீர்! அறத்தைக் கடைபிடியுங்கள், வறிஞர்க்கு ஈதலே அறம். அங்ஙனம் ஈதல் என்னும் அறத்தைக் கரவாது புரிந்து வருவார்களாயின், உண்மைப் பொருள் தானே விளங்கும். அப்பொருள் விளக்கமுற விளக்கமுற அதனினின்றும் உண்மை யின்பம் புலப்படும். அவ்வின்பம் பெருகப் பெருக 'நான்' என்னும் ஒன்று நைந்துபோம்; இருவினை மும்மலம், நாற்கரணம், ஐம்புலச் சேட்டைகள் ஆதிய இவை யெலாம் ஒடுங்கும். அவை ஒடுங்கப் 'பூதமுங் கரணங்களும் நான் போய் ஒடுங்க அடங்கலும் மாய்ந்தால் விளங்கும்' தொன்றாகிய மெய்வீடு கிடைக்கும்- என்னும் அரிய தத்வோபதேசத்தை நமது அருணகிரியார் தமது திருப்புகழாதிய நூல்களால் விளங்கக் காட்டியுள்ளனர்.
--------------------
14. அருணகிரியாரின் குணாதிசயங்கள்.
அருணகிரி நாதரது நிலையையும் குணாதிசயங்களையும் பற்றி ஒருவகையாக ஆய்ந்து கூறுவாம்.
(1) நன்றியறிதல்: சுவாமிகள் மிக்க நன்றி யறிவு உள்ளவர். காமச் சேற்றிற் கிடந்த தம்மை முருகர் கை தூக்கிக் கரை காட்டினரே என்ற நன்றி யறிவு இவர் பாடல்களில் நன்கு பொலிகின்றது. முருக னடியார்களுட் சிறந்தவர் பலரும் அருணகிரியார் காம வலையிற் படஇல்லை; அடியார்களின் நற்கதிக்காக-மாணிக்கவாசகர் முதலான பெரியோர்கள் பாடினது, ஆசையிற் கொடிதான பெண்ணாசையை உலகோர் விலக்குவதற்காக உபசாரமாகப் பெண்கள் வலையிற் பட்டேன் எனத் தாமுங் கூறினரே ஒழிய வேறில்லை என்பர். ஆனால் அருணகிரியார் கூறும் மொழிகளைப் பார்க்கும் பொழுது-
1. கபடிகள் இடையினும் நடையினும் யான் மயக்கமாய்
க்ருஷிபணு தடத்து ...மோக்ஷம தருளிய கழல் (திருப்.344)
2. மடவார் பால் பூணும் மருளற...ஈடேற்று தலால்
உன் வலிமையை மறவேன் (திருப்.360)
3. காமுக னகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்கள் (திருப்.426)
4. அன்ன நடையில்...கண்ணழிவு வைத்த புத்தி ஷண்
முகம் நினைக்க வைத்த கன்மவசம் (திருப். 1189)
-பக்கம் 14-அடிக் குறிப்பு 4-5 பார்க்க.
அவர் மெய்ம்மையே பேசும் பெருந்தகையராதலின்- அவர் தமது சுய சரிதத்தையே நாணாது கூறி இத்தகைய கீழோனுக்கும் மேலோனாகிய நீ அருள் புரிந்தனையே என
முருகன் கருணையையே வியந்து பாராட்டித் தமது நன்றியறிவைப் புலப்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதனால் அருணகிரியாரது பெருமை மேலெடுத்துக் காட்டுமே ஒழிய ஒரு சிறிதும் தாழ்வு படாது; ஏனெனில் அவர் முன் செய்த தபோபலம் எத்துணைச் சிறப்புற்றிருக்க வேண்டும் என்பது வெள்ளிடை மலைபோல விளங்குகின்றது. முருக வேளின் ஆட்கொள்ளுங் கருணைத் திறமும் மிகச் சிறப்பாகத் துலங்குகின்றது. வரகவி-மார்க்க சகாய தேவரும் திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழில்- 'மாதரிரு விழியாகும் அம்புக்கும் மதனவேள் வாளிக்கும் நடுவாகியே மாலாகும் அருணகிரி'-எனக் கூறியுள்ளனரல்லவா?
2. ஆணவணமின்மை: இவர் முருக வேளின் திரு அருட் ப்ரசாதத்தால் 'பதி கேள், அகம்' எனும் மாயை ஒழிந்து, உண்மைப் பத்தி நிலையில் உயர்ந்த தானத்திலிருந்த நிலைத்த புத்தியர் என்பதிலும் 'யான், எனது' என்னும் ஆணவம் அற்ற மஹான் என்பதிலும் யாதோர் ஐயப்பாடும் இல்லை. இவர் தம்மை இழிவு படுத்தித் தம்மைத் தாமே வைது கொள்ளும் வைதற் சொற்களைக் காண வேண்டுமென்றால் 'அவகுண விரகனை' என்னும் 611-ஆம் பாடல் ஒன்றே போதுமானது. தம்மை அலகின்மாறு (விளக்குமாறு-துடைப்பக் கட்டை), ஏடெழுதா முழு ஏழை, ஒட்டாரப் பாவி, காமுகனாயுறு ஜாதக மாபாதகன், காம க்ரோத தூர்த்தன் எனப் பலவாறு இழித்துக் கூறுகின்றார்.
3. கருணை: சுவாமிகள் இயற்கையாகவே மிக்க கருணைக்குணம் வாய்ந்தவர் ஆதலால் 'ஐயோ! உலகோர் சிலர் பெண்கள் மாயையிற் பட்டு அழிகின்றார்களே! இறைவன் திருவடியைத் தியானித்துப் பிறவிக்கடலைக் கடக்கக் கூடாதா! இதென்ன காரணமோ! என வருந்துகின்றார். அசத்தான உரைகளை மறந்து சத்தான உன்னை உணர்ந்து உருகி உன்னைப் பாடினால் இழிவாகுமோ! எனக்கூறி உள்ளம் நொந்து வருந்துகின்றார்.
-
(1) சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற்கு..மிக அன்
புறாதே மாயா காயத்தே, பசுபாசத்தே, சிலர் காமுற்
றேயும் அது என் கொலோதான்! (திருப்.68)
(2) கலவியின்பம் விற்பார்கள் அவயவங்களைப் பாடு..
சிலர் உளநெகிழ்ந்து, அசத்தான உரை மறந்து உனைப்பாடி
உருகி நெஞ்சு சற்றோதில் இழிவாமோ! (திருப்.1230)
இத்தகைய கருணையே இவரைக் 'கருணைக்கு அருணகிரி' என்னும் அருமைப் பட்டத்துக்கு உரிமையாள ராக்கியது. (பக்கம் 99 பார்க்க)
(4) விகடம்: இவர் தமாஷாக வேடிக்கையாகப் பேசும் இயல்பினர் போலும். ஓரிடத்தில் 'மாந்தர்களே! பெண்கள் தோளோடு கூடி விளையாடும் மோக விளையாட்ட -சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை மார்க்கங்களில் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தது?
-
'இனிய மாதர் தோள் கூடி விளையாடும் சரசமோகம்
- -சரியையோ? க்ரியா ஞான சமுகமோ?' (திரு. 1050)
எனப் பரிகசித்து வினவுகின்றனர். (பக்கம் 202)
(5) விலை மாதரையே வைதல்:- இவரது நூலை ஆழ்ந்து படிக்காதவர்கள் இவர் தமது பாடல்களில் பெண்களை வைதுள்ளார் என்று ஓர் இழுக்குப் பேச்சுப் பேசுவது உண்டு. அது பிழையான கருத்து. அவர் வைதது வஞ்சனை, சூது நிறைந்த விலை மாதரையே. இதனுண்மை திருப்புகழிற் பல இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 1180-ஆம் பாடலில் "மானமில் போக மங்கையர் கோடா கோடிய மனதானார்" எனவருவதைக் காண்க. குடித்தனத்துள்ள மங்கையரைப் பற்றிப் பேசும் பொழுது "குடிமை மனையாட்டி" (1234), தக்க மனையினம் (1244), இதம் உள சொற்கு உற்ற அரிவை (1160), எனச் சிறப்பாகவே பேசியுள்ளார். பின்னும், கற்புள்ள மெய்ந்நிறை மனையாளுடன் வாழ வேண்டிய வாழ்க்கையை மதியாதுவிட்டுப் பொதுமாதர், விலைமாதர் மீதா எனக்கு ஆசை மூளவேண்டும்; அவர் பொருட்டா நான் பொருள் தேடவேண்டி மூர்க்கரை யெல்லாம் பாடித் திரிதல் வேண்டும் என வருந்து கின்றார்.
-
'மாத்திரை யாகிலும் நாத்தவ றாளுடன்
வாழ்க்கையை நீடென மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
மாப்பரி வேயெய்தி அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
பாற்படு ஆடக மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
பாற்கட லானென உழல் வேனோ? (திருப். 752)
(vi) தொண்டில் முதன்மை: 'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்றபடித் தமக்கெனவே சிறப்பாக அமைந்த சொல்லழகும் பொருளாழ்ச்சியும் கொண்ட செந்தமிழ்ப் பாக்களை இறைவன் தமக்கு உதவ வேண்டுமென்பது இவரது பிரார்த்தனை; 'எனக்கென்றப் பொருட்டங்கத் தொடுக்குஞ் சொற் றமிழ்த்தந்திப் படியாள்வாய்' (திருப். 33); இங்ஙனம் தொண்டர்களுள் தாமே மேம்பட்டிருக்க வேண்டும் என்னும் அவா பிழையான குணமாகாது; போற்றத் தக்க குணமே ஆம், மணிவாசகப் பெருமானார்-மலர் பறிக்குந் தொண்டில் -'நறு முறு தேவர் கணங்க ளெல்லாம் நம்மிற் பின் பல்ல தெடுக்க வொட்டோம்' என்றாரல்லவா?
(vii) திடபக்தி யுடைமை: இறைவனை மணிவாசகர் 'சிக்கெனப் பிடித்தேன்' என்றது போலவும், அப்பர் சுவாமிகள் 'தொடைக்கினும் போகேன்' என்றது போலவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் 'வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்' என்றது போலவும், சம்பந்த மூர்த்தி சுவாமிகள் 'பெற்றமரும் பெருமானை யல்லாற் பேசுவது மற்றோர் பேச்சிலோமே' என்றது போலவும், அருணகிரியாரும் 'வாழினும் வறுமை கூரினும் நினது வார்கழ லொழிய மொழியேனே' எனத் திடமுற
உரைக்கின்றார்.
(viii) பத்திப் பேற்றினால் வந்த தீரம்.
முருகரிடத்தில் முதலில் அஞ்சிப் பாடிய சுவாமிகளுக்கு ஞானமும் பக்தியும் நிறைந்த நிலையில் முருகனை முத்தமிழால் வைதற்கு வேண்டிய தீர உரிமையும் ஏற்பட்டது.
-
(1) அரிவையை..மயல்கொள லீலைகள் செய்து
சேர நாடிய திருடா (திருப்.741)
(2) செம்மான் மகளைத் திருடுந் திருடன் (கந். அநு. 12)
(3) வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகன். (வேடிச்சி காவலன் வகுப்பு)
-என்றெல்லாம் பாடியுள்ளார். மேலும், பத்திப் பேற்றினால் வந்த திருவருள் வலிவால் பிரமனையும் காலனையும் கூட வெருட்டுகின்றார். (கந். அலங். 21,25, 64,69,81,86,
87, 89).
---------------
15. சுவாமிகள் இறைவனிடம் கேட்கும் வேண்டுகோள்கள்:
இனி, அருணகிரியார் இறைவனிடம் கேட்கும் வேண்டு கோள்களைக் கவனிப்போம். ஒருவர் இறைவனிடம் கேட்கும் வேண்டுகோள்களிலிருந்தே அவரது குணநிலை, பத்திநிலை புலப்படும். சுவாமிகள் கேட்டுள்ள வேண்டுகோள்களின் தொகுதியை எங்கள் திருப்புகழ் மூன்றாம் பதிப்பில் திருப்புகழ் ஆராய்ச்சியில் தலைப்பு 84-ல் பார்க்கலாம். அவை தம்முள் முக்கியமானவை ஒரு சில கூறுவாம்:-
(1) வாழ்நாள் பயன்பட:
'உன்புகழே பாடி நானினி அன்புட னாசார பூஜைசெய்து
உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே' -திருப். 66)
(2) ஆறெழுத்தின் தியானம் உற:
'ஆறெழுத்தை நினைந்து குகா குகா என
வகை வராதோ' -(திருப். 326)
(3) அன்பொடு நினைக்க:
'உனது பொற்சரணம் எப்பொழுதும்
நட்பொடு நினைத்திட அருட் டருவாயே'. (திருப். 672)
(4) அடியார் இணக்கம் பெற: (அடியார்க்குத் தொண்டு செய:)
(i). அசட அநாசாரனை அவலனை ஆபாசனை
அடியவ ரோடாள்வதும் ஒருநாளே. (திருப்.583)
(ii) நிலைபெறு ஞானத்தாலினி உனதடி யாரைச் சேர்வதும்
ஒருநாளே. (திருப். 1273)
(iii) கூள னெனினுமெனை நீ யுனடியரொடு
கூடும் வகைமை யருள் புரிவாயே. (திருப்.121)
(iv) நின்னை யுணர்ந்து உருகிப் பத்மக் கழல் சேர்வார்தம்
குழாத்தினில் என்னையும் அன்பொடு
வைக்கச் சற்றுக் கருதாதோ. (திருப். 492)
(v) உனக்கடிமைப் படுமவர் தொண்டு புரிவேனோ. (திருப்245)
(vi) மறவாதுன் நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும்படி யருள் புரிவாயே (திருப். 1038)
(5) நோய் நலியாதிருக்க:
'நோய்கள் பிறவிகள்தோறும் எனை
நலியாதபடி உனதாள்கள் அருள்வாயே .(திருப்.260)
(6) அவா அடங்க:
யான் அவா அடங்க என்று பெறுவேனோ. (திருப். 739)
(7) வேண்டத் தக்க தறிவோய் நீ:
இறைவா எதுதா அதுதா. (திருப்.834)
(8) யமபயம் நீங்க:
'அந்தகனும் எனை யடர்ந்து வருகையினில்
அஞ்சல் எனவலிய மயில்மேல் நீ -அந்த மறலியொ
டுகந்த மனிதன் நமதன்பன் என மொழிய வருவாயே. (திருப். 70)
(9) இறுதிக்காலத்தில் இறைவனது நினைவு வர:
'காலன்...எனதாவி தனையே குறுகி வருபோது
ஆதிமுரு காதிமுரு காதிமுரு கா எனவும்
ஆதிமுரு காநினைவு தருவாயே' (திருப். 1242)
(10) மோகம் அற:
'மோகாந்த காரந் தீர்க்க வேதாந்த தீபங்காட்டி
யருள்வாயே' (திருப். 1257)
(11) யான் எனது அற:
'யானெனதற் றிடுபோதம் யானறிதற்
கருள்வாயே' (திருப். 1291)
(12) பிறவி யற:
'வாழி! இனிப் பிறவாது நீ யருள் புரிவாயே' (திருப்.1204)
மேற்காட்டிய பன்னிரு வேண்டுகோள்களைப் பார்க்கும் பொழுதே சுவாமிகள் எத்துணை உத்தம திடபத்தர் என்பதும், உத்தம குணத்தினர் என்பதும் எளிதில் விளங்குகின்றன. முருக வேளின் முன்னிலையில் இப்பன்னிரு வேண்டுகோள்களையும் காலையிலும் மாலையிலும் நாமும் தவறாது முறையிட்டுப் பணிந்து உய்வோமாக!
-----------------
16. அருணகிரியாரும் நால்வரும்:
இத்தகைய பெருமை வாய்ந்த எங்கள் அருணகிரிநாத சுவாமிகளுக்கும் தேவார திருவாசகம் அருளிய நால்வருக்கும் உள்ள ஒற்றுமை நயங்களை எடுத்துக்காட்டுவாம்.
இறைவனை அடைதற்குரிய மார்க்கங்கள் நான்கு எனவும், அவை புத்ர மார்க்கம், தாச மார்க்கம், சஹ மார்க்கம், சிஷ்யமார்க்கம் எனப்படும் என்றும், புத்ர மார்க்கமாய் (பிள்ளை போல அன்பு காட்டி) இறைவனை அடைந்தவர் சம்பந்தர், தாச மார்க்கமாய் (அன்புடன் ஊழியஞ் செய்து) இறைவனை அடைந்தவர் அப்பர். சஹ மார்க்கத்தில் (நண்பனாய் அன்பு செலுத்தி) இறைவனை அடைந்தவர் சுந்தரர், சிஷ்ய மார்க்கத்தில் (மாணாக்கனாய் அன்பு செய்து) இறைவனை அடைந்தவர் மாணிக்கவாசகர் எனவும் பெரியார் கூறுவர். இந்த நால்வகை மார்க்கங்களையும் ஒருங்கே அநுட்டித்தவர் அருணகிரியார். அதாவது பிள்ளை போல அன்பு செலுத்தியும், தாசனைப் போல ஊழியஞ் செய்தும், நண்பனைப் போல நட்பு பாராட்டியும், சிஷ்யனைப் போல
உபதேசம் பெற்று அன்புடன் பராவியும் முருகவேளிடத்தில் ஒழுகினவர் அருணகிரியார். உதாரணமாக' எமையாளுந் தகப்பன்' (திருப்.239) அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி (திருப்.827), எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ (கந். அநு.46), எனப் புத்திர பாவத்தைக் காட்டியும்; 'குற்றேவல் அடிமைசெயும் வகை அருளாதோ'
(திருப். 944) எனத் தாச மார்க்க்க்கத்தை வேண்டியும்; ' எமக்கமிர்த தோழா கடப்ப மலர் அணிவோனே' ( திருப். 646) எனத் தோழனது நேச பாவத்தைப் புலப்படுத்தியும்; 'அன்புற உபதேசப் பொருளூட்டி' (திருப்.814)எனச் சிஷ்ய நிலையைக் காட்டியும் பாடியுள்ளார்.
இனிச் சரியை , கிரியை, யோக ஞானம், எனப்படும் நால்வகை வழியைப் பற்றிப் பேறுபெற்றவர் முறையே அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனப் பெரியோர் கூறுவர்.அங்ஙனமே அருணகிரியார் ஒருவரே இந்நால்வரது நால்வகை வழிகளையும் கைப்பற்றி விளக்க முற்றனர் என்பதும் உணர்ந்து மகிழ்தற்பாலது; ' விருப்பொடுன் சிகரமும் வலம் வருகிலன் (திருப்.5) எனச் சரியை மார்க்காத்தையும்,'பாடும் பணியே பணியா அருள் வாய் (கந்.அநு.1) எனக் கிரியை மார்க்கத்தையும்' மூல வாசல் வெளிவிட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதில் ஒட்டும் வகையின்று தாராய்(திருப்.439), தூங்கிய பார்வையோடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு சிவயோகம் தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ (திருப்.1239) என யோக மார்க்கத்தையும், ' சுக ஞானக்
கடல் மூழ்கத்தந் தடியேனுக் கருள்பாலிக்குஞ் சுடர் பாதக் குகனே(திருப்.633) என ஞான மார்க்கத்தையும் ஒருங்கே கைப்பற்றிப் பொலிந்த பெருமான் அருணகிரியார். தலங்களை நாடிச் சென்று தொழுததால் சரியையாளராகவும், தலங்களில் அமர்ந்துள்ள ஆண்டவனைப் பாடித் தொழுததால் கிரியை யாளராகவும், முருகவேளிடம் யோக மார்க்கங்களை உபதேசம் பெற்று சிவ யோகத் தமர்ந்திருந்த சீலராதலால் சிவயோகியாகவும் முருகவேளிடம் சிவஞானம் பெற்ற செல்வராதலால் மெய்ஞ்ஞானியாகவும் அண்ணல் அருணகிரியார் விளங்கினர். முருகவேளிடம் யோக மார்க்கங்க ளெல்லாவற்றையும் உபதேச வழியாக அருணகிரியார் பெற்றனர் என்பது "யோகத்தா றுபதேசத் தேசிக" எனவரும் திருப்புகழாலும் (68), 'சிவயோகம் என்னும் குருத்தையறிந்து முகமாறுடைக் குருநாதன் சொன்ன கருத்தை' எனவரும் கந்த ரலங்காரத்தாலும் (71) அறிகின்றோம்.
பின்னும், நால்வர் காட்டிய அற்புதக் காட்சிகள் போல, அருணகிரியாரும் காட்டி யுள்ளார். உதாரணமாக, சம்பந்தப் பெருமான் இறைவனிடம் தாளம் பெற்றது போல, அருணகிரியார் இறைவனிடம் ஜெபமாலை பெற்றார்'. அப்பர் கடலிற் கல்லே தெப்பமாக மிதந்து (பஞ்சபூதங்களில் ஒன்றான) நீர்தாங்க உய்ந்தது போல, அருணகிரியார் கோபுரத்திலிருந்து விழுந்தும் இறவாது (பஞ்சபூதங்களில் ஒன்றான) நிலந்தாங்க உய்ந்தனர். திருமறைக் காட்டிலிருந்த நாவுக்கரசரைத் திருவாய் மூருக்கு
வா-எனச் சிவபிரான் அழைத்தது போல வயலூரிலிருந்த அருணகிரியாரை முருகபிரான் விராலி மலைக்கு வா-என அழைத்தார். அப்பரும் சம்பந்தரும் சிவபிரானிடம் படிக்காசு பெற்றது போல அருணகிரியார் முருகவேளிடம் படிக்காசு பெற்றார். சோமாசிமாற நயனாரது யாகத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது நண்பர் சோமாசிமாற நாயனாருக்காகச் சிவபிரானை வரவழைத்துக் காட்டிய செயலொப்ப அருணகிரியாரும் ராஜ சபையில் தமது நண்பர் பிரபுட தேவராஜனுக்காக முருகவேளை வரவழைத்துக் காட்டினர். மாணிக்கவாசகர் புத்தர்களை ஊமையாக்கி யடக்கி வாது வென்றது போல
அருணகிரியார் வில்லிபுத்தூரரையும் சம்பந்தாண்டானையும் வாதில் அடக்கி வென்றனர்.
மேலும், மாணிக்கவாசகர் சிவபிரானிடம் உபதேசம் பெற்றது போல அருணகிரியார் முருகவேளிடம் உபதேசம் பெற்றார். இங்ஙனம் அருணகிரியார் ஒருவரே எம்பிரான் முருகவேளுக்கு நால்வராய்த் திகழ்ந்தனர் என்க. பின்னும், சம்பந்த மூர்த்தி போலப் பதினாறாயிரம் பாடல் தாமும் பாடியும், தேவாரம் போல இசைத்தமிழாம் திருப்புகழையும், திருவாசகம் போன்று செந்தமிழ்ச் சுவை சொட்டும் கந்தரலங்காரத்தையும், திருக்கோவையார் போன்ற அகப்பொருள் துறைகள் விளங்கும் கந்த ரந்தாதியையும் பாடித் தமிழ்ப்பா வேந்தாக அருணகிரியார் பொலிவுற்றனர்; இன்றும் பொலிகின்றார்; இனி என்றும் பொலிவார். அவர் பாடிய திருப்புகழாதிய நூல்களும் முற்கூறியபடி (பக்கம் 215) நால்வர் பாடிய பாடல்களின் நல மெலாம் அமைந்து வாக்குக்கு இலக்கியமாய், என்றும் அழியா வனப்புள்ளனவாய் விளங்குகின்றன.
----------------
17. அருணகிரிநாதரும் திருமூல நாதரும்.
அருணகிரிநாதருக்கும் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான திருமூல நாதருக்கும் சிறந்த ஒற்றுமை நயங்கள் பலவுண்டு. இருவரும் இறைவனிடம்
திருவடி தீக்ஷை, சக்ஷு தீக்ஷை பெற்றவர்கள்; நாதன் என்னும் பட்டம் பெற்றவர்கள்; மெய்ஞ்ஞானப் பெரியார்கள்; தவ முதல்வர்கள்; கருணையாளர்கள்; இருவரும் வேதாகம சாரத்தைத் தமிழ் நூல் வாயிலாக உலகுக்கு அளித்து உதவினவர்கள். இருவரும் இறைவனைப் பெறுவதற்காகவே தமிழ்ப்பா பாடினார்கள். (கந்த ரநுபூதி 17-ஆம் பாடற் குறிப்பைப் பார்க்க-பக்கம்-175). திருமூலர் தமது உடலைவிட்டு ஆயன் உடலிற் புகுந்த பின்னர் மந்த்ர நூலாகிய திருமந்திர நூலைப் பாடினர். அருணகிரியார் தமது உடலைவிட்டுக் கிளியின் உடலிற் புகுந்த பின்னர் மந்த்ர நூலாகிய கந்தரநுபூதி நூலைப் பாடினர். திருமந்திரத்திலுள்ள பல சொற்களையும் கருத்துகளையும் கந்த ரலங்காரத்திற் காணலாம். பிற ஒற்றுமை நயங்களின் விவரங்களை எல்லாம் யான் எழுதியுள்ள "திருமூலநாதரும் அருணகிரிநாதரும்" என்னும் தனி நூலிற் காணலாகும். திருமூலநாயனார் ஒரு சித்த புருஷர் என்றால் அருணகிரியாரும் ஒரு பிரசித்த சித்தராம்.
"வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலமேத்திய சித்தப்ர சித்தரே"- என்பது சித்து வகுப்பு.
------------------
18. அருணகிரியார் அருளிய நூல்களின் பெருமை.
திருப்புகழின் பெருமை யெல்லாம் எங்கள் திருப்புகழ்ப் பதிப்பிற் காட்டியுள்ள திருப்புகழ் சிறப்புப் பாயிரத்தினின்றும் (முதற் பாகம் பக்கம் (24-26), பல அறிஞர்களின் பாடல்களினின்றும் (மூன்றாம் பாகம்-அருணகிரி நாதர் சரித்திர ஆராய்ச்சி பக்கம் 20-26; அநுபந்தம் 1-9) நாம் அறிகின்றோம். அருணகிரியார் அருளிய முருகவேளுக்குரிய ஐந்து அருள்நூல்களையும் ஓதிப் பயனடைதலை ஐந்து புநித தீர்த்தங்களில் ஆடிப் பயனடைவதற்கு ஒப்பிடலாம். திருப்புகழின் பரப்பையும், ஆழ்ந்த பெரும் பொருளையும் கருதித் திருப்புகழ் ஓதுதலைச் சமுத்திர ஸ்நாநத்துக்கும், கந்த ரலங்காரத்தின் தூய்மையையும் அழகையும், தண்ணிய நடையையும் கருதிக் கந்தலரங்காரப் பாராயணத்தைக் காவிரி ஸ்நாநத்துக்கும், கந்தரந்தாதியின் நடைக் கடுமையையும், எளிதில் பொருள் எட்டாமையையும், (வேண்டும் வரத்தைத் தரும்) பெருமையையுங் கருதிக் கந்தரந்தாதி ஓதுதலை இராமே சுரத்துக் கோடி தீர்த்த ஸ்நாநத்துக்கும், திருவகுப்பின் மேலாந் தரத்ததான பெரும் பொருளையும் புநிதத்தையுங் கருதித் திருவகுப்பு ஓதுதலைக் கங்கா ஸ்நாநத்துக்கும் கந்தரநுபூதியின் எளிய நடையையும் யாவருக்கும் எட்டும்படி யாய், ஆசாரமாய், உடனே உதவக் கூடியதாய், நித்ய பாராயணத்துக்குஏற்றதாய் இருக்கும் தன்மை கருதிக் கந்தரநுபூதிப் பாராயணத்தை அவரவர் வாசஞ் செய்யும் தலத்திலேயே உள்ள கிணறோ-திருக்குளமோ-ஆய புநித தீர்த்தத்துக்கும் ஒப்பிட்டு மகிழ்வோம்.
இந்த ஐந்து நூல்களையும் பஞ்சரத்ன மதாணியாகத்- திருப்புகழ் என்னும் ஒப்பிலாப் பச்சை மணி நடுவே விளங்க ஏனைய நான்கு நூல்களும் வேறு நாலு வகை மணிகளாகச் சுற்றிலும் பொருந்திய ஒரு திவ்ய மதாணியாக-ஆண்டவன் ஏற்றுப் பூண்டனர் போலும். அருணகிரியார் பாடிக்கொண்டே யிருக்கும்பொழுது தமிழ்ப் பன்னீராய் முருகன்மேல் வீழ்ந்த துளிகள் ஈற்றில் பஞ்ச ரத்ன மதாணியாய் அமைந்தன போலும்.
-
அடிமை சொலுஞ் சொற்றமிழ்ப் ப(ன்)னீரொடு
அணிவோனே. (திருப். 186)
"அருணை நகரினொரு பக்தனிடும் ஒளி வளர் திருப்புகழ்
மதாணிக் க்ருபாகரன்" (வேடிச்சி காவலன் வகுப்பு)
-என வருவன காண்க.
-----------
19. பாராயண முறை.
புலவர் பெருமானாகிய நக்கீர தேவர் வழிகாட்டி, மெய்ஞ்ஞானியாராகிய அருணகிரிநாத சுவாமிகள் அவ்வழியைப் பின்பற்றி உலகுக்கு உபதேசித்துள்ள பாராயண முறையானது ஆறுபடை வீடு என வழங்கும் ஆறு திருப்பதிப் பெருமாளை முறைப்படி தோத்திரஞ் செய்வதேயாம். அந்நெறியே உத்தம நெறியாம். ஆகவே, கணபதியைக் 'கைத்தல நிறைகனி' அல்லது 'உம்பர்தரு' என்னும் திருப்புகழ்ப் பாக்களைக் கூறித் துதிக்க வேண்டும். நமக்குள்ள ஒழிவு நேரத்துக்குத் தக்கபடி பெரிய பாடலோ, சிறிய பாடலோ, ஒன்றோ-பலவோ சொல்லித் துதிக்கலாம். உதாரணமாக-
ஒழிவுள்ளபோது: ஒழிவிலாத போது
(1) திருப்பரங்குன்றம்
உனைத்தினம் (5) சந்ததம் பந்தத் (10)
கனகந்திரள் (2)
மன்றலங் (14)
(2) திருச்செந்தூர்
அந்தகன்(47)
தந்த பசி (70) வரியார் (97)
மூளும் வினை (93) வி்ந்ததின் (98)
வஞ்சங்கொண்டு (94)
(3) திருவாவினன்குடி--பழநி
நாதவிந்து (100) அபகார (106)
மூலமந்திரம் (103) உலக பசு (139)
திமிரஉததி (131) ஒருபொழுது (166)
சுருதிமுடி (148) திடமிலி (180)
தலைவலி (149) வசனமிக (191)
அகல் வினை (156) வரதா (192)
(4) திருவேரகம் சுவாமிமலை
கடிமாமலர் (203)
நாசர்தம் (219) காமியத்(213)
பாதிமதி (225)
(5) குன்று தோறாடல்
தறையின் (235) அதிருங் (233)
(6) பழமுதிர் சோலை
அகரமும் (433)
துடிகொள் (442) காரணமதாக (435)
வாதினை (444)
இங்ஙனம் ஆறு திருப்பதியில் வளர் பெருமாளைப் போற்றிப் பின்பு அவரவர்க்குரிய குலதெய்வமாயுள்ள முருக மூர்த்தியைத்--திருத்தணிகேசரையோ--திருப்போரூர் ஆண்டவரையோ--மயிலத்து அயிலவனையோ—வைத்தீசுவரன் கோயில் முத்துக்குமரனையோ--திருவிடைக்கழி குராவடி வேலரையோ--சிக்கல்--எட்டிகுடி--எண் கண் பெருமானையோ -- திருவேரகத்து சுவாமி நாதரையோ – வயலூர் முருகரையோ--பழநி யாண்டவரையோ—சென்னிமலைத் தேவையோ-- மருதமலை வள்ளலையோ—செங்கோட்டு வேலரையோ--பரங்கிரிப் பரமனையோ--செந்தூர் அதிபதியையோ--கதிர்காமக் கந்தரையோ--அம் மூர்த்திக்குரிய திருப்புகழ்ப் பாவைச் சொல்லி வாழ்த்தித், திருவகுப்பில் 'சீர்பாத வகுப்பு, வேல் வகுப்பு, சேவகன் வகுப்பு என்னும் மூன்றில் ஒன்றை ஒழிவு நேரத்துக்குத் தக்கபடி ஓதிக், 'கந்த ரலங்கார'த்தில் பக்கம் 159ல் காட்டிய பன்னிரண்டையும் அல்லது ஏதேனும் ஒன்றை ஓதிக், கந்த ரநுபூதியில் பக்கம் 173ல் காட்டிய ஆறு பாடல்களையும் அல்லது ஏதேனும் ஒன்றை ஓதிக், கந்தரந்தாதியில் 'சேயவன் புத்தி' என்னும் 48-ஆவது பாடலை ஒதிப் பின்னர் தேவசேனை, வள்ளியம்மை, வேல், மயில், சேவல், நவவீரர், அருண கிரிநாதர், திருப்புகழ் அடியார்கள் இவர்களை ஓவ்வோர் பாடலால் துதித்தோ, பாடல் கூறாது தியானித்தோ, இறுதியாக 'ஆறிரு தடந்தோள் வாழ்க' என்னுங் கந்த புராணச் செய்யுளைச் சொல்லித் துதித்துப் பாராயணத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
ஆறு திருப்பதித் தியான பலன்
இங்ஙனம் ஆறு திருப்பதிகளையும் நித்தம் தியானிப்பதால் வரும் பயன் இன்னதென விளக்குவாம்.
(1) திருப்பரங்குன்றத்தைத் தியானிப்பதால் (பரம்= சிரேஷ்டமான; குன்றம்=உயர்நிலை) மேன்மை வாய்ந்த உயர்நிலையை நாம் அடையலாம்.
(2) திருச் செந்தூர் என்பது அலைவாய்த் தலம்—இத்தலத்தைத் தியானிப்பதால்--அத்தலத்திற் கடலலை கரையில் மோதி ஓய்வது போலவும், அங்ஙனம் ஓயும் இடத்தே
இறைவன் திருக்கோயில் கொண்டுள்ளது போலவும்—நமது மனதில் எழுகின்ற எண்ணங்கள் ஓய்ந்து மன அமைதி கூடும்; அங்ஙனம் கூடுமிடத்து இறையொளி தோன்றும் (பக்கம் 93 பார்க்க)
(3) திரு ஆவினன் குடியைத் தியானிப்பதால்—நமது ஆவியில் முருகன் நன்றாக எழுந்தருளிக் குடிகொள்ளுவான். 'ஆவியுள் நீங்கலன் ஆதி மூர்த்தி' என்னும் சம்பந்தர் திருவாக்குக்கு (III--105--3--கலிக்காமூர், இலக்காகுவோம்.
(4) திரு ஏரகத் தியானத்தால்--நமது அகம் (உள்ளம்) ஏர் (அழகு, தூய்மை) பெற்று (இறைவன் குடிகொள்ளத்தக்க இடமாய்) விளங்கும்.
(5) குன்றுதோறாடல் தியானத்தால் - ஆணவங் குன்றிக் கொண்டே (குறைந்து கொண்டே) வரும். ஆணவ அழுக்கடையும் ஆவி களிம்பு நீங்க அநுபூதி துலங்கும்.
(6) பழமுதிர் சோலைத் தியானத்தால் சிவஞானம் என்கின்ற பழம் கைவந்து பொலிவோம். 'நீயு நானுமாய் ஏக போகமாய்' எனப் பரமசுக நிலையைப் பெறுவோம்.
குறிப்பு ; மேற்சொன்ன நித்ய பாராயணத்தை வேலு மயிலுந் துணை' என ஆரம்பித்து வேலு மயிலுந் துணை' என முடித்தல் வேண்டும்
----------------
20 பிரசங்கங்களுக்கு வேண்டிய பாடற்பகுதிகள்
1. வர்ணனைகள்
1. கணபதி வர்ணனை; திருப்.168. (கடலைபொரி - அடி 1,2), 495 [அஞ்சன 5-6 அடி], 551 [கரிமுக – அடி 1-3], 1005 [கடலை பயறொடு அடி 1-3 கரி - வரை].
2. முருகர் வர்ணனை: பூதவேதாள வகுப்பில் அடி 6 முதல் 38 வரை; சித்து வகுப்பில் அடி 73 முதல் 95 வரை; திருப்புகழில் 1277-ஆம் பாடலில் (விழையு மனிதரை) பின்
நாலடி.
3. ஞானசம்பந்தர் வர்ணனை: திருப்புகழ் 841(சுருதியாய்) பின் நாலடி, கந்தரந்தாதி 29 [திகழுமலங்கள்]
4. சிவபிரான் வர்ணனை: திருப்.585 (வித்துப்புளகித -7-ஆம் ஆடி-தந்திந்திட்டவர் வரை): திருப்.1166 (நரையொடு - அடி 4 முதல் அர நிமலர் வரை); திருப்.1177
[புருவத்தை-அடி 5 முதல் முத்தர் வரை); திருப்.1220 [ஊனேறெலும்பு-அடி 5 முதல் எந்தை வரை].
5. தேவி வர்ணனை: திருப்.464 (தலைவலை-அடி 5 முதல் ஆயி வரை); திருப்.526 (அமுதமூறு அடி 3 முதல் உமை வரை); திருப்.653 (மருவுகடல்-அடி 8 முதல் கவுரி
வரை);திருப்.1001(நாலிரண்டு-அடி 5 முதல் சுந்தரி வரை); திருப்.1133(இடமருவும்-அடி 5 முதல் இளைச்சி வரை); தேவேந்திர சங்க வகுப்பில் முதலிருந்து 'மாசாம்பவி' வரை.
6. திருமால் வர்ணனை: சீர்பாத வகுப்பில் அடி 25 முதல் 'குரிசில்' வரை; வேல்வாங்கு வகுப்பில் அடி 25 முதல் 'கோமான்' வரை; திருப். 458 (செறிதரும், அடி 5 முதல் கொண்டல் வரை); திருப் 653 ('மருவுகடல் - அடி 7 முதல் புயல் வரை).
7. தேவசேனை வர்ணனை: பூத வேதாள வகுப்பு அடி 11 'அகரு' முதல் 'ஆனை' வரை.
8. வள்ளியம்மை வர்ணனை: திருப். 1199 ('வாடையில்' - அடி 5 முதல் 'ஒருத்தி' வரை); திருப். 672 ('ஒருவரை' - அடி 6 'திரு' வரை); திருப். 728 ('பச்சிலை' - அடி 7 'குறத்தி' வரை); திருப். 859 ('தேனிருந்த' - அடி 7 'குறமான்' வரை)
9. வேல் வர்ணனை: வேல்வகுப்பு; திருப்புகழ் 207 (அவாமரு - 6 - ஆவது அடி - 'வேல்' வரை.
10. மயில் வர்ணனை: திருப். 1095 - அனகனென - அடி 5 முதல் 'மயில்' வரை; கந்தரலங்காரம் 'குசை நெகிழா' - 11; 'தடக்கொற்ற' - 96; 'சேலிற்' -97)
11. சேவல் வர்ணனை: கந்தரலங்காரம் - 'படை பட்ட' (12).
12. அடியார் சிறப்பு: கந்தரலங்காரம் - 'சூரிற் கிரியிற்' (49).
13. கந்தபுராணம்: திருப். 1168 (நிருதரார்க்கொரு - அடி 5 முதல் 8 வரை)
14. இராமாயணம்: திருப். 379 ('ஆலகால') - அடி 5 முதல் 'செகுவித்தவன்' வரை); திருப். 1156 ('குனகி' - அடி 5 முதல் 'போராளி' வரை); திருப். 987 ('வால வயதாகி' அடி 7 முதல்
'கேசன்' வரை).
15. பாரதம்; திருப். 932 ('சஞ்சல' - அடி 5 முதல் 'உந்தினன்' வரை): திருப். 1195 ('மோதுமறலி - அடி 5 முதல் 'நெடுமால்' வரை).
16. வாழ்க்கை வர்ணனை: திருப். 162 ('இத்தாரணிக்குள்' - அடி 1 முதல் இனி வரவேணும் வரை;) திருப். 461 'தசைதுறும்' - அடி 1 முதல் அலமலம் வரை; திருப். 862 - 'அறுகுநுனி' - அடி 1 முதல் 'வாழ்வே' வரை.
17. மூப்பு வர்ணனை: திருப். 74 (தொந்தி சரிய' - முதல் நான்கு அடி); திருப். 447 ('தலைமயிர்' - முதல் மூன்றடி); திருப். 1193 ('முனையழிந்தது' - அடி 1 முதல் 'ஆச்சுது' வரை).
18. யாக்கை வர்ணனை: யாக்கையைப் பழித்தல்; திருப். 215 (சுத்திய - அடி 1 முதல் 'மங்குவேனோ' வரை); திருப். 245 (கறுத்த தலை - அடி 1 முதல் 'உடம்பு' வரை; திருப். 317 (கள்ளக் - அடி 1 முதல் 'ஆக்கை' வரை); திருப் 651 (மச்சமெச்சு - அடி 1 முதல் 'இக்கடம்' வரை)
II. பிற முக்கிய விஷயங்கள்
1. கணபதி; பாரதம் எழுதியது - திருப். 1019 (குகையில் - அடி 5 முதல் 'யானை' வரை).
2. சிவபிரான் - [i] காமதகனம்: திருப். 1153 (கலவியின்' - அடி 5 முதல் 'குரிசில்' வரை): திருப். 1176 ('புகரில்' - அடி 5 முதல் 'விலோசனர்' வரை).
[ii] திரிபுர தகனம்: திருப். 510 ('அருவ' - அடி 5 முதல் - 'முனிவார்' வரை); திருப். 1132 ('ஆனாத' - அடி 5 முதல் 'வித்தகர்' வரை).
[iii] நடராஜர் நடனம்: திருப். 562 (சிலைநுதல்' - அடி 5 முதல் கருணையன்' வரை): திருப். 1099 ('விடமளவி' அடி 5 முதல் 'இறைவர்' வரை).
3. ஞான சம்பந்தர் - பாண்டியன் சுரம் தீர்ந்தது; திருப். 181 ('நிகம' - அடி 5 முதல் 'அத்த' வரை).
4. பெண்கள் - கோசாதிபாத வர்ணனை: திருப். 354 ('இதமுறு' - அடி 1 முதல் 'வடிவினர்' வரை).
கொங்கை வர்ணனை: திருப். 882 ('திட்டென' அடி 1 முதல்'தனத்தை' வரை).
கண் வர்ணனை: திருப். 126 ('கடலை' - அடி 1 முதல் 'கட்கடை' வரை); திருப். 552 ('கருநிறம்' அடி 1 முதல் கண்கள்' வரை).
5. யோகநிலை வர்ணனை: திருப். 190 (மூலங்கினர்-- முதல் நாலடி; திருப். 612 ('கட்டி' முதல் நாலடி): திருப் 647 ('நாலு' முதல் நாலடி).
6. திருமால்; [i] கஜேந்திர மோக்ஷம்: திருப். 1062 ('கவடு' அடி 5 முதல் 'ஆள்வான் வரை); திருப். 1187 (மாண்டார்' - அடி 5 முதல் 'புயல்' வரை).
[ii] இரண்ய சம்ஹாரம்: திருப். 874 (கரிய குழல்'-- அடி 5 முதல் 'நெடியவன்' வரை); திருப். 1137 ('இரு குழை' அடி 5 முதல் 'மாமன்' வரை); திருப். 1153 ('கலவியின்' அடி 6 'ஒரு சுரர் முதல் 'அணியுங்கோ' வரை).
[iii] பாற்கடல் கடைந்தது: திருப். 956 ('ஈரமோடு' அடி 5 முதல் 'அச்சுதன்' வரை).
(iv) கிருஷ்ண லீலை; திருப். 1273 ('முருக'-- அடி 5 முதல் 'புயல்' வரை).
கிருஷ்ணபகவான் குழல் வாசித்த பெருமை: திருப். 60 ('களப' - அடி 5 முதல் நெடியவன் வரை).
7. வேண்டுகோள்: யமன் வர்ணனை; ஆண்டவன் வர்ணனை; யமபயம் அற--திருப். 567 ('தமர' முதல் நாலடி).
8. முருகவேளின் திருவோலக்க வர்ணனை: திருப். 350 (சீரான - முதல் நாலடி).
III. பாலர் பாடத் திருப்புகழ்
இனிச் சிறு பிள்ளைகளும் பெண்களும் எளிதாகக் கற்றுப் பாடக் கூடிய திருப்புகழ்ப் பாக்கள் பின் வருவன:-
XXI. அநுட்டான உபதேசங்கள் [1]
இனி, அருணகிரியார் நாம் உய்வதற்கு வேண்டிய நித்யாநுஷ்டானத்திலும் அவ்வச்சமயங்களிலும் சொல்லித் துதித்துக் கரையேறுவதற்காக எடுத்துக் கூறியுள்ள பாடல்களையும், பாடல் அடிகளையும் இங்குக் காட்டுவோம்.
1. காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியது.
'முருகா, குமரா, குகா' - (கந். அநு. 15)
'உமை மைந்த. (திருப். 871)
2. திருநீறு இடும்பொழுது:
'ஆறுமுகம்' என ஆறுமுறை கூறுக. (திருப்) 161)
---------------
[1]. அன்பர் - திருப்புகழ் அடிமை - திருவாளர். கா.ரா. முருகேசம் பிள்ளை வெளியிட்டுள்ள 'அநுட்டானத் திருப்புகழ்' என்னும் நூலைப் பார்க்க.
(3) உண்பதற்கு குன்:
'பொருபிடி யுங்களி றும்விளை யாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முகவா!' (கந். அலங். 57)
(4) படுப்பதற்கு முன்:
'கதிர்வேலும் பொருகாற் சேவலும் நீலந் தரி கூத்தாடிய
மாவும், தினைகாவல் துவர்வாய்க் கானவர்மானும், சுரநாட்
டாள் ஒருதேனும் துணையாத் தாழ்வற வாழும் பெரி
யோனே! துணையாய்க் காவல் செய்வாய். (திருப். 681)
(4ஏ) காவல், துணை வேண்டிய பொழுதெல்லாம்
(5) நோயாயிருப்பினும், நோய் வராதிருக்கவும்:
தணிமலை மேவு பெருமாளே! நோய்கள் பிறவிகள்
தோறும் எனைநலி யாத படியுன தாள்கள் அருள்வாயே. (திருப்260)
குறிப்பு: இப்பாடல் முழுமையும் கூறுதல் நலம்.
(6) தனி வழி நடக்கும் பொழுது:
'வேலுமயிலுந் துணை' (கந்.அலங்.70)
(7) மனக்கலக்கம் உண்டாயின்:
'ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே!
இதயந் தனிலிருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே.' (திருப்233,1201)
(8) எத்தகைய காரியங்களில் முயற்சி செய்யும் பொழுதும், காரிய சித்தி பெறவும்:
'சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசாச ராந்தக! சேந்த! (கந்.அந். 48)
(9) ஆபத்துகள் வரினும் பயணம் புறப்படும் பொழுதும்:
"நாளென் செயும் வினைதா னென்செயும், எனைநாடி வந்த
கோளென் செயும், கொடுங் கூற் றென்செயும், குமரேசரிரு
தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளுங் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே." (கந்அலங்38)
(10) கலியாணம் நிறைவேற:
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே-
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே-
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்-
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே!
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே!
வீரர்கொள் சூரர்க்குங் குலகாலா!
நாலந்த வேதத்தின் பொருளோனே-
நானென்று மார்தட்டும் பெருமாளே' (திருப்.1295)
(11) கருப்பம் நலனுற*
மதியால்வித் தகனாகி-மனதாலுத் தமனாகிப்
பதிவாகிச் சிவஞான-பரயோகத் தருள்வாயே.
நிதியே! நித் தியமே! என்-நினைவே! நற்பொருளாயோய்!
கதியே! சொற் பரவேளே!-கருவூரிற் பெருமாளே-(திருப்927)
(12) புகழ் பெற, பகையற:
"திருத்தணி யிருக்கும் பெருமாளே!
நிறைப்புகழ் உரைக்கும் செயல் தாராய்." (திருப். 263)
(குறிப்பு:-இப்பாடல் முழுமையுங் கூறுதல் நலம்).
(13) இம்மை, மறுமை இரண்டினும் சுகம் பெற*
அமரர் சிறைமீட்ட பெருமாளே
இகபர சௌபாக்யம் அருள்வாயே (திருப்191)
(குறிப்பு:-பாட் முழுமையுங் கூறுதல் நன்று.)
*10, 11, 13 இம்மூன்றும் வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமி சச்சிதானந்தா அவர்கள் அருளிய உபதேசங்கள்.
(14) காலையும் மாலையும்:
ஓலையுந் தூதருங் கண்டுதிண் டாடல் ஒழித்தெனக்குக்
காலையு மாலையும் முன்நிற் குமே கந்தவேள் மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்த செச்சை
மாலையுஞ் சேவற் பதாகையும் தோகையும் வாகையுமே. (கந். அலங். 27)
(15) சதா தியானம்:
வேல், மயில் , சேவல், (கந் அநு. 1)
ஆதிமுருகா! ஆதிரமுருகா! ஆதிமுருகா! (திருப்1242)
(16) மலை ஏறும்பொழுது:
திருப்புகழ் பாடிக்கொண்டே மலைப்படி ஏறவேண்டும்.
"பன்னரிய உன்னற் புதத்திருப் புகழைப் பகர்ந்து
கொண்டுன் திருமலைப் படி யேறும் அன்பர்வினை பொடியாகும்
என்று நிறைமொழி மாந்தர் பகருவது." (திருத்தணிகைத் திருவிருத்தம்.)
22. உபதேச சாரம்: முடிவுரை
சுவாமிகள் தாம் அருளிய ஒவ்வொரு நூலினும் உயிர் நிலை போன்ற பொன்னன்ன சிறந்த உபதேசம் ஒன்றை நாம் உய்யவேண்டி அமைத்துள்ளார். அதுதான்-
(1) திருப்புகழில்:
வேந்தா! கடம்பு புனைந்தருள் சேந்தா! சரண்சரண்
என்பது வீண்போம தொன்றல என்பதை யுணராதோ! (1187)
(2) திருவகுப்பில்:
வாழியென நித்தமற வாது பரவிற் சரண வாரிச
மளிக்கும் உபகாரக் காரனும்-குறத்திதிரு வேளைக்காரனே.
(வேளைக்காரன் வகுப்பு)
(3) கந்தர லங்காரத்தில்:
காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதல் மிக எளிதே. (85)
(4) கந்த ரநுபூதியில்:
'கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய். (7)
(5) கந்த ரந்தாதியில்:
'துமிக் குமர சரண மென்னீர் உய்விர். (97)
(தும்மும் பொழுது 'குமர சரணம்' என்று சொல்லுங்கள்)
மேற் சொன்ன ஐந்து உபதேசங்களின் சாரம்)-
-
'இரப்போர்க்கு ஒளியாமல் இட்டு, வேந்தா சரணம்,
சேந்தா சரணம், முருகா வாழி என மறவாது கூறி அவர்
திருவடியைத் தியானியுங்கள். தும்மும் போதெல்லாம்
'குமர சரணம்' எனச்சொல்லுங்கள்; உய்வீர்கள்!"-
- என்பதாம். இதில் 'துமிக் குமர சரணம்' என்னும் உபதேசம் ஒன்றே நாம் எளிதில் தவறாமல் அநுட்டிக்கக் கூடியதும் நம்மைப் பிறவிக்கடலினின்றும் கரையேற்றக் கூடிய துமான ஒரு பெரும் புணையாம். அப்புணையை (தெப்பத்தை)க் கைப்பற்றித் தும்மும் போதெல்லாம் "குமர சரணம்" என மறவாது கூறித் திருத்தணிகேசர் திருவருளைப் பெற்று உய்வோமாக.
வேலு மயிலுந் துணை.
------------
அநுபந்தம் [ 1]
* இவ் வநுபந்தத்திலுள்ள இரண்டு பாடல்களும் அருணகிரியாரின் பாடல்களின் பெருமையை உணர்ந்த ஓரன்பரின் வாக்கு. கும்பகோணம் காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதராயிருந்த ஸ்ரீ A.M. சடகோப ராமாநுஜாசாரியார் அவர்கள் ஆழ்வார் திருநகரி திருமேனி ரத்னகவிராயர் வமிச பரம்பரையார் வீட்டிற் கிடைத்ததாக ஆழ்வார் திருநகரில் 19-5-1930ல் என்னிடம் கொடுத்துதவிய ஓரேட்டிலிருந்த துதிப்பாக்கள். ஈற்று இரண்டடிகளால் அருணகிரியாரின் அருமை பெருமை நன்கு விளங்கும். திகழதர முந்தி மைக்க ணென்று *அறிவி னுருவம் தனித்திலங்கு சுடரி லொளிரும் பரத்வம் என்பது சரியான பாடமாயின் இவ்வடி 'அறிவு திருமேனி' என்ற திருப்புகழையும் (1019) அறிவைஅறிவது பொருள்' என்ற திருப்புகழையும் (509) குறிக்கும்.
---
1. பெரிய தொரு கொம் படுத் திலங்கு
கமலம திரண்டுவிற் பதிந்த
பிறை மதிய மொன்று வெற் பிரண்டு சிலைமீதே-
பிறழு முகி லொன்று முத்திரண்டு
குமுத மலரொன்று துப்பிரண்டு
பெருகு சுழியொன்று மற்றிரண்டு கயல்போலே
தெரியு மிடை செங்கை பொற்பமைந்த
வதனமொளிர் கொங்கை மட்டலர்ந்து
செருகு குழல் தந்த மிச்சை தந்த கனிவாய்நேர்-
திகழதர முந்தி மைக்க ணென்று
வடிவுபெறு மங்கை யர்க்கி டைந்து
திரையுறு துரும் பெனச் சுழன்று மருளாதே;
வரியரவி னின்று தித்தி தொந்தொ
மடிகுடிகு டிந்தெய் தத்த திந்த
மபநிதப என்று நிர்த்த னஞ்செய் நெடுமாலால்-
மருக உமை யின்ப முற்றமைந்த
அசுரர் பொர வந் தெதிர்த்த அன்று
மயில் கடவு கந்த! நிற் பதங்கள் பெறுவேனோ;
அரியதவ முன்பி யற்றி யைந்து
புலன்வழி தகைந்து தத்துவஞ் சொல்
அடைவின் முறை நெஞ்சுறத் தெளிந்து மறைகாணா
-*அருவி லுருவுந் தனித் திலங்கு
சுடரி லொழியும் பரத்வ மென்ற
அருணகிரி செந்தமிழ்க் குவந்த பெருமாளே.
--------------
2. சிகரவரை விண்டு[1]விற் பதுங்க
முளரிமலர் பங்க[2]முற் றலைந்து
செவி3குறைய மந்த ரத்தை யுந்து மதயானை
திசைதொறு மடங்க வச்ர கும்ப
முடைபட மதன் சிரத் தணிந்து
திகழ் மகுட மங்கி யிற்பொரிந்து பொடியாக;
மகர முகள் சிந்து மொக்கு ளந்த
னுருவழிய வண்பனைக் குரும்பை
வசியிலற அம்புவிக்கு ளொன்று மிணையாகா-
மறுவடிவு கொண்டிழைத்த தென்று
கெருவித முடன்புடைத் தெழுந்து
வளருபய கொங்கையர்க்குள் நைந்து மெலிவேனோ;
பகரமரர் குஞ்சரிக்கு மஞ்சு
பருகு குற மஞ்சரிக்கு மொன்று
படும் விரக சம்ப்ர மஞ்ச
மலரணையி லன்பு றக்கலந்து
பரிவு பெறு சுந்த ரப்ர சண்ட மயிலோனே-
*அகர வுயி ருந்தனித் திருந்த
ககரவுட லுந்தமிற்பு ணர்ந்து
ளமையவிடை நின்ற அக் கரங்கள் முறையாக-
அதனைமரு வும்படிக் கிசைந்த
விதிமுழுவதும் பகுத் துணர்ந்த
அருணகிரி செந்த மிழ்க்கு வந்த பெருமாளே.
-------------
[1] . விண்டு-மேகம், ஆகாயம், 2. பங்கம்-சேறு; 3. செவி- செவ்வி. முதல் நாலடி 882, 126 எண்ணுள்ள திருப்புகழ்க் கருத்தைப் பின்பற்றுவன.
[2]'அகரமுமாகி' (433), 'அகர முதல்' (1127) என்னும் திருப்புகழ்களைக் குறிக்குமோ வேறு குறிக்குமோ ஆராய வேண்டும்.
--------------
அநுபந்தம் 2
1. அருணகிரிநாதர் மீதியற்றிய துதிப்பாக்கள்
1. அந்தாதி யில்லா இறைவனுக் கந்தாதி யன்றுரைத்தும்
நந்தா வகுப்பலங் காரம் அவற்கே நனி புனைந்தும்
முந்தா தரவில் அவன் புகழ் பூதியும் முற்றுஞ் சொன்ன
எந்தாய் அருண கிரிநாத என்னை நீ ஏன்றருளே.
2. நெடியா னுகந்த மருகன் திருப்புகழ் நித்தமுமே
படியார் படித்துப் பரகதி பற்றப் பரிந்தளித்த
அடியான் அருண கிரிநாத னம்பொன் னடிமலர்க்கே
அடியா ரெவரோ அவரேயெம் மாவிக் கருந்துணையே.
தானந் தனத்ததன தானந் தனத்ததன
தானந் தனத்ததன தனன தனதான.
3. மீனங் கொடிச்சிறுவன்[2] மாளும் படிக்கணழல்
வேகஞ் செலுத்தியவ னருளு முருகேசன்
வேலுஞ் சிறைக் கொடிக[3] லாபந்தழைக்குமயில்
வீடுஞ் சிறக்குபத முளரி யிருபாலும்
மானங் கையர்ப் பனிரு தோளுங் கடப்ப மலர்
வாசஞ்செய் செய்ப்பதியு நிதமு மறவாதே
மாலங் கொழித்துலகெ நாளும் பிழைக்க அவன்
மாமங்க ளப்பெருமை அளவில் நசையோடும்
தேனஞ் சருக்கரை நெய் பாலும் பலச்சுளைகள்
சேருங் கனிச் சுவைகள் இழிவு படவே சீர்-
தேருந் திருப்புகழ் சொல் நாதன் கிளிச்சொரூபி
சேயின் கலித்துறை4 சொல் கவிஞன் அநுபூதி [5]
மோனன்[6] பகுப்பு மயில் வேலின் சிறப்புரை[7] சொல்
மூதன் பினுக்கரசன் அருண கிரிநாதன்
மோகந் தவிர்த்த குருநாதன் பதப் புகழை
மூகன் தினத்தினமும் உருகி உணர்வேனே
----
* திருப்புகழும் அதன் பலவகைய அரிய சந்த இசைகளும் முதல் முதலாகச் சென்னை மாகாணத்திற் பரவுதற்கு மூல காரணராயிருந்த வள்ளிமலை-திருப்புகழ் சுவாமி சச்சி
தானந்தா அவர்கள் விரும்பியபடி 1918-ஆம் ஆண்டில் இவை மூன்றும் அடியேனால் இயற்றப்பட்டன.
[2]. சிறுவன்=காமன். [ 3]. 'சிறைக் கொடி = சேவல்.
[4]. சேயின் கலித்துறை-கந்தரந்தாதி, கந்தரலங்காரம்.
[5]. அநுபூதி-கந்தரநுபூதி.
[6]. பகுப்பு= திருவகுப்பு.
[7]. மயில், வேல் சிறப்புரை=மயில், வேல் விருத்தம்.
2. அருணகிரியாரின் சரித்திர வாழ்த்து,
1. அடியார்செய் தவப்பயனால் நினைத்தமாத்
திரை முத்தி யளிக்குஞ் சீர்த்தி
குடியாக விளங்கருணை நகருதித்துக்
குறிஞ்சிமகிழ் குமரவேளின்
கடியார்பூங் கழற்புணையைக் கொண்டுபவ
ஜலராசி கடந்தன் னோன்பால்
[8]ஒடியாத லுபதேசஞ் செபமாலை
இவைபெற்றே உயர்ந்தோன் யாவன்?
--------------
[8]. ஒடியா+நல்+உபதேசம். ஒடியா=கெடாத=அழிவிலாத.
2. பச்சைமயில் வாகனமும் வடிவேலுங்
குக்குடமும் பாடல் தோறும்
வைச்சதிருப் புகழ்ப்பாக்கள் பதினாறா
யிரம்பாடி வாது செய்த
விச்சைநிறை வில்லிபுத்தூர்ப் புலவருள
மிகநாண வேண்டு வோர்தம்
இச்சை யெலாம் நிறைகந்த ரந்தாதி
எனுநூலை இசைத்தோன் யாவன்?
3. எந்தைதிரு வடிவினொளி நினைந்துநினைந்
துருகியவன் எழிலின் வண்ணம்
கந்தரலங் காரமெனக் கலித்துறையாற் பாடி,
யதைக் கண்டோ ரெல்லாம்
செந்தமிழி னணியிதுவோ கந்தபிரா
னணியிதுவோ தெரிகி லேமென்
றந்தமிலா அதிசயத்தை எந்நாளு
முறச்செய்த அன்பன் யாவன்?
4 பி்ன்னரொரு நாள்சம்பத் தாண்டானென்
பானொருவன் பேச்சைக் கேட்ட
மன்னர்பிர புடதேவ மாராஜ
ருளமாட மயிலின் மீதே
தன்னிக ரிலாக்கந்த வேள்திருக்கை
வேல்விளங்கச் சபையில் வந்து
முன்னருறச் செய்தமகா தவப்புலமை
நிறைசெல்வ முன்னோன் யாவன்?
5 கிளியுருவிற் பொன்னுலகம் புகுந்துமலர்
கொடுவந்த கீர்த்தி யுற்று
வெளியுருவிற் கலவாது மாதேவி
திருக்கரத்தில் விளங்க நின்று
கிளியுருவிற் றிகழ்ந்தேநங் கந்தரநுபூதி
சொல்லிக் கேடில் லாத
ஒளியுருவச் சீர்பாத வகுப்பாதி
பாடியே உயர்ந்தோன் யாவன்?
6 அவனே எங்குலதெய்வம் அவனே
எம் உயிர்த்துணைவ னாகும்; நாளும்
அவன் கழலே வாழ்த்துவோம்
அவனருளே நாடுவோம் அவன் பாதச்சீர்
நவநவமாய்ப் புகழ்ந்து மகிழ்ந் தாடுவோம்
பாடுவோம் நாடி நாடித்
தவமுதல்வா அருணகிரி யப்பா என்
றழைத்திடுவோம் தவத்தைச் சார்வோம்.
----------------
இறைவ னடிய ரெவரோ அவர்தம்
குறைவில் புகழே குறிக்கும்-நிறைகுணத்து
விச்சைசெறி விப்பிரனாம் வேங்கட ராவ் சொல்வழியே
இச்சரித்தி ரம்பாடி னேம்.
திருத்தணி,
வ.சு.செ.
21-1-1924' பகல் 1 மணி.
----------------------------
அநுபந்தம் 3
(1) திருப்புகழ் சாரம்
பெரியோர்கள் 'திருவாசகம் என்னும் தேன்', 'திருமுருகாறெனுந் தேறல்' என்றார்கள்; திருப்புகழைத் 'திருப்புகழ் அமுது' என்றார்கள். அமிர்தம் எங்ஙனம் மிருத்துவை (இறப்பை) விலக்குமோ அங்ஙனம் திருப்புகழ் இறவாத இன்ப நிலையைத் தந்து உதவு மாதலின் அதை 'அமுது' என்றே ஆன்றோர் பலரும் பாராட்டியுள்ளார். அமுதுடன் வேறு பல்சுவையுங் கூடியது திருப்புகழ் என்றார் திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் ஆசிரியர் (பக்கம் 216) இலக்கண விளக்க நூலாசிரியராம் திருவாரூர் வைத்திய நாத தேசிகர் "மயிலம் ஸ்ரீ முருகன் பிள்ளைத் தமிழில்'--திருப்புகழின் நறுஞ்சுவையைப் பின் வருமாறு சிறப்பித்துள்ளார் :--
-
" கொண்ட லெனச்சந்தத் தமிழ் மாரிபெய் கொற்றவன் அருணகிரிக்,
கோமான் எண்டிசை யளவு நெடும்புகழ் கொண்ட அருட் செந்தேன்,
அண்டர் தெள் ளமுதொடு முக் கனி யூறல் அளவி வடித்தென்ன,
அணிபெறு கவிதர மாலிகை நீபத் தலர்மாலிகையினுடன்,
கொண்டணி பன் னிரு பொற்புய பூதர கொட்டுக சப்பாணி,
குக்குட கேதன மயிலநி கேதன கொட்டுக சப்பாணி'
திருப்புகழ் பல வகையினும் மிக அருமையான ஒரு நூல். சொற்சுவை, பொருட்சுவை, பத்திச்சுவை இவை மூன்றும் இந்நூலில் தலை சிறந்து நிற்கும். இந்நூலின் அருமைக்குக் காரணம் அதன் பெருமை; பெருமைக்குக் காரணம் அதன் நடுநிலைப் போக்கு (சமரச பாவம்). தம்மை யாண்டருளிய முருக வேளை நடுநாயகமான குறிக்கோள் தெய்வமாகக் கொண்டு, கணபதி, சிவபிரான், பார்வதி, திருமால் ஆகிய பெருங் கடவுளரையும் ஒப்பிலா வகையில் உயர்த்திப்பாடி இத்தகைய கடவுளுக்கு இளையோனே, குருநாதனே, குமரனே, மருகோனே எனப்பாடித் துதித்துச் செல்கின்றார் அருணகிரியார். இந்த சமரச நிலையே திருப்புகழ் யாவராலும் கொண்டாடப் படுவதற்கு ஒரு முக்கிய காரணமாயிருக்கின்றது.
சிவபிரானைப் பற்றிய துதிகளைப் பார்த்தால் சிவனடியார் வேறு யாரும் அதற்கிணையாகப் பாடினாரில்லை எனத் திடம்பட உரைக்கலாம். உதாரணமாக--1177 'புருவத்தை' என்னும் பாடலைப் பார்க்க. தேவியைக் குறிக்கும் தோத்திரங்களோ அதியற்புதமாக இருக்கின்றன. தேவியின் அடியார் வேறு எவரும் இத்தகைய அற்புத வகையில் ஏத்தினாரில்லை. இதற்குக் காட்டு 'தேவேந்திர சங்க வகுப்பு' ஒன்றே போதும். பூத வேதாள வகுப்பின் தொடங்கும் பகுதியும் படித்து மகிழத் தக்கது. அங்ஙனமே திருமாலின் துதிகளும், திருமால் அடியார் ஒருவரும் அருண கிரியாரைப் போலத் திருமாலின் பெருமை பலவற்றையும் அடுக்கடுக்காக அமைத்தாரில்லை. இதற்குக் காட்டாகச் சீர்பாத வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு இவற்றின் ஈற்றடிகளைக் கண்டு நாம் மகிழ்வோம். 'வாக்குக் கருணகிரி' என்னும் சிறப்பு சும்மா வருமா? திருப்புகழ்ப் பாக்களின் பெரும்பாலானவற்றின் பிற்பாதிகள் வள்ளியின் பொருட்டுச் செய்த லீலைகள், சூரசங்காரம் ஆதிய முருகன் திறலையும், சிவபிரான்,தேவி, திருமால் ஆகிய கடவுளரின் சிறப்பையும் எடுத்து ஓத, முற்பாதிகள் ஆசிரியரின் குற்றங்களைக் கூறி இத்தகைய புல்லனையும் பொருட் படுத்தி என்றருளுக என்றும், ஏன்றருளினையே என்றும் எடுத்துரைக்கும். இத்திருப்புகழ்க் கடலின் சாரத்தை எழுத வேண்டின் அது ஒரு தனி நூலாகும்; ஆதலால் திருப்புகழ்ப் பாக்களின் பொதுக்கருத்து எது; முக்கிய உபதேசம் எது என்பதை மட்டும் கூறுவோம்:--
(i) பொதுக்கருத்து; பொது மகளிரின் மாயையிற் சிக்காது எனைப் புரந்தருளுக; யமன் வருங் காலத்து நீ மயில் மீது வந்து எனைக் காத்தருளுக; யாக்கை நிலையாதது, அருவருப்புக்கு இடமாயது; ஆதலால் பிறப்பற உனது அடியார் கூட்டத்தில் என்னையும் சேர்த்து திருவடி நிழலைத் தந்தருளுக--என்பதே.
(ii)முக்கிய உபதேசம்:தினையள வேனும் பகிர்ந்து உண்ணுங்கள். வள்ளிச் சன்மார்க்கத்தை (பக்கம்120-299) உணர்ந்து அவ்வழியில் ஒழுகி உய்வோமாக.
இனிச் சிறப்பாக முற்பாதியிலும் மேலான தத்துவங்களைக் காட்டும் பாடல்களும் உள; பாடல் முழுமையும் பத்திரசம் ததும்பும் பாடல்களும் உள: அவைதாம்;-
(1) பத்திரசத்தன: 5,66,74,100,103,148,162, 210,211,289,319,330,338,350,366,387, 398, 418, 433, 444,460,492,504,567,590,634,661, 668,685,719, 739,740,775, 827, 831,851,862, 912,990,996,1009,1062,1129,1140,1168,1176, 1178,1204, 1210, 1233, 1240,1277,1295.
(2) பெருநிலை கூறுவன; யோக ஞான நிலையன; 17,47,93,148,157,179,190,205,209,220,238, 239, 343,357, 439,481,489,501, 511,563,593, 612,647,652,718,741,766,787,790,814,841, 900,960,980, 989,1001, 1007,1019,1046, 1047, 1048,1052,1053,1114,1115,1127,1159,1174, 1187,1211, 1218,1220,1263,1273,1274,:- புதுப் பாடல் "செய செய அருணா (பக்கம்249).
திருப்புகழின் பெருமை பின்னும் ஒன்றுளது. அது தான் - பேச்சு வராத இளங்குழந்தை முதல் பாலர்கள், காளைகள் பெரியோர்கள் யாவருக்கும் பிரியப் படும்படியான பாடல்களைக் கொண்டுள்ள பான்மையே. சிற்றின்பப் பிரியருக்கும் பாடலுண்டு; பேரின்பப் பிரியருக்கும் பாடலுண்டு; உதாரணமாக, (1) பேச்சு வராத இளங் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருவன:-' குன்றும் குன்றும்' (115), 'சகுடமித்தும்(641) என்பன போன்ற பாடல்களில் வரும்' டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்,"திகுட தித்தித் தகுட தந்தந் திகுட திந்தித் தோதிந்தம் – என்பன போன்ற ஓசை ஒலிகள்: பாலர்களுக்கு உரிய பாடல்கள் பாலர் பாடத் திருப்புகழ்களைப் பார்க்க (பக்கம் 239-40) சிற்றின்பப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தருவன-ஓலமிட்ட (326), கொலை கொண்ட (328), சீர் சிறக்கு (441), நெய்த்த சுரிகுழல் (917)போன்ற பாடல்கள்; பேரின்பப் பிரியர்களுக்கு உகந்தன மேற்சொன்ன பத்திரசப் பாடல்களும் பெருநிலைப்பாடல்களும் ஆம். இவ்வுண்மை யெலாம் ஆய்தறிந்தே திருமலை முருகன் பிள்ளைத் தமிழைச் சொன்னவர் "அறிந்தார் அறியார் இரண்டு மில்லார் ஆரும் எனைப் போல் உனைத்துதிக்க அளித்த அருணகிரிநாதன்" எனப் பாடி மகிழ்ந்தார்.
(2) திருவகுப்பு சாரம்
நடநவில் கலவி,.....கடம்பு.....வாள் வேல்.....திருமுக சமுக...முளரி...சேவல்...ஐவன வெற்பில் வஞ்சிக் கணவா" என்று மொழிதரு மொழியினல்லது பொற் பதங்கள் பெறலாமோ" (661)-எனத் தாம் ஓதினாராதலின்-அதற்கு இணங்க முருகன் திருவடி (சீர்பாத வகுப்பு), முருகன் அடியார் பெருமை (தேவேந்திர சங்க வகுப்பு), முருகன் படை (வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு), முருகனுக்கு உகந்த நாயகி (வேளைக்காரன் வகுப்பு, வேடிச்சி காவலன் வகுப்பு), முருகன் திருவாய் மலர்ந்த திருமொழி (பெருத்த வசன வகுப்பு), முருகன் சேனை (பூத வேதாள வகுப்பு), முருகன் போர் வீரம் (அலகை வகுப்புக்கள், சேவகன் வகுப்பு), முருகன் உபதேசத்தாற் பெற்ற ஞான ப்ரசாதம், (திருஞான வேழ வகுப்பு, திருக்கையில் வழக்க வகுப்பு), முருகன் பன்னிருபுயம் (புய வகுப்பு), முருகன் திருப்புகழ்ப் பெருமை (சித்து வகுப்பு), முருகன் திருநோக்கச் சிறப்பு (கடை கணியல் வகுப்பு), முருகன் திருவருளாற் பெற்ற அன்பின் சிறப்பு (சிவலோக வகுப்பு) ஆகிய இவைகளைச் சந்தப் பாவால் மொழிந்து மொழிந்து மகிழ்கின்றார். இதுவே திருவகுப்பு என்னும் நூல்; ஓதினார்க்கு முருகன் பொற்பதங்கள் எளிதாமாறு அருணகிரியார் அளித்த பிரசாதம் இது.
(3) கந்தரந்தாதி சாரம்
இது போட்டிப் பந்தயத்திற் பாடின நூலாதலின் இந்நூலின் பொருளை அரிய கடின செஞ்சொற்கள் பலாச் சுளையை அப்பழத்தின் கரடு முரடான தோல் மூடியுள்ளது போல, மூடியுள்ளன. பலாப் பழத்தைக் கீண்டி நறுஞ் சுளைகளை எடுப்பது போல, இவ்வந்தாதியின் சொற்களை ஆய்ந்தால் பெருஞ்சுவைச் சுளைகள் கிடைக்கும். அவை வற்றாச் சுவையன, தெவிட்டாச் சுவையன. பல நல்லுபதேசங்களைக் கொண்டுள்ள நூல் இது. ஆறு திருப்பதிகளையும் புகழுங்கள், சேது முதலிய ஸ்நானம் வேண்டாம், திருச்செந்தூர்த் தியானமே போதும் என நற்கதிக்குக் குறுக்கு வழியைக் காட்டியும், வள்ளிகணவ! சூராந்தக! எனக் கூறக் கோள்களால் வரும் தடுமாற்றம் வாராது எனப் புலப்படுத்தியும், முருகன் திருவருள் கூடுவதால் பொறுமை பிறக்கும், பொறுமையால் வெகுளி முதலிய தீயன இறக்கும் என்னும் உண்மையைத் தெரிவித்தும்,
தேவ சேனையைத் தியானிப்பதால் வறுமை ஒழியும், வேலைத் தியானிப்பதால் கூற்று அகலும், பிறவி வாராது, கோழி அஞ்சல் என ஆண்டருளும் என்னும் ரகசியப் பொருள்களை இந்நூல் வாயிலாக வெளிப்படுத்தியும், 'கருணைக் கருணகிரி' எனத் துலங்குகின்றார் அருணகிரியார். இந்நூலுக்கு உயிர்நிலைப் பாடல் "சேயவன் புந்தி" (48) என்பது.
(4) கந்த ரலங்கார சாரம்
சுவாமிகள் பத்தி நிலையிலே உன்னத நிலையில் இருந்தபொழுது பாடின பல பாடல்கள் இந்நூலிற் காணலாகும். பத்திப் பெருக்கால் ஏற்பட்ட திடத்தால் பிரமனையும், இயமனையும், நாள்களையும், கோள்களையும் வெருட்டுகின்றார். காமத்தை வென்றேன், அயன் கையெழுத்து அழிபட்டது, நிலைத்த புத்தி கிடைத்தது, மெய்யன்பர் இணக்கம் பெற்றேன் என மகிழ்கின்றார். முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன் என்பதற்குச் சாக்ஷி 'மொய்தாரணி குழல் வள்ளி' எனக் குறிப்பாய் வெளியிடுகின்றார். பத்தித் துறையில் இழிந்து ஆனந்த வாரியில் படிந்தேன்; அப் பரமானந்த சாகரத்தில் அறுமுக வேளைப் பன்னிரு புயனைக் கண்டேன், கண்டேன் எனக் குதூகலிக்கின்றார். உலகோர்க்கும் 'எழுத்துப் பிழையற அன்புடன் முருகன் துதிப்பாக்களைக் கற்பீர்களாக; மனத்தை நிலைப் படுத்துவீர்களாக, வெகுளியை விடுவீர்களாக, தானஞ் செய்வீர்களாக, இருந்தபடி (சாந்த நிலையில்) இருப்பீர்களாக, நொய்யளவேனும் வறிஞர்களுக்கு உதவுவீர்களாக, "யான் -தான்" என்னும் செருக்கை அழிப்பீர்களாக, முருகனை-அவன் வேலை - மறவாதீர்கள் - போற்றுங்கள், வாழ்த்துங்கள்' - என உபதேசிக்கின்றார். இந்நூலுக்கு உயிர்நிலைப் பாடல்கள்: 'நாளென் செயும்'(38), 'விழிக்குத் துணை'(70) என்பன.
(5) கந்த ரநுபூதி சாரம்
தமது குறைகளை எடுத்துக் கூறியும், தாம் தவ நிலையால் பெற்ற பேற்றினை எடுத்து ஓதியும், தாம் அடைந்த மௌன நிலையின் பெருஞ்சிறப்பை எடுத்துக் கூறியும், நான் பெற்ற இன்பத்தை நீங்களும் வழிபாட்டால் பெற்று உய்யுங்கள் என உபதேசிக்கும் அருணகிரியார் உலகை உய்விக்கும் நூல் கந்தரநுபூதி. இந்நூலுக்கு உயிர்நிலைப் பாக்கள் 'ஆடும்பரி'(1), 'கெடுவாய் மனனே'(7) என்பன. இந்நூலின் அருமை பெருமையைக் கண்டுணர்ந்த பெரியார் தாயுமானவர் என முன்னரே கூறினோம் (பக்கம் 172). பிறிதொரு பெரியார் முருகன் உகந்து வீற்றிருக்கும் இடங்களாகக் கூறின ஒன்பதில் 'அருணகிரியாரின் அநுபூதி'யும் ஒன்று. அந்த இடங்கள்: (1)பார்வதி தேவியின் கைத்தலத் தாமரை (2) சிவபிரானது நெற்றிக் கண் (3) கங்கை (4) சரவணம் (5) அருணகிரியாரின் வாக்கு, (6) அவர் அடைந்த அநுபூதி (7) மறைச்சிரம் (8) அறிவானந்தம் (9) தமது நெஞ்சக்கல் - என அருமையாக விளக்குகின்றார். அச் செய்யுள் வருமாறு;-
இளைத்த மருங்கு லுமை மடந்தை யிருகைத் தலம்செய்பதுமத்தும், எறிநீர்க் கங்கை நதிய கத்தும், எழுந்த செழும்பூஞ் சரவணத்தும், வளைத்த மேருச் சிலையாளி வயங்கும் பால லோசனத்தும், மதுரம் பொழியும், அருணகிரி வாக்கினிடத்தும், அவன் இனிதிற், றிளைத்த அநுபூதி யினும் மறைச் சிரத்தும் அழியாச் சிதானந்தச் செந்தேன் பரவைக் கடலகத்தும், சிறியேன் சிந்தைச் சிலாதலத்தும், முளைத்த பவள இளங்கிளையின் முளையே வருக வருகவே, முழுது மயிலா சலமுகந்த முருகா வருக வருகவே"- (மயிலம் முருகன் பிள்ளைத் தமிழ்.)
மேற் சொன்ன ஐந்து நூல்களுக்கும் அடிப்படையாயுள்ளதும், வள்ளி திருமணத்துக்கு உட்கிடையா யிருப்பதும், அருணகிரியாரால் வெளிப்படுத்தப் பட்டதுமான ரகசிய உபதேசம் 'வள்ளிச் சன்மார்க்கம்". (பக்கம் 120 -1பார்க்க). இதை இங்கு விவரித்துக் கூறுவாம்:-
சிவபிரானுக்கு முருகக் கடவுள் எப்பொருளை உபதேசித்தனரோ அப்பொருளைத் தமக்கும் முருகபிரான் உபதேசித்தருள வேண்டும் என்பது ஸ்ரீ அருணகிரி நாதருடைய பேராசை. அத்தகைய ஆசையினால் "முருகா! நீ சிவபிரானுக்கு உபதேசித்த ரகசியப் பொருளை எனக்கும் உரைத்தருள வேண்டும்". - எனத் திருப்புகழிற் பல இடங்களில் அருணகிரியார் வேண்டியுள்ளதைக் காண்கின்றோம். உதாரணமாக:-
-
"உருத்திரனும் ** அநுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்க மறையெடுத்து பொருள் உணர்த்துநாள்
அடிமையும் உடையேனோ." (173)
உமைபங்காளர்க் கன்றுபகர்பொருள் அருள்வாயே. (397)
புரத்ரய மெரித்த பெருமானும் ** பத்திகொடு
பரவ அருளிய மவுன மந்திரந்தனைப் பழைய நினது
வழியடிமையும் விளங்கும்படிக் கினிதுணர்த்தி யருள் வாயே." (1127)
வேணியர்க் கருள்கூரும்**சத்யவாசகம்
புற்புதப் பிராணனுக் கருள்வாயே." (1251)
இங்ஙனம், இரங்கிக் கேட்டும் அந்த ரகசியப் பொருள் கிடையாதலால் அருணகிரியார் வேறு தந்திரங்களையும் செய்து பார்த்தனர். அதாவது, முருகா! உன் தந்தைக்கு உபதேசித்த ரகசியத்தை எனக்கு உபதேசஞ் செய்ய உனக்கு மனமில்லாவிட்டால் "வேண்டாமை" என்கின்ற ஒன்றை (நிராசையை) அடைந்து உள்ளம் ஒடுங்கும் அன்புப் பேற்றினையாவது தந்தருளுக என வேறுவரம் கேட்பது போல வேண்டிப் பார்த்தார். இதனை "மாண்டா ரெலும்பணி" என்னுந் திருப்புகழில்,
-
"சடையாண்டார் இறைஞ்ச மொழிந்ததை**(அருளாயேல்)
வேண்டாமை ஒன்றை அடைந்து உ(ள்)ளம் மீண்டாறி
நின் சரணங்களில் வீழ்ந்தாவல் கொண்டு உருகு அன்
பினை உடையேனாய்"- (1187)
என வருவதால் அறிகின்றோம்.
இத்தந்திரத்துக்கும் இறைவன் அகப்படவில்லை போலும். பின்னர், "நீ கங்கை சூடிக்குச் செய்த உபதேசத்தை எனக்கு உரை செய்தால் உன் குருத்துவம் சற்றேனும் குறையுமோ" எனச் சற்று வைதும் பார்த்தார். இதனை "கங்கை வைத்த நம்பர்** பெறப் பகர்ந்த உபதேசம் சிறியேன் தனக்கும் உரைசெயிற் சற்றும் குருத்துவங் குறையுமோ தான்?" எனவருந் திருப்புகழிற் (723) காண்க. இங்ஙனம் பலவிதம் அந்த ரகசியத்தை அறிய முயன்ற அருணகிரியார் ஈற்றில் வென்றனர். அந்த ரகசியத்தை அருணகிரியார் வேண்டுகோட் கிரங்கி முருகபிரான் அவர்க்கும் உபதேசித்துள்ளார் என்பதையும் அது இன்னது என்பதை யும் குறிப்பாகக் கந்தரநுபூதியிலும் சற்று வெளிப்படையாகச் கந்தரலங்காரத்திலும், தெளிவாகத் திருப்புகழிலும் அருணகிரியாரே குறிப்பிக்கின்றனர். கந்தர் அநுபூதியில்,
-
"நாதா குமரா நமஎன் றரனார்
ஓதாய் என ஓதிய தெப்பொருள் தான்"
- எனக்கேட்ட வினாவுக்கு விடை பின் இரண்டடிகளிலேயே வெகு குறிப்பாக உள்ளது. எங்ஙனம் எனில், வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்பாதனாய் நீ யிருந்தும் "நீ குறமின் பதசேகரன்"-என்றாரே அது தான். எப்படி என்றால், "யான் எனது" என்னும் இரண்டும் எங்கே அற்றுள்ளனவோ அங்கே இறைவனைக்காணலாம். அங்கே இறைவன் தானே சென்று நின்று தோன்றுவன். வள்ளியம்மை முருகபிரானையே நாடி நின்ற காரணத்தால் முருகர் வள்ளியின் தினைப்புனத்துக்குத்தானே சென்றார். குறமின் (வள்ளி) பாத சேகரர் ஆனார். எனவே தன்னை யிழந்தால் தலைவனைக் காணலாம் என்பதே ரகசியப் பொருள். இந்நிலையை அநுட்டானத்திற் கொண்டு வந்து நடத்தினவள் வள்ளியம்மையே. அவள் நிலையை உணர்ந்த முருகர் தாமே அவளை நாடிச் சென்று கல்யாணம் முயன்றார் என்பதை,
-
"கின்னங் குறித்து அடியேன் செவி நீயன்று கேட்கச் சொன்ன
குன்னம் குறிச்சி வெளியாக்கி விட்டது**சிறுமிதனை
முன்னம் குறிச்சியிற் சென்று கல்யாண முயன்றவனே"(கந்அலங்24)
என்னும் கந்தரலங்காரத்திற் காண்க. இதன் பொருள் "முருகா! என் மனக் கிலேசத்தை அறிந்து (நான் வேண்டின) ஒரு ரகசியத்தை நீஉபதேசித்தாய். அந்த ரகசியம் இன்னதென்பதை குறிஞ்சிநில ஊராகிய வள்ளிமலை எனக்கு வெளியாக்கி விட்டது. எப்படி யென்றால் அவ்வேட்டுவச் சிறுமியை நாடி நீயே அவளிருந்த ஊருக்குச் சென்று அவளைக் கலியாணம் செய்து கொள்ள முயன்றாயாதலின்". இச் செய்யுளில் "சென்று" என்பது எத்துணைப் பொருளாழத்துடன் கூடியது! இறைவன் தானே சென்றார் என்பதுதான் அவரது அருட்டிறம்.
இந்த அலங்காரச் செய்யுளால் வள்ளியம்மை கைப்பற்றின நன்னெறியே. இறைவனை வசப்படுத்தக்கூடிய நெறி என்பதும் இந்த நெறியையே கைப்பற்றுக- எனவும் அருணகிரியார்க்கு முருகர் உபதேசித்தனர் என்பதும் தெரிகின்றன. இதுவே 'தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே' என அப்பர் சுவாமிகள் குறிப்பிட்ட நிலை. இந்நெறியை அருணகிரியார் சுருக்கமாக "வள்ளிச் சன்மார்க்கம்" எனக் குறிக்கின்றனர். இதற்கு 'வள்ளி அநுட்டித்த நன்னெறி' என்பது பொருள். எனவே முருகபிரான் உபதேசித்த ரகசியப் பொருள் என்ன என்றால் யாரொருவர் தன்னை யிழந்து (யான்-எனது என்பன அற்று) தலைவனை நாடுகின்றனரோ அவரை இறைவன் தானே நாடிவந்து அருள் புரிவன் என்பது தெளிவு. இந்த 'வள்ளிச் சன்மார்க்க' ரகசியத்தைத் தான் முருகபிரான் சிவபிராற்கு உப தேசித்தனர் என்பது "கள்ளக் குவாற்பை" (317) என்னுந் திருப்புகழில்,
-
"வள்ளிச் சன்மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்றும் இளையோனே"-
என அருமையாக விளக்கப்பட்டுளது. இதன் பொருள்விள் ஐக்கு-ரகசிய உபதேசம் எது என்று வினவிய தந்தைக்கு' வள்ளிச் சன்மார்க்கம்-வள்ளி அநுட்டித்த நல்வழியே தலைவனை (கடவுளை) வசப்படுத்தும் வழியென்று, நோக்க வல்லைக்குள் -ஒரு நொடிப்பொழுதில் (விரைவில் கண்ணிமைப் பொழுதில்), ஏற்றும் (அவர் காதில் ஏற்றிய) உபதேசித்தருளிய இளையோனே-குழந்தைக் குரு நாதனே" என்பது. அந்த ரகசிய வழியை அநுட்டித்தவள் வள்ளி. இந்த ரகசியத்தைத் தான் முருகபிரான் சிவபிராற்கு உபதேசித்தனர். 'வள்ளிச் சன்மார்க்கமே' ரகசியப் பொருள். இவ்வுண்மையை வள்ளி கல்யாண தத்துவத்தை விளக்க எளியேன் இயற்றிய பின்வரும் பாட்டில் தெளிவுபெறக் காணலாகும்:-
வான்முட்டு மலைக்கனி நீ யதனால் வள்ளி
மலைக்[1] கனியை யடைவதற்கே நாடிச் சென்றாய்!
மாதவட்கு மயலளிப்பச் செட்டி யானாய்
மற்றதுதான்[2] உங்கள்குல தருமம்! வள்ளி
மான்குட்டி யாதலினால் வேங்கையாகி
மற்றவளை அகலாது மருங்கே நின்றாய்!
வள்ளிகிழ வோனென்றே காட்டுதற்கு
வள்ளியிடங் கிழவனாய் லீலை செய்தாய்!
"யான்" கொட்கு மறு நீங்கிப் பத்தி செய்வோர்க்
கேவல் செயும் பணியாளன் ஈசன் என்னும்
இன்பநிலை காட்டுதற்கே வள்ளி பாதம்
இறைஞ்சினை நீ! அதனுண்மை இன்றுணர்ந்தேன்!
தேன்சொட்டு கடம்பணியுஞ் சேயே! உன்றன்
திருவிளையாட் டின்பெருமை செப்பற் பாற்றோ!
சிந்திப்போர் நெஞ்சகத்தில் ஊறுந்தேனே!
திருத்தணிகை மலைவாழுந் தேவ தேவே!
---------------------------
[1]. கனி-கன்னி. [2]. சிவபிரானும் செட்டியாய் வளையல் விற்றார்.
வேலு மயிலுந் துணை.
--------------
நித்திய பாராயணத்துக்குரிய பாக்கள்
1. கந்தரநுபூதி:
விநாயகர் அருள் பெற:
'ஆடும்பரி, வேல், அணி சேவல்' எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே!
வினை நீங்க
கெடுவாய் மனனே! கதிகேள்! கரவா(து)
இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்!
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே
விடுவாய், விடுவாய், வினை யாவையுமே!
காலனை எதிற்க:
கார்மா மிசை காலன் வரிற், கலபத்
தேர்மா மிசை வந்தெதிரப் படுவாய்!
தார் மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே!
மறு ஜென்மம் பெறாமலிருக்கு:
மாஏழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ?
கோவே! குறமின் கொடி தோள் புணரும்
தேவே! சிவசங்கர தேசிகனே!
பாத தரிசனம் பெற
கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்(று)
உய்வாய், மனனே! ஒழிவாய் ஒழிவாய்;
மெய் வாய் விழி நாசி யொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.
சகல காரிய சித்தி பெற
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
2. கந்தரலங்காரம்.
உலகுக்கு உபதேசம்.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம்-என்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழுபாரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்கவை-வேல்
விடும்கோன் அருள்வந்து தானேஉமக்கு வெளிப்படுமே.
முருகன் நாம விசேடம்.
முடியாப் பிறவிக்கடல் புகார் முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப் படார் வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர்குலம் அடங்கப்
பொடி ஆக்கிய பெருமாள் திருநாமம் புகழ்பவரே!
தன்குறை கூறல்
கோடாத வேதனுக்கு யான்செய்த குற்றம் என்குன்று எறிந்த,
தாடாளனே தென்தணிகைக்குமர நின் தண்டை அம்தாள்
சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தன னே.
சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச்
சிந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே.
முருகன் துணை நிற்க:
விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத்துணை முருகாஎனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணை அவன்பன்னிரு தோளும் பயந்தகனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
நாள் என்செயும் வினைதான் என்செயும் எனைநாடி வந்த
கோள் என்செயும் கொடும்கூற்று என்செயும் குமரேசர்இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
யம பயம் இன்மை
வேலாயுதன் சங்கு சக்ர ஆயுதன் விரிஞ்சன் அறியாச்
சூலாயுதன் தந்த கந்தச்சுவாமி சுடர்க்குடுமிக்
காலாயுதக் கொடியோன் அருள் ஆயகவசம் உண்டுஎன்
பால் ஆயுதம் வருமோ எமனோடு பகைக்கினுமே.
தரிசனப்பாடல்
ஒலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்
காலையும் மாலையும் முன்நிற்குமே கந்தவேள் மருங்கில்
சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை
மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.
தன் ஆனந்தம் கூறினது
பத்தித் திருமுகம் ஆறு உடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்து இருக்கும் அமுதுகண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் ஏற்றித்
தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே!
பிரார்த்தனை
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும் சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனைநான்
ஐவர்க்கு இடம்பெறக் கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்து அருளே.
உதித்து ஆங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து எனை உன்னில் ஒன்றா
விதித்து ஆண்டு அருள்தரும் காலம் உண்டோ வெற்புநட்டுஉரக
பதித்தாம்பு வாங்கிநின்று அம்பரம் பம்பரம் பட்டு உழல
மதித்தான் திருமருகா மயில் ஏறிய மாணிக்கமே.
அடைக்கலம் புகுதல்
மைவரும் கண்டத்தர் மைந்த கந்தா என்று வாழ்த்தும் -இந்தக்
கைவரும்தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய்ப்
பைவரும் கேளும் பதியும் கதறப் பழகிநிற்கும்
ஐவரும் கைவிட்டு மெய்விடும்போது உன் அடைக்கலமே.
---
---------------
திருத்த வேண்டுவன
பக்கம் வரி பிழை திருத்தம்
29 17 கருனை கருணை
32 6 தலத்திவ் தலத்தில்
32 9 என்றும் என்றும்
37 21 தலத்தைத் தலத்தை
38 1 முருத முருக
43 16 சேர்த்து சேர்ந்து
45 29 தச்க தக்க
48 12 எள்பதும் என்பதும்
213 14 வளங்கும் விளங்கும்
216 --- (தலைப்புஎண்)8 (தலைப்புஎண்)13
218 30 அமரும் அமரும்
248 8 விளங்கருவனை விளங்கருணை
251 22 என்றருளுக ஏன்றருளுக
268 7 கொள்களின் கோள்களின்
-----------------------------------------------------------
--------------------
3 காளிதாஸ்பிரஸ், நெ.2, பாரத்வாஜீஸ்வரர் காலனி, 4-வது தெரு,
கோடம்பாக்கம், சென்னை-600024.
-----------------------------------------------------------
Comments
Post a Comment