Aḻakar kiḷḷaiviṭu tūtu
பிரபந்த வகை நூல்கள்
Backதிருமாலிருஞ் சோலைமலை
அழகர் கிள்ளைவிடு தூது
பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றியது
உ. வே. சாமிநாதையர் தொகுப்பு (உரையுடன்)
-
Source
-
பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய
"திருமாலிருஞ் சோலைமலை அழகர் கிள்ளைவிடு தூது"
ஸ்ரீ தியாகராச விலாச வெளியீடு
இது : மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் பல பிரதி ரூபங்களைக்கொண்டு
பரிசோதித்து நூதனமாக எழுதிய குறிப்புரை முதலியவற்றுடன்
சென்னை, கபீர் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
ஆறாம் பதிப்பு /Sixth Edition - October, 1957
(விலை 75 ந. பை)
உரிமைப் பதிவு
Kabeer Printing Works, Madras
---------------
இப்புத்தகத்தில் அடங்கியவை
- 1. முகவுரை
2. ஆசிரியர் வரலாறு
3. நூலாராய்ச்சி
[ 1. தூதுப்பிரபந்தங்கள். 2. திருமாலிருஞ்சோலைமலை : பரிபாடலிற் கண்ட செய்தி - சிலப்பதிகாரச் செய்தி - பிற நூல்கள் - தலத்தின் திருநாமங்கள் - பெருமாள் திருநாமங்கள் - நாச்சியார் திருநாமம் - தீர்த்தங்கள் - விருக்ஷங்கள் - விமானம் - மண்டபங்கள் - பூசித்துப் பேறு பெற்றோர் - பிற கோயில்கள் - விழாக்கள் - திவ்யப்பிரபந்தத்திற் கண்ட சிறப்பு. 3. நூலின் பொருள் அமைப்பு : கிளியின் பெருமை - அழகர் பெருமை - தசாங்கம் - பிற சிறப்புக்கள் - திருவிழா - தலைவியின் நிலை - கிளியை வேண்டுதல் - கோயிற் பணியாளர் - தூதுரைக்கும் முறை. 4. நூற்பொருளாராய்ச்சி : அணிகள் - தொகை முதலி யன் - சமற்காரம் - புராணம் முதலிய நூற் செய்திகள் - வைணவ மரபு - பாண்டி நாட்டு வழக்கம் - செய்யுள் நடை.]
4. அழகர் கிள்ளைவிடு தூது மூலமும் குறிப்புரையும்
5. அரும்பத முதலியவற்றின் அகராதி
6. நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற் குறிப்பகராதி
-------------------
கணபதி துணை
அழகர் கிள்ளைவிடு தூதென்பது திருமாலிருஞ்சோலைமலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாளைக் காமுற்ற தலைவி ஒருத்தி அவர்பால் ஒரு கிளியைத் தூது விடுத்ததாகப் பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை யென்னும் புலவர் இயற்றியது. இது காப்பு வெண்பா ஒன்றையும், 239 கண்ணிகளையும் உடையது.
இந்நூல் மூலம் 1905-ஆம் வருஷம் மு. வேணுகோபால சாமி நாயுடு என்பவரால் அச்சிடப்பெற்றது. அதிற் பல கண்ணிகளில் வேறுபட்ட பாடமும் பிழையும் இருந்தன. இற்றைக்கு 56 வருஷங்களுக்கு முன்பு திருநெல்வேலித் தெற்குப் புதுத்தெரு வக்கீல் ஸ்ரீ சுப்பையா பிள்ளையவர்கள் வீட்டில் இந்நூலின் ஏட்டுப் பிரதி ஒன்று கிடைத்தது. அதன் இறுதியில்,
'அழகர் பேரில் கிள்ளைவிடு தூது. பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை
பாடல் எழுதி முடிந்தது. கண்ணி 239. தேவி சகாயம்'
என்பன எழுதப்பட்டிருந்தன. இந்நூலுடன் பத்மகிரிநாதர் தென்றல் விடுதூதும் இருந்தது.
பிறகு எனக்குக் கிடைத்த பிரதிகள் வருமாறு:
1. திருவாவடுதுறை யாதீனத்துப் பிரதி ஒன்று ;
2. களக்காடு ஸ்ரீ சாமிநாத தேசிகர் பிரதி ஒன்று ;
3. மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயரவர்கள் வீட்டுப் பிரதி ஒன்று .
இவற்றின் உதவியினால் இப்பொழுது இந்நூல் செப்பஞ் செய்யப்பெற்றுக் குறிப்புரையுடன் வெளிவரலாயிற்று. அழகர் கோயில் சம்பந்தமான சில செய்திகளை நான் அறிய விரும்பிய போது மதுரைத் தமிழ்ச்சங்கத்து உதவிக் காரியதரிசியும் அட்வொகேட்டுமாகிய ஸ்ரீமான் என்.ஆர். கிருஷ்ணசாமி ஐயங்காரவர்களும் செந்தமிழ்ப் பத்திரிகையின் உதவியாசிரியராகிய ஸ்ரீமான் கி. இராமாநுஜையங்காரவர்களும் விசாரித்து எழுதியனுப்பினார்கள்.
இந்நூலின் முதற்பதிப்பு வடபாதிமங்கலம் ஸ்ரீமான் ராவ் பகதூர் வ. சோ. தியாகராஜ முதலியாரவர்கள் பொருளுதவியால் 1938-ம் வருஷம் வெளியாயிற்று.
இவ்வெளியீடு சம்பந்தமான மற்ற விஷயங்களை முதற்பதிப்பின் முகவுரையிற் காணலாம்.
இந்நூலை ஆராய்ந்தபோதும், பதிப்பித்தபோதும் உட னிருந்து உதவி செய்தோர் சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி. மு. சுப்பிரமணிய ஐயரும், 'கலைமகள்' ஆசிரியர் சிரஞ்சீவி வித்துவான் கி. வா. ஜகந்நாதையரும் ஆவர்.
"தியாகராஜ விலாசம்"
திருவேட்டீசுவரன் பேட்டை இங்ஙனம்
20-7-41. வே. சாமிநாதையர்.
--------------------------
இந்நூலாசிரியராகிய பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை யென்பவர் சற்றேறக்குறைய இருநூறு வருஷங்களுக்கு முன்பு மதுரையில் வாழ்ந்திருந்தவர். இவருடைய மரபினர்கள் பல பட்டடைக் கணக்கு என்னும் ஒருவகை உத்தியோகம் பார்த்தவர்கள். இவருடைய தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை யென்பது. இவர் பெயர் பலபட்டடைச் சொக்கநாதக் கவிராயர் எனவும் வழங்கும்.
இவருடைய முன்னோர்கள் மதுரை ஸ்ரீ சொக்கநாதக் கடவுளிடத்தும் ஸ்ரீ அங்கயற்-கணம்மையிடத்தும் அளவிறந்த அன்பு பூண்டவர்கள். இவ்வாசிரியரும் அத்தகையவரே. இவர் அவ்வப்பொழுது மனங்கனிந்து பாடிய துதிப்பாடல்கள் தமிழ் நயத்தையும் சிவபக்தியையும் ஒருங்கே வெளிப்படுத்தி உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தவை. மதுரைத் தல் சம்பந்தமாக இவர் *மும்மணிக்கோவை ஒன்றும், யமக அந்தாதி ஒன்றும் இயற்றியுள்ளார். இராமேசுவரத் தலத்திற்குத் *தேவையுலா வென்ற ஒருலாவும் திண்டுக்கல்லில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பத்மகிரிநாதர் என்னும் சிவபிரான் மீது ஒரு *தென்றல்விடு தூதும் இவராற் பாடப்பெற்றன. கன்னிவாடியில் அக்காலத்திருந்த ஜமீன்தாராகிய நரசிங்க நாயகர் மேல் இவர் இயற்றிய வளமடல் ஒன்று உண்டு. தேவையுலாவினால், அக்காலத்தில் (கி.பி. 17111725) இராமநாதபுரத்தில் விஜயரகுநாத சேதுபதி என்பவர் அரசாண்டு வந்தாரென்று தெரிகிறது.
--------
[*] இம் மூன்று நூல்களும் என்னாற் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
'கூளப்ப நாயகன் விறலிவிடுதூது' இயற்றிய சுப்பிரதீபக் கவிராயருக்கும் இவருக்கும் சிறிது மனவேறுபாடு இருந்த தென்றும், அதுபற்றி ஒருவரை யொருவர் குறைகூறிச் சில செய்யுட்கள் இயற்றினரென்றும் சில வரலாறுகள் வழங்கி வருகின்றன.
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்திற்குரிய சிறப்புப் பாயிரச் செய்யுட்கள் இரண்டு இவரால் இயற்றப் பெற்றனவாகச் சில பழைய ஏட்டுச் சுவடிகள் தெரிவிக்கின்றன. அதனால், அப்புராணம் அரங்கேற்றிய காலத்தில் உடனிருந்து கேட்டு இன்புற்றவர்களுள் இவரும் ஒருவரெனத் தெரிகின்றது.
சைவ சமயத்தினராயினும் இந்நூலில் இவர் அழகரைப் பாராட்டியிருக்கும் முறையைப் பார்க்கையில் ஸமரஸமான நோக்கமுடையவரென்று தெரியவருகின்றது. சில குறிப்புக்களால் இவரை அத்வைதி என்று கொள்வதற்கும் இடமுண்டு.
ஒரு பொருளைத் தூது விட்டதாகச் செய்யுள் செய்வதில் இவருக்கு மிக்க விருப்பம் உண்டுபோலும். அழகர் கிள்ளைவிடு தூது, தென்றல்விடு தூது என்று தனியே இரண்டு தூதுப் பிரபந்தங்களை இயற்றியதன்றித் தாம் இயற்றிய மதுரை மும்மணிக்கோவையில் மேக விடுதூதுப் பொருளமைந்த அகவல் ஒன்றும் (16), பூவைவிடு தூதுப் பொருளமைந்த வெண்பா ஒன்றும் (20) இயற்றியுள்ளார்.
படிப்பவர்களுடைய உள்ளத்தில் விஷயங்களைத் தெளிவாகப் பதியும்படி செய்யும் முறையில் இவர் தனிப்பாடல்கள் முதல் வரிசையிலே வைக்கத்தக்கவை. தென்றல்விடு தூதும், கிள்ளை விடு தூதும் அவற்றின் பின்னே வருவன ஆகும்.
--------------
3. 1. தூதுப் பிரபந்தங்கள்
தண்டமிழ்ப் பிரபந்த வகைகளில் தமிழ் நாட்டினருடைய கருத்தை மிகுதியாகக் கவர்ந்தவை சில. கோவை, உலா, தூது, பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தங்கள் பல வேறு வகையாகப் பிரிந்துள்ள பிரபந்தங்களின் தொகுதியில் சிறந்தனவாக விளங்குகின்றன. அவை பாட்டுடைத் தலைவன் சிறப்புக்கள் மாறுபடுவதற்கேற்பச் செய்திகள் மாறுபடுதலையன்றி நூலமைப்பில் மாறுபடாதவை. கோவைக்கண் உள்ள துறைப்பொருளும் கிளவியமைதியும் பெரும்பாலும் ஒரே அமைப்பையுடையன. உலாவில் உள்ள ஏழு பருவப் பெண்களின் வருணனையும் பிறவும் அத்தகையனவே. பிள்ளைத் தமிழிலும் பத்துப் பருவங்கள் ஒரு திறத்தனவாகவே அமைந்துள்ளன. தூது நூல்களிலோ தூது விடுக்கப்படும் பொருளுக்கேற்பச் செய்திகளும் பொருளமைப்-புக்களும் மாறுபட்டே இருக்கின்றன. ஆதலின் அவ்வகை நூல்களில் புதுமை மிகுதியாகக் காணப்படும்.
அன்றியும் உலா, கோவை, பிள்ளைத்தமிழ் போன்ற நூலமைப்புக்கள் தமிழுக்கே சிறப்பாக உரியன. தூதோ இந்திய மொழிகள் பலவற்றிலும் சில சில வேறுபாடான அமைப்புக்களுடன் காணப்படும். இங்ஙனம் பல மொழிப்புலவர்களும் விரும்பி நூல் செய்வதற்குரிய அமைப்பு முறை சிறந்ததாகவே இருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை.
வடமொழியில் தூது நூல்களை ஸந்தேசங்களென்றும் தூத காவ்யங்களென்றும் கூறுவர். அவை காப்பிய வரிசையிலே சேர்த்து எண்ணப்படுவன. காளிதாஸ் மகாகவியால் இயற்றப் பெற்ற மேக ஸந்தேசம் புலவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இனிய காப்பியமாக விளங்கி வருகின்றது. அதனைப் பின்பற்றிப் பல தூத காவியங்கள் வடமொழியில் எழுந் துள்ளன. அவற்றைப்பற்றி [#]அறிஞர்கள் ஆராய்ந்து எழுதி யிருக்கின்றனர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட பாஷைகளிலும், வங்காளி, சிங்களம் முதலிய மொழி களிலும் பல ஸந்தேச நூல்கள் உள்ளன வென்பர்.
----
[#] Origin and development of Duta Kavya Literature in Sanskrit’ by Chintaharan Chakravarti in Indian Historical Quarterly, Vol. III, No. 1 and "Meghaduta and its imitations' by E. P. Radhakrishnan, M. A., in the Journal of Oriental Research, Madras, Vol. X. p. 269.
உலக வழக்கில் தூதனுப்பும் முறை பல படியாகப் பயன்படுகின்றது. தலைவன் தலைவியர் இடையேயும், நண்பர்கள் இடையேயும், பகையரசர்கள் இடையேயும் தூது விடுக்கும் மரபை உலக வழக்கிலிருந்து உணரலாகும். செய்யுள் வழக்கில் காப்பியங்களிலே சில தூதுச் செய்திகள் காணப்படுகின்றன. போர் புரியத் தொடங்கு-முன் அரசர்கள் பகையரசர்களுக்குத் தூது விடுத்த வரலாறுகளை இராமாயணம், பாரதம், கந்த புராணம் முதலியவற்றிற் காணலாம். இத்தூது விடும் முறையும், தூதுவர் இலக்கணமும் திருக்குறளிலே சொல்லப் பட்டுள்ளன.
தலைவன் தலைவியர்களுள் தூது விடுதலைச் சீவகசிந்தாமணியில் குணமாலை ஒரு கிளியைச் சீவகனுக்குத் தூது விடுத்ததாக உள்ள வரலாறும் (சீவக. 1000-1002), நளனது சரித்திரத்தில் நளன் அன்னத்தைத் தூதுவிட்ட வரலாறும் தெரிவிக்கின்றன.
ஒருவர் கருத்தை மற்றொருவருக்கு உணர்த்தும் ஆற்றலையுடைய மக்களைத் தூதுவிடுதலே உலக வழக்கில் தகுதியுடையதாயினும், செய்யுள் வழக்கிலே அஃறிணைப் பொருள்களையும் அங்ஙனம் விடுப்பதாக அமைத்தல் மரபு. ருக் வேதத்தில் ஸரமா என்ற பெயரையுடைய நாயொன்றைத் தூதுவிடுத்த ஒரு செய்தி உள்ளதென்பர். (ருக். X : 108)
தலைவன் தலைவியர் இங்ஙனம் தூதுவிடுதற்குக் காரணம் அவர்களுடைய காமமயக்கமே என்பர் இலக்கண நூலார். தூதுவிடப்படுவனவாக அமைக்கப்படும் பொருள்கள் தூதாகச் சென்று வரவேண்டுமென்பது அவர்கள் கொள்கையன்று; அங்ஙனம் செல்வதும் நிகழத்தக்கதன்று. விரகதாபத்தாற் பல படியாகப் புலம்பும் 'காமமிக்க கழிபடர் கிளவி' வகைகளுள் இதுவும் ஒன்று. அன்றியும் கவிஞர் தம்முடைய கவித்திறத்தைக் காட்டுவதற்கு நிலைக்களனாக அமைத்துக்கொண்ட அமைப்பாகிய இது கற்பனைக்கு இலக்கியமேயன்றி இயற்கையாக நிகழத் தகுவது அன்று. சுவையுள்ள-வற்றையெல்லாம் ஒன்றாக்கிக் காட்டும் நாடக வழக்கிற்கு இஃது இனமாகும்.
சங்க நூல்களில் நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு என்பவற்றில் அஃறிணைப் பொருள்களைத் தூது விட்டதாக அமைந்த செய்யுட்கள் சில இருக்கின்றன. தேவாரத்திலும் திவ்யப்பிரபந்தத்திலும் அத்தகைய பாடல்கள் உள்ளன; கலம்பகம் முதலிய பிரபந்தங்களிலும் உண்டு.
தூதுவிடுதலையே பொருளாகவுடைய தனிப்பிரபந்தங்கள் பிற்காலத்தில் எழுந்தன. தமிழ்ப் பிரபந்த இலக்கணத்தைக் கூறும் பாட்டியல் நூல்களுள் இலக்கண விளக்கப் பாட்டியல், பிரபந்தத் திரட்டு என்னும் இரண்டில் மாத்திரம் தூதின் இலக்கணம் காணப்படுகின்றது. இதனால் தாதுப் பிரபந்தங்கள் பிற்காலத்தில் மலிந்தன வென்பதும், அதனையறிந்த பிற்கால இலக்கண நூலாசிரியர்கள் அவ்வகைப் பிரபந்தங்களுக்கும் ஏனைப் பிரபந்தங்களோடு இலக்கணம் அமைத்தனரென்பதும் தோற்றுகின்றன.
-
"பயிறருங் கலிவெண் பாவி னாலே
உயர்திணைப் பொருளையு மஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்துறு தூதெனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே " (சூ. 874)
இப்பொழுது அறியக்கூடவில்லை.
பிரபந்தத்திரட்டென்னும் இலக்கண நூல்,
-
"எகினமயில் கிள்ளை யெழிலியொடு பூவை
சகிகுயினெஞ் சந்தென்றல் வண்டு-தொகைபத்தை
வேறுவே றாப்பிரித்து வித்தரித்து மாலைகொண்டன்
பூறிவா வென்றறூ து"
என்று தூதின் இலக்கணத்தை அமைக்கின்றது. இதன்கண் தூதுவிடுவதற்குரிய பொருள்களும் சொல்லப்பட்டுள்ளன. இப்பத்தையும் இரத்தினச் சுருக்கம் என்னும் நூலொன்று,
-
" இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி - நயந்த குயில்
பேதை நெஞ்சந் தென்றல் பிரமரமீ ரைந்துமே
தூ துரைத்து வாங்குந் தொடை"
எனக் கூறுகின்றது.
இப்பத்துப் பொருள்களையும் தூதுவிடவேண்டுமென்ற வரையறைக்கு மூலம் இன்னதென்று விளங்கவில்லை. கவிஞர்கள் இப்பத்தும் அல்லாத வேறு பல பொருள்களை விட்டதாகவும் செய்யுளியற்றினர். இப்பத்திலும் மயில், பூவை, குயில் என்பவற்றைத் தூது விட்டதாக அமைந்த பழைய நூல்கள் இப் பொழுது காணப்பட்டில.
மேலே குறித்த வரையறைக்குள் அடங்காமல், பணவிடு தூது, முகில்விடுதூது, தமிழ்விடுதூது, மான்விடுதூது, வனச விடுதூது, சவ்வாதுவிடுதூது, நெல்விடுதூது, விறலிவிடு தூது என்னும் தூதுகள் தமிழிலே உள்ளன. நூற்போக்கிலே புலவர்களாற் புலப்படுத்தப்படும் தூதுப்பொருள்கள் பல. மலர்கள், பறவைகள், விலங்குகள் முதலிய பொருள்கள் பலவற்றையும் அவ்வரிசையிற் காணலாம். [§]புகையிலைவிடு தூதென்னும் நூலொன்று தமிழில் உண்டு. மிதிலைப்பட்டிக் கவிராயர் ஒருவர் தமக்குப் பகைவனாகிய ஒருவன் மீது வசையாகப் பாடிய கழுதை விடு தூதென்னும் நூலொன்றிருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
-----
[§] என்னால் அச்சிடப் பெற்றுள்ளது.
மேலே குறித்த தூதுப்பொருள்களை விட்டதாக அமைந்த நூல்களுள், ஒருவகையிலேயே பல இருக்கின்றன. பணவிடு தூது, நெஞ்சுவிடுதூது, விறலிவிடுதூது என்பன இதற்கு உதாரணங்களாகும்.
கிள்ளைவிடுதூது இரத்தினச் சுருக்க வெண்பாவினால் வரை யறுக்கப் பெற்ற பத்தனுள் ஒன்றாய் அடங்குவது. திருமாலிருஞ்சோலைமலை அழகர் மீது பாடப்பெற்ற இந்தக் கிள்ளைவிடு தூதையன்றி வேறு கிள்ளைவிடு தூதுகள் பழையனவாகக் கிடைக்க வில்லை. திருப்பேரூர்க் கிள்ளைவிடுதூது, நாராயணசாமி பிள்ளைமீது கிள்ளைவிடுதூது என இரண்டு நூல்கள் சமீப காலத்தில் இயற்றப்பட்டனவாக உள்ளன.
வடமொழியிற் பல கிள்ளைவிடுதூதுகள் இருக்கின்றனவென் பர். அவற்றுள் இப்பொழுது அறிந்தவை வருமாறு :
1. கீரதூதம் : கோவியர் கண்ணபிரானிடத்தில் கிளியைத் தூது விடுத்ததாக இராமகோபாலர் என்பவரால் இயற்றப் பெற்றது ;
2. சுகஸந்தேசம் : ஒரு தலைவன் தலைவியிடம் அனுப்பியதாக லஷ்மீதரர் என்பவரால் இயற்றப்பெற்றது ;
3. சுகஸந்தேசம் : காங்கபள்ளி நம்பூதிரி என்பவர் இயற்றியது ;
4. சுகஸந்தேசம் : அரங்காசாரியரென்பவர் இயற்றியது ;
5. சுகதூதம் : யாதவசந்திர வித்தியாரத்னர் என்பவர் இயற்றியது.
அஃறிணைப் பொருள்களுள் பேசும் ஆற்றலை ஒருவகையாகப் பெற்ற கிளியைத் தூதுவிடுவதாக அமைத்தல் ஒருவாறு ஏனையவற்றினும் சிறந்ததாகும் ; இக்கருத்தையே இந்நூலாசிரியர்,
-
” - கிளிப்பிள்ளை
சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர்
கொண்டாய் பின்னத்தைப் போலுமொரு பேறுமுண்டோ"
என்று வெளியிடுகின்றார்.
3.2 திருமாலிருஞ்சோலைமலை
திருமாலிருஞ்சோலைமலை யென்பது பாண்டி நாட்டுத் திருமால் திருப்பதிகள் பதினெட்டனுள் ஒன்று. சங்ககாலத்து நூலாகிய பரிபாடலில் இதன் பெருமை சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. அந்நூலில் இளம்பெருவழுதியாரென்னும் புலவராற் பாடப்பெற்று, மருத்துவன் நல்லச்சுதனாரால் இசையமைக்கப்பெற்ற நோதிறப் பண்ணிலமைந்த பதினைந்தாம் பாடல் இத்தலப் பெருமையை விரிவாகக் கூறும் ; அப்பாடலின் பொருட் சுருக்கம் வருமாறு :
3.3 பரிபாடலிற் கண்ட செய்தி
‘அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே விளங்கி நிலத்தைத் தாங்கும் சக்கரவாளம் முதலாகத் தொல்லிசைப் புலவர்கள் ஆராய்ந்துரைத்த குன்றங்களைப் பொதுவகையால் சொல்லப் புகுந்தாற் பலவாம் ; அப்பலவற்றுள்ளும் நிலத்தில் உள்ளோரது பசித் துன்பத்தை நீக்கி, நிறைபயன்களெல்லா வற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்றுகள் சில ; அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர்களையுடைய தடாகங்களும் மேகம் படியும் சிகரங்களும் உள்ள குலவரைகள் சில சிறந்தன ; அவற்றுள்ளே கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும், சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனும் பலதேவரும் எழுந்தருளியிருக்கும் சோலைமலை சிறந்தது. துழாய் மாலையை யுடைய திருமால் அருள் புரிந்தாலல்லாமல் துறக்கம் அடைதல் எளிதாகுமோ? அரிதிற் பெறும் துறக்கத்தை எளிதிற் பெறச் செய்வதனால் திருமாலிருஞ்சோலைமலையை ஏத்தக் கடவோம்.
'பலதேவரது திருமார்பிலுள்ள வெண்கடப்ப மாலையைப் போல அருவியாக வீழ்வதனால் சிலம்பாறு அழகு பெறும். திருமாலிருஞ்சோலை யென்னும் பெயர் உலகமெல்லாம் பரவ, மகளிரும் மைந்தரும் காமத்தை விதைத்து விளைக்கும் யாமத் தியல்பையுடைய இருங்குன்றத்தில் இளவெயில் சூழ இருள் வளர்தலை யொத்துப் பீதாம்பரத்தையுடைய திருமால் பல தேவரோடு அமர்ந்து நிற்கும் நிலைமையை, மாந்தர்களே! தியானம் செய்ம்மின்; அம் மலையின் சிறப்பைக் கேண்மின் :
'சுனைகளிலெல்லாம் நீலமலர் மலர அச்சுனையைச் சூழப் பொன்னிறமுள்ள அசோக மலர்கள் மலர்தலாலும் வேங்கை மலர்கள் மலர்தலாலும் பீதாம்பரத்தை அணிந்த மாயோனை ஒத்த நிலையினதாயிற்று அம்மலை. இருங்குன்றென்னும் பெயர் பரவி உலகத்தில் பழையதாகிய புகழையுடைய அது தன்னைக் கண்டாரது மயக்கத்தை அறுக்கும் தெய்வம் ; அதனால் சென்று திருமாலைத் தொழும் ஆற்றலை இல்லாதீர்! அம்மலையைக் கண்டேனும் பணிமின்.
'குட்டியால் தழுவப்பட்ட மந்தி பாயவும், முல்லை மலர் கற்பு நிகழ்ச்சியைக் காட்டவும், மயில்கள் அகவவும், குருக்கத்தியின் இலை உதிரவும், அதன்கண் இருந்து குயிலினம் கூவவும் அவ் விருங்குன்றத்தில் குகைக்குள் முழங்குகின்ற எதிரொலி ஒழியாது.
'நும் மனைவியரோடும் தாய் தந்தையரோடும் குழந்தைகளோடும் சுற்றத்தோடும் கூடி அக்குன்றத்தைத் தெய்வமாக மதித்துத் திசை நோக்கித் தொழுது சென்மின்.
'தன் திருவுந்தியில் முன்பு உண்டாகிய கமலத்தை யொக்கும் கண்ணை உடையவனும், மேகம் இருள் மணி ஆகியவற்றை யொத்த திருமேனியை உடையவனும், எல்லா உலகத்திலும் வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்க் கூட்டங்களின் பிறவித் துன் பத்தைக் களைவோனுமாகிய திருமால் அன்பு கொண்டு அக்குன் றத்தின்கண் எழுந்தருளி யிருக்கின்றான்.
'திருமாலே! நீ பசுந் துழாய் மாலையையுடையை ; நீல மலையைப் போன்றாய்; மிக்க ஒளியினையுடையை ; ஒற்றைக் குழையையுடையை ; கருடக்கொடியை உடையை ; வளைந்த கலப்பையை உடையை ; தண்டு, சங்கு, சக்கரம், வில், அம்பு, பாராவளை, வாள் என்பவற்றை ஏந்தினை.
'இங்ஙனம், வேதம் அவன் பெருமை ஈதென்று உரைத்தலால் யாமும் அவற்றுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்துத் திருமால் பலதேவரென்னும் இருவரையும் தொழுது அவ்விருங் குன்றத்தின் அடியில் வாழ்தல் எமக்கு உண்டாகுகவென்று வேண்டுவோமாக!'
இப்பரிபாடலால், முற்காலத்தில் இத்தலத்தே திருமாலோடு நம்பி மூத்தபிரானாகிய பலதேவரும் கோயில் கொண்டு எழுந்தருளி யிருந்தனரென்று தெரிகின்றது. அன்றியும், இற்றைக்குச் சற்றேறக்குறைய இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பாடப் பெற்ற இப்பரிபாடலில் உள்ள,
"இருங்குன் றென்னும் பெயர்பரந் ததுவே
பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழது "
என்னும் பகுதி அதற்கு முன்பே பல காலமாக இயன்ற புகழை யுடையதென்று இத்தலத்தைப் பாராட்டுதல் அறிதற்குரியது.
சிலப்பதிகாரச் செய்தி
சிலப்பதிகாரத்தில், மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு ஒரந்தணன் வழியிலே காண்பனவற்றை விரித்துக் கூறுவதாக அமைந்த பகுதியில் இம்மலையைப் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன :
"திருமால் குன்றத்துச் செல்வீராயின், அங்கே மிக்க மயக்கத்தைக் கொடுக்கும் பிலத்துவார வழி ஒன்று உண்டு. அங்கே புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்னும் பெயரையுடைய மூன்று பொய்கைகள் உள. புண்ணிய சரவணத்தில் நீராடினால் இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமென்னும் இலக்கணத்தை உணரலாகும். பவகாரணி யென்னும் தீர்த்தத்தில் ஆடுவார் பழம்பிறப்பை உணர்வர். இட்ட சித்தியில் நீராடி நினைத்தவற்றை யெல்லாம் அடைதல் கூடும். அங்கே சிலம்பாற்றின் கரையின்கண் உள்ள கோங்க மரத்தின் நிழலிலே ஒரு தெய்வப்பெண் தோன்றி, 'இப்பிறப்பிற்கு இன்பமும் மறு பிறப்பிற்கு இன்பமும் இவை இரண்டும் ஒழிந்து எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்க் கோட்டமின்றி அழிவற நிற்கும் இன்பமுமாகிய பொருள்கள் யாவை? அவற்றை உரைமின்; யான் இம் மலையடிவாரத்திலே வாழ்வேன் ; வரோத்தமை யென்னும் பெயருடையேன். யான் வினாவியவற்றிற்கு ஏற்ற விடையை யார் கூறுகின்றனரோ அவருக்கு யான் ஏவல் புரிவேன். நீவிர் உரைத்தீ ராயின் உமக்கு இப்பொழுது இப்பிலவாயிற் கதவைத் திறந்து தருவேன்' என்று சொல்வாள். அவள் வினாவியவற்றிற்கு விடை கூறின் அவள் பிலம் திறந்துவிடுவாள். மேலே செல்லின் ஆங்கொரு பெண் தெய்வம் முன்னே கூறிய மூன்று பொய்கைகளையும் காட்டுவாள். அப்பொய்கைகளிலே பஞ்சாக்ஷரத்தையும் அஷ்டாக்ஷரத்தையும் மனத்தால் நினைத்து ஜபித்து நீராடின் நற்பயனை அடைவீர்கள். அப்பொய்கையினால் உண்டாகும் பயனை விரும்பீராயின், அவற்றை நினையாது, அம்மலைமீது நின்றோனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தியானம் செய்யுங்கள். அங்கே துவஜஸ்தம்பத்தைக் காண்பீர்கள். அப்பெருமானுடைய திருவடி தரிசனம் பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்" (சிலப். 11 : 87-138, சுருக்கம்.)
இப்பகுதியால் இந்தத் தலத்தில் மூன்று பொய்கைகளும், சிறப்புடைய கோங்கமரம் ஒன்றும், பிலத்துவாரம் ஒன்றும் இருந்து வந்தனவென்று தெரியவரும். அன்றியும் சிலப்பதிகார காலத்தில் இத்தலத்தின் கண்ணே தெய்வப் பெண்கள் வாழ்ந்து வந்ததாக மக்கள் எண்ணி யிருந்தனரென்பதும் பெறப்படும்.
பிற நூல்கள்
பத்துப்பாட்டுள் முதலாவதாகும் திருமுருகாற்றுப்படையிலே முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளிய படைவீடு ஆறு கூறப்பட்டுள்ளன ; அவற்றுள் ஒன்றாகிய பழமுதிர்சோலை யென்பது இத்தலமே யென்று தெரிகின்றது. பழங்காலத்தில் இத்தலத்தே முருகக்கடவுள் திருக்கோயிலும் இருந்ததென்பதற்குரிய அறிகுறிகள் இப்பொழுதும் இருக்கின்றனவென்பர். சங்க காலத்துக்குப் பின் எழுந்த நூல்களிலும், திருப்புகழிலும் இதனை முருகக்கடவுளுக்குரிய தலமாகக் கொண்டு புலவரும் அன்பரும் பாடியுள்ளனர்.
பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் என்பவர்களுடைய மங்களா சாஸனம் இத்தலத்திற்கு உண்டு. பிள்ளைப்பெருமாளையங்கார் இயற்றிய அழகர் அந்தாதியும், வேம்பத்தூர்க் கவிகுஞ்சரமையரால் இயற்றப்பெற்ற கலம்பகம் ஒன்றும், சாமி கவிகாளருத்திரர் இயற்றிய பிள்ளைத் தமிழ் ஒன்றும், பெருங்கரைக் கவிகுஞ்சர பாரதியால் இயற்றப்பெற்ற குறவஞ்சி ஒன்றும் இத்தல ஸம்பந்த மாக உள்ளன.
கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் கூற்றாக வுள்ள பகுதியில்,
" முத்திதரு பேரழகர் திருமலையி னிடையுற்றோம் " (12)
என்று இத்தலம் சிலேடைவகையாற் குறிப்பிக்கப் பெறுதல் காண்க.
வடமொழியில் கூரத்தாழ்வார் அருளிய ஸ்ரீ சுந்தரபாஹு ஸ்தவமென்னும் நூலும், ஒரு புராணமும் இருக்கின்றன. வட மொழிப் புராணம் தமிழ்வசன நடையில் 'அழகர்கோயில் மான்மியம்' என்னும் பெயரோடு பல வருஷங்களுக்குமுன் மதுரை வி. என். இராகவக்கோன் என்பவரால் அச்சிடப்பெற்று வழங்குகின்றது. இப்பொழுது இத்தல விசாரணைக் கர்த்தராக இருந்து வரும் ஸ்ரீமான் கே. என். இராதாகிருஷ்ணையர் அவர்கள் மாட்சிமை தங்கிய சென்னைக் கவர்னரவர்களுக்கு 23-10-1935-இல் அனுப்பிய ஆங்கில விண்ணப்பமொன்று புத்தக ரூபத்தில் இருக்கின்றது. தல சம்பந்தமாகப் பல செய்திகளைத் தொகுத்து அதில் அவர் எழுதியிருக்கின்றனர். மேலே கண்ட நூல்களாலும் அழகர் கிள்ளி விடுதூதாகிய இந்நூலாலும் கேள்வியாலும் அறிந்த செய்திகள் பல ; அவற்றிற் சில பின்னே தெரிவிக்கப் படுகின்றன.
தலத்தின் திருநாமங்கள்
அலங்காரன்மலை, அழகர் கோயில், அழகர்மலை, ஆராம் சைலம், இருங்குன்றம், குலபூதரம், குலமலை, குளிர்மாமலை, குன்றம், கேசவாத்திரி, கொற்றமலை, கோலமலை, சஞ்சீவி பர்வதம், சிங்காத்திரி, சீர்பதி, சோலைமலை, தர்மாசலம், திருமலை, திரு மால்குன்றம், திருமாலிருஞ்சோலை, திருமாலிருஞ்சோலைமலை, தென் திருப்பதி, நிலமலை, நீண்டமலை, பழமுதிர்சோலை, பழமுதிர்சோலைமலை, பிரம்மபர்வதம், மண்டூகபர்வதம், மாலிருங் குன்றம், வனகிரி, விருஷபகிரி, ஸ்ரீபதி.
பெருமாள் திருநாமங்கள்
அலங்காரர், அழகர், கள்ளழகர், சங்கத்தழகர், சுந்தரத் தோளர், சுந்தரபாஹு, சுந்தரராஜப் பெருமாள், சோலைமலைக் கரசு, தெய்வசிகாமணி, பரமசுவாமி, மலையலங்காரர், மாலலங் காரர், விருஷபாத்திரி நாதர்.
நாச்சியார் திருநாமம்
ஸெளந்தரவல்லி ; கல்யாண சுந்தரவல்லி யெனவும் வழங் கும். ஸ்ரீ ஆண்டாளும் இங்கே திருக்கோயில் கொண்டெழுந் தருளியுள்ளாள்.
தீர்த்தங்கள்
சிலம்பாறு என்பது இத்தலத்திலுள்ள தலைமையான தீர்த்தம். அது தேனாறு, நூபுர கங்கை , பகவத்பாத தீர்த்தம், மஞ்சீரந்தி, விஷ்ணு கங்கை யென்றும் வழங்கப்பெறும். அது திருக்கோயிலுக்கு வடக்கே 23 மைல் தூரத்தில் இருக்கிறது. மற்றத் தீர்த்தங்கள் வருமாறு :- அக்கினிவாபி, அனுமதீர்த்தம், இஷ்ட சித்தி, உத்தர நாராயணவாபி, கதலிவாபி அல்லது வாழைக் கவி, கருட தீர்த்தம், கிருஷ்ணவாபி, நாராயண புஷ்கரிணி, பண்டாரிவாபி, பவகாரணி, பாண்டவ தீர்த்தம், புண்ணிய சரவணம், பெரிய அருவி, வேணு தீர்த்தமென்னும் மூங்கிற்கவி.
விருக்ஷங்கள்
இங்கே முதல் யுகத்தில் ஆலாகவும் இரண்டாவது யுகத்தில் அரசாகவும் மூன்றாவதில் வில்வமாகவும் இக்கலியுகத்தில் புத்திர தீபமென்னும் பெயரினதாகவும் ஒரு ஸ்தல விருக்ஷம் உண்டென்று இந்த நூல் கூறும். மூன்றாம் யுகத்தில் பலாவாகவும் இக்கலி யுகத்தில் புத்திர ஜீவியென்னும் விருக்ஷமாகவும் இருப்பதாக இத்தல மான்மியம் தெரிவிக்கும். நூபுரகங்கையின் ஆரம்பத்தில் ஒரு மகா வடவிருக்ஷம் இருந்ததென்பர். சந்தன மரத்தைத் தலவிருக்ஷமென்பாரும் உளர். சிலப்பதிகாரத்திலே சொல்லப்பட்ட கன்னிகார விருக்ஷமும், இந்நூலில் கூறப்படும் உறங்காப்புளியும் இத்தலத்தோடு சார்த்திச் சொல்லப்பெறும் விருக்ஷங்களாம். இங்கே சோதிவிருக்ஷ முண்டென்றும் கூறுவர்.
விமானம்
சோமச்சந்திர விமானமென்றும், சோமச்சந்தவிமான மென்றும் வழங்கும். இது பிரணவாகாரமானதென்று தலமான் மியம் கூறும்.
மண்டபங்கள்
(1) மாத்வி மண்டபம் : இது சிலம்பாற்றங்கரையில் இருப்பது ; இந்தத் தலமான்மியத்திலும் இது கூறப்படுகின்றது. (2) சோலைமலை மண்டபம் : இது சாம்பல் போடும் மண்டபமென்றும் வழங்கும் ; பதினாறு கால்களை உடையது. (3) கனு மண்டபம்: கல்யாண சுந்தரவல்லித் தாயார் கனுத் திருவிழா நடைபெறும் மண்டபம். (4) வண்டியூர் மண்டபம் : அழகர் எழுந்தருளும் மண்டபங்களுள் ஒன்று. (5) தேனூர் மண்டபம் : வையையாற்றின் இடையிலே உள்ளது ; அழகர் எழுந்தருளும் மண்டபங்களுள் ஒன்று; இது தேனூரிலுள்ள அன்பர்களாற் கட்டப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது.
பூசித்துப் பேறுபெற்றோர்
அம்பரீஷன், அருச்சுனன், அனுமன், இந்திரத்தியும் நான், இந்திரன், கந்தருவன் ஒருவன், கருடன், குப்ஜபாண்டியன், கெளதம முனிவர், சதிரிளமடவார், சந்திரகேது, சுதபஸ் என்னும் முனிவர், செளனக முனிவர், தருமதேவர், தாலப்பியர், பச்சை வாரணதாசர், பராசரர், பாண்டவர், பிரகலாதன், பிரம் தேவர், புண்ணியம், புரூரவசு, புலத்தியர், மரீசி, மலயத்துவசன், மார்க்கண்டேயர், மாவலி, மைத்திரேயர், யானையொன்று, ருக்மாங் கதர், வசிஷ்டர், விபீஷணன்.
பிற கோயில்கள்
(1) ஸ்ரீ நாகநாதர் கோயில் : பல நாகர்கள் உள்ள கோயில். (2) இராக்காயி அம்மன் கோயில் : (3) அனுமன் கோயில் : இஃது அனும தீர்த்தத்துக்கு அருகிலுள்ள து. (4) கருடன் கோயில் : கருட தீர்த்தத்துக்கு அருகில் உள்ளது. (5) பாண்டவர் கோயில் : பாண்டவர் தீர்த்தத்துக்கு அருகில் உள்ளது. (6) சதிரிளமடவார் கோயில் : இம்மலையின் தென் பகுதியில் உள்ளது. (7) சக்கரத்தாழ்வார் கோயில் : இதற் குச் சில நிவந்தங்கள் அமைந்ததாகக் கூறும் சிலாசாஸனம் உண்டு. (8), தண்டலைக் கோயில். (9) வெள்ளிமலை : இது மலையின் தென் பகுதிக்குப் பெயரென்றும் இங்கே வெள்ளி மலை யாண்டி யென்னும் கடவுள் உறைவதாகவும் கூறுவர். (10) க்ஷேத்திரபாலகர் கோயில் : க்ஷேத்திரபாலகர் கல்லென வும் வழங்கும் ; இக்கல்லில் வைரவர் எழுந்தருளி-யிருக்கின்றன ரென்பது ஐதிஹ்யம்.
விழாக்கள்
(1) கோடை உத்ஸவம் : இஃது இந்நூலிற் சிறப்பிக்கப் பெறுவது ; சித்திரா பௌர்ணமியில் நிகழ்வது. இவ்விழாவில் பெருமாள், ஆண்டாள் சூடிக்கொடுத்து அனுப்பிய மாலையை அணிந்து செல்வது வழக்கம்.
(2) வசந்த உத்ஸவம் : வைகாசி மாதம் பத்து நாள் நடை பெறும்.
(3) முப்பழ உத்ஸவம் : ஆனிப் பெளர்ணமியன்று முக் கனிகள் நிவேதனம் செய்யப்படும்.
(4) பிரும்மோத்ஸவம் : பத்து நாள் திருவிழா. மலயத்து வசபாண்டியன் முதலில் தொடங்கியதாகத் தலமான்மியம் கூறும். தங்கப் பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுவர். ஆஷாட பௌர்ணமியன்று திருத்தேர் .
(5) கருட ஸேவை : ஆடி அமாவாசையன்று நடைபெறுவது.
(6) திருப்பவித்திர உத்ஸவம் : 5 நாள் நடைபெறும். ஆவணி மாதம் பெளர்ணமியோடு நிறைவுறும்.
(7) நவராத்திரி : புரட்டாசி மாதம் நடைபெறுவது.
(8) எண்ணெய்க் காப்பு உத்ஸவம் : ஐப்பசி மாதம் நடை பெறுவது. சுக்கிலபக்ஷத் துவாதசியன்று பெருமாள் தீர்த்தத் தொட்டிக்கு எழுந்தருளுவது வழக்கம் ; இதனால் இது தொட்டி யுத்ஸவமென்றும் வழங்கும்.
(9) திருக்கார்த்திகை விழா : இவ்விழாவிலே புறப்பாடு உண்டு .
(10) அத்யயன உத்ஸவம் : மார்கழி மாதம் நடைபெறும் பகற் பத்து இராப்பத்து.
(11) சட்டத்தேர் உத்ஸவம் : தைமாதம் நடைபெறுவது.
(12) திருக்கல்யாண உத்ஸவம் : பங்குனி உத்தரத்தன்று நிகழும். மறுநாள் தெப்பத் திருவிழா நடைபெறும்.
இவற்றையன்றி வேறு சில உத்ஸவங்களும் நடைபெறுவ துண்டு .
வாமன புராணம், வராக புராணம், பிரம்மாண்ட புராண மென்னும் மூன்று புராணங்களில் இத்திருப்பதியின் மான்மியம் கூறப்பட்டிருப்பதாகத் தலபுராணம் தெரிவிக்கின்றது.
-
திவ்யப் பிரபந்தத்திற் கண்ட சிறப்பு
மேலே கூறியவற்றுள் சிலம்பாற்றை,
"சிலம்பாறு பாயுந்தென் றிருமாலிருஞ் சோலையே”
"ஓட்டருந் தண்சிலம் பாறுடை மாலிருஞ் சோலையதே"
-
"சந்தொடு காரகிலுஞ் சுமந்து தடங்கள் பொருது
வந்திழி யுஞ்சிலம் பாறுடை மாலிருஞ் சோலை"
-
"சிலம்பிய லாறுடைய திருமாலிருஞ் சோலை”
இங்கே திருக்கோயில் கொண்டெழுந்தருளிய பெருமாளை,
"சுந்தரத் தோளுடையான் "
"திருமாலிருஞ் சோலைநம்பி”
"மாலிருஞ் சோலை நம்பி "
" சுந்தரன் "
-
"தேவர்கள் நாயகன் "
"கேசவ நம்பி "
-
"அழகர்"
-
"நெடுமாறன் தென்கூடற்கோன்”
"தென்னன் கொண்டாடும் தென்றிருமாலிருஞ் சோலை"
"அளித்தெங்கு நாடு நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலஞ்செய்யுந்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையே"
"சென்றுலகங் குடைந்தாடுஞ் சுனைத்திரு மாலிருஞ்சோலை " (பெரியாழ்வார்)
"தேசமெல்லாம் வணங்குந் திருமாலிருஞ்சோலை " (திருமங்கையாழ்வார்) "தென்சொல் திசைக்குத் திலகமாய் நின்ற திருமாலிருஞ் சோலை" (நம்மாழ்வார்)
3.3. நூலின் பொருள் அமைப்பு
இந்நூலில் தூதுவிடப் பெறும் கிளியின் பெருமையும், பாட்டுடைத் தலைவராகிய அழகர் சிறப்பும், தலைவி அழகரைக் கண்டு காமுற்ற வரலாறும் முறையே கூறப்படுகின்றன. இதன் பொருளமைப்பு வருமாறு :
கிளியின் பெருமை
திருமாலின் திருநாமமாகிய அரியென்னும் பெயரையும், அவர் திருக்கண்வளரும் பாயலாகிய ஆலிலையின் நிறத்தையும் கொண்டு மன்மதனுக்கு வாகனமாக விளங்கும் கிளியரசே, நான் சொல்வதைக் கேட்பாயாக : உன்னுடைய பெருமை பலபடியாகப் பரந்தது. மன்மதனுடைய ஆட்சியிலே உன் சொல்லைக் கேளாதவர் ஆர்? மன்மதனது ஒற்றைச் சக்கரங்கூட இல்லாமற் செலுத்துகின்ற காற்றாகிய தேரைப் பலங்கொண்டு இழுத்துத் திரிகின்ற பச்சைக் குதிரையே, ஒற்றைச் சக்கரத்தோடு கூடிய சூரியன் தேர் ஒன்றை யிழுக்கும் பச்சைக் குதிரைகள் ஏழும் உனக்கு ஒப்பாகுமோ? 'அந்தக் குதிரைகள் சுற்றிவரும் உலகமும் நீயே ; ஞான விளக்கும் நீயே” என்று சொல்வதிற் பிழையென்ன? உன் உருவம் கொண்ட சுகமுனிவர் எல்லாம் தாமாகவே இருந்தார். எத்தகைய நிறத்தையுடைய பறவையானாலும் உன்னுடைய பஞ்சவர்ணங்களுக்குள் ஒன்றில் அடங்குமன்றோ?
உன் மேனி முழுவதும் பச்சை நிறமா யிருந்தால் உன்னைக் கண்டோர் பார்வதி தேவியாரென்று எண்ணி விடுவார்களென்று கரு தியோ நீ மூக்கு மாத்திரம் சிவந்திருக்கின்றாய்? நாக்குத் தடுமாறிப் பேசுபவர்களை உலகத்தார் சேர்த்துக் கொள்ளாமல் விடுவர்; உன்னை அப்படி விடுபவர் ஒருவரும் இல்லை. முன்பு சீவகனுடைய மனைவியருள் ஒருத்தியாகிய காந்தருவதத்தை மிக்க சிறப்படைந்தமைக்குக் காரணம், அவள் உன் பெயருள் ஒன்றாகிய தத்தை யென்பதைக் கொண்டமையே. பிற பறவைகளினிடத்தில் திருமால் திருநாமத்தையும், சிவபெருமான் நாமத்தையும் சொல்வதனால் பயனில்லை. உன்னிடம் சொன்னால் நீ அவற்றைப் பயின்று கூறுவாய். கூடுவிட்டுக் கூடுபாயும் யோகி உனக்கு ஒப்பாவானோ? பாலின் பெயராகிய கீரம் என்பது உனக்கும் பெயர். அதனால் உனக்கும் ஆடை (பாலாடை, உடை) உண்டு. பாடகம், காலாழி முதலிய ஆபரணங்களை நீ பூண்பாய். [#]கற்புடையாய்; சோலையாகிய மனையிலே சேர்வாய். இவற்றால் உன்னையும் ஒரு பெண்ணென்றே சொல்லலாம்.
சாயுச்சியமென்னும் பதவியைச் சுகரூபமென்பர். உன் பெயர் சுகமாதலின் அது நின் சொரூப மென்றே சொல்லவேண்டும்.[§] 'வன்னி பரிசித்த வெல்லாம் பரிசுத்தம்' என்று வழங்குவதை யெண்ணியே நீ கோதிய பழத்தை யாவரும் உண்கின்றனர். யாருடைய சொல்லையும் நீ கற்றுக்கொள்வாய். யோகங்கள் சாதித்துப் [¢] பச்சைப்பிள்ளையாக வாழும் பெரியோர் பலர் உண்டு. ஆயினும் அந்த யோகங்கள் சாதியாமலே பச்சைப் பிள்ளையாய் நீ வாழ்கின்றாய். நீ" பாலனத்தாலே பசி தீர்க் கின்றாய். திருமாலும் தம்முடைய [£] பாலனத்தாலே உலகத்தோர் பசியைத் தீர்க்கின்றார். ஆதலின் நீ அவருக்கு ஒப்பாகின்றாய். மிக்க நண்பினரானாலும் [@] பூசையை விட்டார் முதலியோரை நீ விரும்பாய். உனக்குப் பச்சை சிவப்பு என்னும் [##] இரண்டு நிறம் இருப்பதனால் இரண்டு வடிவமுடைய கருடாழ்வானுக்கு இணையாவாய்.
--------
[#] கல் புடையாய், கற்புடையாய். [§] வன்னி - நெருப்பு, கிளி.
[¢] பச்சைப்பிள்ளை - இளங்குழந்தை. [||] பாலனம் - பாலோடு கூடிய சோறு.
[£] இரட்சித்தல். [@] பூசையை விட்டார் - பூனையை விட்டவர், தெய்வ வழிபாட்டை நீத்தவர். [##] இரண்டு வடிவம் - பறவை வடிவமும் புருஷ வடிவமும்.
ஜபம் செய்வோர்களுக்கெல்லாம் திருவரங்கர் திருநாமத்தை நீ உபதேசம் செய்வாய். பெண்களுக்கு ஆடவரைப் போல முத்தம் கொடுப்பாய். அங்ஙனம் முத்தங் கொடுப்பதனால் அவருக்கு இதழிலே செந்நிறம் உண்டாயிற்றோ? அன்றி அவர் இதழ்ச் சிவப்பு உன் அலகிற்கு ஏறியதோ? யாருக்கும் தோற்றாதவனாகிய மன்மதனை நீ தேர்க்குதிரையாகி இழுத்து வருவாயாயின், அவனுக்குக் குறை ஏது? யோகிகளெல்லாம் அடக்கிக் கஷ்டப்படுகின்ற வாயுவை உன் பின்னாலே (தேராக) வரச் செய்வாய். திருமகளும் மலைமகளும் தம்முடைய திருக் கரங்களிலே உன்னைப் பிடித்திருக்கும்படி நீ நட்புப் பூண்டாய். திருமாலுக்கும், பார்வதிக்கும், உனக்கும் பச்சை நிறம் வந்த விதம் எங்ஙனம்?
யாவரும் மெச்சும் பறவையே, உன்னுடைய நாக்குக் கூழை நாக்கானது, அரிகீர்த்தனத்தை இடைவிடாமற் செய்ததனாலோ? [§] ........ குயில், வண்டு, புறா, மயில், நாகணவாய்ப்புள் என்னும் பறவைகளுக்கு உன் சிறப்பு வருமோ ?
வேதமாகிய சிவபிரான் குதிரைகளுக்குப் பிரமதேவர் சாரதி ; மன்மதனுடைய குதிரையாகிய உனக்குச் சாரதி யார்? சிவபெரு மான் திருநுதற் கண்ணால் மன்மதனும், அவன் நானாகிய வண்டும், சின்னமாகிய குயிலும் சுடப்பட்டுக் கருகிய காலத்தி லும் நீ கருகாமலே வந்தாய். உனக்குக் கனியினிடத்தில் அதிக விருப்பம். நீ [#]அரிதாளை விட்டு அகலாய். எனக்கு உள்ள இரண்டு கை உனக்கு இல்லை ; உனக்குள்ள இருசிறகு எனக் கில்லை. எனக்கும் உனக்கும் பேதம் இதுதான்.
-----
[§] இங்கே உள்ளே சிலேடைப் பொருள்கள் வசனத்திலே எழுதற்கரியவை.
[#] அரிதாள் - அரிந்த தினைத்தாள், திருமாலின் திருவடி.
நீ வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களுடன் இதமாகப் பழகு வாய். அன்பினால் அக்கா, அம்மா என்று முறையிட்டு அழைப் பாய். வண்டு மதுவை உண்டு குழறும். குயிற்பிள்ளையோ மாமரத்திலேறிக் கத்தும். கிளிப்பிள்ளை சொன்னத்தைச் சொல்லும், என்ற நல்ல பெயரை நீ பெற்றிருக்கிறாய்.
நீ அன்னமில்லாமற் பால் மாத்திரம் குடிக்கும் பச்சைச் குழந்தையானாலும், உன் காலைப் பிடிப்பார் பலராவர். மன்மதனால் வருந்துவோருடைய நோயைத் தீர்ப்பதற்காகவோ நீ பச்சிலை ரூபத்தைப் படைத்தாய் ? மகளிருடைய மயக்கமாகிய காட்டைச் சுடுவதற்-காகவோ நீ [@] வன்னியென்னும் பெயரைத் தாங்கினாய்? அவர்களுடைய துன்பமாகிய வேழத்தைக் கொல்லவோ நீ [§] அரி வடிவம் பூண்டாய்? அவர்களது விரகதாபமாகிய பெரிய படையை வெல்லவோ நீ [$] கிள்ளை வடிவத்தை எடுத்தாய்? மாதர்களுடைய விசனம் கெடுவதற்காகவோ நீ [¢] சுகவடிவத்தைக் கொண்டாய்? .......................... ரதிக்கும் கலைமகளுக்கும் உன்னை உவமானமாக்கி உரைப்பர். உவமையாகக் கூறும் பொருளே உயர்ந்ததாதலின் அவ்விருவரிலும் நீயே உயர்ந்தாயன்றோ ?................. உன்னுடைய வடிவமும் வளைந்த மூக்கும் திருமாலினுடைய துவசத்தில் இருக்கும் கருட தேவனது அம்சமோ? உன்னுடைய சிறகானது, பழைய காலத்தில் கண்ணபிரான் வேய்ங்குழல் வாசித்தபோது மரங்களிலே தளிர்த்த பசுந்தழையோ? அல்லது, இராமபிரான் இராவணனைச் சங்கரித்த பிறகு விபீடணன் இலங்கையிலே புக்குக் கட்டிய புதுத்தோரணமோ? உன்னுடைய இனிய மொழி கண்ணபிரானது வேய்ங் குழலோசையோ?
-----
[@] வன்னி - நெருப்பு, கிளி. [§] அரி - சிங்கம், கிளி.
[$] கிள்ளை - குதிரை, கிளி. [¢] சுகம் - இன்பம், கிளி.
கிளிப்பிள்ளையே, தெள்ளமுதக் கிள்ளையே, இன்பரசக் குஞ்சே, தென்றற் குழவியைத் தாய்போல எடுத்துச் சஞ்சரிக்கும் செல்வமே, திருமகள் திருக்கரத்திலே யுள்ளாய், முத்தி நகரேழில் ஒன்றாகிய அவந்தியென்பதன் பெயரையும், தமிழில் வல்லினம் ஆறனுள் ஒன்றாகிய தகர வரியிலமைந்த தத்தை யென்னும் பெயரையும், ஐந்து பூதத்தில் ஒன்றாகிய நெருப்பின் பெயராம் வன்னியென்பதையும், சதுரங்க சேனைகளுள் குதிரையின் பெயராகிய கிள்ளையென்பதையும், மும்மூர்த்திகளில் ஒருவராகிய அரியின் திருநாமத்தையும், இரு பயனாகிய சுக துக்கங்களில் சுகமென்னும் பெயரையும் தாங்கிய என் கண்ணே , கண்ணுண் மணியே, நான் திருமாலைத் தரிசனம் செய்யப்போய் ஊராரெல்லாம் அவர் கூறும் நிலையை அடைந்ததைச் சொல்கின்றேன் ; கேட்பாயாக :
அழகர் பெருமை
அவன், நரசிங்கம் போன்ற திருவுருவத்தை எடுத்து இரணியசங்காரம் செய்தவன். கிருஷ்ணாவதாரத்தில் பூதனையின் பாலையுண்டவன். பிள்ளைத் தன்மை நீங்காதவன். கல்லைப் பெண்ணாக்கும் திருவடியையுடையவன். ஒரு கவிஞன் பொருட்டுத் தன் படுக்கையைத் தூக்கிச் சென்றவன். தேவர்களுக்காக அமுது கடைந்தவன். சீதாபிராட்டியுடன் கானங் கடந்தவன். ஒரு வேடனுக்கு மெல்லிய கால் நகங்களைத் தந்தவன். என் காதல் வெள்ளத்திலே அமிழ்ந்தினவன் ; பிரளயகால வெள்ளத்திலே மிதந்தவன் என் உள்ளத்தே உள்ளவன் ; ஆயினும், உலகத்துக்கு அப்பாலான். வெட்ட வெளியிலே நின்று எளிதிலே தோற்றாதவன் ; அருகிலே இருந்தும் அணுகுதற்கரியான். மாயன் என்னும் பெயருக்கேற்ப என் மனத்துள் இருந்தாலும் மாயம் செய்து ஒளிப்பவன். எல்லாவற்றையும் காட்டியருளிக் கண்ணனென்னும் பெயரை அடைபவன். எங்கும் இல்லா திருந்தும் எங்கும் நிறைந்திருப்பவன் ; எங்கும் நிறைந்திருந்தும் எங்கும் இல்லாதவனாக இருப்பவன். என்னை எனக்கு ஒளித்துத் தன்னை எனக்கருளும் தம்பிரான். என்னுடைய பழைய வினைகளையும் பல மாயைக் கூட்டத்தையும் கலைத்து என்னைத் தனியே இருத்துவோன். 'நானே பிரமன் ; நானே எல்லா வுயிரும் ; இவ்விருவரையும் ஏவுபவனும் நான்' என்று உணர்த்தும் பொருட்டுக் கோவலரிடத்தே பசுவும் பசுவின் கன்றும் அவற்றை மேய்ப்பவர்களுமாகி நின்ற பரஞ்சோதி. தன்னுடைய சங்கத்தொனியைக் கேட்டாரை நரகினின்றும் மீட்பவன். வேய்ங் குழலின் தொனியால் பட்ட மரங்களைத் தவிர்க்கச் செய்தவன். 'ஆதிமூலம் இவன்' என்பதை உணர்த்தும் யானை யொன்றை உடையவன். பிரமாவைத் திருவுந்தியால் வெளிப்படுத்திச் சிருஷ்டிக்கு மூலகாரணன் தானென்பதைப் புலப்படுத்துவோன் ; அப்படியே பிரளயகாலத்தில் உலகங்களை விழுங்கித் துடைப்போனும் தானே யென்பதை உணர்த்துவோன். தமிழினாலே வேதக் கருத்துக்களை உணர்த்திய ஆழ்வார்கள் பதினொருவருடைய உள்ளத்திலே எழுந்தருளியிருப்பவன். தன் பாதமாகிய செந்தாமரை மலரிலிருந்து வழியும் தேனைப் போலக் கங்கை உண்டாகும் பெருமையுடையவன். துயிலாத் துயில் கொள்பவன். தன் தாயாகிய யசோதைப் பிராட்டிக்கு, தன்னுள்ளும் புறம்பும் உலகம் இருப்பதை வாய் திறந்து காட்டி உணர்த்தியவன். பிறப்பாகிய கடலில் கலந்த அவித்தையாகிய உவர்த்தன்மையை வாங்கிவிட முகில் போல விளங்குபவன். பரசமயவாதங்களாகிய நதிகள் யாவும் தன்பாலே அடங்கக் கடல் போல இருப்பவன். ஒரு கிரணம் போன்ற என்னைத் தன்னுள்ளே அடக்கிக்கொள்ள நீலமணிநிறம் பூண்டவன். உலகமாகிய ஊசலில் எழுந்தருளியிருப்பவனும் அதனை இயக்குபவனும் தானே யாகின்ற அண்ணல். வேடர்கள் ஒரு பார்வை மிருகத்தைக் கொண்டு நூறுமான்களைப் பிடிப்பதைப் போலத் தன் அவதாரமாகிய பத்தினால் தான் படைத்த எண்பத்து நான்கு லக்ஷம் யோனி பேதங்களாகிய பிறவிகளை நீக்குபவன்.
தசாங்கம்
கேசவாத்திரி, சிங்கத்திரி, இடபகிரி என்னும் திருநாமங் களையுடைய சோலைமலைக்கு அவன் தலைவன். அந்த இடபாசலம் இந்திரன் போலவும் அதில் உள்ள சுனைகள் அவன் கண்களைப் போலவும் இருப்பது, தோளில் புரளும் முத்தாரத்தைப் போல விளங்கும் நூபுரநதியை உடையவன். பூமிதேவிக்குப் பன்னிரு செந்தமிழ் நாடுகளும் கை இரண்டு, காது இரண்டு, நகில் இரண்டு, முகம், காலிரண்டு, பின்னல், கண்ணிரண்டு ஆகப் பன்னிரண்டு உறுப்புக்களாக இருப்பவும், அவற்றுள் சோழ நாடும் பாண்டி நாடும் கண்களாக விளங்க, அவற்றுள்ளும் வலக் கண்ணாக விளங்கும் பாண்டி நாட்டை-யுடையவன். சோமச் சந்திர விமானத்தை இந்திர விமானமென்றும், துவசஸ்தம் பத்தைக் கற்பகவிருட்ச மென்றும், தன்னை உபேந்திரனென்றும், திருமாலையாண்டானென்றும், ஆசிரியரைப் பிருகஸ்பதி யென் றும், மற்ற யாவரையும் இந்திரன் முதலாகிய தேவர்களென்றும் யாரும் எண்ணுதலால் தேவர் வாழும் அமராபதி போலத் தோன்றுகின்ற சீபதியென்னும் திருப்பதியையுடையவன். தன் திருமார்பில் உள்ள பல ஆபரணங்களின் நிறத்தோடு சேர்ந்து இந்திரவில்லைப் போலத் தோற்றும் பசுந்துளப மாலையை அணிந்தவன். வைணவமாகிய [#]மதம் பொங்கவும் வைகானசம் பாஞ் சராத்திரமென்னும் ஆகமங்களாகிய மணிகள் ஒலிப்பவும், வடகலையும் தென்கலையும் புரசைக்கயிறாக விளங்கும் அத்துவி தானந்தமென்னும் யானையை உடையவன். வேதமாகிய குதிரையையும் கருடனாகிய கொடியையும் மும்முரசையும் உடையான். தவநிலை ஆணை தரித்தவன்.
------
[#]மதம் - யானையின் மதம், சமயம்.
பிற சிறப்புக்கள்
கண்ணபிரானாக வந்த காலத்துத் தன் திருமேனியிலே சிந்தின வெண்ணெய்ப் பிதிர்கள் நட்சத்திரங்களைப் போலவும் கையில் ஏந்திய வெண்ணெயுருண்டை மதியம் போலவும் விளங்க அதனை உண்டவன். சூரிய சந்திரர்களாகிய திருவிழிகளையும், அவற்றைப் போன்ற சங்கு சக்கரங்களையும் தாங்கினவன். உலகத்தை உண்ட திருவாயையும், அடக்கிய திருவயிற்றையும், ஈன்ற திருவுந்தித் தாமரையையும், அளந்த திருத்தாளையும், அதனை மாவலிபால் ஏற்ற திருக்கரத்தையும், அதன்கண் வளைந்த பயிர்களின் நிறத்தைக் காட்டும் திரு மேனியையும், அதனை வராகாவதாரத்தில் பெயர்த்த மருப்பையும், ஆமையாகி ஏந்திய முதுகையும், அதனைத் தன் படத்திலே வைத்த ஆதிசேடனாகிய பாயையும் உடையவன். தன் திரு நாமத்தை நினைந்து நாமமிட்டவர்களுக்கு இம்மை மறுமைப் பயன்களை ஈபவன். பிரமன் எழுதும் எழுத்தைத் தன் அஷ்டா ஷரத்தால், இனி இல்லையென்று சொல்லும்படி ஆக்குவோன். சங்கரன் முதலியோர் தங்கள் தங்கள் மலைகள் எங்கே இருப் பினும் இது நம் குன்று என எண்ணிவரும் நண்புடையவன். பச்சைவாரண தாசரென்பவருக்கு இரண்டு கண்களையும் மாற்றினவன் ; ஒரு யானைக் கன்றுக்குக் கண் கொடுத்தவன். திருக்கையில் உத்தியோகச் சக்கரத்தை யுடையவன். இலங்கையை முன்பு வென்று கொண்டாலும் நிலத்தை (மாவலியினிடம்) தானமாக வாங்கினவன்....... திருக்கரத்திலே சங்கத்தை யுடைமையினாலும், மதுரையிலுள்ள சங்கத்தில் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்தமையினாலும் சங்கத்தழகனென்று சொல்லும் திரு நாமமுடைய தம்பிரான். தன்னுடைய பாதுகை அரசு புரியவும் கருடாழ்வான் பறவைகளுக்கரசாக இருப்பவும் அருள் புரிந்தவன். செளந்தரவல்லி நாச்சியாரோடு சுந்தரராசனெனத் தோற்றினவன். சுந்தரத்தோளன், மலையலங்காரன் என்னும் திருநாமங்களை யுடையவன்.
வேறு வேறு தெய்வங்களை மக்கள் பூசித்தமையால் உண்டான புண்ணியமே தன்னை வந்து பூசிக்கப் பெற்றவன். மலயத்துவச பாண்டியனால் வழிபடப் பெற்றவன். அம்பரீஷனுக்கு அருள் செய்தவன்.
திருவிழா
அத்தகைய திருமால், தென்றல் வீசுங்காலத்திலே கோடைத் திருவிழாக் கொண்டருளி மதுரைக்கு எழுந்தருளினான். தல்லா குளத்திற்கு வந்து விடியற்காலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிப் பொற்குடையும் வெள்ளிக் குடையும் கொடிகளும் இலங்கவும், முரசம் முழங்கவும், மக்கள் கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வரவும், நீர்வீசு கருவிகள் பனிநீரைத் தூவவும், காணிக்கைக் கொப்பரை முன்னே செல்லவும் வையைநதியில் அங்கங்கே செய்யப்படும் உபசாரங்களை ஏற்றருளி வண்டியூர் மண்டபத்தில் வீற்றிருந்தருளினான்.
அப்பொழுது சூரியன் அத்தமித்தான். தீவட்டிகள் பிரகாசித் தன. வாணக்காட்சி நடைபெற்றது. பெருமாள் அனந்தாழ் வான் மீது பவனிவந்தான். அப்பவனியிலே அவனைத் தரிசித்துக் காமமயக்கத்தை யான் அடைந்தேன். அவன் மற்ற இடங் களுக்கு எழுந்தருளலானான்.
தலைவியின் நிலை
நான் அவனுடைய திருமுகமண்டலம் முதலியவற்றைக் கண்டு மால்கொண்டு என் உடன் வந்த மாதர்களுக்கு அவனைப் பற்றிக் கூறினேன். பின் அவனைப் பார்த்து, "அன்று நீர் திருடிய வெண்ணெயைப்போலத் தோற்றும் சங்கு இருப்பவும் என் கையிலுள்ள [§] சங்கைக் கவர்ந்து கொண்டீர். என்னுடைய கண்ணீர் உம்முடைய மலையிலே உள்ள அருவியைப்போல உமக்கு உவப்பாயிற்றோ? உமக்குரிய பீதாம்பரம் போதாதோ? இராமாவதாரத்திலே உடுத்துக்கொண்ட மரவுரியிலே வெறுப்பு வந்துவிட்டதோ? திரெளபதியாகிய பெண்ணுக்கு நீரே ஆடையை உதவினீரே. இப்பொழுது என்னுடைய ஆடையைக் கவர்ந்தீரே. பழையபடி கோவியர் ஆடை கவர்ந்ததைப் போலத் திருட்டுத்தனத்தை மேற்கொண்டீரோ? இந்த நூலாடை உமக்குப் [$] பாலாடை-யாயிற்றோ? உம்மேல் விருப்பங்கொண்டு முழங்குகின்ற எம்முடைய வார்த்தையை நீர் கேட்டிலீர். பாற்கடலிலே தூங்குவதைப்போல இந்த வையையிலும் தூக்கம் உண்டோ ? இப்பொழுது உண்மையாக நிலாவெள்ளம் பரந்ததோ? அன்றிப் பாற்கடல் தான் உம்முடைய பிரிவாற்றாமல் உம்மைப் பின் தொடர்ந்து இங்கே வந்துவிட்டதோ ? இரவாகிய யானை கசேந் திரன் போல இருக்கிறது; அதன்மேல் வரும் முதலையைப் போன்ற சந்திரனை நீர் சும்மா விட்டு விடலாமா? சதிரிள மடவாருக்கு இரங்கிய நீர் நெஞ்சம் தவிக்கும் இளமாதருக்கு இரங்கு தல் கூடாதோ? கோவியர்களிடத்தில் காம விளையாடல் புரிந்த செய்திகளெல்லாம் இப்பொழுது மறந்து போனீரோ?" என்று யான் கூறி முறையிட்டேன்.
-----
[#]சங்கு - வளை. [$] காய்ச்சிய பாலில் மேலேயுள்ள ஏடு.
பிறகு பெருமான் தேனூர் மண்டபத்தை வலங்கொண்டு சோலைமலையைச் சார்ந்தான். யானோ மிக மெலிந்து யானை நோயுண்ட விளாம்பழம் போலானேன். இந்தத் துன்பத்தைத் தந்த அவன் சிறிதேனும் திருவுள்ளங் கனியானாயினன். சந்திரனும், கடலும், அயல் மகளிர் மொழியும், மன்மதன் செயலும், காளைகளின் மணியும், வேய்ங்குழலும் என்னைப் பலவாறாகத் துன்புறுத்துகின்றன.
கிளியை வேண்டுதல்
கிளியரசே, என்னுடைய உடம்பும் உன் கூடும் பலவகையில் ஒப்புமையுடையன. உன்னுடைய விருப்பத்தையறிந்து யான் உண்பிப்பேன் ; நலங்குக் குளிப்பாட்டுவேன் ; பட்டாடையால் துடைப்பேன் ; கூட்டில் இருத்தி ஆலத்தி எடுப்பேன் ; வாசனைத் தூபம் காட்டுவேன் ; இள வெயிலிலே குளிர்காயச் செய்து எடுத்து முத்தமிட்டு என்கையின்மேல் வைத்துப் பெருமாள் திருநாமமெல்லாம் உனக்குப் பழக்கி வைப்பேன்.
உன்னையன்றிப் பிறபொருள்களைத் தூதுவிடல் கூடுமோ? அன்னம், குயில், வண்டு, தென்றல், மேகம், காக்கை என்பன தகுதியற்றவை. நீயோ, அங்கே போனால் அடியார்கள் இருப்பின் நீயும் அவர்களோடு சேர்ந்து கீர்த்தனம் செய்வாய். நாச்சியார் அருகில் இருந்தால் அவர் கையிற் பறந்து சென்றிருப்பாய். "எங்கிருந்து வந்தாய்?" என்று கேட்டால், " சோலையிலிருந்து தரிசிக்க வந்தேன்" என்று சொல்வாய். சௌந்தர-வல்லிக்கும், சூடிக்கொடுத்த நாச்சியாருக்கும் தெரியாமல் என்னுடைய காதலைத் தெலுங்கிலே தந்திரமாகச் சொல்வாய். என்னுடைய துன்பத்தை நீக்குவாய். சச்சிதானந்தனாகிய பெருமாள் அணிந்துள்ள மாலையைக் கொண்டு வருவாய்.
அங்கே யுகந்தோறும் வேறு வேறாகிக் கலியுகத்தில் புத்திர தீபமாகும் தரு ஒன்று உண்டு. தேவர்களுக்குரிய ஐந்து கற்பகங்களோடு ஆறாவதாக அது விளங்கும். ஒரு கோடி சோலைகளும், ஒரு கோடி ஆறுகளும், ஒரு கோடி பூஞ்சுனையும் இருக்கின்றன. அன்றியும், யோகிகளைப்போல அல்லும் பகலும் துயிலாத உறங்காப் புளி ஒன்று இருக்கின்றது.
கோயிற் பணியாளர்
அத்தலத்தில் பிரமதேவனும் இந்திரனும் வந்து பெருமாளை இறைஞ்சுவார்கள். சீரங்கராச பட்டரென்னும் அர்ச்சகரும், திரு மாலிருஞ்சோலைச் சீயரென்னும் மாதவரும், திருமாலை யாண்டா னென்னும் ஆசிரியரும், தோழப்பையங்காரும், வேத பாரகரும், அமுதாரும், திருமலை நம்பியும், சோலைமலை நம்பியும், சடகோப நம்பியும், திருமாலிருஞ் சோலைப் பிரியரென்னும் சீகருணீகரும், சீகாரியஞ் செய்யும் நாயகர்களும் தன்னுடைய திருத்தாளை வணங்கி நிற்ப எம்பெருமான் திருவோலக்கத்தில் எழுந்தருளி யிருப்பான்.
தூதுரைக்கும் முறை
அப்பொழுது நீ தூதுரைக்கத் தொடங்கினால் உன் வார்த்தை அவன் திருச்செவியில் ஏறாது. ஆதலின் அவன் பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளை பார்த்து வேறொருவர் ஒன்றை விண்ணப்பித் தற்கு முன், என்னை மன்மதன் துன்பப்படுத்துவதற்கு முன்னே, பெண்டிர் அலர் தூற்றுவதற்கு முன்னே , கடலின் ஒலியும் தாயின் உரையும் என்னைத் துன்புறுத்தாமல் அடங்கும்படியாகத் தத்தையே, நீ என் தூதுச்செய்தியை உரைப்பாயாக.
உன்பேர் சுவாகத மாகையால் உனக்கும் [#] சுவாகதம் உண்டாகும். முன்பு ஒரு நாள் ஸ்ரீராமபிரானே உன்னைப் புகழ்ந்து பேசினானென்றால் உன்னைப் புகழ்ந்து பேசாதவர் யார்? நீ என் தூதுச் செய்தியைச் சொல்லிப் பெருமாளிடம் அவன் திருப் புயத்திலணிந்த மாலையைக் கேள். 'உம்முடைய மாலையை அளியாவிடின் கோதையார் சூடிக்கொடுத்து-விட்ட மாலையை யேனும் தந்தருள்க" என்று கேள். தன்னை அடுப்பவர் யாவருக்கும் ஆடி மாதத்தில் தியாகம் கொடுக்கும் எம்பிரான் இல்லையென்று சொல்லான். ஆதலின் அவ்வழகன் புயத்து அணிந்த மாலையை நீ வாங்கி வருவாயாக.
---
[#] சுவாகதம் - நல்வரவு.
3.4. நூற்பொருள் ஆராய்ச்சி
அணிகள் இந்நூலின்கண் அங்கங்கே பலவகையான சொல்லணி பொரு ளணிகளைக் காணலாம்.
-
"வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளாதவரார்காண் கிள்ளையே " (3)
"மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனத் தாலே பசிதீர்ப்பாய்" (19)
-
"செலுத்திய காற் றேரைமுழுத் தேராய்" (4)
..... ..... ..... ..... - என் காதல்
வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன் மிதந்தோன்
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான் " (74-5)
-
"மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மாதுஞ் சங்கரியும்
கைப்பிடிக்க நீவங் கணம்பிடித்தாய்" (28)
"...... .... ..... .....-- கும்ப முனி
வாயினுரையடங்க வந்த கடலடங்கத்
தாயி னுரையடங்கத் தத்தையே" (232-3)
-
"தேறுகனி காவேரி சிந்துகோ தாவிரியும் வீறு பெறுமே” (33)
"அரசா யிருத்தியாலத்தி யெடுத்து ” (196)
-
"தத்தை யடைந்தவரே தத்தையடையார்" (54)
"கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்” (146)
... ..... ..... .... - அடுகிலே
சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதானந்தர் (208-9)
-
"திருப்பா துகைக்குஞ் செழுங்கருடனுக்கும்
திருப்பா துகைக்குமர சீந்தோன்" (137)
"பாத கமலம் பரவுமல பரவுமல யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன் (141)
தொகை முதலியன
ஏழு முதல் இரண்டு வரையில் உள்ள சில தொகைப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் கிளியின் பெயரை அமைத்துக் காட்டிய பகுதி (63-5) இன்பந் தருவதாகும். பூமிக்கும் திருமாலுக்கும் உள்ள தொடர்பு மிக அழகாக ஓரிடத்தில் தொகுத்துச் சொல்லப் பட்டுள்ளது (126-8)
'கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும்' (46-7), 'அவனசையாமல் அணுவசையாது' (123), யானையுண்ட விளாம்பழம் (187-8) என்னும் பழமொழிகள் இதில் வந்துள்ளன.
சமற்காரம்
கிளியின் பெருமையைப் பல திறத்திற் பாராட்டிக் கூறவந்த இந்நூலாசிரியர் அதன் பெயரையும், இயல்பையும், புராண வரலாறுகளையும் வைத்துக்கொண்டு சமற்காரமாகப் பல பொருளமையும்படி அமைத்துக் காட்டுகின்றார். அரி, அவந்தி, கிள்ளை, கிளி, கிளிப்பிள்ளை, கீரம், சுகம், சுவாகதம், தத்தை, வன்னி என்னும் கிளியின் பெயர்களைச் சிலேடை வகையிலும் பிறவாறும் இவர் எடுத்தாளுவர்.
பிற பொருள்களைத் தூதுவிடுவதனாற் பயனில்லை என்று மறுக்கும் வாயிலாகச் சில தூதுப் பொருள்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அவை வருமாறு : அன்னம் (33,199), காக்கை (204), குயில் (34,46,200), 'தென்றல் (202), நாகண வாய்ப்புள் (38), புறா (36), மயில் (37), மேகம் (203), வண்டு (35, 46, 201)
புராண முதலிய நூற் செய்திகள்
திருமாலின் பெருமைகளைச் சொல்லுமிடங்களில் இராமாயணம், பாரதம் என்னும் இதிகாசச் செய்திகளும், பாகவதம் முதலிய மாபுராண வரலாறுகளும், இத்தலத்திற்குரிய புராணத்திற் கண்ட சிறப்புக்களும் எடுத்தாளப்படுகின்றன. ஓரிடத்தில் சீவக சிந்தாமணிச் செய்தியைக் காணலாம்.
வைணவ மரபு
நம்மாழ்வாரைக் காப்பிலே வாழ்த்தியிருத்தல் வைணவ மரபு ; கருடனைப் பெரிய திருவடிகள் என்றும் (22), திருமால் வாகனமாகிய குதிரையைக் குதிரை நம்பிரானென்றும் (152), ஆதிசேடனை அனந்தாழ்வான் என்றும் (166), பள்ளியறையைச் சேர்த்தி யென் றும் (230) வழங்குதல் அம்மரபைச் சார்ந்ததே.
பாண்டி நாட்டு வழக்கம்
'உன்னுடைய சிறகுகள், இராமாவதாரத்தில், விபீடணன் இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டபோது, அங்கே கட்டிய புது மாவிலைத் தோரணமோ' (59) என்பது ஒரு கண்ணியிற் கண்ட பொருள். ஒரு நிலத்தை மற்றொருவன் தனக்குரிய தாக்கும்போது அங்கே தோரணங்கட்டுதலும், அதனால் அச் செயலைத் தோரணம் வைத்தலென்று வழங்குதலும் பாண்டி நாட் டினர் வழக்கம். அவ்வழக்கத்தைப் பின்பற்றியே அவ்வாசிரியர் இங்கே இங்ஙனம் அமைத்தார்.
செய்யுள் நடை
இத்தூதின் செய்யுள் நடை பலவிதமாக அமைந்துள்ளது. மடக்கு, திரிபு, சிலேடை முதலியவை அமைந்த இடங்களிலே சற்றுக் கடினமாக இருப்பினும் மற்ற இடங்களில் தெளிவாகச் செல்வது. திருமாலினுடைய இயல்பைச் சொல்லும் இடங்கள், முக்கியமாக 75-ஆம் கண்ணி முதலிய சில கண்ணிகள் இந் நூலாசிரியர் உள்ளத்தே தீவிரமான பக்தியுணர்ச்சியோடு பாடப்பட்டிருக்கவேண்டும். உயர்ந்த உண்மைகளை ஆற்றலோடும், தெளிவாகவும் விளக்கும் அப்பகுதியிலே இவருடைய கவித்துவத்தின் சிறந்த அமைப்பைக் காணலாம். கிளியினைத் தூதுவிடுவதாக மேற்கொண்ட பிறகு, எந்த எந்த வகையாக வெல்லாம் அதைப் பாராட்ட முடியுமோ அந்த அந்த வகை யாகப் பாராட்டி யிருக்கின்றார். கல்வி, கேள்வி, அனுபவங்களிலே கிளியைப் பற்றி அறிந்தவற்றை யெல்லாம் எப்படியோ தொடுத்துக் கோத்திருக்கின்றார். கிளியைப் போலத் தூது செல்லுவதற்குரிய பொருள் வேறில்லை யென்று சொல்லுவதற்காக நிகண்டிலே கிளியின் பெயர்களாக உள்ள பதங்களும், புராண இதிகாசங்களும், சிலேடையணி முதலிய கருவிகளும், இவருக்குத் துணையாக நிற்கின்றன. கிளிதான் சகலமுமென்றவரைக்குங் கூட இவர் பாராட்டிப் பேசி விடுகிறாரெனின் வேறு என் செய்வது !
-
".... ..... ..... ...... - கண்ட
செகமுழுது நீஞான தீபமுநீயென்று
சுகமுனியே சொல்லாரோ"
என்று இவர் வினாவும் பொழுது 'ஆம்" என்று விடையளிப் பதையன்றி வேறு வழியேது ; யுக்தியினால் சமற்காரமாகக் கிளிக்கு உயர்ந்த புகழைக்கூறிப் பாராட்டும் இடங்கள் இதிலே பல இருக்கின்றன. கிளியைப் பலர் தம் கையிலே பிடிப்பர்; இதே விஷயத்தைக் கிளிக்குப் பெருமை விளைவிக்கும் உருவத்திலே மாற்றி,
-
"பால் குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்
கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே"
திருமாலுடைய பெருமையை மரபறிந்து புகழ்கின்றார். தலப் பெருமையையும், தசாங்கங்களையும், திருவிழா நடைபெறும் முறையையும் ஒழுங்காக உணர்த்துகின்றார். இந்தத் தலத்திலே உள்ள பல கைங்கர்யபரர்களின் பெயர்களை வரிசையாகத் தெரிவிக் கின்றார். அந்தப் பகுதியினால் கிளிக்காவது, தலைவிக்காவது, நமக்காவது பெரும் பயன் ஒன்றும் இல்லையென்றாலும் ஆசிரியர் தம் காலத்தில் இருந்த அவர்களைக் கிளியோடும் அழகரோடும் சேர்த்து அவர்கள் புகழையும் கல்லிற் பொறித்தது போல் தம் சொல்லிற் பொறித்திருக்கின்றார். இது புலவருடைய நன்றியறி வென்றோ, அம்மக்களுடைய பாக்கியமென்றோ இரண்டுமென்றோ சொல்வதிற் பிழை யாதும் இல்லை.
---------------------
கணபதி துணை
திருமாலிருஞ் சோலைமலை அழகர் கிள்ளைவிடு தூது
காப்பு
(வெண்பா )
தெள்ளு தமிழழகர் சீபதிவாழ் வார்மீது
கிள்ளைவிடு தூது கிளத்தவே - பிள்ளைக்
குருகூரத் தானேசங் கூர்கமுகி லேறும்
குருகூரத் தானேசங் கூர்.
நூல்
கிளியின் பெருமை
-
கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர் கொண்டு 1
நீர்கொண்ட பாய னிறங்கொண்டு- சீர்கொண்ட
வையம் படைக்கு மதனையுமேற் கொண்டின்பம்
செய்யுங் கிளியரசே செப்பக்கேள் - வையமெலாம்
வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளா தவரார்காண் கிள்ளையே- நாளும்
மலைத்திடு மாரனொற்றை வண்டிலுமில் லாமற்
செலுத்திய காற் றேரை முழுத் தேராய்ப் - பெலத்திழுத்துக்
கொண்டுதிரி பச்சைக் குதிரா யுனக்கெதிரோ 5
பண்டுதிரி வெய்யோன் பரியேழும் - கண்ட
குறிப்புரை
காப்பு
அழகர் : திருமாலிருஞ் சோலைமலையில் எழுந்தருளியுள்ள திருமாலின் திருநாமம் ; இதன் வடமொழிப்பெயர் அலங்காரரென்பது. சீபதி - ஸ்ரீபதி ; அழகர்மலையின் திரு நாமங்களுள் ஒன்று. பிள்ளைக் குருகு - நாரைக்குஞ்சு. ஊர - தன்பின்னே ஊர்ந்து வருதலால். தானே சங்கு ஊர் கமுகில் ஏறும் : ஊர்கமுகு - மேற்பாகம் பரவியுள்ள கமுகு ; ஊர்தல் - பரத்தல். சங்கு ஏறுதற்கு இடமான. குருகூர் அத்தான் – ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளியுள்ள தலைவனே; அத்தான் - அத்தனே : விளி ; "நம்பான்" (தே.) என்பது போல. நேசம்கூர் - திருவருள் புரிவாயாக. கிளத்த நேசம் கூர் என இயைக்க.
நூல்
1. கடவுள் - திருமால். பெயர் - அவருடைய திரு நாமமான அரி யென்பதை ; அரியென்பது கிளிக்கும் உரிய பெயர். பாயல் - அவருடைய படுக்கையான ஆலிலையின் நிறம் - பச்சை நிறம். (பி - ம்.) கடவுளினற் பேர்கொண்டு.
2. வை அம்பு அடைக்கும் மதனையும் : மதனையும் - மன்மதனை யும். கிளி - மன்மதனுக்கு வாகனமாதலால், 'மதனையுமேற் கொண்டு' என்றார். வையம் படைக்கும் அதனையும் - புவியைப் படைக்கும் அத் தொழிலையுமென்று வேறொரு பொருளும் தோற்றுகின்றது. (பி- ம்.) செய்யும் பசுங்கிளியே.
3. வேளாண்மை - மன்மதனுடைய ஆட்சி ; பயிர்களை விளைத்தல்; சிலேடை. வேளாண்மைத் தொழிலாகிய விளைச்சலென்பது மற்றொரு பொருள். (பி - ம்.) என்றும் விளைவுக்கு முன்.
4. மலைத்திடும் - போர் செய்யும். மாரன் - மன்மதன். ஒற்றை வண்டில் - ஒரு சக்கரம் ; சக்கரம் வண்டிலெனவும் வழங்கும் (தேவை யுலா, 2006). கால்தேர் - தென்றற்காற்றாகிய தேர் ; காற்பங்கான தேரென்பது மற்றொரு பொருள். மாரன் செலுத்திய என இயைக்க. பெலத்து - பலம் கொண்டு.
5. பச்சைக்குதிராய் - பச்சைக்குதிரையே ; என்றது சூரியன் தேரிலுள்ள ஏழு பச்சைக்குதிரைகளை நினைந்து. (பி - ம்.) பரியெல்லாம்.
4-5. ஒற்றைச் சக்கரத்தையுடைய சூரியன் தேரை இழுத்துச் செல் லும் ஏழு பச்சைக் குதிரைகளும் ஒரு சக்கரமும் இல்லாத தேரை இழுத் துச் செல்லும் பச்சைக் குதிரையாகிய உனக்கு ஒப்பாகமாட்டா.
-------------
-
செகமுழுது நீஞான தீபமுநீ யென்று
சுகமுனியே சொல்லாரோ சொல்லாய்-வகைவகையாய்
எவ்வண்ண மாய்ப்பறக்கு மெப்பறவை யாயினுமுன்
ஐவண்ணத் துள்ளே யடங்குமே - மெய்வண்ணம்
பார்க்கும் பொழுதிலுனைப் பார்ப்பதியென் பாரென்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய் - நாக்குத்
தடுமாறு வோரையெல்லாந் தள்ளுவரே யுன்னை
விடுவா ரொருவருண்டோ விள்ளாய் - அடுபோர்
மறந்தரு சீவகனார் மங்கையரிற் றத்தை 10
சிறந்தது நின் பேர்படைத்த சீரே-பிறந்தவர்
6. சுகமுனி - சுகமுனிவர் ; கிளிவடிவங்கொண்டிருந்த கிருதாசி யென்னும் தெய்வமகளிடம் வியாசருடைய கருணையால் அவதரித்தமை யின் இவர் இப்பெயர் பெற்றார். செக......... முனியே : சுகமுனிவர் பிறந்த பொழுதே துறவு பூண்டு பூமியில் நடந்து சென்றார். அவர் தந்தையான வியாசர், 'குழந்தாய்' என்று அவரை அழைப்ப எல்லாப் பொருளும் ஏனென்று கேட்டனவென்பர்;
"பிறந்தபொழு தேதுறந்து பிறைக் குழவி போனடப்பப் பின் போய்த் தொன்னூல்,
அறைந்தபுகழ் வியாத முனி யாதரத்தான் மதலாயென் றழைப்பச் செவ்வாய்,
திறந்து நறை பொழியு மலர்ச் செழுந்தருவு மேனென்ன வுயிர்கள் யாவும்,
நிறைந் துறையுஞ் சுகமுனிவ னிரையிதழ்த் தா மரைமலர்த்தா ணினை தல் செய்வாம்"
(பாகவதம், காப்பு 3) என்பதனாலும் இவர் எங்கும் வியாபகமா யிருந்தனரென்பது விளங்கும். சுகமுனிவர் உன் வயிற்றிற் பிறந்தவர் ராதலால் புகழ்பெற்றார்.
7. ஐவண்ணம் - ஐந்து நிறம் ; பஞ்சவர்ணக்கிளியென்று கிளியில் ஒரு சாதியுண்டு.
8. பார்வதியென்று யாரும் உன்னை நினையாதபடி முற்றும் பசுமை யாயுள்ள தன்மை நீங்கி மூக்குமட்டும் சிவந்தாயென்றபடி ; இதனால் உன்னுடைய அடக்கம் வெளிப்படுகின்றது. பார்வதிதேவியார் பச்சை நிறமுடையவர். (பி - ம்.) பொழுதிற் பசுங்கிளி.
9. உன்னை - குழறிப்பேசுகின்ற உன்னை விடுவார் - தள்ளுபவர்.
10. சீவகனார் - சிந்தாமணி யென்னும் காப்பியத்தலைவன். ததீதை - காந்தருவதத்தை; சீவகனுடைய பட்டத்தேவியருள் முதல்வி ; இவள் பெயர் தத்தை யென்றும் வழங்கும்.
(பி - ம்.) பிறந்தவருள், பறந்து வரும்.
------------
-
ஆரும் பறவைகளுக் கச்சுதன்பே ருஞ்சிவன்றன்
பேரும் பகர்ந்தார் பிழையன்றோ - நேர்பெறுவி
வேகி யொருகூடு விட்டு மறு கூடடையும்
யோகி யுனக்குவமை யுண்டோகாண் – நீகிரம்
ஆகையாலாடை யுனக்குண்டே பாடகமும்
நீ கொள்வாய் காலாழி நீங்காயே- ஏகாத
கற்புடையாய் நீயென்றாற் காமனையுஞ் சேர்வாயே
அற்புடைய பெண்கொடிநீ யாகாயோ- பொற்புடையோர்
துன்னியசா யுச்யஞ் சுகரூப மாகையால் 15
அன்னது நின்சொருப் மல்லவோ-வன்னி
பரிசித்த வெல்லாம் பரிசுத்த மென்றோ
உருசித்த வுன்னெச்சி லுண்பார்- துரிசற்றோர்
11. அச்சுதன்பேர் அரங்கனென்பது. சிவன் தன்பேர் சொக்க னென்பது. கிளி ரங்கரங்கா வென்று கூறுதல் வெளிப்படை. சொக்கர் பெயரைக் கூறுதல்,
"புழுகுநெய்ச் சொக்க ரபிடேகச் சொக்கர்கர்ப் பூரச் சொக்கர்,
அழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண்,
தழுவிய சங்கத் தமிழ்ச்சொக்க ரென்றென்று சந்தத நீ,
பழகிய சொற்குப் பயன் றேர்ந்து வாவிங்கென் பைங்கிளியே" (மதுரைக். 54)
என்பதனால் விளங்கும். பகர்ந்தால் - கற்பித்தால். பிழை - தகுதியில்லார்க்குக் கற் பித்தல். அச்சுதன்பேரையும் சிவன்பேரையும் நீ பிழையில்லாமற் கூறுகின்றாய். மற்றப் பறவைகளுக்குக் கற்பித்தால் அவை பிழைபடக் கூறும் ; அங்ஙனம் கற்பித்தல் பிழை. நேர் - நேர்மை . (பி - ம்.) பேரும் படைத்தாற் பிழையாரோ .
12. கூடு - உடம்பு, பறவைக் கூடு. ஒருகூடு விட்டு மறுகூட்டை அடையும் யோகி உனக்கு உவமை ஆகான்; அவன் தான் இருக்கும் உடம்பை விட்டு அரூபியாகி வேறோர் உடம்பிற் புகுவான் ; நீ உடம் போடு வேறு கூட்டை அடைவாய் ;
"கிட்டுநெறி யோகியருங் கிள்ளை களுந் தங்கூடு,
விட்டுமறு கூடடையும் வேங்கடமே" (திருவேங்கட மாலை, 73).
கீரம் - கிளி, பால் ; சிலேடை.
11-2. விவேகி - விவேகியாகிய ஒருவன்.
13. ஆடை-பாலின் ஆடை ; இங்கே சட்டை. பாடகம்- ஓராபரணம். காலாழி - ஒருவகை அணி ; இது பீலியென்னும் ஆபரணத்தோடு சேர்த்து வழங்கப்படும். கிளிக்குச் சட்டை போடுதலும், கால்விரல்களில் மோதி ரம் போடுதலும் உண்டு. ஏகாத - நீங்காத.
14. கற்புடையாய் - கல்லின் பக்கத்தே யுள்ளாய், கற்பை யுடையாய்; சிலேடை. நீ கற்புடையா யென்றால். காமனை - மன்மதனை, காவாகிய மனையை; கா - சோலை ; சிலேடை.
13-4. கிளியையும் பெண்ணென்று கூறுதற்குரிய காரணங்கள் சிலேடை வகையாற் கூறப்பட்டன.
15-6. சுகரூபம் - இன்பரூபம். வன்னி - கிளி , நெருப்பு. உன் எச்சில் - உன்னுடைய உச்சிட்டத்தை. கிளி கடித்த பழம் சிறந்தது ;
"சுழித்து நல்ல தொழுகியஞ் சுகமுகஞ் சேர்ந்து,
தழைத்த நான் மறைத் தடஞ்சினைக் கற்பகத் தருவிற்,
பழுத்து திர்ந்தது பரமபாகவத மென் றிசைக்கும்,
விழுப்பெ ருங்கனி நுகர்ச்சியே விரும்புவார் மேலோர் " (பாகவதம், காப்பு. 4).
வன்னியென்னும் பெயர், "அச்ச, மனப் பேதையார் மால் வனஞ்சுடவோ வன்னி, எனப்பேர் படைத்தா யியம்பாய்" (49 - 50) என்று பின்னும் சிலேடையில் அமைக்கப்பட் டுள்ளது.
(பி - ம்.) பரிசுத்த மெல்லாம், அரிசித்த ருன்னெச்சி லார்வார் ; உரிசித்து நின்னெச்சில்.
----------
-
இன்சொல்லைக் கற்பா ரெவர் சொல்லு நீகற்பாய்
உன்சொல்லைக் கற்கவல்லா ருண்டோகாண்- நின்போலத்
தள்ளரிய யோகங்கள் சாதியா தேபச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோரார்-உள்ளுணர்ந்த
மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனத் தாலே பசிதீர்ப்பாய்-மேலினத்தோர்
நட்டா ரெனினு நடந்துவரும் பூசைதனை 20
விட்டார் முகத்தில் விழித்திடாய் - வெட்டுமிரு
வாளனைய கண்ணார் வளர்க்கவளர் வாயுறவில்
லாளனை நீ கண்டா லகன்றிடுவாய்-கேளாய்
இருவடிவு கொண்டமையா லெங்கள் பெரிய
திருவடிகள் வீறெல்லாஞ் சேர்வாய் - குருவாய்ச்
செபதே சிகர்க்கெல்லாந் தென்னரங்கர் நாமம்
உபதேச மாக வுரைப்பாய் - இபமுலையார்
சித்தங் களிகூரச் செவ்விதழி லாடவர்போல்
முத்தங் கொடுக்க முகங்கோணாய் - நித்தமவர்
செவ்விதழுன் மூக்காற் சிவந்ததோ வுன் மூக்கில் 25
அவ்விதழின் சிவப்புண் டானதோ – செவ்வியிழந்
17. உண்டோ : இல்லையென்றபடி . (பி - ம்.) உன் சொற்கற் பாரொருவ ருண்டோகாண்.
18. யோகங்கள் - மருந்துகள், யோகாப்பியாசங்கள். பச்சைப் பிள்ளையாய் - இளம்பிள்ளையாகி. இளம்பிள்ளையைப் பச்சைப் பிள்ளை யென்பது வழக்கு. எப்போதும் இளம்பிள்ளையாயிருத்தற்கு யோகம் இன்றியமையாதது. உள் உணர்ந்த - அறிஞர்கள் உள்ளத்தால் உண ரப்பட்ட. (பி - ம்.) உள்ளுணர்ந்து .
19. பாலனம் : திருமாலுக்குப் பரிபாலனத்தொழிலென்றும் கிளிக்குப் பாற்சோறென்றும் கொள்க. (பி - ம்.) மேலினத்து.
20. நட்டார் - நண்பர். பூசைதனை விட்டார் - பூனையை உன்மேல் விட்டவர், பூஜையைச் செய்யாது விட்டவர்.
21. உறவில்லாளனை - மிக வில்லையாள்கின்ற வேடனை, உறவு இல்லாதவனை ; சிலேடை.
22. இருவடிவு : கருடனுக்குப் புருஷ வடிவமும் பறவை வடிவ மும்; கிளிக்குப் பச்சை வடிவமும் சிவப்பு வடிவமும். பெரிய திருவடி கள்-கருடன்; "வயங்கு மீருரு வண்ண க் கலுழன்" (தக்க. 286.) வீறு - வேறொன்றற்கில்லாத பெருமை. "மெய்யின், வடிவம் வளைந்த மணி மூக்கு மாயன், கொடியிலிருப்பவர் தங் கூறோ " என்பர் பின் ; 56-7.
23. செபதேசிகர் - ஜபஞ்செய்தலையுடைய குருமார். உரைப்பது : ரங்க ரங்காவென்பது. இபம் - யானை ; இங்கே அதன் கொம்பு அல்லது மத்தகம்.
24. இதழ் - கீழுதடு. ஆடவர்போல் - கணவரைப்போல. முத்தங் கொடுத்தல் ஆடவர் தொழில். அவர் - அம்மகளிருடைய. (பி-ம்.) செவ்வி தழ் நின்; செவ்வியழியாதவர் போல்.
25. (பி - ம்.) அவ்வித ழிற்சிவப்புண் டானதோ - செவ்வியாம்.
-----------
-
தண்டருக்குந் தோற்றா னடல் வேளா னானை நீ
கொண்டிழுத்தா லாகுங் குறையுண்டோ – உண்டடக்கி
ஆயுவை நீட்ட வருந்தவத்தோர் பூரகஞ்செய்
வாயுவையுன் பின்னே வரவழைப்பாய்- தேயசொளிர்
மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மா துஞ் சங்கரியும்
கைப்பிடிக்க நீவங் கணம் பிடித்தாய் - மெய்ப்பிடிக்கும்
பச்சைநிற மச்சுதற்கும் பார்ப்பதிக்கு முன்றனக்கும்
இச்சை பெற வந்தவித மெந்தவிதம் - மெச்சும்
குருகேயுன் னாக்குத்தான் கூழை நாக் கான 30
தரிகீர்த் தனத்தினா லன்றோ - தெரிவையர்கள்
ஆர்த்தவிர லுன்முகமொப் பாகையா லேகையைப்
பார்த்து முகமதனைப் பாரென்பார் - சீர்த்திக்
கிரியையிலே காணுங்காற் கிள்ளை யடையாத
பெரியதனம் வீணன்றோ பேசாய் தெரியுங்காற்
26. தோற்றான் - தோல்வியுற்றவன், கண்ணுக்குப் புலப்படாத வன். அடல் வேள் ஆனானை - தோற்றானாகி அவர்களை அடுதலையுடைய மன்மதனை. தோல்வியுற்றவனை நீ இழுத்தும் குறையில்லாயென்றபடி. (பி - ம்.) ஆர்க்குங் குறை.
27. ஆயுவை - ஆயுளை. பூரகம் - காற்றை உள்ளே நிரப்புதல். தென்றலென்னும் தேரை இழுக்கும் குதிரையாய் முன்னே செல்லுதல் பற்றி, 'வாயுவையுன் பின்னே வரவழைப்பாய்' என்றார் ; வாயு - தென்ற லாகிய தேர். தேயசு - ஒளி. (பி - ம்.) தேயு வொளிர்.
28. மலர் மாது - திருமகள். திருமகள் கையில் கிளியுண்மை , "பின்னைத்தாய் கையிலுறை பெண்டத்தாய்", "நாச்சியார், பங்கிருந் தாற் கையிற் பறந்திருப்பாய்" (65, 205) என்பவற்றாலும், உமாதேவியாரின் கையிலுண்மை, "களங்கனி யென்றுமை கைக்கிளி பார்க்குங் கறைக் கண்டனே" (காசிக். 61) என்பதனாலும் விளங்கும். வங்கணம் - நட்பு ; "நேசமிலா, வங்கணத்தி னன்று வலிய பகை 17 (தனிப்.)
30. கீர்த்தனம் - இறைவன் பெயரை இசையோடு சார்த்திச் சொல்லுதல் (204 - 5).
(பி - ம்.) குருவி நின்னாக்கு.
31. தூங்கியெழுந்தவுடன் மகளிர் தம் கைவிரலைப் பார்த்துப் பின்பு கண்ணாடியில் முகத்தைப் பார்க்கவேண்டுமென்பது பண்டை மரபு ; இங்ஙனம் கூறுதற்குக் காரணம் அவர்களுடைய கைவிரலின் நகம் உன் மூக்கை ஒத்திருத்தலே.
(பி - ம்.) பார்த்து முகத்தைப்பாரென் பார் பெரியோர்.
32. கிள்ளை - கிள்ளுதலை, கிளியை. பெரிய தனம் - பெருத்த நகில், பெருஞ்செல்வம்.
------------
-
றேறுகனி காவேரி சிந்துகோ தாவிரியும்
வீறுபெறு மே நீ விரும்பினாற்-கூறிலனம்
உன்னுடைய வூணன்றோ வூதப் பறந்து போம்
சின்னவடி வன்றோ செழுங்குயிலும் - என்னே
முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும் 35
மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ -எதிரும்
கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
வரும் புறா வுக்கு மொரு வாயோ- விரும்புமயில்
உற்ற பிணிமுகமே யுன்போற் சுகரூபம்
பெற்ற பறவை பிறவுண்டோ - கற்றறியும்
கல்வியுங் கேள்வியுநீ கைக்கொண்டாய் சாரிகைக்குன்
செல்வமதி லள்ளித் தெளித்தாயோ- சொல்வேத
மென்பரிநா லுக்கும் விதிசாரதிவில் வேள் -
தன்பரி யேயுனக்குச் சாரதியார்-வன்போரில்
மேவுஞ் சிவன்விழியால் வேள் கருகி நாண்கருகிக் 40
கூவும் பெரிய குயில்கருகிப் -பாவம்போல்
33. தேறப்பட்ட பழங்களானவை காவிலுள்ள தேனைச் சிந்துகின்ற சக்கையாகக் கெடும் ; நீ விரும்பினால் அக்கனிகள் வீறுபெறும் ; வீறுபெறுதலாவது கிளி கோதின பழமென்று எல்லாராலும் விரும்பி யுண்ணப்படுதல் : 16, பார்க்க. அனம் - சோறு, அன்னப்பறவை.
இக்கண்ணியில் கன்னி, காவேரி, சிந்து, கோதாவிரி யென்னும் நதிப் பெயர்கள் தோற்றுகின்றன. கனி - தொகுத்தல்.
34. ஊதுதற்குப் பறந்து செல்லும் சின்னமாகிய வாத்திய வடிவு; ஊதியவளவிற் பறந்துபோம் சிறிய வடிவு. குயில் மன்மதனுக்குச் சின்னமென்னும் வாத்தியமென்பது இங்கே அறிதற்பாலது.
35. முடிச்சவிழ்த்தல் - பேரரும்பின் இதழ்க்கட்டை அவிழ்த்தல், இரகசியத்தை விரித்துச் சொல்லுதல். வாயுண்டோ வென்பது குழறு மென்றபடி (45 - 6).
(பி - ம்.) முடிசேவியாமுன், முடி சேவித்தாலும்.
36. கரும்புறா- கரும்பின் சுவையுறாத, கரிய புறாவென்னும் பறவை. புறா தூது விடுவனவற்றுள் ஒன்றென்பது மலையாள பாஷையிலுள்ள கபோத சந்தேச மென்னும் நூலால் அறியப்படுகின்றது (கபோதம் - புறா ; சந்தேசம் - தூது);
"நன்புறவைத் தூண்டினது நாளுந்தூ துண்டொ ழிக்கும்,
என்புறத்துத் தூதாக வெண்ணுமே" (கச்சியானந்த. வண்டு. 337)
37. பிணிமுகமென்பது மயிலின் பெயர் ; நோயோடு கூடிய முக மென்பது மற்றொரு பொருள்.
38. சாரிகை - நாகணவாய்ப்புள். செல்வமதில் அள்ளி - உன்னு டைய செல்வத்திற் சிறிய பாகத்தை அள்ளி. நாகணவாய்ப்புள் பேசும் வன்மை சிறிதே பெற்றதென்னும் கருத்தை உட்கொண்டு இங்ஙனம் கூறினார். (பி - ம்.) தெறித்தாயோ.
38 - 9. வேத மென் பரி - வேதமாகிய மெல்லிய குதிரை ; வேதமென் னும் பரியுமாம்.
விதி - பிரமன். (பி - ம்.) பரியா முனக்குச் சாரதியார்.
40. வேள் கருகி - நெற்றிக் கண்ணின் தீயால் மன்மதன் சாம்ப ராகி ; கருநிறத்தை அடைந்தென்பது மற்றொரு பொருள். மன்மதன் கரிய நிற முடையவன்; "ஆழி யுடையான் மகன் மாயன் " (தண்டி. 48, மேற் ). நாண் - வண்டு. கூவும் - சின்னமாக இருந்து கூவுகின்ற. இயற்கைகள் செயற்கையாகக் கூறப்பட்டன.
--------
-
நின்று மறுப்படுநா ணீதா னடுப்படையிற் 41
சென்று மறுப்படா தேவந்தாய் - என்றுமாக்
காய்க்குங் கனியல்லாற் காய்பூவென் றானாக்கு
மூக்கு மறுப்பாய் முகம்பாராய்-ஆக்கம்
வரையாம னன்மை வரத்தினை நல்கும்
அரிதாளை நீவிட் டகலாய் - இருகை
உனக்கில்லை யுன்சிறகி ரண்டுமெனக் கில்லை
எனக்குமுனக் கும் பேத மீதே-மனைக்குள்
இதமாய் மனிதருட னே பழகு வாயன் 45
பதனான் முறையிட் டழைப்பாய் - மதுவுண்
டளிப்பிள்ளை வாய் குழறு மாம்பரத்தி லேறிக்
களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் - கிளிப்பிள்ளை
சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்
பின்னத்தைப் போலுமொரு பேறுண்டோ - அன்னமின்றிப்
பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்
கால்பிடிப்பார் கோடி பேர் கண்டாயே-மால்பிடித்தோர் 49
கைச்சிலைவே ளால் வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ
41. மறுப்படு நாள் - தோல்வியுற்ற காலத்தில், சாம்பராகி மறுப் பட்ட காலத்தில் மறுப்படாதே வந்தாயென்றது, பச்சை நிறத்தோடி ருத்தலை நினைந்து.
41-2. நாக்கு மூக்கு மறுப்பாய் - நாக்கையும் மூக்கையும் கொண்டு முறையே சுவைத்தலையும் மோத்தலையும் செய்ய மறுப்பாய் ; அறுப்பா யென்று பிரித்து, சொன்னவருடைய நாக்கையும் மூக்கையும் அறுப்பா யென்று வேறொரு பொருள் கொள்க. ஆக்கம் - செல்வம்.
43-4. நன்மை வரத்தினை நல்கும் - நல்ல கரிய மேன்மையான தினையைக் கொடுக்கும், நல்ல வரத்தைக் கொடுக்கும் ; கருந்தினை யென்று ஒரு சாதியுண்டு. அரிதாளை - தினையின் அரிந்த தாளை , திரு மாலின் பாதங்களை ; "அரிதாள் , மறவாத பாக வதனே" (மான்விடு தூது, 45) என்று பிறரும் இதனைச் சிலேடையில் அமைத்துள்ளனர்.
45. முறையிட்டு - முறைப்பெயரிட்டு ; அப்பா, அம்மா, அக்கா என்பன முதலியன.
46. அளிப்பிள்ளை - இளைய வண்டு. ஆம்பரம் - மாமரம். பிள்ளைப் பூங்குயிலும் - பிள்ளையாகிய குயிலும் ; குயிலுக்கு மாமரம் உரியது. (பி - ம்.) களிப்புள்ள பூங்குயிலும்.
47. சொன்னத்தை - சொல்லியதை, தங்கத்தை. அத்தைப் போலும் - அதனைப்போலும். அன்னம் இன்றி - அன்னம் இல்லாமல்.
(பி - ம்.) சொன்னதை, அன்னதை ; அன்னமன்றிப். 48. பச்சைக் குழந்தை - இளங்குழந்தை. கால்பிடித்தல் - கிளியின் . கால் தம் கையிற்படும்படி வைத்துக் கொண்டிருத்தல்.
49. நோயைத் தீர்ப்பதற்குரிய மருந்துகளுள் பச்சிலை ஒன்று.
(பி - ம்.) தீர்ப்பதற்கோர், தீர்ப்பதற்குப் .
----------
-
பச்சிலை ரூபம் படைத்திருந்தாய் - அச்ச 50
மனப்பேதை யார்மால் வனஞ்சுடவோ வன்னி
எனப்பேர் படைத்தா யியம்பாய்- அனத்தை
நிலவோவென் பார்க ணெடுந்துயர்வே முத்தைக்
கொலவோ வரிவடிவங் கொண்டாய் - சிலைநுதலார்
கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவெடுத்தாய் கிற்பாய் நீ-உள்ளம்
மிகவுடை மாதர் விதனங் கெடவோ
சுகவடிவு நீ கொண்டாய் சொல்லாய் - தகவுடைய
தத்தை யடைந்தவரே தத்தையடை யாரென்னும்
வித்தையடைந் தாயுனையார் மெச்சவல்லார் - முத்தமிழோர்
மாரதி பாரதியார்க் குன்னையுவ மானிப்பார் 55
ஆரதிக மார் தாழ் வறைந்திடாய்-ஊரறிய
50. மால்வனம் - காம மயக்கமாகிய காட்டை. வன்னி - கிளி, நெருப்பு. அனத்தை - அன்னப்பறவையை, சோற்றை.
50-51. அன்னப்பறவையையும் மயக்கத்தால் நிலவென்று அஞ்சும் மகளிர். "தலைவரைப் பிரிந்த மகளிர் நிலவைக் கண்டு வருந்துவராதலின் வெண்மையான பிற பொருள்களையும் கண்டு அஞ்சுவாராயினர்.
52. கிள்ளை - குதிரை, கிளி. கிற்பாய் - வன்மையுடையாய். (பி - ம்.) கிர்ச்சிப்பாய், கிற்கிற்பாய்.
53. உடைமாதர் - உடைந்த மகளிர். சுகவடிவு - கிளியாகிய வடிவு, இன்பவடிவு.
54. தத்தை - கிளியை, ஆபத்தை. (பி-ம்.) தத்தையடையென்று.
55. மா ரதி - திருமகளுக்கும் ரதிதேவிக்கும். பாரதியார்க்கு - கலைமகளுக்கு. உவமை உயர்ந்ததென்பது கருத்து ; " உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை " (தொல். உவம். 3)
-----------
-
நெய்யிற்கை யிட்டாலு நீதான் பசுமையென்றே
கையிட்டுச் சுத்தீ கரிக்கலாம்-மெய்யின்
வடிவும் வளைந்த மணிமூக்கு மாயன்
கொடியி லிருப்பவர்தங் கூறோ-நெடியமால்
விண்டுதறித் தூது வேணுகா னத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ- கொண்ட சிற
கல்லிலங்கு மெய்யானை யன்றழித்து வீடணன் போய்த்
தொல்லிலங்கை கட்டுபுதுத் தோரணமோ நல்வாய்
மழலை மொழிதான் மணிவண்ணன் செங்கைக் 60
குழலி னிசைதானோ கூறாய்- அழகுக்
கிளிப்பிள்ளாய் தெள்ளமுதக் கிள்ளாய் நலங்குக்
குளிப்பிள்ளா யின்பரசக் குஞ்சே - வளிப்பிள்ளை
தன்னைத்தாய் போலெடுத்துச் சஞ்சரிக்குஞ் சம்பத்தாய்
பின்னைத்தாய் கையிலுறை பெண்டத் தாய்-பொன்னொத்தாய்
முத்தி நக ரேழிலொன்றே முத்தமிழ்வல் லாறிலொன்றாய்
ஒத்ததனித் தவ்வரிப்பே ருற்றதொன்றே –சுத்தமுறும்
56. பசுமையென்றது கிளிப்பச்சை யென்ற ஒருவகை ரத்தினத்தை நினைந்து. கையிட்டு - கையைச் செலுத்தி, கையறைந்து.
57. கொடியிலிருப்பவர் - கருடாழ்வார்.
58. விண்டு - மூங்கிலை. தறித்து - வெட்டி. வேணு - புல்லாங்குழல். சிறகு, தழைத்த பசுந்தழையோ. சிறகு : இடைநிலைத் தீவகம். (பி - ம்.) தனித் தூதும்.
59. மெய்யான் - இராவணன். கிளி தோரணத்திற்கு உவமை ; "மாடத்துப் பறக்குமொண் கிளியொ ழுங்கின், இலைசெரு கியப சும்பூந் தோரண மிசைய வார்த்தார் " (பிரபு. சூனிய. இருந்த. 9) (பி - ம்.) 58-9, கொண்டனிருத்தல் விலங்கு.
60. மணிவண்ணன் - நீலமணி போன்ற நிறத்தையுடைய கண்ண பிரான்.
61. நலங்கு குளிப்பிள்ளாய் - நலங்கு குளித்தலையுடைய பிள்ளாய்; "நலங் காட்டுவேன் பட்டாடை யாற்றுடைப்பேன்" என்பர் பின் ; 195. வளிப்பிள்ளை - தென்றற்காற்று.
(பி - ம்.) கிள்ளாய் நலுங்கு ; குளிப்புள்ளாய்.
62. தாய்போலெடுத்துச் சஞ்சரிக்குமென்றது குதிரையாக இருந்து வளிப்பிள்ளையைத் தாங்கிச் செல்லுதலை நினைந்து. பின்னைத்தாய் - திரு மகள் ; நப்பின்னையுமாம். பொன் - கிளிச்சிறையென்னும் பொன். (பி - ம்.) பேதைத்தாய்.
63. முத்தி நகர் ஏழில் ஒன்று அவந்தி. வல்லாறில் - வல்லெழுத்து ஆறில் ; தவ்வரிப்பேர் உற்றது ஒன்று : தத்தை. அவந்தி யென்பதும் தத்தை யென்பதும் கிளியின் பெயர்கள்.
-----------
-
ஐந்து பூதத்திலொன்றே யானபடை நான்கிலொன்றே
முந்து முத லானபொருள் மூன்றிலொன்றே- வந்த
இருபயனி லொன்றே யிமையே விழியே 65
பருவ விழியிலுறை பாவாய் – ஒருநாரில்
ஏற்றுந் திருமாலை யெய்தப்போ யூரெல்லாம்
தூற்றுமலர் கொண்ட கதை சொல்லக்கேள் – தோற்றி
அழகர் சிறப்பு
அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகிப்
பெரியதொரு தூணிற் பிறந்து-கரிய
வரைத்தடந் தோளவுணன் வன்காயங் கூட்டி
அரைத்திடுஞ் சேனை யருந்தி - உருத்திரனாய்ப்
பண்ணுந் தொழிலைப் பகைத்து நிலக் காப்புமணிந்
துண்ணும் படியெல்லா முண்டருளி-வெண்ணெயுடன்
பூதனை தந்த பால் போதாம் லேபசித்து 70
வேதனையும் பெற்று வெளிநின்று-பாதவத்தைத்
64. ஐந்து பூதத்தில் ஒன்று : வன்னி (நெருப்பு). படை நான்கிலொன்று : குதிரை. குதிரைக்குக் கிள்ளையென்று ஒரு பெயர் உண்டு. முதலான பொருள் மூன்றில் - திரிமூர்த்திகளில் ஒன்று என்றது அரி யென்னும் பெயரை. வன்னி, கிள்ளை, அரியென்பன கிளியின் பெயர்கள்.
65. இருபயன் - சுகம், துக்கம் ; ஒன்று : சுகம் ; அது கிளிக்கும் பெயர். நார் - அன்பு, பூத்தொடுக்கும் நார். (பி - ம்.) இமையாவிழியே.
66. திருமாலை- அழகரை, அழகிய மாலையை. அலர் - பூ. பழிமொழி.
65-6. ஒரு நாளில் தொடுத்த பூமாலையை அடையப்போய் மலரை மாத்திரம் கொண்டேனென்பது வேறு பொருள்.
67. அரி - சிங்கம். அரன் - சிவன். நரன்வடிவுமாகியெனப் பிரித்து, நரனென்னும் அவதாரம் செய்தென்று கொள்ளுதலுமாம். இக்கண்ணி நரசிங்காவதாரத்தைச் சுட்டியது.
68. அவுணன் - இரணியன். காயம் - உடம்பு, உணவுப் பொரு ளோடு சேர்க்கும் பலவகைப் பொடி ; இது மசாலையென வழங்கும் ; "உப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் " (நாலடி. 116). சேனைசைனியத்தை, சேனைக்கிழங்கை. உருத்திரனாய் - நிலைபெற்ற வடிவை யுடையவனாகி, உருத்திரனென்னும் கடவுளாகி.
(பி - ம்.) சேநெயருந்தி.
69. பண்ணும் தொழில் - காத்தற்றொழில். நிலக்காப்பு - மண்ணைக் குழைத்திட்ட பொட்டு, நிலத்தைக் காத்தல். குழந்தைகளுக்கு மண் பொட்டிடுதல் மரபு ; "மண்பொட் டணிந்து நீறிட்டு " (பிரபு. மாயை யுற்பத்தி. 46). உண்ணும் உலகங்களை யெல்லாம் உண்டு; படி - உலகம், படியால் அளக்கப்படும் அரிசியால் ஆகிய பிரசாதம் ; "குளப்படி நெய் யடிசிற் கொத்ததோ" (திருவரங்கத். 89)
70. வேதனை - துன்பத்தை, பிரமதேவனை. பாதவத்தை மரங்களை.
------------
-
தள்ளுநடை யிட்டுத் தவழ்ந்து விளையாடும் 71
பிள்ளைமை நீங்காத பெற்றியான்-ஒள்ளிழையார்
கொல்லைப்பெண் ணைக்குதிரை யாக்குந் திருப்புயத்தான்
கல்லைப்பெண் ணாக்குமலர்க் காலினான்-சொல்கவிக்குப்
பார முதுகடைந்த பாயலான் விண்ணவர்க்கா
ஆர முதுகடைந்த வங்கையான்- நாரியுடன்
வன்கா னகங்கடந்த வாட்டத்தான் வேட்டுவற்கு
மென்கா னகங்கடந்த வீட்டினான் - என் காதல்
வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன் மிதந்தோன் 75
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான் - தெள்ளிதின்
வெட்ட வெறுவெளியி லேநின்றுந் தோற்றாதான்
கிட்ட விருந்துங் கிடையாதான்- தட்டாதென்
எண்ணிலே மாய னெனும்பேரி னாலொளிப்போன்
கண்ண னெனும் பெயராற் காண்பிப்போன்- எண்ணுங்கால்
71. ஒள்ளிழையார் - ஒள்ளிய ஆபரணத்தை யணிந்த மகளிர் .
72. கொல்லையிலுள்ள பனைமரத்தாலாகிய குதிரையாக்குதற்குக் காரணமான ; மகளிர் மடலேறுதல், திவ்யப்பிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல் முதலியவற்றால் அறியப்படும். புயவழகைக் கண்டு மகளிர் மடலேறுவாரென்பது கருத்து. பெண் -'அகலிகை. கவிக்கு - திருமழிசை யாழ்வார் மாணாக்கரான கணிகண்ணர் பொருட்டு.
73. முதுகு அடைந்த பாயலான் : அரவப், பாயலைத் தோளில் எடுத்துத் தூக்கிக் கணிகண்ணர்க்குப் பின்னே சென்றாரென்னும் பழைய வரலாறு இங்கே அறியத்தக்கது ; 'பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப் பணைத்தோ ளெருத்தலைப்பப், பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே " (மீனாட்சி. பிள்ளைத். காப்பு. 1). ஆர் அமுதுகடைந்த - அரிய அமுதத் தைக் கடைந்த; "கடல் கடைந் தமுதங் கொண்ட, அண்ணலை" (திருவாய். 3. 4: 9). நாரியுடன் - சீதாபிராட்டியோடு.
74. வன் கானகம் கடந்த - வலிய தண்டகாரணியத்தைக் கடந்து சென்ற. வேட்டுவற்கு - சரனென்னும் வேடனுக்கு. மென் கால் நகங்கள் தந்த - மெல்லிய கால் நகங்களைத் தந்த. கண்ணபிரானுடைய காலை மானாக நினைந்து சரத்தை எய்து, பின் கண்ணபிரானது பாதமென்று அறிந்து வருந்திய அவனுக்கு வீட்டையும் அளித்தனரென்பதை வீட்டினா னென்பதனால் உடம்படு புணர்த்தினார் ; இந்த வரலாறு பாகவதம், 11-ஆம் கந்தம் தன்னுடைச் சோதிக்கெழுந்தருளிய அத்தியாயம், 28-ஆம் செய்யுள் முதலியவற்றால் அறியப்படும்.
75. முதலடியில் முரண் அமைந்துள்ளது.
77. மாயன் - கரிய நிறமுடையவன், மாயையை யுடையவன். கண்ணன் - எல்லார் கண்ணிலும் உள்ளவன்; " வீதிவாய்ச் செல்கின்றான்போல் விழித்திமை யாது நின்ற, மாதரார் கண்க ளூடே வாவுமான் றேரிற் செல்வான், யாதினு முயர்ந்தோர் தன்னை யாவர்க்குங் கண்ண னென்றே, ஒதிய பெயர்க்குத் தானே யுறுபொரு ளுணர்த்தி விட்டான்" (கம்ப. உலாவியற். 6) என்பதிலும் இச்சொல் இப்பொருளில் அமைக்கப் பட்டுள்ளது. (பி - ம்.) நண்ணுங்கால்.
-------------
-
எங்கு மிலாதிருந்தே யெங்கு நிறைந்திருப்போன்
எங்கு நிறைந்திருந்தே யெங்குமிலான் - அங்கறியும்
என்னை யெனக்கொளத்தி யானென்றுங் காணாத
தன்னை யெனக்கருளுந் தம்பிரான்-முன்னைவினை
கொன்று மலமாயைக் கூட்டங் குலைத்தென்னை 80
என்றுந் தனியே யிருத்துவோன்- துன்றுபிர
மாவுநான் மன்னுயிரு நானவ் விருவரையும்
ஏவுவான் றானு நா னென்றுணர்த்தக்-கோவலர்பால்
ஆனுமா யான்கன்று மாகி யவற்றை மேய்ப்
பானுமாய் நின்ற பரஞ்சோதி-மா நரகப்
பேரிரு ணீக்கப் பெருந்தவம்வேண் டாவுடலில்
ஆருயிர் கூட்ட வயன் வேண்டா - பாருமெனச்
சங்கத் தொனியுந் தடங்குழ லோசையெனும்
துங்கத் தொனியுந் தொனிப்பிப்போன்- பொங்குமலை
மோதும் பரனாதி மூல மிவனென்றே 85
ஓதுங் கரியொன் றுடையமால் - மூதுலகைத்
தந்திடுவோ னுந்துடைப்போன் றானு நா னென்று திரு
உந்தியால் வாயா லுரைத்திடுவோன்- பைந்தமிழால்
81. கோவலர்பால் - இடையரிடத்தில். 80-81. பிரமாவும் நான்.
82. பிரமன் ஆன்கன்றுகளையும் சிறார்களையும் கவர்ந்து ஒளித்து வைத்த பொழுது கண்ணபிரான் அப்பொருள்களாக இருந்தன ரென்பது, பாகவதம், மலரவன் சிறார்க்கன்று கவர்ந்த அத்தியாயத்தால் அறியப்படும்.
83-4. துரியோதனனைச் சேர்ந்தவர்கள் தீ து செய்தவராயினும், கண்ணபிரானது சங்கத்தொனியைக் கேட்டமையின் நரகம் புகாராயி னார் ; ஆதலின் நரகப்பேரிருள் நீக்கச் சங்கத்தொனி தொனிப்பிப்போன் என்றார். வேய்ங்குழலோசையால் பட்டுப்போன மரங்கள் தளிர்த்தன வாதலின், ' உடலில் ஆருயிர் கூட்ட வயன்வேண்டா ' என்றும், 'குழ லோசை.............. தொனிப்பிப்போன்' என்றும் கூறினார். அலை - திருப் பாற்கடல்.
(பி - ம்.) தொனியாய்த் தொனிப்பிப்போன்.
85. கரி - கசேந்திரனென்னும் யானை, சாட்சி.
86. உந்தி - நாபி; இது தன்பால் பிரமனைத் தோற்றி உலகைச் சிருட்டிப்பது. பிரளயகாலத்தில் உலகத்தை உண்டமையால் வாய் அழித்தற்கு உரியது ; " உலக முண்ட பெருவாயா" (திருவாய். 6:10:1)
-------------
-
ஆதிமறை நான்கையுநா லாயிரத்து நற்கவியா
ஓதும் பதினொருவ ருள்ளத்தான்-பாதமெனும்
செந்தா மரைமலரிற் சிந்திய தேன்போல
மந்தா கினிவழியும் வண்மையான்-சந்ததமும்
ஆன்ற வுலக மறிவுமறி யாமையுமாத்
தோன்றத் துயிலாத் துயில்கொள்வோன்-ஈன்றவளைத்
தெள்ளு மணிவாயிற் காட்டிச் செகம் புறமும் 90
உள்ளு மிருப்ப துணர்வித்தோன்-கொள்ளைக்
கவற்சிதரு சென்மக் கடலிற் கலந்த
அவிச்சையுவர் வாங்கமுகி லானோன் - நிவப்பா
மடங்கும் பரசமய வாத நதிவந்
தடங்கக் கருங்கடலு மானோன்-உடம்பிற்
புணர்க்க வொருகிரணம் போலுமெனை யுங்கொண்
டணைக்க மணிநிறமு மானோன் - பணைக்கும்
விசைப்பூ தலவூசன் மீதிலிருப் போனும்
அசைப்போனுந் தானாகு மண்ணல்-இசைத்திசைத்
மீன்பிடிக்கும் வேட ரொருபார்வை யானூறு 95
மான்பிடிக் கின்ற வகையென்னத்-தான்படைத்த
87. பதினொருவர் - ஆழ்வார்கள் பன்னிருவருள் மதுரகவி யொழிந்த மற்றையோர்.
88. திரிவிக்கிரமாவதாரகாலத்தில் வலக்காலை மேலே தூக்கிய போது கங்கை வழிந்ததென்பர். மந்தாகினி : வளைந்து செல்வ தென்பது இதன் அவயவப் பொருள்.
89. துயிலாத் துயில் - அறிதுயில். ஈன்றவளை - யசோதையை.
90. கொள்ளை - மிகுதி. (பி - ம்.) இருப்ப வுணர்வித்தோன்.
89-90. ஈன்றவளை உணர்வித்தோனென இயைக்க.
91. அவிச்சையுவர் - அஞ்ஞானமாகிய உப்பை. உவரை நீக்கி நீரைக் கொள்வது முகிலின் இயல்பு; முகில் - மேகம். நிவப்பா - உயர் வாக.
92. கடலுக்கு நதிபதியென்று ஒரு பெயருமுண்டு. 91-2. (பி - ம்.) நிவப்பா மடங்காப்.
93. நீலமணி ஏனை நிறங்களைத் தனக்குள்ளே அடக்கிக்கொள்ளும் இயல்புடையது.
95. பார்வை - பார்வைமிருகம் ; மிருகங்களைப் பிடிப்பதற்காக வேடர்கள் வளர்க்கும் மிருகங்கள் அல்லது அவற்றைப் போல மண்ணாற் செய்த வடிவங்கள் ; இவை தீபகமென்றும் சொல்லப்படும்.
-----------
-
என் பிறவி யெண்பத்து நான்குநூ றாயிரமும் 96
தன்பிறவி பத்தாற் றணித்திடுவோன் - முன்பு புகழ்ந்
தசாங்கங்கள்
(மலை)
தேத்திருவர் நீங்கா திருக்கையா லேகேச
வாத்திரி யென்னு மணிபெற்றுக்-கோத்திரமாம்
வெங்காத் திரஞ்சேர் விலங்குகளை மாய்த்திடலாம்
சிங்காத் திரியென்னுஞ் சீர்மருவி - எங்கோமான்
மேய்த்த நிரைபோல வெற்புகளெல் லாஞ்சூழ
வாய்த்த நிரையிலொரு மால் விடையாய்ப் பார்த்திடலால்
இன்னிய மார்க்கு மிடபகிரி யென்னும்பேர் 100
மன்னிய சோலை மலையினான்-எந்நாளும்
(நதி)
பொற்சிலம்பி லோடுஞ்சாம் பூந்தபோன் மாணிக்க
நற்சிலம்பி லோடு நதியாகிக்-கற்சிலம்பில்
96. பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமென்பது எண்பத்து நான்கு லட்சம் பிறப்பின் பேதங்களை. பிறவி பத்து - தசாவதாரம் ; தாம் அவதாரம் எடுத்தமையால் அவற்றைத் தியானிக்க என் பிறவி தீர்ந்த தென்பது கருத்து.
97. இருவர் - பிரமதேவரும் உருத்திரரும். கேசவாத்திரி - அழகர் மலையின் திருநாமங்களுள் ஒன்று.
98. காத்திரம் சேர் விலங்குகளை - உடம்பை அடைகின்ற பிறவி களாகிய தளைகளை, முன்காலைச் சேர்ந்த மிருகங்களாகிய யானைகளை ; சிலேடை. காத்திரம் - யானையின் முன்கால். சிங்காத்திரி : இம்மலையின் திரு நாமம். எம்கோமான் - கண்ணபிரான்.
99. கீழேயிருக்கும் சிறு குன்றுகளுக்குப் பசு நிரையும், அழகர் மலைக்கு இடபமும் உவமை. தருமதேவதை இடபவடிவங்கொண்டு இங்கே தவஞ் செய்து வழிபட்டுப் பேறுபெற்றமையின் இடபகிரி யென்ற பெயர் உண்டாயிற்றென்பர்.
100. இனிமை இயம் - இனிய வாத்தியங்கள் ;
"முன்றி லதிர்மும் முரசினான்' என்பர் பின் ; 122.
97-100. இக்கண்ணிகளால் அழகர் மலையின் திருநாமங்களாகிய கேசவாத்திரி, சிம்மாத்திரி, இடபமலை, சோலைமலை என்னும் திருநாமங் கள் பாராட்டப் பெற்றுள்ளன. (பி - ம்.) கிரியெனும்பேர்.
101. பொற்சிலம்பில் - மேருமலையில். சாம்பூந்தம்-மேருவின் தென் பால் ஓடும் ஓராறு ; நாவற்பழத்தின் சாறே ஆறாக ஓடுதலால் இந்நதம் சாம்பூ நதமெனப் பெயர் பெற்றது; நதம் - மேற்கு நோக்கி ஓடும் ஆறு. மாணிக்க நற்சிலம்பு - திருவடியில் அணியப் பெற்றுள்ள மாணிக்கப் பரலையுடைய சிலம்பென்னும் ஆபரணம். கற்சிலம்பில் - பலவகையான கல்மலைகளுக்கு இடையே .
------------
-
இந்திரன் போலு மிடபா சலமவன்மேல் 102
வந்தவிழி போலும் வளச்சுனைகள் - முந்து திரு
மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போல வருநூ புரநதியான் – சீலமுறு
(நாடு)
பன்னிரு செந்தமிழ்சேர் நாடுகளும் பார்மகட்கு
முன்னிருகை காது முலைமுகங்கால் - பின்னகங்கண்
காட்டு மவற்றுட் கனகவரை மீது புகழ் 105
தீட்டும் புன்னாடுந் தென்னாடும்- நாட்டமாம்
அந்நா டிரண்டி லருள்சேர் வலக்கணெனும்
நன்னாடாந் தென்பாண்டி நாட்டினான் – பொன்னுருவச்
(ஊர்)
சந்த்ரவடி வாஞ்சோமச் சந்திரவி மானத்தை
இந்திரவி மான மிதுவென்றும் - மந்த்ர விரு
துக்கொடி யேறு துசத்தம்பம் வல்லிசா 108
தக்கொடி யேறுகற்ப தாருவென்றும் - மிக்கோர்க்
102. சுனைகளுக்கு இந்திரன் விழிகள் உவமை.
103. முத்தாரம் தோளிலும் மார்பிலும் உள்ளன; நதிக்கு முத்தாரம் உவமை ; "மாயோன் மார்பி லாரம் போல, மணிவரை யிழிதரு மணி கிளரருவி" (தொல். செய். 35, பேர். மேற் ); "நதிக்குப் போத வொழுகு முத்தாரமும்" (தக்க. 280). நூபுரநதி - சிலம்பாறு ; "நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை" (சிலப். 11 : 108); "சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ் சோலை" (பெரியதிரு. 9. 9 : 9)
104. பன்னிரு செந்தமிழ் சேர் நாடுகள் - செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகள் ; "தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி, பன்றி யருவாவதன் வடக்கு-நன்றாய, சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர், ஏதமில் பன்னிரு நாட் டெண்" (நன். 272, மயிலை. மேற்.). பின்னகம் - பின்னல். கண் - கண்கள். கையிரண்டு, காதிரண்டு, நகிலிரண்டு, முகம், காலிரண்டு, பின்னல், கண்ணிரண்டு ஆகிய பன்னிரண்டு உறுப்புக்களும் பன்னிரு நாடுகளுக்கு உவமை.
(பி - ம்.) செந்தமிழ் நாடுகளும் ; வின்னகங்கண்.
105. கனகவரை - மேருமலை. புனல் நாடு - சோழ நாடு. தென்னாடுபாண்டி நாடு. நாட்டம் ஆம் - கண்கள் ஆகும். (பி-ம்.) காட்டு மவற்றுக் கனக.
107. சோமச்சந்திர விமானம் : இஃது அழகருடைய விமானத்தின் திருநாமம். தருமதேவதையின் கட்டளைப்படி விசுவகருமா சந்திர மண்டலத்தைப்போல அமைத்தமையால் இப்பெயர் பெற்றது ; இது சோமச்சந்த விமானமென்றும் வழங்கும் ; " வந்த விமானத்தமரர் மலர் தூவிப் பணிசோமச், சந்தவிமா னத்தமருஞ் செளந்தரிய பரஞ்சோதி 1) (அழகர் கலம். 1)
107-8. விருதுக்கொடி - வெற்றிக்கொடி. துசத்தம்பம் - துவசத்தம் பம். வல்லிசாதக்கொடி - கற்பகமரத்திற் படரும் காமவல்லி.
----------
-
கொருவாழ்வா னோனை யுபேந்திரனே யென்றும்
திருமாலை யாண்டானைத் தேவ-குருவென்றும்
நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை 110
விண்ணவர்கோ னாதி விபுதரென்றும் – எண்ணுதலால்
ஆர்பதி யான வமரா பதிபோலும்
சீர்பதி யான திருப்பதியான்-மார்பிடத்தில்
(மாலை)
எண்ணுங் கலனிறத்தோ டிந்திரவிற் போற்பசந்த
வண்ணந் தருந்துளப மாலையான் –உண்ணின்
(யானை)
துருக்கும் வயிணவமா மோங்குமதம் பொங்கத்
திருக்கொம்பு தான்றுதிக்கை சேர - நெருக்கிய
109. ஒரு வாழ்வானோனென்றது அழகரை. திருமாலையாண்டான் - உடையவருடைய குரு ; இவருடைய விக்கிரகம் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியின் பக்கத்தே இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸுப்ர பாதபடனம், புஷ்பாஞ்சலி முதலியன இவர் சொல்லா நிற்ப அர்ச்சகர் செய்யவேண்டும். திவ்யப்ரபந்த சேவையும் உண்டு. இவருடைய சந்ததியார் பெருமாள் எழுந்தருளும்பொழுது முன்னே பல்லக்கில் வருவார்கள். திரியெடுத்தாடுதல் முதலியவற்றில் இவர்களுக்குக் காணிக்கை யுண்டு. இவர்களைச் சேவித்தபின் அடியார்கள் பெருமாளைச் சேவிப் பார்கள்.
(பி - ம்.) ஒருவாழ்வானோனே.
110. நம்பி - திருமலை நம்பி; இவர் கைங்கரிய பரர் ; பட்டைக் கைங் கரியமென்று பெயர்; இக்கைங்கரியம் தர்ப்பம், கூர்ச்சம், பவித்ரம் முதலியன கொடுத்துப் புண்யாஹவா-சனாதிகள் செய்து வைக்கும் பௌரோகித சம்பந்தமானது. இவர் பரம்பரையார் இன்றும் இங்கேயே இருந்து கைங்கரியஞ் செய்து வருகிறார்கள். விபுதர் - தேவர்.
(பி - ம்.) நம்பி முதலோர்கள்.
111. ஆர் பதி - நிறைந்த ஊர். சீர்பதி-ஸ்ரீபதி ; இஃது இம்மலைக்கு உரிய ஒரு திருநாமம்.
112. கலன் - ஆபரணங்கள். மற்ற ஆபரணங்களோடு சேர்ந்துள்ள துளபமாலைக்கு இந்திரவில் உவமை.
(பி - ம்.) கலனிறத்தால், கலைநிறம்போ லிந்திரவிற்.
113. மதம் - சமயம், யானையின் மதம். திருக்கொம்பு – திருமகளாகிய பூங்கொம்பு, அழகிய யானைக்கொம்பு. துதிக்கை - துதித்தல், யானை யின் துதிக்கை .
--------------
-
பாகமொத்த வைகான் தம் பாஞ்ச ராத்திரமாம் 114
ஆகமத்தி னோசைமணி யார்ப்பெடுப்ப-மோகமறு
மட்டும் பிணிக்கும் வடகலையுந் தென்கலையும்
கட்டும் புரசைக் கயிறாக- விட்டுவிடா
வானந்த மான மலர்த்தாள்கண் டத்துவி
தானந்த மென்றகளி யானையான் – தானந்த
(குதிரை)
வர்க்கத் துடனெழுந்து வாயி னுரைகடந்து
கற்கி வடிவுநலங் காண்பித்துச் சொர்க்கத்தில்
ஏறுங் கதிகாட்டி யெய்து மணுத்தோற்றி
வீறும் பலகலையும் வென்றோடி - ஆறங்கம்
சாற்றிய தன்னங்க மாய்க்கொண்டு தாரணியிற்
போற்றிய வேதப் புரவியான் – பாற்கடலிற்
(கொடி)
புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும் 120
சக்கரமும் போலத் தலைசுழன்று – தொக்கவிசை
114. வைகானதம், பாஞ்சராத்திரம் : வைஷ்ணவ ஆகமங்களின் பெயர்கள். (பி - ம்.) மோகமுறும்.
115. வடகலை, தென்கலை - வைணவ மதத்தின் உட்பிரிவுகள். புரசைக் கயிறு - யானையின் கழுத்திற் கட்டும் கயிறு. (பி - ம்.) விட்டுவட.
116. வான் அந்தம் ஆன.
(பி - ம்.) மானம் வரத்தாள் கண்டு ; தாள்கணடத்து செவிக், கானந்தம்.
117-9. வேதத்துக்கும் குதிரைக்கும் சிலேடை.
117. வர்க்கம் - எழுத்தின் வர்க்கம், சேணம். வாயின் உரைகடந்துமனிதர் வாயின் உரையைக் கடந்து, வாயில் நுரைகள் தந்தென்பது மற் றொரு பொருள். கற்கிவடிவு - கோயிலின் வடிவு. குதிரையின் வடிவு; கற்கி - கோயில் ; "கற்கிளர் கற்கி செய்தோன்" (சேது. இராமநாத. 43)
118. அணு - துளி, உயிர் தோற்றி - வெளிப்படச் செய்து. கலை - நூல்கள், மான்கள். ஆறு அங்கம் - வேதாங்கம் ஆறு, ஆறுவகை உறுப்புக்கள்.
120. மந்திரத்திற்குப் பம்பரமும், பூமிக்குச் சக்கரமும் உவமைகள். விசை - வேகம்.
(பி - ம்.) பூமியு மம்பரமும்.
-------------
-
வற்றும் பொழுதுவிழ வாசுகியைச் சேடனைப் 121
பற்றுங் கருடப் பதாகையான் – சுற்றியதன்
(முரசு )
குன்றிலரி யுங்கரியுங் கொண்மூவு நின்றதிர
முன்றி லதிர்மும் முரசினான் – என்றும்
(ஆணை )
அவனசை யாம லஹிவசையாதென்னும்
தவநிலை யாணை தரித்தோன் - நவநீதம்
மேனியிற் சிந்தியது மென்கையி லேந்தியதும்
வானி லுடுவு மதியுமெனத் - தானுண்டோன்
செங்கதிரும் வெண்கதிரு மென்னத் திருவிழியும் 125
சங்கமுஞ் சக்கரமுந் தாங்கினோன் - அங்கணுல
குண்டகனி வாயா னுறையுந் திருவயிற்றான்
கொண்ட படியீன்ற கொப்பூழான் – மண்டி
அளந்த திருத்தாளா னன்றேற்ற கையான்
விளைந்த பொருள் காட்டு மெய்யான்-உளங்கொண்
121. கருடப்பதாகை - கருடக்கொடி : பதாகை - பெருங்கொடி. (பி-ம்.) பொழுதுவிடா, வாசுகியுஞ் சேடனையும்.
122. அரி - சிங்கம். கரி - யானை. கொண்மூ - மேகம். மும்முரசு - நியாய முரசு, தியாக முரசு. வீர முரசு (புறநா. 58 : 12, உரை)
123. "அவனன்றி யோரணுவு மசையாது" (தாயுமான. எங்கு நிறைகின்ற. 1). நவநீதம் - வெண்ணெய்.
124. உடு - நட்சத்திரம். மதி - சந்திரன்.
1234. மேனியிற் சிந்திய வெண்ணெயின் சிறிய பிதிர்களுக்கு நட்சத்திரமும், கையில் எடுத்த பெரிய உருண்டைகளுக்கு மதியும் உவமைகள்.
125. திங்கள் இடக்கண்ணும் சங்கும், சூரியன் வலக்கண்ணும் சக்கரமும் ஆகும்.
(பி - ம்.) செங்கதிர் வெண்கதிர் நா லென்னத். வெண்கதிர் நாளென்னத்.
125-6. உலகு உறையும் என இயைக்க. கொண்டபடி - உட் கொண்டபடி. கொப்பூழ் - திருவுந்தி. (பி - ம்.) ஈன்ற கொப்புளான்.
127. பூமியை அளந்ததும் அதனை ஏற்றதும் வாமனாவதாரத்தில். விளைந்த பொருள் - பச்சைப்பயிர்.
------------
-
டிடந்த மருப்பினா னேந்து முதுகான் 128
படந்தனில் வைத்தமணிப் பாயான் - தொடர்ந்த வினை
முட்டறுக்குந் தன்னாம முன்னித் திருநாமம்
இட்டவருக் கீவோ னிகபரங்கள் - எட்டெழுத்தாற்
பிஞ்செழுத்தாய் நையும் பிரம் லிபியெனும்பேர் 130
அஞ்செழுத்தை மூன்றெழுத்த தாக்குவோன் - வஞ்சமறத்
தங்கள் குன் றெங்கிருந்துஞ் சங்கர னாதியோர்
நங்கள் குன்றி தென்னவரு நண்புடையோன் - அங்கோர்
வயமுனிக்குக் கண்ணிரண்டு மாற்றினோன் போற்றும்
கயமுனிக்குக் கண் கொடுத்த கண்ணன் – நயமுரைக்கின்
128. இடந்த - பெயர்த்த; இது வராகாவதாரத்தில். முதுகிலேந்தி யது கூர்மாவதாரத்தில் பாய் - ஆதிசேடன்.
126-8. " கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக், கிடந் திடுந் தன்னுட் கரக்கு முமிழும், தடம் பெருந்தோ ளாரத் தழுவும் பாரென்னும், மடந்தையை மால் செய்கின்ற மாலார் காண்பாரே", " உண்டு முமிழ்ந்துங் கடந்து மிடந்துங் கிடந்து நின்றும், கொண்ட கோலத்தோடு வீற்றிருந்துமணங் கூடியும், கண்டவாற்றாற் றனதே யுலகென நின்றான்" (திருவாய். 2, 8:7, 4.5: 10)
129. முட்டு - தடை. தன் நாமம் முன்னி - தன் திருநாமங்களைத் தியானித்து. திருநாமம் இட்டவருக்கு - திருமண்குறிகளை இட்ட அடி யார்களுக்கு ;
"மணிவாசற் றூங்க வொரு குடைக் கீழ்வையங் காத்துச் சிந்தா,
மணிவா சவனென வாழ்ந்திருப் போர்பின்னை மாதிருக்கும்,
மணி வாச மார்பரங் காகேச வாவென்று வாழ்த்தித்திரு,
மணிவாசகங்கொண் பணிவா ரடியை வணங்கினரே" (திருவரங்கத். 72);
"ஈராறு நாம் முரை செய்து மண் கொண் டிடுவார்கள் காணு மிமையோர் (வி. பா. 9-ஆம் போர்ச். 1). எட்டெழுத்து - அஷ்டாக்ஷரம்.
130. பிஞ்சு எழுத்தாய் - சிறிய எழுத்தாய் : பிஞ்சு எழுத்து எனப் பிரித்து, பிய்ந்த எழுத்து எனினுமாம். பிரமலிபி : ஐந்தெழுத்தாலாகி யது ; அஞ்சு எழுத்து - யாவரும் அஞ்சுதற்குரிய எழுத்தெனினுமாம். மூன்று எழுத்தது - மூன்று எழுத்தையுடைய இல்லையென்னுஞ் சொல் ; "போதனார் நெட்டெழுத்து நமனா ரிட்ட குற்றெழுத்தும் புனலெழுத் தாய்ப்போக" (சீரங்க. ஊசல். 16)
(பி- ம்.) எழுத்தா னையும் ; அஞ்செழுத்து ; அஞ்சலியாத்.
131. (பி-ம்.) தங்கள் குன் றத்திருந்தும்; நங்கள் குன்றென்றுவரு.
132. வயமுனி - பச்சைவாரண தாசர்; இவர் திருக்கச்சி நம்பி முன் னோர்களுள் ஒருவர்; பச்சைவாரணப் பெருமாள் கோயிலில் வழிபட்டவர். இவருக்கு ஹஸ்திகிரியில் கண்ணைப் போக்கினதாகவும், அழகர் மலையில் கண்ணைக் கொடுத்ததாகவும் வரதராஜ ஸ்தவத்தில் கூரத்தாழ்வார் கூறி யிருப்பதாகப் பெரியோர் கூறுவர். கயமுனி – யானைக் கன்று; இதற்குக் 'கண் கொடுத்தது, "வளிநான்ற மணிமுறத் தழைசெவிச் சிறுகவுளில் வண்டோ டிரண்டு பாடும் மழைபாய் கடாக்கரிக் கண் கொடுத்தும் 11 (அழகர் பிள்ளைத். அம்புலிப். 4) என்பதிலும் கூறப்பட்டுள்ளது.
-----------------
-
அஞ்சுபடை யோனெனினு மஞ்சாம் லங்கையில்வா
சஞ்செய்யு முத்யோகச் சக்கரத்தான் – எஞ்சாது
விண்ணிலங்கொள் பொன்னிலங்கை வெற்றியாய்க் கொண்டாலும்
மண்ணிலங்கைத் தானமாய் வாங்குவோன் - பண்ணிலங்கும்
ஏரணி பொன்னரங்கத் தெம்பிரான் போலெவர்க்கும் 135
தாரணி நல்காத தம்பிரான் - காரணியும்
செங்கைத் தலத்திடத்துந் தென்மதுரை யூரிடத்தும்
சங்கத் தழகனெனுந் தம்பிரான் - எங்கும்
திருப்பாது கைக்குஞ் செழுங்கருட னுக்கும்
திருப்பாது கைக்குமர சீந்தோன் - விருப்பமுகம்
சந்திர னான சவுந்தர வல்லியுடன்
சுந்தர ராசனெனத் தோன்றினோன் - அந்தம்
சொல நலங்கொ டோளழகாற் சுந்தரத் தோளன்
மலையலங் காரனென வந்தோன் – பலவிதமாய்
133. அஞ்சுபடை - பஞ்சாயுதம், அஞ்சுகின்ற படை. உத்தியோகச் சக்கரம் : உத்தியோகச் சக்கரம், பிரயோகச் சக்கரமெனச் சக்கராயுதம் இருவகைப்படும்; அவற்றுள் இயல்பாக உள்ளது உத்தியோகச் சக்கரம்.
134. பொன் இலங்கை - பொன்மயமான இலங்கை நகரத்தை. மண் நிலத்தை. கைத்தானமாய் வாங்குவோன் - மகாபலியினிடத்தே தானமாய்க் கையில் வாங்குவோன்.
135. அரங்கத் தெம்பிரான் - ஸ்ரீரங்க நாதர். ஸ்ரீரங்கநாதர் நாச்சி யார் பலருக்கு மாலையை அளிப்பவர் ; அழகர் ஆண்டாளுக்கு மட்டும் மாலை அளிப்பவராதலின் இங்ஙனம் கூறினார். தாரணி – மாலையாகிய ஆபரணத்தை. கார் அணியும் - கொடையால் மேகத்தை ஒத்த. (பி- ம்.) நல்காத தண்மையான் ; சீரணியும்.
136. இடச்செங்கையில் சங்கமென்னும் ஆயுதத்தையுடைய அழகர் ; தென்மதுரையூரிடத்தில் தமிழ்ச்சங்கத்திலுள்ள அழகர் ; "சுத்தத் தமிழ்ப் புலவர், சங்கத் திருப்பிரியான் சார்பு " (அழகர் கலம். 68)
137. திருப்பாது உகைக்கும் - பின்வாங்காமல் செலுத்துகின்ற. கருடன் - கருடாழ்வான் ; கருடனுக்கு அரசீந்தது, பறவைகளுக்கு அரசாக்கியது. திருப்பாதுகை - திருவடி நிலை ; அதற்கு அரசீந்தது இராமாவதாரத்தில். (பி - ம்.) அரசீய்ந்தோன்.
138. சவுந்தரவல்லி - இத்தலத்து நாச்சியார் திருநாமம். அந்தம் - அழகு.
139. தோள் அழகால் - தோளாலும் அழகாலும். தோளால் சுந்தரத் தோளனென்றும், அழகால் மலையலங்காரனென்றும் திருநாமங்கள் உண்டாயின.
(பி - ம்.) சொல நலங்கொளழகாற் ; தோளழகர்.
------------
-
வழிபட்டோர்
நண்ணியதெய் வத்தை நரரெல்லாம் பூசித்த 140
புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன் - கண்ணனைய
பாத கமலம் பரவுமல யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன்-கோதில்
அரணாம் புயங்களுறு மம்பரீ டற்குச்
சரணாம் புயங்க டருவோன் – திருநாளில்
கோடைத் திருவிழா
சந்தக்கா வூடு தவழ்ந்துவருந் தென்றற்கால்
மந்தக்கா லாக மருவுங்காற் - சிந்திக்கும்
வாடைத் துளிபோன் மலர்த்தேன் றுளிதுளிக்கும்
கோடைத் திருவிழாக் கொண்டருளி- நீடுவிடைக்
குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற் 145
சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக்
கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்
ஏடலர் தாரா னெழுந்தருளி - ஆடலுடன்
140. புண்ணியம் - தருமதேவதை ; தருமதேவதை வழிபட்டதை, 99-ஆம் கண்ணியின் குறிப்புரையால் அறியலாம். கள் நனைய - தேனை யுடைய அரும்புகளையுடையன-வாகிய ; அரும்புகள், அன்பர்கள் இட்டவை.
141. பாத கமலம் பரவு - திருவடித்தாமரைகளை வணங்கிய . மலயத் துவசன் - மலயத்துவச பாண்டியன் ; இவன் இத்தலத்தில் கோயிற்றிருப் பணி முதலிய திருப்பணிகளையும் நித்தவிழா முதலியவற்றையும் செய் வித்துப் பேறுபெற்றவன்; இவ்வரலாறு இத்தலபுராணத்திலும் உள்ளது; "பதித்தமலை யத்துவச பாண்டியனை யாண்டனையே" (அழகர் கலம். 1). பாதகமாகிய மலத்தை . (பி - ம்.) மலையத்துவசன்.
142. அரணாம் புயங்கள் - தம்முடைய குடிகளுக்கு அரணாகிய தோள்கள் ; "அரண்டரு திரடோள் " (கம்ப. சடாயுவுயிர். 63). அம்பரீடன் : இத்தலத்தில் வழிபட்டுப் பேறுபெற்ற ஓரரசன். சரண அம்புயங்கள் - திருவடித்தாமரைகளை.
143. சந்தக்காவூடு - சந்தனச் சோலையினுள்ளே ; என்றது பொதி யின் மலையிலுள்ள சந்தனச் சோலையை. மந்தக்கால் ஆக - மந்தமாருத மாக ; தென்றலின் மூவகை நடையுள் மந்தம் ஒன்று.
144-5. விடைக் குன்று ; அழகர்மலை ; 99, பார்க்க. சீபதியோர் – அழகர் மலையிலுள்ளோர். (பி - ம்.) சென்றெதிர்த்துக்.
145-6. சீபதியோர் கூடுதலால் கூடலென்னும் பெயர் பெற்ற மது ரையில் ; இது பிரிநிலை நவிற்சியணி. தரரான் - அழகர்.
------------
-
கல்லா குளங்கள் கரையப் பணிவார்முன் 147
தல்லாகுளம்வந்து சார்ந்தருளி – மெல்ல
வையைக்கு எழுந்தருளுதல்
நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்று சிலர் பார்க்கச்- சுரலோகத்
திந்த்ர விமானமிது வென்று மிதுசோமச்
சந்த்ர விமானமே தானென்றும் - முந்தியவட்
டாங்க விமான மவையிரண்டு மென்னவே 150
தாங்கு விமானந் தனிற்புகுமுன் - தீங்கிலார்
உன்னி விமான முரத்தெடுக்கும் போதனந்தன் –
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த-தென்னவே
உம்பரில் வெய்யோ னுதயஞ் செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி- அம்பரத்திற்
147. கல் ஆகு உளங்கள் - கல்லைப் போன்ற மனங்கள். தல்லா குளம் - மண்டபப்படியுள்ள ஓர் ஊரின் பெயர் ; இது வையை நதிக்கு வடக்கே உள்ளது.
148. நரலோகமீது - பூமியின்மேல். சுரலோகத்து - தேவருலகத் தில் உள்ள.
149. சோமச்சந்திர விமானம் : இத்தலத்துள்ள கோயிலின் விமா னம் ; 107-ஆம் கண்ணியின் குறிப்பைப் பார்க்க.
149-50. அட்டாங்க விமானம் : எட்டு அங்கங்களையுடையது : அழ கருடைய சோமச்சந்திர விமானமும், கூடலழகருடைய விமானமும் இவ்வாறு கூறப்படுதலால், " அட்டாங்க விமான மவையிரண்டும் 11 என்றார். இதன் இலக்கணத்தை , அழகர் பிள்ளைத் தமிழ், முத்தப் பருவம், "மட்பாவை தோயும் " (7) என்னும் முதற் குறிப்புடைய செய் யுளால் அறிந்து கொள்ளலாம். தீங்கிலார் - விமானந் தாங்குவோர்.
(பி - ம்.) அவையிரண்டென்னவே.
151. உரத்து - வன்மைகொண்டு. அனந்தன் - ஆதிசேடனு டைய. சென்னிமணி - தலையிலுள்ள மணிகளுள்.
152. குதிரை நம்பிரான் - பெருமாளுடைய வாகனமான குதிரை ; உத்தம் இலக்கணம் அமைந்த குதிரையைக் குதிரை நம்பிரானென்றல் மரபு (சீவக. 2157, ந.)
151-2. சூரியனுக்கு ஆதிசேடனுடைய மணி உவமை.
----------
-
கோடி கதிரோனுங் கோடி பனிமதியும்
ஓடி நிரையா வுதித்தவென- நீடிய
பொற்கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்திலங்க
விற்கொடிகள் விண்ணோர் பெயர் துடைப்பச் சொற்கத்
தியலுங் கரியுமதி பெற்று முரசும் 155
புயலு முருமேறும் போலக்-கயலினத்தை
அள்ளுந் திரைவையை யாறுட் பரந்து நர
வெள்ளங் கரைகடந்து மீதூர-வள்ளல்
திருத்தகு மேகம்போற் செல்லுதலானீர் தூம்
துருத்தி மழைபோற் சொரியக் - கருத்துடனே
வாட்டமற வந்து வரங்கேட்கு மன்பருக்குக்
கேட்டவர மூறுங் கிணறுபோல் நாட்டமுடன்
காணிக்கை வாங்கியன்பர் கைகோடி யள்ளியிடும்
ஆணிப்பொற் கொப்பரைமுன் னாகவரக்-காணிற்
புரந்தரற்கு நேரிதென்று போற்றிசைப்ப வோரா 160
யிரந்திருக்கண் வையைந்தி யெய்தி-உரந்தரித்த
வண்டியூர் மண்டபத்தில் எழுந்தருளுதல்
வார்மண்டு கொங்கை மனம்போல் விலங்குவண்டி
யூர் மண்டபத்தி னுவந்திருந்து – சீர்மண்டு
153. கதிரோன் - சூரியன். மதி - சந்திரன். நிரையா - வரிசையாக,
153 - 4. பொற்குடைக்குச் சூரியனும், வெள்ளிக்குடைக்குச் சந்திர னும் உவமைகள். விற்கொடிகள் - ஒளியையுடைய கொடிகள்.
155. எற்றும் - அடிக்கப்படும்.
156. (பி - ம்.) யாறு பரந்துநிறை.
157. நீர்தூம் துருத்தி - நீர் தூவும் ஒருவகைக் கருவி.
159. காணிக்கை - கையுறைகளை.
160. திருக்கண் - வையை நதியினிடையே அழகர் திருக்கண் சாத்தியருளுதற்காக வைக்கப்படும் பூர்ண கும்பமுதலியன உள்ள மண்டபங்கள். ஆயிரம், பலவென்னும் பொருளை யுடையது. ஆயிரங் கண்களை யுடைமையால் வையை நதிக்கு இந்திரனை உவமை கூறினர். உரம் - மார்பு. (பி - ம்.) நதியேற.
161. வார்மண்டு கொங்கை - திருமகள். வண்டியூர் மண்டபம் - வையைக்கு வடகிழக்கு உள்ள ஓரூர். இவ்வூரில் சிவகங்கையரசரால் மண்டபப்படி நடத்தப்பெற்று வருகின்ற-தென்பர்.
----------
-
மாயனுக்கு வாகனமாய் வாவென்று சேடனைத்தான் 162
போயழைக்க வெய்யோன் புகுந்திடலும்-தூயோன்
மருளப் பகலை மறைத்தவனிப்போ
திருளைப் பகல் செய்தா னென்னத் – தெருளவே
அங்கிக் கடவுளும்வந் தன்பருட னாடுதல்போற்
றிங்கட் கடவுள் சேவிப்பதுபோற் - கங்குற்
கர தீப மும்வாணக் காட்சியுங் காண 165
வரதீப ரூபமாய் வந்த- திருமால்
தலைவி அழகரைத் தரிசித்து மயல் கொள்ளல்
அவனி பரிக்கு மனந்தாழ்வான் மீது
பவனிவரக் கண்டு பணிந்தேன் - அவனழகிற்
பின்னழகு முன்னழகாம் பேரழகைக் காணுமுன்னே
முன்னழகைக் கண்டேனான் மோகித்தேன் - பின்னழகு
தானே கண் டாலுந் தனக்குத் துயர்வருமென்
றேனோரை நோக்கி யெழுந்தருள - ஆனோன்
விமலத் திருமுகமு மென் மார்பின் மேவும்
கமலத் திருமுகமுங் கண்டேன் - அமலன்
அரவணையா னென்பதுமுண் டண்ணலரன் போல 170
இரவணையா னென்பதுமுண் டேனும் – பரவைத்
162. சூரியன் அத்தமிக்க. தற்குறிப்பேற்றவணி.
163. பகலை மறைத்தது, கிருஷ்ணாவதாரத்தில் ; பகல் - சூரியன்.
165. கர தீபம் - தீவட்டி. காண - காண்பதற்கு. தீபரூபமாய் வந்தது திருத்தண்காலில் ; இவருடைய திருநாமம் விளக்கொளிப் பெருமாளென்பது. (பி - ம்.) தீபரூபமாய் வந்தான்.
166. அனந்தாழ்வான்மீது - ஆதிசேடவாகனத்தின்மீது. பவனி - உலா.
167. பெருமானுடைய முன்னழகைப் போல்வதாகிய பின்னழ கைக் காணுமுன்னே . முன்னிலும் பின்பழகியரென்று பெருமாளுக்கு ஒரு திருநாமம் உண்டு ; " முன்பிலும்பின் பழகிய நம் பெருமாள் " (சீரங்க . ஊசல், 8). (பி - ம்.) தன்னழகைத்.
168. (பி - ம்.) எழுந்தருளி - வானோன்.
169. கமலத்திரு - தாமரைப் பூவிலுள்ள திருமகளது.
170. அரவணையான் - ஆதிசேடனை அணையாக உடையவன். இரவு அணையான் - யாசித்தலைப் பொருந்தான், இரவில் தழுவான்.
-------
-
திருவணையா னென்றுதினஞ் செப்புவது பொய்யென் 171
துருவணையு மாதர்க் குரைத்தேன் – மருவணையும்
தலைவி அழகரை நோக்கிக் கூறுதல்
செங்கரத்தி லன்று திருடியவெண் ணெய்போலச்
சங்கிருக்க வென்சங்கு தான் கொண்டீர்-கொங்கை
மலையருவி நீருமக்கு மாலிருஞ் சோலைத்
தலையருவி நீர்தானோ சாற்றீர்-விலையிலாப்
பொற்கலை யொன்றிருந்தாற் போதாதோ வன்று புனை
வற்கலையி லேவெறுப்பு வந்ததோ - நற்கலைதான்
ஆரஞ்சேர் கொங்கைக் களித்த தறியீரோ 175
சோரந் திரும்பத் தொடுத்தீரோ - ஈரஞ்சேர்
நூலாடை யாமெங்க ணுண்ணாடை தாமுமக்குப்
பாலாடை யாமோ பகருவீர்- மாலாகி
மொய்த்திரையு மெங்கண் மொழிகேளீர் பாற்கடலில்
நித்திரைதான் வேகவதி நீரிலுண்டோ - இத்தரையிற்
பொங்குநிலா வெள்ளம் பொருந்திற்றோ பாற்கடறான்
அங்குநிலா தும்மோ டணைந்ததோ – கங்குலெனும்
170-71. பரவைத் திருவணையான் - கடலிற் கட்டிய திருவணையை யுடையவன் , பாற்கடலிற்றோன்றிய திருமகளை அணையாதவன் ; பரவை - கடல் , பாற்கடல் .
மரு - வாசனை.
171. (பி - ம்.) செப்புவதைப்பொய் ; முருகனையுஞ்.
172. என் சங்கு - என்னுடைய வளையலை.
172-3. கொங்கையாகிய மலையில் விழுகின்ற அருவி போன்ற கண்ணீ ர்.
174. அன்று - இராமாவதாரத்தில். வற்கலை - மரவுரி . நற்கலை - நல்ல ஆடைகளை .
175. ஆரம் - முத்துமாலைகள். கொங்கைக்கு - திரெளபதிக்கு. சோரம் - திருட்டுத் தொழில் ; என்றது கிருஷ்ணாவதாரத்தில் கோவியர் துகில் கவர்ந்ததை நினைந்து.
176. பாலாடை - பால்போன்ற ஆடை, காய்ச்சிய பாலிலுள்ள ஏடு ; "ஆடைதனை யொதுக்கிடுமென் பால்வாரும் " (அழகர் கலம். 87)
177. மொய்த்து - நெருங்கி. இரையும் - முழங்கும். வேகவதி -வையை நதி. (பி - ம்.) வேகவதி நீருண்டோ .
178. நிலாவிற்குப் பாற்கடல் உவமை.
----------
-
ஆனை கெசேந்திர னாகிலதன் மேல்வருவன்
மீனையும் விட்டு விடலாமோ -கானச்
சதிரிள மாதர் தமக்கிரங்கு வீர்நெஞ் 180
சதிரிளமா தர்க்கிரங்கொ ணாதோ-முதிர்கன்றைக்
கொட்டத்து வெண்பால் குனிந்துகறப் பார்முலையில்
விட்டுக் கறப்பதையும் விட்டீரோ-கிட்டப்போய்
மென்பா றெறித்த வியன்முலையைப் பாற்குடமென்
றன்பா லெடுத்த தறியீரோ-மின்போல்வார்
செவ்விதழின் மேலே தெறித்தவெண்ணெ யுண்பதுபோல்
அவ்விதழை யுண்ட தயர்த்தீரோ-செவ்விதழை
குன்றன் றெடுத்தீர் குளிருமமு தங்கடைந்தீர்
சென்றன்று பாம்பினடஞ் செய்தீரே-என்றென்று
அழகர் சோலைமலைக்கு மீளுதல்
கொண்டபஞ் சாயுதன்மேற் கொள்கை பெறத்தேனூர் 185
மண்டபஞ் சார்வாய் வலங்கொண்டு- பண்டை
விரசையுடன் வைகுந்த வீடுமிது வென்னப்
புரசைமலை காத்தோன் புகுந்தான்- வரிசை
179. கெசேந்திரன் - கசேந்திராழ்வான். வன்மீனென்றது சந்தி ரனை ; கோள்களையும் மீனென்றல் மரபு ; "'மைம்மீன் புகையினும் " (புறநா. 117 : 1); முதலையென்பது மற்றொரு பொருள். கானம் - பாட்டு.
180. சதிரிள மாதர் - இத்தலத்திலுள்ள தளிப்பெண்டுகள் ; இப் பெயர், " சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது" (திருவாய்மொழி, 2. 10:2) என்பதிலும் காணப்படும். நெஞ்சு அதிர் இளமாதர்க்கு இரங்க ஒண்ணாதோ.
181. கொட்டத்து - பால்கறக்கும் பாத்திரத்தில்.
180-181. கன்றை விட்டுக் கறப்பதையென இயைக்க.
182. எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். (பி - ம்.) எடுப்பதறியீரோ.
183. செவ்வி தழை - அழகு தழைத்த . (பி - ம்.) யுண்பார்போல்.
184. குன்று - கோவர்த்தன மலையை. அமுதங்கடைந்தீர் : " ஆர முதுகடைந்த வங்கையான் " என்றார் முன்னும் ; 73. பாம்பில் - காளியன் தலையில்.
185. தேனூர் - மிகப் பழையதோர் ஊர் ; ஐங்குறுநூற்றிலும் இப் பெயர் வந்துள்ளது ; " தேனூர் வெற்றிலையும் மானூர்ச் சுண்ணாம்பும் " என்பது ஒரு பழமொழி.
186. விரசை - விரஜாநதி ; வைகுந்தத்திற்கு அருகே ஓடுவதோர் ஆறு. வைகுந்தவீடு - வைகுந்தமாகிய முத்தியுலகு. புரசைமலை - கசேந்திரனாகிய யானையை.
---------
-
உபசாரங் கொண்டருளி யோர்சிவிகை மீது 187
தபசாரஞ் சீபதியைச் சார்ந்தான்-இபமுண்ட
தலைவியின் நிலை
வெள்ளிற் கனியானேன் வேதனை யீன்றவன்றான்
உள்ளிற் கனியானே யூர்ந்துவரும்-பிள்ளைமதி
செவ்வை மதியோ திரைக்கடல் வாய்சிறிதோ
கொவ்வையித ழார்மொழிதான் கூற்றன்றோ-எவ்வமுறும்
காற்றேரி னானுமொரு காலனன் றோவுருக்கி 190
ஊற்றாத சேமணியு மொன்றுண்டோ - வேற்றுக்
கிளையோடு வாடிக் கிடந்தாலுஞ் சுட்டுத்
துளையாக் குழலுமுண்டோ சொல்லாய்-கிளியரசே
என்கூடு பொன்கூடு மிந்த நிறத்தினால்
உன்கூடு மென்கூடு மொன்றுகாண் - என்கூட்டில்
மாங்கனி யுண்டு வளஞ்சேர் செழுங்கொவ்வைத்
தீங்கனி யுண்டாசினியுண்டு-பாங்கிற்
187. தபசு ஆர் அம் சீபதி - தவம் பொருந்திய அழகிய சோலை மலையை. இபம் - இங்கே யானை யென்னும் நோய் ; "தூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளி லேபோல் " (சீவக. 232) என்பதன் உரையையும் ஒப்புமைப் பகுதியையும் பார்க்க.
188. வெள்ளிங்கனி - விளாம்பழம். வேதனை யீன்றவன் - பிரமனைப் பெற்றவன், துன்பத்தைக் கொடுத்தவன் ; " வேதனையும் பெற்று வெளி நின்று " என்றார் முன்னும் ; 70. உள்ளில் கனியான் - மனத்தில் இரங் கான். பிள்ளைமதி - பிறை.
189. செவ்வை மதியோ என்றது பிறை கோணியிருப்பதை நினைந்து. மொழி - பழிமொழி. கூற்று - யமன், சொல். எவ்வம்-துன்பம்.
190. காற்றேரினான் - தென்றற்காற்றாகிய தேரையுடையவன். ஒரு காலன் - ஒற்றைத் தேர்ச்சக்கரத்தையுடையவன், ஓர் யமன். உருக்கி ஊற்றாத - வெண்கலத்தை உருக்கி ஊற்றப்படாத, தன் ஓசையைக் கேட்டாரை உருக்கி ஊற்றாத. சேமணி - இடபத்தின் கழுத்திற் கட்டிய மணி. உருக்கியூற்றாத சேமணி உண்டோ : " மெழுகான், ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி 11 (குறுந். 155 : 3-4)
190-191. வேற்றுக் கிளையோடு - வேறு மூங்கில்களோடு. சுட்டுத் துளையாக் குழல் - சுட்டுத் துளை செய்யப்படாத வேய்ங்குழல், தன் இசையைக் கேட்பவரைச் சுட்டுத் துளையாத குழல்.
192. என் கூடு - என்னுடம்பு. பொன் - பசலை. 193. கொவ்வைத் தீங்கனியென்றது உதட்டை. ஆசினி - பலா ; இங்கு அதன் பழத்திற்கு ஆயிற்று ; கொங்கைக்கு உவமை : "கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய்" (திருவா. நீத்தல்.) (பி- ம்.) செழுங்கோவைத்.
----------
-
குழையுமன முண்டுகுழம்பிய பாலுண்
டுழையே தெளிபாலு முண்டு-விழைவறிந்
தூட்டுவே னுன்னை யுருப்பசியா யென்னநலம் 195
காட்டுவேன் பட்டாடையாற்றுடைப்பேன்- கூட்டில்
அரசா யிருத்தியா லத்தி யெடுத்துப்
புரைதீர் நறையும் புகைப்பேன்- அருகே
இளவெயிலிற் காய்வித் தெடுத்தொருகான் முத்தி
வளைபயில் கையின்மேல் வைத்துத் துளபமணி
ஈசன் றிருநாம மெல்லாமென் போலுனக்குப்
பாசந் தொலையப் பயிற்றுவேன்-பேசென்றே
பிற பொருள் தூதிற் சிறவா வென்றல்
ஈடுபட்ட வெள்ளை யெகினத்தைத் தூதுவிட்டாற்
சூடுபட் டார் துணிந்து சொல்வாரோ-கூடுகட்டி
அன்பாய் வளர்த்ததா யார்க்குதவாக் கோகிலந்தான் 200
என்பா லருள்வைத் தியம்புமோ-தன்பேர்
அரியென்று சொன்னா லளியென்று சொல்லும்
வரிவண்டு பேசி வருமோ- விரகஞ்செய்
194. குழையும் மனம், குழையும் அனம். பால் - பகுதி, உண்ணும் பால், உழை - பக்கம்.
195. உருப்பசியே தாயே என்றுகூற, உருவம் பசுத்திருப்பா யென்று யாவரும் சொல்ல. நலங்கு ஆட்டுவேன் : 61.
196. ஆலத்தி - ஹாரத்தி ; அரசு, ஆல், அத்தி யென்னும் மரப் பெயர்கள் தோற்றுதல் ஒரு நயம். நறை - நறும்புகை.
197. முத்தி - முத்தங்கொண்டு ; "புதல்வர் பூங்கண் முத்தி 1 (புறநா. 41:14)
198. பேசென்று பயிற்றுவேனென இயைக்க.
199. ஈடுபட்ட - எளிவரவுபட்ட (தக்க. 61, உரை). எகினத்தை - அன்னப்பறவையை. சூடு - உச்சிக் கொண்டை : இஃது அன்னத்தின் தலையிலுள்ள து. சூடுபட்டார் - சூடுண்டவரென்பது மற்றொரு பொருள்.
200. வளர்த்த தாயார் - காக்கை. கோகிலம் - குயில். காக்கைக் கூட்டிலிருந்து வளர்ந்து இறகு முளைத்தபின் பறந்துபோய் விடுதல் குயிலின் இயல்பு ; " வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள் வளர்த்தாள் சொற் கேட்டில் கடிந்தாள்" (சீவக. 1661); "உயிர்த்த பொழுதே நின் குரல்கே ளாமுன் ஓடிற் றீன்றதாய், நயத்தின் வளர்த்த தாய்குரல் கேட்டலுமே நடுங்கத் துரந்ததால் " (பிரபு. பிரபுதேவர் வந்த. 63)
201. அரியென்று....... சொல்லும் : என்றது வண்டு குழறு மென்ற படி ; " முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும் மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ ", " அளிப்பிள்ளை வாய்குழறும் " என்றார் முன் னும் ; 35, 46. அரி, அளியென்னும் இரண்டும் வண்டின் பெயர்கள். அரியென்பது திருமால் பெயர் ; அதைக் கூடச் சொல்லத் தெரியா தென் பதும், அரிச்சுவடியிலே முதல் வார்த்தையாகிய அரியென்பதே தெரியா தென்பதும் வேறு பொருள்; "அரியென்றெங்கள், தாலத்தின் மீதெழுதச் சமர்த்தி லாரோ" (அழகர்கலம். 6) விரகம் - பிரிவால் உண்டாகும் துன்பம்.
---------------
-
வன்கால திக்கின் மலைவா யிருக்கின்ற 202
தென்காலு மென்காதல் செப்புமோ - பொன்காதல்
வண்டலையுந் தாரான்முன் மாதரையெல்லாந்தூற்றும்
கொண்டலையுந் தூதுவிடக் கூடுமோ -உண்ட
படியேழுங் காக்கும் பரங்கருணை யான்முன்
கொடியோரும் போவாரோ கூறாய் – அடியார்கள்
கிளியின் தகுதி
அங்கிருந்தார் கீர்த்தனஞ்செய் வாயடுத்த நாச்சியார் 205
பங்கிருந்தாற் கையிற் பறந்திருப்பாய் எங்கிருந்து
வந்தாயென் றான்மாலிருஞ்சோலையினிலிருந்
தெந்தா யுனைத்தொழவந் தேனென்பாய் - அந்தச்
சவுந்தர வல்லியெனுந் தற்சொரூ பிக்கும்
உவந்தலர்சூடிக்கொடுத்தா ளுக்கும் - சிவந்த
கடுகிலே சங்கோபங் காணாம லென்மால்
வருகிலே சொல்வாய் வகையாய் - அடுகிலே
சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதானந்தரணி
கொங்கெடுக்குந் தாமங் கொடுவருவாய் - அங்கடுக்கின்
202. காலதிக்கு - தெற்கு ; காலன் - யமன். துன்பத்தைச் செய்வாரோடு தொடர்புடைய-தென்பதைக் காட்டத் தெற்கென்னாது காலதிக் கென்றாள். மலைவாய் - பொதியின் மலையின்கண், மலைப்புடன். தென் கால் - தென்றல் காற்று. பொன் - திருமகள்.
203. தாரான் - திருமால். மாதரை எல்லாம் தூற்றும் - பெண்களை யெல்லாம் பழி கூறுகின்ற பெரிய பூமி முழுதும் துளியைத் தூற்றுகின்ற. கொண்டலை - மேகத்தை.
204. படி - உலகம். கொடியோர் - காக்கைகள், கொடுமையை யுடையவர் ; காகத்தைத் தூது விடுதலுண்டென்பது வடமொழியிலுள்ள காக சந்தேசமென்னும் நூலால் விளங்கும்.
205. கீர்த்தனம் ; "குருகேயுன் னாக்குத்தான் கூழை நாக்கான, தரி கீர்த்தனத்தி-னாலன்றோ " என்றார் முன்னும் ; 30. நாச்சியார் - ஆண் டாள் ; இவர் கையிற் கிளியிருக்கும்.
207. சவுந்தரவல்லி : இத்தலத்துள்ள நாச்சியார் திருநாமம். தற் சொரூபி - அதே வடிவாயிருப்பவள். சூடிக்கொடுத்தாள் - ஆண்டாள்.
208. கடுகு இலேசம் - கடுகளவாகிய சிறுமைகூட. மால் - மயல். வடுகு - தெலுங்கு.
208-9. அடு கிலேசம் கெடுப்பாய் - வருத்துகின்ற துன்பத்தைப் போக்குவாய். சச்சிதானந்தர் - அழகர். கொங்கு - தேன் ; பூந்தாதுமாம்.
------------
-
அடையாளம்
ஒருகத்தி லாலாகி யோருகத்தி லேயரசாய் 210
ஒருகத்தி லேவில் லுவமாகி- ஓருகத்திற்
புத்திர தீபமுமாய்ப் புங்கவர்க்கா றாந்தருவாய்ச்
சத்தி தருமோர் தருவுண்டு-மொய்த்த
ஒரு கோடி காவுண் டொருகோடி யாறுண்
டொருகோடி பூஞ்சுனையு முண்டு – திருமால்
அறங்காக்கும் யோகிகள் போலல்லும் பகலும்
உறங்காப் புளிதானு முண்டு - திறஞ்சேர்
பிதாமக னோடுறையும் பெற்றி விளங்கப்
பிதாமகன் வந்து புகழ் பேசச் - சதாகால
முந்திரமாய் வாழு முபேந்திரனங் கில்லையென 215
இந்திரனார் வந்தங் கினிதிறைஞ்சப் - பிந்திய
தம்பியர் மூவருக்குந் தானே யாசீந்த
நம்பி திருத்தாளை நம்பினோர் – வெம்பிறவித்
210. கிருதயுகத்தில் ஆலமரமாகவும், திரேதாயுகத்தில் அரச மரமாகவும், துவாபரயுகத்தில் பலாமரமாகவும், கலியுகத்தில் புத்திரஜீவி மரமாகவும் தருமம் விளங்கும் என்று இத்தலபுராணம் கூறும். இவர் மூன்றாம் யுகத்தில் வில்வமரத்தைக் கூறுகின்றார்.
211. புத்திர தீபம் - ஒரு மரம். புங்கவர்க்கு - தேவர்க்கு . கற்பகங் கள் ஐந்தாதலின், 'ஆறாந் தருவாய்?' என்றார் ; "மூவரி னால்வரா முனி " (கம்ப. மந்திரப். 5). என்பது போல.
212. கா - சோலை.
213. உறங்காப்புளி : இராஜகோபுரத்திற்கு வடக்கே பதினெட்டாம் படிக்கெதிரில் இது முன்னிருந்த தென்றும், சில நாளைக்கு முன் கீழே விழுந்துவிட்டதென்றும் அந்த இடத்தில் இப்பொழுது பூஜை நிவே தனம் நடந்து வருகின்றனவென்றும் கூறுவர். குமுதவல்லி-யோடு திருமங்கை மன்னன் எழுந்தருளி மங்களாசாசனம் செய்தபோது வைக்கப்பட்ட தென்பது கர்ண பரம்பரைச் செய்தி.
யோகிகள் இரவும் பகலும் தூங்காதிருப்பர். அவர் போல் இலைகளை மூடாமல் எப்பொழுதும் விரித்தே இருக்கும் புளியை உறங்காப்புளி யென்பர்.
212-3. திருமால் அறம் - ஸ்ரீவைஷ்ண வ தர்மம்.
214. மகனோடு பிதா உறையும் பெற்றி. பிதாமகன் - பிரமன்.
214-5. சதாகாலமும் - எப்பொழுதும் . திரம் -ஸ்திரம். உபேந்திரன் - அசுரரால் தேவர்களுக்கு உண்டாகும் துன்பத்தை மாற்றுவதற்குத் திருமால் உபேந்திரராக எழுந்தருளி யிருக்கிறாரென்பது மகாபுராண வரலாறு. "இருகூல மும்பொரு மா நீ ரரங்கத்தி லெந்தை ......... புருகூத னுக்குத் திருத்தம்பி யாகிப் புரக்கும் " (திருவரங்கத்து மாலை, 16). முதலிலுள்ள அங்கென்றது தேவலோகத்தைக் குறித்தது.
216. மூவர் - பரதன், சுக்கிரீவன், விபீடணன் ஆகிய மூவர்.
--------------
-
ஸ்தலாசாரிய புருஷர்களும் பிறரும்
தேகம் பவித்திரஞ்செய் சீரங்க ராசபட்டர் 217
ஆகும் ப்ரசித்தரா மர்ச்சகரும்-மோகமுறும்
கங்குன் மலமாயை கன்மம் விளங்காமற்
செங்கையி லோங்குதிரி தண்டேந்திச்-சங்கையறச்
செய்யுந் திருமாலிருஞ்சோலைச் சீயரென
வையம் விளங்கவரு மாதவரும் - பொய்யில்லா
ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட் டென்றொரு 220
மானதீ பங்காட்டி வந்து நின்று – மேனாளில்
முத்தமிழ்க்குப் பின்போவார் முன் போகப் பின்போன
அத்தன் றிருமாலை யாண்டானும்-பத்தியினால்
வையங்கார் வண்ணனையே வாழ்த்த வருந்தோழப்
பையங்கா ரென்னுமா சாரியரும் - மெய்யன்பாம்
சிட்டர்க டேவர்களாகத் தினம் பரவும்
பட்டர்க ளாம்வேத பாரகரும் - விட்டு வெனும்
சோதிகரு ணைக்கடற் றோன்றிக் கரசர
ணாதியுடன் வந்த வமுதாரும்-மூதுலகிற்
217. பவித்திரம் - சுத்தம். சீரங்கராச பட்டர் : இவர் ஸ்தானிகராக முதலில் வந்தவர் ; அர்ச்சக ஸ்தானிகத்தில் குரு பரம்பரையார்.
218. கங்குல் - இருளைப்போன்ற. மலமும், மாயையும், கன்மமும் அடுத்தவர்களுக்கு நீங்கும்படி ஓங்கிய திரிதண்டம். திரிதண்டம் ஸ்ரீவைஷ்ணவ சந்நியாசிகளுக்கு உரியது. சங்கை - சந்தேகம்.
219. திருமாலிருஞ்சோலைச் சீயர் : ஸ்ரீ மணவாள மாமுனிகள் காலத்தில் இந்த ஜீய ஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு உரிய ஆசாரியர்கள் இப்போது கூடலழகர் சந்நிதியிலுள்ளனரென்பர்.
221. முத்தமிழ்க்குப் பின்போவாரென்றது திருமழிசையாழ்வா ருடைய மாணாக்கருள் ஒருவராகிய கணிகண்ணர் செல்ல அவர் பின்னே திருமால் சென்றதை ; " சொல்கவிக்குப், பார முதுகடைந்த பாயலான்" (72-3) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. திருமாலையாண்டான் - இவர் உடையவருடைய ஆசிரியர்களுள் ஒருவர் ; இவர் பரம்பரையினர் தல்லாகுளத்திற்கு வந்து விட்டனரென்பர்.
222. வையம் கார்வண்ணனையே வாழ்த்த; வையம் - உலகத்தார். தோழப்பையங்கார் : திருமாலையாண்டான் பரம்பரையிலிருந்து பிரிந் தவர்களுள் மூத்தவர் ; " தோழப்பர் நற்றமிழ்ச் சீர்பதிப்போன், நலமருவு மழகன் புரோகிதன் புனிதபத நாண்மலர் வழுத்துவேனே !! (அழகர் பிள்ளைத். பழிச்சினர்ப்பரவல், 14)
223. சிட்டர்கள் - ஒழுக்கமுடையோர். வேதபாரகர் - வேதத்தைக் கரை கண்டவர். விட்டு - விஷ்ணு (227)
224. கரசரணாதியுடன் - கைகால்களுடன். அமுதார் - இவருடைய திருவுருவம் நம்பிள்ளை சந்நிதியிலுள்ளதென்பர்; இவர்பரிசாரக ஸ்தானிகர்.
--------------
-
றண்ணந் துழாயழகன் றங்குந் திருமலைபோல் 225
நண்ணுந் திருமலை நம்பிகளும் – உண்ணின்ற
மாமலை சோலை மலையையே நம்புதலாற்
சோலைமலை நம்பியெனுந் தூயோரும்-மேலை
விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டுப் பிரசாதம்
தருஞ்சட கோபநம்பி தாமும் - பெருஞ்சீர்
வரியெழுதிக் கற்றதிரு மாலிருஞ் சோலைப்
பிரியரெனுஞ் சீர்கருணப் பேரும் - கிரியிலிருந்
தாளுங் கடவு ளருளே துணையாயெந்
நாளுஞ்சீ காரியஞ்செய் நாயகரும்-தாள்வணங்க
தூதுரைக்க வேண்டுதல்
ஆர்த்ததிரு வோலக்க மாயிருப்ப னப்பொழுதுன் 230
வார்த்தை திருச்செவியில் வாயாது- சேர்த்தியிலே
மெல்ல வெழுந்தருளும் வேளை பார்த் தவ்வேளை
சொல்ல வெழுந்தொருவர் சொல்லாமுன்-வெல்லுமதன்
அம்பலர் தூற்ற வடர்த்து வருமுன்னே
வம்பலர் தூற்ற வருமுன்னே-கும்பமுனி
225. திருமலை - திருவேங்கடம். திருமலை நம்பிகள் : மடைப் பள் ளிப் பரிசாரக ஸ்தானிகர்.
226. மாலை மலை - மயக்கத்தை அழிக்கின்ற ; திருமாலைத் தரித்த எனினுமாம். சோலைமலை நம்பி - சோலைமலையை நம்பியவரென்பது பொருள் ; இவர் சந்நிதி பரிசாரக கூடஸ்தர்.
227. விரிஞ்சன் - பிரமன். சடகோப நம்பி - பரிசாரக ஸ்தானிக ருள் ஒருவர். இதன்பின்
"' மருவு திருமாலிருஞ்சோலை நம்பி உருவின் மதனனையொப் போனும் " என ஒரு கண்ணி மிகையாகக் காணப்படுகின்றது.
228. வரி - எழுத்து. திருமாலிருஞ்சோலைப் பிரியர் : இவர் கரு ணீகர்களுள் ஒருவர். சீர்கருணப்பேர் - கணக்கர். .
229. கடவுள் - அழகர். சீகாரியஞ்செய் நாயகர் - கோயிற் பணி விடை செய்பவர் ; இவர்களைக் கோயிற்கொத்தென்பர்.
230. திருவோலக்கம் - சூழ இருப்பாரோடு ஆதனத்தில் எழுந் தருளியிருத்தல். வாயாது - பொருந்தாது. சேர்த்தி - பள்ளியறை.
231. மதன் - மன்மதன்.
232. அம்பு அலர் தூற்ற - பாணமாகிய பூவைத் தூவ. வம்பலர் - அயலார். தூற்ற - பழிமொழிகூற. கும்பமுனி - அகத்திய முனிவருடைய.
----------
-
வாயினுரையடங்க வந்த கடலடங்கத்
தாயினுடையடங்கத் தத்தையே - நீயுரையாய்
உன்பேர் சுவாகதமென் றோதுகை யாலுனக்கும்
அன்பேர் சுவாகதமுண் டாகுங்காண் - முன்பொருநாள்
கோசலை கையிற் குருசி லுனைப்புகழ்ந்து 235
பேசி னுனைப் புகழ்ந்து பேசாரார்- நேசமுடன்
எம்முடைய மாலை யிருபுயத்து மாலை கேள்
உம்முடைய மாலை யுதவீரேல் - அம்மைதிருக்
கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மினென்பாய் - நீதி
அடுப்பவர் யாவர்க்கு மாடித் தியாகம்
கொடுப்பவனில்லையென்று கூறான் - தடுக்கும்
அருமாலை நீக்கு மழகன் புயத்து 239
மருமாலை நீ வாங்கி வா.
233. நுரை அடங்க - நுரைகள் ஒன்றுபட. வாயில் வந்தவென இயைக்க. அகத்திய முனிவர் கடலை ஆசமனம் செய்த வரலாறு இங்கே குறிக்கப்பட்டது. தாயின் உரை - செவிலித்தாயின் அதிகாரச் சொற்கள்; "" அனை வேங்கையினதட்ட 11 (அழகர் கலம். 42). தத்தையே - கிளியே.
234. சுவாகதம் - கிளியின் பெயர்களுள் ஒன்று. அன்பு ஏர் சுவா கதம் ; சுவாகதம் - நல்வரவு.
235. குருசில் - இராமன். அவர் கிளியைப் புகழ்ந்து பேசியதென் றது, சீதை தன் கிளிக்கு யார் பெயர் வைப்பதென்று கேட்க, கைகேயி யின் பெயரை வைக்கும்படி இராமன் கூறியதை நினைந்து ; " என்னொ ரின்னுயிர் மென்கிளிக் கியார் பெய ரீகேன், மன்ன வென்றலு மாசறு கைகயன் மாதென், அன்னை தன்பெய ராகென வன்பினொ டந்நாட், சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய்" (கம்ப.
சூடாமணிப். 83)
236. மாலை - திருமாலை ; நோக்கியென ஒரு சொல் வருவிக்க. மாலை கேள் - பூமாலையைக் கேட்பாயாக.
237. கோதையார் - சூடிக்கொடுத்த நாச்சியார். தாதைஆர் - பூந் தாதுகள் நிரம்பிய. திருவிழாக்காலத்தில் சூடிக்கொடுத்த நாச்சியார் சூடிய மாலை ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து இங்கே வருவது வழக்கம். தம் மின் - தருவீர்.
238. ஆடித் தியாகம் : அழகருக்கு ஆடி மாதத்தில் முன்பு பிர மோத்ஸவம் நடைபெற்று வந்ததென்பர்.
239. அருமாலை - போக்குதற்கு அரிய மயக்கத்தை. மருமாலை - நறுமணமுள்ள பூமாலையை. புயத்து மரும் மாலையென்று கொண்டு திருத்தோளில் மருவிய மாலையெனலும் ஆம்.
அழகர் கிள்ளைவிடு தூது முற்றிற்று.
---------------------
(எண் : கண்ணியின் எண்)
அகத்திய முனிவர், 232 | கூடு - உடம்பு, 12 |
அட்டாங்க விமானம், 150 | கூழை , 30 |
அணு, 118 | கேசவாத்திரி, 97 |
அம்பரீடன், 142 | கொங்கு, 209 |
அமுதார், 224 | கொட்டம், 181 |
அரங்க ர், 23, 135 | கொப்பரை, 159 |
அரி, 67, 122 | கொள்ளை, 90 |
அலர், 66 | கோகிலம், 200 |
அவுணன், 68 | கோசலை, 235 |
அழகர், காப்பு, 136, 239 | கோவலர், 81 |
அனந்தாழ்வான், 166 | சங்கத்தழகர், 136 |
ஆடித் தியாகம், 238 | சங்கரன், 131 |
ஆடை , 13 | சங்கை , 218 |
ஆம்பரம், 46 | சடகோபநம்பி, 227, |
ஆயு, 27 | சதிரிள மாதர், 180 |
ஆலத்தி, 196 | சவுந்தரவல்லி, 138, 207 |
இடபகிரி, 100, 102, 144 - 5. | சாம்பூந்தம், 101 |
இபம், 23 | சாரிகை, 38 |
ஈடுபடுதல் - எளிவரவுபடுதல், 199 | சிங்காத்திரி, 98 |
உடு, 124 | சீகாரியஞ்செய் நாயகர், 229 |
உத்தியோகச் சக்கரம், 133 | சீபதி (சீர்பதி), காப்பு, 111, 145 |
உந்தி , 86 | சீரங்கராச பட்டர், 217 |
உபேந்திரன், 109, 2015 | சீவகன், 10 |
உருசித்த, 16 | சுகமுனிவர், 6 |
உருப்பசி - ஊர்வசி, 195 | சுத்திகரித்தல், 56 |
உழை , 194 | சுந்தரத்தோளர், 139 |
உறங்காப்புளி, 213 | சுந்தரராசன், 138 |
எற்றுதல், 155 | சுவாகதம், 234 |
ஐவண்ண ம், 7 | சூடிக்கொடுத்தாள், 207, 237 |
கண்ணன், 77 | சூடு - உச்சிக்கொண்டை , 199 |
கரதீபம், 165 | சேமணி, 190 |
கரி, 85 | சேர்த்தி , 230 |
கலை, 174 | சொக்கர், 11 |
கற்கி - கோயில், 117 | சோமச்சந்திர விமானம், 107, 149. |
காந்தருவதத்தை , 10 | சோலைமலை, 100, 173, 206 |
காமன், 14 | சோலைமலை நம்பி , 226. |
காலாழி - ஓர் ஆபரணம், 13 | தத்து - ஆபத்து, 54 - 1 |
கிருதாசி, 6 | தபசு, 187 |
கிற்பாய், 52 | தல்லாகுளம், 147 |
கீர்த்த னம், 30, 205 | திருக்கண், 160 |
குஞ்சு : பறவையின் இளமைப்- | திருமலை நம்பிகள், 110, 225 |
பெயர், 61 | திருமாலிருஞ்சோலைச்சீயர், 219 |
குதிரை நம்பிரான், 152 | திருமாலிருஞ்சோலைப்பிரியர், 228 |
குருகூர், காப்பு | திருமாலையாண்டான், 109, 221 |
கூடல், 146 | துசத்தம்பம், 108 |
தென்கலை, 115 | மலர் மாது, 28 |
தேயசு, 27 | மலையலங்காரர், 139 |
தேனூர் மண்டபம், 185 | மாயன், 77 |
தோழப்பையங்கார், 222 | மாரன், 4 |
நலங்கு , 61, 195 | முத்தி - முத்தங்கொண்டு, 197 |
நாண், 40 | மூவர், 216 |
நாலாயிர திவ்யப்ரபந்தம், 87 | வங்கணம், 28 |
நூபுர நதி, 103 | வடகலை, 115 |
பகல், 163 | வண்டியூர் மண்டபம், 161 |
படி, 204 | வண்டில், 4 |
பரவை , 170 | வரி, 228 |
பரிசித்தல், 16 | வன்னி , 15 |
பாஞ்சராத்திரம், 114 | விட்டு - விஷ்ணு , 223, 227 |
பார்ப்ப தி, 29 | விசை , 120 |
பார்வை - பார்வைமிருகம், 95 | விதி, 39 |
பாலனம், 19 | விரகம், 201 |
பின்னை (நப்பின்னை), 62 | விரசை , 186 |
புத்திர தீபம் - ஒரு மரம், 211 | விளக்கொளிப் பெருமாள், 165 |
பூசை 20 | வீடணன், 59 |
பூரகம், 27 | வீறு, 22 |
பெரிய திருவடிகள், 22 | வெள்ளிற்கனி, 188 |
பெலத்து, 4 | வேகவதி, 177 |
பொன், 202 | வேணு, 58 |
மதன், 2 | வைகானதம், 114 |
மதுரை, 136 | வைகுந்தம், 186 |
மலயத்துவசன், 141 | வையை, 145, 156, 160 |
இப்பதிப்பில் மேற்கோளாக எடுத்துக் காட்டிய
நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி
அழகர்கலம் - அழகர் கலம்பகம் | திருவா - திருவாசகம் |
அழகர் பிள்ளைத் - அழகர் பிள்ளைத் தமிழ், | திருவாய் - திருவாய்மொழி |
தே - தேவாரம் | தொல் - தொல்காப்பியம் |
ந - நச்சினார்க்கினியருரை | கம்ப - கம்பராமாயணம் |
நன் - நன்னூல் | காசிக் - காசிக்கலம்பகம் |
நாலடி - நாலடியார் | குறுந் - குறுந்தொகை |
பி - ம் - பிரதிபேதம் | சிலப் - சிலப்பதிகாரம் |
பிரபு - பிரபுலிங்கலீலை | சீரங்க - சீரங்கநாயகரூசல் |
புறநா - புறநானூறு | சீவக - சீவகசிந்தாமணி |
பெரியதிரு - பெரிய திருமொழி | சேது - சேதுபுராணம் |
பேர் - பேராசிரியர் உரை | தக்க - தக்கயாகப்பரணி |
மதுரைக் - மதுரைக்கலம்பகம் | தண்டி - தண்டியலங்காரம் |
மயிலை - மயிலை நாதர் உரை | தனிப் - தனிப்பாடல் |
தாயுமான - தாயுமானவர் பாடல் | திருவரங்கத் - திருவரங்கத்தந்தாதி |
வி. பா. - வில்லிபுத்தூரார் பாரதம் | |
மீனாட்சி. பிள்ளை - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் | |
கச்சியானந்த - கச்சியானந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது |
டாக்டர் ஐயரவர்கள் பதிப்பித்துள்ள வேறு தூதுகள்
- கச்சியானந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது
மதுரைச் சொக்க நாதர் தமிழ்விடு தூது
பத்மகிரி நாதர் தென்றல்விடு தூது
மான்விடு தூது புகையிலைவிடு தூது
கிடைக்குமிடம் :
'தியாகராச விலாசம்' 53, பிள்ளையார் கோயில் தெரு, திருவேட்டீசுவரன் பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை-5.
Comments
Post a Comment