108 Tiruppati antāti


பிரபந்த வகை நூல்கள்

Back

108 திருப்பதி அந்தாதி
திவ்யகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்



அழகிய மணவாள தாசர் எனப்படும்
திவ்யகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எழுதிய
"108 திருப்பதி அந்தாதி"




Source:
நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி: மூலபாடம்
பிள்ளைப்பெருமாளையங்கார்
கலாரத்நாகர அச்சுக்கூடம், 1889, 22 pages

ஸ்ரீ:

ஸ்ரீ ராமஜயம்

நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி


சிறப்புப் பாயிரம்.

வெண்பா

ஏற்ற மணவாள ரிசைத்தாரந் தாதிவெண்பா
தோற்றக்கே டில்லாத தொன்மாலைப்- போற்றத்
திருப்பதியா நூற்றெட் டினையுஞ்சே விப்போர்
கருப்பதியா வண்ணமுண்டா க.

[ஆழ்வார்கள் ப‌ன்னிருவர்]

பொய்கைபூ தன்பேயார் பொன்மழிசைக் கோன்மாறன்
செய்ய மதுரகவி சேரர்பிரான் - வையகமெண்
பட்டர்பிரான் கோதைதொண்டர் பாதப் பொடிப‌ரணன்
கட்டவிழ்தார் வாட்கலியன் காப்பு. (1)

[நம்மாழ்வார்]

பிறவாத பேறு பெறுதற்கெஞ் ஞான்று
மறவா திறைஞ்சென் மனனே!-துறவாளன்
வண்குருகூர் வாவி வழுதிவள நாடுடைய
தண்குருகூர் நம்பிதிருத் தாள். (2)

[உடையவர்]

முன்னே பிறந்திறந்து மூதுலகிற் பட்டவெல்லாம்
என்னே மறந்தனையோ வென்னெஞ்சே!- சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி. (3)

[கூரத்தாழ்வான்]

முக்கால மில்லா முகில்வண்ணன் வைகுந்தத்
தெக்காலஞ் செல்வா னிருக்கின்றேன்?-தக்காரெண்
கூரத்தாழ் வானடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத்தாழ் வானசடம் போட்டு. (4)

[பட்டர்]

நான்கூட்டில் வந்தவன்றே நானறியா நன்மையெல்லாம்
தான்கூட்டி வைத்தநலந் தான்கண்டீர் - ஆங்கூட்டச்
சிட்டருக்கு வாய்த்த திருவரங்க னின்ன‌ருளால்
பட்டருக்காட் பட்ட பயன். (5)

[திருப்பதிகளின் வகை]

ஈரிருப தாஞ்சோழ மீரொன்ப தாம்பாண்டி
ஓர்பதின்மூன் றாமலைநா டோரிரண்டாம் - சீர்நடுநா
டாறோடீ ரெட்டுத்தொண்டை யவ்வட‌நா டாறிரண்டு
கூறுதிரு நாடொன்றாக் கொள். (6)
---------------

நூல்

சோழநாட்டுத் திருப்பதிகள்- 40

1.திருவரங்கம் பெரிய கோயில்

சீர்வந்த வுந்தித் திசைமுகனா லல்லாதென்
சோர்வந்த சொல்லிற் சுருங்குமோ?-ஆர்வம்
ஒருவரங்கக் கோயி லுகந்தவரை யாள்வான்
திருவரங்கக் கோயிற் சிறப்பு. (1)

2.திருவுறையூர்

சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போல‌
மறப்புடைய நாயேன் மனத்துள் - உறப்போந்
தறந்தையா நின்ற வரங்கா! திருவாழ்
உறந்தையாய்! இங்குறைந்த தோது! (2)

3. திருத்தஞ்சை

ஓதக்கே ணெஞ்சே! உனக்குமிது நன்றெனக்கும்
மேதக்க நன்மையினி வேறில்லை - போதப்
பெருந்தஞ்சை மாமணியைப் பேணி வடிவம்
பொருந்தஞ்சை மாமணியைப் போற்று. (3)

4. திருவன்பில்

போற்றிசெய வோர்குடைக்கீழ்ப் பொன்னாடு மிந்நாடு
நாற்றிசையு மாண்டாலு நன்கில்லை - தோற்றமிலா
எந்தையன்பி லாதி யிணைத்தா மாரையடிக்கே
சிந்தையன்பி லாதார் சிலர். (4)

5.திருக்கரம்பனூர்

சிலமா தவஞ்செய்துந் தீவேள்வி வேட்டும்
பலமா நதியிற் ப‌டிந்தும் - உலகில்
பரம்பநூல் கற்றும் பயனில்லை நெஞ்சே!
கரம்பனூ ருத்தமன்பேர் கல். (5)

6. திருவெள்ளறை

கல்லிருந்தான் றந்தை கலத்தோ னக்கமலத்
தில்லிருந்தான் றந்தையரங் கேசனென்றே - தொல்லைமறை
உள்ளறையா நின்றமையா லுள்ளமே! கள்ளமின்றி
வெள்ளறையான் றாளே விரும்பு. (6)

7.திருப்புள்ளம்பூதங்குடி

விரும்பினவை யெய்தும் வினையனைத்துந் தீரும்
அரும்பரம வீடு மடைவீர்--பெரும்பொறிகொள்
கள்ளம்பூ தங்குடிகொள் காயமுடை யீர்!அடிகள்
புள்ளம்பூ தங்குடியிற் போம். (7)

8. திருப்பேர்நகர்

போமானை யெய்து பொருமானைக் கொம்புபறித்
தாமானை மேய்த்துவந்த வம்மானைத்--தாமச்
செழுந்திருப்பே ரானைச் சிறுகாலைச் சிந்தித்
தெழுந்திருப்பேற் குண்டோ விடர். (8)

9.திருவாதனூர்

இடரான வாக்கை யிருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார்--கடவுளர்க்கு
நாதனூ ராதரியார் நானெனதென் னாரமலன்
ஆதனூ ரெந்தையடி யார். (9)

10.திருவழுந்தூர்

அடியாராய் வாழ்மி னறிவிலாப் பேய்காள்!
செடியார் வினையனைத்துந் தீரு--முடிவில்
செழுந்தூரத் தன்னெனினுஞ் செங்கண்மா லெங்கள்
அழுந்தூரத் தன்னணிய னாம். (10)

11. திருச்சிறுபுலியூர்

ஆமருவி மேய்த்த வரங்ரெதி ரார்நிற்பார்?
தாமருவி வாணனைத்தோள் சாய்த்தநாள்--சேமம்
உறுபுலியூர் வன்றோ லுடையா னுடைந்தான்
சிறுபுலியூ ரெந்தைமேற் சென்று. (11)
12. திருச்சேறை

சென்றுசென்று செல்வஞ் செருக்குவார் வாயிறொறு
நின்றுநின்று தூங்குமட நெஞ்சமே! - இன்றமிழைக்
கூறைகுஞ் சோற்றுக்குங் கூறாதே பேறாகச்
சேறைக்கு நாயகன்பேர் செப்பு! (12)

13.திருத்தலைச்சங்கநாண்மதியம்.

செப்புங்கா லாதவனுந் திங்களும்வா னுந்தரையும்
அப்புங்கா லுங்கனலு மாய்நின்றான் - கைப்பால்
அலைச்சங்க மேந்து மணியரங்கத் தம்மான்
தலைச்சங்க நாண்மதியத் தான். (13)

14.திருக்குடந்தை

தானே படைத்துலகைத் தானே யளித்துநீ
தானே யழிக்குந் தளர்ச்சியோ - வானில்
திருமகுடந் தைக்கச் சிறுகுறளாய் நீண்ட‌
மெரும‌!குடந் தைக்கிடந்தாய்! பேசு. (14)

15. திருக்கண்டியூர்

பேசவரிற் றென்னரங்கன் பேரெல்லாம் பேசுவாய்;
கேசவனைக் காண்கவிழி; கேட்கசெவி; - ஈசனார்
உண்டியூர் தோறு முழன்றிவர மற்றவிர்த்தான்
கண்டியூர் கூப்புகவென் கை. (15)

16.திருவிண்ணகர்

கையு முரையுங் கருத்துமுனக் கேயடிமை
செய்யும் படிநீ திருத்தினாய் - ஐயா!
திருவிண் ணகராளா! சிந்தையிலு மெண்ணேன்
பெருவிண் ணகராளும் பேறு. (16)

17.திருக்கண்ணபுரம்

பேறு தரினும் பிறப்பிறப்பு நோய்மூப்பு
வேறு தரினும் விடேன்கண்டாய் - ஏறுநீர்
வண்ணபுரத் தாய்!என் மணம்புகுந்தாய்! வைகுந்தா!
கண்ணபுரத் தாய்!உன் கழல். (17)

18.திருவாலி

கழன்றுபோம் வாயுவினைக் கட்டாமற் றீர்ந்தம்
உழன்றுபோ யாடம லுய்ந்தேன் - அழன்று
பொருவாலி காலன் பரகாலன் போற்றும்
திருவாலி மாயனையே சேர்ந்து. (18)

19.திருநாகை

சேர்ந்துனக்குக் குற்றவேல் செய்திலனென் சிந்தையினீ
ஆர்ந்ததற்கோர் கைம்மா றறிகிலேன் - பூந்துவரை
மன்னா!கை யாழி வலவா! வலம்புரியாய்!
தென்னாகை யாய்!அருளிச் செய் (19)

20.திருந‌றையூர்

செய்ய சடையோன் றிசைமுகத்தோன் வானவர்கோன்
ஐயமறுத் தின்ன மறியாரே - துய்ய‌
மருநறையூர் வண்டுழாய் மாயோன்செவ் வாயோன்
திருநறையூர் நின்றான் செயல். (20)

21.திருநந்திபுரவிண்ணகரம்

செயற்கரிய செய்வோமைச் செய்யாம னெஞ்சே!
மயக்குவா ரைவர் வலியால் - நயக்கலவி
சிந்திபுர விண்ணகர மென்பர்திருச் செங்கண்மால்
நந்திபுர விண்ணகர நாடு. (21)

22. திருவிந்தளூர்

நாடுதும்வா! நெஞ்சமே! நாராய ணன்பதிகள்
கூடுதும்வா! மெய்யடியார் கூட்டங்கள் - சூடுதும்வா!
வீதியிந்த ளத்தகிலின் வீசுபுகை வாசமெழும்
ஆதியிந்த ளூரா ன‌டி. (22)

23. திருச்சித்திரகூடம்

அடியா லுலகெல்லா மன்றளந்து கொண்ட‌
நெடியானைக் கூடுதியே னெஞ்சே!-கொடிதாய‌
குத்திரகூ டங்கி கொளுந்தாமுன் கோவிந்தன்
சித்திரகூ டங்கருதிச் செல். (23)

24.திருச்சீராமவிண்ணகரம்

செல்லுந் தொறுமுயிர்ப்பின் செல்லு மிருவினையை
வெல்லு முபாயம் விரும்புவீர்!-தொல்லரங்கர்
சீராம விண்ணகரஞ் சேர்மின்!பின் மீளாத‌
ஊராம விண்ணகர முண்டு. (24)

25.திருக்கூடலூர்

உண்டுகேட் டுறுமோந் துப்பார்க்கு மைவ‌ர்க்கே
தொண்டுபட லாமோ?உன் றொண்டனேன் - விண்டிலங்கும்
ஆடலூர் நேமிமுத லைம்படையாய்! அன்புடையாய்!
கூடலூ ராய்!இதனைக் கூறு! (25)

26.திருக்கண்ணங்குடி

கூறுபுகழ்த் தன்னடிகே கூட்டுவனோ? இன்னமென்னை
வேறுபடப் பல்பிறப்பில் வீழ்த்துவனோ?- தேறுகிலேன்
எண்ணங் குடியா யிருந்தானின் றான்கிடந்தான்
கண்ணங் குடியான் கருத்து. (26)

27. திருக்கண்ணமங்கை

கருத்தினால் வாக்கினா னான்மறையுங் காணா
ஒருத்தனைநீ நெஞ்சே! உணரில் - பெருத்தமுகில்
வண்ணமங்கை கண்கால் வன‌சந் திருவரங்கம்
கண்ணமங்கை யூரென்று காண். (27)

28. திருக்கவித்தலம்

காணியு மில்லமுங் கைப்பொருளு மீன்றோரும்
பேணிய வாழ்க்கையும் பேருறவும் - சேணில்
புவித்தலத்தி லின்பமும் பொங்கரவ மேறிக்
கவித்தலத்திற் கண்டுயில்வோன் கால். (28)

29. திருவெள்ளியங்குடி

காலளவும் போதாக் கடன்ஞாலத் தோர்கற்ற‌
நூளலவே யன்றி நுவல்வாரார்? - கோலப்
பருவெள்ளி யங்குடியான் பாதகவூண் மாய்த்த‌
திருவெள்ளி யங்குடியான் சீர். (29)

30. திருமணிமாடக்கோயில்

சீரே தருங்கதியிற் சேருகைக்கு நானுன்னை
நேரே வணங்கினே னெஞ்சே!நீ - பாரில்
அணிமாடக் கோயி லரங்கனார் நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு. (30)

31. திருவைகுந்த விண்ணகரம்

வணங்கேன் பிறதெய்வ மாலடி யாரல்லாக்
குணங்கேடர் தங்களுடன் கூடேன் - இணங்கிநின்று
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவே னீதன்றோ
வைகுந்த விண்ணகர வாழ்வு. (31)

32. திருவரிமேயவிண்ணகரம்

வாழு மடியார் மடநெஞ்சே! நம்மளவோ?
தாழுஞ் சடையோன் சதுமுகத்தோன் - பாழிக்
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்
அரிமேய விண்ணகரத் தார்க்கு. (32)

33. திருத்தேவனார்தொகை

ஆர்க்கும் வலம்பரியா வண்டமு மெண்டிசையும்
கார்க்கடலும் வெற்புங் கலங்கினவால் - சீர்க்கும்
திருத்தேவ னார்தொகைமால் செவ்வாய்வைத் தூதத்
தருத்தேவ னார்தொகையுஞ் சாய்ந்து (33)

34. திருவண்புருடோத்தமம்

சாய்ந்த திருவரங்கந் தண்வேங் கடங்குடந்தை
ஏய்ந்த திருமா லிருஞ்சோலை - பூந்துவரை
வண்புருடோத் தமமாம் வானவர்க்கும் வானவனாம்
ஒண்புருடோத் தமன்ற னூர் (34)

35. திருச்செம்பொன்செய்கோயில்
[தலைவி ஆற்றாமை மிகுதியால் மடலூரத் துணிதல்]

ஊர்வேண் மடலை யொழிவேன் மடநாணம்
சேர்வேன் கரிய திருமாலைப் - பாரறிய
அம்பொன்செய் கோயி லரங்கனணி நாங்கூர்ச்
செம்பொன்செய் கோயிலினிற் சென்று (35)

36. திருத்தெற்றியம்பலம்

சென்றது காலந் திரைநரைமூப் பானவினி
என்றுகொல்? சாவறியோ மென்னெஞ்சே! - கன்றால்
உருத்தெற்றி யம்பலத்தை யோர்விளவின் வீழ்த்தான்
திருத்தெற்றி யம்பலத்தைச் சேர்! (36)

37. திருமணிக்கூடம்

சேராது முன்செய்த தீவினைபின் செய்வதுவும்
வாரா தினிநீ மடநெஞ்சே!--நேராக்
குருமணிக்கூ டத்தானைக் கொம்புபறித் தானைத்
திருமணிக்கூ டத்தானைச் செப்பு. (37)

38. திருக்காவனம்பாடி

செப்பேன் மனிதருக்கென் செஞ்சொற் றமிழ்மாலை
கைப்பேன் பிறதெய்வங் காண்பாரை--எப்போதும்
காவளம்பா டித்திருமால் தாற்றா மரைதொழுது
நாவளம்பா டித்திரிவே னான். (38)

39. திருவெள்ளக்குளம்

நானடிமை செய்யவிடாய் நானானே னெம்பெருமான்
தானடிமை கொள்ளவிடாய் தானானான்--ஆனதற்பின்
வெள்ளக் குளத்தே விடாயிரு வருந்தணிந்தோம்
உள்ளக் குளத்தேனை யொத்து. (39)

40. திருப்பார்த்தன்பள்ளி

ஒத்தமர ரேத்து மொளிவிசும்பும் பாற்கடலும்
இத்தலத்திற் காண்பரிய வென்னெஞ்சே!- சித்துணர்ந்த‌
தீர்த்தன்பள் ளிக்கிருந்து செப்பவெளி நின்றானைப்
பார்த்தன்பள் ளிக்குட் பணி. (40)

சோழநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்-18.

1. திருமாலிருஞ்சோலை

பணிந்தேன் றிருமாலைப் பாமாலை தாளில்
அணிந்தே னருட்டஞ்ச மாகத்--துணிந்தேன்
திருமா லிருஞ்சோலை சேர்ந்தே னெனக்கு
வருமா லிருஞ்சோதி வான். (41)

2. திருக்கோட்டியூர்

வான்பார்க்கும் பைங்கூழ்போல் வாளாவுன தருளே
யான்பார்க்க நீபார்த் திரங்கினாய்--தேன்பார்ப்பின்
ஓசைத் திருக்கோட்டி யூரானே! இன்னமுமென்
ஆசைத் திருக்கோட்டி யான். (42)

3. திருமெய்யம்
[பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்]

ஆளா யுனக்கன்பா யாசையாய் நாணிலிலாய்
வாளா மனைவியென்று வாழ்வேனைக்--கேளாய்
திருமெய்ய மாயா! சிலைகால் வளைத்து
வருமெய்ய மாயா மதன். (43)

4. திருப்புல்லாணி

மதயானைக் கோள்விடுத்து மாமுதலை கொன்ற‌
கதையா லிதயங் கரையும்--முதலாய‌
புல்லாணி மாலே! புறத்தோர் புகழிருப்பு
வல்லாணி யென்செவிக்கு மாறு. (44)

5. திருத்தண்காலூர்
[தலைவனை பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி யிரங்கல்]

மாறுப‌ட‌ வாடையெனும் வ‌ன்கால்வ‌ந்தென் முலைமேல்
ஊறுப‌ட‌ வூர்ந்த‌ வுளைவெல்லா--மாறத்
திருத்த‌ண்கா லூரான் றிருத்த‌ண் டுழாயின்
ம‌ருத்த‌ண்கா லூராதோ வாய்ந்து. (45)

6. திருமோகூர்

[அன்னத்தைத் தூது விடுத்த தலைவி அதனைக் குறித்து ஐயுறுதல்]

வாயான் மலர்கோதி வாவிதொறு மேயுமோ?
மேயாம லப்பால் விரையுமோ? - மாயன்
திருமோகூர் வாயின்று சேருமோ? நாளை
வருமோ? கூர் வாயன்னம் வாழ்ந்து (46)

7. திருக்கூடல்

வாழ்விப்பா னெண்ணமோ? வல்வினையி லின்னமென்னை
ஆழ்விப்பா னெண்ணமோ? அஃதறியேன் - தாழ்விழாப்
பாடலழ கார்புதுவைப் பட்டர்பிரான் கொண்டாடும்
கூடலழ கா!நின் குறிப்பு. (47)

8. ஸ்ரீவில்லிபுத்தூர்

குறித்தொருவர் கொண்டாடுங் கொள்கைத்தோ? கோதை
நிறத்தவூர் விண்டுசித்தர் நீடூர் - பிறப்பிலியூர்
தாழ்வில்லி புத்தூரென் றைவர்க்குத் தானிரந்தான்
வாழ்வில்லி புத்தூர் வளம். (48)

9. திருக்கூர்

வளந்தழைக்க வுண்டாலென்? வாசமணந் தாலென்?
தெளிந்தகலை கற்றாலென்? சீசீ - குளிர்ந்தபொழில்
தண்குருகூர் வாவிச் சடகோப னூரெங்கள்
வண்குருகூ ரென்னாத வாய். (49)

10. திருத்தொலைவில்லிமங்கலம்

வாயு மனைவியர்பூ மங்கையர்க ளெம்பிராற்
காயுதங்க ளாழிமுத லைம்படைகள் - தூய
தொலைவில்லி மங்கலமூர் தோள்புருவ மேனி
மலைவில்லி மங்கலந்த வான். (50)

11. ஸ்ரீவரமங்கை (வானமாமலை)

வானோர் முதலா மர‌மளவா வெப்பிறப்பும்
ஆனேற் கவதியிட லாகாதோ? - தேனேயும்
பூவர மங்கை புவிமங்கை நாயகனே!
சீவர மங்கையர‌ சே! (51)

12. திருப்பேரை

அரைசாகி வையமுழு தாண்டலு மின்பக்
கரைசார மாட்டார்கள் கண்டீர் - முரைசாரும்
தென்றிருப்பே ரைப்பதியான் சீர்கெட்டு நாவிலவன்
தன்றிருப்பே ரைப்பதியா தார். (52)

13. ஸ்ரீவைகுந்தம்
[தலைவியின் இளமை கண்ட செவிலி இரங்கல்]

தாருடுத்துத் தூசு தலைக்கணியும் பேதையிவள்
நேருடுத்த சிந்தை நிலையறியேன் - போருடுத்த
பாவைகுந்தம் பண்டொசித்தான் பச்சைத் துழாய்நாடும்
சீவைகுந்தம் பாடுந் தெளிந்து. (53)

14. திருப்புளிங்குடி
[தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]

தெளியும் பசும்பொற் சிறைக்காற்று வீச
விளியுந் துயர்போய் விடுமே - எளியேற்
கருளப் புளிங்குடிவா ழச்சுதனைக் கொண்டு
கருளப் புளிங்குவந்தக் கால். (54)

15. திருவரகுணமங்கை
[பாங்கு வெறிவிலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடுநிற்றல்]

காலமு நோயுங் கருதாத வன்னைமீர்!
வேலன் வெறியை விலக்குமின்கள்! - மாலாம்
வரகுண மங்கையன்றாள் வண்டுழாய் மேலே
தரகுண மங்கை தனக்கு. (55)

16. திருக்குளந்தை

தனக்குடலம் வேறான தன்மை யுணரான்
மனக்கவலை தீர்ந்துய்ய மாட்டான் - நினைக்கில்
திருக்குளந்தை யாருரைத்த சீர்க்கீதை பாடும்
தருக்குளந்தை யாமலிருந் தால். (56)

17. திருக்குறுங்குடி

தாலத் திழிகுலத்துச் சண்டாள மானாலும்
மேலத் தவரதனின் மேன்மைத்தே - கோலக்
குறுங்குடிவாழ் மாயன் குரைகழற்கா ளாகப்
பெருங்குடியாய் வாழ்வார் பிறப்பு. (57)

18. திருக்கோளூர்

பிறப்பற்று மூப்புப் பிணியற்று நாளும்
இறப்பற்று வாழ விருப்பீர்! - புறப்பற்றுத்
தள்ளுக்கோள் ஊராவிற் றாமோ தர‌ன்பள்ளி
கொள்ளுங்கோ ளூர்மருவுங் கோள்! (58)

பாண்டியநாட்டுத் திருப்பதிகள் முற்றும்
----------------------

மலைநாட்டுத் திருப்பதிகள் - 13

1. திருவனந்தபுரம்

கோளார் பொறியைந்துங் குன்றியுட லம்பழுத்து
மாளாமு னெஞ்சே! வணங்குதியால் - கேளார்
சினந்தபுரஞ் சுட்டான் றிசைமுகத்தான் போற்றும்
அனந்தபுரஞ் சேர்ந்தா னடி. (59)

2. திருவண்பரிசாரம்
[ பிரிவாற்றாது வருந்துந் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கல்]

அடியுங் குளிர்ந்தா ளறிவுங் குலைந்தாள்
முடிகின்றாண் மூச்சடங்கு முன்னே - கடிதோடிப்
பெண்பரிசா ரங்குப் பிறப்பித்து மீளுவார்
வண்பரிசா ரங்கிடந்த மாற்கு. (60)

3. திருக்காட்கரை

மார்க்கமுந் தாந்தாம் வழிபடுந் தெய்வமும்
ஏற்க வுரைப்பார்சொ லெண்ணாதே - தோற்குரம்பை
நாட்கரையா முன்னமே நன்னெஞ்சே! நாரணனாம்
காட்கரையாற் காளாகாய்! காண். (61)

4. திருமூழிக்களம்

காண்கின்ற வைம்பூதங் கட்கு மிருசுடர்க்கும்
சேண்கலந்த விந்திரற்குந் தேவர்க்கும் - மாண்கரிய
பாழிக் களத்தாற்கும் பங்கயத்து நான்முகற்கு
மூழிக் களத்தான் முதல். (62)

5. திருப்புலியூர்
[ தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]

முதல்வண்ண மாமே முலைவண்ண முன்னே
விதிவண்ண நீங்கி விடுமே - சதுரத்
திருப்புலியூர் நின்றான் றிருத்தண் டுழாயின்
மருப்புலியூர் தென்றல் வரின் (63)

6. திருச்செங்குன்றூர்

வரவேண்டுங் கண்டாய் மதிகலங்கி விக்குள்
பொரவே யுயிர்மாயும் போழ்து - பரமேட்டி!
செங்குன்றூர் மாலே! சிறைப்பறவை மேற்கனகப்
பைங்குன் றூர் கார்போற் பறந்து. (64)

7. திருநாவாய்

பறந்து திரிதரினும் பாவியே னுள்ளம்
மறந்தும் பிறிதறிய மாட்டா - சிறந்த
திருநாவாய் வாழ்கின்ற தேவனையல் லாலென்
ஒருநாவாய் வாழ்த்தா துகந்து. (65)

8. திருவல்லவாழ்

உகந்தார்க்கெஞ் ஞான்று முளனா யுகவா
திகந்தார்ககெஞ் ஞான்று மிலனாய்த் - திகழ்ந்திட்
டருவல்ல வாழுருவ மல்லவென நின்றான்
திருவல்ல வாழுறையுந் தே. (66)

9. திருவண்வண்டூர்

தேவி முலகு முயிருந் திரிந்துநிற்கும்
யாவும் படைத்த விறைகண்டீர் - பூவில்
திருவண்வண் டூருறையுந் தேவாதி தேவன்
மருவண்வண் டூர்துளவ மால். (67)

10. திருவாட்டாறு

மாலைமுடி நீத்து மலர்ப்பொன் னடிநோவப்
பாலைவன நீபுகுந்தாய் பண்டென்று - சாலவநான்
கேட்டாற் றுயிலேன்காண் கேசவனே! பாம்பணைமேல்
வாட்டாற்றுக் கண்டுயில்கொள் வாய். (68)

11. திருவிற்றுவக்கோடு

வாய்த்த கருமமினி மற்றில்லை நெஞ்சமே!
தோய்த்த தயிர்வெண்ணெய் தொட்டுண்ட - கூத்தன்
திருவிற் றுவக்கோடு சேர்ந்தாற் பிற‌விக்
கருவிற் றுவக்கோடுங் காண். (69)

12. திருக்கடித்தானம்

காண விரும்பமெண்கண் கையுந் தொழவிரும்பும்
பூண விரும்புமென்றன் புன்றலைதான் - வாணன்
திருக்கடித்தா னத்தான் றிகிரியான் றண்டான்
திருக்கடித்தா னத்தானைச் சென்று. (70)

13. திருவாறன்விளை

சென்று புனன்மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்றுபுல னைந்தடக்கி விட்டாலும் - இன்றமிழால்
மாறன் விளைத்த மறையோதார்க் கில்லையே
ஆறன் விளைத்திருமா லன்பு. (71)

மலைநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.
-----------

நடுநாட்டுத் திருப்பதிகள் - 2

1. திருவயிந்திரபுரம்

அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர்தூவி
முன்பணிந்து நீரெமக்கு மூர்த்தியரே - என்பா
எமையிந் திரபுரத்தார்க் கின்றொண்ட ரானார்
தமையிந் திரபுரத்தார் தாம். (72)

2. திருக்கோவலூர்

தாமரையா னாதியாய்த் தரவரங்க ளீறான
சேம வுயிருஞ் செகமனைத்தும் - பூமடந்தைக்
காங்கோவ லாயுதன்பின் னாக வவதரித்த
பூக்கோவ லரயன் பொருள். (73)

நடுநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.
-----------

தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22

1. திருக்கச்சி - அத்திகிரி

பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்
திருளாசை சிந்தித் திராரே - அருளாளன்
கச்சித திருப்பதியா மத்தியூர்க் கண்ணன்றாள்
*-ச்சித் திருப்பதியா யென்று. (74)

2. திருவட்டபுயங்கம்

என்றுத் துயருழக்கு மேழைகாள்! நீங்களிளங்
கன்றுபோற் றுள்ளிக் களித்திரீர் - அன்றுநடம்
இட்ட புயங்கத் திருசரண மேசரணென்
தட்டபுயங் கததர்க்கா ளாய். (75)

3. திருத்தண்கா

[பிரிந்து ஆற்றாளாய தலைவி தலைமகன் பக்கல் தனக்கு உள்ள
அன்புறுதியைத் தோழிக்குக் கூறுதல்]

ஆட்பட்டே னைம்பொறியா லாசைப்பட் டேனறிவும்
கோட்பட்டு நாணங் குறைபட்டேன் - சேட்பட்ட
வண்காவை வண்டுவரை வைத்த விளக்கொளிக்குத்
தணகாவைச் சேர்ந்தான் றனக்கு. (76)

4. திருவேளுக்கை

தனக்குரிய னாயமைந்த தானவர்கோன் கெட்டான்
உனக்குரிய னாயமைந்த னுய்ந்தான் - நினைக்குங்கால்
வேளுக்கை யாளரியே! வேறுதவி யுண்டோ?உன்
தாளுக்கா ளாகாத வர்க்கு. (77)

5. திருப்பாடகம்

தவம்புரிந்த சேதனரைச் சந்திரனா தித்தன்
சிவன்பிரம னிந்திரனாச் செய்கை - உவந்து
திருப்பா டகமருவுஞ் செங்கண்மா றன்மார்
பிருப்பா டகவுரை யாலே. (78)

6. திருநீரகம்

ஆலத் திலைசேர்ந் தழியுலகை யுட்புகுந்த
காலத்தி லெல்வகைநீ காட்டினாய்? - ஞாலத்துள்
நீரகத்தாய்! நின்னடியே னெஞ்சகத்தாய்! நீண்மறையின்
வேரகத்தாய்! வேதியர்க்கு மீண்டு, (79)

7. திருநிலாத் திங்கட்டுண்டம்

மீண்டுந் தெளியார்கண் மேதினியோர் நின்னடிப்பூப்
பாண்டரங்க மாடி படர்சடைமேல் - தீண்டிக்
கலாத்திங்கட் டுண்டத்தின மீதிருப்பக் கண்டு
நிலாத்திங்கட் டுண்டத் தானே! (80)

8. திருவூரகம்

நேசத்தா லன்றுலகை நீர்வார்க்க வைத்தளந்த
வாசத்தா ளென்றலைமேல் வைத்திலையேல் - நாசத்தால்
பாரகத்து ளன்றிநான் பாழ்நரகில் வீழ்ந்தென்கொல்?
ஊரகத்து ணின்றாய்! உரை. (81)

9. திருவெஃகா

உரைகலந்த நூலெல்லா மோதி யுணர்ந்தாலும்
பிரைகலந்த பால்பேரற் பிறிதாம் - தரையில்
திருவெஃகா மாயனுக்கே சீருறவாந் தங்கள்
உருவெஃகா வுள்ளத்தி னோர்க்கு. (82)

10. திருக்காரகம்

ஓராதார் கல்வி யுடையேங் குலமுடையேம்
ஆரா தனமுடையேம் யாமென்று - சீராயன்
பூங்கர ரகங்காணப் போதுவார் தாடலைமேல்
தாங்கா ரகங்காரத் தால். (83)

11. திருக்கார்வானம்

தாலேலோ வென்றாய்ச்சி தாலாட்டித் தன்முலைப்பா
லாலேயெவ் வாறுபசி யாற்றினள்?முன் - மாலே!பூங்
கார்வானத் துள்ளாய்! கடலோடும் வெற்போடும்
பார்வான முண்டாய்!நீ பண்டு. (84)

12. திருக்கள்வனூர்

பண்டேயுன் றொண்டாம் பழவுயிரை யென்னதென்று
கொண்டேனைக் கள்வனென்று கூறாதே - மண்டலத்தோர்
புள்வாய் பிறந்த புயலே! உனைக்கச்சிக்
கள்வாவென் றொதுவதென் கண்டு? (85)

13. திருப்பவளவண்ணம்

கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால்
உண்டறிந்து மோந்தறிந்து முய்யேனே - பண்டைத்
தவளவண்ணா! கார்வண்ணா! காமவண்ணா! கச்சிப்
பவளவண்ணா! நின்பொற் பதம். (86)

14. திருபரமேச்சுரவிண்ணகரம்

பதத்தமிழாற் றன்னையே பாடுவித்தென் னைத்தன்
பதத்தடியார்க் கேயாட் படுத்தான் - இதத்த
பரமேச் சுரவிண் ணகரான் பலவான்
வரவேச் சுரலணைந்த மால். (87)

15. திருப்புட்குழி

மால்வே ழமுமரவு மாயையும்வெற் புங்கடலு
மேல்வீழ் படையும் விடமும்போய்ப் - பாலன்
நெருப்புட் குழிகுளிர நின்றதுங்கேட் டோதார்
திருப்புட் குழியமலன் சீர். (88)

16. திருநின்றவூர்

[தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]

சீரறிந்து தோழிமீர்! சென்று கொணர்ந்தெனக்குப்
போர முலைமுகட்டிற் பூட்டுமினோ! - நேரவுணர்
பொன்றவூர் புட்கழுத்திற் பொன்னைமா ணிக்கத்தை
நின்றவூர் நித்திலத்தை நீர். (89)

17. திருவெவ்வுளூர்

நீர்மைகெட வைதாரு நின்னோ டெதிர்த்தாரும்
சீர்மைபெற நின்னடிக்கீழ்ச் சேர்க்கையினால் - நேர்மையிலா
வெவ்வுளத்த னேன்செய் மிகையைப் பொறுத்தருளி
எவ்வுளத்தனே! நீ யிரங்கு. (90)

18. திருநீர்மலை

இரங்கு முயிரனைத்து மின்னருளாற் காப்பான்
அரங்க னொருவனுமே யாதல் - கரங்களால்
போர்மலைவான் வந்த புகழவாணன் காட்டினான்
நீர்மலைவா ழெந்தையெதிர் நின்று. (91)

19. திருவிடவெந்தை

நின்று திரியும் பிறவியெல்லா நேர்வித்துக்
கொன்ரு திரியுங் கொடுவினையார் - இன்று
வெருவிடவெந் சைக்கே விழுமியதொண் டானேன்
திருவிடவெந் தைக்கே செறிந்து. (92)

20. திருக்கடன்மல்லை

செறிந்த பணைபறித்துத் திண்களிற்றைச் சாடி
முறிந்துவிழப் பாகனையு மோதி - எறிந்து
தருக்கடன்மல் லைக்குமைந்தான் றஞ்சமென்று நெஞ்சே!
திருக்கடன்மல் லைக்குட் டிரி! (93)

21. திருவல்லிக்கேணி

திரிந்துழலுஞ் சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்
புரிந்து *பகனமின்? புகன்றால் - மருந்தாம்
கருவல்லிக் கேணியா மாக்கதிக்குக் கண்ணன்
திருவல்லிக் கேணியான் சீர். (94)

22. திருக்கடிகை

சீரருளா னம்மைத் திருத்திநா முன்னறியாக
கூரறிவுந் தந்தடிமை கொண்டதற்கே - நேரே
ஒருகடிகை யம்மனமே! உள்ளுகிலாய் முத்தி
தருசடிகை மாயவனைத் தான். (95)

தொண்டைநாட்டுத் திருப்பதிகள் முற்றம்.
-----------

வடநாட்டுத் திருப்பதிகள் - 12

1. திருவேங்கடம் (திருப்பதி)

தானே சரணமுமாய்த் தானே பலமுமாய்த்
தானே குறைமுடிக்குந் தனமையான் - தேனேய்
திருவேங் கடந்தொழுதேந் தியவிபூ திக்குள்
மருவேங் கடந்தனெமிவ் வாழ்வு. (96)

2. திருச்சிங்கவேள்குன்றம் (அகோபிலம்)

வாழ்குமரன் மேற்கனக வஞ்சகன்மே லோர்முகத்தே
சூழ்கருணை யும்முனிவுந் தோன்றியவால் - கேழ்கிளரும்
அங்கவேள் குன்ற வழல்சரபத் தைப்பிளந்த
சிங்கவேள் குன்றத்தி னார்க்கு. (97)

3. திருவயோத்தி

ஆர்க்குமிது நன்றுதீ தானாலு நெஞ்சே!நீ
பார்க்கும் பலகலையும் பன்னாதே - சீர்க்கும்
திருவையோத் திப்பயலைச் சீரியமெய்ஞ் ஞானத்
துருவையோத் திற்பொருளை யோர். (98)

4. திருநைமிசாரணியம்

ஓரறிவு மில்லாத வென்போல்வார்க் குய்யலாம்
பேரறிவுண் டேனும் பிறர்க்கரிது - பாரறிய
நைம்மிசா ரண்ணியத்து நாதரடி யாரோடும்
இம்மிசார் வுண்டாயி னால். (99)

5. திருச்சாளக்கிராமம்

உண்டா முறைமை யுணர்ந்தடிமைப் *பேர்புண்டேன்
பண்டாங் குடிகுலத்தாற் பன்மதத்தால் - கொண்டாட்டால்
ஆளக் கிராமத்தா லல்லற்பேர் பூணாமல்
சாளக் கிராமத்தார் தாட்கு. (100)

6. திருவதரியாச்சிரமம்

தாட்கடிமை யென்று தமையுணாரார்க் கெட்டெழுத்தும்
கேட்கவெளி யிட்டருளுங் கேசவனை - வேட்கையொடு
போவதரி தானாலும் போய்த்தொழுவோ நெஞ்சமே!
மாவதரி யாச்சிரமத் து. (101)

7. திருக்கங்கைக்கரைக்கண்டம்

மத்தாற் கடல்கடைந்து வானோர்க் கமுதளித்த
அத்தா! எனக்குன் னடிப்போதில் - புத்தமுதைக்
கங்கைக் கரைசேருங் கண்டத்தாய்! புண்டரிக
மங்கைக் கரைசே! வழங்கு. (102)

8. திருப்பிருதி

வழங்கு முயிரனைத்தும் வாரிவாய்ப் பெய்து
விழுங்குங் கவந்தன் விறற்றோட் - கிழங்கைப்
பொருப்பிருதிக் குங்கிடந்தாற் போற்றுணிந்து வீழ்த்தான்
திருப்பிருதிக் கென்னெஞ்சே! செல். (103)

9. திருவடமதுரை

செல்வ முயுருடம்பு சேர வுரித்தாக்கி
வல்வினையி னீங்குமினோ மாந்தர்காள்! - தொல்லை
வடமதுரை யான்கழலே வாய்த்தஞ்ச மென்று
திடமதுரை செய்தான் றிறத்து. (104)

10. திருத்துவாரகை

திறந்திறமாத் தாந்துய்க்குந் தீஞ்சுவையை நாடி
அறந்திறம்பிப் பாதகரோ ரைவா - நறுந்துளவ
மாதுவரை யோனே! மனந்துணையாக் கொண்டென்னைக்
காதுவரை யோ!மெய் கலந்து. (105)

11. திருவாய்ப்பாடி (கோகுலம்)

கலந்தமர ரோடுங் கலைகண்டா ரோடும்
பொலிந்துதிரு நாட்டிருக்கப் போவீர்! - மலிந்தபுகழ்
அண்டராய்ப் பாடி யமலரடி யாரடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும். (106)

12. திருப்பாற்கடல்

தொழும்பாய நானல்ல சூதறிந்து கொண்டேன்
செழும்பா யலைமுத்தஞ் சிந்தி - முழங்கும்
திருப்பாற் கடலான்றாள் சேர்ந்தா ரடிசேர்ந்
திருப்பாற் கடலா மிடர். (107)

வடநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.
---------

திருநாட்டுத் திருப்பதி - 1

திருவைகுந்தம் பரமபதம்

இடருடையேன் சொல்ல வெளிதோ பிரமன்
அடரும்விடை யோற்கு மரிதே - தொடரும்
கருவைகுந் தம்பிறவிக் கட்டறுத்து மீளாத்
திருவைகுந் தம்பெறுவார் சீர். (1**)

திருநாட்டுத் திருப்பதி முற்றும்.
________________

மண்ணி லரங்கமுதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதிநூற் றெட்டினையும் - நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற்பாத மென்றலைமேற் பூ.

பதின்ம ருரைத்த பதியொருநூற் றெட்டும்
துதிசெய்ய வந்தாதி சொன்னான் - அதிக
குணவாள பட்டரிரு கோகனகத் தாள்சேர்
மணவாள தாசன் வகுத்து.

நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி முற்றிற்று
___________

அழகிய மணவாளதாசர் திருவடிகளே சரணம்.

-----------------------------------------------------------

Comments